Saturday, 31 March 2018

உலக இட்லி தினம்..!


எல்லாவற்றுக்கும் ஒரு தினம் உண்டு.    அதே போல இட்லிக்கும் ஒரு தினம். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 30- தேதி உலக இட்லி தினம் கொண்டாடப்படுகிறது. இதற்குக் காரணமானவர்கள் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள். காரணம் அந்த அளவுக்கு இட்லியோடு நமக்கு நெருக்கம் உண்டு.

இங்கு நாம் இட்லி செய்முறையைப் பற்றியெல்லாம் விளக்கம் சொல்லப் போவதில்லை. அதற்குத் தேவையும்  இல்லை. இதெல்லாம் பார்த்துப் படித்தெல்லாம் அதன் சுவையைக் கொண்டு வர முடியாது.  அது பரம்பரையாக வீடுகளில் கற்றுக் கொள்ளுவது.

இட்லி தமிழ் நாட்டு உணவு அல்ல.  அது இந்தோனேசியாவிலிருந்து அங்கு பணிபுரிந்த இந்து அரசவை சமையல்காரர்களால் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்ட ஓர் உணவு எனச் சொல்லப்படுகிறது. வரும் போது ஒரு விதமாகவும் வந்த பிறகு அதனை மாற்றி அமைத்த பெருமை நம்மையே சாரும். அதனால் தான்  வந்து 700 ஆண்டுகள் ஆகியும்  இன்னும் அது உயிர்த் துடிப்போடு விளங்குகிறது!
பொதுவாக இட்லி என்பது தென்னிந்தியர்களால் மிகவும் விரும்பி சாப்பிடப்படுகின்ற ஓரு காலை உணவு.  நமது நாட்டிலும் இந்தியர்கள் மட்டும் அல்ல சீனர்களும், மலாய்க்காரர்களும் கூட விரும்பி சாப்பிடுகின்ற உணவு தான் இட்லி. அது மிருதுவான தன்மை குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை சாப்பிடுகின்ற உணவாக மாறிவிட்டது. அத்தோடு ஆரோக்கியமான உணவு என்பதும் ஒரு காரணம்.

உலகளவில் பத்து மிகவும் சிறந்த உணவுகளில் இட்லியும் ஒன்று என்பதாக உணவு ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். 

தமிழ் நாட்டில், சென்னையில் ஒர் உணவகத்தின் பெயர் "முருகன் இட்லிக் கடை" என்பதாகவே வெற்றிகரமாக நடந்து வருகிறது.  அது ஒன்றே போது இட்லியின் சிறப்பைச் சொல்ல.

வெறும் "ரொட்டிச்சனாய்" (பரோட்டா) என்று சொல்லி, காலையில் வயிற்றை நிரப்பி உடம்பைக் கெடுத்துக் கொள்ளாமல் கொஞ்சம் ஆரோக்கியமான உணவான இட்லியை சாப்பிட்டு ஆரோக்கிய வாழ்க்கையை வாழ்வோம்.

சாதி வேண்டாம்! மதம் வேண்டாம்! போ!


இது இந்தியாவிலுள்ள  கேரள மாணவர்களிடையே ஏற்பட்டிருக்கும் ஒரு புதிய மாற்றமா, விழிப்புணர்ச்சியா எப்படி சொல்லுவதென்று தெரியவில்லை!

"சாதியும் வேண்டாம்! மதமும் வேண்டாம்! போ!" என்று   ஒரு புதிய பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்!  இந்த  புதிய  2017-2018 கல்வி ஆண்டின்  புதிய சேர்க்கையில் சுமார் 1.24 இலட்சம் மாணவர்கள் ( நமது உள்ளூர் மொழியில் 124,000 ஆயிரம்) தங்களது விண்ணப்ப பாரங்களில் தங்களுக்குச் சாதியும் இல்லை, மதமும் இல்லை என்று கூறியிருக்கிறார்கள்!
இது சரியா, தவறா என்றெல்லாம் கேள்விகள் கேட்டு விவாதம் செய்வதில் அர்த்தமில்லை.  ஏதோ ஒன்று சரியான பாதையில் செல்லுவதாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.

கேரளாவில் படித்தவர்கள் அதிகம். 95  விழுக்காடு மக்கள் படித்தவர்கள்.  படித்தவர்கள் வீட்டுப் பிள்ளைகள் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. 

வருங்காலத் தலைமுறை சாதிக்குச் சவுக்குமணி அடிக்க வேண்டும் என்று நினப்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இத்தனை ஆண்டுகள் கட்டிக் கொண்டு அழுதோம்.  அது எங்கேயாவது நிறுத்தப்பட வேண்டும்.  கல்வி அமைச்சின் அறிவிப்பின் படி இந்த வேண்டாம் "சாதி,மதம்" என்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டு வருவதாகக் கூறுகின்றது. நல்ல செய்தி.

தமிழ் நாட்டில் இது சாத்தியமா என்றால் இது சாத்தியமே. தேவை ஒரு தொடக்கம்.  தமிழ் நாட்டில் சாதி என்பது அரசியல். சாதியை வளர்த்தவர்களே அரசியல்வாதிகள் தான். அதனால் அவர்களால் சாதியை ஒழிக்க எந்த முயற்சியும் எடுக்கமாட்டார்கள்.  இனி அது மாணவர்கள் கையில் தான் இருக்கிறது.

கேரள மாணவர்களின் சாதி ஒழிப்பு  வரவேற்கக் கூடிய ஒன்று. மதங்களை ஒழித்து விட முடியுமா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம். இதில் முக்கியமானது சாதி ஒழிப்பு என்பதாகவே நான் பார்க்கிறேன்.

கேரள மாணவர்கள் மட்டும் அல்ல, தமிழ் நாட்டு மாணவர்கள் மட்டும் அல்ல  இந்தியாவிலுள்ள  அத்தனை மாநிலங்களுள்ள மாணவர்களுக்கும்  இந்த  "வேண்டாம் சாதி, மதம்" சென்றடைய வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு!

Friday, 30 March 2018

வீரத்தாய்க்கு வீர விருது..!ஒன்பது ஆண்டுகள் சட்டப்போராட்டம். ஏமாற்றியதோடு மட்டும் அல்லாமல்   தாயின் அனுமதியின்றி ஒரு தலை பட்சமாக மூன்று பிள்ளைகளையும் மத மாற்றம் செய்த கணவன். போராட்டம்! தோடர்ந்து போராட்டம்! 

கடந்த ஒன்பது ஆண்டு காலம்  பாலர்பள்ளி ஆசிரியை, இந்திரா காந்திக்கு இது தான் வாழ்க்கை.  போராட்டம் என்றால் அது சாதாரண போராட்டம் அல்ல.  அவருடைய தகுதிக்கு மீறிய போராட்டம். அத்தோடு  தன்னோடு இருந்த மூத்த பிள்ளைகளான  தேவி தர்ஷினி (21)  கரன் தினேஷ் (19)  இவர்களின் கல்வி,  பொருளாதாராச் சிக்கல் அத்தனையும்    சமாளித்து கடைசியாக அவர் நினைத்ததைச் சாதிக்க முடிந்தது.  ஆமாம், அவருடைய  ஒன்பது ஆண்டு காலச்  சட்டப் போராட்டம்  இறுதியாக  கூட்டரசு நீதிமன்றம்  மூலம்    அவருக்கு வெற்றியைக்  கொண்டு வந்தது. தாயின் சம்மதமின்றி மத மாற்றம் செய்தது செல்லாது என்பதாக தீர்ப்பு வெளியானது.      இந்த வழக்கின் வெற்றி என்பது அவருக்கு மட்டும் அல்ல இனி வருங்காலங்களில் இது போன்ற வழக்குகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாகவும் அமைந்திருக்கிறது என்பதும் மகிழ்ச்சியான செய்தி.

இந்திரா காந்தியின் அசராத, அயராத,  பல எதிர்ப்புக்களிடையே எந்த விதத்திலும்  பின் வாங்காத அந்தத் துணிச்சல் மிக்க  தாய்க்குக் தான்  "துணிச்சல் மிக்க பெண்" என்கின்ற வீர விருது கொடுத்து சிறப்பித்திருக்கிறது அமெரிக்க அரசாங்கம்.  சமீபத்தில்  அந்த விருதினை  இந்திரா காந்திக்கு வழங்கி சிறப்பு செய்திருக்கிறார்  மலேசியாவுக்கான  அமெரிக்க தூதர் கமலா ஷிரின் லக்திர்.

இந்த வெற்றி என்பது அசாதாரணம் என்றாலும்  அவர்  மனதிலே இன்னும் வேதனை உண்டு. அவருடைய கடைசி மகள்,  பிரசன்னா திக்‌ஷா -   பதினோரு மாதக் குழந்தையாய்  இருக்கும் போது ஓடிப்போன கணவனால்  அபகரிக்கப்பட்ட அந்தக் குழந்தை -  இன்னும் தாயிடம் ஒப்படைக்கப்பட வில்லை. இது வ்ரை அவர்  எந்த நீதிமன்ற உத்தரவையும் மதிக்கவில்லை!  யார் பின்னாலோ ஒளிந்து கொண்டு தண்ணி காட்டிக் கொண்டிருக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது. குழந்தையைக் கூட பள்ளிக்கு அனுப்பாமல் .....? ஆனால் இந்த அயோக்கித்தனம்  நீண்ட காலம் நீடிக்க முடியாது என்பது மட்டும் உண்மை.

இதற்கு முன்னர் இதே விருதை மனித உரிமைப் போராளி அம்பிகா சீனிவாசனுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

நல்லது நடக்கும் என எதிர்பார்ப்போம்! வீரத்தாய்க்கு வீர வணக்கம்!


Thursday, 29 March 2018

பெண்களுக்குக் கல்வியை மறுக்காதீர்கள்!


மலேசிய இந்தியர்களில் கல்வியில் பின் தங்கிய சமூகம் என்றால் அது தமிழர்களாகத்தான் இருக்க முடியும். அதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. பிள்ளைகள் படிக்க வேண்டுமென்றாலும் குடிகாரப் பெற்றோர்கள் என்றால் எல்லாமே பாழாகிவிடும்.  குண்டர் கும்பல், கஞ்சா கும்பல், உலகே மாயம் என்று காற்றில் பறந்து கொண்டிருக்கும் கும்பல், அரசியல்வாதிகளின் பின்னால் வாலைப் பிடித்துக் கொண்டிருக்கும் கும்பல் - சுருக்கமாகச் சொன்னால் குடிகாரக் கும்பல்! 

இவர்கள் வீட்டுப் பிள்ளைகளை எப்படிக் கரை சேர்ப்பது  என்பது பெரிய கேள்விக்குறி.  பெற்றோர்களுக்குப் பிள்ளைகளின் மீது அக்கறை இல்லையென்றால் பிள்ளைகளும் கல்வி மீது அக்கறை இல்லாமல் போவது இயல்பு.  அதுவும் பெண் பிள்ளைகள் என்றால் அவர்களின் எதிர்காலமே இருண்ட காலமாகி விடும்.

