Sunday, 18 April 2021
எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி ..........! (33)
Saturday, 17 April 2021
எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி........! (32)
ஏன் சிறிய தொழில்?
`ஏன் சிறிய தொழிலில் கவனம் செலூத்துங்கள் என்று வலியுறுத்துகிறோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.வசதி படைத்தவர்கள் சிறியதோ பெரியதோ பிரச்சனை இல்லை. காரணம் ஒரு தரப்பினரிடம் பணம் இருக்கிறது அவர்கள் பெருந்தொழில்களில் ஈடுபடுவது என்பது இயல்பான காரியம்.
நண்பர் ஒருவர் ஞாபகத்திற்கு வருகிறார். ஒரு வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை செய்தவர். குடும்பத்திற்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்துவிட்டார். வீடு, கார், பிள்ளைகளின் உயர் கல்விக்கான ஏற்பாடுகள், அனைத்தையும் செய்துவிட்டார். மனைவியும் வேலை செய்கிறார். சொந்தத் தொழிலில் ஈடுபட வேண்டும் என்னும் வேட்கை அவரிடமிருந்தது. ஒரு சில இலட்சங்களைச் செலவு செய்து கணினித் துறையில் இறங்கிவிட்டார். நடுத்தர தொழில் என்று சொல்லலாம். வாழ்த்துகள் நண்பரே! இப்படி வசதி உள்ளவர்கள் தங்களுக்கு ஏற்ற தொழிலைத் தேர்ந்தெடுப்பதில் எந்த தவறும் இருப்பதாகத் தெரியவில்லை.
ஆனால் சில ஆயிரங்களைக் கையில் வைத்திருப்பவர்கள் தங்களுடைய முதலீடுகளைச் சரியாகக் கவனித்து தொழிலில் இறங்க வேண்டும். சிறிய தொழிலில் தங்களது அனுபவங்களை வளர்த்துக் கொண்டு பின்னர் தொழிலை மேம்படுத்த வேண்டும்.
வியாபாரத்துறையில் ஈடுபட வேண்டும் என்று நினைக்கும் இளைஞர்கள் இப்போது நமது இனத்தில் அதிகமாகவே இருக்கிறார்கள். செய்கின்ற வேலையில் பாகுபாடுகள் ஏராளம். முன்னுக்கு வருவதில் முட்டுக்கட்டைகளைப் போட்டு முடக்கி விடுகிறார்கள். எத்தனை நாளைக்குத் தான் முணுமுணுத்துக் கொண்டிருப்பது என்கிற நிலையில் தான் பல இளைஞர்கள் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு நாம் சொல்ல வருவதெல்லாம் வியாபாரத்துறையில் காலெடுத்து வையுங்கள். துணிச்சலோடு வாருங்கள். யாரும் உங்களை விழுங்கி விடப்போவதில்லை. கணவனும் மனைவியும் சேர்ந்து செய்கின்ற தொழில் என்றால் அதற்கு இன்னும் வலிமை அதிகம். ஒரு சில பொருளாதாரக் காரணங்களுக்காக மனைவி வேலை செய்யட்டும் என்று நினைத்தால் அப்படியே செய்யுங்கள்.
நம் நாட்டில் நாம் மூன்றாவது பெரிய இனம். ஆனால் தொழிலில் அது நமது விகிதாச்சாரத்தைக் காட்டவில்லை. நாம் மிகக் கீழான நிலையில் தான் இருக்கிறோம். ஒரு சிறிய தொழில் செய்கின்ற அளவுக்குக் கூட நம்மிடம் அந்த துணிச்சல் என்பது இல்லை. பாக்கிஸ்தானியர், வங்காளதேசிகள் நமது தொழில்களைத் தங்கள் வசம் இழுத்துக் கொண்டார்கள். நாம் பார்த்துக் கொண்டும், ரசித்துக் கொண்டும் இருக்கிறோம்!
முதலில் சிறிய சிறிய தொழில்களில் அக்கறைக் காட்டுங்கள். அதுவே நமக்கு மாபெரும் சக்தியைத் தரும்.
Friday, 16 April 2021
எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி.........! (31)
பொருள் ஈட்டுவதற்கு எது சிறந்த வழி?
பொருள் ஈட்டுவதற்கு இரண்டே இரண்டு வழிகள் தாம். ஒன்று வேலை செய்வது அல்லது வியாபாரம் செய்வது.இந்த இரண்டில் ஒன்றைத்தான் நாம் தேர்வு செய்ய வேண்டும்.
வேலை செய்வதன் மூலம் நாம் பொருள் ஈட்டலாம். உலகெங்கிலும் வேலை செய்து பிழைப்பவர்கள் கோடிக் கணக்கில் இருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் சம்பளமாகப் பெறுகின்றனர். அந்த சம்பளம் என்பது ஒரு சிலருக்குப் போதுமானதாக இருக்கலாம். பலருக்கு அது ஒவ்வொரு மாதமும் பற்றாக்குறையில் தான் போய் முடிகிறது! முதலாளிகளைக் குற்றம் சொல்லுவது நியாயம் ஆகாது. ஒவ்வொருவரும் தங்களது வரவு செலவுகளைத் தங்களது வருமானத்திற்கு உட்பட்டு செலவு செய்தால் தான் கட்டுப்படியாகும். இல்லாவிட்டால் கடனில் மாட்டிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
இன்னும் ஒரு சிலர் "நமக்கு ஏன் இந்த நிலை? ஏன் இந்த பற்றாக்குறை? நாம் ஏன் சம்பளம் வாங்க வேண்டும்? நம்மால் மற்றவர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாதா?" என்று நினைத்தவர்கள் தங்களது நிலையை மாற்றிக் கொண்டார்கள். அதற்கு நிறைய துணிவு வேண்டும். பல பிரச்சனைகளை எதிர் நோக்க வேண்டி வரும் என்று தெரிந்தே ஒரு முடிவை எடுத்தார்கள்! பலப்பரிட்சையில் இறங்கினார்கள். பல தோல்விகளைச் சந்தித்தார்கள். எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டு. அது கடைசியில் வெற்றியில் தான் கொண்டு சேர்க்கும்! இடையில் பயந்து ஓடியவர்கள் தோல்வியே நிரந்தரம் என்று தங்களுக்குத் தாங்களே முடிவுக்கு வந்து தோல்வியைத் தழுவினார்கள்!
ஒன்றை நான் இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன். நீங்கள் வெற்றி பெற விரும்பினால் தோல்வியாளரிடம் போய் ஆலோசனைக் கேட்காதீர்கள். தோல்வியாளரிடம் ஆலோசனைக் கேட்டால் அவர்களிடமிருந்து உங்களால் என்ன பதிலை எதிர்பார்க்க முடியும் என்று நீங்களே யோசித்து ஒரு முடிவுக்கு வாருங்கள். உங்களைச் சுற்றி எத்தனையோ வெற்றியாளர்கள் இருக்கிறார்கள். அவர்களைக் கொஞ்சம் படியுங்கள். அவர்களுடைய குணாதிசயங்களை உன்னிப்பாகப் பாருங்கள். அவர்களின் வெற்றி எங்கிருந்து வருகிறது என்று கவனியுங்கள். நமக்கும் அவர்களுக்கும் அப்படி என்ன வித்தியாசம் என்று யோசியுங்கள்.
ஒருவரின் வெற்றி என்பது வெறும் பணத்தால் மட்டும் வருவதல்ல. ஒருவருடைய எண்ணங்கள், செயல்பாடுகள் சிந்தனைகள் எல்லாமே வெற்றிக்கு அடிப்படையானவை.
வேலை செய்து பிழைப்பது என்பது எல்லாக் காலங்களிலும் பற்றாக்குறையை நோக்கித்தான் போகும். நம்முடைய வாழ்க்கை முறை அப்படித்தான் அமைந்திருக்கிறது. அதுவே வியாபாரம் செய்பவர்களை நோக்குங்கள், அவர்களுடைய வாழ்க்கை முறையைக் கவனியுங்கள் - நம்மால் பொறாமைப் படத்தான் முடிகிறது! ஆனால் அதனை நாம் சரி செய்து கொள்ளலாம். தேவை எல்லாம் துணிச்சல்!
பொருளை எப்படி வேண்டுமானாலும் ஈட்டலாம். ஒன்று: பற்றாக்குறை வாழ்க்கை. இரண்டு: வளமான வாழ்க்கை! நீங்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.
Thursday, 15 April 2021
எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி.........! (30)
மாபெரும் தொழில்கள் தேவையா?
மாபெரும் தொழில்கள் தேவை இல்லையென்று நான் சொல்ல வரவில்லை. சொல்ல வருவதெல்லாம் எடுத்த எடுப்பில் நம் நாட்டு தொழில் அதிபர் டோனி ஃபெர்னாண்டெஸ் போல ஆகாசத்தில் பறக்க நினைக்க வேண்டாம்.ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு மலேசிய இந்திய நிறுவனம் விமானத் தொழிலில் ஈடுபட்டது. எந்த ஒரு குறையும் இல்லை. ஆனால் ஒரு சில மதவெறிக் கும்பலினால் குறைகள் கண்டுபிடிக்கப்பட்டு கடைசியில் அந்த நிறுவனம் செயல் படமுடியாமலே போயிற்று. அவர்களால் எந்த ஒரு நெருக்கடியையும் சமாளிக்க முடியும். காரணம் அது உலகளவில் இயங்கும் நிறுவனம்.
அவர்களோடு நம்மை ஒப்பிட முடியாது. தரையிலேயே செய்வதற்கு நமக்கு நிறையவே தொழில்கள் இருக்கின்றன. இப்போதைய நிலையில் நாம் சிறிய தொழில்களில் கவனம் செலுத்துவோம். ஆரம்பம் அதுவாகத்தான் இருக்க முடியும். அது தான் நமது வளர்ச்சிக்கு நல்லது.
இப்போது உள்ள பெரிய தொழில்களை எல்லாம் எடுத்துக் கொண்டால் எல்லாமே சிறிய அளவில் தான் ஆரம்பிக்கப்பட்டது. சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்டு நாளடைவில் பெருந் தொழிலாக இன்று வளர்ந்துவிட்டன.
ஒருவர் அனுபவம் பெறுவதற்கு ஒரே வழி சிறிய தொழில்கள் தான். அதன் மூலம் ஒவ்வொன்றையும் அணு அணுவாக நாம் கற்றுக் கொள்ளுகிறோம். நேரடி அனுபவம் நாம் பெறுகிறோம். அனுபவமே சிறந்த ஆசான்!
ஒரு காலக் கட்டத்தில் சிறிய தொழில், பெரிய தொழில் என்று எதை எடுத்துக் கொண்டாலும் சீனர்களே ஆக்கிரமித்துக் கொண்டிருந்தனர். ஆனால் இன்று பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இன்று எல்லா இனத்தாருமே சிறு தொழில்களில் ஈடுபட்டிருக்கின்றனர். நடுத்தர தொழில்களில் வளர்ந்து கொண்டிருக்கின்றன.
தொழில் வளர்ச்சி என்பது வளர்ந்து கொண்டிருக்கிற காலக்கட்டம் இது. ஒரு விஷயத்தில் நான் வியக்கிறேன். நமது பெண்கள் தான் சிறு தொழில்கள் அதிக ஈடுபாடு காட்டுகின்றனர். அவர்களுக்குத் தெரிந்த உணவு, மாலை கட்டுதல், தேநீர் வியாபாரங்கள் போன்றவை அவர்களுக்குக் கை கொடுக்கின்றன. பெண்களைப் பார்த்துத் தான் ஆண்களும் வியாபாரத் துறையில் ஈடுபாடுகளைக் காட்டுகின்றனர். நல்ல வளர்ச்சி!
மாபெரும் தொழில்கள் நமது நாட்டிற்குத் தேவை. அதில் பெரும் இந்திய தொழில் அதிபர்கள் கவனம் செலுத்துகிறார்கள். ஆனால் இப்போது நாம், இந்திய சமுதாயம், இன்னும் அதிகமாக வளர வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம். இன்னும் தொழில் செய்யவே நாம் தயாராகாத இல்லை என்பதனை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
அதனால் தான் சிறு தொழில் மூலம் நம்மை முதலில் தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.
மாபெரும் தொழில்களில் ஈடுபட சிறு தொழில்களில் முதலில் நாம் கவனம் செலுத்துவோம்!
Wednesday, 14 April 2021
எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி.........! (29)
நாம் பலவீனமான சமுதாயம் அல்ல!
நமது தமிழ் அரசர்கள் கடல் வழியாகப் பல நாடுகளுக்குப் பயணம் செய்து வணிகம் செய்தவர்கள். அவர்கள் எந்த நாட்டும் மீதும் படை எடுக்கவில்லை. வணிகம் ஒன்றையுமே குறிக்கோளாகக் கொண்டவர்கள். வணிகம் செய்தனர் அதைத் தவிர அவர்கள் வேறு நோக்கங்களைக் கொண்டிருக்கவில்லை. பல நாடுகளை வென்றனர் ஆனால் எந்த நாட்டையும் அடிமைப்படுத்தவில்லை. அது தமிழனின் பலவீனம் அல்ல. அவர்கள் எல்லாரையும் வாழ வைத்தனர். எல்லாக் காலங்களிலும் அமைதியையே விரும்பினர்.
