Monday, 30 October 2017

மீண்டும் மீண்டும் தொழிலேயே....!


நாம் ஒரே விஷயத்தைப் பலமுறை கேட்டிருப்போம். ஆனால் அது ஏனோ நமது மனதில் பதிவதில்லை! பலமுறை கேட்ட அந்தச் செய்தி நமக்குத் தேவையான செய்தியாக இருக்கும். ஆனாலும் எப்போதும் போல நாம் அலட்சியம் காட்டுவோம்.

அப்படி நாம் அலட்சியம் காட்டும் செய்திகளில் ஒன்று தொழில் செய்வோருக்கு மிகவும், மிக மிக அவசியமான ஒரு செய்தி. சமீபத்தில் ஒரு தொழிலதிபர் கொடுத்த பேட்டியில் சொன்ன செய்தியை மீண்டும் நினைவுபடுத்துகிறேன்:

"நான் எனது வியாபாரத்தில் வரும் வருமானத்தை மீண்டும் எனது வியாபாரத்திலேயே அந்த வருமானத்தைப் போடுகிறேன். எனது வியாபாரத்தைப் பெரிய அளவில் கொண்டு செல்ல வேறு வழி எனக்கு இல்லை. யாரும் எனக்குப் பணம் கொடுக்கப் போவதில்லை.  இந்த வழி ஒன்று தான் எனது தொழிலைப் பெரிய அளவில் கொண்டு செல்ல எனக்கு உதவியிருக்கிறது."

அவர் தனது தொழிலைச் சிறிய அளவில் தொடங்கியவர்    இப்போது பெரிய அளவில்  வளர்ந்திருக்கிறார். இன்னும் வளருவதற்கான வாய்ப்புக்கள் நிறையவே உண்டு. 

இப்படிச்  சொல்லும் போது அவருடைய செலவுக்கு என்ன பண்ணுவார் என்னும் கேள்வி எழுவது இயற்கை. அவருடைய வருமானம் என்னும் போது நிறுவனத்திற்கு ஏற்படும் செலவுகள் போக என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். தனது செலவுகளுக்கு மற்ற ஊழியர்களைப் போல அவரும் ஒரு தொகையை மாதச் சம்பளமாக எடுத்துக் கொள்ளுவார்.  சம்பளத்தைத் தவிர வேறு செலவுகளுக்கு என்று எதனையும் எடுத்துக் கொள்ளுவதில்லை. என்ன சம்பளமோ அதற்குள்ளேயே செலவுகள். அது  ஒரு கட்டுப்பாடு; ஒர் ஒழுங்குமுறை.

சில வியாபார நண்பர்களைப் பார்க்கும் போது நமக்கே வருத்தமாக இருக்கும். அவர்களுக்கென்று ஒரு சம்பளம் எடுத்துக் கொள்ளுவதில்லை. தங்களது சொந்தச் சிலவுகளைக் கூட்டிக் கொண்டே போவது. குடும்பத்தினரின் கட்டாயத்திற்காக நிறுவனத்தின் பணத்தில் கை வைப்பது.  தங்களின்   நிறுவனத்தில்  பணி புரியும் ஊழியர்களின் சம்பளத்தைக்  கொடுக்க  முடிவதில்லை. இன்னும் பல முக்கிய  மாதா மாதம் கட்ட  வேண்டிய பணத்தைக் கட்ட முடிவதில்லை.  இப்படிப் பல சிக்கல்களில் சிக்கிக் கொள்வது. அதன் பின் "வியாபாரம் நஷ்டம்" என்று சொல்லி நிறுவனத்தைக் குற்றம் சொல்லுவது. பிரச்சனை  நம்மிடமிருந்து தான் ஆரம்பமாகிறது என்பதை நாம் ஏற்றுக் கொள்ளுவதில்லை!  

அதனால் தான் சொல்லுகிறேன். ஒவ்வொரு மாதமும் ஏற்படுகின்ற செலவுகளுக்கு  நாம்  முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.ஒவ்வொரு  மாதமும்  இலாப நஷ்டத்தை  தெரிந்து கொள்ள வேண்டும். செலவுகள்  போக  மீத  இலாபத்தையே  மீண்டும் நிறுவனத்திலேயே முதலீடு செய்ய வேண்டும். 

இது  தான்  சிறப்பான  நேர்மையான  வழி. வங்கிகள்  நமது  சமுதாயத்தினருக்குக் கடன்  கொடுக்க  விரும்பவதில்லை.  காரணம் நமது  நிறுவனத்தின்  மீது  கடன்  வாங்குவது; அதன் பின்னர்  அந்தப்  பணத்தை வேறு  எதற்கோ செலவு  செய்வது  என்பதெல்லாம் நமக்கு இயல்பான  காரியம்.

நமது நிறுவனங்கள்  வளர  வேண்டும்.  நாம் தொழில்  செய்யும்  சமுதாயமாக  மாற  வேண்டும். நமது  நிறுவனங்களின்  வளர்ச்சியில் இன்னும்  நாம்  முனைப்பு  காட்ட  வேண்டும்.

ஆக, அந்த  தொழிலதிபர் சொன்னது  போல  வருமானத்தை  மீண்டும்   மீண்டும்  நமது  தொழிலேயே  நாம் முதலீடு  செய்ய  வேண்டும். எப்போதோ கேட்டதாக  இருக்கலாம். ஆனால்  இப்போதும்  அது  தான் சரியான  வழி.

மீண்டும், மீண்டும்,  மீண்டும் தொழிலேயே...!
Sunday, 29 October 2017

கேள்வி - பதில் (63)


கேள்வி

நடிகர் கமல்ஹாசன் களத்தில் இறங்கிவிட்டாரே!

பதில்

உண்மை தான்!  எதிர்பார்க்கவில்லை! சமீபத்தில் எண்ணூர்,  கொசஸ்தலை கழிமுகத்தில் கொட்டப்படும் சாம்பல் கழிவுகள், ஆக்கிரமிப்புக்களைப் பார்வையிட்டிருக்கிறார். அத்தோடு அவரைத் தமிழக விவசாய சங்கத்தினரும் தங்களுடன் கலந்துரையாடல் நிகழ்வுக்கு வரும்படியும் அழைப்பு விடுத்திருக்கின்றனர்.

இவைகளெல்லாம் நல்ல செய்திகள் தான். ஓரளவு மக்களோடு மக்களாக ஒட்டி உறவாட களம் இறங்கியிருக்கிறார். தமிழ் நாட்டில் நிறைய குறைகள் இருப்பது அவருக்குத் தெரியும்.    ஆனால் மக்களுடனான தொடர்புகள் அவருக்கு இல்லை. இப்போது தான் வேட்டியைத் தூக்கிக்கொண்டு களத்தில் இறங்கியிருக்கிறார்.

டுவீட் செய்வது வேறு களம் இறங்குவது வேறு என்பது இப்போது அவருக்குப் புரிந்திருக்கும். நேரடியாகப் பார்க்கும் போது கொஞ்சமாவது நெஞ்சிலே ஈரம் கசியும். அரசியல்வாதிகள் செய்ய முடியாததை அவர் செய்திருக்கிறார்.  எப்படிப் பார்த்தாலும் அரசியல்வாதிகள் தங்களது தொகுதி பக்கம் போவதில்லை என்று சபதம் எடுத்திருக்கிறார்கள்! அதனால் யாராவது போய்த்தான் ஆக வேண்டும். அங்குள்ள மக்கள் அனுதினமும் ஏதோ ஒரு வகையில் தங்களது எதிர்ப்புக்களைக் காட்டிக்கொண்டு  தான் இருக்கிறார்கள். ஆட்சியர், தங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர்  என்று அவர்களிடம்  தங்களது மனுக்களைச் சமர்ப்பித்துக் கொண்டு தான்  இருக்கிறார்கள். ஆனாலும் எதுவும் எடுபடவில்லை!  ஏழைச் சொல் அமபலம் ஏறாது என்று சும்மவா சொன்னார்கள்! ஆனால் அவர்கள் ஏழைகள் அல்ல. அந்தத் தொகுதியின் எஜமானர்கள். அதனை அவர்களும் உணரவில்லை, இவர்களும் உணரவில்லை! அதனால் வந்த வினை!

சரி! இப்போது கமல் அந்த இடத்திற்கு வருகை தந்ததின் மூலம் ஏதாவது பயன் உண்டா? எத்தனையோ எதிர்கட்சித் தலைவர்கள் அங்கு வந்து கொண்டும் போய்க்கொண்டும் தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களையெல்லாம்  ஆளுங்கட்சியினர்  காவல்துறையினரை வைத்து விரட்டிவிடுவார்கள். கமல் விஷயத்தில் அப்படி எல்லாம் செய்து விட முடியாது என்பது ஒரு கூடுதல் பலம்.  அடுத்து, கமல் என்ன செய்வார்? டுவீட் செய்வார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே! அத்தோடு மட்டுமா? ஒரு வேளை சம்பந்தப்பட்ட துறையினருக்கு அவர் புகார் அனுப்பலாம்.  அவர் மட்டும் அல்ல, அந்தத் தொகுதியைச் சேர்ந்த அனைவரையும் புகார் அனுப்பும்படியும் செய்யலாம். தனது நற்பணிமன்றத்தையும் புகார் அனுப்பப் பணிக்கலாம். எது வேண்டுமானாலும் நடக்கும். இதன் மூலம் நல்லது நடந்தால் நமக்கும் மகிழ்ச்சியே!  ஆனால் அரசியல்வாதிகள் லேசுபட்டவர்கள் அல்ல.  இதன் மூலம் கமலுக்கு நல்ல பெயர் கிடைப்பதை விரும்பமாட்டர்கள். அவர்கள் என்ன ஆயுதத்தைப் பயன் படுத்துவார்கள் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அது சரி! இந்த களப்பணி மூலம் கமல் என்ன சாதிக்கப் போகிறார்? நேரடியாக அரசியலில் இறங்குவார் என்பதற்கான அறிகுறியா? இல்லை! அரசியலில் இறங்குவார் என்பதற்கான எந்தச் சாத்தியமும் இல்லை என்பதாகத்தான் நான் நினைக்கிறேன். ஒரு வேளை வருங்காலங்களில் அப்படி ஒரு நிலைமை வரலாம். அதற்கான வேலைகளை இப்போதே ஆரம்பித்து விட்டார் என்று நினைக்கிறேன்.

யார் வந்தால் என்ன,  தமிழ் நாட்டுக்கு நல்லது நடந்தால் சரி. அவன் தமிழனாக இருக்க வேண்டும். தமிழ் உணர்வு மிக்கவனாக இருக்க வேண்டும். தமிழர் நலனில் அக்கறை உள்ளவனாக இருக்க வேண்டும். அதுவர் நமது எதிர்பார்ப்பு!                                                                     


Saturday, 28 October 2017

உழைத்து உழைத்து ஓடாய்......!


உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து போனேன் என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். இன்னும் சிலர் இந்தக் குடும்பத்துக்காக உழைத்து உழைத்து  தேய்ந்து போனது தான் மிச்சம் என்று சொல்லுபவர்களும் இருக்கிறார்கள்.

எப்படிப் பார்த்தாலும் அவர்கள் தேய்ந்து போயிருக்கிறார்கள் என்பது  தான் இங்கு நாம் பேச வந்த செய்தி. தேய்ந்து போயிருந்தால் மகிழ்ச்சி அடையுங்கள். நீங்கள் தேய்ந்து போயிருப்பதால் தான் இன்னும் துருப்பிடிக்காமல் நல்ல படியாக இருக்கிறீர்கள்.  துருப்பிடித்த ஓர் இரும்புத் துண்டை பாரூங்கள்.. அது என்ன நமக்கு  மகிழ்ச்சியையா கொடுக்கிறது? அதில் ஏற்பட்டிருக்கிற அந்தத் துருவை அகற்ற நாம் என்ன பாடுபட வேண்டியிருக்கிறது. அதுவே பயன்பாட்டில் இருந்திருந்தால் அது துரு பிடிக்க வழியில்லை. ஒரு வேளை தேய்ந்து போயிருக்கலாம். அது இயற்கை தானே! 

