Sunday 31 July 2022

மலேசிய குடும்பம்!

 

மலேசிய குடும்பம் என்றால் என்ன? மக்களிடையே ஒற்றுமை, புரிந்தணர்வு, திருப்தி - இப்படி  ஒரு விளக்கத்தைக்  கொடுத்திருக்கிறார் பிரதமர். அது மட்டும் அல்ல அதன் பொருளை இன்னும் விரிவுபடுத்தலாம்.

பிரதமரின் அறிவுரையை, ஆலோசனையை நல்ல எண்ணத்துடன் நாம் ஏற்றுக் கொள்கிறோம்.

இந்த அறிவுரை எல்லா மலேசியர்களுக்கும் தான்  ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு அல்ல. அப்படி இருக்கவும் முடியாது.

பிரதமர் நல்ல எண்ணத்துடன் தான்  இதனைச் சொல்லுகிறார் என்பதிலே நமக்குச் சந்தேகமில்லை. ஆனால் ஒரு சில விஷயங்களில் இந்த ஒற்றுமையை, நல்லெண்ணத்தைக் -  கெடுப்பது போன்று ஒரு சில விஷயங்கள் நடக்கின்றன. அது பிரதமரின் பொறுப்பல்ல என்று ஒதுக்கிவிட முடியாது.

சான்றுக்கு இப்போது இந்தியரிடையே மிகவும் பேசுபொருளாக இருப்பது மெட்ரிகுலேஷன் கல்வித்தேர்வு தான். இந்த கல்வி இந்திய மாணவர்களுக்கு புறக்கணிக்கப்படுகிறது என்பது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் காலத்தில்  ஒரு சில வரம்புகளை வைத்திருந்தார்.   அது  பெரிதாக ஒன்றும்  வரவேற்கப் படவில்லை என்றாலும் ஓர் அளவுகோல் இருந்தது. குறைந்தபட்சம் அதாவது கிடைக்கிறதே என்கிற ஒரு திருப்தி இருந்தது. அந்த எண்ணிக்கையைக் கூட்டுவதற்கு அதன் பின்னர் எவ்வளவோ வாய்ப்புக்கள் இருந்தும் அதனை ம.இ.கா. வழக்கம் போல பயன்படுத்திக் கொள்ளவில்லை.  ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.  இந்தியர்களுக்குப் பிரச்சனை என்று வரும்போது  ம.இ.கா. பின்வாங்குவது வழக்கமான ஒன்று தான்!

நாம் சொல்ல வருவதெல்லாம் மலேசிய குடும்பம் என்றால் அது இந்தியர்களையும் சேர்த்துத் தான் என்பதாக நாம் எடுத்துக் கொள்கிறோம். அப்படித்தான் பிரதமர் சொன்னதாக  நாம் அர்த்தப்படுத்திக்  கொள்கிறோம். அது பிரதமர் கருத்து மட்டும் தானா அல்லது அரசாங்கத்தின் ஒட்டு மொத்தக் கருத்தா என்பதிலே நாம் ஐயுறுகிறோம்.

மெட்ரிகுலேஷன் கல்வி என்று வரும் போது பிரதமருக்கு எந்த சம்பந்தமும் இல்லையா என்கிற கேள்வி நமக்கு எழுகிறது. கல்வி அமைச்சுக்கு மட்டும் அப்படி என்ன  தனி உரிமை, தனி அந்தஸ்து - அவர்களுக்கு அப்படி என்ன இந்தியர்களின் மேல் வெறுப்பு? கல்வி அமைச்சுக்கு மட்டும் "மலேசிய குடும்பம்" என்பதில் அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லையோ!

உண்மையைச் சொன்னால் மலேசிய குடும்பத்தை உடைக்கும் முயற்சியில்  கல்வி அமைச்சு ஈடுபட்டிருப்பதாகவே நமக்குத் தோன்றுகிறது. உடைந்த குடும்பத்தை எப்படி ஒன்று சேர்ப்பது?

இதோ மேலே படத்தில் ஒரு குடும்பம் உடைந்து கொண்டிருக்கிறது. குடும்பம் உடைந்தால் நீங்கள் கனவு காணும் "மலேசிய குடும்பம்" ஒன்று சேர வாய்ப்பில்லை!  உங்களுக்கும் அதனைப் பார்க்க வாய்ப்பில்லாமல் போய்விடும்!

மலேசிய குடும்பம் தொடர்ந்து ஒன்றுபடுவது உங்கள் கையில்!

Saturday 30 July 2022

கல்வி என்பது வர்த்தகம்!

கல்வி என்பது, நமது நாட்டைப் பொறுத்தவரை,  இப்போது வர்த்தகமயமாகிவிட்டது!

நமது மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் கல்வியில் இடம் கிடைக்காமல் இருப்பதற்கு  இந்த வர்த்தகமும் ஒரு காரணமாகிவிட்டது. மெட்ரிகுலேஷன் கல்வியில் இடம் கிடைக்காதவர்கள் "ஏம்ஸ்ட்" காலேஜில் சேரலாம் என்று ம.இ.கா. வே அறிக்கை விடுகிறது என்றால் இந்த பிரச்சனையை நாம் ஓரளவுக்குப் புரிந்து கொள்ளலாம்.

இவர்கள் காலேஜில் சேர வேண்டும் என்பதற்காக ம.இ.கா.வினரே நமக்கு எதிராக இருக்கிறார்களோ என்று எண்ண வேண்டியிருக்கிறது. இவர்கள் மட்டும் அல்ல மற்ற தனியார் கல்லூரிகளும் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றும் தோன்றுகிறது.  அதுவும் இந்தியர்கள் தங்களின் பிள்ளைகளின் கல்விக்கு தங்களிடம் உள்ள அனைத்தையும் தியாகம் செய்யத்  தயாராக இருப்பவர்கள் என்று அரசாங்கத்துக்குத் தெரியும்.

வெளி நாடுகளில் எத்தனை இந்திய மாணவர்கள் படிக்கிறார்கள் என்கிற விபரம் கல்வி அமைச்சுக்குத் தெரியும்.  இந்தியர்கள்  என்ன தான் வாழ்க்கையில் சிரமப்பட்டாலும் எப்பாடுபட்டாவது  தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைப்பார்கள் என்பது கல்வி அமைச்சுக்குத் தெரியும். இவர்கள் பணக்காரர்கள் அல்ல என்பதும் அவர்களுக்குத் தெரியும். 

தனியார் கல்லூரிகளுக்கு 'பிஸ்னஸ்' கொடுக்க வேண்டும் என்பதற்காகவே  கல்வி அமைச்சு மெட்ரிகுலேஷன் கல்வியில் இந்திய மாணவர்களுக்கு இடம் ஒதுக்குவதில்லையோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது.

ஆக எல்லாமே பண மயமாகிவிட்ட இந்நாளில்  கல்வியும் அதில் ஒன்றாகிவிட்டது. பணம் இருந்தால்  தான் கல்வி கிடைக்கும் என்று ஒரு நிலை நாட்டில் இருந்தால் ஐயோ பாவம்! என்று தோன்றுகிறது. ஆனால் மலேசியர்  அனைவருக்கும் இந்நிலை இல்லை. இந்நிலை இந்தியர்களுக்கும், சீனர்களுக்கும் மட்டும் தான்.

எது எப்படி இருந்தாலும் நாட்டில் ஏழைகள் எல்லா சமுதாயத்திலும் இருக்கின்றனர். மலாய் சமுதாயத்தில் சுமார் 95 விழுக்காடு  கல்வி வாய்ப்புக்கள் கிடைத்து விடுகின்றன. சீனர்களும் தனியார் கல்லூரிகள், வெளி நாடுகள் என்று பிரிந்து போய்விடுகின்றனர்.  மலேசிய சமுதாயத்தில் இந்திய மாணவர்களே அதிக பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். இந்தியர்கள் தங்கள் பிள்ளைகளை மிகவும் சிரமமான ஒரு சூழலில் தான் படிக்க வைக்கின்றனர். இந்த கல்வி வியாபாரத்தில் அதிகம் பாதிப்படைபவர்கள் இந்தியர்கள்.

ஓர் அரசியல்வாதி தனது பிள்ளைகளை வெளி நாட்டுக்கு அனுப்பி படிக்க வைக்கின்றான். நாம் அதைக் கேள்வி கேட்கவில்லை. உள்ளூரிலாவது இந்திய மாணவர்களுக்கு  வாய்ப்புக் கொடுங்கள் என்று தான் கேட்கிறோம். அதுவும் மறுக்கப்பட்டால் வாய்ப்புக்களை எங்கே தேடி அலைவது?

ஓர் அரசாங்கம் தனது குடிமக்கள் அனவருக்கும், குறிப்பாக கல்வி என்று வரும் போது, அதனை இலவசமாகக் கொடுக்க முன் வரவேண்டும். அது அரசாங்கத்தின் கடமை. ஆனால் அது நியாயமாக நடைபெறவில்லை.

பணத்தைக் கொடுத்துத் தான் கல்வி கற்க  வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது சரியான தீர்வு அல்ல!

Friday 29 July 2022

சீன மாணவர்கள் நிலை எப்படி?

 

உயர்கல்வி என்று வரும்போது இந்திய மாணவர்கள் பெருமளவில் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

இதிலிருந்து நமக்கு ஓரு உண்மைப் புரிகிறது.  கல்வி அமைச்சு, இந்திய மாணவர்கள் உயர்கல்வி பயிலக் கூடாது  என்கிற கொள்கையைக் கொண்டிருக்கிறதோ என்கிற ஐயத்தை ஏற்படுத்துகிறது.  காரணம் ஒவ்வொரு ஆண்டும் நமது மாணவர்கள் உயர்கல்வி என்று வரும் போது அவர்கள் பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றனர். அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை.

இன்னொன்று,  கல்வி என்று வரும் போது இந்தியர்கள் பணக்காரர்கள் என்பது  கல்வி அமைச்சின்  கருத்து.  அவர்கள் எவ்வளவு செலவு ஆனாலும் தங்களின் சொத்துக்களை விற்றாவது பிள்ளைகளைப் படிக்க வைப்பார்கள்.  அதனால் அவர்கள் பணக்காரர்கள். அரசாங்க வேலை என்றால்,  இந்தியர்கள் படிக்காதவர்கள். கல்வியறிவு இல்லாதவர்கள். டாக்டர்கள் என்றால் அரசாங்கத்தில் உள்ள டாக்டர்கள் அனைவரும் இந்தியர்கள். வழக்குரைஞர்கள் என்றால் இந்தியர்களே அதிகம்! ஏமாற்றுக்காரர்கள், குற்றவாளிகள், குண்டர்கள் என்றால் இந்தியர்கள் தான் அதிகம்.  படிக்காத காட்டுமிராண்டிகள். அதனால்  'சொஸ்மா' சட்டம் அவசியம் தேவை. இப்படித்தான் அரசாங்கம்  இந்தியர்களை வகைப்படுத்துகிறது!

ஆனால் இதற்குப் பின்னணியில்  இருக்கும் ரகசியம் என்ன தெரியமா? இந்தியர்கள் ஏழைகள். நாம் என்ன செய்தாலும் தட்டிக்கேட்க ஆளில்லை! எவ்வளவு வேண்டுமானாலும் இவர்களைத் தட்டலாம் என்பது தான்! 

சீன மாணவர்களின் நிலை என்ன?  அவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் எழவில்லை என்று தான் நினைக்க வேண்டியுள்ளது. பத்திரிக்கைகளில் செய்திகள் வரவில்லை என்றால் அவர்கள் எந்தப் பிரச்சனையையும் எதிர்நோக்கவில்லை, அவ்வளவு தான்!

அவர்கள் பணம் உள்ள சமூகம். வெளி நாடுகளில்  பலர் இந்நேரம் கல்வியை ஆரம்பித்திருப்பர்.    நம் நாட்டின் தரமற்ற கல்விக்காக அடித்துக்கொள்ள அவர்கள் தயாராக இல்லை.  ஆமாம் பத்து "ஏ" வாங்கிவிட்டு குறைவான  "ஏ" வாங்கியவர்களோடு போட்டிப்போட அவர்கள் தயாராக இல்லை! அவர்களிலும் பல ஏழைகள் உண்டு. அவர்களுக்குப் பெரும்பாலும் இடம் கிடைத்துவிடும்.   அவர்களின் அரசியல்வாதிகள் பணத்தை வைத்துக் கொண்டு காற்று புக முடியாத இடத்துக்குள்ளும் புகுந்து விடுவர்! சத்தம் இல்லாமல் அவர்கள் காரியம் ஆற்றுவார்கள்.

நம் நிலை அப்படியா? நடு வீதிக்கு வந்து அடித்துக் கொள்கிற ஒரு நிலையைத்தான் நமது அரசியல்வாதிகள் நமக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள்!

என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

Thursday 28 July 2022

நல்ல மார்க் வாங்குவது குற்றமோ!

 

பொதுவாக மெட்ரிகுலேஷன் கல்வி  எப்போது ஆரம்பிக்கப்பட்டதோ அன்றிலிருந்தே இந்திய மாணவர்கள் பிரச்சனைகளை எதிர்நோக்க ஆரம்பித்துவிட்டனர்!

இந்திய மாணவர்கள் என்ன தான் பல "ஏ" க்களைப் பெற்று எஸ்.பி.எம். பரிட்சையில் முதல் நிலைக்கு வந்தாலும் அவர்களுக்கு மெட்ரிகுலேஷன்  கல்வி மறுக்கப்படுகின்றது!  அதைவிட இந்திய மாணவர்களால் வேறு என்ன செய்ய முடியும்.  "ஏ" என்றால் அது தான் முதல் நிலை. அதுவும் அனைத்துப் பாடங்களிலும் "ஏ" பெற்றிருப்பது என்றால் அது தான் அதன் எல்லை. அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்?  அவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்! 

கல்வி அமைச்சு இந்திய மாணவர்களிடமிருந்து என்ன தான்  எதிர்பார்க்கின்றது? அதனைக் கல்வி அமைச்சு தெளிவுபடுத்த வேண்டும்.  மூன்று "ஏ", நான்கு "ஏ" போதும் என்று நினைத்தால், மெட்ரிகுலேஷன் தகுதி அவ்வளவு தான், என்று அமைச்சு நினைத்தால்  அதனையாவது மாணவர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். மணவர்கள் விழுந்து விழுந்து படித்து என்ன தான் பயன்?

பொதுவாக கல்வி அமைச்சு,  மாணவர்கள் பரிட்சைகளில் நல்ல தேர்ச்சி பெற வேண்டும்  என்று தான் நினைப்பார்கள். ஆனால் நம் நாட்டில் கல்வி அமைச்சின் நிலைப்பாடு வேறு மாதிரியாக இருக்கிறது என்று தான் நினைக்கத் தோன்றுகிறது!  மேற்கல்வி பயில நல்ல மார்க் தேவையில்லை என்று அமைச்சு நினைப்பதாகவே தோன்றுகிறது! அப்படியென்றால் அதையும் சொல்லிவிடுங்களேன்.

இந்திய மாணவர்களின் மெட்ரிகுலேஷன் விண்ணப்பங்கள் புறக்கணிக்கப்படுகின்றது என்று ஒவ்வொரு ஆண்டும் பேசிக் கொண்டிருப்பதும், எழுதிக் கொண்டிருப்பதும் நமக்கே சலிப்பை ஏற்படுத்துகின்றது. 

