Wednesday 31 March 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி..........! (17)

  கூட்டத்தோடு கும்மாளம் வேண்டாம்!

யாரோ ஒருவர் ஒரு தொழிலைச் செய்கிறார். அவருடைய நல்ல நேரம் உயர்ந்த நிலைக்கு வந்து விட்டார். அது அவருடைய நேரம் என்று சும்மா தள்ளி  விட முடியாது. அவருடைய உழைப்பு அதில் போடப்பட்டிருக்கிறது.  அவர் வகுத்த செயல்திட்டங்கள் அவர் உயர உறுதுணையாக இருந்திருக்கின்றன. இப்படிப் பல காரணங்கள்.

ஆனால் அதைப் பார்த்து ஒருவர் நாமும் அந்த தொழிலுக்குப் போய் பணத்தை அள்ளலாம் என்று போட்டி போட்டால் என்ன ஆகும்? கையில் இருப்பதெல்லாம் ஆகும்! புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொணட கதை எல்லாம் நமக்கு வேண்டாம்!

ஒருவர் ஒரு தொழிலைத் தேர்ந்தெடுக்கும் போது அவர் ஏன் தெர்ந்தெடுத்தார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும். அதற்கு ஒரு காரணம் இருக்கும்.  அந்த தொழில் அவருக்கு ஏற்றத்தைக் கொடுக்கும் என்பது அவருக்குத் தெரியும். ஏதோ ஒன்று அவருக்கு அப்படிச் சொல்லுகிறது.

பலர் பலவிதமான ஆலோசனைகள் கொடுக்கலாம். நல்லெண்ணமாகவும் இருக்கலாம் அல்லது கெட்ட எண்ணத்துடனும் கொடுக்க வாய்ப்புண்டு.  யாரைத் தான் நம்புவதோ என்கிற புலம்பல் வேண்டாம். யாரையும் நம்ப வேண்டாம்.  தக்கவர்களிடம் சென்று அறிவுரைக் கேளுங்கள். ஆலோசனை கேளுங்கள். தீர விசாரியுங்கள். ஆனால் முடிவு என்பது உங்களுடையதாக இருக்கட்டும்.

ஒருவர் தொழிலைத் தேர்ந்தெடுப்பதில்  பல காரணங்கள் உண்டு. பொருளாதாரம் கூட காரணமாக  இருக்கலாம். ஒரு குறிப்பிட்ட தொகைக்குள் தொழிலைச் செய்ய கட்டாயம் இருக்கலாம். அதனால் எந்த காரணமாக இருந்தாலும் சரி நீங்களே முடிவு செய்யுங்கள். தொழிலில் எது நேர்ந்தாலும் சரி யாரையும் குற்றம் சாட்ட முயலாதீர்கள்.

ஒரு தொழிலில் பணம் கொட்டுகிறது என்றால்  அந்த தொழிலையே இன்னொருவர் செய்யும் போது பணம் கொட்டாமல் போகலாம்! அதைத்தான் நாம் சொல்லுகிறோம்.  வெறும் பணம் என்பது நோக்கமாக இருக்கக் கூடாது.

ஒருவர் செய்கின்ற தொழிலில் ஆர்வம், அக்கறை இருக்க வேண்டும். அக்கறை இல்லாத தொழில் நம்மவிட்டு அக்கரைக்குச் சென்று விடும்!

அதைத்தான் உளவியளாளர்கள் உங்களுக்குப் பிடித்ததைச் செய்யுங்கள் என்கிறார்கள். பிடித்ததைச் செய்யும் போது நேரங்காலம் தெரிவதில்லை. எல்லாம் கூடி வரும்.

அதனால்,  அவன் செய்து பணம் சம்பாதித்தான் நாமும் அதையே செய்வோம் என்கிற உங்கள் கிறுக்குத்தனத்தைத் தொழிலில் காட்ட வேண்டாம்! அவரவர் பாதையை அவரவர் தேர்ந்தெடுக்க வேண்டும்!

கும்மாளம் அடிப்பது எளிது! கூத்தும் வேண்டாம்! கும்மாளமும் வேண்டும்! கூடி வாழ்வோம்! கோட்டையைப் பிடிப்போம்!

Monday 29 March 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி.............(16)

 தொழில் உங்களைத் தனித்துக் காட்டும்

   

                                         ஆச்சி மசாலா நிறுவனர் - பத்மசிங் ஐசக்   

 நாம் வேலை செய்வதையே தொழிலாகக் கொண்டு விட்டோம்!

நம்மிடையே ஒரு நாட்டு  வழக்கு உண்டு. கோழி மேய்த்தாலும் கும்பனியில் மேய்க்க வேண்டும் என்பார்கள்! அதாவது அரசாங்கத்து வேலைக்கு ஈடு இணையில்லை என்பது அதன் பொருள். இதற்கு ஒரு விளக்கம் சொல்லுவார்கள். அதைக் கேட்பதற்கு ஒரு கூட்டம்! இப்படியே நம் மீது ஒரு கருத்தைத் திணித்து நம்மை  அதற்கு அடிமையாக்கி விட்டார்கள்.

ஒரு காலக் கட்டத்தில் வெளி நாடுகளுக்குப் போய் தங்களது தொழிலை கடல் வழியாக  அறிமுகப்படுத்தியவர்கள்  தமிழர்கள். அந்த அளவுக்கு தமிழர்களின் வாணிபம் கொடிகட்டிப் பறந்தது. 

இப்போது வெளி நாடுகளுக்குப் போய் தான் நமது பொருள்களை  அறிமுகப்படுத்த வேண்டும் என்கிற நிலையெல்லாம் இல்லை. கணினியை வைத்துக் கொண்டே பல காரியங்களைச் சாதித்து விடலாம்.

தமிழ் நாட்டிலிருந்து என்னன்னவோ பொருள்கள் இங்கு வந்து குவிகின்றன. அதே போல நமது நாட்டிலும் உள்ளூரில் தயாராகும் பொருள்களும் ஏராளம். ஒரு சில பொருள்கள் பிற இனத்தவரிடமும் பிரபலமாக விளங்குகின்றன.

இது விளம்பர உலகம்.  வாய் வழி மூலம் என்பதும் உண்டு. அது தரத்தில் உயர்தரமானவை என்றால் மட்டுமே எடுபடும். விளம்பரம் என்பது மிக விரைவில் மக்களிடம் போய் சேருகின்றன.  வாய்மொழியோ அல்லது விளம்பரமோ எல்லாமே தரத்தின் அடிப்படையில் தான் விற்பனை ஆகின்றன.

எது எப்படியிருந்தாலும் இது வணிக உலகம். மேலே நாம் பார்க்கும் மசாலா "கிங்" என்று போற்றப்படும் பத்மசிங் ஐசக் ஏதோ பணக்கார வம்சத்தில் இருந்து வந்தவர் என்று நாம் நினைத்தால் மிக மிகத் தவறு! சாதாரண ஏழைக் குடும்பம் தான். அடித்துப் பிடித்து தனது வாழ்க்கையை வளமாக்கிக் கொண்டார். எல்லாம் கடின உழைப்பு தான். சும்மா எதுவும் வருவதில்லை. உழைக்க தயாராய் இருந்தால் உலகமே நமது கைக்கு வரும்! இன்று பத்மசிங்  தொழில் உலகில் தமிழகத்தின் அசைக்க முடியாத மனிதராக வலம் வருகிறார். 

எது அவரைத் தனித்துக் காட்டுகிறது? தொழில் உலகம் தான். இன்று அவருடைய பொருள்கள் இந்தியாவில்  மட்டும் அல்ல உலக அளவில் உள்ள இந்தியர்களால் பெரிதும் வரவேற்கப்படுகின்றன.  அவருடைய பொருள்களைத் தெரியாதவர்கள் இல்லை என்கிற அளவுக்குப் பிரபலமாக இருக்கின்றன!

அவர் வெறும் பணத்திற்காகவா மதிக்கப்படுகிறார்? இல்லை! அவருடைய சாதனைகளுக்காக போற்றப்படுகிறார்! ஆமாம்! அது சாதனை தான். குறிப்பிட்ட சில பொருள்களை வைத்துக் கொண்டு அவைகளை இலட்சக்கணக்கில் உலகெங்கும் வினியோகம் செய்வது சாதனை தானே!

யாரால் இந்த சாதனைகளைச் செய்ய முடியும்? ஒரு தொழிலதிபரால் தான் செய்ய முடியும்!

தொழிலில் உங்கள் சாதனைகளைக் காட்டுங்கள்! தனித்து நில்லுங்கள்!


Sunday 28 March 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி..........! (15)

 எல்லாவற்றையும் அனுபவமாக எடுத்துக் கொள்ளுங்கள்

நமது இளைஞர்கள் பலர் தொழில் பயிற்சிக் கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும் போது "ப்ரேக்டிகல்" பயிற்சிக்காக பல நிறுவனங்களுக்கு வந்து சேருகின்றனர். இதில் ஒரு சில இளைஞர்கள் திறமைசாலிகளாக இருக்கின்றனர். பல இளைஞர்கள் ஏதோ பொழுதை போக்குவதற்காக வருபவர்கள்.

நமது இளைஞர்கள் பலர் திறமைசாலிகள்  என்பதில் ஐயமில்லை. ஒரு சிலர் தான் அக்கறையற்றவர்களாக இருக்கின்றனர்,

நமது இந்திய மாணவர்கள்,  உண்மையைச் சொன்னால்,  பன்முகத் திறமைகளைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். ஒரே வருத்தம் அவர்களது திறமையை வைத்து அவர்களால் தங்களது வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக் கொள்ள தவறுகின்றனர்.

பயிற்சி பெற எந்த நிறுவனத்திற்குச் சென்றாலும் சரி மாணவர்கள் பயிற்சியில் முழுமனதோடு தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். பயிற்சி என்பது சாதாரண விஷயம் அல்ல. பயிற்சி உங்களுக்கு நல்லதொரு அனுபவத்தைக் கொடுக்கிறது. வெளி உலகம் எப்படி இருக்கிறது என்பதை உங்களுக்கு உணர்த்துகிறது. என்ன தான் கல்லூரிகளில் படித்தாலும் அது அனுபவத்தைக் கொண்டு வராது. அதற்கு நீங்கள் நிறுவனங்களுக்குச் சென்று தான் பயிற்சி பெற வேண்டும். பயிற்சிகளின் மூலம் தான்  ஒரு சில அனுபவங்களைப் பெற முடியும்.

நாம் மாணவர்களுக்குச் சொல்ல வருவதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும் பயிற்சிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்.  நீங்க ஒரு வேலையில் சேரும் போது அந்த பயிற்சி உங்களுக்குக்  கை கொடுக்கும். பொதுவாக எங்கள் நிறுவனத்தில் எங்களிடம் பயிற்சி பெற்றவர்களையே நாங்கள் வேலைக்கு எடுக்கும் பழக்கம் உண்டு. ஒரு மாணவர் பயிற்சி பெறும் போது  அப்பொழுதே அவருடைய  குணாதிசயங்களைப் படித்து விட முடியும்.

புதிதாக ஒருவரைத் தங்கள் நிறுவனத்தில் எடுப்பதை விட தங்களிடம் பயிற்சி பெற்ற ஒருவரையே நிறுவனங்கள் விரும்புகின்றன. காரணம் அவர்களுக்கு ஏறக்குறைய  அந்த நிறுவனங்களைப் பற்றிய தேவைகளைத்  தெரிந்திருக்கும்.

ஒன்றைக் குறிப்பிட வேண்டும். பயிற்சிக்கு வரும் சீன மாணவர்கள் நூறு விழுக்காடு தங்களது ஒத்துழைப்பைக் கொடுக்கின்றனர். இந்திய மாணவர்களும் சரி, மலாய் மாணவர்களும் சரி ஐம்பது விழுக்காட்டினர் தான் நூறு விழுக்காடு ஒத்துழைப்பைக் கொடுக்கின்றனர்.

எல்லாமே  அனுபவம் தான். அனுபவம் இல்லதவர்களை  நிறுவனங்கள்  ஏற்பதில்லை.  அதனால் நிறுவனங்களில் கிடைக்கின்ற பயிற்சியைச் சரிவர பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அனுபவத்தை விட சரியான ஆசான் யாருமில்லை!


Saturday 27 March 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி...........! (14)

 புத்தகங்களிலும் அனுபவங்கள் கிடைக்கும்

புத்தகங்கள் படிப்பதின் மூலமும் நாம் அனுபவத்தைத் தேடிக் கொள்ளலாம். குறிப்பாக தொழில் அதிபர்களின் வாழ்க்கையைப் படிப்பதால்  நல்லதொரு அனுபவம் கிடைக்கும்.

வாழ்க்கையில் முன்னேறியவர்கள், குறிப்பாக வியாபாரத் துறையில் முன்னேறியவர்களின்  புத்தகங்கள் உங்களுக்கு நல்ல பயன் அளிக்கும்.

அவர்கள் தங்களின் அனுபவங்களை நமக்குக் கொட்டிக் கொடுத்திருக்கிறார்கள்.  நாம் எதிர்பார்க்காத அனுபவங்களை எல்லாம் அவர்கள் பெற்றிருக்கிறார்கள். தொழில்களில் படு வீழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். படு மேன்மையும் அடைந்திருக்கிறார்கள்.

