Tuesday 27 September 2016

கபாலி: ஆளப்பிறந்தவண்டா...!


கபாலியில் ரஜினி பேசுகின்ற வசனம் இது! "ஆளப் பிறந்தவண்டா, நாங்க!" இதனை ஏதோ ஒரு சினிமா வசனமாக நினைத்து குப்பையில் வீசிவிட்டுப் போய்விட்டீர்களா?

அது தான் இல்லை. அது சும்மா பொழுது போக்குக்காக சொல்லப்பட்ட சினிமா வசனம் இல்லை. நம்மைப் பார்த்து சொல்லப்பட்ட வசனம். இந்தத் தமிழ் சமுதாயத்தைப் பார்த்து சொல்லப்பட்ட வசனம்.

ஆளப்பிறந்த தமிழர் இனம் இன்று அடிமைப்பட்டுக் கிடக்கிறதே என்னும்  வயிற்றெரிச்சலில்  சொல்லப்பட்ட  வசனம். உலகத்திற்கு நாகரீகம் சொல்லிக்கொடுத்த இனம் இன்று அநாகரீகம் சொல்லிக் கொடுக்கும் இனமாக மாறிப்போனதே என்னும் அவலத்தைச் சுட்டிகாட்டுகின்ற வசனம்.

உலகத்தின்  பல பகுதிகளை நமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம். நாம் அந்த நாடுகளை - வெள்ளையனைப் போல - ஆளவில்லை. ஆனால் வர்த்தகத்தின் மூலம் நமது ஆளுமையை வலுவாக வைத்திருந்தோம்.

அந்த ஆளுமை, அந்த அதிகாரம் எங்கே போனது? எங்கே பறிபோனது? யாரிடம் பறிகொடுத்தோம்?
பரவாயில்லை! போனதைப் பற்றிப் பெசுவதில் பயனில்லை.

அடுத்து நாம் என்ன செய்யப்போகிறோம்?  அது தான் நமது கபாலியே சொல்லிவிட்டாரே: நாங்க, ஆளப்பிறந்தவண்டா! எதனை, ஆளப்போகிறோம்? வர்த்தகம் ஒன்று தான் நமக்குக் கை கொடுக்கும்.  நம்மை ஆள வைக்கும். நம்மை வாழ வைக்கும். வர்த்தக பலம் என்பது மகத்தான சக்தி. அது தான் நாம் ஆளப்பிறந்தவர்கள் என்பதற்கான் ஆக்க சக்தி!

முதலில் நமது நாட்டில் நமது வர்த்தகத் திறனை அதிகரிப்போம். சிறிய தொழில்,  பெரிய தொழில் என்னும் பாகுபாடு இல்லாமல் எல்லாத் தொழிகளிலும் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளுவோம்.

ஒரு சிலர்,  நாம் சிறிய இனம் நம்மால் எப்படிப் பெரிய அளவில் தொழிலில் பெரும் வெற்றி அடைய முடியும் என்றெல்லாம் கணக்குப் போடுகிறார்கள். தொழில் செய்வதற்குச் சிறிய இனம் பெரிய இனம் என்பதெல்லாம்  அவசியமில்லை.

இன்று MYDIN பேரங்காடியைப் பற்றி நாம் அனைவருமே அறிந்திருக்கிறோம்.  கிட்டத்தட்ட மலேசிய நாடெங்கும் முன்னுறு கிளைகளுடன் இயங்குகின்ற ஒரு பெரிய நிறுவனம்.. அதன் உரிமையாளர் யார்? சிறுபன்மை வட இந்திய முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர்.. அதனை ஆரம்பித்தபோது அவரின் இலக்கு இந்தியர்கள் தான். ஆனால் இன்று அது அசைக்க முடியாத கோபுரம் ஆகிவிட்டதே! அதே போலத் தான் GLOB SILK STORE என்னும் மாபெரும் நிறுவனம். அதனை ஆரம்பித்தவர்  குஜாராத்தி வம்சாவளியைச் சேர்ந்த ஓர் இந்தியர். . சைக்களில் துணிகளைச் சுமந்து கொண்டு தோட்டம் தோட்டமாக, வீடு வீடாகச் சென்று துணிகளை விற்றவர். அன்றைய நிலையில் அவருடைய இலக்கு இந்தியர்கள் தான். ஆனால் இன்று  அது உலகளவில் பேசப்படும் ஒரு நிறுவனம்.  ஏன்? ஆர்.கே.நாதன் ஒரு தமிழர். சிறுபான்மை சமூகமான நம்மைச்  சார்ந்தவர். மிகச்சாதாரண நிலையிலிருந்து இன்று உயர்ந்த, உலகிலேயே உயர்ந்த, உயர்ந்த கட்டங்களைக் கட்டிக் கொண்டிருப்பவர். உலகையே வலம் வருகிறார்!

இதில் சிறிய, பெரிய என்ன? இன்று தமிழர்களில் பலர் இந்த சிறுபான்மை சமுகத்தைச் சார்ந்துதான் தங்களது தொழில்களைத் தொடங்கினர்.. ஆனால் இன்று எல்லாச் சமுகத்திற்கும் பயன்படும்படியான அளவுக்குத் தங்களது தொழில்களை வளர்த்துவிட்டனர்.

இந்தோனேசியா 26 கோடி மக்கள் தொகையைக் கொண்ட ஒரு நாடு. அந்த நாட்டின் மக்கள் தொகையில் சீனர்கள் சுமார் மூன்று (3) விழுக்காடு தான். இதில் என்ன அதிசயம்? இந்த மூன்று விழுக்காடு சீனர்கள் தான் இந்தோனேசியாவின் பொருளாதாரத்தை தங்கள் கையில் வைத்திருக்கிறார்கள்! ஆக, 97 விழுக்காடு இந்தோனேசிய மக்கள் இந்த மூன்று விழுக்காட்டினரை நம்பித்தான் வாழ்க்கை நடத்துகிறார்கள்!

பொருளாதாரம் என்பது அவ்வளவு சக்தி வாய்ந்தது.  கபாலி சொல்லுவது போல நாம் ஆளப் பிறந்தவர்கள். ஆள்வது நமது உரிமை. பொருளாதாரத்தை ஆள வேண்டும். . தொழில்களை  ஆள வேண்டும். மாபெரும் தொழில்களை ஆள வேண்டும். பெரும் பெரும் கட்டடங்களை ஆள வேண்டும். சுரங்கங்களை ஆள வேண்டும். சீனி ஆலைகளை ஆள வேண்டும். கடல்களில் ஓடும் கப்பல்களை ஆள வேண்டும். வானத்தில் பறக்கும் வானூர்திகளை ஆள வேண்டும்.

நாம் ஆளப்பிறந்தவண்டா ......! என்பதை இந்த உலகத்திற்கு எடுத்துக் காட்ட வேண்டும். யார் காட்டுவார்?  நானும், நீங்களும், ஏன். அனைத்துத் தமிழருக்கும் இதில் பங்கு உண்டு.  தமிழனத்தை உயர்த்துவதற்கு நாம் அனைவரும் சேர்ந்து தான் உழைக்க வேண்டும். நம் குடும்பத்திற்கு நாம் உழைத்தால் போதும். அவரவர் குடும்பத்தின் மேம்பாட்டிற்கு அவரவர் உழைத்தால் போதும். நமது தமிழர் சமூகம் முன்னேறுவதில் எந்தத்  தடையும் இல்லை.

அரசாங்கம் கொடுக்கின்ற வர்த்தக வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். காரணங்களைக் கண்டு பிடித்துக் கொண்டிருக்காதீர்கள். யார் யாருக்குக் கிடைத்தது என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்காதீர்கள். உங்களுக்குக் கிடைக்கிறதா என்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். கிடைக்காவிட்டால் ஏன் கிடைக்கவில்லை, எங்கே தவறு செய்தோம் என்று கண்டுபிடித்து மீண்டும் அந்தத் தவறுகளைக் கலைந்து மனு செய்யுங்கள். அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள். தொடர் முதற்சிகளை சலிக்காமல் தொடர்ந்தால் எதுவும் நகரும்!

கபாலில் மூலம் ப.ரஞ்சித் எழுதி ரஜினி பேசும் அந்த வசனம் "ஆளப்பிறந்தவண்டா...!" என்பது யருக்கோ அல்ல. உலகில் உள்ள தமிழர் அனைவருக்கும் தான். உயர்வு தாழ்வு என்பதெல்லாம் ஒன்றுமில்லை. தமிழர் அனைவரும் ஓர் உயரிய வாழ்க்கை வாழ வேண்டும். இன்று உலகெங்கிலும் மாபெரும் தொழில் சாம்ராஜ்யங்களுக்கு அதிபதிகள் யூதர்கள்.  அந்த இடம் தான் நமது குறிக்கோளாக இருக்க வெண்டும். முதலில் நமது நாட்டில் உள்ள சீனர்கள் தான் நம் கண்முன் இருப்பவர்கள்.இவர்களின் தொழில் நெளிவுசுழிவுகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த வசனத்தை எழுதிய ப.ரஞ்சித் சும்மா பொழுது போக்குக்காக அதனை  எழுதவில்லை என்பதை நாம் உணரவேண்டும். வசனத்தைப் பேசிய ரஜினி அதனை பொழுது போக்குக்காக அவர் பேசவில்லை.  தமிழர் முன்னேற்றம் என்பது ஒரு கூட்டு முயற்சி. நம் அனைவரின் முயற்சியும் இதில் இருக்க வேண்டும். ரஜினியோ, ரஞ்சித்தோ எந்த முயற்சியும் இல்லாமல்  அவர்கள் இப்போது இருக்கும் இடத்திற்கு வந்துவிடவில்லை. எல்லாம் தனிமனித உழைப்புத் தான்.

