Thursday 31 August 2023

சுதந்திர தின வாழ்த்துகள்!

 


                 மலேசியர் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்!


        நாடு சுதந்திரம் பெற்று பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் தமிழர்களாகிய நாம் சுதந்திரத்தை  முழுமையாக அனுபவிக்கிறோமா? 

எல்லா இனமும் தலைநிமிர்ந்து வாழும் போது நாம் எப்போது தலை நிமிரப் போகிறோம்?

ஏன் தலைநிமிர முடியவில்லை? நமக்கு மட்டும் தடைக் கற்களா?தடைக்கற்களை எப்போது தகர்த்தெறியப் போகிறோம்?

கொஞ்சம் சிந்தியுங்கள். தலை நிமிர ஆயிரம் வழிகள் உண்டு. நல் வழியைத் தேர்ந்தெடுத்து  தலை நிமிர்வோம்.


Wednesday 30 August 2023

அரிசி விலை ஏறுகிறது!

 

விலைவாசி ஏற்றம் என்பது நீண்ட நாள்களாக உள்ள பிரச்சனை. இன்றைய அரசாங்கம் அதனைப் பல வழிகளில்  சமாளித்து வருகிறது.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத  ஏற்றம் என்றால் அது அரிசியாகத்தான் இருக்க வேண்டும்.  வெகு விரைவில்  அதன் விலை மலேசியர்களைத் திணறடிக்கும் என்று எதிர்பாக்கலாம்.

அரிசி என்பது மிக மிக அத்தியவாசியமான  பொருள். மலேசியர்களின் அத்தியாவசிய உணவு. ஏழை பணக்காரன் என்கிற பேதம் இல்லை. அனைவருக்கும் பொதுவான உணவு. 

இத்தனை ஆண்டுகள் விலைவாசி ஏற்றம் என்றால் அது ஏற்றம் இறக்கமாக இருக்கும். அதனைத்தான் நாம் அனுபவித்திருக்கிறோம். ஆனால் அரிசி நமக்கு அப்படி ஒரு நிலையை ஏற்படுத்தியதில்லை. அதற்கும் இப்படி ஒரு சோதனையா என்று நினைக்கும் போது  கொஞ்சம் அதிர்ச்சி தான்.

அதுவும் நமது பெண்களை நினைக்கும் போது இன்னும் வருத்தம் தான் அதிகரிக்கிறது.  விருந்துகளில் நாம் கண்களால் பார்க்கிறோம்.  என்ன அலட்சியம். கொஞ்சம் கூட உணவுக்கு மரியாதையே இல்லை.  அப்படியே கொண்டு போய் குப்பைகளில் கொட்டும் பழக்கம் நமது பெண்களுக்கு  எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை. நமது உள்ளம் கூட நொறுங்கிப் போகும். உணவுக்காக ஏங்கும் கோடிக்கான மக்களை நாம் உலகம் எங்கிலும் பார்க்கிறோம்.  ஆனால் நாம் அந்த உணவுக்குக் கொடுக்கும் மரியாதை என்ன?

நாம் எவ்வளவோ சொல்லுகிறோம். ஆனால் அதனை அலட்சியமாகத் தான் பார்க்கிறார்களே தவிர அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. தட்டுகளில் நிறைய அத்தனை வகையறாக்களையும் போட்டு நிரப்பிக் கொண்டு கடைசியில் பாதி கூட சாப்பிடுவதில்லை. அப்படியே குப்பைத் தொட்டிக்குத்தான்  கொண்டு போய் கொட்டுவார்கள்.  சிறு குழந்தைகளுக்கு ஏதோ பெரிய மனிதர்கள் சாப்பிடுவது போல தட்டு நிறைய திணித்துவிட்டு அதுவும் கடைசியில் குப்பைத்தொட்டி தான்  அடைக்கலம்.

ஒரு பெண்மணியிடம் இது பற்றி பேசியபோது  அவர் சொன்ன பதில்: ஆமா, மொய் கொடுக்கிறோம்.  கொஞ்சமா எப்படி சாப்பிடுவது? மொய் காசுக்கு எதையாவது சாப்பிடுணுமே! கொட்டணுமே!   அப்ப தான்  நிம்மதியா இருக்கும்! என்கிறார்.

அரிசி விளைவதற்கு  எத்தனை பேர் உழைக்கிறார்கள். அரிசியை விளைவிக்கும்  அந்த விவசாயிக்குக் கூட சாப்பிட  அரிசி கிடைப்பதில்லை என்பதையெல்லாம் அறியாதவர்களை என்ன செய்வது?

அரிசியின் விலையேற்றம்  ஒரு வேளை அவர்களைத் திருத்தலாம்!

Tuesday 29 August 2023

"மித்ரா"வுக்கு நன்றி!

 

மித்ரா அமைப்பின் தலைவர் டத்தோ ரமணன் நல்லதொரு செய்தியை வெளியிட்டிருக்கிறார்.

மாணவர்களுக்கு,  குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள் பலருக்குப் பரவலாக பயன் அடைந்திருக்கிறனர்.  அது போல பல பாலர்பள்ளிகளுக்கும் உதவிகள் அளிக்கப்பட்டிருக்கின்றன.  மருத்துவ செலவுகளுக்கும் - டைலிஸீஸ் -  நொயாளிகள்  பலர் பயன் அடைந்திருக்கின்றனர். இது இதோடு முற்றுப்புள்ளி அல்ல இன்னும் தொடரும் என எதிர்பார்க்கலாம்.

அனைத்தும் நல்ல நோக்கத்தோடு தான் உதவிகள் அளிக்கப்பட்டிருக்கின்றன.   கலவிக்காக கொடுக்கப்படுகின்ற உதவிகள் அனைத்தும் முதலீடுகள். நமது வருங்கால சந்ததியினரின் முன்னேற்றத்திற்கான முதலீடுகள். எதனையும் குறைத்து மதிப்பிட முடியாது. டைலீஸீஸ்  மருத்துவ செலுவுகள் உயிரைக் காப்பதற்கான செலவுகள். அவசியம் தேவை.

இந்த செலவுகள் அனைத்தும் அவசியம்;  அனாவசியம் என்று சொல்ல இயலாது. ஆனால் சில தயக்கங்களோடு  தான் இந்தக் குற்றச்சாட்டை முன் வைக்கிறேன். ஆரம்ப காலத்திலிருந்தே  "மித்ரா" என்றால் வர்த்தகர்களின் தரத்தை உயர்த்த வேண்டும்  என்கிற நோக்கம் தான் முதன்மையாக  இருந்தது.  அதுவும் சிறு, குறு தொழிலுக்கான  ஒரு வங்கியாக இயங்க வேண்டும் என்பது தான் அப்போது வர்த்தகர்களுக்கு  வாக்குறுதி அளிக்கப்பட்டது. 

ஆனால் இப்போது அது பற்றி டத்தோ ரமணன்  வாய் திறப்பதில்லை. ஒரு பக்கம் சிறு தொழில் செய்வோரை "மித்ரா" அலட்சியப்படுத்துகிறது என்று கூட சொல்லலாம்.  இப்போதும் பலர் கேள்வி எழுப்பிக் கொண்டு தான் இருக்கின்றனர்.   நம் இளைஞர்கள் பலர் சிறு சிறு தொழில்கள்  செய்து கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அவர்களில் பலர் "மித்ரா" வின் உதவியை எதிர்பார்க்கின்றனர். 

ஆனால் இங்குள்ள பிரச்சனை, என்னவென்றால் மித்ரா வெளியே போய், அறிந்து, ஆராயந்து யாருக்கும் கடன் கொடுக்கத் தயாராக இல்லை கடன் தேவைப்படுவோருக்கோ  அவர்களுடைய அலுவலகம்  எங்கிருக்கிறது என்று கூட தெரியவில்லை!  இதையெல்லாம் தெரிந்தும் அவர்கள் மனு செய்யலாம்  என்றால் ஏகப்பட்ட  கெடுபிடிகள்.  ஏகப்பட்ட விண்ணப்பத் தாள்கள். அவைகளை பூர்த்தி செய்யவே சில மணி நேரங்கள் எடுக்கும்! 

இந்த  விண்ணப்பத் தாள்கள் எளிமையாக இருக்க வேண்டும். சீக்கிரத்தில் பூர்த்தி செயவதாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தொழில் செய்பவர்களுக்கான கடன் என்றுமே கிடைக்கப் போவதில்லை. வழக்கம் போல ஏதோ குற்றம் குறைகளைச் சொல்லிக் கொண்டே  போக வேண்டியது தான்.

கடைசியாக, ஒவ்வொரு நாடாளுமன்றத்திற்கும்  ஏன் மித்ராவிலிருந்து  பணம் போக வேண்டும்? அதையும் கொஞ்சம் விளக்கி விடுங்கள். மற்றபடி  இப்போதைக்கு மன நிறைவு தான்!

Monday 28 August 2023

நாம் தமிழர்!

 


பினாங்கு மாநில துணை முதல்வர் பதவியைப்  பற்றி பேசும் போது பல்வேறு கருத்துக்கள் வருவது இயல்பு.

நம்மைப் பொறுத்தவரை அது பினாங்கு மாநில ஜனநாயக செயல் கட்சியின்  உரிமை என்று அக்கட்சியினர் நினைக்கிறார்கள். அதனை அவர்கள் செயலில் காட்டியிருக்கிறார்கள்.   நாம் அது தவறு என்று சொல்லத்தான் முடியுமே தவிர அதனை வலியுறுத்தும் அளவுக்கு அரசியல் வலிமை இல்லை. அது சீனர்களிடம் இருக்கிறது, அவ்வளவு தான்!

ஆனால் ஒரு சிலர் இது பற்றிப் பேசும் போது  நாம் நினைத்துப் பார்க்க முடியாததெல்லாம் பேசுகிறார்கள். அந்தப் பதவி ஒரு மலையாளிக்கோ அல்லது ஒரு தெலுங்கருக்கோ போயிருந்தால்  கூட அதனையும் தமிழர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. நிச்சயமாக அவர்களை நாம் தமிழர்களாக ஏற்றுக்கொள்ள முடியாது.

நண்பர் ஒருவர் தெலுங்கர்களையும், மலையாளிகளையும் தமிழர்களாக  ஏற்றுக்கொள்ளலாம் என்கிறார். அது எப்படி? இன்றைய தமிழ் நாட்டு நிலவரம் அவருக்குச் சாதகமாக இருக்கலாம். ஆனால் அது நிச்சயமாக தமிழர்களுக்குச் சாதகமாக இல்லை. இன்றைய தமிழர்களின் வீழ்ச்சிக்கு  அந்த இரு இனத்தவருமே  முக்கிய காரணியாக இருக்கின்றனர்.

ஏன்? மலேசியாவிலும் அதே நிலை தான். இன்று "மித்ரா" வில் மலையாளிகளே முக்கிய பதவியில் இருக்கின்றனர்.  அது எந்த அளவுக்கு தமிழர்களுக்குப் பயன்படும்?  நிச்சயமாக அவர்கள் மலையாளிகளுக்குத்தான்  முதல் சலுகைக் கொடுப்பார்கள்.தமிழர்கள் அவர்கள் கண்களுக்கு அகப்பட மாட்டார்கள்! கிள்ளான் முன்னாள் எம்.பி. சார்லஸ் சந்தியாகோ வை விட கணபதி ராவ் எப்படி உயர்ந்துவராகி விட்டார்?   நமது மரபு வேறு அவர்கள் மரபு வேறு! ஒரு முறை தமிழனின் பதவி இவர்களிடம் போனால் அதன் பின்னர் அதைத் தமிழன்  மறந்துவிட வேண்டியது தான்.

பஞ்சாபியர் வட இந்தியர் என்று  நாம் சொன்னாலும்  பஞ்சாபியரிடம்  கொஞ்சமாவது ஈவு  இரக்கம் உள்ளவர்கள்.   கர்ப்பால் சிங் குடும்பத்தினரைப் பற்றி எந்த ஒரு  குற்றச்சாட்டும் இதுவரை எழுந்ததில்லை.   குருத்துவாராவில் தான்   வாராவாரம் ஏழைகளுக்கு அன்னதானம் கொடுக்கிறார்கள். இந்தியா, பஞ்சாபில் அவர்களுடைய குருத்துவாராவில் தினசரி ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கும் பழக்கும் உள்ளதாம்.  கடும் உழைப்பாளிகள்.  இந்தியாவிலும் சரி, மலேசியாவிலும் சரி  அவர்களில் ஒரு பிச்சைக்காரனைக் கூட பார்க்க முடியாது என்று சொல்லுகிறார்கள்.  இவர்களை நம்பலாம். நம்பக்கூடிய மனிதர்கள்.

நண்பர் தெலுங்கர்களையும், மலையாளிகளையும்  தமிழர்களாக ஏற்றுக் கொள்ளலாம் என்று சொல்லுவதை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது.  தமிழர்களோடு இவர்களை ஒப்பிடவே முடியாது. தமிழர்களின் வீழ்ச்சியைத் தவிர வேறு எதுவும் இவர்கள் கனவில் கூட வருவதில்லை!

அதனால் நண்பரே! மன்னியுங்கள்! தமிழர்கள் தமிழர்களாகவே இருக்கட்டும்!

Sunday 27 August 2023

இது ஜ.செ.க.வின் தவறு!

 

இப்போது நமது சமூகத்தின் பேசுபொருள்  என்றால் அது பினாங்கு மாநிலத்தில் இரண்டாவது துணை முதல்வர், , ஜக்டீப் சிங் பற்றியான செய்தி. 

முதலில் ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நமது அதிருப்தி என்பது  நமது  சமூகத்திற்கும் ஜக்டிப் சிங் குக்கும் அல்ல. அல்லது தமிழ் சமூகத்திற்கும்  பஞ்சாபியர் சமூகத்திற்கும் அல்ல. அல்லது மற்ற இந்திய சமுகத்தோடும் அல்ல.

இந்தப் பிரச்சனையில் நாம் குற்றவாளி என்று கைநீட்ட வேண்டுமானால்  அது ஜனநாயக செயல் கட்சியின் தலைமத்துவம் தான். அவர்கள் தேவையற்ற ஒரு பிரச்சனையைக் கிளப்பிவிட்டு இப்போது ஒன்றும் தெரியாதவர்கள் போல நமது வாய்ச்சண்டையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். 

ஒன்று தெரிகிறது. நமக்குள்ளயே சண்டை போடுவது அவர்களுக்குக் மகிழ்ச்சியளிக்கிறது. பினாங்கு மாநிலத்தில் கூட இந்தியர்கள் என்று எடுத்துக் கொண்டால்  தமிழர்களே அதிகமாக இருக்கின்றனர். அதுமட்டும் அல்லாமல் துணைமுதல்வர் பதவி தமிழர்களுக்குத்தான்  என்பதும் தமிழர்கள் எதிர்பார்த்த ஒரு பதவி.