இப்போதும் கூட நாம் வீழ்ந்துவிடவில்லை. எத்தனையோ தடைகளைத் தாண்டி வந்திருக்கிறோம். பல துறைகளில் வெற்றியும் பெற்றிருக்கிறோம். நமது ஒவ்வொரு வெற்றிக்கும் நாமே காரணமாக இருந்திருக்கிறோம். யாருடைய உதவியும் இல்லாமல் பல தடைகளைத் தகர்த்தெறிந்திருக்கிறோம். அரசாங்கம் கோடிக்கணக்கில் தொழில் செய்பவர்களுக்குப் பண உதவிகள் செய்தாலும் அது என்னவோ அரசியல்வாதிகளுக்குத் தான் போய்ச் சேருகிறது!
ஆக, இந்த வெற்றிகள் எல்லாம் எப்படி நிகழ்ந்தது? நாம் தொழில் செய்ய வேண்டும் என்கிற முயற்சி நம்மிடம் எப்போதும் உண்டு. தோட்டப்புறங்களில் அடிமை வாழ்க்கை தான். ஆனால் அங்கும் சிறு சிறு வியாபாரங்கள் நடந்து கொண்டு தான் இருந்தன. காலை நேரத்தில் பசியாறல், பசும்பால், நெய் விற்பனை, வீட்டிலிருந்தே மளிகைக்கடை வைத்து நடத்துதல், ஆடு மாடு விற்பனை, ஆட்டிறைச்சி, காட்டுப்பன்றி இறைச்சி விற்பனை, தையல் நிலையங்கள் - இவைகள் எல்லாம் நடந்து கொண்டு தான் இருந்தன. பட்டணங்களில் இருந்த ஆரவாரம் இங்கில்லை என்றாலும் எல்லாம் அமைதியாக வியாபாரங்கள் நடந்து கொண்டு தான் இருந்தன.
நமது வியாபார சிந்தனை என்பது நமது இரத்தத்தில் ஊறிப் போனது. அது எங்கோ ஒரு மூலையில் நம்மோடு ஒளிந்து கொண்டு தான் இருக்கிறது. தேவை எல்லாம் ஓரு தூண்டுதல், நாலு நல்ல வார்த்தைகள், கொஞ்சம் உற்சாகப்படுத்துதல் - இவைகள் தான் இன்றைய இளைய தலைமுறைக்குத் தேவை. குடும்பத்தினரின் ஆதரவு இருந்தால் அதுவே அவர்களுக்கு உற்சாகப்பானமாக அமையும். கணவனுக்கு மனைவி அணுசரனையாக இருந்தால் அது போதும் அவன் சாதனைகள் புரிய!
எப்போதும் ஞாபகத்தில் வையுங்கள். நாம் தாழ்ந்த சமுதாயம் அல்ல. யாருக்கும் இளைத்த சமுதாயமும் அல்ல. நாம் தொழிலில் தோற்ற சமுதாயம் அல்ல. வெற்றி பெற்ற சமுதாயம். இன்றும் வெற்றியை உலகிற்கு அறிவித்துக் கொண்டு தான் இருக்கிறோம். ஆனந்த கிருஷ்ணன், ஞானலிங்கம், டோனி ஃபெர்னாண்டஸ் - இவர்கள் எல்லாம் நம் கண் முன்னே நிற்கும் சான்றுகள். உள்ளூரில் இன்னும் பலர் இருக்கின்றனர். எல்லாமே நமக்கு எடுத்துக்காட்டுகள்.
இவர்கள் எல்லாம் மாபெரும் வெற்றியாளர்கள். அதற்காக பல ஆண்டுகள் உழைத்திருக்கின்றனர். வெற்றி சும்மா வருவதில்லை. உழைப்பு தான் வெற்றி.
அதனால் உங்களால் முடியாது என்று எவனாவது சொன்னால் அவனைப் புறந்தள்ளுங்கள். உங்கள் வட்டத்தில் அவனைச் சேர்க்காதீர்கள்! அவன் ஆபத்தானவன்.
கடைசியாக ஒன்று சொல்லுகிறேன். நாம் யாருக்கும் தாழ்ந்தவர்கள் அல்ல. நாம் பலவீனமானவர்கள் அல்ல!
நாம் வெற்றியாளர்கள்!
Monday, 12 April 2021
எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி.......! (28)
நாம் பார்வையாளர்கள் அல்ல!
நாம் எல்லாக் காலங்களிலும் சீனர்களின் முன்னேற்றத்தைக் கண்டு ஆச்சரியம் அடைந்திருக்கிறோம். அதிசயப்பட்டிருக்கிறோம்.ஆனால் ஒன்றை நாம் மறந்து விட்டோம். சீனர்களின் தொழில் முன்னேற்றத்தைக் கண்டு ஆச்சரியமடைகிறோம் அல்லது அதிசயம் அடைகிறோம், எல்லாமே சரி தான். ஆனால் நாம் அவர்களைப் போல ஏன் அந்த அதிசயத்தைச் செய்ய மறுக்கிறோம்? அது தான் எனக்குப் புரியவில்லை!
சீனர்கள் நம் கண் முன்னே சாதனைகள் புரிகிறார்கள் என்பதில் கருத்து வேறுபாடில்லை. ஆனால் அதனையே ஏன் நாம் ஒரு பாடமாக எடுத்துக் கொள்வதில்லை?
இதோ ஒரு பாடம்: தோட்டமொன்றுக்கு சீனர் ஒருவர் வருகிறார். அவரிடம் உள்ளது எல்லாம் அவருடைய பழைய சைக்கிள் வண்டி, கையில் ஒரு உளி. அவருக்குத் தெரிந்த ஒரே திறன் என்பது அந்த உளியைக் கொண்டு மரக்கன்றுகளுக்கு ஒட்டுக் கட்டுவது.
அதற்காகத்தான் அவர் அந்த தோட்டத்திற்கு வந்திருந்தார். பார்ப்பதற்கு ஏதோ பாவப்பட்ட மனிதர் போல இருப்பார். நல்ல மனிதராகவும் இருந்தார். தொடர்ந்து அந்த வேலையைச் செய்து கொண்டிருந்தார். அவருடைய வேலை மேலிடத்திற்குத் திருப்திகரமாக அமைந்தது. வேலை முடியும் தருவாயில் அவர் பால் மரம் சீவும் குத்தகையை எடுத்தார். இப்போது "கான்ரேக்டர்" உயர்வு கிடைத்தது. பிறகு அந்த தோட்டத்திலேயே அவருக்கு வியாபாரம் செய்ய மளிகைக்கடை ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டது. எல்லாமே சீராக ஓடிக் கொண்டிருந்தது.
அவருக்கு நான்கு ஆண் பிள்ளைகள். அதில் மூன்று பேர் சொந்தமாக பெட்ரோல் விற்பனை நிலையம் வைத்து நடத்தினார்கள். பின்னர் பல்வேறு தொழில்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள்.அதில் ஒருவர் சிறிய ரப்பர் தோட்டம் வாங்கி சொந்தமாகவே தொழிலைச் செய்கிறார்.
ஆனால் கதை பேசும் கில்லாடிகளான நமது மக்கள் அதையே சொல்லிச் சொல்லி ஏதோ ஒரு நகைச்சுவையாக பேசுவதைத் தவிர அதை ஒன்றும் பாடமாக எடுத்துக் கொள்ளவில்லை. காலங்காலமாக தோட்டத்தில் வேலை செயூம் நம்மவர்களுக்கு உளி என்பது புதிதா அல்லது ஒட்டுக்கட்டுவது என்பது புதிதா? ஆனால் ஒட்டுகட்டத் தெரியவில்லை!
முதல் தலைமுறை உளியோடு வந்தது. அடுத்த தலைமுறை பலவித தொழில்களுக்குத் தன்னை மாற்றியமைத்துக் கொண்டு நகர் பக்கம் நகர்ந்துவிட்டது. நாம்? முதல் தலைமுறை, அடுத்த தலைமுறை இன்னும் அடுத்த தலைமுறை - பால்வெட்டு, பால்வெட்டு வேறு எதுவும் தெரியவில்லை! தோட்டமே கதி!
நம்மைச் சுற்றியே நமக்கு நிறைய பாடங்கள் இருக்கின்றன. நாம் எதையுமே கற்றுக் கொள்ளவில்லை. ஓர் அடிமை வாழ்க்கைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவனால் அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்துவது என்பது எளிதல்ல!
ஆம்! நாம் பார்த்துக் கொண்டே இருந்தது போதும்! எல்லாக் காலங்களிலும் பார்வையாளர்களாக இருந்தது போதும். பார்த்தது போதும். இனி செயலில் இறங்குவோம்!
Sunday, 11 April 2021
எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி...........! (27)
Saturday, 10 April 2021
எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி ..........! (26)
இளைஞர்களே! கனவு காணுங்கள்!
இளைஞர்களே! கனவு காணுங்கள்!
நீங்கள் சாதாரணமாக அனுதினமும் காண்கின்ற கனவுகள் அல்ல. மேதகு அப்துல் கலாம் சொன்னது போல கனவு காணுங்கள்.
கனவுகள் வந்து போகும். நீங்கள் தூங்கும் போது வருவது கனவுகள் அல்ல. நீங்கள் காணுகின்ற கனவுகள் உங்களை விட்டு எந்த நிமிடமும் அகலக் கூடாது. அது தான் கனவு. உங்களைத் தூங்க விடாமல் சுற்றிச் சுற்றி உங்களை இலட்சியத்தை நோக்கி விரட்டியடித்துக் கொண்டிருப்பதான் கனவு.
தொழிலில் ஈடுபட்டவனுக்கு எது பெரிய கனவாக இருக்கும்? செய்கின்ற தொழிலில் மேம்பாடு காண வேண்டும் என்பது சராசரி கனவு. ஆனால் அதைவிட மேலே உயரே பார்க்க வேண்டும்.
மேகங்களுக்குக் கீழே பறப்பது குருவிகளின் தன்மை. அதற்கு மேலே அவைகள் யோசிப்பதில்லை. ஆனால் இராட்சத பறவையான கழுகு மேகங்களுக்கு மேலே பறப்பதில் சுகம் காண்கின்றது. அது இவைகளின் தன்மை.
தொழில் செய்பவர்கள் முதலில் உங்கள் மாவட்டத்தில் உங்களின் நிலை என்ன என்று பாருங்கள். அடுத்து உங்கள் மாநிலத்தில் உங்களின் வளர்ச்சி எப்படி என்று பாருங்கள்.
நாம் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் விதி. ஆனால் நாம் யாருடனும் போட்டி வேண்டாம். போட்டி என்பது பொறாமையில் முடியும். அதுவும் தொழிலில் என்பது மிகவும் மூர்க்கமாக அது நம்மை நகர்த்திக் கொண்டு செல்லும்.
இன்று நாட்டில் மிகப் பெரிய பணக்காரர்கள் என்றால் இந்தியர்களில் இரண்டு மூன்று பேர் நமது ஞாபகத்திற்கு வருகிறார்கள். ஆனால் இவர்கள் யாருடனும் போட்டி போடவில்லை. தாங்கள் தேர்ந்தெடுத்த தொழிலில் அவர்கள் தங்களை வளர்த்துக் கொண்டார்கள். இன்னும் வளர்கிறார்கள்.
இளைஞர்களே! கனவு காணுங்கள். அது நீங்கள் செய்கின்ற தொழிலில் வளர வேண்டும், உச்சத்தைத் தொட வேண்டும் என்கிற கனவாக இருக்கட்டும். போட்டிகள் வேண்டாம். யார் மீதும் பொறாமை வேண்டாம்.
இந்த உலகில் ஒவ்வொருவரும் தங்கள் உச்சத்தை தொடர வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன. யாரும் யாருடைய உரிமைகளையும் பறித்து விட முடியாது. தேவை எல்லாம் முயற்சி, உழைப்பு மட்டுமே.
இளைஞர்களே! கனவு காணுங்கள்! தொழிலதிபர் என்கிற கனவு காணுங்கள். உங்களால் இந்த சமுதாயம் பயன் அடைய வேண்டும் என்று கனவு காணுங்கள்.
வாழ்த்துகள்!
Friday, 9 April 2021
எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி.........! (25)
சுதந்திரம் என்பது தான் தொழில்!
நீங்கள் என்ன தான் பெரிய சம்பளம் வாங்கி பெரியதொரு நிறுவனத்தில் பதவியில் இருந்தாலும் உங்களுடைய நிலை என்ன?முதலில் நீங்கள் சுதந்திரமாக இயங்க முடியாது! உங்களுக்கு மேலே ஒருவன், அவருக்கு மேலே ஒருவன் - இந்த அடுக்கு இப்படித்தான் போய்க் கொண்டிருக்கும்! முடிந்ததெல்லாம் ஏதோ கீழ்மட்ட அப்பாவி ஒருவனை ஆட்டிப் படைக்க முடியும். அதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது!
ஒரு சிறு வியாபாரியாக இருந்தாலும் அவனுடைய நிலை என்ன? நிச்சயமாக அவன் உங்களை விட சுதந்திரமாக இயங்குகிறான்! அவன் எடுக்கும் முடிவு அவனுடையது. யாரும் அவனைக் கட்டுப்படுத்த முடியாது! இரவல் மூளையை அவன் கடன் வாங்கவில்லை! நல்லதோ, கெட்டதோ அவனுடைய முடிவு அவனுடையது!
இது தான் வியாபாரத்திற்கும் வேலை செய்வதற்கும் உள்ள வித்தியாசம்.
இங்கு நாம் வெறும் சுதந்திரத்தை மட்டும் பேசவில்லை. அந்த சிறு வியாபாரம் செய்கின்ற ஒருவர் நாளையே தனது தொழிலை பெரியதொரு வியாபாரமாக மாற்றி அமைக்க முடியும். அது அவருடைய முயற்சியைப் பொறுத்தது. இன்றைய ஒரு சிறிய வியாபாரி நாளையே நாடு போற்றும் பெரும் தொழில் அதிபராக மாற முடியும். அது அவருடைய உழைப்பு, எதிர்காலத் திட்டம் போன்றவை தீர்மானிக்கும்.
