Monday, 31 October 2016

கேள்வி - பதில் (33)


கேள்வி

ஜெயலலிதா - கருணாநிதி உடல் சுகவீனத்திற்கு பில்லி சூனியம் தான் காரணம் என்று இப்போது புதிதாக செய்திகள் வெளியாகின்றனவே! இப்படியும் நடக்குமா?

பதில்

அரசியல்வாதிகள் எதனையும் செய்யத் தயங்காதவர்கள் என்பது பொதுவான ஒரு குற்றச்சாட்டு உண்டு.

இந்தக் குற்றச்சாட்டை எழுப்பியிருப்பவர்  ஒரு ஜோதிடர் என்பதாகச் செய்திகள் கூறுகின்றன.

ஜெயலலிதாவுக்கும் ஜோதிடர்களுக்கும் உள்ள தொடர்பை தமிழகமே அறியும். அதில் ஏதும் ரகசியம் இருப்பதாகத் தெரியவில்லை. அவர் செய்கின்ற ஒவ்வொரு காரியமும், ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு செயலும் ஜோதிடர்களின் அறிவுரைப்படி தான் நடக்கின்றன என்பதை ஊரறியும்.

அவரை ஆட்சியில் அமரவைத்த அவருடைய ஜோதிடர்கள் இந்த உடல் சுகவீனத்தைப் பற்றி ஏன் அவரிடம் சொல்லவில்லை? ஏன் அவர்களுக்குத் தெரியவில்லை? ஏன் அவருக்குத் தெரிவிக்கவில்லை?

ஜெயலலிதா கடவுளை நம்பினாரோ,  நம்பவில்லையோ ஆனால் அவர் ஜோதிடர்களை அளவுக்கு அதிகமாகவே நம்பினார்!  அரசியலை முன் அறிந்த ஜோதிடர்கள் அவருடைய உடல்சுகவீனத்தை ஏன் முன்னறியவில்லை? இப்படிக் கேள்விகளை அடுக்கிக்கொண்டு போகலாம். ஆனால் பதில் தான் இல்லை! நம்மிடம் உள்ள ஒரே பதில்: காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையைத்தான் நாம் நினைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது!

ஜோதிடர்கள் அரசியலைக் கணிக்கலாம் ஆனால் அவர்களால் உடல்நலனைக் கணித்து அறிய முடியாது என்பதைத்  தான் இது காட்டுகிறது! அல்லது போகிற போக்கில் இப்படிச் சொல்லிவிட்டுப் போகலாம்: ஜோதிடர்கள் தான் அவரிடம் நெருக்கம் உள்ளவர்கள். பலம், பலவீனம் அறிந்தவர்கள். ஏன் அவர்களிலே ஒருவர் இதனைச் செய்திருக்கக் கூடாது?

கருணாநிதிக்கு இது போன்ற பிரச்சனைகள் இல்லை. அவர் பில்லி, சூனியம், ஏவல் போன்றவைகளில் நம்பிக்கை இல்லாதவர். ஜோதிடரையோ, ஜோதிடத்தையோ நம்பாதவர்! வயதின் காரணமாக சில உபாதைகள் வரும் என்பதை அவர் உணர்ந்தவர். அதனால் அவர் இதனையும் ஒரு பொழுது போக்காக எடுத்துக் கொள்வார்!

நாம் சொல்ல வருவதெல்லாம் ஒன்று தான். இப்போது ஜெயலலிதாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டு வருகிறார்கள். அதுவும் அவர்கள்,  தாங்கள்  சார்ந்த துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள். அவர்களை நம்புங்கள். இதுவே ஒரு சராசரி ஏழைப் பெண்ணாக இருந்தால் ஏதோ ஒரு கோயிலுக்குப் போய், பூசாரி கொடுத்த திருநீற்றை நெற்றியில் பூசிக்கொண்டு வருவார்.  அடுத்த நாளே அவர் குணமாகிவிடுவார்! பணக்காரர்களுக்கு ஏற்படும் நோய் கொஞ்சம் இழுத்துப் பறித்துக்கொண்டு தான் இருக்கும்! அதுவும் அரசியல்வாதிகளுக்கு ஏற்படும் நோய் மருத்துவர்களிடமும் விதண்டாவாதம் பண்ணிக் கொண்டிருக்கும்!

ஜெயலலிதா அவர்கள் உடல்நலம் பெறுவார்.  மீண்டும் தனது பணிகளைத் தொடர நாமும் இறைவனை இறைஞ்சுவோம்!

Friday, 28 October 2016

கபாலி - தீபாவளி செய்தி!


தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்!

தீபாவளியைச் சிறப்பாகக் கொண்டாடுங்கள். நல்ல முறையில் கொண்டாடுங்கள். உற்றார்  உறவினர், நண்பர்கள், நமது நலம் விரும்பிகள் அனைவரோடும் சேர்ந்து குதூகலமாக தீபாவளியைக் கொண்டாடுங்கள்.  

வீணடிப்பது என்பது நமது சமூகத்தில் மிக அதிகம். ஒர் அளவு தெரியாமல் அதிகமாகச் சமைத்துவிட்டு அதனை அப்படியே குப்பையில் கொட்டுவது என்பது நம்மிடையே அதிகம். முடிந்தால் ஆதரவற்ற இல்லங்களுக்குச் சென்று உங்களது தீபாவளியைக் கொண்டாடுங்கள். ஆதரற்றவர் என்பது எப்போது வேண்டுமானாலும் மாறலாம். கொஞ்சம் புண்ணியத்தையாவது சேர்த்து வைப்போம்.

எல்லாவற்றையும் விட கபாலி என்ன சொன்னார் என்பதை நினைவுறுத்த விரும்புகிறேன்.  

பாருங்கள்,  கபாலி என்ன சொல்லுகிறார் என்று: "நாங்கள் ஆண்ட பரம்பரை இல்லை தான்! ஆனால் ஆள விரும்புகிறவண்டா!"  
இதனை மறந்து விடாதீர்கள். நாம்  நாட்டை ஆள வந்த சமூகம். ஆள விரும்புகிற சமூகம். ஆள வேண்டியவர்கள் நாம். பிறரை நாம் ஆள விடக்கூடாது!    தவறுகள் நேர்ந்திருக்கலாம்.  ஆனால் அதனைத் தொடர விடக்கூடாது! இதனைத் திருத்துவதற்கு யாரையும் நாம் எதிர்பார்க்க  வேண்டாம். நாமே தான் நம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும்.

ஆள விரும்புவது என்றால் அனைத்தையும் ஆள வேண்டும். நாடு, வர்த்தகம், மருத்துவம், நீதித்துறை இப்படி அனைத்துத் துறையிலும் நமது கால்கள் உறுதியாக ஊன்றப்பட வேண்டும் நமக்குச் சாக்குப் போக்குகள் வேண்டாம்..    

சீனனைப் பாருங்கள். யூதனையும் பாருங்கள்.  இன்று வர்த்தகம் என்பது அவர்கள் கையில். யூதனைப் பார்க்க முடியாவிட்டாலும் சீனர்களைத் தினசரி  நாம் பார்க்கிறோம்.  அவன் வர்த்தகத்தைப் பாருங்கள்.  எப்படி செயல்படுகிறான் என்று பாருங்கள். நமது நகரத்தாரிடமிருந்து கடன் வாங்கியவன். இன்று நாம் அவனை அண்ணாந்துப் பார்க்கிறோம்!  

தமிழர் சமூகம் கொடிகட்டி வாழ்ந்த சமூகம். அந்தப் பெருமையை மீட்டெடுக்க நாம் உழைக்க வேண்டும். உயர்ந்த வாழ்க்கை வாழ வேண்டும்.நாம் ஆள வேண்டும்! ஆள்கின்ற சமுகமாக மாற வேண்டும்.

இந்தத் தீபாவளி பெருநாளில் "நாம் உயர்வோம்!" என்று உறுதிமொழி எடுப்போம்!    

தீபாவளி வாழ்த்துகள்!                    

Wednesday, 26 October 2016

தீபாவளி எச்சசரிக்கை!


காலையில் ஒரு சொற்பொபொழிவைக் கேட்க நேர்ந்தது.

இது தீபாவளி காலம் என்பதால் நான் கேட்டதை உங்களோடு பகிர்ந்து கொள்ளுகிறேன்.

இப்போதெல்லாம் கண்களில் லென்ஸ் (Contact Lens)  - தொடுவில்லை -போடுவது என்பது மிகவும் சாதராணமாகப் போய் விட்டது. தங்களுக்குக் கண் தெரியவில்லை என்பதை யாரும் காட்டிக் கொள்ள விரும்பவில்லை! அதனால் லென்ஸ் போடுகின்ற பழக்கம் அதிகரித்து வருகிறது.

இதனையெல்லாம்  யாரும் தவறு என்று சொல்லப் போவதில்லை.  பணம் கொஞ்சம் கூடுதலாகப் போட வேண்டியிருக்கும். அவ்வளவு தான்.

தொடுவில்லை போடுவதால் ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா என்பது பற்றி இங்கே நாம் பேசப்போவதில்லை.

ஆனால் திருவிழாக் காலங்களில் இந்தத் தொடுவில்லை  போடுகிறவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது தான் நமது நோக்கம்.

தீபாவளி போன்ற பெருநாட்களில் நாம் பலகாரங்கள் செய்வதில் நிறைய ஈடுபாடு காட்டுகிறோம். பலகாரகங்கள் மட்டும் அல்ல, விதவிதமாகச் சமைப்பது இன்னும் பல. நெருப்பு, புகை, தணல் என்று இவைகளோடு தான் நிறைய போராட்டங்கள் நமது பெண்கள் நடத்த  வேண்டியுள்ளது.

இந்த நேரத்தில் தொடுவில்லையைப் பயன் படுத்துகிற பெண்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் பயன்படுத்துகின்ற அந்தத் தொடுவில்லைகள் பிளாஸ்டிக்கால் ஆனது. நெருப்புக்கு உருகும் தன்மை உள்ளது  அப்படி உருகும் போது அது உங்களின் கருவிழிகளை நிரந்தரமாகக் குருடாக்கிவிடும்.

நீங்கள் அடுப்படி வேலைகளில் ஈடுபட்டிருக்கும் போது முடிந்தவரையில் அந்தத் தொடுவில்லைகளைக் கழட்டி வைத்து விடுங்கள். அதுவே உங்களுக்குப்  பாதுகாப்பு.

கண்கள் நமக்கு மிக முக்கியமான உறுப்பு. அதனை இழந்துவிடலாகது. முடிந்தவரை நமது கண்களுக்கு நாம் பாதுகாப்புக் கொடுப்போம்.

மகிழ்ச்சியோடு தீபாவளியைக்  கொண்டாடுவோம்.                                                

.

Tuesday, 25 October 2016

ம.மு.க. தமிழைப் புறக்கணிக்கிறதா?


