Friday 29 June 2018

சார்டின்களுக்கு மீண்டும் தடை..!


சீன நாட்டிலிருந்து இறக்குமதிச் செய்யப்படும் சார்டின்களுக்கு மீண்டும்  தடை போட்டிருக்கிறது அரசாங்கம். ஆனால் இம்முறை வெவ்வாறு பெயரில் வெளிவரும் சார்டின் டின்கள் இவை.

சமீபத்தில்  "RANESA"  என்கிற பெயரில் வெளியாகும் சார்டின்களுக்கு அரசாங்கம் தடை விதித்திருந்தது. அவைகளில் கிருமிகள் இருப்பதைச்  பரிசோதனைகள் காட்டுவதாக தடுப்புச் சோதனை மையம் அறிவித்திருந்தது.

இம்முறை மேலே படங்களில் காணப்படும் அனைத்துச் சார்டின்களிலும் கிருமிகள் இருப்பதைச் சோதனை மையம் கண்டு பிடித்திருக்கிறது. இவைகள் சாப்பிடுவதற்கு ஏற்றதல்ல!

ஆனாலும் ஒரு கேள்வி. இத்தனை ஆண்டுகள் எந்த விதமானப் பிரச்சனைகளின்றி நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்ட  சீனப் பொருட்கள் - குறிப்பாக வகை வகையான சார்டின்களுக்கு  -  இப்போது என்ன நேர்ந்தது? நம்மைக் கேட்டால் ஒன்றும் ஆகவில்லை! எப்போதும் இப்படித்தான் வந்து கொண்டிருக்கின்றன.  ஆனாலும் இத்தனை ஆண்டுகள் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருப்பதற்குக்  கொஞ்சம் 'சரிகட்டி' க் கொண்டு  போக வேண்டியிருந்தது! அது முந்தைய அரசாங்கத்தில். இனி மேல் இப்படி நடந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மேல்  நடவடிக்கை எடுக்க இப்போதைய அரசாங்கம் தயங்காது என்பதை புரிந்து கொண்டிருக்கிறார்கள்1

மேலும் இது போன்ற மலிவான சார்டின்களை உணவகங்களுக்குத் தள்ளிவிடும் வழக்கம் உண்டு. யாரும் கண்டுக்கொள்ளப் போவதில்லை! அதே சமயத்தில் பெரிய பெரிய பட்டணங்களுக்கு இவைகள் அனுப்பப்படுவதில்லை! சிறிய சிறிய பட்டணங்கள், கிராமங்கள் தான் அவர்களின் இலக்கு.

எது எப்படியோ,  இனி கடமைகளைச் சரியாகச்  செய்யாவிட்டால் இருக்கிறது செருப்படி!  அவர்கள்  தங்களது கடமைகளைச்  சரியாக செய்யாவிட்டால் இருக்கவே இருக்கிறது கைப்பேசி! வாட்ஸப்!  அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்துங்கள்!  அவர்களை வேலை வாங்குங்கள்!

அது தான் இப்போதைக்கு நாம் செய்ய வேண்டிய வேலை!

Thursday 28 June 2018

கல்வி துணையமைச்சர் இந்தியரா...?


துணைக்கல்வி அமைச்சர் இந்தியராக இருக்க வேண்டும் என்று ஒரு சிலர் சொல்லி வருவது சரிதானா என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

கடந்த அரசாங்கத்தில் துணைக்கல்வி அமைச்சராக இருந்த கமலநாதன் செய்த அட்டூழியங்களையும் அசிங்கங்களையும் பார்த்த பிறகு இந்தப் பதவிக்கு ஓர் இந்தியர் வரலாமா என்று நினைக்கத் தோன்றுகிறது! கமலநாதன் தமிழரா என்பது எனக்குத் தெரியாது. தமிழாவது அவருக்குத் தெரியுமா என்பதும் எனக்குத் தெரியாது.ஆனால் அவர் செய்த காரியங்கள் அனைத்தும் தமிழுக்கும், தமிழ்ப்பள்ளிகளுக்கும் எதிரானவை. அதனால் அவர் ஓர் இந்தியராகத்தான் இருக்க வேண்டும்! தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவன் அவரைப் போல தமிழுக்கு எதிரியாகச் செயல்பட்டிருக்க முடியாது என்பதை நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

துணைக்கல்வி அமைச்சராக ஓர் இந்தியர் வரவேண்டும் என்று வாதிடுபவர்கள் கமலநாதனைப் பார்த்துப் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அவர் தமிழ்ப்பள்ளிகளுக்கு எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்யவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்ப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களையே தமிழ் மொழிக்கு எதிராகத்  தூண்டிவிட்டவர் கமலநாதன்.  அவர் காலத்தில் எந்த ஒரு நல்ல காரியத்தையும் தமிழ் மொழிக்கோ அல்லது தமிழ்ப்பள்ளிகளுக்கோ அவர் செய்யவில்லை! பேசத் தெரியாதவன்,  பேச அச்சம் உள்ளவன் அரசியலுக்கு வரக்கூடாது! சொந்தப் பிழைப்பைப் பார்த்துக் கொள்ளலாம்!

இந்த நேரத்தில் இப்போது துணைக்கல்வி அமைச்சராக ஓர் இந்தியர் வரவேண்டும் என்னும் குரல் ஒலிக்கத் துவங்கி இருக்கிறது. "சும்மா ஏதோ ஒரு தமிழன் பிழைத்துவிட்டுப் போகட்டுமே"  போன்ற அனுதாபங்கள் எல்லாம் இனி வேண்டாம்! அவன் பிழைத்து விட்டுப் போகட்டுமே என்று நாம் நினைத்தாலும் அவன் சமுதாயத்திற்குத் துரோகம் அல்லவா செய்து விட்டுப் போகிறான்? துரோகிகளை வளர்த்து விடுவது நமது வேலையல்ல. அது அவன் அப்பனே  சொல்லிக் கொடுப்பான்!

ஒரு துணைக்கல்வி அமைச்சராக ஓரு தமிழன் வர வேண்டும். அவன் தமிழ் தெரிந்தவனாக இருக்க வேண்டும். இனப்பற்று, மொழிப்பற்று உள்ளவனாக இருக்க வேண்டும். பாருங்கள்! அகப்படாமலா போய் விடுவான்.

நல்லதே நடக்கும் என நம்புவோம்!

Wednesday 27 June 2018

நீங்கள் 'சார்டின்' பிரியரா..?


நீங்கள் சார்டின் பிரியரா? கொஞ்சம் கவனமாக இருங்கள்.   அதுவும் சீனாவில் இருந்து வருகிற அனைத்துச் சாப்பாட்டுப் பொருள்களும் சாப்பிடுவதற்கு ஏற்றதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.  காரணம் சீனப் பொருட்களில் எதுவுமே - ஏன் பல - அது உணவு சம்பந்தமாக இருக்கட்டும் அல்லது  தொழில்நுட்பம் சார்ந்ததாக இருக்கட்டும் பெரும்பாலும் தரக்குறைவான பொருட்களாகவே உள்ளன என்பதை மறந்து விட வேண்டாம். 



புதிதாக நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்ட ரி.ம. 200,000 வெள்ளி பெறுமானமுள்ள சார்டின்களின் மாதிரிகளைச் சோதித்த போது அதில் "அனிசாக்கியாசிஸ்" என்னும் நோயை உருவாக்கும் கிருமிகள் இருப்பதாக அதன் சோதனைக்குப்புப் பின்னர் பினாங்கு தடுப்புச் சோதனை முனையம் அறிவித்தது. இதில்  சோதனைக்கு உட்படுத்தப்பட்ட சார்டின் "RANESA'  என்னும் வகையைச் சார்ந்தது. 

இந்த அனிசாக்க்யாசிஸ் வியாதியின் ஆரம்பம் வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி   இன்னும் பல.

பொதுவாக சீனாவிலிருந்தி வரும் உணவுப் பொருட்கள் மலிவு என்று நினைத்து வாங்க வேண்டாம். பிள்ளைகளின் உணவுப் பொருட்களில் கூட பிளாஸ்டிக் கலப்பதாகச் சொல்லப்படுகிறது.

உணவுப் பொருட்கள் பல நாடுகளிலிருந்து நமது நாட்டிற்குள் இறக்குமதியாகின்றன. ஆனால்  சீனப் பொருட்கள் தான் மக்களுக்கு அதிகமான ஆபத்துக்களைக் கொண்டு வருகின்றன.

சீனப் பொருட்களைப் புறக்கணியுங்கள் என்று தான் சொல்லத் தோன்றுகிறது!

Monday 25 June 2018

உணவகங்களில் உள்ளூர் சமையல்காரர்கள்!


நமது உணவகங்களில் உள்ளூர் சமையல்காரர்களைப் பயன் படுத்த வேண்டும் என்கிற மனிதவள அமைச்சரின் அறிவிப்பு  வெவ்வேறான எதிரொலிகளை ஏற்படுத்தியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

நமது உணவகங்கள் நீண்ட காலமாக அனுபவித்த வந்த சலுகைகள் அனைத்தும் போய்விடுமே என்னும் கோபம் தான் அவர்களில் குரல்களில் தொனிக்கிறதே தவிர மற்றபடி அவர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் இறங்கி வருவார்கள் என எதிர்பார்க்க முடியாது!

காரணம் உணவகங்கள் இந்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மூலம் நல்ல வருமானத்தைப் பெற்றார்கள்  என்று தாராளமாகச் சொல்லலாம். எப்படி?  

