Tuesday, 22 November 2016

நஜிப்: போராட்டம் போலியானது!


'பெர்சே' யின் இன்றைய (19.11.2016) ஐந்தாவது பேரணி போலியானது என தனது வலைப்பதிவில் வர்ணித்திருக்கிறார் பிரதமர் நஜிப்!

இதுவரை நடந்த  பேரணிகள் அனைத்தும்  எதிரணியினர் செய்த ஏற்பாடுகள் தான்!  மக்களால் தேர்ந்தெதெடுக்கப்பட்ட  ஓர் அரசை கவிழ்ப்பது தான் அவர்கள் நோக்கம் எனவும் அவர் குறிப்பிடுகிறார்.

ஆனால் அவர் சொல்லும்: "மக்கள் அரசாங்கத்திடம் சேவையைத் தான் எதிர்பார்க்கிறார்கள்"  என்று சொல்லுவது தான் நமக்குக் கொஞ்சம் நெருடுகிறது!

பிரதமர் சேவை என்று எதனைக் குறிப்பிடுகிறார்?  விலைவாசிகள் எக்கச்சக்கமாக ஏறிவிட்டன. அரசாங்கம் எதனையும் கட்டப்படுத்த முடியும் என்னும் நிலையில் இல்லை என்று தான் சராசரி மனிதன் நினைக்கிறான்.

பெட்ரோல் விலை 15 காசு ஏற்றப்பட்டது சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்ள முடியாது. இதனை ஒட்டி எல்லா விலைகளும் ஏறி விட்டன.

சமையல் எண்ணைய் விற்பனையில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்று சும்மா அமைச்சர்கள் அறிக்கைவிட்டால் போதாது. உண்மையில் இப்போது எண்ணைய் கிடைக்கவில்லை என்பது தான் உண்மை! பிலாஸ்டிக் பைகளில் விற்கப்படும் விலை குறைவான எண்ணைய் இப்போது முற்றிலுமாகக் கிடைக்கவில்லை. எத்தனையோ ஏழைகள், நடுத்தரக் குடும்பங்கள் இந்தக் குறைந்த விலை சமையல் எண்ணையைத் தான் பயன் படுத்துகிறார்கள். உண்மையைச் சொன்னால் கடந்த ஐந்து, ஆறு மாதங்களாக இந்த எண்ணைய் முற்றிலுமாக கடைகளிலிருந்து அகற்றப்பட்டுவிட்டது!அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை!

இன்னொன்று குழந்தைகளின் பால் மாவு என்பது இன்னொரு முக்கியமான விஷயம். அதன் விலை கிடுகிடு என்று ஏறிக்கொண்டே போனால் குடும்பங்கள் எப்படி அதனைத் தாக்குப்பிடிக்க முடியும்?  விலை குறையும் என்னும் சாத்தியமே இல்லாமல் தலைதெறிக்க அதன் விலை ஏறிக்கோண்டிருக்கிறது! இதற்கு யார் பொறுப்பு?

அடுத்த மாதத்திலிருந்து சமையல் எரிவாயு (gas cylinder) விலை இன்னும் ஏழு வெள்ளி அதிகரிக்கப் போவாதாக இப்போது பேசுப்படுகிறது. கடைக்காரர்களே இதனைச் சொல்லுகிறார்கள். ஆக, அது உண்மையாகத்தான் இருக்க வேண்டும்! இதன் விலை ஏற்றம் இன்னும் அதிகமானப் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆனால் பிரதமர் நஜிப் அவர்கள் மக்கள் சேவையைத் தான் எதிர்பார்க்கிறார்கள் என்கிறார். அவர் எதனைச் சேவை என சொல்ல வருகிறார் என்பது நமக்கு இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது!

இப்படி விலை ஏற்றத்தை கண்டும் காணாதது போல் இருக்கும் பிரதமர் கொஞ்சம் மக்கள் பக்கம் திரும்பி தனது சேவையைச் சரியான வழியில் கண்காணித்து மக்களின் பிரச்சனைகளைக் கவனித்தால் நாம் அவரைப் போற்றலாம், புகழலாம்! 

பிரதமர் அவர்களே! உங்களிடம் நாங்கள் சேவையை எதிர்பார்க்கிறோம். சேவையில் போலி வேண்டாம்!

Friday, 18 November 2016

மோடி அதிரடி! மக்கள் அவதி!


மோடி அதிரடியான முடிவெடுத்தார்!  இப்போது மக்கள் சொல்லொண்ணாத் துயரத்தில் மூழ்கிருக்கின்ற்னர்! பல பிரச்சனைகள்; பல துயரங்கள்; பல இன்னல்கள். பல இறப்புக்கள்; பல துக்கங்கள் இன்னும் பல பல!

ஐனூறு ருபாய் நோட்டுக்களும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களும் செல்லாது என்று மோடி அறிவித்த அந்த நொடியிலிருந்து இதுவரை பல ஏழை எளிய மக்கள் மட்டும் அல்ல நடுத்தரக் குடும்பங்களும் பல வகைகளிலும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்!

நடுத்தர மக்கள் எப்படியோ ஏதோ சில வழிகளில் தப்பித்துக் கொள்ளுகின்றனர். அவர்களுக்கும் துன்பம் தான். ஆனால் அவர்கள்  எப்படியோ யாரையோ பிடித்து தங்களது காரியங்களைச் சாதித்துக் கொள்ளுகின்றனர்.

ஏழை மக்களின் துயரக்குகுரல் தான் நம்மையும் துயரத்தில் ஆழ்த்துகிறது.. திருமணம் நின்று போனது, இறந்தோரை அடக்கம் செய்ய முடியவில்லை, நோயாளிகளை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வழியில்லை, குழந்தைகளுக்கு உணவு தர முடியவில்லை என்று இப்படி ஏகப்பட்ட அவலக்குரல்; அழுகைக்குரல்.

