Monday 29 June 2020

இந்திரா காந்தி இன்னும் காத்திருக்க வேண்டுமா?


எல்லாவற்றுக்குமே ஓர் எல்லை உண்டு.  

ஆனால் இந்திரா காந்தியின் வேதனைக்கு எந்த எல்லையும் இல்லை. சட்டத்தை மதிக்காத முன்னாள் கணவன். அந்தக் கணவனை தற்காக்கும் அதிகார வர்க்கம். 

சட்டம் அனைத்தும் இந்திரா காந்திக்குச் சாதகமாக இருக்கிறது. இருந்தும் என்ன பயன்?  சட்டத்தை மீறும் அந்தக் கணவனை காவல் துறையால் கைது செய்ய முடியவில்லை. அந்த அளவுக்கு அவர்களின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன!

"இதோ! அதோ!" என்று தான் காவல்துறையால் சொல்ல முடிகிறதே தவிர சட்டத்திற்கு முன் அந்தக் கணவரைக் கைது செய்து கொண்டு வந்து நிறுத்த முடியவில்லை!  அரசியல்வாதிகளின் சட்டம் காவல்துறையை விட வலிமை வாய்ந்ததாக இருக்கிறது!

நாட்டு அரசியலில் பல மாற்றங்கள் நடந்துவிட்டன.   புதிய பிரதமர்கள் வந்து போய்விட்டனர். ஆனால் அவர்கள் நல்ல பிள்ளைகளாகவே நடந்து கொள்ளுகின்றனர்.  அவர்களால் ஒன்றுமே செய்ய முடியாதாம். அது காவல்துறையின் கையில் உள்ளதாம்!   அந்த அளவுக்கு காவல்துறையினருக்குச் சுதந்திரம் உள்ளதாம்!

எப்போதும் போல காதில் பூ சுற்றுகிறார்கள் என்பது நமக்குத் தெரிகிறது/ ஆனால் நமது கையில் அதிகாரம் இல்லையே!  தெரிந்து என்ன செய்வது? அதிகாரத்தில் உள்ளவர்கள் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்று தெரிந்தும் நாம் வாய்ப்பொத்தி மௌனியாகத் தான் இருக்க வேண்டியுள்ளது!

இந்திரா காந்திக்கு எப்போது நல்ல காலம் பிறக்கும்?  போகிற போக்கைப் பார்த்தால் இதனை அவர்கள் இழுத்துக் கொண்டே போவார்கள் போல் தெரிகிறது.

ஒன்றைச் சொல்லலாம்.  இந்திரா காந்தியின் மகள், குழந்தையிலேயே  அப்பனால் கடத்திக் கொண்டு போகப்பட்ட அவரது மகள்,  மகளுக்குத் திருமணம் நடந்த பிறகுதான் அம்மாவின் கண்ணில் அகப்படுவார் என ஓரளவு ஊகிக்கலாம்! அந்த அளவுக்கு அப்பனுக்குப் பயம் இருக்கிறதே அது போதும்!  

கோழையாகவே வாழட்டும்! கோழையாகவே நாள்களைக் கடத்தட்டும்! கோழையாகவே பல முறை சாகட்டும்!

அது தான் அப்பனுக்குத் தண்டனை! வேறு எதுவும் நல்லதாய் சொல்ல ஒன்றுமில்லை!

Saturday 27 June 2020

மொகிதினூக்கு ஆதரவாக .....!

பிரதமர் மொகிதீனுக்கு,  வருகின்ற நாடாளுமன்ற கூட்டம் ஜூலை 13-ம் தேதி கூடும் போது,  பாஸ் கட்சி தனது ஆதரவைத் தெரிவிக்கும் என பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளார் அறிவித்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

நல்ல செய்தி தான். வரவேற்கிறேன்.  என்னைக் கேட்டால் நாடு இப்போதுள்ள நிலைமையில் ஒரு தேர்தலை நடுத்துவதால் நாட்டுக்கு எந்த நன்மையும் வந்து சேரப் போவதில்லை!

அம்னோ தரப்பினர் இப்போது தேர்தலை வைத்தால் தங்கள் தரப்புக்குச் சாதகமாக இருக்கும் என நம்புகின்றனர்.  அந்த ஒரு கட்சிக்குச் சாதகமாக இருக்கும் என்பதற்காக தேர்தலை நடத்துவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாது!

இப்போது மக்கள் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்றால் நிச்சயமாக பதினைந்தாவது தேர்தல் வரும் போது அவர்களைத்தான் மக்கள் ஆதரிப்பார்கள். அதுவரையில் ஏன் அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது?

அம்னோ கட்சியினர் ஆட்சியிலிருக்கும் போது நாட்டையே கொள்ளையடித்தவர்கள் என்பதாகப் பெயர் பெற்றவர்கள்! அதனால் என்ன?  சமீபத்தில் நடைப்பெற்ற இடைத் தேர்தல்களில் மக்கள் அவர்களுக்குத் தானே வெற்றி பெற ஆதரவு கொடுத்தார்கள்! அப்படியென்றால் மக்கள்  தொடர்ந்து அவர்களுக்கு தானே ஆதரவு கொடுக்கப் போகிறார்கள்.

இப்போது இருக்கும் அரசாங்கம் அம்னோவுக்கு ஆதரவாகத் தானே செயல்படுகிறது! அதிலென்ன சந்தேகம்.  உயர்பதவிகளில் மலாய்க்காரர்கள் தானே அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.  ம.இ.கா. வுக்கு ஒர் அமைச்சர் பதவி தானே கொடுக்கப்பட்டிருக்கிறது!  இதெல்லாம் அம்னோவுக்குச் சாதகம் தானே!

எப்படிப் பார்த்தாலும் அனைத்தும் அம்னோவுக்குச் சாதகமாகத் தான் இருக்கிறது! 

இன்றைய நிலையில்  பாஸ்  கட்சியின் கை ஓங்கியிருப்பது  அம்னோவுக்குப் பிடிக்கவில்லை என்று தான் நினைக்க வேண்டியுள்ளது! அமைச்சரவையில் அதிக இடம், அரசு சார்பு நிறுவனங்களில் அதிக இடம் - இது நிச்சயமாக அம்னோவுக்கு நல்ல செய்தி இல்லை!

ஆனால் பாஸ் கட்சியினருக்கு அது நல்ல செய்தி. பாவம்! பாஸ் கட்சியினர் பதவிக்காக காய்ந்து கிடந்தவர்கள். இப்போது தான் அவ்ர்களுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. 

இந்த நேரத்தில் தேர்தல் வேண்டும் என்றால் அவர்கள் - பாஸ் கட்சியினர் -  வரவேற்க மாட்டார்கள்!  அடுத்த தேர்தல் வரை பொறுத்திருந்தால் அதற்குள் அவர்கள் பங்கிற்கு அவர்களது பதவிகள் உதவியாக இருக்கும்!

எந்த காரணத்திற்காக பாஸ் கட்சியினர் நடப்பு அரசாங்கத்தை ஆதரித்தாலும்  பொதுத் தேர்தல் வேண்டாம் என்பதில் அவர்கள் உறுதியாக இருப்பதாக நம்பலாம்.

ஆனால் இது அரசியல்! எந்த நேரத்திலும் எதுவும் நிகழலாம்! அரசியலில் உத்தமர்களை எதிர்ப்பார்க்க முடியாது!

Friday 26 June 2020

அந்த நாளும் வந்திடாதோ...!


நமது நாடு கொரோனா தொற்று நோயிலிருந்து ஓரளவு விடுபட்டு இருக்கிறது என்று சொல்லலாம். 

சுமார் முப்பது விழுக்காடு என எடுத்துக் கொள்ளலாம். இன்னும் வெகு தூரம் போக வேண்டியுள்ளது. 

இருந்தாலும் கொஞ்சம் முன்னேற்றம். மூச்சு விட முடிகிறது.  பன்னிரண்டு வயதுக்குக் கீழ்பட்டவர்கள், அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் இன்னும் வீட்டினுள் அடைந்தே கிடக்க வேண்டியுள்ளது மிகப்பெரும் சோகம்!

 வேறு வழியில்லை என்று அரசாங்கம் சொல்லும் போது ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்.

ஆனால் வெளியில் நடப்பதென்ன?   

சிறு குழந்தைகள் எல்லாம் தாராளமாகப் பெற்றோர்களுடன் சேர்ந்து ஊரைச் சுற்றுகிறார்கள்!  அறுபது வயதற்கு மேற்பட்டவர்கள் எதற்கும் பயப்படுவதாகத் தெரியவில்லை! எல்லாருமே 'திடாப்பா!' என்கிற எண்ணத்துடன் நடந்து கொள்ளுகிறார்கள்!  இது பொறுப்பற்ற செயல் என்பது நமக்குப் புரிகிறது. அவரில் ஒருவர் பிரச்சனைக்கு உள்ளானால், அவர் குடும்பம், அவர் வாழுகின்ற இடம், அக்கம் பக்கம் - இப்படி எல்லாருமே பயப்படும்படி ஆகிவிடும்.  ஆனாலும் மீறுகிறார்கள்! அக்கறையற்ற இழி பிறப்புக்கள்! அவ்வளவு தான் சொல்ல முடியும்!

வருகின்ற மாதத்தில் மேலும் பல தளர்வுகள் காத்துக் கொண்டிருக்கின்றன.  குறிப்பாக திருமணங்கள், திரை அரங்குகள், தனியார் கல்வி நிலையங்கள் - இன்னும் பல.

திருமணங்கள் சரி.  திருமண விருந்துகளைத் தள்ளிப் போடுவதே சிறந்தது.  இதில் பல சிக்கல்கள்.  ஒன்று பிள்ளைகள் வரக்கூடாது, பெரியவர்கள் வரக்கூடாது  என்பதே ஒரு பிரச்சனை! மேலும் வருபவர்களை எல்லாம் உடல் வெப்பநிலையைச் சோதிப்பது.........!முகக் கவசம் பரவாயில்லை! தீர்த்துக் கொள்ளலாம்! அவர்களது முகவரி இத்யாதி,  இத்யாதி.

ஆனாலும் பரவாயில்லை. இப்போது எல்லாமே மலேசியர்களுக்கு  இயல்பாகி விட்டது! இப்படித்தான் இனி மனிதர்களின் தினசரி வாழ்க்கை அமையுமோ?  தெரியவில்லை! பொறுத்திருந்து பார்ப்போம்.

இனி நாம் வாழ்ந்த அந்த பழைய வாழ்க்கை....வருமா?  வரும் வரை "அந்த நாளும் வந்திடாதோ!" என்று பாடி வைப்போம்!

Thursday 25 June 2020

முகைதீனுடன் சேரமாட்டேன்!

முன்னாள் பிரதமர் டாக்டர் மாகாதிர்,  தனது வலைப்பக்கத்தில், இந்நாள் பிரதமர் முகைதீன் யாசினுடின்  சேர்ந்து தான் பணியாற்ற முடியாது என்பதாகக் கூறியிருக்கிறார். 

ஆச்சரியப்பட ஒன்றுமில்லை! 

முகைதீன் யாசின், தனது பங்காளிகளாக, யாரை நாம் திருட்டுக் கூட்டம் என்று கூறி சென்ற 14-வது தேர்தலில் ஆட்சிக்கு வர இயலாதவாறு தடையாக இருந்தோமோ, அவர்கள் அனைவரையும் தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டு புரட்டும் புரளியும் பண்ணியவர்களைப் புண்ணியவான்களாகவும், புனிதமானவர்களாகவும் மாற்றிவிட்டார்! மிகப் பெரிய சோகம்!

இத்தனைக்கும் இவர்கள் எல்லாம் நாட்டைக் கொள்ளையடித்தவர்கள் என்பதாக சென்ற தேர்தலின் போது அவர்களைப் பற்றி தண்டோரா போட்டவர் முகைதீன் யாசின்! 

இரண்டே ஆண்டுகளில் அத்தனை பேரும், அவர் கைக்கு வந்தவுடன், அனைவரும் அவதாரப் புருஷர்களாக மாறிவிட்டார்கள்!

ஆனால் டாக்டர் மகாதிர் அவர்கள் என்ன தான் காரண காரியங்களைச் சொன்னாலும் இவ்வளவு நடந்ததற்குக் காராணம் அவர் தான் என்பதை அவர் மறக்கலாம்! நாம் மறக்க மாட்டோம்!

நல்லதொரு அரசாங்கத்தை அமைக்க வேண்டிய அவர்,  கூட இருந்தவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு கொஞ்சம் அதிகமாகவே ஆட்டம் ஆடிவிட்டார்! அதனால் இன்று தறிகெட்டத் தனமாக, தான் தோன்றித்தனமாக,  அரசு இயந்திரம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது! 

"சீக்கிரம் 15-வது தேர்தலை நடத்துங்கள்!" என்று அம்னோ கட்சியினர் பிரதமர் முகைதீனை  "வா! வா!" என்று வற்புறுத்துகிறார்கள்! அவர்களுக்கு இது நல்ல நேரம் என்று அவர்கள் கணக்குப் போடுகிறார்கள்!  ஆனால் தேர்தல் வைப்பதால் எத்தனை கோடி வீணடிக்கப்படுகிறது என்று நாம் கணக்குப் போடுகிறோம்! கொள்ளயடிப்பவர்களுக்கு "நாட்டுப்பற்று, இனப்பற்று, கடவுள் பற்று" என்றெல்லாம் ஒன்றுமில்லை என்பதை மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்!

ஆனால் பிரதமர் முகைதீன் இந்தத் தவணை முடியும் வரை நான் தான் பிரதமர் என்று கணக்குப் போடுகிறார்!

அது சரி என்றே நான் சொல்லுவேன்.  எப்படியோ பதவிக்கு வந்து விட்டார் இந்தத் தவணையை முடிக்கட்டுமே! நல்லது நடக்கும் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை!ஆனால் ஒரு நிலையான அரசாங்கம் செயல்படுகிறதே என்று நிம்மதி கொள்ளலாம்!

எல்லாவற்றையும் இழந்த பின்னர் டாக்டர் மகாதிர் புலம்புவதில் அர்த்தமில்லை!

மீண்டும் ஒரு தொழிற்சாலை மூடப்பட்டது!


சமீபத்தில், ஒரு சில நாள்களுக்கு முன்பு தான், தவ்வு  (Tofu) தொழிற்சாலை ஒன்று மூடப்பட்டதாக செய்திகளைக் கண்டோம்.

இப்போது  கோலாலம்பூர் மாநகர் மன்றம் மீண்டும் கிளர்ந்து எழுந்திருக்கிறது! மாநகர் மன்றத்தினர் தினசரி வேலை செய்பவர்களா அல்லது ஆண்டுக்கு ஒரு முறை வேலை செய்பவர்களா என்று தெரியவில்லை!

மக்கள் சாப்பிடும் உணவுகள் எப்படி எல்லாம் தயாரிக்கப்படுகின்றன என்று கொஞ்சம் ஆராய்ந்தால் நாம் நிச்சயமாக சாப்பிடுவதையே மறந்து விடுவோம்!

இப்போது மாநகர் மன்றத்தால் மூடப்பட்டிருக்கும் மீ (Noodles) தொழிற்சாலை ஜாலான் செகாம்புட்டில் உள்ளது. முன்பே என்ன காரணிகளைச் சொன்னார்களோ அதே காரணிகள் தான் இப்போதும்!

தொழிற்சாலை மிகவும் அசுத்தம் என்கிற சூழலில் மூடப்பட்டிருக்கின்றது.  எலிகளின் நடமாட்டமும் அதன் கழிவுகளும் பரவலாகக் காணப்பட்டது. எலிகளின் மூத்திரம் இல்லை என்று சொல்லிவிட முடியாது. இருக்கலாம்! நாம் எவ்வளவு தூய்மையற்ற உணவுகளை உண்கிறோம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அவர்களின் கழிப்பிடம் மிகவும் அசுத்தமாக இருந்தது.  தொழிற்சாலையின் சுவர்கள், தரைகள் அனைத்தும் கருமை அடைந்து பார்ப்பதற்கு அருவருப்பைக் கொடுத்தது.  மீ தயாரிக்கப் பயன்படுத்தும் தளவாடங்கள் அனைத்தும் மிகப் பழையவை. மீ  தயாரிப்பதற்கு ஏற்றவை அல்ல.

