Tuesday 28 February 2023

கைதிகளும் கற்றவர்களாக மாறலாம்!

 

           "ஜெயிலுக்குப் போய் வந்த தேச மக்களை சீர்திருத்துவாங்கோ"  

மேலே உள்ள அந்தப் பாடலைப் பாடியவர் கலைவாணர் என்.எஸ்/கிருஷ்ணன்.  கொஞ்சம் முயற்சி எடுத்து கூகலில் தேடினால் அவர் பாடிய முழு பாடலையும் அவரது சிறை அனுபவங்களையும் கேட்கலாம்!

ஆமாம், சிறைகளின் வேலையே வருபவர்களைச் சீர்திருத்துவது தான். அது தான் அவர்களின் முதல் வேலை. இப்போதெல்லாம் நிலைமை மாறிவிட்டது. வரும் போதே கடுமையான குற்றங்களோடு வருபவர்கள் தான் அதிகம். எல்லாகாலங்களிலும் அது தான் நிலைமை  ஆனாலும் விதிவிலக்குகளும் உண்டு.

குற்றவாளிகள் என்று நாம் சொன்னாலும் அவர்கள் கல்வி கற்க வேண்டும் என்கிற முனைப்பு அவர்களுக்கு இருந்தால் அதனையும் சிறைகள் அந்த வாய்ப்பைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

திப்படிப்பட்ட ஒரு சூழலில் தான் அந்த குறிப்பிட்ட குற்றவாளி சிறையில் தள்ளப்பட்டான்.  தனது 14-வது வயதில் ஒரு கொலைக் குற்றவாளியாக  வந்தவன் அவன்.  மரண தண்டனை தான். ஆனாலும் மிக இளம் வயதினனாக இருந்ததால் மாநில சுல்தான் அவர்களின் கருணைப் பார்வையில் அது ஆயுள் தண்டனையில் முடிந்தது. 

இப்போது அவன் 23 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறான். சிறையில் இருப்பது பெரிய காரியமல்ல. தனது செயலுக்காக அவன் வருந்துகிறான் என்பது ஒரு பக்கம் இருக்க தனது கல்வியைத் தொடர்வதில்  அவன் தீர்மானமாக இருந்தான். அவனுக்கு அந்த வசதிகளைச் செய்து கொடுக்க சிறைத்துறை  ஒரு பிரச்சனையாக இல்லை.

முதலில் எஸ்.பி.எம். பரிட்சை எடுத்து வெற்றியடைகிறான். அதன் பின்னர் டிப்ளோமா, பி.ஏ., எம்.ஏ. மாஸ்டர்ஸ்  என்று ஆராம்பித்து இப்போது  முனைவர் பட்டம் பெறுவதில்  முனைப்புக் காட்டிக் கொண்டிருக்கிறான். சீக்கிரம் அந்தப் பட்டமும் கிடைத்துவிடும்.

கல்வியில் ஓர் உச்சியைத் தொட்டுவிட்ட அவனுக்கு அவனது எதிர்காலம் எப்படியிருக்கும்? மாநில சுல்தான் எப்படி அவனுடைய மரண  தண்டனையை ரத்து செய்தாரோ அதே போல  அவனை விடுதலை செய்யவும் சுல்தானுக்கு அதிகாரம் உண்டு.

ஆனால் அவன்  என்ன சொல்லுகிறான்? "தவறு செய்துவிட்டேன். உண்மைதான்.   நான் திருந்தி வாழ எனக்கு ஒரு சந்தர்ப்பம்  கொடுக்க  வேண்டும்.  வெளியே வந்து நான் ஒரு தன்முனைப்பு பேச்சாளனாக  இருக்க விரும்புகிறேன்.  இளைஞர்களை நல்வழிபடுத்த  அது எனக்கு உதவும்."

இந்த  இளைஞனிடம் நமக்குள்ள பாடம் என்ன? எங்கிருந்தாலும், அதளபாதாளாத்தில் இருந்தாலும்,  அங்கும் நேர்மறையான எண்ணத்தோடு வாழமுயற்சி செய்யுங்கள். அது உங்களுக்கு ஓரு புதிய உலகத்தையே காட்டும். இனி எனக்கு வாழ்க்கையே இல்லை என்கிற எதற்கும் உதவாத எண்ணங்கள் வேண்டாம்.

கைதிகள் மட்டும் தானா கற்றவர் ஆக முடியும்? இல்லை யாராலும் கற்றவராக ஆக முடியும். தேவை எல்லாம் நேர்மறை எண்ணமும்  கொஞ்சம் முயற்சியும்!

Monday 27 February 2023

இனி என்ன ஆகும்?

மித்ராவைப் பற்றி புதிதாகச் சொல்ல ஒன்றுமில்லை.  வழக்கம் போல 10 கோடி வெள்ளி இந்தியர்களின் உருமாற்றத்திற்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. 

எலாம் வழக்கம் போலவே நடந்து கொண்டிருக்கிறது. பலகாலமாகவே செடிக் அல்லது மித்ரா அரசியல்வாதிகளின் கையில் அகப்பட்டு சின்னா பின்னாமாக்கி விட்டார்கள்! 

சின்னாபின்னாமானவர்கள்  மக்கள் தான். அரசியல்வாதிகள் தங்களது இருப்பை கொஞ்சம் அதிகரித்துக் கொண்டார்கள். தங்களுக்குப் போக மிச்சம் மீதி இருந்ததை அரசிடம் திரும்பவும் ஒப்படைத்து விட்டார்கள்!  அந்த வகையில் நமது அரசியல்வாதிகள் மகா யோக்கியமானவர்கள்!

மித்ரா மூலம் இந்தியர்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்று சொன்னாலும் பயனடைந்தவர்களும் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலும் அரசியல்வாதிகள் தாம்! அரசியல்வாதிகளும் இந்தியர்கள் தானே! பிச்சை எடுத்துக் கொண்டிருந்தவர்கள்  மித்ரா மூலம் தங்களது வாழ்க்கையை உயர்த்திக் கொண்டார்கள்! குறை சொல்ல ஒன்றுமில்லை! அவர்களும் இந்தியர்கள் தானே என்று திருப்தி அடைந்து  கொள்ள வேண்டியது தான்!

ம.இ.கா. வினர் ஏற்படுத்திய பயத்தில் இப்போது அரசியல்வாதிகள் என்றாலே  நாம் பயப்பட வேண்டியிருக்கிறது! இப்போதும் கூட மித்ரா அமைப்புக்கு தலைமை தாங்குபவர்கள் அரசியல்வாதிகளாகத்தான் இருக்க வேண்டும்.

நம்முடைய சிபாரிசு என்னவென்றால்  மித்ராவுக்குத் தலைமை தாங்குபவர் ஒரு பொருளாதார நிபுணராக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் இந்த முறை அரசாங்கம் ஒதுக்கிய 10 கோடி வெள்ளி முற்றிலுமாக வியாபாரத்துறைக்கே ஒதுக்க வேண்டும். சிறு தொழில், குறுந்தொழில், பெருந்தொழில் அனைத்து தொழில்களுக்கும் மித்ரா பணம் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். அதுவும் குறிப்பாக சிறு குறு தொழில்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

மித்ரா இப்போது பிரதமர் அமைச்சின் கீழ் இருப்பதால் எல்லாம் சரியாகவே போகும் என நம்பினாலும்  இதற்கு முன்னும் பிரதமர் துறையின் கீழ் இருந்தும்,   அப்போதும் கூட ம.இ.கா.வினர் மித்ராவை விட்டுவைக்கவில்லை! காலில் போட்டு மிதி மிதி என்று மிதித்தார்கள்! ஆக அரசியல்வாதிகள் தாங்கள் திருட்டிலிருந்து தப்பிப்பதற்குக் கூடவே ஒரு படித்த கூட்டத்தை வைத்து செயல்படுகிறார்கள்! என்ன செய்ய?

இந்த முறை எல்லாம் சரியாகப் போகும் என நம்புவோம்! கடைசியாக மகாகவி பாரதியார் சொன்னது தான்:  படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான்! போவான்! ஐயோ என்று போவான்!

Sunday 26 February 2023

மனிதர்களையும் மிஞ்சிவிடுமோ!

 

மனிதர்களுடன் மிகவும் ஒட்டி உறவாடும் விலங்குகளை நாம் பார்த்திருக்கிறோம். குறிப்பாக நாய், பூனைகள் தான் மனிதனோடு மிகவும் ஒட்டி உறவாடும் விலங்குகள். பாசம் காட்டுவதில் மனிதனையே மிஞ்சி விடுகின்றன!

ஆனால் ஒரு பறவை, மிகவும் வித்தியாசமான பறவை,  மனிதர்களோடு நெருக்கமில்லாத  ஒரு பறவை எப்படி, இப்படி ஒட்டிக் கொண்டதுமல்லாமல் தனது அன்பையும் பாசத்தையும் பொழிந்து கொண்டிருக்கிறது  என்பதை   ஆச்சரியமாக மனித இனம் பார்த்துக் கொண்டிருக்கிறது!

இந்தியா, உத்திரபிரதேசத்தில் நடந்த சம்பவம் இது.  நாரை ஒன்று விபத்து ஒன்றில் கால்  அடிப்பட்டு  வயல் ஒன்றில்  கிடக்கிறது. அதனை கண்ட  முகமது அரிப் என்பவர்  அதனை வீட்டுக்குக் கொண்டு சென்று  அதற்கு  மருத்துவம் செய்து அந்த பறவையைக் குணப்படுத்தினார்.  குணப்படுத்திய பின்னர் அந்தப் பறவையை மீண்டும்  ஆகாயத்தில்  பறக்கவிட்டார்.  அந்தப் பறவையோ சிறிது தூரம் சென்றபின் அது மீண்டும் அவரது வீட்டுக்கே திரும்பிவிட்டது!

முப்பது வயதான அரிப் தனது மனைவி, இரண்டு பிள்ளைகள் மற்றும் தனது பெற்றோருடன் அமேதியில்  வசித்து வருகிறார். இப்போது இந்த நாரையும் அவரது வீட்டில் ஒருவராக இருந்து வருகிறது!  கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்திலிருந்து  அதனையும் வீட்டில் ஒருவராக  அக்குடும்பத்தினர்  ஏற்றுக் கொண்டனர்.

இப்போது இந்த நாரையின் வேலை என்ன?  அரிப் தனது இரு சக்கர வாகனத்தில் எங்குச் சென்றாலும் அதுவும் அவர் கூடவே பறந்து செல்லுகிறது!  அவர் எந்த மூலை முடுக்களுக்குப் போனாலும் அவருடனேயே பறந்து செல்லுகிறது!  அவருக்குப் பாதுகாப்பு கொடுக்கிறது!

ஒரு நாயின் பாசத்தை நாம் பார்த்திருக்கிறோம்.  மனிதர்களோடு அவ்வளவு நெருக்கம் இல்லாத ஒரு பறவையின் பாசத்தை நாம் பார்த்ததில்லை. அது பாசமா, அன்பா, நன்றி மறாவாமையா என்னவென்று  நம்மால் சொல்ல முடியவில்லை!

சொல்லப்போனால் விலங்குகளும், பறவைகளும் அன்பைப் பொழிவதில் மனிதர்களையும் மிஞ்சிவிடுமோ என்று சொல்லத் தோன்றுகிறது!

Saturday 25 February 2023

குறை கூறுவதற்கு என்ன காரணம்?

 

ஒற்றுமை அரசாங்கம் எப்படி உருவாக்கம் பெற்றது என்பது நமக்குத் தெரியும்.

தமிழர்கள் ஏன் அரசாங்கத்தை இன்னும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கிறார்கள்?  இந்த அரசாங்கமும் சென்ற அரசாங்கங்களைப் போல நம்மை  ஓரங்கட்டுமோ என்கிற ஐயம் தமிழர்களுக்கு இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்கேற்றாற் போல அரசாங்கமும் மெதுநடை போடுவதால்  நாளுக்கு நாள் நமக்கும் தளர்ச்சி ஏற்படத்தான் செய்கிறது.

இந்தியரின்  கோரிக்கை தான் என்ன?  "எங்கள் பிரச்சனைகளைக் கலைய ஒரு குழு அமைத்துச் செயலபட வேண்டும்" என்பது தான் அவர்களது கோரிக்கை.

கடந்த அறுபது ஆண்டளவாக  ஒரே மாதிரியான ஒரு  முறைமையைக் கடைப்பிடித்து  வாழ்ந்தவர்கள் என்பதால் அவர்களை மாற்றுவது என்பது  உடனடியாக நடக்கக் கூடிய காரியம் அல்ல.  அங்கு ஒரு இடைவெளி ஐருக்கத்தான் செய்யும்.  இந்திய அதிகாரிகள்  என்றால் நமது பிரச்சனைகளைப் புரிந்து கொள்வார்கள் என்பது தான் அவர்களது எண்ணம். மற்ற இனத்தவர் என்றால் நாம் சொல்லவருவதை அவர்கள் புரிந்து கொள்ளமாட்டார்கள் என்பதாக நாம் நினைக்கிறோம். ஒரு மலாய்க்காரர் அலுவலகத்திற்குப் போனால் அனைவரும் மலாய்க்காரர்கள். ஒரு சீனர் அலுவலகத்திற்குப் போனால்  அனைவரும் சீனர்கள்.  அங்கு போய் அவர்களிடம் நமது பிரச்சனைகளைக் கூறுவது  அது இயல்பாக இருக்க நியாயமில்லை.

