Saturday 30 July 2016

சாலை விளக்கிலும் அடிதடி!


வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் "கபாலி" திரைப்படம் சில சமீபத்திய நிகழ்ச்சிகளை ஞாபகத்திற்குக் கொண்டுவந்துவிட்டது.

எங்கள் நிறுவனத்தின் முன்னே சாலை சமிக்ஞை விளக்குகள்  உள்ளன. எங்கள்  பகுதியைச் சுற்றி  நிறையவே பெரிய பெரிய நிறுவனங்கள் அமைந்திருக்கின்றன.

மால 5.30 லிருந்து சுமார் 7.30 வரை வாகனங்கள் போவதும் வருவதுமாக கட்டுப்பாடுகள் இல்லாமல் ஓடிகொண்டிருக்கும்! வேலை முடிந்து வீடு போகும் நேரம். எல்லாம் அவசரகதியில் இயங்கிக் கொண்டிருப்பார்கள்!

அப்போது!  சமிக்ஞை,  சிவப்பு விளக்கைக் காட்டியதால்  கார்கள் அனைத்தும் நின்றன. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் ஒருவன் மோட்டார் சைக்கிளை நிறுத்தினான். அவன் பின்னால் வந்த கார் ஒன்றும் நின்றது.  காரிலிருந்து, ஓட்டுனரையும் சேர்த்து, மூன்று இளஞர்கள் இறங்கினார்கள். அவர்கள் கையில் இரும்புத்தடி, கம்புகள் இருந்தன. அவர்களைப் பார்த்ததும் அந்த இளஞன் மோட்டார் சைக்களைப் போட்டுவிட்டு உடனடியாக ஓட்டமெடுத்தான்! அந்த இளைஞர்கள் அவனை விரட்டிப்பிடித்து அவனை இரும்பத்தடி, கம்புகள் கொண்டு அடி அடி என்று அடித்தனர்.அவனோ அவர்களை மீறிக்கொண்டு ஓடினான்; இவர்கள் விரட்டினர்; அடித்தனர். அடிதடி ஓயவில்லை.

பச்சை விளக்கு வந்தது; மஞ்சல் விளக்கு வந்தது; சிவப்பு விளக்கு வந்தது. கார்கள் வெளியாக முடியவில்லை! பிறகு,  அந்தக்காரில் வந்த இளைஞர்கள் சாவகாசமாக வந்து காரை எடுத்துக் கொண்டு  சென்றனர்! அந்த இளைஞன் எப்படியோ தப்பித்துவிட்டான்!

இப்படித்தான் இன்னொரு சம்பவம். அண்ணனுக்குத் தங்கை மேல் சந்தேகம். தங்கை கிளினிக்கில் 'சிகிச்சை' க்காக காத்திருந்தார். உள்ளே புகுந்தான் அண்ணன். கத்தியை எடுத்து தாறுமாறாக  வெட்டினான். தங்கை தப்பிக்க நடுவீதிக்கே வந்துவிட்டார். ஆனாலும் அவன் விடவில்லை.  வந்த வேலையை முடித்துவிட்டுத் தான் போனான் அண்ணன்.

சரி! "கபாலி" திரைப்படம் வந்த பிறகு நடந்த நிகழ்ச்சி. ஸ்தாப்பாக் சமிக்ஞை விளக்கு. கார் வந்து நின்றது.  காரின் இடது பக்கமும் வலது பக்கமும் இரண்டு மோட்டார் சைக்கள்களிலும் இரண்டு,  இரண்டு பேர். இரண்டு பக்கமுமிருந்து உள்ளே இருந்தவரை - கந்தசாமி என்னும் கந்துவட்டிகாரரை - நோக்கி பதினாறு துப்பாக்கிச்சூடுகள்.  இது குண்டர் கும்பல்களின் சண்டை  எனப் போலிஸ் வகைப்படுத்துகிறது.

இது தான் இன்றைய நமது நிலை. எங்கு வேண்டுமானாலும் சண்டை போடலாம், அடிதடி நடத்தலாம், சுட்டுத் தள்ளலாம்  கபாலி மூலம் பா.ரஞ்சித் சொல்ல வருவது மிகைப்படுத்தல் அல்ல! நமக்கு நாமே அடித்துக் கொண்டு சாக வேண்டும்! அதற்குக் காவல் துறையும் உடந்தை எனவும் சொல்லப்படுகிறது!

நிச்சயமாக மாற்றங்கள் வரும் என எதிர்பார்ப்போம்! கபாலி மூலம் நல்ல செய்தி சொல்லப்பட்டிருக்கின்றது. தலைவர் சொல்லுவதை தம்பிகள் கேட்பார்கள் என் நம்புவோம்! அடிதடிகளைத் தவிர்ப்போம்!

சாலை விளக்குகளை மதிப்போம்!


Thursday 28 July 2016

நான் ஏழையா...? வாய்ப்பே இல்லே..!


இப்போது,  இந்த நிமிடம் கையில் காசு இல்லை என்பது உண்மை தான். ஏன், நாளைக்குக்  கூட கையில் காசு இல்லாமல் போகலாம்! அதற்காக நான் ஏழையா, என்ன?  வாய்ப்பே இல்லை! இன்றைய நடைமுறையில் சொல்ல வேண்டுமானால் .....சான்சே இல்லே!

பணம் வரும் போகும். அது உருண்டு  கொண்டு தான் இருக்கும்! அதை ஒரு இடத்தில் நிற்க வைக்க முடியாது!

அப்படித்தான் நமது பணமும். கையில் சம்பளம் வந்ததும் இருபது விழுக்காடு,  அதாவது நமது மாதச் சம்பளத்தின் முதல் செலவு என்பதே இருபது விழுக்காடு சேமிப்பில் முதலீடு செய்வது தான். அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை! அதன் பிறகு தான் மற்றைய செலவுகள். இந்த இருபது விழுக்காடு சேமிப்பு என்பது ஒன்றும் புதிதல்ல! பல  ஆண்டுகளுக்கு முன்னரே இந்த வழக்கம் நடைமுறையில் இருந்திருக்கிறது! அது பணமாக இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு வகையில் அந்த இருபது விழுக்காடு செயல்பாட்டில் இருந்திருக்கிறது.

அதனை வைத்துத் தான் உங்கள் வருமானத்தில் இருபது விழுக்காட்டுப் பணம் சேமிப்பாக இருக்க வேண்டும் என்று இன்றும் சொல்லப் படுகிறது.  அப்படியே வங்கியில் சேமிப்பாக இல்லாவிட்டாலும் காப்புறுதியில் சேமிப்பாகக் கொண்டு வரலாம். காப்புறுதியில் முதலீடு செய்வது என்பது இன்னும் பல நன்மைகளை உங்களுக்குக் கொண்டு வரும். காப்புறுதி கட்டி முடிக்கும் போது நீங்கள் போட்ட பணத்தைவிட உங்களுக்குக் கூடுதலாகவே கிடைக்கும். அப்படி இடையே நீங்கள் மரணித்தாலும் உங்கள் குடும்பம் பயனடையும். காப்புறுதி என்பது பல நன்மைகளைக் கொண்டுவரும்.

நீங்கள் வேலைசெய்து தான் பிழைக்க வேண்டும் என்னும்  நிலையில் இருந்தால் , அதே சமயத்தில் நீங்கள் வேலையிலிருந்து ஒய்வு பெறும் போது, ஓர் இலட்சாதிபதியாக வேண்டும் என்னும் கனவு உங்களுக்கு இருந்தால், உங்களுக்குக் காப்புறுதியே சிறந்த முதலீடு. நீங்கள் நினைத்தது போல நீங்கள் விரும்பிய வேலையும் செய்யலாம் அதே சமயத்தில் வேலையிலிருந்து ஒய்வு பெறும் போது இலட்சாதிபதியாகவும் ஆகலாம்.

எல்லாமே ஒரு திட்டமிடல் மூலம் அனைத்தும் சாத்தியமே! வெற்றிகரமான ஒரு பாதையைத் தேர்ந்து எடுத்து  அந்தப் பாதையையே பின்பற்றுங்கள். முடிந்தவரை உங்களுடைய காப்புறுதி சேமிப்பை ஐம்பது வயதோடு முடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் நல்ல நிலையில் இருக்கும் போதே ஒரு வலுவான சேமிப்பை வைத்துக் கொள்ளுங்கள்.

எல்லாமே நமது கையில் தான்! ஏழை என்கிற நினைப்பே வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்! மனத்தாலும் நினைக்காதீர்கள்!

இப்போது சொல்லுங்கள்: நீங்கள் ஏழையா! வாய்ப்பே இல்லை!

Wednesday 27 July 2016

கொடுப்பதற்கும் கையை நீட்டுங்கள்!


வாங்குவதற்கென்றே பிறந்தவர்கள் பலர் இருக்கின்றனர்! வாங்குவதைத் தவிர இவர்களுக்குக் கொடுக்கும் பழக்கம் என்பதே கிடையாது!

கைநீட்டி வாங்குவதற்கு நான் தயார்!  கைநீட்டிக் கொடுப்பதற்கு நான் தயாரில்லை! என்னும் நிலைமையில் தான் பலர் இருக்கின்றனர்!

குறிப்பாக அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள் இன்னும் உயர்பதவியில் உள்ளவர்கள் பலருக்கு வாங்குகின்ற பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்களே தவிர கொடுக்கின்ற பழக்கம் உள்ளவர்களாக இல்லை!

ஏன்? ஏழை வீட்டுப் பணமோ, பணக்காரன் வீட்டுப் பணமோ , யார் வீட்டுப் பணமோ எனக்குப் பணம் வந்தால் சரி,  என்னும் மனோபாவம் உள்ளவர்களே அதிகம்!  இது போன்ற மனநிலையில் உள்ளவர்கள் தான் அரசாங்கத்தால் தமிழ்ப்பள்ளிகளுக்குக் கொடுக்கப்பட்ட மானியங்கள், தமிழ்பள்ளிகளுக்குக் கொடுக்கப்பட்ட நிலங்கள் அனைத்திலும் 'கைவைத்து' காசாக்கிவிடுகிறார்கள்!, நாம் அதை விடுவோம். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள்! அரசியல்வாதிகளாய் பார்த்து திருந்தினால் தான் உண்டு!

நாம்  இப்போது சராசரி குடும்பங்களைப் பார்ப்போம். இங்குள்ள  நிலவரம் எப்படி?  ஏறக்குறைய மேல் உள்ள நிலை தான்! அப்பா, அம்மா எதையும் சேர்த்து வைத்திருந்தால் பிள்ளைகளிடையே பலவித போராட்டங்கள்! எனக்கு, உனக்கு என்று பெற்றோர்களைப் பிய்த்து எடுத்து விடுவார்கள்! எவ்வளவு தான் பெற்றோர்கள் அவர்களுக்கு நல்ல கல்வியைக் கொடுத்திருந்தாலும்  அவர்களுடைய EPF பணத்தைப் பிடுங்க ஏகப்பட்ட போராட்டங்கள்!

இப்படி எங்குப் பார்த்தாலும் 'எனக்குக் கொடு, எனக்குக் கொடு' என்று அடித்துக் கொள்கிறார்களே தவிர யாருக்கும் கொடுக்க வேண்டும் என்னும் எண்ணமே வருவதில்லை!  சொந்தக் குடும்பத்திலும் அப்படித்தான் வெளியிலும் அப்படித்தான்!

இரண்டு கைகள் நமக்கு எதற்கு இருக்கின்றன? வாங்குவதற்கு மட்டும் தானா? கொடுப்பதற்கும் தானே! அட! கர்ணனைப் போல நாம் கொடுக்க முடியாவிட்டாலும் கொஞ்சமாவது கிள்ளி கிள்ளியாவது நாம் கொடுக்கலாம் அல்லவா! நம்மால் முடிந்தது என்னவோ அதனையாவது கொடுக்கலாம் அல்லவா!

நாம் அப்படிக் கொடுப்பதற்கு ஒன்றுமில்லாமலா போய்விட்டது?  நம்மிடையே ஏழைகள் என்று யாரும் சொல்லுவதில்லை என்பது உண்மை தான்.ஆனாலும் நம்மிடையே எத்தனையோ முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் நிறையவே இருக்கின்றன.  சரி! உங்களால் அள்ளி அள்ளிக் கொடுக்க முடியவில்லை.  இந்த இல்லங்களுக்கு அரிசி, பால் பௌடர், மைலோ போன்ற பொருட்களை வாங்கி இந்த இல்லங்களுக்குக் கொடுத்து  உதவலாமே!

கொடுத்து உதவுவதற்கு  எத்தனை எத்தனையோ வழிகள் இருக்கின்றன..எண்ணிக்கையிலா மக்கள் நமது உதவிக்காகக் காத்துக் கிடக்கின்றனர். நம்மால் அனைவருக்கும் உதவ முடியாது. ஒரு சிலருக்காவது நாம் உதவத்தான் வேண்டும்.

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்றால் எப்படி? அந்த ஏழைக்கு நீங்கள் தான் உங்களின் உதவியின் மூலம் சிரிப்பைக் கொண்டு வரவேண்டும்.

கடைசியாக, நண்பர்களே! மற்றவர்களுக்கு உங்கள் கையை நீட்டி உதவும் போது தான் உங்கள் மனம் நிறைவாக இருக்கும்! வாங்குவதற்கு மட்டுமே நான் கையை நீட்டுவேன் என்றால் உங்கள்  மனம் எல்லாக் காலங்களிலும் தத்தளித்துக் கொண்டும், தடுமாறிக் கொண்டும் தான் இருக்கும்!

கொஞ்சம் கொடுப்பதற்கும் உங்கள் கையை நீட்டுங்கள்!




Monday 25 July 2016

பணம் சம்பாதிக்க மூளை இருந்தா போதும்!


காப்பிக் கடையில் நான்கு இளைஞர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருவன் மற்றவர்களை விட  கொஞ்சம் இள வயதினனாகத் தோன்றினான். அவர்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் சிறு சிறு தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்கள்.

இன்று அவர்கள் சிறு தொழில்களில் ஈடுபட்டிருக்கலாம். இவர்கள் தான் நாளைய பெரும் தொழில்களின் அதிபர்கள். நாளைய தொழிலதிபர்கள். இந்தச்சிறு துளிகள் தான் பெரும் வெள்ளமாக நாளை மாறும் என்னும் நம்பிக்கை உடையவன் நான்..

