Monday, 31 December 2018

இது தான் நாரதர் வேலை என்பது!

பெர்சாத்துவின் இரண்டாவது பேராளர் மாநாடு வெற்றிகரமாக  நடைபெற்றது. நம்முடைய வாழ்த்துகள்!

மாநாடு ஏறக்குறைய அம்னோ மாநாடுகளைப் போலவே  கொஞ்சம் கலகலப்பு , கைத்தட்டல் பாணியிலேயே  நடந்தன!  ஆனால்  அம்னோ  மாநாடுகளைப்  போல வீராவேசமான பேச்சுக்கள்  இல்லை!  இனி  அதற்கான  வாய்ப்புக்கள்  குறைவு  என்பது  தான்   உண்மை!

ஆனாலும் ஒன்று நடந்தது. அதே அம்னோ பாணி பேச்சு. எவன் கெட்டால் நமக்கு என்ன என்கிற  அலட்சியப் போக்கு! நாடு  குட்டிச்சுவர்  ஆனால்  என்ன; எனக்கு என்ன கிடைக்கும் என்பது போல ஒர் ஆணவ  பேச்சு!

பிரதமர், டாக்டர் மகாதிர் தொடர்ந்து அடுத்த தேர்தல் வரை பதவியில்  இருக்க  வேண்டும்  என்பதாக தீர்மானங்கள், அதனை ஒட்டிய பேச்சுக்கள்  இவைகள் எல்லாம் அறிவார்ந்தவர்கள்  அந்த  மாநாட்டில்  க்லந்து  கொள்ளவில்லையோ என்கிற  ஐயத்தை  ஏற்படுத்துகிறது.

பிரதமரை  வைத்துக் கொண்டு இப்படிப் பேசுவது  அது எவ்வளவு  அசௌகரியத்தை அவருக்கு ஏற்படுத்தும் என்கிற  நாகரிகம் கூட  இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளுக்குத் தெரிவதில்லை! அது தான் அம்னோ நாகரிகம்! அந்தப் பாரம்பரியத்தைத்   தொடர வழி தேடுகிறார்கள்!

பக்காத்தான்  கூட்டணியில் ஏற்கனவே  பேசப்பட்ட ஒன்றை, ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றை - இப்போது அது தேவை இல்லை என்பது போன்று பேசுவது  எந்த வகையிலும்  நாகரிகம்  என்று சொல்ல முடியாது! அதுவும் பிரதமரை  வற்புறுத்துவது மிக மிகக்  கொடுமையான செயல்!

நமது பிரதமர் இளைஞர் அல்லர். வயதான மனிதர். பக்கத்தான் அரசாங்கம் அமையும் முன்னரே தமது பதவி காலம் இரண்டு சொச்சம் ஆண்டுகள் என்பதாக ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்று. அது தெரிந்தோ தெரியாமலோ பக்காத்தான்  கூட்டணியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. அதனை பிரதமரும் ஏற்றுக் கொண்டார்.

இந்த நேரத்தில் பிரதமரை வற்புறுத்தி பதவியில் இருக்கச் செய்வது எவ்வளவு கொடுமை.  வயதான காலத்தில் நான் பொய்யனாக இருக்க வேண்டுமா என்று அவர் நினைக்கலாம் அல்லவா. சொன்னச் சொல்லை மீறுவது அம்னோ தரப்பினருக்கு எந்த வெட்கமும் இல்லை ஆனால் பிரதமர் தான் ஒரு எடுத்துக்காட்டாக இருக்க விரும்புகிறாரே தவிர ஒரு சராசரியாக இருக்க விரும்பவில்லை!

ஆமாம்! மலேசிய மக்களுக்கு அவர் ஓர் எடுத்துக்காட்டு. வயதானவர்கள் மற்றவர்களுக்கு  உதாரணமாக இருக்க வேண்டுமே தவிர தவறான வழிகாட்டியாக இருக்கக் கூடாது என்பதில்  அவர்  உறுதியாக  இருக்கிறார். 

எந்த  நாரதர் வேலையும் அவரிடம்  எடுபடாது  என  நம்புவோம்!

Sunday, 30 December 2018

70 மீட்டரே போதும்...!

நூறு மீட்டரைச் சுருக்கி எழுபது மீட்டராக மாற்றியமைத்த ம.இ.கா.வினர் என்ற செய்தியைப் படித்த போது வேறொன்றும் எனது ஞாபத்திற்கு வந்தது!

"ஆமாம்! நாங்கள் எல்லாம் நூறு மீட்டர் ஓடி இன்னும் திருடனாகத்தான் ஓடிக் கொண்டிருக்கிறோம்! எப்போது நூறு மீட்டர் ஓடினோமோ, எங்களது கெட்ட நேரம், இன்னும் அகப்படாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம்!"

மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தார்கள். சொத்துக்களைக் கொள்ளையடித்தார்கள்.  கொள்ளையடிப்பதற்கு வேறொன்றும் இல்லாத நிலையில் பள்ளிக்கூடத்தையும் விட்டு வைக்கவில்லை! கல்வியுலும் கை வைத்தார்கள்! என்ன சொல்லுவது! பணத்திற்காக எதனையும் விட்டுக் கொடுக்கத் தயார்!  அப்புறம் என்ன கல்வி! கத்தரிக்காய்!

பொதுவாக கல்வி என்றால் அதில் கை வைக்க யாராக இருந்தாலும் பயப்படுவார்கள்.  காரணம் அது கல்வி. கல்வி என்றால் அது சரஸ்வதி என்பது நமது மரபு.

சரி! அந்தக் கல்வியில் கை வைத்தவன் யார்? எல்லாம் அரைகுறைகள்! ஆனால் பதவியில் உள்ளவர்கள். அவனது பதவி எல்லாவற்றிலும் அவனை கை வைக்கச் சொல்லுகிறது. இவன் படித்ததே அரைகுறை. அவன் பிள்ளைகள் பெரிய பெரிய படிப்பைப் படிக்க வேண்டுமென்று அப்பன் பிள்ளைக்காகத் திருடுகிறானாம்! பையன் எப்படிப் படிப்பான்? அவனும் எப்படித் திருடுவது என்று தானே படிப்பான்! அவன் படித்தாலும் கொள்ளையடிப்பது எப்படி என்று தானே அவன் மூளையும் வேலை செய்யும்! காரணம் அவன் அப்பன் அப்படித் தானே  மகனை வளர்த்திருப்பான்!

ஓ! இந்தச் சமுதாயத் துரோகிகளை நினைத்தாலே நமக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஒன்றா! இரண்டா! எத்தனை துரோகச் செயல்கள்! இதென்ன!  கொள்ளையடிப்பதையே பரம்பரைத் தொழிலாகக் கொண்டவர்களா!  தமிழர்களிலேயே கொள்ளைக்காரர்கள் என்பதாக ஏதேனும் ஒரு சமூகம் இருக்கிறதா?  அல்லது தமிழர்களிடையே வேறு ஏதேனும்  ஒட்டுக்கட்டி  மாற்றப்பட்டிருக்கிறதா! ஒன்றுமே புரியவில்லை! 

புலம்புவது நாமாக இருந்தாலும் கலங்குவது நாமாக இல்லை! தீய சக்திகளை ஒழித்தே தீருவோம்!

Saturday, 29 December 2018

வாழ்க! எழுத்தாளர் சங்கம்!

எழுத்தாளர் சங்கத்தில் கொஞ்சம் அறிவுள்ளவர்கள் அதிகம் என்பதால் தான் அவர்களை நாம் மதிக்கிறோம்.

பிரதமர் துறை அமைச்சர் பொ.வேதமூர்த்தியின் பிரச்சனையில் இவர்கள் ஏன் எந்தக் கருத்தையும் சொல்லாமல் இந்த அளவுக்க் இழுத்தடித்தார்கள் என்பது நமக்குப் புரியவில்லை. 

அவரைப் பற்றிய ஒரு பிரச்சனை ஒரு மாத காலமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அவர்கள் ஏனோ ஒன்றுமே தெரியாதவர்களைப் போல பேசா மடைந்தையாக இருந்ததற்கு ஏதேனும் உள்நோக்கம் இருக்கிறதா என்று புரியவில்லை!

மற்றவர்கள் எல்லாம் முதலில் தங்களது கருத்துக்களைச் சொல்லட்டும் பிறகு ஆற, அமற  நமது கருத்தைச் சொல்லுவோம் என்று சங்கம் நினைக்கிறதா?  அல்லது இதற்கு ஏதேனும் கருத்தைச் சொன்னால் சங்கத்திற்கு ஆபத்து வரும் என்கிற எண்ணமாக இருக்குமா!

எப்படியோ, நமக்குத் தெரியவில்லை! ஓர் ஆதங்கத்தில் தான் இங்கு நான் எழுதுகிறேன். யார் யாரோ கருத்துக்களைச் சொன்னார்கள். எழுத்தாளர் சங்கம் அறிவார்ந்தவர்களைக் கொண்ட ஒரு சங்கம். கருத்துக்களைச் சொல்லப் பயப்படுகிறதோ என்று என்னைப் போன்ற சராசரிகள் நினைப்பது இயல்பு தான்.

தமிழ், தமிழர், கோவில்கள் -  இவைகள் எல்லாம் நமது உரிமைகள். நம்மிடையே ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் நம்மைப் பாதிக்கிற விஷயங்களுக்குக் குரல் கொடுக்க வேண்டும். நமது ஒற்றுமையைக் காட்ட வேண்டும்.

சீனர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கல்வி இயக்கங்கள், பொது இயக்குங்கள் அனைத்தும் குரல் கொடுக்கும். அமைச்சர்களைச் சந்தித்து தமது எதிர்ப்புக்களைக் காட்டும். நம்மால் அதனைச் செய்ய முடியவில்லை. காரணம் பணத்தைக் காட்டினால் அரசியல்வாதி ப்ல்லைக் காட்டுகிறான். பத்திரிக்கைகள் அவனைப் பக்கம் பக்கமாக பாராட்டுகின்றன! 

பரவாயில்லை! காலம் தாழ்த்தியாவது வேதமூர்த்தியைப் பதவி விலகக் கூடாது என்று எழுத்தாளர் சங்கம் தீர்மானம் போட்டிருக்கிறதே அதற்காக அவர்களுக்கு ஒரு வாழ்த்து!

தமிழர் பிரச்சனைகளில் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என எழுத்தாளர் சங்கத்தைக் கேட்டுக் கொள்ளுகிறேன்! 

மீண்டும் வாழ்த்துகள்!

சாதிக்! உம்மை நான் ரசிக்கிறேன்!

யார் என்ன சொன்னாலும் சரி. சைட் சாதிக்கிடம் நல்லதொரு கொள்கை உண்டு!  பெர்சாத்துவின் இளைஞர் பிரிவு தலைவரான அவரிடம்  "தில்" கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது!

நம் ம.இ.கா. வை நினைத்துப் பாருங்கள். இளைஞர் பிரிவு தலைவர்  பேசுவதற்கு ஏதேனும் உண்டா? பேசுவாரா? பேச முடியுமா? தலைவருக்கு தலையாட்டுவதை விட அவருக்கு வேறு என்ன வேலை!

இருந்தாலும் சைட் சாதிக்கிடம் இளம் வயது இரும்புத்தனம், இளம் கன்றுத்தனம் எல்லாம் உண்டு. அவர் ஒருவர் தான் பயமறியாத கன்றுவாக இருக்கிறார்! வாழ்த்துவோம்!

இன்றைய அரசியலில் நீதி, நியாயம் பேச இடமில்லை!  அரசியலில்  அப்படியெல்லாம் ஒன்றுமில்லை! ஆனால் அவர் துணிவாக பேசுகிறார்.  அதுவும் பிரதமர் மகாதிர் அமைச்சரவையில் அவரால் அப்படி பேச முடிகிறது என்றால் அதனை நாம் பாராட்ட வேண்டும்.

அது சரி, பிரதமர் என்ன நினைக்கிறார்? வெளியே , வெளிப்படையாக அவர் எந்தக் கருத்தையும் சொல்லுவதில்லை என்றாலும் உள்ளுக்குள்ளே அவர் வரவேற்கிறார்! அப்படி பேசுவதற்கு மலாய் சமூகத்தில் ஓர் ஆள் வேண்டும் என்று நினைக்கிறார்!

இன்று மலாய் அரசியல்வாதிகள் இலஞ்சம், ஊழல் என்று வரும் போது முதல் தர ஊழல்வாதிகளாக இருக்கிறார்கள்! அதுவும் குறிப்பாக இப்போது அம்னோ கட்சியில் இருந்து கட்சி தாவும் அரசியல்வாதிகள் பற்றி எதனையும் சொல்ல முடியவில்லை! அனைவரும் ஏதோ ஒரு வகையில் ஊழலில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்! அவர்களிடம் நீதி, நேர்மை என்பதெல்லாம் எப்போதோ போய்விட்டது! அவர்கள் பதவிக்கு ஆசைப்பட்டுத் தான் கட்சி மாறுகிறார்கள் என்பதை மறுக்க முடியாது!

சைட் சாதிக் ஒரு நல்ல கருத்தைச் சொல்லுகிறார். "வாருங்கள்! உங்களுடைய சொத்து விபரங்களை அறிவித்துவிட்டு வாருங்கள்! மக்களிடம் மன்னிப்புக் கேளுங்கள்!  தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நமது கலாச்சாரப் பண்புகளுக்குக் குழி தோண்டாதீர்கள்! நீங்கள் பெர்சாத்துவால் ஏற்றுக்கொள்ளுவதற்கு முன்னர் கட்சியின் நிபந்தனைகளை நன்கு அறிந்த பின்னர் வாருங்கள்!"

சாதிக் சொன்னது சரிதான். பெர்சாத்து என்பது மலேசிய அரசியலில் ஓரு  புதிய பரிணாமம். அம்னோவில் உள்ள கழிசடைகளை இங்கு சேர்த்து இந்தக் கட்சிக்கும் அவப்பெயரை உண்டாக்கக் கூடாது! 

சாதிக்! நீங்கள் சொல்லுவது சரியே! உங்கள் பதவியில் நீங்கள் தொடர எனது வாழ்த்துகள்!

Friday, 28 December 2018

இதெல்லாம் ஒரு வயசா...!

நமது பிரதமர், டாக்டர் முகமது அவர்களைப்  பற்றி பேசும் போது அவருடைய  வயது தான் நம் முன் நிற்கிறது! அவருடைய வயது 93; இரண்டாம் முறையாக பிரதமர் பதவி ஏற்றிருக்கிறார்.