முதலாவது துணைமுதல்வர் என்றால் அது மலாய்க்காரர் தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. முதல்வர் பதவி என்றால் அது சீனருக்குத்தான் என்பது எழுதப்படாத விதி. அதே போல இரண்டாவது துணை முதல்வர்  என்றால் அது தமிழருக்குத்தான். அதில்  எந்த வேறுபாடும் இல்லை. அங்கு இந்தியர் என்றாலும் அது தமிழரைத்தான் குறிக்கும். முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்கள் குறிப்பிடுவது போல  அது தமிழருக்கான பதவி என்று உறுதியாகக் கூறுகிறார். அந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட ஹின்ராப் போராட்டத்தின் விளைவு தான் அந்தத் துணை முதல்வர் பதவி. அந்தப் போராட்டம் என்பது தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்.  ஒரு சிலர் பிற சமுகத்தினராக இருக்கலாம். அவர்கள் எல்லாம் அந்தப் போரட்டத்தைப்  பயன்படுத்தி  தங்களை வளர்த்துக் கொண்டார்கள். ஏமாந்தவன் தமிழன் தான்.

இப்படி ஒரு பிரச்சனையை, தமிழர்களுக்கு நெருக்கடியைக் கொடுத்தவர்கள்,  சாட்சாத் ஜனநாயக செயல் கட்சியினர் தான். அவர்களின் போக்கு மாறிவிட்டது.  இப்போது எல்லா மாநிலங்களிலும் தமிழர்களைக்  களையெடுத்து வருவதாகவே தோன்றுகிறது. அதில் முதல் பலி தான் பேராசிரியர்  இராமசாமி அவர்கள். அவரைக் களையெடுத்தால் தமிழர்கள் யாரும் வாய் திறக்கமாட்டார்கள் என்று அவர்கள் நினைத்துவிட்டார்கள.

ஒன்றை அவர்கள் மறந்து விட்டார்கள். தமிழர்கள் அப்படியெல்லாம் வாய்மூடி மௌனியாக இருக்கப் போவதில்லை. அவர்களின் எதிர்ப்புக் குரல் ஒலித்துக் கொண்டு தான் இருக்கும்! வேண்டாமென்றால் அந்தக்கட்சியை ஒதுக்கிவிடுவார்கள். ம.இ.கா. வை என்ன நிலைக்குக் கொண்டுவந்துவிட்டார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாமலா இருக்கும்!

அடுத்து ஜ.செ.க. வாக இருக்கலாம்!

Saturday 26 August 2023

நாட்டில் என்ன நடக்கிறது?

 

நாட்டில், உலகில் என்ன நடக்கிறது, தமிழ் கூறும் நல்லுலகில் என்ன நடக்கிறது என்பதை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.  

அப்படியெல்லாம்  தேவையில்லையே என்று நினைத்தால்  குறைந்தபட்சம் நமது நாட்டில் என்ன நடக்கிறது என்பது பற்றியெல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். நாட்டு நடப்பு என்பது முக்கியம்.

இன்று நாட்டில் பல பிரச்சனைகள் இந்தியர் பிரச்சனைகளாகவே இருக்கின்றன. அல்லது நம்மை நோக்கியே தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.  எதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆசையில்லை  என்றால் நீங்கள் ஆபத்தை நோக்கி நகர்கிறீர்கள்.

உங்களுக்கு நாட்டு நடப்பு தெரிந்தால் நீங்கள் எல்லாவற்றிலும் எச்சரிக்கை உணர்வோடு இருப்பீர்கள். பள்ளிகளில் படிக்கும் உங்கள் வீட்டுப்பிள்ளைகள் ஏதேனும் பிரச்சனைகளை எதிர்நோக்குகிறார்களா என்பதை அவர்களோடு பேசி தெரிந்து கொள்ள வேண்டும்.

நாட்டில் அரசியல் எந்தத்திக்கை நோக்கி நகர்கிறது, நமக்கு யார் வேண்டும், யாரை ஒதுக்க வேண்டும், நமக்கு உதவும் நபர்கள் யார், நம்மை எதிர்க்கும் நபர்கள் - இவர்கள்  தெரிந்தால்  தான் நாம் சரியான நபர்களை  தேர்தல் வரும்போது   தேர்ந்தெடுக்க முடியும்.

எல்லாமே அரசியல் தான். அரசியல் இல்லாமல் எதுவும் நகராது. அதில் நம் பங்கு நிச்சயம் வேண்டும்.  கூட்டம் கூடி தான் அரசியல் பேச வேண்டும் என்பதில்லை. மற்றவர்களோடு  பேசும் போதே நாம் பலவற்றைக் கற்றுக் கொள்கிறோம். தெரிந்து கொள்கிறோம்  அதுவே போதுமானது. நம்முடைய முடிவுகளை நாமே எடுக்க வேண்டும். எவனும் நமக்குப் பிச்சை போட வேண்டாம். பிச்சை போடுபவன் அயோக்கியன் என்று  மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்!

இன்று நம் சமுதாயம் பலவற்றை இழந்து நிற்கிறது.  யார் யாரையோ நம்பினோம்.  அரசாங்கம் பலவற்றைச் செய்தது. ஆனால் எதுவும் பயனிக்கவில்லை.  அரசியல்வாதிகள் நம்மை முச்சந்திக்குக் கொண்டு வந்து விட்டார்கள்.

இதற்குக் காரணம் நாம் அரசியலைப் புரிந்து வைத்திருக்கவில்லை.  சும்மா தலையாட்டிகளைப் போல் 'ஆமாம்' போட்டுக் கொண்டு  அரசியல்வாதிகளை அதிகம் நம்பினோம். அப்போது அப்படி நடந்தது  என்பது  உண்மை தான்.  ஆனால் இப்போது அப்படி அல்லவே! என்று சொல்லாதீர்கள்.  இப்போதும் அதே கதை தான்! யாரையோ ஒருவரை நம்பும் போக்கு இப்போதும் உண்டு. நம்பலாம் ஆனால் ஒருவரை மட்டும் தான் என்று சிந்திக்கும் போக்கு அபாயகரமானது.

நான் ஒன்று சொல்லவா? யாரை நம்பலாம் என்பதை தேர்தல் வரும் போது  பார்த்துக் கொள்ளுங்கள்! அப்போது நீங்கள் முடிவு செய்யுங்கள்! உங்களது வாக்கை அளியுங்கள். அந்த அரசியல் போதும். மற்ற நாள்களில் உங்களது பிழைப்பைப் பாருங்கள்! அது தான் உங்களை உயர்த்தும். அரசியல்வாதி உங்களை உயர்த்த மாட்டான்!

Friday 25 August 2023

போதும்! குனிந்தது போதும்!

 

மேலே படத்தில் பண நோட்டுகளைத் தானே பார்க்கிறீர்கள்?

ஆம்,  அது தான் சத்தமாகப் பேசும் என்பதை மறந்து விடாதீர்கள். பணம் பாதாளம் மட்டும் பாயும் என்பது பொய்யல்ல.  நாம் தான் அதை ஏற்றுக் கொள்வதில்லை.  அது தான் பிரச்சனை.

நம் நாட்டிலேயே எடுத்துக் கொள்ளுங்கள். யாருக்கு பிரச்சனை அதிகம் எழுகிறது?  சீனர்களும் நம்மைப் போல இங்கு வந்தவர்கள் தானே? ஏன் அவர்களை மட்டும் யாரும் சீண்டுவதில்லை. அடி என்பது நமக்குத் தானே  விழுகிறது?  யார் வேண்டுமானாலும் நம்மை சீண்டுகிறானே? அப்படியென்றால்  என்ன பொருள்?

ஒரு காலத்தில் நாட்டின் மருத்துவர்கள் என்றால்  அவர்கள் இந்தியர்கள்   தான்.  இப்போது அது பற்றி பெருமை கொள்ள முடியுமா? கல்வி என்றால் அவர்கள் இந்தியர்கள் தானே? இப்போது அந்தப் பெருமை எல்லாம் எங்கே போயிற்று?

சரி அனைத்தும் நம்மிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டன.  இப்போது என்னவானது?  மருத்துவம் படிக்க தகுதி இருந்தும் நமக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன! ஓர் ஆசிரியர் ஆக வேண்டும் என்றால் கூட அதுவும் கூட வாய்ய்பில்லை. அதாவது பிரதமர் அன்வார் கூறியது போல நாம் இப்போது பழங்குடி மக்களின் வரிசைக்கு வந்து விட்டோம்.

ஆனால் என்னதான் நம்மைக் கீழே தள்ளி மிதித்தாலும் இந்த இனம் தன்னை தானே முட்டி மோதி தன்னை உயர்த்திக் கொள்ளும் சகதி வாய்ந்த இனம்.  இப்போது நடப்பதெல்லாம் ஏதோ வீழ்ச்சி போன்று தோற்றமளிக்கலாம்.  இது தற்காலிகம் தான்.  புனித தீ பறவை என்பார்களே பீனிக்ஸ் பறவை அது தான் தமிழினம். எத்தனை தடவை வீழ்ந்தாலும் அது மீண்டும் மீண்டும் எழுந்து நிற்கும்.  வீழ்ச்சி என்பதே இல்லை.

அதனால் தான் ஒயாது நம் மேல் தாக்குதலை ஏற்படுத்தினாலும் நாம் மீண்டும் மீண்டும் எழுந்து நிற்கிறோம். மருத்துவமே நமக்கு எட்டாத கனியாக இருந்தாலும்  வெளி நாடுகளில் மருத்துவம் படிப்பதை யாராலும் நிறுத்த முடிவதில்லை.  ஓர் ஏழை கூட தனது சொத்துகளை விற்றாவது தனது பிள்ளைகளைப் படிக்க வைக்கிறான்.அதற்கு மேலாக  படிப்பதற்கான கடன் வசதிகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

இந்த சமுதாயம் அப்படித்தான். என்றும் கீழே விழ வாய்ப்பில்லை. கல்வியை வைத்துத்தான் நாம் முன்னேற வேண்டும். அதனை இந்த சமுதாயம் புரிந்து வைத்திருக்கிறது. அதனால் தான் இன்று நமது பிள்ளைகள் பல துறைகளில் வாய்ப்புக்களைத் தேடி கல்வி கற்கிறார்கள்.

வாய்ப்பே இல்லை என்று புலம்பிக் கொண்டிருப்பதை விட கிடைக்கின்ற வாய்ப்பினைப் பயன்படுத்தி  நம்மை நாம் உயர்த்திக் கொள்ள வேண்டும். கிடைக்கவில்லை என்பதற்காக  புலம்ப வேண்டாம். அப்படியெல்லாம் எல்லாக் கதவுகளும்  மூடிவிடவில்லை. இன்னும் பல வாய்ப்புகள் இருக்கின்றன.

ஒன்றே ஒன்று தான்:  உங்கள் சொந்தக் காலில் நில்லுங்கள்!

Thursday 24 August 2023

காரில் குழந்தைகளைப் பூட்டி வைக்காதீர்கள்!

 

காரில் குழந்தைகளைப் பூட்டி வைக்காதீர்கள் என்று என்ன தான் காவல்துறை சொன்னாலும் அதைக் கேட்கத்தான் நாதியில்லை!

இன்றைய இளம் பெற்றோர்கள் வழக்கம் போல அலட்சியமாகத்தான் இருக்கின்றனர். குழந்தைகளை இப்படி தாங்க முடியாத உஷ்ணத்தில் அவர்களை இப்படியெல்லாம்  காரில் போட்டுவிட்டுப் பூட்டி விட்டுப் போவது அந்த குழந்தைக்கு எத்தைகைய ஆபத்தை  விளைவிக்கும்  என்று தெரியாமலா இருக்கும்?  ஆமாம், தெரியும் ஆனால் தெரியாது!

இந்தக் குழந்தையின் பெற்றோர்கள் தெரிந்து தான் செய்திருக்கின்றனர். காரின் கண்ணாடி சிறிதளவு மேலே திறந்து வைத்து விட்டுத்தான் போயிருக்கிறார்கள்.  ஆனால் இருக்கின்ற வெய்யிலில் இதெல்லாம் போதுமா?  குளிரூட்டி இல்லாமல் பெற்றோர்களால் இருக்க முடியாது. காரில் உட்கார்ந்ததும்  உடனே 'ஏர்கோன்'  இல்லாவிட்டால் உயிர் போய் விடும். ஏர்கோன் இல்லாமல் தங்களால் இருக்க முடியாது என்பது பெற்றோர்களுக்குத் தெரிந்திருக்கிறது.  ஆனால் ஒரு குழந்தை பூட்டிய காரில், வெளுத்து வாங்கும் வெய்யிலும், எப்படி அடைந்து கிடக்கும்  என்பது தெரியுமா, தெரியுதா?

குழந்தை, தாங்க முடியாத அந்த சூட்டில் சோர்ந்து போன நிலையில்  காரின் கதவை உடைத்து, அழுது கொண்டிருந்த   அவனை வெளியே கொண்டுவர நேர்ந்திருக்கிறது. நம்மால் இந்தப் பெற்றோர்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. எப்படி இப்படியெல்லாம் அலட்சியமாக இருக்க முடிகிறது?

இது போன்ற சம்பவங்கள் நம் நாட்டில் அடிக்கடி நடந்து கொண்டு தான் இருக்கின்றன. சில குழந்தைகள் இறந்தும் போயிருக்கின்றனர். ஆனால் பெற்றோர்கள் அதனை ஒரு பாடமாக எடுத்துக் கொள்வதில்லை. எல்லாமே அலட்சியம் தான். கையில் கைப்பேசியைக் கொடுத்துவிட்டால் போதும். குழந்தைகள் உலகை மறந்து விடுகிறார்கள்! ஆனால் எவ்வளவு நேரம்? உஷ்ணம் தாங்க முடியவில்லை. மூச்சு விடுவதில் சிரமம். அவர்களால் என்ன செய்ய முடியும்?

இப்படியெல்லாம் நடக்கக் கூடாது என்று எத்தனை முறை  எச்சரிக்கை விட்டாலும்  அது என்னவோ தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. பெற்றோர்களாய் பார்த்து திருந்தாவிட்டால் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.

தயவு செய்து குழந்தைகளை இப்படியெல்லாம் சிரமத்திற்கு உள்ளாக்காதீர்கள் என்பது தான் நமது செய்தி.

Wednesday 23 August 2023

கூனி, குறுகி, குனிந்து, பணிந்து...!

 

நான் அப்படித்தான் நினைக்கிறேன். நான் ரொம்ப, ரொம்ப கூனி, குறுகி,  குனிந்து, பணிந்து போகிறோமோ என்கிற எண்ணம் மனதிலே ஏற்படுகிறது!

இதற்கு முன்னால் நமது சமூகம் தானைத் தலைவரிடம் கூனி குறுகி  நமது பணிவைக் காட்டியதால் அவர் நம்மை  பழங்குடியினரையிடாம் ஒப்படைத்துவிட்டுப்  போய் விட்டார்!  அவர் என்ன தான் நல்லது செய்திருந்தாலும் அவர் செய்த பொருளாதார சீரழிவு தான்  நம் கண்முன்னே நிற்கிறது.  பொருளாதாரம் தானே இன்றளவும் நம்மை அடிமையாக்கி வைத்திருக்கிறது?

இப்போது நாம் அடுத்த கட்டத்துக்கு வந்துவிட்டோமோ என்று அஞ்சுகிறேன்.  மீண்டும் தானைதலைவரின் - அதே போன்ற வழிகாட்டுதல், அதே மாதிரி அரசியல் - இது என்னவோ சரியானப்பாதையாக  எனக்குப் படவில்லை. அவர் காலத்தில் எப்படியான அரசியல் இருந்ததோ அதே மாதிரியான அரசியலைத்தான் இப்போது காண்கிறேன்.

