Wednesday 30 October 2019

அவரவர் வேலையை அவரவர் செய்ய வேண்டும்!

அவரவர் வேலையை அவரவர் செய்ய வேண்டும்!

அப்படித் தான் செய்ய வேண்டும் என்பதை தமிழ் நாடு, நடுக்காட்டுப்பட்டியில் நடந்த சம்பவம் மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

குழந்தை ஆழ்துளை கிணற்றில் தெரியாத் தனமாக வீழ்ந்துவிட்டது. அந்தக் கிராமத்து மக்கள் எடுக்க முடியாத நிலையில் உடனடியாக தீயணைப்பு நிலையத்தினரை வர வழைத்திருக்கின்றனர்.  

எல்லாமே சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் இந்த அரசியல்வாதிகள் எங்கிருந்து வந்து குதித்தனர் என்பது தான் தெரியவில்லை! குழந்தையின் பிரச்சனையை அவர்கள் கையில் எடுத்துக் கொண்டனர். 

அரசியல்வாதிகள் யாருக்கேனும் ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த குழந்தையைக் காப்பாற்றிய அனுபவம் உண்டா என்பது தெரியவில்லை. அவர்களில் ஒருவரேனும் தீயணைப்பு படையில் சேர்ந்து ஏதேனும் பயிற்சி எடுத்திருக்கிறார்களா என்பதும் தெரியவில்லை. ஆனால் அவர்கள் முன்னின்று உத்தரவு கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள் என்பது தான் சோக்ம்.

அப்படி என்றால் காலங்காலமாக பயிற்சிகள் பெற்று இத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு இவர்கள் தங்களை முன் நிறுத்தக் காரணம் என்ன?  தங்களை நாட்டு மக்களுக்கு முன் காட்டிக் கொள்ளுவதற்கு முந்தி நிற்கிறார்களா என்பதும் புரியவில்லை!

ஆனால் நாம் ஒன்றை புரிந்து வைத்திருக்கிறோம்.  அரசியல்வாதி உள்ளே புகுந்து விட்டால் அவன் கோடிகளைப் பார்க்காமல் போக மாட்டான்! அரசியல்வாதி எதைச் செய்தாலும் லாப நஷ்ட கணக்குப் பார்க்காமல் அவன் களத்தில் இறங்குவதில்லை!

அவர்கள் இத்தனை நாள்கள் இழுத்தடிப்பதற்குக் காரணங்கள் உண்டு.  பெரிய பெரிய இயந்திரங்களையெல்லா தூரத்திலிருந்து  வரவழைப்பதற்குக் காரணங்கள் உண்டு.  அந்தப் பிஞ்சுக் குழந்தையின் உடல் ஒரு நாள் கூட தாங்க முடியாது என்று தெரிந்தும் அவர்கள் இழுத்தடிப்பு செய்தார்கள். அரசியல்வாதிகள் வீட்டுக் குழந்தைகள் எல்லாம் இரும்பால் உருவான குழந்தைகள்!  அதனால் ஓர் ஏழை வீட்டுக் குழந்தையின் துயரம் அவர்களுக்குத் தெரியவில்லை.

இந்தத் துயர நிகழ்ச்சியின் மூலம் அரசியல்வாதிகள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அவரவர் வேலையை அவரவர் தான் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் முட்டாள் என்று தான் பெயர் எடுக்க வேண்டி வரும்!

அரசியல்வாதிகளே காரணம்...!


போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினர்,  அன்வார் இப்ராகிம்  மக்களவையில் ந்ல்லதொரு கருத்தைச் சொன்னார்.

நாட்டில் இன, சமய  பதற்றத்திற்கு அரசியலவாதிகளே காரணம் என்பதாக அவர் கூறிய குற்றச்சாட்டை மறுக்க யாராலும் இயலாது. மக்களவையில் அப்படி யாரும் மறுத்ததாகவும் தெரியவில்லை.

எப்போதுமே பொது மக்கள் சார்பில் நாம் ஒரு கருத்தை வலியுறுத்துகிறோம்.  நாட்டு மக்களிடையே எந்த இன சமய பதற்றம் என்பதாக ஒன்றுமில்லை. 

இன, சமய பதற்றம் என்பதெல்லாம் அரசியல்வாதிகள் செய்கின்ற சேட்டைகள் என்பது மக்களுக்கும் புரிகிறது.  

அரசியல்வாதிகளுக்குப் பதவி வேண்டும். அவர்களுக்குப் பெரிய கனவுகள் உண்டு. ஒவ்வொரு மாநிலத்திலும் அரசியலில் உயர்ந்த, உயர்ந்த நிலைக்குப் போக வேண்டும். அவர்களைப் பார்த்து டத்தோ போட வேண்டும்; டத்தோஸ்ரீ போட வேண்டும்!  அப்போது தான் அவர்கள் நிம்மதியாக தூங்க முடியும்!  

வெறும் பதவி சுகம் போதுமா?  அத்தோடு பணம் வேண்டும்.  இலஞ்சம் என்பதே சமயத்திற்கு எதிரானது என்று சொல்லிக் கொண்டே இலஞ்சம் வாங்க வேண்டும். இவர்கள் உரையைக் காது கொடுத்து கேட்பவர்களுக்குச் சொர்க்கத்தைக் காட்டுவதும் இவர்கள் தங்களை நரகத்திற்குப் போக தயார் செய்வதும் - இது தான் அரசியல்வாதிகளின் திருவிளையாடல்!

பொது மக்களோ இதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. அவர்களுக்கு ஆயிரத்தெட்டுப் பிரச்சனைகள்.  விலைவாசி ஏற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாத கையாலாகாத அரசாங்கம். பிள்ளைகளுக்குப் பால் வாங்க முடிவதில்லை.  ஏகப்பட்ட விலையேற்றம். வீட்டு வாடகை, மாதாந்திர தவணைகள் என்று ஏகப்பட்ட பொருளாதார சிக்கல்கள்.  இந்த நிலையில் அவர்களுக்கு என்ன இனப்பதற்றம் அல்லது சமாயப் பதற்றம்?

பிழைப்பை நடத்தவே வழியில்லாத நிலையில் அவர்கள் சொல்லுவதெல்லாம் "நாய்ப் பயல்களே! எப்படியோ அடித்துக் கொள்ளுங்கள்! எங்களுக்கு ஒரு வழி சொல்லுங்கள்!"  என்பது மட்டும் தான்! 

அன்வார் அவர்களே! நீங்கள் சொல்லுவது எல்லாம் சரி தான். ஏற்றுக் கொள்ளுகிறோம். ஆனால் இந்த அரசியல்வாதிகளுக்குச் சரியான வாய்ப்பூட்டுப் போட ஆள் இல்லையே என்பதில் எங்களுக்கும் வருத்தம் தான்.

இனம், சமயம் மட்டும் அல்ல நாட்டில் நிலவுகிற அனைத்துப் பிரச்சனைகளுக்கும்  அரசியல்வாதிகள் தான் காரணம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை!

அரசியல்வாதிகள் தான் காரணம் என்பதை முழு மனத்தோடு ஏற்றுக் கொண்டதாற்காக நன்றி! நன்றி

Tuesday 29 October 2019

சோகம் நிறைந்த தீபாவாளி

தமிழ் நாட்டிலும்  சரி, மலேசியாவிலும் சரி இந்த ஆண்டு தீப ஒளி என்ப்து மக்களுக்கு எந்த ஒளியையும் ஏற்றவில்லை.

 மலேசியாவில் விடுதலைப்புலிகளின் பெயரில் தமிழர்கள் சொஸ்மா சட்டத்தின் கீழ்  கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.  பொதுத் தேர்தலின் போது"சொஸ்மா சட்டம் தேவை இல்லை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சொஸ்மா சட்டத்தை அகற்றிவிடுவோம்:  என்று சொன்ன எதிர்கட்சியினர், ஆளுங்கட்சியாக பதவிக்கு வந்த பின்னர், நாட்டின் பிரதமர் தனக்கு வேண்டாதவர்களுக்கு சொஸ்மா சட்டத்தைப் பயன்படுத்தி உள்ளே தள்ளுகிறார் என்று பாரவலாகப் பேசப்படுவதைப் பார்க்கின்றோம்!  யார் என்ன செய்ய முடியும்? அதிகாரம் பிரதமரின் கையில்.  வேறு வழியில்லை! சகித்துக் கொள்ளத்தான் வேண்டும்! தமிழர்கள் மீது கைவைப்பது நமக்குக் கவலை அளிக்கிறது.

மற்றும் ஒரு நிலவரத்தில்  தமிழ் நாடு, திருச்சி, மணல்பாறை, நடுக்காடுப்பட்டி கிராமத்தில் நடந்து சோக நிகழ்வு.  சுஜித் வில்சன் என்னும் இரண்டு வயது குழந்தை ஆள்துளை கிணற்றில் விழுந்து இறந்து போன சம்பவம்.

அவனைக் காப்பாற்ற எத்தனையோ போராட்டங்கள். எத்தனையோ வகை இயந்திரங்கள், அவனது உயிரைக் காப்பாற்ற.   இது போன்ற  பேரிடரின் போது அவர்களது துறையில் நிபுணத்துவம் பெற்ற நிபுணர்கள். எண்பது மணி நேரப் போராட்டம்.  இத்தனை பேர்களுக்கும் "பை பை" காட்டி விட்டது அந்தக் குழந்தை.

ஆமாம், ஓர் இரண்டு வயது குழந்தை. எண்பது மணி நேரம் உயிரோடு இருக்குமா என்பது நமக்கும் புரிகிறது.  ஆனால் இறந்து போயிருப்பான் என்பதை மனம் ஏற்கவில்லை.  ஏதாவது அதிசயங்கள், அற்புதங்கள் நடந்து விடாதா என்று தான் மனம் எண்ணிக் கொண்டே இருந்தது.

கடைசியில் நாம் நினைத்தது  போல் எதுவும் நடக்கவில்லை. அதிசயங்களோ, அற்புதங்களோ எதுவும் நடந்து விடவில்லை. குழந்தை இறந்து  போனது தான் நடந்தது.

தமிழ் நாட்டில் ஒரு சில தொலைக்காட்சி நிலையங்கள் அதனை நேரலையாகவே தொடர்ச்சியாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தன. நம்மாலும் மனதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பார்க்காமல் இருக்க முடியவில்லை.

நேரலையைப் பார்க்கும் போதெல்லாம் சமீபத்தில் வந்த "அறம்" படம் ஞாபத்திலேயே இருந்தது. இவ்வளவு தெளிவாகச் சொல்லியும், இப்படி படித்துப் படித்துச் சொல்லியும்  இந்த மக்கள் இப்படி இருக்கிறார்களே என்கிற எண்ணம் தான் கண் முன்னே நின்றது. 