வாருங்கள்! நாம் ஆளப்பிறந்தவர்கள் என்பதை இந்த உலகிற்குக் காட்டுவோம்!

நாம் "ஆளப்பிறந்தவண்டா ....!"










Friday 23 September 2016

தமிழுக்குச் செய்கின்ற அநீதி!


நான் சின்னத்திரை ரசிகன் அல்ல. ஏன்? பெரிய திரை ரசிகன் கூட அல்ல! அவைகளைப் பார்க்கக் கூடிய பொறுமை எனக்கு இல்லை! அப்படியே பார்த்தாலும் ஒரு பத்து நிமிடம் தாக்குப் பிடிப்பேன். பிறகு தூக்கம் வந்துவிடும்!

சமீபத்தில் திடீரென, எதைச்சையாக சின்னத்திரை நாடகமான "தெய்வமகள்" ஓடிக்கொண்டிருந்த போது நான் ஒரு காட்சியைப் பார்க்க நேர்ந்தது. அம்மா, அப்பாவிடம் சொல்லுகிறார்: நம்ம குழந்தை என்னமாய் பாடுகிறான்! எங்க,  அப்பாவுக்குக் கொஞ்சம் பாடிக்காட்டு? குழந்தை பாடுகிறான். பாலர் பள்ளிகளில் பாடுகின்ற ஒரு பாடல். அது ஒரு ஆங்கிலப் பாடல்!

நான் அது ஒரு தமிழ்ப் பாடலாய் இருக்கும் என நினைத்து ஏமாந்து போனேன்!

பாலர் பள்ளிக்குச் செல்லுகின்ற ஒரு குழந்தை ஆங்கிலத்தில் பாடுகிறான் என்றால் என்ன அர்த்தம்? பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளுக்கு ஆங்கிலக் கல்வியைக் கொடுங்கள் என்று ஆங்கிலக் கல்வி நிலையங்களுக்கு இலவச விளம்பரம்  கொடுக்கிறார்கள் என்று தானே அர்த்தம்?  மறைமுகமாக தமிழர்கள் தமிழைப் படிக்க வேண்டாம் ஆங்கிலம் படியுங்கள் என்று தமிழர்களுக்குப் பாடம் நடத்துகிறார்கள் என்று தானே நாம் நினைக்க வேண்டியிருக்கிறது?

கொஞ்சம் கவனியுங்கள். தமிழைப் படித்தவர்கள். தமிழாலேயே வாழ்பவர்கள். தமிழை வைத்துப் பிழைப்பவர்கள். . வசனம் எழுதுபவர், இயக்குனர் அனைவருமே தமிழால் வாழ்பவர்கள்.   பல இலட்சம் தமிழர்கள் பார்க்கின்ற ஒரு நாடகத்தில் எவ்வளவு துணிச்சலாய்  தமிழைப் புறந்தள்ளுகின்றனர்.!

இந்நேரத்தில் வேறொன்றும் எனது ஞாபத்திற்கு வருகின்றது. நான் நாவலாசிரியர் நா.பார்த்தசாரதியின் தீவிர இரசிகன். அவருடைய "தீபம்" மாத இதழை ஒரு சில ஆண்டுகள் தொடர்ந்து படித்து வந்தவன்.. அந்த மாத இதழில் ஒவ்வொரு மாதமும் தொழில் அதிபர்களைப் பேட்டி எடுப்பார்கள். அதில் ஒரு கேள்வி ஒவ்வொரு தொழில் அதிபரிடம் கேட்கப்படுகின்ற  - அவர்களுக்குச் சம்பந்தமில்லாத - ஒரு கேள்வி:  "ஒர் சிலர் சொல்லுவது போல தமிழ் மட்டும் படித்தால் போதும் என்று நினைக்கிறீர்களா?"  கேள்வி கேட்கப்படும் தோரணை அவர்களை எதிர்மறையாகவே பதில் சொல்ல நேரிடும். ஆசிரியர் நா.பா. வுக்குத் தெரியாமல் இது நடந்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை. தமிழில் பண்டிதர் பட்டம் பெற்ற அவருடைய இதழிலேயே இப்படி ஒரு கேள்வி!

இதனை நான் இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம் தமிழ் மொழியைத் தமிழ் மண்ணிலிருந்து  அகற்றுவதற்கான முயற்சிகள் பல ஆண்டுகளாகவே தொடரப்பட்டிருக்கின்றன. ஆனால் சமீகாலமாகத்தான் நமக்கு அது பெரியளவில்  புரிய ஆரம்பித்திருக்கிறது..

இப்போது அச்சு ஊடகங்கள் மட்டும் அல்ல, சின்னத்திரை, சினிமா, தொலைக்ட்சிகள் அனைத்தும் தமிழுக்கு எதிராகவே செயல் படுகின்றன. அவர்கள் பேசுகின்ற மொழியே அதற்குச் சான்று பகர்கின்றது.

இந்த அநீதிகளுக்கெல்லாம் ஒரு முடிவு வரும் என எதிர்பார்க்கலாம்.!

அதுவும் விரைவில் வரும்!

Wednesday 21 September 2016

விலங்குகளின் தூதர் சௌந்தர்யா..!


விலங்குகளின் நல வாரியத் தூதராக, ரஜினியின் மகள், சௌந்தர்யா நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஆரம்பமே அவருக்குச் சரியாக இல்லை.  அவருடைய உருவப்பொம்மை எரிக்கும் அளவுக்கு நிலைமை போயிருக்கிறது!

அவரைத் தூதராக நியமிக்கப்பட்டிருப்பதற்கு ஒரு சில காரணங்களை வாரியம் குறிப்பிட்டிருக்கிறது. அவருக்கு அனிமேஷன் துறையிலும் கிராபிக்ஸ் துறையிலும் நிபுணத்துவம் உள்ளவர் என்பது அவர்களின் விளக்கம். சினிமாத்துறையில் உள்ளவர்கள் உண்மையிலேயே மிருகங்களை வதை செய்கிறார்களா அல்லது கிராபிக்ஸ் மூலம் அந்தக் காட்சிகளை எடுக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்துவதே அவரின் வேலை என்பதாக விலங்கினர் அறிவித்துள்ளனர்.

சௌந்தர்யாவின் நிபுணத்துவத்தைப் பற்றி யாரும் கேள்வி எழுப்பவில்லை. இந்தத் துறையில் யாரும் நிபுணத்துவம் உள்ளவர்கள் இல்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆனால் இவர்கள் ரஜினியின் மகளைத்  தூதராக அறிவித்திருப்பதில் நிச்சயமாக வேறு காரணங்கள் உண்டு. ரஜினியின் செல்வாக்கைப் அவர்கள் பயன்படுத்துகிறார்கள். ரஜினியின் மகள் என்னும் போது எதிர்ப்புக்கள் அதிகம் இராது அன்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் ஆரம்பமே சௌந்தர்யாவின் உருவப்பொம்மையை எரிக்கும் அளவுக்கு ஆரம்பம் ஆரம்பாமாகிவிட்டது!

எப்படியிருப்பினும் நாம் அந்தப் பிரச்சனையில் புக விரும்பவில்லை.

தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த விலங்குகள் நலவாரிய அமைப்பினால் தமிழகம் பலவற்றை இழந்திருக்கிறது என்பதாக அந்த வாரியத்தின் மீது குற்றச் சாட்டுக்கள் உண்டு. குறிப்பாக நம் கண் முன்னே தெரிவது ஜல்லிகட்டு. ஜல்லிக்கட்டுக்கு எதிரான அமைப்பாக இந்த வாரியம் செயல்படுவதாக  அதன் மீது குற்றச் சாட்டுக்கள் உண்டு.

ஆனால் நாம் சொல்ல வருவதெல்லாம் ஒன்று தான். நாம் நினைப்பது போல சௌந்தர்யா,  ரஜினியின் மகள் என்னும் ஒரு செல்வாக்கு உண்டு. தமிழகம் ஜல்லிக்கட்டுக்காக போராடிக் கொண்டிருக்கிறது. ஜல்லிக்கட்டு தமிழர்களின் ஐயாயிரம் ஆண்டு கலாச்சாரத்தைக் கொண்டது. அதனைச் சித்திரவதை என்று சொல்லி தடை செய்வதுற்கு எந்த வித நியாயமுமில்லை!  சௌந்தர்யா இதனை விலங்கினர்க்கு எடுத்துக் கூறி தமிழகத்தின் வீர விளையாட்டை மீட்டுக்கொடுக்க வேண்டும். இதுவே நமது வேண்டுகோள்.

விலங்குகளின் தூதராக மட்டும் அல்லாமல் தமிழர்களின் தூதராகவும் அவர் விளங்க வேண்டும் என்பதே நமது அவா! வாழ்த்துக்கள்!

கேள்வி - பதில் (31)


கேள்வி

காவேரி நீர்ப்பிரச்சனையில் ஓர் இளைஞனின் தீக்குளிப்பு  ஏற்புடையதா?


பதில்

எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. தீக்குளிப்பு என்பது சாதாரணமானதல்ல. . ஒரு கொடூரமான சாவு.  பார்க்கபோனால் இது போன்ற தீக்குளிப்புக்களை திராவிடக்கட்சிகள் சில ஆண்டுகளாக வளர்த்துக்கொண்டு வருகின்றன என்று தான் சொல்ல வேண்டும்.