ஆனால் இவர்களும் கரை சேர்க்கப்பட வேண்டும்.  அதுவும் பெண் பிள்ளைகளின் கல்வி மிக முக்கியம். இவர்கள் கல்வி கற்றால் தான் அடுத்த தலைமுறையாவது மாறக் கூடிய வாய்ப்பு உண்டு. ஒரு சில பெற்றோர்களின் அலட்சியம் நமக்கு வேதனைத் தருவதாகத்தான்  உள்ளது. பரிட்சையில் தோல்வி என்றதும்  உடனே ஏதாவது ஒரு தொழிற்சாலைக்கு  வேலைக்கு அனுப்புகின்ற பழக்கம் இன்னும் நம்மிடம் இருந்து மறையவில்லை! ஏதோ ஆயிரம் வெள்ளி சம்பளம் கிடைக்கும்  போய் சம்பாதிக்கட்டும் என்று அலட்சியம் காட்டும் சமுகமாக நாம் மாறிவிட்டோம்.  அந்த ஆயிரம் வெள்ளியைக் கூட பிள்ளைகளின் நலனுக்காகப் பயன்படுத்துவதில்லை. அதனையும் குடித்தே அழித்துவிடும் பழக்கம் நம்மிடையே உள்ளது!

என்ன தான் முடிவு?  தக்கவர்கள் எடுத்துச் சொல்லி இவர்களின் கல்வி தொடரப்பட வேண்டும். அரசாங்கம் கொடுக்கின்ற வாய்ப்புக்களைப் பயன்படுத்தி தங்களின் அறிவைக் வளர்த்துக் கொள்ள உதவ வேண்டும். பிள்ளைகளுக்கு எல்லாத் திறமைகளும் உண்டு. வீட்டுச் சூழல் அவர்களைத் தடுமாற வைக்கிறது. தடம் மாற வைக்கிறது.

நிறைய  தொழிற்பள்ளிகள் நாடெங்கும் இருக்கின்றன.  அரசாங்கமும் நம்மின மாணவர்களுக்கு  வாய்ப்புக்கள் கொடுக்கின்றது. அவர்களுக்கு மாதாமாதம் பணமும் கொடுத்து  கல்வியும் கொடுக்கின்றது.  கொடுக்கின்ற தொகை சிறியதாக இருந்தாலும் படிக்கும் போது ஏற்படுகின்ற செலவுகளை ஈடுகட்டும். அதிலும் குறை சொல்லுகின்ற பெற்றோர்கள் இருக்கிறார்கள்! இங்கு படிப்பு என்பது தான் முக்கியமே தவிர பணம் அல்ல!

பெற்றோர்களே!  உங்கள் பிள்ளைகளின் கல்வியைப் புறக்கணிக்காதீர்கள். அதுவும் பெண் பிள்ளைகளின் கல்வி இன்னும் முக்கியம்.  கல்வி கற்ற சமுதாயமாக மாறுவோம்!

Wednesday, 28 March 2018

பரிட்சையில் தோல்வியா...?


எஸ்.பி.எம். பரிட்சை முடிவுகள் வெளியாகிவிட்டன. பல வெற்றிகள் அதே சமயத்தில் அதற்கு ஈடாகப் பல தோல்விகள்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நமது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!  வெற்றி பெற்ற மாணவர்கள்  இந்நேரம் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கியிருப்பார்கள்.

வெற்றி பெறாத மாணவர்கள் "இனி என்ன செய்யலாம்" என்று நினைப்பவர்கள் உண்டு. "அவ்வளவு தான்! இனி செய்ய ஒன்றுமில்லை!" என்பவர்கள் உண்டு. "அதான்! தோத்துட்டான் இல்லை! இனி வேலைக்குப் போய் சம்பாதிக்கட்டும்!"  என்று பெற்றோர் சொல்லாவிட்டாலும் ஏதோ கமிஷன் கிடைக்கும் என்று பக்கத்து வீட்டு பரமசிவம் சொல்லுவதைக்  கேட்பவர்களும் உண்டு.

வழிகாட்டுதல் இல்லை! ஆயிரம் இயக்கங்கள் நம்மைச் சுற்றி இருக்கின்றன. அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடு  மட்டும் தான் கவனத்தில் கொள்கின்றனர்.

நமது சமுதாயம் - குறிப்பாகச் சொன்னால் தமிழர் சமுதாயம் -  மதுவுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் கல்விக்குக் கொடுப்பதில்லை! ஒரு சிலர் கல்வியின் முக்கியத்துவம் அறிந்திருக்கின்றனர். ஆனால் அவர்களை ஏமாற்ற ஏகப்பட்ட போலிக் கல்லுரிகள் வரிசையில் நிற்கின்றன!

தோற்றுப்போனாலும் அவர்களைக் கரையேற்ற அரசாங்கம் நிறையவே  தொழிற் கல்லூரிகளை ஏற்படுத்தியிருக்கின்றது. நீங்கள்  உங்கள்  கைப்பணத்தைப்  போட்டு செலவு செய்ய  வேண்டிய அவசியமில்லை. தேவை எல்லாம்  கொஞ்சம் முயற்சி எடுக்க வேண்டும். உங்கள்  பிள்ளைகளின்  எதிர்காலத்தை  நினைத்தாவது  பெற்றோர்கள்   முயற்சிகள்  எடுக்க  வேண்டும். எல்லாம்  வீட்டுப்  பக்கத்திலேயே  இருக்க  வேண்டும் என்னும் எண்ணத்தை வளர்த்துக் கொள்ளாதீர்கள்.' வெளியே போனால் கெட்டுப் போவான்'  என்று உங்கள் பிள்ளைகள்  பற்றியான  தவறான எண்ணம்  வேண்டாம். தைரியமாக, வெளி மாநிலமாக இருந்தாலும், அவர்களை அனுப்பி வையுங்கள். படிக்கட்டும்.

படிப்பதற்கு வெறும் கல்லூரிகளை மட்டும் அரசாங்கம் நடத்தவில்லை அதற்கு மேலும் அவர்களுக்கு மாதா மாதம் செலுவுக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை  அரசாங்கம் கொடுக்கின்றது. காரணம்  தோல்வியடையும்  மாணவர்களில்  பெரும்பாலும் பொருளாதார  ரீதியில் பின் தள்ளப்பட்டவர்களாகவே  இருக்கின்றனர்.

வாய்ப்புக்கள்  நிறையவே  இருக்கின்றன. இப்படித் தோல்வியடைந்த   மாணவர்களுக்காக  அரசாங்கம் நிறையவே செய்கின்றது.. பெற்றோரிடையே விழிப்புணர்ச்சி இல்லை. மாணவர்களிடையே  தமிழ்ச் சினிமாவைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை.  ஒன்றும் தெரியாவிட்டாலும் உங்கள் பள்ளி  ஆசிரியர்களைக்  கேளுங்கள்.  அவர்கள்  உங்களுக்கு  வழிகாட்டுவர்கள்.

கல்வி கற்ற சமுதாயம் என்பது மிக மிக முக்கியம்! பரிட்சையில் தோல்வி என்றாலும் வெற்றி பெற மற்ற வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்! வெற்றி பெற வாழ்த்துகள்!

Monday, 26 March 2018

செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி


தெம்மாங்கு பாடல்கள் மீது எனக்கு  ஓர் அலாதியான ஈர்ப்பு உண்டு.  அந்தக்கால சினிமாவில் பல பாடல்கள் தெம்மாங்கு மெட்டில் வந்திருக்கின்றன. அது அப்படியே கரைந்து கரைந்து அப்புறம் கேட்க முடியாமலே போய்விட்டன. இப்போது அது தேவை இல்லை என்னும் நிலைமைக்கு வந்து விட்டது.

முன்பு தெம்மாங்கு என்றார்கள். அப்புறம் கானா பாடல், கிராமிய பாடல் இப்போது மக்கள் இசை என்கிறார்கள். பெயர் தான் வேறையே தவிர அது மக்களால் விரும்பி, போற்றக்கூடிய பாடல்கள்.

இப்போது தீடீரென இந்தத் தெம்மாங்கு பாடல்களுக்கு ஒரு தெம்பு வந்துவிட்டது!  இத்தனை ஆண்டுகள் முடங்கிக் கிடந்த இந்தக் கிராமிய இசை  இப்போது புதியத்  தெம்போடு விஜய் டிவியின்   ஒத்துழைப்போடு ஒரு புதிய உத்வேகத்தோடு வலம் வரத் தொடங்கியிருக்கிறது!  முதலில் விஜய் டிவிக்கு ஒரு நன்றியைச் சொல்ல வேண்டும். 

அது வெளியான நேரமும் சரியான நேரம் தான்.  தமிழ் நாடு இசைக்கல்லூரியின் துணை வேந்தர் பதவி பற்றிய ஒரு சர்ச்சையை புஷ்பவனம் குப்புசாமி எழுப்பியிருந்தார். தமிழர்களின் பாரம்பரிய இசையான மக்களிசை எப்படி கர்நாடக இசையினரால்  புறக்கணிக்கப்படுகிறது என்பது பற்றி குறிப்பிட்டிருந்தார்.

உண்மையில் மக்களிசையின் நிழல் தான் கர்நாடக இசை. ஆனால் காலப்போக்கில் அது மாறி கர்நாடக இசை உயர்ந்தது மக்களிசை தாழ்ந்தது என்னும் ஒரு நிலையை உருவாக்கிவிட்டனர்.

இந்த நேரத்தில் விஜய் டிவி,  மக்களிசைப் பாடகர்களான செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி இணையை  அறிமுகப்படுத்தினர். அவர்கள் பாடிய முதல் நாள் பாடலிலிருந்து இந்நாள் வரை  அவர்களுக்கு ஈடு இணை இல்லை என்பதைக் காட்டி வருகின்றனர். அவர்கள் பாடி வரும் பாடல்கள் தமிழ் நாடு மட்டும் அல்ல உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு ஒர் உத்வேகத்தைக் கொடுத்து வருகின்றது.    நமது இசை என்கிற உறவை ஏற்படுத்துகிறது. இது நாள் வ்ரை இந்தப் பாடல்கள் எங்கே போயிருந்தன? ஏன் மறைக்கப்பட்டன  என்னும் கேள்விகள் எழுகின்றன.

எனினும் இனி மக்களிசைக்கு எந்தத் தொய்வும் இல்லை! வாழ்க, வளர்க செந்தில்-ராஜலட்சுமி இணையர்!

Saturday, 24 March 2018

ஏன் தலைவர்கள் ஏமாற்றுகிறார்கள்..?


ம.இ.கா. தலைவர்கள் ஏன் இந்தியர்களை ஏமாற்றுகிறார்கள்?

சமீபத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் "இந்தியர்களுக்கு நாங்கள் முழுமையாகச் செய்யாவிட்டாலும் ஏதோ ஓரளவு "ஏனோ தானோ" என்று செய்திருக்கிறோம்! அந்த "ஏனோ தானோ" விலும் ம.இ.கா. தலைமை மடை மாற்றிக் கொண்டது!" என்று கூறியிருக்கிறார்.

இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் ஒன்று தான். டாக்டர் மகாதிர் காலத்தில் எதுவும் நடக்கவில்லை.   சரி, இப்போதாவது ஏதாவது நடக்கிறதா?   ஏதேனும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா? இப்போதும் எதுவும் நடக்கவில்லை!  இப்போது யாரைக் குற்றம் சொல்லுவது? இப்போதைய பிரதமரையா அல்லது ம.இ.கா. தலைமையையா? 

நம்மைப் பொறுத்தவரை இந்தியர்களுக்கு ம.இ.கா ஒன்றும் செய்யவில்லை! அது பற்றி விளாவாரியாக நாம் போகவில்லை. நமக்குத் தெரிந்தவரை ம.இ.கா. இந்தியர்களுக்குச் செய்தது துரோகம் மட்டும் தான்!

இன்னொரு கோணத்தில் பார்ப்போம். முந்திய தலைமை ஒன்றும் செய்யவில்லை என்று இன்று பேசுகிறோம். ஒன்றும் செய்யாத தலைமை, செயல்படாத தலைமை அப்படி செயல்படாத தலைமையின் இன்றைய நிலைமை என்ன?  அவர் மூலையில் முடங்கியா  கிடக்கிறார்? அவர்  ஒரு அமைச்சராக உலகம் பூராவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்! இது எப்படி நடந்தது?  அவர் இந்திய சமுதாயத்திற்குச் செய்தத் துரோகத்திற்காக இந்த அமைச்சர் பதவி அவருக்குக் கொடுக்கப்பட்ட பரிசு என்று எடுத்துக் கொள்ளலாமா?  அதாவது இந்திய சமுதாயத்திற்கு நீங்கள் ஒன்றும் செய்யாவிட்டால் பதவி முடிந்ததும் உங்களுக்கு உயர் பதவி கொடுக்கப்படும் என்று ம.இ.கா. தலைவர்களுக்கு அரசாங்கம் உறுதி அளித்திருக்கிறதோ! இன்றைய தலைவர்களுக்கும் அது பொருந்தும்  என்று எடுத்துக் கொள்ளலாம் அல்லவா! இப்போது உள்ளவர்கள் இந்திய சமுதாயத்தை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டே வந்தால் இவர்கள் பதவி காலம் முடிந்ததும்      இவர்களுக்கும் தகுந்த 'சன்மானம்' வழங்கப்படலாம் அல்லவா!

வேறு நாம் எப்படி இதனைப் பார்ப்பது? ஒரு சமுதாயம் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக் கொண்டே வந்தால் அதனை நாம் எப்படி ஏற்றுக் கொள்வது? ஒரு சிறிய பிரச்சனையைக் கூட தீர்த்து வைக்க முடியாத ஒரு தலைமையை நாம் சீராட்டி, பாராட்டியா வரவேற்க முடியும்?

நாம் சொல்ல வருவதெல்லாம் ஒன்றே ஒன்று தான்.  நமது தலைவர்கள் நம்மை ஏமாற்ற வேண்டும் என்பது தான் அரசாங்க உத்தரவு. அதனை அவர்கள் சிறப்பாகச் செய்கிறார்கள். 

 ஏமாற்றுபவன் ஏமாறுவான் என்பதை ஞாபகப்படுத்துகிறோம்!
Friday, 23 March 2018

ம.இ.கா. ஒன்றும் செய்யவில்லையா...?


முகநூலில் ஒரு நண்பர்  வீராவேசமாகப் பேசிக் கொண்டிருந்தார். அதற்குள் அரசியல் களத்தில் இறங்கி விட்டார் என்றே தோன்றுகிறது! நமக்கு ஒன்றும் அதில் ஆட்சேபணையில்லை. பணம் கொடுத்தால் யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமான பேசுவர்.  

அந்த நண்பர்:  டாக்டர் மகாதிர் இந்திய  சமுதாயத்திற்கு  என்ன செய்து விட்டார்? ஒன்றுமே செய்யாத அவருக்கு, நீங்கள் என்ன அவருடைய  பூட்ஸ் காலை நக்க வேண்டும் என்று சொல்லுகிறீர்களா?

நல்ல கேள்வி. ஆனால் நாங்கள் டாக்டர் மகாதிர் இந்திய சமுதாயத்திற்கு எதுவும் செய்யவில்லை என்னும் கேள்வியையே எழுப்பவில்லை! ம.இ.கா, ஏன் தூங்கிக் கொண்டிருக்கிறது, இந்தியர்களுக்கான எந்த ஒரு பிரச்சனையும் தீர்ந்த பாடில்லையே என்று தானே புலம்பிக் கொண்டிருக்கிறோம்!

டாக்டர் மகாதிர் காலத்தில் மட்டும் அல்ல இப்போதும் கூட அதே தூக்கத்தோடு தானே ம.இ.கா.  நடை போட்டுக் கொண்டிருக்கிறது!  இப்போதும் ம.இ.கா. பெரிதாக ஒன்றையும் சாதித்துவிட வில்லையே!   டாக்டர் மகாதிர் காலத்திலும் அதே ம.இ.கா. இப்போது நஜிப் காலத்திலும் அதே ம.இ.கா! சாதனை என்றால் ஏட்டில் மட்டும் தான். பெரும் பெரும் திட்டங்கள் ஏட்டில்!  ஆனால் ஒரு சிறிய காய் கூட நகர்த்திய பாடில்லை!  சில மாதங்களுக்கு முன்னர் இந்தியர்களின் மேம்பாட்டிற்காக பிரதமர் மாபெரும் பெரும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.  இப்போதைய அதன் நிலை என்ன என்பது யாருக்குமே தெரியாது! பரம ரகசியம்!   கேட்டால் அடுத்த ஐந்தாண்டில், அடுத்த பத்தாண்டில் ....என்னும் பதில் தான் வரும்!

தமிழ்ப்பள்ளிகளில் இரு மொழித் திட்டம் என்பது ம.இ.கா. செய்த துரோகம் தானே! இன்றைய நிலையில் சில பள்ளிகள் அந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டன என்றால் ம.இ.கா. கொடுத்த நெருக்குதல் தானே! இதனை அவர்கள் மறுக்க முடியுமா?   இன்று இந்தியர்கள் நாடற்றவர்கள் என்று முத்திரைக் குத்தப்பட்டதற்கு யார் காரணம்? ம.இ.கா. தானே! ம.இ.கா. இந்தியர்களைக் கேவலப்படுத்தியதே தவிர அவர்களுக்கு எந்த ஒரு நன்மையும் கொண்டுவரவில்லை!              

ஆக, எல்லாக் காலங்களிலும் ம.இ.கா. வினால் இந்தியர்கள் பாதிப்பு  அடைந்தார்களே தவிர எந்த நன்மையும் அடையவில்லை! ம.இ.கா. தலைவர்கள் நன்மையடந்ததை இந்தியர்கள் நன்மை அடைந்ததாகச் சொல்லுவது சரியான கிறுக்குத்தனம்!

அவர்கள் செய்தது எல்லாம்: டான்ஸ்ரீ, டத்தோஸ்ரீ, துன், டத்தோ, செனட்டர், சபாநாயகர், அமைச்சரின் உதவியாளர் - இவைகளெல்லாம் இந்தியரின் முன்னேற்றம் என்றால் இவைகளின் மூலம் சமுதாயம் எந்த முன்னேற்றத்தையும் காணவில்லை!

ஆமாம்! ம.இ.கா. இந்தியர்களுக்கு ஒன்றும்செய்யவில்லை!


                                        

Thursday, 22 March 2018

யார் அந்த அரக்கி...!


வேலை தேடி வெளி நாடுகளிலிருந்து நமது நாட்டிற்கு வருகின்றனர். எல்லாம் வயிற்றுப் பிழைப்புக்காகத்தான். ஆனால் ஒரு சில வீட்டு எஜமானர்கள் அவர்களைப் படுத்துகின்ற பாடுகள் இருக்கிறதே....மனத்தையே கசக்கி விடுகிறது.  அந்த அளவுக்குக் கொடூர உள்ளம் படைத்தவர்களாக இருக்கிறார்கள். அரக்கர்களின் வழி வந்தவர்கள் என நம்பலாம்!
பல வீடுகளில்  கணவன்  -  மனைவி  இருவரும் வேலை செய்வதால் பிள்ளைகளைப் பார்ப்பதற்கு பணிப்பெண்கள் தேவைப்படுகிறார்கள்.  சில வீடுகளில் பணிப்பெண்கள் வைத்திருப்பது பெருமைக்குறிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

மேலே பார்க்கப்படுகின்ற பெண்மணியும் அந்த வகை எஜமானர் என்று தான் சொல்ல வேண்டியுள்ளது.  மற்றவர்கள் தனது அருமைப் பெருமைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக  வேலைக்காரப் பெண்களைப் பணியில் வைத்திருப்பவர்!  வெறும் பெருமை மட்டும் அல்ல. தன்னுடைய 'பலம்' என்ன என்பதை அந்த ஏழைப் பெண்ணிடம் காட்டியிருக்கிறார்! அந்த  இந்தோனேசியப்  பெண் பணியில் அமர்ந்து இரண்டு வாரத்தில் தன்னுடைய பலம்,  செல்வாக்கு  அனைத்தையும் காட்டியிருக்கிறார்!  19 வயதே நிரம்பிய அந்தப் பெண்ணை அடிப்பதற்கு இரும்புக்கம்பி, குடைக்கம்பி அனைத்தையும் பயன்படுத்தி ஒரு பட்டறையையே ஞாபகப்படுத்தியிருக்கிறார். 

கையில் பணம் இருக்கிறது என்பதற்காகத்   தன்னிடம் வேலை செய்யும் ஏழை பெண்களிடம் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்னும் துணிவு இவர்களுக்கு எப்படி வருகிறது? ஒரே காரணம் தான். பணம், பதவி, செல்வாக்கு உள்ளவர்கள் எப்படியோ தப்பித்து விடுகிறார்கள்  அதனால் ஏற்படுகின்ற விளவுகள் தான் இவை. நமது நாட்டின் சட்ட திட்டங்கள் ஆளுக்கேற்றவாறு  வளைந்து கொடுக்கிறது என்று தான் நாம் நினைக்க வேண்டியுள்ளது!

ஆமாம், இவர்களைப் போன்றவர்களை என்ன சொல்லுவது? அரக்கி என்பது தான் இப்போது ஞாபகத்திற்கு வருகிறது!

Wednesday, 21 March 2018

ஏமாற்றும் விளம்பரங்கள்..!


SPM, STPM  முடிவுகள்  வெளியாகிவிட்டன. இதற்காகவே தனியார் கல்லுரிகள் உங்களை ஏமற்றுவதற்காக ஒரு சில மாதங்களாக வரிசையில்  காத்துக் கிடக்கின்றன!

உங்களை அவர்கள் உலக அளவில் கொண்டு செல்லுவார்களாம்! உலகத் தரத்திலான கல்வியை அவர்கள் உங்களுக்குத் தருவார்களாம்!  அவர்களுக்குத் தேவை எல்லாம் உங்கள் பணம்.  அதற்காக அவர்கள் எத்தனை பொய்யையும் சொல்லத் தயார்!