தொண்ணூற்று மூன்று என்னும் போதே, அந்த வயது, நம்மைக் கிடுகுடுக்க வைக்கிறது! சில மாதங்களோ, சில வருடங்களோ என்று நம்மைப் பேச வைக்கிறது! 

ஆனால் உண்மை அதுவல்ல. அவரின் அந்த வயதைத் தாண்டி பலர், மிகப்பலர், இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர். அதிலே ஒருவர் தான்:


சித்ரன் நம்பூதிரிபாட், வயது 99. கேரளாவைச் சேர்ந்தவர். ஓர் முன்னாள் கல்வியாளர். 

அவர் சாதனை என்ன?  இமயமலை ஏறுவதில் தான் அவர் சாதனைப் படைத்திருக்கிறார். முதன் முதலில் அவர் இமயமலை ஏறியது 1956-ல். அப்போது அவரின் வயது 37.  இந்த ஆண்டு,  டிசம்பர் முதல் வாரம் வரை அவர் 29 வது முறையாக அவரின் 99-வது வயதில் இமயமலை ஏறி சாதனைப் படைத்திருக்கிறார்! அதோடு முடியவில்லை அவரின் சாதனை. தனது 100-வது வயதில் 30-வது முறையாக இமயமலை ஏறுவேன் என்று சூளுரைத்திருக்கிறார்!

நம்பூதிரியின் இந்த சாதனையின் பின்னணி என்ன? முதலில் அவர் சைவம். அதனோடு யோகா செய்வது, நடப்பது. இவைகள் தான் அவரின் அன்றாடப்பணி.

நம்பூதிரியின் நூறாவது வயதில் அவரின் முப்பதாவது சாதனையை நாம் பார்ப்போம் என நம்புவோம்!

முதலாளிகளுக்கு பிரம்படி...!

சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகளுக்குப் பிரம்படி தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை குடிநுழைவுத்துறை தலைமை இயக்குனர் முஸ்தபா கூறியிருப்பதாக ஒரு செய்தி.

இப்படி சட்டத்தை மீறும் முதலாளிகளுக்குப் பிரம்படி கொடுக்க சட்டத்தில் இடமுண்டு என்பதையும் அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார்! இது ஆச்சரியம்!  கடந்த இரண்டு ஆண்டுகளில் 1400 க்கும் மேற்பட்ட முதலாளிகள் சட்டத்தை மீறியிருக்கின்றனர். ஆனால் அவர்களில் மூவருக்கு மட்டுமே பிரம்படி தண்டனை கொடுக்கப்பட்டதாக அவர் கூறியிருக்கிறார்! இது ஆச்சரியம்!

இப்போது நமக்குப் புரிந்திருக்கும். நாட்டில் ஏன் அதிகமான சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் யார் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறார்கள் என்பது! முதலாளிகளுக்கு உள்ள தண்டனையை நிறைவேற்றத் தவறினால் அவர்கள் சட்டத்தை மீறுவதை யாராலும் தடுக்க முடியாது! அதனால் தான் இன்று நாட்டில் இலட்சக் கணக்கில் அந்நியத் தொழிலாளர்கள் இருப்பதை அரசாங்கத்தால் தடுக்க முடியவில்லை!

முதலாளிகளுக்குப் பிரம்படி என்பது கூட  பொது மக்களுக்குத் தெரியவில்லை! அந்த அளவுக்கு அந்தச் சட்டம் பரம ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறது!  அமலில் இருக்கும் அந்தச் சட்டம் ஏன் நடைமுறைக்குக் கொண்டு வரப்படவில்லை என்று ஒரு முட்டாள் தனமான கேள்வியை நாம் கேட்கலாம்!  அதற்கு அவர்களிடம் பதில் இருக்கிறது!

நமது அண்டை நாடான சிங்கப்பூரில் அந்நியத் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்,  இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் அங்குள்ள முதலாளிகள் சட்டத்தை மீறவில்லை. அது எப்படி? சட்டத்தை மீறினால் பிரம்படி என்பது அங்கும் உண்டு. அது போதும். பிரம்படி வாங்க எந்த முதலாளியும் தயாராக இல்லை!   மலேசியாவிலும் பிரம்படி வாங்க முதலாளிகள் தயாராக இல்லை!  ஆனால் அவர்களுக்கு சட்டம் பாதுகாப்புக் கொடுக்கிறது! பணம் பாதுகாப்புக் கொடுக்கிறது. இனம் பாதுகாப்புக் கொடுக்கிறது!  இப்படி எத்தனையோ பாதுகாப்புக்கள் மலேசிய முதலாளிகளுக்கு உண்டு. ஆனால் சிங்கப்பூரில் எந்த பாதுகாப்பும் இல்லை! 

நமது நாட்டில் சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்கள் கணக்கு வழக்கின்றி வேலை செய்வதற்குக் காரணமானவர்கள் குடிநுழைவுத்துறையினரே! இந்தச் சட்டத்தை அமல்படுத்த தவறியதால் இன்று சட்டவிரோதிகள் நாட்டில் ஏராளம்! ஏராளம்!

இத்தனை ஆண்டுகள் பேசா மடந்தையாக இருந்த குடிநுழுவுத்துறையின் தலைவர் இப்போது தமது திருவாயைத் திறந்திருக்கிறார்!

இப்போது பிரம்படி யாருக்குக் கொடுக்கலாம்?

Thursday, 27 December 2018

வேதாவிற்குப் பதிலாக....!

பிரதமர் துறை துணை அமைச்சர் பொ.வேதமூர்த்தி பதவி விலகவேண்டும்; அந்தப் பதவியை  வேறொரு இந்தியருக்குக்  கொடுக்க  வேண்டும் என்பதாக பாஸ் கட்சி  அரசாங்கத்திற்குப் பரிந்துரை செய்திருக்கிறது.

இது ஒரு சரியான பரிந்துரையா   அல்லது  இது சரியா  தவறா என்று யார் தீர்மானிப்பது? இந்தியர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்! நம்மைப் பொறுத்தவரை இது தவறான பரிந்துரை என்று நாம்  அடித்துச் சொல்லலாம். 

இனவாத கட்சியான பாஸ் ஏன் இப்படி ஒரு பரிந்துரையைச் செய்கிறது? இந்தியர்கள்  சார்பில்  யார் பிரதிநிதிக்க வேண்டும் என்பது பற்றி பாஸ் கட்சிக்கு என்ன கவலை?

பொ.வேதமூர்த்தி இந்தப் பதவிக்கு சரியான தேர்வு என்பது பற்றி நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். பிரதமர் சரியான, பொறுப்பான ஒருவரை இந்தியர்களின் நலனைக் கவனிக்க தேர்ந்தெடுத்தவர்  எல்லாத் தகுதியும் உள்ளவர். அவர் தகுதி இல்லாதவராக இருந்தால் பிரதமர் அவரைத் தேர்ந்தெடுத்திருக்க மாட்டார்,  இத பாஸ் கட்சி முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

வெதமூர்த்தியே இந்தியரின்  நலனுக்கான சரியான தேர்வு. அதில் நமக்கு எந்த ஐயமுமில்லை. பாஸ் கட்சியின் தலையீடு தேவை இல்லாதது.  சீபீல்ட் ஆலய விவகாரத்தில் வேதா சரியான நடைமுறைகளைக் கையாண்டார்.  ஒரு வேளை பாஸ் எதிர்பார்ப்பது போல வேதாவிடம் "அற்புத விளக்கு"  இல்லாமல் இருக்க்லாம்! அவர் எந்த நேரத்திலும் தனது கடமையிலிருந்து தவறவில்லை! 

பாஸ் சொல்லுகிறதே என்று ஓர் அமைச்சரைப் பதவியிலிருந்து விலக்குவது  தவறான உதாரணமாகி விடும். இன்று வேதா என்றால் நாளை இன்னொருவரைக் கைகாட்டுவார்கள்!  அவர்கள் மட்டும் அல்ல. மலாய் அரசு சாரா அமைப்புக்களும் அதே வேலைகளைத்தான் செய்வார்கள். காரணம் இந்தியர்கள் என்றால் பாதையில் நடந்து செல்லும் ஒரு மலாய்க்காரர் கூட கவிழ்த்து விடலாம் என்னும் தவறான எண்ணம் அவர்களிடம் உண்டு. அதனை மாற்ற வேண்டும் என்னும் எண்ணத்தில் தான் புதிய மலேசியாவின் உருவாக்கம்! மீண்டும் மீண்டும் இந்தியர்களைச் சீண்டுவதும் இழித்துரைத்துப் பேசுவதும் ஒரு சிலருக்கு, ஒரு சில கட்சிகளுக்குப் பொழுது போக்காகி விட்டது!

மீண்டும் சொல்லுகிறோம். வேதாவுக்கு மாற்று இல்லை! நமக்கு சாமிவேலுக்கள் வேண்டாம்! வேதாக்கள் மட்டுமே தேவை!

வேதாவிற்குப் பதிலாக...? ............வேதாவே தான்...!

Sunday, 23 December 2018

இத்தனை ஆண்டுகளாக இப்படித்தானா...!

மிளகாய்கள் பற்றியான ஒரு செய்தி உடம்பெல்லாம் எரிச்சலை உண்டாக்குகிறது!

ஆமாம்,  இப்போது தான் சுகாதார அமைச்சு கண்டுப் பிடித்திருக்கிறது!  நாட்டிற்குள் விற்கப்படும் 21 வகையான - வெளிநாடுகளிலிருந்து வரும் மிளகாய்கள் - உண்பதற்கு ஏற்றவை அல்ல என்கின்ற உண்மை இப்போது தான் சுகாதார அமைச்சின் கவனத்திற்கு வந்திருக்கிறது! 

அளவுக்கு அதிகமான பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன் படுத்துவதால் வருகின்ற ஆரோயக்கியமற்ற பிரச்சனை இது! இந்த ஓரு ஆண்டாகத் தான் சுகாதார அமைச்சு  இதனை ஆய்வு செய்ய ஆரம்பித்திருக்கிறது! 

வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற மிளகாய் வகைகள் மட்டும் அல்ல அனைத்து வகையான மரக்கறிகளும் நமது நாட்டு சட்டத்திற்கு உட்பட்டவைகள் தான்.  அவைகள் உள் நாட்டு உற்பத்தியாக இருந்தாலும் சரி, வெளி நாட்டு இறக்குமதியாக இருந்தாலும் சரி அவைகளின் தரம் பார்த்து மலேசியர்கள்  உட்கொள்ள ஏற்றவைகள்  தானா என்கின்ற தரம் பார்த்து பிரிப்பது சுகாதார அமைச்சின் கடமை.

சுகாதார அமைச்சு சுமார் 503 வகையான  மிளகாய்களை ஆய்வு செய்ததில்  அதில் 21 வகைகள் மிகவும் கெடுதலானவை என்கிற உண்மையைக் கண்டுப்  பிடித்திருக்கிறது.  இந்த 21 வகைகளைத் தவிர்த்து மற்றவை நமது உணவுக்கு ஏற்றவை என்பதாக அமைச்சு கூறுகிறது.

நம்மிடையே உள்ள ஒரு கேள்வி. இந்த ஆய்வு என்பது எல்லாக் காலங்களில் உள்ள ஓர் ஆய்வு தான்.  இந்த ஆண்டு ஜனவரி முதல் என்று ஏன் சுகாதார அமைச்சு கூறுகிறது? அப்படி என்றால் இதற்கு முன்னர் எந்த ஆய்வையும் அமைச்சு மேற்கொள்ளவில்லையா? அப்படி இருக்க வாய்ப்பில்லை!  அது அவர்களின் கடமை என்பதால் அந்த ஆய்வுகள் வழக்கமாக நடந்து கொண்டு தான் இருக்கும்.

ஆனால் ஒன்று சொல்லலாம். வழக்கமாகச் சொல்லப்படுவது தான்.  ஆய்வுகள் பின்னுக்குத் தள்ளப்படுவதும் 'தள்ளுவது' முன்னுக்குத் தள்ளப்படுவதும்  இருக்கலாம். முன்பு அப்படி நடக்கும் என்பது  அனைவரும் அறிந்தது தான்! 

உண்மையைச் சொன்னால் நாம்  சுகாதாரமற்றக்  காய்கறிகளைப் பல ஆண்டுகளாக சாப்பிட்டுக் கொண்டு தான் வருகிறோம். அதில் மிள்காயும் அடங்கும்! அவ்வளவு தான்.இப்போது ஏதோ ஒன்று அவர்களை உண்மைகளைச் சொல்ல வைக்கிறது. அதனால் அவர்கள் சொல்லுகிறார்கள்!

இனி மேல் சுகாதாரமான காய்கறிகளையோ அல்லது மிளகாய்களையோ  மலேசியர்கள்  சாப்பிட முடியும் என நம்பலாம்.

கடந்தவைகள் கடந்தவைகளாக இருக்கட்டும். நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும்.

Saturday, 22 December 2018

நாதியற்றுப் போனதா நாடற்றவர் பிரச்சனை...?

நாடற்றவர் பிரச்சனை கேட்பாரற்று, நாதியற்றுப் போனதா என்கிறார் நாடாளுமன்ற மன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ!

ஆமாம்! அதைத்தான் நாமும் கேட்கிறோம். ஏழு மாதங்கள் ஆகிவிட்ட பின்னரும் இந்தப் பிரச்சனையைப் பற்றி கப்சிப் என்றிருக்கின்றனர்  பிரச்சனையை முடித்து வைக்கும் நிலையில் இருப்போர். நூறு நாளில் முடித்து வைப்போம் என்பது தேர்தல் உறுதி மொழி. இது நாள் வரை எந்த ஒரு முன்னேற்றத்தையும் காண முடியவில்லை!  என்ன முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்பதும் புரியவில்லை.  என்ன தான் நடக்கிறது என்பதும் புரியவில்லை!

நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கலாம். இருக்கட்டும்.  நாட்டில் பிரச்சனைகள் இல்லாவிட்டால் பழைய அரசாங்கத்தை நாம் ஏன் தூக்கி எறிகிறோம்? புதிய அரசாங்கத்தை ஏன் சிம்மாசனத்தில் ஏற்றுகிறோம்?

