Sunday 29 September 2019

ஏன் எடுபடவில்லை...?

பிரதமர், டாக்டர் மகாதிரின் வெளி நாட்டுப் பயணங்கள் நல்லபடியாக அமைந்திருக்கும் என்று சொல்லுவதில் ஒன்றும் மிகையில்லை. 

உலகத்திற்கு என்ன தான் நல்ல செய்திகளை அவர் கொடுத்தாலும் அவர் சொல்லுகின்ற செய்திகளை யாரும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை  என்பது அவருக்கே தெரியும்!

ஏன்? அவரால் மற்ற நாடுகளுக்கு ஏறைக்குறைய புத்தி சொல்லுகின்ற ஒரு நிலையைத் தான் அவர் கையாளுகிறார்.  நமக்குப் புத்தி சொல்லுகின்ற ஆள் அதற்குத் தகுதியானவர் தானா என்று அந்த நாடுகளும் யோசிக்கத் தானே செய்யும்!

ஆமாம், டாக்டர் மகாதிரின் "ஊருக்குத் தான் உபதேசம் எனக்கில்லை!" என்கிற போக்கைத்தான் கையாளுகிறார்! அவர் சொன்ன வார்த்தைகளை அவர் காப்பாற்றவில்லை!

சென்ற தேர்தலின்  போது எத்தனை எத்தனையோ வாக்குறுதிகள். அதுவும் குறிப்பாக இந்தியர்களுக்கு வாரி வாரி வழங்கிய வாக்குறுதிகள் எதுவும்  இந்நாள் வரை நிறைவேற்றப்படவில்லை!  இந்த வாக்குறுதிகள் எல்லாம் இவரால் நிறைவேற்றக் கூடிய வாக்குறுதிகள் தாம். அடுத்த பிரதமர் வரும் வரை காத்திருக்க வேண்டியதில்லை.  ஆனாலும் எதனையும் செய்யாமல் இழு இழு என்று இழுத்துக் கொண்டிருக்கிறார்! மற்றவர்களையும் செய்ய விடுவதில்லை.வழக்கம் போல,  முதல் முக்கியத்துவம் மலாய்க்காரர்களுக்கு மட்டுமே என்கிற அவரது கொள்கையை  விட்டுக் கொடுக்க அவர் தயாராக இல்லை!

இங்குள்ள இந்தியர்கள் அப்படி என்ன ரோகிங்ய மக்களை விட வசதிகளோடும்,வாய்ப்புக்களோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்? நாடற்றவர்கள் பிரச்சனை எங்களுக்கும் தானே உண்டு. குடியுரிமை என்பதற்கு அறுபது வயதுக்கு மேல்  என்கிற கட்டுப்பாட்டை கொண்டு வந்தது யார்? இவர் தானே!  

இந்நாட்டில் வாழுகின்ற மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை! நியாயம் கிடைக்கவில்லை!  ஆனால் இவர் போய் மற்ற நாட்டில் நீதி கிடைக்கவில்ல என்கிறார்! 

ஊருக்குத் தானே உபதேசம்! அந்த உபதேசத்தை யார் வரவேற்பார்? முதலில் நாட்டைக் கவனியுங்கள். பின்னர் உலகத்தைக் கவனிக்க்லாம்!

நாட்டில் நியாயாம் கிடைக்காமல் இந்தியர்கள் போராடுகிறார்கள்!  ஆனால் இவரோ அதனைப் பற்றி கிஞ்சித்தும் கலவலைப்படாமல் மற்ற நாடுகளில் உள்ள அநீதியைப் பற்றி பேசுகிறார்!

அடுத்த பிரதமரிடம் பதவியை  ஒர் ஆண்டில், இரண்டு ஆண்டில் ஒப்படைப்பேன் என்று சொல்லிவிட்டு இப்போது அடுத்த தேர்தல் வரை என்று இழுத்துக் கொண்டு போகிறார்! இவரிடம் என்ன நேர்மை இருக்கிறது உலகத்தைப் பற்றிப் பேச!

நேர்மை இல்லாத வரை டாக்டர் மகாதிரின் பேச்சு எடுபடாது என்பது தான் உண்மை!

தவறு தவறு தான்!

கேரளா, இந்தியாவில் நடந்த சம்பவம் இது.

பெண் ஒருவர், அவரது பெயர் சூர்ய மனிஷ், தனது ஸ்கூட்டரில் இடது புறமாகப் போய்க் கொண்டிருக்கிறார். தீடீரென வலது புறமாக வர வேண்டிய பேருந்து ஒன்று அவருக்கு நேர் எதிராக இடது புறமாக வந்து கொண்டிருக்கிறது. அவருக்கு ஒதுங்கவதற்கு இடமில்லாமல் பள்ளி பேருந்து ஒன்றிலிருந்து பள்ளி மாணவர்கள் இறங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் என்ன செய்வது என்று அறியாமல் அப்படியே தனது ஸ்கூட்டரை நிறுத்திவிட்டார். ஆடவில்லை!  அசையவில்லை!  பயத்தால் உறைந்து போய் விட்டார்.
 
எதிரே வந்த  பேரூந்து   ஓட்டுநர் நிதானமாக  பேருந்தை அந்தப் பெண் மேல் மோதாமல்  பேரூந்தை வலது பக்கமாக செலுத்தி எந்த சேதமும் இல்லாமல் பார்த்துக் கொண்டார்.

அந்தப் பெண் பயந்தாரோ, இல்லையோ ஆனால் அவர், நம் பார்வைக்கு, வீரப் பெண்மணியாகவே தோன்றுகிறார்! அவர் அந்த ஸ்கூட்டரில் உடகார்ந்திருக்கிற தோரணை அவரை ஒரு வீரப் பெண்மணியாகவே நமக்குக் காட்டுகிறது.


எது எப்படி இருப்பினும் ஒரு பேருந்தை எதிர்த்து நிற்பது என்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அது அவரது வீரத்தையே காட்டுகிறது!

பேரூந்து ஓட்டுநர் செய்தது தவறு தான்!

Saturday 28 September 2019

இயற்கையை நேசிக்கும் சிறுமி!

 சிறு பிள்ளைகளைப் பற்றி நமக்குத் தெரியும். அவர்களின் தேவைகள் என்பது கணக்கில் அடங்கா! கண்ணில் பட்டதையெல்லாம் கேட்பார்கள். அதுவும் இந்தக் காலத்தில் கைப்பேசி என்பது தான் சிறு குழந்தைகளிலிருந்து வளர்ந்து விட்ட பிள்ளைகள் வரை முக்கியமான ஓர் அங்கமாக அமைந்து விட்டது! 

ஆனாலும் இதோ ஒரு பள்ளி மாணவி.  தமிழ் நாடு திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஒரு கிராமத்தில், அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி. கைப்பேசி கேட்கவில்லை. விளையாட்டுப் பொருள்கள் கேட்கவில்லை.



மாணவி நதியா தனது தந்தை சிவக்குமாருடன் ஒரு சில மாதங்களாகப் பேசுவதை நிறுத்தி விட்டார். ஒரு மாதம் இரண்டு மாதங்கள் அல்ல சுமார் எட்டு மாதங்கள் அவரது தந்தையோடு பேசுவதில்லை.  ஒரே காரணம் அவரது தந்தை சிவக்குமார் தினசரி குடித்துவிட்டு வந்து அவரது தாயாரோடு தகராறு செய்வதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. 

தந்தை சிவக்குமார் பல முயற்சிகள் எடுத்தும் மகள் நதியா அவருடன் பேசவில்லை. தந்தை சிவக்குமார் இப்போது இறங்கி வந்தார். மகளுடன் சமரசம் பேசினார். "உன்னோடு பேச நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார். அப்போது மகள் நதியா அம்மாவுடன் தகராறு செய்வதை நிறுத்த வேண்டும்.  அடுத்து அவரது பள்ளி அருகே நாறிக் கொண்டிருக்கும் குளத்தை சுத்தம் செய்து கொடுக்க வேண்டும் என்பது தான் அவர் விதித்த நிபந்தனை. 

   
அடுத்த நாளே களத்தில் இறங்கினார் சிவக்குமார்.  சுத்தம் செய்து கொடுத்தார். ததந்தையும் மகளும் சமரசம் ஆனார்கள்.

மாணவி நதியா இயற்கையை நேசிப்பவர்.  நீர்நிலைகள் மேல் ஆர்வம் உள்ளவர். 

கடந்த கால தலைமுறை ஏரி, குளம் என்பதையெல்லாம் மறந்து போன ஒரு தலைமுறை. அதனால் தான் இன்று தண்ணிருக்காக தத்தளித்துக் கொண்டிருக்கிறது.  

இனி நதியா போன்ற இன்றைய தலைமுறை இயற்கையை நேசிப்பதை  நாம் போற்ற வேண்டும்.  இன்னும் பல நாதியாக்களை நமது பள்ளிகள் உருவாக்க வேண்டும். குழந்தைகள் பொது நோக்கத்தோடு வளர வீட்டில் உள்ள பெரியவர்கள் உதவ வேண்டும்.

நல்லதொரு தொடக்கம்!  இயற்கையை நேசிப்போம்! சுவாசிப்போம்!                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                

Friday 27 September 2019

3,000 இந்தியர்கள் பாதிப்பு

இந்தியா, தெலுங்கானா மாநிலத்திலிருந்து வேலை தேடி வந்த 3,000 பேர் வேலையும் கிடைக்காமல், தங்களது பணத்தையும் இழந்து கடைசியில் அவர்களது நாட்டுக்கும் திரும்பவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

போலி ஏஜென்டுகளை நம்பி வந்த இவர்கள் சட்டவிரோதமாக நான்காண்டுகள் வரை இங்கு தங்கி இருந்திருக்கின்றனர். இப்போது அரசு இவர்களுக்கான மன்னிப்புத் திட்டத்தின் கீழ் நாடு திரும்ப வாய்ப்புக் கொடுத்திருக்கின்றது. ஆனாலும் சில நிபந்தனைகள் உள்ளன.  இவர்கள் இங்கு தங்கியிருந்ததற்கான அபராதம் 700 வெள்ளியும் விமான டிக்கெட் கட்டணம் 400 வெள்ளியும் கட்ட வேண்டும். அதன் பின்னரே அவர்கள் தங்களது நாடு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள். இந்த மன்னிப்புத் திட்டம் என்பது ஆகஸ்ட் மாதம் 1-ம் ததி தொடங்கி டிசம்பர் மாதம் 31-ம் தேதி வரை நடப்பில் இருக்கும்.

ஆனாலும் இவர்களிடம்  கட்டுவதற்குப் பணம் இல்லாத நிலையில் ஒன்றும் செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இப்போது இந்திய அரசாங்கத்தின் உதவியைத் தவிர வேறு யாரிடமிருந்தும் எந்த உதவியும் கேட்க முடியாத நிலை.

இந்த மன்னிப்புத் திட்டத்தின் கீழ் அவர்கள் தங்களது நாட்டுக்குத் திரும்பவில்லை என்றால் அவர்கள் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்ததற்காக அவர்கள் சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

ஒன்றைக் கவனிக்க வேண்டும். தெலுங்கானா மாநிலத்தில் இருந்து 3,000 பேர் என்றால் எல்லா இந்திய  மாநிலங்களிலும் இருந்தும் எத்தனை  ஆயிரம் பேர் என்று கணக்கிட்டால் தலையே சுத்தும்!

நம்மிடமும் சில கேள்விகள் உண்டு. இவர்கள் சட்டவிரோதத் தொழிலாளர்கள் என்பது நமக்குப் புரிகிறது. போலி ஏஜென்டுகளை நம்பி ஏமாந்தவர்கள் என்பது இந்த நாடே அறியும். இந்த போலி ஏஜென்டுகள் என்ன ஆனார்கள்? அவர்களும் சிறையில் இருக்கிறார்களா? அல்லது இன்னும் எந்த நாட்டுக்குப் போய் யாரை ஏமாற்றலாம் என்று ஒவ்வொரு நாடாக ஊர்வலம் வருகிறார்களா?

போலி ஏஜென்டுகள் என்றாலும் அவர்களுக்கும்  உள்நாட்டில் சரியான தொடர்புகள் உண்டு.  எந்த ஒரு தொடர்புகளும் இல்லாமல் அவர்களாலும் இது போன்ற போலி வேலைகளைச் செய்ய முடியாது. அரசு அதிகாரிகளின் உதவிகள் இல்லாமல் இவர்களால் இயங்க முடியாது.

ஆனாலும் நமது சட்டங்களால் இவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. 

போலிகள் தப்பித்துக் கொள்ள எத்தனையோ வழிகள்! அப்பாவிகள் நேர்மையாகக் கூட தப்பிக்க வழி இல்லை!

Thursday 26 September 2019

குடியிருக்கும் வீட்டுக்கும் ஆபத்தா..!


"குடியிருக்கும் வீட்டுக்கு "கொள்ளி" வைப்பதா?" என்னும்  செய்தியைப் படித்த போது உண்மையில்  வேதனையடைந்தேன்.

எனக்குத் தெரிந்து இது இரண்டாவது சம்பவம். நான் குடியிருக்கும் தாமானிலும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது. அது "ஆலோங்" பிரச்சனை  என்கிறார்கள்.  

வாங்கிய பணத்தை வசூலிக்க முடியவில்லை என்றால் இப்படி சம்பவங்கள் நடக்கின்றன. அல்லது இரகசிய கும்பல்கள் இது போன்ற அராஜகத்தை அரங்கேற்றுகின்றன.

மிகவும் வருந்தக்க விஷயம்.  இரகசியக் கும்பல்கள் என்றால் சீனர்களை மிஞ்ச ஆளில்லை.  அவர்கள் கூட இது போன்ற காரியங்களைச் செய்ததாக படித்ததில்லை.

ஆனால் இந்திய இளைஞர்கள் செய்கின்ற காரியங்கள், அட்டகாசங்கள் நம்மை கலங்க வைக்கின்றன. இந்த அளவுக்கு அவர்கள் வன்முறைகளில் இறங்குவதற்கு என்ன காரணமாக இருக்கும்? சினிமா படங்கள் தான் என்று எத்தனை நாளைக்கு நாம் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறோம்?  அல்லது சீனர்கள் வாங்கிக் கொடுக்கும் சில பீர் போத்தல்களுக்காக இவர்கள் இப்படிச் செய்கிறார்களா என்பதும் நமக்குப் புரியவில்லை.