அப்படித்தான் மனிதனும்.  நாம் உழைக்கத்தானே பிறந்திருக்கிறோம்? உழைப்பது தானே நமது வேலை. படைப்பின் நோக்கமே அது தானே.  வீணில் உண்டு களிப்பதற்கா இந்தப் படைப்பு? நாம் செய்கின்ற வேலைகளில் வேறுபடலாம். ஆனால் ஏதோ ஒரு வகையில் உழைப்பு என்பது அனைவருக்கும் பொதுவானது. உழைத்துத் தான் ஆக வேண்டும். உழைக்கும் போது தான் நமது அனைத்து  உடல் உறுப்புக்களும் தங்களது வேலைகளை சரிவரச் செய்கின்றன. உழைப்பு என்று ஒன்று இல்லாவிட்டால் - அந்த உறுப்புகளுக்கு நாம் வேலைக் கொடுக்காவிட்டால் - என்ன நடக்கும்? அது துருப்பிடித்து வியாதிகளை உருவாக்கும். அதனைச் சரி செய்ய மருந்து மாத்திரைகளை விழுங்கி, விழுங்கி ஏற்பட்டுவிட்ட பாதிப்பை நிவர்த்தி செய்யும் வேலையை டாக்டரிடம் விட்டுவிடுவோம். ஆனாலும் நாம் தானே அந்த வேதனையை அனுபவிக்கிறோம்! வேலை செய்யாத உறுப்புக்கள், செத்துப்போன உறுப்புக்களுக்குச் சமம். அதனை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கு அசாதாரண முயற்சிகள் தேவை.

ஆனால் அதுவே நாம் உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து போனால் என்ன நடக்கும்? ஏதோ ஒரு சில உறுப்புக்கள் மட்டுமே தேய்ந்து போகும் வாய்ப்புண்டு. நீண்ட நாள் வேலை செய்யும் போது ஒரு சில உறுப்புக்கள் தேய்ந்து போகும். அதற்கும் சில பயிற்சிகள் மூலம் சரி செய்யலாம். அல்லது மருந்து மாத்திரைகளும் சரி செய்து விடும்.  ஆனாலும் நாம் சரியாக வேலை செய்திருக்கிறோம் என்னும் மனநிறைவோடு நாம் மருத்துவம் செய்வோம். கடைசிக்காலம் கூட மகிழ்ச்சியாக இருக்கும். ஆமாம்! நாம் இருந்த காலம் வரை நாம் நமது காலத்தை வீணடிக்கவில்லை என்பதே மகிழ்ச்சிக்குரிய விஷயம் தானே!

மகிழ்ச்சி அடையுங்கள். ஆனால் மனதிலே கொஞ்சம் நேர்மறையான எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். உழைத்து, உழைத்து  நானும் உயர்ந்தேன். என் குடும்பத்தினையும் உய்ர்த்தினேன்! உழைத்து, உழைத்து ஓடாய் தேய வில்லை! ஓகோ, ஓகோ என்று வாழ்வற்கு ஓடி ஓடி உழைத்தேன்! 

ஆக, அது என் வாழ்க்கை! என் குடும்பம் உயர வாழ்ந்த வாழ்க்கை! நான் ஓடாயும் தேயவில்லை. துருப் பிடித்த வாழ்க்கையும் வாழவில்லை. உழைத்து உழைத்து என்னை நானே  மெருகேற்றினேன்!

நாம் தேய்ந்தாலும் பரவாயில்லை; துருப்பிடிக்க வேண்டாம்!

Friday, 27 October 2017

கேள்வி - பதில் (62)


கேள்வி

ரஜினியும் சரி, கமல்ஹாசனும் சரி அரசியலுக்கு வருவது பற்றி இன்னும் உறுதியாக ஒன்றும் சொல்லவில்லையே! இது நடக்குமா?

பதில்

போகிற போக்கைப் பார்த்தால் இவர்கள் இருவருமே அரசியலுக்கு வருவார்கள் என்று தோன்றவில்லை! ரஜினி அரசியலுக்கு வருவதில் உறுதியாகத்தான் இருந்தார்.  இடையே கமல் புகுந்து குழப்பத்தை ஏற்படுத்தி விட்டார் என்று தான் சொல்லத் தோன்றுகிறது. இப்போது அவரும் இல்லை, இவரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது.

ஆனால் எதனையும் உறுதியாகச் சொல்லுவதற்கில்லை. ஒரு வேளை,  கமல் இப்படித்தான் செய்வார் என்பதை ரஜினி முன் கூட்டியே அறிந்திருக்கலாம். அரசியல் என்பது சாதாரண விஷயம் அல்ல. கமலுக்கு அரசியலில் ஒரு தெளிவு இல்லை. முன்னுக்குப் பின் முரணாகப் பேசிக் கொண்டிருக்கிறார்! அதற்கு ரஜினியே பராவாயில்லை என்று சொல்லலாம். அவர் எதிலுமே வாய்த் திறக்க மாட்டேன் என்று சொல்லுகிறார்கள்.  தேவை இல்லை! இப்போது கமல் வாய் திறந்தார். என்ன ஆயிற்று? எதுவும் ஆகவில்லை! ரஜினி அமைதியாக என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை கவனித்துக் கொண்டிருக்கிறார்.  தக்கவர்களிடம் ஆலோசனைக் கேட்டு உன்னிப்பாக அனைத்தையும் அசை போட்டுக் கொண்டிருக்கிறார். அரசியலுக்கு வர  தன்னைத்  தயார் செய்து கொண்டிருக்கிறார் என்று சொல்லலாம். 

இந்த நிலையில் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் சொன்ன கருத்தும் யோசிக்க வேண்டி உள்ளது. கமல்-ரஜினி ஒன்று சேர்ந்தாலும் 10 விழுக்காடு வாக்குகளைத்தான் பெற முடியும் என்று கூறியிருக்கிறார். சரியாக இருக்கலாம்.  காரணம் இவர்கள் அரசியலுக்கு வருவதற்கான எந்த அடிப்படை வேலையும் செய்யவில்லை. எல்லாரும் எம்.ஜி.ஆர். ரைச் சுட்டிக் காட்டுகிறார்கள். அவர் தீடீரென அரசியலுக்குள் புகவில்லை. அவர் வருவதற்கு முன் அவருடைய திரைப்படங்களில்  "மக்களைக் காப்பாற்ற வந்த மகாத்மா" வாக  தன்னைக் காட்டிக் கொண்டார்!  ஜெயலலிதா எம்.ஜி.ஆரின் நிழல். அதனால், அதனால் மட்டுமே, அவர் இவ்வளவு நாள் நிலைத்து நின்றார்.       மற்றபடி ஜெயலலிதா வெறும் சுழியம்!   

ரஜினிக்கும், கமலுக்கு அரசியலுக்கு வர எந்தப் பின்னணியும் இல்லை. திரைப்படங்களில் கூட அப்படி அவர்கள் காட்டிக்கொள்ள  வில்லை! 

கமல் அரசியலுக்கு வர மாட்டார் என்று உறுதியானால் ரஜினி மீண்டும்,  நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லலாம். அவர் முன்  கூட்டியே சொன்னது போல் ஜனவரி மாதம் அவருடைய ரசிகர் மன்றத்தைக் கூட்டலாம்.     

அரசியலில் எதுவும் நடக்கும். யாரும் போட்டியிடலாம். வெற்றி என்பது மக்கள் கையில்! அவர்கள் தான் எஜமானர்கள்!

பொறுத்திருப்போம்!                                                                                                                                                                                                                                                                 


Thursday, 26 October 2017

கோயில், சர்ச், மசூதி


மெர்சல் படம் வந்ததிலிருந்து தமிழக பா.ஜ.க. வினர் பலவித குற்றச்சாட்டுக்களை நடிகர் விஜயின் மீது வலிந்து திணித்து வருகின்றனர்.  அது அரசியல் என்று வைத்துக் கொள்ளலாம். இதில் குறிப்பாக அவர் விஜய், ஜோசப் விஜய், என்று அவர் முழுப்பெயரைச் சொல்லி அவர் கிறிஸ்துவர் என்றும் அதனால் தான் அவர் மெர்சல் படத்தில் கோயில் கட்டுவதை எதிர்க்கிறார் என்றும் அவர் மீது குற்றம் சாட்டப்படுகின்றது.

இந்த நேரத்தில் ஒன்றைச் சுட்டிக் காட்ட வேண்டும். அவர் பிறப்பால் கிருஸ்துவர் என்பது உண்மை தான். அவர் தந்தை பிறப்பால் கிறிஸ்துவர்; அவர் தாயார் பிறப்பால் ஓர் இந்து. விஜய் ஓரு கிறிஸ்துவராக இருந்தாலும் திருமணத்திற்குப் பின்னர் அவர் இந்துவாக மாறிவிட்டார். அவர் மனைவி ஓர் இந்து. இதெல்லாம், இப்படி மாறுவது, அப்படி மாறுவது என்பதெல்லாம் ஒன்றும் அதிசயமான செய்தி அல்ல. அதற்கு ஏதேனும் காரணங்கள் இருக்கலாம். சில மாதங்களுக்கு முன்னர் விஜய் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு முகத்தை மறைத்துக் கொண்டு போனதாக ஒரு செய்தியைப் படித்தேன்!  ஆக,  தமிழக பா.ஜ.க., குறிப்பாக எச்.ராஜா அவர்கள், ஓர் இந்துவை, கிறிஸ்துவர் என்று சொல்லி கலாய்த்துக் கொண்டிருக்கிறார்! விஜயைப் பற்றி எல்லாத் தகவல்களையும் திரட்டியவர் இதனையும் அவர் திரட்டி இருக்க வேண்டும். அது தான் நியாயம். எச்.ராஜா,  வட இந்திய  மாநிலத்தைச் சேர்ந்தவர்; தமிழ் நாட்டில் குடியேறிய குடும்பம் அவருடையது. வட மாநிலங்கள் மதக்கலவரத்திற்குப் பெயர் போனவை. அங்கு செய்ய வேண்டிய வேலையை இப்போது இங்கு செய்து கொண்டிருக்கிறார்! நமக்கும் வருத்தம் தான்!

இன்னொன்று கோயில். கோயில் என்பது ஒரு பொதுவான சொல். அது எல்லா வழிப்பாட்டுத் தலங்களையும் குறிக்கும். தமிழகக் கிராமங்களில் இப்போதும் கிறிஸ்துவ தேவாலயங்களை, கோயில் என்று தான் பேச்சு வழக்கில் உள்ளது. படித்தவர்கள் மட்டுமே "சர்ச்" என்கிறார்கள். அதுவும் தமிழக பாணியில்! குறிப்பாக மலேசியாவில் தேவாலயங்களைப் பேச்சு வழக்கில் கோயில் என்று தான் குறிப்புடுகிறோம். ஆங்கிலத்தில் பேசும் போது மட்டுமே CHURCH என்கிறோம்.

முஸ்லிம்கள் பேச்சு வழக்கிலும் பள்ளிவாசல் அல்லது மசூதி என்று பயன்படுத்துவது உண்மை தான். ஆனால் முஸ்லிம் அல்லாத சாதாரண 
மக்களிடையே அதுவும் ஒரு வழிபாட்டுத்தலம். அவ்வளவு தான். அதுவும் ஒரு கோயில் தான்.

புத்தமத வழிபாட்டுத்தலங்களை புத்தக் கோயில் என்று தான் சொல்லுகிறோம். ஆக, கோயில் என்பது ஒரு பொதுவானச் சொல். அதனால் தான் வேளாங்கண்ணி மாதாக் கோயில், பூண்டிமாதா கோயில் என்று இன்றளவும் நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். 

ஒரு வேளை, எச். ராஜா போன்ற பிராமணர்களிடையே கோயில் என்பதற்கு வேறு அர்த்தம் இருக்கலாம். அதனை நான் அறியவில்லை! மன்னிக்கவும்! மற்றபடி வழிபாட்டுத்தலங்கள் அனைத்துமே கோயில்கள் தான்!

Sunday, 22 October 2017

சிவகார்த்திகேயனுக்கு ......நன்றி!


நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நன்றி!

