Tuesday, 30 October 2018

இரண்டு நாள் விடுமுறை...!

தீபாவளிக்கு இரண்டு நாள் விடுமுறை வேண்டும் எனக் கேட்பதில் தவறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்நாட்டின் முக்கிய பெரும்பான்மை இனங்கள் என்றால் அது மலாய், சீனர், இந்தியர் என்று வரிசைப்படுத்தலாம். அந்த இரண்டு இனத்தவருக்கும் பெருநாள் காலங்களில் இரண்டு நாள் விடுமுறை என்பது வழக்கமான ஒன்றாகி விட்டது. 

ஆனால் தீபாவளி என்னும் போது என்ன காரணத்தை வைத்து அன்று,  ஒரு நாள் விடுமுறை, என்று ஒரு நிலையை உருவாக்கினாகளோ  நமக்குத் தெரியவில்லை. எங்கோ ஒரு தவறு நடந்திருக்கிறது. அந்தத் தவற்றை இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பது தீபாவளி கொண்டாடுபவர்களைச் சிறுமைப்படுத்துகின்ற ஒரு செயல் என்று தான் சொல்ல வேண்டும். இதில் பெரிய இனம் சிறிய இனம், உயர்ந்த இனம் தாழ்ந்த இனம் என்றெல்லாம் ஒன்றுமில்லை.

நாம் அனைவரும் மலேசியர், அவ்வளவு தான். அனைத்து இனங்களுக்கும் சம உரிமை உண்டு. மலாய்க்காரர் சீனர் போல இந்தியர்களுக்கும் அந்த உரிமை உண்டு. மூன்று இனங்களுக்கும் அந்த இரண்டு நாள் உரிமை உண்டு. இப்போது ஒரு சாரார் முழுமையாக அந்தத் தீபாவளி பெருநாளை அனுபவிக்க முடிவதில்லை. ஒரு நாள் விடுமுறை. அடுத்த நாள் வேலை! அடுத்த நாள் வேலைக்கு முதல் நாளே தீபாவளி அன்றே மூட்டை முடிச்சுக்களைக் கட்டிக் கொண்டு புறப்பட வெண்டும்! மிகவும் ஒரு இக்கட்டான சூழலில் தான் இந்து பெருமக்கள் தீபாவளியைக் கொண்டாட வேண்டியுள்ளது.

நாம் கேட்பதெல்லாம் மற்ற இனத்தவருக்கு எப்படி அவர்களின் பெருநாளின் போது இரண்டு நாள் விடுமுறையோ அதனையே தீபாவளிக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்பதே நமது வேண்டுகோள். அதுவும் பெரும்பாலும் தீபகற்ப மலேசியா மட்டுமே.

இதனைத் தொடர்ந்து ஒரு பிரச்சனையாகவே இழுத்தடித்து, நாறடித்துக் கொண்டே போவதைவிட அதற்கு ஒரு முடிவை பக்கத்தான் அரசாங்கம் கொண்டு வர வேண்டும்.

எங்களது உரிமைகள் பல கடந்த காலங்களில் மறைக்கப்பட்டு விட்டன. பறிக்கப்பட்டு விட்டன. ஒடுக்கப்பட்டு விட்டன. இது தொடர்வது யாருக்கும் நல்லதல்ல,

இப்போது நாங்கள் விரும்பிய அரசாங்கம் நாட்டை ஆள்கிறது. நாங்கள் விரும்பிய தலைவர்கள் அரசாங்கத்தில் இருக்கிறார்கள்.

இந்த ஆண்டு இரண்டு நாள் விடுமுறை, நம்புகிறோம்!


அம்னோவுக்கு எதிர்காலம் உண்டா...?

இப்போது மலேசியர்களிடம் உள்ள ஒரு கேள்வி "அம்னோ இன்னும் எத்தனை நாளைக்கு   உயிர் பிழைக்கும்?" என்பது தான். 

போகிற போக்கைப் பார்க்கின்ற போது அம்னோ இனி தாக்குப் பிடிப்பது கடினம் என்று தான் தோன்றுகிறது! டாக்டர் மகாதிர் அம்னோவை ஒழித்துக்கட்டுவதை முதன்மைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார்.

இப்போது அம்னோவில் நடக்கின்ற சம்பவங்களைப் பார்க்கின்ற போது அதற்கு சீக்கிரம் ஒரு முடிவு உண்டு என கணிக்கலாம் அம்னோவின் நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெகு விரைவில்  டாக்டர் மகாதிரின் பெர்சாத்து கட்சியில் இணைவார்கள் என பெர்சத்துவின் உச்சமன்ற உறுப்பினர் காதிர் ஜாசின்  கூறுகிறார். இந்தச் செய்திக்கும் மகாதிருக்கும் சம்பந்தமில்லை எனச் சொன்னலாம் இது நடக்கக் கூடிய சாத்தியம் உண்டு என அரசியல் பார்வையாளர்கள் கணிக்கின்றனர்.

அரசியலில் எதுவும் நடக்கலாம். அதுவும் அம்னோவில் இருக்கின்ற மேல்தட்டு வர்க்கத்திற்கு எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்று ஒவ்வொருவரும் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டு ஒவ்வொரு நிமிடமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்!  காரணம் லஞ்சம், ஊழல்,  வரவுக்கு மேல் செலவு, லண்டனில் ஷாப்பிங், பாரிசில் பசியாறல் என்று சுகபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களுக்கு இப்போது புகலிடம் ஒன்றே ஒன்று தான். அது தான் டாக்டர் மகாதிரின் பெர்சாத்து கட்சி!

ஆனாலும் பெர்சாத்துவில் அவர்கள் வரவேற்கப்படுகிறார்களே தவிர  அவர்களின் ஊழல்கள் வரவேற்கப்படவில்லை! அதனை அவர்கள் ஊழல் தடுப்பு ஆணையத்தில் நிருபித்து நல்ல சுதந்திர மனிதராக பெர்சாத்துவில் வலம் வரலாம். ஆனால் அம்னோவில் கிடைத்த அரவணைப்பு, மரியாதை எல்லாம் இங்குக் கிடைப்பது கடினம்.

அம்னோவுக்கு எதிர்காலம் உண்டா என்னும் கேள்விக்கு இப்போதே நாம் பதில் சொல்லலாம். எதிர்காலம் இல்லை என்றே சொல்லலாம்.  கட்சியை வழி நடத்த நம்பகமான தலைவர் இல்லை.  மக்கள் ஆதரவு பெற்ற தலைவர் இல்லை. பொதுவாக அம்னோவில் உள்ள தலைவர்களைத் திருடர்கள் என்று பார்க்கின்ற அளவுக்கு நிலைமை விபரீதமாகப் போய்விட்டது!

எதிர்காலம் இல்லை!

Monday, 29 October 2018

பெர்சாத்து இன்னொரு அம்னோ..?

டாக்டர் மகாதிர் தலைமையில் இயங்கும் பெர்சாத்து கட்சி இப்போது திசை மாறுகிறதோ என்று எண்ண வேண்டியுள்ளது.

அது ஒரு தனி கட்சியாக அரசாங்கத்தில் இடம் பெறாத கட்சியாக இருந்தால் அது பற்றி யாரு கவலைப்படப் போவதில்லை. அது அவர்களுடைய பாடு என்று விட்டு விடலாம். ஆனால் நிலைமை அப்படி இல்லை.  

இருக்கின்ற அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் பெர்சாத்துவில் சேர்வதில் தவறு இல்லை. அம்னோவே ஒன்றுமில்லாமல் போனாலும் தவறில்லை. ஆனால் அங்கிருந்து பெர்சாத்துவில் சேர்ந்து அவர்கள் அமைச்சர்களானால் அது சரியாகப்படவில்லை. அவர்கள் பழைய அம்னோ அமைச்சர்கள் என்பதால் அவர்களுக்குப் பதவி கொடுக்கப்பட வேண்டும் என்பதில் எந்த நீதியும் இல்லை.

அவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுப்பதும் அவர்கள் கடந்த காலங்களில் செய்த ஊழல்கள்  அனைத்தையும் மறைப்பதும் சரியான செயலாகப்படவில்லை.

பெர்சாத்துவில் சேர்பவர்கள் சேரட்டும். அதில் நமக்கு ஒன்றும் கருத்து வேறுபாடில்லை. ஆனால் அவர்களுக்கு எந்தப் பதவியும் - குறிப்பாக எந்த அமைச்சர் பதவியும் -  கொடுக்கக் கூடாது என்பதில் பெர்சாத்துவே கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் சாதாரண உறுப்பினர்களாக இருந்து மக்களுக்குச் சேவை செய்யட்டும். அதனை நாம் வரவேற்போம். சேவை செய்யத் தானே அவர்கள் அரசியலுக்கு வந்தார்கள், அதனால் அவர்கள் அமைச்சர் பதவியை  ஏற்காமல் சேவைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளத் தக்கது தானே! 

அதோடு மட்டும் அல்ல. அவர்கள் அனைவருமே ஊழல் புரிந்தவர்கள் அல்லர் என்பதாக ஊழல் தடுப்பு ஆணையத்திடமிருந்து நற்சான்றிதழ் பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும். இது விளையாட்டுத் தனமான காரியம் அல்ல.  காரணம் அம்னோ என்றாலே எம்மருங்கிலும் ஊழல் என்றாகிவிட்டது! அக்கட்சியை அப்படியெல்லாம் நம்பிவிட முடியாது.

நாம் சொல்ல வருவதெல்லாம் அம்னோ கட்சியினரை வரவேற்பதில் ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டும். அவர்களின் பின்னணி ஆராயப்பட வேண்டும். அவர்களின் சொத்துக்கள், எத்தனை பெண்டாட்டி பிள்ளைகள்,  எத்தனை பாலியல் பின்னணிகள் அனைத்தும் ஆராய்ந்த பின்னரே அவர்கள் பெர்சாத்துவில் இணைக்கப்பட வேண்டும், அதுவும் சாதாரண உறுப்பினராக!

துங்கு ரசாலி சொல்லுவது போல "கோழிக்கூண்டுக்கள் நரியை விடுவது போல!"

மருமகனுக்கு சீதனம் ...!


பகாங் , சாபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜு,   இந்த சமுதாயம் போகிற போக்கைப் பார்த்து புலம்பியிருக்கிறார்! நமக்கும் வேதனை தான்.

நீங்கள் இரண்டு தடவை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். இந்நேரம் நமது மக்களைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். இருந்தாலும் இது ஒன்றும் அதிசயமல்ல.

நம்மிடையே ஒரு சில 'கஞ்சத்தின் உச்சம்'  என்று சொல்லக்கூடிய மனிதர்கள் இருக்கிறர்கள்! இது ஒரு வகை மனித இனம். யாருடனும் ஓட்டாதவர்கள்! எங்குப் பணம் கிடைக்குமோ அங்கு ஓட்டிக் கொள்ளுபவர்கள். சந்தர்ப்பவாதிகள்!  பணம் தான் அவர்களின் இலக்கு. பணத்திற்காக ஆயிரம் முறை காலில் விழுவார்கள்! ஆயிரம் முறை கூழைக் கும்பிடு போடக் கூட  தயங்கமாட்டார்கள்!

எதைப் பற்றியும் கவலைப்படாத மனிதர்கள் இவர்கள். நமது இனம், நமது மொழி, நமது பண்பாடு, நமது கலாச்சாரம் என்றெல்லாம் அவர்களிடம் பேச முடியாது.எல்லாவற்றிலும் இலாப நஷ்டம் பார்ப்பவர்கள்!  ஒவ்வொன்றிலும் தங்களுக்கு என்ன இலாபம் என்று பார்ப்பவர்கள்! 

ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி பணம் வசூல் செய்பவர்கள். பணம் பிடுங்குவதற்கு ஒரு சிறிய ஓட்டை கிடைத்தால் போதும் அங்குப் புகுந்து விடுவார்கள்! 

இது தான் நடந்திருக்கிறது சட்டமன்ற உறுப்பினர் காமாட்சிக்கு. இது அவருக்கு முதல் அனுபவம். என்ன நடந்தது? நான் மேல் சொன்ன மனித ஜென்மம் ஒன்று அவரின் மருமகனுக்கு  தீபாவளி சீதனம் கொடுக்க வேண்டுமாம் அதற்குப் பணம் கேட்டு சட்டமன்ற உறுப்பினரை நாடியிருக்கிறார் அந்த மனிதர்!

நாம் என்ன பிரச்சனைகள் இல்லாத சமுதாயமா? கல்விக்குப் பணம் கேட்கலாம். ஏழை, எளியவர் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் சாப்பாட்டுக்கு  உதவி கேட்கிறார்கள். வேலையில்லாமல் திண்டாடுபவர்கள் உதவி கேட்கிறார்கள். நோயோடு போராடும் கணவன் மனைவி ஒரு வழியும் இல்லாமல் உதவி கேட்கிறார்கள். நமது பிரச்சனைகள் கொஞ்சமா, நஞ்சமா?

ஆனால் மாப்பிளைக்குச் சீதனம் செய்யப் பணம் வேண்டுமென்றால் என்ன செய்யலாம்? அந்த மனிதரை என்ன செய்யலாம்? இவர்கள் வெட்கம் கெட்டவர்கள். யாரிடம் வேண்டுமானாலும் பண உதவி கேட்பார்கள்! மலாய், சீனர் இப்படி எந்தச் சட்டமன்ற உறுப்பினரிடமும் அவர்களிடம் போக இவர்கள் தயங்கமாட்டார்கள்.

இந்த மனிதர்கள் ஒன்றுமில்லாதவர்கள் என்று நாம் ஒரு முடிவுக்கு வரக்கூடாது!  இவர்கள் பணம் உள்ளவர்கள். ஆனால் மற்றவர்கள் கஷ்டம்,நஷ்டம் பற்றியெல்லாம் இவர்களுக்குக் கவலையில்லை. அவர்கள் அப்படித்தான் வளர்க்கப்பட்டவர்கள். அப்படித்தான் இருப்பார்கள்.