அதனால் தான் இந்தியர்கள் என்றால் எங்களது பிரச்சனைகளைக் கொண்டு செல்ல அனுகூலமாக இருக்கும் என்று அவர்கள் சொல்லுவதில் ஒரு நியாயம் இருக்கிறது.

இப்போது நாங்கள் சொல்ல வருவது தான் என்ன? பிரதமர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட வேண்டும். அந்தக் குழுவில் அனைவரும் இந்தியர்களாக இருக்க வேண்டும். கல்வி பிரச்சனை, தமிழ்ப்பள்ளிகள் பிரச்சனை, குடியுரிமை பிரச்சனை,  அரசாங்க/தனியார் துறை வேலை வாய்ப்புகள்,  பொருளாதார வாய்ப்புகள், சிறு சிறு வியாபாரங்களை ஊக்குவித்தல் - இப்படி அனைத்தும் ஒரே இடத்தில் பேசி, தீர்க்கக்கூடிய வகையில்  அமைய வேண்டும். பிரதமர், இந்திய அதிகாரிகள் என்னும் போது அதுவே அரசாங்கத்தின் மீது ஒரு நம்பகத்தன்மையை ஏற்படுத்தும். இப்போது எதுவும் காணப்படவில்லை. அதனால் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையைக் குறைக்கிறது.

பிரதமர் மீது குறைசொல்ல வேண்டும் என்கிற நோக்கம் இல்லை.  இந்தியர்கள் எதிர்பார்த்த நாள் வந்துவிட்டது. ஆனால் அரசாங்க இயந்திரம் நகரவில்லை என்கிற ஆதங்கம் இந்தியரிடையே உள்ளது. அவர்களின் வேகத்திற்கு  அரசாங்கத்தால் ஈடுகொடுக்க முடியவில்லை!

இப்போது நடப்பது முழுமையான நம்பிக்கைக் கூட்டணியின் அரசாங்கம் அல்ல. இது ஒற்றுமை அரசாங்கம். அதனால் மெது மெதுவாகத்தான் நகர முடியும். அதுவரை பொறுத்திருப்போம்!

Friday 24 February 2023

மிகவும் வருத்தம் தான்!

 


மிகவும் வருத்தமான செய்தி தான்.

ஊழியர் சேமநிதி சந்தாதாரர்கள் நிலை மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டதாகவே தோன்றுகிறது.

ஆமாம், கோவிட-19 என்கிற தொற்று வந்தாலும் வந்தது. பலரைத் துன்பக் கடலில் ஆழ்த்திவிட்டது. ஒரு பக்கம் எதிர்பார்த்ததைவிட அதிகமான இறப்புகள்.  நடுத்தர குடும்பங்கள் பல நடுரோட்டுக்கு வந்து விட்டன. இழப்புக்கள் ஏராளம்.  ஈடுகட்ட முடியாத இழப்புகள். இருந்த மிச்சம் மீதி சொத்துகளும் கரைந்துவிட்டன.

நம் நாட்டில், வேலையை மட்டும் நம்பியிருக்கும் சமூகம் என்றால் அது நமது சமூகம் தான். அவர்கள் பணி ஓய்வு பெறும்போது அவர்களுடைய ஒரே நம்பிக்கை என்பது அவர்களது ஊழியர் சேமநிதி  சேமிப்பு மட்டும் தான். அது தான் அவர்களது அந்திம காலத்திற்கு உதவக்கூடிய சேமிப்பு.

ஆனால் என்ன செய்வது? அதற்கும் உலை வைத்துவிட்டது கொரோனா தொற்று.    தொற்று வந்த காலத்தில் சம்பாத்தியம் இல்லை. சம்பாத்தியம் இல்லாத காலத்தில்  சாப்பாட்டுக்கு வழியில்லை. அதனால் தான் அரசாங்கம் ஊழியர் சேமநிதியிலிருந்து   சேமிப்புகளை எடுக்க அனுமதி கொடுத்தது.  அதுவும் நான்கு முறை அனுமதி கொடுக்கப்பட்டது. அதனால் பெரும்பாலானோரின் சேமிப்பு பெரிய அளவில் குறைந்துவிட்டது என்பது சோகம். 

இன்றைய நிலை என்ன?  சுமார் 71 விழுக்காடு சந்தாதாரர்கள்  இன்றை நிலையில் அல்லது  பணி ஓய்வு பெறும்போது மிகக் குறைவான ஊழியர் சேமநிதியில்  சேமிப்பைக் கொண்டிருப்பர்  என்று கூறுகிறார் பிரதமர். ஏற்கனவே அவர்களுடய சேமிப்பு கோரோனா காலத்தில் குறைந்துவிட்டது. சந்தாதாரர்கள் வயதான காலத்தில் கையில் பணம் இல்லாமல் சிரமப்படுகின்ற நிலை ஏற்படத்தான் செய்யும்.  வயதான காலத்தில் அவர்கள் முற்றிலுமாக தங்களது பிள்ளைகளை நம்பித்தான் வாழ வேண்டி வரும்.

குறிப்பாக தோட்டப்புறங்களில் வாழ்கின்ற மக்களுக்கு இந்த ஊழியர் சேமநிதி  என்பது மிகப்பெரிய பாக்கியம் என்று தான் சொல்ல வேண்டும். அதன் மூலம் தான் பெரும்பாலானோருக்கு வீடுகளை வாங்குகின்ற சக்தி ஏற்பட்டது.  வங்கிகளும் அவர்களுக்குக் கடன்களும்  கொடுத்தன. இப்போது இவைகள் அனைத்துக்கும் வாய்ப்பில்லாமல் போய்விடும்.

போனது போனது தான். இனி அது பற்றி பேசுவதில் புண்ணியம் இல்லை. இனி நமது சம்பாத்தியத்தில் தான் நாம்  எல்லாவற்றையும் செய்ய வேண்டிய கட்டாயம்.  எது  நடந்தாலும் அது நன்மைக்குத் தான் என்கிற மனப்பான்மையை வளர்த்துக் கொள்வோம்.

இப்போதைக்கு அது வருத்தம் தந்தாலும் "இதுவும் கடந்து போகும்"  என்று எண்ணி மகிழ்ச்சியடைவோம்! இது தான் வாழ்க்கை! இது தான் பயணம்!ஏற்றுக்கொள்வோம்!

Thursday 23 February 2023

அறுபதனாயிரம் பேர் வேலை இழப்பர்!

 

மலேசிய முதலாளிகளின் கூட்டமைப்பு ஓர் அதிர்ச்சியான செய்தியை வெளியிட்டிருக்கிறது.

ஆமாம், இந்த ஆண்டு சுமார் 60,000 பேர் வேலையிழப்பர் என்பதாக அதன்  தலைவர் கூறியிருக்கிறார். வேலை இழப்பு என்றாலே மனதிலே நமக்கு அச்சம் ஏற்படத்தான் செய்கிறது. ஒரே காரணம் தான்.

வேலை இழப்பு என்றாலே அது பெரும்பாலும் நமது தமிழர் சமுதாயத்தைத் தான்  பாதிக்கிறது. குடும்பமே சம்பாதிக்காத போது கையேந்துவதும் நன்றாகச் சம்பாதிக்கும் போது,  குறிப்பாக கணவன்மார்கள்,  குடித்து அழிப்பதும் இயல்பாகவே நடந்து கொண்டிருக்கிறது! குடும்பத்தில் மனைவி வேலை செய்தால் அந்தக் குடும்பம் ஓரளவாவது சாப்பிடமுடியும்.  

ஆனாலும் இன்றைய குடும்பங்களுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள். வீட்டு வாடகை,  மாதத் தவணைகள், பள்ளி பஸ்களுக்கான கட்டணம், ஏறிக்கொண்டே இருக்கும் விலைவாசிகள் - இவைகளெல்லாம் சமாளிக்க வேண்டுமென்றால் கணவன் மனைவி வேலை செய்தே ஆக வேண்டும் என்கிற சூழ்நிலை. பொறுப்பற்ற கணவனாக இருந்தால் குடும்பம் நடுரோட்டுக்கு வரவேண்டி வரும்.

இப்படி ஒரு சூழலில் வேலை இல்லை என்றால் எப்படி?  ஆனால் நமது சமுதாயம் ஒருசில படிப்பினைகளை இந்நேரம் கற்றிருக்க வேண்டும். கோரோனா காலத்தில் நாம் நிறைய சோதனைகளையும், வேதனைகளையும் அனுபவித்திருக்கிறோம். அதனால் வேலை இழந்தாலும் நமக்கு அது புதிதல்ல. ஏற்கனவே பட்ட அனுபவத்திலிருந்து சில பாடங்களையாவது நாம் கற்றிருக்க வேண்டும். ஓரளவாவது  நம் கையில் இருப்பு இருக்க வேண்டும். பிரச்சனைகள் வரும் போது நமது கையிருப்பு தான் நமக்கு உதவும்.

நாம் ஏற்கனவே சரியான பாடத்தைக்  கற்றிருக்கிறோம். அது போதும். ஒரு முறை பட்டுவிட்டால் அடுத்த முறை எச்சரிக்கையாகத்தான் இருக்க வேண்டும். 

இப்பொழுதே மணி அடிக்கப்பட்டு விட்டது! எச்சரிக்கையாக இருப்பது ஒவ்வொருவரின் கடமை. குறிப்பாக பி40 மக்களுக்குத் தான் அந்த எச்சரிக்கைக் கொடுக்கப்படுகிறது. அந்த எச்சரிக்கையை நாம் மதிக்க வேண்டும். அதற்குத் தயாராக இருக்க வேண்டும். மற்றவர்கள் உதவுவார்கள் என்கிற பேச்சுக்கு இடமில்லை. நமக்கு நாமே உதவிக்கொள்ள வேண்டும்.

எச்சரிக்கை உணர்வுடன் இருப்போம்!

Wednesday 22 February 2023

அழிந்து வரும் அலுங்குகள்!

 

கடந்த 18-ம் தேதி உலக அலுங்குகள் தினம் அனுசரிக்கப்பட்டது.

பொதுவாக இது போன்ற விலங்குகள் பற்றியெல்லாம் நாம் எந்தவித அக்கறையும் எடுத்துக் கொள்ளாததில் எந்த ஆச்சரியமும் இல்லை. நமக்கு சம்பந்தம் இல்லாத ஒரு விலங்கு. அதற்கு மேல் பலர் இந்த விலங்கை பார்த்திருக்கக் கூட மாட்டார்கள்!

நானும் உங்களைப் போலவே இந்த பாலூட்டியைப் பற்றி அதிகம் அறியாதவன்.

இரண்டு விஷயங்களுக்காக நான்  இந்த கட்டுரையை எழுதுகிறேன். சில ஆண்டுகளுக்கு முன்னர் நான் பார்த்த தமிழ் நாட்டு தொலைக்காட்சி செய்தி.  அப்போது இந்த விலங்கை தமிழ் நாட்டில் ஊட்டியில் கண்டு பிடித்திருக்கிறார்கள். கண்டு பிடித்தவர்களுக்கு அது ஒரு புதிய விலங்காக இருந்திருக்கலாம். அதற்கு முன்னர் அவர்கள் பார்த்திராத விலங்காக இருக்கலாம். அதன் பெயர் என்ன, அது என்ன விலங்கு என்பது அவர்களுக்குப் புரியவில்லை!

அதன் பின்னர் அவர்கள் அந்த விலங்கை 'எறும்பு தின்னி' என்றார்கள். எறும்புகளைத் தின்னும் விலங்கு என்பதால் அப்படி ஒரு பெயர்! முற்றிலுமாக அவர்களுக்கு அது ஒரு புதியவகை விலங்கு. ஆனாலும் நம் நாட்டில் அந்த விலங்கை அலுங்கு என்கிற பெயரில் தான் அழைக்கிறோம்.  எனது இளம் வயதில் நான் அடிக்கடி பார்த்த ஒரு விலங்கு தான் அது. சமைத்தும் சாப்பிட்டிருக்கிறோம். அப்போது தோட்டப்புறங்களில் பன்றி வேட்டைக்குப் போகுபவர்கள் சமயங்களில் இதனையும் வேட்டையாடி வருவார்கள். அந்த விலங்கை இப்போதும் அலுங்கு என்று தான்  நாம் சொல்லுகிறோம். 

இப்போது  இந்த விலங்கு உலகளவில் குறைந்து வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சட்டவிரோதமாக இந்த விலங்குகள் கடத்தப்படுகின்றன. ஒன்று  சீன பாரம்பரிய மருத்துவத்திற்கு இந்த விலங்குகள் தேவைப்படுகின்றன. அடுத்து   அதன் இறைச்சி சுவையாக இருப்பதினால் உணவுக்காகவும் அலுங்குகள் கடத்தப்படுகின்றன.  நமது நாட்டில் அதன் இறைச்சியின் விலை ரி.ம. 1500.00  வெள்ளி ஒரு கிலோ என்கின்றனர். இந்த விலங்கு எந்தவித தீங்கும் செய்யாத ஒர் இனம். அதுவே அதன் அழிவுக்குக் காரணமாகிவிட்டது! நல்லவனுக்குக் காலம் இல்லே என்று சொல்லுகிறோம் அல்லவா!