மெட் ரிக் கல்வியா உங்களுக்கு இல்லை!  நீங்கள் கல்வியில் முன்னேறி விட்டீர்கள்! அதனால் கோட்டா உங்களுக்கு ஏற்றதல்ல!  கல்லுரியா? நீங்கள் படிக்க விரும்பிதெல்லாம்  நாங்கள் கொடுக்க முடியாது. அது உங்களது உரிமையல்ல! எங்களது உரிமை!

எண்பது விழுக்காடு வாக்களித்தீர்களா? அதற்காக உங்களை ஆட்சிக்குழுவில் இடம் அளிக்க வேண்டும் என்று எந்த வாக்குறுதியும் நாங்கள் அளிக்கவில்லை! உங்களுக்குப் போட்டியிட இடம் கொடுத்ததே  ஏதோ புண்ணியம் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

மதமாற்றமா?  அது உங்கள் பிரச்சனை அல்ல.  எங்களது கடமை. எங்களது கடமையில் யாரேனும்  தலையிட்டால் நடப்பதேவேறு. எங்களுக்குச் சட்டதிட்டங்கள் உள்ளன. அதைத்தவிர்க்க முடியாது. அதில் தலையிட உங்களுக்கு உரிமை இல்லை.

நண்பர்களே!  எத்தனை ஆண்டுகாலம் கைக்கட்டி, வாய்ப்பொத்தி, கூனி, குறுகி நாம் வாழப்போகிறோம்?  இவர்களின் தயவில்  தான் நாம் வாழவேண்டுமா என்ன?  இந்த சமுதாய நலன் கருதித் தான்  இவர்களிடம் கைக்கோக்கிறோம்.  நமது சமுதாயம் பிழைக்காத் தெரியாத சமுதாயமா என்ன?   இன்று தொழிலில் கொடிகட்டி பறக்கும் நமது சமுதாயத்தினர் எல்லாம்  இவர்கள் பின்னால் அலைந்தா திரிந்தார்கள்?

இனி நாம் சுயநலத்தோடு தான் வாழக்கற்றுக் கொள்ள வேண்டும்.  நமது முன்னேற்றம் தான் நமக்கு முக்கியம். அரசியல்வாதிகளின் முன்னேற்றத்திற்காக நாயாய், பேயாய் வாழ வேண்டிய அவசியம் நமக்கில்லை.  சீனர்கள் இவர்களை நம்பியா வாழ்கிறார்கள்?

கூனி, குறுகி வாழ வேண்டிய அவசியம் இல்லை. நாம் தலை நிமிர்ந்து வாழ்வோம்!

Tuesday 22 August 2023

சட்டங்களைச் செயல்படுத்துங்கள்!

சட்டங்கள் இருந்தால் மட்டும் போதாது. அவை அமல்படுத்தப்பட  வேண்டும்.  அமலில் இல்லையென்றால்  அதற்குக்  காரணங்கள் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது.  பிரச்சனைகளைக் களைவதற்கான  முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

கடைகளில் பொருள்களின் விலைப் பட்டியலை வைக்க வேண்டும் என்பது கட்டாயம். ஆனால் அது கடைகளில் வைக்கப்படுகின்றதா என்று பார்த்தால் அதுபற்றி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு கடையிலும் வெவ்வேறு முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.  சில கடைகளில் அந்தப் பட்டியலை எப்படியெல்லாம் மறைக்க முடியுமோ  அப்படியெல்லாம் மறைக்கப்படுகின்றன.  

 இதற்கெல்லாம் ஒரே காரணம் இப்போழுது விலைப்பட்டியல் தேவை இல்லை என்கிற நிலைமைக்கு வியாபாரிகள் வந்துவிட்டார்கள்.  ஆனால் நமக்குத் தெரிந்தவரை விலைப்பட்டியல் கட்டாயம் என்கிற நிலைமையில் நாம் இருக்கிறோம்.  காரணம் வியாபாரிகள் ஒரு சில மாதங்களுக்கு முன்னரே  'விலையேற்றம் வருகிறது' என்று சங்கூத ஆரம்பித்துவிட்டார்கள்!  அதனால் எந்த  நேரத்திலும் விலைகளைக்கூட்ட அவர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள்.

அரசாங்க அனுமதி இல்லாமல் விலை ஏற்றம் இல்லை என்று பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும். அரசாங்கம் பொருள்களின்  விலையேற்றத்தை மட்டுப்படுத்த பலவேறு நடவடிக்கைகள் எடுக்கின்றன. அதனால் தான் இதுநாள் வரை பெட்ரோலின் விலை கட்டுப்பாட்டில் உள்ளது. எப்படிப் பார்த்தாலும்  விலையேற்றம் இல்லாமல் இருக்க   அரசாங்க நடவடிக்கைகள் எடுக்கின்றன.

ஆனால் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் வியாபாரிகள் விலைகளை ஏற்றினால்  அதற்கான நடவடிக்கைகளை  வியாபாரிகள் மீது எடுக்க வேண்டும். இன்றைய நிலையில் கடைகளில் பொருள்களை வாங்கினால் நமக்கு விலையே தெரிவதில்லை. அப்படியே நாம் ஏதேனும் கேள்விகளைக் கேட்டாலும் அவர்களிடமிருந்து மழுப்பலான பதில்கள் தான் வருகின்றன.

விலையேற்றம் வரும் முன்பே வியாபாரிகள் விலைகளை ஏற்றிவிட்டார்கள். இன்னும் விலைகள் ஏறுவதற்கான சாத்தியக்கூறுகள்  இருக்கின்றன. அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்கள்  சமாளிக்க முடியாதபடி பிரச்சனைகள் எழும்.

அரசாங்க அதிகாரிகள் களத்தில் இறங்க வேண்டும். விலைகளைச் சரி பார்க்க வேண்டும். அநியாய விலை ஏற்றம் செய்பவர்களைத் தண்டிக்க வேண்டும்.

இனி அரசாங்கத்தின் செயல்பாடு என்ன என்பது தான் முக்கியம்!

Monday 21 August 2023

மீண்டும் ஆட்சிக்குழுவில்!

 

                                   நன்றி:  வணக்கம் மலேசியா

நெகிரி ஆட்சிக்குழுவில் மீண்டும்  நீலாய் சட்டமன்ற உறுப்பினர் அருள் குமார்,   ரெப்பா சட்டமன்ற உறுப்பினர்  வீரப்பன் இருவரும் ஆட்சிக்குழுவில் இணைந்திருப்பதை நாமும் வரவேற்கிறோம்.

இடையிலேயும், சில மாதங்களுக்கு முன்னர், ஜ.செ.க. வின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் அவருடைய அமைச்சின்  கீழ் அருள்குமார் மாற்றப்பட்டு அந்த இடத்தில் வேறோரு சீன சட்டமன்ற உறுப்பினர் நியமிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாயின. ஆனால் ஒன்றும் புரியவில்லை.  அருள் குமார் மீண்டும் பழையபடி ஆட்சிக்குழுவில் நியமிக்கப்பட்டிருக்கிறார்.  ஜ.செ.கா.வில் என்ன நடக்கிறது என்று புரியவில்லை. ஏதோ களையெடுப்பு நடக்கிறது என்று மட்டும் புரிகிறது.

ஆனாலும் இவர்கள் இருவருமே நீண்ட நாள்களாக ஆட்சிக்குழுவில் இருக்கின்றனர். அவர்கள்  செயல்பாடுகளைப்பற்றி  எதுவும் தெரியவில்லை. சரி இத்தனை ஆண்டுகள் எப்படியோ நமக்குத் தெரியாது. 

ஆனால்  இந்த நிலை இப்படியே  போய்க் கொண்டிருக்க முடியாது. அவர்கள் களத்தில் இறங்க வேண்டும். இப்போது நாட்டில் நடப்பது ஒற்றுமை கூட்டணி. இதில் பி.கே.ஆர். முக்கிய பங்கு வகிக்கிறது.

இதற்கு முன்னர் தேசிய முன்னணி பதவியில் இருந்த போது நமது தமிழ்ப்பள்ளிகளில் இருந்து ஏகப்பட்ட புகார்கள் வந்து கொண்டிருந்தன. குறிப்பாக பள்ளிகளின் உரிமம் சம்பந்தமான பிரச்சனைகள்.   பள்ளிகள் தனியார் நிலங்களில் உள்ளன என்று புகார்கள் எழுப்பட்டன.  ஆனால் இன்று எதனையும், எந்தப் புகாரையும்  ஒன்றையும் காணோம். அனைத்தும்  சரிசெய்யப்பட்டு விட்டதா, எதுவும் பொது மக்களுக்குத் தெரியவில்லை. இவர்களே தொடர்ந்து ஆட்சிக்குழுவில் இருக்கும் போது  நிச்சயமாக  நல்லது நடந்திருக்க வேண்டும்.

கோரோனா  தொற்றின்  தாக்கத்தின் போது எல்லா உணவகங்களிலும்  அந்த நோய் சம்பந்தமான விளம்பரங்கள் வெளியாயின. அந்த விளம்பரங்கள் மலாய், ஆங்கிலம், சீனம் ஆகிய மொழிகளில்  எல்லாருக்கும் தெரியும்படியாக ஒவ்வொரு உணவகத்திலும் ஒட்டப்பட்டிருந்தன.   தமிழ் மொழி மட்டும் அங்கே இல்லை. அதனைச் சுட்டிக்காட்டி  ஓய்பி வீரப்பனுக்கு எழுதியிருந்தேன். காரணம் அவர் தான் சுகாதாரத்திற்குப் பொறுப்பேற்றிருந்தவர்.  ஒன்றும் நடக்கவில்லை. 

நான் இங்கு சொல்ல வருவதெல்லாம் நாங்கள் சொல்லித்தான் ஒவ்வொன்றையும் செய்ய வேண்டும் என்பதில்லை. தமிழ் மொழி எங்கு விடப்படுகிறதோ  அதைத்தட்டி கேட்க நீங்கள் அங்கு இருக்கிறீர்கள். அதனைக் கேட்க வேண்டும். உங்களால அது முடியவில்லை என்றால்  ஜ.செ.க. தான் உங்களுக்குத் தடையாக இருக்கிறது என்பது பொருள்.

இப்போதைய ஜ.செ.க. தலைமைத்துவம் இந்தியர்களுக்கு எதிராக இருப்பதாகவே எண்ண வேண்டியுள்ளது.  உங்கள் நடவடிக்கைகள் மூலம் அதனை உறுதிபடுத்தாதீர்கள்.

ஓய்பி வீரப்பன்,  ஓய்பி அருள் குமார் அவர்களின் சேவை தொடர வேண்டும் என்பதே நம ஆசை.  வாழ்த்துகள்!

Sunday 20 August 2023

இது தான் நமது ஆலோசனை!

 

நம் தமிழர்களுக்கு நாம் சொல்லுகின்ற ஒரு சிறிய ஆலோசனை.   இந்தியர்களுக்குச் சொல்ல வேண்டியது எதுவுமில்லை. அவர்கள் பிழைக்கத் தெரிந்தவர்கள். நமக்குத் தான்,  தமிழர் சமூகத்திற்குத்தான்,  ஆலோசனைகள் தேவைப்படுகின்றன.

பினாங்கு மாநிலத்தின்  IIவது துணை முதல்வராக ஜக்டீப் சிங் டியோ பதவியேற்றிருக்கிறார். கடந்த 16 வருடங்களாக பேராசிரியர் இராமசாமி அவர்களையே பார்த்துப் பழகிப்போன நமக்கு  இந்த மாற்றம் நம் மக்களுக்கு  ஏற்பது கடினமாகத்தான் இருக்கும்.  ஆனால் இது அரசியல்.  வருவதும் போவதும்  சகஜமான விஷயம் தான்  பேராசிரியருக்கு போக வேண்டிய நேரம் வந்துவிட்டது. புதியவரான ஜக்டீப் சிங் வரவேண்டிய நேரமும் வந்துவிட்டது. அவ்வளவு தான்.

புதியவரான ஜக்டீப் தமிழர் அல்லரே தவிர மற்றபடி தமிழர் பிரச்சனையை அறியாதவர் அல்லர்.  அவர் தந்தையார், காலஞ்சென்ற கர்பால் சிங், அவர்கள் காலத்திலிருந்தே பொதுசேவையில் உள்ளவர்கள் அந்தக்  குடும்பத்தினர். நாடறிந்தவர்கள்.  நல்லவர்கள் வல்லவர்களென்று பெயர் எடுத்தவர்கள். 

நம் மக்கள், நம் இயக்கங்கள், நம் அமைப்புகள் பொது விஷயங்களோ,தனிப்பட்ட பிரச்சனைகளோ வழக்கம் போல அவரை அணுகலாம்.  நமது பேராசிரியரை எப்படி சென்று அவரைப் பார்த்தீர்களோ அதே போல இவரையும் சென்று பார்க்க வேண்டும். உங்கள் பிரச்சனைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

துணை முதல்வர் பதவி என்பது பொதுவான ஒரு பதவி.  இந்த இனத்தவருக்குத்தான்  என்று சொல்லுவதற்கில்லை. அரசியலில் அப்படி எல்லாம் எந்த ஒரு பதவியும் இல்லை. அரசியல் என்றாலே  எந்த இனத்தவரும் வரலாம் போகலாம். பேராசிரியர் இருக்கும் போது கூட  அவர் அனைவருக்கும் பொதுவானவராகத்தான்  இதுந்தார். அவர் வெற்றி பெற்ற தொகுதியில் உள்ளவர்கள் வரத்தான் செய்வார்கள். அவர்களின் குறைகளைக் கேட்கத்தான் வேண்டும்.

வேறொரு இனத்தவர் என்றாலே பின்வாங்கும் போக்கு நம்மிடம் உண்டு.  அது போன்ற குறைகள் இனி  நம்மிடம் இருக்கக் கூடாது. வருங்காலங்களில் வேற்று இனத்தவர்கள்  நாம் வாழும் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றால்  அவர்களை நாம் புறக்கணிக்க முடியாது. நமக்குப் பிரச்சனைகள் வரும் போது அவர்களைத்தான் நாம் நாட வேண்டும்.

பினாங்கு இரண்டாம் முதல்வர் அனைவருக்கும் பொதுவானவர். அவர் சீக்கியர் என்பதற்காக  நாம் பயந்து நடுங்கக் கூடாது. அவர் நமக்கு உதவி செய்யக்  காத்திருக்கிறார். அது அவரது கடமை. நாம் அவரை உதாசீனப்படுத்தினால் நட்டம் அவருக்கல்ல நமக்குத்தான்.  காரணம் அதிகாரம் வலிமையானது. அதனால் அவரை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அவர் இந்தியர்களின் சார்பில் இருந்தாலும் அவர் அனைவருக்கும் பொதுவானவர்.

நாம் நல்லவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். நாம் வல்லவர்களாகவும் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.  வாழ்க மலேசியா!

Saturday 19 August 2023

இதைத்தான் நாம் எதிர்பார்க்கிறோம்!

 

பிரதமர் அன்வார் அவர்களின் மதமாற்ற விவகாரத்தில் "ஓய்பி இது சரியல்ல!"  என்று குரல் கொடுத்தவர் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்களை மனதாரப் பாராட்டுகிறேன். தொடர்ந்து அவர் குரல் கொடுத்து வருகிறார். இனியும் குரல் கொடுப்பார்.