நிபுணர்கள் செய்ய வேண்டிய வேலையை செய்ய விடாமல் அரசியல்வாதிகள் தலையிடுகிறார்களே என்கிற எண்ணமும் மேலோங்கி நின்றது.

அவ்வளவு தான்,  பேச ஒன்றுமில்லை. இனி மேலாவது இந்த மக்கள் திருந்த வேண்டும். குழந்தைகள் காப்பாற்றப்பட வேண்டும்.  தேவை என்றால் பெற்றோர்கள் கண்டிக்கப்பட வேண்டும்.  

வருங்காலங்களில் மீண்டும் இது போன்ற சோகங்கள் வேண்டாம்.

Saturday 26 October 2019

வாழ்த்துகள்!

அனைத்து இந்து பெரு மக்களுக்கும் எனது அன்பான தீபாவளி நல் வாழ்த்துகள்!

தீபாவளி திருநாளை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறோம். தீமை அழிந்து நல்லது தழைக்க வேண்டும். 

நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதையும் பாருங்கள். நல்லவைகளை வாழ வைப்போம். தீமைகளை வேரோடு சாய்ப்போம். 

ஏழைகளை எண்ணிப் பார்ப்போம். இல்லாதவர்களுக்கு உதவுவோம். 

உணவுகளை வீணடிக்கக் கூடாது என உறுதி மொழி எடுப்போம். தேவையான உணவுகளை மட்டும் சமைப்போம்.  தேவை அல்லாதவற்றை புறந்ததள்ளுவோம்.

குடிகாரத் தீபாவளி என்பதை மறக்கடிப்போம். நாம் குடிகாரர்கள் என்னும் அடையாளத்தை துடைத்தொழிப்போம்.

பிறர் நம்மைப் பார்த்து 'குடிகாரக் கூட்டம்' என்று சொல்லாதவாறு எச்சரிக்கையாக இருப்போம்.

எத்தனையோ நல்ல அடையாளங்கள் நமக்குண்டு.  அதை மட்டும் தக்க வைத்துக் கொள்ளுவோம். குடிகாரன் என்னும் அடையாளம் மட்டும் நமக்கு வேண்டாம்.

குடியால் அழிந்த குடும்பங்களைக் கண் முன் நிறுத்துங்கள்.  குடியை வெறுத்து ஒதுக்குங்கள்.

தீபாவளியைக் கொண்டாடுங்கள்.  குடி வகைகளைக் கொண்டாடாதீர்கள். குடிப்பதைப் பெருமையாக நினைக்காதீர்கள்.

பெருமையாக நினைப்பதற்கு எத்தனையோ பெருமைகள் நமக்கு உண்டு, அதற்கு கீழடியே ஓர் உதாரணம்.

நாம் பெருமை மிக்க ஓர் இனம். அந்த இனத்தின் பெருமையை கட்டிக் காப்பாற்றுங்கள்.

இந்தத் தீபாவளியில் பிள்ளைகளின் கல்வி பற்றி  யோசியுங்கள்.  குடி தான் உங்களுக்குப்    பெருமை என்பதாக பிள்ளைகளுக்கு உபதேசம் செய்யாதீர்கள்.

அனைவருக்கும்  தீபாவளி  வாழ்த்துகள்!

Friday 25 October 2019

பிரதமர் சொல்லுவது சரியா?

பிர்தமர் மகாதிர் தனது வலைத்தளத்தில் ஒரு குற்றச்சாட்டை முன் வைக்கிறார்.

சுதந்திரம் அடைந்த போது தகுதியற்றவர்களுக்கெல்லாம் குடியுரிமை வழங்கப்பட்டது என்கிறார்.எதன் அடிப்படையில் இப்படி ஒரு கருத்தை அவர் சொல்லுகிறார் என்பது நமக்குப் புரியவில்லை.

ஒரு மில்லியன் பேர் என்றால் அவர்கள் எங்கிருந்தோ வானத்திலிருந்து குதித்துவிடவில்லை என்பதை அவர் அறியாதவரா?

அவருடைய குடும்பமே தகுதி அற்றவர்களாக குடியேறி பின்னர் அவர்கள் தகுதியுள்ளவர்களாக மாறிக் கொண்டவர்கள் தாம்.  அப்படித்தான் மற்ற குடியேறிகளும் இந்நாட்டில் கொண்டு வரப்பட்டு அதன் பின்னர் தங்களைத் தகுதியுள்ளவர்களாக மாற்றிக் கொண்டவர்கள் என்பது தான் சரித்திரம்.

இதில் தகுதியற்றவர்கள் என்று சொல்லுவது அவருடைய தகுதிக்கு ஏற்றதல்ல  என்பதை நாம் வலியுறுத்துகிறோம்.

அது நடந்தது சுதந்திர காலத்தில். இப்போது என்ன நடக்கிறது? நேற்று வந்த வங்காளதேசி எந்த வகையில் தகுதியுள்ளவன் ஆனான்?  ஜாகிர் நாயக், இங்குள்ளவர்களை விட, அப்படி  என்ன தகுதியைக் கொண்டிருக்கிறார்?  அவரை விட தகுதியுள்ளவர்கள் இல்லையா? 

இப்படி தகுதியற்றவர்கள் எல்லாம் குடியுரிமை பெற்றவரகளாக இந்நாட்டில் வாழ்கின்ற போது  இருநூறு முந்நுறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நாட்டில் குடியேற்றப்பட்டவர்களை, பிரதமர் மகாதிர், தகுதி அற்றவர்கள் என்று கூறுவது  சரி என என்று நமக்குத் தோன்றவில்லை! அப்படி குடியேற்றப்பட்டவர்கள் உண்டு, கூடி களிக்க வரவில்லை.  அவர்கள் உழைப்பைக் கொடுத்தவர்கள்.  கூட்டம் கூட்டமாக இந்நாட்டிற்காக உயிரைக் கொடுத்தவர்கள். இதை விட வேறு என்ன தகுதிகள் அவர்களுக்கு வேண்டும்?

மலாய் தன்மான காங்கிரஸ் என்பது நீங்கள் பதவியில் தொடர வேண்டும் என்று கூட்டப்பட்ட ஒரு மாநாடு என்பது நாடே அறியும். அதில் முன்னாள் ஊழல் பேர்வழிகள் தான் அங்கம் வகிக்கிறார்கள் என்பதில் உண்மை இல்லாமல் இல்லை!  அதில் சொந்த மக்கள் என்று எடுத்துக் கொண்டாலும் அங்கும் பெரும்பாலும் சொந்த மக்கள் இல்லை என்பதும் அறிந்தது தான்! 

பிரதமர் மகாதிர் ஒன்றும் அறியாதவர் அல்லர். அவருக்குத் தெரியாதது எதுவும் இல்லை. சரித்திரம் அறிந்தவர். அப்படி இருந்தும் நச்சுக் கருத்துக்களை மக்களிடம் பரப்ப நினைக்கிறார்! அவர் தகுதிக்கு, அவர் வயதுக்கு அவருடைய இந்தப் போக்குச் சரியானதாகப் படவில்லை.

பதவியில் தொடர வேண்டும் என்பதற்காக  எதையும் செய்வேன் என்று இந்த வயதிலும் பிடிவாதம் பிடிப்பது நாட்டுக்கு நல்லது அல்ல என்பது அவருக்குத் தெரியும். 

அவர் பதவி தொடர விரும்புகிறார் என்பது நமக்கும் புரிகிறது. அதற்காக அனைவரையும் பகைத்துக் கொண்டு பதவி தொடர விரும்புவது அவரது கொள்கை என்றால் நாம் அதனை வரவேற்கவில்லை!

தனியார் கல்விக் கூடங்களா!

மித்ரா அமைப்பு செய்கின்ற  நிதி ஒதுக்கிடுகளில் அதிக ஒதுக்கீடு தனியார் பயிற்சி மையங்களில் செய்கின்ற ஒதுக்கிடூ என்பதை அறியும் போது  இதில் உள் நோக்கம் இருப்பதாகவே தோன்றுகிறது.

தனியார் கல்வி நிலையங்களைப் பற்றி நாம் நிறையவே அறிந்திருக்கிறோம். ஒரு காலக் கட்டத்தில் ம.இ.கா.வினர் நிறைய பயிற்சி நிலையங்களைத் திறந்து  இலட்சக் கணக்கில் பணம் பார்த்தனர்!  சரியான பயற்சி கொடுக்க மாணவர்களுக்கு ஆளில்லை. மாணவர்களுக்கு எந்தப் பயிற்சியும் கிடைக்கவில்லை. கடைசியில் அவர்கள் அரசாங்கத்திற்குக் கடன்காரர்கள் ஆனார்கள்! மாணவர்களுக்குப் பயிற்சியும் இல்லை. சான்றிதழ்களும் இல்லை.  அரசாங்கத்திற்கு நிரந்தர கடன்காரர்கள்!

இது தான் தனியார் நிலையங்களில் நடக்கும் அவலங்கள்.

இப்போது செடிக் அதே தவறுகளை மித்ரா செய்வது ஏற்கத்தக்கது அல்ல. அப்படி செய்தால் தனியார் நிலையங்களில் அமைச்சருக்கும் ஏதோ பங்கு இருப்பது போன்ற தோற்றத்தையே ஏற்படுத்துகிறது!

இப்போதைய அரசியலில் எதனையும் உறுதிப்படுத்த முடியவில்லை.

பிரதமர் மகாதிரின் தலையீடு மித்ராவில் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால் இருக்கும், இருக்க வேண்டும் என்று தான் நமக்குத் தோன்றுகிறது!  ஏற்கனவே நஜிப்பின் தலையீடு இருந்தது தானே! 

மேலும் ஒரு காலக் கட்டத்தில் அனைத்தும் சாமிவேலுவிடம் கொடுத்துவிட்டு எனக்கு ஒன்றும் தெரியாது என்று சொன்னவர் தானே மகாதிர். அதனையே இப்போது மாற்றி வேதமூர்த்தியிடம் அனைத்தும் கொடுத்துவிட்டேன் எனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்ல எவ்வளவு நேரம் பிடிக்கும்?

இப்போது மித்ராவை இயக்குபவர் யார் என்று முழுமையாகத் தெரியவில்லை.  பொன்.வேதமூர்த்தி இந்தியர்களின் மேல் அக்கறை இல்லாதவர் என்று சொல்லிவிட முடியாது.  சாமிவேலுவை ஒதுக்கியது போல ஒரேடியாக வேதாவை ஒதுக்கிவிட முடியாது.

இது தெரிந்து நடக்கிறதோ, தெரியாமல் நடக்கிறதோ அமைச்சர் வேதமூர்த்தி தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சொல்ல வருகிறோம்.

தனியார் பயிற்சி நிலையங்கள் வேண்டாம். அரசாங்க பயிற்சி நிலையங்களே வேண்டும்.  இங்கு தரமான கல்வி உண்டு. சான்றிதழ்கள் உண்டு. அமைச்சர் உண்மையில் B40 இந்திய மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற உண்மையான நோக்கம் இருந்தால் அரசாங்க பயிற்சி மையங்களையே தேர்ந்தெடுக்க வேண்டும்.