மிகவும் வருத்தத்திற்கு உரியது தான். அதில் ஐயமில்லை. ஒன்று மட்டும் நமக்குப் புரிகிறது. நமது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சிரமத்திற்கு உள்ளாகும் போது நாம் யாரும் அவர்களைக் கண்டு கொள்வதில்லை.  நமது சிரமத்தைபற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறோம். நமது பிரச்சனை ஒரு வேளை அவசரமில்லாத பிரச்சனையாக இருக்கலாம்.  நாளை செய்து கொள்ளலாம். அல்லது அதற்கு அடுத்த நாள் கூட  செய்து கொள்ளலாம். இந்த வேளையில் இப்போது யாருக்கு உதவி தேவைப் படுகிறதோ அவர்களுக்கு நாம் உதவ முன் வரவேண்டும். அப்படி உதவி செய்தவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களை நாம் வாழ்த்துகிறோம். ஆனால் அப்படி உதவும் நிலையில் இருந்தும் உதவாதவர்கள் நிறையவே இருப்பார்கள்..அவர்களுக்காக நாம் வருந்தத்தான் வேண்டியிருக்கிறது.

ஆபத்து அவசர வேளைகளில் நாம் உதவத்தான் வேண்டும். அது நமது கடமை. சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பலர், பலத்தரபட்ட  மக்கள் நேரங்காலம் பாராமல்.தங்களால் முடிந்தவரை உதவினர். அரசியல்வாதிகள் தான் இதற்கு விதிவிலக்கு. மக்கள் மனிதாபிமானம் உள்ளவர்கள். இது பணம் சம்பந்தப்பட்டது என்பதால் மனிதாபிமானம் கொஞ்சம் விலகிப்போய்விட்டதாகாவே நாம் நினைக்க வேண்டியிருக்கிறது.

நாட்டின் மேம்பாட்டுக்காக சில நடவடிக்கைகள் எடுக்கும் போது பாதிப்புக்கள் வரத்தான் செய்யும். அதிலும் ஏழை மக்கள் பாதிக்கப்படும் போது நமக்கும் அது வருத்தத்தை ஏற்படுத்தத்தான் செய்கிறது. ஆனால் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் இந்தப் பிரச்சனைகள் எளிதாகக் களையப்பட வேண்டியவை. ஆனால் நம்மிடையே உள்ள அந்த அலட்சியம், ஏழை என்றால் இரக்க உணர்வு நம்மிடம் இல்லை.

மோடியின் இந்த நடவடிக்கையில்  சில குறைபாடுகள் இருக்கலாம். "இப்படித்தான் செய்யணுமா, அப்படிச் செய்யலாமே!" என்று குறை சொல்லுவதில் பயனில்லை! இப்போது அவர் இப்படித்தான் செய்திருக்கிறார்! இப்படியும் செய்யலாம் என்பது அவரின் நிலைப்பாடு.

இது வரையில் வந்த செய்திகளைப் பார்க்கும் போது பல கோடிகள்   வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன! இன்னும் வரும்!

இது வெற்றியா, தோல்வியா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

Thursday, 17 November 2016

அம்மா! நீங்கள் நலமா?


அம்மாவை நினைத்தால் நமக்கு இன்னும் தலை சுற்றிக்கொண்டு தான் இருக்கிறது!

தமிழக முதல்வர் அம்மா அவர்கள் உடல்நிலை தேறி வருகிறார், வருகிறார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்களே தவிர மற்றபடி உண்மை நிலவரம் தெரிந்தபாடில்லை!

இன்று தமிழகத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் அம்மாவின் ஆசியோடும், அம்மாவின்  ஆலோசனையின் பேரிலும் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்று செய்திகள் கூறுகின்றன. அப்படியென்றால் அம்மா படுத்தப்படுக்கையாக இருக்கிறார் என்றெல்லாம்  சொல்லமுடியாது.

அவர் தெளிவாகத்தான் இருக்கிறார். தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று அவரால் புரிந்துகொள்ள முடிகிறது. தனது அமைச்சர்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்று ஆலோசைனைகள் கொடுத்துக் கொண்டிருக்கிறார். எல்லாமே சரியாகத்தான் இருக்கிறது.

ஆனாலும் இதுவரை அவரைப் பார்க்க யாரும் அனுமதிக்கப்பட வில்லை!

சமீபத்தில் வெளியான அறிக்கையில் தமிழக வாக்காளர்களை அவருடைய கட்சிக்கு வாக்கு அளிக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார். மக்கள் செய்த பிரார்த்தனைகளினால்  தான் தேறி வருவதாகவும், விரைவில் பணிக்குத் திரும்புவேன் என்றும் கூறியிருக்கிறார்!

ஆனால் அப்படி என்ன தான் தேறிவருகிறார் என்று யாராலும் கணிக்கமுடியவில்லை! அப்பொல்லோ மருத்துவமனையை விட அவரது ஜோஸ்யர்கள் சொல்லுவதைத்தான் நாம் நம்ப வேண்டியிருக்கிறது! எல்லாவற்றையும் கணித்து சொல்லுபவர்கள் அவர்கள் தான்! முதல்வரும் மருத்துவர்களைவிட ஜோஸ்யர்களைத்தான் அதிகம் நம்புபவர் என்பது அனைவரும் அறிந்தது தான்!

ஜோஸ்யர்கள் அவர் சீக்கிரம் குணமடைந்து வீடு திரும்புவார் என்று எல்லாவற்றையும் கணக்குப்போட்டுத் தான்  சொல்லியிருக்கிறார்கள்! ஆனால் லண்டன் டாக்டரோ இன்னும் சிறப்பான சிகிழ்ச்சை வேண்டுமென்றால் லண்டனுக்கு வாங்கோ என்று அழைப்பு விடுத்திருக்கிறார்!

ஆனாலும் இதுவரை அவரைப்பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை!

அப்பல்லோ மருத்துவமனையோ இப்படி ஒரு நிலைமை அவர்களுக்கு வரும் என்று கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். ஐம்பது ஆண்டு காலம் திராவிடக்கட்சிகள் தமிழகத்தை ஆட்சி செய்திருக்கின்றன. ஆனால் ஒரு முதல்வருக்கு மருத்துவம் பார்க்க ஒர் அரசாங்க மருத்துவமனைக் கூட தகுதியானதாக இல்லை!

இப்போதைய,  முதல்வரின் புகலிடம் அப்பல்லோ மருத்துவமனை தான்! நூல்நிலையத்தை இடித்து அதனை மருத்துவமனை ஆக்கினார். அது ஏன் என்பது இப்போது தான் நமக்குப் புரிகிறது! அது அவருக்கு முன்னரே புரிந்துவிட்டது!

