Saturday 30 September 2023

எங்கும் எதிலும் போட்டி தான்!

 

அடிபட்ட காரை இழுத்துச் செல்வதிலும் போட்டியா?

போட்டி தான்! போட்டி இல்லாத தொழில் என்று எதுவும் இல்லை. அப்படியிருக்க இவர்களிடம் மட்டும் போட்டி இல்லாமலா இருக்கும்?

போட்டி இருந்தால் கூட அதனை நாம் சமாளிக்கலாம். ஆனால் அடிதடி,  ரௌடிசண்டை  போட்டி என்றால் கொஞ்சம் ஒதுங்கித் தான் நிற்க வேண்டியுள்ளது!

சமீபத்தில் நடந்த இந்தப் போட்டியில் அடிபட்ட காரை இழுத்துப் போக இரு நிறுவனத்தினரின் வண்டிகள் வந்துவிட்டன. இப்போது காரை யார் இழுத்துப் போவது?  அதில் ஏற்பட்ட குஸ்தி தான் பெரும் பிரச்சனையாகி காவல்துறை அளவுக்குப் போய்விட்டது. அதுமட்டும் அல்லாமல் அது குண்டர் கும்பல் சண்டையாகவும் மாறிவிட்டது!

செய்தியில்  சம்பந்தப்பட்டவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படாததால்  'யார் எவர்'  என்று  நமக்கும் தெரியவில்லை.  ஆனாலும் இது போன்ற சம்பவங்கள் என்றால் யாராக இருக்கும் என்று நம்மால் ஊகிக்க முடியும். அந்தப் பெருமை நம்மைத் தவிர வேறு யாருக்கும் போய்விட முடியாது! அவர்களின் சீன முதலாளி நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருப்பார்.

விபத்து நடந்தது அதிகாலை நேரம் என்பதால்,  அதுவும் அங்கே அந்த இரண்டு நிறுவனங்களும் வந்து விட்டன என்பதால், இப்படி ஒரு அடிதடி சண்டையில் தான் முடியும் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இவர்கள் எல்லாம் முன்பின் அறியாதவர்கள் அல்ல.  ஒரே தொழிலில் இருப்பவர்கள்  அறிமுகமானவர்களாகத்தான்  இருக்க வேண்டும். எல்லாம் நண்பர்கள் தான். ஆனால் போட்டி என்று வரும்போது எதிரிகள் ஆகிவிடுகிறார்கள்!

சீன முதலாளிகளுக்கு அது பற்றி கவலையில்லை. 'நீங்கள் அடித்துக் கொள்ளும்வரை எங்களுக்கு இலாபம்' என்கிற மனப்போக்கு உடையவர்கள்.   வண்டியை அனுப்பி,  அவர்களுக்கு வேலை இல்லாமல் திரும்பிப் போனால்,  ஒரு வேளை அவர்களுடைய சம்பளம் வெட்டப்படலாம்!  நமக்குத் தெரிய நியாயமில்லை. 

நாம் சொல்ல வருவதெல்லாம் 'எத்தனை நாளைக்குத்தான் இப்படி சண்டை போட்டுக்கொண்டே  இருப்பீர்கள்? என்பது தான்.  வயதானவர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள்.  இளைஞர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். என்ன தான் செய்வது?

போட்டி இல்லாத தொழில் என்று எதுவுமில்லை. ஆனால் அந்தப் போட்டியைச் சண்டையின் மூலம் தான் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றால் அப்படிப்பட்ட  தொழிலே வேண்டாம்!

போட்டி வேண்டாம் என்று சொல்ல மாட்டேன்! சண்டை வேண்டாம் என்று தான் சொல்வேன்!

Friday 29 September 2023

புகை மூட்டம் திணறடிக்கிறது!

 

புகை மூட்டம் என்பது நமக்குப் புதிய வார்த்தையாகத் தெரியவில்லை!

ஒவ்வொரு ஆண்டும்  இதே பல்லவியைத்தான் பாடிக்கொண்டிருக்கிறோம்! அது ஏன், எப்படி என்கிற கேள்வியைக் கூட எழுப்புவதில்லை. ஆமாம்,  கேள்வியை எழுப்பி என்ன செய்ய? ஆகப்போவது ஒன்றுமில்லை என்கிற நிலைக்கு வந்துவிட்டோம்.

ஒவ்வொரு ஆண்டும் அதே பதில். காதே புளித்துப் போய் விட்டது. "என்னமோ இந்தோனேசியாவில் காடுகளை எரிக்கிறார்களாம்! அதனால் வரும் புகைமூட்டமாம்! அங்கு எரிப்பவர்களும் மலேசிய கம்பனிகளாம்!"

இது நடப்பது ஏதோ ஓரிராண்டுகள் அல்ல. பல ஆண்டுகளாக நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஏதோ மழைகாலமாக இருந்தால் பிரச்சனை  கொஞ்சம் குறைவாக இருக்கும்.  அதுவும் மகா மகா கொடிய வெய்யில் காலம் இது.  அதை சமாளிப்பதற்கே முடியவில்லை. இதுவும் சேர்ந்து கொண்டதால்  இரு பிரச்சனைகளையும் சமாளிக்க வேண்டியிருக்கிறது.

இப்போது மருத்துவமனைகள் நோயாளிகளினால்  நிறைந்து வழிவதாகச் சொல்லுகின்றனர். அதுவும் மூத்த குடிமக்கள் நிலைதான் பரிதாபம். அவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவதாகச் சொல்லப்படுகின்றது.

பள்ளிப் பிள்ளைகளும் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். பள்ளிக்கு வெளியே எந்த புறப்பாட  நடவடிக்கைகளிலும் ஈடுபட முடிவதில்லை. பகல் நேரங்களில் அலுவலகத்தைத் தவிர்த்து வெளிப்புறங்களில் வேலை செய்வோருக்கும்  இந்த புகைமூட்டம் பலரை அவதிக்குள்ளாக்குகிறது; நோயாளிகளாக்குகிறது.  பல வேலைகள் தடைபடுகின்றன.

இருந்தாலும் இந்த வெய்யிலோடும், புகைமூட்டத்தோடும் நாம் வாழத்தான் பழகிக்கொள்ள வேண்டும். எத்தனையோ ஆண்டுகளாக நாம் வாழப்பழகிக் கொணட  நமக்கு  இன்னும் மிச்சம் மீதம் உள்ள ஆண்டுகளிலும் பழகிக் கொள்ள முடியாதா, என்ன?

நமக்கு உள்ள ஒரே கவலையெல்லாம் இந்த நிலை இப்படியே தான் நீடிக்கப் போகிறதா?   இதற்கு ஏதேனும் பரிகாரங்கள் உண்டா என்பதை நமது ஜோஸ்யர்கள் தான் சொல்ல வேண்டும்! விஞ்ஞானிகளால்  முடியவில்லை என்றால்  அப்புறம் என்ன?ஜோஸ்யர்கள் தான் விஞ்ஞானிகள், இல்லையா!

இந்த புகைமூட்டத்தை யாரால் தீர்க்கமுடியும் என்பது தெளிவாக ஒன்றும் தெரியவில்லை. அதைக் கண்டுபிடித்து முடிவு சொல்லும் போது  புகைமூட்டம் இல்லாமல் போய்விடும்! அப்போது இது பற்றியான பேச்சும் மறந்துவிடும்! மீண்டும் அடுத்த ஆண்டும் வரும்வரை அனைத்தும் மறந்து போகும்!

Thursday 28 September 2023

கூட்டரசு பிரதேச தமிழ்ப்பள்ளிகள்

 

பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன்  கூட்டரசு பிரதேச தமிழ்ப்பள்ளிகளின் நிலவும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண சிறப்புக்குழு ஒன்றை  அமைத்திருப்பதாகக் கூறியுள்ளார்.

நாம் இதில் திருப்தியடையவில்லை என்றாலும்  ஒற்றுமை அரசாங்கத்தில் நமது  இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆடாமல் அசையாமல் இருக்கும் நேரத்தில்  இவராவது 'நானும் இருக்கிறேன்! மறந்துவிடாதீர்கள்!' என்பது போல இடைஇடையே அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்! அதற்காகவாவது  அவரைப் பாராட்டத்தான் வேண்டும்!

சமீப காலங்களில் நாம் கூர்ந்து கவனிக்கும்போது ஒன்றை மட்டும் அனைத்து அரசியல்வாதிகளும் தவறாமல்  குறிப்பிடுகின்றனர். அதாவது தமிழ்ப்பள்ளிகளைப் பழுதுபார்ப்பது, நூல்நிலையம் அமைப்பது,  இடப்பற்றாக்குறையினால் பள்ளிகளை விரிவாக்கம் செய்வது  போன்ற முக்கிய பிரச்சனைகள் அனைத்தும் செய்வது என்பது கல்வி அமைச்சின் கடமை.

ஆனால் நமது ஒய்பிகளோ  மித்ராவத்தான் குறிவைக்கின்றனர். கல்வி அமைச்சுக்குச் செல்வதைவிட மித்ரா இன்னும் எளிதாக அணுகலாம் என்கிற காரணமாக இருக்க வேண்டும்.

மித்ரா பள்ளிகளைப் பழுதுபார்க்கும் வேலைகளைக்காக  உருவாக்கப்பட்டது அல்ல. இந்தியர்களின் உருமாற்றத்திற்காக உருவாக்கப்பட்டது.  நமது அரசியல்வாதிகள் அதனை இப்போது உருமாற்றி  அதன் பாதையை மாற்றுகிறார்கள்!  அதனை நாம் தவறு என்று சொல்லவில்லை.இதைத்தான் நாங்கள் செய்வோம் என்றால்  இப்போது அரசாங்கம் கொடுக்கும் நிதி உதவி போதாது என்பது தான் உண்மை. அதனைக் குறைந்தபட்சம் நூறு கோடியாகவாவது ஒதுக்க வேண்டும்.  இது முடியாத காரியம் அல்ல. முடியக் கூடியது தான்.

நாம் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் செய்யும் - செய்கின்ற  - நல்ல காரியங்களுக்காகப் பாராட்டுகிறோம். ஆனால் இது வெறும் ஏதோ ஓர் அறிக்கை விட்டோம் என்கிற போக்கில் போய்விடக் கூடாது. சொன்னவை அனைத்தும் செயல்படுத்தப்பட வெண்டும். அவர் சொல்லுகின்ற அனைத்துத் திட்டங்களும் செய்யமுடியாதது அல்ல. அனைத்தும் செயல்படுத்தௌக்கூடியவை தான்.

இந்த ஒய்பி அனைத்தையும் செயல்படுத்துவார் என நன்புகிறோம்!

Wednesday 27 September 2023

வேலை தேடி சிங்கப்பூர் போகின்றனரா?

 


மலேசியர்கள் இன்றைய நிலையில் பல பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றனர்.

விலைவாசி என்பது நமது முதல் எதிரி.   அனைத்துப் பொருள்களும்  விலையேற்றம் கண்டுவிட்டன. மிக மிக அத்தியாவசியமான  பொருள்கள் கூட, அரிசி போன்ற பொருள்கள், விலையேற்றம் கண்டுவிட்டன. குழந்தைகளுக்கான மாவு, எண்ணெய், சீனி எல்லாம் ஏறிக்கொண்டே போகின்றன.

ஆனால் இவற்றை  விட முக்கியமான ஒன்று உண்டு.  வேலை செய்தால் தானே வயிற்றை நிரப்ப முடியும்?  அதற்கும் இப்போது பிரச்சனை.  வேலை இல்லாப் பிரச்சனை. கோரொனா தொற்றுக்குப் பிறகு இன்னும் நிலைமை சீர் அடையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.  குறிப்பாக வேலை இல்லாப் பிரச்சனை இன்னும் பிரச்சனையாகவே இருக்கின்றது. அதுவும் இந்தியரகளுக்கு வேலை வாய்ப்புகள் கடுமையான பிரச்சனையாகவே இருப்பதாகச் சொல்லப்படுகின்றது.

நம்மிடம் எந்த புள்ளி விபரங்களும் இல்லை.  பேச்சு என்னவோ இந்தியர்களுக்கு  வேலை வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன என்று பெரிய அளவில் பேசப்படுகின்றது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது கேள்விக்குறியே.

இங்குள்ள இந்தியப் பெண்கள் இப்போது சிங்கப்பூருக்கு வேலை வாய்ப்புகளைத்  தேடி போவதாகக் கூறப்படுகின்றது. படித்தவர்கள் வேலை வாய்ப்புகளைத் தேடிப் போவது வேறு.  மிகச் சாதாரண வேலைகளுக்குக் கூட நமது பெண்கள் சிங்கப்பூருக்குப் போவது  நாம் இதுவரை கண்டதில்லை.  இங்கு வேலை வாய்ப்புகள் இல்லை அல்லது மறுக்கப்படுகின்றன என்கிற போது  அவர்கள் சிங்கப்பூரை நோக்கி படை எடுக்கின்றனர்.

படித்தவர்கள் வெளிநாடுகளுக்கு வேலை தேடி போவது என்பது வேறு. ஆனால் இப்போது நமது குடும்பப் பெண்கள் சிங்கப்பூரை நோக்கி வேலைக்குப் போவது  பிரச்சனை கடுமையாக இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம். பிள்ளைகளைப் பிரிந்து, குடும்பத்தைப் பிரிந்து போகிறார்கள் என்றால் பிரச்சனை  கடுமை என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். ஆமாம், என்ன செய்வது?  குடும்ப சுமை என்பது  சாதாரண விஷயமா?

பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள்  வரும்போது தான் நிலைமை சீரடையும். ஆனால் எப்போது என்பது தான் கேள்வி. நம்முடைய ஆலோசனை எல்லாம்  நமது அரசியல்வாதிகள் இந்த வேலை இல்லாப்பிரச்சனையில் கொஞ்சம் தலையிட்டு நமது இந்திய பெண்களுக்கு வேலை வாய்ப்புகளைத் தேடித் தருவதைக் கடமையாகக்  கொள்ள வேண்டும். குடும்பப் பெண்களுக்கு  இது பேருதவியாக  இருக்கும்.

Tuesday 26 September 2023

பெருமகனார் துன் வீ.தி.சம்பந்தன்!

 

       நன்றி: வணக்கம் மலேசியா

துன் என்றால் அது துன் வீ.தி.சம்பந்தன் அவர்களைத்தான் நமது தமிழ்ச்சமுதாயம் நினைவு கூரும். அந்த இடத்தைப் பிடிக்க வேறு யாராலும் முடியாது.

நண்பர் மணிமாறன் கிருஷ்ணன் அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள  "விண்ணில் மறைந்து மண்ணில் வாழ்கிறார்  துன் வி.தி. சம்பந்தன்"  என்கிற  அந்த நூலை இன்னும் படிக்கவில்லை என்றாலும் அவரைப்பற்றி வேறு நூல்கள் அல்லது கட்டுரைகள் நிறையவே படித்திருக்கிறேன்.

உண்மையைச் சொன்னால்  துன் அவர்கள் மலேசிய அரசியலில் பெரும் சாதனையாளர். அதுவும் இந்தியர்களைப் பொறுத்தவரை அவர் செய்திருக்கும் சாதனைகளை வேறு யாரும் செயததில்லை.

அவருக்குப் பின்னர் வந்தவர்கள் யாவரும்  'வாயடி வீரர்கள்' ஆகத்தான் இருந்தார்களே தவிர இந்திய சமுதாயத்திற்கு சோதனையாளர்களாகத்தான்  இன்னும் இருக்கின்றனர்!

அவர் ஆரம்பித்து வைத்த கூட்டுறவு சங்கம் ஒன்றே இன்றுவரை தனிப்பட்ட பெரும் வர்த்தக நிறுவனமாக, இந்தியர்களின் சாதனை நிறுவனமாக, பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.  தலைநகரிலுள்ள ம.இ.கா. கட்டடம் என்பது அவர் கட்டியது தான். இந்நாட்டில் உண்மையான, இந்தியர்களின் தூணாக விளங்கியவர்.

ஆனால் இன்றைய நிலை என்ன? அவருடைய சாதனைகள் தொடரப்படவில்லை. அதில் யாரும் அக்கறை காட்டவில்லை. கேட்டால் ஏம்ஸ்ட் இருக்கிறது, டேஃ கல்லூரி இருக்கிறது (இவைகள் என்ன ம.இ.கா. சொத்தா?), கோவில்களுக்கு உதவினார், பள்ளிகளுகளுக்கு உதவினார், கல்விக்கு உதவினார் என்று எத்தனை பெரிய பட்டியல் போட்டாலும்  கடைசியில்  மைக்கா ஹோல்டிங்ஸ் ஸுக்கு ஏன் உதவவில்லை என்றால்  அத்தனையும் ஒடுங்கிப் போய் விடுகிறது! இது ஒன்றே போதும். ம.இ.கா.  என்றும் தலைதூக்க முடியாத  அளவுக்கு  இந்தியரிடையே மனதில் ஆழப் பதிந்துவிட்டது! யார் என்ன செய்ய? இன்னும் குற்றச்சாட்டுகள் நிறையவே உள்ளன!

இந்த நேரத்தில் ஏன் இவர்களைப்பற்றி எழுதுகிறோம்? துன் சம்பந்தன் ம.இ.கா.வை இரும்புக்கோட்டையாக வைத்துவிட்டுப் போனார். இவர்கள்  இரு இரு கோடாகப் போட்டு , இருபது கோடுகளாக்கி வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்!

துன் அவர்கள் பிறக்கும் போது பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர். கட்சிக்காக தனது சொத்துகளை   இழந்தவர்.  தோட்டப்புற பாட்டாளிகளுக்காக வாழ்ந்தவர். கடைசிவரை ஏழைகளின் துயரத்தை அறிந்தவர்.

அவரது பெயர் என்றென்றும் சரித்திரத்தில் நிலைத்து நிற்கும். மறக்க முடியாத மாமனிதர் துன் அவர்கள். என்றென்றும் வாழ்க அவர் நாமம்!

Monday 25 September 2023

இடைநிலைப் பள்ளிகளுக்குச் செல்வதில்லையா?


இளம் வயதினர்,  13 வயது முதல் 17 வயது வரை உள்ள மாணவர்கள் சுமார் 180,000 மாணவர்கள் பள்ளி செல்வதில்லை என்கிற செய்தி உண்மையில் அதிர்ச்சியான செய்தியாகத்தான் நான் கருதுகிறேன்.

இதனை மலாயா பல்கலைக்கழகத்தின் "ஸ்டெம்" இயக்குநர் டாகடர் சஹிதாயான் முக்தார்  அறிவித்திருக்கிறார். மிகவும் வருத்தமான செய்தி.

பள்ளிக்குப் போகவில்லை என்பதற்காக அவர்களை நாம் கண்டு கொள்ளாமல் விட்டுவிட முடியாது.  ஏதோ ஒன்று அந்த மாணவர்களைப் பள்ளி செல்ல முடியாமல் தடுக்கிறது என்பது உண்மையிலும் உண்மை.

ஏழ்மை என்று சொல்லலாம், கல்வியின் முக்கியத்துவத்தை அறியாத பெற்றோர், இளவயது திருமணங்கள், குடிகாரப் பெற்றோர் - இப்படி பல காரணங்கள்.  இங்கும் புள்ளி விபரங்களைச் சேர்த்தால் நமது தமிழ் மாணவர்கள் தான் முதன்மையாக இருப்பர்.

நமது பெற்றோர்கள் சொல்லுகின்ற காரணங்கள் சரியானதாகவும் இருக்கலாம் அல்லது ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் இருக்கலாம். பள்ளிகள் அருகிலேயே இருக்கலாம். அதற்கும் ஒரு காரணம் வைத்திருப்பார்கள். கொஞ்சம் தூரமாகவும் இருக்கலாம்.  "பஸ் ஸ்கோலா"  கட்டணம் கட்ட முடியவில்லை என்பார்கள். இரண்டு மூன்று பிள்ளைகள் இருந்தால் பஸ் கட்டணம் உண்மையாகவே கட்ட முடியாது தான்.  பண பலம் இல்லதவர்களின் நிலையை நாம் உணரத்தான் செய்கிறோம்.

பள்ளிக்குச் செல்லாத இந்த மாணவர்களுக்கு அடுத்த கட்டமாக என்ன செய்ய விருக்கிறோம்?   நிச்சயமாக தொழில் பயிற்சிகள் பல உண்டு.  அரசாங்கம் ஏகப்பட்ட பயிற்சி  நிலையங்களை திறந்து வைத்திருக்கிறது. என்ன பயிற்சி நமக்கு வேண்டுமோ அந்தப் பயிற்சிகளைப் பெற  எல்லா வாய்ப்புக்களும் உண்டு.

நம்முடய தேவை எல்லாம் இந்த செய்திகள் முதலில் பெற்றோர்களுக்குச் சேர வேண்டும் அடுத்து மாணவர்களுக்குச் சேர வேண்டும். பல பெற்றோர்கள் அதுவும் கீழ் தட்டிலுள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் வெளியே போனால் கெட்டுப் போவார்கள்  என்கிற எண்ணத்தில் ஊறிப்போயிருக்கிறார்கள். அதெல்லாம் உடைத்து எறிய வேண்டும்.

இன்றைய நிலையில் ஓரளவு விபரம் தெரிந்தவர்கள் தங்களுக்குத் தெரிந்த விபரங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். நமது கோவில்கள் பெரும் பங்காற்ற வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் அரசாங்கத்தின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.  எனக்கு என்ன கிடைக்கும்? என்கிற கேள்விகளையெல்லாம் எழுப்பக்கூடாது!

சுயநலம் போதும்! கொஞ்சம் பொதுநலமும் வேணும்!

Sunday 24 September 2023

நான் வீழவதில்லை!

 

 மேலே படத்தில் உள்ளவரைப் பற்றியான செய்திகள் சமீபகாலங்களில் ஊடகங்களில் அமர்க்களக்கப்பட்டன.

அவரது பெயர் அரிஃ பீட்டர். வயது 27. தனது  இருபதாவது வயதிலேயே வர்த்தகத்தில் பல உச்சங்களைத்  தொட்டவர். வெற்றிகராமான வர்த்தகர்.

அவருக்கு மாளிகை போன்ற இரண்டு வீடுகள்,  மூன்று கார்கள், கால்நடை பண்ணை - இப்படி  பல வசதிகளோடு, வெற்றிகரமாக வாழ்ந்தவர். ஆனால் அத்தனையும் கடந்த இரண்டு ஆண்டுகளில் தவிடுபொடியாக்கிவிட்டன! 

அவர் செய்த தவறு: ஒரு தவறான முதலீட்டில் அனைத்தையும் இழந்து பத்து இலட்சத்திற்கு மேல் கடனாளியானார்.  அதன் பலன் அனைத்து சொத்துகளையும்  விற்க வேண்டிய சூழல். அப்படி விற்றும் அவரால் கடனை அடைக்க முடியவில்லை.   இப்போது தனது கார் ஒன்றை வீடாக மாற்றிக்கொண்டு, அந்தக் காரில் வாழ்ந்து கொண்டு, ஏதோ ஒரு வேலையைச் செய்து கொண்டு, அந்த வேலையில் வரும் வருமானத்தில்  கடனையும் அடைத்துக் கொண்டு தனது வாழ்க்கையை நடத்திக் கொண்டு வருகிறார்.

அவர் மீது நாம்  எந்தக் குற்றச்சாட்டையும் வைக்க முடியாது. இளம் ரத்தம் அல்லவா?  இளங்கன்று பயமறியாது என்பார்கள். அனுபவக்குறைவு அவரை எப்படியோ  குழியில் தள்ளி விட்டது. 

ஆனால் அது அத்தோடு முடிந்து விடுவதில்லை அது தான் அவனை வெற்றியாளனாக மாற்றிவிடுகிறது. அவர் கடனிலிருந்து விடுபட்ட பிறகு நிச்சயமாக அவர் மீண்டும் வர்த்தகத்துறைக்கு வரத்தான் செய்வார். வியாரத்தொழிலில் உள்ளவர்கள் என்ன தான் தோல்வி அடைந்தாலும்  அவர்கள் மீண்டும் மீண்டும் வியாபாரத்திற்குள் வரத்தான்  விரும்பவார்கள்.

காரணம் அவர்களுக்கே தெரியும்.  தோல்வி என்பது வியாபாரிகளின் வாழ்க்கையில் 'வந்துபோவது'  சகஜம் தான். அவர்களிடம் தனிப்பட்ட சில விசேட குணங்கள் உண்டு. அதனை அவர்களிடமிருந்து பிரிக்க முடியாது. மீண்டும் மீண்டும் முயற்சிகளைச் செய்து கொண்டு தான் இருப்பார்கள்.

மேலே உள்ள நண்பரும் அப்படித்தான்.  இப்போதைக்கு அவர் தனது கடனை அடைக்க வேண்டும்  என்கிற பொறுப்புணர்ச்சியில் வேலை செய்து கொண்டிருக்கிறார். அவர் கடனிலிருந்து விடுபட்ட பின்னர் மீண்டும் அவர் வியாபாரத் துறையில்  இறங்கி விடுவார்.

வியாபாரி என்று சொன்னாலும், தொழிலதிபர்  என்று சொன்னாலும் - என்ன பெயரில் அவர்களை அழைத்தாலும்  - அவர்கள் தங்களது வியாபார முயற்சிகளைக்    கடைசி வரை, வெற்றிபெரும் வரை ,  கை விடமாட்டார்கள்!

வியாபாரிகளுக்கு என்றுமே வீழ்ச்சியில்லை!

Saturday 23 September 2023

வணக்கம் மலேசியா!

 

இணையதளத்தில் பிரபலமாக விளங்கும் "வணக்கம் மலேசியா"   ஊடக இதழை  தொடர்ந்து படிப்பவர்களில் நானும் ஒருவன்.

பெரும்பாலான செய்திகளை அங்கிருந்து தான்  நான் தெரிந்து கொள்கிறேன்.  சுமார் 820,000 பார்வையாளர்களைக் கொண்ட அந்த இணைய இதழ் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதை அறிந்து நானும் வாழ்த்துகிறேன்.

சில குறைகளும் உண்டு. கடந்த சில மாதங்களாக மிகுந்த பிழைகளுடன் வந்து கொண்டிருப்பதையும் நாம் சுட்டித்தான் ஆக வேண்டும். இன்னும் கொஞ்சம்  பொறுப்புணர்ச்சியோடு ஆசிரியர் குழு நடந்து கொள்ள வேண்டும்.

இருக்கும் குறைபாடுகளைக் களைந்து  இன்னும் சிறப்பாக செயல்பட  வாழ்த்துகிறேன்!

Friday 22 September 2023

இரகசிய காமிராவா?

 


சபா மாநில  தங்கும் விடுதி ஒன்றில் இரகசிய கேமரா பொருத்தப்பட்ட விவகாரம் மிகவும் கடுமையானதாக சுற்றுலாத்துறை  எடுத்துக் கொள்ள வேண்டும். எந்த வகையிலும் சமரசம் செய்து கொள்ள முடியாத  விஷயம் இது.

நாட்டிற்கு அவப்பெயர். நமது நாடு சுற்றுலாப் பயணிகளை அதிகம் நம்பியிருக்கும் நாடு. சுற்றுலாத்துறை கணிசமான அளவுக்கு வருமானத்தை ஈட்டும் ஒரு துறை. 

