Monday, 30 May 2016

ஒரு குடும்பத்திற்கு ஒரு வர்த்தகர்!


ஒரு குடும்பத்திற்கு ஒரு வர்த்தகர் என்னும் உயரிய நோக்கத்தை முன்னெடுத்திருக்கிறது எண்ட்ரிகோஸ் நிறுவனம்.

அதன் நிறுவனர் எஸ்.கே.சுந்தரம் அவர்களுக்கு முதலில் நமது வாழ்த்துக்கள். காரணம் தொழிற்துறையில் வேற்றி பெற்றவர்கள் தமது  அனுபவங்களையும் அதன் ஏற்றத்தாழ்வுகளையும்  தமது இனத்தாரோடு பகிர்ந்து கொள்ளுவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. மீண்டும் அவருக்கு நமது பாராட்டுக்கள்!

எண்ரிகோஸ் நிறுவனம் தொடங்கபட்டு 25 ஆண்டுகள் ஆகின்றன. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும்  அவர்களது பால்மாவு, நெய், ஐடாப் டீ, சோயா மேட், சுராபி மசாலா பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்திய இளைஞர்கள் பொருளாதாரத்தில் உயர வேண்டும், ஊக்கப்படுத்த வேண்டும்  என்னும் உயரிய நோக்கத்தோடு நாடு முழுவதும் வர்த்தக பயணத்தை மேற்கொள்ளுகிறது எண்ரிகோஸ் நிறுவனம்.

ஒவ்வொரு ஊரிலும் நடைபெரும் வியாபாரக் கருத்தரங்கில் இளைஞர்கள் வியாபாரத்தில் ஈடுபட ஊக்குவிக்கப்படுவர்.  இந்த வியாபாரக் கருத்தரங்கில் கலந்து கொள்ளும் இளைஞர்களில் 50 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சனி. ஞாயிற்றுக் கிழமைகளில் பயிற்சி அளிக்கப்படும் என்கிறார் திரு. சுந்தரம்.

திரு.சுந்தரம் அவர்கள் நல்லதொரு முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். வருகிற ஜூன் மாதம் முதல்,  4 (நான்கு) மாதங்களுக்கு நாடு முழுவதும் 25 நகரங்களில் அவரது வர்த்தகப் பயணம் நடைபெறவுள்ளது. முதல் நிகழ்வு ஜூன் மாதம் 4-ம் தேதி டான்ஸ்ரீ சோமா அரங்கில் காலை 8.30 முதல் மாலை 5.30 வரை நடைபெறும்.

18 வயதிற்கு மேற்பட்ட,  வியாபாரத்தில் ஆர்வமுள்ள  இளைஞர்கள், வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், வியாபாரத்தை மேம்படுத்த விரும்பவர்கள் அனைவரும் இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ளலாம்.

நுழைவு இலவசம். ஆனால் முன்பதிவு அவசியம். முன்பதிவு செய்வோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

எண்ரிகோஸின் இந்த வர்த்தகப் பயணத்திற்கு மலேசிய நண்பன் நாள் இதழும் மின்னல் எப் எம்மும் பிரதான ஆதரவாளர்கள். அதே சமயத்தில் நமது ஆதரவும் சேர்ந்தால் ஒரு எழுச்சிமிக்க வர்த்தக சமூகத்தை நம்மால் உருவாக்க முடியும்.
மேல் விவரங்களுக்கு இவர்களைத் தொடர்பு கொள்க: மதன்     017-4488556
கார்த்திக் 014-3495900.

நன்றி: நண்பன்

இப்படியும் ஒரு வழியிருக்கு! (2)


பத்தாங்காலி தமிழ்ப்பள்ளியில் பள்ளி மாணவிகளிடம் காலித்தனமாக நடந்து கொண்ட மலாய்மொழி ஆசிரியர்  என்ன  ஆனார்?

வேறு தமிழ்ப்பள்ளிக்கும் அவர் மாற்றப்படவில்லை. ஆனால் மாநிலக்கல்வி இலாகாவிற்கு அவர் பாதுகாப்பாக மாற்றப் பட்டிருக்கிறார்! அதுவும் தற்காலிகமே!  வேறு தமிழ்ப்பள்ளி தோதாக அமையும் வரை அவர் அங்குப் பணிபுரிவார். அவர் மேல் எந்த நடவடிக்கையும் கல்வி அமைச்சு இதுவரை  எடுக்கவில்லை!

இதன்  தொடர்பில் மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் முதன்மை அமைப்பாளர் பாஸ்கரன் கூறும் போது தனக்கும் இந்த விவகாரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனக் கைவிரித்துவிட்டதாக செய்தி ஒன்று கூறுகின்றது. அதே சமயத்தில் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் டேனியல் அமலதாஸ் - மேலதிகாரிகளின் உத்தரவின்றி கருத்துரைக்க முடியாது  - என்று அவரும் பட்டும் படாமலும் பேசியதாக மேலும் அந்தச் செய்தி கூறுகின்றது. துணைக் கல்வி அமைச்சர் கமலநாதன் தனது அம்னோ எஜமானர்கள்  வாய்த் திறக்கச் சொன்னால் தான் வாய் திறப்பார்! ம.இ.கா. தலைவருக்கும் அதே நிலை  தான்! குனிந்த தலை இன்னும் நிமிரவில்லை!

இதனிடையே சமூக ஆர்வலர்கள் பலர் அந்த மலாய்மொழி ஆசிரியர் மீது  பெற்றோர்கள் காவல்துறையனிரிடம் புகார் செய்ய வேண்டும் என வற்புறுத்துகின்றனர்.  எந்தப்புகாரும்  செய்யாமலேயே காவல்துறையினர் பல பிரச்சனைகளைக் கையில் எடுத்திருக்கின்றனரே, இதனை மட்டும் ஏன் எடுக்கவில்லை,  என்று கேட்பவர்களும் உண்டு!

புகார் செய்வது என்பது சாதாரணமாக இருக்கலாம். ஆனால் அதன் விளைவுகளைப் பார்க்க வேண்டும். இது இந்தியர் சம்பந்தப்பட்ட விஷயம். அதிலும் தமிழ்ப்பள்ளி மாணவிகள். காவல்துறையினர் அந்த ஆசிரியரை விசாரிக்கப் போவதில்லை. அந்த மாணவிகளை விசாரிப்பதில் தான் கூடுதல் கவனம் செலுத்துவர். அவர்கள் பெண் போலிஸை வைத்து விசாரிக்கப் போவதில்லை. காவல்துறையினர் அந்த மாணவிகளைக் கேலி கிண்டல்களோடு தான் அவர்கள் விசாரணை நடத்துவர். ஆசிரியரை அவர்களைத் தட்டிக் கொடுப்பர்! ஆக, இந்த நிலையில் பெற்றோர்கள் புகார் செய்வது அவர்களே தங்கள் தலையில் மண்ணை வாரிப்போட்ட கதை தான்!

ஒரு விஷயம் நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு மலாய் ஆசிரியர் என்பதற்காக எத்தனை தில்லுமுல்லு வேலைகள் மேலிருந்து கீழ் மட்டம் வரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, பாருங்கள்!

கல்வி அமைச்சின் தலையீடு, மாநிலக் கல்வி இலாக்காவின் தலையீடு, தமிழ் அமைச்சர்கள் வாய் திறக்காமல் இருக்கத்  தலையீடு, தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பார்கள் தலையிடாமல் இருக்கத் தலையீடு, பள்ளித் தலமையாசிரியர் தலையிடாமல் இருக்கத் தலையீடு,பெற்றோர் ஆசிரியர் சங்கம் தலையிடாமல் இருக்கத் தலையீடு - அடாடா! - ஒரு கயவனைத் தண்டிக்காமல் இருக்க எத்தனை கட்டுப்கோப்பாக  வேலை செய்கிறார்கள்! ஒரு நல்ல காரியத்திற்கு இப்படி கட்டுக்கோப்புடன் வேலை செய்தால் நாம் மகிழ்ச்சி அடையலாம்.

ஓர் ஆசிரியருக்கு இவ்வளவு அடைக்கலம் கொடுக்கும் அதிகாரிகள் ஒரு விஷயத்தை மறந்துவிட்டார்கள். நாளை அவர்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு இது நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும்  இல்லை! இப்போது அவர்கள் தமிழ்ப்பள்ளி மாணவிகள் என்பதால் மிகவும் அலட்சியும் காட்டுவதும், கேலியும் கிண்டலாகப் பிரச்சனையை அணுகுவதும் அவர்களுக்கு அது ஒரு தற்காலிக மகிழ்ச்சியை அளிக்கலாம். நாளை அதுவே அவர்களுக்கு ஒரு  பெரிய தண்டனையாக மாறும் என்பதை அவர்கள் எப்போதும் மனதில் இறுத்திக்கொள்ள வேண்டும்!

இதனைக் கல்வி அமைச்சினர் ஒரு விளையாட்டாகக் கருதுவதாகவே  நமக்குத் தோன்றுகிறது. பள்ளிகளில் சமயப் பாடங்கள் தினம் தினம் போதித்தாலும் இது போன்ற நிகழ்ச்சிகளும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அதுவும் ஆசிரியர்களே தவறான நடத்தை உள்ளவர்களாக இருப்பதை பார்க்கும் போது சமயப்பாடங்களும் ஒரு கண்துடைப்பு தானோ என்னவோ,  தெரியவில்லை!

இந்த மலாய் ஆசிரியரின் பிரச்சனை ஒரு முடிவுக்குக் கொண்டு வரபட்டுவிட்டதாக நான் நினைக்கவில்லை. எவ்வளவு தான் ஓர் ஆசிரியரின் தவறான செய்கைகளை மூடி மறைக்க முயன்றாலும் அது ஒரு நாள் வெடிக்கத்தான் செய்யும்! இதுவே ஒரு சீனப்பள்ளியில் நடந்திருந்தால் இந்நேரம் அந்த ஆசிரியர் எங்கு இருப்பார் என்பதை நம்மால்  ஊகிக்க முடியவில்லை! அனைத்து சீன மக்களுமே பொங்கி எழுந்திருப்பார்கள்! தமிழ்ப்பள்ளி என்பதால் அவருக்கு இப்போது  நல்ல நேரம்!

பொறுத்திருப்போம்; உண்மை உறங்குவதில்லை!Saturday, 28 May 2016

இந்தோனேசிய பெண்களா..? ஓர் எச்சரிக்கை!


நம் நாட்டுக்கு வெளி நாடுகளிலிருந்து வேலை செய்ய வருபவர்கள் ஏராளம்! ஏராளம்! அதே போல வெளி நாடுகளிலிருந்து வேலை செய்ய வரும் பெண்களும் கணிசமான அளவில்  இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக இந்தோனேசியப் பெண்களே முதலிடம் வகிக்கின்றனர்.