அடுத்து என்ன என்று தான் அவர்கள் சிந்தித்தார்களே தவிர தொழிலை விட்டு  ஓடிவிட வேண்டும் என்கிற சிந்தனை அவர்களுக்கு ஏற்பட்டதே இல்லை! எங்கே தவறு செய்தோம் என்பதைத்  தீவிரமாக ஆராய்ந்தறிந்து அந்த தவறுகள் மீண்டும் நிகழாமல் இருக்க உறுதி செய்து கொண்டு  மீண்டும் களத்தில் இறங்கினார்கள்.

வெற்றி பெற்ற இந்த தோல்வியாளர்கள் அனைவருமே வெற்றி ஒன்றே தங்களது இலட்சியமாக நினைத்து இயங்கினார்கள். தோல்வி என்பது தற்காலிகம் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்! பதினெட்டு தொழில்களில் தோல்வியடைந்த ஒருவர் தனது பத்தொன்பதாவது தொழிலான ஒரு விற்பனையாளனாக மாபெரும் வெற்றி பெற்றார். வெற்றியாளனாக வலம் வந்த ஒருவர் அனைத்தையும் இழந்து ஓட்டாண்டியாக காலையில் கண் விழிக்கிறார். நாளிதழைப் பார்க்கிறார். வங்கிகளின் வேலை நிறுத்தம்!  அது போதும் துள்ளி எழுகிறார். அந்த ஒரு நாளில்  பேச்சு வார்த்தைகளை மீண்டும்  நடத்தி சரிந்து போன தனது தொழிலைத்  தூக்கி நிறுத்துகிறார்!

இதெல்லாம் வெற்றியாளர்கள்  மூலம் நமக்குக் கிடைக்கும் செய்திகள். அவர்களின் வாழ்க்கையை நீங்கள் படித்தால் தோல்வி என்பது தற்காலிகம் என்பதை உணர்வீர்கள். எனக்கு இந்த புத்தகங்கள் மிகுந்த உந்துதல்களைக் கொடுத்தன. தொழிலில் நீடிக்க வைத்தன.

நாம் வாழ்க்கையில் ஒவ்வொன்றையும் நல்லது கெட்டது அனைத்தையும் அனுபவித்துத் தான் நாம்  முன்னேற வேண்டுமென்றால் அது ஏற்புடையது அல்ல. மற்றவர்களுடைய அனுபவங்களை நம்முடைய அனுபவங்களாக எடுத்துக் கொண்டு - அதனை ஒரு படிப்பினையாக எடுத்து கொண்டு - முன்னேற முயற்சி செய்தல் அவசியம்.

கோடிசுவரரான ஒரு தொழில் அதிபர் தான் செய்து வரும் தொழிலில் அவர் தனது பொருள்களைச் சில்லறை வணிகர்களுக்குக்  கடன் கொடுத்தது இல்லை என்கிறார். அதனால் அவருடைய தொழிலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது அவரின் அனுபவம்.  நமக்கும் அது பொருந்தும். வீட்டுத் தளவாடப் பொருள்களை விற்பனை செய்யும் இங்குள்ள பாக்கிஸ்தானிய  வணிகர்கள் நூறு வெள்ளி பொருளை மூன்று மாத தவணையில் நூற்று  முப்பது வெள்ளிக்கு விற்கின்றனர். இது ஒரு வியாபார தந்திரம். இதெல்லாம் நமக்கும்  அனுபவங்கள்.

அனுபவங்கள் நம்மைச் சுற்றியும் கிடைக்கும். புத்தகங்களிலும் கிடைக்கும். புத்தகங்களில் பெரிய பெரிய கோடிசுவரர்களின் அனுபவங்கள் மிகத் தாராளமாக கிடைக்கும்! அவர்கள் வணிகர்கள் மட்டும் அல்ல. வணிக அறிஞர்கள் என்று கொள்ளலாம்!


Friday 26 March 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி...........! (13)

அனுபவத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்

தொழிலில் இறங்கவேண்டும் என்பவர்கள் ஒரளவாவது அனுபவத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.   சமயங்களில் இது சாத்தியம் இல்லாமல் இருக்கலாம். காரணம் வேலை செய்து கொண்டிருப்பவர்கள் தங்களது ஆர்வத்தின் காரணமாக திடீரென்று தொழிலில் இறங்க வேண்டிய சூழல் உருவாகி இருக்கலாம். அவர்களுக்கு தொழிலில் எந்த அனுபவமும் இல்லை. இவர்கள் என்ன செய்யலாம்?

எனக்குத் தெரிந்தவரை நீங்கள் ஈடுபடப் போகும் தொழிலில் அனுபவம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் வேறு வகையான அனுபவங்கள் பெற வாய்ப்புண்டு. அதனையும் ஒரு அனுபவமாக எடுத்துக் கொள்ளலாம். அதாவது ஒன்றுமே தெரியாமல் கால் வைப்பதை விட  இந்த அனுபவம் உங்களுக்குக்  கைக்கொடுக்க வாய்ப்புண்டு.

அதாவது நேரடித் தொழில்களைத் தான் சொல்லுகிறேன். Insurance,  Amway, Avon, Tupperware இப்படி இன்னும் பல நேரடித் தொழில்கள் நாட்டில் உள்ளன. இந்தியர்கள் நடத்தும் பல தொழில்களும் உள்ளன. துணிமணிகள், மருந்து பொருள்கள் போன்றவை. கார் நிறுவனங்கள் அவர்களுடைய கார்களை விற்பதற்கும் விற்பனையாளர்கள் தேவைப்படுகின்றனர். இது போன்ற நேரடித் தொழில்கள் உங்களுக்குப் பயிற்சிகள் கொடுக்கும். மக்களிடம் எப்படிப் பேசுவது, அணுகுவது அனைத்தும் உங்களுக்குக் கிடைக்கும்.

ஒன்றுமே தெரியாதவர்களுக்கு இது போன்ற தொழில்களில் அனுபவங்கள் கிடைக்கும் முதலீடும் கிடைக்கும். நமது நாட்டின் பிரபல கோடிசுவரர் டான்ஸ்ரீ வின்சன் டான் தெரியாதவர் யாருமில்லை. தனது ஆரம்பக் கல்வியை முடித்த பின்னர் முதலில் காப்புறுதி தொழிலில் தான் ஈடுபட்டார். கையில் பணம் இல்லை.  பணம் தேவைப்பட்டது. அதனால் காப்புறுதி தொழில்.  அங்கு சம்பாதித்ததை வைத்துத் தான்  அவருடைய அனைத்துத் தொழில்களும் ஆரம்பமாயின. அவருக்குக் கிடைக்க வேண்டிய  ஆரம்பகால அனுபவங்களை இந்த காப்புறுதி நிறுவனம் அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.

ஒரு அனுபவமும் இல்லாமல் மொட்டையாக நிற்பதை விட இப்படி முயற்சி செய்து அனுபவங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். பணமும் கிடைக்கும். அனுபவமும் கிடைக்கும்.

எனக்குத் தெரிந்த இளைஞர் ஒருவர்  பழைய கார்கள் விற்கும் ஒரு நிறுவனத்தில் விற்பனையாளராக இருந்தார். சில ஆண்டுகளுக்குப் பின்னர் தொழிலின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொண்டார் அதன் பின்னர் தானே அந்த கார் தொழிலில் ஈடுபட்டு சொந்த நிறுவனத்தை அமைத்துக் கொண்டார்.

அனுபவம் என்பது என்ன? மக்களுடன் பழகுவது தான்  பெரிய அனுபவம். வெற்றி தோல்வி என்பதெல்லாம் நம்முடைய மனிதத் தொடர்புகள் மூலம் தான் கிடைக்கின்றன.

அனுபவத்தைத் தேடுங்கள். அதனை உங்களின் உரிமை ஆக்கிக் கொள்ளுங்கள்.


Thursday 25 March 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி...........! (12)

 மேடும் பள்ளமும் இருப்பதுதான் தொழில்

தொழில் என்றால் என்ன?  வேலை செய்தால்,  மாதம் முடிந்ததும்  சம்பளம். தொழில் செய்தால் ஒரு நாள் இருக்கும், ஒரு நாள் இருக்காது. அது தான் தொழில்.

எதுவும் சீராக நடைமுறையில் இருக்காது.  ஆனால் ஒவ்வொரு நாளும் இவ்வளவு தான் என்கிற ஒரு மதிப்பீடு நமக்கு இருக்கும்.  அது வந்தாலே நமக்கு ஒரு திருப்தி வந்துவிடும்.

ஆனால் தொழிலில் எந்த நேரத்தில் எது வெடிக்கும் என்பதை நம்மால் ஊகிக்க முடியாது.

இப்போது,  இந்த கோவிட்-19  தொற்று காலத்தில்,  நாம் அணியும் முகக்கவசம் பற்றி எந்தக் காலத்திலாவது யோசித்திருப்போமா? அது பற்றி கவலைப்  பட்டிருப்போமா? ஏன்,  அப்படி ஒரு தொழிலாவது இருக்கிறது என்றாவது நினைத்துப் பார்த்திருப்போமா? ஏதோ டாக்டர்கள் பயன்படுத்துகிறார்கள், சோதனைக் கூடங்களில் பயன்படுத்துகிறார்கள் - அவ்வளவு தான் நமக்குத் தெரியும். தெரிந்திருந்தால் கூட அதை ஒரு எத்தனை நுட்பமான  தொழில் என்பதாகக் கூட நமது மண்டையில் ஏறியிருக்காது!

ஆனால் இப்போது இந்த தொற்று நோயின் காலக்கட்டத்தில் அதே முகக்கவசத்தின் நிலை என்ன தெரியுமா? முகக்கவசம் தயாரிக்கும் நிறுவனங்கள் தான் இன்று உலகில் மிகப்பெரிய பணக்காரர்கள். முன்பு ஆடி அசைந்து போய்க் கொண்டிருந்த அந்த தொழிலின் இன்றைய நிலை யாருமே எதிர்பார்க்கவில்லை. உலக பணக்காரர்கள் வரிசையில் அவர்கள் இன்று உயர்ந்திருக்கிறார்கள்!  இன்னும் அவர்களின் முகக்கவச தயாரிப்பு நின்றபாடில்லை! தொடர்ந்து கொண்டே இருக்கிறது.  இப்போதைக்கு நிற்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை! இன்று தயாரிப்பில்  அவை  தான் உலகில் மிக மிக வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்கள்.

எல்லாத் தொழில்களும் அப்படித்தான். எந்த முன்னேற்றத்தையும் கண்டிராத ஒரு தொழில் எந்த முன்னறிவுப்பும் இன்றி நம்மைத் திணறடிக்கும்!  மீண்டும் ஒரு சான்று. நம் நாட்டில்  பள்ளிகளில் இயங்களை வகுப்புகள் என்றதும் என்ன ஆயிற்று? இதனை யாரும் எதிர்பார்க்கவில்லை.  தூங்கிக் கிடந்த கணினி நிறுவனங்கள் விழித்துக் கொண்டன. நீங்களே பார்த்திருப்பீர்கள். பெற்றோர்கள் கணினிகளை வாங்க என்ன பாடுபட்டார்கள் என்று. இப்போதும் அந்த அலை ஓயவில்லை! புதிதாகவும் கணினி நிறுவனங்கள் ஆங்காங்கே  திறக்கப்படுகின்றன.

தொழில் என்றால் இப்படித்தான். ஏற்றம் இறக்கம்  என்பதெல்லாம் சாதாரணம்! ஒரு தொழிலில் ஈடுபட்டிருக்கும் போது தீடீரென ஏதாவது ஒரு சுனாமி வரும்! சமயங்களில் நல்லதாகவும் இருக்கும்! கெடுதலாகவும் இருக்கும்!

இப்படியெல்லாம் நடக்கும் என்பது தான் தொழில். பொறுமை பொன்னை அள்ளித்தரும்! சந்தேகமில்லை!


Wednesday 24 March 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி.........! (11)

 


துணிச்சலோடு செயல்படுங்கள்

தொழில் என்றாலே சாதுரியம், துணிச்சல், சமயோசித புத்தி  இப்படி சில குணாதிசயங்கள் உண்டு.

முதலில் தலையாயது தொழிலுக்கு வந்த பிறகு "போய் வேலை ஏதாவது செய்வோம்!" என்கிற எண்ணத்தை முற்றிலுமாக  மறந்து விடுங்கள். அப்படி ஒரு மனநிலை உங்களுக்கு இருந்தால் நீங்கள் தொழில் செய்ய இலாயக்கில்லாதவர்! ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலும் எதற்கும்  உதவாது!    

                                                                                                                                             சிலநேரங்களில் நமது பொருட்களை மூன்று மாத தவணையில்  கொள்முதல் செய்வோம். பணம் கட்ட முடியாத சூழ்நிலை. கையைப் பிசைந்து கொண்டு இருப்போம். என்ன செய்வது? ஒன்றும் புரியாது!

