Tuesday 29 September 2020

ஜ.செ.க. சீனர்கள் கட்சியா?

 ஜனநாயக செயல் கட்சி சீனர்கள் கட்சி என்கிற ஒரு குற்றச்சாட்டு எப்போதுமே நமது மலேசிய அரசியலிலே உள்ள ஒரு குற்றச்சாட்டு!

தேர்தல் காலங்களிலே இது பற்றியான பேச்சு கொஞ்சம் அதிகப்படியாகவே நமது காதில் விழும்! 

ஆனால் அதனை எப்படி நாம் பார்க்கிறோம்?  உண்மையைச் சொன்னால் அது ஒரு சீனர்கள் கட்சி என்பதாகத்தான் நாமும் பார்க்கிறோம் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

காரணம் பெரும்பாலான அதன் ஆதரவு என்பது பட்டணப்புறங்களிலிருந்து தான் வருகிறது என்பது ஒன்றே போதும் நாம் அப்படி குறிப்பிடுவதற்கு! நாம் அப்படி சொன்னாலும்  இந்தியர்களைப் பொருத்தவரை நமது இனத்தவர்கள் பலர் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் அக்கட்சியைப் பிரதநிதிக்கின்றனர் என்பது நல்ல விஷயம் தான். அவர்களில் பலர் சீனர்களின் ஆதரவோடு தான் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதற்கும் ஒரு காரணம் உண்டு என நான் நினைக்கிறேன். ஜ.செ.க. என்பது இத்தனை ஆண்டுகளாக ஓர் எதிர்கட்சியாகவே செயல்பட்டு வந்திருக்கிறது. பல இடங்களில் அக்கட்சி மாநில அளவில் அவர்களின் கிளைகளை வழிநடத்த சீனர்கள் ஆர்வம் காட்டவில்லை என்பதையும் நாம் பார்க்க வேண்டும். அதனால் அவர்களுக்கு இலாபமில்லை.  இந்த நேரத்தில் தான் அவர்களின் இடங்களை நிரப்புவதற்கு இந்தியர்கள் உள்ளே புகுந்தார்கள்! அவர்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக்கள் கிடைத்தன!

சென்ற பொதுத் தேர்தலில் பக்காத்தான் கட்சி ஆட்சியைப் பிடித்தது. அதனால் ஜ.செ.க. வின் செல்வாக்கும் உயர்ந்தது என்பதும் உண்மை! ஆனால் எதிர்பாராத விதத்தில் அந்த அரசாங்கம் கவிழ்ந்தது!  அதனை மீண்டும் - பக்காத்தான் ஆட்சியைக் கொண்டுவர - டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் களத்தில் இறங்கியுள்ளார். அவர் வெற்றிபெறுவார் என நம்புவோம்.

அரசாங்கத்தில் பங்குப் பெறக் கூடிய வாய்ப்புக்கள் இருந்தால் வருங்காலங்களில் ஜ.செ.க. செல்வாக்கு உயரும். அதே சமயத்தில் இந்தியர்களைப் புறக்கணிக்கும் போக்கும் ஆரம்பமாகும்! 

இப்போதே நாம் ஒரு சில விரும்பத்தகாத விஷயங்களைப் பார்க்கிறோம். சீன மொழிக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் தமிழுக்குக் கொடுப்பதில்லை!  அதனை அவர்கள் சரி செய்வார்கள் என நம்புவோம். 

இப்போதைக்கு நாம் ஜ.செ.க. வை சீனர்களைச் சார்ந்த கட்சி என்று சொன்னாலும் அது மலேசியர்கள் கட்சி என்கிற அடையாளமே நிலைத்து நிற்கும்.

அந்த நிலை விரைவில் வரும் என நம்புவோம்!

இது தான் பெருந்தன்மையா?

 அம்னோ தரப்பிலிருந்து இப்போது நிறைய தடவை  பெருந்தன்மையப் பற்றி பேச்சுக்கள் எழுகின்றன!

அம்னோவுக்கும் பெருந்தன்மைக்கும் என்ன சம்பந்தம் என்று நமக்குப் புரியவில்லை!

அப்படி என்ன பெருந்தன்மையோடு இவர்கள் நடந்து கொண்டார்கள்? 

முதலில் இவர்கள் எந்த காலத்தில் பெருந்தன்மையோடு நடந்து கொண்டார்கள் என்று பார்த்தோமானால் அவர்கள் எந்த காலத்திலும் பெருந்தன்மையோடு நடந்து கொள்ளவில்லை என்கிற பதில் தான் வரும்!

இப்போதும் கூட ஒரு சில அரசியல்  காரணங்களுக்காக அவர்கள் தங்களது "பெருந்தன்மையை" விட்டுக் கொடுக்க வேண்டிய சூழலில் இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்! அது அவர்களுக்கும் தெரியும்! இதிலே என்ன பெருந்தன்மை?

பிரதமர் பதவியை விட்டுக் கொடுத்தார்களாம்!  அதைத்தான் நீங்கள் செய்ய முடியும்! வேறு என்ன உங்களால் செய்ய முடியும், சொல்லுங்கள்?  பேராக் மாநிலத்திலும் இதே நிலை தான்! கூடுதலான இடங்கள் இருந்தும் "நாங்கள் விட்டுக் கொடுத்தோம்!" என்று சொல்லிக் கொண்டே இருங்கள்.  ஆகப் போவது ஒன்றுமில்லை! அதைத்தான் நாம் சொல்ல நேரிடும்! சபாவிலும் அதே நிலை தான்.

ஏன்? இப்படி ஒரு நிலை உங்களுக்கு ஏற்பட என்ன காரணம் என்று உங்களுக்குத் தெரியாதா!  

ஆமாம்! மற்றவர்கள் எல்லாம் பேரும் புகழும் சேர்த்து வைத்தால் நீங்கள் ஊழல், ஊழலாக சேர்த்து வைத்திருக்கிறீர்களே அது போதாதா உங்களின் பெருந்தன்மைக்கு? இப்போது மக்களிடையே  உங்களின்  முகத்தைக் காட்டுவதைக் கூட எவ்வளவு கேவலமாக நீங்கள் நினைக்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியாதா!

உங்களின் அரும்பெரும் பிறப்புக்களான நஜிப்-ரோஸ்மா- ஸாஹிடி - போன்ற பிறப்புக்கள் இருக்கும் வரை நீங்கள் இப்படித் தான் பெருந்தன்மையோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்!

இந்த நேரத்தில் இப்படி ஒரு பெருந்தன்மை உங்களுக்கு வந்ததற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம்!  ஆமாம் அது தான் எங்களுக்குத் தேவை. நீங்கள் மக்களிடம் சென்று உங்கள் முகத்தையே காட்டக் கூடாது என்பது தான் எங்களது விருப்பம்!

இனி எந்த காலத்திலும் உங்களின் ஆட்சி அமையாது என்பதில் மலேசியர்கள் உறுதியாக இருக்கிறார்கள்! அதற்காக இனி நீங்கள் பெருந்தன்மையோடு இருக்க வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு

Monday 28 September 2020

நோபல் பரிசு தொகை அதிகரிக்கப்பட்டது!

 இவ்வாண்டு முதல் நோபெல் பரிசு தொகை அதிகரிக்கப்படுகிறது!

அதிர்ஷ்டசாலி யார் என்றெல்லாம் கேட்கக் கூடாது. எல்லாம் உழைப்பு, உழைப்பு, உழைப்பு தான்!

பரிசு வாங்குபவர்கள் யாரும் வெறும் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்த முடியாது. அதற்கெல்லாம் அது இடமில்லை.  அதனை நம் நாடுகளிலே பார்க்கலாமே தவிர நோபெல் அறக்கட்டளை அதற்கான இடமில்லை!

 இப்போது நோபெல் பரிசின் தொகை $110,000 டாலராக உயர்த்தப்பட்டிருக்கிறது.  சுவீடன் நாட்டு விஞ்ஞானி ஆல்ஃரெட் நொபெல் என்பவரால் 1901 ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த அறக்கட்டளை இன்றளவும் தனது பணிகளைச்  செவ்வனே செய்து கொண்டிருக்கிறது.

 நொபெல் பரிசு என்பது பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்தவர்களுக்கான ஓர் அங்கீகாரம் எனச் சொல்லலாம். உலக சமாதானம், இலக்கியம், விஞ்ஞானம், பொருளாதாரம், மருத்துவம் என்று பல்வேறு துறைகளில் சாதனைப் புரிந்தவர்கள் இந்தப் பரிசுகளுக்கு உரியவர்களாக நிபுணத்துவ குழுக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

1901 - ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நொபெல் பரிசு இன்றளவும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இடையே தவிர்க்க முடியாத சில காரணங்களால் தடைப்பட்டாலும் அதனுடைய உன்னதமான நோக்கம் தடைப்படவில்லை.

இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். அதிகமான நோபல் பரிசுகளை வென்றவர் யாராக இருக்க முடியும்? நமக்குப் பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ அவர்கள் யூதர்கள் என்பது தான் ஆச்சரியம்! அதாவது இஸ்ரேல் நாட்டில் உள்ளவர்கள் மட்டும் அல்ல இஸ்ரேல் அல்லாத மற்ற நாடுகளில் உள்ள யூதர்களையும் சேர்த்துத் தான். 

இதுவரை   யூதர்கள் மட்டும் 182 பேர் நோபெல் பரிசுகளை வென்றிருக்கின்றனர்!  அதாவது உலக மக்கள் தொகையில் 0.2% விழுக்காடு தான் யூதர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் தான் உலக பொருளாதாரத்தில் 70% விழுக்காட்டை கையில் வைத்திருக்கின்றனர்! அது மட்டும் அல்ல நான், நீங்கள்,  நாம் அனைவரும் பயன்படுத்தும் அன்றாடப் பொருட்களில் ஏதோ ஒரு வகையில் அவர்கள் கண்டுபிடித்த கண்டுபிடிப்புக்கள் இருக்கின்றன!   ஒதுக்க முடியுமா?

நம்மைப் பொறுத்தவரை வருங்காலங்களில் நமது தமிழ்ப்பள்ளிகளைத் தான் நாம் நம்பியிருக்கிறோம்.  இந்த மாணவர்கள் தான் உலக அளவில் தங்கங்களை வாரிக்குவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் மூலம் தான்  தனிப்பட்ட சாதனைகளை - நோபெல் பரிசுகளை எதிர்பார்க்கிறோம்.

நல்லது நடக்கட்டும். பரிசு தொகைகள் இன்னும் கூடும். பேரும் புகழும் கிடைக்கும். வாழ்த்துகிறோம்!

Sunday 27 September 2020

ம.இ.கா. மகளிர்க்கும் தான்!

 இந்தியப் பெண்களைக் கேவலப்படுத்தும் ஒரு கட்சி என்றால் அது ம.இ.கா. வாகத்தான் இருக்க முடியும்!

காரணங்கள் உண்டு. பெண்கள் தான், ஆண்களை விட, ம.இ.கா.வை அதிகம் எதிர்ப்பவர்கள். இதனை சென்ற பொதுத் தேர்தலில் கண்டோம். 

பொதுவாக ம.இ.கா.வில் பெண்களுக்கான பங்கு எதுவும் இல்லை.  அவர்கள் செய்வது எல்லாம் முட்டாள்களுக்கும் மலர் தூவி வரவேற்கும் முட்டாள்கள் வேலை!  

இதனை வேறு, அவர்களைச் சார்ந்த கட்சிகளில், செய்கிறார்களா பாருங்கள்?  அவர்கள் செய்ய மாட்டார்கள்! செய்யக் கூடாது என்பது சீனப் பெண்களுக்கும் மலாய் பெண்களுக்கும் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கும் பாடம். 

அதனை நாம் சொல்லிக் கொடுக்கவில்லை.   மலர் தூவி வரவேற்பது தான் பெண்களின் வேலை என்பதாக நாம் பழக்கப்படுத்தியிருக்கிறோம்!

முட்டாள்கள் வேறு என்ன சொல்லிக் கொடுப்பார்கள்?  பெண்கள் முட்டாள்களாகத்தான் இருக்க வேண்டும் என்பது தான் அவர்கள் சொல்லிக் கொடுப்பார்கள்!

ஜ.செ.க. வின் சபாய் சட்ட மன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜ் அப்படி என்ன செய்து விட்டார்?  அப்படி என்ன செய்தாலும் அது பற்றி எங்குப் பேச வேண்டுமோ  அங்குப் பேச வேண்டும். அதான் சட்டமன்றம் இருக்கிறதே அங்குப் பேசலாம். அங்குப் பேச வக்கில்லாத ஒரு கட்சி என்றால் அது ம.இ.கா. தான்!

இங்கு ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ம.இ.கா. தலைமைத்துவும் என்ன சொல்லுகிறதோ அதைத் தான் இந்த வாலாட்டிகள் செய்யும். அதைத் தான் அவர்கள் செய்தார்கள்! ஆக, குற்றம் செய்பவர்கள் கட்சியை இயக்கிக் கொண்டிருக்கும் தலைவர்கள் தான்!

அவர்கள் இந்திய பெண்கள் மலர் தூவி வரவேற்கும் ஒன்றே போதும் என்று நினைப்பவர்கள்!  அவர்கள் வீட்டுப் பெண்கள் மட்டும் பெரிய பதவிகளில் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்!

இவர்களைத் தான் நாம் நம்புகிறோம். ஏதோ நம்மைக் காப்பாற்ற வந்த வாராது போல் வந்த மாமணிகள் என்று நினைக்கிறோம்!

இத்தனை ஆண்டுகள் நம்மைக் குப்பைத் தொட்டியில் வீசிய இந்த ஜென்மங்கள் இனி மேல் மட்டும் நம்மைக் கோட்டைக்கா கொண்டுப் போகப் போகிறார்கள்?

பெண்களை இழிவு படுத்துகிறார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு வக்கிர புத்தி உடையவர்களாக இருக்க வேண்டும். ம.இ.கா.வினரைத் தவிர வேறு யாரும் இதனைச் செய்ய மாட்டார்கள் என்பது தான் உண்மை!

பெண்களே! நீங்கள் தான் இந்த சமூகத்தில் ஆண்களை விட விழிப்புணர்வு உள்ளவர்களாக இருக்கிறீர்கள். அதனைத் தொடருங்கள். . ம.இ.கா. மாதர்கள் பூ தூவி புன்னைகையோடு வரவேற்கட்டும்!

நாம் அவர்களிடமிருந்து விலகி நிற்போம்! நாம் யார், நமது பெண்கள் யார் என்பதை அவர்களுக்குக் காட்டுவோம்!

Saturday 26 September 2020

யார் முதலில்? எலியா மனிதனா!

 


 

 இதையெல்லாம் பார்ப்பதற்குக் கோபம் தான் வருகிறது!

கோலாலம்பூர் மாநகர் மன்றம் நடத்திய திடீர் சோதனையில் பிரபலமான ஒரு ரொட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் கண்டறிந்தவை:

ரொட்டிகளைத் தயாரிக்க கழிவறை நீரைப் பயன்படுத்துவது  தெரிய வந்தது. அதன் தரைகள் அழுக்காகவும், ஈரமாகவும் இருந்தன.  ரொட்டி தயாரிக்கப் பயன்படுத்தும் பொருள்கள் அனைத்தும் தரையில் கிடந்தன.  அழுக்குப் படிந்த சுவர்கள். எங்குப் பார்க்கினும் எலிகளின் எச்சம்! அத்தோடு வேலை செய்யும் அந்நியத் தொழிலாளர்களுக்கு தைஃபாய்ட் ஊசி போடப்பட்டிருந்தன. 

அடுத்த நாளே அந்த ரொட்டிதொழிற்சாலை மூடப்பட்டது! சுபம்! 

இதைத்தான் மாநகரத்திடமிருந்து நாம் எதிர்பார்க்கிறோமா என்று நாம் கேட்கலாம் தானே! இவர்கள் திடீர் திடீரென்று சோதனைகள் செய்வார்களாம்.   அப்போது இது போன்ற அயோக்கியத்தனங்களைக் கண்டு பிடிப்பார்களாம்!

ஆனால் இந்த தொழிற்சாலைகள் செய்கின்ற ரொட்டிகளை இத்தனை நாள்களாக, இத்தனை மாதங்களாக நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோமே அதற்கு இந்த மாநகரம் என்ன பதிலை வைத்திருக்கிறது? 

பொது மக்களைக் கேட்டால் என்ன சொல்லுவார்கள்? அதற்கு ஒரு பதிலை பொது மக்கள் வைத்திருக்கிறார்கள். "பணத்தை வாங்கிக்கிட்டு விட்டுறானுங்க!"  என்கிற பதில் எல்லாரிடமிருந்து வரும்!

நமது கேள்வி அவர்களின் உரிமம் ஏன் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது என்பது தான். இது உணவு சம்பந்தப்பட்ட ஒரு விஷயம். அது எப்படி எதோ நாய்கள் சாப்பிடுகின்ற உணவுகளைப் போல மாநகரம் பார்க்கின்றது என்பது தான் நமக்குப் புரியவில்லை!

இது போன்ற தொழிற்சாலைகள் நிரந்தரமாக மூடப்பட வேண்டும் என்பது தான் நமது வேண்டுகோள். சமரசம் கூடாது என்பது தான் நமது நிலை!

அது சரி! இவர்களின் ரொட்டிகளை முதலில் சாப்பிடுவது எலிகளா, மனிதர்களா?

Friday 25 September 2020

பாடுவதை நிறுத்தியது பாடும் நிலா

 

 
 
 
 
 
 
பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைந்தார்.  நீங்கள் படிக்கின்ற இந்த நேரம் இது பழைய செய்தி.
 
பழையதோ புதியதோ மிகவும் வேதனை தரும் செய்தி.  நேற்று, 25.9.2020, வெள்ளிக்கிழமை, நண்பகல் 1.04 மணிக்கு, இந்திய நேரப்படி, சென்னையில் காலமானார்.  அவருக்கு வயது 74. 

கொரோனா தொற்று நோயினால் மரணமடைந்த பிரபலமான முதல் பலி.

அவர் பிறந்தது சென்னை மாகாணத்தில், சென்னையை ஒட்டிய நல்லூர் என்கிற  கிராமத்தில் 4-ம் தேதி,  ஜூன் மாதம்,  1946-ம் ஆண்டு.
 
தமிழ்ப்பட உலகில் கொடிகட்டிப் பறந்தவர் எஸ்.பி.பி.  அவர் பதினாறு இந்திய மொழிகளில் பாடியவர்.  தமிழில் அதிகமாகப் பாடியவர்.  உலக அளவில் தமிழர்களின் மனதைக் கவர்ந்தவர். மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கங்கள் அவருக்குப் பல விருதுகள் கொடுத்து அவரைக் கௌரவித்திருக்கின்றன.

