Saturday, 31 August 2019

தங்கம் வென்ற இளவேனிலி...!

தமிழ் நாடு, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்ப் பெண் ஒருவர் உலகக் கிண்ண துப்பாக்கிச் சுடும் பட்டியில் தங்கம் வென்றிருக்கிறார்.

அவரது பெயர் இளவேனிலி. தந்தையின் பெயர் வாலறிவன். இவரது சகோதரரின் பெயர் இறைவன். இறைவனுக்கு 24 வயதாகிறது. இராணுவத்தில் பணி புரிகிறார். அவரும் முறையான பயிற்சி பெற்று துப்பாக்கி சுடுதலில் சிறப்பாக தேர்ச்சி பெற்றவர். 

இளவேனிலிக்கு 19 வயது ஆகிறது. அவரது சகோதரர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்ட போது இளவேனிலிக்கும் அதில் ஆர்வம் ஏற்பட்டதால்  அவரும் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடலானார்.  அப்போது அவர் ஏழாம் வகுப்பு மாணவி.  பின்னர் அவர் 12-ம் வகுப்பு தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்றதால் அவருக்கு மருத்துவம் அல்லது இன் ஜினீயரிங் படிப்பதற்கான வாய்ப்புக் கிடைத்தும் அதனை உதறித் தள்ளிவிட்டு துப்பாக்கிச் சுடுதலிலேயே தனது கவனத்தைச் செலுத்தினார். இப்போது அவர் இளங்கலை படிப்பை படித்து வருகிறார்.

இளவேனிலி  உலக அளவில் பல பதக்கங்களைப் பெற்றவர். அடுத்து ஒலிம்பிக் போட்டியில் குறி வைத்திருக்கிறார். அதிலும் அவர் வெற்றி பெறுவார் என்பதில் ஐயமில்லை. 
 
இளவேனிலி தற்போது தனது பெற்றோருடன் குஜாராத் மாநிலத்தில் வசித்து வருகிறார். பெற்றோர்கள் குஜாராத்தில்; வேலையில் இருக்கிறார்கள்.

இதில் எனக்கு மிகவும் கவர்ந்த விஷயம் இரண்டு. ஒன்று இவர்களின் பெயர்: தத்தாவின் பெயர்: உருத்திராபதி  மகனின் பெயர்:  வாலறிவன்   பேத்தியின் பெயர்:  இளவேனிலி   பேரனின் பெயர்:  இறைவன். 

"தமிழன்டா!"  என்று பெருமை பட வைக்கிறது!

இப்படியெல்லாம் பெயர் வைத்தால் கூட உலகப் புகழ் பெற முடியும் என்பதை நிருபித்துக் காட்டியிருக்கிறார் இளவேனிலி.  கூகலின் சுந்தர் பிச்சை கூட நமது ஞாபகத்திற்கு வருகிறார்!

இரண்டாவது: படிப்பதற்கு நல்ல பல வாய்ப்புக்கள் இருந்தும் தனது மகளுக்காக அவைகளை விட்டுக் கொடுத்து அவரது துப்பாக்கி சூடும் போட்டிகளுக்கு அவரைத் தயார் செய்த பெற்றோர்கள், பாராட்டுக் குரியவர்கள்.

பிள்ளைகள் தாங்கள் விரும்பும் துறைகளைத் தேர்ந்தெடுத்தால் அதில் அவர்கள் வெற்றி பெறுவார்கள்.  அதற்கு சான்று: இளவேனிலி.

இப்போது அவர் உலக அளவில் தங்கம் வென்றிருந்தாலும் வரும் ஒலிம்பிக் போட்டியிலும் வெற்றி பெறுவார் என நம்புகிறோம்! வாழ்த்துகிறோம்!

வாழ்த்துகள் இளவேனிலி!

Friday, 30 August 2019

வாழ்த்துகிறேன் அமைச்சரே!

வீட்டுடைமை ஊராட்சி மன்ற  அமைச்சர் ஸூரைடா கமாருடின் பாராட்டப்பட வேண்டியவர்!

உண்மையை உண்மை என்று எந்தக் காலத்திலும் அரசியல்வாதிகள் ஏற்றுக் கொள்ளுவதில்லை என்பது ஒன்றும் அதிசயமல்ல. முடிந்தால் அந்த செய்தியைக் கூட வெளி வராமல் இரகசியம் காப்பார்கள்!

ஆனால் அமைச்சர் ஸூரைடா வித்தியாசமானப் பெண்மணி. நாட்டின் வறுமையின் விகிதம் அதிகம் என்கிறது ஐ.நா. சபை. பொருளாதார அமைச்சர் அஸ்மின் அலி 2016-ம் ஆண்டு நாட்டின் வறுமை விகிதம் 0.4% என்கிறார். ஆனால் ஐ.நா. சபை தற்போதைய அதன் அறிக்கையில் மலேசியாவின் வறுமை விகிதம் 15% என்பதாக அறிவித்திருக்கிறது.

இரண்டிலுமே குறைபாடுகள் இருக்கலாம்.  சரியான புள்ளி விபரங்கள் இல்லாத நிலையில் நாம் 15 விழுக்காடு என்பதையே எடுத்துக் கொள்ளுவோம். ஆட்சேபணை இல்லை!

ஆனால் அமைச்சர் ஸூரைடா அதனை எடுத்துக் கொண்ட விதம் பாராட்டத்தக்கதாக இருக்கிறது. அந்த தகவலை அவர் நேர்மறையாகவே எடுத்துக் கொண்டார்.  

"அந்தச் செய்தியை நாம் நேர்மறையாகவே எடுத்துக் கொள்ளுவோம். நாம் இப்போது செய்ய வேண்டியதெல்லாம் ஏழ்மையை ஒழிக்க வேண்டும். ஏழைகளின் முன்னேற்றத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும்" என்பது தான் அமைச்சருடைய எதிரொலியாக அமைந்தது.

அமைச்சரின் பார்வை சரியான பார்வை. வறுமை எந்த ஒரு வகையிலும் எந்த ஒரு நாட்டிலும் தேவை இல்லாத ஒன்று. அதனை ஒழிக்க வேண்டும்.  தொடர விடக் கூடாது.

இந்த நேரத்தில் ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.  ஏழைகளை வாழ வைக்கிறோம் என்று சொல்லி அவர்களுக்கு இலவசங்களை அள்ளி வீசக் கூடாது! இது வறுமை ஒழிப்பு அல்ல. அரசியல் விளம்பரம். பிரிம் போன்ற பண உதவி ஏழ்மையை ஒழிக்க உதவாது.

ஏழ்மையை  விரட்ட ஆக்ககராமான முறையில் அரசாங்கம் செயல்பட வேண்டும். முதல் வேலை படித்தவனோ, படிக்காதவனோ, பண்டிதனோ பாமரனோ,  அனவருக்கும் வேலை வேண்டும். தங்களது பிழைப்பு நடக்க அவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும்.  வயிற்றுக்குச் சாப்பாடு இல்லை என்றால் யாரும் செயல் பட முடியாது. அதனால் வேலை வாய்ப்புக்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும். 

நிச்சயமாக ஏழைகளின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அரசாங்கம் வைத்திருக்கும்.  அவைகள் நிறைவேற்றினாலே  ஏழ்மை ஒழியும்.

நாம் இங்கு சொல்ல வருவதெல்லாம் ஒரு எதிர்மறையான செய்தியைக் கூட நேர்மறையாக எடுத்துக் கொண்ட அமைச்சரை பாராட்டத்தான்!  அனைத்து அமைச்சர்களுக்கும் ஸூரைடா ஒரு எடுத்துக் காட்டாக இருக்கிறார் என்பதை சொல்லத்தான்!

மீண்டும் வாழ்த்துகிறேன் அமைச்சரே!

வர்த்தக சமுதாயம்....!

மின்னல் எப்.எம். வானொலி நல்லதொரு முயற்சியில் இறங்கியிருக்கிறது.  முதலில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்!

பொதுவாக நான் வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்பதில்லை. ஏதோ ஒரு காலக் கட்டத்தில்  கேட்டிருக்கிறேனே தவிர சமீப காலமாக இல்லை!

மின்னல் எப்.எம்.  இப்போது புதிதாக ஒரு நிகழ்ச்சியை அறிவிப்பு செய்திருக்கிறது.  ஆமாம்! இந்திய இளைஞர்கள் வியாபாராத் துறையில் பீடுபாடு கொள்ள ஒரு நிகழ்ச்சியை ஆரம்பிக்க விருக்கிறது என்பது நல்ல செய்தி என்பதில் ஐயமில்லை.

மலேசிய வானொலி இது போன்ற நிகழ்ச்சியை ஒலிபரப்புவது இது தான் முதல் முறை என்று சொல்லுவதற்கில்லை. இதெல்லாம் எத்தனையோ ஆண்டுகள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. 

இது ஒரு தொடர் முயற்சி.  இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதின் மூலம் ஏதேனும் பயன் உண்டா என்று கேள்விகள் எழுந்தாலும்  இதனால் பயன் உண்டு என்பதே நமது முடிவு.

அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள்.  நகர வேண்டுமென்றால் அடி மேல் அடி அடிக்கத்தான் வேண்டும்!  மலாய் சமூகத்தினர் இப்போது வணிகத்தில் அதிகம் நாட்டம் செலுத்துகின்றனர் என்பது நமக்குத் தெரிந்து தான் இருக்கிறது. காரணம் அரசாங்கம் எடுத்த இடைவிடா முயற்சிகள் தான்.  ஏன், சும்மா கிடந்தவனைக் கூட வலிய பணம் கொடுத்து வியாபாரம் செய்ய வைத்தார்கள். சில  தோல்விகள் என்றாலும் பல வெற்றிகள்!

நமக்குப் பணம் கொடுக்க ஆளில்லை. அதனால் நமது சொந்தப் பணம் தான் நமது முதலீடு. வியாபாராம் என்பது நமது பணத்தைக் கொண்டு தான் ஆரம்பிக்க வேண்டும்.  நமது பணம் என்றால் தான் நாம் செய்கின்ற வியாபாராத்தின் மீது நமது அக்கறை இருக்கும்!

இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம்  நமக்கு நல்ல பல செய்திகள் கிடைக்கும்.  நேர்காணலின் போது வர்த்தர்களின் அனுபவம் என்பது முக்கியம். வியாபாரம் என்பது எடுத்த எடுப்பில் வெற்றி அடைவது அல்ல. அது வெற்றியும் அல்ல. எல்லாமே மேடு பள்ளம் நிறந்தவைகள் தான். அனுபவம் தான் நமக்குப் பாடம்.  நாம் ஒவ்வொன்றையும் அனுபவித்துக் கற்றுக் கொள்ளுவதை விட பிறரின் அனுபவத்தின் மூலம் கற்றுக் கொள்ளுவது எளிது.

பிற வர்த்தகர்களின் அனுபவ பகிர்வுகள் நமக்கு நல்லதொரு பாடத்தை கற்றுக் கொடுக்கும். வர்த்தகம் என்பது நமக்குப் புதிதல்ல. நாமே ஒரு வர்த்தகச் சமூகம் தான். ஆனால் பிற்காலத்தில் ஏற்பட்ட சில சரித்திர நிகழ்வுகளால் வர்த்தகத்தில் சுணக்கம் ஏற்பட்டு விட்டது.

அதனாலென்ன? வர்த்தகத்தில் நம்மை தூக்கி நிறுத்த பற்பல முயற்சிகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அது போல மின்னல் வானொலியும் தனது பணியைச் செய்கிறது. நாம் பயன் பெற வேண்டும். 

நாம் வர்த்தக சமுதாயம்! அதனை மறக்க வேண்டாம்! மீண்டும் வர்த்தகத்தில் தலை நிமிர்வோம்

Thursday, 29 August 2019

அர்த்தம் மாறிப் போனதோ..!

சமீபத்தில் நமது பிரதமர், டாக்டர் மகாதிர் "பறையர்" என்று ஒரு சொல்லைப் பயன்படுத்தியது சரியல்ல என்பதாக நாம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறோம். 

அது சரியா, தவறா  என்று இங்கு நாம் விவாதிக்கப் போவதில்லை. 

நாம் அந்த வார்த்தையைப் பயன்படுத்தும் போது தமிழில் நாம் என்ன சொல்லுகிறோமோ, தமிழில் என்ன அர்த்தத்தில் பயன்படுத்துகிறோமோ அது தான் நமது உடனடி ஞாபத்திற்கு வருகிறது. 

இங்கு தான் பிரச்சனையே ஆரம்பம்.  இப்போது அந்தச் சொல்லின் அர்த்தம் மாறி விட்டது. உல்களவில் பயன்படுத்தும் ஒரு சொல்லாக அது இன்று திகழ்கிறது.

ஆங்கிலத்தில் பயன்படுத்தும் ஒரு சொல்.  அது மூலம் என்ன, வேர்ச் சொல் என்ன என்கிற விபரம் நமக்குத் தெரியாது. எத்தனையோ ஆங்கிலச் சொற்களை நாம் பயன்படுத்துகிறோம்.  அதன் மூலம் என்ன என்கிற ஆராய்ச்சியெல்லாம் நமக்குத் தேவை  இல்லாதது.  அது போலவே இந்தச் சொல்லும்.  

ஆங்கிலத்தில் அது சொல்லுப்படும் போது அதன் பொருள் வேறு. அதனை நாம் நமது அர்த்ததிற்குக் கொண்டு வரத் தேவையில்லை.  ஆனால் அதனையே ஓர் இந்தியன் இன்னொரு இந்தியனைப் பார்த்து சொல்லுகிறான் என்றால் அதன் அர்த்தம் வேறு.  அவன் நம்மை கேவலப்படுத்துகிறான்.இழிந்தவனாக நினைக்கிறான். அவமானப் படுத்துகிறான் என்பதாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நாம்ஆப்பரிக்க கறுப்பர்களை பொதுவாக"நீகிரோ" என்கிறோம். நீகிரோ என்னும் சொல் ஏதோ ஒரு வகையில் அவர்களைப் புண் படுத்துகிறது. அவர்கள் கறுப்பர்கள் என்று சொல்லுவதையும் விரும்பவில்லை. ஆனால் நாம் அதனைக் கண்டோமா? நாம் நமக்குள்ளே நீகிரோ என்று தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம்! ஆங்கிலத்தில் அவர்களிடம் பேசும் போது கறுப்பர்  என்றும் நம்மால் சொல்ல முடியவில்லை! நீகிரோ என்றும் நம்மால் சொல்ல முடியவில்லை, நாகரிகம் கருதி! ஆனால் அவர்கள் விரும்புவதோ "நான் அமரிக்கன், நான் நைஜீரியன் - இப்படித்தன் அவர்கள் அழைக்கப்பட விரும்புகிறார்கள்.

  செட்டி  என்றால் அது செட்டியார்களைத் தான் குறிக்கும். ஆனால் இன்று? செட்டி என்றால் ஆலோங் அல்லது கந்து வட்டிக்காரன் என்பதைத் தான் குறிக்கும்! ஆனால் இதையெல்லாம் நாம் கண்டு கொள்ளுவதில்லை!

நாம் சொல்ல வருவதெல்லாம் "பறையர்: என்னும் சொல்லை ஒரு ஆங்கில வார்த்தையாகவே எடுத்துக் கொள்ளுங்கள். அதனை தமிழில் மொழி பெயர்க்காதீர்கள். மொழி பெயர்த்தால்  நாம் வேதனையுற வேண்டி வரும். 

நணபர்களுக்கு ஒரு வேண்டுகோள்:  முடிந்த வரை இந்தியர்கள் இந்த வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம். தமிழாகவும் வேண்டாம். ஆங்கிலமாகவும் வேண்டாம். நமக்குள்ளே பேசி அதனை ஏன் பிரபலப்படுத்த வேண்டும்?  பிற இனத்தவர் பேசும் போது அதனைப் பெரிது படுத்தாதீர்கள்.  விட்டுத் தள்ளுங்கள்!

அர்த்தம் மாறித் தான் போனது!  ஏற்றுக் கொள்ளுங்கள்!

இனி இப்படியும் பேசலாம்...!

இனி வரப் போகும் காலங்களில் ம.இ.கா. வினர் எப்படி கேள்விகளுக்குப் பதில் அளிப்பார்கள் என்பதை ஓரளவு ஊகிக்க முடிகிறது.

சமீபத்தில் ம,இ,கா,வின் தேசிய தலைவர், டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கிப்படி ஒரு கேள்வியைக் கேட்டிருந்தார்.  "சரி, நாங்கள் தான் ஜாவி எழுத்துக்கு ஒப்புதல் கொடுதோம்! அதனாலென்ன? இப்போ நீங்கள் தானே ஆட்சியில் இருக்கிறீர்கள்,  எடுத்து விடுங்களேன்!" 

பரவாயில்லை!  சரியாகவே பேசியிருக்கிறார். அவருடைய நிலையிலிருந்து அதை விட வேறு மாதிரியாக வேறு யாராலும் பேசியிருக்க முடியாது என்பது உண்மை தான்!

இனி மேலும் அவருக்குப் பல கேள்விகள் வரும். அதனை அவர் எப்படி சமாளிப்பார் என்று யோசித்துப் பார்த்தால் எப்படி அவரிடமிருந்து பதில் வரும் என்று ஓரளவு ஊகிக்கலாம்!

கேள்வி: மைக்கா ஹோல்டிங்ஸ்  பிரச்சனை எப்ப தான் முடிவுக்கு வரும்?

பதில்:  இந்தக் கேள்வியை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்?  சாமிவேலு காலத்தில் கேட்க வேண்டிய கேள்வியை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்? அப்போதே அவரிடம் கேட்டிருந்தால் எப்போதோ இந்தப் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்திருக்குமே! இப்போது நீங்கள் தானே ஆட்சியில் இருக்கிறீர்கள்! முடித்து விடுங்களேன்!

கேள்வி: பேரா மாநிலத்தில் தமிழ்ப்பள்ளிகளுக்காக கொடுக்கப்பட்ட  இரண்டாயிரம் ஏக்கர் நிலத்தை ம.இ.கா.வினர் திருடி விட்டார்களாமே!

பதில்:  திருடும் கட்சி அல்ல நாங்கள்!  எங்கள் ஆட்சியில் இந்திய பள்ளிகளுக்காக கொடுக்கப்பட்ட நிலம் அது! நாங்களும் இந்திய பள்ளிகளுக்காகத் தான் கொடுக்க நினைக்கிறோம்! அந்த நாள் இன்னும் வரவில்லை!

இது போன்று நிறைய கேள்விகளுக்கு ம.இ.கா. தலைவர்  பதில் சொல்ல வேண்டி வரும்.  அதற்கெல்லாம் அவரிடம் உடனடியான பதிலை வைத்திருப்பார் என எதிர்பார்க்கிறோம். 

ம.இ.கா. வினர் பல்துறை விற்பன்னர்கள்!  எல்லாக் கேள்விகளுக்கும் அவர்களிடம் பதிலுண்டு!  சாமிவேலுவிடம் பயிற்சி பெற்றவர்கள்  ஆயிற்றே!

அவர்கள் எந்தக் காலத்திலும் கீழே விழ மாட்டார்கள்!  செல்லாக்காசு ஆன பிறகு விழ என்ன இருக்கிறது?

"வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி 
              மக்களின் மனதிலே நிற்பவர் யார் 
                        மாபெரும் வீரர் மானம் காப்போர் 
                                    சரித்திரம் தனிலே நிற்கின்றார்"

பேசுங்கள்! எப்படியாவது பேசுங்கள்!  சரித்திரம் உங்களை தரித்திரம் என்று பேசும்! அதை மறவாதீர்கள்!

Tuesday, 27 August 2019

பிரதமர் இப்படி பேசலமா...?

நாட்டின் பிரதமர் டாக்டர் மகாதிர்.  ஜாதி பற்றி பேசி சர்ச்சையைக் கிளப்புவது அவருடைய வயதுக்கும், தகுதிக்கும் எந்த விதத்திலும் பொருத்தமாக இல்லை. 