நாடு ஏகப்பட்ட  கடனில் மூழ்கியிருக்கிறது.. அதுவும் மாதா மாதம் கோடி கோடியாக கடனுக்காக அள்ளி அள்ளிக் கொடுக்க வேண்டியிருக்கிறது. உண்மை தான்.  நாட்டை திவால் ஆவதிலிருந்து காப்பாற்ற வேண்டியிருக்கிறது.  அந்த திவால் நிலையிலிருந்து நாட்டை மேலே கொண்டு செல்ல நல்ல தொரு நிதி அமைச்சர் லிம் குவான் எங் கிடைத்திருக்கிறார். கடன் அடைப்பது மட்டும் அல்லாமல் புத்தாண்டில் ஏழைப்பிள்ளைகளுக்குப் பண உதவி, அரசாங்க ஊழியர்களுக்கு போனஸ் என்று அவரால் அறிவிக்க முடிகிறது. கடன் இருந்தாலும் தொடர்ந்து நல்ல பணிகளுக்கு அவரால் பணம் ஒதுக்க முடிகிறது.  இது எப்படி முடிகிறது?  நிதி அமைச்சருக்குக் கொடுக்கப்பட்ட வேலையை அவர் செய்கிறார்! ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை!

நூறு நாள் உறுதி மொழிகளில் நாடற்ற பிரஜைகளின் பிரச்சனை முதன்மையானது. இந்த முதன்மையான பிரச்சனையைத் தீர்த்து வைப்பது யாருடைய பொறுப்பு? எந்த அமைச்சர் பொறுப்பேற்றிருக்கிறார்? ஏன் அந்த அமைச்சர் செயல் பட மறுக்கிறார்.  இது உள்துறை அமைச்சை சார்ந்தது என்றால் ஏன் அந்த அமைச்சால் செயல் பட முடியவில்லை? செயல் பட மறுக்கும் அதிகாரிகளை ஏன் தொடர்ந்து இந்தச் தெண்டச் சோறுகளை வைத்திருக்க வேண்டும் என்னும் கேள்வி எழுவது இயற்கை தானே!

ஒரு நாட்டின் கோடி கணக்கான கடன்களை அடைக்க ஒரு அமைச்சரால் முடிகிறது. இருபத்து நான்கு மணி நேரத்தை அந்த அமைச்சர் செலவிடுகிறார். ஆனால் நூறு நாள்களில் முடிப்போம்  என்று சொல்லப்பட்ட  வாக்குறுதியை  யாராலும் நிறைவேற்ற முடியவில்லை!  நூறு நாள்கள் முடிந்துவிட்டன!  இரு  நூறு நாள்கள் முடிந்துவிட்டன.  இன்னும் எந்த விடியலும் தெரியவில்லை! ஆக நாடற்றவர் பிரச்சனை கிடப்பில் போடப்பட்டுவிட்டதாக  நினைக்கலாம்!

ஒன்று தெரிகறது. பழைய அரசாங்கப் பாதையில் புதிய அரசாங்கமும் பயணிக்கிறதோ என்று ஐயம் ஏற்படுகிறது!

சந்தியாகோ நீங்கள் சொல்லுவது சரிதான்!

Friday, 21 December 2018

சாடிக் விளக்க வேண்டும்...!

பெர்சாத்து,  இளைஞர் பிரிவு தலைவர் சைட்  சாதிக் சரியான விளக்கம் அளிக்க வேண்டும்.  

பிரதமர் துறை அமைச்சர் பி.வேதமூர்த்தி பதவி விலக வேண்டும் என்று பிரதமரிடம் அவர் கொடுத்த மகஜரைப் பற்றி போதுமான விளக்கங்கள் கொடுக்கப்பட  வேண்டும். சைட்  சாதிக், பககத்தான்  அரசாங்கத்தில் ஓர் அமைச்சராக இருக்கிறார். அதே சமயத்தில் அதே பக்கத்தான் அரசாங்கத்தில் வேதமூர்த்தியும் ஓர் அமைச்சராக இருக்கிறார். இந்தச் சூழலில்  ஒரே அரசாங்கத்தில் இருக்கும் ஓர்  அமைச்சர் இன்னொரு அமைச்சரைப் பற்றி மகஜர் கொடுப்பதும், அவரைப் பதவி விலகச் சொல்லுவதும் சரி தானா என்று யோசிக்க வேண்டும். அது உங்களுக்குச் சிறுபிள்ளைத்தனமாக தோன்றவில்லையா!

ஏன் கல்வி அமைச்சர் மஸ்லியைப் பற்றியும் தான் பதவி விலகச் சொல்லி  குரல் கொடுக்கின்றனர். அது பற்றி ஏன் சாதிக் கண்டு கொள்ளவில்லை என்னும் கேள்வியும் எழத்தானே செய்கிறது.  இப்போது வாய் மூடிக் கொண்டு இருக்கவும்,  மக்கள் குரலை கேட்காமல் இருக்கவும்,  தட்டிக்கேட்க வேண்டிய நேரத்தில் தட்டிக்கேட்காமல் இருக்கவும் தான் நீங்கள் அரசியலுக்கு வந்தீர்களா? தலை ஆட்டுவதற்கு தலை  எங்கே போயிற்று!

சாதிக், இவ்வளவு பேசும் நீங்கள் ஏன் மஸ்லி விஷயத்தில் பிரதமரிடம் மகஜர் கொடுக்காமல் இருக்கிறீர்கள்?  அவர் மலாய்க்காரர் என்கிற பயம் உங்களுக்கு உண்டு என்பது எங்களுக்கும் தெரியும். ஓர் இந்தியர் என்றால் பிரதமரிடம் மகஜர் கொடுக்கலாம், ஆர்ப்பாட்டம் செய்யலாம், தொடர் போராட்டங்களை நடத்தலாம், பதவி விலகச் சொல்லலாம், அப்படித்தானே! அதற்குத் தானே இளைஞர் பிரிவு?

சாதிக், நீங்கள் இனவாதி என்று நாங்கள் சொல்லலாமா? இந்தியர் என்றால் ஒரு மாதிரி வேஷம்! மலாய்க்காரர் என்றால் ஒரு மாதிரி வேஷம்! சீனர் என்றால் ஒரு மாதிரி வேஷம்!  இந்த நிலையில் நாங்கள் எப்படி உங்களைத் தட்டிக் கேட்கும் தளபதி என்று ஏற்றுக்கொள்ள முடியும்?

இந்தியர்கள் என்றால் நாங்கள் ஒவ்வொரு விஷயத்திலும் உங்களுக்கு "ஆமாஞ்சாமி" போட வேண்டும் என்று நினைக்கிறீர்களா>

எங்களைப் பொறுத்தவரை வேதமூர்த்தி இந்தியர்களுக்கான ஓர் அமைச்சர். இந்தியர்களின் நிலையை அறிந்தவர், அவர் சரியான வழியில் இந்தியர்களுக்கு வழிகாட்டியாக இருப்பார் என இந்தச் சமூகம் எதிர்பார்க்கிறது. இந்த நிலையில் அவரைப் பதவி விலகச் சொல்லுவது இந்திய சமூகத்திற்கு எதிராகக் கொடி பிடிப்பவர்களில் நீங்களும் ஒருவர் என நாங்கள் சந்தேகிக்க வேண்டியுள்ளது!

வேதமூர்த்தி என்ன தவறு செய்தார் என்பதற்கான விளக்கத்தை நீங்கள் கொடுக்க வேண்டும்.  பொது மக்களுக்கு உங்கள் விளக்கத்தைக் கொடுங்கள். அது போதும்!

கூட்டுச் சதியா..?

பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தியைப் பதவி விலகச் சொல்லுவது ஒரு கூட்டுச் சதியாகவே நாம் நினைக்க வேண்டியுள்ளது.

இந்த விலகல் கோரிக்கை மலாய் அரசியல்வாதிகளிடமிருந்தே  தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் பாஸ் கட்சியினர். அதனைத் தொடர்ந்து அம்னோ கட்சியினர். இன்னும் தொடர்ந்து பக்கத்தானிலுள்ள மலாய் அரசியல்வாதிகள்!

அது ஏன் மலாய் அரசியல்வாதிகள்? இந்தியர்களுக்கு எல்லாத் துறையிலும் சம பங்கு என்பதை ஏற்க இயலா மலாய் அரசியல்வாதிகள் ஏன்?  ஆமாம், முந்தைய ஆட்சியில் ம.இ.கா. செய்த துரோகத்தால் ஒரு அமைச்சர், ஒரு துணை அமைச்சர். அது மட்டும் போதும் என்றது ம.இ.கா.  எங்களுக்கும் மகிழ்ச்சி என்றது பாரிசான்! நீங்கள் கேட்டாலும் நாங்கள் கொடுக்கப் போவதில்லை என்றது அம்னோ! 

ஆனால் அந்த நிலைமையை மாற்றி அமைத்தார் பிரதமர் டாக்டர் மகாதிர். காரணம் உண்டு. எண்பத்தைந்து விழுக்காடு இந்தியர்கள் பக்காத்தானுக்கு வாக்களித்திருந்தார்கள்.  இந்தியர்களின் வாக்குகளைக் கவர பி.வேதமூர்த்தி பெரும் பங்காற்றியிருந்தார்.  அதே சமயத்தில் பக்கத்தானை ஆதரித்த மலாய்க்காரர்கள் சுமார் இருபத்தைந்து விழுக்காட்டினர்!

பக்காத்தானை ஆதரித்த இந்தியர்களின் எண்ணிக்கை அதிகம். அத்தோடு வேதமூர்த்தியோடு ஓர் ஒப்பந்தத்தையும் பிரதமர் கையெழுத்திட்டிருக்கிறார். பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களின் தேவைகள் என்ன என்பதே அந்த ஒப்பந்தம். அவைகளை நாங்கள் செயல்படுத்துவோம் என்றார் பிரதமர்.

யாரும் எதிர்ப்பாராத நிலையில் பக்கத்தான் பதவி ஏற்றது. அத்தோடு டாக்டர் மகாதிர் பிரதமராகப் பதவி ஏற்றார். இன்று வேதமூர்த்தி அமைச்சராக இருக்கிறார் என்றால் அவர் இந்தியர்களின் பிரச்சனையை நன்கு அறிந்தவர் என்பதால் தான். அதனால் தான் பிரதமர் இந்தியர்களின் நலனுக்காக வேதமூர்த்தியைப் பதவியில் அமர்த்தினார்.

இந்தியர்களைப் பொறுத்தவரை அவரது பணி சிறப்பாகவே உள்ளது. அவரால் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும்.

ஆனால் இந்த மலாய் அரசியல்வாதிகள் இந்தியர்களுக்கு இத்தனை அமைச்சர்களா என்று தான் சிந்திக்கிறர்களே தவிர இந்தியர்களின் நிலையை அவர்கள் உணர மறுக்கிறர்கள்.

ஆமாம்! இந்த அரசாங்கத்தை ஆதரித்தவர்கள் நாங்கள்.  நாடாளுமன்றத்திற்கு எங்களது பங்கு அதிகம். அறுபத்தைந்து தொகுதிகள் எங்களை நம்பி உள்ளன! அதனால் நான்கு அமைச்சர்கள் என்பது அதிகம் அல்ல!

இதனை பொறாமைக் கண் கொண்டு பார்க்கக் கூடாது. மலாய்த் தலைவர்கள் ஒன்று சேர்ந்து கொண்டு வேதமூர்த்தி பதவி விலக வேண்டும் என்று சொல்லுவதைப் பார்க்கும் போது இது மலாய்த் தலைவர்களின் கூட்டுச்சதி என்றே நம்மால் பார்க்க முடிகிறது! 

இல்லை! நாங்கள் இன்னொரு பாரிசான் அரசாங்கத்தை விரும்பவில்லை! பக்காத்தான் அரசாங்கம் விவேகமான முறையில் நடந்து கொள்ள வேண்டும். வேதமூர்த்தி தனது பணிகளைச் செவ்வனே செய்ய அவர் பணியில் தொடர வேண்டும்.

இந்த மலாய் அரசியல்வாதிகளின் கூட்டுச்சதியைத் தகர்க்க வேண்டும்! மலாய் அரசியல்வாதிகள் பொறாமை குணத்தை விட்டொழிக்க வேண்டும்.

எங்கள் உரிமைகள் மீது கைவைப்பதை  நிறுத்த வேண்டும். இது ஒரு கூட்டுச் சதி. அதனை முறியடிப்போம்!

Thursday, 20 December 2018

நூருலுக்கு அமைச்சர் பதவியா...?

அன்வார் இப்ராகிம் மகள் நூருல் இசாவுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று சொல்லுபவர்களுக்கு  நமது வாழ்த்துகள்! காரணம் அவருக்கு அந்த தகுதி உண்டு என்பதில் எந்த சந்தேமும்  இல்லை.

ஆனால் பிரதமர்  துறை அமைச்சர் பி. வேதமூர்த்தியைக் காலி செய்து விட்டு நூருலுக்கு அந்தப் பதவியைக் கொடுக்க வேண்டும் என்பதை நம்மால்  ஏற்றுக்கொள்ள முடியாது. 

இப்படி ஒரு கோரிக்கையை திரங்கானு மாநில அமானா இளைஞர் பிரிவு பிரதமரிடம் முன் வைத்திருக்கிறது. திரங்கானு என்றால் நமக்குப் புரிகிறது. அவர்களுக்கு இந்தியர்களின் பிரச்சனை புரியாது. அவர்கள் எல்லாக் காலங்களிலும் மலாய்க்காரர்களுடன் வாழ்பவர்கள். நல்ல காலம் அவர்கள் மாநிலத்திலிருந்து ஒருவரை நியமிக்கச் சொல்லி எந்த முன் மொழிதலும் இல்லை. அது வரை அவர்களைப் பாரட்டலாம்!

இங்கு நாம் கவனிக்க வேண்டியது ஒன்று தான். வேதமூர்த்தி ஏன் பதவி விலக வேண்டும் என்பது பற்றி இவர்களால் சரியான காரணங்களைச் சொல்ல முடியவில்லை! ஏன், ஏன்  என்று தான் நாம் மீண்டும் மீண்டும்  கேட்கிறோம்.  அவர் பதவி விலகுவதற்கு எந்தக் காரணமும் இல்லை. பதவி விலகுகின்ற அளவுக்கு அவர் எந்தச் செயலையும் செய்யவில்லை.

பாஸ் கட்சிக்காரன் சொன்னான், அம்னோகாரன் சொன்னான் என்கிற ரீதியில் தான் மற்றவர்களும் அதனையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்! அவர்கள் சொன்னார்கள் என்றால் அது சரியா என்று ஆராய்ந்து பார்க்கின்ற அளவுக்குக் கூட அவர்கள் மன வளர்ச்சி பெற்றவர்களாக இல்லை! 