அந்த இளஞர்களின் மிக இளைவன் ஒரு வார்த்தையை மீண்டும் மீண்டும் அழுத்தமாக வலியுறுத்திச் சொல்லிக் கொண்டிருந்தான். அவன் சொன்னது எனக்குப் பிடித்திருந்தது.

அவன் சொன்னது "பணம் சம்பாதிக்க மூளை இருந்தா போதும்! வேறு ஒன்றும் வேண்டாம்!" என்பது தான்.

பரவாயில்லையே! நமது இளைஞர்களைப் பற்றி நாம் தான் தப்புக்கணக்கு   போடுகிறோம்! இளைஞர்கள் அவர்கள் கணக்கை அவர்கள் சரியாகத்தான் போடுகிறார்கள்.

இளைஞர்கள் என்றால் சினிமா மட்டும்தான் தெரியும். வேறு ஒன்றும் தெரியாது என்று நாம் தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இப்போது அவர்களும் பணத்தைப் பற்றிப் பேசுவது ஒரு மாபெரும் முன்னேற்றம்.

மூளையே மூலதனம்! மூளை இருந்தால் பிழைத்துக் கொள்ளலாம்! மூளைதான் முன்னேற்றம்! மூளை தான் முன்னேற முதற்படி! என்றெல்லாம் எழுதிக்கொண்டும், பேசிக்கொண்டும் வருகிறோம். நூற்றுக்கணக்கான கட்டுரைகள் வெளியாயிருக்கின்றன.

இதோ ஒர் இளைஞன் அந்த வார்த்தைகளைச் சர்வ சாதாரணமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறான்! மகிழ்ச்சி தரும் விஷயம் தான். நமக்கு வேறு ஒன்றும் வேண்டாம். நமது இளைஞர்கள் கூடுகின்ற இடங்களில் பொருளாதாரம் பற்றிப் பேசினாலே நமது சமூகம் முன்னேற்றத்தை நோக்கி நகருகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அந்த நிலை வரும் என்று நான் சொல்லமாட்டேன் - வந்துவிட்டது என்று தான் சொல்லுவேன்.

அந்தக் குழுவின் வேறு ஒரு இளஞர் "அதிர்ஷ்டம் தேவை" என்று சொல்லிக் கொண்டிருந்தாலும் அவன் அதற்கெல்லாம் மசியவில்லை! "இந்தாப்பா! நாலு நம்பர், அதிர்ஷ்டம். அதெல எனக்கு நம்பிக்கையில்லை! நமக்கு மூளை இருந்தாப் போதும் வேற ஒன்னும் தேவை இல்லை!" அதிலேயே உறுதியாக இருந்தான்!

மேலும் நான் என்ன சொல்லப் போகிறேன். அதேயே தான் நானும்  சொல்லுவேன். படித்தவர்களோ, படிக்காதவர்களோ மூளை தான் முக்கியம்.

ஜப்பான் நாட்டிலிருந்து ஹோண்டா மோட்டார் சைக்கள்களைத் தருவித்தாரே MR.HONDA எனப்படும் பூன் சிவ் (BOON SIEW) அவர் என்ன பெரிய படிப்பு படித்தார்? வெறும் ஹாக்கியன் மொழியை வைத்துக் கொண்டே மலேசியாவையே அதிரடித்தாரே! இந்த ஒரு சான்றே போதும் மூளை இருந்தால் பணம் சம்பாதிக்கலாம் என்று.

பொருளாதார முன்னேற்றத்திற்கு மொழிக்கெல்லாம் பெரிய முக்கியத்துவமில்லை!  ஏதோ ஒரு மொழியைப் பேசத் தெரிந்தால் போதும். ஏதோ ஒரு மொழியை ஓரளவு படிக்கத்.தெரிந்தால் போதும். உலகத்தையே  ஆளலாம்! கல்வி அறிவு இருந்தால் இன்னும் சிறப்பு. அவ்வளவு தான்!

நான் அந்த இளைஞனுக்கு இருந்த தன்னம்பிக்கையைப் பாராட்டுகிறேன். நமக்கும் அவனைப் போன்ற தன்ன்ம்பிக்கை வர வேண்டும். நம்மைச் சுற்றி நாலு தன்னம்பிக்கையாளர்கள் இருந்தால் போதும். நமது சமுகமே மாறிவிடும். தன்னம்பிக்கை அற்ற பேச்சு,  எந்நேரமும் குறைகளையே சொல்லிக் கொண்டிருப்பது,  குற்றம் காணும் போக்கு என்பது நமது சமுகத்தில் மலிந்து விட்டது.

நமக்குத் தேவை எல்லாம் நாலு நல்ல வார்த்தைகள், நலந்தரும் பேச்சு, தன்னம்பிக்கையூட்டும் பேச்சு  பொருளாதார சிந்தனைகள் இவைகள் வளர வேண்டும்.

இதற்குத் தேவை - மூளை இருந்தால் போது  முன்னுக்கு வந்து விடலாம்!




Friday 22 July 2016

ஐயா! நான் தான் ஆண்டவன்!



"வணக்கம்! நான் தான் ஆண்டவன்!" என்று சொல்லிக்கொண்டே நல்ல ஒரு பெரிய கும்பிடு போட்டுக்கொண்டே  கடையினுள் நுழைந்தார் ஒரு நண்பர். நல்ல ஒரு வசிகரமான முகம். குங்கமப் பொட்டு அவர் நெற்றிக்கு அழகாகத்தான்  இருந்தது. வயது எப்படியும் 50-க்கு மேல் இருக்கும். நல்ல களையானத் தோற்றம்.


முதலில் அவர் தன்னை "ஆண்டவன்" என்று அறிமுகப்படுத்திதிக் கொண்ட போதே நான் கொஞ்சம் அதிர்ந்து போனேன்! காரணம் யாரும் ஆண்டவன் என்னும் பெயர் வைத்திருப்பார்கள் என்று நான் யோசித்தது கூட இல்லை! முதலில் என்னால் அவருடன் பேச முடியவில்லை!  அந்தப் பெயரைப் பற்றித்தான் எனது சிந்தனை சிறகடித்துக் கொண்டிருந்தது! இப்படியெல்லாம் தமிழில் பெயர் வைக்கும் பழக்கம் உண்டா?  ஒரு முடிவுக்கு என்னால் வர  முடியவில்லை!


தீடீரென அந்த நண்பரே பேச ஆரம்பித்தார். "ஐயா! அவசரமாக ஒரு ஐந்து வெள்ளி வேண்டும். கொஞ்சம் உதவி செய்வீர்களா?"  பேச்சு பணிவாக இருந்தது. கனிவாகவும் இருந்தது. சிரித்த முகம் அப்படியே இருந்தது.


அவரை என்னால் எடை போட முடியவில்லை.யாசகம் செய்யும் மனிதராகத் தோன்றவில்லை!  ஏதோ ஒரு அவசரமாக இருக்கலாம் அல்லது ஏதோ தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கலாம்! என்னால் மறுக்க முடியவில்லை!

அதன் பின்னர் எனது நண்பர்களிடம் விசாரித்தேன். நமது சுற்றப்புறத்தில் "ஆண்டவன்" என்னும் பெயருடையவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று கொஞ்சம் தேடிப் பார்த்தேன். ஏதோ ஒர் உந்துதல்!. ஏதோ ஓர் ஆர்வம்! ஆண்டவன்  ஆயிற்றே! ஊகும் ....!  அப்படியும் அகப்படவில்லை! அது போன்ற பெயர் உடையவர் சுற்று வட்டாரத்தில் யாரும்  இல்லை!


இந்த நிகழ்ச்சி நடந்து நீண்ட நாட்களாகிவிட்டன. அதன் பின்னர் அந்த மனிதரை நான் பார்க்கவில்லை. அது போன்ற பெயரையும் நான் கேள்விப்படவில்லை. புதிதாக எந்த ஒர் ஆண்டவனையும் நான் பார்க்கவுமில்லை!


என்னுடைய கேள்வி எல்லாம் தமிழர்களிடையே "ஆண்டவன்" என்னும் பெயர் வைக்கும் பழக்கமுண்டா என்பது தான். நான் பல இடங்களில் பணிபுரிந்திருக்கிறேன். அப்படி ஒரு பெயரை நான் கேள்விபட்டதில்லை. "பிச்சைக்காரன்" என்னும் பெயரைக் கூட கேள்விப்பட்டிருக்கிறேன். அதற்கு ஒரு காரணம் சொல்லுவார்கள்: நாங்கள் பிச்சை எடுத்து பிறந்த பையன் அதனால் "பிச்சைக்காரன்" என்று பெயர் வைத்தோம் என்பார்கள்!


ஆனால் ஆண்டவன் என்னும் பெயர் வைக்க என்ன காரணமாக இருக்கும்? அதற்கும் காரணங்கள் இருக்கும். போகிற போக்கில் ஏதாவது ஒரு காரணம் அகப்படத்தான் செய்யும்.


அதுவரை, "வணக்கம்! ஐயா! நான் தான் ஆண்டவன்!"








பதவி வரும் போது பணிவு வரவேண்டும் தோழா...!


"பதவி வரும் போது பணிவு வரவேண்டும்,  துணிவும் வரவேண்டும் தோழா!" என்பது கவிஞர் வாலியின் என்றும் வாழும் பாடல்; என்றென்றும் பாடும்  பாடல்.  எம்.ஜி.ஆர். அவர்களுக்காகப் பாடிய பாடல்.

பதவியில் இருப்பவர்கள் என்றென்றும் கவனத்தில் கொள்ள வேண்டிய பாடல். எம்.ஜி.ஆர். வாரிசுகளே அதனைப் பின் பற்றவில்லை என்பதால் அந்தப் பாடலின் வலிமை குன்றிவிடவில்லை!.

நமது நாட்டில் இந்தியர்களில் பலர்  பல  பெரிய பதவிகளில் இருந்திருக்கின்றனர்' இருந்தும் வருகின்றனர். இதில் சில அரசியல் பதவிகள்; சில கல்வித்தகுதியின்  அடிப்படையில் கொடுக்கப்பட்ட பதவிகள். ஆனாலும், அவைகள் அனைத்தும், இந்தியர்களின் சார்பாக உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பதவிகள். இந்தியர்களை நீங்கள் பிரதிநிதிக்கிறீர்கள்.  அதிலே நீங்கள் ஐயப்பட ஒன்றுமில்லை!

எந்தத் தகுதியின் அடிப்படையில் கொடுக்கப்பட்டாலும் நாம் சொல்ல வருவதெல்லாம் ஒன்று தான். அந்தப் பதவியின் மூலம் நீங்கள் இந்தியர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் நிறையவே இருக்கின்றன. அதனை நீங்கள் செய்யத் தவறினால் அந்தப்பெரும் இழப்பு நீங்கள் பிரதிநிதிக்கும் சமுதாயத்திற்குத்தான். உங்கள்  சமுதாயம்  சாக்கடையில் கிடக்கும் போது நீங்கள் மட்டும் சொகுசு வாழ்க்கை வாழ நினைத்தால் உங்களின் பெயர் சொல்ல  எதுவும் இல்லாமல் போகும். இழிவு ஒன்று தான் உங்கள் பெயராக இருக்கும்; என்றும் உங்களைத் தொடரும்!

யாரிடமோ நல்ல பெயர் எடுக்க வேண்டுமென்பதற்காக  சமுதாயத்திற்குக் கிடைக்கின்ற சலுகைகளை நிறுத்துவது, நமக்குக் கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்புக்களை பிறருக்கு மாற்றுவது,  உயர்கல்விக்கூடங்களில் தமிழ்க்கல்வியை மூட வைப்பது   - இவைகளெல்லாம் வீழ்ந்து கிடக்கும் சமுதாயத்தை மேலும் வீழ்ச்சியடையவே செய்யும்.  துரோகிகள் துரைமார்களாக வாழ முடியாது! கறைபடிந்தவர்களாகத்தான் கசிந்து போவார்கள்!

துன் சம்பந்தன் அவர்கள் பத்து பத்து வெள்ளியாகச் சேர்த்து தோட்டங்களை வாங்கினார். அதனால் பலர் பயன் பெற்றனர். அவர் பெயர் என்றென்றும் நம்மிடையே நிலைத்து நிற்கும். டத்தோ பத்மநாபன், பி.எஸ்.என். வங்கியின் இயக்குனர் குழுவில் இருந்த போது நிறைய இந்தியர்களை வேலைக்கு அமர்த்தினார்.  இன்றும் அது தொடருகிறது. அது அவர் செய்த ஒரு மாபெரும் சேவை. குறைந்த காலமே பதவியில் இருந்த டத்தோ பழனிவேலு  தனது பதவி காலத்தில் கல்வித் துறையில் மாபெரும் சேவை செய்துள்ளார். இன்றும் நிறைய இந்திய மாணவர்கள் உயர்க்கல்விக் கூடங்களில் சேர்க்கப்படுகின்றனர். அவரின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்! சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அவர் காலத்தில் நிலக்குடியேற்றத்திட்டத்தில் நிறைய இந்தியர்களைச் சேர்த்து விட்டார். பலரின்  நல்வாழ்வுக்குத் துணையாக இருந்தார்! டத்தோ மலர்விழி குணசீலன் பெரிய பதவியில் இல்லை.  ஆனாலும் இருக்கும் பதவியில் நிறைவான சேவை செய்கிறார். வாழ்த்துகள்!

ஆம்! நீங்கள் பதவியில் இருக்கும் போது உங்களுக்குப் பணிவு வரவேண்டும்.  அதே சமயத்தில் துணிவோடும் பணி செய்ய வேண்டும்! உங்கள் மூச்சு முடிந்த பின்னரும் உங்களைப் பற்றிய பேச்சு நிலைக்க வேண்டும்!

வாழை மலர் போல பூமி முகம் பார்க்கும் கோழை குணம் மாற்று தோழா!


Thursday 21 July 2016

நமக்கு வெற்றிதான் வேண்டும்!