அவர் என்ன பேசுகிறார் என்பது அவருக்குத் தெரியும்.  ஒரு மலாய்க்காரராகவும் அவருக்குத் தெரியும். ஓர் இந்தியராகவும் அவருக்குத் தெரியும்.  சிங்கப்பூரில் மருத்துவம் படித்த போது தன்னை இந்தியர் என்பதாகத் தானே அடையாளம் காட்டியிருக்கிறார்! 

ஆனாலும் இப்படி அவர் பேசியிருப்பது வேறு மாதிரியான சந்தேகங்களை எழுப்புகிறது. சமீபகாலமாக இந்தியர்களின்  மேல் அவருக்குக் கொஞ்சம் கோபம் அதிகமாகவே இருப்பதாகத் தோன்றுகிறது.

இஸ்லாமிய சமயப் போதகர் ஜாகிர் நாயக் மேல் தொடர்ந்தாற்  போல இந்தியர்களால் விமர்சிக்கப்பட்டு வருவதை அவர் விரும்பவில்லை.  என்ன தான் பிரதமர் சட்ட திட்டங்களைப் பற்றி பேசினாலும்,  தனிப்பட்ட முறையில்,  ஓர் இஸ்லாமிய அறிஞர் பிற மதத்தினரால் தொடர்ச்சியாக தாக்கப்படுவதை அவர் விரும்பவில்லை! 

அதோடு சேர்ந்து இன்னொரு விஷயமும் அவரது கோபத்தை அதிகப்படுத்தி இருக்கிறது.  ஜாவி எழுத்தின் மீது இந்திய இயக்கங்கள் ஒன்று சேர்ந்து கடுமையான கண்டனங்களை எழுப்பியிருக்கின்றன.  பிள்ளைகளை நாங்கள் பள்ளிகளுக்கு அனுப்பமாட்டோம் என்று சொல்லுகின்ற அளவுக்கு அந்தப் பிரச்சனை வெடித்திருக்கிறது! வீதி ஆர்ப்பாட்டங்கள் வரை சென்றிருக்கிறது!

இந்தப் பிரச்சனைகள் எல்லாம் இந்தியர்கள் மீது பிரதமருக்கு,  கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது  என்று நம்பலாம்.

ஜாகிர் நாயக், ஜாவி எழுத்து மீதான பிரச்சனை  இந்திய சமுதாயத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்த இந்த வேளையில் பிரச்சனையைத் திசை திருப்ப அவர் வேண்டுமென்றே "பறையா" என்கிற சொல்லை வலிந்து திணித்திருப்பதாகவே நமக்குத் தோன்றுகிறது.  அந்த இடத்தில் அப்படி ஒரு வார்த்தையைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.  அதே நேரத்தில் நேற்று முளைத்த விளையாட்டுத் துறை அமைச்சர், சைட் சாடிக் "முட்டாள்கள்" என்று கூறி இருப்பதும், இது எங்கிருந்தோ திடீரென வந்த சொற்கள் அல்ல.  இந்தியர்களை மட்டம் தட்டுவதே இவர்களின் நோக்கம் என்றே தோன்றுகிறது. இந்தியர்களின் மீதான கவனத்தை வேறு திசைக்குத் திருப்பவே  இவர்கள் இது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்திருக்கின்றனர்!

பிரச்சனையை என்ன தான் திசை திருப்ப நினைத்தாலும்  ஜாகிர் நாயக், ஜாவி எழுத்து, இவை இரண்டும்  நாம் மறக்கக்கூடிய பிரச்சனைகள் அல்ல.

பிரதமர் இப்படி பேசியதை நம்மால் வரவேற்க முடியாது.  நாட்டின் தலைமை பீடத்தில் உள்ள ஒருவருக்கு சில வரைமுறைகள் உண்டு. எதைப் பேச வேண்டும், எதைப் பேசக் கூடாது என்று கட்டுப்பாடுகள் உண்டு.  ஆனால் ஆட்சியில் உள்ளவர்கள் சீனர்கள், இந்தியர்கள் என்று பாகபாடு காட்டிப் பேசுகின்றனர்! இந்தப் பாகுபாட்டில் இந்தியர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்!

பேசிவிட்ட பிறகு "இப்படி பேசாலாமா?" என்று பட்டிமன்றம் போடுவதில் பயனில்லை! இனி இது தேவை இல்லை என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல?

Monday, 26 August 2019

புத்துசாலி நண்பர்...!

நண்பர் ஒருவருடன் நீண்ட நாள் பழக்கம்.  

இவர் கொஞ்சம் வித்தியாசமான மனிதர். பார்ப்பதற்கு "ஏண்டா! மச மசன்னு இருக்கே!"  என்று நாம் சொல்லுகின்ற அல்லது நினைக்கின்ற மாதிரி மனிதர். அவர் அப்படித்தான் இருப்பார். அவரது தோற்றமும் அப்படிதான் இருக்கும். மிகவும் சாது.  அதிர்ந்து பேசுவது, கோபமாகப் பேசுவது = இதெல்லாம் அவருக்கு இருக்கிறதோ இல்லையோ தெரியவில்லை! காரணம் நான் அவரை அப்படிப் பார்த்ததில்லை!

ஆனால் ஏதோ அப்பாவி போல் தோற்றமளிக்கும் அவரைப் பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய உள்ளன. 

அவர் அரசாங்க வேலையில் இருந்தவர். சனி ஞாயிறு களில் விடுமுறை. அன்று அவர் சும்மா இருக்க மாட்டார்.  சொந்தமாகவே புல் வெட்டும் இயந்திரம் வைத்திருக்கிறார். .  புல் வெட்டுவதற்கு அவர் வீட்டு முன் புல் ஒன்றும் இல்லை!  ஆனால் வீடுகளில் புல் வெட்டுவதை பகுதி நேர தொழிலாக செய்து வந்தார். அவருக்கென்று சில வாடிக்கையாளர்கள் இருந்தனர். அதனால் அந்தத் தொழில் எந்த இடையூறின்றி சிறப்பாகவே நடந்து வந்தது.  கோயில் திருவிழா காலங்களில் இலவசமாகவெ கோயிலைச் சுற்றி புல் வெட்டிக் கொடுப்பார்.அது நமது கடமை என்பார்.

ஒரு விஷயம் நிச்சயம். அவரால் வீட்டில் சும்மா பொழுதைக் கழிக்க முடியாது.  ஏதாவது ஒரு வேலையை வைத்துக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருப்பார். வெட்டிப் பேச்சு என்பதெல்லாம் அவர் அகராதியில் இல்லை!

ஒரு சில மாதங்களுக்கு முன்னர் தான் அவர் வேலையிலிருந்து  ஓய்வு பெற்றார். சாலை ஒரத்தில் ஒரு சிறிய தகரகக் கொட்டகை  உணவகத்தை வாடகைக்கு எடுத்து உணவகத் தொழிலை ஆரம்பித்து விட்டார்! எதிர்பார்த்த சூடு பிடிக்கவில்லை.  அவருடைய இலக்கை அடைய நேரடியாகவே வாடிக்கையாளர்களைத் தேடி நகர ஆரம்பித்தார். இப்போது சூடு பிடித்துவிட்டது. நேரம் தான் போதவில்லை!

இவர் ஒரு வெற்றிக் கதை. ஓய்வு நேரத்தை வீணடிக்காமல் ஓய்வு நேரத்தை பொருளாதார வெற்றிக்காக உழைக்கின்ற ஒரு மனிதர்.

நமது சமுதாயத்திற்கு இவரைப் போன்ற மனிதர்களே தேவைப்படுகின்றனர்.  பொருளாதார  ரீதியில் நாம் வெற்றி பெறாத வரை நம்மை ஒரு நாயும் சீண்டாது! நம்மைச் சுற்றி அது தான் நடந்து கொண்டிருக்கிறது!  பொருளாதார வெற்றி பெற்றவனுக்குக் கிடைக்கின்ற மரியாதையும் வரவேற்பும் வேறு யாருக்கும் கிடைப்பதில்லை என்பது ஒன்றும் புதிய செய்தி அல்ல.

பொருளாதார வெற்றி என்பது நமது சமுதாயத்திற்கு மிக மிக அவசியமான ஒன்று. ஒரு பிச்சைக்கார சமுதாயம் என்று பெயர் எடுத்து விட்டோம். ஆமாம் எடுத்தெற்கெல்லாம் அரசாங்க உதவி.  எல்லாக் காலங்களிலும் உதவி! உதவி என்ற கூப்பாடு!   குடிகாரன் என்று பெயர் எடுத்து விட்டோம்! நமது சமுதாயம் அழிந்ததே, அழிந்து கொண்டு இருப்பதே குடியில் தானே! குடித்து, குடித்து குப்பையாகி போனோம்! குடியினால் ஒருவன் அழிந்தால் பரவாயில்லை. ஆனால் அவன் குடும்பமே அழிகிறதே!

அதனால் தான் சொல்லுகிறேன். உங்களுடைய  பொருளாதரா வெற்றி என்பது இந்த சமுதாயத்தை தலை நிமிரச் செய்யும். பொருளாதார வெற்றி என்பது இந்த சமுதாயத்தின் வெற்றி!

மேலே சொன்ன அந்த புத்திசாலி நண்பரைப் போல ஒவ்வொரும் பொருளாதாரத்தை நோக்கி வெற்றி நடை போடுவோம்!

வெற்றி நமதே!

Sunday, 25 August 2019

மாற்றத்திற்கு நான் தயார்....!

பிரதமர் துறை, துணை அமைச்சர் பொன்.வெதமூர்த்தி ஓரு செய்தியாளர் கூட்டத்தில் "இலாகா  மாற்றத்திற்கு  நான் தயார்!"  என்று கூறியிருப்பது நமக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது! 

இதனை நாம்  எதிர்பார்க்கவில்லை. பொன்.வேதமூர்த்தி என்றாலே நமக்குத் தெரிந்தது எல்லாம் இந்தியர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் ஆர்வம் உள்ளவர் மட்டும் அல்ல, பிரச்சனைகளை முற்றிலுமாக அறிந்தவர் என்பது அனைவருக்கும் புரிந்த ஒரு விஷயம்.

மற்ற அமைச்சர்கள் எல்லாம் ஏதோ ஒரு கட்சியின் சார்பில் அமைச்சர்களாக இருப்பவர்கள்.  அவர்களின் இலாகாவில் மாற்றம் ஏற்பட்டால் அது பிரதமரின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்று எடுத்துக் கொள்ளலாம்.  வேதமூர்த்திக்கு மாற்றம் ஏற்பட்டாலும் அதற்கும் பிரதமரே பொறுப்பு.

ஆனால் இங்கு வேறு ஒரு விஷயத்தை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.  மற்ற இந்திய அமைச்சர்களை விட  இந்தியர் பிரச்சனையை அதிகம் அறிந்தவர், புரிந்தவர் வேதமூர்த்தி தான். நீண்ட காலம் களத்தில் இருந்தவர்.   அரசாங்கத்திற்கு எதிராக பல போராட்டங்களை நடத்தியவர். 

ஆனாலும் பதவிக்கு வந்த பின்னர் அவருடைய போராட்டங்களைப் பற்றி அவருக்கே இப்போது சந்தேகம் வந்து விட்டது.   தான் போரடியதெல்லாம் வீணா என்கிற நிலைமைக்கு வந்து விட்டார்!

ஆமாம், பதவி ஏற்கும் போது அவரிடம் இருந்த சுறுசுறுப்பு இப்போது காண முடியவில்லை! தன்னால் எதையும் செய்ய முடியவில்லையே என்று நினைக்கிறாரா அல்லது மக்களை நேருக்கு நேர் சந்திக்கத் தயங்குகிறாரா என்று  நமக்கும் புரியவில்லை!

இந்தியர்களின் தொழில் வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்ட மித்ரா அமைப்பின் மூலம் என்ன நடந்தது என்று நமக்கும் புரியவில்லை அவருக்கும் புரியவில்லை! எந்த ஒரு செய்தியும் வெளிப்படுத்தப்பட வில்லை!

இப்போதெல்லாம் அவரைப் பற்றியான செய்திகள் எதுவும் வெளி வருவதும் இல்லை. ஓய்ந்து போனாரா! அல்லது இந்த "இந்தியர் விவகாரம்" மே வேண்டாம் என்று நினைக்கிறாரா! அப்படி ஓர் எண்ணம் அவருக்கு இருக்கிறது என்றால் அவர் ஒரு போராட்டவாதி என்பதெல்லாம் பொய் என்று தான் சொல்ல வேண்டும்!

நமக்குத் தெரிந்தது எல்லாம் வேதமூர்த்தி கை சுத்தமான மனிதர். மித்ரா அமைப்பிலிருந்து கொடுக்கப்பட்ட பணம் தக்கவர்களுக்குக் கொண்டு போய் சேர்த்திருக்க வேண்டும்.  அது நடந்ததா என்று தெரியவில்லை! 

நேர்மை மட்டும் தான் பதவிக்கு அழகு. கடந்த ஓராண்டு காலம் அவர் நேர்மையைக் கடைப் பிடித்திருந்தால் அவர் எதற்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஒன்றை விட்டு ஒன்றுக்குத் தாவ வேண்டிய  தேவை இல்லை! 

அவர் இந்தியர் சம்பந்தப்பட்ட  அனைத்துப் பிரச்சனைகளிலும் தீர்வு காண வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு.

உங்கள் மாற்றத்திற்கு நாங்கள் தயாராக இல்லை! இந்தியர்களின் தீர்வுகளை நோக்கி நகருங்கள்!  அதுவே நாங்கள் உங்களைக் கெட்டுக் கொள்ளுவது!

அடுத்த காரியத்தைப் பார்ப்போம்..!

நாம் அதிகமாகவே பேசி விட்டோம் என்று நினைக்கிறேம்!

ஆமாம், கடந்த ஒரு சில வாரங்களாக நமது முக்கிய பிரச்சனைகளையெல்லாம் மறந்து விட்டு, ஜாவி மொழிக்கும் ஜாகிர் நாயக்கிற்கும்  அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோமோ என்று யோசிக்க வேண்டியுள்ளது!

நமது தலை போற காரியங்களுக்கெல்லாம் விடுமுறை கொடுத்துவிட்டு இப்போது ஜாவிக்கும், நாயக்கிகும் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்!

நாட்டில் விலைவாசி ஏற்றம் என்பது கட்டுக்குள் அடுங்குவதாக இல்லை. ஏறிய விலைகள் ஏறியது தான்! குறையும் என்னும் உத்தரவாதமும் இல்லை.

நூறு நாள்களில் தீர்த்து வைப்போம் என்னும் தேர்தல் வாக்குறுதியையும் ,மறந்து போனோம்!  இப்போது  நமது பிரச்சனைகள் அனைத்தும் என்ன நிலையில் இருக்கின்றன என்பதும் தெரியவில்லை.

இதனையெல்லாம் மறந்து போகும்படி கடந்த சில வாரங்களாக ஜாவியும், ஜாகிரும் முட்டி அடித்துக் கொண்டு முன்னுக்கு வந்து விட்டனர்! நாம் என்ன செய்ய?

இதற்கெல்லாம் நாம் கொஞ்சம் ஓய்வு கொடுக்க வேண்டும். ஆமாம்,  ஜாவி எழுத்து என்பது கல்வி அமைச்சு கொண்டு வந்த ஒரு திடீர் அதிர்ச்சி!  ஜாகிர் நாயக் என்பது நெருப்பு என்று தெரிந்தும் நெருப்பில் கை வைக்கின்ற முயற்சி! 

நடந்தது அனைத்தும் அரசாங்கத்தின் துணையோடு! ஆனால் பழியோ மக்கள் மீது!  உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின்  ஓர் அறிவிப்பைச் செய்கிறார்.  இன.சமய உணர்ச்சிகளைத் தூண்டாதீர்கள் என்கிறார்.  இன, சமய  பிரச்சனைகளை வைத்து அரசியல் நாடகம் நடத்தியவர் இஸ்லாமிய சமயப் போதகர்,  ஜாகிர் நாயக்! இவர் உள்நாட்டில் அடைக்கலம் புகுந்தவர். ஆனால் பேச்சு என்னவோ இன, மதத் துவேஷ பேச்சுக்கள்! இத்தனை ஆண்டுகள் இல்லாத பிரச்சனைகளை இவர் கிளப்பிக் கொண்டிருக்கிறார்!

இத்தோடு இந்தப் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு கட்டுவோம். ஜாவி என்பது தக்கவர்கள் கையில் எடுத்திருக்கிறார்கள். ஜாகிர் என்பது காவல்துறையின் கையில்.  இனி பேசுவதைக் குறைத்துக் கொண்டு நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவோம். இப்போது நாட்டின் முன்னேற்றம் என்பதே நமது குறிக்கோள்!

இனி அடுத்த காரியத்தைக் கவனிப்போம்!

Saturday, 24 August 2019

இது போதுமே...!

இஸ்லாமிய சமயப் போதகர், ஜாகிர் நாயக்கைப் பற்றி நிறையவே பேசிவிட்டோம். அறிக்கைகள் விட்டுவிட்டோம். எழுதி விட்டோம். 

இதுவரை எழுதியதும் பேசியதும் போதும் என்றே நான் நினைக்கிறேன்.

நாம் விரும்புகிறோமோ, விரும்பவில்லையோ அவர் இனி  ஒரு போதும் பொது வெளியில் தனது வாலை ஆட்ட முடியாது!  அது காவல்துறையின்  உத்தரவு.  அது மட்டும் அன்றி எல்லா மாநிலங்களும் அவ்ருடைய சொற்பொழிவுகளுக்குத் தடை விதித்து விட்டன! தடை விதிக்காத மாநிலங்கள் இருக்கலாம். அங்கும் காவல்துறை அவரைக் கண்காணிக்கும். இப்போதைக்கு இது போதும்.


ஜாகிரை நாடு கடத்த வேண்டும் என்பது நமது விருப்பமாக இருந்தாலும் அது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள - சட்ட திட்டங்களுக்கு உட்பட்டஒரு விஷயம்.  அரசாங்கம் தான் எது சரி, எது தவறு என்று முடிவெடுக்க வேண்டும். நாம் அவசரப்பட தேவை இல்லை! அப்படியே அவசரப்பட்டாலும் எதுவும் ஆகப் போவதும் இல்லை!

நாளையே அரசாங்கத்தின் முடிவுகள் மாறலாம்.  அது ஜாகிர் நாயக் எப்படி நடந்து கொள்ளுகிறார் என்பதைத் பொறுத்தது. அவர் ஆபத்தானவர் என்று தெரிந்தால் உடனே அவரை வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள்!

ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்க வாய்ப்பில்லை.  ஜாகிரால் சும்மா இருக்க முடியாது என்பது உண்மையிலும் உண்மை!  அவர் எங்கிருந்தாலும் அவரது கவனம் ஒன்றே ஒன்றில் தான் இருக்கும்.  அது தீவிரவாதம். தீவிரவாதம் தான் இன்றைய பணம் கொழிக்கும் தொழில்! அவர் தீவிரவாதத்தை வளர்ப்பவர்!  அது தன்னால் தெரிய வரும். 

ஆனால் மலேசியாவில் இருப்பது இன்னொரு சௌகரியம் அவருக்கு உண்டு. இந்து மதத்திலிருந்து மதம் மாறுபவர்கள் இனி அவருடைய கட்டுப்பாட்டில் தான் வருவார்கள். அவருக்கு அது போதும். இப்படி மதம் மாறுபவர்களை வைத்தே இந்து மதத்தினரை கேவலப்படுத்தும் வேலையில் அவர் இறங்குவார்!  அவர் நேரடியாக இறங்காவிட்டாலும்  அவருடைய "சீடர்கள்" இறங்குவார்கள் என நம்பலாம்!

இப்போதைக்கு நாம் அவரை விட்டு விடுவோம். எலி தானே வந்து கண்ணியில் சிக்கும்!  அது தானே நடக்கும்!  அது வரை நாம் பொறுத்திருப்போம்! இப்போதைக்கு இது போதுமே!

பேரணி தேவையா...?

நாம் விரும்பாத சில நிகழ்வுகள் நாட்டில் நடக்கும் போது நாம் அமைதி ஊர்வலம் நடத்துகிறோம். அமைதியான ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளுகிறோம். இன்னும் பெரிய அலவில் பேரணி நடத்துகிறோம். 

