Showing posts with label நடப்பு. Show all posts
Showing posts with label நடப்பு. Show all posts

Tuesday, 1 September 2020

பெயர் மாற்றம் தேவையே!

 தமிழ்ப்பள்ளிகளைப் பொறுத்தவரை இன்னும் பல பள்ளிகள் தோட்டப்புற பெயர்களைக் கொண்டே இயங்கிக் கொண்டிருக்கின்றன.

ஒரு காலத்தில் அது சரி. இப்போது அது சரியா? ஏற்கனவே கூட இது பற்றி நான் எழுதியிருக்கிறேன்.

சமீபத்தில் மீண்டும் அந்தப் பிரச்சனை எழுந்த போது அது பற்றி எழுத வேண்டிய அவசியம் வந்து விட்டது.

சிரம்பான் ஜாவா லேன் தமிழ்ப்பள்ளியின் பெயர் மாற்றம் குறித்து பேசியிருக்கிறார்கள்.  இப்போது அது லோரோங் ஜாவா என்று மாற்றப்பட்டிருக்கிறது.

நான் படித்த பள்ளி அருகிலேயே ஜாவா லேன் பள்ளி இருந்ததால் அந்தப் பள்ளியை நான் அறிந்திருக்கிறேன்.  அந்தப் பள்ளிக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது  என்பது இது வரைக்கும் எனக்குத் தெரியாது.  அந்தப் பள்ளியில் எனது நண்பர் ஒருவர் தலைமையாசிரியராக இருந்திருக்கிறார் அவரிடம் கூட நான் அது பற்றிப் பேசியதில்லை! 

பாரிசான் கட்சி ஆட்சியில் இருந்த போது தமிழ்ப்பள்ளிகளின் பெயர்களை மாற்ற அவர்கள் அனுமதி தந்ததில்லை.  தமிழ்ப்பள்ளிகளைக் கேவலப்படுத்த வேண்டும் என்பதில் அவர்கள் தீவிரமாக இருந்தார்கள். இன்னும் இருக்கிறார்கள்! அதனால் தான் மலாக்காவில் தமிழ்ப்பள்ளிகளின் அதிகாரியாக தமிழரல்லாதவரை போட்டிருக்கிறார்கள்!  ம.இ.கா.வினர் தட்டிக்கேட்க மாட்டார்கள் என்பது அமைச்சுக்குத் தெரியும்!

என்னிடம் ஒரு கேள்வி உண்டு. ஜாவா லேன் தமிழ்ப்பள்ளி எப்படி லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளியாயிற்று? பெயர் மாற்ற முடியாது என்றால் இங்கு எப்படி சாத்தியமாயிற்று?  அதனால் பெயர் மாற்றம் முடியும் என்றாகிறது.

பரவாயில்லை! அதை விடுவோம்.  இப்போது நெகிரி செம்பிலான் மாநிலம் பாரிசான் கட்சியின் ஆட்சியில் இல்லை. இப்போது அது எதிர்கட்சி ஆட்சியில் உள்ளது. நாம் ஏன் இதனைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை?  நெகிரி ஆட்சிக் குழுவில் இரு இந்தியர்கள் இருக்கின்றனர். அதோடு துணை சபாநாயகர் டத்தோ ரவி உள்ளார்.

இந்த நிலையில் பெயர் மாற்றம் இயலாததா?  நாம் அதில் அக்கறை காட்டவில்லை! அது தான் பிரச்சனை!

பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் இதனை செய்யலாம். செய்ய வேண்டும். ஒரு வேளை அவர்கள் ம.இ.கா. ஆதரவாளர்களாக இருக்கலாம். அதனால் நாங்கள் தொடர்ந்து எதிர்ப்பாளர்களாகவே இருப்போம் என்று நினைத்தால் அவர்கள் துரோகிகள்.

நமது மொழி, நமது பள்ளிக்கூடம் என்று வரும் போது கட்சி என்று ஒன்று வரக் கூடாது! அதனைத் தூக்கி எறிந்து விட்டு எது நமக்கு நல்லதோ அது தான் நமக்கு வேண்டும். 

சீக்கிரம் இந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும் என நம்புகிறோம்!

Tuesday, 4 August 2020

அடுத்த கட்டத்துக்கு தயாராக வேண்டும்!

அம்னோ,,  அடுத்த கட்டத்துக்குத் தயாராக வேண்டும்!

இது தான் கைரி ஜமாலுடின், ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினர்,  அம்னோவினருக்கு விடுத்திருக்கும் செய்தி.

உண்மை தான்.  அவர் விடுத்திருக்கும் செய்தியில் உண்மை உண்டு. அம்னோ நீண்ட பாரம்பரியம் உள்ள கட்சி.  நீண்ட நாள் ஆட்சியில் இருந்த கட்சி.

முன்னாள் தலைவர்களின் ஆட்சியில் சில குறைபாடுகள் இருந்திருக்கலாம். ஆனாலும் மக்களைப் பெரிய அளவில் பாதிக்கின்ற குறைபாடுகள் இருந்ததில்லை.

அளவுக்கு அதிகமான குறைபாடுகள், பெரிய குறைபாடுகள் என்றால் அந்தப் பெருமை நஜிப் ரசாக்கையே சாரும்.! அத்தோடு  அகமது சாகிட் ஹமீத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.  இப்போதைக்கு இந்தத் தலைவர்கள் தான் கண்ணுக்குப் பளிச் என்று தெரிபவர்கள். காரணம் விசாரணை இன்னும் மூடிந்த பாடில்லை!

ஆனால் அத்தோடு முடிந்துவிடவில்ல.  அம்னோ அரசியலில் உள்ளவர்கள் அனைவருக்கும்  பலர் மீது பல வழக்குகள் உண்டு.  அவர்கள் எல்லாம் இப்போது அசைக்க முடியாத தலைவர்களாக இருக்கிறார்கள்.! தொடர்ந்து இருந்தால், அவர்களே மீண்டும் ஆட்சியைப் பிடித்தால், தங்களை யாரும் அசைக்க முடியாது  என்று நம்புகிறார்கள்!

அப்படித்தான் நஜிப் ரசாக் நினைத்தார்.  ஆனால் சில மாதங்களே ஆட்சிக்கு வந்து கவிழ்க்கப்பட்ட பக்காத்தான் அரசாங்கம் அவரைக் குற்றவாளி என்று கூறி அவரைக் கூண்டில் நிறுத்தியது! அவரின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது.  இப்போதைக்கு மாதம் இரு முறை காவல்துறைக்குச் சென்று கையொப்பமிட்டு வருகிறார்!

ஆனால் மக்களின் மனநிலையை யாரும் கணித்துவிட முடியாது.  இப்படித்தான் இருக்கும் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. மக்கள் எல்லாக் காலங்களிலும், கிராமத்து மக்களாக இருந்தாலும் சரி,  என்னவோ இவர்களைத்தான் ஆதரிப்பார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

குறிப்பாக ஊழலில் சம்பந்தப்பட்ட அம்னோ தலவர்கள் நஜிப் ரசாக், அகமது சாகிட்டை ஆதரிப்போம் என்று தொடர்ந்து கூறி வந்தார்களானால் அவர்களுக்கு எதிர்காலம் இல்லை என்று தான் நாம் சொல்ல முடியும்!

அம்னோ, அடுத்த கட்டத்துக்குத் தயாராக வேண்டும் என்பது உண்மை தான். ஏதோ மக்களிடையே நல்ல பெயர் உள்ளவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் தான் இனி கட்சியைத் தொடர்ந்து வழி நடத்த வேண்டும்.

கைரி ஜமாலுதீன்  சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்!

Thursday, 30 July 2020

அரசியல்வாதிகளே! உஷார்!

அரசியல்வாதிகளே! நீங்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி,  ஊழல் செய்வதற்குத் தான் அரசியலுக்கு வருகிறீர்கள் என்றால், இப்போது நடந்து முடிந்த நீதிமன்ற வழக்கின்படி முன்னாள் பிரதமர் நஜிப்புக்கு என்ன ஆயிற்று என்பதைப் பற்றி கொஞ்சம் யோசியுங்கள்!

குற்றம் செய்தவன் தண்டனையை அனுபவித்துத் தான் ஆக வேண்டும், வேறு வழியில்லை! யாரும் தப்பிக்க முடியாது! எந்தக் கொம்பனாலும் ஓடி ஒளிந்து கொள்ள முடியாது!

ஆமாம், இது வரை தப்பித்தவன்?  யாரும் தப்பிக்க முடியாது என்பது தான் இறைவனின் நியதி!

நாம் சொல்ல வருவதெல்லாம் ஊழல் செய்து குடும்பத்திற்குச் சொத்து சேர்த்து வைக்காதீர்கள். அது எந்த வகையிலும் உங்கள் குடும்பத்திற்கு நல்லதைக் கொண்டு வராது!

சாபங்கள் ஏழு தலைமுறை தொடரும் என்பார்கள்.  மக்களின் பணம், இரத்தம் சிந்தி சம்பாதித்தப் பணம்,  நெஞ்சொடிய உழைத்துச் சம்பாதித்த பணம் இப்படித்தான் பொது மக்களின் பணம் ஊழலாக அரசியல்வாதிகளுக்குப் போய்ச் சேருகிறது.

இப்படி ஊழல் மூலம் சம்பாதிக்கும் பணம் நல்லதைச் செய்யாது என்பது மட்டும் அல்ல அந்தக் குடும்பத்திற்குச் சாபத்தைக் கொண்டு வரத் தயங்காது என்பதை மட்டும் நம்பலாம்!