People's Progressive Party (PPP) என்றும் தமிழிலே மக்கள் முற்போக்குக் கட்சி என்று அழைக்கப்படும்  ம.மு.க.தமிழைப் புறக்கணிக்கின்ற வேலையைச் செய்கின்றதா என்று நாம் யோசிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

சமீபத்தில் நடைப்பெற்ற ஒரு நிகழ்வைப் பார்க்கின்ற  போது அப்படித்தான்  ஒரு முடிவுக்கு நாம் வரவேண்டியுள்ளது.

ஜாலான் பெட்டாலிங் (Jalan Petaling) அறிவிப்புப் பலகையில் தமிழைப் புறக்கணித்துவிட்டு அங்கு வங்காள மொழியைப் பயன்படுத்திருப்பதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.

இது ஒரு தவறான ஆரம்பம். தமிழைப்புறந்தள்ளிவிட்டு, வங்காள மொழியை கொள்ளைப்புற வழியாகக் கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன என்பது நமக்குப் புரிகிறது. ஒரு முறை ATM - ல் வங்காளா மொழியை நான் பார்க்க நேர்ந்தது.  அதன் பின்னர் எதனையும் காணோம். ஆனால் ஏதோ வேலைகள் நடக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. அதற்கும் சரியான பதிலை அரசாங்கம் வைத்திருக்கும். காரணம் கேட்டால் ATM - மைப் பயன்படுத்துதுபவர்களில் வங்காள தேசிகள் முதன்மையாக இருக்கிறார்கள் என்பதாகப் பதில் வரும்!

இன்னொன்றையும் நாம் மறத்தலாகாது, வங்காள தேசிகளின் பிள்ளைகள் இப்போது, பூமிபுத்ரா என்னும் அந்தஸ்தோடு, பல பதவிகளை அலங்கரிக்கிறார்கள்! அவர்களுடைய ஆதிக்கம் பலம் பெற்று வருகிறது. மொழி விஷயங்களில் அவர்களடைய ஊடுருவல் நமக்குப் பாதகமாக அமையலாம்! நமது அரசாங்கமும் தமிழின் மீதான பிரச்சனைகளில் நமக்கு எதிராகவே இருக்கிறது.

நமது பிரதமர் நமக்கு அள்ளிக் கொடுப்பார். ஆனால் ஒரு அரசாங்கக் கடைநிலை ஊழியன் அதனை நமக்குக்  கிள்ளிக் கொடுப்பான்! இதனை நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். நம்மைப்  பிரதிநிதிக்கிறவர்கள்   எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கிறார்கள்!


இந்த நிலையில் தான் கூட்டரசு பிரதேச துணையமச்சர் டத்தோ லோகபாலமோகன் நம் கண்முன் வருகிறார். அவருடைய அதிகாரத்திற்கு  உட்பட்ட  ஒரு இடத்தில் தான் இது நடந்திருக்கிறது. நாட்டின் அங்கீகரிக்கபட்ட மொழியினை ஒதுக்கிவிட்டு வேற்று மொழியைக் கொண்டு வரவேண்டுமென்றால் அதனை "ஏதோ தவறு நடந்திருக்கிறது" என்று ஒதுக்கிவிட முடியாது. தெரியாமல் இது நடக்கவில்லை. தெரிந்துதான் இது நடந்திருக்கிறது. அதுவும் துணை அமைச்சருக்குத் தெரியாமல் நடந்திருக்க வழியில்லை.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள  வரவேற்பு வளையத்தில் வங்காள மொழி பயன்படுத்தப் பட்டிருக்கிறது.என்றால் அது எப்படி நமது நாட்டில் அங்கீகரிக்கப்படாத ஒரு மொழியை பயன்படுத்த முடியும்? துணை அமைச்சருக்கும் வங்காள மொழிக்கும் என்ன சம்பந்தம்?

ஏற்கனவே ம.மு.க. தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் தமிழ்ப்பள்ளிகள் தேவை இல்லை என்று சொல்லிக் கொண்டிருப்பவர். அவர் வழி வந்த டத்தோ லோகபாலமோகன் என்ன சொல்ல வருகிறார்?  தலைவர் தமிழ்ப்பள்ளிகள் வேண்டாம் என்கிறார். இவர் தமிழே வேண்டாம் என்று சொல்ல வருகிறாரோ!

அவர் தமிழ் மொழிக்கு எதிரி என்றால் அது அவருடைய தனிப்பட்ட பிரச்சனை. அவர் அதனைத் தனிப்பட்ட - சொந்த வாழ்க்கையில் - அதனைத் தவிர்க்கலாம்.. ஆனால் அவர் ஒரு துணையமச்சர். இந்தியர்கள் சார்பில் அவர் அங்கு நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருக்குப் பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ அவர் தமிழ் மொழியை ஆதரித்துத் தான் ஆக வேண்டும்என்று நாங்கள் எதிர்பார்ப்பது யாரும் தவறு என்று சொல்ல முடியாது. அது அவரது கடமை. ஓர் இனத்தை பிரதிநிதிக்கும் ஒர் அமைச்சர், அந்த இனத்தின் தாய் மொழியைப் புறக்கணிப்பது,  மிகவும் கண்டிக்கத்தக்கது.

அமைச்சர் பதவியில் இருப்பவர்கள் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். முதுகில் குத்துபவர்களாக இருக்கக் கூடாது! பதவியில் இருந்து கொண்டு சொந்த இனத்திற்கே துரோகம் செய்வது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

ஏதோ ஒரு ம.இ.க. தலைவர் .இந்த சமுதாயத்திற்குத் துரோகம் செய்தார் என்பதற்காக அவரையே ஒரு வழிகாட்டியாக எடுத்துகொண்டு அரசியலுக்கு வரும் ஒவ்வொருவரும் அவரையே பின்பற்றினால் அப்புறம் உங்கள் இனத்தைக் காப்பது யார்? அந்தப் பொறுப்புணர்ச்சி என்பது உங்களுக்கு எங்கே போயிற்று?

ம.மு.க. தமிழுக்கு ஆதரவாக இல்லை என்பதற்கு அவர்களுடைய ஆங்கில விக்கிப்பெடியா வைப பார்த்தாலே போதும்.. அவர்கள் தங்கள் கட்சியின் பெயரை ஆங்கிலம், மலாய், சீனம் ஆகிய மொழிகளில் எழுதியிருக்கிறார்களே தவிர தமிழில் எழுதவில்லை. அதனை நாம் கேட்டால் நாங்கள் பல்லினக் கட்சி, இந்தியர் கட்சி அல்ல என்பார்கள்! பல்லினக் கட்சி என்றால் தமிழ் தேவை இல்லை என்பது தான் அவர்கள் கொள்கையோ என்பதும் நமக்குப் புரியவில்லை!

எப்படியோ பல அமைப்புக்கள் எதிர்ப்புக் குரல் கொடுத்த பின்னர் அந்த வரவேற்பு வளையத்தில் வங்காள மொழி அகற்றப்பட்டு தமிழ் மொழி புகுத்தப்பட்டு இருக்கிறது.

இதில் நாம் மகிழ்ச்சி அடைய ஒன்றும் இல்லை. வங்காள தேசிகளை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. அவர்கள் தங்கள் மொழிக்காக எதனையும் செய்வார்கள். அரசாங்கமும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறது. கொடுக்க வேண்டியதைக் கொடுத்து அவர்கள் காரியம் சாதிப்பவர்கள்.

நாம் விழிப்போடு இல்லையென்றால் இது போன்ற புறக்கணிப்புக்கள் தொடரும் என்பது நிச்சயம்.  ந்மது அரசியல் தலைவர்களுக்கு எப்படிப் பாடம் புகட்டுவது என்பதை யோசிக்க வேண்டும்.

விழித்திருப்போம்! செயல்படுவோம்!Sunday, 23 October 2016

கருணை வேண்டாம்! கொள்கையே வேண்டும்!


ஏய்மஸ்ட் பல்கலைக்கழகத்தில்,  பன்னாட்டுத் தமிழாசிரியர்களின் மாநாட்டில் ம.இ.கா.தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் நல்லதொரு கருத்தைச் சொன்னார்.

பிரதமர் நஜிப் இந்த சமுதாயத்திற்குக்  கருணைக்  காட்ட வேண்டாம். கருணை என்னும் நிலை மாறி அது அரசின் கொள்கையாக மாற வேண்டும்.

டாக்டர் சுப்பிரமணியம் பிரதமருக்கு விடுத்த இந்த வேண்டுடுகோளை  நாமும் இரு கரம் கூப்பி வரவேற்கிறோம்.

தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீடுகள்  பிரதமரின் கருணை அடிப்படையில் இல்லாமல் அது அரசாங்கக் கொள்கையாகப் பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்பதே அவரின் வேண்டுகோள்.

மலேசியாவில் தமிழ்க்கல்வி தோன்றி  இந்த அக்டோபர் மாதத்தோடு 200 ஆண்டுகள் ஆகின்றன. இனி நமக்குத் தேவை எல்லாம் தமிழ்க்கல்வியின் வளர்ச்சி. அந்த வளர்ச்சி என்பது சரியான முறையில் அமைய வேண்டும். வெறும் கருணை அடிப்படையில் அல்ல!  அது அரசாங்கக் கொள்கையாக அமைய வேண்டும்.

நாட்டில் 524 தமிழ்ப்பள்ளிகள் இருப்பதாகக் கூறப்படுகின்றது.  பிரதமர் நஜிப் பல கோடிகளை இந்தப் பள்ளிகளின் மேம்பாட்டுக்காகக் கொடுத்துள்ளார்.  கடந்த  வெள்ளிகிழமை வெளியான பட்ஜெட்டில் ஐந்து கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு சேர்த்து தமிழ்ப்பள்ளிகளுக்காக 79 கோடி வெள்ளீயை பிரதமர் நஜிப் இதுவரைக் கொடுத்துள்ளார்.

இத்தனை கோடிகள்  கொடுத்தும் தமிழ்ப்பள்ளிகளின் நிலை மாறவில்லை என்றும் ஒரு குற்றச்சாட்டும் உள்ளது.  இந்த நிதி ஒதுக்கீடுகள்  எந்த எந்தப் பள்ளிகளுக்குக் கொடுக்கப்பட்டன என்னும் விபரங்கள் யாரிடமும் இல்லை! அமைச்சரவையில் இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் ஒரே தலைவர் என்னும் முறையில், டாக்டர் சுப்பிரமணியம் அவர்கள் இந்த நிதி ஒதுக்கீடுகள் அனைத்தும் முறையாக எல்லாப்  பள்ளிகளுக்கும் போய்ச் சேருவதை  உறுதி செய்ய  வேண்டும். அல்லது தேவையான பள்ளிகளுக்குப் பயன்படுத்தப்படுவதைக் கண்காணிக்க வேண்டும்.

டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் சொல்லுவது போல இது வெறும் பிரதமரின் இந்தியச் சமூகத்தின் மேல் உள்ள அனுதாபமாகவோ அல்லது கருணையாகவோ இருக்கக் கூடாது!  அது எங்களது உரிமையாக இருக்க வேண்டும். சட்டமாக இருக்க வேண்டும். அது அரசாங்கக் கொள்கையாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு முறையும் கெஞ்சுவதும், கொஞ்சுவதுனாக இருக்கக் கூடாது. அது அரசாங்கத்தின் சட்டமாக  அமைய வேண்டும். ஒரு நாட்டின் குடிமக்கள்,   மூன்றாவது பெரிய இனம், எல்லாலாக் காலத்திலும் பிச்சை எடுக்கும் சமூகமாக அரசாங்கம் மாற்றத் துணியக் கூடாது! இந்தியர்களும் கௌரவமாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்.

இந்தியர்கள் ரௌடிகள், குண்டர்கள் என்னும் ஒரு நிலையே முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிரின் காலத்தில் மிகச் சிறப்பாக அரங்கேற்றப்பட்டது! அதுவும் ம.இ.கா.வின் உதவியோடு!  அனைத்து  உரிமைகளையும் நாம் இழந்து விட்டோம்! இழந்த உரிமைகளை இனி நாம் கேட்கக் கூடிய நிலையில் இல்லை!  உரிமையாளர்கள் உடைந்து போனார்கள்! ஒன்பதாகப் பிரிந்து போனார்கள்!  ஒன்பாதாகிப் போனார்கள்! இனி எந்த உரிமைகளையும் மீண்டும் பெற முடியும் என்னும் நம்பிக்கையும் குறைந்து போய்விட்டது!

இந்த நிலையில் தான் டாக்டர் சுப்பிரமணியம் அவர்கள் "எங்களுக்குக் கருணைக்  காட்ட வேண்டாம்; அதனை சட்டமாக்கி உரிமையாகக் கொடுங்கள்"  என்கிறார். இப்படிப் பேசியதற்காகவே நாம் அவரைப் பராட்ட வண்டும்!

பொதுவாகவே அரசாங்கத்திடம் எந்தப் பிரச்சனையைப் பற்றியும் ம.இ.கா.வினர் வாய்த் திறப்பதில்லை!  இப்போது டாக்டர் அவர்கள் வாய்த் திறந்து ஒரு கோரிக்கையாக அவர் விட்டிருப்பது மிகவும் பாராட்டுதலுக்குறியது!

இப்போதாவது இப்படி ஒரு கோரிக்கை விட்டிருக்கிறாரே  நாம் அவரைப் பாராட்டுகிறோம்!

இப்பவும் அவர் வாய் திறவாதிருந்தால் வேகு விரைவில் வெளி நாட்டுச் சக்திகள்  நம்மைப் பின்னுக்குத் தள்ளிவிடும்! அரசாங்கத்தின் ஒப்புதலுடனே அது நடக்கும்!

இனி டாக்டர் அவர்கள் இந்தியர்களின் ஒவ்வொரு பிரச்சனையையும் அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறோம். உங்களிடையே ஒற்றுமை இல்லையென்றால் சந்தடிச்சாக்கில் இருக்கின்ற அனைத்தையும் இழந்து விடுவோம்!

நீங்கள் நமது பிரதமரிடம் கேட்டுக் கொண்டதைப் போல நமக்குக் கருணை வேண்டாம்! அனைத்தும் சட்டமாகப்பட்டு உரிமையாக வேண்டும்! என்பதை நாங்களும் உங்களுடன் சேர்ந்து ஆதரிக்கிறோம்!


Friday, 21 October 2016

காலை வணக்கம்..!


காலை வணக்கம்! Good Morning! Selamat Pagi!

காலை நேரத்தில் "காலை வணக்கம்!"  என்று சொல்லும் போது  மனதில் மகிழ்ச்சி ஏற்படுவது இயற்கையே! இதை சொல்லுவதற்குக் கூட சிலரால் முடியாது! பதவியில் உள்ளவன் கீழே உள்ளவனைப் பார்த்து அப்படி சொல்லுவதில்லை! அது அவனுக்குக் கௌரவக் குறைச்சல்! இருக்கட்டும்!

ஆனாலும் வெள்ளைக்காரனுக்கு அது ஒரு பிரச்சனை அல்ல. அவன் எவ்வளவு தான் நம் எதிரியாக இருந்தாலும் அவன் வணக்கம் சொல்லத் தவறுவதில்லை. அது அவனது ரத்தத்தில் ஊறிப்போன ஒன்று. அதனை அவனால் மாற்றிக் கொள்ள முடியாது!

நம்முடைய நிலை வேறு. எந்த நல்ல பழக்கங்களையும் நாம் வீட்டில் சொல்லிக் கொடுப்பதில்லை! எங்கு நாம் தவறு இழைத்தாலும் "படி! படி!" என்று குழந்தைகளை வற்புறுத்தி படிக்கவைப்பதில் மட்டும் நாம் தவறு இழைப்பதில்லை!

இளைஞர் ஒருவரைத் தெரியும்.  காலை நேரத்தில் உணவகத்திற்குள் சுறுசுறுப்பாக நுழைவார். பார்ப்பவர்களையெல்லாம் "காலை வணக்கம்! காலை  வணக்கம்!  என்பார். மலாய்க்காரர்களைப் பார்த்தால் "செலமாட் பகி!" என்பார். அதுவரை எந்த சலனுமும் இல்லாமல் இருந்தவர்களைத்  தனது காலை வணக்கம் மூலம் ஒரு சுறுசுறுப்பை உண்டாக்கிவிடுவார்!

இது போன்ற காலை வேளைகளில் "வணக்கம்" என்னும் போது உடலில் ஒரு சுறுசுறுப்பும், புத்துணர்ச்சியும் ஏற்படுவது இயற்கை. .  காலையில் புத்துணர்சி ஏற்படும் போது அது அன்று பூராவும் நமது உடலை உற்சாகமாக வைத்திருக்கும்!

காலை வேளையில் மனம் திறந்து வணக்கம் என்று சொல்லுங்கள். அன்றைய தினம் உங்களைப் பார்த்து அனைத்தும்  வணக்கம் என்று சொல்லுவது போல் இருக்கும்!

அந்த நண்பர் நம்மைப் பார்த்து வணக்கம் என்று சொன்னாலும்  அன்றைய தினத்தை அன்று பூராவும் அவர் - தன்னை உற்சாகமாக வைத்துக் கொள்ளுகிறார்! கேட்பவர்களை விட சொல்லுபவர் இன்னும் தன்னை உற்சாசாகப் படுத்திக் கொள்ளுகிறார். அது தான் உண்மை.

காலைப் பொழுதை உற்சாகமாக ஆரம்பியுங்கள்! குழந்தைகளிடம் வணக்கம் சொல்லுங்கள்! மனைவியிடன் வணக்கம் சொல்லுங்கள்! நண்பர்களிடம் வணக்கம் சொல்லுங்கள்!

அன்றைய நாளை வணக்கம் சொல்லி உற்சாகமான  நாளாக ஆக்கிக்கொள்ளுங்கள்! அனைத்தும் நமது கையிலே!

வணக்கம் தலைவா!

பிச்சை எடுத்தாவது....!


குழந்தைப் பிறந்ததும் ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி! அதைவிட வேறு மகிழ்ச்சி எதனோடும் ஒப்பிட முடியாது! குடும்பத்திற்குக் குதூகலத்தைக் கொண்டு வருவது குழந்தைகள்!

குழந்தைப் பிறந்ததும் நமது மகிழ்ச்சியை எப்படி வெளிபடுத்துகிறோம் என்பதை நாம் பெரும்பாலும் கவனிப்பதில்லை. அது தான் முக்கியம். 

ஒரு குழந்தையின் வளர்ச்சியும், வீழ்ச்சியும் நீங்கள் உதிர்க்கும் உங்கள் சொற்களில் அடங்கியிருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.

தமிழகத்தின் தமிழ் அறிஞர், தமிழ் கடல் நெல்லை கண்ணன் அவர்கள் தனது சொற்பொழிவின் போது உதிர்த்த ஒரு கருத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளுகிறேன். தன்னை உயர்ந்தவனாகக் காட்டிக் கொள்ளுபவனும் தன்னைத் தாழ்ந்தவனாகக் காட்டிக் கொள்ளுபவனும் எப்படிப் பட்ட சிந்தனை ஓட்டத்தைக் கொண்டிருக்கிறான் என்பதற்காக இதனைச் சொல்லுகிறேன்

குடும்பத்தில் ஒரு ஆண் குழந்தைப் பிறந்ததும் ஒரு பிராமணன் - அவன் சமையல் வேலை செய்யும் ஏழைப் பிராமணனாக இருந்தாலும் சரி - அவன் வாயிலிருந்து வரும் முதல் வார்த்தை "நம்ம வீட்டுலே ஒரு கலக்டர் பிறந்துட்டான்'டி!" என்று மனைவியைப் பார்த்து சொல்லுவனாம்! அதுவே பெண் பிள்ளையாக இருந்தால் "நம்ம வீட்டுலே ஒரு டாக்டர் பிறந்துட்டா" என்று மகிழ்ச்சியடைவானாம்! அதுவே சராசரி தாழ்ந்த சிந்தனை உடையவன்: 'ஆம்பளப்புள்ள! பயப்படாத! பிச்சை எடுத்தாவது உனக்குக் கஞ்சி ஊத்துவான்!"

நாம் இங்கு பயன் படுத்தும் வார்த்தைகளைச்  சாதரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. நம்மை அறியாமல் நமது அறியாமையால் உதிர்க்கப்படும் வார்த்தைகள் தான்.ஒருவன் தாழ்வதற்கும் உயர்வதற்கும் நமது வார்த்தைகள் தான் காரணம். மனதில் உள்ளது அப்படியே வெளியாகிறது!

நாம் எவ்வளவு தான் தாழ்ந்த நிலையில் இருந்தாலும், நாம் எவ்வளவு தான் ஏழையாய் இருந்தாலும், , சாப்பட்டுக்கே வழியில்லாமல் இருந்தாலும் நமது சிந்தனை மட்டும் தாழ்ந்த நிலையில் இருக்கக் கூடாது என்பது மிக மிக முக்கியம். எல்லாக் காலத்திலும் நமது எண்ணங்கள் உயர்வாகவே இருக்க வேண்டும்.

பாரதி என்ன பணத்திலே மிதந்தவனா? ஒரு வேளை சாப்பாட்டுக்கே வழியில்லை! . ஆனாலும் "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா!" என்று பாடியவன். அப்படி எண்ணங்கள் உயர்வாக இருக்க வேண்டும்.

குழந்தைகள் தானே நாம் சொல்லுவது விளங்கவாப் போகிறது என்று நினைப்பது தவறு. குழந்தைகளுக்கு நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் என்பது தெரியும்; புரியும்! பேசத்தான் தெரியாது! வயிற்றிலிருக்கும் குழந்தைக்கே நாம் வெளியே பேசிக் கொள்ளுவது தெரியும் போது, வெளியே இருக்கும் குழந்தைக்குப் புரியாதா, என்ன?