அநீதிகள் நடக்கும் போது சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியாது ஆனால் ஒன்று. நாம் தான் அநீதி என்கிறோமே தவிர பிரதமர் அதனை அநீதியாக ஏர்றுக்கொள்ளவில்லை. இதுவரை அவர் அப்படி எதனையும் ஏற்றுக்கொண்டதாகச் செய்திகள் இல்லை.

இங்கு நாம் சொல்ல வருவதெல்லாம் இது ஒரு தவறான முன்னுதாரணம் என்பது தான். இவரே அப்படி ஒரு தவற்றைச் செய்தால் ஜாக்கிம் தவறு செய்கிறது என்று எப்படி சொல்லுவது?

பிரதமரே மதமாற்றத்தின் போது அந்த இளைஞனின் குடும்பத்தைப் புறந்தள்ளிவிட்டார். அவர்களின் அனுமதி தேவை இல்லை என்கிற ரீதியில் தான் செயல்பட்டிருக்கிறார். ஜாக்கிம் அதனைத்தான் செய்கிறது. அவர்கள் யாரைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. அது தேவையும் இல்லை. யார் அகப்பட்டாலும் "பிடி அவனை! மாற்று மதத்தை!"  என்று தான் அவர்கள் செயல்படுகிறார்கள்!  அது கூடாது என்பது தான் இஸ்லாம் அல்லாதவர்கள் ஜாக்கிம் மீது வைக்கும் குற்றச்சாட்டு!

ஆனால் பிரதமர் என்ன செய்தார்? அவர் அப்படி செய்ததின் நோக்கம் என்னவாக இருக்கும் என்று சிந்திக்கும் போது நாம் முகம் சுழிக்க வேண்டியுள்ளது. இவர் இப்போது என்ன செய்தாரோ அதையே தான் நாளை ஜாக்கிம் செய்யும்! காரணம் பிரதமரே ஓரு  முன்னுதாரத்தைக் காட்டியிருக்கிறார்.

வழக்கு விசாரணை என்று வரும்போது பிரதமரின் இந்த செய்கையே நாளை முன்னுதாரணமாக கொள்ளப்படலாம்.

பிரதமர் இது போன்ற செய்கைகள் மூலம் இந்தியர்களுக்கு என்ன சொல்ல வருகிறார்? "இந்தியர்கள் சிறுபானமையினர்! இவர்களால் என்ன செய்ய முடியும்"  என்று அவர் நினைக்கலாம். "ஏழை இந்தியர்கள்! பெரிதா என்ன செய்ய முடியும்!" என்று நினைக்கலாம். "பழங்குடி மக்களை காலங்காலமாக ஏமாற்றி வந்திருக்கிறோம்! அவர்களால் என்ன செய்ய முடிந்தது? இவர்களும் அந்த இலட்சணத்தில் தானே இருக்கிறார்கள்! என்ன வேண்டுமானாலும் செய்யலாம்!" என்பதும் கூட  அவருக்கு நினைவில் வந்திருக்கும்!

இப்படியெல்லாம் பிரதமரின் நினைவுக்கு  வந்திரூக்கூடிய வாய்ப்பு உண்டு. ஏனென்றால் அவர் இதனை முறையாகச் செய்யவில்லை. ஜாக்கிம் செய்வது போல ஏதோ திருட்டுத்தனமாக நடந்ததாகத் தான் நாம் நினைக்க வேண்டியுள்ளது.

இன்றைய நிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக டத்தோஸ்ரீ சரவணன் நியாயமான முறையில் செயல்பட்டிருக்கிறார். தொடர்ந்து செயல்படுவார் எனவும் நம்பலாம். இப்போது அவர் தானே குரல் கொடுக்கிறார். பொது மக்களின் சார்பில் பேராசிரியர் இராமசாமியும் குரல் கொடுக்கிறார். இன்னும் பலரும் கொடுக்கின்றனர்.

டத்தோஸ்ரீ மீண்டும் உங்களுக்கு நன்றி!

Friday 18 August 2023

நம்ம ஊரு!

 


சமீப காலங்களில் இந்த "ஊர்" என்கிற சொல் மிகவும் அதிகமாகவே பேசப்பட்டு வருகிறது.  அதாவது ஊர், ஊர்க்காரர், ஊர்க்காரன் என்று கூறி  தமிழ் நாட்டிலிருந்து இங்கு வந்து  வேலை செய்பவர்களை  அவமானப்படுத்துவதாகவும், இழிவுபடுத்துவதாகவும் கூறப்படுகின்றது. 

தமிழ் நாட்டிலிருந்து வந்த இன்றைய தலைமுறையினருக்கு  ஊர் என்றால் அதன் அர்த்தம் புரியவில்லை. அந்தக் காலத்தில் மலேயாவிலிருந்து எஸ்.எஸ்.ரஜூலா கப்பல் மூலம் தமிழ் நாட்டுக்குத் திரும்புபவர்கள்  தமிழ்  நாட்டுக்குப் போகிறேன் என்று சொல்லுவதில்லை. ஊருக்குப் போகிறேன் என்று தான் சொல்லுவார்கள். அந்த நடைமுறை இப்போதும் உண்டு.  தமிழ் நாட்டுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இன்றைய தமிழர்கள் கூட ஊருக்குப் போகிறேன் என்று தான் சொல்லுகிறார்களே தவிர தமிழ் நாட்டுக்குச் சுற்றுப் பயணம் செய்யப் போகிறேன் என்று சொல்லுவதில்லை.

இது காலாகாலமாக உள்ள நடைமுறை. ஊர் என்றால்,  தமிழ் நாட்டை ஏதோ பக்கத்து ஊர் என்று அர்த்தத்தில் தான் இங்குள்ள தமிழர்கள் சொல்லிப் பழகிவிட்டனர்.  தமிழ் நாடு, அது வேறு ஒரு நாடு,  என்பதற்குப் பதிலாக தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்பது போல  ஓர்  அர்த்தத்தில் தான் அவர்கள் சொல்லுகின்றனர்.

உள் நாட்டில் தங்களது சொந்த ஊருக்குப் போக வேண்டுமென்றால்  "ஊர்" என்று அவர்கள் சொல்லுவதில்லை.  "கம்போங்"  என்கிற வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர். அல்லது தங்களது ஊரின் பெயரைப் பயன்படுத்துகின்றனர்.  உதாரணம்: மலாக்கா,  தைப்பிங், பினேங், கே.எல். ஜே.பி. இப்படித்தான் அது போகும். ஆனால் இங்குள்ள தமிழர்களுக்கு ஊர் என்றால் அது தமிழ் நாடு மட்டும் தான் அதில் எந்தக் குழப்பமும் தேவை இல்லை.

அப்படிப்பார்த்தால்  தமிழ் நாட்டிலிருந்து இங்கு வந்து வேலை செய்பவர்களை  இங்குள்ளவர்கள் எப்படி   அழைப்பார்கள்? ஊர்க்காரர் என்று தான் அழைப்பார்கள்?  அதில் என்ன தவறு? அதில் என்ன இழிவைக் கண்டீர்கள்.  பெயர் தெரிந்தால் பெயரைச் சொல்லி அழைக்கலாம்.  எனது நீண்ட நாள் நண்பரை அவர் பெயர் சொல்லித்தான் அழைப்பேன். அவரின் பெயர் எனக்குத் தெரியும் என்பதால். பெயர் தெரியாவிட்டால் 'தம்பி' என்பேன் அல்லது 'அண்ணாச்சி' என்று அழைப்பேன். அதுவும் தெரியாவிட்டால் 'ஊர்க்காரரே' என்று அழைப்பேன். உணவகங்களில் வேலை செய்பவர்களை 'தம்பி' என்று அழைப்பேன். இது எனது பாணி.

வழக்கம் போல எல்லாவற்றையும் தவறான கண்ணோட்டத்தோடு பார்ப்பது சரியல்ல. உங்களோடு வேலை செய்பவர்கள் உங்களை எப்படி அழைக்கிறார்கள்  என்பது நீங்கள் அவர்களிடம் எப்படிப் பழகுகிறீர்கள் என்பதைப்  பொறுத்தது. இதுவெல்லாம் சாதாரணப் பிரச்சனை.  ஒருசிலர் மரியாதை இல்லாமலே பேசிப்பழகியவர்கள்! அதனால் எல்லா இடங்களிலும் அவர்கள்  அப்படித்தான் பேசுவார்கள். அது அவர்கள் வளர்ந்த விதம்.   

இதற்கெல்லாம் காரணம் யார்? நமது சினிமா படங்கள் தான். சினிமா படங்கள் தான் நமது வழிகாட்டி.

அதனால் 'ஊர்க்காரரே' என்றால் ஏதோ இழிவான வார்த்தையைப் பயன்படுத்துகிறோம் என்று கற்பனை செய்து கொள்ளாதீர்கள். அது நல்ல சொல் தான்.

Thursday 17 August 2023

மதமாற்றம் செய்வது பிரதமரின் வேலையா?

 

பிரதமர் அன்வார் இப்ராகிம் ஓர் இந்து இளைஞனை மதமாற்றம் செய்து வைத்தது அவரது வேலையா  என்பது நமக்குத் தெரியவில்லை!

இதுவரை ஜாக்கிம் அந்த வேலையைச் செய்து வந்தது. இப்போது அந்த வேலையை பிரதமர் செய்திருக்கிறார்! இனிமேலும் அவர் தான் செய்வாரா என்கிற கேள்வியும் எழுகிறது. அதற்குக் காரணம்  ஒரு வேளை  இது போன்ற வேலைகளுக்கு ஜாக்கிம் தேவை இல்லை என்று கூட அவர் நினைத்திருக்கலாம்.

இப்போது நமது பிரச்சனை என்ன? ஓர் இந்து இளைஞனை மதமாற்றம் செய்தார் என்பது தான் பிரதமரின் மேல் உள்ள குற்றச்சாட்டு. மதமாற்றம் செய்யும் போது அந்த இளைஞனின் பெற்றோர்களையும் கூட வைத்திருக்கலாம். அது தான் அவர்களுக்குப் பிரதமர் கொடுக்கும் மரியாதை. அந்தப் பெற்றோர்கள் மதமாற்றத்தை ஏற்கவில்லயென்றால் இந்த மதமாற்றமே நடந்திருக்கவே கூடாது.

மதமாற்றம் என்பது இஸ்லாம் அல்லாதவருக்கு மிகவும் புண்படுத்தும் விஷயம். அந்த இளைஞனுக்கு பத்தொன்பது வயது என்னும் போது அவன் இன்னும் உலகம் அறியாதவன் என்பது தான் பொருள். பிரதமர் யாரோ ஒரு சிறுவனுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து மதமாற்றம் செய்கிறார் என்றால்  அவனது உறவுகளுக்கும் அவர் முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும்.

ஜாக்கிம் மதமாற்றம் செய்தால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது ஒரே வழி தான். யாருடைய அனுமதியும் அவர்கள் எதிர்பார்ப்பதில்லை. அப்படித்தான் அவர்கள் பணிக்கப்பட்டிருக்கிறார்கள்! ஆனால் பிரதமர் நிலை வேறு. நாட்டின் முதலாவது பதவியில் இருப்பவர். அவர் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருந்திருக்க வேண்டும். பெற்றோர்களை அணுகி இருக்க வேண்டும். அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

காரணம் அந்த இளைஞனுக்கு VIP க்குள்ள மரியாதைக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஓர் உயர்ந்தநிலை மரியாதை அவனுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.  அவ்னுடைய பெற்றோர்களுக்கும் அந்த மரியாதை வழங்கப்பட்டிருக்கலாம் அன்றோ? அப்படி அந்தப் பெற்றோர்கள் மதமாற்றத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் பிரதமர் அந்த மதமாற்றத்தை செய்திருக்கக் கூடாது. இது போன்ற விளம்பரங்களிலும் ஈடுபட்டிருக்கக் கூடாது.

பிரதமரின் நோக்கம் தான் என்ன?   இந்திய சமுதாயம்,  ஏழை சமுதாயம் என்று அவர் எப்போதும் சொல்லி வருகிறார். அதாவது  பழங்குடி மக்களோடு ஒப்பிட்டு எப்போதும் அவர் பேசி வருகிறார். நாம் முன்னேற வேண்டும்  என்று இவர் பதவியேற்றதிலிருந்து எந்த முனைப்பையும் காட்டவில்லை. எந்த முயற்சியும் செய்யவில்லை என்கிற  குற்றச்சாட்டும் உண்டு.

இப்படி மதமாற்றம் செய்வதன் மூலம் அவரது நோக்கம் நமக்குப் புரிகிறது.  ஏழையாக இருப்பவர்களை மதமாற்றம் செய்வது  எளிது என்று அவர் நினைப்பதாகத் தோன்றுகிறது.  எப்போதும் போல  இந்தியர்கள் ஏழைகளாகவே இருக்கட்டும் அது தான்  நாட்டுக்கு நல்லது என்று அவர் எண்ணுவதாகவே நாம் நினைக்கலாம். ஒரு சீன இளைஞனை அவர் இப்படி எல்லார் முன்னிலையிலும, தொலைகாட்சி புடை சூழ, இப்படி மதமாற்றம் செய்ய முடியுமா?  சீன சமுதாயத்தைப் பகைத்துக்கொள்ள முடியுமா? சீன சமுதாயம் அவரை ஓரங்கட்டி விடுவார்கள் என்பது அவருக்குத் தெரியும்.

இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் இடங்களை அதிகரித்தால் மலாய் சமுதாயம் பிரதமரை ஓரங்கட்டி விடுவார்கள்!  சீன இளைஞனை இப்படி மதமாற்றம் செய்தால் சீன சமுதாயம் ஓரங்கட்டி விடும் என்பதும் அவருக்குத் தெரியும்! ஆக இந்திய சமுதாயத்தின் மீது எப்படி வேண்டுமானாலும் பந்தாடலாம்! 

ஆக, இந்திய சமுதாயம்  அவரது தொழிலையே மாற்றிவிட்டது எனலாம்!

Wednesday 16 August 2023

போதைக்கு அடிமையாக்காதீர்கள்!

 

தயவு செய்து குழந்தைகளைக் குழந்தைகளாகவே இருக்க விடுங்கள்.

உங்களுடைய ஆசைகளையெல்லாம் அவர்கள் மீது திணிக்காதீர்கள். அதைத்தான் பெற்றோர்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.  கேட்க நாதியில்லை!

ஆனால் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்று நம்மைக் கதிகலங்க வைத்திருக்கிறது. அதுவும் புண்ணிய தலத்தில்!

நமது கோவில் திருவிழா ஒன்றில் இந்நிகழ்ச்சி அரங்கேறியிருக்கிறது. வழக்கம் போல நமது பெற்றோர்களின்  கைங்கரியம் என்பது தான் இதில் விசேஷம்.

மது கலந்த போத்தலை அந்தக் குழந்தையின் வாயில் ஊற்றி  பக்திக்கே ஒரு புதிய வழியைக் காட்டியிருக்கிறார்கள்! அடேய்! உன் மது பக்தியை  உன்னோடு வைத்துக் கொள்! ஒரு குழந்தையிடமா காட்டுவது?  என்ன ஒர் அநாகரிகம்!

