Wednesday 31 July 2019

ஏன் இந்த புலம்பல்..?

அன்வார் இப்ராகிம் அடுத்த பிரதமர் ஆவதை விரும்பாதவர்கள் இருக்கலாம். விரும்பாதவர்களில் பலர் அரசியல்வாதிகள்.   இவர்களில் பலர் அன்வாரின் முன்னாள் எதிர்ப்பாளர்கள். இவர்கள் மீண்டும் மீண்டும்  அன்வாருக்கு எதிராகவே பேசி வருகின்றனர்.

ஆனால் மக்கள்,  அன்வாரை ஆத்ரிக்கின்றனர்.  மக்கள் அமைதியானவர்கள்.  அவர்களின் குரல்  வெளியே  ஒலிப்பதில்லை.  ஆனால் அரசியல்வாதிகளின் குரல் வழக்கம் போல் பத்திரிக்கைகளில் பெரிதுப் படுத்தப்படுகின்றன! 

இந்த  எதிர்ப்பாளர்களின் குரலை நாம் அலட்சியப்படுத்தலாம்.  அல்லது ஒதுக்கிவிடலாம்.  ஆனால் இவர்கள் தொடர்ந்து குரல் எழுப்புவது என்பது மக்களை அவர்கள் தூண்டி விடுகிறார்கள் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. 

டாக்டர் மகாதிர் தொடர்ந்து  அவரின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தி வருகிறார். அடுத்த பிரதமர் அன்வார் என்பதில் கருத்து வேறுபாடில்லை.  சமீபத்திய பேட்டி ஒன்றிலும் மீண்டும் அதனையே வலியுறுத்தியிருக்கிறர்.  இனி மேலும் அவர் அப்படித்தான் சொல்லுவார்.  ஒரே காரணம் தான். அவர் வயது அப்படி. இந்த வயதில், தனது 94-வது வயதில் அவர் கொடுத்த வாக்குறுதியை மீறுவது என்பது  மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க முடியாது.  94 வயதில் ஒரு பொய்யராக, ஏமாற்றுக்காரராக அவரால் இருக்க ஒரு நாளும் முடியாது.  அரசியல்வாதிகளில் பெரும்பாலும் வயது வித்தியாசம் இன்றி பொய்யராகவும், உருட்டல் புரட்டல்வாதிகளாகவும் இருக்க முடிகிறது என்றால்  அவர்களின் வளர்ப்பு அப்படி! அந்தப் பட்டியலில் டாக்டர் மகாதீரை சேர்க்க முடியாது! 

நாட்டின் 14-வது தேர்தலில் வெற்றி பெற்று டாக்டர் மகாதீரை பிரதமர் பதவிக்குக் கொண்டு வந்த போது அவர் ஓர் இடைக்கால பிர்தமர் என்கிற அறிவிப்போடு தான் அவர் பதவி ஏற்றார்.  இதில் ஏதும் ஒளிவு மறைவு இல்லை. 

இப்போது இதனை எதிர்ப்பவர்கள் என்ன காரணத்தோடு எதிர்க்கிறார்கள்?  முக்கியமாக அரசாங்கம் இயங்க முடியாத அளவுக்கு ஒரு நெருக்கதலைக் கொண்டு வருகிறார்கள்!  பக்கத்தான் அரசாங்கம் மக்களிடையே  ஒரு செல்வாக்கைப் பெறாதபடி கவனமாக இருக்கிறார்கள்! இது எதிர்கட்சிகளின் வேலை. அப்படி செய்தால் தான் அது அவர்களுக்கு,  வருகின்ற பொதுத் தேர்தலில் இலாபம்!  ஆளுங்கட்சியில் இருப்பவர்கள், அன்வாரின் முன்னாள் எதிர்ப்பாளர்கள்.  அன்வார் பதவிக்கு வந்தால் தங்கள் பதவிக்கு ஆபத்து என்று நினைப்பவர்கள்!

இப்போது "டாக்டர் மகாதிரே இருக்கட்டும்" என்று புலம்புவர்கள் யார் என்பது புரிகிறது அல்லவா!

Monday 29 July 2019

நியாயமான விசாரணை கிடைக்காது...!

பிரதமர் துறையின் இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சர் டாக்டர் முஜாஹிட் யுசோப் ராவா,   சர்ச்சைக்குறிய இந்திய ,மத போதகர் ஜாகிர் நாயக் இந்தியாவுக்கு நாடு கடத்தாதது ஏன்  என்பது பற்றி விளக்கம் கொடுத்திருக்கிறார்.

"ஜாகிரை நாடு கடுத்துவதில் பிரச்சனை இல்லை. ஆனால் அவருக்கு நீதி கிடைக்குமா என்பதில் தான் சிக்கல்.  நீதியை அடிப்படையாகக் கொண்டு அவர் நியாயமாக நடத்தப்பட வேண்டும்.  அங்கு அவருக்கு நியாயமான விசாரணை கிடைக்க வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம். இந்த விவகாரத்தில் வேறு எந்த தனிப்பட்ட காரணங்களும் இல்லை."

அந்த விளக்கங்களை நாம் ஏற்றுக் கொள்ளுகிறோம்.  இந்தியாவில் அவருக்கு நியாயமான விசாரணை கிடைக்காது என்பது ஜாகிருக்குத் தான் (பிரதமருக்கும் தான்)  தெரியும். நமக்குத் தெரிய வாய்ப்பில்லை.

ஆனால் நமக்கும் அமைச்சரிடமிருந்து  சில விளக்கங்கள் தேவைப்படுகிறது. ஜாகிருக்கு மற்ற இஸ்லாமிய நாடுகள் குடியுரிமை கொடுக்காத நிலையில் மலேசிய குடியுரிமை கொடுக்க ஏதாவது விசேஷ காரணங்கள் உண்டா? 
 
 அவருக்குக் குடியுரிமை கொடுக்கப்பட்டதன் நோக்கமே இங்குள்ள இந்து மதத்தினருக்கு எதிராக செயல் பட வேண்டும் என்பது தான் என்று சொல்லப்படுகிறதே! உண்மையா? அவருடைய செய்பாடுகளும் அப்படித்தானே இருக்கின்றன!

இந்தியாவில் அவர் இந்துக்களுக்கு எதிராக செயல்பட முடியவில்லை. அதனால் அவர் இந்துக்களை எதிர்ப்பதற்கு மலேசியாவை ஒரு தளமாக பயன்படுத்துகிறாரா? 

ஜாகிர் எல்லாக் காலங்களிலும் இஸ்லாம் அல்லதவர்களை குறை சொல்லுபவராகவே தன்னை வளர்த்துக் கொண்டு வந்திருக்கிறார்.  அது அவருடைய பிரச்சனை. ஆனால் மலேசியாவிலும் இந்துக்களை எதிர்க்கும் வாய்ப்பை அவருக்கு அரசாங்கம் கொடுத்திருக்கிறது.  ஜாகிர் இங்கு அடைக்கலம் நாடுவதற்கு முன்னர் இல்லாத பிரச்சனைகள் எல்லாம் இப்போது எழுகின்றன.  உண்மையைச் சொன்னால் இவருடைய பேச்சுக்கள் அனைத்தும் நிந்தனை சட்டத்தின் கீழ் வரவேண்டும். கடைசியாக இந்திரா காந்தின் குழந்தை பிரசன்னா டிக்சா "மறைக்கப்பட்டு" இருப்பதிலும் இவர் பெயர் அடிபடுகிறது. 

இந்த அளவுக்கு ஜாகிர் இந்த நாட்டில் சுதந்திரமாக செயல்படுகிறார்! இது வரை அவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் கொண்டு வரப்படவில்லை!

இங்கு, நமது நாட்டில், நீதி, நியாயம் பற்றி பேச முடியாத போது இன்னொரு நாட்டின் நீதி நியாயம் பற்றி பேசுவது ......என்ன நியாயம்?

அங்கு எப்படி நியாயமான விசாரணை கிடைக்காதோ  இங்கும் அது கிடைக்காது என்று நாமும் நினைக்க வேண்டியது தானோ!

விரைவில் தீரும் எனும் எதிர்ப்பார்ப்போம்!

இந்திரா காந்தியின் மகள் பிரசன்னா டிக்சாவின் பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும் என எதிர்ப்பார்க்கலாம்.

ஐஜி.பி  அப்துல் ஹமிட் படோர்  ஒரு சில நம்பிக்கைத் தரும் வார்த்தைகளை உதிர்த்திருக்கிறார்.  தனது அதிகாரிகளைப் பணித்திருப்பதாக கூறியிருப்பது ஒன்றே போதும் நமக்கும் நம்பிக்கை தருகிறது. 

அது மட்டும் அல்ல. அவர் கூறிய ஒரு சில வார்த்தைகள் நம் நெஞ்சைத் தொடுகின்றன. " இந்தக் குழைந்தையின் விவகாரத்தில் ஒரு குடும்பமே சின்னா பின்னமாகி இருக்கிறது.  நாம் மதம் என்னும் அடிப்படையில் பார்க்காமல் அதனை ஒரு குடும்பமாகப் பார்க்க வேண்டும். தாய், மகள், தந்தை, மகன் என்னும் முறையில் இந்தப் பிரச்சனையை நாம் அணுக வேண்டும்." 

இது போன்ற வார்த்தைகள் காவல்துறை தலைவரிடமிருந்து வருவது என்பது சாதாரண விஷயம் அல்ல. இதற்கு முன்னர் காவல்துறை தலைவர் யாரும் இப்படிப் பேசியதில்லை. 

அதிலும் குறிப்பாக "மதம் என்னும் அடிப்படையில் பார்க்காமல்...." என்று அவர் கூறியிருப்பது நம்மை யோசிக்க வைக்கிறது.  இது நாள் வரை அதிகாரத்தில் உள்ளவர்கள் அப்படி யோசிக்கவில்லை என்பதும் நமக்குப் புரிகிறது! 

காவல்துறை தலைவருக்கு ஒரு வேண்டுகோள். நம்பிக்கை தரும் வார்த்தைகள் நம்மை மகிழ்ச்சியடையச் செய்கிறது.  ஆனால் அது வெறுமனே வார்த்தை அளவில் இருக்கக் கூடாது. அது செயல் வடிவம் காண வேண்டும்.  

நமது காவல்துறையால் முடியாதது என்று ஒன்றுமில்லை.  அவர்களால் கண்டு பிடிக்க  இயலாது என்று யாரும் இது வரை சொன்னதில்லை.  மேலிடத்து நெருக்குதல் மட்டுமே அவர்களைக் கட்டுப்படுத்தும். மற்றபடி அவர்கள் செயல் வீரர்கள்.  அரசியல் நெருக்கடி, மதவாதிகளின் நெருக்கடி இவைகள் தான் அவர்கள் கண் முன்னே உல்ள பிரச்சனை.

மற்றபடி இது ஒரு பிரச்சனையே அல்ல.  என்றோ தீர்த்துக் கொண்டிருக்க வேண்டிய பிரச்சனை. "யார் பெரியவன்" என்னும் கயிறு இழுக்கும் போட்டி தான் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது!

காவல்துறை தலைவரின் நம்பிக்கை தரும் வார்த்தைகள் நமக்கு உற்சாகம் ஊட்டுகின்றன. பிரச்சனை விரைவில் தீர்க்கப்படும் என நம்புவோம். 

Sunday 28 July 2019

வேதமூர்த்தியின் நிலைப்பாடு சரியல்ல..!

"மித்ரா" நிதியகத்திற்குத் தலைமை தாங்குபவர் பொன்.வேதமூர்த்தி. 

சில நாள்களுக்கு முன்னர் பேராசிரியர் இராமசாமி அவர்கள் மித்ராவால் "இந்தியர்களின் முன்னேற்ற" த்திற்காக வழங்கப்பட்ட பணம் பற்றியான விளக்கங்களைக் கேட்டிருந்தார். கேட்டவர் இராமசாமியாக இருக்கலாம். ஆனால்அது பொது மக்களின் கேள்வி. நாங்கள் அதே கேள்வியைக் கேட்டால் அது முக்கியத்துவம் பெறாது என்பதை சொல்லித் தெரிய வேண்டிய்தில்லை.

ஆனால் அவர் கேட்டதற்கான வேதமூர்த்தியின் பதில் சரியானதாக இல்லை.  அவருடைய பதில் ஒரே மழுப்பலைத் தவிர வேறொன்றொமில்லை!

நாங்கள் யாரும் வேதமூர்த்தியின் நேர்மையைப் பற்றி சந்தேகப்படவில்லை.  அவர் இந்திய சமூகத்தின் நலனுக்கு எதிராக செயல்படுவார் என்று  நாங்கள் யாரும் நம்பவில்லை.  அந்த அளவுக்கு அவர் தன்னை தாழ்த்திக் கொள்ளுவார் என்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. 

ஒன்றை வேதமூர்த்தி புரிந்து கொள்ள வேண்டும். இந்த சமூகம் ம.இ.கா. என்னும் அரக்கக் குணம் பாடைத்தவர்களால் காலங்காலமாக ஏமாற்றப்பட்டு வந்த சமூகம்.  நாங்கள் ஏமாந்தது கொஞ்ச நஞ்சம் அல்ல.  அதானால் தான் இப்போது யாரைப் பார்த்தாலும் சந்தேகக் க்ண் கொண்டு பார்க்க  வேண்டியுள்ளது.  நீங்கள் மட்டும் அல்ல.  அரசாங்த்தில் அங்கம் வகிக்கும் ஏனைய இந்தியத் தலைவர்களையும்  சேர்த்துத் தான் சொல்ல வேண்டியுள்ளது. இதனை நீங்கள் கட்சி கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டாம். உண்மையைச் சொன்னால்  அனைத்துக் கட்சியினருடன் சேர்ந்து  நீங்கள் ஆலோசனைப் பெற்றிருக்க வேண்டும்.  தனிக்காட்டு ராஜா என்றெல்லாம் உங்களை நீங்களே நினைத்துக் கொள்ளக் கூடாது.  சென்ற முறை நீங்கள் பதவியில் இருந்த போது ம.இ.கா. உங்களோடு ஒத்துழைக்கவில்லை.  அப்போது அவர்கள் தனிக்காட்டுத் திருடர்களாக இருந்தார்கள்!   ஆனால் இப்போது நீங்கள் தான் இவர்களோடு ஒத்துழைக்க வேண்டும். இந்திய சமூகத்தின் நல்வாழ்வுக்காக உங்களால் ஒத்துழைக்க முடியாதா?

கேள்விக்கான பதிலைச் சொல்லாமல் நீங்கள் ஏன் மௌனம் காட்டுகிறீர்கள்?  அது எங்களுக்குச் சந்தேகத்தைத் தானே ஏற்படுத்தும். உங்களைக் கேள்வி கேட்பதைவிட  நேரடியாகச் சந்தித்திருக்கலாம் என்கிறீர்கள். இல்லாவிட்டால் தொலைப்பேசியில் அழைத்திருக்கலாம் என்கிறீர்கள்!  இது போன்ற பதில்கள் உங்களிடமிருந்து வரும் போது நீங்கள் இந்த சமுதாயத்தை ஏமாற்ற நினைப்பதாகத் தானே நாங்கள் நினைக்க வேண்டியுள்ளது! ஏதோ உங்களின் புதிய கட்சிக்குத் தாரை வார்த்து விட்டீர்களோ என்றெல்லாம் சந்தேகப்பட வேண்டியுள்ளதே!

சார்! உங்கள் நிலைப்பாடு சரியில்லை!

இத்ற்கு அனுமதி உண்டா...?

இந்திரா காந்தியின் முழந்தை பிரசன்னா டிக்சாவை கண்டு பீடிக்கும் வேலையில் இறங்கியிருக்கும்  இங்காட்,  அரசு சார்பாற்ற இயக்கம்,   அதன் தொடர்பில் பல தகவல்களைக் கொடுத்திருக்கிறது.

ஆனால் அவர்கள் கொடுத்திருக்கும் ஒரு தகவல் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது என்பது உண்மையே.  அதாவது இதன் தொடர்பில் இந்திய மத போதகர் ஜாகிர் நாயக் பெயரும் அடிபடுகிறது  என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று!

உண்மையைச் சொன்னால் அவருக்கும் இந்த குழந்தை மறைத்தல் சம்பவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர் மலேசியக் குடியுரிமை பெற்றவர் என்பதால் அவர் வலிந்து தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளுகிறாரா என்பதையும் மறுப்பதற்கில்லை. 

அவர் என்ன தான் மலேசியக் குடியுரிமை பெற்றவர் என்றாலும் அவர்  வெளி நாடு ஒன்றின் தேடப்படும் குற்றவாளி என்பதையும் மறுப்பதற்கில்ல.  நேரங்காலம் வரும் போது அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப் பட வேண்டிய குற்றவாளி.

அவர் ஏன் தேடப்படுகிறார் என்பதை நாம் அறிவோம்.  அவர் இஸ்லாமிய தீவிரவாதத்தை ஊக்குவிப்பவர்  என்பது ஒரு குற்றச்சாட்டு.  அவரைப் பல இஸ்லாமிய நாடுகள் அவருடைய நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள வில்லை!  குறிப்பாக வங்காள தேசம் அத்தோடு இன்னும் பல நாடுகள்.

இந்தியாவும் அதே இஸ்லாமிய நடவடிக்கைகளுக்காக அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. அதே சமயத்தில் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கிடையே  க்லவரத்தை ஏற்படுத்துகின்ற முயற்சியிலும்  அவர் ஈடுபாடு காட்டியிருக்கிறார் என்பதாகவும் சொல்லப்படுகிறது.

இன்றைய நிலையில் அவர் இந்திய நாட்டுக்குப் போகக் கூடிய சூழல் ஏற்பட்டால், அங்குள்ள அரசியல் சூழலில் அவருக்கு என்ன நடக்கும் என்பதை நம்மால் ஊகிக்க முடிகிறது.  அதனை நாம் வரவேற்கவில்லை. ஆனால் அங்கு அவர் செய்த வேலைகளை, இப்போது அங்கு செய்ய முடியாத நிலையில்,  அவர் இங்கு செய்ய முயற்சிப்பதை நம்மால் ஏற்றுக்கொள்ளவோ, வரவேற்கவோ முடியாது.

