Sunday 30 September 2018

முண்டியடிக்கும் சிங்கப்பூர் முதலீட்டாளர்கள்..!

நடைபெறப்போகும் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற தொகுதியின் இடைத் தேர்தலிலிருந்து கிடைக்க பெறும்   பல செய்திகள் நம்மை மகிழ வைக்கின்றன.

ஆமாம்,  அடுத்த பிரதமரமாகப்  பொறுப்பேற்க விருக்கும் பி.கே.ஆர். ரின் அன்வார் இப்ராகிம் அந்த இடைத் தேர்தலில் போட்டியிடுகிறார் என்பது நாடறிந்த செய்தி. அன்வார் பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்தவர். அவர் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் போட்டியிடுவது அவரது துணிச்சலைக் காட்டுகிறது.

போர்ட்டிக்சன் தொகுதி அதன் பின்னர் தெலுக்கெமாங் தொகுதி இப்போது  போர்ட்டிக்சன் தொகுதி. தொகுதியின் பெயர் தான்  மாற்றம் அடைந்ததே தவிர போர்ட்டிக்சன் அப்படி ஒன்றும் பெரிய மாற்றத்தைக் காண முடியவில்லை. எல்லாக் காலத்திலும் ஒரே மாதிரி தான்.  போர்ட்டிக்சன் ஒரு சுற்றலா நகரம். ஆனால் அது ஒரு  சுற்றுலா நகரமாக பெரிய அளவு மாறவில்லை. மாற்றம் என்பதெல்லாம் அம்னோ கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான். அத்தோடு ம.இ.கா. வினரையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இப்போது அன்வார் இங்குப் போட்டிப் போடுவது   நெகிரி செம்பிலானுக்கே ஒரு பெரிய மாற்றம் வரும் என எதிர்ப்பார்க்கலாம்.  அதுவும் போர்ட்டிக்சன் நகரத்திற்கு நல்லதொரு மாற்றம் வரும். இப்போது சிங்கப்பூரிய முதலீட்டாளர்கள் போர்ட்டிக்சனில் முதலீடு செய்ய ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதாக அன்வார் கூறியிருப்பது நல்ல செய்தி. சிங்கப்பூர் என்பது மட்டும் அல்ல மற்ற நாட்டு முதலீட்டாளர்களும் இங்கு முதலீடு செய்ய முன்வருவார்கள் என நாம் நம்பலாம்.

இது தான் அன்வாரிடம் உள்ள தனிப்பட்ட ஆளுமை எனலாம். அவரிடம் உண்மை இருக்கிறது. நேர்மை இருக்கிறது. நாட்டை சிறப்பாக வழி நடத்தும் ஆற்றல் இருக்கிறது. ஊழலை வெறுப்பவர்,  லஞ்சம் வேரறுக்கப்பட வேண்டும் என்பதை இலட்சியமாகக் கொண்டிருப்பவர். எல்லாவற்றுக்கும் மேலாக மக்கள் அவரை நம்புகின்றனர். அவரும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என உறுதியாக இருப்பவர்.

முதலீடுகளை நாம் வரவேற்கிறோம். நிறைய முதலீடுகள் மக்களுக்கு வேலை வாய்ப்புக்களை உருவாக்கும். நாட்டை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும். 

சிங்கப்பூர் முதலீட்டாளர்களை வரவேற்கிறோம். அடுத்த பிரதமர் என்னும் அங்கீகாரத்தோடு வலம் வரும் அன்வார் மீது முதலீட்டாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை நாமும் நம்புகிறோம்.

வருக! வருக!

Saturday 29 September 2018

மைஸ்கில் அறவாரியம் வளர வேண்டும்1

சமீபத்தில் மைஸ்கில் அறவாரியம் பற்றியான ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது.

மைஸ்கில் அறவாரியம் பற்றி இதற்கு முன்னரே நான் படித்திருக்கிறேன். அதன் தலைவர் பசுபதி பற்றி எனக்கு நல்ல அபிப்பிராயம் உண்டு. அங்கு மாணவர்கள் படிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்ட ஆரம்பகாலத்தில்  நானும் என்னாலான மாதாமாதம் ஒரு சிறு தொகையை அனுப்பி உதவிய நாள்களும் உண்டு.

அதே போல ஸ்ரீமுருகன் நிலையத்திற்கும் மாணவர்கள் தங்கிப் படிக்க கட்டடத் தேவைகளுக்காக அப்போதும் பணம் அனுப்பியிருக்கிறேன். 

இவைகளைச் சொல்லுவதற்குக் காரணம் நமது சமூகத்தின் வளர்ச்சி என்பது நம் ஒவ்வொருவர் கையிலும் உண்டு. நம்மால் பல காரியங்களைச் செய்ய முடிவதில்லை. அதனால் யார் தங்களின் நேரங்காலத்தை ஒதுக்கிவிட்டு, இந்த சமூகத்திற்க்காகச் சேவை செய்ய முன் வருகிறார்களோ அவர்களை நாம் தட்டிக் கொடுத்துப் பாராட்ட வேண்டும்; உதவ வேண்டும். அதனை நான் எப்போதும் செய்கிறேன்.

மைஸ்கில் இப்போது மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது என அறியும் போது ,மனம் மகிழ்கிறது. 38 மாணவர்களோடு ஆரம்பிக்கப்பட்ட மைஸ்கில் இப்போது 300க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குத் தொழிற்திறன் பயிற்சி அளிப்பது மன நிறைவை அளிக்கிற்து.   பல விதமான தொழிற்பயிற்சிகள். குறிப்பாக மின்சாரம், நீர்க்குழாய், குளிர்சாதனம் போன்ற தொழிற்திறன் பயிற்சிகள் அளிப்பதாகக் கூறப்படுகிறது.

2020-க்குள் தொழிற்திறன் சார்ந்த வேலை வாய்ப்புக்கள் அதிகரிக்கும் என நாம் நம்பும் வேளையில் அதன் திறன் சார்ந்த வேலை வாய்ப்புக்களைச் செய்வதற்குத் தொழிற்பயிற்சி பெற்ற இளைய சமுதாயம் தயாராக இல்லை என்றால் நாம் மீண்டும் வெளிநாட்டுத் திறன்களை நம்பித்தான் தொழில் செய்ய வேண்டிவரும்.

இந்தத்  தொழிற்பயிற்சிகளின் மூலம் நாம் கல்வி கற்ற சமுதாயமாக மாறுகிறோம். நமது வேலை வாய்ப்புக்களும் பிரகாசமாக இருக்கும். நமது வாழ்க்கைத்தரமும் உயரும்.

நமக்குத் தேவையெல்லாம்  கல்வி, கைநிறைய சம்பளம். இதற்குத் தானே நாம் ஆசைப்படுகிறோம்.. அதற்காக நாம் செய்ய வேண்டியதெல்லாம் நமது திறனுக்கு   ஏற்ப ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து அதனையே நமது வாழ்க்கையாக மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்.

நமது சமுதாயத்திற்கு வாழ்வளிக்கும் மைஸ்கில் வளர வேண்டும். வளமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும்! வாழ்த்துவோம்!

Friday 28 September 2018

இடைத்தேர்தல் சூடு பிடிக்கிறது...!

போர்ட்டிக்சன் இடைத் தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது என்று சொல்லலாம்.  பி.கே.ஆர். தலைவரும் அடுத்த மலேசிய பிரதமரும் போராட்டவாதியுமான அன்வார் இப்ராகிம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு ஏதுவாக நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் டேனியல் பாலகோபாலன் தனது பதவியில் இருந்து விலகி அன்வார் போட்டியிட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.

இப்படி ஒருவர் தனது நாடாளுமன்ற இருக்கையை விட்டுக் கொடுத்து அதில் ஒருவர் போட்டியிடுவது என்பது பற்றி வெட்டியும் ஒட்டியும் விவாதங்கள் நடந்து கொண்டிருந்தாலும் அன்வாருக்கு வேறு வழியில்லை என்பதால் இப்படி ஒரு வழியை அவர் தேர்ந்தக்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது என்பது வருத்தமே. 

சரி,  போர்ட்டிக்சன் நிலவரம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.  இந்தத் இடைத் தேர்தலில் அன்வாரையும் சேர்த்து மொத்தம் எட்டு பேர் போட்டியிடுகின்றனர். இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது மூன்று வேட்பாளர்கள் மட்டும் தான். ஒருவர் பி.கே.ஆரின் அன்வார் இப்ராகிம், மற்றவர் பாஸ் வேட்பாளர் முக்மது நஸ்ரி மொக்தார், இன்னொருவர் சுயேச்சை வேட்பாளர் இசா அப்துல் சமாட். மற்றவர்கள் சுயேச்சைகள் அனைவரும் வாக்குகளைப் பிரிக்க வந்தவர்கள் என்பதாக எடுத்துக்கொள்ளலாம்! 

பொதுவாக பாஸ் கட்சியை எடுத்துக் கொண்டால் அக்கட்சி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவு. ஆனால் அவர்களுக்கென்று குறிப்பிட்ட வாக்கு வங்கி உள்ளது. அவர்கள் அனைவரும் மலாய்க்காரர்கள். ஆனால் அதிலும் அன்வாரின் விசுவாசிகள் உள்ளனர் என்பதை மறுப்பதற்கில்லை. இன்னொரு கவனிக்கப்பட வேண்டியவர் இசா அப்துல் சமாட்.. முன்னாள் நெகிரி செம்பிலான் மந்திரி பெசாராக இருந்தவர். இசாவைப் பொறுத்தவரை மலாய்க்காரர்கள் ஒரு பிரிவினர் அவரை ஆதரிக்கன்றனர். அவர்கள் அம்னோ விசுவாசிகள். இந்தியர்களின் ஆதரவும் ஓரளவு கிடைக்கலாம். பொதுவாக இசா பதவியில் இருந்த போது இந்தியரிடம் நல்ல பெயர் வாங்கியவர். இப்போது அவர்களுடைய ஆதரவெல்லாம் அவருக்குக்  கிடைக்குமா என்பது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம். காரணம் அவர் மேல் ஏகப்பட்ட ஊழல் வழக்குகள் உள்ளன! அதனால் அம்னோ தரப்பும் அவருக்குச் சாதகமாக இல்லை என்பது தான் உண்மை.

இப்படி எல்லாம் ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் அன்வார் வெற்றி பெறுவதற்கான் வாய்ப்பு  அதிகமாகவே இருக்கிறது. வெற்றி பெறுவார் என்னும் நம்பிக்கையும் இருக்கிறது. வெற்றி பெறுவார்!

Thursday 27 September 2018

நல்ல முடிவு..!

நெகிரி செம்பிலான் "பெர்சாத்து"  கட்சி கலைக்கப்பட்டதாக  கட்சியின் தேசியத் தலைவர் முகைதீன் யாசின் கூறியிருக்கும் செய்தி யாரும்  எதிர்பார்க்காத  ஒரு செய்தி என்பதை மறுப்பதற்கில்லை. அதுவும் ஆர்.ஓ.எஸ். எனப்படும் சங்கங்களின் பதிவகத்தின் ஆலோசனைப்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

வரவேற்கக் கூடிய ஒரு முடிவாகவே நான் இதனைக் கணிக்கிறேன்.  கட்சிகள் கடந்த பல வருடங்களாக தான் தோன்றித் தனமாகவும், தறுதலைத்தனமாகவும், அடாவடித்தனமாகவும், அடங்காத்தனமாகவும் தொடர்ந்து கொண்டே இருப்பதை நாம் பார்த்து ஓரளவு சலித்தும் போய்விட்டோம்! இதற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டவர்கள் நமது தானைத்தலைவரும் அவரது சகாக்களும் தான்! அதனை அம்னோவும் பின்பற்ற ஆரம்பித்தது அவர்களது கஷ்டகாலம்!

ஆனாலும் இனி வருங்காலங்களில் இதனை எல்லாம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது.  முகைதீன் யாசின் சரியான நடவடிக்கை எடுத்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் அவர் ஆர்.ஓ.எஸ். ஸின் ஆலோசனையை ஏற்றிருக்கிறார்!  எது சரி, எது தவறு என்பதை ஆர்.ஓ.எஸ். கண்காணிக்க வேண்டும்.

பி.கே.ஆர்.கட்சியின் கூட்டங்களிலும் அடிதடியெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன. ஒன்றை மறந்து விடக்கூடாது. இந்தியர்கள் அதிகமாக ஒரு கட்சியில் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் எல்லாம் முன்னாள் ம.இ.கா. உறுப்பினர்கள். அடிதடி என்பதும், சங்கப்பதிவு இலாக்காவின் இரத்தங்களின் இரத்தங்கள் என்பதும் ஒன்றும் அதிசயமான ஒன்றல்ல! ஆனால் இவைகளையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தால்
அது பெரிய தவறு என்பதைச் சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறோம். கலகம், ஆர்ப்பாட்டம் செய்கின்றவர்கள் மீது  கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இந்த நேரத்தில் நாம் நினைவூட்டுகிறோம். ஒன்று கட்சியிலிருந்து அவர்கள் முழுமையாக நீக்கப்பட வேண்டும். கலகம் செய்கிறவர்கள் களையெடுக்கப்பட  வேண்டும். அது தான் முக்கியம்.

அதுவும் குறிப்பாக இந்திய சமூகம் மிகவும் பின் தங்கிய சமூகம். இனியும் சண்டைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து கொண்டு இருக்க முடியாது. நமக்குக் காரியங்கள் ஆக வேண்டும். செயல்படும் தலைவர்கள் நமக்குத் தேவை. 

பெர்சாத்து நெகிரி செம்பிலான் கிளை கலைக்கப்பட்டதில் நமக்கு மகிழ்ச்சியே! அதே போல கட்சி கூட்டங்களில் குழப்பங்கள் செய்யும் இந்திய உறுப்பினர்களைக் கட்சியிலிருந்து தகுதி நீக்கம் செய்வதும் தேவையே! கடுமையான நடவடிக்கை இல்லையென்றால்  கண்டவன் எல்லாம் சட்டாம்பிள்ளையாகி விடுவான்!

Wednesday 26 September 2018

ஆலயங்கள் பொறுப்பேற்க வேண்டும்..!

பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி ஆலய நிர்வாகங்களுக்கு நல்லதொரு கருத்தைச் சொன்னார். நாம் எல்லாக் காலங்களிலும் அரசாங்கத்தை நம்பியிருக்கும் ஒரு சமூகமாக  மாறிவிட்டோம். நமது தலைவர்கள் அப்படி ஒரு நிலையை உருவாக்கிவிட்டார்கள். ஏறைக்குறைய ஒரு பிச்சைக்கார சமுதாயம் எனப் பெயர் எடுத்து விட்டோம்.

ஆலயப்பணி, சமுதாயப்பணி என்பதையெல்லாம் பிரித்துப் பிரித்துப் பார்க்க முடியாது. மக்கள் பணியே மகேசன் பணி. தனியாகப் பார்க்க முடியாது. ஆலய நிர்வாகத்திற்கு உட்பட்ட பக்தர்கள் அனைவருக்கும் ஆலயங்களே பொறுப்பேற்க வேண்டும். அவர்களின் நல்லது கெட்டதுகளில் ஆலயம் பங்கேற்க வேண்டும்.

குறிப்பாக ஒரு சில குடும்பங்களில் வறுமை அவர்களை வாட்டியெடுக்கும். பல காரணங்கள். கணவன் வியாதியாகிப் படுத்த படுக்கையாகிவிட்டால்  அந்தக் குடும்பம் வறுமையால் வாடும். கணவனைக் கவனிக்க வேண்டும் என்றால் மனைவி வேலைக்குப் போக முடியாது. பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாது. வீடு இல்லை, காப்புறுதி இல்லை. அரசாங்க உதவி என்பது குதிரைக்கொம்பு. இப்படிப் பல துன்பங்களை இந்தக் குடும்பங்கள் அனுபவிக்கின்றன. ஒரு சில குடும்பங்களில் பள்ளிகளுக்குப் பிள்ளைகளை அனுப்ப பண வசதி இல்லாத குடும்பங்கள் உள்ளன.  

இவர்கள் தாங்கள் படும் துன்பங்களை யாரிடம் கொண்டு செல்லுவது என்பதை அறியாமல் இருக்கின்றனர். பிரச்சனைகளை வெளியே கொண்டு வந்தால் தான் ஏதோ ஒரு தீர்வு கிடைக்கும். நூறு விழுக்காடு தீர்வு இல்லையென்றாலும் ஐம்பது விழுக்காடு தீர்வாவது கிடைக்கும். ஆலயங்களும் இவர்களுக்கு உதவலாம். உதவிகள் கிடைக்கக் கூடிய வாய்ப்புக்களை எடுத்துக் கூறி அவர்களுக்கு உதவலாம். ஆலயங்களும் தங்களால் முடிந்த உதவிகளையும் செய்யலாம்.

ஆன்மிகத் துறையில் எந்த அளவுக்கு நமது ஆலயங்கள் நாட்டம் கொள்ளுகின்றதோ அதே அளவு மக்களின் இன்ப துன்பங்களிலும் நாட்டம் கொள்ள வேண்டும் என்பதே அமைச்சர் பொன்.வேதமூர்த்தி அவர்களின் செய்தி. நமது மக்களின் முன்னேற்றத்திற்காகவும் ஆலயங்கள் பாடுபட வேண்டும்.

நமது மக்களின் முன்னேற்றம் என்பது ஆலயங்களின் கையில்!  அனைவரும் இணைந்து பொறுப்பேற்போம்!

Tuesday 25 September 2018

ஏன் இந்தப் புறக்கணிப்பு..?

 மொழி என்று வரும்போது அங்குத் தமிழ்ப் புறக்கணிப்பும் சேர்ந்து வருகிறது. அது ஏனோ என்று நமக்குப் புரியவில்லை.

வெ.செல்லமுத்து என்கிற நண்பர் ஒருவர் மலாக்காவில்  உள்ள சில சாலைகளின் பெயர்கள் இந்தியிலும், வங்காள மொழியிலும் எழுதப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்.

இது நிச்சயமாக நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. நமது நாட்டில் தேசிய மொழியை அடுத்து  அதிகாரப்பூர்வ மொழிகள் என்னும் போது அது சீன மொழியும் தமிழ் மொழியும் தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு வேளை இது  பாரிசான் ஆட்சியில் நடந்ததாக இருக்கலாம். ம.இ.கா.வினரைப் பொறுத்தவரை மொழி என்று வரும்போது அவர்கள் அக்கறை காட்டுவார்கள் என எதிர்ப்பார்க்க முடியாது. 

ஆனால் இப்போது அப்படி இல்லை. எல்லா மாநிலங்களிலும் இந்தியர்களின் அதிகாரம் உண்டு. பக்காத்தான் ஆட்சியில் பலர் ஆட்சி மன்றத்தில் இருக்கிறார்கள். இனி மேலும் யாரையும் குற்றம் சொல்ல வழியில்லை. இப்படி ஒரு தவறு நேர்ந்தால் அதற்குப் பதில் சொல்ல வேண்டியவர்கள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான்.  இது போன்ற பிரச்சனைகள் தங்கள் கவனத்திற்கு வரும் போதே உடனடியாக நடவடிக்கை எடுக்க முயல வேண்டும். மக்களிடமிருந்து புகார் வரும்வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. மலாக்கா, காடேக்,  ஜ.செ.க. சட்டமன்ற உறுப்பினரும், ஆட்சிக்குழு உறுப்பினருமான ஜி.சாமினாதன்  இந்தப் பிரச்சனைக்கு முடிவு காண வேண்டும். இதற்கு வீதி ஆர்ப்பாட்டம் எல்லாம் தேவை இல்லை.

இன்னொரு பிரச்சனையும் இங்கு நாம் பார்க்கிறோம்.  அதுவும் ஜனநாயக செயல் கட்சியினர் எல்லாக் காலங்களிலும்  தமிழ் மொழிக்கு எதிராகவே செயல்படுகின்றனர். அவர்கள் அரசாங்க அறிக்கைகளை வெளியிடும் போது சீன மொழியை மட்டும் பயன் படுத்துகின்றனர். கூடவே தமிழும் உண்டு என்பதை மறந்து விடுகின்றனர் அல்லது அலட்சியம் காட்டுகின்றனர். இதனையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

பக்காத்தானிடமிருந்து மொழியைப் பொறுத்தவரை எந்த புறக்கணிப்பையும்  நாம் விரும்பவில்லை. அனைவரையும் அணைத்துச் செல்ல வேண்டுமென்றால் அது மொழியையும் சேர்த்துத் தான்.

கள்ளச் சாராயம் ...!


கள்ளச் சாராயம், நச்சுத்தன்மை கலந்து மதுபானம் - இது போன்ற செய்திகளப் படிக்கின்ற போது ஏதோ இந்தச் செய்திகள் வெளி நாட்டில் குறிப்பாக இந்தியா,  வங்களாத தேசம், பாக்கிஸ்த்தான் போன்ற நாடுகளில் தான் நடக்கின்றன என்பதாகத்தான் நமக்குத் தோன்றும். 

ஆனால் இது நமது கண்முன்னே நமது மலேசிய நாட்டில் நடக்கிறது என அறியும் போது  நிச்சயமாக அது நமக்கு வருத்தத்தைக் கொடுக்கிறது.

பத்து தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் கூறிய செய்தி இன்னும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. இதற்கும் தமிழ் நாட்டிற்கும் ஏதும் தொடர்பு  இருக்குமோ என நினக்கத் தோன்றுகிறது. மதுக் கடைகள் பள்ளிக்கூடங்களிலிருந்து  ஒரு கிலோ மீட்டர் தொலைவு இருத்தல் வேண்டும்  என்பது விதியாம். மது விற்பவர்கள் அதனையெல்லாம் பொருட்படுத்துவதில்லை! கோயில்கள் அருகிலேயே  மது விற்பனை செய்கிறார்களாம்.  தமிழ் நாட்டில் அரசியல்வாதிகள் சாராயக்கடைகளை நட்த்துகிறார்கள். அதனால் தமழக அரசாங்கம் அதனை ஏற்றுக் கொண்டது. ஆனால் நமது அரசாங்கம் அதனை எப்படி ஏற்றுக்கொண்டது? ஒரு வேளை ம.இ.கா. வினர் மதுக்கடைகளை நடத்துகின்றனரோ?  ஓர் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் ம.இ.கா.வினர் சாராயம் விற்பதை கேள்விப்பட்டிருக்கிறேன் இப்போது அவர்களின் எல்லை விரிந்துவிட்டிருக்கும்

நச்சுத்தன்மை கலந்த மதுபானத்தை அருந்தி உயிரைப் போக்கிக் கொண்டவர்கள் சுமார் 38 பேர் என்பதாகச் செய்திகள் கூறுகின்றன. இறந்தவர்களில் மியன்மார், நேப்பாளம், இந்தியா, வங்காள தேசிகள் மேலும் நமது உள்ளூர் வாசிகள். அதிகமானோர் மியான்மார்,  நேப்பாளத்தைச் சேர்ந்தவர்கள்.

நாம் கொடுக்க வேண்டிய செய்தி ஒன்று தான்.  இந்த இறப்புக்களின் காரணர்கள் யாரோ அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அத்தோடு அவர்களின் உரிமம் ரத்துச் செய்யப்பட வேண்டும்.

குடியை நாம் ஒழிக்க முடியாது. அது  உலகறிந்த விஷயம். ஆனால் தரமற்றக் கள்ளச் சாராயங்களை தயாரிக்கும் நிறுவனங்களை இழுத்து மூடப்பட  வேண்டும்.  இறந்து போனவர்கள் குடும்பத்திற்கு தயாரிப்பு நிறுவனங்கள் போதுமான நஷ்டஈடு கொடுக்க வேண்டும். ஆமாம், குடிகாரன் குடிப்பதற்கு இலவசமாக மதுபானத்தை  யாரும் கொடுப்பதில்லை. அவனும் பணம் போட்டுத்தான் வாங்கிக் குடிக்கிறான். அவன் பணம் போட்டு வாங்கிக் குடிப்பது தரமான பொருளாக இல்லை என்றால் அதற்கு அதனை வெளியிடும் நிறுவனம் தான் பொறுப்பேற்க வேண்டும்.

குடிப்பது உடல் நலனுக்குக் கேடு! அதை விற்பது  விற்பவன் குடும்பத்திற்குக் கேடு!

Monday 24 September 2018

ஹரகிரி என்றால் என்ன?

ஹரகிரி என்றால் என்ன? இது ஒருவகையான தற்கொலை. ஜப்பானியர்களால் - அதாவது வீர மறவர்களால் -  கடைப்பிடிக்கப்படும் ஒரு வீரத் தற்கொலை! இந்தத் தற்கொலைக்கு என்று சில சட்டத் திட்டங்கள் உள்ளன. அதை எப்படி செய்வது என்பன போன்ற விளக்கங்கள் நமக்குத் தேவை இல்லை.

ஒரு வீரன் இன்னொரு வீரனிடம் தோற்றுப் போனால்  இந்த ஹரகிரியைப் பயன் படுத்துவான். அதனைச் செய்வதற்கு நெஞ்சுரம் வேண்டும். அவன் தனக்குத் தானே ஏற்படுத்திக்கொள்ளும் தண்டனை அது.

ஆனால் இப்போது அந்த வீரம் என்பதெல்லாம் இல்லை. தன்னால் தனது குடும்பத்திற்கு அவமானத்தைக் கொண்டு வருவது, தனது நாட்டிற்கு அவமானத்தைக் கொண்டு வருவது, தான் பணி செய்யும் நிறுவனத்திற்கு அவமானத்தைக் கொண்டு வருவது - இப்படி ஒரு நிலை வந்தாலும் அவர்கள் ஹரகிரியைப் பயன்படுத்த தயங்குவதில்லை. அதுதான் ஜப்பானியர்கள்!

அந்த ஹரகிரி நம்மிடையே இல்லை  ஆனாலும் மான அவமானத்திற்கு அஞ்சி ஒரு சிலர் தற்கொலை செய்வதும், நான்று கொண்டு சாவதும், நஞ்சு கலந்த பானங்களை அருந்துவதும், தூக்குப்போட்டுக் கொள்வதும் எல்லாம் அனுதினமும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

சமீபத்தில் டாக்டர் மகாதிர் ஒரு கருத்தைச் சொன்னார். நாட்டையே திவாலாக்கியவன், மக்கள் பணத்தைக் கோடி கோடியாய்  கொள்ளையடித்தவன் - இவர்கள் எல்லாம் கொஞ்சங்கூட வெட்கமில்லாமல் சிரித்துக் கொண்டே  நாட்டில் வலம்  வருகின்றனரே அது எப்படி இவர்களால் முடிகிறது, என்பதாக!  மான அவமானம் இல்லாதவர்களிடம் யார் என்ன செய்ய முடியும்? ஒன்று அவர்கள் குடும்பத்தில் மான அவமானம் என்றால் என்ன என்று சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும். இதெல்லாம் பாரம்பரியமாக வழி வழியாக குடும்பங்களில் கடைப்பிடிக்க வேண்டிய பண்புகள். சம்பந்தப்பட்டவர்களின் குடும்பங்களைக் கொஞ்சம் உற்று நோக்கினாலும் போதும், என்ன நடக்கின்றன?  பெண்டாட்டிகளை மாற்றிக் கொள்ளுகிறார்கள்! தங்களது பிள்ளைகளுக்கு எப்படி திருடுவது என்று சொல்லிக்கொடுத்து வளர்க்கிறார்கள்! முதலில் ஒழுக்கம் என்பதே இல்லை!  ஒழுக்கம் இல்லாதவனிடம் மான அவமானத்தை எதிர்ப்பார்க்க முடியுமா?

அதனால் நாம் சொல்ல வருவது என்ன? இவர்கள் தற்கொலை செய்து கொள்ளப் போவதுமில்லை! ஹரகிரி செய்து கொள்ளப் போவதுமில்லை!  ஒன்று மட்டும் நடக்கும். அவர்கள் சந்ததிகள்  அதனைச் செய்வார்கள்! அப்போது நாம் இருக்க மாட்டோம்! காரணமும் தெரியாது!

Sunday 23 September 2018

கைமாறுகிறதா இந்தியரின் சொத்து..?


