Tuesday 31 December 2019

2019 ஸாகிர் நாயக்கிற்கு ஏற்றமிகு ஆண்டு!

மலேசியாவின் ஜாதகம் சென்ற ஆண்டு எப்படியாவது இருந்துவிட்டுப் போகட்டும்!

நாட்டுக்கு நல்லதோ கெட்டதோ அனைத்தும் பிரதமர் மகாதிர் உபயம்! 

நாட்டிற்குள் அடைக்கலம் புகுந்த இஸ்லாமிய சமயப் போதகர் - சமீபகாலத்தில் பெர்லிஸ்  பல்கலைக்கழகம் அவருக்கு அகில உலக இஸ்லாமிய மேதை என்பதாகப் பட்டம் சூட்டியிருக்கிறது - ஸாகிர் நாயக்கிற்கு சென்ற ஆண்டு மிக அற்புதமான ஆண்டு, மிகவும் ஏற்றமிகு ஆண்டு என்பதை  நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது!

ஸாகிர் நாயக்கைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு கொடுக்க வேண்டியது  நமது கடமை. . அவர் ஓர் இஸ்லாமிய தீவிரவாதி என்பதாக அவரைப் பற்றிக் குறிப்பிடுகிறது இந்திய அரசு. அவர் இந்தியாவால் தேடப்படும் ஒரு குற்றவாளி. அவர் தீவிரவாதத்தை பரப்புகிறவர் என்கிறது இந்தியா. வங்காள தேசம் இன்னும் பல இஸ்லாமிய நாடுகள் அவரை தீவிரவாதி என்பதாகக் கூறி அந்த நாடுகள் அனைத்தும் அவரைப் புறக்கணித்து விட்டன. இந்த நிலையில் அவருக்கு அடைக்கலம் கொடுத்த ஒரே நாடு மலேசியா. இங்கு அவருக்கு நிரந்தர தங்கும் உரிமையை கொடுத்திருக்கிறது மலேசிய அரசு.

அவர் இங்கு காலடி எடுத்த வைத்த நேரம் அவருடைய ஜாதகம்  சற்று ஏறுமுகமாக ஏறிக் கொண்டிருக்கிறது.

இன்று அவர் மலேசியாவில் மிக முக்கியமான ஒரு மனிதராக நாட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார்!  பொதுவாகவே இந்தியர்களைச் சீண்டுவது என்பது ஸாகிரின்  பொழுது போக்கு. அத்தோடு இந்து மதத்தைக் கேவலப்படுத்துவது அவருக்கு மிகவும் பிடித்தமான பொழுது போக்கு. இப்போது அவரே நேரடியாகச் செய்ய முடியாததால் சில இந்து இளைஞர்களை மதம் மாற்றி அவர்களை வைத்து இந்துக்களை, இந்தியர்களைக் கேவலப்படுத்தும் வேலையில் அவர் இறங்கியிருக்கிறார்! 

இவர் இந்துக்களைக் கேவலப்படுத்துவதை வைத்து அவருக்கு இஸ்லாமிய உலக மேதை என்பதாக பெர்லிஸ் பல்கலைக்கழகம் அவருக்கு பட்டம் சூட்டியிருக்கிறது.  இன்றைய நிலையில் இமாம்கள், சட்ட மேதைகள், முஃதிகள் அவரது உரையைக் கேட்க வரிசைப் பிடித்து நிற்கிறார்கள்! அவரிடம் பேச முன் பதிவு செய்கிறார்கள்! அந்த அளவுக்கு அவருடைய செல்வாக்கு ஓங்கி நிற்கிறது! வருங்காலங்களில் மலேசிய அரசியலை வழி நடத்துபவராகவும் அவர் தென்படுகிறார்!

வேலையோடு வேலையாக இங்குள்ள இந்து அரசில்வாதிகள் மேல் பல வழக்குகளையும் தொடர்ந்திருக்கிறார்! 

அவரின் பெயரில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் பிரதமரின் பின்னணி இருப்பதால் அவருடைய ஜாதகம் ஒங்கிய நிலையில் இருக்கிறது! 

இது 2019 - ம் ஆண்டு கணிப்பு.  இது 2020 லும் தொடருமா?

Monday 30 December 2019

இஸ்லாமிய உலக மேதை!

ஸாகிர் நாயக் இஸ்லாமிய உலக மேதை!

நமக்கு அதில் ஆட்சேபனை இல்லை. உலக மேதை மட்டும் அல்ல அதை விட வேறு ஏதாவது பெரிதாக இருந்தால் அதைக் கூட பயன்படுத்திக் கொள்ளுங்கள். நமக்கு அதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஒரே காரணம் நாங்கள் அவரின் இஸ்லாமிய மேதைத்துவத்தை அறிந்திருக்கவில்லை என்பது மட்டும் தான். வேறு காரணங்கள் இல்லை.

ஆனால் ஒரு சில நெருடல்கள் உண்டு.  இந்த அளவுக்கு உலக பிரசித்தப் பெற்ற ஓர் இஸ்லாமியை மாமேதையை ஏன் இஸ்லாமிய உலகம்  அவருக்கு சரியான அங்கீகாரம் கொடுக்கவில்லை என்பது தான். அது மட்டும் அல்ல எந்த ஓர் இஸ்லாமிய நாடும் அவரை ஏற்றுக்கொள்ளாத நிலையில் மலேசிய மட்டும் அவருக்கு அங்கீகாரம் கொடுத்து, நாட்டில் தங்க அடைக்கலம் கொடுத்திருப்பது இஸ்லாமிய மேதை என்பதாலா அல்லது மனிதாபிமான அடிபடையிலா என்னும் கேள்வி எழுத்தான் செய்கிறது.

பிரதமர் டாக்டர் மகாதிர் பல முறை அதற்கான பதிலைச் சொல்லியிருக்கிறார். ஸாகிர் நாயக்கை எந்த இஸ்லாமிய நாடும் ஏற்றுக் கொள்ளாத நிலையில் நாங்கள் மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறோம் என்பது தான்!

ஆக இந்த நாட்டில் அடைக்கலம் கொடுக்கப்பட்டிருப்பது மனிதாபிமான அடிப்படையில் தானே தவிர அவர் ஓர் இஸ்லாமிய மேதை என்பதற்காக அல்ல! இஸ்லாமிய நாடுகளில் மேதைகள் பலர் இருப்பதால் இவருடைய மேதைத்துவம் அங்கு எடுபடவில்லை 

அதே சமயத்தில் நாடு சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து நாட்டை ஆட்சி செய்த பாரிசான் கட்சி இஸ்லாமிய மேதைகளை அல்லது அறிஞர்களை உருவாக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியதாகவே நாம் எடுத்துக் கொள்ளலாம்!  

மாரா கல்லுரிகளை ஆரம்பித்து அனைத்து அரசாங்க வேலைகளைக்கும் அவர்களைப் பயன்படுத்திக் கொண்ட அரசாங்கம் இஸ்லாமிய மத போதகர்களை, அறிஞர்களை, மேதைகளை உருவாக்குவதில் தோல்வி அடைந்துவிட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

இல்லாவிட்டால் இஸ்லாம் அல்லாத இந்திய நாட்டைச் சேர்ந்த ஒருவரை இஸ்லாமிய மேதை என்பதும், இஸ்லாமிய நாடு என்று சொல்லிக்கொள்ளும் மலேசியா நாட்டில் ஓர் இஸ்லாமிய மேதையை உருவாக்க முடியவில்லை என்பதும் ஏற்புடையதல்ல என்பதே நமது கருத்து!

ஒரு பழமொழி ஞாபகத்திற்கு வருகிறது: ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரையாம்!

Sunday 29 December 2019

இது இன வெறி என்று சொல்லலாமா!

எது எப்படியோ இருக்கட்டும்! கேமரன்மலையில் நடந்ததை என்ன வென்று சொல்லலாம்?

முற்றிலுமாக அதனை ஒரு இனப் பாகுபாடு என்று சொல்லலாமா?  அல்லது இன வெறி என்று சொல்லலாமா? பாதிக்கப்பட்ட அறுபது விவசாயிகள் அனைவரும் இந்தியர்கள் என்பது தான் முக்கியமான செய்தி.  பாதிக்கப்பட்டவர்களில் ஓரிரு மலாய்க்காரர்கள் இருந்திருந்தால் கூட இந்த நிகழ்வு நடந்திருக்க வாய்ப்பில்லை!

அப்படி நடந்திருந்தால் பாஸ். அம்னோ கட்சிகள் அத்தோடு மலாய் அரசு சாரா இயக்கங்கள் அனைத்தும் வரிந்து கட்டிக் கொண்டு வந்திருப்பார்கள்! ஏன், "'மீண்டும் மே 13 வேண்டுமா" போன்ற கேள்விகள் கூட எழ வாய்ப்புண்டு!

ஆனால் அவர்கள் இந்தியர்கள். அதனால் அரசு இயந்திரங்கள் சுறுசுறுப்பாக இயங்கின! அவர்களது அறுபது ஆண்டு கால உழைப்பு அனைத்தும் ஒரு நொடியில் அழிக்கப்பட்டன! விவசாயிகளுக்கு பல இலட்சங்கள் நட்டம். அது பற்றி கவலைப்பட வேண்டியவர்கள் விவசாயிகள் மட்டும் தான்.  மாநில மந்திரி பெசார் மகிழ்ந்து போனார்! ஆமாம், இந்தியர்கள் என்றாலே "நாசமா போகட்டும்!" என்கிற மன நிலையில் அவர் இருந்தார்!  இன்னும் அப்படியே தான் இருக்கிறார்!

கேமரன்மலை என்கிற போது அது ம.இ.கா. வின் நாடாளுமன்ற தொகுதி. பல ஆண்டுகள் அவர்கள் தான் ஆண்டு அனுபவித்தவர்கள். அங்கும் ம.இ.கா. கிளைகள் இருக்கின்றன.  தங்களது நிலங்களுக்கு நிரந்தர பட்டா வேண்டும் என்கிற சராசரி அறிவு இல்லாதவர்கள் எல்லாம் தலைவர்களாக இருந்திருக்கின்றனர்.  ஏதோ தற்காலிகமாக எதாவது கிடைத்தால் போதும் என்பதை வைத்தே அரசியல் நடத்தியிருக்கின்றனர். 

இப்படி எல்லாவற்றிலும் அலட்சியமாக இருப்பது இந்த இந்திய சமுதாயம் மட்டுமே!  மனநலம் குன்றியவர்கள் எல்லாம் தலைவர்களாக இருந்தால் இது தான் நடக்கும்! வேறு என்ன சொல்ல? சீனர்கள் இது போன்ற தவறுகள் செய்வதில்லை.  நிலப்பட்டாவுக்காக நடையாய் நடப்பதை நான் பார்த்திருக்கிறேன். தொடர்ந்து அவர்கள் செயல்பாடுகள் இருக்கும். நிரந்தர பட்டா கிடைக்கும் வரை, அது எத்தனை ஆண்டுகள் ஆனாலும், அவர்கள் மனம் தளருவதில்லை!

ந்மது நிலைமையைப் பாருங்கள். கேமரன்மலையில் மட்டும் தானா நமக்குப் பிரச்சனை? எத்தனை தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் தனியார் நிலங்களில் இருந்து கொண்டு பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றன! நமது தலைமைத்துவம் நம்மை சரியான பாதையில் வழி நடத்தியிருந்தால் நமக்கு இப்படி ஒரு நிலை ஏற்படுமா?

இதோ உரக்கச் சொல்லுவோம், இது இன வெறி  என்று!

Friday 27 December 2019

பள்ளிக்குப் போகலாம் வாங்க..!


புதிய ஆண்டு தொடங்குகிறது      

 பிள்ளைகள் பள்ளிக்குத் தயாராகிறார்கள். பாலர் பள்ளிக்குப் போகிறவர்கள், முதலாம் ஆண்டுக்குப் போகிறவர்கள். ஏற்கனவே போகிறவர்கள். பெற்றோர்களுக்குச் சுமையோ சுமை.

என்ன செய்வது? பிள்ளைகள் படிக்க வேண்டுமென்றால்  வேறு வழியில்லை. செலவுகளை ஏற்றுக்கொள்ளத் தான் வேணும்.

நம்மிடையே நடுத்தரக் குடும்பங்கள்தான் அதிகம்.  ஏழ்மையில் வாடும் குடும்பங்களும் கணிசமாகவே இருக்கின்றனர்.

இப்போதெல்லாம் நிறைய இயக்கங்கள், அரசியல் கட்சிகள், தனி மனிதர்கள் - ஏழை மாணவர்களுக்குப் பலவிதமான உதவிகளைச் செய்யத்தான் செய்கின்றனர்.  ஏழைகள் மீது அக்கறை காட்டும் இவர்களுக்கு நாம் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

இந்த இடத்தில்  ஒரு சில குறைபாடுகளைச் சுட்டிக் காட்டுவது பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்.