நான் என்ன செய்தேன்? வாரா வாரம் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டிக் கொண்டு வருவேன். இடையிடையே தேவையான பொருட்களையும் வாங்கிக் கொள்வேன். பணம் அவருக்குத் தொடர்ச்சியாகப் போய்க் கொண்டிருக்கும். அதனால் அவரும் அலட்டிக் கொள்ள மாட்டார்.  நான் "இண்டா வாட்டர்" (Indah Water) நிறுவனத்திற்கு இரண்டாயிரம் வெள்ளி கட்ட வேண்டியிருந்தது. என்ன செய்தேன்?  வாரா வாரம் பத்து வெள்ளி அனுப்பி பிரச்சனையை  சரி செய்தேன்! மாதா மாதம் டி.என்.பி.யின் மின்சார கட்டணத்தைக் கட்ட வேண்டும். அதனை மாத ஆரம்பத்தில் பாதியும்  மாத முடிவில் பாதியும்  கட்டுவேன். நான் வாங்கிய கடனைப் பல ஆண்டுகளாகக்  கட்ட முடியவில்லை. அதனால் கடிதம் எழுதி அவர்களின் அனுமதி பெற்று மூன்று ஆண்டுகளில் கட்டி முடிக்க அனுமதி பெற்று அதன் படி கட்டி முடித்தேன்.

தொழில் செய்பவர்களுக்கு இப்படியெல்லாம் வரத்தான் செய்யும். நான் ஓடுவதற்குத் தயாராக இல்லை. எதிர்த்து நின்றேன். அவ்வளவு தான்! தொழில் செய்பவர்கள் இதையெல்லாம் தாண்டித் தான் வர வேண்டும். ஒன்று மட்டும் நிச்சயம்.  நம்மிடம் நேர்மை இருக்க வேண்டும். நான் யாரிடமிருந்தும் தப்பிக்க நினைத்ததில்லை.

நாம் தொழிலை ஆரம்பித்ததும் கொட்டோ கொட்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது.  தொழில் என்றவுடன்  மூன்று நான்கு மாதத்தில் பணத்தைக் குவித்து விடலாம் என்று நினைப்பவர்களும் உண்டு. இவர்கள் ஏதோ ஒரு திட்டத்தோடு வருபவர்கள். "பார்ப்போம்! முடியவில்லை என்றால் மீண்டும் வேலைக்குப் போய் விடுவோம்!". இந்த மனப்பான்மை உங்களைத் தொழிலில் வெற்றியைக் கொண்டு வராது.

தொழில் என்றாலே துணிச்சல் தான். பிரச்சனைகளைச் சமாளிக்கும் திறன் தான். பெரிய அளவில் வங்கிக் கடன்களை வாங்கி பெரிய அளவில் தொழில் செய்கிறார்களே அதெல்லாம் எப்படி முடிகிறது?  எல்லாம் ஒரு நம்பிக்கை தான். அசாதாரண துணிச்சல் தான்.

ஆனால் கடனே வாங்காமல் தங்களைப் பெரிய அளவில் தங்களை  வளர்த்துக் கொண்டவர்களும் உண்டு. அதற்கு எனது நண்பரே சாட்சி. தனது முதல் கடையில் வந்த வருமானத்தை வைத்தே நான்குக் கடைகளை வாங்கிப் போட்டார். ஒரு கடையை வாடகைக்கு விட்டார். மற்ற கடைகள் அவரது பிள்ளைகள் நடத்துகிறார்கள். அது அசாதாரண துணிச்சல் தானே. கடைசி காலம் வரை ஒரு மோட்டார் சைக்கிளைத்தான் பயன்படுத்தி வந்தார்! அவருக்கு அது போதும்!

துணிச்சலோடு செயல்படுங்கள். தொழில் என்றால் இன்னும் அதிகமான துணிச்சலோடு செயல்படுங்கள். வெற்றி தானாக வரும்!

Tuesday 23 March 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி.........! (10)

 தொழிலில் தோல்வி  என்பதே இல்லையா?

தொழிலில் தோல்வி என்பது இல்லையா? அப்படி சொல்ல முடியாது. அதுவும் தொழிலில் இறங்கும் முதல் தலைமுறையினர் தோல்வியைச் சந்தித்துத் தான் ஆக வேண்டும்.

இது உங்களுக்கு மட்டும் அல்ல. அனைவருக்கும் பொருந்தும். அதுவும் முதல் தலைமுறை வணிகர்களுக்கு இது மிகவும் பொருந்தும்.  நான் தோல்வியே அடையவில்லை என்று சொல்லக்கூடிய துணிச்சல் யாருக்கும் இல்லை.

ஆனால் இவர்களைத் தோல்வியாளர்கள் என்று சொன்னாலும் அவர்கள் தங்களைத்  தோல்வியாளர்களாக  ஏற்றுகொள்ளவில்லை என்பதைத்   தான் இங்கு நான் குறிப்பிட வேண்டும்.  தோல்விகளை எப்படி சரிசெய்வது என்பதில் தான் கவனம் செலுத்தினார்களே தவிர தொழிலை விட்டு ஓடிவிட வேண்டும் என்று அந்த நேரத்திலும் அவர்கள் யோசிக்கவில்லை. அதனால் தான் செட்டியார்களும், தமிழ் முஸ்லிம்களும், குஜாராத்தியர்களும் தொழிலில் கொடிகட்டிப் பறக்கிறார்கள். ஓடுகின்ற எண்ணமே அவர்கள் மனதில் ஏற்படுவதில்லை.

எனக்கு அறிமுகமான முஸ்லிம் நண்பர் ஒருவர் ஒரு மளிகைக்கடை நடத்தி வந்தார். அது ஒரு பாதிக் கடை. தொழில் பிரமாதம் என்று சொல்லுவதற்கில்லை. ஆனால் தொழில் நடந்தது. சமயங்களில் நேரடியாகவே  பொருள்களைக் கொண்டு போய் கொடுப்பார். அந்த கடைக்கு வாடகை. வீட்டுக்கு வாடகை. பிள்ளைகள் படித்துக் கொண்டிருந்தனர். பிள்ளைகளின் கூட்டாளிகளும் வந்து பொருள்களை வாங்குவார்கள். அவருடைய மகள் கடைக்காக வாய் மூலம் தனது பள்ளி நண்பர்களுக்கு  விளம்பரம் கொடுப்பார். தொழில் நடந்து கொண்டு தான் இருந்தது.  அவர் ஓடவில்லை. ஒளியவில்லை. அவருடைய மகள் வேலைக்குப் போனார். அவர் மூலம் கடைக்கு வியாபார  கடன் உதவி  கிடைத்தது. கடையைப் பெரிய அளவில் விரிவு படுத்திக் கொண்டார். நாம் துணிந்து நின்றால் தடைகளைத் தகர்த்தெறியலாம் என்பது தான் இதன் செய்தி. குறைவான வருமானமாக இருந்தாலும் தொழிலைப் பாதியிலேயே நிறுத்தி விடாதீர்கள்.  தொடருங்கள் என்பதுதான் முக்கிய செய்தி. தொடரும் போது தக்க நேரத்தில் தக்க உதவிகள் வந்து சேரும் என்பது தான் விதி.

சீனர்களைப் பற்றி நாம் நிறையவே பேசுகிறோம்.ஆனால் அவர்கள் எத்தகையப் பொருளாதாரக்  கொள்கைகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மறந்து விடுகிறோம். அவர்கள் தொழிலைச் செய்கிறார்கள். நட்டம் அடைந்தாலோ அல்லது தொழிலை விரிவுபடுத்த வேண்டுமென்றாலோ வங்கிகளை நாடுகிறார்கள். வங்கிகள் உதவுகின்றன.  வங்கிகள் சீனர்களுக்குத் தான் உதவுகின்றன இந்தியர்களுக்கு உதவுவதில்லை என்கிற குற்றச்சாட்டு நம்மிடையே உண்டு. அது தவறு.

சீனர்களுக்குத் தொழில் தான் நிரந்திர வயிற்றுப்பிழைப்பு. அதனால் வங்கியில் வாங்கிய கடனை அடைப்பதை முதல் கடமையாக நினைக்கின்றனர். நாமோ தொழிலில் நட்டம் என்றால் தொழிலை மூடிவிட்டு தப்பிக்க நினைக்கிறோம்!  பெரும்பாலான இந்தியர்கள் நிலை இது. தொழிலுக்கு நாம் இரண்டாவது இடத்தைக் கொடுக்கிறோம். சீனர்கள் முதலிடத்தைக் கொடுக்கிறார்கள். அதனால் வங்கிகளும் சீனர்களுக்கு முதலிடத்தைக் கொடுக்கின்றன.

தொழிலில் தோல்வி வரும். அடுத்து வெற்றி வரும். தோல்விக்கு அடுத்து வெற்றி தானே! துணிவு தான் முக்கியம். எல்லாம் சரியாகும் என்கிற மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்!

தொழில் செய்ய வருகிறோம். எதற்கு வருகிறோம். நமது பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்பது தான் முதல் நோக்கம். அதில் ஏற்றம் இறக்கம் இருக்கத்தான் செய்யும். வெற்றி தோல்வி வரத்தான் செய்யும். ஏன் தோல்விக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?  வெற்றி வரும் என்று நினைத்து செயல்படுவோமே!

    

Monday 22 March 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி..........! (9)

 தொழில் உங்கள் மதிப்பை உயர்த்தும்


தொழில் செய்வது என்பது உங்கள் மதிப்பை உயர்த்தும். சமுதாயத்தில் நீங்கள் தனித்து நிற்பீர்கள்.

வேலை செய்தே பிழைப்பு நடத்தும் ஒரு சமுதாயத்தில் ஒருவர் தொழில் செய்கிறார் என்றால் அவரைத் தட்டிக் கொடுத்து வாழ்த்த வேண்டும். "முதலாளி" என்று அழைத்துப் பெருமைப்படுத்த வேண்டும்.

ஆனால் நமக்கு அந்த மனமில்லை. வாழ்த்தவும் மனமில்லை பெருமைப்படுத்தவும் மனமில்லை! அத்தோடு அவரிடம் பொருள்களை வாங்கவும் மனமில்லை. எங்கே அவன் பணக்காரான் ஆகிவிடுவானோ என்கிற பொறாமை நமக்கு நிறையவே உண்டு. ஆனால் இப்போது அந்த  நிலை மாறி வருகிறது என்பதற்காக பெருமைப்படலாம். காரணம் இப்போது அதிகமான இளைஞர்கள் தொழிலில் ஈடுபட வேண்டும் என்கிற நோக்கத்தில் உள்ளனர். அதனால் ஒருவருக்கொருவர் ஆதரவு கரம் நீட்டுவதைக்  கடமையாகக் கருதுகின்றனர்.

தொழில் என்று வந்துவிட்ட பிறகு  திரும்பிப் பார்க்காதீர்கள். ஆயிரத்தைக் கொட்டிக் கொடுத்தாலும் மீண்டும் பழைய நிலைக்குப் போவதை யோசிக்கவே யோசிக்காதீர்கள்.

தொழிலை ஆரம்பித்துவிட்டால் நீங்கள் முதலாளி என்பதை மறந்து விடாதீர்கள். முதலாளி என்று நினைக்கும் போது உள்ள பெருமை வேறு எதிலும் இல்லை.

தொழில் செய்பவர்களைச் சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். அவர்களுக்கு உள்ள தன்னம்பிக்கை வேறு யாரிடமும் இல்லை. அவர்களிடம் உள்ள சுதந்திரமான போக்கு மற்றவர்களிடம் இருப்பதில்லை.

பலகாரங்கள் விற்பனை செய்யும் ஒரு வியாபாரியை எனக்குத் தெரியும். வடை, உருண்டை,  அதிரசம், பக்கோடா - இது தான் அவர் வியாபாரம். எல்லா இனத்தவருமே அவருடைய வாடிக்கையாளர்கள். அவருக்குச் சொந்த வீடு, கார், பிள்ளைகள் கல்லூரி படிப்பு,  அனைத்தும் நம்மைப் போலவே,   அனைத்தையும் அவர் நிறைவேற்றி விட்டார்.  அந்த தொழிலில் அவருக்கு எந்த குறையும் இல்லை. அவர் கல்வியறிவு உடையவராக  இருந்திருந்தால் அவர் அதனை ஏற்றுமதிக்கும் தயார் பண்ணியிருப்பார்!

அவருக்கு இருக்கும் அந்த துணிவை நான் பாராட்டுகிறேன்.வேலை செய்பவர்கள் போல் தான் அவரும்  அந்த தொழிலைச் செய்கிறார். அவர் தொழிலில்  அவருக்கு எந்த அழுத்தமும் இல்லை. யாரும் எந்த அழுத்தமும் கொடுப்பதில்லை. யாருக்கும் எந்த பதிலும் சொல்ல வேண்டிய அவசியமில்லை.அவரிடம் ஒரே கொள்கை தான். தொழிலைச் சரியாகச் செய்ய வேண்டும். செய்யும் தொழிலே தெய்வம். அவ்வளவு தான்.

தொழில் உங்கள் மதிப்பை உயர்த்தும். உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும். உங்கள் குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும்.

உயர்த்தும்! உயர்த்தும்! உயர்த்தும்! நம்புங்கள்!


எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி..........! (8)

 நமது தொழிலில் நீட்சி தேவை


நம்முடைய குறைபாடுகள் அனைத்தும் நாம் ஒர் தொழிலைச் செய்கிறோம். நம்மோடு அந்த தொழிலை முடித்துக் கொள்ளுகிறோம். இது நமது பெரிய குறைபாடு.