சீனர்களைப் பற்றி நமக்குத் தெரியும். இந்திய இளைஞர்களை பின்னணியில் இருந்து இயக்குபவர்கள் இவர்கள்.  அவர்கள் சொல்லுவதை வேத வாக்காக எடுத்துக் கொண்டு இந்திய இளைஞர்கள் செயல்படுகிறார்கள்.  

ஒரு வீட்டை எரிக்கும் அளவுக்கு இந்திய இளைஞர்கள் துணிய மாட்டார்கள் என்பது நமக்குத் தெரியும்.  ஆனால் அது நடந்திருக்கிறது.

ஒரு வீட்டை வாங்குவதற்கு இந்தியர்கள் எவ்வளவு சிரமத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள்  என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.  வங்கிகள் அவ்வளவு எளிதில் இந்தியர்களுக்குக் கடன் கொடுப்பதில்லை. கிடைத்த கடனை வங்கிகளுக்குத் திரும்ப கட்டுவதற்கு எத்தனையோ இடர்ப்பாடுகள், இடைஞ்சல்களைப் பெற்றோர்கள் எதிர் நோக்குகின்றனர். 

இந்த சூழலில் கொஞசம் கூட சம்பந்தப்படாத எவனோ ஒருவன் ஒரு வீட்டுக்குத் தீ வைக்கின்றான் என்றால் இதனை நம்மால் ஜீரணிக்க முடியவில்லை.  குடிகாரப் பயல்கள் அவர்களுக்குள்ளேயே தங்களது பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர அதனை விட்டு வீட்டை எரிக்கும் அளவுக்குத் துணியக் கூடாது. தங்களது மாதத் தவணையையே கட்ட சிரமப்படும் பெற்றோர்கள் இப்போது என்ன செய்வார்கள்?

இதன் எதிரொலி என்ன தெரியுமா?  வருங்காலங்களில் வங்கிகள் இந்தியர்களுக்கு வீட்டுக் கடன் கொடுக்க துணிய மாட்டார்கள். 

இந்த அளவுக்கு இந்திய இளைஞர்கள் வன்மம் நிறைந்தவர்களாய் இருக்க என்ன காரணம்?  குடும்பம் தான் காரணம்.  குடும்பம் குடிகார கூட்டமாக இருந்தால் பிள்ளைகளும் குடிகாரர்களாய்த்தான் இருப்பார்கள். குடி தான் அவர்களைக் கெடுக்கிறது.

குடிகாரர்களுக்குத் தான் இப்போது நாம் கொள்ளி வைக்க வேண்டும்! இல்லாவிட்டால் சிறை சாவுகள் எல்லாம் சரி என்று தான் சொல்ல வேண்டி வரும்!

Sunday 22 September 2019

ஒரு புதிய பாடகர் உதயம்...!

         பார்வையற்ற இளைஞர்  திருமூர்த்தி - இசையமைப்பாளர் இமான்
      
இப்போதெல்லாம் தீடீர் தீடிரென நம்மை அதிர்சிக்குள்ளாக்கும் செய்திகள் வெளியாகின்றன!  அதனாலென்ன நல்ல செய்திகள் என்றால் கைக்கூப்பி வரவேற்போம்.

ஒரு சில வாரங்களுக்கு முன்னர் தான் மும்பையில் ஒர் அதிசயம் நடந்தது. ஆமாம்,  பாலிவூட் பட உலகிற்கு  புதிய பாடகி  ஒருவர் ஒரு ரயில்  நிலையத்தில் எப்போதும் போல  பாடி பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒரு பெண்மணி,  திடீரென பாலிவூட் பின்னணி பாடகி ஆனார்!

அதே போல இப்போது கோலிவூட்டிலும் ஓர் அதிசயம் நடந்திருக்கிறது! தமிழகம், கிருஷ்ணகிரி மாவட்டம்,  நொச்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கண்பார்வையற்ற  இளைஞர் திருமூர்த்திக்குத் தான் அவரது வாழ்க்கையையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டிருக்கிறது. 

விஸ்வாசம் திரைப்படத்தில் வரும் "கண்ணான கண்ணே"  என்னும் பாடலை அவர் பாட - அந்தப் பாடல் சமுகத்தளங்களில் வைரலாக மாற -  அந்தப் பாடலுக்கு இசையமைத்த இமான் பார்வைக்குப் போக - திருமூர்த்தியின் வாழ்க்கையே மாறிவிட்டது!

இமான் உடனடியாக அந்த இளைஞரை தொடர்பு கொண்டு பேசி அவருக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார்.

முகநூல்களில் வருகின்ற செய்திகளுக்கு எத்தனை வலிமை என்பதை நாம் உணர்கிறோம்.  நல்ல செய்திகளே வர வேண்டும் எனவும் நாம் வேண்டுகோள் விடுக்கிறோம்.

இதோ அந்த கண்பார்வையற்ற இளைஞனுக்குப் பாடுவது மட்டும் அல்ல கண்பார்வையும் கிடைக்க வேண்டுமென இறைவனைப் பிரார்திப்போம்.

அந்த இளைஞநுக்கு வாய்ப்புக் கொடுத்த இசையமைப்பாளர் டி.இமானையும் வாழ்த்துவோம்!

கின்னஸ் சாதனை...!


                                                    முகிலன் செல்ல பெருமாள்

"தற்காப்பு கலை தான் எனது வாழ்க்கை"  என்கிறார் மும்பை, தாராவியில் வாழ்ந்துவரும்  16 வயது தமிழ் இளைஞரான முகிலன். 

அவரது குடும்பம் அவர் கைக் குழந்தையாய் இருந்த போது தமிழகம், நெய்வேலியிலிருந்து மும்பைக்குக் குடியேறியது.

முகிலன் டேக்வாண்டோ (Taekwondo)  தற்காப்புக் கலையில் பாயிற்சியாளராக இருக்கிறார். இந்த இளம் வயதிலேயே பயிற்சியாளர் என்றால் அவர் எந்த அளவுக்கு அந்தக் கலையின் மீது பற்றுக் கொண்டிருக்கிறார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். முகிலன் பல்வேறு தற்காப்புக் கலையில் பயிற்சி பெற்றவராக இருந்தாலும் அவர் டேக்வாண்டோ கலையில் மட்டும் அதிகம் ஈடுபாடு கொண்டு அந்தக் கலையின் மீதே அதிகக் கவனத்தைச் செலுத்தியிருக்கிறார்.

இப்போது  முகிலன் ஐந்து வயது குழந்தையிலிருந்து நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் வரை இந்தத் தற்காப்புக் கலையில் பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார்! 

மாநில அளவில் டேக்வாண்டோ தற்காப்புக் கலையில் தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார் முகிலன். அடுத்து கின்னஸ் சாதனை நிகழ்த்த வேண்டும் என்பதிலும் தீவிரம் காட்டி வருகிறார். வெற்றி பெற வாழ்த்துவோம்!


தனது தற்காப்புக் கலையின் மானசீக குரு என்றால் அது ப்ரூஸ் லீ என்று கூறும் முகிலன் இந்தக் கலையையே தனது வாழ்க்கையாக்கிக் கொண்டதாகக் கூறுகிறார்!

"தற்காப்புக்கலை மட்டும் அல்ல, விளையாட்டுக்கள் அனைத்தையுமே வாழ்க்கை முறையாக கருதும் மனோபாவம் நம்மிடையே வளர வேண்டும்!" என்கிறார் முகிலன்.

உண்மையே! நாட்டுக்கு நோயுற்றவர்களை விட நோயற்றவர்களே தேவை என்பதை யார் மறுக்க முடியும்!

 வருங்காலங்களில் அவர் பெறப் போகும் வெற்றிகளுக்காக வாழ்த்துவோம்!

நன்றி: பி.பி.சி.

Saturday 21 September 2019

பதவி ஒப்படைப்பு...!

அன்வார் இப்ராகிம் பிரதமராக பதவி ஏற்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என பிரதமர், மகாதிர் அறிவித்திருக்கிறார்.

சமீபத்தில் புளூம்பெர்க் செய்தி நிறுவனத்திற்குக் கொடுத்த ஒரு நேர்காணலில் தான் அடுத்த வருடம், மே மாத வாக்கில் பிரதமர் பதவியை ஏற்கக் கூடும் என்று கூறியிருந்தார் அன்வார் இப்ராகிம்.

அதற்கான பதில் தான் மேலே டாக்டர் மகாதிர் கூறியது. இது வரை  எல்லாமே சரி தான்.  சந்தேகப்பட ஒன்றுமில்லை. 

ஆனால் டாக்டர் மகாதிர் சொன்னதை  அவருடைய கட்சியினர் ஏற்றுக் கொள்ளுவார்களா?  அதுவும் முக்கியம். இவர் ஒன்று சொல்லவும் அவர் கட்சியினர் ஒன்று சொல்லவும் - அது தான் இன்று வரை நடந்து வருகிறது!  அப்படி வேறு ஒரு கருத்து அவர் கட்சியினரிடமிருந்து வருமானால் நிச்சயமாக, பொது மக்களைப் பொறுத்தவரை,  அதற்குக் காரணம்  டாக்டர் மகாதிரின் தூண்டுதல் தான் என்று தான் நினைப்பார்கள்! அதில் சந்தேகம் இல்லை.

அதே சமயத்தில் பாஸ் கட்சியினரும் சரி, அம்னோ கட்சியினரும் சரி அவர்களும் ஏதாவது ஒன்றைச் சொல்லி மக்களைக் குழப்புவார்கள்! அங்கே இன்னொரு கோஷ்டியும் உண்டு.  அவர்கள் பக்கத்தான் அரசாங்கம் எதைச் செய்தாலும் அதனை ஊதி ஊதி ஓரு பிரச்சைனையாக உருவாக்குவார்கள்!  இவர்கள் நஜிப்பின் ஆதரவாளர்கள்.  நாட்டில் நடப்பது எதுவுமே சரியில்லை என்பது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவார்கள்!  

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டியவர் பிரதமர், டாக்டர் மகாதிர் தான். "விரைவில் அறிவிக்கப்படும்" என்பதற்குச் சொல்லும்படியான கால வரையரை இல்லை. அதனை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். இந்த மாதமே என்று சொல்லலாம்.  அடுத்த மாதம் என்றும் சொல்லலாம். அடுத்த ஆண்டு, அதற்கு அடுத்த ஆண்டு - இப்படியும் அர்த்தப் படுத்திக் கொள்ளலாம். ஆக, அந்த வார்த்தைக்கு ஒரு முடிவு இல்லை!

இப்படி வேறு வேறு கோணத்தில் மக்களைப் போட்டுக் குழப்புவதைவிட டாக்டர் மகாதிர் உருப்படியாக ஒன்றைச் செய்யலாம. எந்த தேதி, எந்த மாதம் பிரதமர் பதவி அன்வாரிடம் ஒப்படைக்கப்படும் என்பதை மக்களுக்கு அறிவித்து விடலாம்.  அப்படி செய்யும் போது யாரும் எதுவும் பேச முடியாது! தேவையற்ற பேச்சுக்கள் எழாது!

பிரதமர் பதவி எப்போது அன்வாரிடம் ஒப்படைக்கப்படும் என்பதை பிரதமர் அறிவித்துவிட வேண்டும்.  "நான் சொன்னபடியே பிரதமர் பதவியை அன்வாரிடம் ஒப்படைப்பேன்!"  என்று மீண்டும் மீண்டும் அவர் சொல்லும் போது - அப்படி பேசுவதே சந்தேகத்திற்கு இடமளிக்கிறது!

நாம் சொல்ல வருவதெல்லாம் பிரதமர் அவர்களே, நீங்களும் ஒரு தேதியைக் குறிப்பிட்டு பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண முயற்சி செய்யுங்கள்!  இழுபறி வேண்டாம், என்பதே நமது வேண்டுகோள்!

Friday 20 September 2019

ஸாகிருக்கும் மகாதிருக்கும் அப்படி என்ன நெருக்கம்?



நமது நாட்டு சட்டத் திட்டங்களின் படி ஸாகிர் நாயக் இந்நேரம் இந்தியாவிடம் ஒப்படைத்திருக்கப்பட வேண்டும். 

ஆனாலும் அது நடக்கவில்லை.  ஒரே இழுபறி. அந்த இழுபறிக்குக் காரணம் பிரதமர் டாக்டர் மகாதிர்! 

அவர் சொல்லுகின்ற காரணங்கள் ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை. ஸாகிரை வைத்து எதிர் கட்சிகள் அரசியல் ஆட்டம் ஆடுகின்றன என்கிறார்.  இருக்கலாம்.   

இன்றைய நிலையில் ஸாகிர் தப்பி ஓடிவந்து அடைக்கலம் புகுந்தவர் என்பது போய் ஸாகிர் ஏதோ மலாய் இனத்தவரைக் காக்க வந்த காவலன் என்கிற மாதிரியான தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்!

டாக்டர் மகாதிரும் எதிர் கட்சியினரோடு சேர்ந்து கொண்டு அவர்கள் ஆடுகின்ற ஆட்டத்திற்கு இவரும் ஆடுகிறார்!  இவரும் நாட்டில் சட்டம் என்று ஒன்று இருக்கிறது என்பதை மறந்து ஆடுகிறார்!

இந்திய அரசாங்கம் ஒன்றைச் சொல்லுவதும் இவர் ஒன்றைச் சொல்லுவதும்  நாட்டில் எல்லாமே தமாஷாக போய்க் கொண்டிருப்பாதாகவே தோன்றுகிறது!

அதிலும் குறிப்பாக மக்களின் பிரதிநிதிகளாக இருக்கும் இந்தியத் தலைவர்களை காவல்துறை நீண்ட நேரம் விசாரிப்பதும் - அவர்கள் குற்றவாளிகள் - என்பதைப் போன்ற  ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதும் இதுவரை இந்த நாட்டில் நடைபெறாத ஒரு முன்னுதாரணம்!