ஆனாலும் காவல்துறை ஊர்வலம் நடத்த அனுமதி வழங்குவதில்லை. எல்லாருமே அமைதியான முறையில் உர்வலம் நடத்த வேண்டுமென விரும்புகிறோம். அப்படியே செய்யவும் செய்கிறோம்.  ஆனால் ஊர்வலம் நடைபெறுவதை விரும்பாத எதிர்தரப்பு இடையில் புகுந்து அமைதி ஊர்வலத்தைக் கலவரமாக மாற்றியமைக்கும் சாத்தியம் எதிர்தரப்பினருக்கு உண்டு. அப்படித்தான் பெரும்பாலான அமைதி ஊர்வலங்கள்  கலவரத்துக்கு இட்டுச் சென்றிருக்கின்றன. 

இஸ்லாமிய மத போதகர்,ஜாகிர் நாயக்கிற்கு எதிரான பேரணி சமீபத்தில் தலை நகரில் நடந்தது சரியானதா என்று யோசிக்க வேண்டும். அவருக்கு எதிராக பல கோணங்களில் நமது எதிர்ப்பைத் தெரிவித்து விட்டோம். உண்மையைச் சொன்னால் அனைத்துத் தரப்பு மலேசியர்களும் தங்களது எதிர்ப்பை அரசாங்கத்திற்குக் கொண்டு சேர்த்து விட்டனர்.

ஆனால் ஒரு தரப்பு எந்த விதமான எதிர்ப்பையும் காட்டவில்லை.  அது அம்னோவும், பாஸ் கட்சியும்,அவர்களை ஆதரிக்கும் அரசு சாரா இயக்கங்களும்  அடக்கமாக இருக்கின்றனர் என்றாலே அது நல்லதற்கல்ல! அவர்களும் ஏதோ திட்டங்கள் வைத்திருக்கின்றனர்.

காவல்துறை விசாரணையில் அவரைப்பற்றி எதுவும்  நல்லதாக வரப் போவதில்லை.  அந்த விசாரணையின் முடிவுகள்  அனைத்தும் சட்டத்துறை அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு அதன் பின்னரே ஜாகிர் நாயக் மேல் என்ன நடவடிக்கை எடுப்பார்கள்  என்று தெரியவரும்.

நாம் நமது எதிர்ப்பை பல வழிகளில் காட்டி விட்டோம். ஆனாலும் பிரதமர் டாக்டர் மகாதிர்,  ஜாகிர் நாயக் இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பப்படுவதை விரும்பவில்லை!  ஜாகிர் நாயக் குற்றவாளி என்றாலும் அவர் நாட்டிலேயே தங்குவதற்கு அனுமதி வழங்கப்படலாம்! 

சட்டத்துறை ஜாகிரை இந்தியாவிற்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று முடிவெடுத்தால்  அப்போது தான் இந்த எதிர்தரப்பினர் என்ன நிலை எடுப்பர் என்று சொல்ல முடியாது. ஜாகிரை இந்தியாவிற்கு அனுப்ப வேண்டும் என்று நாம் பேரணி நடத்தினோம்.  இப்போது அவர்கள் இந்தியாவிற்கு அனுப்பக் கூடாது என்று பேரணி நடத்துவார்கள்! நம்முடையது அமைதி பேரணி.  அவர்களோ பேரணி என்னும் பெயரில் இனத் துவேஷத்தைக் கிளப்புவார்கள்! 

பேரணிகள் யாருக்கும் நல்லதல்ல.  பிரச்சனைகளைக் களைய அரசாங்கத்தோடு பேச்சு வார்த்தைகள் நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில் பேரணி தேவையில்லை. பேரணி என்பது நமக்கு மட்டும் தானா?  சீனர்கள் ஏன் அமைதியாக இருக்கிறார்கள்? அவர்கள் ஆக்ககரமான முறையில் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.  நாமோ, நமது இயக்கங்களுக்கு செய்ய ஒன்றுமில்லையே என்று பேரணிகளை நடத்திக் கொண்டிருக்கிறோம்!

பேரணிகள் தேவை இல்லை என்பதே எனது கருத்து! பேச்சு வர்த்தையின் மூலமே  சிறந்த தீர்வைக் காண முடியும்!

Friday, 23 August 2019

காரணம் தெரியவில்லை...!

ஒரு சில விஷயங்களை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை!  அதாவது எப்போதுமே  புரிந்து கொள்ள முடியமில்லை!

நமது நாட்டில் பனிச்சறுக்கு விளையாட்டில் இப்போது பெயர் போட்டுக் கொண்டிருப்பவர் ஸ்ரீ அபிராமி என்னும் ஏழு வயது குழந்தை!

இது வரை உலக ரீதியில் இருபதுக்கு மேற்பட்ட தங்கப்பதக்கங்களை வாரிக் குவித்திருக்கிறார். நாம் அதனைப் பெரிய சாதனையாகவே பார்க்கிறோம். 

ஆனால் அரசாங்கப் பார்வைக்கு அது சாதனையாகத் தெரியவில்லை. அரசாங்கம் என்று சொல்லும் போது நாம் விளையாட்டுத் துறை அமைச்சையே குறிப்பிடுகிறோம். ஒரு வேளை ஏழு வயது குழந்தை என்னும் போது  அந்த வயது குழந்தைகள் அமைச்சின் கீழ் வருமா என்று தெரியவில்லை. அங்கு வயது கட்டுப்பாடு உண்டா என்பதை நான் அறியேன்.  இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.

அடுத்து அந்தக் குழந்தை பனிச்சறுக்கு விளையாட்டில் 2026-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் சாதனை புரிய வேண்டும்.  அதற்குத் தகுதி பெற இன்னும் பல பயிற்சிகள் தேவைப்படுகின்றது.  அதறகான வசதிகள் ரஷ்யாவில் உள்ளதாக சொல்லப்படுகின்ற வேளையில் ரஷ்யாவில் பயிற்சி பெற  சுமார் 27 இலட்சம் வெள்ளி  செலவாகும் என மதிப்பிடப்படுகின்றது. 

அதன் செலவுகளை யாரும் ஏற்காத நிலையில்  ஓம்ஸ் அறவாரியம் - தமிழ் மலர் நாளேட்டின் - ஓம்ஸ் தியாகராஜன் சுமார் எட்டு இலட்சம் வரை செலவினை ஏற்றுக் கொண்டுள்ளார்.  வாழ்த்துகிறோம்!

நல்லது செய்பவர்களுக்கு நாலு வார்த்தை நல்லதைச் சொல்லுவோம். சமுதாயத்தில்  கொள்ளைக் கும்பல்கள் மலிந்துவிட்டன.  இந்த நிலையிலும் நல்லதைச் செய்ய நாலு பேர் இருக்கின்றனரே  என்பது நல்ல செய்தி.

ஓம்ஸ் தியாகராஜன் செய்திருப்பது ஒரு  நல்ல தொடக்கம். மேலும் ஏற்படப் போகின்ற செலுவுகளை ஏற்க மற்ற நல்ல உள்ளங்கள் முன் வருவர் என எதிர்பார்க்கலாம். 

நம் இளைஞர்கள் நடிகர் சங்கங்கள் வைத்திருக்கிறார்கள். நான் அதனை வரவேற்பவன் அல்லன். இந்த இளைஞர்கள் பாலாபிஷேகம் செய்வதைவிட்டு இது போன்ற நல்ல காரியங்களுக்கு உதவ முன் வர வேண்டும் என்பது எனது வேண்டுகோள்>

நமது அமைச்சுகள் ஏன் உதவ முன் வரவில்லை என்பதைவிட்டு எப்படி நாம் உதவுவோம்  என யோசிப்போம். காரணம் தெரிய வரும் பொறுத்திருங்கள்!

நம்ப முடியவில்லை..!

நம்ப முடியாத செய்தி! 

இதுவே ம.இ.கா. வினர் யாராவது மீது வந்திருந்தால் அதை நிச்சயமாக நம்பியிருப்போம்! அது ஒரு கொள்ளைக்கார கூட்டம் என்பது முடிந்து போன செய்தி!

ஆனால் இது அப்படி அல்ல. இப்போது பக்காத்தான் அரசாங்கம்.  அதுவும் ஜ.செ.க. யின் தலைவர்களில் ஒருவரான கணபதிராவ் மீது  ஒரு குற்றச்சாட்டு. 

கிள்ளான்,  ஜோஹான் செத்தியா அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு நிலம் கொடுக்கப்பட்டு  விட்டதாக சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினரான கணபதிராவ் ஓர் அறிக்கையின் மூலம் அறிவித்திருக்கிறார். இது நடந்தது 2017-ம் ஆண்டு.

அதன் பின்னர்  கோயில் நிர்வாகம் 2017 - ம் ஆண்டு முதல் இன்று வரை கோயிலுக்கான பட்டா பெற நடையாய்  நடந்து கொண்டிருக்கின்றனர்!  நில அலுவலகம்,  மந்திரி பெசார் அலுவலகம்,  ஆட்சிக்குழு உறுப்பினரான கணபதிராவ் அலுவலகம்  - என்று எதனையும் விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் எதுவும் நகர்ந்த பாடில்லை!

ஆனால் புதிதாக ஒரு நிகழ்வு  யாரும் எதிர்பாராத வகையில் நடந்துள்ளது.  கோயில் கட்டப்படும் என்று எதிர்பார்த்த நிலத்தில் இப்போது  அந்த நிலம் சீன இயக்கம் ஒன்றிற்குக் கொடுக்கப்பட்டிருப்பதாக  உறுதிப் படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது ஆலயத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் இப்போது சீன மொழிப் பெயர் பலகை ஒன்று  நடப்பட்டு அது சீனர்களுக்குச் சொந்தமான நிலமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது!

இது தான் இன்றைய நிலை. நம்மைப் பொறுத்தவரை சராசரி மனிதர்களாகிய நாம் என்ன நினைப்போம்?  "ஒரு அடி அடிசிட்டாண்டா!  சீன்ப் பயல்களிடமிருந்து பணத்தை அடிச்சிட்டாண்டா!"  என்று நாம் நினைப்பது இயல்பு தான்!  ஆனால் உண்மை என்னவென்று தெரியவில்லை.  அதனால் எடுத்த எடுப்பில் யாரையும் குற்றம் சொல்ல முடியாது. நமக்கு ஒரு பக்கத்து நியாயம் தான் தெரியும். இன்னொரு பக்கமிருந்து ஏதேனும் அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இப்போதைக்கு கணபதிராவ் குற்றமுள்ளவராகத் தெரிகிறார்.  கோயில் தரப்பு சொல்லுகின்ற காரணங்களைப் பார்த்தால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏன் அவரிடமிருந்து எந்த விதமான பதிலும் நிர்வாகத்தினருக்குத் தரவில்லை என்று கேள்வி எழுகிறது!

பொதுவாகவே ஒன்று நமக்குப் புரிகிறது. இந்தியர்கள் என்றால் கடந்து போன ஆட்சியும்  சரி இன்றைய ஆட்சியும் சரி "திடாப்பா!" என்கிற மனநிலை ஆட்சியாளர்களுக்கு உண்டு!  அப்போதும் உண்டு! இப்போதும் உண்டு!

ம.இ.கா. வினரை எப்படி கொள்ளைக்காரர்கள் என்றோமோ இப்போது இவர்களும் அதனை நோக்கியே செல்லுகிறார்களோ என்று நினைக்க வேண்டியுள்ளது!  ஆனாலும் இவர்கள் மேல் இன்னும் நமக்கு நம்பிக்கை உண்டு.  

நம்பத்தான் முடியவில்லை! நம்புவோம்!

Thursday, 22 August 2019

இது தான் காரணமா...?

ஒன்றை நாம் புரிந்து கொண்டோம். பிரதமர் மகாதிர்  ஏன் இந்த அளவுக்குப் பிடிவாதம் காட்டுகிறார் என்பதை.

ஆமாம், இஸ்லாமிய சமயப் போகதர் ஜாகிர் நாயக்கை இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப மாட்டோம் என்பதில் அவர் காட்டுகின்ற அக்கறை நமக்குப் புரிகிறது.  எல்லாத் தரப்பு மலேசியர்கள் விரும்பினாலும் அவரால் அம்னோ கட்சியினரையும் பாஸ் கட்சியினரையும் ஒதுக்கித் தள்ள முடியவில்லை. அவர்கள் தான் ஜாகிர் நாயக்கை தூக்கிச் சுமப்பவர்கள்! 

நாமும் கூட அவரை வெறுக்கவில்லை.  எந்த நோக்கத்திற்காக அவர் இந்த நாட்டிற்குள் அடி எடுத்த வைத்தரோ அதை மட்டும் அவர் செய்ய வேண்டும். அதை விட்டு. "நான் இந்நாட்டுக் குடிமகன்!" என்று மார்தட்டிக் கொண்டு  அரசியல் பேச ஆரம்பித்தால் அதற்கான விளைவுகளை அவர் அனுபவிக்கத் தான் வேண்டும்.

ஜாகிர்  நாயக் ஓர் இஸ்லாமிய அறிஞர். அவர் இஸ்லாமிய சமயத்தைப்  ப்ற்றி பேசுவது தான் பொருத்தமாக இருக்கும். அவர் இஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம்.  அவர் பேசுவது சரியா, தவறா என்பது பற்றி பிற மதத்தினர் அறிந்து கொள்ள வாய்ப்பில்லை. ஆனால் அவரே பிற மதங்களைப் பற்றி விமர்சிக்கும் போது  அது தவறாகவே முடிய வாய்ப்புண்டு. அது தான் நடந்தது. 

இப்போது ஜாகிர் நாயக் பொது வெளிகளில் உரை நிகழ்த்த தடை செய்யப்பட்டிருக்கிறார். எல்லா மாநிலங்களும் அவரின் உரைக்கு கதவைடைத்து விட்டன.  இப்போது அவருக்குக் கைகொடுப்பவர்கள் கிளந்தான் மாநிலம் மட்டும் என்று சொன்னாலும் காவல்துறை அனுமதி தராது என்று நம்பலாம். 

பொது வெளிகளில் மட்டுமே அவருக்குக் கதவடைப்பு செய்யப்பட்டிருக்கின்றன.  ஆனால் உள்ளரங்கத்தில் தடை செய்யப்படவில்லை என்றே நினைக்கிறேன். இப்போதும் அவர் குடும்பத்தினர் சமய சொற்பொழிவுகளில் ஈடுபட்டுக் கொண்டு தான் இருக்கின்றனர். அவர்களோடு இவரும் சேர்ந்து கொள்ளலாம்.

ஆனாலும் ஜாகிர் நாயக் வழக்கம் போல மிகவும் ஆபத்தான மனிதர் என்பதில் ஐயமில்லை!  எங்காவது ஒரு சிறிய ஓட்டை இருந்தாலும் உள்ளே புகுந்து குழப்பத்தை ஏற்படுத்துவார்!

ஒன்று மட்டும் உறுதி. இனி சீனர்கள் பக்கம் அவர் திரும்ப மாட்டார்! இனி அவருடைய குறி இந்து- இந்தியர் என்னும் போக்கில் தான் போகும். அத்தோடு தீவிரவாதத்தை அவர் ஊக்குவிப்பவர். எத்தனை பேர் அவரின் தூண்டிலில் மாட்டுவர் என்பதை உடனடியாகச் சொல்ல முடியாது என்றாலும்  இது நடக்கும்!

யாருக்கோ பயந்து நாட்டை அழிவுப் பாதைக்கு இழுத்துச் செல்லும் ஒருவருக்கு அரசாங்கத்தோடு நாமும் சேர்ந்து பயப்படத்தான் வேண்டி இருக்கிறது!

Tuesday, 20 August 2019

ஒரு வரலாற்றுச் சோகம்

"உத்துசான் மலாயு " நாளிதழ் நாளை முதல் (21.8.2019) மூடப்படுகிறது என்பது மிகவும் வேதனைக்குறிய விஷயம்தான்.

ஒரு நீணட, நெடிய பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு நாளிதழ் கடைசியில் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டதே என்பதை அறியும் போது நமக்கு அது மகிழ்ச்சி அளிக்கவில்லை. 

இந்தக்  காலக்கட்டத்தில் பத்திரிக்கைத் துறை அல்லது நாளிதழ்கள் அல்லது மாத இதழ்கள் நடத்துவதென்பது சாதாரண விஷயம அல்ல. இன்று அனைத்தையும்  இணையத்தளத்தில் படித்து விடக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம்.

இப்போது என்ன மொழி பத்திரிக்கையானாலும் இணயத்தளங்களின் போட்டியைத் தவிர்க்க  முடியாது. அப்படி இருந்து இன்னும் பத்திரிக்கைகள் பேர் முடிகிறது என்றால் பத்திரிக்கைகளின் தரத்தை இணையத்தளங்கள் கொண்டு வர முடியாது என்று நம்புபவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் நானும் ஒருவன்!

ஆனால் உத்துசாம் மலாயு  இந்த அளவுக்கு அதன் விற்பனை கீழ் நோக்கிப் போகும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. காரணம் அதன்    தரமான, பற்றுள்ள வாசகர்கள் தளம் அவர்களுடையது. 

பொதுவாகவே என்று பத்திரிக்கைகளின் நிர்வாகத்தில் அரசியல் தலையீடு ஏற்படுகிறதோ அன்றே அதன் அஸ்தமகாலமும் ஆரம்பித்து விட்டது எனத் தாராளமாக  நம்பலாம்.  அது தான் எண்பது ஆண்டு கால உத்துசானுக்கும் ஏற்பட்டது. ஒரு நூறூ ஆண்டு காலப் பத்திரிக்கையான தமிழ் நேசனுக்கும் ஏற்பட்டது!

ஆனால் கடைசியாக  கிடைத்த செய்தியின்படி உத்துசான் தனது விற்பனையைத் தொடரும் என்று அறிவித்திருக்கிறது!  அது நல்ல செய்தியாக இருந்தாலும் அது தொடர்ந்து தரமான பத்திரிக்கையாக வெளிவர முடியாது என்பது திண்ணம்.  காரணம் அது அரசியல்வாதிகளின் ஊதுகுழலாகத் தான்  இருக்க முடியுமே தவிர தன்னிச்சையாக, சுதந்தரமாக இயங்க முடியாது!  ஒரு தோற்றுப்போன பத்திரிக்கையில் முதலீடு செய்பவர் அவர் அரசியலில் ஏதோ எதிர்பார்க்கிறார் என்பது தான் பொருள்!  பதவிகளை எதிர்பார்த்து முதலீடு செய்பவர்கள்  தரமான  செய்திகளை எதிர்பார்ப்பதில்லை! அதனால் அந்தப் பத்திரிக்கை மக்களைச் சென்று அடைவதும் இல்லை!

எது எப்படி இருந்தாலும் உத்துசான் மலாயு மீண்டும் தனது சிறகுகளை விரிப்பதை வர வேற்கிறோம்! ஆனால் கூண்டுக்குள் இருந்து கொண்டு அதனால் எவ்வளவு தூரம் பறக்க முடியும் என்பது தான் கேள்வி.

இனி கொஞ்ச காலம் பொறுத்திருப்போம்!

Monday, 19 August 2019

என்ன கெடு இது..?

இஸ்லாமிய சமயப் போதகர், ஜாகிர் நாயக் நமது மலேசிய மண்ணின் மைந்தர்கள் நால்வருக்கு 48 மணி நேர கெடு கொடுத்திருக்கிறார்! எதற்கு? அவர்கள் அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமாம்!  கேட்காவிட்டால்? வழக்குத் தொடரப் போகிறாராம்!

பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி. கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லெஸ் சந்தியாகோ,  சட்டமன்ற உறுப்பினர் சதிஷ் முனியாண்டி,  முன்னாள் தூதர் டெனிஷ் ஜே இக்னேஷியஸ் - இவர்கள் நால்வரும்  அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமாம்! மன்னிப்பு கேட்காவிட்டால் அவர்கள் மீது வழக்குத் தொடர்வதோடு அவர்களிடமிருந்து கணிசமான இழப்பீட்டை அவர்களிடமிருந்து கறக்க வேண்டுமாம்!

