Monday 30 November 2020

தமிழ்ப்பள்ளிகளுக்கான மானியங்கள் தொடர வேண்டும்!

 முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கைப் பற்றி நமக்குப் பலவித அபிப்பிராயங்கள் உண்டு.

அவரின் மிகப் பெரிய பலவீனம் ஊழல் தான்! அது அவரது மனைவியின் ரூபத்தில் வந்து அவருக்கு மிகப் பெரிய அவப்பெயரை ஏற்படுத்தி விட்டது.

அவரது முன்னாள் பெருமைகளை எடுத்துச் சொல்ல மேடை அமைத்துக் கொடுப்பதில்,  மக்கள் சக்தி இயக்கத் தலவர்  டத்தோஸ்ரீ தனேந்திரனும்  ஒருவர்.  அது அவரின் எஜமான விசுவாசத்தைக் காட்டுகிறது. நமக்கு அதில் எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை.

முன்னா பிரதமர் நஜிப் அவர்களைப் பற்றி நல்லவிதமான செய்திகள் வருகின்றன. "நான் தான் தமிழ்ப்பள்ளிகளுக்கு அதிகமாக உதவியிருக்கிறேன்"  என்று அவர் தொடர்ந்து சொல்லி வருகிறார். அதே போல இந்தியர்களின் முன்னேற்றத்திற்கும் அவர் அதிகமாக உதவி செய்திருப்பதாக அவரே சொல்லுகிறார்.

இந்தியர்களின் நலனுக்காக நிறுவப்பட்ட "செடிக்" அமைப்பைப்பற்றித் தான் அவர் இந்தியர்களின் பொருளாதார முன்னேற்றத்துக்காக தான் உதவியதாகக் கூறுகிறார் என்று நாம் எடுத்துக் கொள்ளலாம்

.செடிக் அமைப்பைப் பற்றி நமக்கு ஏற்கனவே ஓரளவு தெரியும். பெரும்பாலான செடிக் நிதி உதவி ம.இ.கா.வினருக்குத் தான் சேர்ந்தது என்கிற குற்றச்சாட்டும் உண்டு. அந்தப் பணம் இந்தியர்களுக்கு முழுமையாகப் போய்ச்  சேராமல்,  அந்த நிதி மீண்டும் அரசாங்கத்திற்கே ஒப்படைக்கப்பட்டதாக சொல்வதும் உண்டு.  அதாவாது நிதி உதவி பெற இந்தியர்களில் யாரும் தகுதி பெறவில்லை என்பதால் அந்தப் பணம் பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. அதாவது அந்த நிதி  பிரதமரின் சொந்த பயனுக்காக ஒப்படைக்கப்பட்டதாக கூறப்பட்டது!

அதனால் இந்தியர்களின் பொருளாதார வளர்ச்சி என்பது ம.இ.கா. அடுத்து பிரதமர் என்பதோடு அது முடக்கப்பட்டு விட்டது! அது இந்தியர்களின் வளர்ச்சி அல்ல!

அதனை விடுவோம். தமிழ்ப்பள்ளிகளுக்கு அவர் உதவி இருக்கிறார் என்பதை நாமும் ஒப்புக் கொள்ளுகிறோம். அதற்காக அவரைப் பாராட்டுகிறோம். அவர் காலத்தில் புதிய தமிழ்ப்பள்ளிகளும் திறக்கப்பட்டிருக்கின்றன. குறைவான எண்ணிக்கையாக இருந்தாலும் அது மனநிறைவானது என்பதில் ஐயமில்லை.

இன்னொன்றையும் நாம் ஞாபகப்படுத்துகிறோம். அவர் காலத்தில் மெட் ரிகுலேஷன் கல்வி,  போலிடெக்னிக் (தொழிற்கல்வி) போன்ற கல்விக்கூடங்களிலும் இந்திய மாணவர்களுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டன; இன்றும் நடைமுறையில் இருக்கின்றது. அதற்காக நிறைய முயற்சிகள் எடுத்த முன்னாள் ம.இ.கா. தாலைவர் டத்தோஸ்ரீ  G.பழனிவேல் அவர்களையும் நினைவு கூறுகிறோம்.

ஆக, நாம் முன்னாள் பிரதமர் நஜிப் அவர்களை முற்றிலுமாக ஒதுக்கிவிடவில்லை. தமிழ்ப்பள்ளிகளுக்கான அவரது சேவை மறந்து விடவில்லை. அதனை நாம் பாராட்டுகிறோம். ஆனால் அவரது ஊழலைத் தான் நாம் வெறுக்கிறோம்.

இப்போது நமது கேள்வியெல்லாம்: இப்போதும் அதே ம.இ.கா. இப்போதும்  அதே அவர்களின் ஆட்சி.  ஏன் இப்போது இந்த  தேக்க நிலை? குறிப்பாக கெடா மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பது நமக்குத் தெரிகிறது. மலாக்காவில் என்ன நடக்கிறது என்பது நமக்குத் தெரிகிறது. மத்தியில் என்ன நடக்கிறது என்பதும் நமக்குத் தெரிகிறது.

ஆனால் நஜிப் அவர்களது தலைமையில் இனி ஆட்சி அமையும் என்பதை ஏற்பதற்கில்லை. அது நடவாத காரியம்.  இனி அவரது அளுங்கட்சி அவரது பணியைத் தொடர வேண்டும். தொடருமா என்பது தான் கேளவி.

அது தொடராத வரை நஜிப் அவர்களின் புகழைப் பாடலாம்!


Sunday 29 November 2020

தடுப்பு மருந்து உறுதிச் செய்யப்பட வேண்டும்!

 வெகு விரைவில் கோவிட்-19 தொற்றுநோய்க்கான மருந்துகள் நமது ஊர் எல்லைகளை அலங்கரிக்கும் என்னும் செய்திகள் நமக்கு ஆறுதலாக இருக்கின்றன.

என்ன செய்வது? உலகமே தொற்று நோயினால் துவண்டு போய்க் கொண்டிருக்கிறதே  தவிர இதுவரை எந்த ஒரு பயனான கண்டுபிடிப்புக்களும் வெளியாகவில்லை. 

இந்த நேரத்தில் சீனா தனது கண்டுபிடிப்பை நமது நாட்டில் அறிமுகப்படுத்தப் போகிறது. அதாவது நாம் அந்த மருந்தை வாங்கிப் பயன்படுத்தப் போகிறோம்.  அது  நல்ல  செய்திதான்.

நிச்சயமாக அந்த மருந்தை நமது நாட்டு ஆய்வகங்களில் ஆய்வு செய்த பின்னரே அந்த மருந்து பயன்பாட்டுக்கு வரும் என நம்பலாம்.

ஆனால் சீனாவின்  பொருள்கள் என்றாலே நமக்கு இயற்கையாகவே கொஞ்சம்  அச்சம் எழத்தான் செய்கிறது. தரமற்ற பொருள்களுக்குப் பெயர் போனவர்கள் சீனர்கள். அதுவும் இலஞ்சம் வாங்கும் அரசியல்வாதிகளை நாம் கொண்டிருந்தால் சொல்லவே வேண்டாம்.  தரமற்ற மருந்துகளைத் தான் நாம் வாங்க வேண்டி வரும்!  அதனைத்தான் நாம் பயன்படுத்தப்பட வேண்டி வரும். பிறகு தரமில்லை என்று சொல்லி கோடிக்கணக்கான பணம் வீணடிக்கப்படும்!  இதெல்லாம் நடக்காது என்று சொல்ல முடியாது. ஒரு சில நாடுகளில் அது நடந்திருக்கிறது. 

சீனர்கள் எதுபற்றியும் கவலைப்படுவதில்லை. யாராக இருந்தாலும் அவர்களைத் தங்களது வலைக்குள் சிக்க வைத்து விடுவார்கள்! அது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இங்கேயும் நடக்கும்.

நமக்கு வேண்டியதெல்லாம் தரமான மருந்துகள். அவ்வளவு தான்.  ஆனால் நமது அரசியல்வாதிகளுக்கு அப்படி ஒரு தேவை இருக்காது. அவர்களுக்கென்று தனி மருத்துவமனை, தனி சிகிச்சை அனைத்தும் தனி தனி! ஆனால் பொது மக்களுக்கோ அப்படி ஒரு நிலை இல்லை. அனைத்தும் அரசாங்கத்தைச் சார்ந்தே இருக்கின்றன; இருக்கும்.

அதனால் அரசாங்கம் தனது ஆய்வுகளை ஒளிவு மறைவு இன்றி செய்ய வேண்டும். அது மக்களுக்கும் வெளிச்சத்துக்கு வரவேண்டும்.  பொது மக்களுக்கு நல்ல சிகைச்சைகள் கிடைக்க வேண்டும். 

அது தான் நமது நோக்கம். தடுப்பு மருந்து தடுப்பு மருந்தாகவே இருக்க வேண்டும்.  ஏதோ தட்டுமுட்டு சாமான்களைப் போல வாங்கிப் போடுவதைத் தவிர்க்க வேண்டும்.

நல்லதே நடக்கும் என நம்புவோம்!

Friday 27 November 2020

நாட்டுக்கு அந்நியரா!

 ஒரு சில செய்திகள் நம்மை சிரிக்க வைக்கின்றன!

கெடா மந்திரி பெசார், முகமட் சனுசி முகமட் நோர்,   நாட்டுக்குப் புதியவரா  அல்லது இப்போது தான் எங்கிருந்தோ விடுதலையாகி வந்திருக்கிறாரா என்று கேட்கத் தோன்றுகிறது!

இந்து கோயில்களை உடைக்கும் உடைக்கிற வேலைகளை அவருக்கு யாரும் கொடுக்கவில்லை. அவராக எடுத்துக் கொண்டிருக்கிறார். அதே போல இந்து கோயில்களுக்கு மானியங்கள் கிடையாது என்பதாக கையை விரைத்திருக்கிறார்.  இதுவும் அவராக எடுத்த முடிவு. அவருக்கு அந்த அதிகாரங்களை யாரும் கொடுக்கவில்லை. கொடுக்கவும் மாட்டார்கள். அவராகவும் எடுத்துக் கொள்ள முடியாது.

வழிபாட்டுத் தலங்களுக்கு அவர் பூசாரி அல்ல.  எது நல்லது எது  கெட்டது என்று தீர்மானிக்கும் உரிமையை யாரும் அவருக்குக் கொடுக்கவில்லை.

முகமட் சனுசி நாட்டுக்குப் புதியவரல்ல. ஆனால் புதியவர் போல பாவ்லா காட்டுகிறார்! ஏன் பிறந்ததிலிருந்து இந்நாள் வரை இந்து கோவில்களை அவர்  பார்த்ததே இல்லையா? இப்போது தான் அவர் கோவிலகளைப் பார்க்கிறாரா? 

மந்திரி பெசார்,  ஒரு வேளை கோவில்களை இப்போது தான் புதிதாகப்  பார்ப்பவராக இருக்கலாம். ஆனால் கோவில்கள் இந்நாட்டுக்குப் புதிதல்ல என்பதை முதலில் அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

முதலில் அவர் கொஞ்சம் சரித்திரத்தைப் பின் நோக்கிப் பார்க்க வேண்டும். இவர் பிறப்பதற்கு முன்னரே இங்குக்  கோவில்கள் இருக்கின்றன.அவர் தந்தையார் பிறப்பதற்கு முன்னரே இங்குக்  கோவில்கள் இருக்கின்றன. அவர் பாட்டனார் பிறப்பதற்கு முன்ன்ரே இங்குக் கோவில்கள் இருக்கின்றன.  

அதைவிட இன்னும் பின் நோக்கிப் போனால் இன்னும் பெரிதாக சரித்திர  சான்றுகள் வரும். அது தான் பூஜாங் பள்ளத்தாக்கு.  சரித்திரங்கள் பொய் சொல்லாது. கொஞ்சம் மெனக்கட்டு, ஆள் வைத்து, அதனையும் அவர் ஆராய்ந்து பார்க்கலாம். 

ஆக  மந்திரி பெசாருக்கு எதுவும் புதிது இல்லை. இன்று நேற்று புதிதாக அறிமுகமாகவும் இல்லை. 

இவருக்கு முன்னாள் இருந்த மந்திரி பெசார்களை விட தன்னை ஒரு படி மேல் என்று நினைக்கவும் வாய்ப்பில்லை.  அவர்கள் எல்லாம் முட்டாள்களும் இல்லை.   அவர்களை அப்படி இவர் நினைப்பதாகவே தொன்றுகிறது.

மந்திரி பெசார் என்பவருக்கு மிக முக்கியமான கடமைகள் உண்டு. ஏதோ ஓர் இனத்தைப் பிரதிநிதிப்பவர் அல்ல அவர் என்பதை முதலில்  புரிந்து கொள்ள வேண்டும். அவர் மாநிலம்,  ஏதோ ஓரினத்தைச் சார்ந்து உள்ளதாக அவர் நினைப்பதைக்  கைவிட வேண்டும். மூன்று இனங்கள் உள்ளது தான் ஒரு மாநிலம். எல்லா மாநிலங்களின் நிலைமையும் அப்படித்தான் உள்ளன.

கெடா மந்திரி பெசார், கெடா மாநிலத்தின் உள்ள அத்தனை குடிமக்களுக்கும் பொறுப்பானவர். மாநிலத்தின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குத் தான் அவருக்கு அந்த பொறுப்பு ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. பொறுப்பே பொறுப்பற்று நடந்தால் எப்படிப்  பொறுப்பது?

மந்திரி பெசார் தனது பொறுப்பை உணர்ந்து நடப்பார் என நம்புவோம்.

புதிய பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்

 கொரோனா தொற்று அல்லது கோவிட் 19 என்று எப்படிச்  சொன்னாலும் சரி இனி அதற்கு முடிவு உண்டா அல்லது இல்லையா என்பது இதுவரை தெரியவில்லை!

இனி இது தொடர்கதை தான். அதோடு வாழக் கற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லுகின்ற தரப்பும்  உண்டு. ஆனால் அப்படி சொல்லுவதில் ஏதும் தவறு இருப்பதாகவும் தெரியவில்லை.

இப்போது  நமது கண்ணுக்குத் தெரிவதெல்லாம் தீர்வு இன்றைய நிலையில் சாத்தியமில்லை என்பது தான்.  

இன்னும் மருந்தே கண்டு பிடிக்கவில்லை என்கிற போது தீர்வுக்கு இப்போதைக்கு வழியில்லை.

ஆனால் இந்த கொரோனா தொற்று நமக்கு ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. வாழ்க்கை என்பது ஒரே மாதிரியாக இருக்காது என்கிற பாடம் மிகவும் முக்கியமானது. மாடாக உழைப்பது, சம்பாதித்ததை செலவு செய்து ஜாலியாக இருப்பது,  பணம் எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்திக் கொள்ளலாம் - என்கிற மனப்பான்மையை தகர்த்தெறிந்து விட்டது கொரோனா தொற்று.

பணம் எப்போது வேண்டுமானாலும் சம்பாதிக்க முடியுமா?  முடியாது என்பதை இப்போது நாம் பார்த்து வருகிறோம்.  வேலை இல்லாமல் எப்படி சம்பாதிக்கப் போகிறோம்? அடுத்த அடி எடுத்து வைக்க வழியில்லாமல் இப்போது பலர் விழிபிதுங்குகின்றனர்.