நாடு போற்றும் தொழில் அதிபர் டான்ஸ்ரீ வின்சன் டான் கையில் பணம் இல்லாத நிலையில் காப்புறுதி நிறுவனத்தில் ஒரு முகவராக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அங்கு கிடைத்த வருமானத்தைக் கொண்டு உணவகத் தொழிலுக்கு மாறினார். அதன் பின்னர் பல மாறுதல்கள், பல முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கொண்டு இன்று இந்நாடு போற்றும் தொழில் அதிபராக தன்னை மாற்றிக் கொண்டார்.
இப்படி பிரமாண்டமான மாற்றங்கள் வியாபாரங்களில் ஈடுபட்டவர்களால் தான் கொண்டு வர முடியும். வேலை செய்பவர்களால் ஒரு போதும் இந்த உச்சத்தை எட்ட முடியாது. ஏர் ஏசியா, டான்ஸ்ரீ டோனி ஃபர்னாண்டஸ், துணிந்து விமானத் துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாதிருந்தால் அவர் தான் படித்த கணக்கியல் துறையோடு தான் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்க வேண்டும்! ஆனால் இன்று நாடு போற்றும் ஒரு தொழில் அதிபராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தொழிலில் உங்களுக்குச் சுதந்திரமும் உண்டு. நீங்கள் எப்படி வாழ வேண்டும் என்கிற வழிகாட்டுதலும் உண்டு. சிறிய அளவிலும் உங்களை இணைத்துக் கொள்ளலாம். பெரிய அளவிலும் உங்களை வளர்த்துக் கொள்ளலாம். உங்களுக்குப் போதும் என்றால் நிறுத்திக் கொள்ளலாம். உங்கள் இலக்கை நீங்களே நிர்ணயித்தும் கொள்ளலாம்.
இது தான் தொழில்! சுற்றித்திரிய சுதந்திரமும் உண்டு! சுற்றும்வரை சுகங்களும் உண்டு!
Thursday, 8 April 2021
எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி..........(24)
யார் அதிகம் கஷ்டப்படுகின்றனர்?
கோவிட்-19 காலத்தில் அதிகம் சிரமத்திற்குள்ளானவர்கள் உள்ளாகிறவர்கள் யார் என்று பார்த்தால் வேலை செய்து பிழைப்பவர்களே அதிகம்.
வேலை செய்து பிழைப்பவர்கள் என்னும் போது கீழ்த்தட்டு மக்கள் மட்டும் அல்ல மேல்தட்டு மக்கள், நடுத்தரத்தட்டு மக்கள் அனைவருமே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எல்லாருமே வேலை செய்து பிழைக்கும் மக்கள். காரணம் மாதம் முடிந்ததும் சம்பளம் கிடைத்து விடும். இப்போது அனைத்தும் நின்றுவிட்டன! வேலை இல்லை! தொழிற்சாலைகள் பல மூடப்பட்டுவிட்டன. வெளிநாட்டு நிறுவனங்கள் மூட்டைக் கட்டுகின்றன. உள்நாட்டு நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கருணை காட்டும்படி கண்ணைக் கசக்குகின்றன! ஒரு பொறுப்பற்ற அரசாங்கத்திடம் நம்மை ஒப்படைத்துவிட்டோம்! பலனை அனுபவிக்க வேண்டியது நமது கடமையாகி விட்டது!
ஆனால் சீனர்கள் அப்படி ஒன்றும் கடைகளைச் சாத்திவிட்டு ஓடிவிடவில்லையே! பெரிய நிறுவனங்கள் ஒரு வேளை பாதிக்கப்பட்டிருக்கலாம் ஆனால் நடுத்தர நிறுவனங்கள் பெரிய பாதிப்பை எதிர்நோக்கவில்லை! என்னதான் ஊரடங்கு என்று சட்டம் போட்டாலும் வீட்டில் சமைக்க வேண்டியுள்ளதே! சீனர்கள் தங்களது நிறுவனங்களை மூடிவிட்டு ஓடினால் சமைப்பது எப்படி? ஆனால் மலேசியர்களான நாம் அதிர்ஷ்டசாலிகள். சீனர்கள், மலாய்க்காரர், இந்தியர் - அனைத்து இனத்தவரின் மளிகைக் கடைகள் திறந்திருப்பதால் மக்கள் பொருள்கள் வாங்குவதில் சிரம்பப்படவில்லை. ஆனால் பொருள்கள் தாரளமாகக் கிடைப்பது என்னவோ சீனர்களின் கடைகளில் தான்.
இங்கு நான் சொல்ல வருவது எல்லாம் தொற்று நோயினால் அதிகப் பாதிப்பு என்பது வேலை செய்து பிழைக்கும் அனைத்துத் தரப்பினருக்கும் தான். ஆனால் வியாபாரத்தில் உள்ளவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. எப்படியோ அவர்கள் அவர்களைக் காப்பாற்றிக் கொள்ள பல வழிகள் உள்ளன. பணம் தான் பிரதானம் என்றால் அதனை அவர்கள் புரட்டிக் கொள்ள முடியும்!
ஆனால் வேலையில் இருக்கும் கீழ்மட்டத்தினரின் நிலை என்ன? சொற்ப ஊதியத்தில் குடும்பத்தை நடத்தும் இவர்கள் என்ன தான் செய்வார்கள்? தினசரி சாப்பாடு, பிள்ளைகள், கல்வி - இப்படி பல அன்றாடக் கடமைகள் இருக்கின்றன. நல்ல வேளை இன்று பல நிறுவனங்கள் ஏதோ ஒரு வகையில் மக்களுக்கு உதவியாக இருக்கின்றன. பட்டினி கிடந்து ஏதேனும் மரணங்கள் நேர்ந்ததா என்கிற விபரங்கள் நம்மிடம் இல்லை. அதனையும் எளிதாக மறைத்துவிடுவார்கள்!
எப்போதும் யாரையும் நம்பி இருக்காதீர்கள். வேலை, வேலை என்று அலையாதீர்கள். சிறு சிறு தொழில்கள் ஈடுபட்டாலும் நம்மால் பிழைத்துக் கொள்ள முடியும் என்பதை இந்த கொரோனா தொற்று காலத்தில் நாம் நேரடியாகவே பார்க்கிறோம்.
நிச்சயமாக சிறு தொழில்கள் உங்களுக்குக் கைக்கொடுக்கும். காலம் புராவும் உங்களுக்குக் கைக்கொடுக்கும். உங்கள் உயர்வுக்கு வழி வகுக்கும்.
Wednesday, 7 April 2021
எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி...........! (23)
பாதுகாப்பு என்பது எந்த வேலையிலும் இல்லை!
பாதுகாப்பு என்பது நாம் செய்யும் எந்த வேலையிலும் இல்லை என்பதை இப்போது கண்கூடாகப் பார்க்கிறோம். அதுவும் குறிப்பாக இந்த கோவிட்-19 தொற்று நோயின் காலத்தில் நாம் என்ன அவஸ்தைப்படுகிறோம் என்பதைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.ஒருவர் விமான ஓட்டுனர் ஆக வேண்டும் என்றால் அதன் படிப்பு, அதன் செலவு என்பதெல்லாம் நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. அப்படிப்பட்ட நிலையில் ஒரு இளைஞர் தொற்று நோய் காலத்தில் தற்கொலை செய்து கொண்டார். அதே வேலையில் இருந்த இன்னொரு மலாய் இளைஞர் சொந்தமாக சிறிய வணிகத்தில் ஈடுபட்டு பலகாரங்கள், மீ கோரெங் போன்றவற்றை விற்று தனக்கென ஒரு வழியைத் தேடிக் கொண்டார். விமானப் பணிப்பெண்ணாக இருந்த ஒருவர் வீட்டிலிருந்து கொண்டே கடைகளுக்குப் பலகாரங்கள் செய்து விற்பனை செய்து வருகிறார். நமது பெண்களில் பலர் தங்களது மோட்டார் சைக்கிள்களில் வலம் வந்து பத்தாய் காய், கீரை வகைகள் போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றனர். தேநீர் விற்கின்றனர். இன்னும் பல.
ஒர் உண்மையை இப்போது நாம் புரிந்து கொள்ள வேண்டும். வேலையை இழக்கும் காலக் கட்டத்தில் சிறிய வணிகங்கள் நமக்கு அரணாக இருக்கும் என்கிற உண்மை இப்போதும் சரி எப்போதும் சரி நமக்குப் பாடத்தைப் புகுட்டுகின்றன என்பது நமக்குத் தெரிகிறது.
என்னைக் கேட்டால் இதுவே சரியான தருணம். இப்போது நீங்கள் செய்கின்ற சிறு வணிகங்கள் உங்களின் பொருளாதாரத்தை உயர்த்துகிறதா? அப்படியென்றால் அதை நிறுத்த வேண்டிய அவசியமில்லை. தொடருங்கள். இன்னும் உங்களின் வருமானத்தைக் கூட்ட முயற்சி செய்யுங்கள்.
எப்போதும் ஒன்றை நினைவிற் கொள்ளுங்கள். ஒரு தொழிற்சாலையில் வேலை செய்வதை விட இன்று நீங்கள் செய்கின்ற இந்த சிறு வணிகம் உங்களின் கௌரவத்தைக் கூட்டும். இன்னும் ஒரு படி மேலே போனால் அந்த தொழிற்சாலை முதலாளியின் ஒப்பிடும் அளவுக்கு நீங்களும் ஒரு தொழில் செய்கிறீர்கள் என்பது தான் உண்மை! ஒரே வித்தியாசம். அது பெரிய தொழில், இது சிறிய தொழில். ஆனால் ஆண்டுகள் கூடும் போது நீங்களும் அவர்கள் அளவுக்கு உயரலாம்! காரணம் அது தான் தொழில்! அது தான் வணிகம்! தொழில் உங்களை உயர்த்தும்!
அதனால் பாதுகாப்பு என்பது எந்த வேலையிலும் இல்லை. அப்படி பாதுகாப்பு இல்லையென்பதால் தான் நாம் வேலை செய்கின்ற இடங்களில் போட்டி, பொறாமை, கோள்சொல்லுதல், காட்டிக்கொடுத்தல் - இவைகளெல்லாம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன! இதனால் என்ன ஆகிறது? மனநிம்மதி இல்லை. வேலையில் நாட்டம் செலுத்த முடிவதில்லை. மாதத் தவணைகளைக் கட்டியாக வேண்டுமே என்று தலையலடித்துக் கொண்டு வேண்டா வெறுப்பாக வேலையைத் தொடர வேண்டியுள்ளது. ஆக வேலை செய்து பிழைப்பதிலும் அப்படி ஒன்றும் 'ஆகா, ஓகோ' என்று சொல்லுவதற்கில்லை!
முடிந்தவரை சிறு தொழில்களில் ஈடுபட்டிருந்தாலும் அது நமது தொழில், நமது வருமானம், நமது சம்பாத்தியம், நாம் தான் முதலாளி என்கிற அந்த கௌரவம் நம்மைத் தலை நிமிர வைக்கும். மக்களிடையே நல்ல எண்ணத்தை ஏற்படுத்தும். எந்த நேரத்திலும் தொழிலை வளர்த்தெடுக்க முடியும்.
ஆக, வேலை செய்வது தான் பாதுகாப்பு என்கிற மாயையை உடைத்தெறிவோம்!
Tuesday, 6 April 2021
எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி..........! (22)
குடும்பத் தொழிலாக மாற்றுங்கள்
குடும்பத் தொழிலை தொடர்ச்சியாக அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் தமிழர்களில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரே முன் நிற்கின்றனர்.
தொழில் ஆரம்பிக்கப்படுகின்ற காலக் கட்டத்தில் நாம் ஒருவரே வேர்வையைச் சிந்தி தொழிலை வளர்க்க வேண்டிய நிலையில் இருப்பதில் வியப்பில்லை. அதில் ஒன்றும் மாற்றமில்லை. ஆனால் அப்படி வியர்வைச் சிந்தி வளர்க்கப்பட்ட தொழில் ஒரு தலைமுறையோடு தலைமறையாகி விடுமானால் அதில் எந்தப் பயனுமில்லை.
நான் படித்த, வளர்ந்த நகரை இப்போது திரும்பிப் பார்க்கின்ற போது அதிர்ச்சியைத்தான் காண முடிகிறது. அங்கு தமிழர்களால் வெற்றிகரமாக நடத்தப்பட்ட பெரிய தொழில்கள், நடுத்தர தொழில்கள் அனைத்தையும் காணோம்! மறைந்து போயின!
என்ன ஆயிற்று? அவர்கள் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைத்தார்கள். படித்த பின்னர் வேலைகளுக்குப் போய்விட்டார்கள். காரணம் "நான் பட்ட கஷ்டம் என் பிள்ளைகள் படக்கூடாது!" என்கிற மாபெரும் தத்துவம் அவர்களை முடக்கிப் போட்டுவிட்டது! வேலை செய்யும் அவன் படுகிற கஷ்டம் அவனுக்குத்தான் தெரியும்!