இங்கு நான் உணவகங்கள் என்றால் இந்திய உணவகங்களைத் தான்  சொல்லுகிறேன். தமிழ் நாட்டுத்  தொழிலாளர்களைத் தான் சொல்லுகிறேன். காரணம் உள்ளூர் முதலாளிகளால் அடிபடுபவர்களில் இவர்கள் தான்அதிகம்.  ஏமாறும் தொழிலாளர்களில் இவர்கள் தான்அதிகம்.

பொதுவாக  தமிழகத் தொழிலாளர்கள்  என்றாலே  உணவக  உரிமயாளர்களுக்கு  மிக மிக  லாபம்  சம்பாதித்துக் கொடுப்பவர்கள். பல முதலாளிகள் அவர்களுக்குச்  சம்பளமே  கொடுப்பதில்லை!  கேள்விகள்  கேட்பதற்கு  வாய்ப்பில்லை. ரௌடிகளின்  துணையோடு  தொழில்  செய்பவர்கள்!  வேலை செய்வதற்கு  நேரங்காலம் இல்லை!  எல்லா நேரமும்  வேலை நேரம்  தான்!

இப்படி  ஒரு  சூழலில்  தொழில்  செய்யும்  உணவக உரிமையாளர்கள் நிச்சயமாக  உள்ளூர்  தொழிலாளர்களை  விரும்ப மாட்டார்கள். எட்டு மணி  நேர வேலை என்பதாகத்தான் தொழிலாளர் சட்டம்  கூறுகிறது. உள்ளூர்  தொழிலாளர்கள்  என்றால் அதற்கு ஏற்றவாறு தான் உணவகங்கள் இயங்க வேண்டும். அவர்களுக்கு  ஏற்ற ஊதியம்  கொடுக்க வேண்டும். இ.பி.எஃ,  சோக்சோ, வார விடுமுறை, மருத்துவம் - இப்படிப் பல கட்டாயங்கள் முதலாளிகளுக்குண்டு. இவைகள்  எல்லாம்  இல்லாமல் தான் பல ஆண்டுகளை அவர்கள் அந்நியத்  தொழிலாளார்களை  வைத்துக் கொண்டு தொழில் செய்து  கொள்ளை இலாபம்  அடித்திருக்கின்றனர்!  இப்போது  மாறச் சொன்னால் மாறுவது எப்படி?

உள்ளூர் இளைஞர்கள் உணவகத்  தொழிலைக் கேவலமாக  நினைக்கிறார்கள்  என்பதெல்லாம் இவர்களுடைய கற்பனை. இவர்களே இவர்களுடைய தொழிலுக்கு மரியாதைக் கொடுக்காத போது தொழிலாளர்கள் எப்படி மரியாதைக் கொடுப்பார்கள்?  தொழில் மீது மரியாதை  இல்லாததினால் தானே சட்டத்திற்கு புறம்பாக வெளியூர் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள்! அது எப்படி முடிகிறது?  அதிக வேலை, குறைவான சம்பளம் என்பது தானே அவர்களது குறிக்கோள்?

நமது  நாட்டு சட்டங்களை  மதித்து தொழிலாளர்களின் நலனில் அக்கறை செலுத்தி உணவகத் தொழிலைச் செய்தால்  எந்த  வெளி நாட்டுத் தொழிலாளர்களும் நமது நாட்டிற்குத் தேவை இலலை!

மனிதவள அமைச்சர் சொன்னதைச் செய்ய  வேண்டும்  என்பதே  நமது  வேண்டுகோள்!

Saturday 23 June 2018

ரயில் விபத்தை தடுத்த சிறுமி...!



பயணிகள் ரயிலுக்கு விபத்து ஏற்பட்டால் அது ஒரு நாட்டின் முக்கிய செய்தியாக மாறிவிடும். அதுவே பெரிய விபத்தாக இருந்தால் உலகச் செய்தியாக மாறிவிடும்.

அப்படி ஒரு உலகச் செய்தியாக மாற வேண்டிய ஒரு விபத்து எந்த ஒரு ஆபத்துமில்லாமல் தவிர்க்கப்பட்டு விட்டது. அந்த ஆபத்தில் இருந்து காப்பாற்றியவர்கள் மிகச் சாதாரண ஏழ்மையில் வாழும் ஏழை எளிய பழங்குடியைச் சேர்ந்த  9 வயது குழந்தையும் அந்தக் குழந்தையின் தந்தையும்.

இந்தியாவின், வட திரிபுரா,  தஞ்சரா கிராமத்தைச் சேர்ந்த சிறுமி சுமதியும் அவரின் தந்தை தபர்மனும்  மலையிலிருந்து இறங்கி வருகின்ற போது அவர்களின் முன்னால் இருந்த ரயில் பாதை முற்றிலுமாக மண்ணால் மூடப்பட்டிருந்தது. தொடர்ந்தாற்  போல பெய்த மழையினால் மண் சரிவு ஏற்பட்டு ரயில் பாதையே காணாமற் போயிருந்தது! அந்த நேரத்தில் பயணிகள் ரயில் ஒன்று, இரண்டாயிரம் பயணிகளுடன்,  அந்த வழியாக, மண்சரிவை அறியாமல்,  அகர்தலாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த நேரம்.

பெரிய விபத்து ஒன்று தங்கள் கண் முன்னாலேயே நடக்கப் போவதை அறிந்த தந்தையும் மகளும் தங்கள் அணிந்திருந்த சட்டைகளைக் கழட்டி ரயிலை நிறுத்துமாறு சைகைக் காட்டியிருக்கின்றனர். இதன் மூலம் பெரிய விபத்து ஒன்று தவிர்க்கப்பட்டிருக்கிறது.

தந்தை, மகள் என்றாலும் இதில் சுறுசுறுப்பாக இயங்கியவர் மகள் சுமதி தான்!  அவருடைய துணிகரமான செயல் தான் ரயில் விபத்தை தவிர்ப்பதற்குக்  காரணமாக அமைந்தது.  அதனால் தான் அவர் இன்று இந்திய அளவில் "துணிகரமான சிறுமி" என்று எல்லாராலும் பாராட்டப் படுகின்றார்! இரயில்வே துறை இப்போது அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யமாறு பணிக்கப்பட்டிருக்கின்றது.

ஏழைச் சிறுமி தான். பழங்குடி சிறுமி தான். அந்தக் குழந்தைக்கு அந்த நேரத்தில் ஏற்பட்ட அந்தத் துணிவை நாமும் பாராட்டுவோம்!  

மாலைகள் தேவையா...?


"மாபெரும் சபையில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்" என்பது கவியரசர் கண்ணதாசனின்  வரிகள்.

அந்த "நீ" யார் என்பது தான் நம்முடைய பிரச்சனை!  நம்முடைய ஜால்ராக்கள் செய்த குழப்படிகளினால் நாம் யாருக்கு மரியாதைச் செய்ய வேண்டும், யாருக்குச் செய்யக் கூடாது  என்பதில் நமக்கும் குழப்பம் ஏற்பட்டு விட்டது!

நாம்  யாருக்குச் செய்யக் கூடாது  என்பது தான் இப்போது நான் சொல்லப் போவது.  குறிப்பாக அரசியல்வாதிகளைத்தான் நான் குறி வைக்கிறேன். நிச்சயமாக அரசியல்வாதிகளுக்கு மாலை அணிவிப்பது மிகப்பெரிய தவறு.

அரசியல்வாதிகள் யார்? மக்களுக்குத் தொண்டு செய்ய பொது வாழ்க்கைக்கு வந்தவர்கள். தொண்டு மட்டும் தான் அவர்களது குறிக்கோள்.  நம்மிடமிருந்து மாலை மரியாதைகளைப் பெற பொது வாழ்க்கைக்கு அவர்கள் வந்தவர்கள் அல்ல. அரசியல்வாதிகள் யோக்கியதை என்ன என்பதை மலாய்க்காரர்களும், சீனர்களும் புரிந்து வைத்திருக்கின்றனர். அவர்கள் எந்த அரசியல்வாதிகளுக்கும் மாலை மரியாதைகள் செய்வதில்லை. நமக்கு மட்டும் எப்படி,  அப்படி ஒரு பழக்கம் ஏற்பட்டது?  மாலை மரியாதை அணிவித்தல் என்பது நமது அடிமைப் புத்தியைக் காட்டுகிறது.  அந்த மாலை மரியாதைகளை ஏற்கும் அரசியவாதிகள் நம்மை அடிமைகளாக நினைக்கிறார்கள். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மந்திரி பெசார்கள் - இவர்களுக்கெல்லாம் மாலை அணிவிப்பவர்கள் யார்? நாம் தான் செய்கிறோம். வேறு எந்த சமூகமும் செய்வதில்லை! 

சரி, கடந்த கால அனுபவங்களைப் பார்ப்போம்.  சாமிவேலு காலத்திலிருந்து எத்தனை எத்தனை அரசியல்வாதிகள் எத்தனை எத்தனை மந்திரி பெசார்கள், எத்தனை எத்தனை பிரதமர்கள் -  இவர்களுக்கெல்லாம் ஆளுயர மாலைகளைப் போட்டு என்ன நடந்தது? ஒன்றுமே நடக்கவில்லை!   ஆமாம், அடிமைகளுக்கு எவன் உதவி செய்வான்?  மாலை போட்டவனுக்கு எதாவது பிச்சை கிடைக்கும்!  மக்க்ளுக்கு என்ன கிடைக்கும்?  ஒன்றுமே கிடைக்கவில்லை என்பது தான் கடந்த கால நிகழ்வுகள் காட்டுகின்றன.

