Wednesday 30 November 2022

நீங்க சொல்லுவது சரிதான்!

 

                            மலேசிய பிரதமர், டான்ஸ்ரீ அன்வார் இப்ராகிம்

மலேசியாவில்  15-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி அமைத்திருக்கிறது. அல்லது ஒற்றுமைக் கூட்டணி என்றும் சொல்லலாம். ஒற்றுமைக் கூட்டணியின் பின்னணியில் மாமன்னர் இருந்திருக்கிறார். அவர் தலையீட்டினால் தான் ஒற்றுமை அரசாங்கம் அமைந்தது.

இந்தப் புதிய அரசாங்கத்தைப் பற்றி நண்பர் ஒருவர் கருத்துரைத்தார்:     

 "சரி! ம.இ.கா.வை தோற்கடித்து விட்டீர்கள்.  பாரிசான் கட்சியை ஒழித்து விட்டீர்கள். இப்போது புதிய கட்சி ஆட்சிக்கு வந்திருக்கிறது. அன்வார் பிரதமராக வந்து விட்டார்.

ஆமாம்! இனி மேல் உட்கார்ந்து சாப்பிடப் போகிறீர்களா? இவ்வளவு நாள் நின்று கொண்டா சாப்பிட்டீர்கள்? இப்போதும் உழைத்தால் தானே சாப்பாடு?" இப்படியாக அவர் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனார்!

இவரைப் போன்றவர்கள் தங்களது சுயநலத்தையே பார்க்கின்றனர். பொதுநலத்தை அறியாதவர்கள். ஒன்றை நாம் சொல்லித்தான் ஆக வேண்டும். இன்று  நம்பிக்கைக் கூட்டணியை ஆதரிப்பவர்கள் பெரும்பாலும் முன்னாள் ம.இ.கா. உறுப்பினர்கள் அல்லது தேசிய முன்னணியை ஆதரித்தவர்கள்.

ஏன் இப்படி ஒரு நிலை ஏற்பட்டது என்பதைக் கொஞ்சம் ஆராய வேண்டும். எப்படிப் பார்த்தாலும் இந்தியர்களின் நிலை பெரிய அளவில் அதாவது மற்ற இனத்தவர்களின் முன்னேற்றத்திற்கு ஈடாக இல்லை என்பது ஒன்றும் புதிய செய்தி அல்ல. இப்படி ஒரு நிலை ஏற்பட்டதற்கு யார் காரணம்.  நமக்குத் தெரிந்தவரை ம.இ.கா. தான் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

பொருளாதாரத்தை உயர்த்த முடியவில்லை.  கல்வியில்,  திறமையிருந்தும் உயர்கல்விக்குப் போகமுடியாமல் தடுக்கப்படுகிறோம். இந்தியர்கள் வேலை வாய்ப்புகளிலிருந்து முற்றிலுமாக ஒதுக்கப்படுகின்றனர். அரசாங்க வேலை வாய்ப்புகள், தனியார்துறை வேலை வாய்ப்புகள்  எதுவும்  எதிர்பார்த்தபடி அமையவில்லை.

இந்தியர்கள் முற்றிலுமாக ஒதுக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு நம்பிக்கைக் கூட்டணியை ஆதரிப்பதைத் தவிர  வேறு போக்கிடம் இல்லை. கோழைகளைக் கொண்ட ஒரு கட்சியை வைத்துக் கொண்டு இந்தியர்களால் என்ன செய்ய முடியும்? கட்சியை வைத்துக்கொண்டு, இந்தியர்களின் பெயரைச் சொல்லிக் கொண்டு, காலங்காலமாக தலைவர்கள் சம்பாதிப்பதற்கு இந்த ஏமாந்த சமுதாயம் தான் அகப்பட்டதா, என்ன?

எதற்கும் இலாயக்கில்லாத ஒரு அரசியல் கட்சியை வைத்துக்கொண்டு, தங்களுடைய வயிற்றுப்பாட்டிற்காக அதனை நடத்திக் கொண்டிருப்பது அவர்களுக்கு இலாபமாக இருக்கலாம். அதனால் மக்களுக்கு என்ன இலாபம்?

ம.இ.கா. தலைவர்கள்  அத்தனை பேரும் சுயநலவாதிகள் என்பதை நாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டு தான் வருகிறோம். இனிமேலும் அவர்களைப் பாராட்டி சீராட்டி அரியனையில் அமர்த்த வேண்டும்  என்கிற நிலைமை நமக்கில்லை! இந்தியர்கள் அவர்களுக்கு நல்லதொரு பாடத்தைக் கற்பித்துவிட்டார்கள்.

இவர்கள் இனி திருந்தினாலும் சமுதாயம் இவர்களுக்குக் கதவடைப்பு செய்துவிட்டது! திறக்கப்போவதில்லை!

Tuesday 29 November 2022

இது சரியா, தவறா?


 ம.இ.கா. தேசியத் தலைவர், டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் புதிய அரசாங்கத்திற்கு,   இந்தியர்களின் உருமாற்றத் திட்டங்களுக்காக, ம.இ.கா. தனது ஆதரவை வழங்கத் தயார் எனக் கூறியிருக்கிறார். இந்நாள்வரை ம.இ.கா. செய்துவந்த பல முயற்சிகளும் தொடர வேண்டும் என்பதாக அவர் கூறியிருக்கிறார்.

இந்தியர்களின் மீது அவருக்குள்ள அக்கறையை அல்லது ம.இ.கா.வின் அக்கறையை நாம் வரவேற்கிறோம்.

அதே சமயத்தில்  இத்தனை ஆண்டுகள் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் எந்த அளவுக்கு வெற்றிபெற்றிருக்கின்றன என்பதையும் நாம் பார்க்க வேண்டும். அவர்கள் எந்த முயற்சிகளும் செய்யவில்லை என்று யாரும் அவர்களைக் குற்றம் சொல்லவில்லை. ஆனால் அவர்கள் முயற்சிகள் வெற்றிபெறவில்லை என்பது தான்  நமது ஆதங்கம்.

அவர்கள் முயற்சிகள் அனைத்தும்  'ஏதோ பிரதமரிடம் மகஜரைக்  கொடுத்தோம்,  நமது வேலை முடிந்தது!' என்கிற பாணியில் தான் அவை அனைத்தும் நடந்தன! அதனுடைய சாதக பாதகங்கள் கண்காணிக்கப்படவில்லை.. தொடர்ந்து 'இந்தத் திட்டம், அந்தத் திட்டம்' என்று ஆண்டுக்கு ஆண்டு பிரதமருக்குப்  போய்க் கொண்டிருந்ததே தவிர எல்லாம் வெற்றுக் கடுதாசியாகவே ஆகிப்போகின! வேறு என்ன சொல்ல?   

அவர் எடுத்த அந்த அக்கறைக்காக நாம் பாராட்டுவோம். ஆனால் வெற்றுக் காகிதம் என்று தெரிந்த பின்னர் பக்காத்தானுக்கு அவரால் அப்படி ஒன்றும் பெரிதாக செய்துவிட முடியாது.  

எல்லாமே புதிதாக தொடங்க வேண்டிய நிலையில்  தான் இன்றைய அரசாங்க உள்ளது. உயர் கல்வியாக இருக்கட்டும், தமிழ்ப்பள்ளியாக இருக்கட்டும், பொருளாதார பிரச்சனையாக இருக்கட்டும்,  வேலை வாய்ப்பாக இருக்கட்டும்  அனத்துமே புதிதாகவே தொடங்க வேண்டிய நிலையில் தான்  புதிய அரசாங்கம் உள்ளது.

முன்னாள் ம.இ.கா. தலைவர் துன் வீ.தி.சம்பந்தன் அவர்களுக்குப் பிறகு அந்தக்கட்சி சரியான தலைவன் இல்லாமல் தட்டுத்தடுமாறி இன்றை நிலையில் வந்து நிற்கிறது!  இவர்கள் நிலையே தடுமாற்றத்தில் இருக்கும் போது இவர்கள் எந்த வகையில் இந்தியர்களின்  உருமாற்றத்திற்காக  உதவ முடியும்! அவர்கள் பாதை வேறு! வழி வேறு! எந்த வகையிலும் நடப்பு அரசாங்கத்துடன் ஒத்துப் போகாதது!

நமக்குத் தெரிந்ததெல்லாம் இந்தியர்களின் உருமாற்றத்திற்காக நமபிக்கைக் கூட்டணி சரியான திட்டங்களை வகுத்துச் செயல்பட வேண்டும்.  அடுத்த ஐந்து ஆண்டுகளில் சரியான இலக்கை நிர்ணயிக்க வேண்டும்.   அந்த இலக்கை நோக்கி நகர வேண்டும்.   

ம.இ.கா.,  உங்களுக்கு உதவுகிறோம் என்கிறார்கள். அதற்கான வரைபடங்கள் அவர்களிடம் உள்ளன. ஆனால் அந்த வரைபடங்கள் அவர்களுக்கே உதவவில்லை!

வேண்டாம் இந்த விபரீதம் என்பதே நமது ஆலோசனை!                                                                                                                     

Monday 28 November 2022

வேண்டாம் இந்த விளையாட்டு!

 

இப்போது நாட்டின் புதிய பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பதவியேற்று ஒரு சில தினங்களே ஆகின்றன.

ஒரு சில நடப்புகளைப் பார்க்கும் போது 'ஏன் இந்த அவசரம்? என்று  சிலரைப் பார்த்துக் கேடகத்தோன்றுகிறது.

அமைச்சரவை அமைவதற்கு குறைந்தபட்சம் ஓரிரு வாரங்கள் பிடிக்கும். அதற்குள்ளாகவே 'அவருக்கு அந்தப் பதவி கொடுங்கள்! இவருக்கு இந்தப் பதவி கொடுங்கள்!' என்கிற கோரிக்கைகள் எழ ஆரம்பித்துவிட்டன.  ஊடகங்களும் அந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன.

நாம் நமது பிரதமரை நம்புகிறோம். இது தேசிய முன்னணியின் அரசாங்கம் அல்ல. அவர்கள் இந்தியர்களை முற்றாகப் புறக்கணித்தவர்கள். 

ஆனால் இது புதிய அரசாங்கம். நமக்கு என்ன தேவை என்பதைப் பிரதமர் அறிவார். அது மட்டும் அல்ல. இந்தியர்களும் கணிசமான அளவு நாடாளுமன்றத்தில் இருக்கின்றனர்.  இந்தியர்கள் பிரச்சனையை பிரதமரிடம் கொண்டுச் செல்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமை.

நாம் இன்னும் பழைய முறைப்படியே சிந்திக்க வேண்டிய அவசியமில்லை. நிச்சயமாக சரியான ஒருவர் பதவிக்கு வருவார் என எதிர்பார்க்கலாம்.

நம்மைப் பொறுத்தவரை அடுத்த ஐந்து ஆண்டு காலத்தில் இந்தியர் பொருளாதாரம் மூன்று விழுக்காடு அடைய வேண்டும் என்பது இலட்சியமாக, அரசாங்கத்தின் கொள்கை அமைய வேண்டும். நம்மிடையே  பொருளாதார நிபுணர்களுக்குப் பஞ்சமில்லை. கடந்த காலங்களில் பல்வேறு அரசாங்க நிதியுதவிகள் மக்களைச் சென்று அடையவில்லை.   பொருளாதாரம் அறிந்தவர்களைக் கொண்டு இனி  செயல்பட வேண்டும்.

கடந்த காலங்களில் நாம் தேர்தெடுத்த மக்கள் பிரதிநிதிகள் தான் அரசாங்க நிதிகளைக் கையாண்டவர்கள். அவர்கள் பொருளாதார நிபுணர்கள் அல்ல. அதனால் பல முறைகேடுகள்! ஏன்? தானைத்தலைவர் கூட நமது பொருளாதாரத்தை ஒரு சிறிய அளவு கூட நகர்த்த முடியவில்லையே! இருந்ததையும் தகர்த்துவிட்டுத் தானே  போனார்!

முடிந்தால் இந்த முறை தக்க நிபுணர்களை வைத்து நமது தரத்தை உயர்த்த முயற்சி செய்ய வேண்டும். அரசியல்வாதிகள் ஏதோ நிபுணர்களைப் போல செயல்பட்டதெல்லாம் போதும்.

அதனால் 'அவரைப் போடு! இவரைப் போடு!' போன்ற பல்லவிகள் இனி வேண்டாம். நாம் யாரை சிபாரிசு செய்கிறோமோ அவர்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்பது தான் நமது அனுபவம். இந்த முறையாவது நல்லது நடக்கட்டும்!

Sunday 27 November 2022

எல்லாம் நன்மைக்குத்தான்!

 

                      பத்து நாடாளுமன்ற உறுப்பினர்,   ப. பிரபாகரன் (பி.கே.ஆர்.)

எவ்வளவு கசப்பானாலும் அதிலும் எங்கோ ஒரு மூலையில் இனிப்பின் சுவை ஒளிந்து கொண்டிருக்கும் என்பதாக சொல்லப்படுவதுண்டு.

அது உண்மை தான்.  இப்படி ஒரு தீடீர்த் தேர்தல் நடந்து, இந்தத் தேர்தல் மூலம் டான்ஸ்ரீ அன்வார் இப்ராகிம்,  நாட்டின் பிரதமராக ஆவார் என்று யாரும்    எதிர்பார்க்கவில்லை.

அதிலும் இப்படி ஒரு தேர்தல் நடத்துவதையே பெரும்பாலானோர் எதிர்த்தோம். இன்னும் ஓர் ஆண்டுக் காலம் இருக்கும் போது 'ஏன் இந்த அவசரம்?' போன்ற கேள்விகள் எழத்தான் செய்தன.

உடனடியாகத் தேர்தல் நடத்த வேண்டும் என்று அடம் பிடித்தவர் என்றால் அது அம்னோ தலைவர் ஸாஹிட் ஹமிடி தான். அவரும் அவரைச் சார்ந்த ஒரு சில நபர்களும் தேர்தல் நடத்துவதில் தீவிரம் காட்டினர். என்ன நினைத்து அவர் இப்படி அடம் பிடித்தார் என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால் அவரின் கணிப்பு தவிடுபொடி ஆனது என்பது மட்டும் நிதர்சனம். இந்தத் தேர்தல் முடிவை அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

அடுத்த ஆண்டு தேர்தல் நடந்திருந்தால் ஒரு வேளை இதைவிட இன்னும் சிறப்பாக நம்பிக்கைக் கூட்டணி  தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை. இந்த அளவுக்கு இழுத்தடிப்புகள் தேவைப்பட்டிருக்காது.

நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பது முதுமொழி. ஸாஹிட் ஹமிடி, கட்சிகளுக்கிடையே,  கலகத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ அது கடைசியில் நன்மையில் முடிந்தது  என்பது தான் இன்பம்  தரும் செய்தி. நிச்சயமாக அது நம்பிக்கைக் கூட்டணியைச் சேர்ந்தவர்களுக்கு இனிப்பான செய்தி தான்!

ஸாஹிட் ஏற்படுத்திய அந்த கலகம்  அன்வாரை ஓர் ஆண்டுக்கு முன்னரே அவரை அரியணை ஏற வைத்துவிட்டது என்பது தான் எதிர்பாராத  செய்தி! நமக்கும் அதில் மகிழ்ச்சி தான்.

