Thursday, 30 May 2019

சமய நெறிகள் போதிக்கப்பட வேண்டும்

நம் நாட்டில் எந்த ஒரு மதமும் புதிதாக வந்தது அல்ல. எல்லாம் நீண்ட காலமாக இங்கு நடப்பில் உள்ள மதங்கள் தான். 

இஸ்லாம், கிறிஸ்துவம், பௌத்தம், பாஹாய், இந்து மதம் - இவைகளெல்லாம் காலங்காலமாக நம்மிடையே உள்ளே மதங்கள் தான். ஒன்றுமே புதிதல்ல. ஒரு வேளை ஒவ்வொரு மதத்தினரும் பிற மதங்களைப் பற்றி அறியாதவர்களாக இருக்கலாம். அது தேவை இல்லை என்று நினைத்திருக்கலாம்.  ஆனால் பள்ளிவாசல்கள் நமக்குத் தெரியும். இந்துக் கோவில்கள் நமக்குத் தெரியும். கிறிஸ்துவ தேவாலயங்கள் நமக்குத் தெரியும். பௌத்தக் கோவில்கள் நமக்குத்  தெரியும்.  இவைகளெல்லாம் வழிப்பாட்டுத் தலங்கள் என்பதை மாணவப் பருவத்திலிருந்தே நாம் தெரிந்து வைத்திருக்கிறோம். காரணம் பள்ளி செல்லுகின்ற போதும் சரி, வருகின்ற போதும் சரி ஏதோ ஒர் இடத்தில் ஏதோ ஒன்று நமது கண்களுக்கு அகப்படாமல் போகாது. வழிப்பாட்டுத் தலங்கள் வணக்கத்துக்கு உரியவை,  புனிதம் கொண்டவை என்கிற ஒரு புரிதல் நமக்கு உண்டு. அதனால் தான் அதற்குரிய மரியாதையை நாம் கொடுத்து வருகிறோம். 

வெறும் வழிப்பாட்டுத் தலங்கள் தான் என்றாலும் அவைகள் மீது நமக்குள்ள மரியாதை குறையவில்லை. கட்டடங்களுக்கே நாம் மரியாதைக் கொடுக்கிறோம் என்றால் அங்கு வழிபடும் பக்தர்கள் மீது நமக்கு என்ன பிரச்சனை?  அவர்களையும் நாம் மதிக்கிறோம்.  அதனால் தான் இந்நாட்டில் மதம் என்பது என்றுமே ஒரு பிரச்சனையாகவோ,  தடையாகவோ இருந்ததில்லை. எந்த ஒரு மதமும் உயர்ந்தது, தாழ்ந்தது என்கிற எண்ணமே நமக்கு வந்ததில்லை 

ஆனால் எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அதனை அரசியல்வாதிகள் கையில் எடுத்தால் அது அனர்த்தமாகி விடும் என்பதை நாம் பார்க்கிறோம்.  ஒன்றுமே இல்லாத பிரச்சனையை ஊதி பெரிதாக்கி அதனை தங்களது இலாபத்திற்குப் பயன்படுத்துபவர்கள் தான் அரசியல்வாதிகள். அவர்களுக்கு அது தான் வாக்குச் சீட்டை கொண்டு வரும் துருப்புச் சீட்டு. 

எது எப்படி இருந்தாலும் நமது இளம் தலைமுறையினர் ஒவ்வொரு வரும் தங்களது மதம் மட்டும் அல்ல பிற மதங்களில் உள்ள நெறிகளையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். எந்த ஒரு மதமும் அநியாங்களையும், அக்கிமரங்களையும், அடிதடிகளையும் பின் பற்றச் சொல்லவில்லை.  மதங்கள் நல்ல பாதைகளைக் காட்டுகின்றன.  நல்ல போதனைகளைக் கொடுக்கின்றன. நல்ல நெறிகளுக்கு வழி  காட்டுகின்றன. 

சமய நெறிகள் என்பது அனைவருக்குமே! அனைத்துச் சமய நெறிகளும் அனைவரும் கற்றுத் தெளிய வேண்டும்!

எச்சரிக்கை! எச்சரிக்கை! எச்சரிக்கை!

எச்சரிக்கை! எச்சரிக்கை!  எச்சரிக்கை!  இவ்வளவு தான் நாம் சொல்ல முடியும். 

பெருநாள் காலம் அல்லவா.  ஒவ்வொரு பெருநாள் காலங்களிலும் இன்று எத்தனை சாலை விபத்துகள் என்று தான் நாம் கணக்கிடுகிறோம்! எல்லா பெருநாள் காலங்களிலும் - தீபாவளியோ, சீனப் புத்தாண்டோ, ஹரி ராயாவோ - எதுவாக இருந்தாலும்  - சாலை விபத்துக்களுக்குக் குறைச்சல் இல்லை.  ஒன்றா இரண்டா சாலை விபத்துகள்?  சாலை மரணங்கள்?

நாம் சொல்ல வருவதெல்லாம் சாலை விபத்துகளைக் குறையுங்கள். நம் அனைவருக்குமே அதில் பங்குண்டு என்பதை மறவாதீர்கள். சாலை விதி முறைகளைப் பின் பற்றுங்கள். 

அலட்சியமாகக் கார்களை ஓட்டாதீர்கள்.  அப்பா வீட்டுக்குப் போகிறோம், அம்மா வீட்டுக்குப் போகிறோம் - எல்லாமே மகிழ்ச்சி தான். அந்த மகிழ்ச்சி வீடு போய் சேரும் வரை இருக்க வேண்டும்.  மகிழ்ச்சியோடு வீடு திரும்பும் வரை இருக்க வேண்டும். கொஞ்சம் அலட்சியம் காட்டினால் அனைத்தும் தவிடு பொடியாகி விடும்!

சாலைகளில் ஒரு சிறிய அலட்சியம் காட்டினால் கூட அடுத்த  நிமிடமே  நாம் நாமாக இருக்க மாட்டோம். கார்களில் பாதுகாப்பாக  பயணம் செய்வோம். கொஞ்ச நேரம் பிடித்தாலும் பரவாயில்லை.  பொறுமையாகப்  பயணம் செய்வோம்.  

பெருநாள்  காலங்களில்  நாம்  அனைவருமே  பெற்றோர்களின்  வீடுகளுக்குப்  போய் வருவது  என்பது மிகவும்  பிடித்தமான  ஒரு விஷயம். பெற்றோர்களைப்  பிரிந்து  எங்கெங்கோ வேலை  செய்து  கொண்டிருக்கிறோம்.  இது  போன்ற  பெருநாள்  காலங்களில்  தான்  பெற்றோர்களைப்  போய் பார்த்து விட்டு வர முடியும். நமது பயணங்கள் மகிழ்ச்சியாக  அமைய  வேண்டும். 

தனி ஆளாக  இருந்தால்  பொது  போக்குவரத்துகளைப்  பயன் படுத்துவது  புத்திசாலித் தனம். அங்கும்  நெருக்கடி  தான்.  என்ன செய்வது?   கார்களில் பயணம் செய்யும் போதும் நெருக்கடி தான்.   ஓர் ஐந்து நிமிடப் பயணத்தை  இரண்டு மணி நேர பயணமாக  பெருநாள்  காலங்கள்  மாற்றி விடும்! இதெல்லாம்  நமக்குத்  தெரியாமலா  இருக்கிறோம்? 

அதனால் தான்  இளைஞர்கள் பலர் மோட்டார் சைக்கள்களைப்  பயன் படுத்துகின்றனர். தவறு இல்லை.   ஆனால் சாலைகளில் அலட்சியம்  காட்ட வேண்டாம் என்பதே நமது  வேண்டுகோள்.  காரணம் சாலை  விபத்துக்களில் பெரும்பாலும் அடிபடுபவர்கள் மோட்டார் சைக்கள்  ஓட்டிகளே.  அதிகமாக மரணத்தை தழுபவர்களும் அவர்களே.

கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள். சாலைகளைச்  சாலைகளாகப் பயன்படுத்துங்கள்.  சர்க்கஸ்  வேலைகளை அங்குக் காட்ட வேண்டாம்.  மகிழ்ச்சியாக பெருநாளைக் கொண்டாடுங்கள். 

எச்சரிக்கை! எச்சரிக்கை! எச்சரிக்கை!

Wednesday, 29 May 2019

மீண்டும் ம.இ.கா. ஏற்றுக்கொள்ளப்படுமா?

மீண்டும் ம.இ.கா. இந்தியர்களால் வரவேற்கப்படுமா?  அதாவது வெளியே இருக்கும் சிலரை உள்ளே இழுப்பதன் மூலம் ம.இ.கா. இந்தியர்களிடையே செல்வாக்கைப் பெற முடியுமா?

முடியாது என்றே நான் நினைக்கிறேன்.  இது சரியாகவும் இருக்கலாம், சரியில்லாமலும் இருக்கலாம்.  இன்றைய நிலையில் ம.இ.கா.வால் எந்த செல்வாக்கையும் இந்தியர்களிடையே பெற முடியாது. ஒரு வேளை இன்னும் அறுபது ஆண்டுகள் போனால் அது நடக்கலாம்!

சரி, அப்படியே உடனடியாக நடக்க வேண்டும் என்றால் ம.இ.கா. என்ன செய்ய வேண்டும்? 

என்னுடைய  ஆலோசனைகளை இதோ கூறுகிறேன்:

இப்போதும் நம் கண்  முன்னே நிற்பது  மைக்கா ஹோல்டிங்ஸ் தான்.  மைக்கா ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இப்போது வரை அதன் அங்கத்தினர்களுக்குச் சேர வேண்டிய  நியாயமான, சட்டப்படி கிடைக்க வேண்டிய இலாபத்தை அவர்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட வேண்டும். இறந்து போனவர்களுக்கு அவர்களின் வாரிசுகளுக்குக் கொடுக்கலாம் 

ம.இ.கா. வினரின் மூலம் பல நிலங்களை இந்திய சமுதாயம் இழந்திருக்கிறது. அது கேபிஜே வும் சேர்த்துத் தான் அத்தோடு கடைசியாக பேரா மாநிலத்தின் 2000 ஏக்கர்  தமிழ்ப்பள்ளிகளுக்கான நிலம் உட்பட. 

இன்னும் பல தில்லுமுல்லுகள் உண்டு.  உதாரணத்திற்கு செடிக். ஏம்ஸ்ட் போன்ற கல்லுரிகள்.   இவைகளைத் திரும்ப இந்திய சமுதாயத்திற்குக் கொடுத்துவிட்டாலே போதும்.  வேறு  தேவை இல்லை. ம.இ.கா. வுக்குக் கிடைக்க வேண்டிய மரியாதை தானாகக் கிடைத்துவிடும். 

ம.இ.கா. கட்சி என்பது சாதாரணம்அல்ல. அது கற்பாறையின் மேல் கட்டப்பட்ட ஒரு கோட்டை.   ஆனால் சாமிவேலு போகும்போது அதனை வெடி வைத்து சிதறடித்து விட்டுப் போய்விட்டார்!  அது தரைமட்டமாகிவிட்டது!

இனி இருப்பவர்களோ அல்லது இனி வரப்போகிறவர்களோ அதனை அப்படியெல்லாம் கட்டி எழுப்பிவிட முடியாது! யார் இருந்தாலும், யார் வந்தாலும் ம.இ.கா.வின் சொத்துக்களின் மீது தான் அவர்கள் கண் இருக்குமே தவிர வேறு நோக்கங்கள் இருக்க முடியாது!  இருப்பவர்களோ, வருபவர்களோ அவர்களின் பின்னணியைப் பார்த்தாலே போதும் கட்சியை வைத்துத் தான் அவர்கள் பிழைப்பு நடத்துவார்களே தவிர இந்தியர்களின் பக்கம் அவர்கள் வரவே மாட்டார்கள்!

ம.இ.கா.வை இந்தியர்கள் ஏற்றுக்கொள்ள வலுவான காரணங்கள்  எதுவும் இல்லை. பக்கத்தான் அரசில் உள்ள இந்தியத் தலைவர்கள் இப்போது தான் பதவி ஏற்றவர்கள்.  ஓர் ஆண்டில் அவர்களை மதிப்பிட முடியாது.  அவர்களுக்குப் போதுமான நேரம் கொடுக்கப்பட வேண்டும். நிச்சயமாக  இங்கும் நல்ல தலைவர்கள் இருக்கிறார்கள்.  நல்லது செய்வார்கள். அப்படி அவர்கள் செய்யாவிட்டாலும்  அவர்களை  செய்ய வைக்க இப்போதைய தலைமுறையால்  முடியும். 

ம.இ.கா...?  இந்திய சமுதாயம்  ஏற்றுக்கொள்ளாது...!

Tuesday, 28 May 2019

இந்திய தொழில் துறைகள் அழிந்து வருகின்றனவா?

இந்தியர்களால் நடத்தப்படுகின்ற  பாரம்பரிய தொழில்கள் அழிந்து வருகின்றனவா அல்லது அழிக்கப்படுகின்றனவா என்கிற ஒரு சந்தேகம் இந்திய வர்த்த சங்ககளின் அறிக்கைகள் நமக்கு ஏற்படுத்துகின்றன!

ஆமாம் அவர்களின் அறிக்கைகள் அப்படித்தான் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. அவர்கள் பக்காத்தான் அரசாங்கத்தைக் குற்றம் சாற்றுகின்றனர். அப்படியென்றால்...? அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்?

"எங்கள் தொழில்களை எங்களிடமிருந்து பறித்துவிட்டு அவைகளை வேறு இனத்தவருக்கு மாற்றம் செய்கின்றனர்"  என்பது தான் அந்தச் செய்தி!  அப்படித் தான் நாம் ஊகிக்க வேண்டியிருக்கிறது.

அதில் உண்மை உண்டா இல்லையா என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால் ஒரு சில தொழில்கள் நம்மிடமிருந்து  மற்றவர்களிடம் போய் விட்டன என்பது உண்மை.

சான்றுக்கு ஒன்றைச் சொல்லலாம். முடி வெட்டும் தொழிலை எடுத்துக் கொள்வோம்.  நமது அப்பன் காலங்களில் எப்படி அந்தத் தொழில் செய்யப்பட்டனவோ அதில் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே தொடர்ந்து அந்தத் தொழிலை செய்து கொண்டிருந்தனர்!  ஏன் எந்த மாற்றமும் செய்யவில்லை?  ஆரம்ப காலத்திலிருந்தே  அந்தத் தொழில் இழிவானத் தொழில்  என்பதாக நாம் நினைத்துக் கொண்டிருந்தோம். செய்து கொண்டிருந்தவர்களும் "நமது விதி" என்று செய்து கொண்டிருந்தனர்.  சீனர்கள் பார்த்தார்கள். பணம் சம்பாதிக்க ஓர் அருமையான தொழில் என்று உள்ளே புகுந்தார்கள். ஆண்கள் மட்டும் அல்ல சீனப் பெண்களும் உள்ளே புகுந்தார்கள்! அவர்கள் பெருத்த மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்! அதன் பின்னர் தான் நாம் விழித்தெழுந்தோம்.  யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற ஒரு மனப்பக்குவம் நமக்கு ஏற்பட்டது. இப்போது அந்தத் தொழிலில் உள்ளவர்கள் யாரும் பரம்பரையாக செய்பவர்கள் இல்லை. 

ஆனால் நாம் செய்த ஒரே தவறு தமிழ் நாட்டில் இருந்து வந்து வேலை செய்பவர்களை நாம் மதிக்கவில்லை. அவர்களைப் பல வழிகளில் நாம் ஏமாற்றினோம்.  குறைவான சம்பளம். அதிக நேரம் வேலை.  அவர்களுடைய கடப்பிதழ்களை பிடுங்கி வைத்துக் கொள்வது. அது பற்றி கேட்க ஆளில்லை. கேள்விகள் கேட்டால் ஆள் வைத்து மிரட்டுவது, அடிப்பது, உதைப்பது! 

அவர்கள் அந்நியத் தொழிலாளர்கள் தான். ஆனால் அவர்கள் அடிமைகள் அல்ல. இன்று  நமது பாரம்பரிய தொழில்கள் நசிந்து வருகின்றன என்றால் அதற்குக் காரணமானவர்கள் அந்த முதலாளிகள் தான் என்று தாராளமாகச் சொல்லலாம். 

இந்த நேரத்தில் ஒன்றை ஞாபகப் படுத்துகிறேன். வர்த்தகச் சங்கத் தலைவரும் அவரது மனைவியும் சமீபத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.  அவர்களுடைய பணிப்பெண்களை அவர்கள் கொடுமைப் படுத்தியதாக! மிகப் பெரிய கோடிசுவரன் அவர். அவர்களுடைய பணிப்பெண்களுக்கே இந்த நிலைமை என்றால் பாரம்பரியத் தொழில் செய்யும் இந்த முதலாளிமார்கள் எப்படி இருப்பார்கள்?  பாரிசான் அரசாங்கம் இருந்த போது நீங்கள் வைத்தது சட்டம்.  இப்போது பாக்காத்தான் அரசாங்கத்தைக் குற்ற சொல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு வீட்டீர்கள்!

இன்று இப்படி ஒரு நிலை வந்ததற்குக் காரணம் நீங்களே தான்! யாரும் உங்களை அழிக்கவில்லை! நீங்களே உங்களை அழித்துக் கொண்டீர்கள்!

Monday, 27 May 2019

செடிக் போலவே மித்ரா....?

செடிக் போலவே மித்ரா!" என்கிறார் இந்து உரிமை போராட்டவாதியான பி.உதயகுமார். 