இல்லாவிட்டால் இங்கும் கமிஷன் தான் விளையாடுகிறது என்று  எண்ணம் தான் நமக்கும் வரும்!

Wednesday 23 October 2019

'மித்ரா' வுக்கு என்ன பிரச்சனை ...?

உண்மையில் மித்ரா, இந்தியர்களின் தரத்தை உயர்த்த வேண்டும் என்னும் நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட மித்ரா இப்போது என்ன செய்கிறது என்று பார்த்தால், முன்பு போல, இதுவும் உருப்படியாக எதுவும் செய்யவில்லை என்றே தோன்றுகிறது!

ஆமாம் ஆளுங்கட்சியைச் சேர்ந்த நாடளுமன்ற உறுப்பினர், சிவகுமார் குறை கூறும் அளவுக்குத் தான் அதன் நிலைமை இருக்கிறது. அதில் உண்மையும் உண்டு என்பது தான் நமது அபிப்பிராயமும் கூட.!

முந்தைய அரசாங்கத்தில் என்ன நடந்ததோ அது தான் இப்போதும் நடக்கிறது என்பது தான் நமது நிலையும்!

முன்பு பெரிய பெரிய இயக்கங்களுக்குப் பணத்தை அள்ளிக் கொடுத்துவிட்டு அதன் பின்னர் அரசியல்வாதிகள் பங்குப் போட்டுக் கொண்ட கதைகள் எல்லாம் நமக்குண்டு.  அதில் உண்மையும் இருந்தது. இப்போதும் அது தான் நடக்கிறதா என்பது உறுதியாகத் தெரியாவிட்டாலும் அது தான் நடக்கிறது என்று ஐயுற வேண்டியுள்ளது. 

முந்தைய அரசாங்கத்தில் iஇந்தியர்களுக்காக கொடுக்கப்பட்ட அந்த மாநியங்களில்  முன்னாள் பிரதமருக்கும் பங்கிருந்ததாக கூறப்பட்டது.    


 இப்போது இந்தியர்களின் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் பிரதமரின் பங்கு என்ன என்பது நமக்குத் தெரியவில்லை. இவருடைய அனுமதியோடு தான்  பெயர் தெரியாத இயக்கங்களுக்கு எல்லாம் மாநியங்கள் கொடுக்கப்படுகின்றனவா என்று அவர்களது நடவடிக்கைகள் ஐயுற  வைக்கின்றன.

ஆமாம்! இன்றைய நிலையில் பிரதமர் மகாதிர் தான் இந்தியத் தலைவர்களை ஆட்டி வைக்கிறார் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.  அப்படி இருக்க வேதமூர்த்தி மட்டும் என்ன விதிவிலக்கா? அல்லும் பகலும் 'இந்தியர், இந்தியர்!' என்று கூக்குரலிட்ட வேதமூர்த்தியை  ஒன்றும் இல்லாமல் செய்து விட்டாரே!  அவரால் இந்தியர்களுக்கு எந்தப் பயனும் இல்லாமல் போய்விட்டதே! 

நமது சந்தேகம் எல்லாம் மித்ரா  வேதமூர்த்தியின் கையிலில்லை என்பது தான். பிரதமரே அவரது கையில் எடுத்துக் கொண்டதாகவே தெரிகிறது! 

இப்போதைய நிலையில் பிரதமர் மகாதிர் இந்தியர்களின் பிரச்சனையை தனது வசம் வைத்திருப்பதாகவே தோன்றுகிறது! அது இந்தியர்களுக்கு நல்லது செய்ய அல்ல. கெடுதல் செய்வதற்காகவே!

பிரதமர் மகாதிர் பதவியிலிருக்கும் வரை மித்ராவால் இந்தியர்களுக்கு எதனையும் செய்ய இய்லாது!

Tuesday 22 October 2019

அமிதாபச்சனுக்கு நன்றி!

பாலிவூட் நடிகர் அமிதாப்பச்சனைப் பற்றியான ஒரு செய்தி  அனைவரும் பகிர்ந்து கொள்ள வேண்டிய ஒரு செய்தி.

"வயது 77 ஆகியிருக்கும் இந்த முதுமை நிலையிலும். அவரது உள்ளுறுப்புகளில் சில குறைந்த அளவே செயல்பட்டு வரும் நிலையிலும் அவர் இடைவிடாமல் படங்களில் நடிப்பதையும், மக்களை மகிவிழ்ப்பதையும் தொடர்ந்து செய்து வருபவர்."

என்கிற மேற் குறிபிட்ட வரிகள்  நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய வரிகள்.

வியாதிகள் இல்லாத மனிதர்களே இல்லை. வியாதிகள் கோடிசுவரனா ஏழையா என்று பாரபட்சம் பார்ப்பதிலை. தவறான உணவு முறைகள்,  தவறான பழக்க வழக்கங்கள் - இப்படி ஏதோ ஒன்று மனிதனிடம் தொற்றிக் கொண்டும், ஒட்டிக் கொண்டும் தான் இருக்கும். வியாதிகள் ஏற்படுவதற்கு அது போதும். வியாதிக்கு ஒரு சிறிய ஓட்டை இருந்தால் போதும் அதனை வைத்தே அது கூடு கட்டிக் குஞ்சு பொறித்து விடும்!

நாம் இங்கு சொல்ல வருவது வியாதி என்பது அனைவருக்கும் உண்டு. அது தவிர்க்க முடியாது ஒன்று.  ஆனால் அந்த வியாதி வந்ததும் நாம் எப்படி செயல்படுகிறோம், எப்படி எதிரொலிக்கிறோம் என்பது தான் முக்கியம். 

"நாளையே செத்துப் போவாய்!" என்று  நோயாளியைப் பார்த்து மருத்தவர் சொல்லுகிறார். ஆனால் அதன் பின்னர் நான்கு ஆண்டுகளோ நாற்பது ஆண்டுகளோ அந்த நோயாளி வாழ்ந்து மருத்துவருக்கு அதிர்ச்சியைக் கொடுக்கிறார்!

"இனி நீங்கள்  நோய் நொடியின்றி பல ஆண்டுகள் வாழ்வீர்கள்!" என்று மருத்தவர் சொல்லுகிறார். ஆனால் நோயாளியோ ஒரு சில நாட்களில் மண்டையைப் போட்டு விடுகிறார்! 

மருத்துவர் சொல்லுவதில் தவறு இல்லை. அதே சமயத்தில் மருத்துவர் கடவுளும் இல்லை. அவர்களது அனுபவத்தை வைத்து ஓரளவு அவர்களால் கணிக்க முடியும், அவ்வளவு தான்.

ஆனால் எல்லாவற்றையும் விட நோயாளி என்ன நினைக்கிறார் என்பது தான் முக்கியம். 

நமக்கு வியாதியா மருத்துவர் கொடுக்கும் மருந்து மாத்திரைகளைச் சாப்பிடுவோம். அவர் சொல்லுவது போல உணவு முறைகளைக் கடைப்பிடிப்போம். பத்தியங்களைக் கடைப்பிடிப்போம்.  உடற் பயிற்சிகளைச் செய்வோம். அவ்வளவு தான் நம்மால் செய்ய முடியும்.  அத்தோடு நமது கடமை முடிவடைந்தது. நமது அடுத்த வேலைகளைச் செய்ய ஆரம்பிப்போம். வியாதிகளைப் பற்றி அதிகம் ஆராய்ச்சி செய்ய வேண்டாம். ஓரளவு நமக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்பதைத் தவிர அதிக ஆராய்ச்சி தேவை இல்லை.

அதை விடுத்து முக்கல் முனகல் எதுவும் தேவை இல்லை.  அதைப் பற்றியே 24 மணி நேரமும் சிந்திக்கத் தேவை இல்லை. கவலைப்படுவதால் ஆகப்போவது ஒன்றுமில்லை. அது வியாதியை அதிகப்படுத்துமே தவிர , வியாதிக்குத் தீர்வு கிடைக்கப் போவதில்லை. இல்லாத வியாதியை இருக்கிற வியாதியாக மாற்றி விடுமே தவிர பயம், கவலை இவைகளினால் எந்தப் பயனும் இல்லை!

அமிதாப்பச்சன் நல்லதொரு எடுத்துக் காட்டாக இருக்கிறார். வியாதி உண்டு. உடலில் குறைபாடுகள் உண்டு. ஆனால் அதனால் அவர் முடங்கிப் போகவில்லை.  நாளையே அவருக்கு மரணம் வரலாம். அதனை நாளைப் பார்த்துக் கொள்ளலாம்.  இப்போது உள்ள வேலை என்ன? அதனை இப்போது செய்வோம். மக்களை மகிழ்விப்போம். நமதுகடமைகளைச் செய்வோம். 

தவிர்க்க முடியாத மரணத்தைப் பற்றி கவலைப்படுவதை விட இப்போது கையில் இருக்கும் இந்த கணத்தை பயனுடையதாக பயன்படுத்திக் கொள்ளுவோம்!

நல்லதொரு பாடம்! வியாதி வரும்! போகும்!  போவதைப் பற்றி சிந்திக்க வேண்டாம்! வருவதைப் பற்றி சிந்திப்போம்!

Sunday 20 October 2019

மாணவரின் பட்டம் ஒப்படைக்கப்படும்..!

மலாயாப் பல்கலைக்கழக நிர்வாகம் பொறியியல் துறை மாணவரான Wong Yan Ke வுக்கு அவர் படித்து முடித்ததற்கான துறை சான்றிதழை அவ்ரிடம் ஒப்படைப்பது என முடிவு செய்திருப்பதை வரவேற்கிறோம்.

ஏற்கனவே அந்த பொறியியல் துறை மாணவருக்கு  அந்தச் சான்றிதழை கொடுப்பதில்லை என்பதாக நிர்வாகம் முடிவு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


எனினும் கொடுப்பதில்லை என்கிற முடிவுக்கு எதிராகவும், ஆதரவாகவும் பலர் தங்களது எண்ணங்களைப் பதிவு செய்தனர்.

அந்தப்  பல்கலைக்கழக மாணவர்  சமீபத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவின் போது மலாயாப் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி விலக வேண்டும் என கூச்சலிட்டும் குழப்பத்தையும் ஏற்படுத்தி மற்ற மாணவர்களையும் ஆர்ப்பாட்டத்திற்குத் தூண்டியதாக குற்றம்  சாட்டப்பட்டார்.  மிகவும் கண்டிக்கத்தக்க முறையிலும் ஒழுங்கீனமான முறையிலும் அந்த மாணவர் நடவடிக்கை அமைந்ததால் அவருக்கு சான்றிதழ் வழங்குவதை பலகலைக்கழக நிர்வாகம் தற்காலிமாக அதனை நிறுத்தி வைப்பதாக அறிவித்திருந்தது.


