Sunday, 29 January 2017

பாம்பு பிடிக்கும் தமிழர்கள்!


காக்கா பிடிக்கும் கலை எல்லாருக்குமே வரும்! ஆனால் பாம்பு பிடிக்கும் கலை எல்லாருக்கும் வராது. தமிழர்களுக்கு அது வரும் என்பதை அமெரிக்கர்கள் அறிந்து வைத்திருக்கின்றனர்!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் பர்மிய மலைப்பாம்புகளின் நடமாட்டத்தால் பல வனவிலங்குகள் அழிவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றன. மலைப்பாம்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் வேளையில் வனவிலங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகிறது!

அப்படி என்ன தான் நடக்கிறது?

மலைப்பாம்புகள் அங்கு வாழும் அனைத்து வன உயிரினங்களையும் கொன்று தின்று விடுகின்றனவாம்! அதனால் பாம்புகள் அதிகரித்தும் மற்ற உயிரினங்கள் அழிந்தும் வருகின்றனவாம்!

இப்போது புளோரிடா வனவிலங்கு காப்பகம் தடாலடியாக நடவடிக்கை எடுக்க ஆரம்பித்திருக்கிறது.  தமிழகம்,  இருளர் சமூகத்தைச் சார்ந்த இரு பாம்புப்பிடி  நிபுணர்களை வரவழைத்திருக்கிறது.  மாசி சடையன், வடிவேல் கோபால் ஆகிய இந்த இருவரும் பாம்புகளை வேட்டையாடுவதோடு பாம்புப் பிடிக்கும் கலையையும் அவர்களுக்குக் கற்றுத்தருவார்கள்!

பரவாயில்லையே! பெரிய படிப்பு படித்த வெள்ளைக்காரர்களுக்கு மலைவாழ் பழங்குடித் தமிழர்களிடம் படிப்பதற்கும் எதாவது இருக்கத்தானே செய்கிறது! நமக்கும் பெருமை தான்!ஆனாலும் சொல்ல வேண்டிய செய்தி ஒன்று உண்டு. இந்த மலைப்பாம்புகள் புளோரிடா மாநிலத்தைச் சார்ந்த பாம்புகள் அல்ல! இவைகள் வந்தேறிகள்!  இந்த வந்தேறிகள் என்ன செய்தன? அங்குள்ள வனவிலங்குகள் அனைத்தையும் அழித்துக் கொண்டிருந்தன. காடுகளில் வழுகின்ற முயல் வகைகள், குருவி வகைகள் என்று அனைத்து விலங்குகளையும் கபளீகரம் செய்து கொண்டிருந்தன! இதனால் பாம்பு வகைகள் அதிகமாயும், அவர்கள் நாட்டு விலங்குகள் எண்ணிக்கை குறைந்தும் கொண்டு வந்தன.

இதனோடு நமது ஜல்லிக்கட்டு காளைகளை ஒப்பிட்டுப் பாருங்கள்.. வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சீமை மாடுகளின் மூலம் நமக்கு என்ன கிடைக்கிறது? அதன் பால் நமக்கு நோயை உண்டாக்குகின்றன. பலவிதமான நோய்கள். அதில் புற்று நோயும் ஒன்று. அதன் சாணம் எருவாகப் பயன் படுவதில்லை. அது வெறும் சக்கை!

நமது நாட்டு மாடுகள் அப்படியா? நாட்டு மாடுகளின் பால் சத்துள்ள பால். அது உலக ரீதியில் முதலாம் வகை.ஏற்றுமதிக்கு மிகவும் தரம் உள்ள பால். தாய்ப்பாலோடு ஒப்பிடும் அளவுக்குத் தரம் வாய்ந்தது. அதன் சாணம் எருவாகப் பயன்படும்.  செயற்கை உரம் தேவை இல்லை. ஏற்கனவே நமது நாட்டு மாடுகளைக் கடத்தி மேல் நாட்டவர் உலக அளவில் பால் விற்பனைச் செய்து கொண்டிருக்கின்றனர். நாமோ, அவர்களின் மாடுகளைக் கொண்டு, வீட்டுப் பாலாகக் கூட பயன்படுத்த முடியவில்லை! அவர்கள் நமது மாடுகளை நம்மிடமிருந்து பிரித்து கோடிக்கணக்கில் பணம் பார்க்கின்றனர். நமது விவசாயிகிகள் அழிந்து கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் மாடுகள் அவர்கள் மண்ணூக்கு உரியவை. நமது மாடுகள் நமது மண்ணுக்கு உரியவை. ஒவ்வொன்றும் அவை இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும். அது தான் நமக்கு இயற்கை சொல்லும் பாடம்.