இந்த விலகல் குறித்து அதிகமாக மலாய்க்கார அரசியல்வாதிகளின்  பக்கம் இருந்து தான் கேட்கிறது. சீனர்களோ,  இந்தியர்களோ அல்ல.  நம்மைப் பொறுத்தவரை இது மலாய்க்கார அரசியல்வதிகளின் பொறாமையைத் தான் காட்டுகிறதே தவிர வேறொன்றும் இல்லை! ஆமாம்! எல்லாக் காலங்களிலும் ஒரே ஒரு அமைச்சரை வைத்துக் கொண்டிருந்த சமூகம் இப்போது நாலு அமைச்சர்கள் என்னும் போது அது பல மலாய் அரசியல்வாதிகளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பது தான் உண்மை! அதைக் குறி வைத்தே மலாய் அரசியல்வாதிகள் செயல்படுகிறார்கள்!

ஏன் திரங்கானு அமானா கூட வேதமூர்த்தியை விலக்கி விட்டு இன்னொரு இந்தியரைக் கொண்டு வர வேண்டும் என்று சொல்லவில்லை.   அது ஒன்றே போதும் அவர்கள் இன வெறியர்கள் என்பதற்கு! இந்தியர் வேண்டாம் என்றால் இன்னொரு இந்தியரைப் போடுங்கள் என்று அவர்கள் சொல்லியிருந்தால் அவர்கள் நியாயமானவர்கள். ஆனால் அப்படி சொல்லவில்லை. அவர்கள் இன ரீதியில் சிந்திக்கிறார்கள்!  அப்படி என்றால் நாமும் அப்படித்தான் சிந்திக்க வேண்டும்!

யாருக்கும் எந்தப் பதவியாவது கொடுக்கட்டும். நமக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் வேதமூர்த்தி பதவி விலக வேண்டும் என்பது கண்டனத்திற்குரியது. 

வேதா, தனது பணிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும். நமது பிரதமர் அவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்! அதே போல நமது இயக்கங்களும் அவருக்காகக் குரல் கொடுக்க வேண்டும்!

Wednesday, 19 December 2018

தலைவர் பதவிக்கு இலாயக்கில்லை...!

பெர்சாத்துவின் இளைஞர் அணி தலைவர் பதவிக்கு சைட் சடிக் இலாயக்கற்றவர் என்பதைக் காட்டி விட்டார்!

சாடிக் எந்த நிலையில் பதவிக்கு வந்தார் என்பது நமக்குத் தெரியும். பல பெரிய வாய்ப்புக்களை உதறித் தள்ளிவிட்டு வந்தவர் " நாட்டுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதால் இங்கிலாந்து சென்று படிக்கும் வாய்ப்பை மறுத்து விட்டேன்" என்று சேவக்காக வந்தவர். உள்ளூர் பட்டதாரி. 

அதெல்லாம் அவரைப் பற்றியான கூடுதல் மதிப்பீடுகள்.  அவரின் திறன் பற்றி நமக்கு எந்த ஐயமுமில்லை.  நம்புக!

ஆனால் வேலை அனுபவம்  என்று வரும் போது அதில் அவர் கோட்டை விட்டு விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.  அவர் இளைஞர் அணி தலைவர் மட்டும் அல்ல விளையாட்டுத் துறை அமைச்சராகவும் உள்ளார். ஒரே குறை அவருக்கு வேலை அனுபவம் இல்லை. அரசியல் அனுபவம் இல்லை. பிரச்சனைகளை எப்படி அணுகுவது என்பது  புரியவில்லை! முதலில் மாணவர் பருவம். அப்போது எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். ஆனால் இப்போது அமைச்சர் பதவி. இது அரசியல் பதவி. எல்லா இன மக்களையும் அரவணைத்துக் கொண்டு போக வேண்டிய பதவி. யோசித்துப் பேச வேண்டிய பதவி. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேச முடியாது.

அவரின் பிரதமர் துறை அமைச்சர் பி.வேதமூர்த்தியைப் பற்றியான கணிப்பு  மிகவும் தவறானது.  "அவர் ஓர் இந்தியர். நானோ பூமிபுத்ரா.  நான் சொல்லுவது சரியாகத்தான் இருக்கும்.  அவரைப் பற்றி பேசினால் யாரும் எந்தக் கேள்வியும் கேட்கப் போவதில்லை!" என்று அவர் நினைத்தால் - நினைத்தால் கூட - தவறு தான்.

சாடிக் ஒன்றை மறந்து விட்டார். வேதா தீடிரென பொது வாழ்க்கைக்கு வந்தவர் அல்லர்.  பொது வாழ்க்கை என்பதில் அவரின் இரத்தத்தில் ஊறியது. அதுவும் இந்தியர்களின் மேம்பாட்டிற்காக  எல்லாக் காலங்களிலும் தொடர்ந்து போராடியவர். அவர்  கோவில் போராட்டங்களில் அதிக ஈடுபாடு காட்டினாலும் அதுவும் அவருடைய போராட்டங்களில் ஒன்று தான்.

சாடிக் பிரதமரிடம் மனு கொடுக்கும் முன்னர் அவரே நேரடியாக வேதாவிடம் பேசி இருக்கலாம். அவருடைய கருத்தைக் கேட்டிருக்கலாம். அல்லது உண்மை நிலவரம் என்ன என்பதை கேட்டு அறிந்திருக்கலாம். எதுவுமே செய்யாமல் பிரதமரிடம் மனு கொடுப்பது அவருடைய முதிர்ச்சியைக் காட்டவில்லை. அம்னோ, பாஸ் இரு கட்சிகளும் அரசாங்கத்தை எப்படி - எப்போது குறை கூறலாம் என்று  காத்துக் கொண்டிருக்கின்றன. அவர்கள் பேசுவதெல்லாம் அரசியல் இலாபத்திற்காக! சாடிக்கும் வேதாவும் ஒரே அரசாங்கத்தை பிரதிநிதிப்பவர்கள் என்னும் போது சாடிக் தனது முதிர்ச்சியைக் காட்டியிருக்க வேண்டும்.

சாடிக் இன்னும் இளைஞராகத் தான் இருக்கிறார். பதவிக்கு ஏற்ப முதிர்ச்சி இல்லை!  கூடி வேலை செய்யும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே நமது ஆலோசனை!

 

ஏன் இந்த விலகல் கோரிக்கை?

பிரதமர் துறை  துணை அமைச்சர் பி.வேதமூர்த்தி பதவி விலக வேண்டும் என்னும் கோரிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது.

இந்திய சமுதாயத்தைப் பொறுத்தவரை அவருடைய சேவை நமக்குத் தேவை என்பதாகத்தான் நாம் சொல்ல வேண்டி வருகிறது. அவர் அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று சொல்லுகிற அளவுக்கு அப்படி ஒன்றும் தவறு செய்ததாகவும் தெரியவில்லை.

இன்னொன்றையும்  நாம் கவனிக்க வேண்டும். இந்தியர்கள் யாரும் அவர் பதவி விலக வேண்டும் என்று இதுவரை சொல்லவில்லை.   அதனை வைத்துப் பார்க்கும் போது அவரது சேவை இந்தியரிடையே திருப்தியாகவே இருப்பதாகக் கொள்ளலாம்.  அவர் வாழ்க்கை பெரும்பாலும் இந்தியரை ஒட்டியே தொடர்ந்து வந்திருக்கிறது. நம்மைப் பொறுத்தவரை அவரது சேவை நிறைவாகவே இருப்பதாகக் கருதலாம்.

பதவிக்கு வந்த இந்த ஆறு,  ஏழு மாதத்தில் பெரிதாக நாம் அவரிடமிருந்து எதிர்ப்பார்க்க முடியாது. அவர் இந்தியர்களை மட்டும் பிரதிநிதிக்கவில்லை.  மற்றைய சிறுபான்மையினரான பழங்குடி மக்களையும் பிரதிநிதிக்கிறார்.  இவ்ர்களின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளவே ஆறு, ஏழு மாதங்கள் பிடிக்கும். அதற்குள் இவரைப் பற்றி குறை கூறுவதும் பதவி விலக வேண்டும் என்று சொல்லுவதும் எந்த வகையிலும் நியாயமாகப் படவில்லை.

இவர் பதவி விலக வேண்டும் என்று முதன் முதலில் சொல்ல ஆரம்பித்தவர்கள் யார்?  அம்னோ, பாஸ் கட்சியினர் தான் இதனைச் சொல்ல ஆரம்பித்தனர். காரணம் என்ன? இந்த இரு கட்சியினருக்கும் வேதமூர்த்தியைப் பிடிக்கக் காரணமில்லை.  ஹின்ரா காலத்திலிருந்தே  அவரை இவர்களுக்குப் பிடிக்காது ஒரே காரணம். கோவில்களுக்காகப் போராட்டம் நடத்தியவர் என்பதே அவர்களுக்குப் பிடிக்காமல் போய்விட்டது! அத்தோடு இந்தியர்களுக்காக அடிக்கடி குரல் கொடுப்பவர். அவர்கள்,  வேதமூர்த்தி ம.இ.கா.வினரைப் போல செயல் படுவார் என நினைத்தார்கள்.

நம்மைப் பொறுத்தவரை வேதமூர்த்தி நமக்குத் தேவை. அவர் கோவில்களுக்கு  மட்டும் அல்ல இந்திய சமுதாயத்தின் நலனில் அக்கறை உள்ளவர். பதவியில் இருக்கும் காலத்தில் அவர் தனது தாக்கத்தை விட்டுவிட்டுத் தான் போவார். அதனை நாம் நம்பலாம்.  வெறும் பதவியை அலங்கரிப்பவர் அல்லர் அவர்.

நமக்கு எத்தனை இந்திய அமைச்சர்கள் இருந்தாலும் வேதமூர்த்திக்காக குரல் கொடுக்க மாட்டார்கள். அவர்கள் அனைவரும் கட்சிகளின் சார்பில் பதவி வகிப்பவர்கள். கட்சி அவர்களைக் கட்டுப்படுத்தும்.  நியாயமே! மன்றங்கள், இயக்கங்கள், சங்கங்கள் குரல் கொடுக்காது!  காரணம் அங்குத்  தமிழர்கள் இல்லை!

நாம் தான் குரல் கொடுக்க வேண்டும். ஆம்! தமிழர்கள் தான் குரல் கொடுக்க வேண்டும்!

Tuesday, 18 December 2018

ஓராண்டு காலம் பதவி இல்லை! சரியா...?

பக்கத்தானில் இணையும் அம்னோ தலைவர்களுக்கு ஓராண்டு காலம் பதவி இல்லை என்பது சரியாக அணுகுமுறையா? 

சரியான அணுகுமுறை அல்ல என்பதே நமது நிலை! ஒன்றை நாக் கவனிக்க வேண்டும்.  அங்கிருந்து வருபவர்கள் யாரும் எனக்குப் பதவி வேண்டும் என்று கேட்டு வரவில்லை.  பதவி கொடுத்தால் தான் வருவேன் என்று யாரும் அடம் பிடிக்கவில்லை.  அவர்களுடைய கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அங்கிருந்து இங்கு வருகின்றனர். அப்படித் தான் இந்தக் கட்சி தாவல்களை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இங்கு வந்தால் பதவி கிடைக்கும் என்று அவர்கள் நினைத்தால்  அது தவறு. அப்படி அவர்களுக்குப் பதவி கொடுத்தால் அது இலஞ்சம் கொடுப்பதற்கு சமம்.

ஓராண்டு காலத்திற்குப் பதவி இல்லை என்பதெல்லாம் சரியாக வராது. அவர்களுடைய நாடாளுமன்ற பாதவி காலம் முடியும் வரை அவர்கள் காத்திருக்க வேண்டும். ஒரு வேளை அடுத்த தேர்தலில் அவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்து அவர்கள் வெற்றி பெற்று வந்தால் அதன் பின்னர் அவர்களுக்குப் பதவி கொடுப்பது பற்றி யோசிக்கலாம்.

இந்த தாவல்களில் சம்பந்தப்பட்டவர்கள் மாசு மறுவற்றவர்கள் என்பதால் அவர்கள் மக்களின் தொண்டுக்குத் தான் முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். அதனால் மீதம் உள்ள பதவி காலத்தில் மக்களின் தொண்டே மகேசன் தொண்டு என்று அவர்களை மக்களுக்கு ஊழியம் செய்ய விட வேண்டும்.  அதன் பின்னரே அவர்களுக்குப் பிற பதவிகள் கொடுப்பதைப் பற்றி முடிவெடுக்கலாம்.

இங்கு வந்தால் நாங்கள் பதவி கொடுப்போம் என்று உறுதிமொழி கொடுக்கப்பட்டிருந்தால்  அது நிச்சயமாக இலஞ்சம் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. அப்படி ஒரு நிலையிருந்தால் அது ஊழல் தடுப்பு ஆணையத்திடம் கொண்டு செல்லப்பட வேண்டும்.

ஓராண்டு காலம் பதவி இல்லை என்பது மக்களை ஏமாற்றும் ஒரு செயல். பதவி இல்லை என்பது தான் சரியான, விவேகமான ஒரு முடிவு.  தொண்டு செய்ய வந்தவர்களுக்கு உடனடியாக ஏதாவது பதவியைக் கொடுத்து உச்சி குளிர வைக்க வேண்டும் என்னும் அவசியமில்லை! 

ஓராண்டு காலம் என்பது சரியல்ல! தொடர்ந்து தொண்டாற்றுவோம் என்பதே சரி!

என்ன நடந்தது...?

அன்வார் இப்ராகிமின் புதல்வி நூருல் இசா அதிரடியான முடிவை எடுத்திருக்கிறார்! அவசர முடிவாகவும் இருக்கலாம்! அத்தியாவசியமான முடிவாகவும் இருக்கலாம்!

பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினராக அவர்  தொடர்வார். மற்றபடி அனைத்து அரசாங்க பதவிகளிலிருந்தும் அவர் தன்னை விடுவித்துக் கொண்டார்.

அவருடைய செயல் பார்ப்பதற்கு சிறுபிள்ளைத் தனமானது என நமக்குத் தோன்றும். உண்மை நிலவரம் என்ன என்பது இன்னும் வெளியாகவில்லை. குடும்ப நிலவரமா என்பதும் புரியவில்லை. அன்வார் சிறையிலிருந்த போது குடும்பத்தினரிடையே கட்டுப்பாடு இருந்தது. ஒரு சில விஷயங்களில் அன்வார் பொறுமை காக்கிறார்;காக்கத்தான் வேண்டும்.   சகித்துக் கொண்டு தான் வாழ வேண்டும். அவர் பிரதமர் அல்லவே! இதுவே குடும்பத்தின் உட்பூசலாகக் கூட இருக்கலாம். எல்லாம் யூகம் தான்!

