Wednesday 31 January 2024

வியாபாரம் யார் கையில்?

 

நம் மலேசிய நாட்டின் சிறு தொழில்கள் யார் கையில்?  மார்க்கெட்டுகளுக்குப் போனால்  யாரிடம் பொருட்களை வாங்குகிறோம்?

முன்பெல்லாம் சீனர்கள் வியாபாரங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தார்கள்.  ஓரளவு மலாய்க்காரர்களும் இந்தியர்களும்  ஏதோ ஒன்றிரண்டு என்கிற வகையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்கள்.

இன்றைய நிலைமை என்ன?  மலேசியர்கள் ஓரங்கட்டப்பட்டு  அதனை வங்காளதேசிகள் தங்களது கையில் எடுத்திருக்கிறார்கள்! இதெல்லாம் அரசாங்கத்திற்குத் தெரியாமலா நடக்கிறது? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. எல்லாருக்கும் தெரிந்து தான் நடக்கிறது!

அரசாங்கம் என்ன சொல்லுகிறதோ தெரியாது. நாம் சொல்லுவதெல்லாம் இலஞ்சம் வாங்கிக்கொண்டு பெருந்தன்மையோடு நடந்து கொள்கிறார்கள் என்பது தான்! அப்படி இல்லையென்று சொன்னால்  இது எப்படி நடக்கும்?   

ஆனால் ஒன்று. இப்படியெல்லாம் மற்ற நாடுகளில் நடக்குமா?  நடக்க வாய்ப்பில்லை.   வெளிநாட்டவர்களுக்குத் தொழில் செய்ய வாய்ப்பில்லை. உள்நாட்டவர்களுக்கே முதல் சலுகை. நம் நாட்டில் மட்டும் இப்படி ஏன் நடக்கிறது என்பது நமக்குப் புரியவில்லை! எங்கே கோளாறு?  என்ன கோளாறு?  இதற்குக் காரணமானவர்கள் யார்.

டாக்டர் மகாதிர் காலத்தில் தான் இந்தப் பிரச்சனைகள் எல்லாம் உருவாக  ஆரம்பித்தன.  நாட்டின் மீது அவருக்கு இருந்த விசுவாசம் இப்படியெல்லாம் அவரைச் செய்ய வைத்தது!   உள்நாட்டவரை அவர் நம்பவில்லை. வெளிநாட்டவரை அவர் நம்பினார்.  அதன் விளைவு தான் இப்போது நடக்கும் இந்த அராஜகங்கள்.  வேலைக்காக அவர்களை நாட்டுக்குள் விட்டாலும் இந்த நாட்டில் வியாபாரம் செய்கின்ற அளவுக்கு அவர்களின் கை ஓங்கவைத்ததற்கு டாக்டர் மகாதிர் தான் காரணம். அன்று அவர் கண்டிப்பு காட்டியிருந்தால்  இன்று இது போன்ற செயல்கள் எல்லாம் நடைபெற வாய்ப்பில்லை. இலஞ்சம்  ஊழல் என்று வந்த பிறகு  வெளிநாட்டவர் அதனைத் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்! எல்லாம் டாக்டர் மகாதிர் செயல் என்பதைத் தவிர  வேறு யாரையும் குற்றம் சொல்ல இயலவில்லை!

இப்போது சிறு சிறு வியாபாரங்கள் அனைத்தும்  வெளிநாட்டவர் கையில்! அதனால் விலையேற்றத்தையும் கட்டுப்படுத்த முடியவில்லை. மலேசிய மக்கள் இப்போது  வெளிநாட்டவர் கட்டுப்பாட்டில்!

அன்று வெள்ளையனுக்கு இடம் கொடுத்தது போல இன்று வங்காளனுக்கு  இடம் கொடுத்துவிட்டோம்!  மாட்டிக் கொண்டோம்!

Tuesday 30 January 2024

என்னதான் குறைபாடு?

மெட் ரிகுலேஷன் கல்வியைப் பற்றி பேசும்போது ஒன்று மட்டும் தெரிகிறது.

கல்வி அமைச்சு வெளிப்படையாக செயல்படுவதில்லை. ஏதோ ஒன்று அவர்களின் கண்களை மறைக்கின்றது.  பல்கலைக்கழகங்களில்  எத்தனை இந்திய மாணவர்கள்  பயில்கின்றனர் என்கிற விபரம் கூட தெரியவில்லை என்கிறார் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். 

இந்த நிலையில் மெட் ரிகுலேஷன் பயிலும் இந்திய மாணவர்களைப் பற்றி கேள்வி எழுப்பினால்  யாரிடமிருந்து பதில் வரும்?  சும்மா ஏனோ தானோ பதில்  தான் வருமே தவிர உண்மையான விபரம் வரப்போவதில்லை.

இதிலிருந்து என்ன தெரிகிறது?  பயம் தெரிகிறது!   ஒரு தலைபட்சமாக நடப்பது தெரிகிறது! கல்வி அமைச்சின் திருட்டுத்தனம் தெரிகிறது!  கல்வி அமைச்சு நேர்மையற்ற முறையில் நடப்பது தெரிகிறது!

இதற்கெல்லாம் ஒரே தீர்வு தான் உண்டு.  மலாய் மாணவரின் எண்ணிக்கை அதிகம் என்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. அவர்கள் தகுதியானவர்களா என்பதில் தான் பிரச்சனை.  தகுதியை வளர்த்துக்கொள்ள என்ன தான் பிரச்சனை? அவர்கள் எந்த வகையில் தகுதியற்றவர்கள் என்று கல்வி அமைச்சு முடிவுக்கு வருகிறது?

மலேசிய மாணவர்கள் அனைவருக்கும் ஒரேவித கல்வி முறை தான். எந்த ஏற்றத் தாழ்வும் இல்லை.  முன்பு சொல்லப்பட்ட  காரணங்கள்  இப்போதும் சொல்லப்பட்டால்  கல்வி அமைச்சு தான் அதற்குக் காரணம்.  இத்தனை ஆண்டுகள் கல்வித் துறையில் எந்த முன்னேற்றத்தையும் கொண்டு வரவில்லை!  தரமற்ற கல்வியைத் தவிர மலேசிய மாணவர்களுக்கு வேறு எதுவும் கிடைக்கவில்லை!

மெட் ரிகுலேஷன் கல்விக்காக போராட்டம் நடத்துகிறோம்.  என்ன தான் நடத்தினாலும் நமது மாணவர்களின் எண்ணிக்கை நமக்குத் தெரிவதில்லை.  அது ஒரு பக்கம் இருக்கட்டும்.  அப்படியே இடம் கிடைத்தாலும்  மாணவர்கள் எதிர்பார்க்கின்ற கல்வி அவர்களுக்குக் கிடைக்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்லப்படுகிறது.  மருத்துவம்,  எஞ்சினியரிங்  போன்ற துறைகளில், தகுதி இருந்தும்,  அவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்  என்கின்றனர்.

இப்படி எல்லாவற்றிலும் புறக்கணிக்கப்பட்டால் மெட் ரிகுலேஷன் கல்வி தேவை தானா என்கிற கேள்வி எழுகிறது.  கல்வி அமைச்சு நம்மைத் தரமற்ற நிலைக்குத் தள்ளுகிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

நாம் அறிவற்ற சமூகம் இல்லையே!  கல்வியில் நம்மை வீழ்த்துவது என்பது அவ்வளவு சுலபமா என்ன?

Monday 29 January 2024

முதியோர் இல்லங்கள் அதிகரிக்கலாம்!

 

வருங்காலங்களில் முதியோர் இல்லங்களுக்கு மவுசு அதிகம் இருக்குமோ என்று யோசிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது!

காரணம் அரசாங்கத்தில் பணிபுரிபவர்களுக்கு இனி மாத ஓய்வூதியம் கிடைக்க வாய்ப்பில்லை. அதற்குப் பதிலாக தனியார் துறை போல ஊழியர் சேமநிதியில் பணம் பிடித்தம் செய்யப்படும்.

