Tuesday 31 May 2022

இழி பிறவிகள்!

 

                                     Zuraida Kamaruddin - Housing and Local Govt.Ministe

பொதுவாக அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும் சரி நாட்டுக்கு  நல்லதைச் செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தோடு  தான் வருகிறார்கள். ஏதோ ஒரு சிலர் மட்டும் பணம் மட்டுமே நோக்கமாகக் கொண்டு வருகின்றனர். இப்போது, இந்த காலக் கட்டத்தில், பணம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வருபவர்கள் அதிகரித்துக் கொண்டு வருகின்றனர் என்பது வருத்ததிற்கு உரிய செய்தி என்பதில் ஐயமில்லை.

ஆனால் சுரைடா கமாரூடின் மிகவும் வித்தியாசமான பெண்மணி. அமைதியாக நடந்து கொண்டிருந்த அரசாங்கத்தை  தடாலடியாக கவிழ்த்துவிட்டு வேறு கட்சிக்குத் தாவியவர். அதே பாணியை இப்போதும் பின்பற்றுகிறார்!  மீண்டும் கீழறுப்பு வேலையை ஆரம்பித்திருக்கிறார்! 

இந்த நடப்பு அரசாங்கத்திற்கு இருக்கும் காலம் என்னவோ இன்னும் ஓராண்டுகள் தான்!  இந்த அரசாங்கமும் எதிர்கட்சிகளிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி இன்னும் கவிழாமல் பேர் போட்டுக் கொண்டிருக்கிறது! அதுவே பெரிய சாதனை!

இன்னும் ஓராண்டுகள் பொறுக்க முடியாமல் இந்த அரசாங்கத்தையும் கவிழ்க்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்  அம்மணி! 

வேறு கட்சி தாவுவதற்கு அவர் சொல்லுகின்ற  காரணங்கள் சரியாக இருக்கலாம்.  கட்சி தாவுபவர்கள் எல்லாருமே சரியான காரணங்களைத் தான் வைத்திருக்கின்றனர்!  கட்சி சரியான கொள்கைகளைக் கொண்டிருக்கவில்லை என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள்!

ஆனால் மக்கள், கட்சி தாவுபவர்களைப் பற்றி, என்ன கருத்து வைத்திருக்கிறார்களோ அதைப் பற்றி மட்டும் அவர்கள் வாய் திறப்பதில்லை.  அரசியல்வாதிகள் கட்சி தாவும்போது அத்தோடு அவர்களோடு சேர்ந்து பல கோடிகளும் தாவுகின்றன என்பதை மட்டும் யாரும் பேசுவதில்லை!

ஆமாம்,   எந்த இலாபமும் இல்லாமல் ஏன் ஒருவர், அரசாங்கத்தையே கவிழ்த்துவிட்டு, வேறு ஒரு கட்சிக்கு மாற வேண்டும்? இது மக்களிடம் உள்ள கேள்வி. நியாயம் தானே? சும்மா விளையாட்டாக யாரும் இதனைச் செய்வார்களா?

சுரைடா போன்றவர்கள் இனி அரசியலில் சம்பாதிக்க வழியில்லை என்கிற கடைசி கட்டத்தில் இருக்கிறார்கள். அவர் தொகுதி மக்கள் எந்த அளவுக்கு அவர் மேல் மரியாதை வைத்திருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியவில்லை. இன்றைய நிலையில், கிடைத்தது போதும்,  என்கிற மன   நிலையில் தான் அவர் இருக்கிறார்! இரண்டு கட்சிகள் மாறி இருக்கிறார். இருபது கோடியாவது  பார்த்திருப்பார் என்பது தான் நமது கணக்கு!

வாழ்க வளமுடன்!

Monday 30 May 2022

தாதியர் பற்றாக்குறையா?

 

சில விஷயங்கள் நம்மால் நம்பத்தான் முடியவில்லை. ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும்.

மருத்துவமனைகளுக்குப் போனால் தாதியர்கள் நிரம்பி வழிகின்றனர். அது தான் நமது அனுபவம். வெளியே இருந்து பார்க்கும் போது நிரம்பி வழிகின்றனர்.. உள்ளே புகுந்து பார்த்தால் வறட்சி நிலவுவதாக மருத்துவ உலகம் சொல்லுகிறது!

தனியார் மருத்துமனைகள் குறிப்பிட்ட சில துறைகளில் பயிற்சி பெற்ற தாதியர்கள் இல்லை என்பதாகவும் அவர்களை வெளி நாடுகளிலிருந்து தருவிக்க வேண்டுமென்றும்  கூறி வருகின்றன. அரசாங்கம் வங்காளதேசிகளுக்கு முதன்மை இடம் கொடுப்பதால்  அந்த நாட்டிலிருந்து கூட தாதியர்களை வரவழைப்பதில்  எந்தத் தவறுமில்லை. தேவை எல்லாம் தகுதியான தாதியர்கள். அவ்வளவு தான்! வங்காளதேசிகளைச் சோறு போட்டு வளர்ப்பவர்களே நமது நாடு தானே! அதனால் இதனையும் செய்யலாம்!

ஆனால் அதிர்ச்சி செய்தி என்னவெனில்  ஜொகூர் மாநிலத்திற்கு மட்டும் சுமார் 18,000 தாதியர்கள் தேவைப்படுவதாக  அம்மாநில சுகாதாரத் துறை  கூறுகிறது!   காரணத்தை ஆராயும் போது  சிங்கப்பூர் மருத்துவமனைகள் ஜொகூர் மாநில தாதியர்களைக் கபளீகரம் செய்துவிடுவதாகத் தெரிய வருகிறது!  ஒரே காரணம் தான். சிங்கப்பூரில் தாதியர்களுக்கான சம்பளம் என்பது மலேசியாவை விட அதிகம்!  அதனால் நமது தாதியர்கள் அங்கு வேலை செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். தாதியர்கள் மட்டும் அல்ல. பொதுவாகவே எல்லாத் துறைகளிலும் சிங்கப்பூரில் சம்பளம் அதிகமாகவே மலேசியர்கள்  பெறுகின்றனர்.

சிங்கப்பூர் மட்டும் அல்ல. அதனைத் தவிர்த்து மற்ற வெளிநாடுகளிலும்  நமது நாட்டைச் சேர்ந்த தாதியர்களுக்கு நல்ல வாய்ப்புக்களும், சம்பளமும் அதிகம் கிடைப்பதால் பலர் வெளிநாடுகளுக்குப் பறந்து விடுகின்றனர்! அதில் ஒன்றும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை!  எப்படிப் பார்த்தாலும் எல்லாவற்றுக்கும் வருமானம் தான் அடிப்படை. குறைவான சம்பளத்தில் நாய்படாதபாடு படுவதைவிட  வெளிநாடுகளுக்குப் போய் அதிகம் சம்பாதித்து தங்களது பணப்பிரச்சனையைத் தீர்க்க நினைப்பது சரியான முடிவு தான். 

இது எல்லா நாடுகளிலும் நடப்பது தான்.  அதிசயம் ஒன்றுமில்லை. நமது தாதியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று வேலைப் பார்ப்பது  என்பது சம்பளம் மட்டும் தான் முக்கிய காரணம்.   பிரச்சனையைத் தீர்ப்பதற்கு ஒரே வழி தான் உண்டு. சம்பளத்தை அதிகரிக்க வேண்டும். தகுதியானவர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்க வேண்டும். உழைப்பவர்கள் பதவி உயர்வை எதிர்பார்க்கத்தான் செய்வார்கள். அது ஒன்றும் குற்றமில்லை. பதவி உயர்வு வரும் போது தகுதி அடிப்படையில் கொடுத்தால் பிரச்சனைகள் எழ வாய்ப்பில்லை.

மேலே நான் சொன்னது ஜொகூர் மாநிலம்  மட்டும் தான். மலேசிய அளவில் தாதியர் பற்றாக்குறை  நிலவரம்  தெரியவில்லை!  சிங்கப்பூர் அருகிலேயே ஜொகூர் இருப்பதால் பல வழிகளில் ஜொகூர் தனது திறமையான ஆள்பலத்தை இழக்கிறது என்பது கண்கூடு.

தாதியராக இருந்தாலும் சரி வேறு துறை சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி, ஜொகூர் தங்களது மாநிலத்தில் உள்ளவர்களைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் சம்பள விஷயத்தில் அவர்கள் சிங்கப்பூரைத் தான் பின்பற்ற வேண்டும். அதுவே சரியான வழி!

Sunday 29 May 2022

காசே தான் கடவுளடா!


 சினிமா படம் ஒன்றில்  நடிகவேள் எம்.ஆர். ராதா பேசுகின்ற வசனம் ஒன்று  ஞாபகத்திற்கு வருகிறது
                "பணம்'னா செத்த பிணம் கூட வாயைப் பிளக்கும்' டா!"   

பிணம்  வாயைப் பிளக்குமோ என்னவோ தெரியாது! பார்த்ததில்லை! ஆனால் அந்தப் பிணம் விட்டுப் போயிருக்கும் பணத்துக்காக வாயைப் பிளக்கும்  குடும்ப உறுப்பினர்களைப் பார்த்திருக்கலாம்!

இப்போது ஏன் இந்த கதை? நமது நாட்டின் கோழி ஏற்றுமதியாளர்கள்  நமது அண்டை நாடான சிங்கப்பூருக்குக்   கோழிகளை ஏற்றுமதி  செய்ய என்ன தீவிரம் காட்டுகிறார்கள் என்று நினைக்கும் போது அவர்களை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. வருகிற ஒன்றாம் தேதியிலிருந்து வெளி நாடுகளுக்கு  கோழி ஏற்றுமதியில்லை என்கிற மலேசியாவின் ஒரு காரணம் போதும்.

சிங்கப்பூர் நாணயத்தின் மதிப்பு நமது நாட்டின் மதிப்பை விட அதிகம். சமீப காலங்களில் சிங்கப்பூர் டாலரின் மதிப்பு இன்னும் அதிகரித்துக் கொண்டே போகிறது என்பது  கோழி  ஏற்றுமதியாளர்களுக்கு  நல்ல செய்தி! என்ன விலைக்கு விற்றாலும் வருங்காலங்களில் அந்த நாணயத்தின் மதிப்பு உயர்ந்தால் அவர்கள் இன்னும் அதிகம் பணம் பார்க்கலாம்! அது ஒன்றே போதும் ஏன் ஏற்றுமதியாளர்கள் படாத பாடு படுகிறார்கள் என்பது!

அதனை தவறு என்று நாம் சொல்ல வரவில்லை. வியாபாரம் என்பதே இலாபம் பார்ப்பது தான். இன்னொன்றையும் கருத்திக் கொள்ள வேண்டும். இலாபம் பற்றியே நாம் பேசுகிறோம். அவர்கள் நிறைய நட்டத்தையும் படுகிறார்கள். கோழிகளுக்கு வியாதிகள் வந்தால் தீடிரென அனைத்துமே செத்துப் போகலாம்! அவைகள் காப்பாற்றப்பட வேண்டும். அதற்கு நிறைய செலவுகள் செய்ய வேண்டும்.

வியாபாரம் செய்வது என்பது ஒரு வழி பாதையில்லை. இலாபம் மட்டுமே வரும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது, இலாபம், நட்டம்  இரண்டுமே உண்டு. இலாபத்தை எப்படி மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளுகிறோமோ அதே போல நட்டத்தையும் ஏற்றுக்கொள்ளத்தான்  வேண்டும்.

இலாப நட்டம் என்பது எல்லா வியாபாரங்களிலும் உண்டு.  கோழி வியாபாரம் மட்டும் அல்ல.  நாம் செய்கின்ற  அனைத்து வியாபாரங்களிலும்  இலாபம் உண்டு; நட்டமும் உண்டு.  இதையெல்லாம் மீறி சீனர்கள் வியாபாரத்தில் ஈடுபடுகிறார்கள் என்றால் ஒரே ஒரு காரணம் தான். நட்டத்தை விட இலாபமே அதிகம் என்பதனால் தான் வியாபாரம் அனைத்து இனத்தினரையும் ஈர்க்கிறது! புரிந்து கொண்டவர்கள் வியாபாரத்தை விட்டு வெளியே போவதில்லை. புரியாதவர்கள் நட்டத்தை மட்டும் பற்றி பேசி மற்றவர்களையும் வியாபாரம் வேண்டாம் என்று சொல்லி தடுக்க நினைக்கிறார்கள்.

என்ன தான் சொல்லுங்கள். காசே தான் கடவுளடா என்று சும்மாவா பாடிவிட்டுப் போனார்கள்? என்ன செய்வது? பணம் தான் ஒருவனை துள்ளி குதிக்க வைக்கிறது! ஓடி ஆடி பாட வைக்கிறது!

தவிர்க்க முடியாத ஒன்று தான் பணம்!

Saturday 28 May 2022

சிந்தனை மாற்றம் தேவை!

 


பொதுவாக நாம் அனைவருமே ஒரே மாதிரியான சூழலில் வளர்ந்தவர்கள்.

அதனால் தான் நம்மால் எந்த புதிய சூழலுக்கும், புதிய மாற்றங்களுக்கும் தயார் நிலையில் இருக்க முடிவதில்லை. நமது முன்னோர் போட்ட பாதையில் நடப்பதே நமக்கு நல்லது என்று நாமும் அதே பாதையில் கடுகு அளவு பிசகாமல் நடந்து கொண்டிருக்கிறோம்.

புதிய முயற்சிகளை நம்மால் எதனையும்  ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. சுருக்கமாகச் சொன்னால்:  "படித்தவனாக இருந்தால் உத்தியோகம் பார். படிக்காதவனாக இருந்தால் ஏதோ ஒரு வேலையைச் செய்து பிழைத்துக் கொள்!"  இப்படித்தான் பெரும்பாலான நமது பெற்றொர்களின் அறிவுரை.

இதுவே நமது நாட்டின் சீனப் பெற்றோர்களின் அறிவுரை வேறு மாதிரியாக இருக்கும். "நல்லப்படிப்பை படி!  பெரிய வேலைக்குப் போ! உன்னால் படிக்க முடியவில்லை என்றால் ஏதாவது வியாபாரம் செய்து பிழைத்துக் கொள்!"

நமது பெற்றோர்கள் யாராவது  வியாபாரம் செய்து பிழைத்துக் கொள் என்கிற வார்த்தையையே உச்சரிப்பார்களா? அது மட்டும் அவர்களால் முடியாது! என்ன காரணமாக இருக்கும்?  அது பாவப்பட்ட ஒரு சொல்லாக அவர்கள் பார்க்கிறார்கள்! "நமக்கு வியாபாரம் வராது!  அதற்குச் சரியானவர்கள் சீனர்கள் தான்! ஏமாற்றுவது அவர்களுக்குக் கை வந்த கலை! நம்மால் அதெல்லாம் முடியாது!" இப்படித்தான் அவர்களது எண்ண ஓட்டங்கள் அமைந்திருக்கின்றன!