அவர் சொல்லுவதில் நியாயமுண்டு என்பதை ஏற்றுக் கொள்ளுகிறோம். செடிக் எப்படி ஆரம்பிக்கப்பட்டதோ அப்படித் தான் மித்ராவும் ஆரம்பிக்கப்பட்டது.

ஆனால் செடிக் ஆரம்பிக்கப்பட்ட போது அவர்கள் மீது நமக்கு நம்பிக்கை ஏற்படவில்லை.  காரணம் அதில் ஊழல் பெருச்சாளிகள் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தார்கள்!   அப்பழுக்கற்ற ஒரு தூய மனிதரை அங்கே தலைவராகப் போட்டாலும்  அதனை அபகரித்துக் கொள்ள ம.இ.கா. கொள்ளையர்கள் கும்மியடித்துக் கொண்டிருந்தார்கள்!  அதனால் செடிக்கின் கொள்கைகள் எதுவும் நிறைவேறவில்லை! 

தனிப்பட்ட மனிதர்களை விட இயக்கங்கள், மன்றங்கள் என்று செடிக்கின் பணம் தண்ணீராக செலவழிக்கப்பட்டது. இந்தியர்களின் வளர்ச்சிக்காக  கொடுக்கப்பட்ட  கோடிக்கணக்கான பணம் கடைசியில் அரசியல்வாதிகளின் அடுப்பங்கரைகளுக்குச் சென்று சேர்ந்தது!

ஆனால் மித்ராவின் நிலை வேறு.  மித்ரா ஆரம்பிக்கப்பட்ட போது அதன் மீது நமக்கு ஓரு நம்பிக்கை எற்பட்டது.  எதிர்ப்பார்ப்புகள் ஏராளம்.  காரணம் அதில் சம்பந்தப்பட்டவர்கள்  இந்தியர்களின் நலன் மீது அக்கறை உள்ளவர்கள். அவர்களை நாம் நம்பாமல் இருக்க முடியாது. 

என்ன காரணமோ மித்ரா சொல்லும்படியாக செயல்படவில்லை என்று தான் நாம் எண்ண வேண்டியுள்ளது.  மித்ராவிடம் பணம் இல்லை என்று சொல்ல முடியாது. செய்ய வேண்டிய வேலைகளைச் சரியாக செய்யவில்லை!  எங்கோ ஏதோ குறைபாடுகள் உள்ளன என்று நமக்குத்  தெரிகிறது. அதனை  களைய  பிரதமரால் தான் முடியும் என்றும் தோன்றுகிறது.

ஆமாம் அனைத்துப் பிரச்சனைகளையும் பிரதமர் ஒருவரால் தான் முடியும் என்றால் அப்புறம் எதற்கு ஓர் அமைச்சு, ஓர் அமைச்சர், அதிகாரிகள் ....?  இந்தியர்களின் நலனை அறிந்தவர்கள் என்று நாம் எதிர்ப்பார்த்தால்  கடைசியில் இவர்களும் கடைந்தெடுத்த கள்வர்களாக இருப்பார்களோ என்று தானே நாம் நினைக்க வேண்டியுள்ளது!

செடிக் அதிகாரத்தில் உள்ளவர்கள் என்ன செய்தார்களோ இவர்களும் அதையே தானே செய்கிறார்கள்.  இவர்களும் இயக்கங்களுக்கும, மன்றங்களுக்கும், அரசு சாரா இயக்கங்களுக்கும் அள்ளி அள்ளிக் கொடுக்கிறார்கள்> அப்படி என்றால் என்ன அர்த்தம்?  இயக்கங்களுக்குக் கொடுத்தால் 'பின்னால்' நமக்கு உதவும் என்று தானே அர்த்தம்!

இருந்தாலும் அவசரப்பட வேண்டாம். பொறுத்திருப்போம்!

கேள்வி - பதில் (100)

கேள்வி

தமிழகத்தில் "நாம் தமிழர் கட்சி" தாக்குப் பிடிக்குமா?

பதில்

தாக்குப் பிடிக்கும் என்றே தோன்றுகிறது. தாக்குப் பிடிக்க வேண்டும் என்பதே நமது விருப்பமும் கூட. 

நாம் தமிழர் கட்சி மிகவும் பலமான கட்சிகளுடன் மோதுகின்ற நிலையில் உள்ள ஒரு கட்சி. பலம் என்று சொல்லும் போது கொள்கையால் அல்ல. தி.மு.க. வும் அ.தி.மு.க். வும் பலம் வாய்ந்த கட்சிகள். அவர்களுடைய சின்னமே அவர்களின் பலம்.  அவர்களின் உதய சூரியன், இரட்டை  இலை சின்னங்கள் தான் இன்னும் பழைய தலைமுறையினருக்கு மனதில் நிற்கும் சின்னங்கள்.  அவர்கள் ஏன் எதற்கு வாக்களிக்கிறார்கள் என்கிற தெளிவு அவர்களுக்கு இல்லை.  அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் கருணாநிதி -ஜெயலலிதா மட்டும் தான்.  அவர்கள் தமிழ் நாட்டுக்குச் செய்த துரோகங்கள் எதுவும் அவர்களுக்குத் தெரிவதில்லை. அவர்களுக்கு இலஞ்சம் கொடுத்து தமிழ் நாட்டுக்குச் செய்கின்ற துரோகங்களை மறைக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை!

நாம் தமிழர் கட்சி முற்றிலுமாக புதிய தலைமுறை வாக்காளர்கள், படித்தவர்கள் போன்றவர்களை ஈர்க்கின்ற ஒரு கட்சியாகச் செயல்படுகின்றது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழக இடைத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி திருப்திகரமாகவே இருக்கிறது என்று சொல்லலாம். இதனைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அவர்களுக்கு வாக்குகள் விழக்கூடாது என்பதற்காக மிகப்பல இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன.  வாக்குச் சீட்டுக்களில் அவர்களின் விவசாயி சின்னம் தெளிவற்ற நிலையில் அச்சடிக்கப்பட்டிருந்தன, ஊடகங்கள் நாம் தமிழர் கட்சி என்று ஒன்று இருப்பதாகவே காட்டிக் கொள்ளவில்லை. அனைத்து ஊடகங்களும் நாம் தமிழர் கட்சியைப் புறக்கணித்தன. அவர்களும் யாருக்கும் எந்த இலஞ்சமும் கொடுக்கவில்லை. இலஞ்சம் இல்லாத, ஏற்காத ஒரு கட்சி என்றால் அது நாம் தமிழர் கட்சி  மட்டுமே! இருந்தும் அக்கட்சி மூன்றாவது நிலையில் தமிழ் மக்களால ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது.  

இப்போது தான் தமிழ் மக்கள் தங்களெக்கென்று ஒரு கட்சி, தமிழர்கள் பிரச்சனைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதை முதன் முதலாக உணர்ந்திருக்கின்றனர். இனி வரும் தமிழர் தலைமுறை நாம் தமிழர் என்பதை உறுதிப்படுத்துவர். 

நாம் தமிழர் கட்சி வளர்ந்து கொண்டிருக்கிறது.  நாம் தமிழர் என்கிற உணர்வும் இப்போது தான் நமக்கும் வளர ஆரம்பித்திருக்கிறது.

நிச்சயமாக நாம் தமிழர் கட்சி தாக்குப் பிடிக்கும்!

Sunday, 26 May 2019

சாலையின் பெயர் மாற்றமா..?

சாலைகளின் பெயர்கள் மாற்றப்படுவது என்பது தேவையான போது நடைபெறைகின்ற ஒரு மாற்றம் தான்.

ஆனால் பிரிக்பீல்ஸில் உள்ள ஜாலான் துன் சம்பந்தன் பெயர் மாற்றம் என்பது சரியான முடிவு அல்ல என்பதுதான் பொதுவாக இந்தியர்களின் எதிர்பார்ப்பாக இருக்க வேண்டும்.

ம.இ.கா.வின் மேல் நமக்கு ஆயிரம் கோபதாபங்கள்   இருக்கலாம்.  ஆனால் அந்த கோபங்களுக்கும் துன் சம்பந்தனுக்கும் எந்த சம்பந்தமுமில்லை.

உண்மையைச் சொன்னால் துன் சம்பந்தன் காலத்தில்  தான் பற்பல நல்ல காரியங்கள் இந்தியர்களுக்கு நடந்திருக்கின்றன. ஏன் இந்தியர்களின் பொருளாதாரத்தையே எடுத்துக் கொள்ளுவோம். இன்று மலேசிய இந்தியர்களின் பொருளாதாரம் ஒன்று/ஒன்றரை விழுக்காடு தான் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.  அதில் முக்கிய பங்கு வகிப்பது  தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் தான். அதனை  தோற்றுவித்தவர்  துன் சம்பந்தன்.  அந்த கூட்டுறவு சங்கம்  இல்லை என்றால் நமது விழுக்காடு அரை விழுக்காடு என்கிற நிலையில் தான் இருக்கும்!

துன் சம்பந்தன் மாபெரும் தலைவர்.  நாடு சுதந்திரம் பெற்ற போது இருந்த தலைவர்களில் அவரும் ஒருவர்.  அவரது பெய்ரை அநாவசியமாக அகற்ற பரிந்துரை  செய்வது மிகவும் கீழ்த்தரமான அரசியல். 

ம.இ.கா.வை இந்தியர்கள் புறக்கணிக்கிறார்கள் என்பது உண்மையிலும் உண்மை.  ஆனால் அது துன் சம்பந்தனால் அல்ல.  அந்த புறக்கணிப்பு என்பது எப்போது சாமிவேலு ம.இ.கா. வின் தலைவராக வந்தாரோ அன்றிலிருந்து தான் அதன் அழிவின் ஆரம்பம்.

இது போன்ற பரிந்துரைகள் எல்லாம் இஸ்லாமிய விவகார அமைச்சர் போன்றவர்களிடமிருந்து வருவது ஏற்புடையது அல்ல.  அவர் இந்தியர்கள் ம.இ.கா. வின் மீது காட்டுகின்ற வெறுப்பை மட்டுமே கவனிக்கிறார்.   ஒன்று மட்டும் புரிகிறது.  அவர் துன் சம்பந்தன் என்பவர் யார், அவருடைய வரலாறு என்ன, இந்தியர்கள் அவரால் அடைந்த பயன்கள் என்ன என்பதையெல்லாம்  ஆராயாமல் இப்படி ஒரு பரிந்துரையைச் செய்திருக்கிறார்.

பக்காத்தான் அரசில் உள்ள இந்தியத் தலைவர்களுக்கு ஒருகோரிக்கை வைக்கிறேன்.  நம்மிடையே ஆயிரம் வித்தியாசங்கள் இருக்கலாம். நீங்கள் மட்டும் அல்ல நாங்களும் ம.இ.கா. வை வெறுக்கிறோம். ஆனால் இன்றைய ம.இ.கா. வேறு. அன்றைய சம்பந்தன் வேறு.  அதனால் தேவை இல்லாமல் பெயரை மாற்றுகிறோம் என்று கூறுவதை நமது தலைவர்கள் ஆதரிக்கக் கூடாது என்பதை உங்கள் பார்வைக்குக் கொண்டு வருகிறோம்.

இது போன்ற பரிந்துரைகளை முளையிலேயே கிள்ளி எறியப்பட   வேண்டும். அவர்களை அடக்கி வைக்க வேண்டும்.   முன்னாள் தலைவர்களின் பெயர்கள் இருந்தது போலவே இருக்கட்டும். அதில் கை வைக்கக் கூடாது என்பதே நமது கோரிக்கை.


பக்காத்தான் அரசிலிருந்து நாம் கேட்பது எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் இருப்பதையும் எடுக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது. நமது தலைவர்கள் வெளியே வீரத்தைக் காட்ட முடியாவிட்டாலும் உள்ளுக்குள்ளேயே பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். 

பெயர் மாற்றம் வேண்டாம்!

Thursday, 23 May 2019

கேள்வி பதில் (99)

கேள்வி

இந்திய தேர்தல் முடிவுகள் எதனைக் காட்டுகின்றன?

பதில்

இந்திய அளவில் அது எந்த வகையில் நன்மை தரும் என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் தமிழக அளவில் அது எந்த அளவிலும் நன்மை தராது என்று மட்டுமே சொல்ல முடியும்.

தமிழ் நாட்டை, தொடர்ந்து பாலைவனம் ஆக்கும் முயற்சிகள் எந்த எதிர்ப்பும் இல்லாமல் நடைபெறும். மக்கள் எதிர்ப்புக்களைக்  காட்டலாம். அவர்களை அடக்கி வைக்க காவல்துறை போதும். அப்படியே அவர்களால் முடியாவிட்டாலும் பிரதர் மோடி  இராணுவத்தையே கொண்டு வந்து இறக்குவார்!

இன்றைய நிலையில் தமிழக அரசு தமிழக மக்களுக்குச் சாதகமாக இல்லை. அவர்களும்  மோடிக்குத் தான் ஆதரவுக் கரம் நீட்டுவார்கள் என நம்பலாம்.   ஒரே ஒரு காரணம் தான். நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற ஒரே நபர், துணை முதல்வர் ஓ.பி.எஸ். ஸின் மகன் மட்டும் தான்.  அவர் மத்திய மந்திரியாக மோடியின் அரசில் பங்கு பெற்றால் அது போதும் தமிழகம் மோடியின் காலில் விழுவதற்கு! அப்படி அவருக்கு மந்திரி பதவி இல்லை என்றால் தமிழகம் மத்திய அரசாங்கத்துடன் ஒத்துழைப்பது சிரமம். அதனை மோடி அறிவார். தமிழகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுவதற்கு ஏதோ ஒரு மந்திரி பதவியை அவர் கொடுக்கலாம்!  இன்று தமிழகத்தை நாசமாக்குவதற்கு தமிழக அரசியல்வாதிகளின் துணை, மோடிக்குத் தேவைப்படுகிறது! 

தமிழ் நாட்டில்  நடைபெற்ற  சட்டமன்றத் தேர்தல் ஓர் இடைத் தேர்தல் தான்.  இப்போதைய நிலவரத்தை வைத்துப் பார்க்கும் போது இன்னும் இரண்டு ஆண்டுகளில் வருகின்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தலை தூக்க முடியாது  என்று ஓரளவு  ஊகிக்கலாம். அதற்குள்ளாக,  இந்த  ஈராண்டுக்குள் அ.தி.மு.க. வினர் தமிழகத்தையே, மோடியுடன் சேர்ந்து,  சுடுகாடு  ஆக்கிவிட்டுத் தான் போவார்கள் என்று நம்பலாம்.  இதனால்அவர்களுக்கு என்ன பலன்?  பணம் தான்! தமிழக அரசியல்வாதிகளில் யார் பணக்காரர்கள் என்கின்ற போட்டி தான் காரணம்!  கருணாநிதி குடும்பமா? சசிகலா குடும்பமா? பழனிசாமி குடும்பமா? பன்னிர்செல்வம்  குடும்பமா?  என்கிற  போட்டி தான்!

மோடியும் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை இன்னும் அதிகமான நெருக்குதல்கள் கொடுத்து  தமிழக  மக்களை  இன்னும்  துன்பத்தை  ஏற்படுத்தவார் என்பதில் சந்தேகமில்லை.  அவரைப் பொறுத்தவரை தமிழ் நாட்டிலிருந்து  தமிழர்கள்  விரட்டப்பட வேண்டும்  என்கிற எண்ணம் கொண்டவர்!

இந்த அபாயங்களிலிருந்து தமிழர்கள் தப்பிக்க  முடியுமா?   முடியும் என்பது நிச்சயம்.  காலங்காலமாக  தமிழர்களை வீழ்த்தலாம்  என்று நினைத்தவர்கள்  கடைசியில்  அவர்கள்  தான்  வீழ்த்தப்பட்டார்கள்! 

என்ன தான் தீமை என்று  நினைத்தாலும் அங்கும் ஒரு நன்மை ஒளிந்து கொண்டிருக்கும்! அதனால் தமிழர் வெல்வர்!

Wednesday, 22 May 2019

அந்நிய நாட்டவரால் ..என்ன பிரச்சனை?

அந்நிய நாட்டவரால் இன்று நாட்டில் பல பிரச்சனைகள் என்பது நமக்குப் புரிகிறது. 

முந்தைய அரசாங்கம் அந்நிய நாட்டவரை எந்தவிதக் கட்டுப்பாடும் இன்றி  நாட்டிற்குள் அனுமதித்தது  சரியா, தவறா என்று பேசுவதில் புண்ணியமில்லை!  இவர்களை அனுமதித்ததின் மூலம் மலேசியர் பலர் பலன் அடைந்திருக்கிறார்கள்.   அவர்களை எதற்கு வர வைக்கிறோம் என்று எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் அவர்களை வைத்து பல அரசாங்க ஊழியர்கள் பணம் சம்பாதித்தார்கள்!       

இப்போது நாடு முழுவதும் அந்நிய நாட்டவர்களின் ஆதிக்கம் ஓங்கி நிற்கிறது.  எல்லாத் துறைகளிலும் அவர்கள் புகுந்து விட்டார்கள்.  ம்லேசியர்கள் செய்ய வேண்டிய வேலைகளை அவர்கள் செய்கிறார்கள். முதலாளிகள் அவர்கள் மூலம் ஒரு பக்கம் கொள்ளையடிக்கிறார்கள். குறைவான ஊதியம். அவ்வளவு தான்.   அது ஒன்றே போதும் முதலாளிகள் வளம் பெற! வேறு  பிக்கல், பிடுங்களில்லை!  சோக்சோ, சேமநிதி சமாச்சாரம் என்று எதுவும் இல்லை! மருத்துவச் செலவு இல்லை, கொடுக்கப்போவதும் இல்லை!