தொழிற்சாலையில் பணி புரியும் வெளி நாட்டுத் தொழிலாளர்கள் மேலங்கியோ , தலையங்கியோ  எதுவும் அணிந்திருக்கவில்லை. தொழிலாளர்களுக்கு அரசாங்க உத்தரவின்படி எந்த தடுப்பு ஊசிகளும் போடப்படவில்லை. அத்தோடு கோரோனா தொற்று நோயிக்கான சோதனைகளும் செய்யப்படவில்லை!

நம்முடைய குற்றச்சாட்டு: உணவுப் பொருள்களைப் தயாரிக்கும் தொழிற்சாலைகளை மாநகர் மன்றம் சரிவர கண்காணிப்பதில்லை! மாநகர் மன்றமே இப்படி என்றால் ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள தொழிற்சாலைகளின் நிலைமை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் :நெஞ்சம் பொறுக்குதில்லையே!"  என்று பாடத் தோன்றுகிறது!

ஒரு வேண்டுகோள்! உணவு தயாரிக்கும் ஒவ்வொரு தொழிற்சாலையும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது சோதனைகளைகளுக்கு உட்படுத்த வேண்டும்.

அதுவே நமது வேண்டுகோள்!

Wednesday 24 June 2020

ஏன்? என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை!

                              "வீரத் தமிழச்சி"   ஜல்லிக்கட்டு ஜூலி                          

 எனது முகநூலில் வருகின்ற ஒரு சில விஷயங்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை! ஜீரணிக்க முடியவில்லை என்று சொல்லலாம்!

தொடர்ந்தாற் போல அவை வருகின்றன! இதன் மூலம் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது எனக்குப் புரியாத புதிராகவே இருக்கின்றது.

விஷயத்திற்கு வருகிறேன்.  முன்னாள் விஜய் டிவி, சுப்பர் சிங்கர் பாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற ஒருவர் பிரியங்கா. வெற்றி பெற்றதில் நமக்கும் மகிழ்ச்சியே!  இப்போது தொடர்ந்து அவர் முக நூலில் காட்சியளித்துக் கொண்டிருக்கிறார்.

அதன் பின்னர் இன்னொரு வெற்றியாளர் பார்வதி.  பார்வதியும் அவர் பங்குக்கு தொடர்ச்சியாக முகநூலில் வந்து கொண்டிருக்கிறார்!

மேலே சொன்ன இருவரும் வெற்றிப் பெற்று  அதற்கான பரிசுகளையும் பெற்றுக் கொண்டார்கள். நாமும் அவர்களை மறந்து விட்டோம்.

இன்னொருவரும் தொடார்ந்தாற் போல வந்து கொண்டிருக்கிறார். அவர் நடிகை நயன்தாரா! இவர் வருவது நமக்கு ஆச்சரியம் அளிக்கிறது! அவர் தமிழ்ப்படவுலகில் பிரபலமான நடிகை. அவருக்கு அறிமுகம் தேவை இல்லை. நடிகைகளின் நேரங்காலம் சரியில்லை என்றால் அவர்களே மூட்டை முடிச்சுகளுடன் புறப்புட்டு விடுவார்கள்!

இந்த மூன்று பேருமே கேரள - மலையாள இனத்தவர்கள்.  இது போன்ற விளம்பரங்களின் மூலம் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? தமிழர்களிடையே ஆதரவு தேட வருகிறார்கள் என்று சொல்லலாமா? தமிழர்கள் யாரும் இப்படிச் செய்வது இல்லையே!

இதற்கு முன்னர் நடந்த ஒன்றையும் விளக்க வேண்டும்.  கேரள வருகை நடிகை ஓவியா கோலிவூட் நுழைய முயற்சி செய்த நேரம். வரும்போதே ஆரவாரத்துடன் தனது அரை-குறை படங்களை வெளியாக்கி தன்னை பிரபலப்படுத்திக் கொண்டிருந்தார்.

இந்த நேரத்தில்"வீரத்தமிழச்சி" என்று போற்றப்பட்ட ஜூலியும் உள்ளே நுழைந்தார். "நான் தமிழச்சி'டா"  என்று ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அவர் சொன்ன ஒரே வார்த்தையை வைத்து ஜூலியைத் தண்டிக்கும் விதமாக ஊடகங்கள் அனைத்தும் அவரை எதிரியாகப் பார்த்தனர். ஓவியாவை தூக்கி வைத்துப் பேசிய அவர்கள் ஜுலியை மட்டமாகப் பேசினர். 

ஜூலி இத்தனைக்கும் தமிழ் மண்ணைச் சார்ந்தவர்.  அவர் ஆந்திராவிலிருந்தோ, கர்நாடகாவிலிருந்தோ,  கேரளாவிலிருந்தோ அடிபட்டோ, உதைப்பட்டோ தமிழ் மண்ணுக்கு வந்தவர் அல்ல! அவர் தமிழ் மண்ணின் சொந்தம்.  ஆனால் ஊடகத் துறையினர் கவர்ச்சியாட்டம் போட்ட ஓவியாவுக்கோ ஓர் ஆர்மியையே உருவாக்கிவிட்டனர்! ஜூலியை விரட்டோ விரட்டு என்று விரட்டி விட்டனர்!

ஏதோ தமிழர்கள் தான் ஜூலியை விரட்டி விட்டது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி விட்டனர். தமிழர்கள் ஏன் அதனைச் செய்ய வேண்டும்? தமிழர்கள் செய்யா விட்டால் வேறு யார் செய்வார். மேலே குறிப்பிட்ட அந்த மூன்று மாநிலத்தவர் தவிர வேறு யாராக இருக்க முடியும்? இதைத்தான் கூட இருந்து குழி பறிப்பது என்பதா?

இன்னும் கொஞ்சம் நாள் போனால் யார் யாரெல்லாம்  முகநூலில் படையெடுக்கப் போகிறார்களோ, பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 

இவர்கள் ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள். ஏதோ புதிய யுக்தியைக் கையாள்கிறார்கள் என்பது தெரிகிறது! பார்ப்போம்!

Tuesday 23 June 2020

சுகுபவித்ரா நாட்டின் ஒற்றுமையின் சின்னம்!

                                                 Sugu Pavithra  You-tube sensation

இந்திய சமையல் உலகில் தீடீரென கால் பதித்தவர் சுகு பவித்ரா தம்பதியினர். 

எந்த  வித முன் தயாரிப்பும் இல்லை.  என்ன கையில் இருந்ததோ அதனை வைத்து ஆரம்பித்து,  காணொளிகளில் பதிவேற்ற,  ஒரு சில நாள்களில் உலகளவில் பிரபலமடைந்தார் பவித்ரா. 

அவருக்கு அதிகமான ஆதரவு மலாய் மக்களிடமிருந்தே வந்தது. அதற்குக் காரணம் அவர் பேசிய சரளமான மலாய் மொழி நடையும் அவருடைய இந்திய சமையலும் அவர்களுக்குப் புதுமையாக இருந்தன. இந்திய சமையலை மலாய் மக்களிடம் கொண்டு சேர்க்க இதுவரை யாரும் முயற்சி செய்ததில்லை. அதனைச் செய்தவர் பவித்ரா.

இப்போது அவரது வீட்டுக்கு நிறைய பத்திரிக்கையாளர்கள், தொலைக்காட்சியினர், பொது மக்கள் என படையெடுப்பதால் அவர் வசித்து வந்த தோட்டத்தை விட்டு வேறு இடத்தில் குடியேறி விட்டார்! இப்போது முழு நேரமாகவே யூடியூபில் கவனம் செலுத்தகிறார் பவித்ரா. அவருக்கு சுமார் 7,00,000 பார்வையாளர்கள் உள்ளனர். அது மேலும் மேலும் வளர்ந்து கொண்டே போகிறது.

ஒரு சில நாள்களுக்கு முன்னர் நாட்டின் பிரதமர் முகைதீன் யாசினுடன்   காணொளிக் கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.

இப்போது அவரது புகைப்படம்,  ஒப்பனைக் கலைஞர் ராஸ்ஸி மூசாவால் எடுக்கப்பட்டு, அதனை அவர் இணையதளத்தில் பதிவேற்றம் செய்த பின்னர் "பெபாத்துங்" என்னும் மலாய் மாத இதழில் முகப்பு அட்டையாக வெளி வந்திருக்கிறது.  இனி உலக இதழ்களில் வரக்கூடிய வாய்ப்பும் வரலாம்! எதுவும் கணிக்க முடியவில்லை!

இந்நேரத்தில் நமது மக்களுக்கு ஒரு வேண்டுகோள். அவர்களுடைய வாழ்க்கையை அவர்கள் வாழ்கிறார்கள்.  அவர்கள் மீது நமக்குப் பொறாமை வேண்டாம். ஏன், எதனால், எப்படி முடியும் என்பன போன்ற கேள்விகள் நமக்குத் தேவை இல்லாத ஒன்று.

அவர்கள் நம்மில் ஒருவர்.  நமது தமிழ்க் குடும்பம். ஒரு தமிழ்க் குடும்பம் முன்னேறும் போது நாம் பெருமைப்பட வேண்டும். வாழ்த்த வேண்டும். ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்கு நாமே தடையாக இருக்க வேண்டாம். காலங்காலமாக அப்படியிருந்தால் இப்போது நம்மை மாற்றிக்கொள்வோம்!

போகப் போக அவர்கள்,  புகழின் வெளிச்சம் எப்படிப்பட்டது,  என்பதை அனுபவங்களின் மூலம் புரிந்து கொள்ளுவார்கள். அனுபவம் தான் எல்லாருக்கும் மேலான ஆசான். அவர்களுக்குச் சரியான வழிகாட்டல்கள் கிடைக்கும்.  இறைவன் அவர்களுக்கு வழிகாட்டுவார் என நம்புவோம்.

இத்தம்பதியினர் சிறப்பான, வெற்றிகரமான வாழ்க்கை வாழ நாம் வாழ்த்துவோம்!

நாட்டின் ஒற்றுமையின் சின்னம் என நாமும் அவர்களைப் போற்றுவோம்!

Monday 22 June 2020

பப்புவா நியுகினியில் ஒர் தமிழ் அமைச்சர்!

                                                       சசீந்திரன் முத்துவேல்

 பப்புவா நியுகினி என்னும் ஒரு நாடு ஏதோ ஆஸ்திரேலிய-நியுசிலாந்து பக்கம் இருப்பதாகத் தெரியும். அங்கு தமிழர்கள் இல்லை என்பதும் தெரியும்.  தமிழர்கள் இருந்தால் தானே நாம் அதைப் பற்றி ஆராய்ச்சி செய்வோம்! 

மலேசியத் தமிழர் ஒருவர்.  சிலகாலம் அங்குப் போய் வேலை செய்து விட்டுத் திரும்பி வரும்போது அங்குள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வந்தார். அவர் நிறம் - கொஞ்சம் அதிகமாக - நம்மை மாதிரி. அது எப்படி? நான் ஏதோ வெள்ளைக்காரர் தேசம் என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன்! அதுவரை தான் எனக்குத் தெரிந்த பப்புவா நியுகினி!

இப்போது தான் எனக்குத் தெரிய வந்தது: அந்நாட்டில் ஒரு தமிழர், நியு வெஸ்ட் பிரிட்டன்  மாநிலத்தின் ஆளுநராக,  ஆறு ஆண்டுகள் இருந்திருக்கிறார். .  இப்போது அவர் மத்திய அரசுத்துறை நிறுவனங்களில் அமைச்சராக இருக்கிறார் என்பது. 

பப்புவா நியுகினியில் 850 க்கும் மேற் பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. அதாவது 850  க்கும் மேற்பட்ட வெவ்வேறு பூர்விகக் குடியினர் வாழ்கின்ற தேசம் அது என்பது பொருள்! ஆனாலும் மக்களை இணைக்கும் மொழியாக பிஜின் என்று சொல்லப்படும் மொழி இருப்பதால் அதனை மூன்றே மூன்று மாதத்தில் அவசியத்தின் பேரில் கற்றுக் கொண்டார் சசிந்தீரன்.

சசீந்திரன் தமிழ் நாடு, சிவகாசியைச் சேர்ந்தவர். தமிழ்வழியில் பள்ளிக் கல்வியைக் கற்றவர்.விவசாயத் துறை பட்டதாரி,  ஆங்கில வழியில்.  வேலை தேடி மலேசியா வந்தவர். இங்கு இரண்டு ஆண்டு காலம் தனியார் நிறுவனமொன்றில் பணி புரிந்தார். அதன் பின்னர் 1998 வாக்கில் பப்புவான் நியுகினியில் வாய்ப்பொன்று தேடி வந்தது.  அப்போது அங்கு அவர் வேலை செய்த நிறுவனத்தின் உரிமையாளர் வணிகத்தை விற்று விட்ட நிலையில் அதே நிறுவனத்தை வாடகைக்கு எடுத்து வணிகத்தில் கால்பதித்தார்.  இது நடந்தது 2000-ம் ஆண்டு. பின்னர் இன்னும் பல நிறுவனங்களையும் புதிதாக அமைத்து வணிகத்தை விரிவு படுத்தினார். இப்போது அவரின் மனைவி சுபா அவரது நிறுவனங்களுக்கு நிர்வாக இயக்குனராக இருந்து பார்த்துக் கொள்கிறார்.

இது தான் நியுகினியில் அவரின் ஆரம்ப காலம்.  அவரை அங்கு வாழ்ந்த பூர்விகக் குடியினர் தங்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டதற்குக் காரணம் அவரால் அவர்களின் மொழியைப் பேச முடிந்தது. அவர்களது கலாச்சாரம், பழக்க வழக்கங்களைப் பின் பற்ற முடிந்தது. அவர்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்குச் சேவையாற்ற முடிந்தது. இவைகள் எல்லாம் அவரின் மேல் அந்த மக்களுக்கு நல்லெண்ணத்தை உருவாக்கியது. 

அந்த காலக் கட்டத்தில் தான் அந்த மக்கள் தேர்தலின் மூலம் அவரைத் தங்களது மாநிலத்தின் ஆளுநராக 2012-ம் ஆண்டும்,  மீண்டும் 2017-ம் ஆண்டும் தெர்ந்தெடுத்தனர்.   பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக  அவர் மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக அழைப்பு விடுக்கப்பட்டு அந்தப் பதவியை 2019-ம் ஆண்டிலிருந்து செயல்படுத்தி வருகின்றார். இதுவே பப்புவான் நியுகினியில் அவரது வாழ்க்கையின் சுருக்கம்.

மாண்புமிகு சசிந்தீரன் அவர்களின் மனைவியின் பெயர் சுபா அபர்னா சசிந்தீரன். திருநெல்வேலியைச் சேர்ந்தவர். இரண்டு பிள்ளைகள்.  சுத்த சைவம். வீட்டில் பேசுவது தமிழ் மட்டுமே. வெளியே மற்ற மொழிகள் பேசுகின்றனர்.  சுபா அவர்கள் திருக்குறள் மீது தீராதப் பற்று உடையவர். அதனை அந்நாட்டு மொழியில் மொழி பெயர்க்கவும் அதற்கான வேலைகளையும் செய்து வருகிறார்.

குறுகிய காலத்தில், அதுவும் அயல் நாட்டில், தமிழர்களுக்குச் சம்பந்தேமே இல்லாத ஒரு நாட்டில், பெரியதொரு பதவியில் இருப்பவர் தமிழர்களில் இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும்! நமக்கும் மகிழ்ச்சியே!

பெரியதொரு பதவியில் இருக்கும் ஒரு குடும்பம் தமிழ் பேசுவது, சைவத்தைக் கடைப்பிடிப்பது என்பதெல்லாம் நடைமுறையில் பார்ப்பது கொஞ்சம் கடினமே! 

மாண்புமிகு சசிந்தீரன் அவர்கள் இன்னும் பல பெரிய பெரிய பதவிகள் பெற வாழ்த்துகிறோம்!

Sunday 21 June 2020

வீர குலப்பெண்களுக்கு வாழ்த்துகள்! (74)

முதலில் நமது பெண்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

நமது பெண்களில் பலர் இப்போதெல்லாம் "ஆன் லைனில்" தொழில் செய்ய ஆரம்பித்திருப்பது மனதுக்கு நிறைவளிக்கிறது. 

முக நூலில் நிறையவே விளம்பரங்கள் வருகின்றன. கோரோனா தொற்றுக்கு முன்னர் இப்படி எல்லாம் பார்த்ததில்லை.  அப்போது அவர்களுக்கு இது தேவைப்படவில்லை! 

காலத்தின் கட்டாயம் என்பது இது தான். ஆனாலும் கொரோனா தொடர்கிறதோ, தொடரவில்லையோ இவர்களின் தொழில் ஆன் லைனில் இனி தொடரும் என நம்பலாம்.  தொடர வேண்டும். 