இனி இது போல யாரேனும் வந்தால் ஒன்று சொல்லலாம். மருமகனைக் கூட்டிக் கொண்டு வா நாங்களே சீதனம் கொடுக்கிறோம்! வேறு என்ன சொல்ல?

Saturday, 27 October 2018

நான் மலேசியன்..!

"நான் மலேசியன்"  என்னும் பெருமிதம் நமக்கு வர வேண்டும் என்று கூறுகிறார் முன்னாள் அமைச்சரான டான்ஸ்ரீ ரபிடா அஸீஸ்.

நல்லதொரு செய்தியைக் கொடுத்திருக்கிறார் ரபிடா.  வர வேற்கிறோம். அவர் பெருமிதம் அடைய வழியுண்டு. அவருடன் சேர்ந்த அனைத்து அரசியல்வாதிகளும் பெருமைப்பட வழியுண்டு.  மேலும் மேலாதிக்க சமுதாயத்தினர் பெருமிதம் கொள்ள வழியுண்டு. சீன சமுதாயம் பெருமிதம் கொள்ள வழியுண்டு.  நாட்டின் பொருளாதாரமே அவர்கள் கையில். அதனால் அவர்களும் பெருமிதம் கொள்ள வழியுண்டு.

ஆனால் கடைநிலையில் இருக்கின்ற இந்திய சமுதாயம் எந்த வகையில் "நான் மலேசியன்" என்று பெருமிதம் அடையும்?

குடியுரிமை இல்லை, நாடற்றவர்கள் கல்வியில் புறக்கணிப்பு, அரசாங்க வேலைகளில் புறக்கணிப்பு, தனியார் நிறுவனங்களில் புறக்கணிப்பு, குண்டர் கும்பளின் வளர்ச்சி  -  இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம். நாங்கள் "நான் மலேசியன்" என்று சொல்லிப் பெருமைப்பட  என்ன இருக்கிறது! 

நாங்கள் நல்லது செய்தால் அது மறைக்கப்படுகிறது. நாங்கள் சாதனைகள் செய்தால் அது மறைக்கப்படுகிறது. விளையாட்டுத் துறைகளில் எங்கள் பிள்ளைகள் புறக்கணிக்கப்படுகின்றனர்.  எங்களின் திறமைகள் வீணடிக்கப்படுகின்றன. நாட்டுக்காக சாதனைகள் செய்தாலும் எங்கள் முகம் தெரிவதில்லை.

எல்லா வகையிலும் நாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம். இந்த நாட்டை உருவாக்கியவர்கள் நாங்கள். அதற்கான மதிப்போ, மரியாதையோ அரசு  தரப்பிலிருந்து எங்களுக்குக் கிடைக்கவில்லை. நேற்று வந்த இந்தோனேசியர், நேற்று வந்த வங்காள தேசிகள், நேற்று வந்த பாக்கிஸ்தானியர்  இவர்களுக்குக் கொடுக்கப்படுகின்ற முன்னுரிமை எங்களுக்கு மறுக்கப்படுகின்றன. 

நாங்கள் சமய ரீதியாக அடக்கப்படுகின்றோம். எங்களது கோவில்கள் எந்த அறிவுப்பும் இல்லாமல் உடைக்கப்படுகின்றன. உடைக்கப்படும் கோவில்களுக்கு மாற்றிடம் கொடுக்கப்படுவதில்லை. ஒரு சிறிய பிரச்சனையை வருடக் கணக்கில் அதிகாரிகளால் இழுத்தடிக்கப் படுகிறது.

இப்படித் தான் இந்நாட்டில் ஒவ்வொரு தமிழனும் பிரச்சனைகளை எதிர் நோக்குகிறான். அவைகளைத் தீர்க்க வேண்டும் என முன்னாள் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நால் அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும் என எதிர்ப்பார்க்கிறோம்.

நாங்கள் வளர்ந்தால் தான் "நான் மலேசியன்!"  என்கிற உணர்வு வரும்.

நான் மலேசியன்!

Thursday, 25 October 2018

இந்தியர்களின் குடியுரிமை...!

சமீபத்தில் 1641 இந்தியர்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட்டிருக்கிறது என்பதை அறிய அப்படியொன்றும் மகிழ்ச்சி அளிக்கவில்லை என்பதை நாம் சொல்லித்தான்  ஆக வேண்டும். 

இதுவரை குடியுரிமை கிடைக்கப் பெற்றவர்கள் அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.  குடியுரிமை பெற்றவர்களில் 103 வயது  மூதாட்டியும் அடங்குவார்! இந்த வயதில் பாட்டியால் எதுவும் செய்ய இயலாது என்பதால் இதெல்லாம் பக்காத்தான் அரசாங்கத்தின் ஒரு சாதனையாக அவர்கள் ஏற்றுக்கொள்ளலாம்; நம்மால். ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒன்று செய்யலாம். இந்த வயதான பாட்டிக்கு எந்தப் பதவியும் கொடுக்க முடியாது. முடிந்தால் அவருக்கு டத்தோ, டான்ஸ்ரீ, துன் பட்டங்களைக் கொடுக்கலாம்! அரசாங்கம் கொடுக்கும் பட்டங்களை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று ஜ.செ.க.கூறுகிறது. அதனால் இத்தனை ஆண்டுகள் பொறுமையோடு இந்த எருமைகளின் முடிவுக்காக அவர் காத்திருந்திருக்கிறார். அப்படியென்றால் இத்தனை  ஆண்டுகள் அவர் பட்ட வேதனைகள்,கஷ்டங்கள் அதற்கெல்லாம் என்ன தீர்வைக் காண முடியும்? பட்டங்களாவது கொடுக்கட்டுமே!

அதுவும் உள்துறைஅமைச்சர்  மொகிதின் யாசின் நல்லதொரு  விளக்கத்தை அளித்திருக்கிறார்.    "அரசாங்கம் வழங்கிய  தேர்தல்  உறுதிமொழிகளின் அடிப்படையில்  60 வயது அதற்கு மேற்பட்டவர்களுக்கான குடியுரிமை விண்ணப்பங்களுக்கு அங்கீகாரம் வழங்கியிருக்கிறது!"

குடியுரிமை கேட்டு விண்ணப்பம் செய்தவர்கள்  3853  என்பதும்  60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்குக் குடியுரிமை  கொடுப்பதும் - பக்காத்தான் அரசாங்கம் - இந்தியர்களை,  பாரிசான் அரசாங்கத்தைப் போலவே, இளிச்சவாயர்களாக நினைப்பதாகவே தோன்றுகிறது.

நூறு  நாள்களுக்குள் நாங்கள் குடியுரிமை கொடுப்போம் என்று சொன்ன வாக்குறுதி என்ன ஆயிற்று என்று நாங்கள் கேட்கத்தான் செய்வோம். காரணம் இது ஒன்றும் கோடி கோடியாகப் பணம் செலவழிக்க வேண்டிய விஷயம் அல்ல. ஏற்கனவே பல ஆயிரக்கணக்கான குடியுரிமைகள் அமைச்சரின் அலுவலகத்தில் குவிந்து கிடக்கின்றன. அமைச்சரின் தலையசைவுக்காக அவைகள் காத்துக்கிடக்கின்றன என்று சொல்லப்படுகிறது.  

பாரிசான் அரசாங்கம் எப்படி ஒரு நேர்மையற்ற அரசாங்கமாக இருந்ததோ பக்காத்தானும் அப்படித்தான் செயல்படுகிறது என்பதும்  உண்மையிலுல் உண்மை.  சீனர்களுக்கு முன்னுரிமை  கொடுப்பதும் இந்தியர்களைப் புறம் தள்ளுவதும் பக்காத்தான் மேற்கொள்ளும் அரசியல் தந்திரமாகவே தோன்றுகிறது.

பார்க்கலாம்! இந்தியர்களின் குடியுரிமை பிரச்சனை அடுத்த தேர்தல் வரை இழுத்துக் கொண்டு போகுமோ!

ஆலயப் பிரச்சனைகள்....!

பொதுவாக நம்மைச் சுற்றியுள்ள இந்து ஆலயங்களைப் பற்றி ஒரு கண்ணோட்டம் விட்டால் பலவிதமானப்  பிரச்சனைகளை அவைகள் எதிர் நோக்குகின்றன. 

இந்தப் பிரச்சனைகள் எங்கிருந்து  தொடங்குகின்றன?  நிச்சயமாக அது அரசாங்கத்திடமிருந்து அல்ல என்பது உறுதி. ஒவ்வொரு கோவிலிலும்  தலைமைத்துவ பிரச்சனைகள் தான் தலை தூக்கி நிற்கின்றன! ஒவ்வொருவரும் தலைவர்கள் ஆக வேண்டும் என நினைக்கின்றார்கள்! பதவி கிடைக்காத போது என்னன்னவோ பெயரில் போராட்டங்கள் நடத்துகின்றார்கள்!  இந்தப் போராட்டங்கள் மூலம் யாரும் எந்தப் பயனையும் அடைவதில்லை!

சரி அப்படியென்றால் பயன் அடைபவர் யார்? இவர்களே பிரச்சனைகளை உருவாக்கி அந்தப் பிரச்சனைகளை எங்குக் கொண்டு செல்லுகிறார்கள்? முதலில் தான் சார்ந்த அரசியல் கட்சி!  அந்த அரசியல் கட்சியின் தலைவர் அவருக்கு வேண்டியவராக இருக்கலாம். அவருக்கு அவர்களுடைய ஆதரவு தேவை. அதனால் நான் பார்த்துக் கொள்ளுகிறேன் என்பார். அவரால் முடியாது. அதன் பின்னர் கொஞ்சம் பயமுறுத்துவதற்காக நகராண்மைக் கழகத்தை உள்ளே இழுப்பார். 

இப்போது அந்த இந்து கோவிலின் பிரச்சனை அரசாங்கப் பிரச்சனையாக மாறிவிடும்! நகராண்மைக் கழகம் இந்து கோவில்களை உடைப்பதில் தீவிரம் காட்டும்.  அவர்களுக்கு கோவில்களை இடிப்பதில் ஏகப்பட்ட சந்தோஷம். உடனே ஆர்ப்பாட்டம், பதாகைப் போராட்டம் இப்படியே தொடரும்.

இந்தப் பிரச்சனை எங்கோ ஆரம்பித்து எங்கோ போய் முடியும். உண்மையைச் சொன்னால் இப்படி ஒரு பிரச்சனை தேவையே இல்லை! தலைமைத்துவ போட்டி என்பது இயல்பு தான். ஆனால் அது ஜனநாயக முறையில் சந்திக்க வேண்டும். தேர்தல் வரும் போது அதைச் சந்திக்க வேண்டும். ஆனால் அதற்கிடையில் கோவிலில் பிரச்சனைகளை உருவாக்கக் கூடாது.  கோவில் என்பது பொது  இடம். அது மக்களின் வழிப்பாட்டுத் தலம். அங்குப் பிரச்சனைகளை உருவாக்கி  மக்கள்  வழிபட தடையாய்  இருப்பது  மிகவும்  பாவமானச் செயல். இப்படிச் செய்வதெல்லாம் சாபம் என்பதை உணர வேண்டும். பதவிக்குக் குறுக்கு வழியெல்லாம் கிடையாது. உழைப்பு, தொண்டு மட்டுமே  பதவியைக் கொண்டு வரும்.

இந்து கோவில்களில் தொடர்ச்சியாக நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் எல்லாம் ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

Wednesday, 24 October 2018

கல்வி அமைச்சரிடம் ஒரு கேள்வி..!

சமீபத்தில் நடைபெற்ற தேசியக் கல்வி சீரமைப்பு - கல்வியமைச்சு கலந்துரையாடலின் போது கல்வி அமைச்சர் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். அவர் கூறியதாவது:     

                     "ஒரு தமிழரால்  தான் (துணைக் கல்வி அமைச்சர்) தமிழ்ப்பள்ளிக்குச்  செயலாற்ற இயலும் என்ற எண்ணம் மாற வேண்டும்."

இந்தக் கருத்து நியாயமானது தான். குறை சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் அதே கலந்துரையாடலின் போது ஒரு சீனரான துணைக் கல்வி அமைச்சரும் அதில் கலந்து கொண்டார்.

துணைக் கல்வி அமைச்சரின் பணி என்ன? சீனப் பள்ளிகளின் நலன் தான் அவரின் முதல் பணி.  தேசியப் பள்ளிகள் என்றால் கல்வி அமைச்சரே நேரடியாக கலந்து கொள்வார். அப்படியே  துணைக் கல்வி அமைச்சர் அங்கு போனாலும் அவர் திறந்த மனதுடன் வரவேற்கப்படமாட்டார்! நிச்சயமாக ஒரு சீனரை அவர்கள் வரவேற்பார்கள் என எதிர்பார்க்க முடியாது.

எப்படிப் பார்த்தாலும் கல்வி அமைச்சர் மட்டும் தான் தேசியப் பள்ளிகளில் வலம் வர முடியும்.

அப்படியென்றால் துணைக்  கல்வி அமைச்சரின் பணி என்ன? அவரின் முக்கிய பணி சீனப்பள்ளிகள் தான். சீனப்பள்ளிகளும் அவரைத் தான் விரும்பவர். அவருடன் தான் பேச்சுவார்த்தை நடத்த விரும்பவர். காரணம் அவர்கள் ஓர் இனம். அவருடன்  பேசும் போது அவர்கள் பேசுவது இயல்பாக இருக்கும். மேலும் அமைச்சரும் சீன வழி கல்வி கற்றவர். அவர்களுக்குச் சாதகமாகத்தான் அவர் இயங்குவார்.  ஒன்றைச் சொல்லலாம். எத்தனையோ ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டிருந்த சீனப் பள்ளிகளின் UEC  சான்றிதழ்   பிரச்சனையை ஒரு சில நாள்களிலேயே முடித்து வைத்தார். அதாவது அவர் பதவி ஏற்றதும் செய்த முதல் வேலை அது தான்.  தமிழ்ப்பள்ளிகளைப் பழுது பார்க்க மானியம் இல்லை ஆனால் சீனப்பள்ளிகள் புதிதாகக் கட்ட மானியம் உண்டு என்பதை சமீபத்தில் காட்டியிருக்கிறார்.