பயணிகள் தங்கும் விடுதிகளில் இது போன்ற சம்பவங்கள் ஏற்படும் போது  அது அந்த தங்கும் விடுதிக்கு மட்டும் கெட்ட  பெயர் அல்ல சுற்றுலாத்துறைக்கே கெட்ட பெயர்.  ஓரிருவர் செய்யும் தவற்றினால்  அனைத்து தங்கும் விடுதிகளுக்குமே கெட்ட பெயர். இது போன்ற சம்பவங்களினால்  சுற்றுலாப் பயணிகள் மலேசியா போன்ற நாடுகளுக்கு  பயணம் செய்வதற்கே தயங்குவர்.

விடுதிகளில் தங்குபவர்கள் வெளிநாட்டுப் பயணிகள் மட்டும் அல்ல உள்நாட்டுப்  பயணிகளும் அடங்குவர். யாராக இருந்தாலும் இது போன்ற செயல்களை விரும்புவதில்லை. ஏன்? தவறு செய்கிறார்களே அவர்களின் குடும்பத்தினர் கூட அதனை விரும்ப மாட்டார்கள்.

காவல்துறை எந்த அளவுக்கு இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டால் தான்  இது போன்ற செயல்களைத் தடுத்து நிறுத்த முடியும்.

நீண்ட நாள்களாக இது போன்ற செய்திகள் வந்ததில்லை. ஒரு வேளை மறைக்கப்படுகிறதோ, அறியோம்.

சுற்றுலா என்றால மற்ற நாடுகளின் கலை கலாச்சாரம், மொழி போன்றவற்றைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு பலர் பல நாடுகளுக்கு வருகைப் புரிகின்றனர்  அங்கே இது போன்ற துர்சம்பவங்கள் நடக்கும் போது  அந்நாட்டின் மீதான நம்பிக்கையே சிதைந்துவிடும்.

எப்படியோ நம்மால் இது போன்ற சம்பவங்களை ஏற்றுக்கொள்ள இயலாது. ஒழுக்கத்துக்கு  சவால் விடும் விஷயங்களைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. நமது எதிர்ப்பினை நாம் தெரிவிக்கிறோம். இது போன்ற சம்பவங்களை ஆதரிப்பார் யாருமில்லை.

சுற்றுலாத்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மட்டும் அல்ல. இனி மேல் இது போன்ற சம்பவங்கள்  நடைப்பெறக் கூடாது  என்பதை  சுற்றுலாத்துறை உறுதிப்படுத்த வேண்டும்.

Thursday 21 September 2023

தப்புக்கணக்கு வேண்டாமே!

 


மித்ராவைப் பற்றி ஏகப்பட்ட கட்டுரைகள் எழுதினாலும் மக்களில் பலர் இன்னும் நம்புவதாக இல்லை!

ஏனெனில் கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை யாரும் மறப்பதாகத் தெரியவில்லை. ஆனாலும் அதனை மறந்து மன்னிக்கத்  தான் வேண்டும்.  காரணம் யார் திருடினார் என்பதை யாராலும் கண்டுபிடிக்காதபடி அவர்கள் பலே திருடர்களாக இருக்கிறார்கள்! அதனால் அதைப்பற்றி பேசுவதை விட்டுவிட்டு இனி நடக்கப் போவதைப் பார்ப்போம். அவர்கள் வெளிப்படையாகவே சவால் விடுபவர்களாக இருக்கிறார்கள்.  'நிருபி!  எங்கள் மேல் நடவடிக்கை எடு!' என்கிறார்கள்.

நம்மால் எதுவும் செய்ய இயலாது.  அவர்களை நாம் மறக்கத்தான் வேண்டும்.  ம.இ.கா. பிரதிநிதி ஒருவர் இப்போது தான் மித்ரா உள்ளே காலடி எடுத்து வைத்திருக்கிறார். நல்லது நடக்க பிரார்த்திப்போம்!

ஒரு பெருந்தொகையைக்  கையாளும் போது நிச்சயமாக  சபலங்கள் வரத்தான் செய்யும். சபலத்திற்கு அடிமையாகதவர் யார்?  எப்படியோ இன்றைய நிர்வாகம் அந்த சபலத்தைக் கடந்து வந்து  இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட மானியத்தை வெற்றிகரமாக கொடுத்து முடித்திருக்கிறது. அதுவே இதுவரை மித்ரா செய்யாத பெரும் சாதனை!

முடித்து வைத்ததை ஒரு சாதனை என்று ஏற்றுக்கொள்ள முடியுமா என்றால் இல்லை தான்.  எப்படியோ  இந்தியர் ஒருவர் பயன்பெறுகிறார் என்றால் நமக்கும் உடன்பாடு தான்.  இதற்கு முன்னர் மானியத்தை திருப்பி அனுப்பிவிட்டனரே  அதனால் யாருக்குப் பயன்? 

இப்போது நாம் சொல்ல வருவது என்ன?  ஆமாம், தப்புக்கணக்குப் போட வேண்டாம். என்றோ நடந்த தவற்றினை மறந்துவிட்டு  இப்போது இனி என்ன செய்யலாம் என்று யோசிப்பதே  நல்லது.

புதிய  நிர்வாகம், புதிய மனிதர்கள், புதிய திட்டங்கள், புதிய யுக்திகள் - ஆகவே நாமும் நம்மை மாற்றிக் கொள்ளுவோம். இவர்களும் உளுத்துப்போன பழைய மனிதர்களாக இருப்பார்கள்  என்று நாம் தப்புக்கணக்குப் போட வேண்டாம்.  அவர்கள் தங்களது திறனைக் காண்பிக்க வாய்ப்பு வழங்க வேண்டும்.

நடைமுறையில் என்ன நடக்கிறது? இப்போதே அவர்களை வசை பாட ஆரம்பித்து விட்டோம்! அங்கே ஊழல், இங்கே ஊழல், அங்கே குற்றம், இங்கே குற்றம் - என்று பேசும் குரல்கள் ஒலிக்கின்றன! இப்போது உள்ள சூழலில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்துவதாகவே தோன்றுகிறது!

ஆனால் மித்ரா இது போன்ற தாக்குதல்களையெல்லாம்  தாண்டித்தான் வரவேண்டும். காரணம் கடந்தகால அனுபவங்கள் அப்படி! அவர்களும் அதனைப் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும்!

மித்ராவின் வருங்காலம் சிறப்பாகவே ஒளிரும் என நம்புவோம்!

Wednesday 20 September 2023

குறைவான எண்ணிக்கையா?

 


தற்காப்புப் படையில் பூமிபுத்ரா அல்லாதாரின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதாக தற்காப்பு அமைச்சர் கூறியிருப்பது வருத்தமடைய வைக்கும்  செய்தி தான். நாட்டின் தற்காப்புக்கு 3 விழுக்காடு தான் சீனர், இந்தியர்களின் பங்களிப்பு  என்றால் பெருமைப்பட என்ன இருக்கிறது?

ஆனால்  இந்த செய்தி ஒன்றும் புதிதல்ல.  இந்தக் குற்றச்சாட்டு எல்லாகாலங்களிலும்  உள்ளது தான். இது ஏன் இப்படியே தொடர்கிறது? எங்கே பிரச்சனை? 

ஒன்று பூமிபுத்ரா அல்லாதவர்கள் உடல் ரீதியில்  தகுதியில்லாதவர்களாக இருக்க வேண்டும். நெட்டை, குட்டையாக  அல்லது ஒல்லிபிச்சானாக இருக்க வேண்டும். ஏதோ ஒரு வகைக் கோளாறு இவர்களிடம் இருக்கத்தான் வேண்டும்.

ஒரு காலகட்டத்தில்  ம.இ.கா. வே களத்தில் இறங்கி இந்திய இளைஞர்கள் தற்காப்புப்படையில் சேர்க்கப்பட வேண்டும் என்று தற்காப்பு அமைச்சரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் எதுவும் செயல்வடிவம் பெறவில்லை. ஏதோ ஒன்றிரண்டு பேர் சேர்க்கப்பட்டார்கள்.   
அத்தோடு முடித்துக் கொண்டார்கள். என்ன தான் நடக்கிறது என்று நமக்கும் புரியவில்லை.

இப்போதும்  அதே குற்றச்சாட்டு.  நமக்கு உள்ள கேள்வியெல்லாம் உண்மையில் இவர்கள் என்ன தான் சொல்ல வருகிறார்கள்?  பூமிபுத்ரா அல்லாதார்  படையில் சேர ஆர்வம் காட்டவில்லை என்கிறார்களா அல்லது ஏதோ காரணங்கள் சொல்லி  அவர்களைப் புறக்கணிக்கிறார்களா என்பது தான்  நமது கேள்வி. நமக்குத்  தெரிந்தவரை நமது இளைஞர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பது தான் பொதுவான  கருத்து.

ஆனாலும் நம்மால் எதனையும் உறுதிப்படுத்த  முடியவில்லை.  அவர்களிடம் புள்ளி விபரங்கள் இருக்கும் அதனைத்தான்  அவர்கள் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். நாமும் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டியது தான்!

தற்காப்பு அமைச்சர் புள்ளி விபரங்களின்படி 3 விழுக்காடு என்கிறார். நன்றி! அதே போல மற்ற அரசாங்கத் துறைகளில் பூமிபுத்ரா அல்லாதாரின்  எண்ணிக்கை எந்த நிலையில் இருக்கிறது என்று தெரிந்த கொள்ளவும் நமக்கு ஆசை உண்டு. அதனையும் தெரிந்து கொண்டால்  அரசாங்கத்தில் நமது  நிலை என்ன என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். அதாவது நாம் புறக்கணிக்கப் படுகிறோமா அல்லது புறந்தள்ளப்படுகிறோமா  என்பது  தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

எப்படியோ,  நமது இளைஞர்கள் தற்காப்புப்படையில் சேர்ந்து  தங்களது வாழ்க்கைத் தரத்தை  உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பது தான் நமது வேண்டுகோள்.  இப்போது நமது வீரம் எல்லாம் சிறையில் தான் பூட்டிக் கிடக்கிறது. 

நாட்டிற்காகவும் இனி நாம் உழைப்போம்!

Tuesday 19 September 2023

எல்லாமே அளவுதான்!

 

பதவியில் உள்ளவர்களை அளவுக்கு அதிகமாகப் புகழ்ந்து தள்ள வேண்டாம்!

இப்படித்தான் ஏற்கனவே புகழ்ந்து, புகழ்ந்து  கடைசியில் வெறும் சுழியத்தில் இந்த சமுதாயத்தை மலைகளுக்கு அனுப்பி விட்டார்கள் நமது முன்னாள் அரசியல்வாதிகள! மீண்டும் மீண்டும் அதே தவற்றைச் செய்ய வேண்டாம்!

ஏதோ ஒன்றைச் செய்தால் அவர்கள் ஆயிரம் காரியங்களை செய்தது போல அவர்களைத் தூக்கு தூக்கு என்று தூக்கி விடுகிறோம்! அப்படி என்றால்  என்ன தான் செய்யலாம்?  ஒன்றும் செய்ய வேண்டாம். நாம் சும்மா இருப்போம்! யாருடைய  வாலையும் பிடித்துக் கொண்டு தொங்கு தொங்கு  என்று தொங்க  வேண்டாம்!

செய்ய வேண்டியது அவர்களது கடமை. செய்யவில்லை என்றால் அவர்கள் தகுதி அற்றவர்கள் என்பது தான் பொருள். அவர்களுக்கு எந்த மரியாதையும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. தேர்தல் வரும் போது  அவர்களைப் புறக்கணியுங்கள்.

அதே போல  டத்தோ ராமகிருஷ்ணன்  மித்ராவின் தலைவராக பொறுப்பேற்றிருக்கிறார்.  அவர் அந்தப் பதவிக்குத் தகுதி உள்ளவர் என்பதனால் அவருக்கு அந்தப் பதவி அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. நமக்கு அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை.

நமக்கு வேண்டியதெல்லாம்  மித்ராவின் பணத்தைக் கொண்டு அவர் இந்திய சமூகத்திற்கு என்ன செய்யப் போகிறார் என்பதைத்தான் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். இந்த ஆண்டு அரசாங்கம் கொடுத்த முழு மானியத்தையும்  பயன்படுத்திக்கொண்டு விட்டதாக அவர் சமீபத்தில் கூறியிருந்தார். நல்லது. வரவேற்கிறோம்! நிச்சயமாக  முழு மானியத்தையும் பயன்படுத்தியிருப்பது இது தான் முதல் தடவை! அதுவே பெரிய சாதனை!  முழு விபரங்களும் அவர்களது அகப்பக்கத்தில் கிடைக்கும் என நம்புகிறோம். அப்படி இல்லையென்றால் ஏதோ சரியில்லை என்று நமபலாம்.

 இன்னும் அவர் என்ன என்ன செய்யப் போகிறார் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நான் ஏற்கனவே சொன்னது போல அவசரப்பட வேண்டாம்.  அவர் அப்படி, இவர் இப்படி என்று புகழ்ந்து தள்ள வேண்டாம். என்ன தான் நடந்திருக்கிறது என்று நமக்குத் தெரிய வேண்டும். மானியங்கள் இந்தியர்களின் முன்னேற்றத்திற்கு எப்படிப் பயன் அளித்திருக்கிறது என்பது நமக்குத் தெரிய வேண்டும்.

ஒன்றுமே தெரியாமல் அவர் ஏதோ பெரிதாக சாதித்துவிட்டதாக அதற்குள் எந்த முடிவுக்கும் வர வேண்டாம்.  கொடுத்த மானியத்தை வாரி இறைத்திருக்கிறார்.  அதனால் என்ன பலன் என்பதற்காக அவரைப் போலவே நாமும் காத்திருக்கிறோம்.

