Sunday 31 January 2021

முடியுமா முடியாதா?

 கோவிட்-19 தொற்று நோய் அதிகமாக அதிகமாக நமக்கே அரசாங்கத்தின் மேல் ஒரு வெறுப்புணர்ச்சி ஏற்படத்தான் செய்யும். 

ஆனால் அதனால் என்ன பயன்.  நாம் சரியாக நடந்து கொள்கிறோமா என்பது தாம் முக்கியம். மக்கள் தங்களது கடமைகளைச் சரியாக செய்யவில்லை எனின் எந்த ஒரு திட்டத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்ற முடியாது.

மக்களைக் குறை சொல்லியும் புண்ணியமில்லை. அவர்களால் என்ன செய்ய முடியும்? ஏதோ ஓரிரண்டை நிறைவேற்றலாம் அவ்வளவு தான். அனைத்தையும் கடைப்பிடிக்க இயலாது.

ஓடி ஆடி விளையாடுகிற பிள்ளைகளை எப்படிக் கட்டுப்படுத்துவது? பெரியவர்கள் ஏதோ ஓரளவு கேட்பார்கள். அவர்களும் "இனி மேல் முடியாதுடப்பா!" என்று முடிவு செய்தார்களானால்  அவர்களையும் கட்டுப்படுத்த முடியாது.

ஆனாலும் பெரும்பாலும் பார்க்கையில் மலேசியர்கள் பலர் முடிந்தவரை கட்டுப்பாடாகத்தான் இருக்கின்றனர்.

இதன் நடுவே ஒரு பகுதி மக்களை நாம் மறந்து விடுகிறோம். அவர்களும் நம் நடுவே இருக்கின்றனர். கொஞ்சம் ஒளிவு மறைவாக இருக்கின்றனர். முன்பு போல் தைரியமாக வெளி நடமாட்டம் இல்லாமல் இருக்கின்றனர். வேலைக்குப் போகின்றனர் வருகின்றனர்.

அவர்கள் தான் வெளி நாட்டுத் தொழிலாளர்கள். இவர்களைக் கட்டுப்படுத்தாத வரை நம்மால் இந்தத் தொற்று நோயைக் கட்டுப்படுத்த முடியாது என்று உறுதியாகச் சொல்லலாம்.

அவர்கள் வேலைக்குப் போகிறார்கள். அங்கேயும் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதை விட அவர்கள் தங்கும் இடங்கள் தான் மிகவும் அபாயகரமானது. இரண்டு பேர் தங்க வேண்டிய இடத்தில் இருபது பேர் தங்குகின்றனர். சிக்கனம் கருதி அவர்களுக்கு அப்படி ஒரு நிலை.

யார் இவர்களை என்ன செய்ய முடியும்? பிழைப்பைத் தேடி வந்தவர்கள். அவர்களால் என்ன செய்ய முடியுமோ அதைத்தான் அவர்கள்  செய்வார்கள்.  அதற்கு மேல் அவர்களிடம் எதனை  எதிர்பார்க்க முடியும்?

தடுப்பூசி விவகாரத்தில் இவர்களுக்குத் தான் முதல் சலுகை கொடுக்கப்பட வேண்டும். அவர்களிடமிருந்து அதற்கான பணம் வசூல் செய்தால் அதிலும் பிரச்சனை! அவர்கள் ஓடி ஒளிந்து கொள்வார்கள்!

இன்றைய நிலையில் இவர்களைக் கட்டுப்படுத்த யாராலும் இயலாது! ஒரு பக்கம் அரசாங்கம் சட்ட விரோதமாக நாட்டில் தங்கியிருப்பவர்களை மீண்டும் அவர்களை அவர்களின் நாட்டுக்கே அனுப்ப முயற்சி செய்கிறார்கள். 

இப்போது ஒரு விஷயத்தில் அரசாங்கம் தெளிவாக இருக்க வேண்டும். சட்டவிரோதமாக இருப்பவர்களா அல்லது கோவிட்-19 தொற்றா? இது தான் நம் முன்னே உள்ள கேள்வி.

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருப்பவர்களை மீண்டும் அவர்களின் நாட்டுக்கு அனுப்ப முயற்சி செய்தால் இவர்கள் அனைவரும் போய் பதுங்கிக் கொள்வார்கள்! அவர்களை அவ்வளவு எளிதாக அகப்படமாட்டார்கள்! இவர்கள் அகப்படாத வரை இந்த தொற்று நோய்க்கு முற்றுப்புள்ளி வைப்பது கடினம்.

அரசாங்கம் எப்படி இவர்களைக் கையாளப் போகிறது என்பது முக்கியமான கேள்வி.  

தொற்றைக் கட்டுப்படுத்த முடியுமா முடியாதா என்றால் சட்டவிரோத தொழிலாளர்களுக்கான தடுப்பூசி முடியுமா முடியாதா என்பதையும் கேட்க வேண்டியுள்ளது!

முடியுமா முடியாதா என்றால் மு...டி....யா....து...! என்று சொல்ல வேண்டி இருக்கிறது!

ஏன் இந்த வெறித்தனம்?

 முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டான்ஸ்ரீ டோமி  தோமஸ் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும் சில விஷயங்கள் நமக்கு வியப்பை அளிக்கின்றன!

அந்த காலக்கட்டத்தில் பிரதமராக இருந்த டாக்டர் மகாதிர் எந்த அளவுக்கு அதிகாரத் திமிர் கொண்டவராக இருந்திருக்கிறார் என்று தனது  புத்தகத்தில் டோமி வெளிப்படுத்தியிருக்கிறார்.  நமக்கும் ஆச்சரியந்தான்!

ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வகை. நல்லது கெட்டது உண்டு.  ஆனால் அரசியலில் உள்ளவர்களோ நல்லது வேண்டாம் கெட்டது தான் வேண்டும் என்று ஓடி ஓடி தேடிப் பிடித்து  சமுதாயத்திற்குக் கெடுதல் செய்கிறார்களே - இவர்களைப் பற்றி என்ன சொல்லலாம்? 

ஒரு செய்தி உண்மையாகவே  அதிர்ச்சி அளிக்கிறது. சென்ற 14-வது தேசியப்  பொதுத்தேர்தலில் ஏற்பட்ட மாற்றம் சாதாரணமானது அல்ல. "வாராது வந்து மாமணி"  என்று  சொல்லுவார்களே அதைப் போன்றது.

அந்த வெற்றிக்காக அனைத்து இனத்தவரும் கடுமையாய் உழைத்திருக்கிறார்கள் என்பது உண்மையிலும் உண்மை. அந்த நேரத்தில் டாக்டர் மகாதிர் பிரதமராக வந்ததைக் கூட பிரமாதப் படுத்தினோம்!

ஆனால் நேர்ந்தது என்ன? அனைத்தும் புஸ்வானமாகி விட்டது!

டாக்டர் மகாதிர் பற்றியான நமது அபிப்பிராயம் மிகவும் உயர்ந்தது. காரணம் அவர் காலக் கட்டத்தில் தான் நாட்டின் வளர்ச்சி என்பது அபரிதமாக இருந்தது. வேலை வாய்ப்புக்கள் கொட்டிக் கிடந்தன என்று சொல்லும் அளவுக்கு நிலைமை இருந்தது. அந்த நேரத்தில் தான் வெளி நாட்டுத்  தொழிலாளர்கள் வந்து குவிந்தனர்.

இரண்டாவது முறையாக அவர் பிரதமராக வந்த போது அவர் செய்த தவறுகள் தான் இன்று நாட்டை  இந்த அளவுக்குக்  கேவலமான ஒரு நிலையை ஏற்படுத்திவிட்டது. ஏன் அவரைக் கூட மிகவும் கீழ்த்தரமாக விமர்சிக்க வேண்டிய நிலையும்  ஏற்பட்டுவிட்டது!

தன்னால் இனி நாட்டை வழி நடத்த முடியாது என்ற நிலை இருந்த போது அவர் கௌரவமாக, ஏற்கனவே செய்த ஒப்பந்தபடி, அன்வார் இப்ராகிமிடம்  பிரதமர் பதவியை ஒப்படைத்திருக்க வேண்டும். அவர் அதனைச் செய்யவில்லை.

இடையில் அவர் நடத்திய அரசியல் நாடகம் பற்றி மலேசியர்கள் அறிந்திருக்கின்றனர். இந்த நிலையில் தான் முகைதீன் யாசின் கொல்லைப்புற வழியாக ஆட்சியை அமைத்துக் கொண்டார்!

ஆனாலும் மாமன்னர் பரிந்துரைப்படி  டாக்டர் மகாதிர்,  பிரதமர் பதவியை துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா விடம் ஒப்படைத்திருந்தால் இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கும் இந்த துன்பங்களை எல்லாம் மக்கள் அனுபவிக்க நேர்ந்திருக்காது. டாக்டர் மகாதிர் மாமன்னரின் பரிந்துரையை ஏற்கவில்லை. தானே மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்கிற நிலையில் தான் மாமன்னர் முகைதீனுக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்தார்!

இப்போது மலேசியாவின் சரித்திரமே மாறிவிட்டது!  உலகளவில் பல வகைகளில் நாடு மிகவும் கீழ் நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது! ஆனாலும் இவர்கள் தான் மலாய்-இஸ்லாம் நலனில் அக்கறை உள்ளவர்கள் போல் நாடகமாடிக் கொண்டிருக்கின்றனர்.

இவை அனைத்துக்கும் காரணம் ஒரே மனிதர்: டாக்டர் மகாதிர்! இவர் மனதில்  உள்ள இரக்கமல்ல - அரக்க குணத்தை நம்மால் கணிக்க முடியவில்லை!

இப்படியும் ஒரு மனிதர் இருக்க முடியுமா? இருக்கிறாரே! "மலபாரி" என்கிறார்களே!  இது தான் அவர்களின் குணமா!

இது கொடுமை!


ஆயிரக்கணக்கான  கோழிகள் உஷ்ணம் தாங்காமல் இறந்து போயின!

வாயில்லா ஜீவன்கள் அவை. அப்படியே அவைகள் போக  வேண்டிய இடத்திற்குப் போய் சேர்ந்திருந்தாலும் அங்கேயும் அவைகள் மக்களுக்குத் தீவனமாகத் தான் போய் சேர்ந்திருக்கும்!   

 ஆனாலும் இங்கு நடந்ததோ கொடுமை. கோழிகள் சிங்கப்பூருக்குப் போய்க் கொண்டிருந்த வேளையில், துவாஸ், சோதனைச் சாவடியில் ஏற்பட்ட தாமத்தினால் அவைகள் மடிந்தன.

ஒரு சில மணி நேரங்களில் போய்ச் சேர வேண்டிய பயணம் ஆனால் பாதி நாளாயிற்று. குறிப்பிட்ட நேரத்தில் போய்ச் சேர முடியவில்லை. ஏகப்பட்ட தாமதம். அதற்கு மேல் கோழிகளால்  உஷ்ணத்தைத் தாங்க முடியவில்லை. மேலும் கோழிகளை அடைத்து வைத்திருக்கும் பெட்டிகளில் அடியிலிருந்து மேல் வரை ஒவ்வொரு பெட்டியிலும் முடிந்தவரை அமுக்கி அமுக்கி வைத்தால் அந்த கோழிகளின் நிலை எப்படியிருக்கும் என்பதை நாமே ஊகித்துக் கொள்ளளாம்!

சாதாரண நாளிலேயே ஒன்றோ இரண்டோ செத்துத் தான் போகும். அதுவும் இந்த நிலையில் அவைகள் இப்படி ஆயிரக் கணக்கில்  செத்துப் போவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை!  ஆனாலும் இவைகளையும் காசாக்கி விடுவார்கள் வியாபாரிகள்!

மனிதனின் உணவுக்காக எத்தனை எத்தனையோ உயிர்கள் ஒவ்வொரு நாளும் உலகெங்களிலும் பலியாகின்றன. மனிதனின் மகிழ்ச்சிக்காக - ருசிக்காக -  ஏகப்பட்ட உயிர்கள் பலியாக்கப்படுகின்றன.

உயிர்களைக் கொல்லாதே என்கிற சப்தம் ஒரு பக்கம்! ஐயோ! கொல்லாமல் நாங்கள் எப்படி உயிர் வாழ்வது என்கிற ஒலம் ஒரு பக்கம்!

கொடுமையிலும் கொடுமையடா சாமி!

பெண் கல்வியில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்!

 தமிழர்கள் தங்கள் பெண் பிள்ளைகளின் கல்விக்கு  முக்கியத்துவம் கொடுக்கிறார்களா என்று கேட்க வேண்டிய நிலையில் தான் இன்றும் நாம்  இருக்கிறோம்.

இன்று தமிழ் இனத்தின் வாரிசு ஒன்று வெள்ளை மாளிகையில் துணை அதிபராக இருக்கின்ற இந்த காலகட்டத்திலும் இது போன்ற கேள்விகள் இருக்கக் கூடாது! ஆனால் இருக்கின்றது, என்ன செய்ய!

நமது நாட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.  இந்திய சமூகத்தில் தமிழர்களைத் தவிர மற்ற சமூகத்தினர் பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாகவே இருக்கின்றனர். மற்றும் சீன, மலாய்க்கார சமூகத்தில் பெரும்பாலான பெண்கள் கல்வி கற்றவர்கள்.

இன்று பெரிய பதவிகளில் இருக்கும் பெண்களில் பலர் சீன, மலாய் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கற்ற கல்வி அவர்களைச் சிம்மாசனத்தில் உட்கார  வைத்திருக்கிறது. 

நம் இன பெண்களிலும் பலர் நல்ல அந்தஸ்தான பதவிகளில் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களில் தமிழ்ப் பெண்கள் குறைவு என்று தான் சொல்ல வருகின்றேன்.

படித்தவர்கள் வீட்டுப் பிள்ளைகள் நல்ல நிலையில் இருக்கின்றனர். இன்னும் கல்வி பெறாத கீழ் மட்டத்தில் பார்ப்போமானால்  அவர்களது முன்னேற்றம் திருப்திகரமாக இல்லை என்றே சொல்லலாம்.

பெற்றோர்களுக்கும் கல்வி எந்த அளவு முக்கியம் என்பதும்  இன்னும் புரிந்து கொள்ளவில்லை. சமீபத்தில் நான் தெரிந்து கொண்ட ஒன்று. மகள் இரண்டாம் பாரத்தில் படிக்கிறாள்.அப்பன் குடிகாரன். அவன் மகளை பள்ளிக்கூடம் போக வேண்டாம், வேலைக்குப் போ என்கிறான். அவன் வீட்டில் இன்னும் இரண்டு மகள்கள் பள்ளிக்கூடம் போகாமல் வேலைக்குப் போகிறார்கள். ஒரே மகன் குடிகாரன். அவனும் அரை குறை!

இப்படித்தான் பொறுப்பற்றத் தமிழன் பிள்ளைகளை வளர்க்கிறான். கல்வியைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. பிள்ளைகளுக்கும் கல்வி கற்க வேண்டும் என்னும் உந்துதலும் இல்லை. இவர்களிடம் போய் "பிச்சை புகினும் கற்கை நன்றே!" என்று சொல்லி விளங்க வைக்கவா முடியும்!

ஆனால் எனக்குத் தெரிந்த பலர் மிகவும் மோசமான ஏழ்மை நிலையில் இருந்தாலும் பிள்ளைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அவர்கள் குடும்பங்களில் கல்வி கற்று பட்டதாரியாக வேண்டும் என்கிற போட்டி  பிள்ளைகளிடம்  இருக்கிறது. சித்தப்பா வீட்டுப் பிள்ளை, பெரியப்பா வீட்டுப் பிள்ளை, மாமா வீட்டுப் பிள்ளை - இப்படி இந்த பிள்ளைகளிடையே ஒரு எடுத்துக்காட்டு  நிலவுகிறது. எடுத்துக்காட்டுகள் நம் குடும்பங்களிலே போட்டியை உருவாக்குகிறது.

எப்படியோ வருங்காலம் தமிழ் இனத்தில் பெண் பிள்ளைகளின் பங்கு கல்வியில் சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம். 