எப்படிப் பார்த்தாலும் அந்தக் குழந்தையின் பெற்றோரின் அனுமதி  இல்லாமல் அது நடக்க வாய்ப்பில்லை. ஏதொ ஒரு குடிகாரன் அந்தக் குழந்தையின் வாயில் மதுவை ஊற்றுவதைப் பார்க்காமல் இருக்க முடியாது. அதன் பெற்றோர்கள் மட்டும் பார்க்காமலா இருந்திருப்பார்கள்?

உண்மையில் அது ஒர் அதிர்ச்சியான சம்பவம். மதுபானத்தை ஒரு குழந்தையின் வாயில் திணிப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனைக் கொடுத்தவன் ஒரு குடிகாரன். அவனுக்கு அதில் ஒரு சந்தோஷம்.  பெற்றோர்களும் அதனைப் பார்த்து சந்தோஷப் பட்டிருப்பார்கள் என்று நிச்சயமாக நாம் நம்பலாம்! இதனை அறியாமை என்று சொல்லுவதா அல்லது குடிகாரக் கூட்டத்தின் கூத்தடிப்பு என்று சொல்லுவதா?

கோவில்களில் இப்படி எல்லாம் நடந்தால் கோவில்கள் மீது யாருக்கு மதிப்பு மரியாதை வரும்? தேவை இல்லை என்கிறீர்களா? ஆமாம் குடிகாரன் அப்படித்தான் சொல்லுவான்!  அது ஒரு நாதாரிக் கூட்டம்!  ஆனால் நல்லவர்கள் அப்படிச் சொல்லத்தான் முடியுமா? அவனது குடிகார ஆட்டத்தை புண்ணிய தலங்களிலா காட்டுவது?

நம்மைக் கேட்டால் இதற்குக் காவல்துறை தான் சரியான   நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இதற்கும் நமது சமயத்திற்கும்  எந்தத் தொடர்பும் இல்லை. குடித்துவிட்டு ஆடுவதை நாம் பக்திப்பரவசம் என்று எடுத்துக் கொள்ள முடியாது. அதுவும் குழந்தைகளுக்கு இப்படி வற்புறுத்தி மது அருந்த வைப்பதை  நிச்சயமாக அது குழந்தை சித்திரவதை சட்டத்தின் கீழ் தான் வரும்.

குடிகாரர்கள் குழந்தைகளை என்ன என்ன அநியாயம் பண்ணுகிறார்களோ  அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். சிறு குழந்தைகளுக்குப் போதையைக் கொடுத்து சீரழிப்பவர்களைக் கடுமையான தண்டனைக்கு  உட்படுத்த வேண்டும்.

குழந்தைகளைக் குடிக்கு அடிமையாக்காதீர்கள்! கடவுள் உங்களைக் கடுமையாகத் தண்டிப்பார்!

Tuesday 15 August 2023

வரவேற்கிறோம்!

 

                                      Jagdeep Singh Deo, Penang Deputy Chief Minister II

பினாங்கு மாநிலத்தின் துணை முதலவர் (II) ஆக, ஒரு சீக்கியரான ஜக்தீப் சிங் தியோ பதவியேற்றிருக்கிறார்.  இதற்கு முன்னர் பேராசிரியர் இராமசாமி அவர்கள் ஏற்றிருந்த பதவி என்பது பெரும்பாலான தமிழர்கள்  அறிந்தது தான்.

இந்த நியமனம் மூலம் ஜ.செ.க. புதியதொரு பாதையை நோக்கி செல்கிறது என்று சொல்லலாம். இந்த நியமனம் அதாவது துணை முதல்வர் பதவி என்பது தமிழருக்கு மட்டும் உரியது அல்ல  தமிழர் அல்லாத பிற  இந்திய சமூகத்தினருக்கும் உரியது என்பதை இந்த நடவடிக்கை மூலம் ஜ.செ.க. செயலில் காட்டியிருக்கிறது.

இந்த நியமனத்தின் மூலம் ஏமாந்தவர்கள் என்றால் அவர்கள் தமிழர்கள் தான். இது தமிழருக்கான நிரந்தரமான ஒரு பதவி என்பதாகத்தான் நாம் நினைத்துக் கொண்டிருந்தோம். அது அப்படி அல்ல என்பதை ஜ.செ.க. தலைமைத்துவம் காட்டிவிட்டது.

பொதுவாக இந்த நியமனத்தை  தமிழர் சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை  என்பதை அவர்கள் தங்களது மௌனத்தின் மூலம் காட்டிவிட்டார்கள். ஆமாம் பேச ஒன்றுமில்லை! நம்மிடம் எந்த பலமும் இல்லை! அரசியலும் நம் கையில் இல்லை! என்ன தான் செய்ய முடியும்?

ஆனால் தனிப்பட்ட முறையில் நமக்கு ஜக்தீப் சிங் அவர்களிடம் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. அவருடைய திறமையில் நமக்கு எந்த கேள்வியும் இல்லை.  அவரின் சேவையில் நமக்கு எந்த குழப்பமும் இல்லை.  கர்ப்பால் சிங் குடும்பம் என்றாலே  யாரும் அவர்களைக் குறை சொல்ல  வழியில்லை. பினாங்கு மட்டும் அல்ல மலேசிய அளவிலும் அவர்கள் புகழ் பெற்றவர்கள்.

ஜ.செ.க. புதிய பாதையை நோக்கி அடி எடுத்து வைக்கிறது  என்று ஏன் நாம் சொல்லுகிறோம் என்றால்  அது ஒரு சீனர்கள் கட்சி என்று சொல்ல முடியாத மாதிரியான  ஓர் இலக்கை நோக்கிப் பயணிக்கிறது  என்று அர்த்தம் கொள்ளலாம். வருங்காலங்களில்  பினாங்கு மாநிலத்தின் முதல்வர் சீனராக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஏன் இன்றைய துணை முதல்வர் நாளை முதல்வராகக் கூட வர வாய்ப்பிருக்கிறது. இல்லை என்று சொல்ல முடியாது. இது சாத்தியமே. ஜ.செ.க. பல்லின கட்சி என்கிற அடையாளத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்றால் இந்த மாற்றங்கள் அவசியமே.

குறிப்பிட்ட பதவி குறிப்பிட்ட இனத்துக்குத்தான்  என்கிற நம்மிடையே ஊறிப்போன எண்ணங்கள் எல்லாம் இனிமேல் தவிடுபொடியாகிவிடும் என நாம் நம்பலாம். ஜ.செ.க. அதனை நோக்கிப் பயணிக்கிறது என்பதில் ஐயமில்லை.

ஆனால் நம் மக்களுக்கு நாம் சொல்லுவது எல்லாம் துணை முதல்வரைப் புறக்கணிக்க வேண்டாம்.  அது நமக்குப் பாதிப்பைத்தான் ஏற்படுத்தும். வழக்கம் போல, இதற்கு முன்னர் பேராசிரியர் இராமசாமியை எப்படி நாம் பயன்படுத்திக் கொண்டோமோ, அதே போல இன்றைய துணை முதல்வரையும்  நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவர் எல்லாப் பினாங்கு மக்களுக்கும் உரியவர். அதே போல நம் இந்தியர்களுக்கும் உரியவர்.

புதிய துண முதல்வர் 11,ஜக்தீப் சிங், அவர்களை வரவேற்கிறோம்! வாழ்த்துகிறோம்!

Monday 14 August 2023

ஏழை குழந்தைகளுக்கென்று பள்ளிக்கூடமா?

 

ஏழைக் குழந்தைகளுக்கென  தனி பள்ளிக்கூடமா?  அரசாங்கம் இன்னும் கொஞ்ச அதிகமாகவே சிந்திக்க வேண்டும்.

ஏழைக் குழந்தைகளின் மேல் உள்ள அரசாங்கத்தின் கரிசனத்தை  நாம் குறைத்து மதிப்பிடவில்லை.  நமக்கும் அந்தக் கரிசனம் உண்டு.

ஆனால் இப்போது உள்ள பள்ளிக்கூடங்கள்  பணக்காரர்களின் பள்ளிக்கூடங்களா என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியது  அரசாஙத்தின் கடமை. ஒவ்வொரு கிராமங்களிலும் உள்ள பள்ளிக்கூடங்கள் அந்தந்த கிராமப்பகுதிகளில் உள்ள குழந்தைகள் தானே அங்கே கல்வி கற்கின்றனர்.  தோட்டப்புறங்களில் உள்ள பள்ளிகளை எடுத்துக் கொள்வோம். அங்கே எந்தப் பணக்கார வீட்டுப் பிள்ளைகள்  கல்வி கற்கிறார்கள்?  அவர்கள் எல்லாம் ஏழைத் தோட்டப்புற மாணவர்கள் தானே!
 
கிராமப்புற மாணவர்களின் கல்வியின் மீது அக்கறை கொள்வது என்பது வேறு. ஆனால் அவர்களை பணக்காரர்-ஏழை என்று பிரிப்பது வேறு. அவர் கல்வியில் பின் தங்கியவர்களாக இருந்தால் அதனைக் களைய எல்லா முயற்சிகளும் எடுக்க வேண்டும்.

இன்று  நாடளவில் அல்லது உலக அளவில் எடுத்துக் கொண்டாலும் சரி மாணவர்கள் ஏன் சீருடை அடைய வேண்டும் என்று பணிக்கப்படுகிறார்கள்?  பள்ளிகளில் பணக்காரன் ஏழை என்கிற பாகுபாடு இருக்கக்கூடாது என்பதற்காகத்தான்.  கல்வி என்பது பொது. அது பணக்காரனுக்கோ ஏழைக்கோ தனித்தனி என்கிற வித்தியாசமின்றி கற்பிக்கப்பட வேண்டும்.  அதனால் தான் இன்று நாம் பொதுவான சீருடைகளை அணிகிறோம். நோக்கம்  கல்வி கற்பதில்  பாகுபாடு  இல்லை. அது ஒன்றே காரணம்.

ஏழைகளுக்கென்று தனிப்பள்ளிக்கடம் என்று அமைந்தால்  இன்னொரு பிரச்சனையைக் கிளப்பி விடுவார்கள். இவன் இந்தப் பள்ளியில் இருந்து வந்தவன், இவன் ஏழை, பொல்லாதவன் இவனுடன் சேரக்கூடாது என்று புதிதாக பல பிரச்சனைகள் தோன்றும். ஏழை மாணவர்கள் புறக்கணிக்கப்படுவார்கள். அவர்களிடம் பேசுவதே  பாவம் என்கிற  கர்வமும் பணக்கார மாணவர்களுக்கும் ஏற்படும்.

இவைகள் எல்லாம் நமக்குத்  தேவையற்ற ஒன்று.  ஏழையோ பணக்காரனோ அவனவனுக்குத் தனிப்பள்ளிகளாக இல்லாமல் எல்லாருக்குமே பொதுவான பள்ளிக்கூடங்கள் தான் நமது எதிர்கால நலன்களுக்கு நல்லது.  சிறு வயதிலேயே ஏழை பணக்காரன் என்று பிரித்து  அதனையே பிற்காலத்தில் அவனது அடையாளமாக மாறிப்போகும் சாத்தியம் உண்டு.

இல்லை!  நமக்குத் தேவை பொதுவான ப்ள்ளிக்கூடங்கள். அது கல்வி கற்க.  ஏழை பணக்காரன் என்று பிரித்துப் பார்க்க அல்ல. சிறப்பான கல்வி கற்க வேண்டுமென்றால் சிறப்பான ஆசிரியர்கள், திறமையான ஆசிரியர்கள் தான் வேண்டும். அதனை விடுத்து பள்ளிக் கட்டுவது அல்ல.!

Sunday 13 August 2023

வாழ்த்துகள்!

 

                                Negeri Sembilan, Menteri Besar  Datuk Sri Aminuddin Harun

நெகிரி செம்பிலன், மாநில மந்திரி பெசாராக, இரண்டாம் தவணையாக, டத்தோஸ்ரீ அமினுடின் ஹருன், வயது 56,  கோலப்பிலா, இஸ்தானா பெசார், ஸ்ரீமெனாந்தியில், நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் துவாங்கு முனாவிர் முன்னிலையில்   பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.  அந்நிகழ்வில் ஒற்றுமை அரசாங்கத்தின் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்

பொதுவாக பல மாநிலங்களிலும் பலவித பிரச்சனைகள் இருந்தாலும் நெகிரி செம்பிலானில் அதிகப் பிரச்சனைகள் இல்லாத மாநிலமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு வேளை பிரச்சனைகள் இருந்தாலும் அதனை வெளிக்கொணர  யாரும் இல்லையோ என்று யோசிக்க வேண்டிய நிலையிலும் நாம் இருக்கிறோம்.

சென்றமுறை எந்த ஒரு எதிர்க்கட்சியும் இல்லாத நிலையில் எந்த ஒரு பிரச்சனையும் பேசப்படவில்லை. அது தான் உண்மை. ஆனால் இந்த முறை அப்படியல்ல. பெரிகாத்தானிலிருந்து ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமர்ந்து கொண்டிருக்கின்றனர். அதனால் பிரச்சனைகள் வெளி வரும் என நம்பலாம்.

நம்மிடம் ஒரு சொலவடை உண்டு. "தட்டிக் கேட்க ஆளில்லை என்றால் தம்பி சண்டப்பிரசண்டம் செய்வான்" என்பார்கள். அதனால் தட்டிக்கேட்க ஆள் வேண்டும். அதுவும் இது அரசியல்.  கொள்ளையடிப்பதற்கு என்றே ஒரு கூட்டம் சுற்றிக்கொண்டு தான் இருக்கும்.  அவர்களை நாம் என்ன செய்ய முடியும்?  தடித்த தோல்கள்! எதுவும் உறைக்காது!

எதிர்க்கட்சி இல்லை என்பதால் நாமும்  எந்த ஒரு எதிர்ப்புக் குரலையும் கேட்கவில்லை. ஆனால் நமக்கு ஒரு நம்பிக்கையுண்டு. பிரதமர் அன்வார் மேல் நமக்கும் நம்பிக்கையுண்டு. இலஞ்சம், ஊழலை அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார்.  ஏற்கனவே அது பற்றியான தனது வலுவான கருத்தை அரசியல்வாதிகளுக்குக் கடுமையான முறையில் எச்சரித்துவிட்டார். அதனால் அவ்வளவு எளிதில் இலஞ்சம் ஊழல் என்பது தொடர  அரசியல்வாதிகள் விரும்பமாட்டார்கள்.

எப்படியோ நெகிரி செம்பிலான் அரசாங்கம் தனது பணிகளை செவ்வனே செய்ய நாம் வாழ்த்துகிறோம். நமது இந்திய உறுப்பினர்களின் சேவை பற்றி நமக்கு  அதிகமாக ஒன்றும் தெரியவில்லை. மக்கள் தான் சொல்ல வேண்டும்.

மாநிலத்திற்கு நல்லது நடக்க வேண்டும். இந்தியர்களின் பிரச்சனைகளுக்கு நல்லதொரு தீர்வு காண வேண்டும். அதுவே நமது  வேண்டுகோள்.

மீண்டும் வாழ்த்துகள்!

Saturday 12 August 2023

அம்னோ இனி எப்படியிருக்கும்?