அரசாங்கத்தில் வேலை என்பதே பலருடைய கனவு காரணம் இந்த மாத ஓய்வூதியம் தான்.  அது இல்லையென்றால்  அரசாங்க வேலையின் மீதான கவர்ச்சி போய்விடும்.

இன்று சில வீடுகளில்  அப்பனின்  ஓய்வூதியத்தை நம்பியே பல பிள்ளைகள் இருக்கின்றனர்.  குடும்பம் நடத்த அதுவே போதும் என்கிற நிலைமையில் அவர்கள் வேலை செய்வதற்கான எந்த கட்டாயமும் இல்லை.

இங்கே முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால்  இந்த ஓய்வூதியதற்காகவே  பெற்றோர்களை வீட்டிலேயே பாதுகாப்பாக வைத்திருக்கின்றனர் மருமகள்கள்!   பணம் எங்கேயும் வெளியே போய்விடக் கூடாதே  என்கிற பாதுகாப்பு உணர்வு அதிகம்!

இந்த நிலையில் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டால் அப்பா-அம்மாக்கள் நிலைமை என்னவாகும்?  வருமானம் இல்லாத பெற்றோர்களை  வைத்துக் கொள்ள மருமகள்களால்  முடியுமா?  யோசிக்க வேண்டிய விஷயம். இத்தனை ஆண்டுகள் அந்தப் பின்விளைவுகளைப் பற்றி நாம் கவலைப்படவில்லை.  இனி நமக்கு அந்தக் கவலையையும் சேர்த்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

வருங்காலங்களில் சுமார் இருபது வருடங்களுக்குப் பின்னர்  வயதான பெற்றோர்களின் நிலைமை என்னவாகும் என்பது தெரியவில்லை.  எப்படியும் முதியோர் இல்லங்களின்   எண்ணிக்கை இன்னும் அதிகமாகும்.  அரசாங்கமும் முதியோர் இல்லங்களைக் கட்ட வேண்டிய  சூழல் அதிகமாகும்.  பெரியவர்களை அப்படியே விட்டுவிட முடியாது.

பெரியவர்கள் செய்த ஒரே தவறு  தங்களுக்கென்று எதனையும் சேர்த்து வைத்துக்  கொள்ளாமல்  பிள்ளைகளுக்கே   அத்தனையையும்  தானம் செய்து விடுகின்றனர். கடைசி காலத்தில் அன்னதானத்திற்காக அலைகின்றனர்.

எப்படியோ வருங்காலங்களில் பெற்றோர்கள் - தனியாரோ அரசாங்கமோ -  எச்சரிக்கையாகவே இருப்பார்கள் என நம்பலாம்! - 

Sunday 28 January 2024

நமக்கு ஒற்றுமை தேவை!

 'நமக்கு ஒற்றுமை தேவை' என்பது ஏதோ இப்போது தான் முதன் முதலாக கேள்விப்படுகிறீர்களா?

நம்மிடம் எப்போதும் ஒற்றுமை உண்டு. இல்லை என்று சொல்ல முடியுமா? அன்று துன் சம்பந்தன் அவர்களால் எப்படி தோட்டங்களை வாங்க முடிந்தது என்று யோசித்தது உண்டா?  நம்மிடம் ஒற்றுமை இராதிருந்தால்  அது எப்படி பத்து தோட்டங்களுக்கு மேல் அவரால் வாங்க முடிந்தது?

துன் அவர்களுக்குப் பின் வந்தவர்கள் ஏன் அந்த ஒற்றுமையைக் கொண்டு  இன்னும் பல புரட்சிகளைப் பண்ண முடியவில்லை?  வங்கிகளை வாங்கியிருக்கலாம். தொழிற்சாலைகளை வாங்கியிருக்கலாம். பொருளாதார ரீதியில் இந்திய சமூகத்தை உயர்த்தியிருக்கலாம். ஆனால் முடியவில்லையே!

ஏன்?  யாரிடம் ஒற்றுமை இல்லை?   அட வெட்கங்கெட்ட  வெண்டைகளா ஒற்றுமை எங்களிடமா இல்லை?    உங்களிடம் ஒற்றுமை இல்லை என்பதால் இந்திய சமூகம் ஒற்றுமையாக  இல்லை என்று சொல்வதா?  நீங்கள் எந்தக் காலத்தில் ஒற்றுமையாக இருந்தீர்கள்? பங்கு போடுவதற்காகத் தானே இந்திய சமுதாயத்தையே பிரித்து வைத்தீர்கள்!

இன்று இந்திய சமுதாயம்  எதிர்நோக்கும் அனைத்து அவலங்களுக்கும் நீங்கள் தானே காரணம்.  ஏதோ நாங்கள் தான் தவறு செய்தது போல பேசுகிறீர்களே?

ஒன்று எங்களுக்குத் தெரியும்.  இந்தியர்களின் ஒற்றுமையை விரும்பாதவர்கள் தான் அன்று போலவே இன்றைய இந்திய அரசியல்வாதிகளும்!  எல்லாரின் இலட்சியமுமே இன்னும் எப்படி அதிகம் சம்பாதிக்கலாம்  என்கிற குறிக்கோளைத் தவிர வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லையே!

நமக்கு ஒற்றுமை இல்லை என்றெல்லாம்  தொடர்ந்து பேசிக் கொண்டிருக்காதீர்கள்.  ஒற்றுமைப்படுத்த உங்களுக்கு  வக்கு  இல்லை என்று வேண்டுமானால் சொல்லுங்கள். இந்த சமுதாயம் எப்போதுமே ஒற்றுமையாகத்தான் இருக்கிறது.  இப்போது இருக்கிற  சில  வெற்றிகள் கூட  எங்களது  ஒற்றுமையால் தான்.

நீங்கள்  -தலைவர்கள் -  எந்தக் காலத்திலும் ஒற்றுமையாக இருக்கப் போவதில்லை என்பது எங்களுக்குத் தெரியும்.  சும்மா எங்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளாதீர்கள். தலைவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாய் இருந்து இந்த சமுதாயத்தை உயர்த்த என்ன வழி பாருங்கள். பணம் பணம் என்று அலையாதீர்கள்.

இருக்கும் ஒற்றுமையையும் குலைத்தை விடாதீர்கள் என்பதே நமது வேண்டுகோள்!

Saturday 27 January 2024

அந்திமகாலத்தின் புலம்பல்கள்!

 டாக்டர் மகாதிர் இன்னும் செய்திகளில் அடிபட்டுக் கொண்டுதான் இருக்கிறார். ஒரே வித்தியாசம். அப்போது அது செய்திகளக இருந்தன.  இப்போது அந்திமகாலத்தின் புலம்பல்களாக இருக்கின்றன! அது தான் வித்தியாசம்.

வயதில் பெரியவர் என்பதால் நாம் இன்னும் அவரை மதிக்கிறோம். ஆனால் சமீபகாலமாக அவரின் பேச்சுக்கள் புலம்பல்களாக மாறிவிட்டன! குற்றம் நம்முடையது அல்ல, அவருடையது தான்.

என்று ஊழல் ஆணையம் தன் மேலும் தன் குடும்பத்தின் மேலும், தன் நண்பர்கள் மேலும்  நடவடிக்கை எடுக்க ஆரம்பித்ததோ அப்போதே புலம்ப ஆரம்பித்துவிட்டார் பெரியவர். தான் செய்த தவற்றுக்கெல்லாம் சீனரையும் இந்தியரையும் குறை சொல்ல ஆரம்பித்துவிட்டார்! 

அதாவது இந்த மூத்த வயதிலும் நாட்டின் அரசியலை திசை திருப்ப முயற்சி செய்கிறார்.  ஆனாலும் இப்போது அவரது நேரம் அவருக்குச் சாதகமாக இல்லை.  மாமன்னர்   அவருக்கு ஆதரவாக இல்லை. இருந்தால் அரசாங்கத்தை இந்நேரம் கவிழ்த்திருப்பார்!