Friday, 27 January 2017

ஏன் இந்தத் தூண்டுதல்..?


மெரினா கடற்கரையில் நடைபெற்ற அறவழி போராட்டம் இன்னும் நமது மனதை விட்டு அகலவில்லை. அகலவும் கூடாது!

தமிழர் பிரச்சனைக்காக மாணவ - மாணவியர் கூடியதை ஏதோ ஒரு தகாத நிகழ்வாக அரசாங்கம் கருதுவதாகத் தான் நாம் நினைக்க வேண்டியிருக்கிறது.

தமிழ் மாணவர்கள் தான் கூடினார்கள். தமிழ் மாணவியர் தான் கூடினார்கள். நாம் தமிழர்கள் என்னும் உணர்வோடு தான் கூடினார்கள். இதில் என்ன தவறு இருக்க முடியும்?

இது எல்லா மாநிலங்களிலும் நடக்கும் ஒரு காரியம் தானே!  கர்நாடகாவில் மாணவர்கள் ஒன்று கூடினால் அவர்கள் கன்னட மாணவர்கள்.  பஞ்சாபில் ஒன்று கூடினால் அவர்கள் பஞ்சாபிய மாணவர்கள்.

அது போலத்தான் தமிழ் நாட்டிலும். தமிழ் நாட்டில் மாணவர்கள் ஒன்று கூடினால் அவர்கள் தமிழ் மாணவர்கள். 'நான் தமிழன், நான் தமிழச்சி' என்று அவர்கள் சொல்லுவதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை!

ஆறு நாள்கள் அறவழியில் நடைபெற்ற மாணவர் போராட்டம் ஏழாவது நாள் காவல்துறையினரின் போராட்டக்களமாக மாறியது! என்ன காரணங்கள் சொன்னாலும் அன்று நடந்த அடிதடிகளெல்லாம்  காவல்துறையினரே ஆரம்பித்து வைத்தவை!

மாணவர் மீது ஏவப்பட்ட இந்த அராஜகம் தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகளுக்குத் தெரியாதா? தெரியும் என்று தான் நாம் நம்ப வேண்டியிருக்கிறது. அதுவும் குறிப்பாக பா.ஜ.க. தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்திரராஜன் ஆகியோருக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்.

"ஜல்லிக்கட்டை நீங்கள் நடத்துங்கள், உங்களுக்கு எதுவும் ஆகாது. நாங்கள் உங்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்கிறோம்" என்று சொல்லிச் சொல்லி மாணவர்களை ஊக்கப்படுத்தியவர்கள் இவர்கள் தான்..  நடத்தச் சொல்லித் தூண்டுதலை ஏற்படுத்தியவர்களே இவர்கள் தான்!

ஆளுங்கட்சியின் முதன்மை இடத்தில் இருக்கும் இவர்கள் தான்  கடைசி நேரத்தில் காலைவாரி விட்டவர்கள்! காவல்துறை கட்டுமீறி நடந்து கொண்ட போது அந்த நேரத்தில் அந்த மாணவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுப்பது அவர்களின் கடமை அல்லவா? காவக்துறையினரைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம் அல்லவா? மோடியின் வலது கையும் இடது கையுமாக இருக்கும் இவர்களால் தடுத்து நிறுத்த முடியாதா?

தூண்டுதலையும் ஏற்படுத்திவிட்டு கடைசி நேரத்தில் ஓடி ஒளிந்து கொண்டவர்களும் இவர்கள் தான்! தமிழக மாணவர்களை - இளைஞர்களை இனி இவர்கள் நேருக்கு நேர் பார்க்க முடியுமா? சந்திக்க முடியுமா?

தமிழகத்தில் கையாளாகாத ஒரு அரசாங்கம்! எதனையும் கண்டு கொள்ளவில்லை! தொடர்ந்து இப்படித்தான் இருப்பீர்களோ? பார்க்கலாம்!

Thursday, 26 January 2017

ஜல்லிக்கட்டு - ஆரம்பம் தான்..!


ஜல்லிகட்டு, முதல் தமிழர் போராட்டம். மாணவர்களாலும், இளைஞர்களாலும் அற வழியில் நடத்தப்பட்டு கடைசி நாளில் மோடி ஆடிய நாடகத்தில் அராஜகத்தில் முடிவுக்கு வந்தது!

முடிவுக்கு வந்ததா...? இல்லை! இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்திய காவல்துறை, உளவுத்துறை தமிழகத்தை தனது கையில் வைத்துக் கொண்டு இன்னும் தமிழர்களை அடக்கி ஒடுக்கி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீடுகளில் புகுந்து பெண்களை அடிப்பதும், உதைப்பதும், இளைஞர்களையும் மாணவர்களையும் கைது செய்வதும் இன்னும் தொடருகின்றன!