பொதுவாகச் சொல்லப் போனால் சமீப காலத்திய நடிகர்களைப் பெரும்பாலும் எனக்குத் தெரியாது. அவர்களின் படங்களை நான் பார்த்ததில்லை. அது ஏனோ அவர்களின் படங்கள் எனக்குத் தூக்கத்தையே கொண்டு வருகின்றன! ரஜினியின் கபாலி படத்தை நான்  தியேட்டரில் பார்த்தேன். கமல்ஹாசன், ரஜினி படங்களைத் தவிர மற்றவர் படங்களைத் தியேட்டரில் பார்ப்பதில்லை. ஏதோ தொலைக்காட்சியில் அவ்வப்போது யார் அந்த நடிகர் என்று தெரியாமலேயே பார்ப்பதுண்டு!  இதற்கெல்லாம் காரணம் படம் பார்க்கும் போதே - ஒரு பத்து நிமிடம் போதும் - தூங்கி விழுந்து கொண்டிருப்பேன்!  திரைப்படங்களின் மீது ஆர்வமில்லை; அவ்வளவு தான்!

தீபாவளி சமயத்தில் நடிகர் சிவகார்த்திகேயனோடு ஒரு தொலைக்காட்சியில் நேர்காணல் நடந்து கொண்டிருந்தது. அதனைப் பார்த்துக் கொண்டிருந்த போது நல்லதொரு கருத்தை அவர் சொல்லிக் கொண்டிருந்தார். அது எனக்குப் பிடித்திருந்தது.  நல்ல கருத்தை யார் சொன்னால் என்ன?  நான் உங்களோடு பகிர்ந்து கொள்ளுகிறேன்.

"நான் சினிமா உலகில் யாரையும் போட்டியாகக் கருதவில்லை. நானே தான் எனக்குப் போட்டி. ஒவ்வொரு படத்திலும் இன்னும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதைத் தவிர மற்ற நடிகர்களுடன் நான் போட்டிப் போடுவதில்லை!" 

நாம் அனைவருமே கேட்டு, கடைப்பிடிக்க வேண்டிய ஒரு கருத்து. நாம் வேலை செய்கின்ற இடத்தில் யாரும் நமக்குப் போட்டியில்லை. நம்முடைய வேலையை நாம் இன்னும் சிறப்பாகச் செய்தால் நமது முன்னேற்றத்தை யாரும் தடுத்து விட முடியாது. வியாபாரம் நாம் செய்கின்றோமா?  நமக்கு யாரும் போட்டியில்லை. நமக்கு நாமே ஒவ்வொரு ஆண்டும் சில இலக்குகளை வைத்து அதனை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். யார் உடனும் போட்டி தேவை இல்லை. இந்த ஆண்டை விட அடுத்த ஆண்டு   இன்னும் அதிகமாக நாம் செயல்பட வேண்டும். நமது இலக்கை அடைய வேண்டும். எல்லாமே நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் ஒருவகையான உந்துதல்.

மற்றவருடன்  போட்டி போடுவதால் என்ன நடக்கும்? தேவையற்ற சர்ச்சைகள், முணுமுணுப்புக்கள்,  பொறாமை - இவைகளெல்லாம் நம்மைப் பின் நோக்கி இழுக்குமே தவிர நம்மை முன் நோக்கி நகர்த்தாது. அது மட்டுமா? நமது உடல் நலனுக்கும் கேடு விளைவிக்கும். எந்தத் துறையில் நாம் இருந்தால் என்ன? நாம் நமது பங்கினை நூறு விழுக்காடு கொடுக்க வேண்டும். யாருடனும் ஒப்பீடு வேண்டாம். நமது திறமைகள் மற்றவர்களோடு ஒப்பிடும் போது ஒரே மாதிரி இருப்பதில்லை. மற்றவர்கள் நம்மை விட குறைவானத் திறமையுடைவர்களாக 
 இருப்பார்கள். நமக்குத் தெரியாத வேறு ஒரு துறையில் அவர்கள் திறமைசாலிகளாக இருப்பார்கள்.

அதனால் நமது திறமைகளை நாம் நமது துறையிலேயே அதிகக் கவனம் செலுத்தி வளர்த்துக் கொள்ள வேண்டும். நாம் யாருடனும் போட்டி போட வேண்டியதில்லை. யாருடனும் நமக்குப் போட்டி வேண்டாம். நமக்கு நாமே தான் போட்டி!

சிவகார்த்திகேயனுக்கு நன்றீ!

Friday, 20 October 2017

"துளசி" யும் போலியா..?


அடாடா! எது தான் போலியாகத் தயாரிக்கப்பட வேண்டும் என்பதில் எந்தப் போலித் தயாரிப்பாளனுக்கும் விவஸ்தையே இல்லை.  உணவுப் பொருட்களில் போலி, மருந்துகளில் போலி  இப்படி அனைத்துமே போலி! போலி! போலி! இப்படிப் போலியாக தயாரிக்கிறானே அந்த முதலாளி அவன் வீட்டுப் பிள்ளைகள் மட்டும் என்ன தப்பி விடுவார்களா?

அந்தக் கால திரைப்படம் ஒன்றில் "கலப்படம், கலப்படம்! எங்கும் எதிலும் கலப்படம்" என்று பாடல் வரும். எஸ்.சி.கிருஷ்ணன் பாடியிருப்பார். ஆக, இந்தப் போலித் தயாரிப்புக்களுக்கு அந்தக் காலத்திலேயே அடிக்கல் நாட்டி விட்டார்கள்!

 சமீபத்தில், நான் பயன்படுத்தும் குளிக்கும் சவர்க்காரம் கூட போலியானது என்பதை அறிந்து அதிர்ந்து போனேன். துளசி சவர்க்காரம் தான் நான் பயன்படுத்துகிறேன்.  காரணம் ஏதோ மூலிகைக் கலந்தது என்பதால் - அல்லது துளசி என்பதே ஓரு மூலிகை என்பதால் அதனைப் பயன்படுத்தவதில் தவறு ஒன்றுமில்லையே!

ஆரம்ப காலத்தில் நான் வாங்கும் போது "துளசி" என்று கொட்டை எழுத்துக்களில் அதன் மேல் அட்டையில் தமிழில் எழுதப்பட்டிருக்கும்.  தமிழில் எழுதியிருந்தால் நமக்கு ஒரு ஈர்ப்பைக் கொடுக்கும் என்பது உண்மை தானே! நான் வாங்குவதற்கு அதுவும் ஒரு காரணம். தமிழ் சம்பந்தப்பட்ட எதுவாக இருந்தாலும் அதற்கு நான் முதலிடம் கொடுப்பேன். ஆனால் நான் கடைசியாக இந்தத் துளசி சவர்க்காரத்தை வாங்கிய போது ஒன்றைக் கவனித்தேன். முற்றிலுமாக தமிழ் தவிர்க்கப்பட்டிருந்தது. அட! சீன மொழி,  அரபு மொழி எல்லாம் அச்சடிக்கப் பட்டிருந்தது ஆச்சயரியமாக இருந்தது! அப்போது தான் ஞாபகம் வந்தது.  எந்த சீனன் துளசி சவர்க்காரம் பயன்படுத்துகிறான்? ஆகா! இங்கும் போலி புகுந்து விட்டதே என்னும் அதிர்ச்சி!

போலிகளுக்கு ஆதரவு கொடுக்கக் கூடாது என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஒரு நிறுவனம் தயாரிக்கும் ஒரு பொருளை இன்னொரு நிறுவனம் போலியாகத் தயாரிப்பது யாராலும்  ஏற்றுக்கொள்ள முடியாது. போலித் தயாரிப்புக்கள் மக்களுக்குத் தீங்கு விளைவிப்பவை.

இது போல பல பொருட்கள் போலியாக இருக்கலாம். தமிழ் எழுத்துகள் உள்ள பொருட்கள் பெரும்பாலும் போலியாக இருப்பதில்லை. அடுத்த முறை பொருட்களை வாங்கும் போது தமிழ் இருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள். போலிகளைப் புறக்கணிப்போம்!

Thursday, 19 October 2017

இது வாழ்த்துச் செய்தி அல்ல....!


பத்திரிக்கைகளில் வரும் தலைவர்களின் தீபாவளி வாழ்த்துச் செய்திகளைப் படிக்கும் பழக்கமில்லை. சும்மா அப்படியே 'மேய்ந்து' விட்டுப் போகும் பழக்கம் உண்டு! காரணம் அவர்கள் சொல்லும் எதுவும் புதிதல்ல. அவர்கள் சொல்லுவதை அவர்களே கேட்கப்போவதில்லை! நாமும் கேட்கும் நிலையிலில்லை! சொல்லுவதற்கும் ஒரு தகுதி வேண்டும். அரசியல்வாதிகளுக்கு அந்தத் தகுதி இல்லை என்பதால் நாமும் தகுதியற்றவர்களின் செய்திகளைப் படிக்க தயாராக இல்லை!

இப்படி 'மேய்ந்து' கொண்டு வரும் போது மைபிபிபி கட்சியின்,தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் கொடுத்த தீபாவளி செய்தியில் ஏதோ ஒரு செய்தி இருப்பதாகத் தோன்றியது.

"அந்த வாழ்க்கையை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இலக்கை வைத்து பயணிக்க நாம் தயார் நிலையில் இருப்பதே சிறப்பு....

வாழ்க்கை என்பது அனைத்தையும் கடந்து செல்வது என்று  எண்ணி சந்திக்கும் சவால்களைத் தவிடு பொடியாக்கிப் பயணிப்பவர்களுக்கும்.....

வளரும் நம்மை இழுத்துப் பிடித்து கீழே தள்ளும் கூட்டத்தை இனியும் நம்பாலும் வெற்றிச் சிகரத்தை நோக்கி பயணிக்கத் தொடங்குங்கள்."

இது போன்ற வாசகங்கள் தனி மனித முன்னேற்றத்தைப் பற்றி பேசுகின்றன. நான் வழக்கமாக வாங்கும் பத்திரிக்கையில் கேவியசின் செய்தி வரவில்லை ஒரு வேளை அது அரசியலாக இருக்கலாம்.   இது "வணக்கம் மலேசியா" இணையத் தளத்தில் வந்த செய்தி.

நான் அவரின் அரசியலை ஆதரிப்பவன் அல்ல. ஆனாலும் நல்லதொரு செய்தியைக் கொடுத்திருக்கிறார் கேவியஸ். நமது தனி மனித முன்னேற்றமே நமது சமுதாயத்தின் முன்னேற்றம். நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் முன்னேற அவர் சொல்லுவது போல ஓர் இலக்கை வைத்து பயணிக்க வேண்டும். நமக்கும் சவால்களுக்கும் ஒரு பஞ்சமும் இல்லை. அனைத்துச் சவால்களையும் தவிடு பொடியாக்கி பயணம் செய்பவர்களைத் தான் இந்த உலகம் கை தட்டி வரவேற்கிறது. வளரும் நம்மை வளர விடாமல் தடுக்க நமக்கு ஆயிரம் சோதனைகள். சோதனைகள், வேதனைகள் வரத்தான் செய்யும். அவைகள் தான் நம்மை சரியான பாதையில் கொண்டு செல்லும். யாரையும் அவ்வளவு எளிதில் நம்பி விடாதீர்கள்.  அதுவும் அரசியல்வாதிகளை அரைக்காசுக்குக் கூட நம்பாதீர்கள். கடவுளை நம்புங்கள்; உங்களை நம்புங்கள். வெற்றிச் சிகரமே நமது நோக்கம்; நமது பயணம். 

நமக்கு வேண்டியது ஒரே ஒரு இலக்கு. அது தான் வெற்றி! வெற்றி! வெற்றி!
Wednesday, 18 October 2017

குழப்பத்தை ஏற்படுத்தும் .......!


நமது இஸ்லாமியச் சொற்பொழிவாளர் சிலர் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதே நோக்கமாகக் கொண்டிருப்பது நமக்கும் வருத்தத்தையே அளிக்கிறது. அதுவும் ஓர் இந்தியரான ஜாக்கிர் நாயக்கிற்கு எப்போது நாட்டில் அடைக்கலம் கொடுத்தார்களோ  அப்போதிருந்தே அவரிடமிருந்து நமது உள்ளூர் சொற்பொழிவாளர்கள் "நிறைய" கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

நமது ஒரே வருத்தம் இவர் ஜொகூர் மாநிலத்தவர் அல்ல. பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்.ஷாகூல் ஹமீது என்பது இவரது  பெயர்.  இத்தனை ஆண்டுகள் நாம் கேட்காததையெல்லாம்  இப்போது இவரைப் போன்ற  சொற்பொழிவாளர்கள் மூலம் நாம் கேட்க முடிகிறது!