அவருடைய சொந்தப் பிரச்சனையை ஏதோ நாட்டின் விபரீதமான பிரச்சனையாகப் பேசி வருகிறார்!  நல்ல வேளை அவருடைய பேச்சுக்கு  அவர் சார்ந்த  சிறு கூட்டம்  மட்டுமே தலையை ஆட்டுகிறது!  மற்றவர்கள் பெரியவரின் புலம்பல் என்பதாகவே எடுத்துக் கொள்கின்றனர்.

ஆனாலும் அவர் அடங்கி விடுவார் என்பதற்கான அடையாளம்  ஏதுமில்லை. இன்னும் விஷத்தைக் கக்குவதற்கு நிறைய சரக்குகள் அவரிடம்  உண்டு. எல்லாமே இந்தியர், சீனர் சம்பந்தப்பட்டது தான்!  நாட்டில் ஒற்றுமை கூடாது என்பதில் அவர்  ஆர்வமாக இருக்கிறார்!  மலாய்க்காரர்களைத் தூண்டிவிடும் வேலையில் தற்போது ஈடுபட்டிருக்கிறார்.  அதெல்லாம் அந்தக் காலத்தில்  அவர் அரசியலில் கால் எடுத்து வைத்த போது அந்த யுக்தி அவருக்கு வேலை செய்தது. இப்போது அதெல்லாம் பயன் தராது என்பது  இன்னும் அவருக்குப் புரியவில்லை. காரணம் அவரைப் போலவே மற்றவர்களும் திருப்தியோடு தான் இருக்கிறார்கள்!  அது போதுமே! கலவரத்திற்கு வாய்ப்பில்லையே!

இன்னும் என்ன புதிய யுக்திகள் அவரிடம் இருக்கின்றன என்பது கூடிய விரைவில் நமக்குத் தெரியவரும்.  அவர் சும்மா இருக்கப் போவதில்லை. எதையாவது சொல்லிக் கொண்டு தான் இருப்பார். நாமும் ஏதோ ஒரு கிழவரின் புலம்பல் என்பதாகத்தான்  அந்த உளறல்களை எடுத்துக் கொள்வோம்!  வேறு என்ன முக்கியத்துவம் இருக்கப் போகிறது?

நல்லதை அவர் நாட்டுக்குச் செய்திருந்தால் எல்லாம் நல்லது நடக்கும். இல்லாவிட்டால் அதனைப் புலம்பலாகத்தான்  நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்!

Friday 26 January 2024

"பாஸ்" கட்சியினரின் மனமாற்றம்!

 நமது நாட்டின் எதிர்கட்சியான "பாஸ்" கட்சியைப்பற்றி பேசும் போது அவர்களைப்பற்றி நம்மிடம் எந்த நல்லெண்ணமும் இல்லை என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

அவர்கள் கொள்கை என்பது சமயத்தை அவர்களின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்துபவர்கள் என்பதைத் தவிர அவர்களைப்பற்றி பேச வேறு ஒன்றுமில்லை. மற்ற சமயத்தினரைக் கிண்டல் அடிப்பது,  மற்ற இனத்தவரை மட்டம்தட்டிப் பேசுவது - இது தான்  அவர்களின் தலையாயக் கொள்கை.  தங்கள் பலவீனங்களைக் கூட பலம் என்று பேசும் ஓர் அறிவீனமானக் கூட்டம் என்பது தான் அவர்களைப் பற்றியான நமது கணிப்பு. 

அவர்களைப்பற்றியான நமது கணிப்பு இப்படி இருக்கையில் சமீபத்தில் திடீரென  பல்டி அடித்ததை நாம் பார்க்கிறோம்!  உள்நோக்கம்  என்பது இருக்கத்தான் செய்யும். நம் பெரியவர்கள் சொல்லுவார்களே: சொழியன் குடுமி சும்மா ஆடாது என்று.  அது ஏன் ஆடுகிறது என்பது போக போகத்தான் தெரியும்.

கிளந்தான், திரெங்காணு, பெர்லீஸ், கெடா என்று  மலேசியாவின் குறிப்பிட்ட பகுதிகளைத் தவிர  வேறு எல்லைகளைக்  தொடக்கூட   முடியவில்லையே என்கிற கவலை அவர்களுக்கு இருக்கத்தான் செய்யும். எல்லா அரசியல்வாதிகளுக்கும் நாட்டையே ஆள வேண்டும்  என்கிற ஆசை இல்லாமலா போகும்?  

அதனால் தான் எப்போதும் மலாய், இஸ்லாம் என்று பேசிக் கொண்டிருந்தவர்கள் திடீரென தங்கள் கவனத்தை இந்தியர்கள் பக்கம் திருப்பியிருக்கிறார்கள்!  அவர்களின் "தைப்பூசம்  வாழ்த்து!"   என்பது  இந்துக்களை நோக்கி  "நாங்களும் உங்களுடன் கைகோர்க்க விரும்புகிறோம்!" என்று  கூறுவதாகவே நாம் எடுத்துக் கொள்ளலாம்.

ஆமாம் முற்றிலுமாக இஸ்லாமியர்களையே சார்ந்திருக்கும் ஒரு கட்சி  இப்போது மற்ற இனத்தவர்களின் மீதும்  தனது செல்வாக்கைப் பயன்படுத்த விரும்புகிறது என்பதாக எடுத்துக் கொள்ளலாம்.  இது மனமாற்றமா அல்லது இந்தியர்களை  ஏமாற்றும் தந்திரமா?  எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும்.  ஆனால் எங்கள் பாதம் பணிய வைத்துவிட்டோமே!  அது போததா?

இந்த மாற்றத்தை நாமும் வரவேற்கிறோம்! 

Thursday 25 January 2024

நிறைகளைப் பார்க்கலாமே!

 எப்படியோ தைப்பூசம் ஒரு நிறைவுக்கு வந்தது.

மலேசியாவில் எத்தனையோ ஊர்களில்  தைப்பூசம் நடந்து முடிந்தது. எத்தனை ஊர்களில்  நடந்தாலும் மக்களின் கவனம் என்னவோ பத்துமலையில் நடைபெறும் தைப்பூசம் தான்.

முடிந்தவரை என்ன என்ன குறைபாடுகள் உள்ளனவோ அததனையையும் கொட்டித் தீர்த்து விட்டார்கள்! அங்கு நல்லதும் நடந்திருக்கும் கெட்டதும் நடந்திருக்கும்.  நல்லது பற்றி பேசுவதற்கு நம்மில் பலருக்கு மனசு வராது.  நாம் அப்படியே பழகிவிட்டோம்.   நமக்குப் பாராட்டுகிற பழக்கமே இல்லை. குறைகள் மட்டும் தான் நம் கண்களுக்குப் பளிச் எனத் தெரியும்.   நம் கண்கள் அப்படியே பழகிவிட்டன!

இனி ஒர் உறுதிமொழி எடுப்போம். பெரும்பாலோர் ஊடகங்கள். டிக்டாக் என்று எதனையும் விட்டு வைப்பதில்லை. அனைத்திலும் குறைபாடுகளைத் தான் கொட்டுகின்றனர்.  

என்ன தான் குறைபாடுகள் இருந்தாலும்  ஏதாவது, கொஞ்சமாவது  நல்ல காரியங்களும் இருக்கத்தான் செய்யும்.  இத்தனை ஆண்டுகளாக தலைவராக இருக்கும் டான்ஸ்ரீ நடராஜாவுக்குத்  தெரியாமலா இருக்கும்?  நல்லதும் இருக்கத்தான் செய்யும். அவைகளையும் நோண்டி எடுங்களேன்.

குறைகளைக் கண்டுபிடித்தது போதும்.  எத்தனையோ நல்ல காரியங்கள் உண்டு.  அவைகளையும் பட்டியலிட்டு  மக்களுக்குத் தெரியும்படி, மக்களின் கவனத்திற்குக் கொண்டு வாருங்கள். குறைகளைக் கண்டுபிடிக்க நிறைய வாய்ப்புகள்  உண்டு.  அது போல, அதைவிட நிறைகளையும் கண்டுபிடித்து சொல்லுவதற்கும் வாய்ப்புகள் உண்டு. 