அவர் சுமார் 42,000 பாடல்களைப் பாடியவர். அதற்காக கின்னஸ்  உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றவர்.

இசையின் மீது உள்ள பற்றுதலினால் தனது இரண்டு பிள்ளைகளுக்கும் ராகங்களின் பெயரை வைத்திருக்கிறார். சரணம், பல்லவி  - இவர்கள் தான் எஸ்.பி.பி. சரண், பல்லவி. 
 
அவர் மரணமடைந்து விட்டார் என்பது உண்மை தான். ஆனால் அவரது குரல் ஒலிக்காத நேரமில்லை, காலமில்லை  எக்காலமும் ஒலித்துக் கொண்டே இருக்கும். நாமும் எந்த நிமிடத்திலும், எந்த நேரத்திலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். 
 
பாடுவதை நிறுத்தினாலும் பாடியவைகளை நிறுத்த முடியாது!
 

பேராசிரியர் சொல்வது சரியா?

 வட மலேசியா பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் சிவப்பிரகாசம் இராஜேந்திரன் கூறிய ஒரு கருத்து இப்போது நமது பத்திரிக்கைகளில் விவாத மேடை ஆகிவிட்டது!

தாய் மொழிப்பள்ளிகளினால் ஒருமித்த கருத்துடைய மலேசியர்களை உருவாக்க முடியாது என்கிற அவர் கருத்தை நாம் ஆதரிக்கவில்லை.  அது நமது கருத்துக்கு விரோதமான கருத்தை அவர் கூறியிருக்கிறார். 

அது பற்றி பேசும் முன் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும்.  அவர் சார்ந்த சமூகம் என்றோ தமிழை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டது. 

ஆமாம் அவர்களைப் பொறுத்தவரை தமிழ் என்பது தமிழ் நாட்டிலிருந்து வந்த தோட்டக் கூலிகளால்  பேசப்படுகின்ற ஒரு மொழி.  கூலிகளால் பேசப்படுகின்ற ஒரு மொழியை உயர்ந்த நிலையில் இருக்கும் யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு அது ஏற்ற மொழி அல்ல என்பதாக அவர்கள் தமிழை ஒதுக்கி விட்டனர். 

ஓர் உண்மையை அவர்கள் மறந்துவிட்டனர்.  அவர்கள் இங்கு கூலிகளாக இல்லாவிட்டாலும் அங்கே அவர்கள் கூலிகளாக இருந்தவர்கள் தான்!  இல்லாவிட்டால் இங்கே இந்த நாட்டில் அவர்களுக்கு என்ன வேலை என்கிற கேள்வி நியாயம் தானே!

ஆரம்ப காலங்களில் அவர்கள் தமிழை வளர்த்தனர்.  தமிழ்ப்பள்ளிகளை நடத்தினர். அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் தமிழப் படித்தனர். அப்படிப் படித்தவர்களில் மலேசிய பணக்காரர்களில் ஒருவரான ஆனந்தகிருஷ்ணன், பூப்பந்து விளையாட்டு வீரர் பஞ்ச் குணாளன் இப்படி இன்னும் பலர்.

ஆனால் இவர்கள் பள்ளிகளில் கூலிக்காரத் தமிழர்களின் பிள்ளைகளும் படிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால் அவர்கள் விழித்துக் கொண்டனர்.  அது அவர்களுக்குத் தனமானப் பிரச்சனையாகி விட்டது. 

அத்தோடு அவர்களின் தமிழ் மீதான நாட்டம் ஒரு முடிவுக்கு வந்தது! அத்தோடு வெறுப்பும் வந்தது! அத்தோடு புறந்தள்ளும் போக்கும் வந்தது! அதன் பிறகு அவர்கள் தமிழ் மொழியைத் முற்றிலுமாக துறந்து விட்டனர்!

இந்த நிலையில், அந்த சமூகத்தில் இருந்து வந்த ஒருவரை, தாய் மொழிப்பள்ளிகளைப் பற்றி பேசச் சொன்னால் என்ன பேசுவார்?

ஆங்கிலத்தையே தாய் மொழியாக ஏற்றுக் கொண்டு விட்ட ஒரு சமூகத்தினரின் கருத்தை அவர் பிரதிபலிக்கிறார், அவ்வளவு தான்! அது தமிழர்களின் கருத்தல்ல!

ஒன்றை அவர் மறந்து விட்டார். என்ன தான் ஊர்குருவி உயரே உயரே பறந்தாலும் பருந்து ஆக முடியாது என்பதை அவர் மறந்து விட்டார்! தமிழனை நம்பாமல் அவர் பேர் போட முடியாது! அது நினைவில் இருந்தால் போதும்!

Thursday 24 September 2020

அரசியல் மாற்றம் ஏற்படுமா?

 நாட்டு அரசியிலிலே ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது!

அரசியல் மாற்றம் ஏற்படுமா என்கிற ஓர் ஆர்வம் இப்போது ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

எந்நேரத்திலும் அரசாங்கம் கவிழலாம் என்கிற எதிபார்ப்பு நாட்டுக்கு நல்லதல்ல! அது தான் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. பெரிகாத்தான் அரசாங்கம் ஓர் இரண்டு பேர்களை வைத்துக் கொண்டு சர்க்கஸ் ஆட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது!

ஒரு நிலையான அரசாங்கம் இல்லாவிடில் என்ன நடக்கும் என்பதை இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்!  பெரிக்காத்தான் கூட்டணியில் உள்ளவர்கள் ஆடுகிற ஆட்டத்துக்கெல்லாம் பிரதமர் முகைதீன் ஆடிக்கொண்டிருக்கிறார்! என்ன செய்ய? அவர் தனது அரசாங்கத்தைக் காப்பாற்றிக் கொள்ள படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார் என்பது நமக்குப் புரிகிறது! ஏதோ கொரோனா தொற்று நோய் காரணமாக இத்தனை நாள்கள் அவர் பிரதமராக இருந்து கொண்டிருக்கிறார்!

இந்நேரத்தில்  அன்வார் இப்ராகிம்  அடுத்த பிரதமர் நான் தான்! மொகிதீன் அரசாங்கம் கவிழ்ந்தது என்பதாக அதிரடி அறிவிப்பைச் செய்திருக்கிறார்!  தனக்குப் போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக அவர் கூறுகிறார். 

இந்த நேரத்தில் நமக்கும் சில சந்தேகங்கள் இருக்கின்றன. மாமன்னர் இப்போது மருத்துவமனையில் இருக்கிறார். இந்த நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மாமன்னர் மருத்துமனையிலிருந்து வெளியான பின்னரே  என்ன நடக்கிறது என்கிற உண்மை நிலவரம் தெரிய வரும். 

மாமன்னர் வெளியாக ஒரு வாரமோ அல்லது பத்து நாள்களோ ஆகலாம்.  இந்த காலக் கட்டத்தில் என்ன நடக்கிறது, என்ன நடக்கும், என்ன குதிரை பேரங்கள் நடக்கும்,  எவன் எவன் ஓடுவான் ஒளிவான் - இந்த நிலையில் அன்வார் இப்ராகிமால் அரசாங்கம் அமைக்க முடியுமா என்று சோதித்துப் பார்க்கின்ற ஒரு இடைவெளியாகத் தான் இதனை நான் பார்க்கிறேன். 

இவ்வளவையும் மீறி அரசாங்கம் அமைந்தால் அன்வார் இப்ராகிம் அசைக்க முடியாத பிரதமராக அடுத்த தேர்தல் வரை நீடிப்பார் என நம்பலாம்.  அது நடக்கும் என எதிர்பார்க்கிறேன். 

ஒரே காரணம் தான். இவ்வளவு நம்பிக்கையோடு அரசாங்கம் அமைப்பேன் என்று அவர் கூறுகின்றார் என்றால் தன்னை பெரிய அளவில் உறுதிப்படுத்திக் கொண்டு தான் அவர் இந்த அறிவிப்பை வெளியிடுகின்றார் என நம்பலாம்.

அரசியல் மாற்றம் ஏற்படும் என நம்புகிறேன்!

Wednesday 23 September 2020

பத்தாய் விற்பது கேவலமா?

 சமீபத்தில் படித்த ஒரு செய்தி எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

செல்வகுமார் தர்மலிங்கம் என்னும் 22 வயது இளைஞர்,   பத்தாய் காய்களை விற்பனை செய்து வருகிறார்.  அதிசயம் ஒன்றுமில்லை!

 மற்றவர்கள் தன்னைக் காணவேண்டும், மக்களைக் கவர வேண்டும் என்பதற்காக கொஞ்சம் வித்தியாசமான முறையில் அதாவது ஸ்பைடர் மேன் பாணியில் உடை அணிந்து கொண்டு அவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார். அது அவரது பாணி. அது அவரது விளம்பரம். அது அவருக்குப் பணத்தைச் சம்பாதித்துக் கொடுக்கிறது.  அவர் கல்வியில் முன்னேற, வணிக பட்டதாரியாக அவருக்கு உதவியாக இருக்கிறது. 

விற்பனைக்கான தனது பத்தாய் காய்களை அவர் பூர்வீகக் குடியினரிடமிருந்து வாங்குவதாக சொல்லுகிறார். நேரடியாக வாங்குபவர்களோடும் சேர்த்து வீடுகளுக்கும் நேரடியாக ஆர்டர் கொடுத்தவர்களிடம் கொண்டு போய் செர்க்கிறார்.  நல்ல காயாக வேண்டுமானால் ஒரு வாரத்திற்கு முன்னரே ஆர்டர் செய்ய வேண்டுமாம்!


 ஒரு வித்தியாசமான அணுகுமுறையோடு செயல்படும் இளைஞர் செல்வகுமார் வருங்காலங்களில் வெற்றிகரமான தொழிலதிபராக வர முடியும் என்பதில் எந்த சந்தேகமில்லை.

ஆனாலும் ஒரு சில மனக்குறைகள் அவருக்குண்டு.  வழக்கம் போல நண்டு கதைகளைச் சொல்லி நம்மைத் தாழ்த்திக் கொள்ளும் பழக்கம் நம்மிடையே உண்டு. ஆனால் நண்டு கதை நம்மிடமிருந்து வரவில்லை என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நமது நாட்டில் இதனை ஆரம்பித்து வைத்தவர் காலஞ்சென்ற காப்புறுதித் துறையில் கொடிகட்டிப் பறந்த திரு. போல் நாயுடு (Paul Naidu) என்பதாக முன்பே நான் குறிப்பிட்டிருக்கிறேன்.  அதனை மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்த வேண்டிய அவசியமில்லை. காரணம் நாம் நண்டுகளில்லை!

அத்தோடு ஒரு சம்பவத்தையும் அவர் குறிப்பிடுகிறார்.  இளைஞர் ஒருவர் இவரைப் பார்த்து "தமிழன் மானத்தையே வாங்குகிறான்!" என்று சொல்லிவிட்டுப் போனாராம்! பொதுவாக தமிழர்கள் யாரும் இப்படிச் சொல்லுவதில்லை. மானத்தை வாங்க என்ன இருக்கிறது?

நம்மின இளைஞன் ஒருவன் தனது கல்விக்காக, தனது குடும்பத்திற்காக அவனது சொந்த உழைப்பைத் தனக்குத் தெரிந்த வழியில் செய்கிறான். ஆனால் அவன் 'தமிழன் மானத்தை வாங்குகிறான்' என்கிறான் ஒருவன்.  என்ன சொல்ல?   அப்படியென்றால் குடித்துவிட்டு அஞ்சடிகளில் கும்மாளம் அடிக்கிறவனை என்னவென்று சொல்லுவான்? எனக்குப் புரியவில்லை!

நண்பர்களே! இளைஞர்கள் பலர் தங்கள் முன்னேற்றத்திற்காக பலவித  வியூகங்களை வகுத்துச் செயல்படுகின்றனர்.  அவர்களைக் கேவலப்படுத்தாதீர்கள்! கொள்ளையடித்து மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளை விட இவர்கள் நல்லவர்கள்.  தனக்கென்று ஒரு வழியை ஏற்படுத்திக் கொண்டு முன்னேற நினைக்கும் இளைஞர் சமுதாயத்தைக் காயப்படுத்தாதீர்கள்.

பத்தாய் காய்கள், பந்துகள், பச்சை மிளகாய்கள் எதுவாக இருந்தால் என்ன விற்பவர்களைக் கேவலப்படுத்தாதீர்கள்!

இளைஞர் செல்வகுமார் வெற்றி பெற வாழ்த்துகள்!

Tuesday 22 September 2020

வெறும் மானியத்துக்காக மட்டுமா?

 

நெகிரி செம்பிலான் மாநிலம் என்பது பக்காத்தான் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் இதுவும் ஒன்று.

பக்காத்தான் அரசாங்கம் தமிழ்ப்பள்ளிகளுக்கு நிறையவே உதவி செய்கின்றது. நல்லது நடக்கும் போது நாம் பாராட்டுகிறோம். ஆட்சிக்குழு உறுப்பினர் ஜே.அருள்குமார் பாராட்டுக்குரியவர்.  வாழ்த்துகள்!

இந்த நேரத்தில் நாம் ஒன்றை பக்காத்தான் அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

மானியங்களை அள்ளிக் கொடுப்பது சரிதான். ஆனால் மானியம் மட்டுமே போதுமானதல்ல. அதற்கு மேல் சில பிரச்சனைகள் இருக்கின்றன. முதலில் இந்த பள்ளிகள் யார் பெயரில் அதாவது அந்த பள்ளிகளின் உரிமையாளர் யார், அந்த நிலம் யாருடைய பெயரில் இருக்கிறது  என்பது முக்கியம். தனியார் பெயரில் இருக்கும் பள்ளிகளாக இருந்தால் அதற்கான மாற்றம் செய்யும் வேலைகள் இப்போதே தொடங்கப்பட வேண்டும்.

இந்த நேரத்தில் அதற்கான வேலைகளைச்  செய்ய முடியாவிட்டால் வேறு எந்த காலத்திலும் செய்ய முடியாது என்பதை தலைமையாசிரியர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

பொதுவாக தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் ம.இ.கா.வில்  பற்றோடு இருந்தவர்கள் தான். தவறில்லை!  அப்போது மானியங்களுக்காக அலையாக அலைந்தவர்கள் தான்! ஆனால் இப்போது மானியங்கள் கிடைக்கின்றன. அதனால் மற்ற வேலைகளைப் பார்க்க வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம்.  நிலத்தின் பெயர் மாற்றம் அல்லது பள்ளிகளின் பெயர் மாற்றம் - இப்படி இது போன்ற வேலைகள் செய்வதற்கு இதுவே சரியான தருணம்.

இன்றைய சூழலில் பல மாற்றங்கள் தேவைப்படுகின்றன. நல்ல கட்டடம் என்பது அனைவரையும் ஈர்க்கும் விஷயம். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வேண்டும். அதுவும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.  மலாய், ஆங்கில மொழிகளின் திறனும் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. விஞ்ஞானத்திலும் வளர வேண்டும்.. உலகளவில் தங்கப் பதக்கங்களைக் குவிக்கிறார்கள். பாராட்டுகள்!

இவைகளெல்லாம் பல நல்ல விஷயங்கள்.  ஆனால் ஒவ்வொரு பள்ளியிலும் ஏதாவது குறைகள் இருக்கத்தான் செய்யும். அந்த குறைகளைக் களைந்து விடுங்கள் என்பது தான் நமது நோக்கம். இந்நேரம் நல்ல நேரம்.  நமக்கு உதவி செய்ய அரசாங்கம்  காத்திருக்கிறது. அதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்பதைத் தான் நாம் வலியுறுத்துகிறோம்.

சமீபத்தில் மலாக்கா மாநிலத்தில் என்ன நடந்தது என்பதை நாம் அறிவோம். தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளராக ஒரு சீனப் பெண்மணியைப் போட்டிருக்கிறார்கள்!  பாரிசான் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.  அதைத்தான் இங்கு சுட்டிக் காட்டுகிறோம்.

அவர்கள் ஆட்சிக்கு வந்தால் ஏதோ ஓரிருவர் பயன் பெறுவர். ஆனால் இப்போது பலர் பயன் பெறுகின்றனர். நமக்கும் சமுதாய நோக்கம் இருக்கத்தான் வேண்டும். மற்ற இனத்தவருக்கும் மட்டுமே அது உரியதல்ல!

ஆக, தலைமையாசிரியர்களே! பந்து உங்கள் கையில். அதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். காலங்கடந்து புலம்பாதீர்கள்!

மானியம் மட்டும் அல்ல மானமும் நமக்கு வேண்டும்!

Monday 21 September 2020

எனது நண்பர்!

 

                                                      Dato' A.Ponniah - 1938 - 30.3.2020

டத்தோ பொன்னையா இறந்த செய்தி சமீபத்தில் தான் நான் தெரிந்து கொண்டேன்.

கொடூரமான கொரோனா தொற்று நோய் அனைத்தையும் உடைத்து எறிந்து விட்டது என்பதற்கு இதுவும் ஒரு சான்று. 

கொரோனா தொற்று நோயின் தாக்கத்தினால் அவரைப் பற்றியான செய்தி எதுவும் கிடைக்கவில்லை. வெளியே நடமாட முடியவில்லை. வீட்டிலேயே முடக்கம். தொடர்புகள் எதுவும் இல்லை. நாளிதழ்களும் கிடைக்கவில்லை. =

அந்த பழைய நாள்களை (1960 களில்) நினைத்துப் பார்க்கிறேன். அவர் செனவாங் தோட்ட தமிழ்ப்பள்ளியில் ஆசிரியர். நான் செனவாங் தோட்ட அலுவலகத்தில் வேலை.

பள்ளியை விட்டு வரும் போது எங்கள் அலுவலகத்திற்கு வருவார். நிறைய கடிதங்களை டைப் செய்து கொண்டிருப்பார்,  அவருக்கு நானும் கொஞ்சம் உதவி செய்தேன். இப்படித்தான் அவர் என்னையும் பொதுத் தொண்டுக்கு இழுத்துக் கொண்டு வந்தார்! அவர் தான் எனக்கு வழிகாட்டி.  

ஆனால் அரசியல் எனக்கு ஒத்துவராது என்பதால் ஒதுங்கிக் கொண்டேன். வேறு வழியில் எனது பணி தொடர்ந்தது.  மீண்டு சொல்லுகிறேன் அவர் தான் பொதுத் தொண்டுக்கான எனது வழிகாட்டி.

அவரைப் போன்று பொதுத் தொண்டு செய்வதில் நான் யாரையும் பார்த்ததில்லை.  பொதுத் தொண்டு என்பது யார் சொல்லியும் வராது.  அது இயற்கையாக வர வேண்டும்.   அது அவரிடம் இயற்கையாக இருந்தது.