நமது தமிழ்ப்பெண்கள் இனி புதிய  புதிய பாணிகளைக் கையாள்வது என்பது தவிர்க்க முடியாதது!

மேலும் நமது பெண்கள் இப்போதெல்லாம் தொழில் செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர் என்பதே நல்லதொரு மாற்றம் நமது சமுதாயத்தில் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. 

ஆண்கள் வேலை செய்வதும் பெண்கள் தொழிலில் ஈடுபாடு காட்டுவதும்  நமது சமுதாயத்தில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பெரிய மாற்றங்கள்!

முன்னேற்றம் கண்டுவிட்ட சீன சமுதாயத்தில் இப்படித்தான் பார்க்கிறோம்.  என்ன தான் ஆண்கள் வேலை செய்தாலும்,  வியாபாரம் செய்தாலும்,  பெண்கள் வீட்டோடு சும்மா இருப்பதில்லை.  சீரியல் நாடகங்களைப் பார்த்துக் கொண்டு நேரத்தை வீணடிப்பதில்லை.  அவர்கள் ஏதோ ஒரு வகையில் தொழில் செய்து கொண்டு தங்களது வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளுகின்றனர். அதனால் தான் சீனர்களோடு - பொருளாதாரத்தில் - நம் தமிழ் இனம் போட்டிப் போட முடியவில்லை.

ஆனால் நம் இனத்திலும் மாற்றங்கள் தெரிகின்றன. இது தொடரும் என நம்பலாம். 

சீனர்களின் வாழ்க்கை முறை, சீனப் பெண்களின் வாழ்க்கை முறையை நமது சமுதாயத்துப் பெண்கள் பார்த்துத் தெரிந்து கொண்டாலே போதும்.  அதனைக் கடைப்பிடித்தாலே போதும்.  நமது சமுதாயத்தின் பொருளாதார வலிமை தன்னாலே வந்து சேரும். அதில் சந்தேகமில்லை.

பெண்களே! வீட்டில்'சும்மா' இருக்கும் பழக்கத்தை விட்டொழியுங்கள்.  முதலில் சம்பாத்தியம். அதன் பின்னர் தான் பொழுது போக்கு. சீனர்களிடம் பொழுது போக்கே இல்லையா?  இருக்கிறது! அவர்களின் அன்றாடம் செய்கின்ற பணிகள் முடிந்த பின்னர் தான் பொழுது போக்கு!

நமக்கும் அதே வழி தான். முதலில் சம்பாத்தியம்.  அதன் பின்னர் தான் பொழுது போக்கு. 

வாழ்த்துகள்! தொடருங்கள் உங்கள் பணிகளை!  அது ஆன்லைன் தொழிலாக இருந்தாலும் சரி, வேறு வகையான தொழிலாக இருந்தாலும் சரி பெண்களுக்குப் பொருளாதார சுதந்தரம் வேண்டும்.

மீண்டும் வாழ்த்துகள்!

இது சாத்தியமா....?

 பாலர் பள்ளிகள் ஜூலை ஒன்று முதல் திறக்கப்படும் என்கிற அரசாங்க அறிவிப்பை பெற்றோர்கள் வரவேற்கத்தான் செய்வார்கள். 

அந்த அளவுக்கு பெற்றோர்கள் பொறுமை இழந்து நிற்கிறார்கள்! பிள்ளைகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை!

ஆனாலும் பெற்றோர்கள், என்ன தான் பொறுமை இழந்துவிட்டாலும், அதற்காக அவர்கள் தங்கள் குழந்தைகளின் உயிரைப் பணயம் வைக்கத் தயாராக இல்லை என்பதையும் ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்.

அரசாங்கம் பாலர் பள்ளிகளுக்கான வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறது.  ஆனால் இது எந்த அளவுக்குக் குழந்தைகளுக்குப் பாதுகாப்பைக் கொடுக்கும் என்பதில் பெற்றோர்களுக்குச் சந்தேகத்தைக் கிளப்பத்தான் செய்யும். அந்த வழிகாட்டுதல்கள் என்ன நூறு விழுக்காடு ஏற்றுக்கொள்ளத் தக்கவையா? அப்படி எதுவும் இல்லை!

சிறு குழந்தைகளை நமது கட்டுப்பாட்டில் கொண்டு வருவது என்பது இயலாத காரியம். ஒரு வேளை ஆசிரியர்களால் முடியும்.  அப்படி எவ்வளவு நேரத்திற்கு அவர்களைக் கட்டுபாட்டில் ஆசிரியர்களால் வைத்திருக்க முடியும்? குழந்தைகள்  ஓடி ஆடி விளையாடுபவர்கள். அவர்களை ஒரு வட்டத்தில் நிறுத்தி கொஞ்ச நேரம் விளையாடுவதை நிறுத்தி வைக்கலாம்.  அதிக நேரம் என்பது இயலாத காரியம்.

இருந்தாலும் அரசாங்கத்தின் வழிகாட்டுதல்கள் என்ன என்பது நமக்கு இன்னும் சரியாகப் புரியவில்லை.  நாம் எழுப்புகின்ற கேளவிகளை எல்லாம் அவர்களும் எதிநோக்கியிருப்பார்கள். 

இங்கு மீண்டும் ஒரு கேள்வி.  அரசாங்கத்தின் பாலர் பள்ளிகளைக் கருத்தில் கொண்டு தான் அரசாங்கத்தின் கொள்கைகள் அமைந்திருக்கும்.  அங்குப் பணம் ஒரு பொருட்டல்ல. ஆனால் தனியார் பள்ளிகளின் நிலை வேறு. இங்கு இலாபம் தான் முக்கிய குறிக்கோள். அரசாங்ம் சொல்லுகின்ற  வழிகாட்டுதல்களை வைத்து இவர்களால் தொழில் செய்ய முடியுமா?

பாலர் பள்ளிகள் ஆரம்பித்த பின்னர் தான் நம்மால் ஒரு முடிவுக்கு வர முடியும். பள்ளிகள் திறந்ததும் பிள்ளைகள் வந்து குவிவார்கள் என்பதை எதிர்ப்பார்க்க முடியாது. பெற்றோர்கள் அவசரப்பட மாட்டார்கள். முதலில் யார் அனுப்புகிறார்கள் என்று "நீயா நானா?" போட்டிகள் இருக்கத்தான் செய்யும்! 

எப்படி இருந்தாலும் பாலர் பள்ளி மீண்டும் ஆரம்பிப்பது என்பது மிகவும் இக்கட்டான சூழல் தான். இது பிள்ளைகளின் உயிர் சம்பந்தப்பட்டது. விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடியாது!

சாத்தியமா என்று கேட்டால்....?  பதில் சொல்ல முடியவில்லை!

Friday 19 June 2020

பிரதமர் வேட்பாளர் யார்?

நம்பிக்கை கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதற்கு பி.கே.ஆர். கட்சியின் உச்சமன்றம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

அதன் பிரதமர் வேட்பாளர் அன்வார் இப்ராகிம் என்பதாக அந்தக் கட்சியின் நிலைப்பாட்டை நாம் ஆதரிக்கிறோம். நம்பிக்கை கூட்டணி பிரதமர் வேட்பாளராக டாக்டர் மகாதிரை ஏற்க முடியாது என்பது சரியான அணுகுமுறையே!

ஆனால், இன்றைய நிலையில், தேசிய கூட்டணியிடமிருந்து அரசாங்கத்தைக் கைப்பற்ற வேண்டுமானால் டாக்டர் மகாதீரின் தலைமைத்துவம் தேவை என்கிற வாதம் சரியானது அல்ல என்று சொல்லி விட முடியாது.

அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் மூன்றாவது முறையாக டாக்டர் மகாதிர் பிரதமராக வரலாம்.  அவர் சொல்லுவது போல இந்த முறை மூன்றாம் முறையாக பதவி ஏற்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டால்,   அடுத்த  ஆறு மாதங்களில்,  தனது பதவியை விட்டுக் கொடுக்கத் தயார் என்று அவர் பக்கம் பேசப்படுகின்ற நியாயம்! 

என்ன தான் அவர் நியாயம் பேசினாலும் க்டந்த கால அனுபவங்கள் அப்படி எதுவும் நியாயமாக நடந்ததாகத் தோன்றவில்லை! டாக்டர் மகாதிர் ஒரு வேளை மாறலாம்! அது சாத்தியம் தான்.  ஆனால் அவரது கட்சியினர் அப்படி மாற வாய்ப்பில்லை! 

இப்போதே அவரது கட்சியினர் "ஏன் அன்வார் பிரதமர் வேட்பாளர்? வேறு யாரும் இல்லையா?" என்கிற ரீதியில் கேள்விகள் எழுப்புகின்றனர். இந்த வாதங்களை வைத்துப் பார்க்கும் போது "மகாதீர் பிரதமர் ஆனால் அன்வார் அடுத்த பிரதமர் அல்ல!"  என்கிற நிலை தான் மீண்டும் மீண்டும் ஏற்படும். 

டாக்டர் மகாதிர் நியாயம் பேசுபவராக இருந்தால் தனது கட்சியினரை வாய்த் திறக்காமல் செய்ய வேண்டும்.  அதனை அவர் செய்யவில்லை! அப்படிப் பார்க்கின்ற போது அவரிடம் உண்மை இல்லை என்று தான் நாம் ஐயப்பட வேண்டி உள்ளது!

இதைத் தவிர்த்து இன்னொரு பரிந்துரையும் நம்பிக்கை கூட்டணியிடம் உள்ளது:  பிரதமர் மகாதிர்  - துணைப்பிரதமர் அன்வார். இந்தப் பரிந்துரை சரி தானே என்று நாம் நினைத்தாலும் கடந்த கால அனுபவங்கள் அது தவறானது என்று மெய்ப்பித்துள்ளது! எப்போது வேண்டுமானாலும் துணைப் பிரதமரைத் தூக்கி எறியலாம் என்பது தான் துணைப்பிரதமர் பதவி! டாக்டர் மகாதிர் தனது சொல்லைக் காப்பாற்றுவார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை!

ஆக, பிரதமர் வேட்பாளர் யார் என்றால் அது அன்வார் இப்ராகிம் ஆகத்தான் இருக்க வேண்டும்.

பி/கே/ஆர். தரப்பின் நியாயம் சரியானது தான்!

இல்லாவிட்டால் 'கம்' என்று இருந்து கொண்டு தேசிய கூட்டணி வழி செல்ல வேண்டியது தான்!

Thursday 18 June 2020

பொருளாதார வலு ஒன்றே...!

அமெரிக்க தொழிலதிபர், Tel.Ganesan,  அவர் வாழ்க்கையில் நடை பெற்ற சம்பவங்கள் நமக்கும் பாடமாக அமைகின்றன.

பொதுவாகவே இப்போது நாம் - கொரோனாவின் தாக்கத்தினால் மிகவும் தளர்ந்து போயிருக்கிறோம். பலரின் வேலை வாய்ப்புக்கள் பறி போயிருக்கின்றன. பல குடும்பங்களின் நிலை பரிதாபத்தின் உச்சத்தில்!

இருந்தாலும் மனம் தளர வேண்டாம். எல்லாம் நன்மைக்கே என்று தைரியம் கொள்ளுங்கள். ஒரு வழி தோன்றும்.

தன் சொந்த நாட்டை விட்டு வெளி நாட்டில் போய் வேலை செய்ய வேண்டுமென்றால் ஒரு மனிதரின் நிலை எப்படியிருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். அதுவும் இனவெறி உள்ள நாட்டில்!

இனி தாங்க முடியாது என்கிற நிலையில் தான் டெல் கணேசன் சொந்தத் தொழிலில் இறங்கினார். அந்தத் தொழிலும் அவருக்குக் கை கொடுக்கவில்லை. அங்கும் இனப்பாகுபாடு காட்டப்பட்டது. தொழில் செய்ய உரிமம் கிடைக்கவில்லை. கடைசியில் அவருக்கு இருந்த ஒரே வழி தனது நிறுவனத்தைக் கையகப்படுத்துவது தான்.  அதைத் தான் அவர் செய்தார்.

டெல் கணேசன் பல ஆண்டுகள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்தும் அவருக்கு எந்த உயர்வும் கிடைக்கவில்லை. பதவி உயர்வோ, ஊதிய உயர்வோ மறுக்கப்பட்டன! இந்த சூழலில் நம்மால் செய்ய முடிந்தது ஒன்றே. அடிமையாகவே வாழ வேண்டும் அல்லது சொந்தத் தொழில் தொடங்க வேண்டும்.

டெல் கணேசன் சொந்தத் தொழிலில் இறங்கினார். அது தான் நம்மை எல்லா நெருக்கங்களிலும் இருந்தும்  காப்பாற்றும் என்று அவர் புரிந்து கொண்டார்.

டெல் கணேசனின் ஒரு சில வார்த்தைகள் நம்மை யோசிக்க வைக்கின்றன. 

"வாழ்க்கையில் வெற்றி பெற எதிர்நீச்சல் போடுவது ஒன்றே,  ஒரே வழி!" என்கிறார். நமக்கும் அது தெரியும்.  ஆனால் அதைச் செயல் படுத்துவது தான் நம்மால் முடியவில்லை! ஒரு சிலர் தான் அந்த முயற்சியில் இறங்குகின்றனர். வெற்றி பெறுகின்றனர்.

அப்படி எதிர்நீச்சல் போட்டு பொருளாதாரத்தில் வெற்றி பெற்ற பின்னர் நடப்பது என்ன?

இனவெறி என்பது மறையும். சாதி என்பது மறையும்  மதம் என்பது மறையும்.  பொருளாதார வலு அனைத்தையும் முறியடித்து விடும்! அதனை டெல் கணேசன் முற்றிலுமாக அனுபவித்தவர்.

இதனை நம் நாட்டிலேயே பார்க்கிறோம்.  பொருளாதார வலுவோடு விளங்கும் சீனர்களை எவனாவது வம்புக்கு இழுக்கின்றானா?   நமக்குத் தானே எல்லா அடியும் விழுகிறது! கேவலப்பட்ட வாழ்க்கை வாழும் ஸம்ரி வினோத் நம்மைத் தானே வம்புக்கு இழுக்கிறான்!  சீனர்கள் பக்கம் போக முடியுமா? ஜாகிர் நாயக் என்ன ஆனார் தெரியுந்தானே!

பொருளாதார வலு இல்லாத ஒரு சமுதாயத்தை ஒரு நாய் கூட மதிப்பதில்லை! நமக்குத் தெரியும். நாம் அதனை அனுபவித்து வருகிறவர்கள். 

நாம் இங்கு ஞாபகப்படுத்துவதெல்லாம் ஒன்று தான்.  பெரிய பெரிய தொழிலுக்குப் போக முடியாவிட்டாலும் ஒரு சிறு தொழிலையாவது தொடங்குங்கள்.  பொருளாதார ரீதியில் சுதந்திரமாக இருக்க முயலுங்கள். பணமே போட வேண்டாம் என்றால் நேரடித் தொழிலில் ஈடுபடுங்கள். 

வெற்றிகரமாக வாழ வழிகள் பல உள்ளன. கொஞ்சம் முயற்சி செய்து வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளுங்கள்!

நம் நாட்டிலும் பல டெல் கணேசன்களை நாம் பார்க்க வேண்டும்.

அமெரிக்க இனவெறி!


அமெரிக்க கோடிசுவரரான டெல் கணேசனைப் பற்றியான ஒரு கட்டுரையை பிபிசி தமிழில் படிக்க நேர்ந்தது.


அமெரிக்காவில் அவருடைய அனுபவங்கள் நம்முடைய அனுபவங்களுடன் ஒத்துப் போவதால் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.

கணேசன் தமிழ் நாட்டில் திருச்சியைப் பூர்விகமாகக் கொண்டவர். முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கல்வி பயில அமெரிக்கா சென்றவர். கல்வியை முடித்த பின்னர், கார்களின் மீது உள்ள அபிமானத்தால், கார்களின் தலைநகரான டெட்ராயிட்  நகரில் கிறிஸ்லர் கார் நிறுவனத்தில் தனது பணியினைத் தொடங்கினார். சுமார் 13  ஆண்டுகளுக்குப் பின்னரும் வெள்ளையர்களுக்குத் தான் பணி உயர்வு கொடுக்கப்பட்டதே தவிர, எவ்வளவு கடுமையாக உழைத்தும், அவருக்கு எந்த உயர்வும் கிடைக்கவில்லை! தகுதி இல்லாத,  அனுபவம் இல்லாத வெள்ளையர்கள் மேலே, மேலே போனார்கள்! ஊதிய உயர்வும் கிடைக்கவில்லை. பொறுத்தது போதும் என்று அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறினார்.