ஜெயலலிதாவுக்காக எத்தனை பேர் செத்தார்கள், கருணாநிதிக்காக எத்தனை பேர் செத்தார்கள் என்பதையெல்லாம் இவர்களின் சாதனைகளாக இவர்கள் நினைக்கின்றனர். இறந்த பிறகு அந்தக் குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் இரண்டு இலட்சம் கொடுத்து மற்றவர்களையும் இது போன்ற செயல்களைத் செய்யத் தூண்டுகின்றனர்.

ஆனால் இளைஞன் விக்னேஷ் அந்தப் பட்டியலில் வருபவன் அல்ல. அவன் உண்மையான இனப்பற்று உள்ளவன். அவனின் இனப்பற்றை தவறான முறையில் காண்பித்திருக்கிறான். அது அவன் செய்த பிழை.

வேறு ஒரு கோணத்திலும் இதனை நாம் பார்க்க வேண்டும். தமிழர்கள் கர்நாடகாவில் தாக்கப்படுகின்றனர். அந்த மாநிலத்தில் அதனை அங்குள்ள அரசியல் கட்சிகள் ஊக்குவிக்கின்றன.. திரைப்படத் துறையினர் அவர்களை ஆதரிக்கின்றனர். ஆளுங்கட்சியோ, எதிர்கட்சியோ அனைவரும் ஒருமித்த குரலில் தமிழகத்தை எதிர்க்கின்றனர்.

ஆனல் தமிழக நிலையோ வேறு! யாரும் எவரும் அங்கு என்ன நடக்கிறது என்பதைக் கண்டு கொள்ளவில்லை. எவன் செத்தால் எங்களுக்கு என்ன என்று இங்குள்ள ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் நினைக்கின்றன. இதில் வேறு கர்நாநாடக ஆளுங்கட்சி தமிழக்த்தில் உள்ள கன்னடர்களைத் தாக்கக் கூடாது என்பதாக முதல்வருக்குக் கடிதம் எழுதுகிறது! இது தமிழரகளைக் கிண்டல் செய்வதாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.

எப்படிப் பார்த்தாலும் தமிழகத்தில் ஒரு இயலாமை நிலவுகிறது. காவேரி நீர் யாருக்குக் கிடைக்கவில்லையோ அந்த விவசாயிகள்  குரல் எழுப்புகிறார்கள். அந்த விவசாயிகளுக்காக ஒரு சில தமிழர் அமைப்புக்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கிகின்றனர். அதற்கு மேல் அவர்கள் எதுவும் செய்தால் அவர்களுக்குச்  சிறை வாசம்! எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் மேல் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்!

அரசாங்கமும் கர்நாடகத்திற்கு எந்த பதிலடியும் கொடுக்க முடியவில்லை! இங்குள்ள தமிழர்கள் குரல் எழுப்பினால் அதனையும் தடுத்து நிறுத்துகிறது அரசு.

இன உணர்வு இல்லாதவனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. இன உணர்வு உள்ளவனால் சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடிவதில்லை. ஏதோ ஒரு வகையில் தனது எதிர்ப்பைக் காட்ட நினைக்கிறான்.

ஆக, தமிழர்கள் தங்களது உணர்வுகளை எந்த வகையிலும் வெளிப்படுத்த முடியவில்லை. தமிழக  அரசின் ஆதரவும் இல்லை! தமிழன் என்ன செய்வான்? எங்கே போவான்?

இப்படி ஒரு இயலாமை நிலையில் ஒரு சில தமிழர்கள் இது போன்ற - தீக்குளிப்பு    சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இந்த நிலைமையில் தான் விக்னேஷ் போன்றவர்கள் தவறான முடிவுகளை எடுக்கின்றனர்.

எந்த வகையிலும் இந்தத் தீக்குளிப்பை நாம் நியாயப்படுத்த முடியாது. இந்தத் தீக்குளிப்பினால் கர்நாடகாவில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. ஏன்? தமிழ் நாட்டிலேயே ஜெயலலிதா அரசு கொஞ்சமும் அலட்டிக் கொள்ளவில்லை!

நமக்குத் தமிழன் என்னும் உணர்வு இல்லை என்றால் எந்தத் தீக்குளிப்பும் எதையும் அசைக்க முடியாது.  தமிழனுக்கு அப்படி ஒரு உணர்வு வரக்கூடாது என்பதற்காக தமிழரல்லாதார் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். அதனால் தான் நம்மை  திசைத்திருப்ப எத்தனையோ வழிகளைக் கையாளுகின்றார்கள்.  கள்ளுக்கடை, சினிமா, தொலைக்காட்சி என்பவைகளெல்லாம்  நமது தமிழ் உணர்வை மழுங்களுக்கடிக்க அவர்களுக்கு உதவுகின்றன.

வாழ்க! வளர்க! வையகம் போற்றும் தமிழினம்!




Sunday 18 September 2016

தங்கம் வென்ற தங்கமகன் மாரியப்பன்!


தங்கம் வென்ற வீரத் திருமகனை - அந்தத் தமிழ்த் திருமகனை - நாமும் வாழ்த்துவோம்,  பாராட்டுவோம்!

மாற்றுத் திறனாளிகளுக்கான - பாரா ஒலிம்பிக் - போட்டியில் தங்கம் வென்ற முதல் தமிழன், அந்த மாரியப்பன் செய்து காட்டிய சாதனையை மீண்டும் பாராட்டுவோம்!

மாரியப்பன் இந்தியா, தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்.  இருபது வயது இளைஞர். சொந்த ஊர் சேலம், பெரிய வடகம்பட்டி என்னும் குக்கிராமம். ஏழ்மையின்  இருப்பிடம்.  பெற்றோர்கள் தங்கவேலு - சரோஜா. அப்பா செங்கல் சூளையில் ஒரு தொழிலாளி.  வீடு வீடாக காய்கறிகளைக் கூவி விற்கும் அம்மா.

ஒரு பேருந்து விபத்தில் வலது கால் பறிபோனது. அது ஒரு பெரிய விபத்து என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இப்படி நாட்டுக்கும் வீட்டுக்கும், உலகத் தமிழருக்கும் பெருமை சேர்ப்பதற்குத் தான் அப்படி ஒரு விபத்து ஏற்பட்டதோ என்று இப்போது நமக்குத் தோன்றுகிறது.

இரண்டு கால்களும் சீராக உள்ள இளைஞர்களைப் பார்க்கிறோம். அவர்களில் பலர் வீட்டிற்கும் நாட்டிற்கும் பாரமாக இருக்கின்றனர். அதனால் கால்கள் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன! சாதனைகள் புரிய வேண்டும் என்னும் எண்ணம் உடையோருக்கு எந்த நிலையிலும் சாத்தியமே!

இன்று அவர் தங்கம் வென்றார் என்றால் அதற்காக அவர் எடுத்துக் கொண்ட முதற்சி. அவருக்கு நல்லபடியாக வாய்த்த நல்லதொரு பயிற்சியாளர்.

ஆனால் ஒருவர் வெற்றி பெற்றாலே அந்த வெற்றிக்காகச் சொந்தம் கொண்டாடுவோர் நம்மிடையே நிறையவே இருக்கின்றனர். அதே கதைதான் மாரியப்பனுக்கும்! இப்போது தான் விழித்தெழுந்த்திருக்கிறது தமிழ் நாடு பாரா ஒலிம்பிக் சங்கம்! நாங்கள் தான் அவர் வெற்றிக்குக்  காரணம் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்!

தமிழ்  நாடாக இருந்தாலும் சரி அல்லது வேறு மாநிலங்களாக இருந்தாலும் சரி - பொதுவாக இந்தியாவில் விளையாட்டுச் சங்கங்கள் என்றால் அது மேல் தட்டு மக்களின் கட்டுப்பாட்டில் உள்ளவை. அதனைக் கூட சகித்துக் கொள்ளலாம். ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் மேல் தட்டு மக்கள் மட்டுமே வெற்றி பெற வேண்டும், இந்தியாவுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்னும்  மனப்போபோக்கு  உள்ளவர்கள்.  நமது ஊர் மதம் சார்ந்தது என்றால் அந்த ஊர் சாதியல் சார்ந்தது! இவைகளையெல்லாம் மீறி தான் மாரியப்பன் போன்றவர்கள் வெற்றி பெற்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள்.

ஒரு வெளிச்சம் தெரிகிறது. சாதியம் அனைத்தும் உடைபடும் நாள் தொலைவில் இல்லை!

விரைவில் இன்னும் பலர் - பல தமிழ் மகன்கள் - உலக விளையாட்டு அரங்கில் தங்கங்களைக் குவிப்பார்கள் என நம்புவோம்.

தங்க மகன் மாரியப்பனுக்கு நமது வாழ்த்துகள்!

Saturday 17 September 2016

கபாலிகள் வேண்டாம்! கல்வியாளர்கள் வேண்டும்!


சில சமயங்களில் நமது இளம் பெற்றோர்கள் அல்லது கூட இருக்கும் பெரியவர்கள் இந்தக் குழந்தைகளிடம் பேசுகின்ற பேச்சுக்கள் நிச்சயமாக நமக்கு எரிச்சல் ஊட்டுவதாகவே இருக்கும். குழந்தைகளுக்கு விதவிதமாக முடிவெட்டி  விடுவதும் 'அடி,'உதை' என்று பிஞ்சு மனதில் விஷத்தை விதைப்பதும் தமிழர்களைத் தவிர வேறு யார் செய்வார்?