இப்போது நமக்கு இருக்கும் ஒரே வழி நமக்கு என்ன தெரியுமோ அதனை வைத்து பிழைக்கக்  கற்றுக்கொள்ள வேண்டும். வெட்கப்பட்டால் கதைக்கு ஆகாது. குடும்பம், பிள்ளைகள் என்று இருக்கும் போது நமது கடமைகளை அலட்சியப்படுத்த முடியாது.

சமீபத்தில் நான் படித்தவை, நேரில் கண்டவைகளை  கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுகிறேன்.

ஒரு குடும்பப் பெண் தனது மோட்டார் சைக்கிளில் பத்தாய் வியாபாரம் செய்கிறார். ஓர் இளைஞர் ஸ்பைடர்மேன் உடைகளை அணிந்து கொண்டு காரில் பத்தாய் வியாபாரம் செய்கிறார். ஒர் இளைஞர் தனது சைக்கிளில் தேநீர் வியாபாரம் செய்கிறார். ஓர் விமான ஓட்டுநர் சிறிய அங்காடி கடை ஒன்றை வைத்துக் கொண்டு , தனது விமான உடையுடன்,  பலகார வகைகளை வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்.  ஒரு விமான பணிப்பெண் பலகாரங்கள் செய்து உணவகங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார். ஓர் ஆசிரியை வேலை பறிபோக சிறியளவில் பிரியாணி கடை ஒன்றை நடத்துகிறார். நல்ல வேலையில் இருந்த இளைஞர் ஒருவர், வேலை பறிபோக, மீன் வியாபாரத்தில் இறங்கிவிட்டார். 

இன்னும் எத்தனையோ இருக்கலாம். நாம் வாழ வேண்டும். நமது குடும்பம் வாழ வேண்டும். நமக்குத் தெரிந்த தொழிலை ஏற்றுக் கொண்டு வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டியது தான். 

குறை சொல்லுவதில் பயனில்லை. யதார்த்தம் இது தான். ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டும். புதிய பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

மறக்க வேண்டாம்! எந்த சூழ்நிலையிலும் வெற்றி ஒன்றே நமது இலக்கு!

Thursday 26 November 2020

வரவு செலவுத் திட்டம் நிறைவேறுமா?

 எது எப்படியோ தனது முதல் பரிட்சையில் தேர்வு பெற்று விட்டது  பிரதமர் முகைதீனின் பெரிகாத்தான் நேசனல் அரசாங்கம்!

ஆனால் அத்தோடு முடிந்துவிடவில்லை. இன்னும் சில முட்டுக்கட்டைகளைக் கடந்து செல்ல வேண்டும். குறைந்தபட்சம் வரும் திங்கள் கிழமை வரை! 

போகிற போக்கைப் பார்க்கின்ற போது அப்போதும் வெற்றி பெற வாய்ப்பிருப்பதாகவே நமக்குத் தோன்றுகிறது.

இப்போது இந்த நாடாளுமன்ற அமர்வில் ஆளுங்கட்சிக்கு முக்கியமான கதாநாயகனாக விளங்குபவரும் எதிர்கட்சிகளுக்கு வில்லனாக விளங்குபவரும் நாடாளுமன்ற சபாநாயகர் அஸார் ஹருன் என்பது தான் இங்கு விசேஷமாக கவனிக்கப்பட வேண்டியது.

அவர் மனம் வைத்தால் முடியாததும் முடிந்து விடும்! அந்த திறமை அவருக்கு உண்டு!  அவர் முன்னால் எதிர்கட்சிகள் வலுவிழந்து விடுகின்றன.  எங்கே கோடு போட வேண்டும், எங்கே வாயை அடைக்க வேண்டும், எங்கே அவர்களை நிறுத்த வேண்டும் என்பதெல்லாம் அவருக்கு அத்துப்படி! எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத காரியங்களைச் செய்ய அவர் தயங்க மாட்டார்! அது அவர் பிரதமருக்குச் செய்ய வேண்டிய செஞ்சோற்றுக்கடன்! அற்காக அவரைப் பாராட்டாலாம்!

இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். முதல் தேர்வில் பிரதமர் முகைதீன் வெற்றி பெற்று விட்டார் என்பதை வேறு ஒரு கோணத்திலும் நாம் கவனிக்க வேண்டும்.  பிரதமர் முகைதீன் இந்த ஆதரவைக் கண்டு நான் மனம் நெகிழ்ந்து விட்டேன் என்கிறார்.   அதே போல மாமன்னரும்  ஆதரவு கொடுத்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்திருக்கிறார்.

இவைகளெல்லாம் நமக்கு எதையோ சுட்டுகின்றன என்றே நமக்குத்  தோன்றுகிறது. இதனையே  சபாநாயகர் நடப்பு அரசாங்கத்திற்குச் சாதகமாக எடுத்துக் கொள்ளலாம் அல்லவா? இனி புதிதாக நம்பிக்கைத் தீர்மானம் தேவையில்லை என்பதாகக் கூட அவர் சொல்லலாம்! அல்லது  வரவு செலவுத் திட்டம் தோல்வி அடைந்தாலும் முதல் தீர்மானம் வெற்றி பெற்றதைச் சுட்டிகாட்டி அதனையே வெற்றியாக எடுத்துக் கொள்ளலாம்!அதற்காக ஏதோ ஒரு சட்டத்தை தனக்குத் துணையாகக் கொண்டு வரலாம்! 

அடாடா! ஆளுகின்ற  நிலையில் உள்ளவனுக்கு எத்தனையோ முகங்கள்! அநியாயத்தையும் நியாயம் என்று சொல்லலாம்! அநீதியையும் நீதி என்று சொல்லலாம்!

அதனால் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது பிரதமர் முகைதீனின் அரசாங்கம் கவிழும் என்று சொல்லுவதற்கில்லை! அது தொடரும் என்றே தோன்றுகிறது!

வரவு செலவுத் திட்டம் நிறைவேறினால் முகைதீன் யாசின் தனது பதவியில் தொடர்வார். அம்னோ தரப்புக்குத் தங்களைப் பணக்காரர்களாக்கிக் கொள்ள நிறைய வாய்ப்புக்கள் உள்ளன.

நாம் வழக்கம் போல, ம.இ.கா.வினர் போல, கிடைப்பதை ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சியாக வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.  கிடைக்கவில்ல என்றால்? கிடைத்ததாக நினைத்து வாழ வேண்டும்!

வரவு செலவுத் திட்டம் நிறைவேறுமா? ஆம் நிறைவேறும் என்பதே நமது கணிப்பு!

Wednesday 25 November 2020

மீண்டும் தேசிய சேவை பயிற்சியா?

 இதற்கு முந்தைய பக்காத்தான் அரசாங்கம் `தேசிய சேவை பயிற்சி தேவை இல்லை என்பதால் அதனைக் கைவிட்டது என்பது நமக்குத் தெரியும்.

இன்றைய கொல்லைப்புற அரசாங்கம் அது தேவை என்று சொல்லி ஓர் ஆண்டுக்கு 700 மில்லியன் ரிங்கிட்டை தேசிய சேவை பயிற்சிக்காக ஒதுக்கியிருக்கிறது!

ஏற்கனவே இந்த பயிற்சியைப் பற்றி ஏகப்பட்ட குளறுபடிகள், பிரச்சனைகள்! முந்தைய பாரிசான் அரசாங்கத்தால் எதனையும் சரி செய்ய முடியவில்லை என்பதையும் நாம் அறிவோம்.

ஆனால் மக்கள் தெளிவாக ஒன்றைப் புரிந்திருக்கிறார்கள். இந்த பயிற்சி தேவை என்றால் அது ஆளும் கட்சியில் உள்ளவர்கள் பணம் பண்ணத் துடிக்கிறார்கள் என்பது மட்டும் தான்! ஏற்கனவே அது தான் நடந்தது. அம்னோவில் உள்ளவர்கள் பணக்காரர் ஆனார்கள். இந்த பயிற்சி திட்டம் பல பணக்காரர்களை உருவாக்கியது. அனைவரும் அம்னோ கட்சியினர்! இப்போது அது மீண்டும் தலை தூக்குகிறது என்பது வருத்தத்திற்குரியது.

அரசாங்கம் சொல்லுவது போல இந்த திட்டத்தினால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. தேசப்பக்தியை வளர்க்கும் என்பதெல்லாம் வெறும் கதை. பயிற்சி பெறாத அந்த காலாத்திலெல்லாம் தேசபக்தி இல்லாதவர்களா கம்யூனிஸ்டுகளுக்காக எதிராகப்  போராடினார்கள்? தேசபக்தி என்பது எல்லாக் காலத்திலும் உண்டு.  அது இப்போதும் உண்டு.

தேசிய சேவை பயிற்சி என்பது பல நாடுகளில் உண்டு.  இல்லையென்று சொல்லவில்லை.   ஆனால் நமது நாட்டில் அதனையும் ஒரு வியாபார யுக்தியாக பயன்படுத்துவது தான் நமக்குள்ள பிரச்சனை!

தேசபக்தி இருந்தால் ஏன் இந்த அளவுக்கு நாட்டில் ஊழல் மலிந்து கிடக்கிறது?  அடிப்படையில் நமக்கு தேசபக்தி என்பது இல்லை. அதற்குக் காரணம் அரசியல்வாதிகள். கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கிறான். வெளிநாடு ஓட முடிந்தால் ஓடி விடுகிறான்!  ஓட  முடியாதவன் நாட்டிலேயே இருந்து கொண்டு வழக்குகளைச் சந்திக்கிறான்!

இப்படியெல்லாம் அரசியல்வாதிகளை வைத்துக் கொண்டு எப்படி தேசபக்தி உணர்வை ஊட்ட முடியும்?

மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் சொல்லுவது போல இந்த பணத்தை உயர் கல்விக்காக செலவு செய்யுங்கள். வேறு பயன் உள்ள திட்டங்களுக்காகச் செலவு செய்யுங்கள். நாடு உங்களை வாழ்த்தும். ஏதோ ஒரு சிலர் பணம் சம்பாதிப்பதற்காக பழைய திட்டங்களை எல்லாம் ஞாபகத்திற்குக் கொண்டு வராதீர்கள்!

தேசிய சேவை பயிற்சி தேவை இல்லை!

 

Tuesday 24 November 2020

எதிர்க்கட்சிகள் கவிழுமா!

 அரசாங்கம் கவிழும் நிலையில் இருக்கிறது என்பது உண்மை தான்.

ஆனால் எதனையும் உறுதிப்படுத்த வழியில்லை. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை மறந்து விட முடியாது. அதுவும் அரசியல் என்றாலே பொய்யும் புரட்டும் புரளுகின்ற ஓர் இடம். அங்கு நீதி இல்லை. நேர்மை இல்லை. நியாயம் இல்லை.

இப்போது எவன் கையில் அரசு இருக்கிறதோ அவன் கை தான் உயர்ந்து நிற்கும். காரணம் அவனால் அதர்மத்தை தர்மமாக்கிக் கொள்ள முடியும்.  அநியாயத்தை நியாயப்படுத்த முடியும்.  அநீதியை நீதியென நியாயப்படுத்த முடியும்.

அரசாங்கம்,  நேற்று யார் கையில் நாளை யார் கையில் என்பதெல்லாம்  முக்கியமல்ல. இன்று, இப்போது யார் கையில் ஆட்சிப் பொறுப்பு  இருக்கிறது என்பது தான் முக்கியம். 

அந்த வகையில் பார்த்தால் பிரதமர் முகைதீன் கையில் அரசாங்கம் இருக்கிறது. சபாநாயகர்கள் அவர் கையில். ஏன்?  கோவிட் 19 கூட அவர் கையில் இருக்கிறது!  சபாவிலிருந்து வருபவர்கள் இனி தனிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்பதில் கூட ஏதோ அரசியல் இருக்கலாம்! அதன் பின்னணி என்ன  என்பது நமக்கு இன்னும் தெரியவில்லை!

இப்படி எல்லாம் அலசி ஆராயும் போது கவிழ்பவர் யார் என்கிற கேள்வி எழத்தானே செய்யும். அது ஏன் எதிர்க்கட்சிகளாக இருக்கக் கூடாது?

எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று கூடி என்னன்னவோ திட்டங்களைத் தீட்டுகிறார்கள். எல்லாம் சரி தான்.  அதே சமயத்தில் ஆளும் அரசாங்கமும் தன்னை தற்காத்துக் கொள்ள அவர்களும் பல அதிரடித் திட்டங்களைத் தீட்டத்தானே செய்வார்கள்? 

எதிர்க்கட்சிகள் என்ன செய்கிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.  ஒளிவு மறைவு இல்லை.  ஆனால் எதிர்தரப்பு திரைமறைவில் என்ன செய்கிறது என்பது இதுவரை வெளிப்படையாகத் தெரியவில்லை. ஒளிவும் உண்டு மறைவும் உண்டு!

பிரதமர் முகைதீனைப் பற்றி அவ்வளவு எளிதில் எடைப்போட்டு விட முடியாது. கழுவுற மீன்ல  நழுவற தனமைக் கொண்டவர்! அப்படி இல்லாவிட்டால் இத்தனை மாதங்கள் பதவியில் நீடித்திருக்க மாட்டார்!

ஆகக் கடைசியாக சீனப்பள்ளிகளுக்கு அதிக நிதியும், தமிழ்ப்பள்ளிகளுக்கு குறைவான நிதியும் ஒதுக்குகிறார் என்றால் அவர் எப்படிப்பட்டவர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தேவைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்பவர் அவர்!

வரவு செலவுத் திட்டத்தில் அவர் வெற்றி பெற்றால் தொடர்ந்து தமிழ்ப்பள்ளிகள் புறக்கணிக்கப்படும் என்பது ம.இ.கா.வினருக்கு மட்டும் தான் புரியாது! நமக்குப் புரியும்.

இப்போது நமது கேள்வி எல்லாம் இன்றைய அரசாங்கம் கவிழும் என்பதை எப்படி உறுதிப்படுத்துவது? பிரதமர் முகைதீன் ஏமாளி அல்ல என்பது மட்டும் உறுதி. எதிர்க்கட்சிகள்  ஏமாளிகளா?

பொறுத்திருந்து பார்ப்போம்!

Monday 23 November 2020

நேர்மையற்ற அதிகாரிகள்!

 நேர்மையற்ற அதிகாரிகள் அதிகாரத்தில் இருந்தால் என்னன்ன நடக்கும் என்பதை சமீபத்திய குடிநுழைவுத்துறை கைது நடவடிக்கை மெய்ப்பித்திருக்கிறது!

அதிகாரத் துஷ்பிரயோகம் என்றால் அதில்  குடிநுழைவுத்துறை தான் முதன்மையானது என்பதில் சந்தேகமில்லை! அந்த அளவுக்கு அதிகார அத்து மீறல்கள்!

ஒருவர் குற்றப் பின்னணியோடு வேலையில் அமர்த்தப்பட்டிருக்கிறார். அது எப்படி சாத்தியம் என்பது நமக்குப் புரியவில்லை. ஆள் கடத்தல், கார்த் திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டிருப்பவர்கள் கூட எளிதாக வேலையில் சேர வாய்ப்புக்கள் உண்டு என்பது ஓர் ஆச்சரியமான தகவல்.