இன்னும் சில கல்லுரிகளில்  உங்களுக்கு முழு அரசாங்கக் கடன் உதவி கிடைக்கும் என்று உறுதிக் கூறுவார்கள். கிடைக்கும் தான். ஒன்றை ஞாபகத்தில் வையுங்கள். உங்களுடைய விண்ணப்பங்கள் ஏற்றுக் கொண்ட பின்னர், அரசாங்கத்தின் கடன் உதவி கிடைக்கும் என்று உறுதிக் கிடைத்த பின்னர், நீங்கள் அந்தக் கல்லுரியின் அடிமை!  அரசாங்கத்தின் நிதி உதவி கிடைத்த பின்னர் உங்களை அவர்கள் சட்டை செய்ய மாட்டார்கள்! நீங்கள் படித்தாலும் சரி, படிக்காவிட்டாலும் சரி, உங்களை ஏன் என்று கூட மாட்டார்கள். காரணம் உங்களை அரசாங்கத்தின் நிரந்தர கடனாளியாக்கி விட்டார்கள்! அவர்களுக்குச் சேர வேண்டிய பணம் சேர்ந்துவிட்டது!   

 இவர்களால் எப்படி இப்படியெல்லாம் ஏமாற்ற முடிகிறது? இவர்களெல்லாம் பெரும்பாலும் அரசியல்வாதிகள்.  இந்திய மாணவர்களை ஏமாற்றிப் பணம் பறிக்க வேண்டும் என்று திட்டம் போட்டுச் செயல்படுபவர்கள்! பொதுவாக இந்தியர்கள் என்று சொன்னாலும் இதில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் தமிழ் மாணவர்கள் தாம். மலையாள சமூகமும், சீக்கிய சமூகமும் படித்த சமுகம் என்பதனால் அவர்கள் ஏமாறுவது குறைவு. 

இந்த நேரத்தில் நான் சொல்லுவது ஒன்று தான். தனியார் பள்ளிகளோ, கல்லூரிகளோ அவற்றைப் புறக்கணியுங்கள். அரசாங்கம் ஏகப்பட்டக் கல்லுரிகளை - தொழிற்நுட்பக் கல்லூரிகளைத் திறந்து வைத்திருக்கிறது. உங்களின் திறமைக்கேற்ப  ஏதாவது ஒன்றில் சேருங்கள். உங்களின் தகுதி எவ்வளவு மோசமாக இருந்தாலும் அதற்கும் அரசாங்கம் உங்களைச் சேர்த்துக் கொள்ள கல்லூரிகளைத் திறந்து வைத்திருக்கிறார்கள். அது அரசாங்கக் கல்வி. அதுவும் இலவசக் கல்வி. சில கல்லூரிகளில் உங்களுக்குப் படிக்கும் காலத்தில் ரி.ம. 300.00  வெள்ளி உதவித் தொகையும் கொடுக்கிறார்கள்.

அரசாங்கம் கொடுக்கும் வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். புதிது புதிதாக ஏன் படிக்கவில்லை என்பதற்கான காரணங்களைக் கண்டுப் பிடித்துக் கொண்டிருக்காதீர்கள்.

போலி விளம்பரங்களைக் கண்டு ஏமாறாதீர்கள்!  ஏதோ ஒரு உயர்க் கல்வியைக் கற்க வேண்டும் என்பதில் உறுதியாயிருங்கள். வாழ்த்துகள்!

Tuesday, 20 March 2018

மகிழ்ச்சியோ, மகிழ்ச்சி!


சமீபத்தில்   ஐ.நா.   வெளியிட்ட "மிகவும் மகிழ்ச்சியான நாடுகள்" பட்டியலில், முதல் பத்து   நாடுகள்  பட்டியலில்,  முதல் நிலையில் வந்திருப்பது ஃபின்லாந்து! 

அந்தப்  பத்து  நாடுகள்:  1) ஃபின்லாந்து  2) நார்வே 3) டென்மார்க் 4) ஐஸ்லாந்து  5) சுவிட்ஸலாந்து  6) நெதர்லாந்து  7) கனடா  8) நியுஸ்லாந்து  9) சுவீடன்  10)  ஆஸ்திரேலியா

நமக்கு நெருக்கமான,  மிகவும் அறிந்த,  அணுக்கமான, பரிச்சையமான  நாடுகளான  நியுஸ்லாந்தும், ஆஸ்திரேலேயாவும்  இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றன. 

சரி,  மகிழ்ச்சியில் இடம் பெற்றிருக்கும் முதல் நாடான ஃபின்லாந்து முதல் இடத்தை எப்படிப் பிடித்தது? அதற்குக் காரணம் என்ன?

இலவசக் கல்வி, தரமான சுகாதார வசதி - இது தான் மகிழ்ச்சியின் முதல் படி. கல்வி எல்லாருக்கும், எல்லா மக்களுக்கும்  ஏழை, பணக்காரர் என்கிற வித்தியாசம் இன்றி  ஒரே விதக்  கல்வி  கிடைக்கும் போது மக்களுக்கு என்ன கவலை? பெற்றோருக்கு என்ன கவலை?   அத்தனையும் தகுதி அடிப்படையில்  தான்! யாரும் யாரையும் குறை சொல்ல ஒன்றுமில்லை! வேலை வாய்ப்புக்களும் தகுதி அடிப்படையில் தான். நிற அடிப்படையிலோ,  அரசியல் அடிப்படையிலோ இல்லாத போது மக்களுக்கு என்ன கவலை!

அப்படியே  மாமியார்-மருமகள் கவலை என்றாலும் தரமான சுகாதார வசதிகள்  உண்டு!  போய்ப் படுத்துக் கொள்ள வேண்டுமானாலும் படுத்துக் கொண்டு சிகிச்சைப் பெறலாம்!  தரமான சேவைகள் கொடுக்கப்படுவதால் மக்கள் மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள்.

வெளிநாடுகளிலிருந்து  குடியேறிவர்களுக்கும் உள் நாட்டினரைப் போலவே எல்லா வசதிகளும் செய்துத் தரப்படுகின்றன. அவர்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

பொதுவாக வரிகள் கூடுதலாக இருந்தாலும் கவலைப்பட ஒன்றுமில்லை. அனைத்தும் மக்கள் நலனுக்கே செலவிடப்படுகின்றன.

தாய் மொழிக் கல்விக்கு அவர்கள் எதிரிகள் அல்ல.  தேவையான அனைத்து மொழிகளும் அவர்களுக்குக்  கற்றுக் கொடுக்கப்படுகின்றன.  தாய் மொழிகள் உக்குவிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு சின்னஞ்சிறிய பிரச்சனையிலிருந்து பெரிய பிரச்சனை வரை மகஜர் கொடுப்பது, ஆர்ப்பாட்டம்  செய்வது தான் வாழ்க்கை  என்றால் நம்மால் எந்தக் காலத்திலும் அவர்கள் இடத்தை  நிரப்ப முடியாது!

மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!  மனிதனுக்கு  வேறு என்ன வேண்டும்!

Monday, 19 March 2018

கேள்வி - பதில் (76)
கேள்வி

தமிழ் நாட்டில் இனி புதிய கட்சிகள் ஆரம்பிக்கப்படும் போது "திராவிடம்" என்னும் சொல் தவிர்க்கப்படுமா?


பதில்

தவிர்க்கப்படும் என்பதே சமீபத்திய நிகழ்வுகள் காட்டுகின்றன. கமல்ஹாசன் தனது கட்சிக்கு  'மக்கள் நீதி மய்யம்'  என்று வைத்திருக்கிறார். அங்கு திராவிடம் இல்லை. அவர் திராவிடம் என்பதற்கு ஆதரவாளர். டி.டி.தினகரனும்  தனது கட்சிக்கு 'அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்'  என்று வைத்திருக்கிறார். இவரும் தனது அம்மாவின் திராவிடக் கட்சிக்கு ஆதராவாளர். ஆனால் இருவருமே திராவிடத்தை ஒதுக்கிவிட்டனர்!

அடுத்து ரஜினி தனது கட்சிக்கு 'திராவிடம்' என்னும் பெயர் வைப்பார் என்று தோன்றவில்லை. அவருடைய அரசியல் ஆலோசகரான தமிழருவி மணியன்  திராவிடம் என்னும் சொல்லுக்கே எதிரானவர்! திராவிடக் கட்சிகளை ஒழிக்க வேண்டும் என்று ஓயாமல் கூவிக் கொண்டிருப்பவர்! ரஜினியும் தன்னைத் தமிழன் என்று சொல்லி அடையாளப் படுத்துகிறார். தன்னைத் தமிழன் என்று  சொல்லிக் கொள்ளுபவர் திடீரென திராவிடன் பக்கம் போகமாட்டார் என நம்பலாம்!

இந்தத் திராவிடன் என்னும் சொல்லுக்கு ஏன் இந்த அளவுக்கு வெறுப்பு அல்லது புறக்கணிப்பு? இதற்குக் காரணம் தி.மு.க.வும் அ.தி.மு.க. வும் தான்.  அவர்கள் தமிழ் நாட்டை வெளியாருக்கு விற்று விட்டார்கள் என்று சொல்லலாம். இரு கட்சிகளுக்குமே தலைமை தமிழர்கள் அல்ல! தமிழர்கள் இல்லை என்று சொல்லும் போது அவர்களுக்குத் தமிழ் நாட்டினர் மீதோ அல்லது தமிழர் மீதோ அக்கறை இருக்கும் என்று நம்புவதற்கில்லை. 

தமிழர்களையும் தமிழ் நாட்டையும் பிச்சைக்காரத் தேசமாக மாற்றி விட்டார்கள். தமிழர்கள் ஒவ்வொரு தேர்தலின் போதும் பிச்சைக்காக அரசியல்வாதிகளிடம் கையேந்துகிறார்கள்! குடிக்கும் தண்ணீர் இப்போது போத்தல்களில் விற்கப்படுகின்றன! அந்த அளவுக்கு ஒரு வளமையான தேசத்தைப் பாலைவனமாக மாற்றி விட்டார்கள்!

இது தான் இந்தத் திராவிடக் கட்சிகள் தமிழ் நாட்டிற்குக் கொண்ட வந்த வளர்ச்சி! இனி இந்தத் திராவிடக்கட்ச்சிகள் தமிழ் நாட்டிற்குத் தேவை இல்லை என்பது தான் இன்றைய நிலை! ஆனாலும் தமிழ் நாட்டு ஊடகங்கள், தொலைக்காட்சிகள் அனைத்தும் இந்தத் திராவிடக் கட்ச்சிகளை வைத்துத் தொங்கிக் கொண்டிருக்கின்றன! காரணம் அவை பெரும்பாலும் தமிழர்களுக்கு எதிரானப் போக்குக் கொண்ட தமிழர் அல்லாதார் நடத்துகின்ற பத்திரிக்கைகள், ஊடகங்கள்!

இனி திராவிடம் தமிழர்களுக்கு வேண்டாம்! திராவிடக் கட்சிகளும் வேண்டாம்! தமிழர்களாகவே வாழ்வோம்! தமிழர்களாகவே சாவோம்! இதில் என்ன திராவிடம் வேண்டிக் கிடக்கு!

தமிழ் நாடு தமிழர்களுக்கே!