தமிழகத்தின் ஆட்சி என்பது இப்போது இந்திய உளவுத்துறையின் கையில்!  ஜனநாயகம் அடக்கி ஒடுக்கப்பட்டுவிட்டது!

போராட்டத்தின் கடைசி நாளன்று காணாமல் போன பல மாணவ மாணவியர், பெண்கள், வயதானவர்கள் - இப்படிப் பலர் என்ன ஆனார்கள் என்று இன்றுவரை யாருக்கும் தெரியவில்லை.

இதை நாம் படிக்கும் போது இது போன்ற செய்திகளை இதற்கு முன்பு எங்கோ கேட்டது போல தோன்றுகிறது அல்லவா? ஆமாம். யாழ்ப்பாணத் தமிழர்களை இப்படித்தான் சிங்கள ராணுவம் வீடு வீடாகப் புகுந்து தமிழர்களை நாசப்படுத்தியது என்பதாக நாம் படித்தோம். அது இப்போது தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே அனுபவிக்கிறார்கள்.

தமிழர்கள்,  தங்களைத் தமிழர்கள் என்று சொல்லுவதைக் கூட மோடி அரசாங்கம் விரும்பவில்லை.  மாணவர்கள்  'நான் தமிழன் டா! நான் தமிழச்சிடா!' என்று சொன்னதை மோடி அரசாங்கம் ஏதோ தீண்டத்தகாத சொல்லாக நினைப்பதாகவே நமக்குத் தோன்றுகிறது!

எது நடந்தாலும் சரி. மோடி அரசாங்கம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த ஜல்லிக்கட்டு ஒரு ஆரம்பம் தான். தமிழன் புகைய ஆரம்பித்திருக்கிறான். அந்தப் புகையை அவ்வளவு சீக்கிரத்தில் நீங்கள் அனைத்துவிட முடியாது! காவல்துறையும், உளவுத்துறையும் அனைத்தையும் அடக்கிவிட முடியும் என்பது கனவு தான்!

வீதிக்கு வருவதை நீங்கள் தடை செய்தாலும் வீதிகளை வீட்டுக்குக் கொண்டு வரமுடியும் என்பதை நவீனத் தொழில்நுட்பம் நிருபித்திருக்கிறது. தொழில்நுட்பத்தில் தமிழனை அடிக்க ஆளில்லை என்பதைத் தமிழன் நிருபித்திருக்கிறான், மறந்துவிட வேண்டாம்!

ஆம்! ஜல்லிக்கட்டு ஆரம்பம் தான்! இனி தமிழரின் அனைத்துப் பிரச்சனைகளையும் நீங்கள் எதிர்நோக்க வேண்டி வரும்! இனித்  தமிழ் நாட்டில் பா.ஜ.க. வோ, திராவிடக் கட்சிகளோ - சமாதி தான்!

Wednesday, 25 January 2017

சிங்கத்தமிழன் சிம்பு..!

நடிகர் சிம்புவை வெறும் விளையாட்டுப் பையனாகத் தான் பார்த்தோம். நடிகர் ராஜேந்திரனுக்கு ஒரு தறுதலை வந்து பிறந்திருக்கிறதே என்று தான் நினைத்தோம்.

ஆனால் பாருங்கள்,  ஒரே நாளில் அவரைப் பற்றிய அத்தனை அபிப்பிராயங்களும் மறக்கடிப்பட்டுவிட்டன!

மெரினா கடற்கரையில் நடைபெற்ற  மாணவர்களின் தன்னெழுச்சியைத் தான் சொல்லுகிறேன்.

சினிமா நடிகர்கள் கலந்து கொள்ளுவதை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விரும்பவில்லை. காரணம் போராட்டத்தில் கலந்து கொண்டு தங்களது 'சுயவிளம்பரத்தை'  தேடுவதாகவே அது அமையும் என்பது தான் அவர்களது நிலைப்பாடு. அது உண்மை தான். அதுவும் நடந்தது என்பதும் உண்மை.

ஆனால் மாணவர்களின் போராட்டத்திற்குக் கொஞ்சம் அட்டகாசமாகக் குரல் கொடுத்தவர் சிம்பு தான். 'நான் தமிழன் டா' என்று ஒங்கி ஒலித்தவர் அவர் தான்!

அவருடைய ஆரம்பமே அட்டகாசமாக இருந்தது! பல மாணவர்களையும், இளைஞர்களையும் அவரது குரல் ஈர்த்தது என்பதை நாம் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது.