பிரதமர்,  டாக்டர் மகாதிர் என்ன தான் நினைக்கிறார்? ஸாகிர் நாயக்கின் கொள்கை நாம் அறிந்தது தான். ஒரே கொள்கை தீவிரவாதம் மட்டுமே! அது மற்றவர்களுக்கு!  அவருக்குத் தீவிரவாதத்தின் மூலம் வரும் பணம்! ஸாகிர் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் போகக் கூடியவர். இப்போது இந்த நாட்டையே தனது பிடியில்  வைத்திருப்பதாக நினைக்கிறார் ஸாகிர் நாயக்! ஒண்ட வந்த பிடாரிக்கு இந்த அளவு ஊர்ப் பிடாரிகள் இடம் கொடுத்தால் இது தான் நடக்கும்! 

இந்த இருவரின் நெருக்கம்  எங்கே போய் முடியும் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஒண்ட வந்த பிடாரி ஓடத்தான் வேண்டி வரும்! அதனை மாற்ற முடியாது!

Wednesday 18 September 2019

சிவ நாடாரைப் பாராட்டுவோம்!

தான் படித்த பள்ளியை  எத்தனை பேர் திரும்பிப் பார்க்கின்றனர்? 

எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் பலர் தாங்கள் படித்த பள்ளியை மறப்பதில்லை.   மறப்பதில்லை மட்டும் அல்ல தங்களால் இயன்ற அளவு அந்தப் பள்ளிகளுக்கு உதவவும் செய்கின்றனர்.

தான் படித்த பள்ளியில் மேல் உள்ள பற்று இங்கு மட்டும் அல்ல எல்லா நாடுகளிலும் உண்டு. 



அதே போல இந்தியாவின் பத்து பணக்காரர்களில் ஒருவரான சிவ நாடார் அவர் மதுரையில் படித்த இளங்கோ அரசு மேல்நிலைப் பள்ளியை நினைவு கூர்ந்து  அந்த அரசுப் பள்ளியை யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு அதன் தரத்தினை உயர்த்தியிருக்கிறார். புதிய கட்டடம் மட்டும் அல்ல தரமான கல்வியைக் கொடுக்கும் பள்ளியாக   அந்தப் பள்ளியை மாற்றி அமைத்திருக்கிறார். 



புதிய 24  வகுப்பறைகள்,  15 அடி நீள கரும்பலகைகள், பள்ளிக்குள்ளேயே 24 மணி நேர தண்ணீர் வசதி,  சூரிய ஒளியில் இயங்கும் வகுப்பறைகள்,  100 கணினிகளைக் கொண்ட  கணினி பயிற்சி மையம், தனியார் நிர்வாகத்தில் கழிவறைகள்,  குளிர்சாதன வசதிகளுடன் நூல் நிலையம்,  பள்ளி வளாகத்தில் அழகிய பூங்கா, கூடைப்பந்து மைதானம் அத்தோடு புதிய இரண்டு பள்ளிக் கட்டடங்கள் என்று கலக்கியிருக்கிறார் சிவ நாடார்.

சுமார் ரூபாய் பதினைந்து கோடியை  தான் படித்த பள்ளிக்கு ஒதுக்கியிருக்கிறார் சிவ நாடார். அத்தோடு அவர் பணி முடிந்து விட வில்லை. தொடர்ந்து பள்ளியின் கல்வி வளர்ச்சியையும் கண்காணித்து வருகிறார். இப்போதெல்லாம் அங்கு படிக்கும் மாணவர்கள் பரிட்சைகளில் நூறு விழுக்காடு தேர்ச்சி அடைகின்றனர்.

சிவ நாடார் தமிழ் வழி கல்வி கற்றவர்.  அவரின் நன்றியுணர்ச்சியை நாம் பாராட்டுகிறோம்.

Tuesday 17 September 2019

இது தான் காரணமா...?

இஸ்லாமிய சமயப் போதகர், ஸாகிர் நாயக் ஏன் மலேசிய அரசாங்கத்தால் வெளியேற்றப்பட முடியவில்லை என்பது குறித்து தொடர்ந்து வரும் செய்திகளை வைத்து வாசகர்கள் ஓரளவு புரிந்திருப்பார்கள் என நம்புகிறேன்.


ஒன்று:  எந்த ஒரு இந்த இஸ்லாமிய  நாடும் இந்த இஸ்லாமிய அறிஞரை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. அவர் அறிஞர் என்பதை விட தீவிரவாதத்திற்குத் துணை போகிறவர் என்று அடையாளம் காணப்படுகிறார்.  சுருக்கமாகச் சொன்னால் அவர் ஒர் இஸ்லாமியத் தீவிரவாதி என்பதாகத்தான் அவர் மீதான குற்றச்சாட்டு.

மற்ற நாடுகளில் என்ன நடந்தது என்பதை விட்டு விடுவோம்.  நமது நாட்டில் என்ன நடந்தது?  கிளந்தானில் நடந்த ஒரு பொது கூட்டத்தில் அவர் இந்து மதத்தினரைப் பற்றி, இந்தியர்களைப் பற்றி தரக் குறைவாகப் பேசினார். சீனர்களையும் வம்புக்கு இழுத்தார். இதுவும் தீவிரவாதம் தான்!

அவர் இந்நாட்டில் தங்குவது என்பது தற்காலிகம் தான். நிரந்தர தங்கும் உரிமையை அவர் பெற்றிருந்தாலும் அந்த உரிமை எந்த நேரத்திலும் மீட்டுக் கொள்ளப்படலாம்! அவர் அரசியலில் தலையிட முடியாது. இந்த நாட்டில் தங்குவதற்கு அது ஒரு முக்கிய நிபந்தனை.

ஆனாலும் அவர் பேசுகிறார். பேச தடை விதிக்க முடியவில்லை. பொது மேடைகளில் இல்லையென்றாலும் உள் அரங்கங்களில் பேசலாம். அதுவே அவருக்குப் போதுமானது!  உள் அரங்கங்களில் அரசியல் பேசலாம். தீவிரவாதம் பேசலாம். பிற மதத்தினரை இழிவு படுத்தலாம்! இதன் மூலம் இத்தனை ஆண்டுகள் விழிப்படையாத நிலையில் இருந்தவர்கள் இனி ஸாகிர் நாயக்கின் மூலம் விழிப்படைவார்கள்!

இந்த விழிப்புணர்வு எந்த வகையில் மலேசியர்களுக்கு நன்மை பயக்கும் என்பது உடனடியாகத் தெரியாவிட்டாலும் அதன் பாதிப்பு இருக்கத்தான் செய்யும். 

இவர் இந்நாட்டிற்கு வந்த ஆரம்ப காலத்தில் இவருடைய உரைகளைக் கேட்டு  இங்கிருந்து தப்பியோடி அரபு இஸ்லாமிய  தீவிரவாத அமைப்புக்களில் சேர்ந்த சிலர் கடைசியில் அங்கேயே  மடிந்து போனதாக வந்த செய்திகளும் உண்டு.

 ஆனாலும் ஸாகிருக்கு இன்னும் நல்ல நேரம் தான். அவருக்கு எதிர்கட்சிகளின் ஆதரவு செம்மையாக இருக்கிறது. பாஸ் கட்சியும் அம்னோ கட்சியும் அவரைத் தலைமேல் வைத்துக் கொண்டு கூத்தாடுகின்றன! இந்தக் கட்சிகளில் உள்ள பலருக்கு ஸாகிர் என்ன பேசுகிறார் என்பது கூட தெரியாது! அவருடைய ஆங்கிலம் பலருக்குப் புரியாது! ஆனாலும் அவர் ஓர் இஸ்லாமியப் போராளி என்பதாக பலர் நினைக்கின்றனர்!

பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அவர் போராளியா அல்லது போலியா என்பது தெரியவரும்!

"மேக்பை" மேய்ந்து விட்டது...!


                                                                   Magpie Bird

பொதுவாக பறவைகள்  மீதான நமது அபிப்பிராயம் அப்படி ஒன்றும் கெடுதலாக இருந்ததில்லை.  ஆனால் மனிதனுக்குக் கேடு விளைவிக்கும் பறவைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவைகள் நமது அருகில் இல்லை என்பதைத் தவிர மற்றபடி அவைகள் இல்லை என்று சொல்ல முடியாது.

மேலே உள்ள "மேக்பை" என்னும் பறவைகள் ஆபத்தானவை. இவைகள் அதிகமாக ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றன.

சமீபத்தில் 76 வயதுடைய நபர் ஒருவர் தனது சைக்கிளில். தலைக் கவசத்துடன், பூங்கா ஒன்றில் சுற்றிக் கொண்டிருக்கும் போது இந்த மேக்பை பறவையால் தாக்கப்பட்டார்.  அவரது தலையில் குறி வைத்து தொடர்ந்து தாக்குதலை அது மேற் கொண்டதும் அவரது கவனம் சிதறி அதன் தாக்குதலிலிருந்து தப்பிக்க  முயன்ற போது வேலி ஒன்றில் மோதி படு காயமடைந்தார்.  மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.


 பொதுவாக வெயில் காலங்களில் இந்தப் பறவைகளின்  தாக்குதல் என்பது எப்போதும் நிகழ்வது தான்.  சாலையில் நடந்து செல்பவர்கள், சைக்கிளில் செல்பவர்கள் இவர்களை தாக்குவது என்பதும் புதிதல்ல. ஆனால் இந்த முறை அது மரணத்தில் முடிந்திருக்கிறது.



இந்தப் பறவைகள், மனிதர்கள் தங்களது எல்லைகளை 'ஆக்கிரமிக்கும்'  போது அவைகள் ஆவேசமடைகின்றன.  அதுவும் குறிப்பாக அவைகள் குஞ்சு பொறிக்கும் காலங்களில். அதனாலேயே மனிதர்கள் மீதான இந்தத் தாக்குதல் என்பதாக சொல்லப்படுகின்றது. 

 மேக்பை பறவைகள் சட்டப்படி பாதுகாக்கபட்ட பறவைகள்.  ஆனால் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தினால் அவைகளுக்கும் ஆபத்து தான்!



Sunday 15 September 2019

கேள்வி - பதில் (110)

கேள்வி

நடிகர் சூரியா பேனர்கள் வைப்பதற்குப் பதிலாக கல்விக்கு உதவுங்கள் என்று குரல் கொடுத்திருக்கிறாரே!

பதில்

நடிகர் சூரியா பாராட்டப்பட வேண்டியவர்.  ஏழைகளில் கல்விக்காக குரல் கொடுக்கும் ஒரே நடிகர் அவர் தான்.

இந்த பேனர் விஷயத்தில் பல நடிகர்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறார்கள்.  

நடிகர் விஜய்  யாரும் இனி விளம்பர பேனர் வைக்க வேண்டாம் என்று தனது ரசிகர் மன்றத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.  அதாவது அவரது அடுத்த படமான பிகில் பட இசை வெளியீட்டு விழாவிற்கு எந்த பேனரும்  வைக்கக் கூடாது என்று கடுமையான உத்தரவைப் போட்டிருக்கிறார். அதன் பின்னர் போட்டாலும் போடலாம்! 

அதே போல  மதுரை அஜித் ரசிகர் மன்றத்தினரும் இனி எந்த நிகழ்விலும் பேனர்களை வைப்பதில்லை என்று உறுதி மொழி எடுத்திருக்கிறார்கள்.  அவர்கள் 'தலை' யின் அனுமதி இல்லாமலேயே இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார்கள். அவர் செய்த முடிவு சரியானது.  ஆனால் அந்த உறுதி மொழி  மதுரைக்கு மட்டும் தான்!  ஆனல் 'தல'  எந்தக் கருத்தையும் இதுவரை சொல்லவில்லை.

நடிகர் சூரியா இனி தனது படங்களுக்கு எந்த  பேனரும் தேவை இல்லை என்று தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். பேனர்களுக்குச் செய்கின்ற செலவை பள்ளிகளுக்குச் செய்யுங்கள் என்று தனது ரசிகர்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

மற்ற நடிகர்கள் நிலை என்ன என்று தெரியவில்லை.  யரோ வீட்டு பிள்ளைகள் செத்தால் நமக்கு என்ன என்று கூட நினைக்கலாம். அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் சாகா வரம் பெற்றவர்களாக இருக்கலாம்!

நாமும் சூரியாவோடு சேர்ந்து இதைத் தான் சொல்ல விரும்புகிறோம். அது சினிமா நடிகர்களோ, அரசியல்வாதிகளோ  இப்படியெல்லாம் பதாகைகளோ, பேனர்களோ,  போட்டு சாலைகளை அசிங்கப்படுத்துவதை நிறுத்திவிட்டு அந்தப் பணத்தை கல்விக்காக செலவு செய்யுங்கள் என்பது தான்.

பதாகைகள் குப்பைத் தொட்டிக்கான கழிவு பொருட்கள்!  கல்வி  குப்பையல்ல, கோபுரம்!

Saturday 14 September 2019

பத்து வயது மலையரசி!


பத்து வயதில் மலையேறுவதில் சாதனைப் படைத்திருக்கிறார் செலினா காவஜா என்கிற பாக்கிஸ்தானிய சிறுமி ஒருவர்.

வயது தான் பத்தே தவிர மலையேறுவதில் அவர் மலை அரசி என வர்ணிக்கப்படுகின்றார்.  சிறு வயது முதலே மலை ஏறுவதில் பல சாதனைகளைப் புரிந்தவர் இந்தச் சிறுமி.

கடைசியாக அவர்  பாலுஸ்தானிலுள்ள 7,027  மீட்டர் ஸ்பேண்டிக்  மலை உச்சியை அடைந்த இளம் விராங்கனை என்னும் பாராட்டைப் பெறுகின்றார். இதற்கு முன்னர் 5,765 மீட்டர் கியுசார் மலையையும் மற்றும் 6,050 மீட்டர் மிங்லிசார் மலையையும் தனது ஒன்பதாவது வயதில் ஏறி சாதனைகளைப் படைத்திருக்கிறார் செலினா.
 