ஒரு பக்கம் மலேசிய இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்கிறார், ஜாகிர் நாயக்! தனது சமயச் சொற்பொழிவுகள் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டன என்கிறார். இன்னொரு பக்கம் வழக்குத் தொடருவேன் என பய முறுத்துகிறார்!  யார் யாரைப்  பயமுறுத்துவது என்கிற விவஸ்த்தையே நாட்டில் இல்லையோ என்று நினைக்க வேண்டியுள்ளது!

அதிலும் நாட்டில் தஞ்சம் புகுந்தவர்.அவருக்கு ஏகப்பட்ட மனிதர்களின் ஆதரவு இருப்பதாக நினைத்துக் கொண்டு இங்குள்ள இந்தியர்களிடம் சவால் விடுகிறார்! 

இப்போது எதற்காக இந்த வழக்கை ஜாகிர் நாயக் கொண்டு வருகிறார்?

வழக்கை விட, வழக்கின் மூலம் ஏதாவது பணம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா என்பதுதான் அவரது குறிக்கோள்! ஆமாம்! ஜாகிர் நாயக் எங்குச் சென்றாலும் பணம் தான் அவரது முதன்மையான நோக்கம்!

பண மோசடி வழக்கு, தீவிராதத் தூண்டுதல் - இதற்காகத்தான் அவர் இந்தியாவால் தேடப்பட்டு வருகிறார்.  

அவர் என்று மேடையில் பேச ஆரம்பித்தாரோ அன்றிலிருந்தே தனது அழிவுச் சொற்பொழிவுகள் மூலம் நாட்டில் விஷக் கருத்துக்களைத் தூவி வருகிறார். அங்கும் கூட அவருக்கென்று சில ஆதரவாளர்கள்.  அவர்கள் இந்தியர்கள் அல்ல! அது தான் அவருக்குக் கொஞ்சம் தலை நிமிரவும். துணிவாகப் பேசவும் தைரியம் கொடுத்து விட்டது!

இப்போது, இந்த நால்வரும், அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமாம்! அத்தோடு அவருக்கு இழப்பீடும் கொடுக்க வேண்டுமாம்!

கெடுவான் கேடு நினைப்பான் என்பார்கள்! இவர் இப்படி கெடு வைப்பதால் தனக்குத் தானே கேடு வைத்துக் கொள்ளுகிறார்!

Sunday, 18 August 2019

என்ன கொடுமை இது...?

இதனை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது!

யானை என்றால் நமது கண்ணுக்குத் தெரிவதெல்லாம் அதன் பெருத்த, கொழு கொழு உருவம்.  அப்படித்தான் நாம் பார்த்து வந்திருக்கிறோம்.  பார்ப்பதற்கு ஒரு பயத்தை ஏற்படுத்தினாலும்  அதற்கு மதம் பிடிக்காதவரை அது மிகவும் சாதுவான பிராணி.  அதனால் தான் குழைந்தைகள் கூட யானைகளிடம் விளையாட முடிகிறது. 

ஆனால் நாம் பார்த்ததற்கு நேர் மாறாக ஒரு யானையின் உருவம் வலைத்தளங்களில் உலா வருகிறது. 

பாருங்கள். எலும்பும் தோலுமான ஒரு யானையின் நிலைமையை. என்ன தான் ஒரு மிருகமாக இருந்தாலும் அதற்கும் வலி, வேதனை அனைத்தும் இருக்கத்தானே செய்யும்.

கண்டி, இலங்கையில்  நடைபெரும் பௌத்த உற்சவம் ஒன்றில் நேர்த்திகடனைச் செலுத்துதற்காகவே    இதன் உரிமையாளர் இந்த யானையை அங்குக் கொண்டு சென்றதாக கூறியிருக்கிறார். அதற்கு உடல் நலம் குன்றியிருப்பதால் அதனைக் குணப்படுத்தும்  வகையில் நேர்த்திக்கடன் வைக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்!

அது வயதான ஒரு பெண் யானை. வயது எழுபது என்பதாக மதிப்பிடப் படுகிறது.  சரியான உணவு கொடுக்கப்பட வில்லை.  அதனால் நலிந்து, மெலிந்து காணப்படுகிறது.உற்சவம் என்னும் பெயரில் அதனை பலகிலோ மீட்டர் தூரம் நடக்க வைக்கப்படுகிறது. அதன் நலிந்த உருவத்தை மறைக்க அதற்கு ஏதோ  ராஜ மரியாதை கொடுப்பது போல ஆடை ஆபரணங்கள்! உற்சவத்தின் போது நடக்கும் காதை  பிளக்கும் ஒலிப்பெருக்கிகள், கண்கள் பாதிக்கின்ற அளவுக்கு ஒளி வெள்ளம் - இதனை அனைத்தையும் கடந்து அந்த யானை. கண்களில் கண்ணீர் சொட்ட சொட்ட ஊர்வலம் வருகிறது!

இனி இது நடக்காது என்பாதாக ஏற்பாட்டாளர்கள் உறுதி அளித்திருக்கின்றனர்.   மனிதர்கள் பண்ணுகின்ற அழிச்சாட்டியங்கள், அட்டுழியங்கள் சொல்லி மாளாது. 

விலங்குகளைக் கொடுமைப் படுத்தாதீர்கள் என்பதை சொல்லுவதைத் தவிர வேறு என்ன சொல்ல/

எங்கு கிடைத்த தகவல் இது?

இஸ்லாமிய சமயப் போதகர், ஜாகிர் நாயக் ஒரு கருத்தைச் சொன்னார்.

எங்கிருந்து அவர் அந்த தகவல்களைப் பெற்றார் என்று நமக்குத் தெரியவில்லையே தவிர அது அவருக்கு மட்டுமே தெரிந்த இரகசியம்!

"இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் கஷ்டத்தில் இருக்கிறார்கள் ஆனால் மலேசியாவில் உள்ள இந்துக்கள் ஓர் இஸ்லாமிய நாடான மலேசியாவில் சகல சௌபாக்கியங்களுடன் சந்தோஷமாக  வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்!  இது அடுக்குமா?"  என்பது தான் அவர் கூறிய வார்த்தைகளின் சுருக்கம். அவருடைய ஆதங்கம். 

அவர் சொல்ல வருவதெல்லாம் இஸ்லாமியர்கள் இந்தியாவில் சந்தோஷமாக ஐல்லை!  அப்ப்டியிருக்க மலேசியாவில் இந்துக்கள் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும்? என்பது தான் அவரது கேள்வி.

அதனை வேறு விதமாக சொல்ல வேண்டுமானால் எந்த ஓர் இஸ்லாமிய நாட்டிலும் இஸ்லாமியர் அல்லாதார் சந்தோஷமாக இருக்கக் கூடாது என்பதுதான் அவர் சொல்ல வருவது!  அதாவது ஓர் இஸ்லாமிய நாட்டில் அனைவரும் இஸ்லாமியர்களாகவே இருக்க வேண்டுமே தவிர வேறு மதத்தினர் வாழக் கூடாது என்பது தான் அவரது நோக்கம். அப்படியே இருந்தாலும் அவர்கள் சந்தோஷமாக வாழக் கூடாது என்கிறார் ஜாகிர்!

இருந்தாலும் அவர் சொல்லுவது மாதிரி உலகம் இல்லை!  எல்லா நாடுகளும் ஒன்றை ஒன்று சார்ந்து  தான் இருக்க முடியும். மனிதர்களும் அப்படித்தான்.  எல்லா மனிதர்களும், சமயத்தினரும் கூடி தான் வாழ வேண்டும்.  தனித்து வாழ்வது இயலாத காரியம். ஜாகிர் நாயக்கின்  தத்துவம் அவருக்குச் சரியாக இருக்கலாம் ஆனால் மற்றவர்களுக்கு ஏற்புடையதல்ல.

ஜாகிர் நாயக் தனது பேச்சின் மூலம் கலகத்தை உருவாக்குபவர்.  அது ஏற்கனவே மெய்ப்பிக்கப்ப்ட்டிருக்கிறது. நமது நாட்டிலும் அது நடந்து கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

குறிப்பாக, ஜாகிர் நாயக் இப்போது இங்கு நாட்டில் இருக்கும் போதே ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது.  ஈப்போ, கம்போங் டூசூன் பெர்த்தாம்,  ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் தெய்வச்சிலைகள் அடித்து நொறுக்கப்பட்டிருக்கின்றன. இவர் மேல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் விடப்படும் இந்த நேரத்தில் இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது.  

இவருக்கும் இந்த அடித்து நொறுக்குதலுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனாலும் சந்தேகத்திற்கு இடம் இருக்கிற்து அல்லவா! அப்படியே இல்லை என்றாலும் இப்போது இங்குள்ள இந்துக்கள் எவ்வளவு சந்தோஷமாக  வாழ்கிறார்கள் என்பதை ஜாகிர் புரிந்து  கொண்டிருக்க வேண்டும்!

அடிப்படையற்ற தகவல்களை வைத்துக் கொண்டு மற்ற சமயத்தினரை இழிவு படுத்துவதை ஜாகிர் நாயக் தவிர்க்க வேண்டும். 

எங்கிருந்தாலும் அவரவர் உழைத்துத் தான் தங்களது குடும்பங்களைக் காப்பாற்ற வேண்டும். பணச் சலவை செய்து சம்பாதிப்பது என்பது கொள்ளையர்களால் தான் முடியும்! எல்லாருக்கும் அது அமைவதில்லை!

Saturday, 17 August 2019

இப்படி தரம் தாழ்ந்து...!

ஒரு வர்த்தக நிறுவனத்தின் நிறுவனரான, டான்ஸ்ரீ கூன் இயு இன்  நமது நாட்டின் இராணுவத்தினரைப் பற்றியான தனது கருத்தை  வலைத்தளத்தில்  பதிவேற்றம் செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க  ஒன்று. 

"டான்ஸ்ரீ"   போன்ற உயரிய  விருது பெற்ற ஒருவர் இப்படியெல்லாம் பேசுவது அந்த விருதுக்கே மரியாதை இல்லாமல் செய்து விடுகிறது.

அவர்: " இராணுவ வீரர்கள் செய்வதெல்லாம் தூங்குவதும் சாப்பிடுவதும் தான்! அதனால் என்னுடைய சிபாரிசு அவர்கள் தோட்ட்ங்களுக்கு வேலைக்கு அனுப்பப்பட வேண்டும்!" என்பது தான்.

ஒரு டான்ஸ்ரீ விருது பெற்ற ஒருவரின் பேச்சு இப்படி இருப்பது என்பது மன்னிக்கக் கூடியது அல்ல. இராணுவ வீரர்கள் இல்லாவிட்டால் ஒரு நாட்டுக்கு என்ன நேரும் என்பதை அவர் அறியவில்லையா அல்லது அறிந்து கொள்ள மறுக்கிறாரா?

ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட் பயங்கரவாதிகளால் நாடு அமைந்தியிழந்த நிலையில் இருந்த போது இந்த நாட்டைக் காப்பாற்றியவர்கள் யார்? அன்று இதே இராணுவம் கம்யூனிஸ்டுகளை எதிர்த்து போராடவில்லை என்றால் இந்த நாட்டுக்கு அமைதி வந்திருக்குமா என்பதை அவர் யோசித்துப் பார்க்காமல் பேசியிருக்கிறார்.

இன்றைய நிலையில் டான்ஸ்ரீ கூன் ஒரு பெரிய தொழில் அதிபர்.  நாட்டில் அமைதி நிலவவில்லை என்றால் அவர் ஒரு தொழில் அதிபர் ஆகியிருக்க முடியுமா என்பதை அவர் யோசிக்க வேண்டும். இன்று நாட்டில் அமைதி நிலவுகிறது என்றால் அது இராணுவத்தினரின் வலிமையைக் காட்டுகிறது. 

ஆமாம். நமக்குத் தெரியாது என்பதால் எல்லாம் இயற்கையாகவே நடந்து கொண்டிருக்கிறது என்பது அர்த்தமல்ல. இராணுவம் என்பது, நாட்டின் பாதுகாப்பு என்பது அர்சாங்கத்தின் வேலை. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது நமக்குத் தெரிவதில்லை. இராணுவ வீரர்கள் எல்லாக் காலத்திலும் ஏதோ ஒரு எல்லையில் நாட்டின் பாதுகாப்புக்காக போராடிக் கொண்டிருக்கின்றனர். 

தொழில் அதிபர் கூன் இயு இன் டான்ஸ்ரீ என்கிற விருதைப் பெற்றவர்.இப்படி அலட்சியமக பேசுவதை, எழுதுவதை தவிர்க்க வேண்டும். அந்த விருதுக்கு தகுதி உள்ளவர் என்பதை மெய்பிக்க வேண்டும்.

விருது பெற்றவர்கள் இப்படித் தரம் தாழ்ந்து பேசுவதை தவிர்க்க வேண்டும் என்பதே நமது வேண்டு கோள்!

Friday, 16 August 2019

ஜாகிர் நாயக்கின் நோக்கம் என்ன?

நாட்டிற்குள் தஞ்சம் புகுந்த ஒருவர் இப்போது நாட்டில் உள்ளவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகிறார்!  

அவர் தான் ஜாகிர் நாயக், பிரபல இஸ்லாமிய சமயப் போதகர்!  நாம் அவரைப் பற்றி குறைத்து மதிப்பிடவில்லை.  அவருடைய சமய அறிவை யாரும் குறை சொல்லவில்லை.  ஆனால் மற்றவர்களுடைய சமய நம்பிக்கைகளைப் பற்றி எதையும் அறியாமல், அரைகுறையாக அறிந்து கொண்டு, மற்ற மதங்களைத் தாக்கிப் பேசுவது அறிவுடையவர்கள் செய்யும் காரியமல்ல.  அவருடைய அறிவு, நிபுணத்துவம் அனைத்தும் இஸ்லாமிய சமயம் மட்டுமே.  ஓர் இஸ்லாமிய அறிஞர் என்பதனால் அவருடைய குறிக்கோள் என்பது இஸ்லாமிய சமயமாகவே இருக்க வேண்டும்.அஅதற்கு அப்பால் போனால் அவர் காயம்படத்தான் நேரிடும்!

இப்போது சமயம் சாராத சில கருத்துக்களையும் அவர் உதித்திருக்கிறார். அதுவும் மலேசிய இந்தியர், சீனர்களைப்பற்றி அவர் சொன்னக் கருத்துக்கள் பொது மக்களிடையே கோபத்தைக் கிளறியிருக்கின்றன. மலேசிய இந்தியர்கள், மலேசியப் பிரதமரை விட இந்திய பிரதமர் மோடியை  அதிகம் விரும்புவதாக  அவர் கூறியிருக்கிறார்.  ஒரு வேளை மலேசிய இந்தியர்கள் அனைவரும் பிராமணர்கள் என்பதாக அவர் நினைத்திருக்கக் கூடும்! அரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய்!

 மலேசிய சீனர்களைப் பற்றி பேசும் போது "அவர்கள் இங்கு வந்த விருந்தாளிகள்! முதலில் நாட்டை விட்டு அவர்கள் போகட்டும்! அதன் பின்னர் நான் போகிறேன்!" என்பதாக அவர் அவர்களைச் சாடியிருக்கிறார்! 

ஆனால் இப்போது அவர் பேச்சுக்களைச் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. அடைக்கலம் புகுந்த நாட்டில் அவர் அமைதியாக வாழ வேண்டும்.  ஆனால் அவரோ ஆர்ப்பாட்டமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்! மற்ற இனங்களைச் சீண்டிப் பார்க்கிறார்! அப்படியென்றால் என்ன அர்த்தம்?

ஆமாம்,  அவர் மீது என்ன குற்றச்சாட்டுக்கள் வந்தாலும் பரவாயில்லை, இங்கே சிறைக்குப் போனாலும் பரவாயில்லை, ஆனால் தன் தாய் நாடான இந்தியாவுக்குத் திரும்பக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்!  இங்கே சிறையில் இருந்தாலும் அது ராஜ வாழ்க்கை! அங்கே போனால் அது அராஜக வாழ்க்கை!  தீவிரவாதம் பேசுபவர்களுக்குத் தீவிரவாதம் தான் பதில்!

இங்குள்ளவர்கள் மீது வழக்குப் போட்டு,   தான் இங்கு தங்குவதற்கான நாள்களை இழுத்துப் போடுகிறார்! அது தான் அவரது நோக்கம்!

ஜாகிர், உங்கள் நோக்கம் நிறைவேராது!

Thursday, 15 August 2019

இதையும் யோசிக்கலாமே..!

சமீபத்தில் மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். 

அங்கு ஓர் அனுபவம்.  அதனைப்   பகிர்ந்து கொள்ளுவது நல்லது என்று நினைக்கிறேன். மற்றவர்களும் பின்பற்றலாம். தவறில்லை.

 ஒர் சீனப் பெண்மனி. இளம் தாய். தனது இரணடு பிள்ளைகளுடன்  மருத்துவமனைக்கு வந்திருந்தார்.  அந்தக் குழந்தைகள் பள்ளிக்கூடம் போகுபவர்கள் அல்ல.   இரு குழந்தைகளும் முதுகில் பள்ளிக்கூட பைகளைச் சுமந்து கொண்டு வந்திருந்தனர்!   அதில் ஒன்றும் ஆச்சரியம் அல்ல.  இப்போது எல்லாக் குழந்தைகளும் அப்படித்தான் பைகளைச் சுமந்து கொண்டு வருகின்றனர். பள்ளிக்கூடம் போகும் வரை காத்திருப்பதில்லை! சரி, அது ஒரு பயிற்சியாகவே இருக்கட்டும்!

அவர்களின் தாய் ஏதோ ஒரு சிகிச்சைக்காக வந்திருந்தார். அவர் கொஞ்சம் வேலையாக இருந்தார். இந்த இரு குழந்தைகளும்  காலியாக இருந்த இருக்கைகளில்  அவர்களின் பள்ளிக்கூட பைகளைத் திறந்தனர்.  உள்ளே இருந்த நோட்டுப் புத்தகத்தை வெளியே எடுத்தனர்.  தங்களது பென்சில் டப்பாக்களைத் திறந்தனர். பென்சில், ரப்பர், ரூலர் என்று அனைத்தையும் வெளியே எடுத்தனர்.  உடனே எழுத ஆரம்பித்து விட்டனர்! இன்னும் பள்ளிக்கூடம் போகாத குழந்தைகள் என்று சொன்னேன். அதனால் பெரிதாக ஒன்று எதிர்பார்ப்பதற்கில்லை. ஏதோ வட்டங்கள், கோடுகள் என்று வரைந்து கொண்டிருந்தனர்! இது ஒரு நல்ல பயிற்சியாகவே நான் நினைக்கிறேன்.  பிள்ளைகள் கல்வியில் கவனம் செலுத்த இது ஒரு நல்ல ஆரம்பம்.

நம் இளம் பெற்றோர்கள் இப்படி செய்வதை நான் பார்த்ததில்லை.   அவர்கள் செய்வதெல்லாம் குழந்தைகளிடம் ஒரு கைப்பேசியைக் கொடுத்து விடுகின்றனர். அது போதும். அந்தக் குழந்தைகள் ஆடாமல் அசையாமல் அப்படியே உட்கார்ந்து விடுகின்றனர்!  வேறெதுவும் வேண்டாம்.  அந்தக் குழந்தைகள் உலகையே மறந்து போகின்றனர்.  அது வயதான பின்னரும் தொடர்கிறது என்பது தான் சோகம்.

ஆனால் குழந்தைகளுக்கு வேறு விதமான ஒரு பயிற்சியை அவர்களது தாயார்  அவர்களுக்குக் கொடுத்திருக்கிறார்,  வரவேற்க வேண்டிய ஒரு பயிற்சி.  கைப்பேசிகளைக் கொடுப்பதை விட இப்படி புத்தகங்களைக் கொடுத்தால்  அவர்களைக் கல்வியை நோக்கி கவனம் செலுத்த ஒரு பயிற்சியாக அமையும்.

நல்லது என்று நினைப்பவர்கள் இதனைச் செய்யலாம்.  எனது கௌரவத்திற்கு  கைப்பேசி தான்  வாங்கிக் கொடுப்பேன் என்று அடம் பிடித்தால்  பிற்காலத்தில் அவதிப் பட வேண்டி வரும் என்பதை மறவாதீர்கள். 