அவர் செய்தது தவறு என்று நான் சொல்லவில்லை. இனம் இனத்தோடு தான் சேரும் என்பார்கள். அப்படித்தான் இருக்க வேண்டும். நான்  அதனை  விரும்புகிறேன். தமிழர்களைத் தவிர  வேறு யாரும் பெருந்தன்மை என்னும் சொல்லைப் பயன் படுத்துவதில்லை! நம்   இளிச்சவாயத்தனம்  தான்  நமது  பெருந்தன்மை  என்பது!

இந்த  நிலையில்  தமிழ்ப்பள்ளிகளின் ஒவ்வொரு  பிரச்சனைக்கும்  ஒரு  மலாய் கல்வி  அமைச்சரைப் போய் பார்ப்பது என்பது நிச்சயமாக அது  ஓர்  இயல்பான  உரையாடலாக  இருக்காது. மேலும் அமைச்சர் நேரடியாக எந்த உரையாடலிலும் கலந்து கொள்ளப்போவதில்லை. அவருடைய அதிகாரிகளில் ஒருவரை அனுப்பி வைப்பார். இதெல்லாம் எந்தப் பயனையும் அடைய வழியில்லை!

நாம் சொல்ல வருவதெல்லாம் ஒரு தமிழரால் தான் நமது பிரச்சனைகளைப் புரிந்து கொள்ள முடியும் என்பது தான்.  ஓரு மலாய் அமைச்சராலோ, மலாய் அதிகாரியோ 'வேண்டுமென்றே' பிரச்சனைகளைப்  புரிந்து கொள்ள மாட்டார்கள்!

கல்வி அமைச்சர் சொல்வதில் நமக்கு உடன்பாடில்லை. அவரோ, அவரின் அமைச்சை சார்ந்தவர்களாளோ தமிழ்ப்பள்ளிகளின் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது  என்பதே நாம் முன் வைக்கும் வாதம்.

கல்வி அமைச்சரிடம் ஒரே கேள்வி: உங்களால் முடியுமா என்பது தான்!
Monday, 22 October 2018

தில்லுமுல்லு தேர்தல்..!


நடந்து முடிந்த ம.இ.கா. மேல்மட்டத் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட  டான்ஸ்ரீ இராமாசாமி ஓர் 'அதிர்ச்சி' தகவலை வெளியிட்டிருக்கிறார். அவர் குற்றச்சாட்டு: கள்ள வாக்குகள் கரைபுரண்டு ஓடின!  தில்லுமுல்லுகள் தலைவிரித்தாடின!  அநீதீயான அக்கப்போரான ஒரு தேர்தல்!  என்று அவர் சொல்லுகிறர்.

நமக்கு ஒன்றும் அதில் வியப்பில்லை. டான்ஸ்ரீ என்ன சொல்ல வருகிறார்?  ம.இ.கா. வில் இது வரை நடந்த தேர்தல்கள் எல்லாம் நீதியாக நடந்தன என்று சொல்ல வருகிறாரா?  அவருக்கு அப்படி ஒரு நினைப்பு இருந்தால் முதலில் அதனை மறக்க வேண்டும். நீதி, நியாயம் பற்றி ம.இ.கா.விடம் கேட்பது கொஞ்சம் கூட நியாயமே இல்லை. அவர்களிடம் இல்லாத ஒன்றை நம்மிடம் சொல்ல வருகிறார்!

ம.இ.கா. எந்தக் காலத்தில் நீதி, நேர்மையைக் கடைப்பிடித்திருக்கிறார்கள்?  தலைமைத்துவத்தை சார்ந்த, தலைவர்களுக்குக் கீழ்படிந்த,  சொன்ன சொல்லைக் கேட்கிற, தலைவருக்குத் தலை ஆட்டுகிற ஆட்டுக்குட்டிகள் தான் அவர்களுக்குத் தேவைப் படுகின்றனார்! இதில் போய் என்ன நீதி, நேர்மை?

கொள்ளை அடிப்பவர்களுக்கென்று தனிப் பாதை உண்டு. அந்தப் பாதையில் பயணம் செய்வது என்பது தனி கலை. எல்லாராலும் அதில் பயணம் செய்ய முடியாது. அந்தப் பாதையில் பயணம் செய்ய 'முற்றும் துறந்தவர்களாக' இருக்க வேண்டும்! மானம், ஈனம், வெட்கம். ரோஷம் எதுவும் இல்லாத மரக்கட்டைகளாக இருக்க வேண்டும். அது ஒரு தனி வழி!

அந்தச் சூழலில் ஒத்துப் போகுபவர்கள் தான் தலைமைத்துவத்துடன் ஒத்து ஊத முடியும்! அது தான் ம.இ.கா. . தேர்தல். பொதுவான  அரசியலே அப்படித்தான்.  ஆனால் தொண்டு அல்லது சேவை மட்டுமே என்று நினைக்கும் அரசியல் என்பது வேறு.  ஆனால் இவர்கள் சூழல் வேறு. வாழ்ந்த பின்னணி வேறு.  பணம் ஒன்று மட்டுமே குறிக்கோள்.  "இனி என் குடும்பம் கஷ்டப்படக் கூடாது" என்பது மட்டுமே இவர்களது குறிக்கோள்! ஆனால் பாவம்! அவர்களின் குடும்பத்திற்கு அவமானத்தையும், மக்களின் சாபத்தையும் இவர்கள் மூலம் தொடர்வது  தான் மிச்சம்.

டான்ஸ்ரீ இராமசாமிக்கு நாம் சொல்லுவதெல்லாம் ஒன்று தான். ம.இ.கா. கடைசி காலம் வரை இப்படித்தான் இருக்கும். ஏதோ இருக்கிற சொத்துக்களைப் பங்குப் போடுவது தான் நோக்கமே தவிர, வேறு நோக்கம் அவர்களிடம் இல்லை!  இந்தியர்கள் ம.இ.கா. வுக்கு மீண்டும் வருவார்கள் என்பதெல்லாம் வெறும் கனவு என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. இத்தனை ஆண்டுகள் செய்ய முடியாததை இனி இவர்கள் செய்வார்கள் என்பதெல்லாம் சும்மா சால்ஜாப்பு என்பார்களே அது தான்!

தில்லுமுல்லுகளைத் தவிர இவர்களிடம் வேறொன்றுமில்லை!

பக்காத்தான் ஆட்சியில் இதுவரை...!

பக்காத்தான் நூறு நாள் ஆட்சியில் என்னத்தைச் சாதித்தார்கள் என்று கேட்டால் அப்படி  மெச்சும் படியாக ஒன்றுமில்லை என்று தான் சொல்ல வேண்டி வரும். அந்த நூறு நாள் சாதனைகள் எல்லாம் வெறும் தேர்தல் கால வாக்குறுதிகளாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். காரணம் பக்காத்தான் வெற்றி பெறும் என்று யாரும் நினைக்கவில்லை. அதே போல பாரிசான் தோல்வியுறும் என்பதும் கனவில் கூட தோன்றவில்லை.

ஆனால் பக்காத்தான்  வெற்றி பெற்று விட்டது. அதுவே பெரிய சாதனை. அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. அவர்கள் சொல்லுகின்ற காரணங்கள் சரியானவைகள் தான். 

அரசாங்க ஊழியர்களை அவர்களால் மாற்ற முடியவில்லை. ஊழல் ஆட்சியில் திளைத்தவர்கள், மக்களிடமிருந்து நக்கித் தின்றவர்கள் - இவர்களை மாற்றுவது என்பது லேசு பட்டம் காரியம் அல்ல! குட்டி நெப்போலியன்களாக வலம் வந்தவர்கள். இளைத்தவனைப் பார்த்தால் இளக்காரமாகப் பார்க்கின்ற ஜென்மங்கள்.  ஏதோ அவர்கள் ராஜப் பரம்பரைகள் என்பதாக ஒரு நினைப்பு.

ஆக, இந்த மன நிலையில் வலம் வந்தவர்களை ஒரே நாளில் மாற்றி விட முடியாது. அல்லது நூறு நாள்களில் மாற்றி விட முடியாது. வேலை செய்யாமலே சம்பளம் வாங்கியவர்கள். இப்போது வேலை செய்யச் சொன்னால் எப்படி? அவர்களுடைய மனப்போக்கில் மாற்றம் ஏற்பட வேண்டும். அப்படி இல்லையென்றால் அவர்கள் தூக்கி எறியப்படுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.

ஆனால் எல்லாவற்றையும் விட ஒன்று மட்டும் மிக அடக்க, ஒடுக்கமாக  நிறைவேறியிருக்கிறது! ஊழலை ஒழிப்போம் என்கிற  தேர்தல் வாக்குறுதி மட்டும் சத்தம் இல்லாமல் நிறைவேறியிருக்கிறது. அரசாங்கம் சொல்லும் வரை யாரும் காத்திருக்கவில்லை. 

இலஞ்சம் என்கிற வார்த்தைக்கு  மட்டும் இப்போது பஞ்சமாகி போய்விட்டது. அதிகாரியோ, அடிமட்ட ஊழியனோ இலஞ்சம் என்று சொன்னாலே பயப்புடுகிறான்! எவனும் வாய் திறப்பதில்லை. கேட்கவும் பயப்புடுகிறான். கொடுக்கவும்  பயப்புடுகிறான்.  கேட்டாலும் அகப்படுவான்! கொடுத்தாலும் அகப்படுவான்! இது தான் இன்றைய நிலை! 

இந்த 14-வது பொதுத் தேர்தலின் வெற்றி இன்றைய நிலையில் இது மட்டும் தான். நாம் அதிகம் அழுத்தம் கொடுக்காமலே வந்த வெற்றி என்றால் அது "இலஞ்சம்" மட்டும் தான்! இது சாதாரணம் விஷயம் அல்ல!

புதிய அரசாங்கத்தின் வெற்றி, மிகப் பெரிய வெற்றி - இலஞ்ச ஒழிப்பு!

Sunday, 21 October 2018

குழாய் நீர் தூய்மையானதா...?

நீர், நிலம், இயற்கை வளங்கள் அமைச்சர்,  டாக்டர் சேவியர் ஜெயக்குமார்  நேரடியாக குழாயிலிருந்து வரும் தண்ணீர்  குடிப்பதற்குப் பாதுகாப்பானது என்கிறார். அது மட்டும் அல்ல, அந்தக் குழாய் நீரைத்தான் தானும் குடிப்பதாகச் சொல்லுகிறார். அப்படியென்றால் அவர் வீட்டாரும் குழாய் நீரைத் தான் குடிப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

டாக்டர் ஜெயகுமாருக்கு ஆதரவாக ஸ்பேன் என்கின்ற தேசிய நீர் சேவை ஆணையமும் அதனையே உறுதிபடுத்தியிருக்கிறது. அதாவது நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வரும் போது அது குடிப்பதற்குப் பாதுகாப்பானது என்று அவர்களும் அதனையே சொல்லுகின்றனர்.

நமக்கு ஒன்றும் ஆட்சேபனையில்லை.  டாக்டர் ஜெயக்குமார்,  தான் நேரடி  குழாய் நீரைக் குடிப்பதாகக் கூறியிருக்கிறார்.   ஆணையம் அது பாதுகாப்பான நீர் என்று சொன்னாலும் அங்கு உள்ளவர்கள் யாரும் குழாய் நீரைக் குடிப்போம் என்று சொல்லவில்லை.

நாம் பள்ளியில் படிக்கும் போதே தண்ணீரைக் கொதிக்க வைத்துத் தான் குடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பதால் அப்படித்தான் நம்மில் பல பேர் கொதிக்க வைத்த நீரைக் குடித்துக் கொண்டிருக்கிறோம்.

நாம் சொல்லும் முன்பே துணை சுகாதார அமைச்சர் ஓர் உண்மையைச் சொல்லியிருக்கிறார்.  நீர் சுத்தமாக இருக்கலாம். ஆனால் குழாய் வழியே போகும் அந்த நீர் எத்தனை இடர்பாடுகளைக் கடந்து செல்லுகிறது என்பதைச் சுட்டிக் காட்டியிருக்கிறார். துரு பிடித்த குழாய்கள் தான் நமக்கு வில்லன்!  எத்தனை ஆண்டு குழாய்கள் இவை என்று யாருக்குத் தெரியும்? வெள்ளைக்காரன் காலத்து குழாய்கள் எல்லாம் இன்னும் பயன்பாட்டில் இருந்து கொண்டு தான் இருக்கின்றன.  எத்தனை ஆண்டு கால துருக்கள் இந்த குழாய்களில் துளிர்த்து வளர்ந்து கொண்டிருக்கின்றன என்று யாருக்குத் தெரியும்? இந்த நிலையில் சுத்திகரிப்பு நீர் என்றால் மட்டும் போதுமா? சுத்திகரிப்பு நிலையம் நமது வீட்டுப் பக்கத்திலா இருக்கிறது! எப்படிப் பார்த்தாலும் சுத்திகரிப்பு நீர் முதலில் துருக்களின் தாகத்தைத் தணித்த பின்பு தான் அது மக்களுக்குப் போய்ச் சேருகிறது! அதனைத் தான் சுகாதார துணை அமைச்சர் அது மாசு படிந்த நீர் என்கிறார். 

நீர், நில அமைச்சர் மக்களைக் குழப்பக் கூடாது. கறை படிந்த நீரை "நான் பருகுகிறேன்" என்று சொல்லி மக்களை நோயுள்ளவர்களாக மாற்ற நினைக்கக் கூடாது.  அவர் சொல்லுவதில் உண்மை இருந்தாலும் கறை படிந்த குழாய்களையும் அவர் மறந்து விடக் கூடாது.