வியாபாராம் செய்யாதவன் நம்மை ஏமாற்றாமலா இருக்கிறான்? நம்மூர் அரசியல்வாதியே பொதுமே! கொஞ்சம் நஞ்சமா  நம்மை ஏமாற்றினார்கள்! ஆக, எமாற்றுவது, ஏமாறுவது  என்பதெல்லாம் மனித வாழ்க்கையில் என்றும் நடப்பது தான். ஏமாற்றிப் பிழைப்பவர்கள் சீனர்கள் என்றால்  ஏமாற்றாமல் அந்த வியாபாராத்தை நம் இனத்தவர் செய்யலாமே! யார் வேண்டாம் என்கிறார்கள்?  நாம் பொத்தாம் பொதுவாக சீனர்கள் ஏமாற்றுக்காரர்கள் என்று முத்திரை  குத்துவது  சரியல்ல! எல்லா இனத்தவரிலும் ஏமாற்றுபவர்கள் உண்டு.

வியாபாரம் செய்வதன் நோக்கம் என்பது மற்றவரை ஏமாற்றிப் பணம் கொள்ளையடிப்பது அல்ல. நேர்மையான வியாபாரம் செய்து பணம் சம்பாதிப்பது தான்.  நமது பெற்றோர்கள் அல்லது பெரியவர்கள் பிள்ளைகள் வியாபாரம் செய்வதை ஊக்குவிக்க வேண்டும்.  பெரிய அளவில் பணம் போடாமல் சிறிய முதலீட்டில் வியாபாரம் செய்ய ஊக்குவிக்க வேண்டும். அதுவும் வேண்டாம் என்று நினைத்தால் பிள்ளைகள் வேலை செய்து தங்கள் சொந்தபணத்தில் வியாபாராம் செய்ய ஆதரவு கொடுக்க வேண்டும்.

இப்போது உள்ள இளைஞர்கள் துடிப்பு மிக்கவராய் இருக்கிறார்கள். அவர்கள் வியாபாரம் செய்கிறேன் என்றால் விட்டுவிடுங்கள். அவர்கள் செய்யட்டும். தடுக்க வேண்டாம்! முட்டுக்கட்டைப் போட வேண்டாம்!

நமது சமுதாயம் முன்னேற ஒரே ஒரு வழி தான். எல்லாக் குடும்பங்களிலும் ஒருவராவது வியாபாராத்தில் ஈடுபடுவதை கட்டாயமாகக் கொள்ள வேண்டும். இப்போது உள்ள இளைஞர்கள் படித்தவர்கள், அறிவுள்ளவர்கள், ஆற்றல் உள்ளவர்கள் - அவர்களை நம்ப வேண்டும். வெற்றி பெற ஊக்குவிக்க வேண்டும்.

அதற்கு நமது பெரியவர்களுக்குச் சிந்தனை மாற்றம் தேவை! நமது இளைஞர்களுக்கும் தேவை!

Friday 27 May 2022

தயாராக இருக்கிறீர்களா?

 

வரும் சில மாதங்களில் பொருள்கள் விலையேற்றம் என்பது தவிர்க்கமுடியாதது என்று கணிக்கப்படுகிறது.

பொருள்களின் விலை குறைந்தபட்சம் 60% விலையேறும் என்று இப்போதே பேச ஆரம்பித்துவிட்டார்கள். விலையேறும் என்பது ஒரு பக்கம். இன்னொன்று பொருள்கள் கிடைக்குமா என்பதும் இன்னொரு பக்கம். அப்படியே பொருள்கள் கிடைத்தாலும் பழைய விலைக்குக் கிடைக்காது என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

ஆனால் மக்களிடையே உள்ள பிரச்சனை என்பது "சம்பளம் ஏறவில்லை! பொருள்கள் விலை மட்டும் இப்படி அனாவசியமாக ஏறுகிறதே!" என்கிற புலம்பல்.  அரசாங்கத்தில் பணிபுரிபவர்களுக்கு ஒரு வேளை சம்பளம் கூடுதலாகக் கிடைக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. இவர்களின் சம்பளத்தை நம்பி தான் வியாபாரிகளே இருக்கின்றனர். "அப்ப தான் அரசாங்கம் கொடுப்பதில் நமக்கும் பங்கு கிடைக்கும்!" என்கிறார்கள் வியாபாரிகள்!

தனியார் துறைகளில் உள்ளவர்களின் குடும்பமே சேர்ந்து உழைத்தால் தான் சாப்பாட்டுப் பிரச்சனையைத் தீர்க்க முடியும்.  அது மட்டும் போதுமா?  பெரும்பாலானோருக்கு ஏதாவது ஒரு வகையில் மாதா மாதம் கார், இரு சக்கரவாகனங்கள், வீட்டு வாடகை அல்லது வீட்டுத் தவணை  - இப்படி தவணைகளாகக் கட்ட வேண்டிய சூழல் இருக்கும். வங்கிக்குக் கட்ட வேண்டிய தவணையைக்  கட்டவில்லை என்றால் பல சிக்கல்களை உருவாக்கும்.

இவைகளையெல்லாம் யோசித்துத் தான் இப்போது பணத்தை செலவழிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் அனைவரும் உள்ளோம். பயனீட்டாளர் சங்கங்கள் கூட மலேசியர்களுக்கு நல்ல அறிவுரையைக் கூறியிருக்கின்றனர். ஆமாம், பார்த்து பார்த்து உங்கள் பணத்தைச் செலவு செய்யுங்கள்  என்கிறார்கள்.  தேவையற்ற ஆடம்பரம் வேண்டாம். அளவாக, சிக்கனமாக உங்கள் பணத்தைச் செலவு செய்யுங்கள் என்பது தான் அவர்களது அறிவுரை.

அது நல்ல அறிவுரை. ஏற்றுக்கொள்ளத்தான்  வேண்டும். அது உங்கள் பணம். அதனை இப்போது நீங்கள்  இறுக்கிப் பிடித்து வைத்தால் தான் நாளை உங்கள்  பணம் உங்களுக்கு உதவும். மற்றவர்கள் பணம் எந்த வகையிலும் உங்களுக்கு உதவப் போவதில்லை. 

அப்படி நீங்கள் இறுக்கிப்பிடித்து வைக்கவில்லை என்றால் வீடு பறி போகலாம், கார் பறி போகலாம் வீட்டிலிருந்து விரட்டி அடிக்கப்படலாம், சாப்பாடு இல்லாமல் தடுமாறலாம் - இப்படி பலவற்றை எதிர்நோக்க வேண்டி வரும்.

இதில் பாதிக்கப்படுபவர்கள்  பெரும்பாலும் நம் மக்கள் தான். அதனால் தான் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள் என்று சொல்ல வேண்டியிருக்கிறது. பயப்பட வேண்டாம்!  துணிவோடு பிரச்சனைகளை எதிர்நோக்குங்கள்! நம்மால் முடியாது என்றால் வேறு யாரால் முடியும்! இதுவும் கடந்து போகும் என நம்புங்கள்!

Thursday 26 May 2022

திறன் அற்றவரா நாம்?

 

நம் சமுதாயம் திறனற்ற ஒரு சமுதாயமா? நம் இளைஞர்கள் எந்தவொரு திறனும் இல்லாதவர்களா? இப்படிப் பல கேள்விகளை நாமே கேட்டுக் கொள்வது நல்லது.

நம் இளைஞர்கள் இயற்காகவே பல திறன்களைக் கொண்டவர்களாகவே இருக்கின்றனர். ஒன்றுக்கும் உதவாதவர்கள் அல்ல.  

இப்போது நாட்டில் பலவிதத்  திறன் பயிற்சிகள் நாடெங்கிளும்  நடந்து கொண்டிருக்கின்றன. பல கல்லூரிகள் இயங்குகின்றன. பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இது போன்ற பயிற்சிகளின் மூலம் பயன்பெற்றுக் கொண்டிருக்கின்றனர். எங்கும் கிடைக்காத பயிற்சிகள் அங்கு அவர்களுக்குக் கிடைக்கின்றன.

நமது இளைஞர்களுக்கு என்ன தான் திறமைகள் இருந்தாலும் முறையான பயிற்சிகளே அவர்களுக்கு முழுமையான திறமைகளைக் கொண்டு வரும். அதே வேளையில் வேலை வாய்ப்புக்களையும் உருவாக்கும். நமக்குத் திறன் இருக்கிறதோ இல்லையோ நிறுவனங்கள் கல்விச்  சான்றிதழ்களுக்குத் தான் முதலிடம் கொடுப்பார்கள்.

பொதுவாகப் பார்த்தால் நமது இளைஞர்கள் பன்முகத் திறமையாளர்களாகவே இருக்கின்றனர். ஆனால் தங்களது திறமைகளைப் பணம் ஆக்கும் வித்தைகளை அவர்கள் கற்றுக் கொள்ளவில்லை. அது ஒரு பெரிய குறைபாடு.

சீனர்களிடம் நம்மிடம் இல்லாத ஒரு திறமை அவர்களிடம் உண்டு. கொஞ்சம் தெரிந்தால் போது அந்தத் திறனை வைத்து சம்பாதிக்க ஆரம்பித்து விடுவார்கள். எல்லாம் தெரிந்தது போல் காட்டிக் கொள்வார்கள். நமக்கு எல்லாம் தெரிந்தும் ஒன்று தெரியாதவர் போல் ஒதுங்கிக்கொள்ள வேண்டி வரும்.

இளைஞர்களே! உங்களுடைய திறன்களை நான் மதிக்கிறேன். உங்களுடைய திறன் என்பது உங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும். அதற்கு முழுமையான தொழில்நுட்ப பயிற்சி பெற வேண்டும். நாட்டில் நிறையவே வாய்ப்புக்கள் குவிந்து கிடக்கின்றன.  அவைகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்களை யாரும் ஒதுக்கவில்லை. நீங்களே ஒதுங்கிக் கொள்ளாதீர்கள். வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன.

நம் திறனை உலகத்திற்குக் காட்ட வேண்டும். நாம் உயர்ந்தவர்கள் என்பதை நிருபிக்க வேண்டும்.

இளைஞர்களே!  அனைத்தும் உங்கள் கையில்!

Wednesday 25 May 2022

சம்பளம் அனைவருக்கும் வேண்டும்!

 

எந்த நிறுவனங்களில் வேலை செய்தாலும் வேலை செய்பவர்களுக்குச் சம்பளம் கொடுக்க வேண்டும் என்பது சட்டம்.  அதனை எந்த ஒரு முதலாளியாலும் தவிர்க்க முடியாது. ஏமாற்றுபவர்கள் இருக்கிறார்கள் அது பற்றி நாம் பேசவில்லை.

ஆனால் கோரொனா தொற்று சமீபத்தில் வந்த நேரத்தில் நம்மால் என்ன செய்ய முடிந்தது? வேலை இல்லை. நிறுவனங்கள் இயங்கவில்லை. வீட்டிலேயே அடைப்பட்டுக்  கிடந்த நேரம். சாப்பாட்டுக்கு வழியில்லை. அந்த நேரத்தில் உதவிகள் கிடைத்தன. பலர் மனமுவந்து பல வழிகளில் மக்களின் பசி தீர்த்தனர்.

அதிலும் குறிப்பாக நமது இளைஞர்கள் பலர் பலருடைய பசி தீர்த்தனர். அதன் பின்னர் தான் அரசாங்கம் விழிப்படைந்தது. உதவி என்று வரும்போது நமது இளைஞர்கள் தான் முன்னணியில் நிற்கின்றனர். அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

அரசாஙத்தில் வேலை செய்பவர்கள் பெரிய பிரச்சனைகளை எதிநோக்கவில்லை. அவர்களுக்கு எப்படியோ மாதம் முடிந்ததும் முழு சம்பளமும் கிடைத்துவிடுகிறது. அதுவே பெரிய பாக்கியம். கையில் பணம் இருந்தால் எப்படியோ சாப்பாட்டுக்கு ஒரு வழி பண்ணிவிடலாம். பணம் இல்லாதவர்கள்...?

இதற்கு அரசாங்கம் தான் தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு ஒரு வழியைக் காட்ட வேண்டும். அவர்களுக்கு முழு சம்பளம் இல்லையென்றாலும் பாதி சம்பளமாவது கிடைக்க வழிவகைகளைச் செய்ய வேண்டும். நிறுவனங்களில் வேலை செய்ய ஆளில்லை என்றால்  அங்கு எந்த உற்பத்தியும் இல்லை.  பல நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. அங்கு வேலை செய்தவர்களின் கதி என்ன? அதனை பின்னர் பார்ப்போம்.

தொற்று நோய் காலத்தில் நிறுவனங்களில் வேலை செய்தவர்களின் வாழ்வாதாரத்திற்கு அரசாங்கம் தான் பொறுப்பேற்க வேண்டும். அவர்களின் குடும்பங்கள் வாழ குறைந்தபட்சம் அவர்களுக்கு பாதி சம்பளமாவது கிடைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். பாதி சம்பளம் என்றாலே ஏதோ ஒரு பாதி வயிறாவது நிறையுமே! அதைத்தான் நாம் வலியுறுத்துகிறோம். அரசாங்க பணியாளர்களுக்கு முழு சம்பளம் என்பதில் மகிழ்ச்சியே! தனியார் பணியாளர்களுக்கும் குறைந்தபட்சம் பாதி சம்பளமாவது கிடைத்தால் அவர்களுக்கு அது பேருதவியாக இருக்கும்.

இந்தப் பிரச்சனையை இப்போது ஏன் நாம் கொண்டு வருகின்றோம் என்றால் வரும் மாதங்களில் உலகளவிலும்  நமது நாட்டிலும் கூட பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். விலைவாசி ஒரு பக்கம் என்றாலும் பொருள்கள் தட்டுப்பாடு என்பது இன்னொரு  பக்கம்.  இவைகளை எல்லாம் களைய அரசாங்கம் முன்னேற்பாடுகளைச் செய்யும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். முக்கியமான உணவு பொருள்கள், மருந்து பொருள்கள் இவைகளின் விலையை அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும். கடைசி நிமிட ஏற்பாடுகள் எதுவும் பயன் தராது.

அதே சமயத்தில் மக்களின் வாங்கும் சக்தியையும் அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்களின் சம்பாத்தியத்தையும் உறுதி செய்ய வேண்டும்.

கொரோனா தொற்றை சமாளிக்கத் தெரிந்த நமக்கு இதனையும் சமாளிக்க  முடியும் என்பதை நாம்  நம்புவோம். இதுவும் கடந்து போகும்! கடந்து போகும் போது கற்களும் முட்களும் இருக்கத்தான் செய்யும். தடைகள் இருக்கத்தான் செய்யும்! 

முன்னேற்றம் என்பது அனைத்தையும் உடைத்துக் கொண்டு வெளியே வருவது தான்!

Tuesday 24 May 2022

எப்படியோ! இதுவும் கடந்து போகும்!


 விலைவாசி ஏற்றம் இன்று பலரையும் பிழிந்து எடுத்துக் கொண்டிருக்கிறது. அது இன்றைய நிலைமை.  ஆனால் வரும் மாதங்களில் அது இன்னும் கடுமையாக இருக்கும் என செய்திகள் வர ஆரம்பித்துவிட்டன.

அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால் மக்களிடையே அது பிரச்சனைகளை உருவாக்கும். வியாபாரிகள் பொருள்களின் விலையை ஏற்றுவார்கள். அவர்கள் கூறுகின்ற காரணம் நிறுவனங்கள் விலையை ஏற்றிவிட்டன என்பது அவர்களது பக்கத்து நியாயத்தைச்  சொல்வார்கள். பொருள்கள் கிடைக்கவில்லை - குறைவான அளவே  பொருள்கள் கிடைப்பதால் - விற்பனைக்குப் பொருள் இல்லை.