அடுத்த  ஆண்டு தேர்தல் என்றால் அதற்குள் எது வேண்டுமானாலும் நடக்கலாம். நாட்டின் சூழல் எப்படிப் போகும், என்ன ஆகும் என்பதை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாது. கொரோனா திடிரென வந்தது போல வேறு ஏதோ ஒரு  கோளாறு தீடிரென வரலாம்! அதனைச் சமாளிக்கும் திறன் முந்தைய அரசாங்கத்திற்கு உள்ளதா என்பது சந்தேகம் தான்.

அதனாலேயே அன்வார் பிரதமராக வந்து பிரச்சனைகளைச் சமாளிக்க வேண்டும் என்று எழுதி வைக்கப்பட்டிருக்கிறது என்றால் அது தான் நடக்கும். 

ஆமாம்; எனக்குத் தெரிந்தவரை நாடு மிகவும் மோசமான ஒரு சூழலை நோக்கி போய்க்கொண்டிருந்த நேரத்தில்  அன்வார், பிரதமர் பதவியேற்று, நாட்டைக் காப்பாற்ற வந்திருக்கிறார் என்று தான் நான் நினைக்கிறேன். நாட்டைக் காப்பாற்ற வந்த மாமனிதர் அன்வார் இப்ராகிம். அவர் காலத்தில் நாடு வளர்ச்சியை நோக்கி செல்லும் என்பதில் ஐயமில்லை.

நடந்து முடிந்தது அனைத்தும் நன்மைக்கே!

Saturday 26 November 2022

இதை என்ன சொல்லுவது?

 

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீரும் இந்நாள் பிரதமர் அன்வார் இப்ராகிம் இருவருக்கும்  எட்டாம் பொருத்தம் என்பது நமக்குத் தெரியும்.

பொதுவாகவே அன்வார் எல்லார் மீதும் அன்பும், அரவணைத்துக் கொண்டுப் போகும் தன்மையுடையவர். மகாதீரிடம் அந்த பண்பு என்பது கிடையாது. ஒரு வேளை அது அவரது பாரம்பரியமாக  இருக்கலாம்! 

டாக்டர் மகாதிர் மீது அன்வாருக்கு எப்போதும் மரியாதை உண்டு. அவரைச் சந்திக்க அவர் எந்த நேரத்திலும் மறுத்ததே இல்லை. அவருக்குரிய மரியாதையை அவர் எப்போதும் கொடுத்து வந்திருக்கிறார். மகாதிர் என்ன தான் புழுதி வாரித் தூற்றினாலும் அதனை அன்வார் காதில் போட்டுக் கொள்வதில்லை. அவரை மரியாதைக் குறைவாக பேசியதும் இல்லை. பெரியவர் என்கிற மரியாதை அவர் மீது அவருக்கு எப்போதும் உண்டு.

இந்த நேரத்தில் ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டும்.  இத்தனை ஆண்டுகள் அன்வார் பிரதமர் பதவிக்கு வர முயற்சி செய்தும் அவரால் வரமுடியவில்லை. தடைக்கல்லாக இருந்தவர் மகாதிர் என்பது அனைவருக்கும் தெரியும். 

டாக்டர் மகாதிர் அவருடைய நாடாளுமன்றத் தொகுதியான லங்காவி  அதனைச் சுற்றிலுள்ள தொகுதிகளில்  தொடர்ந்தாற் போல ஐந்து தவணைகள் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது நமக்குத் தெரியும். அவர் தொகுதியில் அவரை அசைக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். அசைக்க முடியாத நபர் அவர். அவருடைய செல்வாக்கை யாரும் குறைத்து மதிப்பிட்டுவிட  முடியாது.

ஆனால் அத்தனை செல்வாக்கும் சரிந்து போனது இப்போது கடைசியாக  நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில்! பெரும் தோல்வி! ஏன் வைப்புத்தொகையையே இழந்தார்! ஐந்து வேட்பாளர்கள் போட்டியிட்ட லங்காவி தொகுதியில்  இவர் நான்காவது நிலைக்குத் தள்ளப்பட்டார்! மிகவும் அதிர்ச்சிகரமான தோல்வி! யாரும் எதிர்பார்க்க முடியாத தோல்வி!

டாக்டர் மகாதிரின் இந்த அதிர்ச்சி தோல்விக்குப் பிறகு தான் அன்வார் இப்ராகிம் பிரதமராக வர முடிந்தது என்பது தான் அதிசயத்திலும் அதிசயம். அவர் வெற்றி பெற்ற போது இவரால் பிரதமர் பதவிக்கு வரமுடியவில்லை. அவர் தோல்வி அடைந்தார். அன்வார் பிரதமரானார்! மகாதிரின் தோல்விக்காகத்தான் இத்தனை ஆண்டுகள் அன்வார் காத்திருந்தாரோ என்னவோ1 ஒருவரின் தோல்வி இன்னொருவரின் வெற்றி! மகாதிர், பிரதமர் அன்வாரைச் சந்திக்க வேண்டுமென்றால் ஒரு தோல்வியாளராகத்தான் சந்திக்க முடியும்! ஆனால் அப்படி ஒரு சந்திப்பு நிகழாது என நம்பலாம்!

இப்படி நடந்ததை என்னவென்று சொல்லுவது?  டாக்டர் மகாதிரின் தோல்விக்காகத் தான் அன்வார் இத்தனை ஆண்டுகள் காத்திருந்தாரோ!


Friday 25 November 2022

ஒற்றுமை அரசாங்கம் பேர்போடுமா!

 

அரசியல் என்பது நமக்கு இன்னும் புரியாத புதிர்! 

அன்வார் பதவி ஏற்பதற்குச் சில மணித்துளிகள் முன்னர்  கூட  முன்னாள் பிரதமர் முகைதீன்  அன்வாருக்குச் சவால் விடுகிறார்! "உங்களுக்குப் போதுமான ஆதரவில்லை!" என்பது தான் அவரது குற்றச்சாட்டு. "நாடாளுமன்றம் கூடும் போது,  நாடாளுமன்ற உறுப்பினர்களின்  ஆதரவை,  உங்களால்  நிருபிக்க முடியுமா?" என்று கேள்வி எழுப்புகிறார் முகைதீன்!

இது ஒரு ஒற்றுமை அரசாங்கம். மாமன்னர் அதன் பின்னணியில்  இருந்து அப்படி ஒரு தீர்வை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். முகைதீனின் பெரிக்காதான் நேஷனல் கட்சி பக்காத்தான் கட்சியுடன்  ஒற்றுமையாகப் போக முடியாது என்று முகைதீன் மறுத்துவிட்டார். அதே போல  தேசிய முன்னணியும் பெரிக்காத்தான் கட்சியுடன் ஒற்றுமையாகப்  போக வழியில்லை என்று கையை விரித்துவிட்டது.

வேறு  வழி இல்லாததால் தேசிய முன்னணி பக்காத்தான் அரசாங்கத்துடன் சேர்ந்து ஆட்சியில் பங்கு கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. அதனைக்  குறை சொல்ல வழியில்லை.  தேர்தல் முடிந்துவிட்டது. அரசாங்கம் அமைய வேண்டும். யார் அரசாங்கம் அமைக்க வேண்டும் என்பதை இழுத்தடிக்க முடியாது. அதற்கு ஒரு முடிவு காண வேண்டும் என்பது மாமன்னருக்கு ஏற்பட்ட நெருக்கடி.  அவர் தீர்த்து வைத்த முடிவினால் தான்  இன்று அன்வார் இப்ராகிம் பிரதமராக  இருக்கின்றார்.

ஆனால் முகைதீன் தனக்கு ஆதரவு "உண்டு! உண்டு!" என்று சொல்லுகிறாரே தவிர அதனை மாமன்னரிடம் உறுதிப்படுத்த முடியவில்லை! அது தான் அங்குள்ள வில்லங்கம்!

இங்கு நாம் கவனிக்க வேண்டியது முக்கியமான ஒன்று: அன்வார் இன்னும் பதவி ஏற்காத நிலையில் முகைதீன் தனது புலம்பலை ஆரம்பித்துவிட்டார்! "நாடாளுமன்றத்தில் உங்கள் ஆதரவைக் காட்ட முடியுமா?" என்கிற கேள்வியே மிகவும் கேவலமானது! அதுவும் அடுத்த மாதம் டிசம்பர் 19-ம் தேதி நாடாளுமன்றம் கூடும் போதே, முதல் நாளே, ஆதரவைக் காட்ட வேண்டும் என்கிறார்!  அன்வார் அந்த சவாலை ஏற்றுக் கொண்டார். அதுவும் நாடாளுமன்றத்தில் முதல் தீர்மானமே "எங்கள் பலத்தைக் காட்டுவது தான்" என்று கூறியிருக்கிறார்.

முகைதீனுக்கு ஆட்சியைக் கவிழ்ப்பது என்பது கைவந்த கலை! அதை அவர் ஏற்கனவே செய்திருக்கிறார்! அவர் பெரும் பணம் கொடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை வாங்குபவர். நல்ல வியாபாரி! இந்த நேரத்தில் அவரால் அதனைச் செய்ய முடியவில்லை. சட்டம் வந்துவிட்டது அதனால் யாரையும் அவரால் விலை கொடுத்து வாங்க முடியவில்லை! துன்பமோ துன்பம்! பணம் கொட்டிக் கிடக்கிறது ஆனால் பயனில்லை!

ஒற்றுமை அரசாங்கம் பேர் போடுமா என்றால் பேர் போடும். இதோ பிரதமர் அன்வார் அறிவித்து விட்டார். "எங்களுக்கு  மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு உண்டு"  என்று. இனிமேல் பேசுவதற்கு என்ன உண்டு?

இந்தக் கூட்டணிகளை எப்படி வழிநடத்திச் செல்ல வேண்டும் என்பது அவரது திறமை! வாழ்த்துகள்!

Thursday 24 November 2022

அன்வார் பதவியேற்றார்!

 

நாட்டின் பத்தாவது பிரதமராக அன்வார் இப்ராகிம் இன்று (24.11.2020), மாலை ஐந்து மணி அளவில்  இஸ்தானா நெகாராவில் மாமன்னரின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

மற்ற மலேசியர்கள் போலவே நாமும் அவரை வாழ்த்துவோம்.  இந்த வாழ்த்து என்பது வெறும் சம்பிராதயத்துக்காக அல்ல. இது நமது மனதிலிருந்து வரும் வாழ்த்து. கொஞ்சம் அழுத்தமாகவே இந்த வாழ்த்தைச் சொல்லுகின்றோம்.

அரசியலில் ஒரு நல்ல மனிதரைப் பார்ப்பதே அரிதாகிவிட்ட இந்த காலகட்டத்தில்  ஒரு நல்ல மனிதர் பிரதமராக வர எத்தனை முட்டுக்கட்டைகள்,  தடைக்கற்கள், சிறைத்தண்டனைகள்  - அப்பப்பா! சொல்ல முடியாத வேதனைகளை அவர் அனுபவித்துவிட்டார்.

ஒன்றை நான் குறிப்பிட விரும்புகிறேன். அன்வார் பிரதமராக வந்ததும் நாட்டில்  பாலும் தேனும்  ஓடும் என்று யாரும் நினைத்துவிட வேண்டாம். கொஞ்சம் நீதி, நியாயம் கிடைக்கும் என்பது தான் நமது எண்ணமாக இருக்க வேண்டும்.  கடந்த காலங்களில் இந்தியர்கள் பெரிய அளவில் புறக்கணிக்கப்பட்ட சமூகமாக இருந்த நிலைமை மாறும் என்பதைத்தான் நாம் சொல்ல  விரும்புகிறோம்.

வியாபாரம் செய்ய சிறு வியாபாரிகளுக்குக் கடனுதவி, உயர் கல்விக் கூடங்களில் தேவையான ஒதுக்கீடு,  அரசாங்க வேலைகளில் போதுமான வாய்ப்புகள், தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகள், தாய் மொழிக்கல்வி  - இப்படி  இது போன்ற முக்கியமான துறைகளில் பிரதமர் கவனம் செலுத்துவார் என்பது தான் நமது எதிர்பார்ப்பு. 

நமது பொருளாதார நிலை எந்நிலையில் உள்ளது  என்பது நமக்குத் தெரியும். மலேசியர்கள் அனைவருக்கும் தெரியும். அந்த ஒரு விழுக்காட்டிலேயே இன்னும் நின்று கொண்டிருக்கிறோம். அதைத் தாண்ட முடியவில்லை. காரணம் அதைக் கண்டுக் கொள்ள ஆளில்லை! அதனால் ஒரு பிற்போக்கான சமுதாயமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நாம் அன்வாரை பிரதமராக வரவேற்பது இந்த காரணங்களால் தான். நமது சமுதாயம் பிற சமுதாயங்களைப் போல தலை நிமிர்ந்து வாழ வேண்டும். நாம் அதிகமாகவே தலைகுனிந்து நிற்கிறோம். தலை நிமிர நல்லதொரு  தலைமைத்துவம் தேவை. அது அன்வாரிடம் உள்ளது.

மீண்டும் பிரதமருக்கு வாழ்த்துகள்!

Wednesday 23 November 2022

எத்தனை நாளைக்கு இழுப்பது?

 

எதிர்பார்த்த தேர்தல் முடிந்துவிட்டது. முடிந்து நான்கு நாளாகிவிட்டது. 

ஆனாலும் பிரதமரில்லை! பிரதமர் ஒருவரை இன்னும் தேர்ந்தெடுக்க  முடியவில்லை. நாட்டில் இப்படி ஒரு நிலைமை நடப்பது இது தான் முதல் முறை!

இத்தனை ஆண்டுக்கால தேர்தலில் பிரதமரைத் தேர்ந்தெடுக்க முடியாத ஒரு தேர்தல் என்றால்  அது தான் இந்தத் தேர்தல். இத்தனை ஆண்டுக் காலம் இப்படி ஒரு நெருக்கடி நிலையை நாம் பார்த்ததில்லை!

தொங்கு நாடாளுமன்றத்தை இப்போது தான் முதன் முதல் இந்த நாடு சந்திக்கிறது. இத்தனை ஆண்டுக் காலம் பார்க்காத ஒன்றை இப்போது நம்மால் பார்க்க முடிகிறது!

மலேசியர்களாகிய நமக்கு இது புது அனுபவம். வேறு நாடுகளிலும் இது போன்று நடந்திருக்கலாம். நமக்குத் தெரியவில்லை.

தொங்கு நாடாளுமன்றம் என்கிறார்களே இப்போது நமக்குப் புரிகிறது. ஓர் அரசாங்கத்தை அமைக்க எத்தனை இழுபறி! ஒருவன் முன்னுக்குப் போனால் ஒருவன் பின்னுக்கு இழுக்கிறான்! ஒருவன் பின்னுக்குப் போனால் ஒருவன் முன்னுக்கு இழுக்கிறான்! நேற்று ஆதரவு கொடுத்தவன் இன்று கேட்டால் நாளை வா என்கிறான்! சவடால் விடுகிறான்! சாவடிக்கிறான்!