ஒரு குடும்பத்தில் ஏற்படுகின்ற வன்முறைகள், கலகங்கள், விபத்துகள், அமைதியின்மை எதுவாக இருந்தாலும் சரி அனைத்துக்கும் ஒரே காரணம் ஊழல்! ஊழல்! தான்!

ஏதோ ஒன்று வரத்தான் செய்யும்! அது நமக்குத் தெரியாவிட்டாலும் அது வந்து தான் ஆகும்!

எனக்குத் தெரிந்த ஒருவன் தற்கொலை செய்து கொண்டான்! ஒருவன் ஒரு கும்பலால் கொல்லப்பட்டான்! ஒருவன் ஒரு நோயாளியாக இளம் வயதிலேயே இறந்து போனான்! ஒருவன் தனது ஒரே ஒரு மகனின் வைத்திய செலவுக்காக எல்லாச் சொத்துக்களையும் இழந்தும் மகனைக் காப்பாற்ற முடியவில்லை! ஒருவன் வெறித்தனமாக நடமாடிக் கொண்டிருக்கிறான்!

 இப்போது அரசியல்வாதிகளாக வருபவர்கள் அனைவரும் படித்தவர்கள். உங்கள் பெற்றோர்கள் உங்களுக்கு நல்ல கல்வியைக் கொடுத்திருக்கிறார்கள். அதனைப் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறுங்கள். 

ஊழல் செய்து தான் பிழைப்பை நடத்த வேண்டும் என்றால் அப்படி ஒரு பிழைப்பு வேண்டாம்!

Tuesday, 28 July 2020

அஞ்சா நெஞ்சன்!

தமிழ் நாட்டில் "அஞ்சா நெஞ்சன்!" என்று சொன்னால்  குறிப்பிட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்தவர் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.  அது சும்மா ஓர் அடுக்கு மொழிக்காக வைக்கப்படுவதே தவிர மற்றபடி அவருக்கும் அஞ்சா நெஞ்சனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!

அது ஒரு பெரிய வீராதி வீரனுக்குப் போய் சேர வேண்டிய ஒர் அடைமொழி.  ஆனால் என்ன செய்வது? அது போக வேண்டிய இடத்திற்குப் போய்ச் சேரவில்லை! இடையிலேயே அரசியல்வாதிகளால் கடத்திச் செல்லப்பட்டு, இப்போது ரௌடிகளுக்குப் போய் சேர்ந்துவிட்டது!

நம் நாட்டில் அஞ்சா நெஞ்சன் என்றால் யாரைச் சொல்லலாம்?  யோசித்துப் பார்த்தால் நமது முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இதற்கு மிகப் பொருத்தமானவர் என்று தோன்றுகிறது!

நமது தானைத் தலைவர் துன் சாமிவேலு இந்தியர்களுக்கு மட்டும் தான் துரோகம் செய்தார்!  ஆனால் நஜிப் அனைத்து மலேசியர்களுக்கும் துரோகம் செய்தவர்!

 இன்னும் சில காலம் பதவியில் இருந்திருந்தால் நாட்டை சீனாவுக்கு அடகு வைத்திருப்பார்! ஒரு பிரதமர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு மிகப் பொருத்தமானவர் நஜிப். 

உலகில் யாரும் செய்யாத அளவுக்கு, பதவியில் இருந்து கொண்டு, பல அநியாயங்களைச் செய்தவர். அவர்,  மனைவியின் தூண்டுதலால் தான் அத்தனையும் செய்தார் என்று மக்கள் பேசிக் கொண்டாலும் சட்டத்தின் முன் அதெல்லாம் எடுபடாது!

ஆனால் எல்லாக் குற்றங்களையும் செய்துவிட்டு "நான் அவனில்லை!" என்று அஞ்சாமல் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நாட்டுக்குள் வலம் வந்து கொண்டிருந்தாரே அதனை யாரால் செய்ய முடியும்! அந்த தைரியம், அந்த துணிவு யாருக்கு வரும்! அதைக் கண்டு நான் வியக்கிறேன்! 

"நான் குற்றவாளி இல்லை!" என்று, அத்தனை குற்றங்களையும் செய்துவிட்டு, யாரால் இப்படிப் பேச முடியும்! மிகவும் நெஞ்சுறுதி மிக்க மனிதர்! வெறும் பண மோசடி மட்டும் தான் அவர் மீது உள்ள குற்றச்சாட்டுக்களா? இல்லை! வேறு குற்றச்சாட்டுகளும் உண்டு! ஆனால் தனது பதவியைப் பயன்படுத்தி அனைத்தையும் மறைத்து விட்டாரே! அது சாதாரண விஷயமா! ஒன்றைத் தொட்டால் இன்னொன்று தொடரும்! முடிவே இல்லை! ஆனால் அனைத்தையும் அவரால் மறைக்க முடிந்ததே!  மற்றவர்களால் முடியுமா?

உண்மையில் அஞ்சா நெஞ்சன் என்றால் அதற்குப் பொருத்தமான மனிதர் முன்னாள் பிரதமர் நஜிப் தான்!  வேறு எவரும் அவரை நெருங்க முடியாது!

அத்தனை அட்டூழியங்களையும் செய்து விட்டு தேர்தல் கூட்டங்களில் கலந்து கொள்கிறார், வீர வசனம் பேசுகிறார், மற்றவர்களைக் கிண்டல் அடிக்கிறார் - அடாடா! என்ன சாமர்த்தியம்!  என்ன சாதுரியம்! 

இந்நாட்டு மக்களை மடையர்கள் என்று ஒரு தீர்மானத்திற்கு வந்துவிட்டார்! அதனால் தான் இப்படியெல்லாம் அவரால் பேச முடிகிறது!

ஆனால் அவர் ஒன்றை மறந்துவிட்டார். இறைவன் ஒருவன் உண்டு என்பதை மறந்து விட்டார்!

நாம் இறைவனை நம்புவோம்!

Monday, 27 July 2020

பக்கத்தான் கட்சிக்கு ஒரு சபாஷ்!



பக்காத்தான் ஆட்சி 18 மாதங்களே நீடித்தாலும் ஒரு சில விஷயங்களை அவர்களால் தீர்க்க முடிந்ததற்காக அவர்களைப் பாராட்டலாம்!

சான்றுக்கு ஜொகூர், நியோர் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் கட்டடம் பல ஆண்டுகளாக இழுபறி நிலையில் இருந்தது என்பது நமக்குத் தெரியும்.

ம.இ.கா. வினரால் அதனை வெவ்வேறு காரணங்களைச் சொல்லி இழுத்துக் கொண்டே போக முடிந்ததே தவிர கட்டடம் ஒரு முடிவுக்கு வந்த பாடில்லை! அவர்களைச் சொல்லியும் குற்றம் இல்லை. 

கல்வி இலாகாவில் உள்ள கடைநிலை ஊழியன் கூட ம.இ.கா.வினரை மதிப்பதில்லை! பாரிசான் ஆட்சியில் என்ன நடந்தது, என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியாதா, என்ன? 

அதனால் அவர்கள் என்ன தான் தலை கீழாக குட்டிக்கரணம் போட்டாலும் அவர்கள் விரும்பியதை அவர்களால் செய்ய முடியவில்லை என்பது தான் உண்மை! அதனால் அவர்களுக்குள்ளேயே அனைத்தையும் செய்து கொண்டு சமுதாயத்தை மறந்து போனார்கள்!  சரி. அவர்களாவது பிழைத்துப் போகட்டும் என்று நாமும் விட்டுவிட்டோம்!

ஜொகூரில் இன்னும் ஒரு சில பள்ளிகள் பிரச்சனைகளோடு தான் இருக்கின்றன. ஆனால் என்ன செய்வது? நமது கஷ்ட காலம்! பக்காத்தான் ஆட்சி கவிழ்ந்தது!  அதனால் அந்தப் பள்ளிக்கூடங்களுக்கு இப்போது  எந்த விடிவு காலமும் வரப் போவதில்லை!

அதனால் ம.இ.கா.வினர் என்ன சொல்லுகிறார்களோ அதைத்தான் நாம் கேட்க வேண்டும்! அவர்கள் நிறையவே சொல்லுவார்கள்! எதுவும் கதைக்கு உதவாது!  ஒரு காதில் கேட்டுவிட்டு அந்தக் காதிலேயே விட்டுவிட வேண்டியது தான்! அடுத்தக் காதுவரை கொண்டு போக வேண்டியதில்லை! 

இப்போதைக்கு நியோர் தோட்டத் தமிழ்ப்பள்ளியைக் கட்டி முடிக்க உதவியாக இருந்த முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணனைப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.

மீண்டும் பக்காத்தான் ஆட்சிக்கு வரும்!  ம.இ.கா. விட்டுவிட்டுப் போன மிச்சம் மீதி வேலைகளைப் பக்காத்தான் அரசு தான் செய்ய வேண்டி வரும்!  வேறு வழியில்லை!

பக்காத்தான் கட்சியினருக்கு ஒரு சபாஷ்! உங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன்!

இதை நம்பலாம்!

நாம் மீண்டும் சுகுபவித்ரா தம்பதியினரைப் பற்றித்   தான் பேச வேண்டியுள்ளது!

காரணம் 'ஆம்! இல்லை!'  என்கிற பாணியிலேயே பல செய்திகள் வருவதால் எதனையும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை! 

கடைசியாகக் கிடைத்த செய்தி நம்பகரமான செய்தியாக இருக்கும் என நம்புகிறேன்.