நாம் ஏன் எல்லாத் துறைகளிலும் பின் தங்கி  இருக்கிறோம் என்பது இப்போது புரிகிறதா? நாம் குழைந்தைகள வளர்க்கும் போதே நல்லவைகளைச் சொல்லி வளர்ப்பதில்லை. அவர்களின் திறமைகளை ஊக்குவிப்பதில்லை.

சில பெற்றோர்கள் குழந்தைகளை 'வாங்க, போங்க' என்று பண்போடும் அன்போடும்  அழைப்பதில் நமக்கும் உடன்பாடு தான். ஆனால் தங்களுக்குப் பிடிக்காதவர்களை 'வாடா, போடா' என்று குழைந்தைகளைப் பேசை வைப்பதும் இதே பெற்றோர்கள் தான்! இந்த நிலையில் குழந்தைகள் எப்படி பண்போடு வளர்வார்கள்?

குழந்தைகள் வளரும் போது  சினிமா நடிகர்களை முன்னுதாரணமாக காட்டி வளர்க்காதீர்கள். ரஜினி மாதிரி வரணும், கமல் மாதிரி வரணும் என்று ஆசையை ஊட்டி வளர்க்காதீர்கள். சினிமா நடிகர்கள் நமது குழந்தைகளுக்கு சரியான எடுத்துக்காட்டுக்கள்  அல்ல!

"நீ நல்ல டாக்டராக வரவேண்டும், வழக்கறிஞராக வரவேண்டும், இஞ்சினியராக வரவேண்டும், விஞ்ஞானியாக வரவேண்டும், நல்ல  ஆசிரியராக வரவேண்டும், சித்தப்பா மாதிரி கணினி வல்லுனுராக வேண்டும்,மாமா மாதிரி பெரிய பட்டதாரியாக வேண்டும், பக்கத்துவீட்டு அண்ணன் மாதிரி பல்கலைக்கழகம் போய் படிக்க வேண்டும்'  என்று பிள்ளைகளுக்குச் சொல்லி ச் சொல்லி வளர்க்க வேண்டும்.. குழந்தைப் பருவத்திலிருந்தே பிள்ளைகளுக்கு ஒரு குறிக்கோளை ஏற்படுத்த வேண்டும். சிறு வயதிலிருந்தே உயர்ந்த குறிக்கோளை ஏற்படுத்த வேண்டும். ஆனால் உங்களுடைய ஆசையை அவர்கள் மீது திணிக்க வேண்டாம்!

ஆனால் சராசரியான நமது தமிழர்கள் குடும்பங்களில் நல்ல எடுத்துக்காட்டுக்களைக் காண முடிவதில்லை! நமது குடும்பங்களில் இருப்பவர்கள் எல்லாம் குடிகாரன், கபாலி, அடிதடி கும்பல் - இப்படித்தான் பட்டியல் நீளுகிறது! இந்தச் சூழலில் வளர்பவன் எப்படி வளர்வான்? இது போன்ற குடும்பங்களில் தான் மேற் சொன்ன முறைகளில் சொல்லிச்சொல்லி பிள்ளைகளை வளர்க்க வேண்டியுள்ளது! வேறு வழியில்லை!

சாதாரணக் குடும்பங்களை நான் பார்க்கிறேன். நன்றாகச் சம்பாதிக்கிறார்கள். நன்றாகத் தண்ணி அடிக்கவும் செய்கிறார்கள்! கொஞ்சம் தண்ணி அடிப்பதை நிறுத்தி பிள்ளைகளின் கல்வி மீது கொஞ்சம் அக்கறை செலுத்தினால் போதும் அந்தக் குடும்பம் கல்வி கற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்கிவிடும். கல்விக்குப் பணம் செலவு செய்கிகிறார்கள். ஆனால் பையனோ அப்பனைப் போல தண்ணி அடிப்பதில் தான் கவனம் செலுத்துகிறான்!

தாய்மார்கள் பிள்ளைகளின் கல்வியில் கொஞ்சம் கவனம் செலுத்தினால் போதும். இந்த சமுதாயம் உயர்ந்து விடும்.

தாய்மார்களே! தகப்பன்மார்களே! உங்கள் குழந்தைகளைக் கொபுரமாக்குங்கள். குப்பைகள் மிஞ்சிவிட்டன. குப்பைகள் போதும் போதும் என்னும் அளவுக்கு குவிந்துவிட்டன! இனி நமக்குத் தேவை சீமான்களும் கோமான்களும், கோபுரங்களும் தான்! கோபுரமாவோம்! கோடிபதிகளாவோம்!


Friday 16 September 2016

காவேரி நீர்ப் பிரச்சனைத் தீருமா?


காவேரி நீர்ப் பிரச்சனையைப் பற்றி எழுதவதற்கே நமக்குக் கூச்சமாகத் தான் இருக்கிறது.

ஒரே நாடு.  உலக அளவில் இந்தியர் என்னும் ஒரே இனம். கர்நாடகா, தமிழ் நாடு இரண்டு மாநிலங்களும் ஒரே நாட்டில் உள்ள  மாநிலங்கள். வெவ்வேறு நாட்டில் உள்ள மாநிலங்கள் அல்ல. ஒரு மாநிலத்தில் கன்னடர்களும் இன்னொரு மாநிலத்தில் தமிழர்களும் வாழுகின்ற மாநிலங்கள்.

ஆனால் கர்நாடக மாநிலத்தில் இந்தக் காவேரி நதிநீர் பிரச்சனை இப்போது பூதாகாரமாக வெடித்து தமிழர்களைத் தாக்கும் அளவுக்கு எங்கோ போய்விட்டது. காவேரி நதியிலிருந்து குறிப்பிட்ட அளவில் தமிழ் நாட்டுக்குத் தண்ணீர் தர வேண்டும் என்பது நீதிமன்ற ஆணை. ஆனால் கர்நாடக அரசு நீதிமன்ற ஆணையை ஏற்றுக் கொள்ளவில்லை

இப்போது இந்த மோதல் கர்நாடக மக்களிடமிருந்து வரவில்லை. சில ரௌடிகளை வைத்துக்கொண்டு இந்த மோதல்களை ஆரம்பித்து வைத்தவர்கள் அரசியல் கட்சியினர். ஆளுங்கட்சியினர்  ஒரு பக்கம் தங்களது அரசியல் பலத்தை காட்ட வேண்டிய நிர்ப்பந்தம். இன்னொரு பக்கம் எதிர்கட்சியினர் தங்களது பலத்தை கூட்டுவதற்கான ஒரு முயற்சி.

உண்மைச் சொன்னால் இந்த நதிநீர் பிரச்சனை என்பது கர்நாடக அரசியல்வாதிகளின் தங்களது பலத்தைக் காட்டுவதற்கான ஒரு முயற்சி. அவர்களுக்கு இந்தக் கலவரம்  என்பது யார் பலசாலி "காங்கிரசா! பா.ஜ.க.வா" என்னும் ஒரு பலப்பரிட்சை! எல்லாவற்றுக்கும் அரசியல்வாதிகளே பொறுப்பு.

தமிழக எண் கொண்ட கார்களைச் சேதப்படுத்தியிருக்கின்றனர். பேரூந்துகளையும் கனரூந்துகளையும் எரித்து சாம்பலாக்கியிருக்கின்றனர்.  தமிழர்களை அடித்திருக்கின்றனர்; நிர்வாணப் படுத்தியிருக்கின்றனர். தமிழர்கள் பலர் அவமானத்திற்கு உள்ளாக்கப் பட்டிருக்கின்றனர்.

இது வரை தமிழக முதல்வர் ஜெயலலிதா கர்நாடகாவில் தமிழர்கள் தாக்குதல் பற்றி எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. அவருடைய டசட்டமன்ற உறுப்பினர்களோ அல்லது குறைந்தபட்சம் அ.தி.மு.க. தொண்டர்களோ அவர்களுடைய தலைவரைப் போலவே  மௌனம் காக்கின்றனர். அதே போல தி.மு.க. தலைமையும் சரி அவர்களது தொண்டர்களும் சரி எந்த விதமான சலனமும் இல்லை. இந்த இரு கட்சிகளிலும் தமிழர்கள் இல்லை என்பது இப்போது நமக்குப் புரிகிறது!

கர்நாடக முதல்வர் தமிழக முதலமைச்சருக்குக் கடிதம் எழுதி தமிழகத்தில் வாழும் கன்னடர்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கின்றார்! தமிழகத்தில் கன்னடர்களுக்கு எதிராக எந்த ஒரு சம்பவமும் இதுவரை நிகழவில்லை!

ஆமாம், இந்த நதிநீர் பிரச்சனையில் உலகத்தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள்? வன்முறையை  வன்முறையால்  தீர்வு காண முடியாது என்பது உண்மை தான். அதற்காகத் தமிழன் அடி வாங்கிக்கொண்டே இருக்க வேண்டுமா என்பது தான் நமது கேள்வி. ஒரு பக்கம் ஆந்திரா, ஒரு பக்கம் கேரளா, ஒரு பக்கம் கர்நாடகா - எல்லாப் பக்கங்களிலிருந்தும் அவனுக்க அடி விழுகிறது.  இத்தனையும் ஒரே நாட்டுக்குள்!

நம்மைப் பொறுத்தவரை இதற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும். தமிழர்கள் ஒரு பலவீனமான அரசை ஆட்சியில் வைத்திருக்கிறார்கள். ஒன்று அவர்கள் செயல்பட வேண்டும்.அல்லது மக்களைச்செயல்பட விட வேண்டும்.