அதே சமயத்தில் சீன சமுதாயத்தைப் பார்க்கிறேன். முதல் தலைமுறை செய்த தொழிலை இப்போது பேரப்பிள்ளைகள் வரை சென்றுவிட்டது. இன்னும் தொடர்கிறது. ஏன் அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் படிக்கவில்லையா? அவர்கள் வெளி நாடு சென்று பெரிய படிப்பை படித்துவிட்டு இப்போதும் அவர்களின் தொழிலைத் தொடர்கிறார்களே!
நான் வளர்ந்த அந்த காலகட்டத்தில் மூன்று நிறுவனத்தினர் மட்டும் இன்னும் தொழில் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒன்று தங்க விறபனையில் உள்ளவர்கள் இன்னொன்று துணிமணி விற்பனை செய்பவர்கள். ஒன்று இஸ்லாமியக் குடும்பம் இன்னொன்று செட்டியார் குடும்பம். இன்னொன்று அழகு பொருள்களை விற்பனை செய்யும் குஜாராத்தி குடும்பம்.மற்றவர்கள் இருந்த அடையாளமே இல்லை! அனைவரும் தமிழர்கள் என்பது தான் இதில் ஆச்சரியம்.
ஒரே வித்தியாசம். அப்போது பார்த்த அவர்கள் யாரும் இப்போது இல்லை. இப்போது புதிய தலைமுறையிடம் தங்களது தொழிலை ஒப்படைத்து விட்டார்கள். தொழில் தொடர்கிறது. இப்போது நடத்துபவர்கள் அனைவரும் படித்த பட்டதாரிகள். தொழிலை இன்னும் விரிவுபடுத்துவதில் தீவிரம் காட்டுகிறார்கள். முதலீடுகளை இன்னும் அதிகப்படுத்துகிறார்கள். இதற்கெல்லாம் படிப்பு தேவை தானே?
நாம் படிப்பு என்பதையே வேறு ஒரு கோணத்தில் பார்க்கிறோம். படிப்பதே வேலை செய்வதற்குத்தான் என்கிற ஒரு மனோநிலையை உருவாக்குகிறோம்! அவர்களோ படித்தால் தொழிலை இன்னும் வெற்றிகரமாக நடத்தலாம் என்கிற மனோநிலையை உருவாக்குகிறார்கள்!
எப்படியோ நாம் செய்கின்ற இப்போதைய தொழில்கள் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்லப்பட வேண்டும். தொழிலை இன்னும் விரிவாக்கம் செய்ய வேண்டும். அது அடுத்த தலைமுறையினரிடம் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட வேண்டும்.
Monday, 5 April 2021
Saturday, 3 April 2021
எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி...........! (20)
ஒரு சில படிப்பினைகள்
எனக்குத் தெரிந்த உறவு முறைகளில் ஒருவரிடம் இந்த அசாத்தியமான குணம் இருப்பதைக் கண்டு அயர்ந்து போனேன்! அவர் பல பேருந்துகள், லோரிகள், உணவகங்களுக்குச் சொந்தக்காரர். அவருடைய ஆரம்பம் என்பது காரில் பின்னால் கய்கறிகளை வைத்துக் கொண்டு வீடு வீடாகச் சென்று வியாபாரம் செய்தவர். அவருடைய வளர்ச்சி என்பது பெருமைப்படத்தக்கது. அந்த வளர்ச்சி சும்மா வந்துவிடவில்லை. கடும் உழைப்பு. உழைக்க அஞ்சாதவர்.
இவரிடம் ஒரு பழக்கம். இவர் தனது வாடிக்கையாளர்களிடம் ஜப்பானியரைப் போல குனிந்து வணங்குவார்! இயற்கையாகவே அவரிடம் அந்த பழக்கம் இருந்தது. ஒரு வேளை ஜப்பானியரைப் பார்த்து அவருக்கு அந்த பழக்கம் வந்ததா தெரியவில்லை! அந்த பணிவை மக்கள் விரும்பினர் என்பது மட்டும் உண்மை. அவ்ருக்கு உயர்வைத் தந்தது என்பதும் உண்மை.
எனது நண்பர் ஒருவர் பல லோரி டேங்கர்களை வைத்திருப்பவர். அவருடைய அந்த டேங்கர்கள் தினசரி ரப்பர் பால் ஏற்றிக் கொண்டு துறைமுகம் செல்ல வேண்டும். சமயங்களில் அவருடைய ஓட்டுனர்கள் தீடீரென்று வேலைக்கு வராமல் போய் விடுவர். நண்பர் களத்தில் இறங்கிவிடுவார். அவரே ஓட்டுனராக மாறிவிடுவார். இது ஒன்றும் அதிசயம் இல்லை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அரசாங்கத்தில் பெரிய பதவியில் இருந்தவர் அவர். அப்படி செய்வது அதிசயம் தானே!
எனது சீக்கிய நண்பர் ஒருவர் தோட்டத்தில் மருத்துவ உதவியாளராக இருந்தவர். அவருடைய தந்தையார் டெக்சி ஓட்டுனராக இருந்தவர். அவர் தந்தையாரின் மரணத்திற்குப் பின்னர் தனது வேலை முடிந்ததும் டெக்சி ஓட்டும் வேலையில் ஈடுபட்டிருந்தார். வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதனையே முழு நேரமாக எடுத்துக் கொண்டார்.
ஒரு சிலருக்கு நாம் எதிர்பார்க்காத சில குணாதிசயங்கள் உண்டு. எதற்கும் அஞ்சுவதில்லை. எதற்கும் பயப்படுவதில்லை. யார் என்ன சொல்லுவார்கள் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. ஊர் என்ன சொல்லும் ஊர் என்ன பேசும் என்பது பற்றி அவர்களுக்குப் பெரிதாகப் படுவதில்லை.
நமது பாதை சரியாக இருந்தால் எல்லாம் சரியானதே!
பார்த்திருக்கிறேன்.
Friday, 2 April 2021
எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி.........! (19)
சிறிய அளவில் செய்வது பாதுகாப்பாக இருக்கும்!
தொழிலை ஆரம்பிக்கும் காலக்கட்டத்தில் முடிந்தவரை முதலீடுகளைக் குறைத்துக் கொள்வது பாதுகாப்பாக இருக்கும். அதுவும் முதல் தலைமுறையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.Thursday, 1 April 2021
எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி..........! (18)
சிறு தொழில்கள் செழிக்க வேண்டும்!
இந்திய இளம் தொழில் முனைவர் மாநாடுதொழில், யார் வேண்டுமானாலும் செய்யலாம். வயது வித்தியாசம் இல்லை. ஏழை பணக்காரர் இல்லை.
யாருக்குத் துணிச்சல் இருக்கிறதோ அவர்கள் தொழில் செய்யலாம். முக்கியத் தேவை என்பது துணிச்சல் தான்.
முதலீடு என்பது தானே முக்கியம் என்று சொன்னாலும் அதற்கும் துணிச்சல் தான் தேவை. கையில் காசு இல்லை அவர் எப்படி தொழில் செய்ய முடியும்?
அதற்கும் நமக்கு முன்னோடிகள் இருக்கிறார்கள்! இன்றும் அது நடந்து கொண்டிருக்கிறது என்பது தான் விசேஷம்!
காலையில் கடன் வாங்குவார்கள். தேவையான பொருள்களை வாங்குவார்கள். வாங்கிய பொருள்களை விற்பனை செய்வார்கள். அதாவது இலாபத்திற்கு விற்பார்கள். அன்று மாலை வட்டியோடு கடனை அடைப்பார்கள். அடுத்த நாள் காலை மீண்டும் கடன், மாலை கடனடைத்து இலாபத்தை எடுத்துக் கொண்டு மீண்டும் அடுத்து நாள் அதே நடைமுறை.
இப்படி வியாபாரம் செய்பவர்கள் ஆயிரக்கணக்கில் நம்மிடையே இருக்கிறார்கள். இப்படியே தொழில் செய்து வெற்றிகரமான முறையில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பல ஆயிரம் பேர் இருக்கிறார்கள். கையில் துட்டு வந்ததும் அவர்களே பிறருக்குப் கடன் கொடுப்பார்கள்! வேண்டியதெல்லாம் அசாத்தியமான துணிச்சல்!
சிறு தொழில் செய்பவர்கள் அதுவும் அன்றாடம் வட்டிக்கு வாங்கி வியாபாரம் செய்யும் இவர்களுக்குத் துணிச்சலைத் தவிர வேறு என்ன முதலீடு தேவை.
எப்படியெல்லாம் வியாபாரம் செய்கிறார்கள், எப்படியெல்லாம் முதலீடுகளைப் பெறுகிறார்கள் என்பதை நோக்கினால் நாம் மலைத்துப் போவோம்!
துணிந்தவனுக்குத் துக்கம் இல்லை என்பார்கள். வியாபாரம் செய்வதே ஒரு துணிச்சல் தான். அதுவும் கையில் காசில்லாமல் வட்டிக்குக் கடன் வாங்கி வியாபாரம் செய்கிறார்களே இவர்களின் துணிச்சலை யாருடன் ஒப்பிடுவது?
ஆக, எல்லாவற்றுக்கும் ஒரு வழி இருக்கின்றது. அதையெல்லாம் நமக்கு முன்பே கண்டுபிடித்து விட்டார்கள்! காசும் பார்த்து விட்டார்கள்! பார்த்துக் கொண்டும் இருக்கிறார்கள்!
ஏற்கனவே கவியரசு கண்ணதாசன் பாடிவிட்டுப் போயிருப்பதை ஞாபகப்படுத்துவதா? "வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்!" அது போதுமே! இன்னும் வேண்டுமென்றால் "துணிந்தவனுக்குத் துக்கம் இல்லை!" என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்!
ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இன்று சிறு தொழில் செய்பவர்கள் தான் நாளை பெரும் தொழில்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். அதற்கான துணிச்சல் அவர்களிடம் உண்டு. பயிற்சி உண்டு. பிரச்சனைகளை எதிர்நோக்கும் ஆற்றல் அவர்களிடம் உண்டு.
சிறு தொழில்கள் செழிக்க வேண்டும். சீனர்கள் ஏன் சிறு தொழில்களைக் கூட விட்டுவைப்பதில்லை? அதிலுள்ள வருமானம் தான். ஓர் அலுவலகத்தில் வேலை செய்பவரின் வருமானத்தையும் ஒரு சிறு தொழில் செய்யும் வியாபாரியின் வருமானத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள். யார் அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்பது புரியும்.
சிறுசோ பெருசோ வியாபாரத்திற்கு ஈடு இணை இல்லை!
Wednesday, 31 March 2021
எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி..........! (17)
கூட்டத்தோடு கும்மாளம் வேண்டாம்!
யாரோ ஒருவர் ஒரு தொழிலைச் செய்கிறார். அவருடைய நல்ல நேரம் உயர்ந்த நிலைக்கு வந்து விட்டார். அது அவருடைய நேரம் என்று சும்மா தள்ளி விட முடியாது. அவருடைய உழைப்பு அதில் போடப்பட்டிருக்கிறது. அவர் வகுத்த செயல்திட்டங்கள் அவர் உயர உறுதுணையாக இருந்திருக்கின்றன. இப்படிப் பல காரணங்கள்.ஆனால் அதைப் பார்த்து ஒருவர் நாமும் அந்த தொழிலுக்குப் போய் பணத்தை அள்ளலாம் என்று போட்டி போட்டால் என்ன ஆகும்? கையில் இருப்பதெல்லாம் ஆகும்! புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொணட கதை எல்லாம் நமக்கு வேண்டாம்!
ஒருவர் ஒரு தொழிலைத் தேர்ந்தெடுக்கும் போது அவர் ஏன் தெர்ந்தெடுத்தார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும். அதற்கு ஒரு காரணம் இருக்கும். அந்த தொழில் அவருக்கு ஏற்றத்தைக் கொடுக்கும் என்பது அவருக்குத் தெரியும். ஏதோ ஒன்று அவருக்கு அப்படிச் சொல்லுகிறது.
பலர் பலவிதமான ஆலோசனைகள் கொடுக்கலாம். நல்லெண்ணமாகவும் இருக்கலாம் அல்லது கெட்ட எண்ணத்துடனும் கொடுக்க வாய்ப்புண்டு. யாரைத் தான் நம்புவதோ என்கிற புலம்பல் வேண்டாம். யாரையும் நம்ப வேண்டாம். தக்கவர்களிடம் சென்று அறிவுரைக் கேளுங்கள். ஆலோசனை கேளுங்கள். தீர விசாரியுங்கள். ஆனால் முடிவு என்பது உங்களுடையதாக இருக்கட்டும்.
ஒருவர் தொழிலைத் தேர்ந்தெடுப்பதில் பல காரணங்கள் உண்டு. பொருளாதாரம் கூட காரணமாக இருக்கலாம். ஒரு குறிப்பிட்ட தொகைக்குள் தொழிலைச் செய்ய கட்டாயம் இருக்கலாம். அதனால் எந்த காரணமாக இருந்தாலும் சரி நீங்களே முடிவு செய்யுங்கள். தொழிலில் எது நேர்ந்தாலும் சரி யாரையும் குற்றம் சாட்ட முயலாதீர்கள்.
ஒரு தொழிலில் பணம் கொட்டுகிறது என்றால் அந்த தொழிலையே இன்னொருவர் செய்யும் போது பணம் கொட்டாமல் போகலாம்! அதைத்தான் நாம் சொல்லுகிறோம். வெறும் பணம் என்பது நோக்கமாக இருக்கக் கூடாது.
ஒருவர் செய்கின்ற தொழிலில் ஆர்வம், அக்கறை இருக்க வேண்டும். அக்கறை இல்லாத தொழில் நம்மவிட்டு அக்கரைக்குச் சென்று விடும்!