அந்த மாணவர் பட்டமளிப்பு விழாவில் போது பல்கலைக்கழக துணை வேந்தர், அப்துல் ரகிம் ஹாஷிம், சமீபத்தில் நடந்த மலாய் அரசியல்வாதிகள் தன்மான மகாநாட்டில் பேசிய இனத் துவேஷ பேச்சைக் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.  மலேசியாவின் முதலாந்தர பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருப்பவர், இப்படி நாலாந்தர அரசியல்வாதிகளைப் போல பேசுவது பல இன சமுதாயத்தில் ஓர் அச்சத்தை ஏற்படுத்தாதா  என்ற ஒரு தனி மனிதராக போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் தனது துணை வேந்தர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதாக கோரிக்கை வைத்தார். அதற்காக அவர் பெற  வேண்டிய அவரது பட்டத்தை நிறுத்தி வைத்தது பல்கலைக்கழகம். மேடையில் கம்பிராக பிரமுகர்களின் முன் நிலையில் பெற வேண்டிய சான்றிதழ் பின்னர் நான்கு சுவருக்குள்ளே கொடுக்கப்பட்டது நமக்கும்  வருத்தம் தான். 

எனினும் அவரது சான்றிதழ் கொடுக்கப்பட்டதற்காக நன்றி கூறுகிறோம். 

ஒன்றை நான் நினைத்துப் பார்க்கிறேன். இதனையே  இந்திய மாணவர் ஒருவர் செய்திருந்தால் அவர் நிலை என்னவாகியிருக்கும்! 

பிரதமர் மகாதிர் இந்தியர்களை பழி வாங்கும் நோக்கம் கொண்டவர். இந்நேரம் சொஸ்மா சட்டத்தில் உள்ளே தள்ளியிருப்பார்! கேள்வி கேட்க யார் இருக்கிறார்கள்?

எது எப்படி இருப்பினும் இந்தப் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்ததற்கு நன்றி! 

Friday 18 October 2019

தமிழ்ப்பள்ளிகளுக்கான நிதி உதவி...!

பொதுவாக தமிழ்ப்பள்ளிகளுக்கான மானியங்கள் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகின்றன என்று அறியும் போது நமக்கு மகிழ்ச்சி தான். 

பராமரிப்பு, பள்ளியின் மேம்பாட்டுக்கு என்று உதவிகள் தேவைப்படுகின்றன என்பது உண்மை தான்.  முந்தைய அரசாங்கத்தாலும் இந்த உதவிகள் கொடுக்கப்பட்டுத்தான் வந்தன. ஆனால் அங்கு நிறைய ம.இ.கா. அரசியல் ஆட்டம் அதிகமாக இருந்தது. சில பள்ளிகளுக்குக் கிடைத்தன. பல பள்ளிகளுக்குக் கிடைக்கவில்லை! நிதி கிடைக்கப்பட்ட பள்ளிகளுக்குப் பணம் போய்ச் சேரவில்லை என்கிற குற்றச்சாட்டும் உண்டு. 

ஆனால் இப்போது அத்தகைய நிலைமை இல்லை.  எல்லாப் பள்ளிகளுக்கும் கிடைக்கின்றன.  ஒரு சில எதிர்க்கட்சி தலைமையாசிரியர்கள் நிதி உதவி வேண்டாம் என்கிற போக்கும் உண்டு.  அவர்களுக்கு அதனால் ஒரு வரவும் இல்லை என்பதால் "பள்ளி எக்கேடு கெட்டால் எனக்கு என்ன!" என்று  எச்சரிக்கை உணர்வோடு ஒதுக்கி விடுகின்றனர்!

எல்லா மாநிலங்களிலும் இந்த நிதி உதவி கிடைக்கிறதா என்பது தெரியவில்லை.  நமக்குத் தெரிந்த வரை ஜோகூர், சிலாங்கூர், பேரா - இந்த மாநிலங்களின் செய்திகள் தான் நாளிதழிகளில் வருகின்றன. மற்ற மாநிலங்களின் நிலவரங்கள் தெரியவில்லை.  ஒரு வேளை மற்ற மொழி பள்ளிகளுக்கு உதவலாம்.  ஏதாவது நடந்து தான் ஆக வேண்டும். இளிச்சவாயன் தமிழன் தான் என்பது மற்ற மாநிலங்களில் நிருபிக்கப்படுகிறதோ, தெரியவில்லை!

இந்த நேரத்தில் இன்னொரு செய்தியையும் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன். தமிழ்ப்பள்ளிகளுக்கு வெறும் நிதி உதவியோடு நமது மாண்புமிகுக்கள் நிறுத்திவிடக் கூடாது.  பல தமிழ்ப்பள்ளிகள் தனியார் கட்டுப்பாட்டில் உள்ளன.  இதற்க்கெல்லாம் இந்த அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் போதே ஒரு முடிவு காண வேண்டும்.  முந்தைய அரசாங்கத்தின் தொடர்ச்சிகள் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கின்றன.  இதனை அடுத்து வரும் அரசாங்கத்திற்கு - பக்காத்தான் அரசாங்கமாக இருந்தாலும் கூட - இந்தக் குளறுபடிகளை ஒரு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். இதனை வைத்து அரசியல் நடத்தும் வழக்கத்தை ம.இ.கா. கொண்டிருந்தது.  இனி இது வேண்டாம்.  தமிழ்ப்பள்ளிகளின் பிரச்சனைகளை வைத்து நடப்பு அரசாங்கம் அரசியல் நடத்தக் கூடாது  என்பதே நமது எண்ணம்.

தமிழ்ப்பள்ளிகளுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்க வேண்டும்.  பதவி உயர்வுகள் கிடைக்க வேண்டும். கல்வி அமைச்சில் உயர் பதவிகள் கிடைக்க வேண்டும். 

இவைகள் எல்லாம் இப்போது நடப்பில் உள்ள மாண்புமிகுக்கள் செய்ய வேண்டும்.  அது உங்களின் கடமை.  

நிதி உதவி மட்டும் அல்ல, பதவி உயர்வு,  நிலப்பட்டாக்கள் என்று அனைத்தும் உங்கள் வேலை.  இல்லாவிட்டால் எங்கள் புத்தியைக் காட்டி விடுவோம்!

Thursday 17 October 2019

குழப்பமிக்க அரசியல்..!

இப்போது நாட்டில் ஒரு குழப்பமிக்க அரசியல் சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது. 

யார் காரணம் என்று சொல்லத் தேவையில்லை.  அனைத்துக்கும் காரணம் பிரதமர் மகாதிர் என்பது நமக்குத் தெரிந்திருக்கிறது. 

அடுத்த பிரதமர் யார் என்பது முன்னமே அனைத்து பக்காத்தான் கட்சிகளாலும்  பேசித் தீர்க்கப்பட்ட ஒரு பிரச்சனை. இதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை.  அதனை பிரதமர் மகாதீரே ஒப்புக் கொண்டிருக்கிறார். "எனது பொறுப்பை அன்வார் இப்ராகிமிடம் ஒப்படைப்பேன்" என்று பலமுறை அவரே சொல்லியிருக்கிறார்.

ஆனாலும் அவர் எதைச் சொன்னாலும் ஒர் உறுதியற்ற முறையில் தனது கருத்தைச் சொல்லி மக்களைக் குழப்புகிறார். பொதுவாக கிண்டல் பண்ணுவதும், தமாஷாகப் பேசுவதும் அவருக்குக் கை வந்த கலை!  பிரதமர் பதவி ஒப்படைப்பு என்னும் போதெல்லாம் அவர் அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

இப்போது மேலும் பல குழப்பமான செய்திகள் வருகின்றன.  நம்பிக்கைக் கூட்டணி தொடருமா என்கிற சந்தேகத்தை எழுப்புகின்றன.  ந்ல்லது நடக்கும் என்று நினைத்தோம். ஆனால் அவர் இப்படி நாச வேலையில்  ஈடுபடுவார் என்று யாரும் நினைக்கவில்லை. 

பிரதமர் மகாதிரின் எண்ண ஓட்டங்களை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. நாடு நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாரா அல்லது நாசமாகப் போகட்டும் என்று நினைக்கிறாரா அல்லது தனது மகன் அடுத்த பிரதமராக வர வேண்டும் என்று நினைக்கிறாரா என்பதெல்லாம் நம்மால் கற்பனைச் செய்ய முடியவில்லை!

அன்வார் பதவிக்கு வருவதை அம்னோ தரப்பினர் விரும்ப மாட்டார்கள் என்பது நமக்குத் தெரியும். காரணம் மோசடி வழக்குகளை அவர்கள் எதிர் நோக்க வேண்டி வரும் என்கிற நிலைமையில் அவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அந்தச் செய்திகள் உண்மையா, பொய்யா என்பதில் உறுதி இல்லை. அவர்களோடு சேர்ந்து பிரதமரும் செயல்படுகிறாரா என்று நாமும் நினைக்க வேண்டியுள்ளது என்பது வருத்தமே!

பிரதமரின் செயல்பாடுகள் அவருடைய தகுதிக்கு அல்லது வயதுக்கு ஏற்றதாக இல்லை. இளம் வயதில் எப்படியோ இருந்திருக்கலாம். ஆனாலும் வயதான பின்னரும் இப்படி தில்லுமுள்ளுகள் என்பதெல்லாம் வருங்கால தலைமுறைக்கு சரியான எடுத்துக்காட்டாக இருக்க முடியாது. இந்த வயதில் மற்றவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக அவருடைய நடவடிக்கைகள் அமைய வேண்டும்.

நாம் சொல்ல வருவதெல்லாம் மக்களைக் குழப்ப வேண்டாம் என்பதே!

Wednesday 16 October 2019

இது பக்காத்தான் அல்ல...!

இப்போது நாட்டில் நடப்பது பக்காத்தான் அரசாங்கம் அல்ல!

தேர்தலின் போது பக்காத்தான் கொடுத்த வாக்குறுதிகள் வேறு.   நாம் எதிர்பார்த்த -  கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை - நிறைவேற்ற முடியாத ஓர் அரசாங்கத்தை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இது முற்றிலுமாக பிரதமர் மகாதிரின் ஒரு சர்வாதிகார நோக்கம் கொண்ட ஓர் அரசாங்கம். அடக்குமுறை கொண்ட ஓர் அரசாங்கமாக இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

டாக்டர் மகாதிர்,  பிரதமரானது ஓரு விபத்து என்பது ஒன்றும் புதிய விஷயமல்ல.  அவர் ஓர் இடைக்கால பிரதமராகத் தான்  பதவியேற்றார். ஆனாலும் இப்போது அவர் தனது பதவியை விட்டுக் கொடுக்க மறுக்கிறார்!  இத்தனை ஆண்டுகள் கழித்து அவருக்கு மீண்டும் பிரதமர் பதவி மீது ஏற்பட்ட ஆசை அவரை பதவியிலிருந்து விலக  மறுக்க வைக்கிறது.