தேவையில்லாமல் 'காக்காய்' வேலைகளைச் செய்ய வேண்டாம்! அவர்களை வேலைகளைச் செய்ய விடுங்கள். செய்த பிறகு அவர்களைப் பாராட்டுவோம்!

Monday 18 September 2023

தேவையற்ற எதிர்ப்பு!

 


தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் பற்றிய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ம.இ.கா.கண்டனப் பேரணியை நடத்தும் என்று ம.இ.கா. தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறியிருக்கிறார்.

உண்மையில் இது தமிழ் நாட்டில் நடக்கும் ஒரு பிரச்சனை. அவர்கள் இன்று எதிர்ப்பார்கள் நாளை சேர்ந்து கொள்வார்கள்! அவர்களுக்கு இதெல்லாம் அரசியல். வெகு விரைவில் அவர்கள் நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கிறார்கள்.  அதனால் தேர்தல் காலம்வரை அவர்கள் இதுபற்றிப் பேசுவார்கள். அதன் பின்னர்  எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள்! அவ்வளவு தான் அவர்களது எதிர்ப்பு.  எல்லாம் பிசுபிசுத்துப் போகும்!

நமக்கு ஒன்று புரியவில்லை. இதனை ஏன் ம.இ.கா. கையில் எடுக்கிறது? அப்படி என்ன அவர்களுக்குத் தமிழர் மீதான கோபம்?

நம்மைப் பொறுத்தவரை சனாதனம்  என்றால் என்னன்னவோ விளக்கங்கள் இருக்கலாம்.  ஆனால் மிகச்சுருக்கமாக  மேல் ஜாதி கீழ் ஜாதி  என்பது மட்டும் தான்.   இப்படிச்  சொல்லுவதற்கே நமக்கு அருவருப்பாக இருக்கிறது.  ஒரு பானை சோற்றுக்கு  ஒரு சோறு பதம் என்பார்கள்.  மற்றவை எவ்வளவு தான்  சனாதனம் அருமையான கொள்கைகளைக் கொண்டதாக இருந்தாலும்  இந்த ஒரு கொள்கையே அதனை வெறுப்பதற்குப் போதுமானது.

நம் நாட்டில் ம.இ.கா. சாதியை வளர்த்து வரும் கட்சி  என்பது மக்களுக்குப் புரியும்.  ம.இ.கா. தலைமைத்துவம் எல்லாகாலங்களிலும் மேல் தட்டு மக்கள் தான் பதவியில் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்.  மற்றவர்களைப்  புறக்கணிப்பவர்கள் என்பது தெரியும்.  அவர்கள் மக்கள் சக்தி கட்சி டத்தோ தனேந்திரன் நாயர் உடன் சேரவார்களே தவிர ஐ.பி.எப்.  கட்சியுடன் சேர  மாட்டார்கள்!

இப்படிப்பட்ட கொள்கை உடையவர்கள் 'சனாதன ஒழிப்பை எப்படி ஏற்றுக் கொள்வார்கள்?  மேலும் இது போன்ற பிரச்சனைகள் தமிழ் நாட்டில்  எப்போதும் நடைபெரும் ஒன்று தான்! அப்போது எந்த ஒரு ஆர்வமும் காட்டாதவர்கள் இப்போது  ஏன் ஆர்வம் காட்டுகிறார்கள்?  ம.இ.கா. வுக்குச் செய்ய ஒன்றுமில்லையே என்று நினைக்கிறார்களோ!

நமது ஆலோசனை இது தான். அவர்களே அந்தப் பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ளட்டும்.  இது போன்ற செயல்களால் தான் அவர்கள் வளர்ந்து வருகிறார்கள் அல்லது வீழ்ச்சி அடைகிறார்கள். இதெல்லாம் ஒரு வகையான அரசியல்.

இதனைத் தேவையற்ற கண்டனப் பேரணி  என்றே நினைக்கிறேன்!

Sunday 17 September 2023

தற்கொலைகளை தவிர்ப்போம்!


என்னவோ, எவ்வளவோ சொல்லியாயிற்று. ஆனால் இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. யாரை நொந்து கொள்வது?

தற்கொலைக்கு ஆயிரம் காரணங்கள் சொல்லலாம். தற்கொலை செய்பவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.  எல்லாரும் சொல்லுவது போல "அந்த நிமிடத்தை தவிர்த்துவிட்டால்" அதன் பின் அவர்கள் சகஜமாகி விடுவார்கள். ஆனால் மாட்டிக்கொள்பவர்கள் அந்த  நிமிடத்தை தவிர்க்க முடியாவிட்டால் என்ன செய்வது?

அரசாங்கம் பல வசதிகளைச் செய்து கொடுத்திருக்கின்றது. மனநோய் சம்பந்தமான  பிரச்சனைகளைக் களைய  தொடர் சிகிச்சைகளை அரசாங்கம் ஊக்குவிக்கிறது. ஆண்டுக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை சிகிச்சையும் தொடர்கிறது.

தற்கொலைகளைத் தடுக்க பல தனியார் இயக்கங்கள் ஆலோசனைகள் கொடுக்கின்றன. அவர்களுடைய தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டால் அவர்கள் அதற்கான ஆலோசனைகளைக் கொடுப்பார்கள்.

இப்போது நம் நாட்டில் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன.எதற்கு என்றே புரியவில்லை. அதுவும் இந்தியப் பெண்களின் நிலை பரிதாபம். சமீபகாலமாக நானும் 'டிக்டாக்' பார்த்து வருகிறேன். ஒரு சிலரின் போக்கு நமக்கு அதிர்ச்சியை  அளிக்கிறது. இது போன்ற ஆபத்தில் உள்ளவர்கள  நிச்சயம் ஆலோசனைகள் பெற வேண்டும். இயக்கங்களின் தொலைபேசி எண்களை வைத்திருக்க வேண்டும். தேவையோ இல்லையோ நேரம் வரும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

தமிழ்ப்பட இசையமைப்பாளர் விஜய் அண்டனியின் மகள், மீரா செய்து கொண்ட தற்கொலையினால்  இன்று பல பெற்றோர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். குறிப்பாக உலகம் எங்கிலுமுள்ள தமிழர்கள். அந்தப் பெண்ணுக்கு என்ன தான் குறைச்சல்? அப்படி ஏதும்  இருப்பதாகத் தெரியவில்லை. எது கேட்டாலும் கிடைக்கும், எதற்கும் குறைச்சலில்லை, எல்லாமே கைக்கு எட்டிய தூரம் தான் அதற்கு மேல் ஏன்ன வேண்டும்? அது தான் நமது கேள்வி.

ஆனால் இன்னொரு பக்கம் பார்த்தால்  'எல்லாமே கிடைக்கும்' என்பது தான்   குழந்தைகளுக்கு  மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாகத்  தோன்றுகிறது!  என்னவோ நமக்குப் புரியவில்லை! நமது உலகம் வேறு குழந்தைகளின் உலகம் வேறாக இருப்பதாகத் தோன்றுகிறது.

நமக்குத் தெரிந்ததெல்லாம்  பிரச்சனை வரும்போது குழம்பிப் போகாதீர்கள். மனநல மருத்துவரிடம்  சென்று  சிகிச்சைப் பெறுங்கள். அதற்கான வசதிகள் நம் நாட்டில் உண்டு.

தற்கொலைகள் வேண்டவே வேண்டாம்!

      

Saturday 16 September 2023

முதன் முறையாக.....!

 

                                                                   டத்தோ ரமணன் - மித்ரா

மித்ரா அமைப்பு, முதன் முதலாக,  2016 முதல் இந்தியர் உருமாற்றத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும்  நூறு மில்லியன் ஒதுக்கீட்டுத்  தொகையை இந்த ஆண்டு முழுமையாக  இந்திய சமூகத்திற்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதாக மித்ராவின் தலைவர் டத்தோ ரமணன் அறிவித்திருக்கிறார்.

இதற்கே நாம் மித்ராவின் தலைவரைப் பாராட்ட வேண்டும். காரணம் கடந்த காலங்களில்  இந்திய சமூகம் என்று ஒன்று இருப்பதாகக் கூட  மித்ராவின் பொறுப்பாளர்களுக்குத் தெரியவில்லை!  அதனால் 'பெறுவார்' யாருமில்லை  என்று சொல்லி , கொடுக்கப்பட்ட மான்யத்தைத் திருப்பி அரசாங்கத்திற்கே அனுப்பிவிட்டதாக  அப்போதே செய்திகள் வெளி வந்தன. 

எப்படியோ இம்முறை அது போன்ற தவறுகள் எதுவும் நடக்கவில்லை. 'பெறுவதற்கு' இன்னும் பலர் உள்ளனர் என்கிற உண்மை இப்போதைய தலைமையத்துவதற்குத் தெரிய வந்ததால் மான்யம் பரவலாகக் கொண்டு போய் சேர்க்கப்பட்டிருக்கின்றது.  அதற்காக நன்றி.

நம்முடைய நோக்கம் எல்லாம் அரசாங்கம் கொடுக்கும் மான்யம் தேவைப்பட்டவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பது தான். தேவை என்பது நமது சமுதாயத்திற்கு என்றும் இருக்கும்.

ஒன்றை நாம் நம்புகிறோம். இதுவரை மான்யம் பெற்றவர்கள்  தேவையின் அடிப்படையில் தான் பெற்றிருக்கிறார்கள் என்பதை நாம் நம்புகிறோம். இந்த முறை அந்த மான்யம் பெரும்பாலும் கல்வி சம்பந்தப்பட்டவர்களுக்கே  அதிகம் பகிரப்பட்டிருக்கிறது என்பது  நிதர்சனம்.  அதே சமயத்தில் மேற்கல்வி கற்கும் மாணவர்கள், கல்வியைத் தொடர பணம் தேவை, என்றால் அவர்களுக்கும் மித்ரா கைக் கொடுக்கும் என்பதையும் நம்புகிறோம். 

கல்விக்கு நாம் எதிரி அல்ல. நிச்சயமாக அவர்களுக்கான உதவி செய்வதை மித்ரா தொடர வேண்டும்.

ஆனால் அதே சமயத்தில்  சிறு வர்த்தகங்களில் ஈடுபட்டிருக்கும்  சிறு வியாபாரிகளுக்கு உதவ   மித்ரா முடிந்தால் அதிகம் அக்கறை காட்ட வேண்டும் என்று நினைவுபடுத்துகிறோம். பெரும் வியாபாரங்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நாம் சொல்ல வேண்டியதில்லை.வங்கிகள்  அவர்களுக்காகக் காத்துக் கிடக்கின்றன. சிறு குறு வியாபாரிகளுக்குத் தான் உதவி பெறுவதில்  பல சிக்கல்கள், பல பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றனர். அவர்களுக்கு எப்படி உதவலாம் என்கிற ஒரு திட்டத்தை வகுத்து அவர்களுக்கு உதவ வேண்டும். சிறு வியாபாரங்கள் செய்பவர்களுக்கு உதவுவது மித்ராவின் கடமை. அவர்கள் தான் நீண்ட நாள்களாக 'மித்ரா உதவ வேண்டும்' என்கிற கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

இது தான் முதன் முறை என்று சொல்லி முற்றுப்புள்ளி வைக்க வேண்டாம்! உங்கள் பணி தொடர வேண்டும்!

Friday 15 September 2023

அளவுக்கு மிஞ்சினால்......!

 


அந்தக் காலத்திலேயே நம் முன்னோர்கள் சொன்னது தான்: அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்.

சமீபத்திய  செய்தி  ஓன்றைப் படித்த போது  நம் இளம் வயதினர்கள் எந்த அளவு  தங்கள் உடல் நலனில் அக்கறை அற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

 ஒர் இளம்  பெண்  சுவை பானம் அருந்துவதில் எவ்வளவு ஈடுபாடு காட்டியிருக்கிறார்  அதனால் எப்படி தனது உடல் நலனைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதை அறியும் போது மனதுக்கு வருத்தம் அளிக்கிறது.

அந்தப் பெண்  ஒவ்வொரு நாளும் நான்கு பாட்டல் சுவைபானம் அருந்துவதை வழமையாகக் கொண்டிருந்திருக்கிறார். தொடர்ந்தாற் போல ஆறு ஆண்டுகள். அதன் பின் உடல்நிலை மோசமடைந்தது. மருத்துவமனைக்கு செல்கின்றார். நீரிழிவு நோயின் தாக்கம் இருப்பது தெரிந்தது. மேலும்  சோதனைகள்.  இரத்தத்தில் சர்க்கரையின் அளவு 27 என்று தெரிய வந்தது. இப்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில்  சிகிச்சைப் பெற்று சர்க்கரையின் அளவு 7 என்கிற நிலைமைக்கு வந்திருக்கிறது.  இப்போது உணவு கட்டுப்பாடுகள், மருந்து மாத்திரைகள்,  சுவை பானங்களை முற்றிலுமாக தவிர்த்துவிட்டு  இயல்பான வாழ்க்கை வாழ முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

இத்தனைக்கும் இந்தப் பெண்ணுக்கு வயது 22 என்பது தான் அதிர்ச்சியான செய்தி.  இந்த வயதில்  அவர் பல துன்பங்களை அனுபவித்து விட்டார். அடிக்கடி சிறுநீர் கழிப்பது, வெளியே இருக்கும் போது சிறுநீர் கழிக்க முடியாமல்  அவதிப்படுவது,  உடல் எடை திடீரென  92 கிலோகிரேமிலிருந்து  84 கிலோகிரேமாக  குறைந்தது, தலையில் ஏற்பட்ட காயம் ஆறாமல் சீழ்வடியத் தொடங்கியது - இப்படியே பல துன்பங்களை அனுபவித்து விட்டார்.