சமீப காலங்களில் நமது நாட்டில் அவரது பெயர் இந்துக்கள் சம்பந்தப்பட்ட சில பிரச்சனைகளில் அடிபடுகிறது.என்பதை அறியும் போது நமக்கு அது மகிழ்ச்சியை அளிக்கவில்லை.  சான்றுக்கு மத போதகன் என்று சொல்லிக் கொண்டு ஓர் இந்துவை இஸ்லாமியனாக்கி அவர் மூலம் இந்துக்களைக் குறை கூறி கைத்தட்டல் வாங்குவது! இப்போது ஏதோ ஒரு வகையில் இந்திராகாந்தியின் மகள் பிரசன்னா வின் மறைத்தல் சம்பவத்தில்  அவரது பெயரும் அடிபடுகிறது!

இது நமக்குத் தெரிந்த சம்பவங்கள். நமது பார்வைக்கு வராத இன்னும் எத்தனையோ சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கலாம். 

ஜாகிர் நாயக் இப்படி இந்துக்களின் விஷயத்தில் தலையீடுவது நல்லதல்ல!

 

Saturday 27 July 2019

சபாஷ் இங்காட்!

சபாஷ் இங்காட்!   உங்களின் ஙுறுதிப்பாட்டை வரவேற்கிறேன்!

இந்திராகாந்தியின்  இளைய மகள் பிரசன்னா டிக்சாவை தேடும் முயற்சியில் இறங்கியிருக்கும் இங்காட் என்னும் அரசு சாரா இயக்கம் தான் கண்ட/கேட்ட/சொன்ன விஷயங்களில் உண்மை இருப்பதாக நம்புகிறது. அதனால் அந்த இயக்கம் யார் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் சொல்லவும் தயாராய் இருக்கிறது.

டிக்சாவை தேடும் முயற்சியில் இறங்கியிருக்கும் அந்த இயக்கம் இதுவரை கண்டு பிடித்திருக்கும் உண்மைகள் தான் என்ன?

பாஸ் கட்சியின் ஆதரவு பெற்ற அரசு சாரா இயக்கம்,  இந்திய மத போதகர் ஜாகிர் நாயக்கின் ஆதரவு இயக்கம், தென் தாய்லாந்து பிரிவினை வாத இயக்கம் - இவர்களின் ஆதரவோடு இந்திரா காந்தியின் குழந்தை மறைத்து வைக்கப்பட்டிருக்கிறாள் என்பதாக இங்காட் இயக்கம் கண்டு பிடித்திருக்கிறது. - அத்தோடு அந்தக் குழந்தை, கிளந்தான் மாநிலத்தில்,  பதிவு பெறாத சமயப்பள்ளி ஒன்றில் கல்வி கற்றுக் கொண்டிருக்கிறாள் என்பதாகவும் அந்த இயக்கம் கண்டு பிடித்திருக்கிறது. 

காவல்துறை  இந்நாள் வரை கண்டு பிடிக்காத, தங்களால் முடியவே முடியாத, ஒரு சில புதிய தகவல்களை இங்காட் இயக்கம் கண்டு பிடித்திருக்கிறது என்பதை அறியும் போது அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

பாஸ் கட்சியின் ஆதரவு பெற்ற அரசு சாரா இயக்கம் ஒன்றும் இந்த "மறைத்தல்"  சம்பவத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாகக்  கூறப்படுவதை  பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான்  மறுத்திருக்கிறார்.  மேலும் இந்த குற்றச்சாட்டுக்காக இங்காட் இயக்கம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதாகவும் அவர் கூறியிருந்தார். 

ஆனால் இங்காட் இயக்கத்தின் தலைவர் அருண் துரைசாமி  தங்களுடைய குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மையே என்று கூறி  துவான் இப்ராகிம் தங்களது அரசு சாரா இயக்கங்களை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார்.  "மன்னிப்பு தேவை இல்லை. எங்களுடைய ஆதாராங்களைப் பாருங்கள்" என்பதாக அருண் துரைசாமி கூறியிருக்கிறார்.  

நாம் சொல்ல வேண்டியதெல்லாம் ஒன்று தான். இங்காட் இயக்கம் உண்மை பேசுவதாகவே நாங்கள் நம்புகிறோம். பொய் சொல்லுவதற்கான வாய்ப்பு இல்லை. அதனால் அவர்கள் கூற்றில் உண்மை இருப்பதால் மன்னிப்பு என்பதெல்லாம் கூடவே கூடாது. 

மேலும் துவான் இப்ராகிம் பாஸ் ஆதரவு பெற்ற அரசு சாரா இயக்கங்களை ஆராய வேண்டும்.   எப்படிப் பார்த்தாலும் அவருக்குத் தெரியாமல் இருக்க வழியில்லை!   ஆனால் இந்த வயதில்,  பக்தி பழமான அவர்,  பொய் சொல்லுவரா என்பதும் தெரியவில்லை!

சபாஷ் இங்காட்! உங்களைப் பாராட்டுகிறோம்!

Friday 26 July 2019

வெட்டியாள் வேலை!

பொதுவாக மலேசியாவில் வெட்டியான் என்றாலே பலருக்குத் தெரியாது! காரணம் அப்படி ஒரு வேலை இருப்பதாகவே யாருக்கும் தெரிவதில்லை.

ஆனால் அதுவே இந்தியாவில் வெட்டியான் என்பதே ஏதோ ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் செய்கின்ற வேலையாகவே வகைப்படுத்துகின்றது. 

"வணக்கம் மலேசியா" இணைய தளத்தில் படித்த ஒரு செய்தி. 

"சுடுகாட்டில்  பிணம் எரிக்கும் தமிழ் நடிகை!" 

இந்தத் தலைப்பைப் படிக்கும் போது ஏதோ ஒரு தமிழ் நடிகை இப்போது வெட்டியாள் வேலை செய்கிறார் என்பதாகத்தான் நினைப்போம். அப்படித்தான் நினைக்க வேண்டும் என்பது தான் அந்த செய்தியாளரின் நோக்கம்.

அந்தச் செய்தியைப் படிக்கும் போது  தீபிகா என்னும் தமிழ் நடிகை வெட்டியாள் என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாக அந்தச் செய்தி கூறுகிறது.

நமக்கு ஒன்றும் அதில் ஆட்சேபணை இல்லை. ஒரு நடிகை என்றால் எந்தக் கதாப்பாத்திரத்தையும் ஏற்று நடிக்கலாம். மலம் அள்ளும் கதாபாத்திரத்திலும் நடிக்கலாம். அது தான் நடிகைகளின் வேலை. 

ஆனால் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும்.  அவர் ஒரு தமிழ் நடிகை என்று குறிப்பிட்டு சொல்கிறார் அந்தச் செய்தியாளர்? அப்படி என்றால்? இந்த வேடத்தில் ஒரு தெலுங்கு நடிகை நடிக்க மாட்டார். ஒரு மலையாள நடிகை நடிக்க மாட்டார். ஒரு கன்னட நடிகை நடிக்க மாட்டர். ஆனால் அந்தக் கேவலமான வேடத்தில் ஒரு தமிழ் நடிகை நடிக்கிறார் என்பது தானே அர்த்தம்? 

அதாவது மானங்கெட்ட தமிழர்கள் தான் இந்த வேடத்தில் நடிப்பார்கள் என்பது தானே அவரது நோக்கம். சினிமாவில் பெண்கள் பலதரப்பட்ட வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.  விபச்சாரிகளாக, பிச்சைக்காரிகளாக, பிற கணவர்களை அபகரிப்பவர்களாக - பொதுவாக எத்தனையோ நாம் ஏற்றுக் கொள்ள முடியாத வேடங்களில் எல்லாம் நடித்திருக்கிறார்கள்.  அது அவர்களின் கடமை. தங்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளத்திற்காக அவர்கள் நடிக்கிறார்கள்.  நாம் என்ன அவர்கள் தெலுங்கர்களா, மலையாளிகளா, கன்னடர்களா, தமிழர்களா என்றா பார்த்தோம்? 

இந்தச் செய்தியை எழுதியவன் தமிழன் இல்லை என்று நமக்குத் தெரிகிறது.  தமிழர்களைக் கேவலப்படுத்துவது தான் அவனது நோக்கம் என்று தெரிகிறது. தமிழ் மண்ணில் இருந்து கொண்டு, தமிழ் மண்ணில் வயிறு வளர்த்துக் கொண்டு, வேறு போக்கிடம் இல்லாதவன் தமிழர்களைக் கேவலப்படுத்துகின்ற வேலையில் இறங்கியிருக்கின்றான். இது போன்ற செய்திகள் எல்லாம் தமிழர்கள் மீதான மறைமுக தாக்குதல் என்பதை நாம் மறக்கக் கூடாது. இப்போது இது மறைமுகமாக நடந்து கொண்டிருக்கிறது.

 இது போன்ற செய்திகளை வணக்கம் மலேசியா தவிர்க்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!

Thursday 25 July 2019

தமிழ் இடைநிலைப்பள்ளி...

தமிழ் இடை நிலைப்பள்ளி  தேவையற்ற ஒன்று என்பதாக முன்னாள் கல்வி அமைச்சர் மாட்ஸிர் காலிட் கூறியிருக்கிறார்.

இருக்கட்டும், அது அவரது அபிப்பிராயம் நாம் தலையிட முடியாது. ஆனால் அவர் சொன்ன காரணங்கள் தான் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இப்படி ஒரு இடைநிலைப்பள்ளியை தோற்றுவித்தால் நன்மையை விட கெடுதலே அதிகம் என்று அவர் சொல்லுகின்ற காரணம் தான் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 

அதாவது தமிழ் இடை நிலைப்பள்ளி என்றால் அதனால் வரும் தீமைகளே அதிகம் என்று எதனை வைத்து அவர் மதிப்பிடுகிறார்?  நம் நாட்டில் சீன மொழி இடைநிலைப்பள்ளிகள்  காலங்காலமாக இயங்கி வருகின்றன.   அந்தப் பள்ளிகள் அப்படி என்ன கெடுதலைக் கொண்டு வந்துவிட்டன என்பது நமக்குப் புரியவில்லை.

ஒரு காலக்கட்டத்தில் சீனர்கள் கம்யூனிசத்திற்கு ஆதரவானர்கள் என்று குற்றம் சாட்டிய போது,  சீன இடை நிலைப்பள்ளிகளும் கம்யூனிசத்தைப் பரப்புகின்றன  என்றெல்லாம் குற்றம் சாட்டப்பட்டது.  ஆனால் அப்படி எல்லாம் எதுவும் நடக்கவில்லையே!   பள்ளிகள், பள்ளிகளாகத்தானே இருந்தன! இப்போதும் இருக்கின்றன!

மாட்ஸிர் தமிழ் இடைநிலைப்பள்ளி பிரச்சனையைத் திசை திருப்புகின்றார் என்பது நமக்குப் புரிகிறது. அவர் இப்படி ஒரு கருத்தைச் சொல்லி இந்தப் பிரச்சனையை அரசியலாக்குகிறார் என்பது புரிகிறது. அவர் எதிர்க்கட்சி மலாய் அரசியல்வாதிகளைத் தூண்டி விடுகிறார் என்பதும் நமக்குப் புரிகிறது. 

இது போன்ற பிரச்சனைகளை எதிர்ப்பதற்காகவே ஒரு சில அரசியல்வாதிகள்,  மலாய் அரசு சார்பற்ற நிறுவனங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. இவரின் பேச்சு அவர்களை ஊக்குவிப்பதகாவே இருக்கும் என நமக்குத் தெரியும்.

மாட்ஸிர் முன்னாள் கலவி அமைச்சர்.  இப்படிப் பேசுவதே அவரின் தகுதிக்கு இழுக்கு. ஆனாலும் பேசியிருக்கிறார். தமிழ் இடைநிலைப்பள்ளி பற்றியான அறிவுப்பு வரும் போது தான் இவர்களின் குரல் ஒங்கி ஒலிக்கும்!

பொறுத்திருப்போம்!  பொறுத்தவர் பூமி ஆள்வார்!

நூறு நாள் பிரச்சனை முடிவுக்கு வந்தது...!

குடியுரிமை இல்லாத 3,00,000 இந்தியர்களின் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்து விட்டதாகத் தோன்றுகிறது!

கடந்த பொதுத் தேர்தலின் போது இந்த "நூறு நாள்களில் தீர்ப்போம்" என்று பக்காத்தான் வழங்கிய உறுதி மொழி இப்போது ஒரு முடிவுக்கு வந்து விட்டதாகவே நமக்கு எண்ணத் தோன்றுகிறது!

ஆமாம், சமீபத்தில் ஜனநாயக செயல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்று உள்துறை அமைச்சர், டான்ஸ்ரீ மொகிதின் யாசினை சந்தித்த போது  அவர் இந்த குடியுரிமை பிரச்சனைக்கு ஒரு முடிவைக் கொண்டு வந்து விட்டார் என நம்பலாம்!

கொல்லைப்புற வழியாக குடியுரிமை தரப்பட மாட்டாது என அவர் கூறியிருக்கிறார்.  மத போதகர் ஜாகிர் நாயக் அல்லது வங்காள தேசிகள் போன்ற எவருக்குமே கொல்லைப்புற வழியாக குடியுரிமை வழங்கப்பட வில்லை என்பதாகவே நாமும் எடுத்துக் கொள்ளுவோம். 

நம்முடைய நூறு நாள் தீர்ப்பு என்னவாயிற்று?  சமீப காலங்களில் சிலருக்கு, அதுவும் குறிப்பாக எழுந்து நடக்க முடியாத வயதானவர்களுக்கு, பக்காத்தான் அரசாங்கம் குடியுரிமை கொடுத்திருக்கிறது என்பது உண்மையே! அதனை மறுப்பதற்கில்லை!

பல இளைஞர்கள், நடுத்தர வயதினர் இவர்களையெல்லாம் பக்காத்தான் அரசாங்கம் ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்று கேட்கத்தான் நினைக்கிறோம்.  அதையும் கேட்க முடியவில்லை.  நீதி, நியாயம் பேசும் அரசாங்கத்திடம் எப்படி கேள்வி எழுப்புவது?

முன்பு பாரிசான் அரசாங்கம் என்ன காரணங்களைச் சொன்னதோ அதே காரணங்கள் தான் இப்போதும் சொல்லப்படுகிறது. ஆனால் தேர்தலின் போது சொல்லப்பட்ட காரணங்களோ வேறு.  இந்தியர்களுக்குக் குடியுரிமை என்பது ஒரு சாதாரணப் பிரச்சனை. அதனைத் தீர்க்க நூறு நாள்கள் போதும்!   ஆட்சியை எங்களிடம் ஒப்படையுங்கல். நாங்கள் நூறு நாள்களில் முடித்து வைக்கிறோம் என்று சொன்னவர்கள் இப்போது ஏன் தடுமாறுகிறார்கள்? 

உண்மையைச் சொல்லப் போனால் பக்காத்தான் தேர்தல் காலத்தில் சொன்னது போலவே இது ஒன்றும் தீர்க்க முடியாத பிரச்சனை அல்ல.  இது நூறு நாள் பிரச்சனை தான்.  ஏன் இவர்களால் தீர்க்க முடியவில்லை? ஒரு வேளை இதனை அடுத்த தேர்தல் நெருங்கும் போது இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கண்டால் இந்தியர்களின் வாக்கு இவர்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறார்களோ!

எதுவும் சொல்ல முடியவில்லை. அரசியல்வாதிகள் எப்படி யோசிப்பார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுவது கடினம்!

எதுவும் அசையவில்லை என்றால் இந்தப் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்ததாகவே எடுத்துக் கொள்ளலாம்!


Wednesday 24 July 2019

இது என்ன விளையாட்டா...?

நமது இளம் பெற்றோர்களைப் பற்றி என்ன சொல்லுவது? 

பலரும் அறிந்திருப்பர்.  ஜொகூரில் நடைப்பெற்ற சம்பவம் இது.  சின்னஞ் சிறிய பாலகன், இரண்டு வயது,  மது அருந்துகிற  காணொளி  ஒன்று வலைத்தளங்களில்  பகிரப்பட்டு வருகின்றது.


குழந்தை அவன். அறிந்தோ, அறியாமலோ செய்கிறான். யார் மீது குற்றம் சுமத்துவது?  பெற்றோர்களே அந்தக் குற்றச்சாட்டுக்குக் காரணமானவர்கள். வேறு யாரையும் சொல்லிப் பயனில்லை.

பெற்றோர்கள் சொல்லுகின்ற காரணங்களை எல்லாம் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.  குற்றத்திலிருந்து  தப்பிக்க எதையாவது சொல்லலாம். அதனை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. 

பிள்ளைகளைக் குடிக்க வைத்து வேடிக்கப் பார்ப்பது, இன்னும் இன்னும் என்று சொல்லி ஊக்கப்படுத்துவது, இப்படி செய்து சந்தோஷப்படுவதை எல்லாம் நாம் வரவேற்க முடியாது.

இந்திய சமுதாயம் குடிகாரச் சமுதாயம் என்று பெயர் எடுத்திருக்கிறோம். சீனர்களை விடவா நாம் குடிகாரர்கள்?  ஆனால் அவர்கள் குடிப்பது நம் கண்களுக்குத் தெரிவதில்லை.  ஆனால் நாம் குடிப்பது இந்த நாடே அறிந்திருக்கிறது! 

குடிகார நண்பர்களே! கொஞ்சம் யோசியுங்கள். குடித்துவிட்டு யோசிப்பதை விட, குடிக்கும் முன்பே யோசியுங்கள். நீங்கள் குடிப்பதமின்றி  உங்கள் பிள்ளைகளுக்கும் ஊற்றி விடுகிறீர்களே, இது எந்த ஊர் நியாயம்?

அட! அப்பன் தான் குடிகாரன்! அம்மாவுக்கு ஒரு பொறுப்பும் இல்லையா? தன் குழைந்தையைக் குடிக்க வைத்து வேடிக்கைப் பார்ப்பவர்களை சும்மா விட்டு விடுவதா!  நீங்கள் கண்டித்தால் இது நடக்குமா?  உங்கள் குழந்தை நாசமாய்ப் போவதை  நீங்கள் விரும்புகிறிர்களா?

இது போன்ற சம்பவங்கள் ஒவ்வொரு குடிகாரன் வீட்டிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்தக் குழந்தை குடிக்கும் விஷயம் தான்  அம்பலத்திற்கு வந்திருக்கிறது!

நண்பர்களே!  குழந்தைகளைக் குடிக்க வைத்து சந்தோஷப்படுவது  மிகப் பெரிய அயோக்கியத்தனம்! அதனைச் செய்யாதீர்கள்.  அவர்களுக்கும்  ஒரு வருங்காலம் இருக்கிறது. கவனத்தில் கொள்ளுங்கள்.

இது விளையாட்டல்ல!  விபரீதம்!

Tuesday 23 July 2019

ம.இ.கா.வின் சொத்தா...?