இப்போது அவர் பதவி வகிப்பதால் ஏற்படுகின்ற பிரச்சனைகள் என்ன? 

முதலாவது பக்காதான் கட்சி தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தடுமாறுகிறது.  அதற்கு முழு முதற் காரணம் பிரதமர் மகாதிர் தான்.  தனது அந்தக்கால சர்வாதிகார முறையை மீண்டும் கொண்டு வருகிறார்  என்பதைத் தவிர வேறு காரணங்கள் இல்லை.

இஸ்லாமிய சமயப் போதகர் ஜாகிர் நாயக் பிரச்சனையை முளையிலேயே  கிள்ளி எறிந்திருக்க வேண்டிய  ஒரு பிரச்சனை. அதனைத் தண்ணீர் ஊற்றி வளர்த்தவர் பிரதமர் மகாதிர் தான்.

அந்தப் பிரச்சனையின் தொடர்பாக ஏற்பட்டது தான் விடுதலைப்புலிகளின் பிரச்சனை. ஒன்றுமே இல்லாத ஒன்றை உருவாக்கி  தமிழர்களைக் கைது செய்து அவர்களைப் பயங்கரவாதிகளாக உலகத்திற்குக் காட்டுவது தான் அவரது எண்ணமே தவிர வேறொன்றும் இல்லை.

இப்போது இந்தியாவுக்கும் மலேசியாவுக்குமான உறவுகளில் விரிசல் என்பதும் மகாதிரால் ஏற்பட்ட பிரச்சனையே. உட்கார்ந்து பேசித் தீர்க்க வேண்டிய காஷ்மீர் பிரச்சனையை உலக அரங்கில் தன்னை ஹீரோவாக காட்டுகின்ற  முயற்சி அது. அதனால் ஏற்பட்ட விளைவு தான் இந்தியா,  மலேசியாவின் செம்பணை எண்ணைய் புறக்கணிப்பு.

இன்னும் பல உண்டு. மேற்குறிப்பிட்ட அனைத்துக்கும் பிரதமர் மகாதிரே குற்றவாளி.  வேறு ஒரு தலைமையின் கீழ் பக்காத்தான் அரசாங்கம் அமைந்திருந்தால் மேலே குறிப்பிட்ட பிரச்சனைகள் அனைத்தும் தவிர்க்கப்பட்டிருக்கும்.

இடைக்காலம் என்று சொல்லி இப்போது முழு தவணை என்று சொல்லி வருகிறார்!

இடைக்காலப் பிரதமர் மகாதிர் இன்றைய நிலையில் நாட்டிற்கு இடைஞ்சலே!

நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை...!

நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்ல என்பது உண்மை தான்.

விடுதலைப்புலிகளின் பெயரைச் சொல்லி 12 பேர் கைது செய்யப்பட்ட விவாகாரத்தை நம்மால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது உண்மை தான்.

நாட்டில் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் இஸ்லாமிய சமயப் போதகர் ஜாகிர் நாயக் அவரது நாட்டுக்கே அனுப்பப்பட வேண்டும் என்று குரல் கொடுத்ததற்காக இப்படி தமிழர்களைப் பழி வாங்குவதா என்று நினைக்கும் போது அதிகாரம் எப்படி துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

இதன் பின்னணியில் இருந்து செயல்படுபவர் நமது பிரதமரைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்? அதுவும் தெரிகிறது. ஆனாலும் எதுவும்செய்ய முடியவில்லை!

சொஸ்மா சட்டம் ரத்து செய்யப்படும் என்பது தேர்தல் வாக்குறுதி. அதுவும் காற்றில் பறக்கப்பட்டு விட்டது! இப்போது அந்த சட்டத்தை வைத்தே கைது செய்வது என்பது  அதிகாரம்  எப்படியெல்லாம் தவறாக செயல்படுகிறது என்பதெல்லாம் நமக்குப் புரிகிறது.

ஜாகிர் நாயக் ஒரு தீவிரவாதி என்பது மீண்டும் மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. அவரைத் தாங்கும் ஒரு சில இஸ்லாமிய அமைப்புக்களை மகிழ்ச்சிப்படுத்த  தமிழர்களைத் தீவிரவாதிகள் என்பதாக முத்திரைக் குத்தப்படுகின்றது.  இது உலக அரங்கில் தமிழர்கள் என்றாலே  தீவிரவாதிகள்  என்பதாக ஓர் அவப்பெயரை ஏற்படுத்தும் என்பது நமக்குத் தெரிகிறது. 

சமீபத்திய இந்திய செய்திகளின் படி பயங்கரவாதிகள் என கைது செய்யப்பட்ட 127 பேர் ஐ.எஸ். அனுதாபிகள்.   இவர்கள் அனைவருமே ஜாகிர் நாயக்கின் அவரது உரைகளால், அவரது காணொளிகளால் ஈர்க்கப்பட்டவர்கள் என்கிறது அந்த செய்தி.  இங்கும், நமது நாட்டிலும், ஏற்கனவே அது நடந்திருக்கிறது. இனி மேலும் அது நடக்கலாம்.

ஆனாலும் ஜாகிர் நாயக் இந்த நாட்டுக்குத் தேவையானவர் என்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை ஒரு சாரார் ஏற்படுத்தி வருகின்றனர்.  ஆனாலும் வருங்காலம் தான் யார் சரி, யார் தவறு என்று சொல்லும்.

இதுவரை நடந்தவை அதிகாரத் துஷ்பிரயோகம். அதைதான் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!

Monday 14 October 2019

வெள்ளை அறிக்கை சரியே!

பயங்கரவாதம் என்பது தமிழர்களுக்கு மட்டும் உரியது என்கிற போன்ற ஒரு தோற்றத்தை சமீபகாலமாக ஏற்படுத்தப்பட்டு விட்டது! 

ஈழத்தில் நடந்தது என்பது தமிழர்களின் மாநில சுயாற்சி போராட்டம் என்பதே தவிர அது எந்த வகையிலும் பயங்கரவாதத்தோடு சம்பந்தப்பட்டது அல்ல. இருந்தாலும் அது பயங்கரவாதம் என்கிற போர்வையில் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்களை ஆதிக்கசக்திகளால் கொன்ற குவித்த பின்னர் ஒரு முடிவுக்கு  வந்து விட்டதாக சிங்கள அரசு அறிவித்துவிட்டது.

யார் சரி, யார் தவறு என்பதை விட அது முடிவுக்கு வந்துவிட்ட ஓரு போர். ஆனால் காவல்துறை தனது கருத்தில் வேறு படுகிறது. 

இங்கு பேராசிரியர் இராமசாமி கூறும் கருத்தில் நாம் ஒன்று படுகிறோம்.

இப்போது நாட்டில் தீவிரவாதம் எங்கிருந்து வருகிறது என்பது மலேசியர்கள் அறிந்திருக்கிறார்கள். நிச்சயமாக தீவிரவாதமோ, பயங்கரவாதமோ விடுதலைப்புலிகளிடமிருந்து வரவில்லை என்பது ஒன்றும் இரசியமல்ல.

தீவிரவாதம் பேசும், இன நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் நாட்டில் தஞ்சம் புகுந்திருக்கும்  மத போதகர் ஜாகிர் நாயக்கை விட ஆபத்தானவர்கள் யாரும் இருக்க முடியாது. ஏற்கனவே இஸ்லாமிய நாடான வங்காள தேசமே அவரை பயங்கரவாதி என்று அறிவித்துவிட்டது. இவருடைய உரைகளினால் நமது இளைஞர்கள் பலர் ஈரக்கப்பட்டு வெளி நாடுகளில் தீவிரவாதத்தை மேற்கொண்டு விட்டனர். 

இந்த நிலையில் ஜாகிர் நாயக் மற்றும் ஐ எஸ் ஐ எஸ் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பவர்கள் மீதான வெள்ளை அறிக்கை தேவை என்பதை நாமும் ஆதரிக்கிறோம்.

அப்படியே புதைக்கப்பட்டு விட்ட விடுதலைப்புலிகளின் இயக்கம் உயிர் பெற்றாலும் அதனால் மலேசியாவுக்கு எந்த பாதகமும் இருக்கப் போவதில்லை. அவர்கள் தாயகத்திலும் தலை தூக்க வாய்ப்பில்லை. அங்கு மக்கள் இராணுவ கட்டப்பாட்டில் இருக்கின்றனர்!

ஆனால் ஜாகிர் நாயக் அல்லது ஐ எஸ் ஐ எஸ் நிலைமை அப்படியில்லை. உள் நாட்டிலும் அவர்கள் ஆபத்தானவர்களே. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்.

அதனால் பேராசிரியர் இராமசாமி அவர்கள் கேட்டுக் கொண்டிருப்பதை போல வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்பதை நாமும் கேட்டுக் கொள்ளுகிறோம்.

பயங்கரவாதமோ தீவிரவாதமோ ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடில்லை. ஆனால் அதனை மறைக்க நினைப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல என்பதை நினைவுறுத்துகிறோம்.

வெள்ளை அறிக்கை தேவை என்பது சரியே!

Sunday 13 October 2019

மீண்டும் ஆரம்பித்துவிட்டாரா?

என்ன தான் சொன்னாலும் இந்தியர்கள் என்னவோ பிரதமர் மகாதிரை தான் குற்றம் சொல்லுகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை!

முன்பு  டத்தோ சாமிவேலுவை  வைத்துக் கொண்டு ஆடாத ஆட்டம் ஆடியவர் இப்போதும் அதையே தான் செய்கிறார் என்று சொல்லுவதில் ஏதேனும் காரணிகள் இருக்கலாம்.

அப்போதும் இந்தியர்களை ஏமாற்றும் வேலைகள் நடந்தன. இப்போதும் அதே தான் நடந்து கொண்டிருக்கின்றன!

இப்போது விடுதலைப்புலிகளின் ஆட்டம் என்பதும் சட்டமன்ற உறுப்பினர்களைக் கைது செய்வதும் இந்தியர்களை அடக்கி வைக்க வேண்டும் என்பதைத் தவிர வேறோன்றுமில்லை என்பதாகத்தான் நினைக்க வேண்டியுள்ளது. 

இல்லாத ஒன்றுக்காக 'பாவ்லா' காட்டுவது ஒரு மிரட்டல், உருட்டல் நாடகம் என்பதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.  இது இந்தியர்களை வாய் திறக்காமல் இருப்பதற்காகவே நடக்கின்ற நாடகம் என்று தான் சராசாரி மனிதன் நம்புகிறான்!