இங்கு வருகின்ற இந்தோனேசியப் பெண்கள் பலர் இங்குள்ள ஆண்களை விரும்பித் திருமணம் செய்வது என்பது ஒரளவு நடந்து கொண்டு தான் இருக்கிறது. தவறு ஏதும் இல்லை! அது அவர்களது உரிமை.

சில அனுபவசாலிகள்  தருகின்ற சில தகவல்கள் நமக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. இந்த இந்தோனேசியப் பெண்கள் பலர் வறுமையானப் பின்னணியிலிருந்து வருபவர்கள். அவர்கள் தங்களது குடும்பங்களுக்காக உழைக்க வந்தவர்கள். அவர்கள் குடும்பத்தின் முன்னேற்றம் அவர்களுக்கு முக்கியம்.

இங்கு அவர்கள் திருமணம் செய்து கொண்டாலும் கூட அவர்கள் அவர்களின் குடும்பத்திற்குச் செய்ய வேண்டிய  கடமைகளை மறப்பதில்லை. மறக்கவும் முடியாது! மறுக்கவும் முடியாது!

ஆனால் கொடுக்கப்படுகின்ற செய்தி என்னவென்றால் இவர்கள் தங்களது மாந்திரீகத்தின் மூலம் அவர்களின் கணவர்களை அடிமையாக்கி இருவரும் சம்பாதிக்கும் பணத்தை எடுத்து அவர்கள் இந்தோனேசியாவிற்கு அனுப்பி விடுகிறார்களாம்! கணவரோ ஏதோ ஒப்புக்குச் சப்பாணி யாக - பணம் பறிக்கும் இயந்திரமாக - பயன்படுத்திவிட்டு கணவர்களை 'அம்போ' என்று விட்டுவிட்டுப் போய் விடுகிறார்களாம்! அவர்கள் முஸ்லிம்கள் என்பதால் இங்கே விவாரகத்துச் செய்துவிட்டு இந்தோனேசியா போய் புதிய வாழ்க்கையைத் தொடங்கிவிடுகிறார்கள்!

 இது பெரும்பாலும் இந்தோனேசிய முஸ்லிம் பெண்கள் மட்டுமே கடைப்பிடிக்கும் ஒரு நடைமுறை.  ஆனால் கிறித்துவ, இந்து சமய இந்தோனேசியப் பெண்களிடம் இது போன்ற நடைமுறை இல்லை. காரணம் விவாவகரத்து என்பது அவர்களிடம் இல்லை!

அனைத்து இந்தோனேசியப் பெண்களும் இப்படித்தான் என்று சொல்ல வரவில்லை.  ஆனால் எச்சரிக்கையாயிருப்பது நல்லது அல்லவா!

Friday, 27 May 2016

பணம் பத்தும் செய்யும்!


பணம் பத்தும் செய்யும்! இது அனுபவ மொழி!

யாருக்குத்தான் தெரியாது? பணம் பத்தும் மட்டுமா செய்யும்? அடாடா! எத்தனையோ செய்யும்! எல்லாமே செய்யும்!  என்னன்னவோ செய்யும்!

பணம் பாதாளம் மட்டும் பாயும் என்று சும்மாவா சொன்னார்கள்! எங்கும் பாயும்! எதிலும் பாயும்!

நம் நாட்டில் நமது தமிழ் மொழி பல இடங்களில் புறக்கணிக்கப் படுகின்றது. அதே சமயத்தில் சீன மொழிக்கு எந்த பாதிப்பும் எற்படவில்லை.. காரணம் என்ன? தமிழ்,  பணம் இல்லதவர்களின் மொழி. சீனம்  பணம் உள்ளவர்களின் மொழி.

தேசிய மொழி பள்ளிகளில் தமிழ் மாணவர்கள் இருக்கிறார்கள். ஆனல் தமிழ் மொழி இல்லை. சீன மாணவர்கள் இருக்கிறார்கள். சீன மொழி உண்டு.

அது தான் பணம் பத்தும் செய்யும் என்பது. இப்படிப் பத்தும் செய்யும் பணத்தை நாம் அலட்சியம் செய்ய முடியுமா? ஆனால் நாம் அலட்சியம் செய்கிறோம். குடித்தே பணத்தை அழிக்கத் தயாராய் இருக்கிறோமே தவிர பணம் நமக்கு வலிமையான ஆயுதம் என்பதை நாம் மறந்து விடுகிறோம்.

சொந்த வீடு நமக்குத் தேவை. ஆனால் நாம்  வாங்கிய கடனை வங்கியில் கட்டிய  பின்னரே அது நமது வீடு. அது வரையில் அந்த  வீடு வங்கியுனைடய வீடு. அதை நாம் மறந்து விடக்கூடாது!

சொந்தக் கார் என்பது நமது தேவைக்குத்தான். அது சொத்து அல்ல வீட்டின் மதிப்பு ஏறும். காரின் மதிப்புக்  குறையும்.  வீடும் சரி, காரும் சரி, நமது மாதாந்திர தவணையைக் கட்டாவிட்டால் இரண்டும் நம்மை விட்டுப் பறந்து போகும். அவைகள் வங்கியினரின் சொத்துக்கள்!

எல்லாம் பணம் தான்! ஏ.டி.எம். (ATM) -ல் தமிழைக் காணோம் என்று அடிக்கடித் தேடிக் கொண்டிருக்கிறோம். பணம் இல்லாதவனை எவன் மதிப்பான்? தமிழர் சமுகம்,  பொருளாதார ரீதியில் வலிமையான சமூகமாக இல்லாவிட்டால் இந்தச் சமூகம் ஒரு தீண்டத் தகாத  சமூகமாகிவிடும்.

நான் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பதெல்லாம் பணத்தின் முன் அடிபட்டுப் போகும். பணம் உள்ளவன் தான் மதிக்கப்ப்டுபவன். பணம் இல்லாதவன் மிதிக்கப்படுபவன். அதைத்தான் நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.

பணம் பத்தும் செய்யும்; பல கோடியும் செய்யும். அது நம் கையில் இருக்க வேண்டும்; நமது பையில் இருக்க வேண்டும். வங்கியில் வைப்புத்தொகையாக இருக்க வேண்டும். நிறுவனங்களில் நித்தியமாக இருக்க வேண்டும். நிதி மையங்களில் பங்குகளாக மிளிர வேண்டும்.

பத்தும் செய்ய பணத்தை பத்திரமாகப் பாதுகாப்போம்! பத்திரப்படுத்தி வைப்போம்! பரவலாகப் பயன் படுத்துவோம்! பாதுகாப்பாக வாழ்வோம்!

பத்தும் செய்யும் பணமாக இருக்க வேண்டுமானால் அது நமது பணமாக இருக்க வேண்டும்!

பணமே பலம்! பத்தும் செய்யும் பணம்  நமக்குப் பலமே!


Thursday, 26 May 2016

இப்படியும் ஒரு வழியிருக்கு...!


தேசியப் பள்ளியில் ஒர் மலாய் ஆசிரியர் மாணவிகளிடம் விஷமத்தனம் பண்ணினால் அந்த ஆசிரியரை என்ன செய்வார்கள்?

அந்த ஆசிரியர் அங்கேயே  இருந்தால் அந்தப் பள்ளியில் உள்ள மலாய்க்காரப் பெற்றோர்கள் அதனை ஒரு அரசியல் பிரச்சனையாக்கி பின்னர் அதனையே தேர்தல் பிராச்சாரத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளுவார்கள்! அந்த ஆசிரியர் தொடர்ந்து அந்தப் பள்ளியிலேயே இருந்தால் - அல்லது பிரச்சனை பெரிதாக்கப்பட்டால் -  அந்தப் பள்ளியின் பெயெர் கெடும்; பெற்றோர்கள் பிள்ளைகளை அந்தப் பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள்! பெற்றோர்கள் பள்ளியைப் புறக்கணிக்க வேண்டி வரும்!

இதனையெல்லாம் தவிர்க்க கல்வி அமைச்சு ஒரு புதிய வழிமுறையைக் கண்டுப்பிடீத்திருக்கிறது. மிகவும் சுலபமான முறை! பள்ளியின் பெயரும் கெடாது! பிரச்சனையும் தணிந்து விடும்!

சம்பந்தப்பட்ட அந்த ஆசிரியர் தமிழ்ப்பள்ளிக்கு மாற்றப்படுவார்! இதுவே மிகச்சிறந்த வழி என கல்வி அமைச்சு கண்டுபிடித்திருக்கிறது!

அப்படி என்ன சிறந்த வழி? தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பவதால் அவர் திருந்திவிடுவாரா அல்லது திருத்தப்படுவாரா? இரண்டுமே இல்லை! அந்த ஆசிரியர் தொடர்ந்து தனது லீலைகளைத் தொடரத்தான் செய்வார்! ஆனால் இங்கு கேட்கத்தான் ஆளில்லை! பெற்றோர்கள் தலைமை ஆசிரியரிடம் புகார் செய்வார்கள். பின்னர் பெற்றோர் ஆசிரியர் சங்கம் தலையிடும்.தலைமை ஆசிரியர் தலையைச் சொறிந்து கொண்டு கல்வி அமைச்சை கை காட்டுவார்! அதற்கு மேல் அவரால் ஒன்னும் செய்ய முடியாது! அவர் தலையிட்டால் அவரை வேறு ஒரு பள்ளிக்கு மாற்றிவிடுவார்கள்! ஏன் அந்த வம்பு?

கல்வி அமைச்சிடம் புகார் செய்யும் போது அவர்கள் தலையாட்டுவதோடு சரி! எந்த நடவடிக்கையும் எடுக்க  மாட்டார்கள்! காரணம்,  காரணர்களே அவர்கள் தானே!  காவல்துறைக்கும் புகார் செய்ய பெற்றோர்கள் பயப்படுகிறார்கள். அதனால் தங்கள் பிள்ளைகளுக்கு ஏதேனும் பாதிப்பு வரும் என்பது அவர்களது பயம்!

அவர் ஒரு  மலாய் ஆசிரியர் என்னும் ஒரே காரணத்திற்காக மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை அனவருமே அவருக்குப் பயப்பட வேண்டியிருக்கிறது!

 பெற்றோர்கள் மிகவும் நல்லவர்கள். எந்த வம்புதும்புக்கும் போகாதவர்கள்! ஒன்று செய்யலாம். அவர்கள் இருக்கும் இடத்திலுள்ள மலாய்க்கார சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற  உறுப்பினரை அழைத்து இந்தப் பிரச்சனைக்கு ஒரு
 தீர்வு காணலாம்.