பெரும்பாலான நாடுகளில் இந்த விலங்கு பாதுகாக்காப்பட்ட  ஒரு விலங்காகவே இருந்து வருகிறது. மிகவும் அருகிவிட்ட இது போன்ற விலங்குகளை பாதுகாப்பது அரசின் கடமை. மிகவும் பாவப்பட்ட ஓர் இனமான இந்த அலுங்குகள்  பாதுகாக்கப்பட  வேண்டும்  என்பதே நமது அவா!

Tuesday 21 February 2023

மகத்தான மனிதர் மயில்சாமி

 


பொதுவாக சினிமா நடிகர்களைப் பற்றி நாம் எழுதுவதில்லை. ஆனால் விதிவிலக்குகள் உண்டு.

பொதுவாக நகைச்சுவை நடிகர்  மயில்சாமி யைப் பற்றி பேசும்போது அனைத்து தமிழ்ப்பட சினிமா உலகினர் அனைவருமே ஒருமித்த குரலில்  மயில்சாமியைப் பற்றி உயர்வாகவே பேசுகின்றனர்.

மயில்சாமி, எல்லாகாலங்களிலும்  தான் ஒர் எம்.ஜி.ஆர்.பக்தர்  என்பதாகவே தொடர்ந்து கூறி வந்திருக்கிறார். எம்.ஜி.ஆர். ரை ஒருவர் பின்பற்றுகிறார் என்றால் அவரிடம் இயல்பாகவே நல்ல குணங்கள் இருக்க வேண்டும்.  குறிப்பாக மற்றவர்களுக்கு உதவும் அந்த தயாள குணம் எம்.ஜி.ஆரிடம் இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

எம்.ஜி.ஆர். ரைப் பின்பற்றவர்கள் நம் நாட்டிலும் உண்டு. எல்லாருமே ஏதோ ஒரு வகையில் இந்த தமிழ் சமுதாயத்திற்கு  உதவுபவர்களாகவே  இருக்கின்றனர். மேடை நிகழ்ச்சிகளை நடத்தி பலருக்கு உதவிகளும்  செய்திருக்கின்றனர்.

அந்த வகையில் பார்த்தால் மயில்சாமி பிறருக்கு உதவுவதில் தாராளமாகவே  இருந்திருக்கிறார். அப்படித்தான் அவருக்கு நெருக்கமானவர்கள்  கூறுகின்றனர். பண உதவியாக இருந்தாலும் சரி அல்லது வேறு வகையான உதவியாக இருந்தாலும் சரி அவர் அனைவருக்கும் தன்னாலானதைச் செய்திருக்கிறார். தன்னிடம் பணம் இல்லையென்றாலும் மற்றவர்களிடம் வாங்கியாவது உதவிகள் செய்திருக்கிறார்.

அவர் இறப்புக்குப் பல சினிமா புள்ளிகள் வந்திருக்கின்றனர். ரஜினியே வந்திருக்கிறார் என்றால் அது சாதாரண விஷயமல்ல.  எல்லா நடிகர்களுமே அவருக்கு நெருங்கிய நண்பர்களாகவே இருந்திருக்கின்றனர். திரைப்படங்களில் அவர் வருவதெல்லாம் ஏதோ ஓரிரு காட்சிகள் தாம். அவருடைய திறமைகளைக் காட்டுவதற்கு அந்த ஓரிரு காட்சிகளுமே போதுமானதாகும்.

இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அவர் எம்.ஜி.ஆர். படங்களைத் தவிர வேறு எந்தப் படங்களையும் பார்ப்பதில்லையாம். ஏன் தான் நடித்த படங்களைக் கூட அவர் பார்த்ததில்லையாம். அனைத்தும் எம்.ஜி.ஆர். தான்.

எம்.ஜி.ஆர்.தான் அவருக்குத் தெய்வம். அவர் தான் அவருக்கு வழிகாட்டி. வாழ்நாள் முழுவதும் அவரது தொண்டன். அனைத்தும் எம்.ஜி.ஆர்., எம்.ஜி.ஆர்.,  எம்.ஜி.ஆர். தான்! இனி இது போன்ற ஒரு தொண்டன் எம்.ஜி.ஆருக்குக்  கிடைக்கப் போவதில்லை!

Monday 20 February 2023

அப்பாடி! இத்தனை பட்டங்களா!

 

                          Welin Kusuma  - Now aiming for his 41st Degree in Library Science

மேலே காணப்படும் வெலின் குசுமா என்னும் பெயருடைய இந்தோனேசியர் படிக்காத படிப்பு இல்லை என்றே  சொல்லலாம். அந்த அளவுக்குப் பல்கலைக்கழகங்களில் படித்து பட்டங்களைப் பெற்று, தொடர்ந்து படித்து, மேலும் படித்து,  பட்டங்களைப் பெற்று,தொடர்ந்து கொண்டே போகிறார்! கல்விக்கு  ஏது எல்லை என்பதைக் கொள்கையாகவே கொண்டிருக்கிறார்!

குசுமாவுக்கு இப்போது வயது 41. இந்த வயதில் 41-வது பட்டத்தைப் பெறுவதற்கான ஏற்பாடுகளைத் தீவிரமாக செய்து கொண்டிருக்கிறார். இம்முறை "நூலக அறிவியல்"துறையில் பட்டம் பெறும் எண்ணம் கொண்டிருக்கிறார். நாம் என்ன படிக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அவர் அதனை ஏற்கனவே படித்து முடித்துவிட்டார்!

கடந்த 2012-ம் ஆண்டில் இந்தோனேசியாவில் அதிக பலகலைக்கழகப் பட்டங்களைப் பெற்றவர் என்று இந்தோனேசிய  மியுசிம் சாதனைப் புத்தகத்தில் அவர் இடம் பெற்றிருக்கிறார். அப்போது அவருடைய சாதனை என்பது 32 கல்வித்துறை பட்டங்கள். இன்றைய நிலையில் அந்தப் பட்டங்கள் 40 ஆக கூடிவிட்டன! இப்போது அடுத்து தனது 41-வது பட்டத்துக்கான வேலைகளில் ஈடுப்பட்டிருக்கிறார்.

குசுமாவிடம் இன்னொரு சிறப்பும் இருக்கிறது. ஒரே நேரத்தில் ஐந்து பாடங்களை எடுத்து அந்த ஐந்து  பாடங்களுக்கும் ஐந்து பட்டங்களையும் பெற்றிருக்கிறார்! அந்த காலகட்டத்தில் ஒரு நாளைக்குச் சுமார் 15 மணி நேரம் அவர் படிப்பாராம்! அதாவது காலை மணி ஏழு  தொடங்கி இரவு பத்து வரை அவர் படிக்கின்ற நேரமாக இருக்குமாம்!

இப்படி  பட்டங்களை அடுக்கிக் கொண்டே போகும் இந்தப்
 பழக்கம் எப்படி வந்தது? ஏன்? எப்படி? என்று சொல்ல முடியாவிட்டாலும் அவர் இடைநிலைப் பள்ளியில் படிக்கும் போது இப்படி ஒர் ஆசை  அவரிடம் ஒட்டிக்கொண்டதாம். பல்கலைக்கழகங்கள்  ஒரு பொழுது போக்கும் மையமாகவே அவருக்கு மாறிவிட்டதாம்!

கல்வியில் பட்டங்களைப் பெறுவதைத் தவிர்த்து இன்னொரு சிறப்பையும் அவர் கொண்டிருக்கிறார்.   தட்டச்சு செய்யும் போது அவர் தனது பத்து விரல்களையும் பயன்படுத்த முடியுமாம்.  ஆமாம் நம்மால் இரண்டு மூன்று விரல்களையே பயன்படுத்த முடிகிறது!  அப்படி என்றால் பத்து விரல்கள் என்பதும்  சாதனை தானே!

எதிர்காலத்தில் இன்னும் எத்தனை பட்டங்களைப் பெறப்போகிறாரோ நமக்குத் தெரியவில்லை. நமக்குத் தெரிந்ததெல்லாம் அவரின் எதிர்காலமே பட்டங்களைப் பெறுவது தான் என்றே தோன்றுகிறது!

மிகச் சிறந்த கல்வியாளர் உருவாகி வருகிறார்! வாழ்த்துவோம்!

Sunday 19 February 2023

என்ன காரணமாக இருக்கும்?

 

பள்ளிக்கூட விடுமுறை என்றால் நமக்குத் தெரியும். நமக்கும் அந்த அனுபவம் உண்டு.

சந்தோஷம், மகிழ்ச்சி, ஆட்டம், பாட்டம் - என்பது கடைசி நாளன்று எல்லாமே இருக்கும்.  ஆமாம்! நீண்ட விடுமுறை என்னும் போது மகிழ்ச்சிக்குச் சொல்லவா வேண்டும். அதுவும் டிசம்பர் மாத விடுமுறை என்றால் சாதாரணமா! புத்தகம், புத்தகப்பை எல்லாம் எங்கோ ஒரு மூலையில் கிடக்கும்! அது தான் எங்கள் பள்ளிக்கூட நாள்களில் நடந்த சந்தோஷங்கள்!

ஆனால் இப்போதைய நிலவரம் நமக்குத் தெரியவில்லை. பள்ளிக்குச் சென்று நீண்ட நாள்களாகி விட்டன. விடுமுறை என்றால் மகிழ்ச்சி தான். அப்போதும் சரி இப்போதும் சரி மாணவர்கள் என்றால் அப்படித்தான் இருப்பார்கள். இப்போது மட்டும் அப்படி என்ன வித்தியாசம் இருந்துவிடப் போகிறது?

என்ன செய்வது?  பெரிய வித்தியாசம்  தான் இன்றைய நிலை!  பினாங்கு, பட்டர்வொர்த், சிம்பாங் அம்பாட் இடைநிலைப்  பள்ளி ஒன்றில் தான் இந்த நாடகம் அரங்கேறியிருக்கிறது. எல்லாம் ஐந்தாம் படிவ இந்திய மாணவர்கள் என்று சொல்லப்படுகிறது. அது தான் நமக்கு அதிர்ச்சி செய்தி.

அது எங்கோ ஒரு மூலையில் நடந்திருக்கலாம்.  ஆனால் இந்தியர்கள் அனைவருக்குமே  மாபெரும் தலைகுனிவு என்பதில் சந்தேகமில்லை. இப்படி செய்யும் மாணவர்கள் ஒரு வேளை கஞ்சா அடிக்கும் மாணவர்களாகக் கூட இருக்கலாம். வேறு யாராலும் இப்படிச் செய்ய முடியாது.   இப்படியெல்லாம் மாணவர்கள் தறுதலைத்தனமாக நடந்து கொள்ளும் போது நாம் அவர்களின் பெற்றோர்களைத் தான் குறை சொல்லுகிறோம். அது இயல்பு தான். வேறு யாரைச் சொல்லுவது?

பொறுப்பற்றப்  பெற்றோர்கள் அல்லது குடிகாரப் பெற்றோர்கள் இவர்கள் வீட்டுப் பிள்ளைகள் தான் இப்படியெல்லாம் நடந்து கொள்வார்கள் என்கிற ஓர் அளவுகோள்  நாம் வைத்திருக்கிறோம்.  அதனை இல்லை என்றும்  நாம் மறுக்க முடியாது. 

இதனை நாம் ஒரு சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்ள முடியாது.  ஒரு சில பள்ளிகளில்  அனைத்து இந்திய மாணவர்களையும்  ஒரே வகுப்பில் போடுவது உண்டு. படிக்காத முட்டாள் மாணவர்களையும் படிக்கும் கெட்டிக்கார மாணவர்களையும் ஒரே வகுப்பில் போட்டு அடைப்பதால் நன்றாகப் படிக்கும் மாணவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். இதுவே நமக்கு ஒரு தலைவலி பிரச்சனை தான். 

முதலில் பெற்றோர்கள் திருந்த வேண்டும். வன்முறை வீட்டில் நடந்தால் அது பள்ளிகளுக்கும் பரவும் என்பது இந்த நிகழ்ச்சி மூலம் நமக்கு ஒரு பாடம் கற்பிக்கப்படுகிறது.

இது நமது சமுதாயத்திற்கு ஒரு மாபெரும் தலைகுனிவு. அதில் சந்தேகமில்லை. நமது பெற்றோர்கள் தான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

Saturday 18 February 2023

கல்வி எத்தனை முக்கியம்!

 


கல்வியின் முக்கியத்துவத்தை மலேசியத் தமிழர்கள் எந்த அளவுக்கு உணர்ந்திருக்கிறோம்  என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கின்ற நிலையில் மேலே உள்ள செய்தி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது!

மேலே உள்ள பெண்ணின் பெயர் ருக்குமணி குமாரி. வயது 22. இந்தியா, பீகார் மாநிலத்தில் பங்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர். அரசு பள்ளியில் படிப்பவர்.  திருமணமானவர்.

சம்பவத்தன்று அவருக்குப் பிரசவவலி ஏற்பட்டு முந்தைய இரவு  மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அழகான ஆண்  குழந்தை காலை 6.00 மணிக்கு பிறந்தது. தாயும் சேயும் சுகம். 