இனி மேலும் இது தொடர வேண்டுமா என்பது தான் எனது கேள்வி. அரசியல்வாதிக்கு மாலை போடுவது நமது அடிமைப்புத்தியைக் காட்டுகிறது.  இத்தனை ஆண்டுகள்  அடிமைகளாக இருந்தது போதும். இனி மேலாவது நாம் அடிமைகள் இல்லை என்பதைக் காட்டுவோம்.

மாலைகள் தேவையா? ஆம்!  அரசியல்வாதிக்குத் தேவை இல்லை!

Friday 22 June 2018

வாக்களிக்கும் வயது 18.......!

இத்தனை ஆண்டு காலம் 21 வயது ஆகும் போது தான் நாட்டின் பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் தகுதியை நாம் பெற்று வந்தோம். ஒரு வேளை அதில் மாற்றும் வருமோ?

மாற்றம் வேண்டும் என்பது தான்  நமது பிரதமர் டாக்டர் மகாதிர் மலேசியர்களுக்குச் சொல்லும் ஆலோசனை. ஒருவர் 18 வயது ஆகும் போது வாக்களிக்கும் தகுதியைப் பெற்று விடுவதற்கான அனைத்துத் தகுதிகளும் அவர்களுக்கு ஏற்பட்டு விடுகிறது என்கிறார் பிரதமர்.

18 வயது என்னும் போது நமக்கு அது புதிதாக இருக்கலாம். ஏதோ 'சின்ன பசங்க' என்கிற ஒரு எண்ணம் நமக்கு உண்டு. ஆனால் அவர்கள் 'பெரிய பசங்க' என்பதாகத்தான் குறைந்தபட்சம் வளர்ந்த நாடுகள் நினைக்கின்றன.  அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன்  மட்டும் அல்ல தாய்லாந்து,  இந்தோனேசியா போன்ற நாடுகளும் தங்களது  18 வயது இளந்தலைமுறையை வாக்காளர்களாக ஏற்றுக் கொண்டிருக்கின்றன.

நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதாகத் தான் தோன்றுகிறது. இந்த இளந்தலைமுறை தான் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய சக்திப் படைத்ததாக நான் நினைக்கிறேன். அவர்களுக்கு எல்லாத் தகுதிகளும் உண்டு. படித்தவர்களாக இக்கிறார்கள். அரசியல் ஆர்வம் உடையவர்களாக இருக்கிறார்கள்.  அநீதிகளைக் கண்டு பொங்கி எழுபவர்களாக இருக்கிறார்கள். நடந்த முடிந்த 14-வது பொதுத் தேர்தலில் இளைஞர்கள் பங்கு அதிகம். அதனால் தான் பக்காத்தான் வெற்றி மகத்தானதாக இருந்தது. இதுவே 13-வது பொதுத் தேர்தலில், 18 வயதுடையோர் வாக்காளர்களாக இருந்திருந்தால், அப்போதே எதிர்கட்சியினர் வெற்றி பெற்றிருப்பர்.

18 வயது என்கிற போது அவர்களைச் சுற்றி நடக்கும் அநீதிகளை அவர்களால் பார்த்துக் கொண்டிருக்க இயலாது. இயற்கையாகவே அநீதிகளை எதிர்க்கும் போக்கு அவர்களிடம் உண்டு.  இளம் சந்ததியினர் என்பதால் அவர்களிடம் உள்ள போராடும் குணம் தவிர்க்க முடியாதது. ஆட்சி மாற்றம் என்றால் அது அவர்களால் உடனடியாகக் கொண்டு வர முடியும். சகித்துக் கொண்டு போகும் போக்கு வயதானத் தலைமுறையிடம் உண்டு. ஆனால் இளந்தலைமுறை தட்டிக் கேட்கும் தன்முடையது.

வாக்களிக்கும் வயதை 18-க்குக் கொண்டு வர வேண்டும் என்பதை நான் வர வேற்கிறேன். அனைத்து மலேசியரும் வர வேற்பர் என்பதாகவே நான் கருதுகிறேன். 

பொறுத்திருந்து பார்ப்போம்!

Thursday 21 June 2018

இது தான் எடுத்துக்காட்டு...!


சமீபத்தில்  நான் தெரிந்த கொண்ட இரண்டு செய்திகள் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தன.

இரண்டுமே தமிழ்ப்பள்ளி சம்பந்தப்பட்டது. பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவனேசன் தனது பிள்ளைகள் அனைவரும் தமிழ்ப்பள்ளியில் படித்தவர்கள் என ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார், அதே போல  மனிதவள அமைச்சர் குலசேகரன் அவர்களும் தனது பிள்ளைகள் தமிழ்ப்பள்ளிகளில் படிப்பதாகவும் ஒரு நிகழ்வில்  பேசியிருந்தார்.

கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது. இது தான் உதாரணத் தலைமைத்துவம்.  தலைவன் எவ்வழியோ அவ்வழியே குடிகள்.

எனக்குத் தெரிந்து இந்தியர்களுக்குத் தாயும் தந்தையுமாக விளங்கிய ம.இ..கா. வினர் அப்படி யாரும் தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பியதாகக் கேள்விப்படவில்லை! அப்பன் தமிழ்பள்ளிக்குப் போயிருப்பான். நிச்சயமாக அவன் பிள்ளைத் தமிழ்ப்பள்ளியின் பக்கம்  கால்வைத்துக் கூட படுத்திருக்கமாட்டான்!  தமிழ்ப்பள்ளிகளையே கேவலமாக நினைப்பவன்.தமிழ்ப்பள்ளிகளுக்கு உதவுவான்  என்று  தப்புக்கணக்குப்  போட்டது தான்  நமது குற்றம்.  அதனால் தான் ம.இ.கா. என்னும் பேரியக்கம், தமிழர்களால் வளர்க்கப்பட்ட பேரியக்கம், தமிழ்,  தமிழ்ப்பள்ளிகள் என்று வந்த போது எவனும் கண்டு கொள்ளவில்லை! நல்ல வேளை அவர்கள் இனித் தலை தூக்கமாட்டார்கள்! பாடை கட்டி விட்டோம்!

இந்த நேரத்தில் அமைச்சர் குலசேகரன் சொன்ன ஒரு செய்தியையும் இங்கு நான் குறிப்பிட வேண்டும். அவருடைய குழந்தைகள்  படிக்கும் பள்ளியில் மாலை நேரத்தில்  சீன மொழியும் கற்பிக்கப்படுவதாக அவர் சொல்லியிருந்தார். இது நாள் வரை நான் அப்படி ஒரு செய்தியைக் கேள்விப்பட வில்லை. அது ஒரு நல்ல செய்தியாகவே இருந்தது. ஏன், இதனை மற்றப்  பள்ளிகளும்  பின்பற்றலாமே என்று மனதிலே தோன்றியது.

என்னைப் பொறுத்தவரை இனி வருங்காலங்களில்  ஒவ்வொரு  மாணவனும்  மூன்று மொழிகள்  தெரிந்து கொள்ளுவது அவர்களின்  வாழ்க்கை  முன்னேற்றத்திற்கு  உதவியாக இருக்கும்.  நமது நாட்டின் தலையாய மொழிகள் என்றால் மலாய், சீனம், தமிழ். இந்த மூன்று மொழிகளையும் தெரிந்து வைத்திருப்பது என்பது கூடுதலானத் தகுதி எனலாம்.  சீன மொழி தெரிந்தவர்களுக்கு சீன நிறுவனங்கள் வேலை வாய்ப்புக்களைக் கொடுக்கின்றன. அது மட்டும் அல்லாமல் அவர்களின் மொழிக்கும் சீனர்களின் தொழில் முன்னேற்றத்திற்கும் பெரும் பங்குண்டு. அவர்களின் மொழியைத் தெரிந்து கொள்ளுவதன் மூலம்  தான் அவர்களின்  குணாதிசியங்களை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

எது எப்படியோ மாண்புமிகு சிவனேசனும், மாண்புமிகு குலசேகரனும் நமக்கு நல்ல எடுத்துக்காட்டுக்களாகத்    திகழ்கிறார்கள்.

வாழ்க தமிழினம்! வாழ்க தமிழ்!

Wednesday 20 June 2018

இது சரியில்லையே....!


ஜனநாயக செயல் கட்சியைப்  பற்றிய பேச்சு வரும் போதெல்லாம் ஒரு செய்தி நிச்சயாமாக வரும். அது சீனர்கள் கட்சி.  சீனர்கள் நலனில் அக்கறையுள்ள கட்சி என்கிற பேச்சு வரத்தான் செய்யும். சரியோ, தவறோ அது தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கிறது. இனி மேலும் வரத்தான் செய்யும்!  அந்த 'சீன' அடையாளத்தை அதன் தலைவர்கள் எந்தக் காலத்திலும் விடப் போவதில்லை!

சமீபத்தில் ஜ.செ.க.அரசியல் வியூகப் பிரிவுத் தலைவர் லியு சின் தொங்,  பக்காத்தான் ஹரப்பான் அரசாங்கம்  அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னரும் பதவியில் நீடிக்க வேண்டுமானால் அடிமட்டத்தில் இருக்கும் மலாய்க்காரர்களின்  வாழ்க்கைத்  தரம் உயர வழிவகைகளைக் காண வேண்டும் என்று வலியுறுத்திருக்கிறார்.