 

சமீபத்திய ஆறு மாநில சட்டமன்றத்  தேர்தலில்  அம்னோ பலத்த அடி வாங்கியிருப்பது அதன் எதிர்காலத்தைக் கேள்விகுறியாக்கியிருக்கிறது!

அதன் தோல்விக்கு அம்னோ தலைவர் ஸாகிட் ஹாமிடி தான் காரணம் என்று பல்வேறு தரப்பிலிருந்து குரல் எழுப்பப்படுகின்றது. முதலில் அவர் மேல் இருக்கும் 30 க்கும் மேற்பட்ட ஊழல் வழக்குகள் தான்   மக்கள் கண் முன்  நிற்கிறது. 

என்ன தான் மூடி மறைத்தாலும்  அதனை பொது மக்கள் அவ்வளவு எளிதில் மறக்கப்போவதில்லை.  அது மட்டும் அல்ல ஸாகிட் ஹாமிடியைக் குறை சொல்லுவதின் மூலம் தங்களது ஊழல்களை  மூடி மறைத்து விடலாம் என்றும் அவரை எதிர்க்கும் தரப்பும் கணக்குப்போட்டு வைத்திருக்கிறது!

ஆனால் எதுவும் நடக்காது. ஊழல்வாதிகள் அம்பலம் ஆகும்வரை அம்னோவால் தலைதூக்க முடியாது.

இந்தச் சட்டமன்ற தேர்தலில்  அம்னோ மட்டும் போட்டியிட்ட இடங்கள் 108 தொகுதிகள். அவர்கள் வெற்றி பெற்ற இடங்களோ வெறும் 19 இடங்கள் மட்டுமே. இது ஆறு மாநிலங்களிலும் போட்டியிட்ட எண்ணிக்கை. இப்போது  ம.இ.கா.வுக்கு அவர்கள் ஏன் எந்தத் தொகுதியும்  ஒதுக்கவில்லை என்பது புரிந்திருக்கும். தொகுதிகள் ஒதுக்கவில்லை என்று மீண்டும் மீண்டும் அம்னோவைக் குற்றம் சொல்லுவதில் பயனில்லை. ஊழல்வாதிகளை மலாய்க்காரர்கள்  ஓரங்கட்டிவிட்டார்கள் என்பதைப் புரிந்து கொண்டால் போதும்.

ம.இ.கா.விலிருந்து வரிந்து கட்டிக்கொண்டு போய் பெரிக்காத்தான் கூட்டணில் சேர்ந்த நபர்களுக்கும்  இப்போது ஓரளாவது புரிந்திருக்கும்.  கெராக்கான் தலைவருக்கே எந்த மரியாதையும் கொடுக்காத அவர்கள்  இவர்களுக்கு என்ன தான் செய்யப்போகிறார்கள்? ஏதோ செனட்டர் பதவி கிடைத்தால்  அதையாவது  ஐந்து ஆண்டுகள் அனுபவித்திட்டுப் போகட்டும். சும்மா சேவை செய்ய வந்தோம் என்று சொல்லி உளறிக்கொண்டு இருக்காதீர்கள். சேவைக்கும் ம.இ.கா.வுக்கும்  என்ன சம்பந்தம்?

அம்னோ மானம்,மரியாதை எல்லாம் போய்விட்ட கட்சி.  அவர்கள் இப்போது இருக்கின்ற நிலைமையை வைத்தே 'எங்களுக்கு அந்தப்பதவி வேண்டும்! இந்தப்பதவி வேண்டும்!' என்கிற கோரிக்கையைத் தொடர்ந்து எழுப்பிக் கொண்டு தான் இருப்பார்கள்!  ஒற்றுமை அரசாங்கம் இவர்களது கோரிக்கை அனைத்தையும் நிறைவேற்றினால் ஆபத்து அரசாங்கத்திற்குத் தான். காரணம் மக்கள் ஆதரவு இல்லாத ஒரு கட்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்பது தான் கள நிலவர்ம்.

அம்னோ இனி முன்பு போல செயல்பட முடியாது என்பது திண்ணம். அவர்களுக்கான இடம் ஒற்றுமை அரசாங்கத்தில் அதிகம் என்பது தான்  உண்மை நிலவரம். இனி அம்னோவைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வருவது தான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு நல்லது.

இனி அம்னோ கட்சியை வளர்ப்பது என்பது இயலாத காரியம்! ஊழல் இல்லாதவர்கள் யாரும் கட்சியில் இருந்தால் ஒரு வேளை கட்சி மீண்டும் தலைதூக்கும்!

Friday 11 August 2023

குறைபாடா? பெரிதுபடுத்தாதீர்கள்!

 

உணவகங்களில் ஏதாவது தவறுகள் நடக்கத்தான் செய்யும். எந்த உணவகங்களாக இருந்தாலும் சரி. ஒன்று விலை கூடுதலாக இருக்கும். அல்லது வேறு ஏதாவது குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும்.

இன்றைய காலகட்டத்தில் விலை கூடுதல் என்பது தான் பெரிய குற்றச்சாட்டு. வியாபாரிகளுக்கு 'ஏன் விலையை ஏற்றினோம்!' என்பதற்கு  ஆயிரம் காரணங்கள் உண்டு.  அதையெல்லாம் நாம் பார்ப்பதில்லை. சம்பளம் ஏறவில்லையே என்று சொல்லுவதும்  மீண்டும் மீண்டும் சாப்பிடுவதும் குறைசொல்லுவதும் எந்தக் குறைச்சலும் இல்லை!

குறிப்பாக விலை கூடுதல் என்கிற குற்றச்சாட்டைப் பற்றி இங்கு நாம் பேசுவோம். நமக்கும் அந்தக் குற்றச்சாட்டில் நியாயமுண்டு என்பது தெரியும். நம்மில் பெரும்பாலோர் நாம் சாப்பிட்ட அந்த உணவகத்தில்  உணவு  திருப்திகரமாக இருந்தால் நாம் அந்த உணவகத்தைக் குறை சொல்லுவதிலலை.  விலை கூடுதல் என்றாலும் 'உணவு நன்றாக இருந்தது' என்று பாராட்டிவிட்டுத்தான் வருவோம்.  சரி பணத்தைக் கொட்டிக் கொடுத்தும்  உணவு சுவையாக இல்லாமல் இருந்தால்  என்ன செய்வோம்?  மீண்டும் அந்தக் கடைக்குப் போவதை நிறுத்தி விடுவோம்!  அந்த உணவகத்துக்கு நாம் செய்கின்ற உதவி  அதுதான்!  வெளியே போய் பறை அடிப்பதில்லை!

ஒரு சிலரைப் பார்க்கும்போது  அவர்கள் செய்வதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குறிப்பிட்ட அந்த உணவகத்தின் பெயரை நாறடிப்பதில் குறியாய் இருக்கின்றனர். அந்த உணவகத்தின் பெயரைச் சொல்லி, முகவரியைச் சொல்லி, அவர்களின் உணவைக் குறை சொல்லி, அந்த உணவின் விலையைக் குறைசொல்லி, அதனை பரபரப்பான செய்தியாக்கி  அந்த உணவகத்தின் பெயரையே நாசமாக்கி விடுகின்றனர்.  இது ஒரு தவறான செயல் என்றால் அவர்கள் ஏற்கப்போவதில்லை.  "நாங்கள் பணம் போட்டுத்தானே வாங்குகிறோம்" என்று  நியாயம் பேசுவார்கள்!

ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.  இவ்வளவு நேரம் அவர்கள் நியாயம் பேசியதெல்லாம் இந்திய உணவகங்கள் பற்றிதான். அதுவே சீனர் உணவகம், மலாய் உணவகம் என்றால் எந்த நியாயமோ, எந்தப் பணமோ எதுவுமே அவர்களுக்கு ஞாபகத்திற்கு வருவதில்லை! அதைப் பற்றியெல்லாம் தங்களுக்குள்ளே அனைத்தையுமே அடக்கிக் கொள்ளுவார்கள்!  வீரமெல்லாம் இந்திய உணவகத்தினர் மீது தான்! நீதி, நியாயம் பற்றிய ஞாபகம் வருவதில்லை.

அது என்னவோ தெரியவில்லை. குறை சொல்லுவதென்றால் இந்திய ஊணவகங்கள் மீது மட்டும் தான்.  இந்திய உணவகங்கள் மட்டும் தான் கண்ணுக்குத் தெரியும். வீரம் தெரியும்.  விவேகம் தெரியும். தங்களின் வீர விளையாட்டைக் காட்டுவார்கள்!

எந்த ஒரு இந்திய நிறுனங்களின் மீதும் உங்களுக்குக் குறைபாடுகள் இருந்தால் அவர்களிடம் மீண்டும் போகாதீர்கள்.  குறைகளை அவர்களிடம் சுட்டிக் காட்டுங்கள். அத்தோடு உங்களுடைய வேலை முடிந்தது. திருந்துவதும், திருந்தாததும் அவர்களைப் பொறுத்தது. அவ்வளவு தான்.

நோக்கம் எல்லாம் ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுத்து இந்தியர்களின் பெயரைக் கெடுக்காதீர்கள். அவ்வளவ் தான்.


Thursday 10 August 2023

களையெடுக்கிறதா ஜ.செ.க.?

 

என்ன தான் ஜ.செ.க. அனைத்து மலேசியர்களின் கட்சி என்று சொன்னாலும் அந்தக் கட்சியால் அதனை நிருபித்துக் காட்ட இயலவில்லை!

அது சீனர்களின் கட்சி தான் என்று மீண்டும் மீண்டும் நினைவுறுத்தப் படுகின்றது.  அது எல்லாகாலங்களிலும் சீனர்கள் கட்சி என்பதற்கு சான்று அக்கட்சி சீனர்களின் வாழும் இடங்களில் தான் வெற்றிபெற்று வருவதே போதும். மலாய் வாக்காளர் மத்தியில் அது வெற்றி பெற்றதாகச் சரித்திரம் இல்லை. இந்திய வாக்காளர்களும் ஒதுங்கியே நிற்கின்றனர்.

இது தான் அக்கட்சியின் நிலைமை. இப்போது அந்தோணி லோக் ஜ.செ.க. வின் செயலாளராக வந்த பின்னர்  அவர் இந்தியர்களைக் களை எடுப்பதாகவே தோன்றுகிறது.  கட்சியை சீனர் மயமாக்குவதில் இப்போது கொஞ்சம் அதிகமாகவே  அவர் கவனம் செலுத்தி வருகிறார் அது மட்டும் அல்ல அவர் அதற்காகவே பொதுச் செயலாளராக செயல்பட்டு வருகிறார்.இது கட்சியின் தலைமைத்துவத்தின் ஏற்பாடு என்று யூகிக்கலாம்.

பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்களை இந்தத் தேர்தலில் அவரை நிற்கவிடாமல் செய்தது நம்மால் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஒரு நல்ல சேவையாளரை அனாவசியமாகத் தூக்கி எறிவது போல செய்திருக்கிறார்கள். இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்காகப்  பாடுபட்ட ஒரு மனிதரை ஏதோ "சிறுவர்களிடம் விளையாடுவது "   போல லோக் செயல்பட்டிருக்கிறார். அந்த அசல் 'சீனப்புத்தி' அவரிடம் இருக்கிறது என்பது தெளிவு!

ஏன் நெகிரி செம்பிலானிலும்  இதே மாதிரி தான். இந்தியர்கள் இரண்டு பேர் எக்ஸ்கோவில்  இருந்தனர்.  அதனை வேண்டுமென்றே மாற்றினார். ஒருவரை மாற்றிவிட்டு ஓரு சீனரை  உள்ளே கொண்டு வந்தார். இது நிச்சயமாக இந்தியர்களை கீழறுப்பு செய்யும் வேலை. ஏன் பொதுத் தேர்தல் வரை கூட அவரால் காத்திருக்க முடியாதா? தேர்தலுக்குப் பிறகு அந்த மாற்றத்தைக் கொண்டு வந்தால் யாரும் குறை சொல்ல தேவையில்லையே!

இன்னும் மற்ற மாநிலங்களில் என்ன நடக்கிறது என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது. அந்தோணி லோக்  ஒரு மலேசியராக செயபட முடியாதவர். இவர் நடவடிக்கைகள் நவீன கால மலேசியர்களுக்கு ஏற்றதல்ல என்பது நிச்சயம்.

ஒரு காலகட்டத்தில் தேர்தலில் போட்டியிட ஆளில்லாத போது இந்தியர்கள் அதுவும் பட்டதாரி இந்தியர்கள் கைகொடுத்தனர் என்பதை லோக் மறந்துவிட்டார். இப்போது பாதை மாறுகிறார்.

இந்தியர்களை ஜ.செ.க. களையெடுப்பதாகவே தோன்றுகிறது!

Wednesday 9 August 2023

டேய்! எஸ்டேட்டுங்களா!

                                                               Mohd Najwan Halimi

இவர் தான் சிலாங்கூர்,  கோத்தா ஏங்கெரிக் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பக்காத்தான் கூட்டணியின் வேட்பாளர், முகமட் நஜ்வான்.

இவரைப் பற்றியான ஒரு செய்தி தான்  புலனங்களில் பரவிக் கொண்டிருக்கிறது. இந்தியர்களை அவர் அவமானப்படுத்தி விட்டார் என்கிற செய்தி  தான் அது.

நண்பர் ஒருவர், இவர்  இந்தியர்களை  "எஸ்டேட்காரன்" என்று  அவமானப்படுத்திப் பேசியதாக செய்தி வெளியிட்டு வருகிறார்.  அது உண்மை என்பதில் நமக்கு எந்த சந்தேகமுமில்லை. அவர் பொய் சொல்லுவதற்கும் எந்த முகாந்திரமும் இல்லை!

பொதுவாகப் பார்த்தால் இந்தியர்களை :எஸ்டேட்காரன்"  என்று அம்னோ அரசியல்வாதிகள் இதற்கு முன்னர் கூறியிருக்கின்றனர் அப்புறம் "சாரி" சொல்லிவிட்டு  எதுவும் நடவாததைப் போல போய்விடுவார்கள்.  இது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதே வார்த்தையை இப்போது, பிரதமர் அன்வார் காலத்திலும் தொடரக் கூடாது என்பது தான் நமது கட்சி.

நாமும் அவரது கருத்தை வரவேற்கத்தான்  வேண்டும். ஒவ்வொரு முறையும் ஒரு தறுதலை இப்படியெல்லாம் பேசிவிட்டு பிறகு "சாரி" சொல்லிவிட்டுப் போய்விடுகிறது.    நாமும் பெருந்தன்மையாக விட்டுவிடுகிறோம். இதனைத் தொடரவிடக்  கூடாது என்பது தான் நமது விருப்பமும் கூட.

தறுதலைகள் ஒன்றைப் புரிந்து கொள்வதில்லை. மற்றவர்கள் எப்படி இந்தியர்களைச் சிறுமைப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதேபோல அவர்களையும் சிறுமைப்படுத்த நம்மிடமும் வார்த்தைகள் உண்டு என்பதை மறந்து விடுகிறார்கள்.

இங்கு நாம் சொல்ல வருவதெல்லாம் இது போன்று கேவலங்களைப் பரப்பும்  நபர்களுக்கு நாம் ஆதரவு அளிக்கக்  கூடாது என்பது தான். இது போன்ற நபர்களை கழித்துக் கொண்டே வரவேண்டும்.  யாரும் இங்கு பெரியவனல்ல  என்பதைப் புரிய வைக்க வேண்டும்.