அதைத்தான் உளவியளாளர்கள் உங்களுக்குப் பிடித்ததைச் செய்யுங்கள் என்கிறார்கள். பிடித்ததைச் செய்யும் போது நேரங்காலம் தெரிவதில்லை. எல்லாம் கூடி வரும்.
அதனால், அவன் செய்து பணம் சம்பாதித்தான் நாமும் அதையே செய்வோம் என்கிற உங்கள் கிறுக்குத்தனத்தைத் தொழிலில் காட்ட வேண்டாம்! அவரவர் பாதையை அவரவர் தேர்ந்தெடுக்க வேண்டும்!
கும்மாளம் அடிப்பது எளிது! கூத்தும் வேண்டாம்! கும்மாளமும் வேண்டும்! கூடி வாழ்வோம்! கோட்டையைப் பிடிப்போம்!
Monday, 29 March 2021
எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி.............(16)
தொழில் உங்களைத் தனித்துக் காட்டும்
ஆச்சி மசாலா நிறுவனர் - பத்மசிங் ஐசக்
நாம் வேலை செய்வதையே தொழிலாகக் கொண்டு விட்டோம்!
நம்மிடையே ஒரு நாட்டு வழக்கு உண்டு. கோழி மேய்த்தாலும் கும்பனியில் மேய்க்க வேண்டும் என்பார்கள்! அதாவது அரசாங்கத்து வேலைக்கு ஈடு இணையில்லை என்பது அதன் பொருள். இதற்கு ஒரு விளக்கம் சொல்லுவார்கள். அதைக் கேட்பதற்கு ஒரு கூட்டம்! இப்படியே நம் மீது ஒரு கருத்தைத் திணித்து நம்மை அதற்கு அடிமையாக்கி விட்டார்கள்.
ஒரு காலக் கட்டத்தில் வெளி நாடுகளுக்குப் போய் தங்களது தொழிலை கடல் வழியாக அறிமுகப்படுத்தியவர்கள் தமிழர்கள். அந்த அளவுக்கு தமிழர்களின் வாணிபம் கொடிகட்டிப் பறந்தது.
இப்போது வெளி நாடுகளுக்குப் போய் தான் நமது பொருள்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்கிற நிலையெல்லாம் இல்லை. கணினியை வைத்துக் கொண்டே பல காரியங்களைச் சாதித்து விடலாம்.
தமிழ் நாட்டிலிருந்து என்னன்னவோ பொருள்கள் இங்கு வந்து குவிகின்றன. அதே போல நமது நாட்டிலும் உள்ளூரில் தயாராகும் பொருள்களும் ஏராளம். ஒரு சில பொருள்கள் பிற இனத்தவரிடமும் பிரபலமாக விளங்குகின்றன.
இது விளம்பர உலகம். வாய் வழி மூலம் என்பதும் உண்டு. அது தரத்தில் உயர்தரமானவை என்றால் மட்டுமே எடுபடும். விளம்பரம் என்பது மிக விரைவில் மக்களிடம் போய் சேருகின்றன. வாய்மொழியோ அல்லது விளம்பரமோ எல்லாமே தரத்தின் அடிப்படையில் தான் விற்பனை ஆகின்றன.
எது எப்படியிருந்தாலும் இது வணிக உலகம். மேலே நாம் பார்க்கும் மசாலா "கிங்" என்று போற்றப்படும் பத்மசிங் ஐசக் ஏதோ பணக்கார வம்சத்தில் இருந்து வந்தவர் என்று நாம் நினைத்தால் மிக மிகத் தவறு! சாதாரண ஏழைக் குடும்பம் தான். அடித்துப் பிடித்து தனது வாழ்க்கையை வளமாக்கிக் கொண்டார். எல்லாம் கடின உழைப்பு தான். சும்மா எதுவும் வருவதில்லை. உழைக்க தயாராய் இருந்தால் உலகமே நமது கைக்கு வரும்! இன்று பத்மசிங் தொழில் உலகில் தமிழகத்தின் அசைக்க முடியாத மனிதராக வலம் வருகிறார்.
எது அவரைத் தனித்துக் காட்டுகிறது? தொழில் உலகம் தான். இன்று அவருடைய பொருள்கள் இந்தியாவில் மட்டும் அல்ல உலக அளவில் உள்ள இந்தியர்களால் பெரிதும் வரவேற்கப்படுகின்றன. அவருடைய பொருள்களைத் தெரியாதவர்கள் இல்லை என்கிற அளவுக்குப் பிரபலமாக இருக்கின்றன!
அவர் வெறும் பணத்திற்காகவா மதிக்கப்படுகிறார்? இல்லை! அவருடைய சாதனைகளுக்காக போற்றப்படுகிறார்! ஆமாம்! அது சாதனை தான். குறிப்பிட்ட சில பொருள்களை வைத்துக் கொண்டு அவைகளை இலட்சக்கணக்கில் உலகெங்கும் வினியோகம் செய்வது சாதனை தானே!
யாரால் இந்த சாதனைகளைச் செய்ய முடியும்? ஒரு தொழிலதிபரால் தான் செய்ய முடியும்!
தொழிலில் உங்கள் சாதனைகளைக் காட்டுங்கள்! தனித்து நில்லுங்கள்!
Sunday, 28 March 2021
எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி..........! (15)
எல்லாவற்றையும் அனுபவமாக எடுத்துக் கொள்ளுங்கள்
நமது இளைஞர்கள் பலர் தொழில் பயிற்சிக் கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும் போது "ப்ரேக்டிகல்" பயிற்சிக்காக பல நிறுவனங்களுக்கு வந்து சேருகின்றனர். இதில் ஒரு சில இளைஞர்கள் திறமைசாலிகளாக இருக்கின்றனர். பல இளைஞர்கள் ஏதோ பொழுதை போக்குவதற்காக வருபவர்கள்.நமது இளைஞர்கள் பலர் திறமைசாலிகள் என்பதில் ஐயமில்லை. ஒரு சிலர் தான் அக்கறையற்றவர்களாக இருக்கின்றனர்,
நமது இந்திய மாணவர்கள், உண்மையைச் சொன்னால், பன்முகத் திறமைகளைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். ஒரே வருத்தம் அவர்களது திறமையை வைத்து அவர்களால் தங்களது வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக் கொள்ள தவறுகின்றனர்.
பயிற்சி பெற எந்த நிறுவனத்திற்குச் சென்றாலும் சரி மாணவர்கள் பயிற்சியில் முழுமனதோடு தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். பயிற்சி என்பது சாதாரண விஷயம் அல்ல. பயிற்சி உங்களுக்கு நல்லதொரு அனுபவத்தைக் கொடுக்கிறது. வெளி உலகம் எப்படி இருக்கிறது என்பதை உங்களுக்கு உணர்த்துகிறது. என்ன தான் கல்லூரிகளில் படித்தாலும் அது அனுபவத்தைக் கொண்டு வராது. அதற்கு நீங்கள் நிறுவனங்களுக்குச் சென்று தான் பயிற்சி பெற வேண்டும். பயிற்சிகளின் மூலம் தான் ஒரு சில அனுபவங்களைப் பெற முடியும்.
நாம் மாணவர்களுக்குச் சொல்ல வருவதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும் பயிற்சிகளை அலட்சியப்படுத்தாதீர்கள். நீங்க ஒரு வேலையில் சேரும் போது அந்த பயிற்சி உங்களுக்குக் கை கொடுக்கும். பொதுவாக எங்கள் நிறுவனத்தில் எங்களிடம் பயிற்சி பெற்றவர்களையே நாங்கள் வேலைக்கு எடுக்கும் பழக்கம் உண்டு. ஒரு மாணவர் பயிற்சி பெறும் போது அப்பொழுதே அவருடைய குணாதிசயங்களைப் படித்து விட முடியும்.
புதிதாக ஒருவரைத் தங்கள் நிறுவனத்தில் எடுப்பதை விட தங்களிடம் பயிற்சி பெற்ற ஒருவரையே நிறுவனங்கள் விரும்புகின்றன. காரணம் அவர்களுக்கு ஏறக்குறைய அந்த நிறுவனங்களைப் பற்றிய தேவைகளைத் தெரிந்திருக்கும்.
ஒன்றைக் குறிப்பிட வேண்டும். பயிற்சிக்கு வரும் சீன மாணவர்கள் நூறு விழுக்காடு தங்களது ஒத்துழைப்பைக் கொடுக்கின்றனர். இந்திய மாணவர்களும் சரி, மலாய் மாணவர்களும் சரி ஐம்பது விழுக்காட்டினர் தான் நூறு விழுக்காடு ஒத்துழைப்பைக் கொடுக்கின்றனர்.
எல்லாமே அனுபவம் தான். அனுபவம் இல்லதவர்களை நிறுவனங்கள் ஏற்பதில்லை. அதனால் நிறுவனங்களில் கிடைக்கின்ற பயிற்சியைச் சரிவர பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
அனுபவத்தை விட சரியான ஆசான் யாருமில்லை!
Saturday, 27 March 2021
எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி...........! (14)
புத்தகங்களிலும் அனுபவங்கள் கிடைக்கும்
புத்தகங்கள் படிப்பதின் மூலமும் நாம் அனுபவத்தைத் தேடிக் கொள்ளலாம். குறிப்பாக தொழில் அதிபர்களின் வாழ்க்கையைப் படிப்பதால் நல்லதொரு அனுபவம் கிடைக்கும்.வாழ்க்கையில் முன்னேறியவர்கள், குறிப்பாக வியாபாரத் துறையில் முன்னேறியவர்களின் புத்தகங்கள் உங்களுக்கு நல்ல பயன் அளிக்கும்.
அவர்கள் தங்களின் அனுபவங்களை நமக்குக் கொட்டிக் கொடுத்திருக்கிறார்கள். நாம் எதிர்பார்க்காத அனுபவங்களை எல்லாம் அவர்கள் பெற்றிருக்கிறார்கள். தொழில்களில் படு வீழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். படு மேன்மையும் அடைந்திருக்கிறார்கள்.
அடுத்து என்ன என்று தான் அவர்கள் சிந்தித்தார்களே தவிர தொழிலை விட்டு ஓடிவிட வேண்டும் என்கிற சிந்தனை அவர்களுக்கு ஏற்பட்டதே இல்லை! எங்கே தவறு செய்தோம் என்பதைத் தீவிரமாக ஆராய்ந்தறிந்து அந்த தவறுகள் மீண்டும் நிகழாமல் இருக்க உறுதி செய்து கொண்டு மீண்டும் களத்தில் இறங்கினார்கள்.
வெற்றி பெற்ற இந்த தோல்வியாளர்கள் அனைவருமே வெற்றி ஒன்றே தங்களது இலட்சியமாக நினைத்து இயங்கினார்கள். தோல்வி என்பது தற்காலிகம் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்! பதினெட்டு தொழில்களில் தோல்வியடைந்த ஒருவர் தனது பத்தொன்பதாவது தொழிலான ஒரு விற்பனையாளனாக மாபெரும் வெற்றி பெற்றார். வெற்றியாளனாக வலம் வந்த ஒருவர் அனைத்தையும் இழந்து ஓட்டாண்டியாக காலையில் கண் விழிக்கிறார். நாளிதழைப் பார்க்கிறார். வங்கிகளின் வேலை நிறுத்தம்! அது போதும் துள்ளி எழுகிறார். அந்த ஒரு நாளில் பேச்சு வார்த்தைகளை மீண்டும் நடத்தி சரிந்து போன தனது தொழிலைத் தூக்கி நிறுத்துகிறார்!
இதெல்லாம் வெற்றியாளர்கள் மூலம் நமக்குக் கிடைக்கும் செய்திகள். அவர்களின் வாழ்க்கையை நீங்கள் படித்தால் தோல்வி என்பது தற்காலிகம் என்பதை உணர்வீர்கள். எனக்கு இந்த புத்தகங்கள் மிகுந்த உந்துதல்களைக் கொடுத்தன. தொழிலில் நீடிக்க வைத்தன.
நாம் வாழ்க்கையில் ஒவ்வொன்றையும் நல்லது கெட்டது அனைத்தையும் அனுபவித்துத் தான் நாம் முன்னேற வேண்டுமென்றால் அது ஏற்புடையது அல்ல. மற்றவர்களுடைய அனுபவங்களை நம்முடைய அனுபவங்களாக எடுத்துக் கொண்டு - அதனை ஒரு படிப்பினையாக எடுத்து கொண்டு - முன்னேற முயற்சி செய்தல் அவசியம்.
கோடிசுவரரான ஒரு தொழில் அதிபர் தான் செய்து வரும் தொழிலில் அவர் தனது பொருள்களைச் சில்லறை வணிகர்களுக்குக் கடன் கொடுத்தது இல்லை என்கிறார். அதனால் அவருடைய தொழிலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது அவரின் அனுபவம். நமக்கும் அது பொருந்தும். வீட்டுத் தளவாடப் பொருள்களை விற்பனை செய்யும் இங்குள்ள பாக்கிஸ்தானிய வணிகர்கள் நூறு வெள்ளி பொருளை மூன்று மாத தவணையில் நூற்று முப்பது வெள்ளிக்கு விற்கின்றனர். இது ஒரு வியாபார தந்திரம். இதெல்லாம் நமக்கும் அனுபவங்கள்.
அனுபவங்கள் நம்மைச் சுற்றியும் கிடைக்கும். புத்தகங்களிலும் கிடைக்கும். புத்தகங்களில் பெரிய பெரிய கோடிசுவரர்களின் அனுபவங்கள் மிகத் தாராளமாக கிடைக்கும்! அவர்கள் வணிகர்கள் மட்டும் அல்ல. வணிக அறிஞர்கள் என்று கொள்ளலாம்!