அத் தம்பதியினர் தொடர்ந்து காணொளியின் மூலம் அவர்களது சமையற்கலை நிகழ்ச்சியினைத் தொடர வேண்டும் என்பதே என்னைப் போன்றோர் விரும்புகின்றனர். அது மக்களின் விருப்பமும் கூட! அதில் சந்தேகம் இல்லை!

பொதுவாக நான் எந்த சமையற்கலை நிகழ்ச்சிகளையும் பார்ப்பதில்லை. அது எனது பாதையல்ல!

ஆனால் ஒரு தமிழ்க் குடும்பத்தின் முன்னேற்றம் என்பது நமது தமிழர்களின் முன்னேற்றம் என்கிற அசையாத நம்பிக்கை உள்ளவன் நான்.  அவர்களது பொருளாதார வளர்ச்சி என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் பொருளாதார வளர்ச்சி. 

ஒவ்வொரு தமிழ்க் குடும்பமும் யாரையும் நம்பாமல் தங்களைத் தாங்களே வளர்த்துக் கொள்ளுவதில் அக்கறைக் காட்டினால் போதும்!  நமது சமுதாயம் பொருளாதார ரீதியில் தலை நிமிர்ந்து விடும்!

அந்த வகையில் சுகுபவித்ரா தம்பதியினரை நான் இரு கரம் கூப்பி வரவேற்கிறேன்! அவர்களின் வளர்ச்சி அசாதாரண வளர்ச்சி!

அது தொடர வேண்டும் என்பதே எனது அவா. அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் பெற வேண்டும் என்பதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை!

அவர்களின் வளர்ச்சி என்பது அவர்களது குடும்பத்தின் வளர்ச்சி. அவர்களது பிள்ளைகளின் வளர்ச்சி. அவர்களது உறவுகளின் வளர்ச்சி. அவர்களது உற்றாரின் வளர்ச்சி.

ஒரு குடும்பம் முன்னேற்றம் அடையும் போது அதனைக் கெடுக்க நாலு குடிகார நாதாரிகள் குறுக்கிடத் தான் செய்வார்கள்! அவர்களை ஒதுக்கிவிட்டு நமது முன்னேற்றத்தைத் தான் நாம் கவனிக்க வேண்டும். 

இந்த சமையற்கலை என்பது ஒரு கூட்டு முயற்சி. கணவன் மனைவி இருவரும் சேர்ந்து தான் இந்த வெற்றிக்குக் காரணமானவர்கள்.  இதனைத் தனித்து ஓர் ஆளாக செயல்பட முடியாது. 

அதனால் கண்வன் மனைவி இருவரும் சேர்ந்து இக்கூட்டு முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.

குரைக்கின்ற நாயகள் குரைக்கட்டும்! 

உங்கள் நலனுக்காக இலட்சக்கணக்கான மக்கள் பிரார்த்தனை செய்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்! அவர்களது விருப்பத்தை நிறைவேற்றுங்கள்!

Saturday, 25 July 2020

இது சரியான பாதை என்பதை ஒப்புக்கொள்ளலாமா?

ம.இ.கா. தேசியத் தலைவர்  டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சரியான கருத்தைச் சொல்லியிருக்கிறார். .

இனி வருங்காலங்களில் தேர்தலில் போட்டியிடும் போது  இந்தியர்களின் பாரம்பரியத் தொகுதி, இந்தியர்கள் அதிகம் வசிக்கும் தொகுதி என்று பிரித்துப் பார்க்காமல் "வெற்றி பெறும் சாத்தியம் உண்டா?" என்னும் அடிப்படையில் தான் போட்டியிட முடிவு செய்யப்படும் என்பதாகக் கூறியிருக்கிறார்.

இது சரி தானா என்று கேட்கலாம் என்றாலும் வேறு என்ன தான் வழி என்று கேட்கவும் தோன்றுகிறது! 

இந்தியர்கள் தொகுதி என்றாலே அங்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் என்பது நமக்குத் தெரியும்.  பள்ளிக்கூடப் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவே இல்லை!  அத்தனையும் ம.இ.கா.வால் ஏற்பட்ட பிரச்சனைகள்.  

பள்ளிக்கூடங்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலங்களை ம.இ.கா.தலைவர்கள் எடுத்துக் கொண்டார்கள்! பேராக் மாநிலத்தில் தமிழ்ப்பள்ளிகளுக்காக ஒதுக்கப்பட்ட 2000 ஏக்கர் நிலத்தை ,ம.இ.கா. தலைவர்கள் ஒதுக்கிக் கொண்டார்கள்!

இவைகள் மாதிரிகள் தான். இது ஓரு மேலோட்டம், அவ்வளவு தான். இன்னும் ஆழமாகப் போனால் நாறும்! அது வேண்டாம்!

கேமரன் மலையில் விவசாயிகளின்  ஒரு ஏக்கர் நிலத்திற்கு ரி.ம. 4500.00 வாடகை!  எத்தனையோ ஆண்டுகள் ம.இ.கா. தான் கொடிகட்டிப் பறந்தது! அதற்கு ஒரு தீர்வு காணப்படவில்லை! இப்போது மூன்று கட்சிகளும் வாடகையைப் பங்குப் போட்டுக் கொள்கின்றனர் என்று சொல்லப்படுகின்றது!

இதனையெல்லாம் நம்ப வேண்டாம் என்றாலும், ம.இ.கா. வின் கடந்த கால சம்பவங்களைக் கொஞ்ச திரும்பிப் பார்த்தால் "அவர்கள் அதனை செய்ய எல்லாத் தகுதியும் உள்ளவர்கள்தான்!" என்று தான் நம்ப வேண்டியுள்ளது!

இந்த நிலையில் இந்தியர்கள் தொகுதி என்று சொல்லிப் போட்டிப் போடுவதை விட எங்கு வெற்றி பெற முடியும் என்பதைத் பார்த்து போட்டிப் போடுவதே ம.இ.கா.வின் எதிர்காலத்திற்கு நல்லது என்று தான் சொல்ல வேண்டும்!

நம்மைக் கேட்டால் ம.இ.கா. இனி இந்தியர்களை நம்ப வேண்டாம் என்று தான் சொல்லத் தோன்றுகிறது!

ம.இ.கா. தலைவர் செல்வது சரியான பாதை தான்!

 

மீண்டும் உங்கள் பணி தொடர வேண்டும்!

யூடீயுப் பிரபலம், சுகுபவித்ரா தம்பதியினர் தங்களது சமையல் கலையின் திறமைகளைத் தொடர்ந்து ,மக்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும். 

குடும்பத்தில் ஏற்பட்ட சில தடுமாற்றங்களால் தம்பதியினர் தடுமாறிப் போயினர் என்பது தான் உண்மை. 

வாழ்க்கையில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள், எதிர்பாராத திருப்பங்கள், மகிழ்ச்சியானது தான் என்றாலும், அதனை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இன்னும் இவர்களுக்கு வரவில்லை! இது போன்ற திடீர் மாற்றங்கள் வாழ்க்கையில் ஏற்படும் போது யாராக இருந்தாலும் தடுமாறித்தான் போவார்கள்! 

அது தான் இவர்களுக்கும் நடந்திருக்கிறது!

பயப்பட ஒன்றுமில்லை! நடந்தவை ஒரு கனவாகப் போகட்டும்! நடந்தது நடந்தது தான்! நடந்ததைப் பற்றி பேசிப் புண்ணியமில்லை. இனி நடக்கப் போவதில் தான் கவனம் செலுத்து வேண்டும்.

எதிர்காலம் தான் முக்கியம். தொழிலின் எதிர்காலம், குழைந்தைகளின் எதிர்காலம் - இவைகளை நாம் அலட்சியப்படுத்த ,முடியாது.

தெரிந்த ஒரு கலையை சும்மா தூக்கி விசிவிட முடியாது!அந்தக் கலை நம்மை வாழ வைக்கும் கலை. பல்லாயிரம் மக்களைக் கவர்ந்த ஒரு கலை.

எத்தனையோ பேர்  சமையற் கலையை யூடீயுப்பில் முயற்சி செய்தார்கள். அதில் வெற்றி பெற்றவர்கள் ஒரு சிலர் தான். 

ஆனால்  எடுத்த எடுப்பில் மாபெரும் வெற்றி என்றால் அது சுகுபவித்ரா தம்பதியினர் தான்.  காரணம் அவ்ர்களிடம் உண்மை இருந்தது. ஓர் அப்பாவித்தனம் இருந்தது. எந்த முன் தயாரிப்பும் இல்லாத ஓர் எளிமை இருந்தது. அத்தோடு நடைமுறை மலாய்  மொழியிலும் ஒரு திறமை இருந்தது.

இவைகள் எல்லாம் சேர்ந்து தான் அவர்களுக்கு ஏற்பட்ட இந்த மாபெரும் வெற்றி. இவர்களில் யார் பெரியவர் அல்லது சிறியவர் என்கிற பேதம் ஒன்றும் இல்லை. இருவருமே சேர்ந்து தான் இந்த வெற்றியைக் கொண்டு வந்திருக்கிறார்கள். 

அவர்கள் மீண்டும் தொழிலுக்கு வருவது நமக்கு மகிழ்ச்சியளிக்கிறது  கடந்த காலங்களைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் இனி வருங்காலத்தை எப்படி வெற்றிகரமாக எதிர்கொள்வது என்பதை யோசித்தால் போதும்.

ஒரே தவற்றை இருமுறை செய்வது என்பது தொழிலில் ஏற்றுக்கொள்ள படாது! பழைய தவறுகளைச் செய்ய வேண்டாம்! அதனைச் சுட்டிக்காட்டிப் பேசவும் வேண்டாம்!