அதுவே வழி! முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்! இன்னொரு வழியும் உண்டு. ஒரு தமிழ் ஆசிரியர் இப்படி செய்திருந்தால் என்ன நடவடிக்கை எடுப்பீர்களோ அதனைச் செய்யலாம்!

Wednesday, 25 May 2016

ஒன்றரைக்கை மனிதர்!


ஊனமாக உள்ளவர்களை நான் கேலி செய்வதில்லை.  அதை நான் வெறுக்கிறேன்.

ஆனால் நான் சொல்லுகின்ற மனிதர் கொஞ்சம்  மாறுபட்ட மனிதர். அவருக்கு ஒரு கை பாதிதான் உள்ளது. ஏதோ விபத்தில் கையை இழந்திருக்கலாம். உண்மைத் தெரியவில்லை.

அவர் பார்ப்பதற்குச் சராசரி மனிதர் தான். ஏதோ தமிழ்ச் சினிமாவில் வருகிற வில்லன் மாதிரித் தோற்றம். எப்போதும் புன்னகை! இளம் வயதினர். அவரா இப்படி?

அப்படி இவரிடம் என்னதான் விசேஷம்? அவர் பிச்சை  எடுக்கிறார். அது தான் கொஞ்சம் நெருடல். ஒரு கை மனிதர், ஒன்றரைக் கை மனிதர்,  இரண்டு கைகளும் இல்லாத மனிதர் என்று நாம் பார்த்திருக்கிறோம். அவர்கள்  ஏதோ ஒரு வகையில் தங்கள் பிழப்பை நடத்த வழி தேடிக் கொள்கின்றனர்.

அரசாங்கமும் இவர்களுக்குத் தங்கள் பிழைப்பை நடத்த பல பயிற்சிகளைக் கொடுக்கின்றனர். ஆனால் இவரோ தனது பாதிக் கையை அசைத்து அசைத்து மக்களிடம் காட்டி ஒர் அனுதாபத்தைத் தேட முயற்சி செய்கிறார். உண்மையைச் சொன்னால் யாரும் அவருக்கு அனுதாபம் காட்டுவதாகத் தெரியவில்லை. ஆனாலும் பிச்சை என்று வரும்போது நமது பெருந்தன்மை யும் கொஞ்சம் சேர்ந்து கொள்ளுகிறது! அதனால் அவர் தப்பித்துக் கொள்ளுகிறார்!

இங்கே முக்கியமாக சிந்திக்க வேண்டிய செய்தி இன்னொன்றும் உண்டு. இவர் பகலில் பிச்சைக்கார வேஷமும் இரவில் குடிகார வேஷமும் போடுபவரோ என்னும் எண்ணமும் தோன்றுகிறது!

ஒருவர் குடிகாரர் என்னும் பெயர் எடுத்துவிட்டால் அப்புறம் அவரை மாற்றுவது மிகவும் கடினம்! இவரோ இளைஞர்! இளைஞர் என்றால் அவர் பிச்சை எடுக்கத் தயங்குவார். இவர் தயக்கமில்லாமல் கையை நீட்டுகிறார் என்றால் அவர் நிரந்தர குடிகாரராக இருக்க வேண்டும். எதனையும் சட்டைப் பண்ணாதவராக இருக்க வேண்டும்!

இவரைப் பார்க்கும் போது நமக்கும் வருத்தமாகத் தான் இருக்கிறது. நல்ல திடகாத்திரமான மனிதர். ஒரு கை பாதி என்பதை வைத்து - அதனையே சாக்காக வைத்து - பிச்சை எடுக்கிறாரே, என்பது வருத்தம் தான்.

அரசாங்கம் கொடுக்கின்ற பயிற்சிகளை வைத்துக் கொண்டு நல்ல கௌரவமான  வாழ்க்கை வாழலாம்.

பிச்சை எடுப்பதையே தனது தலை எழுத்தாக மாற்றிக் கொண்டாரே என்பது தான் நமது வருத்தமே!

Tuesday, 24 May 2016

உணவு குப்பை அல்ல!


சில செய்திகளை நாம் படிக்கும் போது நமது மனம் கொதிக்கிறது. இந்தப் பாவி ஜென்மங்களை ஏன் இறைவன் படைத்தனோ என்று கேட்கத் தோன்றுகிறது.

உணவுகளை வீணடிப்பதில் நம் நாட்டைப் போல வேறு ஏதேனும் நாடுகள் உண்டா என்று எனக்குத் தெரியவில்லை.அவ்வளவு வீணடிப்புக்கள்! அவ்வளவு அலட்சியங்கள்! அவ்வளவு எகத்தாளங்கள்! உணவு என்றால் ஏதோ குப்பை என நினைக்கும் மனோபாவம்!

சில நாட்களுக்கு முன்னர் கூட ஒரு செய்தி வெளியாயிற்று. ஒரு இந்தியத் தாய் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் தனது குழைந்தைகளுக்கு வெறும் மேகி மீ யைத் (Maggie Noodles) தினசரி சாப்பாடாகக் கொடுப்பதாக அந்தச் செய்தி கூறிற்று. இன்னும் எத்தனையோ குடும்பங்கள் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் தவிக்கின்றன.

ஆனால் நாம் ஒவ்வொரு நாளும் 15,000 டன் உணவுகளை வீணடிக்கிறோம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதில் என்ன மிகவும் வருந்தத்தக்க ஒரு செய்தி என்றால் இந்த உணவுகளில் 3,000 டன் உணவுகள் சாப்பிடக் தகுதியான உணவுகளாம்;  சாப்பிடத்தகுந்த உணவுகளாம்!

நாட்டில் விளைகின்ற 28.4 விழுக்காடு அரிசி அத்தனையும் குப்பைகளுக்குப் போகிறதாம்! அப்படி ஏன் நடக்கிறது என்று புரிந்து கொள்ள யாரும் எந்த முயற்சியும் செய்யவில்லை! ஒரு வேளை தரமற்ற அரிசியா? புரியவில்லை! ஒரு பக்கம் உள் நாட்டு அரிசியை ஒரங்கட்டிவிட்டு வெளி நாட்டு அரிசியை வாங்க ஊக்குவிக்கப்படுகிறதா? கமிஷன் வாங்குபவர்களுக்குத் தான் வெளிச்சம்!

பழங்களும் காய்கறிகளும் 20 பதிலிருந்து 50 விழுக்காடு வரை குப்பைகளுக்குப் போகிறதாம்!

இதோ! ரம்லான் மாதம் தொடங்குகிறது. வந்து விட்டது பெரும் ஆபத்து! நமது குப்பைத்தொட்டிகளில் கணக்கற்ற வகைகளில் எதுவும் சாப்பிடாமல் அப்படியே தூக்கியெறியப்பட்ட  உணவு பொட்டலங்களைப் பார்க்கலாம்! நமது நாட்டைப் பொருத்தவரை நோன்பு மாதம் தான் உணவுப் பொருள்களை வீணடிக்கும் மாதம்! நோன்பைக் கடைபிடிப்பதும் அதன் பின்னர் உணவுப் பொருள்களை கணக்கில்லாமல் வாங்குவதும் அதன் பின்னர் சாப்பிட முடியாமல் குப்பையில் தூக்கி எறிவதும் ...அடா ...அடா..! காணக் கண்கள் கோடிவேண்டும்!

உணவு உண்பதற்குத்தான்! குப்பைகளுக்கு அல்ல! குப்பைத் தொட்டிகளில் வீசுவதற்கு  முன் ஆயிரம் முறை யோசியுங்கள்!

உணவு குப்பைகள் அல்ல!


கேள்வி - பதில் (15)


கேள்வி

ஜெயலலிதா முதல் கையொப்பம் இட்ட கோப்புகள் கொஞ்சம் நம்பிக்கை தெரிவதாக இருக்கிறதே!

பதில்

ஆமாம்! வேளாண் பெருமக்களின் கடன் தள்ளுபடி எதிர்பார்க்கப் பட்டதே. .அதை நாம் வரவேற்கிறோம் என்றாலும் அவர்களைத்  தொடர்ந்து கடனாயாளியாக வைத்திருப்பது யாருடைய குற்றம்? அதற்கு ஆட்சியில் உள்ளவர்கள் தானே பொறுப்பு! அடுத்த தேர்தலுக்குள் இந்தத் தள்ளுபடி, வேளாண் பெருமக்களின் பிரச்சனைகள் என்பதையெல்லாம் மூட்டைக்கட்டி விட வேண்டும். அதுவே நல்லாட்சிக்கு அழகு!

அடுத்து,  மின்சாரம் அத்தியாவசியம் என்பது உண்மையே. அதுவும் வேளாண் பெருமக்களுக்கு உதவும் வகையில் அமைய வேண்டும்.

மதுவிலக்கு சம்பந்தமான வாக்குறுதிகள் வரவேற்தக்கதே! தனது குழந்தைகளைக் குடிகாரர்களாக்கிவிட்டு இப்போது அவர்களுக்கு மீட்பு நிலையங்கள் அமைக்கப்படும் என்பது தாய்க்கு எவ்வளவு மனவேதனை ஏற்படுத்தும் என்பதை நாமும் உணருகிறோம்; உருகுகிறோம்!  500 டாஸ்மார்க் கடைகள் மூடப்படும் என்பது அடுத்த ஐந்து ஆண்டுகளிலா அல்லது ஓர் ஆண்டுக்கு ஐனூறா என்பது தெளிவில்லை! 

தமிழகத்தின் ஆட்சி என்பது கடனிலேயே  நடைபெறுகின்ற ஓர் ஆட்சி என்பது மக்களுக்குப் புரிகிறது. அதுவும் டாஸ்மார்க் இல்லாமல் ஆட்சி நடத்த முடியாத ஒரு நிலைமையில் தமிழகம் உள்ளது!

வேளான் பெருமக்களின் கடனைத் தள்ளுபடி செய்யலாம். ஆனால் தமிழகத்தின் கடனைத் தள்ளுபடி செய்ய முடியுமா?

இப்போது நமக்குப் புரிவதெல்லாம்  ஒன்று தான். அடுத்த முதலமைச்சராக க்ருணாநிதி வரபோவதில்லை. ஆனால் ஸ்டாலின் வருவதை ஜெயலலிதா விரும்பவில்லை!

தன்னுடைய பதவியைத் தற்காத்துக்கொள்ள இனி அவர் எதையாவது - நல்லதை - செய்யத்தான் வேண்டும். சவடால் பேச்செல்லாம் இனி எடுபடாது! இன்னொரு பக்கம் நாம் தமிழர் கட்சி. சீமானை எதிர்கொள்ள வேண்டும்.

அரசியலுக்குச் சீமானின் வரவு ஒரு புதிய பாதையைத் தமிழகத்திற்குப் போட்டுக் கொடுத்திருக்கிறது என்பது உண்மையே!