கொஞ்சம் சிந்தியுங்கள். ஒரு சிலர் தண்ணீரைக் குடிப்பதை கௌரவக் குறைவாக நினைக்கின்றனர். சுவை பானங்கள் அருந்துவதில் பெருமையாகக் கருதும் எருமைகளும் இருக்கின்றனர். ஏன்? எனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவர் மதியம் உணவு முடிந்த பின்னர் சுவை பானத்தைத் தான் அருந்துவார். அவருக்கு நாம் புத்தி சொல்லுவது?

சுவை பானங்களை அளவுக்கு மீறி பயன்படுத்தாதீர்கள். அது உடல் நலத்துக்குக் கேடு என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்.  இன்று அந்தப் பெண். நாளை....? நீங்களாக இருக்கலாம்!

Thursday 14 September 2023

கொஞ்சம் பொறுமை காட்டலாமே!

 


என்ன செய்வது? பார்க்க பரிதாபம் தான். ஆனால் செய்கிற குறும்பு கொஞ்சம் அதிகமாகும் போது ஆசிரியர்கள் பொறுமை இழந்து விடுகின்றனர்.  அது தான் நடந்திருக்கிறது.

பள்ளி  பாட நேரத்தில் ஒரு மாணவன் வகுப்பில் மின் சிகிரெட்டை ஊதிக் கொண்டிருந்தால்  நம்மால் ஓரளவு அவன் எப்படிப்பட்ட மாணவன்  என்பதை ஊகிக்க முடியும். அதுவும் 5-ம்  படிவ  மாணவன். பரிட்சை நெருங்கி விட்டது.  ஆசிரியரும் தனது கடைசி நேர முயற்சிகளை முடுக்கிவிட்டிருக்கும் நேரம்.

ஒரு மாணவன் செய்கின்ற குறும்புதனத்தால் மற்ற மாணவர்களுக்கும் படிப்பில் கவனச்சிதறல்  ஏற்படத்தான் செய்யும்.  அதனை எந்த ஆசிரியரும் விரும்பமாட்டார்.

ஆனால் அதற்காகவெல்லாம் ஓர் ஆசிரியர் இப்படியெல்லாம் கடுமையான தண்டனையைக் கொடுப்பது நியாயம் ஆகுமா என்று  கேட்டால் அது நியாயம் இல்லை என்று தான் சொல்ல வேண்டி வரும்.

அப்படி என்றால் என்ன செய்யலாம்? கால்களிலோ, கைகளிலோ பிரம்பால் அடிப்பது கொஞ்சம் பாதுகாப்பாக இருக்கும். பிரச்சனை என்னவென்றால்  மாணவர்களை அடிப்பதே கூடாது என்றால்  இந்த மாணவர்கள் எப்படி உருப்படுவார்கள்?

மேற்படி இந்த மாணவன் எப்படித்  தாக்கப்பட்டான்  என்பதும் நமக்குப் புரியவில்லை. எதனையும் நம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை.

ஒன்று மட்டும் உறுதி. இப்படித் தங்கள் பிள்ளைகளுக்கு ஏற்படுவதை  எந்த பெற்றோரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அது அவர்களின் பிள்ளைகளின் மேல் உள்ள அன்பு, பாசம் எனலாம்.அதாவது பெற்றோர்களின் அதீத அன்பே  அந்தப் பிள்ளைகளுக்கு விரோதமாய் அமைந்துவிடுகிறது.

நம் பிரார்த்தனையெல்லாம்   அந்த மாணவனின்  கண் பார்வையில் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது  என்பது மட்டும் தான்.  அந்த ஆசிரியரும் வருங்காலங்களில் இது போன்ற  அடவாடித்தனமாக  நடந்து கொள்ளக் கூடாது என்பதையும் சொல்லத்தான் வேண்டும்.  என்ன செய்வது? இன்றைய மாணவர்களின் நடவடிக்கைகள் இப்படித்தான் இருக்கின்றன.  அதற்காக அவர்களிடம் சண்டை போட்டுக் கொண்டா இருக்க முடியும்?

கல்வி அமைச்சு என்ன முடிவு செய்யப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

Wednesday 13 September 2023

எப்போ வருவேன், எப்டி.........!

 

           நன்றி:  செல்லியல்

"நான் எப்போ வருவேன், எப்டி வருவேன்'னு தெரியாது! ஆனா வரவேண்டிய  நேரத்தில  கரெக்டா வருவேன்!"

யார் பேசிய வசனம் என்று சொல்லியா தெரிய வெண்டும்?  தலைவர் ரஜினி  தான்!

அவர் எப்போ வருவார் என்று நமக்குத் தெரியாது என்பது உண்மை தான். எப்படி வருவார் என்பதும் உண்மை தான்.  கோட் சூட்டோடு வருவாரா, கலாச்சார உடையோடு வருவாரா என்பதும் உண்மை தான்.

வரவேண்டிய நேரத்தில் கரக்டா வருவேன் என்றாரே  அது தான் தெரியவில்லை. தேர்தல் நேரத்தில் வந்திருந்தால் ஒரு வேளை அது கரெக்டான நேரமாக இருந்திருக்கும்.  ஒரு வேளை 'ஜெய்லர்' படத்தின் வேலையில் மும்முரமாக இருந்திருப்பாரோ? எப்படியோ இப்போது வந்திருக்கும் நேரமும் கரெக்டான நேரம் தான்!

ஆனாலும் அவரது வருகையால்  அப்படியே இந்தியர்களின் வாக்குகள் பக்காத்தான் கூட்டணிக்குப் போய்விடும் என்பதெல்லாம் கொஞ்சம் அதிகம் தான். அது நடக்கப் போவதுமில்லை.  யாரும் எதிர்பார்க்கவும் இல்லை. 

அது அவரது தனிப்பட்ட வருகை. ஒரு நண்பரைச் சந்தித்துவிட்டுப் போவது போல வந்துவிட்டுப் போயிருக்கிறார். நண்பராகக் கூட இருக்கலாம். நமக்குத் தெரிய நியாயமில்லை. ஆனால் அவரது வருகையால் மலேசிய இந்தியர்களுக்கு எதுவும் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. அதை நாம் தெரிந்து கொண்டால் போதும்!

ஒன்றை நாம் நினைவு கூர்வது நல்லது. அவரது வாழ்க்கைப் பயணம் நமக்கெல்லாம்  ஒரு பாடம். ஒரு பஸ் கண்டக்டராக அவரது வாழ்க்கைப் பயணம் அமைந்தது. ஆனால் அத்தோடு அவரது பயணம் முற்றுப் பெறவில்லை. சென்னைக்கு வந்தார்.  திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து  தமிழ் திரைப்படங்களில்  நடிகனாக வேண்டும்  என்கிற தனது இலட்சியக் கனவைத் தொடர்ந்தார். பின்னர் நடிகனாக ஒரு சிறிய வேடத்தை  இயக்குநர் பாலச்சந்தர் அவருக்குத் தந்தார். அதுவே ஆரம்பம்.

இரும்புக் கதவை  திறந்து கொண்டு தமிழ் திரை உலகினுள் புகுந்தவர்  இன்று வரைத் தொடர்கிறார்.  ஆரம்பகாலத்தில் ஆயிரம், இரண்டாயிரம் என்று சம்பளம் வாங்கியவர் இன்று, ஜெய்லர் படத்தில் 220 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார்!  அநேகமாக அடுத்த படத்தில் இன்னும் அவருக்குச் சம்பளம் கூடலாம்!

நமது இளைஞர்களுக்கு உள்ள செய்தி என்ன? உங்கள் இலட்சியம் என்ன? அதனை நோக்கிப் பயணம் செய்யுங்கள். மற்றவை சோறு போடலாம். ஆனால் மனநிறைவைத் தராது. ரஜினியின் வருகை வாழ்க்கையில் முன்னேற ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளுங்கள். நாமும் நமது பாதையில் பயணம் செய்வோம்!

Tuesday 12 September 2023

கேள்வி மட்டும் போதாது!

 

செனட்டர் டத்தோ நெல்சென் அவர்களைப் பாராட்டுகிறோம்

இந்திய மாணவர்கள் சுமார் 30 பேர் தாங்கள் விரும்பிய மருத்துவதுறையில் கல்வி கற்க வாய்ப்பு வழங்காமல்  வேறு துறையில் வாய்ப்பு வழங்கியது ஏன் என வினா தொடுத்திருக்கிறார் ம.இ.கா. வின் கல்விப்பிரிவுத் தலைவர்  டத்தோ நெல்சன்.

அந்த 30 மாணவர்களும் மருத்துவம் பயில தகுதியற்றவர்களாக இருந்தால்  நாம் அது பற்றி  எதுவும் பேசப் போவதில்லை. அனைவரும் அனைத்து தகுதியும் உள்ளவர்கள். பின்னர் ஏன் இந்த புறக்கணிப்பு? நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை!

ஒவ்வொரு நாடும் மருத்துவம் பயில சிறந்த மாணவர்களையே அல்லது அதிகம் புள்ளிகளைப் பெற்ற  மாணவர்களையே  தேர்ந்தெடுக்கும் ஒரு முறையையே கையாள்கிறார்கள்.   ஒருசில கல்லூரிகளில் தில்லு முல்லுகளும் உண்டு. பணம் கொடுத்து இடம் பிடிப்போரும் உண்டு. 

நமது நாட்டில் அப்படி ஒரு நிலை இருப்பதாக நமக்குத் தோன்றவில்லை. பணம் கொடுத்தால் இடம் கிடைக்கும் என்கிற நிலைமையில் நாம் இல்லை. மருத்துவம் பயில இது தான் தகுதி  என்கிற  ஓர் அளவுகோள் இருக்கிறதா என்பதும் புரியவில்லை.

எப்படி இருந்தாலும் ம.இ.கா.வின் கல்விப்பிரிவின் தலைவர்  டத்தோ நெல்சன் அவர்களின் இந்த அக்கறையையும், முயற்சியையும்  நாம் பாராட்டியே ஆக வேண்டும். காரணம் ஒற்றுமை அரசாங்கத்தின் இந்தியத் தலைவர்கள் யாரும் இந்தப் பிரச்சனையில் அக்கறை காட்டாத  சூழலில் டத்தோ அவர்கள் அக்கறை காட்டியிருக்கிறார். பாராட்டுகள்!

ஆனாலும் பிரச்சனையை டத்தோ அவர்கள் வெளிக் கொணர்ந்திருக்கிறார் என்பதிலே நமக்கு மகிழ்ச்சிதான்.  இனி என்ன செய்யப் போகிறார்?  'பிரச்சனையைக் கொண்டு வந்துவிட்டேன். என் வேலை முடிந்தது'  என்று கைகழுவிவிட்டு நகர்ந்துவிடுவாரா?  அப்படி ஒரு சிந்தனையில் டத்தோ இருந்தாரானால் நமது அனுதாபங்கள்.  அது தான் உங்கள் நிலை என்றால் இதனைச் சொல்லுவதற்கு   செய்தியாளர்கள் தேவையில்லையே!

இந்தப் பிரச்சனைக்கு   இத்தோடு டத்தோ அவர்கள் முற்றுப்புள்ளி  வைக்கக் கூடாது என்பது தான் நமது வேண்டுகோள். இனி தொடர் முயற்சிகள் வேண்டும். கல்வி அமைச்சரைச் சந்திக்க வேண்டும். தேவை என்றால் பிரதமரைச் சந்திக்க வேண்டும். முயற்சிகள்  தொடர வேண்டும். 

பொது மக்களுக்கு என்ன நடந்தது என்பது  அறிவிக்கப்பட வேண்டும். இத்தனை ஆண்டுகள் தேசிய முன்னணி அரசாங்கம்  நம்மை இளிச்சவாயர்களாகவே  நடத்தி வந்திருக்கின்றது! இப்போது ஒற்றுமை அரசாங்கம்.  இனியும் அது தொடரக் நாம் அனுமதிக்கக் கூடாது.

பார்ப்போம்! இனி ம.இ.கா. என்ன செய்யப் போகிறது; பக்கத்தான் கூட்டணி என்ன செய்யப் போகிறது.  பார்ப்போம்!

Monday 11 September 2023

தலையெழுத்தா? கையெழுத்தா?

 

                                                            நடிகர் மாரிமுத்து

நடிகர் மாரிமுத்துவின் மரணம் என்பது அதிர்ச்சியான சம்பவம் தான். மரணத்தை யாரும் எதிர்பார்ப்பதில்லை.  எப்படி வரும் எப்போது வரும் எதுவும் நம் கையில் இல்லை.

சமீப காலத்தில் தான்  அவரது சினிமா பயணம் அவருக்குப் பெரிய அளவில் கைகொடுத்தது. பல ஆண்டுகள் சினிமா உலகில் போராடிய அவருக்குக் கடந்த ஓரிரண்டு ஆண்டுகளாகத்தான்  நல்ல காலம் பிறந்தது. அந்த நல்ல காலமே அவருக்குக் கெட்ட காலமாகவும் அமைந்துவிட்டது. காரணம் ஒயவு இல்லாமல் பணிபுரிந்ததின் விளவு தான் அவரது மரணத்திற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

சினிமா உலகில் நுழைபவர்கள் ஏதோ ஒரு திறமையை வைத்துக் கொண்டு தான் உள்ளே நுழைகின்றனர். அவர்கள் எதிர்பார்க்கும் திறமை எதுவும் அவரிடம் இல்லை. அதற்காக அவர் தன்னைத் தயார் செய்து கொள்ளவும்  இல்லை.

ஆனால் ஒரு திறமை இருந்தது. அதுவோ பள்ளியில் கற்றது. எழுதும் போது தனது கையெழுத்தை மிக அழகாக, நேர்த்தியாக எழுதும் கலையை அவர்  கற்றிருந்தார். அந்தக் கலை தான் அவருக்குச் சினிமா உலகில் அவர் நுழைவதற்குக்  காரணமாக அமைந்தது.