பள்ளிச் சீருடைகள், காலணிகள்,   பள்ளிப்பைகள், போக்குவரத்து செலவுகள் - என்று தங்களால் முடிந்த அளவு உதவிகள் செய்கின்றனர். ஆனால் இதனை இவர்கள் செய்கின்ற விதத்தை நம்மால் ஜீரணிக்க முடியவில்லை. பலரின் முன்னிலையில்  மேடைப் போட்டு, ஒலிபெருக்கியில் அறிவித்து இந்த உதவிகளைச் செய்வதை நம்மால் வரவேற்க முடியவில்லை.

அவர்கள் ஏழைப் பிள்ளைகள் என்பதை நாம் அறிவோம். அதனை ஊரறிய.உலகறிய  எல்லோர் முன்னிலையிலும் அதனை  ஒலிபெருக்கியில் அறிவித்து அவர்களுக்கு இந்த உதவிகள் செய்ய வேண்டுமா என்பது தான் எனது கேள்வி. ஏற்கனவே தங்களது பெற்றோர்களின் இயலாமையினால் பல குறைபாடுகளோடு வாழும் இந்த குழைந்தைகளின் மனதைப் பாதிக்கும் என்பது நமக்குத் தெரியாதா என்ன?  அந்த குழைந்தைகளும் தலை நிமிர்ந்து பள்ளி போக வேண்டும் அல்லவா?

இதனைத் தவிர்க்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.  தாராளமாக உதவி செய்யுங்கள். அந்த பொறுப்பை பள்ளி ஆசிரியர்களிடமோ, தலைமை ஆசிரியர்களிடமோ விட்டு விடுங்கள்.  அப்படி செய்தால் அது பள்ளி அளவிலேயே முடிந்துவிடும்.   வெளியே யாரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் அவசியமில்லை.

நாம் சொல்ல வருவதெல்லாம் அந்தக் குழைந்தைகளுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி விடாதீர்கள் என்பது தான்.

உதவிகளைச் செய்யுங்கள். ஊரார் மெச்சுவதற்காக செய்ய வேண்டாம்! உண்மை மனதோடு செய்யுங்கள்! உண்மையாய்ச் செய்யுங்கள்!

Thursday 26 December 2019

மே 13 ஏன் மீண்டும்..மீண்டும்..!

பொதுவாகவே ஏதோ ஒரு பிரச்சனை என்று வரும் போது உடனே அரசியவாதிகளுக்கு தீடீரென்று  ஞானோதயம் வந்து விடுகிறது! 

ஞானோதயம்  வந்து விட்டாலே "மீண்டும் மே 13 வரும், வரும்படி பார்த்துக் கொள்ளாதீர்கள்!"  என்று பூனைக்குட்டிகள் கூட சிங்கமாக கர்ஜிக்கும்!  

ஏதோ ஓரிருமுறை இதனைச் சொன்னால் ஏதோ மனதிலே கொஞ்சம் அச்சம் ஏற்படத்தான் செய்யும். இதனையே மீண்டும் மீண்டும் சொல்லும் போது "மே 13 - வது, மே 14-வாவது!"  என்று  அலட்சியப் படுத்தத் தான் செய்வார்கள்! 

என்னைக் கேட்டால் மே 13 வரும் என்று சொல்லுபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் சொல்லுவேன். அப்படி என்ன அரசியல்வாதிகளுக்கு மக்கள் மீது அவ்வளவு அக்கறை? ஒவ்வொரு அரசியல்வாதியும் திருட்டுப்பயல் என்று பொது மக்களுக்குத் தெரியும். அவன் திருடும் போது மே 13 வேண்டாம். திருட முடியாத போது மே 13 வேண்டும்! இது தான் இவர்களின் அரசியல் என்பது நமக்கும் தெரியும்!

மே 13 என்று கூறி அச்சத்தை ஏற்படுத்துபவர் யார்?  அதனையே திரும்பத் திரும்பக் கூறி அச்சத்தை ஏற்படுத்துபவர்கள் யார்? பெரும்பாலும் ஓரிரு மலாய் அரசியல்வாதிகள்.  அப்படி என்றால் என்ன அர்த்தம்?  ஏன் அவர்கள் மட்டும் அப்படிக் கூறுகிறார்கள்?

மற்ற இன அரசியல்வாதிகள் யாரும் அப்படிக் கூறுவது இல்லையே! சீன அரசியல்வாதிகளோ, இந்திய அரசியல்வாதிகளோ அப்படிக் கூறுவதில்லையே!  மற்ற இன அரசியல்வாதிகள் அது பற்றி பேசாதிருக்கும் போது  மலாய் அரசியல்வாதிகள்  ஒரு சிலர் மட்டும் ஏன் இப்படிக் கூற வேண்டும்?

எந்தப் பிரச்சனையையும் உட்கார்ந்து பேசித் தீர்க்க முடியும் என்கிற அறிவு ஏன் இவர்களிடம் இல்லை என்று நமக்கும் புரியவில்லை!  படித்தவர்கள் என்று அவர்களே சொல்லிக் கொள்ளுகிறார்கள்!  அறிவு இல்லாதவர்கள் தான் இப்படி சொல்லிச் சொல்லி மற்ற இனங்களை அச்சுறுத்த முடியும்.

இப்படிப் பேசுபவர்களின் நோக்கம் என்ன என்பது நமக்குத் தெரியும். நாட்டில் அமைதி நிலவக் கூடாது என்பது தான் அவர்களின் உயரிய நோக்கம்! காரணம் அவர்கள் சார்ந்திருக்கும் நாடுகள் எதுவும் அமைதியில் இல்லை. இங்கும் அமைதி இருக்கக் கூடாது என்று தான் அவர்கள் விரும்புகிறார்கள்!

மீண்டும் மீண்டும் இந்த மே 13 என்கிற வார்த்தையே வேண்டாம்!

Tuesday 24 December 2019

காலம் மாறிப்போச்சு!

இப்போது,  பிரதமர் டாக்டர் மகாதிர் பற்றியான அபிப்பிராயம் நம்மிடையே வேறுபட்டியிருக்கலாம்.

ஆனால் ஒருகாலக் கட்டத்தில் அவரை நாம் வாழ்த்தினோம், வணங்கினோம்.  காரணம் நாட்டின் வளர்ச்சிக்கு அவரே மூல காரணமாக இருந்தவர்.  நிறைய  வேலைகளை நாட்டில் உருவாக்கியவர்.  வளர்ச்சியின் தந்தை என போற்றப்பட்டவர்.

அவரைப் பற்றி அப்போதும் குறை சொல்லப்பட்டது. ஆனால் சராசரி மனிதர்களைப் பொறுத்தவரை தாங்கள் பிழைத்துக்கொள்ள, தங்களது குடும்பங்களைக் காப்பாற்ற அவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள்  காத்துக் கிடந்தன.  சராசரி மனிதனுக்கு அதுபோதும்.

அப்போதும் அவரது வெளி நாட்டு உறவுகள், அவரது பேச்சுக்கள்,  அவரது சீண்டல்கள், அவரது சவடால்தனங்கள் - ஒரு சில ஏற்றுக் கொள்ளப்பட்டன, ஒரு சில கண்டனங்களுக்கு உள்ளாயின!  ஆனாலும் அதனையெல்லாம் முறியடித்து வந்தவர் அவர். அது ஒரு காலக் கட்டம்

ஆனால் இன்றைய நிலை வேறு. இப்போது அவரது பேச்சுக்கள், கருத்துக்கள் நாடளவிலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை, உலகளவிலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை!  அந்தக் காலத்தில் உள்ள தலைவர்களின் நிலை வேறு, இப்போதுள்ள தலைவர்களின் நிலை வேறு.

இன்றைய நிலையில் அவர் பேசுவதை தாத்தா-பேரன் உறவு போல் தான் இருக்கிறது! தாத்தா நல்ல அறிவுரைகளைச் சொல்லலாம்.  ஆனால் பேரன்கள் யாரும் தாத்தா சொல்லுவதைக் காதில் போட்டுக் கொள்ளுவதில்லை! ஏதோ தாத்தாவின் உளறல் என்று தான் நினைக்கிறார்கள்! எல்லாம் வயது கோளாறு என்று நினைப்பவர்களும் உண்டு!

இன்று டாக்டர் மகாதிர் பேசுவதெல்லாம் நாட்டு நலனுக்கு ஏற்றதாக இல்லை என்பது சரியான வாதம். உண்மை தான். அப்படித்தான் அவரது பேச்சுக்கள் அமைகின்றன. "எனக்கென்று தனி கரூத்துக்கள் இருக்கின்றன! அதனை நான் சொல்லியே தீருவேன்!"  என்கிறார். அது அவரதுசொந்த நலன்  சம்பந்தப்பட்டது என்றால் அதனை யாரும் சட்டைப் பண்ணப் போவதில்லை! அது நாட்டு நலன் சம்பந்தப்பட்டது என்றால் அது நாட்டுக்குக் கேடு!

இன்று இவர் நாட்டுக்குச் செய்கின்ற கேடுகள் நாளை பிரதமராக வருபவருக்கு ஏகப்பட்ட பிரச்சனைகளை உருவாக்கும். 

என்ன செய்வது? இப்போது அவரது கையில் தான் மந்திரக்கோல் இருக்கிறது!  மக்கள் தான் சகித்துக் கொள்ள வேண்டும்!

Sunday 22 December 2019

மீண்டும் ஆட்டம் காட்டுகிறாரா, ஸாக்கிர் நாயக்?

மீண்டும் ஆட்டம் காட்டுகிறாரா, ஸாக்கிர் நாயக்?

சமீபத்தில் இஸ்லாமிய மாநாட்டிற்குப் பின்னர் பிரதமர் மகாதிர்,  இஸ்லாமிய சமயப் போதகர் ஸாகிர் நாயக்கைப் பற்றி  குறிப்பிடும் போது, ஸாகிர் நாயக் இனங்களைப் பற்றி  பேசி இனங்களுக்கிடையே மோதலை உண்டாக்குவதைத்  தவிர்க்க வேண்டும் என்பதாக அறிவுறுத்தப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார்.

நல்லது, நாமும் வரவேற்கிறோம்.  ஆனால் சொறிந்து கொண்டிருப்பவனுக்கு சொறிந்து கொண்டிருப்பது தானே சுகம்!

பிரதமர், ஸாகிர் நாயக்கிற்கு  அறிவுரை கொடுத்த  அடுத்த நாளே அவரது சிஷ்யப்பிள்ளை  ஸம்ரி வினோத் தனது முகநூலில் யாருமே யோசிக்காத  ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார்!

"தாய் மொழிப் பள்ளிகள் எதற்காக?" என்கிற பாணியில் தனது முகநூலில் கேள்விகள் எழுப்பியிருக்கிறார். அவர் தேசிய மொழி பள்ளியில் படித்தாராம் ஆனால் நன்றாகத்தான் தமிழ் பேசுகிறாராம், அப்புறம் எதற்கு தாய் மொழிப்பள்ளிகள் என்கிறார் இவர்! 

நிச்சயமாக ஒரு தமிழனால் இப்படியெல்லாம் பேச முடியாது. கூடா நட்பு கேடில் முடியும் என்பார்கள்.  ஸம்ரி வினோத்தின் ஸாகிர் நாயக்குடனானது கூடா நட்பு!  ஸாகிர் தன்னால் வெளிப்படையாக பேச முடியாது என்பதால் இப்போது ஸம்ரி வினோத்தைப் பயன்படுத்துகிறார் என்பது நமக்குத் தெரிகிறது!  எப்படியும் குழப்பத்தை உண்டாக்குவது தான் ஸாகிர் நாயக்கின் குறிக்கோள். அவரின் குறிக்கோளை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் அவர் போவார்!  யார் காலிலும் அவர் விழுவார்! இப்போது ஸம்ரி வினோத் என்னுமொரு பிள்ளைப்பூச்சி அவரது காலைச் சுற்றிக் கொண்டிருக்கிறது!

இப்போது தாய்மொழிப் பள்ளிகள் ஏன் என்று கேள்வி கேட்கும் இந்தப் பிள்ளைப்பூச்சி வருங்காலங்களில் இன்னொரு கேள்வியையும் கேட்கலாம்.  இந்திய முஸ்லிம்கள் ஏன் தங்களது தாய் மொழியை தங்களது பள்ளிவாசல்களில் பயன்படுத்த வேண்டும், சீனர்கள் ஏன் தங்களது பள்ளிவாசல்களில் சீன மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்று கூட கேள்விகள் கேட்கலாம்!  தமிழ் முஸ்லிம்களின் தமிழ் மொழிப்பற்று எவ்வளவு தீவிரமானது  என்பதை நாம் அறிவோம். அவர்களை எல்லாம் வேற்று கிரகங்களுக்குப் போங்கள் என்கிறாரா வினோத்? சொன்னாலும் சொல்லுவார்! தமிழ் படித்திருந்தால் பண்பாடு தெரியும். எது சரி, எது தவறு என்று புரிந்து கொள்ள முடியும். அதற்கு அவருக்குக் கொடுப்பனை இல்லை!