நம்மைச் சுற்றி இருப்பவர்கள், குறிப்பாகச் சீனர்கள், நல்லதைச் செய்தால் நாமும் அதனைப் பின் பற்றுவோம். எல்லாமே நமது பிள்ளைகளின் வளமான எதிர்காலத்துக்குத் தான். பிள்ளைகளின் கல்வியில் அதிகமான அக்கறை உள்ளவர்கள் சீனர்கள்.  நமக்கும் தான் அக்கறை உண்டு. 

சரி என்றால் பின்பற்றலாமே!

Wednesday, 14 August 2019

ஆபத்தான மனிதர்...!

இஸ்லாமிய சமயப் போதகர் ஜாகிர் நாயக் மிகவும் ஆபத்தான மனிதர் என்பதைக் காட்டி விட்டார்.

இளம் வயதிலிருந்தே தீவிரவாதத்தையே பேசிப் பேசி வளர்ந்த அவர் இப்போது அதனை விட முடியாமல் போகிற இடம் எல்லாம் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறார்!  

எந்த ஒரு இஸ்லாமிய நாடும்  அவரை ஏற்க தயாராக இல்லாத  நிலையிலும் அவர் தீவிரவாதத்தையே பேசி வருகிறார். பேசுகிறார் என்பதை  விட கலகத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.  நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். 

"உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வது"  என்பதை நாம் ஜாகிர் நாயக்கிடம் இருந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும். எந்த ஒரு நாடும் ஏற்காத  நிலையில் மலேசியா அவரை ஏற்றுக் கொண்டது.  ஏற்றுக் கொண்ட நாட்டிற்கே துரோகம் செய்து கொண்டிருக்கிறார் ஜாகிர்! இது ஒரு பச்சைத் துரோகம் என்பதை அறியாதவரா ஜாகிர்? 

மலேசியா அவருக்கு அடைக்கலம் கொடுத்த நாடு. அப்படி அடைக்கலம் கொடுத்த நாட்டில் இருந்து கொண்டே  கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்.

மலேசியா ஓர் இஸ்லாமிய நாடு.  ஆனாலும் பல சமயத்தினர், பல இனத்தவர், பல மொழி பேசுகின்றவர்கள் உள்ள ஒரு நாடு.  அடைக்கலம் புகுந்த போது இதனை அறியாமலா அவர் இங்கு வந்தார்?

அவர் தஞ்சம் புகுந்தவர்.  அவர் பேச்சுக்கு ஓர் எல்லை உண்டு.  எதைப் பேச வேண்டும், எதைப் பேசக் கூடாது என்பதை அறிந்தவர்.  ஆனாலும் அவரது பேச்சு எல்லை மீறி விட்டது!  நேற்று வந்த இவர் இந்தியர்களின் விசுவாசத்தைப் பற்றி பேசுகிறார்.  இந்து சமயத்தைப் பற்றி பேசுகிறார். சீனர்களை "விருந்தாளிகள்" என்கிறார்.  இந்திரா காந்தி மகள் விஷயத்தில் தலையீடு செய்கிறார். ஸம்ரி வினோத் என்பவரை வைத்து  இந்தியர்களைக் கேவலப் படுத்துகிறார்,  இவர் வெளியேற்றப்பட்டால் "தேடி வந்து உன் தலையை வெட்டுவோம்" என்று வழக்கறிஞருக்கு மிரட்டல் விடச்செய்திருக்கிறார்!

இந்த அளவுக்கு ஜாகிர் நாயக்கின் செல்வாக்கு உயந்திருக்கிறது! 

கடைசியாக ஒன்று சொல்வோம்:பேச்சு சுதந்திரம் மலேசியருக்கு மட்டுமே.  தஞ்சம் புகும் தறுதலைகளுக்கல்ல! 

ஜாகிர் நாயக் ஆபத்தான மனிதர்! தனது காரியம் சாதிக்க எந்த எல்லைக்கும் போவார்! இனி அவர் தனது தாய் நாட்டுக்குத் தான் போக வேண்டும்!

ஜாகிர் கொல்லப்படலாம்...!

-பிரதமர் டாக்டர் மகாதிர்  ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார்!

சமயப் போதகர், ஜாகிர் நாயக் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பினால் அங்கு அவர் கொல்லப்படுவார் என்பதாக பிரதமர் கொடுத்த ஆகக் கடைசி செய்தி நம்மையும் அச்சப்படுத்துகிறது. 

இந்தியா அளவுக்குக் கொடுரமான நாடா என்பது நமக்குத் தெரியாது.  அரசியல்வாதிகளுக்குத் தான் வெளிச்சம்!

அவர் கொல்லப்படுவார் என்பதை எந்தக் கோணத்தில் சொல்லுகிறார்?  ஒரு தீவிராதி தீவிரவாதிகளால் தான் கொல்லப்படுவார் என்பதைப் பார்க்கிறோம். வாள் எடுத்துவன் வாளால் தான் சாக வேண்டும். அது தான் நியதி.   தீவிரவாதிகளின் நிலைமை இந்தியாவில் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது தெரியவில்லை.

ஒரு வேளை அவருக்குக் காவல்துறையினர் மூலம் ஆபத்து வருமா என்பதும் புரியவில்லை. நமது நாட்டிலேயே காவல்துறையினர் மூலம் வருகின்ற, சிறையில் நிகழுகின்ற  சாவுகள்,  ஏராளம். அதற்கான காரணங்களும் பல.  குறிப்பாக நோயினால் வருகின்ற சாவுகள் தான் அதிகம்!   இது தான் காவல்துறையினரின் நிலைமை.  சிறையில் நிகழுகின்ற மரணங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்பது தான் நமது அனுபவம்.அங்கும் இது நடக்கலாம்.   அது நோய் மூலம் வருகின்ற மரணமாக இருந்தால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது. அது தான் விதி என்று சொல்லிவிட்டுப் போக வேண்டியது தான்!

இன்னொன்று நீதிமன்றம் மூலமாக வருகின்ற தண்டனை. மரண தண்டனை கிடைக்கும் அளவுக்கு  ஜாகிர் நாயக் மேல் குற்றச்சாட்டுச் சாட்டுக்கள் உண்டா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.  ஒரு வேளை நீண்டகாலச் சிறை தண்டனையாகக் கூட இருக்கலாம்.  இப்போது நாம் சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை. 

ஆக, நமக்குத் தெரிந்த வரை அவர் கொல்லப்படுவார் என்று டாக்டர் மகாதிர் குறிப்பிடுவது இந்த மூன்றுக்குள் தான் அடக்கம்.   அல்லது வேறு வகையென்றால் நமக்குத் தெரிய வாய்ப்பில்லை.  அது அரசியல்வாதிகளுக்குத்  தான்  புரியும்!

எது எப்படி இருப்பினும் அவர் காரணத்தோடோ, காரணமின்றியோ
இப்படியெல்லாம் அவர் கொல்லப்பட வேண்டும் என்று நாம் விரும்பவில்லை.  அவர் ஒரு சமயப் போதகர். நல்ல போதனைகளை மக்களிடம் சேர்க்க வேண்டியது அவரின் பொறுப்பு. அதைத் தான் அவர் செய்ய வேண்டும்.   செய்வார் என நம்பலாம்.

ஜாகிர் கொல்லப்பட வேண்டிய மனிதர் அல்ல. அரசாங்கம் அவரை நல்ல நேர் வழியில் நடத்த வேண்டும். அவருக்குச் சரியான பாதையைக் காட்ட வேண்டும்.

ஜாகிர்  நீண்ட காலம் வாழ பிரார்த்திப்போம்!

Tuesday, 13 August 2019

"பேட் ரியோட்" சொல்லுவது தான் சரி!

நாம் சொல்லுவது எட்ட வேண்டிய இடத்திற்கு இட்டுச் செல்லாது.

நாம் சொன்னதையே இப்போது "பேட் ரியோட்" என்னும் நாட்டப்பற்று இயக்கத்தின் தலைவர் ஓய்வுபெற்ற பிரிகேடியர்  ஜெனெரல் முகமட் ஆர்ஷாட் ராஜி கொஞ்சம் ஆக்ரோஷமாகவே அரசாங்கத்திற்கு எடுத்துக் கூறியிருக்கிறார்.

ஆமாம் சமயப் போதகர் ஜாகிர் நாயக் இந்தியர்களின் நாட்டுப்பற்று பற்றி கேள்வி எழுப்பியுள்ளது பற்றி ஆர்ஷாட் கண்டித்திருக்கிறார். இந்தியர்களின் அர்ப்பணிப்பை உணராத ஜாகிர்.  ஒரு நேர்மையற்ற சொந்த நலனில் அக்கறை கொண்ட சுயநலவாதி என வர்ணித்திருக்கிறார்  ஆர்ஷாட்.  மதப் பிரச்சாரம் செய்வது பிரச்சனையல்ல ஆனால் மதங்களை ஒப்பிட்டுப் பேசி கலவரங்களை ஏற்படுத்த முயற்சிப்பது ஏற்புடையதல்ல என்பதை ஜாகிர் புரிந்து கொள்ள வேண்டும். 

மேலும் ஜாகிர் நாட்டில் அடைக்கலம் புகுந்தவர்.ஒரு கால கட்டத்தில் 1எம்டிபி நிதி முறைகேட்டை  திசை திருப்பவே ஜாகிருக்கு குடியுரிமை கொடுக்கப்பட்டது.  

இப்போது ஜாகிர் குடியுரிமை பெற்றவர் என்னும் தைரியத்தில் நாட்டின் எல்லாப் பிரச்சனைகளிலும் தலையிட ஆரம்பித்து விட்டார். இந்துக்களை மட்டம் தட்டுவது,  சீனாவில் யூகுர் இனத்தவர்களின் மீதான அடக்குமுறையை விமர்சிப்பது  போன்ற பிரச்சனைகளில் தலையிடுவது தவறு என்பதை அவர் புரிந்து கொள்ள வில்லை. 

அவரால் நாட்டுக்குக் கேடு வரும் எனத் தெரிந்தும் அவர் ஏன் இன்னும் நாடு கடத்தப்படவில்லை என்பதாக  ஆர்ஷாட்  கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசாங்கம் இந்த அளவுக்கு அவருக்கு சலுகைக் கொடுத்து வைத்திருப்பதைப் பார்க்கும்போது  கூடிய சீக்கிரம் இவர் அமைச்சரவையில் இடம் பெறக் கூடுமோ என்று நினைக்கத் தோன்றுகிறது!  அந்த அளவுக்கு அவருடைய கருத்துக்கள் தீவிரவாதிகளால் ஏற்றுக்கொள்ளப் படுகின்றன. ஆதரிக்கப்படுகின்றன.

இவர் எங்குப் போனாலும் அந்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி எடுக்கிறார் என்பதாக இவர் மீது குற்றச்சாட்டுகள் உண்டு. போகிற போக்கை பார்க்கின்ற போது இவர் இங்கு கலகத்தையும், அமைதியின்மையையும் ஏற்படுத்திவிட்டுத் தான் நாட்டை விட்டு விடை பெறுவார் எனத் தோன்றுகிறது!

இவரது ராசி என்பது கலக ராசி! 

பேட் ரியோட் சொல்லுவதைக் கேளுங்கள்!  இது நாட்டு நலன்! ஜாகிருக்கு நாடு இல்லை!


Monday, 12 August 2019

வழக்கம் போல....புரியவில்லை!


சமீபத்தில் தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அரபு சித்திர எழுத்தைப் பற்றி பேச்சு வந்தது.

அந்த மனிதர் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.  "நாலு பேரு மந்திரியா இருக்கானுங்க! ! ஒருத்தன் கூட வாயைத் திறக்க மாட்டேங்கிறான்! அப்பெல்லாம்  "சாமிவேலு! சாமிவேலு!" ந்னு கத்திக்கிட்டு  கிடந்தானுங்க! இப்ப எங்கே  போனானுங்க?" 

கொஞ்சம் காரசாரமாகத் தான் அவரது பேச்சு இருந்தது!  நானும் "சாமிவேலு! சாமிவேலு!" என்று கத்தியவன் தான்.  இப்போதும் அப்படித்தான்!  ஆனால் நான் கல்வியாளன் அல்ல!  இந்த நாலு பேரும் வாய்த் திறப்பதில்லை என்பதில் ந்மக்கு எந்தக் கருத்து வேறுபாடில்லை!

ஆனால் இப்போது இந்தப் பிரச்சனை திசை திரும்புகிறது! செகாமட், நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சந்தாரா இந்த ஜாவி எழுத்துமுறை 2014 ஆண்டே தமிழ்ப்பள்ளிகளில் ஆரம்பித்து விட்டதாகக் கூறுகிறார்! அப்போதே நான்காம் வகுப்புக்களில் இது நடைமுறைக்கு வந்துவிட்டது எனக் கூறுகிறார் சந்தாரா!  அப்போது பதவிலிருந்த ம.இ.கா.வினர், துணைக்கல்வி அமைச்சராக இருந்த கமலநாதன் உட்பட, இதற்கு ஆதரவாக இருந்து செயல்படுத்தத் தொடங்கி விட்டனர்!  அவர்கள் அதனை அமைதியாக இருந்து காரியம் சாதித்தனர். இப்போது கொஞ்சம் தவளைகள் சத்தம் அதிகம். அதனால் அது வெளி வந்துவிட்டது. அவ்வளவு தான்!

இப்போது  சந்தாரா சொல்லுவது சரியா என்று தான் நமக்குத் தெரிய வேண்டும்.  காரணம் தலைமையாசிரியர்கள் வேறு சில காரணங்களை வைத்திருப்பார்கள். நான்காம் வகுப்பு பாட நூலில் வந்து விட்டது என்றாலும் அது படித்துக் கொடுக்க ஆளில்லாததால் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது என்கிற பதில் அங்கிருந்து வரலாம்! அப்படி ஒரு பதில் வந்தால்  இனிமேலும் அப்படியே செய்து விட்டுப் போங்களேன்  என்று நாமும் சொல்லிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போகலாம்!

ஒன்றும் தெரியாத நிலையில் எல்லாரும் சேர்ந்து கொண்டு  அறிக்கை விடுவதில் பயனில்லை.  அறிக்கை விடுபவர்கள் எவரும் ஆசிரியர்களாக இல்லை!  அப்படி இருக்கும் போது உண்மை நிலை என்ன என்பது நமக்குத் தெரிய வேண்டும். தெரிந்தால் தான் ஆக்ககரமாக ஏதாவது செய்ய முடியும்.

மேலே நான் குறிப்பிட்டவர் தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர். அவர் அது பற்றி ஒன்றும் வாய்த் திறக்கவில்லை. அவர் எதையோ மூடி மறைக்கிறார் என்று நான் நம்பவில்லை.  அதற்கான காரணங்கள் ஏதோ உண்டு. இன்னும் சில தினங்களில் அதுவும் தெரிந்து விடும்.

அது வரை வழக்கம் போல...ஒன்னுமே  புரியலே!


நாம் தாழ்ந்து போவதில்லை..!

என்ன தான் சொல்லுங்கள். இந்த இனம், தமிழினம், எந்தக் காலத்திலும் வீழ்ச்சியுற வாய்ப்பேயில்லை!

கொஞ்சம் தொய்வு ஏற்படலாம். வீழ்வது போல இருக்கலாம். ஆனால் வீழாது.  தளர்ச்சி ஏற்படலாம். ஆனால் துளிர்த்து விடும்1 அது தான் தமிழினம்!

ஒரு சில மாதங்களுக்கு முன்னர் நண்பர் ஒருவர் வந்திருந்தார்.  கொஞ்சம் கணிணி வேலை.  ஒவ்வொரு ஞாயிறு அன்றும் தமிழ் மொழி படித்து கொடுப்பதாக கூறினார்.  தமிழ் தெரியாத பெரியவர்கள், கொஞ்சம் இளைஞர்கள் இவர்களுக்காக பாடம் நடத்துகிறார். இவர் மட்டும் அல்ல. இவரோடு சேர்ந்து இன்னும் சில தமிழ் தெரிந்தவர்கள். இவர்கள் ஆசிரியர்கள் அல்ல. தங்களுக்குத் தெரிந்த தமிழை மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கிறார்கள். 

உண்மையில் அது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.  இது போன்று வகுப்புகள் நடத்த எல்லாக் காலத்திலும்  ஆசிரியர்களையே எதிர்பார்த்துக் கொண்டிருக்க முடியாது.  அவர்கள் மாணவர்களுக்குப் பாடம் நடத்துபவர்கள்.  பரிட்சைகளுக்கு மாணவர்களைத் தயார் செய்பவர்கள். 

மொழியைக் கற்றுக் கொடுக்க எல்லாத் தரப்பிலிருந்தும்  அக்கறை எடுக்க வேண்டும். மொழியில் பெரும் அளவில் புலமை பெற்றிருக்க வேண்டும் என்பதல்ல.  சராசரி நடமுறைத் தமிழே போதுமானது. நமது நோக்கம் அவர்கள் மொழியில் பாண்டித்தியம் பெற வேண்டும் என்பதல்ல.  அப்படி பெற வேண்டுமானலும் அதற்கான வாய்ப்புக்கள் இப்போது நிறையவே இருக்கின்றன. நமது நோக்கம் அவர்கள் நாளிதழ்கள், புத்தகங்கள், கட்டுரைகள் படிக்கின்ற அளவுக்கு அவர்களை நாம் தயார் செய்தால் போதும்.

நாம் சொல்ல வருவதெல்லாம் அவர்கள் தமிழர்கள் என்கிற அடையாளத்தை விட்டுவிடாக் கூடாது என்பது தான். அந்த அடையாளம் தொடர வேண்டும். 

தாய் மொழி தெரிந்த இனம் என்றும் நசிந்து போனதில்லை.  அந்த மொழி அவர்களைக் காப்பாற்றும்.  நாம் ஐநூறு வருஷத்து மொழியைப் பேசவில்லை.  ஐயாயிரம் வருஷத்தை மொழியைப் பேசுகிறோம்.  நம் மொழியியோடு ஒப்பிட எந்த மொழியும் இல்லை என்கிற திமிர் நமக்கு இருக்க வேண்டும்.  அந்தப் பெருமை நமக்கு இருக்க வேண்டும். தமிழ் எந்தக் காலத்திலும் நம்மைக் கைவிட்டதில்லை.  அந்த மொழியைத் தான் நாம் பேசி, எழுதி, அன்றாட அலுவல் மொழியாக பயன்படுத்தி வந்திருக்கிறோம.  எந்த ஒரு மொழியையும் நாம் எதிர்க்க வேண்டாம்.  நமது பிழைப்புக்காக பல மொழிகளை நாம் கற்கிறோம்.  அவ்வளவு தான்!

நம் மொழி நம்மைத் தாழ்த்தாது, அது நம்மை உயர்த்தும். நாம் தாழ்ந்து போனால் நமது அறிவை நாம் பயன்படுத்தவில்லை என்பது தான் உண்மை.  தமிழினம் உயர்ந்த இனம்! அது உயர்ந்தே நிற்கும்!

தமிழால் வளம் பெறுவோம்!

இதன் பின்னணி மகாதிரோ...!

நாட்டில் நடைபெறுகின்ற ஒரு சில விஷயங்களைப் பாக்கும் போது இதன் பின்னாலிருந்து இயக்குபவர் டாக்டர் மகாதிரோ என்று எண்ண வேண்டியுள்ளது! 

எடுத்துகாட்டுக்கு ஜாகிர் நாயக்கைப் பற்றி சொல்லலாம்.  மலேசிய இந்துக்கள் மலேசிய பிரதமரை விட இந்திய பிரதமர் மோடியை அதிக விரும்புகின்றனர் என்று ஜாகிர் நாயக் சொல்லுகிறார்.   அந்த அளவுக்கு அவர் பேச யார் அவருக்கு அதிகாரம் கொடுத்தார்?  நாட்டில் தஞ்சம் புகுந்த ஒருவர் இப்படி பேச முடியுமா என்று நாமும் அதிசயிக்கிறோம்! 