அவருடைய கையெழுத்து,  பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்துவை, கவர்ந்ததால் அவரைத் தனது உதவியாளராக  வைத்துக் கொண்டார்.  பின்னர் நடிகர்/தயாரிப்பாளர் ராகிரண்  அவரும்  அவருடைய கையழுத்தைப் பார்த்து  தனது உதவியாளராக சேர்த்துக் கொண்டார். ஆக, இங்கிருந்து தான் அவரது சினிமா  பயணம்  ஆரம்பமாகியது.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை. இவருக்கோ இவரது நேர்த்தியான  எழுத்தே இவருக்குத் திறமையாக அமைந்து  அதுவே சினிமா உலகத்தின்  நுழைவாயிலாக அமைந்துவிட்டது!  அசல் தட்டச்சு  போலவே  இருக்குமாம் அவரது கையெழுத்து. அதுவும் ஒரு திறமை தானே! 

 தலையெழுத்து  சரியாக இருந்தால்  வாழ்க்கை எழுத்து  சரியாகவே  அமையும் என்பார்கள்.  கையெழுத்தை யார் பார்த்தார்? அது எப்படி இருந்தால் என்ன என்பது தான் நமது எண்ணம். ஆனால் ஒரு சிலருக்கு அவர்களது  கையெழுத்துக் கூட அவரது முன்னேற்றத்திற்குக் காரணமாக அமைந்து விடுகிறது. அதில் ஒருவர் தான் மறைந்த நடிகர் மாரிமுத்து.

உலகில் பலருக்குக் கையெழுத்து சரியாக அமைவதில்லை.  ஆனால் அவர்களில் பலர் பெரும் பதவிகளில் அமர்ந்திருக்கிறார்கள்.  உலகம் தலையெழுத்துக்குத்தான் மரியாதைக் கொடுக்கிறது.  கையெழுத்துக்கு உரிய மரியாதை இல்லை.

அதற்காக உங்களது கையெழுத்தைக் கன்னாபின்னா வென்று எழுதாதீர்கள். அழகாக, நேர்த்தியாக எழுதிப் பழகுங்கள். கையெழுத்து நேர்த்தியாக இருந்தால் தலையெழுத்தும் நேர்த்தியாக அமையும்.

நடிகர் மாரிமுத்துவுக்கு அவரது கையெழுத்து தான் அவரது வாழ்க்கைக்கு நல்ல வழியைக் காட்டியது! இது அனைவருக்கும் பொருந்தும்!

Sunday 10 September 2023

எதிர்காலம் உண்டா?

 

மூடா கட்சியின் தலைவர் சைட் சாடிக் எந்த பாதையை நோக்கி நகர்கிறார்  என்று அவருக்கும் தெரியவில்லை அவரது கட்சியினருக்கும் தெரியவில்லை!

சைட் சாடிக் ஒர் அரசியல் தலைவருக்கு உள்ள எல்லாப் பண்புகளும்  உள்ளவர்.  பிரச்சனை என்னவென்றால் பொய்யும் புனைவும் உள்ள அரசியலில் எந்த நற்குணமும் தேவை இல்லை!  இது தான் நடப்பு அரசியல். அதனைப் புரிந்து கொள்ளாமல்  அவர் தனியாக ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து  அதன் வழியில் போகிறார்.

ஓர் அரசியல் கட்சியைத் தோற்றுவிப்பது  என்பது மிக எளிதான வேலை. ஆனால் அதனை வழிநடத்தி வளர்ப்பது என்பது சாதாரண வேலை அல்ல முதலில் அவருக்கு அந்த ஆற்றல் இருக்கிறதா என்பதும் புரியவில்லை.

நம் நாட்டு அரசியலில் எத்தனையோ கட்சிகள் உருவாகி இருக்கின்றன. ஆனால் தலை நிமிர முடியவில்லை. முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின்  இப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். அவரது கட்சி வளர்வதற்கு  அவர் அப்படி ஒன்றும்  பெரிதாக  செய்துவிடவில்லை.  ஏற்கனவே இருந்த அம்னோ கட்சியை அப்படியே அவ்ர் மாற்றிக் கொண்டார்.   அவர்கள் எல்லாம் எப்படி என்பது நமக்குத் தெரியும். திருடர்கள், கொள்ளைக்காரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தார்கள்.  கட்சி உருவாயிற்று.

ஆனால் சைட் சாடிக் அப்படியா? இப்போது உள்ள நிலைமையை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.  பணத்தைக் கொட்டாமல் கட்சியை வளர்க்க வாய்ப்பில்லை. பணத்தைக் கொட்டுகிற அளவுக்கு அவரிடம் பணம் இல்லை.  மேலும் அவர் அதனை விரும்பவுமில்லை. அவருடைய கொள்கை, கோட்பாடு எல்லாம் காற்றில் பறக்கவிட அவர் தயாராக இல்லை!

பொய்,  பணம் கையாடல் செய்வது, மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிப்பது - இது தான் இன்றைய அரசியல். இந்த சூழலில் அவரால் எப்படி ஒரு கட்சியை வளர்க்க முடியும்?  ஏன்? அவருடைய இளைஞர் படையே  பணம் இல்லாமல் நகருமா? 

இப்போது அவர் எதிர்க்கட்சி வரிசையில் உட்கார்ந்தாலும் அரசாங்கம் மக்களின் நலனுக்காக கொண்டு வருகின்ற நல்ல திட்டங்களை ஆதரிப்பார் என நம்பலாம்.  அந்த அளவுக்கு மக்களின் ந்லன் விரும்பி  என்று அவரைச் சொல்லலாம்.

சைட் சாடிக் நல்ல தலைவர். நல்ல இளைஞர். நமது நாட்டின் நம்பிக்கை நட்சத்திரம்.   இந்த அரசியலுக்கு இவர் பொருந்துவாரா என்பதைப் பொறுத்திருந்து தான்  பார்க்க வேண்டும்.

Saturday 9 September 2023

வெற்றி! வெற்றி! வாழ்த்துகிறோம்!

 

நடந்த இடைத் தேர்தலில்  ஒற்றுமை அரசாங்கத்தின் வெற்றி  என்பது பிரதமர் அன்வார் மேல் உள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது என  நிச்சயம் நம்பலாம்.

இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது  முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் அவர்களின் கடைசி காலம் மனதை நொருக்கிய காலமாகத்தான்  அமையும்  என நம்பலாம்.

அவர் அரசியலில் புகுந்த போது 'வெண்கலக் கடையில் யானை புகுந்தது போல' புகுந்தார்.  இனக்கலவரத்தை ஏற்படுத்தினார்.  கல்விச் சேவையை காவிமயமாக மாற்றினார். தகுதியின்மையை வளர்த்தாரே தவிர தகுதியுள்ளவராக மாற்ற இயலவில்லை.

இப்போதும் அரசியலில் இருக்கிறார்.  ஆனால் யாரும் அவரை மதிக்கவில்லை.  மலாய் இனம் அவரது பலம் என நினைத்தார். ஆனால் அது  இப்போது  பாவமாக மாறிவிட்டது! யாரும் அவரை நம்பத்  தயாராக இல்லை!  யாரை அவர் புறக்கணித்தாரோ அவர்கள் எல்லாம்  அவருக்கு  நண்பர்களாக மாறிவிட்டனர்!

எப்படியோ  டாக்டர் மகாதிர் இனி ஓர் அரசியல்வாதியாக பேர் போட வழியில்லை. இருக்கும்வரை ஏதாவது குறை சொல்லிக்கொண்டுதான் இருப்பார்.  ஒரு 'தொண தொண' பெரியவரின் புலம்பல் என்று எடுத்துக் கொள்ள வேண்டியது தான்! வேறு வழியில்லை!

இப்போது நடந்த  தேர்தலில் ஒற்றுமைக் கூட்டணி இரண்டு தொகுதிகளிலும் நல்ல கணிசமான வெற்றியைப் பெற்றிருக்கிறது. மலாய் வாக்காளர்கள் மிகவும் அதிருப்தியோடு இருப்பதாக சொன்னாலும் அதில் உண்மை இல்லை என்று நிருபிக்கப்பட்டிருக்கிறது.  சட்டமன்ற தொகுதியில் இந்திய வாக்காளர்களின் வாக்களிப்பு குறைவான எண்ணிக்கையில் இருந்ததாகச் சொன்னாலும் அதன் உண்மை நிலவரம் தெரியவில்லை.  எல்லாருமே தங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக் கொள்கிறார்கள்! என்ன செய்ய?

பிரதமர் அன்வாரை ஆயிரம் தான் குறை சொன்னாலும் அவருடைய நிலையையும்  நாம் புரிந்து கொள்ள வேண்டும். இப்படி அப்படி என்று அலை மோதுகிறார்! அரசாங்கம் கவிழ்க்கப்படுமோ என்கிற பயம் ஒரு பக்கம். மலாய் இனத்தின் ஆதரவு குறையுமோ என்கிற கவலை ஒரு பக்கம். அதனால் ஒவ்வொன்றையும் பார்த்துப்பார்த்துத் தான் செயல்படுகிறார்.  இதற்கிடையே இந்தியர்களின் குடைச்சல் வேறு. தவிர்க்க முடியாதது என்று புரிகிறது.  ஆனால் நிதானமாகத்தான் செயல்பட முடிகிறது.

எப்படியோ இந்த சட்டமன்ற, நாடாளுமன்ற வெற்றிகளை நாமும் வரவேற்கிறோம். நல்லதையும் எதிர்பார்க்கிறோம்!

Friday 8 September 2023

தொழில் திறன் பயிற்சிகள்

 

        நன்றி: வணக்கம் மலேசியா

மனிதவள அமைச்சு நியோஸ் என்கிற அமைப்பின் மூலம் பல தொழில் திறன் பயிற்சி திட்டங்களை இளைஞர்களின் நலனுக்காக  வழங்கி வருகிறது.

எந்த வித  தொழில் திறனும் இல்லாதவர்கள்  இது போன்ற பயிற்சிகளின்  மூலம்  தங்களது தொழில் திறனை வளர்த்து கொள்வது காலத்தின் கட்டாயம். வெறுங்கையில் முழம் போட முடியாது என்பதை நாம் அறிந்திருக்கிறோம். எந்தவொரு பயிற்சியுமின்றி, எந்தவொரு தொழில் திறனுமின்றி  "வேலை இல்லை! வேலை இல்லை! என்று கூவிக் கொண்டிருப்பதில் பயனில்லை.

இந்திய இளைஞர்கள்  திறமையில் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல. இயற்கையாகவே அவர்களிடம் ஏதோ ஒரு திறமை ஒளிந்து கொண்டுதான் இருக்கின்றது. நான் இதனைப் பல இளைஞர்களிடம்  நேரடியாகவே பார்த்திருக்கிறேன். இது போன்ற பயிற்சிகளில் ஈடுபடும்போது  அவர்களது திறமை ஊக்குவிக்கப்படுகிறது. அவர்களது திறமை  வெளிச்சத்திற்கு  வருகிறது.

மனிதவள அமைச்சு பயிற்சி காலத்தில்  உங்களுக்குப் பணம் தருகிறது. நீங்கள் தங்குவதற்கான வசதிகள் கொடுக்கின்றது. உங்களுக்குச் சாப்பாடு போடுகிறது. நீங்கள் உங்கள் கையிலிருந்து எந்த செலவையும் செய்ய ஒன்றுமில்லை.

நம்மிடம் உள்ள ஒரே குறை:  இந்த செய்திகள் போய்ச்  சேர வேண்டிய இடத்திற்குப் போய் சேருவதில்லை. முன்பாவது  ம.இ.கா. வை நாடலாம் என்கிற நிலைமை இருந்தது. இப்போது உள்ள பிரச்சனை: யாரை நாடுவது?  ம.இ.கா. வை ஒதுக்கியாகிவிட்டது. இப்போது ஆளும் கட்சிகளுக்கு  எந்த அலுவலகமும் இல்லை. எங்கே போவது என்று தெரியவில்லை.

நேரடியாகவே  'ஆன்லைன்' மூலம் மனு செய்யலாம். அதுவும் நல்ல ஏற்பாடு தான்.  இன்றைய இளைஞர்கள்  அதுவும் தெரியாதவர்களாகத்தான்  இருக்கின்றனர்! சரி அதையும் விடுவோம்.

இப்போதைய முக்கிய தேவை தொழில் திறன் பயிற்சிகளைப் பற்றியான செய்திகள் நமது இந்திய இளைஞர்களுக்குப் போய்ச் சேர வேண்டும். அது எப்படி என்பதைத்தான்  ஆராய வேண்டும்.  மனிதவள அமைச்சு பல வழிகளில் இந்த செய்திகளைக் கொண்டு சேர்க்கின்றது.  ஆனால் நமது இளைஞர்களோ அது பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கின்றனர்.

இருந்தாலும் நாம் அலட்சியமாக இருந்தவிட முடியாது. குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்  அலட்சியமாக இருந்துவிட முடியாது. ஆக்ககரமான செயலில் ஈடுபட வேண்டும். நீங்கள் 'கம்' மென்று இருந்தால்  பின்னர் கேள்விக்கணைகள் உங்களை நோக்கித்தான் வரும்! 

திறமைகளை வளர்த்துக் கொள்வோம்! தலை நிமிர்ந்து வாழ்வோம்!

Thursday 7 September 2023

நன்றி! அனுமதித்தற்காக நன்றி!

 

பல நீண்ட கால போராட்டத்திற்குப் பின்னர் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது!   மனிதவள அமைச்சிற்கு நன்றி.

முடிதிருத்தகம், பொற்கொல்லர், ஜவுளி நிறுவனங்கள் இவர்களுக்காக மனிதவள அமைச்சு சுமார் 7500 வெளிநாட்டுத்  தொழிலாளர்களை வருவிக்க அனுமதி அளித்திருப்பது நமக்கு மகிழ்ச்சி தான்.