மேலும் இது போன்ற வார்த்தைதைகளை நாம் ஏன் பேச வேண்டும்? நமது சிந்தனைகளில் கூட இது போன்ற எதிர்மறை வார்த்தைகளை நமது சிந்தனைக்கு வருவதை நாம் தடை செய்ய வேண்டும்!

பிச்சை எடுத்தாவது என்று ஏன் சொல்ல வேண்டும்? நாம் என்ன பரம்பரைப் பிச்சைக்காரர்களா? பிச்சை எடுப்பவர்கள் கூட அப்படிச் சொல்ல மாட்டார்கள். ஆனால் சராசரி தமிழன் அதனைத் தாராளமாகப் பயன்படுத்துகிறான்!

நமது தமிழ்ப்படங்கள் சராசரி தமிழனை மிகவும் காயப்படுத்துகின்றன.  சினிமா தயாரிப்பாளன் தான் வேற்று மொழிக்காரன். வசனம் எழுதுபவன் தமிழ் அறிந்தவன் தானே? அறிவுள்ளவன் தானே? நேர்மறையான வார்த்தைதைகளைப் பயன்படுத்தக் கூடாது என்பதைக் கூட அறியாதவனா அவன்?

நாம் மனது அளவிலும் அந்தப் பிச்சைக்காரத்தனத்தை வளர்த்துக் கொள்ளக் கூடாது. அதே சமயத்தில் குழந்தைகளுக்கு அதனை அடிக்கடி ஞபாகப்படுத்த்க் கூடாது.

குழந்தைகளுக்கு  நல்ல செய்திகளைக் கொடுங்கள்.  நல்லதை மட்டும் பேசுங்கள். டாக்டராக வரவேண்டும், வழக்கறிஞராக வரவேண்டும்,  பிரதமராக வரவேண்டும், முதலைமைச்சரகா வரவேண்டும், அரச அதிகாரியாக வரவேண்டும் என்று சிறு குழந்தையிலிருந்தே  சொல்லிச் சொல்லி ஊக்கமூட்டுங்கள். அப்படி ஒன்றுமே தெரியவில்லை என்றால் பெரிய உத்தியோகம் பார்க்க வேண்டும் என்று சொல்லி வளருங்கள்!  எதைச் சொன்னாலும் அது உயரிய குறிக்கோளாக இருக்க வேண்டும்.

அது சரி! இப்படியெல்லாம் சொல்லி வளர்த்தால் அவன் அப்படியே ஆகிவிடுவானாக்கும் என்று கேட்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். ஆமாம், அந்தப் பிராமணர் அப்படி சொல்லுகிறாரே அதற்காக பிரமாணர்கள் எல்லாம் கலக்டர் ஆகிவிட்டார்களா, இல்லை!  அப்படி ஒரு எண்ணத்தை உருவாக்கக் காரணம் அவனது எண்ணங்கள்  கீழ் நோக்கிப் போகக் கூடாது என்பது தான் அதன் நோக்கம். இது இல்லையென்றால் வேறொன்று, அதன் மூலம் உயர்வது.

ஆனால் "பிச்சை எடுத்தாவது!" என்னும் எண்ணத்தை வளர்த்தால் என்ன ஆகும்? அவனைச் சுற்றி கீழ்த்தட்டு மக்களாகவே இருப்பர். கீழே போகப்போக மக்கள் இன்னும் கீழ்நிநிலையை நோக்கியே பயணம் செய்வர்! அவன் தேர்ந்தெடுக்கும்  வேலையும் கீழான வேலையாகவே இருக்கும். அவனைச் சுற்றி குடிகாரக் கூட்டமாகவே இருக்கும். அவன் எல்லக் காலங்களிலும் வறுமைக் கோட்டிலேயே நடந்து கொண்டிருப்பான்.

பாருங்கள்! ஒரு சொல் எப்படி ஒரு குழந்தையை மாற்றிவிடுகிறது! கபாலி படத்தை இயக்கிய பா. ரஞ்சித் அவர்களின் தாயாரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் சொன்ன பதில்: என் பையன் பெரிய ஆளாக வருவான் என்று எனக்கு அப்பவே தெரியும்!  ஆமாம்! அவர்கள் பிள்ளைகள் எல்லாம் நன்கு படித்து நல்ல நிலையில் இருக்கிறார்கள். அவர் ஒரு ஏழைத் தாய். ஆனாலும் அது எப்படி அவரால் முடிந்தது?  அவர் குழந்தைகளுக்குக் கொடுத்த ஒரே செய்தி: நல்லா படித்து நல்லா வா!  அது தான் அவர் கொடுத்த செய்தி.

அது போதுமே!   அப்படிச் சொன்னாலே போதும்! வேறு ஒன்றும் வேண்டாம்! தொடர்ந்து மந்திரம் போல் பிள்ளைகளின் காதில் ஓதிக் கொண்டே இருங்கள்! நன்கு படித்து, நல்லா வா!

உங்கள் குழந்தைகள் உன்னத நிலையை அடைய வாழ்த்துகள்!

Sunday, 16 October 2016

தோல்விக்குப் பின்னாலும் ஒரு பெண்ணே!


ஒர் ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.. அப்படி வெற்றி பெற்ற ஆண்கள் எத்தனை பேர் என்று பார்த்தால் மிகச் சிலர் தான் அந்தப் பட்டியலில் வருவார்கள்! ஆக, பெரும்பாலான ஆண்களின் தோல்விக்குப்  பெண்களே காரணம் என்பது நமக்குப் புரிகிறது!

ஒர் ஆண் சுதந்திரமாகச்  செயல் பட விரும்புகிறான். ஓர் ஆண் புதிய முயற்சிகளில் ஈடுபட விரும்புகிறான்.ஓர் ஆண்,  மக்கள் சேவையில் ஈடுபட விரும்பிகிறான்; புதிய பாதையில் கால் எடுத்து வைக்க விரும்புகிறான். அனைத்துக்கும் அவனுக்குத் துணை செய்ய, ஆதரவாகப் பேச அவனுக்கு அம்மா தேவை அல்லது அக்காள் -தங்கை தேவை அல்லது மனைவி தேவை. ஏன்? அவனது அண்ணனாகக் கூட இருக்கலாம். இங்கு பெரும்பாலும் ஓர் ஆண் தனது மனைவியுடன் தான் அதிகக் காலம் வாழ்கிறான் என்னும் போது அவனது மனைவி தான் அவனுக்கு உற்றத் துணையாகவும்  -  ஊக்கமாகவும் இருக்கிறாள். அதனால் மனைவி தான் அவனது வெற்றிக்கோ, தோல்விக்கோ காரணமாகிறாள்! அவனது மனைவி அவனைக் கவிழ்த்தும் விடலாம், கைத் தூக்கியும் விடலாம்! உயரவும் வைக்கலாம், உடைந்து போகவும் வைக்கலாம்! கோபுரமாகவும் ஆக்கலாம். குப்பை மேடாகவும் ஆக்கலாம்!

ஆனால் கைத்தூக்கி விடுகிற மனைவிகள் குறைவாகவும்  கவிழ்த்து விடுகிற மனைவிகள் அதிகமாகக் கொண்ட சமுதாயம் நாம்! ஊக்கமானச் சொற்களைக் கூற ஆளில்லை. மட்டம் தட்டுவதும் மடத்தனமாய் பேசுவதிலும்  நாம் கைத்தேர்ந்தவர்கள்!

ஒரு இளம் .முஸ்லிம் குடும்பத்தினரை எனக்குத் தெரியும். கணவன் மனைவி இருவருமே நல்ல குணம். கணவர் ஆறாம் வகுப்போடு சரி. படிப்பு ஏறவில்லை. மனைவி ஒன்பதாம் வகுப்போடு சரி. படிக்க வழியில்லை. மனைவியிடம் ஒரு தவறான ஒரு குணம். தனது கணவர் படிக்காதவர் என்று சுட்டிக்காட்டிக் கொண்டே இருப்பார். நாளடைவில் அவரால் ஒரு பத்திரிக்கைப் படிக்க முடியவில்லை. எழுதத் தெரியவில்லை.  படிக்கும் பழக்கமோ, எழுதும் பழக்கமோ அவரிடம் இல்லாமலேயே போய்விட்டது! ஆறாம் வகுப்புப் படித்தவர்களுக்குப் படிக்கத் தெரியாதா? எழுதத் தெரியாதா? ஆனாலும் அவருடைய மனைவியின் வார்த்தையை வேத வாக்காக எடுத்துக் கொண்டார்! மழுங்கிப் போய்விட்டார்! இவர் படிக்கத் தெரியாதவர் என்பதால் எல்லாக் காரியங்களிலும் அவர் மனைவி தான் முன்னணியில் நிற்பார்! இவர் படிக்காதவர் என்பதால் எல்லாவற்றிலும் ஒதுங்கியே நிற்பார்! உண்மையைச் சொன்னால் கணவர் படிக்காதவர் என்பதால் மனைவி தான் அந்தக் குடும்பத்திற்காக அதிகம் உழைப்பவராகி விட்டார்!

அந்த நண்பர் உண்மையில் நல்ல திறமைசாலி. ஆனாலும் அவர் மனைவியால் அவரைப் புரிந்து கொள்ள இயலவில்லை. அவர் படிக்காதவர், அவர் ஏமாறுபவர், அவரை மற்றவர்கள் ஏமாற்றிவிடுவார்கள் என்று சொல்லி சொல்லியே அவரை "தான் எதற்கும் லாயக்கில்லை!' என்று நினைக்கும் படியாக செய்து விட்டார்!  இதனை அவர் வேண்டுமென்றே செய்யவில்லை. அறியாமை என்று தான் சொல்ல வேண்டும்!

ஒரு சிறிய தூண்டுதல் இருந்தாலே போதும். எல்லா மனிதனுமே சாதனை புரிவான். இதில் ஒன்றும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனாலும் நமது பெண்களுக்கு இது புரிவதில்லை. நாம் தோற்றுவிடுவோமோ என்னும் பயம்.  எதிலும் பயம். எல்லாவற்றிலும் பயம்.

கணவனுக்குப் பின்னால் இருந்து கொண்டு கணவன் மூலம் குடும்பத்தைக் கோபுரமாக்குபவள் மனைவி. அவள் ஒரு உந்து சக்தி. அவள் மட்டும் கணவனுக்கு ஆதரவாக இருந்தால் கணவன் இமயத்தைத் தொடுவான். அவள் அரட்டையாக இருந்தால் அவன் அசட்டையாகத் தான் இருப்பான்!

பெண்கள் தோல்விக்குத் துணைப் போகக்கூடாது. எந்த நிலையில் இருந்தாலும் வெற்றியை நோக்கியே நகர வேண்டும். உச்சத்தை தொட  வேண்டும்.  உயரே உயரே போக வேண்டும்!

அடிமட்ட வாழ்க்கை வாழ்ந்தாகிவிட்டது. அது சரித்திரம். இனிமேல் அந்தச் சரித்திரம் திரும்பக் கூடாது. அடுத்தக் கட்டத்துக்கு மாற வேண்டும். மாற்ற  வேண்டும். வாழ்க்கை,  மேல் நோக்கிப் போக வேண்டும்.

