Sunday, 30 June 2019

தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம்!

மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலத்தைப் பற்றியான ஒரு கட்டுரையை மலாக்கா முத்துக்கிருஷ்ணன் தமிழ் மலர் நாளிதழில் எழுதியிருந்தார்.

மிகவும் தெளிவான ஒரு கட்டுரை. தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் சம்பந்தமாக அரசியல் அமைப்பு  என்ன சொல்லுகிறது, எதிர்த்துப் பேசுபவர்கள் நிந்தனைச் சட்டத்திற்கு உள்ளாக்கப்படுவர் என்ப்தெல்லாம் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.  உள்ளதை உள்ளபடி சொல்லியிருக்கிறார்.

வாழ்த்துகள் நண்பரே! காரணம் இந்தத் தெளிவு என்னிடம் இல்லை. இப்போது தான் நான் அறிய வருகிறேன்.  நமது சமூகத்தினர் அனைவரும் நமது உரிமைகளைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதுவும் மொழி என்கிற போது அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

ஆனால் நிந்தனைச் சட்டம் பாயும் என்று தெரிந்தும் இப்போது அவரவர் விருப்பத்திற்குப் பேச ஆரம்பித்து விட்டார்களே! அது யாருடைய குற்றம்? நாம அம்னோவைத்தான் குறை சொல்ல வேண்டி வரும்! ஆமாம்! அவர்களுடைய ஆண்டு கூட்டங்களில் எத்தனையோ முறை இந்த நிந்தனைப் பேச்சுக்கள் பேசப்பட்டிருக்கின்றன. ஆனால் அவர்கள் மீது எந்தச் சட்டமும் பாயவில்லையே!  அப்போதைய அரசாங்கம் அவர்களுக்குப் பாதுகாப்பு கொடுத்தது என்று தாராளமாகச் சொல்லலாம். அதிலும் பினாங்கு "காக்காய்கள்"  அதிகமாகவே சத்தம் போட்டன! அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை!  எடுக்கவும் துணிச்சலில்லை!  காரணம் மறைமுகமாக அவர்களுக்கு ஆதரவு கொடுத்தனர்!

அரசாங்க ஆதரவு இருப்பதனால் இப்போது யார் வேண்டுமாலும்  பேசலாம் என்கிற துணிச்சல் அனைவருக்கும் வந்து விட்டது! அதனால் தான் பாஸ் கட்சியில் உள்ள அம்மையார் ஒருவர் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானார். இவர் அரபு மொழிதெரிந்தவர் அனைவரும் அரபு படிக்க வேண்டும் என்கிறார்!   நமது நாட்டின் சரித்திரம் அறியாத இது போன்ற பத்தாம்பசலிகள் இருந்தால் நாடு என்ன ஆகும் என்பது நமக்குப் புரியவில்லை! படித்தவர். மேற் கல்வி படித்தவர். பொறுப்பான தொழிலில் உள்ளவர். இனங்களிடையே ஒற்றுமையை வளர்க்க வேண்டியவர்.ஆனால் இவர் பேசுவதோ வெறுப்பைத் தூண்டும் பேச்சு!  இவர் என்னஆன்மீகவாதி  என்று நமக்குப் புரியவில்லை!

இப்போது நம்மிடையே ஒரு கேள்வி உண்டு.  இது போன்று பேசுபவர்களை இன்றைய அரசாங்கம் என்ன செய்யப் போகிறது?  இது வரை ஒன்றும் செய்யவில்லை.  இனி மேலும் ஒன்று செய்யாது என்றே தோன்றுகிறது!

எது எப்படி இருந்தாலும் சரி தமிழ்ப்பள்ளிகள் தொடரும் என்பதே உண்மை!  மாற்றுக் கருத்து இல்லை!                                                                                                                                                                                    

மலேசிய ஏர்லைன்ஸ் ... என்ன ஆகும்?

மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் மூடுவிழா காணும் நிலையில் இருக்கிறது! ஆமாம்! கடனில் தத்தளித்துக்  கொண்டிருக்கும் அந்த நிறுவனத்தை என்ன செய்யலாம் என்று யாருக்கும் தெரியவில்லை!

முன்பு வாய் கிழியப் பேசியவர்கள் எல்லாம் இப்போது வாய் மூடி பேசா மடந்தையாகி விட்டார்கள்!  ஒருவருக்கும் பேசத் தகுதியில்லை!

இது போன்ற பெரிய நிறுவனங்களையெல்லாம் யார் வேண்டுமானாலும் நடத்தலாம் என்கிற எண்ணத்தை யாரோ ஒரு சிலர் விதைத்து விட்டார்கள்! அப்போது அதைக் கேட்க நமக்கும் ,மகிழ்ச்சியைக் கொடுக்கத்தான் செய்தது.

ஆனாலும் இப்போது புரிகிறது. வெறும் சவடால் தனம் எதற்கும் உதவாது! அனுபவம் வேண்டும். அப்படி இல்லையென்றாலும் முழு ஈடுபாடு வேண்டும். அரசியல் தலையீடு கூடாது.  மதங்களைப் புறம் தள்ள வேண்டும். எங்கள் இனம் மட்டும் தான் என்கிற இன வெறி இருக்கக் கூடாது. 

மாஸ் விமானத்தின் ஆரம்ப காலம் சிறப்பாகத் தான் இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. அப்போது அதற்குத் தலைமையேற்றவர் ஒரு இந்தியர் என்பதாலேயே அவர் ஓரங்கட்டப்பட்டார்! ஒரு பெருந்தொழிலின் ஆரம்ப காலம் என்பது எவ்வளவு சிக்கலானது என்பது நமக்கும் ஓரளவு புரியும்.  ஆனாலும் அனாவசியமாக அவரை ஒதுக்கிவிட்டு .......  அப்புறம் என்னன்னவோ நடந்தது! கடைசியில் இன்றைய நிலைக்குக் கொண்டு வந்து விட்டது! இப்போது அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது!

இப்போது மூத்த பத்திரிக்கையாளர்  காதிர் ஜாசின் ஒரு கருத்தைச் சொல்லி இருக்கிறார்.  மாஸ் விமானத்தை ஏர் ஏசியா விமான நிறுவனம் வாங்கினால் என்ன என்று அவர் கேட்டிருக்கிறார். நிச்சயமாக அது ஒரு நல்ல கருத்து  என்பதில் ஐயமில்லை.  முன்பெல்லாம் இப்படி ஒரு கருத்தைச் சொல்லியிருந்தால்  பெரிய ஆர்ப்பாட்டமே நடந்திருக்கும்! இப்போது அந்த ஆர்ப்பட்டவாதிகள் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை! இப்போது மலேசியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் விமானங்கள் அனைத்தும் இலாபகரமாகத் தான் ஓடிக் கொண்டிருக்கின்றன!  மாஸ் மட்டும் தான் விதிவிலக்கு! 

ஏர் ஏசியாவுக்கு அதனை ஏற்று நடத்தும் வாய்ப்பு வந்தாலும் வரலாம் என்றே தோன்றுகிறது. வெளி நாட்டுக்காரர்களுக்கு விற்பதை விட உள்நாட்டு ஏர் ஏசியாவுக்கு விறபதையே பலர் விரும்புகிறார்கள். இது ஒரு மானப் பிரச்சனை   நாட்டின் நலன் முக்கியம். 

ஒன்று மட்டும் உறுதி.  டோனி  பெர்னாண்டஸ் ஏர் ஏசியா வை வாங்கும் போது அவர் எந்த விமான நிறுவனங்களையும் நடத்தவில்லை. விமான சேவைக்குப் புதியவர். வெற்றி பெற்றார் என்றால் அது அவருடைய உழைப்பு. உழைப்பு, உழைப்பு! 

டோனி இன்னொரு இரண்டு வெள்ளி நிறுவனத்தை வாங்குவாரா என்று பார்ப்போம்!

Saturday, 29 June 2019

ம.இ.கா.வை நம்பலாமா...?

ம.இ.கா.வை நம்புவது என்பதெல்லாம் சாதாரண விஷயமா?

இது வரை ம.இ.கா.வினரை நம்பலாம் என்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை!  எந்தத் தடயமும் கிடைக்கவில்லை!

ஆகக் கடைசியாக படித்த செய்தி நல்ல செய்தியாக இருந்தாலும் திருப்திகரமான செய்தியாக இல்லை.  ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம்  ம.இ.கா.வின் கட்டுப்பாட்டில் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

வந்திருக்கலாம். இல்லை என்று சொல்லவில்லை.  இவர்களை எப்படி நம்புவது என்று தான் சொல்ல வருகிறேன்.  இவர்கள் வதந்திகளைப் பரப்புபவர்கள்.  இவர்கள் சொல்லுவதையெல்லாம் நம்பித்தான் இந்த சமுதாயத்திற்கு இன்று இந்த நிலை!  ம.இ.கா.வின் கட்டுப்பாட்டில் வந்திருக்கிறதாஅல்லது ம.இ.கா. வில் உள்ள ஒரு சிலரின் கட்டுப்பாட்டில் வந்திருக்கிறதா என்று நாம் ஐயப்படுவதில்  எந்தத் தவறுமில்லை.  அந்த அளவுக்குத்  தான் அவர்கள் மீது நமக்கு மரியாதை!

ஒரு செய்தி நம்மைக் கவருகிறது!  நடந்து முடிந்த எம்ஐடி கூட்டத்தில்  வடிவேலு, வீரசிங்கம், கோ.ராஜு, ராகவன் போன்றோர் தோல்வியைத் தழுவியதாக கூறப்படுகிறது. ம.இ.கா. தலைவர் விக்னேஸ்வரனின் அணியினரின் வெற்றி பெற்றனர். அப்படி வெற்றி பெற்றவர்களில் எம்.சரவணன், டி.மாரிமுத்து, எல்.கிருஷ்ணன், டி.மோகன், டி.சிவராஜா, அசோஜன், எஸ்.கே.தேவமணி, பி.கமலநாதன்,  உஷா நந்தினி ஆகியோர் வெற்றி பெற்றனர். 

இதில் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது முன்னாள் ம.இ.கா. தலைவர் துன் சாமிவேலு இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் அவர் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதாம்!

இங்கே நாம் கவனிக்க வேண்டியது முன்னாள்  எம்.ஐ.டி.யின் நிர்வாகத்திற்கும் இப்போது  தலைமை ஏற்றிருக்கும் நிர்வாகத்திற்கும் அப்படி என்ன பெரிய வித்தியாசம்?  யாராவது ஒருவர் ...ஒரே ஒருவர் ... இவர் யோக்கியமானவர் என்று நம்மால் சொல்ல முடியுமா! அதே குட்டைகள்! அதே மட்டைகள்!  இவர்களைப் பார்க்கும் போது ஏதோ கடத்தல் கும்பல் என்கிற எண்ணம் தான் நமக்குத் தோன்றுகிறதே தவிர அப்படி ஒன்றும் சமுதாயத்தைக் காக்க வந்தவர்கள் போல் தோன்றவில்லை! 

இல்லை! நான் நம்பவில்லை! ஏதோ அந்தப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தில் ஒரு சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்.  அது ம.இ.கா. வின் சொத்தாக மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்பதை நான் நம்பவில்லை. அது இன்னும் குறிப்பிட்ட ஒரு சிலரின் சொத்தாகத்தான் இருக்கும். அதற்குத் தானே துன் சாமிவேலு தேவைப்படுகிறார்!

இப்போது ம.இ.கா.வின் சொத்துக்கள் அனைத்தும் மக்களின் சொத்துக்கள் அல்ல. தனிமனிதர்களின் சொத்துக்கள்! அவ்வளவு தான்!
 

Friday, 28 June 2019

நீங்கள் புத்தகப்பிரியரா....?

நீங்கள் புத்தகம் படிக்கும் பழக்கமுள்ளவரா? அப்படியென்றால் உங்களுக்கு எனது வாழ்த்துகள்!

ஓரிரு நாள்களுக்கு முன்னர் ஒரு கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. ஆமாம். நமது பிரதமர் டாக்டர் மகாதிர் புத்தகப் படிக்கும் பழக்கம் உள்ளவராம்.  தினசரி புத்தகங்கள் படிப்பவராம். அதைப் படித்ததும் "அட! நம்ம மாதிரி தான்!" என்கிற உணர்வு வந்து விட்டது!

இப்போதெல்லாம் புத்தகம் படிப்பது என்பது அரிதாகி வருகின்ற ஒரு காலம்.  இளம் வயதில் நான் படிக்காத புத்தகங்கள் இல்லை. அப்படி விழுந்து விழுந்து படிப்பவன் நான். கண் கண்டதையெல்லாம் படிப்பவன். எவ்வளவு பெரிய புத்தகமாக இருந்தாலும் எனக்கு ஒரு நாள் போதும்! படித்து விடுவேன்! அவ்வளவு வேகம்!

நான் படித்தவை பெரும்பாலும் தமிழ் புத்தகங்கள் தான். ஏனோ ஆங்கிலப் புத்தகங்கள் என்னை அவ்வளவாக ஈர்க்கவில்லை. ஆங்கிலப் புத்தகங்களில் தன்முனைப்புப் புத்தகங்கள்,  தனிமனித வாழ்க்கை வரலாறுகள் - இவைகளைத் தவிர வேறு புத்தகங்கள்  நான் படிப்பதில்லை.

தமிழ்ப் புத்தகங்களை எடுத்துக் கொண்டால் ப்ல்வேறு புத்தகங்கள், பல்வேறு எழுத்தாளர்களின் புத்தகங்கள் படித்தாலும் மிஞ்சி நிற்பதென்னவோ தன்முனைப்புப் புத்தகங்களும், வரலாறுகளும் தான். 

ஆனாலும் நான் பள்ளி காலத்திலிருந்து வாங்கியப் புத்தகங்கள் இன்னும் ஒரு சில இருந்தாலும் பல புத்தகங்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன!  பணி நிமித்தம் நான்  பல  இடங்களுக்கு  மாறிப்  போனதால்  புத்தகங்களும் மாறிப் போய்விட்டன! பல புத்தகங்களை நானே நூல் நிலயங்களுக்குக்  கொடுத்து விட்டேன்.  காணாமல்  போவதை விட  இதுவே நல்லது!

இப்போதும் புத்தகங்கள் படிப்பதைத் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறேன்.    ஆனால் இணைய தளத்தில் அதிகம் படிக்கிறேன்.  படிப்பதை ஏனோ நிறுத்த முடியவில்லை.

படிப்பதற்கு எத்தனையோ வழிவகைகள் இருந்தாலும் புத்தகங்களைப் படிப்பதைப் போன்ற சுவராஸ்யம் எதிலும் இல்லை.

டாக்டர் மகாதிர் ஒரு புத்தகப் பிரியர் என்பதை அறிந்த போது என்னைப் பற்றியும் கொஞ்சம்  எழுத  இந்த  இடத்தைப்  பயன் படுத்திக் கொண்டேன்! 

நீங்களும் புத்தகங்கள் படிப்பதை  வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். வாழ்த்துகள்!