Friday, 26 March 2021
எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி...........! (13)
அனுபவத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்
தொழிலில் இறங்கவேண்டும் என்பவர்கள் ஒரளவாவது அனுபவத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சமயங்களில் இது சாத்தியம் இல்லாமல் இருக்கலாம். காரணம் வேலை செய்து கொண்டிருப்பவர்கள் தங்களது ஆர்வத்தின் காரணமாக திடீரென்று தொழிலில் இறங்க வேண்டிய சூழல் உருவாகி இருக்கலாம். அவர்களுக்கு தொழிலில் எந்த அனுபவமும் இல்லை. இவர்கள் என்ன செய்யலாம்?எனக்குத் தெரிந்தவரை நீங்கள் ஈடுபடப் போகும் தொழிலில் அனுபவம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் வேறு வகையான அனுபவங்கள் பெற வாய்ப்புண்டு. அதனையும் ஒரு அனுபவமாக எடுத்துக் கொள்ளலாம். அதாவது ஒன்றுமே தெரியாமல் கால் வைப்பதை விட இந்த அனுபவம் உங்களுக்குக் கைக்கொடுக்க வாய்ப்புண்டு.
அதாவது நேரடித் தொழில்களைத் தான் சொல்லுகிறேன். Insurance, Amway, Avon, Tupperware இப்படி இன்னும் பல நேரடித் தொழில்கள் நாட்டில் உள்ளன. இந்தியர்கள் நடத்தும் பல தொழில்களும் உள்ளன. துணிமணிகள், மருந்து பொருள்கள் போன்றவை. கார் நிறுவனங்கள் அவர்களுடைய கார்களை விற்பதற்கும் விற்பனையாளர்கள் தேவைப்படுகின்றனர். இது போன்ற நேரடித் தொழில்கள் உங்களுக்குப் பயிற்சிகள் கொடுக்கும். மக்களிடம் எப்படிப் பேசுவது, அணுகுவது அனைத்தும் உங்களுக்குக் கிடைக்கும்.
ஒன்றுமே தெரியாதவர்களுக்கு இது போன்ற தொழில்களில் அனுபவங்கள் கிடைக்கும் முதலீடும் கிடைக்கும். நமது நாட்டின் பிரபல கோடிசுவரர் டான்ஸ்ரீ வின்சன் டான் தெரியாதவர் யாருமில்லை. தனது ஆரம்பக் கல்வியை முடித்த பின்னர் முதலில் காப்புறுதி தொழிலில் தான் ஈடுபட்டார். கையில் பணம் இல்லை. பணம் தேவைப்பட்டது. அதனால் காப்புறுதி தொழில். அங்கு சம்பாதித்ததை வைத்துத் தான் அவருடைய அனைத்துத் தொழில்களும் ஆரம்பமாயின. அவருக்குக் கிடைக்க வேண்டிய ஆரம்பகால அனுபவங்களை இந்த காப்புறுதி நிறுவனம் அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.
ஒரு அனுபவமும் இல்லாமல் மொட்டையாக நிற்பதை விட இப்படி முயற்சி செய்து அனுபவங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். பணமும் கிடைக்கும். அனுபவமும் கிடைக்கும்.
எனக்குத் தெரிந்த இளைஞர் ஒருவர் பழைய கார்கள் விற்கும் ஒரு நிறுவனத்தில் விற்பனையாளராக இருந்தார். சில ஆண்டுகளுக்குப் பின்னர் தொழிலின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொண்டார் அதன் பின்னர் தானே அந்த கார் தொழிலில் ஈடுபட்டு சொந்த நிறுவனத்தை அமைத்துக் கொண்டார்.
அனுபவம் என்பது என்ன? மக்களுடன் பழகுவது தான் பெரிய அனுபவம். வெற்றி தோல்வி என்பதெல்லாம் நம்முடைய மனிதத் தொடர்புகள் மூலம் தான் கிடைக்கின்றன.
அனுபவத்தைத் தேடுங்கள். அதனை உங்களின் உரிமை ஆக்கிக் கொள்ளுங்கள்.
Thursday, 25 March 2021
எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி...........! (12)
மேடும் பள்ளமும் இருப்பதுதான் தொழில்
தொழில் என்றால் என்ன? வேலை செய்தால், மாதம் முடிந்ததும் சம்பளம். தொழில் செய்தால் ஒரு நாள் இருக்கும், ஒரு நாள் இருக்காது. அது தான் தொழில்.எதுவும் சீராக நடைமுறையில் இருக்காது. ஆனால் ஒவ்வொரு நாளும் இவ்வளவு தான் என்கிற ஒரு மதிப்பீடு நமக்கு இருக்கும். அது வந்தாலே நமக்கு ஒரு திருப்தி வந்துவிடும்.
ஆனால் தொழிலில் எந்த நேரத்தில் எது வெடிக்கும் என்பதை நம்மால் ஊகிக்க முடியாது.
இப்போது, இந்த கோவிட்-19 தொற்று காலத்தில், நாம் அணியும் முகக்கவசம் பற்றி எந்தக் காலத்திலாவது யோசித்திருப்போமா? அது பற்றி கவலைப் பட்டிருப்போமா? ஏன், அப்படி ஒரு தொழிலாவது இருக்கிறது என்றாவது நினைத்துப் பார்த்திருப்போமா? ஏதோ டாக்டர்கள் பயன்படுத்துகிறார்கள், சோதனைக் கூடங்களில் பயன்படுத்துகிறார்கள் - அவ்வளவு தான் நமக்குத் தெரியும். தெரிந்திருந்தால் கூட அதை ஒரு எத்தனை நுட்பமான தொழில் என்பதாகக் கூட நமது மண்டையில் ஏறியிருக்காது!
ஆனால் இப்போது இந்த தொற்று நோயின் காலக்கட்டத்தில் அதே முகக்கவசத்தின் நிலை என்ன தெரியுமா? முகக்கவசம் தயாரிக்கும் நிறுவனங்கள் தான் இன்று உலகில் மிகப்பெரிய பணக்காரர்கள். முன்பு ஆடி அசைந்து போய்க் கொண்டிருந்த அந்த தொழிலின் இன்றைய நிலை யாருமே எதிர்பார்க்கவில்லை. உலக பணக்காரர்கள் வரிசையில் அவர்கள் இன்று உயர்ந்திருக்கிறார்கள்! இன்னும் அவர்களின் முகக்கவச தயாரிப்பு நின்றபாடில்லை! தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இப்போதைக்கு நிற்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை! இன்று தயாரிப்பில் அவை தான் உலகில் மிக மிக வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்கள்.
எல்லாத் தொழில்களும் அப்படித்தான். எந்த முன்னேற்றத்தையும் கண்டிராத ஒரு தொழில் எந்த முன்னறிவுப்பும் இன்றி நம்மைத் திணறடிக்கும்! மீண்டும் ஒரு சான்று. நம் நாட்டில் பள்ளிகளில் இயங்களை வகுப்புகள் என்றதும் என்ன ஆயிற்று? இதனை யாரும் எதிர்பார்க்கவில்லை. தூங்கிக் கிடந்த கணினி நிறுவனங்கள் விழித்துக் கொண்டன. நீங்களே பார்த்திருப்பீர்கள். பெற்றோர்கள் கணினிகளை வாங்க என்ன பாடுபட்டார்கள் என்று. இப்போதும் அந்த அலை ஓயவில்லை! புதிதாகவும் கணினி நிறுவனங்கள் ஆங்காங்கே திறக்கப்படுகின்றன.
தொழில் என்றால் இப்படித்தான். ஏற்றம் இறக்கம் என்பதெல்லாம் சாதாரணம்! ஒரு தொழிலில் ஈடுபட்டிருக்கும் போது தீடீரென ஏதாவது ஒரு சுனாமி வரும்! சமயங்களில் நல்லதாகவும் இருக்கும்! கெடுதலாகவும் இருக்கும்!
இப்படியெல்லாம் நடக்கும் என்பது தான் தொழில். பொறுமை பொன்னை அள்ளித்தரும்! சந்தேகமில்லை!
Wednesday, 24 March 2021
எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி.........! (11)
துணிச்சலோடு செயல்படுங்கள்
தொழில் என்றாலே சாதுரியம், துணிச்சல், சமயோசித புத்தி இப்படி சில குணாதிசயங்கள் உண்டு.முதலில் தலையாயது தொழிலுக்கு வந்த பிறகு "போய் வேலை ஏதாவது செய்வோம்!" என்கிற எண்ணத்தை முற்றிலுமாக மறந்து விடுங்கள். அப்படி ஒரு மனநிலை உங்களுக்கு இருந்தால் நீங்கள் தொழில் செய்ய இலாயக்கில்லாதவர்! ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலும் எதற்கும் உதவாது!
சிலநேரங்களில் நமது பொருட்களை மூன்று மாத தவணையில் கொள்முதல் செய்வோம். பணம் கட்ட முடியாத சூழ்நிலை. கையைப் பிசைந்து கொண்டு இருப்போம். என்ன செய்வது? ஒன்றும் புரியாது!
நான் என்ன செய்தேன்? வாரா வாரம் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டிக் கொண்டு வருவேன். இடையிடையே தேவையான பொருட்களையும் வாங்கிக் கொள்வேன். பணம் அவருக்குத் தொடர்ச்சியாகப் போய்க் கொண்டிருக்கும். அதனால் அவரும் அலட்டிக் கொள்ள மாட்டார். நான் "இண்டா வாட்டர்" (Indah Water) நிறுவனத்திற்கு இரண்டாயிரம் வெள்ளி கட்ட வேண்டியிருந்தது. என்ன செய்தேன்? வாரா வாரம் பத்து வெள்ளி அனுப்பி பிரச்சனையை சரி செய்தேன்! மாதா மாதம் டி.என்.பி.யின் மின்சார கட்டணத்தைக் கட்ட வேண்டும். அதனை மாத ஆரம்பத்தில் பாதியும் மாத முடிவில் பாதியும் கட்டுவேன். நான் வாங்கிய கடனைப் பல ஆண்டுகளாகக் கட்ட முடியவில்லை. அதனால் கடிதம் எழுதி அவர்களின் அனுமதி பெற்று மூன்று ஆண்டுகளில் கட்டி முடிக்க அனுமதி பெற்று அதன் படி கட்டி முடித்தேன்.
தொழில் செய்பவர்களுக்கு இப்படியெல்லாம் வரத்தான் செய்யும். நான் ஓடுவதற்குத் தயாராக இல்லை. எதிர்த்து நின்றேன். அவ்வளவு தான்! தொழில் செய்பவர்கள் இதையெல்லாம் தாண்டித் தான் வர வேண்டும். ஒன்று மட்டும் நிச்சயம். நம்மிடம் நேர்மை இருக்க வேண்டும். நான் யாரிடமிருந்தும் தப்பிக்க நினைத்ததில்லை.
நாம் தொழிலை ஆரம்பித்ததும் கொட்டோ கொட்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. தொழில் என்றவுடன் மூன்று நான்கு மாதத்தில் பணத்தைக் குவித்து விடலாம் என்று நினைப்பவர்களும் உண்டு. இவர்கள் ஏதோ ஒரு திட்டத்தோடு வருபவர்கள். "பார்ப்போம்! முடியவில்லை என்றால் மீண்டும் வேலைக்குப் போய் விடுவோம்!". இந்த மனப்பான்மை உங்களைத் தொழிலில் வெற்றியைக் கொண்டு வராது.
தொழில் என்றாலே துணிச்சல் தான். பிரச்சனைகளைச் சமாளிக்கும் திறன் தான். பெரிய அளவில் வங்கிக் கடன்களை வாங்கி பெரிய அளவில் தொழில் செய்கிறார்களே அதெல்லாம் எப்படி முடிகிறது? எல்லாம் ஒரு நம்பிக்கை தான். அசாதாரண துணிச்சல் தான்.
ஆனால் கடனே வாங்காமல் தங்களைப் பெரிய அளவில் தங்களை வளர்த்துக் கொண்டவர்களும் உண்டு. அதற்கு எனது நண்பரே சாட்சி. தனது முதல் கடையில் வந்த வருமானத்தை வைத்தே நான்குக் கடைகளை வாங்கிப் போட்டார். ஒரு கடையை வாடகைக்கு விட்டார். மற்ற கடைகள் அவரது பிள்ளைகள் நடத்துகிறார்கள். அது அசாதாரண துணிச்சல் தானே. கடைசி காலம் வரை ஒரு மோட்டார் சைக்கிளைத்தான் பயன்படுத்தி வந்தார்! அவருக்கு அது போதும்!
துணிச்சலோடு செயல்படுங்கள். தொழில் என்றால் இன்னும் அதிகமான துணிச்சலோடு செயல்படுங்கள். வெற்றி தானாக வரும்!
Tuesday, 23 March 2021
எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி.........! (10)
தொழிலில் தோல்வி என்பதே இல்லையா?
தொழிலில் தோல்வி என்பது இல்லையா? அப்படி சொல்ல முடியாது. அதுவும் தொழிலில் இறங்கும் முதல் தலைமுறையினர் தோல்வியைச் சந்தித்துத் தான் ஆக வேண்டும்.இது உங்களுக்கு மட்டும் அல்ல. அனைவருக்கும் பொருந்தும். அதுவும் முதல் தலைமுறை வணிகர்களுக்கு இது மிகவும் பொருந்தும். நான் தோல்வியே அடையவில்லை என்று சொல்லக்கூடிய துணிச்சல் யாருக்கும் இல்லை.