அந்த காலக் கட்டத்தில் Who is Who in Malaysia  புத்தகத்தில் நெகிரி செம்பிலானைப் பொறுத்தவரை, இந்தியர்களில், அவரது பெயர் மட்டுமே வெளியாகி இருந்தது.  அதே சமயத்தில் அப்போதைய மாநில ம.இ.காவினர் ஏதோ காப்பிக்கடைகளில் கூட்டத்தைப் போடும் பழக்கத்தை வைத்திருந்தனர்! அதனை மாற்றியமைத்து மாநில ம.இ.கா. வுக்கு என ஒரு அலுவலகத்தைத் திறந்தவர் அவர் தான்.

குறைவான சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு வந்த அவர் ஏழை எளியவருக்கு முடிந்த அளவுக்கு உதவி செய்வார். 

அவரிடம் துடுக்குத் தனம் இருந்ததால் அவரை ஆசிரியர் பயிற்சியில் வெற்றி பெற விடவில்லை  என்று சொன்னது ஞாபகம். அவர் பள்ளிக்கு வரும் போது அந்த காலத்து வெள்ளைக்காரர்கள் போல்  காலணியில் கால் முட்டிவரை நீண்ட வெள்ளை சாக்ஸ் போட்டுக் கொண்டு வருவார்! அது அனைவரையும் எரிச்சலூட்டும்! அந்த காலக்கட்டத்தில் தோட்டப்புறங்களில், தமிழ்ப்பள்ளிகளில் இப்படியெல்லாம் யாரும் செய்யத் துணியமாட்டார்கள்!அவரிடம் பயம் என்று ஒன்றும் இருந்ததில்லை!

ஒரு நல்ல மனிதர். ஒரு நல்ல நண்பர். தொண்டு என்றால் நண்பர் பொன்னையா தான். மற்றவர்களுக்கு உ தவும் குணம் இயற்கையாகவே அவருக்கு இருந்தது. சொல்ல நிறைய இருக்கிறது.

அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

Sunday 20 September 2020

மக்கள் என்ன முட்டாள்களா?

 மக்களை முட்டாள்கள் என்று நினைக்கும் அளவுக்கு அரசியல்வாதிகள் வளர்ந்து விட்டார்கள்!  அவர்களை நாம் வளர்த்து விட்டுவிட்டோம்!

சபாவில் நடைபெறுகின்ற தேர்தலுக்குச் சொர்க்கத்திற்கு  வழி காட்டியிருக்கிறார்கள் பாஸ் கட்சியினர்!  அவர்களுக்கு வாக்களித்தால்  நமக்குச் சொர்க்கத்தை உறுதிப் படுத்தி விடுவார்கள்!

எப்படியெல்லாம் மக்களை ஏமாற்றுகிறார்கள் இந்த அரசியல்வாதிகள்! சொர்க்கம்-நரகம் முதலில் இருக்கிறதா, இல்லையா  என்று யாருக்குத் தெரியும்?  இதுவரை பாஸ் கட்சியிலிருந்து எத்தனை பேர் சொர்க்கத்திற்குப் போய் வந்திருக்கிறார்கள்? அல்லது நரகத்திற்குத் தான் போய் வந்திருக்கிறார்களா? நரகம் என்று ஒன்று இருந்தால் அரசியல்வாதிகள் இந்நேரம்  நரகத்தையே நிரப்பியிருப்பார்களே!  சொர்க்கத்தை இலஞ்சம் கொடுத்தே வாங்கியிருப்பார்களே!

அட! சந்திர மண்டலத்திற்குப் போகக் கூட  மேல் நாடுகளில் இப்போதே பல கோடிகளைச் செலவு செய்து முதலிலேயே  முன்பதிவு செய்கிறார்களாம்.

பாஸ் கட்சியினர் இந்த அளவுக்கு உறுதியாக இருந்தால் அவர்களும் இப்போதே  சொர்க்கம் போவதற்கு முன் பதிவு செய்யலாமே! அது வேண்டாம், இப்போதே போய்வர ஏற்பாடுகள் செய்யுங்களேன்! அப்படி செய்தால் உங்களையும் நம்பலாம்! உங்கள் சொர்க்கத்தையும் நம்பலாம்!

உங்கள் மாநிலத்தில் உள்ள நரகத்தையே எந்த முயற்சியும் செய்யாமல் அப்படியே போட்டு வைத்திருக்கிறீர்களே அப்புறம் என்ன சபா மக்களுக்குச் சொர்க்கத்தைக் காண்பிக்கிறீர்கள்?

இப்போது தான் கெடாவில் உங்கள் ஆட்சி கைக்கு வந்ததும் ஓரு கோயிலையே உடைத்து நொறுக்கினீர்கள். மற்றவர்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு மரியாதை கொடுக்காத உங்களுக்கு எங்கிருந்து இப்படி பேசுவதற்குத் தைரியம் வந்தது? 

நாம் பாஸ் கட்சியினருக்குச் சொல்ல வேண்டியது ஒன்று தான். வேண்டாம்! பொய் பேச வேண்டாம்! பதவியில் அமர வேண்டும் என்பதற்காக எதனை வேண்டுமானாலும் பேசலாம், எந்த உறுதியும் கொடுக்கலாம் என்று நினைக்காதீர்கள். 

ஆமாம் பதவியில் இருந்தால் நல்லது செய்யலாம், உண்மை தான். ஆனால் நீங்கள் செய்ய மாட்டீர்கள் என்பது நீங்கள் ஆளுகின்ற மாநிலங்களைப் பார்த்தாலே போதுமே! 

பாஸ் கட்சியினரே! மக்களை முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டு இராதீர்கள். நீங்கள் முட்டாள்கள் என்று நினைப்பதால் தான் இன்று உங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வேலையின் காரணமாக சிங்கப்பூரை அடைத்துக் கொண்டு நிற்கிறார்கள்!

மக்களை ஏமாற்ற வேண்டாம். அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றத்தான் வேண்டும் என்கிற கட்டாயம் ஒன்றுமில்லை! அதனை நீங்களே தான் ஏற்படுத்திக் கொண்டீர்கள்!

சொர்க்கத்திற்கு வழி காட்ட யாராலும் முடியாது! ஒன்று முடியும். நீங்கள் - அரசியல்வாதிகள் - நினைத்தால் சொர்க்கத்தை இங்கே பூமிக்குக் கொண்டு வர முடியும்! அதைச் செய்யுங்கள்!

தொடர்ந்து மக்களை முட்டாள்களாகவே வைத்திருக்க நினைக்காதீர்கள்! அப்படி நினைத்தால் உங்களைப் போல் முட்டாள்கள் யாருமில்லை!

 

Saturday 19 September 2020

டாக்டர் மகாதிர் அப்படிப் பட்டவரா!

 ஒரு சில விஷயங்களை நாம் புரிந்து கொள்வது மிக மிகக்கடினம்!

அதுவும் டாக்டர் மகாதிரைப் பற்றி பேசும் போது அனைத்துமே கடினம் தான்! காரணம் எப்படிப் போய் எப்படிச் சுற்றிவந்தாலும் அவர் சீனர்களையோ, இந்தியர்களையோ நம்பியதில்லை! நம்பமாட்டார்!  மலாய்க்கரர் மீது இருக்கும் அக்கறை அவருக்கு வேறு இனத்தவர் மீது இல்லை! இதெல்லாம் அவரது ஆட்சியில் நாம் கண்டது தான்!

பக்கத்தான் கட்சி ஆட்சி என்பது 22 மாத கால ஆட்சிதான்.  அந்த 22 மாத கால ஆட்சியை அவர் வேறு யாருக்கும் விட்டுக் கொடுத்ததில்லை! அந்த காலக் கட்டத்தில் சீனர்களுக்கோ இந்தியர்களுக்கோ எந்த திடீர் மாற்றமோ அதிசயங்களோ நடந்ததில்லை!   அவரைக் கேட்காமல் எந்த துரும்பும் அசைந்ததில்லை!

நடந்தது எல்லாம் ஒன்று தான். நாட்டில் இலஞ்சம் வாங்குபவர்கள் தடுமாறினார்கள்! வாங்குவதை நிறுத்தி வைத்தார்கள்! அரசாங்கத்தில் வேலைகள் எல்லாம் சுறுசுறுப்பாக இயங்கின! ஏதோ, எங்கோ, யாருக்கோ அவர்களிடம் ஒரு பயம் தெரிந்தது! இப்போது மீண்டும் பழையபடி இலஞ்சம் புத்துயிர் பெற்றுவிட்டது!

தாய்மொழிப்பள்ளிகளை ஆதரிப்போம் என்று சொன்ன மகாதிர் பதவிக்கு வந்ததும் அந்தர் பல்டி அடித்தார்! அவர் எந்த ஆதரவும் கொடுக்கவில்லை. அத்தோடு தாம் தாய்மொழிப்பள்ளிகளை ஆதரிக்கவில்லை என்பதாகப் பேட்டி கொடுத்தார்!

ஏன் இந்த கதையை இப்போது சொல்லிக் கொண்டிருக்கிறோம்? 

பக்காத்தான் ஆட்சியிலிருந்த போது ஆட்சியை நடத்திக் கொண்டிருந்தவர்கள் ஜனநாயக செயல் கட்சி - அதாவது சீனர்கள் என்பதாக - அம்னோ, பாஸ் போன்ற கட்சிகள் மலாய்க்காரரிடையே பயத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தன!

இப்போது அம்னோவின் மூத்த தலைவர் துங்கு ரசாலி ஹம்ஸாவும் அதே கருத்தைச் சொல்லும்போது "இவருமா இப்படி?" என்று கேள்வி கேட்கத் தோன்றுகிறது! நிர்வாகம் மலாய்க்காரர் கையில் இருக்க வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடில்லை! மாற்றம் ஏற்பட்டது ஏன்? இலஞ்சம் தானே தலையாயக் காரணம்!   அதற்குக் காரணமானவர் யார்?  என்பது அவருக்குத் தெரியாமலா இருக்கும். 

அப்படி என்றால் இலஞ்சம் ஒழிய வேண்டும் என்பதைவிட "இலஞ்சம் இருந்தாலும் பரவாயில்லை! நிர்வாகம் எங்கள் கையில் தான் இருக்க வேண்டும்!" என்று துங்கு ரசாலியே இப்படிச் சொன்னால், எப்படி? 

நிர்வாகம் நஜிப் கையில் இருந்திருந்தால் நாட்டை அவர் சீனாவுக்கு விற்றிருப்பார் என்பது அவருக்குத் தெரியும் தானே!  துங்கு எதனை முக்கியமாக கருதுகிறார்? நாடு முக்கியமா? அல்லது கொள்ளைக்காரர்கள் முக்கியமா? 

டாக்டர் மகாதிர் பிரதமராக இருந்த போது அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்பது தான் முக்கிய செய்தி. அவர் யாரையும் நம்பவில்லை!  அவர் ஒவ்வொன்றையும், ஒவ்வொரு திட்டத்தையும் அனைத்தையும் படித்துவிட்டு,  விவாதம் செய்து விட்டுத்தான் அவர் கையொப்பம் இட்டார் என்பது துங்குவுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

டாக்டர் மகாதிர் சும்மா தலையாட்டி பொம்மை அல்ல!  அவர் நாட்டுப்பற்று உள்ளவர். இனப்பற்று உள்ளவர். நாட்டை எப்படி வழி நடத்த வேண்டும் என்று அனுபவம் உள்ளவர்! 

அவரை வெத்து வேட்டு என்று சொன்னால் யார் நம்புவார்?

Friday 18 September 2020

இந்த சந்திப்பு தேவை தான்!

 இதனை நான் ஒரு நல்ல செய்தியாகவே எடுத்துக் கொள்ளுகிறேன்!

பொதுத் தேர்தல் என்று வரும் போது கழுதை குதிரையாகி விடும்! குதிரை கழுதையாகி விடும்! தேர்தல்,  அதன் மூலம் வரும் பட்டம் பதவி , அசைக்க முடியாத ஐந்து ஆண்டு கால தரசியல் அதிகாரம் - இது சாதாரண விஷயம் அல்ல! 

படித்தவனாக இருந்தாலும் சரி, படிக்காதவனாக இருந்தாலும் சரி மக்களுக்குத் தொண்டு செய்ய முடியுமோ முடியாதோ தனக்கு அரசியல் அதிகாரம் வேண்டும் என்கிறான்! பணம் கொடுத்தவன் பதவிக்கு வருகிறான்! கொடுக்காதவன் குதறி உதறப்படுகிறான்!  இது தான் இன்றைய அரசியல்!

இந்த நிலையில் பாஸ் கட்சியின் தலைவர், டத்தோஸ்ரீ ஹடி அவாங் அவர்களின் அழைப்பை ஏற்று மலேசிய இந்து சங்கம் அவரைச் சமீபத்தில் சந்தித்திருக்கிறது. 

அவரிடம் பல விஷயங்கள் பேசப்பட்டிருக்கின்றன.   கிடைத்த செய்திகளின் படி மத மாற்றம், இஸ்லாமிய சட்ட அமலாக்கம்,  இந்திரா காந்தி விவகாரம்,  தாய் மொழிப்பள்ளிகள்,  இஸ்லாமிய போதகர்களின் தேவையற்ற தலையீடு போன்ற பல விஷயங்கள் அவரிடம் பேசப்பட்டிருக்கின்றன.

ஹடி அவாங் இதுவரை இப்படி ஒரு சந்திப்பை இந்து தலைவர்களிடம் பேசியிருக்க வாய்ப்பில்லை என நம்பலாம். அதைவிட அவர் அவர்களுக்கு எந்த மரியாதையையும் கொடுத்திருக்கவும் மாட்டார்!  ஒரே காரணம் தான்! பிற மதங்களை மதிக்கும் தன்மை அவரிடம் இல்லை! இஸ்லாம் அப்படி சொல்லவில்லை! அவருடைய அரசியல் அப்படி!

எப்படியோ அவரது கட்சியினர் பதவிக்கு வர முடியும் என நம்புகின்றனர்.  பதவிக்கு வந்தால் கொஞ்சம்  நாவை அடக்கிப் பேசுவார்கள் இல்லாவிட்டால் அவர்களது அராஜகத்தை தொடர்வார்கள்!

ஒரு காலக் கட்டத்தில் அவர்களுடனான  எனது தொடர்பு நன்றாகவே இருந்தது!  அப்போது நான் ம.இ.கா.வில் இருந்தேன், அப்போது அவர்கள் அம்னோவுடன் இணைந்திருந்தார்கள். அந்த நேரத்தில் நான் இருந்த சட்டமன்றம் அவர்கள் கையில் இருந்தது. அப்போது அந்த சட்டமன்ற உறுப்பினரிடமிருந்து அங்குள்ள ஓர் இந்து கோயிலுக்கு 2000 வெள்ளி உதவி வாங்கினோம். இது ஐம்பது ஆண்டு காலத்திற்கு முன் நடந்தது! 

இந்த முறை இவர்கள் வருவார்களா என்பதை என்னால் கணிக்க முடியவில்லை. வரக் கூடாது என்பதே எனது விருப்பம். திருடர்களையும், கொள்ளைக்காரர்களையும் நாம் ஆதரிக்கக் கூடாது என்பதே எனது எண்ணம்.

இந்த சந்திப்பு மூலம் என்ன கிடைக்கப் போகிறது என்பது முக்கியம் அல்ல. நல்லது நடக்க வேண்டும். இந்த நாட்டில் நல்லது நடக்க வேண்டும். நமது மொழி, நமது சமுதாயம், நமது சமயம் காக்கப்பட வேண்டும். 

அப்படி காக்கப்பட வேண்டுமானால்  நாம் அனைவரையும் அணைத்துச் செல்ல வேண்டிய நிலையில் இருக்கிறோம். நாம் மூன்றாவது பெரும்பான்மை, நம்மைவிட வந்தேறிகள் கூடிவிட்டார்கள்!

தேவையான சந்திப்பு தான்! நல்லது நடந்தால் நல்லது தானே!

Thursday 17 September 2020

வேதனைக்குள்ளாக்கும் செய்தி!

 புலனத்தில் ம.இ.கா.வினர் பெண்களை மிக மிகக் கேவலப்படுத்திப் பேசுவதாக அதுவும் அதனைத் தலைப்புச் செய்தியாகப் படித்த போது மிகவும் வேதனை  அடைந்தேன்.

இப்படியெல்லாம் செய்வதற்கு நம்மிடையே மனிதர்கள்  இன்னும்  இருக்கிறார்களா என்று  வியப்பாகவும், வேதனையாகவும் இருந்தது.

பெண்களைக் கேவலப்படுத்தும் சமுதாயம் எந்தக் காலத்திலும் முன்னேற்றத்தைக் காண முடியாது என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அதுவும் "இந்தியர்களுக்கு நாங்கள்  தான் எல்லாம்!" என்று மார்தட்டும் ம.இ.கா. வினர் இப்படி செய்வதை  நினைத்துப் பார்க்க முடியவில்லை.

ஒன்றை நினைத்துப் பார்க்கிறேன்.ம.இ.கா. முன்னாள் தலைவர் துன் சா.சாமிவேலு அவர்கள் காலத்திலும் சரி அதன் பின்னரும் சரி அவரது துணைவியார் தோ புவான்  இந்திராணி சாமிவேலு ம/இ.கா. விலும்,  பொது இயக்கங்களிலும்  மிக முனைப்போடு வேலை செய்தவர் அவரைப் பற்றியான செய்திகளை இப்போதெல்லாம் பத்திரிக்கைகளில் காண  முடிவதில்லை. 

இது தான் நமக்குச் சந்தேகத்தைக் கிளப்புகிறது. இவரை வேலை செய்ய விடாமல் இந்த ம.இ.கா. குழு தான் பின்னணியில் இருந்து கொண்டு செயல்  படுகிறதோ என்று நினக்கத் தோன்றுகிறது. ஏன் செய்யக் கூடாது? அவர்கள் தான் பெண்களை வெறுப்போடு பார்ப்பவர்களாயிற்றே!

இவர்களின்  பெண்களை வெறுக்கும் செயல்பாட்டுக்கும் வேறு ஒன்றுக்கும் நாம் முடிச்சுப் போட வேண்டியுள்ளது. பெண்களுக்கு முடிச்சு போடும் வேலையிலும் இவர்கள் ஈடுபட்டிருத்தைப் பார்க்கும் போது வேறொன்றும் நமக்கு ஞாபத்திற்கு வருகிறது. 

சாமிவேலு - மீரியாம் ரோசலின் இணைப்புக்கும்  சாமிவேலுவை முடிச்சு போட வைத்தற்கும் இவர்களே  காரணமாக இருந்திருப்பார்களோ என்று யோசிக்க வேண்டியுள்ளது.  காரணம் இவர்கள் மற்ற வீட்டுப் பெண்களுக்கு முடிச்சுப் போடும் போது இதை மட்டும் அவர்கள் விட்டு வைத்திருப்பார்களா என்று நம்மை யோசிக்க வைக்கிறது!