 தனது எட்டாவது வயதிலேயே மலை ஏறும் பயிற்சிகளில் ஈடுபட்டுவிட்டார் இந்த சிறுமி.  3000 மீட்டர் உயரமுள்ள மிராஞ்சி மலையை  45 முறைகளாவது ஏறியிருக்கிறேன் என்கிறார். அதே போல  4000 மீட்டர் உயரமுள்ள மாக்ரா மலையை குறைந்தது மூன்று முறைகளாவது ஏறியிருக்கிறார்.

அடுத்த இலக்கு மிகக் குறைந்த வயதில் ஏவரஸ்ட் மலையை ஏறிய சிறுமி என்று சாதனை புரிய வேண்டும் என்னும் நோக்கத்தில் இருக்கிறார் செலினா. அவர் வெற்றி பெறுவார் என்பது உறுதி. 

இப்படி இளம் வயதிலேயே மலைகளை ஏறிக் கொண்டிருக்கும் இந்த சிறுமியின் உடல் நலனில் பாதிப்பு ஏற்படாதா?   அதற்கு அவரின் தந்தை "இல்லை! எந்த பாதிப்பும் வராது!" என்கிறார்.  "செலினா ஓர் இருபது வயது இளைஞரை விட இன்னும் திடகாத்திரமாக இருக்கிறார்" என்கிறார்.

செலினாவின் தந்தை ஓர் உடற் பயிற்சியாளர். அவரது உடற் பயிற்சி மையத்தில் செலினா  தினசரி பயிற்சிகளை மேற்கொண்டு தனது உடம்பை இரும்பாக வைத்திருக்கிறார்!

மலைகளை ஏறி சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கும் செலினாவின் வருங்காலக் கனவு என்ன?  அவர் விலங்குகளை நேசிப்பவர். அதனால்,   தான் ஒரு கால்நடை மருத்தவராக வர விரும்புவதாகக் கூறுகிறார்.

ஆக, மலைகள், விலங்குகள் அது தான் இப்போதைய கனவு. நாளை மாறலாம்! வயது ஏறும் போது இலட்சியங்கள் மாறலாம்!

மலைகளின் அரசிக்கு நமது வாழ்த்துகள்!

Friday 13 September 2019

நம்பிக்கை நசிகிறதா...?


 பக்காத்தான் அரசாங்கத்தின் மீது மக்களின் நம்பிக்கை நசிகிறதா? ஆம், நசிகிறது என்கிறார் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ!

மக்களின் பிரதிநிதியாக அவர் சொல்லுகிறார்.  ஆமாம் நாமும் அதனைத் தான் சொல்லுகிறோம். அவர் சொல்லுவதற்கும் நாம் சொல்லுவதற்கு ஒரு வித்தியாசம் உண்டு. அவரால் வெளிப்படையாக யார் இதற்குக் காரணம் என்று சொல்ல முடியவில்லை. 

நமக்குத் தெரியும்.  நாம் சொல்லுவதால் ஒன்றும் பிரச்சனை இல்லை. நாம் தேர்தலில் போட்டிப்போட போவதில்லை! அதுவே நமது பலம்.

இன்றைய நிலையில் நமது குற்றச்சாட்டு என்று ஒன்று வந்தால் அது பிரதமர், டாக்டர் மாகாதிர் மேல்  தான்!

புதிய அரசாங்கம் ஆட்சி அமைத்த போது அவருடைய தயவு  புதிய அரசாங்கத்திற்குத் தேவைப்பட்டது. இப்போது அதுவே, அவருடைய தேர்வு, புதிய அரசாங்கத்திற்குத் தலைவலியாக மாறி விட்டது!  முன்னுக்குப் போகாமலும் பின்னுக்கு வராமலும் அனைத்துக்கும் முட்டைக்கட்டையாக அவருடைய பதவி இடைஞ்சலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்று தான் இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்!

முறைப்படி அவர் பதவியை பிரதமர்- நியமனர் அன்வார் இப்ராகிமிடம் பதவியை ஒப்படைத்திருக்க  வேண்டும். ஆனால் அவர் சொன்னது போல நடந்து கொள்ளவில்லை!  அவர் இழுத்தடித்துக் கொண்டும், கிண்டலடித்துக் கொண்டும் பதவியில் இருந்து கொண்டிருக்கிறார்!  யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை!

பிரதமர் பதவி வலிமையானது.  அவர் தான் மற்றவர்களை விரட்டிக் கொண்டும் துரத்திக் கொண்டும் இருக்கிறார்!  அவர் பதவியை விட்டுக் கொடுக்கும் வரை யாரும் அவரை ஒன்றும் செய்து விட முடியாது! அவர் பழைய பாணி அம்னோ அரசியலை நடத்திக் கொண்டிருக்கிறார்!  அவருடைய கட்சியை வலிமையான கட்சியாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார். அவர் கட்சியில் உள்ளவர்கள் பதவியை விட்டுக் கொடுக்க வேண்டாம் என்கிறார்கள்! அதனால் அவர்களுக்கு இலாபம்! 

மக்கள் தான் அவரை வேண்டாம் என்கிறார்களே தவிர அவருடைய பெர்சத்து கட்சியினர் அவரை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை! அதே போல அவர் தொடர்ந்து பதவியில் நீடிக்க வேண்டும் என்பதற்கு  பாஸ் கட்சியும் ஆதரவு கரம் நீட்டுகின்றது!  எல்லாம் சுயநலம்  தான். கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கின்ற கதை!

பிரதமர் பதவிக்கு ஒரு முடிவு  வரும் வரை மக்களுடைய நம்பிக்கை நசிந்து கொண்டு தான் இருக்கும்.  அரசாங்கம் இயங்க வில்லை என்றால் யாருக்கு என்ன இலாபம்? இந்த நசிவுக்கு பக்காத்தான் அரசாங்கம் தான் முழு பொறுப்பை ஏற்க வேண்டும்.

Thursday 12 September 2019

இதுவும் சாத்தியமே!

இஸ்லாமிய சமயப் போதகர், ஸாகிர் நாயக் புகார் செய்ததின் பேரில் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி, காவல் துறையினரால்  ஐந்து மணி நேர விசாரணைக்கு உள்ளானார் என்பதை அறியும் போது நமது காவல துறை எத்தனை நீதியுடன் நடந்து கொள்ளுகிறது  என்பது புலனாகிறது!

குற்றம் என்றால் யார் செய்தாலும் குற்றமே என்பது  தான் காவல்துறையின் கொள்கை.

ஸாகிர் நாயக் வெளி நாட்டிலிருந்து இங்கு ஓடி வந்து அடைக்கலம் கோரியிருக்கலாம்!   தப்பித்துக் கூட வந்திருக்கலாம்! பண பரிமாற்றத்தில் தில்லுமுள்ளுகள் நடந்திருக்கலாம்! தீவிரவாதம் பேசியிருக்கலாம்!

ஆனால் அவைகள் அனைத்தும் இந்த நாட்டில் நடந்தவை அல்ல. வெளி நாடுகளில் நடந்தவை.

இங்கு, இப்போது அவர் மலேசியாவில் நிரந்தரமாக தங்கும் உரிமைப் பெற்றவர் என்று சொல்லப்படுகிறது. ஒரு வேளை மலேசியக் குடியுரிமை பெற்றவராகக் கூட இருக்கலாம். 

அதனால் அவர் இந்நாட்டில் அரசியலில் தலையிடவும் அவருக்கு உரிமை இருப்பதாகவே நமக்குத் தோன்றுகிறது. அரசாங்கம் அந்த அளவுக்கு அவரைத் தாங்கிக் கொண்டிருக்கிறது!

வெளி நாட்டவர் ஒருவர் இந்நாட்டில் குடியுரிமை பெற அவருக்கு என்ன தகுதி வேண்டும்? ஒன்று அவர் நாட்டில் பெரிய முதீலிடுகளோடு வந்திருக்க வேண்டும். அப்படியும் நடந்திருக்கலாம். நஜிப் இருந்த பண நெருக்கடியில் ஸாகிர் உதவியிருக்கலாம்.  அது சாத்தியமே!

இன்னொன்று இந்த நாட்டில் குடியுரிமை பெற இங்குள்ள மலேசியப் பெண்ணை திருமணம் செய்தவராக இருக்க வேண்டும். இது வரை இல்லையென்றாலும் இனி மேல் கூட நடக்கலாம். பெர்லிஸ் மாநில முப்தியிடம் சொன்னாலோ அல்லது பாஸ் கட்சியினரிடம் சொன்னாலோ அதற்கான் ஏற்பாடுகளை உடனடியாகச் செய்யத் தயாராக இருக்கிறார்கள்! அல்லது ஏற்கனவே அப்படி ஒரு ஏற்பாடு நடந்ததோ என்னவோ தெரியவில்லை!

நாம் இங்கு சொல்ல வருவதெல்லாம் காவல்துறை ஸாகிர் நாயக்கின் நிலை ப்ற்றி பொது மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அவரது குடியுரிமை அல்லது நிரந்தர தங்கும் அனுமதி பற்றி  தெளிவு படுத்த வேண்டும்.

காவல்துறையின் நீதி நேர்மை பற்றி நாம் அறிவோம். பேராசிரியர் இராமசாமியை அவர்கள்  விசாரித்தார்கள். அவர்கள் விசாரித்தது இந்தியர்களுக்குத் தலைகுனிவு தான். அதே போல ஸாகிர் நாயக்கின் நிலை பற்றியும் பொது மக்கள் அறிய வேண்டும்.

காவல்துறை நீதியை நிலை நிறுத்த வேண்டும்! இது சாத்தியம் தான்!

நீ தான் தெய்வம்!




மழையோ, வெய்யிலோ,  காற்றோ, புயலோ - எதற்கும் அஞ்சாதவர்  இந்த ஆசிரியை. இந்தியா, ஓடிஷா மாநிலத்தின், தென்கனல் மாவட்டத்தின் ரதிபாலா ஆரம்பப்பள்ளியில்  முதலாம் வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்பு வரை பாடம் சொல்லிக் கொடுக்கிறார் ஆசிரியை, பினோதினி சமல். பள்ளியில் சுமார் 53 மாணவர்கள் படிக்கின்றனர்.

பினோதினி ஒவ்வொரு நாளும் ஆற்றைக் கடந்து தான் பள்ளிக்குச் செல்ல வேண்டும். இப்போது அவருக்கு வயது 49. கடந்த பதினோரு ஆண்டுகளாக அவர் இப்படித்தான் பள்ளிக்குச் செல்லுகிறார். மழை என்றால் கழுத்து அளவு  தண்ணிரைக் கடந்து தான் பள்ளிக்குச் செல்ல வேண்டும். ஒரு கையில் தனது கைப்பையைத் தண்ணீரில் படாமல் தூக்கிக் கொண்டும் ஒரு கையில் தனது சேலையைப் பிடித்துக் கொண்டு நடப்பதும் அவரது தினசரி பயணமாக அமைந்துவிட்டது! துணிகளை மாற்றிக் கொள்ள போதுமான மாற்று உடைகளை பள்ளியிலேயே வைத்திருக்கிறார்.



ஆனாலும் அவரது வேலையில் அவருக்குச் சலிப்பில்லை.  மழைக் காலத்தில் பிள்ளைகள் பள்ளிக்கு வராமல் இருக்கலாம், ஏன்?, தலைமையாசிரியர் கூட வேலைக்கு வராமல் போகலாம்  ஆனால் பினோதினி டீச்சருக்கு விடுமுறை என்பதெல்லாம் ஒன்றுமில்லை! உடல் நலம் சரியில்லை என்றால் கூட அவர் பள்ளிக்கு வராமல் இருந்ததில்லை!

அந்த மாவட்ட இளைஞர் தலைவர் ஒருவர் சொல்லுகிறார்: "ஆண்கள் செய்ய முடியாததைக் கூட அந்த டீச்சர் துணிச்சலாக செய்கிறார். மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இருக்கலாம் ஆனால் அந்த டீச்சர் பள்ளிக்கு வருவதை யாரும் தடுக்க முடியாது. அவரது தொழிலில் அந்த அளவு பற்றும் பிள்ளைகள் மேல் பாசமும் கொண்டவர்" என்கிறார்.

ஆனால் அவருக்கு ஒரு குறை உண்டு.  எட்டு ஆண்டுகள் பணி புரிந்த பின்னரும் தான் இன்னும் தற்காலிக ஆசிரியராகவே பணியில் இருப்பது வருத்தமாகவே இருக்கிறது என்கிறார்.  தற்காலிகம் என்பதால் அவருடைய சம்பளம் 7,000 ரூபாய்க்கு மேல் ஏறவில்லை. பணியில் உறுதி படுத்தியிருந்தால் இந்நேரம் அவரது சம்பளம் 27,000 ரூபாயாக  ஆகியிருக்கும்.

இவரைப் பற்றியான செய்திகள் முகநூலில் வெளியான பின்னரே மாவட்ட ஆட்சியாளரின் காதுகளுக்கு இவரது பிரச்சனை எட்டியிருக்கிறது! நல்லது நடக்கும் என எதிர்பார்க்கலாம்.

இப்படியெல்லாம் ஆசிரியர்களை நாம் எதிர்பார்க்க முடியுமா? 

அவர் ஆசிரியர் மட்டும் அல்ல "அம்மா! நீ தெய்வம்!"

Wednesday 11 September 2019

கமலி கலக்குவாரா...!

மாமல்லபுரம்  மீனவ குப்பத்தைச் சேர்ந்த கமலி என்னும் ஒன்பது வயது சிறுமி. 


தந்தை பெயர் மூர்த்தி. தாயின் பெயர் சுகந்தி. கமலியும் அவரது சகோதரனும் தாயின் அரவணைப்பில் இருக்கிறார்கள்.   சுகந்தி மீன் பஜ்ஜி கடை வைத்து தனது இரண்டு பிள்ளைகளையும் காப்பாற்றி வருகிறார். இருவருமே தனியார் பள்ளிகளில் படிக்கிறார்கள்.

கமலி சிறு வயதிலிருந்தே கடல் சறுக்கு விளையாட்டிலும், ஸ்கேட்டிங் விளையாட்டிலும் தீராத ஆர்வம் கொண்டிருப்பவர்.