நாம் தொழிலைத் தொடங்கும் போதே ஒரு நீண்ட காலத் திட்டத்தோடு தொழிலைத் தொடங்க வேண்டும். இன்னும் நூறு ஆண்டு காலமாவது இந்த தொழில் நீடீக்க வேண்டும் என்கிற கொள்கையோடு திட்டத்தை வகுத்துக் கொண்டு செயல்பட வேண்டும்.

தொழிலில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும். எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும் தோல்வியைச் சந்தித்துத் தான் ஆக வேண்டும். அதனையெல்லாம் தற்காலிகம் என்று எடுத்துக் கொண்டு நாம் முன்னேற வேண்டும். 

சீன வணிகர்கள் தோல்வியே அடைவதில்லையா?  அவர்களுக்கும் அந்த பிரச்சனை உண்டு. ஆனால் அது பற்றி கவலைப்படாமல் எப்படிப் பிரச்சனையைத் தீர்க்க முடியும் என்பதிலே அவர்கள்  கவனம் செலுத்துகிறார்கள். நாமோ "போய் வேலை செய்யலாமா!" என்று யோசிக்க ஆரம்பிக்கிறோம்! நமது புத்தி வேலை செய்வதிலேயே குறியாய் இருக்கிறது!

நாம் செய்கின்ற தொழிலில் பிள்ளைகளுக்கும் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். பணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும். தொழில் செய்வதன் மூலம் தான் நமது பொருளாதார நிலையை உயர்த்த முடியும் என்பதை அவர்களுக்குத் தெளிவு படுத்த வேண்டும்.  பெரும்பாலும் நாம் அதனைச் செய்வதில்லை.

நண்பர் ஒருவர் எட்டு லாரிகளை வைத்து தொழில் செய்து வந்தார். தீடீரென ஒரு நாள் மாரடைப்பால் காலமானார். மகன் பெரிய பையனாக வளர்ந்திருந்தான். தந்தையின் பொறுப்பை அவன் ஏற்றுக்கொள்ள முடியாது என்று மறுத்து விட்டான்.  தொழில் ஒரு சீனருக்குப் பறி போனது. இது தான் நமது நிலை. தந்தை தவறு செய்து விட்டார். இளம் வயதிலேயே தொழிலின் மூலம் என்ன நன்மை, குடும்பப் பொருளாதாரம் எப்படி உயரும் என்று சொல்லி தொழிலில் அவனையும் ஈடுபடுத்திருக்க வேண்டும். அதனை அவர் செய்யவில்லை.  ஒரு மாபெரும் தொழில் பிறரிடம்  பறி போனது!

தொழிலில் நாம் வளரும் போது நமது பிள்ளைகளையும் அதில் ஈடுபடுத்த வேண்டும். "நான் பட்ட கஷ்டம் என் பிள்ளை படக்கூடாது!" என்று சொல்லுவதைக் கேவலமாக நினைக்க வேண்டும். பிள்ளைகள் கஷ்டப்படக்கூடாது என்று சொல்லியே பல தொழில்களை இழந்தோம்.

நாம் எந்த தொழிலில் இருந்தாலும் நாளுக்கு நாள் நாம் வளர்ந்து வருகிறோம்.  பிள்ளைகளும் அதோடு சேர்ந்து வளர வேண்டும்.

தொழிலில் ஒரு நீட்சி தேவை. அடுத்த தலைமுறைக்கு நமது தொழில் சென்று சேர வேண்டும்!

Saturday 20 March 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி........! (7)

 ஏன் அனுபவம் தேவை


அனுபவங்கள் நமது தவறுகளைக் குறைக்கின்றன. தவறு செய்வதைக்  சுட்டிக்காட்டுகின்றன.

எனது அனுபவங்களைக் கூறுகிறேன்.  எனது குடும்பத்தில் முதல் தலைமுறை வணிகன் நான்.  எந்த அனுபவமும் இல்லை.  அதனால் இழந்தது ஏராளம். இழந்ததை சீர் செய்ய பல ஆண்டுகள்.  இப்போது எனது  இரண்டாம் தலைமுறை வணிகத்தில் இருக்கிறார்கள். என்னைப் போல அவர்களுக்கு எந்த பிரச்சனையும் எழவில்லை.

எனது தவறுகளை அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.  அவர்கள் அந்த தவறுகளைச் செய்ய தயாராக இல்லை. என்னுடைய அனுபவத்திலிருந்து அவர்கள் பாடம் படித்துக் கொண்டார்கள். 

நமது குஜாராத்தி நண்பர்களைப் பார்ப்போம். ஒரு விஷயம் நமக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கும். அவர்கள் காலங்காலமாக வீட்டுத் தளவாடப் பொருட்கள் விற்கும் தொழிலில் தான் இருக்கிறார்கள். ஒரு தலைமுறை போனதும் அடுத்த தலைமுறை அந்தத் தொழிலுக்குத் தயாராகி விடுகிறது. அந்த தொடர்ச்சி எங்கும் நிற்பதில்லை. அடுத்த தலைமுறைக்கும் தொடர்கிறது. அவர்களின் குடும்பங்களில், ஆணோ பெண்ணோ, அவர்களின் தொழில் என்னவென்று அவர்களுக்குப் புரிகிறது. பணத்தின் அருமை அவர்களுக்குத் தெரிகிறது.

எனக்குத் தெரிந்த ஒரு குஜராத்தி குடும்பம்.  தொழிலைக் கவனித்த கொண்டிருந்த குடும்பத் தலைவர் திடீரென அகால மரணமடைந்தார். தாயார் கலங்கிப் போனார். மகன் படித்துக் கொண்டிருந்தான்.  தாயார் வரிந்து கட்டிக் கொண்டு தானே கோதாவில் இறங்கினார். மகன் காலையில் படிப்பு.  பள்ளி முடிந்ததும் கடையைப் பார்த்துக் கொண்டான். மிகவும் இக்கட்டான சூழல் தான். ஓரிரு வருடங்களில் பையன் தொழிலில் தேர்ந்தவனாகி விட்டான். அவன் திருமணம் செய்த பெண் அவளும்  குஜாராத்திக் குடும்பம்.  அந்த பெண் தொழில் அனுபவம் உள்ளவள்.  அதன் பின்னர் அவன் OPEN UNIVERSITY மூலம் கல்வியைத் தொடர்ந்தான். 

குஜாராத்திகள் மட்டும் அல்ல நமது தமிழ் முஸ்லிம் நண்பர்கள், செட்டியார்கள் இவர்களெல்லாம் தங்களது தொழில்களில் ஒரு தொடர்ச்சியைப் பின்பற்றுகிறார்கள்.ஒரு தலைமுறை போனால் அடுத்த தலைமுறை, அடுத்த தலைமுறை - இப்படி செய்வதன் மூலம் தொழிலை எல்லாக் காலங்களிலும் தங்களது குடும்பக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். தொடர்ச்சி அறுந்து போவதில்லை. 

ஆனால் இதனைத் தமிழர்களாகிய  நாம் செய்ய மறுக்கிறோம். நம்முடைய பல தொழில்கள் ஒரு தலைமுறையோடு  முடிவுக்கு வந்து விடுகின்றன. நாம் புதிய தலைமுறையை உருவாக்க மறுக்கிறோம். புதிய தலைமுறையினரிடம் செல்வத்தின் அருமை பெருமைகளைக் கொண்டு சேர்க்கவில்லை.  அவர்களுக்கு நாம் செய்கின்ற தொழிலின் அனுபவங்களைக் கற்றுக் கொடுப்பதில்லை.

நாம் செய்கின்ற தொழிலில் நமக்கு அனுபவம் தேவை. நமது பிள்ளைகளும் நம்மிடமிருந்து அனுபவங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். அது தான் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும்.

அனுபவம் நட்டத்தைக் குறைக்கும். செய்ய வேண்டியதை மட்டும் செய்ய வைக்கும்! அது தான் அனுபவம்!

Friday 19 March 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி........! (6)

 தொழில் செய்ய அனுபவம் தேவையா?



அனுபவம் இருப்பது நல்லது என்பது தான் பொதுவான கருத்து.

அது உங்களை பல சங்கடங்களிலிருந்தும் காப்பாற்றும். ஒன்றுமே தெரியாமலும், அறியாமலும் தீடீரென்று தொழிலில் இறங்கும் போது ஆரம்பம் எது முடிவு எது என்கிற தெளிவு இல்லாமல் மனதிலே ஒரு பயத்தை ஏற்படுத்தும். ஓரளவு அனுபவம் இருந்தாலும் அது  தன்னம்பிக்கையைக் கொடுக்கும்.

நாம் எந்த தொழிலைத் தெர்ந்தெடுக்கிறோம் என்பதில் நமக்கு  ஒரு தெளிவு  வேண்டும். சிறு தொழில் என்னும் போது பல வகையான தொழில்கள் இருக்கின்றன. அதில் நமக்கு ஏற்றது எது என்பதை ஆராய்ந்து அதில் ஈடுபட்டால் வெற்றி பெறுவது உறுதி.

இப்போது நமது பெண்களில் பலர் உணவுத் தொழிலில் ஆர்வம் காட்டுகின்றனர். அதில் பலர் சமைப்பதில் ஈடுபாடு உள்ளவர்கள். அவர்கள் எல்லா வகையான உணவு வகைகளைத்  தெரிந்திருக்க வேண்டும். அப்படித் தெரிந்திருக்கவில்லை என்றாலும் அதனைத் தெரிந்த தக்கவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.  அவர்களே செய்து ஒரு சிலருக்கு அந்த உணவுகளைக் கொடுத்து அதன் தரத்தைப் பார்க்க வேண்டும்.  

சமீப காலங்களில்  தேநீர் விற்பனை, நாசி லெமாக், பத்தாய் விற்பனை என்று நமது இளைஞர்கள் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.  பத்தாய் விற்பனையென்றால் அது எங்கு கிடைக்கும், அதன்  வாங்கும் விலை, அதன் விற்கும் விலை, காய்கள் தரமானவையா, பிஞ்சுகளா, முற்றினவையா - இப்படித் தெரிந்து கொள்ள சில நுணுக்கங்கள் தேவைப்படுகின்றன.

இதைத்தான் நாம் அனுபவம் என்கிறோம். பள்ளிக்கூட புத்தகப் பைகள், பென்சில் பேனா இன்னும் பல பள்ளிக்கூட உபகரணங்கள், விளையாட்டுப் பொருள்கள் - இவைகள் எல்லாம் எங்கே கிடைக்கும், என்ன விலையில் கிடைக்கும் - இதற்கெல்லாம் ஓரளவாவது அனுபவம் வேண்டும். அல்லது அனுபவம் உள்ளவர்களை நாம் வைத்துக்கொள்ள வேண்டும்.

தொழில் ஆரம்பிக்கும் புதிதில் நமக்கு நாம் பொருள் வாங்கும் மொத்த வியாபாரிகளிடம் சரியான பழக்கம் இருக்காது. ஒரு சில வியாபாரிகள் அதிக விலை போடுவார்கள், ஒரு சிலர் குறைவான விலை போடுவார்கள். இதற்குக் காரணம் ஒருவர் தரமான பொருள்களாக விற்பவர் இன்னொருவர் மலிவான பொருள்களை விற்பவர். நமது வாடிக்கையாளர்களோ மலிவு விலையைத்தான் நாடுவர்.   நமது வாடிக்கையாளர்கள் மேல்மட்டமா, கீழ்மட்டமா என்பதைப் போகப் போகத்தான் தெரிந்து கொள்ள முடியும்.

இதைத்தான் அனுபவம் என்கிறோம். நமக்கு நேரிடையாக அனுபவம் இல்லை என்றாலும் அனுபவம் உள்ளவர்களை வேலைக்கு வைத்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் நம்மிடம் உள்ள பலவீனங்களைப் பலமாக ஆக்கிக் கொள்ள முடியும். ஆனால் நம்மிடம் நேரிடையான அனுபவம் இருப்பதே எப்போதுமே சிறந்தது. பிறருடைய தயவில் இருப்பது நல்லதல்ல! கவனிக்கவும்!

அனுபவம் இல்லை என்றால் அனுபவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் எதை எதையோ கற்றுக் கொண்டிருக்கிறோம். அது நமது உயிர்நாடியான தொழிலுக்கும் பொருந்தும். இதற்குத் தான் அதிகம் தேவை. காரணம் நமது வீட்டுப் பணம் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.அதன் உரிமையாளர் நாம் தான். அதனால் அலட்சியமாக இருந்து விட முடியாது.

அனுபவம் தேவை. இல்லையெனில் அனுபவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அனுபவம் தேவையே!

Thursday 18 March 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி .............! (5)

 இயல்பானது என ஏற்றுக்கொள்ளுங்கள்!