தமிழ் நாட்டில் அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் தன்னைத்  தமிழன் என்று சொல்ல மாட்டான். காரணம் அவன் தமிழனாக இது நாள் வரை வாழவில்லை! வளரவில்லை! ஒரு தெலுங்கர், ஒரு மலையாளி, ஒரு கன்னடர் போல் தமிழன் மட்டும் தன்னைத் தமிழன் என்று அடையாளம் காட்டுவதில்லை! காரணம் அவன் தமிழ்ச் சூழலில் வாழவில்லை! ஏதோ ஒரு கலப்பினத்தாரோடு வாழ்வதாகவே அவன் வளர்க்கப்பட்டு விட்டான்! திராவிடக் கட்சிகள் அப்படித்தான்  தமிழர்களை வளர்த்து விட்டன!

இந்தச் சூழலில் சிம்பு 'நான் தமிழன் டா'  என்று துணிந்து சொன்னது - அதுவும் ஒரு எழுச்சியை மாணவர்களிடையே ஏற்படுத்தியது என்பதும் உண்மை தான். அதன் பின்னர் தான் மெரினா கடற்கரையில் நாம் பார்த்தோம். ' நான் தமிழன் டா! நான் தமிழச்சிடா!' என்னும்  கோஷங்கள்!

இதனிடையே ஒரு பெட்டிச்செய்தி:  சென்னையில் சிறு வியாபாரம் செய்யும் ஒரு மலையாளப் பெண்மணி,   மாணவர்களுக்குக் குளிர்பானங்கள் விற்க மறுத்து விட்டாராம். காரணம், 'புதுசா என்னா தமிழன், தமிழன்னு சொல்லுறீங்க' என்று அவர்களைப் பார்த்து ஏசினாராம்! இப்போது புரிகிறதா? தமிழன் என்னும் சொல்லே தமிழ் நாட்டுக்கே புதிதாகப் போய்விட்டது! தமிழனை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்கிற நிலைமையில் தமிழன் இருக்கிறான்! தமிழன் என்று சொல்லுவதைக் கூட தமிழ் நாட்டில் உள்ள தமிழர் அல்லாதார் விரும்பவில்லை! அந்த அளவுக்குத் தமிழர்களை தலைகுனிய வைத்து விட்டார்கள் திராவிட ஆட்சியினர்!

இந்த நிலையில் தான் சிங்கத்தமிழன் சிம்பு சொன்ன 'நான் தமிழன் டா" என்னும் வார்த்தை  தமிழரிடம் வீறு கொள்ள வைத்து விட்டது என்பது உண்மையே! அதனைத்தான் மாணவர்கள் கடற்கரையில் எதிரொலித்தார்கள்!

இது ஆரம்பம் தான். இன்னும் போகப் போகத்தான் தெரியும் தமிழன் யார் என்று. அவன் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு. தனது சொந்த மண்ணிலேயே அடிமைப்பட்டுக் கிடக்கும் ஒரு இனம் என்றால் அது தமிழ் இனம் தான்.

திராவிடர்களின் ஆட்சியில் தனது மொழியை இழந்தான்! தனது கலாச்சாரத்தை இழந்தான்!  தனது பெருமைகளை இழந்தான்!  இழந்தான்! இழந்தான்! அனைத்தையும் இழந்தான்! இன்று இழந்தவைகளுக்காகப் போராட்டம் நடத்த சொல்ல வேண்டிய  நிலைமையில் இருக்கிறான்! இது தான் தமிழன் நிலை!

சிம்புவை போல தலை நிமிர்ந்து சொல்லுங்கள் 'நான் தமிழன் டா' என்று!


Thursday, 12 January 2017

ஒரு பச்சிளங்குழந்தையின் சித்திரவதை

இன்று குழந்தைகளின் சித்திரவதை என்பது மிகவும் பரவலாக நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. என்ன தான் சட்டம் போட்டாலும் எந்தச் சட்டமும் சித்திரவதைகளை நிறுத்தியதாகத் தெரியவில்லை.

சில குழந்தைகளுக்கு அப்பன்மார்களே  எமனாக இருக்கிறார்கள். மனைவியிடம் சண்டை என்றால் குழந்தைகளுக்குத் தான் முதலில் ஆபத்து. குழந்தைகளை வைத்துக்கொண்டு அம்மாமார்களைப் பயமுறுத்துவது என்பது கணவர்களால் கடைப்பிடிக்கப்படும் மிக எளிதான வழி.