கல்வி ஒன்ற நம் சமுதாயத்தை உயர்த்தும்! கல்வி மூலம்  நமது தரத்தை உயர்த்துவோம்!

Saturday 30 January 2021

இனி அடுத்து செய்வது என்ன?

 கெடா மாநிலம் இந்த ஆண்டு தைப்பூச விடுமுறையை இழந்துவிட்டது.

நம் அனைவருக்குமே அது வருத்தமான ஒரு நிகழ்வு தான். ஒரு  தனிப்பட்ட மனிதர் ஒரு சமுதாயத்தின் உணர்வுகளை மதிக்காதது என்றுமே நமது நினைவில் இருக்க வேண்டும்.

தைப்பூசம் என்பது தமிழர்களின் தனிப்பெரும் சமயப்பெரு விழா. எனினும் நாட்டிலுள்ள அனைத்து இந்துக்களும், இன வேறுபாடின்றி,  இந்த விழாவை கொண்டாடவே செய்கின்றனர்.

இந்த நேரத்தில் அனைத்து இந்தியர்களும் ஒரு முடிவுக்கு வர வேண்டும். இதை சாதாரண விஷயமாக, ஏதோ பத்தோடு பதினொன்று, என்பது போல எடுத்துக் கொள்ளக் கூடாது.

இன்று நமது உரிமையின் மேல் கைவைக்கப்பட்டது போல நாளை வேறொன்றின் மீதும் கைவைக்கப்படலாம்.  இப்போது எப்படி நம்மால் ஒன்றும் செய்ய இயலவில்லையோ அதே போல நாளையும் இதே நிலை நேரலாம். சாத்தியம் உண்டு.

நம்மால் செய்ய முடிந்தது எல்லாம் ஒன்று தான். இவர்கள்  புறக்கணிக்கப்பட வேண்டும். இவர்களைத் தேர்தலில் புறக்கணிக்க வேண்டும். மற்ற வகை புறக்கணிப்பெல்லாம் இவர்களுக்குப் புத்தியைத் தராது! அரசியல்வாதிகளுக்கு தேர்தல் வாக்கு ஒன்றே அச்சத்தை தரும் ஆயுதம்.

வருகின்ற தேர்தல் காலத்தில் இவர்கள் என்ன பெயரில் வாக்குக் கேட்க வருவார்கள் என்பது தெரியவில்லை.  பாரிசான் என்றா, பெரிக்காத்தான் என்றா அல்லது புதிதாக ஏதாவது பெயரில் வருவார்களா என்பது தெரியவில்லை.  ஒன்றை வைத்து இவர்களைத் தெரிந்து கொள்ளலாம். ம.இ.கா. யார் பெயரில் வாக்குக் கேட்க வருகிறார்களோ அவர்கள் தான் இவர்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்!

ம.இ.கா. வை முற்றிலுமாக புறக்கணிக்கலாம்! தவறில்லை! பினாங்கு மாநிலத்தில், இரத ஊர்வலத்திற்குத் தடை இருந்தும்,  ம.இ,.கா. வினரால்  தடையை உடைத்தெறிய முடிந்ததே!  அங்கு அவர்கள் செய்ய முடிந்ததை ஏன் கெடா மாநிலத்தில் செய்ய முயற்சி எடுக்கவில்லை?

நாம் எல்லாக் காலங்களிலும் "பாவம்!" பார்க்கின்ற சமுதாயம். இனி அதனையெல்லாம் தூக்கி எறிய வேண்டும். பாவம், தயவு தாட்சண்யம் என்பதை மூட்டைக்கட்ட வேண்டும்! சீனர்கள் எந்தக் காலத்தில் பாவம் பார்த்தார்கள்? அவர்கள் என்ன கெட்டா போய்விட்டார்கள்.

ஒன்றைச் சொல்லி முடிக்கிறேன். நமது சமூகம் கேவலப்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்கு நாம் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.

இதற்கு ஒரே வழி:  தேர்தலில் இவர்களைப் புறக்கணியுங்கள்! இதைத்தான் நாம் அடுத்து செய்ய வேண்டும்!

அது என்னடா இளக்காரம்?

 தமிழக திரையரங்குகளில் நூறு விழுக்காடு இரசிகர்களை அனுமதிக்கலாம் என்று தமிழக அரசாங்கம் பச்சைக்கொடி காட்டியிருக்கிறது!

இத்தனைக்கும் கோவிட்-19 குறைந்தபாடில்லை!

ஆனாலும் இந்திய அரசாங்கம் ஐம்பது விழுக்காடு மட்டுமே திரையரங்குகளில் அனுமதிக்கலாம் என்று கட்டுப்பாடு விதித்திருக்கிறது. இருந்த போதும் தமிழக அரசாங்கம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஏற்றுக்கொள்ளாததால் தான் இப்போது விஜயின் "மாஸ்டர்" படம் முழு திரை அரங்காக ஓடிக் கொண்டிருக்கிறது!

இது எப்படி சாத்தியம்?  விஜய் முதலமைச்சரிடம் நேரிடையாக வந்து பேசினார். சாத்தியாமாயிற்று! ஐம்பது விழுக்காடு முடியாது நூறு விழுக்காடு வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் பேரம் பேசினார்கள். சாத்தியாமாயிற்று!

இத்தனைக்கும் கோவிட்-19 இன்னும் குறையவில்லை அதனால் தான் இந்தக் கட்டுப்பாடு என்கிறது  மத்திய உள்துறை அமைச்சு. ஆனாலும் தமிழக அரசு அதனைப் பொருட்படுத்தவில்லை!

எப்படி,  இப்படி நடக்க முடியாதது நடக்க முடிந்தது?

இது தான் அரசியல்! விஜய் பேசினார். சரி என்றார்கள்! அவருடைய இரசிகர்களின் வாக்கு ஆளுபவர்களுக்குச் சாதகமாகலாம்! இன்னொன்று: திரையரங்கு உரிமையாளர்கள் பேசினார்கள். அது அரசியல்வாதிகளுக்குப் பணமாக மாறலாம்! இங்கு ஒன்றை குறிப்பிட வேண்டும். இந்த உரிமையாளர்களில் 99% விழுக்காட்டினர் தமிழர் அல்லாதவர்கள்! அவர்கள் குரல் கேட்கப்படுகிறது!

ஆனால் இது நாள் வரை மத்திய அரசாங்கம் எத்தனையோ திட்டங்களை தமிழ் நாடு மீது திணித்திருக்கிறது. பதவியில் உள்ளோர் வாய் திறக்கவில்லை! இந்தி திணிப்பு, சமஸ்கிருதம் திணிப்பு, மருத்துவக் கல்வியில் ஏழை  மாணவர்கள் புறக்கணிப்பு, விவசாய நிலங்களை அபகரித்தல், தமிழ் மொழி புறக்கணிப்பு, வெளி மாநிலத்தவர்களுக்கு அரசாங்கத்தில் வேலை  வாய்ப்பு -  இப்படியோ எத்தனை எத்தனையோ திட்டங்களில் தமிழர்கள், தமிழ் நாட்டில்  புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்! ஆனால் மத்திய அரசாங்கத்தை ஆளும் கட்சியினர் இது நாள் வரை எதிர்த்துப் பேசவில்லை!

ஆனால் ஒரு சினிமா நடிகனுக்காக,  திரையரங்கு உரிமையாளர்களுக்காக தமிழக அரசாங்கம் மத்திய அரசாங்கத்தை எதிர்த்து நின்றிருக்கிறது! ஆனால் இந்த எதிர்ப்பினால் தமிழனுக்கு எந்த பயனும் இல்லை!

நாம் சொல்லுவதெல்லாம் இப்போது எதிர்க்க முடிந்தவர்களால், எதிர்க்க வேண்டிய எத்தனையோ பிரச்சனைகளில், ஏன் எதிர்க்கவில்லை என்பது தான்!

மாநிலத்தை ஆளுபவனுக்கே தமிழன் என்கிற உணர்வு இல்லை! இவனுக்கே தமிழனைக் கண்டால் இளக்காரம்! விரட்டி அடிக்கும் காலம் வரும்!

ஏன் ஒழிக்க முடியாது?

 நமது காவல்துறையினர் என்னன்னவோ பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டு விடுகின்றனர். 

ஆனாலும்  ஒரு சில பிரச்சனைகளுக்கு அவர்களால் தீர்வு காணவே  முடிவதில்லை! முடியவில்லை என்பதைவிட முடிவு காண அரசியல் அழிவுசக்திகள்  விடுவதில்லை!

அதில் ஒன்று தான் இந்த கந்துவட்டி அல்லது நம் நாட்டில் வட்டிமுதலை அல்லது ஆலோங் என்று சொல்லுகின்ற வட்டிக்குக் கடன் கொடுக்கும் முறை.

இந்த வட்டிமுதலைகள் செய்கின்ற கொடூரங்களும், அழிச்சாட்டியங்களும் நிறையவே நமது செய்தித் தாள்களில் வெளியாகி இருக்கின்றன! வெளியாகிக் கொண்டிருக்கின்றன!

எத்தனையோ ஆண்டுகளாக இவர்களைப் பற்றியான செய்திகள் நமக்குக் கிடைத்துக் கொண்டு தான் இருக்கின்றன.

இப்போது ஒரு சீனப்பெண்மணியைப் பற்றியான ஒரு செய்தியைப் படித்த போது மனம் கலங்கிவிட்டது.  இந்தக் காலத்தில் இப்படி ஒரு கொடுமையா. இவர்கள் எல்லாம் சுட்டுத்தள்ளப்பட  வேண்டியவர்கள் என்று எண்ண வேண்டியிருந்தது.

முவாயிரம் வெள்ளி (3000) தான் அவர் வாங்கிய கடன்.  அதுவும் அந்தக் கடனை அவர்  பெறும் போது அவருக்குக் கிடைத்ததோ வெறும் இரண்டாயிரத்து இருநூறு வெள்ளி(2200) மட்டுமே! இந்த RM2,200 கடனுக்கு அவர் இதுவரை செலுத்திய தொகையோ சுமார் மூன்று இலட்சத்திற்கு மேல்!  இன்னும் அந்தக் கடன் முடிந்த பாடில்லை! இன்னும் வட்டி கட்டிக் கொண்டு தான் இருக்கிறார்! எங்கே போய் முட்டிக் கொள்வது? ஆனால் அந்தப் பெண்மணி முட்டிக் கொள்ளவில்லை, சாகத் துணிந்துவிட்டார் என்பது தான் கடைசியாக அவர் எடுத்த முடிவு.

ஆனாலும் அவர் காப்பாற்றப்பட்டார். மலேசியா சமூக மேம்பாட்டு சிந்தனை இயக்கம் அவரது பிரச்சனையைக் கையில் எடுத்தது.  பொது மக்களின் கவனத்திற்கும் கொண்டு வந்தனர். காவல்துறைக்கும் தகவல்கள் கொடுக்கப்பட்டன. ஆனால் அந்த வட்டிமுதலைகளின்  அராஜகம் மட்டும் இன்னும் அடங்கவில்லை என்கின்றார் அந்தப் பெண்மணி. காவல்துறையினரை விட வட்டிமுதலைகள் இன்னும் வலிமை வாய்ந்தவர்களாக இருக்கின்றனர் என்பது தான் வருத்தத்திற்கு உரியது.

இவர்கள் பின்னணியில் இருப்பவர் யார். கொள்ளையடித்த அரசியல்வாதிகளின் பணம். இலஞ்சமாகப் பெற்ற அதிகாரிகளின் பணம்.  கறுப்புப் பணம்.  இப்படி பெரும்புள்ளிகள் சம்பந்தப்பட்டிருப்பதால் இவர்கள் ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கின்றனர்!

ஒழிக்க முடியும்! அதற்கான நேரம் தான் இப்போது வந்திருக்கிறது!

Friday 29 January 2021

அவர்கள் முட்டாள்கள் அல்ல!

 பொதுவாக அரசியல்வாதிகளை நான் முட்டாள்களாக நினப்பதில்லை!

ஒரு வேளை மக்கள் நலன் என்று வரும் போது அவர்கள் முட்டாள்கள் போன்று நடிக்கலாம் ஆனால் அவர்கள் முட்டாள்கள் அல்ல! காரணம் மக்களின் பணத்தின் மீது கை வைக்கும் போது அவர்கள் மிகவும் அதிபுத்திசாலிகளாக நடந்து கொள்கிறார்கள் என்பது தான் அரசியல்வாதிகள் நமக்கு இதுவரை கற்பித்துக் கொண்டிருக்கும் பாடம்!

நடுவண் அரசில் அமைச்சராக இருக்கும் ஒருவர் "நல்லது செய்கிறேன்"  என்று நினைத்து கெடுதலைச் செய்கிறாரே அது இப்போது சமீபத்தில் நடந்திருக்கிறது.

பினாங்கு தைப்பூச இரத ஊர்வலத்திற்கு மாநில அரசு,  தேசிய பாதுகாப்பு மன்றத்தின் ஆலோசனையின் பேரில்,  தடை செய்திருக்கிறது. இதனை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஒரே காரணம் கோவிட்-19  தொற்று அதிகப்படியாக பரவாமலிருக்க இந்தத் தடை  தேவைப்படுகிறது 

ஆனால் மத்தியில் இருக்கும் அமைச்சர் இந்தத் தடையை நீக்க தேசிய பாதுகாப்பு மன்றத்தில் கூடி பேசி அந்தத் தடையை வெற்றிகரமாக வாபஸ் வாங்க செய்திருக்கிறார்.  பரவாயில்லை இந்த அளவுக்காகவாவது  அவருக்குத் திறமை இருக்கிறதே அதனைப் பாராட்டுகிறோம்! அவரைப் பொறுத்தவரை மாநில அரசாங்கத்தின் மூக்கை உடைத்துவிட்டார்! ஒரு சாராரின் பாராட்டுதலையும் பெற்றுவிட்டார்!

ஆனால் அதே அமைச்சர் அதே திறமையை இன்னொரு மாநிலத்தில் ஏற்பட்ட தலைகுனிவை ஏன் அவரால் சரிசெய்ய முடியவில்லை என்கிற கேளவியை நாம் கேட்கத்தான் செய்வோம்.

கெடா மாநிலத்தில் இந்துக்களுக்கு  தலைகுனிவு ஏற்பட்டதே அப்போது அவர் எங்கே போய் ஒளிந்து கொண்டார்? பாஸ் கட்சியின் கீழ் ஆட்சி அங்கு நடைபெறுகிறது என்பது உண்மை தான்.  ஆனால் அந்த ஆட்சியில் உங்களுக்கும் பங்கு உண்டு என்பதை உங்களால் மறுக்க முடியுமா?

இப்போது உங்களால் தேசிய பாதுகாப்பு மன்றத்தில் பேச முடிந்ததே அப்போது ஏன் நீங்கள் மத்திய அரசாங்கத்தில் அங்கம் பெற்றிருக்கும் பாஸ் தலைவர்களுடன் பேச எந்த முயற்சியும்  எடுக்கவில்லை? பேசியிருந்தால் நல்லதொரு முடிவு கிடைத்திருக்குமே! பாஸ் கட்சியினர் அந்த அளவுக்குக் கெட்டவர்களா, என்ன?  என்னைப் பொறுத்தவரை அவர்கள் நல்லவர்களே! 

இங்கு நடந்ததெல்லாம் "நீயா நானா" போட்டி மட்டும் தான்.  கொஞ்சம் திமிரை விட்டுக் கொடுத்திருந்தால், கொஞ்சம் தலைக்கனத்தை  விட்டுக் கொடுத்திருந்தால்  இந்த விடுமுறை பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வைக் கண்டிருக்கலாம்.

இப்போது ம.இ.கா. வினர் புதியதொரு வழியைக் கண்டுபிடித்திருக்கின்றனர். மக்களைப் போலவே நாளிதழ்களில் அவர்களும் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றனர்!  இந்த ஆவேச அறிக்கைகளினால் எந்தப் பயனும் இல்லை. 

சம்பந்தப்பட்டவர்களுடன் உட்கார்ந்து பேசுங்கள். கூடிப் பேசுங்கள். ராமசாமி என்றால் நாங்கள் வீரத்தைக் காட்டுவோம் சனூசி என்றால் சுருட்டிக்கொள்வோம் என்கிற நிலை வேண்டாம்!