Thursday, 27 June 2019

தமிழ்ப்பள்ளிகளை ம.இ.கா. புறக்கணிக்கிறதா?

தமிழ்ப்பள்ளிகளை ம.இ.கா. புறக்கணிக்கிறதா என்று மீண்டும் பேச்சு எழுந்துள்ளது!

அதற்குக் காரணமாக உள்ளவர்கள் பாஸ் கட்சியினர்.  பாஸ் கட்சி  தனது சமீபத்திய மாநாட்டில் தாய்மொழிப்பள்ளிகள் முடக்கப்பட வேண்டும் என்பதாகத்  தான் தோன்றித்தனமாக பேசியுள்ளனர்.

ம.இ.கா. இப்போது பாஸ் கட்சியுடன் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்து உள்ளது. இந்த நிலையில் பாஸ் ஆடுகின்ற ஆட்டத்துக்கு இவர்களும் சேர்ந்து தாளம் போட வேண்டும்! இப்போதைக்கு  ம.இ.கா. வை விட பாஸ் பலம் வாய்ந்த கட்சி என்பது உண்மை.  ம.இ.கா. இனி தலை எடுக்குமா என்பது அவர்களுக்கே தெரியாது!  இந்தியர்களைப் பொறுத்தவரை ம.இ.கா. என்பதே கறை பட்ட ஒரு வரலாறு! அது போதும்!

பாஸ் கட்சியை விட்டுத் தள்ளுங்கள். கடந்த காலங்களைத் திரும்பிப் பார்க்கின்ற போது ம.இ.கா. எந்த அளவுக்குத் தமிழ்ப்பள்ளிகளுக்கு உதவியாக இருந்திருக்கிறது? அது ஒரு கேள்விக்குறி!

தமிழ்ப்பள்ளிகளைப் பயன்படுத்தி பணத்தைச் சேர்த்தவர்கள் ம.இ.கா.வினர்!  இது ஒன்றும் ரகசியம் அல்ல.  அவர்கள் மட்டும் தமிழ்ப் பள்ளிகளோடு ஒத்துழைத்திருந்தால் எத்தனையோ பள்ளிகள் நல்ல முறையில் சீரமைக்கப்பட்டிருக்கும். ஆனால் அது நடக்கவில்லை! 

இப்போது நமது கண்களுக்குப் "பளிச்" என்று தெரிவது  அவர்கள் நடத்திய ஒரு சில ஊழல்கள்:  ஒரு தமிழ்ப்பள்ளிக்கு ஆறு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. அதில் மூன்று ஏக்கர் நிலத்தை அவர்கள் பாக்கெட்டில் போட்டுக் கொண்டார்கள்!  எத்தனையோ முறையீடுகள். ஆனால் அவர்கள் அதனைத் திருப்பிக் கொடுப்பதாகத் தெரியவில்லை! அதே போல பேரா மாநில அரசாங்கம் இரண்டாயிரம் ஏக்கர் நிலத்தை தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்காகக் கொடுத்தார்கள். அதனை அப்படியே ம.இ.கா. வினர் கபளீகரம் செய்து விட்டார்கள்!  இது ஒரு பெரிய அதிர்ச்சி தான்! நமக்குத் தான் அதிர்ச்சி! அவர்களுக்கு இல்லை!

காலங்காலமாக  கொள்ளையடிப்பதையே அரசியலாகக் கொண்டவர்களுக்கு எதுவும் உறைக்காது! இனம், மொழி என்பது பற்றியெல்லாம் அவர்களிடம் பேச முடியாது! அவர்களைப் பொறுத்தவரை பணம் மட்டும் தான் இனம், மொழி!  அது தான் ம.இ.கா.!

தமிழ்ப்பள்ளிகளை ம.இ.கா. புறக்கணித்து எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன! புதிதாக ஒன்றுமில்லை!

கேள்வி - பதில் (104)

கேள்வி

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடியாக செய்கின்ற செய்ல்களைப் பாராட்டலாமா?

பதில்

பாராட்டலாம்! அதுவும் நல்லது செய்தால் இன்னும் பாராட்டலாம்! ஆனால் நமக்கு அங்குள்ள அரசியல் பிடிபடவில்லை.

கடைசியாக நாம் தெரிந்து கொண்டது: சந்திரபாபு நாயுடு கட்டிய கட்டடத்தை இடித்து தள்ளிவிட்டாராம்! ஆனாலும் அவர் விதாண்டாவாதம் செய்யவில்லை. அந்தக் கட்டடம் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடமாம்.

தமிழ் நாட்டில் என்ன நடந்தது பாருங்கள்.  அம்மையார் ஒரு நூல் நிலையத்தயே உடைத்து மருத்துவமனையாக  மாற்றினார்.  இது போன்ற அடாவடித்தனத்தை நாம் விரும்பவில்லை. அது மக்களின் பணம். அதற்கு மரியாதை வேண்டும்.

நமது ரெட்டி போலவே நாயடுவும் தான் ஆட்சிக்கு வந்த போது  மிகவும் ஆரவாரமாக செயல் பட்டார்.  அப்போது அனைவரும் அவரைப் பாராட்டினார்கள்.  கணினியைப் பயன்படுத்தும் முதலமைச்சர் என்றார்கள். பிறகு எந்த சத்தத்தையும் காணோம்!

மக்களுக்கு இந்த  "ஷோ" காட்டுவதெல்லாம் நமக்கு வேண்டாம்.  உங்களால் இந்த ஆந்திர மாநில மக்களுக்கு என்ன பயன் என்பது தான் முக்கியம். அங்கும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள்.  இது போன்ற தற்கொலைகளைத் தடுக்க ரெட்டி வைத்திருக்கும் திட்டங்கள் என்ன! ஆந்திராவிலும் ஏழைகள் நிறையவே இருக்கிறார்கள். ஏழ்மையைப் போக்க என்ன செய்யப் போகிறார்?  நிறைய கேள்விகள் உண்டு.   

இப்போது நாம் பார்க்கும் அரசியல் எல்லம் அரசியல் எதிரிகளை எப்படி ஒழித்துக் கட்டுவது என்பதைத் தவிர  வேறு ஒன்றுமில்லை. எல்லா மாநிலங்களிலும் இதே நிலை தான்.  தாங்கள்  பதவியில் இருக்கும் காலம் வரை எதிரிகளை ஒழித்துக் கட்டுவதையே நோக்கமாக இருக்கும் இவர்களுக்கு மக்களைப் பற்றி எந்த கவலையும் இல்லை. கருணாநிதியும் ஜெயலலிதாவும் அதைத்தான் செய்தார்கள்!

ஜெகன் ரெட்டி ஒரு நல்ல முதலமைச்சாராக நடந்து கொள்ள வேண்டும். அதைத் தான் ஆந்திர மக்களும் விரும்புகிறார்கள், நாமும் விரும்புகிறோம்.  இந்தியா ஓர் ஏழை நாடு என்று சொல்லுவதே கேவலம். அதனைப் பணக்கார மாநிலமாக, பணக்கார நாடாக மாற்றுவது அரசியல்வாதிகளின் கையில் தான் இருக்கிறது.

ஜெகன் ரெட்டி ஆந்திர மாநிலத்தை வளமாக மாநிலமாக மாற்றுவார் என்று  எதிர்பார்க்கிறோம்!  வாழ்த்துகள்!

Wednesday, 26 June 2019

தாய்மொழிப் பள்ளிகள் முடக்கப்பட வேண்டுமா?

தாய்மொழிப்பள்ளிகள் முடக்கப்பட வேண்டும் என்னும் பாஸ் கட்சியினரின் கூக்குரல் தங்களை மலாய்க்காரர்களிடையே ஒரு ஹீரோவாகக் காட்டிக் கொள்ளும் நடவடிக்கை என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்பதாகத் தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்!

ஏற்கனவே அம்னோ மாநாடுகளில் இது போன்ற ஹீரோக்கள் நிறையவே இருந்தனர் என்பதும் நமக்குத் தெரியும்.  இப்போது பாஸ் கட்சியில் உள்ள ஹீரோக்களும் அதேயே ஊதி வருகின்றனர்.

அவர்கள் இப்படிப் பேசுவதின் மூலம் அவர்களின் நோக்கம் மலாய் வாக்கு வங்கிகளைக்  கவரத்தான்  என்பது  ஒன்றும் இரகசியமல்ல.  இவர்களின் நோக்கமே இப்படிப் பேசினால் தான் மலாய்க்காரர்கள் தங்களுக்கு ஆதரவு தருவார்கள் என்று நினைக்கிறார்கள்!

ஆனால் மக்களுக்கு இது ஒன்று பெரிய பிரச்சனையல்ல. இன்று தமிழ்ப்பள்ளிகளில் படிக்கின்ற மலாய்  மாணவர்களும்  இருக்கத்தான் செய்கிறார்கள். இப்போதெல்லாம்  எந்தப் பள்ளிகள்  அருகில் இருக்கின்றனவோ அந்தப் பள்ளிகளில் தங்கள் குழைந்தைகளைச்  சேர்ப்பவர்கள் இருக்கிறார்கள். போக்குவரத்து செலவுகள், இன்னும் பிற செலவுகள், இவைகளை வைத்துப் பார்க்கும் போது  அதுவே சிறந்த முடிவாக அவர்களுக்குத் தெரிகிறது.

நமக்குத் தெரிந்தவரை தேசியப்பள்ளிகளை விட மற்ற மொழிப்பள்ளிகள் எல்லா வகையிலும் கொடிக்கட்டிப் பறக்கின்றன!  உண்மையைச் சொன்னால் ஆசிரியர் பற்றாக் குறையை  எல்லாக் காலங்களிலும் இந்தப் பள்ளிகள் எதிர் நோக்குகின்றன.   ஆசிரியர் பயிற்சி பெறாத, தற்காலிக ஆசிரியர்கள் என்றுசொல்லி,  அவர்களையே நிரந்தரமாக பணியில் அமர்த்தப்படுவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இவ்வளவு குறைபாடுகள் இருந்தும்  தேர்ச்சி  விகிதத்தில் தேசியப்பள்ளிகளால் இவர்களை நெருங்க முடியவில்லை என்று சொல்லலாம்.

தேசியப்பள்ளிகளில் எல்லா வசதிகளும் உண்டு.  அத்தோடு சரி.  அதிகப் பிரச்சனைகள் அங்கிருந்து  தான்  ஆரம்பமாகின்றன!  முக்கியமான குற்றச்சாட்டுகள்  என்றால்  ஆசிரியர்கள்  மாணவர்கள் மீதோ அவர்களின் கல்வியின் மீதோ அக்கறை காட்டுவதில்லை என்பது தான். 

இன்று மாணவர்கள் பள்ளியில் படிப்பதை விட  டியுஷன் சென்டர்களில் படிக்கும் நேரமே அதிகம். இதற்குக் காரணம் தேசியப் பள்ளிகளின் தரமற்ற  கல்வியே!  இதில்  மாற்றுக் கருத்து ஒன்றுமில்லை!

இதனைச் சரி செய்ய வக்கில்லாதவர்கள் தாய்மொழிப்பள்ளிகளை முடக்க வேண்டும் என்று சொல்லுவது முட்டாள் தனமான கருத்து என்பதை ஒப்புக் கொள்ளவேண்டும். 

இதற்குப் பதிலாக தேசிய மொழிப்பள்ளிகளின் தரத்தை உயர்த்த ஆவன செய்ய வேண்டும். அது தான் நாட்டுக்கு நல்லது. புரிந்து கொண்டால் சரி!

Tuesday, 25 June 2019

இப்போது தான் கண்ணுக்குத் தெரிகிறதா?

பாஸ் மாநாட்டில் பேசிய பேச்சுக்கள். தாய்மொழி பள்ளிகளின் மீதான பேச்சுக்கள், மற்ற இனத்தவர்களின் சினத்தை தூண்டுவதாக அமைந்திருக்கிறது என்பது உண்மை.

அவர்கள் அறிவற்றவர்களோ, அறிவு இல்லாதவர்களோ என்றெல்லாம் யாரையும் நம்மால் மதிப்பிட முடியாது. எல்லாம் படித்தவர்கள்.  பண்புள்ளவர்கள். படித்த மேதைகள்.  ஏன்? சமீபத்தில் தற்காப்பு அமைச்சர், மாட் சாபு, சிங்கப்பூரில் பேசிய ஆங்கில பேச்சைக் கூட பாஸ் கட்சியைச் சார்ந்த ஒருவர் கிண்டலடித்திருக்கிறார்!  அந்த அளவுக்கு அவர்கள் மலேசிய அரசியலில் உயர்ந்து நிற்கிறார்கள் என்பதில் நமக்கு ஐயமில்லை.

ஆனால் சில சமயங்களில் அவர்கள் பேசுகின்ற பேச்சுக்கள் இனங்களிடையே  பிரிவை  உண்டாக்குவது   போன்ற ஒரு தோற்றத்தை அவர்களே ஏற்படுத்துகின்றனர்.  அவர்கள்  மறை முகமாக மற்ற இனத்தவர்களை வெறுக்கின்றார்கள்  என்று தான் நாம் நினைக்க வேண்டியுள்ளது. 

இப்போது அவர்கள் தாய்மொழி பள்ளிகள் தேவையில்லை என்பது வெறுப்பின் உச்சம் என்று நாம் சொல்லலாம்  அல்லவா?  தாய்மொழி பள்ளிகள் இன்றா, நேற்றா இந்நாட்டில் தோன்றியவை?  தமிழ் மொழி இந்நாட்டில் இருநூறு  ஆண்டுகளுக்கு மேலாக,  அதிகாரத்துவ மொழியாக இருந்து வருகிறது.  சீன மொழியும் அப்படித்தான்.  இந்த மொழிகளின் மூலம் இனங்களிடையே அப்படி என்ன வெற்றுமைகள் வளர்ந்து விட்டன?  

மாணவர்களிடையே பிரிவினையை ஏற்படுத்துபவர்கள் யார்? இன்று  பிரிவினை என்பது தேசிய பள்ளிகளில் இருந்து தான் ஆரம்பாகிறது. அந்தப் பிரிவினையை ஏற்படுத்துபவர்கள் அரசியல் கட்சியினர். ஒற்றுமையை வளர்க்க வேண்டிய  அரசியல்வாதிகள் வேற்றுமையை வளர்க்க தேசியப்பள்ளிகளைப் பயன் படுத்துகின்றனர்.

இன்றைய நிலையில் சீனப்பள்ளிகளும், தமிழ்ப்பள்ளிகளும் பல வகைகளில் தேசியப்பள்ளிகளை விட சிறப்பாக இயங்குகின்றன.  கல்வியில் முன்னணியில் இருக்கின்றன.  விஞ்ஞான தொடர்பான போட்டிகளில் தமிழ்ப்பள்ளிகள் உலக அளவில் வெற்றி பெறுகின்றன. 

ஓரளவே அரசாங்க உதவியுடன் இயங்கும் இந்த பள்ளிகளின் வெற்றிகளைப் பற்றி பெருமைப் பட வேண்டும். பொறாமைப் பட கூடாது. அந்த பொறாமை தான் இப்போது இந்த அரசியல்வாதிகளையும் ஒட்டிக் கொண்டது!