அதை விட ஆச்சரியங்கள் இன்னும் நிறையவே இருக்கின்றன. அவர் பயன்படுத்திய கார்கள் நம்மை விழி பிதுங்க வைக்கின்றன. ரோல்ஸ் ராய்ஸ், முஸ்தாங், ஆவ்டி, ரேஞ் ரோவர் போன்ற கார்களை அவர் பயன்படுத்தியிருக்கிறார்!

ரோல்ஸ் ராய்ஸ் என்பது சாதாரண தொழிலதிபர் கூட பாவிக்க முடியாது என்பது நமக்குத் தெரியும்.   பெரும் தொழிலதிபர்கள் கூட பெரும்பாலும் பாவிப்பதில்லை. அவர்களிடம் பணம் இல்லை என்று சொல்ல முடியுமா? பணம் உண்டு.  ஆனால் மெர்ஸிடிஸ்  கார்களே போதும் என்று திருப்தி அடைபவர்கள்.

ஆனால் ஓர் அதிகாரி, அரசாங்கத்தில் பணி புரியும் ஓர் அதிகாரி, அவருக்கு எப்படி இந்த அளவுக்குத் துணிச்சல் வந்தது, பணம் வந்தது  என்பது நமக்குப் புரியவில்லை!  எப்படியும் ஒரு நாள் இது வெளிச்சத்துக்கு வரும் என்பது தெரியாத அளவுக்கு அவர் என்ன ஒன்றும் அறியாதவரா! ஆச்சரியம்!  ஆச்சரியம்!

அதைவிட இன்னும் கொடுமை அந்த அதிகாரி குண்டர் கும்பல் நடவடிக்கைகளிலும் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது!

பொது மக்கள் என்னும் முறையில் நாம் ஒரு முடிவுக்கு வரலாம். இப்படி ஒரு மனிதர் வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கிறார் என்றால் அவருக்கு பலம் வாய்ந்த அரசியல் பின்னணி இருக்க வேண்டும். அப்படிப் பட்டவர்கள் தான் இப்படியெல்லாம் ஏதோ ஒரு குறுக்கு வழியில் உள்ளே புகுந்து விடுகிறார்கள்!

ஆனாலும் என்ன செய்ய? அரசியல் அதிகாரம் மிகவும் சக்தி வாய்ந்தது! எதிர்த்து நின்றாலும் அதனைத் தவிடுபொடியாக்கி விட அரசியல்வாதிகளால் முடியும்! அதற்காக நாம் வாய் மூடி மௌனியாக இருந்து விட முடியாது. நமது எதிர்ப்பை நாம் பதிவு செய்கிறோம்.

நேர்மையற்ற அதிகாரிகள் நாட்டின் அவமானச் சின்னங்கள்!

ஏன் நம்மிடம் நேர்மை இல்லை?

 நாம் எல்லாருமே நம்மைப் பார்த்து நாமே கேட்க வேண்டிய கேள்வி இது.    

ஏன் நம்மிடம்  நேர்மை என்பது குறைந்து வருகிறது?  நாம் என்பது மலேசியர் அனைவரும் தான்.

தேசிய மிருகக்காட்சி சாலை, நமக்கு  "ஊழல்" வரிசையில் வந்த இன்றைய கடைசி செய்தி!

இன்னும் மூன்று மாதம் தான் அவர்களால் தாக்குப் பிடிக்க முடியுமாம். அதன் பிறகு என்ன செய்வது, கையைப் பிசைகிறார்கள் நிர்வாகத்தினர்.

அதன் பின்னால் ஒரு கதையும் உண்டு.  அதன் நிர்வாகம் அரசாங்கத்தின்  கையில் இல்லை.  மலேசிய விலங்கியில் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாகத் தெரிகிறது.  

பிரச்சனை என்னவென்றால் முறையான நிர்வாகம் அமையவில்லை. கணக்கு வழக்குகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. தகுதியற்ற மனிதர்கள் வேலையில் இருக்கிறார்கள்.   உணவுகள் விலங்குகளுக்கா அல்லது மனிதர்களுக்கா என்று புரியவில்லை!      

ஒரு காலக் கட்டத்தில் சிறப்பாக இயங்கி வந்த நிர்வாகம் ஏன் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டது? 

இப்போது நாம் செய்ய வேண்டியது என்ன? இங்குப் பணி புரிபவர்கள் அனைவருடைய சொத்து விபரங்களை ஆராய வேண்டும். வரவுக்கு மீறிய சொத்துக்கள் இருப்பவர்களை சட்டத்தின் முன்னால் நிறுத்த வேண்டும்.

வேறு வழி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை!  ஊழல் என்று வரும் போது யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்  நிறுத்த வேண்டும். இந்த இனத்தார் தான் செய்யும் தகுதி உண்டு மற்ற இனத்தாருக்குத் தடை என்றெல்லாம் ஒன்றுமில்லை.      

ஊழல், இலஞ்சம் என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டு வருவது மனதிற்குச் சங்கடத்தை ஏற்படுத்துகிறது.

படித்தவர்கள் அதிகமாகக் கொண்ட நாடு நமது நாடு. அதுவும் இல்லாமல் சமயத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் நாம்.

நமது அண்டை நாடான சிங்கப்பூர் என்ன சமயத்தைப் பின்பற்றுகிறது என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அங்கு ஊழல் என்பது  உலகளவில் மிக மிகக் குறைந்து காணப்படுகிறது.

ஆனால் சமயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம் உலகளவில் எந்த நிலையில் இருக்கிறோம்?  அப்படி ஒன்றும் மெச்சும் படியாக இல்லை என்பதே போதும்!    

இதற்கெல்லாம் ஒரே காரணம் நமது அரசியல்வாதிகள் தாம். அவர்கள் தான் மக்களுக்கு முன்னுதாரணமாக இருப்பவர்கள்.  தங்களுக்குக் காரியம் ஆக வேண்டுமானால் மக்களுக்கே இலஞ்சம் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்!

அப்படியானால் இவர்கள் படித்த படிப்பு, தங்கள் மதத்தின் மீதான் பிடிப்பு இதனைப் பற்றியெல்லாம் இவர்கள் காவலைப்படுவதில்லையா?

நேர்மை! நேர்மை! நேர்மை! எல்லாவற்றையும் விட நேர்மை தான் தேவை! மற்றவை எல்லாம் இரண்டாம் பட்சம்!

Sunday 22 November 2020

எது முக்கியம்?

 கேட்டாலும் கேட்டார் ஒரு கேள்வி, பதில் சொல்லத்தான் ஆளில்லை!

நம்மால் கேட்க முடியாத ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறார் தேச பக்தியின் தலவர் முகமட் அர்ஷாத் ராஜி! 

கேட்க ஆளில்லாவிட்டால் தம்பி தண்டப்பிரசண்டம் செய்வான் என்பது உண்மை. நம்மால் கேட்க முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். கேட்க முடியாது என்பதால் தம்பி தண்டப்பிரசண்டம் செய்கிறான்!

ஆனால் நாட்டில் இன்னும் நியாயமானவர்கள் நீதிமான்கள் இருக்கிறார்கள் என்பதற்கு முன்னாள் இராணுவத் தலைவர் அர்ஷாத் ஒரு முன்னுதாரணம். 

பதவிக்கு வந்ததும் தங்களது கைவரிசையைக் காட்டி வருகிறார்கள்.  ஒரு கோவிலை உடைத்தார்கள், புனித நூலை புண்ணியமற்ற நூல் என்றார்கள் இப்போது குடியை ஒழிப்போம்  என்கிறார்கள்.  குடியை ஒழிப்பதில் நமக்கு ஒன்றும் ஆட்சேபனையில்லை. அங்கேயும் கீழ்த்தட்டு மேல்தட்டு என்று பிரித்து வைக்கிறார்கள்! ஆக குடிவகைகள் இடம் மாறியிருக்கின்றன.

இந்த இடத்தில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். குடியைத் தடை செய்தால் போதப்பொருள்களின் பயன்பாடு இன்னும் அதிகரிக்கும். இது வரை போதைப்பொருளை நாம் இன்னும் ஒழிக்கவில்லை. ஆக, மயக்கத்தில் இருப்பவன் தொடர்ந்து மயக்கத்தில் இருக்கத்தான் செய்வான்!

ஆனால் இவ்வளவு பேசும் இவர்கள் "ஊழலை ஒழிப்போம்!"  என்று சொல்ல இவர்களுக்கு வாய் வரவில்லை! இது தான் மிகப் பெரிய சோகம். குடித்துவிட்டு அலைபவனால் இந்த நாட்டுக்கு எந்த கேடும் வந்ததில்லை.  ஆனால் ஊழல் செய்பவனால் கீழ்மட்டத்திலிரிந்து மேல்மட்டம் வரை மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

குடிக்குப் பேர் போனவர்கள் இந்தியர்கள். இவர்களால் இந்த நாட்டுக்கு என்ன கேடு வந்தது?  இவனால் மற்றவர்கள் தான் சம்பாதித்தார்கள்! இவன் தான் சம்பாத்தியம் இல்லாமல்  வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறான்!

ஊழலின் நிலை என்ன?  பக்காத்தான் அரசாங்கம் மட்டும் இடையிலே வரவில்ல என்றால் இந்த நாடு சீனாவின்  கைக்கு  ஏலம் போயிருக்கும்!  ஊழல் என்றால் சாதாரண ஊழல் அல்ல!  பல பல கோடிகள்! எண்ணமுடியாத அளவுக்கு ஊழல்கள்! ஆனால் இப்போது இந்தக்  கொல்லைப்புற அரசாங்கம்  அனைத்தையும் நியாயப்படுத்தப் பார்க்கிறது!

கொல்லைப்புற வழியாக வந்தார்கள்! அத்தனை பேரும் ஊழல் பேர்வழிகள்! இப்போது ஆட்சியில் இருப்பதால் இன்னும் ஊழலில் ஈடுபாடு காட்டுகிறார்கள்! அதனால் ஊழலைப் பற்றி பேசுவதில்லை!

ஏதோ இருக்கிற கோயில்களையும், கிறிஸ்துவர்களையும் மட்டம் தட்டினால் அவர்களுக்கு  ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறார்கள்! ஏன் ஊழல் கூடாது என்றால் அதரவு கொடுக்க மாட்டார்கள் என்று எப்படி  ஒரு முடிவுக்கு வந்தார்கள்?

தேசபக்தி இல்லாத ஒரு கூட்டத்துக்கு (பேட்ரியோட்)தேசபக்தியின் தலைவர் முகமட் அர்ஷாத் ராஜி  ஒரு சவால் விட்டிருக்கிறார்!

என்ன பதில் வருகிறது என்று பார்ப்போம்.  குடியைக் கெடுக்கும் குடியா? நாட்டை அழிக்கும் ஊழலா? 

Saturday 21 November 2020

ஏன் இந்த போட்டி?

 பொதுவாக இப்போது அம்னோவில் ஒரு கேள்வி எழுந்து கொண்டிருக்கிறது. 

யார் துணைப் பிரதமராக வர முடியும்,  யார் வர முடியாது  என்கிற போட்டி நடந்து கொண்டிருக்கிறது.

தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளர் அனுவார் மூசா திரும்பத் திரும்ப ஒன்றைக் கூறி வருகிறார். ஊழல் வழக்குகள் உள்ள அம்னோ தலைவர்கள் துணைப் பிரதமராக வரக் கூடாது என்பது அவரின் கருத்து.

ஆனால் அவர் சொல்லுகின்ற காரணம்  சரியாகத்தான் இருக்கின்றது.  அதில் சந்தேகப்பட ஒன்றுமில்லை. ஏற்கனவே ஊழல் வழக்குகள் உள்ளவர்கள் துணைப் பிரதமராக வருவதில் பல சிக்கல்கள் உள்ளன.

துணைப் பிரதமர் பதவி என்பது,  நமது நாட்டைப் பொறுத்தவரை,  கொஞ்சம் கௌரவமான பதவி. மற்ற  நாடுகளில் மிகவும் சக்தி வாய்ந்த பதவி. நமது நாட்டில் அந்த பதவிக்கு யார் வர வேண்டும், எந்த மதத்தவர் வர வேண்டும் என்கிற ஓர்  வரையறையை  வகுத்து வைத்திருக்கிறார்கள்.  மற்ற இனத்தவர் என்ன தான் படித்து உலகை ஆளுகின்ற திறன் இருந்தாலும், அவர்கள்  வரக் கூடாது  என்று சட்டம் மட்டும் சொல்லவில்லை ஆளுகின்றவர்களும்  சொல்லுகின்றார்கள்!

அதனால் தான், கொல்லைப்புற வழியாக பதவியேற்ற இன்றைய அரசு,  தடுமாற்றத்தில் ஊசாலாடிக் கொண்டிருக்கிறது!

காரணம் இன்றைய அரசில் பதவி வகிப்பவர்கள் பெரும்பாலானோர் ஊழல் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள்! ஊழல் இல்லையென்றால் இன்றைய அரசாங்கமே இருக்க வாய்ப்பில்லை.  அத்தனை பேரும் ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள்!

இப்படி ஒரு சூழலில் யாரைத்  துணைப் பிரதமராகக் கொண்டு வருவது என்று பார்த்தால்  சிக்கல் தான்  ஏற்படும்! ஏன் பிரதமரின் சென்ற காலத்தைக் கிளறிப் பார்த்தால் அங்கும் நாறத்தான் செய்யும்!

இந்த நிலையில் தான் அனுவார் மூசா "ஊழல் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் துணைப் பிரதமராக வரக்கூடாது!" என்கிறார்!

அவர் சொல்லுவதெல்லாம் ஊழல் செய்திருந்தால் பரவாயில்லை. ஆனால் வழக்குகள் அவர்கள் மீது இருக்கக் கூடாது என்பது தான் அவர் சொல்ல வருவது!

ஆனால் நம்மைப் போன்ற வேடிக்கைப் பார்ப்பவர்கள் இரண்டுமே சரியில்லை  என்று தான் சொல்லுவோம். முன்னாள் பிரதமர் நஜிப் பற்றி யாரும் ஒன்றும் சொல்ல வேண்டாம். இப்போது நமக்குத் தெரியும்.

ஊழல் செய்பவர்கள் பதவிக்கு வந்தால் ஊழல் இன்னும் அதிகமாகமே தவிர குறைய வாய்ப்பில்லை. அது தான் நடந்து கொண்டிருக்கிறது.

அனுவார் மூசா சொல்லுவதைக் கொஞ்சம் பார்க்க வேண்டும்.  ஊழல் செய்யலாம் ஆனால் அவர்கள் மேல் வழக்குகள் இருக்கக் கூடாது என்பது தான்! ஆனால் அவர்கள் பதவிக்கு வந்து விட்டால் அத்தனை வழக்குகளும் தள்ளுபடி ஆகி விடும்!  அதன் பின்னர் அவர்கள் குற்றவாளிகள் அல்ல! நாட்டைத் தொடர்ந்து நாசமாக்கலாம்!

ஏன் இந்த போட்டி? ஊழல் செய்யத் தான்!


Friday 20 November 2020

யார் துரோகிகள்?