அதுவும் இல்லை என்றால் ரபிசி ரம்லி, அஸ்மின் அலி போன்றவர்களின் திருவிளையாடலாகக் கூட இருக்கலாம்! ஒரு பக்கம் அன்வாரை ஆதரிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டே இன்னொரு பக்கம் எதிர்ப்பையும் காட்டுகின்றனர்! கட்சியில் ஒற்றுமை இல்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது! 

ஆக, ஏதோ ஒன்று னூருல் இசா மனதைப் புண்படுத்திக் கொண்டிருக்கிறது என்று மட்டும் தெரிகிறது. 

நூருல் இசா நல்ல மனம் படைத்த ஒரு பெண். நல்ல அரசியல்வாதி. ஊழலை வெறுப்பவர். இந்தியர்களின் மேலும் பாசம் உள்ளவர். வருங்காலத்தில் பிரதமராக வரக்கூடிய வாய்ப்பும் உள்ளது. பிரதமராக வர அத்தனை தகுதிகளும் கொண்டவர்.

பார்ப்பதற்கு அவர் செயல் நமக்குத் தொட்டாசினுங்கியை நினைவுபடுத்துகிறது! எடுத்தோம் கவிழ்த்தோம் என்னும் ரீதியில் செயல்படுகிறார்! 

அன்வாரின் மகள் இவர். அன்வார் எந்த அளவுக்குப் பொறுமையாக இருக்கிறார் என்பதை அறிந்தவர்.  பொறுத்தவர் பூமி ஆள்வார் என்பது அனுபவ மொழி.

நூருல் மீண்டும் தனது பணிகளைச் செய்ய வேண்டும். தனது பதவிகளை ஏற்க வேண்டும். சிறுபிள்ளைத் தனமாக செயல்படுவதை தவிர்க்கவேண்டும். நல்லதொரு அரசியல்வாதியை இழக்க நாங்கள் தயராக இல்லை.

நடந்தது நன்மைக்கே! நடப்பதும் நன்மைக்கே!  நடக்கப் போவதும் நன்மைக்கே!

Monday, 17 December 2018

தம்பி....! நீங்களுமா....?

அம்னோ கட்சியிலிருந்து அலை அலையாக பெர்சத்துக் கட்சியில் இணைந்து கொண்டிருக்கின்றனர்! அவர்களிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பதாக பிரதமர் மகாதிர் கூறிய போது நாமும் அரை மனதோடு ஏற்றுக் கொண்டோம்.  

ஒரு சிலர் மிக நல்லவர்களாகக் கூட இருக்கலாம்! யார் மனதில் என்ன இருக்கிறது என்பது இறைவனுக்கே வெளிச்சம். 

ஆனால் சமீபத்தில் ஒருவர் பெர்சத்துவில் இணைய விண்ணப்பம் செய்திருந்ததைக் கேள்வி பட்டதும் யாராலும் நம்ப முடியவில்லை! ஒரு காலத்தில் அவர் மிகவும் பிரபலம்! பிரபலமானது நல்ல செயல்களுக்காக அல்ல!  கேடித்தனமான செயல்களுக்காக பிரபலமானவர்!

ஒரு கற்பழிப்பு வழக்கு! ஆஸ்திரேலேயாவுக்குப் பணம் கடத்தியவர்!  தனக்கு ஆங்கிலம் தெரியாது என்று வாக்குமூலம் அளித்தவர்! பதவியில் இருந்த போது ஊழல் வழக்குகளைச் சந்தித்தவர்! சென்ற ஆண்டு முன்னாள் பிரதமர் நஜிப்பை சந்தித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டவர்!

அவர் தான் மலாக்கா மாநிலத்தின் முன்னாள் முதல் அமைச்சர் அப்துல் ரகீம் தம்பி சிக்! ஊழல் பெருச்சாளி! ஊழலின் மறு வடிவம்! அவர் நல்ல மனிதர் என்று எந்தக் காலத்திலும் - அவர் பதவியில் இருந்த போது கூட -பெயர் வாங்கியவர் இல்லை!

இவருடைய விண்ணப்பம் ஏற்றுக்  கொள்ளப்படுமா என்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் இணையத் தளத்தில் பகிரப்பட்டு வருகின்றன. நிச்சயம் ஜ.செ.க. அவரை எதிர்க்கும். ஏன் அன்வார் இப்ராகிம் கூட 
அவரை எதிர்ப்பார். 

எப்படியோ பக்கத்தான் தலைவர்களிடையே இவரின் விண்ணப்பம் ஒருமித்த கருத்துடன் ஏற்றுக் கொள்ளப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பெர்சத்துவின் தலைவர் டான்ஸ்ரீ மொகைதீன் யாசின் இன்னும் தடுமாற்றத்தில் தான் இருக்கிறார்!

நாம் இவர்களின் காதில் போட்டு வைப்பது: வெறும் அங்கத்தினராக  மட்டும் எடுங்கள்! அதற்கு மேல் வேண்டாம் என்பதே! ஒரு சிறிய பதவிக்குக் கூட இலாயக்கு இல்லாத மனிதர் இவர்!

தம்பி! வயசு போன காலத்தில் உங்களுக்கு ஏன் இந்த ஆசை! இப்போது தம்பிகளின் ஆட்சி!  அதுவே தொடரட்டுமே!

Sunday, 16 December 2018

ஊழலை ஒழிக்க முடியுமா...?

இலஞ்சம் ஊழல் என்பதெல்லாம் இன்றைய  நிலையில் அன்றாட நிகழ்ச்சியாகி விட்டது,.

இலஞ்சம் கொடுப்பதும் குற்றம் வாங்குவதும் குற்றம் என்பது நாம் அறிந்தது தான். கொடுப்பவர்கள் அதிகரித்ததன் பலன் தான் வாங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது! நாம் கொடுக்கவில்லை என்றால் யார் கேட்க முடியும்?

என் வாழ்நாளில் நான் யாருக்கும் இலஞ்சம் கொடுத்தது கிடையாது. நான் கொடுக்கத் தயாராக இல்லை. அவர்களும் கேட்கத் தயாராக இல்லை!

ஒரு முறை, தெரிந்தும். தவறான வழியில் காரைச் செலுத்தினேன். காலை வேலை தப்பித்து விடலாம் என்று நான் நினைத்தேன். அந்த நேரத்தில் எங்கிருந்தோ வந்தது போலிஸ் கார். நானும் பேசவில்லை, அவர்களும் பேசவில்லை! உடனே சம்மனைக் கொடுத்து  நீதிமன்றத்தில் பணத்தைக் கட்டச் சொன்னார்கள். அடுத்த நாள் சென்று கட்டினேன்! அது தான் முதலும் கடைசியும்!  நல்ல பாடம்! என் வாழ்நாளில் இதுவரை அரை காசு கூட இலஞ்சமாகக் கொடுத்ததில்லை. அது எனது கௌரவத்துக்கு குறைச்சல் என்று நான் நினப்பதுண்டு. 

இலஞ்சம் வாங்கக் கூடாது என்பது சிறு வயதிலேயே தொடங்க வேண்டும் என்று கூறுகின்றனர். அப்படி என்றால் வீட்டில் அப்பா சரியாக இருக்க வேண்டும்.  குழைந்தைகளுக்கு அப்பா தான் வழிகாட்டி. அப்பா கொள்ளையடித்தால் மகன் தப்பாமல் கொள்ளை அடிப்பான்!

பள்ளியிலேயே இலஞ்சம் ஊழலைப் பற்றி பாடமாகச் சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும் என்கின்றனர். அதுவும் சரி தான். ஆனால் ஆசிரியர்கள் சரியாக இருக்க வேண்டும். பள்ளிச் சிற்றுண்டிகளில் இலவசம், கமிஷன் என்னும் நிலை இருந்தால் பள்ளியிலும்  சரியாக வராது! ஆனால் அங்கு ஏதோ ஒரு சிலருக்காக நாம் பள்ளிகளை ஒரேடியாக புறக்கணித்து விட முடியாது! பல நல்ல ஆசிரிய பெருமக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்கிறார் பட்டுக் கோட்டையார். குழைந்தைப்  பருவத்திலேயே திருடு என்பதென்ன, ஊழல் என்பதென்ன என்பது சொல்லிக் கொடுக்கப் பட  வேண்டும்.

வருங்கால மலேசியா  சிறப்பாக இருக்கும் என நம்பலாம். ஓர் ஊழற்ற சமுதாயம் ஒளிரும் என எதிர்ப்பார்க்கலாம். ஊழலால் வளர்ந்த சந்ததி வெகு விரைவில் காணாமல் போகும்!

ஊழலை ஒழிக்க முடியுமா? முடியும்! கொடுப்பவர் வாங்குபவர் இரு பாலரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். சட்டம் தனது கடமைகளைச் சரியாக செய்தால் ஊழற்ற மலேசியா சாத்தியமே!பணம் விளையாடுகிறதோ...!

இப்போது மழை காலம்.  பூமி குளிர்ந்து விட்டது. ஆனாலும் நமது நாட்டை இத்தனை ஆண்டுகள் கிடுக்குப் பிடியில் வைத்திருந்த அம்னோவுக்கு இப்போது இலையுதிர் காலம்!  ஒன்று ஒன்றாக, கொத்துக் கொத்தாக உதிர்ந்து கொண்டு ஒரு  சில அரசியல்வாதிகளுக்கு  உஷ்ணத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது!

அம்னோ அரசியல்வாதிகள் பெரும்பாலோர் டாக்டர் மகாதிரின் தலைமையில் இயங்கும் பெர்சத்து கட்சியில் இணைய ஆர்வம் காட்டுகிறார்கள் என்னும் செய்தியைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பத்திரிக்கைகளில்  வாசித்துக் கொண்டிருக்கிறோம். சீக்கிரத்தில் அம்னோ கூடாரம் காலியாகி விடும் என்னும் அச்சத்தில் அம்னோவின் இன்றைய நிலைமை!

இந்நிலையில் பண அரசியல் தான் இந்த நிலைக்குக் காரணம் என்று அம்னோ தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகின்றன. அப்படியானால் ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகார் செய்யுங்கள் மற்றவைகளை நாங்கள் பார்த்துக் கொள்ளுகிறோம் என்கிறார் ஆணையத்தின் தலைவர். நிச்சயம் ஊழல் தடுப்பு ஆணையம் தயவு தாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கும் என  நம்பலாம்.

இந்த நேரத்தில் நமக்கும் ஒரு கேள்வி எழுகிறது. யார் யாருக்குப் பணம் கொடுக்கிறார்கள் என்னும் கேள்வி!  

பெர்சத்து புதிதாக நடந்து முடிந்த தேர்தலின் போது ஆரம்பிக்கப்பட்ட ஒரு கட்சி. அவர்களிடம் பண இருப்பு என்பதெல்லாம் வெறு சுழியமாகத்தான் இருக்க முடியும்! அதே சமயத்தில் அம்னோ  கோடிக்கணக்கில் பணம் புரளும் ஒரு கட்சி! பெர்சத்து பணம் கொடுக்க வழியில்லை. ஒரு வேளை அம்னோவில் உள்ளவர்களே பணம் கொடுத்து பெர்சத்துவில் சேர ஊக்குவிக்கப் படுகிறார்களோ!  இது அரசியல்! அரசியல்வாதிகள் படு பயங்கரமான மனிதர்கள்! அவர்கள் திட்டம் என்ன என்பதை சராசரியான நமக்குப் புரியாதது. அது தான் அவ்ர்களின் பலம்!

அதனால் நம்மைப் போன்ற கள்ள அரசியல் அறியாதார் என்ன தான் நடக்கிறது என்பதைப் புரிந்த கொள்ள கொஞ்சம் சிரமம் தான்! செய்திகள் கசியும் வரை பொறுத்திருக்க வேண்டும்.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை. பணம் விளையாடுகிறது என்பது உண்மை! யார் பணம் கொடுத்தால் என்ன அவன் கொடுத்தானா, இவன் கொடுத்தானா என்பதை விட அது அவன் அப்பன் வீட்டுப் பணம் இல்லை என்பது மட்டும் உண்மை! அது நம் அப்பன் வீட்டுப் பணம் ! அதனால் நாம் தெரிந்து கொள்ள எல்லா உரிமையும் உண்டு.

பொறுத்திருப்போம்.  பண விளையாட்டை ரசிப்போம்!

Friday, 14 December 2018

அரசியல் ஆசான்கள்...1

மலேசிய அரசியலில்,  அரசியல் ஆசான்கள் என்றால் முன்னாள் பிரதமர் நஜிப், ம.இ.கா.வின் முன்னாள் தலைவர் சாமிவேலு  - இவர்கள் இருவரும் தான் நம் கண் முன்னே நிற்கின்றனர்!

அரசியலை வைத்துக் கொண்டு எப்படியெல்லாம் பணம் சம்பாதிக்கலாம், மக்கள் பணத்தை எப்படி எல்லாம் கொள்ளையடிக்கலாம், தனது அரசியல் எதிரிகளை எப்படி எல்லாம் பழி வாங்கலாம் என்பதைக் கல்லூரியில் பாடம் நடத்துகின்ற அளவுக்குத் திறமை வாய்ந்தவர்கள் இந்த இருவருமே!

சாமிவேலு யாருக்கும் பாடம் நடத்தவில்லாயாயினும் அவரின் கீழ் இருந்தவர்களுக்கு அவரே பாடமாக நடந்து கொண்டார்!  முடிந்தவரை சுருட்டிவிட்டு,  போகும் போது கூடாரத்தையும் காலி செய்த பெருமை அவருக்கு உண்டு! முடிந்த வரை இந்தியர்கள் முன்னேறவே கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்!

ஆனால் நஜிப் இன்னும் ஒருபடி மேல்!   தனக்குக் கீழ் இருக்கும் ஒவ்வொரு வரும் தன்னைப் போலவே சம்பாதிக்க வேண்டும், பணம் பண்ண வேண்டும், பொருளாதார ரீதியில் உயர வேண்டும் என்னும் உயர்வான எண்ணம் அவருக்கு இருந்தது! அந்த எண்ணத்தை அரசாங்கத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கும் அவர் பகிர்ந்து கொண்டார்!