அதுவுமில்லாமல் எது எதுவோ கொண்டு வந்து விற்கிறார்கள்.  நாட்டிற்குள் தாராளமாக நடமாடுகிறார்கள்!  அவர்களைப் பார்த்து நாம் தான் பயப்பட வேண்டியுள்ளது!  ஏதோ ரவுடி கும்பல்களைப் போல ஊர்வலம் வருகிறார்கள்!

இந்த அந்நிய நாட்டவர்களால் அதிகம் பாதிப்பை அடைபவர்கள் நமது இந்திய சமூகம் தான்.  நாம் செய்கின்ற சிறு சிறு தொழில்களையெல்லாம் அவர்கள் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். அப்படி வியாபாரம் செய்வதற்கான உரிமம் அவர்களுக்குத் தாராளாமாகக் கிடைக்கிறது.  இலஞ்சம் கொடுத்தால் உரிமம் என்ன ஊரையே எழுதிக் கொடுத்து விடும் அரசாங்க ஊழியர்கள் நம்மிடையே இருக்கிறார்கள்!

அரசாங்கம் இதனை எல்லாம் கண்டு கொள்கிறதா, இல்லையா என்றும் நமக்குத் தெரியவில்லை. அவர்களுக்கு ஏதும் கட்டுப்பாடுகள் இருக்கின்றனவா என்றும் தெரியவில்லை. எல்லா வேலைகளிலும் அவர்கள் இருக்கிறார்கள். எல்லா வியாபாரங்களிலும் அவர்கள் இருக்கிறார்கள். உள்ளூர் பெண்களையும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.  திருமணம் செய்து கொண்டதும்  அவர்களுக்கு அடித்தது ராஜ வாழ்க்கை!  நேற்று வந்தவன் நீல அடையாளக்க் கார்டுடன் ஊர்வலம் வந்து கொண்டிருக்கிறான்  உள்ளூரில் பிறந்தவனுக்காக "நீல அடையாளக் கார்டு" கொடுங்கள் என்று நாம் குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறோம்!

அந்நிய நாட்டவர்களால் நமக்கு என்ன பிரச்சனை?  அவர்கள் யார்?  அவர்கள் செய்ய வேண்டிய வேலைகள் என்ன?  எந்தத் துறையில் அவர்கள் இருக்க வேண்டும் என்கிற வரையறை ஒன்றும் இல்லை! 

இந்தப் பிரச்சனைக்குத் தீர்வே இல்லையா?  ஏன் இல்லை.  அந்நியர்கள் சம்பந்தப்படக் கூடாத துறைகளில்  அவர்கள் இருந்தால் உடனடியாக காவல்துறையினருக்குத் அறிவிக்க வேண்டும். அவர்களைத் தங்கள் நாட்டிற்குத் திருப்பி அனுப்பபட வேண்டும்.

அரசாங்கம் கெடுபிடியாக இல்லாவிட்டால் இந்தப் பிரச்சனை தீர வழியில்லை! சிங்கப்பூர் தான் நமக்கு சரியான எடுத்துக்காட்டு!

Tuesday, 21 May 2019

அடுத்தது என்ன...?

 இனியும் மெட்ரிகுலஷன் கல்வியைப்  பற்றி பேசிக் கொண்டிருப்பதில் பயனில்லை.

அதில் நம் மாணவர்கள் பெரிய வெற்றியைப் பெற வில்லை என்றாலும் ஏற்கனவே உள்ளதைக் கொடுத்தார்களே என்பதோடு திருப்தி அடைய வேண்டியது தான். பக்காத்தான்  அரசாங்கம்  பெரிதாக எதனையும்  தூக்கிக் கொடுத்து விடவில்லை!  அதனையும் பல போராட்டங்களுக்குப் பிறகே முந்தைய அரசாங்கம் எத்தனை இடங்கள் கொடுத்ததோ அதையே இத்தனை பொராட்டங்களுக்குப் பிறகு கொடுத்திருக்கிறார்கள்! அவ்வளவு தான்!  இதில் வெற்றி என்று சொல்லும் போது அது மலாய் மாணவர்களுக்குத் தான் போய் சேரும்!  வாழ்த்துகள்!

அந்த மெட்ரிகுலேஷன்  போராட்டம் ஒரு முடிவுக்கு வந்து விட்டதால் இனி அது பற்றி பேச வேண்டாம்.  அடுத்த ஆண்டு  நிலவரம் எப்படி இருக்கும் என்பது  அடுத்த  ஆண்டு தான் தெரியும். போராட்டமா அல்லது தேரோட்டமா  என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நாம் இப்போது கவனம் செலுத்த வேண்டியது பல்கலைக்கழகத்தில் நமது மாணவர்களின் நிலை என்ன என்பது தான். இன்றைய நிலையில் நமது பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்காக  எந்த அளவுக்கு செலவுகள் செய்கிறார்கள் என்பதை நமது பக்காத்தான்  தலைவர்களுக்குத் தெரியாமல் இல்லை.  காரணம் அவர்களும்  அதனைக் கடந்து வந்தவர்கள் தான்.

இங்கும் பிரச்சனைகள் வெடிக்கும் முன்னே பிரதமர் துறை துணை அமைச்சர், பொன் வேதமூர்த்தி,  தனது பணிகளைச் சரியாக செய்ய வேண்டும் என்பது தான் நாம் இப்போது வைக்கும் கோரிக்கை.  எல்லாம் முடிந்த பின்னர் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள் என்று சொல்லுவதெல்லாம் தேவையற்ற ஒன்று.  அப்படியெல்லாம் ந்மது மாணவர்களுக்கு  விசேட அழைப்புகள் எல்லாம்  வேண்டாம்!

இன்றும் நமது பெற்றோர்கள் தாங்கள்  குடியிருக்கும் வீடுகளையும், தங்களது சொத்துப்பத்துக்களையும் விற்றும் தான் தனியார் பல்கலைக்கழகங்களில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கின்றனர். காரணம் தங்கள் பிள்ளைகளுக்குப் பட்டப்படிப்பு தேவை என்கிற ஒரே காரணம் தான். அதற்காக அவர்கள் படுகின்ற பாடு சொல்ல வார்த்தைகல் இல்லை. 

தனியார் பல்கலைக்கழகங்கள்  என்றாலே  அவர்களின் இலக்கே சீன இனத்தவர்கள் தான்.  அவர்களின் பொருளாதார வளர்ச்சியோடு   இந்தியர்களை ஒப்பிடுவது என்றென்றும் அது அரசியலே தவிர வேறு காரணங்கள் இல்லை!

நாம் கேட்டுக் கொள்ளுவது எல்லாம் நமது பக்காத்தான் இந்தியத் தலைவர்கள் அனைவரும் ஒன்று கூடி இந்திய மாணவர்களுக்கான அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் நமது ஒதுக்கிடுகள் என்ன, எவ்வளவு இருக்க வேண்டும் என்பதில் உறுதியான கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும்.  இனி மேலும் மெட்ரிகுலேஷன் போல கசமுச வேண்டாம்!

அடுத்தது என்ன>  ஆமாம் பல்கலைக்கழகம் நோக்கி....!  வேறு என்ன!

Monday, 20 May 2019

குற்றவாளி யார்...?

பள்ளிகளில்  ஆங்கிலம் கற்பித்தல் என்பது இன்று பரிதாபத்திற்குரிய ஒரு நிலையை  எட்டிவிட்டது!

இதற்கு யார் காரணம்?  முழுக்க முழுக்க கல்வி அமைச்சே தான் காரணம். இதில் கருத்து வேறுபாடுகள்  தேவை இல்லை. இப்போது பேராசிரியர் ஒருவர் கூறிய கருத்தைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.  ஆங்கிலம் போதிக்கும் ஐம்பது விழுக்காடு ஆசிரியர்களுக்குப் போதுமான ஆங்கில அறிவு இல்லை என்கிறார்!  இதனை நான் ஏற்றுக் கொள்ளுகிறேன். 

ஆங்கில ஆசிரியர்கள் மேல் இப்படி ஒரு வீண் குற்றச்சாட்டா என்று  சிலர் யோசிக்கலாம். இது வீண் குற்றச்சாட்டல்ல!

ஓரு காலக் கட்டத்தில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் சீன, இந்திய மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டனர். மலாய் மாணவர்களே ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளை ஆக்கிரமித்துக் கொண்ட நேரம் அது. பொதுவாகவே மலாய் மாணவர்கள் ஆங்கிலத்தை வரவேற்பதில்லை என்று கல்வி அமைச்சுக்குத் தெரியும்.  ஆனாலும் அவர்கள் பள்ளிகளில் ஆங்கில மொழி படித்துக் கொடுக்க வேண்டும் என்கிற ஒரு கட்டாய நிலையை ஏற்படுத்தியது கல்வி அமைச்சு!  ஆனால் இது தொடர்கதை ஆனது தான் இப்போதைய ஆங்கிலத்தின் கடும் வீழ்ச்சி!

பொதுவாக ஆங்கிலம் ஓர் அந்நியம் என்றே மலாய் மாணவர்கள் நினைக்கின்றார்கள். அது எங்கிருந்தோ ஊட்டப்பட்டு விட்டது. ஆனால் சீன, இந்தியர்களுக்கு  இந்தப் பிரச்சனை இல்லை. அவர்களில் பலர் வீட்டில் ஆங்கிலம் பேசுகின்ற பழக்கம் உண்டு. பலருக்கு ஆங்கிலத்தில் நல்ல புலமை உண்டு.

ஆங்கிலம் கற்றுக் கொடுக்க இந்திய, சீன ஆசிரியர்களைக்  கல்வி அமைச்சு ஊக்குவித்திருக்க வேண்டும்.  ஆனால் கல்வி அமைச்சில் பணி புரிபவர்களுக்குக்  கொஞ்சம் தலைக்கனம் அதிகம்! "உங்களால் முடிந்தால் எங்களால் முடியாதோ?"  என்று சொல்லிக் கொண்டே மலாய் ஆசிரியர்களையே மீண்டும் மீண்டும் ஆங்கில  ஆசிரியர்களாக நியமன செய்தது!  மலாய் ஆசிரியர்கள் திறமையற்றவர்கள் என்று நாம் சொல்ல வரவில்லை. தங்களுக்குப் பிடிக்காத  ஒரு மொழியான ஆங்கிலத்தைப் படித்துக் கொடுக்கச் சொன்னால் அவர்கள் என்ன செய்வார்கள்? அவர்களுக்குப் பிடிக்காத ஒரு மொழியைப் பிடிக்காதவாறு தான் அவர்கள் படித்துக் கொடுப்பார்கள்! அப்புறம் எங்கே தரம் வரும்?  தரமற்ற ஒரு கல்வியாக ஆங்கிலம் இன்று நமது பள்ளிகளில் போதிக்கப்படுகின்றது என்றால் அதற்குக் காரணமே கல்வி அமைச்சு தான்!

இன்றைய நிலையில் யார் குற்றவாளி  என்று கை நீட்ட வேண்டுமானால் நாம் கை நீட்ட வேண்டியது கல்வி அமைச்சை மட்டும் தான். அங்குள்ள குட்டி நெப்போலியன்களால் ஏற்படுத்தப்பட்ட சாதனை இது!

Sunday, 19 May 2019

பட்டா கிடைக்குமா...?

ஒரு வயதானப் பெண்மணி.  பூந்தோட்டம் வைத்து பிழைப்பு நடத்தியவர். அவருடைய தோட்டத்தையே ஒன்றுமில்லாமல் நாசமாக்கி விட்டனர். பூக்களை வைத்து பிழைப்பு நடத்துவது சாதாரண விஷயமல்ல. 

பூக்கள் குழைந்தைகள் மாதிரி. அதனை நாசம் செய்வது என்பது - என்ன தான் அவன் தனது கடமையைச் செய்கின்றான் என்றாலும் - கொடூரமான மனம் படைத்தவன் என்பதிலே சந்தேகமில்லை. அந்த சட்டமன்ற உறுப்பினர், நில அலுவலக அதிகாரி இவர்கள் கொடூரமானவர்கள். பூக்களைக் கொலை செய்பவர்களை என்னவென்று அழைக்கலாம்?

காலி செய்த பின்னர் இந்த நிலத்தை இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். இலஞ்சம் வாங்கிக் கொண்டு நில மேம்பாட்டளர்களுக்கு விற்று விடுவார்களா?  இல்லாவிட்டால் இந்த அவசரம் தேவை இல்லை!  இதன் பின்னணி ஆராயப்பட வேண்டும். அது ஜ.செ.க. வேலை. இதுவே ஒரு மலாய்ப் பெண்மணியாக இருந்தால் இப்படி அலட்சியமாக நடந்து கொள்வாரா? அல்லது அந்த அதிகாரிதான் அப்படி நடந்து கொள்வாரா? 

ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு என்ன வேலை? தனது ஆளுகைக்கு உட்பட்ட மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க வேண்டும். ஆனால் இவர் தீர்த்து வைப்பார்  என்பதற்கான  ஆளில்லை.  அடுத்த  தேர்தல் வரை  நீடிப்பாரா  என்பதைப் பொறுத்திருந்து  தான் பார்க்க வேண்டும்.

அதிகாரிகளைப் பற்றி சொல்ல ஒன்றுமில்லை.  அவர்கள் இன்னும் தாங்கள் பாரிசான் அரசாங்கத்திற்கு வேலை செய்வதாகவே நினைக்கின்றனர். அவர்கள் நிலை மாறும். அப்படியே தொடர்ந்து கொண்டு இருக்க முடியாது.

சரி எல்லாம் முடிந்து விட்டது. பெரும்  முயற்சி எடுத்து  புதிய நிலம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது எத்தனை நாளைக்கு என்று ஏதாவது ஒரு வரையறைக் கொடுக்கப்பட்டிருக்கிறதா?  அதைவிட முக்கியம் அந்த நிலத்திற்கு அந்த அம்மையாரின் பெயரில் பதிவு செய்ய முடியுமா? அது தான் முக்கியம்.  நாளை ஒருவன் வருவான். நன்றாகச் செழித்து வளர்ந்திருக்கும் பூச்செடிகளைப் பார்த்ததும் அவன் கண் உறுத்தும். உடனே அவன் வாங்க நினைப்பான்.  வீடுகள் கட்டினால் நல்ல இலாபம் தரும் என்று முடிவு கட்டுவான்!  இது தான் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது! 

அந்த வயதான அம்மாள் தனது பழைய நிலத்தில் ஏகப்பட்ட  பணம் செலவு செய்திருக்கிறார். இந்தப் புதிய நிலத்திலும்  அவர் ஏகப்பட்ட  செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கும். அதற்கான செலுவுகளைச் சட்டமன்ற/நாடாளுமன்ற உறுப்பினர் இருவரும் அவருக்குக்  கொடுக்க வேண்டும் என்பதே எனது  வேண்டுகோள்.

எல்லாவற்றுக்கும் மேலாக அந்த நிலத்தை அவரின் பெயருக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்.  முடியும்!

இதற்கும் விளம்பரம் தேவை...!

அரசாங்க கல்லூரிகளில் தொழில் கல்வி பயிலுவதற்கான வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன. அதிலும் முன்பை விட இப்போது இன்னும் வாய்ப்புக்கள் அதிகம்.  ஒரு காலத்தில் இந்தக் கல்லுரிகளில் இந்திய இளைஞர்கள் வாய்ப்புக்கள் கிடைக்காமல் தடுமாறினர் என்பதெல்லாம் பொய்யல்ல! உண்மை!  ஏன் எடுக்கவில்லை என்பதற்கான காரணங்கள் இது நாள் வரை தெரியவில்லை! 

இந்திய மாணவர்கள்  அரசாங்கக் கல்லூரிகளில் கல்வி பயில  - தொழில் கல்வி பயில -  தடையாக இருந்தவர்கள் ம.இ.கா.வினர் தான் என்பதாகவும் பேச்சு உண்டு!  காரணம் பல தனியார் தொழில் கல்விக் கூடங்களை  நடத்தியவர்கள் ம.இ.கா. வினர் தான் என்பதும் உண்மையே!

எனக்குத் தெரிந்த ம.இ.கா. சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் மிகவும் ஆடம்பரமாக ஒரு தொழில் கல்வி நிலையத்தை திறந்தார்.  அந்தக் கல்வி நிலையத்தில்  நிறைய  இந்திய  மாணவர்கள் ஆடுமாடுகளைப் போல கொண்டு வந்து சேர்க்கப்பட்டனர்!  சேர்த்துக் கொண்ட வந்த ம.இ.கா. தலைவர்களுக்கு மன நிறைவான கமிஷன் கொடுக்கப்பட்டது!

உடனடியாக அந்த மாணவர்கள் அனைவருக்கும்  அரசாங்கக் கல்விக் கடன் கொடுக்கப்பட்டது!  ஒவ்வொரு மாணவருக்கும் கல்விக் கடன் கொடுக்கப்பட்டதும் அப்புறம் "நீ யாரோ!  நான்  யரோ!"  தான். வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி!  நிர்வாகத்திற்குக்  கிடைக்க வேண்டிய பணம் வந்துவிட்டது!  முறையான கல்வி அவர்களுக்குக்  கொடுக்கப்பட வில்லை. அவர்கள் படித்ததற்கான அத்தாட்சியிம் இல்லை! ஆனால் அந்த மாணவர்கள் அனைவரும் அரசாங்கத்திற்கு நிரந்தர கடன்காரர்கள் ஆனார்கள்! பல இலட்சங்கள் பணம் சம்பாதித்த பிறகு அந்த நிறுவனம் மூடப்பட்டு விட்டது!  அது தான் ம.இ.கா.!