 நம்மால் இன்னும் இந்த பெரிக்காத்தான் அரசாங்கத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை!  

வரவு செலவு திட்டத்தை ஆதரிக்கவில்லை என்றால் அவர்கள் துரோகிகள் என்கிறார்கள்!

அதாவது அவர்கள் மிகவும் உழைத்து, களைத்து இந்த வரவு செலவு திட்டத்தைத் தயாரித்திருக்கிறார்களாம். அதை எதிர்க்கும் அனைவரும் துரோகிகள், துரோணர்கள், இனப்பற்று இல்லாதவர்கள், சமயப்பற்று இல்லாதவர்கள் இப்படிப் பல வசை மொழிகள்!

அதாவது இவர்கள் பதவியில் நீடிக்க வேண்டுமென்றால் நாம் அனைவரும் சேர்ந்து அவர்களை ஆதரிக்க வேண்டுமாம்!

இந்த வரவு செலவு திட்டத்தை பலர் ஏற்கவில்லை. இது ஒரு தலைபட்சமான வரவு செலவு திட்டம் என்பதாகப் பலர் கூறுகின்றனர். சீனர்கள், இந்தியர்கள் நலனில் கொஞ்சம் கூட அக்கறை காட்டவில்லை என்பதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு.

இது பற்றி கருத்துரைத்த ஒரு பொருளாதார நிபுணர் இத்தனை ஆண்டுகளில் இது போன்ற ஒரு வரவு செலவு திட்டத்தை நாம் கண்டதில்லை எனக் கூறுகிறார்! இது நிச்சயமாக எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்பது அவரது  அபிப்பிராயம்.

பொதுவாக எல்லா கட்சிகளுமே இந்த வரவு செலவு திட்டத்தை எதிர்க்கின்றன. எல்லாக் கட்சிகளுமே இந்த வரவு செலவு திட்டத்தில் ஒரு சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்கின்றன. ஏன், நமது முன்னாள் பிரதமர் நஜிப் கூட "மாற்றங்கள் தேவை" என்கிறார்.

வரவு செலவு திட்டம் என்பது எல்லா மலேசியர்களுக்கும்  பொதுவானது என்கிற ஒர் அடிப்படை அறிவு கூட இல்லாமல் தயாரிக்கப் பட்டிருப்பதாகவே பலர் கருதுகின்றனர்.

பாரிசான் கட்சி ஆட்சியில் கூட இப்படி ஒரு வரவு  செலவு திட்டம் தயாரிக்கப்பட்டதில்லை என்று சொல்லப்படுகிறது!

ஆமை புகுந்த வீடும் பாஸ் கட்சி இணைந்த அரசாங்கமும் உருப்படவே உருப்படாது என்பதை இப்போது நாம் கண்கூடாகவே பார்க்கிறோம்.

இப்போது பந்து பிரதமர் முகைதீன் கையில்! அவருக்கு இரண்டு தீர்வுகள் உள்ளன. ஒன்று: எதிர்க்கட்சிகள் என்ன சொல்ல வருகின்றன என்பதைக் கேட்க வேண்டும். அந்த மாற்றங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். இரண்டு: வரவு செலவு திட்டம் விவாதத்திற்கு வரும் முன்னேரே அரசாங்கத்தைக்  கலைத்து விட வேண்டும்!

அரசாங்கம் கவிழும் அபாயத்தை அவர் விரும்ப மாட்டார் என நம்பலாம்!


Thursday 19 November 2020

பெருமை சேர்க்கும் தமிழ்ப்பெண்கள் (2)

 சென்ற கட்டுரையில் "பெருமை சேர்க்கும் தமிழ்ப்பெண்களில்"  நமது ஆண்களால் கூட எட்ட முடியாத ஒரு பதவியில், உலகிலேயே உயரிய ஒரு பதவியில், இருக்கும் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ்  அவர்களைப் பற்றி எழுதியிருந்தேன். 

இதோ, இன்று, டாக்டர் செலின் கவுண்டர்  என்கிற ஒரு தமிழ்ப் பெண். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ஜோ பைடன் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட - கொரோனா தொற்று நோய்க்கு எதிரான ஆலோசனைக் குழுவில்  ஒருவராக அறிவித்திருக்கிறார்.  அது தான் அமெரிக்காவில் அவரது முதல் அறிவிப்பு.

  


 
 இங்கே ஒரு விசேஷம் ஏன்னவென்றால்  "வாஷிங்டனில் திருமணம்" என்னும் புத்தகம் அந்தக் காலத்தில் எப்படி பரபரப்பாக பார்க்கப்பட்டதோ அதே போல இப்போது  "அமரிக்காவில்  கவுண்டர்"  என்று இந்த தமிழ்ப் பெண்ணைப் பற்றி   பரப்பரப்பாக பேசப்படுகிறது.   

நமக்கும் அது பெருமை தான். எந்த சமூகமாக இருந்தால் என்ன அவர் தமிழ்ப்பெண் என்பதில் சந்தேகமில்லை.

டாக்டர் செலின்  கவுண்டர் அமெரிக்காவில் பிறந்தவர். அமெரிக்காவில் படித்தவர். மருத்துவத் துறையிலும்  கல்வித் துறையிலும்  சாதனைகள் பல புரிந்தவர். இப்போது அவருக்கு வயது 43.

அவரது தந்தையின் பெயர் ராஜ் நடராஜன் கவுண்டர். மேல் நாடுகளில் தங்களது பெயர்களில் தந்தையின் கடைசிப் பெயரை இணைத்துக் கொள்ளுவது வழக்கமான ஒன்று.  அப்படித்தான் செலின் பெயரோடு கவுண்டர் என்பதும் ஒட்டிக் கொண்டது. தந்தையார் ஓரு பொறியியலாளர்.

இனி அவர் டாக்டர் செலின் கவுண்டர் என்று தான் அடையாளப்படுத்தப்படுவார்! அது அவர்களது நடைமுறை.  செலினின் தாயார் பெயர் நோர்மாண்டி. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்.

அவரது தந்தையார் நடராஜ கவுண்டர் தமிழ் நாடு, ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி,  பெரும்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். டாக்டர் செலின் தனது பெரும்பாளையம் கிராமத்திற்கு நான்கு முறை சென்றிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அங்கு அவர் தனது உறவுகளைச் சந்தித்திருக்கிறார். பேசி மகிழ்ந்திருக்கிறார்!

இப்போது பெரும்பாளையம் கிராமமே ஆனந்தத்தில்  மூழ்கியிருக்கிறது.  செலின் கவுண்டரின் புதிய நியமனத்திற்காக இனிப்புக்கள் வழங்கிக் கொண்டாடி மகிழ்கின்றது!

பெரும்பாளையம் உண்மையில் பெரிய பாளையம் தான்.  இன்னும் எத்தனை எத்தனை உயரிய தமிழர்களை  உருவாக்குமோ என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

ஒரு தமிழ் மகளை சான்றோன் எனக் கேட்டது முதல்  தமிழ் உலகமே கொண்டாடுகிறது! 

மன்னார்குடி கலகலக்கிறது! பெரும்பாளையம் சலசலக்கிறது!
               

பெருமை சேர்க்கும் தமிழ்ப்பெண்கள் (1)

 சமீப காலங்களில் தமிழ்ப் பெண்களில் இருவர் பெயர்கள் உலகளவில் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன. அதிலே ஒருவர் கமலா ஹாரிஸ் இன்னொருவர் செலின் கவுண்டர்.

அதிலே நமக்குப் பெருமை தான்.

                


  இவர் தான் கமலா ஹாரிஸ். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் துணை ஜனாதிபதியாக தெர்ந்தெடுக்கப்பட்டவர். 

தமிழ் நாடு,  மன்னார்குடி, துளசேந்திரபுரம் கிராமத்தைப் பூர்விகமாகக் கொண்டவர்.  தாயார் பெயர் சியாமளா கோபாலன், ஆராய்ச்சித் துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.தந்தையாரின் பெயர் டொனால்ட் ஹாரிஸ்,ஜமாய்க்கா நாட்டைச் சேர்ந்தவர்.  பேராசிரியராகப் பணி புரிந்தவர்.   

கமலா தமிழ் நாடு, சென்னைக்குப் பல முறை வருகை தந்திருக்கிறார். அதே போல அவரது தந்தையின் குடும்பத்தினரையும் ஜமாய்க்காவுக்குச் சென்று பார்த்து  வந்திருக்கிறார். அவரின்  பெற்றோர்கள் அவர் ஏழு வயதாக இருக்கும் போது பிரிந்து விட்டனர்.

அவர் தன்னை கறுப்பர் என்பதாகவே அடையாளப்படுத்துகிறார். காரணம் அவர் வாழ்ந்த பகுதியில்  கறுப்பர்கள் அதிகமாக இருந்தனர்.  கறுப்பர்கள் படித்த பள்ளிகளில் படித்திருக்கிறார். அவருடைய தொடர்புகள் கறுப்பர்களிடையே அதிகமாக இருந்தன; இருக்கின்றன. அவர் தந்தையும் ஒரு கறுப்பர். நமக்கு  அதில் ஒன்றும் வருத்தமில்லை. நாமும் கறுப்பர்கள் தானே!

இன்று உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த ஒரு நாட்டில் மிகவும் சக்தி வாய்ந்த பதவியில் இருக்கும் ஒரே தமிழ்ப்பெண் என்றால் அது கமலா ஹாரிஸ் தான்.  அந்தப் பதவிக்கு மிஞ்சி எதுவுமில்லை! நம் ஆண்கள் கூட அந்த சிகரத்தைத் தொட முடியுமா? தெரியவில்லை!

மன்னார்குடி மட்டுமா கலகலக்கிறது துளேசேந்திரபுரமும் தான் பளபளக்கிறது!

Wednesday 18 November 2020

இவர்களையும் அங்கீகரிக்க வேண்டும்

கொரோனா தொற்று நோய் வந்த பிறகு பல மாற்றங்கள் பல வகைகளில் ஏற்பட்டிருக்கின்றன.

பொதுவாக இந்த காலத்தில் நாம் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றைய  மருத்துவத் தொடர்பாளர்கள் அனைவரையும் மிகவும் மதிக்கிறோம். அந்த மரியாதை என்பது இயல்பானதே!

ஆனால் ஒன்றை நாம் மறந்து விட்டோம்.  முன்களப் பணியாளர்கள் என்கிற போது துப்பரவு ஊழியர்களை  நாம் மறந்து விடுகிறோம். 

அதற்கு ஒரே ஒரு காரணம் தான்.  அவர்கள் எந்த மருத்துவக் கல்லூரிகளிலும் மருத்துவர் பட்டம் பெற்றிருக்கவில்லை. அல்லது சாதாரண செவிலியர்களாகக் கூட வர முடியவில்லை. அவர்களை ஏதோ  படிக்காத ஒரு கூட்டம், பிழைக்கத் தெரியாத ஒரு கூட்டம் என்பதாகத்தான் நமது கண்ணுக்குப் படுகின்றனர். 

ஆனால் அவர்கள் செய்கின்ற வேலையைப் பொறுத்தவரை அது ஒரு முக்கியப் பணி என்பதை யாருமே நினைப்பதில்லை. அது தான் நமது வருத்தம்.

துப்பரவு ஊழியர்கள்  இல்லையென்றால் இந்த தொற்று நோயிலிருந்து எந்தக் காலத்திலும் நமக்கு மீட்பு இல்லை. 

ஆமாம் எத்தனை டாக்டர்கள் வரட்டும். எத்தனை மருத்துவ நிபுணர்கள் வரட்டும்.  சுத்தமான சூழல் இல்லையென்றா அனைத்தும் பாழ். அதுவும் இப்போது உள்ள சூழலில் காலை, மாலை மட்டும் வேலை என்கிற நிலை இல்லை.  தொடர்ந்தாற் போல சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.  சுத்தமான சூழல் தான் நோயை ஒழிக்க முடியும்.

இப்படி முக்கியம் வாய்ந்த வேலையில் இருப்பவர்களுக்கு அதற்கான  அங்கீகாரம் இருக்க வேண்டும் என்பதில் வெவ்வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. 

அதற்காகத்தான் அவர்களது தொழிற்சங்கம் அவர்களுக்குச் சரியான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் "எங்களையும் முன்களப் பணியாளர்களாக சேர்த்துக் கொள்ளுங்கள்"  என்று கேட்டுக் கொண்டிருக்கிறது. 

அவர்கள் பட்டம் பெற்றவர்களாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்களின் துப்பரவுப்  பணி என்பது குறிப்பாக மருத்துவ மனைகளில் முதன்மையான பணி எனலாம். அவர்களது பணி இல்லையென்றால் மருத்துவமனைகள் நாறிப் போகும்!

மற்றவர்களின் பணி அவர்களுக்குப் பின் தான் வருகின்றன. மருத்துவமனைகள் மட்டும் அல்ல, எங்கும் எதிலும், சுத்தமே முதன்மையான இடம் பெறுகிறது. 

மற்ற பணியாளர்கள் எந்த அளவுக்கு அபாயத்தை எதிர்நோக்குகிறார்களோ அதே அபாயத்தைத் தான் துப்பரவு ஊழியர்களும் எதிர்நோக்குகின்றனர்.

அபாயம் என்பது இங்கு பணி புரியும் அனைவருக்குமே உண்டு. மேல், கீழ் என்பதாக ஒன்றுமில்லை.

அதனால் துப்புரவு ஊழியர்களின் கோரிக்கை என்பதில் ஒரு நியாயமுண்டு என்பதை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அங்கீகாரம் வேண்டும்! அது சரியே!

நகைகள் அணிவது தவறா?

 நகைகள் அணிவது தவறா? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை!

அதிலும் இந்தியப் பெண்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்.  அதனால் தான் நமது நாட்டில் பெரும்பாலான நகைக்கடைகள் இந்தியர்களுக்குச் சொந்தமானதாகவே இருக்கிறது. சீனர்களின் கடைகள் இருந்தாலும்  நம்பகத்தன்மையில் அவை ஏற்றுக் கொள்ளும் படியாக இல்லை.  அதனால் தான் அவை நீண்ட நாள்கள் நிலைப்பதில்லை.

நாம் எவ்வளவு வேண்டுமானாலும் நகைகளை வாங்கிக் குவிக்கலாம். ஆனால்  வாங்கும் பணம் நம்முடையதாக இருக்க வேண்டும்.  நமது பணம், நமது உழைப்பு - அது தான் நமக்குப் பெருமை தரும். ஊரான் வீட்டுப் பணத்தில் வாங்குவது இழிவைத் தரும்.

வழக்கம் போல அரசியல்வாதிகள் இது பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை!   அவர்கள் பெருமைப்படுகிறார்களே அது எப்படி முடிகிறது என்பது தான் நமக்குப் புரிவதில்லை!

கொள்ளையடித்துப் பொருளைச் சேர்ப்பது என்பதே கேவலம்.  அதிலும் இன்னும் விதவிதமாக நகைகளைச் சேர்ப்பது என்பது அதைவிடக்   கேவலம்! இன்னும் அவைகளைக் கழுத்தில் போட்டுக் கொண்டு ஊரே சிரிக்க போட்டுக் கொண்டு வருகிறார்களே எல்லாவற்றையும் விட இது கேவலம்! கேவலம்! கேவலம்!