இப்போது மருத்துவமனை வீடாகிவிட்டது! அப்பல்லோவுக்கு தலைவலி, திருகுவலி எல்லாம் சேர்ந்து கொண்டது! அப்பல்லோவின் மருத்துவ 'பில்' கோடிகளுக்கு வரலாம்! அது ஒரு பிரச்சனை அல்ல! தமிழன் சாராயத்தைக் குடித்தே அரசாங்கத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறான்!  இப்போது தனது குடும்பம் அழிந்தாலும் பரவாயில்லை அம்மாவைக் காப்பாற்ற வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறான்! சாராயப்பணம் சரியான வழிகாட்டும் என நாமும் எதிர்பார்ப்போம்!

ஆனாலும் அம்மாவின் நிலைமை என்னவென்று இன்னும் நமக்குத் தெரியவில்லையே! தனது மேல் இருக்கும் ஊழல் குற்றச்சாட்டு ஒரளவு தணிந்த பின்னர் தான் அம்மாவின் உடல்நிலை சரியாகுமா? அதுவரை மருத்துவமனை தான் - அல்லது வீடாகக்கூட இருக்கலாம் - அவர் நிரந்தர ஓய்வில் இருப்பாரா? அவருடைய  உடல்நிலைமைக்கும் ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஏதும் தொடர்புகள் இருக்கின்றனவா என்பது போகப் போகத்தான் தெரியும்!

இப்படியெல்லாம் நினைப்பதற்கு நாம் காரணமல்ல. சசிகலா,  முதல்வரை தனது இரும்புப்பிடியில் வைத்திருக்கிறார் என்று சொல்லப்படுவதால் தான் இப்படியெல்லாம் நாம் நினைக்க வேண்டியிருக்கிறது! இதுவரை அவரை யாரும் பார்க்க சசிகலா அனுமதிக்கவில்லை! அப்படியென்றால்.......?

இப்போது நாம் கேட்பதெல்லாம்: அம்மா! நீங்கள் நலமா?


Sunday, 13 November 2016

அமெரிக்கா புதிய பாதையில் பயணிக்கமா?


அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றிருக்கிறார். எல்லாரும் அறிந்த செய்தி.

புதிய அதிபரின் போக்கு  எப்படி இருக்கும் என்பது இன்னும் நமக்குத் தெரியாத செய்தி. அடுத்த நான்கு  ஆண்டுகளுக்கு அதிபரின் நடவடிக்கைகள் எந்தத் திசையை நோக்கி பயணிக்கும் என்பது போகப் போகத்தான் தெரிய வரும்.

ஒன்று மட்டும் உறுதி. இத்தனை ஆண்டுகள் அதிபராக இருந்தவர்கள் பெரும்பாலும்  அரசியல்வாதிகள்.  ஆனால் டொனால்ட்  டிரம்ப் இதில் வித்தியாசப்படுகிறார். அவர் ஒரு தொழில் அதிபர். இளம் வயது தொட்டே அவர்   தொழிலில் ஈடுபட்டவர்.  தோல்விகளையும் வெற்றிகளையும் சந்தித்தவர். மாபெரும் தோல்விகளையும் மாபெரும் வெற்றிகளையும் சந்தித்தவர்.  எதற்கும் அசராத ஒரு தொழில் அதிபர்!  அரசியலில் அதிகம் ஈடுபாடு காட்டாத ஓர் தொழில் அதிபர்!

ஆனால் இன்று அவர் அரசியலுக்கு வந்துவிட்டார். அதிபராகவும் ஆகிவிட்டார்! இது தான் உலக மக்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கும் ஒரு செய்தி! அவர் வெற்றி பெறுவார் என்று யாரும் எதிபார்க்கவில்லை! ஆனால் அவர் வெற்றி பெற்றுவிட்டார்.

அமெரிக்காவின் எதிர்காலப் பயணம் எப்படி இருக்கும்?  தனது கொள்கையில் மிகவும் உறுதியான மனிதர் டிரம்ப். அவர் சொன்னவைகளை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் போகும் மனிதர். அவ்வளவு சீக்கிரத்தில் அவர் எதனையும் விட்டுக் கொடுக்கமாட்டார்! அமெரிக்காவை நேசிப்பவர். தனது மக்கள் நல்லதொரு வாழ்க்கை வாழ வேண்டுமென்று நினைப்பவர்.

அமெரிக்காவை இன்னும் வலிமைமிக்க நாடாக உருவாக்க வேண்டும் என்னும் கொள்கை உடையவர். வையத்துத்  தலைமை அமரிக்காவிடம் தான்  என்பதில் கருத்து வேறுபாடு இல்லாதவர்.

அவரின் பேச்சில் ஒரு முரட்டுத்தனம் தெரிகிறது. அமெரிக்காவின் அதிபர் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு சில வரைமுறைகளை வைத்திருக்கின்றனர் மக்கள். இவரோ அனைத்தையும் உடைத்தெரியும் மனிதராக இருக்கிறார்!  எதற்கும் கட்டுப்படும் மனிதராக அவர் இல்லை!

இன்னும் பதவி ஏற்காத  நிலையில் - பதவியேற்க இன்னும் ஓரிரு மாதங்கள் இருக்கும் நிலையில் - இப்போதே பலரின் எதிர்ப்புக்ளுக்கு ஆளாகியிருக்கிறார்!  அவரது  நாட்டில்  மட்டும் அல்ல , உலகங்கெகளிலும் கூட பலர் தங்களது எதிர்ப்புக்களைத் தெரிவித்து வருகின்றனர்! கொலை மிரட்டல்களும் விடப்படுகின்றன!  இதுவரை எந்த ஒரு அமெரிக்க அதிபரும் இப்படி ஒரு சூழலை எதிர்நோக்கவில்லை!

ஆனாலும் டிரம்ப் அந்த அளவுக்குக் கெட்ட மனிதரா? இல்லவே இல்லை! தனது நாட்டை நேசிக்கிறார். தனது மக்களை நேசிக்கிறார்.தனது மக்கள் வேலை வாய்ப்புக்கள் பெற்று,, நல்ல முறையில் உழைத்து நாட்டின் வளத்தில் பங்கு பெற வேண்டும் என்று நினைக்கிறார்.தனது நட்டில் அமைதி நிலவ வேண்டும், பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறார். இதெல்லாம் தவறு என்று எப்படி நாம் சொல்ல முடியும்? ஒவ்வொரு நாடும் தனது குடிமக்கள் நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்பதில் தானே குறியாக இருக்கிறார்கள்.