பாருங்கள் ஒரு தகப்பனை.  தகப்பனும் தாயும் பிரிந்து விட்டார்கள். ஆனால்அவனோ அந்தப் பெண் குழந்தையைத் தாயிடம் ஒப்படைக்காமல் தானே வளர்த்துக்கொள்ள அவனுடன் கொண்டு வந்துவிட்டான். வளர்க்க வேண்டும் என்பது அவனது நோக்கமல்ல. அந்தக் குழந்தையை வைத்துக்கொண்டு அந்தத் தாயைப் பழி வாங்க வேண்டும் என்பது தான் அவனது நோக்கம்.

என்ன செய்தான்?  குழந்தை குடிக்கும் பாலில் பெப்சிகோலாவைக் கலக்கிக் குடிக்கக் கொடுத்தான். குழந்தையை அருகில் வைத்துக் கொண்டு சிகிரட்டைப் புகைய விட்டான். குழந்தையின் கழுத்தை அமுக்கித்  திணர வைத்தான்.அழும் குழந்தையின் வாயை கைகளால் அடைத்து மூச்சுத்திணர வைத்தான். அந்தச் சிறு குழந்தை அப்பன் கையாலையே எல்லாச் சித்திரவதைகளையும் அனுபவித்தது.

குழந்தை படும் துன்பத்தை அவன் விடியோ படம் எடுத்து அவனது மனைவிக்கு அனுப்பி வைத்தான். தாயால் அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை.


தாய் சிரியா நாட்டைச் சேர்ந்தவள். தகப்பன் சௌதியைச் சேர்ந்தவன். தாய் உடனடியாகக் காவல்துறையினருக்குப் புகார் கொடுத்தாள். காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்தக் கயவனை விலங்கிட்டு விட்டார்கள்! இப்போது குழந்தை தாயிடம்.

தாயே!  நீ நீடுழி வாழ்க!


Wednesday, 11 January 2017

மூளைக்கும் முக்காடா..!

சில சமயங்களில் சில நிகழ்வுகளைப் பார்க்கின்ற போது இவர்களைப் பார்த்து சிரிப்பதா அழுவதா என்று நமக்கு நாமே தலையைச் சொறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது!

தவறுகளைச் செய்துவிட்டு - இவன் அவனைச் குற்றம் சொல்லுவதும், அவன் இவனைக் குற்றம் சொல்லுவதும் - நமக்கு ஒன்றும் புதிதல்ல! ஏதோ இவன் புத்திசாலி போலவும் அவன் தான் மடையன் என்று சுட்டிக் காட்டுவதும் பல விஷயங்களில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது!

ஒவ்வொருவனும் புத்திசாலியைப் போல காட்டிக் கொள்ளுவதில் இவர்களை அடித்துக் கொள்ள ஆளே இல்லை! தவறுகளுக்கு அவர்கள்  சொல்லுகின்ற காரணங்களை நாம் கேட்டால் நமக்கே தலையைச் சுற்றும்!நெடுஞ்சாலயை அனைத்து மலேசியரும் தான் பயன் படுத்துகிறோம். ஆனால் அந்த நெடுஞ்சாலையில் - ஓய்வு எடுக்கும் இடத்தில் - "முஸ்லிம்களுக்கான கழிப்பறை" என்றால் எப்படி இருக்கும்? கழிப்பறைக்குக் கூட இப்படி ஒரு நிபந்தனையா?

குத்தகையாளனைக் குற்றம் சொல்லுகிறது நெடுஞ்சாலை! குத்தைகையாளன் அந்த அளவுக்குப் படிக்காதவனா? அறிவு இல்லாதவனா? தவறுகளைச் செய்து கொண்டே "இனி நிகழாதவாறு பார்த்துக் கொள்ளுகிறோம்!" என்று சொல்லிக் கொண்டே மீண்டும் அதே  தவறுகளைச் செய்வதும், எப்போது  தான் இது போன்ற தவறுகளுக்கு முடிவு வரும்?

ஒன்று புரிகிறது. வெகு விரைவில் நெடுஞ்சாலை முஸ்லிம்களுக்கு மட்டும் என்னும் அறிவிப்பு வரும் என எதிர் பார்க்கலாம்!!

வெட்கமே இல்லாத ஜென்மங்கள்!
ஏதோ ஒரு முறை தவறு நடக்கலாம் அல்லது இரண்டு முறை தவறுகள் நடக்கலாம்.

ஆனால் அதுவே தொடர்கதையாக தொடர்ந்தால்.....? என்னவென்று சொல்லுவது? என்ன வெட்கங்கெட்ட ஜென்மங்கள் என்று தான் நமக்குத் தோன்றும்.