ஸாகிர் நாயக்கின் ஆட்டம் இனி இவரை வைத்துத் தான் தொடரும்! பார்ப்போம்!

Saturday 21 December 2019

முஸ்லிம்கள் மட்டும் அல்ல!


பிரதமர், டாக்டர் மகாதிர், மீண்டும் ஒரு கோணலான பார்வையையே பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு என்பது உண்மை தான்  அதே போல மலேசியாவும் ஒரு மதச் சார்பற்ற நாடு என்பதும் உண்மை தான்!

இந்தியா கொண்டு வந்திருக்கும் குடியுரிமைச் சட்டம் என்பது முஸ்லிம்களுக்குப் பாகுபாடு காட்டுகிறது என்பதில் கருத்து வேறுபாடில்லை.  இங்கும் அது தான் நடக்கிறது!

பிரதமர் மோடி அரசு முஸ்லிம்கள் மேல் காட்டும் வெறுப்பை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அதை நாம் வரவேற்கவில்லை.

ஆனால் அவர்கள் முஸ்லிம்கள் மேல் மட்டும் தான் வெறுப்பைக் காட்டுகிறார்கள் என்பது தவறான செய்தி. அவர்கள் இந்துக்கள் மீதும் வெறுப்பைக் காட்டுகிறார்கள் என்பதையும் டாக்டர் மகாதிர் புரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கையில் இருந்து இந்தியாவில் அடைக்கலம் புகுந்திருக்கும் இலங்கைத் தமிழர்கள் அனைவரும் அல்லது பெரும்பாலும் இந்துக்கள் தாம்.மேற்கு நாடுகளில் தஞ்சம் புகுந்த இலங்கைத் தமிழர்களில் பலரும் இப்போது குடியுரிமை கொடுக்கப்பட்டு அந்த அந்த நாடுகளின் அரசியலிலும் பங்குப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக வேறு பல உயர் பதவிகளிலும் அங்கம் வகிக்கின்றனர்.

ஆனால் இந்தியாவின் நிலைமையோ வேறு.  சுமார் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இரண்டரை  இலட்சம் இலங்கை இந்துக்கள் இந்தியாவில் குடியுரிமை அற்றவர்களாகத்தான் வாழ்ந்து வருகின்றனர். அதிலும் சுமார் ஒரு இலட்சம்  இந்துக்கள் அகதிகள் முகாம்களில் தான் இன்னும் வாழந்து வருகின்றனர்! 

இதனை நீங்கள் வேறு நாடுகளில் பார்க்க முடியாது. இந்தியாவில் தான் பார்க்க முடியும்!

அதனால் இந்தியாவின் மோடி அரசு முஸ்லிம்களிடம் மட்டும்தான் பாரபட்சம் காட்டுகிறது என்று சொல்லுவது ஒரு பக்க உண்மை மட்டும் தான்.  அவர்கள் இந்துக்களிடமும் பாரபட்சம் காட்டுகிறார்கள் என்பதையும் மாண்புமிகு பிரதமர் புரிந்து கொள்ள வேண்டும்.

அதிலும் கொடுமை உலக இந்துக்களுக்காக குரல் கொடுக்கும் விஸ்வ இந்து பரிஷத்தோ போன்ற அமைப்புக்கள் கூட இலங்கை இந்துக்களைக் கண்டு கொள்ளவில்லை என்பது தான்!

ஆக, முஸ்லிம்கள் மட்டும் அல்ல! இந்துக்களும் தான்!

Friday 20 December 2019

நிரபராதியா...?

கம்போங் ஜாமேக் பள்ளிவாசலில், வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர், முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தனது மனைவி, பிள்ளைகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் முன்னிலையில் தான் ஏற்கனவே சொன்னபடி தனக்கும் கொலை செய்யபட்ட மங்கோலிய  அழகி அல்தன்துன்யா ஷாரிபுவுக்கும், அந்த கொலைக்கும்.  எந்தவொரு தொடர்பும் இல்லை என்பதாக சத்தியம் செய்திருக்கிறார்.


 இப்படி ஒரு சத்தியம் செய்யச் சொல்லி எந்தவொரு கட்டாயமும் இல்லாத நிலையில் அவரே தனது சுய விருப்பத்தின் பேரில் இதனைச் செய்திருக்கிறார்.  இதன் மூலம் தான் கடவுள் பக்தி உள்ள மனிதன் என்றும், கடவுள் பக்தி உள்ள ஒரு மனிதனால் இப்படியெல்லாம் செய்ய முடியாது என்பதைச் சுட்டிக் காட்டியிருக்கிறார். அது உண்மையே!

சத்தியம் செய்வதை அவ்வளவு சாதாரண விஷயமாக நாம் எடுத்துக் கொள்ள முடியாது.  அதுவும் பள்ளிவாசலில்.

நமக்கும் ஒரு கேள்வி உண்டு.  சத்தியம் செய்வது என்பது தங்களது மதத்தின் புனித நூலின் மேல் சத்தியம் செய்வதை நாம் கேள்விப் பட்டிருக்கிறோம்.  கிறிஸ்துவர்கள் தங்களது புனித நூலான விவிலியம்,  இந்துக்கள் பகவத்கீதை, இஸ்லாமியர்கள் திருக்குரான் - என்று இப்படித்தான் தங்களது புனித நூலின் மேல் சத்தியம் செய்வார்கள். ஆனால் நஜிப் அப்படிச் செய்யவில்லை.  அது சரியா, தவறா என்பது எனக்குத் தெரியாது. ஒரு வேளை இப்படியும் செய்யலாம், நான் அறியவில்லை.

எனக்கு ஒரு நெருடல் உண்டு. நஜிப் சத்தியம்செய்யும் போது "நான் பொய் சொன்னால் அல்லாவின் சாபம் என் மீது இறங்கட்டும்" என்பதாக அவர் சொன்ன அந்த வார்த்தை.  சில ஆண்டுகளுக்கு முன்னர், நஜிப் பதவியில் இருந்த போது, இந்த பிரச்சனை தீவிரமாக பேசப்பட்ட காலத்தில் நஜிப்பின் மனைவி ரோஸ்மாவின் பெயர் வெகுவாக அடிப்பட்டது.  மங்கோலிய அழகியின் கொலைக்கு ரோஸ்மா தான் காரணம் என்பதாக பேச்சு அடிபட்டது. அது எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத் தெரியாது. 

நஜிப் சத்தியம் செய்த போது "என் மீது இறங்கட்டும்" என்று தான் சொல்லுகிறார். தனது குடும்பம், தன்னைப் போலவே, சம்பந்தப்படவில்லை என்று காட்டிக்கிறாரோ!  நமக்கு உண்மை தெரியாது!

எப்படியோ,  இப்படி சத்தியம் செய்ததன் மூலம் தன்னை நிரபராதி என்கிறார் நஜிப். நீதிமன்றம் என்ன சொல்லுமோ!

இந்த சத்தியங்களை நம்பலமா...?

பொதுவாக ஏதாவது ஒரு பிரச்சனையில் நாம் சிக்கிக் கொண்டால் எதிர் தரப்பு  "கோயிலில் சத்தியம் செய்யத் தயாரா?"  என்று சவால் விடுவதை நாம் பார்க்கிறோம்.  

எதிர் தரப்பு மட்டும் அல்ல பாதிக்கப்பட்ட தரப்பும் கூட "கோயிலில் நான் சத்தியம் செய்கிறேன்!" என்கிற நிலைமையும் உண்டு.  அதைத்தான் முன்னாள் பிரதமர் நஜிப் சமீபத்தில் செய்தார். அவரை யாரும் கோயிலில் சத்தியம் செய்யுங்கள் என்று கேட்கவில்லை. ஆனால் அந்த அவசியம் அவருக்குத் தேவையாய் இருந்தது. அவர் அரசியல்வாதி. இந்த சத்தியத்தின் மூலம் தனது செல்வாக்கை தனது ஆதராவளர்களிடம் "நான் குற்றமற்றவன்" என்று சொல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது!  அதனால் தான் அவரே வலிய வந்து அந்த சத்தியத்தைச் செய்தார்! இப்படி கேட்காமலே செய்பவர்கள் தங்கள் சுயநலனுக்காக செய்கிறார்கள் என்பது ஒன்றும் அதிசயமில்லை!

ஆனால்  பொதுவாக இப்படி சத்தியம் செய்பவர்களை எப்படி நாம் எடுத்துக் கொள்ளுவது? 

கோயில் சத்தியங்களை எப்படி நாம் எடுத்துக் கொள்ளலாம்? நம்பலாமா? நம்பக்கூடியதா?  கோயில் சத்தியங்கள் என்பது நமக்கு முன்னும் நடந்திருக்கிறது, நமக்குப் பின்னும் நடக்கும். அதற்குக் காரணம் நாம் கடவுளை நம்புகிறவர்கள்.  கடவுளின் பேரில் சத்தியம்செய்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்கிற நம்பிக்கை நமக்கு உண்டு.

ஆனால் அதுவெல்லாம் ஒரு காலம். அவனுக்கு உண்மையான கடவுள் பயம் இருந்தது. பொய் சத்தியம் செய்தால் அவன் குடும்பம் தழைக்காது என்கிற ஒரு பய உணர்வு அவனுக்கு இருந்தது. அவனது குடும்பத்திற்கு அது சாபத்தைக் கொண்டு வரும் என்கிற அச்சம் இருந்தது.  இன்றும் சராசரி மனிதனுக்கு அந்த பயம் உண்டு.

பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும்  பயம் என்று ஒன்று இருக்கிறதா என்பதை எதைக் கொண்டு கண்டுபிடிப்பது?  பயமே இல்லாதவன்! பதவியைத் தவிர வேறு எதற்கும் பயப்படாதவன்! அவனா இந்த சத்தியத்திற்கெல்லாம் பயப்படப் போகிறான்!  அப்படியெல்லாம் பயப்படுகிறவனாக இருந்தால் கோயில்களில் ஏன் இத்தனை அடிதடி! தெய்வம் நின்று தான் கொல்லும். அதனால் உடனடியான பலன்கள் எதுவும் இருக்கப் போவதில்லை! அதுவே அவனது பலம்!

ஒன்று மட்டும் உறுதி.  கோயில்களில் சத்தியம் செய்வது என்பது, ஒருவன் தவறானவனாக இருந்தால்,  அது அவனுக்குக் கேடு விளைவிக்கும். அவனது குடும்பத்திற்கு நாசத்தைக் கொண்டுவரும். பாதகத்தை ஏற்படுத்தும்!

நம்பலாம்!

Thursday 19 December 2019

வர்த்தக உரிமம்...!

வர்த்தக உரிமம் என்பது மலேசியர்கள் வர்த்தகம் செய்வதற்கான உரிமை.

ஆனால் இன்று அந்த உரிமை தொடர்ந்து பறி போகிறது என்பது தான் உண்மை. இன்று ஒவ்வொரு தாமானிலும் அந்நியர்கள் கடைகள் வைத்து வர்த்தகம் செய்வதைப் பார்க்கலாம். சந்தைகளிலும்  அவர்கள் தொழில் செய்கின்றனர்.  மார்க்கெட் பகுதிகளிலும் அவர்கள் வியாபாரம் செய்கின்றனர்.

கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ சொல்லுவது சரி தான்.  மலேசிய வர்த்தகர்களும் இப்போது குரல் கொடுக்கின்றனர். அவர்களின் குரலுக்கும் அரசாங்கம் செவி சாய்க்க வேண்டும் என நாமும் கேட்டுக் கொள்ளுகிறோம்.

உள் நாட்டு வியாபாரிகளின் உரிமங்களை வைத்துக் கொண்டு எந்த வித கூச்ச நாச்சமின்றி வியாபாரம் செய்கின்றனர். உள் நாட்டினர் எந்த கஷ்டமும் இல்லாமல், அவர்களை வைத்துக் கொண்டு,  மிக எளிதாக பணம் சம்பாதிக்கின்றனர்!

அரசாங்க ஊழியர்கள் கொஞ்சம் வளைந்து கொடுத்தால் அந்நியர்கள் நிமிர்ந்து நிற்கின்றனர்!  அவர்களை யாரும்தடுக்க முடியாது! அந்த அளவுக்கு அரசாங்க ஊழியர்களின் பங்களிப்பு இவர்களுக்கு நிறையவே தொடர்கிறது!