ம.இ.கா.வின் சொத்து அதாவது இந்தியரின் சொத்து என்று கருதப்பட்ட ஏம்ஸ்ட் பல்கலைகழகம் கைமாறுகிறது என்கிற பத்திரிக்கைச் செய்தியைப் படித்த போது சும்மா ஒரு புன்னகையைத் தவிர கோபப்பட முடியவில்லை!~ இதெல்லாம் நமக்கு மரத்துப் போன செய்தியாகப் போய்விட்டது! மைக்கா ஹோல்டிங்ஸ் என்று நமது கைவிட்டுப் போனதோ அன்றே நமக்கும் ம.இ.கா.வுக்கும் உள்ள உறவுகள் அறுந்து போய் விட்டன!

நமது சமுதாயம் எல்லாக் காலங்களிலும்  யரோ ஒருவனை நம்பி வாழ்ந்த சமுதாயம். அவன் நல்லவனா கெட்டவனா என்று தீர ஆலோசிக்காமல் "தலைவனே தெய்வம்!"  என்று அவனை நம்பியே வாழ்ந்த சமுதாயம்! அதனாலேயே கெட்டுக் குட்டிச்சுவரான சமுதாயம்!

ஏம்ஸ்ட் பல்கலைக்கழகம் என்பது ஒரு காலத்தில் நாம் மிகவும் எதிர்பார்த்த ஒரு பல்கலைக்கழகம். குறைந்த செலவில் அதிகமான இந்திய டாக்டர்களை உருவாக்கும் என எதிர்ப்பார்த்தோம். அதில் தவறில்லை. காரணம் இந்தியர்கள் - ஏழை பணக்காரன் என்கிற வித்தியாசம் இல்லாமல் தங்களது பணத்தை அள்ளி அள்ளிக் கொடுத்து உருவாக்கப்பட்ட கல்லூரி அது. எதிர்ப்பார்ப்புகள் அதிகம். 

ஆனால் இதில் எதுவும் நிறைவேற வில்லை. இப்போதும் குறைவான இந்திய மாணவர்கள் தான் கல்வி கற்கின்றனர். மற்ற கல்லூரிகளை விட இங்குக்  கட்டணம் அதிகம்  என்றும் சொல்லப்படுகிறது. இப்போது இந்தக் கல்லூரி என்பது இந்தியர்களின் சொத்தும் அல்ல என்கிற பேச்சும் அடிபடுகிறது!

ஒன்றை நாம் இங்குக் கவனிக்க வேண்டும். அது ம.இ.கா. சொத்து அல்ல  என்று தான் துன் சாமிவேலு சொல்லுகிறார். இந்தியர்களின் சொத்தும் அல்ல அது. சாமிவேலுவின் குடும்பச்  சொத்து என்பதிலும் எந்த ரகசியமும் இல்லை!  ஆமாம், சாமிவேலு இந்தியர் தானே! ஆக, அந்தச் சொத்து வேறு எங்கும் போய்விடவில்லை! அது இன்னும் இந்தியர்களின் கையில் தான் இருக்கிறது! அதை நினைத்துப் பார்த்துத தான் நாம் நிம்மதி நாட வேண்டும்!

ஒரு வேளை அந்தக் கல்லூரி ஒரு சிங்கப்பூரியரிடம் விற்கப்பட்டு அது சீனர் கையில் மாறினால் அப்போது தான் அது இந்தியர்களின் கையை விட்டுப் போனதாக எடுத்துக் கொள்ளலாம். சீனர்கள் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். காரணம் அதிகப் பணம் போட்டு வாங்குபவர்கள் அவர்களாகத்தான் இருப்பார்கள்!

ஏம்ஸ்ட் பல்கலைக்கழகம் ம.இ.கா. சொத்தும் அல்ல. இந்தியர்களின் சொத்தும் அல்ல என்னும் நிலைமைக்கு ஆளான பின்னர் அது பற்றிப் பேச என்ன இருக்கிறது?

அப்படியே கைமாறினால் அதுவே துன் சாமிவேலு இந்த இந்திய சமுதாயத்திற்குச் செய்த கைம்மாறாக இருக்கட்டும்!

Saturday 22 September 2018

14 வயதா...?

நம் மலேசியா நாட்டில் எதனைச்  சொன்னாலும் அதற்கு எதிர்மறையாக பேசுவதற்கென்றே ஒரு சிலர் இருக்கின்றனர்! சமயங்களில் அதற்கு மதச்சாயம்  பூசுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். பதில் சொல்ல முடியாவிட்டால் இருக்கவே இருக்கிறது சமயம்.  யார் எதிர்க்க முடியும்?

சிறார் திருமணங்கள் வேண்டாம் என்று ஒயாது குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் பல இயக்கங்கள், அதிலும் குறிப்பாக மாதர் இயக்கங்கள், இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், சிஸ்டர்ஸ் இன் இஸ்லாம் சகோதரிகள் - இப்படிப் பல பேர் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் - இதோ இன்னொரு குரல் அதனை எதிர்த்து  ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது!

வேறு என்ன சொல்ல? சபா மாநில முப்தி டத்தோ பொங்சு என்கிற அஜிஸ் ஜபார் திருமண வயதைக் குறைக்க வேண்டுமென கூக்குரலிடுகிறார்!  பெண்களுக்கான திருமண வயதை 14 ஆகவும், ஆண்களுக்கு 16 வயது ஆகவும் குறைக்கப்பட வேண்டும் என ஆலோசனைக் கூறுகிறார்! விதிமுறைகளின் படி செயல்பட்டால்  இந்தக் குறைந்த வயதுடையோரின் திருமணங்கள் ஷாரியா சட்டப்படி  செல்லுபடி ஆகும் என்கிறார் அவர்.

இந்தத் திருமணங்கள் செல்லுபடி ஆகுமா, ஆகாதா என்பதல்ல பிரச்சனை.  சமயங்கள் இதனை ஏற்றுக் கொள்ளுகிறதா என்பதல்ல பிரச்சனை. இது உடற்கூறு சம்பந்தமானது. அவர்கள் பள்ளி செல்ல வேண்டியவர்கள். படிக்க வேண்டியவர்கள். புத்தகப் பைகளைச் சுமக்க வேண்டியவர்கள்; குழந்தைகளை அல்ல. இதனைச் சொல்லுவதற்குச் சமய அறிவு தேவை இல்லை. சராசரி அறிவே போதும். ஒரு தவறான செயலுக்குத் தங்களது  சமய நிபுணத்துவத்தைக்  காட்ட வேண்டிய அவசியம் இல்லை!

இவ்வளவு பேசுகின்ற இந்த முப்தி போன்றவர்கள் அவர்களில் குடும்பங்களில் இது போன்ற திருமணங்களை நடத்தி வைத்திருக்கிறார்களா? அல்லது தங்களது சக முப்திகள் நடத்தி வைத்திருக்கிறார்களா என்று பார்த்தால் சான்றுக்கு ஒன்று கூட பார்க்க முடியாது. காரணம் அவர்கள் பிள்ளைகள் படிக்க வேண்டும். பதவிகள் பெற வேண்டும்.  ஆனால் ஏழை வீட்டுப் பிள்ளைகள் 14 - 16 வயதில் திருமணம் செய்து கொண்டு வறுமையில் வாழ வேண்டும்.  அவர்களை இவர்கள் சமய ரீதியில் அதிகாரம் செலுத்த வேண்டும்.

முப்தியின் கருத்து மிகவும் வெறுக்கத்தக்கது. எதிர்க்க வேண்டிய கருத்து! வருந்துகிறோம்!

Friday 21 September 2018

ஊழல் ராணி..!


நம் நாட்டில் இதுவரை நாம் கேள்விப்படாத அளவுக்கு, நாட்டை வழி நடத்திய பிரதமராக இருந்த ஒருவர், செய்த ஊழல் நம்மை அதிர்ச்சியில் உறையச் செய்கிறது!

துன் சாமிவேலு ஊழல் செய்தார் என்றால் அது இந்திய சமுதாயத்தை மட்டுமே  பாதித்தது. ஆனால் நஜிப் செய்த ஊழல் இந்த நாட்டையே பாதித்தது. அனைத்து மலேசியர்களையும் பாதித்தது. மலேசிய சரித்திரத்தில் இவர் அளவுக்கு ஊழல் செய்த பிரதமர் வேறு யாரும் இல்லை. இனிமேலும் வரப்போவதும் இல்லை. 

ஒரு வேளை கடந்த பதினான்காவது பொதுத் தேர்தலில் வெற்றிப் பெற்று நஜிப் ஆட்சிக்கு வந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?  இந்த நாடு மலேசியர்கள் கையில் இருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும். சீனா இந்த நாட்டை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கும்!  மலேசிய நாட்டில், குவாந்தான் நகரத்தில், சீனப் பெருஞ்சுவர் ஒன்றை எழுப்பியது போல மற்ற நகரங்களிலும் தனது கைவரிசையக் காட்டியிருக்கும்!

இதற்கெல்லாம் காரணம் நஜிப் சீனாவுடன் செய்து கொண்ட அனைத்து வர்த்தக ஒப்பந்தங்களும்  சீனாவுக்குச் சாதகமாக அமைந்தது தான். ஏன் அப்படி செய்ய நேர்ந்தது? நஜிப் தான் செய்த பல ஊழல்களை மறைக்க வேண்டிய நிலையில் இருந்தார். ஒரு பக்கம் நாட்டை சீனாவிடம் அடகு வைத்தார். இன்னொரு பக்கம் நாட்டின் வளர்ச்சியில் சீனா நமக்கு உதவி வருவதாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்தார்.! 

சீனா தான் செய்கின்ற  வர்த்தகத்தில்  உள்ளூர் மக்களுக்கு வேலைகள் கொடுக்காமல் தனது சொந்த நாட்டிலிருந்தே வேலையாட்களை இறக்குமதி செய்து கொண்டிருந்தது! வேலை வாய்ப்புக்களில் அவர்களுக்குத் தான் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருந்தது!

எப்படி நஜிப்பால்  இப்படி செய்ய முடிந்தது? தனது மக்கள், தனது நாடு என்கிற உணர்வு இல்லாமல் எப்படி அவரால் இப்படி நாட்டுக்குத் துரோகம் செய்ய முடிந்தது? அதிகாரத்தில் உள்ளவர்கள் மனைவியரை நம்பி அதிகாரத்தில் இருக்கக் கூடாது என்பதை  நஜிப்பின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது. நஜிப் தான் ஊழலுக்குக் காரணம் என்று சட்டம் சொன்னாலும் அவர் மனைவி தான் காரணம் என்று மக்கள் சொல்லுகிறார்கள்!

ஊழல்! ஊழல்! ஊழல்!  ஊழல் ராணியா? ஊழல் ராஜாவா?

Thursday 20 September 2018

இது ஒரு நல்ல ஆரம்பம்..!


தமிழ்க்கல்வியின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை தரும் நல்லதொரு ஆரம்பம்! 

பிரதமர் துறை துணை அமைச்சர் பி.வேதமூர்த்தி  கல்வித்துறையைச் சார்ந்த உயர் அதிகாரிகளையும் பொறுப்பாளர்களையும் சந்தித்துப் பேசியிருக்கிறார். இதனை நாம் நல்ல சகுனமாகவே எடுத்துக் கொள்ளலாம். காரணம் இது நாள் வரை இப்படி ஒரு சந்திப்பு நடந்ததாக நாம் அறியவில்லை. இப்போது நடந்திருக்கிறது.

இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டவர்களில் கல்வித் துறையின் தேர்வு வாரியம் . தமிழ்ப்பாடப்பிரிவின் அதிகாரிகள்  ஆசிரியர் பிரதிநிதிகள் என்று பலர் கலந்து கொண்டனர்.

கல்வி சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகள் அமைச்சரின் பார்வைக்குக் கொண்டு வரப்பட்டன; விவாதிக்கப்பட்டன. குறிப்பாக தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாடு, இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் பயிற்றுவித்தல்,  தமிழ் இலக்கியம், மாணவர்களின் சரிவு, பெற்றோர்களின் அலட்சியம், தமிழ் வழிக் கல்வியின் மூலம் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை பிற மொழி பள்ளிகளுக்கு மாற்றுவதனால் வருகின்ற சிக்கல்கள் - இப்படிப் பல பிரச்சனைகள் அமைச்சருடன் கலந்து ஆலோசிக்கப்பட்டன.

அனைத்துப் பிரச்சனைகளையும் ஏற்றுக் கொண்ட அமைச்சர் குறைபாடுகள் அனைத்தும், அமைச்சரவை ஆதரவுடன்,  கட்டம் கட்டமாகத் தீர்க்கப்படும்  என்பதாக உறுதி அளித்துள்ளார்.

நடந்து முடிந்த பதினான்காவது தேர்தலுக்குப் பின்னர் நமது தமிழ்ப்பள்ளிகளின் குறைபாடுகளை யாரிடம் கொண்டு செல்லுவது என்கிற நிலை மாறி அமைச்சரே தனது அலுவலகத்தில் இந்தச் சந்திப்பை நடத்தியிருக்கிறார் என்பது வரவேற்கத்தக்கது. 

இனி தமிழ்ப்பள்ளிகளில் நிலவும் பிரச்சனைகளுக்கு அமைச்சரே பொறுப்பேற்றுக் கொள்வார் என நாம் நம்புகிறோம். பொதுவாக இந்தியர்களின் பிரச்சனைகள், குறைபாடுகள் அனைத்தும்  துணை அமைச்சர் வேதமூர்த்தியிடமே டாக்டர் மகாதிர் ஒப்படைத்திருக்கிறார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அவரது பணியை அவ்ர் செவ்வனே செய்வார் என நாம் எதிர்பார்க்கலாம்.

வேதமூர்த்தியை நாம் சாதாரண மனிதராக எடைபோட முடியாது. பத்தோடு பதினொன்று அல்ல அவர். அவர் போர்க்குணம் படைத்தவர். அவர் காலத்தில் நாம் எதிர்பார்ப்பவை நடக்கும் என நம்புகிறோம்.

நல்ல ஆரம்பம்! வரவேற்கிறோம்!

Wednesday 19 September 2018

வாக்களிக்கும் வயது குறைப்பு...!

வாக்களிக்கும் வயதை குறைப்பதற்கான ஒரு முடிவை அமைச்சரவை எடுத்திருப்பது  பாராட்டப்பட வேண்டிய ஒரு விஷயம்.