அவரின் தொகுதியைச் சார்ந்த நமது வாக்காளர்கள்  இதனைப் புரிந்து கொண்டால் சரி  மற்றத் தொகுதிகளிலும்  இவரைப் போன்றவர்கள் இருக்கலாம்.  அங்கும் நாம் அவர்களைக் களை எடுப்பது நமது கடமை!

Tuesday 8 August 2023

இவர்களைத்தான் நாம் நம்புகிறோம்!

 

பினாங்கு மாநிலத்தில் நடைபெற்ற பிரதமர் உடனான  ஒரு கலந்துரையாடலில்  ஓர் இந்திய மாணவி மெட் ரிகுலேஷன் கல்வி ஒதுக்கீடு   சம்பந்தமான  விஷயத்தைக் கேள்வியாக எழுப்பி இருந்தார்.

அதற்கு மழுப்பலாகப் பதிலளித்த பிரதமர் ஓர் உண்மையையும் ஒப்புக் கொண்டார். மலாய் வாக்களர்கள் அதற்கு ஆதரவாக இருக்கமாட்டார்கள்  என்கிற  உண்மையையும் ஒப்புக்கொண்டார்! நாமும் இதனை எதிர்பார்த்தது தான்!

நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இன்னும் நீண்டகாலம் அரசியலில்  இருக்கப்போகும் மாண்புமிகு கணபதி ராவ் வீரமான்  அதுபற்றி என்ன கருத்துரைத்தார்?  "அந்த மாணவிக்கு அன்வார் கொடுத்த பதில் சரியானதுதான். இந்திய மாணவர்கள் மெட் ரிகுலேஷன் ஒதுக்கீடு குறித்து கேள்விகள் எழுப்பி நேரத்தை வீணடிக்க வேண்டாம்"  என்று கணபதிராவ் கருத்துரைத்து உள்ளார்.

நாம் அவரிடம் கேட்கும் கேள்வி என்னவென்றால் இத்தனை ஆண்டுகள் எதிர்கட்சியாக இருந்தபோது இதே கேள்வியை நீங்களும் கேட்டவர் தானே? இப்போது பதவியில் இருக்கும் போது மட்டும் நீங்கள் ஏன் தடம் மாறுகிறீர்கள்?

நீங்கள் செய்ததைத் தானே  ம.இ.கா. காரனும் செய்தான்? அப்போது அவனை வறுத்து எடுத்தீர்களே!  ஆக பதவியில் இருக்கும் போது ஒரு பேச்சு! எதிர் அணியில் இருக்கும் போது ஒரு பேச்சு!  நாங்கள் யாரும் இதனை எதிர்பார்க்கவில்லையே!

இதனைத் தொடர்ந்து பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று மாணவர்களைப் பார்த்துப் பேசுவது வீண் தான் என்பது எனக்கும் புரிகிறது.  அதை விடுங்கள்.  இதற்கான தீர்வு தான் என்ன என்பதற்காவது உங்களிடமோ, உங்கள் கட்சியினரிடமோ பதில் உண்டா?

நீங்கள் இருக்கும் நிலைமையில் உங்களால் இதற்கான  தீர்வையோ, நிரந்தரமான  பதிலோ இனி கிடைக்காது என்பது நன்றாகவே புரிகிறது. காரணம்  நீங்கள் வகிக்கும் பதவி உங்களைப் பேச விடாமல் செய்கிறது என்பது புரிகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இதனை ஒரு பிரச்சனையாக, விவாதப்பொருளாக ஆக்கிக் கொண்டிராமல்  அதற்கான ஒரு தீர்வை கண்டே பிடிக்க முடியாதா?  பேசித் தீர்த்துக் கொள்ள முடியாதது ஏதாவது உண்டோ? என்னைக் கேட்டால் ஒவ்வொரு ஆண்டும் 2500 இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்  என்கிற ஒரு முடிவுக்கு வரலாம்.  முன்னாள் ம.இ.கா. தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேல் அவர்களின்  தலைமைத்துவத்தின் காலத்தில்  ஒதுக்கப்பட்ட  அதனையே ஒரு முடிந்த முடிபாக வைத்துக் கொள்ளலாம் அல்லவா?  தேவை ஏற்படும் போது மாற்றம் செய்யலாமே. முடியுந்தானே?

கணபதிராவ் அவர்களின் தீடீர்  மன மாற்றத்திற்காக  வருந்துகிறோம்!

Monday 7 August 2023

நமது எதிர்காலம் முக்கியம்!

 

ஓர் உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தேர்தல் என்றால் ஏதோ  'வந்தோம் போனோம்'  என்பதல்ல.  அது நமது வருங்காலம்.  நமது சமுதாயத்தின் வருங்காலம். அது நமது ஜனநாயகக் கடமை என்று சும்மா கடமைக்காக  யாருக்கோ வாக்கை  அளிப்பதல்ல.

அது நமது பொறுப்புணர்ச்சியைக் காட்டக் கூடியதாக இருக்க வேண்டும். தொடர்ந்து நாம் குடிகாரச் சமுதாயம் என்று முத்திரையோடு தான் வாழ வேண்டும் என்கிற  எண்ணம் நமக்கிருந்தால் அது எளிது. எந்தவொரு சிந்தனையும் நமக்குத் தேவை இல்லை.  எவனாவது மதுபானம் வாங்கிக் கொடுத்தால் அவனுக்கே வாக்களிக்கலாம்!

நமக்கு எல்லாகாலங்களிலும்  குடிகார முத்திரை மட்டும் அல்ல 'எஸ்டேட்காரன்' என்கிற முத்திரையும் உண்டு.  நமது வாக்குகளை நம்பி வாழும் அரசியல்வாதிகளே நம்மை 'எஸ்டேட்காரன்' என்று சொல்லி கேவலப்படுத்துகிறார்கள்.  இது சமீபத்தில் கூட நடந்தது.

நாம் எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.  நமது தாய் மொழிக்கல்வி, கல்வியில் நமது எதிர்காலம்,  நமது பொருளாதார உயர்வு - இவகளையெல்லாம் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களிலும் நாம் பெரும் அளவில் ஏமாற்றப்பட்டோம். அதில் நமது தலைவர்களின் பங்கும் உள்ளது. அதை விடுவோம்.

ஆனால் இப்போது நாம் ஏமாறத் தயாராக இல்லை.  அறிவார்ந்த ஒரு சமூகத்தை  காலங்காலமாக ஏமாற்றுவது இயலாத காரியம்.  ஏமாந்ததை மறவோம். இனி  ஏமாறாமல் இருக்க உறுதி பூணுவோம்.

நம்மிடையே கோடரிக்காம்புகள் நிறையவே  உள்ளனர். அது ஒரு துரோகக் கும்பல். இனத் துரோகிகள். காட்டிக் கொடுக்கும் கயவர்கள். எல்லாகாலங்களிலும் நமது ஒற்றுமையைக் குலைக்கும் குள்ள நரிகள். அவர்களுக்கு அரசாங்கம் மூலம் ஏதோ  விருதுகள்  கிடைக்கிறது என்றால்  அவர்கள்  சமுதாய நலனையே மறந்துவிடுவார்கள்.

நம் அறுபதற்கு மேற்பட்ட ஆண்டுகள்  பயணம் கீழ்நோக்கியே சரிந்து கொண்டே வந்திருக்கிறது. இது தான் ஆச்சரியம்.   "நாங்கள் அதைச் செய்தோம்! இதைச் செய்தோம்" என்று மார்தட்டினாலும்  பொருளாதாரத்தில் மட்டும்  நாம் மார்தட்ட முடியவில்லை! நம்மை முதலீடாக வைத்து தலைவர்கள் தான்  இப்போது மார்தட்டிக் கொண்டிருக்கிறார்கள்!

போனது போகட்டும். இனிமேலாவது விழிப்படைவோம். இன்றைய பிரதமர் அன்வார் இப்ராகிம்  இந்திய சமுதாயத்திற்கு நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார். அவரை இந்த சமுதாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  கட்சித் தலைவர்கள் வாய்மூடி மௌனியாக இருந்தால் சமுதாயமே நேரடியாகக் களத்தில் இறங்க வேண்டும்.

இன்றைய நிலையில் நமது ஆதரவு அன்வார் பக்கம் தான் இருக்க வேண்டும்! நமது அசைக்க முடியாத ஆதரவை அவருக்குத் தருவோம்!

Sunday 6 August 2023

தேர்தல் பிரச்சாரங்கள் அனல் பறக்கின்றன!


 தேர்தல் பிரச்சாரங்கள் அனல் பறக்கின்றன. ஐந்து  ஆண்டுகளுக்கு ஒரு முறை இதெல்லாம் நடப்பது வழக்கமான ஒன்று தான்.

ஒரு வித்தியாசம். இம்முறை ம.இ.கா. குரல் கேட்கவில்லை. வருத்தம் தான்.

நான் முதன் முதலாக தேர்தலில் வாக்களித்த போது அப்போது ம.இ.கா.வின் சார்பில் ரந்தாவ், நெகிரி செம்பிலான் மாநிலத்தில்  போட்டியிட்ட மாண்புமிகு அய்யாக்கண்ணு அவர்களுக்குத்தான் எனது முதல் வாக்கை செலுத்தினேன். அதாவது 1964-ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில்.  அப்போது நான் ம.இ.க. கிளை ஒன்றில் செயலாளராகவும் இருந்தேன். ஆனால் அப்போதைய எங்களது ஹீரோ என்றால் முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் லீ  கு வான் யூ தான்! அவர் சிரம்பான் வருகிறார் என்றால் அது தேர்த்திருவிழா தான்! அதாவது இப்போதைய நமது பிரதமர் அன்வார் இப்ராகிம் மாதிரி!

அந்த காலகட்டத்தில்  தேர்தல் பிரச்சாரங்கள் என்றாலே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தும். எதுவும் நடக்கும். அதுவும் குறிப்பாக பினாங்கு, மலாக்கா, சிங்கப்பூர் போன்ற சீனர்கள்  அதிகம் வாழும் நகரங்கலில் ஏதாவது அசம்பாவிதங்கள் நடக்கவே செய்யும். 

அதெல்லாம் கடந்தகால நினைவுகள்.  இப்போதெல்லாம் எந்த அசம்பாவிதமும் நடப்பதில்லை.  அந்த அளவுக்கு காவல்துறை ஒவ்வொரு நிமிடமும் கண்காணித்துக் கொண்டிருக்கிறது. தாராளமாகவே பிரச்சார கூட்டங்களுக்குப் போகலாம்.

ஒரே ஒரு பின்னடைவு என்னவென்றால் பிரச்சாரம் செய்யும் அரசியல்வாதிகளை  யாரையும் நம்ப முடிவதில்லை. எல்லாருமே கொள்ளையடிக்கும் கொள்ளைக்காரர்களாகவே இருக்கின்றனர்!

நான் நீண்ட நாள்களாகவே எந்தப் பிரச்சாரக் கூட்டங்களுக்கும் போவதில்லை.  யாருக்கு வாக்களிப்பது என்று ஒரு முடிவுக்கு வந்து விட்டோம்.  பிரச்சாரக் கூட்டங்களுக்குப் போவதால் ஏதும் புதிதாக தெரிந்து கொள்ளப்போவதில்லை. அயோக்கியன் யோக்கியன் போன்று பேசுவதையெல்லாம் இனி காதுகொடுத்துக் கேட்கத்  தயாராக இல்லை!

இன்றைய பிரச்சார கூட்டங்கள் என்றாலே ஏதோ சோத்துமாடுகளின் கூட்டம் என்கிற உணர்வு தான் வருகிறது. ஒரு கம்பீரம் இல்லை.  அவர்களிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை. எப்படியோ கூட்டங்கள் அமைதியாக நடந்தால் சரி. நல்லது நடந்தால் சரி.

அனல் பறக்கட்டும்! அது அமைதியாகப் பறக்கட்டும்!

Saturday 5 August 2023

ஜ.செ.க. ஏன் வாய் திறப்பதில்லை?

 

மெட் ரிகுலேஷன் கல்வி பற்றி ஜ.செ.க. இந்தியத் தலைவர்கள்  இப்போதெல்லாம் வாய் திறப்பதில்லை!

எல்லாம் தெரிந்தது தான். ஆட்சியில் இருக்கும் போது இப்படித்தான் சில சங்கடங்கள் வரத்தான் செய்யும்! இத்தனை ஆண்டுகள் நியாய அநியாயங்களைப் பேசியவர்கள்  இப்போது வாய் திறப்பதில்லை! இத்தனை ஆண்டுகள் வாய் திறக்காதவர்கள்  இப்போது நியாய அநியாயங்களைப் பற்றி பேசுகின்றனர்!  இதனாலெல்லாம் சமுதாயம் விழிப்படைந்து விடுமா? பயன்தான் பெற்று விட முடியுமா? இருந்தாலும் வரவேற்கிறோம்!  யாராவது குரல் எழுப்புகிறார்களே!

ஜனநாயக செயல்  கட்சியினர் இப்போது ஏன் மெட் ரிகுலேஷன் பற்றி பேசுவதில்லை?.  முன்பு பேசியபோது அது அரசாங்கத்தைக் குறி வைத்துத்  தாக்கினார்கள்.  இப்போது ஒற்றுமை அரசாங்கத்தில் அவர்களே அங்கம் பெற்றிருப்பதால் அப்படியெல்லாம் பேச முடியவதில்லை. அப்படியே கேட்டாலும் அது சீனர்களுக்கு எதிராகப் போய் முடியும்! அவர்கள் முதலாளிகளே சீனர்கள் தான்! அவர்களை எப்படிப் பகைத்துக் கொள்வது?  பகைத்துக் கொண்டால் அடுத்த முறை தேர்தலில் போட்டி போட வழியில்லாமல் போய்விடும்!

நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். கல்வி அமைச்சு மெட் ரிகுலேஷனுக்காக  சுமார் 30,000 இடங்கள் ஒதுக்குகின்றது. அதில் மலாய் மாணவர்களுக்கு  90 விழுக்காடு கொடுக்கப்பட வேண்டும். அதனைக் குறைக்க முடியாது. அதனைக் குறைத்தால் அரசாங்கம் மலாய்க்கரர்களிடமிருந்து எதிர்ப்பை எதிர்நோக்க வேண்டி வரும். அடுத்து 10 விழுக்காடு. அதில் சீன மாணவர்களுக்கு  5.43 விழுக்காடு, இந்திய மாணவர்களுக்கு  3.72  விழுக்காடு மற்ற சிறுபான்மையருக்கு  0.85 விழுக்காடு. இதனை அடிப்படையாக வைத்துத் தான் மெட் ரிகுலேஷன் கல்விக்காக மாணவர்கள் எடுக்கப்படுகின்றனர் என்று சொல்லப்படுகின்றது.

முன்னாள் பிரதமர் நஜீப் காலத்தில் ம.இ.கா.வின் வேண்டுகோளின்படி இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதாக  சொல்லப்படுகிறது. பிறகு அது பக்காத்தான் இரண்டு ஆண்டு கால  ஆட்சியின் போது சீன மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.  அதன் பிறகு அந்தப் பிரச்சனையை யாரும் எழுப்பவில்லை. காரணம் அது சீன மாணவர்களுக்குச் சாதகமாக  அமைந்தது தான்.