 எந்த நேரத்திலும் ஸ்கேட்டிங் போர்டும் கையுமாக இருப்பவர். 

ஸ்கேட்டிங் போட்டியில் இது வரை பல பரிசுகளை வாங்கி குவித்திருக்கிறார் கமலி. அவரது ஸ்கேட்டிங் திறமை அவரைப் பல ஊர்களுக்கும் பல நாடுக்ளுக்கும்  கொண்டு சென்றிருக்கிறது. மும்பை, பெங்களூரு, மங்களூர், மற்றும் சீன நாட்டுக்கும் போட்டிகளுக்காக சென்றிருக்கிறார் கமலி. பள்ளியில் நடக்கும் கபடி விளையாட்டிலும் பங்கு பெறுகிறார். ஆனால் இவரது முதல் இடம் என்பது ஸ்கேட்டிங் விளையாட்டுக்கு மட்டுமே.   ஸ்கேட்டிங் போட்டிகளுக்காக இன்னும் பல நாடுகள் செல்வார் என எதிர்ப்பார்க்கலாம்.

இவருடைய திறமையையும், ஆற்றலையும் வெளிச்சதிற்குக் கொண்டு வந்தவர் யார்?  இவரைப் பற்றியான ஓர் ஆவணப்படம் மூலம் வெளி உலகிற்கு அறிமுகமானவர்  கமலி.  ஆம் அந்த ஆவணப்படம் பல பரிசுகளை வாங்கிக் குவித்திருக்கிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் ஆஸ்கார் விருதுக்காவும் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

பெண் குழந்தைகளுக்கு இந்த விளையாட்டெல்லாம் எதற்கு என்று கேள்வி கேட்டவர்கள் இப்போது தங்களது குழந்தைகளுக்கும் இந்த விளையாட்டைக் கற்றுத் தருமாறு கமலியைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்!  இப்போது இரண்டு குழந்தைகளுக்குக் கமலி ஆசிரியராக இருக்கிறார்!

கமலியின் இந்த ஆவணப்படம் அடுத்த ஆண்டு ஆஸ்கார் பரிசுக்காக  பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

கமலி கலக்குவாரா! கலக்குவார் என நம்புவோம்!

Tuesday 10 September 2019

முதல் பழங்குடி பெண்!

                                    
                                             Anupriya Mathumitha Lakra

 பழங்குடி பெண் ஒருவர் விமான ஓட்டுநராக மாறியிருக்கிறார்.

இந்தியா, ஓடிசா மாநிலத்தில் உள்ள  மல்கன்கிரி  மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடி பெண் ஒருவர் - பழங்குடியினரில் முதல் பெண்மணியாக - விமான ஓட்டுனராக தனது பயணத்தை  ஆரம்பித்திருக்கிறார். ஓர் தனியார் விமான நிறுவனமான இண்டிகோ ஏர்லைன் ஸில்  துணை விமானியாக தனது பணியை இம்மாதம் தொடங்குகிறார்.

மாவோ கம்னிஸ்டுகளால் சூழப்பட்ட ஒரு மாவட்டமான மல்கன்கிரி பகுதியில் மட்டும் அல்ல ஓடிஷா மாநிலத்தின் முதல் பழங்குடி பெண் விமானியாகத் திகழ்கிறார் அனுபிரியா மதுமிதா லக்ரா. 

அனுபிரியாவுக்கு இப்போது வயது 27.  சிறு வயது முதல் விமானத்தில் பறக்கும் ஆசையைக் கொண்டிருந்தார் அனுபிரியா. அதுவே விமானியாக ஆக வேண்டும் என்னும் நிலைக்குக் கொண்டு சென்று விட்டது! பெரும் செலவில் படிக்க வேண்டிய ஒரு சூழல். பெற்றோர்கள் பெரும் அளவில் கடன்பட்டு படிக்க வைத்து அனுவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்திருக்கின்றனர்.

ஒன்றை நினைவில் வையுங்கள். அவர்கள் பழங்குடியினர்.  கடன் அவ்வளவு சுலபமாக வராது! ஆயினும் எல்லாப் பெற்றோர்களைப் போலவே அவர்களும் தனது மகளின் ஆசையை  எப்பாடு பட்டாவது நிறைவேற்ற உறுதி பூண்டனர் என்பது தான் கவனிக்கத் தக்கது.

அவரது தாயார் என்ன சொல்லுகிறார்? பெண் பிள்ளைகளைப் படிக்க வையுங்கள்; அவர்கள் விரும்புவதை படிக்க வையுங்கள். எனது மகள் மற்ற பெண்களுக்கு எடுத்துக் காட்டாக இருப்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது என்கிறார்.

நிறையவே அவர்கள் பெருமைப் படலாம். ரயில் கூட இல்லாத ஓர் ஊரிலிருந்து விமானத்தை இயக்கும் அளவுக்கு ஒரு பெண் உயர்ந்திருக்கிறார் என்றால் அது சாதாரண விஷயம் அல்ல. அதுவும் பழங்குடி மக்களின் - ஓடிஷா மாநிலத்தின் - முதல் பழங்குடி பெண்ணாக என்பது பெருமை தான்.

அதிகமான பழங்குடியினரைக் கொண்ட மல்கன்கிரி மாவட்டத்திலிருந்து இனி அதிகமான பெண்கள் விமானிகளாக அல்லது தாங்கள் விரும்புகின்ற துறையில் நிபுணர்களாக வருவதற்கு ஒரு பாதையைப் போட்டுக் கொடுத்திருக்கிறார் அனுபிரியா. 

யாரும் எந்தச் சூழலிலும் முன்னேறலாம் என்பதற்கு அனுபிரியா ஓர் சான்றாக முன் நிற்கிறார்!

கனவு காணுங்கள்! கனவு நிறைவேற கனவு காணுங்கள்!

Monday 9 September 2019

செல்வாக்கு உயருகிறதா...?

இஸ்லாமிய சமயப் போதகர், ஸாகிர் நாயக்கின் செல்வாக்கு உயருகிறதா என்று கேட்டால் "ஆம் உயருகிறது!" என்று அடித்துச் சொல்லலாம்!

வருங்காலங்களில்  அவர் அரசியலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பும் பிரகாசமாக  இருப்பதாகவே நம்பலாம்1  அப்படி அவர் அரசியலில் ஈடுபட முடியுமா என்கிற கேள்விகள் தேவையில்லை.

இப்போது அவர் செய்கின்ற ஒவ்வொரு காரியமும் அரசியல்வாதிகள் செய்கின்ற காரியங்கள் தான்!   அரசாங்கத்தின் அனுமதியோடு தானே அவர் செய்கிறார்.  அதனை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும் போது  அவர் அரசியல்வாதியாவதை அவர்கள் ஏன் தடுக்கப் போகிறார்கள்? 

நாட்டுக்கு நல்லது என்று அரசாங்கம் நினைத்தால் அது நடப்பதில் தவறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லையே! நல்லது என்றால் நடக்கட்டும்!

ஆனால் ஸாகிர் நாயக்கைப் பற்றி இரு வித கருத்துக்கல் இருக்கின்றன. அவர் தீவிரவாதத்தை ஊக்குவிப்பவர்  என்பதாக ஒரு கருத்து. அதே சமயத்தில் மத துவேஷத்தை வளர்ப்பவர் என்பதாகவும் கூறப்படுகின்றது.

மத துவேஷம் என்பதை நாம் கண்கூடாகக் கண்டோம்.  கிளந்தான் மாநிலத்தில் நடைப்பெற்ற ஒரு கூட்டத்தில் இந்து மதத்தைப் பற்றி இந்துக்களைப் பற்றியும் அவர் சாடிப் பேசியதை காணொளிகளில் கண்டோம். இதற்கு முன்னரும் இந்து மதத்தைப் பற்றி தனது அறியாமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.  ஆச்சரியப்பட ஒன்றுமில்லை! காரணம் அவர் இஸ்லாமிய அறிஞர் தானே தவிர இந்து சமய அறிஞர் அல்ல. 

தீவிர வாதம் என்பது இந்தியா அவர் மீது வைக்கும் குற்றச்சாட்டு. அத்தோடு  கோடிக்கண்க்கான பண பரிமாற்றம்.   தீவிரவாதம் பேசுவதன் மூலம்  அவருடைய கல்லாப்பெட்டி  நிறைகிறது!   இளைஞர்களையும் தீவிரவாதத்திற்கு இழுத்துச் செல்லுவதாக அவர் மீது குற்றச்சாட்டு உண்டு. 

மற்ற நாடுகளில் அவர் செய்த தவறுகள் நமக்குத் தெரியவில்லை.  ஆனால் நம் நாட்டில் என்ன நடக்கிறது என்பது இப்போது நமக்குத் தெரிகிறது. ஸாகிர் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்துவதில் வல்லவராக இருக்கிறார்!  அவருடைய பேச்சாற்றல் இளைஞர்களை தீவிரவாதத்திற்கு இழுத்துச் செல்லுகிறது. இனங்களுக்கிடையே பகைமையை ஏற்படுத்துகிறார். 

அவர் மேல் நாம் சுமத்துகிற குற்றச்சாட்டுகள் இப்படித்தான் போகிறது.  ஆனால் இவைகள் எல்லாம் ஸாகிர் நாயக்கின் பலமாக பார்க்கின்றவர்கள் இருக்கிறார்கள்.  இவர்கள் தீவிரவாதம் பேசுவதில்லை. ஆனால் பேசும் ஸாகிர் நாயக்கை ஆதரிக்கிறார்கள்.! நாட்டில் கலவரத்தை இவர்களால் ஏற்படுத்த முடியவில்லை. ஸாகிரால் முடியும் என்பதால் அவருக்கு ஆதரவு கொடுக்கிறார்கள்.

இவர்களுக்குப் பெரிய அளவில் ஆதரவு இல்லையென்றாலும்  இவர்கள் வகிக்கின்ற பதவிகள் ஸாகிருக்கு பலமாக இருக்கின்றன. அவருக்குச் செல்வாக்கைக் கொடுக்கின்றன.  அவருடைய செல்வாக்கை உயர்த்திப் பிடிப்பதை போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.

ஸாகிர் எல்லாக் காலங்களிலும் குழப்பங்களோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்!  குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர்! கலவரம், தீவிரவாதம் இதெல்லாம் அவருக்குப் பிடித்தமான கலை!

அவருடைய உயரம்இன்னும் எவ்வளவு தூரம் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

Sunday 8 September 2019

திரைப்படம் ராட்சசி

"ராட்சசி" திரைப்படத்திற்கு நல்லதொரு விளம்பரத்தைக் கொடுத்திருக்கிறார் கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக்.   

அப்படியெல்லாம் இலவச விளம்பரம் கொடுத்தும் கூட படம் எந்த அளவுக்கு  மக்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது என்பது தெரியவில்லை!

முதலில் இந்தப் படம் எப்போது தியேட்டருக்கு வந்தது, எப்போது தியேட்டரை விட்டுப் போனது என்பது கூட தெரியவில்லை! தியேட்டருக்கு வந்து விட்டதா என்பதும் தெரியவில்லை.

பெரிய நடிகர் நடித்த படம் என்றால்  யாரும் சொல்ல தேவை இல்லை. நமக்கு செய்தி கிடைத்துவிடும்! ஆனால் பெரிய நடிகர்கள் நடிக்காத ஒரு படத்திற்கு எந்த செய்தியும் நமக்குக் கிடைப்பதில்லை! கல்வி அமைச்சர் சொன்ன பிறகு தான் இப்படி ஒரு படம் வந்திருக்கிறது என்பதே நமக்குத் தெரியும். இப்போதும் கூட இந்தப் படத்தின் நிலை என்ன வென்று நமக்குத் தெரியவில்லை.

தமிழ் நாட்டில் ஒரு படம் பேசப்படவில்லை என்றால் இங்கும் அந்தப் படம் பேசப்படாது. பேசக்கூடாது என்பது தான் அவர்களது நிலை. நல்லது எதுவும் தமிழ் நாட்டு மக்களிடம் போய்ச் சேரக் கூடாது என்பதில் அங்குள்ள ஊடகங்கள் எச்சரிக்கையாக இருக்கின்றன. அங்கு ஊடகங்கள் என்ன சொல்லுகிறார்களோ அதைத்தான் நாமும் இங்கு பின்பற்றுகிறோம்!  ஒருவேளை தமிழ்நாட்டுக் கிராமப் புறங்களில் படம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கக் கூடம்.

கல்வி அமைச்சர் இன்னொரு கருத்தையும் கூடவே கூறியிருக்கிறார். இந்தப் படத்தை ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் பார்க்க வேண்டும் என்பதாக அறிவுறித்தியிருக்கிறார். அப்போதே ஒரு பதிலும் வரும்:  அமைச்சு பணம் கொடுத்தால் நாங்கள் படம் பார்க்க தயாராக இருக்கிறோம்!"  என்பதாக! 

இப்படி பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் சேர்ந்து பார்த்த படம் என்றால்  அந்தக் காலத்தில் "ஔவையார்" படம் என்று சொல்லலாம். அதன் பின்னர் ஏதேனும் படம் உண்டா என்று எனக்குத் தெரியவில்லை.

நமது நாட்டைப் பொறுத்தவரை இந்தப் படம் வந்த நேரம் சரியில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. ஜாவி எழுத்தை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சர் முனைந்து நிற்கிறார்.  இந்த திணிப்பை இந்திய சமூகம் எதிர்த்து நிற்கிறது. ஜாவி எழுத்தைப் புகுத்துவதற்கு இந்த "ராட்சசி"  திரைப்படத்தை தனக்குச் சாதகமாகப் பயன் படுத்துகிறாரோ என்று ஐயத்தை ஏற்படுத்துகிறது! அதனாலேயே யாரும் எந்த அறிக்கையும் இதுவரை வெளியிடவில்லை. அது பற்றி பேசவுமில்லை.

அதுவும் தமிழ் படத்தை பிற இனத்தவர் ஒருவர் புகழ்கிறார் என்றால் நம் ஆசாமிகள் செய்கின்ற சேஷ்டைகளை எல்லாம் பார்த்திருக்கிறோம்.  ஆனால் இந்தப் படத்திற்கு எந்த ஆரவாரத்தையும் காணோம்!