இபப்போதும் சில தனியார் நிறுவனங்கள் பத்திரிக்கைகளில் விளம்பரங்களைப் போடுகின்றனர். ஏதேதோ இலவசம் என்கின்றனர். கல்வியே இலவசம் என்கின்றனர்! இந்திய மாணவர்களை ஈர்ப்பதற்கு என்னன்னவோ இலவசம் என்கின்றனர்!  மாணவர்களை நிரந்தர கடனாயாளிக்க இலவசம் என்கின்றனர்.

இப்படிச் செய்வது நமக்கும் வருத்தம் தான். ஆனால் இந்த நேரத்தில் துணை அமைச்சர் சிவராசா அவர்களைப் பாராட்டுகிறேன். அவர் அமைச்சை சேர்ந்த கல்வி நிறுவனங்களுக்குக்காக அவர் பலமுறை பத்திரிக்கைகளில் தனது பேட்டியின் மூலம் விளக்கம் கொடுத்து வந்தார். அந்த விளம்பரங்கள் நிச்சயமாக மக்களிடம் போய்ச் சேர்ந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அதனையே தான் இப்போது மனித வள அமைச்சும், கல்வி அமைச்சும் செய்ய வேண்டும். இந்த இரண்டு அமைச்சுகளின் கீழ் பல தொழிற் கல்விக் கூடங்கள் இயங்குகின்றன. குறிப்பாக அமைச்சர் குலசேகரன் புக்கிட் மெர்டாஜம் ஆறுமுகம் கல்லூரியைப் பற்றி அடிக்கடி நினைவுறுத்துகிறார்.  இன்னும் கல்வி அமைச்சின் கீழ் பல தொழிற் கல்வி நிலையங்கள் இயங்குகின்றன.  ஆனால் அதன் விபரங்கள் மாணவர்களிடம்  போய்ச் சேரவில்லை. பத்திரிக்கைகளின் மூலம் செய்திகள் பரவ வேண்டும்.

எல்லாத் தகவல்களும் இணையத்தில் கிடைக்கும் என்பது உண்மை தான். ஆனால் நமது மாணவர் சமுதாயமோ அல்லது பெற்றோர்களோ அதனை அறியவில்லை என்பது தான் உண்மை. மாணவ சமுதாயம் சினிமா தவிர வேறு எதுவும் வேண்டாம் என்னும் மனநிலையிலிருந்து இன்னும்  மாறவில்லை!  பெற்றோர்களும் அதே மனநிலை தான்!

இப்போது அரசாங்கம் செய்ய வேண்டியதெல்லாம் குறைந்தபட்சம் இன்னும் ஒரு நான்கு ஆண்டுகள் அவர்கள் தொடர்ந்து தொழிற் கல்வி பற்றியான விளம்பரங்கள் செய்ய வேண்டும். தனியார் துறையை முடிந்தவரை நமது மாணவர்கள் ஒதுக்க வேண்டும். கடகாரராவதைத் தடுக்க வேண்டும்.

நமது தமிழ் மாணவர்களை அரசாங்கக் கல்லூரிகள் பக்கம் இழுக்க வேண்டும். அதுவே நமது முக்கிய கடமையாக இருக்க வேண்டும்.

ஆக, விளம்பரம்! விளம்பரம்! விளம்பரம்! அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு  அதுவே நமது மந்திரம்!

Saturday, 18 May 2019

மஸ்லி என்ன சொல்ல வருகிறார்...?

 கல்வி அமைச்சர், மஸ்லி  மாலேக் என்ன சொல்ல வருகிறார்?

இந்திய மாணவர்கள் மெட்ரிகுலேஷன் கல்வி வாய்ப்புக்களை முந்தைய அரசாங்கத்தில் என்ன கொடுக்கப்பட்டதோ அதனையே கொடுக்க வேண்டும் என்பது தான் நமது கோரிக்கை. அப்படிக் கொடுத்த போது பூமிபுத்ராக்களுக்கு எந்தப் பாதிப்பும் சென்ற  ஆண்டு ஏற்படவில்லை என்பதை அமைச்சர் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆனால் இந்த ஆண்டு பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு இடங்களை அதிகரிக்கிறோம் என்னும் பெயரில் முன்பை விட பூமிபுத்ரா மாணவர்களுக்கான இடங்கள்  வரலாறு  காணாத அளவுக்கு  உயர்த்தப்பட்டிருக்கின்றன!  ஆனால் இந்திய மாணவர்களுக்குக்  கொடுக்கப்பட்டதோ  சென்ற ஆண்டு கொடுக்கப்பட்ட  அதே எண்ணிக்கை தான்!    ஆக,  இந்திய மாணவர்களின்  எண்ணிக்கை கூட்டப்படவில்லை.  உண்மையில் மலாய் மாணவர்களின் எண்ணிக்கை தான்  கூட்டப்பட்டிருக்கிறது!

இந்த நேரத்தில் மஸ்லில்  கூறி  இருக்கும்  ஒரு கருத்து நம்மை சிந்திக்க வைக்கிறது.  வேலை வாய்ப்புக்களில்  பூமிபுத்ராக்கள்,  அதுவும் தனியார் நிறுவனங்களில்,   ஒதுக்கப்படுகின்றனர் என்கிற கூற்று நம்மை அதிர்ச்சி அடைய வைக்கிறது!

அமைச்சர் தெரிந்து பேசுகிறாரா அல்லது தெரியாமல் பேசுகிறாரா என்று நமக்குப் புரியவில்லை. அல்லது கீழ்த்தட்டு நிலவரம் அவருக்குத் தெரியுமா  தெரியாதா என்று நாம் யோசிக்க வேண்டியுள்ளது.

அரசாங்கத் துறையில் அனைத்தும் பூமிபுத்ராக்களுக்கே.   அதில் எந்த மாற்றமும் இல்லை. காவல்துறை, இராணுவம், கப்பற்படை என்று எடுத்துக் கொண்டால் அனைத்தும் பூமிபுத்ராக்களுக்கே.

சரி தனியார் துறை என்றால் அங்கும்  ஏறக்குறைய ஒரு கோட்டா முறை உருவாக்கப்பட்டிருக்கிறது. பூமிபுத்ராக்களுக்கே  முதல்  சலுகை. 

இப்போது  அவர் தான் பதில் சொல்ல வேண்டும். இந்தியர்கள்  எல்லாத் துறைகளிலும் புறக்கணிக்கப்படுகிறார்கள். அரசாங்கத் துறையாக இருந்தாலும் சரி அல்லது தனியார் துறையாக இருந்தாலும் சரி இந்தியர்கள் தான் வேண்டப்படாதவர்கள் என்கிற நிலை நாட்டில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

பூமிபுத்ராக்களின் மேல் அக்கறை காட்டுவது என்பது தவறல்ல. இன்னும் அவர்களை ஏழைகளின் பட்டியலில் தொடர்ந்து கொண்டே இருப்பது சரியானதாகத் தெரியவில்லை. அப்படி என்றால் இந்தியர்களின் நிலை என்ன?  எல்லாத் துறைகளிலும் புறக்கணிக்கப்படும் இந்தியர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்? 

மஸ்லி மாலேக்  பேசும் போது கொஞ்சம் யோசிக்க வேண்டும். அனைத்து குடிமக்களின் நலன் என்பது முக்கியம். ஒரு சாரார் தூக்கப்படுவதும் இன்னொரு சாரார் தாழ்த்தப்படுவதும் எதிர்கால மலேசியாவுக்கு நல்லதல்ல!

Friday, 17 May 2019

சமயங்கள் தீவிரவாதத்தைப் போதிக்க வில்லை..!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒரு கருத்தைச் சொன்னார். "ஓர் இந்து தீவிரவாதியாக இருக்க முடியாது. ஓர் தீவிரவாதி இந்துவாக இருக்க முடியாது."

மிகச் சரியான கருத்து என்பதில்  எந்த ஐயமுமில்லை.  

மோடி சொன்ன இந்தக் கருத்து எல்லா மதங்களுக்கும் பொருந்தும். மதங்கள்,  ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு சாகுங்கள் என்று  சொல்லவில்லை.

ஆனால் எல்லா மதத்தினருள்ளும் ஒரு சிலர் இப்படி  அடித்துக் கொண்டு சாவதையும், சுட்டுக் கொண்டு சாவதையும்,  குண்டுகள் வீசி அழிப்பவரும்  இருக்கத்தான் செய்கின்றனர்.  அவர்கள் பயங்கரவாதிகளே தவிர எந்த மதத்தையும் சார்ந்தவரில்லை என்பது தான் உண்மை.

ஜாகிர் நாயக் பயங்கரவாதத்தைத் தூண்டுகிறார் என்பது தான் அவர் மீதுள்ள குற்றச்சாட்டு. இஸ்லாம் தூண்டுகிறது என்று யாரும் சொல்லவில்லை. 

பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நடைபெறுகின்ற குண்டு வெடிப்புச் சம்பவங்கள்  பயங்கரவாதமே தவிர அதற்கும் இஸ்லாம் மதத்திற்கும் சம்பந்தமில்லை. பயங்கரவாதிகள் இஸ்லாமியர்கள் அவ்வளவு தான்.

இந்தியாவில், குறிப்பாக வட இந்தியாவில்,  இஸ்லாமியர்கள் இந்துக்களால் தாக்கப்படுகின்ற சம்பவங்கள் அதிகம்.  அவர்கள் இந்துக்கள் என்பதைத் தவிர இந்து மதம் அதனைச் செய்ய சொல்லவில்லை.  அவர்கள் இந்து பயங்கரவாதிகள், அவ்வளவு தான்.

சமீபத்தில் நியுசிலாந்து பள்ளிவாசலில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம். தாக்குதலை நடத்தியவன்  ஒரு கிறிஸ்துவன் என்பதைத் தவிர கிறிஸ்துவ மதம் அதனைப் போதிக்கவில்லை. இலங்கையில் நடந்த கிறிஸ்துவ தேவாலயங்களின் மீதான தாக்குதல் - இஸ்லாம் அதனைப் போதிக்கவில்லை.   தாக்குதல் நடத்தியவர்கள் பயங்கரவாதிகள்.  அவ்வளவு தான். 

இலங்கையில் தமிழர் மீதான தாக்குதல்களை  நடத்துபவர்கள் புத்த மதத்தினர் என்கிறோம்.  புத்த மதம் என்ன மற்ற இனத்தவரை வெறுத்து ஒதுக்கவா சொல்லுகிறது?  அது பயங்கரவாதம்.  மியான்மாரிலும் ரோஹிங்யா மக்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் யார்?  அவர்கள் ம்தத்தால் புத்த மதத்தினரே தவிர புத்தம் அதனைப் போதிக்கவில்லையே!

பிரதமர் மோடி சொன்ன கருத்து சரிதான். ஓர் இந்து தீவிரவாதி ஆக முடியாது. ஒரு கிறிஸ்துவன் தீவிரவாதி ஆக முடியாது. ஓர் இஸ்லாமியன்  தீவிரவாதி ஆக முடியாது. ஓர் புத்தன் தீவிரவாதி ஆக முடியாது.

ஆனால் மதங்களைப் பின் பற்றுபவர்கள்  தீவிரவாதிகள்  ஆகலாம்.   அவன் சாகும் போது  அவனின் கடவுளின் பெயரை உச்சரிக்கலாம்.   அது அவன் சாகும்போது ஏற்படுகின்ற பயமாகக்  கூட இருக்கக் கூடும்!

எந்த ஒரு சமயமும்  தீவிரவாதத்தைப் போதிக்கவில்லை. அப்ப்டி போதிக்கக் கூடிய மதம் என்று ஒன்றுமில்லை. மதத்தின் பெயரால் தாக்குதல்கள் நடக்கின்றன!  அதனால் மதத்திற்கு அவப்பெயரைத் தவிரவேறு என்ன?
 

Thursday, 16 May 2019

உப்சி பல்கலைக்கழகத்திற்கு என்ன ஆயிற்று..?

காலை நேரத்தில் இது போன்ற செய்திகளைப் படிக்கின்ற போது பொதுவாக நமக்கு  எரிச்சல் தான் வரும்.

இப்போதைய நிலையில் நமது பொதுவான கருத்து  என்ன வென்றால் பாரிசான் அரசாங்கம் என்ன செய்ததோ அதையே தான் பக்காத்தான் அரசாங்கமும் நமக்குத் தொடர்ந்து செய்து வருகிறது!

ஆனால் இது அரசாங்கத்தின் நிலையா? அல்லது கல்வி அமைச்சர் தமிழ்க் கல்வியின் மேல் விரோதப் போக்கைக் கையாள்கிறாரா என்கிற ஐயம் எழத்தான் செய்யும்.

சீனக் கல்விக்கு  இருவகையில் பாதுகாப்புக் கிடைக்கிறது. கல்வி அமைச்சர் மஸ்லி மாலேக்கின் தாயார்  ஒரு சீனர்.  அதே சமயத்தில் கல்வித் துணை அமைச்சர் அவரும் ஒரு சீனர். அதுவே சீனக் கல்விக்கு சரியான பாதுகாப்பைக் கொடுக்கிறது. தமிழ் என்று வரும் போது  கேட்க ஆளில்லாத ஒரு நிலை. அதனால் தான் துணைக் கல்வி அமைச்சாராக ஒரு தமிழருக்கும் இடம் வேண்டும் என்று சொல்லிக் கொண்டு வருகிறோம். 

என்ன தான் நடந்தது?  உப்சி பலகலைக்கழகத்தில் முதுகலை பட்டத்திற்கும், முனைவர் பட்டத்திற்கான ஆய்வுகளும் இனி தமிழில் செய்ய முடியாது என்று உப்சி தடை விதித்திருக்கிறது.  இது நிச்சயம் நமக்கு  ஏமாற்றம் அளிக்கிறது.  என்ன தான் பல்கலைக்கழகம் இந்த முடிவினை எடுத்திருந்தாலும் இது கல்வி அமைச்சரின் அனுமதியின்றி  எடுத்த முடிவா என்பது நமக்குப் புரியவில்லை.

பொதுவாகவே இதன் பின்னணியில் அரசியல் இருப்பதாகவே  நமக்குத் தோன்றுகிறது. நமக்குப் பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ எல்லா இடங்களிலும்  அரசியல் நுழைந்திருக்கிறது என்பது  கண்கூடாகத்  தெரிகிறது.

மெட்ரிகுலேஷன் கல்வி பிரச்சனை எழுந்த போது நாம் என்ன சொன்னோம்!   பாரிசான்அரசாங்கத்தில் இந்திய மாணவர்களுக்கு 2200 இடங்கள் கிடைத்தன  என்று நாம் அனைவரும் பாரிசான் அரசாங்கத்தை உயர்த்திப்  பிடித்தோம்! 

அதுவே இப்போதும் நடக்கிறது. அது தான் ஆச்சரியம். பாரிசான்  அரசாங்கத்தில் - உப்சி பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரை - நமக்கு எந்தப் பிரச்சனையும்  ஏற்படவில்லை.  முதுகலை பட்டம் பெற எந்தத் தடையுமில்லை. தமிழில் ஆய்வுகள் செய்து முனைவர் பட்டம் பெற எந்தத் தடையுமில்லை.  

இப்போது ஏன் தடை?  பாரிசான்  அரசாங்கம்  சரியான பாதையில் தானே போய்க் கொண்டிருந்தது?  அதனை ஏன் பக்கத்தான்  அரசாங்கம்  மாற்ற வேண்டும்? 

ஆக, இப்போது  நாம் மீண்டும்  பாரிசான்  அரசாங்கத்தின்  அருமை பெருமைகளைத்  தான்  இந்த எருமைகளுக்குச் சொல்ல வேண்டியுள்ளது! என்னதொரு அரசாங்கத்தை  நாம்  தேர்ந்து எடுத்தோம்! குடியுரிமை என்றால் அவர்களாலும் முடியாது இவர்களாலும் முடியாது! மெட் ரிகுலேஷன் என்றால் அவர்களால் முடியும் இவர்களால் முடியாது! உப்சி என்றால் அவர்களால் முடியும் இவர்களால் முடியாது!

உப்சி பல்கலைக்கழகத்தின் முடிவின் பின்னால் பாரிசான் கட்சியின் பின்னணி இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.  இந்தியர்களுக்கு அவ்வப்போது பாரிசானின் எச்சரிக்கை மணி ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது!

பக்காத்தான்,   தமிழர்களின்  விரோதப் போக்கைத்  தொடருமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

Wednesday, 15 May 2019

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்...!

கோயில்  இல்லா ஊரில் குடியிருக்க  வேண்டாம் என்பது ஓளவையின் மொழி.  

அதனாலோ என்னவோ கோயிலையும் தமிழர்களையும் பிரிக்க முடிவதில்லை.  ஓளவை என்ன கருத்தில் சொல்லியிருந்தாலும் நமது கருத்து ஒன்று தான். நாம் குடியிருக்கும் இடத்தில் நமக்கு ஒரு கோயில் வேண்டும்.  அவ்வளவு தான்.  கோயிலையும் தமிழர்களையும் பிரிப்பதற்கு எந்த ஒரு சக்தியாலும் முடியாது.

இப்போது நம் நாட்டில் போதுமான கோயில்கள் உள்ளன. நமது தேவை எல்லாம் அந்தக் கோயில்களை நமது சமூக முன்னேற்றத்திற்காக அவைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தான்.  

ஏதோ பூஜை புனஸ்காரங்கள் செய்தோம் அத்தோடு முடிந்தது நமது கடமை.  மண்டபத்தை வாடகைக்கு விட்டோம். ஏதோ வாடகை கிடைக்கிறது. அது போதும் என்கிற மன நிம்மதி நமக்கு ஏற்பட்டு விட்டது. 