இந்தப் பிரச்சனை ஒவ்வொரு ஆண்டும் மீண்டும் மீண்டும் எழுப்புவதைவிட அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கல்வி அமைச்சு அதற்குச்  சரியான முறையில் தீர்வு காண வேண்டும்.

ஜ.செ.க. சீனர் நலன் நாடும் கட்சி என்பது நமக்குத் தெரியும் தான். அவர்களையும் குறை சொல்ல வழியில்லை. சீனர்களின் வாக்கை நம்பித்தான்  அந்த கட்சி இயங்குகிறது.  இங்குத்  தகுதி அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுத்தால் பிரச்சனைகள் வராது. கோட்டா வையும் தள்ளி வைத்து விட முடியாது.

பிரதமர் அன்வார் வருங்காலங்களில் அதற்கான ஒரு தீர்வைக் காண்பார் என நம்புகிறோம்!

Friday 4 August 2023

யார் தந்தார் இந்த அரியாசனம்?

 

       நன்றி: வணக்கம் மலேசியா

பல்கலைக்கழகங்களில்  ஒரு மாணவர் என்ன பாடம் எடுத்துப்படிக்க வேண்டும் என்பது மாணவர்களின் ஆர்வத்திற்கு உட்பட்டது.

மாணவர்கள் அவர்கள் தேர்ந்தெடுத்த பாடங்களைப் படிக்கும் போது தான் அவர்கள் விரும்பிய துறையில் அவர்களால் அவர்களது திறமையைக் காட்ட முடியும். இது தான் நடைமுறை.

ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு ஏற்பட்ட பிரச்சனையைப் பாருங்கள். அவர் மருத்துவம் படிக்க கேட்கவில்லை. எஞ்சினியரிங் படிக்க கேட்கவில்லை.  சட்டத்துறையை  விரும்பவில்லை. ஏனென்றால் நமது மலேசிய பல்கலைக்கழகங்களில்  இந்திய மாணவர்களுக்கு  முன்னுரிமைக் கொடுத்தால் இந்த மூன்று பாடங்களுக்குத் தான் அவர்கள் விண்ணப்பம் செய்வார்கள்!  அதனால் தான் நமது மாணவர்கள் இந்தத் துறையிலிருந்து  தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்கள்! இடம் எதிர்பார்த்த  அளவிற்குக் கிடைப்பதில்லை; ஒதுக்கப்படுவதில்லை!

ஆனால் இந்த மாணவி,  பிரியநங்கை மகேந்திரன்,  கேட்பதெல்லாம் ஆசிரியர் சார்ந்த கல்வி தான். இத்தனைக்கும் பல்கலைக்கழகம் கேட்பதைவிட இவருடைய தகுதி அதிகமாகவே இருக்கிறது. ஆனாலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை!  இதுவரை அவர்கள் இடம் கொடுத்திருக்கும்  மாணவர்களின் தகுதியைப் பார்த்தால் அவர்கள் அனைவருமே இவருடைய  தகுதிக்கு இணையாக இருக்க மாட்டார்கள். ஆனாலும் இவருக்கு இடம் கிடைக்கவில்லை.

இப்போது நமது கேள்வியெல்லாம் கல்வி அமைச்சு யார் என்ன படிக்க வேண்டும் என்று மாணவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இது சரியான முறையா என்பது தான் கேள்வி.   மாணவர்கள் விரும்பாத துறையை அவர்களுக்குக் கொடுக்கிறார்கள். அதைக்கூட மன்னித்து விடலாம். ஆனால் அவர்கள் கேட்காத துறையை, விரும்பாத துறையை அவர்களின் மீது திணிக்கிறார்கள்! அது தான் கொடுமை!  கோட்டாவை நிரப்ப வேண்டும் என்பதற்காக தகுதி இல்லாதவர்களையெல்லாம் மருத்துவராக்கி விடுகிறார்கள்! அப்படியென்றால் தகுதி உள்ளவர்களுக்காவது  கோட்டா முறையில் கொடுத்தாலாவது தகுதி உள்ளவர்கள் மருத்துவம் பயில இயலும். அதுவும் கொடுப்பதில்லை!

சரி இந்த மாணவி ஆசிரியாரவதற்குத் தானே விண்ணப்பம் செய்கிறார்? அதிலென்ன பிரச்சனை/ இந்திய மாணவர்கள் எந்தத் துறைக்கு விண்ணப்பம் செய்தாலும் அந்தத் துறையைக் கொடுக்கக் கூடாது  என்கிற விரோதப் போக்கைத்  தான் கல்வி அமைச்சு கடைப்பிடிக்கிறதோ என்றே தோன்றுகிறது!   மாணவர்கள் அவர்களின் பெற்றிருக்கும் மதிப்பெண்கள்  அடிப்படையில் அவர்களுக்கு இடங்கள் ஒதுக்க வேண்டும்.  கல்வி அமைச்சு தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று இந்திய சமுதாயம் வலியுறுத்துகிறது.

இந்திய மாணவர்களை ஏமாற்றும் போக்கை கல்வி அமைச்சு மாற்றிக்கொள்ள வேண்டும்!

Thursday 3 August 2023

பெற்றோர்களே! அலட்சியம் வேண்டாம்!

 

நாம் நம் குழந்தைகளுக்குச் சரியான பாதுகாப்புக் கொடுக்கிறோமா எனபதைப் பெற்றோர்கள் யோசிக்க வேண்டும்.

பெற்றோர்களின் கவனக் குறைவினால்  குழந்தைகளின் மரணம் என்பது  தொடர்ந்து கொண்டே இருப்பது மனதைப் பதைபதைக்க வைக்கிறது.

சமீபத்தில் வெளிவந்த ஒரு செய்தி.  இது நடந்தது இந்தியா,  பெங்களூரு . கைப்பேசியை சார்ஜ் பண்ண பயன்படுத்தப்படும் வயர் எப்படியோ குழந்தையின் கைகளின் அகப்பட்டுக்கொண்டது.  குழந்தைகள் எது கையில் அகப்பட்டாலும் அது உடனே வாயில் தான் வைக்கும். இது இயல்பு நாம் பார்த்திருக்கிறோம்.  குழந்தை பிழைக்க வாய்ப்பிருந்திருக்கும். ஆனால் ஒரு தவறு நடந்துவிட்டது.

கைப்பேசி சார்ஜ் ஆனதும் அதன் சுவிட்சை அணைக்காமல்  அப்படியே விட்டுவிட்டது குழந்தைக்கு எமனாகி விட்டது.  குழந்தை  சார்ஜரில் உள்ள பின்னை கடிக்க ஆரம்பித்ததால் மின்சாரம் தாக்கி குழந்தைக்கு  ஆபத்தை ஏற்படுத்திவிட்டது.

யாரை நாம் குற்றம் சொல்லுவது? எட்டு மாத குழந்தைக்கு என்ன தெரியும்?  எந்தப் பொருள் கையில் அகப்பட்டாலும் அது வாயில்  வைத்து சப்பத்தான் செய்யும்.  முதலில் குழந்தைகளுக்கு  இது போன்ற எலக்டிரிக் பொருள்களை கைகளுக்கு எட்டாதவாறு  வைத்திருக்க வேண்டும். ஆனால் மிக முக்கியம் சார்ஜ் செய்த பிறகு சுவிட்சுகளை அணைத்துவிட வேண்டும். இந்த விஷயத்தில் நாம் மிகவும் அலட்சியமாக இருக்கிறோம். இந்த அலட்சியத்தை நாம் ஒவ்வொரு வீட்டிலும் பார்க்கத்தான் செய்கிறோம்.  யாரும் அதனைப்  பொருட்படுத்தவதில்லை.  அந்த அளவுக்கு நாம் அலட்சியமாக  நடந்து கொள்கிறோம்.

குழந்தைகள் இருக்கும் இடங்களில் அதுவும் ஓடி ஆடி துருதுருவென இருக்கும் குழந்தைகள் இருக்கும் இடங்களில்  அலட்சியமாக இருந்துவிட 
முடியாது.  

சில ஆண்டுகளுக்கு முன் நம் ஊரில் நடந்த ஒரு சம்பவம்.  ஐந்து வயது பேரன்,  பாட்டி சாப்பிடும் மருந்துகளை மிட்டாய் என நினைத்து சாப்பிட்டு விட்டான். இறந்து போனான்.  குழந்தைகள் இருக்கும் இடங்களில் மிக மிகக் கவனம் தேவை.  அலட்சியம் வேண்டாம்.

மீண்டும் நாம் சொல்லுவது இதுதான்.  பெற்றோர்களே அதுவும் இளம் பெற்றோர்களே  உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால்  மிக மிக எச்சரிக்கையாய் இருங்கள். குழந்தைகளுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வெளியில் இருந்தும் வருகின்றன. வீட்டிலிருந்தும் வருகின்றன. 

பெற்றோர்களே! நீங்கள் தான் உங்கள் குழந்தைகளுக்குப் பாதுகாப்பாய் இருக்க வேண்டும்!

Wednesday 2 August 2023

கேள்வியின் நாயகனே...!

 


மாணவர் ஒருவர் குவந்தான் நகரிலுள்ள பல்கலைக்கழகத்தில் பதிய சென்ற போது நடந்த நிகழ்வு இது!

குறிப்பிட்ட அந்த மாணவர் தனது குடும்பத்தினருடன் பயணம் செய்திருக்கிறார். பயணம் செய்யும் வழியில் ஓய்வு எடுக்கும் பகுதியில் ஓய்வு எடுத்துவிட்டு  மீண்டும் கார் பயணம் ஆரம்பமாகிவிட்டது.

கார் சிறிது தூரம் சென்ற பிறகு தான்   காரில் மகனைக் காணோமே என்று  தாயாருக்குத் தெரிய வந்து காரை நிறுத்தச் சொல்லியிருக்கிறார். அப்போது தான் மகனை  ஓய்வு எடுக்கும் தலத்திலேயே விட்டுவிட்டு வந்தது  குடும்பத்தினருக்கு ஞாபகத்திற்கு வந்தது!

அதன் பின்னர் அந்த மாணவர் ஒயவு தலத்தில் இருந்த வேறொரு பயணியின்  உதவியோடு அவரது குடும்பத்தினரோடு வந்து சேர்ந்து கொண்டார்.  எந்த ஒரு பிரச்சனையும் இல்லை.

பொறுப்பில்லாத மாணவராக இருக்கக் கூடுமோ  என்று நிலைத்தாலும்  ஒன்று மட்டும் நிச்சயம். எல்லாம் பதட்டம், பதட்டம், பதட்டம் தான்!  பழக்கம் இல்லாத புதிய கல்லூரிக்குச் செல்லும் போது, புதிய மாணவர்கள், புதிய சூழல்,  அனைத்தும் புதிய, புதிய, புதிய - எல்லாமே புதியது! அதனால் மாணவனுக்கும் நம்பிக்கை வரவில்லை.

ஆனால் அவனது குடும்பத்தினர் மீது தான் நாம் குற்றம் சொல்ல வேண்டும். பெரியவர்கள். அனுபவம் உள்ளவர்கள். பெரியவர்கள் தான் அவனுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். புதிய இடத்திற்குப் போகிறோமே  என்கிற பயம் அவனுக்கு இருக்கத்தான் செய்யும். முதல் நாளே அவனுக்கு அப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டிருப்பது  வேதனையான விஷயம்.

எல்லாமே நல்லபடியாக முடிந்தது என்பது நல்ல விஷயம் தான். அவனும் இந்த  நிகழ்வை மறந்து நல்லபடியாக அவனது கல்வியைத் தொடர  நாம் இறைவனை வேண்டுகிறோம்!

Tuesday 1 August 2023

உணவு என்றாலே பயம் ஏற்படுகிறது!

 

இப்போதெல்லாம் உணவு என்றாலே ஒரு பயத்தை ஏற்படுத்தி விட்டார்கள்!

உணவகம் சென்றால் சுத்தமாக இல்லை என்கிற குற்றச்சாட்டு எழுகிறது. அதுவும் 'கழிப்பிடம் பக்கம்  போய் விடாதீர்கள்! அப்புறம் சாப்பிட முடியாது!' என்று சொல்லுகின்ற பழக்கமும் நமக்கு உண்டு. இப்போது இதனையெல்லாம் தாண்டி வந்துவிட்டோம். இப்போதும் திருப்திகரமாக இல்லை.

சரி உணவகம் ஒரு பக்கம் இருக்கட்டும். உணவகப் பொருள்களைப் பதப்படுத்தும் தொழிற்சாலைகள்  ஒரு பக்கம்  ஆபத்துகளை அள்ளி வீசுகின்றன.

என்ன தான் சொல்லுவது?  எலி கழிவுகள் ஒரு பக்கம், கெட்டுப்போன உணவு பொருட்கள், காலாவதியான உணவு பொட்டலங்கள்  - ஐயோ! ஐயோ! என்று புலம்ப வேண்டியிருக்கிறது.  

பொது மக்கள் தான் புலம்புகிறோம். தொழிற்சாலைகள் அது பற்றி எல்லாம் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. கவலைப்படுவதாக இருந்தால் அது எப்படி இந்த அளவுக்கு மக்களுக்குக் குப்பைகளை அள்ளித் தருவார்கள்?

சும்மா இரண்டு வாரம் தொழிற்சாலைகளை மூடச் சொன்னால்  என்ன நடக்கும்?  ஒன்றுமே நடக்காது! இதுவரை ஒன்றும் நடக்கவில்லையே! இனிமேலுமா நடக்கப்போகிறது?

நமது குற்றச்சாட்டு எல்லாம் சட்டங்கள் கடுமையாக இல்லை. சட்டங்கள் மீறப்படுகின்றன. அதற்குச் சுகாதார அமைச்சு துணை போகிறது, அவ்வளவு தான்!

உணவுப் பொருட்கள் எனும்போது அரசாங்கம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும். கடுமையாக நடந்து கொள்ளவில்லை என்றால்  இப்படித்தான் நடக்கும்.  இந்த இரண்டு வார தொழிற்சாலகள் மூடப்படுவது எல்லாம் பழைய நடைமுறை. இதற்கெல்லாம் முதலாளிகள் பயப்படப் போவதில்லை.  ஒரு வேளை,  வேலை செய்யும் தொழிலாலர்களுக்குச் சம்பளம் கிடைக்காமல் போகலாம், அவ்வளவு தான்!

விதிகளை மீறினால் ஆறு மாதங்கள் தொழிற்சாலையை இழுத்து மூட வேண்டும். அவர்களுக்கான அபராதம் ரி.ம.1,00,000 (ஒரு இலட்சம்) வெள்ளியாக இருக்க வேண்டும்.  இப்படி செய்தால் யோசித்துப் பாருங்கள்.  அவர்கள் மீண்டும் மீண்டும் செய்யக்கூடிய வாய்ப்பே இல்லை!

இப்போது என்ன நடக்கிறது என்று பாருங்கள். பொதுவாகச் சொன்னால் ஊழல் தான் ஆட்சி புரிகிறது!  வேறு யாரையும் குற்றம் சொல்ல முடியாது!

அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாம் பயந்து கொண்டே தான் இருக்க வேண்டும்!