ஆனால் இந்நாட்டு இந்தியர்களின் தாய் கட்சி என்று சொல்லப்படும்  மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சிக்கு எந்த சலிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று அவர்கள் நினைக்கிறார்களோ இல்லையோ  நமக்கு அப்படி ஒரு சலிப்பை அவர்கள் மேல்  ஏற்படுத்துகிறது.

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் காலத்தில் இந்திய மாணவர்களுக்கு, மெட்ரிகுலேஷன் கல்விக்கு, 2500 இடங்கள், ஒதுக்கப்பட்டது என்றால்  அதையே தொடருங்களேன்.  அதையே அளவுகோளாக வைத்து செயல்படுங்களேன்.  இன்றைய நிலையில் பத்து இடங்களா அல்லது 20 இடங்களா என்று நம்மால் ஊகிக்க முடியவில்லையே! அவர்களிடமிருந்தும் மழுப்பலான பதில்கள் தானே வருகின்றன! ஏன் இந்த திருட்டுத்தனம் என்று  தானே  நாமும் கேள்விகளை எழுப்ப வேண்டியிருக்கிறது!

இந்த மெட்ரிகுலேஷன் கல்வியில் இந்திய மாணவர்களுக்குத் துரோகம் இழைக்கப்படுகிறது என்று நமக்குத் தெரிகிறது. தீர்வு காண  வேண்டியவர்கள் தீர்ப்பார்கள் என்கிற  நம்பிக்கையும் இல்லை. அவர்கள் பொங்கி எழுவார்கள் என்று தோன்றவில்லை அல்லது அமைதியான முறையில் தீர்வு காண்பார்கள் என்றும் தோன்றவில்லை.

இப்போது நமக்குத் தெரிந்ததெல்லாம் பரிட்சையில் நல்ல மார்க் வாங்குவது குற்றமோ!

Wednesday 27 July 2022

'கதாகாலட்சேபம்' ஆரம்பம்!

 

மீண்டும் ஆரம்பமாகிவிட்டது கதாகாலட்சேபம்!

மெட்ரிகுலேஷன் உயர்கல்விக்கு விண்ணப்பித்த 200-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. இவர்கள் அனைவரும் பெரும்பாலும் அனைத்துப் பாடங்களிலும் ஏ தகுதி பெற்றவர்கள்!  அனைத்துப் பாடங்களிலும் "ஏ" என்பதை, இந்திய மாணவர்கள், ஒரு தகுதியாக எடுத்துக்கொள்ளக் கூடாது  என்பதை கல்வி அமைச்சு மீண்டும்  நிருபித்திருக்கிறது. கல்வி அமைச்சின் மெட் ரிகுலேஷன் நுழைவு என்பது எந்த அளவையால் அளக்கப்படுகிறது  என்பது இன்னும் நமக்குப் புலனாகவில்லை!

ஒரு பிரச்சனையென்றால் ஒருமுறை, இருமுறை வரலாம்.  ஆனால் பாரிசான் ஆட்சியில் வருடா வருடம் இந்த பிரச்சனை  வந்து கொண்டிருக்கிறது! அப்படி என்ன? தீர்க்கவே தீர்க்க முடியாத பிரச்சனையா இது? அதற்கு ஏன் ஒரு தீர்வை இன்னும் கண்டுபிடிக்காமல் ஒவ்வொரு வருடமும் இழுத்து............இழுத்துக் கொண்டே போகிறது! அரசாங்கமே இதனைச் செய்கிறதா அல்லது தனிப்பட்ட மனிதர்கள் இதில்  மூக்கை நுழைக்கிறார்களா?

அதுவும் 15-வது பொதுத் தேர்தல் வாசலில் நின்று  வரவேற்றுக் கொண்டிருக்கும்  இந்த நேரத்தில்  ஆளுங்கட்சியினர் இதனை வைத்து  அரசியல் நடத்துகிறார்களா என்கிற ஐயம் எழத்தான் செய்கிறது! ம.இ.கா. வினர் இந்தியர்களின் ஆதரவற்று, சோர்ந்து போய் விழுந்து கிடக்கும் இந்த நேரத்தில் - இரு களவாணிகளும் சேர்ந்து இந்திய சமுதாயத்தின் ஆதரவைத் திரட்ட நினைக்கிறார்களோ!

இந்த செய்தி வெளியானதும் ம.இ.கா. உடனடியாக விழுந்து கிடக்கும்  இந்தியர்களைக் காப்பாற்ற  "எங்கள் தலைமையகத்தை நாடினால் உரிய உதவிகள் செய்யப்படும்" என்று அறிக்கை விடுகிறார்களே!  அப்படியென்றால் என்ன பொருள்?  ம.இ.கா. வை மதிக்காதவர்களா? இப்போது  வாருங்கள். உதவி செய்வது எங்களால் தான் முடியும், வாருங்கள்! வாருங்கள்!  என்று அழைப்பு விடுக்கிறார்களா?  இது தான் சரியான நேரம் என்று ம.இ.கா.வுக்கு ஆதரவு தேடும் முயற்சியில் முயற்சி செய்கிறார்களோ?

எதுவும் நடக்கும்! இந்த அரசியல் களவாணிகள், தங்கள் நலனுக்காக, எதையும் செய்யக் கூடியவர்கள் தான்!

எல்லாப் பாடங்களிலும் "ஏ" எடுத்துவிட்டு  இப்போது உங்களுக்கு இடமில்லை என்று சொன்னால் அது எந்த அளவுக்கு மாணவர்களைப் பாதிக்கும் என்பதைக் கூட அறியாத அறிவிலிகளா  இவர்கள்? அதன் வலியை உணராதவர்களா இவர்கள்? நல்ல மார்க் எடுத்தாலும் இடமில்லை!  நல்ல மார்க் எடுக்காவிட்டாலும் இடமில்லை! இது என்ன கல்விக் கொள்கை என்று நாம் கேட்கலாம் அல்லவா!

இது தொடரக் கூடாது என்பதே நாம் இந்த சமுதாயத்திற்கு விடுக்கும் வேண்டுகோள். நல்ல அரசாங்கம் அமையவில்லையென்றால்  இது ஒரு தொடர்கதையாகவே போய்க் கொண்டிருக்கும். நாட்டை ஆள்வோர் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்பதை நாம் கேட்டுக் கொள்கிறோம்.

Tuesday 26 July 2022

ஏன் சீனர்கள் மட்டும்.....?

 

நமது மலேசிய நாட்டில் சீனர்களின் மளிகைக் கடைகள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லலாம்!

ஓர் ஐம்பது மலாய் குடும்பங்கள் இருந்தால் போதும். அங்கே ஒரு சீனரின் மளிகைக் கடையைக் காணலாம். அது போல ஓர் ஐம்பது இந்தியக் குடும்பங்கள் இருந்தால் போதும் அங்கே ஒரு சீனரின் மளிகைக் கடையைக் காணலாம்.

மலாய்க் குடும்பங்கள் பெரும்பாலும் கம்பங்களில் இருப்பதால் அங்கே கடை திறப்பது ஒரு பிரச்சனை அல்ல. ஆனால் இந்தியக் குடும்பங்கள் நிலை வேறு. ஏதோ ஒரு மூலையில் அவர்கள் வசித்து வந்தாலும் அங்கே ஒரு சீனர் வியாபாரம் செய்து கொண்டிருப்பார்! அந்த அளவுக்கு அவர்கள் எந்த மூலை முடுக்காக  இருந்தாலும் அங்கே போய் அவர்கள் வியாபாரம் செய்யத் தயங்குவதில்லை.  வசதிகளே இல்லையென்றாலும்  அவர்கள் வசதிகளை ஏற்படுத்திக் கொள்வார்கள். வியாபாரம் செய்வதற்காக எந்த ஒர் எல்லைக்கும் அவர்கள் போகத்தாயார் நிலையில் இருப்பார்கள்.

சீனர்கள் சும்மா மந்திரத்தாலோ, மாயாஜாலங்கலாலோ வியாபாரத் துறையில் முன்னுக்கு வந்துவிடவில்லை. வெறும் உழைப்பு மட்டும் அல்ல. வியாபாரம் என்னும் போது மற்ற இனத்தவர் புகுமுன்னே தாங்கள்  புகுந்து விட வேண்டுமென்று நினைப்பவர்கள். ஒரே  ஒரு குறிக்கோள் மட்டும் தான். அது வியாபாரம். வியாபாரத்தில் தான் பணம் சம்பாதிக்க வேண்டும். வேறு எதுவும் தேவை இல்லை. இன்று வியாபாரத்தில் முன்னணியில் நிற்கிறார்கள்  என்றால் அவர்களுடைய துணிச்சலும் முக்கிய காரணம்.

இப்போது நிலை மாறி விட்டது. எல்லா இனத்தவர்களும் வியாபாரம் செய்யலாம் என்கிற நிலைக்கு நாட்டில் மாற்றங்கள்  ஏற்பட்டுவிட்டன.  அதனால் தான் ம்லாய்க்காரர், இந்தியர் என்று பட்டியல்  நீளுகிறது. அவர்களும் எல்லா இடங்களிலும் வியாபாரம் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

இந்தியர்களைப் பொறுத்தவரை தோட்டப்புறங்களில் மளிகைக்கடைகள் வைத்திருந்தனர்.  இப்போது தோட்டங்களும்  குறைந்து போயின. இன்றைய நிலையில்  இந்தியர்கள்  உணவகத் துறையில் தான்  அதிக ஈடுபாடு காட்டுகின்றனர்.  தவறு இல்லை.  தங்களுக்கு  எளிதாக எது  வருமோ அந்தத் துறையில் ஈடுபாடு காட்டுவது இயற்கையே.

நம்மிடம் உள்ள மிகப் பெரிய குறைபாடு என்பது வியாபாரம் என்றால் அது சீனர்களால் மட்டுமே முடியும் என்கிற ஓர் எண்ணத்தை வளர்த்துக் கொண்டு விட்டோம். அது தவறான கருத்து.  வியாபாரத்துக்கும் இனத்துக்கும் சம்பந்தமில்லை. நம் நாட்டில் சீனர்களே வியாபாரத்தில்  அதிக அக்கறை காட்டுவதால்  "வியாபாரம் என்றால் சீனர்கள்'  என்கிற தவறான எண்ணத்தை மனத்தில் விதைத்துவிட்டோம்.

ஏன் சீனர்கள் வியாபாரத்தில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்? சிந்திக்க வேண்டும். ஒரே காரணம்: பணம் மட்டும் தான்! நீங்கள் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்றால் வியாபாரத்தை விட்டால்  வேறு வழியில்லை. ஒரு சிறு வியாபாரம் செய்யும் பெண்மணி, ஓரு நிறுவனத்தில் பணிபுரியும் ஒர் அதிகாரியைவிட அதிகம் சம்பாதிக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள்!

Monday 25 July 2022

யார் ஏழை?

 


நாம் ஏழ்மையில் வாழலாம். கையில் காசில்லாமல் தடுமாறலாம். 

இதனாலெல்லாம் நாம் ஏழைகள் என்பதாக நமக்கு நாமே ஏழைகள் என்று சொல்லிக் கொண்டும் வாழ்ந்து கொண்டும் இருக்க வேண்டிய அவசியமில்லை.

அது உண்மையாகவே  இருக்கட்டும். அதற்காக நாம் ஏழைகள் என்று தண்டோர போட்டு ஊரைக் கூட்ட வேண்டும் என்கிற சில்லறைத்தனமாக நடந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.

நாம் ஏழையாகவே பிறந்திருக்கலாம். அது ஒன்றும் பெரிய பிரச்சனை அல்ல. நாம் எப்போது வேண்டுமானாலும் நமது வாழ்க்கையை நாம் மாற்றியமைத்துக் கொள்ளலாம். அது நமது கையில் தான் உள்ளது.

முக்கியமாக நாம் கருத்தில் கொள்ள வேண்டியது ஒன்று தான். ஏழ்மைக்கும் நாம் வாழ்கின்ற வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லை.  நாம் மனம் வைத்தால் எப்போதும்  மனத்தால் பணக்காரனாகவே  வாழ முடியும். 

மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்களோ அது நம்மைப்பற்றிய அவர்களது பார்வு. ஏழை என்று நினைக்கலாம். பரம ஏழை என்று நினைக்கலாம். அவர்கள் எப்படியோ நினைத்துவிட்டுப் போகட்டும்.

ஆனால் அவர்களைவிட, பணம் என்பதைத் தவிர,  வேறு வழிகளில் நாம் அவர்களைவிட  பணக்காரர்களாக, செல்வந்தர்களாக இருக்கலாம். ஆமாம் பணம் என்றால் வெள்ளி நோட்டுக்கள் மட்டும் தானா?  நமது அறிவு, ஆற்றல், உடல்நலம் - இப்படி அனைத்துமே பணம் தான், சேல்வம் தான்   ஒரு சில இடங்களில் பணம் கொட்டிக் கிடக்கும் ஆனால் அங்கே ஒரு வேளை சோறு கூட சாப்பிட முடியாமல் உடல்நலம் கெட்டுக் கிடந்தால்  அந்தப் பணத்தையா சாப்பிட முடியும்? இதையெல்லாம் நாம் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்!

இங்கு நமது பார்வை  என்பது நாம் நம்மை எப்படிப் பார்க்கிறோம் என்பது தான். இப்போது, இந்த நிமிடம் என்னிடம் போதுமான பணம் இல்லை என்பது உண்மைதான். ஆனால் நான் ஏழை அல்ல. இதோ நான் ஒவ்வொரு நிமிடமும் எனது உயர்வுக்காக, எனது குடும்பத்தின் உயர்வுக்காக உழைத்து வருகிறேன்.  ஒவ்வொரு நிமிடமும் உயர்ந்து வருகிறேன். இந்த ஏனது உழைப்பு நாளையே என்னை உயர்த்தும். நான் ஏழை அல்ல என்பதைக் காட்டும்.

இப்படி ஒவ்வொரு நிமிடமும் உயர்ந்து வரும் என்னை, நான் எப்படி ஏழை என்பதை ஏற்றுக்கொள்வது?

ஏழ்மை என்பது ஒரு மனநிலை. அதனை நாம் எப்படி வேண்டுமானாலும்  மாற்றிக் கொள்ளலாம். ஏழை என்று நினைத்தால் வாழ்நாள் முழுவதும் ஏழை தான். எந்தக் காலத்திலும் உயர வழியில்லை! நான் ஏழை அல்ல என்று நினைத்தால் நாம் ஏழையே அல்ல. முன்னேற்றத்திற்கான பாதைகளும் திறக்கும்.

நாம் ஏழை அல்ல! அது போதும்!

Sunday 24 July 2022

ஏன் சீனர்கள் மட்டும்?




சிறு சிறு தொழில்களில் அதிக ஈடுபாடு உடையவர்கள் என்றால் அது சீன சமுதாயத்தினர் தான்.

இன்று நாட்டில் உள்ள அத்தனை பெரிய தொழில்களும் சீனர்களுடையது தான். ஆனால் அத்தனை பெரிய தொழில்களும் இந்த சிறிய தொழில்களிலிருந்து தான்  பரிமாண வளர்ச்சி பெற்றவை.

அப்போதும் சரி இப்போதும் சரி,  சிறு தொழில்கள் சீனர்களை மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு சென்றிருக்கின்றன.   அதனால் தான் அரசாங்கமே இது போன்ற சிறிய தொழில்களை ஊக்குவித்து வருகிறது. ஒவ்வொரு சிறிய தொழிலும் அடுத்து வரும் பெரிய தொழிலுக்கு ஆணிவேராக விளங்குகிறது.