நம் மக்கள் மீது  தீராத குற்றச்சாட்டு ஒன்று  நாம் குறை சொல்லுவதற்கும் குற்றச்சாட்டுக்களை அடுக்குவதற்கும்  எல்லையே கிடையாது.  நல்லதைச் செய்தாலும்  அதிலும் குற்றம் கண்டுபிடிக்கின்றனர். ஒரு சிலர் உண்மையில் நொந்து போகின்றனர்.  "என்னடா! எதனைச் செய்தாலும் குற்றம்  சொல்லுகின்றனரே!  இப்படி ஒரு சமூகமா?" என்று தலையில் அடித்துக் கொள்கின்றனர்.

ஆமாம் குற்றங்களையே கண்டுபிடித்தது போதும்.  நாட்டில்  எவ்வளவோ  நல்ல காரியங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.  நல்லது நடக்கும் போது பாராட்டுங்கள்.  குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.

பத்துமலை திருத்தலத்திலும் குறைபாடுகள் இருக்கலாம். அதனை அவர்களிடமே சுட்டிக் காட்டுங்கள். நல்லது நடக்கும் போது அதனைப் பொதுவெளியில் சுட்டிக் காட்டுங்கள்.

நிறைகளையும் பார்க்க கற்றுக் கொள்ளுங்கள்!

Wednesday 24 January 2024

யார் வந்தால் என்ன?

பொதுவாக தைப்பூசம் என்றாலே யார் வருவார் யார் வரமாட்டார் என்கிற விவாதம் நம்மிடையே எழத்தான் செய்கிறது. எழத்தான் செய்யும்.

காலங்காலமாக வருபவர்கள் இப்போது ஏன் வருவதில்லை  என்று கேட்கப்படுகின்ற கேள்வி நியாயமானது தான்.  ஆனால் அதனை எல்லாம் யாரும் காதில் போட்டுக் கொள்வதில்லை.  அவசியமுமில்லை.

எல்லாவற்றுக்குமே ஓர் அரசியல் உண்டு.  அரசியல் எல்லாரையுமே பிரித்து வைக்கக் கூடிய சக்தி வாய்ந்தது.  இப்போது நாம் வாழுகின்ற காலகட்டம் என்பது எந்தப் பிரச்சனையானாலும் அதனை அரசியலாக்குவது, அதற்கு  மதசாயம்  பூசுவது  போன்ற காலகட்டத்தில்  நாம் வசிக்கிறோம்.

வாக்குவங்கி பலமற்று இருந்தால் அதற்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஒன்று வாக்குவங்கி பலமாக இருக்க வேண்டும் அல்லது பொருளாதாரம் பலமாக இருக்க வேண்டும்.  நமக்கு இரண்டுமே பலமற்றுக் கிடப்பதால்  நம்மைப் பெரிதாக யாரும் பொருட்படுத்துவதில்லை. 

ஒரு சிலர் முன்னாள் பிரதமர் நஜிப் பத்துமலைக்கு வேஷ்டி -  ஜிப்பாவுடன்,  வந்தாரே அதே போல ஏன் மற்றவர்கள் வருவதில்லை? என்று கேள்வி எழுப்புகிறார்கள்.   தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் இப்படியெல்லாம்  நடிகர்களாக மாறுவது என்பது சாதாரண விஷயம் தான்!   இன்றைய அவர் நிலை என்ன  என்பதையும் மறந்துவிட வேண்டாம்.  நிச்சயமாக அரசியல்வாதிகள்  யாரும் இனி இப்படி நடிக்கத் தயங்குவார்கள் என நம்பலாம்!    காரணம் நடித்தால் தண்டிக்கப்படுவாய் என்பது தான் நீதி. அது எந்தத் தெய்வமாக இருந்தால் என்ன? நீ தண்டிக்கப்படுவாய்!

தைப்பூசத் திருவிழா என்பது இந்துக்களுடைய  பெருவிழா. அது அப்படியே இருக்கட்டும். யார் வேண்டுமானாலும் வரட்டும். வேண்டுதல் செய்யட்டும். ஆனால் வராதவர்கள் பற்றி கவலைப்படத் தேவை இல்லை. அதுவும் குறிப்பாக அரசியல்வாதிகள்.  அவர்கள் வராததற்குப் பல காரணங்கள் உண்டு. அதனுள் நாம் போக வேண்டாம். அது அவர்கள் பிரச்சனை.

கலந்து கொள்பவர்களைக் கௌரவியுங்கள். இந்த விழாவில்  அமைச்சர் கோபிந் சிங் கலந்து கொண்டார் நல்ல செய்தி.  அவரை ஒதுக்குவதற்கு  எந்த நியாயமுமில்லை.  இந்தியர்களுக்கு  தான் எதனையும் செய்யப்போவதில்லை என்று  என்றுமே அவர்  சொன்னதில்லை. அப்படி அவர் சொல்லவும் மாட்டார்.

அதனால் யார் வருகிறார்கள், வரவில்லை என்பது கோவில் நிர்வாகத்தின் பிரச்சனை அல்ல.  வந்ததை  வரவில் வைப்போம்!    அவ்வளவுதான்!

Tuesday 23 January 2024

மக்கள் குவிந்தனர்!

 

பத்துமலைத் திருத்தலத்தில் பக்தர்கள் குவிந்தனர்!

பத்துமலை தேவஸ்தானம் சுமார் இருபது இலட்சம் பகதர்கள்  வருகை தருவர்  என மதிப்பிடுகிறது.  அதற்கு மேலும் போகலாம். நல்ல பருவ நிலை என்றால் யாரையும் நிறுத்திவிட முடியாது.

வழக்கம் போல தேவஸ்தானம் 'எது செய்ய வேண்டும், எது செய்யக் கூடாது' என்று அறிவித்துக் கொண்டுதான் இருக்கிறது.  நம் மக்களுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் எதுவும் காதுக்கு எட்டப் போவதில்லை!

குடித்துவிட்டு காவடி ஆட்டம் ஆடிய  காலிகளைக் காவல்துறை கைது செய்திருப்பதாகத் தகவல்.  காவடிகளுக்கும் காவடிகளுக்கும் மோதலாம். அதுவும் கூட வருங்காலங்களில் குண்டர் கும்பல் கலாச்சாரமாகக் கூட  மாறலாம். முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

தங்க நகைகளை அணிந்து கொண்டு வரவேண்டாம்  என்று சொன்னாலும்  யாரும் கேட்பதில்லை. குமரிகள் கேட்டாலும் பாட்டிகள் கேட்பதில்லை போலத் தோன்றுகிறது. பாட்டியின் சங்கிலியை அறுத்த பெண்மணி ஒருவர் கையும் களவுமாகப் பிடிபட்டிருக்கிறார்.  இது நாள் வரை திருடன் என்றால் வெளிநாட்டவரைத் தான் நாம் நினைத்துக் கொண்டிருந்தோம். இவரும்  வெளிநாட்டுக்காரர் தான், ஸ்ரீலங்காவைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது.  நாம் எதிர்பார்க்கவில்லை ஒரு பெண்மணி  இப்படிச் செய்வார் என்று.  மிக சோகம்.

வழக்கம் போல இப்போதும் நிர்வாகத்தின் மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு. வெளிநாட்டவர்களுக்குச் பத்துமலையில் வியாபாரம் செய்ய இடங்களை அள்ளி அள்ளிக்  கொடுத்திருக்கிறதாம் நிர்வாகம். வியாபாரக் கண்கொண்டு  பார்த்தால் அது தவறில்லை.  நமது இனம் என்று பார்த்தால் அது தவறு தான்.  நம் இன முன்னேற்றத்தைப் பற்றி  நிர்வாக எந்தக் கவலையும் படவில்லை என்று தெரிகிறது.  கவலைப்பட வேண்டிய இடத்தில் டான்ஸ்ரீ நடராஜா இல்லை என்பதும் தெரிகிறது. வாழ்க அவரின் இனப்பற்று!