இன்னொரு பக்கம் பார்த்தால் இந்த பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் இந்தியர்களும், மலாய்க்காரர்களும் தான். அந்நியர்கள் செய்கின்ற வியாபாரம் அனைத்தும் இந்தியர்கள் செய்கின்ற வியாபாரங்கள். இந்தியர்கள் எதனைச் செய்தாலும் அவர்களுக்குப் போட்டியாக அந்நியர்கள் செய்கின்றார்கள்.  இதனால் பாதிக்கப்படுபவர்கள் இந்தியர்கள்.  அந்நியர்கள் செய்கின்ற வியாபாரத்திற்கு வாடிக்கையாளர்களும் இந்தியர்கள்!  

இந்தியர்களின் பணம் இந்தியர்களுக்குப்  போய்ச் சேர வேண்டும்  என்னும் எண்ணம் நமக்கு எந்தக்  காலத்திலும் இருந்ததில்லை.  சீனர்களிடமிருந்து நாம் இதைக் கூட கற்றுக்கொள்ள்வில்லை! 

சீனர்களின் வியாபாரத்தில் அந்நியர்கள் கை வைக்க முடியுமா?  ஏதோ ஒன்று இரண்டு இருக்கலாம்.  அந்நியர்களுக்கு அவர்கள் மேல் அந்த பயம் உண்டு. ஆனால் நாமோ அவர்களுக்கு வலிந்து கொண்டு போய் விற்கிறோம்!  வலிந்து போய் வாங்குகிறோம்! இது தான் நம்மை இளிச்சவாயனாக்கி விடுகிறது!

இப்போது நாம் அரசாங்கத்தை நாட வேண்டி உள்ளது.  அந்நியர்களுக்கு வர்த்தகம் செய்ய உரிமம் கொடுக்கக் கூடாது என்பதாக நாம் தான் அதிகமாக குரல் கொடுக்கிறோம்!

என்ன செய்வது? வந்தவர்களை வாழ வைத்து தொடர்ந்து ஏமாந்து கொண்டு இருக்கிறோம்!

வேறு என்ன சொல்ல!

Tuesday 17 December 2019

என்ன தான் இரகசியமோ...!


ம.இ.கா.வுக்கு  தலைவர்கள் வருவார்கள் போவார்கள். தலைவர்கள்  வருவதும் போவதும் ஒன்றும் புதிதல்ல. எல்லாக் கட்சிகளிலும் அது தான் நடந்து கொண்டிருக்கிறது. 

ஆனால் ஒரு சில கட்சிகளில் தலைவர்கள் வருவார்கள், போகமாட்டார்கள்! அப்படி 'போகமாட்டார்கள்'  கட்சிகளில் ம.இ.கா.வும் ஒன்று. துன் சாமிவேலு தலைவர் பதவிலிருந்து அவராகப் போகவில்லை. அவரைப் போக வைப்பதில் ஏகப்பட்ட குளறுபடிகள்! அவ்ருக்கு ஒரு சில பொறுப்புக்கள் கொடுத்த பிறகு தான் அவர் 'மனசின்றி' கட்சியை விட்டு வெளியேறினார்! 

அவருக்குப் பிறகு வந்த தலைவர்கள் நிலைமை வேறு.  இவர்கள் சும்மா பொழுது போக்குத் தலைவர்கள்! 

இப்போது இருக்கும் தலைவர் விக்னேஸ்வரன் தான் ம.இ.கா. வின் மறைக்க முடியாத, மறுக்க முடியாத தலைவர்!  இவர் தான் சாமிவேலுவின் அரசியலை முன் நின்று நடத்துபுபவர். சாமிவேலுவைப் போன்று எல்லா வகைகளிலும் இந்தியர்களைப் பிரதிநிதிப்பவர்!

சான்றுக்கு ஒன்றைச் சொல்லலாம். இப்போது நம் கண் முன்னே உள்ள ஒரு பிரச்சனை.  ஹூடுட் சட்டம். இது தேவை இல்லாத ஒரு சட்டம் என்பதாகப் பலரும் கூறி வருகின்றனர். 

ஆனால் விக்னேஸ்வரன் இந்த கருத்தில் வேறு படுகிறார். இந்தியர்கள் பயப்பட  ஒன்றுமில்லை என்கிறார்! இஸ்லாமியர்கள் பயந்தால் போதும் இந்தியர்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை என்கிறார்! அவரை ஆதரித்து ஒரே ஒருவர் கை தூக்குகிறார்.  அடுத்த தேர்தலில் அவருக்கு சீட் வழங்கப்படும் என நம்பலாம்!

நாம் இங்கு சொல்ல வருவது எல்லாம் அதே சாமிவேலு பாணி அரசியல் என்பது தான்!  அவரென்ன ம.இ.கா. மாநாடு கூட்டி அவர்களது கருத்தைக் கேட்டாரா? ஒன்றுமில்லை.  அவர் சொன்னால் சரி தான். அதனை இந்தியர்கள் கேட்க வேண்டும், அவ்வளவு தான்!

இப்போது இவர் 'சரி' என்கிற ஹூடுட் சட்டம் யாருக்காக?  அவர் ம.இ.கா இந்தியர்களுக்காக பேசுகிறாரா அல்லது மொத்த இந்திய சமுகத்திற்காக பேசுகிறாரா> இந்திய சமூகத்திற்காக பேசுகின்ற சக்தியை எப்போதோ அவ்ர் இழந்து விட்டார். 

இவர் தலைவராக இருக்க வேண்டும் என்பதற்காகவும், பாஸ் கட்சியிடன் கூட்டு சேர்ந்து மீண்டும் பதவிக்கு வர வேண்டும் என்பதற்காகவும் இந்த ஹூடுட் சட்ட ஆதரவு இவருக்குத் தேவைப்படுகிறது! அது நமக்கும் புரிகிறது. என்ன செய்யலாம்?

இப்படி மனநலம் பாதிக்கப்படுபவர்கள் இந்தியர்களைப் பிரதிநிதிக்காமல் விடமாட்டோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு வந்தால், நம்மால் என்ன செய்ய முடியும்! ஆண்டவன் தான் இவர்களைக் காப்பாற்ற வேண்டும்!

Monday 16 December 2019

என்ன தான் சொல்ல...!


துன் சாமிவேலுவிற்கு "துன்" பட்டம் கொடுத்தது எதனால்? 

 பல காரணங்கள் இருக்கும். ஆனால் வெளியே பேசப்படுகின்ற காரணங்கள் துன் பட்டம் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டால் அந்த நபர் மீது எந்த வழக்கும் போட முடியாது என்பது தான்.  அது எந்த அளவுக்கு உண்மை என்கிற ஆராய்ச்சியில் நான் ஈடுபடவில்லை. எனக்குத் தெரிந்தது எல்லாம் சட்டம் தனது கடமையைச் செய்யும் என்பதுதான்.

இப்போது அவர் மீது ஒரு வழக்கு.  அவர், இன்றைய நிலையில், சிந்திக்க திறனற்றவர்  என்பதாக அவரது மகன் அவர் மீது வழக்குத் தொடர்ந்திருக்கிறார். அதுவும் ஒரு புறம் இருக்கட்டும்.

நான் நினைத்துப் பார்ப்பதெல்லாம் அவருடைய அன்றைய ம.இ.கா.  காலக்கட்டத்தில் நடந்தவைகளைப் பற்றி. 

மைக்கா ஹோல்டிங்ஸ் என்றால் அது சாமிவேலூ தான். அவர் தான் ம.இ.கா. அவர் தான் மைக்கா! அதில் ஏதும் கருத்து வேறுபாடிலை.

அந்த காலக் கட்டத்தில் அவருடைய குரலுக்கு எதிர் குரலில்லை. இருக்க முடியாது என்பது தான் உண்மை! அவர் பேசுவதை நாம் தான் கேட்க  வேண்டுமே தவிர, நாம் பேசுவதை அவர் கேட்க மாட்டார்!

இந்திய சமுதாயத்திற்காக அவர் தான் சிந்தித்தார்; செயல்பட்டார்.  அவருடைய செயல்பாடுகள் இந்திய சமுதாயத்திற்குப் போய்ச் சேரவில்லை! போய்ச் சேராமல் அவரே தடையாக இருந்தார்!

இந்திய சமுதாயம் அவர் கட்டுப்பாட்டில் இருந்தது.  அவரது கைக்குள் இருந்தது!  அவர் வைத்தது தான் சட்டம் என்கிற நிலைமை. அந்த காலக் கட்டத்தில்.

அப்போது தான் அவருடைய இரண்டாவது "திருமணம்" நடைப்பெற்றிருக்கிறது!  அவர் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் தான் திருமணம், மைக்கா ஹோல்டிங்ஸ், டெலிகம்ஸ் பங்குகள், டேப், ஏம்ஸ் என்று வரிசையாக வருகின்றன. ஆனால் அத்தனையும் சரிந்து போய் விட்டன!  காரணம் என்னவாக இருக்கும்?

நினைத்துப் பார்த்தால் அவருடைய சிந்தனை ஆற்றல் அப்போதே சரிந்து போய் விட்டன என்று தான் சொல்ல வேண்டும்!  அதற்கு அந்த திருமணமே சாட்சி! சிந்திக்க திறனற்ற ஒரு மனிதரைத் தான் நாம் பல ஆண்டுகள் தலைவராக வைத்திருந்தோம்!  அதன் பலனைத்தான் நாம் இன்னும் இப்போதும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்!

இந்த நேரத்தில் நமக்கும் ஒரு கேள்வி உண்டு.  உச்சத்தில் இருந்த அந்தக் காலக்கட்டத்தில் அவரது குறைந்த சிந்தனை ஆற்றல் என்பது இந்திய சமுதாயத்தை பலவித இழப்புக்கு இழுத்துச் சென்றிருக்கிறது!  ஆனால் அதே சமயத்தில் அவரது குடும்பத்திற்கு இலாபத்தை அள்ளிக் கொடுத்திருக்கிறது!

நாம் சொல்ல வருவதெல்லாம் அவருடைய சொத்துக்கள் அனைத்தும் இந்திய சமுதாயத்திற்கு சென்று சேர வேண்டும் என்பது தான்.  சிந்திக்க திறனற்ற ஒருவரின் சொத்து அவருடையது அல்ல! அது சமுதாயத்தின் சொத்து.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் சரியாக செயல்பட வேண்டிய ஒருவர் தன்னுடைய சிந்திக்கும் திறன் குறைபாட்டால் இந்திய சமுதாயம் இழந்தது ஏராளம்! 

அந்த சொத்துக்கள் சமுதாயத்திற்குச் சென்று சேர வேண்டும்!

Sunday 15 December 2019

தேவையற்ற கேள்வி...!

டாக்டர் மகாதிரிடம் மீண்டும்  மீண்டும் ஒரே கேள்வியைக் கேட்டுக் கொண்டிருப்பது,   நமக்கும் மட்டும் அல்ல,   அவருக்கும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது என்பதை நமது ஊடகங்கள் தெரிந்திருக்க வேண்டும்.

எல்லாக் கேள்விகளுக்கும் ஒர் உள்நோக்கம் இருப்பது போல இங்கும் ஒர் உள்நோக்கம் இருப்பதாகவே நமக்குப் படுகிறது.  நல்லதைச் செய்கிறேன் என்று நினைத்து கெடுதலைச் செய்கிற வேலையில் நமது ஊடக நண்பர்கள் ஈடுபட்டிருப்பதாகவே தோன்றுகிறது! அல்லது அவர்கள் வேண்டுமென்றே இப்படி ஒரு கேள்வியைக் கேட்டு சம்பந்தப்பட்ட இருவரையும் சங்கடப்படுத்துகிறார்கள் என நம்பலாம்.

"எப்போது பிரதமர் பதவியை அன்வாரிடம் ஒப்படைப்பீர்கள்?" என்று மீண்டும் மீண்டும் அதே கேள்வியைக் கேட்கும் போது யாராக இருந்தாலும் அது எரிச்சலை உருவாக்கத்தான் செய்யும்!  அது தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது! 