நமது இனத்தவர்கள் ஏன் இது போன்ற சிறிய தொழில்களில் ஈடுபட ஊக்குவிக்கப்படுகின்றனர், ஊக்குவிக்கப்பட வேண்டும்  என்றால் ஒன்று:  அதன் வருமானம். அடுத்து:  நம்மாலும் தொழில் செய்ய முடியும் என்கிற தன்னம்பிக்கை. சிறிய தொழில்கள் நமக்குப் பெரிய தொழில்கள் செய்ய ஊக்கப்படுத்தும். தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். 

இன்று  நம்முடைய பிரச்சனை எல்லாம் தொழில் செய்யும்  தன்னம்பிக்கை நமக்கு இல்லை.  சீனர்களுக்கு அந்த பிரச்சனை இல்லை. தொழில்களை சீனர்களே ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதால் அவர்களுக்குத்  தொழில் சம்பந்தமான எதுவும் அந்நியமாக இருப்பதில்லை.  அவர்களுக்கு ஆலோசனைகள் சொல்ல ஆயிரம் பேர் இருக்கின்றனர். மேலும், தொழிலில்,  அவர்களின் ஆதிக்கத்தை விட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாகவும்  இருக்கின்றனர்.  வங்கிகளும் அவர்களுடையது என்பதால் சீனர்கள் எல்லா வகையிலும் தொழில் செய்ய ஊக்கப்படுத்தப் படுகின்றனர்.

  ஆனால் தமிழர்களைப் பொறுத்தவரை தொழில் என்பதே நமக்குப் புதிது.  நாம்,  வேலை செய்யும் ஒரு சமூகமாகவே பழக்கப்பட்டிருக்கிறோம்.  அப்படியே வளர்க்கவும் பட்டிருக்கிறோம். வேலையைத் தவிர வேறு எதுவும் நமக்குத் தெரியாது  என்றும் சொல்லி வளர்க்கப்பட்டிருக்கிறோம். வேலை, வேலை என்று சொல்லியே நம்மைச் சுற்றியுள்ள நமது சமூகம் நம்மை வளர்த்திருக்கிறது. "தொழில் செய்தால் போட்ட பணம் போய்விடும்"  என்று தொழிலில் தோற்றுப்போனவர்களைச் சுட்டிக்காட்ட எப்போதும் தயாராக இருக்கிறோம். 

அதுவும் நமது மலேசிய நாட்டில் வியாபாரம், தொழில் என்று எப்படிச் சொன்னாலும் நாம் சீனர்களைத்தான் முன் நிறுத்துகிறோம்.  நமது சமூகம், நமது பெற்றோர், நமது உற்றார் உறவினர் அனைவரும் நமக்குச்  சொல்லுகின்ற  ஒரே அறிவுரை: சீனர்கள் வியாபாரம் செய்யவே பிறந்தவர்கள்! நம்மால் அவர்களோடு போட்டிப்போட முடியாது! இப்படிச் சொல்லியே நமக்குத் தாழ்வு மனப்பான்மையை நமது குடும்பத்தினரே  நமக்கு  ஏற்படுத்திவிட்டனர். 

ஆனால் இவைகள் எல்லாம் தகர்த்து எறியப்பட்டுவிட்டன. வேலை செய்பவனுக்குத் தொழிலும் செய்ய முடியும் என்கிற எண்ணம் இப்போது வலுப்பட்டு வருகிறது. மேலும் வியாபாரம் என்பது ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தது என்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை. ஏன் இந்திய சமூகத்தில் பஞ்சாபியர், குஜாராத்தியர், தெலுங்கர்கள், மலையாளிகள்,  தமிழ்ச் சமூகத்தில் செட்டியார்கள், தமிழ் முஸ்லிம்கள் இப்போது கவுண்டர்களும் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்துவிட்டனர். தமிழ்ச் சமூகத்தில் இதெல்லாம் மிகவும் பாராட்டுக்குரியவை! இந்தியர்களும் வியாபாரத்தில் 'தங்களால் முடியும்' என்பதை நிருபித்து வருகின்றனர்.

தமிழ் இனத்தில் உள்ள ஒவ்வொரு சமூகமும் சிறு தொழில்கள் மூலம் முன்னேற நினைப்பது  மிக மிக பாராட்டுகுரியது. சிறு தொழிலிருந்து பெருந்தொழில் தான் பரிணாம வளர்ச்சி,  பாராட்டுக்குரியது.

சீனர்களால் மட்டுமே முடியும் என்பது பொய்! நம்மாலும் முடியும் என்பதே மெய்!

தொடர்ந்து சிந்திப்போம்!

Saturday 23 July 2022

சிந்திப்பதே இல்லையா?


 பணம் பற்றியான சிந்தனை உங்களுக்கு  இருந்ததே இல்லையா? பிரச்சனை இல்லை! இனி அதனை மாற்றிக் கொள்ளுங்கள்.  

அது பற்றி  சிந்திப்பதே இல்லை என்று சொல்லுபவர்கள் சந்நியாசியாக  இருக்க வேண்டும். அன்றன்றையப் படி அவர்களுக்கு  அளக்கப்பட்டுவிடும்! கவலைப்பட ஒன்றுமில்லை!

அவர்களைப் பற்றி நாம் பேசப்போவதில்லை.  நம்மைப் பற்றி யோசிப்போம். நமக்குக் குடும்பம், பிள்ளைக்குட்டிகள், பள்ளிக்கூடம், மாதாந்திர தவணைகள் - இப்படி அனைத்தும் பணம்! பணம்! பணந்தான்!

வேலையில் இருக்கும் போது நமக்கு இவைகள் எல்லாம் சுமைகளாகத் தெரிவதில்லை. சம்பாதிக்கிறோம் செலவு செய்கிறோம்! இது போதாதா?

நண்பா! இது போதாது!  வருகிற பணத்தை அனைத்தையும்  செலவு செய்ய நாம் பிறக்கவில்லை. நமக்குப் பல கடமைகள் உண்டு. அதில் முக்கியம் நமக்கு சொந்த வீடு வேண்டும். தலைக்கு மேலே கூரை இருந்தால் நாம் எஜமானன்!

ஆனால் அது போதாது. பிள்ளைகள் படிக்க வேண்டும். இப்படி இன்னும் பல. ஆனால் வேலை செய்து இவைகளை எல்லாம் பூர்த்தி செய்வது  எளிதல்ல.

ஒரு சிறு தொழில் செய்தால் கூட  நாம் வேலை செய்து சம்பாதிப்பதை விட இன்னும் அதிகமாகவே சம்பாதிக்கலாம். தொழில் செய்வதின் இரகசியத்தை நாம் புரிந்து கொள்வதில்லை. நாம் ஒரே மாதிரியான சிந்தனையில் பல காலம் வாழ்ந்துவிட்டோம். வேலை செய்தால் தான் சாப்பாடு என்று சொல்லியே நமது பிள்ளைகளை வளர்த்துவிட்டதினால் தொழில், வியாபாரம் என்றாலே 'நமக்கும் அதற்கும் சம்பந்தமில்லை!' என்று  நமது பிள்ளைகளும் ஒரு தீர்மானத்திற்கு வந்துவிட்டனர்!

ஒரு காலகட்டத்தில் சீனர்கள் இல்லை என்றால் நமக்குச் சாப்பாடே இல்லை என்கிற நிலை இருந்தது. அந்த அளவுக்கு வியாபாரம் அவர்கள் கையில் இருந்தது. சீனர்கள் தங்களது பெருநாள் காலங்களில் தங்களது கடைகளை ஒரு மாத காலத்திற்காவது அடைத்துவிடுவார்கள்! பொருள்களை எங்கே வாங்குவது என்கிற நிலை. ஆனால் இப்போது அதெல்லாம் மாறிவிட்டது.

ஆனால் அந்த மாதிரியான இக்கட்டான காலகட்டத்திலும்  நமது செட்டியார்களும், தமிழ்  முஸ்லிம் நண்பர்களும்   கடைகள் வைத்து நடத்திக் கொண்டு தான் இருந்தனர். யாரை நம்பி? தமிழர்களை நம்பித்தான்!

அவர்கள் என்ன படிக்காதவர்களா? கல்வி அறிவு இல்லாதவர்களா? அவர்கள் தங்களது கல்வியறிவை தொழில் செய்து தங்களை வளர்த்துக் கொள்ள பயன்படுத்தினார்கள். அவ்வளவு தான்.

தொடர்ந்து சிந்திப்போம்!

Friday 22 July 2022

மீண்டும் எழ வேண்டும்!

சிறு தொழில் என்பது நமக்கு ஒன்றும் புதிதல்ல. காலங்காலமாக நமது தாய்மார்கள் செய்து வந்திருக்கிறார்கள்.

ஆனால் நாம் அதனை ஒரு சிறு தொழிலாக வளர்க்கவில்லை. இப்போது நாம் சில கட்டாயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  கணவன் மனைவி இருவரும் வேலை செய்யும் காலம் போய் ஒருவரின் வருமானத்தில் வாழ்கின்ற  நிலை ஏற்பட்டுவிட்டது. அதனால் நமது குடும்பங்களின் வருமானத்தைப் பெருக்க ஏதாவது ஒரு சிறு தொழிலாவது செய்யும் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறோம்.

அது தவறும் அல்ல. ஆனால் எனக்கு ஓர் ஆச்சரியம் என்னவென்றால்  எங்கோ ஒரு மூலையில் முடங்கிக் கொண்டும்  முணகிக் கொண்டும் இருந்த  நமது சகோதரிகள்  வெகுண்டு எழுந்து விட்டனர்! அவர்களின் பொறுப்பை அவர்கள் உணர்ந்திருக்கின்றனர். இனி மேல் வீண் அரட்டை அடித்துக் காலத்தைக் கடத்த முடியாது. குடும்பம் வேண்டும். அவர்களின் நலன் வேண்டும். பிள்ளைகள் பள்ளி செல்ல வேண்டும். அவர்களுக்குச் சாப்பாடு வேண்டும். யாரிடமோ போய் கையேந்த முடியாது. நமது கையே நமக்கு உதவி என்பதைப் புரிந்து கொண்டார்கள். 

இப்போதெல்லாம் நமது சகோதரிகள் தோசை, இட்டிலி, வடை, நாசிலெமாக்  போன்ற காலை உணவு வகைகளை விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். வரவேற்க வேண்டிய முயற்சி. அவர்கள் தொடர்ந்து செய்யும் போது அதன் மூலம் வரும் வருமானம் அவர்கள் முன்பு வேலையில் செய்த வருமானத்தைவிட அதிகம் என்பதை உணர்கின்றனர். நேரத்தையும் அவர்களுக்குத் தோதாக அமைத்துக் கொள்கின்றனர்.

அதே வேளை நமது இளைஞர்களும் கம்பனிகளில் நடக்கும் கட்டுப்பாடுகளைப் பிடிக்காமல் சொந்தமாகவே சிறு தொழில்களில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர். இவைகளெல்லாம் வரவேற்கப்பட வேண்டிய முயற்சிகள்!  இளைஞர் ஒருவர் சுக்குக்காபி, சுக்குத் தேநீர், வடைவகைகள் போன்றவற்றை சைக்கிளில் வைத்து விற்பனைச் செய்கின்றார். இன்னொரு இளைஞர் பத்தாய்காய்களைத் தனது காரில் வைத்துக் கொண்டு வியாபாரம் செய்கின்றார். எல்லாமே நல்ல முயற்சிகள்.

இதனை நான் நமது இளைய சமுதாயத்தின் வளர்ச்சியாகவே பார்க்கிறேன். உண்மையைச் சொன்னால் நமது இளைஞர்கள் இது போன்ற சிறு தொழில்களில் ஈடுபடவே மறுத்த ஒரு காலம் உண்டு. மறுத்த என்பதைவிட அவர்கள் அதிகம் வெட்கப்பட்டனர் என்பது தான் உண்மை. 

காரணம் வேலையே செய்து பழகிவிட்ட ஒரு சமுதாயம் நாம். மாதா மாதம் சம்பளம் வாங்கியே பழகிவிட்ட ஒரு சமுதாயத்தை தொழில்துறையில் திசை திருப்புவது அவ்வளது எளிதல்ல. இப்போது ஏதோ ஒரு கட்டாயம். கொரோனா வந்த பிறகு அனைத்தையும் மாற்றி அமைத்துவிட்டது. சாப்பாட்டுக்கு வழியில்லாத ஒரு நிலைமை ஏற்பட்டதும் எல்லாமே மாறிவிட்டன.

இந்த மாற்றம் நல்லது தான்.வியாபாரம் என்பது நமக்குப் புதிதல்ல. தேவையெல்லாம் நாம் இழந்துவிட்ட நமது வியாபாரங்களை மீட்டெடுக்க வேண்டும். அதற்கான திறமை நம்மிடம் உண்டு.

இன்றைய இந்த சிறு தொழில்கள் நாளை பெருந் தொழிலாக மாறக் கூடிய சாத்தியம் நிறையவே உண்டு. அப்படித்தான் இன்றைய பெருந்தொழில்கள் எல்லாம் பரிணாம வளர்ச்சிக் கண்டு கோபுரமாக வளர்ந்து நிற்கின்றன.

மீண்டும் எழுவோம்!

Thursday 21 July 2022

அரசாங்கத்திற்கும் சிக்கனம் தேவை!

 

விலைவாசி ஏற்றம் நமது எதிர்பார்ப்பையும் மீறிவிட்டது!  இன்னும் ஏறிக்கொண்டே போகிறது!

உலகளவில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தினால் இதெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது என்பது தான் நமது அரசாங்கம் கூறுகின்ற காரணங்கள். அரசாங்கத்தில் இன்னொரு தரப்பும் இருக்கின்றது. இவர்கள் கூறுகின்ற காரணங்கள் "எல்லாம் இறைவான் செயல்!"  என்று கூறி தங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று கைகழுவி விடுவார்கள். இவர்கள் பெரும்பாலும் மூச்சு மூட்ட தின்றுவிட்டுப் பேசுபவர்கள்! உண்மையில் இவர்களுக்கும் விலைவாசிக்கும் சம்பந்தமிருக்காது!

இதனையொட்டி சமீபத்தில் தலைநகரில் விலைவாசி உயர்வைக் கண்டித்து அமைதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆனாலும் இந்த அமைதி ஆர்ப்பாட்டத்திற்குக் கூட  காவல்துறையினர் அனுமதி கொடுக்கவில்லை. காவல்துறை என்னும்போது அவர்கள்  பிரதமர் சொல்லுவதைத் தான் கேட்பார்கள். அவர்களுக்கு உத்தரவு எங்கிருந்து வருகிறதோ அதைத்தான் -  அந்த உத்தரவுக்குத்தான் அவர்கள் பணிவார்கள். ஆக அரசாங்கம் மக்களின் கருத்தைக் கேட்கும் என்கிற நிலை இல்லை. அரசாங்கம் தன்னிச்சையாகவே செயல்படுகிறார்கள் என்பது தான் உண்மை.

இந்த இக்கட்டான நேரத்தில் கூட அரசாங்கம்  கோடிக்கணக்கான பெறுமானமுள்ள ஒரு சில  திட்டங்களை நிறைவேற்றுவதற்காக முயற்சிகளை  செய்தும் கொண்டிருக்கிறது.   பெரும் பெரும் திட்டங்களை நிறைவேற்ற இது சரியான தருணம் அல்ல என்று எதிர்க்கட்சிகள் எதிர்த்தாலும் அரசாங்கம் அதனைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. ஒன்று மட்டும் நமக்குத் தெரிகிறது. யாரையோ திருப்திப்படுத்தும் வேலையில் பிரதமர் நெருக்கப்படுகிறார் என்பது மட்டும் தெரிகிறது!