எதற்குமே இலாயக்கில்லாத ஒரு அரசை பதவியில் அமர்த்தினால் தமிழன் அடி வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை! ஒன்று அடி அல்லது மடி!

Thursday 15 September 2016

சிங்கப்பூர் சுத்தமான நகரமானது எப்படி?


சிங்கப்பூர் உலக அளவில் மிகவும் வரவேற்கத்தக்க ஒரு நகரமாக விளங்குவதற்கு அதன் சுத்தமே முக்கிய காரணியாக விளங்குகிறது என்பது மிக மிக உண்மை.

மிக சுத்தமான ஒரு நகர். சுத்தத்தை அனவருமே விரும்புகிறோம். அதனால் தான் நமது வீட்டை எப்போது சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்னும் அக்கறை நம்மிடம் எப்போதுமே உண்டு. வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளுவது என்பது நமக்கு ஒரு பண்பாடாகவே ஆகிவிட்டது.

ஆனால் நமது வீட்டுக்கு வெளியே உள்ள நிலைமை என்ன? ஏனோ நாம் அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. .நமது சுற்றுப்புறம் சுத்தமாக இருக்க வேண்டும் எனும் எண்ணம் நமக்கு எப்போதுமே ஏற்படுவதில்லை.  இதனையும் நாம் நமது பணபாட்டின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொண்டோமோ?

இப்போது  சிங்கப்பூரைப் பற்றி நாம் பெருமைப்படுகிறோம். அது எப்படி வந்தது? அப்படி என்றால் சிங்கப்பூரியர்கள் காலங்காலமாக சுத்ததைப் பேணி வந்தவர்களா? அப்படி எல்லாம் ஒன்றுமில்லை! உண்மையைச் சொன்னால் சீனர்கள் சுத்தம் என்பதை எந்தக் காலத்திலும் கடைபிடிக்கும்  பழக்கம் இல்லாதவர்கள்!

அதனால் தான் அந்த நாடு மிகவும் கடுமையானச் சட்டதிட்டங்களை வைத்து நாட்டைச் சுத்தமாக வைத்திருக்கின்றது!

சிங்கப்பூரியர்கள் தங்களது நாட்டைவிட்டு மலேசியா போன்ற நாடுகளுக்கு வரும் போது இங்கு எந்தவிதமான சட்டதிட்டங்களைக் கடைப்பிடிப்பதில்லை! வீதிகளில் குப்பைப் போடுவதில் எந்த விதப் பாகுப்பாடும் இல்லை!  மலேசியா வந்தால் மலேசியர்களாகவே மாறிவிடுகின்றனர்!

ஆக, சிங்கப்பூரின் கடுமையான சட்டதிட்டங்கள் தான் அந்த நாட்டை மிகவும் சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது! மற்றபடி அவர்கள் திருந்தி விட்டார்கள் - நாட்டுபற்று -  என்பதெல்லாம்வெறும் கனவு. சீனர்களைப் பொறுத்தவரை சுத்தம் என்பது - இலட்சுமியை விரட்டுவது - என்பதில் குறைந்தபட்சம் ஒரு சாரார் நம்புகின்றனர்!

ஆனாலும் கல்வியில் அதிகக் கவனம் செலுத்தி வரும்  சீன சமூகம் இப்போது மெல்ல மாறி வருகிறது என்பதில் ஐயமில்லை. சுத்தம் தேவை என்பதை அவர்கள் உணர்கின்றனர். .

மலேசியாவில் உள்ள சீன சமுகம் மாறுமா என்பது கேள்விக்குறியே!!  கடுமையான சட்டதிட்டங்களின்றி இவர்களை மாற்றுவது என்பது சிரமமான காரியம் தான்!

மேல் நாடுகளில் இது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. வீதிகளில் குப்பை போடுவதைக் கூட ஒர் அநாகரிகமான கலாச்சாரம் என்பதாக அவர்கள் நினைக்கின்றனர். அவர்கள் வீடுகளிலிருந்தே எங்கே குப்பைகளைப் போட வேண்டும் என்பதைப் பெற்றோர்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கின்றனர்.

உண்மையைச் சொன்னால் இது ஒரு பிரச்சனையே அல்ல. வீடுகளில் நம் பிள்ளைகளுக்குப் பொறுப்பாகச் சொல்லிக் கொடுத்தால் அவர்கள் இதனைக் கடைப்பிடிப்பார்கள். நாம் என்ன செய்கிறோமோ அதைத்தான் பிள்ளைகளும் செய்வார்கள். நம் வீடும் சுத்தமாக இருக்க வேண்டும். நமது சுற்றப்புறமும் சுத்தமாக இருக்க வேண்டும். நமது நாடும் சுத்தமாக இருக்க வெண்டும்.

சுத்தமாக இருந்தால் நாமும் சிங்கப்பூர் தான்!




Saturday 10 September 2016

கேள்வி-பதில் (30)


கேள்வி

விஞ்ஞானக் கல்வியில் நமது தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சிறப்பாகச் செயல்படுகிறார்களே!


பதில்

உண்மைதான்! இளம் ஆய்வாளர்கள் போட்டியில் உலக அளவில் பல விருதுகளை  வாங்கிக் குவிக்கின்றனர். நமது வாழ்த்துகள்!

குறிப்பாக நமது தமிழ்ப்பள்ளிகளின் விஞ்ஞான ஆசிரியர்களை நாம் பாராட்ட வேண்டும். அவர்களின் கடுமையான உழைப்பை நாம் போற்ற வேண்டும்.

தேசியப் பள்ளிகள் சாதிக்க முடியாததை தமிழ்ப்பள்ளிகள் சாதிக்கின்றன.

இந்தச் சாதனைகளை தேசியப்[பள்ளிகள் சாதித்திருந்தால் இந்நேரம் பள்ளிப்பாடப் புத்தகங்களில் அவர்களின் அருமை பெருமைகளைப் போட்டு மலேசிய மாணவர்கள் அனைவரையும் படிக்க வைத்திருப்பார்கள்! தமிழ்ப்பள்ளி மாணவர்கள் என்பதால் எந்தச் சலனமும் இல்லை! அதற்குப் பதிலாக பொறாமைதான் பளிச்சிடுகிறது!

தாய்மொமொழிப் பள்ளிகள் இனங்களிடையே வேற்றுமைகளைத் தான் வளர்க்கின்றன என்பதாக அரசியல் அரைவேக்காடுகள் அலறுகின்றன! அப்படிச் சொல்லுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

தாய்மொழிப்பள்ளிகளின் கல்வி தேர்ச்சி விகிதம், சாதனைகள் அனைத்தும் அவர்களைப் பொறாமைக் கண்கொண்டு பார்க்க வைக்கின்றன. அதனாலேயே தேவையற்ற இந்த அலறல்கள்!  தேசியப் பள்ளிகளில் ஒரு இந்திய மாணவரை பல மலாய்க்கார மாணவர்கள் சேர்ந்து தாக்குகின்ற செய்திகள் அடிக்கடி வருகின்றன. அது மட்டுமல்லாமல் மலாய் ஆசிரியர்கள் இந்திய மாணவர்களைக் காலணியால்  அடிக்கின்ற சம்பவங்களும் நடைபெறுகின்றன!  மாணவர்களை "இந்தியாவுக்குப் போ!, சீனாவுக்குப் போ! என்று சொல்லப்பபடுகின்ற நிலையும் உருவாகியுள்ளது! பல இன மாணவர்கள் கல்வி கற்கின்ற தேசியப் பள்ளிகளில் ஆசிரியர்களே இன ஒற்றுமையைக் குலைப்பவர்களாக இருக்கின்றனர்.  தரமற்றக் கல்வியைக் கொடுப்பதில் தேசியப்பள்ளிகளே முதன்மை வகிக்கின்றன! இவர்கள் தான் தாய்மொழிப்பள்ளிகள் இன வேற்றுமையை வளர்க்கின்றன என்று கூப்பாடு போடுகின்றனர்!

எந்தவொரு அரசாங்கத்தின் ஊக்குவிப்பும் இல்லாமல் நமது  தமிழ்ப்பள்ளிகள் செய்கின்ற சாதனைகள் நம்மை மலைக்க வைக்கின்றன.

சமீபத்தில் சுராபாயா , இந்தோனேசியாவில் நடபெற்ற இளம் ஆய்வாளர் போட்டியில் புலோ ஆக்கர் தமிழ்ப்பள்ளி தங்கப்பதக்கத்தையும், காஜாங் தமிழ்ப்பள்ளி வெள்ளி பதக்கத்தையும், மெந்தகாப் தமிழ்ப்பள்ளி வெண்கல பதக்கத்தையும் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்தன..

 குறிப்படத்தக்க ஒன்று: மூன்று விருதுகளைப் புலோ ஆக்கார் தமிழ்ப்பள்ளி தட்டிச் சென்றது.. அவைகள்: 1) இளம் ஆய்வாளர்களுக்கான ஒட்டுமொத்த சிறந்த விருது, 2) இளம் ஆய்வாளர்களுக்கான தங்க விருது. 3) இளம் ஆய்வாளர்களுக்கான  கொரிய நீதிபதியின் சிறப்பு விருது.  விருதுகள் பெற்ற புலோ ஆக்கார் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நமது இதயங்கனிந்த பாராட்டுக்கள்.