பாஸ் கட்சியினரின் இந்தத் தாக்குதலுக்கு பொறாமை தான் காரணமே தவிர வேறு காரணங்கள் இல்லை.  கல்வி என்றுமே பிரிவினையை ஏற்படுத்துவதில்லை. அரசியவாதிகளுக்கு அதுவே தொழில்!

தாய்மொழிப்பள்ளிகள் ஒன்றும் நமது நாட்டுக்குப் புதிதல்ல!

Monday, 24 June 2019

எந்த ஒப்பந்தமும் இல்லையா...?

அடுத்த பிரதமர் யார் என்கிற கேள்வி இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது!

பிரதமர் மகாதிர் பதிவியிலிருந்து விலகும் போது  பிரதமர் பதவியை அன்வார் இப்ராகிமிடம் ஒப்படைப்பேன் என்பதாகத் தொடர்ந்து சொல்லி வருகிறார்.   

ஆக, பிரதமரைப் பொறுத்தவரை  அத்தோடு அந்தப் பிரச்சனை முடிந்தது. ஆனாலும் ஒரு சில அரசியல்வாதிகள் அது முடிந்து விட்ட பிரச்சனையாக நினைக்கவில்லை.  தொடர்ந்தாற் போல யார் அடுத்த பிரதமர்  என்று கேள்வி எழுப்பவதும் குழ்பத்தை ஏற்படுத்துவதுமாக இருக்கின்றனர்.

இந்த வரிசையில்  கடைசியாக குழப்பத்தை ஏற்படுத்துபவர் முன்னாள் அமைச்சரும், இந்நாள் பிரிபூமி கட்சியின் செயற்குழு உறுப்பினருமான டாக்டர் ரைஸ் யாத்திம். 

இவர் ஒரு படி மேலே போய் "பிரதமர் பதவி அன்வாருக்குக் கொடுக்கப்படும்  என்று எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை!" என்பதாகக் கூறியிருக்கிறார்!  

இது  தேவையற்ற  ஒரு பேச்சு.   அவர் வழக்கறிஞர் என்பதற்காக அனைத்தும் எழுத்துப் பூர்வமாக  இருக்க  வேண்டும்   என்று அவர் நினைக்கிறார்.  உண்மை தான்.  ஆனால்  பக்காத்தான்  அரசங்கம் எந்த நிலையில்  பதவிக்கு வந்தது என்பதை ரைஸ் யாத்திம்  கொஞசம் யோசித்துப்  பார்க்க வேண்டும்.  கடந்த  பொதுத்  தேர்தலில்  பக்காத்தான் வெற்றி பெறும்  என்று  யாரும்  கனவிலும் நினைக்கவில்லை.  அது ஒரு எதிர்பாராத வெற்றி.  அது "எதிர்பாராதது"  என்பதால்  தான்  எந்த  ஒப்பந்ததும் தேவைப்பட வில்லை.  அந்த நேரத்தில்  தான்  அந்தக் கணத்திலேயே  அனைத்துக் கட்சிகளின் முன்னிலையில் "முதலில் டாக்டர் மகாதிர் அதன் பின்னர் அன்வார் இப்ராகிம்"  என்று  வாய்மொழியான ஒப்பந்தம் செய்யப்பட்டது. எல்லாம் வாய்மொழியான ஒப்பந்தம் தான்.  இதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துக் கொண்டனர். அவ்வளவு தான். அதனை இப்போது ஊதி ஊதி பெரிதாக்கி அன்வார் தகுதியான தலைவர் இல்லை என்பதாக ஒரு சாரார் கூறுகின்றனர்.

அன்வாரை எதிர்க்கின்ற ஒரு  குழு நீண்ட  காலமாக அரசியலில் இயங்கி வருகிறது. இவர்கள் பெரும்பாலும்  அம்னோ கட்சியைச்  சேர்ந்தவர்கள். இப்போது அவர்களில் பலர் பிரிபூமி கட்சியில் இணைந்து விட்டனர். இப்போது இங்கிருந்து தான் அடிக்கடி அடுத்த பிரதமர் அன்வார் இல்லை என்பதாகக் கூறி வருகின்றனர்.

ரைஸ் யாத்திம் பேசும் தோரணையைப் பார்க்கின்ற போது அது ஒரு அதிகாரப்பூர்வமான பேச்சாகவே நாம் எடுத்துக் கொள்ள வேண்டி வருகிறது. ஆனாலும் ஒப்பந்தம் ஒன்றுமில்லை என்று சொல்லும் போது இந்த வயதிலும் டாக்டர் மகாதிர் தான் சொன்ன சொல்லை மதிக்க மாட்டார் என்று ரைஸ் யாத்திம் சொல்ல வருவது போல் தோன்றுகிறது. டாக்டர் மகாதிரின் வயதுக்கு அவர் சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டும்.  அது தான் அவருக்கு அழகு. அவர்  மற்றவர்களைப் பேச  விடுவதே தவறு. ஆனால் அது தான் நடக்கிறது.

டாக்டர் மகாதிர் எதற்குஒப்புக் கொண்டாரோ அதன்படி நடக்க வேண்டும் என்பதே நமது ஆசை!

Sunday, 23 June 2019

பசிக் கொடுமையால் ஏற்பட்ட இறப்பா?

கடந்த சில நாள்களாக கிளந்தான் மாநிலத்தில் பாத்தெக் பூர்வீகக் குடியினரைப் பற்றியான செய்திகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. 

நல்ல செய்திகளாக இருந்தால்  வர  வேற்கலாம்.  கெட்ட செய்திகளாக அதுவும் சாவு செய்திகளாகவே  வந்தால் வர வேற்கவா  முடியும். என்ன செய்வது?  அப்படித்தான்  செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

இறந்ததற்கான காரணங்கள் பலவாறு சொல்லப்படுகின்றன.  தடுப்பூசி போடுவதில்லை  போன்ற வகையறாக்கள் ஒரு பக்கம்.  அசுத்தம்,  அசிங்கம. சூழல் இப்படி ஒரு பக்கம். இன்னும் பல.

ஆனாலும் பூர்வீகக் குடியினரைச் சார்ந்த அமைப்பு ஒன்று சரியான  காரணங்களைக்  கூறியிருப்பதாகவே  நமக்குத் தோன்றுகிறது. ஆமாம். பசிக் கொடுமையால் அவர்கள் இறக்கிறார்கள் என்பது  தான் அந்த அமைப்பின் குற்றச்சாட்டு. 

அவர்களின் வாழ்வாதாரம் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டன.  மிகத் தலையாயது அவர்களின் நிலங்கள்.  காலங்காலமாக அவர்கள் பயன் படுத்திய நிலங்கள்  அனைத்தும்  நவீன கால அரசியல் அசுரர்களால் பறி போயின.  இந்தப் பூர்விகக் குடியினர் வாழ்வதே அவர்களின் நிலங்களை நம்பித்தான்.  அவர்களின் மகிழ்ச்சி, அவர்களின் சந்தோஷம் அனைத்தும் இந்த நிலங்களைச் சுற்றித் தான்.  

மேம்பாட்டுத் திட்டங்கள்  என்கிற பெயரில்  அவைகளை அழித்து விட்டு மறு குடியேற்றம் செயவதும்  அவர்கள் விரும்பாத  காரியங்கள் அனைத்தும் செய்வதும் பின்னர் அவர்களைப்  புறக்கணிப்பதும்  ஏதோ அவர்களை வேண்டாத விருந்தாளியாக நடத்துவதும் தான்  இது  நாள் வரை நடந்து வந்திருக்கிறது. இவர்களின் பெயரைச் சொல்லி பலர், குறிப்பாக அரசாங்க ஊழியர்கள்,  பிழைப்பு நடத்தி வருவது என்பதெல்லாம் புதிய செய்தி அல்ல. நமக்கும் தெரிந்த செய்திகள் தான்.

அவர்கள் காடுகளில் இருக்கலாம். அது தவறல்ல.  அவர்கள் வாழ்க்கையை அவர்களே பார்த்துக் கொள்ளட்டும்  என்று  அவர்களை அப்படியே விட்டுவிட்டால் கூட  அவர்கள்  மகிழ்ச்சியாக  இருப்பார்கள். பசியால் இறக்க மாட்டார்கள். 

இப்போது அவர்கள் இரண்டும் கெட்டான் நிலையில் தான் அரசாங்கம் அவர்களை வைத்திருக்கிறது. எந்த வித மேம்பாட்டுத் திட்டமும் அவர்களுக்கு எந்த வித மேம்பாட்டையும் கொண்டு வரவில்லை.  கல்வியும் அவர்களுக்குச் சரியாகப் போய்ச் சேரவில்லை. அவர்கள் கல்வி கற்றவர்களாகவும் இல்லை. எல்லாமே அரைகுறை என்கிற நிலை தான்.

எல்லாவற்றுக்கும் அடிப்படை என்பது உணவு தான். வயிறு நிறையாமல் எதுவும் அசையாது. முதலில் அதனைக் கொடுத்தால் தான்  அவர்களுக்கு நல்ல கல்வியைக் கொடுக்க முடியும். நல்ல மாற்றங்களைக் கொண்டு வர முடியும்.

பசிக் கொடுமையிலிருந்து அவர்கள் காப்பாற்றப் பட வேண்டும்!

Saturday, 22 June 2019

கேள்வி - பதில் (103)

கேள்வி

தமிழ்த் திரை  உலகின் நாயக நடிகர் கேப்டன் விஜயகாந்த்தின் சொத்துகள் ஏலத்திற்கு வந்து விட்டதாகச் சொல்லப்படுகிறதே!

பதில்

உண்மை தான.  செய்திகள் அப்படித்தான் கூறுகின்றன. 

நாயக நடிகர்களில் விஜயகாந்த் வித்தியாசமானவர்.  நல்ல மனிதர் என்று பெயர் எடுத்தவர். அவர் சினிமாவிற்கு வரும் போதே நல்ல நிலையில் இருந்தவர். 

அவர் அரசியலுக்கு வந்ததே அவருக்குக் கெட்ட நேரமாகி விட்டது.  அரசியலுக்கு வந்ததே மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்கிற நோக்கம் தான் காரணம். அதுவே அவருக்கு ஆபத்தாக முடிந்தது.

நல்ல மனிதர்கள் அரசியலில் பேர் போட முடியாது என்பதற்கு விஜயகாந்த் ஓர் உதாரணம்..  அதற்கெல்லாம் ஒரு வில்லத்தனம் வேண்டும். 

சினிமாவில் அவர் தொடங்கியதே கதாநாயகனாகத் தான்.  அதன் பிறகு எல்லாமே வெற்றி வெற்றி தான்.  அப்படியே அவர் இருந்திருந்தால் இன்று அவர் எப்படியோ போயிருக்கலாம்.

அரசியலுக்கு அவர் வந்தது கூட தவறில்லை.  ஆனால்  அவர் மனைவி பிரேமலதா ஏன் அரசியலுக்கு வந்தார் என்பது தான் புரியாத புதிர். அதோடு நிற்கவில்லை. பிரேமலதா  தனது தம்பியையும் தன்னோடு சேர்த்துக் கொண்டார்!

கோடிக்கணக்கில் விஜயகாந்த் சேர்த்து வைத்த சொத்துக்களை நிர்வாகம் செய்ய ஆளில்லை என்கிற நிலைமை. பிரேமலதாவும் அவர் தம்பியும் நிர்வாகத்தில் அக்கறை காட்டவில்லை. அரசியலில் ஆர்வம் காட்டினார்கள். 

விஜயகாந்த் அரசியலில் கட்டிய கோட்டையையும் நிர்மூலமாக்கியவர் பிரேமலதா! 

ஓர் உண்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பணத்திற்கும் கால்கள் உண்டு. கைகள் உண்டு. இறக்கைகள் உண்டு.  அதனைப்  பாதுகாக்கா விட்டால் அது பறந்து போகும்!

பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு உலகக் கோடிசுவரர் ஒருவர் பதில் சொன்னாராம்: "நான் பெரிய கோடிசுவரன் என்பது உண்மை தான். நான் அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள இன்னும்  நான் சம்பாதித்துக் கொண்டு தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நான் இருக்கும் இடம் தெரியாமல்  போய்விடுவேன்!"

நமக்குத் தெரிந்த துறையை விட்டு தெரியாத துறைக்குப் போனால் என்ன ஆகும்? எல்லாமே ஆகும்!

கள்ளக் குடியேறிகளுக்கு இவ்வளவு செலவா...!

நாடு பொருளாதார சிக்கலில் மாட்டிக் கொண்டு விழிப் பிதுங்கி தவித்துக் கொண்டிருக்கும் இந்தக் காலக் கட்டத்தில் இன்னொரு திசையில் பணம் எப்படியெல்லாம் பாழடிக்கப்படுகிறது என்பதை நினைக்கும் போது  நமக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது.

ஒவ்வொரு மாதமும் நாடு கள்ளக் குடியேறிகளின் உணவுக்காக  35 இலட்சம் வெள்ளி  செலவு செய்வதாக குடிநுழைவுத் துறை தலைமை இயக்குனர் கூறியிருக்கிறார்.

இது தேவையற்ற செலவு என்று நாம் சொல்ல வரவில்லை.   கள்ளக் குடியேறிகள் என்று சொன்னாலும்  அவர்கள் மனிதர்கள். நமக்கும் மனிதாபிமானம் உண்டு.  கள்ளக் குடியேறிகள் என்பதற்காக அவர்களைப் பட்டினிப் போட்டு விட முடியாது.

இங்கு தலைமை இயக்குனர் கூறியிருப்பது  உணவுக்கான செலவுகள் மட்டுமே. அத்தோடு அது முடிந்து விடுவதில்லை. இன்னும் நிர்வாகச் செலவுகள் என்று பலவுண்டு.  அங்குள்ள உண்மை நிலவரம் நமக்குத் தெரியவில்லை.  மேலோட்டமாகத் தான் ந்மக்குத் தெரியும். 

ஆனால் இங்குள்ள நமது கேள்விகள் எல்லாம் இதனை எப்படி தவிர்ப்பது என்பது தான். கள்ளக் குடியேறிகள் என்று சொல்லுகிறோமே அவர்கள் எப்படி கள்ளத்தனமாக குடியேறினார்கள். நாட்டுக்குள்  எப்படி  அவர்கள் கள்ளத்தனமாக வர முடிந்தது.  இதற்குப் பொறுப்பானவர்கள்  யார்?  

குற்றச்சாட்டு என்று போனால் அது குடிநுழைவுத் துறையைத் தான் சுட்டிக் காட்ட வேண்டி வரும்.  அவர்கள் தான் இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்பு ஏற்க வேண்டும். 

மற்ற நாடுகளில் உள்ள சட்டத்திட்டங்கள் தான் நம் நாட்டிலும் இருக்க வேண்டும்.  எந்த நாட்டிலும் ஏற்றுக் கொள்ளாத சட்டத்திட்டங்கள் இங்கு இருப்பதாகச் சொல்ல முடியாது. எல்லா நாடுகளிலும் ஏறக்குறைய ஒரே மாதிரியான சட்டத்திட்டங்கள் தான்.