இப்படி ஒரு நல்ல செய்திக்காக மேலே குறிப்பிட்ட நிறுவனங்கள் பல ஆண்டுகாலம்  போராட்டங்களை  நடத்தி வந்திருக்கின்றனர்.  அரசாங்கத்தின் அனுமதி  சும்மா கிடைத்து விடவில்லை.  எத்தனையோ முறை பேச்சுவார்த்தைகள். மாறி மாறி வந்த அரசாங்கங்கள். மாறி மாறி வந்த அமைச்சர்கள்.  அனைவருமே 'இதோ இப்போ! அதோ அப்போ!'  என்கிற ரீதியில் தான் போய்க் கொண்டிருந்தனவே தவிர  எந்த ஒரு  அமைச்சராலும் சொன்னபடி நடந்து கொள்ள முடியவில்லை. அவர்களை நம்மால் குறை சொல்ல முடியாது. அரசாங்கத்தின் அன்றைய கொள்கை என்னவோ அதைத்தான் அவர்களால் செய்ய முடியும்; பேச முடியும்.

இன்று என்னவோ நல்ல காலம்.  பிரதமர் அன்வார், இந்தியர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைத்திருப்பார் போல் தோன்றுகிறது. அதனால் இந்த நல்ல செய்தி கிடைத்திருக்கிறது.  இதற்கு முன்னர் உள்ள மனிதவள அமைச்சர்களை மறந்துவிடுவோம்.  இன்று, இன்றைய  மனிதவளை அமைச்சர்  மாண்புமிகு வி.சிவகுமார் அவர்கள் காலத்தில் தான் இந்த அதிசயம் நடந்திருக்கிறது. அவரைப் பாராட்டுவோம். அவரது முயற்சிகளைப் பாராட்டுவோம்.

ஆனால் எல்லாவற்றையும் விட இந்த நிறுவனங்கள்  அரசாங்கத்தின் இந்த முடிவை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.  அதனைத் தக்க வைத்துக் கொள்வது அவர்களது கடமை.

பொற்கொல்லர் நிறுவனங்கள்  மீது குற்றம் சொல்ல இயலாது.  அந்தத் தொழிலில் கண்டவர்கள் எல்லாம் வரமுடியாது. தொழில் தெரிந்தவர்கள் மட்டுமே வர முடியும்.  ஜவுளி நிறுவனங்கள் பற்றி நமக்குத் தெரியவில்லை. ஆனால் முடிதிருத்தகங்கள் பற்றி அங்கு வேலை செய்பவர்கள் என்ன பாடு படுகிறார்கள் என்பது ஓரளவு நமக்குத் தெரியும். அதனால் அவர்கள் தங்களது தொழிலாளர்களைத் தக்க வைத்துக்கொள்வது அவர்கள் கையில் தான் இருக்கிறது. 

பல நிறுவனங்கள்  தொழிலாளர்களின் நலனின் அக்கறை காட்டுவதில்லை. அதனால் தான் இத்தனை ஆண்டுகளை இந்த நிறுவனங்கள் பல துயர்களுக்கு உள்ளாயின. குறை சொல்ல வேண்டுமானால் சொல்லலாம். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது நமது நோக்கமல்ல.  இனி உங்கள் புத்திசாலித்தனம் அவ்வளவு தான்.

நமது அறிவுரை எல்லாம் அரசாங்கம் கொடுத்திருக்கும் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.  மீண்டும் மீண்டும் இதே பிரச்சனையைப் பற்றிப் பேசி காலந்தள்ளாதீர்கள்.  எப்போதும் அரசாங்கம் உதவும் என்று கணக்குப் போடாதீர்கள்.

இப்போது நல்லது நடந்திருக்கிறது. பாராட்டுவோம்! நன்றி!

Wednesday 6 September 2023

உணவுகளின் விலையேற்றம்!

 

பொதுவாகவே இந்திய உணவகங்களில் உணவுகளில் விலையேற்றம் நம்மைத் திணற அடிக்கிறது! 

இந்திய உணவகங்கள், மாமாக் உணவகங்கள், , தெருக்கடை உணவகங்கள் உட்பட விலையேற்றம் என்பது கன்னாபின்னா என்று ஏறிக் கொண்டிருப்பது  கண்ணுக்குத் தெரிகிறது.  விழிகளும்  பிதுங்குகின்றன!

யாரைத்தான் குறை சொல்வது?  கோழிகளின் விலையேற்றம் தான் நமக்கு முதல் எதிரி. அரிசி விலையேறுகிறது என்று தான் செய்திகள் வந்தன. அதற்குள் உணவகங்கள் அரிசி விலையேற்றமும் ஒரு காரணம் என்கின்றனர்! அதற்குள் அரிசி விலை  ஏறிவிட்டதா? புரியவில்லை. அவர்கள் சொல்லுவதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான்  வேண்டும். உணவகத் துறையில் நாம் இல்லையே! என்ன செய்ய?

இன்றைய நிலையில் நாம் யாரைக்  குறிப்பிட்டு  குறை சொல்லுவது?  தெரு ஓர  உணவகங்களிலிருந்து உலக அளவில் பிரசித்திப்பெற்ற  உணவகங்கள்  வரை  எல்லாவற்றிலும் தாறுமாறான விலையேற்றம் கண்டு விட்டன!

சாதாரண உணவகங்களின் விலையேற்றம் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதன் சுவையைப் பற்றி  நாம் பேசுவதில்லை.  அதன் விலையைத் தான் பேசுகிறோம். வாய்க்கு வக்கனையாக இல்லையென்றால் சிறிய உணவகங்களைப் பற்றி நம் வாய்க்கு வந்த மாதிரி பேசுகிறோம். பொதுவெளியில் அவர்களைக் கண்ட மாதிரி விமர்சனம் செய்கிறோம். அவர்களின் கடைகளுக்கே போகக் கூடாது என்று பொதுசேவையும் செய்கிறோம்! 

பாவம்! எது நடந்தாலும் சிறிய உணவகங்களைத் தான் குறி வைக்கிறோம்.  உலகப்புகழ் பெற்ற உணவகங்களுக்குப் போய் 'ஒன்னுமே நல்லாயில்லெ!' என்று சொல்லுவதோடு சரி!  வேறு எந்த குறைபாட்டையும் நாம் வைப்பதில்லை!  மீண்டும் மீண்டும் அங்கு தான் போகிறோம்! மீண்டும் அதே குறைபாடுகளைத்தான் சொல்லுகிறோம். ஆனால் அவர்களுக்குத்தான் ஆதரவைத் தருகிறோம். ஒரே காரணம் தான். அங்குப் போவதில் ஒரு கௌரவம் கிடைக்கிறது.  மற்றவர்களிடம் சொல்லிச் சொல்லி பெருமைப்படுகிறோம். குழந்தைகளும் அதைத்தான் விரும்புகிறார்கள் என்று சொல்லுகிறோம்.  குழந்தைகளின் பிறந்த நாள்களைக் கொண்டாடுகிறோம்.  விருந்துகளுக்கு ஏற்பாடுகள் செய்கிறோம். விலைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை.

ஆனாலும் விலையேறிவிட்டதாக ஒவ்வொரு நாளும் புலம்புகிறோம்!  விலையேற்றத்திற்குச் சிறிய,  நடுத்தர உணவகங்களே காரணம் என்பது போல  பேசுகிறோம்! பெரிய உணவகங்கள் எந்த விலையில் விற்றாலும்  அதனை ஏற்றுக் கொள்கிறோம்!

ஒன்று மட்டும் நிச்சயம். உணவகங்களில் இனி விலை குறையும் என்று எதிர்பார்க்க முடியாது. சாப்பிடத்தான் வேண்டும் என்றால் சாப்பிடத்தான் வேண்டும். அது சிறியதோ, பெரியதோ உங்கள் கையில் உள்ள பணத்தை பொறுத்தது! விலைகள் குறைவதற்கான வாய்ப்பில்லை!

Tuesday 5 September 2023

இதுவும் பிரச்சனையா!

 

இது ஒரு பிரச்சனையே அல்ல!  இதனை ஏன் ம.இ.கா.தகவல் பிரிவுத் தலைவர், தியாளன் ஒரு பிரச்சனையாகக் கருதுகிறார்  என்பது நமக்குப் புரியவில்லை! 

நமக்குப் புரிவதெல்லாம்  "நாங்கள் இன்னும் உயிரோடு தான் இருக்கிறோம்!" என்பதைக் காட்டிக்கொள்ள  இவரும் ஒரு விளம்பரத்தைத் தேடுகிறார்  என்று தான் நினைக்க வேண்டியுள்ளது.    

வெளிநாட்டுத் தொழிலாளர் பிரச்சனை என்பது ஒரு நீண்ட நாள் பிரச்சனை. அது சாமிவேலு காலத்துப் பிரச்சனை! ம.இ.கா.வால் அதனைச் செய்ய முடியவில்லை என்பதை நீங்களே ஒப்புக் கொண்டீர்கள்.

ம.இ.கா. காலத்துப் பிரச்சனை இப்போது பி.கே.ஆர். காலத்தில் வெற்றிகரமாக நடந்தேறியிருக்கிறது. அந்தப் பெருமையில் பி.கே.ஆரும்  பங்குப்  பெறத்தானே செய்யும்.  அந்தப் பிரச்சனையை அப்போதே சாமிவேலு காலத்திலேயே நீங்கள்  தலைமுழுகி விட்டீர்கள்.  ஆனால் இப்போது, சமீப காலம்வரை,   அந்தப் பிரச்சனையை பி.கே.ஆரும், ஜ.செ.க. வும் தானே  அதனை உயிர்ப்புடன் வைத்திருந்தன?  அவர்களும் இது பற்றி தொடர்ந்து வலியுறுத்தித் தானே வந்திருக்கிறார்கள்.

டத்தோ சரவணன் அவர்களைப் பாராட்டுகிறேன், தனக்கு வாய்ப்பு கிடைத்த போது  அந்தப் பிரச்சனையை பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார். இதனைச்  சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. பொதுவாக அரசியல்வாதிகள் பதவியில் இருக்கும் போது  வாய் திறக்கத்  தயங்குவார்கள். அப்போது பதவிக்குத் தான் முதலிடம். பதவியில் இல்லாத போது  துணிந்து கேட்பார்கள்!  தைரியம் தானாக வந்துவிடும். இழப்பதற்கு ஒன்றுமில்லை. அதைத்தான் டத்தோ சரவணன்  செய்திருக்கிறார்!   'காக்காய் உட்கார பனம்பழம் விழுந்தது போல' என்பார்கள். 

இருந்தாலும் டத்தோ  சரவணன் அவர்களை நான் பாராட்டுகிறேன். அது அவரது பணி தான். ஆமாம் இந்தியர்களுக்கு உதவுவதும் அவரது பணி தான். நல்லதைச் செய்திருக்கிறார். பாராட்டுகிறோம்.  ஆனால் இதற்கெல்லாம் பொதுவெளியில் சண்டை போடுவது  சிறுபிள்ளத்தனம். அவர் இதனை ஊக்குவிக்கக் கூடாது.  செய்யுங்கள் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது. இந்தியர்களுக்குப் பிரச்சனையா இல்லை. அறுபது ஆண்டு கால குப்பைகள் இன்னும் நிறையவே  இருக்கின்றன.

பொது மக்களான எங்களுக்கும் பல பிரச்சனைகள் புரிகின்றன. எந்தவொரு பிரச்சனையிலும் இந்திய தலைவர்கள் வாய் திறப்பதில்லை. ஏன் வம்பு என்று அமைதி காக்கிறார்கள். பேசுவார்கள் ஆனால் இந்தியர் பிரச்சனைகளைப் பேச மாட்டார்கள். இப்போதைக்கு பேசாமலிருப்பது தான் பாதுகாப்பு என்று நினைக்கிறார்கள்! பேராசிரிய இராமசாமிக்கே ஆப்பு வைத்தவர்கள், இவர்கள் எம்மாத்திரம்?

எல்லாருக்கும் பேச சுதந்திரம் உண்டு. ஆனால் தமிழன் பேச அக்கம் பக்கம் எல்லாப்பக்கமும் பார்த்துத் தான் பேச வேண்டியிருக்கிறது! அப்புறம் எங்கே இவர்களால் பேச முடியும். டத்தோ சரவணன் பேசினார். அதற்கான பலன் கிடைத்தது. நன்றி டத்தோ!

Monday 4 September 2023

கலவரத்தில் இன்பம் காண்பவர்!

 

நம் நாட்டில் இனவாதத்தை  தோற்றுவித்தவர் என்றால் அது டாக்டர் மகாதிர் தான்.!

அரசியலுக்கு வரும்போதே இனவாதத்தைப்  பேசித்தான் அவர் அரசியலுக்கு வந்தார்.  அது கலவரத்தில் முடிந்தது. அதுவே அவருக்கு வெற்றியாக முடிந்தது.

நாட்டை அவர் தான் 22 ஆண்டு காலம் வழி நடத்தியவர். அதன் பின்னர் 22 மாதங்கள் அவர் தான் பதவியில் இருந்தவர்.  இப்போது என்னவோ பதவியே வகிக்காதவர் என்கிற தொனியில் பேசிக் கொண்டிருக்கிறார்.

அவர் ஆட்சியில்  இருந்த காலத்தில் தாய் மொழிப்பள்ளிகள் இருக்கத்தான் செய்தன. அந்த காலகட்டத்தில் எந்த ஒரு இன பிரச்சனையோ அல்லது மத பிரச்சனையோ இருந்ததாக எந்தத் தடையமும் இல்லை.