Sunday, 18 March 2018

கழிப்பறைகள் கட்டிய காட்டிலாகா அதிகாரி!காட்டிலாகாவில் பெண்கள் வேலை செய்வது என்பதே குதிரைக் கொம்பு என்பதை நாம் அறிவோம். ஆனால்  பி.ஜி. சுதா என்னும் பெண்மணி அந்த ஆண் ஆதிக்கத்தை எல்லாம் மீறி, உடைத்து ஒர் அதிகாரியாகவும் பணியாற்றுகிறார். ஆனால் இந்தச் சாதனைகள் எல்லாம் பற்றிப் பேச ஏற்ற காலம் அல்ல இது. காரணம் பெண்கள் எத்தனையோ துறைகளில் ஆண்களை மிஞ்சி விட்டார்கள்!

ஆனால் இந்தப் பெண்மணியிடம் யாரிடமும் இல்லாத ஒரு தயாளக் குணம்,  நல்லது நடக்காத போது அதனைப் பார்த்துக் கொண்டு இருப்பது அவரின் குணம் அல்ல! அது தான் அவரைப் பற்றிய அந்தத்  தயாளக் குணத்திற்காக  இன்று அவர் உலகப் புகழ் அடையும்படி செய்துவிட்டது.

கேரளாவைச் சேர்ந்த சுதா,  அவர் பணி செய்கின்ற நேரத்தில் ஏற்பட்ட அனுபவம்,  அவரை மலைவாழ் மக்களிடம் அனுதாபம்கொள்ளச் செய்தது.  கழிப்பறை என்று ஒன்றை அவர்கள் எந்தக் காலத்திலும் பயன்படுத்தியதில்லை! அதற்கு அவசியம் என்று அவர்கள் நினக்கவில்லை! திறந்த வெளியே அவர்களுக்குப் போதும்! ஆனால் அதுவும் அவர்களின் குற்றம் இல்லை. காரணம் கழிவறைகள் கட்டுவதற்கான கட்டுமானப் பொருட்களை அவர்கள் வாழ்கின்ற மலைகளினுள் கொண்டு செல்ல இயலாது!  அந்தச் சூழலில் தான் சுதா,  அவர்களுக்கு உதவ வேண்டும் என்னும் நோக்கில் அவர்களின் பிரச்சனையைக் கையில் எடுத்தார். பிரச்சனைகளில் மாற்றமில்லை. மூன்று நான்கு மணி நேரம் நடந்து,  சுமார் 15-20 கிலோ மீட்டர் தூரம் கடந்து.  காட்டினில் உள்ளே நுழைந்து கட்டுமானப் பொருட்களைக் கொண்டு செல்ல எந்த நிறுவனமும் தயாராக இல்லை.   அத்தோடு போகின்ற வழியில் காட்டு யானைகளின் கூட்டம் வேறு!    

அந்த காட்டினுள் ஒன்பது கிராமங்கள் இருந்தன. அவைகள் அனைத்திலும் கழிப்பறைகள் கட்ட வேண்டும்.  பொருட்களின் விலைகளோ பல மடங்குகள் ஏறிவிட்டன. 300 ரூபாய் பொருட்கள் 3000 ரூபாய்க்கு விற்கப்பட்டன.  இருந்தும் சுபாவுக்கு எதுவும் தடையாக இல்லை. தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்து அனைத்துக் கிராமங்களுக்கும் சுமார் 600 க்கும் மேலான கழிப்பறைகளைக்கட்டி வெற்றிகரமாகச் செயல்படுத்தினார்.  சுபாவும் தனது சொந்தப்  பணத்தை  இந்த மலைவாழ் மக்களுக்காக இந்தத் திட்டத்தின் மூலம் செலவு செய்திருக்கிறார்.  அவர் செலவு செய்த பின்னரே தான் அரசாங்கமும் இத்திட்டத்தில் பங்கேற்று இத்திட்டம் முழுமை அடைந்தது.

அரசாங்கப் பதவியில் இருந்தாலும் ஒரு தனி மனிதரின் முயற்சியால் தான் பல காரியங்கள் நிறவேறியிருக்கின்றன. அதில் இதுவும் ஒன்று. முடியாதது என்று எதுவும் இல்லை. எல்லாம் முயற்சி தான்!

இன்று கேரளா எல்லா இடங்களிலும் கழிப்பறைகள் கொண்ட ஒரு மாநிலமாக விளங்குகிறது! அதில் குறிப்பிடத்தக்கது காட்டிலாக அதிகாரியான சுபாவின் முயற்சியும் ஒன்று!

நமது ஆம்புலன்ஸ் சேவைகள்...!


அபத்து, அவசர வேளைகளில்  நமது ஆம்புலன்ஸ் சேவைகள் எப்படி இயங்குகின்றன?

எல்லா அரசாங்க சேவைகளைப் போல ஆம்புலன்ஸ் சேவைகளும் நொண்டிச் சேவைகள் தாம்!

மருத்துவமனைகளோ, மாவட்டம் தோரும் இயங்கும் சிகிச்சையகங்களோ, எதுவாக இருந்தாலும் எதுவுமே சரியாக, திருப்திகரமாக இயங்கவில்லை என்பது  அனைவரும் அறிந்தது தான்.

சமீபத்தில் கார் ஒன்றினால் மோதி ஒரு மாணவி உயிரிழந்தார். சமபவம் நடந்த இடத்திலேயே அவர் உயிர் பிரிந்தது. இதுநடந்தது சிரம்பான் அருகே மந்தின் என்னும் ஒரு சிறிய பட்டணத்தில். உடனடியாக ஆம்பலன்ஸ் அழைக்கப்பட்டும் ஆம்பலன்ஸ் வரவில்லை.  ஆம்புலன்ஸ் உடனடியாக வந்திருந்தால் அவர் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கலாம்.

அந்த மாணவியின் உயிர்  பிரிந்த  பிறகு    கிடைத்த தகவல்களின் படி மந்தின் சிகிச்சையகத்தில் கடந்த ஒரு மாத காலமாக  ஆம்புலன்ஸ் சேவை இல்லையாம்.  காரணம் ஆம்புலன்ஸ் வண்டி பழுதாகிப் போனதாம்! இதுவெல்லாம் ஒரு காரணம் என்று சொல்லும் போது நம்மைப் போன்ற  பொது 
மக்களுக்கு எவ்வளவு கேவலமாக  அவர்களைப் பற்றி நினைப்போம் என்று சொல்லத் தேவையில்லை.  

வண்டி பழுதாகிப் போனால் அதனைப் பழுதுப் பார்க்க மந்தினில் கடைகளே கிடையாதா? அதையும் விடுங்கள்.  அருகிலே இருக்கும் சிரம்பான் நகரில் எல்லா வசதிகளும் உள்ள ஒரு நகராயிற்றே, அங்கே சென்று பழுது பார்த்திருக்கலாமே. இப்போது யார் மேல் நாம் குற்றம் சொல்லுவோம்? நிச்சயமாக அந்தச் சிகிச்சையகத்தின் தலைவர் யாரோ அவர் தான் குற்றவாளி. சரி, நாம் விரும்பும் மாதிரி எல்லாம் செய்ய முடியாது என்று சொன்னாலும் அதனை எப்படிக் கையாளுவது என்று தெரிந்து தானே இருக்க வேண்டும். 

ஆனால் இங்கு நடந்தது என்னவென்றால் பழுதடைந்து போன அந்த அம்புலன்ஸ் வாகனத்தை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது தான் நாம் கவனிக்க வேண்டியது. சரி, வண்டி ஓடவில்லை. அந்த வண்டி ஓட்டுநர் என்ன ஆனார்? கடந்த ஒரு மாதமாக அவருக்கு வேலை இல்லையா?  அவருக்குச் சம்பளம் கொடுக்கப்படவில்லையா என்பது தான் முக்கியம். சம்பளம் கொடுக்காமல் இருக்க முடியுமா? அது முடியாது தானே! சும்மா வண்டியைப் போட்டுவிட்டு அது எப்படி அவருக்குத் தெண்டச்  சம்பளம் கொடுக்க முடியும்? வண்டி ஓடவில்லை என்றால் அவருக்கு ஏன் சம்பளம் கொடுக்க வேண்டும்?  ஒரு மாதம் ஓடவில்லை என்றால் அந்த வண்டியில் எஞ்சின் பாகங்கள் இருக்கின்றனவா அல்லது அதுவும் 'காணாமல்' போய் விட்டவனவா!

இப்படித் தான் நமக்குக் கேள்விகள் கேட்கத் தோன்றுகிறது!  ஆனால் எதைச் சொல்லி என்ன ஆகப் போகிறது. போன உயிர் போனது தான். அது மீண்டும் வரப்போவதில்லை. அரசாங்கத்தில் பணி புரிபவர்களுக்கு  இப்படி வண்டிகள் கெட்டுப் போனால் அதனைப் பழுதுப் பார்க்க வேண்டும் என்னும் அக்கறை இல்லை. மனித உயிர்கள் மிகவும் கேவலாமக்கப்பட்டு விட்டது.

இதனைத் தீர்த்து வைக்க தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படவில்லை என்றால்  இது தொடரும் என நம்பலாம்!

Friday, 16 March 2018

எதிர்கட்சிகளின் தேர்தல் அறிக்கை..!


எதிர்கட்சிகளின் தேர்தல் அறிக்கையை எதிர்கட்சிகளின் இந்தியத் தலைவர்கள் ஒன்று சேர்ந்து வெளியிட்டு    
இருக்கின்றனர். இந்தியர்களின் நலனுக்காக சில பல   திட்டங்கள். குறை சொல்ல ஒன்றும் இல்லை!

அதனால் குறையே ஒன்றுமில்லை என்று சொல்லுவதாக நினைக்க வேண்டாம். முதலில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். இந்தக் கூட்டத்தில் சீன, மலாய்க்காரத் தலைவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை! ஆக, இவர்கள் ஆட்சிக்கு வந்தால்....வந்தால்! ......... இவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் பறந்து போகும்!  காரணம் சீனத் தலைவர்களிடம் இவர்களால் (நமது ம.இ.கா.வினர் போலவே) பேசும் அளவுக்கு யாருக்கும் துணிவில்லை என நாம் நம்பலாம்! அதற்கான காரணம் "நீங்களாகக் கூட்டத்தைக் கூட்டி அறிக்கையை வெளியிட்டதால்  அதற்கு நாங்கள் பொறுப்பல்ல" எனத் தட்டிக் கழிக்கலாம்!  

இப்படி சொல்லுவதற்குக் காரணங்கள் உண்டு. சிலாங்கூர் மாநிலத்தில் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் சிறப்பாகத்தானே செயலாற்றி வந்தார்? அவரைத் தூக்கிவிட்டு கணபதி ராவ் ஏன் அந்த இடத்தில் அமர்த்தப்ப்பட்டார்? இன்றும் ஜெயக்குமாரின் சேவைகள் தானே பேசப்படுகின்றன!  தமிழ்ப்பள்ளிகளுக்கும், தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் அவர் செய்த சேவைகள் இன்னும் நாம் மறக்கவில்லையே, ஏன்? பொதுவாக எதிர்கட்சிகள், அதுவும் குறிப்பாக சீனர்கள், இந்தியர்களுக்கு நாம் நினைப்பது போல் உதவி விட மாட்டார்கள் என்பது புரிந்தவர்களுக்குப் புரியும்! அவர்களைப் பொறுத்தவரை சீனர்களுக்குத் தான் முதலிடம். தமிழ் மொழிக்குக் கூட அவர்கள் வாய்ப்புக் கொடுப்பதில்லை.அவர்களுடைய பதாகைகளைப் பார்த்தாலே அது புரியும்.

