Monday 31 May 2021

மீண்டும் ஊரடங்கு!

 மீண்டும் ஊரடங்கு வந்துவிட்டது!

எதிர்பார்த்தது தான்.  இப்படித்தான் இது வரும் போகும். அடுத்த பொதுத் தேர்தல் வரும் வரை கோவிட்-19 கட்டுப்பாட்டிற்குள்  வரப்போவதில்லை.

அரசியல்வாதிகள் எப்படி வேண்டுமானாலும் சட்டத்தை தங்கள் கைக்குள் வைத்துக் கொண்டு ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுவார்கள்! இப்போது அந்த ஆட்டம் தான் நடந்து கொண்டிருக்கிறது!

மக்களின் கஷ்டத்தையோ, பிரச்சனையையோ அரசியல்வாதிகள் கண்டு கொள்வதாக இல்லை. அவர்கள் தொடர்ந்து பதவியில் இருக்க வேண்டும். கொள்ளை அடிக்க வேண்டும். பதவியில் இருக்கும் வரை எவ்வளவு சுரண்ட முடியுமோ அவ்வளவு சுரண்ட வேண்டும். சுரண்டலுக்குத் தான் முதலிடம்.  தாங்கள் என்ன பணியில் இருக்கிறோம் எனபதைக் கூட அவர்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்வதில்லை.  பதவியில் உள்ளவர்களில் பலர் ஊரடங்குகளை மீறியிருக்கிறார்கள். ஏதோ விசாரணை என்கிற பெயரில் காவல்துறையினர் அவர்களைக் கூப்பிட்டு விசாரிக்கிறார்கள். எல்லாம் கண்துடைப்பு என்பது நமக்கும் தெரியும். அவர்களுக்கும் தெரியும். ஆனாலும் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது.  அதிகாரம் கொடிகட்டிப் பறக்கிறது, என்ன செய்ய?

இங்கு நாம் முக்கியமாக ஒன்றை ஞாபகத்தில் வைக்க வேண்டும். குடும்பங்களில் வேலை இல்லையென்றால்  அவர்களால் என்ன செய்ய முடியும்?  அவர்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு யார் சாப்பாடு போடுவது? ஒருவர் வேலை செய்தாலாவது ஏதோ சமாளிக்கலாம்.   வேலை இருந்தும் வேலைக்குப் போக முடியாமல் வீட்டில் அடைந்து கிடந்தால் அந்த குடும்பம் என்ன செய்யும்?  பிள்ளைகளுக்குத் தெரியுமா வீட்டு நிலைமை, நாட்டு நிலைமை? அவர்களுக்கு நாம் கொடுக்கும் பாடம் எடுபடுமா?

ஆனாலும் ஒன்றை நினைத்து நாம் பெருமிதம் அடையளாம்.  பலர் பல வழிகளில் உணவுகள் வழங்கி உதவி செய்கிறார்கள். அரசாங்கம் கண்களை மூடிக் கொண்டாலும் தனிப்பட்ட முறையில் நிறுவனங்கள், உணவகங்கள், தனிப்பட்ட மனிதர்கள் பல வழிகளில் மக்களுக்கு உதவிகள் செய்கின்றனர்.

உண்மையைச் சொன்னால் அரசியல்வாதிகளைத் தவிர நெஞ்சில் ஈரமுள்ள மனிதர்கள் நம்மிடையே நிறையவே இருக்கிறார்கள். அவர்கள் தான் இந்த உலகை வாழ வைக்கிறார்கள்.

பசிப்பவர்களுக்கு உணவுகள் கொடுப்பது தான் முதன்மையானது. மற்றவை எதுவாக இருந்தாலும் அதனைப் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்.

ஊரடங்கு என்பது சாதாரண  விஷயம் அல்ல. பல பேருடைய வாழ்க்கை அதில் அடங்கியிருக்கிறது. மேல் நாடுகளில் பசியில்லாமல் தனது மக்களை அரசாங்கங்கள் பார்த்துக் கொள்கின்றன. ஆசிய நாடுகளில் அரசியல்வாதிகள் தங்களையே பார்த்துக் கொள்வதால்  மக்களைப் பார்க்க ஆளில்லை!

ஊரடங்கின் போது நல்லதே நடக்க வேண்டும் என வேண்டுகிறேன்!


Sunday 30 May 2021

இது தொடர்வது நல்லதல்ல!

இன்றைய நிலையில் நாம் ஒரு சில துறைகளில் முன்னேற்றம் அடைந்திருக்கிறோம் என்பது உண்மை தான்.

ஆனால் அடிமை வேலைகளில் நாம் முன்னேறிய அளவுக்கு நமது சொந்த தொழில்களில் முன்னேறாதது தான் மிகவும் வருத்தத்திற்குரியது

நமது இந்திய சகோதரர்களான குஜாராத்தியர்களை எடுத்துக் கொள்ளுவோம் கல்வியிலும் முன்னேறியிருக்கிறார்கள். அதே சமயத்தில் தங்களது பாரம்பரியமாக செய்து வரும் தொழில்களிலும்  முன்னேறியிருக்கிறார்கள்.

ஆனால் நாம் கல்வியை மட்டுமே சிந்திக்கிறோம். கல்வி கற்றுவிட்டால் நாம் பணம் உள்ளவனாக ஆகிவிட முடியாது. கல்வி உங்களுக்கு ஒரு வேலை வாய்ப்பை ஏற்படுத்துமே தவிர பணத்தை அள்ளித் தராது என்பது தான் கவனித்தக்கது.

நமக்குக் கல்வியும் வேண்டும் அதே போல தொழில்களும் வேண்டும். அது தான் நம்மை பொருளாதாரா வலிமை கொண்ட சமூகமாக மாற்றி அமைக்கும். அது குஜாராத்தியரிடம் உண்டு.   தமிழர்களும் அப்படித்தான் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஏன் நாம் காலமெல்லாம் வேலை செய்து பிழைக்கும் சமூகமாகத் தான் வாழ வேண்டுமா? அப்படி எல்லாம் நமது முன்னோர்கள் எழுதி வைத்து விட்டா போயிருக்கிறார்கள்? அப்படி ஒன்றும் இல்லை. சொல்லப் போனால் திருவள்ளுவர் பெருந்தகை மிகவும் மென்மையான போக்கு உடைய அவரே  "செய்க பொருளை!" என்று தமிழர்களைப் பார்த்து ஆணையிடுகிறார் என்பதாகச் சொல்லுகிறார் பேச்சாளர் சுகி சிவம் அவர்கள்! வேறு தமிழ் இலக்கியங்கள் இந்த அளவு பொருள் செய்வதற்காக அழுத்தம் கொடுக்கவில்லை என்கிறார்.

அப்படி என்றால் பொருள் ஈட்டுவது என்பது எத்துணை முக்கியம் என்பதை ஏன் நாம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. ஆயிரம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கப்பலில் பயணம் செய்து வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் தானே நாம். அந்த பரம்பரையில் வந்த நமக்கு இப்போது ஏனோ நம்மை பயம் ஆட்டிப் படைக்கிறது! நாமும் ஆடுகிறோம்.  

இப்போது  நமது பாரம்பரியம் மீட்டு எடுக்கப்பட வேண்டும். அது ஒவ்வொரு தமிழரின் கடமை. நாம் ஏன் என்றென்றும் அடிமை வேலைகளில் ஈடுபட்டு குறைவாக  பொருள் ஈட்ட வேண்டும்?

சிந்திப்போம். மீண்டும் பொருளாதாரம் நமது பக்கம் திரும்ப வேண்டும்.


Saturday 29 May 2021

ஏன்? மீண்டும்.....மீண்டும்...?

 ஒரு சில விஷயங்களை மீண்டும் மீண்டும் சொல்லப்பட வேண்டிய சூழலில் நான் இருக்கிறேன். அதனால்   மன்னித்து  விடுங்கள்.

வேறு வழியில்லை! ஒரு முறை மட்டும் சொல்லிவிட்டுப்  போனால் அது ஞாபத்திற்குக் கொண்டு வர இயலாது. ஏதோ பொழுது போக்கு என்று அலட்சியமாகக் கடந்து போய் விடலாம். 

ஆனால் எனது நோக்கம் அதுவல்ல. ஏதோ ஒரு சிலருக்காவது  எனது எழுத்து பயன்பட வேண்டும்  அதற்காகவே வியாபாரம் என்று வரும் போது சில செய்திகள் மீண்டும் மீண்டும் வற்புறுத்தப்படுகின்றன.    

பொழுதைப் போக்குவதற்காக நான் எழுதவரவில்லை. நமது மக்கள், நமது தமிழினம் சொந்தத் தொழில் செய்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்னும் நோக்கத்தில் தான் நான் எழுதி வருகிறேன்.

அதனால் 'என்னடா இவன்!  சொன்னதையே சொல்லுகிறானே!'  என்று சலிப்பு ஏற்படுவது என்பது இயல்பு தான்.    

 சில செய்திகள் அழுத்தமாகத் தான் சொல்லப்பட வேண்டும்.  மீண்டும் மீண்டும் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். அப்போதாவது ஏதாவது பயன் கிடைக்கும் என நம்புவோம்.

அதனால் மீண்டும்.....மீண்டும்.......ஏன்?  என்று சலிப்பு வேண்டாம்!


நமது நிலை என்ன?

பொருளாதார முன்னேற்றம் என்னும் போது நமது நிலை என்ன?

நாம் பல துறைகளில் படிப்படியாக முன்னேறி வந்திருக்கிறோம். எல்லாம் நமது சொந்த முயற்சியின் மூலம் தான் என்பது எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. 