எப்படியோ பத்துமலை என்பது இந்து பகதர்களுகான  சிறப்பான திருத்தலம்  இந்த அளவு கூட்டம்  மலேசியாவில் வேறு எந்தவொரு  திருத்தலத்திலும் கூடுவதில்லை.  அதில்  வருகின்ற வருவாய் முற்றிலுமாக தமிழர்களின் நலனுக்காகப் பயன்படத்தப்பட வேண்டும் என்பதே நமது நோக்கம்.

இந்த ஆண்டும் முருகப்பெருமான் தமிழ் மக்களுக்கு தனது ஆசிரை வழங்குவாராக!

Monday 22 January 2024

அரசியல் அளவாக இருக்கட்டும்!




 நாம் அதிகம் அரசியல் பேசுபவர்கள் என்கிற குற்றச்சாட்டு உண்டு! அது உண்மையா?

மலாய்க்காரர் அரசியல் பேசினால் அவர்களுக்கு ஆதாயம்.  கல்வியிலே சலுகை,  வியாபாரத்தில் இன்னும் வாய்ப்புக்கள் அவர்களுக்குக் கிடைக்கும்.   சீனர்கள் அரசியல் பேசினால்  பொருளாதாரம் உயர்த்தப்படும். இதில் பிரச்சனைக்கு உரியவர்கள் இந்தியர்கள் தான்.அதுவும் குறிப்பாகத் தமிழர்கள்.  அரசியல் பேசினால் அதிகம் பேசுகிறார்கள் என்பார்கள்.  கோச டப்பாக்கள் என்பார்கள். நாம் என்ன தான்  பேசுகிறோம் என்பது நமக்கே தெரியாத போது  ஆள்பவர்கள் என்ன செய்வார்கள்?

நாம் என்ன தான்பேசினாலும் அது குடிகாரன் பேச்சு என்பதாக மாறிவிடும்.  நம் குரல் ஒரே குரலாக மாறுவதில்லை. ஆயிரம் பேரும் பேசுவார்கள்  ஆயிரம் கருத்துக்களைச் சொல்லுவார்கள். ஆளாளுக்குப் பேசுவார்கள். கடைசியில் என்ன தான் சொல்ல வருகிறோம் என்பதை யாரும் புரிந்து கொள்வதில்லை. சொல்ல வந்த கருத்தும் எங்குப் போய் சேர வேண்டுமோ அங்குப் போய் சேருவதில்லை.

நாம் சொல்ல வருவதெல்லாம் ஒரு கருத்தை மட்டும் தான்.  நாம்  அனைவரும் ஒரே கருத்தைத்  தான் பேசுகிறோம்.  அதைத்தான் வலியுறுத்துகிறோம்.  ஆனால் ஒரே குரலாக ஒலிக்கவில்லை.  அஞ்சடியில் பேசுகின்ற பேச்சாக மாறிவிடுகிறது!

எந்தக் குறையும் இல்லாமல் ஏகப்பட்ட கட்சிகளை வைத்திருக்கிறோம். தலைமை தாங்குகிறவர்கள் அனைவரும் வழக்கறிஞர்களாக இருக்கிறார்கள்.  எப்படியாவது அமைச்சர் பதவியை எட்டிவிட வேண்டும் என்கிற ஆசை தான்.  மக்களுக்கு நம்மால் என்ன செய்ய முடியும் என்கிற எண்ணம் யாருக்கும் இல்லை.

இப்படியே ஆளுக்கு ஆள் பேசியே கடைசியில் நாம் என்ன நினைத்தோமோ அது போய்ச் சேர வேண்டிய இடத்திற்குப் போய்ச் சேருவதில்லை.  இதைத்தான் வெற்று அரசியல், வெத்துவேட்டு அரசியல் ஒரு பயனும் இல்லாத அரசியல் என்கிறோம்.

நாம் அனைவரும் ஆளாளாலுக்குப் பேசுவதைவிட  நமது குரலாக ஒரு தலைவர்  ஒலிக்கட்டும்.  நமக்கு எந்தக் காலத்திலும் தலைவர் பஞ்சம் இருந்ததில்லை.  நமது கருத்தை அரசாங்கத்திடம் போய் ஒரு குழுவினராகச்  சென்று கூற வேண்டிய கருத்தைக் கூறட்டும்.  எல்லாரும் அவரவருக்குத் தனிபட்ட  முறையில் வெளியே இருந்து கத்திக்கொண்டு இருப்பதைவிட நமது சார்பில் யாராவது பேசட்டும். 

இப்போது நமது குரல் அரசாங்கம் வரை  கொண்டு செல்ல யாருமில்லை. நாம் அரசியலில் செல்லாக்காசுகள்.  ஒத்த குரலாக ஒலிக்காதவரை நாம் ஒதுக்கப்பட்டுக் கொண்டே தான் இருப்போம்.

அரசியல் பேச வேண்டும் ஆனால் அளவாக இருக்கட்டும்.  ஒரே குரலாக ஒலிக்கட்டும். அதே  பிழைப்பாக  இருக்க வேண்டாம்! வேறு வேலைகளும் நமக்குண்டு!
 

Sunday 21 January 2024

"சத்து மாக்கான் டூவா மவ்!"


நமது நாட்டின் கறிபாப்  உலக அளவில் புகழ்பெற்றிருப்பதைப் பார்க்கும் போது நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.  உலகத் தரவரிசையில் இந்த பலகாரம்  ஐந்தாவது இடத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

நான் சிரம்பானின் உள்ள  சென்பால் பள்ளியில்  எனது கலவியை ஆரம்பித்த போது இந்த கறிபாப் எனக்கு அறிமுகமானது.  தமிழர் ஒருவர் ஒரு நீண்ட மூங்கிலால்  செய்யப்பட்ட கூடையில்  இந்த பலகாரத்தை சுமந்து கொண்டு வருவார். பள்ளி இடைவேளையில் நாங்கள் வாங்கிச் சாப்பிடுவோம். அற்புதமாக இருக்கும்.  அதன் உள்ளே உருளைக்கிழங்கும் ஒரு சிறிய துண்டு கோழி இறைச்சியும் இருக்கும். அது போதும்.  வீடு போய் சேரும்வரை பசி எடுக்காது!  அது தானே நமக்குத் தேவை?

அதன் விலையை இப்போது ஞாபத்திற்குக் கொண்டுவர முடியவில்லை என்றாலும் ஐந்து காசாகத்தான் இருக்க வேண்டும். கிடைப்பதோ பத்து காசு - ஐந்து காசு கறிபாப் ஐந்து காசு ஐஸ் தண்ணீர்.   காலை சிற்றுண்டி முடிந்தது!

அந்தப் பெரியவர் அதன்பின்னர் சிரம்பான் பேரூந்து நிலையத்தில்  தொடர்ந்து கறிபாப் விற்றுக் கொண்டிருப்பார். "சத்து மாக்கான் டுவா மவ்"  என்று கூவி கூவி விற்றுக் கொண்டிருப்பார்! அதாவது ஒன்று சாப்பிட்டால் இரண்டு கேட்பீர்கள்  என்பது அதன் பொருள்

ஆரம்ப காலத்தில் தமிழர்கள் தான் இந்த வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பார்கள் என நினைக்கிறேன். சிரம்பானில் இன்றளவிலும் இந்த வியாபாரம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. கறிபாப், ஓமப்பொடி,  வறுத்த கச்சான்,  வடை எல்லாமே உண்டு.  ஆனால் இந்த கறிபாப் மட்டும் வெவ்வேறு வடிவங்களில் பல கலவைகளில்  வெளி வருகின்றன.   சீனர்கள்,  மலாய்க்காரர்கள் புதுமைகளைப் புகுத்திவிட்டதினால் வந்த  மாற்றங்கள் இவை.   எனக்கென்னவோ  தமிழர்கள் செய்கின்ற கறிபாப்புக்குத்தான்  முதலிடம்.