இந்த நேரத்தில் நம் மாமன்னர் தனது அதிகாரத்தைக் காட்ட வேண்டும் என்பது தான் பெரும்பான்மையான மலேசியர்களின் விருப்பம். இது போன்ற பிரச்சனைகள் வரும் போது மாமன்னரின் அதிகாரம் என்ன என்பதை அவர் காட்ட வேண்டும். நமக்கு அவரின் அதிகார எல்லை எதுவரை என்பது நமக்குத் தெரியவில்லை.  ஆனால் மாமன்னர் தனது அதிகாரத்தைக் காட்ட வேண்டும். நிச்சயமாக அவருக்கு அதிகாரம் உண்டு. அதில் ஏதும் சந்தேகமில்லை. அவரது எல்லை என்பது குறுகியது என்பதாக நாம் நினைக்கவில்லை.

அரசியல்வாதிகள்  ஒரு பைத்தியக்காரக் கூட்டம்! சயநலமிக்க ஒரு கூட்டம்! பணம், பணம் என்று அலைகிறக் கூட்டம்! நல்ல வேளை! அவர்களுக்கு இப்போது அங்கும் இங்கும் தாவ முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. கட்சித் தாவுதல் சட்டம் வந்த பிறகு இந்தத் தவளைகளால் எதுவும் செய்ய இயலாத ஒரு நிலை. இல்லாவிட்டால் இந்த நேரத்தில் கோடி கோடியாகப் பணம் புரளும் ஒரு நிலை ஏற்பட்டிருக்கும்! 

இப்போது இவர்களால் ஏதும் செய்ய இயலாத நிலை. அதனால் மிகவும் யோக்கியர்களாக நடந்து கொள்கிறார்கள்! மற்றபடி இவர்கள் யோக்கியர்கள் என்பதாக கனவில் கூட நினைத்துவிட வேண்டாம்!

பிரதமர் இல்லாத சூழல் இன்னும் எத்தனை நாள்கள்  நீடிக்கும் என்பது தெரியவில்லை. அதை இழுத்துக் கொண்டும் போக முடியாது. ஒரு முடிவுக்கு வந்துதான் ஆக வேண்டும். இல்லையெனில் அது நாட்டை பாதிக்கும்.

இப்போது அது மாமன்னரின் கையில் இருக்கிறது. சீக்கிரம் அதற்கான முடிவு அவரிடமிருந்து வரும் என்பதை எதிர்பார்க்கலாம்.

Tuesday 22 November 2022

இத்துடன் செய்திகள் முடிவடைந்தன!

 

முன்னாள் பிரதமர்,  டாக்டர் மகாதிர் அவர்களை  அப்படியெல்லாம் அவ்வளவு எளிதாகக் கடந்து சென்றுவிட முடியாது.

நாட்டு நலனின் மீது அவருக்கு அக்கறை இருந்தது. அதுவும் குறிப்பாக மலாய்க்காரர் மீது நிரம்ப அன்பும் மரியாதையும் வைத்திருந்தார். மலாய்க்காரர்கள் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக எத்தனையோ கோடிகள் ஒதுக்கப்பட்டு அவை வெற்றியும் பெற்றன. இல்லை என்று சொல்லவிட முடியாது. ஒரு வேளை ஆங்கிலக் கல்விக்கு முக்கியத்துவம் இல்லாமல் போயிருக்கலாம்.

ஆனாலும் அவர் நல்லதையே செய்தார்.  நிறைய வர்த்தக நிறுவனங்கள் நாட்டில் செயல்பட்டன. வேலை வாய்ப்புகள் நிறைய உருவாக்கப்பட்டன.  அதில் நாமும் பல வழிகளில் பயனடைந்தோம். அதெல்லாம் நாம் மறந்துவிட முடியாது.

இந்தியர்களுக்கு எந்த அளவுக்குத் தீங்கு இழைக்க முடியுமோ அந்த அளவுக்கு நமது தலைவரோடு சேர்ந்து நம்மை முன்னேற முடியாதபடி செய்ததில் இருவருக்குமே பெரும் பங்குண்டு. இருவர்களுமே இந்தியர்கள்! ஒருவர் தமிழர். ஒருவர்  மலபார் மலையாளி. இது தான் வித்தியாசம். இவர்கள் இருவருமே தமிழர் சமுதாயத்திற்குச் செய்த துரோகத்தால் தமிழர்கள்  தலைதூக்க முடியாதபடி செய்துவிட்டனர். அது வேறு கதை.

அவரின் இன்றைய நிலை தான் நமக்குக் கவலையளிக்கிறது. சென்ற 2018  தேர்தல் வரை  அவருக்கு எந்த வகையிலும் செல்வாக்குக் குறைந்ததாகத் தெரியவில்லை. ஆனால் அதன் பின்னர் அவர் செய்த சில காரியங்கள் அவரைப் படுபாதாளத்திற்குக் கொண்டு சென்றுவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

ஒரு பொறுப்புள்ள மனிதராக, நீண்ட காலம் நாட்டை வழிநடத்தியவராக, அவரின் வயதுக்கு ஏற்ப  அவர் நடந்து கொள்ளவில்லை என்பது தான் அவர் மீது உள்ள குற்றச்சாட்டு. அவர் சொன்னபடி நடந்து கொள்ளவில்லை என்பது தான் இன்றுவரை அவரைப்பற்றி பேசப்படுகிறது.

சென்ற முறை, முதல் முறையாக வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்த ஓர் அரசாங்கத்தைக் கவிழ்த்த பெருமை டாக்டர் மகாதீரைத் தான் சாரும். அவர் சொன்னபடி நடந்து கொண்டிருந்தால் நாட்டில் எந்தக் குழப்பமும் ஏற்பட்டிருக்காது.  'தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை' என்பதாக நம்மிடையே ஒரு பழமொழி உண்டு. அது சரியான பழமொழி தான். அவரால் அவரது தொட்டில் பழக்கத்தை இது நாள் வரை மாற்றிக்கொள்ள முடியவில்லை! 

ஆனால் அந்தத் தொட்டில் பழக்கம் இந்த அளவுக்கு நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதை யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. அரசாங்கத்தை எப்போது கவிழ்த்தாரோ அன்றிலிருந்து இந்நாள் வரை அது தலை நிமிர முடியவில்லை! இன்னும் குழப்பம் தான். பொதுத் தேர்தல் முடிந்தும் இன்னும் இழுபறி நிலை தான்!

இவர் செய்த துரோகாத்துக்கான பலன் என்ன? முடிசூடா மன்னராக விளங்கிய அவர், அவர் தொகுதியிலேயே அவர் தோற்கடிக்கப்பட்டார்! அது தான் அவருக்கான தண்டனை! அவரைத் தோற்கடிக்க முடியும் என்பதை யாராலும் நினைத்துக்கூட பார்த்திருக்க முடியாது. ஆனால் அவர் தோற்கடிக்கப்பட்டார்!

இதைவிட இழிவு வேறு என்ன வேண்டிக்கிடக்கு?

Monday 21 November 2022

நல்லது நினைத்தார்!

 

                        தேசிய முன்னணியின் தலைவர் சாஹிட் ஹமிடி

பொதுத் தேர்தல் முடிவடைந்துவிட்டது.   

 தேர்தல் உடனடியாக நடத்த வேண்டும் என்பதில் அதிகத் தீவிரம் காடடியவர் அம்னோ தலைவர் சாஹிட் ஹமிடி என்பது அனைவருக்கும் தெரியும்.

அவர் ஏன் அந்த அளவுக்குத் தீவிரம் காட்டினார் என்பதை ஓரளவுக்கு நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. மழைக் காலம், புயல், வெள்ளம் - இது போன்ற சமயங்களில் தேர்தல் வைத்தால்  தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று அவர் நினைத்திருக்கலாம். அத்தோடு சமீபத்தில் நடைபெற்ற  மலாக்கா, ஜொகூர் மாநிலங்களின்  சட்டமன்ற தேர்தலின் வெற்றி  -  அதுவும் தாங்கள் வெற்றி பெறுவதற்கான உந்துதல்களைக் கொடுக்கலாம் என்றும் அவர் நினைத்திருக்கலாம்.

இது தேர்தலுக்கான நேரம் அல்ல என்று பல்வேறு பக்கங்களிலிருந்து  அவருக்கு நெருக்குதல் கொடுக்கப்பட்டாலும்  அது பற்றியெல்லாம் அவர் கவலைப்படவில்லை. அரசியலர்கள் முதல் அடிமட்டத் தொண்டர்கள் வரை, ஊடகத்துறையினர் முதல் பல்துறை நிபுணர்கள்வரை பலர் எதிர்ப்புக்குரல் காட்டினர். அனைத்தையும் அவர் புறக்கணித்துவிட்டார்.

சாஹிட் நல்லதைத் தான் நினைத்தார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது நாட்டுக்கு நல்லது என்று அவர் நினைக்கவில்லை. தனது கட்சிக்கு அது நல்லது என்று நினைத்தார். நாட்டுக்கு நல்லது என்றால் அவர் நினைத்தது நிறைவேறியிருக்கும். கட்சிக்கு என்று அவர் நினைத்தது மாபெரும் சுயநலம்.

இருப்பினும் அவர் நினைத்தது  நிறைவேறவில்லை.  தேசிய முன்னணிக்குத்  தேர்தல் முடிவுகள் மாபெரும் அடியைக் கொடுத்திருக்கிறது! அதாவது வரலாறு காணாத அடி என்பார்களே  அது போன்ற மரண அடி! 

இது போன்ற மரண அடியிலிருந்து தேசிய முன்னணி மீளுமா என்று தெரியவில்லை. காரணம் இவர்கள் இதுவரை பேசிவந்த அனைத்தும் பெரிகாத்தான் கட்சியும், பாஸ் கட்சியும் கையில் எடுத்துக் கொண்டன!  இவர்கள் பேசுவதற்கு எந்த அவசியமும் இல்லாமற் போய்விட்டது! இவர்கள் பேசி வந்த ஒன்று: இஸ்லாம் இன்னொன்று  'கிறிஸ்துவம் நாட்டில் பரவுகிறது!"  போன்ற விஷயங்கள்.  இஸ்லாமியர்களைக் கவர இந்த இரண்டு விஷயங்களும் தேவைப்படுகின்றன!  வாக்குகளைக் கவர இவைகள் தேவை! இன்றைய நிலையில் இஸ்லாம் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக இந்த மலாய் கட்சிகள் கூறிவருகின்றன!

ஒரு வேளை இந்தப் பொதுத் தேர்தல் இன்னும் ஓர் ஆண்டுக் காலம் கழித்து நடைப்பெற்றிருந்தால் பொதுத்தேர்தல் முடிவுகள் வேறு மாதிரி கூட அமைந்திருக்கலாம். ஓர் ஆண்டுக்கு முன்னரே தேர்தலை நடத்துவது மக்களிடையே  கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டதும் ஒரு காரணமாகவும் இருக்கலாம்.

எப்படியோ எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன.

நல்லதை நினைப்போம்! நல்லது நடக்கும்!

Sunday 20 November 2022

இனி என்ன நடக்கும்?

நாம் என்ன எதிர்பார்த்தோமோ அது தான் நடந்திருக்கிறது!

எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்கும் அளவுக்குப் பெரும்பானமை கிடைக்காது என்பது தான் பொதுவான கருத்து நிலவியது. அது தான் நடந்திருக்கிறது. எந்தக் கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை இல்லை.

பார்க்கப் போனால் இது தொங்கு நாடாளுமன்றம் என்று தான்  சொல்ல வேண்டும்.

ஆனாலும் போகிற வேகத்தை பார்க்கும் போது முன்னாள் பிரதமர் முகைதீன்  யாசின் தனது பெரிக்காத்தான் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று மிகவும் நம்பிக்கையோடு  சொல்லி வருகிறார். அவர் போகின்ற போக்கைப் பார்க்கும் போது  பக்காத்தான் கூட்டணியால் ஆட்சி அமைக்க முடியாது என்று திண்ணமாக நம்புவதாகத் தெரிகிறது.

அதுவும் பதவிக்காக, எந்த எல்லைக்கும் அவர் போவார், என்பதும் அவர் பேச்சிலிருந்து தெரிகிறது. குறிப்பாக ஒன்றை ஞாபகப்படுத்த வேண்டும். தான் எப்போது ஆட்சி அமைக்க முடியும் என்று இஸ்தானாவிலிருந்து அழைப்பு வந்திருப்பதாக அவர் கூறியது வடிகட்டின பொய் என்பது நமக்குப் புரிகிறது. மாமன்னருக்கு தேர்தல் முடிவுகள்  ஞாயிற்றுக்கிழமை தான் கிடைத்திருக்கிறது. அதன் பின்னரே இரண்டு கட்சிகளுக்கும், அவர் அழைப்பு விடுத்திருக்கிறார். ஆனாலும் முகைதீன்   தொடர்ந்து இஸ்தானாவுக்கு ஓர் அழுத்தம் கொடுப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார்!

முகைதீன் பிரதமர் ஆவதை பெரும்பாலான மலேசியர்கள் விரும்பவில்லை என்று தாராளமாகச் சொல்லலாம். அவர் ஏற்கனவே பிரதமராக இருந்த போது மக்களுக்குத் தான் சிரமத்தைக் கொடுத்தார். அவரைப் பொறுத்தவரை அவருக்குப் பதவி தான் முக்கியம். மக்களின் பிரச்சனைகளைவிட அவர் எப்படி பதவியில் நீடிக்க முடியும் என்பதில் தான் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருப்பார்! 

அவர் ஆட்சி எப்படி அமையும் என்பதை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். இப்போதும் அதே நிலை தான் தொடரும். காரணம் தன்னோடு சம்பந்தப்படாதவர்களை எல்லாம் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தால் எங்கெங்கிருந்து அம்புகள் வருமோ என்று இருபத்து நான்கு மணி நேரமும் அதே பயத்தில் இருக்க வேண்டி வரும்! முன்பும் அதைத்தான் செய்தார். இனி மேலும் அதைத்தான் செய்ய வேண்டிவரும். அவர் பணத்தையும், பதவியையும் கொடுத்து ஆட்சி செய்பவர்! மக்கள் நலன் என்பதெல்லாம் அவர் கேள்விப்படாத ஒன்று!

முகைதீன்  நல்ல பிரதமராக மலேசியர்களுக்கு விளங்க முடியும் என்பதற்கான  சாத்தியம் குறைவு தான்.  அவர் ஆட்சி செய்தால் சுமார்  நூறு அமைச்சர்களாவது  அவருக்கு இருக்க வேண்டும்! அப்போது தான் அவரால் கொஞ்சமாவது மற்ற கட்சியினரை நம்ப முடியும்! அது மட்டுமா? அமைச்சர் பதவி வேண்டும், அரசாங்க நிறுவனங்களில் பதவிகள் கொடுக்க வேண்டும் என்று எத்தனையோ நிபந்தனைகள் வரும்!

அன்வார் ஆட்சி அமைத்தால் அவருக்கும் இது போன்ற பிரச்சனைகளை எதிர்நோக்கித் தானே ஆக வேண்டும்? உண்மை தான்.  ஆனால் அவர் பதவிக்காக தன்னைத்  தாழ்த்திக் கொள்ளமாட்டார். அவர் கௌரவமான மனிதர். கௌரவமாகச் செயல்படுபவர்.

எப்படியோ, யார் பிரதமர் என்பது ஓரிரு நாள்களில் தெரியவரும். அதுவரைப் பொறுத்திருப்போம்!

Saturday 19 November 2022

இன்று "தீர்ப்பு" நாள்!