இந்த மாற்றத்திற்கு பெண்களின் பங்கு கொஞ்சம் அதிகம். தங்கள் குடும்பத்தில் அங்கம் வகிக்கும் அனைவரையும் அனுசரித்து, ஊக்கமூட்டி, உற்சாகப்படுத்தி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து முன்னேற்றப் பாதைக்கு வழி காட்ட வேண்டும். வாழ்க்கை என்றால் வளர்ச்சி என்று ஒன்று இருக்க வேண்டும். ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கையில் உயர வேண்டும் என்னும் எண்ணத்தை விதைக்க வேண்டும்.

பெண்களே நீங்கள் தோல்வியாளர்கள் அல்ல! பின்னுக்கு இருந்தாலும் முன்னுக்கு இருந்தாலும் நீங்கள் வெற்றியாளர்கள் தான்! வெற்றி என்னும் விதையைத் தொடர்ந்து விதையுங்கள்! வெற்றி நிச்சயம்!
Friday, 14 October 2016

நூடல்ஸோ... நூடல்ஸ்..!


நூடல்ஸ் என்னும் வார்த்தையே நமக்குப் புதிது! நமது தமிழ்த் திரைப்படங்கள் இந்த வார்த்தையை நன்கு பிரபலப்படுத்தி விட்டன! இப்போது தமிழகத் தொலைக்காட்சி விளம்பரங்கள்  இன்னும் அதிகமாகப் பிரபலப்படுத்தி வருகின்றன!

நமது  நாட்டில் அதனை "மீ" என்கிறோம். அது ஒரு சீன மொழிச் சொல் என்பது மறந்து போய் அதனை ஆங்கிலச் சொல்லாகவே நினைத்து நாம் பயன்படுத்தி  வருகிறோம்! காரணம் நாம் பிறந்த காலத்திலிருந்தே - ஏன் அதற்கு முன்பே - நம்மோடு பயணித்து வருகிறது இந்த "மீ"! அது சீனர்களின் உணவு என்பதால் சீனர்கள் எங்கிருந்தாலும் இந்த "மீ" யும் வந்து விடும்!

இந்த "மீ" வகைகளில் பலதரப்பட்டவை உள்ளன. சிறிய வகை, பெரிய வகை, மீஹூன் வகை, கொய்த்தியோ மீ, லக்சா மீ  இன்னும் பலவகை. உணவு விரும்பிகளிடம் கேட்டால் இன்னும் அதிகம் சொல்லுவர்கள்!

இந்தக் கட்டுரையின் நோக்கம் ஒன்று தான். தமிழகத் தொலைக்காட்சிகளில் வருகிற விளம்பரங்களைப் பார்க்கும் போது நமக்குத் தலையே சுற்றகிறது! அந்த அளவுக்கு விளம்பரங்கள்! அத்தோடு மட்டுமா?  அது ஏதோ பணக்கார உணவு போன்ற ஒரு தோற்றத்தை இந்த விளம்பரங்கள் ஏற்படுத்துகின்றன!

உண்மையில் இது பணக்காரர்களின்  உணவா? அல்லது நடுத்தரக் குடும்பங்களின் உணவா?  பணக்காரர்கள் பொட்டலங்களில்  வரும் இந்த மீ வகைகளைச் சாப்பிடுவதில்லை! நடுத்தரக் குடும்பங்கள் ஆபத்து, அவசர வேளைகளில் இதனைப் பயன்படுத்திக் கொள்ளுகிறார்கள!  பொதுவாக கல்லுரி மாணவர்கள், தனித்து வாழ்பவர்கள், ஏழைகள் - இவர்கள் போன்றவர்கள் தான் இதன் முக்கிய பயனீட்டாளர்கள். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் இந்த நூடல்ஸ் இப்படிப் பொட்டலங்களில் வந்த ஆரம்பக் காலத்தில் அவைகளைப் பற்றி பல விமர்சசனங்கள் எழுந்தன.. அனைத்தும் எதிர்மறையான விமர்சனங்கள். இப்போதும் நமது நோக்கில் அந்த விமர்சனங்கள் அப்படியே தான் இருக்கின்றன!  ஏதோ இடை இடையே ஊறுகாய் போல அவ்வப்போது இந்த நூடல்ஸ்ஸை சாப்பிடலாம். அப்படித்தான் இங்கு நாம் சாப்பிடுகிறோம்.. மற்றபடி தமிழகத் தொலைக்காட்சி  விளம்பரங்கள் அதனைக் கிடைப்பதற்கு அரிய ஒரு பொருளாக  காண்பிப்பது மக்களை ஏமாற்றுவதற்கு ஒப்பாகும்!!

ஆனாலும் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. இது போன்ற விளம்பரங்கள் என்பது ஒரு வியாபார யுக்தி. வியாபாரிகள் வியாபாரத்திற்காக எந்த எல்லையையும் தாண்டுவார்கள்! அவர்களுக்கு விற்பனை தான் முக்கியம். மக்களின் நலன் என்பதெல்லாம் அவர்களுக்குத் தேவை இல்லாத ஒன்று! அது பற்றியெல்லாம் கவலைப்படக் கூடிய இடத்தில் அவர்கள் இல்லை!

நாம் சொல்ல வருவது இது தான்: இது சாப்பிடுவதற்கு ஏற்ற முழு உணவு அல்ல. சும்மா போகிற போக்கில் சாப்பிட்டுவிட்டுப் போகலாம். உடல் நலனைப் பற்றிக் கவலைப்படாதவர்கள் மிக மிகத் தாராளமாகச் சாப்பிடலாம்!  வீட்டில் சாப்படு இல்லாமால் தட்டுக்கெட்டச் சமயங்களில் இதனைப் பயன் படுத்திக் கொள்ளலாம்! அவ்வளவு தான்!

தேவை இல்லாமல் தேவலோகத்து தேவாமிர்தம் என்று நினைத்து உங்கள்  உடல் நலனைக் கெடுத்துக் கொள்ளதீர்கள்!

நல்ல உணவுகளைத் தேர்ந்து எடுத்து நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை வாழ பிள்ளைகளுகுச் சொல்லிக் கொடுத்து நாமும் ஆரொக்கியமாக வாழ்வோம்.

வாழ்த்துகள்!
Wednesday, 12 October 2016

ஜெயவாவுக்காக குழந்தைகள் சித்திரவதை!


 தமிழக முதலமைச்சர் உடன் நலன் குன்றிருப்பது ஒன்றும் புதிய செய்தி அல்ல. அவர்  நல்ல உடல் நலம் பெற்று மீண்டும் தனது பணிகளைத் தொடர வேண்டும் என்பது நமது விருப்பமும் கூட.

ஆனால் அவரின் தொண்டர்கள் செய்கின்ற சில அடாவடித்தனங்கள் நம்மை முகம் சுளிக்க வைக்கின்றன.

ஏழைக்  குழந்தைகளைப் பிடித்து இழுத்து வந்து அவர்களுக்கு அலகுக் குத்தி அம்மாவுக்காக வேண்டுதல் செய்வது நியாயமாகப் படவில்லை! பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு ஏதோ கொஞ்சம் பணம் கொடுத்து இது போன்ற கொடுரச் செயல்களைச் செய்வது மிகவும் கண்டிக்கத்தக்கது. இப்படி செய்வதன் மூலம் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. எப்படிப் பார்த்தாலும் ஒருவர் நலம் பெற இது போன்ற கொடூரச் செயல்கள் உதவப் போவதில்லை!

இப்படி ஏழைக் குழந்தைகளை அழவைப்பதன் மூலம் - அலகுக் குத்துவது மூலம் - ஒருவர் உடல் நலம் பெற முடியுமென்றால் வேறுவினையே வேண்டாம்! பணம் உள்ளவன் - பதவியில் உள்ளவன் - ஒவ்வொருவனும் இப்படி ஏழைக் குழைந்தைகளைப் பிடித்து வந்து குழந்தைகளை அழ வைத்து வேண்டுதல் செய்ய ஆரம்பித்து விடுவான்!

ஒரு வேளை சம்பந்தப்பட்டவர்களின் குழந்தைகள் இது போன்ற வேண்டுதல் செய்தால் அதனால் பயன் கிடைக்கலாம். கொஞ்சமும் சம்பந்தம் இல்லாதவர்கள் என்றால் அதனால் எந்தப் பயனும் இல்லை!

கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்தால்  ஒன்று மட்டும் புரிகிறது. அவருடைய முக்கிய ஆதரவாளர்கள் பலர் - குறிப்பாக அவர்கள் வீட்டுப்பிள்ளைகள் -  எங்கோ போய் ஒளிந்து கொண்டார்கள் என்று நிச்சயம் சொல்லலாம்!

ஆதரவாளர்கள் என்றால் சராசரியான  ஆதரவாளர்கள் அல்ல. வெறித்தனமான ஆதரவாளர்கள்! எப்படி?  அவருடைய புனித பாதங்களைத் தொட்டுக் கும்பிடுவது! அவருடைய செருப்பை தொட்டுக் கும்பிடுவது! அவருடைய கார் சக்கரங்களைத் தொட்டுக் கும்பிடுவது! அவர் மிதித்து நடந்த மண்ணை புனித மண் என்று  தொட்டுக் கும்பிடுவது! அம்மா ஒரு கோயில் அவர் முன் நான் செரூப்புபு அணிய மாட்டேன் என்று சொல்லுவது! அவருடைய ஹெலிகாப்டர் மேலே பறந்தால் கீழே அதன நிழலைத் தொட்டுக் கும்பிடுவது!

இவர்களெல்லாம் வேறித்தனமான ஆதரவாளர்கள் என்று சொல்லுவதில் தவறில்லையே! இப்போது இவர்களெல்லாம் எங்கே போனார்கள்? அப்போல்லோ மருத்துவமனையின் வாசற்படியைத் தொட்டுக் கும்பிட்டுக் கொண்டிருக்கிறார்களோ! அவர்கள் வீட்டுப் பிள்ளைகளை வெளிநாடுகளுக்குச் சுற்றுப் பயணத்திற்கு அனுப்பி விட்டார்களோ!

இவர்களைப் போன்ற தீவிர ஆதரவாளர்கள் தான்  இந்த நேரத்தில்  அம்மாவுக்குப் பக்க பலமாக இருக்க வேண்டும். அம்மாவிடமிருந்து பல வகைகளில் பயன் பெற்றவர்கள் இவர்கள். இவர்களும் இவர்கள் வீட்டுப் பிள்ளைகளும் தான் அம்மாவின் நலனுக்காக எதையும் செய்ய தயாராக இருக்க வேண்டும். இதில் ஏழை வீட்டுக் குழந்தைகள், பணக்கார வீட்டுக் குழந்தைகள் என்றெல்லாம் பாகுபாடு காட்டக்கூடாது.