ஒன்றை மட்டும் நான் சொல்லுவேன்.  தமிழ்ப் பெண்களைத் தாக்குபவர்கள் தமிழர்கள் இல்லை என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். தங்களைத் தமிழர்கள்  என்று சொல்லிக் கொள்ளும் தமிழரல்லாதாரே இத்ற்குக் காரணம் என்று தாராளமாகச் சொல்லலாம்.  அவர்களுக்குத் தமிழர்கள் மீதான ஒரு கோபம் இருக்கிறது.  தமிழர்களைத் தொடர்ந்தாற் போல நசுக்க வேண்டும்  என்கிற ஆத்திரம் இருக்கிறது. காரணம் நாம் தானே அவர்களுக்கு எதிரியாக இருக்கிறோம்! நம்மைக் கீழ் மட்டத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்பது தான் அவர்களது எண்ணம்!

இவர்களையெல்லாம் மீறி தான் தமிழ்ப்  பெண்கள் முன்னேற்றம் அடைய வேண்டியுள்ளது.   அவர்கள் தாக்கும் பெண்களைப் பாருங்கள். . யாரேனும் நாயர், மேனன், ரெட்டி, நாயுடு - என்று இருக்கிறதா பாருங்கள். அப்படி இருந்திருந்தால் அவர்கள் சமூகமே இந்நேரம் கொந்தளித்திருப்பார்கள்; அவர்களைக் கூண்டில் ஏற்றியிருப்பார்கள்!

எப்படியோ இந்தக் கூட்டத்தினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறிந்து நான் பாராட்டுகிறேன்.  அவர்கள் வீட்டுப் பெண் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள், எங்கே ஊர் மேய்கிறார்கள் என்பதையெல்லாம் மறந்துவிட்டு மற்றவர்கள் வீட்டுப் பெண்கள் மீது கல்லெறியும் இவர்கள் மீது சரியான நடவடிக்கை எடுப்பதை வரவேற்கிறேன். 

இன்னொன்றையும் நாம் மறந்துவிடக் கூடாது.  இவர்களுக்கு இவர்களுடைய தலைமை ஊக்க்ப்படுத்துவதால் தான் இவர்கள் இத்தகைய செயலில் ஈடுபடுகிறார்கள் என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்! இதுவரை அவர்கள் இதனைக் கண்டிக்கவில்லையே!  எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே!

இது போன்ற செய்திகள் நமக்கு வேதனை அளிப்பது உண்மை தான்! சட்டம் தான் இவர்களுக்கு ஒரு போதனையைக் கொடுக்கும் என நம்புவோம்!

Wednesday 16 September 2020

சிகப்பாய் இருப்பவன் பொய் சொல்ல மாட்டான்!

 ஒரு சினிமா நகைச்சுவை காட்சியில் வந்த வசனம் இது: சிவப்பாய் இருப்பவன் பொய் சொல்லமாட்டான்! என்பது தான் அது!

பொய்யுக்கும் நிறத்திற்கும் என்ன சம்பந்தம்?  சிவப்பாய்  இருப்பவன்  பொய்  சொல்ல மாட்டான் என்றால் கறுப்பாய் இருப்பவன்  பொய் சொல்லுவான் என்பது தானே பொருள்?

உண்மை தான்! நிறத்திற்கும் பொய்யுக்கும் சம்பந்தம் இல்லை என்பது உண்மை தான்!

ஆனால் என்னுடைய பத்து  பதினோறாம் வயதில் நானும் கூட இப்படி ஒரு கருத்தைக் கொண்டிருந்தேன்!  அது எப்படி வந்தது,  எங்கிருந்து வந்தது, எதனால் வந்தது  அதன் மூலம் என்ன என்பதையெல்லாம் என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை!

இங்கு நான் ஒன்றை சொல்லிவிட விரும்புகிறேன்.  நான் 'சிவப்பாய்' என்பது வைள்ளைக்கார துரைகளை மட்டும் தான்!  அவர்களைத் தான் நான் சிவப்பாய் பார்த்திருக்கிறேன் அந்த வயதில்!

பொய் சொல்ல மாட்டார்கள் என்பது மட்டும் அல்ல! அவர்கள் நல்லவர்கள்! வல்லவர்கள்! கடவுளுக்கு அடுத்தபடியானவர்கள்! இப்படியெல்லாம் அவர்களைப் பற்றியான ஒரு கருத்து எனக்கு இருந்தது! என்னவோ அறியாத வயது! அதனால் கற்பனைகள் ஏராளம்!

ஆனால் பிற்காலத்தில்  நான் தோட்ட அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்த போது தான் "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை!" என்று  அவர்களது பற்றியான எனது அபிப்பிராயம் மாறிவிட்டது!

அவர்களுக்குள்ளேயே சண்டை உண்டு, சச்சரவு உண்டு, வேறொரு ஊர்காரனை அவர்களுக்கும் பிடிக்காது, எல்லா ஆபாசங்களும் அவர்களிடமிருந்து தான் இறக்குமாதியாகின்றன போன்றவைகள் எல்லாம்  பின்னர் நான் தெரிந்து கொண்டேன்!

ஸ்கோட்லாந்து காரனுக்கு வேறு ஊர்களில் பிறந்தவனைப் பிடிக்காது!  பர்மாவில் பிறந்து வெள்ளைக்காரனுக்கு இத்தாலியில் பிறந்தவனைப் பிடிக்காது! இத்தாலியில் பிறந்தவனுக்கு பிரிட்டனில் பிறந்தவனைப் பிடிக்காது! எல்லாமே நம்மைப் போல சராசரிகள் தான்! பிடிக்காது என்றாலே அப்புறம் பொய்யும் புரட்டும் இல்லாமலா போகும்? 

நம்மை விட அவர்கள் கேடுகெட்ட ஜென்மங்கள் என்று தாராளமாகச் சொல்லலாம்!

அதனால் பொய்யுக்கும் சிவப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! இப்போது  அது நமக்கு நன்றாகத் தெரிகிறது. நம்மைச் சுற்றிப் பார்த்தாலே போதும். பொய்யும் புரட்டும் நம்மைச் சுற்றியே இருக்கின்றன! வெள்ளைக்காரன் இப்போது இல்லை!

ஆக சிவப்போ, கறுப்போ பொய் சொல்லுவதை நிறுத்த வழி இல்லை! அவனவன் திருந்தாத வரை பொய் என்றும் நிலைத்திருக்கும்!

Tuesday 15 September 2020

மலேசிய இந்தியர்கள் இயக்கம்

 மலேசிய இந்தியர் இயக்கம் என்பதாக ஒரு புதிய இயக்கம் இந்தியர்களின் முன்னேற்றத்திற்காக இந்தியர்களின் நலனுக்காக ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது!

இயக்கம் என்றாலே கொஞ்சம் தயக்கம் உண்டு! பத்தோடு பதினொன்று, அவ்வளவு தான்!  இது வரை உள்ள இயக்கங்கள் பெரிதாக எதனையும் சாதித்துவிடவில்லை!

அதுவும் திடீர் தேர்தல் எந்த நேரத்திலும் நடக்கலாம் என்கிற நிலையில் ஓர் இயக்கத்தை ஆரம்பித்தால் மக்கள் என்ன நினைப்பார்கள்? தேர்தல் நேரங்களில் பல இயக்கங்கள் பூற்றிசல்கள் போல தோன்றுவது எப்போதும் நடப்பது தான்! காரணம் இப்போது தான் இயக்கங்களுக்குப் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும் என்பது தெரிந்த விஷயம் தான்! தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் இது போன்ற சில்லறை விஷயத்தில் ஈடுபடமாட்டார்கள் என்றாலும் கடைகோடியில் உள்ளவர்கள் ஈடுபடமாட்டார்கள் என்று சொல்லுவதற்கு எந்த உத்தரவாதமும் இல்லையே!

பொதுவாக 'இந்திய' இயக்கங்கள் என்றாலே கொஞ்சம் சந்தேகக் கண் கொண்டு தான் பார்க்க வேண்டியிருக்கிறது.  எல்லாம் அனுபவம தான்! இந்தியர் என்றால் சொன்னாலே அங்கு தமிழனுக்கு வேலை இல்லாமல் போகிறது. தமிழருக்கு அதனால் பயனில்லை என்று தாராளமாகச் சொல்லலாம். 

இந்தியர் என்றாலே தெலுங்கர்களும், மலையாளிகளும் தான் பயன்பெறுகிறார்கள் என்பது தான் நமக்குள்ள அனுபவம்.  தமிழர்கள் பயன் பெறுவதில்லை.  பதவியில் இருப்பவர்களும் அவர்கள் தான், முன் வரிசையில் இருப்பவர்களும் அவர்கள் தான், முந்திக் கொள்பவர்களும் அவர்கள் தான் - தமிழர்களுக்குத் தேவையான செய்திகள் கிடைக்கும் முன்பே கஜானா காலியாகி விடுகிறதே!  உள்ளுக்குள்ளே அவர்கள் வேலை செய்கிறார்கள்! தமிழன் வெளிப்படையாக இருப்பதால் அனைத்தையும் இழக்கிறான்!

சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு.  ஓர் உணவகத்திற்குப் பெரிய அளவில் அரசாங்கத்தின் நிதி உதவி கிடைத்தது. வாழ்த்துகிறோம்! அந்த உணவகத்தின் உரிமையாளர் நாயர் சமூகத்தைச் சேர்ந்தவர். அவருக்குப் பெரிய தொகையை வாங்கிக் கொடுத்தவர் "மக்கள் சக்தி" இயக்கத்தைச் சேர்ந்த தலைவர் டத்தோஸ்ரீ தனேந்திரன் நாயர்! இதனை நான் குறையாகச் சொல்லவில்லை.  தமிழன் என்றால் ஆயிரம், இரண்டாயிரம் - நாயருக்கு ஒரு சில இலட்சங்கள் என்பது தான் நமது ஆதங்கம்! ஏன்? நாம் மட்டும் தொழிலில் வளரக் கூடாதா?  தங்கள் முன்னேற்றத்திற்காக தமிழன் வேண்டும் ஆனால் அவன் மட்டும் வளரக் கூடாது! என்ன நியாயம் இது?

ஆனால் இந்த இயக்கம் என்ன நோக்கங்களைக் கொண்டது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

அரசியலில் பல அராஜகங்கள் நடந்திருக்கின்றன அதனைத் தட்டிக் கேட்க இவர்களுக்குத் திராணி உண்டா? இருப்பவர்கள் பலர் ம.இ.கா வினர். பேராக் மாநிலத்தில் தமிழ்ப்பள்ளிக்களுக்கான 2000 ஏக்கர் நிலத்தை  தங்களது பாக்கெட்டில் போட்டுக் கொண்டனர். மலாக்கா மாநிலத்தில் கல்வி அதிகாரியாக தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒரு சீனப் பெண்மணி பதவி வகிக்கிறார்! 

இவைகளையெல்லாம் கேட்க முடியவில்லையென்றால் இன்னொரு இந்திய இயக்கம் தேவை தானா என்கிற கேள்வி எழத்தான் செய்யும்.  தெலுங்கர்களோ,  மலயாளிகளோ அதில் அக்கறை காட்டமாட்டார்கள்! அவர்களுக்கு அதில் அக்கறை இல்லை!  தமிழர்கள் தானே அதில் அக்கறை காட்ட வேண்டியிருக்கிறது. 

தமிழர்கள் அவர்களின் முன்னேற்றத்திற்கு ஏணியாகத் தான் பயன்படுத்தப் படுகிறார்கள்!

மலேசிய இந்தியர்கள் இயக்கம் என்ன செய்யப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.  நல்லது செய்தால் பாராட்டுவோம்! வாழ்த்துவோம்! நல்லது நடக்கவில்லையென்றால்  தாழ்த்துவோம்! எவனும் நமக்கு உதவப்போவதில்லை! நமது கையே நமக்கு உதவி!

Monday 14 September 2020

ஜனநாயகம் படும் பாடு!

 ஜனநாயகத்தில் அரசியல்வாதிகள் தான் அரசர்கள்! சர்வ வல்லமை படைத்தவர்கள்!  உண்மையான அரசர்களெல்லாம் பொம்மைகளாக்கப் பட்டு போலிகளெல்லாம் பொம்மலாட்டம் போடுவது தான் ஜனநாயம்!

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சிறைத் தண்டனையும் அளித்தது.

ஆனால் இன்று அவர் ஓர் மகாராஜா போல  நாட்டை வலம் வருகிறார்! தான் குற்றவாளி அல்ல என்கிறார்! ஒவ்வொருவரையும் கிண்டலடிக்கிறார்! தான் குற்றவாளி அல்ல என்று மக்களை நம்ப வைக்கிறார்!

இதற்கெல்லாம் ஒரே காரணம் அடுத்த பொதுத் தேர்தலில் தனக்குச் சார்பான கட்சி ஆட்சி அமைக்கும் என மிக மிக நம்புகிறார்! அப்படி அவர் சார்ந்த கட்சி ஆட்சி அமைத்தால் அவர் குற்றவாளி அல்ல என்று  நீதிமன்றமே தனது தீர்ப்பைத் திருத்தி எழுதலாம்! 

இது தான் ஜனநாயகம்!

அதே சமயத்தில் எதிர்கட்சித் தலைவர் லிம் குவான் எங்ஙிற்கு என்ன நடக்கிறது பாருங்கள். அவர் குற்றம் சாட்டப்படுகிறார்! ஒன்று, இரண்டு என்றல்ல! தொடரந்தாற் போல் வரிசையாகக் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுகின்றன! எதிலும் சம்பந்தப்படாத அவருடைய மனைவியும் குற்றம் சாட்டப்படுகிறார்!  

எந்தக் குற்றச்சாட்டும் நிருபிக்க முடியாது என்று தெரிந்தாலும் அவர் குற்றவாளி போல நடத்தப்படுகிறார்!  அவர் சபாவுக்குள் நுழைய முடியாது என்று தடுக்கப்படுகிறார்!

நீதிமன்றம் என்ன சொல்லுகிறது என்பது பற்றி யாரும் கவலைப் படவில்லை!  கவலை எல்லாம் நஜிப் குற்றவாளி அல்ல, சுதந்திரமாக வலம் வரலாம்! லிம் குவான் எங் குற்றவாளி அதனால் தடுக்கப்படுகிறார்! இது தான் இன்றைய அரசாங்கத்தின் நிலைமை!

யார் யாரையோ திருப்தி படுத்த அரசாங்கம் மௌனம் காக்கிறது!  காக்கத்தான் வேண்டும்! ஊழல் நிறைந்தவர்களால் நடத்தப்படுகின்ற ஓர் அரசாங்கம் இப்படித்தான் செயல்பட வேண்டும்!  வேறு வழியில்லை!

அதே சமயத்தில் அவர்கள் நினப்பது போன்று நடவாமல் ஆட்சி முன்பு நடந்தது போல எதிர்கட்சிப் பக்கம் போனால்....? ஒருவர் நாட்டைவிட்டு ஓடுவதற்குத் தயாராக இருப்பார்! அதற்கு அரசாங்கம் துணை நிற்கும்! எல்லாம் தலைகீழாக மாறிவிடும்! 

இது தான் இன்றைய நிலைமை! ஜனநாயகத்தில் நாம் நினைப்பது போன்று நடப்பதில்லை! நீதி,  நியாயம் அனைத்தும் குழி தோண்டி புதைக்கப்படும்!

இன்றைய உலகில் ஜனநாயகம் கேலிப் பொருளாகிவிட்டது!

Sunday 13 September 2020

மேலவையில் டத்தோஸ்ரீ வேள்பாரி!

 மேலவை உறுப்பினர் அதாவது செனட்டர் பதவி ஒருவருக்கு கிடைக்கிறது என்றால் அதன் பொருள் என்ன?

சுருக்கமாக செனட்டர் பதவி என்பது சேவையாளர்களுக்குக் கொடுக்கப்படுகின்ற ஒரு பதவி.

அதன் நோக்கம் நல்லதொரு நோக்கம்.  சேவையாளர்களுக்கு இன்னும் சிறப்பாக சேவையாற்ற அது ஓர் அங்கீகாரம்.

சமீபத்தில் டத்தோஸ்ரீ சா.வேள்பாரி அதாவது துன் சாமிவேலுவின் மகன், செனட்டராக பதவி ஏற்றார் என்பது மகிழ்ச்சியான விஷயம்.

வேள்பாரி கடந்த காலங்களில் மலேசிய இந்தியர் காங்கிரஸின் தலைமைச் செயலாளராக இருந்தவர். கடந்த ஆண்டு அந்த பதவியிலிருந்து விலகினார்.  தனது வணிக நிறுவனங்களைக் கவனித்துக் கொள்ளவும் உடல் நலம் குன்றியிருக்கும் தனது தந்தை துன் சாமிவேலுவைக் கவனித்துக் கொள்ளவும் அவர் பதவி விலகுவதாக  அறிவித்தார்.

வேள்பாரி ஆஸ்திரேலியாவில் கல்வி கற்றவர். அவர் அங்கும் பிரபலமான வணிகராக விளங்கியவர் என்பதாக முன்னர் பத்திரிக்கைகளில் வந்த செய்தி இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. பின்னாளில் அவர் ம.இ.கா.வின் மைக்கா ஹோல்டிங்ஸ்  நிறுவனத்தின்மிகப் பெரிய பொறுப்பில் இருந்தவர்.

டத்தோஸ்ரீ வேள்பாரி அரசியலில் ஆற்றிய தொண்டும் அவரது வணிக அறிவும் இந்த சமுதாயத்திற்குப் பயன்படும்  என நம்பலாம்.  அவருக்குக் கிடைத்திருக்கும் இந்த செனட்டர் என்னும் அங்கீகாரம் இந்த சமுதாயத்திகுப் பயன்படும்   என நம்புகிறோம்.

இந்த பதவியில் பலர் இருந்திருக்கின்றனர். அவர்களால் இயன்றதைச் செய்திருக்கின்றனர்.  இவரும் தனது பங்கை கடமை உணர்ச்சியுடன் செய்வார் என்று இந்த சமுதாயம் நம்புகிறது. செய்வார்!

டத்தோஸ்ரீ வேள்பாரிக்கு வாழ்த்துகள்!

எனது முதல் இரயில் பயணம்!

சாமேக் இரயில்வே நிலையத்தின் சேவை கடந்த 6-ம் தேதியுடன் ஒரு முடிவுக்கு வந்தது  என்கிற பத்திரிக்கைச் செய்தி எனது பழைய நினைவுகளுக்குக் கொண்டு சென்றது.

நான் ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்தவன் அல்ல. நெகிரி செம்பிலான் மாநிலத்தைச் சேர்ந்தவன்.