பதினைந்து ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்த அனுபவம் தொழில் செய்ய முடியும் என்கிற நம்பிக்கையைக் கொடுத்தது. மெக்சிகன் மாகாணத்தில் மென்பொருள் நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். போதுமான பொருளாதார பலமில்லை. வங்கி வங்கியாக ஏறி இறங்கினார். அனைத்தும் ஏமாற்றத்தில் முடிந்தது. அதுவே ஓர் அமெரிக்க வெள்ளையராக இருந்திருந்தால் வங்கியினர் தங்கத் தாம்பாளத்தோடு வரவேற்பு கொடுத்திருப்பர் எனக் கூறுகிறார் கணேசன்.

ஆனாலும் சோர்ந்துவிடவில்லை. வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்கிற வெறி இன்னும் அதிகரித்தது. தனதுவீட்டை அடமானம் வைத்தார். தன்னிடமிருந்த கடன் அட்டைகளை வைத்து எல்லாப் பணத்தையும் எடுத்து பணத்தைத் திரட்டினார்.  அப்போது, அந்தக் காலக் கட்டத்தில், அவரது நிறுவனம் தயாரித்த மென்பொருளுக்கு ஏகப்பட்ட கிராக்கி உள்ளது என்பது அவருக்குத் தெரியும். ஆனாலும் அங்கும் பெரும் ஏமாற்றம். அவர் அமெரிக்காவைப் பூர்விகமாக கொண்டவர் அல்லர் என்கிற காரணத்தை வைத்து எந்த நிறுவனமும் அவரோடு தொழில் செய்ய விரும்பவில்லை!

இப்படிப் பல ஏமாற்றங்கள்! ஆனாலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்னும் வெறி மட்டும் மனதில் இன்னும் அதிகமாக அவருக்கு ஏற்பட்டது. அடுத்து என்ன செய்வது?  இப்போது இன்னும் துல்லியமாக அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்தார். அதுவே அவருக்கு மாபெரும் வெற்றியைத் தந்தது.

தனது நிறுவனத்தை உள்ளூர் நிறுவனத்துடன் கையகப்படுத்தியதன் மூலம் எல்லா எல்லைகளும் தகர்ந்தன!  இனவெறியும் தளர்ந்தது! தொழிலின் விரிவாக்கம் சரியான பாதையில் சென்றது.

அமெரிக்க நிறுவனம் ஒன்றை கையகப்படுத்தியதன் விளைவால் இப்போது தன்னைப் பற்றியான அமெரிக்கர்களின் பார்வை அடியோடு மாறத் தொடங்கியது! தொழிலும்  மாபெரும் வெற்றியை நோக்கி அடியெடுத்து வைத்தது! 

இப்போது கணேசன் ஒன்றைக் குறிப்பிடுகிறார்:  ஆரம்ப காலத்தில் இனவெறி காரணமாக யார் எனக்குப் பதவி உயர்வு கொடுக்க மறுத்தாரோ, யார் எனக்குச் சம்பள உயர்வு கொடுக்க மறுத்தாரோ அந்த நிறுவனத்தின் மேலாளர் இப்போது என்னிடம் இந்நாள் வரை வேலை செய்து வருகிறார்! இருபது ஆண்டு காலம் என்னைத் துரத்தித் துரத்தி அடித்த இனவெறியும், இனப் பாகுபாடும்,  பொருளாதார வெற்றியும், புகழும் வந்த பிறகு  பெரும்பாலும் மறைந்து விட்டன!  வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடும் பழக்கமே வெற்றிக்கான அறிகுறி! வேறு வழி இல்லை!

எல்லாம் வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்த போது மீண்டும் உலகளாவிய நிலையில் ஏற்பட்ட (2008-2009) பொருளாதார பெருமந்தம் நிறுவனத்தை முடக்கியது. அதனையும் பல்வேறு துறைகளில்,  நாடுகளில் தொழிலை விரிவுபடுத்தியதன் மூலம் வெற்றிகரமாக சமாளித்தார்! 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தன் வசம் இருந்த மூன்று நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து கைபா (KYYBA) என்கிற பன்னாட்டு நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார்.

இன்று இந்த நிறுவனம்  அமெரிக்கா தவிர்த்து கனடா, ரஷ்யா, பெலாரஸ், இந்தியா போன்ற நாடுகளில் பல்வேறு கிளைகளுடன் பெரும் நிறுவனமாக வளர்ந்துள்ளது.  அத்தோடு ஹாலிவூட் சினிமாத் தளத்திலும் களம் இறங்கியிருக்கிறார் கணேசன்.  இதுவரை நான்கு ஹாலிவூட் திரைப்படங்களைத் தயாரித்திருக்கிறார்.

இனவெறி தொடருமா என்கிற கேள்விக்கு: அமெரிக்காவில் கறுப்பினத்தவருக்கு எப்போது கல்வியும். வேலை வாய்ப்பும், பொருளாதார முன்னேற்றமும் ஏற்படுகிறதோ அப்போது தான் இது ஒரு முடிவுக்கு வரும்.

"ஒரு காலத்தில் இனவெறியோடு ஸீரோவாக பார்க்கப்பட்ட நான் பொருளாதாரத்தில் வலுவான நிலையை அடைந்த பின்னர் இப்போது ஹீரோவாகப் பார்க்கப்படுகிறேன்!"  என்கிறார் கணேசன்.

மேலும் மேலும் வெற்றிகளைக் குவிக்க அவரை வாழ்த்துவோம்!     

Tuesday 16 June 2020

குமட்டலும், வாந்தியும் வருகிறது...!


மலேசியர்களால் நமது தினசரி உணவுகளில் பயன்படுத்தப்படும் "தவ்வு" என்று நம்மால் செல்லாமாக அழைக்கப்படும் தோஃபு (சோயா)தொழிற்சாலை ஒன்றை கோலாலம்பூர் மாநகர் மன்றம் மூடும்படி உத்தரவிட்டிருக்கிறது.

எந்தவிதமான சுகாதார விதிமுறைகளையும் பின்பற்றாமல், மனிதர்கள் சாப்பிடுகின்ற உணவாயிற்றே என்கிற கவலையே இல்லாமல், அந்த தொழிற்சாலை எவ்வளவு காலமாக இயங்கி வருகிறது என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியவில்லை.

பொது மக்கள் கொடுத்த தகவலை வைத்துத் தான் மாநகர் மன்றம் இந்தத் தொழிற்சாலையை திடீர் சோதனயை நடத்தியிருக்கிறது. அப்படியென்றால் இது போன்று உணவு தயாரிக்கும் தொழிற்சாலைகள் எல்லாம் எந்தவித சோதனைகளுக்கு உட்படுவதில்லையோ என்கிற சந்தேகம் நமக்குக் கிளம்புகிறது!

தொழிற்சாலையைத்   சோதிக்க வந்த அதிகாரி சொல்லுகிறார்: வெறும் தரையில் தான் அந்தத் தவ்வு செய்யப்படுகிறது. கரப்பான் பூச்சிகளின் நடமாட்டம். எலிகளின் புழுக்கைகள்! வேலை செய்பவர்கள் பாதுகாப்புக் கவசங்கள், கையுறைகள் அணியவில்லை! சட்டைகள் கூட அணிந்திருக்கவில்லை!  அங்குள்ள சூழலைப் பார்த்ததும் பலமுறை வாந்தியும், குமட்டலும் வருவதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை! இனி என் வாழ்நாளில் ....தவ்வா?....வ்வே! வேண்டவே வேண்டாம்!

இனி 14 நாள்களுக்குத் தொழிற்சாலை மூடப்படும்  என்று மாநகர் மன்றம் அறிவித்திருக்கிறது. 

இது தண்டனை என்று சொல்ல முடியவில்லை! உணவில் நஞ்சைக் கலப்பது!  அதற்குப் பதினான்கு நாள்களா?

Monday 15 June 2020

இது தான் மாத்தி யோசி என்பது!

இன்று நமது இளைஞர்கள் மாற்றி யோசிக்க ஆரம்பித்தார்களானால் எதுவும் சாத்தியமே!


அப்படி ஒரு சாதனையைச் செய்து காட்டியிருக்கிறார் முருகபூபதி என்கிற இளைஞர்.

இந்தியா, புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த முருகபூபதி ஒரு  பட்டதாரி இளைஞர்.  புதுச்சேரி, காரைக்காலில் உள்ள தனது பேட்டை என்னும் கிராமத்தில் ஓர் அசாத்தியமான செயலை செய்து காட்டியிருக்கிறார் அவர்.

தனது சொந்த நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வரும் அவருக்கு   சிறு வயது முதலே விவசாயத்தில் அதிக ஈடுபாடு உண்டு.  தனது கல்லூரி படிப்பை முடித்த பிறகும் தனது நிலத்தில் விவசாயம் செய்வதை அவர் விட்டு விடவில்லை.

அண்மையில் தனது நிலத்தில் இயற்கை முறையில் கத்திரிக்காய் சாகுபடியில் அதிகக் கவனம் செலுத்தி முழுமூச்சாக அதில் ஈடுபட்டிருந்தார்.  அதன் காரணமாக அதிகமான விளைச்சல் ஏற்பட்டது. 

மகிழ்ச்சி தான் என்றாலும் கொரொனா தொற்று ஏற்பட்டதால் அனைத்தும் பாழாகும் நிலை ஏற்பட்டது.  ஊரடங்கு கடைப்பிடிகப்பட்டதால் விற்பனையில் தேக்கம் ஏற்பட்டது. குறைவான விலையில் கத்திரிக்காய் விலைப் பேசப்பட்டது. அத்தனையும் நஷ்டம்.

இந்த நேரத்தில் தான் விவசாயிகளில் பலர் தங்களது விலைப்போகா கத்திரிக்காய்களையும், காய்கறிகளையும் வீதிகளில் எறிந்து தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர். 

முருகபூபதி கொஞ்சம் வித்தியாசமாக சிந்தித்தார். அதன் பயன்: கத்திரிக்காய்களைக் காயவைத்து அதனை வற்றலாக மாற்றியமைத்து அதன் விலையைக் கூட்டி உள் நாட்டில் விற்பனையைத் தொடங்கி விட்டார்! இப்போது வெளி நாடுகளிலும் ஏற்றுமதி செய்யும் பணிகளில் கவனத்தைத் திருப்பியிருக்கிறார். 

காலங்காலமாக விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளுக்கு ஒரே மாதிரியான சிந்தனை. அதிலிருந்து அவர்களால் விடுபட முடியவில்லை. கோபத்தைத் தான் காட்ட முடிகிறது. புதிய, படித்த நவீன விவசாயம் செய்யும் இளைஞர்கள் சிந்தனைகளில் மாற்றம் தெரிகிறது.

ஒரு வழி அடைக்கப்பட்டால் அடுத்த வழி என்ன என்கிற தேடல் அவர்களிடம் இருக்கிறது/

முருகபூபதி போன்ற இளைஞர்களை நாம் பாராட்டுவோம். எல்லாவற்றுக்கும் ஒரு தீர்வு உண்டு என நம்புவோம்.

தேவை என்றால் மாற்றி யோசிப்போம்! யோசிப்பதை செயல் படுத்துவோம்!

Sunday 14 June 2020

மீண்டும் டாக்டர் மகாதிரா..?

மீண்டும் அரசாங்கம் பக்காத்தான் ஹராப்பான் கட்சியின் கைக்கு வருமானால் அப்போது யார் பிரதமராக வரக்கூடும்?

இப்போது இந்தக் கேள்வி தேவைதானா என்று தோன்றலாம். தேவை  என்பது தான் எனது அபிப்பிராயம். காரணிகளை அலசும் போது இப்படி ஒரு கேள்வி எழுவதில் ஆச்சரியமில்லை. 

இன்றைய அரசாங்கத்தின் அடித்தளம் அப்படி ஒன்றும் பலமாக இல்லை.

ஒன்று சொல்லலாம்.  இது கோரோனா தொற்று நோய் காலம். இந்தத் தொற்று அரசாங்கத்திற்கு தனது ஆயிளை நீடிக்க தோதாக அமைந்துவிட்டது! கொரோனா பல மலேசியர்களைப் பலி வாங்கினாலும் இன்றைய அரசாங்கத்தைப் பலி வாங்கவில்லை! அது வரையில் பிரதமர் முகைதீன் குழுவினர் மகிழ்ச்சி அடையலாம்!

அப்படி இந்த அரசாங்கம் கவிழ்க்கப்பட்டால் ....?  கவிழாது என்று சொல்லுவதற்கில்லை!  அப்படி யாரும் உத்தமபுத்திரர்கள் அரசாங்கத்தில் இருப்பதாகத் தெரியவில்லை!

எல்லாருமே பணம்,  பதவி என்றால் அடிமையிலும் அடிமையாக அனைத்தையும் இழக்கத் தயாராக இருப்பவர்கள்! மானம், மரியாதைப் பற்றி அவர்களுக்கு எந்த அபிப்பிராயமும்  இல்லை!

இவர்களோடு ஒப்பிடுகையில் டாக்டர் மகாதிர் இன்னும் உயர்வாகத்தான் தென்படுகிறார். அனைத்து மலேசியர்களும் ஆதரிக்கும் தலைவராகத்தான் இன்றும் அவர் உயர்ந்து நிற்கிறார். அடிமட்ட மலாய்க்காரரிடையே அவர் செல்வாக்கு மிகுந்தவராகத்தான் இன்னும்  வலம் வந்து கொண்டிருக்கிறார். 

அப்படி அரசாங்கம் கவிழும் என்றால் அடுத்த பிரதமராக அன்வார் இப்ராகிம் வருவதற்கு என்ன தடை உள்ளது? ஒன்று: டாக்டர் மகாதிரை வைத்துத்தான் தரசாங்கம் அமைக்க முடியும். இன்றைய நிலையில் வேறு யாரும் பிரதமராக வர முடியாது என்பது உண்மையிலும் உண்மை!

முதலில் டாக்டர் மகாதிர் தலைமையலான அரசாங்கத்தை அமைத்த பின்னர் ஆறு மாதங்கள் கழித்து பிரதமர் பதவியை அன்வார் இப்ராகிடம் ஒப்படைக்கலாம்.  அது தான் சாத்தியம். வேறு ஏதேனும் வழிகள் இருப்பதாகத் தோன்றவில்லை.

இவர்கள் இருவரும் - டாக்டர் மகாதிர், அன்வார் இப்ராகிம் - ஒரு முடிவுக்கு வராத வரை இன்றைய நடப்பு அரசாங்கம் தலை நிமிர்ந்து நிற்கவே செய்யும்! அவர்களை எதிர்ப்பார் யாருமில்லை என்கிற மமதை அவர்களுக்கு எழவே செய்யும்!  அது தானே உண்மை?

இப்போது என்ன செய்ய வேண்டும்? எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும். அது நடப்பதும் ஓர் அதிசயம் தான். அந்த அதிசயம் நடக்காத வரை முகைதீன் தலைமையலான அரசாங்கம் தொடரவே செய்யும்!

நமக்கு அதில் ஆட்சேபணை இல்லை! யார் வந்தாலும் நமது நிலை இப்படியே தான் இருக்கப் போகிறது!

நாம் அரசாங்கத்தை நம்பவில்லை எங்களைத்தான் நம்புகிறோம்!

Saturday 13 June 2020

பின் வாங்காதீர்கள்...!

கொரோனா தொற்று நோயினால் நிறைய பாதிப்புகள் ஏறபட்டிருக்கின்றன.

அதுவும் சிறு தொழில் செய்கின்ற நமது இந்திய சமூகத்தினருக்கு  பெரிய பாதிப்புகள்.

மிக முக்கியமானது உணவகங்கள்.  பெரும்பாலும் வெளி நாடுகளிலிருந்து தொழிலாளர்களை அமர்த்தியிருக்கும் இந்த உணவகங்களுக்குப் பெரிய அளவில் பாதிப்புகள். 

அதே போல முடிவெட்டும் தொழில்களிலும் இதே நிலை தான். இங்கும் வெளி நாட்டுத் தொழிலாளர்களை வைத்துக் கொண்டு ஐந்து ஆறு கடைகளை நடத்துபவர்கள் பலர் உண்டு. அதே போல ஒப்பனை செய்யும் தொழிலில் உள்ள நமது பெண்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அத்தோடு நடைபாதைகளில் காலை நேரப் பசியாறல்கள் செய்யும் நமது பெண்கள். அல்லது லாரி ஓட்டுநர்களுக்காக இரவு நேர உணவுகளைத் தயார் செய்யும் பெண்கள்.