புதிய அமெரிக்க அதிபர் பார்வைக்கு ஒரு கரடுமுரடான மனிதராகத் தோற்றமளிக்கிறார்! கரடுமுரடாகப் பேசுகிறார் என்பதை வைத்து நாம் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது!

அமெரிக்காவின் வருங்கால இன்னும் சிறப்பாகவே இருக்கும்! புதிய பாதையாக இருந்தாலும் பயணம் வெற்றிகரமாகவே அமையும்!


Thursday, 10 November 2016

அதிரடி கொடுத்தார் மோடி!


இந்தியப் பிரதமர் மோடி அதிரடியான அறிவிப்பு  ஒன்றினைச் செய்திருக்கிறார்!

ஆயிரம் ரூபாய் நோட்டுக்களும், ஐனூறு ரூபாய் நோட்டுக்களும் செல்லாது என அதிரடியான அறீவிப்பு  செய்து அந்த நோட்டுக்களைச் செல்லாதபடி ஆக்கிவிட்டார்!

இது ஒரு துணிச்சலான  முடிவு என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. ஆரம்பத்தில்,  குறிப்பாக நடுத்தர குடும்பங்கள் ஓரளவு பாதிக்கப்படும் என்பது  உண்மையே! ஆனால் பெரிய பாதிப்பு என்பது அரசியல்வாதிகளுக்குத் தான்.

தமிழ் நாட்டில் தேர்தல் வருவதற்கு முன்னரே இப்படி ஒரு அதிரடி அறிவிப்பு வந்திருந்தால் ஒரு வேளை அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்.

ஆயிரம், ஐனூறு ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிய வந்தபோது எனக்கு நடிகர்  மகாலிங்கம் நடித்த  பழைய  "நாம் இருவர்" படம் ஞாபகத்திற்கு வந்தது! அதில் "ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாதா?"  என்று -  நடிகர்  சாரங்கபாணி என்று நினைக்கிறேன் - மயங்கி விழுவது போல ஒரு காட்சி வரும்! சரியாக ஞாபகத்திற்குக் கொண்டு வர முடியவில்லை! என்னால்  உறுதியாகவும் சொல்ல முடியவில்லை! என்ன சொல்ல வருகிறேன் என்றால் அந்தக் காலத்திலேயே இந்தக் கறுப்புப் பணம் ஒரு பிரச்சனையாக இப்போதும் போல் இருந்திருக்கிறது! இப்போதோ அப்போது விட பல மடங்குகள் அதிகரித்துவிட்டன!

ஆனால் சமீபத்தில் வந்த "பிச்சைக்காரன்" படத்திலும் இப்படி ஒரு செய்தி சொல்லப்பட்டிருப்பது ஆச்சரியமான விஷயம்!  இந்திய நாட்டின்  வறுமையையும், கறுப்புப்பணத்தையும் ஒழிக்க படத்தின் இயக்குனர் சசி அமைத்திருந்த அந்த  வசனம் இப்போது உண்மையாகிவிட்டது! ஆக, நமது சினிமாப் படங்களும் அவ்வப்போது சில செய்திகளை முன்கூட்டியே சொல்லிவிடுகின்றன. "சுனாமி" பற்றி நடிகர் கமலஹாசன் தனது அன்பே சிவம் படத்திலும் அப்படித்தான் சொல்லியிருந்தார்!

சரி! பிரதமர் மோடி கொடுத்த இந்த அதிரடி அறிவிப்பினால் யாருக்கு பலத்த அடி?  தீவிரவாதிகள், கறுப்புப்பணம் வைத்திருப்போர், ஊழல்வாதிகள்,
 லஞ்சம் வாங்குவோர்  இவர்களுக்கெல்லாம் சரியான அடி விழும்!  சரியான முறையில் அனைத்தையும் கடைப்பிடித்தால் - அரசியல்வாதிகள் எதனையும் உடைத்தெறியக் கூடியவர்கள் -அமலாக்கம் சரியாக இருந்தால் - இந்த அதிரடி என்பது இந்தியாவைச் சரியானப் பாதைக்குக் கொண்டு செல்லும்.

இந்தியப் பிரதமர் மோடி தான் ஒரு துணிச்சல்வாதி  என்பதை நிருபித்திருக்கிறார். எந்த ஒர் அரசியல்வாதியும் செய்யத் துணியாததைச் செய்திருக்கிறார்! அவரது மாநிலமான, குஜாராத் மாநிலம், கறுப்புப் பணத்திற்குப் பெயர் போன மாநிலம்! அப்படியிருந்தும் இப்படி துணிச்சலோடு அவர் ஓர் அதிரடியைக் கொண்டு வந்ததற்கு அவரை நாம் பாராட்ட வேண்டும்!

மோடி அவர்கள் நல்லதைச் செய்திருக்கிறார்! பாராட்டுக்கள்!


Wednesday, 9 November 2016

டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார்!


அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் டொனால்ட்  ட்ரம்ப் வெற்றி பெற்றார்!

உலக அளவில் இந்தச் செய்தி எப்படி வரவேற்கப்படும் என்பது இன்னும் சரியாகத் தெரியவில்லை. இஸ்லாமிய உலகம் அதனை வரவேற்கவில்லை என்று ஆரம்பச்  செய்திகள் கூறுகின்றன.  ஆனாலும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நான் ட்ரம்பின் விசிறி.  அவருடைய ரசிகன். என்னுடைய இளமைக்காலத்தில் அவரை நான்  எனது சுப்பர் ஸ்டாராக நினைத்தவன். எனக்குச் சினிமா நடிகர்களில் யாரும் சுப்பர் ஸ்டார் இல்லை!

நான்  சொல்லுபவை எல்லாம் அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு - பல ஆண்டுகளுக்கு முன்பு! அவர் அரசியலில் இல்லாத காலத்தில்!