நமது தமிழினம் தலைநிமிர வேண்டுமானால் நமக்கு வெற்றி தான் வேண்டும். எவ்வளவோ பேசலாம்; எவ்வளவோ எழுதலாம். நாம் பேசுவதும் வெற்றியாகத் தான் இருக்க வேண்டும். நாம் எழுதுவதும் வெற்றியாகத்தான் இருக்க வேண்டும்!

வெட்டிப்பேச்சு வெற்றியைக் கொண்டு வரப்போவதில்லை! எட்டிப்பேச்சு வெற்றியை ஓட வைக்கும்! வெறும் வெற்றெழுத்து வெற்றியைக் கொண்டு வரப்போவதில்லை! வீண் எழுத்து  வெண்சாமரம் வீசுவதில்லை!

காலை எழுந்தது முதல் இரவு படுக்கப்போகும்வரை நமது பேச்சு, சிந்தனை, செயல் அனைத்தும் வெற்றியை நோக்கியே இருக்க வேண்டும். பேச்சும், மூச்சும் வெற்றியாகவே இருக்க வேண்டும்.  வெற்றி எனும்  நற்கனி இருக்கும் போது நச்சுக்கனி எதற்கு?

பேசுங்கள் நல்லதையே பேசுங்கள். எழுதுங்கள் நல்லதையே எழுதுங்கள்.

இன்று முதல் பயிற்சியை ஆரம்பியுங்கள். இந்த நிமிடம் முதல் யாரையும் குறை சொல்லுவதில்லை என்று உறுதிமொழி  எடுத்துக் கொள்ளுங்கள்.உங்கள் வீட்டிலிலிருந்தே தொடங்குங்கள். மனவியாகட்டும், பிள்ளைகளாகட்டும், வீட்டு வேலைக்காரியாகட்டும்  - யாராக இருந்தால் என்ன - நல்லதையே பேசுங்கள்.நல்லதைப் பாராட்டுங்கள். பிள்ளைகளைப் பாராட்டுங்கள்! மனைவியைப் பாராட்டுங்கள்! வேலைக்காரியின் சமையலைப் பாராட்டுங்கள்! திட்டிக்கொண்டேசெய்பவள் கூட திருத்திக் கொள்ள வேண்டும் என்று தீர்மானம் போட்டுக் கொள்ளுவாள்! பிள்ளைகள் கூட,  பாடங்களைச் சிறப்பாகச் செய்தால்,  அப்பா பாராட்டுவார் என்று இன்னும் சிறப்பாகச் செய்ய ஆரம்பிப்பார்கள்! மனைவி கூட உங்களின் மாற்றத்தைக் கண்டு அவரும் தன்னைக் மாற்றிக் கொள்ளுவார்!

வீட்டில் ஆரம்பிக்கும்  இந்தப் பழக்கம் வெளியிலும் வழக்கமான பழக்கமாக  வைத்துக் கொள்ளுங்கள்.

இப்படி நல்லது செய்பவர்களைப் பாராட்டுகிற பழக்கம் தான் உங்கள் வெற்றிக்கான முதல்படி என்பதை மறவாதீர்கள். வெற்றி பெற்றவர்களிடம் இந்தப் பாராட்டும் குணம் இயற்கையாகவே அமைந்திருக்கிறது. நீங்கள் வெற்றியாளராக உங்களை மாற்றிக்கொள்ள விரும்பினால் முதலில் பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள். ஏர் ஏசியாவின் டோனி பெர்னாண்டஸ் எப்படி மற்றவர்களைக் கவருகிறார்? அவரது புன்னைகையும், அவரது பேச்சும், அவரது பாராட்டும் மற்றவர்களைச் சுண்டி இழுக்கின்றன அல்லவா!

ஒரு கோடிஸ்வரரான அவரது குணத்தை நாமும் ஏன் பின்பற்றக்கூடாது? அவரைப் போல நமக்கும் வெற்றிதானே நமது இலக்கு. வெற்றி தான் நமது இலக்கு என்றால் வெற்றிக்கான முதல்படியில் முனைப்புக் காட்டுவோம்!

வெற்றி நமதே!

Tuesday 19 July 2016

தோல்விகளைச் சுமக்காதீர்கள்!


தோல்விகளைச் சந்திக்காத மனிதர் யாரும் இல்லை! எடுத்த எடுப்பிலேயே நான் வெற்றிபெற்றேன் என்று சொல்லுபவர் யாரும் இன்னும் பிறக்கவில்லை! அதனால் தோல்விகளைப்பற்றிக் கவலைப்படாமல், தடைகளைப்பற்றிச் சோர்ந்து போகாமல், நாம் முன்னேற வழிவகைகளை ஆராய்ந்து நாம் வெற்றிப் பாதையை அமைத்துக்கொள்ள வேண்டும். தோல்வி தான் நமது முன்னேற்றத்திற்கான முதல் படி. முதல் காலடி.தொடர் முயற்சிகளின் பின்னரே நமது வெற்றிகளை நாம் அமைத்துக்கொள்ள முடியும்.

ஆனால் நாம் இங்கு பேசவருவது அதுவல்ல. தோல்விகள் என்பது வேறு; தோல்விகளைச் சுமப்பது என்பது வேறு!

காலங்காலமாக தோல்விகளைச் சுமப்பவர்கள் நிச்சயமாக எந்தத் துறையிலும் வெற்றிபெற மாட்டார்கள்! தோல்விகளையே பேசுவதும், தோல்விகளையே தங்களது பேச்சின் மூலம் பரப்புவதும், தோல்விகளையே சிந்திப்பதும், தோல்விகளையே பார்ப்பதும், தோல்விகளையே உன்னிப்பதும்....அடாடா!....தோல்விகளைத் தவிர  அவர்களால் எதுவும் பேச முடிவதில்லை! தோல்விகள் தான் அவர்களது வாழ்க்கை! அவர்களாலும் வெற்றிபெற முடியாது; சுற்றி இருப்பவர்களையும் வெற்றிபெற விடமாட்டார்கள்!

அவர்கள் திருத்த முடியாதவர்கள்! எப்படித்தான் அவர்களிடம் பேசினாலும் கடைசியில் அது தோல்வியில் தான் போய் முடியும்!

நண்பர் ஒருவர் நல்ல எடுத்துகாட்டு:  பத்திரிக்கை விற்கும் போது 'யாரு பேப்பர் வாங்குறா? காசு இருந்தாத்தானே வாங்கிறதற்கு?' என்பார்! பத்திரிக்கை விற்பதில் ஒரு தோல்வி! வாடகைக்கார் ஓட்டும்போது: 'எங்க ஆளுங்க வராங்க! காசு இருந்தாத்தானே!' என்பார்! ஓட்டுநராகவும் ஒரு தோல்வி! ஒரு கடை வைத்து வியாபாரம் செய்தார். 'ஒன்னுமே புண்ணியமில்லே! எல்லா விலையையும் ஏத்திட்டானுங்க!  இப்பவிக்கிற விலைக்கு ஆளுங்களால தாங்க முடியலே!'  அதுவும் தோல்வி!

இப்படித் தோல்வியையே பேசி, தோல்வியையே நினைத்து, தோல்வியையே கக்கிக்கொண்டு இருந்தால் அவர் எந்தக் காலத்தில் முன்னேற முடியும்?  எத்தனையோ பேர் இவர் செய்த தொழில்களில் இன்னும் செய்து கொண்டு தானே இருக்கிறார்கள்? அவர்கள் வெற்றிபெற முடியும் போது இவரால் ஏன் வெற்றிபெற முடியவில்லை? காரணம் இவர் தோல்விகளையே - உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை - சுமந்து கொண்டு திரிகிறார்!

அந்தத் தோல்விமனப்பான்மையை அவர் மனதிலிருந்து அகற்றும் வரை அவர் முன்னேறக் கூடிய சாத்தியம் இல்லை!

தோல்விகள் வரலாம்; ஆனால் வெற்றிபெற முடியும்! தோல்விகளைச் சுமந்தால் வெற்றி வாய்ப்புப் பறிபோகும்! சுமைகளைச் சுமக்கலாம் ஆனால் தோல்விமனப்பான்மையைச் சுமக்காதீர்கள்!

நம்மாலும் முடியும்!


வர்த்தகம் செய்வது ஏதோ சிலருக்குத்தான் வரும் என்று சொல்லிக்கொண்டு காலத்தை வீணடிக்காதீர்கள். சிலருக்கு மட்டும் தான் வரும் என்பது உண்மையல்ல. அந்த ஒரு சிலர் முயற்சி செய்கிறார்கள் அவர்களுக்கு வருகிறது. முயற்சி செய்யாதவர்களுக்கு அது எப்போதுமே வருவதில்லை! முயற்சி செய்யாமல் அது எப்படி வரும்?

முயற்சி எடுக்கும் போதே நம் மனதில் ஒரு முட்டுக்கட்டை வந்து சேருகிறது. நம்மால் முடியுமா என நாம் எண்ணும் போதே அங்கு ஒரு தடைக்கல்  வந்து சேர்ந்து விடுகிறது! நீங்கள் முயற்சி எடுத்ததற்கான காரணமே உங்களால் முடியும் என்னும் ஒரே காரணத்தினால் தான்! முடியும் என்று நினைத்து, முயற்சிகளை எடுத்த பிறகு "முடியுமா?" என்னும் எண்ணம் வரவே கூடாது! எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்த பிறகு, நல்லது கெட்டதுகளை புரிந்து கொண்ட பிறகு, முன் காலை எடுத்து வைத்தப் பிறகு அதன் பின்னர் மீண்டும் "முடியுமா?" என்னும் எண்ணமே வருதல் கூடாது!

வர்த்தகத் துறையில் அனுபவம் பெற விரும்பவர்களுக்கு இன்று நாடெங்கிலும்  பல இடங்களில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. சிறு தொழில்களில் பயிற்சி பெற விரும்பவர்களுக்கு அரசாங்கமே பல பயிற்சிகளை வழங்குகின்றது. இந்திய வர்த்தக சபையினரும் பலவித பயிற்சிகளை ஆர்வமுள்ள இளைஞர்களுக்குக் கொடுக்கின்றனர். .நாம் தான் எல்லாத் தகவல்களையும் பெற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எல்லாத் தகவல்களும் கிடைக்கக் கூடிய வாய்ப்புக்கள்  நிறையவே இருக்கின்றன. இணையத்தளம், நாளிதழ்கள் சென்று அலசி ஆராய வேண்டும். கிணற்றுத் தவளைகளாக  இருந்துவிட்டு "அதிர்ஷ்டம் இல்லை" என்று தலையில் அடித்துக் கொள்ளுவதில் அர்த்தமில்லை!

உங்களைச் சுற்றி இருப்பவர்களைப் பாருங்கள்.வர்த்தகத்தில் வெற்றி பெற்றவர்களைப் பாருங்கள். அவர்கள் எல்லாம் எதனை முக்கியமாகக் கருதுகிறார்கள் என்று கவனியுங்கள். அவர்கள் வர்த்தகத்தில் இருப்பதற்கு எது உந்து சக்தியாக இருக்கிறது என்பதைக் கவனியுங்கள். ஆம்! பணம் தான் உந்து சக்தி! பொருளாதார உயர்வு தான் உந்து சக்தி!

உங்கள் வாழ்க்கையைத் தொய்வில்லாமல் கொண்டு செல்ல பணம்தேவை. குடும்பம் குதூகளித்து வாழ பணம் தான் முக்கியமாகக் கருத்தப்படுகின்றது. நாலு பேருக்கு நல்லதைச் செய்ய பணம்  தேவை. கோவில் குளங்களுக்குச் சென்று வர பணம் தேவை. கோவில் கும்பாபிஷேகம் செய்ய பணத்தை நீங்கள் அள்ளிக் கொடுக்கலாம். பள்ளிக்கூடங்கள் கட்ட பணத்தை அள்ளிக் கொடுக்கலாம். ஏழை எளியவர்களுக்கு பணம் கொடுத்து உதவலாம்.

அந்தப் பணம் எங்கிருந்து வரும்? அது வர்த்தகத்தில் மூலம் தான் வரும். அந்த வர்த்தகத்தை நாம் ஆள வேண்டும். நம்மால் முடியாது என்று ஒன்றுமில்லை. மற்றவர்களால் முடிந்தால் நம்மாலும் முடியும். அதனை மனத்தில் இருத்திக் கொள்ளுங்கள். ஒரு சீனன் அரைக்கிறுக்கனாக இருந்தால் கூட நாம் அவனுடன் பொருள்களை வாங்கி ஆதரிக்கிறோம். நம் மக்கள் நம்மை ஆதரிக்க மாட்டர்களா, என்ன?

முடியும்! முடியும்! என்று சொல்லுங்கள். நம்மாலும் முடியும்! துணிவைத் துணையாகக் கொண்டு "நம்மாலும் முடியும்" என்று சொல்லுங்கள்! நம்மால் நிச்சயம் முடியும்!


Monday 18 July 2016

டெல்லியில் அப்துல் கலாம் நினைவிடம்!


இந்தியத் தலைநகர் டெல்லியில்,  முன்னாள் குடியரசுத் தலைவர்  டாக்டர் அப்துல் கலாம் நினைவாக "அறிவுசார் மையம்" அமைக்கப்படும் என்று  மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ஏற்கனவே அறிவித்தது போல இம்மாதம் (ஜூலை) 27-ம் தேதி அந்த அறிவுசார் மையம்  திறக்கப்படும் என்று அறிவிப்புக்கள்  வெளியாகி உள்ளன.

மாநில முதல்வரை வாழ்த்துகிறோம்! மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கபில் மிஷ்ராவையும் வாழ்த்துகிறோம்!

அந்த அறிவுசார் மையத்தில் டாக்டர் அப்து கலாம் பயன்படுத்திய பொருட்களும்  அங்கு காட்சிக்கு வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் சேர்த்து வைத்த புத்தகங்கள், அவர் எழுதிய புத்தகங்கள், அவருடைய உடைகள், பேனா,  அவருக்கு வழங்கப்பட்ட  பரிசு பொருட்கள் மற்றும் அவருடைய உடமைகள் அனைத்தும் காட்சிக்கு வைக்கப்படும் எனத் தெரிய வருகிறது.

ஆனால் டாக்டர் அப்துல் கலாம் பிறந்த ஊரான தமிழகத்தில் வெறும் அறிவிப்புக்களோடு சரி! அனைத்தும் மந்தமான போக்கில் போய்க் கொண்டிருக்கிறன என்று தான் சொல்ல வேண்டும்! நகர வேண்டிய எதுவும் நகரவில்லையாம்!