கோயில்கள் என்றாலே சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற ஓரு பொது இடம் என்னும் நிலைக்கு நாம் வர வேண்டும்.  பள்ளிவாசல்கள் வெள்ளிக்கிழமைகளில் மலாய் மக்களிடையே கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தியது.  அந்த விழிப்புணர்வு தான் இன்று மலாய் மாணவர்களின் கல்வி முன்னேற்றம். 

நமது பெற்றோர்களிடையே இன்னும் அந்த விழிப்புணர்வு  வரவில்லை என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.  அதனால் தான் அரசாங்கம் எவ்வளவோ வாய்ப்புக்கள் கொடைத்தும் நாம் அதனைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறுகிறோம்.  இன்னும் நமது சிந்தனை  பழைய பாணியிலேயே இருக்கிறது. அம்மாவுக்கு உடம்பு சரீல்லை; அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. எங்களைக் கவனித்துக் கொள்ள ஆளில்லை. இங்கேயே இருந்து,  இங்கேயே ஏதோ ஒரு வேலை செய்தால் குடும்பத்தைக் கவனித்த மாதிரியும் இருக்கும், எங்களையும்  கவனித்துக் கொண்ட   மாதிரியும்  இருக்கும்!

இது போன்ற சாக்குப் போக்குகள் நமக்கு மட்டுமே சொந்தம்!  மற்ற இன பெற்றோர்களுக்கு  இப்படியெல்லாம் சிந்திப்பதில்லை. 

இவர்களுக்கெல்லாம் விழிப்புணர்வு கிடைக்க வேண்டிய இடம் கோயில்கள் மட்டும் தான். கல்வியின் முக்கியத்துவம் உணர்த்தப்பட வேண்டும்.  இப்போது தமிழை அறியாதார் பெருகி வருகின்றனர். அதனால் தமிழ் வகுப்புக்கள் எடுக்கப்பட வேண்டும்.  ஓய்வு பெற்ற தமிழாசிரியர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.  இன்று வெளி நாடுகளில் கோயில்கள் தான் தமிழ் மொழி கற்றுக்கொள்ளும் இடங்களாக மாறி வருகின்றன. 

கோயில்கள் பக்தியை வளர்ப்பதோடு நமது மொழி, கலாச்சாரம் அனைத்திலும்  கவனம் செலுத்த வேண்டும்.

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்! குடியும் வேண்டாம்!

தொழிலாளர் பற்றாக்குறை...!

தொழிலாளர் பற்றாக்குறையால் இந்தியர்களின் தொழில்கள் பாதிக்கப்படுகின்றன என்பதை அறியும் போது  நமக்கும் வேதனை தான்.

இந்தியர் சார்ந்த அனைத்துத் தொழில்களும் இன்று தேக்கம் அடைந்து விட்டதாகக் கூறப்படுகின்றது. கோலாலம்பூரில் சமீப காலத்தில் மூன்று இந்திய உண்வகங்கள் மூடப்பட்டு விட்டதாகக் கூறப்படுகின்றது. இன்னும் பல தொழில்களும் ஆள்பற்றாக் குறையால்  மூடப்படும் அபாயத்தில் உள்ளன என்றும் சொல்லப் படுகின்றது.

என்னைச் சுற்றி நான் பார்க்கின்ற போது, நான் வழக்கமாகப் போகும் உணவகங்கள், வேறு பல இந்தியர்  சார்ந்த தொழில்கள், இவைகளைப் பார்க்கும் போது எந்த ஒரு தொழிலும் ஆள் பற்றாக் குறையால் மூடப்பட வில்லை.  நிர்வாகக் கோளாரினால் ஓரிரு உணவகங்கள் மூடப்பட்டிருக்கின்றன என்பது எனக்குத் தெரியும்.   அதனைச் சரி செய்வதற்கு திறமையான நிர்வாகம் தேவை. தொழில் செய்பவர்களுக்குத் தான் செய்யும் தொழிலில் அனுபவம் இல்லாததால் தான் பல தொழில்கள் மூடப்படுகின்றன. 

நான் வாடிக்கையாகப் போகும் உணவகங்கள் எந்தப் பிரச்சனையும் இன்றி இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றன. இந்த உணவகங்களில் அந்நியத் தொழிலாளர்களும் அத்தோடு உள்நாட்டுத் தொழிலாளர்களும் - பெரும்பாலும் பெண்கள் - வேலை செய்து கொண்டு தான் இருக்கின்றனர். அல்லது குடும்ப உறுப்பினர்கள் அதிகம் பங்கெடுக்கின்றனர். மூடுகிறோம் என்கிற பிரச்சனைக்கே இடமில்லை!

ஆள் பற்றாக்குறை தான். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் இன்னொரு பக்கம் உணவகங்கள் திறப்பு விழா கண்டு கொண்டு தான் இருக்கின்றன.  ஒருவர் விற்கிறார் ஒருவர் வாங்குகிறார். அதுவும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது!

முடி திருத்தகம் பற்றி பேசும் போது அங்கும் ஆள்பற்றாக் குறை நிலவத்தான் செய்கிறது. இந்த நிலையிலும்  எனக்குத் தெரிந்த ஓர் இளைஞர் புதிது புதிதாக  க்டைகளைத்  திறந்து கொண்டு தான்  போகிறார்!  இவர்கள் எல்லாம் எப்படி பிழைப்பு  நடத்துகிறார்கள்  என்பது  எனக்கும் புரியாத புதிராகத்தான் இருக்கிறது!

ஆனால் ஒன்று சொல்லுவேன். இது அரசாங்கத்திற்கு நான் கொடுக்கும்  வேண்டுகோளாக எடுத்துக் கொள்ளலாம். நாட்டிற்குள்  சுற்றித்திரியும் வெளி நாட்டவர் ஏராளம்.  இவர்களுக்கு முறையான ஆவணங்களைக் கொடுத்து  இவர்களுக்கு வேலை கொடுக்கலாம். இதன் மூலம் ஓரளவு இந்தப் பிரச்சனைகளுக்குத்  தீர்வு  காணலாம்.  குறிப்பிட்ட இனத்தவர் தான் வேண்டும் என்று அடம் பிடிக்காமல் வேற்று நாட்டவர்களையும்  நமது பணிமனைகளில் சேர்த்துக் கொள்ள பழக வேண்டும். எனக்குத் தெரிந்து பல உணவகங்களில், முடி திருத்தகங்களில் வங்காள தேசிகள், நேப்பாளிகள், பர்மியர்கள். இலங்கையர்கள் பணி புரிகிறார்கள்.

இது காலத்திற்கு ஏற்ற மாற்றங்கள். இனி நமது தொழில்கள் இப்படித்தான் நகர வேண்டும். துணிந்து மாற்றங்களை  ஏற்றுக்கொள்ள  பழக வேண்டும்.  வேறு மாற்று வழிகள் இருந்தால் யார் ஆட்சேபிக்கப் போகிறார்!  துணிந்து நடை போடுங்கள்.  ஆனால்  மூடு விழா என்னும் பேச்சே வேண்டாம்!

Tuesday, 14 May 2019

என்னா ஆனார்...?

முகமது ஷாஃபி அப்துல்லா என்ன ஆனார்....!

ஆமாம் அவர் "எஸ்டேட்காரன்" என்றார்.  நாம் எல்லாம் ஒன்று சேர குரல் கொடுத்தோம். தலைவர்கள் கொடுத்தார்கள். இயக்கங்கள் கொடுத்தன. ஷாஃபியே மன்னிப்புக் கேள் என்றோம். ஊகும் ...!  ஒன்றும்   ஆகவில்லை..!

அவர் மன்னிப்பு கேட்பதாய் இல்லை.  அவர் அதிகாரத்தில் இருந்தவர். மன்னிப்பு கேட்பதவது!  அவர் சார்ந்த கட்சியைத் தோற்கடித்தவர்கள் நாம். அந்த வன்மம் அப்படியெல்லாம் சீக்கிரமாகப் போய்விடாது! ஓரு அதிகாரமும்  இல்லாத ம.இ.கா. காரனையே நம்மால்  மன்னிப்பு கேட்க வைக்க முடியவில்லை!   ம.இ.கா. தலைவர், அவர் செய்த பாவங்களுக்காக, எந்தக் காலத்திலாவது இந்திய சமுதாயத்திடம்   மன்னிப்பு கேட்டிருக்கிறாரா? 

ம.இ.கா. காரனுக்கு அவ்வளவு திமிர் இருந்தால் அம்னோவைச் சார்ந்த ஷாபிக்கு எவ்வளவு  திமிர் இருக்க வேண்டும்?  அவரைக் குறை சொல்ல முடியாது.  அவர் வாழ்ந்த வாழ்க்கை அப்படி. அவர் வகித்த பதவிகள் அப்படி. பாரிசான் ஆட்சியில் அவர் முடிசூடா மன்னர்! அத்தகைய ஒரு மனிதரைப் போய் "மன்னிப்பு கேள்" என்றால் அது நடக்கக் கூடிய காரியமா,  என்ன?

சரி, இப்போது என்ன. நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்! உன்னால் என்ன செய்ய முடியும் என்று இந்திய சமுதாயத்தைப் பார்த்து கேள்வி கேட்கிறார்! ஆமாம் நம்மால் என்ன செய்ய முடியும்? கொஞ்சம் பின் நோக்கிப் பாருங்கள். ஸம்ரி காளிமுத்துவை நம்மால் என்ன செய்ய முடிந்தது?  முகமது ரிதுவான் அப்துல்லாவை  நம்மால் என்ன செய்ய முடிந்தது? இவர்கள் எல்லாம் சுண்டைக்காய்கள்! இவர்களையே நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அப்படியிருக்க இதுவோ ஒருவகை கடல் சுறா மாதிரி! என்னா செய்ய முடியும்?

அதிகாரம் அவர்  கையில் இருந்திருந்தால்  மன்னிப்பு கேட்க சொன்னவர்களை இந்நேரம் உண்டு இல்லை என்று ஆக்கியிருப்பார்!  இப்போது அவரிடம் அதிகாரம் இல்லை! இருந்தாலும் முடிந்து போன அதிகாரத் திமிர் இன்னும் அவரிடம் ஒட்டிக் கொண்டிருக்கிறது! நடப்பில் இருக்கிற கணக்கு வழக்குகள் எல்லாம் முடிந்த பின்னர் நிலைமை மாறலாம்.  அதற்கு இன்னும் காலம் உண்டு. அதுவரையில் அவரிடமுள்ள வீராப்புக்குக் குறைவு  இருக்காது!

ஒன்று செய்யலாம். இது போன்ற அடாவடி மனிதர்களுக்காக வேண்டுதல் செய்யலாம்.  ஆமாம்! வேறு ஒன்றும் செய்ய இயலாத நிலையில் "இறைவா! இவருக்கு   நல்ல  புத்தியைக் கொடு!" என்று  நாம் வேண்டுதல் செய்யலாம்.  அவர் திருந்துவதறகு நாம் வாய்ப்புக் கொடுக்க வேண்டும்.

யாராலும் செய்ய முடியாத ஒன்றை இறைவனால்  தான்  செய்ய  முடியும். அதுவும் கொஞ்சம் தலை கனத்து இருப்பவர்களுக்கு இது  ஒன்று தான் வழி!

என்னா ஆனார்? ஒன்றும் ஆகவில்லை!

மெட்ரிகுலேஷன் கல்வி தொடர வேண்டுமா..?

அரசாங்க ஆலோகசர் டையிம் ஜைய்னுடின் நல்லதொரு கருத்தைச் சொல்லியிருக்கிறார்.

ஆமாம்,  மெட்ரிகுலேஷன் கல்வி இனி தேவையற்ற உண்டு என்பதாக அவர் கூறிய  கருத்து  சரியானது தான். இல்லை என்று மறுக்க முடியாது. இதே கருத்தை கெராக்கான் கட்சியும் கூறியிருக்கிறது. 

ஆனால் கெராக்கான் தனது கருத்தை பாரிசான் ஆட்சி காலத்திலேயே கூறியிருந்தால் அவர்களைப் பாராட்டலாம். இப்போது அவர்களின் கருத்தை யாரும் கேட்கப் போவதில்லை! லட்சியம் செய்யப் போவதில்லை!   ஜைய்னுடின்  நிலைமை வேறு.  அவர் பக்காத்தான் அரசாங்கத்தை பிரதிநிதிப்பதால்  வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது போல் ஆகி விடும். அம்னோவுக்கு இப்போது வேறு வேலை இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். அரசாங்கம் எதனைச் செய்தாலும் அதற்கு ஒரு புதிய வடிவம் கொடுக்கத்  தயாராக இருக்கிறது!

இப்போது அம்னோவுக்குத் தெரிந்ததெல்லாம் "மலாய்க்காரர் உரிமை பறிபோயிற்று1 ஆட்சியாளர் உரிமை இழந்தனர்! இஸ்லாம் தகுதி இழந்தது!" என்னும்  பாணியிலேயே  அவர்கள் அரசாங்கத்திற்கு எதிராகக் களம் இறங்குவர்! பாஸ் கட்சியும் அவர்களோடு ஒட்டிக் கொள்ளும்!  இன்றைய நிலையில் அவர்களுக்குக் கை கொடுப்பது மலாய்க்காரர் உரிமை, ஆட்சியாளர், இஸ்லாம் - இவைகள் தான் இனி அவர்களுடைய அரசியல்! 

நல்ல மாற்றங்களை அவர்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை! அது மட்டும் உண்மை.

மெட் ரிகுலேஷன் கல்வி என்பது ஒரு காலத்தில் மலாய்க்கார மாணவர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒன்று. பல்கலைக்கழகத்தில் மலாய் மாணவர்களின் எண்ணிக்கையைக் கூட்ட வேண்டும் என்பது தான் அவர்களின் குறிக்கோள்.  

இப்போது அதன் நோக்கம் நிறைவேறியாயிற்று என்பதில் ஐயமில்லை. இப்போது  படிக்கப்போகிற மாணவர்கள் பெரும்பாலும்ஆரம்ப கால மாணவர்களின்  பேரப் பிள்ளைகள்!    ஆரம்ப கால மாணவர்களிலிருந்து  இப்போது  போகும் அவர்களது  பேரப் பிள்ளைகள் வரை எந்த மாற்றமும்  மலாய்  மாணவர்களிடம்  ஏற்படவில்லை என்றால்  நமது கல்வி முறை குப்பைக் கூடையில் போட வேண்டிய கல்வி முறை என்பது தான் உண்மை!

நமக்குத் தெரிந்த வரை படிவம் ஆறு (எஸ்.டி.பி.எம்.) கல்வி முறைக்குத் தான் இனி அதிகக் கவனம் செலுத்தப்பட வேண்டும்.  அப்படி மெட்ரிகுலேஷன் கல்வி தேவை என்றே வைத்துக் கொள்ளுவோம். அப்படி என்றால் எஸ்.டி.பி.எம். தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் அனைவருக்கும் பல்கலைக்கழகத்தில் இடம் ஒதுக்க வேண்டும்.  அது கட்டாயமாக்கப்பட வேண்டும். 

இந்த வழிமுறை ஒன்றே போதும்  படிவம் ஆறு மாணவர்களுக்குப் பலகலைக்கழகக் கல்வி   கட்டாயம் என்கிற  நிலை  இருந்தாலே போதும்  மெட்ரிகுலேஷன் கல்விக்காக யாரும் போராடப் போவதில்லை.

படிவம் ஆறு என்பது இன்னும் சிறப்பானது.   மற்ற பல்கலைக்கழகங்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு கல்விமுறை.  உலக அளவில்  அங்கீகரிக்கப்பட்டது.  இப்போதைய பிரச்சனை நமது  பல்கலைக்கழகங்கள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தான்! உலகமே ஏற்றுக் கொள்ளும் போது நம் நாடு ஏற்றுக் கொள்ளவில்லை என்றால்....?   

படிவம் ஆறு கல்வி முறையை ஏற்றுக் கொள்ள வேண்டும். அது ஒன்றே போதும். மெட்ரிகுலேஷன் கல்வி தேவையற்ற ஒன்று!

Sunday, 12 May 2019

இது சமுதாயத்தின் வெற்றியா....?

இந்த ஆண்டு மெட்ரிகுலேஷன்  கல்வி பயில மொத்தம் 2,228 இடங்கள் இந்திய மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக  ஆகக் கடைசி செய்திகள் கூறுகின்றன.

"இது சமுதாயத்தின் வெற்றி" என்பதாக  தமிழ் மலர் நாளிதழ் அதனை வர்ணிக்கிறது. இல்லை. நான் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த இடங்கள் நமக்குச் சும்மா கிடைக்கவில்லை. நமது போராட்டம்,  மகஜர்கள், பொங்கியெழுந்த மக்கள், ஊடகங்கள்  - அனைவரும் எழுப்பிய பக்காத்தான் அரசாங்கத்திற்கு எதிரான கூக்குரல் - இது தான் இந்த வெற்றியை ஏற்படுத்தியிருக்கிறது!