அவர்களைப் பார்த்து நாடே காறித் துப்புகிறதை என்பது மறந்து ஊர்வலம் வருகிறார்களே - இதை விட வேறு என்ன கேவலம்?

திருடிய பணத்தில் உங்களுடைய பெருமைகளைக் காட்டாதீர்கள் என்பது தான் நாம் அவர்களுக்குச் சொல்லும் பாடம்.

உழைத்துச் சம்பாதித்து வாங்கிய பொருள்களையே அபகரித்து விட சுற்றித்  திரியும் ஒரு கூட்டம் உண்டு. நீங்களோ அரசியலைப் பயன்படுத்தி உங்களை யாரும் அணுக முடியாத எட்டாத தூரத்தில்  இருக்கலாம். ஆனால் மறந்து விடாதீர்கள். உங்களையும் அபகரிக்க சட்டம் உண்டு, நீதிமன்றம் உண்டு. 

சட்டம் இப்போது உங்களுக்குச் சாதகமாக இருக்கலாம்.  ஆனால் எப்போதும் சாதகமாக இருக்க முடியாது.   நேரங்காலம் கூடி வரும் போது உங்களைப் பார்த்து ஊரே கும்மியடிக்கும் என்பதை எப்போதும் மனதில் வைத்திருங்கள்.

அணிகலன்கள் அழகூட்டும்.  தங்கம், வைரம், வைடூரியம்  அனைத்தும் அழகூட்டும் அணிகலன்கள் தான்.  சந்தேகமில்லை!

ஆனால் வாங்கும் அணிகலன்கள் நமது வீட்டுப் பணமாக இருக்க வேண்டும். நமது உழைப்பாக இருக்க வேண்டும்.  அதில் தான் நாம் மகிழ்ச்சி காண முடியும்.

திருட்டுப் பணத்தில் மகிழ்ச்சி காண முடியாது. ஊர் பார்த்து சிரிக்குமே தவிர யாரும் மெச்சிக் கொள்ளப் போவதில்லை.

நகைகள் நளினத்தைத் தரவேண்டுமே தவிர மற்றவர்களின் நகைப்புக்கு உள்ளாகக் கூடாது!

நகைகள் அணிவது தவறில்லை. அது நமது வீட்டு நகைகளாக இருக்க வேண்டும். கொள்ளையடித்து நகைகளைக் குவிப்பது ஊர் சிரிக்கும்! ஊரார் சிரிப்பர்!

எலும்புக் கூடுகளுக்கு அணிகலன்கள் அணிவித்தால் அது வெறுப்பைத்தான் அதிகரிக்கும்!

Monday 16 November 2020

பிரச்சனைகளைத் தகர்த்தெறியுங்கள்!

 இப்போது உள்ள கொரோனா தொற்றின் காலக் கட்டத்தில் பிரச்சனைகளுக்குப் பஞ்சமில்லை. நாம் வேண்டாமென்றாலும் அவைகள் நம்மைத் தேடித்தான் வருகின்றன!

ஆனால் நம்மால் என்ன செய்ய முடியும்? மூலையில் முடங்கி விட முடியாது! எதிர்த்து நிற்பது தவிர வேறு சாத்தியங்கள் இல்லை!

எல்லாக்  காலக் கட்டங்களிலும் பிரச்சனைகள் வரத்தான் செய்கின்றன. அப்போதும் கூட நாம் ஓடி ஒளியவில்லை! இப்போது மட்டும் என்ன?

இந்த உலகம் பெரிது. யாரோ ஓரிருவர் கையில் அடங்கிப் போய் விடவில்லை. வாழ்வதற்கு இன்னும் எத்தனையோ வழிகள் உள்ளன.

ஒரு கதவு அடைக்கப்பட்டால் இறைவன் ஒன்பது கதவுகளைத் திறந்து வைப்பார்  என்பதை நம்ப வேண்டும்.

ஏற்றத்தாழ்வு உள்ள உலகில் தான் நாம் வாழ்கிறோம்.  ஏற்றத்தாழ்வுகளுக்கு  இடையே தான் நமது வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆனால் இப்போது இந்த நேரத்தில் ஏற்றத்தாழ்வுகள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கலாம்.  எதுவும் நிரந்தரமல்ல.

ஒரு விஷயம் நம்மைக் கவர்கிறது. ஒரு காலக்கட்டத்தில் மிகவும் அப்பிராணிகள் என்று நினைத்த பலர் இன்று துணிச்சலோடு தங்களது குடும்பத்தைக் கரைசேர்க்க களத்தில் இறங்கி விட்டனர்! அது ஒரு பெரிய மாற்றம். தேவையான மாற்றம். 

இந்த மாற்றத்தைத் தான் நாம் விரும்புகிறோம். நாம் முடங்கிக் கிடந்து சாக வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. யாரோ ஒருவரை நம்பி சார்ந்து வாழ வேண்டிய அவசியமில்லை.

வாழ்வதற்கு வழியேயில்லை என்கிற நிலைமை ஒன்றும் இல்லை. வாழ நினைத்தால் வாழலாம் என்கிற ஒரு பாடல் உண்டு. அது நமது கையில் உண்டு. அவ்வளவு தான்.

நாம் துரித உணவகங்களுக்குச் செல்கிறோம். துரித உணவுகளைச் சாப்பிடுகிறோம். எல்லாக் காலங்களிலும் நாம்  இப்படிச் சாப்பிடுகிறவர்களாகவே இருக்கத்தான் வேண்டுமா?

ஒரு சில பாதிக்கப்பட்டவர்கள்  தங்கள் எண்ணங்களை மாற்றிக் கொள்ளுகின்றனர்.  தங்களுக்குத் தெரிந்த சமையற்கலைகளை வைத்து அதனை தொழிலாகவே மாற்றிக் கொள்வதைச் சமீப காலங்களில் நாம் பார்க்கிறோம். இது போன்ற மாற்றங்கள் தான் நமக்குத் தேவை.

நம்மைப் பார்த்து குற்றம் சொல்லுவார்கள், குறை சொல்லுவார்கள் என்பதை நாம் பார்த்துக் கொண்டிருந்தால் எதுவும் நடக்காது.  குறை சொல்லுபவர்கள் உங்களுக்கு உதவத்  தயார் என்றால் குற்றம் சொல்லிவிட்டுப் போகட்டும். ஆனால் அதெல்லாம் நடக்கப் போவதில்லை!

பிரச்சனைகளைப் பார்த்துப் பயப்பட வேண்டாம். ஓடி ஒளிய வேண்டாம்! அவைகளை முறியடிக்க வேண்டும், தகர்த்தெறிய வேண்டும்! அதுவே வெற்றீ!

Sunday 15 November 2020

யாகாவாரினும் நாகாக்க!

நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதனாலேயே எதையும் பேசலாம் என்கிற எண்ணம் இப்போது வளர்ந்து கொண்டு வருகிறது! 

சமீப  காலங்களில்  இதை வளர்த்து விட்டவர் புங் மோக்தார்,  சாபா கினாபாத்தாங் நாடாளுமன்ற உறுப்பினர். அவருக்குத் துணை போனவரகள் பாரிசான் கட்சியினர்.

அதனால் இப்போது நாவடக்கம் இல்லாமல் பேசுகின்ற ஒரு நிலைமை ஏற்பட்டுவிட்டது!

பிந்துலு நாடாளுமன்ற உறுப்பினர் தியோங் கிங் சிங் சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர், டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லாவைப் பற்றி நாடாளுமன்றத்தில் சிறுமைப்படுத்திப் பேசியது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

கொரோனா தொற்றுலிருந்து நாட்டை மீட்க இன்று டாக்டர்கள் தான் முன் நிற்கின்றனர். அவர்களோடு சேர்ந்து சுகாதாராப் பணியாளர்களும் பெரும் அளவில் பங்கேற்கின்றனர். ஏன் சுகாதாராப் பணியாளார்களும் சரி, டாக்டர்களும் சரி பலர் தங்களது உயிரைத் தியாகம் செய்திருக்கின்றனர். வெளி நாடுகளிலும் சரி உள்நாட்டிலும் சரி இது தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றது.

இந்த நேரத்தில் அவர்கள் உயிருக்குப் பயப்புடுகிறார்கள் என்று சொல்லுவதை அதிகப்பிரசிங்கத்தனம் என்று தான் சொல்ல வேண்டியுள்ளது.

இன்று நாட்டில் இந்த அளவுக்கு கொரோனா தொற்று பரவுவதற்கு யார் காரணமாக இருந்திருக்கிறார்கள்?  கட்டுப்பாட்டில் இருந்த  தொற்றை எப்படி இந்த அளவுக்குப் பரப்ப முடிந்தது? உண்மையைச் சொன்னால் நமக்கு அரசியல்வாதிகள் மேல் தான் அதிகக் கோபமுண்டு. இவர்கள் தங்களுடைய பதவிகளைத்  தற்காத்துக் கொள்ள இந்த வியாதியை இன்னும் கூட பரப்பிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆக நமக்குத் தெரிந்தது ஒன்று தான். அடுத்த தேர்தல் வரை இந்த வியாதி நம்மைத் தொற்றிக் கொண்டு தான் இருக்கும்!

தங்கள் பதவியைத் தற்காத்துக் கொள்ள நோயைப் பரப்பும் அரசியல்வாதிகள் ஒரு பக்கம்.  நோயை விரட்டியடிக்க படாதபாடுபடும்  டாக்டர்கள் ஒரு பக்கம்.

இந்த நேரத்தில் இப்படி ஒரு கருத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறுகிறார் என்றால் நமக்குக் கோபம் வரத்தான் செய்யும்.

தலைமை இயக்குனரைக் குறை கூறுவது என்பது அனைத்துச் சுகாதாரப் பணியாளர்களையும் குறை கூறுவதாகும்.

யாகாவாரினும் நாகாக்க!

ஊழியர் சேமநிதியிலிருந்து.............!

 இன்று நாட்டில் வேலையிழந்து நிற்பவர் பலர்.

வேலையிழந்தவர்களுக்கு ஒன்று அவர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும். அல்லது பொருளாதார உதவி கிடைக்க வேண்டும்.

அரசாங்கத்தால், வேலையிழந்த அனைத்துக்  குடும்பங்களுக்கும் பெரிய அளவில் உதவ வாய்ப்பில்லை.

அதனால் ஊழியர் சேமநிதியிலிருந்து அவர்களுக்கு உதவுவது எப்படி  என்று இப்போது அரசாங்கம் ஆராய்ந்து கொண்டிருக்கிறது. அவர்களின் சேமிப்பு நிதியிலிருந்து மாதாமாதம் 500 வெள்ளி கொடுக்க முடியுமா என்று இப்போது ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். அந்த திட்டம் நடைமுறைக்கு வந்தாலும் அதுவும் சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு ஓரளவு உதவியாக இருக்கும் என்பதும் உண்மை.

ஆனால் ஊழியர்களில் பலர் - அதாவது இப்போது வேலை இழந்த பலர் -  வங்கியில் கடன் வாங்கி வீடுகளை வாங்கியிருப்பர். ஒரு சிலருக்கு அவர்களின்  மாதாந்திர தவணைகள் முடிய இன்னும் ஒரு சில ஆண்டுகள் இருக்கலாம். அல்லது பத்து ஆண்டுகள் கூட இருக்கலாம். 

சொந்த வீடு என்பது ஒவ்வொருவருக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்று. தலைக்கு மேல் ஒரு கூரை இருந்தால் அவன் கொடுத்து வைத்தவன் என்பார்கள்.  ஒரு வீடு அவனுக்குத் தெம்பைத் தரும். பிள்ளைக் குட்டிகளோடு அவன் நடுத்தெருவுக்கு வர வேண்டிய தேவை இல்லை.

இப்படி ஒரு சில ஆண்டுகள் அல்லது பத்து ஆண்டுகள் இன்னும் மாதாந்திர தவணைகள் கட்ட வேண்டி இருந்தால்  அவர்களுடைய கடன்களை முற்றிலுமாக அடைக்க அவர்களுடைய சேமநிதியிலிருந்து பணம் கொடுத்து உதவ சேமநிதி வாரியம் முன் வர வேண்டும். அதாவது அவர்களுடைய சேமநிதியில் போதுமான பணம் இருக்குமானால் இந்த உதவியை அவர்கள் செய்யலாம்.

இன்றைய சூழலில் சேமநிதியிலிருந்து பணம் எடுக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் வீடு வாங்குவதையும் சேர்த்துக் கொள்ளலாம்.

வீடு ஏன் இவ்வளவு முக்கியம்?  ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு மனிதனுக்கு வேலை இல்லை. அதுவே அவனுக்கு மிகப்பெரிய பலவீனம். இந்த நிலையில் அவன் வீட்டுக்காக மாதாந்திர தவணைக் கட்ட வேண்டும். அது அவனை பலவேறு சிக்கல்களில் கொண்டு போய்ச் சேர்க்கும்.  வீடு என்று ஒன்று இருந்துவிட்டால் அதுவே அவனுக்கு மிகப் பெரிய பலம்.

இந்த நேரத்தில் நாம் கேட்டுக் கொள்ளுவதெல்லாம்: ஊழியர் சேமநிதி வாரியம் தனது சந்தாதாரார்களுக்கு இது  போன்ற சொந்த வீடு வாங்கும் திட்டத்துக்கு உதவ முன் வர வேண்டும் என்பது தான்.

நல்லது நடக்கும் என எதிர்பார்ப்போம்!

Saturday 14 November 2020

குடியைத் தவிருங்கள்!

 எல்லாருக்கும் தான் பெருநாள்கள் வருகின்றன.

பெருநாள்கள் மகிழ்ச்சியைக் கொடுக்கின்றன. குடும்பங்கள் ஒன்று சேர்கின்றன. எல்லாரும் சேர்ந்து கொண்டாடுகிறோம். மகிழ்ச்சி, சந்தோஷம்  கொடுப்பது பெருநாள் காலங்கள் தான்.

ஆனால் இந்த ஆண்டு அதுவும் முடியவில்லை.  வீட்டோடு கொண்டாட வேண்டிய சூழல்.  கார்களில் இருவருக்கு மேல் போகக் கூடாது என்பது கூட கடுமையாகத்தான் இருக்கிறது. அதனால் வீட்டிலிருந்து கொண்டே என்ன முடியுமோ அதன் படியே நடந்து கொள்வது தான் அனைவருக்கும் நல்லது.

இந்த ஆண்டு ஓரு வித்தியாசமான தீபாவளி.  எங்கும் பயணம் செய்ய முடியாத - ஒரு வழியும் இல்லாத - வீட்டிலேயே கொண்டாட வேண்டிய தீபாவளி.

அதுவும் நல்லது தான். நண்பர்கள் இல்லாத தீபாவளி.  உறவுகள் இல்லாத தீபாவளி.  இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ளலாம். சிக்கனமான தீபாவளி.

ஆமாம் இப்போது நாம் பல பிரச்சனைகளை எதிர்நோக்குகிறோம். ஒவ்வொரு குடும்பத்திலும் தலைவனோ தலைவியோ யாராவது ஒருவர் அல்லது இருவருமாகக் கூட இருக்கலாம் - வேலை  இழந்த நிலையில் இருக்கின்றனர்.  அதனால் இது தான் சரியான நேரம். எப்படி சிக்கனமாகத் தீபாவளியைக் கொண்டாடலாம் என்பதப் புரிந்து கொள்ள சரியான நேரம்.