நமது முன்னேற்றத்திற்குத் தடையாக  இருந்தவர்கள் என்றால் அது அரசாங்கமும் ம.இ.கா. வும் தான். ம.இ.கா. ஏதோ ஒரு சில சலுகைகளை வாங்கிக் கொடுத்தனர் என்றாலும் அது அரசாங்கம் போட்ட பிச்சை தான்! பெருமைப்பட ஒன்றுமில்லை! அன்றும் சரி இன்றும் சரி அவர்கள் தங்களின் நலனுக்குத் தான் முக்கியத்துவம் கொடுத்தனர். பள்ளிக்கூடங்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலங்களை அபகரித்தவர்களை மாலை போட்டா வர வேற்க முடியும்?

சீனர்கள் அரசியலுக்கு வருமுன்னரே ஓரளவு வசதியான நிலையில் தான் வருகின்றனர். பணம் இல்லாமல் அவர்கள் அரசியலுக்கு வருவது குறைவு. நமது நிலை என்ன? 

பஞ்சப்பராரிகள்,  ஒரு வேளை சாப்பாட்டுக்கு லாட்டரி அடித்தவர்கள், வழியில்லாமல் அடிதடியில் ஈடுபட்டவர்கள் - இவர்கள் தான்,  அரசியலை வைத்து பிழைப்பு நடத்த வேண்டிய சூழலில் இருந்தவர்கள் தான்,  அரசியலுக்கு வந்தார்கள்! அவர்கள் தங்கள்  வேலைகளைச் சரியாகச் செய்தார்கள். நம்மையும் ரௌடிகளாக மாற்றினார்கள்!   இன்றும் அது தொடர்கிறது!  இன்றளவும் சிறை மரணங்கள் குறைந்தபாடில்லை.

இன்று நமது முன்னேற்றம் என்பது வளர்ந்திருக்கிறது. திருப்திகரமாக இல்லை என்பது தான் நமது குறை. அரசாங்கம் நமது வேலை வாய்ப்புகளை முற்றாகப் பறித்துவிட்டது. தனியார் துறையில் குறைந்த சம்பளம் வாங்குகின்ற கூலித் தொழிலாளர்கள் என்றால் அது நாம் தான்.

நம்மிடையே நிறைய வழக்குரைஞர்கள் இருக்கிறார்கள். அதுவும் திறமை மிக்கவர்கள் என்று பெயரெடுத்திருக்கிறோம். ஆனால் இங்கு ஏமாற்று வேலை என்பது நிறையவே உண்டு. பெயர் போட முடியாதவர்கள் அரசியலுக்கு வந்து விடுகிறார்கள்!

நமக்கு அரசாங்க வேலை என்பது பெரும்பாலும் ஆசிரியர் பணி தான். தமிழ்ப்பள்ளிகள் இல்லாவிட்டால் அதுவும் காலி! இடைநிலைப்பள்ளிகள், கல்லூரி விரிவுரையாளர்கள் இருந்தாலும் அங்கேயும் அரசாங்கம் கை வைக்கிறது. நம்மை தகுதியற்றவராக்கி விடுகிறது!

மருத்துவம் என்பது நமது முதன்மையான தொழிலாக இருந்தது. அதனையும் அரசாங்கம் தகர்த்துவிட்டது! தகுதியற்றவர்களைக் கொண்டு வந்து நிரப்பிவிட்டது! இனி வருங்காலங்களில் இவர்களும் வேலை தேடி நடு ரோட்டுக்கு வருவார்கள்!

ஒன்று மட்டும் சொல்லுவேன். நீங்கள் நிறையவே படித்திருக்கலாம். பல தகுதிகள் கொண்டவராக இருக்கலாம். ஆனால் வேலை தான் செய்ய வேண்டும் என்று அலையாதீர்கள்.  நீங்கள் சார்ந்த துறையில் சொந்தமாக தொழில் செய்ய முயற்சி எடுங்கள். சொந்த மருத்துவ நிலையங்கள், சொந்த வழக்குரைஞர் நிறுவனங்கள், சொந்த கல்வி நிறுவனங்கள் என்று கொஞ்சம் வித்தியாசமாக சிந்தியுங்கள்.  வேலை செய்வதில் பெருமைபட்டுக் கொள்ளாதீர்கள்! உங்களின் சொந்தத் தொழில் தான் உங்களுக்குப் பெருமை.

இந்த சமுதாயம் மற்றவர்களால் மதிக்கப்பட வேண்டும் என்றால்  யாருக்கோ வேலை செய்பவர்களாக இருக்க முடியாது! நமது எண்ணங்கள் மாற வேண்டும். சொந்தத் தொழில் என்பது நமக்குக் கம்பீரத்தைக் கொடுக்கும் என்பதை நம்ப வேண்டும்.

சொந்தத் தொழில் தான் தமிழரின் நிலையை உயர்த்தும்! உயர்வோம்!

Thursday 27 May 2021

வலிமை வாய்ந்த சமூகம்


நமது சகோதர இனமான சீன சமுகத்தைப் பற்றிப் பேசும் போது  ஒரு விஷயத்தை நாம்  தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

சீனர்கள் எல்லாத் துறைகளிலும் முன்னேறி இருக்கின்றனர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

வழக்குரைஞர்கள் என்றாலே அது இந்தியர்கள் தான் என்று சொல்லப்படுவதுண்டு.  அவர்கள் நீதிமன்றங்களில் காணப்படுவது குறைவாக இருக்கலாம் ஆனால் அவர்கள் பெரும்பாலும் வர்த்தகத்துறையினரைச் சார்ந்து இருக்கிறார்கள். ஆலோசனைகள்  கொடுப்பது, வழிகாட்டுதல் போன்றவை அவர்களது பணியாக இருக்கும்.

மருத்துவத்துறையில் அவர்களை அதிகமாகக் காண முடிகிறது. இன்று பெரும்பாலான கிளினிக்குகள் அவர்களுடையவை. அதுவும் குறிப்பாக நிபுணத்துவம் என்பது அவர்கள் கையில்.  இன்று எதைனை எடுத்துக் கொண்டாலும் மருத்துவத் துறையில் அவர்கள் தான் நிபுணர்களாக இருக்கிறார்கள்.

கணக்கியல் துறை என்றாலும் அவர்களே முன்னணியில் நிற்கின்றனர். இன்று பெரும்பாலான நிறுவனங்கள் அவர்களை நம்பியே இருக்கின்றன. பல பெரும் நிறுவனங்களில் அவர்களே அதிகம் பங்கு பெற்றிருக்கின்றனர்.

இப்படி எதனை எடுத்துக் கொண்டாலும் அவர்கள் இல்லாத துறைகள் என்று எதுவும் இல்லை. அந்த அளவுக்கு  அவர்களின் உச்சத்தை தொட முடியாத அளவுக்கு நமக்கும் அவர்களுக்கும் பெரும் இடைவெளி உள்ளது! அதனால் நான் நம்மை குறைத்து மதிப்பிடவில்லை என்பதையும் அறிந்து கொள்க.

இவற்றை நான் ஏன் பட்டியல் இட்டிருக்கின்றேன் என்றால் இவ்வளவு இருந்தும், எல்லாத் துறைகளிலும் அவர்கள் பேர் போட்டிருந்தாலும், நாம் அவர்களைப் பற்றி பேசும் போது அவர்களை எப்படிக் குறிப்பிடுகிறோம். அதைத்தான் நான் சொல்ல வருகிறேன். 

எத்தனையோ சாதனைகள் அவர்களிடமிருந்தும் நாம் அவர்கலைப்பற்றி பேசும் போது  "சீனர்கள் பணக்காரர்கள்!" என்கிற ஒரே வார்த்தையில் சுருக்கி விடுகிறோம்! மற்றவைகளைப் பற்றியெல்லாம் நாம் கவலைப்படவில்லை. பணம் மட்டும் தான் நம் முன் நிற்கிறது! பணம் இருந்ததால் தான் அவர்களால் இந்த அளவுக்கு உயரமுடிந்திருக்கிறது என்பதும் உண்மை.

ஆனால் சீனர்களிடம் எத்தனையோ பண்புகள் இருந்தும், திறமைகள் இருந்தும் அவைகள் எல்லாம் மறக்கடிக்கப்படுகின்றன. ஒன்றே ஒன்று தான் நமது ஞாபகத்திற்கு வருகின்றது. அது தான் பணம்.

உலகில் ஒரு சில இனத்தினரை நினைத்தாலே  நமக்கு வருவதெல்லாம் பணம் தான். யூதர்கள் என்றாலே பணம் தான் ஞாபகத்திற்கு வருகிறது. அவர்கள் தான் உலகில் உள்ள பல தொழில்களுக்கு சொந்தக்காரர்கள். இன்று சீன நாடு மற்றவர்களை விட பொருளாதாரத்தில் மிகவும் சக்தி வாய்ந்த நாடாக வலம் வருகிறது என்றால் அதற்குப் பணம் தான் காரணம். பணத்தை வைத்துக் கொண்டு பல நாடுகளை சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ஏன்? அடிமையாக வைத்திருக்கிறது என்று கூட சொல்லலாம்.

பணம் வலிமை வாய்ந்தது. அதனால் தான் சீனர்களைப் பற்றிப் பேச பலர் பின் வாங்குகின்றனர்.  இந்தியர்களைப் பற்றிப் பேசும் ஜாகிர் நாயக் அவரது சிஷ்யரும் சீனர்களைப் பற்றிப் பேச முடிகிறதா?

சீனர்கள் வலிமை வாய்ந்த சமூகம். அதற்குக் காரணம் பணம்!

Monday 24 May 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி.......! (60)

                                                    Little India - Kuala Lumpur  
இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக நாம் இந்த மண்ணில் வாழ்ந்து வருகிறோம்.  நமது வளர்ச்சி என்பது பெரிய அளவில் இல்லை என்று சொல்லலாம். அதிலும் பொருளாதார வளர்ச்சி என்பது திருப்திகரமாக  அமையவில்லை என்று துணிந்து சொல்லலாம்.