மீண்டும் சொல்லுகிறேன் அவர்கள் முட்டாள்கள் அல்ல!

எண்ணிக்கை பயமுறுத்துகிறது!

 கோவிட்-19 தொற்றைப் பற்றி எவ்வளவோ கிண்டலடிக்கலாம்!

ஆனால் நடப்பது என்னவோ கிண்டலாகத் தெரியவில்லை! இன்று மட்டும்  அதன் எண்ணிக்கை பயமுறுத்துவதாகவே இருக்கிறது.

இன்றைய நிலமை (29-1-2021)   =  5,725 பேர் பாதிப்பு                        மரணமடைந்தோர் எண்ணிக்கை   =  16 பேர்

ஒவ்வொரு நாளும் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது என்ன தான் நடக்கிறது என்பதும் புரியவில்லை.

ஒரு பக்கம் வயதானவர்கள் வீட்டிலேயே அடைந்து கொண்டு இருக்கிறார்கள். ஏதோ ஒரு மாதம், இரண்டு மாதம் என்றிருந்தால் பொறுத்துக் கொள்ளலாம்.  ஆனால் நிலைமை அப்படி இல்லை. எத்தனையோ மாதங்கள் வீட்டிலேயே அடைபட்டுக் கிடைக்க வேண்டியிருக்கிறது.

என்ன தான் சும்மா இருந்தாலும் அது சாதாரண விஷயம் அல்ல! சும்மா இருப்பது தான் மிகக் கஷ்டமான வேலை!

தினசரி பணிகளெல்லாம் பின் தங்குகின்றன. "இப்போ முடியும்! அப்போ முடியும்!" என்று ஒவ்வொரு நாளும் காத்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது!

வயதாகிவிட்டால் வீட்டில் சும்மா முடங்கிக்கிடக்க முடியுமா?  ஏதாவது செய்து கொண்டிருந்தால் தானே பொழுது போகும்! வயதாகிவிட்டவர்கள் ஓய்வு எடுக்கலாம்.  வயதாகாத  வயதானவர்கள் என்ன செய்வது? 

வழக்கம் போல அரசாங்கம் என்ன செய்கிறது என்று கேட்பது மிகவும் எளிதான விஷயம். என்ன செய்வது? யார் மீதாவது பழி போட வேண்டியிருக்கிறது! நாமே சட்டத்தை மீறுகிறோம்! அப்புறம் அரசாங்கத்தைக் குறை சொல்லுகிறோம்.

நாம் பழகுகிற சக மனிதர்கள் எதற்கும் அஞ்சுவதில்லை. எப்போதும் போல வெளியே போவதும் வருவதுமாக இருக்கிறார்கள்! அவர்களைக் குறை சொல்லவும் முடியவில்லை. எவ்வளவு நேரம் அடைந்து கிடப்பது என்கிறார்கள்!

இந்த எண்ணிக்கை இன்னும் கூடுமா என்றும் தெரியவில்லை! கூடும் என்றே நினைக்க வேண்டியிருக்கிறது!

எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் தொற்று பரவிக் கொண்டிருக்கிறது! நாமும் செய்வதறியாது முழித்துக் கொண்டிருக்கிறோம்!

என்ன செய்ய, சொல்லுங்கள்!

Thursday 28 January 2021

மீண்டும் பொருளாதார முடக்கமா?

 மீண்டும் ஒரு பொருளாதார முடக்கம் ஏற்படுமா என்கிற அச்சம் சமீபகாலமாக  ஒலித்துக் கொண்டிருக்கிறது.

பொதுவாக இன்றைய நிலையில் அனைத்து வணிகங்களும் திறக்கப்பட்டு ஒரு சீரான நிலையை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி செய்து கொண்டிருக்கிறது. பாராட்டுகிறோம்!

ஆனால் எந்த நேரத்திலும்  அரசாங்கம் பல்டி அடிக்கலாம் என்கிற எண்ணத்தையும் ஒதுக்கித் தள்ளி விட முடியாது.  ஒரு நிலையற்ற அரசாங்கத்தை நாம் கொண்டிருக்கிறோம்!  அவர்களின் சிந்தனை, எண்ண ஓட்டம் எதனையும் கணிக்க முடியவில்லை.

நாட்டின் நிலைமை சீரடைய வேண்டும் என்பதை விட தங்களது அரசியல் நிலைமை சீரடைய வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்! 

இந்த நிலையில் அவர்கள் நாட்டின் நலனில் அக்கறை கொள்வார்களா அல்லது தங்களது நலனில் அக்கறை கொள்வார்களா என்றால் தங்களின் நலனில் தான் என்பது புலப்படும்!

அவசரகாலம் என்பதே அரசியல்வாதிகளின் நலன் சார்ந்தது தானே! இதைக் கூடவா நம்மால் புரிந்து கொள்ள முடியாது!

முதல் முடக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகளே இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. வேலை வாய்ப்புகள் இழந்தோர் பல இலட்சம் பேர் என முன்பே கூறப்பட்டது. பல ஆயிரம் வணிக நிலையங்கள் மூடப்பட்டன.  பெரும் தொழில்களின் பலர் தொழிலை விட்டே போய்விட்டனர்.  சிறிய தொழில்கள் பல நசுக்கப்பட்டுவிட்டன. இன்னும் பலரால் தலை  எடுக்கவே  முடியவில்லை.

முதல் முடக்கத்தின் பாதிப்பே இன்னும் அப்படியே தேங்கி நிற்கிறது. இந்த நிலையில் இரண்டாம் பொருளாதார முடக்கம்  என்றால் மக்களின் நிலை என்ன என்கிற கேள்வி எழத்தான் செய்யும்.

அதுவும் சுமார் 28 இலட்சம் பேர் வேலை இழப்பர் என்றும் கணிக்கப்படுகிறது. இது நாள் வரை அரசாங்கம் மூலம் சில உதவிகள் அல்லது தங்களது ஊழியர் சேமநிதியிலிருந்து ஓரளவு மக்களால் தங்களது பணத்தை எடுக்க முடிந்தது.

இரண்டாம் பொருளாதார முடக்கம் என்றால் அவர்களது வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வார்கள்?  மக்கள் என்ன அரசாங்க வேலையிலா இருக்கிறார்கள்!  ஏதாவது ஒரு வேலையில் இருந்தாலே அவர்களின் வாழ்வாதாரத்தை அவர்கள் பார்த்துக் கொள்ள முடியும். அதற்கும் வேட்டு வைத்தால் அவர்களால் என்ன செய்ய முடியும்?

இந்த நிலையில் வெளி நாட்டுத் தொழிலாளர்களுக்கும் வேலை கொடுக்க வேண்டிய கட்டாயமும் உண்டு. அதனையும் தவிர்க்க முடியாது. அவர்களுக்குக் குறிப்பிட்ட துறைகளில் வேலை வாய்ப்புக்களைக் கொடுத்துவிட்டு மற்ற துறைகளில் மலேசியர்களுக்கு வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். 

இன்றைய நிலையில் எல்லாத் துறைகளிலும் வெளி நாட்டுத் தொழிலாளர்களே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டும்.

பொருளாதார முடக்கம் மீண்டும் வரும் என்கிற பேச்சு அச்சத்தைக் கொண்டு வருகிறது.

அப்படி வராது என்கிற உறுதி மொழி இன்னும் வரவில்லை. வரும் என்றாலும் வாரா என்றாலும் அடி என்னவோ நமது மக்களுக்குத் தான்!

இது தாண்டா போலிஸ்!

 

காவல்துறையினரைப் பற்றிய குறைபாடுகள் ஏராளம்!  

ஏன் இந்த குறைபாடுகள் என்றால் நாம் செய்கின்ற குறைபாடுகளினால் வருகின்றவை தான் இவை பெரும்பாலும்!

ஆனால் தேவையான நேரத்தில் அவர்கள் பொது மக்களுக்கு உதவ தயாராகவே இருக்கிறார்கள். 

அது தான் சமீபத்திலும் நடந்திருக்கிறது. தைப்பூச இரத ஊர்வலத்தின் போது காவல்துறையினர், ஆள் பற்றாக்குறையால்,  முருகப் பெருமானின்  சிலையை வெள்ளி இரதத்தில்  தூக்கி வைக்க  உதவியிருக்கின்றனர்.


இதனைப் பெரிதுபடுத்தி ஒரு சிலர் சர்ச்சையாக்குகின்றனர்.

அப்படியே காவலர்கள் உதவாத நிலை உருவாகியிருந்தால் என்ன ஆயிருக்கும் என்பதும் யோசிக்க வேண்டிய விஷயம். குறைவான மக்கள். உதவ ஆளில்லை.  நடு ரோட்டில் அப்படியே வைத்துவிட்டு ஓடிவிட முடியுமா!

காவல்துறையினர் யாருக்கு உதவ வேண்டும், யாருக்கு உதவக்  கூடாது என்கிற நிபந்தனையெல்லாம் வைக்க முடியாது.  ஆபத்து அவசர வேளையில் காவல்துறை, எந்த சூழ்நிலையாக இருந்தாலும், உதவித்தான் ஆக வேண்டும்.

சமயம், இனம் அனைத்திற்கும் அப்பாற்பட்டவர்கள் காவல்துறையினர். அவர்கள் கடமையை அவர்கள் செய்யும் போது ஒருசில விதண்டாவாதிகள் விவாதப் பொருளாக ஆக்கி விடுகின்றனர்! பொறுப்பற்ற ஜென்மங்கள் இவர்கள்! வேறு என்ன சொல்ல!

எது செய்தாலும் அதனை அரசியலாக்குவதில்  ஒரு சிலர் கை தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்!

எது எப்படி இருந்தாலும் காவல்துறையினரின் கடமை உணர்ச்சியைப் பாராட்டுகிறேன். அவர்கள் கடமையை அவர்கள் செய்திருக்கின்றனர்.அதில் கருத்து வேறுபாடில்லை!

மிகவும் இக்கட்டான நிலையில் காவல்துறையினர் "இது  தாண்டா போலிஸ்! நண்பன் டா!" என்பதைக் காட்டியிருக்கின்றனர்!

வாழ்த்துகள்!

Wednesday 20 January 2021

இனப்பாகுபாடு காட்டுகிறதா அரசாங்கம்?

 இன்றைய ஆளுங்கட்சியான பெரிக்காத்தான் நேஷனல் இனப்பாகுபாடு காட்டுகிறதோ என்கிற ஒர் ஐயம்  எழத்தான் செய்கிறது.

இந்தியர்களால் நடத்தப்படுகின்ற ஜவுளிக் கடைகளுக்கு மட்டும் ஏன் இந்தக் கதவடைப்பு என்று நாம் கேள்வி கேட்க வேண்டியுள்ளது ஒரு துரதிருஷ்டமே.

காரணம் இப்போது நாம் எங்கே வேண்டுமானாலும் போய் நமக்கு வேண்டிய துணிமணிகளை வாங்கலாம்.  சமீபத்தில் நான் கூட வாங்கியிருக்கிறேன். எல்லாமே பெரும் பெரும் பேரங்காடிகள்.  பெரிய புகழ்பெற்ற நிறுவனங்கள்.

இப்படி வெளிநாட்டு, உள்நாட்டு  நிறுவனங்களுக்கெல்லாம் அரசாங்கம் வியாபாரம் செய்ய அனுமதி கொடுத்திருக்கும் வேளையில்  உள்நாட்டில் காலங்காலமாக வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் ஜவுளி நிறுவனங்களுக்கு மட்டும் ஏன் இந்த கடுமையான கட்டுப்பாடு?  அவர்களும் மனிதர்களே! அவர்களிடமும் பல ஆயிரம் பேர்கள் வேலை செய்கிறார்கள்! அவர்களை நம்பி பலாயிரம்  குடும்பங்கள் ஜீவனம் நடத்துகின்றனர்.

ஒரு வேளை அவர்களை இந்தியர்கள் என்கிற ரீதியில் பார்க்கும் போது குறைவானவர்களாக இருக்கலாம். ஆனாலும் அவர்களும் மனிதர்கள். அவர்களும் கவனிக்கப்பட வேண்டியவர்கள்.  அது தான் அவர்களின் வாழ்வாதாரம். புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல.

சீன முதலாளிகளுக்குச் சார்பாக அரசாங்கம் இருக்கக் காரணம் சீனர்களுக்காக பரிந்து பேச ம.சீச. எப்போதும் தயாராக இருக்கிறது. இந்தியர்களுக்குப் பரிந்து பேச எந்த பிரதிநிதித்துவமும் இல்லை. 

மலாய்க்காரர்கள் என்றால் எதுவும் தேவை இல்லை. முண்டியடித்துக் கொண்டு உதவ அரசாங்கம் தயாராக இருக்கிறது. அதனால் அவர்கள் பிரச்சனைகள் வெளி வரும் முன்பே அனைத்தும் தீர்க்கப்பட்டு விடுகின்றன.

ஆனால் இந்தியர்களின் பிரச்சனை எந்தக் காலத்திலும் தீர்க்கப்படுவதில்லை. யாரும் அது பற்றி பேசுவதில்லை. அதனால் தான் நமது குரலைக் கேட்க ஆளில்லாமல் தவிக்கிறோம்!

இன்றைய நிலையில் பார்க்கும் போது இது இனப்பாகுபாடு தான்  என்பது தெளிவாகத் தெரிகிறது.

ஜவுளி வியாபாரிகளின் கோரிக்கை கேட்கப்பட வேண்டும். அவர்களும் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்.

எந்தவித மாற்றமுமில்லாமல் இந்தப் பிரச்சனை தொடரும்  என்றால் அது இனப்பாகுபாடு தான்! ஐயமில்லை!

விடுமுறையும் இல்லை!

 தைப்பூசம் இல்லை, அதனால் விடுமுறையும் இல்லை!

கெடா மாநிலத்தின்,  பாஸ் மந்திரி பெசார், முகமது சனுசி  முகமது நோர் இப்படி ஒர் அறிவிப்பைச் செய்திருக்கிறார்.

சில நாள்களுக்கு முன் அவர் இந்து சங்கத்தினரைச் சந்தித்திருக்கிறார். ஒரு வேளை இது பற்றி அவர்களிடம் அவர் பேசியிருக்கலாம்!

என்றாலும் இந்த அறிவிப்பு சரியா தவறா என்பதை விட அவரின் அறிவிப்பு சரியாகக் கூட இருக்கலாம் என்பதையும் மறந்து விடக் கூடாது.

தைப்பூசம் என்பதை  மட்டும் நாம் எடுத்துக்கொள்ளக் கூடாது. இதன் பின்னர் வருகின்ற  மற்றைய பெருநாள்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என்பதாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மந்திரி பெசார் என்பவர் அனைத்துக் கெடா மக்களுக்கும் அவர் மந்திரி பெசார் தான்.  மலாய்க்கரர்களுக்கு மட்டும், சீனர்களுக்கு மட்டும், இந்தியர்களுக்கு மட்டும்  என்று அவரை நாம் பிரித்துப் பார்க்கக் கூடாது. அப்படிப் பார்த்தால் அது முட்டாள் தனம்! அப்படியெல்லாம் யாரும் பார்ப்பதில்லை! கெடா மந்திரி பெசார் உட்பட!

இன்றைய கோவிட்-19 தொற்று நோயின் தாக்கம் மிக மிக அதிகரித்துக் கொண்டு வருகிறது. கெடா மாநிலத்தில் இன்னும் அதிகம். அதனால் மந்திரி பெசார் சொல்லுவது நமது நன்மைக்காகத்தான். நாட்டின் நலன் கருதித் தான். இதில் நாம் கோபப்படுவது சரியில்லை.

பெருநாட்களில் அடுத்து வருவது சீனர் பெருநாள்.ஹரிராய ஹாஜி போன்ற பெருநாள்களும் வரிசைப் பிடித்து நிற்கின்றன. இந்த பெருநாள்களும் யாரும் கொண்டாடும் படியான சூழல் இல்லை. கோவிட்-19 இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கும்.

இந்த பெருநாள்களும், மந்திரி பெசார் அறிவிப்பின்படி,  கொண்டாட முடியாது. கொண்டாட முடியாத எந்த பெருநாள்களுக்கும் விடுமுறை எடுக்க முடியாது என்பதைத் தான் அவர் கூறுகிறார்.