பேரா மாநிலத்தில் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்காக கொடுக்கப்பட்ட 2,000   ஏக்கர் நிலம் பற்றி இப்போது  தான் வீதிக்கு வந்திருக்கிறது!

இதே போல 2,000 ஏக்கர் நிலம் சீனப் பள்ளிகளுக்கும் மலாய் சமயப் பள்ளிகளுக்கும் கொடுக்கப்பட்டு அவர்கள் அங்கிருந்து கிடைக்கும் வருமானத்தை  அந்தப் பள்ளிகளின் வளர்ச்சிக்காக   பயன் படுத்துகின்றனர்.

அவர்களைச் சந்தேகிக்க ஒன்றுமில்லை.  அவர்களின் பள்ளிகளுக்கு அந்த வருமானம் தேவை அதனால் அதனைப் பயன் படுத்துகின்றனர். 

ஆனால் தமிழ்ப்பள்ளிகளின் நிலை வேறு. அந்த நிலம் போய்ச் சேர வேண்டிய இடத்தில் போய்ச் சேராமல் ம.இ.கா.   என்னும் முதலைகளிடம் போய்ச் சிக்கிக் கொண்டது!  இங்கே தான் பிரச்சனையே ஆரம்பம்!  மலாய், சீனப் பள்ளிகள் தங்களது நிலங்களின் மூலம் வருகின்ற வருமானத்தைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.  ஆனால் இங்கோ நிலைமை வேறு. இது யார் நிலம்? யாருக்குச் சொந்தம்?  என்று சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

இதில் ஒரு முக்கிய விஷயத்தை நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த 2000 ஏக்கர் நிலத்திற்குச் சொந்தம் கொண்டாடிக் கொண்டிருப்பவர்கள் ம.இ.கா. இந்திய்ர்கள்.  இவர்கள் தமிழ் என்றால் என்னவென்று தெரியாது, தமிழ் மொழி என்றால் என்னவென்று தெரியாது, தமிழுக்கும் இவ்ர்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை!  ஆனால் இவர்களிடம் தான் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்காக 2000 ஏக்கர் நிலத்தை தாரை வார்த்திருக்கிறார்கள்! இதை விடக் கொடுமை வேறு என்ன வேண்டும்?

ஆனால் இதனை வேறு ஒரு கோணத்திலும் நாம் பார்க்க வேண்டும்.  இந்த நிலம் ம.இ.கா. வின் சொத்து என்று இப்போது அவர்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள்! அப்படி என்றால் என்ன அர்த்தம்? ம.இ.கா. வின் சொத்துக்கள் அனைத்தும் முன்னாள் தலைவர் சாமிவேலுவின் பெயரில் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது!  இது நாள் வரை ம.இ.கா. அதனை மறுக்கவில்லை!  அப்படி என்றால் அது ம.இ.கா. சொத்து அல்ல. சாமிவேலுவின் சொத்து என்பதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி என்றால் இந்த 2000 ஏக்கர் நிலம் ம.இ.கா. சொத்து என்றால் அது யார் பெயரில் இருக்க வேண்டும்? இன்றைய ம.இ.கா. தலைவர் பெயரில் தானே இருக்க வேண்டும்!  

எது எப்படியோ போகட்டும். நாம் சொல்ல வேண்டியது ஒரு விஷயம்தான். இந்த நிலம் இந்த விஷக்கிருமிகளிடமிருந்து  காப்பாற்றப்பட வேண்டும். எது போன்ற நடவடிக்கை  தேவை என்பது   நமக்குத் தெரியவில்லை. 

ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் தான் என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்ய வேண்டும். இவர்களுக்குச் சிறைவாசம்  ஒன்று தான் சரியான தண்டனையாக இருக்கும். 

அது நடக்கும் என திர்ப்பார்க்கிறோம்!

 

சோம்பேறித்தனமா. .....!

இது நாள் வரை இப்படி யாரும் சொன்னதில்லை. அதுவும் காவல்துறையைப் பற்றி இப்படியெல்லாம் சொல்ல முடியுமா என்பது கூட நமக்குத் தெரியாது! 

ஆனால் நமது புதிய ஐ.ஜி.பி. டான்ஸ்ரீ அப்துல் ஹமீட் பாடோர்  இப்படி ஒரு குற்றச்சாட்டை நமது காவல்துறையினர் மீது வைத்திருக்கிறார்!

ஆமாம், பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள பல புகார்கள் இன்னும் விசாரணைக்கு வராமலிருக்கக் காரணமே புலனாய்வுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் தாம் என்பதாக அவர் கூறியிருக்கிறார். 

பட்டுக்கோட்டையாரின் பாடல் ஒன்று ஞாபத்திற்கு வருகிறது:

            நீ தாங்கிய உடையும் ஆயுதமும்
            பல சரித்திரக் கதை சொல்லும் சிறைக் கதவும் 
            சக்தி இருந்தால் உன்னைக் கண்டு சிரிக்கும் 
            சத்திரம் தான் உனக்கு இடம் கொடுக்கும் 

இந்தப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த சோம்பேறி அதிகாரிகளால் தான் இத்தனை ஆண்டுகள் எந்த ஒரு முடிவும் இல்லாமல் விசாரணைக்கு வராமல் பல வழக்குகள் கிடப்பில் கிடப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

நமக்கு ஒன்று புரியவில்லை.   அவர்கள் தாங்கிய உடையும் ஆயுதமும் அவர்களை எப்படி சோம்பேறித் தனத்தைக் கொண்டு வர முடியும்?  அவர்கள் தாங்குகின்ற உடைகள் சோம்பேறித்தனத்திற்கு அடையாளமோ! இவர்களால் எப்படி தூங்க முடியும்?  நாட்டைக் காக்க  வேண்டியவர்கள் நாட்டை அழிப்பதற்கு அல்லவா போட்டிப் போடுகிறார்கள்!

இவர்கள் செய்கின்ற வேலையைப் பார்க்கின்ற போது இவர்கள் என்ன சம்பளம் இல்லாமல் வேலை பார்க்கிறார்களோ என்றல்லவா எண்ணத் தோன்றுகிறது!  அரசாங்கத்தின் அத்தனை சலுகைகளையும் அனுபவித்துக் கொண்டு அவர்கள் சோம்பேறிகளாக இருந்தால்  நாம் எங்கே போய் முட்டிக் கொள்ளுவது? 

எது எப்படி இருந்தாலும் அவை கடந்துபோன சம்பவங்கள்.  தலைமை சரியாக இல்லாவிட்டால் மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை "தூங்காதே தம்பி தூங்காதே!" என்று தான் நாம் பாட வேண்டி வரும். இப்போது காவல்துறை சரியான தலைமைத்துவத்தைக் கொண்டிருக்கிறது. காவல்துறை மட்டும் அல்ல மற்ற துறைகளிலும்  முன்னாள் சோம்பேறிகள் எல்லாம்  அப்புறப்படுத்தப் படுகின்றனர் என்பது நல்ல செய்தி.

சோம்பேறித்தனம்  வீட்டுக்கும் நல்லதல்ல, நாட்டுக்கும் நல்லதல்ல.  அது ஒரு குடும்பத்தையும் கவிழ்த்துவிடும் அதே போல நாட்டையும் கவிழ்த்துவிடும்!  இன்று நமது அரசாங்க ஊழியர்களைப் பற்றி நமக்கு நல்ல  அபிப்பிராயம் இல்லை  என்றால் அந்த அபிப்பிராயம் சோமபேறிகளால்  ஏற்படுத்தப்படுகிறது  என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

ஐ.ஜி.பி. சொன்னது போல  சோம்பேறி அதிகாரிகளால்  பல வழக்குகள் நிலுவையில் நிற்கின்றன. தூசி துடைத்து அவைகள் உயிர்ப்பிக்கப்பட வேண்டும்.

இந்த நேரத்தில் ஐ.ஜி.பி. க்கு நன்றி சொல்ல நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.  எல்லாக் காலங்களிலும்  ஏதோ ஒரு வகையில்  சோம்பேறிகளால் நாம் வழி நடத்தப்படுகின்றோம். நாமும் சோம்பேறி  கூட்டமாக மாறி விடுகிறோம். அந்த நடைமுறை ஒழிக்கப்பட வேண்டும்!      

சோம்பேறி என்னும் பெயர் வாங்காதே!                                                                                                                                                                                     

Monday 22 July 2019

இது ஒரு கடுமையான குற்றச்சாட்டு..!

சிலங்கூர் ஆற்று நீரில் நச்சுக்கலவை கலக்கப்பட்டிருந்தது   ஒரு சதி செயல் என்பதை அறியும் போது  அதனை நாம் சாதாரணமாக எடுத்து கொள்ள முடியவில்லை.

மேலும் இதுவரை இது போன்ற செய்திகளை நாம் கேட்டதில்லை. இதுவே முதன் முறை என்று நான் நினைக்கிறேன்.

இப்படிச் செய்திகள் வரும் போது இது எதிர்க்கட்சியினரின் வேலையாக இருக்குமோ என்று நாம் நினைப்பது இயல்பு தான். காரணம் அவர்களின் சமீபகால நடவடிக்கைகள் எல்லை மீறி விட்டதாகவே நாம் நினைக்கத் தோன்றுகிறது  என்பதும் உண்மை தான்.

இருந்தாலும் அப்படி எல்லாம் நாம் நினைத்து விட முடியாது. நம் விருப்பத்திற்கு நம் கற்பனைகளை கட்டவிழ்த்து விட முடியாது.  இது காவல்துறை  கண்டு பிடிக்க வேண்டிய வேலை.

ஆனால் செய்தியின் படி இது சதி செயல் தான் என்பதாகக் காவல்துறை கண்டு பிடித்திருக்கிறது.  அப்படியென்றால் இது சதி செயல் என காவல்துறை உறுதிபடுத்தியிருக்கிறது. இனி தேவை எல்லாம் இது போன்ற செயல்களுக்கு யார் பின்னிலிருந்து இயக்குகிறார்கள்.என்பதைக் கண்டுபிடிப்பது  தான்.

இது போன்ற செயல்களைத் தீவிரவாதிகள் செய்திருப்பதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அவர்கள் எதற்கும் அஞ்சாதவர்கள். பாவ புண்ணியம் பார்க்காதவர்கள்.  அதெல்லாம் அவர்களின் அகராதியில் இல்லை. குடிநீரில் நஞ்சைக் கலந்து பொது மக்களைக் கொல்லுவது என்பதெல்லாம் அவர்களுக்குக் குறுக்கு வழியில் சொர்க்கத்தை அடையும் வழி!

நம் நாட்டில் இது போன்ற செயல்களை ஊக்குவிக்க முடியாது.  இது தீவிரவாதிகளின் சொர்க்க பூமி அல்ல. நமக்குத் தெரிந்தவரை  அரசியல்வாதிகளிடம் தான்  ஏதோ கொஞ்சம் தீவிரவாதம் இருப்பதை நாம் பார்க்கிறோம். ஆனால் இது போன்ற தூண்டுதல்கள் எங்கிருந்து வருகிறது என்பதைக் கண்டு பிடிப்பது காவல்துறையின் பொறுப்பு.

ஆமாம்! இது ஓரு கடுமையான குற்றச்சாட்டு. இதற்கு உடைந்தையாக இருந்தவர்களோ அல்லது இந்த சதி செய்லுக்குத் தலைமை தாங்கிய்வர்களோ சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். 

அதுவே நமது வேண்டுகோள்!

சண்டையை நிறுத்தங்கள்!

ஒவ்வொரு நாளும் சண்டையை நிறுத்தங்கள் என்பதாகச் செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. 

இந்த "அடுத்த பிரதமர்" பிரச்சனைக்கு ஆளுங்கட்சி தீர்வு கண்டாலும் எதிர்கட்சிகள் தீர்வு காண விடமாட்டார்கள் என்றே தோன்றுகிறது. அதாவது இதையெல்லாம் பேசி அரசாங்கத்திற்குக் கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும். அவர்களை வேலை செய்யாமல்  தடுக்க வேண்டும் என்பது  தான் அவர்கள்  நோக்கம்.

மிகவும் வெட்கக் கேடான விஷயம்  என்னவெனில் ஆளுங்கட்சியில் உள்ளவர்களும்  இது பற்றி பேசுவது சரியானதாக  நமக்குத் தோன்றவில்லை. 

எதிர்கட்சியில் உள்ளவர்கள் பேசலாம். இன்றைய நிலையில் அவர்கள் செய்வதற்கு ஒன்றுமில்லை. பதவியில் இருந்த போதும் அவர்கள் ஒன்றும் செய்யவில்லை! இப்போது மட்டும் என்ன செய்து விடப் போகிறார்கள்!   அவர்கள் நோக்கம் எல்லாம்  ஆளும் அரசாங்கம் எதையும் செய்யக் கூடாது.  அவர்களுக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பது தான்.  இதைத்தான் அவர்கள் தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கிறார்கள்!

அரசாங்கம் எதைச் செய்தாலும் உடனே அதனைக் குற்றம் சொல்லுகிறார்கள்.  உடனே அதனை ஒரு பிரச்சனையாக உருவாக்குகிறார்கள்.  உடனே ஆர்ப்பாட்டம் செய்வோம் என மிரட்டல் விடுக்கிறார்கள்! ஏதாவது ஒரு அமைச்சரைப் பற்றி அவதூறுகளைக் கிளப்பி விடுகிறார்கள்! 

இது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது!  ஒரே காரணம் தான். முந்தைய அரசாங்கத்தில் இது  போன்ற வாய்ப்புக்களை எதிர்க்கட்சிகளுக்கு அவர்கள் கொடுக்கவில்லை.  இன்றைய அரசாங்கம் அந்த வாய்ப்பை எதிர்க்கட்சிகளுக்குக் கொடுக்கிறது. அது தான் வித்தியாசம்.  முந்தைய அரசாங்கம் ஏன் கொடுக்கவில்லை  என்பதை இப்போது நமக்குப் புரிந்திருக்கும்!


இன்னொன்றையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இப்படி அடுக்கடுக்காக அவதூறுகளையும், அடுத்த பிரதமரைப் பற்றி வசை பாடுவதும், அரசாங்கத்தைப் பற்றி குறை கூறுவதும் தொடர்ந்து கொண்டிருப்பதற்குக் காரணம் ஒரு குழு அதற்காக இயங்கி கொண்டிருக்கிறது  என்பது தான்!

குறையே சொல்லக் கூடாது என்பதல்ல நமது நோக்கம். சொல்லுகின்ற குறைகள் அனைவருக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும். அந்தக் குறைகள் நிவர்த்திப் செய்யப்பட வேண்டும்.  அது தான் நமது நோக்கம். 

அதனால் நாம் சொல்ல வருவதெல்லாம் "சண்டையை நிறுத்துங்கள்!"  "உங்கள் வேலையைப் பாருங்கள்!"  என்பது தான்!

குறைகள் வரலாம். வரத்தான் செய்யும்.  செய்கின்ற வேலையில் தொய்வு ஏற்படக் கூடாது!                                                                                                                             

Sunday 21 July 2019

இது தான் வாழ்க்கை...!

ஞாயிறு  இதழ் ஒன்றில் ப்டித்த கட்டுரை ஒன்று மனதை அசைத்துப் பார்த்தது.

பிரபலமான கவிஞர் ஒருவர் தனது வயதான காலத்தில் ஓரு முதியோர் இல்லத்தில்  ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதை அறியும் போது மனம் கனத்தது.

ஆனால் நமக்கு இது ஒன்றும் புதிதல்ல.  பலருடைய வாழ்க்கை இப்படித் தான் தங்களது இறுதி காலத்தில் முதியோர் இல்லங்களில்  கழிந்து  கொண்டிருக்கிறது. 

வயதாகும் போது மனைவி கூட இருந்தால் கணவனுக்குக் கொஞ்சம் பாதுகாப்பு.  மனைவி இறந்து போனால் அதுவும் இல்லை.

வசதிகளும், சொத்துக்களும் குவிந்து கிடந்தால் அனைத்தும் மாறும்  என்று சொன்னாலும்  அப்படி எதுவும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.  தமிழக முன்னாள் முதலைமைச்சர் ஒருவர் கை கால்கள் உடைக்கப்பட்டு தான் மாண்டு போனார்.  பணத்தால் என்ன செய்ய முடிந்தது? ஒரு நகைச்சுவை நடிகர் பசியாற ஓர் இட்டலிக்காக  நீதிமன்றம் ஏறினார். 

வயதான காலம் என்பது, விழிப்பாய் இராவிட்டால்,   சோகத்தில் தான் முடியும் என்பது எழுதப்படாத விதி.   முதியவர்களை வைத்துக் கொண்டு எந்த இளசுகளும் காலந்தள்ள தயாராக இலை என்பது தான் நிதர்சனம்.  

ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு ஓய்வூதியம் வருகிறதா? பிழைத்தீர்கள்!  மாத வருமானத்தை இழக்க யாரும் தயாராக இல்லை. எனக்குத் தெரிந்த வயதானவர் ஒருவர் முன்னாள் அரசாங்க ஊழியர்.  அவருடைய வருமானத்தில் தான், மகன் தன் பெண்டாட்டி பிள்ளைகளுடன், ஒரு மகள் தனது மகளுடன், மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்!  அதே போல 96 வயதான பெரியவர் ஒருவர் தனது மகன் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்!  நண்பர் ஒருவர் மாதாமாதம் "சோக்சோ"  பணம் வருகிறது. அவருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை!

இப்போதைய தலைமுறை இலாப நஷ்டக் கணக்குப் போட்டு வாழ்கின்ற தலைமுறை.  வருமானம் தான் முக்கியம்.  இலாபம் இல்லாவிட்டால் வீதிக்கு அனுப்பத்  தயங்காத தலைமுறை. நாம் அப்படித்தானே அவர்களை வளர்த்திருக்கிறோம்!

ஒன்று மட்டும் சொல்வேன்.  முதியோர் இல்லத்தில் தங்குவதை  நான் தவறாக நினைக்கவில்லை. அது தான் அவரது விருப்பம் - வேறு வழியில்லை - என்றால் அதுவே நடக்கட்டும்.  அவர் எதிர்பார்க்கின்ற "கவிஞர்களின் சூழல்" இருந்தால் அதுவே சொர்க்கம்!  நாளிதழே இல்லாத இடத்தில் அதனை எதிர்பார்க்க முடியாது என்பதும் தெரிகிறது!

ஆனால் நாம் எங்கிருந்தாலும் அந்த இடத்தை நமக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ள வேண்டும். அதனை சொர்க்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும். மகிழ்ச்சியின் இருப்பிடமாக மாற்றி அமைக்க வேண்டும்.