இன்னொரு பிரச்சனையும் சிறிய தொழில் செய்பவர்களுக்கு உண்டு. அது தான் கடை வாடகை.   கட்டடத்தை வாடகைக்கு விட்டிருக்கும் முதலாளிகள் யாரும் வாடகை வேண்டாம் என்று சொல்லுவதில்லை! அவர்களாலும் என்ன செய்ய முடியும்? வங்கிகளுக்குப் பணம் கட்ட வேண்டும்! அவர்களுக்கு அவர்களின் பிரச்சனை!

இப்போது உள்ள பிரச்சனை வியாபாரத்தில் உள்ள அனைவருக்குமே உண்டு. நாம் அனைவருமே  எதிர் நோக்குகின்ற பிரச்சனை தான்.

அதனால் தொழிலை மூடிவிட்டு  நாங்கள் போய்விடுவோம் என்று பேசுவது சரியாக இருக்காது. அப்படி ஓர் எண்ணம் வருவதே சரியில்லை. இத்தனை ஆண்டுகள் ஒரு தொழிலைச் செய்துவிட்டு இப்போது நாங்கள் மூடிவிட்டுப் போய் விடுவோம் என்று சொல்லுவதை நினைத்துப் பார்க்க முடியவில்லை!

அப்படியென்றால் இத்தனை ஆண்டுகள் நீங்கள் செய்த உங்கள் தொழிலில் ஒன்றுமே சம்பாதிக்கவில்லையா? என்கிற கேள்வி எழுகிறது! சம்பாதிக்காத தொழிலில் தான் நீங்கள் கார் வாங்கினீர்கள், வீடு வாங்கினீர்கள், பிள்ளைகளைப் பட்டதாரிகள் ஆக்கினீர்கள் - இப்போது என்ன நடந்து விட்டது? கொஞ்சம் அல்லது அதிகமாகவே பொருளாதார நெருக்கடி, அவ்வளவு தான்! தீர்வு காண வேண்டுமே தவிர "ஓடிவிடுவேன்" என்று பயமுறுத்தக் கூடாது!  ஒரு சீனன் வாயிலிருந்து இப்படி ஒரு வார்த்தை வரவே வராது! அது தான் அவனது குணம்! போராட்டக் குணம்! போராடி வெற்றிப் பெற வேண்டும் என்கிற குணம்!

அதனால் நீங்கள் அரசாங்கத்தின் மூலம் பேச்சு வார்த்தைகள் நடத்தி பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும்.

ஒரு தொழிலைத் தொடங்கும் போது, ஆரம்பக் காலத்தில்,  ஏற்பட்ட பிரச்சனைகள், பொருளாதார நெருக்கடிகள் அதைவிடவா இப்போது பெரிய நெருக்கடியைச் சந்திக்கிறோம்? 

இதெல்லாம் தொழிலில் நாம் சந்திக்கும் இன்றியமையாத ஒரு நிகழ்வு. சந்திக்கத்தான் வேண்டும்.

அதனால் எத்தனையோ ஆண்டுகள் தொழிலில் இருந்துவிட்டு, நெளிவு சுளிவுகளை அறிந்துவிட்டு இப்போது "வேண்டாம் சாமி" என்று சரணடைந்து விடக் கூடாது. 

எதிர்த்து நிற்க வேண்டும். எப்போதோ காலை முன் வைத்து விட்டோம். இப்போதா பின் வாங்குவது? வாங்கவே வாங்காதீர்கள்!

முன் வைத்த காலை பின் வாங்குவதில்லை! என்று சங்கல்பம் செய்து கொள்ளுங்கள்!

வெற்றி பெற வாழ்த்துகிறேன்!

Friday 12 June 2020

இன்னும் ஒரு சில வாரங்களுக்கு....!

நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வருவதாக அரசாங்கம் கூறுகிறது.

நமக்கும் மகிழ்ச்சி தான். எவ்வளவு நாள்களுக்குத் தான் உள்ளேயே அடைந்து கிடப்பது?  இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மூச்சு விட முடிகிறது!

இருந்தாலும் நம்மிடையே  சில கேள்விகள் இருக்கத்தான் செய்கின்றன. அரசாங்கம் தடுமாறுகிறதா அல்லது நாம் தான் தடுமாறுகிறோமா, அது தான் புரியவில்லை!

இனி பேருந்துகள் அனைத்தும் எப்போதும் போல இயங்கலாம் என்று சொல்லுகிறார்கள்.  இடை வெளியைப் பின்பற்றினால் அவர்களுக்கு நட்டம் என்பது நமக்கும் புரிகிறது. விமான இயக்கமும் அது போலத்தான்.

இனி கூட்டங்கள் நடத்தலாம். வகுப்புக்கள் நடத்தலாம். கருத்தரங்குகள் நடத்தலாம். பயிலரங்குகள் நடத்தலாம். இரவு நேர சந்தைகள் நடத்தலாம். உணவகங்கள் நடத்தலாம்.இப்படி எல்லாமே ......லாம்! ......லாம்! ..........லாம்! 

எல்லாமே மக்களின் நன்மைக்குத் தான்.  இல்லை என்று சொல்ல முடியாது. 

ஆனால் இன்னும் நடைமுறை கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படும் என்று சொல்லுவது தான் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.

பொது போக்குவரத்துகளுக்கு அனுமதி கொடுத்து விட்டாலே அப்புறம் பேசுவதற்கு எதுவுமில்லை.  பேரூந்தகளில் பயணம் செய்பவர்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. அவர்களைச் சோதனை செய்ய முடியாது. வாடகைக் கார்களுக்கும் அதே நிலை தான்.

முடிதிருத்தகங்கள் பற்றி ஒருவர் கேளவி எழுப்பியுள்ளார். முடிதிருத்தனர் தொற்று உள்ளவரா என்பது எப்படி உறுதி செய்வது? அதுவும் முக்கியமான கேள்வி தான்.

எப்படி இருந்தாலும் ஒவ்வொரு துறையும் "திறந்து" விடும் போது தான் நமக்குப் புதிய புதிய கேள்விகள் எழும்!  கேள்விகள் எழும் போது தான் அதற்கான தீர்வுகளும் கிடைக்கும். இது தான் அனுபவம் கொடுக்கும் பாடம் என்பது.

ஆனாலும் இதில் பொது மக்கள் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவைகளை அறிந்து அரசாங்கத்தோடு ஒத்துழையுங்கள். மக்கள் நெருக்கம் உள்ள இடங்களில் குழந்தைகள்,வயதானவர்கள் போவதைத் தவிர்க்க வேண்டும்.

அரசாங்கம் என்ன தான் பல தளர்ச்சிகளை அறிவித்திருந்தாலும் கொரோனா தொற்று இன்னும் முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை. இன்னும் ஒரு சில வாரங்களில் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என நம்புவோம்.

அது வரையில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்போம்!

 

பாஸ் கட்சியின் இந்திய செனட்டர்!

நம் நாட்டின்  மேலவையில் எத்தனையோ இந்திய செனட்டர்களைப் பார்த்து விட்டோம்.

மேலவையின் தலைவராகவும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனையும் பார்த்துவிட்டோம்.

எல்லா செனட்டர்களுமே ம.இ.கா. சார்ந்தவர்களாகவோ அல்லது அக்கட்சியின் ஆதரவாளர்களாகவோ,  தேசிய முன்னணியைச் சார்ந்தவர்களாகவோ இதுவரை நடப்பில் இருந்தது சூழல்.

ஆனால் இப்போது தான் மேல்சபையின் சரித்திரத்தில் ஒர் அதிசயம் நடந்திருக்கிறது. அதாவது பாஸ் கட்சியின் சார்பில் - அதாவது இந்தியர்களுக்குச் சம்பந்தம் இல்லாதவர்கள் என்று நினைத்தோமே - அந்தக் கட்சியின் சார்பில் ஓர் இந்தியர் செனட்டராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்!


அவர் தான் பாலசுப்ரமணியம் த/பெ நாச்சியப்பன்.  பாஸ் கட்சியின் புதிய இந்திய செனட்டர்.

இந்த நியமனம் பராட்டுக்குரியது. எதிர்பாராத இடத்திலிருந்து இந்த நியமனம் வந்திருக்கிறது. 

பாஸ் கட்சியைப் பற்றி எந்தக் காலத்திலும் நமக்கு நல்ல எண்ணம் இருந்ததில்லை.  குறிப்பாக சமயம் என்று வரும் போது எப்போதுமே எதிர்ப்புக் குரல் கொடுப்பவர்கள்.  நம்மையெல்லாம் சாத்தானின் பிள்ளைகள் என்று சொல்லுபவர்கள். நாங்கள் சொல்லுவதைத் தான் நீங்கள் கேட்க வேண்டும் என்று ஆதிக்க மனப்பான்மையோடு பேசுபவர்கள். 

இன்று ஜாகிர் நாயக், ஸ்ம்ரி வினோத் போன்றவர்கள் தறிகெட்டுப் பேசுகிறார்கள் என்றால் அதற்கு இவர்களே காரணம்!

இது கடந்த காலம். மறந்து விடுவோம். இப்போது பாஸ் கட்சி ஆளுகின்ற கட்சியாக மாறி வருகிறது. இன்றைய அரசாங்கத்தில் அவர்களின் பலம் கணிசமாக உயர்ந்திருக்கிறது. 

தங்களது அதிகாரம் இன்னும் அதிகரிக்க வேண்டும் என்கிற எண்ணம் அவர்களுக்கு உண்டு. அதே சமயத்தில் அதிகாரமும் தங்களது கைக்கு வர வேண்டும் என்கிற திட்டமும் அவர்களிடம் உண்டு.

அதன் விளைவு தான் ஓர் இந்தியருக்கு இந்த செனட்டர் பதவி.  பாராட்டுகிறோம்! பாராட்டுதல் வழக்கம் போல! அவ்வளவுதான். 

அந்தக் காலம் தொட்டு இன்றைய காலம் வரை இந்த இந்திய செனட்டர்கள் இந்தியர்களுக்கு என்ன நல்லது செய்து விட்டார்கள் என்பது நமக்கும் தெரியாது! அவர்களுக்கும் தெரியாது! தெரியாமலே போகட்டும்!

செனட்டர் பாலசுப்ரமணியத்தை வரவேற்கிறோம்! வாழ்த்துகிறோம்!

Thursday 11 June 2020

நடவடிக்கை எடுக்க முடியாது!

ஸம்ரி வினோத்  மீண்டும்  சர்ச்சையில் மாட்டியிருக்கிறார்!

சர்ச்சை என்பது அவருக்கு ஒன்றும் புதிதல்ல. அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் தொழிலே சர்ச்சையை ஏற்படுத்துவது தான்! அதை அவர் வெற்றிகரமாக செய்து கொண்டு வருகிறார்.

அவர் செய்து கொண்டு வருகிற சர்ச்சையினால், நம் நாட்டில்,  அவருக்கு எந்த ஆபத்தும் வராது என்பதை அவர் புரிந்து வைத்திருக்கிறார். அவரது குருவான ஜாகிர் நாயக்கும் அதனை அறிந்தவர்.

எத்தனை போலீஸ்புகார்கள் - இதுவரை 800 புகார்கள் என அறிகிறேன் - செய்தாலும் காவல்துறை நடவடிக்கை எடுக்காது என்பதும் நமக்குப் புதிதல்ல.

கொஞ்சம் பின்னோக்கிப் பாருங்கள். நஜிப் பிரதமராக இருந்த காலத்தில், மகாதிர் சிறிது காலம் பிரதமராக இருந்த காலத்தில் ஏன் இப்போது முகைதீன் பிரதமராக இருக்கின்ற காலத்தில் - எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதே போதும் ஸம்ரி எவ்வளவு உயரத்தில் இருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்! அந்த உயரம் அவருக்கும் ஜாகிர் நாயக்கிற்கும் மட்டும் தான்! வேறு யாருக்கும் இல்லை!

அதற்காக புகார் தேவையில்லையா என்று கேட்கலாம். இல்லை புகார்கள் தொடர்ந்து செய்தாக வேண்டும். காவல்துறை இன்னும் உயிரோடு தான் இருக்கிறது என்பதற்கு இந்த புகார்களை அவர்கள் ஏற்றுக் கொள்ளுகிறார்களே அது தான் அத்தாட்சி!

அவரது அறிவு, ஆற்றல், நிபுணத்துவம் அனைத்தும் இங்கு தான் செல்லுபடியாகும் என்பதையும் ஸம்ரி அறிந்து வைத்திருக்கிறார்! வேறு எந்த நாட்டிலும் அவரது அறிவு செல்லுபடியாகாது! ஒவ்வொரு நாட்டிலும் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அங்கெல்லாம் அவர் சென்று வாயைத் திறக்க முடியாது! ஏன் அவர் குருவும் கூட அடங்கி விடுவார்! அந்நாடுகளிலுல்ல காவல்துறையினருக்கு தரசியல் தலையீடு இல்லை! அது போதும்! அதை இங்கு நாம் எதிர்ப்பார்க்க முடியாது!

எப்படியோ மதத்தின் பெயரால் குடும்பத்தை நடத்துபவர் ஸம்ரி வினோத்  அவருக்கு எந்த குறையும் இல்லை. அதே போல அவரது குருவுக்கும் எந்த குறையும் இல்லை!

குடும்பம் நன்றாக நடந்தால் யாரையும் எதனையும் எதிர்க்கலாம் என்கிற கொள்கை உடையவர்களை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.  அதுவும் அறிவு குறைபாடு உள்ளவர்களின் உளரல்கள்!

காவல்துறை இன்னும் காலாவதியாகிவிடவில்லை!

Wednesday 10 June 2020

முடி வெட்டியாச்சா?

ஆமாம் இப்போது இது தான் பெரிய கேள்வி!

கடந்த மூன்று மாதங்களாக தலையில் கை வைக்காததால் இப்போது அது காடு மண்டிப் போய்விட்டது!

என்ன செய்வது? வெட்டுவதற்கு ஆளில்லை. அதுவும் முடி திருத்தகம் என்னும் போது கோரோனாவிற்கு மிகவும் ஆபத்தைக் கொண்டு வரக்கூடிய ஒரு தொழில்.

கொரோனா காலத்தில் இந்த தொழில் செய்வது சரியா, தவறா என்றெல்லாம் விவாதம் செய்ய முடியாது.சோதனை செய்து பார்ப்பதெல்லாம் முடியாத காரியம். எல்லாம் ஒரே வழி தான்.  பட்டால் பட்டது தான்! போய்ச் சேர வேண்டியது ஒருவரா, இருவரா - தெரியாது! அந்த அளவுக்கு ஆபத்தான ஒரு தொழில் முடி திருத்தகம்.

இப்போது தான் நேரங்காலம் பொருந்தி வந்திருக்கிறது.  ஓரளவு பரவாயில்லை என்னும் நிலையில் தான் முடி திருத்தகங்கள் திறக்கப் பட்டிருக்கின்றன. முதல் நாளே பெரிய கூட்டம் என்பதாக நண்பர்கள் சொல்லுகிறார்கள். அது இளைஞர்கள் சரி.

என்னைப் போன்றவர்களுக்கு இன்னும் விடிந்த பாடில்லை! கூட்டம் இல்லாத நேரம் பார்த்து நாங்கள் போக வேண்டும்.  ஒருவர் மட்டும் தான் கடையினுள்ளே இருக்க வேண்டுமாம்.

கூட்டம் இல்லை என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?

எப்படியோ இத்தனை மாதங்களைச் சமாளித்து விட்டோம்! கொரோனா சீக்கிரம் நமக்கு "பை-பை"  சொல்லும் என்று நம்புகிறோம். நம்பிக்கை வீண் போகாது.

முடிகளைத் திருத்திக் கொள்ளுங்கள்! கொரோனாவை நம் மத்தியிலிருந்து விரட்டி விடுங்கள்.

கொரோனா நீடிக்குமானால் நாம் வாழ்கிற வாழ்க்கையும் தடங்கலாகத்தான் இருக்கும்.

கொரோனாவுக்கு முடிவு கட்டுவோம்! முடி வெட்டுவோம்!

மகாதிர் நல்லவரா கெட்டவரா?

நாயகன் தமிழ் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். பேத்தி தாத்தாவிடம் ஒரு கேள்வி கேட்பார்: தாத்தா, நீங்கள் நல்லவரா கெட்டவரா? என்று.