கோவிட்-19 தொற்று நோயினால் ஏகப்பட்ட விடுமுறைகள் எடுக்கப்பட்டு விட்டன. இந்த நேரத்தில் கொண்டாட முடியாத பெருநாள்களுக்கு ஏன் விடுமுறை கொடுக்க வேண்டும் என்பது தான் அவரது நோக்கம். அது சரி தானே!

அதனால்  இதனைப் பெரிது படுத்த வேண்டாம். கடந்த ஆண்டில் எந்த ஒரு பெருநாளும் உருப்படியான முறையில் நாம் கொண்டாட முடியவில்லை. வீட்டோடு அடைந்து கிடந்தோம். எங்கும் வெளியாக  முடியவில்லை. காரணம் தொற்று நோய்.

அதே நிலைமை தான் இந்த ஆண்டும். எந்த மாற்றமும் இல்லை. பின்னர் ஏன் விடுமுறை?  இப்போதும் எப்போதும் விடுமுறை என்கிற நிலை இருக்கும் போது  அப்புறம் எதற்கு விடுமுறை என்பது தான் மந்திரி பெசாரின் கேள்வி.

விடுமுறை இல்லை! வேலையும் இல்லை!

Tuesday 19 January 2021

இதுவும் கடந்து போகும்!

 கொவிட் 19 தொற்று நோய் எப்போது  ஒழியும் எப்போது முடங்கும் என்று நாம் கணக்குப் பண்ணினால் அதுவோ நம்மிடமிருந்து நழுவிக் கொண்டே போகிறது! 

எங்கே போகும், எப்போது போகும், என்ன ஆகும் என்பதற்கெல்லாம்  நல்லதொரு பதில் இல்லை.

ஒரே ஆறுதல் என்னவெனில் "இதுவும் கடந்து போகும்!" என்கிற  நம்பிக்கை மட்டும் உண்டு. ஆனால் எப்போது என்கிற கேள்வி மட்டும் வேண்டாம்!

இப்போது தொற்று கட்டுக்கடங்காமல் போய்க்  கொண்டிருக்கிறது.  ஒவ்வொரு நாளும் நாம் பயப்படுகிற அளவுக்கு எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது!

மருத்துவமனைகளில் போதுமான படுக்கைகள் இல்லை என்கிற செய்தியும் வெளியாகிக் கொண்டிருக்கிறது. படுக்கைகள் கூட்டப்பட வேண்டும். வேறு வழி தெரியவில்லை!  படுக்கைகளைக் கூட்டுவது ஒன்று தான் வழி.  ஏதோ ஒரு இடத்தில் மட்டும் அல்ல.  பொதுவாகவே எல்லா மாநிலங்களிலும் இந்த நிலைமை தான்!

கொரோனா நோயாளிகளும்  கூடிக் கொண்டே போகிறார்கள்.  படுக்கைகள் கூடிக் கொண்டே போகின்றன. இறப்பும் கூடிக் கொண்டே போகின்றது.

நாட்டிலும் வேறு வழி தெரியாமல் அவசரகாலம்  அளவுக்கு பிரச்சனை வளர்ந்து விட்டது. அதுவே இப்போது ஒரு பயமுறுத்தலாகவும் மாறிவிட்டது. யாராவது எதிர்த்துப் பேசினால் அவர்களை 'உள்ளே' தள்ளவும் அதிகாரம் வந்திருக்கிறது!

அது அரசியல் என்று தெரிந்தாலும்  நமது பிரச்சனை தான் நமக்கு முக்கியம். இன்று அடித்துக் கொள்வார்கள், நாளை கூடிக் கொள்வார்கள்1 அது தான் அவர்களது நிரந்தர கொள்கை! 

ஒன்று ஆறுதல் தருகிறது. அவசரகாலம்  வேண்டுமா, வேண்டாமா என்று முடிவெடுப்பது   மாமன்னர் கையில் இருக்கிறது. ஒரு வகையில் இப்போது தான் ஆட்சியைத் தனது கையில் எடுத்திருக்கிறார் மாமன்னர். பிரதமர் தனது விருப்பு வெறுப்புக்கு ஏற்ப செயல்பட முடியாது. 

முன்னாள் பிரதமர் மகாதிர் தனது தலைமையில் இருக்கும் கட்சியின் மூலம் மாமன்னருக்கு  "அவசரகாலம் தேவை இல்லை" யென்பதாக கடிதம் அனுப்பியிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. அது அவரது கட்சியின் முடிவு. அது மட்டுமல்ல. நாட்டில் உள்ள பலரும் "தேவை இல்லை" என்பதாகவே கூறி வருகின்றனர்.

எது நடந்தாலும் "இதுவும் கடந்து போகும்!"  என்று நம்பிக்கை கொள்வது தான் நமது நிலை!

இலவச உணவு கொடுக்கும் உணவகம்!

 இப்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்த கொரோனா தொற்று நோயின் தாக்கம்  பலரது  மனக்கதவை திறந்து விட்டிருக்கிறது!

    


பினாங்கு, புக்கிட் மெர்தாஜாமில் உணவகம் நடத்தும்  BIG BOSS BANANA LEAF RESTAURENT  உரிமையாளர்  எம். மோகனசுந்தரம் அந்த நல்ல காரியத்தைச் செய்ய ஆரம்பித்திருக்கிறார். வாழ்த்துகிறோம்!

தேவையான நேரத்தில் தேவையான உதவிகளைச் செய்வதில் மலேசியர்கள் யாரும் சளைத்தவர்கள் அல்ல. 

இன்றைய  நிலையில் பல உணவகங்கள் தங்களால்  இயன்றதைச் செய்து கொண்டு தான் இருக்கின்றன.

அதில் ஒருவர் தான்  மோகனசுந்தரம். ஜாலான் ஊய் கார் செங்கில் (Jalan Ooi Kar Seng)அமைந்திருக்கும்  அவரது உணவகத்திலிருந்து ஒவ்வொரு நாளும் சுமார் 100  பேக்கெட்டுக்களில் சமைத்த உணவுகளைத் தேவையானவர்களுக்குக் கொடுத்து உதவுகிறார். 

அவரிடம்  பணி புரியும் பணியாளர்கள் - சுமார் 12 பேர் -  மாலை  மணி 3.00 லிருந்து 5.00 மணி வரை அதற்கான வேலைகளில் ஈடுபட்டு சுமார் 6.00 மணி அளவில் பசித்தோருக்கு வினியோகம் செய்ய ஆரம்பக்கிறார். 

 அது அவரது தினசரி பணி. இலவச உணவுக்காக ஒவ்வொரு நாளும் 10 கிலோ அரிசி, 100 முட்டைகள்,  100 மீன்கள், 100 கோழித்  துண்டுகள், மரக்கறிகள்  இவையனைத்தும் கொடுக்கப்படுகின்றன.

தினசரி நடக்கும் இந்த இலவசப் பணி பற்றி மோகனசுந்தரம் என்ன சொல்ல வருகிறார்?  "பணம் மட்டுமே எனக்குப் பிரதானம் அல்ல.  மனிதாபிமானம் என்பது முக்கியம். இப்போதும் பலர் வறுமையில் வாடுகிறார்கள். அவர்களின் நலனும் முக்கியம்".

மோகனசுந்தரம் வாழ்த்துக்குரியவர்.  "கொடுத்தே ஆண்டியானன்!"  என்று சொல்லுபவர்கள் உண்டு. இப்போது  அப்படி சொன்னவர்கள் ஒன்றும் கொடி கட்டி வாழவில்லை! உண்மை என்னவென்றால் கொடுப்பவர்கள் தான் தொழிலில் நீடிக்கிறார்கள். தொடர்ந்து வளமாக வாழ்ந்து  வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள்.

கொடுப்பது நமது கடமை. அதனை எல்லாரும் செய்ய வேண்டும்!

Sunday 17 January 2021

என்ன தான் நடக்கிறது?

 நாட்டில் என்ன தான் நடக்கிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை!

எங்குப்  பார்த்தாலும் கூச்சல்  குழப்பம்  என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது!

மக்களிடையே வேலை  இல்லாப் பிரச்சனை ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் வியாபாரிகளின் கூச்சலும் கூக்குரலும்  அதிகமாக் கேட்கிறது!

போகிற போக்கைப் பார்த்தால் நாட்டின் இன்றைய நிலையை அரசாங்கத்தால் கையாள முடியுமா என்று ஐயமுற வேண்டியிருக்கிறது. பிரதமர் இருக்கிறாரா இல்லை எங்கேனும் ஒளிந்திருக்கிறாரா என்கிற நிலை உருவாகிக் கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது.

எல்லாப் பக்கங்களிலுருந்தும் "எங்களுக்கு உதவுங்கள்!" என்று அனுதினமும் அறிக்கைகள் தூள் பறக்கின்றன!

முடிவெட்டும்  நிலையங்கள் இப்போது பெரும்பாலும் வெளிநாட்டவரால் நடத்தப்படுகின்றன. அவர்களின் தொழில் முடக்கப்பட்டால் அவர்களும் முடங்கிப் போய் விடுகிறார்கள்.  முதலாளிகளின்  நிலையும் சரியாக இல்லை.

உணவகங்களின் பிரச்சனை இன்னும் பூதாகாரமாக இருக்கின்றது. உணவகங்களுக்குப் போகுபவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. இப்போது பெரும்பாலும்   மோட்டார் சைக்கிளில் வீடுகளுக்கே சென்று உணவுகளைக்  கொடுத்து வருகின்றனர். இப்போது இது தான் உணவகங்களுக்குக் கொஞ்சம் கை கொடுக்கிறது என்று சொல்லலாம். பெரிய சம்பாத்தியம் இல்லையென்றாலும் வண்டி ஓடுகிறது என்று கொஞ்சம் மூச்சு விடலாம். அதே நேரத்தில் வண்டி ஓட்டுபவர்களுக்கும் வேலை வாய்ப்புக்கள் நிறையவே கிடைக்கின்றன.

ஆனாலும் அவர்களின்  கோரிக்கை என்பது நியாயமானது தான்.  உணவகங்கள் திறக்கும் நேரத்தை அல்லது அடைக்கும் நேரத்தை  கொஞ்சம் கூட்டலாம்.  அப்படியே கொடுத்தாலும் அப்படி ஒன்றும் வாடிக்கையாளர்கள் குவியப் போவதில்லை!

இந்த அவசரகாலம், ஊரடங்கு நமக்கும் பல பிரச்சனைகளை உருவாக்குகின்றன. வீட்டிலேயே எத்தனை நாள்களுக்குத் தான் முடங்கிக் கிடப்பது என்கிற பிரச்சனையும் எழுகிறது.

நமக்குள்ள கோபம் எல்லாம் இந்த அரசியல் அராஜகங்களின் மேல் தான். வருகிறது.  இவர்கள் பதவியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக தொற்றை தடுப்பதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. அதனால் தான் இன்று நாடு இவ்வளவு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

இப்போது நாம் திரிசங்கு நிலையில் தள்ளப்பட்டிருக்கிறோம். எப்போது போல நமது சராசரி வாழ்க்கையை வாழ முடியவில்லை. அதுவும் இல்லை இதுவும் இல்லை என்னும் நிலைமை!

ஒரு பக்கம் ஆளும் அரசியல்வாதிகள் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். பதவி, பணம் எல்லாமே கிடைக்கிறது.  பொது மக்கள் தான் அழ வேண்டியிருக்கிறது.

என்ன தான் நடக்கிறது? ஒன்றும் நடக்கவில்லை என்பது தான் பிரச்சனை!


இது தான் மலேசியா!

 


மலேசியர்கள் பரிவு மிக்கவர்கள் என்பது மீண்டும் மீண்டும் நிருபிக்கப்பட்டு வருகிறது

நம்முடைய பிரச்சனைகளுக்கு முக்கிய காரணிகளாக இருப்பவர்கள்  அரசியல்வாதிகள் தான்.

மலேசியர்களிடேயே ஒற்றுமையில்லை அதற்குக் காரணம் தாய்மொழிப்பள்ளிகள் அல்லது பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் என்று பேசி வருபவர்கள் அரசியல்வாதிகள்!

ஆனால் தனிப்பட்ட முறையில் அவர்கள் அரசியல்வாதிகளாக இருந்தாலும் கூட நல்லவர்கள் தான்.  மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை உள்ளவர்கள் என்பதில் சந்தேகமில்லை.

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்று நம்மை மனம் நெகிழ வைக்கிறது.

சீன பெரியவர் ஒருவர் தனது 32 வயது மகன் விபத்தொன்றில் இறந்து போனார் என்கிற செய்தி கேட்டு மலாக்கா மாநிலத்திலிருந்து  தெலுக் இந்தான், பேரா மாநிலத்திற்கு விரைந்திருக்கிறார். ஆனால் அங்கிருந்து இறந்துபோன  தனது மகனின் உடலை மலாக்கா கொண்டு வருவதில் அவருக்குச் சிரமம் ஏற்பட்டது.

ஆமாம்,  அங்கிருந்து சவ வண்டியில் கொண்டு வர அவருக்கு ரி.ம. 1,600.00 வெள்ளி தேவைப்பட்டது.  ஆனால் அந்த அளவுப் பணம் அவரிடம் இல்லை.

அவர் பணத்துக்காக அலைமோதி கொண்டிருக்கையில்  மலாய் நண்பர் ஒருவர் இலவசமாக அவருக்கு உதவ முன் வந்தார். 

அவர் வைத்திருந்த, இஸ்லாமியர்களுக்கான சவ வண்டியை,  அந்த சீன பெரியவருக்குக் கொடுத்து  உதவ முன் வந்தார். இஸ்லாமியர் பயன்படுத்தும் சவ வண்டியை வேறு ஒரு மதத்தைச் சார்ந்த உடலுக்குப் பயன்படுத்தலாமா என்கிற கேள்வி எழுந்த போது அது பற்றி அவர் கவலைப்படவில்லை.

"கடவுளுக்குத் தான் நாம் பதில் சொல்ல வேண்டுமே தவிர மனிதனுக்கு அல்ல!"  என்பது தான் நமது பதிலாக இருக்கும்.

ஆபத்து, அவசர நேரத்தில் மனிதனுக்கு மனிதன் உதவுவதை யாரும் தவறாக நினப்பதில்லை. 

அந்த மலாய் நண்பர் சுமார் 300 கிலோ மீட்டர்  தூரம் இலவசமாக அந்த சீனருக்கு அவரின் மகனின் பிரேதத்தை மலாக்கா வரைக்  கொண்டு வர உதவியிருக்கிறார்.

இது தான் நமது பண்பு. இது தான் மனிதம் என்பது. அந்த மலாய் நண்பர் நீடுழி வாழ இறைவனைப் பிரார்த்திப்போம்!

Saturday 16 January 2021

மீண்டும் ஒத்திவைப்பு!

 பள்ளிகள் திறப்பது மீண்டும் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது!

அது மாணவர்களின் நலனுக்காகத்தான் என்று நமக்குப் புரியாமலில்லை. ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

நேற்று மட்டும் (16.1.2021) 4029 பேர் தொற்று நோயினால் பாதிப்பு  அடைந்திருக்கிறார்கள்.  இதுவரை ஏற்பட்ட பாதிப்புகளில் இதுவே அதிகம். 

குறைவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றனவா என்கிற சந்தேகம் இப்போது நமக்கு எழத்தான் செய்கிறது. 

அரசாங்கம் கொரோனா தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர இயலுமா என்பதும்  உண்மையாகத் தெரியவில்லை!

இப்போது தான் ஒன்று நமக்குப் புரிகிறது.  அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும்  ஓர் அரசாங்கம்  என்பது செயல்பட முடியாத ஓர் அரசாங்கம்  என்பதில் சந்தேகமில்லை.

ஆமாம்! அவர்களால் செயல்பட முடியவில்லை. எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்கிற பயம் அவர்களைச் செயல்பட முடியாதபடி செயலிழக்க வைக்கிறது!