என்ன சொல்லுகிறார்? முஸ்லிம் அல்லாதவர்கள் கடைகளில் முஸ்லிம்கள் முடி வெட்டிக் கொள்ளுவது ஏற்புடையதல்ல  என்கிறார்  ஷாகூல். முஸ்லிம் அல்லாதவர்களால் நடத்தப்படும் பள்ளிகளுக்கு உங்கள் பிள்ளைகளை அனுப்பாதீர்கள். சமயத்தின் முறைப்படி இவைகள் எல்லாம் தவறானவை என்கிறார்.  "பிறந்த நாள் வாழ்த்துகள்"  என்று வாழ்த்துவதோ "ஹலோ"  என்று தொலைப்பேசியை எடுத்ததும் கூறுவதோ தவிர்க்கப்பட வேண்டும் என்கிறார்.

இப்படிப் பேசுவதற்கெல்லாம் என்ன ஆதாரம் என்று  நமக்கும் புரியவில்லை. முஸ்லிம் அல்லாதவர்கள் கடைகளுக்குப் போகக் கூடாது என்பதில் - முஸ்லிம்கள் அல்லாதவர்களும் உள்ள  ஒரு நாட்டில் - இதெல்லாம் சாத்தியமா என்பது ஏன் அவருக்குப் புரியவில்லை? எல்லா நேரங்களிலும் "முஸ்லிம் கடைகளுக்கும் மட்டும் தான்" என்கிற கொள்கை சாத்தியம் இல்லை!  இன்று அரசாங்கம் மாணவர்களைக் கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து வெளி நாடுகளுக்குப் படிக்க அனுப்புகிறார்களே - முஸ்லிம் அல்லாதவர்கள் தானே படித்துக் கொடுக்கிறார்கள்! 

இவர்களால் எப்படி இப்படியெல்லாம் பேச முடிகிறது என்பது நமக்குப் புரியவில்லை! இவர் என்ன பிறந்ததிலிருந்து முஸ்லிம்களை மட்டுமா பார்த்தும், பேசிக் கொண்டும் இருக்கிறார்? அதுவும் தவறு தானே? நீங்கள் குழம்பியிருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. அது உங்களோடு இருக்கட்டும்! மக்களைக் குழப்ப வேண்டாம்! அதுவே நமது வேண்டுகோள்.

Monday, 16 October 2017

தீடீர் அல்ல, தீபாவளி..!


தீபாவளி, தீடீரென வரும் பெருநாள் அல்ல. ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடித்தான் வருகிறோம்.  மற்ற பெருநாட்களைப் போல தீபாவளியும் ஒவ்வொரு ஆண்டும் வந்தும் போயும் கொண்டிருக்கிறது.

ஆனாலும் செலவு என்று வரும் போது,  எப்போதும் போல, இப்போதும், முன்னை விட, மிகவும் எச்சரிக்கையாக பணத்தின் மீது  கை வைக்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு காசாகப் பார்த்து செலவு செய்வது என்பது மிகவும் முக்கியம். பொதுவாக அது எல்லாக் காலங்களிலும் முக்கியம். பெருநாள் காலங்களில் மற்றக் காலங்களை விட  முக்கியம்.

நமது நாட்டின் மூன்றாவது பெரும்பான்மை இனத்தைச் சார்ந்தவர்கள் நாம்.  ஆனால் செலவுகள் என்று வரும் போது நாம் தான் முன்னணியில் இருக்கிறோம்! கல்யாணமா, காது குத்தா, கல்யாண நாளா, பிறந்த நாளா - நம்மைப் போல செலவு செய்வதில் நம்மை அடித்துக் கொள்ள ஆளில்லை! வீண் விரயம் செய்வதில் நம்மைப் போல் ஆளில்லை! பணத்தை வீணடிப்பதில் நம்மைப் போல் ஆளில்லை! நம்மிடம் சிக்கனம் மட்டும் இருந்தால் நம்மை அடித்துக் கொள்ள ஆளில்லை!

ஆமாம்! சிக்கனம்! சிக்கனம்! சிக்கனம்! தலைக்கனம் கூட இருக்கலாம் சிக்கனம் இல்லை என்றால் என்றென்றும் சிங்கக்குகை தான் வாழ்க்கை! மறந்து விடாதீர்கள்! சமீபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்டார்கள். பொருளாதார சிக்கலாகத்தான் இருக்க வேண்டும். அது தானே நம் கண்ணுக்குத் தெரிகிறது.  வேறு என்ன?

தீபாவளி எப்போதும் போல ஒவ்வொரு ஆண்டும் வரத்தான் செய்யும். அது வரத்தான் வேண்டும். அதனை நாம் தடை செய்ய முடியாது. செலவுகளைத் தடை செய்வதற்கு சில வழி முறைகள் இருக்கின்றன. முதலில் ஒரு பட்டியல் தயார் செய்யுங்கள். துணிமணிகளுக்கான செலவு. பலகாரங்கள் வாங்குவதற்கான செலவு; அல்லது செய்வதற்கானச் செலவு. வருகையாளர்களுக்கான செலவு. வீட்டு அலங்காரங்கள் - இப்படி முக்கியமான செலுவுகளுக்காக   ஒரு பட்டியல் போடுங்கள். இப்போது தோராயமாக தீபாவாளிச் செலவுக்கென ஒரு தொகை தெரியும்.  அது கூடுதல் என்றால் எப்படி குறைக்கலாம் என்று மீண்டும் மீள் பார்வை செய்யுங்கள். கடைசியாக, இவ்வளவு தான் என்று ஓர் இலக்கை நிர்ணயத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நிர்ணயத்த  அந்தத் தொகை உங்கள் எல்லைக்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதனையே உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள். அதை மீறக்கூடாது என்பது தான் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட தடை. பெருநாள் காலங்களில் மதுவகைகளுக்கு இடமில்லை. அது தேவையும் இல்லை.

இப்படித் திட்டம் போட்டுத் தான் நாம் நமது பெருநாட்களைக் கொண்டாட வேண்டும்.   நமது வீட்டில் நடைபெறுகின்ற எந்த நிகழ்வுகளாக இருந்தாலும் சரி, ஒரு பட்டியலைப் போட்டு, அப்புறம் தான் அந்த நிகழ்வுகள் கொண்டாடப்பட வேண்டும். பணத்தைத் தண்ணீராகச்  செலவு செய்வது  தான் நம்முடைய இயல்பு. அதன் பிறகு வருந்துவதும் நமது இயல்பு.

அதனால் தீபாவளி தீடீரென வரவில்லை. உங்களுக்கென ஒரு இலக்கை நிர்ணயத்துக் கொண்டு பெருநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள். அது உங்கள் பணம். அதனை எப்படி செலவு செய்ய வேண்டும் என்பது உங்கள் கையில்.  பணம் வரும், போகும். போவதைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்.

தீபாவளி வாழ்த்துகள்!                                                                                                                                                                                                                                                                                                                          


சோதனை மேல் சோதனை......!


அவரவர் வேலையை அவரவர் பொறுப்புணர்வோடு செய்வது எத்துணை முக்கியம் என்பதை சமீபத்திய நிகழ்வு ஒன்றைச் சுட்டிக்காட்டுவது நமது கடமை. அதுவும் பல இன, சமயத்தினர் வாழ்கின்ற நாட்டில் பொறுப்புணர்ச்சி என்பது மிக, மிக அவசியம்.   "நாங்கள் எதை வேண்டுமானாலும் பேசுவோம் காரணம் எங்களுக்குக் கீழ் தான் நீங்கள், நாங்கள் அல்ல!" என்னும் பொறுப்பற்ற, திமிர் பேச்சுக்கள்  இப்போது அதிகமாகக் காதில் விழ ஆரம்பித்து விட்டன! 

பேசுபவர்கள் யார்? படிக்காத பாமரனா? இல்லை!  அவன் அப்படிப் பேசமாட்டான். அவன் அறிவுள்ளவன். அவன் சக நண்பர்களுடன் வாழ்பவன்; வாழ வேண்டும். ஆனால் மிக அறிவுள்ளவர்கள் என தங்களுக்குத் தாங்களே நற்சான்றிதழ் கொடுத்துக்  கொண்டு. கண்ணாடி மாளிகையில் இருந்து கொண்டு மற்ற சமயத்தினர் மீது கல் வீசுகிறார்களே, ஜாகிர் நாயக் போன்றவர்கள், இவர்கள் போன்றவர்களால் தான் நாட்டில் அமைதி  குலைகிறது என்பது உண்மை.

சமீபத்திய நிகழ்வினை அறிவீர்கள். சமயச் சொற்பொழிவாளரும், முன்னாள் ஜாக்கிம் அமைப்பின் அதிகாரியுமான ஷாமிஹான் மாட் ஜின் மற்ற இனத்தவரின் மீதான தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதின் மூலம் ஜொகூர் சுல்தானின் கோபத்திற்கு ஆளாகி இருக்கிறார். ஜொகூர் சுல்தான் ஷாமிஹானைப் பற்றி சொன்னவை:  இவர் திமிர்ப்பிடித்தவர்; மற்ற இனத்தவரை அவமதிப்பவர்; பொய் சொல்லுவதில் கெட்டிக்காரர்; நல்லதைக் கற்றுக் கொடுக்காதவர்

கடைசியாக, ஜொகூர் சுல்தான் என்ன சொல்லு வருகிறார்? மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு இலாகாவான (ஜாக்கிம்) இனி  ஜொகூருக்குத் தேவை இல்லை; தடை விதித்திருக்கிறார். சமயப்பிரச்சாரர்களின் பின்னணியை ஆராயும்படி பணித்திருக்கிறார். மாநிலத்திற்குத் தேவையற்றவர்களைக் களை எடுத்து,  அவர்களது அங்கீகாரங்களை மீட்டுக் கொள்ளும்படி கூறியிருக்கிறார்.

சமீபத்தில் சமயப்பள்ளி ஒன்று தீப்பிடித்து எரிந்தது. மாணவர்கள் பலர் சாம்பலாயினர். இத்தீச் சம்பவத்திற்குக் காரணமான மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் உரிமம் இல்லாது பள்ளியை நடத்திய உஸ்தாஸ்கள் கண்டு கொள்ளப்படவில்லை!  இங்கும் சமயம் பொய் சொல்ல வைத்திருக்கிறது. பொய் சொல்லுபவர்களால் எப்படி மாணவர்களுக்கு  நல்லொழுக்கத்தைக் கற்றுக் கொடுக்க முடியும்?

நாம் மீண்டும் சொல்லுகிறோம். சமயத் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்கள் நாட்டிற்கு நல்லதைச் செய்ய வேண்டும்; நல்லதைச் சொல்ல வேண்டும். மக்களுக்கு நம்பிக்கையை ஊட்ட வேண்டும். மக்களை மிரட்டும் தொனியிலேயே  பேசிக் கொண்டிருப்போர்,  களை எடுக்கப்பட வேண்டும். 

இதுவே நமது வேண்டுகோள். சோதனைகள் வரும் போவும். ஆனால் சோதனை மேல் சோதனை வேண்டாம்!

Saturday, 14 October 2017

2,94,000 பேர் திவால்!