எல்லாம் நன்மைக்கே! என நினைத்து வருங்காலத்தை எதிர் கொள்ளுங்கள்!

தொடருங்கள் உங்கள் பணிகளை! வாழ்த்துகள்!

Thursday, 23 July 2020

குடித்துச் சீரழியும் சமுதாயம்!

சில சமயங்களில் சில சங்கடங்களை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியுள்ளது!

குடித்துக் கெட்ட சமுதாயம் என்று பெயர் எடுத்தவர்கள் நாம்! அதிலிருந்து நாம் இன்னும் விடுபடவில்லை! 

அது போதாது என்று சட்டைக்குள் அரிவாளை பதுக்கி வைக்கும் ஒரு கலாச்சாரத்தையும் நம் சினிமா கதாநாயகர்கள் நமது இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார்கள்!

அறிமுகப்படுத்திய கதாநாயகர்களுக்குக் கோடிக்கணக்கில் பணம் கொட்டுகிறது!  அவர்களைப் பின்பற்றும் நமது இளைஞர்களுக்கோ காவல்துறையினர் மூலம்  கொட்டு கொட்டு என்று கோடிக்கணக்கில் கொட்டு விழுகிறது! குடும்பம் சிதறுகிறது! பிள்ளைகள் அனாதைகளாகின்றனர்! 

சினிமா  என்பதை சினிமா தியேட்டர்களோடு முடித்துக் கொள்ள வேண்டும். சினிமா நடிகர் என்ன பண்ணுகிறார் என்கிற அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை நமக்குத் தேவை இல்லாதது!

சினிமா நடிகன் குடிகாரனாக இருந்தாலும் அவன் குடும்பம் சீரழிந்து போகும் என்பதற்கு நமக்கு நிறைய எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. நமது நிலை என்ன? அவனை விடப் பொருளாதார ரீதியில் மிகத் தாழ்ந்த நிலையில் இருக்கிறோம்! நாம் குடிகாரன் என்று பெயர் எடுத்தால் நமது குடும்பம் தாங்குமா?

நமது வயதான மூத்தக்குடிமக்கள் குடிகாரர்களாக இருந்ததற்குப் பல காரணங்கள் உண்டு.  அப்போது அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறை இப்போது இல்லை. குடித்து நமது அசதிகளைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்கிற அவசியம் இப்போது இல்லை. 

ஆனாலும் நமது குடிப்பழக்கம் ஒழிந்து போனதாகத் தெரியவில்லை! ஏதேதோ காரணங்கள் சொல்லி அதனை உயிர்ப்பித்துக் கொண்டே இருக்கிறோம்!

நமது பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகத்திலேயே குடிக்கிறார்கள் என்கிற உண்மை நமக்குத் தெரியும்  அவர்கள் பெற்றோர்களிடமிருந்து அதனைக் கற்றுக் கொள்கிறார்கள். அதிலும் ஒரு சில மாணவர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு குடிக்கிறார்கள்! இதில் பெண்களின் பங்கும் உண்டு!

குடிகாரன்,  அப்பா அம்மா சொன்னால் கேட்க மாட்டான். சகோதரன் சொன்னால் கேட்க மாட்டான். மனைவி சொன்னால் கேட்க மாட்டான். பெற்ற பிள்ளைகள் சொன்னால் கேட்கமாட்டான்.

சட்டம் தனது கடமையைச் செய்ய வேண்டும். கடுமையான தண்டனைகளைக் கொடுக்க வேண்டும். காவல்துறையினர் 'சாத்து!சாத்து!' என்று சாத்தினால் தான் அவனுக்குப் புத்தி வரும்!

இந்த சமுதாயம் இப்படியே தான் போய்க் கொண்டிருக்குமா என்பது புரியாத புதிராக இருக்கிறது! தலைவன் என்று சொல்லுபவனும் குடிக்கிறான்! தொண்டன் என்று சொல்லுபவனும் குடிக்கிறான்! தொழிலதிபன் என்பவனும் குடிக்கிறான்!  தொழிலாளி என்று சொல்லுபவனும் குடிக்கிறான்!

குடியை என்னால் நிறுத்த முடியாது என்று சொல்லுபவனுக்காக இதனைச் சொல்லுகிறேன். நண்பனே! உன் உழைப்பின் அசதி தீர இரவு நேரத்தில், உன் வீட்டில், அளவாகக் குடித்து உனது அசதியைப் போக்கிக் கொள். அதன் பின் தூங்கிவிடு! உனது நண்பர்களைச் சேர்த்துக் கொள்ளாதே! நீ குடிப்பது உன் பிள்ளைகளுக்குத் தெரிய வேண்டாம்!

அது போதும்! உன்னை யாரும் குடிகாரன் என்று சொல்லப் போவதில்லை! உன் குடுமபத்திற்கு எந்த பாதிப்பும் வரப் போவதில்லை.

அளவோடு குடித்தால் உன் குடும்பம் சீரழியாது. உன்னால் சமுதாயத்திற்கும் எந்த கெட்டப் பெயரும் ஏற்படாது! உனது வேலைகளும் தடைப்படாது.

நண்பா! எல்லாவற்றையும் சிந்தித்துச் செயல்படு. உன்னால் உன் குடும்பம் பெருமைப்பட வேண்டும். உன் சமுதாயம் பெருமைப்பட வேண்டும். உன் உறவுகள் பெருமைப்பட வேண்டும்.

குடி, சீரழிக்கும்! சிறைக்கம்பிகள் உனக்காகக் காத்திருக்கும்! 

சீரழியாதே!

Wednesday, 22 July 2020

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்!

இந்த பழமொழிக்குச் சரியான எடுத்துக்காட்டு நமது முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் தான்!

அவர் அரசியலில் புகுந்த போது யார் யாரையோ, எவர் எவரையோ குற்றம் சொன்னார்.  அப்படிக் குற்றம் சொன்னாரே தவிர மற்றபடி யாரும் அவரது குற்றச்சாட்டைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை! 

சுதந்திரத் தந்தை என்று போற்றப்படும் ,  முன்னாள் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான். சிங்கப்பூர் தலைவர்கள் - இவர்களைப் பற்றியெல்லாம் ஏராளமானக் குற்றச்சாட்டுக்களை அடுக்கடுக்காக பல குற்றசாட்டுகளை வைத்தவர் இவர். 

ஆனால் என்ன ஆயிற்று? துங்கு நல்ல பெயரோடு தான் போய்ச் சேர்ந்தார். சிங்கப்பூர் இன்று தலை நிமிர்ந்து நிற்கிறது! 

இவரது ஆட்சியில் என்ன செய்தார்? பல கொள்ளைக்காரர்களை உருவாக்கினார் முன்னாள் பிரதமர் நஜிப் உட்பட!  இன்று நஜிப் என்ன சொல்லுகிறார்? டாகடர் மகாதிரின் பிள்ளைகள் எப்படிக் கோடிசுவரர்கள் ஆனார்கள் என்று கேளவி கேட்கிறார்!

டாக்டர் மகாதிரின் சாதனை என்பது கொள்ளைக்காரர்களை உருவாக்கியது தான். அது மட்டும் அல்லாமல்அன்று முதல் இன்று வரை தன்னோடு பணிபுரிந்தவர்களை யாரையும் நல்லவர் என்று இதுவரை அவர் சொன்னதில்லை!

எப்போது மற்றவர்களைக் கெட்டவர்கள் என்று சொல்ல ஆரம்பித்தாரோ  அன்றிலிருந்து இன்றுவரை அது தொடர்கிறது! அந்த குற்றச்சாட்டை இன்னும் அவர் நிறுத்தவில்லை!

அவருக்குப் பின் பிரதமராக வந்தவர்கள் எல்லாம் அவரால் உருவாக்கப்பட்டவர்கள்.  ஆனால் அவர்கள் யாரையும் நல்லவர்கள் என்று இவர் சொன்னதில்லை! அப்படியென்றால் அவர்கள் சரியானபடி வார்த்து எடுக்கப்படவில்லை என்று தானே சொல்ல வேண்டியுள்ளது! அது யார் குற்றம்?

அப்படி என்ன தான் இவர் சொல்ல வருகிறார்? தன்னைத் தவிர மற்றவர்கள் ஆட்சி செய்ய இயலாது என்று சொல்லுகிறார்!

இதைத்தான் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை  சொல்லி வருகிறார்! அவர் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ஷாஃபியைக் கூட நல்லவர் என்று லிம் குவான் எங் தான் பரிந்துரைத்திருக்கிறார்! இவர் அல்ல!

இந்த 95-வது வயதிலும் இவர் இப்படி நடந்து கொள்ளுவது நமக்கே சங்கடத்தைத் தருகிறது!

சுடுகாடு வரை இப்படித்தான் இருப்பாரோ!

Tuesday, 21 July 2020

அப்படியா! ரொம்ப சந்தோஷம்!

 நெகிரி மாநிலத்தில் கடந்த இரண்டு வாரங்களில் எந்த ஒரு கொரோனா தொற்று நோயும் புதிதாகப் பதிவு செய்யப்படவில்லை என்பதாக சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் எஸ்.வீரப்பன் கூறியுள்ளார்.

அதாவது மருத்துவமனையில் இப்போது யாருக்கும் சிகிச்சை அளிக்கப்படவில்லை.  புதிய இறப்புக்கள் இல்லை. புதிய திறப்புக்களும் இல்லை!