நாம் எங்கிருந்தாலும் மகிழ்ச்சி என்பது நமது கையில்!

இது தான் வாழ்க்கை! இது தான் பயணம்!

முனைவர் ராஜேந்திரன் முன்வந்திருக்கிறார்...!

செடிக் நிதி எப்படி பயன்படுத்தப்பட்டது என்பது பற்றி வாய்த் திறந்திருக்கிறார்  அதன் தலைமை பொறுப்பிலிருந்த முனைவர் ராஜேந்திரன். 

இது பற்றி விசாரிக்கப்பட்டால் தான் முழு ஒத்துழைப்பையும் தருவதாக உறுதி அளித்திருக்கிறார் ராஜேந்திரன்.

முனைவர் ராஜேந்திரன் ஒரு கல்வியாளர். இன. மொழிப்பற்று உள்ளவர். அவர் நல்லவர், வல்லவர் என்பதாக, அறிந்தோ அறியாமலோ, அவரை நாம் ஒரு நல்லவர் என்னும் பட்டியலில் வைத்திருக்கிறோம்!  அதனால் அவர் பொய் சொல்லுவார் என்று நாம் நம்பவில்லை!

அவர் அறிக்கையைக் காணும் போது ஒரு விஷயம் நமக்குப் புரிகிறது. அவர் மூலம் கொடுக்கப்பட்ட நிதி அனைத்துக்கும் அவர் கணக்கு  வைத்திருக்கிறார்.  அவரைப் பொறுத்தவரை அது தான் முக்கியம் என்று அவர் நினைக்கிறார்.  எல்லாம் அதிகாரப்பூர்வமாக செய்யப்பட்டவை.  கணக்கு வழக்குகள் உள்ளன.   கொடுத்ததற்கு அடையாளமாக ரசீதுகள் உள்ளன.  அதை விட  வேறு என்ன செய்வது என்பது தான் அவர் நிலை. அவரால் வேறு என்ன செய்ய முடியும்? என்று தான் நாமும் நினைக்கிறோம்!

அவருடைய  நிதி பரிவர்த்தனையில் இலட்சம், கோடி என்று போய்க் கொண்டிருந்தது.  கடன் கேட்டவர்களின் பின்னணியை ஆராய முடியாது. எல்லாம் அரசியல் பின்புலம் உள்ளவர்கள்!  அதனால் அவருக்குக் கொடுத்த பணியை அவர் சரியாகச் செய்திருப்பார். கேட்டவர்களின் பின்னணியை ஆராயாமல் பணம் கொடுத்திருப்பார்!  அப்படி செய்யாவிட்டால் அவரை விட மாட்டார்கள் என்பது அவருக்குத் தெரியும். 

முனைவரின் ராஜேந்திரனின் நிலை நமக்கும் புரிகிறது. அவரைக்  குறை சொல்ல நம்மால் இயலாது.  மிகவும்  நிதானமான நிலையில் உள்ளவர். அவர் கடமையை அவர் சரியாகச் செய்தார் என்பதாகத்தான் நாம் எடுத்துக் கொள்ளுகிறோம். 

செடிக் பிரச்சனையில் அரசியல்வாதிகள்  தலையீட்டினால் தான் இப்படி ஒரு தலைக்குனிவு அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.  விசாரணையின் போது அவர் முழு ஒத்துழைப்பைக் கொடுப்பார் என்பதில் சந்தேகமில்லை.  அயோக்கியர்கள் செய்யும் அயோக்கியத் தனங்களுக்கு நாம் அவரைக் குறை சொல்ல வேண்டாம் என்பது தான் நமது நிலை. 

நீதிக்குத். தலை வணங்குபவர் முனைவர் ராஜந்திரன்.  நல்லது நடக்கும் என எதிர்பார்ப்போம்!

Saturday 20 July 2019

சரவணபவன் அண்ணாச்சி....!

சரவணபவன் அண்ணாச்சி ராஜகோபால் சமீபத்தில் காலமானார். 

நான் அவருடைய இருண்ட வரலாற்றுப் பக்கம் போகவில்லை.  ஜோதிடத்தின் மேல் அளவற்ற நம்பிக்கை வைத்தால் என்ன ஆகுமோ அது தான் அவருக்கு ஆயிற்று. அது போதும்!

அண்ணாச்சியின் இயற் பெயர் ராஜகோபால். உழைப்பால் உயர்ந்த மனிதர். உணவகத் துறையில்  மிகப் பெரிய வெற்றியாளர்.  ஈடு இணையற்றவர். மிகப் பெரிய ஜாம்பவான்.

அண்ணாச்சி மிக ஏழ்மையான வறிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்.  தூத்துக்குடி  மாவட்டம் புன்னையடி கிராமம் அவரது ஊர். வறுமை காரணமாக ஏழாம் வகுப்போடு  தடைபட்டது அவரது கல்வி

அவரது முதல் வேலை உணவகத்தில் மேஜைகளைத் துடைப்பது.  அங்கு தான் அவர் தேநீர் போடவும் கற்றுக் கொண்டாராம்.  பகலிலே  மேஜைகள் துடைப்பது இரவிலே கட்டாந்தரையில் தூக்கம். அது சில காலம். 

அதன் பின்னர் மளிகைக் கடையில் உதவியாளர் வேலை.சில காலம் அது ஓடியது.  மளிகைக்கடை அனுபவத்தை வைத்து  தனது தந்தை, மைத்துனர் உதவியுடன் சொந்தமாக ஒரு மளிகைக்கடையைத் தொடங்கினார். பெரும் சவால்கள், சங்கடங்கள் எல்லாம் இருந்தன. முதல் முயற்சி என்பதால் சறுக்கல்கள், கிறுக்கல்கள் எல்லாம் இருந்தன. ஆனாலும் இளம் வயது அண்ணாச்சிக்கு தைரியம் மட்டும் அல்ல, தன்னம்பிக்கையும் அதிகம். அனைத்தையும் எதிர்கொண்டு எதிர் நீச்சல் அடித்து அனைத்தையும் முறியடித்தார்.

இந்த நேரத்தில் தனது கடைக்கு வந்த ஒரு விற்பனையாளர் கொடுத்த ஒரு யோசனை தான் உணவகம். அங்கிருந்து தான் தொடங்குகிறது அவரது உணவக சாம்ராஜ்யம் - சரவணபவ சைவ உணவகம்.

இப்போது நாடெங்கிலும்  33  கிளைகள், உலகெங்கிலும் 45 கிளைகளுடன் ஓர் உணவக சாம்ராஜ்யத்தை உருவாக்கியிருக்கிறார் அண்ணாச்சி.  அவரிடம் அசாத்தியமான தன்னம்பிக்கை இருந்தது.  

அவருக்கென சில கோட்பாடுகளை அவர் வைத்திருந்தார், முதலாவது உணவில் தரம். வாடிக்கையாளர்களின் திருப்தி.  உணவகப் பணியாளர்களின் மேம்பாடான வேலைச் சூழல்.  பணியாளர்களுக்கான இருப்பிடம். ஊதிய உயர்வு.  சொந்த ஊர் செல்ல விடுமுறை. நோயுற்ற வேலையாள்களைக் கவனித்தல்,  குழைந்தைகளின் கல்விச் செலவு -  இப்படி பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியவர் அண்ணாச்சி. 

சாப்பாட்டுத் தட்டுகளின் மேல்  வாலை இலையை வைத்துப் பரிமாறும் முறையையும் அண்ணாச்சி தான் அறிமுகப்படுத்தினார்.  இன்றும் அது நடைமுறையில் இருக்கிறது. பணியாளர்களின் பணிச்சுமையைக் குறைப்பதே அதன் நோக்கம்.

அண்ணாச்சி ராஜகோபால் உழைப்பால் உயர்ந்த ஒரு மனிதர். கடும் உழைப்புக்கு ஓர் எடுத்துக்காட்டு. 

சரவணபவன் (சைவ உணவகம்) என்றால் அண்ணாச்சி ராஜகோபால் அவர்களின் ஞாபகம் வரும். வரத்தான் செய்யும்!

Friday 19 July 2019

ஒன்றும் புரியவில்லை..!

நமது நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் உண்டு. 

ஆனால் அது பற்றியெல்லாம் இப்போது மறந்துவிட்டு நாம் என்னன்னவோ செய்து கொண்டிருக்கிறோம்!  அடுத்த பிரதமர் யார் என்பதெல்லாம் முக்கியமானது தான்.  ஆனால் அது மட்டும் தான் இப்போது நம் முன்னே உள்ள பிரச்சனை என்று சிலர் பேசுவதும், சொல்லுவதும் எழுதுவதும் நமக்கே எரிச்சலை ஊட்டுகின்றன.

பிரதமர் பதவி என்பது எப்போதோ  அனைத்துக் கட்சிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பிரச்சனை.  டாக்டர் மகாதிர் பதவி விலகும் போது, அது ஓராண்டு ஈராண்டுகளாக இருக்கலாம் -  அவர் தனது பிரதமர் பதவியை  அன்வாரிடம் ஒப்படைக்க வேண்டும். அவ்வளவு தான்.  அனைத்துக் கட்சிகளாலும் அது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தீர்வு. 

ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பிரச்சனையை மீண்டும் மீண்டும் கிளரிக் கொண்டே இருந்தால் நாட்டில் வேறு பிரச்சனைகளே இல்லையோ என்று நமக்கே தோன்றுகிறது!

நாட்டில் உள்ள பிரச்சனைகளைத் தீர்க்காமல் இப்படி "அடுத்த பிரதமர் யார்?" என்று பேசிக் கொண்டிருந்தால் "இந்த அரசாங்கம் என்ன செய்கிறது?" என்று தான் மக்கள் கேள்விகள் எழுப்பிக் கொண்டிருப்பார்கள்!.

நமக்குத் தெரிந்தவரை அடுத்த பிரதமர் யார் என்னும் பிரச்சனையில்  பின்னணியில் இருப்பவர்கள் அம்னோ - பாஸ் கட்சியினர் தான் என்பது புரிகிறது. அவர்கள் தொடக்கி வைத்தார்கள். இப்போது தொடக்கி வைத்தவன் தொடக்கி வைக்காதவன், வேண்டியவன் வேண்டாதவன்,  புரிந்தவன் புரியாதவன் - இப்படி அனைவருமே பெச ஆரம்பித்து விட்டார்கள்!

பேசுபவர்கள் பெரும்பாலும் அரசியல்வாதிகள் அல்லது அரசியல் சார்புடையவர்கள். இவர்களின் நோக்கமே இந்த அரசாங்கம் தொடர்ந்து ஆட்சியில் இருக்கக் கூடாது என்னும் கொள்கை உடையவர்கள். அதனால் அவர்கள் ஏதோ ஒரு வகையில் "யார் அடுத்த பிரதமர்" என்னும் விவாதத்தை மக்கள் முன் வைத்துக் கொண்டே இருக்கிறார்கள்!  இவர்கள் நோக்கம் என்பதே அரசாங்கத்தை இயங்க முடியாதபடி செய்வது தான். அரசாங்கத்திற்குக் கெட்ட பெயரை ஏற்படுத்துவது தான். வேறோன்றுமில்லை!

ஆனால் இவைகளையெல்லாம் மீறி தான் டாக்டர் மகாதிர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார், அது தான் அவரின் பலம். அவர் நல்லவரோ கெட்டவரோ நமக்குத் தெரியாது. அவர் தனது கடமைகளிலிருந்து தவறவில்லை.  தன்னுடைய அமைச்சர்களையும் கடமைகளிலிருந்து தவற விடவில்லை!

அரசாங்கம் சரியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் விளம்பரம் என்னவோ "யார் அடுத்த பிரதமர்?"  என்கிற விவாதத்திற்கு தான் கிடைக்கிறது!

சீக்கிரம் புரியும்!

Thursday 18 July 2019

கேள்வி - பதில் (107)

கேள்வி

விஜயகுமாரின் மகள் வனிதா தமிழ் மக்களை முட்டாள்கள் என்று சாடியிருக்கிறாரே!

பதில்

உண்மை தான்!  அதனை நாம் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை. 

தமிழ் மக்கள் "பிக் போஸ்" பார்க்கின்ற நிலையில் இல்லை. அவர்களுக்கு நிறையவே பிரச்சனைகள் இருக்கின்றன.  குடிநீர் பிரச்சனை. குடிநீர் பிரச்சனை சென்னையில் உள்ள மக்களுக்கு ஓரளவு தீரலாம். இரயில் மூலம் தண்ணீர் வருகின்ற நிலைக்குத் திராவிடக்கட்சிகள் ஒரு நிலையை உருவாக்கிவிட்டன! கிராமங்களில் உள்ளவர்களுக்கு எந்த ஒரு தீர்வும் ஏற்படவில்லை. ஆக, தண்ணிர்ப் பிரச்சனை அப்படியே தான் இருக்கிறது! இப்படி ஒரு நிலையில் எந்தத் தமிழன் "பிக் போஸ்" நிகழ்ச்சியைப்  பார்க்கப் போகிறான்? 

தமிழ் நாட்டில் பல மாவட்டங்களில்  விவசாய நிலங்கள் அபகரிக்கப் படுகின்றன. நாட்டுக்கு வளர்ச்சியைக் கொண்டு வருகிறோம் என்று சொல்லி மக்களின் விவசாய நிலங்களை பணக்கார நிறுவனங்கள் ஏழை மக்களின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு விவசாயப் பெருமக்களும் அழுது கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் எந்தத் தமிழன் "பிக் பாஸ்"  நிக்ழ்ச்சியைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறான்?

இன்னும் பல பிரச்சனைகள் உள்ளன.   அதில் கல்வி பிரச்சனையும் ஒன்று. நடிகர் சூரிய தனது கருத்தைச் சொல்லப் போக அதனை ஆளும் அரசியல்வாதிகள் - அ,தி.மு.க., பா.ஜ.க. - வினர் நடிகர் சூரியாவை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.  தமிழக மக்களே நடிகர் சூரியாவை ஆதரித்துக் கொண்டிருக்கும் போது  இந்தத் தமிழ் நாட்டுத் துரோகிகள் கல்வி கொள்கையை ஆதரிக்கின்றனர்! இப்படி தமிழ் நாடே கொந்தளிக்கும் போது "பிக் போஸ்" நிக்ழ்ச்சியை எந்தத் தமிழன் பார்த்துக் கொண்டிருக்கிறான்.  ஒரு கருத்தைச் சரியாக பதிவு செய்திருக்கிறார் சூரியா. "குடிக்க ஆளில்லை என்று எந்த டாஸ்மார்க் சாராயக் கடையும் மூடப்படவில்லை.  ஆனால் படிக்க மாணவர் இல்லை என்று ஆயிரக்கணக்கான பள்ளிகள் மூடப்படுகின்றன. இது என்ன நியாயம்!" 

ஆக, தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. தமிழர்களுக்கு "பிக் போஸ்" பார்க்க நேரமுமில்லை, தேவையுமில்லை!

இப்படித்தான் எவனோ செய்கின்ற தவறுகளுக்கு வனிதா விஜயகுமார் தமிழர்களைச் சாடுகிறார்.

அவர் பிரச்சனையை அவரால் தீர்த்துக் கொள்ள முடியவில்லை என்றால் அதற்குத் தமிழன் என்ன செய்வான்?

மாயமாய் மறைந்த செடிக் மான்யம்..!

செடிக் பற்றியான செய்திகளை வைத்துக் கொண்டு இப்போது நாடும் பூராவும் அலறல் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது!

ஆனால் இந்தச் சத்தம் எல்லாம்  ஏற்கனவே கேட்கப்பட்ட சத்தங்கள் தான். ஒன்றும் புதிதல்ல!  ஒரு வித்தியாசம். அப்போது யார் திருடர்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.  இனி அதெல்லாம் வெளிச்சத்திற்கு வரும்.

பொதுவாக ஆளுங்கட்சியைச் சேர்ந்த திருடர்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவது என்பது எளிதல்ல. இப்போது இவர்கள் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் ஒரு வேளை நமக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கலாம்!  பெரிய, மகாப்பெரிய திருடர்களைத் தெரிந்து கொள்ளுவதில் யாருக்குத் தான் ஆர்வம் இருக்காது!  ஏற்கனவே இவர்களைப் பெற்றவர்கள் "சான்றோன்" எனக் காது குளிர கேட்டுவிட்டார்கள்! இப்போது  நம்முடைய நேரம்!

இந்த நேரத்தில் மனதில் ஒரு சிறிய வருத்தம்.  இந்த செடிக் விவாகாரத்தில் கல்வியாளர் பேராசிரியர் ராஜேந்திரன்  பெயரும் அடிபடும் போது நமக்கு வருத்தமாகவே இருக்கிறது.  ராஜேந்திரன் ஒரு கல்வியாளர்.  அவர் இந்த அரசியல் கூட்டத்தோடு சேர்ந்து கொண்டு அவரும் சேர்ந்து பொய்ச் சொல்ல வேண்டிய ஒரு சூழல் ஏற்பாட்டிருப்பது நமக்கும் வேதனையைத் தருகிறது.

ராஜேந்திரன் நல்ல மனிதர் என்று பெயர் எடுத்தவர். அவருக்கு நல்ல பெயர் இருந்தது. அவர் இருந்தால் சமுதாயத்திற்கு நல்லது நடக்கும் என மக்கள் நம்பினர். ஒரு கல்வியாளர் என்கிற அடையாளம் சமுதாயத்தில் அவருக்கு நல்ல பெயரைக் கொண்டு வந்தது. கடைசியாக அவர் இந்த ம.இ.கா. கழிசடையர்களிடம் போய் மாட்டிக் கொண்டார்! அது திருட்டுக் கூட்டம் எனத் தெரிந்தும் அவர்களின் வலையில் போய்ச் சிக்கிக் கொண்டார். அவர் ஜாதகம் அப்ப்டி என்றால் யார் என்ன செய்ய முடியும்?

இப்போது நாம் நம்பியிருப்பதெல்லாம் ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் லத்திபா கோயா வைத்தான்.  இவரை நாம் நம்புகிறோம்.  அவரைத் தான் நாம் நம்புகிறோம். நமக்கும் தெரியும். இதில் எத்தனை பேர்  மருத்துவமனையில் படுத்திருப்பார்கள், எத்தனை பேர் வேளிநாடுகளுக்கு நடையைக் கட்டுவார்கள் என்பதையெல்லாம் ஓரளவு நம்மால் ஊகித்து அறியலாம்!