கடந்த கால பிரதமர் மகாதிர் ஆட்சியிலும் இந்தியர்கள் ஏமாந்தது தான் மிச்சம். இப்போதும் அதுவே நடக்கிறது. இந்தியர்கள்  பேச முடியாத வாய் திறக்க முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது! யாரும் வாய் திறக்க முடியாத ஒரு சூழல். ஆமாம் தலைவர்களாலும்  வாய் திறக்க முடியவில்லை சாதாரண மனிதர்களாலும் வாய் திறக்க முடியவில்லை. அட,  இந்தியர்கள் நலனுக்காக என்று கூறப்பட்ட  அமைச்சர் கூட எதனையும் பேச முடியாத ஒரு சூழல் உருவாகிவிட்டது! மற்ற அமைச்சர்களுக்கும் அதே நிலை தான்!

இந்தியர்களுக்கு நல்லது நடக்கும் என்று தான் கடந்த தேர்தலில்  பக்காத்தான் அரசாங்கத்திற்கு இந்தியர்கள் ஆதரவு கொடுத்தார்கள்.   ஆனால் இந்தியர்கள் நம்பியது அன்வார் இப்ராகிம் பிரதமராக வருவார் என்கிற நம்பிக்கை தான்.  ஆனால் அது நடக்கவில்லை. இன்னும் அது நடக்கவில்லை என்பது தான் வருத்ததிற்குரியது! அதுவே இந்தியர்களுக்கு இன்றளவும் சரியான அடியாக விழுந்து கொண்டிருக்கிறது!

"எனக்கும் அந்த கைதுக்கும் சம்பந்தமில்லை!" என்று பிரதமர் சொல்லும் போதே தமிழர்களின் எண்ணம் ஓட்டம் எப்படி இருக்கிறது என்பதை அவர் புரிந்து கொண்டிருக்கிறார்.  தமிழர்கள் அவரைத் தான் குற்றம் சாட்டுகிறார்கள் என்பதும் அவருக்குப் புரிகிறது.

இந்த ஒரு விஷயத்தில் மட்டும் அல்ல மற்ற விஷயங்களிலும் தனக்குச் சம்பந்தமில்லை என்பதாகத்தான் அவர் பட்டும் படாமலும் பேசி வருகிறார்.  குழந்தையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிக் கொண்டிருக்கிறார்! இதெல்லாம் அரசியல்வாதிகளுக்குக் கை வந்த கலை!

இப்போது நமக்குத் தெரிந்தது எல்லாம், வெளிப்படையாகவே, தனது பாணி அம்னோ அரசியலை  பிரதமர் மகாதிர் ஆரம்பித்துவிட்டார். அவர் பதவியை விட்டுக் கொடுப்பார் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை! அதுவும் பிரச்சனைகளை ஏற்படுத்திவிட்டுத் தான் அவர் பதவியை விட்டு இறங்குவார் என்பதும் நமக்குத் தெரிகிறது!

வேறு வழியில்லை! பொறுமை தான் காக்க வேண்டும்! நல்லதே நடக்கும் என நம்புவோம்!

Saturday 12 October 2019

"சொஸ்மா" சட்டம் ஏன்?

விடுதலைப் =புலிகளின் ஆதரவாளர்கள் என்று சொல்லி இதுவரை ஏழு பேர்களைகக் காவல்துறை கைது செய்திருக்கிறது.

விடுதலைப்புலிகள் இயக்கம்  என்றோ ஒழித்துக்கட்டப்பட்ட ஓர் இயக்கம். அதை மீண்டும் உயிருள்ள இயக்கமாக நமது காவல்துறை மக்களின் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது!

என்ன தான் காவல்துறை தங்களுக்கு ஏற்றவாறு காரணிகளை வெளியிட்டுக் கொண்டிருந்தாலும் பொது மக்களின் பார்வையில் சொல்லப்படுகின்ற காரணிகள் வேறு!

இவர்கள் கைதுக்கும் இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கிற்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதாகவே ஐயப்படுகின்றனர்.

இந்தியத் தலைவர்கள்,  பொதுவாக இந்தியர்கள்,  ஜாகிர் நாயக்கிற்கு எதிராகவே குரல் கொடுக்கின்றனர் என்பதை நாடே அறியும். காரணம் ஜாகிர்,  அளவுக்கு அதிகமாகவே இந்தியர்களையும், இந்து மதத்தையும் தாக்கிப் பேசி வருபவர். அதனாலேயே இந்தியர்கள் அவரை எதிர்க்கின்றனர். 

இந்த எதிர்ப்புத் தான், எங்கோ ஆராம்பித்து எங்கோ போய் முடிகிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.  ஜாகிர் நாயக்கிற்கு எதிராக குரல் கொடுத்ததினால், ஓங்கிக் குரல் கொடுத்த தமிழ் தலைவர்களை. விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் என்று முத்திரைக்குத்தி அவர்கள் கைது செய்யபட்டிருக்கின்றனரோ என்று சந்தேகத்தை எழுப்புகிறது. இதற்கும் அதற்கும் முடிச்சுப் போட வைக்கிறது.

ஈழத்தமிழர்களுக்காக உலகம் எங்கும் உள்ள தமிழர்கள் கண்ணீர் வடிக்கின்றனர். இரண்டு இலட்சத்திற்கு மேல் ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். அது ஓர் இனப்படுகொலை. அந்த அரசாங்கமே விடுதலைப்புலிகளை அழித்துவிட்டதாக கூறிவிட்ட பின்னர் அப்புறம் என்ன புதிதாக விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள்? 

இது இங்குள்ள தமிழர்களைப் பயங்கரவாதிகள் என்று சொல்லி  தமிழர்களைத் தலைக்குனிவு ஏற்படுத்தும் முயற்சி என்று தான் நாம் நினைக்க வேண்டியுள்ளது.  அப்படியென்றால் தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் பயங்கரவாதிகளா?  அப்படி ஓர் தோற்றத்தை ஏற்படுத்த ஏன் இவர்கள் முயற்சிக்கிறார்கள்? 

நாங்கள் ரோஹிங்ய மக்களுக்காகக் குரல் கொடுக்கிறோம். பாலஸ்தீனிய மக்களுக்காகக் குரல் கொடுக்கிறோம். இப்படி உலகம் எங்கிலும் உள்ள ஒடுக்கப்படுகின்ற மக்களுக்காகக் குரல் கொடுக்கிறோம். குரல் கொடுப்பவர்கள் என்ன பயங்கரவாதிகளா? 

ஓர் தனிப்பட்ட ஜாகிர் நாயக்கிற்காக ஓர் இனத்தையே பயங்கரவாதிகள் என்று முத்திரைக் குத்தி அவர்களை சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்வது .....ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

சட்டத்தைப் பின்பற்றலாம்; ஆனால் சொஸ்மா சட்டத்தை அல்ல.

 

Thursday 10 October 2019

அவர்கள் என்ன பயங்கரவாதிகளா?

தமீழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று சொல்லி பலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

பொதுவாகவே உலகம் எங்கும் வாழும் தமிழர்களுக்கு,   தமீழீழ மக்கள் மீது ஓர் அனுதாபம் உண்டு.  அனுதாபம் என்பது வேறு  பயங்கரவாதம் என்பதோ, தீவிரவாதம் என்பதோ வேறு. 

இவர்கள் மூலம் நாட்டுக்கு அச்சுறுத்தல் என்பதாக புக்கிட் அமான் பயங்கரவாத எதிர்ப்புக் குழுவின் த்லைவர் அயூப்கான் மைதீன் பிச்சை கூறியிருப்பது நமக்கு வியப்பை அளிக்கிறது.

                          ஜி.சாமிநாதன்                                         பி.குணசேகரன்          

எப்படியோ நாம் பயங்கரவாதத்தை ஆதரிக்க முடியாது. ஆனால் காவல்துறை இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களைக் கைது செய்திருப்பதும்  அவர்கள் நாட்டுக்கு அச்சுறுத்தல் என்பதும்  நம்மை யோசிக்க வைக்கிறது.   

இஸ்லாமிய சமயப் போதகர் ஜாகிர் நாயக் ஒரு தீவிரவாதி என்று நாடே சொன்ன போது கூட புக்கிட் அமான் இவ்வளவு தீவிரம் காட்டவில்லை என்பதையும் நாம் அறிவோம்.

அதுவும் நெகிரி செம்பிலான் சட்டமன்ற உறுப்பினர் பி.குணா கைது செய்த விதம் நமக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. முகமூடி அணிந்துகொண்டு ஏதோ ஒரு பயங்கரவாதியைக் கைது செய்வது போல - குண்டர் கும்பலைக் கைது செய்வது போல - காவல்துறையினர் நடந்து கொண்டது ஏற்றுக்கொள்ள முடியாது.  ஒரு கௌரவமிக்க சட்டமன்ற உறுப்பினரை இப்படிக் கைது செய்வதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என்பது தான் குற்றச்சாட்டே தவிர அவர் விடுதலைப்புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்தவர் அல்ல என்பதைக் காவல்துறை புரிந்து கொள்ள வேண்டும். 

விடுதலைப் புலிகள் என்பது என்றோ மறக்கப்பட்டுப் போன ஒர் இயக்கம்.  அதற்குப் புத்துயிர் கொடுப்பது என்பதெல்லாம் - அதுவும் மலேசியத் தமிழர்கள் - கொடுப்பார்கள் என்பதெல்லாம்  புக்கிட் அமான்  ஏதோ ஓரு கற்பனை உலகில் இருப்பதாகவே தோன்றுகிறது! யாரையோ குறி வைத்து அல்லது யாரையோ திருப்திப்படுத்த இந்த நாடகம் அரங்கேறுகிறதோ என்கிற சந்தேகமும் எழுகிறது!

எப்படி இருப்பினும் கவால்துறையிடமிருந்து இதுவரை சரியான விளக்கம் இல்லை.

பொறுத்திருந்து பார்ப்போம்!

Tuesday 8 October 2019

வாழ்த்துகள் மகேன்..!

வாழ்த்துகள் மகேன்!

தொடங்குவதற்கு முன் ஒரு வார்த்தை சொல்லிவிடுகிறேன்.  நான் BIG BOSS  இரசிகன் அல்ல. முதல் பருவத்திலிருந்து மூன்றாவது  பருவம் வரை நான் பார்க்கவில்லை. உண்மையைச் சொன்னால் அந்தத் தொடரை நான் வரவேற்காதவன்.  மக்களுக்குப் பயன்படாத எதனையும் நான் வரவேற்பதில்லை.

இம்முறை நம்ம ஊர்  இளைஞர் ஒருவர் வெற்றி பெற்றிருக்கிறார் என்று அறியும் போது அந்த வெற்றியை நான் வரவேற்கிறேன். 