சமீபத்தில் பிரதமர் மகாதிர் பேசும் போது அரசாங்க ஊழியர்கள் புதிய அரசாங்கத்துடன் ஒத்துழைக்க மறுக்கின்றனர் என்பதாகக் குற்றம் சாட்டியிருந்தார். அதற்கான காரணம் இப்போது புரிகிறதா? அரசாங்கத்தில்  இலஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுகிறது என்றால் அதனைக் கண்டு கொள்ள வேண்டாம் என்பது தானே முன்னாள் பிரதமரின் கொள்கை.  இப்போது அது குறைந்திருக்கிறது  என்பது நல்ல செய்தி. 

ஓர் இனத்தையே ஒழித்துக்கட்டும் அளவுக்கு அல்லது அழித்துக்கட்டும் அளவுக்கு  இந்த இனத்தின் மீது அவர்களுக்கு  அப்படி என்ன கோபம்? ஒரு  சில நாடுகளில் நாம் பார்த்திருக்கிறோம்  சர்வாதிகாரம்  என்னும் பெயரில்  அந்த நாட்டு  மக்களை  மனிதர்களாகவே  நடத்தப்படுவதில்லை. ஏழ்மை, பஞ்சம், பட்டினி -  இது தான் சர்வாதிகாரம். 

ஆனால் நமது நாட்டில்  ஜனநாயகத்தின் பெயரில் சர்வாதிகாரம்!  சாமிவேலு மலேசிய இந்தியர்களுக்கப் பெரியதொரு பொருளாதார குழியை  வெட்டினார்!  நஜிப் மலேசியர்களுக்கே மண்வாரி  இயந்திரந்த்தைக் கொண்டு மண் அள்ளிப் போட்டார்! கடைசியாக நாட்டை சீனாவுக்கு அடகு வைத்தார்! டாக்டர் மகாதிர் வந்தார்; தப்பித்தோம்!

மலேசிய அரசியலில் சாமிவேலுவும் நஜிப்பும் ஊழல்களுக்கு இரு பெரும் ஆசான்கள்! இவர்களைப் போன்று இனி ஒரு மனிதரை நாம் பார்க்க மாட்டோம்!  ஊழல் வரிசையில் இவர்களே கடைசி!


Thursday, 13 December 2018

ஐசர்ட்டை எதிர்க்கும் அரசியல்வாதிகள்..!

ஐக்கிய நாடுகள் சபையின் ICERD ஒப்பந்தத்தை மலாய் அரசியல்வாதிகள், மலாய் அரசு சாரா இயக்கங்கள் அனைத்தும் கொடுத்த எதிர்ப்பின் பேரில் நடபு அரசாங்கம் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. பின் வாங்கிவிட்டது என்று சொல்லலாம். மலாய்க்காரர்களின் எதிர்ப்பை மீற முடியாது என்பது அவர்களின் விளக்கம்.

அதன் பொருள்:  மலாய்க்கார பூமிபுத்ராக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களின் சமயமான இஸ்லாம் பாதுகாக்கப் பட வேண்டும். மற்றவர்களுக்குச் சமயமும் இல்லை, உரிமைகளும் இல்லை!

ஒன்றை நாம் உற்று நோக்க வேண்டும்.  இது முற்றிலுமாக பெரும்பான்மை மலாய்க்காரர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது மட்டும் தான். சமயமும் இதில் அடங்கும்.

இது தான் சரி என்பது அவர்களின் வாதம்.  நமக்கும் இதில் ஆட்சேபிக்க ஒன்றுமில்லை. 

இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளில் மியான்மாரும் ஒன்று. அந்த நாடும் அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில்  கவனம் செலுத்திய நாடுகளில் ஒன்று. அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களின் சமயமான பௌத்தம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் அவர்கள் கவனம் செலுத்தினார்கள். அதனால் சிறுபான்மை ரோஹிங்யா  மக்களை ஓட ஓடத் துரத்தினார்கள், சுட்டுத் தள்ளினார்கள், பெண்களை, குழைந்தைகளைப் போட்டு மிதித்தார்கள் இன்னும் பல கொடுமைகள்.

இப்படி ஒவ்வொரு நாடும் தங்கள் விருப்பத்திற்கிணங்க  சிறுபான்மையினரை நடத்தக் கூடாது என்பது தான் ஐசெர்ட் ஒப்பந்தம். ஆனாலும் தான் தோன்றித்தனமாக சில நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையிழுத்திட மறுக்கின்றன. 

இன்றைய நிலையில் நாமே கையிழுத்திடாத நிலைமையில் மற்ற நாடுகளில் ஏற்படுகின்ற பிரச்சனைகளில் தலையிட முடியாது, நியாயம் பேச முடியாது 

ஐசர்ட்டை எதிர்க்கலாம் ஆனால் அதன் நியாயத்தை எதிர்க்க முடியாது!

கேள்வி - பதில் (90)

கேள்வி

பா.ஜ.க. வின் தோல்வியை "வெற்றிகரமான தோல்வி"  என்று தமிழிசை பெருமைப்படுகிறாரே!

பதில் 

நாம் சராசரியாக பயன்படுத்தும் வார்த்தை "கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை!" என்பதைத்தான்  இப்படி   வேறு மாதிரியாகச்  சொல்லுகிறார் தமிழிசை!

அதனாலென்ன நாமும்  அவருடன் சேர்ந்து பெருமைப்படுவோம்!

தோல்வி என்று வந்து விட்டாலே - அது வெற்றிகரமான தோல்வியாக இருந்தாலும்" மதிப்பும் மரியாதையும் போய்விட்டது என்று அர்த்தம்!  ஆனால் அரசியல்வாதிகள் மதிப்பு, மரியாதை, மானம், அவமானம் - இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள்!  அதெல்லாம் அவர்களுக்கு தூசு!  அவர்களுக்குப் பதவியைத் தவிர  வேறு எதுவும் தேவை இல்லை! பதவி இருந்தால் தான் பணம் வரும், கமிஷன் வரும்! அதற்காகத் தானே  அவர்கள் இலஞ்சம் கொடுத்து வாக்கு சேகரிக்கிறார்கள்! 

இந்த "வெற்றிகரமான தோல்வி!" என்பதன் பொருள்,  இனி மேல் பதவி இல்லை! பதவி இல்லை என்றால் எவனும் மதிக்க மாட்டான்! யாரையும் அதிகாரம் பண்ண முடியாது!  நேற்று "சார்!" என்று விளிச்சவன் இனி பெயரைச் சொல்லிக் கூட கூப்பிடலாம்! எதற்கும் தயாராக இருக்க வேண்டும்! இதுவரை மற்றவர்களை அடிக்க காவல்துறையைப் பயன்படுத்தியவன் இனி காவல்துறையைத் தன் மேலேயே ஏவி விடுவான்!  இவைகள் எல்லாம் பதவி இல்லை என்றால் வருகின்ற சோகங்கள்!

தமிழ் நாட்டை எடுத்துக் கொண்டால்  எச்.ராஜாவின் அக்ராகரத் திமிர் குறைய வாய்ப்பிருக்கிறது. தமிழிசை அடக்கமாக வாசிப்பார். எஸ்.வி. சேகர் இனித் தனியாகப் பயணிக்க வாய்ப்பு இருக்கிறது!  தமிழ் நாட்டில் பா.ஜ.க.வுடன் இணைய எந்தக் கட்சியும் முன் வராது! ஒரு வேளை தமிழக அமைச்சர்களுக்கு இனி மேல் கொஞ்சம் ரோஷம் வரலாம்! பா.ஜ.கா. வோடு மோதலாம்!

ஆக, வெற்றிகரமான தோல்வி என்பதில் பல அர்த்தங்கள் உண்டு.  இனி அதிகாரம் இல்லை என்பது தான் அதன் சுருக்கம். தமிழிசையும் நாவை அடக்கக் கற்றுக் கொள்ளுவார்.

இது பா.ஜ.கா. விற்கு வெற்றிகரமான தோல்வி தான்!  நல்லது செய்தால் நல்லது நடக்கும்! மாற்றம் செய்கிறேன் என்று நாற்றத்தைக் கொண்டு வந்தால் நாற்றம் தான் நடக்கும்!
 

Wednesday, 12 December 2018

தகுதிக்கு மீறிய சம்பளமா...?

புதிய பட்டதாரிகள் தகுதிக்கு மீறிய சம்பளம் கேட்கின்றனரா? 

என்னைக் கேட்டால் அது உண்மை தான் என்று சொல்லுவேன். பட்டதாரிகளைப் பொறுத்தவரை அவர்கள் பட்டம் பெற்று விட்டாலே அதுவே தங்களுக்கான தகுதி என்று நினைக்கின்றனர். ஆனால் வெளி உலகம் அப்படி அல்ல. முதலாளிகள் தங்களது தேவை என்ன - அந்தத் தகுதி அவர்களுக்கு இருக்கிறதா - என்று தான் பார்க்கின்றனர்.

பெரும்பாலான பட்டதாரிகள் அவர்கள் சார்ந்த துறையில் கூட  தேர்ச்சி பெற்றவர்களாக இல்லை என்பது தான் நமக்குள்ள கவலை! அது மட்டும் அல்ல எதனையும் படித்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆர்வமும்   இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள்! ஒன்றில் மட்டும் ஆர்வம் காட்டுகிறார்கள். வேலைக்கு வரும் முன்னே தங்கள் "தகுதி" என்ன அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் தரப்பட வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறார்கள்.

பொதுவாக அரசாங்கத் துறையில் பட்டப்படிப்பு படித்ததற்கான ஆதாரங்கள் இருந்தால் போதும். அவர்களுக்கு அறிவு இருக்கிறதா  இல்லையா போன்ற பிரச்சனைகள் இல்லை!  பட்டதாரிகளுக்கான சம்பளம் எவ்வளவோ அதுவே அவர்களின் சம்பளம்.  அதுவும் ஆங்கில அறிவு கூட அவர்களுக்குத் தேவை இல்லை.

தனியார் துறை என்பது வேறு. இங்கு இவர்களுக்கு ஆங்கிலம் தேவை. பேசும் திறன் வேண்டும்.  மொழி ஆற்றல் வேண்டும். வெளி நாட்டு நிறுவனங்களில் வெளி நாட்டவர் வேலை செய்வர். அவர்களுடனான தொடர்பு மொழி ஆங்கிலம். மேலும் எந்தத் துறையில் பட்டம் பெற்றிருக்கிறார்களோ அந்தத் துறையில் அவர்களுக்கு  ஆற்றல் வேண்டும்.

இப்போதுள்ள இந்த பட்டதாரிகளுக்கு ...ஊகும் ....அனைத்திலும் பூஜ்யம்.  அவர்களுக்கு அரசாங்கத் துறையே சரி வரும்.

இவர்களுடைய பிரச்சனை எங்கிருந்து ஆரம்பாமாகிறது என்பது புரியவில்லை. கல்லூரிகளில் என்ன தான் படிக்கிறார்கள் என்பதும் புரியவில்லை.

தகுதியே இல்லாதவர்களுக்கு தகுதிக்கு மீறிய சம்பளமா? அரசாங்கத்துறையில் அது நடக்கும்! தனியார் துறைகளில் அது நடக்காது!

Tuesday, 11 December 2018

கேள்வி - பதில் (89)

கேள்வி

இந்தியாவில் நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் பிரதமர் மோடியின் அலை ஒய்வதாகத் தெரிகிறதே!

பதில்

அவ்வளவு சீக்கிரத்தில் நாம் ஒரு முடிவுக்கு வந்து விட முடியாது. ஒரு வேளை இந்தத் தோல்வியின் மூலம் மோடியின் பா.ஜ.க. தனது கொள்கைகளை மாற்றிக் கொள்ளலாம்.

இத்தனை ஆண்டுகள் இந்துத்துவா என்று சொல்லிக் கொண்டு மற்ற மதத்தினர் அனைவரையும் புண்படுத்தினர். அவர்களின் தொண்டர்கள் எந்த அளவுக்குக் கீழ்த்தரமாக நடந்து கொள்ள முடியுமோ அந்த அளவுக்குக் கீழ்த்தரமாக நடந்து கொண்டனர். கொலை, கற்பழிப்பு என்று எந்த விதமான அச்சமும் இன்றி காவல்துறை உதவியுடன் அனைத்தையும் அரங்கேற்றினர். மக்களின் மரியாதைக்குறிய கோவில் அர்ச்சர்கள் கூட பெண்கள் என்று பார்க்காமல் தங்களின் கைவரிசையைக் காட்டினர். 

மோடி ஏன் பதவிக்கு வந்தார் என்பதற்கு ஒரே காரணம் பிராமணர்களை உயர்த்த வேண்டும், சமஸ்கிருத மொழிக்கு உயிர் கொடுக்க வேண்டும்  என்கிற இலட்சியத்தைத்  தவிர வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏன்,  அவர் சொந்த மாநிலத்தில கூட சொல்லும்படியாக அவர் எதனையும் செய்யவில்லை.

ஒரு விஷயத்தில் அவர் திறமையாளராய் இருந்தார். தன்னைப் பற்றி தம்பட்டம் அடிக்க உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்களை நல்லபடியாக பயன்படுத்திக் கொண்டார்! தன்னைப் பற்றி மிகவும் உயர்வாக சித்திரிக்கவும்  தன்னுடைய ஆட்சியில் இந்தியா மிகப் பெரிய வள்ர்ச்சியைக் காண்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை அவர் ஏற்படுத்தினார்.   இந்த விளம்பரங்களுக்காக உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்களுக்கு  அவர் தினசரி ஒன்றரை கோடி ரூபாய் செலவிட்டதாகச் சொல்லப்படுகின்றது.

நமக்குத் தெரிந்தவரை தமிழ் நாட்டு ஊடகங்கள் பெரும்பாலும் அவருடைய கட்டுப்பாட்டில்!  திரைப்பட தணிக்கைக் குழுவும் அவருடைய கட்டுப்பாட்டில்!

எந்த ஒரு சேவையும் இல்லாமல் வெறும் விளம்பரத்தை வைத்துக் கொண்டு இந்தியாவுக்கு சேவை செய்ய வந்தவர் மோடி! அதற்கான பலன் தான் இந்தத் தேர்தல் முடிவுகள்!

கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல் ஒன்று ஞாபத்திற்கு வருகிறது: விளம்பரத்தால் உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது! மோடிக்கு அது நிச்சயம் பொருந்தும்!

ஆண்டவனே! உனக்கு நூறு தேங்காய் உடைக்கிறேன்..!