ஏழை வீட்டுக் குழந்தைகளுக்கு ஏதோ அப்போதைக்கு அவர்களின் பெற்றோர்களுக்குக் கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டு அவர்கள் வீட்டுப் பிள்ளைகளை அலகுக் குத்தி அழ வைப்பது மனிதாபிமானமற்றச் செயல். இது குழந்தைகளைக் கொடூரப்படுத்துகின்ற ஒரு செயல். கொடுமைப்படுத்தி அவர்களைக் கதற வைப்பது அறிவற்ற ஒரு செயல். எந்த வகையிலும் சம்பந்தமில்லாத ஒரு நபருக்காக இந்தக் குழந்தைகளைச் சித்திரவதை செய்வது மிகவும் கண்டிக்கத்தக்கது.

அவர்கள் ஏழைகள். அவர்கள் ஏழைக் குழந்தைகள்.இந்தக் குழந்தைகள் பெற்றோர்களுக்குப் பயந்து அலகுக்குத்த சரி என்று தலையை ஆட்டுகின்றனர்.இப்படிக் குழந்தைகளைச் சித்திரவதை செய்வதே ஒரு பாவமான செயல். ஒரு பாவச் செயல் எப்படி ஒரு நோயாளிக்கு நல்லதைக் கொண்டு வரும்? இது போன்ற செயல்கள் நோயாளிக்கு இன்னும் துன்பத்தைத் தான் விளைவிக்கும்!

எப்படிப் பார்த்தாலும் குழந்தைகளைச் சித்திரவதை செய்து ஒரு நொயாளியைக் குணப்படுத்த நினைப்பது ஏற்புடைய  செயல் அல்ல.

அம்மாவின் தீவிர ஆதரவாளர்களே செய்ய வேண்டிய ஒரு செயலை - அதனை அவர்கள் ஏழைக்குழந்தைகளின் மீது  திருப்பிவிட்டு - தாங்கள் தப்பித்துக் கொள்ளுவதை எந்த வகையிலும் நாம் ஆதரிக்க முடியாது. நியாயப்படுத்தவும் முடியாது!

இது குழந்தை சித்திரவதையே!

முதல்வர் நலம் பெற்று மீண்டும் தனது பணிகளைத் தொடர இறைவனை இறைஞ்சுகிறோம்!


Tuesday, 11 October 2016

கர்நாடக முதல்வர் செய்வது சரியா?


கர்நாடக முதல்வர் சித்தராமையா தமிழகத்திற்குத் தண்ணிர்  தர  முடியாது என்று சொன்னதைப் பற்றியான விமர்சனங்கள் பலவாறாக உள்ளன.தமிழ் நாட்டில்  ஒரு மாதிரியாகவும் கர்நாடகாவில் வேறு மாதிரியாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை!

தமிழகத்தில் அவர் வில்லனாகச் சித்திரிக்கப் படுகிறார்! கர்நாடகாவில் அவர் கதாநாயகனாகப் ;போற்றப்படுகிறார்!

அவர் வில்லனாகச் சித்திரிக்கப் படுகின்றார் என்றால் அவரால் தமிழ் நாட்டுக்கு நஷ்டம்! கர்நாடகாவில் அவர் போற்றப்புடுகின்றார் என்றால் அவரால் கர்நாடாகவுக்கு இலாபம்.

ஒரு தமிழனாக இருந்து பார்க்கும் போது அவர் செய்வது எவ்வகையிலும் சரியில்லை. ஆனால் ஒரு  மாநிலத்தின் முதல்வராக அவர் செயல் படுவதில்  எந்தத் தப்பும் இல்லை!

அது அவர் மாநிலம். அவருடைய மக்களின் நலன் அவருக்கு முக்கியம். அவர் மாநிலத்து மக்களில் குடிநீருக்கு எந்த இடைஞ்சலும் வரக்கூடாது என்பது அவரது வாதம். சரிதானே? சரியில்லை என்று யார் சொல்ல  முடியும்?

அவர் மாநிலத்தின் நலனுக்காக அவர் எடுத்த முடிவுகள் நிச்சயமாகப் பல சிக்கல்களை ஏற்படுத்தும் என்பது அவருக்கும் தெரியும். அவரின் முதல்வர் பதவி பறி போகலாம். அவரின் ஆட்சி கலைக்கப்படலாம்.அவர் நீதிமன்ற உத்தரவுகளை மதிக்கவில்லை - இப்படியான குற்றச்சாட்டுக்கள் அவர் மீது உண்டு!

ஆனாலும் அப்படியே அவரின் ஆட்சி கலைக்கப்பட்டாலும் அது பற்றி அவர் கவலைப்படவில்லை! எனது மக்களின் நலனே எனக்கு முக்கியம்  என்கிறார் சித்தராமையா!

இப்படிப் பட்ட முதல்வரை நாம் எங்குப் பார்க்க முடியும்? பதவிக்காக அடித்துக் கொள்ளுகிற இந்தக் காலக் கட்டத்தில் பதவி போனாலும் பரவாயில்லை என்று யார் சொல்லுவார்? அது அவரின் இனப்பற்றைக் காட்டுகிறது என்பது தானே பொருள்?

தமிழர் மாநிலத்தில் அது போன்ற நிலைமை இல்லையென்றால் அது சித்தராமையாவின் குற்றமல்ல!  தமிழர் மாநிலத்திலும் அவர் கடைப்பிடிக்கின்ற அதே  இனவுணர்வை இங்கும் தமிழர் என்னும் இனவுணர்வை  .கடைப்பிடிக்கலாம். யார் வேண்டாமென்று சொன்னார்?  தமிழர் நலனை இங்கும் தமிழக முதல்வர் முதன்மையான கொள்கைகையாகக்  கொண்டு  வரவேண்டும்.. முடியாது என்று யார் சொல்லுவார்?  அவர் மாநில மக்களின் மீது எந்த அளவுக்கு பற்றும் பாசத்தையும் கட்டுகிறாரோ அதே பற்றும் பாசமும் ஏன் தமிழக முதல்வர் தனது குடிமக்களிடம் காட்டக்கூடாது?  இது போன்ற மாநில பாசம் கர்டநாகத்திற்கு மட்டும் தானா சொந்தம்? அப்படி  அல்லவே!  அது ஒரு நல்ல எடுத்துக்காட்டு தானே! தமிழக முதல்வரும் ஏன் அதனைப் பின் பற்றக் கூடாது?

கர்நாநாடக முதல்வர் அவரது மாநிலத்தைப் பொறுத்தவரை தனது மாநில மக்களின் நலனை முன்னிறுத்தி செயல்படுகிறார். அதனை அந்த மாநில மக்களும்  வரவேற்கிறார்கள்.தமிழர் மாநிலத்தில் தமிழக முதல்வர் தமிழர் நலனை முன்னிறுத்தி செயல்பட்டால் நிச்சயம் தமிழ் மக்களும்  அதனை வரவேற்பார்கள்.

தமிழ் மாநிலத்தின் நலன் தான் என்ன?  தமிழக முதல்வருக்குத் தெரியாதது ஒன்றுமில்லை!  அது தெரியாவிட்டால் அவர் முதல்வராக இருக்க முடியாதே!

ஆக, நமக்குத் தெரிந்தவரை கர்நாடக முதல்வரைக் குற்றம் சொல்லுவதை நிறுத்த வேண்டும்! அவர் செய்வது சரியே! அவரின் மாநிலத்தின் நலனுக்காக அவர் போராடுவது சரியே! தனது மாநிலத்திற்காக போராடும் போராளி அவர்!


Sunday, 9 October 2016

கேள்வி - பதில் (32)


கேள்வி

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உண்மை நிலவரம் தெரிய வாய்ப்பே இல்லையா?

பதில்

இன்றைய அவர் நிலையை நினைத்தால் பரிதாபப்படத் தான் வேண்டியிருக்கிறது.  எத்தனையோ சட்டமன்ற உறுப்பினர்களைக்  காலில் விழவைத்து வேடிக்கைப் பார்த்தவர்  இன்று   யார் காலிலோ அவர் விழுந்து கிடக்கும்  நிலமை!

அத்தோடு மட்டும் அல்ல!  அவர் என்ன நிலையில் இருக்கிறார், உண்மையில் தேறி வருகிறாரா அல்லது ஆளே இருக்கிறாரா, இல்லையா என்பது கூட யாராலும் தெரிந்து கொள்ள முடியவில்லை! இந்த  அளவுக்கு இதில் என்ன ரகசியம் வேண்டியிருக்கிறது  என்பது நமக்கும் புரியவில்லை!

இந்த ரகசியத்தினால் யாருக்கு என்ன பயன் என்பதும் நமக்குத் தெரியவில்லை! ஏதோ அரசியல் விளையாட்டு நடக்கிறது என்பது தெரிகிறது. இதில் கோடிக்கணக்கில் பணம் கைமாறுகிறது என்று சொல்லப்படுகிறது!

இந்த அளவுக்கு அரசியல் விளையாட்டுக்கள் நடக்கிறது என்றால் அம்மாவின் நிலை சரியில்லை  அவர் மீண்டும் அரசியல் நடத்த வழியில்லை என்பது தான் பொருள்!  அவரைப் பார்த்து இனி யாரும் பயப்படப்போவதில்லை!

ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர்.க்கு ஜெயலலிதா என்ன செய்தாரோ அதுவே இன்று அவரைத் திருப்பித் தாக்குகிறது!  இதைத்தான் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பர். பூனைகளுக்கு இப்போது தான் காலம் வந்திருக்கிறது! இது  பூனை,  யானையை ஏறி மிதிக்கும் காலம்!  இனி வரும் நாள்களில் இந்த நாடகங்கள் எல்லாம் நடக்கும்!

சசிகலா குடும்பத்தினர் இந்த அளவுக்கு முதல்வரை அடக்கி ஆள்வது என்பது நாம் நினைத்து பார்க்க முடியாத ஒன்று. ஜெயலலிதாவை வைத்து பிழைப்பு நடத்தியவர்கள்  இப்போது அவருக்கே எமனாகி விட்டனர்.

இனி தமிழக முதல்வருக்கு என்ன நடந்தாலும் அதற்கான பொறுப்பை சசிகலாவே ஏற்க வேண்டும். ஒரு முதல்வரை சிறைப் பிடித்து வைத்திருப்பது என்பதே தவறானது. இதில் அப்போலோவும் சம்பந்தப்பட்டிருக்கிறதா என்பதும் தெரியவில்லை.

முதல்வரைப் பற்றியான உண்மைச் செய்திகள் வெளியாகாத நிலையில் இப்போது பல வகையான ஊகங்கள் வெளியாவது இயற்கையே! இப்போதே, அவர் இன்னும் உயிரோடு இருக்கும் போதே, அவரைப்பற்றி வாழ்க்கை வரலாறு எல்லாம் யுடீயுப்பில் வெளியாக ஆரம்பித்துவிட்டன!

இப்போதைக்கு முதல்வரை வைத்து பணம் பண்ணுபவர்கள் சசிகலா குடும்பத்தினர் என்பது மட்டும் தெரிகிறது! அரசியல் பேரம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்!

பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். உண்மை நிலை எப்போது தெரியும் என்பது இப்போது தெரியவில்லை!