அப்படியிருக்க நம் நாட்டில் மட்டும் கள்ளக் குடியேறிகளின் நடமாட்டம் எப்படி அதிகமாயிற்று?  மலேசியா எப்படி கள்ளக் குடியேறிகளின் சொர்க்க பூமியாக மாறிற்று? 

இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியது  குடிநுழைவுத் துறை. அவர்கள் செய்த தவறுகளினால் நாட்டில் கள்ளக் குடியேறிகள் அதிகமாகவே நடமாடுகின்றனர். 

இப்போது நமக்குத் தெரிந்ததெல்லாம் நமது நாடு,  தடுப்பு முகாம்களில் தங்கி இருக்கும் கள்ளக் குடியேறிகளுக்காக ஒவ்வொரு மாதமும் 35 இலட்சம் வெள்ளியை உணவுகளுக்காக செலவு செய்கிறது என்பது மட்டுமே. எப்படிப் பார்த்தாலும் அது தண்டச் செலவு தான்.  அர்சாங்கப் பணம்  வீணடிக்கப்படுகிறது

அதற்குக் காரணம் குடிநுழைவுத் துறை !

Wednesday, 19 June 2019

மீண்டும் சாராயம்...!

தமிழ் நாட்டில்   சாராயத்தை  வைத்து  எப்படி தமிழனை  கவிழ்க்கிறார்கலோ  அதே  பாணியை இங்கும்  பின் பற்றுகிறார்களோ என  நினைக்க வேண்டி உள்ளது!

பாரிசான்  ஆட்சியில்  சாராயத்திற்கு  எந்தக்  கட்டுப்பாடும் இல்லை.  அது  தமிழனின் "மானம் காக்கும்!" பானம் என்பதால்  ஆட்சியாளர்கள்  எந்த வித  அக்கறையையும் எடுத்துக் கொள்வதில்லை!   அந்த நிலை  மீண்டும்  வரக் கூடாது  என்பது  தான் நமது கவலை.

இன்றைய பக்காத்தான்  ஆட்சியில்  கள்ளச் சாராயம் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். காள்ளச்  சாராயம்  என்பதை விட மிகவும் கௌரவமாக நமது மளிகைக் கடைகளில் ஏதோ  வெளி நாடுகளிலிருந்து விறபனைக்கு வரும்  மது பானங்கள் போல விற்பனையில் இருக்கும் இந்த மலிவு விலை சரக்குகள்  தடை செய்யப்பட வேண்டும்.

இந்த மலிவு விலை சரக்குகள் எந்த வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் தாராளமாக மளிகைக் கடைகளில் கிடைக்கின்றன. இவர்களில் முதன்மையான வாடிக்கையாளர்கள் நமது குடிமகன்கள்,  இந்தியர்கள், நேப்பாளிகள்,  மியான்மார்கள், வங்காள தேசிகள்  இன்னும் பலர்.

ஒர் இந்தியக் குடிமகன்  ஒரு முறை காலையில் சாராயத்தில் பல் துலக்கி, முகங் கழுவி சாராயத்தையும் குடிப்பதைப்  பார்த்திருக்கிறேன்! அவன் ஊரில் அந்த சுகம் அவனுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை! 

ஆனாலும் யாராக இருந்தாலும் எந்த நாட்டினராக  இருந்தாலும் நாம் இந்தக் குடி பழக்கத்தை  வர வேற்க முடியாது. குடிப்பவன் குடும்பம் கடைசியில் நிற்பது நடுத் தெருவில் தான் .   அதை இப்போதும்  நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

நமது அரசாங்கம் இதனைப்  பார்த்துக்  கொண்டு சும்மா இருக்க   முடியாது.  சாராயம் குடித்து  ஒரு  சீனன் இறந்தான்  என்பதாக எந்த ஒரு செய்தியையும் நாம் படிப்பதில்லை.   இந்த  ஒரு பிரச்சனையில் மட்டும் நாம் தான்  முன்னணியில்  நிற்கிறோம்!

நம் நாட்டில்  மது விலக்கு  என்பது இல்லை. தரமான மது பானங்கள் விற்பனையில் இருக்கத்தான்  செய்கின்றன.  அதன் விலை  சராசரி மனிதனுக்கு ஏற்றதாக  இல்லை. ஆனால்  இந்த மட்டமான  சரக்குகள் எல்லா மளிகைக் கடைகளில்  தாராளமாக  கிடைக்கின்றன!

சாராயத்தை  மளிகைக் கடை பொருளாக்கி விட்டனர்  வியாபாரிகள்! மளிகைக் கடைகள்  எங்கெங்கு இருக்கின்றனவோ  அங்கெல்லாம் சாராயம் அமோகமாக விற்பனையில் இருக்கின்றன.

இந்த மலிவு விலை சரக்குகள்  தடை செய்யப்பட வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

Sunday, 16 June 2019

சட்டம் என்ன சொல்லுகிறது...?

சர்ச்சைக்குரிய  இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக் விஷயத்தில் பல் வேறு கருத்துக்கள் - வெட்டியும் ஒட்டியும் - பேசப்படுகின்றன.

இதில் குறிப்பாக பெர்லிஸ் முப்தி முகமது அஸ்ரி  கூறி வருகின்ற கருத்துக்களைக்  கொஞ்சம் நாமும் கவனிக்க வேண்டும். 

"அவரை இந்தியாவிற்கு அனுப்ப முடியாது!: என்று பிரதமர் டாக்டர் மகாதிர் கொண்டிருக்கும் கருத்துக்கு  அஸ்ரி  ஆதரவாக இருக்கிறார், அஸ்ரி கூறுகின்ற காரணங்கள் என்ன?   

"இங்குள்ள ஜாகிர் நாயக்கின் எதிர்ப்பாளர்கள் இந்தியாவிற்கு விசுவாசமாக இருக்கிறார்களே தவிர மலேசியாவிற்கு விசுவாசமாக இல்லை!  இந்தியாவில் நிலவும் கொடூரமான, வேற்றுமைகளை உடைய சட்டங்களுக்கு நாம் இடம் அளிக்கக் கூடாது அதனால் இங்குள்ள முஸ்லிம் பெருமக்கள் பிரதமரின் கருத்துகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்". என்கிறார் அஸ்ரி!

அஸ்ரி  முஸ்லிம்களைப் பார்த்து ஆதரவு தாருங்கள் என்று  கேட்டுக் கொள்ளுவதன் மூலம் ஒரு கருத்தை நமக்குப் புரிய வைக்கிறார்.  முஸ்லிம்  அல்லாதவர்களின் ஆதரவு ஜாகிர் நாயக்கிற்கு இல்லை  என்று அவரே சொல்லுகிறார்! நாம் சொல்லவில்லை!

ஏன் முஸ்லிம் அல்லாதவர்களின் ஆதரவு ஜாகிர்  நாயக்கிற்கு  இல்லை?  இங்கு ஒன்றை நாம் குறிப்பிடுவது  அவசியம்.  ஜாகிர் நாயக்  இங்கு  வந்ததுமே  தனது  கைவரிசையைக்  காட்ட  ஆரம்பித்துவிட்டார்!  இந்து மதம், கிறித்துவ மதம் என்று  பாரபட்சம்  இல்லாமல்  தாக்க  ஆரம்பித்துவிட்டார்.  அவர்  மற்ற மதங்களை  இழிவுபடுத்த ஆரம்பித்த  பின்னர்  தான் இங்குள்ள முஸ்லிம் அல்லதவர்கள் அவர்  மேல் காவல்துறையில்  புகார் செய்ய  ஆரம்பித்தனர்.  

மற்ற மதத்தினர்  மீது  அவர்  தாக்குதலை  ஆரம்பித்த போது பெர்லிஸ் முப்தி எங்கிருந்தார் என்று நமக்குத் தெரியாது.  ஆனால்  அவர் வாய் திறக்கவில்லை என்பது நமக்குத் தெரியும். 

அந்நேரத்தில் இந்தியா அவரை இந்தியாவுக்கு அனுப்புங்கள் என்று சொல்லவில்லை. இங்கிருந்தவர்களும் அவரை அவர் நாட்டுக்கே  திருப்பி அனுப்புங்கள்   என்று  சொல்லவில்லை.

அனைத்துக் காரணங்களுக்கும் ஜாகிர் நாயக் மட்டுமே. தீவிரவாதத்தை நம் நாட்டிலும் தூண்டி விட்டவர்.  சமீப காலங்களில் கூட இந்துக்களை தம் பக்கம் இழுத்து  அவர்கள் இப்போது   இந்து சமயத்தைத் தாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

நாம் சொல்ல வருவதெல்லாம்  சட்டம் என்ன சொல்லுகிறதோ அதனைச் செய்யுங்கள் என்பது தான்.  சட்டம் மட்டுமே உயர்ந்தது!

பெரும் தலைவர் துன் சம்பந்தன்

இன்று (16.6.2019)  நம் மலேசிய மன்ணின் மாபெரும் தலைவர் மறைந்த துன் சம்பந்தனாரின் நூறாவது பிறந்த நாள்.

ம.இ.கா. வை வழி நடத்த,  இந்தியர்களுக்குத்  தலைமை தாங்க எத்தனையோ தலைவர்கள்  வரலாம் போகலாம்.  ஆனால் வந்த பின் தொடர்ந்து நிலைத்து  நிற்பவர்  துன் சம்பந்தன் மட்டுமே. இனி அவரின் இடத்தை நிரப்புவது என்பது இயலாத காரியம். அது சாத்தியம் இல்லை.

வரலாற்றில் தனது பெயரை அழுத்தமாக பதித்தவர் துன்.  நாடு சுதந்திரம் பெற்ற போது  பிரிட்டன்  உடனான ஒப்பந்ததில் கையெழுத்திட்ட  மூவரில் அவரும் ஒருவர்.

இந்திய சமுதாயத்திற்குச் சரியான ஒரு பாதையை வகுத்தவர். தோட்டத் துண்டாடலின் போது   பெரும் அவதிக்குள்ளான தோட்டப் பாட்டாளிகளுக்காக களத்தில்  இறங்கி  பத்து பத்து வெள்ளியாக பாட்டாளிகளிடமிருந்து வசூல் செய்து தோட்டங்களை வாங்கி சாதனைப் படைத்தவர். அப்போது அவர் சொன்ன சிந்திக்க வேண்டிய வேண்டிய ஒரு சொல்:  குருவிக்கும் கூடு உண்டு நமக்கு என்ன உண்டு" என்கிற அந்த மந்திரச் சொல்.  

பொதுவாக அவருக்கு  மக்களிடையே ஒரு செல்வாக்கு  இருந்தது என்பது உண்மை. அவரிடம் உண்மை இருந்தது.  நேர்மை  இருந்தது.  சத்தியம்  இருந்தது.  அரசியலுக்கு வந்து  தனது  சொத்துக்களை  இழந்த ஒரே மனிதர்  என்கிற பெயரும்  இருந்தது!

இந்தியர்களின் பொருளாதாரம்  ஒரு  விழுக்காடு என்றால் அது  கூட  அவரால் ஆரம்பிக்கப்பட்ட  தேசிய  நிலநிதி  கூட்டுறவு சங்கம் மூலம் தான். அவருக்குப் பின்னர்  அந்த விழுக்காட்டை  கூட்டுகிற  அளவுக்கு யாருக்கும் துணிவில்லை! கூட்டுறவு சங்கம் அமைந்திருக்கும் இன்றைய விஸ்மா துன் சம்பந்தன் கூட அவர் காலத்தில் கட்டப்பட்டது தான். 

அவர் பதவியில் இருந்த காலத்தில் தான் இந்தியர்களின் குடியுரிமை பிரச்சனைக்கு ஒரு முடிவு காணப்பட்டது. தோட்டம் தோட்டமாக சென்று தோட்டப் பாட்டாளிகளுக்குக் குடியுரிமை வழங்கப்பட்டது. அடையாளக் கார்டுகள் வழங்கப்பட்டன.

துன் சம்பந்தன் அவர்களை நான் இருமுறை பார்த்திருக்கிறேன். முதல் முறை நான் வாழ்ந்த செனவாங் தோட்டத்திற்குக்  கூட்டுறவு சங்கத்திற்கு ஆள் சேர்க்க வந்திருந்தார்.  அப்போது எனது பெற்றோர்கள் அங்கத்தினராக சேர்ந்தார்கள். இரண்டாவது  முறை  நான் வேலை செய்து கொண்டிருந்த சுங்காலா  தோட்டத்திற்கு  வந்திருந்தார்.  அப்போது அவருடன் பேசிய  ஞாபகம் உண்டு.   அவருடைய அந்த புன்னகை இன்னமும் மனதில் நிற்கிறது. 

துன் சம்பந்தன் அவர்கள் ஒரு மாபெரும் தலைவர். மலேசிய இந்திய சமூகம்  மறக்க முடியாத ஒரு தலைவர், அவர் செய்த  சாதனைகளை  அவருக்குப் பின்னர் வந்தவர்களால்  முறியடிக்க முடியவில்லை. 

அவருடைய நினைவுகள் எக்காலமும் நிறைந்திருக்கும்!

Saturday, 15 June 2019

கேள்வி - பதில் (102)

கேள்வி 

ராஜராஜ சோழனைப் பற்றி  தமிழ்ப்பட இயக்குனர் ரஞ்சித் பேசியது சரியா?

பதில்

அவர் பேசியது சரிதான் என்பதாக அவர் கூறுகிறார். அவர் படித்த புத்தகங்கள், அவர் படித்த  வரலாறுகள் - இவைகள் எல்லாம் அப்படித்தான் கூறுகின்றன என்பது தான் அவரது பதில்.

இருந்து விட்டே போகட்டும்.  அது வரலாறோ இல்லையோ அது அவருடைய கருத்தாகவே இருக்கட்டும்.  அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. 

முதலில் அவர் தன்னைத்  தமிழன்  என்று  சொல்லிக் கொள்ளவில்லை. தன்னை தலித் என்கிறார்.  தலித்  தமிழனைப் பற்றி பேச வேண்டிய அவசியமில்லை.  இருந்தாலும் அவர்  பேசுகிறார். இருந்து விட்டுப் போகட்டும்.