மகாதிரைப் பற்றி பேசும் போது அந்த பேத்தி-தாத்தா கேள்வி தான் ஞாபகத்திற்கு வருகிறது!

மகாதிர் இந்த நாட்டின் வளர்ச்சியின் தந்தை என்று போற்றப்படுபவர். அவர் காலத்தின் தான் நிறைய வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்தினார். தொழிற்சாலைகளை உருவாக்கினார். மலாய் மக்களின் கல்வி கண்ணைத் திறந்தார். வர்த்தகத்தை செய்யுமாறு ஊக்குவித்தார். பணத்தை வாரி வாரி இறைத்து அவர்களுக்குப் புதிய வழிகளைக் காட்டினார். 

மலாய் மக்களின்அபார முன்னேற்றத்திற்கு அவர் தான் பலமான அடித்தளம் அமைத்தவர். இப்போது அவரை எதிர்ப்பவர்களாக இருந்தாலும் சரி, ஆதரவு தெரிப்பவர்களாக இருந்தாலும் சரி அவரால் வளர்க்கப்பட்டவர்கள். அவரால் கொடுக்கப்பட்ட கல்வியைக் கற்றவர்கள்.  எப்படியோ சலுகைகள் கொடுத்தாவது அவர்களைத் தூக்கி விட்டார்! பதவிகள் கொடுத்து அவர்களைப் பணக்காரர்களாக ஆக்கினார்! என்னன்னவோ! எப்படி எப்படியோ! மலாய் இனத்தவரின் முன்னேற்றத்திற்கு அவரின் பங்கு அளப்பரியது! 

தவறுகள் நிறையவே செய்தார். அந்தத் தவறிலும் பல பணக்காரர்கள் உருவாகினார்கள்! உதாரணத்திற்கு மாஸ் ஏர் விமானம்.  வர்த்தக ரீதீயில் இன்று தலைகுனிந்த நிலையில் இருந்தாலும் அது பல பணக்கரர்களை உருவாக்கியிருக்கிறது!

பல அரசாங்க நிறுவனங்களை தனியார் மயமாக்கினார்.  தனியார் மய மாக்கியதும் அப்படி ஒன்றும் அவைகள் ஜொலித்து விடவில்லை!  ஜொலிக்காது என்பது அவருக்கும் தெரியும்!அதற்கு தலைமை ஏற்றவர்களின் வாழ்க்கை ஜொலித்தது! அது தான் அவரது இலக்கு! அது நிறைவேறிற்று!

இன்று பல மலாய் அரசியவாதிகள் அவரை எதிர்க்கிறார்கள். ஆனால் அவர்களால் அதை அரை மனதுடன் தான் செய்ய முடிகிறது! எதிர்ப்புக்கள் எத்தனை இருந்தாலும் ஆதரவும் கணிசமாக இருக்கவே இருக்கத்தான் செய்கிறது. அதுவும் சராசரி கிராமத்து மக்கள் அவரை முழு மனதுடன் நம்புகின்றனர். அவர்களின் முன்னேற்றம் எப்படி வந்தது என்பதை அவர்கள் அறிந்திருக்கின்றனர். ஒரு வேளை ஒரு சில அரசியல்வாதிகள் அவரை எதிர்க்கலாம். ஆனால் அவர் நேரடியாக அவர்களிடம் பேசினால் அவர்கள்  அவர் பக்கம் சாய்ந்து விடுவர்!  அந்த அளவுக்கு அவரின் செல்வாக்கு இன்னும் அவர்களிடையே கொடிகட்டிப் பறக்கிறது என்று சொல்லலாம்!

தம் இனத்தவர் முன்னேற வேண்டும் என்பதற்காக கடுமையான உழைப்பைப் போட்டவர். அந்த நன்றிக் கடன் இன்னும் அவர்களிடம் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

 மிகவும் பிற்போக்குத்தனம் கொண்ட  ஓர் இனத்தை முன்னேற்றத்திற்குக் கொண்டு வருவது என்பது சாதாரண காரியம் அல்ல.  அதை அவர் சாதித்துக் காட்டியிருக்கிறார்!

இப்போது அவரிடம் ஒரு சில தடுமாற்றங்கள் இருக்கலாம்.  அதற்காக அவர் கெட்டவர் என்கிற முடிவுக்கு வரக் கூடாது!

நல்லவரே!

Tuesday 9 June 2020

கொரோனாவை ஒழித்த முதல் நாடு!


கொரோனா தொற்று நோயை எப்படி ஒழிப்பது என்று இன்றும் நாம் பேசிக் கொண்டும், விவாதம் செய்து கொண்டும் இருக்கும் இந்தக் காலக் கட்டத்தில் "நாங்கள் கொரோனாவை ஒழித்து விட்டோம்!"   என்று ஒரு நாட்டின் பிரதமர் சொன்னால் அதனைக் கேட்க எப்படி இருக்கும்?

வயிற்றெரிச்சலா தான் இருக்கும் என்று சொல்ல வருகிறீர்களா! அப்படி இருந்தாலும் பரவாயில்லை! இந்தத் தொற்று நோயினால் நாம் படுகின்ற அவதி யாருக்குப் புரிய போகிறது? 

இந்தத்  தொற்று நோயை வைத்து எவ்வளவு கல்லாக்கட்டலாம் என்று அரசியல்வாதிகள் திட்டம் போட்டுக் கொண்டிருக்கும் வேளையில் நியுசிலாந்தின் பெண் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் "நாங்கள் கொரோனாவை ஒழித்துவிட்டோம்!" என்று மட்டும் சொல்லவில்லை அந்தச் செய்தியைக் கேட்டு துள்ளிக் குதித்து ஒரு சிறிய நடனமே ஆடிவிட்டாராம்!

கொரோனாவின் ஆரம்ப காலத்தில் நமக்கு என்ன நேர்ந்ததோ அவை அனைத்தும் நியுசிலாந்து மக்களுக்கும் நேர்ந்தது. அதில் எந்த மாற்றமுமில்லை. 

நம்மைப் போலவே: சமூக இடைவெளியைப் பின் பற்றினார்கள். பொது இடங்களில் கூட்டங்கள் தடை விதிக்கப்பட்டன, ஊரடங்கு உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டன, நான்கு கட்டங்களாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன  -  நாம் என்ன என்ன விதிகளைக் கடைப்பிடித்தோமோ அனைத்தையும் நியுசிலாந்து மக்களும் கடைப்பிடித்தார்கள். அந்த அரசாங்கம் கடைப்பிடிக்க வைத்தது.

அதன் எதிரொலி: 1,154 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இறந்தவர்களின் எண்ணிக்கை 22 பேர். இப்போது, இன்றைய நிலையில் சுழியம் விழுக்காடு என்கிற நிலைமைக்கு வந்து விட்டது. அரசாங்கம் கடைப்பிடித்த கடுமையான வழிமுறைகள் இப்போது எல்லா நாட்டு மக்களின் பாராட்டுதல்களைப் பெறுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை!

நியுசிலாந்தின் இன்றைய நிலை என்ன?  கூட்டங்களுக்குத் தடையில்லை. ஊரடங்கு இனி இல்லை. எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை.  பொது போக்குவரத்துகளுக்குத் தடையில்லை. பள்ளிகள் வழக்கம் போல இயங்கலாம். திருமணங்கள் இனி நடத்தலாம். இறப்புகளுக்குப் போய் வரலாம். எல்லாம் வழக்கம் போல!

ஆனால் நாட்டு மக்களின் நலனை முன்னிட்டு சமூக இடைவெளியைப் பின்பற்றுவது மக்களுக்கு நன்மை பயக்கும் என்கிறார் பிரதமர்.  வெளி நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு இன்னும் கட்டுப்பாடுகள் உண்டு.

"கொரோனாவை ஒழித்து விட்டோம் என்றாலும் அத்தோடு அது முடிந்து விடவில்லை. எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்" என்பது தான் நாட்டு மக்களுக்கான அவரின் நினைவுறுத்தல்.

கொரோனாவை ஒழித்து விட்ட முதல் நாடு நியுசிலாந்து! வாழ்த்துகள்!

Monday 8 June 2020

வெட்டிவேரில் முகக் கவசம்!

வெட்டி வேர் பற்றி ஏதேனும் அறிந்திருக்கிறீர்களா? நமது நாட்டில் வெட்டி வேர் இருப்பதாகத் தெரியவில்லை.

நானும் பார்த்ததில்லை! அறிந்ததில்லை! தெரிந்தது எல்லாம் ஒரு பாடலின் வரி "வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம்"  அவ்வளவு தான்! 

வெட்டிவேர் வெறும் வாசமிக்கது மட்டுமல்ல.  அது பல மருத்துவ குணங்கள் கொண்டது. வாசனைத் திரவியங்கள், அழகு சாதனப் பொருட்கள், பாய், தலையணைகள், காலணிகள் என்று பலவேறு வகையில் பயன் தர வல்லது.

இவ்வளவு பயன் இருந்தும் என்ன செய்வது? கொரோனா ஊரடங்கு,  அனைத்தையும் முடக்கிப் போட்டுவிட்டது! 

தமிழ் நாடு,   கடலூரில் சுமார் 2000 ஏக்கருக்கு மேல் வெட்டிவேர் சாகுபடி செய்யப்படுகிறது. ஊரடங்கு அமலில் இருந்ததால் கடந்து இரண்டு,  மூன்று மாதங்களாக வெட்டிவேரின் விற்பனை முடங்கிப் போய்,   விவசாயிகள் தடுமாறிக் கொண்டிருந்த நேரம்.

பொறியியல் பட்டதாரியான பிரசன்னகுமாரும் அவரது நண்பர்களும் ஒன்று சேர்ந்தனர். வெட்டிவேரில் முகக் கவசம் செய்ய முடிவெடுத்தனர். 

வெட்டிவேரில் செய்யப்படும் முகக்கவசம் ஒன்று வாசமாக இருக்கும். ஒரு முறை பாவித்ததை துவைத்துவிட்டு மீண்டும் பாவிக்கலாம். நாற்றமெடுக்காது. வெட்டிவேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம், நுரையீரலையும் தூய்மையாக வைத்திருக்கும் என்பது பாரம்பரியம்.

இப்போது வெட்டிவேர் முகக்கவசம் வெற்றிகரமாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

ஒரு பிரச்சனை வந்த போது அதனை வேறு ஒரு வழியில் தீர்வு  கண்டார்களே அந்த இளைஞர்களுக்கு நமது பாராட்டுகள்!

எல்லாவற்றுக்குமே ஒரு தீர்வு உண்டு. நம்பிக்கைக் கொள்ளுங்கள்!

சுகு-பவித்ரா சமையல் தம்பதியர்


சமீபகாலத்தில் காணொளிகளில் எதிர்பாராத வகையில் தீடீரெனப் புகழ் பெற்ற ஒருவர் என்றால் அது பவித்ராவும் அவரது கணவர் சுகுவும் தான். 

அவருக்கு யூடீயுப் என்றால் என்னவென்று தெரியாது. இருவருமே கணினி அறிவு இல்லாதவர்கள். பவித்ரா கல்வி அறிவு இல்லாதவர் என்று சொல்லிவிட முடியாது. அவர் யு.பி.எஸ்.ஆர். தேர்வில் 5ஏ க்கள் பெற்றவர். தமிழ்ப்பள்ளியில் படித்தவர். ஏனோ அவர் கல்வியைத் தொடரவில்லை.

இன்னும் ஒரு சில மாதங்களில் கணினியைப் பற்றி முழுமையாக அறிந்திருப்பார் என நம்ப இடமிருக்கிறது.

அவர் மலாய் மொழி பேசுவதில் வல்லவர் என்பது தான் அவரைத் தூக்கி நிறுத்தியிருக்கிறது!  சும்மா தூக்கவில்லை. உலக அளவில் தூக்கி நிறுத்தியிருக்கிறது! மலாய் மக்களிடமிருந்து பேராதரவைப் பெற்றிருக்கிறது அவரது யூடீயுப் சமையல்கள்.  இந்தியர்களின் சமையல் கலையை மலாய் மக்களுக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள் இந்த தம்பதியினர்.

இவர்கள் சுங்கை சிப்புட் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் வசிக்கிறார்கள். கணவர் மட்டுமே தோட்டத்தில் வேலை செய்கிறார்.  இரண்டு குழந்தைகள்.  பார்ப்பதற்கு ஆளில்லை.  ஒருவர் மட்டுமே சம்பாதித்து கட்டுப்படியாகவில்லை.

இந்த நேரத்தில் பவித்ராவின் இந்தோனேசிய பெண் நண்பர் ஒருவர் அவரை யூடீயுப்பில் இந்திய சமையல் கலையை ஒளிபரப்ப ஆலோசனைக் கூறியிருக்கிறார். 

அந்த இந்தோனேசிய பெண் நண்பரே அவருக்கு யூடீயூபையும் அமைத்துக் கொடுத்திருக்கிறார். சமைப்பதற்கு என்று எந்த விசேஷமான சமையல் பாத்திரங்கள் எதுவும் இல்லை. வீட்டில் இருக்கும் பாத்திரங்களை வைத்தே முதல் சமையல் காணொளியில்  வெளியானது. ஒன்று, இரண்டு, மூன்று வருமுன்னரே எக்கச்சக்கமான பார்வையாளர்கள்!  அத்தோடு கருத்துக் குவியல்கள்! பெரும்பாலும் மலாய் மக்களிடமிருந்து!

தடுமாறினாலும் நிலைத்து நிற்பதற்கு அது துணிவைக் கொடுத்தது! 

இத்தம்பதியினருக்கு சமையல் என்பது இரத்தத்தில் ஊறிப் போயிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அவர்களிடமிருந்த அந்தத் திறமை அவர்களுக்கே தெரியவில்லை.  ஓர் இந்தோனேசிய பெண்ணுக்கு அது தெரிந்திருக்கிறது! அவர் தான் பவித்ராவின் திறமையை வெளிக்கொணர்ந்திருக்கிறார்.

இப்படித் தான் நம்மில் பலர் இலை மறை காயாக இருக்கிறோம். சுடர் விளக்காயினும் ஒரு தூண்டுகோல் தேவை.  

என்ன சொல்ல வருகிறோம்?  நம்மில் யாரேனும் ஏதோ ஒரு திறனைக் கொண்டிருந்தால் அதனைக் வெளிக்கொணர நாம் தயாராக இருக்க வேண்டும்!

சுகு பவித்ரா தம்பதியர் சிறப்பாக வாழ வாழ்த்துகிறோம்!

Sunday 7 June 2020

கொஞ்சம் நம்பிக்கை தருகிறது!

கொரோனா தொற்று நோயின் தாக்கத்திற்குப் பிறகு சுற்றுலாத் துறை கொஞ்சம் நம்பிக்கைத் தர ஆரம்பித்திருப்பது உண்மையில் மிக மிக நல்ல செய்தி.

பிரதமர் மொகிதீன் நேற்று,  ஞாயிற்றுக்கிழமை,  நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறிய ஒரு செய்தி நம்மில் பலரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது!  

ஆமாம்,  மாநிலங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் எதிர்வரும் ஜூன் 10-ம் தேதிக்குப் பின்னர் நீக்கப்படும் என்கிற செய்தி மலேசியர்களிடம் பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ளது!


உள் நாட்டில் பிரபல சுற்றுத்தலமான லங்காவியில் உள்ள தங்கும் விடுதிகள் மீண்டும் சுறு சுறுப்பு அடைந்திருக்கின்றன.

பிரதமர் அறிவிப்புக்குப் பின்னர் சுமார் 45 நிமிடங்களில் லங்காவியில் உள்ள தங்கும் விடுதிகளில் ஆயிரம் (1000) அறைகள் இதுவரை முன் பதிவு செய்யப்பட்டிருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இந்த செய்தியை லங்காவி சுற்றலாத்துறைத் தலைவர் ஜைனுதின் காதர் உறுதிப் படுத்தியிருக்கிறார். இந்த ஆண்டுக்குள் சுமார் பத்து இலட்சம் சுற்றுப்பயணிகள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதாக அவர் கூறுகிறார்.  அந்த நோக்கம் நிறைவேறினால் நமக்கும் மகிழ்ச்சியே!

இதுவரை  நமக்குத் தெரிந்ததெல்லாம் லங்காவியிலிருந்து வந்த அறிவிப்பு மட்டும் தான்.மற்ற மாநிலங்களிலும் சுற்றாலத்துறை சுறு சுறுப்பு அடைந்திருக்கும் எனவும் நம்ப இடமிருக்கிறது.  சுற்றுப்பயணிகளுக்கு இன்னும் பல இடங்கள் இருக்கின்றன. அங்கும் மக்கள் குவியத் தொடுங்குவார்கள் என்பதும் உறுதி.