ஆனால் இதையெல்லாம் விட நம்மை கொந்தளிக்க வைக்கும் காரணம் ஒன்று உண்டு. ஆமாம், அது தான் பதுக்கல். வியாபாரிகள் பொருள்களைப் பதுக்கி வைப்பார்கள்.  விலையேற்றத்தின் போது பொருள்களை ஒவ்வொன்றாக  அதிக விலையோடு வெளியாக்குவார்கள்!  நிறுவனங்கள் தங்களது  உற்பத்திகளைக் குறைப்பார்கள். விலையேறும் போது அவர்கள் தங்களது உற்பத்தியை அதிகப்படுத்துவார்கள். வியாபாரிகள் காலங்காலமாக கடைப்பிடிக்கின்ற யுக்தி இது!

அதனால் தான் நாம் சொல்ல வருவதெல்லாம் அரசாங்கம் இப்போதே கடுமையான நடவடிக்கைகளில் இறங்கவில்லை என்றால் பாதிக்கப்படப் போவது பொதுமக்கள் தான். பொதுவாகப் பார்த்தால் இந்த நடப்பு அரசாங்கம் பிரச்சனைகள் வந்த பின்னர் தான் செயலில் இறங்குகிறது! அதற்கு முன்னரே எந்த ஒரு விஷயத்திலும் முனைப்புக் காட்டுவதில்லை! ஏதோ நொண்டி அடித்துக் கொண்டு அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று தான் தோன்றுகிறது! ஆனால் மக்கள் பணத்தைக் கொள்ளையடிப்பதில் மட்டும் தடகள வீரர் உசேன் போல்ட் கூட தோற்றுப் போவார்! அத்துணை வேகம்!

இந்த நிலையில் நமது மக்கள் நிலை என்ன?  வரப்போகும் மாதங்களில் எப்படி பிரச்சனைகளைச் சமாளிப்பார்கள் என்கிற ஆதங்கம் நமக்குண்டு. எப்போதும் வேலை செய்து பிழைக்கும் சமுதாயம் நாம்.   குறைவான கூலி பெறும் சமுதாயம். குடிகார சமுதாயம். பொறுப்பற்ற கணவர்கள். கேட்பாரற்ற இளைஞர்கள்.இப்படியெல்லாம் முத்திரைக் குத்தப்பட்டவர்கள் நாம்.

ஆனாலும் கொஞ்சம் நம்பிக்கை இருக்கிறது.  கோவிட்-19 தொற்றின் தாக்கத்திலிருந்து இப்போது மெல்ல மெல்ல விடுபட்டுக் கொண்டிருக்கிறோம். வேலையில்லா பிரச்சனையிலிருந்து  விடுபட்டுக் கொண்டிருக்கிறோம். தொற்றின் போது ஏற்பட்ட வலிகளின் மூலம் பாடம் கற்றிருப்போம் என்கிற நம்பிக்கை எனக்குண்டு.

இனி என்ன தான் பிரச்சனைகள் வந்தாலும் சமாளிக்கக் கூடிய திறன் நமக்குண்டு. இதுவும் கடந்து போகும் என்கிற மனநிலை உள்ளவர்களுக்கு எதனையும் கடந்து போக முடியும்!

Monday 23 May 2022

கோழி என்ன அவ்வளவு முக்கியமா?

 

கோழி விலை ஏறிவிட்டது என்று சொல்லும் போது அது பல்வேறு சிக்கல்களையும் ஏற்படுத்திவிடுகிறது.

நாம் வீட்டுக்கு வாங்கும் போது நாமே எதிர்ப்பார்க்காத அளவுக்கு அதன் விலை ஏற்றம் கண்டிருப்பதைப் பார்க்கிறோம். பொதுவாக ஒரு முழுக் கோழியை வாங்கினால் கூட சுமார் பத்து வெள்ளி இருந்தால் போதும். வாங்கிவிடலாம். அது அப்போது! இப்போது பத்து வெள்ளியெல்லாம்  எடுபடவில்லை! அது இருபது வெள்ளிக்கு எகிறிவிட்டது!

இந்த நிலையில் பார்த்தால் உணவகங்களை நடுத்துபவர்கள் என்ன செய்வார்கள்? கோழி இல்லாத உணவகங்களே கிடையாது. உணவகங்களுக்கு கோழி தான் முக்கிய உணவு. அதுவும் நமது நாட்டில் நேரங்காலம் இல்லாமல் சாப்பிடப்படுகின்ற  உணவு கோழி தான்.எப்படிப் பார்த்தாலும் உணவகங்களுக்கு சரியான அடி என்றே சொல்ல வேண்டும். அதனால் தான் இத்தனை கூப்பாடு, கூச்சல்!

யாரைக் குறை சொல்லுவது?  இப்போது நடப்பது ஒரு தற்காலிக அரசாங்கம். யாரும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. ஒருவருக்கொருவர் குற்றஞ்சாட்டிக் கொள்ள வேண்டியது தான்!

ஆனால் இந்த கோழி பிரச்சனையை விட வேறொரு பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது  என்பதை நாம் மறந்துவிட்டோம்.

குழந்தைகளுக்கான பால்மாவு விலை ஏற்றம் என்ன நிலையில் இருக்கிறது  என்பதை யோசிக்க வேண்டும். குழந்தைகளுக்கு மட்டும் அல்ல பெரியவர்களும் பால்மாவுகளை பயன்படுத்துகின்றனர்.  ஆனால் குழந்தைகளின் பால்மாவு விலையேறினால் பெற்றோர்களின் நிலை என்ன? எத்தனை ஏழை  பெற்றோர்களால் அதன் விலையேற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியும் என்பது கேள்விக்குறியே.

பால்மாவு என்பது மிகவும் அத்தியாவசியமான குழந்தைகளின் உணவு. அதன் விலையேற்றம் என்பது கொடுமையிலும் கொடுமை. அதன் விலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும். நாங்கள் வாடிக்கையாக வாங்கும் பால்மாவு விலை பதினாறு வெள்ளி. அது இப்போது இருபது வெள்ளிக்கு எகிறிவிட்டது! இன்னும் வரும் மாதங்களில் என்ன ஆகும் என்பதை நினைத்தால் தலை சுற்றுகிறது!

அரசாங்கம் பால்மாவு விலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இது தான் சரியான நேரம் என்று நினைத்து வியாபாரிகள் விலைகளை ஏற்றக் கூடாது என்பதே நமது வேண்டுகோள்.

இன்று உலகத்திற்கே ஒரு சிக்கலான நேரம்.  நமது நாட்டுக்கும் சிக்கல் தான். எல்லாம் ஒன்று கூடி தான் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும். எந்தப் பிரச்சனையும் எழாமல் அரசாங்கம்  கவனம் செலுத்த வேண்டும்.

கோழியை விட பால்மாவு இன்னும் அத்தியாவசியம் என்பதை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்!

Sunday 22 May 2022

பொருளாதாரத்தை உயர்த்துங்கள்!

 

நாட்டின் பொருளாதாரம் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவு முக்கியம் தனி மனிதனின் பொருளாதார வளர்ச்சி. தனி மனித வளர்ச்சி என்கிற போது நான் குறிப்பிடுவது தமிழர்களின் பொருளாதார வளர்ச்சி.

நம்மைச் சுற்றிப் பாருங்கள்.  அதெப்படி  சீனர்கள் மட்டும் எல்லாக் காலங்களிலும் பணக்காரர்களாக இருக்கின்றனர்? நாட்டில் பொருளாதார வளர்ச்சி இருக்கிறதோ இல்லையோ சீனர்கள் மட்டும் எப்படி கையில் பணத்தோடு வாழ்கின்றனர்? அவர்கள் மலேசியாவில் மட்டுமா அப்படி வாழ்கின்றனர்? அவர்கள் வாழ்கின்ற அனைத்து நாடுகளிலும் அவர்கள் தான் பணக்காரர்கள். குறிப்பாக  சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா  போன்ற நமது அண்டை நாடுகளில் சீனர்கள்  கைதான் ஓங்கியிருக்கிறது!

இதிலிருந்து ஒரு பாடத்தை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். சீனர்கள் எங்கிருந்தாலும் வியாபாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற ஓர் இனம்.. வியாபாரம் செய்துதான் பிழைக்க வேண்டும் என்கிற எண்ணம் அவர்கள் இரத்தத்தில் ஓடுகிறது. அப்படி ஓர் எண்ணத்தை அவர்கள் வளர்த்துக் கொண்டார்கள். வியாபாரம் செய்தால் தான்  பணம் சம்பாதிக்க முடியும் என்பதை அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

நாம் இங்கே தான் - நமது எண்ணங்களில்  கொஞ்சம் வித்தியாசப் படுகிறோம். நாம் ஆதிகாலந்தொட்டே வேலை செய்துதான்  பிழைக்க வேண்டும்  என்கிற எண்ணத்தை நம்மைச் சுற்றி இருப்பவர்கள் அனைவரும் சேர்ந்து நமது தலையில் அடித்து அடித்து வளர்த்து விட்டிருக்கிறார்கள்! "வேலை செய்! வேலை செய்!  அப்பத்தான் பிழைக்க  முடியும்!" என்று சொல்லிச் சொல்லி நாம் வளர்க்கப்பட்டிருக்கிறோம்!படித்தவனாக இருந்தாலும் வேலை செய்! படிக்காதவனாக இருந்தாலும் வேலை  செய்! என்பதைத் தாரக மந்திரமாகவே நமக்கு ஓதப்பட்டிருக்கிறது~  ஒருவர் கூட "நீ வியாபாரம் செய்து பெரிய  ஆளாக வா!" என்கிற பேச்சுக்கே இடமில்லை! அப்படிப்பட்ட ஒரு சமூக பின்னணியிலிருந்து நாம் வந்திருக்கிறோம். அதனால் தான் நம்மை நாமே மாற்றிக்கொள்வது எளிதான காரியமாக இல்லை!

ஆனால் நம்மை நாமே மாற்றிக் கொள்வது என்பது பெரிய விஷயமே இல்லை. சில பயிற்சிகளின் மூலம் நமது குறைபாடுகளை நாம் களைந்து விடலாம். இது  நாள் வரை எது முடியாது என்கிற எண்ணத்தைக் கொண்டிருந்தோமோ அதை இனி முடியும் என்று எண்ணிப் பழகுங்கள். இதில் என்ன பிரச்சனை? முடியாது என்பது மனதில் ஆண்டுக்கணக்கில் ஊறிப்போய்விட்டது. இனி அதனை மாற்றி  'முடியும்' என்று சொல்லிப் பழகுங்கள்.

முடியாது என்பது தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்தும். முடியும் என்பது தன்னம்பிக்கையை ஏற்படுத்தும்.  நமது பொருளாதாரத்தை உயர்த்த நமக்குத் தேவை முடியும் என்கிற மனப்பான்மையே!

Saturday 21 May 2022

இதுவே சரியான தருணம்!


வியாபாரம் செய்வதற்கு என்று ஏற்ற தருணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றீர்களா? 

அதனாலென்ன?  நாம் செய்வது சிறு வியாபாரமாக இருந்தாலும் அது காலங்காலமாக நிலைத்து நிற்க வேண்டுமென்று தான் நாம் ஆசைப்படுகிறோம்.  அப்படியே சிறு வியாபாரமாக ஆரம்பித்து அதனைப் பெரிய அளவில் கொண்டு செல்வது தான் நமது நோக்கம். அப்படித்தான் எல்லா வியாபாரங்களும் சிறிதாக ஆரம்பித்து பெரிதாக வளர்ந்திருக்கின்றன.

நல்ல தருணம் என்பதைவிட வியாபாரத்தை ஆரம்பிக்கும் முன்  இஷ்ட தெய்வத்தை வணங்கிவிட்டு வியாபாரத்தை ஆரம்பியுங்கள். தெய்வத்தை விட சக்தி வாயந்தது உலகத்தில் வேறு எந்த சக்தியும் இல்லை. அதனால் "தெய்வம் உதவும்" என்கிற நம்பிக்கையோடு உங்கள் கடமைகளைச் செய்ய ஆரம்பியுங்கள்.

சிறு  வியாபாரங்கள் நம்மை எட்டா உயரத்திற்குக் கொண்டு செல்லும். அதில் சந்தேகம் வேண்டாம். தோட்டப்புறங்களில் வேலை செய்தவர்களில் ஒரு சிலரை நான் பார்த்திருக்கிறேன். தோட்டத்தில் வேலை செய்வார்கள். வீட்டில் மளிகைச் சாமான்களை வைத்துக்கொண்டு வியாபாரம் செய்வார்கள். இவர்களால் எப்படி முடிந்தது?  பணம் பண்ண வேண்டும் என்கிற ஆர்வம் தான். இன்னும் சிலர் ஓமப்பொடி போன்ற பலகார வகையறாக்களை வீட்டிலேயே செய்து வியாபாரம் செய்து கொண்டிருப்பார்கள். காலையில் வேலைக்குப் போவதும் மாலையில் இது போன்ற வியாபாரங்களில் ஈடுபட்டிருப்பார்கள். பணத்திற்காகத்தானே உழைக்கிறோம்? அதில் ஏன் கஞ்சத்தனம்! இன்னும் கொஞ்சம் அதிகமாகவே உழைத்துக் குடும்பத்தைக் கரை  சேர்ப்போமே என்கிற அக்கறை தான்.

என் இளம் வயதில் எங்கள் பக்கத்து வீட்டுப் பாட்டி தினசரி காலையில் தேங்காப்பால் அப்பம் சுட்டு விற்பார்கள். நல்ல வியாபாரம் ஆகும். இதெல்லாம் எப்படி நடந்தது? இன்னொரு பக்கம் இடியாப்பம்,  தோசை என்று ஒரு பாட்டி வியாபாரம் செய்தார். வீட்டிலிருந்த வேலை செய்யாத பாட்டிகள் இப்படியெல்லாம் உழைத்து தங்களது குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்திக் கொண்டார்கள்.


இதெல்லாம் நடந்தது சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்னர்.  அந்தக் காலத்தில் அந்த பாட்டிகளுக்கு இருந்த பொருளாதார விழிப்புணர்வு இப்போது ஏன் நமக்கில்லை? ஆண்களுக்கும் இல்லை! பெண்களுக்கும் இல்லை! சாப்பாடு கிடைத்தால் போதும், வயிறு நிறைந்தால் போதும் என்கிற ஒரு மனநிறைவுக்கு  வந்து விட்டோமோ?  இன்று ஒவ்வொரு நிகழ்வுக்கும் மற்றவர்களை எதிர்பார்க்கிறோம். குடும்பத்தில் ஒருவர் இறந்துவிட்டார் பணமில்லை! மகள் நன்றாகப் படிக்கிறாள் மேலே படிக்க பணவசதியில்லை! சரி வேலைக்கு அனுப்பு! - இப்படி ஒவ்வொன்றுக்கும் யாரோ ஒருவர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் வந்து தான் நமது குறைகளைத் தீர்த்து வைக்க வேண்டியிருக்கிறது!