அன்று அவர் தனது  கடைசி பரிட்சையான விஞ்ஞானப் பரிட்சியை எழுத வேண்டும்.  குழந்தை பிறந்து மூன்று மணி நேரமே ஆன  நிலையில் தான் பரிட்சை எழுதப் போகவேண்டுமென டாக்டர்களிடம்  வேண்டுகோள் விடுக்கிறார். டாக்டர்கள் மறுக்கின்றனர். அவரது குடும்பமும் மறுக்கிறது.  அது அபாயகரமானது என டாக்டர்கள் கூறுகின்றனர். இல்லை! போயே ஆகவேண்டுமென பிடிவாதம் பிடிக்கிறார்!  வேறு வழியில்லை! டாக்டர்கள் மருத்துவனை ஆம்புலன்ஸ் மூலம் அவரைப்  தேர்வு  எழுதும் மண்டபத்துக்கு அனுப்பி வைக்கின்றனர்.  அத்தோடு சில மருத்துவமனை உதவியாளர்களையும், ஆபத்து அவசரத்துக்காக,  அனுப்பி வைக்கின்றனர்.

ருக்குமணி நல்லபடியாக படிக்கக் கூடியவர். எல்லாப் பரிட்சிகளையும் சிறப்பாகவே, விஞ்ஞானம் உட்பட,  எழுதியிருப்பதாகக் கூறுகிறார். வெற்றி பெறும் நம்பிக்கையில் இருக்கிறார்.

அவர்  கொடுக்கும் செய்தி என்ன?  "நான் நன்றாகப் படிக்கக் கூடியவள். பரிட்சையைத் தவிர்க்க விரும்பவில்லை. குறிப்பாகப் பெண்களுக்கு அது தவறான எடுத்துக் காட்டாக  அமைந்துவிடும். அதனால் தான் நான் அவ்வளவு பிடிவாதமாக நடந்து கொள்ள நேர்ந்தது. வருங்காலத்தில் எனது மகன் பெரிய கல்விமானாக ஆக வேண்டும் என்பதே எனது அவா!"

இங்கு நமது சமுதாயத்திலும், குறிப்பாக பெண் கல்வி என்பது, மிக மிக முக்கியம் என்பதை நாம் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை.  ஆட்டம் பாட்டம் இருக்கலாம். அதுவே வாழ்க்கை ஆகாது.  ஆட்டம் பாட்டத்தோடு கல்வியையும் ஆட்டம் பாட்டமாக எடுத்துக் கொள்ள வேண்டும்! மலாய்ப் பெண்கள், சீனப் பெண்கள் அவர்களோடு ஒப்பிடும் போது நமது பெண்களின் கல்வி நிலை ஏமாற்றம் அளிக்கிரது. வறுமை என்பது ஒரு காரணமாக   இருந்தாலும் உதவும் கரங்களும் நிறையவே இருக்கின்றன.  பல வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன. 

கல்வி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்பதே நமது வேண்டுகோள்!


Friday 17 February 2023

விற்றுத் தீர்ந்தன!

 

தமிழ் நாட்டிலிருந்து தொடர்ந்தாற் போல  இங்கு வந்து கலை நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்!

குறை சொல்ல ஒன்றுமில்லை. கலை நிகழ்ச்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கிறது. அதனால் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன!

குற்றம் சொல்வோர் பல்வேறு காரணங்களை முன் வைக்கின்றனர். அதுவும் இப்போது எல்லாருமே தங்களது கவனத்தைத் தமிழ்ப்பள்ளிகளின் மீது திருப்புகின்றனர்.  "நமது இரசிகர்கள் ஏன் தமிழ்ப்பள்ளிகளுக்கு உதவக்கூடாது?" என்று கேள்வி எழுப்புகின்றனர்.

அதுவும் சரிதான்!  ஆனால் இரசிகர்களைக் குறை கூற ஒன்றுமில்லை. தமிழ்ப்பள்ளிகளுக்கு ஏன் உதவக் கூடாது என்கிற குரலே இப்போது தான் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது! இதற்கு முன்னர் யாருமே கண்டுகொள்ளவில்லை.  இப்போது தான் தமிழ்ப்பள்ளிகளைப் பற்றியே நாம்  பேச ஆரம்பித்திருக்கிறோம்!  அதற்குள் நமது இளைய சமுதாயத்தைத் திருத்திவிட முடியுமா?  ஆனால் நான் பார்த்தவரை நமது இளைய சமுதாயத்தினர்  சிறப்பாகவே செயல்படுகின்றனர்.  பள்ளிகளின் மீது அக்கறை காட்டுகின்றனர். சமுதாயத்தின் மீது ஈடுபாடு உள்ளவர்களாகவே இருக்கின்றனர். பெரியவர்கள் முணகிக்கொண்டு செய்வதை இளைஞர்கள் ஜாலியாகச் செய்கின்றனர்! அவ்வளவு தான்!

கேளிக்கைக்ளில் ஈடுபடுவதாலேயே அவர்கள் பொறுப்பவற்றவர்கள் என்று நாம் ஒரு முடிவுக்கு வந்துவிடக் கூடாது. இப்போது அவர்கள் கேளிக்கைகளை விரும்புகிறார்கள். அதெல்லாம் நீண்ட நாள்களுக்குக் கொண்டு செல்ல முடியாது. நேரம் வரும்போது கவனம் வேறுதுறைகளில் சென்று விடும்.

நாங்கள் எல்லாம் இளமைக் காலத்தில் சிரம்பானிலிருந்து கோலலம்பூர்  போய் பந்து விளையாட்டுகளைப் பார்த்தோம்! ஏன் எம்.ஜி.ஆர். படங்களைப் பர்த்தோம். அண்ணா பேசிய கூட்டத்திற்குப் போனோம். கடைசியில் டாக்டர் உதயமூர்த்தியின் தன்முனைப்பு கூட்டத்தோடு  முடிவுக்கு வந்தது! இப்படித்தான் அனைத்தும். ஒரே மாதிரியாக கடைசிவரை இருக்கப்போவதில்லை.  மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கும். மாற்றங்களும் நடக்கும்.

அதே போல ஹாரிஸ் ஜெயராஜின் கலை நிகழ்ச்சி சிறப்பாகவே நடக்கட்டும். டிக்கட்டுகள் விற்றுத் தீர்ந்தன. மகிழ்ச்சி! இளைஞர்கள் மகிழ்ச்சியாக இருக்கட்டும்! இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு கொடுப்பதனாலேயே அவர்கள் வேறு எதிலும் ஆர்வம் காட்டுவதில்லை என்கிற குற்றச்சாட்டுகள் எல்லாம் வீண் பேச்சு!

எல்லாம் நன்மைக்கே! நல்லதே நடக்கும்!

Thursday 16 February 2023

புதிய கட்சி உதயமாகுமா?

 

முன்னாள் ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் கைரி ஜமாலுதீனின்  இப்போதைய நிலைமை என்ன?

கைரி திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார். அம்னோ அவரை முதுகில் குத்தியது என்று தான் சொல்ல வேண்டும். பொதுவாகவே அம்னோ, ம.இ.கா. அரசியல்வாதிகள் தங்களைவிட படித்தவர்கள் யாரும் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள்! அது தான் கைரிக்கும் நடந்தது.

கைரி ஜமாலுதீன் இங்கிலாந்தில் படித்தவர்.  ஆக்ஸ்போர்ட் பலகலைக்கழகத்தில்  பட்டம் பெற்றவர். இது ஒன்றே போதும் அம்னோ தலைவர்கள் ஏன் அவரைத் தள்ளி வைக்கிறார்கள் என்பது! இப்போதுள்ள அம்னோ தலைவர்களில் கைரி  மட்டுமே ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றவர். 

இப்போது கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கைரி அடுத்து என்ன செய்வார் என்பது எதுவும் தெளிவாக இல்லை. அவரிடம் உள்ள ஆற்றலுக்கு வேலை என்பது ஒன்றும் பிரச்சனையல்ல.

இப்போது தனியார் வானொலி நிலையமொன்றில் அறிவிப்பாளராக சேர்ந்திருக்கிறார். வாரத்திற்கு ஒரு நாள், திங்கள் கிழமை,  அறிவிப்புப் பணிகளில் ஈடுபடுவார் எனத் தெரிகிறது.  அதே சமயத்தில் ஜொகூர் மாநிலத்தின் இளைஞர் குழுவிற்கு ஆலோசகராகவும்  காற்பந்து சங்கத்தின் இயக்குனர்களின் ஒருவராகவும் அவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். 

இந்த சூழலில் கைரி புதிய அரசியல் கட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் உண்டா என்று பார்த்தால் வாய்ப்பு இல்லையென்றே தோன்றுகிறது.  புதிய  அரசியல் கட்சி என்பதெல்லாம் சாதாரண விஷயம் அல்ல. மேலும் கைரிக்கு அம்னோ கட்சியில் மட்டும் தான் ஈடுபாடு உண்டு என்று சொல்லலாம்.  அவர் வேறு எந்தக் கட்சிக்கும் மாறலாம் என்பதெல்லாம் வெறும் ஊகம் மட்டும் தான்.

என்னதான் அவர் தற்காலிகமாக வேலை செய்தாலும் அவருக்கு  அரசியலில் தான் ஈடுபாடு அதிகம். அதுவும் அம்னோ அரசியலில் மட்டும் தான்.  வேறு கட்சிகளில் அவருக்கு ஈடுபாடு இல்லை.

புதிய கட்சி தொடங்குவார் என்பது சாத்தியமில்லை!

Wednesday 15 February 2023

அப்படி அவர் என்ன செய்துவிட்டார்?


 பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்கள் நமது அரசாங்கதில் உள்ள ஒரு குறைபாட்டை சுட்டிக் காட்டினார்.

அவர் கூறிய குற்றச்சாட்டை இதுவரை யாரும் மறுக்கவில்லை. அவர் சொன்னது உண்மை என்பது அனைவருக்கும் தெரிகிறது. ஆமாம்,  அரசாங்கத் துறைகளில் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகள் கொடுக்கப்படுவதில்லை என்பதாக அவர் கூறியிருந்தார். ஒரு குறிப்பிட்ட இனமே ஆதிக்கம் செலுத்துகிறது என்பது இந்த ஊரே அறிந்தது தான். 

இந்தக் குறை எத்தனையோ முறை சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. இது நாட்டுக்கு ஒன்றும் புதிதல்ல. அனைவரும் அறிந்தது தான்.  ஆனால் இந்த முறை ஏன் இந்தப் பிரச்சனை பெரிய அளவில் பேசுபொருளாக மாற்றப்பட்டிருக்கிறது?  ஒரே காரணம் தான். பல மாநிலங்களில் மாநிலத் தேர்தல்கள் விரைவில் நடைபெற விருக்கின்றன. மலாய் வாக்காளர்களை, இப்போது ஆளும் ஒற்றுமை அரசாங்கத்தின் மீது  வெறுப்பேத்த  அதுவும் குறிப்பாக  பிரதமர் அன்வார் மீது வெறுப்பை ஏற்படுத்தி அவரை வீழ்த்துவது  என்கிற ஒரு திட்டத்தை  பெரிகாத்தான் கூட்டணியினர் ஓரு இலட்சியமாகவே வைத்திருக்கின்றனர்.  அது தான் முன்னாள் பிரதமர் முகைதீன் கொண்டிருக்கும் மாபெரும் கனவு. 

முகைதீனைப் பற்றி இந்தியர்கள் அதிகமாகவே அறிந்து வைத்திருக்கிறோம். பொதுவாகவே அவர் இந்தியர்களுக்கு எதிரானவர் என்பது நமக்குத் தெரியும். இந்தியர்களின் குடியுரிமை பிரச்சனையில் அவர் இந்தியர்களுக்கு எதிராகவே செயல்பட்டவர். அவர் மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்பதில் முனைப்போடு இருக்கிறார். அதனால் தான்  மலாய்க்காரர்களை,  இந்தியர்களுக்கு எதிராக, பேராசிரியர் இராமசாமிக்கு எதிராகத்  தூண்டிவிட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்!

இந்தியர்களைப் பொறுத்தவரை பேராசிரியர் இராமசாமி  எந்த ஒரு தவறும் இழைத்ததாக நமக்குத் தெரியவில்லை.  இந்தியர்களின் தேவையை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். இது நாம் எல்லாகாலங்களிலும் கேட்கின்ற கேள்வி தான். புதிது அல்ல. இப்போது  எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கையில் எடுத்திருப்பதால் ஒரு வேளை அது அவர்களுக்குப் புதிதாக இருக்கலாம், நமக்குப் புதிதல்ல!

பினாங்கு துணை முதல்வர் பேசியதில் எந்தத்  தப்புமில்லை என்பதில் நாமும் அவரோடு சேர்ந்து குரல் கொடுக்கிறோம்.  இப்படித்தான் ஒவ்வொரு பிரச்சனையையும் மறைத்து மறைத்து இப்போது நமக்கும் மரத்துப் போய்விட்டது! வாயை மூடிக்கொண்டே இருந்தால் எதுவும் நடக்கப்போவதில்லை!