தொழில் செய்வது இயல்பானது என ஏற்றுக் கொள்ளுங்கள். ஏதோ சீனன் தான் செய்வான், வெள்ளைக்காரன் தான் செய்வான் , பணக்காரன் தான்  செய்வான் - என்பதையெல்லாம் மறந்து விடுங்கள். தொழில் செய்வதற்கு யார், எவர்,  நிறம், உயரம் என்கிற  வரையறை எதுவும் இல்லை!  யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

ஒரு செல்வர் வீதியில் போய்க் கொண்டிருக்கிறார். தாகம் தாங்க முடியவில்லை. அதோ அருகே ஒருவர் ஐஸ் விற்றுக் கொண்டிருக்கிறார். போய் வாங்கிக் குடிக்கிறார். தாகத்தைத் தீர்த்துக் கொள்ளுகிறார். கார் நெடுஞ்சாலையில் போய்க் கொண்டிருக்கிறது. தாகம் எடுக்கிறது. ஒரு வியாபாரி இளநீர் விற்றுக் கொண்டிருக்கிறார்.  இளநீரை வாங்கிக் குடிக்கிறார் அந்த காரில் சென்றவர்.

எல்லாமே இயல்பாக நடந்து கொண்டிருக்கிறது. யார் அவர்! யார் இவர்! என்கிற கேள்வி எழுவதில்லை. 

நாமும் இயல்பாகவே இருப்போம்.  யாரும் நம்மை வித்தியாசமாகப் பார்க்கப் போவதில்லை. சீனர்களே வியாபாரத் துறையை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த போது ஒரு இந்தியரோ, ஒரு மலாய்க்காரரோ வியாபாரம் செய்தால் அது அதிசயமாக இருந்தது. அந்த நிலையில் கூட நமது செட்டியார்களும், தமிழ் முஸ்லிம்களும், குஜாராத்தியரும்  வியாபாரம் செய்து கொண்டு தான் இருந்தனர்.  இன்றைய நிலை என்பது வேறு.  வியாபாரம் பரவலாக்கப்பட்டு விட்டது. வாய்ப்புக்கள் அதிகம்.

எந்த ஊர்களுக்குப் போனாலும் செட்டியார்களும், தமிழ் முஸ்லிம்களும், குஜாராத்தியரும் தாங்கள் தொழில் செய்ய வந்தவர்கள் என்கிற அடையாளத்தோடு தான் இருக்கின்றனர். தொழில் செய்வதையே தங்கள் இயல்பாகவே  ஆக்கிக் கொண்டனர். 

அவர்களெல்லாம் நமக்கு முன்னோடிகள். வேலை செய்தால் தான் பிழைப்பை நடத்த முடியும் என்று எப்படி நமக்கு இயல்பாகி விட்டதோ, அவர்களுக்கு தொழில் செய்வதே  இயல்பான ஒன்றாகிவிட்டது.

வேலை செய்தால் மிச்சம் மீதி உள்ள காலத்தை ஓட்டலாம். தொழில் செய்தால் வாழ்க்கையில் உயரலாம்; வளரலாம்.

வேலை செய்வதை எப்படி நாம் இயல்பான ஒன்றாக ஏற்றுக் கொண்டோமோ அதே போல  தொழில் செய்வதையும் இயல்பான ஒன்றாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தொழில் செய்வதை நமக்கு இயல்பானதாக மாற்றிக் கொண்டு நமது முன்னேற்றம் இனி தொழில் தான் அடங்கியிருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்வோம். நமது முஸ்லிம் நண்பர்களுக்குத் தொழில் எப்படி இயல்பாக இருக்கிறதோ அதே போல நமக்கும் அது இயல்பாக இருக்க வேண்டும்.

தொழில் நமக்கு இயல்பானது என்கிற உத்வேகத்தோடு தொழிலில் காலடி  எடுத்து வைப்போம்!

Wednesday 17 March 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி........! (4)

 சிறு தொழில்கள் மாற்றத்தை ஏற்படுத்தும்!


எல்லா தொழில்களுமே சிறிய அளவில் தான் அதன் தொடக்கம்  அமைந்திருக்கும். நமது அப்பா அம்பானியாக இருந்தால் ஒரு வேளைத் தொழில் தொடங்கும்போதே கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டலாம். ஆனால் அது தொழிலைத் தமாஷாக எடுத்துக் கொண்டு செய்வது! 

அம்பானியின் அப்பா - அவர் தொழிலை ஆரம்பிக்கும் முன்னர் ஒரு பெட் ரோல் பங்கில் வேலை செய்தவர். தொழிலை ஆரம்பிக்கும் போது கையில் கொஞ்சம் பணத்தை வைத்துக் கொண்டு அடக்கமாகத்தான் தனது தொழிலில் காலடி எடுத்து வைத்தார்.

எல்லாத் தொழில்களின் மூலம் என்பது ஒரு சிறிய அளவில் தான். ஏன்? துன் சம்பந்தன் தொடங்கிய தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் ஆரம்பம்,  ஆளுக்குப் பத்து வெள்ளி,  என்று சொல்லித்  தான் ஆரம்பிக்கப்பட்டது. இன்று அதன் சொத்து மதிப்பு என்பது கோடிக்கணக்கில்! இது நமது ஒற்றுமையின் அடையாளம்.

தொழில் செய்ய நம்மிடம் உள்ள பணம் அனைத்தையும் கொட்டித் தீர்க்க வேண்டும் என்பதல்ல. ஒரு சிறிய அளவில் தொழிலில் முதலீடு செய்யுங்கள். அதனை வைத்தே தொழிலை வளர்த்தெடுங்கள். சிறிய அளவில் என்னும் போது வருமானம் சிறிய அளவில் தான் இருக்கும். அது பாதகமில்லை. சிறிய வருமானம் என்றாலும் தொழிலில் உள்ள  நெளிவு சுளிவுகளைப் படிக்கிறீர்கள். ஒரு தொழிலை நிர்வகிக்கும் திறனைக் கற்றுக் கொள்கிறீர்கள். அது உங்களுக்குத் தன்னம்பிக்கையைக் கொடுக்கும். சுயகாலில் நிற்கும் தகுதியைப் பெறுகிறீர்கள்.  பயத்தைப் போக்குகிறீர்கள்.

வசதி படைத்தவர்கள் பெரிய தொழில்களுக்குப் போகலாம். நட்டம் ஏற்பட்டால் தொழிலை மாற்றிக் கொள்ளலாம்.   இது அனைவருக்கும் பொருந்தாது.  அந்த அளவு வசதி உள்ளவர்களை வரவேற்கிறோம்.

ஆனால் நமது தேவை அடிமட்டத்தில் உள்ளவர்கள் தொழிலில் ஈடுபட வேண்டும் என்பதே. அதனால் தான் சிறிய தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். அரசாங்கமும் அதனை ஊக்குவிக்கிறது.

சீனர்கள் எந்த அளவுக்கு பெரும் தொழில்களைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்களோ அதே அளவு சிறு தொழில்களையும்  அந்த சமூகம் அவர்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

இன்றைய ஒரு சிறிய தொழில் நாளை ஒரு பெரிய தொழிலாக மாற அதிக வாய்ப்பிருக்கிறது. அப்படித்தான் பல தொழில்கள் மாறி இருக்கின்றன. இன்றைய "மைடீன் பேரங்காடி" பற்றி தெரியாதவர் யாருமில்லை.   கிளந்தான், கோத்தபாருவில்   ஒரு சிறிய பலகைக் கடையில் விளையாட்டுப் பொருள்கள், பொம்மைகள் போன்றவைகளை வைத்து அவர்களின்  தொழில் 1957-ல் ஆரம்பிக்கப்பட்டது. 64 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றைய அதன் வளர்ச்சி பிரமிக்கத்தக்க வளர்ச்சி என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

சிறிய அளவில் முதலீடு செய்து தொழில் தொடங்குவது ஒரு சிலருக்குக் கௌரவ குறைச்சலாக இருக்கலாம். ஆனால் தொழில் என்று வந்து விட்டால் நாணயம் தான் முக்கியமே தவிர நமது கௌரவம் அல்ல. அவர்கள் ஒதுங்கிக் கொள்வதே நல்லது.

தொழில் என்பதே கௌரவம் தான். நமது வாழ்வின் பாதையை மாற்றியமைக்கும் தொழில், சிறியதோ பெரியதோ, ஏற்றுக் கொண்டு செயல்படுங்கள்.


Tuesday 16 March 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி......! (3)

 சீனர்களால் தான் முடியும்!

தொழில் என்றால் அது சீனர்களுக்கு மட்டும் தான் என்கிற ஒரு கருத்து ஒரு காலக்கட்டத்தில் நிலவியது.

இந்தியர்கள் எப்படி மலாயா தோட்டங்களில் வேலை செய்யக்  கொண்டு வரப்பட்டார்களோ அதே போல சீனர்கள் ஈய லம்பங்களில் வேலை செய்ய வரவழைக்கப்பட்டவர்கள்.  அவ்வளவு தான்.

மற்றபடி சீனர்கள் வியாபாரம் செய்ய இங்கு வரவில்லை. ஆனால் ஒன்று கவனிக்கத்தக்கது. அந்த காலக்கட்டத்திலயே நமது செட்டியார்கள் இங்கு தங்களது தொழிலை ஆரம்பித்து விட்டார்கள். வியாபாரத்திற்கான முன்னோடிகள் என்றால் மலேயாவில் நமது செட்டியார்கள் தான்.

ஆனால் சீனர்களின் இன்றைய பொருளாதார வளர்ச்சிக்குப் பல காரணங்கள் உண்டு.  அதை நாம் ஆராய வேண்டாம்.

ஒரு காலக்கட்டத்தில் சீனர்கள் யாராக இருந்தாலும், நாம் அவர்களை, "தவுக்கே"  என்று கூறும் அளவுக்கு அவர்களை  உயர்த்திப் பிடித்திருந்தோம்! ஒரு நிகழ்வு எனது ஞாபத்திற்கு வருகிறது. தோட்டத்தில் வாசக்கூட்டி என்று சொல்லப்படும் இருவர் - ஒருவர் சீனர், ஒரு இந்தியர் -  வாசல் கூட்டும் வேலையில் ஈடுபட்டு வந்தவர்கள். அந்த சீனர் கொஞ்சம் வயதானவர், இந்தியர் நடத்தர வயது. ஒரு முறை, மழை காரணமாக -  ஒரு சிறிய கால்வாயில்  மரக்கிளைகள் விழுந்து நீர் ஓட்டத்தை அடைத்துக் கொண்டது.  அப்போது அந்த சீனர் அதை சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்டிருந்தார். அந்த இந்தியர் "இப்படி செய், அப்படி செய்!" என்று அவருக்கு வழிக்காட்டிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு முறையும் அவரைத் "தவுக்கே! தவுக்கே!" என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தது எனக்குச் சிரிப்பை வரவழைத்தது. சீனர்கள் என்றால் அவர்கள் தவுக்கே என்கிற முடிவுக்கே நமது சமுதாயம் வந்துவிட்டது!  அந்த சொல் சீனர்களுக்கு எத்தகைய உளவியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை யோசித்துப் பாருங்கள்.     சிறுசோ பெருசோ, தொழிலில் ஈடுபட்டிருக்கும்  நம்மவர்களை  "முதலாளி" என்று அழைக்கும் பழக்கத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி அழைப்பதன் மூலம் அந்த "முதலாளி" யைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற உந்துதலை அவருக்கு அது ஏற்படுத்தும்.

தொழில் என்றால் சீனர்களால் தான் முடியும் என்பது மாயை. நான் மேலே சொன்னது போல செட்டியார்கள் முன்னோடியாக இருந்து நாட்டில் தொழிலை வளர்த்திருக்கிறார்கள். நமது தமிழ் முஸ்லிம்கள்  தொழில் செய்தே வளர்ந்தவர்கள்.  தொழிலில் அவர்களின் ஈடுபாடு அதிகம்.  நமது வட இந்திய குஜாராத்தியர் (பட்டேல்) எல்லாக் காலங்களிலும் வீட்டுத் தளவாடப் பொருள்களை விற்றே  தங்களின் தொழிலை வளர்த்துக் கொண்டவர்கள். . நமது பஞ்சாபியர் பசும்பாலை விற்றவர்கள். இப்போது முழுமையாக  தொழிலின் பக்கம் இருக்கின்றனர்.

தோட்டங்களிலேயே அடைந்த கிடைந்த  நம்மவர்கள்  அப்போது சும்மாவா இருந்தார்கள்? இல்லையே! எங்களது பக்கத்து வீட்டுப் பாட்டி காலையில் பசியாறப் போட்டு அட்டகாசமாக விற்பனையில் ஈடுபட்டிருந்தார். அவர் போடும் தேங்காப்பால் ஆப்பத்திற்கு  ஈடு இணையில்லை! இன்னும் ஒரு சிலர் தங்களது வீட்டிலேயே சிறிய மளிகைக் கடை வைத்து வியாபாரத்தை நடத்தி வந்தனர். இன்னும் சிலர் தோட்டத்தில் பெரிய அளவில் மளிகைக்கடை, காப்பிக்கடை என்று பிரமாதப்படுத்தினர். பக்கத்துத் தோட்டத்திலிருந்து "ரொட்டி பாய்"  அனுதினமும் வருவார். தேங்காப்பு ரொட்டி, காயாரொட்டி, இஞ்சித்தண்ணி, சாப்பிடாத நாளில்லை! வீட்டில் விசேஷம் என்றால் கேக் வகையறாக்கள் எங்கே கிடைக்கும்? தமிழர்கள் தான் செய்தார்கள். சட்டை சிலுவார் தைக்க வேண்டும். தமிழர்கள் தான் தைத்தார்கள்.