பிரதமர் முகைதீனும் பதவியை மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்க தயாராக இல்லை! முடிந்த வரையில் அடுத்த பொதுத் தேர்தல் வரை அவர் மல்லுக்கட்டுவார் என்பது தெரிகிறது!

இப்போது பிள்ளைகள் பள்ளிக்கூடம் போகவில்லை என்றால்  அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்று சொல்லத்தான் வேண்டுமா? அவர்கள் கையில் கைப்பேசியை கொடுப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை!

அது தவறு என்று தெரிந்தும் பெற்றோர்கள் அதைத்தான் செய்ய வேண்டியுள்ளது! அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணிக்கவும் முடியவில்லை. ஒரு சில பெற்றோர்கள் அதனையும் தெரிந்து வைத்திருப்பவர்களாக இருக்கிறார்கள். அவர்களை வாழ்த்துகிறோம்!

இனி பெற்றோர்கள் பிள்ளைகளுக்குக் கைப்பேசிகளைக் கொடுக்கும் முன்னரே அவர்கள் அதன் அத்தனை செல்பாடுகளையும் தெரிந்து வைத்திருப்பது அவசியம் என்றே கருத வேண்டியிருக்கிறது.

பெற்றோர்களை விட பிள்ளைகள் இன்னும் அதிகமாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள்!  "என்னவிட என் பிள்ளைக்கு அதிகம் தெரியும்!" என்றெல்லாம் சொல்லி  அலட்சியமாக இருந்தால் பிள்ளைகள் தறுதலைகளாக மாறிவிடுவார்கள்!

எப்போது தான் இந்த "ஒத்திவைப்பு" நாடகம் ஒரு நிறுத்தத்திற்கு வரும்  என்று சொல்ல முடியவில்லை.

ஒரு பக்கம் தொற்று கூடிக்கொண்டே போகிறது.  இங்கு அரசாங்கத்தின் கையாலாகத்தனம் தெரிகிறது. இன்னொரு பக்கம் பெற்றோர்களின் "பிரஷர்"  ஏறிக் கொண்டே போகிறது.  இப்போதைக்கு இது எங்கே போய் முடியும் என்று கணிக்க முடியவில்லை!

ஒத்தி வைக்கலாம்! பொத்தி வைக்க முடியாது!

Friday 15 January 2021

இலவசங்கள் தெறிக்கப்படுகின்றன!

 தமிழ் நாட்டில் வருகின்ற பொதுத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பது மக்கள் கைகளில் தான் இருக்கிறது. 

இப்போது உள்ள கணிப்புப்படி யார் இலஞ்சம் அதிகமாகக் கொடுக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள் என்று சொல்லப்படுகின்றது. அந்த வாய்ப்பு தி.மு.க. வுக்கே அதிகம் என்பது தான் இப்போதைய அரசியல் நிலவரம்!

இந்த நேரத்தில் நடிகர் கமல்ஹாசன் புதிதாக தொடங்கியிருக்கும் "மக்கள் நீதி மைய்யம்"  கட்சியும் அனைத்துச்  சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறது!  அந்த துணிச்சலுக்காக அவரைப் பாராட்டுவோம்.

அவர் பதவிக்கு வந்தால் "நாங்கள் இலவச கணினி" ஒவ்வொரு  வீட்டுக்கும் கொடுப்போம் என்கிற அறிவிப்பைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

ஏழைக் குழந்தைகள்  பலர் கல்வி கற்கும்  இந்த நேரத்தில் கணினி தேவை தான் என்பதில் கருத்து வேறு பாடில்லை.

ஆனால் அருகில் உள்ள கேரளா மாநிலத்தில் இது  போன்ற பிரச்சாரங்கள் எடுபடுமா என்று பார்ப்போம். அது எடுபடாது என்பது நமக்குத் தெரியும்.  

தமிழர்கள்  இலவசங்களுக்குக் கை ஏந்துபவர்களா திராவிடக் கட்சிகள் உருவாக்கி வைத்திருக்கின்றன! இப்போது கமல்ஹாசனும் அதனையே செய்கிறார்.

மக்களுக்குத் தேவை இலவசங்கள் அல்ல என்று அவருக்கே தெரியும். பிள்ளைகளுக்கு நல்ல கல்வி வேண்டும். இப்போதைக்கு சமமான கல்வி இல்லை.  அவர்களுக்கு ஏற்ற வேலை வேண்டும். இது தான் முக்கியம்.

இன்றைய விவசாயம் அரசாங்க உதவியோடு சரியான பாதையில் கொண்டு சென்றால் அதன் பின்னர் யாரும் விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்கிற அவசியம்  இல்லை. அந்த விவசாயியால் தனது குடும்பத்தைக்  கௌரவமாக பார்த்துக் கொள்ள முடியும்.  அவர்களின் பிள்ளைகளின் கல்விப் பிரச்சனையை அவர்களே தீர்த்துக் கொள்ளுவார்கள்.

இன்றைய தமிழ் நாட்டின் பிரச்சனையே விவசாயிகளை அரசியல்வாதிகள் அலட்சியம் செய்வது தான். விவசாயி செழிப்பாக வாழ்ந்தால் தமிழ் நாடு செழிப்பாக வாழும்.

ஆனால் நடப்பதெல்லாம் என்ன? அனைத்துமே விவசாயிக்கு எதிரான போக்கு.  

கமல்ஹாசனுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற எண்ணம் இருக்கலாம்.  ஆனால் அடிப்படை பிரச்சனையை அவர் புரிந்து கொண்டு பிரச்சனைகளை அணுக வேண்டும்.

இலவசம் நல்லதல்ல. அனைவரும் தங்கள் சொந்த காலில் நிற்க வேண்டும்.  அரசாங்கம் கொடுக்கும் இலவசங்களை நம்பி இருந்தால் அது ஒரு பிச்சைக்கார சமூகம்.  கொடுக்கிறேன் என்று சொல்லுபவனும் பிச்சைக்காரன் தான்!

திராவிடர் யார்?

 பொதுவாக நமது நாட்டில் திராவிடர் என்கிற சொல் எந்த அளவு பயன்படுத்தப்படுகிறது?

பெரும்பாலும் இல்லை என்று சொல்லலாம். அந்த சொல் இங்கு தேவைப்படவில்லை என்றும் சொல்லலாம். ஆனாலும் திராவிடம் என்கிற பெயரில் கட்சிகள், கழகங்கள் இருக்கின்றன. 

ஆனாலும் இந்த பெயரில் உள்ள கட்சிகளையோ, கழகங்களையோ நாம் ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை. 

இவைகள் சீர்திருத்த கட்சிகள் என்பது உண்மை தான்.  தமிழ் நாட்டில் பெரியார் ஈ.வே.ரா. கூட  தமிழர்களுக்குத் தான் சீர்திருத்ததை எழுதியும், பேசியும் வந்தவர். திராவிடர்களுக்கு அல்ல!  திராவிடர் என்று யாரும் இல்லை! அவரின் விடுதலை பத்திரிக்கைக் கூட தமிழில் தானே வெளி வருகிறது!

திராவிடர் என்கின்ற சொல் கூட தென் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களையும்  குறிக்கும். குறிப்பிட்ட எந்த ஒரு மாநில மக்களையும் அது  குறிக்கவில்லை. அவ்வளவு தான்!

தமிழ் நாட்டில் மட்டும் அந்த சொல் வலுக்கட்டாயமாக திணித்து  நடைமுறைக்குக்  கொண்டு வரப்பட்டது!

இருந்தாலும் அது பற்றியெல்லாம் இப்போது நாம் கவலைப்பட வேண்டாம்!  எங்கோ ஒரு பிழை நடந்துவிட்டது!

இப்போது நாம் நம்மை திருத்திக் கொள்ள வேண்டும் என்பது தான் நான் சொல்ல வருவது.

திராவிடக்கட்சிகளில் நாம் அங்கத்துவம் பெறக் கூடாது. அதனை வேண்டுமானால் தமிழர் கட்சிகளாக, கழகங்களாக இருந்துவிட்டுப் போகட்டுமே!  தமிழர்களுக்காகத் தானே அவர்கள் பாடுபடுகிறார்கள்? 

இத்தனை ஆண்டுகளாக நாம் எப்படி எப்படியோ ஆட்டு மந்தைகளாக இருந்து விட்டோம். இனி நாம் தமிழர்கள் என்கிற நமது அடையாளத்தை இழந்து விடக் கூடாது.

மற்ற மாநில  மக்கள் யாரும்  தங்களைத் திராவிடர் என்று சொல்லுவதில்லை.  நாமும் அவர்களையே பின் பற்றுவோம். அவர்கள் எப்படி தெலுங்கர்களோ, மலையாளிகளோ, கன்னடர்களோ அதே போல நாம் தமிழர்கள். இதில் ஏதும் சிக்கல் இல்லை!

இனி முடிந்தவரை  நாம் தமிழர்கள் என அடையாளப் படுத்துவோம். நமது மொழி தமிழ் என அடையாளப் படுத்துவோம்.

உலகளவில் நாம் தமிழர்கள்! அந்த பெருமை நமக்கு இருக்கட்டும்!

Thursday 14 January 2021

யார் பிரதமர் வேட்பாளர்?

 பொதுவாக முன்னாள் பிரதமர் டாக்டர் மாகாதிர் தனது அரசியல்  கருத்துகளை  தனக்கேற்றவாறு  மாற்றிக் கொண்டிருப்பவர்!

இன்றைய  நாட்டின் அரசியல்  சூழலுக்கு காரணகர்த்தா என்றால் அது டாக்டர் மகாதிர் தான். இப்போதும்  அது தனது தவறு தான் என்று இதுவரை அவர்  ஏற்றுக் கொள்ளவில்லை! அது தான் அவரின் பேச்சு சாமர்த்தியம்.

எப்போதும்  எதையாவது சொல்லி மக்களைக் குழப்பிக் கொண்டிருப்பவர்! "வயாதானவர் என்றால் அப்படித்தான் இருப்பார்கள்!" என்று சொல்லி  அவரைச்  சிறுமைப் படுத்த விரும்பவில்லை.  ஆனால் அவரின் வயதுகேற்ப அவர் நடந்து கொள்ளவில்லை என்பது தான் நமது ஆதங்கம்!

நாட்டில் நல்லதொரு சூழல் ஏற்பட்ட போது தனது பழிவாங்கும் குணத்தால்  நாட்டையே  தர்மசங்கடமான நிலைக்குக் கொண்டு வந்து விட்டார்!  யாரை சென்ற தேர்தலில் ஊழல்வாதிகள் என்று எதிர்த்தாரோ  அவர்கள் எல்லாம் இப்போது, இன்றைய ஆட்சியில்,  ஜம்மென்று  பதவியில் அமர்ந்து கொண்டு விட்டார்கள்! அன்றும் அவர்கள் கொள்ளைக்காரர்கள் தான் இன்றும் அவர்கள் கொள்ளைக்காரர்கள் தான்! சுடுகாடுமட்டும் அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள்!

இப்போது புதிதாக ஒரு கதையைப் பின்னிக் கொண்டிருக்கிறார். 

பிரதமர் வேட்பாளராக வாரிசான் கட்சியின் தலைவர் ஷாஃபி அப்தாலே  சிறந்த பிரதமர்  வேட்பாளாராக இருக்க முடியும் என்பதாகக்கூறி வருகிறார்! அவரால் தான் மலாய் வாக்காளர்களைக் கவர முடியும் என்பதாகவும கூறி வருகிறார்!

அவர் கூறுவது போல்  ஷாஃபி சிறந்த பிரதமர் வேட்பாளராக இருக்கலாம்.  ஆனால் மேற்கு மலேசியாவில் உள்ளவர்கள், குறிப்பாக மலாய்க்காரர்கள், எந்த அளவுக்கு அவருக்கு ஆதரவு கொடுப்பார்கள்? என்கிற கேள்வியும் எழுகிறது.  மேற்கு மலேசியாவில் இல்லாத ஒருவரை பிரதமராக ஏற்கும் அளவுக்கு இங்குள்ளவர்கள் அப்படி ஒன்றும் அறிவுசார்ந்த பின்னணி உடையவர்கள் அல்ல!  தன்னை வைத்து மலாய் மக்களை அவர் எடை போடுகிறார்! 

டாக்டர் மகாதிர் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்!  மக்களைக் குழப்பலாம்!

உள்ளூரில் அன்வார் இப்ராகிமே இன்னும் சிறந்த பிரதமர் வேட்பாளராக மக்களின் மனதில் நிற்கிறார். அதை அவர் மறுப்பதன் மூலம் உண்மையைப் பொய்யாக்கும் வேலையைச் செய்கிறார். செய்யட்டும்!

இனி மேலும் அவர் சொல்லுவதை மக்கள் ஏற்றுக் கொள்ளுவார்கள் என்று இன்னும் அவர் நம்புகிறார்!  

எப்படியானாலும் அன்வாரே அடுத்த பிரதமருக்கான தகுதியைப் பெற்றிருக்கிறார் என்பதே நமது முடிவு!

Wednesday 13 January 2021

தைப்பொங்கல் வாழ்த்துகள்!

 தமிழ் மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

இதை வெறும் வாழ்த்து செய்தியாக மட்டும் எடுத்துக் கொள்ளாதீர்கள். வேறு ஒரு செய்தியையும் கொடுத்திருக்கிறேன். அதனை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

இன்று காலை (14-1-21) தமிழக முதலமைச்சரின் பொங்கல் நிகழ்வு ஒன்று நடைபெற்றது. அப்போது அந்நிகழ்வில் இசை ஒன்றும் இசைக்கப்பட்டது. இசைக்கப்பட்ட அந்தப்  பாடல் வரிகள் "அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா"! அந்தப் பாடல் என்னைக் கொஞ்சம்  தடுமாற வைத்துவிட்டது.

நடப்பதோ தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டு நிகழ்ச்சி.  ஆனால் பாடப்பட்டப்  பாடலோ திராவிடரின் பெருமை!  தமிழர்களுக்கு இதனால் என்ன பெருமை?

அதனால் நமது தமிழ் மக்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் இது தான். இனி திராவிடர், திராவிடம் போன்ற வார்த்தைகளை நமது அகராதியிலிருந்து எடுத்து விடுங்கள். 

இதனால் யாரும் மனம் புண்பட்டுப் போவதில்லை.  

தமழர் என்றால் தமிழ் மொழி, கலாச்சாரம், பண்பாடு என்பது தனி.  தெலுங்கர் என்றால் தெலுங்கு மொழி, கலாச்சாரம், பண்பாடு என்பது தனி. மற்றும் அதனை ஒட்டிய பெருமைகள் அவர்களுக்கே உரியது. அதே போல மலையாளிகள்  என்றால்அவர்களின் மொழி,  கலாச்சாரம், பண்பாடு, அவர்களுடைய பெருமைகள் அனைத்தும் அவர்களுடையதே.  திராவிடம் என்றால் தமிழ் நாடு, ஆந்திரா, கேரளம், கர்நாடகா. இந்த நான்கு மாநிலங்கள் சேர்ந்தது தான் திராவிடம் அல்லது திராவிடர் என்று சொல்லப்படுகிறது.  இந்த திராவிடம் என்கிற சொல்லே தமிழ் நாட்டில் மட்டுமே இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது! மற்ற மாநிலங்களில்  இப்படி ஒரு வார்த்தை இருப்பதாகக் கூட அவர்களுக்குத் தெரியாது!

இப்போது நான் என்ன சொல்ல வருகிறேன்?  நாம் தமிழர் என்போம், அவர்கள் தெலுங்கர், மலையாளி, கன்னடர் என்று  வழக்கம் போல சொல்லட்டும். இதில் திராவிடர், திராவிடம் என்று வலிந்து நாம் திணிக்க வேண்டாம்.  நம்மைத் தமிழர் என்போம். அவர்களைக் குறிக்கும் போது தெலுங்கர், மலையாளி, கன்னடர் என்போம். 

நாம் யாரையும் குறை சொல்லவில்லை, நமக்குச் சில பெருமைகள் உண்டு  அதே போல  அவர்களுக்கும் பல பெருமைகள் உண்டு. 

இனி திராவிடர் என்னும் சொல்லே வேண்டாம்!  அவர்களுக்கென்று பெருமைகள் உண்டு. அதனை வளர்ப்போம்!