அதுவும் நம்மைப் போன்று சராசரி குடும்பங்களிலிருந்து  ஒருவர் வெற்றி பெறுகிறார் என்றால் அது சாதாரண விஷயம் அல்ல.  ஏதோ ஒரு வகையில், குறிப்பாக பொருளாதார ரீதியில்,  அவர் உயர கை கொடுக்கிறது.  அதோடு சேர்ந்து புகழ், சினிமா பட வாய்ப்புக்கள், விளம்பர வாய்ப்புக்கள் என்று பல வரலாம்.  நல்லதே நடக்கட்டும் என வாழ்த்துவோம்!

மகேன் நல்ல பாடகர் என்று சொல்லப்படுகிறது.  நான் கேட்டதிலை.  அதனாலென்ன? இப்போதைய இளையர் பட்டாளம் உள்ளூர் பாடகர்களின் பாடல்களை விரும்பிக் கேட்பதை நான் அறிவேன்.  அது தான் தேவை.  இப்போது இளைஞர்கள் யாருடைய பாடல்களை விரும்பிக் கேட்கிறார்களோ அந்தப் பாடகர்கள் தான் வெற்றி பெறுகிறார்கள்.  இசைத் துறையிலும் அவர் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

ஆனால் அவர் எதிர்காலம் என்ன, எதனை நோக்கி அடி எடுத்து வைக்கப் போகிறார்  என்பது நமக்குத் தெரியாவிட்டாலும் அவர் இந்நேரம் ஒரு முடிவுக்கு வந்திருப்பார். கவர்ச்சிகரமான சினிமாத் துறையாக இருக்கலாம்.    அங்குப் பணமும் கொட்டலாம்,  கொட்டாமலும் போகலாம், காணாமலும் போகலாம்! 

மகேன் ஒரு நிதானமான இளைஞர்.  தடாலடியாக எதையும் செய்யமாட்டார் என நம்பலாம். தனக்கு ஏற்றது எதுவோ அதனையே அவர் தேர்ந்தெடுப்பார் என நம்பலாம். 

ஏழ்மை நிலையிலிருந்து தீடீரென ஓர் உயர்ந்த நிலைக்குப்  போகும் போது கொஞ்சம் அதிகமாகவே நிதானம் தேவை.  இது கூட இருந்தே குழி பறிக்கும் உலகம்! அனைத்தையும் வென்று  அவர் வெற்றி பெற வேண்டும்.

எது எப்படி இருப்பினும் அவரது வருங்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்!

மீண்டும், வாழ்த்துகிறேன் மகேன்!

Monday 7 October 2019

தாய்மொழிப் பள்ளிகள்

தாய்மொழிப் பள்ளிகள் பற்றியான விவாதங்கள் தொடர்ந்து, எல்லாக் காலங்களிலும், நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

அப்போதும் அம்னோ மாநாடுகளிலும் பேசப்பட்டு பேராளர்கள் பலர் கைதட்டல் வாங்கியிருக்கின்றனர்!

இப்போது இது கொஞ்சம் வித்தியாசம். வித்தியாசத்திலும் அப்போது யார் பேசினார்களோ அவர்களே இப்போதும் பேசியிருக்கின்றனர்.  அம்னோ என்னும் பெயர் தான் இல்லையே தவிர மற்றபடி அதே மேடை, அதே பேச்சு -  இது ஒரு தொடர் கதை!

இந்த மலாய் கௌரவர்களின் நோக்கம்  என்ன? எல்லாம் அரசியல் தான். டாக்டர் மகாதிர் தொடர்ந்து பதவியில் இருக்க வேண்டும், அன்வார் பிரதமர் பதவிக்கு வரக்கூடாது,  என்பது தான் அவர்களின் நோக்கம். இதற்காக மலாய் மக்களிடையே தங்களது ஆதரவைப் பெருக்கிக் கொள்ள தாய்மொழிப் பள்ளிகளை வைத்து அரசியல் நடத்துகின்றனர்!

தாய்மொழிப் பள்ளிகள் இந்த நாட்டிற்கு ஒன்றும் புதிதல்ல. அவைகள் இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.  இந்தத் தாய்மொழிப் பள்ளிகளால் யாருக்கு என்ன கேடு வந்திருக்கிறது என்று சொல்ல முடியுமா? ஒன்றும் இல்லை.!இவர்கள் சொல்லுகின்ற குற்றச்சாட்டுகள் எல்லாம் இவர்களே உருவாக்கியவை.

பல்லின மக்களிடையே ஒற்றுமை இல்லாததற்கு இந்தத் தாய்மொழிப் பள்ளிகளே காரணம் என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத குற்றச்சாட்டு.  யார் காரணம் என்பதை யாவரும் அறிவர்.  தேசிய பள்ளிகள் அனைத்தும் இஸ்லாமியப் பள்ளிகளாக மாறியதே, இன வாதம் பேசும் பள்ளிகளாக மாறியதே முழு காரணம் என்பதை மூடி மறைக்கின்றனர் இந்த கௌரவர்கள்! 

ஒன்றை நாம் கூர்ந்து கவனித்தால் ஒரு விஷயம் நமக்குப் புரியும்.  இது போன்ற, தாய்மொழிப் பள்ளிகள் இன வேற்றுமைக்குக் காரணம், என்று பேசுபவர்கள் யார்? இதுவும் வந்தேறிகள் தான் செய்கின்றனர்! பேசியவர்களைப் பாருங்கள். பெரும்பாலும் இந்தோனேசிய. தாய்லாந்து, இந்திய, பாக்கிஸ்தானிய, வங்காள வந்தேறிகள் தான் பேசுகின்றனர்!

ஒன்று நமக்குப் புரிகிறது. நாட்டு மக்களிடையே எல்லாமே எப்போதும் போலத் தான் போய்க் கொண்டிருக்கிறது.  தலைவர்களிடையே ஒற்றுமையில்லை!  பதவி ஆசை போகவில்லை!  

இவர்களின் பதவி வெறிக்காக மக்களிடையே ஒற்றுமை இல்லை என்று பேசி வருகின்றனர்! தாய்மொழிப் பள்ளிகளை வேரறுக்க நினைக்கின்றனர். எதைப் பேசினால் கைத்தட்டல் வாங்கலாம் என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசலாம் என்கிற நிலைமைக்கு தரந்தாழ்ந்து பேசுகின்றனர்.

தாய்மொழிப் பள்ளிகள் நமது உரிமை. உரிமைகள் நமக்குமுண்டு!

Sunday 6 October 2019

பதவியில் தொடர்ந்து நீடிப்பார்!

பிரதமர் துறை, துணை அமைச்சர் பொன்.வெதமூர்த்தி தொடர்ந்து தனது பதவியில் நீடிப்பார் என்பதாக பிரதமர் மகாதிர் கூறியிருக்கிறார்.

இந்த அறிவிப்பினால் அதிர்ச்சியடையவோ.மகிழ்ச்சியடையவோ.  வேதனைப்படவோ ஒன்றுமில்லை! இப்போது அவர் பதவியில் இருக்கிறார்.  உடனடியாக அவரைப் பதவியில் இருந்து நீக்குவதற்கு எந்த முகாந்தரமும் இல்லை.

மேலும் அப்படி அவர் என்ன தவறு செய்து விட்டார்? சொல்லும்படியாக ஒன்றுமில்லை.

ஆனாலும் நம்மிடையே சில கேள்விகள் உண்டு. 

பதவிக்கு வருவதற்கு முன்பிருந்த பொன்.வேதமூர்த்தி வேறு. இப்போது அமைச்சராக இருக்கும் பொன்.வேதமூர்த்தி வேறு என்பதாக நாம் பிரித்துப் பார்க்க வேண்டிய தேவை வருமோ என்று நினைக்கத் தோன்றுகிறது!

பதவிக்கு வருவதற்கு முன் இந்தியர், இந்தியர் என்று சொல்லி போராட்டங்கள் எல்லாம் செய்து, தன்னை விட்டால் இந்திய சமூகத்திற்கு நாதி இல்லை என்கிற போக்கில் போய்க் கொண்டிருந்தார்! தன்னை இந்தியர்களின் பாதுகாவலன் என்று இறுமாந்து கிடந்தார்!

ஆனால் அந்த வீராப்பு எல்லாம் எங்கே போயிற்று என்று நாம் இப்போது அவரைக் கேள்வி கேட்க வேண்டியுள்ளது! 

இன்றைய அவரது போக்கைப் பார்க்கும் போது பிரதமர் மகாதிருக்கு ஏற்ற அமைச்சராக வலம் வருகிறார்!  பிரதமர் மகாதிரை எதிர்த்துப் பேச அமைச்சரவையில் இன்றைய நிலையில் யாரும் இல்லை. இவரும் அவர்களோடு சேர்ந்து கொண்டார். அவ்வளவு தான்!

அந்த வீரம், வீராப்பு எல்லாம் பறந்தோடி விட்டன.  அவர் பிரதமர் மகாதிரால் 'காய'டிக்கப்பட்டு விட்டாரோ என்று நினைப்பதில் தவறு ஏதும் இல்லை!

மற்ற அமைச்சர்கள் நிலை வேறு. இவரது பதவி என்பது இந்தியர்களின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு பதவி.  இந்தியர்களுக்கு அவரால் எந்தப் பயனுமில்லை  என்றால் அவர் தான் அது பற்றி சிந்திக்க வேண்டும். நமது நிலை வழக்கம் போல என்று நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் இந்தியர்களின் பெயரால் பதவி வகிக்கும் போது கொஞ்சமாவது ஏதாவது செய்ய வேண்டும் என்கிற உந்துதல் அவருக்கே வர வேண்டும். ஏறகனவே மித்ரா மூலம் எந்தப் பயனும் இந்தியர்களுக்கு கிடைக்கவில்லை!  இனி மேலும் வரும் என்கிற உத்தரவாதமும் இல்லை!

பிரதமர் மகாதிருக்கு  பொன்.வேதமூர்த்தியால் எந்த பிரச்சனையும் இல்லை. இப்படி 'ஆமாஞ்சாமி'  பொட்டுக் கொண்டிருப்பவர்கள்  தான் அவருக்குத் தேவை!

ஏதோ நமது பெயரால் ஒருவர் பிழைத்துவிட்டு போகட்டும்!  ஏற்கனவே எத்தனையோ சாமிகளைப் பிழைக்க வைத்தோம் அதில் இவரும் ஒருவராக இருக்கட்டுமே!

ஆப்பிரிக்க தமிழர்!


        





                                            செனூரன் முத்துசாமி
   
 சர்வதேச கிரிக்கெட் விளையாட்டில் வெளிநாடு வாழும் தமிழர் ஒருவர் அறிமுகமாயிருக்கிறார்.  தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருக்கும்  செனூரன் முத்துசாமி தான் அவர். வயது 25 ஆகிறது. டெர்பன் நகரில் பிறந்தவர். அவரது குடும்பத்தினர் தமிழகத்தின் நாகப்பட்டிணத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். 