நமது நாட்டில் 2,94,000 பேர் திவால் நிலையில் உள்ளனர் என திவால் துறை அறிவித்திருக்கின்றது. இதில்  35 வயதிலிருந்து 45 வரை  உள்ளவர்களே அதிகம்.  இவர்களே 70% திவலானவர்கள் பட்டியலில் இருக்கின்றனர்.   பெரும்பாலும் வீட்டுக்கடன், கார் கடன்,  கடன் அட்டை,  தனிப்பட்ட கடன் மற்றும்  தவணைமுறை கடன்களை முறையாகக் கட்ட இயலாததினால் ஏற்பட்ட திவால்கள்  இவை.  இவர்களில் 25 வயது கீழ் உள்ளவர்களும் கடன் கொடுக்கப்பட்டு திவால் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். இவர்கள் 1109 பேர்.  மிகவும் அதிர்ச்சி தரும் தகவலே! குறைவான வயதினருக்குப் கடன் தருவதும் பிறகு அவர்களைத் திவால் நிலைக்குத் தள்ளுவதும் நிறுவனங்கள் செய்யும் பொறுப்பற்ற செயலாகவே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8,000 பேரிலிருந்து 20,000 பேர் வரை பல காரணங்களுக்காக திவால் ஆகின்றனர்.  இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று களத்தில் இறங்கியிருக்கின்றனர் திவால் துறையினர். "இந்தத் திவால் பிரச்சனையை நீட்டிக் கொண்டு போவது முறையல்ல.  பிரச்சனைக்கு முடிவு கட்ட வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் பிரச்சனையத் தீர்க்க முன் வர வேண்டும். வெட்கப்படுவதற்கு ஒன்றுமில்லை! எங்கள் துறையினர் உங்கள் வருகைக்காகக் காத்துக் கிடக்கின்றனர்"  என்று கூறுகிறார் திவால் துறையின் தலைமை இயக்குனர்,  அப்துல் ரகுமான் புத்ரா.  "திவால் ஆனவர்களையும்,  அவர்களை நீதிமன்றத்தின் வழி,  மீண்டும் தங்களது பணிகளைத் தொடர வழி வகைகளைக் காண முடியும்"  என்கிறார் அவர்.

எப்படியிருப்பினும் இனி ஒவ்வொரு ஆண்டும் குறைந்த பட்சம் 10,000 பேர் திவால் நிலையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று திவால் துறை திட்டமிட்டிருக்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகள் வரை  அவர்களது பணிதொடரும். சம்பந்தப்பட்டவர்கள் திவால் துறையைச் சந்தித்து தங்களது பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டு வர வேண்டு மென்பதே நமது அவா.  ஏதோ ஒரு காரணத்தால் நாம் திவாலாகியிருக்கிறோம். அதனாலென்ன?  திவால் துறை நம்மைக் கூப்பிடுகிறார்கள். பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டு வாருங்கள் என்கிறார்கள். வாய்ப்புக்கள் கொடுத்தும் "எனக்கென்ன" என்று அலட்சியம் காட்டுவது உங்களது எதிர்காலத்தைப் பாதிக்கும். 

நாட்டில் இந்த அளவுக்குத் திவாலானவர் எண்ணிக்கையை அறிந்து நமது பிரதமர் கூட வருத்தப்பட்டிருக்கிறாராம். வருத்தப்படத்தான் செய்வார். காரணம் 70 விழுக்காடு திவாலானவர்கள் நல்ல திடகாத்திரமான நிலையில் உள்ளவர்கள். உழைக்கும் நிலையில் உள்ளவர்கள். இளையத் தலைமுறை.    அவர்களைத் திவாலானவர்கள் என்று ஒதுக்குவது  நாட்டிற்கு ஏற்புடையதல்ல!

திவாலுக்கு ஒரு சவால்! சமாளி!


Friday, 13 October 2017

எறும்புத்தின்னியா, அலுங்கா..?


ஒரு சில ஆண்டுகளுக்கு முன் தமிழகக் தொலைக்காட்சியில் ஒரு செய்தி வெளியாகியது. ஊட்டி மலைப்பகுதியில்  ஓர் அரிய விலங்கைக் காண நேர்ந்ததாகவும் அது  என்ன விலங்கு என்று தெரியவில்லை என்பதாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்த விலங்கையும் காட்டினார்கள்.

அட! இதென்ன? நம்ம ஊரில் அலுங்கு என்று சொல்லுவோமே அதுவல்லவா இது! பிறகு அவர்களே அது எறும்புத்தின்னி என்று யாரோ சொல்ல செய்தியாளரும் அதனை எறும்புத்தின்னி என்று சொன்னதாக ஞாபகம்.எறும்புத்தின்னி என்பது புதிதாகக் கண்டுபிடித்த பெயரா என்பது உறுதியாக எனக்குத்   தெரியவில்லை. ஆனால் இதன் பெயர் அலுங்கு என்பது பல வருடங்களுக்கு முன்னரே எனக்குத் தெரியும். 

தோட்டப்புறங்களில்  இருந்தவர்கள் அறிவர். ஒரு காலக் கட்டத்தில் வேலை முடிந்த பின்னர் தங்களில் கைகளில் ஈட்டியையும் கூடவே நாய்களையும் கூட்டிக் கொண்டு இளைஞர்கள் வேட்டைக்குச் செல்வார்கள். அவர்களின் இலக்கு பெரும்பாலும் காட்டுப் பன்றிகள் அல்லது உடும்பாக இருக்கும். அந்த நேரத்தில் இந்த அலுங்குகளும் 'மாட்டுவது' உண்டு! இந்த விலங்கு மனிதர்களைப் பார்த்தாலே சுருண்டு கொள்ளும் தன்மை உடையது! ஆனால் அந்த நேரத்தில் அதன் மேல் ஓடுகள் எப்படி இருக்கும் என்பதையெல்லாம் நான் அறியவில்லை. எப்படியோ  அதன் இறைச்சியை நான் சாப்பிட்டுருக்கிறேன்! இந்த விலங்கின் மேல் செதில்,  ஆமை ஓடு போன்று கடினமாக இருக்கும் என்பதாகச் சொல்லப்படுகின்றது. அந்தக் காலத்தில் எப்படி இதனை எல்லாம் சமாளித்து அதன் பின் சமைத்தார்கள் என்பது புரியவில்லை! 

இந்த விலங்கின் ஆங்கிலப் பெயர் Pangolin. இப்போது இந்த விலங்கு பார்ப்பது கூட அரிதிலும் அரிது. வெறும் எறும்புகளைத் தின்று உயிர் வாழும் இந்த அலுங்கு மிகவும் சாதுவான - அப்பிராணியான ஒரு விலங்கு.  மிகவும் அரிய வகை பிராணி. இதனைப் பிடிப்பதோ, விற்பதோ சட்டப்படி தடை  செய்யப்பட்டு விட்டது.

சரி, இதன் பெயர் எறும்புத்தின்னியா, அலுங்கா? அந்தக் காலத்தில் தமிழகத்திலிருந்து  இங்கு வந்தவர்கள் இதனை அலுங்கு என்று தான் சொன்னார்கள். அப்படியென்றால் இந்தப் பெயர் தமிழகத்திலிருந்த வந்த பெயர் தான். இந்தப் பிராணி மிகவும் அருகிப் போனாதால் பிற்காலத்தில் இப்படி ஒரு பிராணி இருப்பதையே தமிழர்கள் அறியவில்லை.  மறந்து போனார்கள்! இப்போது அதற்குப் புதிதாக "எறும்புத்தின்னி" என்று பெயர் சூட்டி விட்டார்கள்! எப்படியோ எறும்பைஅலுங்கு தின்னட்டும். நாம் அலுங்கை தின்ன வேண்டாம்!

காரணம் நமக்குக் கை விலங்கு வேண்டாம்!


Thursday, 12 October 2017

73 வயது ....ஆரம்பம் தான்!


என்னப்பா, சொல்றீங்க? 73 வயது எல்லாம் ஒரு வயதா?  73 வயது பாட்டிக்கு வாகனம் ஓட்டும் ஆசை வந்து விட்டது.  ஏற்கனவே பாட்டி கார் ஓட்டும் உரிமம் வைத்திருந்தவர் தான்.  உரிமம் காலாவதியாகி நீண்ட காலம் ஆகிவிட்டது.  இப்போது பாட்டி கார் ஓட்டும் கட்டாய நிலையில் இருக்கிறார்.
ஒவ்வொரு மாதமும் கிளினிக் போக வேண்டும்.  இனிப்பு நீர், இரத்தக் கொதிப்பு பரிசோதனை செய்ய வேண்டும். மாத்திரைகள் வாங்க வேண்டும். பள்ளிவாசல் போக வேண்டும்.   பிள்ளைகள் யாரும் அருகில் இல்லை. எல்லாம் வேலையின் நிமித்தம் வெகு தூரத்தில் இருக்கிறார்கள்.

ஆக, அந்த சங்கடத்தில் இருந்து மீண்டு விட்டார் பாட்டி. கார் ஓட்டும் உரிமம் கிடைத்து விட்டது.  இனி பிரச்சனை இல்லை. தானே  காரை ஓட்டிக் கொண்டு போகலாம். யாரையும் பார்த்துப் பயப்பட வேண்டியதில்லை என்கிறார்!  கார் ஓட்டுவதற்கான அடிப்படைகளைப் புரிந்துகொண்டேன் ஆனால் வயதானதால் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டி உள்ளது என்கிறார் பாட்டி.

அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், எனது பிள்ளைகள் - பலராலும் கேலிக்கும்கிண்டலுக்கும் ஆளானேன்! அதே சமயத்தில் ஊக்கமூட்டும் வார்த்தைகளும் வந்து விழுந்தன. எது எப்படி இருப்பினும் என்னுடைய நோக்கம் ஒன்று தான். எனக்கு கார் ஓட்டும் உரிமம் வேண்டும். அது எனது கட்டாயத் தேவை. இந்த வயதில் கார் ஓட்டும் உரிமம் கிடைத்ததற்காக கடவுளுக்கு நன்றி!

இந்த நேரத்தில் நாம் சொல்ல வேண்டியது என்ன?  வயதானவர்களை ஒரங்கட்டாதீர்கள். சொந்தமாக இயங்க விடுங்கள். அவர்கள் தேவைகளை அவர்களே பூர்த்தி செய்ய முடிந்தால் செய்ய விடுங்கள். இன்று நம்மிடையே உள்ள பிரச்சனை எல்லாம் வயதானவர்களைத் தாழ்த்திப் பேசி அவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி விடுகிறோம். எந்த வயதில் யார் என்ன சாதிப்பார்கள் என்று யாராலும் கணித்து விட முடியாது. கொஞ்சம் நம்பிக்கை, கொஞ்சம் துணிச்சல், கொஞ்சம் பாராட்டு என்று வயதானவர்களுக்குக் கொடுத்துப் பாருங்கள். பிறகு தெரியும் அவர்களுடைய சாதனைகள்!

பாட்டிக்கு மீண்டும் ஒரு புதிய ஆரம்பம். பாட்டிக்கு நீண்ட ஆயுளை இறைவன் அருள்வாராக!


Wednesday, 11 October 2017

சமயப் போதகர் கைது...!


சமயப் போதகர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஜொகூர் சுல்தானை விமர்சனம் செய்ததற்காக  அவர் மீது  இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.  சலவை மையம் ஒன்று "முஸ்லிம்களுக்கு மட்டும்" என்று அறிவிப்புச் செய்ததற்கு ஜொகூர் சுல்தான் கண்டனம் தெரிவித்திருந்தார். சுல்தான் செய்த கண்டனத்திற்கு எதிராக தனது கருத்தைக் கூறிய  சமயப்போதகரும், ஜாக்கிம் அதிகாரியுமான  ஷாமிஹான் மாட்ஜின் மீது காவல்துறை அவர் மீது நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

ஷாமிஹான் மாட்ஜின் அப்படி என்ன கருத்தைக் கூறினார்?


 "சீன இனத்தவர்கள் மிகவும் அசுத்தமானவர்கள். காலைக் கடன்களை முடித்த பின்னர் சுத்தமாகக் கழுவமாட்டார்கள். நாய்களைக் கட்டிப் பிடிப்பார்கள். மது அருந்தவார்கள். பன்றி இறைச்சியை உண்பார்கள்" என்னும் அவருடைய வலைத்தள காணொளி ஒன்று பரவலாக பகிரப்பட்டு வருகின்றது. அத்தோடு சுல்தானின் செயலையும் அவர் விமர்சித்துள்ளார். 