அவர் பிறந்த ராமேஸ்வரத்தில்  "அறிவுசார் மையம்" அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து அதற்கானத் திட்டங்களையும் அறிவித்தது. அதற்கான நில ஒதுக்கிட்டையும் மாநில அரசு கொடுத்து  விட்டது. . ஆனாலும் இதுவரை மையம்  அமைப்பதற்கான எந்த ஒரு வேலையும் நடைபெறவில்லை எனச் சொல்லப்படுகின்றது!

வருத்தப்பட வேண்டியதே!  தமிழகம் என்றாலே, தமிழன் என்றாலே நடுவண் அரசும் சரி மாநில அரசும் சரி எதனையும் கண்டு கொள்வதில்லை என்பதனை இதனை  வைத்தே நாம் புரிந்து கொள்ளலாம். அப்துல் கலாம் அவர்கள் நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்தவர். உலகப் போற்றும் விஞ்ஞானி. ஆனால் அவர் ஒரு தமிழர் என்கிற ஒரே காரணத்தால் யாரும்  கண்டு கொள்ளவில்லை! டெல்லியில் கூட மாநில முதல்வரின் தூண்டுதலினால் - அவர் காட்டிய அவசரத்தால் - இப்போது அவரது நினைவிடம் திறப்பு விழா காண்கிறது.  அந்த மாநில முதல்வருக்கு அப்துல் கலாம் மீது இருக்கின்ற  பற்றும் பாசமும் கூட தமிழக முதல்வருக்கு இல்லை! அது எங்கள் வேலை இல்லை என்கிற மனப்போக்கில் இவர் இருக்கிறார்! எவ்வளவு தான் தமிழன் ஒருவன் உயர்ந்திருந்தாலும் அவனை வரவேற்க தமிழகத்தில் தமிழன் ஆட்சி இல்லை! இது தான் தமிழகத்தின் இன்றைய நிலை! தமிழக முதல்வர் இந்தியப் பிரதமரிடம் பேசத் தகுதியற்றவராக இருக்கிறார்! அந்த அளவுக்கு அவருக்குச் சிக்கல்கள் உள்ளன!

தமிழக,  ராமேஸ்வரத்தில் "அறிவுசார் மையம்" அமைக்கப்படுமா என்பது யாருக்கும் தெரியாது! இப்போதைக்கு டெல்லியில் அமைக்கப்படும் - திறப்பு விழா காணும் -  அறிவுசார் மையத்திற்கு நமது வாழ்த்தினைத் தெரிவிப்போம்.

டாக்டர் அப்துல் கலாமின்  அறிவுசார் மையம் இளஞ்சிறார்களுக்கு மட்டும் அல்ல பெரியவர்களுக்கும் பயனுடையதாக அமையும் என நம்புவோம்!

இந்தியர்களால் - அரசியல்வாதிகளைத் தவிர - அனைவராலும்  விரும்பப் பட்ட மனிதர் அப்துல் கலாம் அவர்கள். கறைபடாத மனிதர். நேர்மை, நாணயம் என்பதற்கு அவர் ஓர் எடுத்துக்காட்டு.

அவர் புகழ் என்றென்றும் இந்திய மண்ணில் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை!




Sunday 17 July 2016

கபாலிக்குப் போட்டி இன்னொரு கபாலியா?


ஊகும்! கபாலியை அடிச்சிக்க ஆளில்லை என்று நினைத்தோம்! கபாலியையே தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு இன்னும் பல கபாலிகள் இருப்பார்கள் போலிருக்கு!

கபாலி வெளியாகும் அன்று திருட்டுத்தனமாக இணயத்தளங்களிலும் படத்தை வெளியிடும் முயற்சிகளிலும் பலர் ஈடுபட்டிருக்கின்றனர். பொதுவாக இது இணயைத்தளங்களில் தடுக்கமுடியாத ஒரு நடைமுறையாக வந்துவிட்டது!

இதனை ஒழித்துகட்ட கபாலி தயாரிப்பாளர், கலைப்புலி எஸ் தாணு நீதிமன்ற நடவடிக்கைகளை  மேற்கொண்டார். அதில் அவர் திரைப்படத்தை திருட்டுத்தனமாக வெளியிடும் இணையத்தளங்களுக்குத் தடை விதிக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டிருந்தார். அப்படி மீறி வெளியிட்டால் அந்த இணையத்தளங்களின் உரிமம் ரத்துச்செய்யப்பட  வேண்டுமென அவர் கேட்டுக்  கொண்டிருந்தார். நீதிமன்றமும் அதனை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.

ஆனால் இணயத்தள கபாலிகள் இதற்கெல்லாம் அடங்குபவர்களாகத்  தெரியவில்லை! இவர்கள் வெளிநாடுகளிலிருந்து தங்களது இணையத்தளங்களை இயக்குபவர்களாம்.  திரைப்படங்களைத் தடைச்செசெய்ய  அந்நாடுகளில் தடைச்சட்டம் இல்லாதால் அங்கிருந்து கபாலியை வெளியிட முடிவு செய்திருக்கிறார்களாம்! கபாலிக்கே கபாலி!

ஏன் கபாலி திரைப்படத்தின் மீது இணையத்தளங்கள் இந்த  அளவுக்கு எல்லை மீறிப் போகின்றன? கபாலி திரைப்பபடம் உலக அளவுக்குக் கொண்டு செல்லப்படுகின்ற ஒரு படமாக அமைந்துவிட்டது!  அந்த அளவுக்கு விளம்பரங்கள் கொடுக்கப்படுகின்றன!

இந்த நேரத்தில் இணையத்தளங்களும் கபாலியை வைத்து எந்த அளவுக்குப் பணம்  சம்பாதிக்க முடியும் என்று கணக்குப் போடுகின்றன! அவர்களின் தினசரி வருமானம்  லட்சத்தை எட்டும் என்று சொல்லப்படுகின்றது! அத்தோடு அவர்களுக்குக் கிடைக்கின்ற விளம்பரங்களும்  பெரிய அளவில் பணம் ஈட்டித்தரும் என்று கணக்கிடப்படுகிறது!

பல கோடிகள் பணத்தைப் போட்டுப் படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் தான் இது போன்ற பிரச்சனைகளினால் பாதிக்கப்படுகின்றனர்!  கோடிகளை அவர்கள் முதலீடு செய்கின்றனர்.இந்த இணயத்தளங்கள் எந்த முதலீடும் போடாமல் இலாபம் பார்க்கின்றனர்!

கபாலி இதனையும் முறியடித்து வெற்றிநடைபோடும்  என நம்புவோம்!

Friday 15 July 2016

கேள்வி - பதில் (25)



கேள்வி

டாக்டர் மகாதிர் புதிய கட்சி ஆரம்பிப்பார் என்று செய்திகள் வருகின்றனவே! ஆரம்பிப்பாரா?

பதில்

ஆரம்பிப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை. எல்லாருமே முன்னாள் துணைப்பிரதமர் அன்வார் இப்ராகிம் புதிய கட்சி ஆரம்பித்தாரே இவரால் முடியாதா என்று தான் பேசி வருகிறார்கள். உண்மையைச் சொன்னால் அன்வாருக்கு  இருந்த கீழ்மட்ட ஆதரவு போல்   டாக்டர் மகாதீருக்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும்!

அன்வார் கீழ்மட்டத்தில் அவர் போட்ட உழைப்பு இப்போது உள்ள எந்த அரசியல் தலைவருக்கும் இல்லை என்பது தான் உண்மை. அவருடைய கால்கள் பதியாத பள்ளிவாசல்களே இல்லை. அந்த அளவுக்குச் சமய சொற்பொழிவுகளை அவர் நிகழ்த்தியுள்ளார். இளைஞர் அணித் தலைவர்கள் அனைவரும் அவருடைய நண்பர்கள். பேச்சுத் திறன் மிக்க தலைவர் அவர். அவருக்காக உழைப்பைக் கொடுக்க பலர் இருந்தனர். இப்போது உள்ள எந்தத் தலைவர்களுக்கும் அத்தகையத் தொடர்புகளும்  இல்லை; ஆற்றல் மிக்கவர்களும் இல்லை!

டாக்டர் மகாதிர் யாரை நம்பி கட்சியை ஆரம்பிப்பார்? அவர் கட்சியை ஆரம்பிக்கலாம். ஆனால் கட்சியை வளர்க்க கிழ் இறங்கி வேலை செய்ய ஆள் வேண்டுமே!  அவருடைய ஆதரவாளர்கள் பெரும்பாலும் மேல்மட்டத்திலேயே வளர்ந்துவிட்டவர்கள்!

அவருடைய எதிர்பார்ப்புக்கள் எல்லாம் அம்னோவில் உள்ள தனது ஆதரவாளர்களைப் புதிய கட்சிக்குக் கொண்டு வரவேண்டும் என்பது தான். இது நடக்கும் என நான் நம்பவில்லை! டாக்டர் மகாதிர்அம்னோவின் தலைவராக இருந்த போது தனது உறுப்பினர்களுக்குத் தவறான தலைவராக இருந்தவர்; தவறான வழிகாட்டி!  இப்போது உள்ள அவரது ஆதரவாளர்கள் யாரும் கஷ்டப்படத் தயாராக இல்லை!  அரசனை நம்பி அணைத்தவனைக் கைவிடத் தயாராக இல்லை!

இப்போது யார் பதவியில் இருக்கிறார்களோ அவர்களுக்கே அவர்களது ஆதரவும் இருக்கும்!  எல்லாருமே பதவி வேண்டும்: பணம் வேண்டும்; குத்தகை வேண்டும் என்று கணக்குப் போடுபவர்கள்! அவர்களுக்குத் தீனி போட பிரதமர் தயாராக இருக்கிறார். அப்புறம் ஏன் தங்களது ஆதரவை டாக்டர் பக்கம் திருப்ப வேண்டும்?

எல்லாமே டாக்டர் மகாதிர் தான் தலைவராக இருந்த போது கட்சியில் உள்ளவர்களுக்குக் கற்றுக் கொடுத்த பாடங்கள்! அப்போது அவர் தலைவராய் இருந்த போது அது சரி என்றால் இப்போதும் இது சரி தானே!

ஊகூம்! டாக்டர் கட்சி ஆரம்பிக்க மாட்டார்! அப்படியே ஆரம்பித்தாலும் அது பெரிய சறுக்கலாகவே அமையும்!

இன்றைய அரசாங்கத்தை நாம் என்ன தான் குறை சொன்னாலும் இன்று, இப்போது பதவியில் இருப்பவர்களுக்குத் தான் மரியாதை அதிகம்; செல்வாக்கு அதிகம்! வெளியே இருந்து கொண்டு கத்தலாம்! காரியத்திற்கு ஆகாது! யார் காதிலும் விழாது!

Thursday 14 July 2016

எதற்கும் தயார் தானே?


தயார் நிலையில் இருங்கள்! எதற்கும் தயார் என்று மனதிலே ஒரு வைராக்கியத்தைப் பதிய வையுங்கள்.எதனையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் எனக்கு உண்டு என்று உறுதியாக நம்புங்கள்! வான் இடிந்த போதிலும் நான் அசையப் போவதில்லை  என்று சொல்லுங்கள்!

இப்போது நமது நாட்டில் வேலை இல்லாப் பிரச்சனை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. ஒரு பக்கம் புதியவர்ககளை எடுப்பதும் இன்னொரு பக்கம் பழையவர்களை நீக்குவதும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

பழையவர்களின் அனுபவம், ஆற்றல் என்னவாயிற்று?  அவர்களின் இருபது, முப்பது ஆண்டுகளாக  உழைப்புக்கு ஏதேனும்  மரியாதை கிடைத்ததா? ஒரு மண்ணும் இல்லை!

ஆனாலும் இது முதலாளிகளின் உலகம்! அவர்கள் நினைத்தால் மூன்று மாதச் சம்பளம், ஆறு மாதச் சம்பளம் என்று  கொடுக்காமலேயே  ஒரு நிறுவனத்தை அடைத்துவிட்டுப் போய் விடுவார்கள்! முதலாளிகள் அரசாங்கத்தின் செல்லப் பிள்ளைகள்!  அவர்கள் வைத்தது தான் சட்டம்!

ஆனாலும் அதுவல்ல நாம் பேச வருவது. இது போன்ற நேரங்களில் பிரச்சனைகளை எதிர்நோக்கத்  தயராக இருக்கிறீர்களா? நீங்கள் தயராகத்தான் இருக்க வேண்டும். காரணம் உங்கள் கடைசிக் காலம் வரை அவர்கள் உங்களுக்கு வேலைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும் ஏன்று எந்தச் சட்டமும் இல்லை! அதுவும் உங்களுக்குத் தெரியும்.

வேலையில் இருக்கும் போதே ஒரு பகுதி நேரத் தொழிலை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்வது உங்களுக்குத் தன்னம்பிக்கையைக் கொடுக்கும். வேலை இல்லாத போது அதுவே உங்களுக்கு முழு நேரத்தொழிலாக .மாறிவிடும். வேலைகளைத் தேடிக்கொண்டிருப்பதை விட இருக்கின்ற வாய்ப்புக்களைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.  ஓரளவு நடுத்தர வயதைத் தாண்டி விட்டால் யாரும் வேலைக் கொடுக்கமாட்டார்கள்.  அப்படிக் கொடுத்தாலும் மிகக் குறைவானச் சம்பளத்தின் தான் வேலைக் கொடுப்பார்கள். அது உங்களுக்கு ஒரு திருப்திகரமான வேலையாகவும்  அமையாது!

இன்றைய நிலையில் நாம் பலரைப் பார்க்கிறோம். ஏதோ சிறு சிறு வியாபாரங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாம் அவர்களை வெறுமனே பார்த்துக் கொண்டிராமல் நாமும் களத்தில் இறங்க வேண்டியது தான். நமது தகுதிக்கேற்ப அல்லது நமது ஆர்வத்திற்கு ஏற்ப ஒரு தொழிலைத் தேர்ந்து எடுத்து ஒரு புதிய பாதையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லாக் காலங்களிலும் யாரோ நமக்கு வேலைக் கொடுப்பார் என்று கனவுக் கண்டு கொண்டிருக்காமல் நாமே நமது பிரச்சனைகள் தீர வழி காணவேண்டும்.