 

இந்த கட்டுரை வெளியாகும் நேரத்தில் ஏறக்குறைய பல வாக்குச்சாவடிகள் மூடப்படும் நிலையில் இருக்கும். மக்கள் வாக்களித்திருப்பார்கள். மழையோ, வெள்ளமோ வந்தால் மட்டுமே கொஞ்சம் நேரம் பிடிக்கும். அதுவும் ஆறு மணியோடு சரி.

பல இடங்களில் மழை என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பதால்  மக்கள் சீக்கிரமாகவே வாக்களிக்க வந்திருப்பார்கள். இன்று விடுமுறை என்பதாலும்  நேரத்தோடு வந்து வாக்களிக்க வேண்டும் என்கிற  மனநிலையில் தான் மக்கள் இருக்கிறார்கள்.

ஒன்றை நாம் நினைவு படுத்துகிறோம். தேர்தல் முடிவடைந்துவிட்ட நிலையில் இனி புத்திசொல்லவோ, அறிவுரை சொல்லவோ எதுவுமில்லை.

தேர்தல் என்பது மக்களின் தீர்ப்பு. எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும் என்று இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும். நமக்குப் பிடித்த கட்சியோ அல்லது பிடிக்காத கட்சியோ தீர்ப்பை ஏற்றுக்கொள்ளத் தான்  வேண்டும். அது மக்களின் தீர்ப்பு, அவ்வளவு தான்.

நம்முடைய எதிர்பார்ப்பு எல்லாம் இரண்டு கட்சிகளில் ஒரு கட்சி ஆட்சி அமைக்கும். அது தேசிய முன்னணியாக இருக்கலாம் அல்லது நம்பிக்கைக் கூட்டணியாக இருக்கலாம். அல்லது தொங்கு அரசாங்கம்  அமையும் சாத்தியமும் உண்டு.  ஆனால் தொங்கு நாடாளுமன்றம் ஆபத்தானது! அமையக் கூடாது. அது பல பிரச்சனைகளை உருவாக்கும். அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் அம்னோவுடன் பக்காத்தான் கூட்டணி அமைக்க நேரலாம்.  ஆனால் அதிகாரம் என்னவோ பக்காத்தான் கையில் தான் இருக்க வேண்டும்.  அம்னோ,  பிரதமர் இஸ்மாயிலைப் படுத்திய பாடு நமக்குத் தெரியுந்தானே!

நாம் மக்களுக்கு விடும் அறைகூவல் இது தான். அமைதி காக்க என்பது தான் நாம் விடும் அறைகூவல். யார் ஆட்சிக்கு வந்தாலும் அதனை  ஏற்றுக்கொள்ளுவது தான் நமக்குள்ள ஒரே வாய்ப்பு. முணுமுணுக்காமல் ஏற்றுக்கொள்ளுவோம்.

இதனை ஏன் நாம் வற்புறுத்துகிறோம் என்றால் அதற்குக் காரணம் நாம், இந்தியர்கள், எல்லாவற்றுக்கும் உணர்ச்சி வசப்படுபவர்கள். நம்மை ஏவிவிட்டுவிட்டு மற்றவன் காணாமல் போய் விடுவான்! நாம் அகப்பட்டுக் கொள்வோம்! ஒரு காசுக்குப் பிரயோஜனம் இல்லாத விஷயங்களில் மூக்கை நுழைப்பவர்கள் நாம்!

அதனால் பெருந்தன்மையோடு எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும்  அதனைப் பெருமனதோடு ஏற்றுக்கொள்வோம். வம்பு தும்பு எதுவும் வேண்டாம்.

இன்றைய தீர்ப்பு என்பது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான தீர்ப்பு. தீர்ப்பை மாற்றியமைக்க முடியாது. மக்களின் தீர்ப்பு மகேசனின் தீர்ப்பு.

மகேசன் நம் பக்கம் என்பதை நம்புவோம்!

Friday 18 November 2022

நாளை தேர்தல்!

 

நாளை (19-11-22) சனிக்கிழமை  நமது நாட்டின் பொதுத் தேர்தல். இன்று இரவு வரை பிரச்சாரங்கள்  நீடிக்கும். கடைசிவரைப் போராட்டங்கள் நடக்கும். ஒன்னுமே கிழிக்க முடியாதவன் எல்லாம் என்னால்  கிழிக்க முடியும் என்பான்! தலைவிதியே என்று நாமும் கேட்டுக்கொள்ளத்தான் வேண்டும்! அது தானே ஜனநாயகம் நமக்குக் கொடுத்திருக்கும் சுதந்திரம்!

ஆனாலும் நீங்கள் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும். இந்த வாய்ப்பை இழந்தால் அடுத்த வாய்ப்புக்கு இன்னும் ஐந்து ஆண்டுகள் பிடிக்கும். நமக்குத் தேவை நீதி நேர்மையான ஓர் ஆட்சி. அதைத்தான் கேட்கிறோம். இந்தியர்களைப் பொறுத்தவரை நமக்கு நியாயங்கள் கிடைத்ததில்லை! எல்லாம் வெறும் வாய்ச் சவடாலோடு சரி! ம.இ.கா.வினர் அதைத்தான் செய்தனர்!  அப்போதும் செய்தனர்! இப்போதும் செய்கின்றனர்!

இந்தத் தேர்தலில் பல கட்சிகள் போட்டியிட்டாலும் போட்டி என்னவோ இரண்டு கட்சிகளுக்கு மட்டும் தான். அது தான் தேசிய முன்னணிக்கும் நம்பிக்கைக் கூட்டணிக்கும். மற்றவைகள் எல்லாம் உதிரிகட்சிகள். பல கட்சிகள் இந்தத் தேர்தலோடு காணாமற் போய்விடும்! பழைய அம்னோ ஜாம்பவான்கள் காணாமல் போய்விடுவார்கள். ஏதோ ஒரு சிலர் தங்களது பழைய செல்வாக்கை நிலைநிறுத்துவார்கள். அவ்வளவு தான்!

ம.இ.கா.வை பொறுத்தவரை இந்தியர்களின் ஆதரவை இழந்துவிட்டது என்பது உண்மை.  இப்போது ம.இ.கா.வை எதிர்க்கிறவர்கள் எல்லாம் முன்னாள் ம.இ.கா.  உறுப்பினர்கள் தான்! காரணம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.  அந்தக்கால மைக்கா ஹொல்டிங்ஸ் இந்தக்கால மித்ரா வரை அவர்கள் ஆடிய ஆட்டம் கொஞ்ச நஞ்சம் இல்லை! அவர்கள் குடும்பத்தின் வயிற்றுப்பாட்டைப் பார்த்தார்களே தவிர இந்தியர்களை மறந்து போனார்கள்! அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் எல்லாம் வெளிநாட்டில் படிக்கிறார்கள். நமது வீட்டுப் பிள்ளைகள் உள்நாட்டில் படிக்கக் கூட வாய்ப்புக் கிடைக்கவில்லை! இது தான் இந்தியர்களுக்கு அவர்கள் கொடுத்த முன்னேற்றம்!  விளங்காத ஜென்மங்கள்!

"நாங்கள் தோற்றுப்போனால் இந்தியர்களைப் பிரதிநிதிக்க ஆளில்லையே!" என்று  சொல்லும் அவர்களுக்கு நாம் வைக்கும் குற்றச்சாட்டு:  "இப்போதும் கூட யாரும் இல்லையே!" என்பது தான்.  ம.இ.கா.வால் இனி முடியாது என்கிற நிலையில் தானே இந்தியர்கள் மாற்று கட்சிகளைத் தேடிப் போகிறார்கள் என்பதை ம.இ.கா.வினர் மறந்துவிட வேண்டாம்!

நாம் சொல்ல வருவதெல்லாம்: "மக்களே! எல்லாம் உங்கள் கையில்!" என்பது தான். வாக்கு என்பது இரகசியமானது. அதனைப் போய் யாரும் நோண்டிப்பார்க்கப் போவதில்லை. அதனால் உங்களுக்கு யார் தேவை என்று நினைக்கீறீர்களோ, யார் அரசாங்கம் அமைத்தால் நல்லது என்று நினைக்கீறீர்களோ, அவர்களுக்கு உங்கள் வாக்கை அளியுங்கள்.

பக்காத்தான் ஹராப்பான் என்பதே நமது கோரிக்கை!

Thursday 17 November 2022

எதிர்பார்த்த நாள் நெருங்கிவிட்டது!

 

15-வது பொதுத் தேர்தல் நெருங்கிவிட்டது. கடைசி நிமிட இனிப்புகள் எல்லாம் வரும்!  அது வழக்கமான ஒன்று தான்.

ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.  நீங்கள் போடுகின்ற வாக்கு என்பது அடுத்த ஐந்து ஆண்டுகள் உங்களுக்கு  நல்லதா, கெட்டதா என்பதைத் தீர்மானிக்கக் கூடியது.  தவறானவர்களை நீங்கள் தேர்ந்தெடுத்தால்  அனைத்தும் தவறாகவே போய்விடும்.

நீங்கள் கடந்து வந்த பாதையைப் பார்க்கும் போது உங்களுடைய எண்ண ஓட்டங்கள் எப்படியிருக்கிறது? நீங்கள் எந்தவொரு பிரச்சனயும் இல்லாமல் திருப்திகரமாக வாழ்ந்து வந்திருக்கிறீர்களா? 

உங்கள் பிள்ளைகள் மேற்கல்வி பயில நீங்கள் தானே பணம் போடுகிறீர்கள்? முழுமையான பணம் கட்டி படிக்க வேண்டிய நிலையில் தானே இருக்கிறோம். நாம் ஏழையோ, இரங்கத்தக்கவர்களோ நாம் தானே அங்கும் இங்கும் ஓடி பணத்தைக் கொண்டு வரவேண்டும். நம் பிள்ளைகள் படிக்க வேண்டுமென்றால் நாம் தானே அலைய வேண்டியிருக்கிறது.

நமது குழந்தைகள் பரிட்சையில் முதல்தர புள்ளிகள் எடுத்திருந்தாலும்  நமக்கு ஏன் கல்வி மறுக்கப்படுகிறது? குறிப்பாக மெட்ரிகுலேஷன் ஏன் நமக்கு எட்டாக் கனியாக இருக்கின்றது?  நமது குழந்தைகள் நல்ல மார்க் எடுக்கிறார்கள். ஆனால் நல்ல மார்க் என்பது அளவுகோள் அல்ல என்கிறது கல்வி அமைச்சு! அப்படியென்றால் எது அளவுகோள்? குறைவான மார்க் எடுத்திருந்தால் கூட நாம் மறந்துவிடலாம். நல்ல மார்க் என்கிறபோது....?  அந்த ஏமாற்றத்தை  நாம் எப்படி ஏற்றுக் கொள்வது? இத்தனை ஆண்டு காலம் ஆளும் இந்த அரசாங்கத்திற்கு எதனால் ஒரு கொள்கையை வாரையறுக்க முடியவில்லை?  கல்வி என்பது அனைவருக்கும் பொதுவானது. அதனை மறுப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை.

இந்த நாட்டில் பிறந்த நம் உறவுகள் எத்தனை பேர் அடையாளக்கார்டு இல்லாமால், அடையாளங்களே இல்லாமல் நாடற்றவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியுந்தானே?  அவர்களிடம் அனைத்து அடையாளங்களும் இருந்தும் அவர்களுக்கு ஏன் குடியுரிமை மறுக்கப்படுகிறது?  அது ஏன் அவர்கள் சாகிற காலத்தில் குடியுரிமை கொடுக்கப்படுகிறது?  அவர்கள் தகுதியுள்ளவர்கள் என்றால் உடனடியாகக் கொடுக்க வேண்டியது தானே? மக்களை ஏமாற்றுகின்ற அரசாங்கத்தை நாம் ஏன் ஆதரிக்க வேண்டும்?

இப்படித்தான் பல வழிகளில் நம்மை ஏமாற்றி வருகிறார்கள். அரசாங்க அலுவலகங்களுக்குப் போனால் ஏதாவது ஒரு வேலை உருப்படியாகச் செய்ய முடிகிறதா? எல்லாவற்றிலும் தடங்கள்! தகுதி இல்லாதவர்களை வேலைகளுக்கு அமர்த்தி நம்மைத் தகுதியற்றவர்களாக மாற்றிவிடுகிறார்கள்.

நாம் செய்கின்ற வேலைக்கும் மற்ற இனத்தவர் செய்கின்ற வேலைக்கும்  என்ன வித்தியாசம்? ஆனல் நமக்குக் குறைவான சம்பளம் கொடுக்கப்படுவது ஏன்? எல்லாவற்றிலும் வேறுபாடுகள் இருப்பது ஏன்?

இப்படிப்பல கேள்விகள். இப்படித்தான் வாய் இல்லாப் பூச்சிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.

நமது மக்கள் நலம் பெற, எதிர்காலம் சிறப்புற அன்வார் தலைமையிலான நம்பிக்கைக் கூட்டணிக்கே வாக்களிப்போம்!

Wednesday 16 November 2022

மித்ரா - ஏன் வாய் திறப்பதில்லை?

 

எல்லாவற்றுக்கும் வாய் திறக்கும் ம.இ.கா.வினர் மித்ரா பற்றி பேசும் போது மட்டும் வாய்மூடி மௌனியாகி விடுகின்றனர்!  அடக்கமாக நடந்து கொள்கின்றனர்!

அவர்கள் 22 மாதம் பக்காத்தான் கட்சி ஆட்சி செய்தார்களே அவர்கள் இந்தியர்களுக்கு என்ன செய்தார்கள் என்று  நம்மைப் பார்த்து கேள்வி கேட்கிறார்கள்!  அறுபது ஆண்டு காலம் குறுநில மன்னர்களைப் போல அனைத்தையும் அனுபவித்துவிட்டு 22 மாதத்தைப் பற்றி கேள்வி எழுப்புகின்றனர்! அப்படி ஒரு கேள்வியைக் கேட்கக் கூட  கூச்சப்படவில்லை! அது தான் அவர்களின் ஆச்சரியமூட்டும் செயல்!

ஆமாம்! கொள்ளையடிப்பதையே தொழிலாகக் கொண்டவனுக்கு அவமானம் என்பது  இருக்கும் என்பது நினைப்பது கூட  நமக்கு அவமானம்!

நம்முடைய கேள்வி எல்லாம் இந்தியர்களின் தொழில் வளர்ச்சிக்காக மித்ரா மூலம்  அரசாங்கத்தால்  ஒதுக்கப்பட்ட பணம் என்ன ஆயிற்று என்பது தான். ஒரு காசு, இரண்டு காசு இல்லை தலைவா! பல கோடிகள்! இதுவரை எத்தனை வியாபாரிகளை உருவாக்கியிருக்கிறீர்கள், சொல்ல முடியுமா? அந்தப் பணம் என்பதே  இந்தியர்கள் வியாபாரத்துறையில் வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காகக் கொடுக்கப்பட்ட பணம். ஆனால் அந்தப் பணத்தை வேறு வ்ழிகளில் கொள்ளையடித்துவிட்டு 'கம்' மென்று ஒன்றும் தெரியாதவனைப் போல நடிக்கிறீர்களே அது தான் நம்மை வியக்க வைக்கிறது!