இந்த நேரத்தில் இன்னொரு செய்தியையும் நாம் கவனத்தில் கொண்டு வருகிறோம். மகன் ஒருவர்  இறந்த போன தனது தந்தையின் உடல் இஸ்லாமிய மையத்துக் கொல்லையில்  அடக்கம் செய்ததை எதிர்த்து, நெகிரி செம்பிலான் ஜாக்கிம் மீது வழக்குத் தொடுக்க விருப்பதாக அறிவித்திருக்கிறார். தனது தந்தை ஓர் இந்து என்று ஜாக்கிம் அதிகாரிகளிடம் சொல்லியும் அவர்கள்  அதனைச் சட்டை செய்யாமல் அவருடைய பெயரை வைத்து அவரைத் தாங்களாகவே முஸ்லிமாக மாற்றி மையத்துக் கொல்லையில் அடக்கம் செய்து விட்டதாக அவர் கூறியிருக்கிறார்.  ஓர் மனிதர் இறந்த பின்னரும் கூட  ஜாக்கிம்  நிம்மதியாக இருக்கவிடுவதில்லை என்பதற்கு இதுவும் ஒரு சான்று. அவர் இந்துவா, இஸ்லாமியரா என்று, இன்றுள்ள தொழில் நுட்ப வளர்ச்சியில்,  தெரிந்து கொள்ளுவதற்கு ஒரு சில நிமிடங்களே போதும். அதனைப் பயன்படுத்த தெரியவில்லை என்றால் மற்ற மதத்தினர் மீது பிரச்சனைகளை உருவாக்க வேண்டாம் என்பதே நமது வேண்டுகோள்.

மற்ற சமயத்தினரை சீண்டிப் பார்ப்பதே ஜாக்கிமிக்குக் கொடுக்கப்பட்ட வேலையாகத் தோன்றுகிறது! மாநிலங்களின் இஸ்லாமியத் தலைவர்கள் என்றால் அது சுல்தான்கள் மட்டுமே. ஜொகூர் சுல்தானைப் போல மற்ற மாநிலங்களின் சுல்தான்களும் நாட்டின் ஒற்றுமைக்காக நியாங்களைப் பேச முன் வர வேண்டும், இதுவே நாம் இங்கு வைக்கும்  வேண்டுகோள்!

Tuesday, 10 October 2017

ஐயோடா..! 700 ....இடங்கள் கூடுதலாகவா...?

இந்திய மாணவர்களுக்கு இன்னும் 700 இடங்கள் கூடுதலாக தேசியப் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் என்னும் பிரதமரின் அறிவிப்பு  வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாக இருந்தாலும் அது இந்திய மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஒன்றாகவும் இருக்க வேண்டும்.

ம.இ.கா. வைத் தவிர வேறு யாருக்கும் இது மகிழ்ச்சி அளிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.! காரணம் அது அவர்களுக்கு வெறும் எண்ணிக்கை.  ஆனால் அது நமக்கோ தரம்; தரம் வாய்ந்த கல்வி.  எல்லாப் பாடங்களிலும் 'ஏ' பெற்றவர்கள் பலர் மருத்துவம், பொறியியல் கல்வி கற்க விரும்புவர். இந்திய மாணவர்கள் எந்தப் பாடங்களை விரும்பவில்லையோ அதையே அவர்களுக்குக் கொடுக்க வேண்டுமென்று கல்வித்துறை பணிக்கப்பட்டிருக்கிறது என அறிகிறோம். கல்வித்துறையின் இந்த விரும்பத்தகாத செயலினால் மாணவர்கள் பலர் கடன் பெற்றாவது தாங்கள் விரும்பிய கல்வியைத் தொடர வெளி நாடுகளுக்குச் செல்லுகின்றனர்.

மூன்று பெரிய இனங்கள் வாழ்கின்ற நமது  நாட்டில், மூன்றாவது பெரிய இனமான இந்தியர்களே, குறைவான வளத்துடன் வாழ்பவர்கள் என்பது புதிய செய்தி அல்ல, அனைவரும் அறிந்ததே. ஆனால் பிள்ளைகளின் கல்வி என்று வரும் போது இந்தியர்கள் தங்களது தகுதிக்கு அதிகமாகவே செலவு செய்கின்றனர். இதனை யாருடனும் ஒப்பிட முடியாது. மலாய் மாணவர்களின் கல்வியை அரசாங்கம் கவனித்துக் கொள்ளுகிற்து. சீனரின் பொருளாதாரம் அவர்களைக் கையேந்த வைப்பதில்லை.  இந்தியர்கள் மட்டும் தான் தங்களது சொத்துக்களை விற்று தங்களது பிள்ளைகளைப் படிக்க வைக்கின்றனர். இதற்கு ஒரே காரணம் அரசாங்கம் தனது குடிமக்களின் ஒர் அங்கமான இந்தியர்களை ஓரங்கட்டுவது தான். 

மருத்துவம், பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்களைக் கால்நடை மருத்துவம் மீன்பிடித்துறை மருத்துவம் என்று அங்குத் தள்ளிவிடுவது ஏற்புடையதல்ல.  இன்னும் எந்த ஒரு வசதியும் இல்லாத  மாணவர்கள் பலர், என்ன தான் படிக்க வேண்டும் என்று தெளிவில்லாத மாணவர்கள், இவர்களுக்குக் கொடுக்கப் படும் கல்வி நமக்கே தலையைச் சுற்ற வைக்கும். அவர்களின் பெற்றோர்களுக்கு எந்த  ஒரு வசதியும் இல்லாததால் எதையாவது படிக்கட்டும் என்று விட்டு விடுகிறார்கள். சமீபகாலமாக நான் பார்த்த பல மாணவர்கள் மனித வள மேம்பாட்டுத் துறை (Human Resources) பட்டதாரிகளாக வெளி வருகின்றனர்! இவர்களுக்கு யார் தான் வேலை கொடுப்பார்? நாம் சொல்ல வருவதெல்லாம் அவர்களுடைய கல்வித்  தகுதியைப் பார்த்து அவர்களுக்கான துறையைக் கொடுங்கள்.  பிற்காலத்தில் அந்தக் கல்வி அவர்களுக்கு வேலை வாய்ப்புக்களைக் கொடுக்கும். அல்லது அரசாங்க வேலை கொடுங்கள்.

போகிற போக்கைப் பார்க்கும் போது  இந்தியர்களுக்கென இன்னுங்கூட நிறைய இடம் கொடுக்கிறோம் என்று சொல்லி அவர்களுக்கென்றே ஒரு துறையை ஒதுக்கி  அங்கே அவர்களைத் தள்ளி விட தயாராய் இருப்பது போல் தோன்றுகிறது! இதன் மூலம் தரமற்ற கல்வியை இந்தியர்களின் மேல் திணிப்பதாகவே நாம் எண்ண வேண்டி உள்ளது. 

நாம் சொல்லுவதெல்லாம்: இடங்களைக் கூடுதலாகக் கொடுங்கள். ஆனால் அவைகள் தரம் உள்ளவைகளாகக் கொடுங்கள். அதுவே நமது வேண்டுகோள்.

பஞ்சாபி மொழி பேசும் சீனப்பெண்...!


நமது மலேசிய நாட்டில் பல மொழிகள் பேசுபவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அக்கம் பக்கம் உள்ளவர்கள், பள்ளிகள், வேலை இடம் - இப்படி எந்த இடமாக இருந்தாலும் மற்றவர்கள் மொழி பேச வேண்டும், கற்றுக்கொள்ள வேண்டும்      என்னும் ஆர்வம் உள்ளவர்கள் ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

                     
அந்த வரிசையில் ஒரு சில தினங்களாக வலைத்தளங்களில்
வலம் வரும் ஒரு சீனப் பெண்மணி,  கிறிஸ்தல் லிம்.  அவர் பேசும் மொழி பஞ்சாபி. அது தான் இங்கு நம்மை ஆச்சிரியப்பட வைக்கும் ஒரு செய்தி. சீனர்கள் தமிழ் பேசினால் அது ஆச்சரியம் இல்லை. அதனை நாம் சாதரணமாக எடுத்துக் கொள்ளுகிறோம்.  பஞ்சாபியர்கள் தமிழ் பேசுவது ஆச்சரியமான விஷயம் அல்ல. அவர்கள் எல்லாக் காலங்களிலும் நம்மிடம் தமிழில் பேசுவதை நாம் பார்க்கிறோம். ஆனால் பஞ்சாபி  மொழி பேசுவது என்பது அது அவ்வளவு எளிதல்ல.  காரணம் பஞ்சாபியர்கள், நமது நாட்டைப் பொறுத்தவரை, மிகக் குறைவான மக்களே உள்ளனர். அவர்களுடனான நமது தொடர்பே மிகக் குறைவு. கொஞ்சம் உயர்தர வர்க்கமாகவே அவர்கள் உள்ளனர். இந்த நிலையில், அதுவும் ஒரு சீனப் பெண்மணி பஞ்சாபி மொழி பேசுவது என்பது உண்மையில் ஆச்சரியம் தான்! மொழிகளைக் கற்றுக் கொள்ள வேண்டும், பேச வேண்டும் என்று எண்ணம் உள்ளவர்களுக்கு எந்தச் சூழலிலும் கற்றுக் கொள்வார்கள்  என்பதற்கு கிறிஸ்தல் லிம் நல்லதொரு உதாரணம்.

அவர் பஞ்சாபி  மொழி மட்டும் அல்ல, இந்தியும் பேசும் திறமை உள்ளவராம். இந்தி மொழி பேசுபவர் யார் என்று கூட நமக்குத் தெரியாத நிலையில் நாம் இருக்கிறோம்! அவர் இந்தியையும் விட்டு வைக்கவில்லை!

வர்த்தகத் துறையில் உள்ளவர்களுக்கு பல மொழிகளைப் பேசுவதன் மூலம் நமது தொடர்புகளை அதிகரித்துக் கொள்ள முடியும்.  இந்தப் பெண் இதனை நன்கு உணர்ந்திருக்கிறார். நாம் கூட ஒரு சீனர் தமிழ் பேசினால் அவருடன் வியாபாரம் செய்ய விரும்புகிறோம். நம் நாட்டில் வியாபாரம் செய்யும் குஜாராத்தியர்கள் பெரும்பாலும் தமிழ் பேசுபவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய வியாபாரம் பெரும்பாலும் நம் இனத்தவர்களுடன் தான். 

மற்றவர்களின் மொழிகளைப் பேசுவதன் மூலம் நமது தொடர்புகள் அதிகமாகும்.  பஞ்சாபி மொழி மட்டும் அல்ல இன்னும் பல மொழிகளைத் தெரிந்து வைத்திருக்கும் இந்தப் பெண்ணை வாழ்த்துவோம். வர்த்தக உலகத்தில் வேற்றிகரமாக உலா வருவார் என்பதில் ஐயமில்லை!

Saturday, 7 October 2017

தலித் அர்ச்சகர்கள்...!


தமிழக அரசியல்வாதிகள் சட்டம் இயற்றுவார்கள், பயிற்சிகள் கொடுப்பார்கள் ஆனால் கோவில்களில் வேலை கொடுப்பதில் சாதி பார்ப்பார்கள்!  இது தான் தமிழக அரசியல்!  அர்ச்சகப் பயிற்சி பெற்ற 206 பிராமணர் அல்லாதாரில் ஒருவர் கூட  இது வரை தமிழக அரசு எந்த ஒரு கோவிலிலும் பணி நியமன ஆணை பிறப்பிக்கவில்லை. இது ஒன்றே போதும், சாதி பார்ப்பதில் திராவிடக் கட்சிகள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பது!  இந்தியாவுக்கே வழிகாட்டி என்கிற பெயரே போதும் என்று சட்டத்தை இயற்றியதோடு நிறுத்திக் கொண்டார்கள்!

ஆனால் தமிழகத்து பக்கத்து மாநிலமான கேரள அரசு ஒரு முன்மாதிரி  மாநிலமாக இந்த அர்ச்சர்கள் விஷயத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது எனச் சொல்லலாம். கோயில் அர்ச்சகர்கள் பணியில் பிற்படுத்தப்பட்ட - தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்காக 32 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்துள்ளது. அதில் குறிப்பாக 30 பேர் பிற்படுத்தப்பட்ட சுமூகத்தைச் சேர்ந்தவர்கள்; 6 பேர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவருக்கும் பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டுள்ளது.