நமக்கு அதில் கருத்து வேறுபாடில்லை.  ஆனால் மலாய்க்காரர்களை விட இன்னும் அடிமடி மட்டத்தில் இருக்கும் இந்தியர்களைப் பற்றி அவர் எதனையும் குறிப்பிடவில்லை. அதனை அலட்சியம் சென்று சொல்லலாமா? அல்லது 'இந்தியர்கள் தானே' என்கிற இளக்காரம் காரணமா?

பொதுவாக சீனர்களிடம் இன்னும் அந்த அரசியல் முதிர்ச்சி வரவில்லை என்பது இவரைப் போன்ற மெத்த படித்தவர்களே சாட்சி! இந்தியர்களை ஒதுக்குகின்ற மனோபாவம் இன்னும் அவர்களிடையே இருக்கின்றது என்பதையே இது காட்டுகின்றது.  சீனர்கள் பதவியில் இருக்க வேண்டும் என்றால்  மலாய்க்காரர்களின் நலனில் அக்கறைக் காட்ட வேண்டும். இந்தியர்கள் பிரச்சனை இல்லை. இதோ! அதோ! என்று பாவலா காட்டிக் கொண்டே போகலாம் என்பது தான் சீனர்கள் நினைக்கின்றார்கள்! 

ஜ.செ.க. ஒரு தவறான பாதையை வாழ்நாள் முழுவதும் காட்டிக் கொண்டே இருக்க முடியாது.  திருந்த வேண்டும். இந்தியர்கள் எல்லாக் காலங்களிலும் அரசாங்கத்தை ஆதரித்தவர்கள் என்பது உண்மை தான்  என்றாலும் கடந்த தேர்தலில் இந்தியர்களின் ஆதரவு  பக்காத்தான் பக்கம் பலமாக வீசியது என்பதை மறுக்க முடியாது. அதனால் தான் ஜனநாயக செயல் கட்சியும் ஆட்சியில் அமர முடிந்தது. இதனையெல்லாம் ஜ.செ.க. கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியர்களை ஒதுக்குகின்ற வேலையை விட வேண்டும்.

இப்போதைக்கு இது சரியில்லை!

Tuesday 19 June 2018

கேள்வி - பதில் (80)


கேள்வி

நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்தும்  பா.ஜ.க. பிரமுகரும், நடிகருமான எஸ்.வி. சேகரைக் கைது பண்ண முடியவில்லையே!

பதில்

கைது செய்ய முடியாது என்பது தான் இந்தியப் பிரதமர் மோடியின் ஆட்சியின் சிறப்பு. அதுவும் பிராமணர்களைக் கைது செய்ய காவல்துறைக்கு அதிகாரமில்லை. சாதாரண ஏழை, எளிய மக்களை காவல்துறையினர் அடிக்கலாம், உதைக்கலாம், கைது செய்யலாம்! இப்போது காவல்துறை அதைத்தான் செய்கிறது! தூத்துக்குடியில் நடந்த சம்பவங்கள் அதைத்தான் சுட்டுகின்றன.

இப்போது தமிழ் நாட்டில் மட்டும் அல்ல பொதுவாக இந்தியாவில் பிராமணர்கள் செய்கின்ற தவறுகள் அனைத்தும் மறைக்கப்படுகின்றன. குற்றவாளிகளைத் தெரிந்தாலும் கூட அவர்கள் கைது செய்யப்படுவதில்லை!  காஷ்மீரில் நடந்த சிறுமி ஒருவர் கற்பழிக்கப்பட்டு, கொலை செய்த சம்பவம் அதற்கான சான்று.   சம்பந்தப்பட்ட அனைவரும் உயர் சாதிக்காரர் என்பதால் இது வரை யாரும் கைது செய்யப்படவில்லை! ஒவ்வொரு நாளும் சமய ரீதியாக பலர் தாக்கப்படுகின்றனர். ஆனால் எந்தக் கைது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை! 

எஸ்.வி.சேகர் இதையெல்லாம் அறியாதவரா, என்ன? தமிழ் நாட்டில் பா.ஜ.க. வைச் சேர்ந்தவர்கள் பலர் எதையெல்லாம் செய்யக்கூடாது என்று நினைக்கிறோமோ அதனையே அவர்கள் எல்லாம்  செய்கிறார்கள்! எதையெல்லாம்  பேசக்கூடாது என நினைக்கிறோமோ அதனையெல்லா அவர்கள்  பேசுகிறார்கள்!

எஸ்.வி. சேகருக்கு இப்போது நல்ல நேரம். தினசரி மேடை  நாடகம் நடத்திக் கொண்டிருந்தவர் இப்போது காவல்துறை வாகனத்திலேயே காவல்துறையின் பாதுகாப்போடு நகர ஊர்வலம் வந்து கொண்டு இருக்கிறார்! இது போன்ற ராஜ உபசாரம் அவருக்கு எந்தக் காலத்திலும் கிடைத்ததில்லை!

ஆனால் ஒன்று. யார் செய்தாலும் தவறு தவறு தான். அதற்கான தண்டனையிலிருந்து தப்ப வழியில்லை!  துக்ளக் சோ பிராமண சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருந்தவர். கடைசி காலத்தில் ஜெயலலிதாவின் சாராயக் கம்பெனிகளுக்கு அவர் தான் தலைவர்! ஜீரணிக்க முடியவில்லை!


Sunday 17 June 2018

"காக்காய்கள்" வேண்டாமே..!


இன்றைய நாளிதழில் ஒரு செய்தி. இது பற்றி முன்னரே எழுதியிருக்கிறேன். ஆனாலும் இது போன்ற செய்திகள் மீண்டும் மீண்டும் வரும் போது வருத்தமாகத்தான் இருக்கிறது.

ஒரு சட்டமன்ற உறுப்பினரோ, நாடாளுமன்ற உறுப்பினரோ வேலை செய்ய முடியாதபடி ஒரு கூட்டம் அவர்களைச் சுற்றி நின்று கொண்டே உசுப்பிக் கொண்டிருப்பதை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.  அது முன்னர் ம.இ.கா.வில்  தொடர்ந்து கொண்டே இருந்தது; அதற்கு முடிவே இல்லை! இப்போது பக்காத்தானிலும் தொடர்கிறது.

சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கேசவனுக்கு முழு அமைச்சர் பதவி கொடுக்கப்பட வேண்டும் என்பதாக ஒரு குழுவினர் பிரதமரிடம் பரிந்துரை செய்திருக்கின்றனர். ஏற்கனவே யார் வந்தாலும் இப்படித்தான் பரிந்துரை என்று சொல்லி ஆர்ப்பாட்டம் வரை சென்றதையெல்லாம் நாம் பார்த்திருக்கிறோம். இந்த ம.இ.கா. கலாச்சாரத்தை ஒழித்துக் கட்ட வேண்டும்.  ஒரு குழு பரிந்துரை செய்கிறது என்றால் அந்தக் குழு பிரதமருக்கு நெருக்கம் கொடுக்கிறது என்று பொருள். பிரதமருக்கு இந்த கேசவன் யார் என்று தெரியாதா?  அல்லது அவர் சார்ந்த கட்சித் தலைவருக்கு அவரைப்பற்றி ஒன்றுமே தெரியாதா? 

இப்படிப் பரிந்துரை செய்வது மிகவும் கீழ்த்தரமான செயல் என்பது தான் எனது கருத்து. அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் தான் அவரால் மக்களுக்குச் சேவையாற்ற முடியுமா? அவரது கட்சி அவரை சுங்கை சிப்புட் தொகுதிக்கு நிறுத்திய போது அவர்  தான் ஒரு அமைச்சராக வேண்டும் என்னும் கனவோடு தான் களம் இறங்கினரா?  முதலில் அவர் வெற்றி பெறுவரா என்பதே அவருக்குத் தெரியாது. இந்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் சார்பில் யார் போட்டி போட்டிருந்தாலும் அந்த வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பார் என்பது தான் உண்மை.  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயகுமார் பக்காத்தான் சார்பில் நின்றிருந்தால் கேசவனை விட அவர்  இன்னும் அதிக ஓட்டு வித்தியாசத்தில் கூட ஜெயித்திருக்கலாம். 

அதனால் பிரதமருக்கு எந்த நெருக்குதலும் கொடுக்க வேண்டாம். அவர் சார்ந்த கட்சியே அவரை பரிந்துரை செய்யட்டும் அல்லது செய்யாமல் இருக்கட்டும். ஒரு பத்து பேரைச் சேர்த்து வைத்துக் கொண்டு பரிந்துரை என்னும் பேரில் கூடிக் கூட்டம் போடுவதை நாம் நிறுத்த வேண்டும். அதற்குத் கேசவனும் துணை போவது வெட்கப்பட வேண்டிய விஷயம். இது இந்திய சமூகத்துக்கு  எந்த விதத்திலும் பெருமை தரப் போவதில்லை. எல்லாக் காலங்களிலும் நாம் மற்றவர்களால் கேலி செய்யப்படுவதை நிறுத்த வேண்டும்.

போதும்! இந்தக் காக்கைக் கூட்டம் நமக்கு வேண்டாம்!

கேள்வி - பதில் (79)



கேள்வி

"காலா"  படம் வெற்றியா, தோல்வியா?

பதில்

இந்த கேள்விக்குப் பதில் கொடுத்தால்  ஆயிரம் பொற்காசுகளை அள்ளி கொடுக்கலாம்!