வேறு எந்த வகையில் வளர்ச்சி அடைந்திருக்கிறோம்?

தமிழர்களை விட குறைவான எண்ணிக்கையில் இருக்கும் மலையாளிகள், தெலுங்கர்கள்,  பஞ்சாபியர்கள் , குஜராத்தியர் - இவர்களோடு ஒப்பிடுகையில் தமிழர்களின் வளர்ச்சி என்பது பேசும்படியாக இல்லை!

தமிழர்களுக்கு என்னன்ன வாய்ப்புக்கள் கிடைக்கின்றனவோ அதே வாய்ப்புக்கள் தான் நம்மிலும் சிறுபானமையினராக இருக்கும் அவர்களுக்கும் கிடைக்கிறது. ஆனால் அவர்கள் கிடைக்கின்ற வாய்ப்புக்களைச் சரியாக பயன்படுத்துகின்றனர். இதில் யாரையும் குறை சொல்ல ஒன்றுமில்லை.

ஒன்று மட்டும் சொல்லலாம். தமிழர்கள் ம.இ.கா. தலைவர்களை  நம்பி ஏமாந்து போனார்கள். நாம் நம்மை நம்பவில்லை. தலைவர்களை நம்பினோம். நாசகமாகப் போனோம்! தலைவர்கள் சுகமாக இருக்கிறார்கள்! தலைவர்கள் என்று சொல்லும் போது தமிழர்கள் மட்டும் அல்ல மலையாளிகள், தெலுங்கர்கள் அனைவரையும் சேர்த்துத்தான்.

சராசரியாக தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் என்று எடுத்துக் கொண்டால் கூட  மலையாளிகள், தெலுங்கர்கள் இருக்கும் அளவுக்கு தமிழர்கள் குறைவாகத்தான் இருக்கின்றனர். இதில் நாம் யாரைக் குற்றம் சொல்ல முடியும்?

கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்காத சமூகம் என்றால் அது தமிழர் சமூகம் தான்.  கோவில் வேண்டும் என்கிறோம் ஆனால் வாழ்க்கைக்குத் தேவையான கல்வியைப் புறந்தள்ளுகிறோம். கோவிலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம் கோவில் தலைவர்கள் பதவியைப் பிறருக்கு விட்டுக் கொடுக்கிறோம்!

நமது பலவீனம் என்பது என்றென்றுமே கல்வி தான். நாம் கல்வியில் பல படிகள் தாண்டி வந்திருக்கிறோம் ஆனால் நமது தமிழர்  எண்ணிக்கைக்கு ஏற்ப அது பிரதிபலிக்கவில்லை என்பது தான் உண்மை.

நாம் எப்போதோ கல்வி அற்றவர்களாக இருந்திருக்கலாம். அதற்குப் பல காரணங்கள் உண்டு.  ஆனால் இப்போது கல்வி கற்க நிறைய வசதிகள் உண்டு. இப்போதும் ஏதேதோ காரணங்கள் சொல்லிக் கொண்டு உடகார்ந்திருக்கிறோம்!  கல்வியின் முக்கியத்துவம் இன்னும் நமது பெற்றோர்கள் உணரவில்லை.

கல்வி தான் நமது முதல் முதலீடு. கல்வி இருந்தால் பிறவற்றை நாம் தேடிக் கொள்ள முடியும்.  கல்வியை நாம் தேடிக் கொள்ளாதவரை நமது இனம் தான் ஆகக் கீழ் மட்டத்தில் உள்ள வேலைகளைச் செய்ய வேண்டி வரும்!

கல்வி வளர்ச்சி என்பதே அடிமட்டத்தில் இருக்கும் போது பொருளாதார வளர்ச்சிப் பற்றி பேசுவது எங்ஙனம்? இந்த சூழ்நிலையில் கூட நம்மில் ஒரு சிலர் வியாபாரத் துறையில் ஈடுபட்டு பெரும் வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றனர். இது அவர்களின் பாரம்பரியம் எனலாம்.

ஒன்றை மட்டும் நம்பலாம். இப்போது நாம் சரியான பாதையில் காலடி எடுத்து வைத்திருக்கிறோம். இன்னும் சில ஆண்டுகளில்  நமது சாதனைகளை மற்ற இனத்தவரும் புரிந்து கொள்வர்.

வாழ்க தமிழினம்!

Friday 21 May 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி......! (59)

சீனர்கள் எதனை முக்கியமாகக் கருதுகிறார்கள்?

பொதுவாக  ஒவ்வொரு குடும்பத்தினரும் ஒவ்வொரு விடயத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவராக இருக்கிறோம்.

சரி,  தமிழர்களாகிய நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்?  இன்றைய நிலையில் ஒரு வீடு,  ஒரு கார் என்பது தான் நமது நோக்கமாக இருக்கிறது. நடுத்தர குடும்பங்கள் என்றால் ஏறக்குறைய இப்படித்தான்.  அதுவும் ஒரு சிலர் கார்களுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். கார் என்பது அவர்களுடைய தகுதியைக் கூட்டிக் காட்டும் என்று நினைக்கின்றனர்.

ஆனால் சீனர்களின் பார்வை வித்தியாசப்படுகிறது.  அவர்களின் வரிசைப்படி முதலாவது பணம்.  தொழில் செய்பவர்களாக இருந்தால் தொழிலில் முதலீட்டை அதிகரிப்பது.  தேவைக்காக ஒரு கார். அதன் பின் தான் வீடு மற்றவை.

கையில் பணம் இருந்தால் எதுவும் செய்ய முடியும். கார் போக்குவரத்து வசதிக்காக மட்டும் தான்.  பணம் இருந்தால் தொழிலை மேம்பாடு அடையச் செய்ய முடியும். தொழில் மேம்பாடு அடைந்தால் பணம் தானாக வரும். அதன் பின்னர் தான் பணத்தை வைத்துக் கொண்டு எல்லா வேலைகளையும் செய்ய முடியும்.

சீனர்களுக்குத் தொழில் தான் வாழ்க்கையில் முதல் அடியை எடுத்து வைப்பது. அதன் பின்னர் அதனை அபிவிருத்தி செய்வது. வங்கியில் கடன் கேட்டாலும் அவர்களுக்குக் கிடைக்கும். காரணம் அவர்களின் தொழிலின் முன்னேற்றத்திற்குக் கடன் தேவை.  வங்கிகளும்  கடன் கொடுக்க தயார் நிலையில் இருக்கின்றனர்.  வங்கிகள் சீனர்கள் மேல் அதிக நம்பிக்கை வைக்கின்றனர். புள்ளி விபரங்கள் அவர்களுக்குச் சாதகமாக இருக்கின்றன.

நமது இனத்தவர் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை  நாமே மீள்பார்வை செய்ய வேண்டும்.  வங்கியில் கடன் வாங்கினால் அது வணிகத்திற்கு மட்டுமே செலவு செய்ய வேண்டும் என்கிற ஓர் ஒழுங்கு வேண்டும். தொழிலில் வருகின்ற வருமானம் மீண்டும் தொழிலுக்கே போக வேண்டும் என்கிற கட்டுப்பாடு வேண்டும்.

ஆக, சில பாடங்களை நாம் சீனர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். நம் அருகில் உள்ள அவர்கள் தான் நமக்கு நல்ல எடுத்துக்காட்டு. அவர்களால் முடியும் என்றால் நம்மாலும் முடியும்.

எது முக்கியம் என்பதை நாம் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.


Wednesday 19 May 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி ........! (58)

 சீனர் சமூகமே நமக்கு எடுத்துகாட்டு (iv)

ஒரு காலக் கட்டத்தில் சிறந்த கல்வியாளர்களைக் கொண்ட சமூகமாக நாம் இருந்தோம்.

இன்று நிலைமை  மாறி விட்டது. இன்று சீனர்கள் தான் சிறந்த கல்வியாளர்களாக இருக்கின்றனர்.  தனியார் பலகலைக்கழகங்களில் அவர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். பெரும்பாலான பேராசிரியர்களாக அவர்கள் தான் இருக்கின்றனர். உண்மையைச் சொன்னால் நாம் தான் கல்வித்துறையில் கோலோச்சினோம். இன்று அதனையும் இழந்தோம்.

நாம் பெரிய பெரிய கல்வி நிறுவனங்களை விடுவோம். சாதாரண இடை நிலைக்கல்வி, தொழில் பயிற்சிக் கல்வி  இவைகளைப் பற்றி  பார்ப்போம்.

தொடக்கக் கல்வி முடிந்து இடைநிலைப் பள்ளிகளுக்குப் போகும்  போது  கணிசமான மாணவர்கள் இடைநிலைப் பள்ளிகளைத் தவிர்க்கின்றனர். முதல் அடி அங்கே விழுகிறது. அடுத்து இடைநிலைப் பள்ளிகளில் ஐந்தாம் பாரம் வரை  அனைத்து மாணவர்களும் போய் சேருவதில்லை. அடுத்த அடி இங்கே!

இப்படி விடுபட்டுப் போன மாணவர்களின் நிலை என்ன? இவர்களில் பெரும்பாலானோர் ஒன்று: குடிகாரர்கள் அடுத்து: குண்டர் கும்பல். இப்படி உருப்படாத மாணவர்களை குண்டர் கும்பல்கள் தங்களுடன் சேர்த்துக் கொள்ளத் தயாராக இருக்கின்றனர்.

இதனை நாம் சீன மாணவர்களோடு ஒப்பிடும் போது நாம் மிகவும் அதிகம்.  அவர்கள் குறைவான விழுக்காடு தான்.  அதே சமயத்தில்  அவர்களின் பாதை வேறு. ஏதோ ஒரு வியாபார நிறுவனங்களில் , தொழில் நிறுவனங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுகின்றனர். ஒன்று தொழிலைக் கற்றுக் கொள்ளுகின்றனர். அடுத்து சொந்தமாக வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர்.