நீண்ட நாட்களாக சிவப்பு மண்டலமாக இருந்த ரெம்பாவ் வட்டாரம் கூட பச்சை மண்டலத்திற்குள் வந்துவிட்டது!

அப்படியென்றால் நமக்கு மகிழ்ச்சி தானே!

ஆனாலும் மகிழ்ச்சி அடைய முடியவில்லை. பிரதமர் "நீங்க ஒழுங்கா இல்லேன்னா மீண்டும் ஊரடங்கு வரும்!" என்கிறார்!   "மீண்டும் முகக்கவசத்தை அணியுங்கள்! அது முக்கியம்!" என்கிறார்!

கொஞ்சம் யோசித்தால் ஒன்று புரியும்.  "என்றும் துன்பம் இல்லை சோகம் இல்லை!"  என்று பட்டுக்கோட்டையாரின் பாடலை பாடிக் கொண்டிருக்க வழி இல்லை!

நெகிரி செம்பிலானில் இரண்டு வாரங்களாக கொரொனா 19 இல்லையென்றாலும் மாநிலத்தில் எல்லாக் கதவுகளும் இழுத்து மூடப்பட்டு விட்டன என்று சந்தோஷப்பட வழியில்லை! எல்லைகள் எல்லாம் வருக! வருக! என வரவேற்றுக் கொண்டு தான் இருக்கின்றன!

இங்கிருந்து வெளி மாநிலங்களுக்குப் போவதும் வெளி மாநிலங்கலிலிருந்து இங்கு வருவதற்கும் எந்தத் தடையுமில்லை! தடையுத்தரவும் இல்லை! அப்படிப் போடவும் வழியில்லை!

இந்த நிலையில் கொரோனா வரவே வராது என்று எந்த உத்தரவாதமும் இல்லை! எந்த நேரத்திலும் வரலாம்!  எந்த நேரத்திலும் போகலாம்! 

அதனால் நாம் கட்டுப்பாடோடு தான் இருக்க வேண்டும். அரசாங்கம் சொல்லுகின்ற கட்டுப்பாடுகளை ஏற்க வேண்டும்.

இப்போதைக்கு பிரதமர் சொல்லுவது போல முகக்கவசம் அணிவது அவசியம்.  சிவப்பு மண்டலங்களில் உள்ளவர்கள் இன்னும் அதிகமாக பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும்!

இப்போது, இன்றைய நிலையில், நெகிரி செம்பிலானில் உள்ள நிலவரம் நமக்கு மக்ழ்ச்சி தான்! அது தொடர வேண்டும் என்பதே நமது பிரார்த்தனை!

சந்தோஷம் நீடிக்க வேண்டும்!

Monday, 20 July 2020

பொறுத்தவர் பூமி ஆள்வார்!

பொறுத்தவர் பூமி ஆள்வார்! இப்படி ஒரு பழமொழி நம்மிடையே உண்டு. 

கெடாவில் பாஸ் அரசாங்கத்தில் ஒர் இந்து கோயில் உடைபட்டது. எந்த ம.இ.கா. தலகளோ, தளபதிகளோ,  சுப்பர்களோ, சுப்ரீம்களோ எதுவுமே 
 வாய்த் திறக்கவில்லை!

பொதுவாக அவர்களைப் பற்றி நமக்குத் தெரியும். நல்லது நடந்தால் "நாங்கள் தான்!" என்பார்கள்! கெடுதல் நடந்தால் "நாங்களில்லை!" என்பார்கள்!  இந்துப் பெரு மக்களும் "நான் அவனில்லை!" என்று போய் விடுவார்கள்!

ஆனால் ரொம்ப நாளைக்குப் பிறகு இப்போது தான் ஒரு விஷயம் அம்பலத்திற்கு வந்திருக்கிறது! 

அமைதியைக் கடைப்பிடித்தால் அதிர்ஷ்டம் நம் வீட்டைத் தேடிவரும் என்று நமது அரசியல்வாதிகள் அறிந்து வைத்திருக்கிறார்கள்!

பரவாயில்லை! முன்னாள் துணைக் கல்வி அமைச்சருக்கு, அவர் இந்திய சமுதாயத்திற்குச் செய்த சேவைக்கு, காலங்கடந்து, பெரிகாத்தான் அரசாங்கத்தில், அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒன்றை நினைவில் வையுங்கள், பெரிகாத்தான் என்பது பாரிசானின் நிழல்!

ஆனால் நமக்கு வருத்தமில்லை.  உண்மையைச் சொன்னால் யார் யாரோ அந்தப் பதவிக்கு அடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அதனைத் தமிழர் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறதே, அதுவரை நமக்கு மகிழ்ச்சி தான். 

இதோடு நிறுத்திக் கொள்ளாமல்  மற்ற தல தளபதிகளுக்கும் வேறு பதவிகள் கிடைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறோம். வருத்தப்பட ஒன்றுமில்லை!

சமுதாயத்திற்குத் தான் அவர்களால் எந்தப் பயனுமில்லை! அவர்களது வாழ்க்கையாவது வளமாக இருக்கட்டுமே! 

இனி அவர்களால் ஜனநாயக தேர்தல் மூலம் எதையும் சாதிக்க முடியாது என்பது அவர்களுக்கும் தெரியும், நமக்கும் தெரியும்!  இனி இப்படித்தான் அவர்கள் வாழ்க்கையை ஓட்ட வேண்டும்!

எது எப்படி இருந்தாலும் சரி! டத்தோ கமலநாதனுக்கு நமது வாழ்த்துகள்! சபா துறைமுக வாரியத்தின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறோம்!

வாழ்த்துகள்!


Sunday, 19 July 2020

உணவகங்கள் மூடல்!

உணவகங்கள் மூடல் என்பது வேதனையான செய்தி தான்!

சிலாங்கூரில் சுமார் 25 உணவகங்கள் மூடும்படியான உத்தரவை சுகாதார அமைச்சிடமிருந்து பெற்றிருக்கின்றன.

ஒன்று: அவைகள் சுகாதாரத்தோடு இருக்கவில்லை.  இன்னொன்று: சமுக இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை.

இதில் முதலாவது மிகவும் கண்டிக்கத்தக்கது. நாமெல்லாம் சிறு வயதிலேயே படித்திருக்கிறோம் சுத்தம் சுகம் தரும் என்று. நமது பெரியவர்களும் நமக்குச் சொல்லிவிட்டு போயிருக்கிறார்கள். 
அது போதும். வேறு எந்த விளக்கமும் தேவை இல்லை. வீட்டில் சுத்தம் இல்லை என்றால் நமக்குச் சாப்பிடப் பிடிக்குமா?

ஒரு முறை குளுவாங்கில் உள்ள ஒரு உணவகத்திற்குச் சென்றிருந்தேன். அங்கிருந்த கழிவறையில் சிறுநீர் கழிக்க வேண்டிய சூழல். அந்த இடத்தைப் பார்த்ததுமே அங்குச் சாப்பிட வேண்டும் என்கிற எண்ணமே இல்லாமால் போய்விட்டது! உணவகம் என்னும் போது எல்லாமே சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். சுத்தம் செய்ய வேலையாள் இல்லையென்றால் முதலாளி தான் பொறுப்பெடுத்து சுத்தம் செய்ய வேண்டும்.  அப்படி செய்பவர்கள் தான் முதலாளி என்கிற பொறுப்புக்குத் தகுதியானவர்கள். 

இதற்கு நான் முக்கியத்துவம் கொடுப்பதற்குக் காரணம் கிட்டத்தட்ட மூன்று, நான்கு மாதங்கள் வியாபாரமே இல்லாத சூழல். வருமானம் இல்லாமால் சிரமப்பட்டு, உணவகங்கள் அடைப்பட்டுக் கிடந்தன.  உணவகங்கள் திறக்கும் போது "சுத்தம் இல்லை!" என்று சொல்லி அடைக்கச் சொன்னால் அதனை என்னவென்று சொல்லுவது? இது அக்கறையற்ற போக்கு என்று தானே சொல்ல வேண்டும்!

சமூக இடைவெளி என்பது கொஞ்சம் சிக்கலான பிரச்சனை. குடும்பத்தோடு வருபவர்கள் அதனைக் கடைப்பிடிப்பது சிரமம் தான்! இளைஞர் கூட்டம் வந்தால் அவர்களிடம் எடுத்துச் சொல்லி சமாளிக்கலாம்.  அதுவும் சொல்வதைக் கேட்கக் கூடியவர்களாக இருந்தால்! அதிகப்படியான நாற்காலிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்! சீன உணவகங்களில் அப்படித்தானே செய்கிறார்கள். எப்படியோ அது நமது சாமர்த்தியம்!

ஏதோ காரணங்களைச் சொல்லி இப்படி வியாபாரம் தடைப்படுவது நல்லதல்ல.  நமது பொறுப்புக்களை நாம் சரியாகச் செய்தால் தடைப்படுவதைக் தவிர்த்து விடலாம்!

எப்படியோ இவைகளையெல்லாம் சமாளித்துத் தான் வியாபாரம் செய்ய வேண்டும்.

கொரோனா தொற்று நோயையே சமாளிக்கத் தெரிந்த நமக்கு இது முடியாதா, என்ன?


ஏன் இந்தியத் திரைப்படங்கள் ?

நமது நாட்டில தயாரிக்கப்படும் படங்கள் என்றால் அது தமிழ்த் திரைப்படங்கள் மட்டுமே.