நான் இன்னும் இந்தப் படத்தைப் பார்க்கவில்லை.  தூத்துக்குடியில் இருந்து வந்த கட்டளை. நானும் தமிழன் தானே.

ரஜினிக்கு வேண்டியவர்கள்  'மாபெரும் வெற்றி" என்கிறார்கள்! அவருக்கு வேண்டாதவர்கள் "மாபெரும் தோல்வி" என்கிறார்கள்! நடுநிலை என்பதெல்லாம் தமிழ் நாட்டுக்கு ஏற்ற சொல்லே அல்ல. அதில் சில ஊடகங்களுக்கு ரஜினியின் மேல் ஒரு பயமும் இருக்கிறது! நாளை அவர் ஆட்சிக்கு வந்து விட்டால்......? என்கிற பயம்!

எனக்குத் தெரிந்த ஒரு இளைஞனிடம் கேட்டேன். "புண்ணியமில்லை! சும்மா இழுவை!: என்று பதில் சொன்னான். என்னால் அப்படி எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் ரஜினியின் ரசிகன் தான் ஆனால் அதை விட இயக்குனர் ரஞ்சித்தின் ரசிகன். நிச்சயமாக ரஞ்தித்  நல்ல செய்திகளைக் கொடுத்திருப்பார் என நம்பிக்கை உண்டு.

இந்தப் படத்தின் மூலம் யாருக்கு வெற்றி என்றால் அது இயக்குனர் ரஞ்சித்துக்குத் தான்.  அவர் சொல்ல வேண்டிய செய்திகளைக்  சொல்லி விட்டார். அதுவும் ரஜினியின் மூலமாக! அதுவே ஒரு பெரிய வெற்றி. 

ஆனால் ரஞ்சித்திற்கு இனி மேல் பெரிய பட்ஜட் படங்கள், பெரிய நடிகர்களை வைத்து படங்கள் எடுக்க வாய்ப்பில்லை! அந்தப் பயம் மற்ற நடிகர்களுக்கும் வந்து விட்டது! அவர் இனி தனது பாணியிலேயே தனக்கு வேண்டியவர்களை வைத்து படங்களை எடுப்பார் என நம்பலாம். அதுவே அவருக்கு வெற்றியைத் தரும்.

அது சரி, காலா வெற்றியா, தோல்வியா?  வசூலை வைத்துத் தான் முடிவு செய்ய வேண்டுமென்றால் - அப்படித்தான் இது நாள் வரை நடந்து வந்திருக்கிறது - வசூல் எதிர்பார்த்தவாறு இல்லை எனத் தெரிகிறது.

அதற்காக தோல்வி எனச் சொல்ல மனம் வரவில்லை!

Thursday 14 June 2018

மீண்டும்....! மீண்டும்......!


மீண்டும் மீண்டும் இந்தப் பிரச்சனையை நான் ஞாபகப்படுத்த வேண்டியவனாக இருக்கிறேன்.  பதினான்காவது பொதுத் தேர்தலுக்கு எந்த அளவுக்கு முயற்சி எடுத்து பக்காத்தானை ஆட்சியில் அமர்த்தினோமோ அதே முயற்சியை இப்போது நாம் எடுக்க வேண்டும்.

இந்தியர்களின் பிரச்சனைகள் அதிகம். 

தேசிய அளவில் முக்கியமான பிரச்சனைகள் உள்ளன. அதே சமயத்தில் ஒவ்வொரு வட்டாரங்களிலும்,  மாவட்டங்களிலும் இருக்கின்ற பிரச்சனைகளும் அதிகம். காரணம் காலங்காலமாக நாம் ஆளுங்கட்சியான, நம்முடைய தலையாக விளங்கிய ம.இ.கா.  மூலம் ஏமாற்றப்பட்டு வந்திருக்கிறோம். திருடர்களைப் பதவியில் அமர்த்திவிட்டு திரும்பத் திரும்ப புலம்புகிற சமூகமாக நாம் இது நாள் வரை இருந்து வந்திருக்கிறோம்.

இது இனி நடக்கக் கூடாது என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அதனால் தான் நான் மீண்டும் மீண்டும் இந்தப் பிரச்சனைகளை எழுப்பிக் கொண்டிருக்கிறேன்.

இப்போது நமக்கு நல்ல நேரம்.  இந்த நல்ல நேரம் இருக்கும் போதே காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டும்.  எந்த அரசியல்வாதியும் எல்லாக் காலத்திலும் நீதியும் நேர்மையோடும் இருப்பான் என்று சொல்ல முடியாது. தலைமை நிலை தடுமாறினால் கீழே உள்ளவனும் தடுமாறி விடுவான்! அவனைத் தடுமாற வைக்க தீய சக்திகள் நிறையவே உண்டு.

இப்போது பக்காத்தான் அரசு நமக்குச் செய்ய வேண்டிய தேசிய அளவில் உள்ள பிரச்சனைகள் என்றால்: தமிழ்ப்பள்ளிகள் முழு நேர அரசாங்க பள்ளிகளாக மாற்றியமைக்கப்பட வேண்டும். தமிழ்ப்பள்ளிகளில் தமிழ் மொழியின் நிலையை இன்னும் உறுதியாக்கப்பட வேண்டும். அத்தோடு தேசிய மொழி, ஆங்கிலம். கல்வியாளர்களின் உதவியோடு அனைத்தும் அணுகப்பட வேண்டும்.

குடியுரிமை, அடையாள அட்டை, நாடற்றவர்கள் போன்ற பிரச்சனைகளில் உடனடி கவனம் செலுத்தி  இந்தப் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதனை நீட்டிக் கொண்டே போகக் கூடாது.

மற்றபடி நிலப் பிரச்சனைகள், நிலப் பட்டாக்கள், வீடுகள் கட்டுவதற்கு முன்னரே வங்கிகளுக்குப் பணம் கட்டிக் கொண்டிருப்பது - இப்படிப் பல பிரச்சனைகளை இந்தியர்கள் எதிர் நோக்குகின்றனர். இவைகள் எல்லாம் திட்டம் போட்டே இந்தியர்களை ஏமாற்றும் வேலை.  இவை அனைத்துக்கும் ஒரு முற்றுப்புள்ளி தேவை. இவைகளில்  ஏமாறுபவர்கள் இந்தியர்கள் அதே சமயத்தில் ஏமாற்றுபவர்களும் இந்தியர்கள். இவர்கள் அனைவரும் நல்ல அரசியல் தொடர்புடையவர்கள். இனி இது போன்ற வேலைகள் தொடரக் கூடாது என்பது தான் நமது வேண்டு கோள்.

அதனால் மீண்டும் மீண்டும் சொல்லுகிறேன். தேசிய அளவில் உள்ள வேலைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாகக் கையில் எடுக்க வேண்டும். அதே சமயத்தில் நிலப்பட்டாக்கள், நிலப் பிரச்சனைகள் போன்றவைகளைச் சட்டமன்ற உறுப்பினர்கள் உடனடித் தீர்வுகளுக்கான வேலைகளைச் செய்ய வேண்டும். 

இதுவே எனது வேண்டு கோள்.  வெற்றி பெறுவோம்!

Tuesday 12 June 2018

இந்தியர் விவகாரம்.........(5)


இந்திய விவகாரக் குழுவிற்கு கடைசியாக நாம் கொடுக்கும் ஆலோசனைகளில் இவைகளும் அடங்கும்.

பொது:  சில பொதுவான பிரச்சனைகள். ஆனாலும் முக்கியம் வாய்ந்த பிரச்சனைகள். அலட்சியம் காட்ட முடியாத  பிரச்சனைகள்.

பினாங்கு, சிலாங்கூர் மாநிலங்களில் தேர்தலுக்கு முன்னர் ஏற்படுத்திய மாற்றம்  இது என்று சொல்லப்படுகிறது. இந்த இரு மாநிலங்களிலும் சாலை அறிவிப்புப் பலகைகளில் மலாய், சீன மொழிகளோடு தமிழும் எழுதப்பட்டிருப்பதாகக் கூறுகின்றனர். அதனை இப்போது பக்காத்தான் ஆட்சியில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொண்டு வர வேண்டும்.

வங்கிகளின் ATM இயந்திரங்களில் தமிழ் மொழி பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும். இனியும் சாக்குப்போக்குகள் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அல்லது வங்கிகள் இந்தியர்கள் பணம் எங்களுக்கு வேண்டாம் என்று சொல்ல வேண்டும். இதற்கு இப்போதே ஒரு முடிவு கட்ட வேண்டும். இனி மேலும் இது ஒரு பிரச்சனையாக இருக்கக் கூடாது.

தீபாவளி பெருநாளுக்கு இரண்டு நாள்கள் விடுமுறை கொடுக்க வேண்டும். தைப்பூசத்திற்கு அனைத்து மாநிலங்களுக்கும் விடுமுறை கொடுக்க வேண்டும்.

தமிழ்ப்பள்ளிகள் இனி "அரசாங்க பகுதி உதவி பெற்ற பள்ளிகள்"  என்று இனிமேல் எந்த முத்திரையும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுவது இந்தக் குழுவின் கடமை. அத்தோடு தமிழ்ப்பள்ளிகள் இனி தனியார் நிலங்களில் இருப்பது தவிர்க்கப்பட வேண்டும்.