ஆனால் நமது எழுத்தில் அந்த சொல்லே வேண்டாம்! புறக்கணிப்போம்!

இந்து கோவில்கள் இடிக்கப்பட்டன!

 பொதுவாக உலகளவில் இந்து கோவில்களை இடிக்கின்ற அல்லது உடைக்கின்ற நாடுகள் என்றால் அது பாக்கிஸ்தானும் நம் நாடான மலேசியா மட்டுமே!

இந்த இரு  நாடுகளில் தான் கோவில்கள் உடைபடுகின்ற செய்திகளைப்  பத்திரிக்கைகளில் நாம் பார்க்க முடிகிறது!


(பழமையான இந்து சாமியாரின் சமாதி பாக்கிஸ்தானில்                                அழிக்கப்பட்டது)    நன்றி:  BBC

பாக்கிஸ்தானில் ஒரு நூற்றாண்டு கால இந்து சாமியாரின் சமாதி, கடந்த டிசம்பர் மாதத்தில், தீவிரவாதிகளால் அழிக்கப்பட்டது. இது இந்த சமாதி மீதான இரண்டாவது தாக்குதல்.

இதற்கு முன்னரும் இது போன்ற இந்து கோவில்கள் மீதான தாக்குதல்கள்  நடைபெற்றிருக்கிறன.  பாக்கிஸ்தானில் இந்து சமயத்தினர் பாக்கிஸ்தான் மொத்த மக்கள் தொகையில் சுமார் இரண்டு  விழுக்காட்டுக்கும் குறைவானவர்கள்.சிறுபான்மை இந்துக்கள்  என்பதால் அவர்களுக்கான பாதுகாப்பு குறைவு.

 ஆனாலும் பாக்கிஸ்தானின்  முதன்மை நீதிபதியான குல்சார் அகமது "இந்த தாக்குதல் சர்வதேச அளவில் பாக்கிஸ்தானுக்கு ஏற்பட்ட அவமானம்" என்பதாகக்  கூறியிருக்கிறார். உடைக்கப்பட்ட கோவில்களை மீண்டும் கட்டிக் கொடுக்கப்பட வேண்டும் என்பதையும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

இங்கு நமது நாட்டைப் பொறுத்தவரையில்  மொத்த மக்கள் தொகையில் ஏழு விழுக்காடு இந்துக்கள் இருக்கின்றனர். இங்கு நமக்குள்ள பிரச்சனை என்பதெல்லாம்  நமக்காக பேசுபவர்களை விட உடைபடும் கோவில்களுக்காக அரசாங்கத்தை  ஆதரித்துப் பேசும் நம் இன அரசியல்வாதிகள்  அதிகம் என்பதால் நமது பிரச்சனைகள் பலவீனம் அடைந்து விடுகின்றன!

இரவோடு இரவாக கோவில்களை உடைப்பதும், காவல்துறையினரையும், இராணுவத்தினரையும்  வைத்து கொண்டு நம் கண் முன்னே கோவில்களை இடிப்பதும்  - இதெல்லாம் நமக்குப் பழகி, புளித்துப் போன விஷயமாக விட்டது!

ஆகக் கடைசியாக, கெடா மாநிலத்தில், அரசாங்க அனுமதியோடு இரண்டு கோவில்கள் உடைக்கப்பட்டன.  நமது கேள்விகளுக்கு அவர்கள் பக்கமிருந்து திமிரான பேச்சுக்கள் தான் வந்ததே தவிர அதைப்பற்றி அவர்கள் கொஞ்சமேனும் வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை!

ஒரு நாட்டில்  தீவிரவாதிகள் என்றால் இன்னொரு  நாட்டில் அரசாங்கமே  தீவிரவாதியாய் செயல்படுகின்றதைப் பார்க்கிறோம்!

அதனால் என்ன நாம் வாய் மூடி மௌனியாய் இருக்க முடியாது! நம் எதிர்ப்பை காட்டித்தான் ஆக வேண்டும்! 

ஆக, உலகளவில் பாக்கிஸ்தானும், மலேசியாவும் கோவில்களை உடைப்பதில் முன்னணி நாடாகத் திகழ்கின்றன!

Tuesday 12 January 2021

சம்பளம் குறைக்கப்பட வேண்டும்!

 அவசரகாலம் அறிவிக்கப்பட்டு விட்டது!

மேலும் வேலையில்லாப் பிரச்சனை. குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு அனுப்புவதில் இயலாமை என்கிற தொடர்கதை தொடரும்.

ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்  இவர்களின் நிலை என்ன. சாதாரண  நாட்களிலேயே இவர்கள் தங்கள் தொகுதிகளுக்குப் போவதில்லை! இந்த கொரோனா காலக்கட்டத்திலா இவர்கள் போவார்கள்?அந்த அளவுக்கு அவர்கள் கடமையுணர்ச்சி உள்ளவர்கள் என்றால் அதனை  நம்புவதற்கு ஆளில்லை!

இந்த நிலையில் இவர்களுக்கு ஏன் ஒவ்வொரு மாதமும் முழு சம்பளம் கொடுக்கப்பட வேண்டும்?  நடமாட்டுக் கட்டுப்பாடு உள்ள நிலையில் இவர்கள் மக்கள் தொண்டு செய்வார்கள் என்று நம்ப இடமில்லை.

பொது மக்கள் கஷ்டப்படும் போது இவர்களுக்கு மட்டும் ஏன் முழு சம்பளம் என்று தாராளமாகக் கேட்கலாம்.

அவர்களும் மக்களின் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள்  மாட மாளிகைகளின் இருந்து கொண்டு பதவிக்காக  மளிகைக்கடை வியாபாரிகள் போல் கூவி கூவிக் கொண்டு இருப்பார்கள்! அவர்கள் குடும்பத்தினரும் ஒவ்வொரு பேரங்காடிகளுக்குச் சென்று பேரன் பேர்த்திகளோடு சுற்றிக் கொண்டு இருப்பார்கள்! இவர்கள் எல்லாம்  MCO வுக்கு எதிரிகள் எனலாம்.

இவர்களுக்குச் சம்பளமே கொடுக்கப்படவில்லை என்றால் இவர்கள் ஏங்கிப் போவார்கள் என்பதால் இவர்களுக்கு ஒரு  பத்து விழுக்காடு சம்பளம் கொடுத்தால் போதும் என்பதே எனது கணிப்பு. பத்து விழுக்காடு என்பதே, பெரும்பாலானோருக்கு, நான்கு இலக்கச் சம்பளம்! அது தாம் அவர்களையும் மக்களையும் ஒன்று சேர்க்கும், போதுமே!

இங்கு நான் குறிப்பிடுவது நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்,  அமைச்சர்கள், அரசு சார்பு நிறுவனங்களில் 'பணி' புரியும்  அரசியல்வாதிகள் - இவர்கள் அனைவருக்கும் இந்த சம்பளப் பிடித்தம் தேவையான ஒன்று.

இப்போது உள்ள நடமாடும் கட்டுப்பாட்டினால் ஏற்கனவே கோடிக்கணக்கில்  நாட்டிற்கு நஷ்டம்.  இப்போதும் ஏகப்பட்ட நஷ்டம். இந்த நேரத்தில் மக்கள்  பலவற்றை தியாகம் செய்யும் நிலையில் இருக்கிறார்கள். அரசியல்வாதிகள் மட்டும் ஒன்றையும் தியாகம்  செய்யவில்லை. அவர்கள் பங்கும் நாட்டிற்குத் தேவை தானே!

அரசியல்வாதிகளும், மக்களைப் போல, தியாகங்கள் செய்ய வேண்டும் என்பதே நமது குறிக்கோள்!

அரசாங்கம் செய்ய வேண்டும்!

இது இராணுவ புரட்சி அல்ல!

 நாட்டில் அவசரகாலம் அறிவிக்கப்பட்டிருக்கிறது என்பது புதிய செய்தி அல்ல!

ஆனால் அதில் ஒரு புதிய செய்தி உள்ளதாகவே நமக்குத் தோன்றுகிறது. அவசரகாலத்தை அறிவித்த பிரதமர் இது இராணுவ புரட்சி அல்ல  என்று கொஞ்சம் கூடுதல்  செய்தியாக அவர் கொடுத்திருப்பது ஏதோ ஒன்றைச் சுட்டிக் காட்டுகிறது என்று எடுத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

பிரதமர் முகைதீனின் ஆட்சி,  சொல்லப்போனால் உண்மையில் கவிழ்க்கப்பட்டு விட்டது, என்று தான் சொல்ல வேண்டும். அவர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையை இழந்து விட்டார்.  இது வரை நடந்தவற்றைப் பார்ப்பவர்களுக்கு இது புரியும்.

ஆனால் என்ன நடந்தது? கோவிட்-19 தொற்றினால் நாட்டில் வேலை இழக்காத ஒரே மனிதர் என்றால் அது நமது பிரதமர் தான்! வேலை இழந்தும் வேலையில் இன்னும் இருக்கிறார்!  பிரதமருக்குள்ள அத்தனை சலுகைகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்!அந்த தொற்று தான் ஆரம்ப காலத்திலிருந்து அவருக்குப் பக்கபலமாக இருந்து வருகிறது; இன்னும் இருக்கும்! எப்படியும் அடுத்த தேர்தல் வரை கோவிட்-19 நீடிக்கும் என்றே  நாம் ஒரு முடிவுக்கு வரலாம்! கோவிட்-19 எப்படி நீடிக்கும் என்பதற்கு அரசியல்வாதிகளுக்கு நாம் பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை!

பிரதமர் இராணுவப் புரட்சி என்கிற எந்த சம்பந்தமும் இல்லாமல் ஒரு வார்த்தையைப் பயன்படுத்த வேண்டிய அவசியமென்ன?  "என்ன நடந்தாலும் அன்வார் இப்ராகிம் பிரதமராக வர முடியாது,  நான் தான் பிரதமர்!"  என்பதைத் தான் இப்படி பூடகமாகச் சொல்லுகிறார்! இல்லாவிட்டால் இராணுவப் புரட்சி என்கிற சொல்லாடல் தேவையற்ற ஒன்று!

கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற கதை தான். இவர்கள் கணக்குப்படி  ஆறு மாதங்கள் என்று சொன்னாலும் நமது கணக்குப்படி அது இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு இழுத்துக் கொண்டு போகும் அன நம்பலாம்!

எப்படியோ நல்லது நடந்தால் நாம் பாராட்டலாம். அப்படி நடந்தால் இந்த  ஆட்சி நீடிப்பதற்கு நமக்கு ஒன்றும் ஆட்சேபனையில்லை.

ஆனால் கொள்ளயடிப்பவர்கள் திருந்துவார்களா என்று பார்த்தால் அப்படி ஒர் அதிசயம் நடக்க  வாய்ப்பில்லை!

என்னவோ நல்லது நடக்கும் என எதிர்பார்ப்போம்!

Monday 11 January 2021

அவசரகாலம் பிரகடனம்!

 அவசரகாலம் என்றதும் நமது நாட்டில்  ஏதோ இராணுவ ஆட்சி வந்துவிட்டது என்கிற சந்தேகம் எதுவும் தேவையில்லை!

இராணுவ ஆட்சி என்பது இந்த நாட்டிற்கு ஏற்றதல்ல. ஆட்சியாளர்களுக்கு மட்டும் அல்ல மக்களுக்கும் அது தெரியும்!

இந்த அவசரகாலம் என்பது வேறு. இரண்டு காரணங்களுக்கான அவசரகாலம் இது!  நாடாளுமன்றத்தைக்  கூட்ட முடியாது, பொதுத் தேர்தலை நடத்த முடியாது! இந்த இரண்டு விஷயங்கள் தானே  இப்போது  அதிகமாக அரசியல்வாதிகளால் பாடப்படுகின்ற பாடுபொருட்கள்! அதற்கான வாயடைத்தல் என்று பொருள் கொள்ளலாம்.

பொதுவாக இப்போது நாம் ஒன்றைப் புரிந்து கொள்ளலாம். அடுத்த தேர்தல் என்பது எப்போது வரும்?  கிட்டத்தட்ட இன்னும் மூன்று ஆண்டுகள் - அதாவது செப்டம்பர் மாதம் 2023 - ம் ஆண்டு பொதுத் தேர்தல் வர வேண்டும்.

இப்போது நமக்குள்ள கவலை எல்லாம் கோவிட்-19 தொற்று நோயும் அது வரை  நீடிக்கப்படுமா என்பது தான். இப்போதைக்கு  ஆறு மாதங்களே  என்று சொல்லியிருந்தாலும் அதை நீட்டிப்பதற்கு எல்லா முயற்சிகளும் எடுப்பார்கள் எனத்  தாராளமாக நம்பலாம்!  

நமது நாட்டைப் பொறுத்தவரை கோவிட்-19 அரசியல்வாதிகளின் செல்லப்பிள்ளையாக மாறிவிட்டது! சாபா மாநிலத் தேர்தல் அவர்களுக்குப் பல வழிகளைக் காட்டிவிட்டது! இப்போது அதனையே இருகப் பிடித்துக் கொண்டார்கள். 

தொற்று நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்பட அவர்கள் முயற்சி செய்யவில்லை. அது இருப்பது தான் தங்களுக்குச் சாதகம் என்கிற நிலைமைக்கு அவர்கள் வந்து விட்டார்கள்!

ஒரு கருத்தை அரசாங்கம் வலியுறுத்தியிருக்கிறது. மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துபவர்களுக்குத் தண்டனைகள் உண்டு.  ஆனால் இது எப்படி சாத்தியம் என்பது நமக்குப் புரியவில்லை. இன்று குழப்பத்தை ஏற்படுத்துபவர்கள் யார்? தேர்தல் வேண்டும்  என்று கூப்பாடு போடுகின்ற அம்னோ அரசியல்வாதிகள் தான்! பிரதமர் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா என்கிற கேளவி எழுகிறது!

எது எப்படியோ இப்போதைக்கு கொரோனா தொற்று என்பது இன்னும் நீண்ட நாட்கள் நீடிக்கும் என நம்பலாம்! ஆனால் மக்களின் அன்றாடப் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்பது தான் நமது வேண்டுகோள்!

இது அவசரகாலமாக இருக்கட்டும்!  நாட்டை அலங்கோலப்படுத்த வேண்டாம்!

இது ஒரு வெற்றிக் கதை!

                                     

மேலே நாம் பார்ப்பது ஒரு சிறிய பறவை இனம். நமக்குத் தெரிந்த சிட்டுக்குருவியை விட கொஞ்சம் பெரிதாக இருக்கும்.

அது தான் Barn Swallow என்று அழைக்கப்படும் பறைவை இனம்.

எல்லாமே குருவிகள் தானே என்று அலட்சியப் படுத்த வேண்டாம். அது செய்யும் சாதனைகளைப் பார்த்தால் நிச்சயமாக சரணடைந்து விடுவோம்!

இது அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்த ஒரு பறவை இனம். ஒவ்வொரு ஆண்டும் தனது இனப் பெருக்கதிற்காக இன்னொரு நாட்டிற்கு  - அதாவது கலிஃபோர்னியா நாட்டிற்குப் பறந்து செல்லுகிறது.

இப்படி அது பறந்து செல்லுகின்ற தூரம்  அதாவது நில மார்க்கமாகப் போகும் போது சுமார் 10,000 மைல்களைக் அது கடந்து செல்ல வேண்டும். அதனைத் தவிர்க்க அது கடல் மார்க்கத்தை தேர்ந்து எடுக்கிறது. அதாவது வெறுங்கடல் மட்டுமே - சுமார் 8300 மைல்கள் அது பயணம் செய்கிறது. கடல் மார்க்கம் என்று சொல்லும் போது எந்த நிலப்பரப்பும் அங்கு இல்லை. வெறுங்கடல் - வெறும் தண்ணீர் மட்டுமே!