முதலில் அவருடைய ஆதங்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.   தாழ்த்தப்பட்டவர்கள் எப்படி எல்லாம் தங்களுடைய  வாழ்க்கையை நடத்த ஒவ்வொரு நாளும் போரடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்கும் தெரியும்.  அதுவும் இந்த விஞ்ஞான யுகத்தில்  அவர்கள் இன்னும் மனிதக் கழிவுகளை கையால் அள்ளிக் கொண்டிருக்கும் அளவுக்கு அவர்களைக் கீழ் நிலையில் வைத்திருப்பவர் யார்? தமிழர்கள் தானே என்று அவர் நம்புகிறார்,

ஆனால் அதற்குக் காரணம் தமிழர்கள் இல்லை. அறுபது ஆண்டு தமிழ் நாட்டின் வரலாற்றை திரும்பிப் பார்க்க வேண்டும். இந்த அறுபது ஆண்டு கால ஆட்சி தமிழர்களுடையது அல்ல. அது திராவிடர்களின் ஆட்சி. பெரியார் கொள்கைகளைப் பின்பற்றுகிறோம்  என்று சொல்லிக் கொண்டு திராவிடக் கட்சிகள் தான் ஜாதியை வளர்த்தன. அப்படி ஜாதியை வளர்த்ததனால் தான்  இன்றும்  அவர்களால் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடிகிறது!  அன்று அவர்கள் கொஞ்சம் முயற்சி எடுத்திருந்தால் எப்போதோ ஜாதியை ஒழித்துக் க்ட்டியிருக்கலாம். இப்போதும் அவர்களின் ஆட்சி தான்.  ஆனால் அவர்கள் ஆட்சியில் இருக்க ஜாதி அவர்களுக்குத் தேவைப்படுகிறது.  அதனால் அவர்கள் ஜாதியை வளர்த்துக் கொண்டு தான் இருப்பார்கள். அதனால் ரஞ்சித் தமிழர்களின் மேல் கோபப்படுவதில் எந்த அர்த்தமும் இல்லை.

அவருடைய நோக்கமெல்லாம் எதனைச் சொன்னால் தமிழர்கள் கோபப்படுவார்கள் என்பதைப் புரிந்து  வைத்திருக்கிறார்.  அதனால் தான் இந்த ராஜராஜ சோழனின் மீதான தாக்குதல். அதன்படியே இப்போது  நடந்து  கொண்டிருக்கிறது!

எவ்வளவு காலத்துக்குத் தான் ரஞ்சித் தன்னுடைய  கோபத்தை அடக்கி  வைத்துக் கொண்டிருப்பார் இப்போது அவருடைய நேரம்!  நாம் அலறிக் கொண்டிருக்கிறோம்!

மகளிர் மட்டும்....!

 கோலாலம்புர் - சிரம்பான் பேரூந்து சேவையில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

வரவேற்கக் கூடிய ஒரு மாற்றம். பெண் பயணிகளுக்கான ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார் போக்குவரத்து அமைச்சர்  அந்தோணி லோக்.

காலை நேரத்திலும், மாலை நேரத்திலும் இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்திருக்கிறது.  வேலைக்குப் போகும் பெண்கள் இந்த மாற்றத்தினால் பயன் அடைவர்.

முக்கியமாக காலை ஐந்து மணியிலிருந்து ஏழு மணி வரை என்பது பெண்களுக்கு மிகவும் சவாலான நேரம். அதே போல வேலை முடிந்து வீடு திரும்பும் அதே மாலை ஐந்து மணியிலிருந்து ஏழு மணி வரை மீண்டும் சவால்களைச் சந்திக்கும் பெண்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என நம்பலாம்.

"பெண் பயணிகள் கேட்டுக் கொண்டதினால் நாங்கள்   இந்த மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறோம்"  என்கிறார் போக்குவரத்து அமைச்சர். நல்ல, தேவையான மாற்றமே!

காலை நேரத்தில் வேலைக்குப் போகும் அந்த நேரத்தில்  பெண் பயணிகள்  படும் அவஸ்தை. பின் மாலை வேலையில் வீடு திரும்பும் போதும் அதே அவஸ்தை.  இதற்க்கெல்லாம் ஒரு முற்றுப் புள்ளியை வைத்திருக்கிறார் போக்குவரத்து அமைச்சர்.

குறிப்பாக வேலைக்குப் போகும் பெண்கள் இதனை வரவேற்பார்கள். காரணம் வேலைக்குப் போகும் ஆண்களோடு போட்டிப்போட்டுக் கொண்டு   பேருந்தூகளில் ஏற வேண்டிய அவசியம் இனி இராது என நம்பலாம்.

ஒவ்வொரு நாளும்  சுமார் 2000 பயணிகள் இந்த சிரம்பான் - கோலாலம்பூர் சிரம்பான்  வழித்தடத்தை காலை - மாலை நேரங்களில்   பயன்படுத்துகின்றனர். அனைவரும் வேலைக்காகப் பயணம் செய்பவர்கள்.  அவர்களுக்காகவே இந்த மாற்றத்தைப் பெண் பயணிகள் பயன் பெற கொண்டு வந்திருக்கிறார் அமைச்சர்.

இந்த "மகளிர் மட்டும்"  மாற்றத்தை வர வேற்கிறோம். இது ஆரம்பம் தான். நல்லது கெட்டது என்பது போகப் போகத்தான் தெரிய வரும். நல்லதை மட்டும் யோசிப்போம்.

Friday, 14 June 2019

இதுவும் பெருமை தானோ.. !

இப்போது, நம்மிடையே உள்ள மனிதர்,களிடம், எதற்கெல்லாம் பெருமை படுவது  என்கிற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது!

இதனைப் பெருமை என்று சொல்லுவதா அல்லது தன்னையும் அவமானத்திறகுள்ளாக்கி பிறரையும் அவமானப்படுத்துவது என்பது அரசியலில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகி விட்டதா என்பது நமக்கும் விளங்கவில்லை!

இப்படி எல்லாம் சொல்லுவதற்குத் தைரியம் வேண்டும். ஒருவரை, அதுவும் நல்லவர் என்று பெயர் எடுத்த ஒருவரை, அவரைப் பதவியிலிருந்து வீழ்த்த வேண்டும் என்பதற்காக என்ன என்னவெல்லாம் செய்யலாம், செய்ய வேண்டும் என்று மலேசியர்களுக்குப் பாடம் நடத்துகிறார்களோ, நமது அரசியல்வாதிகள்!

ஆபாச காணொளிகள் என்பது நம் நாட்டில் வளர்ந்து வருகின்ற ஒரு துறையோ என்று சொல்லத் தோன்றுகிறது!  உருப்படாதவர்கள் என்று யாரை  நாம்  நினைக்கிறோமோ அவர்கள் தான் இது போன்ற  ஆபாச  காணொளிகளுக்கு நிபுணத்துவம்  வாய்ந்தவர்களாக  இருக்கிறார்கள்!

இவர்களின் நோக்கம் தான் என்ன?  பணம்  சம்பாதிப்பது  தான் என்று தெரிகிறது!  இல்லாவிட்டால்  ஒருவரே முன் வந்து "நான் தான் அவன்!" என்று சொல்லத் துணிவாரோ!  இப்படியெல்லாம் சொல்லும் போது அவ்ருக்கே தெரியும் அவ்ர் செய்கின்ற வேலைக்கு ஆபத்து வரும் என்று! ஆபத்தோடு சிறை  வாசமும் கிடைக்கலாம்!  அவரின் குடும்பத்திற்கும் அவமானம்  சேர்ந்து வரும். ஆனாலும் அப்படி அவரால் சொல்ல முடிகிறது என்றால்  அவரைப்  பின்னணியிலிருந்து  யாரோ  இயக்குகிறார்கள்  என்பது  நமக்குப் புரியாமலா  போகும்!

மலேசிய அரசியலில்  இப்படி  ஆபாச காணொளிகளை அதிகம்  கொண்டு வந்தவர்கள் என்றால் முன்னாள்  ஆளுங்கட்சியினருக்கு இதில் நிறைய பங்கு உண்டு.    இப்போதும் இது போன்ற விரும்பத்தக்காத நடவடிக்கைகள் தொடர்கிறது என்றால்  அவர்களின் பங்களிப்பு கணிசமாக இருக்கும் என நம்பலாம்!  

எது எப்படி இருப்பினும்  இது  போன்ற  ஆபாசங்கள்  ஒழிக்கப்பட  வேண்டும் என்பதில் நம்மில்  எல்லாருக்கும்  ஒருமித்த  கருத்துண்டு.  அரசியலில்  பேரும் புகழும் உடையவர்களை இப்படி  எல்லாம் அசிங்கப்படுத்துவது  ஒரு  கலாச்சாரமாகவே உருவாகிக் கொண்டிருக்கிறது. 

இப்போது "நான் தான் அவன்!" என்று சொன்னவனின் பின்னணி நமக்குத் தெரியவில்லை. நல்ல குடும்பங்களிலிருந்து மிப்படியெல்லாம் மனிதர்கள் வர மாட்டார்கள்.  செய்துவிட்டு,  ஏதோ ஒரு தவறான காரியத்தைச்  செய்துவிட்டு,  அதற்குப் பெருமைப்பட  மாட்டார்கள்.

இப்படி பெருமை படுபவன் மனிதனல்ல!

Wednesday, 12 June 2019

ஆபாச காணொளிகள்

நமது மலேசிய அரசியலில் ஒருவரை வீழ்த்துவதற்கோ அல்லது இழிவு படுத்துவதற்கோ ஆபாச காணொளிகள் அடிக்கடி வலம் வந்து கொண்டிருக்கின்ற்ன.

சொல்லப்  போனால் இது போன்ற செயல்களை ஊக்குவிப்பவர்கள் அரசியல்வாதிகள் தான். இன்று ஊக்குவிப்பவர்கள் நாளை அவர்களே இந்த கண்ணிகளில் மாட்டலாம்!  யாரும் தப்ப முடியாது. வாள் எடுத்துவன் வாளால் தான் வீழ வேண்டும்!  

தங்களால் இனி முடியாது, தங்களால் இனி அரசியலில் தாக்குப் பிடிக்க முடியாது,  இந்த தலைவனை வீழ்த்தினால் தான்,  தான் தலைவனாக வர முடியும், இந்த  அமைச்சரை காலி பண்ணினால் தான் நாளை நான் அமைச்சராக வர முடியும் என்று நினைப்பவர்கள் தான் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்!  இவர்கள் நோக்கம் மக்களிடையே குழப்பத்தை  ஏற்படுத்துவது. ஓர் ஒழுக்கமான அரசியல்வாதியை இப்படி குறுக்கு வழியைப் பயன்படுத்தி  அவர்களை   ஒழிக்க நினைப்பது.

ஆனால் இந்த ஒழுக்கமற்ற செயல்களைச் செய்பவர்கள்  எதற்கும் உதவாத அரசியல்வாதிகள் என்பது மக்களுக்குத் தெரியும்.  இவர்கள் எல்லா வகையிலும் ஒழுக்கமற்றவர்கள். குடும்பத்திலும் சரி, மக்களிடையேயும்  சரி இவர்களால் எந்தக் காலத்திலும் நல்லவர்கள் என்று பெயர் எடுக்க முடியாது!  ஏனெனில் நல்லவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதில்லை.

இப்போது கடைசியாக இந்தக் காணொளியில், பொருளாதார அமைச்சர் அஸ்மி அலியின் பெயர் வைரலாகிக் கொண்டிருக்கிறது என்பது வருத்தமான விஷயம் தான்.   அவர் அதனை மறுத்திருக்கின்ற அதே நேரத்தில்  தடாலடியாக இன்னொருவர் அவரோடு இருக்கும் நபர் நான் தான் என்று ஒப்புக் கொண்டிருக்கிறார்!   எல்லாமே ஏதோ நாடகம் போன்று நடந்து கொண்டிருக்கிறது!  எது உண்மை எது பொய் என்று நம்மாலும் ஊகிக்க முடியாது.  எல்லாம் பணம் படுத்துகிற பாடு என்று தான் சொல்ல முடியும்!

இது போன்ற வீண் வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் இந்த வேலையற்ற  கும்பல்களைக் கையும் களவுமாகப் பிடிக்கப்பட வேண்டும். காவல்துறை  இது போன்ற  காணொளிகளின்  பின்னணியில் இருப்பவர்களைக் கண்டு பிடித்து  அவர்களைக் கடுமையாகத்  தண்டிக்க வேண்டும். 

அரசியல்வாதிகளைக் கையும் களவுமாகப் பிடிப்பது என்பது  அவ்வளவு எளிதல்ல என்பது நமக்குப் புரிகிறது.  அதற்காக அவர்களை  அப்படியே   சுதந்திரமாக  விட்டு விட முடியாது! இப்படி  ஒரு  அநாகரீக கலாச்சாரத்தை   வளர்த்துக்  கொண்டே  போக முடியாது.  எங்காவது ஓர் இடத்தில் அதற்கு முற்றுப் புள்ளி  வைக்க வேண்டி உள்ளது. கடுமையான தண்டனைகளுக்கு  அவர்களை உட்படுத்த வேண்டும்.  

ஆபாச காணொளிகள் இனி தலை தூக்காதவாறு பார்த்துக் கொள்ளுவது காவல்துறையினரின் கடமை!  அதற்குக் காவல்துறைக்குப் போதுமான  "கெத்து" இருக்க வேண்டும்! பொறுத்திருப்போம்!

Monday, 10 June 2019

இதுவும் தமிழ்ப்பள்ளிகளுக்காகத் தான்!

சில சமயங்களில் சிலர் விடும் அறிக்கைகளைப் படிக்கின்ற போது நமக்குத் தான் கோபம் வருகிறதே தவிர அறிக்கை விடுபவர்களுக்குக் கோபமும் கூட வரும் என்பதை எண்ணிக்  கூட பார்க்க முடிவதில்லை.

அப்படித்தான் சமீபத்திய அறிக்கை ஒன்றினைப் படிக்க நேர்ந்தது. செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு ஐந்து ஏக்கர் நிலம் எப்போது வழங்கப் போகிறீர்கள் என்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. மூன்று மாதத்திற்கு முன்னர் நடந்த இடைத் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதி அது என்பதும் நமக்குத் தெரிகிறது.

"எப்போது கிடைக்கும்"  என்பது பற்றி நமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.  அது கிடைத்தாலும் கிடைக்கலாம் கிடைக்காமலும் போகலாம்! அதனால் எவ்வளவு விரைவில் கிடைக்குமோ  அவ்வளவு  விரைவில் அது கிடைக்க வேண்டும் என்பது தான் நமது நோக்கமும் கூட.   காரணம் அரசியல்வாதிகளின் பேச்சு அடுத்த மேடையோடு போச்சு என்பது தான் அவர்களின் கலாச்சாரம். அதனால் அவர்களுக்குத் தொடர்ந்தாற் போல நெருக்குதல் கொடுத்தால் அன்றி அவர்கள் இயங்கமாட்டார்கள்> அதனை அந்த நெருக்குதலை நாம் வர வேற்கிறோம். 

ஆனால் நம்மிடமும் ஒரு கேள்வி உண்டு.  பேரா மாநிலத்தில் தமிழ்ப்பள்ளிக்ளுக்குக் கொடுக்கப்பட்ட 2000 ஏக்கர் நிலம் ம.இ.கா.வினரால் அப்படியே மறைக்கப் பட்டதே அதனைப் பற்றியும் ஒரு வார்த்தை இவர்கள் பேசியிருந்தால் நாம் பாராட்டலாம்.  2000 ஏக்கர் என்பது அவ்வளவு சின்ன விஷயமா? நமக்கே புரிவில்லை! ஐந்து ஏக்கர் நிலத்திற்குக் குரல் கொடுக்கும் இவர்கள் 2000 ஏக்கர் நிலத்திற்குத் தங்களது குரலை எழுப்பவில்லையே என்கிற ஆதங்கம்  நமக்கு உண்டு.