இப்போதும் இந்த நிகழ்ச்சி இந்தியாவின் ஓரிசா மாநிலத்தில் நடந்தேறியிருக்கிறது. இதற்கு முன்பும் - நாம் கேள்விப்பட்டவரை - முதன் முதலாக இதே மாநிலத்தில் தான் கணவர் ஒருவர் இறந்து போன தனது மனைவியைத் தோளில் சுமந்து சென்றதாக செய்திகள் வெளியாகின.

இதற்கு முன்னும் இது நடந்து இருக்கலாம். ஆனால் செய்திகள் வெளியாகவில்லை. இப்போது இருக்கும் நவீன தொழில் நுட்பங்கள் உடனடியாகச் செய்திகளை வெளிக்கொணர்ந்து விடுகின்றன.

இதில் நாம் குறிப்பாகப் பார்க்க வேணடியவை தங்களைப்  படித்தவர்கள் என்று நினைப்பவர்கள் எவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்ளுகிறார்கள் என்பது தான். மனிதாபிமானமே இல்லாத ஈன ஜென்மங்களாக இவர்களால் எப்படி நடந்து கொள்ள முடிகிறது?

ஏழைகள் என்றால் அல்லது தாழ்த்தப்பட்டவர்கள் என்றால் அவர்கள் இப்படித்தான் நடத்தப்பட வேண்டுமா?

இறந்த போன ஏழு வயது குழந்தையை ஒரு தகப்பன் 15 கிலொமீட்டர் தூரம் சுமந்து கொண்டு செல்வது என்பது சாதாரண விஷயம் அல்ல.

முன்பு நமக்குக் கிடைத்த செய்தி  -  இறந்து போன தனது மனைவியை கணவர் தோளில் சுமந்து கொண்டு போனதாக வந்தது - ஆனால் இது போன்ற செய்திகள் வரும் போது சம்பந்ததப்பட்ட மருத்துவமனை என்ன நடவடிக்கை எடுத்தது அல்லது சுகாதார அமைச்சு என்ன நடவடிக்கை எடுத்தது அல்லது மாநில அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்தது அல்லது நடுவண் அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்று ஒன்றுமே தெரியவில்லை. நடவடிக்கை எடுத்திருந்தால் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடப்பதற்கு வழியில்லை.

இந்தச் செய்தியைக் கேள்வியுற்ற அரபு நாட்டு அரசர் ஒருவர் அந்த ஏழைக்கு பண உதவி செய்ததாக செய்திகள் வெளியாயின. எங்கோ இருக்கும் ஒருவருக்கு இந்தியாவில் நடக்கும் அசிங்கங்கள் தெரிகின்றன. ஆனால் தனது மாநிலத்தில் நடக்கும் இந்த அசிங்கத்தை சுகாதார அமைச்சருக்குத் தெரியவில்லை!

யார் என்ன செய்வது? இது போன்ற ஒரு படத்தை எடுத்து சமுகவலைத்தளங்களில் போடுபவர்கள் கொஞ்சம் மனிதாபிமனத்தோடு நடந்து கொள்ள வேண்டும். நாலைந்து  பேர் சேர்ந்து கொஞ்சம் பணம் போட்டு இந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைக்கலாம்.

இனி இது போன்ற செய்திகள் வராமலிருக்க இறைவனை வேண்டுவோம்.

Friday, 6 January 2017

எலிகளின் அட்டகாசம்..இங்கேயுமா...?


ஆபத்து, அவசரம் என்றால் எங்கே போவோம்? அதுவும் இரவு நேரத்தில்..? நமக்கு தெரிந்தது எல்லாம்'செவன்  இலவன்' கடைகள் தாம். இருபத்து நான்கு மணி நேர சேவை தரும் இந்தக் கடைகள் நாடெங்கிலும் பரந்தும் விரிந்தும் மக்களுக்குத் தேவையான - ஆபத்துக்கும், தேவைக்கும் உதவி வருகின்றன.

அவர்களின் சேவைகளை நாம் குறைத்து மதிப்பிடவில்லை. அந்த இரவு வேலைகளில் வேறு எங்கும் கிடைக்காதப் பொருள்கள் - குறிப்பாக உணவுப் பொருள்கள் - அங்கு தான் கிடைக்கின்றன. அவர்கள் தருகின்ற சேவைகளில் நாம் பெருமைப் படுகிறோம்.

ஆனாலும் இப்போது வலைத் தளங்கலில் பரபரப்பாகப் பரவிக் கொண்டிருக்கும் ஒரு செய்தி நம்மைத் திகைக்க வைக்கிறது.  7-Elevan என்றாலே சுத்தத்திற்குப் பேர் போனது. அதன் சுத்தமும், பொருள்கள் அடக்கி வைக்கப்பட்டிருக்கும் நேர்த்தியும், அதன் குளு குளு சுற்றமும் ஒரு நிமிடம் நம்மை கிரங்கடித்து விடும்!