இது சமுதாயத்தின் வெற்றி என்பதை நான் வேறு கோணத்தில் பார்க்கிறேன். பக்காத்தான் அரசாங்கம் நாம் கேட்காமலேயே நமது மாணவர்களுக்குத் தேவையான இடங்களை ஒதுக்கி இருக்க வேண்டும். அது அவர்களின் கடமை என்பதை அவர்கள் உணர்ந்திருக்க வேண்டும். கடந்த அரசாங்கம்  எத்தனை இடங்கள் நமக்கு ஒதுக்கி இருந்தனவோ அந்த அளவேனும் நாம் கேட்காமலேயே அவர்கள் கொடுத்திருக்க வேண்டும்.  அப்படி அவர்கள் கொடுத்திருந்தால் - நாம் கேட்காமலேயே அவர்கள் அததனை இடங்களை அவர்கள் கொடுத்திருந்தால் - அது தான் இந்த சமுதாயத்தின் வெற்றி.  நாம் தேர்ந்தெடுத்த அரசாங்கம் நமக்குச் செய்த கைம்மாறு. அரசாங்கம் இந்த சமுதாயத்தின் மேல் வைத்த நம்பிக்கை. அது தான் இந்தச் சமுதாயத்தின் வெற்றி. 

ஆனால் நடந்தது என்ன?  எல்லாம் நேர்மாறாக நடந்தது! முந்தைய  அரசாங்கத்தின் கொள்கைகளை அப்படியே கடைப்பிடித்தது பக்காத்தான் அரசாங்கம்! இது தான் நமக்குக் கிடைத்த முதல் அடி! இப்போது இந்த அரசாங்கத்தை எந்த அளவுக்கு நம்புவது என்பது தான் நம்முடைய கேள்வி. இனி மேலும் நம்ப முடியுமா? தெரியவில்லை! 

அடுத்த ஆண்டும் இந்தப் பிரச்சனை நீளுமா என்பதும் இன்னும் தெளிவில்லை!  கல்வி அமைச்சர் எந்த உறுதிமொழியும் கொடுக்கவில்லை. அடுத்த ஆண்டும் அமைச்சர் குலசேகரன் அமைச்சரவையில் பேசித்தான் நமது மாணவர்களுக்கு இடங்களை வாங்கிக் கொடுப்பாரா? தெரியவில்லை!  சரி, குலசேகரன் இல்லையென்றால் வேறு அமைச்சர்கள் வாயைத் திறப்பார்களா? தெரியவில்லை!  இப்போது நமது மற்றைய அமைச்சர்கள் மீது நமக்கு மரியாதையும்  நம்பிக்கையும் குறைந்து வருகிறது. 

நமக்கு மீண்டும் ம.இ.கா.பாணி அமைச்சர்கள் தேவை இல்லை.  இப்போது நம்மிடையே உள்ள அமைச்சர்கள் மக்கள் பணத்தில் கை வைத்தவர்கள் என்று யாரும் சொல்ல முடியாது.  அதனை அவர்கள் தொடர்ந்து காப்பாற்ற வேண்டும். அது மட்டும் அல்ல. அவர்கள் செயல்பட  வேண்டும்.  அவர்கள் தங்களின் அமைச்சின் கடமைகளைச்  செய்கிறார்கள் என்பது நமக்கும் தெரியும்.  அதே சமயத்தில் இந்திய சமுதாயத்தின் பிரச்சனைகளை கூடிப் பேசி தீர்க்க முயற்சிகள் எடுக்க வேண்டும்.

இது தற்காலிக வெற்றி தான்! 
                                                                                                                                                                                                                                                                                                                                                                      

Saturday, 11 May 2019

தேசிய விமானத்தின் எதிர்காலம்...?

நமது தேசிய விமானமான "மாஸ்" நிலை என்ன? 

மிகவும் இக்கட்டான நிலை என்பதில் ஐயமில்லை.  அது ஒரு வெள்ளை யானை. அதனைக் கட்டி மேய்ப்பது சிரமம் என்னும் நிலைக்கு அது தள்ளப்பட்டு விட்டது.

அதனை விற்றுவிடுவது   நல்லது என்கிறார் பிரதமர் மகாதிர். அது நாட்டின் மாபெரும் சின்னம். அதனை விற்பது நாட்டின் கௌரவத்திற்கு இழுக்கு என்கின்றனர் சிலர்.

அதனை விற்கலாம். தனியார் துறைக்கு விற்கலாம். ஆனால் அது தொடர்ந்து மலேசிய விமானமாகவே தனது பயணத்தைத் தொடர வேண்டும் என்னும் சொல்வாரும் உண்டு.

இந்த கருத்தை நான் ஆதரிக்கிறேன். அது தனியார் துறையினரால் நடத்தப்படுவதில் நமக்கு ஆட்சேபணையில்லை.  மலேசியாவில் உள்ள எத்தனையோ பேர் அதனை நடத்த தயராக உள்ளனர்.  அவர்கள் அதனை மலேசிய விமானமாகவே நடத்த தயாராக இருப்பர் என நம்பலாம்.

நட்டத்தில் ஓடும் ஒரு விமானத்தை யார் வாங்குவார் என்னும் பேச்சுக்கே இடமில்லை. மாபெரும் கடனில்  மூழ்கியிருந்த "ஏர் ஏசியா" விமானத்தை 0 விலைக்கு வாங்கி அதனை வெற்றிகரமான நிறுவனமான மாற்றி அமைத்தவர்கள் நம் கண் முன்னே இருக்கிறார்கள்.  அதனால் வாங்க ஆளில்லை; நடத்த ஆளில்லை என்பதெல்லாம் வெறும் பேச்சு. வாங்க ஆளில்லை என்று சொல்லப்பட்ட "இக்குவானிமிட்டி" கப்பலை கெந்திங் நிறுவனம் வாங்க வில்லையா? 

கொஞ்சம் பின் நோக்கிச் செல்வோம். மாஸ் விமான நிறுவனம் ஆரம்பித்த போது மிகவும் ஆரவாரமாக ஆராம்பிக்கப்பட்டது. அது மட்டும் அல்ல. அப்போது அது இலாபகரமான ஒரு நிறுவனமாக செயல்பட்டது என்பதையும் மறக்க இயலாது. இலாபகரமாக செயல்பட்ட ஒரு நிறுவனத்தை எப்போது அரசியல்வாதிகள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்களோ அப்போது இருந்தே அதன் செயல்பாடுகள் கீழ் நோக்கிச் செல்ல ஆரம்பித்தன. 

அதனைத் தவறாக வழி நடத்தியவர்கள் எல்லாம் இன்றும் வெட்கமில்லாமல் கோடிசுவரர்களாக ஊர்வலம்  வந்து கொண்டு இருக்கிறார்கள்! விமான நிறுவனமோ பொலிவிழந்து, களையிழந்து  கட்டவிழ்ந்து கிடக்கிறது! "இனி எங்களால் முடியாது!" என்று விமானத்தை வைத்து அரசியல் நடத்தியவர்கள் இப்போது மௌன ஊர்வலம் வருகிறார்கள்!

மாஸ் விமானத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும்? சிறப்பாகவே இருக்கும்.  அந்த நிறுவனம் தொழில் செய்பவர்கள் கையில் இருந்தால் அதனை நொடிப் பொழுதில் மாற்றி அமைத்து  விடுவார்கள்.  அரசியல்வாதிகள் கையில் இருந்தால் நொடிப் பொழுதில்  நட்டத்தை ஏற்படுத்துவார்கள்! அரசியல்வாதி அவன் வேலையை மட்டும் செய்ய வேண்டும். தொழிலதிபனாக மாற கனவிலும் நினைக்கக் கூடாது!

இனி இந்ததேசிய விமான நிறுவனத்தை தொழில் அதிபர்கள் தான் நடத்துவார்கள் என்பதை  மகிழ்வுடன் வர வேற்கிறோம்!

Friday, 10 May 2019

விலைவாசி எப்போது குறையும்...?

பக்காத்தான்  அரசின் மிகப்பபெரிய பின்னடைவு என்றால் அது விலைவாசி ஏற்றம் என்பது தான்!

விலைவாசி ஏற்றம் குறைய வேண்டும் என்பது நமது ஆசை மட்டும் அல்ல  அரசாங்கத்தின்  ஆசையும் கூட.  ஆனால் விலை ஏற்றம் குறையவில்லை!  ஒரு முறை ஏறினால் பின்னர் அது குறையும் என்று நாம் சொல்லிவிட முடியாது.  அது வியாபாரிகளின் கையில் என்பது தான் நமது அனுபவம்.

ஆனால் பக்காத்தான் அரசாங்கம் அதனை எப்படி கையாளப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இப்போதைக்கு நாம் பாராட்ட வேண்டிய அம்சம் பெட்ரோல்  விலையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தான்.  குறைக்கவும் இல்லை கூட்டவும் இல்லை  என்பதால் நாம் நிம்மதிப் பெருமூச்சு  விட முடிகிறது!  பெட் ரோல் விலை குறைந்தால் பொருள்களின் விலையும் குறையும் என்பது பொதுவான அபிப்பிராயம்.   பொது மக்களைப் பொறுத்தவரையில் பெட் ரோல் விலை குறைந்தால் மகிழ்ச்சியே!

ஆனால் வியாபாரிகளைப் பொறுத்தவரை  பெட்ரோல் விலை குறைந்தாலும்  பொருள்களின் விலையைக் குறைப்பார்களா என்பது தெரியவில்லை.  குறைய வைப்பது அரசாங்கத்தின் கையில். அதனைக் கண்காணிப்பது அரசாங்கத்தின் கையில். வியாபாரிகள் அவ்வளவு சுலபமாக எந்த விலையையும் குறைத்து விட மாட்டார்கள்!

எது எப்படி இருந்தாலும் எண்ணைய் விலை குறைந்தால் மட்டுமே மேற் கொண்டு நாம் விலைவாசிகளைப் பற்றி பேச முடியும்.

இப்போது மலேசியர்களுக்கு மிகவும் அத்தியாவசியமான விலை குறைப்பு என்றால் அது தினசரி பயன்படுத்தும் உணவுப் பொருள்களின் விலையே.  காய்கறிகள்  விலை கட்டுப்பாடு இல்லாமல் ஏறிக் கிடக்கிறது என்பது உண்மையே!  தினசரி பயன்படுத்தும் சமயலறை சமாச்சாரங்கள் அனைத்தும் விலை ஏறிவிட்டன.  எதனை வாங்குவது, எதனை உண்பது என்பதே போராட்டமாகப் போய்விட்டது!

பக்காத்தான் அரசாங்கத்தின் மிகப் பெரிய சவால் என்பது  உணவுப் பொருள்களின் விலை ஏற்றமே!  அரசாங்கம் எப்படி சமாளிக்கப் போகிறது என்பதைப்   பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

முதல் ஆண்டு மக்களைப் பொறுத்தவரை முகம் சுளிக்க வைத்த ஆண்டு தான்.  முகத்தில் மகிழ்ச்சி இல்லை. இரண்டாம் ஆண்டை நோக்கி நகருகிறது பக்காத்தான் அரசாங்கம்.  விலைவாசி ஏற்றத்தைக் கட்டுப்படுத்தமா என்பதை இனி தான் பார்க்க வேண்டும்!

Thursday, 9 May 2019

அது என்ன "எஸ்டேட் புத்தி?"

முன்னாள் பிரதமர் நஜிப்பின் வழக்கறிஞர் முகமது ஷாஃபி அப்துல்லா நீதிமன்றத்தில் பத்திரிக்கையாளர்களைப் பார்த்து சீறியிருக்கிறார்! "ஏன் எஸ்டேட்காரன் போல் நடந்து கொள்ளுகிறீர்கள்?"  என்று அவர் சொன்ன வார்த்தை பத்திரிக்கையாளர்களைச் சீற்றம் அடையச் செய்திருக்கிறது!

நாம் நினைத்துப் பார்க்கும் போது ஒன்று நமக்கு ஞாபகத்திற்கு வருகிறது. நாமும் கூட "இவனுக்குக் கம்பத்துப் புத்தி போகாது!"  என்று சொல்லுவது நமக்கும் வழக்கம் தான்! ஆனால் நாம் அதனை மேடையிலோ அல்லது நீதிமன்றத்திலோ  சொல்லுவது கிடையாது!  அந்த வாய்ப்பு  அவருக்குக் கிடைத்திருக்கிறது, அதனை அவர் பயன் படுத்திக் கொண்டார்! அவ்வளவு தான்!

ஷாஃபி  போன்றவர்கள் என்ன குணாதிசயங்கள் கொண்டவர்கள்  என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  வாழ்க்கையில் பெரும்பாலான பகுதி  அவர்கள் மற்றவர்களின் நனமதிப்பைப் பெற்று வாழ்ந்தவர்கள் அல்ல.  அரசியல் தான் அவர்களைத் தூக்கி விட்டது! மற்றபடி கடுமையாக உழைத்துச் சம்பாதித்தவர்கள் என்பதெல்லாம் அவர்கள் அகராதியில் இல்லை!

"எஸ்டேட் காரன்" என்பதை எந்த அர்த்தத்தில்  அவர் சொன்னார்?.  தோட்டப்புறத்தில் வாழ்ந்த ஒருவன் எந்தக் காலத்திலாவது  ம.இ.கா.வை வைத்து  கோடிக் கணக்கில் பணம்  சம்பாதித்தான்  என்று சொல்ல  முடியுமா?  தோட்டப்புறத்தில் உள்ளவனை வைத்துத் தான் பட்டணத்து அரசியல்வாதி  கோடிக் கணக்கில் பணம் சம்பாதித்தான் என்று நமது வரலாறு சொல்லுகிறது!

இதனைத் தான் ஷாஃபி  இடித்துரைப்பது போல் சொல்லுகிறார். எஸ்டேட்காரன் பிழைக்கத் தெரியாதவன்! அரசியலை வைத்து கம்பத்துக்காரன் பிழைத்துக் கொள்ளத் தெரிந்தது போல்  எஸ்டேட் காரனுக்குப் பிழைக்கத் தெரியவில்லை என்கிறார்! 

அதற்கு நாம் என்ன செய்வது?  நமது கல்வி முறையே நம்மை மழுங்கடித்து விடுகிறதோ என்று தோன்றுகிறது. அறம் செய்ய விரும்பு என்று சொன்னார்களே தவிர கொள்ளயடிக்க விரும்பு என்று எஸ்டேட் பள்ளியில் சொல்லிக் கொடுக்கப்பட வி,ல்லையே!

ஷாஃபி சீறியதைப் பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை.  அவர் படித்த படிப்பு, அவர் வளர்ந்த முறை  என்று பின்னோக்கிப் போனால் அவர் அப்படித்தான் பேசுவார் என்று புரிந்து கொள்ளலாம்.

நல்லவன் ஒரு கருத்தைச் சொன்னால் அதன் படி நாமும் நடக்க முயற்சி செய்யலாம். நாரவாயன் ஒரு கருத்துச் சொன்னால் நார வாயா என்று துப்பிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க வேண்டியது தான்!

Wednesday, 8 May 2019

ஓர் ஆண்டு நிறைவு...! 100 / 20 புள்ளிகள்!

பக்காத்தான் அரசு பதவியேற்று ஓர் ஆண்டு நிறைவு அடைந்தது!  ஏதோ நேற்று போல் தோன்றுகிறது. அதற்குள் ஓர் ஆண்டு!

இந்த  ஓர் ஆண்டில்  இந்த அரசு எதனைச் சாதித்தது என்று நீங்களும் நானும் கேட்கத்தான் செய்கிறோம். பலரும் கேட்கின்றனர்.

எல்லாரும் கேட்பதைப் போல் நான் கேட்கப் போவதில்லை. என்னைப் பொறுத்தவரை இந்தியர்கள் தான் எனது இலக்கு.  மற்ற இனத்தவர்கள் கேட்க ஒன்றுமில்லை. அது தானாக நடக்கும். ஆனால் நம்மைப் பொறுத்தவரை அது தானாக நடக்காது. கேட்டாலும் கிடைக்கும் என்னும் நம்பிக்கையும் இல்லை. அந்த நம்பிக்கையின்மையை  இந்த அரசு ஏற்படுத்திவிட்டது. அதுவும் இந்த ஓர் ஆண்டு காலத்தில்! 

கடந்த பொதுத் தேர்தலின் போது நம்மால் அதிகம் கேட்கப்பட்டது என்றால் அது  குடியுரிமை பற்ற்யதாகத்தான் இருக்கும். ஒரு சில மாதங்களில் இதற்கு முடிவு கிடைக்கும் என்று நமக்குக் கிடைத்த தகவல்கள் பிறகு பொய்யாக்கப்பட்டு விட்டன! 

குடியுரிமை அற்றவர்கள் சுமார்3,00,000 பேர் என்றார்கள். அதாவது இந்தியர்கள் மட்டும்!  அனைவரும் இங்கு இந்த மண்ணில் பிறந்தவர்கள். ஆனால் எதிர்ப்பார்த்தபடி ஒன்றும் நடக்கவில்லை! நடந்தது என்ன? இவர்கள் பதவிக்கு வந்த  ஒராண்டில்  1641 பேர் குடியுரிமை கொடுக்கப்பட்டிருப்பது  மாபெரும் வெற்றி  என்கிறார் உள்துறை அமைச்சர்  டான்ஸ்ரீ மொகைதீன்! குடியுரிமை பெற்றவர்கள் அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்! 

அந்த எதிர்ப்பார்ப்பு  "பக்பக்",  "காத்தான் காத்தான்",  என்று  எகத்தாளமாகப் போய்விட்டது!

சரி கல்வியை எடுத்துக் கொள்ளுவோம். பாரிசான் ஆட்சியில் இந்திய மாணவர்கள் மெட்ரிகுலேஷன் கல்வி பயில 2200 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதனை 700 ஆக்கிய பெருமை பக்காத்தான் ஆட்சிக்கு உண்டு.   இது என்ன ஓராண்டு சாதனையா?  கூடுதலாக கொடுக்கப்படும்  என்பதில் எந்த உறுதியும் இல்லை!