தோட்டங்களில் வாழ்ந்த போது இருந்த அந்த அடிமை மனோபாவம் நம் இரத்தத்தில் ஊறிவிட்டது போலும்!  அதனை நாம் தொடரவே விரும்புகிறோம்! உலகம் எவ்வளவோ மாறிவிட்டது! நமது அடிமை மனோபாவம்  இன்னும் மாறவில்லை!

அதற்குத்தான் நாம் இங்கு வலியுறுத்துவது உங்களது பொருளாதாரத்தை உயர்த்துங்கள். அது உங்கள் அடிமைத்தனத்தை மாற்றிவிடும். மற்றவர்களோடு சமமாக வாழ வைக்கும். பணம் தலைநிமிர வைக்கும். கூனிக்குறுகி வாழ உங்களை யாரும் வற்புறுத்தவில்லை.

வியாபாரம் செய்ய எல்லாமே ஏற்ற தருணம் தான். இதுவும் சரியான தருணம் தான். இன்றே செய்வோம்! நன்றே செய்வோம்!

Friday 20 May 2022

வாய்ப்புக்கள் எப்போதும் உண்டு!

 

          சிறு வியாபாரங்களுக்கு எப்போதும் ஒரு சந்தை உண்டு.

அதுவும் தமிழர்களிடையே பிரபலமாக உள்ள வடை,  தோசை, இட்டிலி என்று எதை எடுத்துக் கொண்டாலும் மலேசியர்களிடையே நல்ல வரவேற்பும் உண்டு.

இது போன்ற சிறு வியாபாரங்களில் நமது பெண்கள் கவனத்தைச் செலுத்த வேண்டும்.  இப்போது ஒரு சிலர்  தங்கள் வீடுகள் அருகிலேயே  சிறு கடைகள்  போட்டு இது போன்ற வியாபாரங்களைச் செய்கின்றனர். ஒரு சிலர் இரவு சந்தைகளிலும் விற்பனை செய்கின்றனர்.

பொதுவாக எடுத்துக் கொண்டால் இந்த சிறு வியாபாரங்கள்  தான்  நமது பெண்கள்  வியாபாரத்தில் எடுத்து வைக்கும்  முதல் காலடி!  இப்படிச் செய்வதன் மூலம் அடுத்தக் கட்டத்துக்கும் அவர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்கின்றனர்.  வியாபாரம் என்று வரும் போது அவர்களுக்கு ஓர் அசாதாரண துணிச்சல் வந்துவிடுகிறது! இயல்பாகவே ஆண்களைவிட பெண்களே வியாபாரத்தில் அதிக ஈடுபாடு காட்டுகின்றனர் என்பதைத் துணிவாகச் சொல்லலாம்!

இவைகள் எல்லாம் நம்மிடையே உள்ள நல்ல அம்சங்கள். வருங்காலங்களில் வியாபாரத்துறையில் பெண்களே ஆதிக்கம் செலுத்துவார்கள் என நம்பலாம். ஆண்கள் தங்களது மனைவியர்களுக்கு போதுமான  ஆதரவு கரம் நீட்டினாலே போதும். தேவை என்றால் இருவரும் சேர்ந்தே வியாபாரங்களில் ஈடுபடலாம். 

வியாபாரம் என்னும் போது "இப்ப செய்யலாம்! அப்ப செய்யலாம்!" என்று இழுத்தடித்துக் கொண்டு போகாதீர்கள்.   இப்படி இழுத்துக் கொண்டே போகும் போது பின்னர் அதுவே ஆர்வத்தைக் குறைத்துவிடும். நம்மைச் சுற்றிருப்பவர்கள் எதையாவது சொல்லி நமது ஆர்வத்தைக் குழி தோண்டி புதைத்து விடுவார்கள். இது நமது மக்களிடமிருந்து காலங்காலமாக நமக்குக் கிடைக்கும் இலவச புத்திமதி!

நாம் சில பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி விட்டோம். எதுவுமே முடியாது என்கிற மனநிலை தான் நம்மை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து விடுபட வேண்டும். 

இப்படி சிறு சிறு வியாபாரங்களில் நாம் ஈடுபடும் போது "முடியாது!" என்கிற மனநிலையிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ளக்கூடிய மனநிலைக்கு மாறுவோம். நமக்கு இருக்கின்ற பதற்றங்களிலிருந்து  நாம் விடுபடுவோம். இப்போது நமக்கு இருப்பதெல்லாம் "பயம்!பயம்!பயம்!" அது மட்டும் தான். அது நம்மை தலைநிமிராமல் செய்து விடுகிறது!

சிறு வியாபாரமோ, குறும் வியாபாரமோ அல்லது  பெரும் வியாபாரமோ எல்லா வியாபாரங்களுக்கும் எல்லா காலத்திலும் இடமுண்டு. இப்போது நம் தமிழினத்தைற்கு முதல் தேவை: சிறு வியாபாரங்கள். இங்கிருந்துதான் நாம் அடுத்துக் கட்டத்திற்கு நாம் நகர வேண்டும்.

வாய்ப்புக்கள் எப்போதும் உண்டு! இப்போதும் உண்டு! பயன்படுத்திக் கொள்வது நமது கடமை!

Thursday 19 May 2022

சிறு வியாபாரங்களை ஊக்குவிப்போம்!

இன்றைய குடும்பத் தலைவிகளில் பலர் சிறு சிறு வியாபாரங்களில் ஈடுபட்டிருப்பதைப் பார்க்கும் போது நமக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது!

கணவர்கள் நிறுவனங்களில் வேலை செய்வதும் மனைவியர் சொந்தமாக வியாபாரங்கள் செய்வதும் நல்லதொரு வளர்ச்சியாகவே  நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆமாம், இதில் நமது கடமை என்ன?  நாம் எப்போதும் அவர்களுக்கு நல்ல வாடிக்கையாளர்களாக இருக்க வேண்டும்.

சீனர்களிடம் ஒரு பழக்கம் உண்டு.  அது பத்துக் காசாக இருந்தாலும் அவர்களது பணம் சீன வியாபாரிகளுக்குத் தான் போக வேண்டும். அதாவது அவர்கள் சொல்ல வருவது பத்துக் காசாக இருந்தாலும் சரி பத்துக் கோடி சொத்தாக இருந்தாலும்  சரி அவர்களுடைய சொத்துக்களை அவர்களது இனத்தினர் வாங்குவதற்குத் தான்  முன்னுரிமை கொடுப்பார்கள். அதனால் தான் அவர்களுடைய சொத்துரிமை குறைய வாய்ப்பில்லாமல் போகிறது.

நாம் இதனைச் செய்ய முடியாதா?  எல்லா விடயங்களிலும் இதனை நாம் செய்யலாம். ஒரு செய்தித்தாள் வாங்குவது  கூட   நம் வியாபாரிகளாக இருக்கட்டும்.. நம் சகோதரிகள் பலர் பல வகையான உணவு பொருள்களை தயாரித்து விற்பனை செய்கின்றனர். அவர்களிடம் நாம் வாங்கி ஆதரவு கொடுப்போம்.. மளிகை சாமான்கள் கூட நமது இந்தியர்களின் கடைகளாகவே  இருக்கட்டும். இப்படி செய்வதன் மூலம் நமது பணம் நம் இனத்தவரிடையே சுழன்றுக் கொண்டிருக்கும். அது நமது வளர்ச்சிக்கு நல்லது.

இப்படியெல்லாம்  ஆதரவு கொடுத்தால் தான் நமது வியாபாரிகள் பயன் அடைவார்கள். சிறு வியாபாரமாக இருந்தாலும் அவர்கள் வளர்ச்சி காண முடியும்.  அப்படி வளர்ச்சி அடையும் போது அவர்களது சிறிய வியாபாரம்  பெரிய வியாபாரமாக  மாறும்.  இப்படித்தான் நாம்  நம்மிடையே ஒருவருக்கொருவர் உதவுபவர்களாக  இருக்க வேண்டும். அதுவே நமது வளர்ச்சிக்கு உதவும்.

எல்லாக் காலங்களிலும் நம்மிடையே  போட்டி, பொறாமை என்று போய்க் கொண்டிருந்தால் நமது சமுதாயம் முன்னேற்றம் காண வழியில்லாமல் போய்விடும். மற்ற இனத்தவரை எப்படி நாம் ஆதரிக்கின்றோமோ அதே போல நம் இனத்தவருக்கும் நாம் ஆதரவு கரம் நீட்ட வேண்டும்.

ஒருவர் முன்னேறினால் அவரைப் பாராட்டுங்கள். பொறாமைப்படாதீர்கள். சீனர்கள் முன்னேறினால் நாம் பொறாமைப்பட வில்லையே!  நமக்குள் மட்டும் ஏன் போட்டி பொறாமை?

சிறு வியாபாரிகளைப் பார்த்தீர்களானால் அவர்களுக்கு ஆதரவு கொடுங்கள். அவர்களை ஊக்கப்படுத்துங்கள். நமது சமுதாயத்தின் வருங்கால பெருமைக்குரியவர்கள் அவர்கள் என்பதாக நினைத்து செயல்படுங்கள்.

Wednesday 18 May 2022

சிறு வியாபாரங்கள்


 பெரும் பெரும் வியாபாரங்கள் என்பது வேறு சிறு சிறு வியாபாரங்கள் என்பது வேறு.

ஆனால் எல்லாவற்றுக்கும் அடிப்படை என்பது பணம் சம்பாதிப்பது மட்டும் தான். வேறு நோக்கம் இல்லை. 

அதற்காக சிறு வியாபாரங்களைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. இந்த சிறு வியாபாரங்கள் தான் பிற்காலத்தில் பெரும் வியாபாரமாக  மாற்றம் கண்டன. சீனர், இந்தியர், மலாய் இனத்தவர் யாராக இருந்தாலும் வியாபாரத்தில்  ஒரே நாளில் எங்கிருந்தோ குதித்து வந்த விடவில்லை.

இன்று சீனர்கள் பெரும் வியாபாரங்களில் கொடிகட்டிப்பறக்கக்  காரணம் அன்று அவர்களது முன்னோர் சிறு வியாபாரங்களில் ஈடுபட்டு  தங்களது பொருளாதாரத்தை வளர்த்துக் கொண்டவர்கள் தான். சீனர்கள் மட்டும் அல்ல நமது தமிழ் முஸ்லிம்கள், குஜாராத்தியர், மலபாரிகள் என்று யாரை எடுத்துக் கொண்டாலும் அந்த வழியில் வந்தவர்கள் தான்.

சிறு வியாபாரங்களில் நாம் ஈடுபடும் போது குறைந்தபட்சம் இரண்டாவது, மூன்றாவது தலைமுறையில் அவர்கள் அதனை பெருந்தொழிலாக மாற்றி அமைத்து விடுவார்கள். அதற்கு ஒரு தொடக்கம் தேவை. தொடக்கம் இருந்தால் தான்  அதன் நீட்சியும்  சிறப்பாக  அமையும்.

நமது சமுதாயத்தில் வியாபாரம் தொடங்குவதையே  ஏதோ பாவம் செய்வதைப் போன்ற ஒரு தோற்றத்தை நமது சுற்றுச்சூழல்  ஏற்படுத்திவிடுகிறது.வியாபாரத்தில் யார் யார் தோற்றுப் போனார்கள் என்கிற புள்ளிவிவரத்தை நமக்கு அடுக்குவார்கள்! வெற்றி பெற்றவர்களைப் பற்றி அவர்கள் வாய் திறக்கமாட்டார்கள்.  உண்மையில் தோல்வி அடைந்தவர்களை விட வெற்றி பெற்றவர்களே அதிகம்.

உங்களைச் சுற்றிப் பாருங்கள். உங்கள் நண்பர்கள் அனைவருமா  வியாபாரத்தில் தோல்வி அடைந்தவர்கள்? வெற்றி பெற்றவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்!  அப்படி ஒருவர் வெற்றி பெற்றால்  அதனை ஏதோ ஒரு குருட்டு அதிர்ஷ்டம் என நா கூசாமல் பேசுவார்கள்.

அதனால் தான் நாம் சொல்ல வருவதெல்லாம் நிறைய பணம் போட்டு வியாபாராம் செய்யுங்கள் என்று நாம் சொல்ல வரவில்லை. இருக்கிற பணத்தையெல்லாம் கொண்டுவந்து கொட்டுங்கள் என்று நாம் சொல்லவில்லை. சிறிய அளவு முதலீட்டில் சிறியதாகவே வியாபாரத்தை ஆரம்பியுங்கள். அதனை வைத்தே படிப்படியாக வியாபாரத்தை விருத்தி செய்யுங்கள். 

வியாபாரம் செய்ய ஆரம்பித்த பிறகு வெற்றியைப் பற்றியே யோசியுங்கள்.  நட்டம் என்கிற ஒரு சொல் இருப்பதை மறந்துவிட்டு செயலாற்றுங்கள்.

வியாபாரம் செய்வோம்! வெற்றி பெறுவோம்!

Tuesday 17 May 2022

வியாபாரம் தான் ஒரே வழி!


பணம் சம்பாதிப்பதில் பல வழிகள் இருக்கலாம். ஆனால் எல்லாருக்கும் தெரிந்த  வழி என்றால் அது வியாபாரம் செயவது மட்டுமே! அது தான் பணம் கொட்டுகிற இடம்!

வேறு வழிகள் ஏதேனும்  இருக்கின்றனவா என்று பார்த்தால் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. 

உலகளவில் எடுத்துக் கொண்டால் யூதர்கள் தான், பணம் என்று வரும் போது, முன்னணியில் நிற்கின்றனர். நமது நாட்டில் சீனர்களுக்குத் தான் முதலிடம். என்ன தான் கபடி ஆடினாலும் அவர்களை அடித்துக் கொள்ள ஆளில்லை! நினைத்தால் அவர்களாகவே ஓர் அரசாங்கமாகவே இயங்க முடியும்!

சரி,  நமது நிலை என்ன?  மலேசியர்களில் மிகக் குறைந்த சம்பளம் வாங்குபவர்கள் என்றால் அது நாம் தான்.  எல்லாம் முதலாளிகள் வைத்ததுதான் சட்டம். நமக்கும் வேறு வழியில்லை!

இன்னும் எத்தனை ஆண்டு காலம் இப்படியே நாம் சொல்லிக்கொண்டு இருக்கப் போகிறோம்? இந்த வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கப் போகிறோம்?

அதனால் தான் நாம் சொல்லுவது எல்லாம்  வியாபாரத்தில் இறங்குங்கள் என்பது! அதற்காக நாம் என்ன இலட்சக்கணக்கில் முதலீடு செய்து  வியாபாரம் செய்யுங்கள் என்று சொல்ல வரவில்லை. சிறிய அளவில் செய்யலாம்.