இன்னொரு கோரிக்கையையும் இந்த அமைதிப் பேரணியில்  முன்மொழியப்பட்டிருக்கிறது. அமைச்சர்கள், துணை அமைச்சர்கள்  இவர்களின் சம்பளம் குறைக்கப்பட வேண்டும் என்பது தான் அந்த கோரிக்கை. இதற்கு மறுப்பு சொல்ல எந்த நியாயமும் இல்லை.

இன்று மலேசியர்கள், அரசாங்கப் பணியாளர்களைத் தவிர்த்து,  மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். குடும்பங்களில் இருவருக்கு வேலை என்பது போய் ஒருவர் மட்டும் வேலை என்கிற நிலை பல குடும்பங்களில்  இன்று உண்டு. இந்த நிலையில் வங்கிக்குப் பணம் கட்ட முடியாமல் வீடுகளை இழந்து விட்டவர்கள் பலர். சாமானிய, நடுத்தர குடும்பங்கள் பலர் வீதிக்கு வந்துவிட்டனர்.

இந்த நிலையில் அமைச்சர்கள், துணை அமைச்சர்களின் குடும்பங்கள்  இன்றளவும் வெளிநாடுகளுக்குச் சென்று 'ஷோப்பிங்' செய்கின்ற பழக்கத்தை விடவில்லை!  அது தவறு என்று நாம் சொல்ல வரவில்லை. ஆனால் அவர்களும் மலேசியர்களோடு சேர்ந்து சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று தான் சொல்லுகிறோம். அவர்கள் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. அவர்களால் அது மூடியாத காரியம்.

அமைச்சர்கள் பல இலவசங்களை அனுபவிக்கின்ற நிலையில் அவர்களுடைய சம்பளம் மாதம்  நான்காயிரம் வெள்ளியாக நிர்ணயிக்கலாம்.  இப்படிச் செய்வதால் பல இலட்சங்களை அரசாங்கம் மிச்சம் பிடிக்க முடியும். அமைச்சர்கள் என்று சொல்லும் போது அமைச்சர்கள் அந்தஸ்த்தில் பலர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். அரசு சார்ந்த நிறுவனங்களில் அமைச்சர்களுக்கு ஈடாக சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் அனைவரும் இதில்  அடங்குவர்.

சிக்கனம் எல்லாப் பக்கமிருந்தும் வரவேண்டும். பொது மக்களுக்கு மட்டும் தான் என்கிற நிலை மாற வேண்டும். அரசாங்கமும் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்  

விலைவாசி உயர்வு என்பது அனைவருக்கும் தான்! ஏழை எளியவர்களுக்கு மட்டும் அல்ல!

Wednesday 20 July 2022

ஒப்பீடு வேண்டாமே!

 

பண வீக்கம் பற்றி பேசுவதற்கு நான் சரியான ஆள் அல்ல! அதனை முதலில் சொல்லிவிடுகிறேன்!

ஆனாலும் சில சமயங்களில் இது போன்ற விஷயங்கள் பேசப்படும் போது நமது நாடு என்னவோ உயர்ந்த நிலையில் இருப்பது போலவும் மற்ற நாடுகள் நமக்குக் கீழே இருப்பது போலவும்  இந்த அரசியல்வாதிகள் பேசுவது நமக்கு ஒத்துவரவில்லை!

ஒரு காலத்தில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமது பேசினார். அப்போது அவர் பிரதமராக இருந்தார். நாட்டை சரியாக வழிநடத்தினார் என்று சொல்ல முடியாவிட்டாலும் 'பரவாயில்லை' என்கிற போக்கு நிலவியது! நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றார். மற்ற ஆசிய நாடுகளைவிட அல்லது தென் கிழக்காசிய நாடுகளைவிட மலேசியா வெற்றிகரமான, முன்னணி நாடாக  விளங்க வேண்டும் என்கிற வேகம் அவரிடமிருந்தது. பல மாற்றங்களைச் செய்தார். அது நாட்டுக்குத் தேவையாக இருந்தது.

அவருக்குப் பிறகு பிரதமராக வந்தவர்கள் அனைத்தையும் வீணடித்து விட்டனர். பிசுபிசுக்க வைத்துவிட்டனர். அதுவும் குறிப்பாக நஜிப் அப்துல் ரசாக் வந்த பிறகு நாட்டையே மொட்டை அடித்துவிட்டார். அவர் இன்னும் பதவியில் இருந்திருந்தால்  இந்த நாடு சீனாவுக்கு விலை போயிருக்கும்! ஆனாலும் அவர் இப்போது வெளியே சவடால்தனம் பண்ணிக் கொண்டிருக்கிறார்! காரணம் அவருடைய கட்சியினர் ஆட்சியில் இருக்கின்றனர் என்கிற ஒரே காரணம் தான்!

சமீபத்தில் நமது பிரதமர் பேசும் போது மற்ற தென் கிழக்காசிய நாடுகளோடு ஒப்பிடும் போது நமது நாட்டின் பணவீக்க விகிதம் குறைவு என்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

எப்படியாவது  எதையாவது சொல்லிவிட்டுப் போகட்டும். சராசரி மலேசியர்களுக்குத் தெரிந்தது என்ன? அது தான் முக்கியம். நமது நாட்டை அண்டி வந்தவர்கள்,  வேலை தேடி வந்தவர்கள்  இன்று நம்மைவிட  முன்னேற்றம் கண்டிருக்கின்றனர். மற்றவர்கள் முன்னேறுகிறார்கள் என்றால் நமக்கு மகிழ்ச்சியே! அதற்காக நாம் வீழ்ச்சி காண்பது  என்றால் அது கேவலமான செயல்! 

சான்றுக்கு இந்தோனேசிய, வியட்னாம், தாய்லாந்து போன்ற நாடுகள்.  எல்லாம் நம்மைவிடப் பின் தங்கிய நாடுகள். ஆனால் இன்றைய  நிலை என்ன? நம்மைவிட அந்த நாடுகள் முன்னேறி விட்டன.  வாய்ச்சவடால் பேசிக் கொண்டிருந்த நமது நாடு அவர்களைவிடப் பின் தங்கி விட்டது!  

இப்போது வேலை தேடி அல்லது தொழில் செய்ய  நாம் தான் வியட்னாம் போகிறோம். இந்தோனேசியா போகிறோம். தாய்லாந்து போகிறோம். இந்தோனேசிய பணிப்பெண்களைக் கூட நம்மால் வேலைக்கு அமர்த்த முடியவில்லை. அந்த நாடு நம்மை மதிக்கவில்லை!

இந்த நிலையில் நாம் சொல்ல வருவதெல்லாம் தயவு செய்து மலேசியாவை மற்ற நாடுகளுடன் ஒப்பிட வேண்டாம். நமது நிலை அப்படி ஒன்றும் உயர்ந்ததாக இல்லை.  நாளுக்கு நாள் நாம் கீழ் நோக்கிப் போகிறோம். இலஞ்சத்தை ஒழிக்காதவரை நம்மால் முன்னேற வழியில்லை. இலஞ்ச ஒழிப்புத்துறைக்கு இலஞ்சம் வாங்கிய ஒருவரை நாம் தலைவராகப் போட்டிருக்கிறோம்!

கீழ் நோக்கிப் போவதற்கு ஒப்பீடு தேவையா?

Tuesday 19 July 2022

மகிழ்ச்சியான மலேசியர்கள்!

 

மலேசியர்கள் பொதுவாக மகிழ்ச்சியாகவே வாழ்கின்றனர் என்று புள்ளியியல் துறையின் அறிவிப்பு நம்மைக் கொஞ்சம் அதிர்ச்சுக்குள்ளாகிறது என்பது  உண்மை தான் என்றாலும் அதைத்தான் நாம் நம்பவேண்டியுள்ளது!

அதுவும் சென்ற 2021-ம் ஆண்டு பல வேதனைகள், சோதனைகளிலிருந்து மீண்டு வந்திருக்கிறோம். நாட்டில் வேலை இல்லாத பிரச்சனை, வேலைக்குப் போக முடியாத பிரச்சனை,  வியாபார நிலையங்கள், தொழிற்சாலைகள் திறக்க முடியாத நிலை - இப்படி தொடர்ந்தாற் போல  அதிகமான பிரச்சனைகளை எதிர்நோக்கிய ஆண்டு சென்ற ஆண்டு. இந்த நிலையில் மலேசியர்கள் எப்படி மகிழ்ச்சிகரமாக வாழ முடியும் என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது. 

ஒரு வேளை இந்த புள்ளிவிபரம் அரசாங்கத்தில் பணிபுரிபவர்களை வைத்து எடுக்கப்பட்ட ஒரு ஆய்வு நடவடிக்கையா அல்லது தனியார் துறையும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறதா என்பதையும் யோசிக்க வேண்டிய சூழலில் நாம் உள்ளோம். அரசாங்கத்தில் பணிபுரிபவர்கள் என்றால் இந்த ஆய்வு சரியாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அரசாங்கத்தில் பணிபுரிபவர்கள் மட்டும் தான் தங்களது சம்பளத்தை முழுமையாகாப் பெற்றவர்கள். அவர்களுக்கு வழக்கம் போல அனைத்தும் கிடைத்து வந்தன. அதனால் வங்கிக்கடன், வீட்டுக்கடன்,  வாகனக் கடன் என்று எதை எடுத்துக் கொண்டாலும் அவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை. அவர்களுக்கு  இலவச உணவு பேக்கெட்டுகள் தேவைப்படவில்லை. 

அரசாங்க ஊழியர்கள் நிச்சயமாக, பொருளாதார ரீதியில்,   எந்த ஒரு துயரத்தையும் அனுபவிக்கவில்லை.  இந்த மகிழ்ச்சி குறியீட்டின் படி  அரசாங்க ஊழியர்கள் தான்  "மகிழ்ச்சி மலேசியர்கள்"  என்பதை ஏற்றுக் கொள்ளலாம்.

ஆனால் தனியார் துறையில் பணிபுரிபவர்கள்  நிலையோ வேறு. வேலை இல்லை  அதனால் சம்பளம் இல்லை!  சம்பளம் இல்லை அதனால் வீட்டில் சாப்பாடு இல்லை. கணவன்  -  மனைவி இருவருக்கும் வேலை இல்லை அதனால் வங்கிக் கடன்களைக் கட்ட முடியவில்லை. இது தான் அரசாங்கத்திற்கு வெளியே வேலை செய்பவர்களின் நிலைமை!  இலவச உணவு பேக்கெட்டுகள் இவர்களுக்குத்தான் தேவைப்பட்டது. இந்த நிலையில் எப்படி அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும்?

அப்போது ஏற்பட்ட அந்த அடி தான் பலர் வீட்டுக்கு வாடகை கட்ட முடியாமல் வெளியேற்றப்பட்டனர். பலர் வீதிக்கு வந்தனர். தற்கொலை செய்து கொண்டவர்களும் இருக்கின்றனர். இப்பவும் அந்த பாதிப்பு இருக்கத்தான் செய்கிறது.

மலேசியர்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதில் நம் அனைவருக்குமே அக்கறை உண்டு. சென்ற ஆண்டில் வேதனையையே அதிகம் அனுபவித்த மலேசியர்கள்  மகிழ்ச்சியை எப்படி அனுபவத்திருக்க முடியும் என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது.

ஆனால் மகிழ்ச்சி என்பது ஓர் மனநிலை. ஒரு வேளை மலேசியர்கள் "இடுக்கண் வருங்கால் நகுக" என்பதைக் கடைப்பிடிப்பவர்களோ? அப்படியென்றால் நமக்கும் மகிழ்ச்சியே!

Monday 18 July 2022

எங்களாலும் முடியும்!

 

"எங்களாலும் முடியும்"  என்பதை மீண்டும் நிருபித்திருக்கின்றனர்  ம.இ.கா. தலைவர்கள். வரவேற்க வேண்டிய செய்தி என்பதில் ஐயமில்லை.

மலேசிய இந்திய உலோகத் தொழிற்துறையைச் சேர்ந்த  வர்த்தகர்கள்   பெரிதும் அவர்களைப் பாராட்டியிருக்கின்றனர். அவர்களின் மகிழ்ச்சியில் நாமும் பங்குபெறுவோம்! நல்லது நடக்கும் போது அரசியல்வாதிகளைப் பாராட்டுவதும் நமது கடமையே!

உலோகத் தொழில் துறை மற்றும் சேவைத்துறையைச் சேர்ந்த சுமார் 25,000 வர்த்தகர்கள் பயன்பெறும் வகையில் வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்பட்டிருப்பதாக வர்த்தகர்கள் அரசாங்கத்திற்குத் தங்களது நன்றியைத் தெரிவித்திருக்கின்றனர்.

ம.இ.கா. தலைவர்களை - டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஸ்ரீ சரவணன் - இருவரையும்  நாம் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம். இந்த வர்த்தகர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் அனைத்துக்கும் தீர்வைக் கண்டிருப்பது நமக்கும் மகிழ்ச்சியளிக்கிறது.

இந்த நேரத்தில் நாம்  வேறு சில  விஷயங்களையும்  நமது தலைவர்களின் கவனத்திற்குக் கொண்டு வருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

அதுவும் குறிப்பாகக்  கல்வி சார்ந்த சில விஷயங்கள்.  நமது பத்திரிக்கைகளில்  வருகின்ற  செய்திகள் தான்.  

பள்ளிகள் கட்டப்பட்டுவிட்டன. ஆனால் பயன்படுத்த முடியவில்லை.  ஏற்கனவே பாதி கட்டடங்களோடு அப்படியே வேலை நின்று போய் காட்சியளிக்கும் பள்ளிகள். பள்ளிகள் கட்டுவதற்குப் பணம் கொடுத்தாயிற்று  ஆனால் பள்ளி எழவில்லை.  பள்ளிக்கு  அமைச்சர் அடிக்கல் நாட்டினார்  அது அப்படியே வேலையே தொடங்கப்படாமல்  மூலியாக நிற்கிறது.

இவைகள் எல்லாம் பெரும்பாலும் ம.இ.கா. தலைவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகள் தான். இந்தப் பள்ளிகளுக்கு எந்த ஒரு தீர்வும் காணப்படாமல் அப்படியே அசிங்கமாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன!

நாம் இங்கு சொல்ல வருவதெல்லாம் இந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் ஒரு தீர்வைக் காண முயற்சி செய்யுங்கள்  என்பது தான். இது கல்வி சம்பந்தப்பட்ட விஷயம். உண்மையில் நாம் கட்சி  கண்ணோட்டத்தோடு இதனைப்  பார்க்க முடியாது. அப்படிப் பார்க்கவும் கூடாது. ஏன் சீனர்கள் பார்ப்பதில்லையே? கல்வி என்று வரும்போது அவர்கள் ஆளுங்கட்சி எதிர்கட்சி என்பதாக வித்தியாசம் பார்ப்பதில்லை.  ஆனால் நாம் பார்க்கிறோம்! நாம் நமது மொழியை நேசிப்பதில்லை, அவ்வளவு தான் சொல்ல முடியும். பக்காத்தான் கட்சியின் 22 மாத கால ஆட்சியில் இருந்தவர்களைக் குற்றம் சொல்லுவதில் நியாயமில்லை. அவர்கள் தொடர்ந்து இருந்திருந்தால் பள்ளிக் கட்டடம் சம்பந்தமான பல பிரச்சனைகளுக்குத்  தீர்வு கண்டிருப்பார்கள் என்று ஆணித்தரமாக நம்புகிறேன்.