இந்த நிலையில் செவன் இலவனில் இப்படி எலியாரும் வருகையாளர்களில் ஒருவர் என்றால் நம்மால் ஜீரணிக்க முடியவில்லை தான். அதுவும் நாம் சாப்பிடுகின்ற உணவுப் பொருள்களை எலியாரும் சாப்பிடுகிறார் என்றால் .... கொஞ்சம் மனதுக்குக் கஷ்டமாகத்தான் இருக்கிறது!

இதைவிட நம்மை அஞ்ச வைப்பது  எலி கழிக்கும் சிறுநீர் தான். அது சாப்பிட்டுப் போட்டதை  நாம் சாப்பிடுவது நல்லதல்ல. அதுவே விஷம் தான். ஆனால் சிறுநீர் என்றால் அது மரணத்தைச் சம்பவிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால் இது ஏதோ அரிதான ஒரு நிகழ்ச்சி என்கிறார்கள் அந்த நிறுவனத்தார்.  நம்மால் எதையும் நம்ப முடியவில்லை. அந்த வலைப்பதிவாளர் இதனைப்படம் பிடித்துப் போடவில்லை என்றால் இது வெளியே வந்திருக்காது. இந்த பாமா (எலி) விஜயம் தொடர்கதையாகத்தான் இருந்திருக்கும்!

"ஒன்னுமே புரியலே உலகத்திலே!" என்று நாமும் சந்திரபாபு மாதிரி பாடிக்கொண்டு,  தலையை ஆட்டிக் கொண்டே போக வேண்டியது தான்! எத்தனை சட்டங்களைக் கொண்டு வந்தாலும் ஒரு சிலரைத் திருத்த முடியாது என்பார்கள்.

கிளானா ஜெயாவில் உள்ள இந்த 7-Eleven னும் ஒன்று! திருந்தாத ஜென்மங்கள் இருந்து என்ன லாபம்?


Wednesday, 4 January 2017

கேள்வி - பதில் (41)


கேள்வி

சசிகலாவிற்கு அடிமட்டத்தில் எதிர்ப்புக்கள் காணப்படுகிறதே! இதனை அவர் எப்படி சமாளிக்கப்போகிறார்?

பதில்

ஆமாம்! பல இடங்களில் அ.தி.மு.க. தொண்டர்கள் அவருடைய சுவரொட்டிகளைக் கிழித்து போடுவதாக செய்திகள் வருகின்றன.

ஆனால் சசிகலாவிற்கு இதெல்லாம் ஒரு பிரச்சனையே அல்ல. முதல்வர் பன்னீர்செல்வமே அடங்கிப்போனார் என்றால் இந்தத் தொண்டர்கள் எம்மாத்திரம்? 

காவல்துறை அவர் பக்கம். அவர் சொல்லுவதை அப்படியே அவர்கள் நிறைவேற்றுவார்கள். அத்தோடு மட்டுமா? மன்னார்குடி என்பது அவருடைய ரௌடிக்கும்பல். மதுரையில் எப்படி ஒர் அஞ்சாநெஞ்சரோ அதே போல தமிழ் நாட்டுக்கு மன்னார்குடி ஓர் அஞ்சாநெஞ்சர்!

சசிகலாவிற்கு எந்தப் பிரச்சனைகள் வந்தாலும் அந்தப் பிரச்சனைகளைச் சமாளிக்கும் திறன் இந்த மன்னார்குடி கும்பலுக்கு உண்டு.

அடிமட்டத்தில் எங்கிருந்து எதிர்ப்பு வருகிறது என்று முதலில் ஆராய்வார்கள். பின்னர் அங்குள்ள வட்டம், மாவட்டம் அனைத்தையும் அலசுவார்கள். முதலில் பணத்தைக் கொடுத்து சரி பண்ண முயலுவார்கள். அதாவது சின்னம்மா தான் அம்மாவின் வாரிசு என்று அவர்களுக்கு ஓர் அழுத்தத்தைக் கொடுப்பார்கள். அடுத்த தேர்தலில் அவர்களுக்கும் ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என்று பேரம் பேசுவார்கள்.

ஏற்றுக் கொண்டால் தொண்டனுக்கு நல்ல காலம். அந்த நல்ல செய்தியோடு பணமும் கிடைக்கும். ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அத்தோடு அவனது அரசியல் எதிர்காலம் ஒன்றுமில்லாமல் போகும்!