சில பழைய திரைப்படங்களில் இப்படி சில காட்சிகளைப் பார்த்திருக்கலாம்: திருடன் திருடப் போகும் முன் சாமி முன்னால் நின்று கொண்டு "இன்று நான் போகும் காரியம் ஜெயமானால் உனக்கு நூறு தேங்காய் உடைக்கிறேன்!"  என்று சொல்லிக் கொண்டே ஒரு தேங்காயை உடைப்பான்!  அந்தக் காட்சியில் பெரும்பாலும் நகைச்சுவை நடிகர்கள் தான் நடிப்பர்.

சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் அதனை நினவுக்குக் கொண்டு வந்தது! சனிக்கிழமை நடந்து முடிந்த பேரணியில் போகும் போது ஒரு காரியம் செய்துவிட்டுப் போனார்கள்.

"சாமி! புதிய அரசாங்கம் அமைத்து எட்டு மாதம் தான்! ஆனால் அவர்கள் செய்கின்ற துரோகங்கள், அநியாயங்கள் கணக்கிலடங்கா! இன்னும் எண்பது வருஷத்திற்கு நாங்கள் தலை தூக்க முடியாது! எங்கள் அரசாங்கத்தில் தேனும் பாலும் கோடியில் ஓடியது!  இப்போது நாங்கள் கொடி தான் பிடிக்க முடிகிறது!  எங்களுக்குக் கோடிகள் தான் வேண்டும்! கொடி பிடிக்க வெட்கமாக இருக்கு! அதனால் சாமி! இந்த அரசாங்கம் எந்த நல்ல காரியங்களையும் செய்யக் கூடாது! சீக்கிரம் அவர்களின் ஆயுளைக் குறைக்க வேண்டும்! உனக்கு ஆயிரம் தேங்கா வேண்டுமானாலும் உடைக்கிறேன்!" 

இப்படித் தான் அமைந்தது அவர்களின் சாமி பக்தி! 

இதில் என்ன வேடிக்கை தெரியுமா?  ஆட்சியில் இருந்த போது எந்த ஒரு நல்ல காரியத்தையும் இவர்கள் செய்யவில்லை.  செய்ய வேண்டும் என்கிற எண்ணமே எழவில்லை!  அவர்களை அசைக்க முடியாதாம்!  மக்களை மாக்களாக நினைத்துக் கொண்டு செயல்பட்டார்கள்! மக்களின் பணத்தைக் கொள்ளையடித்தார்கள்! வெள்ளைக்காரன் தேசத்தில் "ஷோப்பிங்" செய்தார்கள்! அவர்களின் தகுதிக்கு இங்கு "ஷோப்பிங்" செய்வது இழிவாம்! காரணம் இந்த நாடு இன்னும் இருளில் இருக்கிறதாம்!  மக்கள் படு முட்டாள்களாக இருக்கிறார்களாம்! படிக்காத கூட்டம். பாமர மக்கள் வாழும் நாட்டில் என்ன கிடைக்கும்? மரவெள்ளி தானே கிடைக்கும்!

எது எப்படி இருப்பினும் அவர்கள் சாமி கும்பிட்டுவிட்டுப் போனார்கள். அத்தோடு  நேர்ந்து விட்டுப் போயிருக்கிறார்கள்! நூறு தேங்காய் என்ன ஆயிரம் தேங்காய் கூட உடைக்கத் தயாராய் இருக்கிறார்கள்! சாமி கண் திறக்குமா பார்ப்போம். ஆனால் சாமி நல்லதற்குத் தானே கண் திறக்கும். கயமைத் தனத்திற்கெல்லாம் கண் திறக்குமா?

அப்பனே! ஆண்டவா! நானும் நூறு தேங்காய் உடைக்கிறேன்! என் பக்கமும் உமது கடைக்கண் பார்வையைத் திருப்பும்!

Sunday, 9 December 2018

இது தாண்டா புதிய மலேசியா...!

இப்போது பொறுப்பேற்றுள்ள புதிய அரசாங்கத்திற்கு ஒரு தங்கப் பதக்கம் கொடுக்கலாம்!

வேறு என்ன? கடந்த சனியன்று (8-12-2018) நடைபெற்ற மிகப் பிரமாண்ட பேரணியை நடத்திய தேசிய முன்னணி - பாஸ் கட்சிகளின் மகிழ்ச்சிப் பேரணியை வாழ்த்தலாம், வணங்கலாம்! எந்த வித ஆர்ப்பாட்டம் இல்லை, ஆரவாரம் இல்லை!  இந்தப் பேரணியே அமைதிப் பூங்காவாக  ஆகிவிட்டது.

இரு கட்சிகளைச் சார்ந்தவர்களும் அடக்கமாக நடந்து கொண்டனர் என்பதே புதிய மலேசியா உதயமாகி விட்டதாக ஏற்றுக் கொள்ளலாம்.  தேசிய முன்னணி அரசாங்கத்தில் இப்படி நடப்பது என்பது சாத்தியம் இல்லை என்பதை நாம் கண்ணாரக்  கண்டிருக்கிறோம்!

பேரணியில் கலந்து கொள்ளுபவர்கள் அமைதியாகப் பேரணியை நடத்தினாலும் அன்றைய அரசாங்கம் குண்டர் கும்பல்களை அனுப்பி குழப்பத்தை ஏற்படுத்துவதில் கை தேர்ந்தவர்களாக இருந்தார்கள்! அதனால் பேரணிகள் என்றால் குழப்பம், அடிதடி,  வன்முறை, அத்து மீறல் என்று ஒவ்வொரு பேரணியிலும் பிரச்சனைகள் எழுந்தன.

ஆனால் இந்தப் பேரணியில் எந்தப் பிரச்சனையும் எழவில்லை! அதுவே வாழ்த்துக்குறியது! காவல்துறையும் தனது பணியைச் செம்மையாக செய்ததாக செய்திகள் கூறுகின்றன. 

ஆனால் ஒரு செய்தி நமக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. பேரணியில் குழந்தை குட்டிகளையெல்லாம் கொண்டு வருவது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். அப்படிக் கொண்டு வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.  குழந்தைகளைக் கூட்டி வரும்போது  விரும்பத்தகாத எதுவும் நடக்கலாம். பேரணிகளில் குழைந்தைகளுக்கு என்ன வேலை? அது பெரியவர்களோடு போகட்டும். குழைந்தைகளுக்கு எதிர்ப்புணர்வை பிஞ்சிலேயே புகட்ட  வேண்டாம்.

நமது பிரதமர் மகாதிர் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த மாபெரும் பேரணியில் குப்பைக் கூளங்கள் இல்லாப்  பேரணி என்கிற பெயரும் உண்டு. அப்படி இருந்ததையும் பேரணியினர் போகும் போது சுத்தம் செய்துவிட்டு போய்விட்டனர்!

புதிய மலேசியவிற்கு இந்த பொறுப்புணர்ச்சி தான் தேவை. நாடு சுத்தமாக இருக்க வேண்டும். மக்கள் சுத்தமாக இருக்க வேண்டும். அரசியல்வாதிகள் சுத்தமாக இருக்க வேண்டும்! எல்லாரும் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். 

இது தான் புதிய மலேசியா! 

Saturday, 8 December 2018

அட! இதுவும் சரி தான் போலிருக்கு...!

கல்வி மேம்பாட்டு அறவாரியத்தின் 2000 ஏக்கர் நில விவாகாரம் பற்றி இப்போது தான் வாயைத் திறந்திருக்கார் டான்ஸ்ரீ  வீரசிங்கம். (ம.இ.கா.வில் இவர் பெயர் தான் பிரபலம் அதனால் தான் இவர் பெயரைக் குறிப்பிடுவது புரிந்து கொள்ள உதவும்!)

நம்மைப் பொறுத்தவரை ம.இ.கா. வைப் பற்றிய நல்லண்ணம் நமது மக்களுக்கு எப்போதும் இருந்ததில்லை, ம.இ.கா. தலைவர்களைத் தவிர! கடந்த ஆட்சியின் போதும் இந்த நிலத்தை வைத்து இவர்கள் என்ன தான் செய்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது. ஒரு சில தினங்களுக்கு முன்னர் இந்த நிலத்தின் மூலம் ரி.ம. 7.00 லாபம் பெற்றதாக  செய்திகள் வந்தன! அதைக் கூட நாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை! காரணம் அவர்களின் தகுதி அவ்வளவு தான். ம.இ.கா.வினர் எந்தக் காலத்தில் தங்கள் அறிவைப் பயன் படுத்திருக்கிறார்கள் அவர்களைப்  பற்றி பெருமைப்பட? அவர்கள் ஞானசூனியங்கள் என்பது தான் நாம் அறிந்ததாயிற்றே!

அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் கொல்லைப்புற வழியாக எப்படி சம்பாதிப்பது என்பது மட்டும் தான்! ஆக, இந்த 2000 ஏக்கர் நிலத்திலும் அது தான் நடந்திருக்கிறது. இது நாள் வரை வாய்த் திறக்காதவர்கள் இப்போது வாய் திறந்திருக்கிறார்கள்!  அதுவும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட நெருக்கடியினால்! இல்லாவிட்டால் அந்த நிலம் எங்கே என்று தேட வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும்!

விபரம் தெரியாமல் உளற வேண்டாம் என்று சொல்லக் கூடிய தைரியம் ம.இ.கா. வினருக்கு மட்டுமே உரியது என்று எடுத்துக் கொள்ளலாம்.  இது சாமிவேலு காலந்தொட்டே அவர்களுக்குக் கிடைத்த தைரியம். அந்தத் தொடர்ச்சி இன்னும் அறுபடவில்லை! 

இவர்களின் கணக்கறிக்கையைக் காண இவர்களின் கணக்காளரின்  அலுவலகத்தைப் போனால் எல்லாம் விலாவாரியாகச் சொல்லி விடுவார்களாம்!  

சீனர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலம், மலாய்க்காரர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலம் எல்லாம் அறுவடைக்குத் தயாராகி எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன.  ம.இ.கா. வினருக்குக் கொடுத்த நிலம் .....படித்தவன் பாவம் செய்தால் போவான், போவான் ஐயோன்னு  போவான் ...என்பது பாரதி சொன்னது! நான் சொல்லவில்லை.

இவர்கள் ஐயோன்னு மட்டும் போக மாட்டார்கள், இவர்கள் குடும்பமே ஐயோன்னு போகும்!

எது எப்படி இருப்பினும் - எவ்வளவு "திறமைசாலிகளாக" இருந்தாலும்  எம்.ஏ.சி.சி. க்கும் ஒரு காலம் வரும் என்று பொறுத்திருப்போம்!

அது வரை இதுவும் சரி தான் போலிருக்கு!

Friday, 7 December 2018

இது தாண்டா ஆளுங்கட்சி...!

சமீபத்தில் ஊடகங்களில் வந்த செய்தி.

ஜொகூர் மாநிலத்தில் இரண்டு தமிழ்ப்பள்ளிகள்  முன்னைய அரசாங்கத்தால் கட்டப்பட்டிருக்கின்றன. பள்ளிகள் கட்டப்பட்டு விட்டனவே தவிர அந்த இரு பள்ளிகளுமே இன்னும் பயன்படுத்தப்படவில்லை! வருகின்ற புதிய ஆண்டிலும் பயன்படுத்த முடியுமா என்பதும் உறுதியில்லை!

காரணம் ஒரு பள்ளிக்கூடம் கட்டி முடித்து நகராண்மைக் கழகத்தின் அனுமதிக்காகக்  காத்துக் கொண்டிருக்கிறது. சென்ற ஆண்டே அனுமதியில்லை என்றால் இந்த ஆண்டு மட்டும் அனுமதி கிடைக்குமா? இதில் என்ன ஆச்சரியம் தெரியுமா?  கட்டடத்தைக் கட்டுபவர்கள் கல்வி அமைச்சால் அங்கீகரிக்கப்பட்ட குத்தகையாளர்கள். வெளியார்கள் குத்தகை எடுக்க அனுமதியில்லை.  அப்படியிருக்க பள்ளிக் கட்டடத்தின் கட்டடம் ஏன் தரமானதாக அமையவில்லை? கட்டடம் கட்டி முடித்தாயிற்று. குத்தகையாளர் பணத்தை வாங்கிவிட்டார். கமிஷன் வாங்க வேண்டியவர்கள் வாங்கிவிட்டார்கள்! இன்னும் யாருக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்?  பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது  என்பது கல்வி அமைச்சுக்குத் தெரியாதா? அந்த அளவுக்கா அவர்கள் முட்டாள்களாக, மடையர்களாக  இருந்திருக்கிறார்கள்?

சரி,  இன்னொரு பள்ளிக்கூடத்திற்கு வருவோம். புதிய பள்ளிக்கூடம் கட்டிவிட்டார்கள். பள்ளிக்கூடம் தான் கட்டியிருக்கிறார்கள்.  பள்ளிக்கூடம் போவதற்கு எந்த சாலை  வசதிகளும் செய்து கொடுக்கவில்லை!  பஸ் எப்படி போகும்! கார் எப்படி போகும்! மோட்டார் சைக்கிள்கள் எப்படி போகும்! அல்லது மாணவர்கள் நடந்து போவதற்காவது பாதை வேண்டாமா! அடாடா! நினைத்தாலே புல்லரிக்கிறது! இப்படியெல்லாம் புத்திசாலிகள் நம்மிடையே இருந்திருக்கிறார்கள் என்று நினைக்கும் போது  உள்ளம் பூரிக்கிறது! அட, ஜொகூர் மாநிலத்தில் இப்படி எல்லாம் புத்திசாலிகள் இருக்கிறார்கள் என்றால்  சபா, சரவாக் மாநிலங்களில் எப்பேர்பட்ட புத்திசாலிகள் இருந்திருப்பார்கள்!

தமிழ்ப்பள்ளிகள் என்று நினைக்கும் போது நமக்கு உடனடியாக நினவுக்கு வருபவர் பாரிசான் அரசாங்கத்தில் துணைக்கல்வி அமைச்சராக இருந்த கமலநாதன் தான்!

என்ன செய்வது? அது தான் ஆளுங்கட்சியின் பலம்! மக்களை ஏமாற்றுவது தான் அவர்களின் பலம்! அதைப் பார்த்துக் கொண்டிருப்பது தான் நமது பலவீனம்!

Thursday, 6 December 2018

ஆலோசணை வழங்கலாம்...!

சீபீல்ட் ஆலய விவகாரம் தொடர்பில் பொது மக்கள் ஆலோசனை வழங்கலாம் - அதனை வரவேற்பதாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் கூறியிருப்பதை கருத்தில் கொண்டு இதனை நான் எழுதுகிறேன்.