இப்போது ஆளுங்கட்சியில் இருப்பவர்கள் ம.இ.கா.வினர். அது போதும்  இந்த பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு.  பிரச்சனைகளைத்  தீர்ப்பதற்கு நீங்கள் எந்த ஒரு முயற்சியும் செய்யாவிட்டால் நீங்கள் மக்கள் முன் தலை நிமிர முடியாது. செய்வது உங்கள் கடமை. கடமை தவறினால் அது உங்கள் மடமை. பதவிகள் உங்களை அலங்கரிக்க வேண்டுமென்றால், நம் மக்களுக்கு, உங்கள் பங்களிப்பும் அவசியம். ஒரு வழிச்சாலை என்பதெல்லாம் இனி இல்லை! புரிந்து கொண்டால் போதும்.

உங்களால் முடியும் என்கிற போது அதனை ஏன் தள்ளிப்போட வேண்டும்? உங்களால் முடியும் என்பதை இந்த சமுதாயத்திற்குக்  காட்டுங்கள். அது போதும்.

Sunday 17 July 2022

இது என்ன புது கலாச்சாரம்?

 

நாட்டில் புது கலாச்சாரம் உருவாகி வருகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது!

நமக்குத் தெரிந்தவரை  வீடுகளுக்கு சிவப்பு வண்ணங்களைத் தெறிப்பதும்,  கார்களுக்குச் சிவப்பு வண்ணங்களைப் பூசி  அலங்கலோப் படுத்துவதும்  யார் என்று நமக்குத் தெரியும்.  வட்டிக்குப் பணத்தைத்  தூக்கியெறியும் வட்டி முதலைகள் அல்லது ஆலோங் - இந்த கூட்டத்தினரின் வன்முறைதான் இந்த வண்ணம் பூசும் வேலை!

அவர்கள் எந்த வன்மத்தைக் கையாண்டாலும் அதனைத் தடுக்க ஆளில்லை என்பது இன்னொரு பக்கம்!

வண்ணம் பூசுவதும்/தெறிப்பதும்  வட்டிமுதலைகளிடமிருந்து தான் வரும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் வேலையில் இங்கேயும் ஒரு திடீர் திருப்பம்  ஏற்பட்டிருக்கிறது! இதனை நாம் எதிர்ப்பார்க்கவில்லை.

காமடி கிளப் ஒன்றில் ஏற்பட்ட ஒரு பிரச்சனை.  பெண் ஒருவர் இஸ்லாமிய சமயத்தை அவமதித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.  அது இப்போது காவல்துறையினரால் - சமய இலாக்காவினால் - வைசாரிக்கப்பட்டு வருகிறது. அந்தப் பெண் மட்டும் அல்ல அவரது கணவரும் விசாரிக்கப்பட்டு வருகின்றார்.

இது ஒரு புறம் இருக்க,  அந்த காமடி கிளப்பின் மீது  ஒரு சிலர் சிவப்பு கறுப்பு  சாயங்களைத் தெறிக்க விட்டிருக்கின்றனர்! இதை நாம் எதிர்ப்பார்க்கவில்லை. வட்டிமுதலைகளால் ஆரம்பித்து  வைக்கப்பட்ட இந்த வன்முறை கலாச்சாரம் இப்போது ஆன்மீகவாதிகளால் கையில் எடுக்கப்பட்டிருக்கிறதோ என்று சந்தேகத்தை எழுப்புகிறது. முதலில் இதனை நாம் எப்படி எடுத்துக் கொள்வது என்று புரியவில்லை!

வட்டிமுதலைகள்  என்பவர்கள் மக்களின் உயிரை எடுக்கும் கலாச்சாரம் உடையவர்கள்! ஆன்மீகவாதிகள் அப்படி இல்லையே. மக்களை மனிதர்களாக வாழ வைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். ஒன்று உயிரை எடுப்பது. இன்னொன்று  உயிரை வாழ வைப்பது. அவர்கள் எடுக்கும் உயிர்போக்கும் கலாச்சாரத்தை இவர்கள் கையில் எடுக்க முடியாது; எடுக்கவும் கூடாது! ஒன்றுக்கொன்று எந்த வகையிலும்  ஒத்துப்போகக் கூடிய ஒன்றல்ல!

இது தொடரக் கூடாது என்பதே நமது வேண்டுகோள். ஆன்மீகவாதிகள் எந்தக் காலத்திலும் வன்முறையை ஆதரிப்பவர்கள் அல்ல. அப்படி ஆதரித்தால் அவர்கள் ஆன்மீகவாதிகள் அல்ல.

இது போன்ற கலாச்சாரங்கள் நம் நாட்டுக்கு ஏற்றதல்ல. தவறு செய்த அந்த நகைச்சுவை கலைஞர்களின் செயல் சரிதானா என்பது நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். அதற்கு முன்னரே நாம் அவர்களுக்குத் தண்டனைக் கொடுக்க நினைப்பதும் ஏற்புடையதல்ல.

இந்த 'பெயிண்ட்'  வீசும் கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும்! வன்முறையாளர்கள் கையில் எடுத்தாலும் அது குற்ற தான். அதே போல ஆன்மீகவாதிகள் கையில் எடுத்தாலும் அது குற்றம் தான்! 

நெற்றிகண் திறப்பினும் குற்றம் குற்றமே!


Saturday 16 July 2022

குறைவான காய்கறிகளா?

 

மலேசியர்களின் உணவு பழக்க வழக்கங்கள் மிகவும் கீழ் நோக்கிச் சென்றுக் கொண்டிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியதாகவே தோன்றுகிறது.

அதாவது  மலேசியர்களில் 95% விழுக்காட்டினர்  காய்கறிகளைச் சாப்பிடுவதில் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை  என்பதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டிருப்பதாக "வணக்கம் மலேசியா" இணையதளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

காய்கறிகள் சாப்பிடுவதே கேவலம் என்கிற மனப்பான்மையில் தான் இன்று நம்மில் பலர் இருக்கிறோம்.  இறைச்சி சாப்பிடுவதில் தான் உடலுக்கு நல்ல பலம் கிடைக்கும் என்பதாக நினைத்துக் கொள்கிறோம்.

சரி அப்படியாகவே இருக்கட்டும்.  காய்கறிகளையும் சமமான அளவிலாவது  சாப்பிட வேண்டும் என்கிற அறிவு கூட இல்லாமல் இருக்கிறோமே அது  தான் நம்மை கவலைப்பட வைக்கிறது.   இறைச்சி சாப்பிடும் போது, போனால் போகிறது, என்று கொஞ்சம் காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாமே! ஒவ்வொரு  நாளும் ஏதோ ஒருவகைக் காய்கறிகளைச் சேர்த்துக் கொள்வதால் உடம்புக்கு நல்லது தானே.

இன்றைய தாய்மார்களுக்கே காய்கறிகளைக் கண்டால் நடுக்கம்  ஏற்படுகிறது என்றால் அவர்களின் பிள்ளை வளர்ப்பு எப்படி இருக்கும்? சமீபத்தில் கோவிட்-19 தீவிரமாக இருந்த காலத்தில் தாய்மார்கள் குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவதில் என்ன பாடுபட்டிருப்பார்கள் என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

ஒரு சில தாய்மார்கள் "இறைச்சி இல்லேன்னா என் பிள்ள சோறே சாப்பிட மாட்டேன் என்கிறான்!" என்று பெருமையடிப்பதைப் பார்த்திருக்கிறோம்! என்ன சார் கொடுமை! குழந்தைகளுக்கு ஏற்பட்ட துயரைத்தைப்  பாருங்கள்! வயதானவர்களுக்கு வருகின்ற வியாதிகள் எல்லாம் இப்போதே குழந்தைகளுக்கும் வர ஆரம்பித்துவிட்டன என்பது சோகம். தவறான உணவு முறைகளால் குழந்தைகள் பாவம்! உடல் பெருத்து எந்த ஒரு பயிற்சியும் செய்ய முடியாமல் கைப்பேசிகளை வைத்துக் கொண்டு அங்கும் இங்கும் நகர முடியாமல் 'கேம்' விளையாடிக் கொண்டிருப்பது மிக மிக சோகம்.

இது பற்றி துணை சுகாதார அமைச்சர் என்ன கூறுகிறார் பாருங்கள்: "நாட்டில் பெரும்பாலானவர்களுக்கு ஈரலில் கொழுப்பு சேர்வது,  இருதயக் கோளாறு,  சிறுநீரகக் கோளாறு போன்ற நோய்களுக்குத் தவறான உணவு முறைகளே காரணம்" என்கிறார் அமைச்சர்.

நமது உணவு முறைகள் நமக்குத் தெரியாதா என்ன?  பல பல ஆண்டுகள்  நாம் அதிகமாக காய்கறிகளைத்தான் உண்டு வந்தோம். அப்போது இல்லாத வியாதிகள் எல்லாம் இப்போது எங்கிருந்து வந்தன?  பெரியவர்களுக்கு ஏற்படுகின்ற வியாதிகள் எல்லாம் குழந்தைகளை  இப்போது தாக்குகின்றன அது ஏன் என்பதையாவது நாம் சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா?

இறைச்சி சாப்பிடுவதைத் தவிர்க்க முடியவில்லை என்பது உண்மை தான். அதே சமயத்தில் காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று தான் சொல்லுகிறோம். பாதி இறைச்சி என்றால் பாதி காய்கறிகள் அதுவே நல்லது. பிள்ளைகளுக்கும் அதையே சொல்லிக் கொடுங்கள். முடிந்தால் காய்கறி உணவுகளுக்கே முக்கியத்துவம் கொடுங்கள்.

காய்கறி உணவே சிறப்பு வாய்ந்தது!

Friday 15 July 2022

முன்னேறுவது போட்டியல்ல!

வாழ்க்கையில் முன்னேற நினைப்பது என்பது யாருக்கும் போட்டியல்ல!

நாம் முன்னேற நினைக்கிறோம். அதுவும் குறிப்பாக பொருளாதார ரீதியில் பின் தங்கியிருக்கிறோம். அதனால் நாம் முன்னேற நினைப்பது யாருக்கும் இடைஞ்சல் அல்ல. நமது முன்னேற்றம் நமது கையில். அதை மட்டும் பிடித்துக் கொண்டால் போதும். நாம் முன்னேறுவதை யாராலும் தடுக்க முடியாது.

வாழ்க்கையில் முன்னேற்றம் காணுவது ஒவ்வொரு மனிதனுக்கும் தேவை. மிக உயர்ந்த நிலையில் இருக்கும் ஒரு மனிதன் கூட 'அடுத்த இலக்கு என்ன?'  என்று தான் சிந்திக்கிறான். ஒரே காரணம் தான். மேலே உள்ளவன் கீழே விழ தயாராக இல்லை.

ஆனால் கீழ் நிலையில் இருக்கும் ஒருவனுக்கு அடுத்த படி என்ன என்கிற எண்ண ஓட்டம் எப்போதும் இருக்க வேண்டும்.  காரணம் யாரும் நமக்குப் பாதை போட்டு வைக்கவில்லை. அதனால் நாமே தான் பாதை போட வேண்டும்.  அது முன்னேற்றப் பாதையாக இருக்க வேண்டும். அந்த பாதையில் நமது ஆர்வத்தைக் காட்ட வேண்டும். அது தான் வழி. தேர்ந்தெடுத்த விட்டோம். தொடர்ந்து அந்த வழியிலேயே பயணிப்போம்.

மிகவும் ஏழ்மை சூழலிலிருந்து நம்மில்  பலர் வந்திருக்கிறோம். ஒரு சிலருக்குக் கல்வி சரியாக அமைந்தது. அதுவே அவர்களுக்கு ஓரளவு அடுத்த கட்ட வளர்ச்சிக்கு வாய்ப்பாக அமைந்தது. ஆனாலும் பொருளாதாரம் என்று வரும் போது அவர்கள் வெற்றியாளர்கள் என்று கருத முடியவில்லை.

நாம் என்ன தான் கல்வியில் ஓரளவு படித்த சமூகம் என்று பெயர் எடுத்தாலும் பொருளாதார முன்னேற்றம் மட்டுமே நம்மை உயர்த்திக் காட்டும்.

பள்ளிகளில் படிக்கின்ற வாய்ப்பே கிடைக்காத பலர் பொருளாதார ரீதியில் வெற்றி பெற்றிருக்கின்றனர். நண்பர் ஒருவர் முதலில் தையற் தொழிலில் இருந்தார். அதன் மூலம் கிடைத்த பணத்தை மூலதனமாகக் கொண்டு சொந்தமாக மளிகைக்கடை ஒன்றினைத்திறந்தார். அதன் பின்னர் அவர் வாழ்க்கையில் கிடுகிடு முன்னேற்றம். இப்போது முன்னேற்றம் கண்ட மனிதராக மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார். அவர் ஓரு முன்னாள் தோட்டத் தொழிலாளி என்பதை மறக்க வேண்டாம்.

நாம் முன்னேற நினைப்பதில் யாரும் நமக்குத் தடையாக இருக்கப் போவதில்லை. இந்த நிலையில் நாம் ஏன் பாவப்பட்ட ஜென்மமாக வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்?

பெரிய சாதனைகளைப்பற்றிய எண்ணம் எதுவுமில்லை என்றாலும்  நம்மால் முடிந்த, நமது வருமானத்திற்கு ஏற்ப நமது அடுத்தக்கட்ட நகர்வு இருக்க வேண்டும். ஒன்று: நமது பிள்ளைகளைக் கல்வியில் உயர்த்த வேண்டும். அதில் எந்த சமரசமும் இல்லை. அடுத்து சொந்த வீடு இருக்க வேண்டும்.  இதைச் செய்தாலே அதுவே பெரும் சாதனை. சொந்த வீடு இருந்தாலே அதுவே பெரும் வெற்றி தான்.

பிள்ளைகளின் கல்வி, சொந்த வீடு என்பதெல்லாம் நல்ல முன்னேற்றம் தான்.  நாம் யாருடனும் போட்டி போடவில்லை.  அது நமது தேவை. அதற்காக யாரும் வருத்தப்படப் போவதில்லை. யாரும் பொறாமைப்படப் போவதில்லை.

நமது முன்னேற்ற நமது கையில்!

Thursday 14 July 2022

கடும் தண்டனை தேவை!!

 

சமையல் எண்ணெய் இல்லையென்றால் சமையலறையில் வேலை இல்லை!

பாதிக்கப்படுவது குடும்பங்கள் மட்டும் அல்ல. சிறு சிறு வியாபாரங்களில் ஈடுபட்டிருக்கும்  நடைபாதை கடைகள்,  சிறிய, பெரிய, நடத்தர உணவகங்கள்  - இப்படி எல்லாமே பெரிய அளவில் பாதிக்கப்படும்.