இதன் பின்னணியில் பிரதமர் மகாதிர் தான் இருப்பார் என நாம் நினைக்க வேண்டியுள்ளது.  மகாதீரின் அனுமதி இல்லாமல் தஞ்சம் புகுந்த ஒருவர் இப்படி பேச வாய்ப்பில்லை.  அப்படி என்றால் பிரதமர் மகாதிர் இந்த நாட்டு இந்தியர்களைப் பற்றி என்ன தான் நினைக்கிறார்? அல்லது இந்துக்களைப் பற்றி என்ன தான் நினைக்கிறார்? பாரிசான் காலத்திலும் அவர் இந்தியர்களுக்கு எதுவும் செய்யவில்லை. இப்போதும், இதுவரை, எதுவும் செய்யவில்லை.  உதாரணத்திற்குக் குடியுரிமை பிரச்சனையில் ஒரு கல்லைக் கூட அவர் எடுத்து வைக்கவிலை!  அவர் ஒன்றுமே செய்யாமல் இங்குள்ள இந்துக்களைப்பற்றி - இன்னொரு நாட்டிலிருந்து தஞ்சம் புகுந்தவர் மூலம் - தனது  கருத்துக்களை வெளியிடுகிறார் என்று ஆணித்தரமாக நான் நம்புகிறேன்.

இன்னொன்று அரபு சித்திரக்கலை எழுத்து.  முதலில் இந்தப் பிரச்சனையைக் கிளப்பியவர் கல்வி அமைச்சர் மஸ்லி. கொஞ்சம் கூட நமக்குச் சம்பந்தமிலாத ஒரு எழுத்து முறையைப் பற்றி முதலில் பேசியவர் மஸ்லி  தான். அதன் பின்னர் தான் பிரதமர் மகாதிர் ஒன்றும் தெரியாதவர் போல் உள்ளே நுழைந்தார்!  ஆனால் இதன் பின்னணி பிரதமர் தான்.  அதில் சந்தேகமில்லை. ஒரு காலக்கட்டத்தில் அம்னோ செய்ய முடியாததை இப்போது  பக்காத்தான் மூலம் செய்ய முனைகிறார்!  இதன் மூலம் பிரதமர் மகாதிர் என்ன செய்ய முயலுகிறார்?  ஒன்று மலாய்க்காரர்களின் ஆதரவு. இன்னொன்று அரசியல் ரீதியாக சீனர்களை வீழ்ச்சியடைய செய்வது.

ஒரு சில விஷயங்களை மற்றவர்களைச் சொல்ல வைத்து  பின்னர் அவர் உள்ளே வருகிறார்.  முன்னாள் பிரதமராக இருந்த போது என்ன செய்தாரோ அதையே இப்போதும் செய்கிறார்!  அப்போது அவரைச் சர்வாதிகாரி என்றோம். இப்போதும் அப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது!  எல்லா அதிகாரமும் பிரதமரிடம் இருந்தால் என்ன நடக்கும் என்பதை இப்போது நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.  இப்போது இவர் எடுக்கும் தன்னிச்சையான முடிவுகள் நம்மை ஐயுற வைக்கின்றன. 

நல்லது நடக்கும் போது நாம் கை தட்டுகிறோம். கெடுதல் நடந்தால் அதன் பின்னணி பிரதமர் மகாதிர் என்கிறோம்! அது தானே உண்மை!

Sunday, 11 August 2019

ஒரு சில அதிசயங்கள்...!

நம் வாழ்க்கைப் பயணத்தில் பல அதிசயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஏன், நம்மைச் சுற்றிக் கூட பல அதிசயங்கள் நிகழலாம்.  அவைகள் நமது காதுகளுக்கு எட்டவில்லை என்பதைத் தவிர மற்றபடி அவைகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. 

அது போல இதுவும் ஓர் அதிசயம் தான்.

மேற்கு நாடுகளில் ஒன்றான போலந்து நாட்டின் ஒரு கிராமத்தில் ஓர் அதிசயம் நடந்து கொண்டிருக்கிறது.  இந்தக் கிராமத்தில் கடந்து பத்து ஆண்டுகளில் ஒரு ஆண் குழந்தை கூட பிறக்கவில்லையாம்!  எல்லாம் பெண் குழந்தைகளின் ராஜ்ஜியம் தானாம்!  

இந்த அதிசயம் இப்போது தான் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது!  சமீபத்தில் நடந்த ஒரு போட்டியின் போது அந்தப் போட்டியில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் பெண் குழைந்தைகள் தானாம்!  அதன் பிறகு தான் அதிகாரிகள் இது பற்றி யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்! மருத்துவர்கள் இது பற்றி ஆராய்ச்சி செய்ய நகர மேயர் அனுமதி கொடுத்திருக்கிறாராம். 

இந்த நேரத்தில் வேறொன்றும் நமக்கு ஞாபத்திற்கு வருகிறது.   இந்தியா, கேரள மாநிலத்தில்  ஒரு கிராமத்தில் இரட்டைக் குழந்தைகளாகவே  பிறந்து ஓர் அதிசயத்தை உருவாக்கி விட்டார்கள்!  அது ஏன் என்றெல்லாம் நமக்கும் புரியவில்லை, அவர்களுக்கும் புரியவில்லை! இந்த செய்தி வந்து ஒரு சில ஆண்டுகள்  ஆகிவிட்டதால் நிச்சயமாக அது பற்றியான ஆராய்ச்சிகள் நடந்திருக்கும்.  இன்றைய நிலைமை தெரியவில்லை. 

முதலைகளைப் பற்றி நமக்குத் தெரியும்.  எந்த அளவுக்கு ஓர் ஆபத்தான விலங்கு என்பது தெரியும்.  ஆனால் ஆப்பிரிக்க நாட்டு கிராமம் ஒன்றில் ஓர் அதிசயம் நடக்கிறது. அந்த கிராமத்தில் உள்ள ஏரி ஒன்றில் சிறியவர், பெரியவர் என்று எந்தப பாகுபாடுமின்றி அந்த ஏரியில் உள்ள முதலைகளின் மேல் சவாரி செய்கின்றனர்! விளையாடுகின்றனர்! ஆடுகின்றனர்!    ஓடுகின்றனர்!  பாடுகின்றனர்!  அந்த முதலைகள் எதுவும் செய்வதில்லை! அந்த முதலைகள் தங்களது  காவல் தெய்வம் என்கிறனர் அந்த கிராம மக்கள்! ஆமாம் அந்த தெய்வ முதலைகள் அங்கு மட்டும் தான்!  அந்த ஏரியோடு சரி!  அதற்கு அப்பால் அவைகளுக்கு அந்த தெய்வ குணம் இருப்பதில்லை!

சமீபத்தில் படித்தது.  தமிழ் நாட்டு கிராமம் ஒன்றில் தங்களுக்கு இனி பெண் குழந்தைகள் வேண்டாம் ஆண் குழைந்தைகள் தான் வேண்டும் என்றால் ஒரு வினோதமான பழக்கத்தை வைத்திருக்கிறார்கள்.  பிறக்கும் கடைசி பெண் குழைந்தைக்கு  "வேண்டாம்" என்று பெயர் வைப்பார்களாம்.  இது போன்ற "வேண்டாம்"  என்னும் பெயரில் பல பெண்கள் அந்த கிராமத்தில் இருக்கிறார்களாம்! ஆமாம் அது அவர்களுக்கு  சரியாக வேலை செய்கிறது என்றால், தொடரட்டுமே! நமக்கு என்ன கவலை! 

இப்போதைக்கு ஞாபகத்தில் உள்ள ஒரு சில அதிசயங்கள் தான் இவை! மற்றவை பின்னர் பார்ப்போம்!

இது ஜாகிரின் வேலை அல்ல..!

ஜாகிர் தனது எல்லையை மீறிவிட்டார்!

அதற்கு யார் காரணம்?  டாக்டர் மகாதிர் என்கிற ஒரே மனிதர்!   ஜாகிர் நாயக் இந்தியர்களின் விசுவாசத்தைப் பற்றி கேள்வி எழுப்புவது  என்பது அவருக்கு அளவுக்கு மீறிய சுதந்தரத்தை  பிரதமர் மகாதிர் வழங்கியிருக்கிறார் என்றே தோன்றுகிறது!  

ஜாகிர் நாயக் இந்திய அரசால் தேடப்படும் ஒரு குற்றவாளி. சமயத்தை வைத்து பணம் சம்பாதிப்பது மட்டும் அல்ல அவர் வேலை பணம் கையாடல் என்பதும் அவர் மேல் உள்ள பல குற்றச்சாட்டுகளில் ஒன்று.

முதலில் அவர் மேல் உள்ள குற்றச்சாட்டுக்களுக்கு அவர் பதில் சொல்ல வேண்டும். இந்திய நீதிமன்றத்தில் போய் அவர் நிற்க வேண்டும். குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்ல வேண்டும். 

நீதியை நேர் கொள்ள அவருக்குத் திராணி இல்லை.  நேர் கொள்ள துணிச்சலோ  தைரியமோ இல்லாத நேர்மையற்ற ஒரு மனிதராக மலேசியாவில் தஞ்சம் புகந்திருக்கும் அவர் இங்குள்ள இந்தியர்களைப் பற்றி  கேள்வி எழுப்புகிறார்.  அவர் கற்ற  கல்வி அவருக்கு நேர்மையைக் கற்றுக் கொடுக்கவில்லை. பின்புற வழியாக எப்படித் தப்பிப்பது என்று தான் சொல்லிக் கொடுத்திருக்கிறது!  

இப்படி ஒரு கோழைக்குத் தான் பிரதமர் மகாதிர் வீரத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறார்! அதுவும் இங்குள்ள இந்தியர்களை எப்படித் தாக்கிப் பேசுவது, இந்து மதத்தை எப்படி இழிவாகப் பேசுவது போன்ற விஷயங்களுக்கு வழிகாட்டியாக இருந்து வழிகாட்டியிருக்கிறார்! 

ஒரு கேள்வி ஜாகிர் நாயக்கிடம் கேட்கிறேன்.  கிளாந்தானில்  "மாபெரும்" கூட்டத்தில் பேசி கைதட்டல் வாங்கியது போல் அதனையே ஜொகூர் மாநிலத்தில் பேசி கைதட்டல் வாங்க முடியுமா?   மாநில சுல்தான் உங்களைக் கழுத்தைப் பிடித்து விரட்டி அடித்திருக்க மாட்டாரா! அதனால் பார்த்துப் பேசுங்கள்!  உங்கள் நேரம் இப்போது சரியில்லை. எந்த நேரத்திலும் நீங்கள்  விரட்டி அடிக்கப்படலாம்! குறைந்தபட்சம்  துரத்தி அடிக்கப்படலாம்! எதுவும் நடக்கும்! இது தான் இன்றைய நிலை!

எந்த ஒரு இஸ்லாமிய நாடும் உங்களுக்கு  அடைக்கலம் கொடுக்கவில்லை.  மலேசியா கொடுத்திருக்கிறது.  இந்த நாட்டுக்கு உங்கள் நன்றியைக் காட்டுங்கள். இந்த நாட்டில் கலகத்தை ஏற்படுத்தாதீர்கள். 

இப்போது உங்கள் பெயர் பல விஷயங்களில் அடிபடுகிறது. இந்திரா காந்தியின் மகள் பிரச்சனை, மதம் மாற்றும் பிரச்சனை, இங்குள்ள இந்தியர்கள் இந்திய பிரதமர் மோடியை ஆதரிக்கிறோம் என்று குற்றம் சாட்டுவது - இதெல்லாம் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல! 

ஒன்றை நினவில் வையுங்கள். உங்கள் கூட்டத்திற்கு காவல்துறை பாதுகாப்பு கொடுக்கிறது என்பதற்காக  மலேசியாவில் முக்கிய மனிதர்களில் ஒருவராக ஆகிவிட்டதாக நினைத்து விடாதீர்கள்!  ஒரு கைதிக்கு உள்ள சுந்ததிரம் தான் உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது!

மோடியா லேடியா என்பது உங்கள் பிரச்சனை! மகாதிரா அன்வாரா என்பது எங்கள் பிரச்சனை! 

பிரதமர் மகாதிர் உங்கள் சார்பாக

Friday, 9 August 2019

மதமாற்ற மசோதா...!

ஏனோ தெரியவில்லை ஒரு சில தினங்களாக சிலாங்கூர் மாநிலத்தில் ஒருதலைப்பட்ச  மதமாற்று மசோதாவைப் பற்றியான செய்திகள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கின்றன! 

நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை!  ஆளுக்கு ஆள் இது பற்றிப் பேசி கருத்து தெரிவிப்பதை விட  சட்டம் என்ன சொல்லுகிறது என்பதைப் பார்க்க வேண்டும்.

பொதுவாக,  நாம் சொல்லுவதைத் தான் மற்றவர்கள் கேட்க வேண்டும் என்னும்  எண்ணம் யாருக்கும் நல்லதைக் கொண்டு வரப்போவதில்லை.  அது வீட்டுக்கும் பொருந்தாது, நாட்டுக்கும் பொருந்தாது! ஆனால் அதைத் தான் ஒரு சிலர் செய்கிறார்கள்.

நம் கண் முன்னே ஒரு சட்டம் இருக்கிறது. நீதிபதிகள் அது தான் எல்லை என்பதாக வகுத்து வைத்திருக்கிறார்கள்.  அதன் பின்னரும் மீண்டும் மீண்டும்  "நான் அங்கேயே தான் இருப்பேன்! அதை விட்டு நகரமாட்டேன்! நான் தான் அதனைத் தீர்மானிக்க வேண்டும், நீதிமன்றம் அல்ல!" என்று கூறிக் கொண்டு இருந்தால் இதற்கு ஒரு முடிவு காண முடியாது.

நம்மால் தீர்க்க முடியாத பிரச்சனையைத் தான் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்கிறோம்.  அதன் பின்னர் நாம் நீதிமன்றத்துக்குத் தான் கட்டுப்பட வேண்டும்.  நீதிமன்றம் ஒரு முடிவு எடுத்த பின்னரும் எதிர்கேள்வி கேட்டுக் கொண்டிருந்தால் அதற்கு ஒரு முடிவே இல்லை! அப்படி ஒரு நிலைமை ஏற்படக் கூடாது. பாதிக்கப்படுபவர்களுக்கு நீத்மன்றமே புகலிடம்.  அதற்கு மேல் எதுவுமில்லை.

பாலர்பள்ளி ஆசிரியை இந்திராகாந்தி  வழக்கில் கடந்தாண்டு கூட்டரசு நீதிமன்றம் அவரது மூன்று பிள்ளைகளை அவரது முன்னாள் கணவர் ஒருதலைப்பட்சமாக மதம் மாற்றியது செல்லாது  என்று அறிவித்துவிட்டது. தாய், தந்தை இருவரில் ஒருவர் மற்றவரின் அனுமதியில்லாமல்  பிள்ளைகளை மதம் மாற்றினால் அது சட்ட விரோதம் என்பதாகத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.  நாட்டின் உச்ச நீதிமன்றமே இதனை சட்ட விரோதம் என்று அறிவித்து விட்ட நிலையில் இப்போது சிலாங்கூர் அரசாங்கம் ஒரு சட்ட திருத்தத்தின் மூலம் "இருவரில் ஒருவர் அனுமதித்தால் போதும்" என்று கொண்டு வர முயற்சி செய்வது தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

மதம் மாறுவது என்பது வேறு. மதமாற்றம் செய்வது என்பது வேறு. நம் கண் முன்னே இருக்கிற சட்டத்தைப் பின்பற்றாமல் காலாகாலமும் நாம் சண்டைப்  போட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று எந்த ஒரு சட்டத்தையும் பின்பற்றாமல் இருப்பது ஏற்கக் கூடியது அல்ல.

மாற்றம் தான் வேண்டும்!

கொஞ்சம் விட்டுக் கொடுங்கள்..!

தொழிற்கல்வி பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மனிதவள அமைச்சு எடுத்துக் கொண்டு வருவதை நம்மால் அறிய முடிகிறது.

வரவேற்கிறோம்.  கடந்த காலங்களில் இந்திய மாணவர்கள் அரசாங்க தொழில்பயிற்சி கல்லூரிகளில் திண்டப்படாதவர்கள் போல் ஒதுக்கப்பட்டனர். தகுதி இருந்தும் தகுதியற்றவர்கள் போல் நடத்தப்பட்டனர்.  

அது ஒரு காலம். இப்போது தான் காலம் கனிந்திருக்கிறது.  நமது மாணவர்கள் வாய்ப்புக்களைப் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்பது தான் நமது பரிந்துரை.  

இனி மேலும் தாத்தா பாட்டி கதைகளைச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம்.  வாய்ப்புக்கள் வாசல் கதவைத் தட்டும் போது அதனைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்திய மாணவர்களின் நலனுக்காக பலர் வாதாடிக் கொண்டும், போராடிக் கொண்டும் இருக்கின்றனர். குற்றம் சொல்லிக் கொண்டும் குறை சொல்லிக் கொண்டும் இருப்பதை விட வாய்ப்புக்கள் கொடுக்கப்படும் போது ஏற்றுக் கொள்ளுங்கள்!

இந்த நேரத்தில் பினாங்கு உரிமைக்குரல் இயக்கத்தின் தலைவர் க.இராமன் சொன்ன ஒரு கருத்தை வரவேற்கிறோம். தொழில் பயிற்சி பயில மாணவர்கள் தேசிய மொழி தேர்ச்சி பெற வேண்டும் என்னும் விதியை தளர்த்த வேண்டும் என்னும் கோரிக்கையை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும்.  அவர்கள் தேசிய மொழியில் தேர்ச்சி பெறாததற்குப் பல காரணங்கள் உண்டு. தேர்ச்சி பெறவில்லை என்கிற ஒரே காரணத்திற்காக  அவர்களின் எதிர்காலத்தை வீணடிப்பது என்பது யாருக்கும் நல்லதல்ல.  அவர்கள் ஒன்றும் மருத்துவம் படிக்கவில்லை. அல்லது இன்னும் உயர்தரக் கல்விக்குப் போட்டிப் போடவில்லை. தேவை எல்லாம் அவர்களுக்கென்று ஒரு கைத்தொழில். அது அவர்களின் பிழைப்புக்காக.  இதற்குப் போய்  தேசிய மொழி தேர்ச்சி என்பதெல்லாம் தேவையற்றதாகவே நான் கருதுகிறேன். 

இன்று நிறுவனங்கள் புதியவர்களை வேலைக்கு எடுக்கும் போது அவர்கள் எஸ்.பி.எம். வரை கல்வி பயின்றிருக்கிறார்களா என்பதே முக்கியமாகப் பார்க்கின்றனர். அந்த நடைமுறையே கல்வி அமைச்சோ/மனிதவள அமைச்சோ பின் பற்ற வேண்டும். அதுவே சரியான நடைமுறையாய் இருக்கும்.

இதனை அரசாங்கம் கொஞ்சம் விட்டுக் கொடுக்க  வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!

Thursday, 8 August 2019

முறைகேடு..! முறைகேடு...!~ முறைகேடு..!

நமது நாளிதழ்களில் வரும் சில செய்திகளைப் படிக்கும் போது  இந்த சமூகத்தில் என்ன தான் நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை!

ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு வகையில் "ஒரு முறைகேடு"  போன்ற செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.  ஆலயங்களில் முறைகேடு, பொது இயக்கங்களில் முறைகேடு, அரசியல் கட்சிகளில் முறைகேடு என்று ஏதோ ஒரு முறைகேடு  தொடர்ந்து வண்ணமே இருந்து கொண்டிருக்கிறது.

இதற்கு முன்னர் நாம் யார் யாரை யோக்கியன் என்று நினைத்தோமோ அவர்கள் எல்லாம் இப்போது அயோக்கியர்கள் பட்டியலில்  வந்து விட்டார்கள்! படித்தவன், பெரிய படிப்புப் படித்தவன், கல்வியாளர் என்று யாரை நம்பி நாம் பொறுப்புக்களை ஒப்படைத்தோமோ அவர்கள் எல்லாம் இப்போது நம்பிக்கைத் துரோகிகளாக  மாறிவிட்டாளர்கள்! 

இந்த சமுதாயத்திற்கு யாராவது ஒருவரைச் சுட்டிக்காட்டி இவர் நல்லவர் என்று சொல்ல முடிகிற அளவுக்கு யாராவது இருக்கிறார்களா?   ஏன் படித்தவர்கள் கூட இந்த அளவுக்குத் தரமற்ற் மனிதராக மாறிவிட்டார்கள்?