அப்போதும் ஓரளவு பொருளாதாரத்தை நாம் வைத்திருந்தோம். இடைப்பட்ட காலத்தில்  விடுபட்டுப் போன அந்த பொருளாதாரத்தை நாம் மீட்டெடுக்க வேண்டும்.

நம்மால் முடிந்தது! இப்போதும் முடியும்! எப்போதும் முடியும்! தேவை எல்லாம்  தமிழர்களால் முடியும் என்கிற உணர்வு  தான்!

Monday 15 March 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி......! (2)

 ஏன் பயம் வருகிறது?

எல்லாக் காலங்களிலும் யாருக்கோ ஒருவருக்கு அடிமையாக உழைத்து,  உழைத்து நம்மைப்  பழக்கப்படுத்திக் கொண்டோம்!

மாதம் முடிந்தால் சம்பளம். எப்படிப்பட்ட சம்பளம்?  பற்றாக்குறைச்  சம்பளம்! அப்புறம் கடன் வாங்க வேண்டும். களைத்துப் போய் உழைத்ததற்குச் சாராயம் அடிக்க வேண்டும்!  பற்றாக்குறைச் சம்பளத்திற்காகப் போராட வேண்டும்! தொழிற் சங்கம் வேண்டும்.

இவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும்  நமக்குப் பயம் வரவில்லை.  எப்படியோ ஒரு வருமானம் தடையின்றிக்  கிடைத்து விடுகிறது. அது குறைந்த வருமானமாக இருந்தாலும், பற்றாக்குறையான வருமானமாக இருந்தாலும் நமக்கு எங்கிருந்தாவது கடன் கிடைக்கும்! சாராயம் கிடைக்கும்! அப்படி ஒரு வாழ்க்கைக்கு நாம் அடிமையாகி விட்டோம்!

சரி,  இந்தப் பக்கம் சீனர்களைப் பார்ப்போம். தினசரி பணம் பார்ப்பவர்கள். அது பற்றாக்குறையாகவும் இருக்கலாம். அதிகமாகவும் இருக்கலாம். அதிரடியாகவும் இருக்கலாம்.ஒரு நேரம் நோகடிக்கலாம்! ஒரு நேரம் கைக்கடிக்கலாம். ஒரு நேரம் தூக்கியடிக்கலாம்! ஒரு நேரம் தூக்கிவிடலாம்! இது தான் தொழில் செய்பவர்கள் அன்றாடம்  சந்திப்பவை.

இங்கும் கடன் உண்டு. அது தங்களது தொழிலின் வளர்ச்சிக்கான கடன். கடனை வங்கிகளுக்குச் சரியாக செலுத்தினால் உங்களுக்கு இன்னும் அதிகமாகக்  கடன் கிடைக்க வாய்ப்புண்டு. தொழில் வளர வளர நீங்களும் வளரலாம். உங்கள் தொழில் வளர வளர சமுதாயத்தில் உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் உயரும்.

தொழிலில் நீங்கள் உயர முடியும். சாத்தியக் கூறுகள் அதிகம்.  நீங்கள் கோடிசுவரனாக ஆக முடியாவிட்டாலும் நீங்கள் இலட்சாதிபதி என்கிற அந்தஸ்தோடு தலை நிமிர்ந்து வாழலாம்! அப்படி இல்லயென்றாலும் ஒரு கௌரவமான வியாபாரி என்கிற முத்திரையோடு வாழலாம்.

எப்படிப் பார்த்தாலும் தொழில் செய்பவர்களில் 99% விழுக்காடு வெற்றி பெறுகின்றனர்.

ஆனால் வேலை செய்கின்ற ஒருவரின் நிலை என்ன? என்றென்றும் பற்றாக்குறை பட்ஜெட்டிலேயே வாழ்ந்து செத்துப் போகிறார்!  அவர் பிள்ளைகளுக்கும் "உனக்கு நிரந்தர வருமானம்!"  என்று அவர் வளர்ந்த பாதையையே காட்டிவிட்டுப் போகிறார்! ஓர் அடிமையாகவே இரு என்கிற பாதை அது!

வேலை செய்வதை நான் குறையாகச் சொல்லவில்லை. ஆனால் தொழில் செய்வதில் ஒரு சுவராஸ்யம் உண்டு. தினசரி வருமானம் ஒரே விதமாக இருப்பதில்லை.  அந்தப் பணத்தை எப்படி கையாள வேண்டும் என்பதை நாமே முடிவு செய்ய வேண்டும். வாடகை தர வேண்டும், பொருள்கள் வாங்க வேண்டும். அவைகளை  விற்பனைப்படுத்த வேண்டும். சம்பளம் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பன போன்ற  ஒவ்வொன்றையும் கணக்குப் பண்ணி செலவு செய்ய வேண்டிய சூழல் வரும்.. ஒரு முதலாளிக்கு உள்ள அத்தனை தன்மைகளையும் நாம் வளர்த்துக் கொள்ளுகிறோம். அது தான் நம்மை தலை நிமிர வைக்கிறது.

 அது ஒரு முதலாளி என்கிற பெயரைக் கொடுக்கிறது!  நாம் வேலை செய்வதில் மாதம் முடிந்தால் பணம் கிடைக்கிறது. அதில் நமக்கு பயம் இல்லை.  ஒரு நிரந்தர வருமானம் இல்லை ஆனால் அந்த மாதச் சம்பளத்தை இங்கே ஒரே நாளில் எடுத்து விடலாம்! அது தான் நமக்குப் பயத்தைக் கொடுக்கிறது!

அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. நாட்டின் பொருளாதாரம் சீனர்களின் கையில் இருக்கிறது. அவர்களிடம் அந்த பயம் இல்லை. அடிமையாக வாழ்ந்த நமக்குத் தான் அந்த பயம் இன்னும் தெளியவில்லை!

Sunday 14 March 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி....! (1)

            உயர்வோம்!  தமிழினமே உயர்வோம்!                                                                                                                                                            

இது நமது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கிய பயணம்!

வாழ்க்கை என்றால் அது ஒரு தொழில் செய்வதாகத்தான்  இருக்க வேண்டும்.

யூத இளைஞர்கள் தாங்கள் மேற்படிப்பு படிக்கும் காலத்திலேயே அவர்கள் என்ன தொழிலில் ஈடுபட வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருப்பார்களாம். அவர்களுக்குப் பிடித்தமான தொழில் என்பது தான் முக்கியம்.

படிக்கும் காலத்திலேயே அது பற்றியான சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுவதும் அது பற்றியான செய்திகளை சேகரிப்பதிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுவார்களாம்.

இன்று உலகளவில் யூதர்கள் தான் மாபெரும் தொழில்களை நடத்தி வரூகின்றனர். எந்தவொரு தொழிலை எடுத்துக் கொண்டாலும் அவர்களது பங்கு இல்லாமல் எந்த ஒரு பொருளும் இல்லை!

பொருளாதாரத்தில் அவர்களை அசைக்க ஆளில்லை. அசைக்கவும் முடியாது! அத்துணை உயரத்தில் அவர்கள் இருக்கிறார்கள்.

யூதர்களை அசைத்துப் பார்க்க வேண்டுமென்றால் அது ஒரே ஒரு இனத்திற்குத்தான் முடியும். சொல்லுவதை நம்புங்கள்.  அது நம்மால்  மட்டுமே முடியும். அதாவது தமிழினத்தால் மட்டுமே முடியும்.

அந்த அளவுக்கு ஆற்றலுள்ளவர்கள் தமிழர்கள். நமது சரித்திரம் அதனை நிருபிக்கின்றது. அன்று முடிந்தவர்களுக்கு இன்று மட்டும் முடியாதா, என்ன? அன்று முடிந்தது; இன்றும் முடியும். 

இடைப்பட்ட காலத்தில் நடந்தவைகளை மறந்து விடுவோம். அதனை நமது பலவீனமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நாம் நமது வலிமையை பெருக்கிக் கொள்ள அந்த இடைப்பட்ட காலம் நமக்குத் தேவைப்பட்டது. அதனை நாம் சரியாகவும் பயன்படுத்திக் கொண்டோம்.

இப்போது நாம் தயார் நிலையில் உள்ளோம். நேரம் காலம் கூடி வந்தால் எல்லாமே சரியாக நடக்கும் என்பார்கள். அந்த நேரம் காலம் இப்போது கூடி வந்திருக்கிறது. எல்லாம் சரியாக நடந்து கொண்டும் இருக்கிறது.

இப்போது நமது தேவை எல்லாம் தொழிலில் முதல் அடியை எடுத்து வைக்க வேண்டும் என்பது தான். ஆயிரம் முறை சிந்தியுங்கள். சிந்தித்த பின்னர் எந்த காரணத்தைக் கொண்டும் பின் வாங்காதீர்கள். தோல்வி என்பதை ஏற்றுக் கொள்ளாதீர்கள். தடைக்கற்கள் இருக்கத்தான் செய்யும். தடைக்கற்களை தூர எறிந்துவிட்டு பயணத்தைத் தொடருங்கள்.

சதாகாலமும் 'வேலை! வேலை!' என்று அலையும் சமுதாயமாக நாம் இருக்க வேண்டாம். இருந்தது போதும்.  வேண்டுமானால் தொழில் செய்வதற்காக போதுமான பணத்தைத்  திரட்டிக் கொள்ள அது உங்களுக்கு ஏதுவாக  இருக்கும்.

எந்த துறையாக இருந்தாலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும். வேலை செய்தால் ஏற்றம், தொழில் செய்தால் இறக்கம் என்று ஒன்றுமில்லை.  ஏற்றம் வரும் போது இறக்கமும் வரும், இறக்கம் வரும் போது  ஏற்றமும் வரும்! அதனை நாம் எப்படிக் கையாள்கிறோம் என்பதில்  தான் நமது திறமை அடங்கியிருக்கிறது.

பயணத்தைத் தொடர்வோம்! ஓர் இலட்சியத்தோடு தொடர்வோம்! பொருளாதாரம் நம் கையில் என்கிற இலட்சியப் பிடிப்போடு தொடர்வோம்!


Friday 12 March 2021

மீண்டும் போட்டியிடுவாரா?

 அடுத்த  15-வது பொதுத் தேர்தலில் டாக்டர் மகாதிர் போட்டியிடுவாரா என்கிற கேள்வி அவ்வப்போது எழுந்து கொண்டு தான் வருகிறது!

ஒரே காரணம்  அவருடைய வயது தான். வருகிற ஜூலை மாதம் அவர் தனது 96 -ராவது  பிறந்த நாளைக்  கொண்டாட விருக்கிறார். அவர் வயதைப் பற்றி அவர் கவலைப்படுவதாகத் தெரியவில்லை! நாம் தான் கவலைப்படுகிறோம்!

பொதுவாக ஒரு கருத்து சொல்லப்படுவதுண்டு. தனது வேலையை அல்லது தனது தொழிலை நேசிப்பவர்களுக்கு வயது பற்றி அவர்கள்  கவலைப்படுவதில்லை. அல்லது அது பற்றி சிந்திக்க அவர்களுக்கு நேரமில்லை என்பார்கள்.

டாக்டர் மகாதிர் அரசியலை நேசிப்பவர்.  மலாய்க்காரர் முன்னேற்றத்திற்காக பெரும் அளவில் பாடுபட்டவர். இன்று அரசியலில் இருப்பவர்கள் பெரும்பாலும் அவரது காலத்தில் கல்வி கற்று களத்தில் இருப்பவர்கள்.

இன்றளவும் அவருக்கு மக்களிடையே செல்வாக்கு உண்டு. ஏன் அவர் கொண்டு வந்த பல மாறுதல்களினால் இந்தியர்களும் பலன் அடைந்திருக்கிறார்கள். இன்று இந்தியர்கள் தொழிலில் காலூன்றி இருக்கிறார்கள் என்றால்  அதற்கு அவரும் ஒரு காரணம். 

மலாய்க்காரர் முன்னேற்றம் என்பது  அவர் காலத்தில் தான் வெரூன்றியது. கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்புக்கள் அனைத்தும் அவர் காலத்தில் தான் சரியான பாதை அமைக்கப்பட்டது. இன்று வெளிநாட்டு நிறுவனங்கள் பல உள்ளன. பாதைப் போட்டவர் டாக்டர் மகாதிர் தான். அதனால் வேலை வாய்ப்புக்கள் நிறைய உருவாக்கப்பட்டன. உள் நாட்டில் ஆள் பற்றக்குறையினால் வெளி நாடுகளிலிருந்து தொழிலாளர்கள் வருவிக்கப்பட்டனர்.

எப்படிப்  பார்த்தாலும் மலேசியாவின் அபரிதமான வளர்ச்சிக்கு  அவர் தான் காரணம். அவருக்குப் பின் வந்தவர்கள் நாட்டை நாசமாக்கி விட்டார்கள் என்பது வருத்தமான செய்தி.

அவருக்கு வயதாகிவிட்டது என்று நாம் தான் கவலைப்படுகிறோமே தவிர அவர் எப்போதும் போல அதே பழைய மிடுக்குடன் அரசியல் பேசிக் கொண்டும், ஊடகங்களைச் சந்தித்துக் கொண்டும், வெளி நாட்டுப் பிரமுகர்களைப் பார்த்துப்  பேசிக் கொண்டும் தனது நேரத்தைப் பயன் உள்ளதாகவும் பார்த்துக் கொள்கிறார்.