வாயையே திறக்காத தலைவர்களை நாம்  கொண்டிருந்தோம்! இப்போது நாம் வாயைத் திறக்க ஆரம்பித்து விட்டோம்!

Tuesday 14 February 2023

உயிரோடு இருக்கிறார்!



 

தமிழீழ விடுதலைப் புலிகளின்  தலைவர் பிரபாகரன் உயிரோடுஇருக்கிறார் என்பதாக  உலகத் தமிழர் பேரவைத் தலைவர்  பழநெடுமாறன்  அவர்கள் கூறியிருப்பதானது  உலகத் தமிழிரிடையே ஒரு புதிய குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது என நம்பலாம்.

ஆனாலும் என்ன தான் ஐயா நெடுமாறன் போன்றவர்கள் இப்படி ஒரு குண்டை தூக்கிப் போட்டாலும் அதனை நம்புவதற்கு ஆளில்லை என்று தான் சொல்ல வேண்டும். பிரபாகரன் இப்படி  உயிரோடு இருப்பதாக பலமுறை செய்திகள் வாந்தாலும் அதனை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அது  முடிந்துபோன  ஒரு வீர வரலாறு!

இலங்கை இராணுவமும் அதனை உறுதிப்படுத்தியிருக்கிறது. அதற்கான தடயங்களும், ஆதாரங்களும் அனைத்தும் பக்காவாக காட்டிவிட்டது இலங்கை அரசு. இன்னொன்றையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். ஓடி ஒளிந்து கொண்டு வீரம் பேசும் மனிதரல்ல பிரபாகரன். அது அவரது குணமும் அல்ல. ஒரு வீரனைப் போய் இப்படி ஒரு கோழை போல சித்தரிப்பதை நாம் விரும்பவில்லை.

ஆனால் ஏன் இந்த நேரத்தில் இந்த செய்தி யாருக்குத் தேவைப்படுகிறது? இந்திய அரசாங்கம் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கும் நேரமிது. உலகத்தின் இரண்டாவது பணக்காரர் என்று சொல்லப்பட்ட அதானி என்பவருக்கு உதவப்போய் சிக்கலில் மாட்டியிருப்பதாக இந்திய செய்திகள் கூறுகின்றன. அதனால் இது திசை திருப்பும் வேலையாகவும் இருக்கலாம்! எல்லாமே அரசியல் தான்!

அல்லது தமிழ் நாட்டில் உள்ள அரசியல் நிலைமை. தமிழ் தேசியம் என்பது  இப்போது மெள்ள மெள்ள தமிழ் நாட்டில் பரவி வருகிறது. அது திராவிடக்கட்சிகளுக்கு எப்படிப் பார்த்தாலும் நல்ல செய்தியே அல்ல. அதனால் தமிழ் தேசியம் என்பது பயங்கரவாதம்  என்பதாகச் சொல்லி  அவர்களை முடக்கிவிட சாதகமாக அமையும். அதற்காகக் கூட ஐயா பழ.நெடுமாறனின் இந்த அறிவிப்பு பயன்படலாம்!

பொதுவாகவே இங்கு இந்திய அரசியலே இந்த அறிவிப்பின் பின்னணியிலிருந்து  செயல்படுவதாக நம்பப்படுகிறது! பழ. நெடுமாறனின் இந்த அறிவிப்பு ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே அவர் இதுபோன்ற அறிவிப்புகளை வெளிப்படுத்தியிருக்கிறார். அப்போது அதுபற்றி யாரும் கண்டு கொள்ளவில்லை.  ஆனால் இப்போது அது திட்டமிட்டு வைரலாக்கப்படுகிறது! காரணம் வரப்போகின்ற நாடாளுமன்றத் தேர்தலும் ஒரு காரணம்!

மேதகு பிரபாகரன் உயிரோடு இல்லை என்றாலும் அவரது வீரம் என்றென்றும் பேசப்படும்!

Monday 13 February 2023

இது எந்த வீட்டு நியாயம்?

 

தேசிய ஹாக்கி விளையாட்டு வீராங்கனை ஹானிஸ் நாடியா ஓன் சமீபத்தில்  தேசிய விளையாட்டிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட செய்திகள் நம்மைத் திணறிடத்தின. பத்திரிக்கைகள் அமர்க்களப்படுத்தின!

"ஆ! ஐயோ!" என்று ஹாக்கி கூட்டமைப்பும்  கூட அவரைப் பொளந்து  தள்ளியது!  நமக்கு அதில் பெரிய மகிழ்ச்சியெல்லாம் ஒன்றுமில்லை. ஒரு விளையாட்டு வீராங்கனையின் எதிர்காலம் இப்படி பாழாகிவிட்டதே என்கிற  அனுதாபம் நமக்கு உண்டு. 

  இப்போது மீண்டும் ஒரு செய்தி.  ஆனால் இந்த முறை பெரிதாக ஒன்றும் தம்பட்டம் அடிக்கப்படவில்லை.  ஊடகங்கள் மறைத்துவிட்டன.

அப்படி என்ன தான் நடந்தது? அவர் இனி விளையாட முடியாது என்கிற அறிவிப்பு வந்த சில மணி நேரங்களுக்குப் பின்னர்  அவர் நெகிரி செம்பிலான் மாநிலத்திற்காக விளையாடியதாக செய்திகள் கசிந்திருக்கின்றன!

நமது கேள்வி எல்லாம் அதிகாரத்தில் உள்ளவர்கள் தொடர்ந்து இந்திய சமூகத்தை ஏமாற்றும் வேலையை இன்னும் விடவில்லையா என்பது தான். ஒரு பக்கம் தடை என்பதாக தடபுடலான அறிவிப்பு! இன்னொரு பக்கம் இன்னொரு மாநிலத்தில் சிவப்புக்கம்பள வரவேற்பு! அது ஏன் என்பதற்கான விளக்கம் சீக்கிரம் வரும்!  எதிர் பார்க்கலாம்!

இதைத்தான் நாம் இரட்டை வேடம் என்கிறோம். இதனையே ஓர் இந்திய விளையாட்டாளர் என்றால் என்ன நடந்திருக்கும் என்பதை யோசித்துப் பார்க்கிறோம். அப்போது சட்டங்கள், நியாயங்கள் எல்லாம் தவறாமல் கடைப்பிடிக்கப்படும் என்பதில் ஐயமில்லை! சட்டங்கள் நமக்கு மட்டும் தான் என்பது தெளிவாகத் தெரிகிறது!

இதனை ஒரு முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டால் வருங்காலங்களிலும் இந்த முன்னுதாரணம் தொடர்ந்து கடைப்பிடிக்க  வேண்டிய கட்டாயம் வரும். வேறு வழியில்லை!

நம்முடைய கவலையெல்லாம் இப்படி ஒரு சூழல் ஏற்படும்போது விளையாட்டாளர்கள், எந்தவொரு ஒழுங்கு முறையும் இல்லாமல் தங்களது விருப்பதிற்கு ஏற்ப நடந்து கொள்ள வாய்ப்புகள் அதிகம். அவர்கள் விருப்பத்திற்கு வருவார்கள், போவார்கள் அதிலும் விளையாட்டில் கொஞ்சம்  திறமை ஏற்பட்டுவிட்டால் தலைகனமும் அதிகமாகிவிடும்.`

இது எப்படி, ஏன் நடந்தது என்று நம்மால் யூகிக்க முடியவில்லை. ஆனாலும் செய்திகள் கசியும்.  அப்போது தான் என்ன நடந்தது என்பது தெரியவரும். அதுவரை "எனக்கு ஒரு நீதி, உனக்கு ஒரு நீதியா?"  என்கிற கேள்வி தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்! பொறுத்திருப்போம்!

Sunday 12 February 2023

தகுதியின் அடிப்படையிலா!

 

பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்கள் அரசாங்கத் துறைகளில்  பல்லின சமுதாயத்தின் சமமான பிரதிநிதித்துவம் இல்லை என்பதாக ஓர் அறிக்கையில் கூறியிருந்தார்.

அவர் பேச்சுக்கு வழக்கம் போல எதிர்ப்புகள் கிளம்பின. இங்கே ஒரு விசேஷம். பொது சேவைத் துறையின் - கியுபெக்ஸ் - தலைவர் டத்தோ அட்னான் மாட் ஒரு உண்மையைப் போட்டு உடைத்திருக்கிறார். அவரின் கூற்றுப்படி அரசாங்க சேவைக்குத்  தகுதியின் அடிப்படையில் தான் ஆட்கள் சேர்க்கப்படுகிறார்கள் என்று அவர் கூறியிருப்பது நம்மை சிந்திக்க வைக்கிறது.  நம்மைப் பொறுத்தவரை அவர் எந்தவொரு அரசாங்க அலுவலகத்திற்கும் போனதில்லை என்பது நமக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது! ஒரு வேளை போக வேண்டிய அவசியம் அவருக்கு  ஏற்பட்டிருக்காது!

ஆனால் களநிலவரம்  அப்படி இல்லை என்பது அவருக்குத் தெரியவில்லை. எந்தவொரு  அலுவலகத்திற்குப் போனாலும் ஒரே நாளில் அந்த  வேலை முடிவதில்லை. ஒரு சாதாரண  பிரச்சனைக்குக் குறைந்தது ஐந்தாறு முறை மீண்டும் மீண்டும் போக வேண்டியதிருக்கும்! அரசாங்க அலுவலகங்கள்  அப்படித்தான் செயல்படுகின்றன! இதில் என்ன ஒளிவு மறைவு? ஒன்றுமில்லை! ஆனால் டத்தோ அட்னான் அரசாங்க ஊழியர்களைத் தூக்கிப் பிடிக்கிறாரே! தூக்கட்டும்!

டத்தோ அட்னானின் இன்னொரு கூற்றையும் நாம் கொஞ்சம் சிந்திக்க வேண்டியுள்ளது.   "நாங்கள் இனம், சமயம் எல்லாம் பார்ப்பதில்லை. தகுதி அடிப்படையில் தான் அரசாங்க வேலைக்குத் தகுதியானவர்களை நாங்கள் எடுக்கிறோம்!" என்று அடிக்கிறாரே அந்தர்பல்டி! சிரிப்பு, சிரிப்பாக வருகிறது!

அப்படியென்றால் மலாய்க்காரர்கள் அரசாங்க வேலைக்குத் தகுதியானவர்கள் காரணம் அவர்களுக்கு வேலைக்கான தகுதிகள் உண்டு. மற்ற இனத்தவர்களுக்குத் தகுதி இல்லையென்று அவர் எங்கிருந்து கண்டுபிடித்தார்? நாம் ஒரே பள்ளிக்கூடம், ஒரே கல்லூரி, ஒரே பல்கலைக்கழகம் தானே செல்லுகிறோம். இந்திய, சீனர்களுக்கு  இல்லாத தகுதி மலாய்க்காரர்களுக்கு எங்கிருந்து வந்தது? எல்லாருமே ஒரே தகுதியைத் தானே கொண்டிருக்கிறார்கள்!

கியுபெக்ஸ் தலைவர் டத்தோ அட்னான் சங்கத்தின் தலைவர் பதவியில் வெற்றி பெற வேண்டும்  என்பதற்காக "வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ" என்கிற பாணியில் பேசுவது கூடாது. இந்த நாட்டின் வளப்பத்தில் அனைத்து மக்களுக்கும் பங்கு உண்டு. அதில் எங்களுக்கும் பங்கு உண்டு,  உங்களைப் போல!

நாம் மலேசியர்கள்! அதனை எப்போதும் நினைவில் வையுங்கள்!

Saturday 11 February 2023

அவருக்கு என்ன ஆயிற்று?

                     தேசிய ஹாக்கி விளையாட்டு வீரர்  ஹனிஸ் நாடியா ஓன்

தேசிய ஹாக்கி விளையாட்டாளர் ஹனிஸ் நாடியா ஓன், இந்தியர்களை இழிவு படுத்தும் வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக,  தேசிய விளையாட்டிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதில் எந்தத் தவறும் இல்லை  அதனால் அவர்  மேல்முறையீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதாக மலேசிய ஹாக்கி கூட்டமைப்பின் தலைவர்  டத்தோஸ்ரீ சுபஹான் கமால் அறிவித்திருக்கிறார்.

அவர் மீது எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கை கடுமையானது தான் என்றாலும்  அது தேவை என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடில்லை.

அதே சமயத்தில் வேறு ஒரு கேள்வியும் நமக்கு எழுகிறது. சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு தான்.  பள்ளி மாணவர் ஒருவரை "நீ தேசிய விளையாட்டில் பங்கு பெற வேண்டுமானால் மதம் மாற வேண்டும்" என்று  அந்த மாணவர் மீது தாக்குதலைத் தொடுத்த ஆசிரியர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது  என்பதையும் நாம் கேட்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.