இந்த அனைத்து முன்பதிவும் உள்ளூர் மக்களிடமிருந்து வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. வெளியூர் சுற்றுப் பயணிகள் என்பதெல்லாம் இப்போதைக்கு நினைத்துப் பார்க்க முடியாது! உள்ளூர் சுற்றுப்பயணங்கள் அதிகரித்தால் அதுவே நமக்குப் பெரிய வெற்றி. காரணம் எல்லாமே ஒன்றைச் சார்ந்து ஒன்று இருக்கின்றன. ஒரு துறை வளர்ச்சி அடைந்தால் அதைச் சார்ந்த மற்ற துறைகளும் வளர்ச்சி அடையும்.

இது ஓர் ஆரம்பம். மிக நல்ல ஆரம்பம்.  தங்கும் விடுதிகளில் தங்குவதற்கான கட்டுப்பாடுகள் ஒரு சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

கொஞ்சம் நம்பிக்கைத் தருகிறது!

உணவகங்கள் நிலை என்ன ஆகும்?

பொதுவாகவே நமது நாட்டின் எல்லா உணவகங்களும், கோரோனா தொற்றினால், பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்பது உண்மையிலும் உண்மை. 

இதில் இந்திய உணவகங்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருக்கின்றன என்று சொல்லுவதில் உண்மை இல்லை. 

எனது நிறுவனம் பக்கத்திலேயே ஒரு பிரமாண்ட மலாய் உணவகம் ஆரம்பித்து ஒரு சில மாதங்களே ஆகின்றன. அதனை நடத்துபவருக்கோ பெரிய அடி என்பதில் ஐயமில்லை.  அவருடைய வேலையாள்கள் பெரும்பாலும் இந்தோனேசியர்கள். ஒருவர் உள்ளூர் இந்தியர். அவர்களுக்கு, உள்ளுர் வாசியைத் தவிர,  மற்றவர்களுக்குச் சம்பளம் கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. சாப்பாடு போட்டாலே அதுவே பெரிய விஷயம். அதனை அவர் செய்கிறார். 

சீன உணவகங்களுக்கும் பெரிய அளவில் பாதிப்பு உண்டு. இல்லை என்று சொல்ல முடியாது. அவர்களும் பலர் வெளி நாட்டினரை நம்பியே உள்ளனர். பல உணவகங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. வெளி நாட்டினரையே நம்பி இருப்பவர்கள் கொஞ்சம் தாமதமாகும்.  சொந்தமாகவே தொழில் செய்வோர் இப்போதே ஆரம்பித்துவிட்டனர்.

கொரோனா தொற்று உலகையே புரட்டிப் போட்டுவிட்டது என்று சொல்லுகிறார்களே அது முற்றிலும் உண்மை. அதிலும் உணவகங்கள், தங்கள் தொழிலைத் தொடர,  இனி வேறு வழி வகைகளைக் காண வேண்டும்.  அது என்ன வழி என்பது அவர்களுக்குத் தான் தெரியும்.

பழைய நிலைக்கு உணவகத் தொழில் மீளுமா என்பதை இப்போது கணிக்க முடியவில்லை. அது கொரோனா இன்னும் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்பதைப் பொறுத்தது.  நீண்ட நாள் என்றால் பாதிப்பு அதிகமாகவே இருக்கும். ஆனாலும் பிரச்சனைகள் வரும் போது அதற்கு ஒரு தீர்வும் வரும். இப்படித்தான் எல்லாக் காலங்களிலும் நடந்து கொண்டிருக்கிறது.

உள் நாட்டில் வேலை வாய்ப்புக்கள் குறைந்துவிட்டன. ஒரு வேளை. தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக, இனி உணவகங்களுக்கு மலேசியர்கள் கிடைக்கலாம். ஏதாவது ஒரு வேலையைச் செய்து தங்களின் குடும்பங்களைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருக்கிறார்கள்.

உணவகங்கள் என்பது முக்கியமான ஒரு தொழில்.  நாட்டில் பல கோடிகளைச் சம்பாதித்துக் கொடுக்கும் தொழில் அது.

நிச்சயமாக அரசாங்கம் அதனைக் கவனத்தில் கொள்ளும் என நம்பலாம். உணவகங்கள் நடத்துவோரின் தேவைகளைக் கவனத்தில் கொண்டு அவர்களுக்குத் தேவையான பொருளாதார உதவிகளை அரசாங்கம் செய்யும் என நம்பலாம்.

அரசாங்கம் தான் இன்றைய பெரிய முதலாளி.  அதனால் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைத்துத் தொழில்களுக்கும் அரசாங்கத்தின் உதவி இல்லாமல் மேலும் தொடர முடியாது.

தொழில் செய்வோர் பலர் முதலாம் தலைமுறையைச் சேர்ந்தவர்கள்.  அதனை அரசாங்கம் கவனத்தில் கொண்டு அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்யும் என நம்புவோம்.

Saturday 6 June 2020

பதினைந்தாவது தேர்தல் வருமா?

முதலில் ஒன்றைச் சொல்லி விடுகிறேன். 

மக்கள் இன்னொரு புதிய தேர்தலை விரும்பவில்லை. விரும்புவதற்கும் வாய்ப்பில்லை.  இப்போது மக்களுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள். ஒரு தேர்தலை நடத்துவதற்கு பல கோடிகள் செலவிடப்பட வேண்டும் - அதவாது சென்ற தேர்தலின் கணக்குப்படி 50 கோடிக்கு மேல் செலவிடப்பட்டிருக்கின்றது! இப்போது இன்னொரு தேர்தலை நடத்தினால் அதற்கும்  பணம் தேவை.  இன்றைய நிலையில் இன்னும் அதிகமாகவே தேவைப்படலாம்! 

முன்பு பதவியில் இருந்தவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை வெளியே கொண்டு வந்தாலே போதும்! அதை வைத்தே செலவில்லாத தேர்தல் நடத்தலாம்! அது சாத்தியம் இல்லை! எல்லாமே உத்தமபுத்திரர்கள்!

இப்போது தேர்தல் வேண்டுமென்று யார் அடித்துக் கொள்ளுகிறார்கள்? இன்றைய பிரதமர் முகைதீன் விரும்பமாட்டார்.  அவர் நிலைமை சரியாக இல்லை.  எவன் எந்த நேரத்தில் பல்டி அடிப்பானோ - அரசாங்கத்தைக் கவிழ்ப்பானோ - என்பது அவருக்கே தெரியாது! அவர் "கோரோனா தொற்று நோயை" வைத்து அரசாங்கத்தை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்!

பக்கத்தான் கட்சியின் தலைவர், அன்வார் இப்ராகிம், இப்போதைக்குத் தேர்தல் வேண்டாம் என்றே நினைப்பவர்.  பணம் மட்டும் அல்ல இப்போதைய அரசாங்கம் இன்னும் எத்தனை காலம் நீடிக்கும் என்பதை ஆவலோடு பார்த்துக் கொண்டிருப்பவர். அரசாங்கம் எந்த நேரத்திலும் கவிழலாம் என்று கணக்குப் போட்டுக் கொண்டிருப்பவர். புதிதாக தேர்தல் நடத்தினால் தனது நிலை என்னவாகும் என்பதை அனுமானிக்க முடியாத நிலையில் உள்ளவர்.  இப்போது என்ன நடக்கிறதோ அதுவே தொடரட்டும் என்பது தான் அவரது விருப்பமாக இருக்க வேண்டும். தேர்தல் வருவதை அவர் விரும்பமாட்டார்.

தேர்தல் வேண்டும் என்னும் நிலையில் உள்ளவர்கள் யார்?  பாரிசான் கூட்டணியில் உள்ள அம்னோ கட்சியினர் மட்டுமே தேர்தல் வேண்டும் என்று விரும்புகின்றனர். இந்தக் கூட்டணியின் மற்றக் கட்சிகளான ம.சீ.ச. வோ அல்லது ம.இ.கா. வோ தேர்தல் வருவதை விரும்பமாட்டார்கள்! இருக்கும் இடத்தையும் இழக்க அவர்கள் தயாராக இல்லை!

அம்னோவினருக்கு ஏன் இந்த ஆசை? நடந்து முடிந்த அனைத்து இடைத் தேர்தல்களிலும் அவர்கள் வெற்றி பெற்றிருக்கின்றனர்.  அது அவர்களுக்கு "வெற்றி பெற முடியும், ஆட்சி அமைக்க முடியும்" என்னும் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது!   இழந்து போன ஆட்சியைப் பிடிக்க இதுவே தக்க தருணம் என்பதே அவர்களது எண்ணம். அடுத்த தேர்தல் வரும் வரை பொறுத்திருந்தால் எதுவும் நடக்கலாம். ஒரு வேளை அவர்களின் தலைவர்கள் சிறையில் கூட இருக்கலாம்! அம்னோ அரசியல் பலத்தை இழந்துவிடலாம். இப்போது காற்று அவர்கள் பக்கம் தூற்றிக் கொள்வது அவர்களது விருப்பம்!

அதுவும் அம்னோ தரப்பு செய்த கடந்த காலத் திருட்டுத் தனங்களை மக்கள், நடந்து முடிந்த இடைத் தேர்தல்களின் மூலம், மறந்து விட்டார்கள் என்னும் போது அதனைச் சரியாக பயன்படுத்திக் கொள்வது அவர்களது புத்திசாலித்தனம் என்று அவர்கள் நினைப்பதில் எந்தத் தவறும் இல்லை.

புதினைந்தாவது பொதுத் தேர்தல் விரைவில் வருமா என்பது முற்றிலுமாக அம்னோவின் கையில் இருக்கிறது.  அவர்கள் மகா நல்லவர்கள், உத்தமபுத்திரர்கள் என்பதை நிருபிக்க உடனடித் தேர்தல் அவர்களுக்குத் தேவைப்படுகிறது!  காலங்கடந்தால் பெயர் நாறிப்போகவும் அவர்களுக்கு வாய்ப்புண்டு!

அது சரி உடனடியாகத் தேர்தல் வருமா? வரும் என்று சொல்லுவதற்கு வாய்ப்புக்கள் குறைவாகத் தான் இருக்கிறது!   காரணம் பாஸ் என்கிற ஒரு கட்சி இருப்பதை மறந்துவிடக் கூடாது.  இன்றைய பிரதமர் முகைதீன் அவர்களுக்குச் சரியான தீனி போட்டு வளர்த்துக் கொண்டிருக்கிறார்! 

பாஸ் கட்சியினர் மத்திய  ஆட்சியில் எந்த பதவியையும்  வகிக்காதவர்கள். பதவிக்காக ஏங்கிக் கொண்டிருந்தவர்கள்! இப்போது அவர்களுக்குத் தாராளமாக பதவிகள் கொடுக்கப்படுகின்றன. அமைச்சரவை மட்டும் அல்ல  அரசு சார்பு நிறுவனங்களிலும் அவர்களுக்குப் பதவிகள் வந்து கொண்டிருக்கின்றன. 

இப்போது அவர்களுக்கு நல்ல நேரம்! அதைக் கெடுக்க அவர்கள் விரும்ப மாட்டார்கள். தேர்தல் வந்தால் அம்னோவோடு அவர்கள் ஒத்துப் போக முடியுமா என்பது சந்தேகம் தான்.  "நான் பெரியவன், நீ பெரியவன்"  என்பதில் அவர்களுக்குக் கருத்து வேறுபாடுகள் உண்டு. இரு கட்சிகளுமே விட்டுக் கொடுக்க மாட்டார்கள்! 

அதனால் இப்போதைக்குப் பதினைந்தாவது தேர்தல் என்பது சாத்தியமில்லை!

Friday 5 June 2020

கொடூரத்தின் உச்சம்


இந்தியா, கேரளாவில் சமீபத்தில் நடைப்பெற்ற ஒரு சம்பவம் உலகத்தையே உலுக்கிவிட்டது.

ஒரு கர்ப்பிணி யானையை அன்னாசி பழத்தின் மூலம் வெடி வைத்துக் கொன்ற சம்பவம் அவ்வளவு சீக்கிரத்தில் நம்மால் மறந்து விட முடியாது/

கொடூரத்திலும் கொடூரமான சம்பவம் என்று சொல்லுவதில் எந்த தவறும் இல்லை. இங்கும், நமது நாட்டில்,  ஒரு பூனையைப் பிடித்து துணி துவைக்கும் இயந்திரத்தில் வைத்து துவைத்துப் போட்டார்களே அந்த ஞாபகமும் கூட வருகிறது. ஒரு வித்தியாசம்: ஒன்று சிறிய ஜீவன் இன்னொன்று பெரிய ஜீவன். அது தான் வித்தியாசம்.

கேரளா, பாலக்காடு மாவட்டத்தில் ஒரு சில அடையாளம் தெரியாத நபர்களால் இந்தக் கொடூரச் சம்பவம் நடந்தேறியிருக்கிறது. சுமார் 14-15 வயது மதிக்கத்தக்க அந்த யானை கடைசி மூன்று நாள்கள் மிகவும் துன்பத்தை அனுபவத்திருக்கிறது. அந்த மூன்று நாள்களிலும் அந்த யானை வெள்ளையாறு நதியை விட்டு வெளியேறாமல்,  வலி தாங்க முடியாது,  தனது வாயையும், தும்பிக்கையையும் தண்ணீருக்குள்ளிருந்து வெளியே எடுக்கவில்லை. தண்ணீரில் இருந்தபடியே அது இறந்து விட்டதாக  வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

பொதுவாகவே கேரள மாநிலத்தில்  யானைகளுக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு.  கோவில் திருவிழாக்களில் யானைகளின் பங்கு அளப்பறியது. தனிப்பட்ட முறையில் பலர் யானைகளை வளர்க்கின்றனர். அதுவும் இன்னுமொரு 18-20 மாதங்களில் குட்டியை ஈனும் நிலையில் உள்ள யானையை யாருக்கும் கொல்ல மனம் வராது. 

ஆனால் காட்டு யானைகள் என்று வரும் போது அவைகளை யாரும் விரும்புவதில்லை. கிராமங்களை அழிக்கும் என்பதால் காட்டு யானைகளை மக்கள் பல வழிகளில் அவைகளை விரட்டுகின்றனர். ஆனால் இப்படி ஒரு வெடிச் சம்பவத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை.

எது எப்படி இருப்பினும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கலாம்.

நமது நாட்டில் ஒரு கர்ப்பிணி பூனையை சலவை இயந்திரத்தில் போட்டு அரைத்துச் சாகடித்த குற்றத்திற்காக ஒரு நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனைக் கொடுத்தார்கள்.

கர்ப்பிணி யானைக்கு எப்படியோ!


Thursday 4 June 2020

குடிகார ஓட்டுநர்கள்!

இப்போது குடித்துவிட்டு கார்களை ஓட்டுவது, லோரிகளை ஓட்டுவது என்பது மிகவும் சர்வ சாதாரணமான விஷயமாகி விட்டது!

கூர்ந்து கவனித்தால் இருக்கின்ற சட்டதிட்டங்கள் போதுமானதாக அல்லது பயப்படும்படியாக ஒன்றும் இல்லை என்று தான் நினைக்க வேண்டியுள்ளது. போதுமானதாக இருந்தால் இந்த அளவுக்கு குடிகார ஓட்டுநர்களால் ஏற்படுத்தப்படுகின்ற விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பில்லை.

நடைபாதை ஓரங்களில் உள்ள அங்காடிக் கடைகள், காவல்துறையினரின் சாலை தடுப்புக்கள், ஏன்? சரியான நேர் பாதைகளில் கூட பல விபத்துக்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்த விபத்துக்களுக்குக் காரணமானோர் பெரும்பாலோர் குடித்து விட்டு கார்களை ஓட்டுபவர்கள் தான்!

ஏன் குடிகாரர்களால் ஏற்படுத்தப்படும் இந்த விபத்துக்களை நம்மால் குறைக்க முடியவில்லை? நம்மிடம் உள்ள குறைபாடான சட்டங்கள் தான்  இந்த விபத்துக்களைக் குறைக்க முடியாமல் செய்கின்றன.

கடுமையான சட்ட திட்டங்கள் இன்றி இதனைக் குறைக்க வழி இல்லை. ஒரு சில நாடுகளில் இது போன்ற விபத்துக்கள் முற்றிலுமாக - அல்லது தொண்ணுறு விழுக்காடு - ஒழித்துக் கட்டப்பட்டு விட்டன என்றும் கூறப்படுகின்றது.