Monday, 23 May 2016

உலகசாதனைப் புரியும் தமிழ் மாணவர்கள்!


தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உலகளவில் சாதனைகள் புரிகின்றனர்! நம் அனவைருக்கும் மகிழ்ச்சியான செய்தி தான்.

ஆனால் இந்தச் சாதனைகளே நமக்கு எதிராகத் திரும்புகிறதோ என்று சந்தேகம் எழுவது இயல்பு தான்! சந்தேகம் என்பதைவிட பொறாமையை ஏற்படுத்துகிறதோ என்று நினைக்க வேண்டியுள்ளது!

தேசியப் பள்ளிகளுக்குக் கோடிகணக்கில் செலவு பண்ணியும் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.ஆனால் எப்போதும் புறக்கணிக்கபடுகின்ற தமிழ்ப்பள்ளீகள் எப்படி சாதனைகள் புரிகின்றன?

சமீபத்தில் அறிவியல், தொழில்நுட்ப  துணையமைச்சர் டத்தோ டாக்டர் அபு பாக்கர் அவர்கள் இந்தத் தமிழ்ப்பள்ளி மாணவர்களை அவர்களின் அறிவியல் படைப்புக்களுக்காகப் பாராட்டினார்! அதனைக்கூட அவர் கிராமப்புற பள்ளிகள் என்று தான் சொன்னார்.தமிழ்ப்பள்ளி என்று சொல்ல வாய் வரவில்லை!

இந்தச் சாதனைகள் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதித்தவை.

1) 2014-ம் ஆண்டு கூலிம் தமிழ்ப்பள்ளி, லண்டனில் நடைபெற்ற அனைத்துலக பிரிட்டிஷ் அறிவியல், புத்தாக்கப் போட்டியில் உயரிய இரண்டு தங்க விருதுகளைப்  பெற்றன.
2) 2015-ம் ஆண்டு பினாங்கு ராமகிருஷ்னா தமிழ்ப்பள்ளி ஹாங்காங்கில் நடைபெற்ற அனைத்துலக மாணவர் புத்தாக்கக் கண்டுபிடிப்பு போட்டியில் ஆறு விருதுகளுடன் ஒரு தங்கப்பதக்கத்தையும் வென்றது.

உலக அளவில் உயரிய விருதுகள் தான். ஆனால் நமது நாட்டில் அது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை! ஏன், கல்வி அமைச்சு கூட அந்த மாணவர்களை ஏறெடுத்துப் பார்க்கவில்லை! ஒரு வேளை இதனை விட - தங்கத்தைவிட - வேறு எதனையும் எதிர்பார்த்தார்களோ தெரியவில்லை!

இந்தச் சாதனையைத் தேசியப் பள்ளியில் பயிலும்  மாணவர்கள் சாதித்திருந்தால் அதற்கு அடுத்த ஆண்டே பள்ளிப்பாடப் புத்தகங்களின் அந்தச் சாதனைகள் பாடமாக வெளி வந்திருக்கும்! யார் கண்டார் - டத்தோ பட்டங்கள் - கூட கிடைத்திருக்கலாம்!

ஆனால் இந்தச் சாதனைகளுக்குப் பின்னர் தான் தமிழ்ப்பள்ளிகள் பல சோதனைகளைச் சந்திக்கின்றன. தமிழ்ப்பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை என்று சொல்லுபடுகின்றது. பயிற்சிப் பெற்ற ஆசிரியர்கள் இருந்தும் அவர்களுக்கு வேலை கொடுக்காமல் இழுத்தடிக்கப்படுகின்றது. தமிழ்ப்பள்ளிகளுக்காகப் பயிற்சி பெற்ற அவர்களுக்கு வேலை இல்லை! குறைவான ஆசிரியர்களை வைத்துக் கொண்டு ஆசிரியர்கள் பல போராட்டங்களைச் சந்திக்க வேண்டி உள்ளது.

தாய் மொழி பள்ளிகளுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று சொல்லிக்கொண்டே எல்லா ஆபத்துக்களையும் தமிழ்ப்பள்ளிகள் சந்தித்து வருகின்றன. சீனமொழி பள்ளிகள் மீது கைவைக்க முடியாத நிலையில் தமிழ்ப்பள்ளிகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நசுக்கப்படுகின்றன.

இருப்பினும் தமிழ்ப்பள்ளிகள் தொடர்ந்து இருக்கும். தமிழும் தொடர்ந்து இருக்கும். நமது மாணவர்களும் தொடர்ந்து சாதனைகள் புரிவார்கள். பொறாமைப் படுபவர்கள் பொறாமையாலேயே அழிவார்கள்!

நமது மாணவர்கள் சாதனைகள் புரியட்டும்! உலகம் அவர்களை வாழ்த்தட்டும்!

வாழ்க! வளர்க!

Friday, 20 May 2016

எல்லாம் நன்மைக்கே!


எல்லாம் நன்மைக்கே!

இதனைத் தெரிந்து கொண்டால் போதும். எந்தப் பிரச்சனையும் நமக்கு வராது. எது நடந்தாலும் அது நன்மைக்குத்தான். நாம் தீமை என்று எதை நினைக்கிறோமோ அது அந்தக் கணத்தில் நமக்குத் தீமையாகக் காட்சியளிக்கிறதே தவிர அது உண்மையில் அது தீமையல்ல! பின்னர் நாம் யோசித்துப் பார்க்கும் போது அது நன்மைக்குத் தான் நடந்தது என்பது நமக்குப் புரியும்.

ஒவ்வொரு கசப்பான அனுபவத்திலும் ஒரு நன்மை ஒளிந்து கொண்டிருக்கிறது என்பது அப்போது நமக்குத் தெரிவதில்லை. அதனை விளாவாரியாகப் பிரித்துப் பிரித்துப் பார்க்கும் போது அங்கும் ஒரு ஒளி  உள்ளே ஒளிர்ந்து கொண்டிருக்கும். அதனைப் புரிந்து கொள்ள நாம் முயற்சி செய்வதில்லை.

ஒரு நண்பர் இறந்து போனார். இதில் என்ன 'நன்மைக்கே'? சம்பாதிக்கும் வரையில் அவர் கவலையில்லாத மனிதர். 'தண்ணி' அடிப்பதில் பலே கில்லாடி! வேலை செய்ய முடியாத நிலை வந்தது. 'தண்ணி'' அடிக்கப் பணம் இல்லை! பிள்ளைகள் பணம் கொடுப்பதாக இல்லை. வெளியே சுற்றிக் கொண்டிருப்பார். அவ்வப்போது கையை நீட்டுவார். ஒரு நிரந்தர பிச்சைக்காரனாகும் முன்னேரே இறந்து போனார்! இதில் என்ன நன்மை?  அவர் பிச்சைக்காரர் ஆகவில்லையே! அது நன்மை. அவர் குடும்பத்திற்கு நிரந்தர பாரமாக இல்லாமல் - எந்த ஒரு பொறுப்பும் - இல்லாத நிலையில் போய் சேர்ந்தது அவருக்கு  அது நல்லது தான். இருந்திருந்தால் அவர் நிரந்தர துன்பத்திற்கு ஆளாகியிருப்பார். எங்கேயாவது அஞ்சடியில் படுத்துக் கிடந்திருப்பார். கால்வாய்களில் விழுந்து கிடந்திருப்பார். கடைசியில் அனாதை விடுதியில் அடைக்கலமாகியிருப்பார்!

இறப்பு மட்டும் என்பது அல்ல. எல்லாப் பிரச்சனைகளிலும் ஏதோ ஒரு வகையில் அதிலுள்ள நன்மைகள் நமது கண்களுக்குத் தெரிவதில்லை. தீமைகளைப் பெரிதுபடுத்துவதால் - தீமைகளை மட்டும் பூதக்கண்ணாடிப் போட்டுப் பார்ப்பதால் - நன்மைகள் நமது கண்களுக்குப் புலப்படாமல் ஒளிந்து கொள்கின்றன.

எல்லாவற்றையும் விட எது நடப்பினும் "எல்லாம் நன்மைக்கே!' என்னும் மனப்பான்மையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். 'போனால் போகட்டும் போடா!' என்று கண்ணதாசன் பாடல் ஏன் சமயங்களில் நமக்கு நினைவிற்கு வருகிறது? அதற்கு மேல் செய்ய எனக்கு ஒன்றுமில்லை என்று ஒரு விரக்தியில் வருகின்ற பாடல் அது! ஆனால் எல்லாம் நன்மைக்கே என்பது விரக்தி அல்ல. ஆக்ககரமானது! இந்தத் தீமையிலும் ஒரு நன்மை உண்டு; நல்லது உண்டு என்னும் நம்பிக்கையைக் கொடுக்கின்ற வரிகள் அவை.

வருவது வரட்டும்! எல்லாம் நன்மைக்கே! நடப்பது நடக்கட்டும்! எல்லாம் நன்மைக்கே!

மனந்தளராதீர்கள்! எல்லாம் நன்மைக்கே!

'நாம் தமிழர்' சீமான் அவர்களே!


நாம் தமிழர் கட்சி சீமான் அவர்களே!

வணக்கம்! நடந்து முடிந்த தமிழகத் தேர்தலில் - வெளி நாடுகளில் வாழும் தமிழர்கள் - எதிர்பார்த்தபடி எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை!

வழக்கம் போல் திராவிடக்கட்சிகளின் ஆட்சி! ஜெயலலிதா கடந்த ஐந்து ஆண்டுகளில் என்ன செய்தாரோ அதையே தான் தொடருவார் என்பதில் ஐயமில்லை.  இலவசங்களைக் கொடுத்தே ஆட்சி செய்பவர் அவர். அவருடைய  அகராதியில் அது தான் ஆட்சி! உலகிலேயே அது தான் சிறந்த ஆட்சி என்று அவர் சொன்னால் அதற்குத் தலையாட்ட அவருடைய அனைத்துச் சட்டமன்றங்களும் அவரின் காலில் விழும்!

நமது வருத்தம் எல்லாம் தமிழகத்தின் வளங்கள் எல்லாம் சுரண்டப்படுகின்றனவே என்பது தான்.தமிழர்கள் தலைநிமிர எந்த வழியும் இல்லையே என்பது தான்.

அது உங்களுக்குத் தெரிந்தது தான். நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரிய வேண்டும் என்பதில்லை!

நண்பரே! அடுத்த ஐந்து ஆண்டுகள் நீங்கள் இன்னும் வீறுகொண்டு எழுவீர்கள் என்பது எனக்குத் தெரியும். போராட்டங்கள்! போரட்டங்கள்! பொராட்டங்கள்! அதற்கு நீங்கள் ஒய்வு கொடுக்கப் போவதில்லை!