இந்த நிகழ்வு என்பது மேலே விளையாட்டாளர் ஏற்படுத்திய  நிகழ்வைவிட கடுமையானது என்பது நமக்குப் புரியும். அந்தப் பெண் விளையாட்டாளர் ஏற்படுத்திய நிகழ்வைவிட அந்த ஆசிரியர் செய்தது கொஞ்சமேனும்  ஏற்றுக்கொள்ள முடியாதது.  அந்த ஆசிரியர் என்பவர் அவரது தொழிலுக்கே கேவலமானவர்.  ஆசிரியர் தொழிலில் உள்ள ஒருவரின் நடவடிக்கை  இப்படியிருக்கும் என்றால் அவரிடம் கல்வி கற்கும் மாணவர்களின் நிலை என்ன? இதுவரை எத்தனை மாணவர்கள்  இந்த முறையில் மதம் மாற்றப்பட்டிருக்கிறார்கள்? ஆக, இது ஒரு தொடர்கதை என்பதாகத்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு காலத்தில் விளையாட்டுத் துறையில்  கொடிகட்டிப் பறந்த நமது  நாட்டில் இன்றைய நிலை என்ன? அதற்கான காரணம் என்னவாக இருக்கும்? இப்போது தான் நமக்குப் புரிகிறது. பள்ளிகளில் நடக்கும் அட்டுழியங்கள் இப்போது தான் நமக்குத் தெரிய வருகின்றன! விளையாட்டுத் துறையில் திறமையான மாணவர்கள் இருக்கின்றனர். ஆனால் எதன் பெயரால் ஒதுக்கப்படுகின்றனர்  என்பது நமக்கு இப்போது தான் புரிகின்றது. என்ன செய்வது?  நாட்டின் பெருமையைவிட மதத்தின் பெருமை தான்  இவர்களைப் போன்ற ஆசிரியர்களுக்குப் பெருமை தருவதாக தோன்றுகிறது. அதில் தவறில்லை! ஆனால் அவர் இருக்க வேண்டிய  இடம் பள்ளிக்கூடம் அல்ல என்பதை அவரே அறிந்திருக்க வேண்டும்!

இவரைப் போன்றவர்கள் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்பவர்கள். மேலே அந்தப் பெண்ணுக்கு  கிடைத்த தண்டனையை விட இவருக்கு இன்னும்  அதிகமான தண்டனைக் கொடுக்கப்பட வேண்டும் என்பதே நமது கோரிக்கை!

Friday 10 February 2023

வெளிநாடுகளில் வேலையா?

 

வெளிநாடுகளுக்கு வேலைக்குப் போகிறீர்களா?

வெளிநாடுகளில் போய் வேலை செய்வதில் நமக்கு ஒன்று புதிதல்ல. இது காலாகாலமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பயப்பட ஒன்றுமில்லை.

ஆனால் சமீப காலமாக  இதன் போக்கே மாறிவிட்டது. மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும்  ஓர்  ஏமாற்றுக் கும்பலிடம்  நமது இளைஞர்கள் அகப்பட்டுக் கொண்டு பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்.

நமது இளைஞர்களும் கொஞ்சம் யோசிக்க வேண்டும். வேலைக்கு விண்ணப்பம் செய்பவர்கள் எது போன்ற நாடுகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதும் முக்கியம். படித்து முடித்த இளைஞர்கள் பலருக்குப் பொது அறிவு என்பது கொஞ்சம் கூட கிடையாது என்பது மிகவும் வருத்தமான செய்தி.

கம்போடியா, லாவோஸ்,  மியான்மார் போன்ற நாடுகள் நமது நாட்டை விட மிகவும் பிந்தங்கிய நாடுகள் என்பதைக் கூட அறியாதவர்களாக இருக்கின்றனர். அந்த நாடுகளில் அப்படி என்ன பிரமாதமான வேலைகள் கிடைத்து விடப்போகின்றன? ஆனாலும் நம்மால் அவர்களைக் குற்றம் சொல்ல முடியவில்லை. அவர்களுக்கு வேலை வேண்டும், அவ்வளவுதான்! படித்துவிட்டு சும்மா  சோம்பித்திரிவதை விட எங்கு வேலை கிடைத்தால் என்ன என்கிற மனநிலையில் அவர்கள் இருக்கிறார்கள். ஆமாம், நமது நாட்டில் வேலை கிடைக்கவில்லை அதனால் எங்கேயாவது போய் அவர்கள் வேலை செய்ய தயாராக இருக்கிறார்கள். அவர்களை நாம் எப்படி குற்றம் சொல்லுவது?

இதில் மிகவும் வருத்ததற்குரிய விடயம் என்னவென்றால்  அந்த நாடுகளில் சுமார் 330 பேருக்கு மேல்  மோசடிக் கும்பல்களின் கையில் அகப்பட்டுப் பல வேதனைகளை அனுபவித்து வருகின்றனர். ஏமாற்று வேலைகளைச் செய்ய சொல்லி துன்புறுத்தப் படுகின்றனர். இந்த மோசடிக் கும்பல்களின் வேலையே மக்களை ஏமாற்றுவது தான்.

ஆனாலும் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காக அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்பதாக பிரதமர் அறிவித்திருக்கிறார். நடவடிக்கையும் ஆரம்பித்தாகி விட்டது. இப்போது அரசாங்கத்தின் நோக்கம் எல்லாம் அந்த நாடுகளில் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கும்  இளைஞர்களை மீண்டும் மலேசியாவுக்குக் கொண்டு வரவேண்டும். அது தான் நோக்கம். நிச்சயம் நோக்கம் நிறைவேறும்.

வெளிநாடுகளுக்கு  வேலைத் தேடி போக வேண்டும் என்றால் தீர விசாரித்துவிட்டுப் போங்கள். அரைகுறையாக தெரிந்து கொண்டு போக வெண்டாம். இது தான் நமது வேண்டுகோள்.

Thursday 9 February 2023

வரவேற்கிறோம்!

 


வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதில் கொஞ்சம்  கவனம் செலுத்த வேண்டும்.

இதனைப் பிரதமரும் வலியுறுத்தியிருக்கிறார்.  இடைத்தரகர்கள் மூலம் வெளிநாட்டவரை எடுக்கும் போது ஏகப்பட்ட பண விரயம் ஏற்படுவதை பிரதமர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

இந்த நடைமுறை பற்றி  நான் அதிகம் அறிந்திருக்கவில்லை.

ஒன்று மட்டும் நமக்குத் தெரிகிறது. நமது இந்திய உணவகங்கள் ஆள் பற்றாக் குறையால் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன.  வேலைக்கு ஆள் கிடைக்காததால் பல உணவகங்கள் மூடப்பட்டு விட்டன. இன்னும் பல மூடப்படும் அபாயத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன என்பதாக சம்பந்தப்பட்ட உணவக உரிமையாளர் சங்கங்கள் கூறுகின்றன.

இப்படிப்பட்ட நேரத்திலும் உணவகத்தில் பணிபுரியும்  வெளிநாட்டுத் தொழிலாளர்கள்  மீதான உணவக உரிமையாளர் நடத்தும் அராஜகங்களும் செய்திகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றன! அதனை அவர்கள் மறுக்க முடியாது!

குறிப்பாக இந்தியாவிலிருந்து வரும் தொழிலாளர்கள் பல குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர்.  அவர்கள் விமான நிலையம் வந்து இறங்கியதுமே  முதலில் அவர்களின் கடவுச்சீட்டுகளைத் தரகர்கள் பறிமுதல் செய்து விடுகின்றனர்! ஆக யார் இவர் என்கிற அடையாலமே இல்லாமல் முதல் அடி விழுகிறது! இவர்கள் எங்கே வேலைக்குப் போகிறார்கள் என்பது இவர்களுக்குத் தெரியாது. மலேசியாவின் எந்த மாநிலத்தில் வேலை செய்கிறார்கள் என்கிற வ்பரங்கள் எதுவும் சொல்லப்படுவதில்லை. 

இப்படித்தான் வெளிநாடுகளிலிருந்து வரும் தொழிலாளர்களின் வாழ்க்கை ஆரம்பிக்கிறது!  பின்னர் பல வழிகளில் துன்புறுத்தப்பட்டு, சம்பளம் இல்லாமல் வேலை செய்து, அடிகளை வாங்கி இன்னும் ஒரு சிலர் வந்ததற்கான அடையாளமே இல்லாமல் மறைக்கப்பட்டு - இப்படி பல துன்பங்களை அனுபவிக்கின்றனர்.

இங்கு வருபவர்கள் அனவருக்குமே இப்படி நடப்பதாக நான் சொல்லவில்லை. ஒரு சிலருக்கு நடப்பது தான் பெரிய செய்தியாக வெளி வருகின்றன. அதற்குத்தான் நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம். ஒரு பக்கம் ஆள் பற்றாக்குறை என்கிற புலம்பல்! இன்னொரு பக்கம் வேலை செய்பவர்களைத் தக்கவைத்துக் கொள்ள துப்பு இல்லாத ஒரு கூட்டம்! என்ன தான் செய்வது?

அரசாங்கம் கடுமையான சட்டதிட்டங்களோடு இந்தப் பிரச்சனைகளை அணுக வேண்டும். இல்லாவிட்டால் இந்தப் பிரச்சனை எந்தக் காலத்திலும்  தீரப்போவதில்லை. வெளி நாடுகளிலிருந்து வந்து வேலை செய்பவர்களைச் சரியாகக் கவனித்துக் கொண்டாலே  பாதி பிரச்சனைகள் தீர்ந்து விடும்.

வருங்காலங்களில்  இந்தப் பிரச்சனை எதனை நோக்கி நகரும் என்பதைப்  பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Wednesday 8 February 2023

பயன்படுத்திக் கொள்வீர்!

 

        நன்றி:  வணக்கம் மலேசியா

வேலையில்லா பட்டதாரிகளுக்கும், வேலையில்லா பட்டறிவு பெற்றவர்களுக்கும்,  வேலையில்லா படித்து, கல்விகற்று வேலை தேடுபவர்களுக்கும் இதோ வேலை வாய்ப்புகளைத் தேடித்தருகிறது மேலே உள்ள அறிவிப்பு.

மனிதவள அமைச்சும் சோக்சோவும் சேர்ந்து ஏற்பாடுகளைச் செய்திருக்கும்  இந்த ஆண்டின் முதல் வேலைவாய்ப்பு கண்காட்சி இந்த வாரம் நடைபெறுகிறது.

வருகிற சனி ஞாயிறு (11-2-2023/12-2-2023) இந்த இரு நாள்களிலும் இந்தக் கண்காட்சி கோலாலம்பூர்  மாநாட்டு மையத்தில் நடைபெறும். இந்தக் கண்காட்சியில் 140 க்கும் மேற்பட்ட அரசாங்க - தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ளும்.

படித்தவர்கள், பட்டதாரிகள், நிபுணத்துவ துறைகளைச் சேர்ந்தவர்கள் என பல துறைகளைச் சேர்ந்தவர்களும் இந்தக் கண்காட்சியில் கலந்து கொள்ளுமாறு மனிதவள அமைச்சு அழைப்பை விடுத்திருக்கிறது.

இந்தக் கண்காட்சியின் மூலம் சுமார் 10,000 வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியுமென மனிதவள அமைச்சு நம்புகிறது.

நமது இளைஞர்களும் காலாகாலமும் குறைசொல்லுவதையே கொள்கையாக  கொண்டிருக்கும் நம் இன நண்பர்களும்  முடிந்தவரை இந்த கண்காட்சியைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என நாமும் இந்த வேளையில் கேட்டுக் கொள்கிறோம்.

முயற்சி செய்யுங்கள். முயற்சியால் முடியாதது என்று எதுவுமில்லை. முயற்சி திருவைனையாக்கும் என படித்திருக்கிறோம். அதற்கு செயல் வடிவம் நீங்கள் தான் கொடுக்க வேண்டும்.

Tuesday 7 February 2023

ஏன் வரவில்லை?


நமது சமூகம் ஏனோ தெரியவில்லை  உப்புசப்பில்லாத பிரச்சனையையும் கூட  ஒரு பிரச்சனையாக்கி அதையும் ஒரு பேசுபொருளாக்கி, விவாதமாக்கி பொது மேடைகளில் பேசுகின்ற அளவுக்குக் கொண்டு சென்று விடுகின்றனர்!

தைப்பூச திருவிழாவில் பிரதமர் அன்வார் இப்ராகிம் கலந்து கொள்ளவில்லை  என்பது பலருக்கு வருத்தத்தை கொடுத்திருக்கும் என்பது உண்மை தான். அதுவே ஒரு சிலருக்கு  மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும் என்பதும் உண்மை தான். "எங்கள் தலைவரைப் போல முடியுமா?" என்கிற எக்காளப் பேச்சையும் நம்மால் கேட்க முடிகிறது! 

இதையெல்லாம் நாம் காதில் போட்டுக் கொள்ளக் கூடாது.  தைப்பூச திருவிழாவுக்கு முன்பு தான் பிரதமர் மருத்துவனைக்குப் போய் வந்தார் என்கிற செய்திகள் வந்தன. அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பது தான் அதன் பொருள். அதனால் தைப்புசத்திற்குக் கலந்து கொள்ளாததில் ஒன்றும் அதிசயமில்லை. அதனை ஒரு பிரச்சனையாக ஆக்க வேண்டிய  அவசியமுமில்லை!