இதைவிட இன்னும் ஆச்சரியம் தேர்தலில் கூட, வெட்கம் இல்லாமல்,  நாடாளுமன்றம் போக வேண்டும் என்று  போட்டிப் போடுகிறீர்களே உங்களுக்கு வெட்கம் என்பதே இல்லையா? அந்த அளவுக்கு மரத்துப் போய் விட்டதா?

உண்மையைச் சொன்னால் அரசாங்கம் கொடுத்த பணத்தை வைத்துக் கொண்டு ஒரு சில ஆயிரம் வியாபாரிகளை உருவாக்கியிருக்க முடியும். சிறு வியாபாரிகளுக்கு உதவியிருக்க முடியும். அவர்கள் செய்யும் தொழிலில் வளர்ச்சி பெற பல வழிகளில் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்க முடியும். ஆனால் அப்படியெல்லாம் செய்ய வேண்டும் என்கிற முனைப்பே உங்களிடம் இல்லை. வேறு வழிகளில் உங்கள் 'திறமை' யைக் காட்டி பணத்தைக் கொள்ளையடித்தீர்கள்.

இப்போது 'மித்ரா என்னா ஆயிற்று?' என்று சிறு வியாபாரிகள் கூட கூக்குரல் இடும் அளவுக்கு வந்துவிட்டது. காரணம் வங்கிகள் இந்தியர்களைப் புறக்கணிக்கின்றன என்று பொதுவாகச் சொல்லப்பாடுகிறது. அப்படியில்லை என்பது நமக்குத் தெரியும். மித்ரா மூலம் ஏதோ சில சலுகைகள் கிடைக்கலாம் என்பதனால் தான் வியாபாரிகள் உங்களை அணுகுகிறார்கள். கடன் கிடைப்பது  சுலபமாக இருக்கும். அதற்காகத்தானே பல கோடிகள் ஒதுக்கப்படுகின்றன?

ஆனால் இந்தப் பணம் வியாபாரிகளுக்குப் போய்ச் சேரவில்லை. கண்ட கண்ட கசமாலங்களுக்குப் போய்ச் சேர்கிறதைப் பார்க்கும் போது, என்ன செய்வது?, வயிற்றெரிச்சல் தான்! உங்களுக்கெல்லாம் தேர்தல் ஒரு கேடா என்று தான் கேட்க வேண்டியுள்ளது!

வாக்காளர்களே நீங்கள் புரிந்து கொண்டால் சரி!


Tuesday 15 November 2022

ஊழலுக்கு வாக்களிக்க வேண்டாம்!

 

ஊழலுக்கே வாக்களித்து நாம் பழகி விட்டோம். அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் என்னவென்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்றைய நாட்டின் நிலைமையை எடுத்துக் கொண்டால் கூட மகிழ்ச்சியளிப்பதாக இல்லை. விலைவாசி ஏற்றம், வேலை இல்லாத் திண்டாட்டம், இன்னும் பல தொழில் நிறுவனங்கள் இயங்காமல் இருப்பது - இப்படி பல பிரச்சனைகள் நம் முன் இருக்கின்றன. ஏன்? கோழி முட்டைகளுக்குக் கூட முட்டி மோத வேண்டிய நிலை! இது தான் இவர்களது இலட்சணம்!

ஆனால் ஆளும் வர்க்கமோ பட்டம் பதவிக்காக அடித்துக் கொள்வதைப் பார்க்கிறோம். இப்போது இறுதிக்  கட்டமாக  அது பொதுத் தேர்தலில் வந்து நிற்கிறது. 

இங்கும் அவர்களது இலஞ்சம் நின்றபாடில்லை.  இராணுவ வீரர்களுக்குப் பணம் கொடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.  அதற்கான ஆதாராமும் தன்னிடம் இருப்பதாக அவர் கூறுகிறார்! இப்போதே இலஞ்சம் கொடுத்து வாக்குகளை வாங்கும் வேலையை ஆரம்பித்துவிட்டனர்! 

மக்களுக்குத் தொண்டு செய்ய நினைப்பவன் ஏன் இலஞ்சம் கொடுக்க வேண்டும். இலஞ்சத்தைக் கொடுத்தாவது பதவிக்கு வர நினைப்பவன் மக்களுக்கு அப்படி என்ன செய்துவிடப் போகிறான் என்பதை மக்கள் யோசிக்க வேண்டும். தொண்டு செய்து பதவிக்கு வரவேண்டும் என்கிற நிலை போய் பணம் கொடுத்தால்  பதவிக்கு வரலாம் என்கிற நிலைமையை உருவாக்கியவர்கள் யார்?  இவர்கள் தானே!

மக்களே யோசியுங்கள். இந்தியர்கள் வியாபாரத்துறையில் முன்னேறுவதற்கு எத்தனை எத்தனை கோடி பணம் ஒதுக்கப்பட்டும்  கடைசியில் எதுவும் ஆகவில்லையே! அந்தப் பணத்தை என்ன செய்தார்கள் என்று எந்த நாதாரியும் பதில் சொல்லமாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்களே! இத்தனை ஆண்டுகள் ஆகியும் இந்தியர்களின் பொருளாதார வளர்ச்சி ஒரு விழுக்காட்டைத் தாண்டவில்லையே!

சரி! சாமிவேலு காலத்தில் அதைச் சாதிக்க முடியவில்லை என்பது உண்மை தான். அதன் பின்னர் வந்தவர்கள் என்ன செய்தார்கள்? கேட்டால் ஒவ்வொருவனும் பெரிய பொருளாதார நிபுணன் மாதிரி பேசுகிறான்! அட! ஒவ்வொரு ஆண்டும் இந்தியரின் முன்னேற்றத்திற்காக பிரதமரிடம் மனு கொடுக்கிறான்! மனு கொடுத்தால் நாம் முன்னேறிவிட முடியுமா? முதலில் மனு கொடுப்பதை நிறுத்த வேண்டும்.

ஏதோ இவர்களுக்கு இந்தியர்களின் பிரச்சனையே தெரியாதவர்கள் போல - கண்ணைக்கட்டி காட்டில் விட்டவர்கள் போல - நடந்து கொள்வதைப் பார்க்கும் போது திவர்கள் ஏன் அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது.  செய்ய வருபவனுக்கும் ஏன் தடையாய் இருக்க வேண்டும்?

ஊழல்! ஊழல்! ஊழல்! தேசிய முன்னணிக்கு வாக்களிப்பவர்கள் ஊழலுக்கு வாக்களிக்கின்றனர் என்பதை ஞாபகத்தில் வையுங்கள். ஊழலுக்கு வாக்களித்துவிட்டு எந்த மாற்றத்தையும் எதிர்ப்பார்க்காதீர்கள்!

ஊழலற்ற ஓர் அரசாங்கம் அமைய பக்காத்தானுக்கே வாக்களியுங்கள்!

Monday 14 November 2022

வங்கிகளுக்கு என்ன ஆயிற்று?



 

நமது நீண்ட கால கோரிக்கையில் வங்கி வேலை வாய்ப்புகளும் அடங்கும். வங்கிகளில் ஏன் இந்தியர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன என்பது இன்னும் நமக்குப் புரியவில்லை!

இந்தியர்கள் கல்வி அறிவு இல்லாதவர்களா அல்லது வங்கியில் பணிபுரிகின்ற அளவுக்கு நமக்குப் போதுமானா கல்வி இல்லையா? அல்லது நாம் தகுதி இல்லாதவர்களா?  

எது எப்படி இருப்பினும் இந்த நடைமுறை திருத்தப்பட வேண்டும். ம.இ.கா.வினர் இது பற்றி அக்கறை காட்டவில்லை என்பது தெளிவு. இனி மேலும் இதனை நாம் தொடரவிட முடியாது. குறைந்தபட்சம் நமது இன விகிதாச்சாரப்படி ஏழு விழுக்காடு வேலைகள் ஒதுக்கப்பட வேண்டும்.

ஒரு காலகட்டத்தில் நான் வங்கிகளோடு தொடர்பில் இருந்தபோது ஒரு குறிப்பட்ட வங்கி ஓரே இந்திய இளைஞரை "ஆபீஸ் பாய்" யாக வைத்திருந்தார்கள்! அவரைத் தவிர வேறு இந்தியர் யாரும் அவ்வங்கியில்  வேலை செய்யவில்லை. இது அன்றைய நிலைமை. இப்போது ஒரு சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்.  ஆனாலும் எல்லா வங்கிகளிலும் இந்த விகிதாச்சாரம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பது தான் நமக்கான வாய்ப்புகளை  உறுதி செய்யும்.

அரசாங்கத் தலையீடு இல்லாமல் வங்கிகள் இதனைக் கடைப்பிடிக்கும் என்பதை நம்புவதற்கு வாய்ப்பில்லை. இது போன்ற கோரிக்கைகள் இன்னும் பல உள்ளன. இத்தனை ஆண்டுகள் நாம் இது போன்ற விடயங்களில் கவனம் செலுத்தவில்லை. ம.இ.கா.வும் அதனை மறந்து போனது! 

இனி வருங்காலங்களில் நாம் வாய் மூடிக்கொண்டிருந்தால் வழக்கம் போல நமக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புக்களைப் பிறர் ஏப்பம் விட்டுவிடுவர்!  இனி ஒவ்வொரு விடயத்திலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். நம் உரிமைகள் அனைத்தும்  நம்மைவிட்டுப் போய்விட்டன.  அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் கனிந்துவிட்டது.

யார் ஆட்சிக்கு வந்தாலும் நம் உரிமைகளை நாம் விட்டுவிடக் கூடாது. அது தான் நமது இலக்காக இருக்க வேண்டும். நாம் அதிகமாகவே ம.இ.கா. வினரை நம்பி அனைத்தையும் இழந்துவிட்டோம்.  அவர்கள்  நமது உரிமைகளைக் கேட்க மறுக்கிறார்கள். நம்மிடம் பேசும் போது மட்டும் அவர்களது வீரம் தெரிகிறது! மற்றபடி கோச டப்பாக்கள்!

அடுத்து  ஆட்சியமைக்கப் போவது பக்காத்தான் தான் என்பது நிச்சயம். பக்காத்தானில் உள்ள நமது பிரதிநிதிகள் பல பிரச்சனைகளைக் களைய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அதிலே இந்த வங்கி பிரச்சனையும் ஒன்று.

பக்காத்தான் கூட்டணியை நம்புவோம்!

Sunday 13 November 2022

சொத்து இல்லே! வெக்கமா இருக்கு!

 

                                        PAS Vice President:   Amar Nik Abdullah

பொதுத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்களது சொத்துகளை அறிவிக்க வேண்டும்  என்பதாக சில அரசியலாளர்கள்  கூறி வருகின்றனர். ஒரு சில அரசியலாளர்கள்  அது தேவை இல்லாத வேலை என்றும் கூறி வருகின்றனர்.

ஆனால் பாஸ் கட்சியினரோ அதனை வேறு கண்ணோட்டத்தோடு பார்க்கின்றனர்.  பாஸ் கட்சியின் உதவித் தலைவர் அமர் நிக் அப்துல்லா,  சொன்னது  அவரது  கருத்தா அல்லது கட்சியின் கருத்தா என்பது தெளிவில்லை,  'எங்களிடம் சொத்து எதுவும் இல்லை  அதனால் வெட்கம் அடைகிறோம்'   என்பதாக அவர் கூறியிருப்பது  மக்களிடம் அனுதாபம் பெற கூறுவதாகவே  நமக்குத் தோன்றுகிறது!

பொதுவாக அரசியலாளர்கள்  உண்மையைப் பேச மாட்டார்கள் என்கிற அபிப்பிராயம் நமக்க உண்டு. அமர் நிக் எந்த அளவுக்கு உண்மையைப் பேசுகிறார் என்பது கடவுளுக்கே வெளிச்சம். 

பொதுவாகவே அரசியலுக்கு வருபவர்கள் பலர் பணம் சம்பாதிக்கவே வருகின்றனர்.  அரசியலுக்கு வரும் சீனர்கள் பெரும்பாலும் பணம் உள்ளவர்களாகவே இருக்கின்றனர். பணத்தைச் சம்பாதித்து விட்டுத் தான் அரசியலுக்கு வருகின்றனர். இந்தியர்களை எடுத்துக் கொண்டால் நிலைமை வேறு. ம.இ.கா. வே அதற்குச் சாட்சி. "காஞ்ச மாடு கம்புல புகுந்த மாதிரி" என்பார்களே அது தான் ம.இ.கா.வின் நிலைமை!  அவர்கள் பெருத்து நம்மை வெறுமையாக்கி விட்டார்கள்!

"சொத்து இல்லை அதனால் வெக்கமா இருக்கு!" என்று பாஸ் கட்சி சொல்லுகிறதே அது நமக்கும் கவலையளிக்கிறது. அரசியலாளர்களுக்குச் சொத்து இல்லை என்றால் யாரும் கவலைப்படப் போவதில்லை. ஆனால் உங்களுக்கு வாக்களித்தார்களே பொது மக்கள் அவர்களுக்குச் சொத்து வேண்டும், பணம் வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்கு வாழ்க்கையே சோகமாகி விடும். மக்கள் உங்களைத் தெர்ந்தெடுத்ததே அவர்கள் சொத்து சுகத்தோடு வாழவேண்டும் என்பதற்காகத்தான். 

அப்படி அந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை  உங்களால் உயர்த்த முடியவில்லையென்றால்  பாஸ் கட்சியினருக்கு அரசியலே தேவையில்லை. ம.இ.கா. காரனாவது தங்களுக்குள்ளேயாவது  பணம் சம்பாதித்துக் கொண்டான்.  இந்தியர்களைக் கைவிட்டான்! பாஸ் கட்சி அவனும் சம்பாதிக்கவில்லை, மக்களையும் சம்பாதிக்கவிடவில்லை என்பது எத்தனை பெரிய சோகம்!

நாம் பாஸ் கட்சியினருக்குச் சொல்லுவதெல்லாம் மக்களை ஏமாற்றிக் கொண்டு திரியாதீர்கள். உங்களை யாரும் சொத்து வாங்க வேண்டாம் என்று சொல்லவில்லை. மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து  சொத்து வாங்க வேண்டாம் என்று தான் சொல்லுகிறோம். நாடாளுமன்ற உறுப்பினராக உங்களுடைய ஒரு மாத சம்பளத்தில் 10,000 ஆயிரம் 
வெள்ளியாவது உங்களால்  மிச்சப்படுத்த முடியும்.  ஐந்து ஆண்டுகளில் நீங்கள் 6,00,000 இலட்சம்  வெள்ளியைச் சேமித்துவிட முடியும்.

இந்த நிலையில் எங்களிடம் சொத்து இல்லை என்றால் யாராவது நம்புவார்களா!

நீங்கள் வெட்கப்பட வேண்டிய அவசியம் இல்லே!

Saturday 12 November 2022

மூன்று துணை பிரதமர்களா?

 

                                                            
                                                      BN Chairman;  Ahmad Zahid Hamidi
தேசிய முன்னணி தனது கொள்கை அறிக்கையில் மூன்று துணைப் பிரதமர்களுக்கான அறிவிப்பு எதனையும் கொண்டு வரவில்லை.

ஏற்கனவே தேசிய முன்னணியின் தலைவர்  ஸாஹிட் ஹமிடி இது பற்றி அறிவித்திருந்தாலும் இதனைப்   பிரதமர்  இஸ்மாயில் சப்ரி புறக்கணித்து விட்டார். 