Friday, 7 October 2016

முதல்வர் ஜேவுக்கு ஏன் இந்த நிலைமை?


மிகவும் வருத்தமாகத்தான் இருக்கிறது முதல்வர் ஜெயலலிதாவின் நிலைமை. தமிழக அரசியலில் ஒரே ஆண் மகன் அவர் தான் என்று சொல்லும் அளவுக்கு அவர் செயல்பட்டார்.

இன்று அவர் 'பாவம்' என்று சொல்லுகிற நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். அவரிடம் எடுபிடியாக இருந்தவர்கள் இன்று அவரைக் கொடுக்குப்பிடியாக சிறை வைத்திருக்கின்றனர் என்று தான் நினைக்க வேண்டியிருக்கிறது!

முதல்வரின் நிலைமை எப்படியிருக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை! ஆளுநர், தலைமைச் செயலாளர்  இன்னும் யார் யாரோ வருகிறார்கள், போகிறார்களே தவிர அவரை பார்க்க அனுமதி மறுக்கப்படுகின்றது! அனுமதிக்கப்படுவதில்லை!  ஏன் அவருடைய அண்ணன் மகள் - லண்டனிலிருந்து வந்தவர் - அவருக்குக் கூட அனுமதியில்லை!

முதல்வரின் நெருங்கிய தோழி, சசிகலாவின் குடும்பம் தான் இன்றைய நிலையில் முதல்வரின் நிலையைப் பற்றி  அறிந்தவர்கள். ஆளுநரோ, தலைமைச்செயலாளரோ  முதல்வரைச் சந்தித்தார் என்பதற்கான எந்த அடையளாமும் இல்லை!  எல்லாம் வெறும் வெற்று அறிவிப்போடு சரி!

முதல்வர் தங்கி சிகிச்சை பெறும் அப்பொல்லொ மருத்துவனமனையின் முற்றிழுமாக ஒரு பகுதியை சசிகலாவின் குடும்பத்தினர் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன!

இது போன்ற இறுக்கமான ஒரு சூழ்நிலையில் ஊடகங்கள் பலவித ஊகங்களாக  செய்திகளை வெளியிடுவது தவிர்க்க முடியாததாகி விடுகின்றது!

யாருமே முதல்வரைப் பார்க்க அனுமதி இல்லை என்றால் ஊடகங்களில் பரவலாக பரவிக் கொண்டிருக்கும் செய்திகள் அனைத்தும் உண்மை என்றே நினைக்க வேண்டியுள்ளது.

முதல்வர் உயிரோடு போராடிக் கொண்டிருக்கிறார் அல்லது அவரைப் பார்ப்பவர்களுக்கு அவருடைய நோய் தொற்றிக் கொள்ளும் என்று இப்படியாகத் தான் சராசரியாக நாம் கணிக்க வேண்டியுள்ளது. இல்லாவிட்டால் ஏன் இந்த கெடுபிடி?

சமூக ஆர்வலரான டிராஃபிக் ராமசாமி சொல்லுவதை நான் ஏற்றுக் கொள்ளுகிறேன். முதல்வருக்கு ஏதேனும் விபரீதம் நேர்ந்தால் சசிகலாவை சிறையில்  தள்ளுவேன் என்று அவர் சொல்லுவது சரியே! சசிகலாவும் அவர் குடும்பத்தினரும்  தான் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

கூட்டிக்கழித்துப் பார்த்தால் முதல்வர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலாவின் செமப்பிடியில் சிக்கி இருக்கிறார் என்று தான் தோன்றுகிறது!

அன்று எம்.ஜி.ஆர்! இன்று ஜெயலலிதா!

Thursday, 6 October 2016

முதலையை செருப்பால் விரட்டிய பெண்மணி!


ஒரு பழைய தமிழ்ப்படப் பாடல் ஒன்று உண்டு.  அறிஞர் அண்ணாவின் கதை வசனத்தில் வெளிவந்த  சொர்க்கவாசல் படத்தில் கே.ஆர்.ராமசாமி ஒரு பாடல் பாடுவார். அதில்  ஒரு வரி:  சீறி வந்த புலியதனை முறத்தினாலே அடித்து சிங்கார மறத்தி  ஒருத்தி துரத்தினாலே!

இந்தப் பாடல் வரிகள் எந்த அளவுக்கு உண்மை என்று நமக்குத் தெரியாது.  அது பற்றி நாம்  யோசிப்பதும் இல்லை. அந்தக் காலக் கட்டத்தில் அது சாத்தியமாகக் கூட இருந்திருக்கலாம்! ஒரு வேளை புலியைக் கூட பூனையைப் போல அந்தக் காலப் பெண்கள் நினைத்திருக்கலாம்!

முறத்தால் துரத்தியடித்த மறத்தியின் நினைவாக மாமல்லபுரத்தில் ஒரு புலியை முறத்தால் துரத்தியடிப்பது  போன்று  ஒரு சிற்பத்தைக் கூட  தமிழக அரசு நிறுவியிருக்கின்றதாம்!

முன்பெல்லாம் இது ஒரு கற்பனை  என்று நினைக்கப்பட்ட  இந்த செய்தி இப்போது உண்மையாக இருக்கும் என்று தான் நினைக்கத் தோனறுகிறது!

காரணம் அப்படி  ஒரு செய்தி சமீபத்தில் வெளியானது. ஆஸ்திரேலியாவில் ஒரு பூங்காவில் தனது நாய்க்குட்டியுடன் முதலைகள் குளத்தின்  கரையருகே முதலைகளைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெண்மணிக்கு அவர் அறியாமல் அவரது  வீரத்தைக் காட்ட ஒரு சம்பவம் நடந்தது. அவரைப் பார்த்து முதலை ஒன்று  அவரை நெருங்கிக் கொண்டிருந்தது! மற்றவர்களாக இருந்தால் அலறி அடித்துக் கொண்டு இடத்தைக் காலி செய்திருப்பார்கள்! அல்லது முதலை அவர்களைக் காலி செய்திருக்கும்! ஆனால் அந்தப் பெண்மணி ஓடவும் இல்லை! அலறவும் இல்லை!  மிகச் சர்வ சாதாரணமாக தனது காலில் இருந்த செருப்பைக் கழற்றி, கையில் அடித்து ஓசை எழுப்பி, அந்த முதலையை அச்சுறுத்தி அங்கிருந்து விரட்டி அடித்தார்! அந்த முதலையும் 'என்னமோ, ஏதோ' என்று பதுங்கி, பின்வாங்கி இடத்தைக் காலி செய்தது!

இந்த நிகழ்வுகள் அனைத்தும் ரகசிய கேமராவில் பதிவாகியுள்ளதாம்! அவர் எவ்வளவு பெரிய ஆபத்தில் சிக்கியிருந்தார் என்பதை அவர் ஊணர்திருந்தாரா   என்பது தெரியவில்லை!

ஒன்று புரிகிறது! மனிதனைப் பார்த்து எல்லா மிருகங்களும் பயப்படத்தான் செய்கின்றன! நாமும் அவைகளைப் பார்த்து பயப்படுகின்றோம்; அவைகளும் நம்மைப் பார்த்து பயப்படுகின்றன!

அப்படியென்றால் பலியை முறத்தால் அடித்து விரட்டினாரே அது எப்படி உண்மையில்லாமல் போயிருக்கும்?  இது நம் கண் முன்னால் நடந்தது. அது கண் முன் நடக்கவில்லை என்பதால் உண்மையில்லாம் போய்விடுமா!

இந்த சிங்கார மறத்திகளை வாழ்த்துவோம்!

இன்னொரு இந்தியர் கட்சியா..?


மலேசிய இந்தியர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி. இன்னொரு புதிய கட்சி இந்நாட்டு இந்தியர்களுக்குச் சேவை செய்ய களத்தில் இறங்க உள்ளது. ஆனால் ஒரு வித்தியாசம். இம்முறை வயதான இந்தியர்களை ஒதுக்கிவிட்டு இளம் தலைமுறையினருக்காக ஒரு கட்சி உதயமாக உள்ளது!

இப்படி ஒர் இளம் தலைமுறையினருக்காக ஒரு கட்சி அமையப்போவதாக ஆளுங்கட்சியான மலேசிய இந்தியர் காங்கிரஸ்ஸின் முக்கிய புள்ளிகளில் ஒருவரான டத்தோ ஜி.குமார் அம்மான் ஓர் அறிவிப்பைச் செய்திருப்பதாகப் பத்திரிக்கைச் செய்தி ஒன்று கூறுகிறது.

வாழ்த்துகிறோம்! வரவேற்கிறோம்!

மலேசிய இந்தியர்கள் மலேசிய நாட்டின் மூன்றாவது பெரிய இனம். மலாய்க்காரர், சீனர் அதற்கு அடுத்து இந்தியர். மலேசிய இந்தியர்களுக்குச் சேவை  செய்ய ஆறு நாளிதழ்கள்! மலேசிய இந்தியர்களுக்குச் சேவை செய்ய ஏகப்பட்ட அரசியல் கட்சிகள்! ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் மலேசிய இந்தியர் காங்கிரஸ் (ம.இ.கா.) - இரண்டாகப் பிளவுப்பட்டுக் கிடக்கிறது. ஏற்கனவே ம.இ.கா. விலிருந்து பிரிந்து வெளியேறிய இன்னொரு கட்சி ஐ.பி.எப். இரண்டாகப் பிளவுப்பட்டுக் கிடக்கிறது. இன்னொன்று மக்கள் முற்போக்கு கட்சி.  பல இன கட்சி என்று சொல்லப்பட்டாலும்  அது இந்தியர்களையே அதிகம் சார்ந்து நிற்கிறது.

இங்குக் குறிப்படப்பட வேண்டிய ஒன்று. அதிகமான மலாய்க்கரர்களைக் கொண்ட இந்நாட்டில் மூன்று மலாய்ப் பத்திரிக்ககைகள் தான் வெளியாகின்றன. இரண்டாவது அதிகமான சீனர்கள், மூன்று சீனப்பத்திரிக்கைகள் தான் வெளியாகின்றன.  மூன்றாவது இடத்தில் இருக்கும்  நமக்கு ஆறு தமிழ்மொழி பத்திரிக்கைகள்!

தமிழ்ப் பத்திரிக்கைகளின் தலையாயக் குறிக்கோள் என்ன? பிளவுப்பட்டுக் கிடக்கும் அரசியல் கட்சிகளில் உள்ள இந்தியர்களை மேலும் மேலும் பிளவு படுத்துவது! இந்தியர்களை அடித்துக் கொள்ள வைப்பது. இந்தியர்களின் ஒற்றுமையைக் குலைப்பது. எல்லா இந்தியர்களையும் பிரித்து  ஆளுக்கொரு கட்சிகளிள் சேர்த்துக் கொள்வது! ஆனால்  இந்தக் கட்சிகள் எவ்வளவு தான் பிரிந்திருந்தாலும், அடித்துக் கொண்டாலும்  ஒன்றே ஒன்றில் மட்டும் ஒற்றுமையாக இருக்கின்றன. இந்தியர்கள் அனைவரும் ஆடாமல் அசையாமல்,  அலுங்காமல் குலுங்காமல் அனைத்து இந்தியரும் அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்! தேர்தல் வரும்போது அரசாங்கத்துக்குத்தான் வாக்கு செலுத்த வேண்டும்!  இந்த ஒரு விஷயத்தில் மட்டும் அனைத்துக் கட்சிகளும் மிக மிக ஒற்றுமையாக இருக்கின்றன.