ஆனால் இவர்களைத் தோல்வியாளர்கள் என்று சொன்னாலும் அவர்கள் தங்களைத் தோல்வியாளர்களாக ஏற்றுகொள்ளவில்லை என்பதைத் தான் இங்கு நான் குறிப்பிட வேண்டும். தோல்விகளை எப்படி சரிசெய்வது என்பதில் தான் கவனம் செலுத்தினார்களே தவிர தொழிலை விட்டு ஓடிவிட வேண்டும் என்று அந்த நேரத்திலும் அவர்கள் யோசிக்கவில்லை. அதனால் தான் செட்டியார்களும், தமிழ் முஸ்லிம்களும், குஜாராத்தியர்களும் தொழிலில் கொடிகட்டிப் பறக்கிறார்கள். ஓடுகின்ற எண்ணமே அவர்கள் மனதில் ஏற்படுவதில்லை.
எனக்கு அறிமுகமான முஸ்லிம் நண்பர் ஒருவர் ஒரு மளிகைக்கடை நடத்தி வந்தார். அது ஒரு பாதிக் கடை. தொழில் பிரமாதம் என்று சொல்லுவதற்கில்லை. ஆனால் தொழில் நடந்தது. சமயங்களில் நேரடியாகவே பொருள்களைக் கொண்டு போய் கொடுப்பார். அந்த கடைக்கு வாடகை. வீட்டுக்கு வாடகை. பிள்ளைகள் படித்துக் கொண்டிருந்தனர். பிள்ளைகளின் கூட்டாளிகளும் வந்து பொருள்களை வாங்குவார்கள். அவருடைய மகள் கடைக்காக வாய் மூலம் தனது பள்ளி நண்பர்களுக்கு விளம்பரம் கொடுப்பார். தொழில் நடந்து கொண்டு தான் இருந்தது. அவர் ஓடவில்லை. ஒளியவில்லை. அவருடைய மகள் வேலைக்குப் போனார். அவர் மூலம் கடைக்கு வியாபார கடன் உதவி கிடைத்தது. கடையைப் பெரிய அளவில் விரிவு படுத்திக் கொண்டார். நாம் துணிந்து நின்றால் தடைகளைத் தகர்த்தெறியலாம் என்பது தான் இதன் செய்தி. குறைவான வருமானமாக இருந்தாலும் தொழிலைப் பாதியிலேயே நிறுத்தி விடாதீர்கள். தொடருங்கள் என்பதுதான் முக்கிய செய்தி. தொடரும் போது தக்க நேரத்தில் தக்க உதவிகள் வந்து சேரும் என்பது தான் விதி.
சீனர்களைப் பற்றி நாம் நிறையவே பேசுகிறோம்.ஆனால் அவர்கள் எத்தகையப் பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மறந்து விடுகிறோம். அவர்கள் தொழிலைச் செய்கிறார்கள். நட்டம் அடைந்தாலோ அல்லது தொழிலை விரிவுபடுத்த வேண்டுமென்றாலோ வங்கிகளை நாடுகிறார்கள். வங்கிகள் உதவுகின்றன. வங்கிகள் சீனர்களுக்குத் தான் உதவுகின்றன இந்தியர்களுக்கு உதவுவதில்லை என்கிற குற்றச்சாட்டு நம்மிடையே உண்டு. அது தவறு.
சீனர்களுக்குத் தொழில் தான் நிரந்திர வயிற்றுப்பிழைப்பு. அதனால் வங்கியில் வாங்கிய கடனை அடைப்பதை முதல் கடமையாக நினைக்கின்றனர். நாமோ தொழிலில் நட்டம் என்றால் தொழிலை மூடிவிட்டு தப்பிக்க நினைக்கிறோம்! பெரும்பாலான இந்தியர்கள் நிலை இது. தொழிலுக்கு நாம் இரண்டாவது இடத்தைக் கொடுக்கிறோம். சீனர்கள் முதலிடத்தைக் கொடுக்கிறார்கள். அதனால் வங்கிகளும் சீனர்களுக்கு முதலிடத்தைக் கொடுக்கின்றன.
தொழிலில் தோல்வி வரும். அடுத்து வெற்றி வரும். தோல்விக்கு அடுத்து வெற்றி தானே! துணிவு தான் முக்கியம். எல்லாம் சரியாகும் என்கிற மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்!
தொழில் செய்ய வருகிறோம். எதற்கு வருகிறோம். நமது பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்பது தான் முதல் நோக்கம். அதில் ஏற்றம் இறக்கம் இருக்கத்தான் செய்யும். வெற்றி தோல்வி வரத்தான் செய்யும். ஏன் தோல்விக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? வெற்றி வரும் என்று நினைத்து செயல்படுவோமே!
Monday, 22 March 2021
எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி..........! (9)
தொழில் உங்கள் மதிப்பை உயர்த்தும்
தொழில் செய்வது என்பது உங்கள் மதிப்பை உயர்த்தும். சமுதாயத்தில் நீங்கள் தனித்து நிற்பீர்கள்.
வேலை செய்தே பிழைப்பு நடத்தும் ஒரு சமுதாயத்தில் ஒருவர் தொழில் செய்கிறார் என்றால் அவரைத் தட்டிக் கொடுத்து வாழ்த்த வேண்டும். "முதலாளி" என்று அழைத்துப் பெருமைப்படுத்த வேண்டும்.
ஆனால் நமக்கு அந்த மனமில்லை. வாழ்த்தவும் மனமில்லை பெருமைப்படுத்தவும் மனமில்லை! அத்தோடு அவரிடம் பொருள்களை வாங்கவும் மனமில்லை. எங்கே அவன் பணக்காரான் ஆகிவிடுவானோ என்கிற பொறாமை நமக்கு நிறையவே உண்டு. ஆனால் இப்போது அந்த நிலை மாறி வருகிறது என்பதற்காக பெருமைப்படலாம். காரணம் இப்போது அதிகமான இளைஞர்கள் தொழிலில் ஈடுபட வேண்டும் என்கிற நோக்கத்தில் உள்ளனர். அதனால் ஒருவருக்கொருவர் ஆதரவு கரம் நீட்டுவதைக் கடமையாகக் கருதுகின்றனர்.
தொழில் என்று வந்துவிட்ட பிறகு திரும்பிப் பார்க்காதீர்கள். ஆயிரத்தைக் கொட்டிக் கொடுத்தாலும் மீண்டும் பழைய நிலைக்குப் போவதை யோசிக்கவே யோசிக்காதீர்கள்.
தொழிலை ஆரம்பித்துவிட்டால் நீங்கள் முதலாளி என்பதை மறந்து விடாதீர்கள். முதலாளி என்று நினைக்கும் போது உள்ள பெருமை வேறு எதிலும் இல்லை.
தொழில் செய்பவர்களைச் சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். அவர்களுக்கு உள்ள தன்னம்பிக்கை வேறு யாரிடமும் இல்லை. அவர்களிடம் உள்ள சுதந்திரமான போக்கு மற்றவர்களிடம் இருப்பதில்லை.
பலகாரங்கள் விற்பனை செய்யும் ஒரு வியாபாரியை எனக்குத் தெரியும். வடை, உருண்டை, அதிரசம், பக்கோடா - இது தான் அவர் வியாபாரம். எல்லா இனத்தவருமே அவருடைய வாடிக்கையாளர்கள். அவருக்குச் சொந்த வீடு, கார், பிள்ளைகள் கல்லூரி படிப்பு, அனைத்தும் நம்மைப் போலவே, அனைத்தையும் அவர் நிறைவேற்றி விட்டார். அந்த தொழிலில் அவருக்கு எந்த குறையும் இல்லை. அவர் கல்வியறிவு உடையவராக இருந்திருந்தால் அவர் அதனை ஏற்றுமதிக்கும் தயார் பண்ணியிருப்பார்!
அவருக்கு இருக்கும் அந்த துணிவை நான் பாராட்டுகிறேன்.வேலை செய்பவர்கள் போல் தான் அவரும் அந்த தொழிலைச் செய்கிறார். அவர் தொழிலில் அவருக்கு எந்த அழுத்தமும் இல்லை. யாரும் எந்த அழுத்தமும் கொடுப்பதில்லை. யாருக்கும் எந்த பதிலும் சொல்ல வேண்டிய அவசியமில்லை.அவரிடம் ஒரே கொள்கை தான். தொழிலைச் சரியாகச் செய்ய வேண்டும். செய்யும் தொழிலே தெய்வம். அவ்வளவு தான்.
தொழில் உங்கள் மதிப்பை உயர்த்தும். உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும். உங்கள் குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும்.
உயர்த்தும்! உயர்த்தும்! உயர்த்தும்! நம்புங்கள்!
எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி..........! (8)
நமது தொழிலில் நீட்சி தேவை
நம்முடைய குறைபாடுகள் அனைத்தும் நாம் ஒர் தொழிலைச் செய்கிறோம். நம்மோடு அந்த தொழிலை முடித்துக் கொள்ளுகிறோம். இது நமது பெரிய குறைபாடு.
நாம் தொழிலைத் தொடங்கும் போதே ஒரு நீண்ட காலத் திட்டத்தோடு தொழிலைத் தொடங்க வேண்டும். இன்னும் நூறு ஆண்டு காலமாவது இந்த தொழில் நீடீக்க வேண்டும் என்கிற கொள்கையோடு திட்டத்தை வகுத்துக் கொண்டு செயல்பட வேண்டும்.
தொழிலில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும். எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும் தோல்வியைச் சந்தித்துத் தான் ஆக வேண்டும். அதனையெல்லாம் தற்காலிகம் என்று எடுத்துக் கொண்டு நாம் முன்னேற வேண்டும்.
சீன வணிகர்கள் தோல்வியே அடைவதில்லையா? அவர்களுக்கும் அந்த பிரச்சனை உண்டு. ஆனால் அது பற்றி கவலைப்படாமல் எப்படிப் பிரச்சனையைத் தீர்க்க முடியும் என்பதிலே அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள். நாமோ "போய் வேலை செய்யலாமா!" என்று யோசிக்க ஆரம்பிக்கிறோம்! நமது புத்தி வேலை செய்வதிலேயே குறியாய் இருக்கிறது!
நாம் செய்கின்ற தொழிலில் பிள்ளைகளுக்கும் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். பணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும். தொழில் செய்வதன் மூலம் தான் நமது பொருளாதார நிலையை உயர்த்த முடியும் என்பதை அவர்களுக்குத் தெளிவு படுத்த வேண்டும். பெரும்பாலும் நாம் அதனைச் செய்வதில்லை.
நண்பர் ஒருவர் எட்டு லாரிகளை வைத்து தொழில் செய்து வந்தார். தீடீரென ஒரு நாள் மாரடைப்பால் காலமானார். மகன் பெரிய பையனாக வளர்ந்திருந்தான். தந்தையின் பொறுப்பை அவன் ஏற்றுக்கொள்ள முடியாது என்று மறுத்து விட்டான். தொழில் ஒரு சீனருக்குப் பறி போனது. இது தான் நமது நிலை. தந்தை தவறு செய்து விட்டார். இளம் வயதிலேயே தொழிலின் மூலம் என்ன நன்மை, குடும்பப் பொருளாதாரம் எப்படி உயரும் என்று சொல்லி தொழிலில் அவனையும் ஈடுபடுத்திருக்க வேண்டும். அதனை அவர் செய்யவில்லை. ஒரு மாபெரும் தொழில் பிறரிடம் பறி போனது!
தொழிலில் நாம் வளரும் போது நமது பிள்ளைகளையும் அதில் ஈடுபடுத்த வேண்டும். "நான் பட்ட கஷ்டம் என் பிள்ளை படக்கூடாது!" என்று சொல்லுவதைக் கேவலமாக நினைக்க வேண்டும். பிள்ளைகள் கஷ்டப்படக்கூடாது என்று சொல்லியே பல தொழில்களை இழந்தோம்.
நாம் எந்த தொழிலில் இருந்தாலும் நாளுக்கு நாள் நாம் வளர்ந்து வருகிறோம். பிள்ளைகளும் அதோடு சேர்ந்து வளர வேண்டும்.
தொழிலில் ஒரு நீட்சி தேவை. அடுத்த தலைமுறைக்கு நமது தொழில் சென்று சேர வேண்டும்!
Saturday, 20 March 2021
எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி........! (7)
ஏன் அனுபவம் தேவை
அனுபவங்கள் நமது தவறுகளைக் குறைக்கின்றன. தவறு செய்வதைக் சுட்டிக்காட்டுகின்றன.
Friday, 19 March 2021
எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி........! (6)
தொழில் செய்ய அனுபவம் தேவையா?
அனுபவம் தேவை. இல்லையெனில் அனுபவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அனுபவம் தேவையே!
Thursday, 18 March 2021
எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி .............! (5)
இயல்பானது என ஏற்றுக்கொள்ளுங்கள்!
ஒரு செல்வர் வீதியில் போய்க் கொண்டிருக்கிறார். தாகம் தாங்க முடியவில்லை. அதோ அருகே ஒருவர் ஐஸ் விற்றுக் கொண்டிருக்கிறார். போய் வாங்கிக் குடிக்கிறார். தாகத்தைத் தீர்த்துக் கொள்ளுகிறார். கார் நெடுஞ்சாலையில் போய்க் கொண்டிருக்கிறது. தாகம் எடுக்கிறது. ஒரு வியாபாரி இளநீர் விற்றுக் கொண்டிருக்கிறார். இளநீரை வாங்கிக் குடிக்கிறார் அந்த காரில் சென்றவர்.