ஏறக்குறைய எனது பத்தாவது வயதில் எனது பெற்றோருடன் சிரம்பானிலிருந்து சாமேக் சென்றது ஞாபத்திற்கு வருகிறது. அதாவது 1951 அல்லது 1952  ஆக இருக்கலாம்! 

அது தான் முதல் இரயில் பயணம். வெள்ளை சட்டை அணிந்திருந்தேன். சட்டையெல்லாம் கரி!  அப்போதெல்லாம் இரயில் ஓடுவதற்கு எஞ்சினில் நிலக்கரியைப் பயன்படுத்தினார்கள். அந்த ஞாபகம். அந்த கரி, இன்னும் ஞாபகத்தில் இருக்கிறதென்றால் எனது சட்டை எப்படி இருந்திருக்கும்!

அப்போதெல்லாம் கார்,  டெக்சி என்பதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. டெக்சி இருந்ததா என்று கூட  தெரியவில்லை!  இரயில் பயணம் மட்டும் தான் சுலபமான வழி. அது ஒரு நீண்ட பயணம். காலையில் புறப்பட்டு மாலை வேளையில் தான் போய்ச் சேர்ந்தோம்.

சாமேக் அருகே  சாமேக் தோட்டம் என்கிற இடத்திற்கு நாங்கள் சென்றிருந்தோம். அங்கே எங்களது உறவுக்கார பெண் ஒருவருக்குத் திருமணம். அதற்காகத் தான் இந்த பயணம்.

இந்த பயணத்திற்குப் பின்னர் நான் மீண்டும் இரயில் பயணம் செய்தது எனது 45 - வது வயதில்  அப்போது குளுவாங், மெர்சிங் அருகே ஒரு தோட்டத்தில் வேலை. அதனால் அடிக்கடி பயணம் செய்ய நேர்ந்தது. 

அந்த நேரத்தில் இந்த சாமேக் தாண்டித் தான் இரயில் போகும். அப்போதும் இந்த சாமேக் தோட்டமும் - அந்த பெயர் பலகையும் - வந்து போகும். பார்த்திருக்கிறேன்.  அந்த பழைய நினைவுகளும் வந்து போகும்!

ஏதோ ஒரு பழைய நினைவு என்பதைத் தவிர குறிப்பிட்டுச் சொல்ல வேறு எந்த நினைவுகளும் ஞாபத்திற்கு வரவில்லை. 

அந்த பத்தாவது வயதில் அந்த முதல்  இரயில் பயணமும் இரயில் தூவிவிட்ட அந்த கரியும் தவிர மற்றவை எதுவும் சொல்லும்படியாக இல்லை!

நான் முதன் முதலாக சென்று அடைந்த அந்த முதல் இரயில் நிலையம் இப்போது மூடப்பட்டுவிட்டதாக அறியும் போது எல்லாவற்றுக்குமே ஒரு முடிவு உண்டு என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்ல வரவில்ல!

Saturday 12 September 2020

இது தேச விரோதம்!

 

தேச விசுவாசிகளின் இயக்கமான பேட்ரியோட்டின் தலைவர், பிரிகேடியர் ஜெனரல் முகமட் அர்ஷாட் ராஜி சொன்ன ஒரு கருத்து நம்மை யோசிக்க வைக்கிறது.

ஆமாம்! தாய் மொழிப்பள்ளிகளை ஒழிக்க வேண்டும் என்று குரல் கொடுப்பது தேச விரோதம் என்பதாக அவர் கூறியிருக்கிறார். அதனையும் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்.

இப்போது உள்ள தலைமுறைக்கு இவர் பேசுகின்ற பேச்சுக்கள் போய் சேரவில்லை என்று இவர்கள் சொன்னால் இது சிந்திக்கத் தெரியாத, அரைகுறை கல்வி கற்ற சமுதாயம் என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது!

முகமட் அர்ஷாட் போன்றவர்கள் பேசுவதை அலட்சியப்படுத்தினால் பாதிப்படைவது இளைய தலைமுறை தான் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இளைய தலைமுறை பேசிப்பேசியே தங்களது செல்வாக்கை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். எது சரி எது தவறு என்பதைப் பற்றியெல்லாம் அவர்களுக்குக் கவலையில்லை! 

குறிப்பாக, மலாய் வாக்காளர்களிடையே தங்களது செல்வாக்கை உயர்த்திக் கொள்ள இரண்டு விஷயங்களைப் பற்றி பேசுகிறார்கள். அது அவர்களை உயர்த்தி விடுமாம்! ஆமாம் தாயமொழிப்பள்ளிகள், மதம் இவைப் பற்றி பேசினால் அவர்களது  செல்வாக்குக் கூடிவிடுமாம்! 

சரியான அறிவுக் களஞ்சியுங்கள்! இந்த வீராதி வீரர்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். மதங்களைப் பற்றி பேசுவது ஒரு வழிச் சாலை என்பது தெரியுமா?  எங்களுக்கும் அந்த ஒரு வழிச் சாலையில் போக அனுமதியுங்களேன்! பிறகு துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடுவது யார் என்று பாருங்களேன்!

தாய் மொழிப்பள்ளிகளைப் பற்றி பேச எந்த அருகதையும் உங்களுக்கில்லை. உங்களுக்கு   முன்னால் நாங்கள் இங்கு இருக்கிறோம்!  சரித்திரத்தைக் கொஞ்சம் திரும்பிப் பாருங்கள், தெரியும்!

அரசியல் தெரியாதவனெல்லாம், சரித்திரம் தெரியாதவனெல்லாம்  மெத்த படித்தவன் போல பேசி தனது முட்டாள்தனத்தைக் காட்டுவதைப் பார்க்கும் போது  நமக்கு வேடிக்கையாக இருக்கிறது!

அதனால் தான் முன்னாள் பிரிகேடியர் ஜெனரல் முகமட் அர்ஷட் ராஜி போன்றவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள், என்ன பேச வருகிறார்கள் என்பதை இளைய தலைமுறை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

உண்மையாக இந்த நாட்டை நேசிப்பவர்கள் அனைவரும் நமது முன்னாள் ஜெனரல் சொல்லுவதைக் கேட்க வேண்டும். புரிந்து கொள்ள வேண்டும். கடைப்பிடிக்க வேண்டும்.

இனி இந்தப் பிரச்சனை தேச நிந்தனையின் கீழ் வரலாம்!

பேசுவதற்கு முன் யோசியுங்கள்!

 இது தான் நாம் அமைச்சர்களூக்கு சொல்லுகின்ற ஆலோசனை: பேசுவதற்கு முன் யோசியுங்கள்! பேசிய பிறகு சாக்குப் போக்குச் சொல்லாதீர்கள்!

 சமீபத்தில் சபா பல்கலைக்கழக மாணவியைப் பற்றி இரு  துணை அமைச்சர்கள் கூறிய கருத்துக்கள் மக்களிடையே  கொந்தலிப்பை ஏற்படுத்திய்து. 

அவர்கள் அந்த மாணவியைப் பற்றியான செய்தியைக் கிண்டலடித்தனர்! கேலி செய்தனர்! அந்த மாணவியின் செய்தில் உண்மைத் தன்மை இருக்கிறதா என்பது பற்றி கவலைப்படவில்லை!

ஆனால் பின்னர் தங்களது தவற்றினை உணர்ந்து எங்கோ போய் மறைந்து கொண்டனர்  என்கிற செய்தியையும் நாம் அறிவோம்.

ஒரு நல்ல செய்தி. இந்த இரு அமைச்சர்கள் ஒளிந்து கொண்டாலும் அரசாங்கம் அவர்கள் செய்த தவறுகளுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டது.  அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர்  கைரி ஜமாலுடின்  சம்பந்தப்பட்ட மாணவி வெவோனா மொசிபின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் அரசாங்க சார்பில் மன்னிப்பைக் கேட்டுக்கொண்டார். 

இது தேர்தல் நேரம் அல்லவா! அதனால் தானோ? பரவாயில்லை! அதை விட்டு விடுவோம்!

நாம் சொல்ல வருவதெல்லாம்,  அமைச்சார்களே!  உங்களிடம் போதுமான தகவல்கள் இல்லையென்றால்  சரியான தகவல்களைப் பெற்று  அதன் பின்னர் உங்கள் கருத்தை வெளிப்படுத்தங்கள். நீங்கள் அமைச்சர்கள் என்பதனால் நீங்கள் சொல்லுவதையெல்லாம் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்னும் அவசியமில்லை! மக்களுக்கும் உண்மை எது பொய் எது,  என்பதை அறிந்திருக்கின்றனர் என்பதை மறந்து விடாதீர்கள்!

நீங்கள் எந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பற்றியெல்லாம் எங்களுக்குக் கவலையில்லை.  காரணம் பாஸ் கட்சியினருக்கு வாய் கொஞ்சம் அதிகம் என்பது மக்களுக்குப் புரிகிறது!  அதனால் நீங்கள் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  ஏனெனில் பாஸ் கட்சியினருக்கு அமைச்சரவை என்பது புதிது!   புதுசு என்பதால் கொஞ்சம் லூஸ் தனமும் அதிகம்!

இப்போது நாம் கேட்டுக் கொள்ளுவதெல்லாம் சபா மாநிலத்தில் இணையத்தள வசதிகளை மேம்படுத்துங்கள் என்பது தான். மீண்டும் மாணவர்களை மரத்தில் ஏறி தங்களது பாடங்களைச் செய்ய வைக்காதீர்கள் என்பது தான்!

யார் அரசாங்கம் அமைப்பது என்பதில் மட்டும் அக்கறை காட்டாதீர்கள். மக்களின் நலனிலும் அக்கறை செலுத்துங்கள்!

Friday 11 September 2020

புயலாக புறப்படும் முன்னாள்கள்!

 ம.இ.கா.வின் முன்னாள் தலைவர்கள் எல்லாம், எல்லாவற்றையும் மறந்து, புயலாகப் புறப்படுகிறார்களாம் இந்த சமுதாயத்தை மாற்றியமைக்க!  

நீங்களே  மாற்றிக் கொள்வீர்கள்  என்பதிலே எங்களுக்குச்  சந்தேகமில்லை!  ஆனால் இந்த  சமுதாயத்தை  மாற்றியமைப்பீர்களா என்கிற சந்தேகம்  அன்றும் உண்டு!  இன்றும் உண்டு! 

புயலோடு புயலாக நீங்கள் மாற்றியமைப்பதற்கு ஒரு சில விஷயங்கள் இப்போது கையிலே உண்டு.  அதை மாற்றியமைத்து  வீட்டிர்களானால் அப்புறம் உங்களை எப்படி வேண்டுமானாலும் பாராட்டோ பாராட்டு என்று  பாராட்டுகிறேன்!  அது வரை நீங்கள் இந்த இந்திய சமுதாயத்தின் துரோகிகள் என்கிற அடையாளத்தை விட்டு விட முடியாது!

நீங்கள் முன்னாள்கள் என்று சொல்லுகிறீர்களே உண்மையில் யார் நீங்கள்? சாமிவேலுவின் சில்லறைகள் என்பது தானே நீங்கள்?  அவரோடு சேர்ந்து நீங்கள் ஏற்படுத்திய கறையை உங்களால் போக்கிவிட முடியுமா? அது என்ன அவ்வளவு எளிதா? அது உங்களால் முடியுமா? அவரோடு சேர்ந்து நீங்களும் ஆட்டம் ஆடி பாட்டுப் பாடியவர்கள் தானே!

இப்போது புயலாக வருகீறீர்கள் என்றால் ஏதோ செனட்டராக ஆகிவிட முடியாதா என்கிற ஏக்கத்தோடு வருகிறீர்களே தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை. இன்னொன்று அரசாங்க அமைப்புக்களில் ஏதாவது பதவிகள் கிடைக்காதா என்பது தான்!

உங்கள் முன்னே ஒரு சவாலை வைக்கிறேன்.  பேராக் மாநிலத்தில் தமிழ்ப்பள்ளிகளுக்குக் கொடுக்கப்பட்ட  2000 ஏக்கர் நிலத்தை முழுவதுமாக உங்கள் வீட்டுச் சொத்தாக்கினீர்களே அதை சமுதாயத்திற்குத் திருப்பித் தர முடியுமா?  மலாக்காவில் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒரு சீனப் பெண்மணியை அதிகாரியாகப் போட்டிருக்கிறார்களே அதனை உங்களால் மாற்ற முடியுமா?  பக்கத்தான் அரசாங்கத்தில் இது நடக்காது என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் உங்கள் அரசாங்கத்தில் இது நடக்கும்!

எப்படியிருப்பினும் வாருங்கள்! புயலாக வராதீர்கள்! புயல் உங்களை அடித்துக் கொண்டு போய்விடும்! அப்புறம் உங்களால் தலை தூக்கவே முடியாது!

கொஞ்சம் நல்ல எண்ணத்தோடு வாருங்கள், ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்து வாருங்கள். நல்ல எண்ணம் என்பது கொஞ்சம் கஷ்டமானதது தான்!  உங்கள் கட்சி அப்படி உங்களை வளர்க்கவில்லை!

இனி மேலாவது அந்த பண்பை வளர்த்துக் கொள்ளுங்கள்!

பெற்றோர்களே! பொறுமை காட்டுங்கள்!

 இன்று காலையிலேயே தனது மகளிடம் பொறுமையிழந்த ஒரு தாயைக் காண நேர்ந்தது!

பிரச்சனை மகளிடம் இல்லை!  

மகள் கணினியில் தனது பாடம் சம்பந்தமாக எதையோ செய்து கொண்டிருந்தாள்.  இடையிடையே தாய் புகுந்து கொண்டு "அப்படி செய்! இப்படி செய்!" என்று உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருந்தார். அத்தோடு அவர் நிற்கவில்லை. "நீ போடோ! ஒரு முட்டாள்! இது கூட தெரியாதா? சீக்கிரம் செய்! " என்று திட்டிக் கொண்டிருந்தார்!

உண்மையைச் சொன்னால் யார் இங்கே முட்டாள்? அந்த தாய் தான் இங்கே முட்டாள்!  அவர் மகள் அல்ல! இதை என்னால் சொல்ல முடியவில்லை. இது பொல்லாப்பில் போய் முடியும் என்பதால் நான் ஒன்றும் பேச முயற்சி செய்யவில்லை.

பெற்றோர்கள் குழந்தைகளிடம் எப்படி எல்லாம் தவறு செய்கிறார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை.

பிள்ளைகள் கணினிகளை இயக்குகிறார்கள்.  அவர்களது பாடங்களைச் செய்கிறார்கள். அவர்களுக்குக் கணினிகளை இயக்கும் போது ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அவர்கள் கேள்விகள் கேட்கும் வரை பெற்றோர்களே பொறுமையாகக் காத்திருங்கள். அவர்கள் உங்களிடம் கேள்விகள் கேட்கும் வரை நீங்களாகவே உள்ளே புகுந்து குழப்ப வேண்டாம்.

அந்த அம்மா அப்படித் தான் செய்தார். மகளைக் குழப்பிக் கொண்டிருந்தார்! ஒன்றை அவர் புரிந்து கொள்ளவில்லை. மகளின் கேள்விக்கு அவர் பதில் சொன்னால் போதும்.  எப்படி செய்வது என்பதை விளக்கிச் சொன்னால் போதும். மற்றபடி அம்மாவுடைய அறிவையும் ஆற்றலையும் பிள்ளைகளிடம் காட்டிக் கொள்ள வேண்டாம் என்பது தான் முக்கியம்! அதனால்  ஆகப் போவது ஒன்றுமில்லை! பிள்ளைகள் தவறு செய்து தான் கற்றுக் கொள்ள வேண்டும். வேறு வழியில்லை! வெற்றி பெற குறுக்கு வழிகள் ஏதும் இல்லை!

"சீக்கிரம் செய்! சீக்கிரம் செய்!" என்றால் பிள்ளைகள் தடுமாறிப் போவார்கள்!  பாடங்களையே வெறுக்க ஆரம்பித்து விடுவார்கள்!   அம்மாவுக்கும் அதே கதிதான்!

அப்படி என்ன அவசரம்?  அம்மா அருகில் இல்லாவிட்டால் தங்களது நண்பர்களைத் தொடர்பு கொண்டு அவர்களே பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டு விடுவார்கள்.  நண்பர்கள் வேண்டாமென்றால் அம்மாக்களே நண்பர்கள் போல பிள்ளைகளிடம் பழக வேண்டும். 

சில பெற்றோர்கள் பிள்ளைகளிடம் ஏதோ எதிரிகளைப் போல நடந்து கொள்ளுகிறார்கள்!  பின்னர் பிள்ளைகளே உங்களுக்கு எதிரிகளாகி  மாறி விடுவார்கள் என்பதை மறக்க வேண்டாம்!   அப்போது அம்மாக்கள் புலம்புவதால் பயனில்லை! இது முன்பும் நடந்தது! இப்போதும் நடக்கிறது! எப்போதும் நடக்கும்!

பெற்றோர்களே பிள்ளைகளைப் பொறுமை இழக்க வைக்காதீர்கள். நல்லபடியாக பேசி நல்லபடியாக அவர்களுக்குப் பாடங்களைத் தெளிவு படுத்துங்கள். உங்களுடைய அவசரத்தைப் பிள்ளைகளிடம் காட்டாதீர்கள்! உங்களுடைய அவசரத்தை அவர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள்!

பெற்றோர்களே! பொறுமை காக்க!

Thursday 10 September 2020

இது ஒர் அதிர்ச்சி செய்தி தான்!

 பொதுவாக கொரோனா தொற்று என்பதே ஓர் அதிர்ச்சி செய்தி தான்! மக்கள் அந்த அளவுக்குப் பீதியில் இருக்கிறார்கள்! உலகெங்கும் பயத்தை ஏற்படுத்தும் தொற்றாக அது இன்னும் விரிவடைந்து கொண்டிருக்கிறது! அதனை எப்படி நிறுத்துவது என்று இன்னும் எந்த நாடும் அதற்குத் தேவையான மருந்துகளைக் கண்டு பிடிக்க முடியாமல் திணருகின்றன!


 இந்த நிலையில் கொரோனா தொற்று நோயினால் பாதிப்பு அடைந்தவர்களில் அதிகமானார் சுகாதார ஊழியர்கள் என்று அறியும் போது மனது கனக்கிறது. அவர்களில் சுமார் 53 விழுக்காட்டினர் என்பதாக சுகாதார அமைச்சு கூறுகிறது.

 இவர்களில் பெரும்பாலானோர்  மருத்துவமனைகளில் முன் நின்று நம்மை சோதித்து உள்ளே அனுப்பவர்கள் தான்! இவர்களில் பலர் எந்த முன்னெச்சரிக்கையும் எடுப்பதில்லை என்பது மட்டும் அல்ல தங்களது தொழிலில் அலட்சியமாக இருப்பவர்கள்.  அவர்களை நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்! என்ன செய்ய?