பதவியில் இருப்பவர்கள் பேசும் போது மிகக் கவனமாகப் பேச வேண்டும். அவர் சொலவதை என்னைப் போன்றவர்கள் பின் பற்றப் போவதில்லை. ஆனால் அவர் சொல்லுவதை உண்மை தான் என்று சொல்லக் கூடியவர்கள் இருக்கலாம், அல்லவா!

இரு தவணைகள் போதும்...?


பிரதமர், டாக்டர் மகாதிர், நல்லதொரு திட்டத்தை முன் மொழிந்திருக்கிறார். ஆமாம், பிரதமர் பதவியை வகிப்பவர்கள், மாநில முதலமைச்சர்கள் - இந்த இரு தரப்பினரும் இரண்டு தவணைகள் மட்டுமே பதவி வகிக்க வேண்டும் என அவர் ஆலோசனைக் கூறியிருக்கிறார்.

யோசிக்க வேண்டிய கருத்து.  ஆனால் அதிகம் யோசிக்க வேண்டியதில்லை! உலகில் எத்தனை நாடுகள் இந்த இரண்டு தவணைகள் மட்டும் திட்டத்தைக் கடைப்பிடிக்கின்றன? அதிகம் தெரியாவிட்டாலும் இப்போதைக்கு அமெரிக்காவும் இந்தோனேசியாவும் கடைப்பிடிக்கின்றன என்பதாகச் சொல்லப்படுகின்றது.

அதிக நாள் பதவியில் இருந்தால் அந்த நாட்டு மக்களுக்கு அதிகம் ஆபத்து ஏற்படும் என்பதை முன்னாள் பிரதமர் நஜிப் நிருபித்து விட்டார்! இரண்டு தவணைகள் என்பதை விட மிகக் குறுகிய காலத்திலேயே அவர் நாட்டு மக்களுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகளைக் கொண்டு வந்து விட்டார். நாட்டையே ஒரு சூதாட்ட களமாக மாற்றி விட்டார்!

அதே சமயத்தில் கட்சி ரீதியில் பார்க்கும் போது ம.இ.கா. வை எடுத்துக் கொள்ளுவோம்.  மற்ற யாரையும் விட அதிக காலம் தலைவர் பதவியில் இருந்தவர் துன் சாமிவேலு. அவர் பதவியை விட்டுப் போகும் போது ம.இ.கா. வை சுடுகாட்டுக்கு அனுப்பிவிட்டு இந்தியர்களையும் சுடுகாட்டுக்கு வழி காட்டிவிட்டுப் போனார்!  அந்த தரித்திரம் நமது சரித்திரம் ஆகிவிட்டது! இப்போது அதனை சரி பண்ணுவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகுமோ தெரியவில்லை! 

இந்த இரண்டு  தவணைகள்  என்னும்  போது நாம்  அமெரிக்காவைத்  தான் சான்றுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இன்று உலகிலேயே எல்லாவகையிலும்  உயர்ந்த, செழிப்பான, வளர்ந்த  நாடு என்றால் அது  அமெரிக்காதான்.  உலகில் சக்தி வாய்ந்த நாடு என்றால் அது அமெரிக்கா தான். அந்த நாட்டில் ஊழல்,  லஞ்சம் என்னும் வார்த்தைகள் எல்லாம் அவர்களது  அகாராதியில் தான் பார்க்க  முடியும். அப்படி  ஏதேனும்  தவறுகள் நடந்தால் இருக்கவே  இருக்கிறது  நீதிமன்றம். அங்கு தான் அவர்களின் பிரச்சனைகளைத்  தீர்த்துக் கொள்ள வேண்டும். எப்பேர் பட்ட கொம்பனாக இருந்தாலும் அவன்  நீதிமன்றத்துக்குத் தான் போக வேண்டும்!

மேலும் இரண்டு தவணைகள்  முடிந்து  புதிதாக  வருபவர் புதிய  சிந்தனைகளையும், புதிய ஆற்றல்களையும் கொண்டு  வருவார்  என  எதிர்பார்க்கலாம். அனைத்தும்  மக்களின் நலனுக்காக அவரது  ஆற்றலைப் பயன்படுத்துவார்.  தொடர்ந்தாற் போல அவர் பதவியில்  இருந்தாரானால் ஊழல் செய்ய நேரிடும்! குடும்பத்திற்காக கோடிகளைச் சேர்க்க வேண்டி வரும். அதைத்தான் நாம்  கண்கூடாக பார்க்கிறோம்.

ஊழலை நாம் தவிர்க்க வேண்டுமானால் இரண்டு தவணைகள்  என்பதே சிறந்தது. அவர்களுடைய பதவி காலத்தில்  நல்லவைகள் நடக்கும். மக்களுக்கு நல்லது நடக்கும். ஊழல் தவிர்க்கப்படும்.

ஆக, இரண்டு தவணைகள் என்பதை ஆதரிப்போம். அது மாநிலமாக இருந்தாலும் சரி, நடுவண் அரசாங்கமாக இருந்தாலும் சரி இரண்டு தவணைகள் என்பதே சரியானதாக இருக்கும்!

Friday, 19 October 2018

தாய்க் கட்சியா...?

ம.இ.கா. வை மலேசிய இந்தியர்களின் தாய்க் கட்சி என்று சொன்னால் நமக்குக் கோபம் வருகிறது. அதுவும் ம.இ.கா.காரன் சொன்னால் இன்னும் கோபம் வருகிறது.

ம.இ.கா.வின் சாதனை என்ன? ஒவ்வொரு மலேசிய இந்தியனையும் கோவனத்தோடு நிற்க வைத்தது தான் அவர்களின்  சாதனை! ஏதாவது ஒன்றில்  நாம் வெற்றி பெற்றிருக்கிறோம் என்று அவர்களால் காட்ட முடியுமா?

ம.இ.கா.அரசியலுக்கு எப்போது குண்டர் கும்பல் கலாச்சாரம் நுழைந்ததோ அந்த ஒன்றில் மட்டும் தான் ம.இ.கா. வெற்றி பெற்றிருக்கிறது! இது நாள் வரை அந்தக் குண்டர் கும்பலை ஒழிக்க முடியவில்லை. காவல் துறையும் கூட தடுமாறுகிறது! குண்டர் கும்பலைத்தான் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக அவர்கள் சிறந்த முறையும் வளர்த்து எடுத்திருக்கிறார்கள்! அதனைத்தான் ம.இ.கா.வின் பெரிய சாதனை! பிற இனத்தவர்களால் எட்ட முடியாத சாதனை! 

இன்று நாம் வாழ்கின்ற இந்த சொந்த நாட்டில் எத்தனை பிரச்சனைகளோடு நாம் வாழ்கிறோம். எத்தனை உரிமைகளை நாம் இழந்திருக்கிறோம்.

இங்குப் பிறந்தவனுக்கு அடையாளக்கார்டு இல்லை; குடியுரிமை இல்லை. நாடற்றவன் என்னும் அடைமொழி வேறு. இங்குப் பிறந்த பிள்ளைகள் பள்ளிக்கூடம் போக முடியவில்லை. அப்படியே படித்து வெற்றி பெற்றால் பல்கலைக்கழகம் போக முடியவில்லை. அப்படியே அவன் பட்டதாரியானால்  அவனுக்கு வேலை கொடுக்க யாரும் தயாராய் இல்லை. அப்படியே அவனுக்கு வேலை கொடுத்தாலும் மற்ற இனத்தவரை விட குறைவான சம்பளம். 

இந்த சமூகத்தை இப்படி ஒரு கடை நிலைக்குக் கொண்டு செல்ல பாதை அமைத்துக் கொடுத்தது யார்? அது ம.இ.கா. என்கிற இந்த தாய்க் கட்சி தானே! ஒரு வழக்கறிஞரைத் தலைவராகக் கொண்டு சேவை மனப்பான்மையோடு  ஆரம்பிக்கப்பட்ட ஒரு கட்சி கடைசியில் சேவையை சேலையாக நினைத்தவர்களிடம் கட்சி அகப்பட்டு இந்த இனத்தையே சின்னாப்பின்னமாக ஆக்கி விட்டதே, அப்புறம் என்ன தாய்க்கட்சி?

ம.இ.கா. மீண்டும் தலை தூக்குமா?  தேர்தல் நடந்தால் என்ன, நடக்காவிட்டால் என்ன? ஏதோ கட்சியில் இருப்பதை நாலு பேரும் பங்கிட்டு கடைசியில் ஒன்றுமில்லை என்று ஒப்பாரி வைக்கட்டும்! 

இந்தியனைத் தூக்கி நிறுத்துகிறோம் என்று எவனாவது  சொன்னால் அவனை.........! நீங்களே போட்டுக் கொள்ளுங்கள்!


Thursday, 18 October 2018

எதிரபார்த்தது நடந்திருக்கிறது...!

நாம் என்ன எதிர்பார்த்தோமோ அது நடந்திருக்கிறது! இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை! சீனர்கள் சீனர்களாகத்தான் இருப்பார்கள். நாம் மட்டும் தான் மலேசியர் என்று சொல்லிக் கொண்டு நமது இளிச்சவாயத் தனத்தைக் காட்டுபவர்கள்!  

சீனர்கள் அமைச்சர்களாக இருந்தாலும், அடுப்படி வேலை செய்பவர்களாக இருந்தாலும், மகான் என்று சொல்லும் சாமியர்களாக இருந்தாலும் - அவர்கள் சீனர்களுக்கு மட்டுமே உதவுபவர்களாகத் தான் இருப்பார்கள்!  மனிதம் என்றால், அவர்களைப் பொறுத்தவரை -  தங்களது சமூகத்திற்கு உதவுவது மட்டும் தான்!

மெங்கெளம்பு தமிழ்ப்பள்ளி பற்றியான ஒரு செய்தி. முடியும் தருவாயில் - போதுமான மானியம் இல்லாததால் -  பள்ளிக் கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டது  என்பது தான் அந்தச் செய்தி. அந்தக் கட்டுமானப் பணியை முடிக்க இன்னும் தேவை 14 இலட்சம் வெள்ளி மட்டுமே என்கிறார் பள்ளியின் வாரியத் தலைவர். ஒரு சீனப் பெண்மணியான, கல்வி துணையமச்சர் தியோ நீ செங்  அவர்களை பள்ளி நிர்வாகத்தினர் நாடிய போது "இனி மானியம் இல்லை!" எனக் கை விரித்து விட்டார் என்று அந்தச் செய்தி மேலும் கூறுகிறது!

அதே சமயத்தில் கலவி துணை அமைச்சர் பினாங்கு மாநிலத்தில் இரு புதிய சீனப் பள்ளிகள் நிர்மாணிக்க 230 இலட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்திருப்பதாக பத்திரிக்கைகளில்  செய்திகள் வெளியாகி இருப்பதாக கூறப்படுகிறது. 

ஒன்று நமக்குப் புரிகிறது. சீனப்பள்ளி நிர்மாணிக்க கல்வி அமைச்சிடம் பணம் இருக்கிறது. அதுவும் இரு சீனப்பள்ளிகள். ஆனால் ஒரு தமிழ்ப்பள்ளியின் கட்டுமானம் இறுதி கட்டத்தில் இருக்கும் போது அதை முடிப்பதற்குக் கல்வி அமைச்சிடம் பணம் இல்லை! 

இதற்குத் தான் தமிழ்ப்பள்ளிகளுக்காக ஒரு தனி கல்வி துணை அமைச்சர்  தேவை என்பதாக  பக்காத்தான் அரசு அமைந்ததிலிருந்து நாம் சொல்லி வருகிறோம். துணை அமைச்சர் சீனராக இருக்கும் போது  அவர் மொத்த பணத்தையும் சீனப்பள்ளிகளின் பக்கம் தள்ளி விடுகிறார்!   தேர்தலின் போது அவர்கள் சீனர்களை நம்பித்தான் தேர்தலில் நிற்கிறார்கள்.  அதனால் அவரைப் பொறுத்தவரை அவர் செய்வது சரி தான். ஜனநாயக செயல் கட்சியினர் இந்தியர்களுக்கு உதவி செய்வார்கள் என நாம் நம்பி விடக் கூடாது.  அவர்களைப் பொறுத்தவரை முதலில் சீனர்கள் அப்புறம் தான் இந்தியர்கள். முதல் உதவி அவர்களுக்கு. அதன் பின்னர் தான் "போனால் போகிறது"  என்று சில எலும்புத் துண்டுகள் நமக்கு!

பள்ளி வாரியத்திற்கு நம்முடைய ஆலோசனை எல்லாம் அவ்வளவு சீக்கிரத்தில்  கை கழுவி விடாதீர்கள். எத்தனை முகாந்திரங்கள் இருக்கின்றனவோ அத்தனையையும் முயற்சி செய்து பாருங்கள். விடா முயற்சி என்பது நாம் வாழ்க்கையில் கற்ற பாடம். அடி மேல் அடி அடித்தால்  அம்மியும் நகரும் என்பார்கள். அது சீனர்களிடம் இருக்கிறது. நாமும் அதனைக் கடைப்பிடிக்க வேண்டும். நாமும் அடி அடி என்று அடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

புதிய சீனப்பள்ளிகளுக்கான மானியம் என்பது இப்போதைய  அவர்களின் வெற்றி.  அதற்காக நாம் தோல்வி அடைந்து விட்டோம் என்பதல்ல! நமக்கும் மானியங்கள் கிடைக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். தொடர்ந்து முயற்சிகளை மேற் கொள்ளுங்கள். 

தட்டிக் கொண்டே இருங்கள்> கதவுகள் திறக்கும். நாம் ஓர் அடிமை சமுதாயமாக இத்தனை ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறோம். இப்போது தான் அதிலிருந்து விடுபட்டுக் கொண்டிருக்கிறோம். 

கொஞ்சம் தாமதம் ஆகலாம். ஆனால் கண்டிப்பாக நடக்கும்!

Wednesday, 17 October 2018

ஏன் இந்த பிரிவினை...?

சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களுக்குச் சிறப்பு விசா கட்டணம் வழங்க வேண்டும் என்பதாக மலேசிய ஐயப்ப சேவை சங்கம் இந்திய தூதரகத்திடம் மனு ஒன்றைச் செய்திருப்பது   நல்ல செய்தி.

ஆனால் ஒரு செய்தி நமது மனதை நெருடுகிறது. அது ஏன் ஐயப்ப பக்தர்களுக்கு மட்டும்?  இப்படியும் யோசிக்கலாம் அல்லவா?  ஏன் மலையாளிகள் தங்களின் நலனில் மட்டும் அக்கறை காட்டுகிறார்கள்? தங்களின் கேரள மாநிலத்தை மட்டும்  முன் நிறுத்துகிறார்கள்?

இந்தியாவை ஒரு புண்ணிய பூமி என்பார்கள். அங்கு சபரிமலை மட்டும் இல்லை. திருப்பதி மலை உண்டு, பழனி மலை உண்டு. பஞ்சாபில்  பொற்கோவில் உண்டு. வேளாங்கண்ணி கோவில் உண்டு. நாகூர் தர்கா உண்டு. பௌத்த சமயத்தைச் சேர்ந்த சில புண்ணிய இடங்கள்.  இப்படி இன்னும் பல திருத்தலங்கள் உண்டு.  திருத்தலங்கள் நிறைந்த பூமி இந்திய மண்.

இந்த நிலையில் ஐயப்ப கோவிலை மட்டும் முன் நிறுத்தி "எங்களுக்கு மட்டும் விசா கட்டணத்தைக் குறையுங்கள்" என்பது மிகவும்கேவலமான ஒரு செயல். இந்தியத் திருத்தலங்களுக்குப் பயணம் செய்யும் யாத்ரிகர்கள் அனைவருக்கும் சிறப்பு விசா கொடுங்கள் எனக் கேட்கலாம். அப்படித்தான் கேட்க வேண்டும்.  இப்படிக் கேட்பதால்  அனைத்து யாத்ரீகர்களும் பயன் அடைவார்கள். 

இப்படி ஐயப்ப பக்தர்கள் மட்டும் என்றால் இது ஒரு விளம்பரமாகத் தான் அமையும். கேரளாவுக்கு விளம்பரம் செய்வதாகத் தான் அமையும்.  அப்படி என்றால் மற்ற இந்திய மாநிலங்களுக்குச் செல்லாதீர்கள் கேரளாவுக்கு மட்டும் வருகை தாருங்கள் என்று இவர்கள் சொல்ல வருகிறார்களா?  அதுவும் வெளி நாடுகளிலிருந்து  கொண்டு கேரளாவுக்கு இலவச விளம்பரம் தருகிறார்களா?  அது பற்றி நமக்குக் கவலை இல்லை. தந்துவிட்டுப் போகட்டும்.  கேரளா கடவுளின் பூமி என்று பெயர் பெற்ற பூமி. அங்குப் போவதற்கு யாருடைய சிபாரிசும் தேவை இல்லை. 

நாம் சொல்ல வருவதெல்லாம் எல்லாவற்றையும் குறுகிய கண்ணோட்டத்தோடு பார்க்காதீர்கள் என்பது தான். மலையாளிகளுக்கு மட்டும் என்னும் குறுகிய மனம் வேண்டாம். ஒவ்வொரு மாநிலத்திலும் நிறைய திருத்தலங்கள் உண்டு. அவர்களும் குறைந்த விசா கட்டணத்தில் போய் அந்த திருத்தலங்களைச் சென்று தரிசிக்கட்டும்.

நமக்குள் பிரிவினை வேண்டாம். பிரித்தது போதும் இனியாவது ஒற்றுமையாக வாழ விடுங்கள்!

இன்னுமா மிரட்டல் அரசியல்...?

ம.இ.கா.வினரை நம்மால் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆட்சியில் இருக்கும் போதும் குத்துச் சண்டை, மல்யுத்தம் என்று குண்டர்களின் தலையீடு.  அப்போதும் மக்கள் அவர்களால் எந்தவித பயனையும் அடையவில்லை.!

இப்போது அவர்களை முற்றிலுமாக மக்கள் விளக்கமாற்றல் அடித்து துரத்தி அடிக்கப்பட்டு விட்டாளர்கள்! ஏற்கனவே ஏதோ பதவியில் இருந்த போது கொஞ்சம் நஞ்சம் - பிடுங்கி தின்பவர்களிடமிருந்து -  மரியாதை இருந்தது. இப்போது அதுவும் இல்லை. மரியாதைக்குரியவர்களாக அவர்கள் நடந்து கொள்ளவில்லை. மக்கள் மதிக்கின்ற அளவுக்கு அவர்கள் பதவியில் இருந்த போது தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை.

இப்போது ம.இ.கா. தேர்தல் நேரம். ம.இ.கா. தேசிய துணைத் தலைவர் பதவிக்கு  டான்ஸ்ரீ எம்.இராமசாமி என்னும் தொழிலதிபர் போட்டியிடுவதாக அறிவிப்புக்கள் வெளியாயின. அவர் இப்போது  அறிவிப்பை ஒன்றை செய்திருக்கிறார். அவரின் பிராச்சாரத்தை  ஒரு சிலர் முடக்க நினைப்பதாக கூட்டம் ஒன்றில் அறிவித்திருக்கிறார். ஒரு சிலர் என்னும் போது அது அடியாட்கள் என்பதைத் தவிர வேறு யாராக இருக்கப் போகிறார்கள்?

ஆனால் ஒன்று புரியவில்லை. முன்பு ம.இ.கா.வில் இருந்த போது பதவி, பட்டம், சுகம் எல்லாம் கிடக்கும். இப்போது எதுவும் கிடைக்க நியாயம் இல்லை. முன்பு அரசாங்கப் பணத்தில் கட்சியை நடத்தி வந்தார்கள். இனி அதற்கும் வாய்ப்பில்லை. முடிந்த வரை சொந்தப் பணத்தைப் போட்டு கட்சி நடத்த வேண்டும். கிளைத் தலைவர்கள் தங்களது உறுப்பினர்களின் சந்தாவை அவர்களே கட்டி விடுவார்கள். இனி இதெல்லாம் நடக்குமா என்பது எனக்கும் புதிராகத்தான் இருக்கிறது. காரணம் இனி இவர்களுக்கு மாநில சுல்தான்களின் பட்டம் கூட கிடைக்கப் போவதில்லை. எதுவுமே இல்லை என்னும் போது இவர்களுக்கு என்ன தலைவிதியா தங்கள் சொந்தப் பணத்தைப் போட்டு கட்சி நடத்துவதற்கு?

ஆக,  இப்படி எந்த பலனுமே இல்லாத நிலையில் ஏன்  தேர்தலில் போட்டியிடும் ஒருவரின் பிரச்சாரத்தை முடக்க நினைக்கிறார்கள்? ஏன் பயமுறுத்துகிறார்கள்? டான்ஸ்ரீ இராமசாமி  நல்லதை செய்வேன் என்று தானே சொல்லுகிறார். இந்தியர்ளை மீண்டும் ம.இ.கா. பக்கம் கொண்டு வருவேன் என்று தான் சொல்லுகிறார். ஒன்று தெரிகிறது. " இருப்பவர்கள் அப்படியே இருப்போம். புதியவர்கள் யாரும் தேவையில்லை"  என்று  யாரோ நினைக்கிறார்கள்  என்று தானே நாம் நினைக்க வேண்டியுள்ளது! ஏன் கட்சியில்  புதிய  மாற்றம் தேவை இல்லை என்று நினைக்கிறார்கள்? 

கட்சியினால் யாருக்கும் பயனில்லை.  பயனடைபவர்கள் தலைவர்கள் மட்டும் தான். இப்போது தலைவர்களின்  பார்வை எல்லாம்  ம.இ.கா.வின் சொத்துக்களின் மீது தான்  என்று  தான்  நினைக்கத்  தோன்றுகிறது. மற்றபடி சேவை என்றெல்லாம் ஒன்றை இவர்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாது!  அந்த சொத்துக்களின் மீது கண் உள்லவர்களிடமிருந்து தான் இந்த மிரட்டல் வருகிறது என்று  தான் நாம்  நினைக்க வேண்டியுள்ளது.

என்ன  நடக்கிறது என்று பார்ப்போம்>

Tuesday, 16 October 2018

இப்போதும் அதே கதை தானா...?

பாகான் டத்தோ,  ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் நிர்வாகத்திற்கும் அங்குள்ள நகராண்மைக் கழகத்தின் திமிரான நடவடிக்கைகளும் நம்மை கொஞ்சம் யோசிக்க வைக்கிறது.  நகராண்மைக் கழகம் 'நாங்கள் இன்னும் பாரிசான் ஆட்சியின் கொள்கைகளைத்தான் கடைப்பிடிக்கிறோம்' என்பதாகவே  நடந்துகொள்கிறது! 

இதில் அதிசயப்படஒன்றுமில்லை. காரணம் அரசாங்க ஊழியர்கள்  அப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்பது மேலிடத்து உத்தரவு. கடந்த ஐம்பது அறுபது ஆண்டு காலமாக அவர்கள் அப்படித்தான் ஊட்டி வளர்க்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை மாற்றுவது என்பது கொஞ்சம் கடினம் தான்.   அப்போது ஆட்சியில் இந்தியர்களைப் பிரதிநிதித்த சோத்துமாடுகள் சோத்தைப் பற்றியே  நினைத்துக் கொண்டிருந்ததால் இந்த அரசாங்க அதிகாரிகளுக்கு இன்னும் தலைக்கனம் அதிகமாகி விட்டது! அந்தத் தலைக்கனத்தை குறைப்பது இன்னும் சிரமமாகவே இருக்கிறது என்பது உண்மை.

ஆனாலும் அவர்கள் அப்படித் தொடர்வதை நிறுத்த வேண்டும். நிறுத்தும்படி செய்ய வேண்டும். அவர்களின் தலைக்கனத்தை குறைக்க வேண்டும்.

இப்போது இருக்கின்ற இந்தியர்களைப் பிரதிநிதிப்பவர்கள் - நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள்  அல்லது அவர்களின் தொகுதியைப் பிரதிநிதிப்பவர்கள் - யாராக இருந்தாலும் சரி பிரச்சனைகளைக் கொண்டு செல்ல வேண்டும்.  இந்தியப் பிரதிநிதிகள் ஓடி ஒளிவதை இன்னும் இன்னும் நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அன்று ம.இ.கா. காரன் ஓடி ஒளிந்து கண்ணாமூச்சி ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தான்.  இப்போது ஆட்சியில் உள்ளவனும் அதையே செய்தால் நாம் என்ன எருமைகள் என்று நினைக்கிறார்களா?

இது போன்ற செய்திகள் வரும் போது ஆட்சியில் உள்ள இந்தியப் பிரதிநிதிகள் ஓடி வந்து என்ன நடக்கிறது என்று அறிய வேண்டும். ஒரு வேளை அங்குள்ள பிரச்சனைகளை அவர்கள் தெரிந்திருக்க வாய்ப்புக்கள் உண்டு. அந்தத் தவறுகள் நம்முடைய மக்களின் தவறுகளாகத்தான் இருக்க முடியும்!

என்ன செய்யலாம்? ஒற்றுமை இல்லாத சமூகம்.  எதைச் சொன்னாலும் தலை ஆட்டம் சமூகம். பணம் கொடுத்தால் எப்படி வேண்டுமானாலும் பேசும் சமூகம். எதற்கெடுத்தாலும் விதண்டாவாதம் பேசும் சமூகம். குடிகாரச் சமூகம். 

இந்தச் சமூகம் இப்படித்தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதனால் யார் வேண்டுமானாலும் ஏமாற்றலாம். பணம் இருந்தால் இன்னும் அதிகமாக ஏமாற்றலாம்.  அதற்காக இந்தச் சமூகத்தை ஒவ்வொருவனும் ஏமாற்ற வேண்டிய அவசியமில்லை. அதனை நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

திமிர் பிடித்தவர்களை அடக்க வேண்டும். இப்போது நமக்கு அரசியல் பலம் உள்ளது. அதனை நாம் காட்ட வேண்டும். இனி மேலும் இந்தக் கதை தொடரக் கூடாது. என்ன நடக்கின்றது என்று பார்ப்போம்!

Monday, 15 October 2018

22 மாணவர்கள் தானா..?


சமூக சேவையாளர் டத்தோ சௌந்தரராஜன் ஓர் அதிர்ச்சி செய்தியைக் கொடுத்திருக்கிறார்.

கப்பளா பத்தாஸ் பகுதியில் உள்ள ஐ.எல்.பி.  தொழிற்பள்ளி ஒன்றில் சுமார் 600 மாணவர்கள் கல்வி கற்று வரும் நிலையில் அதில் இந்திய மாணவர்கள் சுமார் 22 பேர் மட்டுமே என்று அறியும் போது நமக்கு வருத்தைத்தை அளிக்கிறது.

பல தொழிற்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இந்திய மாணவர்களை எடுக்க வேண்டிய அவசியமில்லை என நினைக்கின்றனர். காரணம் அவர்களுக்குத் தேவை இல்லை. வேண்டாம்! அவ்வளவு தான். அதற்கான  அதிகாரம் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதாக அவர்களே நினைத்துக் கொள்ளுகின்றனர்! அப்படி எல்லாம் ஒன்றுமில்லை என்பது நமக்கும் தெரியும். என்ன செய்வது? நமக்குத் தலையாக இருந்தார்களே அவர்களுக்குத் தெரியவில்லை!

இதுவும் ஒரு காரணம். இந்திய மாணவர்கள் தொழிற் பயிற்சியில் ஆர்வம் காட்டுவதில்லை என்ற குற்றச் சாட்டும் உண்டு. ஒரு பக்கம் இந்திய மாணவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கக் கூடாது - இன்னொரு பக்கம் அவர்களை வர விடாமல் தடுப்பது என்பது தான் முன்னைய அரசாங்கத்தின் கொள்கையாக இருந்து வந்துள்ளது. ஆனால் குற்றச்சாட்டு என்னவோ இந்திய மாணவர்கள் மீது.