காரணம் உண்டு. இந்தியர்களுக்காகப் பல கட்சிகள் இருக்கலாம். ஆனால் இந்தக் கட்சிகள் அனைத்தும் பிரதமருக்குப் பிளவு படாத ஆதரவைக் கொடுக்கின்றன. அதனால் இவர்களுக்கு நேரம் காலம் சரியாக இருந்தால் அவர்களுக்கு ஏதேனும் அதிர்ஷ்டம் அடிக்கலாம்! ஏதாவது ஒரு துணையமைச்சர் பதவி கிடைக்கக் கூடிய வாய்ப்புண்டு. இல்லாவிட்டால் மேலவை (Senate) உறுபினர் ஆகலாம். அல்லது அரசாங்க அமைப்புக்களில் ஏதேனும் பதவிகள் கிடைக்கலாம். இல்லாவிட்டால் அரசாங்கம் தமிழ்ப்பள்ளிகளுக்கோ அல்லது இந்திய வியாபாரிகளுக்கென்றோ பல கோடிகள் ஒதுக்கும் போது இவர்களும் அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்! இப்படி எத்தனையோ பயன்கள் இருக்கும் போது இந்தக் கட்சிகள் அனைத்தும் அரசாங்கத்தை ஆதரிப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை!

இந்தக் கட்சிகள் மூலம் சராசரி இந்தியனுக்கு என்ன லாபம் என்று நாம் விவாதம் செய்வதில் எந்த அர்த்தமுமில்லை. இதுவரையில் எந்த ஒரு பயனும் இல்லாத போது புதிதாக என்ன பயன் கிடைத்துவிடப் போகிறது? ஏதோ தலைமைத்துவ பதவியில் இருப்பவருக்காவது பதவி கிடைக்கிறதே என்று ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டியது தான்!

பராவியில்லை! இவர்களையும் வரவேற்போம்!


Saturday, 1 October 2016

அழகுக்கலையா..? அவசரம் வேண்டாம்!


இன்று நமது பெண்களிடையே, -  குறிப்பாக இடை நிலைப்பபள்ளிகளிலிருந்து வெளியாகும் மாணவிகள் - அழகுக்கலைப் பயிற்சியில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பதில் நமக்கும் மகிழ்ச்சியே!

ஆனால் அவர்கள் தங்களது  கல்வித்தரத்தை இன்னும் அதிகரித்துக் கொண்டால் அது தான் நமக்கு உண்மையான மகிழ்ச்சி!

இன்று,  அழகுக்கலை அல்லது ஒப்பனைக்கலை அல்லது பியூட்டிஷியன் என்று சொல்லப்படும்  பயிற்சிகளுக்கு  ஊடகங்களில் அதிக அளவில் விளம்பரத்துப்படுகின்றன. இதில் சொந்தப்  பணம் போட்டு பயிற்சி பெறுபவரும் உண்டு; அரசாங்கக் கடன் பெற்று பயிற்சி பெறுபவரும் உண்டு.

இங்கு நாம் கவனிக்கத்தக்க முக்கியமான ஒன்று:  பள்ளிகளிலிருந்து வெளியாகும் மாணவிகளில் ஏன் இந்தப் பயிற்சிகளில் அதிக ஈடுபாடு காட்டுகின்றனர். தீடீரென ஏன் அழகுக்கலை மீது மோகம்?

முக்கியமான ஒன்று: இவர்கள் பெரும்பாலும் கல்வியில் பின் தங்கிய மாணவிகள் அல்லது கல்வியில் நாட்டம் இல்லாத மாணவிகள் என்று சொல்லலாம். கல்வியில் நாட்டமில்லாததால் தங்களது பெற்றோர்களிடம் அவர்களது கவனத்தைத் திசை திருப்ப அழகுக்கலைப் பயிற்சி என்று சொல்லி கல்வியைப் பின் தள்ளிவிடுகின்றனர். இதற்கு ஓரளவு இந்தப் பயிற்சிகள் கொடுக்கும் பள்ளிகளும் ஒரு காரணம். அவர்கள் பலவிதமான யுக்திகளப் பயன்படுத்தி இந்த மாணவிகளைக் கவர்ந்து இழுக்கின்றனர்! அவர்களைப்  பொறுத்தவரை அவர்களுக்குத் தேவை பணம் மட்டும் தான்! சமுதாய  நோக்கம் என்பதெல்லாம் ஒன்றுமில்லை!

கல்வியில் பின் தங்கிய மாணவர்களுக்கு அரசாங்கம் ஏகப்பட்ட பயிற்சிகளைக் கொடுக்கின்றது.. எந்தவித பணமும் செலவு இல்லாமல் பல பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. அரசாங்கம் கொடுக்கின்ற பயிற்சிகள் மூலம் மாணவர்கள் தங்களது கல்வித்தகுதிகளை  உயர்த்திக் கொள்ளலாம். அரசாங்க மூலம் கிடைக்கின்ற பயிற்சிகளுக்கு அரசாங்க வேலை வாய்ப்புக்கள் பிரகாசமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அரசாங்கத்திலும் ஓராண்டு, ஈராண்டு பயிற்சிகள் உண்டு. சான்றிதழ், டிப்ளோமா என்று அனைத்துக்கும் உரிய அங்கீகாரம் உண்டு.

இந்த அழகுக்கலைப் பயிற்சிகள் மூலம் என்ன சாதிக்கப்போகிறோம்? கடைசியில் பார்த்தால் ஒன்றும் இருக்காது! வேலை தேடி யாரிடம் போவீர்கள்? எத்தனை இந்தியர்கள் அழகு நிலையம் வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள்? வைத்து நடத்துபவர்களே பிழைப்புக்கு வழியில்லாமல் தடுமாறுகிறார்கள்!

அப்படியே உங்களுக்கு அதிதீவிரமான ஆர்வம் இந்தத் துறையில் இருந்தால் - இருந்தால் மட்டுமே - சீனர்கள் நடத்துகின்ற பயிற்சிப்பள்ளிகளில் கலந்து உங்களது பயிற்சியை மேற்கொள்ளுங்கள். அவர்களிடம் பயிற்சி பெற்றால் மட்டுமே நீங்கள் சீனர்களின் அழகு நிலையங்களில் பணி புரியலாம். சீனர்களுக்கான சந்தை என்பது பெரிது. பயிற்சி இருந்தால் - திறமை இருந்தால் - மட்டுமே அவர்களிடம் வேலை செய்ய முடியும். சும்மா, அரைகுறை வேலையெல்லாம் அவர்களிடம் எடுபடாது!

சமீபத்தில் அழகுக்கலையில் பயிற்சி பெற்ற - சீனரிடம் வேலை செய்த - ஒரு பெண் சொன்னார்: நொந்து நூலாகவிட்டேன் என்று! பிறகு சொந்தமாகக் கடை வைத்தார். அதனையும் இழுத்து மூடிவிட்டார்! இப்போது: கையில் ஒரு பையைத் தூக்கிக்கொண்டு தொழிற்சாலை ஒன்றில் "ஆப்பரேட்டர்" வேலைக்குப் போய்க் கொண்டிருக்கிறார்!  அப்பா-அம்மா செலவு செய்து படிக்கவைத்த "அழகுக்கலை" ஒன்றுக்கும் உதவாமல் போய்விட்டது!

பெண்களே! கொஞ்சம் சிந்தியுங்கள். அரசாங்கம் உங்களுக்கு நிறைய வாய்ப்புக்கள் கொடுக்கின்றது.அவர் சொன்னார், இவர் சொன்னார், கூட்டாளி சொன்னார், பக்கத்து வீட்டுக்காரர் சொன்னார் - என்றெல்லாம் சொல்லி, எதை எதையோ நினைத்து உங்களின் எதிர்காலத்தை வீணடிக்காதீர்கள். இந்தப் பயிற்சி நிலையங்கள் ஐயாயிரம், பத்தாயிரம் என்று உங்களிடமிருந்து பணத்தைப் பிடுங்குகின்றனர்! அவ்வளவும் உங்களின் பெற்றோர்கள் உழைத்துச் சம்பாதித்தப் பணம். அதனை வீணடிக்க உங்களுக்கு உரிமையில்லை.

முடிந்தவரை உங்கள் கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்ளுங்கள். கல்வி மட்டும் தான் உங்களின் எதிர்காலத்திற்கு - எந்தக்காலத்திற்கும் உத்தரவாதமாக இருக்கும்.

அழகுக்கலையோ, ஒப்பனைக்கலையோ அது ஒரு பகுதி நேரமாகத்தான் உங்களுக்கு உதவியாக இருக்கும்.. காரணம் அதற்கானச் சந்தையைப் பிடிப்பதற்கு நீண்ட நாளாகும்.  முதலில் உங்களுக்கு நல்ல பயிற்சி தேவை. அதற்கு உங்களுக்கு அனுபவம் தேவை. ஒரளவு சந்தையைப் பிடித்த பின்னர் தான் நீங்கள் சொந்தமாக ஒரு நிலையத்தை ஆரம்பிப்பதைப் பற்றி சிந்திக்க முடியும்.

சொந்தத் தொழில் செய்வதை நான் ஊக்குவிக்கிறேன். ஆனால் இங்கு நீங்கள் அழகுக்கலையைப் படிக்க நினைப்பதற்கான நோக்கம் சரியாக இல்லை. கல்வி கற்பதிலிருந்து தப்பிப்பதற்கான ஒரு வழியாக அழகுக்கலையைப் பற்றிக் கொள்ளுகிறீர்கள். கல்வி கற்பதலிருந்து இப்போது நீங்கள் தப்பித்துக்கொள்ளலாம். ஆனால் நீங்களும் ஒரு காலத்தில் ஒரு பையைத் தூக்கிக்கொண்டு ஏதோ ஒரு தொழிற்சாலயில் ஆபரேட்டர் வேலைக்குத் தான் போக வேண்டி வரும்!

நமக்கு ஒரு தொழிற்கல்வி தேவை தான். அதற்காகத்தான் அரசாங்கம் ஏகப்பட்ட தொழிற்கல்லூரிகளைக் கட்டி வைத்திருக்கிறது. நல்லதொரு பயிற்சியைப் பெறுங்கள். வாழ்க்கையில் முன்னேறுவதற்கு வழிவகைகளை கொஞ்சம் சிரத்தை எடுத்துது ஆராயுங்கள். ஒரு அடிப்படை கல்வியாவது உங்களுக்குத் தேவை.

அழகுக்கலையா? அவசரப்படாதீர்கள்!  சிந்தித்துச் செயல்படுங்கள்! வாழ்க வளமுடன்!