மீண்டும் மீண்டும் அந்தக் கேள்வி எழுப்பபடும் போது மகாதிர் என்ன நினைக்கிறார்? ஆமாம் நாம் என்ன நினைப்போமோ அப்படித்தான் அவரும் நினைப்பார்!  முன்பே அவர் எப்பொழுது ஒப்படைப்பேன் எப்று கூறிவிட்ட பிறகு ஏன் மீண்டும் அந்த கேள்வி எழுப்பப்படுகிறது என்று அவர் சங்கடப்படத்தான் செய்வார்! அதனால் ஒவ்வொரு முறையும் அவர் வெவ்வேறான பதில்களைக் கொடுத்துக் கொண்டு வருகிறார்! இப்போது அது ஒரு தமாஷான  கேள்வியாக ஆகிவிட்டது! அவரும் தமாஷ் செய்வது போல பேசி வருகிறார்! இப்போது  நாம் அவரது பதிலை தமஷாகவும் எடுத்துக் கொள்ளலாம் தமாஷ் அல்லாத மாதிரியும் எடுத்துக் கொள்ளலாம்! இதில் அதிகம் சங்கடப்படுபவர் வருங்காலப் பிரதமர் என்று சொல்லப்படும் அன்வார் இப்ராகிம் தான்! அவர் அந்த கேள்வியைப் பிரதமரிடம் கேட்கவில்லை. கேட்பவர்கள் ஊடகவியலாளர்கள். இந்த கேள்வி வரும் போதெல்லாம் அவர் நேரத்திற்குத் தகுந்தாற் போல் பதிலளித்து வருகிறார்! இப்போது மக்கள் தான் கேனையனாகி விட்டார்கள

இந்த கேள்வியைத் தவிர்த்து விட்டு நாட்டு நன்மைக்காக கேள்விகள் கேளுங்கள் என்று தான் ஊடகங்களுக்கு நாம் ஆலோசனை சொல்ல முடியும்.  அதைத்தான் நமது தலைவர்களும் சொல்லி வருகிறார்கள். .  தேவையற்ற கேள்விகள் கேட்டு மக்களை குழப்ப வேண்டாம் என்று நாமும் இந்த நேரத்திலே ஊடகங்களைக் கேட்டுக் கொள்ளுகிறோம்.

பிரதமர் போகும் போது போகட்டும். அது வரை பொறுத்திருங்கள்! குழப்பத்தை ஏற்படுத்தும் கேள்விகளைக் கேட்க வேண்டாம். 

ஆளுங்கட்சியில் உள்ள சில்லறைகளையோ அல்லது எதிர்க்கட்சியில் உள்ள சில்லறைகளையோ நாம் கேட்டுக் கொள்ளுவதெல்லாம் நீங்கள் நாட்டுக்கு நல்லதை செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தில் தான் உங்கள் பதவிகளில்  இருக்கிறீர்கள்.  அதனைச் செய்தாலே போது. நாடு நலம் பெறும்.

இனி "பிரதமர் மாற்றம்" என்பது கேள்வியாகவே இருக்க வேண்டாம்!அது நடக்கும்! அது போதும

வெங்காயம் கொடுத்த வெற்றி...!

வெங்காயம் என்றாலே மக்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு அதன் விலையேற்றம். கண்களில் நீர் கசியும் அளவுக்கு அதன் பற்றாக்குறை தமிழ் நாட்டில்! அதுவும் அந்த பொன் விளையும் பூமியில்!

அந்த சோகச் செய்தியிலும் ஒரு வெற்றி செய்தி அதே வெங்காயத்தின் மூலம். தமிழ் நாட்டில் அல்ல, கர்நாடகா மாநிலத்தில்.

கர்நாடக மாநிலத்தின், சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி மல்லிகர்ஜுனா. விவசாயத்தின் மூலம் பல இலட்சங்களை இழந்தவர். கடன்காரர் ஆனவர். 

வங்கியில் பதினைந்து இலட்சத்தைக் கடன் வாங்கி  தனது நிலத்தில் வெங்காயத்தில் முதலீடு செய்தவர். இது தான் அவர் வங்கியில் வாங்கிய பெரிய கடன்.  ஏதோ ஓர் ஐந்து அல்லது பத்து இலட்சம் கிடைத்தாலே பெரிய புண்ணியம் என்று நினைத்தவர். ஆனால் அடித்ததோ யோகம்!

"வெங்காய விலை மட்டும் அடிமட்ட விலைக்குப் போயிருந்தால் எனது நிலையும் அடிமட்டத்திற்குப் போயிருக்கும்!" என்கிறார் மல்லி.

வெங்காய விலை ஒரு கிலோ 200 ரூபாய் அளவுக்கு ஏற்றம் கண்ட நேரத்தில் அவருடைய வெங்காய அறுவடை 240 டன் அளவுக்கு அறுவடையானது. அதாவது சுமார் 20 லாரிகளில் கொண்டு செல்லும் அளவுக்கு அறுவடை.

நீண்ட காலமாக, தனது பத்து ஏக்கர் நிலத்தில், வெங்காயம் பயிர் செய்வதில் ஈடுபட்டிருக்கிறார்  மல்லி. சென்ற ஆண்டு அவர் கண்ட இலாபம் சுமார் ஐந்து இலட்சம்.  பெரிதாக சொல்ல ஒன்றுமில்லை. சராசரி தான்.

ஆனால் இன்றைய நிலையில்,  வெங்காய விலை ஏற்றத்தில், அவர் அதிரடியாக கோடிஸ்வரராகி விட்டார்! இப்போது  அவர் சுற்று வட்டார விவசாயிகளிடையே கதாநாயக அந்தஸ்தோடு வலம் வருகிறார்!

"எனது கடன்களையெல்லாம் அடைத்து விட்டேன். இப்போது நான் ஒரு வீடு கட்ட வெண்டும். இன்னும் கொஞ்சம் நிலம் வாங்கி விவசாயத்தை அதிகப்படுத்த வேண்டும்"  என்கிறார் மல்லிகர்ஜூனா.

தான் விரும்பிய துறையில் நிலைத்து நிற்பவர்களுக்கு தானாகவே கதவுகள் திறக்கும் என்பது உண்மை தான்!

Friday 13 December 2019

அடுத்த தேர்தல் வரை....!


ஆகக் கடைசி செய்தி பிரதமர்  டாக்டர் மகாதிர், தனது பதவியில், அடுத்த ஆண்டு நவம்பர் 2020 வரை நீடிப்பார் என்பது தான்!

அதற்கு அவர் கூறியிருக்கிற காரணம் அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெறும் ஆசிய-பசிபிக் பொருளாதார மாநாட்டில் தன்னுடைய பங்களிப்பு அவசியம் என்றும் அதனால் அத்ற்கு முன்னர் பதவி ஒப்படைப்பு எதுவும் நடக்கப் போவதில்லை என்றும் கூறியிருக்கிறார்.

அதோடு கூட, வழக்கம் போல, தான் உறுதியளித்தபடி தனது பதவியை அன்வாரிடம் ஒப்படைப்பேன் என்றும் கூறியிருக்கிறார்.

நமக்குத் தெரிந்தவரை டாக்டர் மகாதிர் அடுத்த தேர்தல் வரை தனது பிரதமர் பதவியில் நீடிப்பார் என்றே தோன்றுகிறது.  அவர் ஒவ்வொரு முறையும் பதவியில் தொடர்வதற்கான காரணங்களை வைத்திருக்கிறார்!

இப்போது அவரது நேரம்.   அவர் எதனைச் செய்தாலும் நாம் தலையாட்ட வேண்டியது தான்! அவரை ஆதரிப்பதற்கென்றே ஒரு கூட்டம் உள்ளது. அவரை எதிர்ப்பதற்கும் யாருக்கும் துணிவில்லை!  அப்படி துணிந்து யாரும் குரல் கொடுத்தால் இருக்கிற நிலைமையும் மோசமாகிவிடும்!

இப்போதைய அரசாங்கம் பதவி ஏற்றதிலிருந்து  மக்களுக்கு எந்த ஆதாயமும் இல்லை என்பதாகப் ப்ரவலாக பேசப்படுகின்றது என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. மீண்டும் முன்னாள் பிரதமர் நஜிப்பை தான் இன்றைய அரசாங்கமும் ஞாபகப்படுத்துகிறது! டாக்டர் மகாதிரோ முந்தைய அம்னோ காலத்து அரசியலையே அவர் பின்பற்றுகிறார் என்று தான் பேசப்படுகிறது! எந்த மாற்றமும் இல்லை. 

அதுவும் இந்தியர்களைப் பழி வாங்குவதில் டாக்டர் மகாதிர் முன்னணியில் நிற்கிறார்.  மக்களுக்கு வாக்களிக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை! டாகடர் மகாதிர் தெரிந்து செய்கின்ற தவறுகள் பக்காத்தான் தலைவர்களைத் தடுமாற வைக்கிறது!

பிரதமர் மகாதிர் தொடர்ந்து பதவியில் நீடிப்பார் என்பதில் எந்த ஐயமுமில்லை. ஆனால் அவர் தொடர்ந்தாற் போல அன்வார் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களைக் கொண்டு வருகிறார் என்பது தான் இப்போதைய பிரச்சனை.  அவர் பதவியில் இருக்கும் வரை இன்னும் எத்தனை பாலியல் குற்றச்சாட்டுக்களை அன்வார் மீது கொண்டு வருவார் என்பது தான் தெரியவில்லை.  மக்கள் அன்வாரை வெறுக்க வேண்டும் என்று திட்டமிட்டே அவர் செயல்படுகின்றார்  அதனால் தான் டாக்டர் மகாதிர் "மக்கள் அன்வாரை ஏற்றுக் கொள்ளாவிட்டால்"  என்கிற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துகிறார்!

"குரங்கு கையில் பூமாலை" என்கிற பழமொழி தான் ஞாபகத்திற்கு வருகிறது!

Thursday 12 December 2019

நஷ்டயீடு முடியாதா..?

சமீபத்தில் எழுபது வயதுக்கு மேர்பட்ட இருவருக்குக் குடியுரிமை கொடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின!

அதில் பெருமைப்பட ஒன்றுமில்லை. இந்தியர்களைப் பொறுத்தவரை எழுபது வயதக்கு மேற்பட்டவர்களுக்குத் தான் குடியுரிமை கொடுக்கப்பட்டு வருகின்றது.   முந்தைய பாரிசான் ஆட்சியிலும் அது தான் நடந்தது. அது தான் இப்போதும் தொடர்கிறது! அப்போதும் ஏதோ ஒரு ம.இ.கா. பிரமுகர் ஒருவர் குடியுரிமை பெற்ற மாவீரர்களுடன் புகைப்படத்தோடு புன்னைகைப்பார்! இப்போதும் அது தான் தொடர்கிறது!

குடியுரிமை என்பது அரசாங்கத்தில் பணிபுரியும் பணியாளர்களின் பொறுப்பு. எப்படி வேண்டுமானாலும் வளைந்து கொடுக்கும்! சமயங்களில் ஏழு வயதிலும் கிடைக்கும் கொஞ்சம் விரைத்துக் கொண்டால் எழுபது வயது வரை போகும்! அது பணியாளர்களின் மனநிலையைப் பொறுத்தது!

என்னிடம் ஒரு கேள்வி உண்டு. குடியுரிமை என்பது அரசாங்கத்தின் உரிமை. அதாவது பனியாளர்களின் உரிமை!  நமக்கு அது தெரியும். அந்தக் குடியுரிமை சம்பந்தப்பட்டவர்கள் விண்ணப்பம் செய்து நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கிறது. இந்த நாற்பது ஆண்டுகள் என்ன நடந்தது? நாற்பது ஆண்டுகள் கழித்து குடியுரிமைக்கு விண்ணப்பித்தவர் எப்படி குடியுரிமைக்குத் தகுதி பெற்றார்? இந்த நாற்பது ஆண்டுகள் தகுதி பெறாதவர் எந்த அளவுகோளை வைத்து தகுதி பெற்றார்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னும் அவர் அதே தகுதியைத்தான் வைத்திருந்தார். நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னரும் அவர்  அதே தகுதியைத்தான் கொண்டிருக்கிறார்.  இந்த நாற்பது ஆண்டுகளில் அவர் என்ன தகுதியை இழந்திருந்தார்? அவர் ஏன் நாற்பது ஆண்டுகள் இழுக்கடிக்கப்பட்டார்? 

குடியுரிமை கிடைக்க எது அவருக்குத் தடையாக இருந்தது? மதமா? மொழியா? நடத்தையா?  ஆனால் கடந்து போன நாற்பது ஆண்டுகளாக  இவைகள் எல்லாம் தடையாக அவருக்கு இருந்தது இல்லையே! தடையாக இருந்திருந்தால் நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு குடியுரிமை கிடைக்க வழியில்லையே!

என்ன தான் அது அரசாங்கத்தின் உரிமை என்றாலும் ஒரு மனிதரை இந்த அளவுக்கு சிறுமைப்படுத்துவது என்பது வெட்கக்கேடானது!  இந்த நாற்பது ஆண்டுகள் அவர் இழந்த உரிமைகள் ஏராளம்.  

இது போன்ற இழுத்தடிப்புகளுக்கு ஒரு தீர்வு காண வேண்டும்.  நாற்பது ஆண்டுகள் அவர் இழந்த பொருளாதார இழப்புகளுக்கு அரசாங்கம் பொறுப்பு ஏற்க வேண்டும்.  அவர்களுக்குப் போதுமான பொருளாதார உதவிகள் செய்ய வேண்டும்.

எழுபது வயதுக்கு மேல் குடியுரிமை கிடைத்து "நான் இந்நாட்டுப் பிரஜை" என்கிற பெருமிதமா வரப்போகிறது! பொருமல் தான் வரும்!