இவ்வளவு காலம் சட்டத்தை இருட்டறையில் போட்டு அடைத்து வைத்திருந்தார்கள்! இப்போது தான் சட்டம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. 

ம.இ.கா. இந்தியர்களைக் காப்பாற்றும் என்பதெல்லாம் வெறும் பேச்சு. லத்திபா கோயா தான் இந்தியர்களைக் காப்பாற்ற வேண்டும்!

Tuesday 16 July 2019

இன்னொரு அரசியல் கட்சியா!

புதியதோர் அரசியல் கட்சி இந்தியர்களுக்காக   உதயமாகியிருக்கிறது! வாழ்த்துகள்! 

அரசியல் கட்சிகள் ஆரம்பிப்பது என்பது சும்மா ஒரு பொழுது போக்காக ஆகி விட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது!

புதிய அரசாங்கம் அமைந்த பிறகு இதற்கு முன்னர் ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்கப்பட்டு  தோல்விகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது என நம்புகிறேன்!   அரசியல் கட்சிகள் மட்டும் அல்ல இன்னும் பல இந்தியர் சார்ந்த இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.  அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கப்பட்டதின் நோக்கம் தேர்தல் காலங்களில் தங்களுக்கு ஏதேனும் போட்டியிட ஒரு வாய்ப்புக் கிடைக்காதா என்னும் சிறிய ஆசை! சரி அது இல்லாவிட்டாலும் ஒரு செனட்டர் வாய்ப்பாவது கிடைக்கதா என்னும் நப்பாசை!  கட்சி என்று ஒன்று இருந்தால்  பேரம் பேசுவதற்கு ஒரு வாய்ப்புக் கிடைக்கும்.  தனி ஆளாக இருந்தால்  அலட்சியப்படுத்தப் படுவோம் என்று நமது "தலைவர்கள்"  புரிந்து வைத்திருக்கிறார்கள்!

புதிய அரசாங்கம் அமைந்த பிறகு இந்தியர்களுக்குச் சேவை செய்ய பலர் முன் வ்ந்து விட்டனர். இதில் பலர் முன்னாள் திருடர்கள்!  எந்தச் சூழ்நிலையிலும் இவர்களால் "கை" வைக்காமல் இருக்க முடியாது! கை அரித்துக் கொண்டே இருக்கும்! அது அவர்களின் பிறவி குணம்!  இழிந்தவர்களின் இயல்பு அப்படித்தான் இருக்கும்!

இப்போது புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்திருப்பவர் வேறு யாருமல்ல நமது துணை அமைச்சர் பொன் வேதமூர்த்தி அவர்கள் தான்.  அவரைக் குறை சொல்லுவதற்கோ, சந்தேகப்படுவதற்கோ ஒன்றுமில்லை. அவரின் சேவையை நாடறியும்.  நாடறிந்த ஒரு போராட்ட வாதி. இந்தியர் சார்ந்த பிரச்சனைகளில் முன் நிற்பவர்.

அவருடைய கட்சியின் பெயர் "மலேசிய முன்னேற்றக் கட்சி" என்பதாகும். அதனை ம.மு.க. என்று சொன்னால்  அது மக்கள் முற்போக்குக் கட்சி என்பதை ஞாபகப்படுத்தும். அது எந்த வகையில் மக்களை ஈர்க்கும் என்று சொல்லுவது கடினம். ஹின்ராப் என்பது அவரது சின்னம் என்று சொல்லலாம்.  அவரின் செல்வாக்கு என்று சொல்லலாம். ஹின்ராஃபையும், வேதமூர்த்தியையும் பிரிக்க முடியாத ஒரு பந்தம் உண்டு. அதனைப் பிரிந்து ம.மு.க. செல்வாக்குப் பெறுமா என்பது கேள்விக்குறியே!

அவரின் நோக்கம் நமக்குப் புரியவில்லை. அவருக்கு அமைச்சர் பதவி போனால் ம.மு.க. நிலைத்து நிற்குமா என்பது நமக்கும் இயல்பாக  கேள்வி எழுகிறது. தனக்கென்று ஒரு கட்சி இருந்தால்  தன்னுடைய அமைச்சர் வாழ்க்கைத் தொடரும் என்று அவர் நினைக்கிறரோ, தெரியவில்லை! 

எல்லாவற்றுக்கும் மேலாக  அவரின் சேவை மட்டுமே தான் கணக்கில் எடுக்கப்படும் என்பதை அவர் புரிந்து கொண்டால் சரி!

Monday 15 July 2019

தன்னிகரற்ற தலைவன்..!

தமிழர்களின்  தன்னிகரற்ற அரசியல் தலைவன் என்றால் யாரைச் சொல்லுவது? அது காமராஜர் என்கிற மாபெரும் தலைவனைத்  தவிர வேறு யாராக இருக்க முடியும்?

அவரின் பிறந்த நாள் இன்று (15.7.2019).  இன்று தமிழ் நாட்டில் "நாங்கள் காமராஜர் ஆட்சியைக் கொண்டு வருவோம்!" என்று  அனைத்துக் கட்சியினராலும் ஏகோபித்தக் குரலில் உச்சரிக்கப்படும் பெயர் காமராஜர்.

இன்றைய அரசியல் தலைவர்கள் ஒன்றில் மட்டும் அவரிடமிருந்து வித்தியாசப்படுவர். பணம் மட்டுந்தான் என்கிறார்கள் இன்றைய அரசியல் தலைவர்கள். அவரோ பணம் மக்களிடம் தான் போய்ச் சேர வேண்டும் அரசியல்வாதிகளுக்கல்ல என்பது தான் அவரின் கொள்கை!

காமராஜரின் கொள்கைகள் மிகவும் சாதாரணமானவை. மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும். குடிமக்கள் அனவருக்கும் தரமான வாழ்க்கை அமைய வேண்டும். பிள்ளைகள் அனைவருக்கும் தரமான கல்வியைக் கொடுக்க வேண்டும். படித்தவர் மாநிலமாக தமிழ் நாடு மாற வேண்டும்.  ஏழைப் பிள்ளைகளுக்கு மதிய உணவு கொடுத்தால் அவர்கள் பள்ளிக்கு வருவார்கள் என்பன போன்ற கொள்கைகளை மனதில் கொண்டு காரியம்

அரசியல்வாதிகளில் தமிழ் நாட்டில் எத்தனை ஏரிகள், குட்டைகள், பாலங்கள் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் - இவைகள் அனைத்தையும் அறிந்து வைத்திருந்தவர் காமராஜர் மட்டுமே!  அவருக்குத் தெரிந்த அளவுக்கு வேறு எந்த அரசியல்வாதியும் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் காட்டவில்லை! 

காமராஜர் எல்லாக் காலங்களிலும் களத்தில் நின்றவர்.   தனது கருத்துகளை அவர் சொல்லுவதில்லை.   உத்தரவு கொடுப்பதெல்லாம் அவர் பாணியல்ல.  பிரச்சனைகள் என்றால் உடனே அதனைத் தீர்க்க வேண்டும்.  தள்ளிப்போடும் பழக்கம் இல்லை. 

எப்போதும் அவர் தன்னை புரிந்து வைத்திருக்கிறார். தான் ஓர் அரசியல்வாதி என்பதை அவர் மறக்கவில்லை.  தனது வேலை,  மக்களுக்குச் சேவை செய்வது  மட்டுமே என்பதை அவர் அறிந்து வைத்திருக்கிறார். மக்களுக்குச் சேவை என்பது தான் அரசியல்.

அவரது சேவையால் மட்டுமே அவர் என்றென்றும் மக்கள் மனதில் நிற்கிறார்.   எழுத்தாற்றலோ, பேச்சாற்றலோ எதுவும் இல்லை! மக்களுக்கு என்ன தேவை என்று ஓடி ஓடி தெரிந்து கொண்டு வேலை செய்தவர். அதனால் தான் இன்று எல்லா அரசியல்வாதிகளாலும் போற்றப்படும் மாபெரும் அரசியல்வாதியாகத் திகழ்கிறார்.

இன்னும் பல ஆண்டுகள் அவர் பெயர் நம் மனதில் நிற்கும்!

என்ன தண்டனை கொடுக்கலாம்?

மூன்று இந்தியத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக செம்பனைத் தோட்ட மொன்றில் வேலை வாங்கப்பட்டிருக்கின்றனர்.

இந்தியத் தொழிலாளர்களை இப்படி கொத்தடிமைகளாக நடத்தப்படுவது என்பது நமது நாட்டில் ஒன்றும் புதிது அல்ல.  சமீபத்தில் தான் உணவகம் ஒன்றில் வேலை செய்த தொழிலாளர்களுக்குச் சம்பளம் தரவில்லை, அடித்து நொறுக்கப்பட்டனர் என்பதாக செய்தி ஒன்று வெளியாகியது.

இன்னும் பலர் இதுபோன்ற  கொத்தடிமைகள் நாடளவில் இருக்கத்தான் செய்வர்.  நாட்டில் கடுமையான சட்டதிட்டங்கள் இல்லையென்றால் இது நடக்கத்தான் செய்யும்!  அதுவும் முன்னால் அரசாங்கத்தில்  திருட்டு முதலாளிகள வெற்றிகரமாக தங்களது 'தொழிலைச்' செய்து வந்தனர்! அவர்களுக்குப் போதுமான பாதுகாப்புகள் வழங்கப்பட்டன.

ஆனால் அவர்களுக்கு இன்னும்  நல்ல  நேரம் நடந்து  கொண்டு தான் இருக்கிறது என்பதைத் தான்  மேற் கூறிய  சம்பவங்கள் மெய்ப்பிக்கின்றன. காரணம் திருட்டு முதலாளிகள் இன்னும் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர்!

வெளி நாடுகளிலிலிருந்து  தொழிலாளர்களை வரவழைத்து விமான நிலையத்திலேயே அவர்களுடைய  கடப்பிதழ்களைப் பறிமுதல் செய்வதும், அவர்களுடைய கைப்பேசிகளை வாங்கி வைத்துக் கொள்ளுவதும் அவர்கள்  வெளியே தொடர்பு கொள்ள முடியாதபடி செய்வதும் - இது என்ன நாடா அல்லது காடா?  காட்டாட்சியா இங்கு நடக்கிறது?

அது சரி  இது போன்ற திருடர்களுக்கு என்ன தண்டனைக் கொடுக்கப்படுகிறது?  தெரியவில்லை! நமக்குத் தெரிந்தவரை அவர்கள் கொஞ்ச நாள்களில் வெளியே வந்துவிடுவார்கள்!  அதைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இல்லாவிட்டால் இது போன்ற  'தொழில்கள்' எப்படி வளர்ந்து கொண்டே போகும்?

இது போன்ற நபர்களுக்குக் கடும் தண்டனைக் கொடுத்தால் ஒழிய இந்த கொத்தடிமை சம்பவங்கள்  தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். கொத்தடிமை என்பது காட்டில் மட்டும் அல்ல நாட்டிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.  உணவகங்களில் நடப்பது என்ன அதுவும் கொத்தடிமை தான்!

குறைந்தபட்சம் இந்தத்  தவறுகளைச்  செய்பவர்களுக்குப் பத்து ஆண்டுகளாவது சிறைத் தண்டனைக் கொடுக்கப்பட வேண்டும். சிங்கப்பூரைப் போன்று கடும் தண்டனை தான் இதற்கான தீர்வாக இருக்க முடியும். 

இவர்களுக்குச் சரியான தண்டனை இல்லாததால் தான் இவர்களுடைய தொழிலும் வளர்ந்து கொண்டு இருக்கிறது! அதற்கு அரசாங்க ஆதரவு இருப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தையும் ஏற்படுத்துகிறது!

அரசாங்கம் தான் இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இன்னும் இது போன்று கயவர்களால் சீரழிந்து கொண்டிருக்கும் கொத்தடிமைகளுக்காக  இறைவனை வேண்டுவோம்>

Sunday 14 July 2019

மூன்று ஆண்டுகள் என்பது சரிதான்!

நாம் என்ன சொல்லுகிறோமோ அதனைத் தான் ஜ.செ.க. தலைவர் லிம் கிட் சியாங்கும் கூறுகிறார்.

ஆமாம் நாட்டின் சீர்கேடுகளைக் களைந்து நாட்டை சீரான நிலைக்குக் கொண்டு வர பிரதமர் மகாதிருக்கு மூன்று ஆண்டுகள் பிடிக்கலாம். எதனையும் அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. காரணம் முன்னாள் பிரதமர் நஜிப்பின்  திருவிளையாடுகள் - திருட்டுத்தனங்கள் அனத்தையும் குறுகிய காலத்தில் சீர் செய்வது என்பது அவ்வளவு எளிதல்ல!  நாட்டையே அழிவு பாதைக்கு இட்டுச் சென்றவர் நஜிப்.  சீர் செய்வது என்பது ஒர் இமாலய முயற்சி.  அது தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.  நாடு மீண்டும் வளர்ச்சியை நோக்கிச் செல்லும் என தைரியமாகச் சொல்லலாம்.

ஆனால் இதற்கும் பிரதமர் பதவியை அன்வாரிடம் ஒப்படைப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  இரண்டையும் போட்டுக்  குழப்ப வேண்டிய அவசியமுமில்லை.

ஒரு சிலர், பிரதமர் மகாதிரின் மகன், முக்ரிஸ் மகாதிர் உட்பட தேவையற்ற பிரச்சனைகளைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கின்றனர்.    அரசியலில் வேண்டியவர், வேண்டாதவர் என்பதெல்லாம் மிகவும் சாதாரணம்.  ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு ஒப்பந்தத்தை "அப்படி ஒன்று இல்லவே இல்லை!"  என்று பேசுவதை ஏற்றுக்கொள்ள இயலாது.

பேசப்பட்ட ஒப்பந்தம் மதிக்கப்பட வேண்டும். மரியாதைக் கொடுக்கப்பட வேண்டும்.   அடுத்த பிரதமர் அன்வார் என்பது பொதுத் தேர்தலின் போது  கொடுக்கப்பட்ட வாக்குறுதி.  எழுத்துப் பூர்வமாக ஒன்றும் இல்லை என்று பேசுவது சிறுபிள்ளைத்தனம்.  இப்போது  எழுத்துப் பூர்வமாக ஒன்றுமில்லை என்று பேசுபவர்கள் ஏன் அன்றே அதனை எழுத்துப் பூர்வாமக செய்திருக்கலாமே! 

இதுவெல்லாம் அறிவற்றவர்களின் பேச்சு என்பதாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.  இப்படிப் பேசுபவர்கள் டாக்டர் மகாதிரை அவமதிக்கின்றனர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர் தனது வாக்குறுதியைக் கொடுத்திருக்கிறார். தனது பதவியை அன்வாரிடம் தான் ஒப்படைப்பேன் என்று அன்றே அவர் கூறியிருக்கிறார். அப்போது பத்திரிக்கைகள், ஊடகங்கள் அனைத்தும் இரண்டு ஆண்டுகள் என்பதாகப் பிரமாதப்படுத்தின!.

இப்போதோ எந்த ஒப்பந்தமும் இல்லை, அப்படிப் பேசவும் இல்லை என்பது போல் பேசுவது கிறுக்குத்தனம் என்பதைத் தவிர வேறு என்ன சொல்லுவது? நாட்டை சீர்படுத்த இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகள் பிடிக்கலாம் அதுவரை பொறுத்திருங்கள் என்று  சொல்லுவது வேறு!  ஆனால் முக்ரிஸ் போன்றவர்களின் பேச்சு தேவை இல்லாதது!

லிம் கிட் சியாங் சொல்லுவது சரிதான்!

"வேண்டாம்" என்பதும் ஒரு பெயரா..?

தமிழர்களிடையே  எத்தனையோ  ஆச்சரியப்படத்தக்க சம்பவங்கள், நம்பிக்கைகள் காலங்காலமாக நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

ஒரு சில விஷயங்கள் நாம் கேள்விப்படாத ஒன்றாக இருக்கலாம்.  ஆமாம் நாம் நவீனத்திற்குப் போய்விட்டோம் என்று நினைத்துக்  கொண்டிருக்கிறோம். பார்க்கப் போனால் ஒரு மண்ணுமில்லை!  அந்த நம்பிக்கைகள் பொய்த்துப் போய் விட்டதாகவும் சொல்ல முடியவில்லை.

தமிழ் நாட்டில்,  திருத்தணி அருகே உள்ளே நாராயணபுரம் என்னும் கிராமத்தில் உள்ளவர்களிடையே ஒரு விசித்திரமான பழக்கம் உண்டு.

தொடர்ந்தாற் போல பெண் குழைந்தை பிறந்து "இனி பெண் குழைந்தை வேண்டாம்" என்று பெற்றோர்கள் முடிவு செய்தால் பிறந்த அந்தக் கடைசிக் குழைந்தைக்கு "வேண்டாம்"  என்று பெயர் வைப்பார்களாம்! அதாவது அதன் பின்னர் அவர்களுக்கு ஆண் குழைந்தை தான் பிறக்குமாம்!  அது தான் அவர்களின் நம்பிக்கை! நம்மால் இதை நம்ப முடிகிறதா? இதில்  ஏதும்  விஞ்ஞானம் இருக்கிறதா?  அறிவியில் இருக்கிறதா?  ஒன்றுமில்லை!  ஆனால் அது நடக்கிறதே! என்ன சொல்ல?


 அந்தக் கிராமத்தில் ஏகப்பட்ட "வேண்டாம்" என்னும் பெயரில் பெண் பிள்ளைகள் இருக்கிறார்களாம்!   அதனால் அவர்கள் மாணவ, மாணவியரிடம் கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாவதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.

இப்போது ஒரு செய்தி கிடைத்திருக்கிறது. பெற்றோர்களால் வேண்டாம் என்று புறக்கணிக்கப்பட்ட ஒரு மாணவி "இனி பெண் குழந்தை வேண்டாம்" என்று சொன்னாலும்  அந்தப் பிறந்த குழந்தைக்கு அவர்கள் கல்வியைக் கொடுக்கத் தயங்கவில்லை.  இப்போது சென்னை அருகே  உள்ள ஒரு இஞ்ஞினியரிங்  கல்லூரியில் மூன்றாம் ஆண்டில் படிக்கும் அந்த மாணவி சமீபத்தில் நடைபெற்ற கல்லூரி நேர்காணலில்  ஒரு ஜப்பான் நிறுவனத்தால் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.  அடுத்த ஆண்டு அவர் கல்வி முடிவடைகிறது. கல்வி முடிவடைந்ததும் அந்த ஜப்பான் நிறுவனத்தில் வேலை செய்ய  அவருக்கு ஆண்டுக்கு 23 இலட்சம் ரூபாய் சம்பளத்தில் அந்த நிறுவனம் ஒப்பந்தம் செய்திருக்கிறது.