கணவன் மனைவி வேலை செய்தால் ஒருவர் வேலை செய்யலாம் ஒருவர் வியாபாரம் செய்யலாம். என்னுடைய  கருத்து பெண்கள் வியாபாரத்தில் ஈடுபடுவது தான் சிறப்பு.  இப்போது பல இடங்களில் நாம் பார்க்கிறோம். பெண்கள் தான் சிறு சிறு வியாபாரங்களைச் செய்து வருகின்றனர். இன்னொன்று அவர்களிடம் ஒர் ஒழுங்கை எதிர்பார்க்கலாம். பொறுப்புணர்வு அவர்களிடம் உண்டு.  குடும்ப நலன், பிள்ளைகளின் கல்வி  இவைகளைப் பற்றியெல்லாம் யோசிப்பவர்கள் பெண்கள் மட்டுமே. மேலும் வாடிக்கையாளர்களிடம் வெற்றிகரமாகப் பேசி விற்பனை செய்பவர்கள் பெண்கள். அவர்களிடம் இயற்கையாகவே அமைந்தது அந்த குணம்

எப்போது வியாபாரம் செய்ய நல்ல நேரம்? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை!  எல்லாமே நல்ல நேரம் தான்.  வியாபாரம் செய்ய நல்ல நேரம் என்றால் எப்போது உங்களுக்கு  வியாபாரம் செய்ய ஆர்வம் பொங்கி எழுகின்றதோ வியாபாரத்தை தொடங்கி விடுங்கள்.

Monday 16 May 2022

சேமிப்பு என்பது என்றென்றும்!

சிறு பிள்ளைகளுக்கு ஏன் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள் என்று சொல்லுகிறார்கள்? அநாவசியமான, தேவையற்ற  செலவுகளைச் செய்யக் கூடாது என்பதற்காகத்தான்.

ஒரு காலகட்டத்தில் பள்ளி மாணவர்களின் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக அஞ்கலகங்களிலிருந்து அதிகாரிகள் வருவார்கள். அவர்கள் ஒவ்வொரு மாணவரிடமும் அட்டை ஒன்றைக் கொடுப்பார்கள்.  அதில் நமது விபரங்களை எழுத வேண்டும். அந்த அட்டையில் கட்டங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு கட்டத்திலும்  பத்து காசு தபால்தலை ஒட்ட வேண்டும். அதில் நூறு கட்டங்கள் இருக்கும். நூறு கட்டங்களிலும் தபால்தலை ஒட்டிய பின்னர் அது மொத்தம் பத்து வெள்ளியாக  ஆகி இருக்கும். அந்த பத்து வெள்ளி நமது கணக்கில் வரவு வைக்கப்படும். இப்படித்தான் அஞ்சலகத்தில் எனது முதல் கணக்கை நான் திறந்தேன்.  பின் நாள்களில் பி.எஸ்.என். வந்த பிறகு தான் அந்தக் கணக்கு எண் மாற்றப்பட்டது.

அதன் நோக்கம் என்பது மாணவப் பருவத்திலேயே சேமிப்பை ஊக்குவிக்க வேண்டும் என்பது தான்.

இன்றைய காலகட்டம் என்பது கொஞ்சம் சிரமமானது  என்பது  உண்மை. இப்போது எப்படி சேமிக்க முடியும் என்கிற கேள்வி எழுவது இயல்பு. ஆனால் சேமிக்கத்தான் வேண்டும். இது நாள்வரை நீங்கள் பெருந்தொகையாகச் சேமித்துக் கொண்டு வந்திருக்கலாம். வருமானம் குறையும் போது உங்கள் சேமிப்பைக் குறைத்துக் கொள்ளுங்கள்.  ஆயிரம் வெள்ளி சேமிப்பவராய் இருந்தால் அதனை ஐநூறு வெள்ளியாக மாற்றிக் கொள்ளுங்கள். அதுவும் முடியவில்ல என்றால் அதனை நூறு வெள்ளியாக மாற்றிக் கொள்ளுங்கள். பின்னர் அதனை அதிகரிக்க வேண்டுமென்றால் அதிகரித்துக் கொள்ளுங்கள்.  எல்லாம் ஒரு ஒழுங்கு முறை தான். நம் காரியங்களைச் சரியாக ஒழுங்காக செய்கிறோம் என்பதற்கான அடையாளம் அது.

சேமிப்பு என்பதை எந்தக் காலத்திலும் நாம் அலட்சியம் செய்யக் கூடாது. தமிழர்கள் மட்டுமே அதிக அலட்சியம் காட்டுபவர்களாக இருக்கிறோம். பின்னர் அதிகம் அவதிப்படுகிறோம்.

அதற்கு கோவிட்-19 தொற்றே மிகப்பெரிய எடுத்துக்காட்டு. அப்போது எந்த சமூகம் சிரமத்தை எதிர்நோக்கியது? சாப்பாடு இல்லாமல், பிள்ளைகளுக்குப் பால் மாவு இல்லாமல், உணவு இல்லாமல் நமது சமூகம் தான் மிகவும் அவதிப்பட்ட சமூகம். அதே சமயத்தில் குடும்பத்தலைவன்  ஒரு பக்கம், எந்தக்கவலையும் இல்லாமல், கும்பலோடு  கும்பலாக குடித்து கும்மாளம் அடித்துக் கொண்டிருக்கிறான்!  நல்ல வேளை நமது குடும்பப் பெண்கள் தான் குடும்பங்களைக் காப்பாற்றினார்கள்.

சேமிப்பு என்பது நமது பணம். அது தான் நம்மைக் காப்பாற்றும். அண்ணன் தம்பியெல்லாம் ஒரு சில நாள்கள் தான் காப்பாற்ற முடியும்.

சேமிப்பு என்பது  ஒவ்வொரு குடும்பத்திற்கும் தவிர்க்க முடியாத ஒன்று. அதனை அலட்சியம் செய்யாதீர்கள்.

Sunday 15 May 2022

ஏழ்மை என்பது சாபமல்ல!


 ஏழ்மை என்பது சாபமல்ல. அது மாற்றக்கூடியது தான்.

ஏழ்மையை யார் ஒழிப்பது?  அரசாங்கத்தால் மட்டும் தான் முடியும் என்கிறார்கள். ஆனால் அரசாங்கம், தனது வாக்கு வங்கியை அதிகரிக்க வேண்டுமானால், பெரும்பான்மையினரின் ஏழ்மையைத்தான் ஒழிக்க நினைக்கும். நாம் அதைத்தான் பார்க்கிறோம். நமது தலைவர்களால் அரசாங்க உதவியுடன்,  அதனைச் செய்ய முடியும் என்றால் தலைவர்கள் அவர்களின் வறுமையைப் போக்கத்தான் முதலிடம் கொடுக்கிறார்கள் என்பதையும் பார்த்துவிட்டோம், இப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இவர்களும் கீழ்மட்டத்திலிருந்து அங்கே  போனவர்கள் தான். அவர்களை நொந்து கொள்வதில் புண்ணியமில்லை.  அவர்கள் வயிற்றுக்குத் தான் அவர்கள்  முதல் இடம் கொடுப்பார்கள்! அவர்கள் பின்னணியைப் பாருங்கள். எல்லாம் சோற்றுக்கு லாட்டரி அடித்தவர்கள் தான்! நல்ல கல்வியையும் பெற்றவர்கள் இல்லை!

ஆக யாரும் நமக்கு உதவும் நிலையில் இல்லை என்பது தான் நமது முதல் புரிதலாக இருக்க வேண்டும்.

இனி அடுத்து யார்? வேறு யாரும் இல்லை!  நம்மைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்? ஆமாம், நமது முன்னேற்றத்தில் நம்மைத்தவிர வேறு யாருக்கு அக்கறை? நமது ஏழ்மையைப் போக்க நாம் தான் அந்தப் பொறுப்பை  ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நம்மைச் சுற்றிப் பாருங்கள்  முன்னேறியவர்கள், பணம் படைத்தவர்கள் எல்லாரையும் பாருங்கள். அவர்கள் என்ன வானத்திலிருந்து குதித்துவர்களா? ஒன்றுமில்லை! அவர்களும் ஏழ்மையிலிருந்து அடித்துப்பிடித்து தங்களை முன்னேற்றிக் கொண்டவர்கள் தான்.

ஆனால் நம்முடைய பிரச்சனை என்பது சிக்கலானது. யாரோ வந்து நமது கைகளைப் பிடித்து நம்மைத் தூக்கி விடுவார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். அப்படியெல்லாம் யாரும் வரப்போவதில்லை! அந்த அதிசயம் எல்லாம் தேர்தல் காலங்களில் வாய்ச்சவடாலாக வரும்! அதை நம்ப வேண்டிய அவசியம் இல்லை.

நம் கையே நமக்கு உதவி.  அது வெறுங்கை அல்ல.  முருங்கை போல முந்நூறு வேலைகளை அது செய்யும். முனைப்புக் காட்டினால்  நம்மை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்லும். அத்துணை ஆற்றல் வாய்ந்தது நமது கைகளும் நமது கால்களும்.

ஆனாலும் யாரோ வருவார், யாரோ வருவார், யாரோ வந்து நம்மாக் காப்பாற்றுவார் என்று யாரையோ எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம்! இது நாள் வரை வரவில்லை! இனி மேலும் வரப்போவதில்லை!

யாரும் நமக்கு வேண்டாம்.  நாம் தின்றுவிட்டு ஏப்பம் விடும் இனம் அல்ல. மற்றவர்களிடம் இல்லாத உழைப்பு நம்மிடம் உள்ளது. இல்லாமலா இந்த நாட்டை வளமான நாடாக உருவாக்கினோம்?  உழைப்பில் போட்டிப் போட நம்மை அடித்துக் கொள்ள ஆளில்லை.

தேவை எல்லாம் நமது உழைப்பின் ஒரு பகுதியை நமது குடும்ப வளர்ச்சிக்காக நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் ஏழை என்று சொல்வதை வெறுக்க வேண்டும். நாம் தன்மானமிக்கவர்கள்.  உழைப்பதில் யாருக்கும் நாம்  சளைத்தவர்கள் அல்ல. உழைக்கும் சமுதாயம் என்றுமே தோற்றதில்லை!

ஏழ்மை சாபமல்ல! சாதிக்க வைப்பது!

Saturday 14 May 2022

நான் ஏழையல்ல!

 

நீங்கள், இந்த நிமிடத்தில், எப்படியும் இருக்கலாம். நம்மில் பெரும்பாலோர் ஏழ்மை நிலையிலிருந்து தான் ஒரு படி மேலே வந்திருக்கிறோம். இதில் ஒன்றும் தப்பில்லை. இப்போது நமது பிரச்சனை எல்லாம் அந்த முதல் படியைவிட்டு அடுத்த படிக்குப் போகத் தயாராக இல்லை!

இன்று உலகில் உள்ள எந்தப் பணக்காரர்களை அல்லது இலட்சாதிபதிகளை அல்லது அதற்குமேலே கோடிஸ்வரர்களை அல்லது அதற்கு மேலே மேலே யாராக இருந்தாலும் அனைவருமே ஏழ்மை நிலையிலிருந்து வந்தவர்கள் தான். அந்தக் குடும்பங்களின் முதல் பணக்காரர் ஏழ்மை என்று கூட சொல்ல முடியாத மிக அடிமட்டத்திலிருந்து வந்தவராகத்தான் இருக்க முடியும். குப்பைத் தொட்டியிலிருந்து எடுத்து சாப்பிட்டவர்களும் உண்டு.

நாம் ஏன் ஒரு கட்டத்துக்கு மேல் வளராமல் அப்படியே நின்று விடுகிறோம்? இருப்பது போதும் என்கிற மனநிறைவு நமக்கு ஏற்பட்டுவிடுகிறது! எந்த வம்புதும்பும் வேண்டாம் என்கிற மனநிலைக்கு வந்துவிடுகிறோம்.

தீர்க்க முடியாத வியாதி. பணம் இல்லை. மக்களை நாட வேண்டியுள்ளது. பிள்ளைகளுக்கு உயர் கல்வி கொடுக்க முடியவில்லை. பணம் இல்லை. பிள்ளைகள் படித்தது போதும் என்கிற மனநிலைக்கு வந்து விடுகிறோம். அவர்களை ஏதாவது ஒரு வேலைக்கு அனுப்பிவிடுகிறோம்.

இந்த மனத் தடைகளிலிருந்து நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்.  இன்னும் கொஞ்சம் அதிகம் பணம் சம்பாதித்து இன்னும் கொஞ்சம் அதிக வசதியாக வாழலாமே. யார் வேண்டாம் என்று சொன்னார்கள்?  யார் உங்களுக்குத் தடையாக இருக்கிறார்கள்?

முதலில் "நான் ஏழை!" என்கிற மனத்தடையை அகற்ற வேண்டும்.  தமிழர்களின் மிகப்பெரிய தடை  இந்த ஏழை என்கிற எண்ணம் தான். நம் மனதில் மிக ஆழமாக  வேருன்றிவிட்டது.  அதிலிருந்து  நாம் விடுபட வேண்டும். அது ஒன்றும் கம்பசூத்திரம் அல்ல!

.மிக எளிமையாக "நான் பணக்காரன்!" என்று சொல்லிவிட்டுப் போங்கள்! அவ்வளவு தான்! அந்த எண்ணத்தையே வளர்த்துக் கொள்ளுங்கள். இப்போது கையில் காசில்லை! அதனால் என்ன?  நான் பணக்காரன் தான்! ஏதோ இந்த நிமிடம் கையில் காசில்லையே தவிர அதற்காக காலாகாலமும் கையில் காசு இல்லாமலா போய்விடும்.? அடுத்த நிமிடமே வரலாம். அடுத்த மாதமே வரலாம்.எந்த நேரம் வேண்டுமானாலும் வரலாம்.

அதற்காக நம்மை நாமே ஏன் "ஏழை" என்று தாழ்த்திக்கொள்ள வேண்டும்? நாம் இரண்டு மூன்று தலைமுறையாக "நாம் ஏழைகள்" என்றே சொல்லி வளர்க்கப்பட்டிருக்கிறோம். அதை மாற்றுவது கொஞ்சம் கடினம் தான். ஆனால் மாற்றிக் கொள்ளலாம். நமது பிள்ளைகளுக்கும் அந்த மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும். மனதில் மிக ஊறிப்போன அந்த ஏழையை மனதிலிருந்து அகற்றி பணக்காரன் என்பதை உள்ளே புகுத்த வேண்டும்.

நாம் பணக்காரன் என்பதால் உடனே பணக்காரன் ஆகிவிட முடியுமா? என்கிற கேள்வி எழத்தான் செய்யும். முடியாது என்பது உண்மை தான். ஆனால் ஏழை என்கிற வார்த்தை இரண்டு மூன்று தலைமுறையாக நம்மை ஏழையாகவே வைத்திருக்கிறதே! ஏழை என்பது முடியும் போது பணக்காரன்  என்பதும் முடியும் தானே! நாம் வெளியே சென்று "நான் பணக்காரன்!" என்று பறை அடித்தா சொல்லப் போகிறோம்? இல்லை! நம் மனத்தில் அதனை, அந்த எண்ணத்தை, வளர்த்துக்கொள்ளப் போகிறோம். அப்படி ஓர் எண்ணத்தை மனதில் விதைக்கும் போது நம் மனதிலும் மாற்றங்கள் ஏற்படும். நம் வெளி உலகத்திலும் மாற்றங்கள் ஏற்படும்.

மீண்டும் மீண்டும் சொல்லுகிறேன். நாம் ஏழை சமுதாயம் அல்ல. நான் ஏழையல்ல! உழைப்பில் பெருமைபடுகிற சமுதாயம். நம்மிடம் உழைப்பு இருக்கிறது. உழைக்கும் ஆற்றல் இருக்கிறது.  அப்புறம் ஏன் நாம் ஏழை சமுதாயம்? நான் ஏன் ஏழை?