தான் சார்ந்த மனிதர்கள், தான் சார்ந்த இயக்கம், தான் சார்ந்த கட்சி என்ன தவறுகள் செய்தாலும் நாங்கள் பேச மாட்டோம்!  என்ன தவறுகள் செய்தாலும் அவர்களைத் தட்டிக் கொடுப்போம் என்று சொல்லுபவர்களை நாம் தாம்பாளத் தட்டிலா வைத்து வர வேற்க முடியும்?

நீதி அனைவருக்கும் ஒன்று தான்.  அன்று ம.இ.கா. வைத் தட்டிக் கொடுத்ததினால் இன்று தமிழன் தரம் தாழ்ந்து கிடக்கிறான் என்பதை நமது கட்சிகள் உணர வேண்டும்.  இன்றும் அதனை தொடரத் தான் வேண்டுமா என்பதைக் கொஞ்சம் யோசியுங்கள். 

மற்றபடி உங்களின் ஐந்து ஏக்கர் நில போராட்டத்தை நானும் வர வேற்கிறேன். வெற்றி பெற வாழ்த்துகள்!

Sunday, 9 June 2019

தேவையற்ற கையெழுத்து இயக்கம்...!

ஊழல் தடுப்பு ஆணையத் தலைவராக லத்தீபா கோயா நியமனத்தை எதிர்த்து  பக்காத்தானின் ஒர் உறுப்புக் கட்சியான பி.கே.ஆர். இணையத் தளத்தில் ஒரு கையெழுத்து  இயக்கத்தை  தொடங்கியிருக்கிறது என்பதை அறியும் போது நமக்கு வருத்தத்தை அளிக்கிறது.

ஜ.செ.க. கட்சியில் உள்ளவர்கள் கூட பலர் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்திருக்கின்றனர்.  இன்னும் ப்ல வழக்கறிஞர்கள் கூட தங்களது ஆட்சேபங்களை பதிவு செய்திருக்கின்றனர்.

ஆனால் பி.கே.ஆர். என்னும் போது  -  ஆட்சேபங்கள் என்பது இயற்கைதான் - அவர்களின் கையெழுத்து இயக்கம் வேறு மாதிரியான  ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. ஆமாம் இது ஏதோ மகாதீர்-அன்வார் இருவருக்கிடையே நடக்கும் பலப்பரிட்சை என்று தான் பேசப்படும். 

பி.கே.ஆர். ரின் இந்த கையெழுத்து இயக்கம் எந்தப் பலனையும் கொண்டு வரப் போவதில்லை.  மேலும் அந்த அளவுக்கு இந்த நியமனத்திற்கு  இப்படி ஒரு எதிர்ப்பைக் கொடுக்க வேண்டிய அவசியமுமில்லை.

இப்போது என்ன தான் பிரச்சனை? லத்திபா கோயா வைப் பற்றி எந்தப் பிரச்சனையும் இல்லை. அவருடைய திறமையைப் பற்றி யாரும் கேள்வி எழுப்பவில்லை. அவருடைய நியமனம் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லை  என்பது தான் குற்றச்சாட்டு.  

இந்த இடத்தில் ஒன்றை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். டாக்டர் மகாதீர் தான் செய்ய வேண்டிய வேலைகளை  உடனடியாகச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். அவர் வேகமான மனிதர். ஒவ்வொன்றுக்கும் "சட்டப்படி, சட்டப்படி" என்று சொல்லிக் கொண்டிருந்தால் எந்த வேலையும் ஓடாது.

இப்போதே பக்கத்தான் அரசாங்கத்தின் மீது பல குறை கூறல்கள்.  எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல மக்களும் குறை கூற ஆரம்பித்து விட்டனர். இப்படி பல குற்றச்சாட்டுகள் தமது காலத்தில் இருக்கக் கூடாது என்று பிரதமர் நினைக்கிறார். அதனால் என்ன என்ன முடியுமோ அதனை அவர் காலத்திலேயே செய்து முடிக்க வேண்டும்  என்று நினைப்பதில் தவறு  ஏதும் இல்லை! அதனால் தான் ஒரு சில முக்கிய நியமனங்களை அவரே செய்து முடிக்கிறார். 

அவர் செய்த நியமனத்தைக் குறை கூறுகின்றவர்கள் பக்காத்தான் அரசாங்கம் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறை வேற்றி விட்டனரா?   நூறு நாள் வாக்குறுதிகள்  என்னவாயிற்று?  அவைகளைக் கூட டாக்டர் மகாதிர் செய்து முடிக்கவில்லை என்று குறை கூறலாமே!

ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.  டாக்டர் மகாதிர் ஓர் இக்கட்டான சூழ் நிலையில் நாட்டின் பிரதமராக ஆனவர்.  அவர் அன்று கை கொடுக்காவிட்டால் இன்று பக்காத்தான் ஆட்சியில் இருக்க வாய்ப்பில்லை. அதனையும் மறக்க வேண்டாம். அவருக்கு என்று சில கொள்கைகள் உண்டு. அவர் அப்படித்தான் செயல்பட்டுப் பழக்கப்பட்டவர்! 

இப்போது அவர் பொறுப்பு ஏற்ற பின்னர் அவர் செய்த நியமனங்களில் எங்கு குறை உண்டு என்பதை மட்டும் பாருங்கள்.  ஏற்கனவே உள்ளவைகளைப் பற்றி அலசிக் கொண்டிருக்காதீர்கள். 

எந்த சட்டத்திட்டங்களைக் கடைப் பிடிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த சட்டத்திட்டங்களை வருங்கால பிரதமர்களுக்காக ஒதுக்கிவையுங்கள். டாக்டர் மகாதிர் ஓர் இடைக்கால பிரதமர் தான். அவரின் ஆயுசு கெட்டியாக இருந்தால் இந்த ஆட்சி முடியும் வரையில் இருப்பார்.  அது மட்டும் அல்ல. நாட்டை  ஊழல் இல்லா நாடாக மாற்றி அமைப்பார்.  அது நடக்கும்.

இந்தக் கையெழுத்து இயக்கம் வீண்!

Saturday, 8 June 2019

அம்னோ - பாஸ் கூட்டணி ஆட்சிக்கு வருமா?

நீர், நில  இயற்கைவள அமைச்சர்  டாக்டர் சேவியர் ஜெயக்குமார்  சமீபத்தில் தமிழ் அறவாரியத்தின் நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

"அம்னோ=பாஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால்  நமது நிலைமை படு மோசமாக் மாறும்" என்பதாக அவர் கூறி வருத்தப்பட்டிருக்கிறார்.

உண்மை தான்.  நாங்களும் அதனை நம்புகிறோம். அதனால் தான் நாங்கள் உங்கள் மூலம் ஒரு புதிய ஆட்சியை அமைத்துக் கொடுத்திருக்கிறோம். நீங்கள் கூட அதனை சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.  பெரும்பான்மையான இந்திய மக்கள் உங்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்பது பெருமைக்குறிய விஷயம் தான்.  அதாவது 85 விழுக்காடு இந்தியர்கள் பக்காத்தானுக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்பதாக புள்ளி விவரங்கள்  கூறுகின்றன.

உங்களுக்கு அது மகிழ்ச்சி அளித்தாலும் எங்களுக்கு அது மகிழ்ச்சி அளிக்கவில்லை. பல காரியங்கள் உங்களால் செய்ய முடியாததற்குக் காரணம் நிதிப் பிரச்சனை என்பதாகக் கூறியிருக்கிறீர்கள். 

எல்லாவற்றுக்குமே நிதிப் பிரச்சனை என்று கூறி மக்களைத் திசை திருப்பாதீர்கள். சான்றுக்கு இந்தியர்களின் குடியுரிமை  பிரச்சனையை எடுத்துக் கொள்ளுங்கள்.  எதிர்க்கட்சியாக இருந்த போது குடியுரிமை இல்லாத இந்தியர்கள் 3,00,000 பேர் என்றீர்கள். இப்போது ஆட்சியில் இருக்கும் போது 3,000 பேர் என்கிறீர்கள். முதல்  நூறு  நாள்களில் பிரச்சனையை முடிப்போம் என்றீர்கள். இப்போது ஓர் ஆண்டாகியும் அப்படி முடிந்ததாகத் தெரியவில்லை.  

ஆமாம், இந்தியர்களின் குடியுரிமை பிரச்சனை தீர எத்தனை கோடி உங்களுக்குத் தேவைப்படுகிறது?  1000 கோடியா 2000 கோடியா?  இந்தியர்களின் வாழ்வாதாரம் இதில் அடங்கியிருக்கிறது.  நீங்களோ அரசாங்கத்திடம் பணம் இல்லை என்கிறீர்கள்!

இந்த ஒரு பிரச்சனையை நீங்கள் தீர்த்து விட்டாலே போதும்  நிச்சயமாக இந்தியர்களின் ஆதரவு  உங்களுக்குக் கிடைக்கும்.  ஆனால் உங்களால் இயலவில்லை!  நான்கு அமைச்சர்கள் என்பதில் எங்களுக்குப் பெருமையில்லை. உங்களால் இந்த சமுதாயத்திற்கு என்ன பயன் என்பதில் தான் எங்கள் கவனம் இருக்கும்.

உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் சரியாகச் செய்கிறீர்கள் என்பதில் கருத்து வேறு பாடில்லை. ஆனால் இந்திய சமுதாயத்திற்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைத் தான் இந்த சமுதாயம் பார்க்கும் என்பதை மறக்க வேண்டாம்.

பொதுவாக பார்க்கும் போது உங்களிடையே ஒற்றுமை இல்லை என்பது தெளிவு. அப்புறம் என்னத்த இந்த சமுதாயத்திற்குக்காக கிழிக்கப் போகிறீர்கள் என்று தான் மக்கள் கேட்பார்கள். நான்கு அமைச்சர்கள் போதாத குறைக்கு ஏகப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் - ஏன் உங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஏன் அரசாங்கத்திடம் போதுமான அழுத்தத்தை கொடுக்க முடியவில்லை? 

வருங்கால தேர்தல்களில் மக்கள் உங்களை ஆதரிக்கவில்ல என்றால்- அல்லது இந்திய சமூகம் ஆதரிக்கவில்லை என்றால் - நீங்கள் தான் குற்றவாளி என்பதை மனதில் இருத்தி வையுங்கள்!                                                                                                                                                                                                                 

பிரதமர் சரியான வழியில் போகிறாரா?

 டாக்டர் மகாதிர், பிரதமராக பதவி ஏற்ற பின். சரியான வழியில் தான் செல்கிறாரா அல்லது தான்தோன்றித் தனமாக  அவர் செயல்படுகிறாரா?

அவர் மீது இப்போது பல குற்றச்சாட்டுக்கள்.   அவர் தானே பல முடிவுகளை எடுக்கிறார். தேர்தல் காலத்தில் கொடுக்கப்பட்ட  வாக்குறுதிகளை  அவரே மீறுகிறார்.  பக்காத்தான் தலைவர்களிடம் அவர் கலந்தோசிப்பதில்லை. நாடாளுமன்றத்தில் எதுவும் பேசப்படுவதில்லை. அவரே முடிவுகளை எடுக்கிறார். அவரே சுயமாக செயல்படுகிறார் என்பதாக அவர் மீது குற்றச்சாட்டுக்கள் உண்டு.  கடைசியாக அவர் செய்த நியமனம் ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவராக லத்திபா கோயா வை நியமித்தது. 

இந்த நியமனத்தில் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வர ஆரம்பித்திருக்கின்றன.  

இந்தப் பதவியை ஏற்கும் முன்னர் லத்திபா கோயா பி.கே.அர். கட்சியில் பல்வேறு பொறுப்புகளிலிருந்தவர்,   லத்திபா கோயாவின் நியமனம் கட்சியின் தலைவர் அன்வார் கூட அறியவில்லை! 

இங்கு நாம் முக்கியமாக பார்க்க வேண்டியது லத்திபா கோயா அந்தப் பதவிக்கு ஏற்றவரா, தகுதியானவரா என்பதல்ல. அவர் தகுதியானவர் என்பதை எல்லாத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ளுகின்றனர். ஆனால் அந்த நியமனம் முறையாக நாடாளுமன்றத்திற்குக் கொண்டு சென்றிருக்க வேண்டும் என்பது தான் அனைவரும் கூறுகின்ற குற்றச்சாட்டு. 

ஆனால் பிரதமர் மகாதிர் அப்படிச் செய்யவில்லை. அவருக்கு அப்படி நியமனம் செய்ய அதிகாரம் உண்டு. அந்த நியமனத்தை அரச ஒப்புதலுடன்  நிறைவேற்றியிருக்கிறார்.

இங்கு நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும்.  டாக்டர் மகாதிர் சுமார் 22 ஆண்டுகள் இந்த நாட்டை வழி நடத்தியவர். அவருடைய அனுபவங்களுக்கு ஈடு இணையாக யாரும் இப்போதைய அமைச்சரவையில் இல்லை.  அது மட்டும் அல்ல. அவர் எல்லாக் காலத்திலும் எது சரியோ அதை நிறைவேற்ற நினைப்பவர். அப்படித்தான் அவரின் கடந்த காலம்.

இப்போதோ நிலைமையே வேறு. அமைச்சர்கள் அனைவரும் முன்பின் அனுபவம் இல்லாதவர்கள்.  அவரும் தனது காலம் அதிகம் இல்லை என்பதை உணர்ந்தவர்.  மக்களோ பக்காத்தான் அரசாங்கத்தின் மேல் நம்பிக்கை இழந்து வருகின்றனர்.  பேச்சு அதிகம்; செயலில் ஒன்றுமில்லை என்கிற நிலைமைக்கு மக்கள் வந்துவிட்டனர்.

அதனால் தான்,  தான் இருக்கும் போதே  செய்ய வேண்டிய வேலைகளைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். எல்லாம் முறையாக செய்வதற்கு நேரம் இல்லை.  காரியங்கள் ஆக வேண்டும். மக்களின் அபிமானத்தை பெற வேண்டும். நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.  கெட்டவன் என்கிற பெயர் எடுத்தாலும் பரவாயில்லை  செய்ய வேண்டிய வேலைகளை உடனடியாகச் செய்ய வேண்டும்.  அதனால் தான் அவர் தம் போக்கில் தனது காரியங்களைச் செய்கின்றார். 

பிரதமரின் மேல் குற்றச்சாட்டுக்களைக் கூறிக்கொண்டிருப்பதை விட அவர் அனுபவமிக்கவர், நாட்டை நல்ல நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைப்பவர், மக்களின் நலனில் அக்கறை உள்ளவர் என்பதை நாம் நம்ப வேண்டும். 

என்ன சொல்லி என்ன பயன்? அவர் அவராகத்தான் இருப்பார்! அது தான் மகாதிர்!

Friday, 7 June 2019

இந்திய வியாபாரிகள் வஞ்சிக்கப்படுகின்றனரா!