"தேசிய முன்னணியின் தேர்தல் கொள்கை அறிக்கையில்  இந்த செய்தி வரும்வரை இந்த செய்திக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்க வேண்டியதில்லை"  என்பது தான் அவரது கருத்து.  அவர் எதிர்பார்த்தது போல  கொள்கை அறிக்கையில் அது பற்றியான செய்தி எதுவும் வரவில்லை.

ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். தேசிய முன்னணியின் தலைவர் ஸாஹிட் ஹமிடி மூன்று  துணைப் பிரதமர்கள் தேவை என்கிறார். ஆனால் பிரதமரோ இஸ்மாயில் சாப்ரி அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அதாவது மூன்று துணைப் பிரதமர்கள் தேவை இல்லை என்று அவர் கருதுவதாக  நாம் எடுத்துக் கொள்ளலாம்.

ஏன் ஸாஹிட் ஹமிடி தேவை என்பதாகக் கூறிவருகிறார்?  இதில் ஏதேனும் வில்லங்கம் இருக்குமோ?  அதிக எண்ணிக்கையில் தேசிய முன்னணி வெற்றி பெற்றால், அதாவது முழுமையான வெற்றி பெற்றால், ஸாஹிட் ஹமிடி தான் பிரதமர் ஆவார் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அதே சமயத்தில் இழுபறி அரசாங்கம் அல்லது குறைந்த எண்ணிக்கையில்  அமைந்தால் இஸ்மாயில் சாப்ரி தான் பிரதமர் ஆவார் என்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. அப்போது மூன்று துணைப் பிரதமர்கள் தேவை என்பதாக ஸாஹிட் ஹமிடி நினைக்கிறார். அதில் ஒருவர் தீபகற்ப மலேசியாவைச் சேர்ந்தவர். அந்த தீபகற்ப மலேசியர் அம்னோ தலைவராக இருக்க வேண்டும். அப்போது தான் அம்னோ தனது பிரதமர்  பீடத்தை  தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று அவர் நினைக்கிறார். தான் பிரதமராக வரவும் முடியும் என்பது அவரின் கணிப்பு. 

இஸ்மாயில் சாப்ரி அம்னோ தலைவராக வருவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதனை எட்டுவதற்குப் பல தடங்கல்கள் உள்ளன. இன்னொரு பக்கம் அம்னோ தலைவர் தான் பிரதமராக வரவேண்டும் என்கிற பாரம்பரியத்தை விட்டுவிடக் கூடாது.  அதுவும் முக்கியம். யார் வேண்டுமானாலும் பிரதமர் ஆகலாம் என்றால் தலைவர் பதவிக்கு அடித்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லையே!

சபா, சரவாக் மாநிலங்களுக்கு துணைப் பிரதமர் தேவை என்பதில் எந்த குறையும் இல்லை. ஆனால் தீபகற்ப மலேசியாவுக்குத் தேவை இல்லை என்பதே பொதுவான கருத்து.  அம்னோ எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பதையும் சொல்ல இயலாது.  தேர்தல் முடிவு தெரியும் முன்னரே எதனையும் அறுதியிட்டுக்  கூற முடியாது!

பொறுத்திருப்போம்!

Friday 11 November 2022

விடுமுறை தேவையே!

 


பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில்  பொதுத்தேர்தலுக்கு முதல் நாள், 18-ம் தேதி,  விடுமுறை கொடுத்திருப்பது நியாயமானதே. 

அதே போல மற்ற மாநிலங்களும் விடுமுறை கொடுக்க வேண்டும் என்பதே  நமது வேண்டுகோள். வாக்காளர்கள் பெரும்பாலும் அவர்கள் சார்ந்த தொகுதிகளில் அல்லது மாநிலங்களில் வேலை செய்வார்கள் என நாம்  எதிர்பார்க்க முடியாது. பெரும்பான்மையோர்  வெளி மாநிலங்களில் வேலை செய்பவர்களாகத் தான் இருக்கிறார்கள்.

இந்த ஒரு நாள் விடுமுறை கொடுக்கும் போது தங்களது ஊர்களுக்கு முதல் நாளே பயணம் செய்து அடுத்த நாள் வாக்களிக்க அவர்களுக்கு வசதியாக இருக்கும்.  விடுமுறை கொடுக்காவிட்டால் இவர்கள் வாக்களிக்க வருவது  சாத்தியம் இல்லை. புறக்கணிக்கும் வாய்ப்பும் உண்டு.

ஆனால் அம்னோ கட்சியினர் அதனையே விரும்புகின்றனர். வாக்களிக்க வரவில்ல என்றால் அது அவர்களுக்கு இலாபம் என்று நினைக்கின்றனர். மழை, வெள்ளம் காரணமாக மக்கள் வாக்களிக்க் முடியவில்லை என்றால் அதுவும் அவர்களுக்கு இலாபம். இது போன்ற இலாப நட்டம் கணக்குப் பார்த்துத் தான்  அம்னோ இந்தப் பொதுத் தேர்தல்  முன்னாதாகவே நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி நடக்கவும் செய்துவிட்டது.

வெகு விரைவில் மற்ற மாநிலங்களும் விடுமுறையை அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கிறோம். இது மக்களின் வசதிக்காக என்று அம்னோ நினைத்தால் நல்லது. எல்லாவற்றுக்கும் அரசியலை வைத்து தீர்மானிப்பதும் மக்கள் நலனைப் புறக்கணிப்பதும்,  மக்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தும் என்பதை அம்னோ அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள  வேண்டும். 

விடுமுறை உண்டோ இல்லையோ பொதுத்தேர்தல் நடந்து தான் ஆக வேண்டும். முடிந்தவர்கள், முடிந்தவரை வாக்களிக்கத்  தவற வேண்டாம் என்பதே நமது வேண்டுகோள். ஏனேனில் தேர்தல் என்பது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வருவது  இத்தனை ஆண்டுகள் ஏதோ ஒரு கட்சியின் மீது உள்ள ஒரு பற்றால், பாசத்தால் நமது வாக்குகளைக் கொடுத்து நாம் ஆதரித்து வந்தோம். ஆனால் இனி மேலும் இப்படிக் குருட்டுத்தனமாக  வாக்களிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அறிவு பூர்வமாக சிந்திக்க வேண்டும்.

மலேசியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் 18-ம் தேதி விடுமுறையை அறிவிக்க வேண்டும் என பொது மக்களாகிய நாங்களும் அரசாங்கத்திற்கு வேண்டுகோள் வைக்கிறோம்.  இது நடக்கும் எனவும் எதிர்ப்பார்க்கிறோம்.

வாழ்க மலேசியா!  வாழ்க மலேசியர்!

Thursday 10 November 2022

அடுத்த பிரதமர் யார்?

 

                                                                         

வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்றால் யார் பிரதமர் என்று  தேவையற்ற ஆருடங்கள் வலுத்து வருகின்றன.

ஏற்கனவே அம்னோ தாங்கள் வெற்றி பெற்றால் முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பிரதமராக வருவார் என்று அறிவித்திருக்கின்றனர். ஆனால் அந்த வாய் மொழி ஒப்பந்தம் மீறப்படுமா என்கிற ஒரு சந்தேகம் இப்போது எழுப்பப்பட்டிருக்கிறது!

இப்போது இந்த 15-வது பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு தான் நடைபெற வேண்டும். ஆனாலும் அம்னோ கொடுத்த  நெருக்குதலினால் இந்த ஆண்டு நடைபெறுகிறது. அந்த நெருக்குதல் கூட , இஸ்மாயிலுக்கே தொடர்ந்து பிரதமர் பதவி,  என்கிற அடிப்படையில் தான் இஸ்மாயில் இந்தத்  தேர்தலுக்கு ஒப்புக்கொண்டார்.

ஆனால் இன்று ஏனோ அம்னோ அந்த ஒப்பந்தத்தை மீறும்  என்கிற பேச்சு அடிப்பட்டுக் கொண்டிருக்கிறது.   அம்னோவுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சனையே அல்ல. அவர்கள் எதனையும் மீறும் இயல்பு உடையவர்கள்! சொன்ன சொல்லை அவர்கள் என்றுமே காப்பாற்றியதில்லை! அவர்களின் கூற்றுப்படி இஸ்மாயில் அப்படி ஒன்றும் வலிமையான, தகுதியான  பிரதமர் வேட்பாளர் அல்ல என்று அவர்கள் நினைக்கிறார்கள்!

அது மட்டும் அல்ல. நாட்டின் பிரதமர் என்றால் அவர் அம்னோ கட்சியின் தலைவராக இருக்க வேண்டும் என்பது அம்னோ உறுதியாக நம்புகிறது. அதனை அக்கட்சி விட்டுக் கொடுக்காது என்பது உறுதி. அதுவே அவர்களிடம் உள்ள நடைமுறை!   அந்த நடைமுறையோடு ஒரு சில நீதிமன்ற ஊழல்  வழக்குகள்  இருக்க வேண்டும் என்கிற நடைமுறையும் இப்போது நடப்புக்கு  வந்துவிட்டது!

இப்படி ஒரு சூழலில் அம்னோ கட்சியின் தலைவராக இல்லாத ஒருவரை அவர்கள் எப்படி நாட்டின் பிரதமராக வருவதற்கு ஒப்புக் கொள்வார்கள்? அது தான் இன்றைய பிரச்சனை!  காலங்காலமாக அம்னோ தலைவர் தான் நாட்டின் பிரதமர். அதுவே ஒரு பாரம்பரியமாக வந்துவிட்டது. அதனை அவர்கள் விட்டுக் கொடுக்கத்  தயாரில்லை.  இன்று அவர்கள் விட்டுக் கொடுத்தார்களானால் மீண்டும் இப்படி ஒரு நிலை வரலாம்.  அதனால் பாரம்பரியத்தை விட்டுக் கொடுப்பது தவறு என்பது அவர்களது எண்ணமாக இருக்க வேண்டும்.

எப்படியோ தேர்தல் முடியும் வரை இந்தப் பேச்சு தொடரந்து கொண்டு தான் இருக்கும். தேர்தலுக்குப் பிறகு தான் ஒரு முடிவுக்கு வரும். அம்னோ ஆட்சி அமைக்குமா என்று சொல்லுவதற்கில்லை. அதுவும் சந்தேகத்திற்கு உரிய ஒன்று தான். அதனால் இப்போதைக்கு இது பற்றி பேசுவதில் எந்த ஒரு புண்ணியமும் இல்லை.

அடுத்த பிரதமர் யார்? பொறுத்திருப்போம்!

Wednesday 9 November 2022

எல்லாம் ஆண்டவன் செயல்!


"இது மழை காலம். மழை வரும். வெள்ளம் வரும். வாக்களிக்க சிக்கலாக இருக்கும். அதனால் 15-வது பொதுத் தேர்தலை அடுத்த ஆண்டு வையுங்கள்." என்று மக்கள் சொன்னார்கள். அரசியல்வாதிகள் சொன்னார்கள். எதிர்க்கட்சியினர் சொன்னார்கள்.

ஆனால் எதனையும் அப்போதைய பிரதமர் இஸ்மாயில் சாப்ரி காதில் போட்டுக் கொள்ளவில்லை. அவரது கட்சியினர்  சொல்லுவதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு செயல்பட்டார்.  வானிலை நிலையமும் அம்னோ கட்சியினருக்கு வக்காளத்து வாங்கியது.  ஆளுங்கட்சி சொன்னால் அதற்கு  மறுபேச்சு என்பது இல்லையே!

இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது? நாடெங்கிலும் மழை, வெள்ளம்,  புயற்காற்று என்று மக்களைத் திணறடித்துக் கொண்டிருக்கிறது. இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவது  எப்போது என்பது  மக்களின் கேள்வி. இன்னும் மழை நின்றபாடில்லை. தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது!

வானிலை நிலையங்கள் போன்ற அரசாங்க அமைப்புகள், அம்னோ கட்சியினரின் ஆட்களாக இருந்தால், என்ன நடக்கும் என்பது இப்போது நமக்குத் தெரிந்திருக்கும். இப்படித்தான் பல அரசாங்க அமைப்புகள் அம்னோ கட்சியினரால் நிரப்பப்பட்டிருக்கின்றன. அம்னோ கட்சியின் ஆதரவாளர்கள்  என்றால் போதும்! அது தான் அவர்களின் தகுதி! அரசாங்க சார்பு  நிறுவனங்கள் பல இவர்களை வைத்துத்தான் நட்டத்தை அடைந்து கொண்டிருக்கின்றன! இலாபம் கிடைக்க வேண்டும் என்கிற நோக்கம் இவர்களிடம் இல்லை! எல்லாம் அரசியல்! அரசியல் முட்டாள்கள்!

இப்போது தான் பிரதமர் இஸ்மாயிலுக்கு கொஞ்சம் விழிப்பு ஏற்பட்டிருக்கிறது! வாக்களிப்பு தேதியை மாற்றலாமா என்னும் யோசனை வந்திருக்கிறது. அது யோசனை மட்டும் தான்! அதனை அம்னோ ஏற்றுக்கொள்ள வேண்டுமே! அவர்களுக்கோ மழை பெய்தால் நல்ல சகுனம் என்று நினைப்பவர்களாயிற்றே! மக்கள் வாக்களிக்க வரமாட்டார்கள். வெளியூர்களிலிருந்து இளைஞர்கள் வரமுடியாத நிலை. இது போன்ற நல்ல தருணம் தான் அம்னோவுக்கு வேண்டும். மற்றவர்கள் வர தயங்கும் போது இவர்களோ பணத்தை வாரி இறைப்பார்கள்! அவர்களுக்கு வேண்டியவர்களை  வாக்களிக்கும் மையங்களுக்குக்  கூட்டிக்கொண்டு வருவார்கள்.

எப்படிப் பார்த்தாலும் வாக்களிக்கும் தேதியை மாற்ற அம்னோ ஏற்றுக்கொள்ளாது என்பது நிச்சயம்! அதனால் நமக்கு வேண்டுமானால்  நாம் படகிலாவது சென்று வாக்களிக்க வேண்டும்! இல்லையென்றால் எப்படியோ பறந்து சென்றாவது வாக்களிக்க வேண்டும்! வேறு வழியில்லை!

பொறுத்திருந்து பார்ப்போம். வானிலை அறிவிப்பின்படி வாக்களிப்பு நடைபெறும் அன்று மழை பெய்யாது என்றார்கள். அப்படியே ஆகட்டும்! நமக்கும் அதில் மகிழ்ச்சி தான்!

எல்லாம் ஆண்டவன் செயல்!

Tuesday 8 November 2022

கல்விக்கு ஏன் தடை?

 

உயர்கல்வி பயில்வதில்  அதிகமாகப் பாதிக்கப்படுகிறவர்களில் இந்திய மாணவர்களே அதிகம்.

நமது தமிழ்ப்பள்ளிகளை எடுத்துக் கொண்டாலும் அங்கும் அதே பிரச்சனை தான். பள்ளிகளைக் கட்டுவது பின்னர் அதனைப் பயன்படுத்த முடியாமல் தடையாய் இருப்பது. பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறைகள் இருந்தால் அதனைத் தீர்த்து வைக்கும் ஆற்றலும்  கல்வி அமைச்சுக்கு இல்லை. ஒழுங்காகப் பணியாற்றும் ஆசிரியர்களை "வேறு இடத்திற்கு மாற்றுவோம்!"  என்று சொல்லி ஆசிரியர்களைப் பயமுறுத்துவது. இது போன்ற செயல்களால் ஆசிரியர்கள் தங்களது முழு கவனத்தைச் செலுத்த முடிவதில்லை.