ஒன்றை நான் நினைவுறுத்த விரும்புகிறேன். எல்லாவற்றுக்கும் கோபித்துக் கொள்வது என்பது ஏற்புடையதல்ல. அதிகாரத்தில் உள்ளவர்களுக்குப் பல வேலைகள், பல கடமைகள் இருக்கின்றன. ஏன் வருகிறார்கள் ஏன் வரவில்லை  என்பதெல்லாம் நம்மால் கணிக்க முடியாத ஒன்று.  அனைத்தையும் போகிற போக்கில் தூசியைத் தட்டிவிட்டுக்  கொண்டே போக வேண்டியது தான்!

"வந்தால் நல்லது! வராவிட்டால் அதைவிட நல்லது!" என்கிற மனப்போக்கை நமது சமுதாயம் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதை ஒரு விவாதப் பொருளாக்குவதை தவிர்க்க வேண்டும். அதைப்பற்றி நீண்ட ஆராய்ச்சிகள் எல்லாம் தேவையில்லை! அந்த அளவுக்கு அது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல! ஒரு சிறிய பிரச்சனையைப் பூதாகரமாக ஆக்குவதில் நம்மை விட்டால் வேறு யாருமில்லை!

முன்னாள் பிரதமர் நஜிப் ஒவ்வொரு ஆண்டும்  தைப்பூசத் திருழிழாவில் கலந்து கொள்வார் என்கிற பேச்சும் தொடர்ந்து வந்தது. நல்லது தானே! அது பாராட்டப்பட வேண்டிய விஷயம்! யாரும் மறுக்கவில்லையே! ஆனால் அது  அவருக்கு எந்த அளவு இந்தியர்களின் வாக்காக மாறியது? அரசியல்வாதிகள் இது போன்ற நிகழ்வுகளுக்கு வருவதே வாக்குகளுக்காகத்தான்! நாம் அறியாததா, என்ன? 

அதனால் பிரதமர் கலந்து கொள்ளாதது ஒரு பிரச்சனையே அல்ல. விவாதிக்க வேண்டிய விஷயமும் அல்ல! போகிற போக்கில் "எல்லாம் நனமைக்கே!" என்று எடுத்துக் கொண்டால் போதும்.  நமது சமுதாயத்திற்குத் தேவை ஏகப்பட்டவைகள் உள்லன. எது முக்கியமோ அதில் நமது மூக்கை நுழைத்தால் போதும்! கல்வி, வேலைவாய்ப்பு என்று நமக்குப் பிரச்சனைகள் உள்ளன. அதில் கவனம் செலுத்துவோம்.

பிரதமர் அன்வார்  தைப்பூசத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்பது முக்கியம் அல்ல! எல்லாம் நல்லபடியாக நடந்ததா என்பது தான் முக்கியம்!

Monday 6 February 2023

இவர்கள் தான் பில்லியனர்கள்!

 

                                மலேசிய நாட்டின் பில்லியனர்கள்

மேலே உள்ளவர்கள் தான் நமது மலேசிய நாட்டின் பில்லியனர்கள். இந்தப் படத்தில் கடைசியாக உள்ளவர் தான் டான்ஸ்ரீ ஆனந்தகிருஷ்ணன். இவர் தான் நமது நாட்டின் ஐந்தாவது பெரிய பணக்காரர். அவர் தமிழர் என்பதால் நாமும் கொஞ்சம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

இவர்கள் தான் மலேசியாவின் பில்லியனர்கள். இன்னும் இருக்கின்றனர். தேவைப்பட்டால்  பின்னர் பார்ப்போம்.

இங்கு ஏன் இந்த கட்டுரை என்றால் சமீபத்தில் நடந்த சில குளறுபடிகள். இணைய இதழ் "வணக்கம் மலேசியா" வுக்கு அளித்த ஒரு பேட்டியில் பத்துமலை கோவில் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா சொன்ன ஒரு கருத்தை வைரலாக்கி விட்டனர் பயனாளர்கள்! அவர் அப்படி என்ன சொன்னார்"

"நான் பில்லியனரும் இல்லை! வசதி குன்றியவனும் இல்லை! ஏழையும் இல்லை! பெரும் பணக்காரனும் இல்லை!"

இப்படித்தான் அவர் அந்தப் பேட்டியில்  அவர் கூறியிருக்கிறார்.  கொச்சையாக எதனையும் அவர் சொல்லவில்லை.

ஆனால் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும்.   நேர்காணல் செய்தவர் தைப்பூசம் சம்பந்தமான கேள்விகளைத் தான் கேட்டார். அவர் சரியான கேள்விகளைத் தான் கேட்டார். ஆனால்  டான்ஸ்ரீ ஏதோ அடக்கி வைத்திருந்த அனைத்தையும் புலம்பி தீர்த்து விட்டார் என்று தான் நினைக்க வேண்டியுள்ளது!

வேண்டாம்! அது பற்றி பேச வேண்டாம்! அது விவகாரமாகி விடும்!

ஓர் ஆலயத்திற்கு அதுவும் மலேசியாவின் தாய் கோயில் என்று சொல்லப்படும் ஓர் ஆலயத்திற்கு அது மட்டும் அல்லாமல் பத்து, பதினைந்து இலட்சம் தைப்பூசம் அன்று பகதர்கள் கூடும் ஓர் ஆலயத்திற்கு  ஒரு தலைவராக இருப்பது என்பது சாதாரண காரியம் அல்ல. அதுவும் 33 ஆண்டுகாலம் தலைவராக  தொடர்ந்து இருப்பதும் சாதாரண விடயம் அல்ல. 

இப்படி நீண்டகாலம் ஒரு கோயிலுக்குத் தலவராக ஐருந்தால் நிச்சயமாக எல்லா கல்லடிகளும் பட்டுத்தான் ஆக வேண்டும். அதற்கு டான்ஸ்ரீ நடராஜாவும் விலக்கல்ல. கடவுள் சக்தி தான் அவரை இப்படி நீண்டகாலம் தலைவராக வைத்திருக்கிறது என நாம் நம்புகிறோம். கோயிலில் தலைமை தாங்குபவர்கள், பணியாளர்கள் - இப்படி யாரை எடுத்துக் கொண்டாலும் ஒன்றைப் புரிந்து வைத்திருக்கின்றனர். "கோவில் சொத்து குல நாசம்" என்பதை அவர்கள் தான் அதிகமாகவே புரிந்து வைத்திருக்கின்றனர்.

தனால் அவர்களை நாம் நாம்புவோம்! கோயில் காசில் யாரும் பில்லியனர் ஆகிவிட முடியாது!  தொழிலதிபர்கள் தான் பில்லியனர்கள்!

நல்லதையே நினைப்போம்!

Sunday 5 February 2023

வழக்கமாக்கிக் கொள்வோம்!

 

பத்துமலை திருத்தலம் என்றாலே  தைப்பூச தினத்தன்று அதிக இந்துக்கள் கூடுகின்ற  இடம் என்பதை நாடே அறியும். இந்த ஆண்டும் சுமார் பத்து இலட்சம் பேர்  வருவர் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதுவும் சனி, ஞாயிறு, திங்கள் என்று தொடர் விடுமுறை வேறு. சொல்லவா வேண்டும்.

சரி, அப்படியே ஆகட்டும். நாம் விஷயத்திற்கு வருவோம். இலட்சக் கணக்கில் பக்தர்கள்  கூடுகின்ற இடம் என்பதால் குப்பைகளும் இலட்சக் கணக்கில் தான் இருக்கும் என்பது தான் நாம்   வைத்திருக்கும் ஓர் அளவுகோள்!

ஆனால் அப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. நாம் குப்பை போடுவதைக் கூட கௌரவமாக நினைக்கும் ஒரு சமுதாயம்! நமது வீட்டுக் குப்பைகளை பக்கத்து வீட்டுக்குத் தள்ளி விடுபவர்கள் தானே! நம் வீடு சுத்தமாக இருக்க வேண்டும் அடுத்தவன் வீட்டைப் பற்றி நமக்கு என்ன கவலை?

இப்படி வீடுகளில் ஆரம்பிக்கிற இந்த குப்பை போடும் ஆக்கிரமிப்பு தான் நாளடைவில் குப்பை என்பதை எங்கு வேண்டுமானாலும்  போடலாம், வீசலாம் என்கிற நிலைக்கு நம்மைத் தள்ளி விட்டிருக்கிறது! அந்தப் பழக்கத்தை இது நாள்வரை நம்மால் விட முடியவில்லை!

வெள்ளைக்காரன் பத்து இலட்சம் பேர் கூடினால் அங்கு மட்டும் ஏன் குப்பகளைக் காண முடிவதில்லை? அவர்கள் வீடுகளிலேயே அந்தப் பழக்கத்தை வளர்க்கிறார்கள். நம்மால் அது முடியாதா? காசா, பணமா? பிள்ளைகளுக்கு வீட்டிலேயே சொல்லித் தரலாமே!

பத்துமலையில் இலட்சக்கணக்கில் செலவு செய்து குப்பைகளைப் போடுவதற்கென்று தொட்டிகளைக் கட்டி  வைத்திருக்கின்றார்கள். தொட்டிகளிலோ அல்லது அதற்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களிலோ உங்கள் குப்பைகளைப் போடுங்கள். அதைவிட பெரிய சேவை என்பது வேறு எதுவுமில்லை. அதைவிட பக்தி என்பது வேறு எதுவுமில்லை! 

கோவிலுக்குப் போகும் போது சுத்தபத்தமாக இருக்க வேண்டும் என்பது தானே நம் வீட்டில் நமக்குக் கற்றுக் கொடுத்த முதல் பாடம்?  அதே பாடம் தான் போய் வரும் போதும் நாம் சுத்தமாக இருக்க வேண்டும், கோவிலையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறது? அப்படியிருக்க  அது எப்படி பக்தி பரவசமாக போவதும்  வரும் போது  கோவிலையே நாசம்பண்ணிவிட்டு வருவதும் - இதனை நாம் எப்படி எடுத்துக் கொள்வது?

கோவிலை அசுத்தப்படுத்துவது என்பது நம்மை நாமே அசுத்தப்படுத்துவது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எந்த நோக்கத்தோடு நாம் போவிலுக்குப் போகிறோமோ அந்த நோக்கமே பாழ்பட்டுப் போகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

வீட்டில் நமது பிள்ளைகளுக்குக் குப்பைகளை எங்கே போட வேண்டும் என்று சொல்லிக் கொடுக்காததால் இன்று அந்தக் குப்பைகள் பத்துமலை வரை சென்று குவிய ஆரம்பித்துவிட்டன!

குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போட நம் பிள்ளைகளைப் பழக்குவோம். அதனையே நாம் வழக்கமாக்கிக் கொள்வோம்!  ஒரு சின்ன காரியத்தைக் கூட செயல்படுத்த முடியாத சமுதாயம் என்கிற  அவப்பெயர் நமக்கு வேண்டாம்!

Saturday 4 February 2023

இன்னும் எத்தனை பள்ளிகளோ!

 

       நன்றி: வணக்கம் மலேசியா

குனோங் ராப்பாட் தமிழ்ப்பள்ளியின் ஏழு ஆண்டுகால சர்ச்சை ஒரு முடிவுக்கு வந்ததாக  "வணக்கம் மலேசியா" செய்தி வெளியிட்டுள்ளது.

நமக்கு அந்த பள்ளியைப் பற்றி அதிகம் தெரியாது. ஏதோ, ஈப்போ, குனோங் ராப்பாட், அம்பாங் சாலையில் உள்ள ஒரு தமிழ்ப்பள்ளி என்பது மட்டும்  அந்த செய்தியின் படி தெரிகிறது.

சரி, அதை விடுவோம்.  பள்ளியில் ஏழு ஆண்டு கால சர்ச்சை ஒரு முடிவுக்கு வந்தது  பற்றி நமக்கும் மகிழ்ச்சியே. நம்மிடம் உள்ள ஒரு கேள்வி: எழுபது இலட்சம் வெள்ளி பணம் செலவு செய்து  கட்டப்பட்ட  அந்த பள்ளி ஏன் சர்ச்சையில் சிக்கியது? ஏழு ஆண்டு காலம் என்பது ஒரு சிறிய காலம் அல்ல. அது நீண்ட காலம்.

கட்டடம் கட்டியவன் பணத்தை வாங்கி விட்டான்!  கமிஷன் வாங்கியவன் கமிஷனை வாங்கிவிட்டான்! அப்புறம் என்ன கேடு வந்தது என்பது தான் கேள்வி. கட்டடம் கட்ட பொறுப்பானவர்கள் கல்வி அமைச்சின் அதிகாரிகள். கட்டடம் கட்டி முடிந்தது. அதன் பின்னர் ஏதும் பிரச்சனைகள் என்றால்  அது கல்வி அமைச்சின் பொறுப்பு.  அந்த பிரச்சனையைத் தீர்க்க ஏழு ஆண்டுகள் கல்வி அமைச்சு எடுத்துக் கொண்டது என்றால்  அவ்வளவு பெரிய பிரச்சனையா அது?

ஒரு கட்டடத்தைக் கட்டிவிட்டு சும்மா அப்படியே போட்டு வைத்திருப்பது என்றால்  நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்போது நமக்குச் செவிக்கு எட்டியது இந்த பள்ளிக்கூடம். நாட்டில் இன்னும் எத்தனை பள்ளிக்கூடங்கள் இந்த நிலையில் இருக்கின்றன என்பது தெரியவில்லை. நெகிரி மாநிலத்தில் மூன்று பள்ளிகள் திறக்கப்படாமல் கிடப்பதாகக் கூறப்பட்டது. அதன் இன்றைய நிலை தெரியவில்லை.