அவர்கள் பேசுவதில் உண்மை இருந்தால் இந்திய மாணவர்கள் ஆர்வம் காட்ட  என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை அவர்கள் சொல்ல வேண்டும். பள்ளிகளிலேயே அந்தச் செய்திகள் கொடுக்கப்பட வேண்டும். பத்திரிக்கைகளிலே அந்தச் செய்திகள் போடப்பட வேண்டும். பத்திரிக்கைகளிலே தனியார் பள்ளிகளின் விளம்பரங்கள் மாணவர்களின்  கவனத்தை ஈர்க்கின்றன. 

அது மட்டும் அல்லாமல் ஏன் அரசு தொழிற்பள்ளிகளில் இந்திய மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்பதும் நமக்குத் தெரிய வேண்டும். பெரும்பாலும் உணவு என்று வரும் போது இந்திய மாணவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். பொதுவாக மாட்டிறைச்சி உணவு அல்லது பன்றி இறைச்சி உணவு என்பதெல்லாம் வீட்டோடு வைத்துக் கொள்ளலாம். கோழிறைச்சி, மீன் போன்ற உணவுகள் பொதுவானவை. இது போன்ற உணவுகளால் எந்த மாணவர்களும் பாதிக்கப்படுவதில்லை.

இது போன்ற இன்னும் சில 'கெடுபிடிகள்' இந்திய மாணவர்களுக்கு ஏற்றதாக இல்லாமல் இருக்கலாம். அவைகளைக் களைய வேண்டும். பொதுவாக எல்லா மாணவர்களும் ஏற்றுக்கொள்ளும் படியான சூழல் இருக்க வேண்டும்.

22 மாணவர்கள் என்பது மாற வேண்டும். காரணங்கள் நமக்கு வேண்டாம்.  இனி மேலும் இது தொடரக் கூடாது என்பதே நமது வேண்டு கோள். 

டத்தோ சௌந்தரராஜன்  அவர்களுக்கு நமது பாராட்டுக்கள்.  இப்படி பலரும் தங்கள் அருகில் உள்ள தொழிற்பள்ளிகளில் எத்தனை மாணவர்கள் என்பதைத் தெரிந்து புகார் செய்ய வேண்டும்.

இனி 220 மாணவர்கள் என்பதாக செய்திகள் வர வேண்டும்! வாழ்த்துவோம்!

Friday, 12 October 2018

தீபாவளி சந்தை

தீபாவளி சந்தை என்னும் போது கடந்த காலங்களில் நடந்த பல விரும்பத் தகாத சம்பவங்கள் ஞாபகத்திற்கு வருகின்றன.

எல்லா விஷயங்களிலும் ஒதுங்கி நிற்கும் ம.இ.கா. வினர் இந்தத் தீபாவளி சந்தையில் மட்டும் ஓடி வந்து நமது வியாபாரிகளுக்கு உபத்தரவமாக இருப்பார்கள்! அவர்களால் செய்ய முடிந்தது உபத்தரவம் மட்டும் தான். ஏதோ கொஞ்சம் பணம் பண்ணலாம் என்னும் அற்ப ஆசை!

இந்த அற்ப ஆசையால் வரும் விபரீதங்கள்என்ன? சந்தை கடைகளின் வாடகையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயர்த்துவது. உள்ளூர் வியாபாரிகள் 'கட்டுப்படியாகாது' என்று முணகினால் உடனே வெளி நாட்டவருக்கு தாராளமாகக் கடைகளைக் கொடுத்து உதவுவது!  இந்த ம.இ.கா. வினருக்கு மிகவும் துணையாக இருப்பவர்கள் அரசாங்க அதிகாரிகள்.  அவர்களுடைய அதிகாரம் தூள் பறக்கும்! இவர்களோடு சேர்ந்து கொண்டு வியாபாரிகளிடையே  போட்டா போட்டி! இதைவிட வியாபாரத்திற்குச் சம்பந்தமே இல்லாதவன் கடைகளை வாங்கி வெளி நாட்டவனுக்கு அதிக வாடகைக்குக் கொடுப்பது!  ஒரு தமிழன் வியாபாரம் செய்வதற்கு அவனைச் சுற்றி எத்தனை பொறுக்கித் தின்னும் நாய்கள்! நெஞ்சம் பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்...!

சிரம்பானில் போன ஆண்டு ம.இ.கா.வும தமிழ் இளைஞர் மணிமன்றமும் இந்த தீபாவளி சந்தைக்காக முஷ்டியை உயர்த்திக்  கொண்டனர்! தொண்டு என்று வரும் போது முகத்தை  முக்காடிட்டு ஓடுபவர்கள் துட்டு என்று வரும் போது துள்ளி விளையாடுகின்ற்னார்!

ஆனால் இன்றைய நிலை என்ன?  இந்த ஆண்டு வியாபாரிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படாது என நம்பலாம். காரணம் வியாபாரம் செய்பவர்களுக்கு மட்டுமே கடைகள் கொடுக்கப்படும். இனி வெளி நாட்டவருக்கு வியாபாரம் செய்ய வாய்ப்பில்லை. வாடகைகளும் ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்கும். இலஞ்சம் பற்றியெல்லாம் பேச ஒன்றுமில்லை.  அதிகாரம் பண்ணியவர்கள் மூட்டையைக் கட்டிக்கொண்டு போக வேண்டிய சூழ்நிலை. அவர்கள் போய் விட்டார்கள்.

இப்போது மக்கள் மிகக் கவனத்துடன் இருக்கிறார்கள். அதிகார அத்து  மீறல் என்றால்  உடனடியாக அதிகாரத்தில்  உள்ளவர்களுக்குச் செய்திகள்  போய் விடுகின்றன.  இலஞ்சம்  வாங்குபவர்களைப் பற்றி  காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டு விடுகின்றன. யாரும் யாரையும் எதிர்ப்பார்ப்பதில்லை. உடனடியாக குற்றச்சாட்டுக்கள் பொது மக்களிடமிருந்து  எழுப்பபடுகின்றன. 

அதனால் அதிகாரத்தில் உள்ளவர்கள் எச்சரிக்கையாகவே இருக்கின்றனர். புதிய அரசாங்கம் தங்கள் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறார்கள்.

இந்த ஆண்டு  தீபாவளி சந்தையில்  கடை எடுத்தவர்கள் லாபம் பார்க்கட்டும், அரசியவாதிகளின் பிக்கல் பிடுங்கல் இருக்காது என நம்பலாம். 

வியாபாரிகள் வெற்றி பெறட்டும்! வாழ்த்துவோம்! 

இந்தியர்கள் எத்தனை விழுக்காடு...?

நாளை, சனிக்கிழமை,  நடைபெறும்  போர்ட்டிக்சன் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் இந்தியர்களின் ஆதரவு அன்வாருக்கு எந்த அளவில் இருக்கும்?  மிகப் பெரிய அளவில் இருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

கடந்த மே மாதம் நடைப்பெற்ற நாட்டின் பொதுத் தேர்தலில் பக்காத்தான் அரசாங்கம் ஆட்சி அமைக்க இந்தியர்களின் பங்கு அதிகம் என்பதாகவே இன்றும் சொல்லப்படுகின்றது. குறைந்தபட்சம் இந்தியர்களின் வாக்கு எழுபது  விழுக்காட்டுக்கு மேல் என்று சொல்லப்படுகிறது.

இப்போது போர்ட்டிக்சன் நிலவரத்தைப் பார்ப்போம். பொதுவாகவே இந்தியர்களின் வாக்கு பக்காத்தானுக்கு அதிகம் விழும் என்பது தெரிந்தாலும் கடந்த பொதுத் தேர்தலை விட இப்போதைய நிலவரப்படி இன்னும் அதிகம் வாக்குகளை எதிர்ப்பார்க்க முடியும் என்பதே உண்மை.

போர்ட்டிக்சன் தொகுதி என்பது காலங்காலமாக ஒரு ம.இ.கா. நாடாளுமன்ற தொகுதி என்பது நமக்குத் தெரியும். இந்த முறை எந்த வித முன் அறிவிப்புமின்றி, ம.இ.கா.வுடன் கலந்து ஆலோசனை செய்யாமல், அம்னோ தான் போட்டியிடப் போவதாகக் கூறிவிட்டு, கடைசியில் அவர்களும் போட்டியிடாமல், ம.இகா.வுக்கும் விட்டுக் கொடுக்காமல், ஒரு சூழலை அம்னோ தலைமை உருவாக்கிவிட்டது. இது நிச்சயமாக ம.இ.கா. தரப்பில்  வரவேற்கப்படவில்லை. பொதுத் தேர்தலில் அம்னோ தோல்வியடைந்தும் அது இன்னும் இறுமாப்புடன் இருப்பதாகவே இந்திய வாக்களர்களை நினைக்கின்றனர்.

சரி இந்தத் தேர்தலில் ம.இ.கா. போட்டியிடவில்லை. அம்னோவும் போட்டியிடவில்லை. அதாவது பாரிசான் கட்சிகள் போட்டியிடவில்லை. இப்போது ம.இ.கா. இந்தியர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள்? முன்னாள் மந்திரி பெசார் இசா அப்துல் சமாட் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவர் ஏகப்பட்ட ஊழல் வழக்குகளில் பங்குள்ளவர். எப்போது 'மாட்டுவார்' என்பது இன்னும் தெரியவில்லை!  அவரால் எந்தப் புன்ணியமும் இல்லை!

நமது கணிப்பின் படி ம.இ.கா.வினரும் அன்வாருக்குத் தான் வாக்களிப்பார்கள் என நம்பலாம்.  சமீபத்தில் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் சோதி நாதன் தனது பிரச்சாரத்தின் போது அதனையே கூறியிருந்தார். ஏகமாய் அன்வாரைப் புகழ்ந்து தள்ளினார். வருங்காலத்தில் அன்வார் பிரதமர் ஆவார் என்கிற முறையில் இந்தியர்களின் மேன்மைக்கு அன்வார் வெற்றி பெறுவது அவசியம்  என்பது மட்டும் அல்ல அதிகப் பெரும்பான்மையில் வெற்றி பெறுவதும் அவசியம்.

எனது கணிப்பின்படி இந்தியரில் 95 விழுக்காடு மக்கள் அன்வாருக்கே வாக்களிப்பார்கள் என்பது தான்! எப்படியோ நாளை மாலைக்குள் முடிவு வெளியாகி விடும். அது வரை பொறுத்திருப்போம்.

எத்தனை விழுக்காடு? 95 விழுக்காடு!
 

Thursday, 11 October 2018

இலக்கை அடைவரா...?

நாளை சனிக்கிழமை 13-தேதி (13-10-2018) போர்ட்டிக்சன் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் ஜெயிக்கப் போவது யாரு என்று கேள்விகள்  எல்லாம் தேவையில்லை!

அன்வார் வெற்றி பெறுவார் என்பதில் எந்த ரகசியமும் இல்லை. அவர் வெற்றி பெறுவது உறுதி. இப்போது பேசப்படுவதெல்லாம் எத்தனை வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெறுவார் என்பது தான்.  

சென்ற 14-வது பொதுத் தேர்தலின் போது அதன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டேனியல் பாலகோபலன் 17,000 வாக்கு வித்தியாசத்தில் அந்தத் தொகுதியில் வெற்றி பெற்றார். அதுவே பெரிய வெற்றி தான். 

ஆனால் இப்போது அந்தத் தொகுதியில் நிற்கும் வேட்பாளர் சராசரியான ஆளாக நாம் எடுத்துக் கொள்ள முடியாது.. அவர் அடுத்த மலேசியப் பிரதமர். டாக்டர் மகாதிர் பதவி ஓய்வுக்குப் பிறகு பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளப் போகிறவர். அதனால் அவரது வெற்றி என்பது உறுதி என்றாலும் அவரது வெற்றி என்பது எத்தனை ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் என்பதும் முக்கியம். அந்தப் பெரிய வித்தியாசம் தான் அவரைப் பிரதமராக மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பதற்கான அடையாளமாக எடுத்துக் கொள்ளப்படும்.

பொதுவாகவே இடைத் தேர்தல்களில் வாக்களிப்பவர்கள் குறைவாகவே இருப்பர். வாக்களர்கள் யார் வெற்றி பெறுவார் என்பதை முன் கூட்டியே ஓரு முடிவு செய்து வைத்திருப்பர். வெற்றி உறுதி என்பது தெரிந்த பின்னர் வாக்களிப்பதில் அக்கறை இன்றி இருப்பர். இப்படி அக்கறை இன்றி இருப்பவர்கள் மட்டும் சுமார் முப்பது நாற்பது விழுக்காடு வாக்காளர்கள் என்பது தேர்தல் ஆணையத்தின் கணக்கெடுப்புக் கூறுகிறது!

ஆக, ஒவ்வொரு இடைத் தேர்தலிலும் குறைவான வாக்காளர்களே வாக்களிக்கிறார்கள். சுமார் அறுபது, எழுபது விழுக்காடு வாக்காளர்கள். அதிலும் இப்போது மழைக்காலம் வேறு!    வாக்களிக்கும் மக்கள் இன்னும் குறையுமோ என்னும் ஐயமும் உண்டு.

ஆனாலும் அன்வார் முழு மூச்சாக தனது பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். யாரையும் விட்டு வைக்கவில்லை. எந்த இடையூறுகளையும் எதிர்கொள்ளத் தயாராய் இருக்கிறார்.  ஆடுகிறார்!  ஓடுகிறார்! பாடுகிறார்!

அவருடைய வாக்கு இலக்கு என்னவாக இருக்கும்?  முப்பதாயிரத்தை எட்டினால் ....நமக்கும் மகிழ்ச்சி தான்!

Tuesday, 9 October 2018

பிடி தளர்கிறதா...?


பிடி என்றதும் தேர்தல் நடக்கப் போகும் பிடி அல்ல. இது  வேறு பிடி.