இடைநிலைப்பள்ளியிலும் மாணவர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றனர். அது சரியில்லை, இது சரியில்லை என்று பலவாறு அவர்கள் அவமானாப்படுத்துகின்றனர்.

இவைகளையெல்லாம் மீறி அவர்கள், சிறப்பாகப் படித்து, பரிட்சைகளில் தேர்ச்சி பெற்று வந்தால்  அதன் பின்னரும் மாணவர்கள் பல்வேறு வகைகளில் அவர்கள் மனம் நோகடிக்கப்படுகின்றனர். நல்ல தேர்ச்சி ,முதன்மையான புள்ளிகளைப்பெற்று வெற்றி பெற்றாலும் அவர்களுக்கு மேற்கல்வியைத் தொடர வாய்ப்புக் கொடுப்பதில்லை.

சான்றுக்கு மெட்ரிகுலேஷன் கல்வி அவர்களுக்கு மறுக்கப்பாடுகின்றது. பல்கலைக்கழகங்களிலும் கல்வி  மறுக்கப்படுகின்றது. அவர்கள் விரும்புகின்ற துறைகளை அவர்களுக்குக்  கொடுப்பதில்லை. குறிப்பாக மருத்துவம்,  என் ஜினியரிங், வழக்கறிஞர் போன்ற  படிப்புகளில் அவர்களுக்குக் கல்வி மறுக்கப்படுகின்றது.

நாம் இங்குக் கேட்கின்ற கேள்விகள் எல்லாம் எப்போது, எந்தக் காலகட்டத்தில் இவைகள்  நடந்தன என்பது தான். அனைத்தும் தேசிய முன்னணி ஆட்சியில் நடந்தது.  எப்படிப் பார்த்தாலும் இந்தியர்கள், நமது மாணவர்கள் உடபட, எல்லா வகையிலும் புறக்கணிக்கப்பட்டு வருகிறோம். தேசிய முன்னணியின் உறுப்புக்கட்சியாக இருக்கும் ம.இ.கா.  எந்தக் காலத்திலும் வாய் திறக்கப் போவதில்லை!  வாய் திறந்தால்  அம்னோ நம்மை விட்டு வைக்காது என்பது அவர்கள் நினைக்கிறார்கள்!  அதனால் கிடைக்கும் எலும்புத் துண்டுகளைப்  பொறுக்கிக் கொண்டு, நம்மை நாம் தற்காத்துக் கொள்வோம்  என்பது தான் அவர்களது நோக்கம்!

ஆக, கல்வி மட்டும் அல்ல. நமது உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றால் தேசிய முன்னணி நமக்கு ஏற்றக்கட்சி அல்ல என்பதை இந்திய வாக்காளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

பக்காத்தான் ஹரப்பானே நமது எதிர்காலம்!


Monday 7 November 2022

பத்து தொகுதியில் பத்துப்பேரா!

 

இந்த 15-வது நாடாளுமன்ற தேர்தலில் அதிகமான வேட்பாளர்களைக்  கொண்ட தொகுதி என்றால் அது பத்து நாடாளுமன்ற தொகுதி தான்.

ஆமாம்,  பத்து தொகுதிக்குப் பத்துப் பேர் போட்டியிடுகின்றனர்!

அந்தத் தொகுதியின் மீது ஏன் இந்த அளவுக்கு வேட்பாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்?  என்ன காரணமாக இருக்கும்? 

சென்ற தேர்தலில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர் பக்காத்தான் கட்சியின் சார்பில் போட்டியிட்ட பி.பிரபாகரன். சுயேச்சையாக சுற்றிபார்க்க வந்தவருக்கு ஏதோ ஓர் அதிர்ஷ்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனவர்! அவருக்கு ஆதரவு காட்டியவர்கள் பக்கத்தான் ஹரப்பான் கட்சியினர், அதன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவா, டாக்டர் மகாதிர் போன்ற அனைவரும் வந்து பிரபாகரனுக்காக பிரச்சாரம் செய்தனர்.

அப்போது அவர் வெற்றி பெற்றதில் ஒரு நியாயம் உண்டு. இந்த முறை அது நடக்குமா?.ஆனால் சென்றமுறையைவிட இந்த முறை அவர் பக்காத்தான் ஹராப்பானின் அதிகாரபூர்வமான வேட்பாளர். இப்போது  அவர் அதிர்ஷ்டத்தை நம்பி அவர் போட்டியிடவில்லை. என்ன தான் பக்காத்தான் அவருக்காகப் பிராச்சாரம் செய்தாலும் அவர் கடந்த ஐந்த ஆண்டுகளாக அவருடைய சாதனை என்ன என்பது தான் இப்போது அவர் முன் நிற்கும் கேள்வி.  சாதனை இருந்தால் வெற்றி பெறுவதற்கான  வாய்ப்புக்கள் அதிகம் என்று சொல்லலாம்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவாவை நாம் குறைத்து மதிப்பிடவும் வழியில்லை. அவர் பத்து தொகுதியில் மக்களால் மிகவும் அறியபட்டவர். அவருடையபலவீனம் என்பது அவர் சுயேச்சையாக நிற்பதுதான். சுயேச்சை என்பதால் எந்த அளவுக்கு அவர் சீனர்களின் ஆதரவைப்  பெறுவார் என்று சொல்வதற்கில்லை. அதற்கு மாறாக அவர்கள் பக்காத்தான் பக்கமே சாய  வாய்ப்புண்டு. அது பக்காத்தான் தலைவர் அன்வார் எந்த அளவுக்குச் சீனர்களைக் கவரமுடியும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சீனர்களைப் பொறுத்தவரைப் பக்காத்தான் பக்கமே சாய அதிக வாய்ப்புண்டு. இந்தியர்களின் ஆதரவையும், மலாய்க்காரர்களின் ஆதரவையும்  பக்காத்தான் பெறவும் வாய்ப்பு அதிகமுண்டு.

ஆனால் எதனையும் சொல்வதற்கில்லை. இது அரசியல். அரசியலில் ஒருவருடைய உழைப்பு மட்டுமே நிற்கும். பிரபாகரனும் தனது தொகுதியில் தனது உழைப்பைக் கொடுத்திருப்பார் என நம்பலாம். அவரது உழைப்பு அவருக்கு வெற்றியைத் தரும் என நம்புகிறோம்.

பத்துத் தலைகள் போட்டிப் போடுகின்றனர்! ஓர் ஆச்சரியம் என்னவென்றால் பக்காத்தான் வேட்பாளரை பலவீனமானவர் என்று பலர் நினைக்கின்றனர். அதனால் தான் இந்த அளவுக்கு அந்தத் தொகுதியில் போட்டி ஏற்பட்டிருக்கின்றது. ஆனாலும் பிரபாகரன் வெற்றி பெறுவார் என நம்புகிறோம்.

Sunday 6 November 2022

பொய் சொல்லக் கற்றுக்கொள்!

 


பள்ளிக்கூடம் போகும் மாணவ/மாணவிகள் எப்படிச் சரியான காலணிகளை அணிய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

மேலே நீங்கள் பார்க்கும் காலணிகளை அணிவது மாபெரும் குற்றம் என்பதைப் புரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள். சரியான காலணி என்பது கருப்பு நிறமாகவும், கயிறு உள்ளதாகவும் இருக்க வேண்டும். 

அதுவும் நீங்கள் இந்திய மாணவியாக இருந்தால் நீங்கள் மாணவர்கள் முன்னால் முட்டிப் போட  வேண்டி வரும்.  இது தான் உங்களுக்குத்  தண்டனை!

நீங்கள் ஏழை என்பது பள்ளிக்கூடத்தின் பிரச்சனை அல்ல! அவர்களுக்குக் கட்டுப்பாடு தான் முக்கியம்1 நீங்கள் ஏழையாக இருப்பது உங்கள் குற்றம்!

சமீபத்தில் ஒரு மாணவி,  இது போன்ற காலணிகளை அணிந்ததற்காக,  பள்ளி ஆசிரியை ஒருவரால் மேற்சொன்ன தண்டனைக்கு உள்ளாகியிருக்கிறார்!

மாணவியின் பெற்றோர் இது சம்பந்தமாக போலீஸ் புகார் செய்திருக்கின்றனர். ஆனால் சம்பந்தப்பட்ட ஆசிரியை "அப்படியெல்லாம் அந்த மாணவிக்கு எதுவும் நடக்கவில்லை!" என்பதாக அவரும் போலீஸில் புகார் செய்திருக்கிறார்! அவர் தனக்கும்  சாட்சியங்கள் உள்ளதாகக் கூறுகிறார்!

மேற்சொன்ன அனைத்தும் காலையில் பள்ளிக்கூடம் கூடும்  நேரத்தில் நடந்தாகச் சொல்லப்படுகிறது. அதாவது  மாணவர்கள் முன்னிலையில்  இவை அனைத்தும் நடந்தேறியிருக்கின்றன. 

ஆனாலும்  தனக்குச் சாட்சியங்கள் இருக்கின்றன என்கிறார் ஆசிரியை!  அப்படியென்றால் மாணவர்கள் தான் அவருக்குச் சாட்சியங்கள். இதை இரண்டு விதமாகப் பார்க்கலாம்.  ஒன்று ஆசிரியைச் சொல்லுவது போல எதுவும் நடக்கவில்லை. அப்படியென்றால் அவர் சொல்லுவது சரிதான். இன்னொரு பக்கம் பார்த்தால் மாணவர் முன்னிலையில் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. அப்படியானால்  அங்கு நடந்த  சம்பவத்தை மாணவர்கள் பார்த்திருக்க வேண்டும். 

இங்கு நமக்கு ஒரு கேள்வி உண்டு. மாணவர்கள் பார்த்திருந்தால், ஆசிரியையின் தூண்டுதலினால், அவர்கள் பொய் சொல்லும்படி  பணிக்கப்படலாம். அதற்கான சாத்தியங்களும் உண்டு. மாணவர்களைப் பொய் சொல்லும்படி ஒரு ஆசிரியர் தூண்டுவாரானால்  அது  மாபெரும் குற்றம். மிகவும் இழிவான ஒரு செயல்.

குறிப்பாகத் தமிழர்கள் ஆசிரியர்களை 'மாதா, பிதா,குரு'  என்று சொல்லி ஆசிரியர்களை குரு என்கிற  மிக உயரிய இடத்தைக் கொடுத்து வைத்திருக்கிறார்கள். மாணவர்களைப் பொய்  சொல்லத் தூண்டுவது என்பது மன்னிக்கப்பட முடியாத செயல்.

ஒன்று மட்டும் நமக்குப் புரிகிறது. பிரச்சனையை மறைப்பதற்கு வேலைகள் நடக்கின்றன. அதற்கு  உடைந்தையானவர்களை வைத்து அவர்களின் ஆலோசனையின் பேரில் நடப்பதாகவே தெரிகிறது. அதனால் கடைசியில் எல்லாமே சுழியம் ஆலிவிடுமோ!

இங்கே நீதி கிடைக்கவில்லை என்றால் இனி வருங்காலங்களில் இதுவே முன்னுதாரணமாகிவிடும் என்கிற அச்சம் நமக்கு உண்டு.

பொய் சொல்லக் கற்றுக்கொள்! பிழைத்துக் கொள்வாய்! என்கிறார்கள்  நவீன கால ஆசிரியர்கள்!

Saturday 5 November 2022

ஏன் அம்னோ வெற்றி பெற வேண்டும்?

 

பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங்,  அம்னோ கட்சியினரைப் பற்றி நல்லதொரு செய்தியைக் கூறியிருக்கிறார்.

நாட்டின் 15-வது பொதுத் தேர்தலை சீக்கிரம் வைக்க வேண்டும் என்று கடந்த அரசாங்கத்திற்கு நெருக்குதலை அம்னோ  கொடுத்தற்கு  ஒரே ஒரு காரணம்  நீதிமன்ற  வழக்குகளில் சிக்கியிருக்கும் அம்னோ தலைவர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்பது மட்டும் தான்.

நாம் அதைச் சொன்னால் வீண்பழி என்பார்கள். ஆனால் கடந்த ஆட்சியில் அம்னோவோடு கூட்டுச் சேர்ந்து ஆட்சி அமைத்தவர்கள் சொல்கிறார்கள்!

சீக்கிரம் தேர்தலை வைத்துவிட்டால் மட்டும் வெற்றி அடைந்துவிட முடியுமா? ஏதோ ஒரு  சில காரணங்கள் அவர்களுக்குச் சாதகமாக அமையும் என்பதாக அம்னோ தலைவர்கள் கனவு காண்கிறார்கள் என்பது மட்டும் உண்மை! ஏன் அதுவே எதிர்க்கட்சிகளுக்கும் சாதகமாக அமையலாம் என்பதும் உண்மை தானே? நியாயங்கள் ஒரு பக்கமாக மட்டும் இருக்கப்போவதில்லை! இரண்டு பக்கமும் சாதகமாக அமையலாம்!

சமீபத்தில் ம.இ.கா. மாநாட்டில் பேசுகின்ற போது அம்னோ தலைவர் ஒரு கருத்தைச் சொன்னார். அது தமாஷாக சொல்லப்பட்டதாக ம.இ.கா. தலைவர்கள் அவரைப் பார்த்துச்  சிரித்தனர்! ஆனால் பொது மக்கள் அப்படி நினைக்கவில்லை.  உள்ளத்தில் உள்ளது தானே வெளியே வருகிறது! அதில் என்ன தமாஷ் வேண்டிக் கிடக்கு?

அவர் பேசும் போது எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தால்  "அம்னோ தலைவர்கள் மட்டும் அல்ல ம.இ.கா. தலைவர்களும்  நீதிமன்ற வழக்குகளைச் சந்திக்க வேண்டி வரும்!" என்று தமாஷாகப் பேசியதாக அப்போது பேசப்பட்டது. ஆனால் அது உண்மை தான் என்று மக்கள் புரிந்து வைத்திருக்கின்றனர்!

அவர்கள் விரும்புகிறார்களோ, விரும்பவில்லையோ நீதிமன்றக் கதவுகள் அவர்களுக்காகக் காத்துக் கிடக்கின்றன என்பது மட்டும் உண்மை! எப்பேர்ப்பட்ட திருடனாக இருந்தாலும் ஒரு நாள் அகப்பட்டுத் தானே ஆக வேண்டும்! சிறைச்சாலையை ஏமாற்றினாலும் வீட்டில் உள்ள சிறைச்சாலையைச் சந்தித்துத் தானே ஆக வேண்டும்! தப்ப முடியாது கண்ணா!

இப்போது நமக்கு ஓரளவாவது புரிந்து கொண்டிருக்க வேண்டும். ஏன் அம்னோ இந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று துடிக்கிறது என்பது! இந்தத் தேர்தலில் எல்லாவித உபாயங்களும் வெளிப்படும் என்பது உண்மையே! அவர்களின் முதல் விளையாட்டு ஜோகூரில் எதிர்க்கட்சி மாநாட்டில் கூச்சலும் குழப்பத்தையும் விளவித்தது! இது தொடரும் என நம்பலாம்.  இப்போதும் அவர்கள் கை தான் ஓங்கியிருக்கிறது. தட்டிக்கேட்க ஆளில்லை!