அவர் மீது நமக்குக் கருத்து வேறு பாடுகள் இருக்கலாம். இருந்துவிட்டுப் போகட்டும்!  அவர் நூறு வயது வரை வாழ வேண்டும்! நமது வாழ்த்துகள்!


Thursday 11 March 2021

இவர்களை மறந்து போனோமே!

 


பொதுவாக இந்த கோவிட்-19  தொற்று காலக் கட்டத்தில் பலர் வேலை  இழந்திருக்கின்றனர்.

நாம் பெரும்பாலும் தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களைத் தான் தெரிந்து வைத்திருக்கிறோம்.

சுற்றுலாத் துறையையே அதிகம் நம்பியிருக்கும் நமது ரிக்‌ஷா ஓட்டிகளைக்  கொஞ்சம் கூட யோசித்துப் பார்த்ததில்லை! அவர்களுக்கும் குடும்பங்கள் உண்டு. பள்ளி செல்லும் பிள்ளைகள் உண்டு. வீட்டு வாடகை உண்டு. இப்படி உண்டு! உண்டு! உண்டு! என்று நிறைய உண்டுகள் இவர்களுக்கும் உண்டு!

ஆனால் நாம் இவர்களைப் பார்ப்பது என்பது குறைவு தான்.  எல்லா நகரங்களிலும் இவர்களைப் பார்க்க முடிவதில்லை. நாம் தினசரி வாழ்க்கையில் இவர்களைப் பார்க்க முடியாததினால் நாம் இவர்களை மறந்தே போனோம்.

ரிக்‌ஷாக்கள் இப்போது பெரும்பாலும் சுற்றுப்பயணிகளால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  சுற்றுப்பயணிகள் போகின்ற இடங்கள் என்றால் அது மலாக்கா, பினாங்கு போன்ற நகரங்கள் தான். மற்ற நகரங்களில் ரிக்‌ஷாக்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

சுற்றுலாப் பயணிகள் என்றால் உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணிகள் சேர்ந்தே இவர்களின் பிழைப்புக்கு வழிவகுக்கின்றனர். வெளிநாட்டவர்களின் வரவை  முற்றிலுமாக இழந்துவிட்டோம். உள்நாட்டிலும் பல கட்டுப்பாடுகள். தூரப்பயணங்கள், வெளி மாநிலப் பயணங்கள் எல்லாம் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கின்றன.

சுற்றுலாத்துறையைச் சார்ந்த பல துறைகள் இன்று வெறுமையாகி விட்டன.  ரிக்‌ஷா தொழில் என்பது சுற்றுலாத் துறையில் ஒரு சிறிய பகுதி தான்.  ஆனால் சுற்றுலாத் துறையின் பெரும் பங்காற்றியவை என்றால் அது பேரூந்துகளாகத்தான் இருக்க வேண்டும்.  அவைகள் எல்லாம் ஒரே மாதத்தில் அனைத்தும் தவிடுபொடியாகி விட்டன.  புத்தியுள்ளவர்கள் பிழைத்துக் கொண்டனர். புத்தி இல்லாதவர்கள் குமுறிக் கொண்டிருக்கின்றனர்!

சுற்றுலாத் துறை  என்பது நாட்டிற்கு நல்ல வருவாய்த் தருகின்ற ஒரு துறை.  அதனை நசிந்து போகாதபடி பார்த்துக் கொள்வது அரசாங்கத்தில் கடமை. மேல்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் வரை ஆயிரக்கணக்கானோர் பணி புரிகின்றனர். பல குடும்பங்கள் இந்தத் துறையை நம்பி வாழ்கின்றனர்.

சுற்றுலாத் துறை இன்னும் முழுமையாக இயங்கவில்லை என்பது வேதனை தான். ஆனால் யாரையும் குற்றம் சொல்ல முடியாது. உலகமெங்கும் இந்த நிலை  தான்.  விமானங்கள் இன்னும் முழுமையாக இயங்கவில்லை.  அதனால் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள்  இல்லை. உள்நாட்டிலும் மக்கள் முழுமையாக நடமாட முடியவில்லை. அதிலும் தடைகள்.

இந்த நீண்ட கால கோவிட்-19 க்குப் பின்னர் சுற்றுலாத் துறையின் நிலை என்ன ஆகும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த நிலையில் ரிக்‌ஷாகாரர்களின் நிலை என்ன ஆகும் என்பதும் தெரியவில்லை.

பார்ப்போம்! பொறுத்திருப்போம்!

Wednesday 10 March 2021

கட்சித் தாவல் குற்றமா?

 கட்சித் தாவல் என்பது குற்றமா? என்கிற கேள்வி நம்மிடையே எழுவது இயல்பு தான்!

ஆனாலும் அது குற்றமில்லை என்பதை நாம் அறிந்து தான் வைத்திருக்கிறோம். அது குற்றம் என்றால் இந்நேரம் எத்தனையோ அரசியல்வாதிகள்  சிறைகளிலில் அடக்கமாகி இருப்பார்கள்! அது இல்லை என்பதால் தான் கட்சித் தாவல் மிகவும்  இயல்பாக நடந்து கொண்டிருக்கிறது!

கடைசியாக நமது சட்டத்துறை அமைச்சர் கூட கட்சித்  தாவல் குற்றமாகாது என்று சமீபத்தில் கூறியிருக்கிறார். பாவம்! சட்டத்துறை அமைச்சரே  இவ்வளவு கீழே  இறங்கி வந்து இந்த தகவலை மலேசியர்களுக்குச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்! என்ன செய்வது? அது தான் ஜனநாயகம்!

கட்சித் தாவல் குற்றம் என்றால் ஒரு நிலையான அரசாங்கம்  கவிழ வழியில்லை. அப்படி ஒரு சட்டம் இல்லாததால் எதுவும் நடக்கலாம். அதைத் தான் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம்! மிக அநாவசியமாக தாவல்கள் நடந்து கொண்டிருக்கின்றன!  அதனால் பொது மக்களுக்குத் தான் நட்டம். 

ஒரு நிலையான  அரசாங்கம் நடப்பில் இல்லாததால் அதனால் ஏற்படும் பிரச்சனைகள் ஏராளம்.  எந்த ஒரு முடிவையும் அவர்களால் எடுக்க முடியவில்லை. அரசாங்கம் கவிழ்ந்து விடக்கூடாது  என்பதே அவர்களின் வேலையாகப் போய்விட்டது! கவிழ்ந்து விடக்கூடாது அத்தோடு பிரதமர் பதவியையும் விட்டு விட முடியாது! கோவிட்-19 வைத்து அரசியல் நாடகம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்!

சரி, கட்சித் தாவல் குற்றமில்லை. ஏற்றுக் கொள்ளுகிறோம். நமது நாட்டின் முதல் கோட்பாடு என்பதே "இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்!. நமக்கு இறைவன் மீது கூடவா நம்பிக்கை இல்லை?

மக்களை ஏமாற்றுவது இறைவனை ஏமாற்றுவது  தானே! அதைவிட கட்சித் தாவலின் போது கோடிக்கணக்கான பணம் கைமாறுகிறதே, இது என்ன நமது பக்தியையா குறிக்கிறது?  சுற்றி வளைத்துப் பார்த்தால் அது மக்களின் பணம் தானே!

பணத்தின் மீது குறிவைத்து கட்சித் தாவல் நடந்தால் அவனை  என்னவென்று சொல்லுவது? பக்திமானா? புனிதனா? சட்டப்படி அவர் குற்றம் செய்யவில்லை என்று சட்டம் சொல்லுகிறது. ஆனால் ஆன்மீகம் அவனை குற்றவாளி என்கிறதே! சட்டம் அவனுக்குப் பயத்தைக் கொண்டு வரவில்லை. ஆன்மீகமும் அவனுக்குப் பயத்தைக் கொண்டு வரவில்லை! கடவுள் இறங்கி வந்து தண்டனைக் கொடுக்கப் போவதில்லை! அதனால் அவன் கடவுளைப் பார்த்துப் பயப்படப் போவதும் இல்லை!

அதனால் நாம் சொல்ல வேண்டியது ஒன்று தான். இனி புதிய தேர்தல் நடந்து, நாடாளுமன்றம் கூடும் போது முதல் தீர்மானம் கட்சித் தாவல் குற்றம் என்று  சட்டம் இயற்றுவது தான். அதை விட வேறு முக்கியமானது ஏதும் இல்லையே!


Sunday 7 March 2021

இது சரியான தருணமா?

 குடிநுழுவுத்துறை ஓரிரு நாள்களுக்கு முன்னர் புடு அடுக்குமாடி குடியிருப்பில் மேற்கொண்ட அதிரடி சோதனையில் சுமார் 205 வெளி நாட்டினர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

இது செய்தி. இதில் ஏதும்  தவறு இருப்பதாகத் தெரியவில்லை. குடிநுழுவுத்துறை தனது கடமையைச் செய்கிறது. அவர்களது கடமையுணர்ச்சியை நாம்  பாராட்டுகிறோம்.

ஆனால் நமக்குள்  ஒரு கேள்வி எழுகிறது.  சோதனை செய்வதற்கு இது சரியான தருணமா என்கிற கேள்வி.

கோவிட்-19  தொற்று அப்படி ஒன்றும் குறைந்ததாகத் தெரியவில்லை. தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகளை சுகாதாரத் துறை பதிவு செய்கிறது.

இந்த நேரத்தில் இந்த சோதனையின் நோக்கம் என்ன?  அதன்  பின்னணியில் அரசியல் இருக்கிறதா என்கிற சந்தேகம் எழுகிறது!

வெளி நாட்டுத் தொழிலாளர்கள்  இன்னும் சட்டத்தை மீறி நாட்டில் தங்கியிருப்பவர்கள்  இவர்களில் பலர் கோவிட்-19 தடுப்பூசி கட்டுப்பாட்டுக்கள்  வரவில்லை. சமீபத்தில் அந்நிய நாட்டவர்கள் கோவிட்-19 தொற்றின் பரிசோதனையின் போது சுமார் 49 பேர் தொற்று பரவியிருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டிருக்கின்றன. பரிசோதிக்கப்பட்டோர் சுமார் 7,000 பேருக்கு மேற்பட்டோர். இது சட்டப்படி வேலை செய்கின்றவர்களின் நிலை.  சட்டத்தை மீறி தங்கியிருப்பவர்  நிலை என்ன? அவர்கள் பரிசோதனைக்காக வரப் போவதில்லை.

இப்படி இது போன்ற அதிரடி சோதனைகள் செய்யும் போக்கு நீடித்தால் அவர்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து வெளி வரப்போவதில்லை! அவர்களில் எத்தனை பேர் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரியப் போவதுமில்லை!

நாம் சொல்ல வருவதெல்லாம் இது போன்ற அதிரடி சோதனைகளினால்  மலேசியர்கள் தான் பாதிக்காப்படுகிறார்கள் என்பது தான். நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாது.  ஒரு பக்கம் தடுப்பூசி. இன்னொரு பக்கம் நோய் பரவுதல்!

நம்முடைய சந்தேகம் எல்லாம் தொற்று திட்டம் போட்டு பரப்பப்படுகிறதோ என்பது தான். அப்படி இல்லையென்றால் மிக்க மகிழ்ச்சி! இல்லையேல் அடுத்த பொதுத் தேர்தல் வரை இப்படியே போய்க் கொண்டிருக்க வேண்டி வருமோ என்கிற கவலை தான்!

காரணம் அரசியல்வாதிகள் அப்படி ஒன்றும் உத்தமர்கள் இல்லையே!

Friday 5 March 2021

நம்மால் ஏன் முடியவில்லை?

 உலகில் எந்த நாடுகளிலும் இந்தியர்கள் பெயர் வாங்கி விடுவார்கள். ஆனால் அது  மலேசியாவில் நடக்காது என்றே தோன்றுகிறது!

அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியினர் பல துறைகளில் பெயர் பெற்றவர்களாக இருக்கிறார்கள். அமெரிக்க அரசாங்கத்தை தவிர்த்து வேறு பல தனியார் துறைகளில் இந்தியர்கள் கொடிகட்டிப் பறக்கின்றனர்.

அதே சமயத்தில் அமெரிக்காவில் தனது  அரசாங்கத்தில் சுமார் 55  இந்திய வம்சாவளியினர்  பல துறைகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக அதிபர் ஜோ பைடன் கூறியிருக்கிறார்.  அவர்கள் திறமைசாலிகள் என்பதாகப் புகழாரம் சூட்டியிருக்கிறார்.  உலகில் வாழும் இந்தியர்களுக்கு அது பெருமை தரும் விஷயம் தான்! அதுவும் அது அமெரிக்க அதிபரின் வாயிலிருந்து வருகின்ற செய்தி  என்றால் சாதாரண விஷயம் அல்லவே!