ஆனால் ஒன்று மட்டும் என்னால் சொல்ல முடியும்.  தமிழர்கள் இந்த அளவுக்கு தாழ்ந்த மக்கள் அல்ல.  அவர்கள் இந்த அளவுக்கு கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட மாட்டார்கள் என்பது மட்டும் உண்மை. 

தங்களுக்குப் பதவி வேண்டும் என்பதற்காக தங்களைத் தமிழன் என்று சொல்லுபவர்கள் இன்று நிறையவே இருக்கிறார்கள். இவர்கள் தமிழர்கள் தானா என்பதை உள் புகுந்தா நம்மால் பார்க்க முடியும்!  அது அவர்களுக்கு வசதியாகப் போய் விட்டது!  இப்போது இங்கும் ஒரு மாற்றம் வருகிறது. இப்போது அவர்கள் எல்லாம் ஜாதி பெயரைப் போட ஆரம்பித்து விட்டார்கள்.  அதனால் வருங்காலங்களில் இவர்கள் தமிழர்களா என்பதை எளிதாகக் க்ண்டுப்பிடித்து விட முடியும்.

இப்போது நம்மிடையே நிறையே இயக்கங்கள்.  ஆனால் அதன் தலைவர்களைப் பாருங்கள். ஒருவன் கூட தமிழனாக இருக்க மாட்டான். இவர்கள் எல்லாம் அரசாங்க மானியம் வாங்குவதற்காகவே தலைவர்கள் ஆனவர்கள்!

யார் தலைவராக இருந்தாலும் சரி. வரவேற்கிறோம்.  ஆனால் மக்களை ஏமாற்றாதீர்கள்.  இயக்கத்தின் பேரை வைத்துக் கொண்டு தவறு செய்யாதீர்கள் ஆலயங்களின் பணத்தை அபகரிக்காதீர்கள். திருடாதீர்கள்! கொள்ளையடிக்காதீர்கள்!

சிவன் சொத்து குல நாசம் என்பார்கள். அது சிவன் சொத்துக்கு மட்டும் அல்ல.   பொது சொத்தும் குல நாசம் தான்.  கல்வி சொத்தும் குல நாசம் தான். அரசாங்க மானியங்களை அபகரிப்பதும் குல நாசம் தான். 

சமுதாயத்தில் எத்தனை முறை கேடுகள்! எத்தனை கையாடல்கள்! அத்தனைக்கும் மேலாக ஆலய முறைகேடுகள் தலைமுறை முறைகேடுகள்! தலைமுறை வீழ்ச்சியுறும்!                                                                                                                                                                                                                         

இன வேறுபாடா...?

வெளிநாட்டுத் தொழிலாலர்களை வருவிப்பதில் இன வேறுபாடு காட்டப்படுகின்றதா என்பது இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது! 

இந்தியர்களின் தொழில், சீனர்களின் தொழில், மலாய்க்காரர்களின் தொழில் என்று பிரித்துப் பார்க்கப்படுகின்றதா என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது. 

யாரும் இதனைக் குறை சொல்ல முடியாது.  நாம் எல்லாவற்றையும் அப்படித்தான் பிரித்துப் பிரித்து பழகியிருக்கிறோம்! இந்தியர்கள் என்றால் ஒரு மாதிரி, சீனர்கள் என்றால் ஒரு மாதிரி, மலாய்க்காரர்கள் என்றால் ஒரு மாதிரி - இப்படித்தான் அரசாங்கம் நம்மைப் பிரித்து வைத்திருக்கிறது. நாமும் அதனையே பின்பற்றி எதனை எடுத்தாலும் பிரித்துப் பழகி விட்டோம்!   அதுவும் முந்தைய டாக்டர் மகாதிர் ஆட்சி காலத்தில் இப்படிப் பிரித்துப் பார்ப்பது என்பது  அதிகமாக வழக்கத்திற்கு வந்து விட்டது!

நெல் பயிரிடும் தொழிலுக்கும்,  கையுறை  தயாரிப்புத் தொழிலுக்கும்  வெளி நாட்டுத் தொழிலாளர்களை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக  உள்துறை அமைச்சும்,  மனிதவள அமைச்சும் ஒப்புதல் அளித்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.  அந்த இரு தொழில்களுக்கும் வங்காளதேசிகளும், நேப்பாளிகளும் தருவிக்கப்படுவர்.

நாம் இங்கு பார்ப்பது என்னவெனில் நெல் பயிரிடும் தொழில் என்பது  காலங்காலமாக மலாய்க்காரர்கள் செய்கின்ற தொழில். அதே போல கையுறை தொழிற்சாலை என்பது  சீனர்களின் ஆதிக்கத்தில் உள்ள ஒரு தொழில்.  கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது மலாய்க்காரர் தொழிலுக்கு ஆதரவு, சீனர்களின் தொழிலுக்கு ஆதரவு, இந்தியர்களின் தொழிலுக்கு ஆதரவு இல்லை என்று அரசாங்கத் தரப்பு செயல் படுகிறதோ என்று நினைக்க வேண்டியுள்ளது! 

இப்படி நினைப்பதே தவறு தான்! என்ன செய்வது?  பழக்க தோஷம்! இன்னொரு நினைப்பும் உண்டு. சலவைத் தொழிலாக இருந்தாலும் சரி, ஜவுளி தொழிலாக இருந்தாலும் சரி உள்ளூரில் ஆளே இல்லையா என்று கேள்வி எழுகிறது! எத்தனையோ பெண்கள் வேலைக்காக அலைகிறார்கள்.  திருப்திகரமான  சம்பளம் அவர்களுக்குக் கொடுத்தால்  ஆள் கிடைப்பதில் என்ன பிரச்சனை?  முடி திருத்தும் தொழில் என்பது சீனர்கள் இந்தியர்களை விட இன்னும் நவீன முறையில் செய்கிறார்கள். அவர்களுக்குப் பிரச்சனைகள் இருப்பதாகத் தெரியவில்லை!   தங்க நகை என்பது ஒரு நுட்பமான தொழில் தான். இல்லை என்று சொல்லவில்லை.  பெரும்பாலும் இது குடும்பத் தொழிலாகவே பார்க்கப்படுகின்றது. இது மிகவும் உயரிய தொழில்.  அதற்கு உரிய வருமானம் இல்லாமல்  யாரும் ஏறெடுத்துப் பார்க்க மாட்டார்கள்!  எல்லாவற்றுக்கும் வருமானமே பிரதானம்.  வெளிநாட்டுத் தொழிலாளர்கள் என்றால்  குறைந்த சம்பளம் அதிக வருமானம் என்கிற மனப்பான்மை நீங்க வேண்டும். 

ஓர் வெளி பார்வையாளனாகவே நான் இதனைப் பார்க்கிறேன். மற்றபடி உள்ளே உள்ள பிரச்சனைகள்  எனக்குத் தெரிய வாய்ப்பில்லை!

இது இன வேறுபாடா? உங்களைப் போலவே எனக்கும் தெரியாது!

இது என்ன கூட்டணி..?

இப்போது நடப்பது என்பது ஒரு கூட்டணி அரசாங்கம் தான். பல கட்சிகள் சேர்ந்து தான் இந்த ஆட்சியை அமைத்திருக்கின்றன.

ஆனாலும் நடப்பது என்னவோ முன்னாள் ஆட்சியில் என்ன நடந்ததோ அதுவே தொடர்வதாகவே தோன்றுகிறது. முன்னாள் பாரிசான் ஆட்சியில் அம்னோ கட்சியினர் தன்மூப்புத்தனமாக என்ன செய்தார்களோ அதுவே தான் இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது.

ஒரு வேளை அது  பிரதமர் மகாதீரின் பழக்க தோஷமோ என்னவோ, தெரியவில்லை!  அப்போது நடந்ததும் ஒரு கூட்டணி ஆட்சி தான். அப்போதும் சீனர்களையோ, இந்தியர்களையோ பிரச்சனைகளுக்குக் கலந்து பேசி  தீர்வு காண வேண்டும் என்னும் அக்கறைஅன்றைய அம்னோ தரப்பினருக்கு வந்ததில்லை!  இப்போதும் டாக்டர் மகாதிர் அந்த பாணியையே பின்பற்றுவது  நமக்குச் சரியானதாகப் படவில்லை.

அவரின் நோக்கம் என்னவென்பது நமக்குப் புரிகிறது. மலாய்க்காரர்களின் அதிகாரம் என்றென்றும் தோடர வேண்டும் என நினைக்கிறார்.  எப்படிப் பார்த்தாலும் அவர்களுடைய அதிகாரம் குறைய வாய்ப்பில்லை.  ஆனாலும் அப்படி ஒரு பயம் அவரிடம் இருக்கிறது! அதனால் தான் ஏற்றுக்கொள்ள முடியாத அரபு சித்திரக்கலை எழுத்துக்களை சீன, தமிழ்ப்பள்ளிகளில் புகுத்த வலிந்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியிருக்கிறார்.

ஆனால் இது பற்றி முடிவெடுக்க வேண்டியது கல்வி அமைச்சரோ, பிரதமரோ அல்ல.   முதலில் அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனைப் பெற்றிருக்க வேண்டும். தனிப்பட்ட தலைவர்களின் விருப்பு, வெறுப்பு அல்ல இங்கு முக்கியம். ஆனால் அதுதான் நடந்திருக்கிறது. 

நடந்த முடிந்த பொதுத் தேர்தலில் அனைத்துத் தலைவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல விஷயங்கள் இன்னும் நடைமுறைக்குக் கொண்டு வர முடியவில்லை.  இது அவர்களின் இயலாமையா? அல்லது முந்தைய அரசாங்கம் செயததே சரி என்று இவர்கள் ஏற்றுக் கொண்டனரா? அதனை ஒட்டியே அனைத்தையும் கிடப்பில் போட்டுவிட்டனரா?

நாம் டாக்டர் மகாதீரை குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் அவர் செய்கின்ற காரியங்கள் சீன, இந்திய இனத்தவர்களுக்குப்  பாதகமாக அமைந்து கொண்டிருக்கிறது என்பதை அவர் அறியாதவரா? முன்பு அவர் பிரதமராக இருந்த போது என்ன தவறுகள் செய்தாரோ அதனையே இப்போதும் செய்வது ஏற்றுக்கொள்ளுவதாக இல்லை!

இப்போது நடப்பது கூட்டணி  ஆட்சி என்பதை விட  முன்பு போலவே பிரதமர் மகாதீரின் சர்வாதிகார ஆட்சி என்று தான் சொல்ல வேண்டி உள்ளது!

Wednesday, 7 August 2019

மகாதிருக்கு ஆதரவு...!

சமீபத்தில் நடைப்பெற்ற,   டாக்டர் மகாதிர் தலைமை தாங்கும்,  பெர்சாத்துவின்  தலைவர்களின் கூட்டத்தில் பல விஷயங்கள் பேசப்பட்டிருக்கின்றன.

அதிலும் குறிப்பாக " நாங்கள் பிரதமர் மகாதிருக்கு முழு ஆதரவை வழங்குவோம் என தலைவர்கள் ஏக மனதாக ஏற்றுக் கொண்டதாக!  விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாதிக்  டிவிட் செய்துள்ளார்.

இதனை ஒரு நல்ல செய்தியாகவே நான் பார்க்கிறேன்.  மகாதிருக்கு ஆதரவு என்பது ஒன்றும் வேண்டாத செய்தி அல்ல. அனைத்து மலேசிய மக்களின் ஆதரவும் அவருக்கு இருக்கிறது. இந்த நேரத்தில் இவர்களாக ஏன் எங்களின் ஆதரவை நாங்கள் தெரிவிக்கிறோம் என்கிறார்கள்?

பரவாயில்லை!  இந்த இரகசியக் கூட்டத்தின் மூலம் ஒரு முக்கிய செய்தி வெளியாயிருக்கிறது. அடுத்த பிரதமருக்கான செய்தி அது. 

இனி அடுத்த பிரதமர் யார் என்கிற கேள்வி பொதுவில் விவாதிக்கப்படாது என நம்பலாம்.  இது நாள் வரை பெர்சாத்து கட்சியில் உள்ளவர்கள் டக்க்டர் மகாதிரே பதவியில் தொடர வேண்டும் என்பதாக அறிக்கைகளை விட்டுக் கொண்டிருந்தார்கள்.   இப்படி அறிக்கை விடுபவர்களின் பின்னால்  யார் இவர்களை இயக்குகிறார்கள் என்கிற சந்தேகம் எல்லாம் நமக்கும் உண்டு. அது டாக்டர் மகாதிராகக் கூட இருக்கலாம்  என்றெல்லாம் ஓர் அனுமானமும் உண்டு. 

ஆனால் இந்த இரகசியக் கூட்டதின் மூலம் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்ததென நம்பலாம். இனி பெர்சாத்துவில் உள்ளவர்கள் அடுத்த பிரதமர் யார் என்கிற விவாதத்தில் இறங்கமாட்டார்கள். அப்படி அவர்கள் பிரதமர் டாக்டர் மகாதீரே பதவியில் நீடிக்க வேண்டும் என்று அறிக்கை விட்டார்களானால் இதன் பின்னணியில் டாக்டர் மகாதீரே இருந்து இயக்குகிறார்  என்று தான் நாம் ஐயுற வேண்டி வரும். அவர் அப்படி செய்யமாட்டார் என நாம் தாராளமாக நம்பலாம்!

இனி பெர்சாத்து செய்ய வேண்டியதெல்லாம் அடுத்த பிரதமர் யார் என்பதல்ல! மக்களுக்கான சேவைக்குத்தான் முதலிடம் தர வேண்டும். அவர் அடுத்த பிரதமர் அன்வார் இப்ராகிமிடம் தனது பதவியை ஒப்படைக்கும் வரை மக்களுக்கான  சேவைகளில் தனது கவனத்தைச் செலுத்த வேண்டும் என்பதே நமது அவா!

அது வரை நமது ஆதரவு மகாதிருக்குத் தான்!

Tuesday, 6 August 2019

வெறுப்பூட்டுகிறது ....!

வெறுப்பூட்டுகிறது என்பது உண்மையே!

பி.கே.ஆர். தலைமைச் செயலாளர் சைபுடின் நாசுத்தியோன் இந்தக் கருத்தை வலியுறுத்திருக்கிறார்.  தொடர்ந்தாற் போல பிரதமர் பதவியைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பது  மக்களிடையே வெறுப்புணர்வையே ஏற்படுத்தும் என்பதாகக் கூறியிருக்கிறார்.

இப்போது என்ன நாட்டில் பிரதமர் பதவிக்கு மட்டும் தானா பிரச்சனை! எத்தனையோ பிர்ச்சனைகள. இப்போது நம் கண் முன்னே உள்ள பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும்.  மக்களுக்குத் தேவையான அன்றாடப் பிரச்சனைகள் பல உண்டு. 

பொதுத் தேர்தலில் வாக்களிக்கப்பட்ட  எத்தனையோ பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்பட்ட பாடில்லை.  காரணங்கள் தான் சொல்லிக் கொண்டிருக்கிறோமோ தவிர தீர்வுகள் காணப்படவில்லை. 

அது சரி, இந்த அடுத்த பிரதமர் பிரச்சனையை எழுப்புவர்கள் யார்?  அடுத்த பிரதமராக அன்வார் இப்ராகிம் வருவதை விரும்பாதவர்கள் தான் முழுமையான காரணம்.  அவர் பதவிக்கு வருவதை விரும்பாதவர்கள் தான் தொடர்ச்சியாக அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கின்றனர்!

அவர்கள் சொல்லுவதெல்லாம் டாக்டர் மகாதிர் தனது பதவி காலத்தை அடுத்த தேர்தல் வரை தொடர வேண்டும் என்பதும் ஒரு காரணம். இன்னும் பல காரணங்கள் உண்டு. 

இந்த பிரதமர் என்னும் பதவியை ஒப்படைப்பது என்பது ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு பிரச்சனை. அவ்வளவு தான்! அப்போதெல்லாம் இந்த எதிர்ப்பாளர்கள் எங்கே போனார்கள்?  இப்போது இந்த எதிர்ப்பாளர்கள் ஆளுங் கூட்டணியில் இருக்கிறார்கள். அன்று வாய்த் திறக்காதவர்கள் இன்று துணிவோடு வாயைத் திறக்கிறார்கள்.  அப்படி என்றால் இவர்களுக்கு அந்தத் துணிவைக் கொடுத்தவர்கள் யார்?

எதிர்ப்பாளர்கள் இருப்பது அதிசயமல்ல. ஆனால் இவர்கள் அரசாங்கம் தங்களது கடமைகளைச் செய்ய விடாமல் தடங்களாக இருப்பது தான் நமக்கு வருத்தம் அளிக்கிறது!

நாட்டில்"அடுத்த பிரதமர் யார்?: என்பது முடிந்த விஷயம்.  அதனையே பேசிக் கொண்டிருப்பது மக்களுக்கு வெறுப்பூட்டும் விஷயம் தான்.  வேறு வேலையே இல்லையா என்று மக்கள் கேட்கத்தான் செய்கிறார்கள்> ஆனால் இதைத் தான் ஒரு சாரார் விரும்புகிறார்கள்! மக்கள் வெறுக்க வேண்டும் என்பது தான் அவர்களது நோக்கம்.  ஆனால் டாக்டர் மகாதிர் கட்சியில் உள்ளவர்களே இதனைச் செய்கிறார்களே! தினசரி ஏதாவது  அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்களே! இவர்களே இப்படி செய்தால் நாம் என்ன நினைப்பது? டாக்டர் மகாதிரின்  ஆதரவு இவர்களுக்கு இருக்கிறது என்று தானே நினைக்க வேண்டியுள்ளது! 

எது எப்படி இருந்தாலும் ஒன்றை  நினைவில் கொள்ளுங்கள்.   மக்கள் வெறுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.  அம்னோ பாஸ் கட்சிகளின்  எதிர்ப்பு என்பதை மக்கள் அலட்சியப் படுத்தி விடுவார்கள்! ஆனால்  ஆளுங்கட்சியில் உள்ளவர்களே இது பற்றி பேசிக் கொண்டிருந்தால்? இது திட்டம் இட்டு செய்கின்ற வேலை என்பது தானே பொருள்!

வெறுப்புணர்ச்சியை வளர்க்க வேண்டாம் என்பதே நமது வேண்டுகோள்!

Monday, 5 August 2019

எட்டாவது எட்டுமா...!

நாளிதழில்  படித்த ஒரு செய்தி எனக்குள்ளேயே ஒரு புன்னகையை ஏற்படுத்தியது!

ஆமாம்,  நாட்டின் எட்டாவது பிரதமராக  கெடிலான் கட்சியின் தேசியத் தலைவர்  அன்வார் இப்ராகிம் வருவதற்கு 198 தொகுதித் தலைவர்கள் ஆதரவு கொடுத்திருப்பதாக  அந்தச் செய்தி கூறூகிறது. 

உடனே என் மூளை அந்த எட்டாவது எண் என்னன்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதாக எப்போதோ படித்த சில செய்திகள் ஞாபகத்திற்கு வந்தன.

எட்டாவது எண்ணின் பலன் என்பது: நல்லது செய்தால் ஒரே தூக்காகத் தூக்கும், கெடுதல் செய்தால் படு பாதாளத்திற்குத் தள்ளிவிடும் என்பதாக படித்த ஞாபகம் உண்டு. 

சில உதாரணங்களைக் கொடுத்திருந்தார்கள். பெரியார் ஈ.வே.ரா. எட்டாம் எண்ணில் பிறந்தவர்.  அவர் உயிரோடு இருந்த வரை அவரை அசைக்க ஆளில்லை.  அவர் பார்க்காத உச்சம் இல்லை. வாழ்நாள் முழுவதும் போராட்டங்கள், போர்க்களங்கள் என்று போராடிக் கொண்டே இருந்தவர்.  அவர் யாரையும் நிம்மதியாக விடவில்லை. ஆனாலும் அவர் நிம்மதியாகத் தான் இருந்தார்!  கடைசி வரையில் அவர் கொள்கையில் அவர் உறுதியாக இருந்தார்.   வீழ்ச்சி என்பது அவருக்கு இல்லை!           