Wednesday 11 December 2019

ஏன் மாற்றங்கள் கூடாது...?

இந்திய உணவகங்களில் ஆள் பற்றாக்குறை என்பதைப் பல காலமாக நாம் கேட்டு வருகிறோம்.

உணவக உரிமையாளர்கள் வைக்கின்ற குற்றச்சாட்டு அரசாங்கம் தமிழகத் தொழிலாளர்களுக்கு அனுமதி கொடுப்பதில்லை என்பது தான். நாம் அவர்கள் மீது வைக்கின்ற குற்றச்சாட்டு "நீங்கள் அவர்களுக்கு ஒழுங்காக சம்பளம் கொடுப்பதில்லை, தங்கும் வசதிகள் இல்லை, ஓய்வு என்பதில்லை!" போன்ற குற்றச்சாட்டுக்கள்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.  நம்முடைய குற்றச்சாட்டுக்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளுவார்களா என்பது தெரியவில்லை! அது வேறு கதை.

ஒன்று மட்டும் தெரிகிறது. அவர்கள் சிந்தனைப் போக்கை அவர்கள் மாற்றுவதாகத் தெரியவில்லை. ஒரே வழி, ஒரே பாதை!  எங்கள் அப்பன் காலத்தில் இப்படித்தான், நாங்களும் இப்படித்தான் என்கிற மனப்போக்கு. 

உணவகங்களை காலை ஆறு மணிக்குத் திறந்து இரவு ஒன்பது மணி வரை திறந்து தான் ஆக வேண்டும் என்று யார் இவர்களுக்குச் சொன்னது?  நேரத்தை மாற்ற முடியாதா? 

என்னைச் சுற்றி பார்க்கிறேன். மலாய்க்காரர்கள்,  தாய்லாந்துகாரர்கள்,  இந்தோனேசியர்கள்  ஒர் இந்தியர் உணவகம், இரண்டு மாமாக் உணவகங்கள் இயங்குகின்றன.  மலாய்க்காரர் உணவகங்கள் காலை மதியம்,  தாய்லாந்து உணவகங்கள் ஒன்று காலை மதியம், இன்னொன்று மதியம் இரவு,  தாய்லாந்து, இந்தோனேசிய ஸ்டால்கள் இரவு மட்டும்.  வேலை செய்பவர்கள் அனைவரும் இந்தோனேசியர்கள், தாய்லாந்துகாரர்கள்.

நம் பக்கம் வருவோம். இந்தியர் உணவகம், இரண்டு மாமாக் உணவகங்கள்  காலை ஆறு மணியிலிருந்து இரவு பத்து மணி வரை. அவர்கள் அனைவரும் கேரள, தமிழகத் தொழிலாளர்கள். கடுமையான வேலை நேரம், ஓய்வு என்பது போதுமானதாக இல்லை. எப்போதும் ஓர் உறக்க நிலையிலேயே இருக்க வேண்டிய சூழல்!  அதற்கு ஏற்றது போல் வருமானமா, அதுவும் இல்லை. சிரம்பான் நகரில் ஓர் இந்தியர் உணவகம். காலை மதியம் என்பதோடு சரி.  மூன்று மணிக்கு மேல் இயங்குவதில்லை.  பெரும்பாலும் மலேசிய இந்தியப் பெண்களே வேலை செய்கின்றனர்.  மகிழ்ச்சியாகவே வேலை செய்கின்றனர்.

இதோ எனது பக்கத்தில் மலாய்க்காரர் ஒருவர் இந்த மாதம் தான் உணவகம் ஆரம்பித்திருக்கிறார்.  அந்த உணவகம் இயங்கும் நேரம் மதியம் மட்டுமே. காலை, இரவு என்பதெல்லாம் இல்லை. சீனர்கள் உணவகங்களும் அப்படித்தான்.  ஒரு நேரம் மட்டுமே.

நமக்குத் தெரிந்து எல்லாம் மலேசியர்கள் வேலை செய்ய மாட்டார்கள் என்பதில்லை.  நமது இந்திய உணவகங்களின் நேரம் என்பது மிகக் கொடுமையானது.  காலை மதியம் என்று தங்களது நேரங்களை மாற்றினால் மலேசியர்கள் வேலை செய்வார்கள்  அவர்களுக்கு நல்ல ஓய்வு கிடைக்கும். மற்ற நேரங்களில் தங்களது சொந்த வேலைகளையும் கவனித்துக் கொள்ளுவார்கள். 

நமது உணவகங்கள் தமிழகத் தொழிலாளர்களை மனிதர்களாக நினைப்பதில்லை.  அவர்கள் எல்லாம் இவர்களுக்குக் கிடைத்த அடிமைகள்! 

நமது உணவகங்கள் நேர மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். அது ஒன்றே இந்த பிரச்சனைக்குத் தீர்வு.

Tuesday 10 December 2019

எனது எடை 62 கிலோ...!

பொதுவாக பிரதமர் டாக்டர் மகாதிர் எது பற்றிப் பேசினாலும் அதிலே ஒரு 'கிக்' இருக்கும்!  ஒரு சுவாரஸ்யம் இருக்கும்! நாம் எழுதவதற்கு ஒரு செய்தி இருக்கும்.

அப்படித்தான் சமீபத்தில் அவர் சொன்ன ஒரு செய்தி.  அந்த செய்தி எல்லா மலேசியர்களுக்கும் பொருந்தும். 

"கடந்த நாற்பது ஆண்டுகளாக எனது எடை 62 கிலோவாகவே இருந்து வருகிறது. என்ன தான் உணவு ருசியாக இருந்தாலும் கூட நான் அதிகம் சாப்பிடுவது கிடையாது! வயதானாலும் விரும்புகின்ற வேலையைச் செய்வதால் களைப்பு என்பது தெரிவதில்லை" என்கிறார் மகாதிர்.

நல்ல செய்தி. ஒவ்வொரு மலேசியரும் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு செய்தி. 

யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ எனக்கு அது பொருந்தி வருகிறது.  எனது எடை எந்த காலத்திலும் 60 - 65 கிலோவுக்கு மேல் போனதில்லை. உணவு என்று வரும் போது அதில் அதிக ஈடுபாடு கிடையாது. சாப்பிட்டால் சரி.  எனது வேலையில் எனக்குக் களைப்பு ஏற்படுவதில்லை.

அவர் சொன்னதில் முக்கியமான ஒன்று  அவர் விரும்பி செய்கின்ற வேலை அவருக்குக் களைப்பை ஏற்படுத்துவதில்லை. அரசியல் தான் அவரது வேலை. சரியாகச் சொன்னால் 1969 - ம் ஆண்டில் தான் அவர் அரசியல் வெளிச்சதிற்கு வந்தார். அந்த அரசியல் ஈடுபாடு தான் அவரை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது.  அரசியலில் அதிகம் நன்மைகள் செய்தால் அதனால் வரும் திருப்தி. அதனை அவர் சார்ந்த மக்களுக்கு நிறையவே செய்திருக்கிறார்.

மனோதத்துவம் என்ன சொல்லுகிறது? உனக்குப் பிடித்தமான வேலை செய்தால் உனக்குக் களைப்பு தெரிவதில்லை என்கிறது. 

கவிஞர் வாலி ஒரு முறை சொன்னாராம். "நான் இஷ்டப்பட்டுத் தான் கஷ்டப்பட வந்தேன்! என்றாராம்.  அவர் இஷ்டப்பட்டது சினிமாவில் பாடல் எழுதுவது. ஆனால் அது அவ்வளவு எளிதில் கிடைத்து விடாது, ஏகப்பட்ட கஷ்டங்களைச் சந்திக்க வேண்டி வரும் என்று தெரிந்தே அவர் கஷ்டப்பட வந்தார். ஆனால் அது அவருக்கு  கஷ்டம் அல்ல.  காரணம் அது அவருக்குப் பிடித்தமானது. 

டாக்டர் மகாதிர் தனக்குப் பிடித்தமான அரசியலைச் செய்வதால் அவருக்கு அதனால் எந்த களைப்பும் ஏற்படுவதில்லை.  சுமையாகவும் தெரிவதில்லை.

நமக்குள்ள செய்தி என்ன?  நாம் தெர்ந்தெடுத்த வேலைகளைச் செய்தால் நமக்குச் சோர்வு என்பதில்லை!                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         

இதுவரை கேட்டதில்லை..!

பூப்பந்து விளையாட்டில் இந்தியர்களின் பங்கு என்பது மிக மிகக் குறைவு!

ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. அது சீனர்களின் கோட்டை.  ஒரு சில இந்தியர்கள்,  குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் பஞ்ச் குணாளன், ஜேம்ஸ் செல்வராஜ்  போன்றவர்களின் பெயர்கள் ஞாபகத்திற்கு வருகின்றது.  அவர்கள் ஆண்கள்.

ஆனால் பெண்கள்?  இதுவரை கேட்டதில்லை. அங்கே சீனப் பெண்களை அடித்துக் கொள்ள ஆளில்லை. ஒரு சில உள் அரங்க விளையாட்டுகளில் சீனர்களின் ஆதிக்கம் அதிகம்.  அது ஒரு வகையான பாரம்பரியம் என்றே சொல்லலாம்.  சீனப்பள்ளிகளில் இது போன்ற விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் அவர்கள் தான் மூடி சூடா மன்னர்களாக இன்னும் இருந்து வருகின்றனர்.  மற்றவர்கள் உள்ளே உடைத்துக் கொண்டு போக வழியில்லை.  வழி விட மாட்டார்கள் என்பது தான் உண்மை!



ஆனாலும் இப்போது தான் ஒரு பெண்ணின் பெயரைக் கேட்கிறோம்.  அது ஓர் தமிழ்ப் பெண் என்று நமபலாம். கிஷோனா என்பது அவரது பெயர்.   முதலில்,  ஒரு வேளை சபா, சரவாக் மாநிலமாக இருக்குமோ என்று நினைத்தாலும்  பின்னர் அவரது தந்தையின் பெயர் செல்வதுரை என்றும் தாயார் பெயர் வளர்மதி என்று அறிந்த போது நிச்சயமாக அவர் ஓரு தமிழ்ப்பெண் என்று உறுதியாகியது.

இந்த பூப்பந்து விளையாட்டுக்கும் சீனப்பள்ளிகளுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்க வேண்டும். இந்த கிஷோணாவும் ஒரு சீனப்பள்ளி மாணவி தான். அதனால் தான் இந்த அளவுக்கு அவரால் வர முடிந்தது என நம்பலாம்.

இன்னொன்றையும் நாம் குறிப்பிட வேண்டும். இவர் அவ்வளவு சீக்கிரத்தில் வந்ததும் போய் விடுவார் என்று சொல்லுவதற்கில்லை. இதற்கு முன்னர் அது நடந்திருக்கிறது. இப்போது இவரிடம் அது நடக்க வாய்ப்பில்லை. 

அது தான் சீனப்பள்ளிகளின் பாரம்பரியம்!  அவ்வளவு எளிதில் அவர்கள் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். கடைசிவரை போராட்டம். அந்த போராட்டம் கிஷோணாவிடம் இருக்கிறது. அவர் இன்னும் உயரிய நிலைக்குச் செல்லுவார் என நம்பலாம்.

சீ போட்டியில் தங்கம் வென்ற நமது தங்கத்திற்கு ஒரு சபாஷ்! தொடர்க!

Monday 9 December 2019

எந்த வயதில் வரும்..?

துன் சாமிவேலு சுயநினைவை இழந்துவிட்டார் என்ற செய்தியைப் படித்த போது கொஞசம் தடுமாற்றம் ஏற்படத்தான் செய்தது! அவருக்கு வயது 82 என்பதை மறக்க வேண்டாம்.

ஆமாம், மனிதன் என்றால் ஏதோ ஒரு வகையில், ஏதாவது ஒரு வகையில் ஏதோ ஒரு வியாதியால் பீடிக்கப்படுவது என்பது ஒன்றும் புதிதல்ல. நம்மைச் சுற்றிப் பார்த்தாலே நமக்குத் தெரியும். நமது நண்பர்கள், நமது சுற்றங்கள் - பெரும்பாலானோர் எந்த வகையிலோ பாதிக்கப்பட்டிருப்பதை நாம் பார்க்கிறோம்.

இப்போது நமக்கு நினைவுக்கு வருபவர் நமது பிரதமர் டாக்டர் மகாதிர். அவருக்கு வயது 94. நமது இன்றைய அரசியலின் கதாநாயகன்!  இன்னும் அதே தெளிவு. இன்னும் அதே கிண்டல். இன்னும் அதே கடுமை.  ஆனாலும் தமது சுயநினைவை இன்னும் இழக்கவில்லை!  இன்றும் நாட்டை வழி நடத்திச் செல்வதில் தணியாத ஆர்வம  கரை புரண்டு ஓடிக்கொண்டு தான் இருக்கிறது!