அப்படி என்றால் ஓய்வு எடுப்பது எப்படி?  பசி எடுத்தால் எப்படி? என்று யாரும் அதற்குப் புத்தகம் போட்டு விளக்கவில்லை!  வாழ்த்துகள்! அந்தப் பறவை பயணம் செய்வதற்கு முன்பாக தனது வாயில் ஒரு சிறு குச்சியை வைத்துக் கொள்கிறது. பசி எடுக்கும் போது அந்தக் குச்சியை கடலில் போட்டு விடுகிறது. கனமில்லாத குச்சி என்பதால் அது மிதக்க ஆரம்பிக்கும் போது அதன் மேல் ஏறிக் கொண்டு பசிக்கு மீன்களைத் தேடுவதும் அப்படியே ஓய்வு எடுத்துக் கொள்வதும் அது இயல்பாகச்   செய்கிறது! மீண்டும் பயணத்தை ஆரம்பிக்கும் போது அந்தக்  குச்சியை வாயில் கவ்விக் கொள்கிறது! மீண்டும் பசிக்கத் தானே செய்யும்! மீண்டும் ஓய்வு எடுக்கத்தானே வேண்டும்!

இப்படித்தான் அந்தப் பறவை 8300 மைல்களை எந்தவிதப் பிரச்சனையுமில்லாமல் கடந்து செல்லுகிறது. கலிஃபோர்னியாவில். இரண்டு மாதங்கள் தங்கி  தனது வேலை முடிந்த பின்னர் தனது பிள்ளைக்குட்டிகளுடன் மீண்டும் 8300 மைல்கள் கடந்து தனது ஊரான அர்ஜெண்டினா வந்து சேருகிறது! 

ஆக மொத்தம் 16,600 மைல்கள் கடலிலேயே  பறந்து  தனது கடமைகளை எந்த முணுமுணுப்புமின்றி, எந்த காழ்ப்புணர்ச்சியுமின்றி  வெற்றிகரமாக செய்து முடித்து நாடு திரும்புகிறது!

ஒரு மனிதனால் இப்படியெல்லாம் செய்ய முடியுமா என்பது கேள்விக்குறி தான். இறைவன் அதற்குக் கொடுத்த வல்லமையை அது முழுமையாகப் பயன்படுத்துகிறது. மனிதன் எதற்கெடுத்தாலும் தடுமாற்றம், தயக்கம் - அடுக்கிக் கொண்டே போகலாம்!

நிச்சயமாக இது குருவி இனத்தின் வெற்றி கதை தான்!

Sunday 10 January 2021

தளபதியாரே! வேண்டாம் விபரீதம்!

 தளபதி விஜய் அவர்களே! வேண்டாம் இந்த விபரீதம்!  

திரைப்படங்களில் தளபதி! ஆனால் சொந்த வாழ்க்கையில் சுயநலப் பேர்வழி! வேண்டாம் இந்த வேடம்! 

 திரை அரங்குகள நூறு விழுக்காடு திறக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சரிடம்  அரங்குகளின் உரிமையாளர்களுக்காகவும், உங்களின் ஊதியத்திற்காகவும் போய் பேசி  அனுமதி வாங்கினீர்கள்.

இதில் ஜெயித்தவர் யார்? முதலமைச்சர் தான்! அவர் தன் மேல் குற்றமில்லை என்று மத்திய அரசின்மீது பழி போட்டுவிடுவார். உங்களது இரசிகர்களிடமும் நல்ல பெயர் வாங்கி விடுவார். மத்திய அரசாங்கம் சரி என்றாலும் உள்ளூர் பா.ஜ.க. வினர் சும்மா இருப்பார்களா! உங்கள் பெயரைச் சொன்னாலே அவர்கள் கடுப்பில் இருக்கிறார்கள்!

கோவிட் -19 தொடர்ந்து தனது தாக்குதலை விடாமல் மேற்   கொண்டிருக்கிறது. ஒரு முடிவும் இல்லாத நிலையில் உலக நாடுகள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன.  இந்தியாவிலும்  கூட அப்படி ஒன்று குறைந்ததாகத் தெரியவில்லை.

இந்த நேரத்தில் உங்கள் சுயநலத்திற்காக  பேச்சு வார்த்தை நடத்தி உங்கள் படங்களை ஓட வைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்! உங்கள் ரசிகன் உங்கள் படத்தைப் பார்க்க வேண்டும். அவன் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை!  அவன் சாகலாம்! அவன் பிள்ளைக்குட்டிகள் சாகலாம்!  ஆனால் நீங்கள் பாதுகாப்பாக உங்கள் வீட்டிலேயே தங்கி பணத்தை எண்ணிக் கொண்டிருப்பீர்கள்!  அடேங்கப்பா! என்ன சுயநலம்!

ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள், பணியாளர்கள் - தங்கள் உயிரைப் பணயம் வைத்து இந்த தொற்று நோய்க்காக அல்லும் பகலும் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குப் பிள்ளைக் குட்டிகள் இல்லையா? அவர்கள் உங்களைப் போல கோடிக்கணக்கிலா பணம் சம்பாதிக்கிறார்கள்? 

தளபதியாரே! நீங்கள் இப்படியும் செய்யலாம். அரசாங்கம் அரங்கம் ஒன்றுக்கு பாதி பேரை அனுமதித்திருக்கிறது. நீங்கள் உங்கள் சம்பளத்தைப் பாதியாக குறைத்துக் கொள்ளுங்கள். தயாரிப்பாளர் மகிழ்ச்சி அடைவார்! கஷ்ட காலத்தில் இதைக் கூட செய்யக் கூடாதா?

இவ்வளவு தானே! உங்கள் பிழைப்புக்காக ரசிகன் ஏன் சாக வேண்டும்? கொஞ்சம் சிந்தியுங்கள்! உங்களின் பதாகைகளுக்குப் பாலாபிஷேகம் செய்கிறானே அந்த ரசிகனுக்கு நீங்கள் செய்யும் கைம்மாறு இது தானா!

நாங்கள் சொல்ல வருவதெல்லாம்: வேண்டாம்! இந்த விபரீதம்! இத்தோடு இந்தப் பிரச்சனையை விட்டு விடுங்கள்! மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய வேண்டாம்!  அது உங்களுக்கு நல்லதல்ல!

Saturday 9 January 2021

சிந்தித்து செயல்படுங்கள்

 தைப்பூசம் என்பது ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறும் நாடுகளில் நமது  மலேசிய நாடும் ஒன்று.

இங்குள்ள அனைத்து  மாநிலங்களிலும் மிகச் சிறப்பாக தைப்பூசம் கொண்டாடப்படுவதும் நாம் அறிந்தது தான்.

ஆனால் என்னவோ தைப்பூசம் என்றால் அது பத்துமலையைத் தான் நம் கண் முன்னே கொண்டு வருகிறது. அது பெரும்பாலும் இலட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோரும் கூடும் இடமாகவும் அறியப்படுகிறது. அதோடு சுற்றுப்பயணிகள் வேறு.

இப்போது பத்துமலை மட்டும் அல்ல மற்ற மாநிலங்களிலும்  தைப்பூச கொண்டாட்டங்கள் நடக்குமா என்பதும் கேள்விக்குறியே.  காரணம் எல்லாக் கோயில்களிலும் பக்தர்கள் நிரம்பி வழிவர். 

பினாங்கு மாநிலத்தில் தைப்பூச கொண்டாட்டம் ரத்து செய்யப்படுவதாக மாநில துணை முதல்வர் அறிவித்திருக்கிறார்.  சிலாங்கூர் மாநிலமும் தைப்பூச கொண்டாட்டங்கள் ரத்து செய்யபடும் என்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மற்ற மாநிலங்களும் இவர்களையே பின்பற்றுவார்கள் என்பதும்  பொதுப்படையாக நமக்குத் தெரிகிறது.

ஆனால் பத்துமலை தைப்பூசம் என்பது கொஞ்சம் வித்தியாசமானது. தைப்பூசம் என்றாலே பத்துமலையைத் தவிர வேறு எதுவும்  நமக்குத் தெரிவதில்லை.

இந்த ஆண்டு தடை என்றால் அடுத்த ஆண்டு எப்படி என்று பத்துமலை நிர்வாகம் யோசிப்பதில் நியாயம் உண்டு. 

கொரோனா தொற்று அடுத்த ஆண்டும் தொடருமா, தொடர்ந்தால்  இன்றைய நிலை தான் அப்போதும் வரும். வேறு என்ன தீர்வைக் காண முடியும்?  ஆனால் அந்த அளவுக்குப் பயப்பட ஒன்றுமில்லை.  இனி விரைவில் தொற்றுக்கான தடுப்பூசி ஆரம்பிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது. அது நல்லமுறையில் மக்களுக்குப் பயன் தரும்  என்று நாம் நம்புகிறோம். நம்பிக்கை தான்!  அடுத்த ஆண்டு நிலவரம் எப்படி இருக்கும் என்பது இப்போதே கணிக்க முடியாது.

இப்போதைய நமது அவசரத் தேவை என்பது கொரோனா தொற்று ஒழிக்கப்பட வேண்டும்.  ஒழிக்கப்படவில்லை என்றால் வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் ஆபத்துக்கு உள்ளாகும் என்பதில் ஐயமில்லை.

அதனால் திருவிழாக்கள் எந்த அளவுக்கு முக்கியமோ  அதே அளவுக்கு மக்களின் நலன் முக்கியம். திருவிழாக்கள் ஒவ்வொரு ஆண்டும் வரும்.  ஆனால் மக்களின் நலன் பாதிக்கப்பட்டால் அது மீண்டும் வராது.

நமது வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம் இது. 

Friday 8 January 2021

இது தேசத் துரோகம்!

ஒரு சில விஷயங்களில் நாம் கண்டிப்பாக இருக்க வேண்டியுள்ளது.

என்ன தான் நாம் கொல்லைப்புற அரசாங்கத்தைக் கொண்டிருக்கிறோம் என்றாலும் இன்றைய நிலையில் நாட்டில் எது நடந்தாலும் அரசாங்கம் தான் பொறுப்பை ஏற்க வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை!

இந்தக் காலக்கட்டத்தில் நாம் கோவிட்-19 தொற்று நோயினால் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்குக் காரணம் நமது அரசாங்கம் தான், வேறு யாருமல்ல! 

அரசாங்கம் கவிழ்ந்து விடுமே என்று ஒவ்வொரு நிமிடமும் பயந்து கொண்டு அரசாங்கத்தை நடத்துவது மிக மிகக் கேவலம். இந்தப் பயத்தினால் நாம் எவ்வளவோ இழந்து விட்டோம்.  இனி மேலும் இது தொடரக் கூடாது என்பது தான் நமது நோக்கம்.

15-வது பொதுத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று சொல்லுபவர்களைக் கைது செய்ய வேண்டும்.  அவர்கள் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டுக் கொண்டு வர வேண்டும்.  அவர்கள் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டும்.

நாடு இன்று இருக்கும் நிலையில்,  கொரோனாவினால் பல தொல்லைகளுக்கு மக்கள் ஆளாகி இருக்கும் நிலையில், அரசியல்வாதிகள் யாரேனும் "உடனடியாகத் தேர்தல் நடத்த வேண்டும்!" என்று கூறினால் அவர்களைக் கைது செய்ய வேண்டும். நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.

அரசாங்கத்தின் மீது இவர்களுக்குக் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அது அரசியல்.  இப்போது மக்கள் படுகின்ற அவதிகளும், அல்லல்களும்  கொஞ்சநஞ்சமல்ல.  மக்களின் வாழ்க்கை முறையே மாறிப் போய்விட்டது மட்டும் அல்ல நாறியும்  போய் விட்டது.

இந்த நேரத்தில் அடுத்த தேர்தலைப் பற்றி பேசுபவர்கள் தேசத் துரோகிகள். மக்களின் பிரச்சனைகளை அறியாத மடத்தனமான  அரசியல்வாதிகள்! இவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அது மட்டும் அல்லாமல் அடுத்த தேர்தலில் இவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கொடுக்கக் கூடாது. இது தான் முக்கியம்.

தொற்று நோயினால் உலகமே ஊசாலடிக் கொண்டிருக்கிறது. தடுப்பு மருந்துகள் உண்டா என்பது இன்னும் தெரியவில்லை. உண்டு என்றாலும் அதன் வலிமை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எல்லாமே "அப்படி,இப்படி" என்கிற நிலைமையான் தான் போய்க் கொண்டிருக்கிறது. மக்களுக்குத்  தங்களின் வாழ்க்கையைப் பற்றிய பயம் ஒரு பக்கம். எதுவும் நிரந்தரம் அல்ல என்கிற நிலைமை.

இந்த நேரத்தில் மக்களின் நிலை அறியாமல் "அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்! அடுத்த தேர்தலை நடத்துவோம்!"  என்று எந்த அரசியல்வாதிகள்  பேசினாலும்  அவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும்.

இப்போது தேர்தல் என்பது அவசியம் அல்ல. ஓர் அரசாங்கம் நடந்து கொண்டிருக்கிறது.  அந்த அரசாங்கத்தைச் செயல்பட விடுங்கள் என்பது தான் நாம் அரசியல்வாதிகளுக்கு விடுக்கும்  கோரிக்கை.

தேர்தல் இப்போது முக்கியம் அல்ல. தொற்று நோய் ஒழிக்கப்பட வேண்டும். மக்கள் வாழ வழி காட்ட வேண்டும். தங்களது குடும்பங்களைக் காப்பாற்ற வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். வியாபாரிகள் மீண்டும் தங்களது வியாபாரங்களைத் தொடங்க வேண்டும். நாட்டில் உள்ள பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும். இது தான் முக்கியமே தவிர தேர்தல் அல்ல.

தெர்தலைப் பற்றி பேசுபவர்களை  இனி தேசத் துரோகிகளாக அறிவிக்கப்பட வேண்டும்! இதுவே அரசாங்கத்திற்கு நாம் வைக்கும் வேண்டுகோள்.

கொரோனாவின் கோரப்பிடியில் நாம்!

 கொரோனாவின் கோரப்பிடியில் நாம் சிக்கிக் கொண்டோமோ என்று நினக்கத் தோன்றுகிறது!

மிகவும் கேவலமான ஒரு சூழலை நமது அரசியல்வாதிகள் ஏற்படுத்தி விட்டார்கள்! ஆனால் அவர்கள் அது பற்றி கவலைப்படுவதாகத் தெரியவில்லை. நாம் தான் கவலைப்பட வேண்டியுள்ளது.

அரசியல்வாதிகளுக்கு, எந்த சூழ்நிலையானாலும், எல்லா வசதிகளும் கிடைத்துவிடும். எல்லாம் இலவசமாகக் கிடைத்து விடுகின்றன.

ஆனால் சராசரி மலேசியனுக்கு அப்படி எளிதாக எதுவும் கிடைத்து விடுவதில்லை. வேலை செய்தால் தான் வயிற்றை நிரப்ப முடியும். அவன் வேலை செய்ய வேண்டும்.  சாப்பாடு வேண்டும். பிள்ளைகள் படிக்க வேண்டும். அன்றாட வாழ்க்கையைக் கவனிக்க வேண்டும்.

அரசியல்வாதிகளுக்கு இந்த பிரச்சனை இல்லை. அன்றாட  அவலங்கள் இல்லை. அவர்களுடைய எல்லா  அவலங்களையும் நாம் ஏற்றுக்  கொண்டோம்.  அவர்கள் ராஜ வாழ்க்கை வாழ நாம் தான் ஏற்பாடுகள் செய்து கொடுத்தோம்!  இப்போது அவர்கள் ராஜ வாழ்க்கை வாழ்கிறார்கள். நாம் அவர்களுக்கு அடிமைகளாக வாழ்கிறோம்!

சமீபத்திய செய்தியின் படி. உலக அளவில் புள்ளி விபரங்களின் படி, கொரோனா தொற்று சீனாவை விட நாம் அதிகமான சம்பவங்களைக் கொண்டிருக்கிறோம்! அவர்கள் நமக்குக் கீழே இருக்கிறார்கள்! அதாவது நம்மை விட குறைவான சம்பவங்களைக் கொண்டிருக்கிறார்கள்!

கொரோனா தொற்று என்பது சீன நாட்டிலிருந்து வெளி உலகிற்குப்  பரப்பப்பட்டது என்பது நாம் அறிந்தது தான். ஆனால் அவர்கள் நாட்டில் நம்மை விட குறைவான சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன! நாம் அதிகமாகக் கொண்டிருக்கிறோம் என்பது வியப்புக்குரியது!