ஆனால் நம்முடைய மிகப் பெரிய பலவீனம் எது என்றால் நம் கண்முன்னே நிற்பது குடி ஒன்று தான்.

இந்தக் குடி ஒன்று தான் மற்ற இனத்தவரிடமிருந்து நம்மைப் பிரித்துக் காட்டுகிறது.  குடித்துவிட்டு சாலைகளில், கால்வாயில்களில் விழுந்து கிடப்பவர்கள் நம் இனத்தவராகத் தான் இருக்க வேண்டும்.

இந்தக் குடி நம் குடும்பங்களில் இல்லையென்றால் தலை நிமிர்ந்து நடப்பவர்கள் நாமாகத்தான் இருக்க முடியும். நாம் எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்ல. கல்வியில் சாதனையாளர்கள் நாம். பொருளாதாரத்தில் மற்றவர்களை விட எந்த அளவிலும் குறைந்தவர்கள் அல்ல. ஆனால் நம்மை மிகத் தாழ்ந்த நிலையில் காட்டுவது இந்தக் குடிப் பழக்கம் தான்!

இந்த தீபாவளி  நந்நாளில் நம்மைப் பற்றி சிந்தித்துப் பார்ப்போம். நமது குடும்பங்களைப் பற்றி சிந்திப்போம். பிள்ளைகளைப் பற்றி சிந்திப்போம். 

இந்தக் கொரோனா தொற்று என்பது மறைமுகமாக நமக்கு ஒரு பாடத்தைக் கற்பிக்கிறது. சிக்கனத்தைக் கற்பிக்கிறது. குடும்ப ஒற்றுமையைக் கற்பிக்கிறது. வருங்காலத்தில் சிறப்பான வாழ்க்கை வாழ கற்பிக்கிறது.

ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக குடியைத் தவிருங்கள். அதவே சிறந்த பாடம்!

Monday 9 November 2020

சட்டவிரோத குடியேறியா?

 டிவி 3 என்பது நாட்டின் பிரபலமான ஒரு தொலைக்காட்சி நிறுவனம்.

அந்நிறுவனத்தின் ஒரு செய்தி வாசிப்பாளர், செய்தி வாசிப்பின் போது,  அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்ஸை "சட்ட விரோதக் குடியேறியின் மகள்!" என்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

இப்போது நமக்கு ஒரு கேள்வி உண்டு.  செய்தி வாசிப்பாளர் தன் விருப்பதற்கு ஏற்ப செய்திகளை வாசிக்க முடியாது. அவருக்கு அந்த அதிகாரம் இல்லை.  செய்தி ஆசிரியர் என்ன செய்தியைக் கொடுக்கின்றாரோ அதை மட்டும் தான் அவர் வாசிக்க வேண்டும்.

செய்தி ஆசிரியர் தவறான செய்திகளைக் கொடுத்தால்,  தவறு செய்தி வாசிப்பாளர் மீது இல்லை. அவர் கொடுக்கப்பட்ட தவறான செய்திகளுக்குப் பொறுப்பானவர் இல்லை.  ஆனால் இந்த 1.30 மணி செய்தி வாசித்தவர் தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டு டுவிட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார்! அந்த தொலைக்காட்சி நிலையமும்  தனது தவறுக்கு மன்னிப்பும் கேட்டுள்ளது. 

ஆனால் இங்கு செய்தி ஆசிரியரைப் பற்றி ஒரு தகவலும் இல்லை. செய்தி ஆசிரியரும் செய்திகளை தனது விருப்பம் போல் எழுத முடியாது.  வெளிநாட்டுச் செய்திகள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் இருக்கும். அவைகள் மொழி பெயர்க்கப்பட வேண்டும்.

இப்போது நாம் கேட்க நினைப்பதெல்லாம் ஏதோ ஒரு செய்தியில்,   செய்தி ஆசிரியருக்கு இந்த "கள்ளக் குடியேறியின் மகள்" என்கிற செய்தி குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அப்படி ஒரு செய்தியை அவராகவே திணித்திருக்க வழியில்லை. அந்த செய்தியின் மூலம் எங்கிருந்து வந்தது என்பது தான் நமது கேள்வி.

நமது நாடு கள்ளக்குடியேறிகளுக்குப் பெயர் பெற்ற ஒரு நாடு. இன்று பெரிய பதவிகளில் இருப்பவர்கள் எல்லாம் பெரும்பாலும் கள்ளக்குடியேறிகளின் பேரப்பிள்ளைகள், பிள்ளைகள் தாம்.  இங்கு குடியேறுபவர்களுக்குத் தகுதி என்று ஒன்றும் இல்லை! தேவையும் இல்லை! இலஞ்சம் ஒன்று மட்டுமே அதனைத் தீர்மானிக்கின்றது!

ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளுக்குக் குடியேறுவதற்குப் பல கட்டுப்பாடுகள் உண்டு.  குறிப்பாக கல்வித் தகுதி மட்டுமே அதனைத் தீர்மானிக்கின்றது.

அப்படி ஒரு சூழலில் தான் கமலா ஹாரிஸ்ஸின் தாயார் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றவர். அடுத்த நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் பத்திரிக்கைகளில் விலாவாரியாக வெளியாகைவிட்டன. புதிதாகச் சொல்ல ஒன்றுமில்லை.

சட்டவிரோதக் குடியேறி, கள்ளக்குடியேறி போன்ற வார்த்தைகளை அதிகம் பயன்படுத்துவது நமது நாடு. அமெரிக்கா போன்ற நாடுகளை நம்மோடு ஒப்பிடுவது சரியல்ல.

ஆனாலும் இப்படி ஒரு தவறுக்கு மூலம் என்ன என்பது தான் இன்னும் மனதை அரித்துக் கொண்டிருக்கிறது!

Sunday 8 November 2020

இது பழமையா புதுமையா?

 இன்று தொலைக்காட்சியில் பார்த்த ஒரு பெயர் எனது கவனத்தை மிகவும் ஈர்த்தது!

இப்படியெல்லாம் இன்னும் பெயர்கள் வைக்கப்படுகின்றனவா என்று ஓர் அதிர்ச்சி தான் ஏற்பட்டது! ஆனாலும் தமிழர்கள் இன்னும் பழமையைப் போற்றுகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. அது பெருமையே!

நான் இதுவரை கேள்விப்படாத அந்த பெயர் தான் "சோழச்சி",  தமிழ் நாடு, காரைக்குடி பக்கம் என்று தெரிந்து கொண்டேன்.  அதோடு இன்னொன்றும் எனது ஞாபகத்திற்கு வந்தது.    சோழச்சி என்று ஒரு பெயர் இருந்தால் சேரச்சி (சேரன்),  பாண்டிச்சி (பாண்டியன்) என்கிற பெயர்களும் இருக்கக் கூடும். தெரியவில்லை! இப்படியெல்லாம் பெயர்கள் வைக்கப்படுகிறது என்றால் அந்த மக்களிடையே கலாச்சாரம், பண்பாடு என்பது இரத்தத்தில் ஊறிப்போன விஷயம் என்பதை  நாம் அறிந்து கொள்ளலாம்.

நமது நாட்டில் இப்படியெல்லாம், தங்களைத் தமிழர்கள் என்று  அடையாளப்படுத்திக் கொள்வது  சாத்தியமா என்பது தெரியவில்லை. நம்மிடையே கலாச்சாரம், பண்பாடு என்பதை மறந்து போனோமோ என்பது இன்னும் புதிராகத் தான் இருக்கிறது!

தமிழர்களில் கிறிஸ்துவர்கள் கணிசமான அளவில் இருக்கின்றனர். அவர்களில் பலர் வெள்ளைக்கார  அடையாளத்தோடு தான் இருக்கின்றனர். அதில் அவர்கள் பெருமைப்படுகின்றனர். தனது அடையாளாத்தை தொலைப்பதில் என்ன பெருமை!

ஒரு காலக்கட்டத்தில் பிரபலமான ஆங்கிலப் பத்திரிக்கையில் பணி புரிந்தவர் பெலிக்ஸ் அபிஷேகநாதன் என்கிற பெயருடை ஒரு தமிழர்.  இப்போது அவரது வாரிசுகள் பல நாடுகளில் வாழ்கின்றனர். தமிழ் அறியாத அந்த வாரிசுகள் - தங்களது பெயரில் மட்டும் - அபிஷேகநாதன் என்கிற அடையாளத்தோடு வாழ்கின்றனர். அவர்களது பூர்விகம் தமிழ் என்று தெரிகிறது. தமிழ் தெரிந்தால் நல்லது தான். அது ஒரு கலப்பு இனமாக மாறிவிட்டது!

எந்த சமயத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் தங்களது  தமிழர் அடையாளத்தை இழக்கக் கூடாது என்பது தான் சரி.  முஸ்லிம்களால் அப்படி முடியுமா? முடியும். சீன முஸ்லிம்கள் தங்களது சீன அடையாளத்தைக் கொண்டிருக்கிறார்களே? எல்லாவற்றுக்கும் ஒரு வழி உண்டு.  அனைத்தும் அடைப்பட்டுவிட்டதாக நினைப்பதற்கு ஒன்றுமில்லை. 

அந்த "சோழச்சி" என்பது நமது வலிமை வாய்ந்த ஓர் அடையாளம். அதுவும் காரைக்குடியில் தங்களது முன்னோர்களின்  பெயர்கள் மறக்கப்படுவதில்லை. அது வாழயைடி வாழையாக தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.

புதுமை என்று சொல்லி நாம் தான் நமது பழமைகளை மறந்து கொண்டிருக்கிறோம். ஆனால் பழமைகள் இன்னும் போற்றப்படுகின்றன என்பதை நம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்!

இதுவும் புதுமையே!


Saturday 7 November 2020

எது வலிமையான ஆயுதம்?

 இன்றைய நிலைமையில் எது வலிமையான ஆயுதம் என்று சொல்லுவோம்?

அமெரிக்கா வலிமையான நாடு.  உலகமே  அவர்கள் சொல்லுக்குத்தான் அடி பணிகிறது.

இன்று நடந்த அமெரிக்கத் தேர்தலில் ஜோ பைடன் 46-வது அமெரிக்க அதிபராக வெற்றி பெற்றிருக்கிறார். அதில் பெருமைப்பட ஒன்றுமில்லை. 

ஆனால் துணையதிபராக யார் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதில்தான் நாம் பெருமைப்படுகிறோம். ஆமாம் அவர் தான் கமலா ஹாரிஸ். அவர் துணையதிபர் என்றாலும் வருங்காலங்களில் அமெரிக்க அதிபராகக் கூட வரலாம். அதற்கான சாத்தியம் உண்டு. 

எதற்காக நாம் பெருமைப்படுகிறோம்?  அவர் தமிழ் நாட்டைப் பூர்விகமாகக் கொண்ட  ஒரு பெண் என்பதாகவா? இல்லை!

கல்வி என்பது நம்மை எந்த அளவுக்கு உயர்த்தும் என்பதற்காகத்தான் இந்த எடுத்துக்காட்டு. அவரது தாயார் தமிழ் நாட்டில் படித்தவர். அவரிடம் கல்வி இருந்தது. அந்த கல்வி அவருக்குத் துணிச்சலைக் கொடுத்தது. கல்வி இருந்தால் எப்படியும் பிழைத்துக் கொள்ளலாம் என்கிற துணிச்சல். . அது தான் கல்வி.  அந்த கல்வியை நம்பித்தான்  அவர் அமெரிக்கா சென்றார். ஒரே தலைமுறை தான். இப்போது அவர் மகள் கமலா ஹாரிஸ் உலகில் சக்தி வாய்ந்த ஒரு பதவிக்கு  தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். 

கமலா ஹாரிஸ்ஸின் தாயார், சியாமலா கோபாலான்,  வசதியான குடுமபத்தைச் சார்ந்தவர் அல்லர்.  சாதாரண குடும்பம். தனது கல்வியைக் கொண்டு அவர் அமெரிக்கா சென்றார். அவர் கற்ற கல்வி தான் அவருக்கு வலுவான ஆயுதம். அந்த கல்வியைக் கொண்டு தான் அவரால் முன்னுக்கு வர முடிந்தது. வேறு வலிமையான ஆயுதம் எதுவும் அவரிடம் இருந்ததில்லை, கல்வியைத் தவிர!

இங்கு நாம் ஒன்றே ஒன்றைத் தான் வலியுறுத்துகிறோம். அது தான் கல்வியின் அவசியத்தை. கல்வி இருந்தால் பதவிகள் நம்மைத் தேடிவரும். ஓடி ஒளிய வேண்டிய அவசியம் இல்லை!

ஓர் இனத்தைச் சார்ந்தவன் என்பதால் பதவிகள் வரலாம். அது தற்காலிகம்! ஒருவன் ஒரு குறிப்பிட்ட  மதத்தைச் சார்ந்தவன் என்பதால் பதவிகள் தேடி வரலாம். அதுவும் தற்காலிகம் தான்! இதற்கெல்லாம் அறிவு  தேவை இல்லாத ஒன்று.

ஆனால் கற்ற கல்வி எல்லாக் காலங்களிலும் நம்மோடு துணை நிற்கும். பதவிகள் தேடி வரும்.  கற்ற கல்வியின் மூலம் நமது அறிவைப் பயன்படுத்தி நம்மை உயர்த்திக் கொள்ளலாம். அது தான் கல்வியின் பலம்.

எது வலிமை? கற்ற கல்வி தான் வலிமை!  கற்ற கல்வி ஒன்றே வலிமை!

நமது உயர்வுக்கு வலிமையான ஆயுதம், கல்வியே!

அது சியாமளா கோபலானுக்கும்  பொருந்தும்!  நம்ம விமலா  கோபாலனுக்கும்  பொருந்தும்!

நமது வலிமையைப் பயன்படுத்த கல்வியே சிறந்த ஆயுதம்!

Friday 6 November 2020

இது போதும்!

 இன்றைய நாட்டின் சூழ்நிலைக்கு யார் காரணம்? அரசியல்வாதிகளே காரணம் என்பதைத் தான் நாடாளுமன்றம் குறைவான எண்ணிக்கையுடன் தொடங்கப்படுவதற்கான சாட்சியாக எடுத்துக் கொள்ளலாம்!

அது போதும்! அது தான் நமக்கு  வேண்டும்!

அரசியல்வாதிகள் எந்த அளவுக்கு மகா அயோக்கியர்கள் என்பதை சபா  சட்டமன்ற தேர்தலின் போது தெரிந்து கொண்டோம்! அவர்கள் யோக்கியர்கள் என்றால் இப்போது மக்கள் இந்த அளவுக்குச் சிரமப்பட வேண்டிய அவசியமில்லை.

இன்று நடப்பது என்ன?  மக்களின் நலன் மறக்கப்பட்டுவிட்டது. நலன் முக்கியமல்ல. அது பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது.  பதவிக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.