நாம் வளமான சமுதாயமாக வாழ்வோம்!

Friday 13 May 2022

பணம் இல்லாதவரா நாம்?

 


மைக்கா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தைப்பற்றி நாம் அறிந்திருக்கிறோம். பல ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனம்.

அதன் நோக்கம் சரியானது. இந்தியர்களின் பொருளாதார வளர்ச்சி என்பது தான் அதன் குறிக்கோள். நிர்வாகக் குளறுபடியால்  அது தோல்வியில் முடிந்தது.  அரசியல்வாதிகள் சாலை ஓரங்களில் ஒரு தேநீர் கடையைக் கூட நடத்த இலாயக்கற்றவர்கள்  என்பதை அந்நிறுவனம் நிருபித்துக் காட்டியது. அதனால் தான் அதன் பின்னர் "திரட்டுகிற" அரசியல்வாதிகளின் முயற்சிகள் எதுவும் எடுபடவில்லை!

நாம் நினைத்தபடி அந்நிறுவனம் இந்தியர்களுக்கு முன்னேற்றத்தைக் கொண்டுவர முடியவில்லை என்றாலும் ஒருசிலராவது அதன் மூலம் வயிற்றைப்பெருக்கிக் கொண்டார்களே என்கிற மனநிறைவே நமக்குப் போதுமானது.  அவர்களும் இந்தியர்கள் தானே! 

நாம் சொல்ல வருவது அதுவல்ல. இந்த நிறுவனம் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. அந்த நிறுவனத்தில் பணம் போட்டவர்கள்  அனைவரும் இந்தியர்கள். அப்போதும் ஏழை இந்தியர்கள் என்று தான் நாம் அழைக்கப்பட்டோம்.  ஏழை இந்தியர்களிடமிருந்து சுமார் 10 கோடி திரட்டப்பட்டது. இதைத்தான் நாம் கவனிக்க வேண்டும்.

அந்த காலகட்டத்தில் மக்களிடையே பேசப்பட்ட ஒரு செய்தியை நான் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். அதன் உண்மைத்தன்மையை என்னால் நிருபிக்க முடியாது. ஆனால் பேசப்பட்டது உண்மை. அந்நிறுவனத்திற்காக ஏழை இந்தியர்களிடமிருந்து  திரட்டப்பட்ட பணம் சுமார் பத்து கோடி ரிங்கிட். இதனைக் கண்டு பலர் ஆச்சரியப்பட்டார்கள். காரணம் அந்தக் காலகட்டத்தில்  பத்து கோடி சொத்துக்கள் உள்ள உள்ளூர் நிறுவனங்கள் எதுவும் இல்லை எனக் கூறப்பட்டது.  ஓரிரு வெளி நாட்டு நிறுவனங்கள் தான் அந்த அளவு சொத்துக்களைக் கொண்டிருந்தனவாம்.  அப்போது பிரதமராக இருந்த டாக்டர் மகாதிர் கூட அதனை அறிந்த போது வியந்து போனதாகப் பேசப்பட்டது.  "ஏழை இந்தியர்களிடம் இவ்வளவு பணம் இருக்கா!"  என்று சொன்னதாகப் பரவலாகப் பேசப்பட்டது. அப்போதே இந்தியர்களை டாக்டர் மகாதிர் ஏழைகள் அல்ல என்கிற முடிவுக்கு வந்து விட்டார்.

ஆனாலும் நாம் தான் வலுக்கட்டாயமாக இந்தியர்களை ஏழைகள் என்று சொல்லிக் கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறோம்.  இந்தப் போக்கை நாம் அறவே ஒழிக்க வேண்டும்.  நாம் ஏழைகள் என்பதை மறந்துவிட வேண்டும்.

டாக்டர் மகாதிர் கூட நம்மை ஏழைகள் என்று எண்ணியதில்லை. அவர் "வணக்கம் மலேசியா" இணையதளத்தில் கடைசியாகக் கொடுத்த பேட்டியில் கூட நாட்டில் இன்றும் அதிகமான டாக்டர்கள் இந்தியர்களாகத்தான் இருக்கிறார்கள் என்பதாகக் குறிப்பிடுகிறார்.  அந்த அளவுக்கு நாம் நீண்ட நாட்களாக அந்த இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறோமே அப்படியிருக்க  நாம் ஏழை சமுதாயம்  என்று ஏன் நம்மை நாமே பறைசாற்றிக்  கொள்ள வேண்டும்?

நம்மிடையே உள்ள சில தவறான பழக்க வழக்கங்களால் நாம் ஏழைகள் என்பதாக முத்திரைக் குத்தப்படுகிறோம். பணம் இல்லாதவர்கள் என பேசப்படுகிறோம்.

இவைகளெல்லாம் மாறிக்கொண்டு வருகின்றன. பணம் உள்ளவர்கள் தான் நாம் என்பதை வருங்காலங்களில் காட்டுவோம்!

Thursday 12 May 2022

குடிகாரர்களும் திருந்துவார்கள்!

 


குடிகாரர்களைத் திருத்தவே முடியாதா? அப்படியும் சில ஜென்மங்கள் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.

பலர் திருந்தக் கூடியவர்கள் தான். ஆனால்  கவலை எல்லாம் நமது இளைஞர் சமுதாயம் இப்படி அழிவை நோக்கிப் போகிறதே என்பது தான்.

ஒரு குடிகார நண்பனிடன் பேசக் கூடிய வாய்ப்பு ஒன்று கிடைத்தது.  அவன் பெரிய மொடாக்குடியன்!

நான் வேலை செய்த அந்தத் தோட்டத்தில் சுமார் முந்நூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.  பெரும்பாலும் இந்தோனேசியர்கள். அதில் மூன்று குடும்பங்கள் தான் இந்தியக் குடும்பங்கள். அதில் இந்த மொடாக்குடியனின்  குடும்பமும் ஒன்று. அங்குள்ள அடிதடிகள், சண்டைசு சச்சரவுகள் என்றால் இந்த மூன்று குடும்பங்களில் மட்டும் தான்!

இந்த மொடாக்குடியனுக்கும் அவன் மனைவிக்கும் தினசரி சண்டை. நடக்கும்! அவன் குடும்பத்திற்கு எந்த பணமும் கொடுப்பதில்லை. பள்ளி போகும் ஒரு மகள். இவர்களைப்பற்றி அவன் கவலைபடுவதாகவும் தெரியவில்லை. அந்த அளவுக்கு அவன் போதையிலேயே மிதப்பவன்! அவன் எவ்வளவு சம்பளம் வாங்குகிறான் என்பது அவன் மனைவிக்குத் தெரியும்.  அதனால் பணத்தைக் கேட்டு நச்சரிப்பாள்.

இந்த நிலையில் தான் நான் அவனைச் சந்திக்க நேர்ந்தது. உண்மையைச் சொன்னால் அவன் பாவப்பட்ட மனிதன். அவன் சகோரர்கள் யாரும் அவனை மதிப்பதில்லை. அதற்குக் காரணம் அவன் குடிப்பழக்கம். அந்தப் பழக்கத்திலிருந்து அவனால் விடுபடவும் முடியவில்லை.

பிரச்சனையைத் தீர்ப்பதற்கு ஒரு வழி சொன்னேன். அவன் மனைவி குடும்பத்தை நடத்த ஒரு மாதத்திற்கு எவ்வளவு தேவை என்பதைக் கேட்டேன். அவன் சொன்னான். அந்தப் பணத்தை அவளிடம் கொடுத்து விட்டால் அவள் பிரச்சனை பண்ணப்போவதில்லை. அவன் மகளுக்காக ஒவ்வொரு மாதமும் நூறு வெள்ளி சேமிப்பில் போட்டுவிடும்படி சொன்னேன். மீதமுள்ள பணத்தில் எதையாவது செய்துவிட்டுப் போ. உன் மனைவி எந்தப் பிரச்சனையையும் ஏற்படுத்தப் போவதில்லை. அவன் வேலையில் அவனுக்கு நல்ல ஒவர்டைம் சம்பளம் கிடைக்கும். அது எவ்வளவு என்பது அவன் மனைவிக்குத் தெரியவாய்ப்பில்லை. நீ குடிப்பதற்கு அந்தப் பணத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறினேன்.

தான் அப்படியே செய்வதாகக் கூறினான். நான் அவனை நம்புகிறேன். காரணம் யாரும் அவனை மனிதனாகக் கூட மதிப்பதில்லை. நான் ஒருவன் தான்  அவனை  மனிதனாக  மதித்து அவனிடம் பேசினேன்.

பின்னர் மாற்றலாகி  நான் வேறு தோட்டத்துக்குப் போகும் போது அவனே என்னைப் பார்க்க வந்தான்.  நான் அவனிடம் எதுவும் கேட்கவில்லை. அவனே என்னிடம் "நீங்கள் சொன்னபடியே நான் செய்கிறேன். என் மகளுக்கும் மாதாமாதம் சேமிக்கிறேன்". என்று கூறினான்.

அது உண்மையோ பொய்யோ எனக்குத் தெரியாது. அவன் சொல்வது உண்மை என்றே நான் நம்புகிறேன். பொய்யென்றால் அவன் என்னைப் பார்க்கவே வந்திருக்க மாட்டான். நான் மறந்து போனதை அவன் நினைவு படுத்தியிருக்க மாட்டான்.

குடிகாரர்கள் திருந்துவார்கள். அவர்கள் மீது அக்கறைக்காட்டி  அவர்களைத் திருத்த வேண்டும்.

Wednesday 11 May 2022

உங்கள் பணமாகவே இருக்கட்டும்!

 


நீங்கள் எதனைச் செய்தாலும்  நீங்கள் சம்பாதித்த பணத்திலிருந்து அதனைச் செய்யுங்கள். உங்கள் பணம் தான் உங்களுக்குத் திருப்தியைத் தரும்

அப்பா அம்மா பணத்தை எதிர்பார்க்காதீர்கள். அவர்கள் பணத்தில் கை வைக்காதீர்கள். நீங்கள் சம்பாதித்த பணம் உங்களுடையது. அதனை காப்பாற்றிக் கொள்ளுங்கள். தான தர்மம் செய்யச்சொல்லி யாரும் உங்களை வற்புறுத்தவில்லை!

அம்மாவின் பணம் ஊழியர் சேமநிதியில் இருக்கிறது. "இந்தா கிழவி! பணம் வந்ததும் நான் மோட்டர் சைக்கள் வாங்கனும்! வேற வாயத் திறக்காத!" மகன் சொல்லுகிறான். அவன் தான் சாப்பாடு போடுகிறான். மருமகள் கிட்ட ஏன் வம்பு? அம்மாவின் பணத்திற்கு ஆப்பு!

தோட்டப் பாட்டாளி அப்பா நன்றாகத்தான் படிக்க வைத்தார். அதில் ஒருவர் ஆசிரியர். அவரது மனைவியும் ஆசிரியர். அவர்களுக்கு வீடும் வாங்கிக் கொடுத்தார். ஒரு நாள் மகன் அப்பாவின் பணத்தில் கைவைத்தார். அப்பா நொந்து போனார்.  "நான் எல்லாமே இவனுக்குச் செய்தேன். இப்படி ஏமாற்றி விட்டானே!" அதன் பிறகு அப்பா எழவேயில்லை. இது படித்தவன் அப்பாவுக்கு வைத்த ஆப்பு!

ஒரு தாய் தனது மகனுக்கு ஊரில் கல்யாணம் செய்து வைத்தார். எல்லாம் சொந்தம் தான். தாயிடமிருந்த பணம் காலியாகிவிட்டது. மகன் காலியாக்கி விட்டான்.  ஊரிலிருந்த வந்த மருமகளுக்கு மாமியார் சொந்தமாகத் தெரியவில்லை. சோத்துக்குப் பாரம் என்று நினைத்தாள்! மாமியாரை வீதி வீதியாக பிச்சை எடுக்க அனுப்பிவிட்டாள்! மாமியாருக்கு மருமகள் வைத்த ஆப்பு!

நீங்கள் எதைச் செய்தாலும் அது உங்கள் பணமாக இருக்கட்டும். உங்கள் பணம் உங்களுக்குப் பொறுப்புணர்ச்சியைக் கொடுக்கும். "என் பணம்! நான் சம்பாதித்த பணம்!" அது பெருமையைத் தரும்.  யாரையும் ஏமாற்ற வேண்டும் என்கிற எண்ணம் எழாது.  மேலே எல்லா சம்பவங்களிலும் பாருங்கள் ஒரு மருமகள் ஒளிந்து கொண்டிருக்கிறாள்! அதே போல ஒரு சாபமும் ஒளிந்து கொண்டிருக்கிறது!

நாம் சம்பாதிக்கும் பணத்தில் தான் நமது காரியங்கள் ஆக வேண்டும். நமது முன்னேற்றம், நமது குழந்தைகளின் படிப்பு, நாம் வாங்கும் வீடு, நாம் வாங்கும் கார் - அனைத்தும் நமது பணமாகவே இருக்கட்டும்.  அப்பா அம்மா பணத்தில் குளிர் காய நினைத்தால் பிற்காலத்தில் அது வேதனையையும் கொடுக்கலாம்.

அப்பா அம்மா பணத்திற்கு மரியாதை கொடுங்கள். அவர்களின் பணத்தைக் கொண்டு அவர்கள்  விரும்புவதை செய்யட்டும். இளைய சமுதாயம் தங்களது சொந்தக்காலில் நிற்பது தான் அவர்களுக்குப் பெருமை. அப்பா அம்மா பணத்தைக் கொள்ளையடிப்பது, பறிப்பது பிற்காலத்தில் பிள்ளைகளுக்குக் கேவலத்தை உண்டாக்கும்.

உங்கள் பணம் தான் உங்களுக்குச் சாதனைகளைக் கொண்டு வரும்!

Tuesday 10 May 2022

எதற்கு பணம் தேவை?


பணம் எதற்குத் தேவை? நமது வாழ்க்கையைச் செழிப்பாக மாற்றிக்கொள்ள நமக்குப் பணம் தேவை.

நமது வளர்ச்சி, நமது குடும்பத்தின் வளர்ச்சி, நமது பிள்ளைகளின் வளர்ச்சி அனைத்துக்கும் அடிப்படை பணம் தான். பணம் இல்லாமல் எதுவும் நகராது! இதை நாம் புரிந்து வைத்திருக்கிறோம். 

இவ்வளவு விஷயங்களைப் புரிந்து  வைத்திருக்கும் நமக்கு அந்தப் பணத்தை நமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள மட்டும் அலட்சியமாக இருந்து விடுகிறோம்! 

குறிப்பாக எடுத்துக் கொண்டால் தமிழர்களாகிய நாம்  பணம் என்று வரும்போது மிகவும் பலவீனர்களாக மாறிவிடுகிறோம்! அதனை இறுக்கிப்பிடிப்பதில் அலட்சியம் காட்டி விடுகிறோம்.

பணம் இல்லாவிட்டால் என்ன ஆகும் என்பதைப் புரிந்து வைத்திருக்கிறோம். ஆனாலும் பணத்தை வைத்துக் கொண்டு எந்த அளவுக்கு அந்தப் பணத்தை வீணடிக்க முடியுமோ அந்த அளவுக்கு விணடிக்க நாம் தயாராக இருக்கிறோம்.