இந்திய  வியாபாரிகள் வஞ்சிக்கப்படுகின்றனர்  என்பதாக இந்தியர் வர்த்தக சங்கம்  அரசாங்கத்தை கடுமையாக சாடியிருக்கிறது.

இந்த வஞ்சிக்கப்படுதல் என்பது இன்று நேற்று அல்ல பல ஆண்டுகள் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது.  முந்தைய அரசாங்கத்திலும் சரி இன்றைய அரசாங்கத்திலும் சரி அதற்கான ஓரு சரியான தீர்வு ஏற்படும் என்னும் நம்பிக்கையும் இல்லை. முந்தைய அரசாங்கம் எதனையும் கண்டு கொள்ளவில்லை.  இன்றைய  அரசாங்கம்  கண்டு கொள்ளும் என்பதால் காதில் போட்டு வைக்கிறார்கள்!

முந்தைய அரசாங்கத்தின் ஆட்சியில் அவர்கள் குற்றம் சாட்டும் "வர்த்தகச் சந்தை"  என்னும் பெயரில் வெளி நாடுகளிலிருந்து குறிப்பாக பாக்கிஸ்தானியர், வங்காள தேசிகள், வட இந்தியர்கள் போன்றவர்கள் இங்கு வந்து வியாபாரம் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகப்படுத்தப்பட்டதா  அல்லது அவர்களே கையில் எடுத்துக் கொண்டார்களா என்று பார்த்தால்  அவர்களே கையில் எடுத்துக் கொண்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்!  காரணம் உள் நாட்டு நிலைமை அவர்களுக்குச்  சாதகமாக இருந்தது என்று சொல்லலாம். இலஞ்சத்தைக் கொடுத்து இந்நாட்டில்  எதனையும் சாதிக்கலாம் என்னும் உண்மயை அவர்கள் புரிந்து கொண்டார்கள்!

பயந்து பயந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த வர்த்தகச் சந்தை  இப்போது அவர்களுக்கு நமது வர்த்தகர்கள் பயப்படும்படியான ஒரு சூழலை  ஏற்படுத்திவிட்டது! அரசாங்கத்தால்  இவர்களைத் தடை செய்ய முடியவில்லை. ஒரு இடத்தில் தடை செய்தால் இன்னொரு இடத்திற்கு அவர்கள் மாறி விடுகிறார்கள்!  கூடு விட்டுக் கூடு பாயும் வித்தைகளை அவர்கள்  கற்று வைத்திருக்கிறார்கள்! 

இந்த வெளி நாட்டு வியாபாரிகளுக்கு எல்லாமே சாதகமாக அமைந்து விட்டன!  எந்த விதி முறைகளையும் அவர்கள் பின் பற்றுவதில்லை!  எந்த வரியும் கட்ட வேண்டிய அவசியமில்லை! ஏதோ இலஞ்சமாக ஒரு சில நோட்டுகளைக் கொடுத்து விட்டு தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை அவர்கள் ஊர்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள்!

இப்படி ஒரு சூழல் எந்த நாட்டிலாவது இருக்குமா, சொல்லுங்கள். அது தான் மலேசியா! வெளி நாட்டு வியாபாரிகளுக்கு இது ஒரு சொர்க்க பூமி!  பெரும்பாலான நாடுகளில் வெளி நாட்டவர் உள்ளூரில் வியாபாரம் செய்ய அனுமதிப்பதில்லை!  ஆனால் நாம் அனுமதிக்கிறோம். காரணம் நமக்கு இலஞ்சம் தான் முக்கியம். உள்ளூர் வியாபாரிகளைப் பற்றி கவலை இல்லை.  உள்ளூர் வியாபாரிகள் யார்?  சீனரோ, மலாய்க்காரரோ அல்ல. இந்தியர்கள் தானே!  அது பரவாயில்லை! இந்தியரகளை யார் வியாபாரம் செய்ய சொன்னது?

இது தான் நமது அதிகாரிகளின் மன நிலை. இந்த மன நிலை இருக்கும் வரை நாம் பாதிக்கப்படத்தான் செய்வோம்.   

ஊத வேண்டிய இடத்தில் ஊதியாகிவிட்டது! செவிடர்கள் காதுகள் திறக்கப்படும் என நம்புவோம்!

 

ஒரே பள்ளி முறை..!

"எல்லா மொழிப் பள்ளிகளையும் அகற்றிவிட்டு ஒரே பள்ளி முறையைக் கொண்டு வர வேண்டும்"   என்பதாகக்   கல்வி அமைச்சர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

கல்வி அமைச்சர் கூறியிருப்பது இது ஒன்று முதல் முறை அல்ல.  இதற்கு முன்னரும் பல முறை கூறப்பட்ட கருத்து தான். முன்னாள் கல்வி அமைச்சர்கள் அல்லது அம்னோ மாநாடுகளில்  பேராளர்கள் பலரால் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்ட கருத்து தான். 

ஆனாலும் இந்தக்  கருத்துக்கு அவர்கள் கூறுகின்ற காரணங்கள் தான்  சரியாக, ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை.  அவர்கள் கூறுவதெல்லாம்  மக்களிடையே வர வர ஒற்றுமை குறைந்து வருகிறது அல்லது பல்லின , மாணவரிடையே ஒற்றுமை சீர்குலைந்து வருகிறது  என்பது தான் அவர்கள் கூறுகின்ற குற்றச்சாட்டு!

தமிழ்ப் பள்ளிகளை எடுத்துக் கொண்டால் சுமார் 200 ஆண்டுகளுக்கு மேல் இந்த நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் இருந்து வருகின்றன. தாய் மொழிப் பள்ளிகள் என்றால் அது தமிழும் சீன மொழி பள்ளிகளும் தான். 

பொதுவாக தாய் மொழிப் பள்ளிகளால் எந்தக் காலத்திலும் மக்களிடையே ஒற்றுமை குலைவதாக எந்த ஒரு  சான்றும் இல்லை.  அப்படி ஒற்றுமையைக் குலைப்பதற்கு எந்த ஒரு வாய்ப்பும் இல்லை! 200 ஆண்டுகள் தமிழ்ப் பள்ளிகளும் சரி, சீனப் பள்ளிகளும் சரி இந்த நாட்டில் இருக்கின்றன என்றால் தாய் மொழிப் பள்ளிகளால்  எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்பது தான் பொருள்.

ஆனால் இந்தப் பிரச்சனை  தாய் மொழிகளை வெறுக்கும் ஒரு சில அரசியல்வாதிகளால்  வலிந்து ஏற்படுத்தப்பட்ட  ஒரு வெறுப்புணர்ச்சி என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் சமீப காலங்களில் தான் இந்தப் பிரச்சனை எழுப்பப் பட்டது என்பதும் உண்மை. 

காரணம் சமீப காலங்களில் தேசிய பள்ளிகளின் மீது பல விதமான குற்றச்சாட்டுகள்.  அவை இஸ்லாமிய பள்ளிகளாக மாறுகின்றன என்கிற குற்றச்சாட்டுகள் பெற்றோர்களால் எழுப்பப்பட்டன.  தாய் மொழிப் பள்ளிகள் வேண்டாம் என்று நினப்பவர்கள்  இந்நாட்டு மக்கள் இஸ்லாமிய கல்வியைப் பயில வேண்டும் என்கிற குறுகிய மனப்பான்மையில்  தாய் மொழிக் கல்வி வேண்டாம் என்கின்றனர். அது தான் உண்மை.

தாய் மொழிக்கல்வி என்பது நமது உரிமை. அது ஏதோ தங்கத் தாம்பாளத்தில் வைத்து தூக்கிக் கொடுக்கப்பட்டதல்ல என்பதை கல்வி அமைச்சர் உணர வேண்டும்.

எது எப்படியோ கல்வி அமைச்சர் எங்களது உரிமைகளையும் மதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

ஒரே பள்ளி முறையை  நாம் வரவேற்கவில்லை!

Tuesday, 4 June 2019

கோட்டா முறை இல்லை!

சமீபத்திய  ஒரு  நேர் காணலில், கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார். 

புதிதாக ஒன்றுமில்லை. ஏற்கனவே சொல்லப்பட்ட ஒரு கருத்துத் தான்.  மெட்ரிகுலேஷன் தொடர்பான ஒரு பிரச்சனையில்  அவர் சொன்ன கருத்து:  "ஆறாம் படிவம் படிக்க எந்த வித கோட்டா முறையும் இல்லை"   என்று சொல்லியிருக்கிறார்.

அது உண்மை தான்.  கோட்டா முறை இல்லாதிருந்தும் மாணவர்கள் மெட் ரிகுலேஷன் கல்வியையே நாடுகிறார்கள் என்பது தான் அவர் பூமிபுத்ரா அல்லாத  மாணவர்களின் மேல்  வைக்கும் குற்றச்சாட்டு!

இதன் காரணம் என்ன  என்பது கல்வி அமைச்சர் அறியாதது அல்ல.  அதனை அவர் மறைத்து பூமிபுத்ரா அல்லாத  மாணவர்கள் மேல் குற்றம் சாட்டுகிறார்.

மெட் ரிகுலேஷன் கல்வியால் வரும் நன்மைகள் என்ன  என்பதையும் அனைத்து இன மாணவர்களும் ஏன் அதற்காகப் போராட்டம் நடுத்துகிறார்கள் என்பதும்  பெற்றோர்கள் மட்டும் அல்ல மாணவர்களுக்கும் தெரியும்.   மெட் ரிகுலேஷன் கல்வி என்பது பல்கலைக்கழகம் போக எளிமையான  ஒரு வழி!  மெட் ரிகுலேஷன் கல்வியை - அதன் தகுதியை - யாரும் ஏற்றுக் கொள்ளுவதில்லை!  அந்தக் கல்வியை வேலைக்காக பயன்படுத்த முடியாது!   அதனை முடித்து ஏதாவது ஒரு கல்வியைப் பல்கலைக்கழகங்களில்  தொடர வேண்டும்.  அந்தக் கல்வி அதனை உறுதிப்படுத்துகிறது.  மிக எளிமையான ஒரு வழி! மெட் ரிகுலேஷன் கல்வி என்பது பலகலைக்கழகத்தில் முடிகிறது.

ஆறாம் படிவமான (எஸ்.டி.பி.எம்) கல்வி அப்படி அல்ல.   அதன் சான்றிதழ்கள் எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற ஒரு கல்வி முறை.  வேலைக்காகவும் பயன்படுத்தலாம்.  ஆனால் அதன் முக்கிய நோக்கம் பலகலைக்கழகம் போவது தான்.  வெளி நாட்டுப் பல்கலைக்கழகங்களும்  அந்தக் கல்வி முறையை ஏற்றுக் கொள்ளுகின்றன.  வசதி படைத்தவர்கள் வெளி நாடுகளுக்குப் போகின்றனர். ஏழை, நடுத்தர குடும்பங்கள் உள்ளூரில் தான் படிக்க வேண்டும்.  ஆனால் இங்குள்ள பிரச்சனை இவர்களுக்கு  பல்கலைக்கழகங்களில் இடம் கிடைப்பது குதிரைக் கொம்பு என்பது தான்! அது தான் இங்குள்ள பிரச்சனை. 

ஆனால் கல்வி அமைச்சர் ஆறாம் படிவத்திற்கு கோட்டா முறை இல்லை என்கிறார். இருக்கட்டும்.  இவர்கள் தொடர்ந்து படிப்பதற்கு ஏன் வாய்ப்புக் கொடுப்பதில்லை என்பது தான் கேள்வி! குறைவான தகுதியுள்ள மெட் ரிகுலேஷன் மாணவர்கள் மேல் கல்வியைத் தொடர்கின்றனர். ஆனால் அதிகத் தகுதி உள்ள மாணவர்களுக்கு இடம் இல்லை என்று கையை விரிக்கின்றனர்! 

நாம் சொல்ல வருவதெல்லாம் ஆறாம் படிவத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள். இங்கு பயிலும் மாணவர்களுக்குக் கல்வி பயில வாய்ப்புக் கொடுங்கள் என்பது தான். இல்லாவிட்டால் ஏதாவது ஒன்றைத்  தேர்ந்தெடுத்து வருங்கால மாணவ சமுதாயத்திற்கு வழி காட்டியாய் இருங்கள்!

கோட்டா முறையை விட தகுதி முறையே சிறந்தது!

ம.இ.கா. ஏன் துவண்டு போனது?

பேரா  மாநிலத்தில் சமீபத்தில் நடைப்பெற்ற பேரா மாநில பேராளர் மாநாட்டில்  டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ஒரு கருத்தைச் சொன்னார்.

அதனைச் சொல்லுவதற்கு அவர் தகுதியானவர் மட்டும் அல்ல அந்தக் கருத்தைச் சொன்ன இடமும் தகுதியான இடம் தான்! 

ம.இ.கா என்னும் ஆலமரம் ஒரு சில முறை கேட்டால் பட்டுப்போய் துவண்டு விட்டது  என்று கூறியிருப்பது அவர் அதனை முழுமையாக அறிந்திருக்கிறார் என்ப்து நமக்கும் புரிகிறது.

ஒரு சில என்பதில் நாம் கருத்து வேறு பட்டாலும் ஒரு சிலர் செய்த முறை கேட்டால் ஆலமரம் அடியோடு சாய்க்கப்பட்டு விட்டது என்பதில் சந்தேகமில்லை! நிச்சயமாக நமக்கு அதில்  வருத்தம் தான். காரணம் நாமும் அந்த மாபெரும் ஆலமரத்தில் ஒரு இலையாகவாவது இருந்திருக்கிறோம். அதனால் நமக்கும் வருத்தம் ஏற்படுவது இயற்கை தான்.

இந்த ஆலமரம்  துளிர்க்க வழியில்லையா?  வழி இல்லை என்று சொல்ல முடியாது. முடியும். அது இன்னும் இருபது முப்பது ஆண்டுகள் பிடிக்கும். அது வரை பொறுமையாக இருக்க வேண்டும்.

ஆனால் முதலில்  இந்தியர்களின்  நம்பிக்கையைப்  பெற  ம.இ.கா. முயல வேண்டும்.  எந்த வகையில் அவர்கள் இந்தியர்களின் நம்பிக்கையைப் பெறுவார்கள்? இப்போது இந்தியர்களின் அலை பக்கத்தான் பக்கம் வீசிக் கொண்டிருக்கிறது.  பக்கத்தான் அரசாங்கம் இந்தியர்களின்  பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க முடியும் என்றால் அந்த அலை தொடர்ந்து பக்கத்தான் பக்கம்  தான்  வீசிக் கொண்டிருக்கும்!

இந்தியர்கள் ம.இ.கா. மீது  கொஞ்சமாவது நம்பிக்கை  வைக்க வேண்டுமென்றால் ஒரு சில காரியங்களையாவது அவர்கள் செய்யத் தான் வேண்டும்.  இந்தியர்கள் பெரிய அளவில் ஏமாற்றப்பட்டது மைக்கா ஹோல்டிங்ஸ்  பிரச்சனையில் தான்.  இன்னும் பல நில விவகாரகங்கள், பள்ளிக்கூட நிலங்கள் என்பதெல்லாம் ஒரு தொடர்கதை!