இன்னொரு பக்கம் இங்கிலாந்தின் எழுத்தாளர் அறிஞர் பெர்னாட்ஷா.  இவரும் எட்டாம் எண்ணில் பிறந்தவர் தான். பின் நாள்களில் அவரை அறிஞர் என்று கொண்டாடினாலும் அவருடைய ஆரம்ப காலம் படு மோசமாகத்தான் இருந்த்து. படாதா பாடுப்பட்டுத் தான் அவருடைய முன்னேற்றம் அமைந்தது.  முன்னேறி வரும் போது பல இடையூறுகள். எல்லாத் தடைகளையும் தாண்டி வந்தவர். அவர் தன்னுடைய கொள்கைகளை எந்தக் காலத்திலும் மாற்றிக் கொண்டதில்லை. இங்கிலாந்து மக்கள் தான் அவருக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டார்கள்!  பிறப்பு தரித்திரம் தான். இறப்பு சரித்திரம்!

நமது தானைத் தலைவர் துன் சாமிவேலுவும் எட்டாம் எண்ணில் பிறந்தவர் தான்.  மலேசிய இந்திய அரசியலில் அவருடைய உச்சத்தை யாரும் தொட்டதில்லை. இனி மேலும் தொட வாய்ப்பில்லை. நீண்ட காலம் பதவியில் இருந்தவர்.  அவர் பதவியில் இருந்த காலத்தில் ஒரு நாளேனும் அவர் நிம்மதியாக இருந்திருப்பாரா என்பதே சந்தேகம்! எப்போது எதிரிகள் தன்னை வீழ்த்துவார்கள் என்கிற பயம். யார் மேலும் நம்பிக்கையில்லை. யாரை நம்புவது?  எவன் காலை வாருவான் என்பது தெரியவில்லை!   எட்டாம் எண் அவருக்கு உச்சத்தைக் கொடுத்தது.  அதே சமயத்தில்அவரை ஆட்டிப் படைத்தது!  பதவி போனதும் ....இன்றைய நிலைமை - மறந்து போனோம்! 

இப்போது  எட்டாவது பிரதமர் என்று எதிர்பார்க்கப்படும் அன்வாரைப் பற்றி பார்ப்போம். இவரே அடுத்த பிரதமர் என்பதாக  தேர்தலின் போது ஒப்புக்கொள்ளப் பட்ட ஒன்று.   ஆனால் அவரை இப்படியும் அப்படியுமாக அலைக்கழிக்கப்படுவதை நாம் பார்க்கிறோம். ஒரு பக்கம் அவர் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு. இன்னொரு பக்கம் எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பு.  யாரை நம்புவது என்று அவருக்கே புரியவில்லை! கூட இருப்பவனே குழி பறிக்கிறான்! பிரதமர் மகாதீரை எந்த அளவுக்கு நம்பலாம் என்றும் தெரியவில்லை! நல்லவராகவும் தெரியவில்லை. கெட்டவராகவும் தெரியவில்லை!

பாவம் அன்வார்! அவர் பிரதமர் பதவியில் அமரும் வரை அவருக்கு நிம்மதி இல்லை!  உண்மையில் இந்த எட்டாவது அவரைப் படாதப்பாடு படுத்துகிறது!  பிரதமர் பதவி கைக்கு எட்டும் தூரத்தில் இருந்தும் எட்டாத தூரத்தில் இருப்பது போல் தெரிகிறது!  வரும் ஆனால் வராது என்பது போல் இருக்கிறது!

ஒன்றை நாம் உறுதியாக நம்பலாம். அன்வார் பிரதமராக வந்தால் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது. அவர் நல்லது செய்வார். நல்ல பிரதமராக இருப்பார். உச்சம் தொடுவார் என நம்பலாம்!

எட்டாவது எட்டும் என நம்புவோம்!

Sunday, 4 August 2019

கோவில்கள் என்ன மோதுகின்ற இடமா..?

கோவில் திருவிழாக்களில்  குண்டர் கும்பல்கள் மோதிக் கொள்ளுவது என்பது நமக்கு ஒன்றும் புதிய செய்தியல்ல!~

குண்டர் கும்பல்கள் மோதிக் கொள்ளுவதற்கு ஏன் கோவில் திருவிழாக்களைப் பயன்படுத்திக் கொள்ளுகிறார்கள்?  மிகவும் சிக்கலான கேள்வி!

இன்று நேற்று அல்ல! எத்தனையோ  ஆண்டுகளாக இது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.  ஓர் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் இரு தோட்டங்களுக்கிடையே நடந்த மோதலை நான் அறிவேன். அதுவும் கோவில் திருவிழா அன்று, இப்போது இரு தோட்டங்களுமே இல்லை! ஒரு வித்தியாசம். தோட்டப்புறத்திலிருந்து போன வாரிசுகள் தட்டாமல் தவறாமல்  அதனை நகர்ப்புறங்களுக்கு நகர்த்தி சென்றுவிட்டனர்! இப்போது அது நகர்ப்புற கலாச்சாரமாகி விட்டது!

கோவில்களில் பெரியவர்கள் அடித்துக் கொள்ளுகிறார்கள்! நீயா நானா பலப்பரிட்சை அவர்களிடையே நடக்கிறது!  அதுவும் கோவில் சொத்துகள் அதிகமிருந்தால் அது நீதிமன்றம் வரை செல்லுகிறது!  பேராசைக்கு அளவே இல்லை! 

ஆனால் இந்த இளைஞர் கூட்டத்திற்கு என்ன கேடு வந்தது?  இவர்கள் ஏன் இப்படி அடித்துக் கொள்ளுகிறார்கள்?  பணம் நோக்கமா? அப்படி சொல்லுவதற்கு இல்லை. இவர்கள் பிரச்சனையே வேறு. அற்ப காரியங்களுக்காக அடித்துக் கொள்ளுகிறவர்கள் இவர்கள்.  அதை விட்டால் அரசியல்வாதி  எவனாவது இவர்களைத் தூண்டி விட்டிருப்பான்! ஒரு காலக்கட்டத்தில் அரசியல்வாதிகளின்  தூண்டுதல்களினால் இவர்கள் கொழுத்து கும்மாளம் போட்டனர்! அவர்களே பின்னர் அரசியல்வாதிகளாக மாறினர்! இப்போதும் அரசியல்வாதிகளின் இழுத்த இழுப்புக்களுக்கெல்லாம் இவர்கள் ஆட்டம் போடுகின்றனர்!

ஆனாலும் ஏதோ ஓரிடத்தில் நாம் சரியாக இல்லை. அரசாங்கம் இளைஞர்களுக்கு தொழில்கல்வி கொடுக்கின்றது. அதை விடுங்கள். ஒவ்வொரு கோவில்களிலும் சமய வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன. தேவாரம், திருவாசகம் கற்பிக்கப்படுகின்றன. இங்கும் நம்மிடையெ ஒரு பிரச்சனை உண்டு.  பெற்றோர்களின் ஆதரவு சரியாக இல்லை. இவர்களுக்கு யாரையோ பிடிக்கவில்லை என்றால் பிள்ளைகளைக் கோவிலுக்கு அனுப்பமாட்டார்கள். எல்லாம் தொட்டாச்சிணுங்கி வகைகள்! பிள்ளைகளின் நலன் இவர்களுக்கு  முக்கியமானதாகத் தெரியவில்லை.

நம்மிடையே உள்ள பெரிய குறை.  பிள்ளைகளுக்குச் சமய அறிவை நாம் சரியாக ஊட்டவில்லை என்பது தான். ஒன்று கோவிலைப் பயன்படுத்த வேண்டும். அல்லது வீட்டில் சொல்லித் தரப்பட வேண்டும்.

சமய அறிவு இல்லாதவரை கோவில்கள் இளைஞர்களின் மோதுகின்ற இடமாகத்தான் இருக்கும். அதுவரை சிறைகள் தான் அவர்களுக்குச் சமா அறிவை ஊட்ட வேண்டும்!

நமக்குத் தேவை சமுதாய நலன்..!

நமது நாட்டில் இரண்டு முக்கிய பிரச்சனைகள் பத்திரிக்கைகளில்  வாசகர்களால், அரசியல்வாதிகளால் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 

ஒன்று அடுத்த பிரதமர்:  பிரதமர் மகாதிர் ஒப்புக் கொண்டது போல எப்போது அன்வாருக்கு அவர் வழி விடுவார் என்பது பற்றி அரசியல்வாதிகள், அரசியல் விமர்சகர்கள, ஆளுங்கட்சியினர், எதிர்கட்சியினர், பொது மக்கள் அனைவரும் ஒட்டி, வெட்டி பேசி வருகின்றனர்!  இது அனைத்து மலேசியர்களுக்கான ஒரு பிரச்சனை. நல்லது கெட்டது பற்றி விவாதம் தொடர்ந்து கொண்டிருக்கிறது!

இரண்டாவது இந்திய சமூகம் பற்றியது.  மித்ரா நிதி ஒதுக்கிடு. முன்பு பாரிசான் ஆட்சியில் இதனை செடிக் என்று அழைத்தார்கள். பெயர் தான் வேறு. மற்றபடி நோக்கம் எல்லாம் ஒன்று தான். 

இந்திய சமுகத்தைப் பொறுத்தவரை நமக்கு மித்ரா தான் முக்கியமாகத் தெரிகிறது.

காரணம் இந்திய சமூகம் எல்லாக் காலங்களிலும் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வந்திருக்கிறது. செடிக் அமைக்கப்பட்ட காலத்தில் அதன் நோக்கம் சரியாகத்தான் இருந்தது. இந்தியர் முன்னேற்றம் என்பது தான் அதன் சுருக்கம்.  ஆனால் அது ஆர்மபித்து ஒரு சில நாள்களிலேயே  அது ம.இ.கா. கொள்ளையர்களின் கையில் அகப்பட்டுக் கொண்டது. அதன் பின்னர் அது காணாமல் போய் விட்டது!  இந்தியர்களின் நலன் காற்றில் பறந்து விட்டது!

இப்போது புதிய  பக்காத்தான் அர்சாங்கம்  அதே காரணங்களுக்காக - இந்தியர் நலன் காக்க - மித்ரா என்னும் பெயரில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.  இந்த முறை அது அதன் நோக்கத்திலிருந்து தவறக் கூடாது என்பதில்  அனவருமே மிகவும் எச்சரிக்கையாக இருக்கின்றனர்.  ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் மட்டும் அல்ல பொது மக்களும் இப்போது இந்த நிதி ஒதுக்கீட்டில் ஆர்வங்காட்டுகின்றனர்.  இந்த நிதி இந்தியர்களுக்குப் போய்ச் சேருகின்றதா என்பதில் அரசியல்வாதிகள், ஊடகங்கள் அனைத்தும் கேள்விகள் கேட்க ஆரம்பித்திருக்கின்றனர். 

பிரச்சனை இப்போது இதற்கு பொறுப்பு ஏற்றிருக்கும்  பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கேள்விகளுக்கான பதிலைச் சொல்லாமல் மழுப்பலையே தனது பதிலாகச் சொல்லி வருகின்றார்! அவர் சொல்லுகின்ற பதிலே மித்ரா அதன் நோக்கத்தை நோக்கி நகரவில்லை என்பதைக் காட்டிக் கொடுக்கிறது!

ஏதும் தவறுகள் நடக்கின்றதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.  அப்படி நடக்கக் கூடாது என்பது தான் எங்களின் நோக்கம். வேதமூர்த்தி சரியான பாதையில் தான் போகின்றாரா என்பது இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை.  ஆனால் வரும்!

நாம் சொல்ல வருவதெல்லாம் இந்திய சமுதாயத்தின் நலன் முக்கியம். அவர்களின் பொருளாதார முன்னேற்றம் முக்கியம். அதனை நோக்கி மித்ரா செல்ல வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

நமக்கு வேண்டியது சமுதாய நலன்! தனிப்பட்ட மனிதரின் நலன் அல்ல!

Saturday, 3 August 2019

"மித்ரா" தப்புமா...!

அரசாங்கம் என்ன தான் இந்தியர்களின் மேம்பாட்டுக்காக பல நிதி ஒதுக்கீடுகளைச் செய்தாலும்  அது என்னவோ நம்மிடம் வந்து சேருவதில்லை!  என்ன சாபக்கேடோ தெரியவில்லை.  ஏதாவது  கோமாளிகள் இடை இடையே வந்து சேர்ந்து விடுகிறார்கள்! இந்தக் கோமாளிகள் எல்லாம் கோமான்களாக ஆக வேண்டும் எனும் வேட்கை இருப்பதால்  ஒதுக்கப்பட்ட பணம் நம்மை விட்டு ஒதுங்கிப்போய் விடுகிறது!

"செடிக்" தான் அப்படி ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டது என்றால்  இப்போது "மித்ரா" வுக்கும் அதே நிலை தானா என்று யோசிக்க வேண்டியுள்ளது. உரியவர்கள் சரியான பதில் சொல்ல கடமைப் பட்டிருக்கிறார்கள். 

மித்ராவை பற்றை ஒரு கேள்வி எழுப்பினால் அதற்கான பதிலைச் சொல்ல அமைச்சர் வேதமூர்த்தி கடமைப்பட்டிருக்கிறார்.  அவர் வேறு ஒரு இயக்கத்தைப் பற்றி கேள்வி எழுப்புவது அவர் தனது கடமையில் இருந்து தவறுகிறார் என்றே நினைக்க வேண்டியுள்ளது.

தவறுவது மட்டும் அல்ல ஏன் தடுமாறுகிறார் என்று நாமும் கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது.  வேதமூர்த்தி நேர்மையான மனிதர் என்று பொதுவாகவே அவர் மீது ஓர் அபிப்பிராயம் உண்டு.  அப்படி ஓர் அபிப்பிராயத்தின் மீது நமக்கே கொஞ்சம் சந்தேகம் ஏற்பட வைக்கிறது அவரது நடவடிக்கை.

பொதுவாக அரசியல் என்றாலே நமக்குத் தெரியும்.  நேர்மையாளர்கள் குறைவாகவே இருப்பார்கள்!  இப்போது ஓர் நேர்மையற்ற  ஆட்சியை வீழ்த்தி  பக்காத்தான் கூட்டணியைப்  பதவியில் அமர்த்தியிருக்கிறோம். பதவிக்கு வந்தவ்ர்கள் உடனடியாக த்ங்களது கைவரிசையைக் காட்ட மாட்டார்கள்!  அத்ற்கெல்லாம் நாள் பிடிக்கும்! மற்றபடி இவர்கள் உத்தமர்கள் என்று நாம் நம்ப வேண்டியதில்லை! 

வேதமூர்த்தி புதிதாக ஓர் அரசியல் கட்சியை ஆர்ம்பித்திருக்கிறார். அவருக்கும் பணத் தேவை உண்டு. ஆனால் இதற்கும் அதற்கும் முடிச்சுப் போட தேவை இல்லை.  

ஆனால் கேள்வி எல்லாம் ஏன் இப்படி நம்மை யோசிக்க வைக்கிறார் என்பது தான்!  இயக்கங்கள், மன்றங்கள், அமைப்புக்கள். நிலையங்கள் - இப்படி எதுவாக இருந்தாலும் ஒருவரிடமே மொத்தமாக பல இலட்சங்கள், பல கோடிகள் என்றால் சந்தேகங்கள் வரத் தான் செய்யும்.  வாங்கியவர்கள் ஏற்கனவே "செய்திகளில்" அடிபட்டவர்கள்!  

நேரடியாக பணத்தை வெளியாக்க முடியாது என்பதிலும் சரியாக இல்லை. வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு  எப்படிக் கடன் கொடுக்கப் போகிறீர்கள?  தொழிலை மேம்படுத்த நினைப்பவர்களுக்கு எப்படி உதவ முடியும்? அதனை நீங்கள் நேரடியாகத் தான் செய்ய முடியும். 

"மித்ரா" மூலம் நல்லது நடக்கும் என எதிர்பார்க்கிறோம்.  இந்த சமுதாயம் பயனுறும் என எதிர்பார்க்கிறோம்.  வெட்டிப்பேச்சுப் பேசிக் கொண்டும், நீயா நானா போட்டிப் போடவும்  இங்கு இடம் இல்லை! அதை நீதிமன்றத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

மித்ரா எந்தத் தடையும் இல்லாமல், தனது பணியைத் தொடர வேண்டும்!

Friday, 2 August 2019

ஏன் முடியாது...?

மித்ரா நிதியை நேரடியாக யாருக்கும் தர முடியாது என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி  கூறியிருப்பதைப் பற்றி யோசிக்க வேண்டியுள்ளது. 

முன்பு செடிக் நிர்வாகத்திலும் இதே நடைமுறையைப் பின்பற்றிய போது ஏராளமான புகார்கள் கூறப்பட்டன என்பது வேதமூர்த்திக்குத் தெரியாது என்று அவர் சொன்னாலும் நாம் நம்ப தயாராக இல்லை.  இப்போது அதே நடைமுறையைத் தான் மித்ராவும் பின் பற்றும் என்று வேதா கூறுவது நமக்குச் சரியானதாகத் தோன்றவில்லை. 

முந்தைய நடைமுறையில் தவறுகள் நடந்தது என்றால் இன்றைய நடைமுறையில் அதனை எப்படி சரி செய்வது  என்று அமைச்சர் யோசித்திருக்க வேண்டும்.  இருபத்தெட்டு ஊழியர்களைக் கொண்டு இயங்கும் மித்ரா - அந்த மித்ரா ஊழியர்களிடம் எந்த அளவுக்கு அவர் ஆலோசனை பெற்றிருக்கிறார்?   அவர்களை வெறும் ஊழியர்களாக நினைக்காமல் அவர்களுக்கும் அறிவு உண்டு ஆற்றல் உண்டு என்று ஒரு தலைவருக்குத் தெரிந்திருக்க வேண்டும்.  ஒரு வேளை அவர்கள் அதற்குத் தகுதி அற்றவர்கள் என்று  அவர் நினைத்திருக்கலாம்.

அது ஒரு பக்கம் இருக்கட்டும்.  அமைச்சர் இப்போது பக்காத்தான் அரசாங்கத்தில் பணி புரிகிறார் என்று முதலில் அவர் புரிந்து கொள்ள வேண்டும்.  மாநில அளவில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர் சந்தித்திருக்க வேண்டும்.  ஒவ்வொரு  மாநிலத்திற்குமான மித்ராவின் தேவை எவ்வளவு  என்பதை அவரது அலுவலகமே முடிவு செய்து, நிதி ஒதுக்கீடுகளை அவர்களுக்கான தேவைகளை ஒதுக்கியிருக்கலாம்.  களத்தில் இருப்பவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.   மக்களின் பிரச்சனைகளை அவர்கள் அறிந்தவர்கள். 

எல்லாக் குறை கூறல்களையும்  இப்போது அமைச்சர் மீதே விழுந்திருக்கிறது.  அவர் முன்பு பாரிசான் அரசாங்கம் செய்த  அதே தவறுகளை இவர் செய்திருக்கிறார். செடிக் நிதி என்பது ம.இ.கா. வின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவர்களின் நோக்கம் வேறு.  திருட்டு மட்டுமே அவர்களது நோக்கம். இங்கு நோக்கமே வேறு.   நிதி மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என்பது தான். 

ஆனால் நினைத்தவாறு நிதி மக்களிடம் போய்ச் சேரவில்லை.  அமைச்சர் வேதமூர்த்தி சொல்லுகின்ற காரணங்கள் மக்களிடம் எடுபடாது.   அவரின் நேர்மை இப்போது கேள்விக்குறியாக உள்ளது. 

மேலும் மற்ற இந்திய அமைச்சர்களுடன், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அவர் கைகோர்த்து செல்ல வேண்டும். சென்ற முறை ம.இ.கா. அவரைப் புறக்கணித்தது. ஆனால் அமைச்சர் இப்போது  பக்காத்தானைப் புறக்கணிக்கிறார்! 

உங்களைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை.  ஆனால் இந்த சாமுதாயத்தைப் பற்றி எங்களுக்குக் கவலையுண்டு.  அதனால் முடியாது என்று சொல்லுவதை விட்டுவிட்டு எப்படி முடியும் என்பதை யோசியுங்கள்!

முடியும்! ஏன் முடியாது?