இன்று எந்த அளவுக்கு நாம் ம.இ.கா. வை குறை சொல்லுகிறோமோ அதே போன்று தான் நாளை      எதிர்கட்சியினர் பதவிக்கு வந்தால் நாம் குறை சொல்ல நேரிடும். காரணம் அங்கும் பெரிதாக "தொண்டு" செய்வோம் என்று யாரும் கங்கணம் கட்டிக் கொண்டு  வரவில்லை!  தொண்டு என்பதெ,ல்லாம்  தானாக வர வேண்டும். வற்புறுத்தி வருவதில்லை.

ஆக, எல்லாம் வெற்று அறிக்கைகள் தாம்! ரொம்பவும் நம்பி விடாதீர்கள்!

ஏதோ, டாக்டர் மகாதிர் என்பதால்,  அனைத்தையும் யோசிக்க வேண்டியுள்ளது!ம.இ.கா. தேறுமா...?


வருகின்ற 14-வது பொதுத் தேர்தல் நாட்டை ஆளும் பாரிசான் நேஷனலின் முக்கிய பங்காளி கட்சியாக விளங்கும் ம.இ.கா. தொடர்ந்து தனது நிலையைத் தக்க வைத்துக் கொள்ளுமா அல்லது மக்கள் அந்தக் கட்சியை தள்ளி வைத்து விடுவார்களா?

மிகவும் சிக்கலான கேள்வி!  ம.இ.கா.வில் உள் கட்சி சண்டை என்பது எல்லாக் காலங்களிலும் தொடரும் ஒரு கலாச்சாரமாகவே வளர்ந்து விட்டது. 13-வது தேர்தலுக்குப் பிறகு என்று கணக்குப் போட்டுப் பார்த்தால்  கட்சியின் உள் சண்டையே மிகப் பிரதான 'மக்கள் தொண்டாக'  அந்தக் கட்சியின் கொள்கையாக இருந்து வந்துள்ளது!

கட்சியில் எந்தக் கொள்கையும் இல்லை! இந்தியர்களின் பிரச்சனையைக் கவனிக்க ஆள் இல்லை. அவர்களுக்கு என்ன தான் தேவை என்பதைக் கூட ம.இ.கா.வினர் அறிந்திருக்கவில்லை! ம.இ.கா. தலைவருக்கு மிக முக்கியமான பிரச்சனை என்பது,  கூட இருக்கும் தன்னை ஆதரிக்கும் தலைவர்களை என்ன பதவிக் கொடுத்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பது மட்டும் தான்! இல்லாவிட்டால் அவர்களால் தலைவருக்கு ஆபத்துக்கள் வரலாம்! 

ம.இ.கா. வில் உள்ள தலைவர்களைப் பொறுத்தவரை ம.இ.கா  தங்க முட்டை இடும் வாத்து! தமிழ்ப்பள்ளிகளை வைத்தே கோடிக்கணக்கில் மானியங்கள் அரசாங்கத்தால்  வழங்கப்படுகின்றன. அந்த மானியங்கள் தமிழ்ப்பள்ளிகளுக்குப் போய் சேரவில்லை என்பது எப்போதுமே உள்ள ஒரு குற்றச்சாட்டு!

பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோற்றுப்போனால் கூட  அவர்களுக்கு அது  ஒன்றும் பெரிய நஷ்டம் இல்லை.  அவர்களுக்குச் செனட்டர் பதவி கிடைக்கலாம். அமைச்சர்களுக்கு எடுபிடியாக வரலாம்! சில அரசாங்கப் பதவிகளுக்குத் தலைவராகப் போகலாம்! எப்படிப் பார்த்தாலும் தேர்தலில் தோற்றுப் போனாலும் - அதுவே அவர்களுக்கு ஒரு கூடுதல் தகுதியாக'  ஆகி விடுகிறது!

ஆனால் மக்களைப் பொறுத்தவரை ம.இ.கா. வால் என்ன இலாபம்?  என்ன கொள்கைகளை வைத்து இவர்கள் வாக்குக் கேட்பார்கள்?  நாடற்றவர்கள் பிரச்சனை நம் கண் முன்னே நிற்கிறது. எந்த நடவடிக்கையும் இல்லை! வேலையில்லாப் பிரச்சனைக் கூடிக்கொண்டே போகிறது. வெளி நாட்டவர்களுக்கு வேலைக் கிடைக்கிறது. உள் நாட்டினருக்கு வேலைகள் மறுக்கப்படுகின்றன.

இந்த நிலையில் வருகின்ற பொதுத் தேர்தலில் ம.இ.கா. தேறுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்! தொண்டு தான் நோக்கம் என்றால் தேறும்! பணம் தான் நோக்கம் என்றால் தேறாது!

Monday, 12 March 2018

சீனப்பள்ளியில் ரவீந்திரநாத் தாகூர்...!சீனப் பள்ளிக்கும் வங்கக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூருக்கும் என்ன சம்பந்தம்?  பெரிய அளவில் அவருடைய உருவப்படம் ஒன்று சீனப்பள்ளியை அலங்கரித்துக் கொண்டிருக்கிறதே, என்ன காரணம்?

நீங்கள் மேலே பார்க்கின்ற சீனப்பள்ளிக்கூடம் பினாங்கு மாநிலத்தில் உள்ள பல சீனப்பள்ளிக்கூடங்களில் இதுவும் ஒரு பள்ளிக்கூடம் அவ்வளவு தான்! இருந்தாலும்   SJK (C) HU YEW SEAH  என்னும் பெயரில் உள்ள அந்தப் பள்ளிக்கூடத்திற்கு ஒரு வித்தியாசம் உண்டு.

இரவீந்திரநாத் தாகூர் அந்தப் பள்ளிக்கூடத்திற்கு அடிக்கல் நாட்டியவர். இது நடந்தது 1927 - ம் ஆண்டு.

தாகூர் நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர். தனது கீதாஞ்சலி கவிதை  தொகுப்பிற்காக 1913-ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர். இன்னும் கதை, கவிதை, கட்டுரை, நாடகம்  என்று எல்லாத் துறைகளிலும்  கால் பதித்தவர். வங்காள மொழியில் புதுமைகளைப் புகுத்தியவர்.  இந்தியாவின் தேசிய கீதமும்,  வங்காள தேசத்தின் தேசிய கீதமும் இவரால் இயற்றப்பட்டவை. இரு நாடுகளின் தேசிய கீதத்தை எழுதிய ஒரே மனிதர், உலகிலேயே,  இவர் ஒருவர் மட்டும் தான்.

தாகூரின் பக்கத்தில் இருக்கும் அந்த சீனர் யார்? அவர் தான் பினாங்கில் பிறந்த டாக்டர் வூ லியான் தே.  நோபல் பரிசுக்காக 1935-ல் முன்மொழியப்பட்டவர்.  அத்தோடு முதன் முதலாக இங்கிலாந்து சென்று மருத்துவ படிப்பை மேற்கொண்ட முதல் மலேசிய சீன வம்சாவளியைச் சேர்ந்தவர்.

இவைகள் எல்லாம் எதற்காக? அவர்கள் எல்லாம் மாணவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டுக்கள். மாணவர்க்களுக்கு உத்வேகத்தைக் கொடுக்க, ஓர் உந்துதலைக் கொடுக்க இவர்களின் ஓவியங்கள் அங்கு வைக்கப்பட்டிருக்கின்றன. அவர்களைப் பார்க்கும் போது ஒவ்வொரு மாணவனும் ஒரு  இலட்சிய  வெறியோடு தனது எதிர்காலத்தைக் கொண்டு செல்ல, செயல்பட உதவும் என்பதே நோக்கம்.

நல்ல நோக்கம்!  அவர்களை முன் மாதிரியாகக் கொண்டு    மாணவர்கள் முன்னேறட்டும்! வாழ்த்துகள்!

நன்றி: FMTFriday, 9 March 2018

நாடற்றவர் பிரச்சனை - 100 நாள் போதும்!


நாட்டின் பிரதான எதிர்க்கட்சித்  தேர்தல் கூட்டணியான  பக்காத்தான் ஹரப்பான் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. 

அதில் ஒன்று:  புத்ரா ஜெயாவைக் கைப்பற்றிய 100 நாள்களுக்குள் இந்நாட்டிலுள்ள  நாடற்ற இந்தியர்களின் பிரச்சனைத் தீர்க்கப்படும்.

தீர்க்கப்படுமா, தீர்க்கப்படாதா என்பதை விட  இந்தப் பிர்ச்சனைத் தீர்க்கப்பட 100 நாள்  போதும் என்பது தான் முக்கியம்.  இதற்கு 10 ஆண்டுகள், 20 ஆண்டுகள், 30 ஆண்டுகள் என்று இழுத்தடிப்பதற்கு  எந்தக் காரணமும் இல்லை! ஏதோ ஏதோ உப்புச்சப்பில்லாத காரணங்களைக்  கூறி இந்தியர்களை நாடற்றவர்கள் என்று கூறி கேவலப்படுத்திக் கூத்தடிப்பது  கோமாளிகளின் வேலை என்பது நமக்குப் புரிகிறது! இவர்கள் கூத்தடிப்பதற்குக் கிடைத்தவர்கள் இந்தியர்கள்!  இதனைக் கேட்பதற்கு ஆளில்லை! ஆளில்லை என்றால் ....?  அது தான் ஆளில்லை!

நாடற்றவர் என்று சொல்லப்படுகின்ற இந்தப் பிரச்சனையை நூறு நாள்களுக்குள் தீர்க்கப்படும் என்று சொல்லுபவர் யார்?  நமது முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர்.  அவர் சொல்லுவதில் தவறு இருக்க முடியாது. அவர் நீண்ட காலம் அரசாங்கத்தில் இருந்தவர். பிரதமர் ஆவதற்கு முன் பல அமைச்சுகளில் அமைச்சராக இருந்தவர். அவரை ஏமாற்றுவது அவ்வளவு எளிதல்ல.  அதனால் அவர் சொல்லும் - நூறு நாள்களுக்குள் - தாராளமாக ஏற்கலாம்.

ஆமாம், இப்போது - நமது பி.என். அரசாங்கம் ஏன் இந்தப் பிரச்சனையை ஒரு முடிவுக்குக் கொண்டு வராமல் காலந்தாழ்த்துகிறது?  இப்போது  நம்மைச் சுற்றிப் பார்த்தால் எங்கிருந்தோ வந்த வங்காளதேச, பாக்கிஸ்தானியர் நீல நிற அடையாளக்கார்டுகளோடு சுற்றி வருகின்றனர்.  அவர்கள் பிரஜைகள். இந்நாட்டில் பிறந்த ஏதோ ஒரு பத்திரம் இல்லை, அல்லது ஏதோ ஒரு பத்திரத்தில் அரசாங்க முட்டாள் ஒருவன் செய்த தவறு - இது போன்ற காரணங்களால் அவர்கள் நாடற்றவர்கள் என்று முத்திரைக் குத்தப்படுகின்றனர்!