அதை விட, சமீபத்திய காலத்தில் நடந்த, டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் காலத்தில் நடந்த, எந்த மண்ணில் இருந்து இப்போது குரல் கொடுத்தாரோ அந்த பேரா மண்ணில் 2000 ஏக்கர் நிலத்தை ம.இ.காவின்ர் கபளீகரம் செய்தார்களே அது என்ன மறக்கக் கூடிய விஷயமா?  அதுவும் தமிழ்ப்பள்ளிகளுக்குக் கொடுத்த நிலம்.  அப்படி  பார்த்தால்  ம.இ.கா. வினர் இருந்தால் தமிழ்ப்பள்ளிகளையே அழித்து விடுவார்களே என்னும் எண்ணம் இயற்கையாகவே வந்துவிட்டுப்  போகுமே!

ம.இ.கா. மீண்டும் தலையெடுக்க  வேண்டும்  என்று நினைப்பது  ம.இ.கா. தலைவர்  என்கிற முறையில் அவருக்கு அது சரி தான். ஆனால் ம.இ.கா. வினர் திருடர்கள் என்னும் எண்ணத்தை முதலில் இந்தியர்களின் மனதிலிருந்து அழிக்க வேண்டும்.  அதற்கு அவர்கள் நிறைய உழைக்க வேண்டும்.  எந்த விதத்திலும் அவர்கள் துவண்டு விடக் கூடாது!

ம.இ.கா. மீண்டும் தலையெடுக்க வாழ்த்துகள்!

Monday, 3 June 2019

கேள்வி - பதில் (101)

கேள்வி

தமிழ் நாட்டில் இந்தி திணிப்பு  சரியா?

பதில்

இந்தப் பிரச்சனையில் எனக்குக் கருத்து வேறுபாடுகள் உண்டு. காரணம் இதில் எனக்குத் தெளிவுகள் இல்லை.

ஒரு காலக் கட்டத்தில் இந்தியை எதிர்த்தார்கள்.  அந்தக் காலக் கட்டத்தில் என்ன நடந்தது என்று தெரியவில்லை.

இப்போதும் இந்தியை எதிர்க்கிறார்கள். சரியான காரணங்கள் தெரியவில்லை.

இந்தி வந்தால் தமிழ் அழிந்து விடுமா என்பது புரியாத புதிர். தென் மாநிலங்களில் - கர்னாடகா, ஆந்திரா, கேரளா - இந்த மாநிலங்கள் இந்தியை எதிர்க்கவில்லை.  அந்த மாநிலங்களில் கன்னடமோ, தெலுங்கோ, மலையாளமோ அழிந்து போனதாக ஒன்றும் தெரியவில்லை.  தமிழ் நாட்டில் இந்தி படித்தால் தமிழ் அழிந்து விடும் என்பது என்ன கணக்கு என்பதும்  புரியவில்லை.

இந்தி, இந்தியாவின்  ஆட்சி மொழியா. அதிகாரத்துவ மொழியா என்பதும் தெரியவில்லை. அப்படி இல்லையென்றால் ஏன் மற்ற மாநிலங்கள் எந்த எதிர்ப்பையும் காட்டாமால்  இந்தியைப் படிக்கின்றனர்?  அப்படி என்றால் இந்தி படிப்பதன் மூலம் அந்த மாநிலத்தவர்களுக்கு ஏதோ இலாபம் இருப்பதாகத்தானே பொருள்!  இல்லாவிட்டால் அவர்கள் ஏன் படிக்க வேண்டும்?  அல்லது அவர்கள் மூன்று மொழிகளைப்  படிப்பதன்  மூலம் அவர்கள் அறிவாளிகள் என்று தானே  நாம்  நினக்க வேண்டியுள்ளது!  இல்லாவிட்டால் தமிழ் நாட்டிலும் வேறு ஒரு மொழியைப் படிப்பதன் மூலம்  மூன்று மொழிகளைப் படிக்க எங்களாலும்  முடியும் என்று நாமும் காட்டலாமே! 

ஒன்று நமக்குப் புரியவில்லை. கன்னடர்கள் இந்தியைப் படிக்கிறார்கள். மலையாளிகள் இந்தியைப் படிக்கிறார்கள். தெலுங்கு மக்கள் இந்தியைப் படிக்கிறார்கள்.   தமிழ் நாட்டில் பிராமணர்கள் தனிப்பட்ட முறையில் இந்தியைப் படிக்கிறார்கள். மத்தியில் முக்கிய அரசாங்கப் பதவிகளில் மலையாளிகள் இருக்கிறார்கள், தெலுங்கர்கள் இருக்கிறார்கள், கன்னடர்கள் இருக்கிறார்கள். அத்தோடு  தமிழ் நாட்டுப்     பிராமணர்களும் இருக்கிறார்கள்.  மற்ற தமிழர்கள்  யாரும் பெரிய பதவிகளில்  இருப்பதாகத்  தெரியவில்லை. தமிழர்கள் மத்திய பதவிகளில் இல்லாமல் ஒருப்பது இந்தியும் ஒரு காரணமோ என்று நினைக்கத் தோன்றுகிறது!

தமிழ் நாட்டில் திராவிடக் கட்சிகள் ஆரம்பக் காலந் தொட்டே  அவர்களின் செயல்பாடுகள் தமிழர்களுக்கு எதிராகவே இருந்திருக்கின்றன. திராவிடக் கட்சிகள் இந்தி எதிர்ப்பை கேரளாவிலோ, ஆந்திராவிலோ, கர்னாடக்த்திலோ காட்டவில்லை, தமிழ் நாட்டில் மட்டும் காட்டியிருக்கிறார்கள் என்றால் அதற்கு என்ன காரணம்? தமிழன் மட்டும் இளிச்சவாயன் என்று தானே அர்த்தம்!

ஒரு வீம்புக்காக இந்தியை எதிர்ப்பது சரியானது அல்ல. ஒரு வீம்புக்காக இந்தியை வற்புறுத்தி, திணித்து  படிக்க வைப்பதும் சரியானதல்ல!

இந்திய அளவில் அனைவரும்  மூன்று  மொழிகளைக்  கற்க வேண்டும். இந்தியைத் தாய் மொழியாகக்  கொண்ட மாநிலங்களும் மூன்று  மொழிகளைக்  கற்க  வேண்டும்.  இதில் வேறுபாடுகள் இருக்கக் கூடாது. இதில் தாழ்ந்தோர் உயர்ந்தோர் இருக்கக் கூடாது. 

ஒவ்வொரு மாநிலத்திலும் மூன்று மொழிக் கொள்கை அவசியம்.  அதனை நான் ஆதரிக்கிறேன். 

எந்த மொழித் திணிப்பையும் நான் ஆதரிக்கவில்லை! அது தேவையும் இல்லை.  ஆனால் மூன்று மொழிகள் தேவை.

Sunday, 2 June 2019

அந்நியத் தொழிலாளர் அனுமதி..!

மனித வள அமைச்சர் எம்.குலசேகரன் நல்லதொரு  செய்தியை நமது வர்த்தகச் சமூகத்திற்குக்  கொடுத்திருக்கிறார்.

நாடு திரும்பும் அந்நியத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட பெர்மிட்டுகள் அவர்களுக்குப் பதிலாக புதிய தொழிலாளர்களை எடுத்துக் கொள்ள வசதியாக அந்தப் பெர்மிட்டுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

இது ஏற்கனவே நடப்பில் இருந்த ஒரு சட்டம் தான். ஆனால் அதனை அரசாங்கம் கடந்த 2016-ம் ஆண்டு  நிறுத்திக் கொண்டது.  அதனை மீண்டும் அமலுக்குக்கொண்டு வர இப்போது அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. 

வரவேற்கக் கூடிய ஒரு செய்தி. நமது வர்த்தக சமூகத்தினர் மகிழ்ச்சி அடைவர் என நம்பலாம்.

இதில் குறிப்பாக அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் நமது உணவக உரிமையாளர்கள் தான் என்று தாராளமாகச் சொல்லலாம்.   பல உணவகங்கள்  மூடப்பட்டு விட்டதாக அவர்கள் சொல்லுகின்றனர்,

அதிகம் பாதிப்பு உணவகத் துறை என்று நாம் சொன்னாலும்  அதிகம் கெட்ட பெயரை வாங்கிக் கொண்டவர்களும்  அவர்கள் தான்! இப்போதும் கூட நான் பார்க்கின்ற சில விஷயங்களைச் சொல்லுகிறேன்:  பல உணவகங்கள் தங்களது தொழிலாளர்களுக்குப் போதுமான ஓய்வு நேரம் கொடுப்பதில்லை. அதனால் அவர்கள் வேலை திருப்திகரமாக அமையவில்லை. அதனை அவர்கள் குற்றமாகக் கருதுகின்றனர். சரி அவர்களின் சம்பளம் திருப்திகரமாக இருக்கின்றனவா? அதுவும் இல்லை. கேட்டால் அரசாங்கம் கொடுத்த சட்ட திட்டங்களை வைத்துத் தான் நாங்கள்  சம்பளம்  கொடுக்கிறோம் என்கிறார்கள்.  அந்த சம்பளத்தைக் கொடுத்தாலாவது புண்ணியம் கிடைக்கும். அதையும் கொடுப்பதில்லை.

உண்மையைச் சொன்னால்  தொழிலாளர்களுக்குப் போதுமான ஓய்வுகள் இல்லை  போதுமான சம்பளம் இல்லை. ஏதாவது  பேசினால் உடனே வன்முறையில் இறங்கிவிடுகிறார்கள். அவர்களுக்குக்  காவல்துறை  பக்க பலம்.  

உணவகத் துறையில் பல பலவீனங்கள்.  வேலை தேடி வந்தவர்களையும் சம்பளம் கொடுக்காமல் விரட்டியடித்த கதைகள்  எல்லாம்  உண்டு. இந்த நிலையில்  தமிழ் நாட்டிலிருந்து வந்து இவர்களுக்கு இலவசமாக தொண்டு செய்ய வேண்டுமாம்! 

உண்மையைச் சொன்னால் இவ்வளவு பிரச்சனைகளுக்கும்  காரணம் இவர்களே தான்.  இந்தத் தொழிலில் பல ஆண்டுகளாக இருப்பவர்களால் எந்தப் பிரச்சனையும் இல்லை. அவர்களுக்கு அவர்களது தொழில் தான் முக்கியம்.  தமிழகத் தொழிலாளர்களை ஏமாற்ற வேண்டும் என்பதற்காகவே  ஒரு சிலர் உணவகங்களைத் திறந்து  அவர்களை ஏமாற்றி சம்பளம் கொடுக்காமல் அடித்து உதைத்து பணம் சம்பாதிக்கும் திடீர் பணக்காரர்கள்  உணவகத் துறைக்கு வந்தது தான் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம்!

இப்போது ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதனை அவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

இனி நல்லதோ கெட்டதோ எல்லாம் உங்கள் கையில்!

Saturday, 1 June 2019

பட்டாசுகள் தடையா..?

சாமி! எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்!

நம் நாட்டில் பட்டாசு தடை செய்யப்பட்ட ஒன்றா என்று இது நாள் வரை எனக்குத் தெரியவில்லை!  நான் வியாபாரத் துறையில் காலடி எடுத்த வைத்த ஆரம்ப காலத்தில்  பெருநாள் காலங்களில் பட்டாசுகளும் விற்று வந்தேன்.  ஆனால் ஒரு சில ஆண்டுகள் தான் என்னால் விற்க முடிந்தது. அதன் பின்னர் தடை செயப்பட்டு விட்டதாக எனக்குச் சொல்லப்பட்டது.

 இது நடந்து சுமார் இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. என்னைப் போன்று கடை வைத்து வியாபாரம் செய்தவர்கள் தான் தடை செய்யப்பட்டனரே தவிர மற்றபடி பட்டாசுகளுக்கு எந்தத் தடையும் இல்லை! கடைகளில் கிடைக்காவிட்டால் என்ன?  அது சந்தைகளிலும், மூலை முடுக்குகளிலும் அனைத்து இடங்களிலும் தாராளமாக கிடைத்தன.  ஏன்? இப்போதும்  கிடைக்கின்றன!

இது என்ன தடை என்பதை இது வரை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை!  நமக்குப் புரிய வருவது எல்லாம் பட்டாசுகளைக் கடைகளில் விற்கக் கூடாது, அவ்வளவு தான்! அது தான் பட்டாசு மீதான தடை என்பதாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ள்து  மற்றபடி கடைகளுக்கு வெளியே, அஞ்சடிகளில் பேராங்காடிகளின் சுற்றுப் புறங்களில்  - இப்படி எங்கு வேண்டுமானாலும் பட்டாசுகளை  விற்கலாம். அதற்குத் தடையில்லை!

இப்படி தடையில்லை என்று தைரியமாகச்  சொல்லுவதற்கு ஒரு காரணம் உண்டு.  நான் வாழுகின்ற பகுதி மலாய்க்காரர்கள்  அதிகமாக உள்ள ஒரு பகுதி.  இங்கு  காவல்துறையில் வேலை செய்பவர்கள் பலர் உண்டு. அவர்களும் தான் பட்டாசுகளை வெடிக்கிறார்கள்! அவர்கள் குடும்பத்தினரும் தான் பட்டாசுகளை வெடிக்கிறார்கள்! அப்படி என்றால் அவர்களுக்கு நடப்பில் உள்ள சட்டம் தெரியாதா, என்ன? 

எனக்குத் தெரிந்தது எல்லாம்  இப்படி  சட்டம் தெரிந்தவர்  தெரியாதவர்  எல்லாம்  பட்டாசுகளை வெடிக்கும் போது  அப்புறம் என்ன தடை? 

அரசாங்கம் இந்த பட்டாசு வெடிகளைப் பற்றி சரியான, தெளிவான நிலைமையில் இல்லை என்பது தெரிகிறது.  ஏதோ தடுமாற்றம் தெரிகிறது!

இந்தத் தடை என்பது பெரிய தலை போகிற விஷயம் அல்ல.  வேண்டும் என்றால் வேண்டும். வேண்டாம் என்றால் வேண்டாம். அவ்வளவு தான். வேண்டும் என்றால் பெரிய பெரீய வெடி ஓசைகளை எல்லாம் தடைச் செய்துவிட்டு சிறிய சிறிய - சிறியவர் பெரியவர் - அனைவரும் விளையாடும் படியான மத்தாப்பு போன்றவைகளை விளையாட அனுமதிக்கலாம்.  இப்போது எது வெடி, எது வெடிகுண்டு, எது துப்பாக்கிச் சூடு என்று பிரித்துப் பார்க்க முடியவில்லை!

அரசாங்கம் மக்களுக்குத் தெளிவுபடுத்த கடமை உண்டு. தடுமாற்றம் தேவை இல்லை. 

இப்போது பட்டாசுகளுக்குத் தடையில்லை என்றே தோன்றுகிறது!