வேலை வாய்ப்புக்கள் என்பது பற்றி சரியான தீர்வுகள் காணப்படவில்லை. அரசாங்க வேலை எதுவும் இந்தியர்களுக்குக் கொடுக்கப்படுவதாகத் தெரியவில்லை. தனியார் துறையிலும் நமக்கான பங்கு நமக்குக் கிடைக்கவில்லை.  வங்கிகள், பெரும் நிறுவனங்கள் இன்னும் நமக்குக் கைக்கொடுப்பதில் ஆர்வம் காட்டவில்லை! 

இன்னும் பல பிரச்சனைகள் நமக்கு உண்டு.  அதனை இங்கு நான் கொண்டு வரவில்லை.  இது முதலாம் ஆண்டு என்பதால் நம்மால் அதிக அழுத்தம் கொடுக்க முடியவில்லை.  பொருளாதார சீர்திருத்தத்திலேயே  அரசாங்கம் அதிகக் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் இன்னும் இருப்பதால்  நாமும்  கொஞ்சம் விட்டுக் கொடுப்போம். 

இந்த ஓர் ஆண்டு காலத்தில் பக்கத்தான் ஆட்சிக்கு எத்தனை புள்ளிகள் கொடுக்கலாம்?  நாம் இந்தியர்களிப் பற்றித் தான் பேசுகிறோம். அதனால்  நூறுக்கு இருபது புள்ளிகள் கொடுக்கலாம்!  கிள்ளி கொடுப்பவர்களுக்கு அள்ளி கொடுக்க முடியாது!

Tuesday, 7 May 2019

தமிழ் மொழிக் காப்பகம்

எத்தனையோ  ஆண்டுகள் நமது தொடர்புகள் தேவான் பகாசா டான் புஸ்தக்காவுடன் இருந்தாலும்  தமிழ் மொழியை அவர்களும் கண்டு கொள்ளவில்லை.  நாமும் கண்டு கொள்ளவில்லை.

ஆனால் சீனர்கள் கமுக்காகவே அனைத்தும் செய்து வந்தனர். செய்து கொண்டும் விட்டனர்! அதுவும் 15 ஆண்டுகளுக்கு முன்னராம்!  நம்மால் செய்ய முடியவில்லை. முந்தைய அரசாங்கத்தில் நமது இனததவர் துணைக் கல்வி அமைச்சராக இருந்தும் அவரும் தனது நிலையைத் தற்காத்துக் கொள்ள வேண்டி இந்த முயற்சியில் ஈடுபடவில்லை! அவருக்கு அவரது பதவி தான் முக்கியம். இருக்கட்டும்! 

இப்போது தமிழ் மொழிக்கு ஓர் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. அதுவும் ஒரு சீனத் துணைக் கல்வி அமைச்சர் மூலம்!  துணைக்கல்வி அமைச்சர் தீயோ நீ சிங் இந்தக் காப்பகத்தின் தலைவராக இருக்கிறார். வரவேற்கிறோம்! 

ஏன் ஒரு தமிழர் தலைவராக இருக்க முடியாதா என்கிற கேள்விக்கு இடமில்லை. ஏற்கனவே  துணைக்கல்வி அமைச்சர் டத்தோ கமலநாதன் இந்தப் பதவி வேண்டாம் என்று தூக்கி எறிந்தவர். அவர் மொழியை மதிக்காதவர். அதனால் இப்போதைய அமைச்சர் தீயோ நீ சிங் தலைவராக இருப்பதில் நமக்கு ஒன்றும் ஆட்சேபணையில்லை. ஆனால் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது:  தமிழ் மொழிக் காப்பகத்தின் துணைத் தலைவராக இருப்பவர் முன்னாள் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ தெய்வீகன் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. அவர் காவல் தெய்வமாக இருந்து தமிழ் மொழியைக் காவல் காப்பார் என்பதில் ஐயமில்லை.  இன்னும் பல தமிழ் கல்விமான்கள் இந்தக் காப்பகத்தில் இடம் பெற்றிருக்கின்றனர்.  மன்னர் மன்னன்  போன்றவர்கள் இருக்கும் வரை தமிழ்க் காப்பகம் சரியான பாதையில் செல்லும் என நம்பலாம்.

கல்வி அமைச்சின் கீழ் இயங்கப் போகும் இந்தக் காப்பகத்தின் மூலம்  நாம் என்ன எதிர்ப்பார்க்கலாம்?  ஒன்று மொழி வளர்ச்சி,  கலைச் சொற்கள் உருவாக்கம்,  மொழியாக்கம், மலாய் மொழியிலிருந்து தமிழ், தமிழிலிருந்து மலாய் என்று சொல்லலாம். நமது படைப்புக்கள் அங்கே, அவர்களது படைப்புக்கள் இங்கே என்று நீண்டுக் கொண்டே போகும்.

மொழிக் காப்பகம் என்பது தமிழ் மொழிக்கு ஒரு பொற்காலம்.  அதனை  சரிவர பயன்படுத்திக் கொள்ளுவது நமது கையில்! அதனை வழி நடத்துபவர்கள் சரியான வழியில் அதனைக் கொண்டு செல்ல வேண்டும் என்பது நமது வேண்டுகோள்.

இருநூற்று இரண்டு  ஆண்டு காலம் மலேசிய மண்ணில் வலம் வரும் நமது செம்மொழியான தமிழுக்கு ஒரு காப்பகம், தமிழ் மொழிக் காப்பகம்.

வாழ்த்துவோம்! வணங்குவோம்! நமது தாய் மொழியை!

Monday, 6 May 2019

இலஞ்சமோ இலஞ்சம்..!

 இன்று  நடப்பு அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் யார்?

கடந்த காலங்களில் பாரிசான் ஆட்சி என்றாலே நமக்குத் தெரியும். இலஞ்சம் வாங்காத அரசாங்க அதிகாரிகள் இல்லை என்கிற அளவுக்கு அது நீக்கமற நிறைந்திருந்தது!

இப்போது புதிய அரசாங்கம் பதவியேற்றதும் நிலை தலை கீழாக மாறியிருக்கிறது! இலஞ்சம் வாங்க ஆசை தான். எந்த நேரத்தில் யார் அகப்படுவார் அல்லது யார் காட்டிக் கொடுப்பார் என்று கணிக்க முடியவில்லை! பயம் வேறு! ஆமாம்! இலஞ்சம் வாங்கப் போய் இருக்கிற வேலையும் பறி போனால் "பூவா" விற்கு எங்கே போய் பிச்சை எடுப்பது?

இப்போது தான் இவர்களுக்குப் பயம் வந்திருக்கிறது!  அது பரவாயில்லை.   அந்த பயம் ஆத்திரமாக மாறிவிட்டது! ஆமாம்,  இந்தப் புதிய அரசாங்கத்தால் தங்களது  'வரவு' பாதிக்கப்பட்டு விட்டதே என்கிற கோபம்  அவர்கள் அரசாங்கத்தை வீழ்த்த எதிர்கட்சியினரோடு கைக் கோர்த்து  வருகின்றனர்!

இலஞ்சம் என்று வரும் போது நமது பாரம்பரியம் மறந்து போகிறது. நமது சமயம் என்ன சொல்லுகிறது என்பதும் மறந்து போகிறது.  நமது பெரியவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதும் மறந்து போகிறது. லஞ்சம் யாரைப் பாதிக்கிறது என்பது மறந்து போகிறது. ஏழை எளியவர்களைப் பாதிக்கிறது என்பதும் மறந்து போகிறது.

இப்படி அரசாங்கத்தில் உள்ளவன் ஒவ்வொருவனும் இலஞ்சம் வாங்கினால் அது நாட்டையே பாதிக்கிறது என்பதையே அறியாதவர்களா அவர்கள்?  முதலில் இலஞ்சம் மக்களிடமிருந்து வாங்குவது.  மக்கள் பாதிக்கப் படுகிறார்கள்.  குத்தகையாளர்களைப்  பிழிந்தெடுப்பது.  குத்தைகையாளன் பணம் பார்க்க முடிவதில்லை!  உலக அளவில் செய்யப்படும் வியாபார ஒப்பந்தங்கள்.  கோடிக்கணக்கில் பணம் இலஞ்சமாகப் புரளுகிறது!  அப்புறம் நாடு எப்படி உருப்படும்?      

விலைவாசி ஏற்றத்தால் மக்கள் சிரமப்படுகிறார்கள். ஓர் இளந்தாய் தனது குழந்தைக்குப் பால் மாவு வாங்க முடியாமல் தேநீரையும், சோற்றையும் ஊட்டவதை நான் அறிவேன்.   இது போன்ற பாதகச் செயல்களுக்கு யார் காரணம்? இலஞ்சம் வாங்கும் இழிப்பிறவிகள் தானே!

நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக குரல் எழுப்பவர்கள் யார்? ஆட்சியாளர்கள் என்றும், இஸ்லாம் என்றும், மலாய் மொழி என்றும் குரல் எழுப்பவர்கள் யார்?  வேறு யாருமல்ல! இலஞ்சத்தையே தொழிலாகக் கொண்டவர்கள் தான்! தங்களது வருமானம் போய்விட்டதே என்று அங்கலாய்க்கும் இவர்கள் தான் இன்று எதிர்க்கட்சி ஆதரவாளர்களாக வலம் வருகிறார்கள்!

இப்போது இலஞ்சம் குறைந்திருக்கிறது.  அது போதும். அது தொடர வேண்டும் என்பதே நமது  வேண்டுகோள். 

இலஞ்சம் ஒழிக! முற்றிலுமாக ஒழிக!

Sunday, 5 May 2019

இலஞ்சமா? தண்ணி அடிப்பதா?

சமீபத்தில் நமது பிரதமர் டாக்டர் மகாதிர் ஒரு கருத்தைச் சொல்லியிருந்தார். 

அரசாங்க ஊழியர்கள் இலஞ்சம் வாங்குவதைத் தவறாக நினைக்கவில்லை.  ஆனால் குடிப்பது - தண்ணி அடிப்பது -தான் தவறு என்பதாக நினைக்கிறார்கள் என்று கூறியிருந்தார்.

நாம் என்ன நினைக்கிறோம்?  ஆமாம் பணம் ஓசியில் வந்தால் அது தவறு இல்லை.  ஆனால் குடி அப்படியா? ஐயோ! அப்பா! அது  எவ்வளவு பெரிய பாதகம்!   அடாடா! குடிப்பது  என்பது எம்மாம் பெரிய தவறு!  நோ! நோ!  நோ! அள்ளிக் கொடுத்தாலும் நான் குடிக்கப்பட்டேன்! 

இப்படித்தான் நமது மனநிலை!  அதாவது  இலஞ்சம் வாங்குவது புண்ணியம்! குடிப்பது நரகம்!

ஆமாம், இதில் எது சரி?  இரண்டுமே சரியில்லை.  அது தான் சரி. குடிப்பது குடும்பத்திற்குக் கேடு.  எத்தனையோ குடும்பங்கள் குடியினால் சின்னாப்பின்னமாகி போய்வி்ட்டன.   குடும்பத் தலைவன் குடிகாரனாக இருந்தால் அந்தக் குடும்பம் தலை தூக்குவது  .....தலை தூக்குவதா! தலையே தூக்க  முடியாது!  குடியினால் சீரழிந்த குடும்பங்கள்  ஏராளம்! ஏராளம்! அதுவும் இந்தியர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

சரி, குடியினால் குடும்பம் சீரழிகிறது, பார்த்தோம். இலஞ்சம் வாங்குவதினால் என்ன தவறு? எந்த ஒரு மதமும் குடியை வரவேற்கவில்லை.  ஏன்? இலஞ்சத்தை மட்டும் வரவேற்கின்றதோ? இல்லை! அதுவும் இல்லை! இலஞ்சத்தைக் கண்டிக்கின்றன. 

இலஞ்சத்தினால் என்ன தீமை? தகுதியற்ற வேலைகள் செய்து கொடுக்கப்படுகின்றன. காலந்தாழ்த்தப் படுகின்றன. அரசாங்க கோப்புகள் நகர மறுக்கின்றன.  தலைமை சரியாக இல்லை என்றால்  கடைநிலை ஊழியினும் காசை எதிர்ப்பார்க்கின்றான்!  

மிகவும் அதிர்ச்சியான செய்தி. கடந்த கால அரசாங்கம்  பதவியில் இருந்திருந்தால்  இந்நேரம் மலேசியாவின் ஒரு சில பகுதிகள் சீனாவுக்குள் அடைக்கலமாகி இருக்கும்  என்பதை நாம் மறந்து விடக் கூடாது.  மலேசியாவுக்குள் இன்னொரு நாட்டின்  ஆதிக்கம்! அது தான் இலஞ்சத்தின் உச்சக் கட்டம்!

இலஞ்சம் மனிதனை,  தன் நாட்டையே காட்டிக் கொடுக்க வைக்கும்!  பதவியில் உள்ளவன் பணத்துக்காக நாட்டையே விற்கத் துணிவான்!  

குடி என்பதோ ஒரு குடும்பத்தை அழிக்கும் தனமை உடையது. இலஞ்சம் என்பதோ ஒரு நாட்டையே அழிக்கும் தனமை உடையது. நமக்குக் குடியும் வேண்டாம்.  இலஞ்சமும் வேண்டாம்.  இரண்டுமே ஒழிக்கப்பட வேண்டியவை. 

மறை நூல்கள் என்ன சொல்லுகின்றனவோ அது தான் நமது கடமையுங் கூட!

 

Saturday, 4 May 2019

இல்லை! நான் அவமதிக்கவில்லை!

இந்து மதத்தின் மேல் தாக்குதலை மேற் கொண்டு வரும் புதிய வரவான ஸம்ரி வினோத் காளிமுத்து  தான் அப்படியொரு குற்றம் ஏதும் செய்யவில்லை என்று மறுக்கிறார்.  

இந்து தெய்வ வழிபாட்டையும், உருவ வழிபாட்டையும் அவர் ஏற்கவில்லை அதனால் அவர் மதம் மாறியதாகக் கூறியிருக்கிறார். 

நன்றி! வாழ்த்துகிறோம்!  நாமும் கூட -  வேறு காரணங்களுக்காக இலாபம் கருதி - மதம் மாறியிருக்கிறார் என்று அவரைப் பற்றி தவறாகக் கூறவில்லை. அதனையும் அவர் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஆனாலும் ஒன்றை ஸம்ரி கவனத்தில் கொள்ள வேண்டும். மதம் மாறுவது ஒருவரது சுயவிருப்பம். மலேசியாவில் மட்டும் அல்ல.  உலகெங்கும் இது நடந்து கொண்டு தான் இருக்கிறது.  காரணங்கள்  பல. குறிப்பாக திருமணங்கள் என்று கூறலாம். இன்று மலேசியாவில் திருமணங்கள் மூலம் தான் அதிக மத மாற்றங்கள் நடக்கின்றன.  ஆச்சரியப்பட  ஒன்றுமில்லை!  மதத்தின் மேன்மை  கருதி  யாரும்  மதம் மாறுவதில்லை!  அப்படிப்பட்ட அறிவு ஜீவிகள் யாரும்  இங்கு இல்லை!

ஆனால்  ஒரு வித்தியாசம்.  திருமணத்தோடு சரி. அவர்கள் அதன் பின்னர் வாய்த் திறப்பதில்லை. 

மதப் பிரச்சாரம் என்பது  வேறு.  பொது வெளிக்கு வருகிறீர்கள்.  முன்பு இருந்த உங்கள் மதத்தையே தாக்கிப்  பேசுகிறீர்கள்.  அங்கு தான் பிரச்சனையே வருகிறது. நீங்கள் தழுவிய புதிய மதம் உங்களுக்குச் சில பயிற்சிகளைக் கொடுக்கின்றன.  அந்தப் பயிற்சியின் மூலம் எல்லாம்  அறிந்தவர்  ஆகி விடுகிறீர்கள்!   அங்கு தான் தவறு  ஏற்படுகிறது. 

இதற்கு   முன் இருந்த உங்கள்  மதத்தைப் பற்றி  என்ன படித்தீர்கள்?  என்ன தெரிந்து கொண்டீர்கள்?  ஏதும் பயிற்சிகளுக்குப்  போயிருக்கிறீர்களா?  குறைந்த பட்சம்  கோயில் பூசாரியாகவாவது  இருந்திருக்கிறீர்களா?  ஒன்றுமே இல்லை!  நீங்கள் சார்ந்து வளர்ந்த, வாழ்ந்த  மதத்தைப் பற்றி  ஒன்றுமே அறியாமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசினால் எப்படி! 

இந்து மதத்தின் தெய்வ வழிபாட்டையும், உருவ வழிபாட்டையும்  ஏற்கவில்லை என்கிறீர்கள்.  சரி தான்.   அது பற்றி  இந்து சமயப் பெரியவர்களிடம் பேசியிருக்கிறீர்களா? நம் நாட்டில் பல பெரியவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் சென்று தெளிவு  பெற்றிருக்கலாம்.  அதனை நீங்கள் செய்திருந்தால் உங்களைப்  பாரட்டலாம்.

ஒன்றை நீங்கள்  புரிந்து  கொள்ள வேண்டும்.  ஜாகிர் நாயக் என்பவர் ஓர் இஸ்லாமிய  அறிஞர்  மட்டும் தான்.   இந்து சமய அறிஞர் அல்ல.  அதனால் அவர் இந்து சமயத்தைப் பற்றி பேச  தகுதி இல்லாதவர்.  தகுதி இல்லாத ஒருவரிடம் போய் பாடம் கற்றுக் கொண்டு ஒரு மதத்தைத் தாக்கிப் பேசுபவரை என்ன வென்று சொல்லலாம்? நீங்களே  முடிவு செய்து கொள்ளுங்கள்.