ஆம், இப்போது மலேசியர்கள் - 21 வயதிற்கு மேற்பட்டவர்கள் = வாக்களிக்கலாம் என்னும் நிலை மாறி இனி 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் வாக்களிக்கலாம் என்னும் நிலை வருகிறது! அடுத்த பொதுத் தேர்தலில் இந்த மாறுதல் வரும் என நம்பலாம்.

பதினெட்டு வயது என்பது பல வெளி நாடுகளுடன் ஒத்துப் போகிறது எனச் சொல்லலாம். தாய்லாந்து, இந்தோனேசியா,  இந்தியா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் வாக்களிக்கும் வயது பதினெட்டு.  இப்போது  மலேசியாவும் அந்நாடுகளுடன் சேர்ந்து கொள்ளுகிறது.

நடைமுறையில் கார் உரிமம் பெற வயது 18.  திருமணம் செய்து கொள்ள வயது 18. வங்கியில் கடன் பெற வயது 18,  கடன் அட்டை பெற வயது 18.  குடும்பச் சொத்துக்கள் பெறவும் வயது 18.  இப்போது இவைகளுடன் வாக்களிப்பும் சேர்ந்து கொள்ளுகிறது, வயது 18.

வயது 18 என்பது ஓரளவு முதிர்ச்சி அடைந்த வயது எனலாம். மாணவர்கள் இடைநிலைப்பள்ளிகளைக் கடந்து கல்லூரிகளுக்குப் போகின்ற வயது.  கல்லூரிகள் என்பது ஒரு மாணவனை இன்னும் அதிக முதிர்ச்சியுடைய மாணவனாக மாற்றி அமைக்க உதவுகின்றவை.  

வாக்களிக்கும் 18 வயதை இப்போது அமைச்சரவை ஏற்றுக் கொண்டிருக்கிறது. இதனைச்  சட்டபூர்வமானதாக ஆக்க அரசியல் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.  திருத்தங்கள் செய்ய நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு மடங்கு உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும்.  இதற்கு எதிர்கட்சிகளின் ஆதரவு தேவை. ஆதரவு தந்தால் மட்டுமே அந்தத் திருத்தம் நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படும். எதிர்கட்சிகளின் ஆதரவு இல்லை என்றால்  ... முடியாது! எனினும் எதிர்கட்சிகள் ஆதர்வு தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

வாக்களிக்கும் வயதை 18 ஆக குறைப்பதை நாம் வரவேற்கிறோம்!

Tuesday 18 September 2018

ஏன் பதவி விலகல்..?

சட்டத்துறைத் தலைவர் டோமி தாமஸ் எந்த வித காரணமுமின்றி பதவி விலகுகிறார் என்பதாக செய்திகள் வருகின்றன! அவர் சட்டத்துறைத் தலைவர் பதவி வகிப்பது  கடந்த நான்கு மாதங்களாகத்தான். அதற்குள் அவர் ஏன் பதவி விலக வேண்டும் என்பது நமக்குப் புரியவில்லை! அவரது சட்டத்துறைத் தலைவர் பதவி என்பது வெறும் அரசியல் நியமனம் அல்ல. ஏதோ ஒரு கட்சியில் இருந்தார் என்பதற்காக  அவருக்கு அந்தப் பதவி கொடுக்கப்பட்டது அல்ல. அது பாரிசான் ஆட்சியில் நடந்தது! இப்போது அது நடக்க வாய்ப்பில்லை. டோமி தாமஸின் திறமையின் அடிப்படையில் அவருக்கு சட்டத்துறைத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டது.

இது போன்ற "விலகல்"  வதந்திகளுக்கு யார் காரணமாக இருக்கக் கூடும்?  கொஞ்சம் ஆழமாகப் போனால் அம்னோ மட்டும் தான் நமது கண்ணுக்குத் தெரிகிறது. அவர்களைப் பொறுத்தவரை எந்தப் பதவிக்கும் தகுதி என்பதாக ஒன்றுமில்லை என்று சொல்லி சொல்லி, ஊட்டி ஊட்டி வளர்க்கப்பட்டவர்கள்! அதே போல சட்டத்துறைத் தலைவர் பதவிக்கும் வெறும் சட்டப்படிப்பு இருந்தால் போதும், பெரிதாக ஒன்றும் தேவை இல்லை என்று நினைப்பவர்கள்! இந்த நிலையில் முழுத் தகுதியோடு ஒருவர் பதவி வகிக்கிறார் என்றால் அது நிச்சயமாக அவர்களின் கண்களை உறுத்தும்!

அப்படி முழுத்தகுதியைக் கொண்டு ஒருவர் பதவி வகிக்கிறார் என்றால், அதுவும் ஓர் இந்தியர் என்றால் - அவர்களுக்கு அது நல்ல செய்தியாக இருக்க முடியாது! அதிலும் அவர் கிறிஸ்துவர் என்றால் அதனை அவர்களால் மன்னிக்கவே முடியாது! காரணம் அப்படித்தான் கடந்த அறுபது ஆண்டுகளாக அவர்கள் நம்ப வைக்கப்பட்டிருக்கிறார்கள்!

இன்னும் ஒரு சிலருக்கு வேறு மாதிரியான கருத்துக்களும் உண்டு. மலாய்க்காரரை விட மற்ற இனத்தவர்கள் அப்படி என்ன தகுதிகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பதாக!  காரணம் நாட்டிலுள்ள அத்தனை பல்கலைக்கழகங்களிலும், அத்தனை கல்லுரிகளிலும் தொண்ணூறு அல்லது நூறு விழுக்காடு மலாய்க்கார மாணவர்கள் தான் படிக்கிறார்கள்.  அப்படியிருக்க மற்ற இனததவரை எப்படி தகுதி உள்ளவர்கள் என்று சொல்ல முடியும்? வாய்ப்பே இல்லை என்பதாக நினைக்கிறார்கள்!

இவர்களைப் போன்றவர்கள் தான் சட்டத்துறை தலைவரை அடிக்கடி  சீண்டிக் கொண்டே இருக்கிறார்கள்! பதவி விலகல் என்று சொல்லிக் கொண்டு தங்களது காழ்ப்புணர்ச்சிகளை வெளியே கொட்டிக் கொண்டு இருக்கிறார்கள்!

ஒன்றை உறுதியாகச் சொல்லலாம்.  டோமி தாமஸ் எந்தக் காலத்திலும் தன் விருப்பப்படி பதவி விலகப் போவதில்லை. அரசாங்கம் ஏப்போது அவருக்கு ஓய்வு கொடுக்கிறதோ அப்போது தான் அவர் பதவி விலகுவார்.

அது வரை இது போன்ற பேச்சுக்களுக்கு காது கொடுக்க வேண்டாம்!

Monday 17 September 2018

பத்திரிக்கையிலும் குண்டர்களா...?

நாம் வாசிக்கும்  தினசரி நாளிதழ் கிடைக்கவில்லை என்றால் எதனையோ இழந்தது போல், எல்லாமே இயங்காதது போல், ஓர் ஏமாற்றம்  ஏற்படும்! அதுவும் தினசரி வாசிப்பவர்களுக்கு அது இன்னும் பெரிய ஏமாற்றத்தைக் கொடுக்கும்.

நான் தமிழ் மலர் வாசகன். கடந்த ஞாயிற்றுக் கிழமை (16.9.2018) தமிழ் மலர் கிடைக்கவில்லை. வழக்கமாக வாங்குபவரிடம் விசாரித்தேன். பத்திரிக்கை வரவில்லை என்றார். ஏன்? தெரியவில்லை, சிரம்பானில் கிடைக்கவில்லை! என்றார்.

நான் கட்டுரை பிரியன். தலைமையாசிரியர் எம்.ராஜனின் கட்டுரை, ந.பச்சைபாலனின் கட்டுரை, வழக்கறிஞர் சீலனின் கட்டுரை  -  இவர்கள் எழுதும் கட்டுரைகள் எல்லாம் எனக்குப் பிடிக்கும். மற்ற நாள்களி,ல் மலாக்கா முத்துக்கிருஷ்ணனின் கட்டுரைகள் எனக்குப் பிடித்தமானவை.  ஜெர்மனியிலிருந்து எழுதுகின்ற ஒரு பேராசிரியையின் கட்டுரையையும் வாசிப்பதுண்டு.

இதனை ஏன்  நான் சொல்லுகிறேன் என்றால் இவைகள் எல்லாம் தினசரி பழக்கங்கள். இந்த ஞாயிற்றுக் கிழமை குறிப்பாக மூன்று கட்டுரைகளை நான் இழந்துவிட்டேன்! 

 தினசரி பத்திரிக்கைகள் வருவதில் ஏன் இந்த சுணக்கம்? பத்திரிக்கைக்களிடையே உள்ள போட்டி ஒரு காரணமாக இருக்கலாம். அதுவும் ஞாயிறு பதிப்பு முக்கியமானது. அதனால் மற்ற பத்திரிக்கைகள் அந்த குறிப்பிட்ட தினசரியை வாசகர்களுக்குப் போய்ச் சேராதவாறு "உருவி" விடுவார்கள்! ஏற்கனவே இதனை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்!  குண்டர் கும்பல்கள் எல்லாத் துறைகளிலும் புகுந்து விட்டார்கள்! என்ன செய்வது?  அல்லது இப்படியும் நடக்கலாம். பத்திரிக்கையை வைத்துக் கொண்டே அந்தப் பத்திரிக்கை இல்லை என்று சொல்லலாம்! அதை நானே பார்த்திருக்கிறேன்! அதற்குக் காரணம் ஏதோ ஒரு  பத்திரிக்கை  அவர்களுக்குக் கமிஷன் அதிகமாக கொடுப்பதற்கு ஒப்புக் கொண்டிருக்கும்!

எல்லாத் துறைகளிலும் பணம் விளையாடுவது போல்  இங்கும் விளையாடுகிறது! இதையெல்லாம் மீறி தான் பத்திரிக்கைகள் செய்திகளைக் கொண்டு வருகின்றன. கௌரவமே இல்லாதவர்கள் எல்லாம் பத்திரிக்கைத் துறைக்கு வந்தால் இப்படித்தான் நடக்கும். அரசியல்வாதி என்றைக்குப் பத்திரிக்கையில் தலையிடுகிறானோ அன்றே பத்திரிக்கைகளும் அரசியல் நடத்த வேண்டியுள்ளது!

பத்திரிக்கைகள் என்பது அறிவு சார்ந்தது. மக்களுக்கு உலக விஷயங்களைக் கொண்டு வருவது. ஏனோ தமிழன் மட்டும் எல்லாவற்றிலும் அறிவை இழந்து சொந்தப் பிரச்சனைகளைக் கொண்டு வருகிறான்!

இப்போது மூன்று கட்டுரைகள் போய்விட்டன! என்ன செய்யலாம்?

வாழ்த்துகிறேன், நயன்..!


திரையுலகிளும் சில நல்லவர்கள் அவ்வப்போது தோன்றி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடுகின்றனர்! நடிகர் அஜீத்தைப் பற்றி பேசும்போது ஒவ்வொரு படத்திலும் தன்னோடு பணி புரிந்தவர்களுக்கு  - அதுவும் கீழ் மட்டம் வரை - அனைவருக்கும் உதவி செய்வார் என சொல்லுவதுண்டு. அவருடைய ஓட்டுனருக்கு உதவினார், தோட்டக்காரருக்கு உதவினார் என்றெல்லாம் செய்திகள் வருவதுண்டு. நகைச்சுவை நடிகர் விவேக்கும் அஜீத்தைப் பற்றி பெருமையாகவே பேசியிருக்கிறார். அதனால் அது உண்மையாகவே இருக்கும்.

இப்போது நடிகை நயன்தாராவை பற்றி சில நல்ல செய்திகளும் வருவதுண்டு. வேறு எந்த நடிகைகளுக்கும் இல்லாத பெருமை நயனுக்கு உண்டு.  அவருடைய நடிப்பைப் பற்றி நான் பேசவில்லை. அவர் நடித்த ஏதோ ஒரு படம் பார்த்ததாக ஞாபகம் உண்டு. நான் பேச வருவதெல்லாம் அவருடைய குணாதிசயங்கள் பற்றி. அவருடைய பெருந்தன்மையைப் பற்றி.

யோகி பாபு என்பவர் மிகச் சாதாரண நடிகர். சினிமாவில் ஓரிரு காட்சிகளில் வருபவர். எந்த சினிமா பின்னணியும் இல்லாதவர்.  அப்படி ஒன்றும் அழகு என்றும் சொல்லுவதற்கும் இல்லை. ஓர் முரட்டுத் தோற்றம். இவர் நயன்தாராவுடன் நடித்ததன் மூலம் இப்போது அவர் பெரிய நகச்சுவை நடிகர் ஆகிவிட்டார்! நயன் தாரா மூலம் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புக்கள் வருகின்றன. அதனைத் தொடர்ந்து மற்ற இயக்குனர்களும் அவரை தங்களது படங்களில் நடிக்க வைக்கின்றனர்.

ஏதோ ஒரு சராசரி மனிதர் தான் யோகி பாபு.  சினிமாவில் வளரத் துடித்துக் கொண்டிருப்பவர்.  ஆனால் அவர் உயரம் என்னவென்று அவருக்குத் தெரியும். மற்ற பிரபல நடிகர்கள் அவரை கண்டு கொள்ளவில்லை. ஆனாலும் சினிமாவையே தனது பிழைப்பாக எடுத்துக் கொண்டவர். அவரிடம் திறமை உண்டு. உயர வேண்டும் என்னும் வெறி உண்டு. என்ன வாய்ப்புக்கள் கொடுத்தாலும் அதனைப் பிடித்துக் கொண்டு வளர வேண்டும் என்னும் கொள்கை உண்டு.

இந்த நேரத்தில் தான் நயன் அவருக்கு உதவினார். உதவி சரியான இடத்தில், சரியான நேரத்தில் வந்தது. நயனுக்கும் அவர் மேல் ஒரு அனுதாபம். அவரும் உதவினார். தொடர்ந்து அவரது படங்களில் வாய்ப்புக்கள் கொடுத்தார். 