அவர் முதன் முதலில் எழுதிய "The Art of the Deal" என்னும் தலைப்பைக் கொண்ட புத்தகம் பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் படித்திருக்கிறேன். அதன் பின்னரும் நான் படித்திருக்கிறேன். இப்போதும் நான் படிக்கிறேன். இன்னும் அவர் எழுதிய ஒருசில புத்தகங்களையும் நான் படித்துக்கொண்டு தான் இருக்கிறேன்.

இந்தப் புத்தகங்கள் அனைத்தும் தொழில் சம்பந்தமானவை. அவர் ஒரு சிறந்த நிர்வாகி என்பதில் சந்தேகமில்லை. ஒரு வெற்றிகரமான தொழில் அதிபர். எதனையும் பெரிய அளவில் நினைத்துப் பார்ப்பவர். நினைத்துப் பார்ப்பவர் மட்டும் அல்ல. அதனைச் செயல்படுத்தியவரும் கூட. திறமையானவர்.

ஆனால் அவருடைய அரசியல் எப்படி?  அவர் உதிர்த்த சில கருத்துக்கள் மக்களிடையே பலவித எதிர்மறை எண்ணங்களை உருவாக்கியிருக்கின்றன என்பது உண்மை தான். அதுவும் குறிப்பாக முஸ்லிம்களிடையே அவருடைய கருத்துக்கள் ஏற்கக்கூடியவையாக இல்லை.

ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். தேர்தலில் போது அவர் உதிர்த்த கருத்துக்கள் தேர்தல்கால கருத்துக்கள்! அவைகளுக்கு எந்த அளவுக்கு மரியாதை உண்டு என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அது முற்றிலும் ஓர் அரசியல்வாதியின் பேச்சாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அமெரிக்க அதிபர் பதவி என்பது உலக அளவில் அதற்கு ஈடு இணை இல்லை! அந்த  அளவு உயர்ந்த பதவி. அந்தப் பதவியை வைத்துக்கொண்டு ஓர் அதிபர் தனது விருப்பத்திற்கு எதனையும் செய்துவிட முடியாது! அவரைக்  கட்டுப்படுத்தவும் அவர்களுடைய செனட்டுக்கு அதிகாரமுண்டு என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

டொனால்ட் ட்ரம்ப்,   நான் விரும்பிய ஒரு 'கதாநாயகர்'  என்பதால் அவர் பதவிக்கு வந்ததில் எனக்கு மகிழ்ச்சியே!  அதே சமயத்தில் அவர் காலத்தில் உலகில் அமைதி நிலவ அவர் பாடுபட வேண்டும். அது நடந்தால் இன்னும் மகிழ்ச்சி! வாழ்த்துகள்!

Tuesday, 8 November 2016

ஹின்ராப் இயக்கம் தேர்தலில் குதிக்குமா?


ஹின்ராப் அடுத்து வரும் பொதுத் தேர்தலில் பங்கெடுக்குமா  என்பதை  வெகு விரைவில் தீர்மானிக்கும் என்று அதன் தலைவர் வேதமூர்த்தி அறிவித்திருக்கிறார்.

அவர் ஆளுங்கட்சியில் கூட்டுச் சேர  வழியில்லை. எந்த ஆளுங்கட்சியும் அவரை வரவேற்கத் தயாராக இல்லை. அப்படியே அவர்கள் வருந்தி அழைத்தாலும் அவரும் போகத் தயாராக இல்லை.

ஒரு காலக்கட்டத்தில் இப்போதைய அரசாங்கத்தில் துணை அமைச்சராக இருந்தவர் பொன் வேதமூர்த்தி.  இந்தியர்கள் சார்பில் பிரதமருடன் ஒர் ஒப்பந்தம் போட்டுவிட்டு துணை அமைச்சரானவர். ஆனால் அவர் நினைத்தபடி எதனையும் அவரால் செயல்படுத்த முடியவில்லை!

நல்லதைச் செய்ய வேண்டுமென்று அவரிடம் ஆர்வம் இருந்தது. பிரதமரின் ஒத்துழைப்பும் ஒரளவு இருந்தது. ஆனால் அங்கு ம.இ.கா. (மலேசிய இந்தியர் காங்கிரஸ்} அவருக்கு இடையூறாக இருந்தது! அவர் செய்ய நினைத்த அனைத்துக்கும் அது தடையாக இருந்தது! அவரால் எதனையும் செய்ய இயலவில்லை. மனம் வெறுத்துப் போய் தனது துணையமைச்சர் பதவியை பதவிதுறப்புச் செய்துவிட்டார். பிரதமருக்கு ஒரு விஷயம் புரிந்துவிட்டது. இந்தியர்களுக்கு தான் எதுவும் செய்ய வேண்டிய அவசியமில்லை. ம.இ.கா. இருந்தாலே நமக்குப் போதும். அவர்களே நாம் எதையும் செய்ய முடியாதபடி பார்த்துக் கொள்ளுவார்கள் என்று!

ஆளுங்கட்சியில் சேரமுடியாத ஒரு நிலையில் அவர் எதிர்கட்சியில் சேர நினைக்கலாம்.அவர்கள் வரவேற்பார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் தேர்தல் என்று வரும் போது பெரிதாக அவர்களிடமிருந்து எதனையும் எதிர்பார்க்க முடியாது! ஒரு நாடாளுமன்ற இடம் கொடுத்தாலே அதுவே பெரிய சாதனை!

பொதுவாக ஹின்ராப் தனித்து ஓர் அரசியல் கட்சியாக இயங்க வழியில்லை.  முற்றிலும் அவர்கள் இந்தியர் சார்ந்த ஒர் அமைப்பு. இந்தியர்கள் எந்தத்தொகுதியிலும் பெரும்பான்மை இல்லாதவர்கள். அவர்கள் போட்டிப்போட நினைக்கும் ஒரளவு இந்தியர் சார்ந்த தொகுதிகள் அனைத்தும் ம.இ.கா. வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். எதிர்கட்சி இந்திய  வேட்பாளர்களும் அங்குக் களம் இறக்கப்பபடுவார்கள். தனித்து இவர்கள் போட்டியிட்டால் வேற்றிபெறுவதற்கான வாய்ப்புக்கள் மிகமிகக் குறைவு.