எனக்குத் தெரிந்த  ஒரு குடும்பத்தினர் அந்த காலகட்டத்திலேயே ஏதாவது விசேஷம் என்றால்  கேக் மற்றும் பல்வகைப் பலகாரங்கள் செய்து தருவதைப் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் சீனர்கள் கேக் வியாபாரம் செய்வதைப் பார்த்ததில்லை.  நம்முடைய பிரச்சனை எல்லாம் நமது வியாபாரங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதை தவிர்த்துவிட்டோம்.  காரணம்,   "நான் பட்ட கஷ்டத்தை எனது பிள்ளைகள் படக்கூடாது"  என்கிற  நொண்டிச் சாக்கால்  ஒன்றும் இல்லாமல் போனோம்!

எந்த ஒரு வியாபாரமும், அது மிகச் சிறிய அளவாக இருந்தாலும், அதனை விட்டுவிடக் கூடாது என்பதை நாம் சீனர்களிடமிருந்து  கற்றுக்கொள்ள வேண்டும்.  அங்கு ஒரு வருமானம்  வருவதை ஏன் விடவேண்டும்? அதனை அடுத்த தலைமுறைக்கும் கடத்த வேண்டும். ஒரு வேளை அதனை அவர்கள் பெருந்தொழிலாக மாற்றி அமைக்கலாம், அன்றோ?

எல்லாச் சிறிய தொழில்களும் அடுத்து பெரிய தொழில்களுக்கான பாதையைப் போட்டுத்தரும். கறிபாப் சிறிய தொழில் அல்ல.  இன்று அது இல்லாத இடமே  இல்லை. சாதாரண வியாபாரிகள் தொட்டு பெரும் வியாபாரிகள் வரை ஒங்கி வளர்ந்து கொண்டிருக்கிறது.

Saturday 20 January 2024

நாட்டின் வளம் நமக்குந்தான்!

 

இந்த நாட்டின் வளம் நமக்கும் சேர்த்துத்தான்.  அந்த வளத்தை யாரும் ஒளித்து  வைக்கவில்லை.  அது மலாய்க்காரர், சீனர், இந்தியர் என்று யாரும் பிரித்து வைக்கவில்லை. 

நாட்டின் வளம் எல்லாருக்கும் பொதுவானது. தேவை எல்லாம்  கொஞ்சம் முயற்சி அவ்வளவு தான்.  மற்றவர்களிடம் அந்த முயற்சி  உண்டு நம்மிடம் இல்லை. அது தான் பிரச்சனை.

நாம் எல்லாகாலங்களிலும்  யாரோ ஒருவரிடம் கைகட்டி வேலைசெய்யவே விரும்புகிறோம். சொந்தமாக ஓர் ஆணியைக் கூட புடுங்க விரும்புவதில்லை. அப்புறம் எங்கே ஆணியை அடிப்பது பிடுங்குவது  நடக்கும்?  அதனைச் செய்தால் அது சொந்தத் தொழிலாக மாறிவிடும். நாம் செய்வதில்லை!

சீனன் பணக்காரன் என்பது நமக்குத் தெரியும். அதெப்படி அவர்களால் முடிந்தது?  நமக்கு ஆணி அடிக்கத் தெரியும் என்பது சீனனுக்குத் தெரியும்.  அவன் நம்மைப் பயன்படித்துக் கொள்கிறான்!  நாம் அவனிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு ஆணி அடித்துக் கொண்டே இருக்கிறோம்!  இதற்கு ஒரு முடிவே இல்லையா?  முடிவு உண்டு.  முதலில் நமக்கு ஆணி அடிக்கத் தெரியும் என்பதை நாம் நம்ப வேண்டும்.  அதன் பின்னர் தான் தொழில்  செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் நமக்கு வரும்.

ஒன்றை மறந்து விடாதீர்கள்.  நாட்டில் எல்லா வளங்களும் உண்டு. அது ஏதோ ஓர் இனத்துக்கு மட்டும் அல்ல. அனைத்து இனங்களுக்கும் தான்.

வெளிநாடுகளிலிருந்து வந்த வங்காளதேசிகள், பாக்கிஸ்தானியர்கள், மியான்மார் ரோகிங்யாக்கள் - இப்படி பலரும் இங்கு வந்து தொழில் செய்கிறார்கள். நாமும் அவர்களிடம் பொருட்களை வாங்குகிறோம்.  அதனையே நம்மால் செய்ய முடியாதா?  கொஞ்சம் யோசியுங்கள்.

எல்லாத் தொழில்களையும் நம்மாலும் செய்ய முடியும்.  காரணம் நம்முடைய பின்னணியே வியாபாரத்தைச் சார்ந்தது தான்.  சரி அப்படியில்லை என்று நீங்கள் நினைத்தால் மற்றவர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள். அவ்வளவு தான்.  

நாட்டின் வளம் யாருக்கோ அல்ல. நமக்குந்தான்.  நாம் தான் நகராமல் இருக்கிறோமே தவிர அதற்கு யாரோ காரணம் அல்ல.  இனி மேலும் யார் யாரையோ குற்றம்  சொல்லுவதை விட்டு  'குறை நம்மிடமே' என்பதை ஒப்புக் கொண்டு வளத்தை நோக்கி நகர்வோம்!

நமது வளர்ச்சியே நமது வெற்றி!

Friday 19 January 2024

வீட்டு வாடகை செலுத்தாவிட்டால்?

 வீட்டு வாடகை செலுத்தாவிட்டால் என்ன நடக்கும்? 

வீடு காலி செய்ய  வேண்டி வரும். விட்டிலுள்ள பொருட்கள் அனைத்தும்  நடுரோட்டுக்கு வரும். இதெல்லாம் தெரிந்து தான் நாம் வாடகை வீடுகளில் வசிக்கிறோம். வாடகைக்கு விடுபவர்களை வள்ளல்களாக நினைத்தால் அது அவர்களது குற்றமல்ல.

அதனால் தான் ஒருவர் சொன்னார்: உன் தலைக்கு மேல் கூரை இருக்குமானால்  நீ   கோடிஸ்வரன் என்று. ஆமாம், அந்த கூரை உனக்குச் சொந்தமாக இருக்க வேண்டும். கொஞ்சம் ஓட்டை உடைசலாக இருந்தாலும் அது உன் கூரை. உன் சொந்தம். நீ அங்கு தாராளமாக அங்குக் குடியிருக்கலாம்.  யாரும் உன்னைக் காலி செய்யச் சொல்லமாட்டார்கள். நேரம் வரும் போது, உன் கையில் பணம் வரும்போது நீ அதனை அரண்மனையாக மாற்றிவிடலாம்!

இப்போது சமீபகாலமாக நமது மக்களுக்குச் சோதனையான காலம் என்று தான் சொல்ல வேண்டும்.  வேலைகள் குறைந்து வருகின்றன. இன்னும் பல தொழிசாலைகள் மூடுவிழா கண்ட நிலையிலேயே இருக்கின்றன. தொழிற்சாலைகள் திறக்கப்பட்டால் தான்  அவர்கள் மீண்டும் வேலைக்குப் போக முடியும் என்கிற சூழல். ஏதோ வீட்டில் மனைவி வேலை செய்தால் கொஞ்சம் சமாளிக்கலாம்.

ஒன்று மட்டும் நமக்குப் புரியவில்லை. இங்கு வேலை இல்லை என்று சொல்லி நமது மக்களில் பலர் சிங்கப்பூர் போகிறார்களாம்.  அங்கு மட்டும் எப்படி வேலை வாய்ப்புக்களை உருவாக்குகிறார்கள் என்று நமக்குத் தெரியவில்லை. நாம் எங்கே குறைந்துபோனோம் என்பதும் புரியவில்லை.