பிரதமர் முகைதீனின் அரசாங்கம் 'மக்களின் நலன்' என எதனையும் நினைத்துச் செயல்பட வழியில்லை! அந்த அளவுக்கு அவரின் நிலை மோசமாக இருக்கிறது. இடைக் குறிக்கீடுகள் அதிகம். 

இந்த நிலையிலும் அவர் தனது பதவியைத்  தற்காத்துக் கொள்ள நாம் எதிர்பார்க்காத, நினைத்துப் பார்க்காத புதிய புதிய வழிகளைக் கண்டு பிடித்து இன்னும் பிரதமராக இருந்து கொண்டிருக்கிறார்!

அதில் ஒன்று தான் இப்போது நாடாளுமன்றத்தில் பாதி பேர் கலந்து கொள்கின்றனர்!

எப்படியிருப்பினும் பிரதமர் முகைதீனின் அரசாங்கம் தொடர வேண்டும் என்பது தான் எனது எண்ணம்.  எதிர் கட்சிகள் அவருக்கு ஒத்துழைப்புக் கொடுப்பதே நல்லது என்று நினைக்கிறேன்.

அரசாங்கத்தின் கொள்கைகள் விமர்சிக்கப்படலாம். பிரச்சனைகள் சுட்டிக் காட்டப்படலாம்.  எல்லாம் நடக்கட்டும்.  ஆனால் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதை நான் விரும்பவில்லை.

அதற்குக் காரணம் பொருளாதார வீணடிப்பு வேண்டாம் என்பது தான்.

கொரோனா தொற்று நோயினால் இன்று நாடு பல வழிகளில் நலிந்தும்  நசிந்தும  போன நிலையில்  இருக்கிறது. மக்களிடையே வேலை இழப்புக்கள் அதிகம். 

இன்றைய நிலையில் வசதியாகவும் வாய்ப்புடனும் வாழ்பவர்கள் அரசியல்வாதிகள் தான். மக்கள் அவதிப்படுகின்றனர்.  நோயின் தாக்கம் அதிகம்.  இன்னும் அரசாங்கத்தால் கொரோனாவைக் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வர முடியவில்லை.

நாம் சொல்ல வருவதெல்லாம் அரசாங்கம் அடுத்த தேர்தல் வரை  "கவிழ்ப்போம்!" என்கிற பிரச்சனை இல்லாமல் தொடர வேண்டும். இங்கே அம்னோ கட்சியினர் மட்டுமே மிரட்டலாக இருந்தனர்.  அவர்கள் வாய்க்கும் தீனி போட்டாகி விட்டது!  இனி அவர்களின் பயமுறுத்தல் குறைவாகவே இருக்கும் என நம்பலாம்!

எப்படியோ ஆட்சி கவிழும் என்கிற பேச்சு இன்னும் கொஞ்ச காலம் இருக்காது. ஆனாலும் முகைதீன் அப்படியெல்லாம் அலட்சியமாக இருந்து விட மாட்டார்! அதனால் தான் நாடாளுமன்றத்தின் எண்ணிக்கை குறைப்பு. கவிழ்ப்பு பயத்திலிருந்து அவ்வளவு அளிதாக அவர் விடுபடமாட்டார்!

இப்போதைக்குக் கொரோனா கை கொடுத்திருக்கிறது! அதனால் கொரோனா தொடருமோ என்கிற பயமும் நமக்கு உண்டு!

Thursday 5 November 2020

நல்லது நடக்கும் என நம்புங்கள்! (6)

 நல்லது நடக்கும் என நம்புங்கள். நம்பிக்கை தான் வாழ்க்கை என்பார்கள். நம்பிக்கை இல்லாத வரை எல்லாமே வெறுமையாகத்தான் இருக்கும். அனைத்தும் பூஜ்யத்தில் தான் முடியும்.

கொஞ்சம் முயற்சி எடுத்தால் போதும். தீராத பிரச்சனையும் தீர்ந்துவிடும்.

சமீபத்தில் படித்த ஒரு செய்தி. மேரி என்று அழைக்கப்படும் ஒரு பெண்மணி கொரோனா தொற்று நோய் காரணமாக தனது வேலையை  இழந்தார். அவருடைய கணவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து போனார்.

வேலை இழந்த அவருக்கு பொறுப்புக்கள் நிறைய இருந்தன. தனது மூன்று பிள்ளைகளுக்கும் உணவு, கல்வி இவை அனைத்தும் தேவை. வயதான தாயாரைக் கவனிக்க வேண்டும்.  வாழ்ந்த வீடு வாடகை வீடு என்பதால் வாடகைக் கட்ட வேண்டும். இன்னும் பிற சராசரி குடும்பங்கள் எதிர்நோக்கம் பிரச்சனைகள் அவருக்கும் உண்டு.

வேலை போனதால் கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்திருக்கவா  முடியும்? அவருக்குத் தெரிந்த ஒரு சிறிய தொழிலைத் தொடங்கினார். அது ஒன்றும் பிரமாணட தொழில் என்று சொல்லுவதற்கில்லை. வெறும் நாசிலெமாக், மீகூன் - இது தான் அவருக்குத் தெரிந்த தொழில். அதனை வைத்து தொழிலை ஆரம்பித்தார். காலைப் பசியாறல் மட்டும் தான்.

இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று உண்டு. துணிச்சலாக அவர் ஆரம்பித்த அந்த தொழிலுக்கு நல்ல வரவேற்பு  கிடைத்தது. மக்களின்  ஆதரவு  நன்றாக இருந்தது. பல வாடிக்கையாளர்கள் வீடுகளிலிருந்தே நாசிலெமாக் ஆர்டெர் செய்தனர். நிறைய உதவிகள் தேடி வர ஆரம்பித்தன. தனது வீட்டு மாத வாடகையான 700 வெள்ளியை மாதா மாதம் கொடுத்து உதவுவதாக ஒருவர் உறுதி அளித்திருக்கிறார்.

அவரின் தொகுதியான, செபூத்தே,   நாடாளுமன்ற உறுப்பினர், தெரேசா கோக், சமையல் எண்ணைய், முட்டை, சீனி போன்ற நாசிலேமாக் செய்வதற்குத் தேவையான பொருள்களை வாங்கிக் கொடுத்திருக்கிறார். அத்தோடு ஒரு மாதத்திற்கு அவரது அலுவலகத்திற்கு முப்பது நாசிலேமாக்  பொட்டலங்களை ஒரு மாதத்திற்கு அனுப்பும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார். 

கோலாலம்பூர் இந்திய வர்த்தக சபையும் அவருடைய தொழில் வளர்ச்சி அடைந்து வருவதால் அவர்களது  பங்காக பெரிய ரைஸ் சூக்கர் ஒன்றை  வாங்கிக் கொடுத்திருக்கின்றனர்.

இப்போது அவரது தொழில் உரிமம் பெற்று முறையாகச் செய்யவும் அவருக்குப் பொருத்தமான தொழில் செய்ய அதற்கான இடம் கிடைக்கவும் துணை அமைச்சர் எட்மண் சந்தாராவும் ஆதரவு கரம் நீட்டியிருக்கின்றார்.

இந்த பெண்மணியிடமிருந்து  என்ன தான் நாம் கற்றுக் கொண்டோம்? வேலை போனதும் வீட்டில் முடங்கிக் கிடக்கவில்லை. முதலடி அவர் எடுத்து வைத்தார். அந்த முயற்சி அவருடையது. அதன் பின்னர் என்ன நடக்க வேண்டுமோ அது நடந்தது. அது அப்படித்தான் நடக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எந்த நிலையில் இன்று நாம் இருந்தாலும் நாம் செய்ய வேண்டியதெல்லாம் அந்த முயற்சி தான்.  சோர்ந்து போகாமல், சோர்வடைந்து போகாமல் எடுத்து வைப்போம் முதல் அடியை. அதன் பின்னர் பாருங்கள் உங்களது திருவடியை!

வளர்வோம்! வளர்ச்சி அடைவோம்

காலத்தால் செய்த உதவி....!

 காலத்தால் செய்த உதவி சிறிதாக இருந்தாலும் தக்க நேரத்தில் செய்த உதவியாயிற்றே - அதற்கு  ஈடு இணையில்லை! 

தீ விபத்தில் ஒரு வீடு எரிந்து போனது. அது ஒரு துயரச் சம்பவம்.

வசதி மிக்க ஒருவரின் வீடு என்றால் அது பற்றி நாம் கவலையடைய வேண்டாம். ஆனால் அதுவே ஒரு சராசாரி மனிதர், ஏழை என்றே வைத்துக் கொள்ளுவோம். அவர்களுக்கு அது பேரிடி. பெரும் துயரம்.

இப்போதெல்லாம் பலர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன் வருகின்றனர். அவர்களை நாம் வாழ்த்துகிறோம்.

அரசியல் கட்சிகள் அதனை வைத்து விளம்பரம் தேட முயல்கின்றனர். அதுவும் சரி தான். அரசியல் சார்பற்ற நிறுவனங்கள் பலர் பல வகைகளில் உதவுகின்றனர். அந்த ஆபத்து நேரத்தில் உதவுகிறார்களே அதுவே பெரிய காரியம். 

அரசியல் சார்பற்ற நிறுவனங்கள் அந்த குடும்பத்திற்கு அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக உணவு பொருட்களை வழங்குகின்றனர். ஆனால் அதனையே அரசியல் கட்சிகளும் செய்வது தான் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

குறிப்பாக அரசியல் கட்சிகள் அரசாங்கத்தின் மூலம் பெரிய அளவில் மானியங்கள் பெறுகின்றனர். ஓர் ஏழையின் வீடு முற்றிலுமாக எரிந்து சாம்பலாகி விட்டால் முடிந்தவரை அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க முன் வர வேண்டும்.

இதனை சமீபத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் செய்து காட்டியிருக்கிறார். அவர் பாராட்டுக்குரியவர். தனிப்பட்ட முறையில் எங்களது கிளையின் சார்பில் உதவுகிறோம் என்கிற பெயரில் சும்மா அரிசி, பருப்பு வாங்கிக் கொடுத்துவிட்டு அவர்களுக்கு உதவுகிறோம் என்று விளம்பரம் தேடுவதைத் தவிர்க்க வேண்டும்.

அதற்குப் பதிலாக கிளை, சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர், மற்றும் அரசாங்க உதவி பெற்று  வீடு கட்டிக் கொடுத்தால் அந்த குடும்பத்தினருக்குப் பெரும் உதவியாக இருக்கும். வாழ்நாள் பூராவும் இந்தியர்கள் ஐந்துக்கும் பத்துக்கும் கை  ஏந்துபவர்கள் என்கிற எண்ணத்தை வளர்த்துக் கொண்டே போவது இந்த அரசியல் கட்சிகள் தாம்.  அதனைத்  தவிர்க்க முனைய வேண்டும். 

செய்யும் உதவி திருப்திகரமாக அமைய வேண்டும் என்பது தான் நமது  நோக்கம். 

தக்க நேரத்தில் செய்கின்ற உதவி பெரிய உதவி தான். அதனை நாம் மறுக்கவில்லை.  

அதுவே அவர்களுக்கு நீண்ட காலம் பயனுடைய உதவியாக இருக்க வேண்டும் என்பது தான் நாம் சொல்ல வருவது.

செய்யுங்கள். ஆபத்து அவசரத்துக்குக் கை கொடுங்கள். ஆனால் ஓர் அரசியல் கட்சியாக, பொது இயக்கமாக செய்யும் போது வலிமைமிக்க அரசியல்வாதிகளையும் பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.  அப்போது தான் உங்கள் உதவி சம்பந்தப்பட்டோருக்கு பெரும் உதவியாக அமையும்.

இது காலத்தால் செய்த உதவி.  தக்க காலத்தில் செய்த உதவி, பாராட்டுக்குரியது!

Wednesday 4 November 2020

iஇது சரியா? தெரியவில்லை!

"உங்களுக்குக் கொரோனா தொற்று நோய்க்கான தடுப்பூசி உடனடியாக வேண்டுமென்றால் எங்கள் சீன நாட்டு மீனவர்கள் அத்துமீறி கடலுக்குள் நுழைந்ததாக கைது செய்யப்பட்டவர்களை  விடுதலை செய்யுங்கள்!" என்பதாக சீன வெளியுறவு அமைச்சு கூறியிருக்கிறது!

இதற்கு முன்னர் வேறு ஏதேனும் நாடுகள் இது போன்ற கோரிக்கைகள் வைத்ததுண்டா என்பது எனக்குத் தெரியவில்லை. 

இது கோரிக்கை என்பதை விட பயமுறுத்தல் என்பதாகக் கூட எடுத்துக் கொள்ளலாம். 

இதனை நமது நாடு ஏற்றுக் கொண்டால் பிற நாடுகளுக்கு  நாம் ஒரு புதிய பாதையைக் காட்டுவதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். 

மேலும் ஒன்று.  எல்லாவற்றுக்கும் சீனாவையே நம்பியிருக்கும் நாடுகளுக்கு இது போன்ற கோரிக்கைகள் புதியதோர் மிரட்டல்.  சான்றுக்கு பாக்கிஸ்தான்,  ஸ்ரீலங்கா இன்னும் ஒரு சில ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்த அனுபவம் ஏற்கனவே ஏற்பட்டிருக்கலாம்.  வேறு வழியில்லை! அவர்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். 

மேற்கத்திய நாடுகள் என்றால் ஏதோ நீதி நியாயம், சட்டம் என்று வாய் கிழியப் பேசுவார்கள்!  ஆனால் சீனர்கள் எதனையுமே மதியாதவர்கள். மிரட்டல் ஒன்று தான் அவர்களின் பலம்! அதனை எப்படிக் கையாள்வது என்பது அவர்களுக்குத் தெரியும். 

இந்த நேரத்தில் டாக்டர் மகாதிர் போன்றவர்கள் பிரதமராக இருந்தால் இப்படி ஒரு கோரிக்கையே வந்திருக்காது.  அது டாக்டர் மகாதிரின் பலம்.
ஆனால் இன்றைய நமது அரசாங்கமோ இரண்டும் கெட்டான் நிலையில் உள்ளது. இது ஒர் இழுபறி அரசாங்கம்! எந்நேரத்திலும் கவிழலாம் என்கிற நிலையில் இருக்கும் அரசாங்கம்! இவர்கள் தங்களது பதவியில் நீடிப்பதற்கு நாட்டிற்கு எந்த துரோகத்தையும் செய்யத் தயாராய் இருக்கும் அரசாங்கம்! இந்த நேரத்தில் கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கிறது சீன அரசாங்கம் என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்ல முடியவில்லை!

இன்று பல நாடுகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைக்கிறது சீன அரசாங்கம்.  தனது பொருளாதார பலத்தை வைத்து மற்ற நாடுகளை தனது வலைக்குள் சிக்க வைக்கிறது என்பது தான் உண்மை.

அது மட்டும் அல்லாமல் மற்ற நாடுகளில் வியாபாரம் என்னும் பெயரில் ஒரு சில இடங்களையே தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறது. சான்றுக்கு பக்காத்தான் அரசாங்கம் இடையிலே ஆட்சிக்கு வராதிருந்தால் பகாங், குவந்தான் நகரத்தில் ஒரு பகுதி சீனாவுக்குச் சொந்தமாகியிருக்கும்! அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த அந்த பகுதியில் வேலை செய்தவர்கள் அனைவரும் சீனாவிலிருந்து கொண்டு வரப்பட்டவர்கள்! உள்ளூரில் உள்ள  அரசாங்க அதிகாரிகள் கூட உள்ளே புக முடியாத அளவுக்குத் தங்களது கட்டுப்பாட்டில் அந்தப் பகுதியை வைத்திருந்தார்கள்! இது நஜிப் பிரதமராக இருந்த போது நடந்தது!