இவைகள் பொதுவான பிரச்சனைகள். ஆனால் மாநிலந்தோரும், மாவட்டம் தோரும் ஆங்காங்கே பல பிரச்சனைகள் உள்ளன. அதுவும் குறிப்பாக இந்தியர்கள் வாழும் சிறு சிறு கிராமங்களில் உள்ள வீடுகளுக்குப் பட்டா இல்லை என்கிற பிரச்சனை நீண்ட நாள் பிரச்சனை.  அந்தப் பிரச்சனைகளைத் தீர்க்க ம.இ.கா.வும் சரி, பாரிசான் அரசாங்கமும் சரி அது தேவை இல்லாதப் பிரச்சனை என்பதாகத்தான் இது நாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர். இவைகளுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இன்னும் சில கிராமங்களில் தண்ணிர், மின்சாரம்  இவைகளெல்லாம் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை.

எனக்குத் தெரிந்தவைகளைப் பற்றி மட்டும் இந்தியர் விவகாரக் குழுவினருக்கு முக்கியமான, அவசரமான  செய்திகளாக வெளியிட்டிருக்கிறேன். தீர்த்து வைப்பது உங்களின் கடமை.

நல்லதே நடக்கட்டும்!

Monday 11 June 2018

இந்தியர் விவகாரம்...(4)


அடுத்து நாம் இந்திய விவகாரக் குழுவின் கவனத்திற்குக் கொணடு  வருவது:

பொருளாதாரம் -  கடந்த காலங்களில் இந்தியர்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக கோடிக்கணக்கில் செலவிடப்பட்டாதாகச் சொல்லப் படுகின்றது.  இந்திய அரசியல்வாதிகளுக்கெல்லாம் செலவு செய்தவைகளை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது.  அது பாரிசான் அரசாங்கத்தின் கொள்கை என்பதால் இப்போது அது பற்றி பேசுவதில் பயனில்லை.

இப்போது உண்மையாகவே தொழில் செய்பவர்களுக்குக்  கடன் உதவி செய்ய பக்காத்தான் அரசாங்கம் முன் வரவேண்டும். அதுவும் சிறு தொழில் செய்பவர்கள் பெரிய அளவில் தங்களது தொழில்களைக் கொண்டு செல்ல  முடியவில்லை. முந்தைய அரசாங்கத்தில் பெருந்தொழில் செய்பவர்களே எல்லாப் பணத்தையும் கபளீகரம் செய்ததால்  சிறு தொழில்கள் செய்பவர்களுக்கு எந்த நிதியும் பயனிக்கவில்லை. இனி இது ஏட்டளவில் இருக்கக் கூடாது.  செயல் அளவில் கொண்டு செல்லுவது அரசின் கடமை.

நம்மிடையே சிறு சிறு வியாபாரிகள் நிறையவே இருக்கின்றனர். அவர்களுக்குப் போதுமான நிதி உதவிகள் கிடைக்காததால் அவர்கள் தொடர்ந்து தங்களது தொழில்களை மேம்படுத்த முடியவில்லை. வங்கிகளும் இந்தியர்கள் என்றால் கடன் உதவி செய்வதில்லை.  வங்கிகள் எல்லாக் காலங்களிலும் இந்தியர்களுக்கு  எதிரான போக்கையே கடைப்பிடிக்கின்றன என்பது ஒன்றும் புதிதல்ல.

எப்படி இருப்பினும் இன்றைய பக்காத்தான் அரசாங்கம் இந்த விஷயத்தில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்பது தான் நமது கோரிக்கை.

நாம் எல்லாக் காலங்களிலும் நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு விழுக்காடு அளவிலேயே இருந்து கொண்டு வருகிறோம். முந்தைய அரசாங்கம் எவ்வளவோ முயற்சி செய்தும் (அப்படித்தான் சொன்னார்கள் நாங்களும் நம்பினோம்!) எந்த வித முன்னேற்றமும் இல்லை. அந்த ஒரு விழுக்காடும் கூட வட இந்தியர்கள் கையில் இருப்பாதாகச் சொல்லப்படுகிறது. அவர்கள் மீது நமக்கு எந்தப் பொறாமையும் வேண்டாம்.  நம்முடைய தேவைகள் எல்லாம் சிறு தொழில் செய்யும் நம்மவர்கள் தங்களின் தொழிலின் விரிவாக்கத்திற்கு அரசாங்கம் உதவ வேண்டும் என்னும் கோரிக்கை மட்டும் தான்.   

அடுத்த பொதுத் தேர்தல் வரும் போது நம் நாட்டில் நம்முடைய பொருளாதார விழுக்காடு குறைந்த பட்சம் மூன்று விழுக்காடாக உயர வேண்டும் என்கிற இலக்கோடு அரசாங்கம் களத்தில் இறங்க வேண்டும். தொழில் செய்யும் தகுதியானவர்களுக்கு இது நாள் வரை எந்த உதவியும் கிடைக்கவில்லை. இனி மேலாவது அது கிடைக்கும் என நன்புவோம்.

பொருளாதாரம் மட்டுமே நமக்கு மரியாதை தரும்! உழப்போம்! வெற்றி பெறுவோம்!

                                                                                                                     

Sunday 10 June 2018

இந்தியர் விவகாரம்.......(3)


இந்தியர் விவகாரத் துறைக்கு மீண்டும் ஒரு முக்கிய பிரச்சனையை விவாதத்திற்காக எடுத்துக் கொள்ளமாறு  கேட்டுக்கொள்ளுவது எனது கடமை எனக் கருதுகிறேன்.

கல்வி: மிக முக்கியமான ஒன்று. இந்திய சமுதாயத்தின் தேவைகளில் முதலிடம் பிடிக்க வேண்டிய ஒன்று. ஓர் ஏழை சமுதாயத்தைத் தூக்கி நிறுத்துவது கல்வி மட்டுமே. பொருளாதாரம் படு பாதாளத்தில்  இருந்தாலும் கல்வி இருந்தால் ஒருவனை ஓகோ ஓகோ என்று உயர்த்திவிடும்.நம்மைச் சுற்றிப் பார்த்தாலே  போதும் கல்வியால் எத்தனை குடும்பங்கள் -  மிகத் தாழ்வான நிலையில் இருந்த குடும்பங்கள் - இன்று கல்வியால் உயர்ந்து நிற்கின்றன என்பது தெரியும்.

இன்றைய காலக் கட்டத்தில் நமது மாணவர்களுக்கு இழைக்கப்படும்  அநீதிகள்  ஏராளம்.  என்ன தான் திறமைகள் இருந்தாலும் அவர்க்ள் விரும்புகின்ற துறைகளில் அவர்களால் பயணிக்க இயல்வில்லை. இப்போது தான் அவர்களுக்கு ஒரு விடிவு காலம் பிறந்திருக்கிறது. புதிய அரசாங்கம் மிகவும் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது.

நமது பல்கலைக்கழகங்களில் பொதுவதாக மருத்துவத்துறை,  பொறியியல்,  சட்டத்துறைகளில் நமது மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. அப்படியே நடந்தாலும் ஏதோ ஓரிவருவரோடு சரி.  அதனால் தான் இந்திய மாணவர்கள் தனியார் கல்லுரிகளுக்கோ, வெளி நாடு சென்றோ கல்வி கற்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இவர்களெல்லாம் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் அல்ல. பெரும்பாலும் தங்களது சொத்துக்களை விற்று பிள்ளைகளைப் படிக்க வைக்கும் நடுத்தர அல்லது ஏழை குடும்பங்கள்.

இனி நாம் உயர்கல்விக் கூடங்களில் அனைத்துத் துறைகளிலும் பத்து விழுக்காடு மாணவர்கள் கல்வி கற்பதை உறுதி செய்ய வேண்டும். வெளி நாடு சென்று படிக்க வேண்டும் என்னும் நிலை வேண்டாம்.

சமீபத்தில் மனித வள அமைச்சர் "இந்திய மாணவர்கள் தொழிற்பள்ளிகள் படிக்க விரும்புவதில்லை" என்பதாகக் கூறியிருந்தார். எஸ்.பி.எம். தேர்வில் முற்றிலுமாக தோல்வி அடைந்த மாணவர்களை தொழிற்பள்ளிகளுக்கு  பள்ளியிலிருந்தே அவர்களை அங்கே அனுப்பி கல்வியைத் தொடர வைக்கலாம். 

கல்வி என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் முக்கியம்.  இந்திய சமூகத்தில் சீக்கியர் சிறுபான்மையினர் தான் ஆனால் அனைவர்களும் கல்வி கற்றவர்கள். குஜாராத்தியர்கள் சிறுபான்மையர்கள் தான்  ஆனால் அனைவரும் கல்வி கற்றவர்கள். நாம் பெரும்பான்மை சமூகம். நாமும் கல்வி கற்பதில் முனைப்பு காட்டுவோம். நூறு விழுக்காடு படித்தவர்களாக இருப்போம்!

அதற்கு அரசின் ஒத்துழைப்பையும் எதிர்பாக்கிறோம்!

Saturday 9 June 2018

இந்தியர் விவகாரம்.........(2)

இந்தியர் விவகாரம் பற்றி விவாதிக்கும் குழுவுக்கு அடுத்து நாம் முன் வைக்கும் விவகாரம்.