பொதுவாக சாதி ஒழிப்பு என்று வரும் போது தமிழகமே முன்னணி மாநிலம் என்று பெயர் எடுத்த மாநிலம். இப்போது நம்மிடையே நமது பெயருக்குப் பின்னால் எந்தச் சாதியும் வருவதில்லை! அதை நாம் விரும்புவதும் இல்லை! ஏதோ ஒரு சிலர்,  சாதியினை விடாப்பிடியாக உடும்புப்பிடியாக பிடித்துக் கொண்டு இருப்பதை பார்க்கிறோம். அவர்கள் வெகு சிலரே!  ஆனால் கேரளத்தில் சாதி ஒழிந்ததாகத் தெரியவில்லை. அங்கு நாயர், பிள்ளை, மேனன், நம்பூதிரி  என்பதெல்லாம் பெருமைக்குரிய சாதிப் பெயர்களாக இருக்கின்றன! நாம் எதற்காக வெட்கப்படுகிறோமோ அதற்காக அவர்கள் பெருமைப்படுகிறார்கள்! நமது தமிழ் சினிமாவையே எடுத்துக் கொள்ளுங்கள். கேரள நடிகைகளைப் பார்க்கிறோம். நாயர், மேனன், பிள்ளை என்பவை பெருமைக்குரிய அடையாளமாகக் கருதப்படுகிறது!

இப்படி சாதியை உயர்த்திப் பிடிப்பவர்கள் மாநிலம் தான் கேரள மாநிலம். ஆனால் அந்த மாநிலம் தான் தலித்துகளும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்று சட்டம் போடுகிறது.  சாதியை ஒழிப்போம் என்று சொல்லும் தமிழ் நாடு சாதியை வளர்க்கிறது! தமிழன் சாதியை வேண்டாமென்றாலும் திராவிடக் கட்சிகள் சாதியை ஒழிக்காமல், சாதியை வளர்க்கவே விரும்புகின்றன. சாதியை வைத்தே தமிழர்களைப் பிரிக்கும் வேலையில் திராவிடக் கட்சிகள் இறங்கியிருக்கின்றன என்பதே உண்மை!

தலித்துகளோ, பிற்பட்டவர்களோ - அவர்களும் அர்ச்சர்கள் ஆகலாம் என்பது மிக உயரிய அங்கீகாரம். எல்லாக் காலங்களிலும் ஏதோ ஓரிருவர் மட்டும் தான் இறைவனுக்கு உகந்தவர்கள் என்கிற மாயை உடைக்கப்பட்டிருக்கிறது. வரவேற்கிறோம்!

கேரளத்தை வழி நடத்தும் முதல்வர் பினராயி விஜயனுக்கு நமது வாழ்த்துகள்!

Thursday, 5 October 2017

இப்படியும் ஒரு பிழைப்பா...?


பொதுவாக மானம், சூடு, சொரணை இல்லாதவர்கள் என்று யாரைச் சொல்லலாம்? எதுவும் உறைப்பதில்லை, எதைச் சொன்னாலும் உறைப்பதில்லை ஆனால் பணத்திற்கு மட்டுமே பல்லைக் காட்டும் அப்படி ஒரு ஜென்மங்களை - நிச்சயமாக இறைவனின் படைப்பாக இருக்க முடியாது. இறைவன் மனிதனுக்கு மன நிறைவாகத்தான் செய்வாரே தவிர குறையாக எதனையும் செய்ய மாட்டார்.

ஆனாலும் இப்படிப் பட்ட படைப்புக்களையும் பார்க்க முடிகிறதே, என்ன செய்ய?

நமது நாட்டின் 14-வது பொதுத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பெரிய கொடுமை, தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களை நாட்டின் மூன்றாவது பெரிய இனமான இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் மலேசிய இந்தியர் காங்கிரஸ், தனது வேட்பாளர்களை தானே தேர்ந்த எடுக்க முடியாது என்னும் நிலமையில் தள்ளப்பட்டிருப்பதாகத் தகவல் கசிந்திருக்கிறது! இந்தப் பொறுப்பையும் ஆளுங்கட்சியின் முதுகெலும்பாகத் திகழும் அம்னோவே எடுத்துக் கொண்டதாகச் சொல்லப்படுகின்றது!

அப்படியென்றால் இந்தத் தேர்தலில் ம.இ.கா.வின் மிச்சம் மீதம் உள்ள எலும்புகளும் நொறுக்கப்பட்டு விட்டதாகக் கூறலாம்!

பொதுவாக ம.இ.கா. மேல் நமக்கு ஒன்றும் எந்த ஒரு நல்ல்லெண்ணமும் இல்லை. காரணம் நம்மேல் அவர்களுக்கு எந்த ஒரு கருணையிம் இல்லை. திருடுவதற்காகத்தான் கட்சியில் இருக்கிறோம் என்றால் அவர்கள் மேல் நமக்கென்ன மதிப்பு வரும்? ஆனாலும் அது இந்தியர்களின் கட்சி. அது நமது முன்னோர்களின் தியாகத்தால் உருவான கட்சி. நமது முப்பாட்டன்கள் பட்டினி கிடந்து வளர்த்த கட்சி.  அவர்களின் இலக்கு இந்திய சுததிந்திரம்; இந்தியர்களின் முன்னேற்றம். பிற்காலத்தில் அக்கட்சிக்குத் தலைமையேற்ற தலைவர்கள் அக்கட்சியைத்  தங்க முட்டை இடும் வாத்தாக பயன்படுத்திக் கொண்டனர்! மக்களின் பணத்தைக் கொள்ளையடிப்பதும்,  அரசாங்கம் கொடுத்த மானியங்களைத் தங்களின் சுயநலத்திற்குப் பயன்படுத்துவதும் - அவர்களின் வேகத்தை யாராலும் தடுத்த நிறுத்த முடியவில்லை! காரணம், கூடவே குண்டர் கும்பல்கள்!  இன்று வரை  அது தொடர்ந்து கொண்டிருக்கிறது! இப்போது அவர்கள் இந்தியரிடையே செல்லாக்காசு ஆகிவிட்டனர்.    

இந்த நிலையில் தான் இருக்கும் கொஞ்ச நஞ்ச மரியாதையும் அம்னோ பறித்துக் கொண்டது.  பொதுத் தேர்தலில் ம.இ.கா. வேட்பாளர்களை  அம்னோவே தேர்ந்தெடுக்கும் என்னும் நிலை வந்தால் ....நெஞ்சு பொறுக்குதில்லையே!...என்று பாடுவதைத் தவிர, நமக்கு வேறு வழி தெரியவில்லை!

அப்படி அம்னோ தேர்ந்தெடுத்தால் யாருக்கு முதல் மரியாதை? என்னைக் கேட்டால் துணைக்கல்வி அமைச்சர் கமலனாதனுக்கு பெரிய வரவேற்புக் கிடைக்கும்! காரணம் தமிழ்ப்பள்ளிகளை ஒழிப்பதற்கும், அழிப்பதற்கும் கமலநாதனே சரியான ஆள் என்று அம்னோ புரிந்து கொண்டது!   அது மட்டும் அல்ல.  தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் மானியங்கள் பெரும்பாலும் பள்ளிகளுக்குப் போய் சேருவதில்லை என்னும் குற்றச் சாட்டும் உண்டு.   இது அம்னோவுக்குப் போய்ச் சேருகிறது என்பது உண்மை. இவ்வளவு தாராளம் காட்டும் கமலநாதனை அவர்கள் ஒதுக்கிவிட மாட்டார்கள் என நம்பலாம். அடுத்ததாக வேள்பாரிக்கும் வாய்ப்புக்கள் நிறையவே உண்டு. அதனை "துன்" கவனித்துக் கொள்ளுவார்!  

எப்படியோ,   ம.இ.கா. வுக்கும் இந்தியர்களுக்கும் சம்பந்தமில்லையென ஆகி விட்டது! "இப்படியும் இரு பிழைப்பா!" என்று நாம்  காறித்துப்பி என்ன ஆகப்போகிறது!  அவர்கள் அல்லவா துப்ப வேண்டும்!                                                                                                                                                                                                                                                                              

Wednesday, 4 October 2017

அங்கேயும் ஆசை உண்டு....!


காலையில் ஒரு நண்பரைப் பார்க்க நேர்ந்தது. 

தமிழ் பேசுபவர் தான். ஆனால் தமிழரில்லை. பூமிபுத்ரா என்னும் அந்தஸ்தோடு இருப்பவர். அவரைப் போன்ற படித்தவர்கள் தங்களைக் கேரள வம்சாவளி என்று சொல்லுவதையும் விரும்பவதில்லை. தங்களை யாரோடும் ஒப்பிடாதாவாறு  'மலபாரி'  என்று சொல்லுகின்ற ஒரு சிறுபான்மையினர்.  அவர்கள் தங்களை  இந்தியர்களாக நினைப்பதில்லை. மலபாரி என்று சொல்லுவதில் பெருமைப் படுபவர்கள். ஆக, இவர்கள் தங்களைப் பூமிபுத்ராகவும் நினைப்பதில்லை; இந்தியராகவும் நினைப்பதில்லை! இருந்துவிட்டுப் போகட்டும்!

நண்பரின் மகள் பல்கலைக்கழக படிப்பை முடித்துவிட்டு இப்போது ஒரு நிறுவனத்தில் பொறுப்பான பதவியில் இருக்கிறார். அம்மா, மகன், மகள் மூன்று பேருக்குமே தமிழ் பேச வராது. பெரும்பாலும் மலாய் மொழி தான்.  அம்மா தமிழ் பேசினால் வெள்ளைக்காரர் பேசுவது போல் இருக்கும்!  மகன், மகள் ....அதுவும் இல்லை!

வேலையில் இருக்கும் பட்டாதாரி மகளுக்கு இப்போது மாப்பிளை பார்க்கும் படலம் ஆரம்பமாகி விட்டது. ரொம்பவும் சலித்துக் கொண்டார். சிலருடைய படங்களைக் காட்டிக் கொண்டிருந்தார்.  என்னா செய்யிறது?  பசங்க எல்லாம் மலாய் பெண்ணா பார்த்திட்டுப் போயிடுறானுங்க! அதனால மாப்பிள கிடைக்கிறதல பெரிய தலைவலியா இருக்கு!  ஏன்? மலபாரி எல்லாம் அவ்வளவு சீக்கிரத்தில் வேறு பக்கம் சாய மாட்டாங்களே!  பெரும்பாலும் உங்களுக்குள்ளேயே பார்த்துக்கொள்வீர்களே! என்னா ஆச்சு? இல்லைங்க! மொத மாறி இல்லை! பையனுங்க மாறிட்டாங்க! 

ஏன்? உங்க மகள் மாறலியா? ஒரே மதம் தானே! 

அதான், பிரச்சனை!  'நாம்ப' என்ன அவங்க மாறியா பிள்ளைங்கள வளர்க்கிறோம். ஏங்க! நமக்கும் அவங்களுக்கும் சரிபட்டு வருங்களா? 'நம்ப' பண்பாடு எல்லாம் வேறைங்க! ஒரு நல்ல வரன் வந்திச்சு. அவங்க தமிழ் பேசத் தெரியலேன்னு வேணான்னுட்டாங்க! ஊர்த் தொடர்புள உள்ளவங்க தமிழ் தெரியுனும்னு, எதிர்பார்க்கிறாங்க! இப்படியும் இல்லே! அப்படியும் இல்லே!   இப்ப, மாப்பிளைய தேடிக்கிட்டே இருக்க வேண்டி இருக்கு!

என்னடா உலகம் இது!  ஒரு சமயத்தில் தமிழையும், தமிழனையும் கண்டால் தீண்டத்தகாதவனைப் போல் பார்ப்பதும், மாப்பிளைப் பார்க்கும் போது 'நம்ம' பண்பாட்டைப் பற்றி யோசிப்பதும், இவர்களுக்கு என்ன ஆயிற்று?  முற்றும் நினைந்த பின் முக்காடு எதற்கு?

அங்கேயும் ஆசை உண்டு! வெளியே வருவதில்லை!

Monday, 2 October 2017

ஒரு கறுப்பு சீனரின் சோகக்கதை...!


நம்மைச் சுற்றி என்னன்னவோ நடந்து கொண்டிருக்கிறது. சில "என்னன்னவோக்கள்" கேலியும் கிண்டலுமாகக் கூட நமக்குத் தோன்றுகிறன்றன.  சம்பந்தப்பட்டவர்களுக்கு அது எந்த அளவு பாதிப்பை  ஏற்படுத்துகிறது என்பதை நினைக்கும் போது நமக்கும் வருத்தமே.