சரி நமது பக்கம் வருவோம். இங்கு உலக அளவில் பெயர் பெற்ற இந்திய வம்சாவளியினர் என்றால் அது நமது முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் தான். ஆமாம் அவர் இந்திய வம்சாவளி தான். சிங்கப்பூரில் அவர் மருத்துவம் பயில சென்ற போது தன்னை அவர் இந்தியர் என்றே குறிப்பிட்டிருக்கிறார். அதற்கான ஆவணங்கள்  இருக்கின்றன. பின்னாளில் அரசியல் காரணங்களுக்காக என்னன்னவோ மாற்றம்!

சமீபகாலத்தில் நாட்டில் குடியேறிய இந்திய  மத போதகர் ஜாகிர் நாயக் இன்று உலகளவில் பிரபலமானவர் என்று குறிப்பிடலாம். பொதுவாக எல்லா நாடுகளும் அவரை அறிந்திருக்கின்றன. ஒரு நாடும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தான் ஏமாற்றத்திற்கு உரியது!

மற்றபடி யாரையும் நம்மால் குறிப்பிட முடியவில்லை. நல்ல கல்வியாளர், உலகப் புகழ் பெற்ற மருத்துவர் அல்லது விளையாட்டாளர் - இப்படி யாரும் இல்லை! ஒரு வேளை பனிச்சறுக்குப் போட்டியில் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் பெற்றால் சிறுமி அபிராமிக்கு அந்த பெயர் வர வாய்ப்புண்டு.

வருங்காலங்களில் அரசாங்கத்தால்  நமது பெருமைகள் புரிந்து கொள்ளப்படலாம். அல்லது படாமலும் போகலாம். அதற்காக நாம் திறமையற்றவர்கள் என்று சொல்ல முடியுமா?

ஆனால் நாம் அப்படித்தான் சொல்லப்படுகிறோம்! அப்படித்தான்  சொல்லப்பட்டு வருகிறோம்! அது தான் கொடுமை!

இந்நாட்டில் கல்வியாளர் என்றால் அது இந்தியர்களைத்தான் குறிக்கும்.  ஆனால் இன்று அது கூட நம்மிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டது! நமது கல்வியாளர்கள் தான் சிறந்த ஆட்சியாளர்களை உருவாக்கினார்கள். ஆனால் இன்று எத்தகைய அரசியல்வாதிகள் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் கொஞ்சம் திரும்பிப்   பார்த்தாலே போதும்! இன்றைய கல்வியாளர்கள் யார் என்பது புரியும்!

எப்படியோ அதிபர் ஜோ பைடனைப் பாராட்டுவோம்.  திறந்த மனதுடன் இந்தியர்களின் திறமையைப் பாராட்டியிருக்கிறார். பாராட்டுவது என்பது எவ்வளவு கடினமானது என்பதை நடைமுறையில் நாம் பார்க்கிறோம். பாராட்டுவது என்பது கூட "இவன் என்ன ஜாதி! இவன் என்ன மதம்! இவன் எந்த நாடு!" என்கிற பின்னணியைப் பார்த்துத் தான் வருகின்றது!

நம்மால் ஏன் முடியவில்லை?  முடியும்! அதற்கும் நேரம் காலம் உண்டு!

Thursday 4 March 2021

மித்ராவின் நிலை என்ன?

 எந்த பெயரில் அழைத்தாலும் சரி - அது செடிக் அல்லது மித்ரா - எப்படிச் சொன்னாலும் அந்த உதவி நிதி இந்தியர்களுக்குப் போய்ச்  சேரவில்லை என்பதில் தான் போய் முடிகிறது!

இதில் ம.இ.கா.வினர் மிகத் திறமைசாலிகள். கொடுக்க வேண்டியதைக் கொடுத்துவிட்டு, எடுக்க வேண்டியதை எடுத்துக் கொண்டு மீதமுள்ளவைகளை நல்ல பிள்ளைகளைப் போல  அப்படியே கொண்டு போய் அரசாங்கத்திடம் ஒப்படைத்து விடுவது என்கிற அவர்களின் கொள்கை அவர்கள் வட்டாரத்தில் அவர்களுக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுக்கிறது!  இந்தியர்களுக்கு கிடைத்ததெல்லாம் நாமம் மட்டும் தான்!

பக்காத்தான் ஆட்சி தொடர்ந்திருந்தால் பணத்தை எப்படி எப்படியோ கொடுத்து முடித்திருப்பார்கள்!  பணம் இந்தியர்களின் தொழில் முன்னேற்றத்திற்கு உதவுகிறதோ இல்லையோ வேறு வகையில் இந்தியர்களுக்குப் போய்ச் சேர்ந்திருக்கும். ஏதோ கோவில் குளம், புனிதப்  பயணம், சில பல இயக்கங்கள் என்றாவது போய்ச் சேர்ந்திருக்கும். இப்போதெல்லாம் தொழில் துறையில் இளைஞர்கள் எந்த அளவுக்கு ஆர்வம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதை மித்ராவால் கணிக்க முடியவில்லை!

ஆனாலும் வழக்கம் போல் தொழில் துறையில் இருக்கும் இளைஞர்கள் மித்ராவிலிருந்து உதவிகள் கிடைக்க வாய்ப்பில்லை என்று தான் சொல்லிக் கொண்டு வருகிறார்கள்! காரணம் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் கொடுத்துவிட்டு  அதாவது வளர்ந்து விட்ட தொழிலதிபர்களுக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு வளர்கின்ற தலைமுறையினரை புறக்கணிப்பது என்பதாக இந்த தரப்பு குற்றம் சாட்டுகிறது!

யாரையும் குற்றம் சொல்லி புண்ணியமில்லை. வளர்ந்துவிட்டவர்கள் யார் என்று கண்ணுக்குப் பளிச் என்று தெரிகிறது!  வளராதவர்கள் இன்னும் தடுமாற்றத்திலேயே இருப்பதால் அவர்களால் தங்களது வளர்ச்சியை உறுதிபடுத்தப்பட முடியவில்லை! அதனால் அவர்களால் எந்த அமைப்பிலிருந்தும் பயன் பெற முடிவதில்லை!

எப்படியோ தொழில் செய்ய ஆர்வமுல்ல இளைஞர்கள் மித்ராவை நம்பியோ செடிக்கை நம்பியோ தொழிலை ஆரம்பிப்பதில்லை! எல்லாமே சொந்தப் பணம், சொந்த முயற்சி, சொந்த ஏற்றத் தாழ்வுகள் - எல்லாமே தங்களின் அனுபவத்திலிருந்து கற்றுக் கொண்டவைகள் தாம்! அதனால் தான் அவர்களால் தொழிலில்  நீடிக்க முடிகிறது!

வருங்காலங்களிலாவது இந்த அமைப்புகளின் மூலம் நல்லது நடக்கும் என எதிர்பார்ப்போம்!


Wednesday 3 March 2021

யாருக்குத்தான் பயப்படுவது!

 யாருக்குத்தான் பயப்படுவது என்பதில்  கூட ஒரு விவஸ்தை இல்லாமல் போய்விட்டது!

அடிதடி கும்பல், இரகசிய கும்பல், குண்டர் கும்பல் இப்படி  எததனையோ கும்பல்களைப் பற்றி நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். அவர்கள் கத்தியால் குத்திக் கொண்டார்கள்,  வாளால் வெட்டிக் கொண்டார்கள், துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார்கள என்று பல! இன்னும் குண்டர் கும்பல் தாக்கல்,  குண்டர் கும்பல்களிடையே கைகலப்பு இப்படியாக ஒரு வகைச் செய்திகள்!

பொது மக்களுக்கு இது போன்ற செய்திகள் எல்லாம் நடுக்கத்தைக் கொண்டு வரும்!

ஆனால் இப்போது நாட்டில் புது வகையான செய்தி ஒன்று பரவிக் கொண்டிருக்கிறது. ஜொகூர் மாநில காவல்துறைத் தலைவர்  டத்தோ  அயூப் கான் மைதீன் பிச்சை கூறியிருப்பதைப் பார்க்கும் போது "யாரைத்தான் நம்புவதோ ஏழை நெஞ்சம்!" என்று பாட வேண்டும் போல் தோன்றுகிறது!

டான் ஸ்ரீ, டத்தோ ஸ்ரீ  என்று நம்பப்படும்  நபர்களிடம்  எச்சரிக்கையாய் இருங்கள் என்று பொது மக்களை அறிவுறுத்திருக்கிறார் டத்தோ அயூப் கான்! இவர்கள் போலீஸாரையே மிரட்டுகிற அளவுக்குச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்களாம்! எல்லாம் நேரம் தான்!

ஆனால் இந்த நபர்களின் டான் ஸ்ரீ, டத்தோ ஸ்ரீ விருதுகள் மலேசிய அரசாங்காத்துடையது அல்ல என்கிறார் காவல்துறைத் தலைவர்.  சில ஆண்டுகளுக்கு முன்னர் சபா மாநிலத்தைச் சொந்தம் கொண்டாடிய சுலு சுல்தான் என்பவர் இது போன்ற விருதுகளைக் கொடுப்பதாக செய்திகள் வெளியாயின.  பட்டங்கள் பெற இங்கு பணமே பிரதானம்!ஆக, அது இன்னும் தொடர்கிறது என்றே தெரிகிறது.

ஆனால் நமக்குத் தெரிந்தது எல்லாம் இந்த, உள்ளுரா வெளியுரா,  என்பதை எப்படி அறிந்து கொள்ளுவது? இதற்குக் காவல்துறை தான்  ஒரு முடிவை எடுக்க வேண்டும். அரசாங்கத்தால் ஏற்கப்படாத, குறிப்பாக டான்ஸ்ரீ, டத்தோஸ்ரீ வீருதுகளைப் பயன்படுத்துபவர்களைக் கண்காணிக்க வேண்டும். இவர்கள் மக்களை ஏமாற்றுபவர்கள் என்று தெரிந்தவுடன் அவர்கள் மேல் நடவடிக்க எடுக்க வேண்டும்.

இந்த வித்தியாசங்கள் எல்லாம் பொது மக்களுக்குத் தெரிய நியாயம் இல்லை. இப்படியெல்லாம் மக்களைப் பயமுறுத்திக் கொண்டிருந்தால் யாருக்குத்தான் பயப்படுவது! ஒரு பக்கம் பட்டமே இல்லாமல் பட்டாக்கத்தியை வைத்துக் கொண்டு  பயமுறுத்துகிறான்! இன்னொரு பக்கம் பட்டம் பதவிகளை வைத்துக் கொண்டு பயமுறுத்துகிறான்!

என்னவோ நடவடிக்கை எடுத்தால் சரி!

Monday 1 March 2021

ஊகும்! இவர் அசையமாட்டார்!

 ஒன்று தெரிந்துவிட்டது! இவர் எதற்கும் அசைகிற ஆளில்லை! அதைத்தான் கள நிலவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன!

நமது பிரதமரைப் பற்றி தான் பேசுகிறேன்.  என்னன்னவோ சொன்னார்கள். என்னன்னவோ பேசினார்கள். என்னன்னவோ எழுதினார்கள்.  ஆனாலும் ஆடாமல், அசையாமல் அப்படியே தான் இருக்கிறார்! எதற்கும் அசைபவராகத்  தெரியவில்லை! அவரைப் பற்றி எழுதியவர்கள் தான் அசந்து போனார்கள்!

அவர் மீது சொல்லப்பட்ட குறைபாடுகள், அவதூறுகள் அனைத்தும் அப்படியே தான் இருக்கின்றன! நாட்டிலும் எதுவும் அசையவில்லை. அப்படியே தான் இருக்கின்றன.

ஆனாலும்,  அவரும்  அப்படியே தான் இருக்கின்றார்! எந்த கொம்பனாலும் ஒன்றும் செய்ய முடியவில்லையே!

ஒருவன் போனால் இன்னொருவன் வந்து விடுகிறான்!  இரண்டு குறைவா இதோ இப்போது இரண்டு வந்துவிட்டது! அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்கிறார்கள்!  கோடிக்கணக்கான பணம்  கைம்மாறுகிறது.

அரசியலுக்கு  ஏதோ பெரிய கோட்பாட்டுடன் வருகிறார்கள். பின்னர் பார்த்தால் பணம் தான் ஆகப்பெரும் கோட்பாடு!

சே! இந்த அரசியல்வாதிகளை நினைத்தாலே கோபம் தான் வருகிறது. இப்போதே தேர்தலை நடந்துதுங்கள் என்று சொல்ல மாட்டேன். பிரதமருக்கான வாய்ப்பு உங்களுக்கு வந்துவிட்டது.  உங்களுடைய சேவைகளை நிறுத்தி விடாதீர்கள். தொடர்ந்து ஆக்ககரமாகச் செயல்படுங்கள்.  அதைத்தான் நான் இங்கு சொல்ல வருகிறேன்.

எப்படியோ இந்த நாட்டு மக்கள் உங்களைப்  பிரதமராக ஏற்றுக் கொண்டார்களோ இல்லையோ அதைப்பற்றியெல்லாம் இப்போது யாருக்கும் கவலையில்லை!  நடக்கக்கூடாதது நடந்துவிட்டது! வேறு  வழி இல்லாமல் நீங்கள் தான் எங்கள் பிரதமர்! 

இப்போதைய தேவையெல்லாம் நீங்கள் நாட்டின் நலனைச் சிந்தியுங்கள். இந்நாட்டுப் பிரதமராக நடந்து கொள்ளுங்கள். அதுவே எங்களது வேண்டுகோள்.