எதையாவது காரணங்கள் சொல்லி  இனங்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துவதே இவர் பாணி அரசியல் என்பதை நாம் அறிவோம். இப்போதும் அதைத்தான் செய்கிறார்.  அவரின் வயதின் காரணமாக அவர்மீது  யாரும் கைவைக்க முடியாது என்பதை அவர் அறிவார். அதனால் தான் அவர் "நீ முன்னால போனாலும் பின்னால போனாலும் உதைத்துக்  கொண்டே தான் இருப்பேன்!"  என்று ஆணவத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்! அதுவும் பிரதமர் அன்வார் பெரியவர்களை மதிப்பவர். அதனால் அவரது பேச்சுக்களைப் பிரதமர்  பொருட்படுத்துவதில்லை. ஆனால் டாக்டர் மகாதிர் பதவியில் இருந்து இப்படி ஒருவர் செயல்பட்டால் அத்தோடு அவரின் அரசியல் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிடும்! அவருக்கு வயதெல்லாம் ஒரு பொருட்டல்ல!

டாக்டர் மகாதிரை எப்படித் தான் புரிந்து கொள்வது?கலங்கிய குட்டையில் மீன் பிடித்து அப்படியே கைகளில் அவைகளை நெரித்துக் கொல்லுபவர்! பாவ புண்ணியம் என்று எதுவும் இல்லாத ஒரு பாவப்பட்ட ஜென்மம். பழிவாங்கும் சுபாவம் அப்போதும் உண்டு. இப்போதும் உண்டு. தன்னைத்தவிர வேறு யாரும் முன்னேறி விடக்கூடாது  என்கிற எண்ணம் எப்போதும் உண்டு.

அதனால் தான் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் அவரைப் பார்த்து                    "தாத்தா! போதும்!  ஓய்வெடுங்கள்!"  என்று கிண்டலடித்திருக்கிறார்!  அது நஜிப்  அவர்களின் கருத்தாக இருந்தாலும், உண்மையில், அது ஒட்டுமொத்த மலேசியர்களின் கருத்து என்பதாகத்தான்  எடுத்தக் கொள்ள வேண்டும்! ஏன் நாமும் அப்படித்தானே நினைக்கிறோம்! "இந்தக் கிழவனுக்கு என்ன வேலை!" என்று அவர் சம்பந்தமான செய்திகளைக் கூட படிப்பதில்லையே!. வர வர அவர் மேல் இருக்கும் மதிப்பும்,  மரியாதையும்  இல்லாமல் போய்விட்டதே! நம் வீடுகளில் இருக்கும் "தொண! தொண!" தாத்தா பாட்டிகளை நாம் என்ன பாடுபடுத்துகிறோம்!  அப்படி ஒரு நிலைக்குத் தான் அவர் வந்துவிட்டார்!

சரி! நாமும் "தாத்தா! போதும் ஓய்வெடுங்கள்! நீங்கள் ஊருக்கே தாத்தா" வேறு நாங்கள் என்ன தான் சொல்ல முடியும்!

Sunday 3 September 2023

கடுமையான ஒழுங்குமுறை!

 

ஒரு காலகட்டத்தில் காவல்துறை நமது இளைஞர்களுக்கு மிகவும் விரும்பிய துறையாக இருந்தது.

ஆனால் இப்போது என்னவோ அந்தத் துறையும்  நமது இளைஞர்களுக்கு  கசக்க ஆரம்பித்துவிட்டனவோ என எண்ணத் தோன்றுகிறது!  நமது இளைஞர்கள் விரும்பியபோது காவல்துறை நம்மைவிட்டு விலகி நின்றது. இப்போது காவல்துறை வேண்டும் என்கிற போது நமது இளைஞர்கள் விலகி நிற்கின்றனர்!

சமீபத்தில் காணொளி ஒன்றில் காவல்துறையைச் சேர்ந்த நண்பர் ஒருவர் பேசியதைக் கேட்க நேர்ந்தது. அந்தப் பேச்சினை நண்பர் மிகவும் வருத்தத்தோடு பதிவு செய்திருந்தார்.

ஆமாம். இந்திய இளைஞர்கள் விண்ணப்பம் செய்கிறார்கள். நேர்காணலுக்கு வருகிறார்கள்.  வெற்றி பெறுகிறார்கள்.  எல்லாமே சுபமாகத் தான் முடிகிறது. ஆனால் தெர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஓரிரு வாரங்களில்  "எனக்கு இந்த வேலை  சரிபட்டு வராது! நான் போகிறேன்! என் பெற்றோர்களைக் கேட்க    வேண்டும்!"  என்று சிறுபிள்ளைதனமாக நடந்து கொள்கிறார்கள் என்று அவர் கூறியிருந்தார்.

இங்கு நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்ன வென்றால் பல இளைஞர்கள் வாய்ப்புகள் கிடைக்க வேண்டியவர்கள்,  இந்த இளைஞர்களுக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பினால்,  அவர்களும் வாய்ப்பினை இழந்து போனார்கள். இது தான் பிரச்சனை. இவர்கள் வேண்டாம் என்று இடையிலேயே ஓடிப்போனால் அந்த  இடம் மீண்டும் நிரப்பபடுவதில்லை. இப்படிப் பல இந்திய இளைஞர்களின் வாய்ப்புகள் வீணடிக்கப்படுவதாக  அவர் கூறியிருந்தார்.

காவல்துறை  சம்பந்தமான  வேலைகளுக்குச் சில கெடுபிடிகள் இருக்கத்தான் செய்யும். கடுமையான பயிற்சிகள். கடுமையான நெறிமுறைகள். ஒழுங்குமுறைகள்  என்று பல கட்டுப்பாடுகளை எதிர்நோக்கத்தான்  வேண்டும். இதற்கெல்லாம் பயப்படுவர்கள்  காவல்துறை பக்கம் எட்டிப்பார்க்கூடாது. ஆனால் போகும் போது பெரிய வீராப்போடு  போவதும் பின்னர் "நான் வீட்டுக்குப் போறேன்!" என்று அழுவதும் - இது சிரிப்பதற்கான விஷயம் அல்ல.

காவல்துறையைத் தேர்ந்தெடுத்தால்  உறுதியாக இருங்கள். வீதிகளில் சண்டை போடுவதை வைத்து உங்கள் வீரத்தை மதிப்பிடாதீர்கள். நீங்கள் பயிற்சியின் போதே விலகினால் ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். உங்களைப் போன்ற இன்னொரு இளைஞனின்  எதிர்காலத்தை வீணடிக்கிறீர்கள். நீங்கள் விண்ணப்பம் செய்து, நேர்காணலில் பங்குப் பெற்றிருக்காவிட்டால்  யாரோ ஒரு இந்திய இளைஞனுக்கு அந்த இடம் கிடைத்திருக்கும். 

இளைஞனே கேள்! நமக்குப் பொறுப்புணர்ச்சி வேண்டும். வீரனாகப் போய் கடைசியில் கோழையாக வெளியே துரத்தடிக்கப்படுவது  மிக் மிக அற்பத்தனம். கோழைத்தனத்தின் எல்லை!

Saturday 2 September 2023

புதிய அதிபருக்கு வாழ்த்துகள்!

 

                     சிங்கப்பூர் அதிபர், தர்மன்  சண்முகரத்தினம்

சிங்கப்புர் நாட்டின் அதிபராக தர்மன் சண்முகரத்தினம்  தெர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.  

 வாக்களிப்பின் மூலம் தேர்ந்தெடுக்கபட்ட அவருக்கு  மக்களின் ஆதரவு சுமார் எழுபது விழுக்காட்டுக்கு மேல்  என்பது,  அதுவும்  சீனர்கள் அதிகம் வாழும் சிங்கப்பூரில்,  எதிர்பார்க்க முடியாத ஒன்று. எப்படியிருப்பினும் அது மக்களின் தீர்ப்பு. தமிழர் ஒருவருக்கு  இந்த அளவு வரவேற்பு கிடைத்திருப்பது  உலகத்தமிழர்களுக்கு  மகிழ்ச்சியளிக்கும்  விஷயமாகும்.  தமிழர்களின் திறமைக்கு இது ஒன்றே போதும்.

அவருக்கு எதிராக போட்டியிட்ட இருவருமே சீனர்கள். அதில் ஒருவருக்கு  16 விழுக்காடும்  இன்னொருவருக்கு 14 விழுக்காடு வாக்குகளுமே கிடைத்தன.

திரு தர்மன் அவர்களின் பதவியேற்பு சடங்கு, இப்போதைய அதிபர் ஹாலிமா யாகோப்  பதவி காலம் முடிந்த பின்னரே நடைபெறும். அவருடைய பதவி காலம் 13.9.2023  அன்று முடிவடைகிறது. புதிய அதிபரின்  பதவியேற்பு  அடுத்த நாள் 14.9.2023 அன்று நடைபெறும். 

சிங்கப்பூர் நாட்டின் ஒன்பதாவது அதிபராக திரு தர்மன்  விளங்குகிறார்.  அவர் இலங்கைத் தமிழர். சிங்கப்பூரில் பிறந்தவர். அவருக்கு  மனைவியும் நான்கு குழந்தைகளும் இருக்கின்றனர். மனைவி ஜப்பானிய-சீன வம்சாவளியைச் சார்ந்தவர். சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர். சட்டம் படித்தவர்.

அதிபராக பதவியேற்கும் திரு தர்மன் அவர்கள் உலகத் தமிழர்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் மனிதர். சீனர்கள் அதிகமாகக் கொண்ட  ஒரு நாட்டில் ஒரு தமிழராலும் அதிபராக முடியும் என்பதை எண்பித்திருக்கிறார். உலகத் தமிழர்களுக்கு ஓர் உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறார்.

தமிழர்கள் உலக அளவில் பல நாடுகளில் பெரும் பதவிகளில் அமர்ந்திருக்கின்றனர்.  அவர்களது திறமைகளைப் பல நாடுகள் அங்கீகரித்திருக்கின்றன.  இன்றளவும் அவர்கள் பல உயர் பதவிகளை வகிக்கின்றனர். வருங்காலங்களில் தமிழர்கள் இந்த உலக ஆள்வர் என்பது திண்ணம்.

Friday 1 September 2023

இடைத் தேர்தல்!

 


பூலாய் நாடாளுமன்ற தேர்தலும்  சிம்பாங் ஜெராம் சட்டமன்ற தேர்தலும்  வருகின்ற 9 செப்டெம்பர் 2023,  சனிக்கிழமை  நடைபெற விருக்கின்றது

இந்த இடைத்தேர்தலில் மும்முனை போட்டி என்றாலும் போட்டி என்னவோ ஒற்றுமைக் கூட்டணிக்கும், பெரிகாத்தான் கூட்டணிக்குமான போட்டியாகத்தான் பார்க்கப்படுகின்றது.

இங்கு முக்கியமாக பார்க்கப்படுவது சிம்பாங் ஜெராம் சட்டமன்ற போட்டியில்  பக்காத்தான் கூட்டணி வெற்றி பெற வாய்ய்புண்டா  என்பது தான்.   இரண்டு தொகுதியுமே மலாய்க்காரர் அதிகமுள்ள தொகுதி தான்  என்றாலும் சிம்பாங் ஜெராம் தொகுதியில் குறைவான சீன வாக்களர்களும் இந்திய வாக்களர்களும் உள்ள தொகுதி என்பதால்  பாஸ் கட்சி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக  இருப்பதாக சொல்லப்படுகின்றது.

அதிலும் சீன வாக்காளர்கள் பாஸ் கட்சிக்கு வாக்களிப்பதற்கான  வாய்ப்புகள் இல்லை. இந்திய வாக்காளர்களின் நிலை கணிக்க முடியவில்லை என்றாலும்  அவர்கள் பக்காத்தான் கூட்டணிக்குத்தான்  வாக்களிப்பார்கள் என்னும் நம்பிக்கை உண்டு. அவர்களும் பாஸ் கட்சியின் வலைக்குள் விழ வாய்ப்பில்லை.

இந்த இடைத் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும் அரசாங்கத்தில் எந்தவொரு  பெரிய மாற்றமும் ஏற்படப்போவதில்லை. ஆனால் பக்காத்தான் கூட்டணி தோல்வி அடைந்தால்  அது பிரதமர் அன்வாரின் அரசாங்கத்திற்குப் பலத்த அடி என்று கருதலாம். அவர் மக்களின் ஆதரவை இழந்து வருகிறார் என்பது அதன் பொருள்.

இருந்தாலும், இருக்கின்ற சூழலில், அவர் தான் வெற்றி பெறுவார்  என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.  அவ்வளவு சீக்கிரத்தில் மக்கள் அவர் மீது உள்ள நம்பிக்கையை இழந்து விடவில்லை. இன்னும் நாட்டு மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத்தான் அவர் திகழ்கிறார்.

அவர் மீது உள்ள குற்றச்சாட்டுகள் எல்லாம் தற்காலிகைமானவை. வெகு விரைவில் அவைகளை எல்லாம் அவர் களைந்து மீண்டும் நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெறுவார் என நம்பலாம்.   நாம் அவர் மீது நம்பிக்கை இழந்தாலும்  அவர் நம்மீது உள்ள நம்பிக்கையை இழக்கமாட்டார்.

ஏற்கனவே அவர் மீது உள்ள குற்றச்சாட்டுகளை எல்லாம் இப்போது சுட்டிக்காட்டுவது தேவையற்ற வேலை. அதனால் யாருக்கும் பயனில்லை. தவறு செய்யாத அரசியல்வாதி யார்?  பழையனவற்றை  இப்போது புதிப்பிக்க வேண்டாம்.  மறந்துவிட்டு இப்போது என்ன நடக்கிறது என்பதை மட்டும் பாருங்கள். சுட்டிக்காட்டுங்கள். பேசுங்கள். விவாதியுங்கள்.

இந்த இடைத் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் வாழ்த்துகள்!