அதனால் அவருக்கு ஒரு வியாதியும் இல்லை என்று சொல்ல முடியுமா? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.  வியாதிக்கான மருந்துகளை எடுத்துக் கொண்டு அவரது வேலைகளை அவர் செய்து கொண்டு இருக்கிறார். சமீபத்தில் கூட ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவரது மூக்கில் இரத்தம் வழிந்ததே!  இன்றைய காலக் கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களின் நிலைமை இப்படித்தான்!  ஆச்சரியப்பட ஒன்றுமில்லை!

சுயநினைவு இழத்தல் என்கிற போது தமிழகத்தின் காலஞ்சென்ற முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஞாபகம் வருகிறது.  சொத்துப் பிரச்சனையின் போது அவர்  அடிக்கடி சுயநினைவை இழந்து போனார்! அதன் பின்னரும்  முதலமைச்சராக இருந்து, பின்னர் காலை இழந்து, இறந்த தேதியும் தெரியாமல் சமாதியானார்.  இறக்கும் போது அவருக்கு வயது 68.  அரசியல்வாதிகளுக்கு 68 என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல.  ஆனாலும் அவருக்கு அப்படி ஒரு நிலைமை!

ஜெயலலிதாவின் சுயநினைவு இழத்தல் என்பதைப் பார்க்கும் போது துன் சாமிவேலுவுக்கும் அவருக்கும் ஓர் ஒற்றுமை தெரிகிறது. இங்கும் ஏதோ சொத்துப் பிரச்சனை!  ஆமாம் அதைத்தான் அவரது மகன் வேள்பாரி காரணம் காட்டியிருக்கிறார்!  

நல்ல வேளை டாக்டர் மகாதிருக்கு அப்படி ஒரு நிலை வரவில்லை. அதனால் அவரது வண்டி வலிமையாக ஓடிக் கொண்டிருக்கிறது!  சொத்து என்று வந்து விட்டாலே சுயநினைவும் போய்விடும் போலிருக்கிறது!

எது என்னவோ! அவருக்கு சுயநினைவு மட்டும் தான் முக்கிய பிரச்சனை.  மற்ற பிரச்சனைகள் எல்லாம் சராசரியாக மனிதர்களுக்கு உள்ள பிரச்சனைகள் தான்.  அவர் சுயநினைவு பெற பிரார்த்திப்போம்!

அவரது சிம்மக்குரலை மீண்டும் நாம் கேட்க வேண்டும்!

Sunday 8 December 2019

விக்னேஸ்வரன் என்ன சொல்ல வருகிறார்?

ஒரு சில விஷயங்களை அதுவும் மிகவும் முக்கியமான ஒரு பிரச்சனையை எப்படி அணுக வேண்டும் என்பதையெல்லாம் நமது தலைவர்கள் தெரிந்து கொண்டு தான் செயல்படுகிறார்களா என்பது நமக்குப் புரியவில்லை!

இந்து சங்கத்தின் தலைவர் ஆர்.எஸ். மோகன் ஷான் ம.இ.கா. வினரிடம் ஒரு சில கேள்விகள் கேட்டிருந்தார். அதற்கான பதிலை பொறுப்பான முறையில் விக்னேஸ்வரன் பதில் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. 

அதற்குப் பதிலாக "போடா! உன்னையும் தெரியும், உங்கப்பனையும் தெரியும்! என்கிற மாதிரியான ஒரு பதிலைக் கொடுத்திருக்கிறார்! 

இந்து சங்கம் என்பது அரசு சாரா அமைப்பு. அவர்களால் முடிந்ததை அவரகள் செய்கிறார்கள். மற்றபடி அவர்களுக்கு எந்த வருமானமும் இல்லை.  அதிகாரமும் இல்லை!  அவர்கள் சொல்லுவதை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும் என்கிற உத்தரவாதமும் இல்லை!  அவர்களுக்கு ஏதோ ஒரு "டத்தோ",  "டான்ஸ்ரீ" போன்று பட்டங்கள் கிடைக்கலாம்!  அதுவும் அரசாங்கத்தோடு - முன்பு ம.இ.கா. வோடு - இணைந்து செயல் ஆற்றினால்  அது நடக்கும். இல்லாவிட்டால் அதுவும் இல்லை!

"இந்துக்களை நட்டாற்றில் விட்டவர்" என்பது மிகவும் கடுமையான ஒரு சொல்.  ம.இ.கா. இந்துக்களை, இந்தியர்கள் நட்டாற்றில் விட்ட ஒரு கட்சி என்பது தான் மலேசியர்களுக்குத் தெரியும். 

அப்படியே இந்துக்களை நட்டாற்றில் விட்டவர்  என்று சொன்னால் அதன் பின்னால் ம.இ.கா. வினர் தான் இருந்திருப்பர்!  எந்த ஒரு நல்ல செயல்களுக்கும் தடையாக இருந்தவர்கள் ம.இ.கா.வினர் என்பது தான் நாம் அறிந்த உண்மை!

இப்போது இவர் இப்படிப் பேசுவதால் ம.இ.கா. வினரைப் பற்றியான நமது அபிப்பிராயம் மாறி விடப்போவதில்லை!  அவர் பேச்சில் ஒரு விரக்தி தெரிகிறது  தவிர மற்றபடி ஒரு மண்ணுமில்லை!

ம.இ.கா., பாஸ் கட்சியை ஆதரிக்கட்டும் அல்லது அவர்கள் கொண்டு வருகின்ற ஷரியா சட்டத்தை ஆதரிக்கட்டும்! ஆனால் அவர்களை ஆதரிக்கத் தான் ஆளில்லை!

அதை மனதில் ஆழமாக பதித்துக் கொண்டால் போகும்!

Saturday 7 December 2019

தந்தையின் தியாகம்...!

பிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் பலர் எவ்வளவோ தியாகங்கள் செய்கின்றனர்.  

அதுவும் பெற்றோர்கள் படித்தவர்களாக இருந்தால் அவர்களை விட இன்னும் நல்ல முறையில் தங்களது பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும் என்னும் ஆசை இல்லாத பெற்றோர்களே இல்லை. அதனால் தான் இன்று நாம், நமது சமூகத்தில், டாக்டர்களையும்,  வழக்கறிஞர்களையும், கணக்காளர்களையும்,   பொறியிலாளர்களையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் ஏழ்மை நிலையில் உள்ளவர்களின் நிலை என்ன?  எப்பாடுப் பட்டாவது பிள்ளைகளுக்குக் கல்வியைக் கொடுக்க வேண்டும் என்னும் எண்ணம் இப்போதுங்கூட ஒரு சில பெற்றோர்களிடம் இல்லை. பலருக்குக் கல்வியின் அருமை தெரிந்தாலும் வறுமையில் வாடும் ஒரு சிலருக்கு அது எட்டாக் கனியாகவே ஆகி விடுகிறது. ஆனாலும் அவ்வளவு மோசமான நிலைமையில் நாம் இல்லை.  மனமிருந்தால் மார்க்கம் உண்டு.

ஒரு முறை, ஒரு பெண்மணியும் அவரது மகளும் ஒரு கடிதம் அடித்துக் கொடுக்கச் சொன்னார்கள்.  அவரது மகள் தனது ஐந்தாம் பாரத்தை முடிக்காமல் ஏதோ ஒரு பொய் சொல்லி ஒரு நிறுவனத்தில் சேர்ந்து விட்டாராம். பொய் சொன்னார் என்பதற்காக அவரது சம்பளத்தை அவர்கள் கொடுக்கவில்லை. அதனால் அது குறித்து அவர்களுக்கு ஒரு கடிதம் தேவைப்பட்டது. ஏன் ஐந்தாம் பாரம் முடிக்கவில்லை என்று கேட்டேன்.  ஐந்தாம் பாரம் படிக்கும் போது  "அவரது தகப்பனார் தவறிப்போனார் அதனால் என்னால் அவளைப் படிக்க வைக்க முடியவில்லை" என்று அவரது தாயார் பதிலளித்தார். இன்னும் ஏழு மாதங்கள் தான் ஆனாலும் அவரால் படிக்கவைக்க முடியவில்லை! இது தான் நமது தமிழ்க் குடும்பங்களின் நிலை. இங்கு ஏழ்மை என்பதை விட அக்கறையற்ற ஒரு தன்மை என்பது தான் உண்மை!



இதோ பாருங்கள். ஆப்கானிஸ்தான் நாட்டில் வறுமையில் வாடும் ஓரு குடும்பம். பெண்கள் கல்வி கற்றாலே அவர்களைச் சுட்டுத் தள்ளும் ஒரு தீவிரவாதிகள் கூட்டம். இந்த சூழ்நிலையில் ஒரு தந்தை தனது மூன்று பெண் பிள்ளைகளையும் தனது மோட்டார் சைக்களில் ஏற்றிக் கொண்டு தினசரி பன்னிரெண்டு கிலொமீட்டர் பயணம் செய்து பள்ளிக்குக் கூட்டிச் செல்கிறார்.  அவர்களுடைய வகுப்பு முடியும் வரையில் அங்குக் காத்திருந்து வகுப்பு முடிந்ததும் மீண்டும் அவர்களை வீட்டிற்குக் கூட்டி வருகிறார். இது தான் அவரது தினசரி நடைமுறை வாழ்க்கை. 

ஏன் பெண் பிள்ளைகளின் மேல் இந்த அக்கறை? "என் ஆண் பிள்ளைகளைப் போல் அவர்களும் கல்வி கற்க வேண்டும். எனது கிராமத்தில்  பெண் டாக்டர்கள் இல்லை. அவர்கள் படித்து வந்து எங்கள் கிராமத்தில் சேவை செய்ய வேண்டும்"  

ஒரு தந்தையின் ஆசை இது. பெண் டாக்டர் இல்லாத ஒரு கிராமம். படித்து வந்த சேவை செய்ய வேண்டும். 

தந்தைக்கு உயரிய நோக்கம்.  அதே சமயத்தில் அவரது தியாகம். தனது கிராம மக்களின் மீது அவருக்குள்ள அக்கறை.

அவரது ஆசை நிறைவேற நமது பிரார்த்தனைகள்!

Friday 6 December 2019

நல்லதா? கெட்டதா?


பி.கே.ஆர். தலைவரும் அடுத்த பிரதமர் என்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் அன்வார் இப்ராகிம் பற்றியான செய்திகள் அதுவும் எதிர்மறையான செய்திகள் ஏதோ ஒரு வகையில் வெளியாகிக் கொண்டு தான் இருக்கின்றன.

அதுவும் அவரை பற்றியான பாலியல் ரீதியான செய்திகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.  

ஏன், எதனால் என்றெல்லாம் நம்மால் யோசிக்க முடியவில்லை. தொடர்ந்தாற் போல வந்து கொண்டிருக்கிறது. அவருக்குத் தொடர்ந்து ஓர் அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதாக இது போன்ற செய்திகள் உருவாக்கப்பட்டு உள்நோக்கத்தோடு உலா வந்து கொண்டிருக்கிறது!

இப்படியெல்லாம் செய்திகளை உருவாக்கி, பணத்தை வாரி இறைத்து, இந்த செய்திகளின் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறார்களே இவர்களை நாம் ஒன்றும் செய்ய முடியாது என்கிற எண்ணம் அவர்களுக்கு உண்டு. ஒன்று இவர்கள் எப்படியோ சட்டத்தின் பிடியிலிருந்து  ஒவ்வொரு முறையும் தப்பி விடுகின்றனர்.  கடுமையான தண்டனை எதுவும் இதுவரை அவர்களுக்குக் கிடைக்கவில்லை.

சரி, இப்படியெல்லாம் செய்திகள் வருகின்றனவே அது அன்வாரை எந்த அளவுக்குப் பாதிக்கும்? 

ஓரளவும் பாதிக்காது என்பது தான் நமது கருத்து!  ஒரு மனிதரைப் பற்றி இது போன்ற செய்திகள் முதன் முறையாக வந்தால் நமக்கு அது ஆச்சரியத்தைக் கொடுக்கும்!  அதுவும் பிரபலமான மனிதர் என்றால் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே ஆச்சரியத்தைக் கொடுக்கும்! 

ஆனால் அன்வார் பற்றிய செய்திகள் என்பது அப்படியல்ல. இந்த ஒரே குற்றச்சாட்டு மீண்டும் மீண்டும் அதே குற்றச்சாட்டு என்பது சராசரியாக சிந்திக்கும் மனிதன் கூட விழுந்து விழுந்து சிரிப்பான்! ஒரு மனிதன் ஒரு முறை தவறு செய்யலாம். ஆனால் மீண்டும் மீண்டும் அதே தவறை ஒரு மனிதன் செய்கிறான் என்றால் யாராவது நம்புவார்களா? அப்படித்தான் அன்வார் கதையு ம்.  முதல் கதையையே நம்ப ஆளில்லை. ஆனால் தொடர்ந்து தொடர்ந்து அது போன்ற செய்திகளே வருகின்றன.  அப்படியென்றால் அன்வாரின் எதிரிகள் எந்த அளவுக்கு அவருக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு அவருக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்தி அவர் பிரதமர் பதவிக்கு வர முடியாதபடி செய்கின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது!