ஆனாலும் இதனூடே ஒரு சிறிய ஆலோசனை. சரியா தவறா என்பது  எனக்குத் தெரியாது. வெறும் ஆலோசனை தான். ஏதாவது ஒரு கிராமத்தை தத்து எடுத்து நீங்கள் சொன்ன வேளாண்மை தத்துவத்தை செயல்படுத்த முடியுமா என்று பாருங்களேன். அடுத்த ஐந்து ஆண்டுகளில் குறைந்த பட்சம் ஒரு கிராமத்தையாவது சீர்படுத்த முடியுமா என்று பரிட்சாத்த முறையில் செய்து பார்க்கலாமே! தேர்தல் காலத்தில் நீங்கள் சொன்னவைகள் எல்லாம் வெறும் வாய்ச்சவடால் இல்லை என்பதை நிருபிக்கலாமே!

வேளாண்மை என்பது ஒர் உதாரணம் தான். வேறு ஏதேனும் திட்டங்கள்  இருந்தாலும் நீங்கள் செயல் படுத்தலாம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு கிராமத்தை ஒரு தமிழகமாக மாற்றி அமைக்க முடியுமா என்று முயற்சி செய்யுங்களேன்.

இது அடியேனின் ஒரு சிறிய ஆலோசனை.

தமிழனின் புலிக்கொடி மீண்டும் கோட்டையில் கம்பீரமாக பறக்க வேண்டும்! இது நடக்கும்; நடக்க வேண்டும்!

வாழ்த்துகள்!

Thursday, 19 May 2016

டத்தோஸ்ரீ பழனிவேலு அவர்களே....!


டத்தோஸ்ரீ பழனிவேலு அவர்களே! உங்களைப் பற்றி எழுத வேண்டும் என்று எனது மனதிலே ஓர் ஆசை. இன்று தான் அதற்கு வாய்ப்புக் கிடைத்தது. மகிழ்கிறேன்!

உங்களைப் பற்றியான விமர்சனங்கள் பல இருக்கலாம்.  ம.இ.கா. (மலேசிய இந்தியர் காங்கிரஸ்) சரித்திரத்தில் நீங்கள் மட்டும் தான் மிகவும் பலவீனமானத் தலைவர் என்று  ம.இ.கா.வினர் கூறுகின்றனர். நீங்கள் ஒர் ஐயப்ப பக்தர் என்றும் எப்போதும் ஏதோ பக்தி நிலையிலேயே இருப்பதாக ஒரு குற்றச் சாட்டு! தமிழனுக்குப் பக்தி என்பது கூட கேலிக்குரிய ஒன்றாகப் போய்விட்டது!

நான் அப்படி நினைக்கவில்லை. பக்தி என்பது உங்களது பலம் என்றே நினைக்கிறேன்.

உங்களுக்கு முன்னர் ம.இ.கா. பல தலைவர்களைக் கண்டிருக்கிறது. ஆனால் பாருங்கள் நீங்கள் இருந்ததோ சில வருடங்கள் தான். அந்த சில வருடங்களில் நீங்கள் செய்த சாதனையை வேறு யாரும் சாதிக்கவில்லை.நமது மாணவர்களுக்கு நீங்கள் செய்த உதவி என்பது எக்காலத்திலும் மறக்க முடியாதது.

பிரதமருடன் நீங்கள் பேச்சுவார்த்தை நடத்தியதன் பலன் இன்று பல மாணவர்கள் - எத்தனையோ ஏழை மாணவர்களுக்கு  - நல்லதொரு பலனை அளித்திருக்கிறது.

மெற்றிக்குலேஷன் கல்வி மட்டும் அல்ல; பல மாணவர்கள் பல்கலைக்கழகங்களிலே பயில்கின்றனர். தொழில்நுட்பக் கல்லுரிகளிலே படிக்கின்றனர்.. இதை எல்லாம் உங்களுக்கு  முன்னர் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.

நிதிச் சுமை என்பதாலேயே பல ஏழை மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. ஆனால் இன்று பல ஏழைக் குடும்பங்களின் பிள்ளைகள் உயர்கல்வி பயிலுகின்றனர். பெற்றோர்களின் முகங்களிலே மகிழ்ச்சி! மாணவர்களும் மகிழ்ச்சி அடைகின்றனர்.

ஆனாலும் நமது பெற்றோர்கள் செய்கின்ற சில காரியங்கள் நமக்கு வருத்தத்தை அளிக்கின்றது.வெளி மாநிலங்களில் கல்வி பயில பெற்றோர்களே தடையாக இருக்கின்றார்கள்! அதுவும் ஆண் பிள்ளைகளை! பிள்ளைகள் கெட்டுப்போய் விடுவார்களாம்! இப்போது கெட்டுப்போகிறவன் எல்லாம் வீட்டிலிருந்து தானே கெட்டுப் போகிறான்! எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் தன்னுடைய ஒரே ஒரு பெண் பிள்ளையை கல்வி பயில சபா மாநிலத்திற்கு அனுப்பி வைத்தார். அவர் கல்வியை முடித்து இப்போது கோலாலம்பூரில் முனைவர் பட்டத்திற்குப் படித்துக் கொண்டிருக்கிறார்.பெற்றோர்கள் மனம் மாறுவார்கள் என நம்பலாம்.

நான் பல மாணவர்களை - கல்லூரிகளில் படிக்கின்ற மாணவர்களை - அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்கிறேன். பல துறைகளில் கல்வி பயிலுகின்றனர்.

உண்மையில் நான் மகிழ்ச்சியடைகிறேன். முன்பெல்லாம் தொழில்நுட்பக் கல்லுரிகளில் கல்வி பயில எவ்வளவு 'கெடுபிடி' என்பது எனக்குத் தெரியும். இப்போது அனைத்தும் 'தாராள'  மயமாக்கபட்டது குறித்து மகிழ்ச்சி
அடைகிறேன்!

டத்தோ! இந்த இந்திய சமுதாயம் மறக்க முடியாத ஒரு நபர் நீங்கள்! குறிப்பாக கல்வித் துறையில் நீங்கள் செய்தது சாதனையே!

நீங்கள் செய்த இந்தச் சமுதாயப் பணிக்காக நீங்கள் நீடுழி வாழ வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன்! வாழ்த்துகள்!
கேள்வி - பதில் (14)


கேள்வி

தமிழகத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. வழக்கம் போல் தானே!


பதில்

ஆமாம்! வழக்கம் போல் தான்! நாம் என்ன தான் ஜனநாயகம், பணநாயகம் என்று எதைச் சொல்லியாவது குறை கண்டுபிடித்தாலும் அது மக்களின் தீர்ப்பு என்று ஏற்றுக்கொள்ள வேண்டும்.

வெளி நாட்டுத் தமிழர்களுக்கு இது ஒரு ஏமாற்றமானத் தேர்தல் என்பதில் ஐயமில்லை. நாம் எதிர்பார்த்தது நடக்கவில்லை. தமிழ் நாட்டு வாக்காளர்களுக்கு அவர்களது வாழ்க்கைப் பிரச்சனையே பெரிய போராட்டம். அவர்கள் வெளி நாடுகளில் வாழும் தமிழர்களைப் பற்றி கவலைப்பட நேரமில்லை. அவர்களுக்கு உள் நாட்டு அரசியல் புரியவில்லை. அவர்கள் புரிந்து கொண்டு ஆகப்போவதும் ஒன்றுமில்லை.

தி.மு.க. தலைவர் கருணாநிதி மேல் சுமத்தப்பட்டக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஜெயலலிதாவுக்குச் சாதகமாக போய்விட்டதாகவே தோன்றுகிறது. ஆமாம்! ஜெயலலிதா மேல் குற்றம் சொன்னாலும் அதற்குக் காரணம் கருணாநிதி தான் என்னும் அனுதாப அலையாகக் கூட இருக்கலாம்.

ஆனால் வருகின்ற ஐந்து ஆண்டுகள் ஜெயலலிதாவுக்கு மிகவும் சோதனையான ஆண்டுகள்.  மீண்டும் தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளுக்கு அவர் பதவி ஏற்கிறார், இனி கருணாநிதி தான் எல்லாவுற்றுக்கும் காரணம் என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது.

வருகின்ற ஐந்து ஆண்டுகள் சிறப்பான ஆட்சியைத் தமிழகத்துக்குக் கொடுப்பார் என நம்புவோம்.வயதானக் காலத்தில் மக்களின் சாபத்திற்கு ஆளாக வேண்டாம் என்று அவரும் நினைக்கலாம் அல்லவா! அதற்காகவே நல்ல ஆட்சியை அவர் தரலாம்; தருவார் என நம்புவோம்.

அம்மையார் ஜெயலலிதாவுக்கு நமது வாழ்த்துகள்!

Tuesday, 17 May 2016

தெரியலையா...? தெரிஞ்சக்கோ...!இரண்டு பெண்கள் பேசிக்கொண்டே வந்தார்கள். ஒருவர் மலாய்ப்பெண். இன்னொருவர் தமிழ்ப்பெண்.

இருவருமே அதிகம் படித்தவர்கள் என்று சொல்ல முடியாதத் தோற்றம். .அந்த மலாய்ப்பெண் "எனக்கு ஃபேக்ஸ் (FAX) ன்னா என்னான்னே தெரியலே! என்னா செய்வாங்க, எப்படி அனுப்புவாங்கன்னு  ஒன்னும் புரியலே!" என்று ஒருவாரு சொல்லிக்கொண்டே வந்தார். அதற்கு அந்தத் தமிழ்ப்பெண்  "இது என்னா பெரிய விஷயம்! தெரியலேன்னா, தெரிஞ்சுக்கோ!" என்று சிரித்துக் கொண்டே அவருக்குப் பதிலளித்தார்.

அடா...அடா,,. எவ்வளவு பெரிய விஷயம் . சர்வ சாதாரணமாக அவர் சொல்லுகிறாரே! தெரியலேன்னா, தெரிஞ்சுக்கோ!

இதை நாம் தெரிந்து கொள்ளுவதற்கு எத்தனை தன்முனைப்புப் புத்தகங்களைப்  படிக்க வேண்டியிருக்கிறது!  எத்தனை தன்முனைப்புக் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டியிருக்கிறது!

இந்தப் பெண்ணோ - இத்தனைக்கும் பெரிய படிப்பெல்லாம் படித்தவர் மாதிரி தெரியவில்லை - அவர் இப்படிப் போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போகிறாரே!

இது நம் அனவருக்குமே பொருந்தும். தெரியலைன்னா, தெரிஞ்சுக்குவோம்! அவ்வளவு தான்! இதில் நமக்கு என்ன பெரிய பிரச்சனை?  தெரியலேன்னா நாம் எப்போதும் முட்டாளாக இருக்கப் போகிறோம்! தெரிந்து கொண்டால் ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக் கொண்டவராவோம். அவ்வளவு தான் விஷயம்!