ஏன் நான் கூட கல்வி அமைச்சர் சொன்னது பற்றி பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. காரணம் சொன்ன நேரம் அப்படி. நாம் வேண்டாம் என்று சொல்லுவதை அவர் வேண்டும் என்று திணிக்கப் பார்ப்பதை இந்தப் படத்தை வைத்து உதாரணம் காட்டுகிறார்! செய்தே முடிப்பேன் என்பது அவர் வாதம். செய்யக் கூடாது என்பது நமது வாதம். 

அதற்கு ஏன் ராட்சசி?

நாட்டு நடப்பு எப்படி...?

நாட்டு நடப்பு என்ன நிலையில் இருக்கிறது? இப்போது  மக்களிடம் உள்ள கேள்வி இது தான்!

ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.  எல்லாம் எப்போதும் போலவே போய்க் கொண்டிருக்கிறது என்பதைத் தவிர புதிதாகச் சொல்ல ஒன்றுமில்லை!

சென்ற தேர்தலில் மக்கள் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தார்கள். அறுபது ஆண்டு கால சரித்திரம் மாற்றியமைக்கபப்பட்டது  என்பதைத் தவிர வேறு எந்த மாற்றமும் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை!

என்ன காரணமாக இருக்கும்! இப்போது நமது பிரச்சனையே பிரதமர்,  டாக்டர் மகாதிர் தான்!  தேர்தலில் வெற்றி பெற அவருடைய பங்களிப்பை குறைத்து மதிப்பிட முடியாது. அங்கு அவர் எந்தக் குறையும் வைக்கவில்லை.  அவர் பிரதமர் பதவி வேண்டாம் என்றாலும் வேறு வழி இல்லாமல் தான் அவர் மீது அந்தப் பதவி திணிக்கப்பட்டது!

ஆனால் இது வரை எல்லாமே சரி தான். பக்காத்தான் அரசாங்கத்தின் மீதான குறைபாடுகள் என்ன?

டாக்டர் மகாதிர் முக்கிய ஆயுதமாக கையில் எடுத்தது முன்னாள் பிரதமர் நஜிப் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தான். ஊழல் குற்றச்சாட்டோடு அவர் நாட்டை மாபெரும் அழிவு பாதைக்கு இட்டுச் செல்கிறார் என்பது மட்டும் தான் டாக்டர் மகாதிரின் முன் உள்ள பிரச்சனையாக இருந்தது. அதில் மட்டும் தான் அவர் கவனம் செலுத்தினார்.  பெரும் கடன் சுமையிலிருந்து நாட்டை மீட்டுக் கொண்டு வந்து விட்டார். நஜிப் மீதான ஊழல் வழக்கும் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.  

உண்மையைச் சொன்னால் அவர் வந்த பணி முடிவடைந்தது. . மற்றபடி பக்காத்தான் அரசாங்கம் வாக்குறுதி அளித்தபடி எதுவும் செய்யவில்லை என்றால் டாகடர் மகாதிர் அதில் கவனம் செலுத்தவில்லை  என்பது தான் பொருள். 

அவர் என்ன நினைத்தரோ அந்தப் பணிகள் முடிந்தன.   மற்றபடி அவர் பாதை என்பது முன்னைய பாரிசான் கட்சியின் வழி தான் அவர் வழி! வேறு புதிய வழிகளுக்கு அவர் தயாராக இல்லை! அவர் பதவி விலக தயாராக இருந்தாலும்  அவரது கட்சியினர் அவரை விட தயாராக இல்லை!

இதே அரசாங்கத்திற்கு அன்வார் இப்ராகிம் பிரதமராக வந்திருந்தால் பல மாறுதல்களைக் கொண்டு வந்திருப்பார். இப்போது இரண்டும் கெட்டான் நிலைமையில் நாடு தடுமாறுகிறது! ஒரு பெரிய மனிதரை, வயதில் மூத்த தலைவரை சும்மா போங்க என்று விரட்டி அடிக்க முடியாது! இப்போது அவர் கையில் தான் மந்திரக்கோல் இருக்கிறது! அவர் தான் மற்றவர்களை விரட்டுவாரே தவிர  மற்றவர்கள் அவரை விரட்ட முடியாது!

ஒன்றும் செய்ய இயலாத நிலையில் அரசாங்கம் இருக்கிறது என்றால் அதற்குக் காரணமானவர் டாக்டர் மகாதிர் தான்!  என்ன செய்யலாம், சொல்லுங்க! பக்காத்தானைப் போல நாமும் "அந்நாள் எந்நாளோ!" என்று பாடிக் கொண்டிருக்க வேண்டியது தான்!

Saturday 7 September 2019

எந்த நேரத்திலும் வெளிப்படலாம்....!

சமீப காலமாக இந்தியர்களிடையே அதிகமாக அடிப்பட்ட பெயர் ராணு மரியா மோண்டல்!

மேற்கு வங்காளத்தில், ரயில் நிலையமொன்றில் பாடி பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒரு பிச்சைக்கார பெண்மணி.

ஆனால் ஒரு வித்தியாசம். அவர் "ஐயா சாமி! அம்மா பிச்சை போடுங்கம்மா!" என்று யாரிடமும் கையேந்தி நிற்கவில்லை. அவரிடம் பாடும் திறமை இருந்தது.  அந்தக் காலத்து லதா மங்கேஷ்கர் பாடல்களை அவர் பாடிக் கொண்டிருப்பார். அவர் பாடல்களைக் கேட்டு அவருக்குப் பிச்சைப் போட்டு விட்டுப் போவார்கள் ரயில் பயணிகள். 


 இந்த நேரத்தில் பயணி ஒருவர் அவர் பாடுவதைக் கேட்டு அசந்து போனார். அவரது குரலை ஒலிப்பதிவு செய்து முகநூலில் போட்டு தனது வியப்பை வெளிப்படுத்தினார். அங்கிருந்து அது பாலிவூட் வரை பரவி இப்போது ராணுவை இந்திப் படங்களில் பின்னணிப் பாடும் அளவுக்கு உயர்த்தியிருக்கிறது! இப்போது பல நிகழ்ச்சிகளிலும் பாடி வருகிறார்!

ராணு இத்தனை ஆண்டுகள் யாரும் கவனிப்பாரற்று ஓர் அனாதை போல் வாழ்ந்து வந்தார். பெற்ற மகளும் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் "இருந்தா செலவு!" என்று தாயாரை ஓரங்கட்டிவிட்டுப் போய்விட்டார். இப்போது மகள் "இருந்தா வரவு!" என்று அம்மாவைத் தேடி கண்டுபிடித்து குடும்பத்தோடு அம்மாவிடம் ஒட்டிக் கொண்டார்!  இது தான் இன்றைய உலக வழக்கு! அதைத்தான் கவிஞர் வாலி பாடி விட்டுப் போனார்: "ஒரு மானம் இல்லை அதில் ஈனம் இல்லை அவர் எப்போதும் வால் பிடிப்பார்!"
பரவாயில்லை! அம்மா வால் தானே!

ராணு எத்தனையோ ஆண்டுகள் பாடி பிச்சை எடுத்தவர். அவர் பாடித்தான் பிச்சை எடுத்தார். அவர் பாடுவதை எந்தக் காலத்திலும் நிறுத்தவில்லை. அந்த பாடும் திறமை தான் அவரை உயர்த்தியிருக்கிறது. அவர் அறியாமலே அந்த பாடும் கலை அவரோடு இணைந்திருக்கிறது.

எல்லாமே அப்படித்தான்.  யாரிடம் என்ன திறமை இருக்கிறது என்பதை நாம் கண்டு பிடிக்கும் வரை நமக்குத் தெரிவதில்லை.

ராணுவிடம் ஒளிந்திருந்த அந்தத் திறமையைக் கண்டு பிடிக்க ஒரு ரயில் பயணிக்குத் தெரிந்திருந்தது.

அது போல நமது திறமைகளும் வெளிப்பட ஏதாவது ஒரு பயணிக்குத் தெரியாமலா போய்விடும்? அது வரை நமக்குத் தெரிந்த கலையை கைவிடாமல் தோடர்வோம்!

Friday 6 September 2019

மணி ஓசை வரும் முன்னே..!

இந்து மதத்தை இழிவு படுத்திப் பேசிய இஸ்லாமிய போதகரும்,ஜாகிர் நாயக்கின் சீடருமான ஸம்ரி வினோத் மீது எந்த நடவடிக்கையும் இல்லை  என்பதாக சட்டத்துறை அலுவலகம் அறிவித்து விட்டது!

அது மட்டும் அல்லாமல் அதற்கு என்ன காரணம் என்பதை வெளிப்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை என்பதையும் அந்த அலுவலகம் தெளிவு படுத்தி விட்டது!

அது போதும்.  இப்போதைக்கு நாம் ஒரு முடிவுக்கு வந்து விடலாம். இனி இந்து மதத்தைத் தாக்கிப் பேசினால், தாராளமாகப் பேசலாம்.  அப்படி பேசியவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்பதை சட்டத்துறை அலுவலகம் ஒரு தீர்மானத்திற்கு வந்து விட்டது.  

இனி கிளந்தானில் தான் பேச வேண்டும் என்கிற அவசியம் இல்லை. மற்ற மாநிலங்களிலும் பேசலாம் யாரும் ஒன்றும் செய்த விட முடியாது என்பது தான் நமக்கு சட்டத்துறை கொடுக்கும் செய்தி.

சீடர்,  ஸம்ரி வினோத்துக்கான சட்டத்துறையின் பதில் இது தான்.  சீடருக்கே இது தான் பதில் என்றால்  குரு, ஜாகிர் நாயக்கிற்கு என்ன பதிலாக இருக்கும்?  அவருடைய வழக்கும் நிலுவையில் நிற்கின்றது அல்லவா?  பதில் வேறு மாதிரியாக இருக்கும் என்று நாம் நினைப்பதற்கு எந்த சாத்தியங்களும் இல்லை!

சட்டத்துறையின் பதில் அதே பதிலாகத்தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஜாகிர் நாயக் இப்போது மலேசிய குடியுரிமை பெற்றவர்.  ஸம்ரி வினோத்துக்கு என்ன என்ன தகுதிகள் இருக்கின்றனவோ அதே தகுதிகள் ஜாகிருக்கும் உண்டு என்பதை மறக்க வேண்டாம்!

அவருக்கு நாட்டில் அடைக்கலம் கொடுத்திருப்பதே மற்ற சமயங்களை இழிவு படுத்திப் பேச வேண்டும் என்பதற்காகத் தான்.  அவரைப் பேச விடாமல் தடுப்பது சட்ட விரோதம் என்று தான் அவர் சொல்லி வருகிறார். அவர் பக்கம் நியாயம் உண்டு என்பதைத் தான் சட்டத்துறை அலுவலகம் ஸ்ம்ரி மீதான் தீர்ப்பின் மூலம் நமக்குச் சொல்லும் செய்தி. 

ஜாகிர் நாயக்கின் சட்டத்துறையின் தீர்ப்பு என்ன்வாக இருக்கும்? ஸம்ரி வினோத்துக்கு என்ன தீர்ப்பு அளிக்கப்பட்டதோ அதே தீர்ப்பு தான் இவருக்கும் கொடுக்கப்படும் . அவர் குற்றவாளி அல்ல என்பதாகத்தான் தீர்ப்பு அமையும்!

ஆனால் ஒன்று. அவர் குற்றவாளி அல்ல என்று தான் தீர்ப்பு வருமே தவிர அதற்கான விளக்கத்தை நாம் பெற முடியாது! அந்த விளக்கத்தைக் கேட்பதே குற்றம் என்று சொன்னாலும் சொல்லலாம்.

சில அரசியல்வாதிகளுக்குப் பயந்து அனைத்தையும் மூடி மறைக்கும் வேலை இனியும் தொடரலாம்!

இப்போதே மணியோசை கேட்கிறதே!

சொல்லி வருவதல்ல மனித நேயம்...!

நாளிதழில் ஒரு செய்தியைப் படித்த போது மனதில் பட்டது" "சொல்லி வருவதல்ல மனித நேயம்!"

நம்மைச் சுற்றி பாருங்கள். இந்தியர்களை முன்னேற்ற எத்தனை எத்தனை இயக்கங்கள், மன்றங்கள், சங்கங்கள்!  சொல்லி மாளாது!  எல்லாம் சேர்ந்து இந்திய சமுக்கத்தினரை முன்னேற்றப் பாடு படுகிறார்களாம்!

சென்ற பாரிசான் கட்சியின் ஆட்சி காலத்தில் இந்திய இயக்கங்களுக்கு அள்ளி அள்ளி மானியங்கள் கொடுக்க ஆரம்பித்த பிறகு மிகப் பலர் "தொண்டு"   செய்வதில் ஆர்வம் காட்டினர்.  இப்போது இந்த பக்காத்தான் ஆட்சியிலும் தொடர்கின்றனர்.

தொண்டு என்பது இப்படி "பணம்" கொடுத்தால் தான் வரும் என்பதை நான் நம்பவில்லை.

தைப்பிங் நகரில் ஒரு பெரியவர் கடந்த 25 ஆண்டுகளாக பள்ளி மாணவர்கள் சாலையைக் கடப்பதற்கு உதவியாக இருந்து வருகிறார்.

அவரது பெயர் மாதவன். வயது 69.  ரேலா தொண்டூழியப் படையின் பணியில் உள்ளவர்.  பள்ளி ஆரம்பிக்கும் நேரம் காலை 7.45 மணிக்கு பள்ளி முன்வளாகத்திற்கு வந்து விடுவார். பிள்ளைகள் அனைவரும் பள்ளிக்குள் போன பின்னர் அத்தோடு காலை நேரப்பணி முடிந்து விடும். பின்னர் பிற்பகல் பள்ளி விடும் நேரம் 1.30 மணிக்கு  மீண்டும் அதே சாலைப் பணி. பிள்ளைகள் அனைவரும் சாலையைக் கடந்து வீடுகளுக்குப் போக ஆரம்பித்து விடுவர்.  மாணவர்கள் அனைவரும் களைந்த பின்னர் அவருடைய வேலையும் முடிந்தது.