நாடாளுமன்றத்தில் நமது குரல் ஒலிக்க வேண்டும் என்று நினைப்பது நல்லது தான்.  இப்போது மட்டும் என்ன?  நமது குரல் ஒலிக்காமலா இருக்கிறது? எதிர்கட்சியினர் அதனைச் செய்கிறார்களே! ம.இ.கா.வினரைத் தவிர மற்றவர்கள் குரல்கள் ஒலித்துக் கொண்டு தான் இருக்கின்றன!

நாங்கள் நாடாளூமன்றத்திற்குப் போனால் எல்லாவற்றையும் மாற்றிவிடுவோம் என்னும் வீண் நினைப்பால் யாருக்கும் பயனில்லை!

ஒன்று ஆட்சி மாற வேண்டும் அப்படி ஒரு மாற்றம் ஏற்பட்டால் ஒரு வேளை ஒரு சில மாற்றங்களைக் கொண்டு வரலாம். கல்வி, வேலை வாய்ப்பு  போன்ற சில பிரச்சனைகள் நமக்குச் சாதகமாக இல்லை என்பது உண்மை தான்.

ஹின்ராப் தலைவர் வேதமூர்த்தி அவர்கள் தனது இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றுவது என்பது அவரது உரிமை. ஆனால் காலங்காலமாக ஏமாற்றுப்பட்டு வரும் நம் இனத்தவர்கள் யாரையும் நம்பத் தயாராக இல்லை என்பது தான் உண்மை!

ஹின்ராப் அரசியலில் குதிக்கட்டும்! கூத்தாடட்டும்! வாழ்த்துகிறோம்!

கடைசியாக,

எந்த ஓர் அரசியல்வாதியையும் நம்பிப் பயனில்லை!  நம்மை நாமே நம்புவோம்!


Saturday, 5 November 2016

கபாலி ....ஒரு கண்ணோட்டம்!கபாலி திரைப்படம் வெளியாகி மூன்று மாதங்கள் மேல் ஆகிவிட்டன. 100 நாள்கள் மேல் ஒடி முடிந்துவிட்டது..

இந்த நிலையில் ஒரு கண்ணோட்டமா?  அதனாலென்ன? படம் வெளியானதும் அடித்துப்பிடித்து விமர்சனம் செய்கிற அளவுக்கு எனக்கு ஒன்றும் அவசரமில்லை!

இதனை ஒரு பெரிய விமர்சனமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். என்னுடைய கண்ணோட்டத்தில் சில கருத்துக்கள். அவ்வளவு தான்!

அதுவும் கபாலி மலேசியாவைக் களமாக கொண்ட ஒரு திரைப்படம். அதனை மனதில் கொண்டு சில கருத்துக்கள்.

முதலாவது கபாலி நமக்குச் சீனர்களை எதிரியாகக் காட்டுகிறது. அது உண்மை தான் என்றாலும் நமக்குப் பெரிய எதிரி அரசாங்கம் தான். அந்த உண்மையைச் சொல்ல முடியவில்லை.  அதனால் சீனர்கள் மேல் பழிபோடுவது என்பது எளிதாகப் போய்விட்டது!

அரசாங்கக் கொள்கைகள் அனைத்தும் நமக்கு எதிரானவை.  மேற்கல்வி  தடைச் செய்யப்படுகிறது. அப்படியே கிடைத்தாலும் நாம்  விரும்பிய கல்வி கிட்டுவதில்லை. தனியார் கல்வி நிலையங்களில் படித்து வந்தாலும் வேலை கிடைப்பதில்லை. வெளி நாடுகளில், சொந்தப்பணத்தில், தரமான மருத்துவக் கல்வி கற்று வந்தாலும் அது தரமில்லை என்று குப்பையில் போடுவது. இப்படி எல்லாவற்றிலும் கதவடைப்பது. இவைகளையும் மீறித்தான்  ஒரு சிலர் வெற்றி பெறுகிறார்கள். திறமைக்கு எந்த மரியாதையும் இல்லை.

அரசாங்க வேலை வாய்ப்புக்கள் நமக்கு மறுக்கப்படுகின்றன. தனியார் துறைகளிலும் நமக்குக் கிடைக்கின்ற வாய்ப்புக்களும் திறமைக்கு ஏற்ப அமையவில்லை. அரசாங்கமும் இதனை கண்டு கொள்ளவில்லை. நாட்டின் மூன்றாவது இனம் என்னும் முக்கியத்துவம் இல்லை. எல்லாத் துறைகளிலும் கதவடைத்தால் எப்படி முன்னேறுவது?  வங்காள தேசத்தவனுக்கு உள்ள சலுகைக் கூட நமது இனத்தவருக்கு இல்லை!

சீனர்களின் நிலையோ வேறு. அரசாங்க உதவி அவர்களுக்குத் தேவை இல்லை. தனியார் துறை அவர்களைச் சார்ந்தது. நாடே அவர்களை நம்பித்தான் இருக்கிறது! சீனர்களிடம் ஒரு குணம் உண்டு. சீன இனத்தவரை ஒரு மாதிரியாகவும் மற்ற இனத்தவரை வேறு மாதிரியாகவும் பார்க்கின்ற குணம் அவர்களுடையது. அவர்கள் இனத்திற்கு ஒரு விலை, ஒரு சம்பளம்! நம்மைவிட அவர்களுக்குக் கூடுதலான சம்பளம். கடைகளில் அவர்களுக்கு என்று ஒரு விலை! நமக்கென்று  ஒரு விலை!  என்னதான் அரசாங்கம் சட்டம் கொண்டு வந்தாலும், கொண்டு வந்தவர்களையே கையில் போட்டுக்கொண்டு, அவர்கள் அத்தனையையும் முறியடித்து விடுவார்கள்!

அபின், கஞ்சா என்பதெல்லாம் சீனர்களிடமிருந்து  வருவது தான். நம் இனத்தவர் எல்லாம் அவர்களுக்குக் கீழே தான். ஆனால் அவர்கள் யாரும் தொட முடியாத இடத்தில் இருப்பார்கள். அகப்படுபவன் உதைப்படுபவன் எல்லாம் நம் இனத்தவன்!