இந்த புள்ளி விபரத்திலிருந்து இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். ஒரு சிறிய நாடான நமது நாட்டிலே இப்படி என்றால் உலகில் உள்ள மற்ற நாடுகளில் நிலவரம் எப்படி இருக்கும்? என்று  யோசிக்க வேண்டியுள்ளது.

"எந்த வியாதியும் என்னை ஒன்றும் செய்யாது!" என்று நினப்பவர்களுக்கு ஆபத்து எப்போது வரும் என்று நம்மால் கூற முடியாது! இதில் ஆச்சரியம் என்னவென்றால் இவர்களில் பலர் முன்னரே சோதிக்கப்பட்டு "ஒன்றுமில்லை!" என்று எதிர்மறையான நற்சான்றைப் பெற்றவர்கள்!

ஆக ஒன்று மட்டும் உறுதி. சோதிக்கும் போது இல்லாமல் இருக்கலாம் ஆனால் அதன் பின்னர் கூட ஆபத்துகள் வரலாம்! வரக்கூடும்! எதனையும் அறுதியிட்டுக் கூற வழியில்லை! 

நம் நாட்டில் இப்படி ஒரு நிலைமை என்னும் போது நம்மால் நம்ப முடியவில்லை. மருத்துவர்கள் சரியானப் பாதுகாப்பைக் கொண்டிருக்கின்றனர். இருப்பினும் அவர்களுக்கும் ஆபத்துகள் வருகின்றன. உலகளவில் அந்த செய்திகளையும் கேட்கிறோம். நம் நாட்டிலும் இருக்கலாம். 

நமது சுகாதார ஊழியர்கள் தங்களது பாதுகாப்பில் அதிக அக்கறை எடுக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள். செய்கின்ற வேலை ஆபத்து நிறைந்த வேலை என்பதை மனத்தில் கொண்டு தங்களது பணிகளை ஆற்ற வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறோம். 

அலட்சியம் வேண்டாம்! ஊழியரிடையே அலட்சியம் என்பது சாதாரண விஷயம் தான்! ஆனால் இது உயிரை எடுக்கின்ற விஷயம்! 

அதனால் மீண்டும் மீண்டும் அதிர்ச்சியைக் கொடுக்காதீர்கள்!

ஆதரவு கூடுகிறதா?

 பிரதமர் முகைதீனுக்கு மக்களிடையே ஆதரவு கூடுவதாக மெர்டேக்கா சென்டர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வருகிறது.

அந்த ஆதரவாளர்களில் நானும் ஒருவன். தீவிர ஆதரவாளன் என்பதெல்லாம் ஒன்றுமில்லை. அவருடைய ஆட்சி அடுத்தப் பொதுத் தேர்தல் வரும் வரை நீடிக்க வேண்டும் என்று மனப்பூர்வமாக நினைப்பவர்களில் நானும் ஒருவன்.

காரணம் தீடீர் தேர்தல் வருவதை நான் எதிர்க்கிறேன்.   ஒரு பொதுத் தேர்தலை நடத்த கோடிக்கணக்கில்  மக்களின் வரிப்பணம் வாரி இறைக்கப் படுவதை நான் விரும்பவில்லை.  அது பொது மக்களின் பணம்.  பொது நலனுக்காக அந்தப் பணம் பயன் படுத்தப்பட்டால்  நாட்டுக்கு நல்லது. அது ஏன் வீணடிக்கப்பட வேண்டும் என்பது தான் நான் தொடுக்கும் கேள்வி.

மற்றபடி இன்றைய அரசாங்கம் கேடு விளைவிக்கும் வரப்போகின்ற அரசாங்கம்  வாரிக் கொடுக்கும் என்பதை நான் நம்பவில்லை! இப்போது என்ன நடக்கிறதோ அப்போதும் அது தான் நடக்கும்!

பக்காத்தான் அரசாங்கம் நீடித்திருந்தால்  நமது சமூகத்தின் ஒரு சில காரியங்கள் நிறைவேறியிருக்கும். அது முடியாமல் போயிற்றே என்கிற வருத்தம் எனக்கு உண்டு,  ம.இ.கா. வினர் வந்தால் எல்லாமே பூஜ்யம்! அவர்களே பூஜ்யம் தானே!  அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள்! மலாக்காவில் ஏற்பட்ட கல்வி அமைச்சின் ஒரு மாற்றத்தை அவர்கள் கண்டு கொள்ளவில்லையே!  யாருக்கு செனட்டர் பதவி என்பதிலேயே அவர்கள் கவனத்தைச் செலுத்துவார்கள்! நாம் அறிந்தது தானே!

பாரிசான் வந்தால் கல்வியில் கை வைக்கும்! பாஸ் வந்தால் கோவிலில் கை வைக்கும்!  இதை நாம் பார்த்து வந்திருக்கிறோம்.  எந்த சட்டதிட்டங்களையும் அவர்கள் மதிப்பதில்லை! சட்டதிட்டங்களை மதிக்க வேண்டும் என்கிற சுமாரான அறிவு கூட அவர்களுக்கில்லை! ம.இ.கா.வும் கேட்கப் போவதில்லை!

கோவிலை சேதப்படுத்திவிட்டு ஒரு மனநோயாளி அதைச் செய்தான் என்று வழக்கம் ஒரு பதிலை வைத்திருக்கிறார்கள்! இப்போதும் அது நடக்கும்! அப்போதும் அது நடக்கும்!

பிரதமர் முகைதீனுக்கு ஆதரவு கூடுவதை நான் விரும்புகிறேன்.  அவர் காலத்தில்  அவர் நல்லதைச் செய்ய வேண்டும் எனவும் நான் விரும்புகிறேன். ஒரு சில நல்ல காரியங்கள் செய்தாலே போதும்.  அந்த நல்ல காரியங்களைச் செய்யக் கூட, கூட இருக்கும் குள்ளநரிகள் செய்ய அவரை விடுவதில்லை! 

எந்த நேரத்திலும் அவரது அரசாங்கம் கவிழலாம்!  ஆனால் அப்படி ஒரு நிலை வரக் கூடாது என்பதைத் தான் நான் விரும்புகிறேன்.

தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று சொல்லுபவர்கள் மனசாட்சி இல்லாதவர்கள்! தங்களது   சுயநலனுக்காக, முன்னாள் பிரதமர் நஜிப்பைப் போல, எதையும் செய்யத் துணிந்தவர்கள்! நாட்டையே விற்க நினைப்பவர்கள்!

மக்களின் ஆதரவு முகைதீனுக்குக் கூட வேண்டும்! அரசாங்கம் நிலைக்க வேண்டும்! என்பதே எனது பிரார்த்தனை!

Wednesday 9 September 2020

இதென்ன வீர விளையாட்டா?

 ஒரு சில பெற்றோர்கள் செய்கின்ற தவறுகளைப் பார்க்கும் போது நமக்கு கவலையைத் தருகிறது!

ஒரு சிறுவன் லோரி டேங்கரை ஓட்டுகிறான்!  ஒரு சிறுவன் காரை ஓட்டுகிறான்! இருவருமே ஒன்பது வயது சிறுவர்கள்.


நாம் பெற்றோர்களைப் பார்த்துக் கேட்பதெல்லாம் இதில் என்ன பெருமை இருக்கிறது என்பதுதான்.

இப்படிக் குழந்தைகளை வைத்துக் காரை ஓட்டுவது, லோரி டிரைலரை ஓட்டுவது என்பது என்ன வீர விளையாட்டா என்பது தான் நாம் பெற்றோர்களைப் பார்த்துக் கேட்கின்ற கேள்வி. 

இப்படித்தான் பல பெற்றோர்கள் சிறுவர்களிடம் மோட்டார் சைக்கிள்களை ஓட்டுவதற்கு அனுமதி கொடுக்கின்றனர். இது எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை.

குறிப்பாக தாமான்களில் பல விபத்துக்களை இவர்கள் ஏற்படுத்துகின்றனர். மெதுவாக  போனால் கூட நாம் மன்னித்து விடலாம். ஆனால் சிறுவர்களுக்குப் பயம் தெரிவதில்லை. எடுத்ததும் அவர்கள் ஏதோ பந்தயத்தில் போவது போல பறக்கின்றனர்! இளம் கன்று பயமறியாது, உண்மை தானே!

என்ன செய்வது? பட்டால் பட்டது தான்! யாரும் ஒன்றும் செய்ய முடியாது. அப்போது வந்து நியாயத்தைப் பேசுவதால் என்ன ஆகப் போகிறது? போனது போனது தான்!

பிள்ளைகள் சுறுசுறு வென்று தான் இருப்பார்கள். அது அவர்களின் இயல்பு. அப்படித்தான் இருக்க வேண்டும்.

ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு வரையறை உண்டு.  கார் ஓட்ட, லோரிகள் ஓட்ட எந்த வயதில் உரிமம் எடுக்க வேண்டுமோ அந்த வயதில் தான் அவர்கள் உரிமம் எடுக்க வேண்டும்.  எவ்வளவு தான் கார் ஓட்ட  பயிற்சிகள் பெற்றிருந்தாலும் நாம் நேரடியாகச் சென்று உரிமம் எடுத்து விட முடியாது. அப்போதும் பயிற்சி பள்ளிகளில் சேர்ந்த பின்னர் தான் உரிமம் எடுக்க முடியும்.

அதனால் அவசரப்பட வேண்டாம்.  அதற்கான வயது வரும் போது நீங்கள் அவர்களுக்கு உரிமம் கிடைக்க வகை செய்யுங்கள். 

இது ஒன்றும் வீர விளையாட்டல்ல! கரணம் தப்பினால் மரணம் என்பார்கள்! வீர விளையாட்டு தப்பிப் போனாலும் மரணம் மட்டும் தப்பாது!

இது சாகசம் புரியும் வயது அல்ல!  சாதனைகள் புரியும் வயது! கல்வி மூலம் தான் நீங்கள் சாதனைகள் புரிய வேண்டும்.

இது வீர விளையாட்டல்ல! வினை தரும் விளையாட்டு!

இளம் வயதில் கார் ஓட்டுவது, டிரயிலர் ஓட்டுவது, மொட்டார்  சைக்கிள் ஓட்டுவது - இவைகளெல்லாம் பெருமை என்பதாக வெளியே காட்டிக் கொள்ளாதீர்கள். 

ஆபத்தோடு விளையாடாதீர்கள் என்பது தான் நாம் கொடுக்கின்ற எச்சரிக்கை!

குடியை ஒழிக்க முடியுமா?

 இப்போதைய சூழலில் ஒவ்வொரு குடும்பத்திலும் கணவன் - மனைவி இருவருமே வேலை செய்து பிழைப்பு நடத்த வேண்டிய நிலையில் இருப்பது ஒன்றும் அதிசயம் அல்ல! அதே போல இது ஒன்றும் புதிதல்ல!

 நமது பெண்கள்  எல்லாக் காலங்களிலும் குடும்பத்தைக் காப்பாற்ற கணவனுக்கு ஈடாக அவர்களது உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.  உண்மையைச் சொன்னால் மனைவி தனது உழைப்பைக் கொடுத்திரா விட்டால் பல குடும்பங்கள் சீரழிந்திருக்கும்!

 காரணம்,   எப்போது நாம் தோட்டப்புறங்களில் வேலைக்கு வந்தோமோ அப்போதே குடியும் நம்மோடு சேர்ந்து கொண்டது!  தோட்டப்புறங்களில் நம்மைத் தக்க வைத்துக் கொள்ள வெள்ளைக்காரனுக்குக் கள்ளுக் கடைகள் தேவைப்பட்டன!  அவன் நினைத்தது வீண் போகவில்லை! நம்மை ஆண்டவன் நமது இனத்தைக் குடிகாரனாக ஆக்கிவிட்டுத் தான் போனான்!

அது இன்றளவும் தொடர்கிறது! என்பது தான் சோகம்.  நாம் எவ்வளவோ முன்னேறி விட்டோம். ஆனால் நம்மில் குடி கொண்டிருக்கும் குடி நம்மை விட முன்னேறிக் கொண்டு தான் போகிறது! 

குடி நம்மை முன்னேற விடாது.  அது நமது முன்னேற்றத்திற்கு என்றென்றும் தடைக்கல்.

இப்போதும் பல குடும்பங்கள் பெண்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றன.  பிள்ளைகளின் கல்வி, குடும்பங்களின் தினசரி தேவைகள் அனைத்தும் பெண்கள் தான் சமாளிக்கின்றனர். ஆண்களால் எந்தப் பயனுமில்லை!

ஒரு குடும்பத்தைத் தெரியும்.  அம்மா இல்லை. அப்பன் குடிகாரன்./ அதாவது நிரந்திர குடிகாரன்.  இத்தனைக்கும் நடுத்தர வயதினன். வேலை செய்ய முடியாத அளவுக்கு சீக்கில் படுத்து விட்டான்! மகன் அப்பனை விட பெரிய குடிகாரன்! அப்பன் சாரயத்தைப் போட்டால் தான் தூக்கமே வரும்! பெண் பிள்ளைகள் உழைத்து ஏதோ கிடைக்கின்ற சம்பளத்தில் அப்பனுக்குச் சாராயம் வாங்கிக் கொடுத்து அவனைத் தூங்க வைக்கிறார்கள்! அவனுக்கு அது போதவில்லை. பள்ளிக்குச் செல்லும் ஒரு மகளை பள்ளிக்குப் போக விடாமல் "வேலைக்குப் போ!" என்று விரட்டி விரட்டி கடைசியில் அந்தப் பெண் குழந்தை வேலைக்குப் போகிறாள். அவனுடைய கூடப் பிறந்த சகோதரிகள் எதனையும் கண்டு கொள்வதில்லை. கல்வி எத்துணை முக்கியம் என்பதை அவனுக்குச் சொல்லிக் கொடுக்க ஆளில்லை! சொன்னாலும் கேட்கின்ற நிலையில் அவனில்லை! இவர்களுக்கு அடி, உதை உதவுவது போல வேறு எதுவும் உதவாது!

குடி நம்மில் ஒரு பகுதியாக இருக்கின்ற நிலையில் நமது எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது?

குடித்து கும்மாளம் அடிக்கின்ற சமுதாயம் முன்னேறுவதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவு. அதை நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

எல்லாவற்றிலும் அலட்சியம். எதைப் பற்றியும் கவலை இல்லை. நமது எதிர்காலம், பிள்ளைகளின் எதிர்காலம் என்பதைப் பற்றியெல்லாம் யோசிப்பதில்லை.

குடியை ஒழிக்க முடியுமா? முடியும்!  குழந்தைகளின் கண் முன்னால் அப்பன்மார்கள் குடிப்பதை நிறுத்தினாலே போதும்! வேறு எதுவும் தேவை இல்லை!

Tuesday 8 September 2020

நேரத்தை தள்ளிப்போடாதீர்கள்!

 வேலை தேடிக் கொண்டிருந்த ஓர் இளைஞனுக்கு நேர்காணலுக்கு வரும்படி ஒரு நிறுவனத்தார் அவனை அழைத்திருந்தார்கள்.

அவன் குறிப்பிட்ட நேரத்தில் போக முடியவில்லை. அவன் கூறிய காரணம், கொரோனா தொற்று நோயினால் பொது போக்குவரத்துகள் குறைந்து போய் விட்டன.  அவன் தந்தையின் காரில் வர வேண்டியிருப்பதால் அவனின் தந்தை வந்ததும் தான் நேர்காணலுக்கு வருவதாக அவர்களுடன் தொடர்பு கொண்டு பேசினான். 

அவனுக்கு வேலை கிடைக்கவில்லை! 

கொஞ்சம் யோசியுங்கள்.  அவன் நேர்காணலுக்கு வருவான் என்பதற்காக அந்த நிர்வாகி இவனுக்காக மற்ற வேலைகளை விட்டுவிட்டு இவனுக்காகக் காத்திருக்கிறார். இப்போது இவன் நேரத்தை மாற்றும் போது அவருக்கு அதனால் பல பிரச்சனைகள் வரும். அவர் செய்ய வேண்டிய வேறு வேலைகளைத் தள்ளிப்போட்டிருப்பார். எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்திருப்பார். இப்போது அவர் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளும் பாழாய்ப் போனது தான் மிச்சம்!   அத்தனை வீணடிப்பும் இவன் ஒருவனால் வந்தது!

இது ஒரு பக்கம். இன்னொன்று வெறும் நேர்காணலுக்கே இவன் காரணம் சொல்லிக் கொண்டிருக்கிறான்!  இவனுக்கு வேலை கொடுத்தால் இவன் எந்த அளவுக்குக் காரணங்களைச் சொல்லுவான்! காரணங்களைச் சொல்லுபவன் வேலை செய்யாததற்கும் காரணங்களை அடுக்கிக் கொண்டு போவான்!  இவன் வேலை செய்வதற்கு இலாயக்கானவனா என்று எந்த ஒரு முதலாளியும் யோசிக்கத்தான் செய்வார்கள்!

இப்போது இன்னொரு பக்கமும் உண்டு, இவன் நேர்காணலுக்குப் போக வேண்டிய இடம் சுமார் முப்பது மைல்கள் தள்ளிப் போக வேண்டும். கொரோனா தொற்று நோயினால் பொது போக்குவரத்துகள் எப்போதும் போல் இல்லை என்பது அவனுக்கு முன்னரே தெரியும். காரணம் அவன் பெரும்பாலும் பொது போக்குவரத்துக்களைப் பயன்படுத்துபவன் அப்படியே பிரச்சனைகள் இருந்தால் அவன் தன் தந்தையாரிடம் சொல்லி எத்தனை மணிக்குப் போக வேண்டும், எத்தனை மணிக்கு அங்கு இருக்க வேண்டும் என்பதையெல்லாம் யோசித்து  அதற்கு ஏற்றவாறு ஏற்பாடுகளைச் செய்திருப்பான்! 

அவன் எதனையுமே செய்யவில்லை.  இப்படி பார்க்கும் போது இவன் உண்மையிலேயே வேலை செய்ய வேண்டும் என்கிற அக்கறை உள்ளவனா என்பதை ஒரளவு நாம் ஊகிக்கலாம். 

நமக்கு வேலை வேண்டும் என்றால் நாம் தான் அக்கறை எடுக்க வேண்டும்.  முதலாளிக்கு எந்த அக்கறையும் இருக்க வேண்டி அவசியம் இல்லை!  வயிற்று வலி முதலாளிக்கு அல்ல நமக்குத் தான். 

இப்படித்தான்  நாம்  பல  வாய்ப்புக்களை இழக்கிறோம்.  நேரம் தவறாமை என்பது எல்லாம் இளம் தலைமுறையினருக்குத் தெரிவதில்லை!   எல்லாமே அவசரம்! அவசரம்! அவசரம்!  கடைசியில் எதையும் சாதித்தாகத் தெரியவில்லை!