நமது அரசியல்வாதிகள் ஏதும் நாச வேலைகளில் ஈடுபடுகிறார்களா? மக்களின் நலன் தான் அரசுக்கு முக்கியம்.  நம் நாட்டின் நிலைமை இந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து போனது ஏன்? இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகள் நம்மைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு  முன்னுக்குப் போய்விட்டன என்று சொல்லப்படுகின்றது.`

நமது இளைஞர்கள் பலர் வெளிநாடுகளுக்குப் போய்  சிக்கல்களில் மாட்டிக் கொள்கின்றனர். விளம்பரத்தை நம்பி ஏமாந்து போகின்றனர். எப்படிப் பார்த்தாலும் இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுப்பது  அரசாங்கத்தின் கடமை. 

நம் நாட்டில் பல இந்திய குடும்பங்கள் வேலை இல்லாமல் பல சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர். வேலை இல்லை, வீடு இல்லை அப்படி என்றால் சாப்பாடும் இல்லை.

குடுமபத் தலைவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது. குடித்து கும்மாளம் அடிக்க வேண்டும் என்று நினைத்தால்  குடும்பம்  தெருவுக்குத் தான் வரும்.

Thursday 18 January 2024

குடிதான் நமது வீழ்ச்சி!


 எல்லா காலங்களிலும், அப்போதும் சரி இப்போதும்  சரி நமது அடையாளம் என்றால் அது நிரந்தர குடிகாரன் அடையாளம் தான்!  

அதனை மறக்கவோ மறுக்கவோ  முடியாத ஓர் அடையாளம்!

நம் நாட்டில் ஒவ்வொரு  இனத்திற்கும் ஓர் அடையாளம் உண்டு.  சோம்பேறி,  பேராசை, குடி - முறையே மலாயக்காரர், சீனர், இந்தியர் இப்படித்தான் பொதுவாக  அடையாளம் கூறப்படுகின்றது.

ஆனாலும் இதில் எந்த உண்மையும் இல்லை. ஒவ்வொரு இனத்திலும் ஒரு சிலர் இருக்கத்தான் செய்வர்.  அதற்காக  அனைவரையும் இப்படித்தான் என்று  முத்திரைக் குத்துவது  பொருத்தமற்றது.  ஆனாலும் அது என்னவோ அப்படித்தான் தொடர்கிறது.

எத்தனையோ பேர் சொல்லி விட்டார்கள். எழுதிவிட்டார்கள்.  கேட்பதாகத் தெரியவில்லை.  எனக்குத் தெரிந்த ஓர் இளைஞனிடம் சொன்னதை மீண்டும் சொல்லுகிறேன். அவன் திருந்திவிட்டான். ஏன் உங்களால் முடியாது?   உன் குடும்பத்திற்குத் தேவையான தேவைகளை, செலவுக்கான தொகையை உன் மனைவியிடம் கொடுத்துவிடு. பள்ளி செல்லும் உன் மகளுக்கான செலவையும் கொடுத்துவிடு. அந்தக் குழந்தைக்கு மாதம் ஐம்பது வெள்ளி வங்கியில் சேர்த்து வை.  குடும்பத்தின் தேவை அவ்வளவு தான்.  மீதப் பணம் மட்டும் தான் உனது பணம். அது உன் சொந்த செலவுக்கு.

நான் சொன்னது  அவ்வளவு தான். அவன் அதனைக் கடைப்பிடித்தான். அதன் பின்னர் அவன் குடும்பத்தில் சண்டை, சச்சரவு ஏதுமில்லை. அது போதுமே,   குடும்பத்தில் சண்டை சச்சரவு இல்லை என்றால் அவன் குடிகாரன் என்பது கூட வெளியே தெரிய நியாயமில்லை.

குடிக்கவே கூடாது என்று யாரும் சொல்ல வரவில்லை. அந்தக் குடியை உன்னோடு வைத்துக்கொள். உன் குடும்பத்திற்குள் கொண்டு வராதே. குடும்பத்தைச் சீரழிக்காதே என்பதைத்தான் நாம் சொல்ல வருகிறோம்.

நமது இன வீழ்ச்சிக்கு யார் யாரையோ குறை சொல்லுகிறோம். அரசாங்கம் சரியில்லை. நமது தலைவர்கள் சரியில்லை  என்று நம்மிடையே நீண்ட பட்டியைலைக் கொண்ட குற்றச்சாட்டுக்களை வைத்திருக்கிறோம்.  ஆனால் முதல் குற்றவாளி என்றால் அது யார். குடும்பத் தலைவர்களைத் தவிர வேறு யாருமல்ல. குடும்பத் தலைவர்  சரியாக இருந்தால்  எல்லாம் சரியாக இருக்கும். அந்தக் குடும்பமே நல்ல நிலையில் இருக்கும்.

இன்று நம்மைப்பற்றி வெளிப்படையாக  பேசப்படும் இந்த 'மாபோக்'   கலாச்சாரத்திற்கு  முற்றுப்புள்ளி வைக்கும் வரை அந்த அடையாளம் நம்மைத்  தொடரத்தான் செய்யும்.

குறைந்தபட்சம் நீங்களாவது இன்றோடு இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பீர்களா? உங்கள் வீழ்ச்சியைத் தடுப்பீர்களா?

Wednesday 17 January 2024

இன்னும் ஏன்?



முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் "விசுவாசம்" பற்றியான செய்தி இன்னும் முற்றுப்புள்ளி வைக்க முடியாத அளவுக்கு இன்னும் நீண்டு கொண்டே போவது வருத்தம் அளிக்கிறது.

அவருடைய கருத்தைச் சொன்னார்.  அதனை இந்த அளவுக்குப் பெரிது படுத்த வேண்டிய அவசியமில்லை.

டாக்டர் மகாதிர் மலேசிய அரசியலில் செல்லாக்காசாகிப் போனவர். அவர் கொடிகட்டிப் பறந்த காலத்திலேயே அவருடைய கருத்தை யாரும் மதிக்கவில்லை.

இப்போது அவரின் நிலையோ தலைகீழாக மாறிவிட்டது. எதையும் சொல்லுவார், எதையும் பேசுவார்  என்கிற நிலைமைக்கு வந்துவிட்டார்.அவருடைய அரசியல் ஆரம்பமே இனக் கலவரத்தில் தோன்றியது தான்.  அதை வைத்தே அவர் அரசியல் நடத்தியவர்.

அப்போது பேசியது போலவே இப்போதும் பேசுகிறார். இனங்களைத் தூண்டிவிட்டு வேடிக்கைப் பார்ப்பது அவரது இயல்பு. ஒரு சரித்திர சான்றைச் சொல்லுவார்களே:  ரோம் நகரம்  பற்றி எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்தனாம். அந்த கதை தான்  மகாதிர்.  நாட்டில் கலவரம் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.  தான் மட்டும் மகழ்ச்சியாக வாழ வேண்டும். அது தான் மகாதிர்.

அமைதியை விரும்பாதவர்.  மக்களின் மகிழ்ச்சியை விரும்பாதவர். இன்று நாடு இந்த அளவுக்கு சீர்கேடு அடைந்ததற்கு அவர் தான் காரணம். சீனர்கள், இந்தியர்கள்  - வந்தேறிகள் அவர் உள்பட. இந்த வந்தேறிகளின்  பணத்தை வைத்துத்தான்,  தான், தன் குடும்பம், தனது நண்பர்கள் அனைவரையும் மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து கோடிஸ்வரனாக்கியவர்!  அவரது குடும்பத்தினரின் சொத்துகளைக் கணக்கெடுத்தாலே  அது புரிந்துவிடும்.

இப்போது நாம் செய்ய வேண்டியது என்ன?  அவரை நாம் மறந்துவிட வேண்டும்.  அவர் இந்தியர்களுக்குச் செய்த துரோகங்கள் நிறைய உண்டு. அதுவும் பொருளாதார ரீதியில் நம்மை மொட்டை அடித்தவர்  அவர்     எப்படியும் பேசுவார். 