நமக்குத் தெரிந்ததெல்லாம் இப்படி சும்மால் கிடப்பில் கிடக்கும் பள்ளிகள் அனைத்தும் தமிழ்ப்பள்ளிகள் தான்! தேசிய மொழிப் பள்ளிகள் இப்படி ஏதேனும் இருப்பதாக கேள்விப்படவில்லை!

இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். தேசிய முன்னணி கட்சியின் ஆட்சியின் போது தான்  இது போன்ற குளறுபடிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. ம.இ.கா. வை நாம் கேட்க முடியாது! அப்படி ஒரு பிரச்சனை இருந்ததே அவர்களுக்குத் தெரியாது!

இப்போது நடந்து கொண்டிருப்பது ஒற்றுமை அரசாங்கம்.  தமிழ்ப்பள்ளிகள் பிரச்சனைகள் தீர வேண்டுமானால்  இது தான் தக்க நேரம். பிரச்சனைகளை இப்போதே ஒரு முடிவுக்குக் கொண்டுவர் முயற்சி செய்யுங்கள்.  தேசிய முன்னணியோ அல்லது பெரிகாத்தான் நேஷனல் கட்சியோ ஆட்சிக்கு வருமானால்  அதே பழைய நிலைமை தான்! மீண்டும் ம.இ.கா. வின் முகத்தில் தான் முழிக்க வேண்டும்!

இன்னும் எத்தனை பள்ளிகள் இது போன்ற இழுபறியில் இருக்கின்றன என்பது நமக்குத் தெரியவில்லை.  இதுவே தக்க நேரம். இப்போது பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் விழித்துக்கொள்ள வேண்டும். பிரச்சனைகளை ஒரு முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்.

Friday 3 February 2023

இது விழிப்புணர்வா?

 


இன்று தமிழ்ப்பள்ளிகள் பற்றி பலரும்  பேச ஆரம்பித்திருக்கின்றனர்.

வரவேற்கப்பட வேண்டிய நல்ல செய்திதான். பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிகளில்  சேருங்கள் என்கிறார்கள். பொருளாதார ரீதியில் உதவுங்கள் என்கிறார்கள். சிரமத்தில் உள்ள மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள் என்கிறார்கள்.  பள்ளி பஸ்களுக்குக் கட்டணம் கட்ட முடியாத குடும்பங்களுக்குப் பஸ் கட்டணத்தைக் கொடுத்து உதவி செய்யுங்கள் என்கிறார்கள். எல்லாவகை உதவிகளையும் இந்த சமுதாயம் வரவேற்கிறது.

சீனப்  பள்ளிகளுக்கும்  இதே நிலைமை தான் இல்லையென்று சொல்லிவிட முடியாது.  ஆனால் அவர்களின் சமுதாயத்தில் பணம் படைத்த சீன முதலாளிகள் அதனைப் பார்த்துக் கொள்கிறார்கள். அதனால் நமக்கு எந்த செய்தியும் வெளியே கிடைப்பதில்லை. நமது சமுதாயத்தில் அப்படி ஒரு நிலைமை இல்லை.   அதனால் வெளிப்படையாகவே அறிக்கைகளை விட்டு பள்ளியின் மேம்பாட்டுக்காக,  பணத்தை திரட்டுகிறார்கள்.  நமது சமுதாயத்திலும் ஓர் இஸ்லாமிய வர்த்தகர் இப்படி பல தமிழ்ப்பள்ளிகளுக்கு உதவி  செய்து வந்தார். இன்னும் பலர் இருக்கலாம். வாழ்த்துகிறோம்!

தமிழ்ப்பள்ளிகளுக்கு ஏன் இப்படி ஒரு நிலைமை என்று பார்த்தால் அதன் காரணம் நமக்குப் புரியும். நான் வசிக்கும் இடத்தை எடுத்துக் கொண்டால்  மாணவர்கள் நடந்து போகும் தூரத்திலேயே  தேசியப் பள்ளிகள் இருக்கின்றன. ஒன்று ஆரம்பப்பள்ளி இன்னொன்று இடைநிலைப்பள்ளி. இது பெற்றோர்களுக்கு வசதியாக இருக்கிறது. அவர்கள் இங்கு தானே  பிள்ளைகளை அனுப்புவார்கள்! செலவு குறைவு என்பது தான் அவர்கள் கண்களுக்குத் தெரியும்.  ஏழ்மையில் இருப்பவர்களிடம் "பற்று" பற்றியெல்லாம்   பேச முடியுமா?

ஆனாலும் என்னதான் இக்கட்டான சூழலில் இருந்தாலும்  தமிழர்கள் அவர்களின் மொழியை நேசிக்கிறார்கள். அதில் ஏதும் குறையில்லை. ஆனால் தமிழுக்காக வாய் கிழிய பேசும் அரசியல்வாதிகளைப் பார்த்திருக்கிறீர்களா?  அந்தக்காலத்தில் சாமிவேலு தொடங்கி அப்படியே பார்த்து வந்தீர்களானால் அவர்கள் பிள்ளைகள் யாரும் தமிழ் பள்ளிகளுக்குப் போகவில்லை! 

ஆனால் இப்போதைய நிலையில் கட்டடங்கள் தரமாக இருக்க வேண்டும் என்று படித்த பெற்றோர்கள் நினைக்கின்றனர். அது தவறில்லை. அதனால் தான் தரமான கட்டடங்கள் கொண்ட பள்ளிகள்  இப்போது தமிழ் மாணவர்களால் நிரம்பி வழிகின்றன! அத்தோடு பல பெற்றோரிடையே நாம் தமிழர்கள் என்கிற உணர்வும் மேலோங்கி நிற்கின்றன.

அதனால் நம் பெற்றோரிடையே நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். சமுதாய நோக்கம் உள்ள பல நல்ல உள்ளங்கள் "தமிழ்ப்பள்ளியே நம் தேர்வு"  என்று தொடர்ந்தாற் போல விதைகளைத் தூவிக் கொண்டு வருகின்றனர். நல்ல முயற்சி! பாராட்டுவோம்!

Thursday 2 February 2023

இப்படியும் ஒரு ரசிகையா!

 

                                   Datuk Sri Nur Halizah and  A.R.Rahman

நமது பிரபல இசையமைப்பாளர் , இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவருடைய கலைநிகழ்ச்சி  நடந்து முடிந்தது. 

வெற்றிகரமாக நடந்ததாகத்தான் சொல்ல வேண்டும் சுமார் 60,000 மேற்பட்ட கூட்டம் என்றால் அது வெற்றிகரமான ஓர் இசை நிகழ்ச்சி தானே!

நமது தமிழ் இரசிகர்களின் குறைபாடு என்றால்  இந்த இசை நிகழ்ச்சியில் குறைந்த அளவே தமிழ்ப்பாடல்கள்  பாடப்பட்டன  என்பது தான். மற்றபடி அவர்கள் அதிகம் குறை சொல்லவில்லை. அதிகமாக தமிழ்ப்பாடல்களைத்தான் பாடுவேன் என்று அவர் சொன்னாலும் கடைசி நேரத்தில் ஏற்பாட்டாளர்கள் பின்வாங்கிவிட்டார்கள்! காரணம் இரசிகர்களில் பலர் பிற இனத்தவர்கள் என்பதால் நாமும் பெருந்தன்மையோடு விட்டுவிடுவோம்!

ஆனால் ஒரே ஒரு பெண்மணி மட்டும்  அதிக உரிமை எடுத்துக் கொண்டு அவதூறுகளை அள்ளி வீசியிருக்கிறார்! இன்ஸ்டாகிராமில்  செல்வாக்குப் பெற்ற ஒரு நபரான  Fatinamyralee  தனது கருத்துகளைக் கூறவில்லை; அனலை கக்கியிருக்கிறார். "நான் இந்தி பாடல்களைக் கேட்க வந்தேன் ஆனால் கிலிங் பாடலைப்பாடி எனக்குத் தலைவலியை ஏற்படுத்திவிட்டார்கள்"  என்பதாக அவர் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

அவர் ஏன் இந்த அளவுக்கு வெறுப்புணர்வைக் கொண்டிருக்க வேண்டும் என்பது புரியவில்லை. அவர் என்ன தமிழ்ப்பாடல்களைக் கேட்காதவரா? மலேசியாவில் எங்கோ ஓரிடத்தில் தமிழ்ப்பாடல்கள் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. அதிசயம் ஒன்றுமில்லை.

அவர் தமிழ்ப்பாடல்களே, அதுவும் மலேசியாவில் இருந்து கொண்டு, கேட்காதவர் என்று  சொல்லிவிட முடியாது. தமிழ்ப்பாடல்களைப் பாடுபவர்களை அவர் இப்படி கீழ்த்தரமாக பேச வேண்டிய அவசியமில்லை.  

பாடல்கள் என்றாலே இனிமை; காதுகளுக்கு சுகம். அந்த எந்த மொழிப்பாடல்களாக இருந்தாலும் சரி எல்லாமே ஏதோ ஒரு வகையில் நம்மைக் கவரத்தான் செய்கின்றன. பாடல்களை ரசிக்கத் தெரியாதவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடக்கும் இடத்திற்கு அடி எடுத்து வைக்கக் கூடாது!

என்ன செய்வது? அவருக்குக் கொஞ்ச வாய் ஜாஸ்தி! அவ்வளவு தான்!

Wednesday 1 February 2023

ஒன்னும் பிரச்சனையில்லை!

 

                                                                நூருல் இஷா
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தனது முதன்மை ஆலோசகராக அவரது 
 மகள் நூருல் இஷாவை நியமித்திருப்பதைப் பற்றி  பல்வேறு தரப்பிலிருந்து கண்டனக்குரல்கள் எழும்ப ஆரம்பித்திருக்கின்றன.

அது இயற்கை தான். மேலோட்டமாக பார்க்கும் போது இதில் ஏதும் சூது உண்டோ என்று தான் சொல்லத் தோன்றும்!

ஆனால் அது அப்படியல்ல. அதற்கான விளக்கத்தையும் பிரதமர் கொடுத்திருக்கிறார். அந்தப் பதவிக்காக நூருல் சம்பளம் எதுவும் வாங்கப் போவதில்லை! அன்வாரும் நூருலும் ஒத்த கருத்து உடையவர்கள். ஏழைகளுக்கு  முன்னேற்றத்தைக் கொண்டு வரவேண்டும். நாடு வளர்ச்சிப்பாதையில் செல்ல வேண்டும்.  அது தான் அவர்களின் குறிக்கோள். அதனால் தான் அன்வார் தனது மகளுக்கு அந்தப் பதவியைக் கொடுத்திருக்கிறார்.

இதற்கு முன்னர் ஆட்சி நடத்தினார்களே அவர்கள் என்ன செய்தார்கள்? தங்களது ஆட்சி நிலைக்க வேண்டும் என்பதற்காக  பாஸ் கட்சியினருக்குப் பதவிகளைக் கொடுத்தது மட்டும் அல்லாமல் அவர்களுக்கு ஓர் அமைச்சருக்குக் கொடுக்கப்பட்ட சம்பளத்தையும் கொடுத்தார்கள்!  அப்போது ஏன்  யாரும் வாய் திறக்கவில்லை?

நூருல் இப்போது எந்த சம்பளமும் வாங்காமல் தான் வேலை செய்யப் போகிறார். யாருக்கும் எந்த நட்டமும் இல்லையே!  இன்னொன்று தனது வேலை என்ன என்பது அவருக்குத் தெரியும். அதற்கான தகுதியும் அவருக்கு உண்டு.  அவர் செய்வது நாட்டுக்கான சேவையாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.  பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் அவருக்கில்லை. போதுமான சாம்பாத்தியம் அவருக்குண்டு.

இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும்.  பிரதமரைச் சுற்றி இருப்பவர்கள் யார்? நேர்மைக்கு விலை பேசுபவர்கள்! இதற்கு முன்னர் அரசியலை வைத்து கொள்ளையடித்தவர்கள்!  இவர்களை எப்படி நம்புவது? அது ஒர் எமகாதகக் கூட்டம்!  எதற்கும் அஞ்சாத கூட்டம்! நேர்மையானவரை வேலைக்கு வைத்தாலும் அவர்களைத் தங்கள் பக்கம் இழுத்து விடுவார்கள்! என்ன செய்வது? இது பல கட்சிகளைக் கொண்ட  ஓர் ஒற்றுமை அரசு. அதனால் பிரதமர் அன்வார் சுயேச்சையாக இயங்க முடியாத நிலையில் இருக்கிறார்!

அதே சமயத்தில் வீண் செலவுகளைக் குறைக்க வேண்டிய சூழலிலும்  இருக்கிறார். அதற்கேற்ப தான் அவர் வேலை செய்ய வேண்டும். செலவுகளைக் குறைக்க வேண்டும். அது தான் அவரது தலையாயப் பணி.

எப்படி பார்த்தாலும் பிரதமரின் இந்த நியமனம் நாட்டின் நலனைச் சார்ந்ததாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்! அனைத்தும் நன்மைக்காக, நம்புவோம்!