எதையும் நேரத்தோடு செய்யக் கற்றுக் கொள்ளுங்கள்! நேரம் தவறாமையைக் கடைப்பிடியுங்கள்! நேரம் - போனால் போனது தான்! திரும்ப வாங்க எந்தக் கொம்பனாலும் முடியாது!

மந்திரி பெசார் அறியாதவரா?

ரோம் நகரம் தீப்பற்றி  எரியும் போது நீரோ  மன்னன் பிடில்  வாசித்துக் கொண்டிருந்ததாக ஒரு சரித்திர நிகழ்ச்சி நம்மிடையே சொல்லப்படுவது உண்டு!

அதனை ஞாபகப்படுத்துகிறது  சமீபத்திய சிலாங்கூர் மந்திரி பெசாரின் வீட்டில் நடந்த நிகழ்வு ஒன்று.  கிட்டத்தட்ட நான்கு இலட்சம் பேருக்கு மேல் நான்கு நாட்கள் தண்ணீருக்காக அலை மோதிக் கொண்டிருந்த நிலையில் மந்திரி பெசார் வீட்டின் நீச்சல் குளத்திற்கு லோரிகளின் மூலம் தண்ணீர் கொண்டு சென்றதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன!

கேட்பதற்கு மனதுக்கு எப்படியோ இருக்கிறது என்பது உண்மையிலும் உண்மை.  குடிப்பதற்கு நீர் அனுப்பப்பட்டது என்றால் கூட ஏற்றுக் கொள்ளலாம்.  அதுவும் கூட குடி மக்களுக்குத் தான் முதல் சலுகை.  பெரிய மனிதர்களுக்கு எப்படியோ, ஏதோ ஓர் இடத்தில் அந்த வசதியும் வாய்ப்பும் கிடைத்துவிடும்!  அவர்கள் பிள்ளைகள் வீட்டில், சகோதர சகோதரிகள் வீட்டில், நண்பர்கள் வீட்டில் - இப்படித் தான் நாம் ஆபத்து அவசர வேளைகளில் பயன்படுத்திக் கொள்ளுகிறோம்.  

இப்படித்தான் மந்திரி பெசாரும் தனது குடி மக்களுக்கு முதலிடம் கொடுத்து தனது தேவைக்குத் பின்னுரிமை தர வேண்டும். குடி உயர்ந்தால் தானே கோன் உயர்வான்?

இந்த நிகழ்வில் இருந்து ஒன்று நமக்கு விளங்குகிறது. இப்போது அரசியலில் உள்ளவர்கள் எதுவாக இருந்தாலும் "முதலில் எனக்கு அதன் பின்னர் தான் உனக்கு!" என்கிற மனப்பான்மை உடையவர்களாக இருக்கிறார்கள்! ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு தானே பதம்!

மக்களுக்கான சேவையில் நாம் இருக்கிறோம் என்பதெல்லாம் இப்போது மக்களுக்குச் சேவை ஆற்ற வருபவர்களுக்கு இல்லை என்றே சொல்லலாம்!

 

                                                  கல்லூரி மாணவி - வெவோனா

அரசியலில் இருப்பவர்கள்  தான்தோன்றித்தனமாக நடந்து கொள்ளுகிறார்கள் என்பதை  சமீப காலமாக நாம் பார்க்கிறோம்.  ஒருவர் வெளிநாடுகளுக்குப் போய் வந்தார். எந்த ஊரடங்குச் சட்டத்தையும் பின்பற்றவில்லை!  ஒருவர் ஒரு கல்லூரி மாணவியை எகத்தாளமாக பேசுகிறார். அவருடைய எம்.பி.ஏ. பட்டமோ ஒரு கிறிஸ்துவ இறையியல் கல்லூரியிலிருந்து கொடுக்கப்பட்டதாம்!  இறையியலுக்கும்.எம்.பி.ஏ. வுக்கும் என்ன சம்பந்தம்?ஒருவர் ஒரு மதத்தை வம்புக்கு இழுக்கிறார்! இவரும் இறையியல் கல்லூரி தானோ! இவர்கள் எல்லாம் குட்டி ராஜாக்களாக ஜனநாயகத்தின் பெயரால் வலம் வருகிறார்கள்! கல்வியிலோ பூஜ்யங்கள்!

இவர்களுக்கு இந்த உரிமையை யாரும் கொடுக்கவில்லை! ஆனால் கொடுத்தாக அவர்களே சொல்லிக் கொள்ளுகிறார்கள்!  எல்லாம் அறிந்தவர்களாக காட்டிக் கொள்ளுகிறார்கள்!

ஆனால் இது போன்ற செயல்களில் மட்டும் - நீர் விநியோகம்  - அதாவது அவர்கள் அறிந்து கொள்ளாதது போல் நடிக்கிறார்கள்!

நமக்குத் தெரிந்தவை இவைகள் தாம். நமக்குத் தெரியாதவை?  பாவம் நமது பிரதமர்!  ஒரு பலவீனமான அரசாங்கத்தை வைத்துக் கொண்டு படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்!

அவனவன் வைத்தது சட்டம் என்பது போல் நடந்து கொள்ளுகிறான்! எவ்வளவு நாளைக்குத் தான் இதைப் பிரதமர் தாங்க முடியுமோ!

Monday 7 September 2020

கட்சி ஆரம்பிப்பாரா சையது சாதிக்?

முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர், சையது சாதிக் தான் ஒரு புதிய கட்சியை இளஞர்களுக்காக ஆரம்பிக்கப் போவதாக கூறிக் கொண்டிருக்கிறார்! இது நடக்குமா என்பதை விட இது நடக்கும் என்றே நாம் ஊகிக்கலாம்.

 ஒரே காரணம் தான்.  வசதியும் வாய்ப்பும் இருந்தால் யார் வேண்டுமானாலும்  கட்சிகளை ஆரம்பிக்கலாம்!  இது ஒன்று இயலாத காரியம் அல்ல!  பணம்  பாதாளம் மட்டும் பாயும் என்பது சரியே!

சைட் சாதிக் எதனை வைத்து கட்சி ஆரம்பிப்பேன் என்று சொல்லுகிறார்?  அவரைப் பற்றியான சரியான புரிதல் நமக்கு இல்லை.

மலேசிய அளவில் அவரால் அவருடைய கட்சியை கொண்டு செல்ல முடியுமா? வளர்க்க முடியுமா?  என்கிற கேள்விகள் எழுவது இயற்கையே! அந்த அளவுக்கு அவர் மலேசிய மக்களிடையே வரவேற்பைப் பெற்றவரா, புகழ் பெற்றவரா?  அல்லது இளைஞர்களிடையே மிகப் பெரிய செல்வாக்கு உடையவரா, ஒன்றும் புரியவில்லை!

ஒன்றுமே இல்லை என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது!  அப்படியிருந்தும் அவர் எப்படி இளைஞர்களுக்காக ஒரு கட்சி ஆரம்பிப்பேன் என்று சொல்லுகிறார்? அதற்கான தைரியம் எங்கிருந்து அவருக்கு வந்தது? பல கேள்விகளை நாம் எழுப்ப வேண்டியுள்ளது! என்ன செய்ய, நிலைமை அப்படி! 

ஒன்றை மட்டும் நம்மால் சொல்ல முடியும். ஒரு வேளை அவர் ஜொகூர் மாநிலத்தை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு பேசுகிறாரா என்பதில் நமக்குத் தெளிவில்லை. அவருடைய செல்வாக்கு ஜொகூர் அளவில் மட்டும் தான் என்கிற நிலைமை உண்டா என்பதையும் யோசிக்க வேண்டும்.  காரணம் பக்கத்தான் அரசாங்கம் பதவியில் இருந்த காலத்தில் அவர் இளைஞரிடையே நல்ல செல்வாக்கைப் பெற்றிருக்கலாம்.  நிறைய சேவைகள் செய்திருக்கலாம். அதனால் ஜொகூர் இளைஞரிடையே அவர் நல்ல பெயர் பெற்றவராக இருக்கலாம். 

ஆனால் மலேசிய அளவில் அவருக்குச் செல்வாக்கு ஏற்கும் அளவுக்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். 

கடைசியாக ஒன்றைச் சொல்லி நிறைவு செய்கிறேன். கட்சிகள் இப்போது நிறையவே  உருவாகி விட்டன! அதில் ஒன்று டாக்டர் மகாதிர் ஆரம்பித்திருக்கும் ஒரு புதிய கட்சி. என்ன தான் அவர் மக்களிடையே செல்வாக்குப் பெற்றவராக இருந்தாலும் கடைசி காலத்தில் தனது பெயரைக் கெடுத்துக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது! அவர் தனது கட்சியை நாடெங்கிலும் கொண்டு செல்லும் அளவுக்கு அவருக்குத் தெம்பில்லை! அது மட்டும் அல்ல. அவரது கட்சித் தளபதிகள் அந்த அளவுக்கு உழைக்கத் தயாராக இல்லை என்பதும் கவனிக்கத் தக்கது.

சையது சாதிக் கட்சி ஆரம்பிக்கலாம்! ஆனால் வெற்றி பெற மாட்டார் என்பதே நமாது கணிப்பு!

Sunday 6 September 2020

மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது சரியே!

 ஒரு சில பிரச்சனைகளில் அதுவும் கருத்துச் சொல்ல முடியாத சில பிரச்சனைகளில் அவரவர் விருப்பப்படி கருத்துக்களைச் சொல்லுவது நிறுத்தப்பட வேண்டும் என்பதை நாம் சொல்லி வந்திருக்கிறோம். அதனை மீண்டும் இங்கே வலியுறுத்துகிறோம்.

தாய் மொழிப்பள்ளிகளைப் பற்றி யார் வேண்டுமானாலும் பேசலாம் அது பற்றி பேசுவது அதன் முன்னேற்றத்தை ஒட்டி இருக்க வேண்டுமே தவிர  அதனை ஏதோ தீண்டத் தகாத ஒரு பொருளாக நினைத்துப் பேசுவதை நாம் ஏற்க முடியாது!

இன்னொன்று தாய் மொழிப்பள்ளிகளைப் பற்றி பேசும் போது அதனை அறிந்து பேச வேண்டும். குறிப்பாக அமைச்சராக இருப்போர் அது  பற்றி அதிகம் அறிந்திருக்க வேண்டும்.

விளையாட்டுத்துறை துணை அமைச்சராக இருக்கும் வான் அமாட் பைசால்  தான் ஒரு பொறுப்பான பதவியில் இருப்பவர் என அறிந்து பொறுப்புள்ளவராக நடந்து கொள்ள வேண்டும். மக்கள் புரிந்து கொள்ளுமாறு  அவர்களுக்கு விளக்கம் தர வேண்டும்.

பதவியில் உள்ளவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளுவது நல்லது. உங்களது தாத்தாமார்கள், தந்தைமார்கள் இங்குக் குடியேறுவதற்கு முன்பே தமிழ் இங்கே இருந்து வருகிறது!  உங்களை எங்களோடு ஒப்பிடாதீர்கள்!

அமைச்சராக இருப்பவர்கள் அரசியல் சட்டம் என்ன சொல்லுகிறது  என்பதைப் புரிந்து கொண்டு பேசுவது நல்லது. அமைச்சர்கள் மட்டும் அல்ல சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டத்தைப் பற்றியான அறிவு இருக்க வேண்டும்.

யாரோ ஒரு சிலர் கைதட்டுகிறார்கள் என்பதற்காக பொறுப்பற்றுப் பேசாதீர்கள்!

ஜ.செ.க.பொதுச் செயலாளர் லிம் குவான் எங் சொல்லுகின்ற கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். பொறுப்பற்று பேசுகின்ற அமைச்சர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

எந்த நேரத்திலும் கவிழலாம் என்று ஆட்டங் கொண்டிருக்கும்  ஓர் அரசாங்கத்தில் பதவியில் இருந்து கொண்டு அரசாங்கத்தையே கவிழ்க்க நினைப்பது மாபெரும் துரோகம்!

மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பது சரியே!

இளைஞரணிக்கு ஏன் இப்படி பயப்படுகிறார்?

 ஜொகூர் மாநில பாரிசான் கட்சியின் தலைவர், ஹஸ்னி முகமட் ஏன் இப்படிப் பயப்படுகிறார்  என்பது நமக்குத் தெளிவாகத் தெரியவில்லை!

முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சரும், இளைஞர் அணி தலைவருமான சையட் சாடிக் புதிதாக - இளைய தலைமுறைக்காக கட்சி ஒன்று ஆர்ம்பிக்கப் போவதாக சமீப காலமாகக் கூறி வருகிறார். 

அவர் அந்த முயற்சியில் வெற்றி பெறுவாரா தோல்வி அடைவாரா என்பது பற்றிப் பேசுவது நமது நோக்கமல்ல. 

ஆனால் பாரிசான் கட்சியின் தலைவர் அந்தப் புதிய கட்சியை வரவேற்கவில்லை என்பது மட்டும் நமக்குப் புரிகிறது. அதற்கு அவர் கூறுகின்ற காரணங்கள்  அம்னோவுக்குச் சரியாக இருக்கலாம். அது இளைய தலைமுறைக்குச் சரியாக இருக்குமா என்பது யோசிக்க வேண்டிய விஷயம்.

அவர் கூறுவது: "நாங்கள் தான் இளைஞர்களுக்கு அனைத்தையும் செய்கிறோமே அப்புறம் எதற்கு இளைஞர்களுக்கென்று ஒரு புதிய கட்சி? எங்களிடையே ஓர் இளைஞர் அணி இருக்கிறது. அவர்களோடு சேர்ந்து பணியாற்றலாமே! பெரியவர்களும், சிறியவர்களும் சேர்ந்து தான் பணியாற்ற வேண்டும். அது தான் நாட்டுக்கு நல்லது! இளைஞர்களுக்கென்று கட்சி ஒன்றைத் தொடங்குவது என்பது பெரியவர்களை அவமரியாதை செய்வதற்குச் சமம்! புதிய இளைஞர் கட்சி ஒன்று தேவை இல்லை!"  

இப்படித்தான் ஹஸ்னி அகமட் பேசி இருக்கிறார். நமக்கு ஒன்றும் ஆச்சரியமில்லை. சென்ற பொதுத் தேர்தலில் பாரிசான் கட்சி ஏன் தோல்வி அடைந்தது என்பது அவர்களுக்குத் தெரியாமலில்லை.  சென்ற தேர்தலில் இளைஞர்களே பாரிசானை ஆதரிக்கவில்லை என்பது அவருக்குத் தெரியாமலிருக்க முடியாது. அது ஒன்றும் தங்கமலை இரகசியம் அல்ல!

பெரியவர்கள் சேர்ந்து நாட்டைக் கொள்ளையடித்தும் கும்மாளமடித்தும் நாசமாக்கியது மக்களுக்குத் தெரியும். அதனால் தான் அவர்களுக்கு ஏற்பட்டது தோல்வி! இப்போது கொள்ளைப்புற வழியாக அரசாங்கத்தைக் கவிழ்த்ததும் இளைஞர்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்!

பாரிசான் கட்சி மேல் மக்களுக்கு அல்லது இளைஞர் அணியினருக்கு நல்லெண்ணம் வர வேண்டுமென்றால் அவர்கள் நேர்மையாளர்கள், நீதியானவர்கள் என்கிற பெயரை அவர்கள் எடுக்க வேண்டும். அதெல்லாம் நடக்கிற காரியமாகத் தெரியவில்லை!

திருடர்கள் "இனி நாங்கள் திருட மாட்டோம்!" என்று சொன்னால் நம்புவதற்கு யாரும் தயாராக இல்லை! அதற்கான வாய்ப்பே இல்லை! நடப்பு அரசாங்கத்தைக் கவிழ்த்தவர்கள் என்கிற பெயரோடு சுற்றிக் கொண்டிருப்பவர்களை யாரும் நம்ப மாட்டார்கள்! ஆனால் மக்கள் நம்ப வேண்டும் என்று அவர்களே சொல்லிக் கொண்டு திரிகிறார்கள்!

இளைஞர் அணி ஒன்று திரண்டால் என்ன நடக்கும் என்பதை ஹஸ்னி முகமட் தெரிந்து வைத்திருக்கிறார்! அதனால் தான் இந்த புலம்பல் நாடகம்!

இளைஞர்கள் ஒன்று திரள வேண்டும். தங்களது சக்தி என்ன என்பதைக் காண்பிக்க வேண்டும். பழைய பஞ்சாங்கங்களைத் தூக்கி எறிய வேண்டும்! அரசியல் என்றால் கொள்ளையடிப்பது என்கிற மனப்போக்கை மாற்ற வேண்டும்.

நாளை புதிய விடியல் தோன்ற வேண்டும்! புத்தம் புது காலை மலர வேண்டும்1

சிலாங்கூர் ஆற்றில் தூய்மைக்கேடு!

ஆறுகளில்  தூய்மைக்கேடு என்பது நமது காதுகளில் அன்றாடம் விழும் சாதாரணப் பிரச்சனையாகிவிட்டது! இந்தப் பிரச்சனைகள் வரும் போதெல்லாம் அதிகாரிகள் காசை வாங்கிக் கொண்டு விட்டு விட்டார்கள் என்பது நாம் கூறுகிற குற்றச்சாட்டும் சாதாரண விஷயம் தான்!  இதில் எந்த அளவு உண்மை அல்லது பொய் என்பது நமக்குத் தெரியாது! அதிகாரிகளைக் குற்றம் சொல்லுவதில் நமக்கு ஒர் அலாதியான இன்பம்!  அவ்வளவு தான்!

ஆனால் இந்த முறை சிலாங்கூரில் நடந்த சம்பவம் என்பது மிகவும் கொடுமையானது. இதனை நாம் மன்னிப்பதற்கான வாய்ப்பில்லை!

முதாலாளிகள் என்ன தான் பணத்தைக் கொடுத்துச் சாதிக்க நினைத்தாலும் ஒரு சில விஷயங்கள் கட்டு மீறிப் போகும் போது அதன் பலனை அவர்கள்  அனுபவித்துத் தான் ஆக வேண்டும்!

சிலாங்கூரில் நடந்த சம்பவம் கட்டு மீறி விட்டது என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இருக்க முடியாது! நான்கு நாட்கள் தண்ணீர் இல்லை என்பது ,  அதுவும் தவறான காரணங்களுக்காக என்பது, ஏற்றுக் கொள்ள முடியாது! பன்னிரெண்டு இலட்சம்  மக்கள் தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகிற விஷயத்தை அதுவும் கொரோனா தொற்று நோய் காலத்தில், அதனை ஒரு கொலைக் குற்றமாக பார்க்க வேண்டும்.  மாற்று வழி இல்லாத நேரத்தில் மக்கள் படும் அவதியை எண்ணிப் பாருங்கள். அப்போது தான் வலி உங்களுக்குத் தெரியும்.

காவல் துறை   சிறப்புப் படை அமைத்துக் கண்டறிவது என்பது பிரச்சனையை ஆறப் போடுகிற விஷயம். பயன் இல்லை!