வாழ்க்கைப் பாதையில் எதுவும் நிரந்தரமல்ல. வேலை மட்டும் நிரந்தரம் என்று யார் சொன்னார். அப்படியே நிரந்தரம் என்று நீங்கள் நினைத்தாலும் ஒரு பகுதி நேரமாக ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபடுவது உங்களாலும் உங்களக்கென்று ஒரு பாதையை அமைத்துக் கொள்ள ஒரு ஊக்கத்தைக் கொடுக்கும். கைத்தொழில் தெரிந்தவராக இருந்தால் அந்தத் தொழிலில் ஈடுபடலாம். வாய்ப்புக்களை நாம் தான் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

எதற்கும் தயார் என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்லுங்கள். எங்கும் போய் நாம் ஓடி ஒளிந்து கொள்ள முடியாது! யதார்த்தத்தை நாம் எதிர்கொள்ளத்தான் வேண்டும். வருவது வரட்டும் என்று துணிந்து பிரச்சனைகளை எதிர் நோக்குங்கள்! பயப்படுவதாலோ, ஓடி ஒளிவதாலோ ஆகப்போவது ஒன்றுமில்லை!  என்ன செய்யலாம், எப்படி செய்யலாம் என்பதை ஊறவுகளோடு ஆழ்ந்து சிந்தித்து வெற்றிகரமாகச் செயல்படுத்துங்கள்

வெற்றி பெற வாழ்த்துகள்! எதற்கும் தயார்! தயார்! தயார்!


Wednesday 13 July 2016

90 + 10% = 100%


தம்பதியர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் என்பதைப்பற்றி முன்னரே ஏழுதியிருக்கிறேன்.  இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம். காரணம் இளம் தம்பதியினர் இது பற்றியெல்லாம் கவலைப்படுவதாக இல்லை!  'பிடிக்கலியா விவாகரத்துப் பண்ணியிடுவோம்!'  என்று சாதாரணமாக எடுத்துக் கொள்ளுகின்றனர்! ஆனால் அதனைப் புரிந்து கொள்ளுவதற்கு காலம் வரும்.  அப்போது அது காலம் கடந்த கதையாகிவிடும்!

கணவர்-மனைவியர் விட்டுக்கொடுத்து வாழவேண்டும் என்னும் போது எவ்வளவு விட்டுக் கொடுக்க வேண்டும்? யார் விட்டுக் கொடுக்க வேண்டும்?  என்றெல்லாம் இரு பக்கமும் கேள்விகள் வருகின்றன!

வாழ்க்கை நடைமுறைகளை வைத்துப் பார்க்கும் போது பெரும்பாலான குடும்பங்களில் கணவனே அதிகம்  விட்டுக் கொடுக்கிறான். எப்படிப் பார்த்தாலும் அது அப்படித்தான் நடைமுறையில் இருக்கிறது!

நான் ஏற்கனவே சொன்னது போல கணவன் தொண்ணுறு விழுக்காடும் மனைவி பத்து விழுக்காடும் விட்டுக் கொடுத்துத் தான் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது! ஆனாலும் இதனை மறுக்கும் கணவர்களும் இருக்கிறார்கள். தொண்ணூறு என்பதெல்லாம் சும்மா சப்பைக்கட்டு! நூறு விழுக்காடு கணவன் விட்டுக் கொடுக்கிறான் என்பது தான் உண்மை என அனுபவப்பட்டவர்கள் சொல்லுகிறார்கள்!

அது உண்மை என்று தான் தோன்றுகிறது! காரணம் இப்போது கணவன் - மனைவி  இருவருமே படித்தவர்களாக இருக்கிறார்கள். இருவருமே வேலை செய்பவர்களாக இருக்கிறார்கள். யாரையும் நம்பி யாரும் இல்லை! கணவனை நம்பித்தான் மனைவி வாழ வேண்டும் என்னும் நிலைமையில் மனைவி இல்லை!  காலங்காலமாக அடுப்பூதும் பெண்களாகவே  அடிமைப் பெண்களாகவே - அவர்களை நாம் வைத்திருந்தோம்! இப்போது எல்லாம் மாறிவிட்டது. இப்போது அவர்கள் தங்களது குரலை உயர்த்த ஆரம்பித்திருக்கிறார்கள்! அவர்கள் எடுக்கும் முடிவுகள் சரியாகவே இருக்கின்றன. ஒரு ஆணைவிட பெண் சரியான முடிவு எடுக்கிறாள்  என்பது நடைமுறையில் சரியாகத்தான் இருக்கிறது!

சரி, என்னதான் முடிவு? விட்டுக் கொடுத்துத்தான் வாழவேண்டும்! இருவரும் கலந்தாலோசித்து முடிவுகளை எடுக்க வேண்டும்.

உங்கள் மனைவி பத்து விழுக்காடு விட்டுக் கொடுத்தால் நீங்கள் பேறு பெற்றவர்! அது போதுமே!

Tuesday 12 July 2016

களம் இறங்கும் கபாலி!


கபாலி களம் இறங்கும் நாள் அறிவிக்கப்பட்டு விட்டது. வருகிற ஜூலை, 22, வெள்ளிக்கிழமை அன்று வெளியாகும் என அதன் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அறிவித்து விட்டார்.  இந்த முறை எந்த மாற்றமும் ஏற்படாது என நாமும் நம்புவோம்!

கபாலி களம் இறங்கும் இந்த நேரத்தில் கொஞ்சம் பழைய படங்களில் இந்தக் கபாலியின் நிலையென்ன என்பதைத் திரும்பிப் பார்ப்போம்.

கபாலி என்றாலே ஒரு வில்லன் பாத்திரம். அதிலும் நகைச்சுவை கலந்த ஒரு வில்லன் பாத்திரம். ஒருவகையில் அஞ்சடித்தனமான  வில்லன் மாதிரி!   ஒரளவு அறிமுகமான நடிகர் அந்தப் பாத்திரத்தில் நடிப்பார். ஒரு கோடு போட்ட பனியன், கழுத்தைச் சுற்றி ஒரு துண்டு சுற்றிருப்பார்! இப்படித்தான் அன்றைய கபாலி. அது ஒரு சிறிய வேடமாகத்தான் இருக்கும்! ஆனாலும் அந்தக் கபாலி என்கின்ற பெயரைக் கேட்டவுடனே அவர் ஒரு வில்லன் என்பதாக - ஒரு அபிப்பிராயத்தை - நம்மீது இயக்குனர்கள் திணித்து வைத்திருக்கிறார்கள்!

இப்போது - இந்த ரஜினியின் கபாலி - ஒரு அதிரடியான கபாலி! இத்தனை ஆண்டுகள் கபாலி என்னும் பெயரைத் தங்கள் பிள்ளைகளுக்கு யாரும் வைப்ப தில்லை. இனி மேல் இந்தப் பெயர் பிள்ளைகளுக்கு வைக்கப்படலாம்! வீதியில் கிடந்த கபாலியை ஐந்து நட்சத்திர அளவுக்கு உயர்த்தியிருக்கிறார் ரஜினி! ஆக, திரைப்படமும் அந்த அளவுக்கு உயர்ந்திருக்கும் என நாம் நம்பலாம்!

இந்த நேரத்தில் ரஜினியின் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்களுடைய ஆர்வத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியாது என்பது உண்மையே! ஆனாலும் பொறுமை காக்க!

ரஜினியில் பெயரில் பல நல்ல காரியங்களைச் செய்ய இதுவே தக்க தருணம். ஏழைக் குடும்பங்களுக்கு உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள். ஒரு மாதத்திற்கான  அரிசி புருப்பு வாங்கிக் கொடுத்தோம் என்பதெல்லாம் அரசியல்வாதிகள் செய்கின்ற சில்லறைத்தனமான வேலை! வீடில்லாதவர்களுக்கு வீடு கட்டிக்கொடுங்கள்; வீடுகளைப் பழுது பார்த்துக் கொடுங்கள்.  பள்ளிப்போகும் ஏழை மாணவர்களுக்குப் போக்குவரத்துச் செலவுகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.

இன்னும் நிறையவே செய்யலாம். நமது சுற்றுப் புறத்தைக் கொஞ்சம் கூர்ந்து பார்த்தால் போதும். என்ன செய்ய வேண்டுமென்று உங்களுக்கே புரியும். ரஜினிக்காக எவ்வளவோ செய்யக் காத்துக் கொண்டிருக்கிறீர்கள். அது நல்லதாகவே இருக்கட்டும். அது நீண்ட கால பயனுடையதாக இருக்கட்டும்.

இதுவே ரஜினியின் "கபாலி" வெளியாகின்ற நேரத்தில் நான் ரஜினியின் சார்பில் ரஜினியின் ரசிகர்களுக்கு  வெளியிடுகின்ற செய்தி!

ரஜினியின் "கபாலி" வெற்றி பெற வாழ்த்துகள்!


வேலை தேடும் படலம் ஆரம்பமா?


நிறைய மாணவர்கள் கல்லூரிகளிலிருந்து பட்டம் பெற்று வெளியாகிக் கொண்டிருக்கின்றனர். .நிறைய புதிய  மாணவர்கள் கல்லுரிகளிலும் சேர்ந்து கொண்டிருக்கின்றனர்.

வெளியாகிய மாணவர்கள் வேலை தேடும் படலத்தை ஆரம்பித்து விட்டனர்.  நல்லது தான். ஆனால் நாம் நினைப்பது போல வேலை என்பது கைக்கு எட்டிய தூரத்தில் இல்லை. பல முயற்சிகள், பல போராட்டங்கள்  - அதன் பின்னர் தான் வெற்றி! எல்லாமே எளிதில் கிடைத்த காலம் போய் விட்டது. இப்போது நிலைமைகள் மாறிவிட்டன. உங்களுக்கு என்ன வேண்டுமோ நீங்கள் தான் தேடிப் போக வெண்டும். ஊட்டிவிட ஆளில்லை!

மலாய் இளைஞர்களிடம்   நல்ல மாறுதல்களைப் பார்க்கிறேன்.  எல்லாரும் பட்டதாரிகள் தான். ஆனால் என்ன வேலை கிடைக்கிறதோ முதலில் அதனைப் பற்றிக் கொள்கின்றனர். அதன் பின்னரே அடுத்த முயற்சிகள்.

நம்முடைய இளைஞர்களின் மனப்போக்கு என்பது  வேறாக இருக்கிறது.  தான் படித்த படிப்புக்கான வேலை தான் கிடைக்க வேண்டும். வேறு வேலை  செய்ய நான் தயராக இல்லை. அது வரை நான்  காத்திருக்கிறேன் என்னும் இந்த மனப்போக்கிற்கு்  பெற்றோர்களும்  ஒரு காரணம் என்று தான் சொல்ல வேண்டும்! நடைமுறை வாழ்க்கையை  இவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

முதலில் கிடைக்கின்ற வேலையைச் செய்ய வேண்டும். எந்த வேலையாக இருந்தாலும் எல்லாவற்றிலும் நாம் ஏதோ புதிதாக ஒன்றை கற்றுக் கொள்ளுகிறோம். பள்ளி வாழ்க்கை, கல்லூரி வாழ்க்கை என்பதெல்லாம் நீங்கள் படித்ததற்கான ஒர் அத்தாட்சி மட்டுமே. உங்களுக்கு வேலை தெரியும் என்பதற்கான அத்தாட்சி அல்ல! உங்களுக்குப் பயிற்சி தேவை; அனுபவம் தேவை. அப்படியே அவர்களுக்கு வேலை கிடைத்தாலும் அந்தப் பட்டப்படிப்புக்கான சம்பளைத்தை எதிர்பார்க்கின்றனர்.  உங்களுக்கு அனுபவம் இல்லாத போது எந்த நிறுவனமும் நீங்கள் விரும்புவது போல் சம்பளத்தைக் கொடுக்கப் போவதில்லை!

நமது நாட்டில் ஒரு பிரபலமான கொரிய நிறுவனம்.  கணினி சம்பந்தமான  ஒரு வேலை. அவர்களுடைய மூன்று கணினி பட்டதாரிகளால் ஒரு நாள் பூராவும் அந்தப் பழுதைச் சரிபண்ண முடியவில்லை. ஒரு தனியார்  நிறுவனத்தின் உதவியை நாடினார்கள்.  அவர்களிடம்  வேலை செய்யும் ஒரு இளைஞனை அனுப்பி வைத்தார்கள்.. ஒரு ஐந்து நிமிட வேலை கூட இல்லை!  வேலை முடிந்தது!  அதற்குத்தான் பயிற்சி, அனுபவம்  தேவை என்று சொல்லுகிறார்கள்.

நீங்கள் என்னத் துறையில் படித்திருந்தாலும் சரி. நீங்கள் சம்பந்தப்படாத ஒரு துறையில் வேலை கிடைத்தாலும் சரி. செய்யுங்கள் அதிலிருந்து முன்னேற முயற்சி செய்யுங்கள். அப்படித்தான் பலர் முன்னேற்ற்ம் அடைந்திருக்கின்றனர்.

ஒரு வேலையும் செய்யாமல் - வேலைக்காகக் காத்துகொண்டிருந்தால்  - நீங்கள் சோம்பறிகள் பட்டியலில் இடம் பெற்று விடுவீர்கள்! எத்தனையோ சிறிய சிறிய நிறுவனங்கள் இருக்கின்றன. பேரங்காடிகள் நாட்டில் ஏகப்பட்டவைகள் இருக்கின்றன.  அங்குச் சாதாரண வேலையில் சேர்ந்தாலும் அங்கும் பல பெரிய பெரிய பதவிகள் இருக்கின்றன என்பதை மறந்து விடாதீர்கள். எல்லாம் உங்கள் முயற்சி தான்! உங்கள் திறமை தான்!

இப்போது வேலை இழந்த பலர் வேலைகளைத் தேடிக்கொண்டிருக்கின்றனர். புதிதாகக் கல்லூரிகளிலிருந்து வெளியாகும் மாணவர்களும் வேலை தேடிக்கொண்டிருக்கின்றனர். போட்டா போட்டிகள் ஏராளம்! அதனால் வேலைகளைத் தேர்வு செய்கின்ற நிலைமையில் யாரும் இல்லை. நிதானித்து, பொறுமையாகத் தேர்வு செய்ய காலமில்லை!  எந்த வேலை வருகிறதோ அதனை ஏற்றுக் கொள்ளுங்கள்.