பார்ப்பதற்கோ, கேட்பதற்கோ எளிதான  பணியாகத் தோன்றும். ஆனால் ஒன்றை  யோசியுங்கள்.  அவரது மற்ற வேலைகளை விட்டுவிட்டு அந்த குறிப்பிட்ட நேரத்தில் அங்கு வந்து விடுவார். தனது சொந்த வேலைகளைத் தியாகம் செய்கிறார்.  அந்த நேரத்தில் மழை பெய்யலாம், பனி பொழியலாம்.  புகை, புகைமூட்டம் கண்களை மறைக்கலாம்.  கார்கள் அபாயகரமாக வரலாம்.  அவரை மோதலாம். இப்படி பல அபாயங்கள். 

இருப்பினும் அந்தப் பெரியவர் அதனை விரும்பி செய்கிறார். அது பிள்ளைகள் மேல் அவருக்கு உள்ள பாசம். எல்லாப் பிள்ளைகளும் பள்ளிக்கு வர வேண்டும்.  பின்னர் பத்திரமாக வீடு போய் சேர வேண்டும். அந்த நேரத்தில்  சாலையைக் கடக்க அந்தப் பிள்ளைகளுக்கு உதவியாக தான் இருக்க வேண்டும். அது போதும். பிள்ளைகளுக்கு உதவுவதில் ஒரு நிம்மதி. வேறு என்ன வேண்டும்?

நாம் இந்த உலகில் வாழும் வரை எதையோ சாதிக்க வேண்டும் என்பதற்காக பெரிய பெரிய காரியங்களை நோக்கி செல்ல வேண்டும் என்பதில்லை. நம்மைச் சுற்றி சின்ன சின்ன காரியங்களைக் கூட விரும்பிச் செய்யலாம். 

தொண்டு என்பது பணம் கொடுத்தால் தான் வரும் என்பதெல்லாம் ஒன்றுமில்லை.  அது தானாக வந்தால் தான் தொண்டு. பணம் கொடுத்து வந்தால் அது அரசியல்!

Wednesday 4 September 2019

எப்படி.....?

நமக்குத் தெரிந்து எல்லாத் துறைகளிலும் அறிஞர்கள் இருக்கிறார்கள்.  நல்ல கல்விமான்கள் இருக்கிறார்கள்.

அதே போல சமயத் துறைகளிலும் அறிஞர்கள் பலர் இருக்கிறார்கள்.  நமது நாட்டில் அப்படி அறிஞர்கள் இருக்கிறார்களா என்கிற ஐயம் இப்போது ஏற்பட்டிருக்கிறது. 

காரணம் இப்போது தான் நாம் முதன் முதலாக ஜாகிர் நாயக்கை இஸ்லாமிய அறிஞர் என  சொல்லுகிறோம்.  அப்படி என்றால் இந்நாள் வரை சமயத்துறையில் இங்கு யாரும் அறிஞர் இல்லை போலும்.

அப்படி இஸ்லாமிய அறிஞர் என்று மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒருவரின் நடவடிக்கைகள் எப்படி அமைய வேண்டும். எந்த சமய அறிஞராக  இருந்தாலும் அவர்கள் விரும்புவதெல்லாம்  நாட்டிலோ உலகிலோ சமாதானம், அமைதி , நல்லிணக்கம், அன்பு என்பதாகத்தான் இருக்கும்.

ஆனால் ஜாகிர் நாயக் இதனையெல்லாம் மீறி ஓரு சமய அறிஞர் செய்யக் கூடாததெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்!  தவறு என்று தெரிந்தாலும் அவர் செய்யக் காரணம் என்ன? இப்படித் தவறுகள் செய்வதன் மூலம் கோடிக் கணக்கில் பணம் சம்பாதிக்க அவரால் முடிகிறது! ஆமாம் மதத்தின் பெயரால் பணம் சம்பாதிப்பதில் அவரும் ஒருவர். 

அவர் போகின்ற இடங்களில் எல்லாம் விஷ விதைகளை விதைத்தவர். தீவிரவாதத்தை வளர்த்தவர். நிச்சயமாக ஓர் அறிஞர் செய்கின்ற வேலை அல்ல இது!

ஓர் சமய அறிஞர் என்னும் போது அவர் எல்லாராலும் மதிக்கக் கூடியவராக இருக்க வேண்டும். ஆனால் எந்த ஒரு இஸ்லாமிய நாடும் ஜாகிரை ஆதரிக்கவில்லை! அவர்கள் நாட்டிற்குள் புக முடியாதபடி அவரைத் தடை செய்து விட்டன!  அவருக்கு அடைக்கலம் கொடுத்த நாடு, நமது நாடான மலேசியா மட்டுமே!

அடைக்கலம் கொடுத்த நாடான மலேசியாவுக்கு அவர் செய்யும் கைம்மாறு என்ன?   மதத்தின் பெயரால்  மக்களிடையே பிரிவினையை உண்டாக்குதல், இஸ்லாம்  அல்லாத மக்களிடையே  அவர்களின் மதத்தைக் கேலி செய்தல் - இப்படித்தான் இவரின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன. தீவிரவாதம் அவருக்குக் கை வந்த கலை. இப்படித்தான் அவர் நமது நாட்டில் கலவரத்தை தூண்டிக் கொண்டிருக்கிறார்!  ஆனால் ஆளும் தரப்பினர்,   ஒரு சில தரப்பினரை திருப்தி செய்ய  வேண்டி அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை!          

ஜாகிர் நாயக் ஓர் ஆபத்தான மனிதர். அவர் நோக்கம் சமய அறிஞருக்குறியது அல்ல!  கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பவர்! தீவிரவாதத்தைப் பரப்புவதன் மூலம் பணம் சம்பாதிக்க நினைப்பவர்! கலகத்தை ஏற்படுத்துபவர்கள் அறிஞர்கள் அல்ல அஞ்சடிக்காரர்கள்! 

எப்படி? எப்படியோ!                         

ஏன் நிரந்தர குடியுரிமை?

இஸ்லாமிய சமயப் போதகர், ஜாகிர் நாயக் பற்றியான செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கிறது!

ஏன்,  நாட்டில் ஏற்பட்டிருக்கும் சில பல பிரச்சனைகள் அனைத்தும் அவருடைய கை ஒங்கியிருப்பதையே காட்டுகிறது! 

ஒன்று நமக்குத் தெளிவாகிறது. இவர் போகின்ற இடங்களில் எல்லாம் குழப்பத்தை ஏற்படுத்துபவர் என்பது மிக மிகத் தெளிவு. தனது சுயநலத்திற்காக சமயத்தைப் பயன்படுத்துபவர்களில் இவர் முதன்மையானவர். 

மலேசியாவில் எதன் அடிப்படையில் இவருக்குக் குடியுரிமை கொடுக்கப்பட்டது என்று பலர் கேள்விகளை எழுப்பினாலும் இப்போது சமீபமாக நெகிரி செம்பிலான், பெர்சாத்து கட்சியின் மாநிலத் தலைவர், டத்தோ ரைஸ் யாத்திம்  இதே கேள்வியை எழுப்பியுள்ளார்/ இன்னொரு கேள்வியும் நமக்கு உண்டு.  இவர் குடியுரிமை பெற்றவரா அல்லது நிரந்தர வாசியா என்பதும் நமக்குத் தெரியவில்லை.

நமக்குச் சில சந்தேகங்களும் உண்டு. பெர்சாத்து கட்சியின் தலைவர் டாக்டர் மகாதிர், நாட்டின் பிரதமர். இவரே முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார்! காவல்துறை முடிவு செய்யட்டும் என்கிறார். அவரை நாடு கடத்த முடியாது என்கிறார். காவல்துறை,  தங்களது   அறிக்கையை சட்டத்துறையின் பார்வைக்கு அனுப்பி விட்டோம். இப்போது அவர்களது  பதிலுக்காக காத்திருக்கிறோம் என்கிறார்கள். ஆனாலும் பிரதமர் டாக்டர் மகாதிர் நாங்கள் அவரை அனுப்பப் போவதில்லை என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்!

இன்னொரு பக்கம் விளையாட்டுத் துறை அமைச்சர், சைட் சாடிக் விளையாட்டாகப் பேசுகிறாரா அல்லது வினையாகப் பேசுகிறாரா என்பதும் புரியவில்லை! ஜாகிரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று வீராவேசமாக அறிக்கை விட்டார்.  அடுத்த நாளே ஜாகிருக்கு தனது வீட்டில் விருந்து வைத்து கொண்டாடுகிறார்! இவர் பெர்சாத்து கட்சியின் இளைஞர் பகுதியின் த,லைவர்.

இப்போது நெகிரி மாநில பெர்சாத்து கட்சியின் தலைவர் டத்தோ ரைஸ் யாத்திம் தனது பங்குக்கு கேள்விகளை எழுப்பியுள்ளார். "எதற்காக ஜாகிருக்கு குடியுரிமை கொடுக்கப்பட்டது,  எந்த வகையில் அவர் இங்குள்ள இஸ்லாமியர்களை விட திறமையானவர்"  என்று இப்படி பல கேள்விகளை எழுப்பியுள்ளார்!

உண்மையைச் சொன்னால் ஆளுங்கட்சியின் கூட்டணியில் உள்ள பெர்சாத்து கட்சியே ஜாகிர் நாயக்கிற்கு ஆதரவாகவே செயல்படுகிறது என்று தான் நமக்குத் தோன்றுகிறது! ஒரு பக்கம் சட்டம், ஒழுங்கு என்று பேசுவதும் இன்னொரு பக்கம் "நாங்கள் அவரை வெளியேற்ற மாட்டோம்! என்று பேசுவதும் இப்போதைய இவர்களின் நிலைப்பாடோ என்று நினைக்கத் தோன்றுகிற்து!

சட்டத்துறை அலுவலகம் கூட சரியான முடிவை எடுத்தாலும் அவர்களும் "எங்களது முடிவை பிரதமருக்குத் தெரிவித்து விட்டோம்" என்று தான் சொல்லப் போகிறார்கள்!  பிரதமரைத் தவிர வேறு யாரும் முடிவு எடுக்க முடியாத நிலையில் ......ஜாகிர் இன்னும் நாட்டில் பல சேதங்கள ஏற்படுத்தலாம்!

ஏன் நிரந்தர குடியுரிமை?  ஜாகிர் இங்கு இருந்ததற்கான் அடையாளம் வேண்டும் அல்லவா! அதற்காகத்தான்!

Tuesday 3 September 2019

யாருக்கு என்ன பயன்?

பொதுவாக அடுத்த தேர்தலுக்கான   வேலைகளை இப்போதே  ஆரம்பித்து விட்டனர் அம்னோ - பாஸ் கட்சியினர்!

அவர்களிடம் இப்போது கையில் இருக்கும்  ஒரே ஆயுதம் மலாய் இனமும் இஸ்லாம் மதமும்ததான்.  பாஸ் எல்லாக் காலங்களிலும் இதனை வைத்துத் தான் அரசியல் செய்து கொண்டு வருபவர்கள்.   அம்னோவினர் அவ்வப்போது தொட்டுக் கொள்ளுபவர்கள்!  இப்போது அவர்களும் இதுவே முழு நேர வேலையாக ஏற்றுக் கொண்டனர்!

அம்னோ கட்சியினரால்  இப்போது  எதையும்  பேச இயலாது. காரணம் நாட்டை சுரண்டியவர்கள் என்கிற  அவப்பெயர் அவர்களை வீட்டு நீங்க இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று தெரியாது.

ஆக இப்போதைக்கு மிக எளிதான வழி இஸ்லாம்  அல்லது இனத் துவேஷத்தை எழுப்புவது தான்! 

இப்போது புதிதாக ஒன்றைக் கண்டுபிடித்து விட்டார்கள்.  அம்னோவும், பாஸும் சேர்ந்து சீனர்களின் பொருட்களைப் புறக்கணியுங்கள் என்பது தான்.! அவர்களாக இதனைச் செய்ய மாட்டார்கள்.   அவர்களுக்கென்று  சில அரசு சாரா இயக்கங்களைப் பணம் கொடுத்து வளர்த்து வரும் அவர்கள்,  அவர்கள் மூலமாக அவர்களது எதிர்ப்புக்களைக் காட்டுவார்கள்!  இது தான் இப்போது தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது!

அவர்கள் நோக்கமெல்லாம் அரசாங்கத்தை மலாய்க்காரர்கள் வெறுத்து ஒதுக்க வேண்டும் என்பது தான்.  இந்த வெறுப்பு எப்படி வந்தது, எதனால் வந்தது என்பதையெல்லாம் மக்கள் அறிந்திருக்கிறார்கள்.

ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த வெறுப்பு, புறக்கணிப்பு என்பதெல்லாம் மேல் மட்டத்தில் பேசப்படுவதோடு சரி.  அவர்கள் கீழ் இறங்கி வர மட்டார்கள்!  கீழே உள்ளவர்களும் மேல் மட்டத்தில் போகப் போவதில்லை! 

மேல் மட்டத்தில்  உள்ளவர்கள் சீனர்கள் உதவி இல்லாமல் வாழ முடியாது. சிறந்த எடுத்துக் காட்டு: நஜிப்-ஜோ லோ கூட்டணி!    அத்தோடு அது நின்று போகப் போவதில்லை.  தொடர்வதற்கு எல்லா சாத்தியங்களும் உண்டு!

சும்மா,  தேவை இல்லாமல் சீனர்களின்  பொருட்களைப் புறக்கணியுங்கள், முஸ்லிம் அல்லாதாரின் பொருட்களைப்  புறக்கணியுங்கள் என்பதெல்லாம் வெறும் அரசியல் பேச்சு! ஒரு வட்டத்திற்குள் இருந்து கொண்டு இனத் துவேஷம் பேசலாம். முக நூலில் பிற இனத்தவரை, பிற மதத்தினரை சாடலாம். அதன் மூலம் நாட்டில் "கலவரம்"  என்கிற பயத்தை ஊட்டலாம். 

மற்றபடி இது போன்ற பேச்சுக்கள் மூலம் எதுவும் நடக்கப் போவதில்லை! யாருக்கும் பயன்படப் போவதில்லை.