ஆனாலும் இப்போது நடப்பது என்ன? இப்போது மக்களே அன்வார் மீது ஓர் அனுதாபம் ஏற்படுகின்ற ஒரு சூழலை அவருக்கு எதிரான செய்திகள் ஏற்படுத்துகின்றன. அதுவும் குறிப்பாக இந்த பாலியல் அவதூறு செய்திகள் அவருக்கு இன்னும் மக்களின் ஆதரவைத் தேடித் தருகின்றன என்பது தான் உண்மை!

இது போன்ற கெட்ட செய்திகள் அன்வாருக்கு மக்களிடையே நல்ல செய்திகளாக மாறுகின்றன!  அவருக்கு மக்களின் செல்வாக்கு இன்னும் அதிகரிக்கிறது என்பது தான் உண்மை! 

வர வேற்போம்!

Thursday 5 December 2019

செல்வாக்கு மிக்க ஒரே மனிதர்..!

இன்று  நாட்டில் செல்வாக்கு மிக்க ஒரே மனிதர் என்றால் அவர் இஸ்லாமிய சமயப் போதகர் ஜாகிர் நாயக் மட்டும் தான்!

ஒரு காலத்தில் இங்கும் அங்கும், நாடு நாடாய்,  ஓடிக் கொண்டும் ஒளிந்து கொண்டும் இருந்த ஜாகிர் நாயக் இப்போது இந்நாட்டில் ஓர் அரசரக்குரிய மரியாதையோடு நாட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார்!

அது மட்டும் அல்ல.  வருங்காலங்களில் இந்நாட்டின் அரசியலை தீர்மானிக்கக் கூடிய சக்தியும் அவரிடம் இருப்பதாகவே நமக்குத் தோன்றுகிறது!

பெர்லீஸ் மாநிலத்தின் முப்தி போன்றவர்கள் அவருக்குப் பக்க பலமாக இருப்பதும் அவருக்குக் கூடுதல் பலத்தைக் கொடுக்கிறது. அதே போல அம்னோவின் உள்ள சில தரப்பினர் அவரை ஆதரிப்பதும் இப்போது அவர்களுக்குத் தேவையாக இருக்கிறது!

இதில் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். இந்நாட்டில் பிறந்தவர்கள் யாராக இருந்தாலும் - பூர்வீகமான மலாய்க்கார்களோ அல்லது இந்தியர்களோ, சீனர்களோ - இவர்கள் எல்லாக் காலங்களிலும் நாட்டின் சமாதானத்தையே, அமைதியையே விரும்புகின்றனர்.

கூர்ந்து கவனித்தால் நாட்டில் பிரச்சனைகளை ஏற்படுத்துபவர்கள் வெளி நாட்டினரே. இவர்கள் தான் தங்களை  "மலாய்க்காரர்களை விட நாங்கள் தான் மலாய்க்காரர்கள்"  என்பதும் "இஸ்லாமை காக்க வந்த காவலர்கள்" என்பதும்  "மலாய் மொழியைக் காக்க வந்த மன்னவர்கள்"  என்பதும் இவர்களது செயல்பாடே!

அப்படி என்றால் இத்தனை ஆண்டுகளாக மலாய் மொழி காக்கப்பட வில்லையா,  இஸ்லாம் காக்கப்பட வில்லையா மலாய்க்காரர்களின் மாண்பு காக்கப்பட வில்லையா என்பது நமக்குத் தெரியும். ஆனால் எங்கிருந்தோ வந்த இவர்களுக்குத் திடீரென்று இவர்கள் தான் நாட்டைக் காப்பாற்ற வந்தவர்கள் போல வீர வசனம் பேசுவதும் அதனை சிலர் நம்புவதும் எப்படியோ ஒரு வேடிக்கை நடந்து கொண்டிருக்கிறது!

இவர்களின் வழியில் வந்தவர்கள் தான் ஜாகிர் நாயக்,  முகமது அஸ்ரி ஜைனல் அபிடின் போன்றவர்கள்.  இவர்களில் ஜாகிர் நாயக் ஒரு படி மேல்.  தன்னை இஸ்லாமிய அறிஞர் என்று கூறிக் கொள்ளும் இவர் தீவிரவாதம் இல்லாமல் இஸ்லாம் இல்லை என்று பேசுபவர்.  இப்படி பேசுவதால் பல இஸ்லாமிய நாடுகள் இவரை ஏற்றுக்கொள்ளவில்லை!  

பல நாடுகள் இவரை ஆபத்தானவர் என்று சொன்னாலும் மலேசியா இவரை ஆபத்தற்றவர் என்று ஏற்றுக் கொண்டது இவரது நல்ல நேரம் என்று தான் சொல்ல வேண்டும்.

இப்போது இவர் மலேசியாவில் மிகவும் செல்வாக்கு மிக்க மனிதராக விளங்குகிறார்!  வருங்காலங்களில் அரசியலிலும் இவர் பேர் போடலாம்! மலேசிய அரசியலில் எதுவும் நடக்கலாம்!

Wednesday 4 December 2019

பண்பாடற்ற ஒரு மனிதர்...!

தேசிய முன்னணி  நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பேசிய பண்பாடற்ற பேச்சு ஒன்று,  இன்று  இந்து சமயத்தினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பதில் ஐயமில்லை. 

நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர்,  நெற்றியில் பூசியிருந்த வீபூதி,  முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சின் பெங்கின் அஸ்தியா  என்று நாடாளுமன்ற உறுப்பினர், தாஜூடின் அப்துல் ரகுமான் கிண்டலடித்திருப்பது  அவர் தனது பதவிக்குத் தகுதியானவர் தானா என்கிற சந்தேகமே நமக்கு எழுகிறது.

நமது நாட்டைப் பொறுத்தவரை இப்படி பிற மதங்களைக் கிண்டலடிப்பவர்கள் என்பது நாம் கேள்விப்படாதது. 

நாம் பல சமயத்தினரிடையே காலங்காலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்து, கிறிஸ்துவம்,  பௌத்தம்,  பஹாய், இஸ்லாம் என பல சமயங்கள்.  கிண்டலடிப்பதற்கு எல்லா மதங்களிலும் ஏதோ ஒன்று உண்டு.  ஆனால் சம்பந்தப்பட்டவர்களின் மனம் நோகுமே என்கிற உயரிய பண்பாடு நம்மிடையே உள்ளதால் அப்படியெல்லாம் நாம் செய்வதில்லை.  

இப்படி நான் சொல்லுவது சாதாரண - சராசரியான மக்களிடையே உள்ள பண்பாடு.  மக்களிடையே எந்த குழப்பமும் இல்லை. அவர்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் வழக்கம் போல அரசியல்வாதிகள் செய்கின்ற விஷமத்தனமான பேச்சுக்கள் தான் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. 

தாஜூடினைப் பற்றி பேச நமக்கு ஒன்றுமே இல்லையா?  அல்லது அவருடைய சமயத்தைப் பற்றி பேச நமக்கு ஒன்றுமே இல்லையா? அல்லது அவருடைய சமயத்தைப் பற்றி யாரும் பேச முடியாது என்கிற துணிவில் அவர் அப்படிப் பேசுகிறாரா?  பேசுகின்ற உரிமை இருந்தால் கூட  பிற மதத்தினர் அப்படி பேச மாட்டார்கள் என்கிற உண்மயை அவர் புரிந்து கொள்ள வேண்டும். 

அவர் அப்படி பேசியதற்கு அவர் நாடாளுமன்றத்திலிருந்து இரண்டு நாள்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இப்படி இரண்டு நாள்கள் என்பதெல்லாம் இவரைப் போன்ற தகுதியற்றவர்களுக்குப் போதுமானது அல்ல. 

இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழக் கூடாது என்று நாட்டை ஆளும் பெரும் மன்றமான நாடாளுமன்றம் நினைக்குமானால் ஒன்று அவர்களை முற்றிலுமாக  பதவியில் இருந்து நீக்க வேண்டும். அல்லது நீண்டகால இடை நீக்கம் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் ஓர் ஆண்டு. இதுவே நமது பரிந்துரை. முற்றிலுமாக இவர்கள் வாயை அடுக்குவதற்கு வேறு வழியில்லை.

பண்பாடற்றவர்களுக்கு இது தான் சரியான வழி!

Sunday 1 December 2019

பிளவுகள் தீருமா...?

பிரதமர் மகாதிர்,  மீண்டும் மீண்டும் பிரதமர் பதவியை அன்வாரிடம் ஒப்படைப்பேன் என்று சொல்லும் போதே ஏதோ வில்லங்கம் இருப்பதாகவே நமக்குத் தோன்றியதில் ஒன்றும் வியப்பில்லை!

அவர் பிரதமர் பதவியை இன்னும் ஒப்படைக்காமல் இருப்பதே பி.கே.ஆர். கட்சியில் பிளவை ஏற்படுத்த வேண்டும் என்னும் நோக்கம் தான் காரணம் என்பது இப்போது நமக்கு வெட்ட வெளிச்சமாகவே தோன்றுகிறது.

ஆமாம், பி.கே.ஆரில் ஏகப்பட்ட பிளவுகள் என்பதாக ஒவ்வொரு நாளும் படித்துக் கொண்டிருக்கிறோம். இந்தப் பிளவுகளுக்குக் காரணம் டாக்டர் மகாதிர் இல்லை என்றாலும் அந்த பிளவுகளின் பின்னணியில் அவர் தான் இருக்கிறார் என்பதும் நமக்குப் புரிகிறது.

இன்றைய நிலையில் அன்வார் இப்ராகிம் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார் என்பது தான் உண்மை.  இன்று அவர் பிரதமர் பதவி ஏற்றால் எல்லாப் பிளவுகளும் பறந்து போகும்! அவர் பதவியில் இல்லாத வரையில் பிளவுகள் இன்னும் அதிகமாகும்.  

கட்சியில் ஏற்பட்டிருக்கும் பிளவுகளுக்குக் காரணமானவர்கள் அன்வார் பிரதமர் ஆகக் கூடாது - வரமாட்டார் என்றே நம்புகிறார்கள்.  இவர்கள் தான் டாக்டர் மகாதிரின் பலம்.   டாக்டர் மகாதிர்,  பதவியை ஒப்படைக்காமல்,  காலத்தை இழுத்தடிப்பதன் மூலம் கட்சியில் இன்னும் பிளவுகள் அதிகமாகும் என நம்புகிறார்.  பிளவுகள் அதிகமாகி பி.கே.ஆர். என்னும் கட்சியே இல்லாமல் போக வேண்டும் என்பது தான் அவரது கடைசி ஆசையாக இருக்க வேண்டும். அதன் மூலம் அன்வார் பிரதமர் ஆக முடியாத ஒரு சூழலை அவர் உருவாக்குகிறார்!

இருந்தாலும் தான் போகும் இடங்களிலெல்லாம் -  வெளி நாடுகளிலுள்ள நிருபர்களைச் சந்திக்கும் போதெல்லாம் -  தான் பிரதமர் பதவியை அன்வாரிடம் தான் ஒப்படைப்பேன் என்று திரும்பத் திரும்ப சொல்லுவதில் ஏதோ உள் நோக்கம் இருப்பதாகவே நமக்குப்படுகிறது! 

பி.கே.ஆர். கட்சியில் பிளவுகள் இன்னும் அதிகமாக வேண்டும் என்பதற்காகவே அவர் இன்னும் பதவியில் இருக்கிறார் என்பது இப்போது உறுதியாகத் தெரிகிறது! அன்வாரிடம் பிரதமர் பதவி இல்லாத வரை அவரால் கட்சியில் ஏற்படும் பிளவுகளை ஒன்றும் செய்ய இயலாது என்பது தான் உண்மை. அது நமக்கும் தெரியும், டாக்டர் மகாதிருக்கும் தெரியும். 

அன்வாரிடம் பிரதமர் பதவி ஒப்படைப்பு என்பது கட்சியில் பிளவுகள் எந்த அளவுக்குப் போகப் போகிறது என்பதைப் பொறுத்துத் தான் அமையும். இன்னும் பிளவுகள் அதிகமாக வேண்டும் என்பதற்காகவே பிரதமர் மகாதிர் இன்னும் காத்துக் கொண்டிருக்கிறார்!

கட்சியில் பிளவுகள் ஏற்பட்டால் ஒழிய பிரதமர் மாற்றம் ஏற்பட வழியில்லை!