படிக்கவில்லை என்றாலும் சீன மாணவர்கள்  தங்களுக்கு ஏற்ற ஒரு பாதையை அமைத்துக் கொள்ளுகின்றனர். அது அவர்களுக்கு ஆக்ககரமாக அமைகிறது. தமிழ் மாணவர்கள் குடி, குண்டர் கும்பல் என்று சீரழிவு பாதைக்கு இழுத்துச் செல்லப்படுகின்றனர்.  சீனப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வழிகாட்டியாக அமைகின்றனர்.

இன்று இந்திய மாணவர்களுக்கு தொழிற் பயிற்சி பெற நிறையவே வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. முன்பு போல முணுமுணுக்க ஒன்றுமில்லை. ஆனாலும் மாணவர்கள் தயாராக இல்லை.

வாய்ப்புகள் இருந்தும் அதனை நாம் பயன்படுத்திக் கொள்வதில்லை. நமது இந்திய பெற்றோர்கள் பொறுப்பற்று நடந்து கொண்டால் அதற்கு அரசாங்கத்தைக் குறை சொல்லுவதில் பயனில்லை.

நமது மாணவர்கள் பொறுப்பற்றுப் போவதற்கு பெற்றோர்களே முழு காரணமாக அமைகின்றனர்.

பெற்றோர்களே நீங்கள் தான் பிள்ளைகளுக்கு வழிகாட்டியாக இருந்து வழிகாட்ட வேண்டும்.

Monday 17 May 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி.....! (57)

சீனர் சமுகமே நமக்கு எடுத்துக்காட்டு!   (iii)


பொதுவாகவே இந்தியர்கள் குடிகார சமூகம் என்கிற பெயர் எடுத்துவிட்டோம்! ஏன்? வளர்ந்து வரும் இளைய சமுதாயம் கூட குடிகாரர்கள் என்பது மற்றவர்கள் சொல்ல வேண்டாம்.  நாம் கண்கூடாகவே பார்க்கிறோம்.  பள்ளி மாணவர்கள் கூட அதற்கு விதிவிலக்கல்ல!

ஒரு வித்தியாசம். இந்த மாணவர்களின் பெற்றோர்களைத் தவிர மற்ற பொது மக்கள் பெரும்பாலும் இதனை அறிந்து வைத்திருக்கிறார்கள்!

ஆனால் உண்மையில் நாம் அந்த  அளவு பெரிய குடிகாரர்களா? இல்லை!  நாம் குடிப்பதை விட நாம் செய்கின்ற ஆர்ப்பாட்டம் அதிகம்! கொஞ்சம் குடித்துவிட்டு அதிக ஆர்ப்பாட்டம் செய்கின்றவர்கள் நாம்! ரோடுகளில் விழுந்து கிடப்பது, ரகளைச் செய்வது, வம்பிழுப்பது,  உதை வாங்குவது, அடித்துக் கொள்ளுவது - இவைகள் எல்லாம் நாம் போதையில் இருக்கிறோம் என்பதற்கான அறிகுறிகள்!

ஆனால் குடிப்பதில் கில்லாடிகள் என்றால் அது சீனர்கள் தான்.  ஒரு வித்தியாசம். அவர்கள் குடிகாரர்கள் என்பது அவ்வளவாக வெளியே தெரிவதில்லை. அவர்கள் அதனைக் காட்டிக் கொள்ளுவதில்லை. ஏதோ குடித்தோம்! போய்ப் படுத்தோம்! என்பது தான் அதிகம். வரம்பு மீறுவது அங்கும் உண்டு. வெளியே தெரிவதில்லை!

மனிதன் குடிப்பது என்பது உலக அதிசயம் உல்ள. ஆனால் அதனை  ஏதோ தொழில் போல செய்வது என்பது நாமாகத்தான் இருக்க வேண்டும்! சீனர்கள் குடிக்கிறார்கள் ஆனால் அவர்களின் குடும்ப வாழ்க்கைப் பாதிப்பதில்லை. அவர்களின் தொழில் பாதிப்பதில்லை. நமது நிலை அப்படி அல்ல. தொழில் செய்பவர்கள் கூட தங்களின் தொழிலில் கவனம் செலுத்தாத நிலை நம்மிடையே உண்டு.

சீனர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இது.   நமது வேலையிலோ, தொழிலோ முழு கவனத்தைச் செலுத்துங்கள். உங்கள் உழப்பை வீணடிக்காதீர்கள். பொறுப்பை உணர்ந்து செயல்படுங்கள். நீங்கள் குடித்துத்தான் ஆக வேண்டும் என்றால் கூட்டம் போட்டுக் கும்மாளம் அடிக்காதீர்கள்.  உங்கள் வீட்டிலேயே குடித்துவிட்டு அமைதியாகப்  படுத்து விடுங்கள்.

இந்திய இனம் ஏழைகள் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். குடிப்பதற்காக இவர்கள் ஏராளமாக செலவு செய்கிறார்கள்! இவர்கள் குடும்பம் என்ன நிலையில் இருக்கிறதோ நமக்குத் தெரியவில்லை. ஆனால் குடித்துவிட்டு அடித்துக் கொள்ளுவதில் மன்னராக இருக்கிறார்கள்!

இந்த குடிகாரர் பிரச்சனையில் கூட  சீனர்கள் தான் நமக்கு உதாரணம். மதுபான விற்பனை நிறுவனங்கள் இந்தியர்களை நம்பி இல்லை, சீனர்கள் தான் அவர்களின் பிரதான வாடிக்கையாளர்கள். ஆனால் நமக்குத் தான் குடிகாரப்பட்டம் எளிதாக கிடைக்கிறது!

நாம் குடியை மறந்தால் நமது முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். குடித்தாலும் கும்மாளம் அடிக்க வேண்டாம்.!


Saturday 15 May 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி ........! (56)

சீனர் சமூகமே நமக்கு எடுத்துக்காட்டு   (ii)


உலகத்தில் உள்ள வேறு எந்த மனிதரையும் நாம் தேடி ஓட வேண்டியதில்லை! நமது பக்கத்து வீட்டு அல்லது அடுத்த தெரு அல்லது பக்கத்து தாமானில் உள்ள சீன சகோதரர்களைப் பார்த்தாலே போதும். கொஞ்சம் உற்றுக் கவனியுங்கள். அவர்களின் வாழ்க்கை முறையைப் பாருங்கள்.

அதெப்படி அவர்களால் முடிகிறது என்கிற கேள்வி எழத்தான் செய்யும். ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் கடவுளை நம்புகிறார்களோ இல்லையோ அவர்கள் பணத்தை நம்புகிறார்கள். முதலில் பணம், பிள்ளைகளின் கல்வி. கல்வி சரியாக அமையாவிட்டால் ஏதாவது தொழில். இப்படித்தான் அவர்களது வாழ்க்கை அமைகிறது.

கல்வியில் தோல்வி என்றால் ஏதாவது ஒரு நிறுவனத்தில் போய் வேலை செய்வது என்பது பெரும்பாலும் இல்லை.  இந்தியர்களும் மலாய்க்காரர்களும் தான் இந்த வேலைகளுக்கு அடித்துக் கொள்ளுகிறோம்! சீன இளைஞர்கள் ஏதாவது தொழிலைக்  கற்றுக் கொண்டு பின்னர் அதனையே தங்களது தொழிலாக்கிக் கொள்கின்றனர்.

சான்றுக்கு ஒன்று சொல்லுகிறேன்.  ஒரு சிறிய நிறுவனம்.கார்களுக்கு புது டயர் போடுகின்ற அல்லது மாற்றம் செய்கின்ற வேலை.  ஒரு சீன இளைஞன் அங்கு வேலை செய்து கொண்டிருந்தான். ஓராண்டுக்குப் பின்னர் இன்னொரு சீன இளைஞன் வந்து சேர்ந்தான். சுமார் இரண்டு மூன்று ஆண்டுகள் இருவரும் வேலை செய்தனர்.  இருவருமே போதுமான பணம் சேர்த்துக் கொண்டனர்.  இருவரும் வளர்ந்து வரும் இன்னொரு பட்டணத்தில் சொந்தமாக ஒரு கடையை அவர்கள் ஆரம்பித்துவிட்டனர். அவர்கள் கற்றுக்கொண்ட அதே தொழில்.  இப்போது அது பெரியதொரு நிறுவனமாக மாறிவிட்டது!

கல்வி குறித்து ஓர் எடுத்துக்காட்டு. ஒரு பாட்டி, தாய், மூன்று பேரப்பிள்ளைகள். பாட்டிக்கு வேலை இல்லை. தாய் ஒரு கடையில் சுத்தம் செய்கின்ற வேலை. பேரன் பெரியவன் படிக்கிறான். இருவர் இன்னும் பள்ளி போகவில்லை. பாட்டி குப்பைகளைக் கிளறி எதை எதையோ பொறுக்கிக் கொண்டிருப்பார். அது அவர் வேலை. தாய் வேலை முடிந்ததும் அவரும் பாட்டியோடு சேர்ந்து குப்பைகளில் மூழ்கிவிடுவார். பேரப்பிள்ளைகளும் பாட்டியோடும்  தாயோடும்  சேர்ந்து குப்பைகளில் உதவி செய்வர்.  பாட்டி இவ்வளவு ஆர்வத்தோடு செய்வதற்குக் காரணம் உண்டு.  பேரனுக்குக்  கணினி வேண்டும்.  வந்து விலையெல்லாம் விசாரித்துவிட்டுப் போனார். பணம் சேர்ந்ததும் வந்து கணினியை வாங்கினார்.  இதில் என்ன ஆச்சரியம் என்றால்  அவரிடமிருந்ததெல்லாம் கசங்கிப் [போன ஒரு வெள்ளி நோட்டுக்களும் ஷில்லிங்குளும்  தாம்.