குழந்தைகளுக்குப் பிறந்த நாள் என்று சொல்லிக் கொண்டு நாம் ஆடாத ஆட்டமா! அப்படியென்றால் மற்ற இனத்தவர்கள் பிறந்தநாள் கொண்டாடுவது இல்லையா? நாம் அளவை மிஞ்சி விடுகிறோம். பிறந்தநாள் நமது நெருங்கிய உறவுகளோடு கொண்டாடினாலே போதுமானது. நாம் என்ன செய்கிறோம்? ஒரு திருமணத்தைற்கு ஆகும் செலவை நாம் செலவு செய்கிறோம்.

இது போன்ற குடும்பங்கள் தான் கோரோனா தொற்றின் போது பிரச்சனைகளுக்கு உள்ளான குடும்பங்கள். வேலை இல்லை. அதனால் கையில் காசு இல்லை.  இவர்கள் தான்  மற்றவர்களின் உதவியை எதிர்பார்த்த குடும்பங்கள். அரசாங்கத்தின் உதவியை நாடிய குடும்பங்கள். ஆனால் உதவியவர் யார்?  பெரும்பாலும் தமிழர் அமைப்புக்கள் தான். அவர்கள் தமிழர்களுக்கு மட்டும் அல்ல அனைத்து இனங்களுக்கும் உதவினார்கள். அது தான் நமது மாண்பு.

ஆனால் ஒன்று. நாம் பிறரை எதிர்பார்த்து வாழ்கின்ற  மக்களாக என்றுமே  வாழக் கூடாது. பிறர் கையை எதிர்பார்க்கும் நிலைமை நமக்கு வரக்கூடாது. நமது கைகள் தான்  மற்றவர்களுக்குக் கொடுத்து  உதவ வேண்டுமே தவிர, நமது கைகள் பிறரிடம் கையேந்தக்  கூடாது.

எதற்குப் பணம் தேவை? ஒவ்வொரு நகர்தலுக்கும்  பணம் தேவை. பணமின்றி எதுவும் அசையாது! பணத்தோடு வாழ்வோம். பண்போடு வாழ்வோம்!

Monday 9 May 2022

எவ்வளவு சேமிக்கலாம்?


 பொதுவாக எவ்வளவு சேமிக்கலாம் என்று கேட்கும் போது ஒவ்வொருவரும் வேவ்வேறு விதமான பதிலைக் கொடுப்பார்கள். எந்த வரையரையும் இல்லை!

ஆனால் சேமிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு இது போன்ற கேள்விகளுக்கு  இடமில்லை.. அது இயல்பாகவே அவர்களிடம் உள்ளது. இரத்தத்தில் கலந்துவிட்ட ஒன்று.

சேமிப்பு பழக்கம் இல்லாதவர்களுக்கு ஒரு வழிகாட்டல் தேவைப்படுகிறது. மாதசம்பளம் வாங்குபவர்கள் எவ்வளவு  சேமிக்க வேண்டும், மாதசம்பளம் வாங்காதவர்கள் எவ்வளவு சேமிக்க வேண்டும், தொழிலில் உள்ளவர்கள் எவ்வளவு சேமிக்க வேண்டும் - அனைவருக்குமே வழிகாட்டல் தேவைப்படுகிறது.

தங்களால் முடிந்தவரை சேமிக்கலாம் என்பது நல்ல விஷயம் தான். ஆனால் ஒரு விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நிறைய சேமிப்பதும் அதன் பிறகு சேமித்ததை எடுத்துச் செலவு செய்வதும்  நாம் ஆதரிக்கவில்லை.

ஒரு புத்தகத்தில் படித்தது. படித்ததில் பிடித்தது. அந்த இளைஞர் தனது வருமானத்திலிருந்து பத்து விழுக்காடு சேமிக்கும் பழக்கம் உள்ளவர். சேமிப்பு என்றால் அது சேமிப்பு. அந்தச் சேமிப்பிலிருந்து பணத்தை எடுக்கக் கூடாது என்பதில் அவர் கண்டிப்பாக இருந்தார்.  இடை இடையே பண நெருக்கடிகள் வரும். ஆனால் அந்த சேமிப்பில் அவர் கை வைப்பதில்லை. தான் திருமணம் செய்து கொள்ளும் போது பண நெருக்கடியில் இருந்தார். இல்லை! அவர் சேமிப்பில் கை வைக்கவில்லை! கடன் வாங்கித் தான் பண நெருக்கடிகளைச் சந்தித்தார்! 

அப்படியென்றால் எதற்குச் சேமிக்க வேண்டும் என்கிற கேள்வி நமக்கு இயல்பாகவே எழும். அவரிடம் பெரிய திட்டம் இருந்தது.  சேமிப்பில் கணிசமான தொகை சேர்ந்ததும் அந்தப் பணத்தைக் கொண்டு நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்கிற நோக்கம் இருந்தது. அதைத்தான் அவர் செய்தார். பின் நாட்களில் அவர் மிகப்பெரிய பணக்காரராக வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொண்டார்.

பத்து விழுக்காடு சேமிப்பு அவரை எந்த அளவுக்கு உயர்த்தியது என்பதை நாம் புரிந்து கொண்டால் போதும். 

எந்த அளவுக்குச் சேமிக்கலாம் என்கிற கேள்வி எழும்போது இருபது விழுக்காடு என்பது சரியாக இருக்கும் என்பதே நிதி ஆலோசகர்கள் நமக்குக் கொடுக்கும் செய்தி. இதனையே  மறை நூலான விவிலியம் உறுதிப்படுத்துகிறது.

இருபது விழுக்காடு என்பதையே வழிகாட்டியாக எடுத்துக் கொள்வோம். ஆனால் ஒன்று. சேமிப்பு என்பது எடுத்து எடுத்து செலவு செய்வதற்கு அல்ல! ஒரு சொத்து வாங்குவதற்கோ, வீடு வாங்குவதற்கோ பயன்படுத்திக் கொள்வோம்.  வங்கிகள் தேவை இல்லை. நமது சேமிப்பையே நமது வங்கிகளாக மாற்றி அமைத்துக் கொள்வோம்.

Sunday 8 May 2022

நாம் மொடாக்குடியர்களா?


நமது நாட்டில் ஒரு கணக்கெடுப்பு எடுத்தால்  யார் பெரிய குடிகாரர்கள் என முன் நிறுத்துபப்டுவர்? 

சந்தேகமே வேண்டாம். நாம் தான் பெரிய குடிகாரர்கள் என்பதற்கான ஆதாரங்களைப் பலர் கொண்டு வருவார்கள்! 

ஆனால் உண்மை அதுவல்ல! மதுபானத் தொழில் நம்மை நம்பினால் அந்தத் தொழிலகங்கள்  சீக்கிரம்  இழுத்து மூடிவிட்டுப் போக வேண்டிய சூழல் தான் வரும்! நம்மைவிட மகாக் குடிகாரர்கள் எல்லாம் நாட்டில் இருக்கிறார்கள்! 

ஒரு வித்தியாசம் என்னவென்றால் குடித்துவிட்டு நடு ரோட்டில் கும்மாளம் அடிப்பது நம்மிடையே அதிகம்! சீனர்கள் குடித்தால் வெளியே தெரிவதில்லை. சீனன் ஒரு நாள் பூராவும் வேலை செய்கிறான். இரவில் குடிக்கிறான் போய் படுத்துவிடுகிறான். நம்ம ஆள் வேலைக்குப் போவதற்கு முன்பே குடிக்க ஆரம்பித்துவிடுகிறான்! இரவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறான்! சண்டை, சச்சரவு என்பதெல்லாம் தனது வாழ்க்கையில் ஒரு பகுதி என் நினைக்கிறான்.

இந்நாட்டில் நாம் வசதியாக வாழ முடியாததற்கு யார் காரணம்? யாரும் காரணம் அல்ல. நமது குடிப்பழக்கமே நம்மை மேலே முன்னேற விடாமல் தடுத்து விடுகிறது!

கொரொனா தொற்று பரவி இருந்த காலத்தில் கூட நமது குடிகார நண்பர்கள் குடிப்பதைக் குறைத்துக் கொள்ளவில்லை! அவர்களுக்கு வேலை இல்லை தான், அவர்கள் வீட்டில் சாப்பாடு இல்லை தான் ஆனாலும் அவர்கள் எந்த வகையிலும் குடியைக் குறைத்துக் கொள்ளவில்லை! 

நம் வீட்டுப் பெண்கள் தான் பல வகைகளில் சிறு சிறு தொழில்களில் ஈடுபட்டு, ஆங்காங்கே வேலை செய்து கொண்டு  குடும்பத்தின் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டனர்.  குடிகாரக் கணவர்கள் கொஞ்சம் கை கொடுத்திருந்தால்  அந்தக் குடும்பங்கள் நல்லதொரு நிலைக்கு வந்திருக்க முடியும்.

நமது சமுதாயம் சீரழிவதற்கு இந்தக் குடிப்பழக்கம் தான் தலையாய காரணம். குடிப்பழக்கத்தினால் கையில் பணம் இருப்பு இல்லை. நல்ல சாப்பாட்டுக்கு வழியில்லை. பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை.

நம் சமுதாயத்தில் குடிப்பழக்கம் என்பது கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை பரவி நிற்கின்றது. மேல்மட்டத்தில் உள்ளவனுக்குக் கையில் பணம் இருப்பதால் அவன் குடும்பம் தப்பித்து விடுகிறது. கீழ்மட்டத்தில் உள்ளவனது குடும்பம்  தடுமாறுகிறது.

கடைசியில் ஒரு புள்ளியில் தான் வந்து நிற்கிறோம். முதல் தேவை பணம்.  உன் குடும்பத்திற்கு அது தேவை. அந்த தேவையை முதலில் பூர்த்தி  செய். குடும்பம் வழக்கம் போல் இயங்கும். உன்னை யாரும் எதிர்ப்பார்க்கப் போவதில்லை. நீ குடி! செத்து மடி!

Saturday 7 May 2022

பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை!


 முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை!

நாம் வாய் கிழிய பேசலாம். "போகும் போது கொண்டா போகப்போகிறோம்!"  என்று பேசுபவர்கள் யார்? கையில் பணம் வைத்திருப்பவன் அப்படியெல்லாம் பேசுவதில்லை. ஓட்டாண்டியாக இருப்பவன் தான் அப்படியெல்லாம்  பேசுவான்! குடிகாரன் பேசுவான்! ஒன்றுமில்லாதவன் பேசுவான்!

ஆனால் உண்மை நிலவரம் என்ன? இந்த வீண் பேச்சுகளை யாரும் இலட்சியம் செய்வதில்லை. காரணம் இந்த உலகில் இருக்கும்வரை நமக்குப் பணம் தேவைப்படுகிறது.

இந்த உலகின் எந்தப் பகுதிக்குப் போக வேண்டுமானாலும் நீங்கள் போய் வரலாம். உங்களை யார் தடுக்கப் போகிறார்கள்? அது உங்கள்  பணம். உங்கள் பணத்தைக் கொண்டு நீங்கள் என்ன செய்ய வேண்டுமானாலும் செய்யலாம். 

இந்த நாட்டில் நாம் ஏன் மரியாதை இழந்து கிடக்கிறோம்? யோசித்திருக்கிறீர்களா? கையில் பணம் இல்லை, அவ்வளவு தான்!

சீன சமுதாயத்தை யாராவது சீண்டிப் பார்க்கிறார்களா?  அவர்கள் மீது ஏதோ  ஒரு  பயம் இருக்கிறது!  அவர்களிடம் பணம் இருக்கிறது. அந்தப் பணம் பாதாளம் மட்டும் பாயும் என்பது நமக்குத் தெரியும். அவர்களைச் சீண்டிப் பார்த்தால்  பணத்தாலேயே திருப்பி அடிப்பார்கள்! பணத்தை யாராலும் புறக்கணிக்க முடியுமா! அதிகாரத்தில் உள்ளவர்கள் பணந்திண்ணி பிணங்கள்! வாயை அகலமாகவே திறப்பார்கள்!

நம்மால் என்ன செய்ய முடியும்?  பணம் இல்லையென்பதால் நாம் பிச்சைக்கார சமூகமாக அடையாளப்படுத்தப்படுகிறோம். குற்றவாளி சமூகமாகப் பார்க்கப்படுகிறோம். 

விசாரணை என்று ஜெயில் பக்கம் ஒருவன் போனால் அடுத்த நாள் அவன் பிணமாகத் திரும்புகிறான்! அந்த அளவு தான் நமக்குள்ள மரியாதை!

போகும் போது கொண்டு போக முடியுமா என்கிற கேள்வியைவிட இருக்கும் போது  ஜெயில் வரை கொண்டு போகலாம். நீதிமன்றம் வரை கொண்டு போகலாம். ஏன்? கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவன் நிரபராதியாக வெளியே வருவதில்லையா? 

பணத்தை எங்கெல்லாம் கொண்டு போக முடிகிறது என்பதைக் கவனித்தீர்களா? சொர்க்கத்துக்குக் கொண்டு போக முடியாது தான். ஆனால் நாம் வாழும் நரகத்துக்குப் பணம் அவசியம் தேவை! நரகத்தைச் சொர்க்கமாக்கிக் கொள்ள பணம் தேவை!

நண்பா! பணம் அலட்சியப்படுத்தப்பட வேண்டிய பொருள் அல்ல!  இருக்கிப் பிடிக்க வேண்டிய பொருள்

ஒரு சில மாற்றங்கள்!




ஒரு சில மாற்றங்கள் செய்ய விரும்பினேன். ஆனால் செய்ய முடியவில்லை. செய்யத் தெரிந்தவர்கள் அகப்படவில்லை.

ஆனாலும் அதற்காக சும்மா  இருக்க முடியுமா?  இருப்பதைக் கொண்டு செயலாற்றுவது தான் ஒரே வழி! தவறுகள் இருந்தால் மன்னியும். 

தொடர்ந்து ஆதரவு கொடுக்கவும்  இப்படியே இருக்கப் போவதில்லை. ஆள் கிடைத்ததும் மாற்றங்கள் கொண்டு வருவேன். நன்றி!










Thursday 5 May 2022

தேர்தல் களம் காண்பதறகு இது சரியான தருணமா?

 

அடுத்த பதினைந்தாவது பொதுத் தேர்தல் பற்றியான பல செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த ஆண்டு வரும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

இதில் ஆளும் தரப்பினர் தான் 'உடனடித் தேர்தல்' என்பதில் அவசரம் காட்டுகின்றனர்! ஆனால் தேர்தல் நடப்பதற்கு இன்னும் ஓர் ஆண்டுக்கு மேல் இருப்பதால் அப்போது தேர்தல் வைத்தால் போதும் என்கிற நிலைப்பாடை எதிர்க்கட்சிகள் எடுக்கின்றன.

பொது மக்களும் அதனையே விரும்புகின்றனர். இன்னும் ஓர் ஆண்டு இருக்கும் போது ஏன் இப்போது அவசரம் காட்ட வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை  தேர்தல் ஏன்னும் நடைமுறையை  நான்காண்டு தேர்தலாக  ஏன் மாற்ற வேண்டும்? 