அதனால் அவரை மன்னிப்போம்! மறப்போம்!   வயதானவர்கள் மீது நமக்கொரு மரியாதை உண்டு.    இதனையும் அவருடைய உளறல்களில் ஒன்றாக எடுத்துக் கொள்வோம்.

இனி அவரைப்பற்றி பேசுவதைத் தவிர்ப்போம்!

Tuesday 16 January 2024

நாட்டிற்கு விசுவாசமாக இல்லை!

 


பொதுவாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர், இன்றைய நிலையில், ஒரு தேவையற்ற அரசியல்வாதி!

அவருடைய கருத்து என்ன என்பது பற்றி யாருக்கும் கவலையில்லை. ஒரு பெரிய மனிதர், குறைந்தபட்சம் வயதில் பெரியவர்,  என்பது பற்றிக் கூட யாருக்கும் கவலையில்லை. அவர் அந்தத் தகுதியை  எப்போதோ இழந்துவிட்டார்.  எதைப் பற்றி பேசவும் அவருக்குத் தகுதி இல்லை என்கிற நிலைக்கு வந்துவிட்டார்.  நாம் தான் அவரை ஒரேடியாக இன்னும் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறோம்!

நாட்டிற்கு விசுவாசம் என்றால் அவர் என்ன சொல்ல வருகிறார்?  நான்கு, ஐந்து பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் அவர்கள் ஒவ்வொருக்கும் நானூறு, ஐனூறு கோடி ஊழல் மூலம் சொத்துக்களைச் சேர்த்து வைத்துவிடுங்கள். அதுதான்  அவர் சொல்லும் விசுவாசம்! அவரது காலத்து  மலாய் அரசியல்வாதிகளின் பின்னணியைப் பாருங்கள். மிக மிகச் சாதாரண நிலையில் இருந்தவர்கள் அனைவரும் இன்று பெரும் பெரும் கோடிஸ்வரர்கள்! இன்றும் அது தொடரத்தான் செய்கிறது.

இப்படி நாட்டின் வளத்தைச் சுரண்டி அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் கோடிஸ்வரர்களாக்குவது தான் "நாட்டுப்பற்று" என்றால் அவரே அதை வைத்துக் கொள்ளட்டும்! நமக்கு அது தேவையில்லை. நாம் உழைக்கும் சமூகம்.  உழைப்பின் பெருமை நம்மிடம் உண்டு. உழைப்பில் உயர்வோம் என்கிற உயர்ந்த நோக்கம் நம்மிடம் உண்டு.

இலஞ்சம் ஊழல் மூலம் தன்னையும் தனது குடும்பத்தையும் கோடிஸ்வரராக்கிக் கொண்ட ஓர் ஊழல் அரசியல்வாதி  இந்திய சமூகத்தை விசுவாசமற்றவர்கள் என்று கூறுவதைப் பெரிதுபடுத்த வேண்டிய  காரணம் எதுவும் இல்லை.  நாட்டு நலனைப்பற்றி சிந்திக்காத  ஓரு முன்னாள்  ஊழல் அரசியல்வாதியான டாக்டர் மகாதிர் சொல்லுகின்ற கருத்துக்களைப் பெரிதுபடுத்தாதீர்கள்.

ஒரு வயதானவர்  என்பதால் நாம் அவரை மதிக்கிறோம்.  அது நமது பண்பாடு.  அவர் நம்மை மிதிக்கிறார் என்றால் அவர் ஒரு பண்பாடு அற்ற மனிதர். அவ்வளவு தான்!

போட்டிக்குப் போட்டி என்று சொல்லி கடும் சொற்களைப் பயன்படுத்த வேண்டாம்.  இதுவும் கடந்து போகும்!

Monday 15 January 2024

இனிய பொங்கல் வாழ்த்துகள்!

 


                                உலகத் தமிழர் அனைவருக்கும்

                                மலேசியத் தமிழர் அனைவருக்கும்

                                இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!


Sunday 14 January 2024

மன்னிக்க வேண்டுகிறேன்!




மன்னிக்க வேண்டுகிறேன்! கணினி செய்த சதியால் ஆண்டின் ஆரம்பமே பிரச்சனைக்கு உள்ளாகிவிட்டது!

மன்னிக்க!  மன்னிக்க!   

இனி தொடரும்!

Monday 1 January 2024

வெற்றிகரமான 2024-ம் ஆண்டு!

 

யாரோ என்னவோ சொல்லிவிட்டுப் போகட்டும். 2014-ம் ஆண்டு பலர் பலவிதம் அதுவும் குறிப்பாக ஜோஸ்யர்கள் என்ன சொல்லுகிறார்கள்  என்று உற்று உற்று  நோக்க வேண்டிய அவசியமில்லை.  அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது முக்கியமல்ல.   நாம் எப்படி இந்த ஆண்டை எதிர்நோக்கப் போகிறோம்  என்பது தான்  முக்கியம்.

வழக்கம் போல 'ஏதோ இன்னொரு ஆண்டு' என்று சும்மா தள்ளிவிடாதீர்கள். ஓரு புதிய ஆண்டு நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றது.  அதற்கே நாம்  புண்ணியம் செய்திருக்க வேண்டும்.  எத்தனையோ பேருக்கு அந்த பாக்கியம் கிட்டவில்லை.  ஆமாம் நேற்று இருந்தார் இன்றில்லை! நாம் இருக்கிறோமே!  அதுவே பெரும் புண்ணியல் அல்லவா?

இந்த நேரத்தில் நான் கேட்டுக் கொள்வது ஒன்றே ஒன்று தான்.   நமது குடும்பங்களின்  வளர்ச்சி  நமக்குப் பெருமை அளிக்கும் வகையில் உள்ளதா என்பது தான்.  

நாட்டி வளர்ச்சிக்கு - பொருளாதார வளர்ச்சிக்கு - நமது தலைவர்கள்  பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.  ஜப்பான், சைனா, அரபு நாடுகள்  என்று பல நாடுகளுக்குச் சென்று, இந்நாட்டில் தொழில் செய்ய அழைப்பு விடுக்கின்றனர்.  அந்நாடுகளில் உள்ள தொழிலதிபர்கள்  பணத்தை இந்நாட்டில் முதலீடு செய்தால்  தான் நமக்கு வேலை கிடைக்கும்.  நாம் பிழைக்க முடியும்.  முதலீடுகளைக் கொண்டு வருவது  நமது தலைவர்களின் கடமை.

குடும்பத் தலைவர்களாகிய நமக்கு உள்ள கடமைகள் என்ன?  நம்முடைய பொருளாதார  வளர்ச்சிக்கு நமது பங்கு என்ன?   வேலை செய்வது தான் நமது இலக்கா?  தொழிற்சாலைகள் இழுத்து மூடப்பட்டால் அத்தோடு நமது வாழ்க்கையும் இழுத்து மூடப்படுமா?  அப்படி ஒரு  வாழ்க்கை நமக்குத் தேவையா?

இந்நாட்டில் யார் நமக்கு வேலை கொடுக்கிறார்? சீனர்கள் தானே.  ஏன் நாம் மட்டும் காலம்பூராவும் வேலை செய்பவர்களாகவே இருக்கிறோம்? அந்த சீனர்கள் போல் ஏன் நமது நிலையை நாம் உயர்த்திக் கொள்ளக் கூடாது? 

இந்த புத்தாண்டில் அது பற்றி சிந்திப்போம்.  இந்நாட்டில் யார் வேண்டுமானாலும் தொழில் செய்து பெரும் முதலாளிகளாக ஆக முடியும். நாம் தொழிலாளியாகவே  இருக்க வேண்டும் என்று யாரும் சொல்ல வில்லை. நாமே தான் அப்படி ஒரு முடிவு செய்து அப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

வரும் ஆண்டை வெற்றிகரமான ஆண்டாக நாம் பயன்படுத்திக் கொள்வோம்.  வெற்றியே நமது இலக்காக இருக்கட்டும்!