நீங்கள் வெற்றி பெற வாழ்த்துகள்!


Sunday 10 July 2016

கேள்வி-பதில் (24)


கேள்வி

திருவாருர் பொதுக்கூட்டத்தில் நன்றி தெரிவித்து பேசிய கலைஞர் கருணாநிதி, தமிழக ஆட்சியில் திராவிடர்கள் பங்கு பெற கூடாது  என்பதற்காகவே ஜெயலலிதாவைத் தேர்ந்தெடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டை முன் வைத்தாரே, அது சரியா?

பதில்

சரியில்லை! ஜெயலலிதாவும் திராவிடர் தான்! ஆனால் அவர் திருவாருரில் திராவிடர் என்று குறிப்பிட்டுச் சொல்லுவதைப் பார்க்கும் போது அங்கு தெலுங்கு மக்கள் அதிகம் இருக்கலாம் என்றே தோன்றுகிறது.

ஆனாலும் கலைஞர் இது போன்ற குற்றச்சாட்டை சுமத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. 50 ஆண்டுகளாக பதவியில் இருந்தவர்; இருப்பவர்.  இது போன்ற குற்றச்சாட்டின் அவசியம் என்ன என்பது நமக்குப் புரியவில்லை!

தமிழர்கள் அவரைத் தமிழராகத் தான் ஏற்றுக் கொண்டார்களே தவிர அவரை ஒரு தெலுங்கர் என்று நினைத்ததும்  இல்லை. ஆனால் அவர் தன்னைத் தமிழராக நினைக்கவில்லை. அவருடைய நடவடிக்கைகளைப் பார்க்கின்ற போது அவர் தன்னை ஒரு தெலுங்கர் என்று நினைத்தே செயல்பட்டு வந்திருக்கிறார். வாழ வைத்த தமிழ் நாட்டுக்கு அவர் செய்த துரோகங்கள் எண்ணிலடங்கா!

இலங்கைத் தமிழர்கள் இன்று நாடோடிகளாய் இங்கும் அங்கும் அலைந்து கொண்டும் நாடற்றவர்களாய் வாழ்ந்து கொண்டும் இருப்பதற்கு அவரே முழுமுதற் காரணம்.தமிழர்கள் கொத்துக் கொத்தாய் மடிகிறார்களே என்கிற அக்கறை அவரிடம் இருக்கவில்லை.


தமிழன் தன் சொந்த நாட்டிலேயே அந்நியனாய் வாழ்கின்ற ஒரு நிலையை ஏற்படுத்தியவர் அவர். தனது தாய் மொழியை மறக்க வைத்து தமிழனை ஆங்கில மோகத்திற்கு அடிமையாக்கியவர் அவர். தமிழ் நாட்டில் தமிழ் இல்லாத ஒரு சூழலை ஏற்படுத்தியவர் அவர். தமிழகத்தின்  அத்தனை வளங்களையும் சூறையாடி தனது குடும்பத்திற்குக் கோடி கோடியாய் சொத்து சேர்த்தவர் அவர். தமிழக விவசாயிகளைக் கொன்று போட்டவர் அவர்.

பொதுவாக சொல்ல வேண்டுமானால் ஒரு முதலைமைச்சர் செய்ய வேண்டிய எந்தப் பணிகளையும் அவர் செய்யவில்லை. அவர் குடும்பத்திற்குச் செய்த அளவுக்கு தமிழ் நாட்டுத் தமிழனுக்கு அவர் செய்யவில்லை. தமிழ் மொழியை வைத்தே தமிழ் நாட்டில் அரசியல் விளையாட்டு விளையாடியவர். கடைசியில் தமிழையே அழித்தவர்.

இன்று ஜெயலலிதா, கருணாநிதியின் தொடர்ச்சி! அவ்வளவு தான்!

ஆனால் ஜெயலலிதாவிடம் ஒரு மாற்றம் வரும் என எதிர்பார்க்கிறேன். இந்த முறை அவர் முதலைமைச்சர் ஆனது அவருக்கு ஒரு புதிய தெம்பைக் கொடுத்திருக்கிறது! தொடர்ந்து தான் பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என நினைக்கவே செய்வார்.
ஸ்டாலினை  முதலைமைச்சர் பதவிக்கு  நெருங்க விடமாட்டார் என்றே தோன்றுகிறது.

தமிழ் நாட்டில் கருணாநிதியோடு தி.மு.க. ஆட்சி ஒரு முடிவுக்கு வரும்! வர வேண்டும்!

தமிழ் நாட்டுக்கு ஜெயலலிதா மூலம் ஏதாவது நல்லது நடந்தால் வரவேற்போம். நல்லது செய்வார் என நம்புவோம். வேறு வழி இல்லை!




சட்ட நடவடிக்கையா?! ஐயோ தாங்கமுடியல!


நமது சமூகத்தில் ஏன் இத்தனை வழக்கறிஞர்கள் என்பது இப்போது புரிகிறது! நமது இளைஞர்கள் ஏன் இந்த வழக்கறிஞர் கல்விக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதும் இப்போது புரிகிறது!

ம.இ.கா.வில் சேர்ந்தால்  சுலபமாகப் பணம் சம்பாதிக்கலாம் என்பதாகவே  நமது இளம் வழக்கறிஞர்கள் நினைக்கிறார்கள் போல் தொன்றுகிறது!

இந்த ம.இ.கா.வினரை நினைக்கும் போது இவர்கள் என்ன படித்தவர்களா?  பண்பில்லாதவர்களா? பொறுக்கித்தின்னும் கூட்டமா? புறம் போக்குகளா?  எதுவும் விளங்கவில்லை! அவ்வளவு அட்டுழியங்கள்! நமது இனத்தின் அவமானச் சின்னங்கள்!

எத்தனை நாளைக்குத் தான் இவர்கள் செய்கின்ற அட்டுழியங்களை நாம் பொறுப்பது?

மக்களூக்குத் தொண்டு செய்ய இவர்கள் நாம் தேர்ந்து எடுத்தால் இவர்களோ பொண்டாட்டி பிள்ளைகளுக்குத் தொண்டு செய்கிறார்கள்  இவர்களுக்கு எல்லாக் காலத்திலும் கூடவே ஒரு வழக்கறிஞர் இருந்தே ஆக வேண்டிய கட்டாயம்  உண்டு. திருடுவதற்கு முன்னர் சட்ட ஆலோசனைகளைக் கேட்டுவிட்டுத் தான் இவர்கள் திருடுகிறார்கள் போல் தெரிகிறது!

இப்படி மக்களை ஏமாற்றுவதற்குத்தான் இவர்களின் கல்வி பயன்படுகிறது என்றால் - பணத்தைத் திருடுவதற்குத்தான் இவர்கள் கல்வி பயன்படுகிறது என்றால் - அவர்கள் படிக்கின்ற கல்வியை வாழ்த்தி வரவேற்கவா முடியும்?

ஓர் உண்மையை எப்படி அவர்களால் மறக்க முடியும்?. தெய்வம் நின்று கொல்லும் என்று தமிழன் சும்மாவா எழுதி வைத்தான்!  ஒரு செல்வந்தனின்  மகன் மேல்மாமாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டானே அப்போது அவன்  அப்பன்  கொள்ளையடித்து சேர்த்த  பணம் அவனைக் காப்பாற்றியதா?

தமிழ்பள்ளிகளுக்குக் கொடுக்கப்பட்ட கோடிக்கணக்கான அரசாங்கப்பணம் என்ன ஆயிற்று என்று ஒருவனும் வாய்த் திறக்கமாட்டேன் என்கிறானே - அவன் பிள்ளைகளுக்கு நோய் வந்தால் அந்தப் பணம் அவர்களைக் காப்பாற்றிட முடியுமா? சாதாரண நோயைக்கூட அசாதாரணமாக ஆக்கிவிடை இறைவனால் முடியாதா?

வீழ்ந்து கிடக்கும் சமுதாயம்  எழுச்சி பெற வேண்டும் என்பதற்காக  எத்தனையோ பேர் தங்கள் சொந்தப் பணத்தைக் கொண்டு இந்தத் தமிழ் இனத்துக்காக உழைக்கிறார்கள். ஆனால் இவர்களோ அரசியலை வைத்துக் கொண்டு - பதவியில் இருந்து கொண்டு - இப்படியெல்லாம் ஏமாற்றிப் பிழைக்கிறார்களே - தெய்வம் பார்த்துக் கொண்டு தான் இருக்கும் என நினைப்போ!

எடுத்ததற்கெல்லாம் சட்டம்! சட்ட நடவடிக்கை! போங்கடா! நீங்களும் உங்கள் அரசியலும்! ஒரு நாள் சட்டையில்லாமல் வீதிக்கு வருவீர்கள்! அது தான் உங்களுக்கு, உங்கள் விதி எழுதிய சட்டம்!


Friday 8 July 2016

காசேதான் கடவுளப்பா...!



"காசேதான் கடவுளப்பா!" என்னும் கவிஞர் வாலியின் பாடலை கொஞ்சம் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். பாவம்! பணம் என்ன என்னப்  பாடுபடுத்துதுகிறது, பாருங்கள்!!

பையன் வயதிற்கு வந்துவிட்டான். திருமணம் செய்ய வேண்டும். நாமே போய் தேடி, பெண்ணைப் பார்த்து  - இதற்கே நிறைய செலவு ஆகும் - அப்புறம் கல்யாணம் என்றால் சொல்லவே வேண்டாம். ஒரு செலவு இல்லாமல் திருமணம் நடைபெற வேண்டும்.

பையன் ஒரு பெண்ணைக் காதல் பண்ணுகிறான் என்று செய்தி கிடைத்தது. பரவாயில்லை! பெண்ணும் சரி, குடும்பமும் சரி, தகுதிற்கு ஏற்ற குடும்பம் தான்.  இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது பையன் தீவிரமாகத்தான் அந்தப் பெண்ணைக் காதிலிக்கிறான்!  நல்ல செய்தி! அது போதும்!

பெற்றோர் பையனிடம் திருமணத்தைப் பற்றி பேசுகிறார்கள். பெண் பார்த்திருக்கிறோம் என்றார்கள். பையன் எனக்கு எந்தப் பெண்ணும் வேண்டாம். நான் பர்த்துவிட்டேன். அந்தப் பெண்ணைத் தவிர வேறு பெண்ணை நான் கல்யாணம் செய்வதாக இல்லை என்று தீர்க்கமாக சொல்லிவிட்டான். அதனைத்தான் அவர்கள் எதிர்பார்த்தார்கள்! பெற்றோர் கொஞ்சம் பிகு பண்ணினார்கள்! நாங்கள் பார்த்த பெண்ணை நீ திருமணம் செய்தால் கல்யாணச் செலவு எங்ககளுடையது.. நீ பார்த்த பெண்ணைத்தான் நீ திருமணம் செய்ய வேண்டுமென்றால் நாங்கள் எந்தச் செலவும் செய்ய மாட்டோம். அது உனது பிரச்சனை! எங்களுக்குத்  தெரியாது என்று கை விரித்து விட்டார்கள்!

பையன் பெண்வீட்டாரிடம் பிரச்சனையைச் சொன்னான். பெண் வீட்டாருக்கு பையன் மேல் நல்ல அபிப்பிராயம் இருந்தது.  அதே சமயத்தில் பையனின்  பெற்றோரின் மீதும் நல்ல எண்ணம் இருந்தது.சரி! கல்யாணச் செலவுகளை நாங்கள் பார்த்துக் கொள்ளுகிறோம் என்று பெண்வீட்டார் செலவுகளை ஏற்றுக் கொண்டனர். இரு வீட்டாரின் 'அனுமதியோடு' திருமணம் சிறப்பாக நடைபெற்றது! பையனின் திருமண 'மொய்' பணத்தை பையனின் பெற்றோர்களே பெருந்தன்மையாக எடுத்துக் கொண்டனர்! இப்போது பையனின் பெற்றோருடனேயே மருமகளும் வாழ்கிறார்!  எந்தப் பிரச்சனையும் இல்லை. அனைத்தும் சுபம்!

ஆனாலும் பணம் பண்ணுகின்ற கூத்தைப் பாருங்கள். மனிதர்களை எப்படியெல்லாம் பேச வைக்கிறது! எப்படியெல்லாம் செயல்பட வைக்கிறது!

அப்போதே கவிஞர் வாலி பாடினார்: காசேதான் கடவுளப்பா,  அந்தக் கடவுளுக்கும் இது தெரியுமப்பா!  என்று.

நமக்கும் தான் தெரிகிறது! என்ன செய்ய? நாமும் சேர்ந்து பாட வேண்டியது தான்! எப்படியோ திருமணம் செய்தவர்கள் நல்லபடியாக  வாழ்வது தான் முக்கியம். நாமும் வாழ்த்துவோம்!

Thursday 7 July 2016

கேள்வி - பதில் (23)


கேள்வி

அரசியல்வாதிகளையும், உலாமாக்களையும் "வாயை மூடுங்கள்" என்று சமூக ஆர்வலர் மரினா மகாதீர் சாடியிருக்கிறாரே!

பதில்

வரவேற்கப்பட வேண்டிய செய்தி. மரினாவின் துணிச்சலுக்கு நமது பாராட்டுக்கள்.  நம்மைப் போன்ற சாதாரணக் குடிமக்கள் இப்படிப் பேசினால்  உடனே "தேச நிந்தனை" என்று சொல்லி நம்மீது பாய்வார்கள்!

மரினா மகாதீர், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீரின் மகள். துணிச்சல் மிக்கவர். உண்மையைச் சொல்லத் தயங்காதவர். அவருடைய தந்தையுடேனேயே பல முறை மோதியிருக்கிறார்!