எல்லாமே இயல்பாக நடந்து கொண்டிருக்கிறது. யார் அவர்! யார் இவர்! என்கிற கேள்வி எழுவதில்லை.
நாமும் இயல்பாகவே இருப்போம். யாரும் நம்மை வித்தியாசமாகப் பார்க்கப் போவதில்லை. சீனர்களே வியாபாரத் துறையை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த போது ஒரு இந்தியரோ, ஒரு மலாய்க்காரரோ வியாபாரம் செய்தால் அது அதிசயமாக இருந்தது. அந்த நிலையில் கூட நமது செட்டியார்களும், தமிழ் முஸ்லிம்களும், குஜாராத்தியரும் வியாபாரம் செய்து கொண்டு தான் இருந்தனர். இன்றைய நிலை என்பது வேறு. வியாபாரம் பரவலாக்கப்பட்டு விட்டது. வாய்ப்புக்கள் அதிகம்.
எந்த ஊர்களுக்குப் போனாலும் செட்டியார்களும், தமிழ் முஸ்லிம்களும், குஜாராத்தியரும் தாங்கள் தொழில் செய்ய வந்தவர்கள் என்கிற அடையாளத்தோடு தான் இருக்கின்றனர். தொழில் செய்வதையே தங்கள் இயல்பாகவே ஆக்கிக் கொண்டனர்.
அவர்களெல்லாம் நமக்கு முன்னோடிகள். வேலை செய்தால் தான் பிழைப்பை நடத்த முடியும் என்று எப்படி நமக்கு இயல்பாகி விட்டதோ, அவர்களுக்கு தொழில் செய்வதே இயல்பான ஒன்றாகிவிட்டது.
வேலை செய்தால் மிச்சம் மீதி உள்ள காலத்தை ஓட்டலாம். தொழில் செய்தால் வாழ்க்கையில் உயரலாம்; வளரலாம்.
வேலை செய்வதை எப்படி நாம் இயல்பான ஒன்றாக ஏற்றுக் கொண்டோமோ அதே போல தொழில் செய்வதையும் இயல்பான ஒன்றாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தொழில் செய்வதை நமக்கு இயல்பானதாக மாற்றிக் கொண்டு நமது முன்னேற்றம் இனி தொழில் தான் அடங்கியிருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்வோம். நமது முஸ்லிம் நண்பர்களுக்குத் தொழில் எப்படி இயல்பாக இருக்கிறதோ அதே போல நமக்கும் அது இயல்பாக இருக்க வேண்டும்.
தொழில் நமக்கு இயல்பானது என்கிற உத்வேகத்தோடு தொழிலில் காலடி எடுத்து வைப்போம்!
Wednesday, 17 March 2021
எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி........! (4)
சிறு தொழில்கள் மாற்றத்தை ஏற்படுத்தும்!
எல்லா தொழில்களுமே சிறிய அளவில் தான் அதன் தொடக்கம் அமைந்திருக்கும். நமது அப்பா அம்பானியாக இருந்தால் ஒரு வேளைத் தொழில் தொடங்கும்போதே கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டலாம். ஆனால் அது தொழிலைத் தமாஷாக எடுத்துக் கொண்டு செய்வது!
அம்பானியின் அப்பா - அவர் தொழிலை ஆரம்பிக்கும் முன்னர் ஒரு பெட் ரோல் பங்கில் வேலை செய்தவர். தொழிலை ஆரம்பிக்கும் போது கையில் கொஞ்சம் பணத்தை வைத்துக் கொண்டு அடக்கமாகத்தான் தனது தொழிலில் காலடி எடுத்து வைத்தார்.
எல்லாத் தொழில்களின் மூலம் என்பது ஒரு சிறிய அளவில் தான். ஏன்? துன் சம்பந்தன் தொடங்கிய தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் ஆரம்பம், ஆளுக்குப் பத்து வெள்ளி, என்று சொல்லித் தான் ஆரம்பிக்கப்பட்டது. இன்று அதன் சொத்து மதிப்பு என்பது கோடிக்கணக்கில்! இது நமது ஒற்றுமையின் அடையாளம்.
தொழில் செய்ய நம்மிடம் உள்ள பணம் அனைத்தையும் கொட்டித் தீர்க்க வேண்டும் என்பதல்ல. ஒரு சிறிய அளவில் தொழிலில் முதலீடு செய்யுங்கள். அதனை வைத்தே தொழிலை வளர்த்தெடுங்கள். சிறிய அளவில் என்னும் போது வருமானம் சிறிய அளவில் தான் இருக்கும். அது பாதகமில்லை. சிறிய வருமானம் என்றாலும் தொழிலில் உள்ள நெளிவு சுளிவுகளைப் படிக்கிறீர்கள். ஒரு தொழிலை நிர்வகிக்கும் திறனைக் கற்றுக் கொள்கிறீர்கள். அது உங்களுக்குத் தன்னம்பிக்கையைக் கொடுக்கும். சுயகாலில் நிற்கும் தகுதியைப் பெறுகிறீர்கள். பயத்தைப் போக்குகிறீர்கள்.
வசதி படைத்தவர்கள் பெரிய தொழில்களுக்குப் போகலாம். நட்டம் ஏற்பட்டால் தொழிலை மாற்றிக் கொள்ளலாம். இது அனைவருக்கும் பொருந்தாது. அந்த அளவு வசதி உள்ளவர்களை வரவேற்கிறோம்.
ஆனால் நமது தேவை அடிமட்டத்தில் உள்ளவர்கள் தொழிலில் ஈடுபட வேண்டும் என்பதே. அதனால் தான் சிறிய தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். அரசாங்கமும் அதனை ஊக்குவிக்கிறது.
சீனர்கள் எந்த அளவுக்கு பெரும் தொழில்களைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்களோ அதே அளவு சிறு தொழில்களையும் அந்த சமூகம் அவர்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.
இன்றைய ஒரு சிறிய தொழில் நாளை ஒரு பெரிய தொழிலாக மாற அதிக வாய்ப்பிருக்கிறது. அப்படித்தான் பல தொழில்கள் மாறி இருக்கின்றன. இன்றைய "மைடீன் பேரங்காடி" பற்றி தெரியாதவர் யாருமில்லை. கிளந்தான், கோத்தபாருவில் ஒரு சிறிய பலகைக் கடையில் விளையாட்டுப் பொருள்கள், பொம்மைகள் போன்றவைகளை வைத்து அவர்களின் தொழில் 1957-ல் ஆரம்பிக்கப்பட்டது. 64 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றைய அதன் வளர்ச்சி பிரமிக்கத்தக்க வளர்ச்சி என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
சிறிய அளவில் முதலீடு செய்து தொழில் தொடங்குவது ஒரு சிலருக்குக் கௌரவ குறைச்சலாக இருக்கலாம். ஆனால் தொழில் என்று வந்து விட்டால் நாணயம் தான் முக்கியமே தவிர நமது கௌரவம் அல்ல. அவர்கள் ஒதுங்கிக் கொள்வதே நல்லது.
தொழில் என்பதே கௌரவம் தான். நமது வாழ்வின் பாதையை மாற்றியமைக்கும் தொழில், சிறியதோ பெரியதோ, ஏற்றுக் கொண்டு செயல்படுங்கள்.
Tuesday, 16 March 2021
எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி......! (3)
சீனர்களால் தான் முடியும்!
தொழில் என்றால் அது சீனர்களுக்கு மட்டும் தான் என்கிற ஒரு கருத்து ஒரு காலக்கட்டத்தில் நிலவியது.இந்தியர்கள் எப்படி மலாயா தோட்டங்களில் வேலை செய்யக் கொண்டு வரப்பட்டார்களோ அதே போல சீனர்கள் ஈய லம்பங்களில் வேலை செய்ய வரவழைக்கப்பட்டவர்கள். அவ்வளவு தான்.
மற்றபடி சீனர்கள் வியாபாரம் செய்ய இங்கு வரவில்லை. ஆனால் ஒன்று கவனிக்கத்தக்கது. அந்த காலக்கட்டத்திலயே நமது செட்டியார்கள் இங்கு தங்களது தொழிலை ஆரம்பித்து விட்டார்கள். வியாபாரத்திற்கான முன்னோடிகள் என்றால் மலேயாவில் நமது செட்டியார்கள் தான்.
ஆனால் சீனர்களின் இன்றைய பொருளாதார வளர்ச்சிக்குப் பல காரணங்கள் உண்டு. அதை நாம் ஆராய வேண்டாம்.
Monday, 15 March 2021
எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி......! (2)
ஏன் பயம் வருகிறது?
எல்லாக் காலங்களிலும் யாருக்கோ ஒருவருக்கு அடிமையாக உழைத்து, உழைத்து நம்மைப் பழக்கப்படுத்திக் கொண்டோம்!மாதம் முடிந்தால் சம்பளம். எப்படிப்பட்ட சம்பளம்? பற்றாக்குறைச் சம்பளம்! அப்புறம் கடன் வாங்க வேண்டும். களைத்துப் போய் உழைத்ததற்குச் சாராயம் அடிக்க வேண்டும்! பற்றாக்குறைச் சம்பளத்திற்காகப் போராட வேண்டும்! தொழிற் சங்கம் வேண்டும்.
இவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் நமக்குப் பயம் வரவில்லை. எப்படியோ ஒரு வருமானம் தடையின்றிக் கிடைத்து விடுகிறது. அது குறைந்த வருமானமாக இருந்தாலும், பற்றாக்குறையான வருமானமாக இருந்தாலும் நமக்கு எங்கிருந்தாவது கடன் கிடைக்கும்! சாராயம் கிடைக்கும்! அப்படி ஒரு வாழ்க்கைக்கு நாம் அடிமையாகி விட்டோம்!
சரி, இந்தப் பக்கம் சீனர்களைப் பார்ப்போம். தினசரி பணம் பார்ப்பவர்கள். அது பற்றாக்குறையாகவும் இருக்கலாம். அதிகமாகவும் இருக்கலாம். அதிரடியாகவும் இருக்கலாம்.ஒரு நேரம் நோகடிக்கலாம்! ஒரு நேரம் கைக்கடிக்கலாம். ஒரு நேரம் தூக்கியடிக்கலாம்! ஒரு நேரம் தூக்கிவிடலாம்! இது தான் தொழில் செய்பவர்கள் அன்றாடம் சந்திப்பவை.
இங்கும் கடன் உண்டு. அது தங்களது தொழிலின் வளர்ச்சிக்கான கடன். கடனை வங்கிகளுக்குச் சரியாக செலுத்தினால் உங்களுக்கு இன்னும் அதிகமாகக் கடன் கிடைக்க வாய்ப்புண்டு. தொழில் வளர வளர நீங்களும் வளரலாம். உங்கள் தொழில் வளர வளர சமுதாயத்தில் உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் உயரும்.
தொழிலில் நீங்கள் உயர முடியும். சாத்தியக் கூறுகள் அதிகம். நீங்கள் கோடிசுவரனாக ஆக முடியாவிட்டாலும் நீங்கள் இலட்சாதிபதி என்கிற அந்தஸ்தோடு தலை நிமிர்ந்து வாழலாம்! அப்படி இல்லயென்றாலும் ஒரு கௌரவமான வியாபாரி என்கிற முத்திரையோடு வாழலாம்.
எப்படிப் பார்த்தாலும் தொழில் செய்பவர்களில் 99% விழுக்காடு வெற்றி பெறுகின்றனர்.
ஆனால் வேலை செய்கின்ற ஒருவரின் நிலை என்ன? என்றென்றும் பற்றாக்குறை பட்ஜெட்டிலேயே வாழ்ந்து செத்துப் போகிறார்! அவர் பிள்ளைகளுக்கும் "உனக்கு நிரந்தர வருமானம்!" என்று அவர் வளர்ந்த பாதையையே காட்டிவிட்டுப் போகிறார்! ஓர் அடிமையாகவே இரு என்கிற பாதை அது!
வேலை செய்வதை நான் குறையாகச் சொல்லவில்லை. ஆனால் தொழில் செய்வதில் ஒரு சுவராஸ்யம் உண்டு. தினசரி வருமானம் ஒரே விதமாக இருப்பதில்லை. அந்தப் பணத்தை எப்படி கையாள வேண்டும் என்பதை நாமே முடிவு செய்ய வேண்டும். வாடகை தர வேண்டும், பொருள்கள் வாங்க வேண்டும். அவைகளை விற்பனைப்படுத்த வேண்டும். சம்பளம் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பன போன்ற ஒவ்வொன்றையும் கணக்குப் பண்ணி செலவு செய்ய வேண்டிய சூழல் வரும்.. ஒரு முதலாளிக்கு உள்ள அத்தனை தன்மைகளையும் நாம் வளர்த்துக் கொள்ளுகிறோம். அது தான் நம்மை தலை நிமிர வைக்கிறது.
அது ஒரு முதலாளி என்கிற பெயரைக் கொடுக்கிறது! நாம் வேலை செய்வதில் மாதம் முடிந்தால் பணம் கிடைக்கிறது. அதில் நமக்கு பயம் இல்லை. ஒரு நிரந்தர வருமானம் இல்லை ஆனால் அந்த மாதச் சம்பளத்தை இங்கே ஒரே நாளில் எடுத்து விடலாம்! அது தான் நமக்குப் பயத்தைக் கொடுக்கிறது!
அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. நாட்டின் பொருளாதாரம் சீனர்களின் கையில் இருக்கிறது. அவர்களிடம் அந்த பயம் இல்லை. அடிமையாக வாழ்ந்த நமக்குத் தான் அந்த பயம் இன்னும் தெளியவில்லை!