இவர்கள் பெரும்பாலும் பயன்படுத்துவது பிளாஸ்டிக் பைகளில் விற்கப்படும் இந்த எண்ணெய் மட்டும் தான். நமது ஏழைக் குடும்பங்களிலும் இந்த   எண்ணெய் தான் பெரும்பாலும் பயன்பாட்டில் உள்ளது.  அது மட்டும் அல்ல சமீப காலங்களில் விலை உயர்ந்த எண்ணெய்கள் பெரும் பெரும் கடைகளில் கிடைக்காத போது பிளாஸ்டிக் பைகளில் விறகப்படும்  இந்த  எண்ணெய் தான் அனைவராலும் பயன்படுத்தப்பட்டது. இன்றைய நிலையில் எது கிடைக்கிறதோ அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் தான் நாம் இருக்கிறோம்.

ஆனாலும் இந்த வகை எண்ணெயே பெரும்பாலும் பயன்பாட்டில் இருப்பதால் - ஏழைகளின் தோழனாக இருப்பதால் - அரசாங்கம் முடிந்தவரை அதன் விலையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. அரசாங்கத்தின் உதவித்தொகையோடு  குறைந்தவிலையில் பொது மக்களுக்கு  வழக்கம் போல கடைகளின் மூலம் விற்கப்படுகிறது.

மக்களை ஏமாற்றும் கடைக்காரர்கள் எல்லாக் காலங்களிலும் உண்டு. ஒரு சில வியாபாரிகள்  மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்வது நமக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை.  

ந்மக்குத் தெரிந்தது எல்லாம்  மக்களை ஏமாற்றும் இந்த வியாபாரிகள் கடுமையாகத் தண்டிக்கப்படுவது தான் சரியான வழி. சமீபத்தில் மலாக்காவில் ஒரு வியாபாரி  அகப்பட்டிருக்கிறார். அரசாங்கத்தின் உதவித்தொகையோடு கிடைக்கும் இந்த எண்ணெயை ஒரு வெள்ளி கூடுதலாக வேறு வியாபாரிகளுக்கும்  அவர் விற்றிருக்கிறார்.

இன்னும் ஒரு சில வியாபாரிகள் பக்கத்து  நாடுகளுக்கும் இப்படி குறைவான விலைக்கு விற்கப்படும் இந்த எண்ணெயை,  விற்பனைச்  செய்கிறார்கள். பார்க்கப்போனால் இது பல ஆண்டுகளாக நடைபெறும் வியாபாரமாகவே தெரிகிறது!  இப்போது நமக்கே பற்றாக்குறை என்பதால்  கொஞ்சம் கெடுபிடியாக இருக்கிறார்கள், அவ்வளவு தான்!

எது எப்படியோ இதற்கு முன் என்ன நடந்ததோ அப்போது அது பற்றி நாம் கவலைப்படவில்லை. ஆனால் இப்போது அப்படிச் செய்வதை நம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நமக்கே பற்றாக்குறை என்னும் போது அதனை எப்படிப்  பக்கத்து நாடுகளுக்குக் கடத்தல் செய்ய முடியும் என்பது சரியான கேள்வி.  அதுவும் அரசாங்கத்தின் உதவித்தொகையோடு உள்நாட்டு மக்களுக்காக  விற்கப்படும் ஒரு பொருளை இப்படிப் பக்கத்து நாடுகளுக்கு அதிக விலையில் விற்பது  தேசத்துரோகம் தானே! அதற்கு மேல் பேச ஒன்றுமில்லை!  அது அதிகாரிகள் சம்பந்தப்பட்டது!

சமையல் எண்ணெய்க்கு அரசாங்கம் ஒரு தீர்வைக் கண்டிருக்கிறது. ஏழை முதல் பணக்காரர் வரை சம்பந்தப்பட்டது சமையல் எண்ணெய். அதன் விலை கூடாமல் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். சாக்குப்போக்கு சொல்லுவதை எதனையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

கடைசியாக கடத்தல் செய்பவர்கள்,  விலை ஏற்றத்துக்காக  பதுக்கல் செய்பவர்கள், விலையை ஏற்றி வியாபாரம் செய்பவர்கள் - இவர்கள் கண்டிக்கப்பட வேண்டும்.   கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும்.

Wednesday 13 July 2022

உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்!

 

          
இதைத்தான் நாம் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறோம்.

நாட்டில் பிரச்சனைகள் ஏற்படும் போது  பிரச்சனைகளின் முன்னணியில் நாம் தான் நிற்கிறோம்.

மேலே படத்தில் காணப்படும் திருமதி கிரேஸ் எட்வர்ட்   தான் வசித்து வந்த வீட்டின்  வாடகையைக் கட்ட முடியாமல், தனது குடும்பத்தோடு, வெளியேற்றபட்டிருக்கிறார். கடந்த சில தினங்களாக அவரும் அவரது கணவர், ஆறு வயது மகன் மூவரும் தங்களது பழைய காரில்  இரவு நேரத்தைக் கழித்து வருகின்றனர்.

கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விபத்தினால்  நீண்ட நேரம் வேலை செய்ய முடியாத நிலை. அவரின் வருமானம்  குடும்பத்திற்குப் போதுமானதாக இல்லை.  திருமதி கிரேஸ் அவர்களின் தாயார் மருத்துவமனையில் இருப்பதால் அவரால் வேலைக்குப் போக முடியவில்லை.  இப்போது அவரது மகனையும்  பள்ளிக்கு அனுப்பமுடியவில்லை.   சாப்பாட்டுக்கும் வழியில்லை. 

இப்போது அவரின் நிலைமை என்ன? அவரே சொல்லுகிறார்:  "இப்படி ஒரு நிலை எங்களுக்கு  ஏற்படும்  என்று கற்பனை கூட செய்ததில்லை" என்று குமுறுகிறார் கிரேஸ்.

இதைத்தான் நமது மக்களுக்கு அடிக்கடி ஞாபகப்படுத்துகிறோம்.  நிலைமை ஒரே மாதிரி எப்போதும் இருப்பதில்லை. ஏற்றத்தாழ்வுகள் இல்லாத வாழ்க்கை இல்லை. ஏற்றம் இருக்கும் போது கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டும். அப்போது தான் தாழ்வு ஏற்படும் போது அதனைச் சரி செய்ய முடியும். ஆனால் நாம் பார்ப்பதென்ன? நம்மிடம் அடக்கம் என்பதே இல்லை. பணத்தின் மீது நமக்கு எப்போதுமே அலட்சியம். 'எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம்' என்கிற அலட்சியம் நம் சமுதாயத்தினரிடையே மிக மிக அதிகம்.  அதுவும் குறிப்பாக தமிழர்களிடம்.  தேவையற்ற முறையில் பணத்தை வீணடிப்பதில் நாம் தான் முன்னணியில் நிற்கிறோம்.

ஒருவன் செலவு செய்வதில் சிக்கனம்  காட்டினால் அவனைக் கஞ்சன் என்று  முத்திரைக் குத்துகிறோம். அது அவனது பணம்.  அவனுக்கு என்ன தேவையோ  அப்படியே அவன் செலவு செய்துவிட்டுப் போகட்டும் என்று நாம் இருப்பதில்லை. அவனை ஏன் கஞ்சன் என்று சொல்ல வேண்டும்?  அதைவிட சிக்கனக்காரன் என்று சொல்லலாமே!

ஒன்றை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். சிக்கனம் உள்ளவன் தான் தனது பிள்ளைகளைப் பட்டதாரியாக்குகிறான். மருத்துவர் ஆக்குகிறான்.  என்சியனர் ஆக்குகிறான். நல்ல கல்வியைக் கொடுக்கிறான். சொந்த வீடு வைத்திருக்கிறான். சொந்தக் கார் வைத்திருக்கிறான். இவைகளெல்லாம் சிக்கனத்தால் நாம் பெருகின்ற ஆதாயங்கள்.

நாம் மீண்டும் மீண்டும் சொல்லுவதெல்லாம் பணம் உங்களுடையது. அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை நீங்கள் தான்  முடிவு செய்ய வேண்டும். நீங்கள் சிரமத்தை  எதிர்நோக்கும் போது  மற்றவர்கள் உதவுவார்கள் என்று எதிர்ப்பார்க்க முடியாது.

திருமதி Grace Edward குடும்பத்தினருக்கு உதவ வேண்டும் என்று நீங்கள் நினைத்தால்:   Send a WhatsApp Message to Free Malaysia Today's  Helpline at 019-3899839. Please do not call.

வருகின்ற காலங்களில் நம்மையே நாம் காப்பாற்றிக் கொள்ள அனைத்தையும் செய்வோம். 

                                                                                                        

Tuesday 12 July 2022

என்ன மாற்றத்தைக் கொண்டுவரும்?

 

                                            மலேசிய இந்தியர் பெருந்திட்ட வரைவு

மலேசிய இந்தியர் பெருந்திட்ட வரைவு பற்றியான பேச்சுக்கள்  மீண்டும் ஆரம்பித்திருக்கின்றன!

அதனை ஆரம்பித்துவைத்தவர் முன்னாள் ம.இ.கா. தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம்.

இத்தனை ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்ட இந்தப் பெருந்திட்டத்தை இப்போது தூசு தட்டி மீண்டும் மக்கள் மன்றத்திற்குக் கொண்டு வந்ததில்  நமக்கும் மகிழ்ச்சியே!

ஆனாலும் ஒரு வகையில் நமக்கு அது மகிழ்ச்சியைத் தரவில்லை. இது ம.இ.கா.வினரால் கொண்டு வரப்பட்ட ஒரு திட்டம். இத்திட்டத்தைப்பற்றி முன்னாள் தலைவர் தான்  மீண்டும் பேச ஆரம்பித்திருக்கிறார்.  அவர் பேசிய பின்னர் தான் இன்றைய ம.இ.கா. தலைவர் பேச ஆரம்பித்திருக்கிறார்!

அப்படியென்றால் இதுநாள் வரை இந்த பெருந்திட்டம் முன்னாள் தலைவர் கையில் தான் இருந்ததோ என்று நினைக்க வேண்டி உள்ளது. சொல்ல முடியாது! அங்கு என்ன நடக்கிறது என்பது பரம ரகசியம்!

இத்தனை ஆண்டுகள் எதைப்பற்றியும் கவலைப்படாதவர்கள் இப்போது அடுத்த பொதுத் தேர்தலை எதிர்ப்பார்க்கின்ற காலகட்டத்தில் அப்படி என்ன இந்தியர்கள் மேல் திடீர் பாசம்? இதற்கு முன்னர் யார் இவர்களைத் தடுத்தது?

நாம் சொல்ல வருவது எல்லாம் இவர்கள் ஆளுங்கட்சியில் அமைச்சர்களாக இருக்கிறார்கள்; செனட்டர்களாக இருக்கிறார்கள்; பல்வேறு பதவிகளில் அரசாங்கத்தைப் பிரதிநிதிக்கிறார்கள். ஆனாலும் 'நாங்கள் இந்தியர்களைப் பிரதிநிதிக்கவில்லை!'  என்பது போல நடந்து கொள்கிறார்கள்!

ஒரு நாள் தீடீரென்று 'நாங்கள் தான் இந்தியர்களின் காவலன்!' என்று சொந்தம் கொண்டாடுகிறார்கள்!

அதனால் தான் நாம் அவர்களைப் பார்த்து கேட்கின்ற கேள்வி: ஓர் சிறப்பான இந்தியர்களின் முன்னேற்றத்திற்காக ஒரு திட்டத்தை உங்கள் கையில் வைத்திருக்கிறீர்கள். அதனை வைத்துக் கொண்டு இதுவரை என்ன செய்தீர்கள் என்பது தான் கேள்வி!

மக்கள் ம.இ.கா.வினர் மீது வைக்கும் குற்றச்சாட்டு: அவர்களுக்குப் பதவி வேண்டும். செனட்டர் ஆக வேண்டும்.அரசு சார்பு நிறுவனங்களில்  பதவிகள் வேண்டும். டத்தோ வேண்டும்.  டத்தோஸ்ரீ வேண்டும். டான்ஸ்ரீ வேண்டும்.  இது தான் இவர்களின் வாழ்நாள் இலட்சியம் என்பது போல நடந்து கொள்கிறார்கள்!

நீங்கள் பேசுவதால் எந்தப் பயனுமில்லை. இந்த பெருந்திட்டம் மூலம் என்ன சாதித்திருக்கிறீர்கள் என்பதை மட்டும் மக்களுக்கு அறிவியுங்கள். அது போதும்!

Monday 11 July 2022

வாழ்த்துகிறோம்!

 

               நன்றி: மக்கள் ஓசை

நாம் ம.இ.கா.வினருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.

குறிப்பாக ம.இ.கா.வின் கல்விக்குழுத் தலைவர் டத்தோ நெல்சன் ரங்கநாதன் அவர்கள் செய்த நல்ல செயல்களுக்காகப் பாராட்டப்பட வேண்டியவர்.

காஜாங் இடைநிலைப் பள்ளி ஒன்றில் தமிழ் இலக்கியப்பாட போதிப்பு நிறுத்தப்பட்டதாக சமீப காலங்களில் செய்திகள் வெளியாயின. அது சம்பந்தமாக உலுலங்காட் மாவட்ட கல்வி இயக்குநரைச் சந்தித்து அந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வைக் கண்டிருக்கிறார் டத்தோ நெல்சன் அவர்கள்.

இந்த ஒரு பள்ளியோடு நின்றுவிடாமல் மேலும் சிலாங்கூர் மாநிலத்தில்  வேறு ஏதேனும் பள்ளிகளில் தமிழ்ப்பாடங்களோ அல்லது தமிழ் இலக்கியப் பாடங்களோ நிறுத்தப்பட்டிருக்கின்றனவா அல்லது மறுக்கப் பட்டிருக்கின்றனவா  என்பதையும் அறிந்து அதற்கான நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம்.

ம.இ.கா.வைப் பொறுத்தவரை  அதன் கிளைகளுக்குப் பஞ்சமில்லை. எல்லா இடங்களிலும் கிளைகள் இருக்கின்றன.  எந்த ஒரு தகவலையும் மிக விரைவில் பெற்று விட முடியும். டத்தோ அவர்கள் கொஞ்சம் மெனக்கட்டு  இந்த தகவல்களைப் பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலாங்கூர் மாநிலத்தில் எல்லாப் பள்ளிகளிலும் தமிழ் மொழிப்பாடங்கள் வெற்றிகரமாக  நடைபெறுகின்றன என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. அந்த அளவுக்குத் தலைமை ஆசிரியர்கள் பெருந்தன்மை உள்ளவர்களாக இருந்தால்  நமக்கும் பெருமையே.

கல்விக்குழுத் தலைவர் டத்தோ நெல்சன் அவர்கள் கல்விக்குழுத் தலைவர் என்கிற முறையில் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் தமிழ் மொழியின் நிலை என்ன  என்பதை அறிந்திருப்பது அவரது கடமை. காரணம் அவர்தான் ஆளுங்கட்சியின் இந்தியர் பிரிவின் கல்விக்குழுவின்  பிரதிநிதியாக இருப்பவர்.  எல்லாப் பள்ளிகளிலும் தமிழ் மொழி, இலக்கியம் கற்பிக்கப்பட வேண்டும்  என்பதை  அவர் தான் உறுதி செய்ய வேண்டும்.