நம்மோடு ஒப்பிட்டுப் பாருங்கள். வீட்டை விற்போம். சொத்தை விற்போம் கணினி வாங்க பள்ளிகள் உதவ வேண்டும். இல்லாவிட்டால் பிரச்சனையை ஏற்படுத்துவோம்!. சொந்தக் காலில் நிற்பது என்பது நாம் விரும்பாதது!

சீன சமூகம் யாரையும் எதிர்பார்ப்பதில்லை. சொந்தக் காலில் நிற்பதைத் தான் அவர்கள் கௌரவமாக எண்ணுகின்றனர். கிடைத்தால் ஏற்றுக் கொள்வோம். கிடைக்காவிட்டால் மாறிக் கொள்வோம்! அவ்வளவு தான்!

யாரையும் குறை சொல்லுவதில்லை. நம்முடைய பிரச்சனை நாம் தான் பொறுப்பு. மற்றவர்களைக் குறை சொல்லுவதால் எந்தப் பயனுமில்லை. இது தான் சீன சமூகம்!

நம்மாலும் முடியும்!




Friday 14 May 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி.........! (55)

சீனர் சமூகமே நமக்கு எடுத்துக்காட்டு  (i)

நாம் மலேசியர்கள். நம் நாட்டில் பெரும் பணக்காரர்கள் என்று வரும்  போது  யார் நம் கண் முன்னே வருவர்?

எல்லா இனத்தவரிலும் பணக்காரர்கள் உண்டு.  சீனர், இந்தியர், மலாய்க்காரர் அனைவரிலும் உண்டு.  ஆனால் ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால் எங்கே போகிறோம்?  எத்தனை கடைகள் இருந்தாலும் கடைசியில் சீனர் கடைகளுக்குத் தான் போகிறோம்! இந்தியர் கடைகள் ஐந்து இருந்தால் சீனர் கடைகள் ஐநூறு இருக்கும் போது நாம் இயல்பாகவே சீனர்களை நாடித்தான் செல்ல வேண்டிய சூழல்!

சீனர்கள் எல்லா விதத் தொழில்களிலும் இருக்கின்றனர். சிறிய, நடுத்தர, பெரிய - இப்படி அனைத்துத் தொழில்களிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றனர். அதனால் தான் பொருளாதாரம் என்னும் போது அனைத்தும் அவர்கள் கையில் இருப்பதால் இயல்பாகவே அவர்கள் தான் முன்னணியின் நிற்கின்றனர்.

அன்று சிறிய தொழில்களைச் செய்தவர்களின் வீட்டுப் பிள்ளைகள் இன்று அவைகளைப்  பெரிய தொழில்களாக மாற்றிவிட்டனர்!  எல்லாருமே சிறிய தொழில்களிலருந்து தான் வர வேண்டும். யாரும் விதிவிலக்கல்ல!

சிறிய தொழில்களிலும்,  நடுத்தர தொழில்களிலும் ஈடுபாடு காட்டினால் தான் பெரிய  தொழில்களுக்குப் போக முடியும். அது தான் பரிணாம வளர்ச்சி என்பது. எடுத்த எடுப்பில் பெரிய தொழில்களில் குதித்து விட முடியாது. அது சாத்தியமுமில்லை. வாய்ப்புமில்லை.

இன்று நாட்டின் பொருளாதார சக்தி என்பது சீனர்களின் கையில் தான். எல்லாத் தொழில்களையும் அவர்கள் தான் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றனர்!  அவர்களிடம் பொருள்களை வாங்கித்தான் மற்ற இனத்தவர் தொழில் செய்ய வேண்டிய சூழல் உள்ளது. அதனை அப்படி ஒன்றும் எளிதில் மாற்றி விட முடியாது. அவர்களும் விட்டுக் கொடுக்கத் தயாரில்லை!  அது அவர்களின் கடும் உழைப்பால் நேர்ந்தது. 

நாம், குறிப்பாக தமிழர்கள், சீனர்களிடமிருந்து படிக்க வேண்டியது நிறையவே உள்ளது.  அதுவும் தொழில் ஈடுபாடு வேண்டுமென்றால் நாம் சீனர்களின் வாழ்க்கையை ஆராய்ந்தாலே போதும். நாம் தலைநிமிர்ந்து வாழலாம்.

Thursday 13 May 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி.....,......! (54)

சிறிய நடுத்தர தொழில் தான்  நமது வலிமை! 

தொழில் தொடங்கும் நம் இனத்தவர்கள் ஒரு சில குறிப்பிட்ட தொழில்களிலேயே கவனம் செலுத்துகின்றனர். குறிப்பாக உணவகம் தான் நமது முதன்மைத் தேர்வு! தவறில்லை!

அதை நாம் குறை சொல்லவில்லை. அவர்களுக்குத் தெரிந்த ஒரு தொழிலைத் தான் அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள்.  இன்று நம்மில் பலர் சமையற்கலை தெரிந்தவர்களாக இருப்பதால் அதன் விளைவு தான் இது!

ஆனால் நம் இளைஞர்களில் பலர் பல்வேறு திறன்களை அறிந்தவர்களாக இப்போது இருக்கின்றனர் என்பதால் ஒரு சில மாற்றங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

முடிந்தவரை உணவகங்களைத் தவிர்த்து வேறு பல தொழில்களில் ஈடுபடுவதே சிறப்பாக இருக்கும். மளிகைக்கடைகள் கூட நம்மில் பலர் வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். என்ன தான் பேரங்காடிகள் பல இருப்பினும் மளிகைக்கடைகளை அப்படியெல்லாம் ஒழித்து விட முடியாது. அவைகள் இருக்கத்தான் செய்யும். நம் இனத்தவர் பலர் பேரங்காடிகளுக்கு நிகராக பெரும் அங்காடிகளை  நடத்துகின்றனர். ஆனால் தொடர் அங்காடிகளை நடத்துகின்ற அளவுக்கு இன்னும் நாம் வளரவில்லை. அதுவும் சீக்கிரம் நடக்கும் என எதிர்பார்க்கலாம்.

கார் விற்பனைத் துறையில் எனக்குத் தெரிந்து ஓரிருவர் ஈடுபட்டிருக்கின்றனர்.  மலேசிய அளவில் இன்னும் அதிகமானோர் இருக்கலாம். கார் பழுது பார்க்கும் தொழிலில் பலர் இருக்கின்றனர். நம்மைச் சுற்றிப் பார்த்தாலே போதும்  அதன் எண்ணிக்கைப் பெரிது எனச் சொல்லலாம்.  முடித் திருத்தகம் என்பது இப்போது அதனைச் சீனர்கள் நவீனப்படுத்தி அதிகக் கட்டணங்களை வசூலிக்கின்றனர்.  நமது இளைஞர்களும் நவீனத்தைப் பின்பற்றுகின்றனர் என்பதும் மகிழ்ச்சிக்குரிய செய்தி. ஒரு காலக் கட்டத்தில் அது பெரும்பாலும் நமது சமூகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு தொழில். ஆனால் நவீனப்படுத்தாததால் அது நமது கையை விட்டுப் போய்விட்டது. அது மீண்டும் நமது கைக்குத் திரும்புகிறது. இப்போது இளைஞர்கள் பலர் அதிக வருமானம் தரும் தொழில் என்பதால் அதன்பால் அதிகம் ஈர்க்கப்படுகின்றனர் என்பது பெரிய மன மாற்றம்.

இன்னும் ஒரு சில தொழில்கள் பெண்கள் வீட்டிலிருந்தே செய்கின்றனர். அதற்குப் போதுமான பொருளாதாரம் இல்லை என்பது தான் காரணம். கேக் போன்ற இனிப்பு வகைகளைச் செய்து வீட்டிலிருந்தே பலர் செய்து பலவித நிகழ்வுகளுக்கு விற்பனை செய்கின்றனர். ஒப்பனைத்துறை இப்போது நம்மிடையே வளர்ச்சி அடைந்து கொண்டு வருகிறது.  தையல் துறை நாம் மறந்துவிட்ட ஒரு தொழில்.  ஆனால் பெண்களே அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட ஒரு தொழில்.

பொருளாதார நெருக்கடியினால்  இந்த தொழில்களெல்லாம் பெரிய வளர்ச்சி காண முடியவில்லை. ஆனால் வளர்ந்து வருகிறது. இன்னும் பெரிய அளவில் வளர வேண்டும்.

சிறிய நடுத்தர தொழில்கள் எல்லாமே பாராட்டுக்குரிய தொழில்கள் தாம். ஆனால்  நாம் அதனை பெரிய அளவில் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அப்போது தான்  நமது வளர்ச்சி சரியானதாக இருக்கும். இல்லையெனில் என்றுமே நாம் வாடிக்கையாளர்கள் தான் இருப்போம்!

தொழில் என்பது நமது வலிமையைக் காட்டும். சிறிதோ பெரிதோ நம் முத்திரையைப் பதிப்போம்!

Tuesday 11 May 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி......! (53)



சிறுபான்மையினரா? அதனால் என்ன?





 Tan Sri A.K.Nathan & Narish Nathan  (Eversendai Corporation)









ஆம்! நாம் சிறுபான்மையினர் தான்! அதனால் என்ன? 

மலேசிய பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் நமது சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் இருக்கிறார்.  அதுவே நமக்குப் பெரும்பான்மையினரின் பெருமையைக் கொடுக்கிறதே!  அதற்காக நம்மை நாமே பாராட்டிக் கொள்ளலாம்!

மேலே படத்தில் உள்ள ஏ.கே.நாதன் பெரும் தொழில் அதிபர்களில் ஒருவர். அவர் சார்ந்த தொழில் அதிகம் வெளி நாடுகளில்! இவரைப் போன்ற தொழில் அதிபர்கள் இன்னும் பலர் இருக்கின்றனர்.  பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்கள் ஞானலிங்கம், டோனி ஃபெர்னாண்டெஸ், மோகன் லூர்துநாதன் இப்படிப் பலர்.