இந்த நேரத்தில் இந்தச் செய்தியும் சொல்லப் பட வெண்டும். சென்ற  ஆண்டு (2015) ஹாங்காங்கில் நடைபெற்ற உலக அளவிலான இளம் ஆய்வாளர்களுக்கானப் போட்டியில் 6 பதக்கங்களைப் பெற்று வாகை சூடிய இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளியையும் பாராட்டியே ஆக வேண்டும். அவர்களும் நமது நாட்டுக்குப் பெருமை சேர்த்தனர்.

இதற்கு முன்னரும் சில  தமிழ்ப்பள்ளிகள் இது போன்ற உலக அளவிலான ஆய்வுப் போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்றிருக்கின்றனர்.

அனைவரையும் நாம் வாழ்த்துகிறோம். ஆய்வுகளில் ஆர்வம் காட்டிய மாணவர்களையும் வாழ்த்துகிறோம். அதே சமயத்தில் தங்களது கடும் உழைப்பினைத் தந்து பள்ளிகளுக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்த ஆசிரியப் பெருமக்களையும் நாம் வாழ்த்துகிறோம். காரணம் ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்தப் பெருமைகள் கிடைக்க வாய்ப்பில்லை.

வாழ்த்துகள்!







!

Thursday 8 September 2016

"நன்றி!" சொல்லுங்க சார்!


வெள்ளைக்காரன் மொழியான ஆங்கிலத்தைப் படித்தோம். படித்த அந்த ஆங்கிலம் மூலம் பெரிய பெரிய பதவிகளில் உட்கார்ந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.

நல்ல ஆசை தான். குற்றமில்லை! ஆனால் அதே வெள்ளைக்காரன் சொல்லிக் கொடுத்த "நன்றி!" என்று சொல்லை மட்டும் மறந்து விட்டோம்! வெள்ளைக்காரனுக்கு நன்றி ஒரு வார்த்தையைச் சொல்லாமல் இருக்க முடியாது. அது அவனுடைய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகிவிட்டது. எல்லாவற்றுக்கும் நன்றி! அவர்கள் குழந்தைகளாகட்டும் அல்லது பிச்சைக்காரனாகட்டும் அல்லது கோடீஸ்வரனாகட்டும், மனைவி பிள்ளைகளாகட்டும் யார் எதைச் செய்தாலும் நன்றி! என்று சொல்லுவதை அவனது தினசரி வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது!

ஆனால் நம்முடைய நிலை என்ன? இங்கே நன்றி என்று சொல்லுவதிலும் ஒரு ஏற்றத் தாழ்வைக் கொண்டு வந்து விட்டோம். சம நிலையில் உடையவரிடையே பேசும் போது நன்றி என்று தாராளாமாகச் சொல்லுகிறோம். நமக்குக் கீழே உள்ளவர்களுக்கு நன்றி சொல்லுவதே கேவலம் என்னும் நிலைக்கு வந்து விட்டோம்!

அ) அவன் அவனுடைய வேலையைச் செய்வதற்கு நன்றி சொல்ல வேண்டுமா?
ஆ) நமக்குக் கீழே வேலை செய்பவன் அவனுக்கு நன்றியா?
இ) நாம் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் இவனை வேலையை விட்டுத் தூக்க முடியும்! இவனுக்குப் போய் நன்றி சொல்லுவதா?
ஈ) ஒரு முதாலாளி ஒரு தொழிலாளிக்கு நன்றி சொல்லுவதா?

ஒவ்வொன்றையும் இப்படித்தான் நாம் எடை போடுகிறோம்! ஆனாலும் நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். நன்றி சொல்லுவதில் பெரியவர், சிறியவர் என்றெல்லாம் பாகுபாடு கிடையாது!

ஒருவர் நமக்கு ஏதோ ஒரு வகையில் உதவியிருக்கிறார். அவருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். உங்கள் மகன் உங்களது கண்ணாடியைக் கொண்டு வது கொடுக்கிறான். . நன்றி சொல்லத்தான் வேண்டும்.  உங்கள் மனைவி உங்களது சட்டையை "இஸ்திரி" போட்டுக் கொடுக்கிறார்.   நன்றி சொல்லத்தான் வேண்டும். காவலாளி உங்களுக்காகக் கதவைத் திறந்து விடுகிறார். நன்றி சொல்லத்தான் வேண்டும். உணவகத்தில் பரிமாறுபவர் தேநீர் கொண்டு வந்து வைக்கிறார். நன்றி சொல்லத்தான் வேண்டும்.

ஆமாம், வெள்ளைக்காரன் இதனை எல்லாம் செய்கிறான் தானே? அவனது மொழியைப் படித்த நமக்கும் அந்தப் பண்புகள் வரவேண்டும் அல்லவா! நன்றி அவ்வளவு முக்கியமா என்று நாம் கருதலாம். ஆமாம் முக்கியம் தான். நன்றி சொல்லிப் பாருங்கள். அடுத்த முறை நீங்கள் உணவகத்திற்குச் செல்லும் போது உங்களை ஆர்வத்தோடு வரவேற்பார்; விசேஷமாகவும் கவனிப்பார் அந்த பரிமாறும் நண்பர்!

இந்த உலகமே நன்றிக்காகவும், பாராட்டுக்காகவும் ஏங்கித் தவிக்கின்றன. நாமும் இந்த மனித மனங்களைக் குளிர வைப்போம். நன்றி சொல்லி பாராட்டுவோம்! நன்றி சொல்லுவதன் மூலம் நல்லது தான் நடக்குமே தவிர எந்தக் கெடுதலும் நடக்கப் போவதில்லை!

நன்றி! நன்றி! நன்றி!

Tuesday 6 September 2016

கடன் வாங்கப்பட்ட மொழி தமிழ்!


மற்ற மொழிகளிலிருந்து கடன் வாங்கப்பட்ட மொழி தான் தமிழ் என்றால் நீங்கள் என்ன சொல்லுவீர்கள்? ஏதோ பைத்தியக்காரன் உளருகிறான் என்று தான் சொல்லுவீர்கள்!

ஆனால் மலேசிய நாட்டில் தமிழைப்பற்றியோ, தமிழர்களைப்பற்றியோ, தமிழர் கலாச்சாரத்தைப் பற்றியோ  எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம், என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்னும் நிலை உருவாகி வருகிறது என்பது தான் உண்மை!

இதோ! இப்போது ஒரு புது 'உண்மை' யைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்!  தமிழ் எங்கிருந்து வந்தது என்பதை ஒரு பெரிய ஆராய்ச்சியே செய்திருக்கிறார்கள்!

தமிழ் எங்கிருந்து வந்தது? "போர்த்துகீஸ், இங்கிலிஷ், கிரேக்கம் மற்றும் கிழக்கிந்திய நாடுகளின் மொழிகளில் இருந்து கடன் வாங்கப்பட்ட மொழி தான் தமிழ்!"

இதனை மாலாய் மொழி பாடப்  புத்தகத்தில்   வெளியிட்டிருக்கிறார்கள்! நாளை பல்கலைக்கழகம் செல்லுவிருக்கும் மாணவர்களுக்கானப் பாடம் புத்தகம் இது!

வெளீயிடு செய்திருப்பவர்கள்: OXFORD FAJAR PUBLICATIONS என்னும் பிரபல நிறுவனம்!

வெளியீட்டாளர்கள் உலக அளவில் பெயர் பெற்ற  பிரபலமான நிறுவனத்தினர். இது போன்ற பாடப்புத்தங்களைத் தயாரிப்பவர்கள் சிறந்த கவிமான்களின்  துணை கொண்டு தான் புத்தகங்கள் தயாரிக்கின்றார்கள். ஆயினும் தவறுகள் நேர்கின்றன! எப்படி? அதுவும் மலாய் மொழி பாடப்புத்தகங்களில் தமிழ் மொழி பற்றி பேசும் போது நிச்சயம் தவறுகள் நேர்கின்றன! இது ஒன்றும் நமக்குப் புதிது அல்ல! மலாய் மொழி  கல்விமான்களுக்குத் தமிழ் பற்றி எதுவும் தெரியவில்லை! தெரிந்து கொள்வதும் இல்லை! அது தேவை என்றும் அவர்கள் நினைக்கவுமில்லை!

இந்த மலாய் கல்விமான்கள் தமிழ் என்று வரும் போது அங்கு அரசியலைக் கொண்டு வருகிறார்கள்!  தமிழனை மட்டம் தட்ட வேண்டும்; தமிழை மட்டம் தட்ட வேண்டும்; தமிழர் கலாச்சாரத்தை மட்டம் தட்ட வேண்டும்! இது தான் அவர்களது கொள்கையாக இது நாள் வரை இருந்து வருகிறது! இது நாள் வரை அப்படித்தான் அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்! தமிழ், தமிழன் என்று வரும் போது எத்தனையோ குளறுபடிகள்!

இப்படி குளறுபடிகள் நேரும் போது ஒவ்வொரு முறையும் தமிழ்/இந்திய அமைப்புக்கள் கண்டனத்தை தெரிவிப்பதும் அரசாங்கத்தின் பார்வைக்குக் கொண்டு செல்வதும், அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சாக்குப்போக்குச் சொல்வதும் இது ஒரு தோடர்கதை!

இம்முறை அது தனியார் வெளியீடு என்பதால் அதனைத் திருத்திக் கொள்வதாக அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். உலக அளவில் பிரசித்திப் பெற்ற ஒரு நிறுவனம் என்பதால் தங்களது தவற்றினை அவர்கள்  ஏற்றுக் கொண்டனர்.

தவறை தவறு என்று ஒப்புக்கொண்டவர்களுக்கு நமது பாராட்டுக்கள். இனி வருங்காலங்களில் இது போன்ற தவறுகள் நேர வண்ணம் கவனமாக இருப்பது அவர்களின் பொறுப்பு.