அதனை ஏன் இந்தியத் திரைப்படங்கள் என்கிறோம்? அப்படி இங்கே தெ;லுங்கு,  மலையாளம், கன்னடம் திரைப்படங்கள் தயாரித்தால் இந்தியத் திரைப்படங்கள் என்பதில் எந்தப் பிரச்சனையும் எழ நேரிடாது. அப்படித்தான் நான் நினைக்கிறேன்.

இதனை ஏன் நான் சொல்லுகிறேன் என்றால் தமிழ் நாட்டில் இப்படி ஒரு பிரச்சனை தலை தூக்கியது! ஆனால் இது நாள் வரை அந்தப் பிரச்சனை தீர்ந்த பாடில்லை!

தென்னிந்திய திரைப்படங்களைப் பற்றி குறிப்பிடும் போது: தெலுங்கு திரைப்பட சங்கம், மலையாள திரைப்பட சங்கம், கன்னட திரைப்பட சங்கம்  என்கிறார்கள் ஆனால் தமித் திரைப்படங்கள் என்று வரும் போது அதனை தென்னிந்திய திரைப்பட சங்கம் என்கிறார்கள்! 

ஆனால் இன்றுவரை இந்தப் பிரச்சனை தீர்ந்தபாடில்லை!

இங்கு நமது நாட்டில் அப்படி ஒரு பிரச்சனை இருக்கக் கூடாதே என்கிற நோக்கத்தில் தான்,  நான் இதனை எழுதுகிறேன்.

நடிப்பவர்கள் தெலுங்கர்களாக இருக்கலாம், மலையாளிகளாக இருக்கலாம், கன்னடர்களாக இருக்கலாம்!  திரைப்படங்கள் என்பது அப்படித்தான் இருக்கும்.

இங்குத் தமிழைத் தவிர அனைத்தும் மொழிவாரியாகத் தான் குறிப்பிடப்படுகின்றது. தமிழுக்கு மட்டும் அது ஒத்து வரவில்லை! 

ஆனால் மலேசிய நாட்டில் ஏன் நாம் இந்தியத் திரைப்படங்கள் என்று குறிப்பிட வேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை! இங்கு எந்த சிக்கலும் இல்லை. வேறு மொழிப் படங்களும் இங்குத் தயாரிப்பதற்கான அறிகுறியும் இல்லை!

பின்னர் எதற்கு இந்தியத் திரைப்படம் என்கிறோம்?  கொஞ்சம் சிந்திக்கலாமே என்பது தான் நோக்கம். தமிழ்த் திரைப் படங்கள் என்பதில் எந்த குறைபாடும் இல்லையே!

சொல்லுவது எனது கடமை. சொல்லிவிட்டேன்! மணி கட்டுவது என் வேலையல்ல! ஜாம்பவான்கள் தான் செய்ய வேண்டும்!

Saturday, 18 July 2020

மலேசியப் பொருட்களை வாங்குவீர்!

கொரோனா தொற்று நோயினால் நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்பு என்பது பெரிய பாதிப்பு என்பதில் ஐயமில்லை.

மலேசிய பொருட்களை வாங்கி ஆதரிப்பீர் என்று பிரதமர் முகைதீன் மக்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார். நாட்டில் செலவு செய்யப்படும் ஒவ்வொரு வெள்ளியும் நாட்டின் பொருளாதார மீட்சிக்கு உதவும் என்பது நமக்குப் புரிகிறது.

ஆனால் எது தான் உள் நாட்டுப் பொருள்?  என்பதில் எனக்கு ஐயமுண்டு. உள்நாட்டுப் பழங்கள் எது என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் டுரியான் பழம் என்றால் கூட அது இந்தோனேசியப் பழம் என்கிறார்கள் அல்லது தாய்லாந்து பழங்கள் என்கிறார்கள்! மற்ற வகைப் பழங்கள் உள் நாட்டுப் பழங்கள் தான், அவைகள் நமக்குத் தெரிந்தவை. 

உள் நாட்டு உணவகங்களில் நாம் சாப்பிடுகிறோம். இவைகளும் உள்நாட்டுப் பொருள்கள் தான் என்று நினைக்கிறேன். சுற்றுலாப் பயணங்ள் என்பது எல்லாருக்கும் அமையப்போவதில்லை.  ஆனால் வெளி நாடுகளுக்குச் செல்வதைத் தவிர்க்கலாம். உள்ளூர் சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று வரலாம். அது சாத்தியமே. அதனை நம் மக்களே புரிந்து கொள்ளுவார்கள். 

ஓர் ஐயமுண்டு.  நம் பணத்தை உள்நாட்டில் தான் நாம் செலவு செய்கிறோம். வெளி நாடுகளுக்குப் போவதால் நமது பணம் வெளிநாடுகளுக்குப் போகிறது. அதை மட்டுமே நாம் தவிர்க்க வேண்டும்.  மற்றபடி உள்நாட்டில் செலவு செய்யப்படுகின்ற பணம் பொருளாதார மீட்சிக்கு உதவும் என்பது தான் அரசாங்கம் நமக்குச் சொல்ல வருவது. 

அதைத்தான் இப்போது நாம் செய்கிறோம். அரசாங்கம் சொல்ல வருவது எல்லாம் வெளி நாடுகளுக்குப் போகாதீர்கள் என்பது தான் என்று நான் நினைக்கிறேன்.

அதை நாம் ஏற்றுக் கொள்ளலாம். வெளி நாடுகளுக்குப் போவதை தவிர்க்கலாம். உள்நாட்டு சுற்றுலா பயணங்களுக்கு இன்னும் ஆதரவு கொடுக்கலாம்.

வேறு வகையில் நாம் எப்படி உதவ முடியும்?  நமக்குத் தெரிந்த சில எளிய வழிகளை நாம் பின்பற்றலாம். நாம் செய்கின்ற செலவுகள் அனைத்தும் உள்நாட்டில் தான்.  நாம் வாங்குகின்ற பொருட்கள் அனைத்தும் உள்நாட்டில் தான்.  இதன் மூலம் தான் நாம் மீட்சி பெற முடியும் என்று நான் நினைக்கிறேன். 

வெளி நாடுகளுக்குப் போகிறவர் யார்? அரசியல் பின்னணி உள்ளவர்கள் தான் வெளி நாடுகளுக்குச் சென்று 'ஷோப்பிங்' செய்கிறார்கள்! இவர்களை முடக்கி வைத்தாலே போதும் பொருளாதாரம் மீட்சி பெற்றுவிடும்! கொள்ளையடித்த பொருள்களை வெளிநாடுகளில் தானே அவர்கள் செலவு செய்கிறார்கள்!

மலேசியப் பொருட்களை வாங்குவதில் நமக்கு எந்த தயக்கமுமில்லை. ஆனால் அரசியல்வாதிகளுக்கு அந்த தயக்கமுண்டு.

அரசியல்வாதிகள் வீட்டுப் பெண்களுக்குத் தான் இந்த அறிவுரை பொருந்தும்!

ஆனாலும் பொது மக்களாகிய நாம் நமது கடமைகளைச் செய்வோம்! உள்நாட்டுப் பொருள்களை வாங்கி நமது நாட்டின் பொருளாதாரம் உயர நம்மாலானதைச் செய்வோம்!

வாழ்க மலேசியா!
 

இதற்கு யார் பொறுப்பு?

ஒரு விஷயம் எனக்குப் புரியவில்லை!

மாதா மாதம்   Indah Water - க்குப் பணம் கட்டி வருகிறோம்.  எதற்கு? வெறும் குப்பைக் கூளங்களை அள்ளிக் கொண்டு போகிறார்களே,  அதற்காகவா? 

அது சரியாகக் கூட இருக்கலாம்.  ஆனால் அதில் வேறு ஒரு விஷயமும் அடங்கி இருக்கிறது. ஏன், ஒவ்வொரு வீட்டிலும், மலக்குழி தொட்டிகள் (septic-tank) என்று ஒன்று இருப்பது Indah Water-க்குத் தெரியாதா?  அதை அவர்கள் மறந்தே போனார்களா அல்லது நாம் தான் மறந்து போனோமா?

ஒரு காலக் கட்டத்தில் மலக்குழி தொட்டிகளை அவர்கள் தான் சுத்தம் செய்தார்கள்.  எந்தக் கட்டணமும் கட்ட வேண்டிய அவசியமில்லை.
 நாம் அவர்களுக்கு மாதா மாதம் பணம் கட்டுவது அதற்காகத்தான்! ஆனால் இப்போது அவர்களே அந்த நடைமுறையை மாற்றிக் கொண்டார்கள்.  அவர்கள் அப்படி மாற்றிக் கொள்ள அவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை! அந்த வேலையை அவர்கள் செய்ய மாட்டார்களாம்! நாமே தான் செய்ய வேண்டுமாம்!

அப்படித்தான் அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்!  தனியார் நிறுவனம் மூலம் என் வீட்டில் சில வேலைகளைச் செய்ய நேர்ந்தது. அந்த நண்பரிடம் விசாரித்த போது அவர் தான் இந்தத் தகவலைச் சொன்னார். 

பொது மக்கள் எந்த ஒரு புகாரும் செய்யாததினால் இப்போது அவர்கள் வைத்ததே சட்டம் என்கிற ஒரு சூழல் ஏற்பட்டுவிட்டதாக  அவர் சொன்னார். 

ஒரு வேளை அவர்கள் அதற்குக் கட்டணம் வாங்கலாம்.  ஆனால் அங்கும் அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப கட்டணம் வாங்குகிறார்கள். எல்லா இடத்திலும் இலஞ்சம், ஊழல் - இது தான் வாழ்க்கை முறை என்கிற ஒரு நிலைமை நாட்டில் ஏற்பட்டுவிட்டது! யார் ஏமாறுவார் என்று காத்துக் கிடக்கிறார்கள்!