நாம் சிறுபான்மையினர் என்று கவலைப்பட ஒன்றுமில்லை.   சில ஆண்டுகளுக்கு முன்னர் நான் படித்த ஒன்று ஞாபத்திற்கு வருகிறது. இந்தோனேசிய மக்கள் தொகையில் சீனர்களின் தொகை சுமார் 3% விழுக்காடு தான்.  இந்த மூன்று விழுக்காடு சீன மக்கள் தான் இந்தோனேசியாவின் 90% விழுக்காடு பொருளாதாரத்தைக் கையில் வைத்திருக்கின்றனர்!

நமது மலேசிய நாட்டில் நம் விழுக்காடு என்பது 8% விழுக்காடு என்பதும் கூட சிறிது என்று சொல்ல இடமில்லை. நம்மால் மலேசிய பணக்கரர் பட்டியலில்  இடம் பிடிக்காவிட்டாலும் கூட வேறு வகையில் நமது பலத்தைக் காட்டலாம். சிறிய, நடுத்தர தொழில்களில் நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்பது தான் நமது வேண்டுகோள்.

நம்மால் எந்த தொழில் - நமக்கு ஏற்றத் தொழில் எது,  போன்றவைகளைத் தெரிந்து கொண்டு தொழிலில் இறங்க வேண்டும் என்பது  நமது தலையாய்க் கடமை. இன்று நாம் அசட்டையாக இருந்து விட்டால் பாக்கிஸ்தானியரும், வங்காளதேசிகளும் நம்முடைய தொழில்களை அவர்கள் பிடித்துக் கொள்ளுவார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.

தொழில் செய்ய வாய்ப்புக்கள் அதிகம். தொழிலில் இறங்க நமக்குத் துணிச்சல் வேண்டும். ஆயிரத்தில் ஒருவனாக இருக்க வேண்டும். தொழில் செய்பவன் தனித்து நிற்பவன். தொழில் என்பது துணிச்சல் மட்டும் தான்.

சிறுபான்மை, பெரும்பான்மை என்பதெல்லாம் தேவை இல்லாத ஒன்று. தேவை துணிச்சல் ஒன்றே!


Monday 10 May 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி..........! (52)

 சிறுபான்மை தான் ஆனால்....!


நமது மலேசிய இந்தியர்களில் குஜாராத்தியர் என்பவர்கள் சிறுபான்மை இனத்தவர் தான். 

ஏன் நம்மில் பலருக்கு  குஜாராத்தியர் என்றாலே யார் என்று தெரிய வாய்ப்பில்லை  இங்கு பலர் அவர்களைப்  பட்டேல் என்பார்கள். தமிழ் நாட்டில் இவர்களை மார்வாடிகள் அல்லது பணியாக்கள் எனகிறார்கள்.

ஆனால் நம்மில் பலருக்குத் தெரிந்த ஒன்று இவர்கள் பெரும்பாலும் தொழில் செய்பவர்கள். எல்லாப் பெரிய சிறிய பட்டணங்கள் ஒன்று விடாமல் இவர்கள் தொழில் செய்கிறார்கள். அதுவும் குறிப்பாக வீட்டுத் தளவாடப் பொருள்களை விற்பவர்களாக இருக்கிறார்கள்.

இவர்களுடைய தொடர்புகள் பெரும்பாலும் தமிழ்ச் சமூகத்தோடு தான். ஆனால் இப்போது மாறிவிட்டது. மலாய் சமூகத்தினரோடும் அதிகமான தொடர்புகள் ஏற்பட்டுவிட்டது. சீன சமூகத்தோடு வாய்ப்பில்லை. இவர்கள் செய்கின்ற தொழிலைத்தான்  அவர்களும் செய்கிறார்கள்!

ஆனால் இவர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும் இன்றைய நிலையில்  நாம் அலசி ஆராய்ந்தால் இந்திய சமூகத்தில் பெரும் பணக்காரர்களாக இருப்பவர்கள் இவர்கள் தான்!

இவர்களைப் பற்றியான ஒரு விஷயம் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இவர்கள் எங்கும் வேலை செய்ததாகத் தெரியவில்லை!  இந்த நாட்டிற்கு வரும்போதே தொழிலோடு வந்திருக்கிறார்கள்! அதுவும் குறிப்பாக வீட்டுத் தளவாடப் பொருள்களை விற்பவர்களாகத்தான் வந்திருக்கிறார்கள்! பின்னர் மற்ற பல தொழில்களில் கவனம்  செலுத்தியிருக்கிறார்கள்.

அவர்களிடம் உள்ள ஒரு சிறப்பு அவர்கள் எங்கு சென்றாலும் அவர்களோடு கொண்டு செல்வது தொழில் என்பது மட்டும் தான்.

அவர்கள் இல்லாத நாடுகளே இல்லை எனலாம். எல்லா நாடுகளிலும் அவர்கள் செய்வது வியாபாரம் மட்டும் தான். வியாபாரத்தையும் இவர்களையும் பிரித்துப் பார்க்க முடியாது. இந்தியாவில் இந்த இனத்தவரே பணக்காரர்களாக இருக்கிறார்கள். இந்தியாவின் முதல் பணக்காரர் அம்பானி குஜராத்தியர் தான்.

உலகில் உழைப்பு என்றால் நம்மைப் பொறுத்தவரை அது ஜப்பானியர் அல்லது சீனராகத்தான் இருக்கு முடியும் என்கிறோம். ஆனால் இவர்களோ "குஜாராத்தியர் போல் உழைக்க யாருமில்லை. எங்களோடு யாராலும் போட்டி போட முடியாது!" என்கிறார்கள்! 

மலேசிய இந்தியர்களில் இந்த குஜாராத்தியரே பெரும் பணக்காரர்கள் என்று துணிந்து சொல்லலாம். நமக்கு அவர்களைப் பற்றி அதிகம் தெரியவில்லை காரணம் அவர்கள் நம்மிடையே  அதிகம் பேசப்படுவதில்லை.

தொழில் செய்வதற்கு சிறிய இனமோ பெரிய இனமோ என்கிற அவசியமில்லை. தேவை எல்லாம் துணிச்சல் தான்.  அந்த துணிச்சல் என்பது குஜராத்தியரிடம் உள்ளது.  அவர்கள் மக்களை நம்புகிறார்கள். அது தான் அவர்களின் வெற்றி.

பணமிருந்தால் நாம் தான் பெரும்பான்மை!


Saturday 8 May 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி .......! (51)

 பணம் தான் வியாபாரம்!

நாட்டுக்கோட்டை செட்டியார் என்றாலே நம்மில் பெரும்பாலும் அறிந்திருப்பர். மலாய் மொழியில் பேசும் போது பணக்காரர்களை "செட்டி"  என்று குறிப்பிடும் அளவுக்கு செட்டியார்கள் மிகவும் பிரபலம்!

பொதுவாக இவர்களின் காலம் என்பது தமிழ் முஸ்லிம்கள் வருகைக்குப் பின்னரே நிகழ்ந்திருக்கிறது எனலாம்.

இவர்களிடம் உள்ள குறிப்பிடத்தக்க அமசம் என்பது இவர்கள் வியாபாரம் செய்ய வந்தவர்கள் என்பதை விட இவர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு பண உதவி செய்து அதன் மூலம்  மற்றவர்களைப் பொருளாதார வளர்ச்சி பெறச் செய்தவர்கள் என்று சொல்லலாம். அது தான் லேவாதேவி தொழில்.

ஆமாம்,  வங்கிகள் அதிகம் இல்லாத ஒரு காலக்கட்டத்தில் இவர்கள் தான் பெரும்பாலும் வங்கிகளாக செயல்பட்டனர்.  அந்த வகையில் நாட்டின் வளர்ச்சிக்கு இவர்களின் பங்கு அளப்பரியது.

அந்த காலக்கட்டத்தில் சீனர்களும் தொழிலாளர்களாகத்தான் வேலை செய்து வந்திருக்கின்றனர். அதனால் வியாபாரத்துறையில் அவர்களின் ஈடுபாடு அதிகம் இல்லை. அதன் பின்னர் தான் சீனர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு செட்டியார்கள் பெரும் அளவில் பங்காற்றிருக்கின்றனர்.

இப்போது வங்கிகள் அதிகம் பெருகிவிட்டதால் செட்டியார்களின் லேவாதேவி தொழில் என்பது நசிந்து விட்டது என்று சொல்லலாம். அதனால் அவர்கள் வேறு பல தொழில்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். செட்டியார் சமூகத்தினர் மற்றவர்களிடம் போய் வேலை செய்வது என்பது அரிது. தங்களை ஏதோ ஒரு வகையில் வியாபாரத்தில் ஈடுபடுத்திக் கொள்ளுவது என்பது தான் அதிகம்.

மலேசிய நாட்டின் பல சிறிய பெரிய நகரங்களில் அவர்கள் தொழில் செய்யாத இடமே இல்லை. இன்று வங்கிகள் எங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கெல்லாம் அவர்கள் இருந்திருக்கின்றனர்.

தமிழ்ச் சமூகத்தில் செட்டியார் சமூகத்தினர் தனித்து நிற்கின்றனர், அவர்களுக்கென்று ஒரு முருகன் கோயில். தனி கணக்கு வழக்குகள்.  கூடிப்பேசி முடிவு எடுப்பது. சமூகத்தில் எந்த அடிதடியும் இல்லை. வர்த்தகத்தில் மட்டும் ஈடுபாடு.  தங்களின் கட்டுப்பாட்டில் பல நிறுவனங்கள்.    நாட்டின் பல துறைகளில்  முத்திரைப் பதித்திருக்கின்றனர். அமைதியான சமூகம் என்று பெயர் எடுத்திருக்கின்றனர்.