இலஞ்சத்தையும் ஊழலையும் மட்டுமே ஆயுதமாகக் கொண்டிருக்கும் தேசிய முன்னணி நமக்கு வேண்டுமா என்பதை யோசியுங்கள்!

Friday 4 November 2022

தேர்தல் களம் சூடு பிடிக்கிறது!

 

தேர்தல் களம் சூடு பிடிக்கிறது! நாளை (5.11.22) வேட்பு மனு தாக்கல். அதன் பின்னர் தேர்தல் பிரச்சாரம். இரண்டு வார இடைவெளியில் அரசியல் கட்சிகள் தனது பிரச்சாரங்களை மக்களிடம் கொண்டு செல்லலாம். நேரடியாக வீடு வீடாக சென்று மக்களிடம் வாக்கு கேட்கலாம்.  வாக்களிப்பு நாள் 19.11.22. 

இனி அடுத்த இரண்டு வாரங்களுக்கு நாமும் அரசியல் பற்றி தான் அதிகம் பேசுவோம்; பேச வேண்டும். 

நாட்டின் வளர்ச்சியில் நமது பங்களிப்பு எதிர்பார்த்தபடி இல்லை. இனியும் நாம் ஏதோ  வேண்டா வெறுப்பாகத்தான்  பார்க்கப்படுகிறோம்.  நமது உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு விட்டன.  அரசாங்கத்தில் நமது குரல் எடுபடவில்லை.

நேற்று வந்த வங்காளதேசிகள் கூட இந்நாட்டுக் குடிமக்கள் போல் வாழ்கின்றனர்.  உண்மையைச் சொன்னால் இந்நாட்டில் வாழும் இந்தியர்களை விட வெளிநாட்டவர் அதிகமாக வாழ்கின்றனர். இது நாட்டில் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்று சொல்லியும் அது பற்றி அரசாங்கம் சட்டைசெய்ததாகத் தெரியவில்லை.

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அளவுக்கு அதிகமாகவே நாட்டுக்குள் வருகின்றனர். ஆனால் உள்நாட்டில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் இல்லை என்று மீண்டும் மீண்டும் சொன்னாலும் அரசாங்கத்தின்  காதில் விழவில்லை. அனைத்து வேலைகளும் வெளிநாட்டவர்களுக்கு என்றால் உள்நாட்டுக் குடிமக்களுக்கு அரசாங்கம் என்ன சொல்ல வருகிறது?

வெளிநாட்டுத் தொழிலாளர்களால் முதலாளிகளுக்கு இலாபம் என்பதால் முதலாளிகள் அவர்களையே வேலைகளுக்கு அமர்த்த விரும்புகின்றனர்.

இங்கும் இனரீதியில் இந்தியர்கள் பாதிக்கப்படுகின்றோம். பொது வேலைகள் என்கிற போது அவர்களில் பெரும்பாலும் மலாய்க்காரர்களும் இந்தியர்களும் தான். மலாய்க்காரர்களுக் கிடைக்க வேண்டிய பங்கை நிர்வாகங்கள் நிறைவேற்றிவிடுகின்றனர். ஆனால் இந்தியர்களைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. இந்தியர்களைப்  பல நிறுவனங்கள் புறக்கணிக்கின்றன. அப்படியே ஒரு சில வேலைகள் கொடுக்கப்பட்டாலும்  அவை மிகவும் குறைவான சம்பளத்திற்கான வேலைகளாகத்தான் இருக்கும்.

இந்தியர்களின் முதல் பிரச்சனை என்பது போதுமான வேலை வாய்ப்புக்கள் அவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. அவர்களைப் பிரதிநிதிக்கிறோம்  என்று சொல்லுபவர்கள்  அதுபற்றிப் பேச பயப்படுகின்றனர். இவர்களை நாம் என்ன செய்வது?

நம்மைப் பொறுத்தவரை நமக்கு ஒரு மாற்றம் வேண்டும்.  ஒரு புதிய அரசாங்கம் தேவை. நமது நலனில் அக்கறை உள்ளவர்கள் தேவை. நம்மை மதிப்பவர்களை நாம் மதிக்க வேண்டும். நம்மை மதிக்காத அரசாங்கத்தை நாம் மதிக்க வேண்டிய அவசியமில்லை!

பக்காத்தான் அரசாங்கம் என்பது காலத்தின் கட்டாயம்! அவர்களை நாம் ஆதரிப்போம்!

Thursday 3 November 2022

மாற்றங்கள் வேண்டும்!

 

  
இப்போது தேர்தல் காலம். ஆமாம், 15-வது பொதுத் தேர்தல்  இந்த  மாதம் 19-ம் தேதி எனத்  தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. வேட்புமனு தாக்கல் வருகிற 5-ம் தேதி நடைபெறும்.

இப்போதே போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இது இறுதியானது அல்ல. கடைசி நேர மாற்றங்கள் ஏற்படலாம்.  ஆனால் இன்னும் வேறு சில மாற்றங்களும் வரும். போட்டியிடுகிறேன் என்று சொல்லி, வேட்பு மனு தாக்கல் செய்து, பின்னர் ஓரிரு நாட்களில்  வாபஸ் வாங்கும் கூத்துகளும் நடக்கும்! எல்லாம 'செட்டப்' செய்து வைத்திருப்பார்கள். இதெல்லாம் அரசியலில் உள்ளவர்களின்  விளையாட்டு!

எப்படியோ போகட்டும். நம்மைப் பொறுத்தவரை இப்போது நாம் மிகவும் இக்கட்டான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இத்தனை ஆண்டுகாலம் நம்மால் வளர்க்கப்பட்டவர்கள் இப்போது  நம்மை அதள பாதாளத்திற்குக் கொண்டு போய்ச் சேர்த்திருக்கின்றனர்.

வேறு யாரையும் நான் குற்றம் சொல்லவில்லை. நமது இனத்தவன் தான் நமக்குக் குழி ப்றித்தவன். நம் பெயரை வைத்துக் கொண்டு அவன் சம்பாதித்தானே தவிர நம்மைக் கழட்டிவிட்டுவிட்டான்!

கல்வியில், அதுவும் உயர்கல்வியில், நமக்கு உரிமையில்லை. இந்த நாட்டில் பிறந்தவன் அனாதையாக, குடியுரிமையின்றி, சுற்றிக் கொண்டிருக்கிறான். வேலை இல்லை, வாய்ப்பு இல்லை. குழந்தைகள் கல்வி கற்க இடமில்லை.

திறமை இருந்தும் அவன் வீதியில் சுற்ற வேண்டிய நிலை. இப்படி ஒரு சூழல் யாரால் உருவாக்கப்பட்டது?  நமது மாபெரும் தலைவர்களால் தானே! அவன் தானே நமக்கான பிரச்சனைகளைத் தீர்க்க முயற்சி செய்திருக்க வேண்டும்?  ஆனால் தீர்க்கவில்லை!

நமக்கு ஒரு மாற்றம் தேவை. எப்போதும் நாம்  கையாலாகாத ஒரு தலைமத்துவத்தை வைத்துக் கொண்டு மாரடித்துக் கொண்டிருக்கிறோம். அவர்களால் நமது மக்களுக்கு ஒன்றும் செய்ய இயலாது என்பது நன்கு புரிந்துவிட்டது. அவர்களால் முடியும் ஆனால் அந்த சுமையை அவர்கள் ஏற்கத் தயாரில்லை! அவர்கள் வாழ்ந்தால் போதும்  என்கிற சுயநலம் அவர்களைப் பீடித்துக் கொண்டது!

ஓர் ஆண்டு, ஈராண்டு பொறுக்கலாம்.  நாற்பது, ஐம்பது ஆண்டுகள் என்றால் எப்படி?  ஒரு முடிவே  இல்லாமல் போய்க் கொண்டிருந்தால் எப்படி? ஒன்று நல்லதைச் செய்ய வேண்டும்.  இல்லாவிட்டால் ஓடிப்போக வேண்டும். அவர்கள் ஓடிப்போவதாக இல்லை! நாம் தான் கழுத்தைப்பிடித்து விரட்டியடிக்க வேண்டும்.

மாற்றங்கள் நமக்குத் தேவை! மாற்றுவோம்!

Wednesday 2 November 2022

ஈப்போ மாநகர மன்றத்திற்கு நன்றி!

 

       நன்றி: வணக்கம் மலேசியா                     டாக்டர் செல்வமணி

டத்தோஸ்ரீ டாக்டர் என்.எஸ்.செல்வமணி  அவர்களைப் பற்றி நான் எதனையும் அறியேன்.

இருந்தாலும் ஒரு தமிழரின் பெயர் ஒரு சாலைக்கு வைத்ததை நான் பெருமையாகவே  கருதுகிறேன்.

இப்போது  சாலைகளுக்குப் பெயர் வைப்பது எல்லாவற்றிலும் அரசியல் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.  நாட்டுக்குச் சேவை ஆற்றியவர்களின் பெயர்கள் தான் பெரும்பாலும் சாலைகளுக்கு வைக்கப்படுகின்றன. ஆனால் என்ன செய்வது? கட்சிகளுக்குச் சேவை செய்தவர்களின் பெயர்கள் தான் முக்கியத்துவம் பெறுகின்றது!  

க்ட்சிகளில் சேவை என்பது வேறு, நாட்டுக்குச் சேவை என்பது வேறு. நாட்டுக்குச் சேவை செய்தவர்களின் பெயர்கள் தான் என்றென்றும்  நினைவு  கூரப்பட வேண்டும்.

டாக்டர் செல்வமணி அவர்கள் ஈப்போ மக்கள் நன்கறிந்த கல்வியாளர். கல்விக்காக அவரது குடும்பம் நிறைய தியாகங்களைச் செய்திருக்கின்றனர்.  அவரது பாட்டனார் குழைந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக தனது நிலத்தையே தானமாகக் கொடுத்தவர். ஏழைக்குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்பதில் டாக்டர் செல்வமணி அவர்கள் நிறைய அக்கறையைக் காட்டியிருக்கிறார்.

அவரின் கல்வி  சேவைக்காக 1997-ம் ஆண்டு அவருக்கு "தோக்கோ குரு" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.

ஈப்போ அண்டர்சன் இடைநிலைப்பள்ளியில் ஆசிரியராகவும் பின்னர் முதல்வராகவும் பணியாற்றியவர். கல்வி என்று வரும்போது அவர் இனம், மதம், நிறம் எதுவும் பார்ப்பதில்லை. அனைத்து இன மாணவர்களும் கல்வி  பயிலுவது அவர்களது உரிமை என்பது தான் அவரது கொள்கை. கடைசிவரை அவரது கொள்கையிலிருந்து அவர் மாறவில்லை.

ஆசிரியர் செல்வமணி அவர்கள் 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் காலமானார். அப்போது அவருக்கு வயது 93. கல்விமான்களுக்கு இறப்பு என்பது இல்லை. அவர்கள் என்றென்றும் வாழ்ந்திருப்பர்.

அவரது நினைவாக சாலை ஒன்றுக்குப் பெயரிப்பட வேண்டும் என்னும் கோரிக்கையை ஈப்போ செயிண்ட் பிலோமினா தமிழ்ப்பள்ளி அறவாரியம் முன்வைத்து இப்போது  அது நடப்புக்கு வந்திருக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டு கால முயற்சியின் காரணமாக இது நிறைவேறியிருக்கிறது. இந்த அங்கீகாரம் பெற முயற்சிகள் செய்த ஈப்போ மாநகரமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயகோபி மற்றும் ஈப்போ மேயர் டத்தோ ருமைசி பஹாரின் அவர்களுக்கும்  நன்றி! நன்றி! கூறுகிறோம்.

Tuesday 1 November 2022

ஏனப்பா இந்த வெறி?

 

ஏனப்பா! இந்த வெறி உனக்கு? உன்னை யார் என்ன செய்தார்கள்? அல்லது அந்தக் கோலம் தான்  உன்னை என்ன செய்தது?

உனக்குச் செய்ய திராணி இல்லையென்பதால் மற்றவர்கள் செய்வதை பார்த்து இரசிக்கக் கூட உனக்குத் திராணி இல்லையா?  இதையெல்லாம் செய்ய உன்னால் முடியாது என்பது எங்களுக்குத் தெரியும். காரணம் இதற்கெல்லாம் கொஞ்சமாவது அறிவு தேவை. இப்படிச் செய்வதிலிருந்தே உனக்கு அது குறைவு என்பதை நீயே உலகிற்குப் பறை சாற்றுகிறாய்!

இதுபோன்ற கோலங்களை இந்திப் படங்களில் பார்த்தால் மகிழ்ச்சியில் துள்ளுகிறாய். ஆனா நேரடியாக இது போன்ற கோலங்களைப் பார்த்தால் மனம் வெதும்புகிறாய். 'நம்மால் முடியவில்லையே!' என்று இயலாமையில் வன்முறையாளனாக  மாறுகிறாய்!

தம்பி! நீ தவறான போதனைகளால் பீடிக்கப்பட்டிருக்கிறாய். உங்களுக்கு எப்படிக் கலாச்சாரங்கள்  உள்ளவனவோ அதே போல உலகமெங்கிலும் அனைத்து இனத்தவருக்கும் பண்பாடுகள், கலாச்சாரங்கள்  உள்ளன. இருக்கத்தான் செய்யும்.

அது நமக்குப் பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ அதற்கு மரியாதைக் கொடுக்கத்தான் வேண்டும். எல்லாப் பண்பாடுகளும், கலாச்சாரங்களும்  உயர்ந்தவைகள் தாம். எதுவும் தாழ்ந்ததில்லை.

அது பண்பாடு உள்ளவனுக்குத்தான் தெரியும். ஆனால் உனக்குத் தெரியவில்லையே! பணபாட்டோடு வளர்க்கப்படாதவர்களின் செயல்கள் இப்படித்தான் இருக்கும்.

தம்பி! மற்றவர்களின் கலை கலாச்சாரங்களைப் பற்றி பொறாமை கொள்ளாதே.  பொறாமை என்பது அழிவு சக்தி. ஆக்ககரமாக வாழ கற்றுக்கொள். எல்லாக் கலைகளுமே ஆக்ககரமான செய்திகளைச் சொல்லுகின்றன. தெரியவில்லை என்றால் கேட்டுத் தெரிந்து கொள்.

இது வெறும் கோலம் மட்டும் அல்ல.  ஆயிரக்ககணக்கான சிறு சிறு  உயிர்களுக்கு  அது உணவாகவும் பயன்படுகிறது என்பது தான் அதற்கான முக்கியத்துவம். உனக்குத் தெரியாது என்பதனால் அது தேவை இல்லை என்பதாகாது.

இப்படி வெறித்தனமாக நடந்து கொள்வது யாருக்கும் உதவாது.மற்றவர்களின் கலாச்சாரங்களை மதிக்கக் கற்றுக்கொள். எல்லாக் கலைகளையும் ஏற்றுக்கொள். அதனால் ஒன்றும் எதுவும் குறைந்து போய் விடாது.

வேண்டால் இந்த விபரீத விளையாட்டு!