 கபாலியில் குண்டர் கும்பல் தலைவனாக ஒர் உயர் ஜாதி தமிழன் தலமை தாங்குவதாக காட்டப்பட்டிருப்பது எந்த அளவுக்கு உண்மை என்பது எனக்குத் தெரியவில்லை. அதனை நான் நம்பவில்லை என்றாலும் இயக்குனர்  ரஞ்சித் இந்தத் தகவலை எங்கு பெற்றார் என்பது தெரிந்தால் தான் அதன் நம்பகத்தன்மை தெரியவரும். ஆனால் கபாலி, வில்லனைப்  பார்த்து பேசுகின்ற அந்த உச்சக்கட்ட காட்சியின் வசனங்களைத் தேவையான ஒன்றாகவே கருதுகிறேன். ஆனால் அது முற்றிலும் தமிழ் நாட்டு நடப்பைப் பேசுகிறது!  மலேசிய நடப்பை அல்ல!

படத்தில் கபாலி உடுத்துகிற உடைகளைப் பற்றி பல இடங்களில் பேசுப்படுகிறது. ஆனால் இவைகள் முற்றிலும் தமிழகப் பின்னணிக் கொண்டவை. இங்கு மலேசியாவில் உடைகள் உடுத்துவது பற்றி எந்த ஏற்றத்தாழ்வுகளும்  இல்லை! மிகச் சாதாரணமானவன் கூட நல்ல  தரமான உடைகளைத்தான் அணிகிறான்.மேலும் நமது நாட்டில் யார் தாழ்ந்தவன், யார் உயர்ந்தவன் என்று எப்படி கண்டு பிடிப்பது?     நான் தாழ்ந்தவன், நான் உயர்ந்தவன் என்று யார் சொல்லிக் கொண்டு திரிகிறார்?  ஒருவருமில்லை!  ஒருவரின் குடும்பப் பின்னணி   நமக்கு நேரடியாகத்  தெரிந்தால்  ஒழிய அதனையெல்லாம் அவ்வளவு எளிதில் நாம் கண்டுபிடித்துவிட முடியாது.

மேலும் கோட்-சூட் போடுபவரெல்லாம்  உயர்ந்தவர்கள் என்னும்  கலாச்சாரம்  தமிழகக் பின்னணி கொண்டவை.  இங்கு இது பிரச்சனை அல்ல. மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், கணக்காயர்கள், ஆசிரியர்கள்  என்று எடுத்துக் கொண்டால் அனைத்துப் பிரிவினரும் இதில் உள்ளனர்.  அது மட்டும் அல்ல. காப்புறுதித்துறை, விற்பனையாளர்கள், நேரடித் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள்  அனைவருமே கோட்-சூட் போடுபவர்கள் தான். உடை அணிவதில்  சாதியப்பிரச்சனை என்று ஒன்று  இருப்பதாகத் தெரியவில்லை.

இப்போது கலப்புத் திருமணங்கள் அதிகம். குறிப்பாக மருத்துவத்துறை, சட்டம்  பயிலுபவர்கள்  பலர் காதல் திருமணங்கள் செய்கின்றனர். ஒரே துறையைச் சார்ந்தவர்கள் என்பதால் இங்கு சாதியம் அடிபட்டுப் போகிறது.  நடுத்தர வட்டத்தில் வேண்டுமானால் இன்னும் இந்தப் பிரச்சனை இருக்கலாம். ஆனால் காதல் என்று வரும்போது சாதியம் தகர்க்கப்படுகிறது.  இதை நான் நேரடியாகவே பார்க்கிறேன்.

தமிழ் சினிமா உலகில் கபாலி ஒரு வித்தியாசமான படம் என்பது உறுதி சொல்ல வந்த கருத்துக்கள் உண்மையானவை. அதுவும் இயக்குனர் ரஞ்சித் அவர் சொல்ல வேண்டிய செய்திகளை ரஜினி மூலம் சொல்ல வைத்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கது.  ரஜினிக்கு மிக உயர்ந்த குணம். தனக்கும் இந்த சமூகத்தின் மேல் அக்கறை உண்டு என்பதை அவர் காட்டியிருக்கிறார். வாழ்த்துகள், ரஜினி சார்!

கபாலி மலேசியப் பின்னணியைக் கொண்ட படம் என்றாலும் அது தமிழகப்பிரச்சனையையும்  பேசுகிறது என்பது தான் உண்மை. அது தவறு என்று நான் சொல்ல வரவில்லை. யாராவது, எங்கேயாவது அதனை பேசித்தான் ஆக வேண்டும். இது ஒரு ஆரம்பம்! இது தொடர வேண்டும் என்பது எனது நிலைப்பாடு!

இயக்குனர் ரஞ்சித்திடம் இன்னும் பல சமூக மாற்றத்திற்கான படைப்புக்களை   எதிர்பார்க்கிறோம்.

கபாலி ஒரு வெற்றிப் படைப்பே!


Wednesday, 2 November 2016

அம்மா உணவகம்..!


அம்மா உணவகம் என்றால் தமிழ் நாட்டில் மிகவும் பிரபலம். அது அரசியல் உணவகம். நம் மலேசியாவில் காக்கா உணவகம் என்றால் மிகவும் பிரபலம்! நாம் அதனைக் "காக்காக் கடை" என்று செல்லமாக அழைப்போம்!

வெளிநாட்டு வாசர்களுக்கு:  காக்காவுக்கும் இந்த உணவகங்களுக்கும் சம்பந்தம் இல்லை.  இங்கு காக்கா என்று குறிப்பிடுவது கேரள நாட்டு முஸ்லிம்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அதுவும் குறிப்பாக உணவகங்கள் நடத்தும் கேரள முஸ்லிம்களையே இது குறிக்கும்! இப்போது அது கொஞ்சம் கிளைவிட்டு உணவகங்கள் நடத்தும் தமிழ் முஸ்லிம்களையும்  பற்றிக் கொண்டது!

இப்போது இந்த கேரள முஸ்லிம்களின் கடைகள் நாடெங்கம் அதிகரித்து வருகின்றன. மூலை முடுக்குகள் எல்லாம் இவர்கள் உணவகங்களைத் திறக்கின்றனர். முதாளிகளும் கேரள முஸ்லிம்கள், வேலை செய்பவர்களும்  கேரள முஸ்லிம்கள்!