அந்த ஆலயத்தில் நடந்த அசம்பாவிதங்களைக் கண்ணுற்று வேதனை அடைந்தவர்களில் நானும் ஒருவன். நான் எந்தக் காலத்திலும், எந்த நிலையிலும் இனக் கலவரங்களை ஆதரிக்க மாட்டேன்.  மே '69 கலவரத்தை அறிந்தவர்களில் நானும் ஒருவன்.  

இனக்கலவரத்தை பொது மக்கள் யாரும் விரும்புவதில்லை. இனக்கலவரத்தின் முக்கிய பொறுப்பாளிகள் அரசியல்வாதிகளே! அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. பதவி சுகம் என்பது அவ்வளவு வலிமையானது! அதிலிருந்து விடுபடுவது என்பது சாத்தியமில்லை!

இந்த ஆலய பிரச்சனை என்பது இனக்கலவரம் அல்ல.  இது நில மேம்பாட்டாளர்கள் குண்டர் கும்பலை ஏவி விட்டு அவர்களால் ஏற்படுத்தப்பட்ட பிரச்சனை.

இங்கு நாம் சொல்ல வருவதெல்லாம் இந்தக் கலவரம் குண்டர் கும்பலுக்கும் சம்பந்தப்பட்ட கோவில் பக்தர்களுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு மோதல் என்னும் ரீதியில் தான் நாம் பார்க்க வேண்டும். தங்களுடைய வழிப்பாட்டுத்தலம் அசிங்கப்படுத்தப் படுவதை, சிலைகள் உடைக்கப் படுவதை  எந்த ஒரு பக்தானாலும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது, . அதனால் ஏற்பட்ட மோதல் தான் பின்னர் கலவரமாக வெடித்தது. 

காவல்துறையைப் பொறுத்தவரை இந்த ஆலய விவகாரம் என்ன என்பதை முன்னரே அறிந்தவர்கள்.  புதிது என்று  ஒன்றுமில்லை. கலவரம் வெடித்த போது அவர்கள் மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்திருப்பார்கள் என நம்பலாம். அதனால் குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் வர நியாயமில்லை.

இது  வருந்தத்தக்க ஒரு கலவரம்.   ஆனால் இந்தக் கலவரத்தைப் பயன்படுத்தி ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்களை ஏதோ குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது போல நடத்தக் கூடாது என்பதே நமது வேண்டுகோள். இதெல்லாம் நமக்கு முன்னரே ஏற்பட்ட அனுபவம். எது நடந்தாலும் அதற்கு இந்தியர்களே காரணம் என்னும் எண்ணத்தைக் கைவிட வேண்டும்.

பொது சொத்துக்களுக்குச் சேதம் என்றால் அந்தச்  சொத்துக்கள் யாருடையவை  என்பதும் முக்கியம். கார்களில் வந்தவர்கள் கலகக்காரர்கள் என்றால் அந்தக் கார்கள் ஏன் அங்கு வந்தன என்னும் கேள்வியும் எழுகின்றது. அவை பொது சொத்துக்களா? எது எப்படி இருப்பினும் நீதி நிலை பெற  வேண்டும்.  பக்தர்களை பக்தர்களாகப் பார்க்க வேண்டும். குண்டர் கும்பலை குண்டர்களாகப்  பார்க்க வேண்டும்.

உணர்வுகளைத் தூண்டும் இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாதவாறு காவல்துறை  கண்காணிக்க வேண்டும்.

இதுவே நம் ஆலோசனை.

Wednesday, 5 December 2018

துக்கம் விசாரிக்கவா...?

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் மூலம் ஒரு செய்தி வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

அவர் கூறிய ஒரு கருத்து நம்மை யோசிக்க வைக்கிறது.  இப்போது  அமைச்சரவையில்  இருக்கும் நமது இந்திய அமைச்சரகளிடையே  ஒற்றுமில்லை என்பதை தடாலடியாகப் போட்டு உடைத்திருக்கிறார்! சீபீல்ட் ஆலய விவகாரத்தில் அவர்களின் நடவடிக்கை சரியாக இல்லை என்பது தான் அவர் சொல்ல வந்த செய்தி.

நமக்கும் இது ஆச்சரியத்தை அளிக்கத்தான் செய்கிறது.  பதவி ஏற்று ஏழு மாதங்களில் இப்படி ஒரு நிலைமையா என்று நம்மை யோசிக்க வைக்கிறது! அதுவும் முக்கியமான ஒரு விவகாரத்தில் அவர்களிடையே ஒற்றுமை இல்லை. மிகவும் வேதனைக்குரியது.  ஆலயப்  பிரச்சனை என்பது சாதாரண விஷயம் அல்ல. ஒவ்வொரு  மனிதனின் உணவர்களைத் தூண்டுகிற பிரச்சனை.

"அசம்பாவிதம் நடந்த பிறகு துக்கம் விசாரிக்க வருகிறார்கள்" என்பதாக அவர் கூறியிருப்பது சிந்திக்க வேண்டியது மட்டும் அல்ல மிகவும் கடுமையான குற்றச்சாட்டு. இதைத் தான் நமது முன்னாள் ம.இ.கா. தலைவர்கள் செய்து வந்தார்கள்.  ஒன்றில் மட்டும் அவர்கள் ஒன்றுபட்டார்கள்!  "நாம் தலையிட வேண்டாம்!  பிரச்சனையை கொஞ்சம் அப்படி இப்படி என்று இழுத்துக் கொண்டு போனால் போதும்! அப்புறம் நமது மக்கள் மறந்து விடுவார்கள்!" என்பது தான் அவர்கள் வகுத்துக் கொண்ட மிகப்பெரிய கொள்கை.

ஆனால்; பக்கத்தான் அரசாங்கத்தில் உள்ள இந்தியத் தலைவர்கள் அப்படியெல்லாம் சிந்திக்க முடியாது.  அதனை நாங்கள் பார்த்துக் கொண்டு இருப்போம்  என்று அவர்கள் தாங்களாகவே முடிவு செய்து கொள்ள வேண்டாம் என்று நாம் சொல்ல வேண்டிய தருணம் இது. 

ஏற்கனவே நாங்கள் ஏமாந்த சமூகம் என்று ம.இ.கா. வால் முத்திரைக் குத்தப்பட்ட சமூகம் நாம். நாம் சொல்ல வருவதெல்லாம் "செய் அல்லது செத்து மடி" என்பது தான். சும்மா குளிர்சாதன அறையில் இருந்து கொண்டு குளிர்ச்சியான  வசனங்களை ஒப்புவிக்க வேண்டாம்.  மீண்டும் மீண்டும் நாங்கள் ஏமாறத்  தயராகத்  இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

துக்கம் விசாரிக்க வந்தவர்களாக இருந்தாலும் சரி வராதவர்களாக இருந்தாலும் சரி ஒன்றை நினைவுறுத்துகிறேன். பொது வாழ்க்கைக்கு வந்து விட்டீர்கள். உங்கள் கடமையைச் செய்யுங்கள்.  உங்கள் கடமை என்பது  இந்திய மக்களைச் சார்ந்தது. அவர்களின் துன்பங்களில்  உங்களின் பங்கு அளப்பரியது. துன்பங்களை நீங்கள் தான் சுமக்க வேண்டும்.. மக்களைச் சுமக்க வைக்க வேண்டாம்.

தலைவர்களிடையே ஒற்றுமை இல்லை என்றால் சமுதாயத்தை அது பாதிக்கும் என்பதை மறவாதீர்கள். மீண்டும் இந்தத்  துக்கம் விசாரிக்கும் வேலை வேண்டாம்! உங்களை நாங்கள் பதவியில் வைத்திருப்பது துக்கம் விசாரிக்க அல்ல! துக்கத்தை தூக்கி எறிய!

Sunday, 2 December 2018

வேதா - மாஸ்லீ ...!

பிரதமர் துறை துணையமச்சர் வேதமூர்த்தி, கல்வி அமைச்சர் மஸ்லி இருவரும் சிறப்பாகவே செயலாற்றுகிறார்கள் என்பதாகக் கூறியிருக்கிறார் பிரதமர்.

இதற்கு முன்னர் பிரதமரின் ஊடகத் தலைவர் காதிர் ஜாசின் இந்த இருவரைப் பற்றி எழுதிய கருத்துக்கள் பல்வேறு தரப்பிலிருந்து பலதரப்பட்ட அபிப்பிராயங்களை ஏற்படுத்தின.

இவர்களின் செயல்பாடுகள் சிறப்பாக இல்லை என்பதாக அவர் சாடியிருந்தார். ஒரு வேளை வேதமூர்த்தி இந்து கோவில்களில் தலையீடுவது பற்றி ஏதேனும் சொல்ல வரலாம். அவர் அதனைத் தெளிவாகச் சொல்லவில்லை.  அம்னோ தரப்பினர் கூட வேதமூர்த்தியைக் குறை கூறுகின்றனர். அம்னோ சொல்லுகின்ற காரணங்களையே இவரும் சொல்லலாம்! அந்தக் குறை கூறல்களை வைத்தே காதிரும் வேதாவைச் சாடியிருக்கலாம்!

நாம் இங்கு சொல்ல வருவதெல்லாம் ஒன்று தான். பிரதமர் சொல்ல என்ன நினைக்கிறாரோ அதனை காதிர் ஜாசின் முன்னதாகவே சொல்லி அவர்களை எச்சரிக்கிறாரோ! இருவரும் சேர்ந்து தான் இந்த நாடகத்தை நடத்துகிறார்களோ என்னும் ஐயமும் நமக்கு உண்டு! 

அமைச்சர்கள் என்னும் முறையில் பிரதமர் அவர்களை எச்சரிக்காமல் கொஞ்சம் விட்டுக் கொடுத்து தனது பத்திரிக்கையாளர் மூலம் செய்திகளைச் சொல்ல வைக்கிறாரோ! இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்!

மஸ்லியைப் பற்றி வேறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் நம்மைப் பொறுத்தவரை வேதமூர்த்தியைப் பற்றி வேறுபட்ட கருத்துக்கள் இல்லை.  இந்தியர்களின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட அமைச்சர் வேதமூர்த்தி. அவரால் முடிந்த வரை சிறப்பாகவே செயல்படுகிறார். இந்தியர்களின் பிரச்சனைகளில் அக்கறை காட்டுகிறார்.  ஏன்? சீபீல்டு ஆலயத் தகராற்றிலும் அவர் நன்றாகவே செயல்பட்டார்.

ஒரு வேளை தவறுகள் நேரலாம். அவர் அப்படி ஒன்றும் அனுபவப்பட்ட அமைச்சர் இல்லை. தவறுகளைத் திருத்திக் கொள்ளலாம். அது அவரால் முடிந்தது தான்.

அதனால் அம்னோ தரப்பினர் சொல்லுகிறார்கள் என்பதற்காக வேதமூர்த்தியைச் சீண்டிப்பார்ப்பது சரியான அணுகுமுறை அல்ல! இந்திய சமுதாயத்திற்காக அவர் சிறப்பாகவே செயல்படுகிறார். அவர் மேல் நமக்கு நம்பிக்கை உண்டு. அது போல பிரதமரும் அவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்!

வேதா, இன்னும் சிறப்பாக செயல்பட வாழ்த்துவோம்!

Saturday, 1 December 2018

நிலத்தை வாங்க முடியுமா...?

"சீபில்டு ஆலய நிலத்தை நாமே வாங்கிவிட்டால் என்ன?" என்று ஒரு எண்ணத்தை தூவி இருக்கிறார் பிரபல தொழிலதிபர் வின்சன் டான்.

நூறு ஆண்டுகளுக்கு மேல் அந்த நிலத்தில் வீற்றிருக்கும் அந்த சீபில்டு ஆலயம் இந்துக்களிடமே இருக்க வேண்டும் என்றால் அது இந்து மக்களுக்குச் சொந்தமாக வேண்டுமென்றால் அந்த நிலம் வாங்கப்பட வேண்டும் என்பது தான் அவர் சொல்லுகின்ற ஒரு தீர்வு. 

அந்த நிலம் 1.1 ஏக்கர் என்று சொல்லுப்படுகிறது. அதன் விலை  சுமார் ஒன்றரை கோடி வெள்ளி மதிப்பு பெறும். இப்போது புரிகிறதா ஏன் அந்த நிலத்தை மேம்பாட்டார்கள் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை என்பதை? 

அந்த நிலத்தை வாங்க வேண்டுமென்றால் அதற்கு ஒரு நிதியைத் திரட்டியாக வேண்டும்.  அதற்கும் வழிகாட்டியிருக்கிறார் வின்சன் டான். அவரே முன்வந்து 5 இலட்சம் வெள்ளியை வழங்கி அந்நிதியைத் தொடக்கி வைத்திருக்கிறார். அத்தோடு இன்னும் இரு வர்த்தக பிரமுகர்களும் தலா 5 இலட்சம் வெள்ளி கொடுத்து அந்நிதியை 15 இலட்சமாக உயர்த்தியிருக்கின்றனர்.  இவர்கள் அனைவரும் சீனர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதொரு நல்ல ஆரம்பம் என்று எடுத்துக் கொள்ளலாம். இந்திய தொழிலதிபர்களும் நாட்டில் பல பேர் இருக்கின்றனர்.  அவர்கள் நினைத்தால் ஒரு கோடியோ, ஒன்றரை கோடியோ என்பதெல்லாம் ஒரு பெரிய தொகையே அல்ல. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள வர்த்தக சபைகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் இணைந்தால் ஒரு சில நாள்களிலேயே இந்தத் தொகையை எட்டிவிடலாம். அத்தோடு பொது மக்கள். இது முடியும் என்று நாம் நம்பலாம்.

இப்போது இந்த கோவில் விஷயத்தில் அரசாங்கத்தின் வழிகாட்டுதல் நிச்சயம் தேவை.  இப்போதே  தலைமை பீடம் யாருக்கு என்கிற ஒரு வேகம் தெரிகிறது. இது தேவை இல்லாத ஒன்று.

இப்போது இந்த நிலப் பிரச்சனைக்கு ஒரு தீர்வைக் காண்போம். கோவிலை வைத்துக் கொண்டு  கலவரம் பண்ணுவதெல்லாம் பிரச்சனையைத் தீர்க்க உதவாது.

அமைதியின் மூலம் தான்-பேச்சுவார்த்தயின் மூலம் தான்-அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்த்தாக வேண்டும். 

இது தொழிலதிபர் வின்சன் டான் கொடுத்த ஒரு யோசனை. வரவேற்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!