இதற்குக் காரணமானவர்கள் நான்கு சகோதரர்கள் என்பதாகச் செய்திகள் கூறுகின்றன. இவர்களைக் கைது செய்வது சாதாரணம்! சிறையிலடைப்பது சாதாரணம்!

இவர்களுக்குப் பத்து ஆண்டு சிறைத் தண்டனையெல்லாம் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. பிரம்படிகள் கொடுக்கப்படும் என்பதெல்லாம் எதிர்பார்க்க முடியாது!

என்ன தான் செய்யலாம்? ஒரே ஒரு வழி தான் உண்டு.  அவர்களுக்கு ஐந்து இலட்சம் அபராதம் விதிக்கலாம் என்பதாக சட்டம் கூறுகிறது.  அதாவது ஒருவருக்கு ஐந்து இலட்சம் என்றால் நான்கு பேருக்கு இருபது இலட்சம்!

இவர்களுக்குப் பணம் தான் வலியைக் கொடுக்கும்! கொலைக் குற்றச்சாட்டை விட இது ஒன்றும் அதிகம் இல்லையே!

Saturday 5 September 2020

கடைசி காலம் வரை....!

 முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் தனது கடைசி காலம்வரை ஊழலுக்கு எதிராகப் போராடுவேன் என்கிற கனவுகளோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்! அதனைத் தான் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். 

ஒவ்வொரு நாட்டிலும் ஊழல் என்பது அரசியல்வாதிகளால் தான் உருவாக்கப்படுகிறது என்பதை நாம் அறிந்திருக்கிறோம். உலகெங்கிலும் அரசியல்வாதிகள் தான் காரணகர்த்தாக்கள். ஊழல் இல்லாமல் அவர்களால் வாழ முடியாது!

இன்று உலகில் ஊழல் இல்லாத நாடே இல்லை என்கிற அளவுக்கு ஊழல் மலிந்து விட்டது. ஊழலை ஒழிக்க முடியும் என்னும் நம்பிக்கையே இப்போது எந்த நாட்டு குடி மக்களுக்கும் இல்லை!  அதை ஒழிக்க அரசியல்வாதிகள் எந்த முயற்சியும் எடுப்பதில்லை!

பொது மக்கள் மனம் வைத்தால் ஒழிய ஊழலை ஒழிக்க முடியாது!  ஆமாம்  பொதுத் தேர்தலின் போதும் ஊழல் அரசாங்கத்தை நாம் தேர்ந்தெடுக்கக் கூடாது  என்கிற  மன உறுதியோடு செயல்பட்டால் ஊழலை ஒழித்து விடலாம்! ஆனால் நம்மால் முடியவில்லையே!

நம் நாட்டைப் பொறுத்தவரை ஊழலின் தொடக்கம் என்றால் அது டாக்டர் மகாதிரின் காலத்தில் தான் என்று அடித்துச் சொல்லலாம்!  பூமிபுத்ராக்களின் 'முன்னேற்றம்' என்பதே அப்போது தான் ஆரம்பமாகிறது! அந்த முன்னேற்றத்தை அவர் ஊழலலிருந்து தான் ஆரம்பிக்கிறார்! நேர்மை, நியாயம் என்பதெல்லாம் தவிடுபொடியாகிறது!

அவருடைய ஒரே நோக்கம் பூமிபுத்ராக்களின் முன்னேற்றம் மட்டும் தான். அவர்களின் முன்னேற்றத்தைப் பற்றி யாருக்கும் குறை இல்லை. ஆனால் அதனை அவர் கொண்டு சென்ற விதம் ஊழலுக்கு விதை விதைத்து தண்ணீர் விட்டு வளர்த்தது தான்! அது இப்போது ஆலமரமாக வளர்ந்து விட்டது!

அதன் உச்ச கட்டம் தான் முன்னாள் பிரதமர் நஜிப்-ரோஸ்மா  ஊழல்!  நஜிப் நாட்டையே சீன நாட்டினருக்கு விற்கின்ற அளவுக்குப் போய் விட்டார்! ஆட்சி மாற்றம் ஏற்பட்டதினால் நாடும், மக்களும் தப்பித்தனர்!

இப்போது டாக்டர் மகாதிர் தனது கடைசி காலம்வரை ஊழலை எதிர்த்துப் போராடுவேன் என்று எல்லாரிடமும் சொல்லிக் கொண்டு வருகிறார்!  அவர் செய்த தீமைகளை அவரே தான் சரி செய்ய வேண்டும்.

எப்படியோ அவருடைய கடசி காலம்வரை என்றே எடுத்துக் கொள்ளுவோம்!

Friday 4 September 2020

அரசியல்வாதிகளே ஊழல்மிக்கவர்கள்!

 நாட்டை ஆளுகின்ற, நாட்டை வழி நடத்துகின்ற அரசியல்வாதிகளே அதிக ஊழல் மிக்கவர்கள் என்பதாக தேசிய ஊழல் எதிர்ப்பு மையத்தின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ அபு காசிம் முகமட் கூறி இருக்கிறார்!

நமக்கு இது புதிய செய்தி அல்ல! ஆனால் அதனை தலைமை இயக்குநர் கூறுவது தான் நமக்குப் புதிய செய்தி!

"குடி உயர கோல் உயரும்"  என்பார்கள். குடியும் உயரவில்லை! கோலும் உயரவில்லை! கோல் சாய்ந்து நீண்ட  நாட்களாகி விட்டன. டாக்டர் மகாதிர் என்று நாட்டின் பிரதமரானாரோ அன்றே கோல் சாய்ந்துவிட்டது!

இப்போது அவரது தவறுக்குப் பரிகாரம் செய்ய நினைக்கிறார்! ஆனால் அவரால் முடியவில்லை! முடியவும் முடியாது!  காரணம் கோல் சாய்ந்து அதற்குப் பாடையும் கட்டிவிட்டார்கள்!  அனைத்துக்கும் காரணம் அவரது கட்சியினர் தாம்! அவர் தான் அவர்களை வளர்த்து எடுத்தார்! கொஞ்சி அணைத்தார்! இப்போது எப்படி அதனைச் சரி செய்வது?

எப்படி இருப்பினும் வருங்காலங்களில் இது சரி செய்யப்படும் என நம்புவோம்.

அரசியல்வாதிகளால் வளர்க்கப்பட்ட ஊழல் இப்போது எல்லாத் துறைகளிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது என்பது உண்மையிலும் உண்மை! அரசாங்கத் துறைகளும் இன்று ஊழல் நிறைந்ததாக ஆகி விட்டது! 

வெளி  நாடுகளிலிருந்து  வந்தவர்கள் ஊழல்  வளர்வதற்கு ஒரு காரணமாக இருந்தார்கள்; இருக்கிறார்கள்  என்பதும் உண்மை! இன்று அவர்கள் மலேசியர்களின் உரிமைகளில் கை வைக்கிறார்கள் என்றால் அது ஊழல் மூலம் தான் நடக்கிறது என்பது நமக்குத் தெரியும். 

இன்று அவர்கள் வியாபாரம் செய்கிறார்கள் என்றால் அது எப்படி முடிகிறது? சந்தைகளில் அவரகள் கொடி கட்டிப் பறக்கிறார்கள்! சிறு சிறு வியாபாரங்களை அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளன என்றால் அது எப்படி அவர்களால் முடிகிறது?

அது தான் நாடு நாசமாகப் போகிறது என்றால் அதற்குக் காரணமானவர்கள் அரசியல்வாதிகள் தான்! இதில் எந்த சந்தகமுமில்லை!

ஊழல் மட்டும் தானா அவர்கள் மீது உள்ள குற்றச்சாட்டு?  இல்லை! அரசியல்வாதிகள் என்றால் நாட்டுப்பற்று இல்லாதவர்கள்< இனப்பற்று இல்லாதவர்கள், மொழிப்பற்று இல்லாதவர்கள்,  சமயப்பற்று இல்லாதவர்கள் - இப்படி இல்லாதவர்கள் பட்டியல் நிறைய உண்டு!

நாம் ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை. ஊழல் எதிர்ப்பு மையத்தின் தலைவரே இப்படி ஓர் அறிக்கையை வெளியிடுகிறார் என்றால் இனி அது மக்கள் மனதில் எந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொறுத்துப் பார்ப்போம்.

ஊழல் ஊழல் என்றாலே அரசியல்வாதிகள் தான்!

மீண்டும் மீண்டும் ஏமாற்றம்!

 ஏமாற்றம் தான். என்ன செய்ய முடியும்? மீண்டும் மீண்டும் ஏமாற்றம். என்ன தான் செய்ய முடியும்?

பாலர் பள்ளி ஆசிரியை இந்திரா காந்தி தனது வாழ்க்கையில் ஏகப்பட்ட ஏமாற்றங்களைச் சந்தித்துவிட்டார். மீண்டும் ஏமாற்றம்.

ஆமாம், காவல்துறைத்  தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹமிட் பாடோர் தனது பங்குக்கு அவரும் இந்திரா காந்திக்கு ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறார்! அவரும்  இந்திரா காந்தியைக் கடைசி நிமிடத்தில் கை கழுவி விட்டார்! 

ஒரு சந்திப்புக்கு வரச் சொல்லிவிட்டு வரவில்லை என்றால் அது அவருக்குப் பெரிய விஷயம் அல்ல.  அந்தத்  தீடீர் மாற்றத்திற்குப் பல காரணங்கள் உண்டு. அவர் பதவி அப்படி. நாம் குறை சொல்ல முடியாது. அதனை  அந்தத் தாயின் பக்கம் இருந்து பார்க்க வேண்டும். இதனால் வரை அது ஒரு சந்திப்பு அளவுக்குப் போகவில்லை. அந்த அளவுக்கு காவல்துறையில் அது பெரிய விஷயமாகப் பார்க்கப்படவில்லை. 

ஆனால் ஒரு தாயின் பக்கம் இருந்து பார்க்கும் போது அது ஒரு எதிர்பாராத அழைப்பு. அதுவும் காவல் துறைத் தலைவரிடமிருந்து வருகின்ற  அழைப்பு. சமீப காலமாக காவல் துறைத் தலைவர் பேசிய பேச்சுக்கள் ஏதோ கொஞ்சம் நம்பிக்கைத் தரும் பேச்சாக, ஆறுதல் தரும் பேச்சாக இருந்ததினால் நமக்கும் அவர் பேச்சில் நம்பிக்கை ஏற்பட்டது.

கடைசியில் எதுவுமே இல்லை! எல்லாமே சும்மா டூப்பு என்கிற மாதிரி போய் விட்டது!

இப்போதைய நிலையில் பார்க்கும் போது இந்தப் பிரச்சனை மீண்டும் சுழியத்திலிருந்து தொடங்கப்படுமோ என்கிற சந்தேகத்தையும்  எழுப்புகிறது! 

ஆதரவாகப் பேசிய ஐ.ஜி.பி. ஏன் இப்படி ஒரு மாற்றத்திற்கு உள்ளானார் என்கிற கேள்வி நம்மிடையே உண்டு. நமக்குத் தெரிந்தவரை அது அரசியல் அழுத்தமாக இருக்கலாம் அல்லது மதவாதிகளின் அழுத்தமாக இருக்கலாம். ஆனாலும் தனது மகள் தொடர்ந்து இஸ்லாமியராக இருக்கலாம் என்று இந்திரா காந்தி சொல்லிவிட்டார்.  அதன் பின்னே என்ன பிரச்சனை? 

இவர்களின் பிரச்சனை என்ன? ஒன்று புரிகிறது. ஒரு பெண்ணின் குரலுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் பணிந்து விடக் கூடாது என்பது இந்தப் பழமைவாதிகளின் மனதில் ஊறிப் போன ஒரு கொள்கை. அதனை அவர்கள் விட்டுக் கொடுக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள், அவ்வளவு தான்! 

எது உண்மை என்பது நமக்குத் தெரியாது. எதைச் சொன்னாலும் அதற்கு அவர்கள் மறுப்புச் சொல்லுவார்கள்!

எதற்கும் ஒரு முடிவு உண்டு. ஏமாற்றம் என்பது அது வரை தான்!

Thursday 3 September 2020

தீவிரவாத இயக்கமல்ல!

 விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அல்ல என்பதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் கூறியிருப்பது அவர் ஏதோ மேலோட்டமாகக் கூறவில்லை என்பதை இன்றைய அரசாங்கத்தினர் புரிந்து கொள்ள வேண்டும்.

அவர் உலகில் உள்ள பல தீவிரவாத இயக்கங்களைப் பற்றி அறிந்தவர், புரிந்தவர்.

ஸ்ரீலங்காவில் அவர்களைப் பற்றி பல்வேறு கருத்துக்கள் இருக்கலாம். நேரத்துக்குத் தகுந்தவாறு அவர்கள் தங்களது நிலையை மாற்றிக் கொள்ளுவார்கள்.  அது அவர்களுக்குத் தேவையானது.  மக்களின் வாக்குகளைப் பெற அவர்களது கொள்கையும் மாறும்! குணமும் மாறும்! அது வெறும் அரசியல்! 

ஆனால் நமது நிலை வேறு.  நமக்கு அங்குள்ள தமிழ் மக்கள் மீது அனுதாபம் உண்டு. இலட்சக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவித்த  சிங்கள இராணுவத்தை  நம்மால் கொஞ்சிக் குலாவ முடியாது! அந்த வலி உலகம் எங்கும் உள்ள தமிழர்களுக்கு இருக்கத்தான் செய்யும். அது மலேசியத் தமிழருக்கும் உண்டு.

அதனை வைத்து இங்குள்ள தமிழர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று முத்திரைக் குத்துவது என்பது நமது புக்கிட் அமான் தவறாக வழி நடத்தப்படுகிறது என்பது தானே தவிர இங்குள்ள தமிழர்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை!

ஒன்று நமக்கு வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் என்று புக்கிட் அமான் கூறுவதிலிருந்து அவர்கள் இதனை இங்குள்ள தமிழர்கள் மீது தவறாகப் பயன்படுத்த ஒரு வசதியாக, வாய்ப்பாக இருக்கும் என்பதற்காக அந்த இயக்கத்தின் மீது பழி போடுகின்றனர்  என்பது மட்டும் தான்!

அதனை அவர்கள் அரசியல்வாதி தமிழர்கள் மீது கைவைக்க விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பயன்படுத்திக் கொள்ளுகின்றனர்!  இது தான் இங்கு நடந்தது! பக்கத்தான் ஆட்சியில் எந்தக் காரணமுமின்றி அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் கொடுமைப் படுத்தப்பட்டனர். கடைசியில் அவர்கள் குற்றவாளிகள் அல்ல என்பதாக விடுதலை  செய்யப்பட்டனர்.  அவர்கள் குற்றவாளிகள் அல்ல என்பது நமக்குத் தெரியும்.  அதன் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதும் நமக்குத் தெரியும். ஆனால் அவர்களின் நோக்கம் எல்லாம்  அவர்களைக் கொடுமைப்படுத்த வேண்டும் என்பது மட்டும் தான்!

எப்படியோ முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் "விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அல்ல" என்பதாக உறுதியாகக் கூறிவிட்டார்.  அதே போல முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டோமி தோமஸ் அவர்களும் விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அல்ல என்று மறு உறுதிபடுத்தி விட்டார்.

ஆனால் இன்றைய அரசாங்கமும் புகிட் அமானும்  "எவனைப் பிடிக்கலாம்! எவனை அமுக்கலாம்!" என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்!

 

Wednesday 2 September 2020

இது அறிவுடையோர் செயல் அல்ல!

 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டை வழி நடத்தும் பணியில் இருப்பவர்கள்.  

அத்தகைய நாடாளுமன்றத்தில் அறிவுடையோர் தான் இருக்க வேண்டுமே தவிர மண்டை மழுங்கியோர் இருப்பது நாட்டின் ஜனநாயகத்திற்கு ஏற்புடையதல்ல!

அத்தகைய மண்டை மழுங்கியோரில் பாஸ் கட்சியின் பாசிர்மாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ நிக் முகமட் ஸவாவியும் ஒருவர்! புனித நூல்கள் திரித்துக் கூறப்பட்டவை என்பது அவரது இயல்பு!

பி.கே.ஆர். தலைவர், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நல்லதொரு கருத்தைச் சொன்னார்.  "அப்படிக் கூறுவது இஸ்லாத்தின் போதனைக்கு முரணானது"  என்கிற கருத்தை முன் வைத்திருக்கிறார்.

அன்வார் இப்ராகிம்,  நமக்கு வேண்டியவர் அல்லது வேண்டாதவர், பட்டியலில் இருக்கலாம். ஆனால் ஒன்று மட்டும் உண்மை. இஸ்லாத்தைப் பற்றி அவர் அளவுக்குத் தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் ஏதோ ஓரிருவர் நமது நாட்டில் இருக்கலாம்.  இஸ்லாமிய மார்க்கத்தில் புலமைப் பெற்றவர். அவர் சொல்லுவதை மறுத்துப் பேச  யாரும் இல்லை என்பது உண்மை.

இப்போது நமக்கு ஒரு கேள்வி எழுகிறது. "இஸ்லாத்திற்கு முரணானது" என்று அன்வார் சொல்லுகிறார். இதற்கு நிக் முகமட் என்ன சொல்லப் போகிறார்?  என்ன பதிலை வைத்திருக்கிறார்? இஸ்லாத்திற்கு முரணானது அல்ல என்றால் அதனை அவர் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்பது தான் நமது கோரிக்கை.

அப்படி சொல்ல முடியாவிட்டால் அவரைப் பற்றி நாம் என்ன நினைப்போம்? அவருடைய புனித நூலைப் பற்றியே அதிகம் அறியாத ஒருவர் மற்றவர்களின் புனித நூல்களைப் பற்றிப் பேச என்ன தகுதியைக் கொண்டிருக்கிறார்?  அவரை எப்படி அழைக்கலாம்? அதனை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன். 

மற்றவர்களின் புனித நூல்களைப் பற்றிப் பேசுவதற்கு முன்னர் தாங்கள் சார்ந்த மதத்தின் நூல்களை - புனித நூல்களை - ஐயமற கற்றிருக்க வேண்டும். அப்படிக் கற்றறிந்தாலே போதும். மற்ற மதங்களைப் பற்றி பேசுகின்ற நிலைமை வராது! ஐயமற கற்றவர்கள் அப்படிப் பேசுவதில்லை.

மற்றவர்களின் புனித நூல்களைப் பற்றிப் பேசுவதற்குப் பொது வெளிகள் ஏற்ற இடமல்ல! புனித நூல்களை விட மனித உறவுகள் மிக முக்கியம். 

மலேசியர்களிடையே ஒற்றுமையின்மையை விதைக்கும் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே நமது நிலைப்பாடு!

வாழ்க மலேசியா!