ஆக்ஸ்போர்ட் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய அனைவருக்கும் நமது நன்றி! இது போன்ற 'தவுறுகள்' தொடர்கின்ற போதெல்லாம் குரல் எழுப்பி கண்டனத்தை தெரிவிக்கின்ற அனைத்து தரப்பினருக்கும் நமது நன்றியும் வாழ்த்துக்களும்!

தமிழ் வாழ்க! தமிழர் வாழ்க! தமிழர் கலாச்சாரம் தழைத்தோங்குக!



Monday 5 September 2016

ராஜபக்சேவுக்கு ராஜ மரியாதை!


என்ன தான் மலேசியத் தமிழர்கள் ராஜபக்சேவின் வருகையை எதிர்த்தாலும் அந்த எதிர்ப்பை ஏதோ ஆங்காங்கே ஒரு சிறிய அளவில் தான் காட்ட முடிந்ததே தவிர பெரியதொரு எதிர்ப்பைக் கொண்டு வரமுடியவில்லை! அந்த அளவுக்குத் தமிழர்கள் அடக்கி வைக்கப் பட்டியிருக்கிறார்கள் என்பது தான் உண்மை! தமிழர்களை ஒரு பொருட்டாகக் கூட அரசாங்கம் மதிக்கவில்லை.

அரசாங்கத்தின் கொள்கையெல்லாம் ஒன்றே ஒன்று தான். அரசாங்கத்தைப் பொருத்தவரை இரு நாடுகளுக்கும் நல்ல உறவுகள் உண்டு. நல்ல உறவுகள் மூலம் வர்த்தகத்தைப் பெருக்க வேண்டும். மற்றபடி  சொல்லும்படியான வேறு காரணங்கள் இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள் அல்ல என்கின்ற ஒரே ஒரு காரணமே அவர்களுக்குப் போதும்! இனப்படுகொலை என்பதெல்லாம் எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதை வைத்துத்  தான் அரசாங்கத்தின் கொள்கை வகுக்கப்படும்!

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நமது இனத் தலைவர்களின் கொள்கையைப் பொருத்தவரை அரசாங்கத்தின் கொள்கை எதுவோ அதுவே அவர்களின் கொள்கை! மிக உயரியக் கொள்கை!  ஏதாவது கேள்வி கேட்டால் அந்தோ! அவர்களின் பதவி பறி போய் விடும் என்னும் பயம் அவர்களுக்கு உண்டு! அரசாங்கத்தில் ஏதோ ஒரு பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என நினைப்போர், அமைச்சர் பதவி இல்லையென்றால் எனக்குத் தூக்கம் வராது என்று நினைப்போர், அடுத்த அமைச்சர் பதவி எனக்குத்தான் என்று நினைப்போர் - இப்படியாகப் பலர் அரசாங்கப் பதவிக்காக வரிசைப் பிடித்து நிற்போர் - நிச்சயம் வாயைத் திறக்கமாட்டார்கள் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை!

அரசாங்கக் கொள்கை என்பது ஒன்றே ஒன்று தான். ராஜபக்சேயின் வருகைப்பற்றி எப்படி வேண்டுமானாலும் நீங்கள் எழுதங்கள்.  கொட்டை எழுத்துக்களில் போடுங்கள். உங்கள் எதிர்ப்பை தமிழ் பத்திரிக்கையோடு வைத்துக் கொள்ளுங்கள். ஆங்கிலப்  பத்திரிக்கைகளில் போட நாங்கள் அனுமதிக்க மாட்டோம்! தமிழ்ப்பத்திரிக்கைகளை எந்த மலாய்க்காரரோ சீனரோ படிக்கப் போவதில்லை!  அது உலகச் செய்தியாகவும் ஆகப்போவதில்லை! அதனால் அதனைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை!  அதே சமயத்தில் ஆர்ப்பாட்டம் செய்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்!  இது தான் அரசாங்கத்தின் நிலைப்பாடு!

ஆர்ப்பாட்டம் என்றால் எப்படிச் செய்வது? ஒருவனைக் கைது செய்தால் 'சும்மா வேண்டுமென்றே' அவனைப் பிடித்து யாரும் நெருங்க முடியாதவாறு சில வாரங்களாவது  அவனைச் சிறையில் போடுவது. ஏதோ ஐ.எஸ். பயங்கரவாதியைப் போல நடத்துவது!வேலைச் செய்கின்ற நபராக இருந்தால் அவன் வேலை பறி போகும்! குடும்பம் நடு வீதிக்கு வரும்! இவைகளெல்லாம் தமிழருக்காகவே விசேஷமாக செய்யப்படுபவை! எல்லாமே ஒரு பயமுறுத்தல்! மற்ற இனத்தவரிடம் இதெல்லாம் செல்லுபடியாகாது! செய்யவும் மாட்டார்கள்! தமிழனை என்ன செய்தாலும் கேட்க நாதியில்லை என்னும் நிலைமை!

இவைகளை எல்லாம் மீறியும் சில எதிர்ப்புக்கள் நடந்தன! நடக்கின்றன!  ராஜபக்சேவுக்கு ராஜ மரியாதை! உள்ளே மண்டபத்தில் பிருமாண்ட மேடையில் உரையாற்றிக் கொண்டிருக்கிறார்.  மண்டபத்தின் வெளியே தமிழர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். அவரின் உருவ பொம்மை எரிக்கப் படுகின்றது1 மாநாட்டின் ஏற்பாட்டாளரான அனமைச்சர் வெளியே வந்து ஆர்ப்பாட்டாளர்களைச் சந்திக்கிறார். "ராஜபக்சேவை நாங்கள் அழைக்கவில்லை! கொரிய அரசாங்கம் தான் அவருக்கு அழைப்பை விடுத்தது. அவர்களின் அழைப்பை ஏற்றுத்தான் அவர் இங்கு வந்தார்! இப்போது அவர்  நாட்டில் இல்லை! நாட்டைவிட்டு வெளியேறி விட்டார்!" என்று புதிய கதையைச் சொல்லுகிறார்!  ராஜபக்சே மண்டபத்தில் உள்ளே உரையாற்றிக் கொண்டிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும்! அவருக்கு அழைப்பை விடுத்ததும்  மலேசிய அரசாங்கம் தான் என்பதும் தெரியும்!

இதனிடையே அமைச்சர் ஒருவரை வழியனுப்ப விமான நிலையம் சென்றிருந்த இலங்கைத் தூதர் இப்ராஹிம் அன்சாரைத் தாக்கியதாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர், காவல் துறையினர் இவர்களை விசாரித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

ராஜபக்சே தமிழர்களின் எதிரி என்பது அரசாங்கத்திற்குத் தெரியாதது அல்ல. இலட்சக்கணக்கானத் தமிழ் மக்களைக் கொன்று குவித்த ஒரு கொடுங்கோலன் என்பது அரசாங்கத்திற்குத் தெரியாத புதிய செய்தி அல்ல. அப்படி ஒரு மாபாவியை இருகரம் நீட்டி வரவேற்பதும், அவருக்கு ராஜ மரியாதை செய்வதும், மாநாட்டில் உரையாற்ற வைப்பதும் ஒரு சாதாரணமான  நிகழ்வாக  நாம் எடுத்துக் கொள்ள முடியாது.

இங்குள்ள  தமிழர்களைக்  கேவலப்படுத்தும் ஒரு சம்பவமாகவே நமக்குத் தோன்றுகிறது.  ஒரு மூன்றாவது பெரிய இனமாக இருக்கும் தமிழர்களை - இந்தியர்களை -  அவமதிக்கப்படுகின்ற ஒன்றாகவே நாம் இதனை எடுத்துக் கொள்ளுகிறோம்.

வருங்காலங்களில் இது போன்ற தவறுகள் தொடரக் கூடாது என்பதே அரசாங்கத்திற்கு நாம் விடுக்கும் வேண்டுகோள். ஏற்கனவே விடுக்கப்பட்ட வேண்டுகோள்கள் எந்த ஒரு பயனும் அளிக்கவில்லை. இனி மேலாவது இது தொடராது என நம்புவோம். வாழ்க, வெல்க தமிழினம்!












Saturday 3 September 2016

ஐயோடா! என்னமாய் சிந்திக்கிறார்கள்!


ஐயோடா! சில மனிதர்களை நினைக்கும் போது நம்மை என்னமாய்  திணறடித்து விடுகிறார்கள்! எப்படி எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள்!

ஒரு திருமண  நிகழ்ச்சி. வழக்கமான சம்பிராதயங்கள் ஆரம்பமாகின.  மாப்பிளை வீட்டார்  வந்தார்கள்; போனார்கள். பெண் வீட்டார் வந்தார்கள்; போனார்கள். எப்போ வச்சிக்கலாம், எப்படி வச்சிக்கலாம் என்று பேசி முடிவெடுத்தார்கள்.

இரண்டு குடும்பங்களுமே படித்தவர்கள். இரண்டு குடும்பங்களுமே ஒரேவித அந்தஸ்து உடையவை. ஒரே இனம். ஒரே மதம். பையனும், பெண்ணும் படித்தவர்கள்; நல்ல  வேலையில் உள்ளவர்கள். சீர், சினத்தியெல்லாம் பெரிதாக ஒன்றுமில்லை.