பத்திரிக்கையில் செய்தி வரவேண்டும், மக்கள் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் அதன் பின்னர் தான் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்  என்பது இந்தக் கால நடைமுறைக்கு ஏற்புடையதல்ல.  கல்விக்கென்று ஒரு குழு இருக்கும் போது  அவர்கள் தான் கல்வி தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும். மெட் ரிகுலேஷன், பலகலைக்கழகம் போன்ற அனைத்துப் பிரச்சனைகளுக்கும் அவர்களால் தான் தீர்வு காண  முடியும். அவர்களால் தான் சம்பந்தப்பட்டவர்களைச் சந்தித்துப் பேச முடியும். தீர்வு காணும் இடத்தில் நீங்கள் தான் இருக்கிறீர்கள். ஆளுங்கட்சியில் இருப்பதற்கு அது தானே காரணம்!

டத்தோ நெல்சன் அவர்கள் இந்தியர்கள் எதிர்நோக்கும் கல்வி பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் இடத்தில் இருக்கிறார். 'எங்களை வந்து பார்த்தால் தான் தீர்வு காண முடியும்' என்கிற மனப்போக்கு' அவசியமற்றது. அது உங்களுக்கு பலன் அளிக்காது.

டத்தோ நெல்சன் அவர்களும் ம.இ.கா.வும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற வாழ்த்துகிறேன்!

Sunday 10 July 2022

மீண்டும் கொரோனா!

 


நம் நாட்டில் மீண்டும் கோரோனா தொற்று தீவிரமாக மக்களைத்  தாக்கத் தொடங்கியிருப்பதாக சுகாதார அமைச்சு எச்சரித்திருக்கிறது.

சுகாதார அமைச்சரின் அறிவிப்பின் படி மலேசியர்கள் பல இலட்சம் பேர் தொற்று நோய்க்கான தடுப்பூசி இன்னும் போடாமலிருக்கின்றனர். முதல் ஊசி போடாதவர்கள் பல இலட்சம் என்றால் இரண்டாவது ஊசியும் போடாதவர்கள் இலட்சக்கணக்கில் இருக்கின்றனர்!

இந்த அளவுக்குத் தடுப்பூசி போடவில்லை என்றால் அது யாருடைய தவறாக இருக்க முடியும்? நிச்சயமாக சுகாதார அமைச்சின் தவறாக இருக்க முடியாது. ஒரு சிலர் 'நாங்கள் போடமாட்டோம்!' என்று பிடிவாதம் பிடித்தனர். ஒரு சிலர் இந்த ஊசிகளினால் 'எங்களுக்கு ஆபத்துவரும்' என்று போட மறுத்தனர். ஒரு சிலருக்குப் போக்குவரத்து பிரச்சனை அதனால் ஊசி போட முடியாத சூழல். ஒரு சிலர் இந்த மருந்துகளை 'ஹரம்'  என்று சொல்லி போட மறுத்துவிட்டனர். இப்படிப் பல காரணங்கள்!

அவர்கள் போட மறுத்தால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் சுகாதார அமைச்சு முக்கியமானவர்களை, மக்களுடன் தொடர்பு உள்ளவர்களை, போட வைத்தது பாராட்டத்தக்கது.  ஆசிரியர்கள், அரசாங்கத்தில் வேலை செய்பவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டிருக்கின்றனர். தனியார் துறைகளில் வேலை செய்பவர்களை அந்த அந்த நிறுவனங்கள் தடுப்பூசி போட வைத்து விட்டனர். இவைகள் எல்லாமே பாராட்டுக்குரிய செயல்கள் தாம்.

இந்த அளவுக்கு மலேசியர்கள் தடுப்பூசி போட்டும் இன்னும் பல இலட்சம் பேர்  போடாமல் இருக்கின்றனர் என்பதை அறியும் போது கவலையளிக்கிறது. 

இப்போதெல்லாம் பலவிதமான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தடுப்பூசி தேவை என்பதாக ஒரு தரப்பும் தேவை இல்லை என்பதாக ஒரு தரப்பும் கூறுகின்றன.  பொது மக்களாகிய நமக்கு  எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. நம்மைப் பொறுத்தவரை சுகாதார அமைச்சு சொல்வதே சரி என்று எடுத்துக் கொள்கிறோம். அது தான் சரி என்பதே நமது முடிவு.

அதற்கும் ஒரு காரணம் உண்டு. இந்தத் தொற்று ஏற்பட்ட காலகட்டத்தில் மக்களின் மரண எண்ணிக்கை ஒரு பக்கம் இருக்க மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ உதவியாளர்கள் - இப்படிப்
 பலர் உயிர் இழந்திருக்கின்றனர்.  தடுப்பூசி தேவை இல்லையென்றால் இவர்கள் சாக வேண்டிய அவசியமில்லை. நேரங்காலம் இல்லாமல் மக்களுக்குச் சேவை செய்திருக்கின்றனர். அதனைக் குறைத்து மதிப்பிட அவசியமில்லை.

நாம் சொல்ல வருவதெல்லாம் இன்னும் தடுப்பூசி போடாதவர்கள் இந்த முறை வாய்ப்புக் கிடைக்கிறது. தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்பது தான்.  கொரோனாவின் வீரியத்தை குறைத்து மதிப்பிடாதீர்கள்!

Saturday 9 July 2022

வாக்களிப்பது அவசியம்!

 

இன்னும் ஓர் ஆண்டுக்குள் அடுத்த 15-வது பொதுத் தேர்தல் வருவதற்கான சூழல் பிரகாசமாகத் தெரிகிறது.

வந்தாலும் வராவிட்டாலும் ஒன்றை மட்டும் நான் வலியுறுத்துகிறேன். வாக்களிக்கும் தகுதியை நீங்கள் பெற்றிருந்தால் எந்த ஒரு காரணத்தையும் சொல்லாமல் நீங்கள் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று   வாக்களிப்பது மிக மிக அவசியம்.

நம்மிடையே நிறைய மனக்குறைகள் உண்டு. குறிப்பாக இன்றைய நிலையில் விலைவாசிகள் ஏற்றம், விவசாயம் செய்கின்ற நிலங்களை அபகரித்தல், வேலை வாய்ப்புக்களில் புறக்கணிப்பு, இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் போதிப்பதில் குறைபாடுகள் மற்றபடி அடையாளக்கார்டு, குடியுரிமை போன்ற பிரச்சனைகள் - இப்படிப் பல பிரச்சனைகள் நம்மிடையே இருக்கின்றன.

இது போன்ற பிரச்சனைகள், நாம் விழிப்பாய் இல்லாவிட்டால், தொடர்ந்து கொண்டே இருக்கும். நம்மிடையையேயும் குறைபாடுகள் உண்டு. 

ஆனால் நாம் மிக எளிதாக அரசாங்கத்தைக் குறை கூறுகிறோம். அல்லது நமது தலைவர்களைக் குறை கூறுகிறோம். நமது குறைகள் நமது கண்களுக்குத் தெரிவதில்லை.

நம்மிடையே குறைபாடுகளை வைத்துக் கொண்டு "தேர்தல் வரட்டும்! நான் ஓட்டுப்போடப் போவதில்லை!" என்று சவடால் தனம் பண்ணுவதில் யாருக்கும் பயனில்லை.

வாக்குச்சீட்டு என்பது நமது ஜனநாயக உரிமை. வாக்களிப்பது நமது ஜனநாயகக் கடமை. ஜனநாயகத்தில் குறைபாடுகள் இருக்கலாம். இருக்கத்தான் செய்யும்.  அதற்காக வாக்களிக்க மறுப்பது மன்னிக்க முடியாத துரோகம்.

உங்கள் தொகுதியில் தேர்தலில் நிற்பவர்கள் அயோக்கியர்கள் என்று பெயர் எடுத்திருக்கலாம். அதில் ஏதாவது யோக்கியர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு நீங்கள் வாக்களிக்கலாம். ஒரு சிலர் கட்சியின் சின்னத்தை வைத்து வாக்களிப்பார்கள். அப்படியும் செய்யலாம். ஏதோ ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

தேர்தலைப் புறக்கணிக்கிறோம் என்று சொல்லி வாக்களிக்காமல் இருப்பது நிறைய அயோக்கியர்கள் நம்மை ஆளுகின்ற நிலை ஏற்பட்டுவிடும். அவர்களால் யாருக்கும் நன்மை இல்லை. தங்களது சொந்த நலனில் மட்டும் தான் அவர்கள் அக்கறை காட்டுபவர்களாக இருப்பார்கள்!

நல்லவர்கள் நாட்டை ஆள வேண்டும். நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

நல்லது நடக்க வேண்டும் என்றால் நாம் அவசியம் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்!

Friday 8 July 2022

அலட்சியம் வேண்டாம்!

 

பெருநாள் காலம். நீண்ட விடுமுறை. சாலைகளில் எண்ணிக்கை அடங்கா ஊர்திகள்.

இன்னும் ஓரிரு தினங்களுக்கு நாட்டின் நிலைமை இப்படித்தான் இருக்கும். முதலில் பட்டணப்புறங்களிலிருந்து கிராமப்புறங்களுக்கான படையெடுப்பு! அதன் பின்னர் மீண்டும் வீடு திரும்புதல்!

இங்கு ஆபத்தான பயணம் என்றால் போகும் போதும் வரும் போதும் தான். இந்த நேரத்தில் தான் பெரும்பாலான விபத்துகள் நடக்கின்றன. அதிலும் ஒவ்வொரு ஆண்டும் விபத்துகள் பெருகிக் கொண்டு போகின்றன.

கடந்த இரண்டு மூன்று ஆண்டுகள் கொரோனாவின் பாதிப்பினால் பெரும்பாலானோர் தங்களின் கிராமங்களுக்குப் போக இயலவில்லை.  உற்றார் உறவினர்களைப் பார்க்க முடியவில்லை. பெற்றோர்களைப் பார்க்க முடியவில்லை. அண்ணன் தம்பிகளை, அக்காள் தங்கச்சிகளைப் பார்க்க முடியவில்லை. மனதிலே ஏக்கம்.  

இந்த ஆண்டு கொஞ்சம் தளர்வு ஏற்பட்டிருக்கிறது. அதனால் மக்களின் படையெடுப்பு அதிகமாகத்தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை. நமது அறிவுரை எல்லாம் உங்கள் எதிர்பார்ப்பில் தவறில்லை. உறவுகளைச் சந்திப்பதில் ஏகப்பட்ட மகிழ்ச்சி என்பதும் உண்மைதான்.

ஆனால் அதற்காக சாலைகளில் நிலைமை நாம் எதிர்பார்ப்பது போல அமைவதில்லை. பொறுப்போடு பயன்படுத்துபவர்கள் நிறையவே இருக்கின்றார்கள். ஒரு சிலர் பொறுப்பற்ற முறையில் சாலைகளைப் பயன்படுத்துவதால் தான் விபத்துகள் ஏற்படுகின்றன. எல்லாவற்றிலும் அவசரம் காட்டுபவர்கள் இருக்கின்றனர்.  சாலைகளில் உள்ள வாகனங்களைப் பார்க்கும் போது அவசரம் என்பது எந்த வகையிலும் நியாயமாக இருக்காது.

இந்த முறை இன்னொரு ஆபத்தையும் கிராமங்களுக்குக் கொண்டு செல்கிறோம். ஆமாம், கோரானாவைத் தவிர்க்க முடியவில்லை. கூடவே அதனையும் கூட்டிச் செல்கிறோம்! சென்ற பெருநாள் காலத்திற்குப் பின்னர் கோரோனா அதிகரித்திருக்கிறது என்கிறது சுகாதார அமைச்சு. இந்த முறையும் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்க வாய்ப்பிருக்கிறது.

என்ன செய்வது? பெருநாட்களைத் தவிர்க்க முடியாது. போய்த்தான் ஆக வேண்டும். உறவுகளைப் பார்க்க வேண்டும். ஆனால் உங்கள் வேகத்தைக் கட்டுப்படுத்துங்கள்  பொறுமையைக் கடைப்பிடியுங்கள். வாகனங்களைச் செலுத்தும் போதும் பொறுமைத் தேவைப்படுகிறது. உங்கள் குழந்தை குட்டிகளோடு பயணம் செய்கிறீர்கள். மகிழ்ச்சியான பயணம். மகிழ்ச்சியாகவே அமையட்டும். கோரோனாவும் கூட வருகிறது என்கிற ஞாபகம் இருக்கட்டும். முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதார அமைச்சு சொன்னால் அதனைக் கேட்டு அதன்படி நடந்து கொள்ளுங்கள். சமூக  இடைவெளியைக் கடைப்பிடியுங்கள் என்றால் அதனையும் செய்யுங்கள். அனைத்தும் நமது நன்மைக்காகத்தான் என்பதைப் புரிந்து கொண்டு செயல்படுங்கள்.

எதிலும் அலட்சியம் காட்ட வேண்டாம். வாகனங்களைச் செலுத்துவதானாலும் சரி, கோரோனா தொற்றை தவிர்க்க வேண்டுமானாலும் சரி  அலட்சியம் வேண்டாம். 

உங்கள் பயணம் சுகமான பயணமாக அமையட்டும்!

Thursday 7 July 2022

ம.இ.கா.வின் நடவடிக்கை தேவை!

 

இன்றைய ஆளும் அரசாங்கத்தில் பங்குப் பெற்றிருக்கும் கட்சிகளில் ஒன்று ம.இ.கா.  ம.இ.கா. இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் கட்சி என்பது நாம் அறிந்தது தான்.

15-வது பொதுத்தேர்தல் என்பது இன்னும்  ஓர்  ஆண்டுக்குள் நடக்கும் என்னும் எதிர்பார்ப்பு இருப்பதால் கட்சிகள் எல்லாம் இப்போதே இயங்க ஆரம்பித்திருக்கின்றன. ம.இ.கா.வும் விதி விலக்கல்ல.

இந்த நேரத்தில் ஆளுங்கட்சி என்னும் முறையில் ம.இ.கா. விடம்  சில கோரிக்கைகள்  நம்மிடம் உண்டு.

ம.இ.கா.வும் தனது கல்விக்குழுவுக்குப் புதியதொரு  தலைவரை நியமித்திருப்பதே அவர்கள் தமிழ்க்கல்வி மீது அக்கறை உள்ளவர்கள்  என்பதாகவே நாம் எடுத்துக் கொள்ளுகிறோம்.

இன்றைய நிலையில் நமது கோரிக்கை இது தான்: நாட்டில் பல்வேறு இடங்களில் தமிழ்ப்பள்ளிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.  இதில் பல பள்ளிகள் பல்வேறு  பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றன.

குறிப்பாக  பல பள்ளிகள் சில மாற்றங்களைச் செய்ய வேண்டிய சூழலில் உள்ளன. கணினி அறைகள் தேவைப்படலாம். இன்னும் சில பள்ளிகள் நீண்ட காலங்கள் இயங்குவதால், ஒரு சில பகுதிகள்,  இடிந்து விழும் நிலையில் உள்ளன.  சில பள்ளிகளில் கழிவறை மாற்றங்கள் செய்ய வேண்டிய நிலை.

அது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம்: புதிய பள்ளிகள் கட்டப்பட்டு விட்டன. ஆனால் அந்த கட்டடங்கள் இன்னும் காலியாகவே வைக்கப்பட்டிருக்கின்றன. காரணம் பயன்படுத்துவதற்கான சான்றிதழ் வெளியாக்கப்படவில்லை! கட்டியவன் பணம் வாங்கிவிட்டான்; கொடுத்தவன் கமிஷன் வாங்கி விட்டான். அவர்கள் தப்பித்தார்கள். படிக்க வேண்டிய குழைந்தைகள் காலி கட்டடத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்!