நாட்டுக்கோட்டை செட்டியார்கள் நமது தமிழ்ச் சமூகத்தின் பெருமை மிக்க சமூகம். அவர்களின் வழி தனி வழியாகத்தான் இன்றுவரை உள்ளது. மற்ற சமூகத்தினருக்கு நல்ல வழிகாட்டியாகவும் உள்ளனர்.

பணம் பணத்தைக் கொண்டு வரும்!  முன்னேற்றத்தையும் கொண்டு வரும்!

Friday 7 May 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி......! (50)

வியாபாரந்தான் அவர்களது தொழில்!


 
தமிழ் முஸ்லிம்கள் பினாங்கு மாநிலத்திற்கு 200 ஆண்டுகளுக்கு முன்னர் வந்தவர்கள்.  அவர்கள் வந்த காலந்தொட்டே வியாபாரம் தான் அவர்களின் தொழில்.  வெள்ளைக்காரர்கள் அங்கு வருவதற்கு முன்னரே அவர்கள் அங்கிருந்து தொழில் செய்து வருகின்றனர்.

தமிழ் முஸ்லிம்கள் சிறிய  சமூகத்தினர் தான். இப்போதும்  அதே நிலை தான். அவர்கள் அந்த காலத்து மலேயாவிற்கு வரும் போது ஆயிரக்கணக்கிலோ இலட்சக்கணக்கிலோ வரவில்லை. சிறு சிறு குழுக்கலாக வந்தவர்கள்.

ஆரம்பக் காலத்தில்  சிறிய சிறிய மளிகைக் கடைகள், உணவுக் கடைகள்,  சைக்களில் பொருள்களை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்வது போன்றவைகளில் தான் அவர்கள் கவனம் செலுத்தினர். அத்தோடு இன்னும் கடற்கரை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டனர்.

அன்று அவர்களால் ஏற்படுத்தப்பட்ட பல தொழில்கள் இன்று உலக அளவில் சென்று விட்டன. இன்று அவர்களின் தொழில்கள் பல அவர்களின் வாரிசுகளால் வெற்றிகரமாக நடத்தப்படுகின்றன.

அன்று நமது தமிழ் முஸ்லிம்கள் ஊரறியாத  இந்த ஊருக்கு வந்து, இங்கு  வந்து வேலை செய்து, அதில் கிடைத்த ஊதியத்திலிருந்து சிறு சிறு வியாபாரங்களில் ஈடுபட்டு தங்களை வளர்த்துக் கொண்டனர். அன்று அவர்கள் செய்த அந்த வியாபாரங்கள் தான் இன்று வளர்ந்து ஆலமரமாக 
நிற்கின்றன.

அவர்களுடைய வாரிசுகள் இன்று பல துறைகளில் வளர்ச்சி அடைந்திருக்கின்றனர். வியாபாரம், அரசியல், அரசாங்க வேலைகள் என்று பெரிய அளவில் அவர்களின் முன்னேற்றம் அமைந்திருக்கின்றது. வியாபாரத்துறை இன்றளவும் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றது.

ஒரு கணம் அவர்களது வளர்ச்சியைப் பற்றி சிந்தித்துப் பார்ப்போம். அவர்கள் இங்கு  வந்த போது பினாங்கு என்பதே ஏதோ ஒரு பெரிய கிராமமாகத்தான் இருந்திருக்க வேண்டும். துறைமுகம் இருந்ததால் அதனையொட்டி பல தொழில்கள்  தோன்றிருக்கின்றன. அந்த சூழலை வைத்து அவர்கள் தங்களது வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொண்டனர்.

தமிழ் நாட்டிலிருந்து இங்கு வந்த போது பணத்தோடு வரவில்லை. கிடைத்த வேலைகளைச் செய்து, கிடைத்த பணத்தை சேர்த்து வைத்து, அதன் மூலம் சிறு சிறு வியாபாரங்கள் செய்து தங்களை வளர்த்துக் கொண்டனர். அன்று அந்த சிறு வியாபாரிகள் தான் இன்றைய பினாங்கின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்திருக்கின்றனர். அவர்களும் இன்று பெரிய பெரிய நிறுவனங்களை நடத்துகின்றனர்.

ஒன்றை நாம் புரிந்து கொள்ளலாம். சிறிய அளவில் வியாபாரங்களில் ஈடுபட்ட தமிழ் முஸ்லிம்கள் இன்று பொருளாதாரத்தில் வலுவான நிலையில் உள்ளனர் என்பதை மறப்பதற்கில்லை.

இன்று அவர்கள் தமிழ்ச் சமூகத்திற்குப் பெருமை சேர்க்கின்றனர்!


Wednesday 5 May 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி........! (49)


அனுபவங்கள் வெற்றிக்கு அடையாளம்


ஒரு தொழில் முனைவருக்கு தோல்விகள் என்பது வெற்றிக்கான அடையாளம். எத்தனை தோல்விகள் அடைந்தாலும் அடுத்தடுத்து அவர்களது முயற்சிகள் தொடரும்.

தொழில் செய்வதில் தடைகள் வரத்தான் செய்யும். அப்படி  தடையே இல்லாவிட்டால் யார் வேண்டுமானாலும் தொழிலை கையில் எடுப்பார்கள்!  ஓரிரு தடைகள் மட்டும் தான் என்றால்  எல்லாருமே தொழில் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.  தொழிலில் பல தடைகள், பல பிரச்சனைகள், பண பிரச்சனைகள் உள்பட அனைத்தும் உண்டு!

அதனால் தான் நமது இனத்தினர் தொழில் என்றாலே ரொம்பவும் யோசிக்கின்றனர். கடைசிவரை யோசித்துக் கொண்டே இருக்கின்றனர்! அங்கு தான் தவறுகள் நடக்கின்றன. யோசித்து ஒரு முடிவுக்கு வர முடியவில்லை என்றால் அதற்கு யோசிக்காமலே இருந்து விடலாம்! ஏன் அந்த சுமையை சுமந்து கொண்டே இருக்க வேண்டும்? ஆமாம், அதுவும் ஒரு சுமை தானே!

ஆனால் ஒன்று உங்களின் இயலாமையை உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு இலவசமாக உங்களின் இயலாமையைப்  பரப்பிக் கொண்டு திரியாதீர்கள்!

தொழில் முனைவோர் என்றாலே அவர்களுக்கு அசாதாரண செயல்கள் செய்வதில் அசாத்தியமானவர்கள்.  எத்தனை தோல்விகள் வந்தாலும்  "நீயா நானா ஒரு கை பார்ப்போம்!" என்கிற மனநிலையில் இருப்பவர்கள். தோல்விகள் அவர்களைத் தலைநிமிரச் செய்யுமே தவிர துவண்டுப் போகச் செய்யாது!

எத்தனை தோல்விகள் வந்தாலும் அதனை வெற்றியாக மாற்றும் திறமை தொழில் முனைவோருக்கு உண்டு. அவர்கள் தான் உண்மையான தொழில் முனைவோர். அவர்கள் தோல்விகளை பாடமாக எடுத்துக் கொள்வார்கள். பாடமாக எடுத்துக் கொண்டு தங்களது தொழிலைத் தொடர்வார்கள்.

தோல்விகளே வெற்றிப்படிகள்!

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி .........! (48)

சமாளிக்க கற்றுக் கொள்ளுங்கள்!    


பிரச்சனைகள் எங்கும் உண்டு. எல்லாப் பக்கமும் உண்டு. தினசரி வாழ்க்கையில் எத்தனையோ பிரச்சனைகளை நாம் கண்டு கொண்டிருக்கிறோம். ஆனால் அத்தனை பிரச்சனைகளையும் எப்படி எப்படியோ சமாளித்துக் கொண்டிருக்கிறோம்! அதாவது எத்தகைய பிரச்சனைகளாக இருந்தாலும் நம்மால் சமாளிக்க முடியும் என்கிற துணிச்சல் நமக்கு உண்டு.

ஆனால் அதுவே சொந்தத் தொழில் என்று வரும் போது அதனை சமாளிப்பதில் சிரமப்படுகிறோம். அதாவது  நாமே ஒரு பயத்தை ஏற்படுத்திக் கொள்ளுகிறோம்!  அதற்குப் பதிலாக அதனை எளிதாக எடுத்துக் கொண்டு அதனை சமாளிக்க முடியும் என்கிற நம்பிக்கையோடு செயல்படுவதே அறிவுடமை.

நம்மால் சமாளிக்க முடியும். அந்த ஆற்றல் நம்மிடம் உண்டு. வாழ்க்கையில் எல்லாமே ஒரு சமாளிப்புத் தன்மையைக் கொண்டது தான். சமாளிப்பது ஒரு பிரச்சனைக்குத் தற்காலிகத் தீர்வைக் கொடுக்கும்.

தொழில் செய்கின்ற ஒரு சிலரை நான் அறிவேன்.  எவ்வளவோ பிரச்சனைகள் அவர்களுக்கு உண்டு. தொழிலில் பிரச்சனைகள் என்றாலே அது பொருளாதாரச் சிக்கல்கள்  தான்! அதுவும் குறிப்பாக கடன் பிரச்சனைகளாகத் தான் இருக்கும். ஆனால் இந்த ஒரு சிலர்  இருக்கிறார்களே இவர்கள் ஒன்றுமே ஆகாதது போல சிரித்துப் பேசி மகிழ்ந்து கொண்டிருப்பார்கள்!  இவர்கள் எத்தகைய பிரச்சனைகளாக இருந்தாலும் அவைகளை மிக எளிதாக சமாளித்து விடுவார்கள்! அவர்கள் சொல்லுவதெல்லாம் ஒன்று தான்:  "இதுவும் கடந்து போகும்" என்பது தான்!  இன்னும் ஒரு சிலர் என்ன தான் தலை போகிற காரியமாக இருந்தாலும்: Take It Easy!  என்று சொல்லிவிட்டு அடுத்த காரியத்தைப் பார்க்க போய்விடுவார்கள்! நமக்குப் பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ  அன்றாட வாழ்க்கையில் இப்படித்தான் பிரச்சனைகளைச் சமாளிக்க வேண்டியுள்ளது!