இப்படிப் பொறுப்பாக செயல்பட வேண்டியவர்கள் எல்லாம் பொறுப்பற்று செயல்படுவதால் எந்த ஒரு அரசு அலுவலகத்திற்குப் போனாலும் எல்லாமே பொறுப்பற்ற முறையில் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன!

இந்த நிறுவனம், ஒவ்வொரு மாதமும்,  கோடிக்கணக்கில் பணம் புரளுகின்ற ஒரு நிறுவனம்.  ஆனால் இவர்களின் சேவை என்பது இப்போதைக்குக் குப்பைகளை அள்ளுகின்ற வேலை மட்டும் தான்!  பயனீட்டாளர்களுக்கு வேறு எந்த சேவையையும் இவர்கள் செய்வதில்லை!

இவர்கள் சேவை என்ன என்பது பயனீட்டாளர்களுக்குத் தெளிவாக விளக்க வேண்டும். மக்களுக்குத் தெரிய வேண்டும். ஆனால் அனைத்தும் ஏதோ மறைமுகமாக நடப்பது போல் நிறுவனத்தின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன!

பொதுவாக இவர்களின் சேவை பற்றி யாரும் கண்டு கொள்வதில்லை, வீட்டில் மலக்குழி தொட்டிகளில் அடைப்பு ஏற்படும் வரை!  அப்போது தான் இவர்களின் சேவையை நாம் நாடுகிறோம்! அந்த அடைப்புக்கள் கூட எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஏற்படுகிறது! அதனால் தான் இவர்கள் பொறுப்பிலிருந்து இவர்கள் தப்பித்து விடுகிறார்கள்!

இதற்கான நடவடிக்கைகளைப் பயனீட்டாளர்கள் சங்கம் தான் எடுக்க வேண்டும். அவர்கள் தான் பயனீட்டாளர்களின் குரல்.

இதற்கு அந்த Indah Water நிறுவனமே பொறுப்பு!

Friday, 17 July 2020

கட்சி தாவல் சட்டம் ...!

கட்சி தாவல்,  சட்டத்துக்குப் புறம்பானது, என்று சட்டம் இயற்றும்படி இப்போது நாம் ஆங்காங்கே கேட்டு வருகிறோம்!

சிலாங்கூர் சட்டசபையும் இப்படி ஒரு தீர்மானத்தை இயற்றி நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றும்படி கேட்டுக் கொண்டிருக்கிறது!

இந்த நேரத்தில் இப்படி ஒரு தீர்மானம் தேவை என்று நினைத்திருந்தால் அதனைப் பக்காத்தான் கட்சி ஆட்சியில் இருக்கும் போதே செய்திருக்க வேண்டும்.  அவர்கள் செய்யவில்லை! 

இப்படி ஒரு தீர்மானத்தை அவர்கள் ஆட்சியில் இருக்கும் போதே செய்திருந்தால் இன்று அவர்கள் ஆட்சியை இழந்திருக்க மாட்டார்கள்! இப்படி ஒரு நிலைமை டாக்டர் மகாதீருக்கு ஏற்பட்டிருக்காது!

செய்யவேண்டிய நேரத்தில் அவர்கள் செய்யாததால் அன்று கொள்ளையர்களாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இன்று கோமாதாக்களாகப் போற்றப்படுகிறார்கள்!

ஜனநாயகத்தில் எதுவும் நடக்கலாம். எதுவும் நடப்பது தான் ஜனநாயகம்! கேடு கெட்டவர்களுக்கெல்லாம் அடைக்கலம் தருவது ஜனநாயகம்!

ஆனால் இன்று இது பற்றிப் பேசுவது கேலிக் கூத்து என்று சொல்லலாம்! இன்றைய ஆளுங்கட்சி ஒரு சில மாநிலங்களைத் தங்கள் கைவசம் கொண்டு வந்தது இந்தக் கட்சி தாவல் மூலம் தான்!  இன்றைய ஆட்சி இன்னும் நீடிக்கிறது என்றால் கொரோனா மட்டும் காரணம் அல்ல, கட்சி தாவல் தான் தலையாய்க் காரணம்!

எதிர்க்கட்சிகள் எல்லாக் காலங்களிலும் கட்சி தாவல் பற்றி பேசுவார்கள். அதற்குக் காரணம் அவர்கள் பலவீனமாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். அவர்களே ஆளுங்கட்சியாக மாறினால் அப்போதுங் கூட அவர்கள் கட்சி தாவலைப் பற்றி வாய்த் திறக்கமாட்டார்கள்!  அப்போதும் அவர்கள் பலவீனம் எங்கோ இருக்கிறது என்று அவர்களுக்குத் தெரியும்.

ஒன்று மட்டும் நிச்சயம். அப்படி ஒரு சட்டம் எந்தக் காலத்திலும் வராது என்பதை உறுதியாக நம்பலாம்! காரணம் கட்சி தாவல் ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் தேவையான ஒன்று. தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளுவார்கள்!

இந்தக் கட்சித் தாவலை,  வாக்களித்தவர்கள் மட்டும் தான் எதிர்ப்பாளர்கள்! உண்மையான எதிர்ப்பு என்பது பொது மக்களிடமிருந்து தான் வரவேண்டும். அரசியல்வாதிகள் பக்கமிருந்து வராது.  காரணம், இந்தக் கட்சித் தாவல்கள் மூலம் கோடிக்கான வெள்ளிகள் கைமாறுகின்றன.  இந்த ஐந்து வருடங்களில் பார்க்காத பணத்தை அந்த ஒரு தாவலின் மூலம் ஓர் அரசியல்வாதி பார்த்து விடுகிறான்! ஒரு தாவலின் மூலம் பல தலைமுறைக்கு அவன் பணம் சம்பாதித்து விடுகிறான்!

இப்போது சொல்லுங்கள்,இந்த நிலையில், எந்த அரசியல்வாதி எதிர்ப்பான்?  கட்சிக்குக் கொள்கை இருக்கிறது. எந்த அரசியல்வாதிக்குக் கொள்கை இருக்கிறது? அவன் கட்சியின் கொள்கையே அவனுக்குத் தெரியாது!

அரசியல் என்பதே பணம் கொட்டும் ஓர் அமுதசுரபி. நேர்மை, நீதி என்பதெல்லாம் பாடப் புத்தகங்களில் உள்ள ஒரு பாடம்! தேவை என்றால் இதில் சமய நூல்களையும் சேர்த்துக் கொள்ளலாம்! அவ்வளவு தான்!

கட்சி தாவலாம்! சட்டம் தாவலாம்! கட்சி தாவல் சட்டமும் தாவலாம்!

Thursday, 16 July 2020

இங்கேயும் இலஞ்சமா?

"அம்மாடியாவ்! இங்கேயும் இலஞ்சமா?"   என்று கேட்கும் அளவுக்கு இலஞ்சம் எல்லை மீறிவிட்டது என்று தான் நினைக்கத் தோன்றுகிறது!

ஒரு சில தினங்களுக்கு முன்னர் தான் காவல் துறைத் தலைவர், டான்ஸ்ரீ அப்துல் ஹமிட் பாடோர்,  நாட்டின் எல்லைப் புறங்களிலே இலஞ்சம் தண்ணீராய் ஓடுகிறது என்று கொந்தளித்துப் பேசியிருந்தார்!

இப்போது இன்னொரு அடி! தங்களுக்குப் பதவி உயர்வு வேண்டும் என்பதற்காக காவல்துறையைச் சேர்ந்தவர்கள். போலீஸ் தேர்வில் தேர்ச்சி பெற,  இலஞ்சம் கொடுத்து காரியத்தைச் சாதிக்க நினைக்கிறார்களாம்!

இப்போது காவல் துறை எப்படி இயங்குகிறது என்பது நமக்குப் புரிகிறது!ஒரு இடத்தில் கொடுத்தால் இன்னொரு இடத்தில் வாங்க வேண்டும்! அதைத்தான் காவல் துறை செய்கிறதோ!

இலஞ்சம் கொடுத்து தேர்ச்சி பெற வேண்டும், இலஞ்சம் கொடுத்து பதவி உயர்வு பெற வேண்டும்  என்று நினைக்கும் அதிகாரிகள் எப்படி தங்களது தொழிலில் பற்றுறுதியோடு இருப்பார்கள் என்கிற கேள்வி எழுகிறது!

இலஞ்சம் கொடுக்கிறார்கள் என்றால் அவர்கள் நேர்மையற்றவர்கள், நீதி நேர்மையற்றவர்கள், நாட்டுப்பற்றற்ற துரோகிகள், சுயநலவாதிகள் - இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்!  நாட்டுப்பற்றுள்ளவர்கள் இலஞ்சம் பக்கமே தலை வைத்தே படுக்க மாட்டார்கள்!

ஆனால் காவல் துறைத் தலைவரே நெஞ்சம் வெதும்பி பேசியிருக்கிறார். அதனை அவர் கடுமையாகவே கருதுகிறார் என்பது அவர் பேச்சில் தெரிகிறது.  இலஞ்சம் கொடுப்பவர் மீதும் குற்றம், இலஞ்சம் வாங்குபவர் மீதும் குற்றம்.  ஆனால் இது பொதுவான சட்டம். ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

அதனை காவல் துறையில் உள்ளவர்கள் செய்வார்களானால் அது மிகவும் கடுமையானது. இலஞ்சத்தைக் கொடுத்து சோம்பேறிகள்  மிக எளிதாக பதவி உயர்வு பெறுவார்களானால் அவர்களால் நாட்டுக்கு எந்த விதப் பயனுமில்லை. அவர்கள் எளிதாகவே அனைத்தையும் சாதிக்கப் பார்ப்பார்கள்! கடுமையான உழைப்பு இருக்காது! பொது மக்களை ஆழம் பார்ப்பவர்களாக இருப்பார்கள்!