குறிப்பாக சுவீடன் நாட்டில் மிகக் கடுமையான தண்டனையின் மூலம் விபத்துக்கள் வெகுவாக குறைக்கப்பட்டிருக்கின்றன. வழக்கமாக ஓர் அபராதத் தொகையைக் கட்ட வேண்டி வரும்.  அல்லது சிறை தண்டனையாகக் கூட இருக்கலாம். ஆனால் சுவீடன் நாட்டிலும் பணம் தான் அபராதத் தண்டனை என்றாலும் அது ஓரு குறிப்பிட்ட தொகை அல்ல. விபத்தை ஏற்படுத்திய  அந்த ஓட்டுநரின் வங்கியில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை அது பொறுத்திருக்கிறதாம்!   ஆமாம்,  கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை யார் தான் இழக்க விரும்பவர்? இதன் வழி விபத்துக்கள் வெகுவாக குறைந்து விட்டனவாம்!

எது எப்படி இருந்தாலும் விபத்துக்கள் குறைக்கப்பட வேண்டும். அதுவும் குடிகாரர்கள் மூலம் வருகின்ற விபத்துக்கள் குறைக்கப்பட வேண்டும். இவர்களால் ஏற்படுத்தப்படுகின்ற விபத்துக்கள் மூலம் மரணம் ஏற்பட்டால் தண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டும்.

நம் நாட்டில் சட்டங்கள் கடுமையாக இருக்கின்றன. ஆனால் அது போதுமானதாகத் தெரியவில்லை. அதையெல்லாம் யாரும் மதிப்பதாகத் தெரியவில்லை! அப்படியென்றால் சட்டத்தை யாரும் மதிக்கவில்லை என்பது தானே அர்த்தம்!  அபராதம், சிறை தண்டனையோடு பிரம்படியும் சேர்த்துக் கொள்ளலாம்!

நமது பணக்காரர்களைக் காப்பாற்றுவதற்காக அல்லது அரசியல்வாதிகளைக் காப்பாறுவதற்காக அல்லது பெரிய  மனிதர்களைக் காப்பாற்றுவதற்காக கடுமையான சட்டங்களைக் கொண்டு வர தயங்குகிறோம் என்று தான் நினைக்க வேண்டியுள்ளது.

நாம் யாரையோ காப்பாற்றுவதற்காக இன்னும் இன்னும் குடிகாரர்களை அதிகமாக உருவாக்குகிறோம் என்பதைத் தவிர வேறு எந்த காரணங்களும் இருப்பதாகத் தெரியவில்லை.  இதன் மூல விபத்துக்களையும் அதிகப்படுத்துகிறோம்!

குடிகாரனாய் பார்த்து திருந்தால் விட்டால் குடியை ஒழிக்க முடியாது! விபத்தையும் ஒழிக்க முடியாது!

Tuesday 2 June 2020

உணவில் சிக்கனம் தேவை!

சிக்கனம் என்பது எல்லாக் காலங்களிலும் நமக்கு இருக்க வேண்டும்.

அது ஏனோ நம் இனத்தவரிடம் இல்லை. ஒரு சில குடும்பப் பெண்கள் செய்கின்ற அட்டகாசங்கள் நமக்குக் கண்களில் கண்ணீரைக் கொண்டு வந்துவிடும். குமரிகளும் அப்படித்தான்!  தாய் வழி தானே பிள்ளைகளும்!

தினசரி அவர்கள் செய்கின்ற - சமையலில் ஏற்படுகின்ற வீணடிப்புக்களைச் சொல்லி மாளாது! தங்களது வீடுகளின் முன்னால் உள்ள அள்ளூறுகளில் அவர்கள் அப்படியே  சோற்றைக் கொண்டு வந்து கொட்டுவார்கள் பாருங்கள்! நமக்குக் கண்ணீரை வர வழைத்து விடும்!

இப்போது உள்ள நமது குடும்பப் பெண்களைக் குற்றம் சொல்லும் போது இன்னொருவரையும் குற்றம் சாட்ட வேண்டியுள்ளது. ஆமாம்! அவர்கள் படித்தது எல்லாம் அவர்களது தாயாரிடமிருந்து தானே! தாயார் எட்டு அடி
பாய்ந்தால் மகள் பதினாறு அடி பாய்வது இயல்பு தானே!

இப்போது உள்ள இளம் தாய்மார்களுக்குப் படிக்கின்ற பழக்கம் என்பதாக ஒன்றுமில்லை. உலகில் மட்டும் அல்ல நமது ,மலேசிய நாட்டில் கூட எத்தனையோ குடும்பங்கள் உணவு இன்றி தவிக்கின்றனர் என்பதை அவர்கள் அறியாதவர்களாக இருக்கின்றனர். படிக்காத பெண்கள் தான் இப்படி என்றால் படித்த பெண்களும் அதே தவற்றைச் செய்யத்தான் செய்கின்றனர்.  காரணம் இவர்களுக்கும் பொது அறிவு என்பதே இல்லை. படிக்கின்ற பழக்கமும்   இல்லை, என்ன செய்வது! தொலைக்காட்சி தொடர்கள் மூலம் இவர்கள் எதையும் கற்றுக் கொள்ளவும் முடிவதில்லை!

ஒரு பானைச் சோற்றை அப்படியே அள்ளூறுகளில் கொட்டுவதை விட அந்தச் சோற்றை சாப்பிடுவதற்கு எத்தனையோ உயிர்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன என்பது கூடவா தெரியாது?  ஒரு பக்கம் நாய்கள், பூனைகள், கோழிகள், காக்கைகள், பறவைகள் - இவைகளுக்குப் போட்டாவது அவைகளின்  வயிற்றை நிரப்பலாமே!

இந்தக்  கொரோனா காலத்தில் எல்லா உயிர்களுமே உணவு இல்லாமல் தடுமாறுகின்ற நேரத்தில் உணவுகளை வீணடிக்க வேண்டாம் என்பதே நமது வேண்டுகோள்.

சாப்பாடு இல்லாமல் நாய்கள் கீழே விழுந்து மடிகின்றன. ஆட்டுக்கு உணவு இல்லாமல் தனது சாப்பாட்டிலேயே பங்கு போட்டுக் கொடுக்கிறார் ஒரு நண்பர்.

இந்த நேரத்தில் அரசாங்கத்தைக் கை கூப்பி வணங்க வேண்டும். திருமணங்களைத் தடை செய்திருப்பது மிக மிக நல்ல செயல். திருமண விருந்துகளில் ஏகப்பட்ட வீணடிப்புக்கள்!  பார்த்தாலே வயிறு எரியும்.

வீட்டில் சமைக்கும் போது மிகவும் பொறுப்பாக குடும்பப் பெண்கள் நடந்து கொள்ள வேண்டும்.

சிக்கனம் என்பது ஏதோ ஒன்றில் மட்டும் அல்ல. அனைத்திலும் தேவை.  சிக்கனம் தெரியாவிட்டால் அது சீரழிவுக்கு இட்டுச் செல்லும்!


இது கொரோனா காலம், மறந்து விடாதீர்கள்!

பொதுவாக தமிழரிடையே சிக்கனம் என்பது தேவையற்ற ஒன்று என்பதாகவே இன்னும் நாம் கருதிக் கொண்டிருக்கிறோம்.

இந்த சிக்கலான நேரத்தில் கூட இன்னும் நமது இளைஞர்கள், நடுத்தர வயதினர் பலர் பெரிய வரிசைப் போட்டுக் கொண்டு மது அருந்துவதை நம்மால் பார்க்க முடிகிறது.  அதாவது இவர்களுக்கு இன்னும் சாப்பாடு கிடைக்கிறது என்பது உறுதியாகத் தெரிகிறது!

சிக்கனம் இல்லாததால் இன்று பல குடும்பங்கள் உண்ண உணவில்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன என்பதை இவர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.

இன்று குடித்து விட்டு ஆடிப்பாடி மகிழும் இவர்கள் நாளை சாப்பாடு இல்லாமல் திண்டாடக் கூடிய நிலை  வரும். ஆமாம் வாழ்க்கையில் எதுவும் நடக்கலாம். ஏற்ற இறக்கங்கள் இல்லாமலா போகும்?

சிக்கனம் இல்லாத சமுதாயம் என்றால் அது நாமாகத்தான் இருக்க முடியும்.

இன்று இந்த தொற்று நோய் காலத்தில் நிறைய பாடங்கள் நாம் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். மலாய்க்காரர்கள் பெரும்பாலும் அரசாங்க ஊழியர்கள் என்கிற முறையில் அவர்களுக்கு அவ்வளவாக பிரச்சனைகள் எழவில்லை. சீனர்கள் பெரும்பாலும் வர்த்தகத் தொடர்பு உள்ளவர்கள் என்பதால் அவர்களுக்கும் எந்த சிக்கல்களும் எழவில்லை.

ஆனால் தமிழர்கள் நிலை வேறு. நாம் எங்காவது ஓரிடத்தில் வேலை செய்து பிழைத்துக் கொண்டிருக்கிறோம். ஏன்?  நேற்று வந்த பாக்கிஸ்தானியரிடமும்,  வங்காளதேசிகளிடமும் கை கட்டி வேலை செய்து கொண்டிருக்கிறோம்.  உண்மையைச் சொன்னால் நேற்று வந்தவன் நம்மை அதிகாரம் செய்து கொண்டிருக்கிறான்! இது ஒன்றே போதும். பொருளாதாரத்தில் வலிமை இல்லாத சமுதாயத்தை யார் வேண்டுமானாலும் ஏறி மிதிக்கலாம்! வாயைப் பொத்திக் கொண்டு சும்மா இருக்க வேண்டியது தான்!

கொஞ்சம் கூட மாற்ற முடியாத ஒரு தமிழனைத் தெரியும்.  வேலைக்குப் போவான், குடிப்பான் - அது தான் அவனது தினசரி வேலை. குடும்பம் உடைந்து போனது. தாய் கதையை முடித்துக் கொண்டாள்.  பிள்ளைகளுக்குக் கல்வி இல்லை. இப்போது படுத்த படுக்கை ஆனான். ஒரு தொண்டு நிறுவனம் அவனுக்கும் அவனது குடும்பத்துக்கும் சாப்பாடு போடுகிறது!

இன்று கும்மாளம் போட்டுக் குடிப்பவன் நாளை வியாதியால் படுத்த படுக்கையாகி விடுவான்.  அப்போது அவனுக்குத் தொண்டு நிறுவனங்கள் தான் உதவிக்கு வர வேண்டும்.

இந்த அளவுக்கு சூடு சொரணை இல்லாத சமுதாயத்தை நாம் கொண்டிருக்கிறோம். எல்லாமே அவனுக்குத் தெரியும். நீதி நியாயம் பேசுவான். ஆனால் தனது வாழ்க்கையைக் கவனித்துக் கொள்ள மட்டும் அவனுக்குத் தெரியாது!

இப்போது கோரோனா கோலோச்சும் காலம்.  இத்தனை ஆண்டுகள் சிக்கனத்தைப் பற்றி நாம்  கருத்தில் கொள்ளவில்லை என்றால் இப்போது தான் தக்க தருணம். இனி மேலாவது சிக்கனத்தைப் பற்றி யோசியுங்கள்.

பொருளாதார பலம் இருந்தால் யாருக்கும் தலை குனிய வேண்டியதில்லை.  பணம் உங்களைத் தலை நிமிரச் செய்யும்!

இந்தக் கொரோனா காலத்தில் நமது வாழ்க்கையில் சிக்கனத்திக் கொண்டு வருவோம்!

Monday 1 June 2020

நேரடித் தொழில் என்றால் என்ன?

வேலை செய்து பிழைக்கும் நமது சமூகத்தினர் இப்போது - இந்த கொரோனா தோற்று நோய் காலத்தில் - மிகவும் இக்கட்டான சூழலில் இருப்பது நமக்குப்  புரிகிறது.

ஒரு சிலர் தப்பித்துக் கொள்ளலாம். எல்லாருக்கும் அந்த யோகம் இல்லை. பலர் தங்களது வேலையையே நம்பி இருக்கின்றனர். அவர்களின் நிலை?

ஆனாலும் எதுவும் கெட்டுப் போய் விடவில்லை.  ஒரு கதவு அடைப்பட்டால் இறைவன் ஒன்பது கதவுகளைத் திறந்து வைப்பார் என்பதை நம்புங்கள்.

இந்த நேரத்தில் நேரடித் தொழில்கள் நமக்குக் கை கொடுக்கும் என்பதையும் மறந்து விடாதீர்கள்.

நேரடித் தொழில்களில் பல பிரிவுகள் இருக்கின்றன. நமக்கு அதிகம் பரிச்சயமனது காப்புறுதி தொழில் மட்டும் தான்!  அதற்குக் காரணம் காப்புறுதி முகவர்களைத் தான் நாம் அடிக்கடி எதிர் நோக்குகின்றோம். அதனாலேயே அவர்கள் நமது கவனத்திற்கு உடனடியாக வந்து விடுகிறார்கள்! 

ஆனால் உண்மை நிலை வேறு. எனது சீன நண்பரைப் பற்றி நான் சொல்லியாக வேண்டும். அவர் ஒரு பெரிய வியாபாரி.  துணி வியாபாரம் அத்தோடு பிளாஸ்டிக் பொருள்களும் விற்று வந்தார். ஆனால் அது ஒரு தாமான் என்பதால் எதிர் பார்த்தபடி வியாபாரம் பெரிய அளவில் இல்லை. அவரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.  அந்தக் கடையை வேறு ஒருவருக்கு விற்பதில் முனைப்புக் காட்டினார். விற்கும் வரையில் தாக்குப் பிடிக்க வேண்டுமே!  தொழிலை மனைவியிடம் ஒப்படைத்து விட்டு  நேரடித் தொழிலில் ஈடுபட்டார்.

மருந்துகள் விற்கும் ஒரு நிறுவனத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.  மூன்று ஆண்டுகள் கடும் உழைப்பு.  பிள்ளைகளின் கல்வி, குடும்பச் செலவுகள் அனைத்தையும் அந்த நேரடித் தொழிலின் மூலம் அவருக்குக் கிடைத்தது. அதற்குள் அவரது கடையை வாங்க ஆள் கிடைத்ததால் கடையை விற்றுவிட்டு தனது தொழிலை வேறு இடத்திற்கு மாற்றிக் கொண்டார்.  ஒன்றைக் கவனிக்க வேண்டும். அவரது தொழிலை அவர் மூடிவிட்டு ஓடிவிடவில்லை. அவரது தொழில் தொடர்ந்து நடைபெறுகிறது. அது தான் சீனர்களின் பலம்!  அவருக்குத் தேவை எல்லாம் ஓரு தற்காலிகத் தீர்வு. அது ஒரு நேரடித் தொழிலின் மூலம் அவருக்குக் கிடைத்தது.

நேரடித் தொழில் என்றால் வெறும் காப்புறுதி மட்டும் அல்ல,  மருந்துகள் விற்பது,  துணிமணிகள் விற்பது, வீட்டுப் பொருள்கள் விற்பது இன்னும் பல.  கார்கள் விற்பது, பழைய கார்களை வாங்கி அவைகளை புதுப்பித்து விற்பது சந்தையில் உள்ள அனைத்துக்கும் விற்பனையாளர்கள் தேவை. விற்பனையாளர்கள் இல்லாமல் எதுவும் நகராது. இவைகள் எல்லாமே நேரடித் தொழில்கள் தான்.

இந்த நேரடித் தொழில்களில் நாம் இறங்கினால் தான் அதனைப் பற்றி நாம் முழுமையாகப் புரிந்து கொள்ளமுடியும்.

நமது பொருளாதார சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ள  இது தான் வழி. சீனர்கள் பலர் இந்த நேரடித் தொழில்களில் ஈடுபட்டு நல்ல நிலையில் இருக்கின்றனர். தொழில் என்று வந்த பிறகு அவர்கள் எதற்கும் தயக்கம் காட்டுவதில்லை. வெட்கப் படுவதில்லை!  ஆனால் நம்மிடம் வேகுவாக தயக்கம் உண்டு.

நமக்குப் பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ சில சமயங்களில் நமது குடும்பங்களின் நலனுக்காக நாம் ஏதாவது செய்து தான் ஆக வேண்டும்.

அது நேரடித் தொழிலாகவே இருக்கட்டுமே! என்ன கெட்டுப் போய் விட்டது!