இப்படி ஒரு சூழல் ஏற்படுவதற்குக் காரணம் அரசியல்வாதிகள்!  ஆனால் அவர்களுக்கு இன்னும் வெறி அடங்கவில்லை! அடுத்த பொதுத் தேர்தலை வையுங்கள் என்று அரசாங்கத்தை  நச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள்! அந்த அளவுக்கு மக்களின் நலன் அவர்களுக்குப் பெரிதாகப் படவில்லை.

அவர்களுக்குத் தேவையானவை எல்லாம் பதவி, பணம், பட்டம் - அது போதும்!  மக்கள் பிச்சை எடுக்க வேண்டும்! மிக உயர்ந்த எண்ணம்!

இப்போது இந்தத் தொற்று எல்ல மீறி விட்டது என்பது தான் உண்மை. உண்மையாகவே நாம் கொரோனாவின் பிடியில் சிக்கித்தான் கொண்டிருக்கிறோம்.  நம்மால் இன்னும் அதிலிருந்து விடுபட முடியவில்லை.  கொல்லைப்புற அர்சாங்கம் இன்னும் கொள்ளையடிப்பதிலேயே கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது!

மக்கள் நலன் மறக்கடிக்கப்பட்டிருக்கிறது. அரசாங்கம் என்ன செய்யப் போகிறது? மக்கள் என்ன செய்யப் போகிறார்கள்?  இன்னும் எதிலும் சரியான பதிலில்லை!

`மக்களை வழி நடத்த முடியாத அரசாங்கத்தை நாம் கொண்டிருக்கிறோம்!  நல்லதோ, கெட்டதோ அவர்கள் தான் மக்களுக்கு ஒரு தீர்வைச் சொல்ல வேண்டும்!

தீர்வு  கிடைக்கிறதோ இல்லையோ நமது கடமைகளைச் சரியாகச் செய்வோம்! அரசாங்கம் சொல்லுகின்ற அந்த விதிமுறைகளைக் கடைப்பிடிப்போம்.

வேறு வழி?

பயமுறுத்தல் நாடகம் வேண்டாம்!

 நடப்பு அரசாங்கத்தின் தலைவிதி இன்னும் எத்தனை நாளைக்கோ என்று நாள்களை எண்ண வேண்டிய நிர்ப்பந்தத்தில் நாம் இருக்கிறோம்.

அரசாங்கத்தில் அங்கம் பெற்றதுமல்லாமல், அமைச்சர் பதவிகளில் இருந்து கொண்டு அனைத்தையும் அனுபவிப்பது மட்டும் அல்லாமல் பிரதமர் முகைதீன் அரசாங்கத்திற்கு எந்த அளவு தொல்லைக்  கொடுக்க முடியுமோ அந்த அளவு தொல்லைக் கொடுப்பது  அம்னோ தரப்பினருக்குக் கை வந்த கலை என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது!

அரசாங்கம் தனது கடமைகளைச் செய்ய முடியாமல் தொடர்ந்து தடையாக இருப்பது எப்படி என்பதை நாம் அம்னோ கட்சியிடமிருந்து தான் பாடம் படிக்க வேண்டும்.

ஒவ்வொரு நாளும் அம்னோவிடமிருந்து ஏதாவது ஒரு புகார் வந்து கொண்டே தான் இருக்கிறது.

"எந்த நேரத்திலும் நாங்கள் எங்களின் ஆதரவை மீட்டுக் கொள்வோம்!" என்கிற முணுமுணுப்பு அம்னோ பக்கம் இருந்து ஒவ்வொரு நாளும் காதில் ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது! என்ன தான் இவர்களுக்குப் பிரச்சனை?

இப்போது அவர்களின்  வாய்க்கு இன்னொரு பிடி அவல் கிடைத்துவிட்டது!ஆமாம்! பெரும்பாலான அம்னோ கிளைகள் முகைதீன் அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட்டு அடுத்த பொதுத் தேர்தலுக்குத் தயாராக வேண்டும் என்று தீர்மானம் நிறவேற்றியிருக்கின்றன! அப்படியென்றால் என்ன பொருள்? அனைத்துக் கிளைகளிலும் ஊழல் பெருச்சாளிகள் நிறைந்து விட்டார்கள் என்பது தான் பொருள்! அவர்களெல்லாம் மாட்டும் நிலையில் தான் இருக்கிறார்கள் என்பதும்  பொருள்!

இன்றைய நிலையில் முன்னாள் பிரதமர் நஜிப் இன்னும் வெளியே இருக்கிறார் என்றால் அதற்கு இன்றைய அரசாங்கம் தான் காரணம்! பின்னர் ஏன் இவர் இன்னும் கூக்குரலிட்டுக் கொண்டிருக்கிறார்? அவர் மனைவிக்கும் 'நல்ல'தொரு தீர்ப்பும் வேண்டும் என்பதால் அவரும் அம்னோவோடு சேர்ந்து 'இன்னொரு தேர்தல் தேவை!'  என்பதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்! சொல்லுகிறார் என்பதை விட கதறுகிறார் என்று தான் சொல்ல வேண்டும்! நல்ல முடிவு தேவை என்பதற்காக ஒரு நெருக்கடியை பிரதமர் முகைதீனுக்கு இவர்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்!

நாம் சொல்ல வருவதெல்லாம் சரியோ தவறோ இந்த அரசாங்கத்தை செயல்பட விடுங்கள் என்பது தான்.  உங்கள் பயமுறுத்தல் நாடகம் தொடர்ந்தால் இது அரசாங்கத்திற்கும் பிரச்சனை, பொது மக்களும் எரிச்சல் அடைவார்கள்.

இன்னொரு தேர்தல் நடந்தால் உங்கள் நிலைமை என்ன என்பது உங்களுக்குத் தெரியாது.  ஒரு வேளை சென்ற பொதுத் தேர்தலை விட இந்த முறை இன்னும் மோசமான தோல்வியைச் சந்தித்தால் என்ன ஆகும் என்று சிந்தித்துப் பாருங்கள்.

மக்களின் மனநிலை என்ன என்பதை அறிந்து கொள்ளுவது அவ்வளவு சுலபமல்ல!

பயமுறுத்தல் நாடகம் வேண்டாம்!

Thursday 7 January 2021

அமெரிக்க நாடாளுமன்றத்தில் வன்முறை!

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் வன்முறையைத் தூண்டி விட்டிருக்கிறார். அதனால் பலியானோர் நான்கு பேர் என்பதாக செய்திகள் கூறுகின்றன.

நாடாளுமன்றத்தில் இப்படி ஒரு வன்முறையைப் பற்றி படித்த போது என் மனதில் முதலில் தோன்றியது: ஆகா! அமரிக்காவில் இப்போது இந்தியர்கள் அதிகமாக இருக்கின்றனரே! அங்குமா இப்படி!  

இருந்தாலும் அப்படி நடக்க வாய்ப்பில்லை. அங்கு இருக்கும் இந்தியவர்கள் அனைவரும் படித்தவர்கள். 'தான் உண்டு தன் வேலையுண்டு' என்று இருப்பவர்கள். அதனால் இந்தியர்களின் வன்முறை ஈடுபாடு என்பது அந்த அளவுக்கு இருக்க நியாயமில்லை!

டொனால்டு ட்ரம்ப் ஏன் இப்படி அமெரிக்க அரசியலில் ஒரு மாறுபட்ட மனிதராக இருக்கிறார் என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது. நான் கூட இவருக்கு இந்தியப் பின்னணி ஏதும் இருக்குமோ என்று நினைத்தது உண்டு.  ஆனால் அப்படி ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு வேளை இந்தியப் பிரதமர் மோடி அடிக்கடி அமரிக்கா போய் வந்தாரே அங்கிருந்து ஏதும் பாதிப்பு ஏற்பட்டிருக்குமோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது!

எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை!

இவர் அமெரிக்க ஜனாதிபதியாக வரும் முன்னர் நான் இவருடைய புத்தகங்களைப் படித்திருக்கிறேன்.  அவர் ஒரு பெரிய, பெரிய தொழிலதிபர். ஆமாம்.  தான் செய்யும் தொழில்களில் வானத்தை எட்ட வேண்டும் என்று நினைப்பவர். மிகவும் அழுத்தமான மனிதர். எதனையும் அவர் விட்டுக் கொடுக்கும் போக்கு இல்லாதவர். கடைசி வரை போராடுபவர். அப்படித்தான் அவர் கடைசி வரை அவர் போராடி வந்திருக்கிறார்! அப்படி ஒரு குணம்! என்ன செய்யலாம்?

தொழிலில் அவரின் போக்கு சரியாக இருந்திருக்கலாம். அதில் அவர் வெற்றியும்  பெற்றிருக்கலாம்.

ஆனால் இது அரசியல். அமெரிக்கா உலகின் காவலன் என்று அவர்களாகவே ஒரு முடிவுக்கு வந்தவர்கள்! யாரும் அவர்களுடைய உதவியைக் கேட்காவிட்டாலும் அவர்களாகவே ஆஜராகி விடுபவர்கள்!

இப்படி ஒரு மனப்போக்கு உள்ள  நாட்டில்  எப்படி, எங்கிருந்து இப்படி ஒரு மனிதர் அதிபராக வந்தார் என்பது தான் நமக்குப் புரியாத புதிர்! பதவியில் இருந்த போதும் அவரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை! உலக நாடுகளே அவரைக் கேலி செய்தன!  பத்திரிக்கைகளின் - ஊடகங்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானார்! ஊடகங்கள் அவரைக் கிழி கிழி என்று கிழித்தெடுத்தன! அவர் எதற்கும் அசராத மனிதர்! எதுவும் அவரைப் பாதிக்கவில்லை!

ஆனாலும் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவுண்டு. அவரும் அவரது தோல்வியை ஒப்புக் கொண்டார்.  ஆனாலும் போகும் போது சும்மா போகக் கூடாது என்பதற்காக நாடாளுமன்றத்தில் ஒரு கலவரத்தையும், வன்முறையையும் தூண்டிவிட்டு விடைபெறுகிறார்!

வருங்கால ஜனாதிபதிகளுக்கு இவரது வன்முறை ஒர் எடுத்துக் காட்டாக அமையுமோ, தெரியவில்லை! பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

இத்தனை ஆண்டுகள் என்ன செய்தீர்கள்?

 தமிழ் நாட்டில் தைப்பூசத்திற்குப் பொது விடுமுறை என்று படித்த போது அது ஓர் அதிர்ச்சி செய்தியாகத் தான் இருந்தது!

அப்படியென்றால் இத்தனை ஆண்டுகள் விடுமுறை இல்லையா என்று கேட்கத் தோன்றியதே தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை! இத்தனை ஆண்டுகள் ஏன் விடுமுறை கொடுக்கப்படவில்லை என்பது நமக்கும் புரியவில்லை!

கலைஞர் நீண்ட காலம் தமிழகத்தை ஆட்சி செய்தவர். தமிழ், தமிழர், தமிழ் இலக்கியம் என்று நாள் தவறாமல் பேசி வந்தவர். அவர் காலத்தில் கூட தைப்பூச விடுமுறை தேவையற்றதாக அவர் நினைத்திருக்கிறார் என்று அறியும் போது நமக்கு வருத்தத்தை  அளிக்கிறது.

தமிழ்க் கடவுள் முருகப்பெருமானின் தாய் வீடு என்றால் அது தமிழகம் தான். அதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை. ஆனால் தமிழகத்திற்கு வெளியே பல நாடுகளில் முருகப்பெருமானின் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக தமிழர்கள் அதிகம் வாழும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, மொரிஷியஸ் போன்ற நாடுகளில் தைப்பூசம் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

அதிலும் குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் பொது விடுமுறையும் உண்டு.  குறிப்பாக மலேசியாவில் நாடளவில் விடுமுறை இல்லையென்றாலும் இந்தியர்கள் அதிகம் வாழும்  மாநிலங்களில் பொது விடுமுறை கடைப்பிடிக்கப்படுகிறது.

இப்படி வெளிநாடுகளிலேயே விடுமுறை என்கிற போது தமிழ் நாட்டில் இப்போது தான் பொது விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருப்பது - பரவாயில்லை! - இப்போதாவது  ஒரு தமிழரான எடப்பாடியின் முலம் ஒரு விடிவு பிறந்திருக்கிறதே அதனை நினைத்து பெருமைப்படுவோம்! 

இத்தனை ஆண்டுகள் தமிழரின் பூமியில் ஆட்சி செய்தவர்கள் எந்த அக்கறையும் எடுக்கவில்லையே என்ன செய்தீர்கள் என்று கேட்கலாம் என்றாலும் அதற்கான பதிலையும் அவர்கள் வைத்திருப்பார்கள் என நம்பலாம்!

எடப்பாடியாரே! நன்றி! நன்றி!

ரஜினியின் சரியான முடிவு!


ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னார். அது அவர் தமிழர்களுக்குச் செய்யும் துரோகம் என்று சொன்னோம். ஆனால் அவர் தனது உடல்  நலனைக் கருதி அரசியலுக்கு வரவில்லை என்று இப்போது சொல்லுகிறார் அதனை வரவேற்கிறோம்.

ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னது அவரது கருத்து அல்ல.  அவரை வற்புறுத்தி அரசியலுக்கு வர வைத்தவர்கள் அழிவு சக்திகள்.  இப்போதும் கூட, அவர் உடல் நலம் சரியல்ல என்று கூறியும் கூட, அழிவு சக்திகள் "அவர் வந்தே ஆக வேண்டும்!"  என்று ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்! அவரின்  உடல் நலன் எக்கேடு கெட்டால் எங்களுக்கு என்ன என்கிற மனோபாவம் தான் தெரிகிறது.

இருந்தாலும் தனது உடல் நலன் கருதி அவர் அரசியலுக்கு வரப்போவதில்லை என்பது தெளிவு. ரஜினி 70 வயது ஆன ஒரு பெரியவர். இனி மேல் அவரால் ஓடி ஆடி வேலை செய்வது என்பது கடினம் என்பது நமக்குப் புரிகிறது. அரசியல் என்பது சாதாரண விஷயமல்ல.  அதைத் தாங்கக் கூடிய சக்தி அவருக்கு இருந்தாலும் அவரின் உடல் ஒத்துழைக்காது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.  ஆனால் அழிவு சக்திகள் அதனைப் புரிந்து கொள்ள மறுக்கின்றனர்.

ரஜினி சினிமாவில் பல சாதனைகளைச் செய்தவர். அவருக்குக் கோடிக்கணக்கான ரசிகர்கள் உலக அளவில் உண்டு.  அது அவர் சினிமாவில் செய்த சாதனை.

நான் சினிமா படங்களைத் திரை அரங்குகளில் பார்ப்பதில்லை. அப்படிப் பார்த்தாலும் அது ரஜினி-கமல் நடிக்கின்ற படங்களாகத்தான் இருக்கும். அவர்கள் நடித்த படங்களைத் திரை அரங்குகளில் பார்க்கத்தான் விரும்புகிறேன். நான் ரஜினியின் ரசிகன். அதே போல கமலின் ரசிகன் கூட. 

அதனால் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் யாருக்கோ கூலிக்கு மாரடிக்கின்றனர் என்பது அவர்களது நடவடிக்கைகளிலிருந்து நாம் புரிந்து கொள்ளுகிறோம்!

ரஜினி தமிழ் நாட்டில் நல்ல புகழோடும் பொருளோடும் வாழ்ந்து வருபவர். அவர் தமிழரல்ல என்றாலும் அவரை  வாழவைத்துக் கொண்டிருப்பது தமிழரின்  பெருந்தன்மை. அவர் எந்த ஒரு பொதுச் சேவையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதில்லை. இனி மேலும் ஈடுபடுத்திக் கொள்ளப் போவதில்லை.

பரவாயில்லை! அவர் தொடர்ந்து தனது சினிமாத் துறையில் இன்னும் பல சாதனைகள் புரிய வேண்டும். 

இப்போது, அவரின் உடல நலன் கருதி, அவர் எடுத்த முடிவை மதிக்கிறோம். பாராட்டுகிறோம்! அவரின் கலைப்பணி தொடரட்டும்!