நாம் ஒன்றைத் தெரிந்து கொள்ளுவதற்கு எத்தனையோ பேர் நம் அருகிலேயே இருப்பர். ஆனாலும் ஏதோ ஒரு தயக்கம். அவர்களை நாம் கேட்க முடியாது. காரணம் நம்மைவிட அவர் ஒரு படி கீழ் ஏன்று நாம் நினைக்கிறோம். அப்படியெல்லாம் பார்த்தால் எதையுமே நாம் தெரிந்து கொள்ள முடியாது.

நாம் நினைக்கும் நம்மைவிடத் தகுதி குறைவானவர்கள் சில துறைகளில் நம்மைவிடத் திறமையானவர்களாய் இருப்பார்கள். நாம் எல்லாருமே எல்லாத் துறைகளிலும் முற்றும் அறிந்தவர்கள் இல்லை. சில பொது விஷயங்களில் சிலர் பலே கில்லாடியாக இருப்பார்கள். சாதாரணமாக செய்து விட்டுப் போவார்கள்! பெரிய படிப்பு படித்தவர்கள் அவர்கள் முன் நிற்க முடியாது!

சில அரசாங்க அலுவலகங்களுக்குப் போகும் போது சில பாரங்களை நாம் பூர்த்திச் செய்ய வேண்டியிருக்கும். நமக்குச் சில புரியாது.  நாம் விழித்துக் கொண்டிருப்போம். அதைவிட நமக்குப் பக்கத்தில் இருப்பவரிடம் கேட்டால் அவர் நமக்கு அதனைச் சொல்லிக் கொடுப்பார். அல்லது அங்குப் பணிபுரிபவர்களிடம் கேட்டாலே அவர்கள் நமக்குப் பதில்  சொல்லுவார்கள்.
அந்தச் சில நிமிடங்களில் நம்மை அவர்கள் முட்டாள் என்று நினைத்து விட்டுப் போகட்டுமே! நாமோ, ஒன்றை நாம் புதிதாகக் கற்றுக் கொண்டோம் என்று நம்மை  நாமே பாராட்டிக் கொள்ளுவோமே!

உண்மையைச் சொன்னால் யாரும் நம்மைப் பற்றி ஒன்றும் நினைக்கப் போவதில்லை. நமக்குச் சொல்லிக் கொடுப்பதில் அவர்களுக்கு மகிழ்ச்சியே! காரணம் நாம் அவர்களையும் ஒரு மனிதராக மதித்து அவர்களிடம் கேட்கிறோமே அதைவிட அவர்களுக்கு என்ன சந்தோஷம் இருக்கப் போகிறது!

எப்போதுமே முட்டாளாக இருப்பதைவிட சில நிமிடங்கள் முட்டாளாக இருந்து விட்டுப் போவேமே! ஒரு முறை தெரிந்து கொண்டால் அதற்கு பின்னர் அது நம்முடையது தானே! அப்படிச் சிந்திப்போம்!

நமது வாழ்க்கையில் நமக்குத் தெரியாதது எத்தனையோ! எத்தனையோ! அத்தனையையும் தெரிந்து கொள்ளவும் முடியாது! ஏதோ முடிந்தவரை தெரிய வேண்டியதைத் தெரிந்து கொண்டு வாழ முயற்சிப்போம்.

வேறு என்ன?

தெரியலியா? தெரிஞ்சிக்கிவோம்!

Thursday, 12 May 2016

கேள்வி - பதில் (13)


கேள்வி

தமிழகத்தில் ஊழல் என்றால் அது ஏதோ கருணாநிதிக்கு  மட்டுமே சம்பந்தம் போலவும்  ஜெயலலிதா தூய்மையான அரசியல்வாதி போலவும் பேசப்படுகின்றதே அது சரியா?

பதில்

அது சரியல்ல! ஊழலக்குப் பிள்ளையார் சுழி போட்டவர் கருணாநிதி. ஆரம்பம் அவருடையது. அந்தப் பிள்ளையார் சுழி மேல் மல்லையா சுழி போட்டவர் ஜெயலிலதா!

அன்று  தூய்மையான அரசியல்வாதியாகத் திகழ்ந்த மறைந்த காமராசரைத் தோற்கடித்து பதவிக்கு வந்த அண்ணா  கூட எந்த இலஞ்ச குற்றச்சாட்டுக்கும் ஆளாகவில்லை. ஆனால் அப்போதே கருணாநிதி தனது ஊழல் வேலையை ஆரம்பித்துவிட்டார்.

அன்று கருணாநிதி சரியான அரசியல் பாதையைத் தமிழகத்தில் போட்டிருந்தால் ஜெயலலிதா இந்நேரம் பாட்டி வேடங்களில் தமிழ்ப்படங்களில் நடித்துக் கொண்டிருப்பார்! எம்.ஜி.ஆர்.கூட நீண்ட நாள் இன்னும் வாழ்ந்திருப்பார்.

கருணாநிதி அன்று ஆரம்பித்து வைத்த அனைத்தும் தமிழகத்தின் அழிவுக்குத் தான் வித்திட்டது! உண்மையைச் சொன்னால் அவர் ஓரு நேர்மையற்ற அரசியல்வாதி. ஒரு நேர்மையற்ற இலக்கியவாதி! எந்த ஒர் உண்மை இலக்கியவாதியும்  ஒரு மொழியை அழிக்க விரும்பமாட்டான்..  எந்த ஓர் இலக்கியவாதியும் எந்த ஓர் இன மக்களையும் குடிகாரர சமுதாயமாக மாற்றி அமைக்க மாட்டான்! ஆனால் கருணாநிதி அதனைச் செய்தார்!

வாழவந்த நாட்டில் அவருக்குச் சிவப்புக் கம்பள வரவேற்புக் கொடுத்தோம். வாழ வைத்தோம். வரவேற்றவனை எட்டி உதைத்தவர் கருணாநிதி!

கருணாநிதி கொடூர மனம் படைத்தவர்! அந்தக் கொடூரத்தில் பிறந்தது தான் ஜெயலலிதா! இரண்டு கொடூரங்களின் கொட்டம் இனிமேல் தமிழகத்தில் எடுபடாது என்பது மட்டும் நிச்சயம்!

Wednesday, 11 May 2016

கேள்வி - பதில் (12)


கேள்வி

தொலைக் காட்சி கருத்துக் கணிப்பில் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி அவர்களுக்கு இளைஞர்களின் ஆதரவு பெரும் அளவில் இருப்பதாக சொல்லுப்படுகிறதே! இது நம்பக்கூடிய கணிப்பா?

பதில்

நம்பக்கூடியதாக இல்லை! அப்பாவும் மகனும் (கருணாநிதியும் ஸ்டாலினும்) சேர்ந்து தயாரித்த சொந்தக் கருத்துக் கணிப்பாக இது இருக்க வேண்டும்!

ஐம்பது கால திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் அனைத்தும் - பெரும்பாலும் தொலைக்காட்சி ஊடகங்கள் இவர்களது கைவசம்! பத்திரிக்கைகளும் அப்படியே! அதனால் அவர்களது வசதிகளுக்கேற்ப கருத்துக் கணிப்புக்களை அவர்களே தயாரித்துக் கொள்கிறார்கள்!

இளைஞர்கள் தீடீரென அவர் மீது பற்றும் பாசமும் ஏற்பட அப்படி என்ன அவர்களுக்குச்  செய்துவிட்டார்? சாராயக்கடைகளைத் திறந்து இளைஞர்களைக் குடிகாரர்களாக்கியது ஒரு பெரிய சாதனையோ!  அந்தக் குடிகார இளைஞர்களும் இப்போது அவருக்கு எதிராகத் தான் செயல் படுகிறார்கள்! அவர்களும் ஒரு நாள் திருந்தி தானே ஆக வேண்டும்!

அதுவும் அல்லாமல் அவர் என்ன இப்போது தான் பராசக்தி படத்திற்குக் கதை வசனம் எழுதி, கணேசன் நடித்து, கிருஷ்ணன்பஞ்சு இயக்கி, நேஷனல் பெருமாள் தயாரித்த பராசக்தி படம் வெளியாயிருப்பதாக நினைக்கிறாரோ! ஞாபக மறதியோ?

அந்தக் கால இளைஞன் ஏமாந்தது போல இந்தக்கால இளைஞன் ஏமாற மாட்டான்! அப்போது சினிமா மட்டும் தான் அவனுக்கு அனைத்தும்.  இப்போது அப்படி அல்ல.  இணையத்தளத்தைத் திறந்தால் அரசியல்வாதிகளின் எல்லா அயோக்கியத்தனங்களும் எல்லா யோக்கியத்தனங்களும் தானாக வந்து விழும்!

மு.கருணாநிதி அவர்கள் இப்போது வெறும் கதை வசனகர்த்தா அல்லவே இளைஞர்களைக் கவர!  அவர் இலட்சம் கோடி ஊழலில்  தவழும் அரசியல்வாதியாயிற்றே!


தமிழக வாக்காளர்களே!தமிழக வாக்காளர்களே! தேர்தல் நெருங்கிவிட்டது. இன்னும் நான்கு தினங்களே உள்ளன.

எல்லாக் கட்சிகளும்  தேர்தல் வாக்குறுதிகளை வாரி வாரி வழங்கிவிட்டன. நீங்களும் அவர்கள் வாரி வாரி வழங்கிய வாக்குறுதிகளைக் கேட்டு திக்குமுக்காடிப் போயிருப்பீர்கள்!

அதிலும் குறிப்பாக  தி.மு.க.வும்,  அ.தி.மு.க.வும் எல்லா வாக்குறுதிகளையும் கொடுத்து முடித்திருப்பார்கள்!

அவர்களுக்கு எந்தப் பிரச்சனையுமில்லை! கடந்த ஐம்பது ஆண்டுகளாக என்ன சொல்லி வருகிறார்களோ அதையே மீண்டும் மீண்டும் சொல்லி உங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இலஞ்ச ஊழலை ஒழிப்போம் என்றால் இத்தனை ஆண்டுகள் இலஞ்சத்தை தானே தேடி ஓடி அலையாய் அலைந்து கொண்டிருந்தீர்கள்! இப்போது மட்டும் எப்படி ஒழிப்பீர்கள்? இலஞ்சத்தை வாங்குவதே நீங்கள்! எப்படி ஒழிப்பீர்கள்?

மதுவை ஒழிப்போம் என்றால் ஏன் இத்தனை ஆண்டுகள் மதுவை வாழவைத்துக் கொண்டிருந்தீர்கள்? தமிழனை அழிக்க வேண்டும் என்பதற்காகத் தானே? மதுவை ஒழித்துவிட்டால் அப்புறம் தமிழனை எப்படி அழிப்பிர்கள்? தமிழனை அழிப்பது தானே உங்கள் இரு கட்சிகளின் தலையாய கொள்கை?