இப்போது தேர்தல் வேண்டும் என்பதில் அதிகம் அக்கறை காட்டுபவர்கள் இப்போது நாட்டை ஆண்டுக் கொண்டிருப்பவர்கள். சென்ற பொதுத் தேர்தலில் மக்களால் கரிபூசப்பட்டவர்கள்!  சென்ற தேர்தலில் மக்களால் உதாசீனப்படுத்தப்பட்டவர்கள்! இலாயக்கில்லாதவர்கள் என்று மக்களால் தூக்கி எறியப்பட்டவர்கள்!

ஆனால் இப்போது காற்று அவர்கள் பக்கம் அடிப்பதாக கனவுலகில் சஞ்சரிக்கும் அம்னோ, எம்.ஐ.சி., எம்.சி.ஏ. போன்ற கட்சிகள் மக்களிடமிருந்து அதிகம் எதிர்ப்பார்க்கின்றனர். அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும். 

இந்தக் கட்சிகள் மக்கள் நிலை என்ன என்பதைப் புரிந்து கொள்ள மறுக்கின்றன. இப்போது  தான் கோரோனா பெருந்தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது. தொழிற்சாலைகள் திறக்கப்பட்டு மக்களும் வேலைக்குப் போக ஆரம்பித்திருக்கின்றனர். பிரச்சனைகள் அப்படி ஒன்றும் முடிவுக்கு வந்துவிட்டன என்று சொல்வதற்கில்லை. இன்னும் தொழில்கள் வழக்க நிலைக்குத் திரும்பவில்லை. நாட்டின் நிலை சீரடைய இன்னும் சில காலம் பிடிக்கும்.

இந்த நிலையில் பொதுத் தேர்தலுக்கு ஏன் அவசரம் காட்ட வேண்டும் என்பது தான் கேள்வி.  பொதுத்தேர்தலை நடத்த  குறைந்தபட்சம் தொற்று இல்லாத காலங்களில் சுமார் நாற்பது, ஐம்பது கோடிகளாகவது தேவைப்படும். இன்றைய நிலையில் தொற்று நோய் முற்றிலும் அகலாத நிலையில் இன்னும் அதிகமாகவே செலவு செய்ய வேண்டிய நிலை வரும்.

எதிர்க்கட்சிகளுடன் ஆளுங்கட்சி போட்டிருக்கும் ஒப்பந்தம் ஜுலை மாதம் முடிவடையும். அதுவரை நாட்டில் எந்த குழப்பமும் ஏற்பட வாய்ப்பில்லை என நம்பலாம். முடிந்தவரை அடுத்த பொதுத் தேர்தல் வரும்போது தேர்தலை நடத்துவதே சிறப்பு.

தேர்தல் களம் காண இது சரியான தருணம் அல்ல என்பதே நமது கருத்து!


Wednesday 4 May 2022

மிகவும் துயரமான சம்பவம்!

 

சமீபத்தில் பினாங்கு மருத்துவமனையின் மருத்துவ  பயிற்சியாளர் ஒருவர் தான் குடியிருந்த கட்டடத்தின் 23-வது மாடியிலிருந்து விழுந்து மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

இதற்கு முன்னரும்,  இந்த இரண்டு ஆண்டுகளுக்குள், இதே போல ஒரு மருத்துவ பயிற்சியாளர் மாடியிலிருந்து விழுந்து இறந்த  சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது.

இருவருமே சுமார் 25, 26 வயதுக்கு உட்பட்டவர்கள் தான். மருத்துவமனையில் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் என்ன, இந்த தற்கொலை சம்பவங்கள் ஏன் நடக்கின்றன  போன்ற  விபரங்களை போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர். மருத்துவமனையும் பிரச்சனைகளை ஆராய்ந்து வருகிறது.

நமக்குள்ள ஆதங்கள் எல்லாம் இந்த இளம் வயதில்  இப்படி இவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்களே என்று மனதிற்குள் ஏற்படுகின்ற வருத்தம் தான். ஆனால் அவர்கள் பிரச்சனைகள் என்ன என்பதே நமக்குத் தெரியவில்லை. நம்மால் ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை.

படித்த இளைஞர்கள் இப்படி கோழைத்தனமாக நடந்து கொள்வதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தற்கொலை கோழைத்தனம் தான். மருத்துவமனையில் ஏகப்பட்ட நெருக்குதல்கள் இருக்கலாம். அதற்கெல்லாம் தற்கொலை தான் தீர்வா? படிக்காதவன் தான் அடங்கிப் போகிறான். படித்தவனுக்கு என்ன? வேறு மாற்றுத்தீர்வை நோக்கித்தான் பயணிக்க வேண்டுமே தவிர தற்கொலை தீர்வாகாது.

ஒரு மருத்துவரை உருவாக்க அவனது குடும்பம் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறது, எவ்வளவு கடனில்  மாட்டியிருக்கிறது, எவ்வளவு பணத்தை இழந்திருக்கிறது என்பது சாதாரண விஷயமல்ல. அது பலருடைய உழைப்பு. குடும்பமே உழைத்திருக்கிறது.  அந்த குடும்பத்தின் எத்தனையோ ஆண்டுகால உழைப்பு. ஆனால் அத்தனையும் விழலுக்கு இறைத்த நீராகிப்போனது.  இழப்பு என்பது குடும்பத்திற்கு மட்டும் அல்ல. அது சமுதாயத்துக்கும் தான்.

 மருத்துவம்  தாங்கள் விரும்பாத தொழிலாக இருக்கலாம். பெற்றோரின் வற்புறுத்தலால் அவர்கள் அந்தத் தொழிலை தேர்ந்தெடுத்திருக்கலாம். விரும்பாத அந்தத் தொழிலில் நெருக்கடிகள் வரும் போது, என்ன செய்வது என்று புரியாமல், இது போன்று தற்கொலை முயற்சிகளில் ஈடுபட கூட வாய்ப்புண்டு.

எதையும் சொல்வதற்கில்லை. இது மிகவும் துயரமான செய்தி என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள் என்பதைத்தான் சொல்ல முடியும்.

Tuesday 3 May 2022

இணைய மோசடி!


 இணைய மோசடி என்பது கடந்த சில வருடங்களாக அதிகரித்துக் கொண்டே வருகிறது!  இப்போது அது கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கட்டு மீறிக் கொணடே போகிறது என்பது மட்டும் உண்மை!

கடைசியாக வந்த செய்தியின்படி  சுகாதார அமைச்சின் அதிகாரி எனக் கூறிக்கொண்டு ஒரு நிறுவனத்தின் பெண் நிர்வாகி ஏமாற்றப்பட்டிருக்கிறார்!  சுமார் 1,32,900 ரிங்கிட்டை அந்தப் பெண் நிர்வாகி பறிகொடுத்திருக்கிறார்!

நாம் அதிர்ச்சி அடைவதெல்லாம் இது எப்படி நடக்கிறது என்பது  தான். படிக்காதவர்கள் ஏமாறுவதற்கான வாய்ப்புக்கள் உண்டு. விபரம் புரியாதவர்கள் ஏமாந்து போவதும் உண்டு.

ஆனால் சமீப காலங்களில் வருகின்ற செய்திகள் எல்லாம் அதிகம் பேர்  படித்தவர்களாக இருக்கிறார்கள்! இவர்களுமா ஏமாற வேண்டும்? தினசரி நாளிதழ்களில் படித்தாலே  போதும். வேறு எங்கும் போக வேண்டாம்.  இது போன்று செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்த செய்திகள் மூலம் நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டாமா? 

ஒன்று நமக்குப் புரிகிறது. இப்போது படித்தவர்கள் பத்திரிக்கைகள் படிப்பதில்லை.  படிக்கவில்லை என்றால் உங்களை முட்டாளுக்குவது மிக எளிது என்பதை இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் கணினி பக்கம் அதிகம் நாட்டம் உள்ளவர்கள் என்றால் அங்கும் நிறைய இணைய இதழ்கள்  வருகின்றன. அதனையாவது படியுங்கள். படிப்பதில் நாட்டமில்லையென்றால் நட்டம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது!

உங்களை ஏமாற்ற நினைப்பவர்கள் என்ன வழியைக் கடைப்பிடிக்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள்.  உங்கள் தொலைபேசி எண் அவர்களுக்கு எப்படியோ கிடைத்துவிட்டது. ஒரு முறை அவர்களூக்குக் கிடைத்துவிட்டால் அவர்கள் உங்களைப் பின்தொடர்ந்து கொண்டு தான் இருப்பார்கள். அதாவது அவர்கள் நோக்கம் நிறைவேறும் வரை. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, ஆண்டுக்கு ஒரு முறை என்று தொடர்ந்து கொண்டே இருப்பார்கள்! அது அவர்களது கடமை! அவர்களது முயற்சியைக் கைவிடமாட்டார்கள்! உங்கள் தொலைபேசியில் இன்று நீங்கள் பேசலாம் அடுத்தமுறை வேறு யாரும் பேசலாம். அது அவர்களுக்கு இலாபம். நீங்கள் ஏமாறமாட்டீர்கள் நாளை வயதானவர்கள் யாரும் பேசலாம். ஏமாறும் வாய்ப்புண்டு.

நீங்கள் முக்கியமாக ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அரசாங்க அலுவலகங்களிலிருந்து எந்தத் தொலைபேசி அழைப்புக்களும் வரவாய்ப்பில்லை. அறவே வாய்ப்பில்லை!காவல் துறையோ அல்லது வேறு அரசாங்கத் துறைகளோ நிச்சயமாக உங்களை அழைக்க மாட்டார்கள்.  வங்கிகளும்  அழைக்கமாட்டார்கள். வங்கிகள் அழைக்க காரணங்கள் உண்டு. ஆனால் அவர்கள் உங்கள்  வங்கிக்கணக்கு எண் போன்றவற்றைக் கேட்டால் "நான் வங்கிக்கு வருகிறேன்" என்று சொல்லிவிடுங்கள். அது நிச்சயமாக வங்கியாக இருக்க வழியில்லை!

பொதுவாக யாராக இருந்தாலும் சரி அந்த எண், இந்த எண், எந்த எண்ணாக இருந்தாலும் சரி எதையும் கொடுத்து விடாதீர்கள். ஒரு எண் அவர்களுக்குக் கிடைத்துவிட்டால் அதை வைத்தே மற்ற எண்களைக் கண்டுபிடித்து விடுவார்கள்! பலே கில்லாடி அவர்கள்!

இணைய மொசடி அதிகமாகிக் கொண்டே போகிறது! எச்சரிக்கை தேவை! ஏமாந்து விடாதீர்கள்!

Monday 2 May 2022

ஒழிக்கவே முடியாதவர்களா?

 

                                           கந்து வட்டிக்கரர்களை ஒழிக்க முடியாதா?

காவல்துறையால் ஒழிக்கவே முடியாத  அல்லது கண்டு பிடிக்கவே முடியாத ஒரு சில விஷயங்கள் உண்டு. அப்படியென்றால் யாரால தான் இவர்களைக் கண்டு பிடிக்க முடியும் அல்லது ஒழிக்க முடியும் என்று பொது மக்களும் கேள்வி கேட்க முடியும்.

ஆலோங் எனப்படுகிற கந்து வட்டிக்காரர்களை அறவே இயங்காமல் அவர்களை ஒழித்துக்கட்ட வழிவகைகள் உண்டா என்றால் இதுவரை அது சாத்தியப்படவில்லை~ அவ்வப்போது ஓரிருவர் கைது செய்யப்படுகிறார்களே தவிர மற்றபடி இவர்கள் சுதந்திரமாகத் தான் வட்டித்தொழிலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் ஒரு பெண் தன் காதலனுக்காக ஆலோங்கிடம் பணம் வாங்கப் போக அந்த காதலன் அதோடு நிற்காமல் மேலும் பல ஆலோங்களிடம் - சுமார் 38 பேரிடம்  -  அந்தப் பெண்ணின் பெயரில் பணம் வாங்கி கடைசியில் அந்தப் பெண்ணை நடுவீதிக்குக் கொண்டு வந்துவிட்டான். இப்போது அந்தப் பெண்ணின் குடும்பம் இந்த ஆலோங்களால் பிரச்சனைக்கு உள்ளாகி இருக்கின்றனர். அந்தப் பெண்ணும் இப்போது  தலைமறைவாக வாழ வேண்டிய சூழல்.

அவ்வப்போது தான் இதுபோன்று விஷயங்கள் ஊடகங்களில் வெளியாகின்றன. ஆனால் வெளி வராமல் இருப்பவை நிறையவே இருக்கின்றன.

காவல்துறையின் நடவடிக்கைகள் சரியாக இருக்கின்றனவா என்பது நமக்குத் தெரிய வழியில்லை.  ஆனால் இந்த வட்டிமுதலைகளின் அட்டுழியங்கள்  ஒரு முடிவுக்கு வருமா என்பது புரியாத புதிர்!

காவல்துறையால் கண்டுபிடிக்கவே முடியாத பட்டியலில் ஒரு சிலர் இருக்கின்றனர். நமக்கு அதிகம் தெரிந்த,  ஊடகங்களில் அதிகம் பேசப்பட்ட - இந்திராகாந்தியின்  மகள் பிரசன்னா. தனது முன்னாள் கணவரால் கடத்திச் செல்லப்பட்ட  அந்தக் குழந்தை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. குழந்தை படிக்கிறாள். கடத்திக் கொண்டு போனவன் கார் வாங்குகிறான்,  வீடு வாங்குகிறான்,  வேலை செய்கிறான்,  EPF. SOCSO  வெட்டுகிறான் ஆனால் அவனைக் காவல்துறை கண்டுபிடிக்க முடியவில்லை!

இன்னும்  சில வழக்குகளும் உண்டு.  கிறிஸ்துவ பாஸ்டர்கள்  கடத்தப்பட்டார்கள். அதில் ஒருவர் இராணுவ வாகனமொன்றில் கடத்தப்பட்டார்  என்பதற்கான ஆதாரங்கள் இருந்தும்  அவரைக் காவல்துறை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த வழக்குகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. 

ஒழிக்க முடியாதவை, கண்டு பிடிக்க முடியாதவை தொடர்ந்து கொண்டு தான் இருக்கும் என்றே தோன்றுகிறது!

Sunday 1 May 2022

மேதின வாழ்த்துகள்!

 


வாசகர்கள் அனைவருக்கும் மேதின வாழ்த்துகள்!  

நாடு எதிர்நோக்கும் பல இடர்களுக்கிடையே மேதினம் அல்லது தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டில் எல்லாம் சீரடைந்துவிட்டது என்று சொல்வதற்கில்லை. பிரச்சனைகளுக்குப் பஞ்சமில்லை.

இந்த நெருக்கடியிலும்  இப்போது குறைந்தபட்ச சம்பளம் ரி.ம.1500.00 இப்போது அமலுக்கு வருகிறது. இதில் பலர் பயனடைவர் என்பது நல்ல செய்தி.

அனைவரையும் வாழ்த்துகிறோம்!


நாளை (2.5.2022) நோன்பு பெருநாள் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் சமூகத்தினருக்கும் நமது நல்வாழ்த்துகள்!

பயணம் செய்யும் போது உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அவசரம் வேண்டாம். அமைதியைக் கடைப்பிடியுங்கள்.

குடும்பத்தோடு கூதுகலமாக பெருநாளைக் கொண்டாடுங்கள்! 

வாழ்த்துகள்!