திருமண நாள் குறித்தாகிவிட்டது. விருந்துக்கான மண்டபம் பதிவு  செய்தாகிவிட்டது. திருமணப் பத்திரிக்கை அச்சாகிவிட்டது. பத்திரிக்கைகளை இப்போது கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கிறது. அப்போது தீடீரென ஒரு நாள் மணப்பெண்ணின் தகப்பனார் மாப்பிள்ளையை தனது வீட்டில் வந்து பார்க்கும்படி சொன்னார். குடும்பத்தோடு அல்ல, தனியாக. ஏன் தனியாக? மாப்பிள்ளைக்குக் கொஞ்சம் தயக்கம். இருந்தாலும் வருங்கால மாமனாராயிற்றே! தைரியத்தை வரவைத்துக் கொண்டு அவர் வீட்டுக்குப் போனார்.

வீட்டிற்கு வந்ததும் மாமனார், மருமகனிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தார். அது ஒரு வழக்கறிஞர் நிறுவனத்தின் கடிதம். அக்கடிதத்தில் திருமணத்திற்குப் பின் மாப்பிள்ளை என்ன என்ன செய்ய வேண்டும் என்று ஒரு பட்டியல் போடப்பட்டிருந்தது! சுருக்கமாகச் சொன்னால்: திருமணம் ஆனதும் தனிவீடு பார்த்துப் போய்விட வேண்டும். ஒவ்வொரு மாதமும் இவர்கள் இருவரும் எடுக்கும் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகயைப் பெண் வீட்டாருக்குக் கொடுத்துவிட வேண்டும். மாதத்தில் முதல் சனிக்கிழமையும், கடைசி சனிக்கிழமையும் பெண்  வீட்டிற்கு அவசியும் வர வேண்டும். இன்னும் பல!

மாப்பிள்ளை அந்தக் கடிதத்தைப் படித்ததும் "கிறு,கிறு" த்துப்  போய்விட்டார்! சொல்லாமல் கொள்ளமால் வீட்டைவிட்டு தனது வீட்டுக்குக் கிளம்பிவிட்டார்! என்ன ஆயிற்று? திருமணம் நின்று போனது.  இவ்வளவும் செய்தவர்  பெண்ணின் தகப்பனார்! அவருடைய குடும்பத்தினர் யாருக்கும் இது பற்றி ஒன்றும் தெரியவில்லை!  குடும்பமே வெலவெலத்துப் போனது.

கடைசியில் என்ன ஆயிற்றூ? அந்தத் தகப்பானாரை 'அம்போ' என்று தனியே விட்டுவிட்டு அந்தக் குடும்பம் தனது மகனோடு போய்ச் சேர்ந்து கொண்டது. தகப்பனார் என்ன ஆனார்? தனி ஆளாக இருந்து கொண்டு சௌக்கியமாக இருக்கிறார்1

கதையின் நீதி:  திருமணம் நடந்திருந்தால் மாமியாரே காய்களைச் சமர்த்தியமாக நகர்த்தியிருப்பார்!  ஒரு பெண் செய்ய வேண்டிய வேலையை ஆண் செய்தால் இப்படித்தான் நடக்கும்!

Friday 2 September 2016

பசுபதி சார்! உங்களை நாங்கள் நம்புகிறோம்!


பசுபதி சார்! நாங்கள் உங்களை  நம்புகிறோம்!

உங்களை நம்பக்கூடாது என ஒரு பத்திரிக்கை வரிந்து கட்டிக்கொண்டு எழுதுவதை நாங்களும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.

அவர்கள் எழுதட்டும். அவர்களை நாம் ஒன்றும் செய்ய முடியாது என்பது அவர்களுக்கும் தெரியும். அதனால் இன்னும் வீர்யத்தோடு எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

முதல் நிலையில் இருக்கும் பத்திரிக்கை என்பது அவர்களது பலம். அந்தப் பலத்தை  அவர்கள் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பது அவர்களின் கட்டாயம்! அவர்கள் கீழே விழுந்தால் அவர்களை மிதித்துப் போட நிர்வாகம் தயாராக இருக்கிறது! அதனால் எப்பாடுப் பட்டாவது தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும்.

அதனால் தான் இது தான் வாய்ப்பு என்று 'பிடி! பிடி!'' என்று பிடித்துக் கொண்டு பிடி கொடுக்காமல் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்! பாவம்! அப்படியாவது அவர்கள் வாழட்டும்!

உங்களைப் பற்றி எங்களுக்குத் தெரியும். உங்களுடைய பணி என்ன என்பது உங்களுக்குத் தெரியும்.  இது போன்ற சலசலப்புக்களுக்கெல்லாம் நீங்கள் அஞ்ச மாட்டீர்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும்.

பாவம்! அவர்கள் தொழில் அப்படி! கொஞ்சம் ஏமாந்தால் அவர்கள் இடத்தை இன்னொருவன் பிடித்துக் கொள்ளுவான்! அவர்கள் தான் என்ன செய்வார்கள்? அவர்கள் வாழ்க்கை அப்படித்தான்.யாரைத் தாக்க வேண்டும், யாரைத் தூக்க வேண்டும் என்றெல்லாம் அவர்களிடம் ஒரு பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கிறது! அதனைத் தான் அவர்கள் பின்பற்றுவார்கள்!

நீங்கள்  மட்டும் அல்ல. அவர்கள் பட்டியலில் செம்பருத்தி கா.ஆறுமுகம் போன்றோரும்  இருக்கிறார்கள்!. தாக்குவதற்கு மூலை முடுக்குகள் எல்லாம் வலைப்போட்டுக்  கொண்டிருக்கிறார்கள்!

அதனால் சொல்லுகிறேன். அவர்களை மன்னியுங்கள். நீங்கள் செய்கின்ற பணி மிக முக்கியமான ஒரு பணி. நமது இளைஞர்கள் குண்டர் கும்பல் கலாச்சாரத்திலிருந்து விடுபட வேண்டும். அதனை நீங்களும் உங்கள் குழுவினரும் மிகச் சிறப்பாகச் செய்கிறீர்கள்> உங்கள் பணி தொடர வேண்டும். உங்களைத் திசை திருப்பும் முற்சிகள் முறியடிக்கப்பபட வேண்டும்.

உங்களின் பணி தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்ப்பள்ளிக்கூடங்களுக்கும் தேவை,

பசுபதி சார்! நாங்கள் உங்களை நம்புகிறோம்!

Thursday 1 September 2016

கேள்வி-பதில் (29)


கேள்வி

கபாலியில் காட்டப்படும் பள்ளிக்கூடக் காட்சியான -  மாணவர்களைக் கபாலி சந்திக்கும் காட்சியான அந்தப் பள்ளிக்கூடம் -  மலேசியாவில் எடுக்கப்பட்ட காட்சியா?

பதில்

ஆம்! அந்தப் பள்ளிக்கூடக் காட்சி இங்கு மலேசியாவில் எடுக்கப்பட்டது தான். MySkills Foundation  என்னும் பயிற்சி திறன் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு காட்சி தான் அது.

கல்வியைத் தொடர முடியாத ஏழை மாணவர்கள்,  கட்டொழுங்கை மீறும் மாணவர்கள் என்று பல்வேறு பிரிவினர் இந்தப் பள்ளியில் பல்வேறு பயிற்சிகளைப் பெருகின்றனர். எல்லாமே அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சிகள். வாழ்க்கையில் முன்னேறுவதற்கு அத்தனை பயிற்சிகளும் அங்கு வழங்கப்படுகின்றன. இது முற்றிலுமாக இந்திய மாணவர்களுக்கென நடத்தப்படும் பள்ளி.

இந்தப்பள்ளியின் இயக்குனர்கள் வழக்கறிஞர் பசுபதி அவர்கள், டாக்டர் ஷண்முகசிவா இன்னும் பலர்  உள்ளனர்.

ஆரம்பகாலந்தொட்டே தமிழுக்கும், தமிழ்ப்பள்ளிகளுக்கும் தமிழ் மாணவர்களுக்கும் அயராமல், தளராமல் தொண்டு செய்து வருபவர் ஐயா பசுபதி அவர்கள். அரசாங்கம் மானியம் கொடுத்தால் மட்டுமே இந்தத் தட்டுக் கெட்ட சமூகத்துக்குத் தொண்டு செய்வோம் என்று மார்தட்டிக் கொண்டிருக்கும் தலைவர்களுக்கு மத்தியில் ஐயா பசுபதி அவர்களும் அவர்தம் குழுவினரும் தங்கள் சொந்தப் பணத்தைப் போட்டு இந்தச் சமுகத்திற்காக அல்லும் பகலும் உழைத்து வருகின்றனர். சமீப காலத்தில்  தான் அரசாங்கம் இவர்களைத் திரும்பிப் பார்க்க ஆரம்பித்திருக்கிறது. அதனால் இப்போது அரசாங்க உதவியும் கிடைக்கிறது.

கபாலி படத்தின் மூலம் இந்த MySkills Foundation  பள்ளிக்கு ஒரு புதிய வெளிச்சம் கிடைத்திருக்கிறது.  வாழ்க்கையில் மிகவும் பின் தங்கிய மாணவர்கள் இங்குக் கொடுக்கப்படும் வாய்ப்புக்களைப் பயன் படுத்தி தங்களை முன்னேற்றிக் கொள்ள வேண்டும்.

தமிழுக்கும், தமிழ்ப்பபள்ளிகளுக்கும் நேரங்காலம் பார்க்காமல் இன, மான உணர்வோடு பாடுபட்டு வரும் பசுபதி ஐயாவுக்கும் அவர்தம் குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டிருக்கிறேன்!

ஐயா அவர்கள் நலனுக்காக இறைவனைப் பிரார்த்திக்கிறேன்!