இதனால் யாருக்கும் பயனில்லை என்று நமக்குப் புரிகிறது! ஆனால் அரசியல்வாதிகளுக்கு  அது எப்போது புரியுமோ!

Sunday 1 September 2019

இது என்ன சவடால்...!

அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ஒருவர் பக்காத்தான் அரசாங்கத்திற்கு ஓரு சவால் விட்டிருக்கிறார்!

"வருகின்ற 15-வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் மீண்டும் அரசாங்கம் அமைக்கும் என்றால் அது வரை ஏன் காத்திருக்க வேண்டும்?  இப்போதே நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு தேர்தலை நடத்துங்களேன்!" 

இது தான் அவரது சவால். இது போன்ற சவால்களை எல்லாக் காலங்களிலும் அரசியல்வாதிகள் நமது காதுகளில் ஓதிக் கொண்டு தான் இருக்கிறார்கள்!  ஆனால் இதுவரை எந்தக் கட்சியும், எந்த அரசாங்கமும், தொங்கும் அரசாங்கமாக இருந்தாலும் கூட அப்படியெல்லாம் நாடாளுமன்றத்தைக் கலைத்ததாக சரித்திரம் இல்லை!  இது போன்ற கேள்விகளை அம்னோ அரசாங்கத்தைக் கூட எதிர்க்கட்சிகள் கேட்டிருக்கின்றன!

நடக்காத ஒன்றைப் பற்றி  இப்படி ஓயாமல் அரசியல்வாதிகள் அறைகூவல் விடுகின்றனரே இதனை நாம் எப்படி எடுத்துக் கொள்ளுவது? அதுவும் இது போன்ற சவால்கள் அம்னோவிடமிருந்து வருகிறது என்றால் .......?  நிச்சயமாக கோபம் வரத் தான் செய்யும்!

நாட்டை நாசமாக்கிய ஒரு கட்சி, நாட்டை திவாலாக்கிய ஒரு கட்சி, ஒரு தனிப்பட்ட மனிதர் தனது பேராசையால் நாட்டையே பிற நாட்டவருக்கு அடகு வைத்த ஒரு கட்சி  இப்படி ஊழலலையே  பிரதான நோக்கமாக   கொண்ட ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் இப்படி சவால் விடுவதைப் பார்க்கும் போது அவர்கள் நினைப்பதெல்லாம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எவ்வளவு சம்பாதிக்கலாம்  என்பதை மட்டும் தான்!

அவர்கள் செய்த குற்றங்களையெல்லாம் கொஞ்சம் கூட  வெட்கமே இல்லாமல் - அரசியல்வாதிகளுக்கு சூடு, சொரணை எல்லாம் இருக்காது - நடக்காது என்று தெரிந்தும் இவர்களுக்கு எவ்வளவு தெனாவெட்டு இருந்தால் இப்படியெல்லாம் சவால் விடுவார்கள்! 

யாருக்கு யார் சவால் விடுவது என்கிற விவஸ்தை வேண்டாமா? ஒரு நாட்டை ஆட்சி செய்ய, அந்த நாட்டின் மக்கள் வளமாக வாழ என்ன செய்ய வேண்டும் என்று அறியாத அறிவிலிகள் எல்லாம் சவால் விட்டால் நமக்கும் இரத்தம் கொதிக்கத் தான் செய்கிறது!

நடப்பு அரசாங்கம் தவறுகள் செய்யலாம். இல்லை என்று சொல்லவில்லை. ஏன் அடுத்த தேர்தல் வரை நீங்கள் பொறுத்துக் கொள்ள முடியாதா? இவர்கள் தவறு செய்தால் மக்கள் மீண்டும் உங்களைத்  தானே தேர்ந்தெடுப்பார்கள்! ஆனால் கனவு காணாதீர்கள்! பினாங்கில் உங்கள் ஜம்பம் பலிக்கவில்லையே! அது போல இங்கும் உங்கள் ஜம்பம் பலிக்காது!

சவால் விடுவதை விடுத்து மக்களின் நம்பிக்கையைப் பெற முயற்சி செய்யுங்கள்!

கேள்வி - பதில் (109)

கேள்வி 

தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறாரே!

பதில்

இந்தச் செய்தியைப் படித்ததுமே "இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பால குமாரா!"   என்கிற எழுத்தாளர் பாலகுமாரனின் வசனம் பளிச்சென்று கண் முன் நின்றது!

இப்படி ஒரு பதவி கிடைப்பதற்கு இவர் மட்டும் அல்ல. பொன்னார், ராஜா - இவர்கள் அனைவரும் தமிழ் நாட்டுக்கு என்னன்ன துரோகம் செய்தார்கள் என்பதை சமீப காலங்களில் நடந்த பிரச்சனைகளை வைத்து ஓரளவு இவர்களை மதிப்பிடலாம்.

ஒரு பதவியைப் பெறுவதற்காக எதை வேண்டுமானாலும் இவர்கள் செய்வார்கள்.

நமது கலாச்சாரம், நமது மொழி, நமது நிலம் அனைத்தையும் காட்டிக் கொடுத்த தால் தான் இப்படி ஒரு பதவி இவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது!

அவர் தமிழ்ப் பெண் என்பதற்காக நாம் பெருமைப்பட ஒன்றுமில்லை. ஒரு தமிழ்ப்பெண் போல அவர் நடந்து கொள்ளவில்லை.  தமிழர்கள் பெருமைப்  படுவது போல அவர் நடந்து கொள்ளவில்லை.

பா.ஜ.க. செய்த அத்தனை அட்டுழியங்களுக்கும் துணை போனவர். மத வெறியை உண்டாக்கியவர்களோடு சேர்ந்து கொண்டு இவரும் மத வெறியராக மாறியவர். மத நல்லிணக்கம் என்பதெல்லாம் கேலிக் கூத்தாக மாற்றியவர்.

தமிழை எதிர்த்தவர். தமிழ் நாட்டில் சமஸ்கிருதத்தை புகுத்தியவர்.

வேண்டாம்! இது போதும்! குறிப்பாக  பா,ஜ,க, வுக்குத் தேவையான அத்தனை அம்சங்களும் அவரிடம் உண்டு. அத்தனை அட்டுழியங்களுக்கும் சொந்தக்காரர்.

இவர் காங்கிரஸ்காரர் குமரி அனந்தனின் மகள் என்பது வருத்தப்படக் கூடிய ஒரு செய்தி. அவர் தந்தையே இந்த நியமனத்தைப் பற்றி பெருமைப் படுவாரா என்பது சந்தேகமே!

கடைசியாக,பதவிக்காக எப்படியெல்லாம் மக்கள் அடித்துக் கொள்ளுகிறார்கள் என்று நினைக்கும் போது - என்ன செய்வது? - ஏற்றுக் கொள்ளத்தான் முடியவில்லை!  ஆனால் அவர்கள் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதாகவும் தெரியவில்லை!

ஆளுநர் பதவியை வைத்துக் கோண்டு நல்லது சேய்ய இறைவன் தமிழிசையை ஆசீர்வதிக்கட்டும்!

கேள்வி - பதில் (108)

கேள்வி

நடிகர் அஜித் குமார் இனி படங்களில் பெண்களைக் கேலி செய்வதை தவிர்ப்பாராமே!

பதில்

நல்லது தான். அவர் மகள் அனுஷ்கா சொன்ன ஒரு கருத்துக்காக தனது படங்களில் பெண்களைக் கேலி செய்வதை இனி தவிர்க்கப் போகிறாராம்.
நாமும் வரவேற்கிறோம். 

பொதுவாகவே அஜித் ஒரு நல்ல நடிகர் மட்டும் அல்ல, நல்ல மனிதர் என்றும் சொல்லப்படுவதுண்டு.  

ஆனால் ஒரு விஷயம் நம்மை சிந்திக்க வைக்கிறது. அவரது இரசிகர்கள் அவரிடம் அன்பைப் பொழிகிறார்கள்.  உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள். நமக்கு அதில் உடன்பாடில்லை!

அவருடைய இரசிகர்கள் சொல்லுவதை இது நாள் வரை அவர் காது கொடுத்துக் கேட்டிருப்பாரா? பெண்களைக் கேலி செய்வது, திருநங்கைகளைக் கேலி செய்வது, வயதானவர்களைக் கேலி செய்வது, பெற்றோர்களைக் கேலி செய்வது,  பெரியவர்களை "பெரிசு" என்று கேலி செய்வது,  அரசு பள்ளிகளை "கார்ப்பரேஷன்" பள்ளி என்று கேலி செய்வது - இவைகள் எல்லாம் தமிழ் திரைப்படங்களில் வரும் பொதுவான உரையாடல்கள்!

அஜித் படங்களிலும் வந்திருக்கலாம்.   அநேகமாக இப்போது வரும் எல்லாத் தமிழ்ப்படங்களிலும் இவர்களைக் கேலி செய்யும் வசனங்கள் வரத்தான் செய்கின்றன. இல்லை என்று சொல்ல முடியாது.

இது போன்ற வசனங்களையும் அஜித் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நடிகர் கவுண்டமணியும் செந்திலும்  நகைச்சுவை என்னும் பெயரில் அப்பாக்களை :வாடா! போடா!"  என்று பேசுவதும், கிண்டலடிப்பதும் மிகவும் பிரபலம். அதுவே இப்போது எல்லாப் படங்களிலும் தவறாமல் பேசப்படுகின்ற வசனமாகி விட்டது.

நடிகர் அஜித் அவர் மகள் சொன்னதைக் கேட்டு அதன்படி நடக்கத் தயாராகி விட்டார்.  மற்ற நடிகர்களுக்கு அப்பனுக்குப் புத்தி சொல்ல பிள்ளைகள் இல்லை! குறைந்தபட்சம் இரசிகர்கள் சொல்லுவதையாவது அவர்கள் கேட்க வேண்டும். 

அஜித் மகள் ஒரு முன்மாதிரி. வாழ்த்துகிறோம்!

பக்காத்தான் ஆதரவு சரிகிறதா...?

இன்றைய நடப்பு பக்காத்தான் அரசாங்கத்திற்கு மக்களின் ஆதரவு சரிகிறதா என்கிற கேளவி அடிக்கடி எழுப்பப்படுகிறது. 

பொதுவாக பார்க்கும் போது மக்களின் எண்ணங்கள் பக்காத்தான் அரசாங்கத்தின் மீது சரியாக தீர்மானிக்க முடியாதபடி தான் இன்னும் இருந்து கொண்டிருக்கிறது. 

காரணம் இவர்கள் சொன்னது போல்  செயல்படவில்லை என்னும் குற்றச் சாட்டு தான் இன்னும் இருக்கிறது.  அரசாங்கத்தில் ஏற்படுத்தப்பட்ட நிதி நெருக்கடி பற்றி  மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அது அரசாங்கத்தின் வேலை. அதற்காக மக்கள் ஏன் கஷ்டப்பட வேண்டும் என்னும் எண்ணம் தான்  மக்களிடையே  நிலவுகிறது.

விலைவாசி ஏற்றத்தைத் தான் மக்கள்  பெரிய சுமையாகக் கருதுகிறார்கள்.   பெரிய அளவில் ஏற்றம் இல்லை என்றாலும் விலைவாசி குறையவில்லை  என்பது தான் அரசாங்கத்தின் மேல் உள்ள குற்றச்சாட்டு. பெட் ரோல் விலை கட்டுப்பாட்டில் உள்ளதால்  விலைவாசி ஏற்றம் என்பதும் ஓரளவு கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

இப்போதுள்ள  நாட்டிலுள்ள பல பலவீனங்களுக்கும் டாக்டர் மகாதிர் தான் காரணம் என்பதாக சாதாரணமாக  மக்களிடையே  பேசப்படுகிறது என்பதும் உண்மை தான். 

சென்ற தேர்தலின் போது நாட்டை காப்பாற்ற வந்த மாமனிதர் என்று நினைத்த நினைப்பெல்லாம் போய் இப்போது நாட்டிற்கு வந்த சாபக்கேடு என்று நினைக்கும் அளவுக்கு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது!

ஒரு பிரச்சனையையும் அவரால் தீர்க்க முடியவில்லை. பழையபடி அவர் முருங்கை மரம் ஏறி விட்டாரோ என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது!  அவர் போக்கு ஏதோ பழைய அம்னோ ஆட்சியைக் கொண்டு வருகிறாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது! முன்னாள் ஆட்சியின் நீட்சி தான் இது என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது.

தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் கிடப்பில் போடப்பட்டு விட்டன. இந்திய வாக்காளர்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்பட வில்லை. ஜாகிர் நாயக் பிரச்சனையைத் தீர்க்க முடியவில்லை. இந்தியாவுக்கு அனுப்பினால் நீதி கிடைக்காது என்கிறார் அவர்!  வர்த்தகர் ஜோ லோவை மலேசியாக்குக் கொண்டு வர முடியவில்லை. மலேசியாவில் நீதி கிடைக்காது என்கிறார் இவர்!

நாடு சரியான பாதையில் செல்லுகிறதா என்று கேட்டால் "இல்லை!" என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது.  பிரச்சனைகள் தீர வேண்டுமானால் டாக்டர் மகாதிர் பதவி விலக வேண்டும்.  அவர் விலகுவதாகத் தெரியவில்லை. ஏதோ தமாஷாக காலங் க்டத்திக் கொண்டிருக்கிறார்!

மக்கள் அரசாங்கத்தின் மேல் நம்பிக்கை இழக்காமல் இருக்க வேண்டுமானால் டாக்டர் மகாதீர் அவரது பொறுப்பை அன்வாரிடம் ஒப்படைக்க வேண்டும்.  வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை! டாக்டர் மகாதிர் வயது மூப்பின் காரணமாக  சரியாக செயல்பட முடியவில்லையோ என்று தான் நாம் சந்தேகப்பட வேண்டியிருக்கிறது.

மக்களின் ஆதரவு சரியும் முன்னே இந்த பதவி ஒப்படைப்பு நடைபெற வேண்டும்.  ஆனால் டாக்டர் மகாதீர் என்ன நினைக்கிறாரோ! ஆண்டவனுக்கே வெளிச்சம்!