எது எப்படி இருப்பினும் காவல் துறைத் தலைவரின் இந்தக் குற்றச்சாட்டை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது!  அவரே  கூறியிருப்பது போல இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

பதவி உயர்வுக்காக இலஞ்சம் கொடுப்பது என்பது மிக மிக மட்டமான செயல். அப்படி என்றால் கடும் உழப்பாளிகள் அடி மட்டத்திலேயே இருக்க வேண்டுமா? பதவி உயர்வுக்குத் தகுதியானவர்கள் கிணற்றில் போட்ட கல்லாகவே இருக்க வேண்டுமா? பல கேள்விகள் உண்டு.

காவல் துறைத் தலைவர் சொல்லுவது போல இது போன்ற நடவடிக்கைகளை அவர் இனிச் சகித்துக் கொள்ள மாட்டார் என நம்பலாம்.

இவர்கள் மீது நடவடிக்கை, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்னும் உத்தரவாதமே போதும்!

இலஞ்சம் ஒழியும் என நம்புவோம்!

Wednesday, 15 July 2020

மீண்டும் கூட்டணி தானே?

திடீர் தேர்தல் வந்தால் டாக்டர் மகாதிரும் அவரது ஆதரவாளர்களும் என்ன செய்வார்கள்?

அவர்கள் புதிய கட்சி தொடங்க வேண்டும். அந்தக் கட்சியின் சார்பில் அவர்கள் போட்டியிட வேண்டும்.

புதிய கட்சி தொடங்குவது கூட நடக்குமா என்றும் சொல்ல முடியாது! காரணம் ஆளுங்கட்சி அதற்குத் தடையாகக் கூட இருக்கலாம்! இன்றைய ஆளுங்கட்சி எந்த அளவுக்கு டாக்டர் மகாதிருக்கு முட்டுக்கட்டையாக இருக்குமோ அந்த அளவுக்கு அவர்கள் புதிய கட்சி தொடங்க தடையாக இருக்கலாம்!

இது அரசியல். நீதி, நியாயம் என்கிற வார்த்தைகளெல்லாம் இங்கு எடுபடாது! காரணம் அப்படித்தான் டாக்டர் மகாதிர் தனது ஆட்சி காலத்தில் இருந்தார்!  அவரின் சிஷ்யர்கள் மட்டும் வேறு மாதிரியாகவா இருக்கப் போகிறார்கள்!

சரி அப்படியே தனி கட்சி அமைத்து போட்டி இடுகிறார் என்றே வைத்துக் கொள்வோம். அந்தக் கட்சியை அவரால் மலேசிய அளவில் கொண்டு செல்ல முடியாது! அந்த அளவுக்கு அவருக்குப் படை பலம் இல்லை!

எப்படியோ தனித்து, தனிக்கட்சியாக அவரால் போட்டிப் போட முடியாது. வேறு கட்சிகளுடன் சேர்ந்து தான் அவர் போட்டியிட வேண்டும்.  அதற்கு அவருக்கு ஒரு கூட்டணியுடன் சேர வேண்டும் என்கிற ஒரே வாய்ப்பைத் தவிர வேறு தேர்வு இல்லை!

அதே சமயத்தில் மூன்றாவது அணி என்பதெல்லாம் நமது நாட்டில் சாத்தியமில்லை. அந்த அளவுக்கு நமக்கு அரசியல் அறிவு போதாது. நமது அரசியல் என்பது சமயமும், இனமும் கலந்த குறுகிய அரசியல்!  இந்த அரசியலில் கொள்ளையடிப்பது கூட நேர்மை தான் என்று போதிக்கப்படுகின்ற அரசியல்!

அதனால் டாக்டர் மகாதிர் எந்தக்கட்சியுடன் கூட்டணி வைப்பார்? மீண்டும் அவர் நம்பிக்கை கூட்டணியுடன் தான் கூட்டணி வைக்க வேண்டிய சூழல் வரும்.

அப்போதும் அவர்களுக்கு இதே பிரச்சனை மீண்டும் தலை தூக்கும்! அவர்கள் அன்வார் பிரதமராக வருவதை ஆதரிக்காமாட்டார்கள்!

ஏதோ ஒரு நம்பிக்கை. இந்த முறை அதிகப் பெரும்பான்மையுடன் நம்பிக்கை கூட்டணி வெற்றி பெறும் என்கிற நம்பிக்கை அதிகமாகவே உள்ளது!

எப்படிப் பார்த்தாலும் டாக்டர் மகாதிருக்கு நம்பிக்கை கூட்டணி தான் மீண்டும் கை கொடுக்க வேண்டும்!

Tuesday, 14 July 2020

முகைதீன் யாசின் சரித்திரம் படைத்துவிட்டார்!


நாட்டின் முன்னாள் பிரதமர், டாக்டர் மகாதிர் உலக சரித்திரத்தில்  யாரும் செய்ய முடியாததை செய்து காட்டியவர்.

எந்த ஒரு நாட்டிலும் பிரதமர் பதவியிலிருந்து விலகியப் பின்னர், இரண்டாம் முறையாக 22 ஆண்டு காலம் தான் சார்ந்திருந்த கட்சியையே எதிர்த்து, போட்டிப் போட்டு மீண்டும் பிரதமராக வந்தவர் யாருமில்லை. உலக சரித்திரத்தில் அப்படி யாரும் இல்லை. அது தான் டாக்டர் மகாதிரின் சிறப்பு.  அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்பது தான் உண்மை!

இன்றைய பிரதமர் முகைதீன் யாசின் பிரதமராக கொல்லைப்புற வழியாகப் பதவிக்கு வந்த பின்னர் என்ன நடந்தது என்று பார்ப்போம். 

அவர் பல மாற்றங்களைக் கொண்டு வந்தார். மாற்றங்கள் என்றால்?  தனது எதிரிகள் யார், யார் தன்னை எந்த நேரத்திலும் குறி வைப்பவர்கள் என்பதையெல்லாம் கணித்து அவர்களை எல்லாம் களை எடுத்தார்!  

இவைகள் எல்லாம் இது போன்ற கொல்லைப்புற ஆட்சியில் நடக்கின்றவை தாம்! ஆச்சரியப்பட ஒன்றுமில்லை! ஆனால் இவரது  களையெடுப்பில் அம்னோ கட்சி அதிகமாக சம்பந்தப்பட்டிருக்கிறது! அம்னோ தான் பல களையெடுப்புக்களுக்குக் காரணமாக இருப்பவர்கள்; இருந்தவர்கள்! அம்னோவுக்கு அந்த அதிகாரம் கொடுத்திராவிட்டால் இந்நேரம் ஆட்சி கவிழ்க்கப்பட்டிருக்கும்!

இப்போதைய பிரதமர் முகைதீன் காலத்தில் எத்தனையோ களையெடுப்புக்கள் நடந்தாலும் முக்கியாமான இரண்டைக் குறிப்பிட வேண்டும்.  ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் இலத்திஃபா கோயா தான் முதல் பலி. அவரைக் கண்டால் அம்னோவுக்கு அடிவயிற்றில் புளி கரைத்தது போல! அது உடனடியாக நடந்தது! 

அடுத்தது முகைதீனின் முக்கிய பலி நாடாளுமன்றத்தின் சபாநாயகர் ஆவார்.  டான்ஸ்ரீ முகம்மது அரிஃப். இவரைப்பற்றி நாம் சந்தேகப்பட ஒன்றுமில்லை.  நேர்மையான மனிதர் என்று பெயர் எடுத்தவர். அம்னோவோ அல்லது பிரதமரோ நேர்மை என்றாலோ எட்டி நிற்பவர்கள்! அதனால் இவரையும் துணை சபாநாயகரையும் கழட்டி விட்டார்கள்!

இது பற்றி முன்னாள் சபாநாயகர் முகம்மது அரிஃப் பேசும் போது இப்படி ஒரு சம்பவம் 800 ஆண்டுகளாக எங்கேயும் நடந்ததில்லை என்கிறார்! அவருக்குத் தெரிந்த உண்மையை அவர் சொல்லுகிறார்! யாராலும் இதனை மறுக்க முடியாது!

இந்த வகையில் பார்க்கும் போது நஜிப்பைப் போல இன்றைய பிரதமரும் சரித்திரம் படைத்துவிட்டார்! முன்னாள் பிரதமர் ஊழலக்கு எப்படிப் பெயர் பெற்றாரோ அதே போல 800 ஆண்டுகாலம் நடக்காத ஒரு சம்பவத்தின் மூலம் நடக்க வைத்த பெருமையை அவர் பெறுகிறார்!

இன்னும் என்ன என்ன பெருமைகளை அவர் பெறப் போகிறாரோ என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

அரசியல்வாதிகள் தங்களது பதவிகளைத் தக்க வைத்துக் கொள்ள எந்த எல்லைக்கும் போவார்கள் என்பதை இந்த நிகழ்வுகள் சுட்டிக் காட்டுகின்றன!

இன்னும் பல சரித்திர நிகழ்வுகளை எதிர்ப்பார்க்கலாம்!