இது தான் கடந்த ஐம்பது ஆண்டுகள் நீங்கள் செய்த சாதனை:   தாய் மொழி தமிழைத் அழித்தீர்கள். அவன் படிக்க புதிய பள்ளிகளைக் கட்டிக் கொடுக்கவில்லை. விவசாயிகளைச் சாகடித்தீர்கள். மீனவனை நாசப்படுத்தீனீர்கள். தமிழன் கலாச்சாரத்தை வேரறுத்தீர்கள். இலவசம் என்னும் பெயரில் தமிழனை  பிச்சைக்காரனாக்கினீர்கள்.

தமிழன் தனது சொந்த மண்ணிலேயே அகதியாக வாழ்கிற சூழலை உருவாக்கியவை இந்த இரண்டு திராவிடக் கட்சிகள் தாம்! இனி மேலும் இவர்களை ஆதரிப்பது என்பது நம்மை நாமே தற்கொலைச் செய்வதற்குச் சமம். இனியும் வேண்டாம் இந்த விபரீதம்!

தமிழகத்திற்கு வலிமையான ஓர் அரசியல் கட்சி தேவை. தமிழக மக்கள் தாங்கள் இழந்த அனைத்தையும் மீண்டும் பெற ஓர் உயிருள்ள கட்சி தேவை. அந்த உயிர் - அந்த வீரியம் - நாம் தமிழர் கட்சியிடம் உள்ளது. அதன் ஒருங்கிணப்பாளர் சீமானிடன் உள்ளது.

தமிழகத்தின் வலிமைமிக்க ஆட்சி உலகத்தமிழர்களையும் தலை நிமிர வைக்கும். புதிய உத்வேகத்தைக் கொடுக்கும்.ஒரு வீரமிக்க பரம்பரை - திட்டம்  போட்டு உருக்குலைக்கப்பட்ட - ஒரு மானமிக்க தமிழினம் மீண்டும் தலை நிமிர நல்லதொரு அரசியல் தலைமை தமிழகத்திற்குத் தேவை.

அந்தத் தலைமைத்துவத்திற்கு தகுதியானவர் நாம் தமிழர் கட்சி, சீமான். தமிழக வாக்காளர்களே! அக்காள்மார்களே, தங்கைமார்களே! அண்ணன்மார்களே, தம்பிமார்களே, ஐயாமார்களே, அம்மாமார்களே! உங்கள் வாக்கு நாம் தமிழர் கட்சிக்கே! உறுதியாக இருங்கள்!

நாம் வெல்வோம்! நாம் தமிழர் வெல்வோம்!

Tuesday, 10 May 2016

கேள்வி - பதில் (11)கேள்வி

தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியை கலைஞர் என்றும் டாக்டர் கலைஞர் என்றும் அழைப்பது சரி என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில்

இல்லை! அதனை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். அவர் எந்தக் கலையில் சிறந்து விளங்கினார் என்று நமக்குத் தெரியவில்லை! ஆனாலும் நடிகவேள் எம்.ஆர்.ராதா - தூக்குமேடை - நாடகத்தின் போது இவருக்கு "கலைஞர்" என்னும் பட்டத்தைக் கொடுத்தார். நாடத்துறையில் அவர் ஆற்றிய பணிக்காக அதனை அவர் கொடுத்திருக்கலாம்.. அப்போது அந்தப் பட்டத்திற்குத் தகுதி உடையவராக அவர் இருந்தார். அதனால் நாம் அனைவருமே அவரை மரியாதைக்குரிய மனிதராக நாம்  அவரை "கலைஞர்" என்று அழைத்தோம்.

ஆனால் இப்போது - எப்படிப் பார்த்தாலும்- இது நாள்வரை தமிழ் இனத்திற்கு எதிரியாகவே அவர் நடந்து கொண்டு இருக்கிறார்.

1) தமிழ் இன அழிப்பின் போது தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள - தனது பிள்ளைகளின் பதவிக்காக -  மத்திய அரசோடு போராடிக் கொண்டிருந்தார்.
2) நமது தாய் மொழியான தமிழை முற்றிலுமாக ஒழித்துக் கட்டியவர்.   ஆங்கிலத்தை வெண்சாமரம் வீசி வரவேற்றவர்.
3)தமிழன் ஒழிய வேண்டும் என்பதற்காக தமிழ் நாட்டில் சாராயத்தைத் தேசிய மயமாக்கியவர்.
4) தமிழனை தன் சொந்த நாட்டிலேயே பிச்சை எடுக்க வைத்தவர். இலவசங்களைத் தாராளமாக்கி தமிழனைக் கையேந்த வைத்தவர். தனது திருமணத்தைக்  கூட செய்து வைக்க ஆட்சியில் உள்ளவர்களை எதிர்பார்க்க வைத்தவர்.
5) தமிழன் குனிந்த தலை நிமிராமல் அவனை எல்லாக் காலங்களிலும் தலை நிமிராமல் அடிமையாக வைத்திருந்தவர்.

தமிழனித் துரோகிகளுக்கு நாம் ஏன் மரியாதக் கொடுக்க வேண்டும்?  அவரை நாம் மு.கருணாநிதி என்றாலே அதுவே அவருக்கு நாம் கொடுக்கும் மரியாதை. வெறு அடைமொழிகள் எதுவும் அவருக்குத் தேவையில்லை!

ஐம்பது ஆண்டு கால ஆட்சியில் தமிழகத்தைச் சுரண்டியவருக்கு "கலைஞர்" என்று நாம் அழைக்க வேண்டுமா? வெண்டுமானால் "கொள்ளைக்காரர்" என்னும் பட்டத்தைக் கொடுக்கலாம்.

இன்றைய தமிழ் நாட்டின் அத்தனை தீமைகளுக்கும் அவரே காரணம்! அவரை இனி யாரும்  கலைஞர் என்று அழைத்தால்,  அழைத்தவர்  தமிழர் இல்லை என்று நாம் புரிந்து கொள்ளலாம்!
Sunday, 8 May 2016

பொருளாதார வலிமை பெறுவோம்


இன்று இந்தத்  தமிழ்ச் சமூகம் பொருளாதாரம் என்று வரும் போது நாம்  பின் தங்கியிருக்கிறோம் என்பது நமக்கு அனைவருக்குமே புரிகிறது.

உலகளவில் நாம் ஒரு பெரிய சமூகம். சுமார் 13 கோடி தமிழர்கள் வாழ்கின்றோம். அது ஒரு பெரிய எண்ணிக்கை. மலேசியாவிலும் நாம் மூன்றாவது பெரிய சமூகம். நமது எண்ணிக்கை சுமார் 20 இலட்சம் என்று கணக்கிடப்படுகிறது.

மலேசியாவில் நமது பொருளாதாரம் வலுவானதாக இல்லை. உண்மையைச் சொன்னால் இப்போது தான் பொருளாதாரம் மிக முக்கியமானது என்பது நமக்குப் புரிய ஆரம்பித்திருக்கிறது.

அரசாங்க ஆதரவு இல்லாமல் -  சரியான பொருளாதார பிண்ணனி இல்லாமல் - நமது முன்னேற்றத்தில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது என்பது உண்மையே. அரசாங்கம் சிறிய தொழில்களுக்கு  நிதி ஒதுக்கீடு செய்தாலும் அந்த நிதியும் சரியான  முறையில் சிறு தொழில் செய்பவர்களுக்குப் போய் சேருவது இல்லை என்னும் குற்றச்சாட்டும் உண்டு. அந்த நிதி பெரிய வர்த்தகர்களுக்குத் தான் பயன்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

ஆனாலும் இப்படியே நாம் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிக்கொண்டே போவதில் எந்தப் பயனுமில்லை. அரசாங்கம் கொடுத்தால் நல்லது. கொடுக்காவிட்டால் அதைவிட  நல்லது என்னும் மனப்போக்கை நாம் கொண்டிருக்க வேண்டும்.

சீனர்களின் பொருளாதார முன்னேற்றம் என்பது அரசாங்க உதவினால் ஏற்பட்டதல்ல. சிறிய தொழிலில் ஈடுபட்டு பின்னர் அதனை பெரிய தொழிலாக மாற்றி அமைத்தவர்கள் சீனர்கள். நமது தமிழ் முஸ்லிம்  நணபர்கள், நமது நகரத்தார் சமூகம் அனைவருமே சிறு தொழில்களிருந்து பின்னர் தங்களது தொழில்களைப் பெரிய தொழில்களாக வளர்ச்சி அடையச் செய்தவர்கள்.

இன்று மலேசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர் ஆனந்தகிருஷ்ணன்   என்பது நமக்கு அனைவருக்குமே தெரியும்.  நமக்கும் அதில் பெருமையே. ஆனாலும் நமது இன்றைய இளம் தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாக இருப்பவர் - ஏர் ஏசியா விமானத்தின் -  டோனி ஃபெர்னாண்டஸ்.  மிகவும் சுறுசுறுப்பும் எப்போதும் உற்சாகமாகத் திகழும் அவர் நமது இளைஞர்களுக்கு மிகப் பெரிய எடுத்துக்காட்டு. கடனில் மூழ்கியிருந்த ஒரு விமான நிறுவனத்தை இரண்டு வெள்ளிக்கு வாங்கி - அந்த விமானத்தின் கோடிக்கணக்கான கடன்களை இரண்டே  ஆண்டுகளில் கட்டி முடித்தவர்!  அவர் செய்த ஒரே மாற்றம்:  அந்த விமானத்தை மலிவு கட்டண விமானமாக்கி மலேசியர்களை உலகம் பூராவும் பயணிக்க வைத்தார். 

இன்று அவர் தயவால் தான் தமிழ் நாடு, இந்தியா இன்னும் பல நாடுகளுக்கு   நாம் மலிவு கட்டணத்தில் பயணம் செய்கிறோம். இன்று ஏர் ஏசியாவில் தான் நமது இன இளைஞர் பலர் விமான ஓட்டுனர்களாகவும், விமானப் பணீபெண்களாகவும் அதிகமான எண்ணிக்கையில் பணி புரிகின்றனர்.

ஆமாம், இளைஞர்களே! இந்தத் தமிழினத்தின் முன்னேற்றம் என்பது நம்மோடு நின்றுவிடவில்லை. நமது இனத்திற்கும் அது பொருளாதார வலிமையைக் கொண்டு வரவேண்டும்.

நமது நோக்கம் பொருளாதார வலிமைக்கான நோக்கமாக இருக்க வேண்டும். யாருக்கோ வேலை செய்து அதுவே பெருமை என்னும் மனப்போக்கை நாம் அகற்ற வேண்டும்.