தனது பெயரை மாற்ற வேண்டும் என்று நினைத்தவர் இனி தனது பெயரை மாற்றப் போவதில்லை என்று முடிவு எடுத்திருக்கிறார்,  "அது அப்படியே இருக்கட்டும்" என்கிறார்.  பெற்றோர்கள் இனி இது போன்ற பெயர்களை வைக்க வேண்டாம் என்பது தான் அவரின் வேண்டுகோள்.

இனி அந்த கிராமத்தில் இது போன்ற பெயர்கள் எடுபடாது என நம்புவோம்!

Friday 12 July 2019

இது சரியான அணுகுமுறையல்ல!

நமது நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பது ஒன்றும் இரகசியமல்ல.  பதினான்காவது பொதுத் தேர்தலின் போது எல்லாக் கட்சியினராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட வாய்மொழி ஒப்பந்தம் அடுத்த பிரதமர் அன்வார் இப்ராகிம் என்பது.

ஆனாலும் அது பற்றி தேவையற்ற பேச்சுக்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இதனைத் தொடர்பவர்கள் யார்?  இன்றைய பிரதமர் டாக்டர் மகாதிரின் ஆதரவாளர்கள் அல்லது  அவரைச் சுற்றி இருக்கும் அவரது கட்சியினர்.

கடைசியாக இந்த அவசியமற்ற ஒரு கருத்தினை  கெடா மந்திரி பெசார்  முக்ரிஸ் மகாதிர் வெளியிட்டிருக்கிறார். அது தேவையற்ற ஒரு பேச்சு. அன்வார் இப்ராகிம் ஏதோ பதவிக்கு அலைபவர் போல ஒரு கருத்தினை உதித்திருக்கிறார்.

முக்ரிஸ் போன்றவர்கள்  பேசாமலிருந்தாலே அது கட்சிக்கும் நல்லது. நாட்டுக்கும் நல்லது.  அவர் பேசுவது மற்றவர்களால் அதனை மகாதிரின் கருத்தாகவே  ஏற்றுக்கொள்ளக் கூடும்  என்பதை அவர் அறியாதவரா? ஆமாம், தந்தையின் கருத்தைத் தான் மகன் பிரதிபலிக்கின்றார்  என்று தானே பொருள் கொள்ளப்படும். அப்படித் தானே  மக்கள் நினைப்பர்? அப்படித்தான் நினைக்க வேண்டும் என்று முக்ரிஸ் நினைக்கிறாரா? 

அடுத்த பிரதமர் யார் என்று பேச்சு எழும்போது முக்ரிஸ்  ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்.  அவரது தந்தை  பிரதமர் டாக்டர் மகாதிர்  மீண்டும் மீண்டும் ஒன்றை நினைவுறுத்துகின்றார்.  "நேரம் வரும் போது பிரதமர் பதவியை  அன்வார் இப்ராகிடம் ஒப்படைப்பேன்" என்று பலமுறை  அவர் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறர். அது வீட்டின் அடுக்களையில் சொல்லப்பட்ட வார்த்தைகள் அல்ல!  பொது மக்களுக்குச் சொல்லப்பட்ட வார்த்தைகள் என்பதை முக்ரிஸ் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு வேளை அது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் பிடிக்கலாம்.  அது ஏன் நீட்டப்படுகிறது  என்றால்  நாட்டின் நிதி நிலைமை படு மோசமாக இருக்கும் போது அவர் அங்கிருந்து தப்பிக்க நினைக்கவில்லை! அதனை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.  நாட்டை நல்ல சூழலில் ஒப்படைக்க வேண்டும் என அவர் நினைக்கிறார்.

மகாதிர் பொறுப்பற்ற மனிதர் அல்ல. அதுவும் வயதான நிலையில் இன்னும் பொறுப்புள்ள மனிதராகவே அவர் நடந்து கொள்ளுவார். 

முக்ரிஸ் போன்றவர்கள் அன்வாரை விரும்பால் இருக்கலாம். ஏன், சென்ற பொதுத் தேர்தலின் போது  டாக்டர் மகாதீரை  எத்தனை பேர் விரும்பினார்கள்?   மலாய் இனத்தவரைத் தவிர்த்து மற்ற இனத்தவர் அவருக்கு எதிராகத் தான் இருந்தார்கள்.  ஆனாலும் நஜிப் செய்த தவறுகளினால் டாக்டர் மகாதிரை மக்கள் ஆதரித்தார்கள்.  அதே போல இப்போதும் மகாதிரை விட அன்வாரே சிறந்த பிரதமராக வருவார் என்னும் நம்பிக்கை மக்களிடம் இருக்கிறது.

அதனால் அன்வார் மீதான் தாக்குதலை முக்ரிஸ் போன்றவர்கள் கைவிட வேண்டும். உங்களால் பிரதமராக ஆக முடியாது என்பது எப்படி உண்மையோ அதே போல அன்வார் பிரதமராக வருவார் என்பதும் உண்மை.

முக்ரிஸ் உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளுங்கள்!                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  

Thursday 11 July 2019

அங்கீகாரம் உண்டா?

தமிழ்ப்பள்ளி மாணவர்களின் அறிவியல் சாதனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.  உலகளவிலும்  சரி  நாடளவிலும் சரி  பல வெற்றிகள், பல தங்கப்பதக்கங்கள், இரண்டாம், மூன்றாம்  பரிசுகள் என்று அவர்களின் சாதனைகள் படர்ந்து விரிந்து கொண்டே இருக்கின்றன. 

நாம் அவர்களை வாழ்த்துகிறோம். இன்னும் பல சாதனைகள் புரிய இறைவனை வேண்டுகிறோம். .

ஆனால் இந்த நேரத்தில் ஒரு கேள்வி.  நாம் இவர்களின் சாதனைகளைப் பார்த்து பெருமை அடைகிறோம்.  நமது பிள்ளைகள் செய்கின்ற சாதனைகளைப் பார்க்கின்ற போது நமக்கு மகிழ்ச்சியே. 

இந்தப் பெருமை, மகிழ்ச்சி என்பதெல்லாம் நமக்குள்ளேயே முடங்கி விடுகிறதா அல்லது உரியவர்களிடம் போய்ச் சேருகிறதா என்பதையும் நாம் யோசித்துப் பார்க்க வேண்டியுள்ளது. உரியவர்கள் என்கின்ற போது நாம் கல்வி அமைச்சைத்  தான் சொல்லுகிறோம். அல்லது கல்வி அமைச்சரோ, துணைக்கல்வி அமைச்சரோ - இவர்களைத்தான் நாம் உரியவர்கள் என்கிறோம். 

கல்வி அமைச்சின் அங்கீகாரம் இல்லாத வரை இந்தப் பெருமைகள்  அனைத்தும் நமக்குள்ளேயே வைத்துக் கொண்டு சிரித்து மகிழ்ந்து கொள்ள வேண்டியது தான்.  இந்தப் பெருமைகள் எல்லாம் பாடப் புத்தகங்களில் வர வேண்டும். இவைகளெல்லாம் நமது பிள்ளைகள் - நமது தமிழ்ப்பள்ளி பிள்ளைகள் சாதித்தவை - என்பது அனைத்து இன மாணவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும். அறிந்து கொள்ள வேண்டும். குறைந்த வசதிகளை வைத்துக் கொண்டு நமது ஆசிரியர்கள் எந்த அளவுக்கு உற்சாகத்தோடு பணி புரிகிறார்கள் என்பதை தேசிய பள்ளி  ஆசிரியர்கள் உணர வேண்டும்.  இருக்கின்ற பள்ளிகளில் தேசியப் பள்ளிகள் தான் தரமற்ற கல்விக்கூடங்களாக  மாறி விட்டன என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

 தமிழ்ப்பள்ளிகள் தங்கப் பதக்கங்கள் பெற்றால் நமது தலைவர்களில் ஒருவரை அழைத்து அந்த மாணவர்களைக் கௌரவப்படுத்துவது  என்பது அந்தக் காலத்தில் ம.இ.கா. செய்த வேலை.  இப்போது நமக்கு அது வேண்டாம்.   நமக்குக் கல்வி அமைச்சரோ, துணைக்கல்வி அமைச்சரோ நமது  மாணவர்களைக் கௌரவப்படுத்த வேண்டும்.  அது தான் உரிய அங்கீகாரம்.  அது செய்திகளில் வரும்.  பாடப் புத்தகங்களிலும் வெளிவர உதவியாக இருக்கும். நமக்குள்ளேயே கும்மி அடித்துக் கொண்டிருப்பதில் பயனில்லை!

இன்றைய நிலையில் எந்த அளவுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது என்று நான் அறியவில்லை.  பத்திரிக்கைச் செய்திகளோடு சரி. வேறு அங்கீகாரம் உண்டா  என்று தெரியவில்லை.

உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!

கேள்வி - பதில் (106)

கேள்:வி

இயக்குனர் கௌதமனின்  "பிக் போஸ்"  பற்றியான கருத்து சரியானது தானா?

பதில்

சரியானது என்பதாகவே  நான் ஏற்றுக் கொள்ளுகிறேன். இப்போது அந்நிகழ்ச்சி  மூன்றாவது பருவத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது.  முதலாவதாக ஆரம்பிக்கப்பட்ட  நிகழ்ச்சியிலிருந்தே நான் அதனை பார்க்கவில்லை.  முதலாவது பருவத்தில் கிடைத்த வெற்றி இரண்டாவது பருவத்தில் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.  அதனால் இந்தப் பருவத்தில் மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக அதிகக்  கவர்ச்சியைப் பயன்படுத்துகிறார்கள்.  அப்படி என்றால் அது சினிமா என்று தானே எடுத்துக் கொள்ள வேண்டும். வேறு என்ன சொல்ல!

இப்போது கௌதமன் சொன்ன கருத்தை முழுமையாக  ஆதரிக்கிறேன்.   அது ஒரு சினிமா நிகழ்ச்சி என்பதாகவே  முதலில் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.  ஒரு சினிமாவுக்கு என்ன என்ன தேவையோ  அவை அனைத்தும் அதில் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது. 

அந்த நிகழ்ச்சியில்  இடம் பெறும் ஆடை அலங்காரங்களைத் தான் அந்த நடிகர்கள் வீட்டிலும்  பயன் படுத்துகிறார்களா என்பது நல்ல கேள்வி!  வீட்டில் பயன்படுத்த முடியாத  உடைகளை நிகழ்ச்சியில் பயன்படுத்துகிறார்கள்  என்றால்  அது சினிமா தானே!

இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்துவதன் மூலம்  கமலஹாசன்  சாதிக்கப் போவது என்ன?   வருங்காலங்களில் அரசியலில் பெரிய ஆளாக வர வேண்டும்  என்று  கனவு காணும் கமல் இப்படியெல்லாம் நிகழ்ச்சிகளை நடத்தி  அவர் எப்படி அரசியலில்  பெயர் போடப் போகிறார்? இது போன்ற  நிகழ்ச்சிகள்  அவருக்கு எந்த அளவில் அரசியலுக்கு உதவும்?

இன்றைய தமிழக அரசியல்வாதிகள் தமிழர்களைக் குழி தோண்டி புதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  எல்லா இடங்களிலும் சாராயக் கடைகளைத் திறந்து  தமிழனைத் தலை நிமிராமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளுகிறார்கள்!  இப்போது கமலும்  தமிழக அரசியல்வதிகளோடு சேர்ந்து ஆபாசத்தை  மக்களிடையே விதைத்துக் கொண்டிருக்கிறார்!   அப்படி என்றால் என்ன அர்த்தம்?   தமிழர்கள் எல்லாக் காலங்களிலும்  அடிமைகளாகவே வாழ வேண்டும்  என்கிற நோக்கம் கமலுக்கும் உண்டு 

கமல் சினிமா நடிகனாகவே இருந்தால்  "இது தான் ஒரு கூத்தாடியின் நோக்கம்" என்று விட்டுவிடலாம்.  ஆனால் தன்னை ஓர் அரசியல் தலைவன் என்று  பிரகனப்படுத்தும் கமல் மக்களுக்கு ஏற்கக் கூடாத  ஒன்றை வலிந்து திணித்து வருகிறார்

இயக்குநர் கௌதமன்  சொல்லுவது சரிதான்.  கமலை எப்படி ஓர் அரசியல் தலைவராக பார்ப்பது?

Wednesday 10 July 2019

எலி பிரியாணியா..?

பினாங்கு, ஜோர்ஜ் டவுனில் மிகப் பிரபலமான பிரியாணி உணவகம்.  சுற்றுப் பயணிகளிடையே மிகவும் பிரசித்திப் பெற்ற  ஓர் உணவகம்.

அது ஓர் இந்தியர் (மாமாக்) உணவகமாகத்தான் இருக்க வேண்டும். வேறு இனத்தவர் யாரும் மாமாக்களுடன் போட்டிப்போடப் போவதில்லை. இதை நாம் அறிந்தது தான்.  இதெல்லாம் நல்ல செய்திகள் தான். நம் இனத்தவரின் வெற்றி நமது வெற்றியாகத்தான் தான் நாம் பார்க்க வேண்டும்.

ஆனால் அங்கிருந்து வரும் கெட்ட செய்திகளைப் பார்க்கும் போது நமக்கு அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.  மனம் ஒப்பவில்லை.  சமயலறையில் எலிகளின் எச்சம்!  இறந்து போன பல்லிகள்!  ஏன் இறந்து போன எலிகள் கூட இருக்கலாம். அதிசயம் ஒன்றுமில்லை. இதனை எல்லாம் தெரிந்த பிறகு எப்படி இது போன்ற உணவகங்களுக்கு வாடிக்கையாளர்களாக இருக்க முடியும்? 

நாம் அந்தக்  குறிப்பிட்ட உணவகத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை. நாட்டில் பல பிரபல உணவகங்கள் இருக்கின்றன. பிரபல உணவகங்கள், அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட உணவகங்கள் - இது போன்ற உணவகங்களுக்குச் செல்லுவதற்கே நமக்கு அச்சமாக இருக்கிறது!  காரணம் வேலை செய்பவர்கள் வாடிக்கையாளர்களைக் கவனிக்கத் தான் நேரம் ஒதுக்குவார்களே தவிர என்ன செத்துக் கிடக்கிறது என்பது பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. அந்த நாற்றத்தையெல்லாம் தாங்கும் சக்தி அவர்களுக்கு இருக்கிறது!  நமக்குத் தான் இல்லை!

இங்கே இன்னொரு  செய்தியையும்  நாம்  குறிப்பிடத்தான் வேண்டும்.  வேலை செய்பவர்கள்  வேலையில்  அலட்சியம்  காட்டினால்  அந்த அலட்சியம் வாடிக்கையாளர்களுக்குத் தான் போய்  சேரும்! அவை தரமற்ற உணவுகளாக வாடிக்கையாளர்களுக்கு வரும்!

வேலை செய்யும் நண்பர்கள் முதலில் தங்களின் ஊதியத்தைத்  தான்  பார்ப்பார்கள்.  குறைவான சம்பளம், அதிகமான வேலைப் பளு, ஓய்வு இல்லாமல் அதிக நேரம் அவர்களை வேலை வாங்குதல் - இவைகளெல்லாம்  அவர்களின் வேலையில்  பிரதிபலிக்கும். 

கடை முதலாளிகள் தங்களின் வேலயாள்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். அப்போது தான் அவர்கள செய்கின்ற பிரியாணி, பிரியாணியாக இருக்கும்.  இல்லாவிட்டால் அவர்கள்  கோபத்தில் எலியைக் கூட பிரியாணியாக்கி விடுவார்கள்!

உணவகங்களில் எதுவும் நடக்கலாம்!

பிரதமருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

பொதுவாக பிறந்த நாளை நான் அவ்வளவாக பொருட்படுத்துவதில்லை!

ஆனால் இன்று (10.7.2019)  நமது பிரதமரின் பிறந்த நாள்.  94- வது வயதில் அடி எடுத்து வைக்கிறார்.  இது ஒன்றும் சாதாரண விஷயம் அல்ல. 

மலேசியர்களின் சராசரி வயது  என்பது எண்பது வயதாக இருக்கலாம்.  அதுவும் நல்ல ஆரோக்கிய வாழ்க்கை அமைந்தவர்கள் நீண்ட நாள்கள் வாழ்கிறார்கள்.   ஆரோக்கிய மற்ற  வாழ்க்கை வாழ்பவர்கள், பலவித நோய்களை வைத்துக் கொண்டு, இழுத்துப்பறித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்! 

அதற்காக டாக்டர் மகாதிர் எந்த வியாதியும் அற்றவர் என்று நாம் சொல்ல வரவில்லை.  அவரும் இருதய வியாதிக்குச் சிகிச்சை  பெற்றவர் தான்.   வியாதி இருந்தால் தான் அவன் மனிதன்!  ஆனால் அவர் வியாதிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.  மனிதனுக்கு வியாதிகள் இருப்பது அதிசயமல்ல. ஆனால் அது அவனைக் கட்டிப் போடக் கூடாது.  நாம் மருந்து மாத்திரைகள், உடல் பயிற்சிகளின் மூலம் வியாதிகளைக் கட்டிப் போட்டுவிட்டு நமது வேலைகளை நாம் தொடர வேண்டியது தான்!

அரசியலிலிருந்து எப்போதோ விடை பெற்றவர் டாக்டர் மகாதிர்.  ஆனால் நாட்டின் நலன் கருதி அவர் மீண்டும் அரசியலுக்கு வந்தவர்.  வந்தது மட்டும் அல்லாமல் மீண்டும் பிரதமர் பதவியை ஏற்றவர். அதிலும் 93-வ்யதில் - யாரும் எதிர்பார்க்காத வயதில் - அவர் பிரதமர் பதவியை ஏற்றார்! உலகில் எங்கும் நடக்காத அதிசயம் இது! தள்ளாடி நடக்கும் வயதில்  துள்ளலாக நாட்டை வழி நடத்துகிறார்!  நாட்டின் மீதும், நாட்டின் மக்கள் மீதும் பற்றும், பாசமும் உள்ளவர்களுக்கு  எந்தக் காலத்திலும் தள்ளாட்டமும் இல்லை தள்ளாடி நடப்பதும் இல்லை!