ஒரு சில வியாபாரிகளைப் பார்க்கும் போது நமக்கே பாவமாக இருக்கும்! எந்நேரமும் உம்ம்...என்று இருப்பார்கள்! பிரச்சனை பெரிதாக ஒன்றும் இருக்காது. ஒரு சிறிய பிரச்சனை அதனை சமாளிக்கத் தெரியாத அப்பாவியாக இருப்பார்கள்!

பிரச்சனைகள் எல்லாம் ஒன்று தான். அவைகளை சமாளிக்கும் திறன் நமக்கு வேண்டும். சாதாரண நடைமுறை வாழ்க்கையில் சமாளிக்கும் திறன் நமக்கு உண்டு. ஆனால் வியாபாரம் என்று வரும் போது நாம் தடுமாறுகிறோம். அந்த தடுமாற்றம் தேவையற்ற ஒன்று.

சவாலே சமாளி!

Sunday 2 May 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி.....! (47)

இது சரியான தருணமா?


புதிய தொழில்கள் செய்வதற்கு இது ஏற்ற தருணமா என்பது கேட்க வேண்டிய கேள்வி தான்.

காரணம் எத்தனையோ தொழில்கள் மூடப்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய நிலையில் புதியதொழில்கள் தொடங்குவதற்கு இது சரியான தருணம் அல்ல என்கிற முணுமுணுப்பு நமக்கும் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறது.

ஆனாலும்  புதிய புதிய தொழில்கள் தொடங்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன.  அப்படி ஒன்றும் முழுமையாக நின்றுப்போய் விட வில்லை. அதிலும் குறிப்பாக சிறு சிறு முயற்சிகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. சிறிய தொழில்கள் ஆங்காங்கே தொடங்கப்பட்டு பலதொழில்கள் வெற்றிகரமாக நடந்து கொண்டு இருக்கின்றன. இதற்காக  நம்மின பெண்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். காரணம் வேலை இல்லை. குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். வேறு வழியில்லை. தங்களுக்கு என்ன தெரியுமோ அதைச் செய்கின்றனர். பெரும்பாலும் உணவு சார்ந்த வியாபாரங்கள்.  இதில் பெண்கள் பங்கு தான் அதிகம்.

இன்னொன்று இந்த தொற்று நோய் காலத்தில் ஓரளவு பணம் வைத்திருப்பவர்களைக் கவர்ந்த தொழில் என்றால் அது மளிகைக் கடைகள். எத்தனை பேரங்காடிகள் இருந்தாலும் நமக்கு அருகில் இருப்பவை இந்த சிறிய நடத்தர மளிகைக் கடைகள் தான். நாம் பெரும்பாலும் தூரமான இடங்களுக்குப் போக முடியாத சூழலில் இந்த கடைகள் தான் நமக்கு வாய்ப்பாக அமைகின்றன.

இன்னும் கணினி நிறுவனங்களும் ஆங்காங்கே தலைதூக்க ஆரம்பித்து விட்டன!  கையில் பணம் இருந்தால் எங்கே பணம் பார்க்க முடியுமோ அங்கே எல்லாம் பணம் உள்ளவர்கள் பாய ஆரம்பித்துவிட்டனர்!

ஆக ஏதோ ஒரு வகையில் ஒரு சில தொழில்கள் மீண்டும் தலை காட்டுகின்றன. தொழில்களை நிறுத்த முடியாது. எல்லாத் தொழில்களும் நாட்டில் மூடப்பட்டுக் கிடந்தால் அது நாட்டுக்கு நல்லதல்ல. சிறு நடத்தர தொழில்கள்  மீண்டும் வர வேண்டும். மீண்டும் தொடக்கபட வேண்டும்.

ஆனால் உணவகத் தொழில் தான் இன்னும் நம் இனத்தவருக்கு விரும்பி செய்கின்ற தொழிலாக இருக்கிறது. அதுவும் சரிதான்.  ஒரு பக்கம் ஆள் பற்றாக்குறை என்று சொல்லிக் கொண்டே இன்னொரு பக்கம் புதிதாக திறக்கப்படும் தொழில் என்றால் அது உணவகத் தொழில் தான்.

தொழில் செய்ய இது சரியான தருணமா என்று கேட்டால் "ஆம்!இல்லை!" என்று தான் சொல்ல வேண்டியுள்ளது!  எல்லாம் அவரவர் கையிருப்பைப் பொறுத்தது!

துணிந்தவனுக்கு துக்கமில்லை என்பார்கள். எல்லாமே சரியான தருணம் தான்!

Saturday 1 May 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி........! (46)

 சிறு தொழில்களே பொருளாதார பலம்!

பொருளாதாரம் என்னும் போது நம்மை சீனர்களோடு ஒப்பிடுவது சரியாக வராது.

அவர்கள் பொருளாதாரத்தில் வளர்ந்துவிட்ட ஒரு சமூகம். அவர்கள் சிறிய தொழில், நடுத்தரத் தொழில் அடுத்து பெரும் தொழில்கள் அனைத்தும் சீனர்களின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன.   

நமது சமுதாயத்தைப் பொருத்தவரை நாம் ஆரம்பப் புள்ளியில் உள்ளவர்கள்.   இனி நாம் எப்படி செயல்பட வேண்டும் என்பதைத்தான் யோசிக்க வேண்டும். எல்லாக் காலங்களிலும்  சம்பளம் வாங்கும் சமூகமாகவே நாம்  இருக்கப் போகிறாமா, அப்படியே சம்பளத்தை நம்பியே வாழ்கின்ற சமூகமாக இருக்கப்போகிறோமா என்பதை நாம் யோசித்து முடிவெடுக்க வேண்டும்.

நமது குடும்பங்களிலும் எங்கோ ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும்.  அது அத்தியாவசியம். இப்போதுள்ள இளைஞர்களுக்குக் கல்வி உண்டு. பல தகுதிகளைப் பெற்றிருக்கின்றனர். அவர்கள் அனுபவம் பெற சில நிறுவனங்களில் வேலை செய்து அனுபவம் பெற்றுக் கொள்ளலாம். அதன் பின்னர் சொந்த தொழிலுக்கு வரலாம். அவருடைய சொந்தங்கள் அவருக்கு உறுதுணையாக இருக்க  வேண்டும்.  "ஆ! ஊ!" என்று பயத்தைக் காட்டி ஒடுக்கிவிடக் கூடாது!

எனக்குத் தெரிந்த இளைஞர் ஒருவர். படித்தவர். ஒரு நிறுவனத்தில் விற்பனையாளராகச் சேர்ந்தார். பின்னர் அதன் நிறுவனத்தின் நிர்வாகியாக உயர்ந்தார். அதன் பின்னர் சொந்தமாகவே தொழிலைத் தொடங்கினார். இப்போது இரண்டு நிறுவனங்கள்     அவரது கைவசம். இரண்டும் வெற்றிகரமாக இயங்குகின்றன. இப்போது அவர் வெற்றிகரமான ஒரு தொழிலதிபர். அவரது பின்னணியோ அப்படி ஒன்றும் சொல்லும்படியாக இல்லை.  தோட்டப்பாட்டளியின் மகன் தான். முதலில் அவர் அனுபவத்தைத் தேடிக் கொண்டார். பின்னர் தானே களத்தில் இறங்கினார்.  எல்லாமே அவரது பணம் தான்.  யாருடைய உதவியையும் அவர் நாடவில்லை.

நமது வளர்ச்சி என்பது இப்படித்தான் அமைய வேண்டும். வேலையில் சேருவது அனுபவம் பெற என்கிற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.  பெரியதொரு படிப்பைப் படித்து விட்டு வேலை செய்கிறோம் என்றால் அது அனுபவம் பெற என்பதாக இருக்க வேண்டும்.

சிறு தொழில்களில் நாம் அதிகமாகக் கால்பதிக்க வேண்டும்.  இப்போது நமது பெண்கள் சிறு சிறு தொழில்களில் நிறையவே கவனம் செலுத்துகின்றனர். அதுவே நல்ல வளர்ச்சி.  நமது சமூகத்தில் பெண்கள் முன் எடுப்பது நல்லதொரு மாற்றத்தைக் கொண்டு வரும் என்றே கருதுகிறேன். அது போல இளைஞர்களும் வியாபாரம் செய்ய முன் வர வேண்டும். உங்களுக்கு ஏற்ற தொழில்களை தேர்ந்தெடுங்கள். அதன் பின்னர் அதனை நீங்கள் விரிவுபடுத்தலாம்.

நாம் தொழில் செய்வது என்பது காலத்தின் கட்டாயம். பணம் இல்லாத சமூகம் ஓர் அடிமைச் சமூகம் என்பதை நினைவில் வையுங்கள்! பொருளாதாரம் அற்ற சமுதாயத்தை யார் வேண்டுமானாலும் கேலியும் கிண்டலும் செய்வான். பொறுத்துக் கொண்டு போக வேண்டியது தான்.

சிறிய தொழில்களில் அதிக ஈடுபாடு காட்டுங்கள். சிறிய தொழிலாக இருந்தாலும் அது மிகவும் சக்தி வாய்ந்த தொழில் என்பதை மறவாதீர்கள். 

நமது சமுதாயத்திற்குப் பொருளாதார பலம் மிகவும் முக்கியம். பொருளாதார பலம் நமக்குக் கௌரவத்தைக் கொடுக்கும். பெருந்தொழில்களில் ஈடுபடும் முன்னர் கீழ்மட்டத்தில் உள்ள தொழில்களை நம் வசமாக்குவோம். 

தொழில் தான் நம் வருங்காலம்!