சீனா மற்ற நாடுகளின் உரிமைகளை மதிப்பதில்லை. முடிந்த வரை தங்களது பொருளாதார வலிமையை வைத்து  இலஞ்சம் தலைவிரித்தாடுகிற நாடுகளில் உள்ளே புகுந்து விடுகின்றனர். 

அந்த மனநிலையில் தான் இப்போது நமது நாட்டிலும் சீனா நடந்து கொண்டிருக்கிறது. தனது வலிமையைக் காட்டி பயமுறுத்தலில் ஈடுபடுவதாகவே எடுத்துக் கொள்ளலாம். 

சீன மீனவர்களை விடுவிப்பது சரியா என்பது தெரியவில்லை! சரியில்லை என்பது தான் சரியாக இருக்கும் என நம்புகிறேன்!

எங்கே போனது இந்த திறமை?

 முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் இப்போதெல்லாம் அடிக்கடி பத்திரிக்கைகளில் காணப்படுகிறார்!  அதுவே ஆச்சரியம் தான்!

ஆனாலும் இத்தனை திறமை உள்ள இவர் தனது ஆட்சி காலத்தில் எங்கே போனார் என்பதும்  கேட்க வேண்டிய ஒரு கேள்வி. 

அப்போதெல்லாம் தனது திறமைகளை எங்கோ ஒளித்து வைத்து விட்டு இப்போது அளவுக்கு அதிகமாகவே தனது திறமைகளை வெளிக் கொணர்கிறார்! 

அதுவும் இன்றைய முகைதீன் யாசின் ஆட்சியில் அல்லது பெரிகாத்தான் ஆட்சியில் அவரது குரல் கொஞ்சம் அதிகமாகவே ஒலிக்கிறது! 

"என்னை யாரும் ஒன்றும் செய்து விட முடியாது!"  என்னும் பாணியில் அவர் அடிக்கடி பேசி  வருகிறார்.

இப்படி ஒரு தைரியம் அவருக்கு எங்கிருந்து வந்தது? இப்போது  "முகைதீனின் குடுமி என் கையில்!" என்பதால் அவருடைய தைரியம் எல்லாரையும் மிஞ்சி விட்டது. எப்படியோ அவருக்குச்  சிறைவாசம் கிடைக்கப் போவதில்லை. அது ஒன்றே போதும், அதுவே அவருக்கு வெற்றி!

உலகிலேயே ஒரு நாட்டின் பிரதமர் என்னன்ன செய்யக் கூடாதோ அதனையெல்லாம் செய்தவர் அவர். ஒரு நாட்டை எப்படியெல்லாம் வழி நடத்தக் கூடாதோ அப்படி எல்லாம் வழி நடத்தி நாட்டையே அழிவு பாதைக்குக் கொண்டு சென்றவர் அவர். அப்படியிருந்தும் ஆட்சி தனது பக்கம் என்பதால் இப்போது எல்லாக் குற்றச்சாட்டுகளுமே தூசி என்கிற நிலைமைக்கு வந்துவிட்டது!

இப்போதெல்லாம் தைரியமாக மற்றவர்களைக் குறை சொல்லுகிறார்! மற்றவர்களைக் கிண்டலடிக்கிறார்!  மற்றவர்களுக்குச் சவால் விடுகிறார்! மற்றவர்களுக்குப் புத்தி சொல்லுகிறார்! புத்தியுள்ளவர் போல நடந்து கொள்ளுகிறார்! இப்போது கூட டாக்டர் மகாதிரை "வா! பேசலாம்!" என்கிறார்!  

பல வழிகளில் "நான் திறமையானவன்!" என்பதை அடிக்கடி மக்களுக்கு,  குறிப்பாக மலாய்க்காரர்களுக்கு, நினைவுறுத்துகிறார்! 

நம்மிடம் உள்ளது ஒரே கேள்வி தான். நீங்கள் ஆட்சியிலிருந்த போது  நீங்கள் எங்கே போனீர்கள் என்பது மட்டும் தான். அப்போது உங்கள் திறமைகள் எல்லாம் சமையல்கட்டுக்குத் தான் பயன்பட்டது. நாட்டுக்கு ஏன் பயன்படவில்லை என்பதைத் தானே நாங்கள் கூறி வந்தோம்! 

இப்போது உங்களுக்கு ஆட்சி  சாதகம் என்பதால் உங்களுடைய அதிபுத்திசாலைத்தனத்தை எல்லாம் காட்டி வருவது பொது மக்களுக்கு அது வியப்புக்குரியது தானே!

பரவாயில்லை!  மக்களுக்குப் புத்தி இல்லை என்றால்  நீங்கள் தான் வருங்காலங்களில் முன்னணியில் இருப்பீர்கள்! மக்கள் பின்னுக்குத் தள்ளப்படுவார்கள்!

அதுவரை உங்கள் "திறமையை"ப் பாராட்டுகிறோம்

Tuesday 3 November 2020

இது என்ன சாபமா?

இது என்ன சாபமா என்பது புரியவில்லை!

ஏதோ ஒன்று இரண்டு சம்பவங்கால் நடந்தால் பரவாயில்லை எனலாம். ஆனால் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருந்தால் என்ன சொல்லுவது?

சபிக்கப்பட்ட குடும்பங்களிலிருந்தே  தலைவர்கள் வருவார்கள் என்றால், அதுவும் தொடர்ந்து என்றால், நாம் யாரை நோவுவது?

அரசாங்கத்தால்  இந்தியர்களுக்கென்று  ஒதுக்கப்பட்ட பணம் இந்தியர்களுக்குப் போய்ச் சேரவில்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் வருகின்றன. அது எப்படி முடிகிறது என்பது தான் நமக்குப் புரியாத புதிராகவே  இருக்கிறது.

பாரிசான் கட்சி ஆட்சியில் இருந்த போது "செடிக்" என்கிற ஓர் அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் இந்தியர்களின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதாக ஆரம்பிக்கப்பட்டது தான் "செடிக்". ஆனால் பின்னர் வந்த குற்றச்சாட்டுக்களோ நம்மையே வியக்க வைத்தது. பெருந்தன்மையோடு யார் அள்ளிக் கொடுத்தாரோ அவருக்கே அந்த பணத்தைக் கொண்டு போய் சேர்த்து விட்டார்கள் என்பது செய்தி!  அதாவது வேலியே 'செடி' க்கை  மேய்ந்துவிட்டது!

ஆக "செடிக்" மூலம் பல கோடீசுவரர்களை நிர்மூலம் ஆக்கிவிட்டோம்!

அதன்  பிறகு வாராது வந்த மாமணி பக்காத்தான் ஆட்சி.  ஓர் இரண்டு ஆண்டுகள் நீடித்தது.  வந்த வேகத்தில் அவர்கள் "செடிக்" பெயரை மாற்றினார்கள்.  பெயரை மாற்றி "மித்ரா" என்று  வைத்தார்கள். 

பக்காத்தான் ஆட்சி கவிழ்ந்தது. அந்த ஆட்சி கவிழும் முன்னரே  "மித்ரா" வைப் பற்றி பலவிதமாக பேசப்பட்டன. எதுவும் சரியாக இல்லை! 

இப்போது எழும் கேள்வி. "மித்ரா" விடம் ஒப்படைக்கப்பட்ட கோடிகள் பத்ரமாக இருக்கிறதா அல்லது அதுவும் மீண்டும் அரசாங்கத்திடமே அடைக்கலமாகி விட்டதா? என்பது தான்!

பத்திரமாக இருக்க வழி இல்லை! பத்திரமாக இருந்தது என்றால் "மித்ரா" இரண்டு ஆண்டுகளாக செயல்படவில்லை என்பது தான் பொருள். அப்படி இருக்க நியாயமில்லை.  அதன் பொறுப்பாளராக இருந்த அமைச்சர்  பொன்.வேதமூர்த்தி சும்மா வேடிக்கைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்திருப்பார்  எனறு சொல்ல முடியாது!

ஆனால் இப்போது, இன்றைய "மித்ரா" வின் நிலை என்ன என்பது நமக்குத் தெரியவில்லை. இப்போதைய ஆட்சி புதிது. புதிது மட்டும் அல்ல. இந்தியர் என்னும் பெயரில் இங்கு ஓர் இனம் இருப்பது கூட அறியாத ஓர் ஆட்சி. மற்ற இனத்தவர், மற்ற மதத்தினர் எல்லாம் தேவையற்றவர் என்று கருதும் ஓர் ஆட்சி.

இப்படிப்பட்ட ஓர் ஆட்சியில் "மித்ரா" இன்னும் உயிரோடு இருக்கிறதா என்பது கூட  நமக்குத் தெரியவில்லை.  தெரிந்து கொள்ள வாய்ப்பில்லை!

இதற்கெல்லாம் காரணம் என்ன? பணம் எதற்காகக் கொடுக்கப்பட்டது? அதன் நோக்கம் நிறைவேற்றப்பட்டதா என்பது தான்  கேள்வி. அந்தப் பணத்திற்குப் பொறுப்பு  எடுத்துக் கொண்டவர்கள் என்ன செய்தார்கள்? என்ன செய்ய வேண்டும் என்பதை அறியாதவர்களா என்றால் "ஆமாம்!" அறியாதவார்கள் என்று தான் சொல்ல வேண்டும்!

அப்படி இல்லையென்றால் அந்தப் பணம் ஏன் அரசாங்கத்திடமே மீண்டும் செல்ல வேண்டும்?

பொருளாதார உயர்வுக்காக இந்தியர்கள் எந்தவித வங்கிக்கடனும் கிடைக்காமல் அல்லல்  படுகிறார்கள் என்பது அரசாங்கம் அறிந்திருக்கிறது. ஆனால் நமது தலைவர்கள் அறிந்திருக்கவில்லை என்பது தான் ஆச்சரியம்!

அதனால் தான் நமக்கு இப்படி ஒரு சந்தேகம் வந்துவிட்டது. சபிக்கப்பட்ட குடும்பங்களிலிருந்து வந்தவர்களுக்கே பொறுப்புக்கள் கொடுக்கப்படுவதால் அதன் பயன் யாருக்கும் போய்ச் சேருவதில்லையோ என்கிற சந்தேகம்!

சாபம் என்பது ஏழு தலைமுறைகளுக்கு நீடிக்கும் என்பார்கள்.  ஆனால் முதல் தலைமுறையிலிலேயே அதன் அறிகுறிகள் நமக்குத்  தெரிந்துவிடும்.  ஆனால் அது சம்பந்தப்பட்ட குடும்பத்திற்கு மட்டும் தான். பிற குடும்பங்களுக்கு அல்ல.

ஆனால் இந்த குடும்பங்கிலிலிருந்து சமுதாயத்திற்குத் தலைமை தாங்கினால் அது விளங்காது என்பது இப்போது நமக்குப் புரிகிறது!

Monday 2 November 2020

நமது பழங்களுக்கு என்ன நேர்ந்தது?

 உலகம் பூராவும் இன்று கொரோனா தொற்று நோய் ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பதை நாம் அறிவோம்.

நமது நாடும் விதிவிலக்கல்ல.  மூன்றாவது அலையில் இப்போது நாமும் அலைக்கழிக்கப்பட்டு  எங்கெங்கோ மோதிக் கொண்டிருக்கிறோம்! இந்த மூன்றாவது அலை என்பது நமது ஊர் ஆளும் அரசியல்வாதிகள் நமக்குப் பெருந்தன்மையாக வாரி வழங்கிய வைரம்!

அதை விடுவோம்.  நமது ஊர் உள்ளூர் பழங்களுக்கு என்ன வியாதியை அறிமுகப்படுத்தினார்களோ தெரியவில்லை! 

பொதுவாக எல்லாப் பழங்களும் ஏதோ ஒரு வியாதியால் பீடிக்கப்பட்டிருக்கின்றன என்பது நமக்குத் தெரிகிறது! ஆனால் தெரிய வேண்டியவர்களுக்குத் தெரியவில்லை என்பது தான் சோகம்!

மிகச் சாதாரண பழமாக நம்மிடையே அதிகம் சாப்பிடப்படுவது வாழைப்பழம். இன்னொன்று பப்பாளிப் பழம். 

இந்த பழங்களுக்கு என்ன வியாதியை உருவாக்கினர்களோ தெரியவில்லை  எதையும் சாப்பிடக் கூடிய நிலையில் இல்லை. வாழப்பழம் பாதி பழுத்தும், பாதி பழுக்காமலும்  கடை,களில் விற்கப்படுகின்றன. பப்பாளி பழங்களின் நிலையோ இன்னும் மோசம். ஒவ்வொரு பழமும் ஏதோ கரடுமுரடாக  இப்போது தான் அமேஸோன் காடுகளிலிருந்து வந்தவை போன்று தோற்றமளிக்கின்றன!   அதுவும் சாப்பிடுக்கூடிய அளவுக்குப் பழமாக இருந்தால் கூட மன்னித்து விடலாம்! என்னவோ அரைப்பழம். , முக்கால் பழம் = ஏதோ வெந்தும் வேகாமல் இருப்பது போல - இந்த பழங்கள் விற்கப்படுகின்றன!

ஏன் இந்த பழங்களின் நிலை இப்படி ஆகிவிட்டது?  யாரைக் குறை கூறூவது?  விவசாயிகளிடமிருந்து ஏன் இப்படி இந்த பழங்கள் தாறுமாறாக வெளியாகின்றன?

ரசாயனத்தைப் பயன்படுத்தி  பழங்களைப் பழுக்க வைக்கிறீர்களோ  என்று ஒரு சீனப் பெண்மணியிடம் கேட்ட போது அவர் மறுக்கிறார். இப்படிச் செய்தால் எங்களுக்கு இன்னும் அதிகம் செலவாகும் என்கிறார். 

எப்படியோ நமது பழங்களுக்கும் கொரோனா தொற்றை உருவாக்கிவிட்டார்கள்! எதுவும் சாப்பிடும்படியாக இல்லை. சீனர்கள் கைகளில் விவசாயம் போகும்போது இப்படியெல்லாம் நடக்கும் என்ப்து நமக்குத் தெரிந்ததுதான்!  ஆமாம், நேற்றுப் பொரித்த கோழிக்குஞ்சுகளையே பத்து நாள்களில் கோழிகளாக்கி விற்பனைக்குக் கொண்டுவருபவர்களுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சனையா!

இருந்தாலும் இதையெல்லாம் கட்டுப்படுவதற்குச் சட்டதிட்டங்கள் உள்ளன. இப்போது அது பற்றியெல்லாம் யாரும் அக்கறைக் காட்டுவதில்லை.

பார்ப்போம்! இதுதொடர்கிறதா என்று.

நோயுள்ள பழங்களைச் சாப்பிட்டு நம்மையும் நோயாளிகளாக்குவதில் அப்படி என்ன பெருமையோ!