மேலும் ஜாகிர் நாயக் உலகளவில் தேடப்படும் ஒரு குற்றவாளி. அவர் தீவிரவாதம் பேசிக் கொண்டே வெளி நாடுகளில் சொத்துக்களை வாங்கிக் குவிக்கிறார்! ஓரு குற்ற்வாளியைக் குருவாக ஏற்றுக் கொண்டால்  குற்றம் தான் பெருகும்!  நீங்கள் தான் அவமதிக்கப்படுவீர்கள்.

"நான் இந்து மதத்தை அவமதிக்கவில்லை" என்று நீங்கள் எப்படி சொன்னீர்களோ அதனையே தொடருங்கள்.  நாம் என்ன செய்கிறோமோ அது மீண்டும் நம்மிடமே வரும்!

Thursday, 2 May 2019

ஸாகிர் நாயக் செய்வது சரியா..?

ஸாகிர் நாயக் நமது மலேசிய நாட்டில் அடைக்கலம் புகுந்திருக்கிறார். அவருக்கு இப்போது ராஜ மரியாதை. அவர் நிரந்தரமாக தங்க அனுமதிக்கப்பட்டவர், அவர் குடியுரிமை பெற்றவர் என்றும் சொல்லப்படுகின்றது.

ஓர் இஸ்லாமியர், இஸ்லாமிய நாட்டில் அடைக்கலம் கொடுக்கப்ப்பட்டிருப்பது ஒன்றும் புதிதல்ல. இயல்பு தான்.  ஆனால் இன்றைய நிலையில் பல இஸ்லாமிய நாடுகள் அவரின் கொள்கைகளையோ,  அவரின் தத்துவங்களையோ ஏற்றுக் கொள்ள வில்லை என்பது தான் உண்மை.

காரணம் அவர் மத தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறார் எனபதாகக் குற்றச்சாட்டு அவர் மேல் உண்டு. 

ஆனால் மலேசிய இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை ஸாகிர் நாயக் குற்றமற்றவர் என்று நினைக்கின்றனர்.  "அவர் அப்ப்டி என்ன செய்து விட்டார் அவரிடம் குறை காண்கின்றார்கள்" என்பது அவர்களின் பொதுவான கருத்து.  

நான் சந்தித்த சராசரியான இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை அவர் சொல்லுவது சரிதான் என்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் சமயங்களைப் பற்றி அரைகுறையான அறிவைக் கொண்டவர்கள்.  அவர்களுக்கு ஸாகிர் நாயக் இஸ்லாமியத் துறையில் ஒரு கல்விமானாக நினைக்கின்றனர். அது சரியே!

இஸ்லாமியத் துறையைச் சார்ந்த கல்விமான் என்பது வேறு.  மற்றபடி மற்ற சமயங்களைப் பற்றியான கல்விமான் என்பது வேறு. நிச்சயமாக அவர் இஸ்லாம் தவிர மற்ற எந்த மதத்தைப் பற்றியும் அறியாதவர்.  அவர் இந்தியர். அவர் இந்தியாவில் மக்களிடையே உள்ள வெவ்வேறு பழக்க வழக்கங்களைக் கொண்டு அவர்களின் சமயங்களை எடை போடுபவர்.  அதனை மேற்போக்காக பார்த்து இந்து சமயத்தைப் பற்றி பேசுபவர்.  அவர் இந்து சமயக் கல்வியைப் பெறாதவர். அவர் எந்த வகையிலும், இஸ்லாமிய மதத்தைத் தவிர, மற்ற மதங்களின் சமயக் கொள்கைகளை அறியாதவர். 

ஆனாலும் மற்ற சமயங்களை இழிவு படுத்துவது மூலம், கேலி செய்வதன் மூல, கிண்டல் செய்வதன் மூலம்  கை தட்டல் வாங்குபவர்! அத்தோடு அவர் நிற்கவில்லை.  தனது சொந்தக் கருத்தாக தீவிரவாதத்தையும் அவர் ஊக்குவிக்கிறார். அது ஏன் என்பது நமக்குத் தெரியவில்லை. இந்தியாவில் அவர் சந்தித்த சாதி வித்தியாசங்களோ, ஏற்றத் தாழ்வுகளோ, தான் தாழ்த்தப்பட்டவன் என்பதோ  ஏதோ  ஒன்று  அவரைப் பாதித்திருக்கிறது என்பது மட்டும் உண்மை. 

இல்லையென்றால் அவருக்கு ஏன் மற்ற மதத்தினர் மேல் இந்த வன்மம்?  ஸாகிர் நாயக் செய்வது சரியல்ல என்பது தான் நமது நிலைமை. அவர் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும். அவர் சரியானவராக இருந்தால் அவர் இந்திய நீதிமன்றத்தை எதிர்கொள்ள வேண்டும். 

மலேசிய இந்தியர்களை வைத்து மத ரீதியாக தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும். தன்னை ஓர் இஸ்லாமிய வீரராக காட்டிக் கொள்ளும் ஸாகிர் நாயக் - ஒரு வீரரைப் போலவே நடந்து கொள்ள வேண்டும்!

வயசு என்னா வயசு...!

ஒரு சில பெரியவர்கள் செய்கின்ற சாதனைகளைப் பார்க்கும் போது :வயசு என்னா வயசு!" என்று சொல்லத் தோன்றுகிறது!

நமது பிரதமர் டாக்டர் மகாதிரையே  எடுத்துக் கொள்ளுங்கள். இந்த 94 வயதில்  இரண்டாவது முறையாக  பிரதமர் பதவி ஏற்றிருப்பது என்பது நம்மைப் பொறுத்தவரை அதிசயத்திலும் அதிசயம்! 

நம்மிடையே எப்போது 60 வயது ஆகும் "அக்கடா"  என்று ஓய்வு எடுப்போம் என்று நினைப்பவர்கள் அதிகம்! வேலைக்குப் போகும் மலேசியர்கள் பெரும்பாலும் இப்படித்தான் நினைக்கின்றனர்! காரணம் கேட்டால் வேலை பளு, அதனால் ஓய்வு தேவை  என்கின்றனர். " குடும்பத்திற்கு உழைச்சி கொட்டியது போதும்!" என்று புலம்புகின்றனர்!

ஆனால் 94 வயதில் மீண்டும் பிரதமர். மீண்டும் அரசியல் பணி. மீண்டும் ஏச்சு பேச்சுக்கள்! எதைப் பற்றியும் கவலைப்படாமல்  தனது பணிகளைச் செய்கிறார். முன்னாள் பிரதமர் ஏற்படுத்திவிட்டுப் போன சீரழிவுகளைச் சீர்படுத்துகிறார். 

அவர் மட்டுமா? சமீபத்தில் காணொளியில் பார்த்த ஒரு சம்பவம் ஆச்சரியப்படுத்துகிறது. 96 வயது மனிதர் அவர்.  விவசாயி.  இந்த வயதிலும் பனை மரம் ஏறுகிறார்.  காய்களைப்  பறிக்கிறார்.  அவைகளைக் கொண்டு போய் விற்று பணமாக்குகிறார்.  தனது தேவைகளைப் பார்த்துக் கொள்ளுகிறார். பிள்ளைகள் இருந்தும் அவர்களிடம் உதவிக்காகப் போகவில்லை. தானே சம்பாதித்து தனது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறார்.  வயதைக் கவனியுங்கள். இந்த வயதிலும் மரம் ஏறுவது என்பது சாதாரணமான காரியம் அல்ல. நடப்பதற்கே ஊன்றுகோள் தேவையாய் இருக்கும் காலம் இது! இந்த வயதில் மரம் ஏறுவதா!

அட! இதோ ஒரு பெண்மணி.  கல்வி அறிவை பெறுவதற்கு வயது என்ன தடை என்பார்கள். வயது ஒரு தடையல்ல என்பது உண்மை தான். ஆமாம்! நான் சொல்லுகின்ற பெண்மணிக்கு வயது நூறு ஆகிறது. சிறு வயதில் கல்வி கற்க முடியவில்லை. அதனால் இப்போது தான் கல்வி கற்க காலம் கனிந்திருக்கிறது.   கல்வி கற்க ஆரம்பித்திருக்கிறார். அத்தோடு கணினி பயிலவும் ஆரம்பித்திருக்கிறார்!  இனி மேல் படித்து ...... என்ன ஆகப் போகிறது என்று சொல்லுபவர்கள் நம்மைப் போன்ற சராசரி மனிதர்கள்! அவர்கள் சாதனையாளர்கள். அது தான் வித்தியாசம்.

இந்த நேரத்தில் இன்னொன்றும் ஞாபகத்திற்கு வருகிறது. தத்துவ மேதை சாக்கிரட்டிஸ்  தூக்கு மேடைக்காகக் காத்திருக்கிறார், பக்கத்து அறையில் இருந்த ஒரு கைதி ஏதோ ஒரு இசைக் கருவியை வைத்து இசைத்துக் கொண்டிருக்கிறார்.  சாக்கிரட்டிஸ் அதுவரை அது போன்ற இசையைக் கேட்டதில்லை. அந்த நண்பரைக் கூப்பிடுகிறார். தனக்கு அந்த இசையைக் கற்றுக் கொடுக்க முடியுமா என்கிறார் சாக்கிரட்டிஸ். "நாளை தூக்கு மேடை ஏறப்போகும் உமக்கு எதற்கு இந்த ஆசை?" என்கிறார் நண்பர். அதற்கு  "சாகும் போது புதிதாக ஒன்றைக் கற்றுக் கொண்ட திருப்தி ஒன்றே போதாதா!"  என்கிறார் சாக்கிரட்டிஸ்!

அது தான்.  மனிதன் இருக்கும் வரை, இறக்கும் வரை, ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும். அரசியல் பண்ணுபவர் அரசியல் பண்ணட்டும்.  மரம் ஏறுபவர் ஏறிக் கொண்டே இருக்கட்டும்.  கற்றுக் கொள்ள நினைப்பவர் கற்றுக் கொண்டே இருக்கட்டும்.  புதிய புதிய முயற்சிகளில் ஈடுபடுவோர் ஈடுபட்டுக் கொண்டே இருக்கட்டும். 

இது தான் வாழ்க்கை! இது தான் பயணம்! அப்புறம் என்னா வயசு? அதில் ஏற்றத் தாழ்வு என்று ஒன்றுமில்லை!

Wednesday, 1 May 2019

அந்நியத் தொழிலாளர்கள்...!

அந்நியத்  தொழிலாளர்கள் பிரச்சனை என்பது நமது நாட்டில்  அஞ்சும் அளவுக்குப் போய்க் கொண்டிருக்கிறது.

மே தினத்தன்று நமது பிரதமர் டாக்டர் மகாதிர் ஒரு செய்தியைச் சொல்லியிருக்கின்றார். செய்ய வேண்டிய வேலைகளைச் செய்யாமல். சோம்பித் திரிந்தால் வந்தவன்  உயர்ந்து கொண்டே போவான் இருப்பவன் இருப்பதையும் இழந்து கொண்டே போவான் என்பதாக!

ஒரு சில வேலைகளை நாம் செய்ய்த் தயங்குகிறோம் என்பது உண்மை தான். அதனை வெளி நாட்டுத் தொழிலாளர்கள் செய்வது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது தான். வெளி நாட்டுத் தொழிலாளர்கள் என்பதை விட  அகதிகளுக்கு அந்த வேலைகளைக் கொடுத்தால் என்ன என்று ஒரு சாரார் கூறுவதிலும் நியாயமுண்டு என்பதை மறுப்பதறகில்லை>

ஆனால் நாம் அது பற்றிப் பேசப் போவதில்லை. வெளி நாடுகளிலிருந்து தொழிலாளர்களாக வந்தவர்கள் இப்போது நமது வாரச் சந்தைகளில் வணிகம் செய்கிறார்களே அது எப்படி நடக்கிறது?  அவர்கள் வணிகம் செய்ய யார் அனுமதி கொடுத்தது?  வாரச் சந்தைகள் மட்டும் அல்ல இப்போது எல்லா வீடமைப்புகளிலும்  அவர்களின் வணிகம் கிளைவிட்டுக் கொண்டே இருக்கிறதே யார் அவர்களுக்கு அனுமதி கொடுத்தார்கள்?  இதில் முன்னணியில் நிற்பவர்கள் வங்காள தேசிகள், பாக்கிஸ்தானியர் - இவர்கள் மலேசியர்களின் தொழில்களை அழித்துக் கொண்டு வருகிறார்களே - இது எப்படி நடக்கிறது?  இவர்களின் இலக்கு உள்நாட்டு இந்தியர்களின் தொழில்களை அழிப்பது தான்.  நாம் கேட்பதெல்லாம் இவர்களை இந்த அளவுக்கு வளர்த்து விட்டவர்கள் யார்? 

டாக்டர் மகாதிர் அந்நியத் தொழிலாளர்களைப் பற்றி மட்டும் தான் பேசுகிறார்.  அதுவும் அதில் பலர் கள்ளக் குடியேறிகள்! ஆனால் இவர்கள் எப்படி வணிகம் செய்யும் அளவுக்கு உயர்ந்தார்கள்?   கள்ளக் குடியேறிகளை வணிகம் செய்யும் அளவுக்கு வளர்த்து விட்டவர்கள்  யார்? அரசாங்கம் தானே!

நிச்சயமாக  நாம் இதனை வரவேற்கவில்லை.  எந்த ஓர் அரசாங்கமும் இப்படிச் செய்வதில்லை.  சொந்த நாட்டு மக்களின் நலன் தான் முக்கியமே தவிர வெளி நாட்டவரின் நலன் அல்ல. வேலை செய்ய வந்த வெளி நாட்டவர்களுக்கு அவர்களுக்கான ஊதியம் மற்றும் வீட்டு வசதிகள் கொடுக்கப்பட வேண்டும். அவர்களின் நலன் காக்கப்பட வேண்டும். 

ஆனால் இங்கு வணிகம் செய்யும் அளவுக்கு அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கச் செய்த முந்தைய அரசாங்கத்தை வழி நடத்தியவர்கள் கண்டிக்கப்பட வேண்டும். இப்போதும் அதனைத் தொடர்பவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

இப்போது நடப்பது அந்நியத் தொழிலாளர்களின் ஆதிக்கம்.  அனைத்திலும் நடந்து கொண்டிருக்கிறது. இதனை எப்படி சரி செய்யப் போகிறார்கள்?  பொறுத்திருந்து பார்ப்போம்!

தாமதம் வேண்டாம்..!

நாட்டில் உள்ள நமது சமயங்களை இழிவபடுத்துவது, பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோரை வெளியே விட்டு வைக்கக் கூடாது என்பதில் அரசாங்கம் இன்னும் தீவிரமாக இல்லை என்பதை சமீபத்திய  நடவடிக்கைகள் காட்டுகின்றன.

ஸாகிர் நாயக்கின்  சீடன் என்று சொல்லிக் கொண்டு இஸ்லாம் அல்லாத மற்ற மதங்களை இழிவுபடுத்தும் ஸம்ரி வினோத் காளிமுத்து என்னும் நபரைப் பற்றி  காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால்  நாம் எங்கோ ஏதோ தவறு செய்கிறோம் என்று  தான் அர்த்தம்.

தவறுகளுக்குத் தண்டனைக் கொடுக்கப்பட வேண்டும். எந்த மதம் ஆனாலும் கேலி, கிண்டல் பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

ஆனால் நாம் இங்கு பெரிய தவறு செய்கிறோம். இந்த நபர் வெட்ட வெளியில் பேசுகின்ற பேச்சுக்கள் நாடெங்கிலும் பரவலாகப் பேசப் படுகின்றன.  ஊடகங்களில் வெளியாகின்றன.  எந்த ஒளிவு மறைவும் இல்லை.   மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துகின்றன. கோபத்தை ஏற்படுத்துகின்றன. காவல்துறைக்கு  மட்டும் எந்த வித தாக்கத்தையும் 
 ஏற்படுத்தவில்லை!  

காவல்துறை நீதியை  நிலை  நாட்ட  வேண்டும்.  தாங்கள்  ஏதோ  ஒரு  மதத்தினருக்கு மட்டுமே சொந்தம்  என்னும்  கொள்கையைக் கை விட வேண்டும்.  காவல்துறை  அனைத்து மதத்தினருக்கும் சொந்தமானது.  எந்த  மதத்தினரைப்  பற்றியும்  அமைதியின்மையைத்  தூண்டும் வகையில்  பேசுவதோ எழுதுவதோ  யாருக்கும்  உரிமை இல்லை.  அதைக்  கண்காணிப்பது  காவால்துறையின்  வேலை.  இங்கு உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்னும்  பேதம் இல்லை.  அதே போல கடவுள் நம்பிக்கையில் உயர்ந்தது, தாழ்ந்தது  என்று ஒன்றும் இல்லை.

இப்போது நாம்  காவல்துறையைத்  தான் குற்றம்  சாட்ட வேண்டிய சூழலில்  இருக்கிறோம். இந்து  மதத்தை  இழிவுபடுத்திப் பேசிய  ஸம்ரி காளிமுத்துவின்  மேல்  800 க்கும் மேற்பட்ட  போலிஸ் புகார்கள்  செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை!

அப்படி என்றால் எந்த மதத்தையும் தாக்கிப் பேசலாம்.  காவல்துறை கண்டு கொள்ளாது என்றே நாம் நினைக்க வேண்டியுள்ளது. இதற்கு அரசாங்கம் ஒரு முடிவைக்  காண வேண்டும்.  மதங்களை வைத்துக் கொண்டு மதம் பிடித்து ஆடுபவர்களைத் தண்டிக்க வேண்டும். கடும் தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும்.

இதற்கான தீர்வைக் காண வேண்டும். தாமதம் வேண்டாம்!