இன்னும் சில பள்ளிகளில் இடப்பற்றாக்குறையால் கூடுதலாக  கட்டடங்களைக் கட்டிவிட்டு மேலே சொன்ன அதே பிரச்சனை தான். திறக்கப்பட முடியவில்லை! காரணம் சான்றிதழ் இல்லை!

ஒரு சுதந்திர நாட்டில், வளர்ந்து வரும் நாட்டில்,  கல்விக்கு எத்தகைய முக்கியத்துவம் கிடைக்கிறது என்பதை இதனை வைத்தே ஒரு முடிவுக்கு வரலாம். உண்மையைச் சொன்னால் அரசாங்க அதிகாரிகள்  எவ்வளவு அலட்சியமாக நடந்து கொள்கிறார்கள், ஏன் தங்கள் பணிகளில் அலட்சியம் காட்டுகிறார்கள் என்பதை அரசாங்கம் ஆராய வேண்டும்.

இந்த பிரச்சனைகளுக்காகத் தான் ம.இ.கா.வை நாம் நாடுகிறோம். ஆளுங்கட்சியில் உள்ளவர்களின் குரல் தான் இத்தகைய சூழலில் எடுபடும்.

தேர்தலில் உணவுக் கூடைகளை, ஓட்டுக்காக, அன்பளிப்பாகக் கொடுப்பதைவிட இப்படி சில நல்ல காரியங்களைச் செய்தால் நல்ல பெயராவது கிடைக்கும். அதற்கான வாய்ப்புக்களும் வசதிகளும்  ம.இ.கா.வினருக்கு உண்டு. குறுக்கு வழிகளைப் பயன்படுத்தி பெயர் வாங்க நினைக்காமல் நேர்மையான வழிகளில் பெயர் வாங்கப் பாருங்கள்.

இந்தியர்களின் பார்வை இப்போது மாறிவிட்டது.  ம.இ.கா. வினரும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். உங்களின் முன்னற்றத்திற்காக இந்தியர்கள் உழைக்கத் தயாராக இல்லை! இந்தியர்களின் முன்னேற்றத்திற்காக நீங்கள் உழைத்தால் இந்தியர்களும் உங்களுக்கு ஆதரவு தர தயாராக இருக்கிறார்கள்!

உங்களின் அக்கறையைப் பார்ப்போம்!

Wednesday 6 July 2022

நன்றி சொல்லலாம்!

 

இந்திய சமூகம் எல்லாத் துறைகளிலும் விழிப்புணர்ச்சி பெற அத்தோடு குறிப்பாக வியாபாரத்துறைகளில்  முன்னேற்றங்காண அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஓர் அமைப்பு தான்  மித்ரா என்பதை  அறிந்திருக்கிறோம்.

முன்னர் செடிக் எனவும் பின்னர் பக்காத்தானின் குறுகியகால ஆட்சியில் அதன் பெயர் மித்ரா என மாற்றப்பட்டாலும் அதன் பிடி என்னவோ பெரும்பாலும் ம.இ.கா.வின்  உடும்புப்பிடியிலேயே இருந்தது தான்  அதன் வீழ்ச்சிக்குக் காரணம் என்பது பொதுவான மக்களின் அபிப்பிராயம்.

நம் பார்வையில் அது விழ்ச்சி ஆனால்  ம.இ.கா.வினரோ அதனைச் சாதனை என்பார்கள்! அவர்கள் சொல்லுவதையே சொல்லிக் கொண்டு தான் இருப்பார்கள்! மித்ரா வை வைத்து அவர்களும் சில கோடிசுவரர்களை உருவாக்கிவிட்டார்கள்!

பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ இத்தனை ஆண்டுகாலம் ம.இ.கா.வின் கட்டுப்பாட்டில் தான் மித்ரா இருந்து வந்திருக்கிறது.  இப்போது மீண்டும் மித்ரா பற்றியான செய்திகள் வர ஆரம்பித்திருக்கின்றன.

இப்போது வந்திருப்பது கலகலப்பான செய்தி! மித்ரா பாலர் பள்ளிகளின் மேல் ஆர்வத்தைக் காண்பிக்க ஆரம்பித்திருக்கிறது.   பொதுத் தேர்தல் வரப்போகின்ற காலகட்டத்தில் பாலர் பள்ளிகளுக்குப் கொடுக்கப்படுகின்ற மானியங்கள்! இது அவர்களின் தேர்தல் வியூகங்களில்  ஒன்று  என்று சொல்லலாம்!  நாம் கேட்டுக் கொள்வதெல்லாம்  இது மித்ராவின் பணம். அதற்கான கணக்கையாவது முறையாகக் காட்டுங்கள்! அமைச்சு மீது பழி போடாதீர்கள்  என்பது தான்! பாலர் பள்ளிகளின் மீதாவது அக்கறைப் பிறந்திருக்கிறதே அதற்கு ஒரு நன்றி சொல்லுகிறோம்!

ஆனால் மித்ராவின்  தலையாய நோக்கம்  என்பது பாலர்பள்ளிகள் அல்ல! இந்தியர்களை, சிறு வியாபாரிகளை, வியாபாரத்துறையில் பொருளாதார உதவிகள் மூலம் அவர்களை முன்னேற்றங்காண செய்வது தான்.  ம.இ.கா. பெரிய வியாபாரிகளுக்கு மட்டும் பொருள் உதவிகள் செய்து அவர்கள் முன்னேற வைத்தது தான் சாதனை! சிறு வியாபாரிகளை முற்றிலுமாக புறந்ததள்ளி விட்டனர்! புறந்ததள்ளியதில் ம.இ.கா.வினருக்கு பெரும் பங்கு உண்டு.

ஒரு விடயத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. 'இந்தியர்கள் முன்னேற வேண்டும், அதுவும் வியாபாரத்துறையில்'    என்று  நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக கூக்குரலிட்டுக் கொண்டிருக்கும் ம.இ.கா. தலைவர்கள் இந்தியர்களின் முன்னேற்றத்திற்கு எதிராகத்தான் செயல்பட்டிருக்கிறார்களே தவிர ஆதரவாக இருந்ததில்லை! ஆனால் தலைவர்கள் தான்  முன்னேறியிருக்கிறார்கள்!

இன்னும் ஓர் ஆண்டு காலத்திற்குள் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்த இடைப்பட்ட காலத்தில் மித்ரா வேறு என்ன என்ன சாதனைகளைச் செய்யப் போகிறதோ, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

Tuesday 5 July 2022

இது தொடர் கதையா?

 


இன்றைய நிலையில் மக்காவ் மோசடிக் கும்பலாக இருந்தாலும் சரி நமது உள்நாட்டு கந்துவட்டியில் பணம் கொடுக்கும் ஆலோங்காக இருந்தாலுன் சரி - இரு கும்பல்களுமே மிகவும்  துடிதுடிப்போடு செயல்படுகின்றனர்,  புதிய புதிய யுக்திகளைக்  கையாளுகின்றனர்! அவர்களோடு போட்டிப் போட ஆளில்லை!

நாம் ஆலோங்கிடம் 500 வெள்ளி கடன் வாங்கினால் உங்களிடம் குறைந்தபட்சம் 5,00,000 இலட்சம்  வெள்ளியாவது  அவர்கள்  கறந்து விடுவார்கள்! அதற்கான வசதிகள் எல்லாம் அவர்களிடம் உண்டு!

இன்னொரு செய்தியும் உண்டு. ஆலோங்களிடம் நிறையப் பணப்புழக்கம் உண்டு என்று சொன்னால் அது அரசியல்வாதிகளிடமிருந்து வருகின்றன என்று சொல்லப்படுவது உண்டு. அதனால் தான் அவர்கள் மீதான நடவடிக்கைகள் மேம்போக்கானதாகவே இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அது எந்த அளவுக்கு உண்மை என்பது கேள்விக்குறியே!

ஆனால் மக்காவ் மோசடி என்பது அவர்களிடமிருந்து நமக்குப் பணம் வருவதில்லை! நம்மிடமிருந்து பணத்தைக் கறக்க மிக அற்புதமான வழிகளையெல்லாம்  அவர்கள் பயன்படுத்துகின்றனர். வங்கி. காவல்துறை - இவைகள் தான் இவர்களின் வலுவான ஆயுதம்!

இப்போது நமது நாட்டில் பெரும்பாலானோர் அந்த மோசடிக் கும்பலிடமிருந்து தொலைபேசி அழைப்புக்களைப் பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றனர்.   நமது தொலைபேசிகளின் எண்கள் எப்படி அவர்களிடம் போய்ச் சேர்கின்றன என்பதும் புரியாத புதிராகவே இருக்கின்றது.  தனி மனிதர்களின் ரகசியங்களை வைத்துக்கூட வருங்காலங்களில் இவர்கள் மிரட்டி சம்பாதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன! அந்த அளவுக்குத் தொழில்நுட்பம் இவர்களிடம் கைகட்டி சேவகம் செய்கிறது!

நாம் அவர்களை மறந்தாலும் அல்லது புறக்கணித்தாலும் அவர்கள் நம்மை மறப்பதில்லை. தொடர்பை நிறுத்தி விடுவதில்லை! என்றாவது ஒரு நாள் காரியம் ஆகும் என்பதில் நம்பிக்கையோடு இருப்பவர்கள். இப்போதெல்லாம் எனக்கு மாதம் ஒருமுறையாவது அவர்களிடமிருந்து  அழைப்பு வந்துவிடும்! இதில் என்ன ஆச்சரியம் என்றால்   முன்பு எனது வீட்டுத் தொலைபேசிக்கு அழைப்புவரும். சமீபத்தில் டெலிகம் ஊழியர்கள் சில மாற்றங்கள் செய்தனர். அப்போது எனது கைப்பேசி எண்ணை அவர்களிடம் கொடுத்துவிட்டேன். அதன் பின்னர் வீட்டுத் தொலைபேசிக்கு அழைப்புக்கள் நின்றுபோய் இப்போது கைப்பேசிக்கு அழைப்புக்கள் வருகின்றன! இவர்களுக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு?

இந்த மக்காவ் மோசடி கும்பல் செய்கின்ற வேலையை நீங்களும் கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள். அவர்களின் முதல்படி: யாரும் பேச மாட்டார்கள். பதிவு செய்யப்பட்ட குரல் தான் பேசும்.  "நீங்கள் ஆபத்தில் இருக்கிறீர்கள்! மேற்கொண்டு தெரிந்து கொள்ள  இந்த நம்பரை அமுக்குங்கள்!" என்று அந்த குரல் உங்களுக்குக் கட்டளையிடும்!  அப்போதே நீங்கள் அந்த அழைப்பைத் துண்டித்துவிடலாம்! 

ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். காவல்துறையோ, வங்கிகளோ, அரசாங்க அலுவலகங்களோ எப்போதுமே உங்களைத் தொலைபேசி மூலம் அழைக்கமாட்டார்கள். வங்கிகள் என்று சொன்னால் அவர்களிடம் உங்களின் வங்கிக் கணக்கு எண்ணை மட்டும் கொடுத்துவிடாதீர்கள். நேரடியாக வருகிறேன் என்று சொல்லி அழைப்பைத் துண்டித்து விடுங்கள்.

எப்படிப் பார்த்தாலும் இந்த மோசடிகள் இப்போதைக்கு ஒழியும் என்று தோன்றவில்லை. படித்தவர்கள் தான் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். அப்படியென்றால் அவர்கள் தான் அதிகம் குற்றம் புரிபவர்களாக இருப்பார்களோ!

Monday 4 July 2022

இரண்டுமே சரியில்லே!

 

முன்னாள் பிரதமர்கள், நஜிப் - முகைதீன் - இருவருமே  பேசி வருகின்ற சில விடயங்கள்  நாட்டு நலனுக்கு ஏற்றதாக இல்லை என்று தாராளமாகச் சொல்லலாம்!

முகைதீன் யாசின் இந்த நேரம் பார்த்து தங்கள் கட்சிக்கு துணைப் பிரதமர் பதவி வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்! அதன் நோக்கம் தங்கள் பக்கமிருக்கும்  உறுப்பினர்கள் யாரும் கட்சி மாறிவிடக் கூடாது என்பது தான். மற்றபடி பெரிய கொள்கைகளோ, இலட்சியங்களோ எதுவுமில்லை! அப்படியே இருந்தாலும் புதிய பதவிகளை உருவாக்கிக் கொண்டே போவதற்கு இது ஏற்ற தருணமும் இல்லை.

இதற்கு முன்பு சில காலம் பிரதமராக இருந்திருக்கும் முகைதீனுக்குத்  தெரியாதது ஒன்றுமில்லை. விலைவாசி ஏற்றம் மக்களின்  கழுத்தை நெருக்குகின்ற இந்த நேரத்தில் கூட  பதவிகளைக் கேட்கும் நபர் என்றால் அது இவர் ஒருவர் தான்.  மக்களின் துயரம் இவருக்குத் துயரமாகத் தெரியவில்லை!  நல்ல வேளை இவர் நீண்ட காலம் பிரதமராக இல்லை! அது மக்கள் செய்த புண்ணியம்!

இன்னொரு பக்கம் நஜிப் துன் ரசாக். இப்போதெல்லாம் இவருடைய குரல் அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறது! ரொம்பவும் புத்திசாலித்தனமாக பேசுகிறார்! எல்லாருக்குமே இப்போது இலவச ஆலோசனைகள அள்ளிவிட்டுக் கொண்டிருக்கிறார்!  அவருடைய ஆட்சி காலத்தில் யாருடைய ஆலோசனைகளையும் கேட்காததின்  விளைவு தான் இப்போது அப்படி ஒரு பக்குவத்தை அவருக்குக் கொடுத்திருக்கிறது!

நஜிப் ரசாக்கும் முகைதீனுக்கு வழக்கம் போல தனது ஆலோசனையைக் கொடுத்திருக்கிறார். பதவிகளைக் கேட்க வேண்டிய நேரம் இதுவல்ல. தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில்  பதவிகள் தேவையற்றது என்கிறார்!

நஜிப் இப்படிக் கூறினாலும் இன்னொரு பக்கம் அவர் மற்றவர்களைத் தூண்டிவிட்டு  சீக்கிரம் தேர்தல் நடத்த அரசாங்கத்திற்கு  நெருக்குதல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்! அதுவும் அவருக்குள்ள நெருக்கடி தான் காரணம்! அவருக்குச் சிறைத்தண்டனை ஏற்கனவே கொடுத்தாகிவிட்டது! ஆனாலும் இன்னும் வெளியே இருக்கிறார். அம்னோ அரசாங்கம் அமைய வேண்டும் என்னும் எதிர்ப்பார்ப்பில் இருக்கிறார். அப்படி அமைந்தால் எல்லாக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் தமக்கு விடுதலை கிடைக்கும்  என நினைக்கிறார்!

ஆனால் இருவருமே ஒன்றை மறந்து விட்டார்கள். மக்களுக்குத் தேர்தலும் வேண்டாம் அமைச்சரவையை விரிவு படுத்தவும் வேண்டாம். முதலில் விலைவாசிகள் ஏற்றத்திற்கு ஒரு முடிவைக் காணுங்கள். அரசாங்கம் இதற்குத்தான் முதலிடம் கொடுக்க வேண்டுமே தவிர அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுப்பது இமாலயத் தவறு என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய நிலையில் மக்களுக்குத் தரமான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பது  அரசாங்கத்தின் கடமை.

நாம் சொல்லுவதெல்லாம் மக்களின் வாழ்க்கை முக்கியம். அந்த இருவரையுமே புறந்தள்ளுங்கள்  என்பது தான்!