சசிகலா ஜெயலலிதா வழி வந்தவர்.  முப்பாதாண்டுகள் அவரோடு இருந்தவர். ஆக, கடைசிவரை அவருக்குக் கை கொடுத்தது அராஜகம் தான். அதனை அவர் எப்படியெல்லாம் கையாண்டார் என்பது சசிகலா நன்கு அறிந்தவர். ஆனால் அதே அராஜகம் கடைசியில் அவர் உயிருக்கே ஆபத்தாக அமைந்தது! வாள் எடுத்தவன் வாளால் சாவான் என்பார்கள்! அது தான் அவருக்கு நடந்தது!

சசிகலாவால் எல்லாப் பிரச்சனைகளையும் சமாளிக்க முடியும். ஆனால் வழி நேர்மையாக இருக்காது! அவருடைய வழி என்பது அராஜகம் தான்!

Sunday, 1 January 2017

இனிய புத்தாண்டே வருக!


அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

பிறந்துவிட்டது புத்தாண்டு! இந்தப் புத்தாண்டை இன்னொரு புதிய ஆண்டாக எடுத்துக் கொண்டு காலத்தை வீணடிக்காதீர்கள்.

இந்த ஆண்டை உங்களுக்குச் சாதனை ஆண்டாக மாற்றி அமையுங்கள். என்ன தான் சாதனை?

நீங்கள் நினைத்தவை நடந்தேற வேண்டும். உங்கள் திட்டங்கள் நிறைவேற வேண்டும். புத்தாண்டில் பல தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என்று உறுதிமொழி எடுத்திருப்பீர்கள். பல என்று இல்லாவிட்டாலும் சிலவாவது இருக்க வேண்டும். அந்தச் சிலவற்றில் மிகவும் முக்கியம் என்று நீங்கள் எதனை நினைக்கிறீர்களோ குறிப்பாக அதனையாவது நிறைவேற்ற முயற்சி எடுங்கள்.

பலவற்றை கையில் வைத்துக் கொண்டு எதனைச் செயல்படுத்தலாம் என்று நேரத்தை வீணடிப்பதைவிட ஒன்றை கையில் வைத்துக் கொண்டு அதனை நிறைவேற்ற முழு மூச்சோடும், முழு வீச்சோடும் செயல்படுங்கள்.

அப்படியே இரண்டு மூன்று திட்டங்களை இவ்வாண்டு அவசியம் நிறைவேற்ற வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் ஒவ்வொரு திட்டத்துக்கும் எத்தனை மாதங்கள் தேவை என்று அதற்குத் தேவையான மாதங்களை ஒதுக்கி உங்களது திட்டங்களை நிறைவேற்ற முயலுங்கள்.

நீங்கள் நினைக்கும் திட்டங்களை மனதில் அடக்கி வைத்துக் கொண்டு 'இதோ, அதோ' என்று மனத்தை அலைய விடாதீர்கள்.

இன்றே அதற்கான முயற்சிகளில் ஈடுபட ஆரம்பித்து விடுங்கள்> ஒவ்வொரு நாளும் உங்கள் திட்டம் நிறைவேற என்ன செய்திருக்கிறீர்கள் என்று படுக்கைக்குப் போகும் முன்னர் எழுதி வையுங்கள். சும்மா மனதிலேயே போட்டு கணக்குப் பண்ணி வைத்திருந்தால் கணக்குத் தவறாகப் போகும்! எழுதி வையுங்கள். எழுதி வைத்தால் எத்துணைத் தூரம் கடந்திருக்கிறீர்கள் என்று ஒரு  தெளிவு கிடைக்கும். படிப்படியாக ஒரு முன்னேற்றம் தெரியும். அந்த முன்னேற்றம் தான் நமக்கு உற்சாகத்தைதைக் கொடுக்கும்.

சென்ற ஆண்டு எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் நமது கணக்கைத் தவறாகப் போட்டிருப்போம்.. அதனை இந்த ஆண்டு சரி படுத்துவோம்.

முடிந்து போனவைகளைப் பற்றி புலம்ப வேண்டாம். நடந்தால் நல்லது. நடக்காவிட்டால் அதனைவிட நல்லது என்னும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.சென்ற ஆண்டின் தவறுகளை இந்த ஆண்டு திருத்த முயற்சிப்போம்.

நாம் நமது காரியங்களைச் செய்வதற்கு யார் யாரையோ எதிர்பார்த்து ஏமாற வேண்டாம். நமது முயற்சிகளைச் செய்து கொண்டு போகும் போது மற்றவர்கள் உதவி தன்னால் வரும் என்பது  தான் பிறரின் அனுபவம்.

நல்லதை எடுத்துக் கொள்ளுவோம். நல்லதைச் செய்வோம். நல்லதையே நினைப்போம். இந்த ஆண்டிலும் நல்லதே நடக்கும்!