அவர் இந்த வயதிலும் நாட்டை வழி நடத்துவதற்கான இரகசியம் என்ன? அவரின் நீண்ட ஆயுளுக்கு என்ன காரணம்?  அது தான் தனது மக்களை  நேசிப்பது. அவர் தொழில்  ரீதியில்  ஒரு  டாக்டர்  என்றாலும் அவர் அரசியலை விரும்பி ஏற்றுக் கொண்டவர். தனது  மக்கள்  மற்ற இனத்தாரைப்  போல முன்னேற  வேண்டும்  என்னும் உயரிய  நோக்கம் கொண்டவர். அவர் காலத்தில் தான்  மலாய் மக்களின் முன்னேற்றம் மிகவும் அசாத்தியமாக இருந்தது! மலாய்க்காரர்கள்  எல்லாத் துறைகளிலும் இன்று மிளிருவதற்கு அவர் தான் காரணம்.  அவரின் ஒரு சில திட்டங்கள் தோல்வியில் முடிந்திருக்கலாம். ஆனால் அவர் அதற்குப் பொறுப்பல்ல! அவரிடம் நேர்மை இருந்தது. நியாயம் இருந்தது.

ஒரு மனிதன் நீண்ட  நாள்  வாழ்வதற்கு அவன் செய்கின்ற தொழிலை அவன் நேசிக்க வேண்டும்.  அவன் விரும்புகின்ற தொழிலை அவன் செய்ய வேண்டும். அது தான் அவனை நீண்ட நாள் வைத்திருக்கும்.

பிரதமருக்கு நமது பிறந்த நாள் வாழ்த்துகள்!

என்ன தான் முடிவு?

நமக்கு ஒன்றும் புரியவில்லை.  பள்ளி சிறுவரிடையே சிறு சிறு மனக்கசுப்புகள் வரலாம். சிறு சிறு சண்டைகள் வரலாம்.  நாமெல்லாம் அதைக் கடந்து தான் வந்திருக்கிறோம். ஆனால் அவைகள் எல்லாம் ஒரு சில நாள்கள் தான் நீடிக்கும்.  அப்புறம் நாம் எல்லாம் சகஜ நிலைக்கு வந்து விடுவோம். இது தானே இயற்கை?

ஆனால் நம்மால் ஜீரணிக்க முடியாத செய்தி இது. அதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. மாணவர்களிடையே ஏற்பட்ட ஒரு சிறிய தகராறகத்தான் இருக்க முடியும். ஒரு சிறிய மோதல். பல பள்ளிகளில் இது போன்ற மோதல்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.   அடிதடியும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்திய மாணவரிடையே கட்டொழுங்குப் பிரச்சனை அதிகம் என்பதாகத்தான் பார்த்துக் கொண்டும், கேள்விப்பட்டுக் கொண்டும் இருக்கிறோம்.

இந்தக் கொலைச் சம்பவம் நம்மை அதிர வைக்கிறது. இப்போது யாரை நாம் குற்றம் சாட்டப் போகிறோம்?  14 வயது,  15 வயது, 16 வயது -  என்பதெல்லாம் ஒரு வயதா? இது படிக்க வேண்டிய வயது என்று தானே நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.  ஆனால்  இது கொலை செய்கின்ற வயது என்பதைக்  காட்டி விட்டனரே  நமது  செல்வங்கள்.

ஒன்று நாம் பெற்றோரைக் குறைச் சொல்லுகிறோம்.  இல்லையென்றால் பள்ளி ஆசிரியரைக் குறைச் சொல்லுகிறோம். 

நமக்குத் தெரிந்தவரை  முதல் பொறுப்பு பெற்றோர்கள் தான். அதன் பின்னர் தான் பள்ளி ஆசிரியர்.முதலில் வீட்டில் பெற்றோரிடம் கட்டொழுங்கு  இல்லை!  அது தேவை இல்லை என்று நினைக்க வேண்டாம்.  இருபத்து நான்கு  மணி நேரமும்  தொலைக்காட்சிகளின் முன்னால் உட்கார்ந்து கொண்டு  படம் பார்த்துக் கொண்டு இருந்தால் பிள்ளைகள் எப்படி  இருப்பார்கள்?  படம் பார்ப்பதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்று கேட்கலாம்.  எல்லாமே  பெரிய விஷயம் தான். அந்தச் சினிமா படங்கள்  நீங்கள்  வாழ வேண்டும் என்றா சொல்லிக் கொடுக்கின்றன?  நீங்கள் எப்படி  ஒருவரை ஒருவர்  அடித்துக் கொண்டு  சாக வேண்டும்  என்று தானே  சொல்லிக் கொடுக்கின்றன! அதைத்தானே இப்போது நாம் செய்து  கொண்டிருக்கிறோம்!

சினிமாவில் வருகின்ற  வன்முறைகள் நமது  பிள்ளைகளை  மிகவும் பாதிக்கின்றன என்பது இந்த ஒரு கொலைச் சம்பவத்தை வைத்தே மதிப்பிடலாம். இதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும்  மாணவர்கள். பதினான்கு வயது தங்கை தனது பதினைந்து வயது காதலனுடன் சேர்ந்து அவளுடைய பதினாறு வயது அண்ணனைக் கொலை செய்திருப்பது என்பது நாம் கேள்விப்படாத ஒன்று.  தங்கை தனது அண்ணனின் கழுத்தை அறுத்து கொலைச் செய்திருக்கிறாள் என்று சொல்லப்படுகிறது. இந்த அளவு  கொடூரக் கொலைக்குக் காரணம் என்னவாக இருக்கும்?

இதற்கான தீர்வு என்ன என்பது தான் நம் முன் நிற்கும் கேள்வி? என்ன தான் முடிவு?  பார்ப்போம்!

Monday 8 July 2019

ஏன் இந்த அளவு பாதுகாப்பு...?

சர்ச்சைக்குறிய இந்திய இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் மீண்டும் மீண்டும் நமது செய்திகளில் அடிபட்டுக் கொண்டிருக்கிறார். 

இது போன்ற சர்ச்சைகளை  அவர்  விரும்புகிறார்  என்று நாம் நம்பலாம்.  அவர் தாய் நாட்டில் அவர் மிதிக்கப்படுகிறார்! அதே சமயத்தில் நமது நட்டில் அவர் மதிக்கப்படுகிறார்!  பிரச்சனை ஒன்றே! அங்கே ஏன் மிதிக்கப்படுகிறார் என்பதற்கும் இங்கே ஏன் மதிக்கப்படுகிறார் என்பதற்கும் ஒரே பிரச்சனை தான்.  ஒவ்வொரு நாடும் அவரவர் கோணத்தில் அவரைப் பார்க்கின்றனர்! இதிலிருந்து ஒன்றைத் தெரிந்து கொள்ளலாம் ஜாகிர் நாயக் பலே கில்லாடி என்று!

ஜாகிர் தப்பித்தவறி இந்தியா பக்கம் போனால் அவருக்கு என்ன நடக்கும் என்பதை அவர் புரிந்து வைத்திருக்கிறார்! முக்கியமாக அவர் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும்!    அதன் பின்னர் அவர் வாழ்க்கையே அர்த்தமற்றதாகி விடும்! 

சரி, ஜாகிர் இந்தியாவால் தேடப்படுவதற்கான காரணங்கள் என்ன?  பல காரணங்கள் உண்டு. அதில் ஒரு காரணம் அவர் மதங்களிடையே பிரிவினையை ஏற்படுத்துகிறார் என்பதும் ஒன்று. அவர் சார்ந்த மதத்தை உயர்த்தியும் மற்ற மதங்களைத் தாழ்த்தியும் பேசுகின்ற பழக்கத்திற்கு அடிமையானவர் அவர்!

அந்த மத வெறுப்பு இந்தியாவில் எதிர்ப்பையும் மலேசியாவில் ஆதரவையும் அவருக்குக் கிடைக்க வைத்திருக்கிறது!  அதைத் தான் சொன்னேன். ஒரே பிரச்சனை! இரு பார்வைகள்!

அது சரி. இந்தியாவின் எதிர்ப்புக்கு ஆளான இவர் மலேசியவில் என்ன செய்கிறார்?  இங்கே அவர் பணி என்ன?  

இந்தியாவில் என்ன செய்தாரோ அதையே  தான்  இங்கும் தொடர்ந்து  கொண்டிருக்கிறார்!  இஸ்லாமியர் என்கிற முறையில் மற்ற மதங்களை வெறுக்க வேண்டும் என்பது அவர் படித்த பாடம். எப்படியோ அவர் இந்தியாவின் பிடியில் சிக்கவில்லை!  அது அவர்களின் பெருந்தன்மையாக இருக்கலாம். ஆனால் அவர் அதனையே மலேசியாவிலும் செய்கிறார் என்பது தான் நாம் ஏற்றுக் கொள்ள முடியாத விஷயம். ஆனால் அதைத்தான் அவர் செய்கிறார்!

சமீபத்திய செய்தியின் படி அவர் கிளந்தானில் சமய சுற்றப்பயணம் செய்து கொண்டிருக்கிறார். அவர் இஸ்லாமிய போதகர் என்கிற முறையில் அதில் ஒன்றும் வியப்பில்லை. இஸ்லாமிய போதனை என்பது ஒன்றும் நமக்கும் புதிதல்ல. ஆனால் அவருக்கு ஏன் ஏகப்பட்ட பாதுகாப்பு என்ப்து தான் நமக்குப் புரியவில்லை! காவல்துறை அவரின் பாதுகாப்புக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்கிறார்கள் ஏற்பாட்டாளர்கள்! ஏன்? யார் அவரை எதிர்க்கிறார்கள்?  அந்த அளவுக்குத் தீவிரவாதிகள் நமது நாட்டில்  இருக்கின்றனரா என்பது நமது கண்ணுக்குத் தெரியவில்லை.  ஆனால் ஏதோ ஒன்றை அவர்கள்  எதிர்பார்க்கிறார்கள் என்று தான் நமக்குத் தோன்றுகிறது! 

அது மட்டும் அல்லாமல் அவருக்கு எதிர்ப்பாளர்கள் இருக்கிறார்கல் என்றால் அப்படி என்ன  தான் அவர் பேசுகிறார்?  இது வரை நமது நாட்டில் எந்த இஸ்லாமிய பேச்சாளர்களும் பேசக் கூடாத ஒன்றை அவர் பேசுகிறாரா!  இஸ்லாம் நமக்கு என்ன புதிதா? இஸ்லாமிய போதனைகள் நமக்கு என்ன புதிதா?  அப்புறம் ஏன் இந்த தடபுடல் பாதுகாப்பு ஏற்பாடுகள்! 

அதைத்தான் நாம் கேட்கிறோம்.  தீவிரவாதம்  எல்லா நாடுகளிலும் உண்டு. நமது நாடு இன்னும் அதனை அனுபவிக்கவில்லை. மலெசியர்களும் அனுபவிக்கவில்லை. ஆனால் அதனைத் தூண்டி விடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது பொறுப்புள்ள அரசாங்கத்தின் கடமை.

நம்மைக் கேட்டால் ஜாகிர் நாயக்கிற்கு இந்த அளவு பாதுகாப்புத் தேவை இல்லை. ஓர் இஸ்லாமிய அறிஞருக்குப்  பாதுகாப்பு என்றால் இந்தப் பாதுகாப்பை அந்த அறிஞரே ஏற்றுக் கொள்ளக் கூடாது!  மலேசியர்கள் சகிப்புத் தன்மை உள்ளவர்கள். அதனை அனைவரும் மதிக்க வேண்டும்.

நல்லதைப் பேசும் போது பாதுகாப்பு எதற்கு?

Sunday 7 July 2019

கேள்வி - பதில் (105)

கேள்வி
உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருப்பது சரி தானா?

பதில் 

சரி தான்.  தனது மகனை நியமனம் செய்திருப்பது ஸ்டாலினின் உரிமை. ஒரு காலக் கட்டத்தில் கருணாநிதி இளைஞரணி செயலாளராக தனது மகனும். இன்றைய தலைவருமான ஸ்டாலினை நியமித்தார்.  அன்றும் அதனை யாரும் எதிர்க்கவில்லை! அதே போல இன்றும் இந்த நியமனத்தை யாரும் எதிர்க்கவில்லை!

எதிர்க்க என்ன இருக்கிறது?  எதிர்ப்புக் குரல் எழுந்தால் அடுத்த நாளே எதிர்ப்புக் குரல் எழுப்பியவர் காணாமல் போய்விடுவார்!  அது தான் அவர்களின் ஜனநாயகம்! அதனால் இருக்கிற ஜனநாயகத்தைக் காப்பாற்றிக் கொள்வது  தான் சிறந்தது என்று அவை அடக்கமாக இருந்து விடுகிறார்கள்!

தளபதி ஏன் இந்த அவசரம் காட்டுகிறார்? காரணம் உண்டு.  கருணாநிதி காலத்தில் அவரை எதிர்க்கச் சகோதரர் யாரும் இல்லை. இப்போது நிலைமை வேறு. தளபதிக்கு நேரடி எதிர்ப்பாளராக அஞ்சா நெஞ்சன் அழகரி இருக்கிறார்! இவர் எப்போது நெஞ்சை உயரத்துவார் என்று யாருக்கும் தெரியாது! அவரின் எதிர்ப்புக் குரல் வரும் முன்னேரே எல்லாவற்றையும் முடித்தாக வேண்டும் என்கிற அவசரத்தில் இருக்கிறார் தளபதி!

இது கட்சி பிரச்சனையாக இருந்தால் நாலு பேர் உட்கார்ந்து பேசி தீர்த்து விடலாம். இது கட்சி பிரச்சனையல்ல! அவர்களின் தந்தை விட்டுப் போன சொத்துப் பிரச்சனை.  கோடிக்கணக்கில் சொத்து இருந்தால் எந்தத் தலைவனும் அந்தச் சொத்துக்களைக் கட்சிக்கு விட்டுவிட்டுப் போக மாட்டான்!

இதை இங்கேயே  நமது ம.இ.கா.வினர் என்ன செய்தார்கள் என்பதைக் கொண்டே நாம் தெரிந்து கொள்ளலாம்! தமிழ்ப்பள்ளிகளுக்குக் கொடுக்கப்பட்ட  2000 ஏக்கர்  நிலத்தையே  அப்படியே  பாக்கெட்டுக்கள் திணித்துக்  கொண்டார்களே!  அது தான் தலைவனுக்கள்ள உள்ள இலட்சணம்!  அப்படியிருக்க 2000 கோடி சொத்துக்களைக் கொண்ட கட்சி என்றால் எப்படியிருக்கும்?  அந்த சொத்துக்களுக்காகத்  தான் இப்போது மறைமுக தள்ளுமுல்லுகள்! அது போகப் போகத் தெரியவரும்! அஞ்சா நெஞ்சன் சும்மா இருக்க மாட்டர்!  பாகப்பிரிவனை கேட்பார் அல்லவா!

ஆக, ஸ்டாலின் செய்தது சரி தான்!  வருங்கால எதிர்ப்புக்களைச் சமாளிக்க  இப்போதே மைந்தனுக்கு முடி சூட்டிவிட்டார்! 

அனைத்தும் சரியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது! போகட்டும்!

Saturday 6 July 2019

அடுக்குமாடி வீடுகளா...!

அடுக்குமாடி வீடுகளைப் பற்றி பேசும் போது  நமக்குக் கொஞ்சம் அச்சமாகவே இருக்கும்.

மனிதர்கள் குடியிருக்க இப்படியெல்லாம்  வீடுகள் கட்டுவார்களா  என்று நினைத்து நினைத்து நாம் வேதனைப்பட வேண்டியுள்ளதே தவிர இதற்கு என்ன தான் முடிவு என்று நமக்கும் புரியவில்லை. 

  இந்த அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்ட  நோக்கம் தான் என்ன? இது போன்ற அடுக்குமாடி வீடுகள் யாருக்காக கட்டப்பட்டவை?  இப்படிக் கேளவிகளைக் கேட்டுக் கொண்டே போனால் ஒன்று நமக்குப் புரியும். இந்த வீடுகள் பணக்காரர்களுக்கோ, நடுத்தர குடும்பங்களுக்கோ கட்டப்பட்ட வீடுகள் அல்ல.  குறிப்பாக ஏழை, எளியவர்களுக்காக கட்டப்பட்ட வீடுகள் என்பது தான் உண்மை.  அந்த ஏழை, எளியவர்களுக்குக் கூட அந்த வீடுகள் சும்மா காசு இல்லாமல் கொடுக்கப்பட்ட வீடுகள் அல்ல.  எல்லாம் பணம் தான்.  அந்த ஏழைகளால் முடிந்தது அவ்வளவு தான். அதனால் தான் அவர்கள் வாங்கினார்கள். அதில் ஒன்றும் தப்பில்லை. 

 ஏழை மக்கள் வீடுகள் வாங்கிய  அந்தக்  காலக் கட்டத்தில் அதுவும்  பெரிய பணம் தான்!  நம்முடைய குற்றச்சாட்டெல்லாம் அந்த அடுக்ககங்களை வாங்கியவர்கள் ஏழைகள் என்பதற்காக தரமற்ற வீடுகளை அவர்கள் தலையில் கட்டினார்களோ என்று ஐயுற வேண்டியிருக்கிறது!  

முன்னாள் அரசாங்கத்தைப் பற்றி நமக்குத் தெரியும். வீடுகள் கட்டும் போது ஓர் அக்கறையின்மை தெரியும். "எப்படிக் கட்டினால் என்ன!" என்கிற  அலட்சிய மனோபாவம் அவர்களுக்கு உண்டு.  அதுவும் புதியவர்களை வைத்தே தரித்திரம் படைத்தவர்கள் அவர்கள்! பற்பல குறைபாடுகள். ஒன்றா, இரண்டா எடுத்துச் சொல்ல!

குடி புகுந்த ஒரு சில ஆண்டுகளிலேயே கட்டடத்தில் ஆங்காங்கே  கீறல்கள்! ஒரு பகுதி இடிந்து விழுவதும் அதன் பின்னர் அதனைச் சரி செய்வதும் இது தான் அவர்கள் வேலை!

இங்கே நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது  ஒன்றுண்டு.  அதாவது வீட்டைக் கட்டி முடித்ததும்  அத்தோடு அவர்கள்  வேலை  முடிந்தது.  அதன் பின்னர் அங்கே என்ன நடக்கிறது என்பது பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை!  அவர்கள் பயன்படுத்தும் "லிஃப்ட்"  வேலை செய்யவில்லை என்றால் அதனால் அவர்கள் படும் கஷ்டம் ...சொல்லி மாளாது!  அது மட்டுமா?  தண்ணீர் பிரச்சனை மிகவும் கொடியது. பாவப்பட்ட மனிதர்கள்.  அவர்கள் ஏழைகள் என்பதால் என்னன்ன துன்பங்களை அனுபவிக்க வேண்டியுள்ளது! என்ன செய்வது? 