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் என்றால் தெரியாதவர் யாரும் இல்லை. நாம் அனைவரும் அறிவோம். இந்தச் சங்கத்தின் தலைவராயிருப்பவர் டான்ஸ்ரீ கே.சோமசுந்தரம் என்பதையும் நாம்  அறிவோம். என்னுடைய கேள்வி சங்கத்தில் அவருடைய பிடி தளர்கிறதா என்பது தான்.  காரணம் அவருடைய வயதை வைத்துப் பார்க்கும் போது அப்படி ஒரு கேள்வி எழுவது இயல்பு தான்.

 இந்தச் சங்கம் எப்போது உதயமானதோ அப்போதிருந்தே நான் அதனுடன் தொடர்பில் உள்ளவன். இத்தனை ஆண்டுகளாக அங்கிருந்து எனக்குக் கடிதங்கள் வந்திருக்கின்றன. அப்போது,  எனது நினைவு சரியாக இருந்தால், அந்தக் கடிதங்களின் மேல் கடித உறையில் ஆங்கிலத்தோடு தமிழ் எழுதப்பட்டிருக்கும். தமிழ் மொழியின் கீழ் தான் ஆங்கிலம் எழுதப்பட்டிருக்கும். இதில் ஒன்றும் அதிசயமல்ல. இது எப்போதும் உள்ள நடைமுறை தான்.

ஆனால் சமீபகாலமாக அந்த உறையில் தமிழ் தவிர்க்கப்பட்டிருக்கிறது. காரணம் தெரியவில்லை. அதனால் தான் நாம் இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டியிருக்கிறது.  ஏன் தமிழைத் தவிர்க்கிறார்கள் என்பது தான் புரியவில்லை.

கூட்டுறவு சங்கத்தின் தலைவர் டான்ஸ்ரீ சோமசுந்தரம் ஒரு தமிழர். இந்தச் சங்கத்தின் தமிழர் ஒருவர் இருப்பது இதுவே கடைசியாக இருக்குமோ?  நாம் எல்லாக் காலங்களிலும்  உரிமைகளை விட்டுக் கொடுப்பதில் வல்லவர்கள்! கூட்டுறவு சங்கத்தின் அடுத்த தலைவர் தமிழராக இருக்க வழியில்லை! ஆனால் அந்தத் தலைமைத்துவம் மீண்டும் தமிழருக்குக் கிடைக்காது என்பதை இப்போதே ஒரளவு ஊகிக்கலாம். காரணம் அதை நாம் இப்போதும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். வருபவர்கள் தமிழுக்கு எந்த அளவு ஆதரவு கொடுப்பார்கள் என்பதும் உறுதியில்லை. இப்போதே ஆதரவு கொடுக்கவில்லை என்றால் பிறகு எப்போது?

இப்போதே நாம் எதையாவது செய்ய வேண்டும். 

தலைவரின் பிடி தளர்கிறது என்றே தோன்றுகிறது! நாம் என்ன செய்யலாம்? இப்போது விட்டுக் கொடுத்தால் எப்போதுமே விட்டுக் கொடுக்க வேண்டி வரும்!

Monday, 8 October 2018

பொன்னாடை வேண்டாம்...!

"என் இலக்கு நிறைவேறும் வரை எனக்குப் பொன்னாடையும்  வேண்டாம் மலர் மாலையும் வேண்டாம்! பொன்னாடையையும் சுமக்கப் போவதில்லை, மலர் மாலையையும்  சுமக்கப் போவதில்லை!"  எனக் கூறியிருப்பவர் பிரதமர் துறை துணை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி.

சமீபத்தில் நடந்து தெலுங்கு மாநாட்டில் இதனைக் கூறியிருக்கிறார் வேதமூர்த்தி. மிகவும் வரவேற்கக் கூடிய ஒரு செய்தி.

நாம் என்ன செய்ய வந்தோம்?  நமது கடைமைகள் என்ன? நமது சமுதாயத்தின் நிலை என்ன?  போன்ற கேள்விகளோடு அரசியலுக்கு வருபவன் தான் தலைவன். அப்படித்தான் ஒவ்வொரு தலைவனும் வருகிறான். வந்தவன் தனது கடமையை மறந்து பொன்னாடைக்கும், பூமாலைக்கும் சேவை செய்பவனாகி விடுகிறான்!  யார் பெரிய மாலை போடுகிறார்கள், யார் சிறிய மாலை போடுகிறார்கள் என்று கணக்குப் பண்ண ஆரம்பித்து விடுகிறான்.  பெரிய மாலை போடுபவனுக்கு உதவி, சிறிய மாலை போடுபவனுக்கு உதை என்கிற ரீதியில்  செயல்பட ஆரம்பித்து விடுகிறான்!

கடந்த ம.இ.கா. ஆட்சி காலத்தில் எண்ணிக்கையில் அடங்கா மாலைகளையும், பொன்னாடைகளையும் தலைவர்களுக்குப்  போட்டாகி விட்டது! ஆனால் எதுவும் நடக்கவில்லை! இந்த மாலைகளுக்கும், பொன்னாடைகளுக்கும் இந்தியர்களுக்கும் எட்டாம் பொருத்தம் என்று சொல்லலாம்! எத்தனை எத்தனை மாலைகளும், பொன்னாடைகளும்  இந்தத் தலைவர்களுக்கு நாம் போட்டிருப்போம்! எந்த நாயாவது இந்த சமுதாயத்தைப் பற்றி கவலைப்பட்டிருக்குமா!

இப்போது தான் இந்தச் சமுதாயத்தைப் பற்றி கவலைப்படும் ஒரு தலைவனைப் பார்க்கிறோம். என் இலக்கை அடையும் வரை எனக்கு மாலைகள் வேண்டாம், பொன்னாடைகள் வேண்டாம் என்று சொல்பவர் யார்? அவர் மேல் எனக்கு நம்பிக்கை உண்டு. தனது இலக்கை அடையும் வரை அவர் கண்துஞ்சார்,  பசி நோக்கார், மெய்வருத்தார் பாரார், கருமமே கண்ணாயினர் என நாம் நம்பலாம். அந்த அளவுக்கு இந்த மக்கள் மீது பற்றும் பாசமும் உள்ளவர்.

பொன்னாடையும் வேண்டாம்! மலர்மாலையும் வேண்டாம்! சமுதாயம் சாதனையாக மாற வேண்டும்!

Sunday, 7 October 2018

வாசிப்பது கடைசிவரை....!

வாசிப்பதற்கு வயது ஒரு தடையில்லை. சிறிய வயதினரோ, பெரிய வயதினரோ வாசிப்பதை நிறுத்தக் கூடாது. எந்நாளும் வசிப்பதை ஒரு பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனாலும் என்ன நடக்கிறது?

ந்மது இளைஞரிடையே படிக்கும் பழக்கம் இருக்கிறதா என்பதே தெரியவில்லை!  அவர்கள் படிக்கும் செய்திகள் எல்லாம் "வாட்ஸப்" மூலம் தான்! சரி வாட்ஸப் மூலம் அவர்களுக்கு அப்படி என்ன செய்திகள் கிடைக்கின்றன? எவன் செத்தான், எவன் வெட்டினான் போன்ற செய்திகள் தான் அதிகம்! அது போன்ற செய்திகள் தான் அவர்களைச் சுண்டி இழுக்கின்றன! 

மற்றபடி இணயத்தைப் பயன்படுத்தி படிக்கின்ற பழக்கமும் குறைவு தான். நான் இங்குக் குறிப்பிடுவது பெரும்பாலும் கல்லூரியில் படிக்கின்ற இளைய தலைமுறையைப் பற்றி தான்.
இதோ என் அருகிலேயே  நான்கு  இளைஞர்கள்.  செய்முறை பயிற்சிக்காக வந்திருக்கிறார்கள்.  இவர்கள் நாளிதழ்கள் படிப்பதை நான் பார்க்கவில்லை. இணையத்தில் செய்திகளைப் படிப்பதை நான் பார்க்கவில்லை. அரட்டை அடிப்பது தான் அதிகம்.  அதைவிட தங்களுடைய கைப்பேசியில் என்ன தான் செய்கிறார்கள் என்பதே நமக்குப் புரியவில்லை! கைப்பேசியுடன் ஒன்றிப் போய் விடுகிறார்கள்!

இவர்களின் மூன்று மாணவர்கள் அடுத்து பட்டப்படிப்பை மேற்கொள்ளப் போகிறர்கள். நல்லது. சரி எந்தப் பல்கலையில் படிக்கலாம், படிக்கப் போகலாம், அரசாங்கமா தனியார் கல்லுரிகளா என்று இணயத்தைத் திறந்து கொஞ்சமாவது பார்ப்பார்களா என்றால் ...ஊகூம்.... கொஞ்சம் கூட அந்த அக்கறை இல்லை! பெற்றோர்களுக்குச் செலவு வைப்பதில் தான் ஆர்வம் காட்டுகிறார்கள். பெற்றோர்கள் வசதியானவர்கள் என்றால் கவலையில்லை. ஆனால் பெரும்பாலும் நடுத்தரக் குடும்பங்கள். அரசாங்கக் கல்லுரிகள் என்றால் செலவுகள் கொஞ்சம் குறைவு.  அதைப் பற்றியெல்லாம் இவர்களுக்கு அக்கறை இல்லை! இவர்களைப் பற்றி நாம் என்ன சொல்லுவது?

வாசிக்கும் பழக்கம் பெற்றோரிடமிருந்து வர வேண்டும். அப்போது தான் அது பிள்ளைகளுக்கும் வரும். நாளிதழ்கள் இல்லையென்றாலும் இணையத்தில் உள்ள நாளிதழ்கள், கட்டுரைகள், கவிதைகள், கதைகள் என்று அனைத்தையும் படிக்க முடியும். அவைகளையாவது அவர்கள் படித்தால் உலகத்தைப் பற்றி அல்லது நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

வாசிப்பது கட்டாயம். கண்டதைப் படிப்பவன் பண்டிதன் ஆவான் என்பார்கள். கண், கண்டு, தேர்ந்து கொண்டு, படிப்பது நம்மையும் கல்வி கற்ற பண்டிதனாக்கும்!  

வாசியுங்கள்! அது உங்களை உயர்த்தும்!

Saturday, 6 October 2018

விரும்பத்தகாத பெயர்கள்...!

விரும்பத்தகாதப்  பெயர்களை பிள்ளைகளுக்கு வைக்க வேண்டாம் என தேசியப் பதிவு இலாகா பெற்றோர்களுக்கு அறிவுரைக் கூறுகிறது.

வரவேற்கிறோம்!  இவர்களின் அறிவுரை யாரை நோக்கிச் சொல்லப்படுகிறது என்பதும் முக்கியம். தேசியப் பதிவு இலாகா சொல்லுவதைப் பார்க்கும் போது அது மலாய்ப் பெற்றோர்களை நோக்கித் தான் சொல்லப்படுகிறது என்பதாகத் தான் நாம் நினைக்க வேண்டியுள்ளது. காரணம் தேசியப் பதிவு இலாகாவில் வேலை செய்பவர்கள் மலாய்க்காரர்கள். அதனால் அவர்கள் சொல்லுகின்ற அறிவுரை மலாய்க்காரர்களுக்குத் தான் என நாம் சொன்னால் தவறு ஏதுமில்லை.

ஆனால் இந்தியர்களுக்கும் இந்த வேண்டத்தகாத, விரும்பத்தகாத பெயர்கள் பெற்றோர்களால் சூட்டப்படுகின்றன என்பதையும் நாம் பதிவு இலாகாவின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

சிலருடைய பெயர்களைப் பார்க்கும் போது அவர்கள் எந்த ஊர், எந்த நாட்டிலிருந்து வந்தவர்கள் என்று நாம் யோசிக்க வேண்டியுள்ளது! கடைசியில் பார்த்தால் நிறம், தமிழன் நிறம், கையிலே ஒரு மந்தரித்த கயிறு - அவன் பச்சைத் தமிழனாக இருப்பான்!  நாம் தலையில் அடித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது! யாருடா இவனுக்குப் பெயர் வைத்தது என்று கோபப்பட வேண்டியிருக்கும்!

இதற்கு முக்கிய காரணம் நமது கோயில் அர்ச்சகர்கள். இவர்கள் ஏதோ பெயர் வைப்பதில் நிபுணர்கள் போல பெயர்களை ஷாவில் துவங்குவது போல வையுங்கள், ஸ்ரீ யில் வையுங்கள், ப் பில் வையுங்கள்,  ரு வில் வையுங்கள்,  ஞ் சில் வையுங்கள் என்று எதற்கும் ஒத்துவராத பெயர்களை வைக்கச் சொல்லுகிறார்கள்! பாவம் இந்த இளம் பெற்றோர்கள்! அங்கும் அறியாமை, இங்கும் அறியாமை! எப்படி எப்படியோ பெயர்களை வைக்கிறார்கள்! அதற்குப் பதில் சினிமா நடிகன் பெயர் வைத்தாலாவது அவன் தமிழன் என்கிற ஓர் அடையாளமாவது இருக்கும்!

ஒரு முறை இளைஞர் ஒருவர் தனது மகளுக்குப் பெயர் வைக்க வேண்டுமென்று கணினியில் தேடச்  சொன்னார். அவர் கொடுத்த எழுத்தை வைத்து அப்படி ஒன்றையும் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் ஏதோ ஒன்று கொஞ்சம் ஒத்து வந்தது. ஆனால் அதன் பொருள் என்னவென்றே புரியவில்லை! அனாலும் அது தான் வேண்டும் என்று அவர் பிடிவாதம் பிடித்தார்! அவர் ஒரு காரணம் சொன்னார்: "ஏதோ என் மகள் வாழ்க்கையாவது நன்றாக இருக்கட்டும்!"  என்று.  நான் அவரிடம் சொன்னேன்: பரவாயில்லை! அந்தப் பெயரோடு ஒரு தமிழ்ப் பெயரையும் சேர்த்துக் கொள் என்று.  செய்தாரா செய்யவில்லையா என்பது தெரியவில்லை! 