பொருளாதார வெற்றியே நமது தமிழ் இனத்தின் பெருமை!

Friday, 6 May 2016

கேள்வி - பதில் (10)


கேள்வி

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத் தொலைக் காட்சிகள் ஒளிபரப்புகின்ற அத்தனை செய்திகளும் தி.மு.க.,  அ.தி.மு.க. செய்திகளையே முன்னிறுத்துகின்றன.  வெற்றி வாய்ப்பு இந்த  இரு கட்சிகளுக்கு மட்டும் தானோ?


பதில்

திரவிடக் கட்சிகள் ஐம்பது ஆண்டுகாள ஆட்சியைக் கொண்டுள்ளன.. ஐமபது ஆண்டுகள் இடைவிடாது தொடர்ச்சியாக ஆட்சி செய்த கட்சிகள் அவை. இந்த ஊடகங்களும் ஏதோ ஒரு வகையில் இந்தக் கட்சிகளுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்றன. வேறு வழியில்லை! அந்த இரு கட்சிகளையும் எதிர்க்க முடியாது. நாளை இவர்களே ஆட்சிக்கு வரலாம்!  இப்போது வேறு கட்சிகளுக்கு ஆதரவு கொடுத்தால் நாளை இவர்கள் பதவிக்கு வரும் போது பழி வாங்கும் படலம் ஆரம்பமாகும்!  ஏன் பிரச்சனை என்னும் நோக்கில் தான் அவர்கள் செயல் படுகிறார்கள்.

ஆனாலும் இந்த இரு கட்சிகளுமே இம்முறை ஆட்சி அமைக்கப் போவதில்லை என்பது தான் யதார்த்தம். இது நாள் வரை இல்லாத எதிர்ப்பு இப்போது அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இனி இலவசம் என்றெல்லாம் சொல்லி மக்களை ஏமாற்ற முடியாது.

நீண்ட கால நோக்கு எதுவும் இந்த இரு கட்சிகளிடமும் இல்லை. மேலும் இப்போதைய இளைய தலைமுறை இவர்களை நம்பவுமில்லை!  அரசியல் கொள்ளையர்கள் என்பதாகவே இப்போது இவர்கள் பார்க்கப்படுகிறார்கள்!

இந்தத் தேர்தலுக்குப் பின்னர் இந்த ஊடகங்கள் அனைத்தும் இந்த இரு கட்சிகளையும்  மதிக்கப் போவதில்லை!

அது வரை நாம் பொறுத்துத் தான் ஆக வேண்டும்!

இந்திரா காந்திக்கு ...என்று தான் விடியும்?இந்திரா காந்தியின் பிரச்சனை எந்த ஒரு முடிவும் இல்லாமல் இழுத்துக் கொண்டே போகிறதே தவிர அதற்கு எந்த ஒரு முடிவும் கிடைக்குமா என்பது இதுவரை நம்மால் ஊகிக்க முடியவில்லை!

இந்திராவுக்கும் - கே.பத்மநாதனுக்கும் மூனறு பிள்ளைகள் பிறக்கும் வரை ஏதும் பிரச்சனைகள் இருந்ததா என்று நமக்குத் தெரியவில்லை. ஆனால் முன்றாவது குழந்தைப் பிறந்த பிறகு தான் அவர் இஸ்லாத்தை தழுவியிருக்கிறார். இன்றைய அவரது பெயர் ரிதுவான் அப்துல்லா.

பத்மநாதன் தனது மனைவியோடு கருத்து வேறுபாடுகள் இருந்திருந்தால்  அவர் வீட்டுப் பெரியவர்களை வைத்து பிரச்சனைகளுக்கு ஒரு முடிவைக் கண்டிருக்க வேண்டும். அது சரிபட்டு வரவில்லை என்றால் முறையாக நீதிமன்றத்தை அணுகி விவாகரத்துக்குச் மனு செய்திருக்க வேண்டும்.

அவர் இதனை எதையும் செய்யவில்லை. அவரது நோக்கம் "உன்னைப் பழி வாங்கியே தீருவேன்!" என்னும் எண்ணத்தில் அவர் இஸ்லாமிய மதத்தில் தஞ்சம் அடைந்திருக்கிறார்!  காரணம் ஒருவன் இஸ்லாமியனாக மாறியபிறகு "என்னை எவனும் அசைக்க முடியாது" என்னும் எண்ணம் மலேசிய சூழலில் தானகவே வந்துவிடும்!

ரிதுவான் 2009 - ம் ஆண்டு மார்ச் மாதம் இஸ்லாத்திற்கு மதம் மாறினார். போகும் போது அவர் சும்மா போகவில்லை. போகும் போது அவருடைய மூன்று பிள்ளகளையும் கூடவே கூட்டிக்கொண்டு போய் விட்டார்.போனதும் முதல் வேலையாக அவருடைய மூன்று பிள்ளைகளையும் மதம் மாற வைத்தார். அப்போது அவர் பிள்ளைகளின் வயது 11, 10 கடைசியாக 11 மாதக் குழந்தை. பெயர் பிரசன்னா டிக்சா. பெரிய குழந்தைகள் இருவரும் பின்னர் தங்களது முஸ்லிம் அடையாளத்தோடு தாயாரோடு சேர்ந்து விட்டனர்.  11 மாதப் பெண் குழந்தை மட்டும் ரிதுவான் தன்னோடு வைத்துக் கொண்டார். குழந்தையின் தாயார் அதன் பின்னர் இதுநாள் வரை தனது பெண் குழந்தையைப் பார்க்கவில்லை. நீதிமன்றத்திலும் பார்க்க ரிதுவன் அனுமதிக்கவில்லை.

ஒரு பக்கம் சிவில் நீதிமன்றம் குழந்தையைத் தாயாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றாலும் இன்னொரு பக்கம்  ஷரியா  நீதிமன்றம்  அந்தக் குழந்தையைத்  தாயாரிடம் ஒப்படைக்கக் கூடாது என்கிறது! வேண்டுமென்றால் தாயார் ஷரியா நீதிமன்றத்திடம் வழக்காடலாம் என்கிறது. ஷரியா நீதிமன்றம் முஸ்லிம்களுக்கு உரியது! ஒர் இந்து எப்படி வழக்காட முடியும்! நமக்கும் புரியவில்லை! அவர்களுக்கும் புரியவில்லை!

ஆரம்பத்திலிருந்தே ரிதுவான் நீதிமன்ற ஆணையை மதிக்கவில்லை! குழந்தையைத் தாயாரிடம் ஒப்படைக்கச் சொல்லியும் அவர் அதனை பொருட்படுத்தவில்லை. காவல்துறையும் அவரைக் கைது செய்ய முடியவில்லை!

ஆகக் கடைசியாக உச்ச நீதிமன்றம் ரிதுவானைக் கைது செய்யும் படியும் குழந்தையைத் தாயாரிடம் ஒப்படைக்கும் படியும் காவல்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் காவல்துறையோ அவரைக் கைது செய்ய முடியவில்லை என்று மீண்டும் மிண்டும் பழைய பல்லவியையே பாடிக்கொண்டிருக்கிறது!.

என்ன நடக்கிறது? முகமது ரிதுவான் எந்தவொரு முகவரியிலும்  இல்லாமல் மலேசியாவில் இருக்கிறார் என்கிறது காவல்துறை. அது தான் அவர்கள் சொல்லும் காரணம்.  கடந்த ஏழு வருடங்களாக அவர் எந்த முகவரியிலும் இல்லை.  ஆனால் வழக்கு நடைபெறும் போது அவர் வருகிறார்; போகிறார்! கடந்த ஏழு வருடங்களாக ஒரே ஒரு கைபேசியை வைத்துக் கொண்டு அவர் முன்னாள் மனைவியை அவ்வப்போது - திட்ட வேண்டும் என்று ஆசை வந்தால் - திட்டுகிறார்! ஆனாலும் காவல்துறையினர் அவரைக் கண்டுப்பிடிக்க முடியவில்லை என்கின்றனர்!

குழந்தையின் தாயாரான இந்திரா காந்தி தனது குழந்தையைப் பார்த்து ஏழு வருடங்கள் ஆகிவிட்டன என்று ஏங்குகிறார். குழந்தையின் தகப்பனோ குழந்தையை நீதிமன்றத்திற்குக் கூட்டி வந்தாலும் குழந்தையைத் தாயாரிடம் காட்ட அனுமதிப்பதில்லை! ஒருவன் என்ன தான் வேறு ஒரு மதத்தில் ஈடுபடுத்திக் கொண்டாலும் அவனுடைய பிறவிக்குணத்தை மாற்ற முடியாது என்பது உண்மை தான்!

என்ன தான் முடிவு? இப்போது இருவருக்குமே நிம்மதி இல்லாத வாழ்க்கை.

இந்திரா காந்தி தனது குழந்தைக்காக ஏங்குகிறார். அதோடு அவருடைய பிரச்சனைத் தீரவில்லை. அவரோடு இருக்கின்ற இரு குழந்தைளும் மீண்டும் இந்து மதத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும். அது ஒன்றும் சாதாரண விஷயம் அல்ல. அப்பனின் உதவி இல்லாமல் அதுவும் எளிதில் நடக்கப் போவதில்லை. நீதிமன்றமும் வீடுமாக வாழ்நாள் பூராவும் அலைய வேண்டிய நிலைமை.

அப்பனின் நிலை என்ன?  ஓடி, ஒளிந்து கொண்டு கண்ணாமூச்சி ஆடுகின்ற நிலைமை. நிம்மதி இல்லாத வாழ்க்கை. வெளியே எங்கும் போவதற்குப் பயம். எங்கு என்ன நடக்குமோ என்னும் பயத்தோடு வாழும் நிலைமை. என்ன தான் 'பாதுகாப்பு' என்று இருந்தாலும் அது எப்போதும் இருக்கப் போவதில்லை. பள்ளிக்குப் போகும் தனது குழந்தைக்கு என்ன நேருமோ என்னும் பயம்! எல்லாம் பய மயம்!

 எல்லா வழக்குகளிலும் குழந்தைகள் தாயாரோடு இருக்க வேண்டும் என்பது தான் பொதுவானது. அதுவும் பெண் குழந்தைகள் தயாரோடு இருப்பது பாதுகாப்பானது. இது நமது கலாச்சாரம் சார்ந்த விஷயம். ஆனால் இதனை எடுத்துச் சொல்ல நம்மால் முடியவில்லை. நமது மதம் அது அல்லவே!

எனினும் எல்லாம் நல்லதே நடக்கும் என எதிர்பார்ப்போம்!

ஒரு வலிமையான அரசோடு மோதிக் கொண்டிருக்கிறார் இந்திராகந்தி.அந்தப் பெற்றத்  தாய்க்காக நாம் பிரார்த்தனை செய்வோம்.