இப்போது யோகி பாபு முதன்மையான நகைச்சுவை நடிகராக மாறிவிட்டார். அதனை அதிர்ஷ்டம் என்று சொல்லக் கூடாது. அது அவரது உழைப்புக்கான பலன். வெற்றி பெற வேண்டும் என்னும் அவரது வெறி. தங்களது இலட்சியங்களை நோக்கி உழைத்துக் கொண்டே இருப்பவர்கள் வெற்றி பெறுவார்கள் என்பது தான் உலக வழக்கு.

நயன்தாராவின் பெருந்தன்மையைப் பாராட்டுகிறேன்! ஓர் ஏழையை உயர்த்துவதற்கு நல்ல மனம் வேண்டும். அது அவரிடம் இருக்கிறது! வாழ்த்துகிறேன்!

Saturday 15 September 2018

நோக்கம் நல்லதாகத் தெரியவில்லை..!

நடக்கப் போகின்ற  போர்ட்டிக்சன் நாடாளுமன்ற  இடைத் தேர்தலில் அன்வரை இப்ராகிமிற்காக  அம்னோ தலைவர்கள் சிலர் பிரச்சாரம் செய்ய விரும்புவதாக செய்திகள் வெளியாகிருக்கின்றன!  அதனாலென்ன! செய்திகள் செய்திகளாகவே இருக்கட்டும்!

எப்படிப் பார்த்தாலும் இதனை நாம் வரவேற்க வழியில்லை.  அம்னோ தலைவர்களில் ஊழலற்ற தலைவர் என்று யாரைச் சொல்லுவது? ம.இ.கா. வினரைப் போலவே அத்தனையும் ஊழல் பெருச்சாளிகள்!  ஒன்று திமிங்கலம்! இன்னொன்று குட்டி திமிங்கலம்! ஒன்றொக்கொன்று சளைத்தது அல்ல!

அம்னோ தலைவர்கள் பக்காத்தானுக்கு நல்லது செய்வார்கள் என்றெல்லாம் நாம் எதிர்பார்க்க முடியாது. அன்வாரை எப்படிக் கவிழ்ப்பது என்று இப்போதும் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கும் முதலைகள் அவர்கள்!  அம்னோவில் நல்லவர்கள் என்றெல்லாம் ஒருவரும் இல்லை!  அவர்கள் உதவிகரம் நீட்டுவது உதவி செய்ய அல்ல எட்டி உதைப்பதற்கு என்பதை அன்வார் புரிந்து கொள்ள வேண்டும்! அவர்கள் உதவி தேவையே இல்லை! பாம்பு நஞ்சைத் தான் கக்குமே  தவிர நல்லது எதுவும் அங்கிருந்து வராது! அம்னோவினர் அம்பைத் தான் விடுவார்களே தவிர அன்பை அல்ல!

இதனை அன்வார் புரிந்து கொள்ளுவார் என நம்புகிறோம்.  அது மட்டுமல்ல. பி.கே.ஆர்.தலைவர்களும் அதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.  பி.கே.ஆர்.ருக்காக பிரச்சாரம் செய்ய வருகிறோம் என்று சொல்லுபவர்களை "நன்றி!" என்று சொல்லி திருப்பி அனுப்ப வேண்டுமே தவிர அவர்களை வரவேற்பது என்பது சிக்கலில் கொண்டு போய் சேர்க்கும்.

போர்ட்டிக்சன் தொகுதி என்பது மலாய்க்காரர்கள் மட்டும் அல்ல சீனர்களும் இந்தியர்களும் அதிகம் உள்ள தொகுதியும் கூட! ஏற்கனவே மலாய்க்காரர்கள் ஓரளவு அம்னோவை ஒதுக்கிவிட்டனர். சீனர்களும் இந்தியர்களும் முற்றிலுமாக பாரிசானை ஓரங்கட்டிவிட்டனர்! 

நாம் சொல்ல வருவதெல்லாம் ஒன்று தான். அம்னோவின் நோக்கம் சரியானதல்ல!  அவர்களை வரவேற்பதும் சரியானதல்ல!

Friday 14 September 2018

ஏன் இந்த எதிர்ப்பு...?


பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராகிம் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதை பல தலைவர்கள் விரும்பவில்லை!

அவர்கள் சொல்லுகின்ற காரணங்களில் உண்மை இல்லை என்று சொல்லிவிட முடியாது.  அவருடைய மனைவி தனது தொகுதியை அவருக்கு  விட்டுக் கொடுக்கலாம்.  ஏன் அவரின் மகள் கூட அவரது தொகுதியை விட்டுக் கொடுக்கலாம். இப்படி தனது சொந்த உறவுகளை புறந்தள்ளிவிட்டு நடப்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் டேனியல் பாலகோபால் அப்துல்லாவை  ராஜினாமா செய்ய வைத்தது சரியான முடிவா என பலரும் கேள்வி கேட்பது சரி தான்.

அன்வாரின் மனைவி, வான் அஸிஸா அவரது பாண்டான் நாடாளுமன்ற தொகுதியை தனது கணவருக்கு விட்டுக் கொடுத்திருக்கலாம். அவர் அதனைச் செய்யவில்லை. வான் அஸிஸா நாட்டின் துணைப் பிரதமராக இருப்பவர்.  அவர் தனது தொகுதியை விட்டுக் கொடுத்தால் தனது துணைப் பிரதமர் பதவியை இழக்க நேரும். அப்படியே அவர் விட்டுக் கொடுத்து அன்வார் வெற்றி பெற்றால் அவர் துணைப் பிரதமராக வர விரும்பமாட்டார்! காரணம் உண்டு.  டாக்டர் மகாதிரிடம் துணப்பிரதமராக இருந்தவர்கள் யாரும் பிரதமராக வந்ததில்லை என்கிற பொதுவான ஒரு கருத்து மக்களிடையே உண்டு! அந்த அச்ச உணர்வு அவரின் குடும்பத்தினரிடையேயும் இருக்கலாம்! அதுவும் ஒரு காரணமாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்!

அன்வாரின் மகள், நூருல் இஸ்ஸா அவரது பெர்மாத்தாங் பாவ் தொகுதியை தனது தந்தைக்கு விட்டுக் கொடுக்கலாம். நூருல் இஸ்ஸா தொடர்ந்து அரசியலில் இருக்கப் போகிறவர். ஒரு வேளை வருங்காலங்களில் பிரதமராக வரக் கூடிய வாய்ப்பும் உண்டு.  தாயார் வான் அஸிஸா அடுத்த தேர்தலில் போட்டியிடமாட்டார் என நம்பலாம். ஆனால் மகள் அரசியலின் தொடர்கதை!

இப்படிப் பல கோணங்களில் யோசித்துத் தான் அன்வார் போர்ட்டிக்சனில் போட்டி இடுகிறார்.  வருங்காலப் பிரதமர் என்னும் முறையில்  போர்ட்டிக்சன் தொகுதி மட்டும் அல்ல நெகிரி செம்பிலான் மாநிலமும் நல்ல முன்னேற்றத்தைக் காணும் என நம்பலாம்.   மேலும் பிரதமர்கள் அனைவரும் வடப் பகுதியில் இருந்து வந்தவர்களாகவே இருக்கிறார்கள். இப்போது தெற்குப் பகுதிக்கும் ஒரு வாய்ப்பு. நல்லது தானே!

இந்த எதிர்ப்புக்களையெல்லாம் தாண்டி அன்வார் வெற்றி பெறுவார்! வாழ்த்துகிறோம்!

பகுதி மானியம் பெறும் பள்ளிகள்..!

ஜோகூர் ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் ராமகிருஷ்ணன் நல்லதொரு செய்தியைச் சொன்னார். கேலாங் பாத்தா தமிழ்ப்பள்ளியின் நிகழ்ச்சி ஒன்றில்  பேசுகின்ற போது அவர் சொன்ன ஒரு சில விஷயங்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன.

கேலாங் பாத்தா தமிழ்ப்பள்ளியில் 90 மாணவர்களே கல்வி பயில இயலும். ஆனால் கல்வி பயிலுபவர்களோ 170 மாணவர்கள்!  குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகளை மூட வேண்டும் என்று சொல்லுபவர்கள் இப்படி அதிகமான மாணவர்களைக் கொண்ட பள்ளிகளுக்குக் கூடுதலான கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்னும் எண்ணம் ஏன் எழவில்லை?   

மாணவர்கள் ஓடி ஆடி விளையாட விளையாட்டுத் திடல் இல்லை. கல்வி கற்க போதிய வகுப்பறைகள் இல்லை. அறிவியல் கூடம் இல்லை. இப்படிப் பல இல்லைகள்!  இந்த இல்லைகளுக்கிடையே  ஆசிரியர்கள் தங்களது பணிகளைச் செய்கிறார்களே,  அவர்களைப் பாராட்ட வேண்டும்!

தோட்டப்புறங்களிலிருந்து தமிழ்ப்பள்ளிகள் நகர்ப்புறங்களுக்கு மாற்றம் கண்டாலும் கல்வி அமைச்சு அவைகளை  தொடர்ந்து  தோட்டப்புறப் பள்ளிகளாகவே,  தங்கள் ஆவணங்களில்  எந்த மாற்றமும் செய்யாமல்,  தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்கிறது. காரணம் அதன் மூலம் அந்தப் பள்ளிகளைப் பகுதி நேரப் பள்ளிகளாக தொடர்ந்து வைத்திருக்க கல்வி அமைச்சுக்கு வசதியாக இருக்கிறது! அதனால் குறைவான மானியத்தைக் கொடுத்து அதிகமான மானியத்தை இவர்கள் பாக்கெட்டில் போட்டுக் கொள்கிறார்களோ என்னவோ!பாரிசான் ஆட்சியே ஊழல் ஆட்சி தானே! கேலாங் பாத்தா தமிழ்ப்பள்ளியே அதற்குச் சான்று. அது இன்னும் தனது பழைய பெயரிலேயே - ஹொக் லாம் தோட்டத் தமிழ்பள்ளி - என்னும் பெயரிலேயே தொடர்கிறது!

எது எப்படியோ இராமகிருஷ்ணன் நல்லதொரு முயற்சியில் இறங்கி இருக்கிறார். வாழ்த்துகிறோம்! 

இந்த நேரத்தில் கல்வி அமைச்சர் சமீபத்தில் சொன்ன ஒரு செய்தியையும் இராமகிருஷ்ணன் அவர்களுக்கு நினைவுறுத்துகிறோம். பகுதி உதவி பெறும் பள்ளிகள் முழு உதவி பெறும் பள்ளிகளாக மாற வேண்டுமானால்  முதல் தகுதி அவைகள் அரசாங்க நிலத்தில் இருக்க வேண்டும் என்பது தான்.  அதனால் பகுதி உதவி பெறும் பள்ளிகள் அனைத்தையும் அரசாங்கப்பள்ளிகளாக மாற்ற வேண்டும். இது முடியுமா என்பதல்ல கேள்வி.  இது முடியும். அரசாங்கம் நினைத்தால் இது முடியும். முன்பு இருந்த அரசாங்கம்,  ம.இ.கா. வுக்கு இது தேவை இல்லை.  நமது தேவைகளை அவர்கள் காதில் போட்டுக் கொள்ளவில்லை. ஆனால் இப்போது முடியும்.

இராமகிருஷ்ணன் அவர்கள் தனது கடமையைச் செய்வார் என நம்புவோம்!

Thursday 13 September 2018

நாடகத் தொடர்களை எப்படி ஒழிப்பது?

இப்போது தமிழ் நாட்டில் நடக்கின்ற பல குடும்பப் பிரச்சனைகளுக்கு தொலைக்காட்சி நாடகத் தொடர்களே காரணம் என்பதாக சொல்லப்படுகின்றது. அனைத்திலும் வன்மம்! வன்மம்! வன்மம்! ஒன்று: அடிதடி வன்மம்! இன்னொன்று பேச்சு வன்மம்!

பேசப்படுகின்ற சொல்லாடல்கள் மூலம் வருகின்ற வன்மம் என்பது மிகக் கடுமையானது.  நாடகங்களில் வருகின்ற கதாபாத்திரங்கள் பேசுகின்ற பேச்சுக்கள் பார்க்கின்றவர்களை மிகவும் கீழ்த்தரமான நிலைக்குக் கொண்டு செல்கின்றன என்பது உண்மையிலும் உண்மை! நமது குடும்பங்களில் நாம் நினைத்துப் பார்க்காத பல விஷயங்களை நமக்குக் கற்றுத் தறுகின்றன. கெடுதல் செய்வதற்கான தூண்டுதல்களை ஏற்படுத்துகின்றன! புதிய கோணத்தில் குடும்பங்களில் புகைச்சலை ஏற்படுத்துகின்றன.

நோக்கம் நல்லவைகளாக இருந்தால் பாராட்டலாம். ஆனால் இந்தத் தொடர்களில் மூலம் நல்லவைகள் சம்பந்தப்படவில்லை. அனைத்தும் கெடுதல்களைச் சொல்லிக் கொடுக்கின்றன. எல்லாம் பழிவாங்கள்!  கணவர்களை வாழ விடுவதில்லை! மனைவியர்களை வாழ விடுவதில்லை! அக்காள் தங்கையை வாழ விடுவதில்லை! தங்கை அக்காளை வாழ விடுவதில்லை!

தொலைகாட் சி முன்னால் உட்கார்ந்து கொண்டு ஒவ்வொரு நாளும் தரித்திரங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்! குடும்ப அமைதியை இழந்து கொண்டிருக்கிறோம். மருமகள்களையும், மாமியார்களையும் எப்படி ஒழிப்பது என்று பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவைகளைப் பார்த்து நாமும் எப்படிப் பின்பற்றுவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம்.

கள்ளக்காதலுக்காக பிள்ளைகளையே கழுத்தறுத்து கொல்லும் அளவுக்கு தாய்மார்களின் இதயம் கல்லாகிவிட்டது. பிள்ளைகளை  எப்படிக் கொல்லுவது என்பதற்கெல்லாம் பாடம் நடந்து கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு தூண்டுதல் இந்த நாடகங்கள் மூலமாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது. 

ஆமாம், நாம் என்ன செய்யப் போகின்றோம்? இப்படியே பார்த்துக் கொண்டு நமது வாழ்க்கையை நரகமாக ஆக்கிக் கொள்ளப் போகிறோமா? ஆர்ப்பாட்டம்  அது இது என்று எதுவும் தேவையில்லை. இந்தத் தொடர்களுக்கு எதிராக கண்டனங்கள் எழ வேண்டும். நமது முகநூலை எதற்கு எதற்கோ பயன்படுத்துகிறோம். தேர்தல் களத்தையே மாற்றி அமைத்திருக்கிறோம்.  இந்த நாடகத் தொடர்களுக்காக முகநூலைப் பயன்படுத்துவோம்.