ஆனால் இவைகள் எல்லாம் தேசியப் பதிவு இலாகாவின் கவனத்திற்கு எப்படிக்  கொண்டு செல்வது?  பார்க்கலாம். புதிய அரசாங்கத்திலாவது  இதற்கு ஒரு தீர்வு கிடைக்குமா என்றூ.

திருடுவது குற்றமா....?

திருடுவது குற்றமா என்னும் நிலைமைக்கு வந்துவிட்டனர் முன்னாள் பிரதமர் நஜிப்பின் குடும்பத்தினர்!

அமெரிக்காவில் உள்ள அவரது மகள் நூர்யானா நஜிப்  ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறார்!  அவரது தாயார் கைது செய்யப்பட்டிருப்பதைப் பற்றி கேள்விப்பட்டதும் அரசாங்கத்தைப் பார்த்து: நீங்கள் எல்லை மீறுகிறீர்கள்! என்பதாக.  திருடுவது குற்றம் என்பது பாலபாடம். ஒரு வேளை  திருடுவது குற்றம் இல்லை என்பதாக நூர்யானா வளர்க்கப்பட்டிருப்பாரோ! ஒன்றும் புரியவில்லை!

அவருக்குத் தாய் மேல் உள்ள பாசம் ஒரு வேளை அவரை அப்படிப் பேச வைத்திருக்கலாம். இன்று நஜிப் மேல் உள்ளக் குற்றசாட்டுக்களுக்கு மிகப் பெரிய காரணமே அவருடைய மனைவி ரோஸ்மா தான் என்பதாகத்தான் மலேசியர்கள் நம்புகின்றனர். ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்பது நமது அனுபவமொழி.  பெண்களிடமிருந்து ஆக்ககரமான செய்திகளே அதிகம். ஆனால் ரோஸ்மா மாபெரும் அழிவு சக்தி. தானும் தன் குடும்பமும் வாழ எதை வேண்டுமானாலும் செய்வார் என்பதை அவரின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன.

அமெரிக்காவிலுள்ள தனது  மகனுக்கு சினிமா படம் எடுக்க அவ்ர் உதவி செய்திருக்கிறார். அதே வேளை தனது மகள் நூர்யானவுக்கும் வேறு வழிகளில் அவர் உதவிகளை வழங்கியிருப்பார்.  அதனால் தான் நூர்யானாவுக்கு அம்மா மேல் பாசம் பொங்கி வழிகிறது!  அம்மா ஒரு தங்கச் சுரங்கம். பாசம் எழுவது இயல்பு தான்.

ஆனாலும் திருடுவது குற்றம் என்பது தான் நாமறிந்த உண்மை. அதற்கு வேறு வியாக்கியானம் இல்லை. தாய் தனது மகளுக்குத் திருடியாவது உதவி செய்கிறாள் என்றால் அது பிள்ளைப் பாசம் தான் காரணம். ஆனால் அந்த உதவி யாருக்குப் போய் சேர்ந்தாலும் அது திருடு திருடு தான்.  பிள்ளைகள் அதனை மறுக்க வேண்டுமே தவிர வாழ்த்தி வரவேற்கக் கூடாது. இது ஒரு குடும்பத்தின் வருங்காலத் தலைமுறையினரை திருடர் கூடாரமாக  மாற்றிவிடும்.

நூர்யானா பேசுவது தாய்ப்பாசம். ஆனால் தாய் தவறான வழியைப் பின் பற்றுகிறார் என்றால் அதற்கு மகள்  வக்காளத்து வாங்கக் கூடாது. அதைவிட பேசாமல் இருப்பதே மேல். 

சட்டம் தனது கடமையைச் செய்யட்டும். இது வரை எதுவும் மெய்ப்பிக்கப்படவில்லை. அப்படியே ஆகட்டும்!

Thursday, 4 October 2018

இது தாண்டா போலிஸ்....!

சில சமயங்களில் நமது காவல்துறையின் செயல்பாடுகள் நம்மை வியக்க வைக்கின்றன!   அவர்களைக் குற்றம் சாட்டுகின்ற அளவுக்கு நம்மைப் பேச வைக்கின்றன!

கடைசியாக பத்திரிக்கைகளில் அமர்க்களப்பட்ட ஒரு செய்தி. சிரியா நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அனைத்துலக விமான நிலையத்தில் கடந்த ஏழு மாதங்களாக தங்கி இருந்திருக்கிறார்!  குடும்பம் நடத்தவில்லை என்பதைத் தவிர மற்றபடி விமான நிலையமே அவரது வீடாக இருந்திருக்கிறது! 

ஆனாலும் ஏழு மாதங்களாக அவர் யாருடைய கண்களுக்கும் அகப்படாமல் - குறிப்பாக காவல்துறையினரின் கண்களுக்கு அகப்படாமல் - அவரால் எப்படி தொடர்ந்தாற் போல ஏழு மாதங்களாக இருக்க முடிந்திருக்கிறது என்பதை நினைக்கும் போது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்!

இப்போது யாரை நாம் பாராட்டலாம்?  ஏழு மாதங்களாக அனுமதியின்றி இருந்த ஒர் அயல்நாட்டவரை கண்டு பிடிக்காத காவல்துறையை நாம் பாராட்டவோ, சீராட்டவோ முடியாது! ஒன்றைச் சொல்லலாம். இது காவல்துறையே அல்ல!  நாட்டிற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவினாலும் கூட இவர்களால் கண்டு பிடிக்க முடியுமா என்பதும் சந்தேகம் தான். இது காவல்துறையினரின் அலட்சியமா அல்லது இது தான் அவர்களின் இயல்பா?  கடந்த காலங்களில் இவர்களின் சேவை இப்படித்தான் அமைந்திருக்கும் என்பதை இப்போது நாம் அணுமானிக்கலாம்!

ஒரு நாட்டின் விமான நிலையம் என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாயந்தது என்பதை நாம் அறிவோம். இப்போது ஒவ்வொரு நாடும் ஏதோ ஒரு வகையில் பயங்கரவாதத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது. இதுவே நமது அண்டை நாடான சிங்கப்பூரில் நடக்கும் சாத்தியம் உண்டா? இங்கு அந்த சாத்தியம் உண்டு என அறியும் போது "என்னடா காவல்துறை?" என்று நாமும் சலித்துக் கொள்ள வேண்டி உள்ளது.வேறு என்ன செய்ய?

எல்லாம் முடிந்த பிறகு 14 நாள் தடுப்புக் காவல், 10,000 வெள்ளி அபராதம், ஐந்தாண்டு சிறை, பிரம்படி என்று சொல்லிக் கொண்டிருப்பதில் யாருக்கும் எந்தப் புண்ணியமும் இல்லை. இதெல்லாம் நடக்கும் முன்பே  அந்த இளைஞர் அவர் நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டிருக்க வேண்டும். 

இதுவா போலிஸ்...!

Wednesday, 3 October 2018

ஹாடி மாற வேண்டும்...!

பாஸ் கட்சி த.லைவர் அப்துல் ஹாடி அவாங் ஒரு நல்ல மனிதர். நல்லவர் என்றால் நல்லவர் தான். அவர் திருடினார், லஞ்சம் வாங்கினார் என்றெல்லாம் அவர் மீது குற்றம் சுமத்த முடியாது. ஒரு நல்ல அரசியல்வாதி.

சமயம் என்று வரும் போது அவரும் தடுமாறுகிறார். சமயத் துறையில் யாராக இருந்தாலும், நிபுணத்துவம் பெற்றவர்கள் என்று சொல்லிக் கொண்டாலும், தடுமாறத்தான் செய்வார்கள். காரணம் சமயம் என்னும் போது ஒரே ஒரு சமயத்தில் அவர்கள் நிபுணத்துவம் பெறலாமே தவிர இருக்கின்ற அனைத்து மதங்களிலும் அல்ல. நிபுணத்துவம் பெறலாமே தவிர புனிதத்துவம் பெற எந்த மனிதனாலும்  முடியாது! 

அன்வார் இப்ராகிம் தனது இடைத் தேர்தல் பரப்புரையை  போர்ட்டிக்சனில் உள்ள ஒரு சீக்கிய குர்துவாராவிலிருந்து (கோவில்) துவங்கினார். அது அவருடைய விருப்பம். அவர் ராசி பலன் பார்ப்பவர் அல்ல. நேரங்காலம் பார்ப்பவர் அல்ல. தனது சுய விருப்பத்தின் பேரில் எங்குத் தொடங்க விருப்பம் கொண்டாரோ அங்கிருந்து தொடங்கினார். 

இதனையே ஒரு பிரச்சனையாக  கையில் எடுத்துக் கொண்டு ஹாடி,  அன்வார் மேல் சேற்றை வாரி இறைக்க ஆரம்பித்துவிட்டார்.  குர்துவாரா போவதே பாவம் என்கிற ரீதியில் பேச ஆரம்பித்துவிட்டார்! அவர் பேசுவதைப் பார்க்கும் போது நமது நாட்டில் வேறு மதங்களே இல்லை என்று அவர் நினைக்கிறாரோ என்று நமக்கு ஐயம் ஏற்படத்தான் செய்கிறது. மற்றொன்று இஸ்லாமிய சமயம் என்று வரும் போது அன்வார் வெறும் 'வெள்ளிக்கிழமை'  இஸ்லாமியர் அல்லர். அவர் தனது இளம் வயதில் நாடெங்கும் சென்று இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றி சமயச் சொற்பொழிவாற்றியவர். மார்க்கத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்.

அவரைப் பற்றி ஹாடி பேசுவதே அவருடைய தகுதிக்கு ஏற்புடையதல்ல. இந்த நாட்டில் இஸ்லாம் என்பது மற்ற மதங்களைப் போல  அதுவும் ஒரு மதம் தான் என்பதை ஹாடி உணர வேண்டும். இங்கு இந்து சமயம், கிறிஸ்துவ சமயம், பௌத்த சமயம், சீனர்களின் பாரம்பரிய சமயம் இன்னும் ஆழமாகப் போனால் பல சமயங்கள் உண்டு. இப்படி பல சமயங்கள் உள்ள நாட்டில் யாரும் எந்த வழிப்பாட்டுத் தலங்களுக்கும் போகலாம் வரலாம்!  இதனாலெல்லாம் ஒருவரின் சமய நம்பிக்கைகள் குறைந்து விடும் என்பது போன்று பேசுவது சரியல்ல என்பதே ஹாடிக்கு நாம் சொல்ல வரும் செய்தி. 

வழிபாட்டில் கலந்து கொள்வது வேறு. அதே சமயத்தில் அவர்களின் அழைப்பை ஏற்று மரியாதை செலுத்துவது வேறு. ஹாடி அதன் வித்தியாசங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஹாடி தொடர்ந்து இது போன்ற குற்றச்சாட்டுக்களை முன் வைப்பது அவர் தகுதிக்கு ஏற்புடையது அல்ல.

அவர் மாற வேண்டும்! மாற்றிக்கொள்ள முடியாவிட்டால் மாறிக்கொள்ள  வேண்டும்!

Monday, 1 October 2018

ஊழலக்குப் பிரம்படி..!

மலேசிய ஊழல் எதிர்ப்பு  ஆணையம் அரசாங்கத்திற்கு நல்லதொரு பரிந்துரையைச் செய்திருக்கிறது. ஒரு நபரின் ஊழல் குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் ஊறுதிபடுத்தப்பட்டால் அந்நபருக்குப் பிரம்படி தண்டனைக் கொடுக்கப்பட வேண்டும் என்னும்  பரிந்துரையைப் பரீசலிக்க வேண்டும் என ஆணையம் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.

இதனை நாம் வரவேற்கிறோம். ஊழல் என்பது முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். குறிப்பாக சீனாவில் மரண தண்டனை அளவுக்கு ஊழல் கொண்டு சென்றிருக்கிறது! அதில் தவறு இல்லை. மனிதன் சமீப காலங்களில் திருந்துவான் என்று சொல்லுவதற்கில்லை. அறம் போற்றப்படுவதில்லை; அறம் கொண்டாடப்படுகிறது!

ஆக, பிரம்படி சரியானதொரு வழி தான்.  ஏற்றுகொள்ளக்கூடிய பரிந்துரை தான் அதில் சந்தேகமில்லை.

ஆனால் எந்த அளவு ஊழல் செய்யப்பட்டிருக்கிறது என்பதில் ஓரு வரையறை வேண்டும். இப்போது நம் கண் முன்னே நிற்பவர் முன்னாள் பிரதமர் நஜிப். அவருடைய வழக்கறிஞர் முகமது ஷாபி அப்துல்லா. நமது முன்னாள் ம.இ.கா. தலைவர்கள். இப்படி பல அரசியவாதிகள் இதில் அடங்குவர்.

எந்த அளவு என்று சொல்லுவதை விட யார் ஊழலில் ஈடுபட்டவர்கள் என்னும் வரையறை சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.  குறிப்பாக அரசியல்வாதிகள், அரசாங்க ஊழியர்கள் - இவர்கள் தான் நமது இலக்காக இருக்க வேண்டும். காரணம் இவர்கள் தான் மக்களின் பணத்தைக் கொள்ளையடிப்பவர்கள் என்று பெயர் வாங்கியவர்கள்! இவர்களிடமிருந்து தான் மக்கள் காப்பாற்றப்பட வேண்டும்.

வெறும் பிரம்படி மட்டும் போதாது. அத்தோடு வழக்கமான தண்டனைகளான சிறைத்தண்டனை,  அபராதம் அனைத்தும் ஓரு கூட்டாக வர வேண்டும்.

ஊழலுக்கு பிரம்படி என்பது மிக மிக முக்கியம். ஊழலை நிறுத்த உடனடியான பலன் வேண்டுமென்றால் பிரம்படி தான் அதற்கான தீர்வு.

ஆனால் அரசியல்வாதிகள் இந்தப் பரிந்துரையை  ஏற்றுக்கொள்ளுவார்களா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!