சமீபத்தில் நடைபெற்ற தீவிரவாதிகளின் குண்டுவீச்சு சம்பவத்தை மிகக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார், மரினா! இதற்குக் காரணமானவர்கள் ஆளும்  மலாய் அரசியல்வாதிகளும் எதிர்கட்சி (பாஸ்)மலாய் அரசியல்வாதிகளும் தான்!  ஆளும் அரசியல்வாதிகள்  ஐ.எஸ். தீவிரவாதிகளை வைத்தே  மக்களைப் பயமுறுத்திக் கொண்டிருந்தார்கள்!  அதே போல எதிர்கட்சி மலாய் அரசியல்வாதிகள் தீவிரவாதிகளை இஸ்லாமைக் காக்க வந்த புனிதர்கள்  போன்று பேசி வந்தார்கள்!  நமது நாட்டில் எந்தக் காலத்திலும் தீவிரவாதம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும் அரசியல்வாதிகளின் தூண்டுதல் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் உலாமாக்கள் மற்ற மதத்தினரை இழிவுபடுத்துவதும் ஐ.எஸ். ஸை ஆதரிப்பது போன்ற நடவடிக்கைகளும் இங்குள்ள மலாய் இளஞர்களை ஊக்குவிப்பதாக அமைந்து விட்டது!  விரோத சக்திகள் அனைத்தும் ஆளும் தரப்பிலிருந்தே உருவாக்கப்பட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

மும்பாயைச்  சேர்ந்த இஸ்லாமிய போதகர் ஸாகிர் நாய்க் போன்றவர்களை நாட்டில் அனுமதிப்பதும் அவர் கலந்து கொள்ளும் கூட்டங்கள் அனைத்திலும் மற்ற மதத்தினரைத் தாக்கிப் பேசுவதும் தீவிரவாதத்தை அதிகரிக்கவே செய்யும். சமீபத்தில் வங்காள தேசத்தில் 20 பிணைக்கைதிகளைக் கொலை செய்த இரண்டு பயங்கரவாதிகள் ஸாகிர் நாய்க்கின் சமூக வலைத்தளத்தைப் பின்பற்றுபவர்கள் என்னும் செய்திகளும் வெளியாகி இருக்கின்றன.

தீவிரவாதிகளின் தாக்குதல் என்பது நமது நாட்டுக்குப் புதிது. எப்படிப் பார்த்தாலும் தீவிரவாதத்தை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது!  மலேசியா ஒரு அமைதியான நாடு. இங்கு தீவிரவாதத்தை வைத்து மக்களின் ஆதரவைப் பெற முடியாது!

மரினா மகாதிர் சொன்ன குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மையே! நாட்டில் அமைதியைக் கொண்டு வருவது அரசாங்கத்தின் கடமை. தீவிரவாதிகளை ஆதரித்து பேசுபவர்களின் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி, மதவாதிகளாக இருந்தாலும் சரி சட்டம் தனது கடமையைச் செய்ய வேண்டும். நாட்டில் தொடர்ந்து அமைதி நிலவ வேண்டும்.

வாழ்க மலேசியா! ஒழிக தீவிரவாதம்!




Wednesday 6 July 2016

பள்ளி உண்டு - மாணவர் இல்லை!


நமது நாட்டில் என்ன நடக்கிறதோ அது போலவே தமிழ் நாட்டிலும் நடப்பது ஆச்சரியம் தரும் செய்தி!

சமீபத்தில்  தமிழக தொலைக் காட்சி ஒன்றின் செய்தினைக் கேட்க நேர்ந்தது. அந்தச் செய்தியில் தமிழகக் கிராமமொன்றில் பள்ளிக்கூடம் போக மாணவர்கள் இல்லை! ஆசிரியர்கள் ஏழு பேர் பள்ளிக்கூடத்திற்குத்  தினசரி  போய் வருகின்றனர். அதுவே செய்தி.

நமது நாட்டில் தமிழ்ப் பள்ளிகளை மூடுவதற்கு என்ன என்ன செய்ய வேண்டுமோ அத்தனை முயற்சிகளும் நடந்து கொண்டிருக்கிறது. தமிழ் நாட்டிலும் ஏறக்குறைய அதே நிலைமை தான்!

சில ஆண்டுகளுக்கு முன் நூறு மாணவர்களைக் கொண்ட அந்தப் பள்ளி இப்போது காலியாகக் கிடக்கிறது. மாணவர்கள் என்ன ஆனார்கள்? இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் அருகிலுள்ள ஆங்கிலப் பள்ளிகளுக்கு மாற்றலாகி விட்டார்கள்!

இதன் பின்னணியைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு தமிழ்ப் பள்ளிகளின் அருகிலேயே ஆங்கிலப் பள்ளிகளைக் கட்டுவது ; கட்டிய பின்னர் தமிழ்ப்பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்களை ஆங்கிலப் பள்ளிகளுக்குத்  திசை திருப்புவது! இதன் பின்னணியில் இருப்பவர்கள் அரசாங்க அதிகாரிகள்!

அப்படி ஆங்கிலப் பள்ளிகளுக்குப் பிள்ளைகள்  அனுப்பப்படுவதில்லை என்றால் அதற்கு வேறு வகையான தண்டனை உண்டு.  தமிழ்ப்பள்ளிகளுக்கான வசதிகளைக் குறைப்பது.  தண்ணிர் வசதி, கழிப்பறை வசதி இன்னும் பல அத்தியாவசியமான வசதிகளைக் குறைத்து பிள்ளைகளை ஆங்கிலப்பள்ளிகளின் பக்கம் திருப்புவது! இந்த நடைமுறையே தொடர்ந்து பல ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

இதிலிருந்து ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழக அரசு தமிழ் மொழி மீது - அதன் வளர்ச்சியில் - எந்தக் கவனமும் செலுத்தவில்லை என்பது நன்கு புலனாகின்றது. ஆங்கிலக் கல்வியின் மூலம் அரசியல்வாதிகள் பயன் அடைகிறார்கள். அதுவே அரசாங்கப் பள்ளிகளாய் இருந்தால் அரசியல்வாதிகளுக்கு எந்த இலாபமும் இல்லை!

தமிழ் மொழி மீது காழ்ப்புணர்ச்சியோடு தமிழரல்லாதார் பலர் செயல்படுகின்றனர். அவர்கள் அனைவருமே தமிழால் வாழ்பவர்கள். தமிழோடு வாழ்பவர்கள். இருந்தும் தமிழருக்கும், தமிழுக்கும் துரோகம் இழைக்கின்றனர்.  முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி காலத்தில் ஏற்பட்ட இந்த மாற்றம் இன்னும் தொடருகிறது!

இந்நாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலத்திலாவது மாற்றம் ஏற்படும் என நம்புவோம்.  இவரின்  தலமையில் பல மாற்றங்கள் இப்போது தமிழகத்தில் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. தமிழுக்கும் ஒரு விடிவு காலம் ஏற்படும் என நாம் நம்புவோம்!

வாழ்க தமிழனம்! வாழ்க தமிழ்!

Tuesday 5 July 2016

ரஜினியின் "கபாலி"........டா....!


ரஜினியின் ஒவ்வொரு படமும் ஏதோ ஒரு வகையில் பெரிய எதிர்ப்பார்ப்புடன் வெளியாகின்ற படங்கள் தான்! அதனை நாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டு தான் வருகிறோம்.

ஆனால் "கபாலி" ரஜினியின் மற்ற அனைத்துப் படங்களையும் மிஞ்சிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.  படத்தின் விளம்பரங்களைப் பார்க்கின்ற போது புதுவித யுக்திகள் கையாளப் பட்டிருக்கின்றன. கைதேர்ந்த ஒரு வர்த்தக நிறுவனம் எப்படியெல்லாம் தங்களது பொருளை விற்பனைச் செய்ய என்னன்ன யுக்திகளைக் கையாளுமோ அதனையெல்லாம் மிஞ்சி விட்டது கபாலி திரைப்படம்.

படம் இன்னும் வெளியாகாத நிலையில், வெற்றி தோல்வி அறியாத நிலையில் படத்தின் விளம்பரங்களோ நாளுக்கு நாள் மாறிக்கொண்டே போகிறது! இன்னும் அதிகரித்துக் கொண்டே போகிறது! இன்னும் எப்படியெல்லாம் மாறும் என்றும் புரியவில்லை!

முதலில் பெங்களுருவிலிருந்து சென்னைக்கு பிரத்தியேக விமானப் பயணம் என்றார்கள்! அதன் பின்னர் "சிட்டி பேங்க்" வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு கபாலி திரைப்படத்தின் புகைப்படங்களை தனது கிரடிட் கார்டுகளில் வெளியிடப்படுவதாக ஒரு செய்தி! வானில் பறக்கும் ஏர் ஏசியா விமானத்தில் கபாலி விளம்பரங்கள் தூள் கிளப்புகின்றன! இந்திய சினிமாவுக்கு இது புதிது! மேலும் கபாலி வெளியீட்டை முன்னிட்டு சென்னையிலிருந்து மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் நாடுகளுக்கு மலிவுக் கட்டணத்தில் ஏர்  ஏசியா விமானப் பயணம்.  புதுச்சேரியில் முதல் நாள் முதல் காட்சி  அரசு அலுவலர்களுக்கு டிக்கெட் வழங்கப்படுமாம்! மொழிமாற்றத்தில் எல்லாத் தமிழ்ப்படங்களையும் மிஞ்சிவிட்டது கபாலி. மலாய் மொழி (மலேசியா, சிங்கப்புர், புருணை,  தாய்லாந்து ) மற்றும் இந்திய மொழிகளான தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்படுகின்றது.

நமது மலேசிய நாட்டைப் பொறுத்தவரையில் பல மலேசிய வீதிகளில் கபாலி பிரமாண்டமான விளம்பரங்களில், இதுவரை உள்நாட்டுப் படங்களுக்குக் கூட,  இது போன்ற விளம்பரங்கள் செய்யப்படவில்லை என்பது குறிப்படத்தக்கது!

இந்த நேரத்தில் ரஜினி ரசிகர்களுக்கு நாம் கொடுக்க வேண்டிய செய்தி ஒன்று தான். கபாலி திரப்படத்தைப் பாருங்கள். ரசியுங்கள். அவ்வளவு தான்.  விளம்பர பதாகைகளுக்கெல்லாம் பாலாபிஷேகம் செய்யாதீர்கள்! அது ரஜினிக்குக் கேடு விளைவிக்கும்!  ஏற்கனவே நீங்கள் செய்த பாவத்தினால் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார். மீண்டும் மீண்டும் அவருக்குத் தொல்லைக் கொடுக்காதீர்கள். அப்படி ஏதாவது நீங்கள் செய்ய வேண்டுமென்றால் அவரது பெயரைச்சொல்லி ஏதாவது ஏழைக் குடும்பங்களுக்கு உதவி செய்யுங்கள். நம்மிடையே இருக்கும் ஏழைகளைக் கொஞ்சம் கவனியுங்கள்

அதுவே நமது செய்தி. ரஜினியின் ....கபாலி......வெற்றி பெறும்! வெற்றிபெற வேண்டும்! வாழ்த்துகள்!.


Monday 4 July 2016

அவர்கள் ஐ.எஸ்.தீவிரவாதிகளே!


பூச்சோங் I.O.I. மொவிடாவில், தாக்குதல் நடத்தியவர்கள் ஐ.எஸ்.தீவிரவாதிகளே என்று (I.G.P.) காவல்துறைத் தலைவர் காலிட் அபு பக்கர் உறுதிப் படுத்தியிருக்கிறார்.

நம் நாட்டில் நடைப்பெற்ற முதல் தீவிரவாதிகளின் தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் நடந்த இது போன்ற சம்பவங்கள் அனைத்தும் தொழிற்போட்டி, பொறாமை என்று காவல்துறையினர் சொல்லி வந்தனர். அது உண்மையாகவும் இருக்கலாம். அதனால் தான் அதனை நாம் ஒரு பெரிய விஷயமாகக் கருதவில்லை.

ஆனால் இந்தச் சம்பவத்தை நாம் அப்படி ஒதுக்கிவிட முடியாது. முதலில் சிறிய அளவில் - ஒரு சோதனை முறையில் - நடத்தப்பட்டிருக்கலாம். இந்தச் சம்பவத்தில் எட்டுப் பேர் காயமடைந்திருக்கின்றனர். பெரிய பாதிப்பு இல்லையென்றாலும் அந்தச் சம்பவத்தில் காயமடைந்த ஓர் இந்தியத் தம்பதியினருக்கு அது ஒரு சாதாரண விஷயமல்ல. அதில் காயமடைந்த ஜெயசீலன் பெரிய பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றார்.  இனி அந்தக் குடும்பத்தின் நிலைமை?

பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும். அது வளர்க்கப்பட எந்தக் காரணத்தைக் கொண்டும் அனுமதிக்கக் கூடாது. மதவாதிகள் - குறிப்பாக இஸ்லாமிய மதவாதிகள் - இதனை ஆதரிப்பதை எக்காரணத்தைக் கொண்டும் காவல்துறையினர் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

மலேசியா எல்லாக் காலங்களிலும் அமைதி மிகுந்த நாடு. பயங்கரவாதம் என்பதெல்லாம் இங்கு எந்தக் காலத்திலும் எடுபட்டதில்லை. ஆனால் காலம் மாறிவிட்டது. மூவினம் கொண்ட நாடு என்பது போய் இப்போது வங்காள தேசிகள், பாக்கிஸ்தானியர், நேப்பாளியர், வியாட்னாமியர், கம்போடியர் என்று பல தேசத்தினர் இங்கு வாழ்கின்றனர். இதிலும் குறிப்பாக வங்காள தேசத்தவரும் பாக்கிஸ்தானியரும் தீவிராதப் பின்னணி உள்ள நாடுகளிலிருந்து வந்தவர்கள்! அதனால் எதுவும் நடக்கலாம்! தீவிரவாதிகளிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு இவர்கள் எந்தத் தாக்குதளையும் செய்யக் கூடியவர்கள்!

தீவிரவாதிகள் வெறும் கேளிக்கை மையங்களைத்தான் குறி வைப்பார்கள் என்று சொல்ல முடியாது. இஸ்லாம் அல்லாத வழிப்பாட்டுத் தலங்கள், சீனர், இந்தியர் கூடிகின்ற இடங்கள் ஆகியவையும் அவர்களின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படலாம்!

நமது நாட்டின் அமைதிக்காகப் பிரார்த்திப்போம்! வாழ்க மலேசியா!