மாற்றியமைப்போம்!

Wednesday 12 September 2018

அன்வார் போர்ட் டிக்சனில் போட்டியிடுகிறார்..!

அதிகாரபூர்வமான செய்தி: பி.கே.ஆர், தலைவர் அன்வார் இப்ராகிம் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற  தொகுதியில் போட்டியிடுகிறார். நடப்பு  நாடாளுமன்ற உறுப்பினர் டேனியல் பாலகோபால்  அப்துல்லா அன்வாருக்காக இந்தத் தொகுதியை விட்டுக் கொடுக்கிறார். இந்தத் தொகுதிற்கான இடைத் தேர்தல் மிக விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கலாம்.

அன்வார் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறுவார் என்பதில் சந்தேகமில்லை. பி.கே.ஆர். தலைவர் அன்வார் இங்குப் போட்டியிடுவது நல்ல செய்தி தான்.  ஆனாலும் மனதிலே ஒரு சிறிய நெருடல். காலங்காலமாக இது ம.இ.கா. தொகுதி.  இந்தியர்களை அதிகமாகக் கொண்ட தொகுதி. எனக்குத் தெரிந்து முதன் முதலில் இங்கு போட்டியிட்டவர் மகிமா சிங் என்னும் சீக்கியர். இவரின் பெயரைச் சொன்னதும் ஒரு முக்கியமான செய்தி தொடர்ந்து வரும். "தமிழனுக்கு  கள் வாங்கிக் கொடுத்தால் போதும் அவன் ஓட்டுப் போடுவான்!" என்னும் உண்மையை அன்றே சொன்னவர்! வருத்தப்பட ஒன்றுமில்லை. அப்போதும் இப்போதும் ஒரே நிலை தான்!

அதற்குப் பிறகு துணை அமைச்சர்  கு.பத்மநாபன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் காலத்தில் அவர் மலாய்க்காரர்களுக்குத் தான் முதலிடம் கொடுத்தார். அதன் பின் வந்தவர்கள் அவரையே முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டனர். அவர்கள் சொன்ன காரணம்:  மலாய்க்காரர்களுக்கு முதலிடம் கொடுங்கள். இந்த ஐந்தாண்டு காலத்தில் நான்கு ஐந்து கோயில்களுக்கு பணம் கொடுத்தால் போதும். தமிழர்கள்  திருப்தி அடைந்து விடுவார்கள்! அதுவும் அவர்களுக்குப் பல ஆண்டுகள் வெற்றியைக் கொடுத்தன! அதாவது பள்ளிகள் வேண்டாம் கோயில்கள் போதும்!

போன தேர்தலில் தமிழன் விழித்துக் கொண்ட போது அந்தத் தொகுதி எதிர்கட்சிக்குப் போனது! டேனியல் பாலகோபால்  அப்துல்லா வை நம் இனத்தவர்கள் ஒரு தமிழராகத்தான் பார்த்தார்கள். ஆனால் இப்போது அன்வார் போட்டியிடுவது வருங்காலங்களில் அது மலாய்க்காரர் தொகுதியாக ஆகிவிடுமோ என்னும் எண்ணத்தை ஏற்படுத்துகிறது!  இருந்தாலும் அன்வார் நல்ல சேவையாளர். அதனால் பயப்பட ஒன்றுமில்லை! அதுவே தொடர்ந்தால் வருங்கால பிரதமரின் தொகுதி என்னும் அந்தஸ்தைப் பெறும்! 

இப்போது பாரிசான் சார்பில் யார் போட்டியிடுவார்? அது ம.இ.கா. வின் தொகுதி என்னும் வகையில் ம.இ.கா. வேட்பாளரே நிறுத்தப்படுவார் என நம்பலாம். அப்படி இல்லாவிட்டால் "இதுவும் போச்சிடா!" என்று தலையில் அடித்துக் கொள்ள வேண்டியது தான்!

அன்வாரை நாங்கள் வரவேற்கிறோம்!

Tuesday 11 September 2018

புதிய கட்சி ஆரம்பித்தார் வேதா..!


இந்தியர்களுக்கென புதிய கட்சியை ஆரம்பித்திருக்கிறார் ஹின்ராஃ தோற்றுனரும், பிரதமர் துறையின் அமைச்சருமான மாண்புமிகு வேதமூர்த்தி பொன்னுசாமி அவர்கள். கட்சியின் பெயர் எம்.ஏ.பி. அதாவது  MALAYSIAN ADVANCEMENT PARTY. தமிழில்: மலேசிய முன்னேற்றக் கழகம். 

பொதுவாக நம்மிடம் உள்ள கேள்வி: இந்தியர்களுக்கென தனி  அரசியல் கட்சி தேவையா என்பது தான். காரணம் நாம் எந்த ஒரு தொகுதியில் நின்றாலும் மலாய்க்காரர்-சீனர்  ஆதரவு இல்லாமல் வெற்றி பெற முடியாது என்பது மட்டும் நமக்குத் தெரியும்!  ஒரு சட்டமன்ற தொகுதி அல்லது ஒரு நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெறுவது என்பதெல்லாம் நமக்குச் சாத்தியமே இல்லை! ஆனால் ஒன்று.  சுமார் 64 நாடாளுமன்ற தொகுதியில் நம்முடைய ஆதரவு இல்லாமல் வேற்று இனத்தவர்கள் வெற்றி பெற வாய்ப்பில்லை! அதனையும்  ஏற்றுக் கொள்ள வேண்டும்!

இப்போது பக்காத்தான் கூட்டணியில் உள்ள கட்சிகளில் மலாய் ஆதரவு கட்சிகள், சீன ஆதரவு கட்சிகள் எவை என நமக்குத் தெரியும். ஆனால் இந்தியர்களுக்கு ஆதரவான கட்சிகள்.....? எல்லாக் கட்சிகளுமே பல்லின கட்சிகள் என்பதாகவே கூறிக் கொள்ளுகின்றன. ஆனால் பிரச்சனைகள் வரும் போது மலாய் ஆதரவு கட்சிகள் எது, சீன ஆதரவு கட்சி எது என்பது வெளிப்படையாகவே தெரிகின்றன! ஆனால் இந்தியர்களுக்குக் குரல் கொடுக்க எந்தக் கட்சியும் இல்லை என்பது இப்போதைய பக்காத்தான் வரை நமக்குத் தெரிகிறது!

அதனால் ம.மு.க.அமைவதை நான் வரவேற்கிறேன்.  நம்முடைய பிரச்சனைகளைக் கொண்டு செல்ல நமக்கோர் அமைப்பு வேண்டும்.  நமக்கு  வலிமையான அரசியல் தேவை. இப்போது நம்முன் உள்ள பிரச்சனைகளை  யாரும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. அடையாள அட்டை,  குடியுரிமை, தமிழ்ப்பள்ளிகள் சார்ந்த பிரச்சனைகள் - இவைகள் எல்லாம் இழுத்துக் கொண்டே போகும் எனும் அறிகுறிகளே தென்படுகின்றன! முடிவுக்குக் கொண்டு வருவார்கள் எனத் தோன்றவில்லை.  கட்சிகளில் உள்ள இந்தியத் தலைவர்கள் வாய்த் திறப்பார்களா? தெரியவில்லை! 

பிரச்சனைகளை அடையாளங்கண்டு அதனைத் தக்க இடத்திற்குக் கொண்டு செல்ல வேதமூர்த்தி போன்ற தலைவர்களே நமக்குத் தேவை. அவர் தனி ஆளாக, தனி கட்சியாக இருக்கிறார். யாருக்கும் பயப்பட ஒன்றுமில்லை! ஏற்கனவே பதவியைத் தூக்கி எறிந்தவர்.  இவரைப் போன்றவர்கள் தான் இந்த சமுதாயத்தை வழி நடத்த முடியும்.

ம.மு.க. வெற்றி பெற வாழ்த்துகிறேன்!

Sunday 9 September 2018

ஏன் இந்தப் புறக்கணிப்பு..?

நமது தமிழ்ச் சமூகம்  தொடர்ந்தாற் போல  அறுபது ஆண்டுகள் ஏமாற்றப்பட்ட ஒரு சமூகம். முன்னாள் அரசாங்கம் நம்மை முட்டாளாகவே வைத்திருந்த ஒர் சமூகம். அந்த முட்டாள் தனத்துக்கு,  பாரிசான் அரசாங்கத்தோடு  நல்ல முறையில் ஒத்துழைப்புக் கொடுத்து உதவியவர் துன் சாமிவேலு என்னும் பெருமகனார்!

ஆனால் நாம் அதனை மறக்க நினைக்கிறோம். மறந்தும் விட்டோம். அதனால் தான் முன்னாள் அரசாங்கத்தை 'துன்னு'னு தூக்கி அறிந்து விட்டோம்! புதிய பக்காத்தான் அரசாங்கத்தை அரியணை ஏற வைத்ததில் நமது பங்கு அளப்பறியது. இதனை நாம் மீண்டும் மீண்டும்  பக்காத்தான் அரசாங்கத்திற்கு நினைவூட்ட வேண்டியுள்ளது. பக்கத்தான் அரசாங்க இந்திய தலைவர்களுக்கும் அவ்வப்போது தலையில் தட்ட வேண்டியுள்ளது!

மலேசிய கல்வி ஆலோசனை மன்றத்தில் ஒருவர் கூட இந்தியர் இல்லை என்பது தான் இப்போதைய அதிர்ச்சியான செய்தி. இது எப்படி நடந்தது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. மன்றத்தில் இடம் பெற இந்தியர் ஒருவர் கூட தகுதி பெறவில்லையா எனும் கேள்வி எழுகிறது. கல்வி மன்றம் என்னும் போது இந்தியர்களைப் பொறுத்தவரை கல்வி என்பது முக்கியமான துறை.  கல்வித் துறையில் நமக்குப் பல பிரச்சனைகள் இருக்கின்றன.  யார் அவைகளைத் தீர்த்து வைப்பார் என்பதில் இப்போது பல சந்தேகங்கள் கிளம்பியிருக்கின்றன.

இது வரை கல்வி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் யாரிடமும் எடுத்துச் செல்லப்படவில்லை.  கல்வி பிரச்சனைகள் அனைத்தும் நமக்கு எட்டாக் கனியாகவே இருக்கின்றன. யாரிடம் செல்வோம்? கல்வி அமைச்சர் அம்னோ அமைச்சரைப் போலவே நடந்து கொள்ளுகிறார்.

சீனர்கள் இப்போது தலை நிமிர்ந்து நிற்கிறார்கள். அவர்களிடம் தலைவர் என்று தனியாக இல்லை. அனைத்துச் சீன அமைச்சர்களும் தலைவர்கள் போலவே நடந்து கொள்ளுகிறார்கள். அவர்களின் தேவைகளை அவர்களே கையில் எடுத்துக் கொள்ளுகிறார்கள். நமது அமைச்சர்கள் அப்படி செய்ய முடியாது என்று நினைக்கிறார்கள். நாம் நான்கு அமைச்சர்கள் என்கிற மிதப்பில் இருக்கிறோம்! அதிலிருந்து விடுபட வேண்டும்.  நான்கு அமைச்சர் என்ன, நானுறு அமைச்சர்கள் இருந்தாலும் நமது சமுதாயத்திற்குப் பயன்படவில்லை என்றால் அவர்கள் வெறும் குப்பை தான்.  

நாம் தலைவர்கள் கவனத்திற்கு மீண்டும் கொண்டு வருகிறோம். கல்விப் பிரச்சனையை எப்படிக் கையாள்வது என்பதை நீங்களே ஒரு முடிவு செய்யுங்கள். கல்வி ஆலோசனை மன்றத்திற்கு நமக்கும் ஒரு பிரதிநிதித்துவம் தேவை என்பதை நீங்கள் தான் கொண்டு செல்ல வேண்டும். புதிய செனட்டர்கள் வரும் போது நமக்கும் செனட்டர் பதவிகள் தேவை என்பதும் உங்கள் வேலை தான். எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்துக் கொண்டு போனால் அப்புறம் உங்களுக்கும் சாமிவேலுவுக்கும் என்ன வித்தியாசம்?

நீங்கள் பதவியில் இருக்க வேண்டும் என்னும் ஆசை எல்லாம் எங்களுக்குக் கிடையாது. இந்த சமுதாயத்திற்கு  உங்களால் என்ன பயன் என்பது மட்டும் தான் எங்களது ஆசை. 

இந்தப் புறக்கணிப்பு தொடரக் கூடாது என்பதே எங்களது எதிர்பார்ப்பு!

Friday 7 September 2018

கேள்வி - பதில் (87)

 கேள்வி

உலக நாயகன் கமலின் விஸ்வரூபம் ஊத்திக் கொண்டதாக சொல்லப் படுகிறதே!

பதில்

அப்படித்தான் தோன்றுகிறது. நமது மலேசிய நாட்டில் ஓர் ஐந்து நாளைக் கூட தியேட்டர்களில் அது எட்டவில்லை! இது ஆச்சரியம் தான். காரணம் தியேட்டரில் கூட்டம் அதிகமாக இருக்கும் என நினைத்து ஒரு வாரம் கழித்துப் போகலாம் என்றால் படமே காலி! கமல் படத்துக்கு இப்படி ஒரு நிலையா.....?  ஏற்றுக் கொள்ள முடியவில்லை!

ஏதோ ஒரு மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது என்று சொல்லலாமா? ரஜினியின் காலா படம் ஓடவில்லை. இப்போது விஸ்வரூபம் படம்  ஓடவில்லை. அப்படியென்றால் பெரிய நடிகர்களின் படங்கள் ஓடாதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இருவருமே தமிழக அரசியலின் எதிர்காலங்கள்! நாட்டை ஆள வேண்டும் என வேட்கை உள்ளவர்கள்!