அங்குக் குடியிருப்பவர்களும் தங்கள் பொறுப்பு என்ன என்பதை உணர்வதில்லை.  குப்பைகளை கண்ட மாதிரி வீசுவதும் வீடுகளை அசுத்தமாக வைத்திருப்பதும், மற்றவர்களுக்கு இடைஞ்சலாக இருப்பதும் - அவர்கள் மீதும் குற்றம் உண்டு.

நாம் ஏழையோ பாளையோ நமக்கும் பொறுப்புணர்ச்சி வேண்டும். நாம் ஏழை தானே தவிர குணத்தால் நாம் பணக்காரனாக இருக்க வேண்டும். படித்தவன் எப்படி இருக்கிறானோ அப்படித்தான் நாமும் இருக்க வேண்டும். இதில் ஏழை பணக்காரன் வேறுபாடுகள் இல்லை.

இந்த அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டதே ஒரு சோகக் கதை. அதை இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பது அதை விட சோகம். 

"கொண்டோமினியம்" கட்டுங்கள். "அபார்ட்மெண்ட்'  கட்டுங்கள். ஆனால் இந்த அடுக்குமாடி வீடு என்கின்ற அடுக்ககங்கள் வேண்டாம்!

Friday 5 July 2019

அடுத்த பிரதமர் யார்?

மலேசியர்கள்  வாய்  மூடி  மௌனிகளாக இருந்தாலும்  அரசியல்வாதிகள் விடுவதாக இல்லை!

பி.கே.ஆர். தலைவர்  அன்வார் இப்ராகிம் நாட்டின் அடுத்த பிரதமராக வரக் கூடாது  என்பதில் அக்கறை காட்டுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் முன்னாள் அம்னோ அரசியல்வாதிகள். இப்போது அவர்களில் பலர் இந்நாள் பெர்சாத்து  கட்சி அரசியல்வாதிகள்! அதாவது  டாக்டர் மகாதிரின் வலப்பக்கம், இடப்பக்கம் அனைத்தும் அவர்கள் தான்!  அதனால் தான்  அவர்கள்  அடிக்கடி அன்வாரை தாக்கி அறிக்கை வெளியிடும் போது அது முக்கியத்துவம் பெருகிறது!

இவர்கள் அன்வாரை வெறுப்பதற்கான  காரணங்கள் என்னவாக இருக்கும்  என்று கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் ஒரு சில விஷயங்கள் நமக்குப் புரியும்.

அன்வாருக்கும் மகாதிருக்கும் ஆரம்ப காலத்தில் ஏற்பட்ட கசப்புக்களும் அதன் பின்னர் அன்வார் பல ஆண்டுகள் சிறைவாசம்  அனுபவித்ததையும் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம். அந்தக் காலக் கட்டத்தில் டாகடர் மகாதிருடன் சேர்ந்து பல அம்னோ அமைச்சர்கள் அனவாருக்கு எதிராக இருந்தார்கள்.  அதாவது மகாதிருக்கு ஒத்து ஊதினார்கள்!  சரியோ, தவறோ அவர்கள் டாக்டர் மகாதீரை ஆதரித்தார்கள். அப்போது அந்தச் சூழலில் அவர்களுக்கு அது தான் சிறந்த முடிவாக இருந்தது.  தலைவன் யாரை ஆதரித்தாலும் நாமும் ஆதரிக்க வேண்டும்;  ஒதுக்கினால் நாமும் ஒதுக்க வேண்டும்.  அதைத் தான் அவர்கள் செய்தார்கள்.  அப்போது அது அவர்களுக்கு அது பலம். இப்போது அதே அவர்களுக்குப் பலவீனம்! 

இப்போது அவர்கள் கட்சி மாறினாலும் அவர்கள் இன்னும் டாக்டர் மகாதீரின் ஆதரவாளர்கள் தான்.    டாக்டர் மகாதிர் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பார் என்று அவர்கள் கனவிலும் நினைக்கவில்லை! அது நடந்து விட்டது!  எல்லாம் சரி. டாக்டர் மகாதிரே ஆட்சியில் இருந்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால்  தாங்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி இன்னும் ஓரிரண்டு ஆண்டுகளில் டாக்டர் மகாதிர் பதவி விலகி  தனது பிரதமர் பதவியை அன்வார் இப்ராகிமிடம் ஒப்படைக்க வேண்டும்.

இப்படி வரும் போது தான் "தங்கள் நிலை என்ன!" என்கிற பயம்  அன்வாரின் எதிர்ப்பாளர்களுக்கு வந்து விட்டது!  அதனால் தான்  எதிர்ப்புக்களைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்!  அன்வார் பிரதமராக வந்தால் தங்களை அடையாளம் தெரியாமல் செய்து விடுவார் என்கிற பயம் அவர்களுக்கு உண்டு!

இவர்கள் விரும்புகிறார்களோ, விரும்பவில்லையோ அன்வார் பழைய மனிதராக இல்லை என்பதும் மட்டும் உண்மை. பழி வாங்கும் குணம் எல்லாம் அவரிடமிருந்து பறந்தோடி விட்டது!  அந்தக் கால தீவிரத் தன்மை இப்போது அவரிடம் இல்லை!  சிறைவாசம் அவரைத் திருத்தி விட்டது எனலாம்.

நிச்சயமாக அடுத்த பிரதமர் அன்வார் இப்ராகிம் தான். அதில் ஏதும் மாற்றம் இல்லை.அவர் எல்லாருக்கும் நல்ல பிரதமராக இருப்பார் என நம்பலாம்.  நாம் விரும்புவதும் அதனைத் தான்!

Thursday 4 July 2019

அடுத்த ஆண்டு தேர்தலா...?

இன்றைய நிலையில் எதிர்கட்சியினர்  மிகவும் விரும்புகின்ற ஒரு சொல்:  "அடுத்தாண்டு தேர்தல் வரும்!"  என்பது தான்.

தேர்தல் வரும் என்று நாம் சொல்லவில்லை  ஆனால் எதிர்கட்சியினர் அவசியம் தேர்தல் வரும் என்கின்றனர்.  அதிலும் குறிப்பாக  அம்னோவும் பாஸ் கட்சியும் தேர்தல் வரும் என்று அடித்துச் சொல்லுகின்றனர்!
 சொல்லப்படுகின்ற காரணங்கள் நமக்குப் பலவீனங்களாகத் தெரியலாம்! ஆனால் அவர்களுக்கோ அது தான் பலம்!

அப்படி என்ன தான் அவர்கள் சொல்லுகின்றார்கள்.  அவர்கள் சொல்லுவதெல்லாம் டாக்டர் மகாதிர் பிரதமர் பதவியை அன்வாரிடம் ஒப்படைக்க மாட்டார். ஒப்படைப்பதற்குப் பதிலாக அரசாங்கத்தைக் கலைத்துவிட்டு மறு தேர்தல்  நடத்துவார் என்பது தான  அவர்கள் சொல்லுகின்ற  காரணங்கள்!

இவர்கள் சொல்லுவதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கும்? நமக்குத் தெரியவில்லை!   பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த வேண்டும் என்றால் அது சாதாரண விஷயம் அல்ல. பணம் கையாடல் செய்ததினால்  நாட்டிற்கு ஏற்பட்டிருக்கும் பாதகங்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல. நஜிப்பைப் போல மகாதிர் பொறுப்பற்ற மனிதர் அல்ல. முதலில் பணம் வீண் விரயம் ஆவதை அவர் விரும்பமாட்டார். ஒரு தேர்தல் நடத்துவது என்பது கோடிக்கணக்கில் பணத்தை வீணடிக்கிற விஷயம் என்பதை அவர் புரிந்து வைத்திருக்கிறார். மறு தேர்தல் என்பதற்குச் சாத்தியல் இல்லை.  அந்தத் தவற்றினை டாக்டர்  மகாதிர்  ஒருக்காலும் செய்ய  மாட்டார் என்பதை  உறுதியாக  நம்பலாம்.

எந்த  அடிப்படையில்  பொதுத்  தேர்தல்  வரும்  என இவர்கள்  நம்புகிறார்கள்?  உண்மையில்  இவர்கள்  நம்பவில்லை!  அது  தான்  உண்மை!  ஏன்  நம்பவில்லை?  டாக்டர்  மகாதிர்  அது  போன்ற   தவற்றினைச் செய்ய  மாட்டார்  என்பது  அவர்களுக்கே  தெரியும்! ஆனாலும் மீண்டும்  மீண்டும்  அவர்கள் சொல்லுவதற்குக்  காரணங்கள் உண்டு.  ஆளுங்கட்சியான பக்காத்தான்  ஒரு  பலவீனமான  கட்சி என்பதை  மீண்டும்  மீண்டும் சொல்லுவதன்  மூலம்  மலாய்க்காரர்களிடம் அவர்கள் தங்களை விட்டால்  வேறு யாரும்   நாட்டை வழி நடத்த முடியாது என்பதைச் சொல்லிச் சொல்லி தங்களைத்  தாங்களே  உயர்த்திக் கொள்ளுகிறார்கள்!  அவ்வள்வு தான்!  இந்தத் தொடர் தாக்குதல்  மூலம் தங்களால் மட்டும் தான் - அம்னோ பாஸ் - ஸால்  மட்டும் தான் நாட்டை ஆள முடியும்  என்பதாக  ஒரு  தோற்றத்தை  ஏற்படுத்துகிறார்கள்!

பொதுவாக பாஸ்- அம்னோ  இரு கட்சிகளுமே அழிவுச் சக்திகள்  என்பதை நாம்  அறிவோம்.  மலாய்க்காரர்கள்  மட்டும்  அறியாதவர்களா?  அவர்களும்  அறிந்தவர்கள்  தான்.  பக்காத்தான் அரசாங்கம்  தங்கள்  கடமைகளை நேர்மையாகச்  செய்கிறார்கள் என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  அரசாங்கத்தின் நோக்கமே அனைவரின்  உரிமைகளும்  பாதுகாக்கப்பட வேண்டும்  என்பது  தான். அவர்கள்  யாருடைய உரிமைகளையும் பறித்து விட விரும்பவில்லை. அது நடக்காது என்பதும் தெரியும்.

நீதி, நேர்மை என்பதெல்லாம்அம்னோ-பாஸ் கட்சிகளிடம்  கிடையாது! இரு கட்சிகளுமே  ஊழக்குப் பேர்  போனவை!

அடுத்த ஆண்டு தேர்தல்  வருமா?  வரவே வராது என்பது தான் பதில்!

Tuesday 2 July 2019

வருத்தம் அளிக்கும் செய்தி தான்

என்ன செய்வது? ஒரு சில செய்திகளைப் படிக்கும்  போது நமக்கு வருத்தம் வருவதை தடுக்க  முடிவதில்லை.

அப்படித் தான் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது. சுப்பர மைண்டடின் தன்முனைப்புப் பேச்சாளரும், ஆசிரியருமான மு.கணேசன் இந்தச் செய்தியை விடுத்துள்ளார். 

ஆமாம், சிலாங்கூர் மாநில நூலகங்களில் 14,500 தமிழ்ப் புத்தகங்கள் இருக்கின்றன.   என்ன புண்ணியம்?  படிக்கத்தான்  ஆளில்லை என்கிறார்.  அதனை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

ஒரு  காலக் கட்டத்தில்  நான்  நூலகம் சென்று புத்தகங்களைப்  படித்ததுண்டு. அப்போதெல்லாம் தமிழ்ப் புத்தகங்களை நூலகங்களில் பார்க்க முடியாது. அதனால்  பெரும்பாலும்  ஆங்கிலப் புத்தகங்களைத் தான் படிக்க முடிந்தது.  இப்போதும் கூட தமிழ்ப் புத்தகங்கள்  இருக்கும் என நான்  நம்பவில்லை. காரணம்  ஆசிரியர் கணேசன் சிலாங்கூர்  மாநிலத்தைப் பற்றித்தான்  பேசுகிறார். மற்ற மாநில நூலகங்களில் ஏதோ ஓரிரு புத்தகங்களை வைத்திருப்பார்கள். அதையும் யாரும் படிக்கப் போவதில்லை. இது தான்  இன்றைய  நிலை!

நம்மிடையே நிறைய  இயக்கங்கள்  இருக்கின்றன.  மலேசிய அளவில் ஒரு மாபெரும் இயக்கம் என்றால் அது தமிழ் இளைஞர் மணி மன்றம் தான்.  அதனை அடுத்து மிகவும் சக்தி வாய்ந்த இயக்கம் என்றால் அது திராவிடர் கழகம்.  இவர்கள் கொஞ்சம் முயற்சி எடுத்து தனது அங்கத்தினர்கள் படிக்கின்ற பழக்கத்தை  ஏற்படுத்த வேண்டும்  என நானும்  இந்த நேரத்தில் கேட்டுக் கொள்ளுகிறேன். நமது இளைஞர்களை நாம்  தான்  ஊக்குவிக்க வேண்டும்.

பொதுவாக படிக்கின்ற பழக்கம் குறைந்து விட்டது என்பதாக நாம் சொல்லுகிறோம்.  ஆனால்  சீனர்களிடையே படிக்கின்ற  பழக்கம் குறைந்ததாகத்  தெரியவில்லை.  அதே போல மலாய்க்காரர்களிடையேயும் படிக்கின்ற தாகம்  இன்னும் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.    படிக்கின்ற சமுதாயம் தான் முன்னேறும் என்பதே நமக்குத் தெரியவில்லை.

இப்போதைய இளைய தலைமுறை கையில் ஒரு கைப்பேசி இருந்தால் போதும் என்னும் மன நிலைக்கு வந்து விட்டது.  அத்தோடு இணையத்தளத்தில் அனைத்தையும்  தெரிந்து கொள்ள முடியும் 

ஆனாலும் அரசாங்கம் கொடுத்திருக்கும் வாய்ப்புக்களைப்  பயன்படுத்திக் கொள்ளுவது  தான் புத்திசாலித் தனம்.  நாம்  அவைகளை ஒதுக்க விட  முடியாது.  நாம் ஒதுக்கினால் அரசாங்கம் நம்மை ஒதுக்கிவிடும்!  இன்றைய நிலையில் நமக்குக் கொடுக்கப்படும் வாய்ப்புக்களைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

கொடுக்கும் போது ஒதுங்கிக் கொள்ளுவதும் கொடுக்காத போது அதற்காகப் போராடுவதும் நமது குணம்! இது எங்கே போய் முடியும்?

Monday 1 July 2019

iஇது உண்மையா....?

நான் அறியாத ஒரு  புதிய  செய்தியை அறிந்து கொண்டேன்.

நமது நாட்டில்  மலையாளப் பள்ளி ஒன்று  இருந்ததாக ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது. உண்மையில் இது நாள் வரையில் நான் கேள்விப் படாத செய்தி அது. 

தெலுங்கு மொழிப் பள்ளிகள் இருக்கின்றன. நாம் அறிந்தது தான். நான் ஆங்கிலப் பள்ளியில் படித்த காலத்தில்  எங்கள் பள்ளி அருகே  சீக்கிய  குருத்தவாரா ஒன்று இருந்தது. இப்போதும் இருக்கிறது. அப்போது அந்தக் காலக் கட்டத்தில் அங்கு பஞ்சாபி மொழி பள்ளிக்கூடம் இருந்ததை நான் அறிவேன். அதற்கு "கல்சா ஸ்கூல்" என்று நாங்கள் சொல்வதுண்டு. ஒரு சில ஆண்டுகளுக்குப் பின்னர் அதனை மூடிவிட்டார்கள்.

இநத மலையாள மொழிப் பள்ளிகூடம் பாடாங் ரெங்காஸ், கேப்பீஸ் தோட்ட்த்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. பொதுவாக இது போன்ற சங்கச் செய்திகளை நான் படிப்பதில்லை. ஆனால் கேப்பீஸ் தோட்டம் என்றால் அது எனது கவனத்தை ஈர்க்கும். காரணம் எனது பள்ளிக் காலத்தில் சிங்கப்பூர், மலாக்கா வானொலி நேயர் விருப்பம் மிகவும் பிரபலம். அப்போது கேப்பீஸ் தோட்டத்தில் இருந்து  பெருமாள் என்னும் நண்பரின் பெயர் தொடர்ந்தாற் போல ஒவ்வொரு நேயர் விருப்பத்திலும் வந்து கொண்டிருக்கும்! அதனால் அந்தத் தோட்ட்த்தின் பெயர் மனதில் பதிந்து விட்டது!

இந்த மலையாளப் பள்ளி என்பது ஒரு புதிய செய்தி என்று சொன்னேன்.  ஒரு வேளை வேறு இடங்களிலும் இருந்திருக்கலாம். எனக்குத் தெரியவில்லை. ஆனால் அது ஒரு வரலாற்றுச் செய்தி.  அதனை நாம் மறந்து விடக் கூடாது. 

நமது நாட்டில் பல்வேறு மொழிப் பள்ளிகள் இருந்திருக்கலாம். குறிப்பாக சிறுபான்மையோரின் மொழிகளான மலையாளம் மட்டும் அல்ல, ஓடிசா மொழியும் இருந்திருக்கலாம். ஓடிசா மக்கள் குறிப்பிட்ட சில இடங்களில் அதிகமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 

ஒரு காலக் கட்டத்தில் நான் கிளந்தான் மாநிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது ஒரு  நண்பர்  பேச்சு வாக்கில் தான் வேலையிலிருந்து ஓய்வு பெற்றதும் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள  பெடாஸ், ரெம்பாவில் குடியேறுவேன் சென்று சொன்னது ஞாபக மிருக்கிறது.  என்ன காரணம் என்று கேட்டதற்கு தான் ஓடிசா என்றும் பெடாசில்  தான் ஓடிசா மக்கள் நிறைய  பேர் இருக்கிறார்கள் என்று சொன்னார்.

மலையாளப் பள்ளி  ஒன்று இருந்தது என்று தெரிந்ததும் இந்த ஞாபகமெல்லாம் எனக்கு வந்து விட்டது. வெவ்வேறு  மொழிப் பள்ளிகள் இங்கு இருந்திருக்கின்றன. காலப் போக்கில் ஆசிரியர் பற்றாக்குறை, மாணவர் பற்றாக்குறை என்று பல்வேறு  காரணங்களினால் அவைகள் மறைந்து விட்டன.

எப்படியோ ஒரு புதிய செய்தியைத்  தெரிந்து  கொண்டேன். இந்தச் செய்தியைக் கொடுத்த தமிழ் மலர்  நாளிதழுக்கு நன்றி!