                                                                                                                                                                                                                                                                                                                                        மேலே  படத்தில்  உள்ளவரின் பெயர் நமக்குப் பரிச்சையமான பெயர் அல்ல. நிறத்திற்கும் அவருக்கும் சம்பந்தமில்லாத பெயர்.டாங் வூன் செங் என்பது அவர் பெயர். அது சீனப் பெயர். இந்தியராகத்தான் அவர் பிறந்தார். சீனப் பெற்றோர்களால் அவர் தத்து எடுக்கப்பட்டார். மற்ற ஆறு பிள்ளைகளுடன் இவரும் அவர்களோடு சேர்த்து வளர்க்கப்பட்டார். அவருக்குத் தமிழ் பேசத் தெரியாது.  சீன மொழி தான் தெரியும்.  இப்போது அவருக்கு வயது 34.

இங்கு என்ன தவறு நேர்ந்தது? அந்தச் சீனப் பெற்றோர் அவருக்குப் பிறப்பு சான்றிதழ் எடுக்கும் போது அவர்கள் அவரைத் தங்களது வளர்ப்புப் பிள்ளை என்று எடுக்காமல் தங்களது சொந்தப்பிள்ளை என்று சான்றிதழை எடுத்து விட்டார்கள்.  அதனால் ஏற்பட்ட குளறுபடி தான் இப்போது அவரை ஒரு நாடற்றவர் என்னும் நிலைக்குத் தள்ளிவிட்டது.

இவர் ஏற்கனவே 12 வயதில் தனது அடையாளக்கார்டை எடுத்திருக்கிறார். அப்போது அவர் வெள்ளையாக இருந்தாரோ, தெரியவில்லை. எந்தவிதப் பிரச்சனையும் இல்லாமல் அடையாளக்கார்டு கிடைத்து விட்டது!   பின்னர் அவர் திருமணம் செய்து கொள்ளும் போது தான் இவர் கறுப்பர் என்று அடையாளங் கண்டு விட்டனர்.  உடனடியாக அவரது அடயாளைகார்டு  கபளீகரம் செய்யப்பட்டு நாடற்றவர் என்று பிரகடனப் படுத்தி விட்டனர்!

இதுவும் நாம் வழக்கம் போல் என்ன சொல்லுவோமோ அதைத்தான் இங்கு நாம் சொல்ல வேண்டியிருக்கிறது. நேற்று வந்த வங்காளதேசி பிரஜையாக தலைநிமிர்ந்து நடக்கிறான்! ஆனால்  இங்குப் பிறந்தவன்....?

நாடற்றவர் நிலை என்ன? அவருடைய அத்தனை உரிமைகளும் பறிபோகின்றன. எங்கும் வேலை செய்ய முடியாது. எந்த உரிமையும் இல்லை.

நாம் சொல்ல வருவது இது தான்: பிறப்பு சான்றிதழில் ஒரு தவறு நடந்திருக்கிறது. அதற்காக வீறு கொண்டு எழ வேண்டியதில்லை. அந்தக் குழந்தை இங்கு தான் பிறந்தது என்பதற்கான அடையாளம் தான் பிறப்புப் பத்திரம்.  வேறு நாட்டில் பிறக்கவில்லை. அதற்கும் வாய்ப்பில்லை. ஒரே தவறு:   பெற்றோர் பெயர் தவறுதலாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவ்வளவு தான். இதனைக் கண்டு பிடித்து தவற்றை நிவர்த்திச் செய்ய வேண்டும். அது தான் தேசியப் பதிவிலாகாவின் வேலை. அதற்குக் கொஞ்சம் அவகாசம் தேவை. இதையெல்லாம் விட்டுவிட்டு உடனடியாக நாடற்றவர்கள் பட்டியலில் சேர்ப்பது ஒரு மடத்தனமான செயல் என்பதைத்தான் இது காட்டுகிறது. அப்படி இல்லாவிட்டாலும் அவருடைய உரிமைகளைப் பறிக்காமல் செயல்பட வேண்டும்.

கடைசியாக, ஒரு பொறுப்புள்ள  அரசாங்கத்தின் வேலையாக நாம் இதனைக் கருதவில்லை. பொறுப்பு என்றால் என்ன வேன்று தெரியாத பொறுப்பற்றவர்களை வேலைக்கு வைத்திருந்தால் இது போன்ற செயல்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.

வருந்துகிறோம்!                                                                                                                                                                                                                                         

அரசியல் குண்டர்கள்....!


குண்டர்கள் இல்லாமல் அரசியலில் பேர் போட முடியுமா? முடியாது என்பது தான் நிகழ்கால அரசியல். ஆனால் இதற்கு விதை போட்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. அதனால் அது வேர்விட்டு, மரமாகி  இப்போது குண்டர்களே அரசியலைக் கையில் எடுத்துக் கொண்டனர்! ஆனாலும் அவ்வப்போது சில நியாயங்களை  நீதிமன்றங்களில் பார்க்கவும் முடிகிறது.

தீபாவளி காலங்களில் குண்டர்களின் அடாவடித்தனத்தை நாம் எப்போதும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். கத்திக்குத்து, கொலை போன்ற செய்திகளைப் பார்க்கவும் முடிகிறது.

இப்போது ஒரு வித்தியாசமான செய்தியைப் படிக்க முடிந்தது. சிரம்பான் தீபாவளிச் சந்தையைப் பற்றிய செய்தி. கடந்த ஏழு ஆண்டுகளாக நெகிரி மாநில தமிழ் இளைஞர் மணிமன்றம் வெற்றிகரமாக இச்சந்தையை நடத்திக் கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு தனது தொடர் வெற்றியை மணிமன்றத்தால் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லையாம். காரணம் மாநில ம.இ.கா. தனது, சதி, சூழ்ச்சியின் மூலம் அந்தச் சந்தையை அபகரித்துக் கொண்டதாம்.

இதில் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது: ம.இ.கா. சீனர்களிடமிருந்தோ, மலாய்க்காரர்களிடமிருந்தோ, வங்காளதேசிகளிடமிருந்தோ அபகரித்துக் கொள்ளவில்லை! அதெல்லாம் முடியாது என்பது நமக்கும் தெரியும். ஆனால் தமிழர்களிடமிருந்து அபகரிக்க எத்தனை சூழ்ச்சி, எத்தனை சதி வேண்டுமானாலும் அவைகளைச் செய்ய ம.இ.கா. என்றென்றும் தயார் நிலையில்! 

இந்தச் சந்தை ஆரம்பித்த போது வெறும் 17 கடைகள் தான் இருந்தனவாம். அதனை 100 கடைகளாக அதிகரிக்கச் செய்ய வைத்தது எங்கள் சாதனை என்கிறார் மன்றத் தலைவர். ஆனாலும் ஏன் அவர்களுக்கு இப்படி ஒரு சோதனை? "நீங்கள் மட்டும் தான் பணம் சம்பாதிக்க வேண்டுமா? ம.இ.கா. காரன் சம்பாதிக்கக் கூடாதா?" என்னும் கேள்வி எழுப்புகிறதாம் ம.இ.கா. தரப்பு! ஆக, பணம் தான் இந்தச் சோதனைகளுக்கெல்லாம் காரணம் என்று புரிகிறது!  ஆனாலும் மன்றத் தரப்பு இதனை மறுக்கிறது! நாம் சொல்ல வேண்டியதெல்லாம் ஒன்று தான்: திருடனாய் பார்த்துத் திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது!  பட்டுக்கோட்டையார் பாடியது.

கடந்த மன்றத்துக் காலங்களில் சந்தை ஆரம்பிக்கும் முதல் ஓரிரு நாள்களுக்கு வியாபாரம் செய்ய முடியாத அளவுக்கு இவர்களின் தலையீடு இருக்குமாம்! வயதானவர்களுக்கு மூட்டை முடிச்சுகள் கொடுக்கிறோம் என்னும் பெயரில் சந்தையில் வியாபாரம் செய்ய முடியாதபடி முழு போக்குவரத்தையும் அடைத்துக் கொள்ளுவார்களாம்! ம.இ.கா. வும் தனது பங்குக்கு தங்களது மாபெரும் தலைவர்களை வரவழைத்து தங்களது சாதனைகளை விளக்கி வியாபாரத்தைக் கெடுப்பார்கள் என நம்பலாம்! வியாபாரம் செய்ய பணத்தையும் கொடுத்து, இது போன்ற தடங்கள்களையும் முறியடித்து, கடைசியில் பார்த்தால் ...வியபாரிக்குக் கிடைப்பது....என்ன?

ஆமாம்! இங்கு எங்கே குண்டர்கள்? கொஞ்சம் ஆழமாகப் போய் நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்!


Sunday, 1 October 2017

முஸ்லிம்கள் மட்டும்....!

"முஸ்லிம்களுக்கு மட்டும்"  என்று ஆரவாரத்தோடு இயங்கி வந்த  சலவை நிலையம் ஒன்று ஜொகூர் சுல்தானின் கண்டனத்துக்கு உள்ளானது!  முவார்,  ஜொகூரில் உள்ள  இந்த நிலையம் சமீப காலமாக மக்களை முகம் சுளிக்க வைக்கும் நிலைக்கு ஆளாகியது.

இதனை அறிந்த ஜொகூர் சுல்தான் அவர்கள் உடனடியாக தனது கடுமையான எச்சரிக்கையை அந்த நிலையத்தின் உரிமையாளருக்கு விடுத்தார். "இது ஜொகூர் மாநிலம். ஜொகூரில் வாழும்  அனைத்து ஜொகூர் மக்களுக்காக உள்ள மாநிலம்.   இது போன்ற தீவிரவாதத்தை என்னால் ஏற்க முடியாது.  இங்கு நடப்பது தலிபான் ஆட்சி அல்ல. இப்படித்தான்  செய்ய வேண்டும் என்று நீங்கள்  விரும்பினால்   உங்களுக்கு ஏற்ற நாடு ஆப்கானிஸ்தான். நீங்கள் அங்குப் போய் தாராளமாக  உங்கள் தொழிலைச் செய்யலாம்."

இப்போது அந்த சலவை நிலையம் குறிப்பிட்ட அந்த விளம்பரப் பலகையை அப்புறப்படுத்தி விட்டதாகப் சொல்லப்படுகின்றது. அந்தச் சலவை   நிலையத்தின் உரிமையாளர் சுல்தானின் மன்னிப்புக்காக தேதியும் கேட்டிருக்கிறார்.  

இதற்கு முன்னர் அந்த உரிமையாளர் பேசும் போது "நான் ஒரு முஸ்லிம். ஒரு முஸ்லிமாக எனது கடமையை நான் செய்கிறேன்" என்பதாக அறிவித்திருந்தார்.

ஆனாலும் மற்ற மாநிலங்களின் சுல்தான்கள் இப்படி ஒரு முடிவை எடுக்க முடியுமா என்பது கேள்விக்குறியே. மற்ற மாநிலங்களின் சுல்தான்களை விட அந்தந்த மாநிலங்களின் முப்திகளே அதிக அதிகாரம் பெற்றவர்களாக இருக்கின்றனர்.  இருப்பினும் வருங்காலங்களில் மற்ற மாநில சுல்தான்களும் ஜொகூர் சுல்தானின் பாதையைப் பின்பற்றுவார்கள் என நம்பலாம். அது சாத்தியமே. காரணம் தீவிரவாதம் என்பதெல்லாம் நமது நாட்டிற்கு ஒத்து வராது என்பது அனைவரும் அறிந்ததே.  பல இனங்களும், சமயத்தினரும்  கலந்து வாழும் ஒரு நாட்டில் இப்படியெல்லாம் பிரித்துப் பார்க்க முடியாது.  மேலும் இப்படி "முஸ்லிம்கள் மட்டும்"   என்பதனால் மட்டுமே ஒருவர் நல்ல முஸ்லிம் ஆகிவிட முடியாது! அதற்கு நிறைய வேலைகள் உண்டு! 

இந்த நேரத்தில்  இன்னொன்றையும் நான் குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும். ஜொகூர் மாநிலத்தில் உள்ள பள்ளிவாசல்களுக்கு முஸ்லிம் அல்லாதவரும் சென்று வரலாம். நல்ல உடை என்பதே முக்கிய நிபந்தனை. மற்ற மாநிலங்களில் சாத்தியமல்ல!