நீலநிற அடையாள அட்டை:   நமது இந்திய சமுதாயத்தின் மிகப்பெரிய பலவீனம்அடையாள அட்டை,  குடியுரிமை  நாடற்றவர் என்று  இப்படி  நீண்டு  கொண்டு  போகிறது. நாடற்றவர்களே  சில  இலட்சம் பேர்கள்  இருப்பதாகக்  கூறப்படுகின்றது. இதற்கெல்லாம் ஒரு  முடிவு  கட்ட  வேண்டியது இப்போது  ஆட்சியில் இருக்கும்  பக்கத்தான்  அரசின்  கடமை என்பது  உண்மை. இது  அவர்கள்  கொடுத்த  தேர்தல் வாக்குறுதிகள்.  "நூறு  நாள்கள் கொடுங்கள் முடித்துக் காட்டுவோம்" என்று  அவர்கள் சொல்லியிருந்தாலும், பரவாயில்லை,  இருநூறு நாள்கள் எடுத்துக் கொள்ளட்டும். முடித்துக் காட்டட்டும். நூறு நாள்களில் செய்ய முடிந்ததைச் செய்யட்டும். எப்படியும் ஓர் ஆண்டுக்குள் அனைத்தையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதையே நாங்கள்  விரும்புகிறோம்.

இந்த நேரத்தில் ஓர் ஆலோசனையையும் கொடுப்பது நமது கடமை என  நான் நினைக்கிறேன்.குழந்தைகளின் பிறப்புப் பத்திரம் எடுப்பதை எளிதாக்க  வேண்டும். பொதுவாகப்  பத்து, இருபது  ஆண்டுகள்  பின்னோக்கிப் பார்க்கும்  போது  பிறப்புப் பத்திரம் எடுப்பதில்  எந்தப் பிரச்சனையும்  எழவில்லை. காரணம்  குழந்தை பிறந்து மருத்துவமனையை விட்டு வெளியேறும் போது அப்போதே பிறப்புப் பத்திரம் பெற்றோர்களிடம்  கொடுக்கப்பட்டு விடும் ஒரு முறை இருந்தது. அந்த  நடைமுறை  நீண்ட  நாள் இருந்த ஒரு நடைமுறை  மட்டும் அல்ல மிகவும்  வெற்றிகரமான  நடைமுறையாகவும் இருந்து  வந்துள்ளது. அந்த  நடைமுறை மீண்டும்  கொண்டு வரப்பட  வேண்டும்.

இப்போது உள்ள நடைமுறை என்பது அரசாங்கத்தில் வேலை செய்பவர்களுக்கு ஏற்ற ஒரு நடைமுறை. அவர்களுக்கு விடுமுறை என்பது பிரச்சனை அல்ல. ஆனால் தோட்டப்புறங்களில் வேலை செய்பவர்களுக்கு விடுமுறை கிடைப்பது என்பது மிகவும் சிக்கலானது. ஏதோ ஒரு முறை இரண்டு முறை விடுமுறை எடுக்கலாம்.  அதற்கு மேல் அவர்கள் பல பிரச்சனைகளுக்கு உள்ளாவார்கள். அப்படியே விடுமுறை எடுத்துக் கொண்டு போனாலும் அரசாங்கத் துறையில் உள்ளவர்களுக்கு தினசரி விடுமுறை தான்! அவர்கள் உழைக்கத் தயாராக இல்லை! அதனால் சாதாரணமாக தோட்டப்புறங்களிலிருந்து போகுபவர்கள் தங்களது வேலைகளைச் சரிவரச் செய்ய முடிவதில்லை. தொடர்ந்தாற் போல் அவர்கள் விடுமுறையும் எடுக்க முடிவதில்லை. இவர்கள் தான் பிற்காலத்தில் சரியான தகவல்கள் இல்லை என்று அடையாள அட்டைகள் இல்லாமல், குடியுரிமை இல்லாமல், நாடற்றவர்கள் என்று கேவலப்படுத்தப் படுகின்றார்கள். உண்மையில் நாம் கொஞ்சம்  சிந்தித்தால் இந்தியர்களை நாடற்றவர்களாக ஆக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு புதிய நடைமுறையை அரசாங்கம் கொண்டு வந்ததாகவே நமக்குத் தோன்றுகிறது. 

வழக்கம் போல அன்றைய நமது தலைவர்கள் இதனைக் கண்டு கொள்ளவில்லை! ஆனால் இன்று நாம் அப்படி இருக்க முடியாது. நாம் விழிப்புடன் இருந்தால் தான் நமது இன்றைய தலைவர்களும் சுறுசுறுப்பாகச் செயல் படுவார்கள்.

இறுதியாக நாம் சொல்லுவதெல்லாம்   இந்தியர்களிடையே நாடற்றவர்கள் என்னும் சொல்லே இருக்கக் கூடாது! நாம் அனைவருமே இந்நாட்டுக் குடி மக்கள்!


Friday 8 June 2018

இந்தியர் விவகாரம் வடிவம் பெறுகிறது! (1)


இந்தியர் விவகாரம் வெகு விரைவில் வடிவம் பெறுகிறது. அதற்கான வேலைகள் ஆரம்பிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. அமைச்சரவைக் குழு ஒன்று அமைக்கப் படுவதாகவும்  கூடிய விரைவில் இந்தியர் விவகாரம் பற்றி விவாதிக்கும் எனவும் பிரதமர் டாக்டர் மகாதிர் அறிவித்திருப்பது நல்ல செய்தி.

இந்தியர் விவகாரம் பற்றி நாம் அவசரப்படுவதும் அது பற்றி எழுதுவதும் இன்றியமையாத ஒன்று. காரணம் நாம் பல ஆண்டுகளாக ஏமாற்றப்பட்ட ஒரு சமூகம். அதுவும் நமது தலைவர்களாலேயே நாம் சுரண்டப்பட்டிருக்கிறோம்; நசுக்கப்பட்டிருக்கிறோம்.

இப்போது நேரம் காலம் கனிந்திருக்கிறது. இதற்காகத்தானே நாம் இத்தனை ஆண்டுகள் காத்துக் கிடந்தோம். இந்தியர் விவகாரம் பற்றி விவாதிக்கும் குழுவுக்கு முதன்மையான ஆலோசனை.

வேலை வாய்ப்பு:  இந்த வேலை வாய்ப்பு என்பது நமது முதல் பிரச்சனை. வெறும் தனியார் துறை மட்டும் அல்ல அரசுத்துறையும் சேர்த்துத் தான் இங்குக் சொல்லப்படுகிறது. நாட்டில் நமது மக்கள் தொகை கிட்டத்தட்ட எட்டு (8%) விழுக்காடு என்று சொல்லப்படுகிறது. ஆனால் அது உண்மையான கணக்கெடுப்பு அல்ல. குறைந்த பட்சம் பத்து விழுக்காடு நாம் இருக்க வேண்டும். 

பத்து விழுக்காடு வைத்துத் தான் நாம் நமது வேலை வாய்ப்புக்களைப் பெற வேண்டும். அரசுத் துறையில் இனி வருகின்ற வேலை வாய்ப்புக்களில் நமது பங்காக பத்து விழுக்காடாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இனி மேலும் சாக்குப்போக்குகள் வேண்டாம். பொது அரசாங்கத் துறைகள், காவல்துறை, இராணுவத்துறை அனைத்திலும் பத்து விழுக்காட்டை நாம் பெற வேண்டும். அடுத்து தனியார் துறையிலும் இது நாள்வரை நாம் ஏமாற்றப்பட்டிருக்கிறோம். மலாய்க்காரர்கள் மட்டும், சீனர் மட்டும் என்று சொல்லியே  இந்தியர்களுக்குத் துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது. நமக்குப் பிழைக்க வழியில்லாமல் தான் குண்டர் கும்பல்களை அதிகம் வளர்த்து விட்டிருக்கிறது அரசாங்கம். இதில் அரசாங்கம் தான் குற்றவாளி.

இன்னும் பல பிரச்சனைகள் நமக்கு இருக்கிறது என்றாலும் இப்போது வேலை வாய்ய்ப்புக்களில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.

அடுத்து நாளை...!

Thursday 7 June 2018

இப்படித்தான் தமிழை வளர்க்கிறார்கள்..!

தமிழை வளர்க்க வேண்டும் என்கிறோம். எல்லாத் துறைகளிலும் தமிழ் பயன்படுத்தப்பட  வேண்டும் என்கிறோம்.  தவறில்லை. ஆனால் நாம் எந்த அளவுக்கு தமிழைப் பயன்படுத்துகிறோம் என்பது கேள்விக்குறியே!

ஜனநாயக செயல் கட்சி தனது கூட்டங்களில், அவர்கள் கூடும் இடங்களில் சீன மொழியைப் பயன்படுத்த தவறுவதில்லை. அங்கும் ஒரு தமிழன் இருப்பான், பதவியில் உள்ளவனாகவும் இருப்பான். அவனோ ஏன் தமிழ் இல்லை என்பது பற்றி அவன் சிந்திப்பதும் இல்லை, வாய் திறப்பதும் இல்லை!  அவ்வளவு பயம். எல்லாம் எஜமான விசுவாசம்! 

சரி நமது நிலை என்ன? தமிழர்கள் கூடும் இடங்களிலெல்லாம் தமிழைப் பயன் படுத்துகிறோமா? தமிழர்கள் கூடும் இடங்களிலெல்லாம் தமிழர்களுக்குத் தலைமை தாங்குகிறவன் தமிழன் இல்லை! அவனுக்குத் தமிழ் தேவை இல்லை.  அவன் தன்னைத் தமிழன் என்று சொல்லிக் கொள்ளுகிறான். ஆனால் அவன் தமிழனில்லை! அவனுக்குத் தமிழை விட சமஸ்கிருதம் இன்னும் மேல். இதையெல்லாம் கண்டும் காணாமல்  நாம் இருக்கிறோம்.  இவர்களை எல்லாம் ஒழிக்கும் காலம் வந்து விட்டது.