இவர்களின் இருவரின் படங்கள் ஓடவில்லை என்றால் தமிழக மக்கள் இவர்கள் அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை என்று சொல்லுவதா?  இந்தியாவை ஆளும் அதிகார வர்க்கம் நடிகர் கமல் அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை.  அவர்கள் ரஜினி வருவதையே விரும்புகின்றனர். ரஜினியும் தான் ஆளும் அதிகாரத்தின்  பக்கமே என்று தொடர்ந்து காட்டிக் கொண்டு வருகின்றார்.

தமிழக மக்கள் எதனை விரும்பவில்லையோ அதனை ரஜினி விரும்புகிறார்!  தன்னைத் தமிழன் என்று சொல்லிக் கொண்டு தமிழர் நலனுக்கு எதிரானவைகளை ஆதரித்துக் கொண்டிருக்கிறார்! 

ரஜினி செய்யும் தவறுகளினால் கமலுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்துகிறதோ என்பது புரியவில்லை.

இந்த நேரத்தில் ஒன்றை மட்டும் உறுதி செய்ய முடியும்.  அடுத்து வரும் ரஜினியின் படங்கள் எந்த அளவுக்கு வெற்றிபெறுகின்றன  என்பதை வைத்தே இந்த இருவரின்  எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும்.

விஸ்வரூபம் வசூல் அளவில் தோல்விதான்.  இவர்கள் படங்கள் வெற்றி பெற வாழ்த்துகிறோம். ஆனால் அரசியலில் இவர்கள் வெற்றி பெற வாழ்த்தமாட்டோம்! இவர்களின்  தோல்வி, தமிழர்களின் வெற்றி!


Wednesday 5 September 2018

கொஞ்சம் மிகையாக போகத் தயங்காதீர்கள்..!

மக்களிசைக் கலைஞர்,  உலகப்புகழ் பெற்ற செந்தில் கணேஷ்,  ஓர் நேர்காணலின் போது சொன்ன வார்த்தை என்னால் மறக்க முடியவில்லை.

தமிழ் நாட்டில் அவர் செய்கின்ற மேடைக் கச்சேரிகள் சுமார் மூன்று மணி நேரம் நீடிக்கும். அவரோடு மற்ற  கலைஞர்களும்  பங்குப் பெறுவர். அதில் ஒரு சில கலைஞர்கள் எப்போது மணி ஆகும் என்று கடிகாரத்தைப்  பார்த்துக் கொண்டே இருப்பார்கள்!சரியாக மூன்று மணி நேரம் ஆனதும் மூட்டை முடிச்சுகளைக் கட்ட ஆரம்பித்து விடுவார்கள்! மக்கள் நிறையப் பேர் நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் பாடுங்கள் என்கிறார்கள். நாம் பாடித்தான் ஆக வேண்டும். மக்கள் ரசிக்கும் போது நாம் பிகு பண்ணுவது சரியான அணுகுமுறையல்ல. மக்களை மகிழ்ச்சி படுத்துவது தான் ஒரு கலைஞனின் கடமை.  நேரம் ஆனாலும் பரவாயில்லை. நாம் அவர்களை மகிழ்ச்சி படுத்துவதைக் கடமையாகக் கொள்ள வேண்டும்.

செந்தில் சொல்லுவது சரியான அணுகுமுறை.  கொஞ்சம் நேரம் ஆனாலும் பரவாயில்லை. கொஞ்சம் அதிகமான மெனக்கெடுதலால் எதுவும் கெட்டு விடப்போவதில்லை! அதனைத் தான் "ஒரு மைல் தூரம் வா என்றால் இரண்டு மைல் தூரம் நடக்க ஆயத்தமாக இருக்க வேண்டும்!" என்பர்.   ஓர் அளவை வைத்துக் கொண்டு அதற்கு மேல் அசைக்க முடியாது என்று சொல்லுவது தோல்வியாளர்களின் மனநிலை. வெற்றி எப்போது வரும் என்று நம்மால் கணிக்க முடியாது. ஆனால் எந்த நேரத்திலும் வரலாம்.  நாம், நமது முயற்சிகளை மட்டும் கைவிட்டு விட முடியாது. வெற்றி என்பதே தொடர் முயற்சி தான்.

அந்த மிகையான நேரம். மறந்து விடாதீர்கள்.  நமது நேரத்தைத் தாண்டி அந்த மிகையான நேரத்தில் நாம் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கும் போது அந்த வெற்றி நம்மைத் தேடி வரலாம். இப்படித்தான் பல பேருடைய வாழ்க்கையில் நடந்திருக்கிறது,

ஒரு தொழிலதிபர். அனைத்தையும் இழந்துவிட்டார். எவ்வளவோ முட்டி மோதி ...ஊகூம்...ஒன்றும் நடக்கவில்லை. அடுத்த நாள்...விடியாமல் இருந்தால் பரவாயில்லை.ஆனால் விடிந்துவிட்டது. வங்கிகள் தன்னை திவாலாக்கி விடும்.  மஞ்சள் கடுதாசி கொடுத்துவிடும். இன்றோடு அனைத்தும் முடிந்து விட்டது. வாழ்க்கை இருண்டு விட்டது. காலையில் பத்திரிக்கையைப் பார்க்கிறார். பளிச்சென்று ஒரு மின்னல். வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்! அது போதும், தான் வெற்றி பெறுவதற்கு! கடைசி நிமிட பேச்சுவார்த்தை வெற்றி பெறுகிறது! 

கடைசி நிமிடத்தில் எதுவும் நடக்கலாம். நமது வாழ்க்கையையே புரட்டிப் போடலாம். சோர்ந்து போகாதீர்கள்.  கொஞ்சம் பொறுங்கள். இன்னும் கொஞ்சம் முயற்சி செய்யுங்கள். கொஞ்சம் மிகையாகப் போகத் தயங்காதீர்கள். 

வாழ்க்கையே வெற்றியை நோக்கியப் பயணம்! வெற்றி! வெற்றி வெற்றி!

செந்தில் கணேஷ் - ராஜலெட்சுமி

சமீப காலத்தில் பாடல் துறையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம் என்றால் அது செந்தில் கணேஷ் - ராஜலேட்சுமி தம்பதியினரைச் சாரும்.  தமிழ்ப் பாடல் துறையில் ஒரு சுனாமியையே ஏற்படுத்திவிட்டார்கள்!

தமது தமிழ்த் திரைப்படங்கள்  நாட்டுப்புறப் பாடல்கள் எனப்படும் மக்களிசைப் பாடல்களை எத்தனையோ ஆண்டுகளாகப் பயன்படுத்தித் தான் வந்திருக்கிறார்கள். அதில் பல பாடல்கள் மிகவும் புகழ் பெற்றப் பாடல்கள்/ அதன்  பின்னர் கானா பாடல்களும் திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அதிலும் பல பாடல்கள் புகழ் பெற்றிருக்கின்றன. கானா பாடல்கள் என்பது சென்னையைப் பின்னணியாகக் கொண்ட பாடல்கள். மக்களிசைப் பாடல்கள் என்பது தமிழகக் கிராமங்களைப் பின்னணியாகக் கொண்டவை.

நான் முதன் முதலாக த்மிழகம் சென்ற போது எங்களது கிராமத்திலேயே வயல்களில் வேலை செய்பவர்கள் பாடுவதைக் கேட்டிருக்கிறேன். அது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர். அதன் பின்னர்  நான் கேட்கவில்லை. ஆனால் சமீபத்தில் தஞ்சையைச் சேர்ந்த விவசாயப் பெண்கள் கேரளாவுக்கு வயல்களுக்குச் சென்ற பெண்கள்  பாடிக்கொண்டே வேலை செய்வதைக்  காணொளியில் காண  நேர்ந்தது.  ஆக,  இந்த இசை  இன்னும் கிராமப்புறங்களில்  ஒலித்துக்  கொண்டு தான் இருக்கிறது என நம்பலாம்.

ஆனால் இதனைத் தொழிலாகச் செய்யும் இந்த மக்களிசை கலைஞர்கள் நிலை தான் எதிர்பார்த்தபடி இல்லை. ஒரு பாரம்பரியத்தை தூக்கி நிறுத்தும்  கலையில் அவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மக்களின் வரவேற்பு தான் அவர்களுக்கு ஆதரவாக இல்லை. எவ்வளவு தான் கஷ்டமாக இருந்தாலும் அதனை விடாது தொடர்புவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். "பசியோ பட்டினியோ அது எங்கள் பாரம்பரியம், எங்கள் கலை  நாங்கள்   விடமாட்டோம்"  என்று விடாது தொடர்பவர்களை மதிக்கிறோம்.

இந்த நிலையில் தான் புயலென புறப்பட்டு வந்தார்கள் செந்தில்-ராஜலெட்சுமி  தம்பதியர். அவர்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்தவர்கள் விஜய் தொலைக்காட்சி நிலையத்தினர். அவர்கள்  பாடிய பாடல்கள் உலகப்புகழ் பெற்றுவிட்டன.  பாடியவர்களும் உலகத் தமிழர்களின் வரவேற்பைப் பெற்றுவிட்டனர்.  இது சாதாரண விஷயம் அல்ல. மிகக் குறுகிய காலத்தில் இந்த அளவுக்குப் பேர் பெற்றவர்கள் வேறு யாரும் இல்லை.

மக்களிசைக் கலைஞர்களை வாழ வைப்பது நமது கடைமை. நம்மால் முடிந்தவரை அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவோம். நமது கலை வளர அவர்களுக்குக் கை கொடுப்போம். 

வாழ்க மக்களிசை!


Tuesday 4 September 2018

ஏன் அந்த பண்பு நம்மிடமில்லை?

தோபுவான் உமா சம்பந்தன் அவர்கள் ஓரு நேர்காணலின் போது தனது கணவரும், முன்னாள் ம.இ.க.தலைவரும், அமைச்சருமான  துன் சம்பந்தனைப் பற்றி சொல்லும் போது அவர் சொன்ன ஒரு வார்த்தை:  ஒழுகும் வீட்டுக் கூரையைக் கூட பழுது பார்க்க அவர் அனுமதிக்கவில்லை! 

ஒரே காரணம். மக்களின் பணம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்னும் கருத்து மக்களிடையே எழலாம் என்பதால் அவர் அதனை அனுமதிக்கவில்லை. 

இப்படித்தான் இருந்திருக்கிறார்கள் நமது முன்னாள் தலைவர்கள். தமிழ் நாட்டில் பெருந்தலைவர் காமராசர் அவர் அமைச்சரவையில் இருந்த அமைச்சர் கக்கன், அமைச்சர் லூர்தம்மாள் - இவர்கள் அனைவருமே இறக்கும் போது  ஏறக்குறைய சராசரி மனிதர்களைவிட கீழ் நிலையில் தான் இருந்திருக்கிறார்கள். ஓர் உண்மை. அவர்கள் மக்களுக்குத்  தொண்டு செய்ய வந்தவர்கள். அரசியலை வைத்து பணம் சம்பாதிக்கும் எண்ணம் அவர்களிடம் எழவில்லை!

துன் சம்பந்தன் அவர்களைப் பற்றி பேசும் போது அவர் ஒரு சில தவறுகள் செய்திருக்கலாம். அவர் வாழ்ந்த காலக்கட்டத்தில்  அது தவறுகளாக  அவருக்கும் தோன்றவில்லை, நமக்கும் தோன்றவில்லை.  இந்த நேரத்தில்  ஒன்றை நினைவு கொள்வது அவசியம். அப்போது நிதி அமைச்சராக இருந்தவர் டான் சியு சின். அப்போது சீனர்களுக்கு அவர் பல வகைகளில் உதவியாக இருந்தார். தொழில் செய்வதற்குப் பலவகைகளில் உதவினார் என்பதாகச் சொல்லப்படுவதுண்டு.  சீனர்களின் தொழில் முன்னேற்றத்திற்கு அவரே முக்கிய காரணம் என்பார்கள்.

ஆனால் அந்த காலக் கட்டத்தில் இந்தியர்களின் நிலை வேறு. பெரும்பாலும் தோட்டப்பாட்டாளிகள். இவர்களுக்குள்ள பிரச்சனைகள் வேறு.  அவைகளைக் களைவது தான் அவர் அப்போது எதிர்நோக்கிய பிரச்சனைகள்.

சான்றுக்கு ஒன்று இரண்டு சொல்லலாம். குடியுரிமை அப்போது நேரடியாகவே தோட்டங்களுக்கு வந்து கொடுக்கப்பட்டது. இது நெகிரி செம்பிலானில் நடந்தது. என் தந்தையார் எடுத்துக் கொண்டார். என் தாயார் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இரண்டாவது அடயாள அட்டை.. தோட்டத்திலேயே வந்து அடையாள அட்டை வழங்கப்பட்டது. அதிலே நானும் ஒருவன். மூன்றாவதாகச் சொல்ல வேண்டும் என்றால் தோட்டத்துண்டாடல்.  கூட்டுறவு சங்க, மூலம் தோட்டங்கள் வாங்கப்பட்டது.

இவைகள் எல்லாம் துன் அவர்கள் செய்த சாதனைப் பட்டியல்கள். இன்னும் இருக்கலாம். நினைவில் இல்லை. அவர் காலத்தில் எது தேவையோ அதனை அவர் செய்தார். 

அரசியலை வைத்து இந்திய சமுதாயத்திற்கு அந்தக் காலக்கட்டத்தில் அவரால்  செய்ய முடிந்ததை செய்தார். அதனால் அவருடைய சொத்துக்களையும் இழந்தார். அவர் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தார் என்பதாக யாரும் அப்போதும் சொல்லவில்லை; இப்போதும் சொல்லவில்லை.

துன் சம்பந்தன் அவர்கள் படித்தவர். பண்பான குடும்பத்தில் வளர்ந்தவர். அதன் பின்னர் இந்தச் சமுதாயத்திற்குத் தலைமை தாங்கியவர்கள் இரண்டுமே இல்லாதவர்கள்!

ஏன் அந்தப் பண்புகள் இப்போது நம்மிடம் இல்லை என்றால்..? அது நமது பரம்பரையில் இருந்தால் தான் அது தொடரும்!

'மாமாக்' மகாதிர்!

மகாதீரை 'மாமாக்' என்பதெல்லாம் இன்று நேற்று வந்ததல்ல. அவர் எப்போது அரசியலுக்கு வந்தாரோ அப்போதிருந்தே இந்த மாமாக் என்ற சொல் அவரோடு ஓட்டிக்கொண்டது!