இவர்களின் முக்கிய வாடிக்கையாளர்களாக  உள் நாட்டு முஸ்லிம்களையே குறி வைக்கின்றனர். இப்போது இந்திய உணவு வகைகளையும் சேர்த்துக் கொண்டு இந்தியர்களையும் வளைத்துப் போடுகின்றனர்! ஆனால் சுத்தம் என்று வரும்போது இவர்கள் இன்னும் தங்களது இந்திய உணவகங்களின் மரபையே பின் பற்றுகின்றனர்! அதனால் உள்நாட்டு இந்தியர்களின் ஆதரவு என்பது கொஞ்சம் தள்ளியே நிற்கிறது!

ஆனால் நாம் இங்கு சொல்ல வேண்டிய செய்தி இதுவல்ல.  இவர்கள் உணவகங்கள் திறக்கிறார்கள். இவர்கள் அருகிலேயே மலாய்க்கார முஸ்லிம்களும் உணவகங்களை நடத்துகின்றார்கள்.  இந்தக் காக்காமார்களின் உணவகங்களோ 'ஓகோ' என்று நடைபெறுகின்றது. மலாய்க்கார உணவகங்களோ 'ஈகோ' என்று ஈ ஓட்டிக்கொண்Mடிருக்கிறது! இது எப்படி சாத்தியம்?

அப்படி ஒகோ என்று நடைபெறுகின்ற அளவுக்கு அங்கு எந்த விசேஷமும் இல்லை. ஆனால் அவர்களின் வியாபாரம் அசாதாரணமாக நடக்கிறது! அவர்களின் உணவகங்களின் விலையோ மற்ற உணவகங்களை விட விலை அதிகம்! அவர்கள் அரசாங்கம் சொல்லுகின்ற விலையைப் பற்றிக் கவலைப்படுவதில்லை! அவர்கள் வைத்தது தான் விலை. விலையோ கூடுதல்! ஆனால் அங்கு தான் மலாய்க்காரர்கள் அதிகம் கூடுகின்றனர்!

உண்மையைச் சொன்னால் அவர்களின் உணவகங்களில் விலை அதிகம். சுத்தம், சுகாதாரம் என்பதோ கொஞ்சம் கம்மி! பழைய சரக்குகளை வைத்தே சரிசெய்தல்! இப்படி பல்வகையான குற்றச்சாட்டுக்கள் அவர்கள் மீது உண்டு!

ஆனாலும் எல்லாக்காலங்களிலும்  அவர்கள் வியாபாரங்கள் குறைவதில்லை! ஏறுமுகமாகவே உள்ளன!

இது பற்றி எனது முஸ்லிம் நண்பர் - அவரும் காக்கா தான், உணவகமும் உண்டு -  அவருடன் பேசிக்கொண்டிருந்த போது ஒரு தகவலைச் சொன்னார்: இந்தக் காக்காமார்களெல்லாம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை கேரளா போவார்கள். அங்கு போய் தங்களது வியாபாரம் பெரிய அளவில் பெருக வேண்டும் என்பதற்காக 'மந்திரம்' செய்துவிட்டு வருவார்கள்! அதனால் தான் அவர்களின் வியாபார நிலையங்களில் கூட்டம் குறைவதில்லை! என்பதாக அவர் குறிப்பிட்டார்!

பொதுவாக நான் இது போன்ற 'மந்திர,தந்திர' செய்திகளை நம்புவதில்லை. ஆனால் சொன்னவரோ அவரும் அந்த கேரள காக்கா என்பதால் ஏதோ 'இருக்கலாம்!' என்று தலையாட்டியதோடு சரி! ஆனால் முழுமையாக நமபவில்லை!

ஆனாலும் நான் நம்புவதைப் பற்றி யார் கவலைப்பபட்டார்? காரியங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. சமீபகாலங்களில் நடைபெறுகின்ற சம்பவங்களைப் பார்க்கின்ற போது அது உண்மைதான் என்று தோன்றுகிறது! ஒருவர் கேரளா போகின்றார் என்றாலே கொஞ்சம் சந்தேகக்கண் கொண்டு தான் பார்க்க வேண்டியிருக்கிறது!

சரி! இந்த மந்திர வேலையெல்லாம் உணவகங்களுக்கு மட்டும் தானா? ஏன், மற்ற தொழில்களுக்குப் பயன்படுத்த முடியாதா? அப்படி ஒரு கேள்வி கேட்க நினைத்தாலும் இந்தக் காக்காமார்கள் எல்லாம் உணவுத்துறைக்கு  மட்டும் தான் முன்னுரிமை கொடுக்கிறார்கள்! நான் பார்த்தவரை இவர்கள் உணவகங்கள் மட்டுமே நடத்துகிறார்கள்!   வேறு துறைகளைத் தேர்ந்தெடுப்பதில்லை!

ஒன்றை நான் குறிப்பிட விரும்புகிறேன். அந்தக் காக்காமார்களை நான் குறைத்து மதிப்பிடவில்லை. அவர்களின் உழைப்பை நான் குறைவாகச் சொல்லமாட்டேன். நல்ல உழைப்பாளிகள்.24 மணி நேரமும் உழைக்கத் தயாராக இருப்பவர்கள். சரியான, கடுமையான உழைப்பு அவர்களிடம் உண்டு.அந்த உழைப்பை நாம் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். எங்கே போனாலும் ஒரு உணவகத்தைத்  திறந்து நடத்த வேண்டும் என்னும் அந்த மன உறுதி நமக்கும் வேண்டும். தொழில் தான் அவர்களின் குறிக்கோள். அது மிகவும் பாராட்டுக்குறியது.

அவர்களிடம் நேர்மைக்குறைவு உண்டு. தொழிலில் அது தேவை என்று அவர்கள் நினைக்கிறார்கள்! ஏமாற்றாமல் ஒரு தொழிலைச் செய்ய முடியாது என்பது அவர்களின் நிலைப்பாடு!

நாம் அவர்களைப்பின் பற்ற வேண்டும் என்னும் அவசியம் இல்லை. நாம் அவர்களின் உழைப்பை மட்டும் பார்ப்போம். தாங்கள் முன்னேற வேண்டும் என்னும் அவர்களின் துடிப்பு நமக்கும் வர வேண்டும். அது போதும்!

கேரள காக்காய்களிடமிருந்து நல்லதை நாம் எடுத்து கொள்ளுவோம்! முன்னேறும் வழியைப் பார்ப்போம்!