பல தலைமுறைகளாக தென் ஆப்பிரிக்காவில் வாழும் அவர் குடும்பத்தில் இன்னும் தமிழ் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் செனூரனுக்கு தமிழ் அந்நிய மொழியாகிவிட்டாலும் இப்போது தான் தமிழைக் கற்க ஆர்வம் காட்டி வருகிறார்.  கோயிலுக்குப் போகிற பழக்கமும் உண்டு என்கிறார்.

இந்தியா, விசாகப்பட்டணத்தில் இப்போது நடந்து கொண்டிருக்கும் கிரிக்கெட் விளையாட்டில் இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா அணியில் இவரும் களம் இறங்குகிறார்.


அவரது நாட்டின் சார்பில் அவர் களமிறங்குவது நமக்கும் மகிழ்ச்சியே. அவர் பல வெற்றிகளைப் பெற நாமும் வாழ்த்துவோம்!

                                                    

Friday 4 October 2019

சிலம்பம் அரசன்


                                                                தர்ஷ்வின் செந்தில்   

ப்போதெல்லாம் குழந்தைகள் படுத்துகின்ற பாடு இருக்கிறதே நான் சொல்ல வேண்டியதில்லை. எல்லாருமே அறிந்திருக்கிறோம்.

ஆனால் அப்படி சேட்டை பண்ணுகின்ற குழந்தைகளை வெறுத்து ஒதுக்காமல் அவர்களை ஏதோ ஒரு துறையில்- குறிப்பாக விளையாட்டுத் துறையில் - ஈடுபடுத்தி அவர்களை சாதனையாளர்களாக மாற்ற வேண்டுமே தவிர அவர்களைத் திருத்துகிறோம் என்று சொல்லி  அடி அடி என்று அடிப்பதில் யாருக்கும் புண்ணியமில்லை; ஆகப் போவதும் ஒன்றுமில்லை!

கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு பெற்றோர் அதைத்தான் செய்தனர். ஆசிரியர் செந்தில் அவரது மனைவி வித்யலட்சுமி  இவர்களது மகன் தர்ஷ்வின். தர்ஷ்வினுக்கு இப்போது நான்கு வயதாகிறது. 

வீட்டில் அவனது தொல்லை தாங்க முடியவில்லை. துரு துரு வென்று எப்போதும் இருப்பவன். அடக்க முடியவில்லை.  ஆனாலும் அவனிடம் பல திறமைகள் ஒளிந்திருப்பதை பெற்றோர்கள் கண்டனர்.

பெற்றோர்கள் பார்த்தார்கள். ஏதாவது செய்ய வேண்டுமே என்று நினைத்து அவனை சிலம்பம் கற்றுக் கொள்ள சிலம்பாட்ட பயிற்றுனரிடம் சேர்த்து விட்டனர். அவனை அங்கு சேர்க்கும் போது அவனுக்கு மூன்றரை வயது.


வ்வளவு தான்.  ஒரு சில மாதங்களிலேயே சிலம்பாட்டத்தை பிரமாதமாக கற்றுக் கொண்டான். சிறுவர் போட்டிகளில் பங்கு கொண்டான். முதலாவது போட்டி அவர்களது மாவட்டத்தில் நடைபெற்றது. முதல் பரிசு. அடுத்து ஈரோட்டில் நடைபெற்ற மாநில அளவு போட்டியில் முதல் பரிசு.  அடுத்து தேசிய ரீதியான போட்டி கோவாவில் நடைபெற்றது. அங்கும் முதல் பரிசு. 

அடுத்து சேலம் நகரில்  உலக அளவில் நடைபெற்ற போட்டியிலும் முதல் பரிசு. அத்தோடு தங்கத்தையும் வென்றான். இப்போது அவனது சாதனை  INDIAN BOOK OF RECORD என்கிற சாதனைப் புத்தகத்திலும் இடம் பெறுவதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

குழந்தைகளின் சேட்டைகளைக் கண்டு முணுமுணுப்பதை  விட அவர்களைச் சரியான வழியில் கொண்டு செல்வது தான் பெற்றோர்களின் கடமை. அதனைத் தான் தர்ஷ்வினின் பெற்றோர்கள் செய்திருக்கின்றனர்.

வருங்காலங்களில் தர்ஷ்வின் பல தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைக்க வாழ்த்துவோம்!

Thursday 3 October 2019

அக்னி சுகுமார் மறைந்தார்

அக்கினி சுகுமார் மறைந்தார் என்னும் செய்தி உண்மையில் ஓர் அதிர்ச்சியான செய்தி. 

அவர் நல்ல பத்திரிக்கையாளர். நல்ல கவிஞர். நல்ல படைப்பாளர் என்று அவரைப் பற்றியான செய்திகள் கூறுகின்றன. நானும் அறிவேன்.

ஆனால் அவரைப்பற்றி - ஒன்றே ஒன்று மட்டும் - என் நினவில் நிற்கிறது. நான் கவிதைகள் படிப்பதோ, கதைகள் படிப்பதோ மிகவும் குறைவு. அது போல அவர் படைத்தவை எதனையும் நான் அதிகம் படிக்கவில்லை.

      நன்றி: செல்லியல்

ஆனாவ் அவர் நண்பன் பத்திரிக்கையில் எழுதிய தொடர் ஒன்றை என்னால் இன்றளவும் மறக்க முடியவில்லை. அது பயணக் கட்டுரை.

யாழ்ப்பாணத்திற்கு சென்று அவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்த அந்தக் கட்டுரை என்னால் மறக்க முடியாத ஒரு கட்டுரை. அதன் தலைப்பு எனக்கு மறந்து போனது. அது புத்தகமாக வராதா என்று இன்றளவும் ஓர் ஏக்கம் உண்டு. 

ஆனால் "வணக்கம் மலேசியா"  வில் அவரைப் பற்றியான செய்தியைப் படித்த போது நான் மறந்து போன அந்தக் கட்டுரையின் தலைப்பு "மண்ணே உயிரே"  என்று அறிகிறேன்.  அது புத்தகமாகவும் வெளி வந்திருக்கிறது. நான் தான் அறியவில்லை. அதை விட நான் வழக்கமாக புத்தகங்கள் வாங்கும் இடத்தில் மலேசிய படைப்பாளர்களின் புத்தகங்கள் விற்பது மிகவும் குறைவு. அதனால் தான் அந்தப் புத்தகம் என் கண்ணில் படவில்லை.

அந்த ஒரு பயணக் கட்டுரைக்காகவே அக்கினி சுகுமார் என்னால் மறக்க முடியாத மனிதராகி விட்டார். நான் கட்டுரைகளை வாசிப்பவன், கட்டுரைகளை நேசிப்பவன்.   அந்த வகையில் "மண்ணே உயிரே"  கட்டுரை என்னுள் ஒரு பெரிய தாக்கத்தையே ஏற்படுத்தியிருக்கிறது. இப்போதும் கூட அவருடைய கட்டுரைகளைக் கண்டால் நான் படிப்பதுண்டு. 

அவருடைய மரணம் தமிழ் எழுத்துலகிற்கு மாபெரும் இழப்பு.  அவருக்கு வயது 64 தான் என்கிற போது ......ஒன்றும் சொல்ல முடியவில்லை.

தலைவனை இழந்து  வாடும் அவரது குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

Tuesday 1 October 2019

கேள்வி - பதில் (111)

கேள்வி

இந்திய பிரதமர் மோடி ச்மீப காலமாக தமிழைப் பற்றி உயர்வாகப் பேசுகிறாரே!

பதில்

மோடி,  இந்தியாவின் பிரதமர். அவர் குள்ள நரி தந்திரம் கொண்ட அரசியல்வாதி. தனது கட்சி தமிழ் நாட்டில் காலூன்ற  முடியவில்லையே என்கிற ஏக்கம் அவருக்கு உண்டு. ஊன்றவும் முடியாது என்று உறுதியாகவும் தெரிகிறது. 

அதனால் தமிழக பா.ஜ. க. வினரின் ஆலோசனைக் கேட்ப கொஞ்சம் அதிகமகாவே தமிழைப் பற்றி எடுத்து விடுகிறார்!

ஒரு பக்கம் தமிழின் உயர்வைப் பற்றி பேசுவதும் இன்னொரு பக்கம் தமிழை அழிக்கின்ற வேலை செய்வதும், இந்தி, சமஸ்கிருதம் படிக்க கோடிக்கணக்கில் பண ஒதுக்கீடு செய்வதும் - இவைகள் எல்லாம் அவர் செய்து வருகின்ற ஏமாற்று வேலைகள்!

தமிழை மட்டும் அழிக்கும் முயற்சியில் அவர் இறங்கவில்லை, தமிழ் நாட்டையும் அழிக்கும் முயற்சியில் அவர் இறங்கியிருக்கிறார்.  தமிழ் அடையாளங்களை அழிக்கிறார். தமிழர் அடையாளங்களை அழிக்கிறார். இவரால் தமிழ் நாட்டுக்கு, தமிழருக்கு, தமிழ் மொழிக்கு எந்த நல்லதும் நடக்கவில்லை.  அதிகம் கெடுதலே நடந்து கொண்டு வருகிறது.  அவர் செய்வதெல்லாம் நாடகமாகவே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்! 

இந்தி திணிப்பு, ஹைட்ரோ கார்பன், நீட் தேர்வு இவை அனைத்தும் தமிழர்களை அழிக்கும் ,முயற்சிகள். இன்று தமிழகம், தமிழர் அல்லாத,  மேட்டுக்குடி மக்களின் கட்டுப்பாட்டில் தான் இருந்து வருகிறது. இவர்களுக்குத் தமிழர்கள் மேல் அல்லது தமிழர் நாட்டின் மேல் எந்த வித பற்றும் பசமும் இல்லாதவர்கள்.  தமிழன் எக்கேடு கெட்டால் நமக்கு என்ன என்று யோசிப்பவர்கள்!

இந்த உயர்குடி மக்களின் ஆலோசனையைக் கேட்டுத் தான் பிரதமர் மோடி இயங்கிக் கொண்டிருக்கிறார். 

த்மிழின் தொன்மையைப் பற்றி பேசுபவர் இன்று தமிழக மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத பல விஷயங்களைக் கொண்டு வந்தவர் யார்? நீட் தெர்வு வேண்டாம் என்கிறார்கள். இந்தி வேண்டாம் என்கிறார்கள். சமஸ்கிருதம் வேண்டாம் என்கிறார்கள்.  ஹைட்ரோ கார்பன் திட்டம் வேண்டாம் என்கிறார்கள்.ஆனால் இவை அனைத்தையும் கொண்டு வந்தவர் பிரதமர் மோடி.

ஒரு பக்கம் தமிழர் ஒழிப்பு வேலை. இன்னொரு பக்கம் தமிழின் பெருமை பேசுதல் என்பதெல்லாம் தமிழர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத  விஷயங்கள்.

பிரதமர் மோடி த்மிழர்களை ஒழித்துக்கட்டும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் என்பதில் ஐயமில்லை!