அப்போதும் மகாதிரை மாமாக் என்று சொன்னவர்கள் எதிர்க்கட்சியினர். இப்போதும் அவரை மாமாக் என்று சொல்லுபவர்கள் எதிர்க்கட்சியினர் தான்! அப்போது எதிர்க்கட்சியினர் என்றால் அது ஜனநாயக செயல் கட்சியைக் குறிக்கும்.  இப்போது எதிர்க்கட்சியினர் என்றால் அது அம்னோவினரைக் குறிக்கும்.  முன்பு சீனர்கள் கட்சி என்பார்கள். இப்போது மலாய்க்காரர் கட்சி என்கிறோம். ஆக, தொடர்ந்தாற் போல அவர்,  அவரது முதாதயரைக் குறி வைத்துத்  தாக்கப்படுகிறார்! இந்த அளவுக்கு வேறு யாரும் மலேசிய அரசியலில் தாக்கப்படவில்லை  என நிச்சயம் சொல்லலாம்!

சரி மாமாக் என்றால் யார்? கேரள காக்கா என்கிறோம்.  கேரள மலபார் இனத்தவரை மாமாக் என்கிறோம். நமது நாட்டில் உள்ள கேரள இனத்தவரைப் போல இவர்கள் தங்களை மலையாளிகள் என்று சொல்லுவதில்லை.  அப்படி சொல்லுவதிலும் இவர்கள் விரும்புவதில்லை. தங்களுக்கு என்று தனி அடையாளத்தை விரும்புகின்றனர். அதனால் தங்களை மலபாரி என்று கூறிக் கொள்ளுவதில் பெருமைப்படுகின்றனர்.  இளம் தலைமுறையினருக்கு மலபாரி என்றால் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது கூடத் தெரியாது என்பது தான் உண்மை! கேரளாவுடன் தொடர்பு உள்ளவர்கள் மட்டுமே அறிவர்.

ஆனால் மகாதிர் நீண்ட காலம் அரசியலில் உள்ளவர் என்பதால் அவருக்கு இந்த மாமாக் என்கிற அடையாளம் அவருடன் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அவருடைய  தாத்தா கேரளாவிலிருந்து வந்தவர் என்பதைத் தவிர அதன் பின் அவர் இந்நாட்டோடு கலந்துவிட்டவர். அவர் சிங்கப்பூர் பலகலையில் மருத்துவம் படிக்க அனுமதிக்கப்பட்ட போது அவர் இந்தியர் என்பதாகவே பதிவாயிருக்கிறது. மாமாக் எனகிற வார்த்தை எல்லாம்  அப்போது  பயன்பாட்டில் இல்லை.

இப்படி மாமாக் என்பதால் அவர் என்ன வெட்கப்படுகிறாரா?  அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. யார் என்ன சொன்னாலும் அது பற்றி அவர் கவலைப்படுவதில்லை. சஞ்சிக்கூலிகளாக இந்தியர்கள் இந்நாட்டிற்கு வந்த காலகட்டத்தில்  படித்த ஒரு சிலர் வேவ்வேறு தொழில்களில் ஈடுபட்டிருக்கின்றனர். ஆசிரியர், அரசாங்க உத்தியோகம்,  ரயில்வே போன்று பல தரப்பட்ட வேலைகளைச் செய்து வந்திருக்கின்றனர். அவர்களைப் போல இவரது முன்னோர்களும் அடங்குவர். இதில் ஏதும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.

புஜிஸ் என்று சொல்லிக் கொண்டு கொள்ளைகாரனாக இருப்பதைவிட கௌரவமாக வாழ்வது எவ்வளவோ மேல்.

மாமாக் மகாதிர் வாழ்க!

Monday 3 September 2018

அவமதிப்பது குற்றமே...!


எந்த மதத்தினாராக இருந்தாலும் சரி,  பிற  மதத்தை அவமதிக்கும் யாராக இருந்தாலும் சரி அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே நமது கோரிக்கை.

சமீபத்தில்  24 வயது இளைஞன் ஒருவன் இஸ்லாமிய சமயத்தை அவமதிக்கும் வகையில் பேசி, காணொளி ஒன்றை வேளியிட்டதின் தொடர்பில் கைது செய்யப்பட்டிருக்கிறான்.

இது போன்ற சமய அவமதிப்புக்களை நாம் வரவேற்கவில்லை. பல சமயத்தினர்,  பல இனத்தினர், பல மொழியினர் வாழ்கின்ற நாடு நமது நாடு.  எந்த ஒரு துவேஷ கருத்துக்களும் இனங்களுக்கிடையே  பகைமையை உருவாக்கும்.

ஆனால் இது நாள் வரை என்ன நடந்தது?  முந்தைய அரசாங்கம் பாரபட்சமான,  ஒரு தலைசார்பான கொள்கையைக் கடைப்பிடித்து வந்ததே  இது போன்ற செயல்கள் தொடர்ந்த வண்ணம் இருப்பதற்கான காரணிகள்.

இதற்கு முன் நடந்தது என்ன?  இஸ்லாமியர்கள் மற்ற மதங்களைப் பற்றி எப்படி வேண்டுமானாலும் பேசலாம். இழிவாகப் பேசலாம். இடித்துரைத்துப் பேசலாம். அதனை தட்டிக் கேட்க யாராலும் முடியாது.  அது தவறு என்பது அரசாங்கத்திற்குத் தெரிந்தும் அதனை அவர்கள் கண்டு கொள்ளவில்லை. அவர்கள் தட்டிக் கொடுக்கப்பட்டார்கள். தவறு இல்லை என்பதாக ஊக்கமூட்டப்பட்டார்கள்!

அதனையே பிற மதத்தினர் இஸ்லாமைப் பற்றி பேசும் போது  அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அவர்கள் மீது அப்படி நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆர்ப்பாட்டாங்களும்,  நாட்டில் குழப்பங்களும் ஏற்படுத்த ஒரு தரப்பு ஆள் அம்பு சேனைகளோடு தயாராகக் காத்துக் கொண்டு இருந்தனர்!  அதற்கு அரசாங்கமும் உடந்தை!

பொதுவாக அரசாங்கம் உடந்தை என்பதால் தான் அவர்களால் மற்ற மதத்தினரைப் பேச விடாமல் செய்ய முடிந்தது. அதற்கு உதாரணம் ஜாகிர் நாயக்!

ஆனால் அது தொடரக் கூடாது என்பதே நமது வேண்டுகோள்.  யாரும் மற்ற மதத்தினரின் நம்பிக்கைகளில் தலையிடக் கூடாது என்பது தான் நாம் சொல்லவந்த செய்தி. இந்து மதத்தையோ, கிறிஸ்துவ மதத்தையோ அவமதித்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம் எல்லாம் ஒன்று தான். அது செயல்படுத்துப்பட வேண்டும்.

குற்றம் குற்றமே!

நீங்களுமா....?

ஜோகூர் மாநில ம.இ.க. வைப் பற்றி மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு இராமகிருஷ்ணன் கூறிய செய்தியைப் படித்த போது "அடேய்! நீங்களுமா இப்படி!" என்று கேட்கத் தோன்றவில்லை! செருப்பால் அடிக்க வேண்டும் என்று  தோன்றியது!

பாரதி ஒரு செய்தியைச் சொன்னான்:  படித்தவன் பாவம் செய்தால் போவான் போவான் ஐயோ என்று போவான்!

இங்கு தவறு செய்பவர்கள்  அனைவரும் படித்தவர்கள்.  சரி, அப்படியே அவர்கள் பெரிய பெரிய படிப்பெல்லாம் படிக்கவில்லை என்றாலும் அவர்கள் படித்தவர்கள். பாரதியின் வாக்குப்படி போவான் போவான் ஐயோ என்று போவான்!  அதாவது சாதாரண மக்களின் சாபத்தின்படி:  டேய்! உன் குடும்பம் நாசமாப் போகும்! உன் குடும்பமே விளங்காம போகும்! என்று இவர்களது சாபமும் பாரதியின் வாக்கும் ஒரே செய்தியைத்தான் சொல்லுகின்றன!

இந்திய சமூகத்திற்காக ஒதுக்கப்பட்ட எண்பது லட்சம் வெள்ளியை ஐந்தே மாதத்தில் - அதாவது  இந்த ஆண்டு  மே மாததிற்குள் - அனைத்துப் பணத்தையும் கபளீகரம் செய்துவிட்டனர் என்பது  பெரிய சாதனை தானே! ஒரு தமிழ்ப்படத்தில் ரஜினி ஒரு மாதத்தில் ஆயிரம் கோடியைச் செலவு செய்ய படாதபாடுபடுவார்!  பைத்தியக்காரர்! நமது ம.இ.க. வினரைக் கேட்டால் ஆயிரம் வழிகளைச் சொல்லுவார்கள்!

நமக்குள்ள ஆச்சரியம் எல்லாம் இது எப்படி இவர்களால் முடிகிறது என்பது தான். படித்திருக்கிறான். படித்தவன் என்று சொல்லிக் கொள்ளுகிறான். தான் பெரியவன் என்று மக்களிடம் சொல்லுகிறான். மக்கள் என்னை ஆதரிக்கிறார்கள் என்று சொல்லிக் கொள்ளுகிறான். மக்களுக்குத் தொண்டு செய்ய வந்தேன் என்று  சொல்லுகிறான். டேய்! தொண்டு செய்ய வந்த நீ இப்படி ஏன் நீயே உனக்காகக் குழி தோண்டி கொள்ளுகிறாய்?  சாகும் போது இங்குள்ள அனைத்தையும் நீ கையோடு கொண்டு போவாயோ!  நாயே! கேள்! அரசியல் மூலம் பெரிய ஆள் ஆனான்.  பெரிய மாளிகைக் கட்டினான்! அதனுள் நீச்சல் குளம் கட்டினான்! அதனை அவனால் அனுபவிக்க முடியவில்லை. சீக்கிரம் மண்டையைப் போட்டான்! அவ்வளவு தான். முடிந்தது அத்தியாயம்! இப்போது அவனை நினைப்பார் யாருமில்லை! உங்கள் வீட்டுப் பணத்தில் எதனையும் செய்யுங்கள். யாரும் கேட்கப் போவதில்லை.

ஆனால் ஒரு நிமிடம் யோசியுங்கள். மக்கள் பணத்தில் கை வைக்காதீர்கள். உங்கள் பணத்தில் ஆடுங்கள் பாடுங்கள்! அடுத்தவன் பணத்தில் வாழ நினைக்காதீர்கள்! 

ஒன்று மட்டும் உண்மை. உங்களுக்கான சிறை தயார் நிலையில் வரவேற்கக் காத்துக் கிடக்கிறது! 

Sunday 2 September 2018

"கானா" மொழி...!

நான் தொலைக்காட்சியைத் திறந்த போது ஏதோ ஒரு புதிய  தமிழ்த் திரைப்படம் ஓடிக் கொண்டிருந்தது. என்ன  படம்  என்று தெரியவில்லை. அதைத் தெரிந்து என்ன ஆகப் போகிறது?

ஆனால் அதில் பேசப்பட்ட  சில வசனங்கள் மனதிலே பொறித்தட்டியது! ஆமாம்!  அவர்கள் பேசியது "கானா"  என்கிற  கானா மொழி! அல்லது பரிபாஷை எனலாம்.

ஒரு காலக் கட்டத்தில் இந்த கானா மொழி என்பது எங்கைளிடையே மிகவும் பிரபலம். இது ஒர் எழுபது ஆண்டு காலக் கதை! அப்போது இந்த மொழி வழக்கு எப்படி வந்தது என்பது தெரியவில்லை. அப்போதும் கூட ஏதோ ஒரு சினிமா தாக்கமாக இருக்கலாம்.

கானா மொழி பேசுவதில் எங்களது பக்கத்து வீட்டு அக்காள்கள் கமலமும் அவரது தங்கை சரஸ்வதியும் மகா மகா நிபுணர்கள்! இவர்கள் பேசுவதே இந்த கானா மொழி தான் அதிகம். மற்றவர்கள் அவர்கள் பேசுவதைப் புரிந்து கொள்ளக் கூடாது என்பதறகாக இந்தக் கானாவைப் பயன்படுத்துவார்கள்!  என்னால் அவர்களைப் போல வேகமாகப் பேச வராது;  யோசித்து யோசித்துத் தான் பேச வேண்டி வரும்.

ஆமாம், அது  என்ன கானா மொழி? அது ஒன்றும் கம்பச்சித்திரம் இல்லை. ஒவ்வொரு சொற்களுக்கும் முன்னால் ஒரு "க" வைப் பயன்படுத்த வேண்டும். அவ்வளவு தான். சான்றுக்கு: அரசியல் திருடன்  என்று வைத்துக் கொள்ளுங்கள். அதனை இப்படிச் சொல்ல வேண்டும்:  கஅ கர கசி கய கல்  கதி கரு கட கன்.  இதனை வேகமாகச் சொல்லும் போது புரிந்து கொள்ளுவது கடினம். பயிற்சி இல்லையென்றால் வேகமாகவும் சொல்ல இயலாது!

இந்தக் கானா மொழியின் மூலம் என்ன?  ஒரு வேளை இது சித்தர்கள் பயன்படுத்திய பரிபாஷையாக இருக்கலாம். அல்லது வேறு யாராவது  இருக்கலாம். தாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை பிறர் அறியக் கூடாது என்பதற்காக இத்தகைய இரகசியப் பேச்சுக்களை அந்தக் காலத்தில் உபயோகத்தில் வைத்திருக்கிறார்கள். இப்போது அது தேவைப்படவில்லை. நமக்கு இரண்டு மூன்று மொழிகள் தெரிந்திருப்பதால் மாற்று மொழிகளில் பேசி பிறர் அறிந்து கொள்ளாதபடி செய்துவிடலாம்.  ஆனாலும் தமிழ் நாட்டுக் கிராமங்களில் தமிழே இன்னும்  அதிகப் பயன்பாட்டில் இருப்பதால் இந்தக் "க" னா இன்னும் அவர்களுக்குத் தேவைப்படுகிறது.  இல்லையென்றால் சமீபகால திரைப்பட மொன்றில்  இந்த கனா மொழி வர வாய்ப்பில்லை!

சரி! உங்கள அனைவருக்கும் இந்தக் கட்டுரையை படித்ததற்காக கந,கன் கறி!