நாம் கேட்பதெல்லாம் இது தான். மூன்று மாதத்தில் செய்யப்பட வேண்டிய வேலைகளை ஏன் இந்த அளவுக்கு - 20 ஆண்டுகள், 30 ஆண்டுகள் -  இழுத்தடிக்கப்படுகின்றது?    ஒரே காரணம் அவன் இந்து  என்பது மட்டும் தான் காரணமாக இருக்குமோ!

வாழ்த்துகள், செல்வங்களே!


எஸ்.டி.பி.எம்.  தேர்வில் நல்ல பல புள்ளிகள் பெற்று இந்திய சமுதாயத்திற்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள் பல மாணவ, மாணவியர்.  கடைசியாகக் கிடைத்த செய்தியின் படி ஒரு மாணவர் 5A எடுத்திருக்கிறார். எல்லாமே நல்ல செய்திகள் தாம். 

இது போன்ற சிறப்பான தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்களை நமது பல்கலைக்கழகங்கள் எப்படிப் பார்க்கின்றன?       இவர்களை ஒரு பொருட்டாகக் கூடப் பார்ப்பதில்லை என்பது தான் உண்மை! ஏன்? இவர்கள் அனைவருமே மருத்துவ படிப்புக்குத் தான் விண்ணப்பம் செய்வார்கள் என்பதை அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்!  ஆனால் அவர்கள் சிறப்பாகத் தேர்ச்சி பெறுகின்ற மாணவர்களுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுப்பதில்லை என்பது தான் நமது முந்தைய  அனுபவம். இரண்டாந்தர, மூன்றாந்தர மாணவர்களுக்கே  மருத்துவம் பயில வாய்ப்புக்கள் அதிகம் கொடுக்கப்படுகின்றன என்பதை நாம் எல்லாக் காலங்களிலும் சொல்லிக் கொண்டும், புலம்பிக்கொண்டும் இருப்பது ஒன்றும் புதிது அல்ல!

ஆனால்  இது  கடந்த  காலங்களில்  நடந்தவை.  நடந்தவை  நடந்தவைகளாகவே  இருக்கட்டும்.  பழயதைக்  கிளறுவதால்  ஆகப்போவது  ஒன்றுமில்லை.  இந்தப்  புதிய  ஆண்டில்  அனைத்தும்  மாறும்  என நம்பிக்கையோடு  எதிர்கொள்வோம். சிறப்பாகத்  தேர்ச்சிப்  பெற்ற  மாணவர்களுக்கு   இந்த  ஆண்டில்  நல்லதொரு  வழிகாட்டுதல்  கிடைக்கும்  என எதிர்பார்ப்போம்.

வசதிப்  பெற்ற  மாணவர்கள்  வெளி  நாடுகளுக்குக்  கல்வி  கற்கப்  போவது  ஒன்றும்  பிரச்சனையல்ல.  இதில்  பெரும்பாலும்  ஏழை  மாணவர்கள் தான் அதிகம்  பாதிக்கப்படுகின்றனர்.  நடுத்தரக்  குடும்பத்தைச்  சார்ந்தவர்கள்  தங்கள்  சொத்துக்களை  விற்று பிள்ளைகளைப் படிக்க  வைக்கின்றனர்.  ஆனால்  இதில்  கவனம்  தேவை. சொத்துக்களை  விற்றுப்  படிக்க  அனுப்பும் போது  அவன்  உங்கள்  வீட்டுப்  பிள்ளை. டாக்டராகி  அவன்  திரும்பும் போது  உங்கள்  வீட்டுப்பிள்ளையாகப்  பெரும்பாலும் அவன்  இருக்கமாட்டான்!

எப்படி இருந்தாலும்  சாதனைப்  படைத்த  மாணவர்களுக்கு  நமது  பாராட்டுக்கள்!  நீங்கள் கற்ற  கல்வி  வீண் போகாது  என்பதை நம்புங்கள். இன்று உங்கள்  ஆசை  நிறைவேறவில்லை  என்றாலும் நாளை  நிறைவேறலாம். நிறைவேறுமா, நிறைவேறாதா என்பது  உங்கள் கையில் தான் இருக்கிறது!

சமுதாயத்தைப்  பெருமைப்பட  வைத்த  செல்வங்களுக்கு, நமது வாழ்த்துகள்!

Thursday, 8 March 2018

கேள்வி - பதில் (75))கேள்வி

ரஜினி தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஆனால் தமிழ் நாட்டில் தமிழ் இருக்காது என நம்பலாமா?

பதில்

நிச்சயமாக நம்பலாம். அவருடைய சமீபத்திய  பேச்சிலிருந்து அதனை அவர் உறுதி செய்து விட்டார். ஆங்கிலம் படித்தால் தான் வெளி நாடுகளுக்குப் போய் வேலை செய்யலாம் என்று அவர் ஆங்கிலத்திற்கு நற்சான்றிதழ் கொடுத்து விட்டார்! காரணம் அவர் மனைவி நடத்தும் பணக்காரப்  பிராமணர்கள் படிக்கும் கல்லுரி கூட ஆங்கிலத்தில் தான் நடைபெறுகிறது  என்பதால் இந்த  நற்சான்றிதழ் தேவைப்படுகிறது என்று நாம் நினைத்தால்  அது பிழை என்று யார் சொல்ல முடியும்?  எல்லாமே தங்களின் குடும்பத்தைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை வைத்துத் தான் அரசியல் நடத்துகிறார்கள்!

இப்படியெல்லாம் பேசஅவரால்  எப்படி முடிகிறது?  சமீபத்தில்  தான் அவர்  தன்னைத்  தமிழன் என்று பிரகனப்படுத்தினார்!  தமிழன் என்று பிரகடனப்படுத்தியதுமே எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்கின்ற துணிவு அவருக்கு ஏற்பட்டுவிட்டதோ! இவருடைய பேச்சை ரசித்தவர்கள் நிச்சயமாக தமிழர்களாக இருக்க முடியாது. அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைப்பவர்கள்  கன்னடர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் - இவர்கள் தான் அவருடைய அரசியலை விரும்புகிறார்கள். காரணம்  தமிழ் நாட்டிற்கு தமிழர் ஒருவர் முதலமைச்சராக வருவதை இந்தக் கூட்டம் விரும்பவில்லை.

ரஜினி ஒன்றை மிகவும் வசதியாக மறந்து விட்டார். அவருடைய சொந்த மாநிலமான கர்நாடகாவில் " கன்னடம் எழுதப் படிக்கத்  தெரியாத எந்த அரசாங்க ஊழியரும் எங்களுக்குத் தேவையில்லை"  என்று கர்நாடக முதலமைச்சர் பகிரங்கமாக அறிவித்துவிட்டார்!  எங்களுக்கு இந்தி தெரியும்,  எங்களுக்கு ஆங்கிலம் தெரியும் ஏன்று   எந்த மத்திய அரசாங்க ஊழியரும் அங்கே சவால் விட முடியாது! 

ஆனால் தமிழ் நாட்டிற்குப் பிழைக்க வந்த ரஜினி ரொம்ப ரொம்பத் தாராளமாக "தமிழ் தேவை இல்லை! ஆங்கிலம் தான் தேவை!" என்று துணிச்சலாகச் சொல்ல முடிகிறது என்றால் தமிழன் இளிச்சவாயன் என்று  ரஜினியும் நினைக்கத்  தொடங்கி விட்டார்!

ரஜினியின் அரசியல் தமிழ் நாட்டிற்குத் தேவை இல்லை! தமிழ் அழிந்தால் தமிழர் கலாச்சாரம், தமிழர் பண்பாடு அனைத்துக்கும் ஆபத்து ஏற்படும். அவருடைய அரசியலை முளையிலேயே கிள்ளி எறிவோம்!

Wednesday, 7 March 2018

ஏன் இந்த புறக்கணிப்பு?


இன்று ஒரு சில நிறுவனங்கள், தமிழர் நிறுவனங்கள் என்று நாம் நினைக்கும் நிறுவனங்கள்,  தமிழைப் புறக்கணிக்கின்றன. இது ஏன் என்று உள்ளே நுழைந்து பார்த்தால் இவை உண்மையில் தமிழர் நிறுவனங்கள் அல்ல.  தமிழ் நாட்டில் என்ன நடக்கின்றனவோ  அது தான்  இங்கும் நடக்கின்றது.

அவை தமிழர் நிறுவனங்கள் அல்ல என்பது உண்மையாக இருந்தாலும் தொண்ணூறு விழுக்காடு தமிழர்களை நம்பி வாழும் நிறுவனங்கள். சான்றுக்கு ஒரு நிறுவனத்தின் காலண்டர் எனது வீட்டில் ஓரிரு நாள்களுக்கு முன்னர் தான் கவனித்தேன்.  அது பிரபலமான ஒரு நிறுவனம். பெண்கள் அணியும் ஆபரணங்களை விற்பனைச் செய்யும் ஒரு நிறுவனம்.  அனைத்தும் செயற்கை அணிகலன்கள். சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மாநிலங்களில் ஐந்து கிளைகளைக் கொண்ட நிறுவனம்.

அவர்களை நாம் பாராட்டுகிறோம். இந்தியர்கள் தொழிற்துறையில் மூன்னேறுவதை வரவேற்கிறோம். 

ஆனால் ஒரு இந்திய  நிறுவனம் மிக உயர்ந்த தரத்தில் தயாரித்திருக்கும் காலண்டரில் ஒரு தமிழ் எழுத்தைக் கூடப் பார்க்க முடியவில்லை என்பதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சராசரியாக வெளியாகும் காலண்டரில் - அதாவது குதிரைப்பந்தய காலண்டர் என்போமே - அவைகளில் கூட காலண்டரின் மேலே நமது நிறுவனங்களில் பெயரைப் போடலாம். ஆனால் பெரும் பணம் செலவழித்து மிக உயர்தரமாகத் தயாரிக்கப்படும் காலண்டரில் ஒரு தமிழ் எழுத்தைக் கூட பயன்படுத்தவில்லை என்றால் அது தமிழரை, தமிழைப் புறக்கணிப்பதாகும்.

நாம் சொல்ல வருவதெல்லாம் இது தான். இது போன்ற நிறுவனங்களை நாம் புறக்கணிக்க வேண்டும். இந்திய நிறுவனங்களுக்கு நாம் ஆதரவு கொடுப்பது அவசியம். என்ன தான் இந்திய நிறுவனங்கள் என்று நமது ஆதரவை நாம் அவர்களுக்குக் கொடுத்தாலும் அவர்கள் நன்றி கெட்டவர்களாக நடந்து கொள்ளுவதும், தமிழையும், தமிழரையும் கேவலப்படுத்துவதையும் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.  தமிழர்களை இன்னும் இளிச்சவாயர்கள் என்று அவர்கள் நினைத்தால் நாம் திருப்பி அவர்களை அடிக்கமுடியாது.  ஆனால் அவர்களை நாம் புறக்கணிக்க முடியும்.