ஏன் இவ்வளவு பீடிகை? பக்காத்தான் கட்சிக்கு ஆதரவு கொடுத்த ஒரு சிறு இந்தியர் கட்சி தனக்குப் பலம் சேர்க்க புதிய அங்கத்தினர்களைச் சேர்த்துக் கொண்டிருக்கிறது. நாமும் அவர்களை வாழ்த்துகிறோம். அவர்களுடைய விண்ணப்ப பாரங்களைப் பார்த்த போது ஆச்சரியமாக இருந்தது. தலைவரோ தமிழுக்காக தலையையே கொடுப்பேன் என்கிறார். ஆனால் அவருடைய  கட்சியின் விண்ணப்ப பாரத்தில் அனைத்தும் ஆங்கிலத்தில்! இது சரி என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  நாமே நமது மொழிக்கு உரிய மரியாதையைக் கொடுக்கவில்லை என்றால் வேறு யார் கொடுப்பார்?

நமது சீன நண்பர்கள் அவர்கள் வெளியிடும் பாரங்களைப் பாருங்கள் சீனம், ஆங்கிலம் கலந்து தான் இருக்கும்.  நாம் அவர்களைப் போலவே  தமிழும், ஆங்கிலமும் கலந்த பாரங்களை வெளியிடும் பழக்கத்தைக் கொண்டு வர வேண்டும், இதையெல்லாம் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பது அவசியமில்லை. தானாக அது வர வேண்டும். அது தான் மொழிப்பற்று என்பது.

ந்ண்பர்களே! தலைவர்களே! அரசாங்கம் தான் அனைத்தும் செய்ய வேண்டும் என்று மயங்கிக் கிடக்காமல் நாமும் நமது கடமைகளைச் சரிவர செய்ய வேண்டும் என்பதும் உண்மை தான்! நமது மொழிப்பற்றைக் காட்டுவோம்!

Wednesday 6 June 2018

ஆங்கிலம் படிங்க..!


"சீக்கிரம், ஆங்கிலம் படிங்க!" என்று உத்தரவு போட்டிருக்கிறார், பிரதமர். 

"ஆமாம்! அப்படி! இப்படி!" என்று காரணகாரியங்களைக் கண்டுப் பிடித்துக் கொண்டிருக்கும் மலாய்ப் பண்டிதர்களையோ அல்லது அரசியவாதிகளைப் பற்றியோ அவர் கவலைப்படவில்லை. சும்மா சொல்லிக் கொண்டிருந்தால் ஏதோ எருமை மாட்டின் மேல் மழை பெய்த கதை தான்! எதுவும் நடக்காது! அதனால் நேரடியான பாய்ச்சல்! ஆங்கிலம் கற்றுக் கொள்ளுங்கள் என்று ஒரு வரியில் முடித்து விட்டார் பிரதமர்.

ஒரு வேளை ஆங்கிலம் தெரியாவிட்டால் உங்களுக்குப் பதவி உயர்வு இல்லை என்று அடுத்த அடி கூட விழலாம்! அல்லது மற்றவர்களுக்குப் பதவி உயர்வு கொடுக்கப்படலாம்! எதுவும் நடக்கலாம்! பிரதமரைச் சரியாகக் கணிக்க முடியவில்லை. ஏதோ குண்டு வீசித் தாக்குவது போல் இருக்கிறது!

அதனால் என்ன? நல்லது நடக்க வேண்டும் என்றால் ஏதாவது செய்து தான் ஆக வேண்டும். அதனைச் சரியாக செய்திருக்கிறார் பிரதமர். "மயிலே, மயிலே" என்றால் இறகுகள் தானாக விழப் போவதில்லை என்பது அவருக்குத் தெரியும். அதனால் தான் இந்த அதிர்ச்சி வைத்தியம்!

பள்ளிகளை எடுத்துக் கொண்டால்  நீண்ட காலமாக சொல்லப்படும் ஒரு காரணம் கிராமப்புறங்களில் இருக்கும் மலாய் மாணவர்களால் ஆங்கிலத்தில் போட்டிப் போட முடியாது என்பது தான். இது உண்மை என்று ஏற்றுக்கொள்ள முடியாது. தோட்டப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் கிராமப்புற மாணவர்கள் தான். அவர்களால் முடியும் போது மலாய் மாணவர்களால் ஏன் முடியாது? இத்தனைக்கும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உலக ரீதியில் பல போட்டிகளில் பங்குப் பெற்று பல பரிசுகளை வாங்கியிருக்கிறார்கள்.

இதற்கெல்லாம்  மலாய் ஆசிரியர்களின் அலட்சியம் தான் காரணம். அத்தோடு கல்வி இலாக்காகளில் வேலை செய்யும் ஆங்கிலம் தெரியாத மந்தப்புத்திகளும்  காரணம் என்று சொன்னாலும் தப்பில்லை!  அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதால் மற்றவர்களுக்கும் ஆங்கிலம் தெரியக் கூடாது  என்பது தான் அவர்களின் உயர்ந்த எண்ணம்!

இதற்கெல்லாம் ஒரு முடிவைக் கொண்டு வந்து விட்டார் பிரதமர். "செய் அல்லது செத்து மடி"  என்பது தான் பிரதமரின் இந்தத் திடீர் அறிவிப்பு! உலக நாடுகளோடு ஒப்பிட வேண்டுமென்றால் ஆங்கிலத்தை அலட்சியப்படுத்த முடியாது. ஆங்கிலத்தை தொடார்ந்தாற் போல அலட்சியப்படுத்தியது  முந்தைய அரசு.

இனி ஆங்கிலம் தெரிந்தால் தான் மவுசு என்கிறது புதிய அரசு!

Tuesday 5 June 2018

இனி தற்காலிகம் வேண்டாம்!


புதிய அராசாங்கத்திற்குப் பல வேலைகள். இத்தனை ஆண்டுகள் ஊரை ஏமாற்றிக் கொண்டு திரிந்த பல இலாக்காக்களில் கல்வி இலாக்காவும் ஒன்று. அவர்கள் தமிழ்ப் பள்ளிகள் என்றாலே ரொம்பவும் இளக்காரமாக பார்ப்பவர்கள். அவர்கள் உயர்ந்தவர்களாம், நாம் தாழ்ந்தவர்களாம்! அறிவில்லாதவர்களெல்லாம் அதிகாரிகளாக இருந்தால் அதிகாரம் தூள் பறக்கும்!  அவர்களுக்குக் காட்டிக் கொடுக்கும் வேலைகளைச் செய்பவனே ம.இ.கா. காரன் தான்! அதனால் தான் அவர்களுக்கு அவ்வளவு அதிகாதம்!

தமிழ்ப்பள்ளிகளில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை விட தற்காலிக ஆசிரியர்களே அதிகம். பல பள்ளிகள் இந்தத் தற்காலிக ஆசிரியர்களை வைத்தே பல ஆண்டுகளை ஓட்டிவிட்டனர்! இன்னும் ஓட்டிக் கொண்டும் இருக்கின்றனர். ம.இ.கா. வில் உள்ளவர்கள்: இதனைக் கண்டு கொள்ளும் அளவுக்கு அறிவு உள்ளவர்களாக இல்லை!

புதிய அரசாங்கத்திற்கு நமது வேண்டுகோள் இது தான். இனி தமிழ்ப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் என்பவர்கள் வேண்டாம். நீண்ட நாள் தற்காலிக ஆசிரியர்களாக இருப்பவர்களுக்குப் பயிற்சிகள் கொடுத்து அவர்கள் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களாக மாற்ற வேண்டும்.

தேசியப் பள்ளிகளுக்கு என்ன உரிமைகள் இருக்கிறதோ அதே போல தமிழ்ப்பள்ளிகளுக்கும் அனைத்து உரிமைகளும்  கொடுக்கப் பட வேண்டும்.  இது ஒன்றும் பசார் மாலாம் வியாபாரம் அல்ல!  பிள்ளைகளின் கல்வியில் எந்த சமரசமும் தேவை இல்லை. அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான கல்வி என்பது அவர்களின் உரிமை.

கடந்த காலங்களில் ஆசிரியர் பாற்றாக்குறை என்று சொல்லிக் கொள்வதில் கல்வி அதிகாரிகள் பெருமைப்பட்டனர். அதுவும் தமிழ்ப்பள்ளிகளுக்குப் பற்றாக்குறை! அது ஒன்று பெருமைப்பட வேண்டிய விஷயம் அல்ல. அவர்கள் தங்கள் கடமைகளைச் செய்வதில் தவறி விட்டனர் என்பது தான் பொருள். கடமைகளைச் செய்யாமல் பெருமைப்பட்ட ஒரே கூட்டம் என்றால் அது இந்தக் கூட்டம் தான்!

ஆனாலும் இவைகள் அனைத்தும் மாற்றப்பட வேண்டும். இனி மேலும் கடமைகளைச் செய்யாதவர்கள் தூக்கி எறியப்பட வேண்டும். தமிழ்ப்பள்ளிகளுக்கு இனி பட்டம் பெற்ற, தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் தான் நியமிக்கப்பட வேண்டும்.

புதிய அரசாங்கத்திற்கு ஒரு வேண்டுகோள்.  தமிழ்ப்பள்ளிகளுக்கு இனி தற்காலிகம் வேண்டாம்.நிரந்தரமான, தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களே வேண்டும். கவனிப்பார்கள் என நம்புவோம்!