கேள்வி-பதில் (22)



கேள்வி

அம்னோவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் துணைப்பிரதமர் டான்ஸ்ரீ முகைதின் யாசின் பக்கத்தான் ஹராப்பன் கூட்டணியில் இணைவார் என்று கிசுகிசுக்கப்படுகிறதே! சரியாக வருமா?

பதில்

பொதுவாக அரசாங்கப் பதவியில் நீண்ட நாள் இருந்துவிட்டு தீடீரெனத் தூக்கி எறியப்பட்டவர்கள் மீண்டும் தலைத் தூக்குவது சிரமம். முன்னாள் துணைப்பிரதமர் அன்வாரோடு முகைதீனை ஒப்பிட முடியாது. அன்வார் நாடறிந்த நல்ல பேச்சாளர். இஸ்லாமிய இயக்கங்களோடு இணைந்து பணியாற்றியவர். அவருடைய செல்வாக்கு வேறு. முகைதீனோ ஜோகூர் மாநில அளவிலேயே பெயர் பெற்றவர். அதுவும் மேல்மட்டத் தலைவர். கீழ் மட்டத்தில் அவரின் செல்வாக்குப் பெரிதாக ஒன்றும் பேசப்படவில்லை!

முகைதீன் பக்காத்தானில் இணைவதால் மட்டும் எதுவும் தலைகீழாக மாறிவிடப்போவதில்லை! அவரின் இலக்கு பிரதமர் பதவி. அதனை யாரும் தூக்கிக் கொடுத்தால் தான் உண்டு! அதற்கு அவர் உழைக்கத் தயாராக இல்லை!

எனினும் அவர் இன்னும் ஒரு முடிவுக்கும் வரவில்லை.ஓய்வு பெறுவது, பக்காத்தானில் இணைவது அல்லது புதிய கட்சி தொடங்குவது. ஏதோ ஒன்றை அவர் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறார். புதிய கட்சி என்பது அவ்வளவு எளிதல்ல. அது அசாதாரணமான வேலை! அவர் தொடங்கமாட்டார்! வேறு  கட்சிகளில் இணைவது எளிது. ஆனால் பத்தோடு பதினொன்று என்னும் நிலை! பிரமாதமாக சொல்லுவதற்கு ஒன்றுமில்லை! அவர் ஓய்வைத்தான் தேர்ந்தெடுப்பார். ஒய்வுக்குப் பின்னர் ஏதாவது வெளிநாட்டுப் பதவிகளில் குறி வைப்பார்! அதற்குள் பிரச்சனைகள் சரி செய்யப்பட்டுவிடும்!

அரசியலிலிருந்து ஒதுக்கப்பட்டவர்கள் மீண்டும் அரசியல் பதவிகளுக்கு வருவது அப்படி ஒன்றும் எளிதான காரியம் அல்ல. அதுவும் முகைதீன் அம்னோ அரசியல்வாதிகளையே அதிகம் நம்புபவர்! எல்லாம் மேல்மட்ட அரசியல்வாதிகள்! இந்தியர்களையும் சீனர்களையும் கண்டு கொள்ளாதவர்!

அரசியல் ரீதியில் அவருடைய எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று சொல்லுவதற்கில்லை!


Sunday 3 July 2016

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்!


எந்த வல்லவனைப் பற்றி இந்தப் பழமொழி சொல்லப்பட்டது என்று எனக்குத் தெரியாது! ஆனால் எனக்குத் தெரிந்த இரண்டு வல்லவர்களைப் பற்றி இங்கு நான் சொல்லுகிறேன்.

ஒருவர் எனது நண்பர். பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர். கொஞ்சம் வசதி குறைவானவர். அவரது மாமனார் குடும்பம் சுமார் நூறு மைலுக்கு அப்பால் இருந்தார்கள். அங்கு போய் வர வேண்டும் என்றால் அவருக்கு ஒரு நாள் வீணாகிவிடும். வாரத்தில் ஒரு நாள் தான் அவருக்கு விடுமுறை.

அவர் வேலை செய்த இடத்தில் ஒரு கார் அவர் கண்ணில் அகப்பட்டது. ஏறக்குறைய குப்பையில் போட்டுவிட்டார் அதன் உரிமையாளர். அதன் உரிமையாளரிடம் பேசி ஒரு இருநூறு வெள்ளிக்கு அந்தக்காரை வாங்கினார். பழைய சாமான் வாங்குபவர்கள் அவ்வளவு தான் அதனை மதிப்பீடு செய்திருந்தார்கள்! நண்பர் காரை வாங்கியதும் அதற்கு என்ன என்ன பொருள்கள் தேவையோ அவைகளைப் பழைய சாமான்கடைகளுக்குச் சென்று அனைத்தையும் வாங்கினார். ஒரு வாரத்தில் காரை ஓடுகின்ற நிலைமைக்குக் கொண்டு வந்துவிட்டார்! அதன் பின்னர் வாரம் ஒருமுறை மாமனார் வீட்டிற்குப் போய் வந்துவிடுவார்! போகும் போதும் வரும் போதும் இடையில் நிறுத்தி கார் இஞ்சினைச் சுத்தப்படுத்துவார்! அதன் பின்னர் சுகப்பயணமே!

இன்னொரு நண்பர். ஒரு வெள்ளைக்காரன் காலத்துக் கார் வைத்திருந்தார்! அந்தக் காரை யாருக்கும் இயக்கவும் தெரியாது! பழுது அடைந்து விட்டால் அந்தக் காரை இங்கிலாந்துக்கு த் தான் அனுப்ப வேண்டும்! அப்படி ஒரு நிலைமை! அந்தக் காரில் அவர் குடும்பத்தோடு நாடு புராவும் சுற்றி வருவார்! ஒரு பிரச்சனை இல்லை! காரின் உள்ளே இங்கும் அங்குமாக சில டப்பாக்களை வைத்திருப்பார்! ஒவ்வொரு டப்பாவிலும் எதாவது  'சொட் சொட்' என்று எண்ணைய் ஊற்றிக் கொண்டிருக்கும்! கொஞ்சம் தூரம் சென்றதும் அந்த டப்பாக்களைச் சுத்தம் செய்துவிட்டு மீண்டும் பயணம் தொடரும்! அவர் இருக்கும் வரை அந்தக் கார் அவரோடு இருந்தது! அதன் பிறகு அது பழைய சாமான் வாங்குபவர்களிடம் அடைக்கலமாகி விட்டது!

என்னைக் கேட்டால் புல்லையும் ஆயுதமாகப் பயன்படுத்தவர்கள் இவர்கள் தான்! இதற்கெல்லாம் கொஞ்சம் "ஜி.டி.நாயுடு' மூளை வேண்டும். அவ்வளவு தான்!

இந்தத வல்லவர்களைப் பற்றி எழுதக் காரணம் நான்  17 ஆண்டுகளாகப் பயன்படுத்திய எனது புதிய கார் இப்போது குப்பைக் காராக மாறிப்போய் அதனையும் ஓர் இளைஞர் மலிவான விலையில் வாங்கி இப்போது பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்!

நம்மிடையே வல்லவர்களுக்கும் பஞ்சம் இல்லை! புற்களுக்கும் பஞ்சமில்லை!

Friday 1 July 2016

தளரா மனம் வேண்டும்!


வாழ்க்கையில் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் தளரா மனம் வேண்டும்!

நமது வாழ்க்கைப் பாதையில் எத்தனையோ இடையூறுகள்; எத்தனையோ தடங்கள்கள்; எத்தனையோ போராட்டங்கள்!  இவைகளையெல்லாம் தாண்டித் தான் நமது முன்னேற்றத்திற்கான பாதைகளை நாம் அமைத்துக்  கொள்ள வேண்டும். பாதை கரடுமுரடானது தான்! அதனால் என்ன? நாம் பின்வாங்கவா முடியும்! கன்னத்தில் கைவைத்துக் கொண்டு புலம்பிக் கொண்டா இருக்க முடியும்! அடுத்த காரியத்தைக் கவனிக்க வேண்டியது தான்!

எனக்குத் தெரிந்த ஒரு நண்பர். மின்னியல் துறையில் ஈடுபட்டிருப்பவர். எலக்டிரிகள் வேலைகள் செய்வதில் நல்ல திறமைசாலி. பெரும்பாலும் கடைகள், தொழிற்சாலைகளில் குத்தகை எடுத்துச் செய்பவர்.  ஒரு முறை தொழிற்சாலை ஒன்றிலிருந்து அவருக்குப் பெரியதொரு வாய்ப்புக் கிடைத்தது. அதுவரையில் அவ்வளவு பெரிய தொகைக்கு யாரும் அவருக்குக் குத்தகைக் கொடுத்ததில்லை. தன்னிடம் உள்ள பணம் பற்றாமல் வெளியே உள்ளவர்களிடம் கடன் வாங்கி அந்த வேலையை முடித்துக் கொடுத்தார். அவர் சில லட்சங்களை அங்குப்  போட்டிருந்தார். அவருக்குக் கிடைக்க வேண்டிய பணம் கைக்கு வரும் முன்னரே அந்தத் தொழிற்சாலை தீடீரென மூடப்பட்டு விட்டது. நண்பர் இங்கும் அங்கும் ஓடினார். ஒன்றும் ஆகவில்லை! வங்கியில் தனது நிலையை எடுத்துச் சொன்னார். வங்கியில் அவருக்கு நல்லதொரு ஆலோசனைக் கிடைத்தது. அவர் செய்து வருகின்ற வேலைகள் அனைத்தின் பணமும் நேரடியாக வங்கிக்குச் சென்று அங்கிருந்து அவருடைய கடன்காரர்களுக்குச் செலுத்தப்பட்டது. கடன் கட்டி முடிக்கப்பட்டது.

நண்பரிடம் உழைப்பு இருந்தது. நாணயம் இருந்தது.தொழிலைத் தொடர வேண்டும் என்னும் ஆர்வம் இருந்தது. வேறு என்ன தேவை? நண்பர் இன்று நல்ல நிலையில் இருக்கிறார். அவர் மனம் தளரவில்லை! நம்பிக்கை தளரவில்லை. மனம் சோர்ந்து போகவில்லை.

நாம்  ஒவ்வொருவருக்கும் அந்தத் தளரா மனம் வேண்டும். அனைத்தையும் இழந்தாலும் 'நான் அத்தனையையும் மீண்டும் பெறுவேன்' என்னும் நம்பிக்கை வேண்டும்.  இறை நம்பிக்கை.நம்மீதே நமக்கு நம்பிக்கை.இந்த உலகத்தின் மீது நம்பிக்கை. .அனைத்தும் கூடிவர நமக்குத் தளரா மனம் வேண்டும்!

தளரா மனத்துடன் வாழ்வோம்! வெற்றி பெறுவோம்!

அப்பாடா! அடையாள அட்டை கிடைத்தது!



நமது நாட்டில் அடையாள அட்டைக் கிடைப்பது என்பது சாதாராண விஷயம் அல்ல!

இந்த நாட்டிலேயே பிறந்து, வளர்ந்து பேரன், பேர்த்திகள் எடுத்தவர்கள் கூட கடைசிவரை அடையாள அட்டை இல்லாமலேயே பலர் இறந்து போனார்கள்! அந்த அளவுக்குக் கடினமான நடைமுறைகள் நடப்பில் உள்ளன.

இப்போது ஒரு பள்ளி மாணவிக்கு அடையாள அட்டைக் கிடைத்திருப்பது அவருக்கு நல்ல காலம் என்றே தோன்றுகிறது. தனது 12-ம் வயதிலிருந்து முயற்சி செய்து இப்போது தனது 18-வது வயதில் அவருக்கு அடையாள அட்டைக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்போது வெளியான  எஸ்..பி.எம். தேர்வில் 10ஏ க்கள் பெற்றிருப்பதில் அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

அந்த மாணவியின் பெயர் .வோங் நெய் சின். சீனத் தம்பதியினரால் தத்தெடுத்து வளர்க்கப்பட்ட ஒரு இந்தியப் பெண். அவரின் இந்தியப் பெற்றோர்கள் பிறந்த ஒரு மாதத்திலேயே அவர்களிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு போனவர்கள் போனவர்கள்தான்! குழந்தையின் பிறப்பிதழ் இல்லாத நிலையில் பலவித போரட்டங்களுக்குப் பிறகு இப்போது தான் அவர்களுக்கு ஒரு தீர்வு பிறந்திருக்கிறது! வாழ்த்துகள்!

இந்த நேரத்தில் ஒன்றை நினைத்துப் பார்க்கிறேன். தமிழ் நாட்டில் பிறந்து ஒரு மாதத்தில் மலேசியாவுக்குக் கொண்டுவரப்பட்ட ஒரு குழந்தை - அடையாள அட்டைக்காக - எத்தனையோ ஆண்டுகள் முயற்சி செய்தும் கிடைக்கவில்லை.  காரணம் தேசிய மொழியில் தேர்ச்சி பெறவில்லையாம். அந்தப் பெண் பள்ளிப்படிப்பை முடித்து, பல்கலைக்கழகம் போய் பட்டமும் பெற்று வந்துவிட்டார். ஒரு மாதக் குழந்தையாய் எப்போது வந்தாரோ அதிலிரிந்து வெளி நாடுகளுக்கு - ஏன் அருகிலிருக்கும் சிங்கபூருக்குக் கூட - அவரால் போக முடியவில்லை. அதனைக் காரணமாக வைத்து தனக்குக் குடியுரிமை கொடுக்கமாட்டார்களோ என்பதனால் அவர் வெளி நாடுகளுக்குப் போவதைத் தவிர்த்தார். பட்டதாரியானப் பின்னரும் அவருக்கு வேலை கிடைப்பதில் சிக்கல். ஆனாலும் அதன் பின்னர் தனியார் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக அவர் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.  அதன் பின்னரே பல முயற்சிகளுக்குப் பின் அவருக்குக் குடியுரிமைக் கொடுக்கப்பபட்டது எனத் தெரிந்து கொண்டேன்.

குடியுரிமை, அடையாள அட்டை என்பதெல்லாம் இந்தியர்களுக்குச் சாதாரண விஷயமல்ல. அதனால் எச்சரிக்கையாய் இருங்கள்!

வோங் நெய் சின்னுக்கு மீண்டும் நமது வாழ்த்துகள்!