இனி மேலும் தமிழைப் புறக்கணிக்கும் எந்த நிறுவனங்களாக இருந்தாலும் சரி நாமும் அவர்களைப் புறக்கணிப்போம். நமது பெருந்தன்மையை அவர்கள் தவறாகப் பயன்படுத்துவதை நம்மால் சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியாது! செயலில் காட்டுவோம்!

 

Sunday, 4 March 2018

கேள்வி - பதில் (74)


கேள்வி

நடிகர்  ரஜினி  அரசியலிலிருந்து பின் வாங்குவரா?

பதில்

வாய்ப்பு இருக்கிறது என்று நினைத்தாலும் அதிரடியாகவும் சொல்லவும் முடியவில்லை!

எதிர்பாராத நிலையில் கமல் கட்சி ஆரம்பித்துவிட்டார். பெயரும் வைத்து விட்டார். எல்லாம் ஆரவாரமாகப் போய்க் கொண்டிருக்கிறது.

 ரஜினி அரசியலுக்கு வருவேன்  என்று   சொன்ன பிறகும் கூட எந்தப் பிரச்சனைக்கும் வாய்த் திறக்க மாட்டேன் என்கிறார்!

சரி, அப்படியே ரஜினியும் கமலும் அரசியலுக்கு வந்தாலும் கோட்டையைப் பிடிக்க முடியுமா என்பதும் உறுதியாக இல்லை. ஏதோ ஓரளவு இவர்கள் இருவருமே சில  இடங்களைப்  பிடிக்கலாம். மற்றபடி ஆட்சி அமைக்கும் அளவுக்கு இவர்களுக்குச் செல்வாக்கு இருக்கிறதா என்பதும்  உறுதியாக  இல்லை.

இவர் பாதை ஆன்மிக அரசியல்  என்றால் அது தான் பா.ஜ.க. வின் பாதை. அவர்களோடு கூட்டுச் சேரவும் ரஜினிக்கு வாய்ப்பு உண்டு. அது தமிழகம் விரும்பாத பாதை.

ஒரு வேளை 'காலா' திரைப்படம் வரட்டும் என நினைக்கிறோ தெரியவில்லை. காலா திரைப்படம்  அதிகமாகவே அரசியல் பேசும் படம் என்று சொல்லப்படுகிறது.  இந்தத் திரைப்படம் கபாலி அளவுக்கு வெற்றியடைந்தால்  அல்லது கபாலி படத்தையும் மிஞ்சினால், ரஜினிக்கு அது பெரிய திருப்புமுனையாகவும், நம்பிக்கை ஊட்டும் படமாகவும் அரசியலுக்கு வர ஒரு புத்துணர்ச்சியையும் கொடுக்கும் என நம்பலாம். அவருடைய மௌனத்தைப் பார்க்கின்ற போது  காலா திரைப்படத்தை அவர் மிகவும் எதிர்பார்ப்பதாகத் தோன்றுகிறது! அதே சமயத்தில் காலா திரைப்படம் வெளியாகும் போது அதிகமானக் கட்டணத்தில் ரசிகர்கள் படம் பார்க்க நேர்ந்தால் அது அவருக்குப் பாதகமாகவும்    அமையலாம்.

ரஜினி பின் வாங்கும் சாத்தியமும் உண்டு என்பதும் மறுப்பதற்கும் இல்லை.  கமலோடு போட்டிப் போடுவதா என்றும் நினைக்கலாம். இருவரில் ஒருவர் தானே பதவிக்கு வர முடியும் என நினைக்கலாம். கமல் தமிழர் என்பதும்  அவருக்குக் கூடுதலான ஒரு புள்ளி அங்கே உண்டு, 

ஒன்றை மட்டும் சொல்லலாம்.  ரஜினி இப்போது வாய்த்திறக்காமல் இருப்பதற்குக் காரணம்  கமலின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்      என நம்பலாம். கமல் அவருக்குப் பயமுறுத்தலாக இல்லை என ரஜினி நினைத்தால் அவர் பின் வாங்க மாட்டார்! 

ஆனால் நம்முடைய கருத்து என்பது தமிழக அரசியலுக்கு இருவருமே தேவை இல்லை என்பது தான்!
Friday, 2 March 2018

இன்னும்....இன்னும்.....!இன்னும்...இன்னும்....! பெண்களே!  கொஞ்சம் கவனமாக இருங்கள்.

எல்லாவற்றுக்கும் ஓர் அளவு உண்டு. பொருளாதாரத் தேவைகளுக்கும் ஓர் எல்லை உண்டு. சராசரியான மலேசியத் தமிழனுக்கு  அல்லது ஒவ்வொரு மலேசியனுக்கும்   ஓர் வீடு, ஒரு கார்,  மாதா மாதம் ஒரு வருமானம். இவைகள் தான் அவனின் இலக்கு. ஏழையாய் இருப்பவனுயும் இந்த இலக்கை நோக்கித்தான்  பயணிக்கிறான்.

தொழிற்துறையில் இருப்பவர்களுக்கு  இன்னும் இலட்சியங்கள் அதிகமாக இருக்கும்.   விலை உயர்ந்த வீடுகள், சொகுசு கார்கள், பல தொழில்களில் முதலீடுகள் என்று  இலட்சியங்கள் உயர்ந்து கொண்டே போகும்.

இவைகள் எல்லாம் தவறுகள் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.  அதற்காகத்தானே தொழிற்துறையில் ஈடுபட்டிருக்கிறோம். இல்லாவிட்டால் கைக்கட்டி யாரிடமாவது வேலை அல்லவா செய்து கொண்டிருப்போம்! அதனால் உயர்ந்த இலட்சியங்கள் இருப்பதில் தவறில்லை.

ஆனாலும் பெண்களே, உங்களுக்குத் தான் இந்த ஆலோசனை.  உங்கள் கணவர் தனது  இலட்சியத்திற்காக  இரவும் பகலும் உழைத்துக் கொண்டிருக்கிறார். அவரின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டியது உங்களது கடமையாக நினையுங்கள்.  உங்களது கணவரின் வெற்றி உங்கள் கையில் தான் இருக்கிறது. நீங்கள் அவரின் கவனைத்தை திசைத் திருப்பினால் அனைத்தும் திசைத்  திரும்பி விடும்!

அடுத்த வீட்டு அமுதாவோடு போட்டிப் போட வேண்டும் என்று நினைக்காதீர்கள்! அவர்கள் உங்களை விட வளர்ந்து  விட்டவர்கள்.   உங்களின் தகுதிக்கு ஏற்றவாறு உங்களுக்கென்று ஒரு வரையறையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு உதவுவது நமது கடமை. உங்களின் தகுதிக்கு மீறி 'இன்னும்...இன்னும்... அவரைவிட.....அவரைவிட...!' என்று தகுதியற்றப் போட்டிகள் வேண்டாம்!  நீங்கள் கொடுக்கும் போது 
'கொடுத்துச் சிவந்த கரங்கள்!' என்பார்கள்! கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டால் 'இரத்தக் கறை படிந்த கரங்கள், அதான் இப்படி!'  என்று அவமானப் படுத்துவார்கள்! இது தான் உலகம்!

கணவர்மார்களை  உசுப்பிவிட்டு உங்களுக்குப் பெருமைத் தேட நினைக்காதீர்கள்!  பணம் வருகின்ற பாதைகளை அடைத்துவிட்டால், உங்கள் பெருமைக்காக, உங்கள் கணவர் இருட்டறைகளைத் தேடித்தான் செல்வார்!  உங்கள் பணம் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். செல்வத்தைப் பெருக்க 'இன்னும்,,,,இன்னும்,,,,!' என்று  முயற்சி செய்யலாம். ஆனால் பெருமைகளைத் தேட 'இன்னும்...இன்னும்...!' என்றால் சிறுமைகள் தான் உங்களைத் தேடி வரும்!

பணத்தின் அருமை நமக்கும் தெரியும். அது பாதாளம் மட்டும் பாயும் என்பதும் நமக்குத் தெரியும். 

ஆனால் ......   இன்னும்.......இன்னும்.....! என்று  பெருமைக்காக   போட்டியில் இறங்கினால் பாதாளம் மட்டும் அல்ல பதாகைகளிலும் பாயும்!

Thursday, 1 March 2018

ஆடம்பரம் வேண்டாம்!


ஆடம்பரத்தால் அழிந்தவர் பலர். இப்போது அழிந்து கொண்டிருப்பவர்களும் பலர். இனி மேலும் அழிவார்கள் - இது தொடரும்!

காரணம் நமது ஆசை! அளவுக்கு மீறிய ஆசை! எல்லாருக்கும் ஆசைகள் உண்டு. மனிதன் என்றால் அவனுக்கு ஆசை இருக்கத்தான் செய்யும். இருக்கத்தான் வேண்டும். முற்றும் துறந்த முனிவர் கூட  அந்தப் பரம்பொருளோடு  இணைவது தான் அவரது ஆசையாக இருக்கும்.

ஆசைப்படுவதில் தவறு இல்லை.  மலேசியாவின் முதல் நிலை பணக்காரரான ராபர்ட்  குவோக் போன்று, உச்சத்தைத் தொட வேண்டும் என்பதில் தவறில்லை. அல்லது ஏர் ஏசியா, டோனி ஃபெர்ணாண்டஸ் போல் பதினேழாவது நிலை பணக்காரர் ஆக வேண்டும் என்பதிலும் தவறில்லை. இவைகளெல்லாம் நம்மாலும் அடையக்கூடியது சாத்தியமே. அதற்கு உழைப்பு, பல்வேறுத் திறன்கள் அந்த உச்சத்திற்குக் கொண்டு போகும்.

ஆனால் கையில் ஒரு கோடியை வைத்துக்கொண்டு 'நான் ராபர்ட் குவோக் போன்று வாழ வேண்டும், டோனி ஃபெர்னாண்டஸ் போல வாழ வேண்டும்' என்று  வாழ நினைப்பது சாதாரண ஆசை அல்ல; பேராசையை விட இன்னும் பல படிகள் மேல்!  இருப்பதைக் கொண்டு தான் வாழ வேண்டும். இன்னும் உச்சத்தைத் தொட முயற்சிகளைத்  தொடரலாம். ஆனால், இடைப்பட்டக் காலத்தில்,  அவர்களைப் போன்று  வாழ்க்கையை வாழ முயற்சி செய்யக் கூடாது!

நமது இனத்தினர் வாழ்க்கையில் முன்னேற வேண்டும். அதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. லட்சாதிபதிகளாக ஆக வேண்டும்,  கோடீஸ்வரர்களாக  ஆக வேண்டும். பெரும் பெரும் தொழில்களைச் செய்ய வேண்டும். பெரும் கல்வியாளர்களாக ஆக வேண்டும் என்பதெல்லாம் நம்முடைய இலட்சியங்களாக மாற வேண்டும்.

நாம் பணம்  படைத்தவர்களாக  மாறுவோம்.  தவறான வழிகளில் அல்ல. நேர்மையான வழிகளில் நாம் கவனத்தைச் செலுத்துவோம்.  நமது சமுதாயத்திற்குப் பெருமைகள் சேர்ப்போம்.

ஆடம்பரத்தை வெறுப்போம்!  முன்னேற்றத்தை  வரவேற்போம்!