Saturday, 28 April 2018

இலவச சவப்பெட்டி...!


இந்தியர்களுக்கு இலவச சவப்பெட்டி!  ஆம், இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்  துணைப் பிரதமர் சைட் ஹமிடி.

அவருடைய நாடாளுமன்ற தொகுதியில் அவர் வெற்றி பெற்றால் இந்தியர்கள் அனைவருக்கும் சவப்பெட்டி இலவசமாகத் தருவதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் கூறியிருக்கிறார்.  இதனைக் கூறுவதற்கே அவருக்கு ரொம்பவும் தைரியம் வேண்டும். ஆனால் அவர் கூறியிருக்கிறார்! ஏன், எதனால் எப்படி என்பதெல்லாம் நமக்குத் தெரியவில்லை. 

இந்தியர்களைக் குறி வைத்து அவர் பேசியிருப்பது நம்மை அவமானப்படுத்துவது என்னும் நோக்கில் தான் அவர் பேசியிருக்கிறார் என்று நாம் நினைக்கத் தோன்றுகிறது. தேர்தல் பரப்புரையின் போது எல்லா இனத்தவர்கள் தான் கலந்துகொள்ளுகின்றனர்.  அவர் பொதுவாகப் பேசி இருந்தால்  யாரும் அதனைப் பொருட்படுத்த மாட்டார்கள். ஏன், மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் அனைவரும் தானே சவப்பெட்டிகளைப் பயன் படுத்துகிறோம். அவர்கள் மட்டும் என்ன ரயில் பெட்டிகளையா  பயன்படுத்துகிறார்கள்! சவம், சவம் தான்! செத்தா பிணம் தான்! கடைசியில் எல்லாருக்குமே சவப்பெட்டிகள் தான் தஞ்சம்!  சைட் ஹமிடிக்கு மட்டும் என்ன 'சைட்' அடிக்கவா போகிறார்கள்! அல்லது 'சைட் டிஷ்' என்று சொல்லி பகிர்ந்து அளிக்கவா போகிறார்கள்!

அவர் சார்ந்த உள்துறை அமைச்சு தான் இன்றைய இந்தியர்களின் மிகவும் கேவலமான நிலைக்குக் காரணம் என்பதை அவர் அறியாதவரா? குடியுரிமைக் கொடுக்க மறுப்பதும், அடயாளக்கார்டுகள் கொடுக்க மறுப்பதும் - இந்தியர்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் அவரது உள்துறை அமைச்சு தான் காரணம். அவர் இந்தியர்களை அவமதிப்பது மட்டும் அல்ல, இதுவும் ஒரு விதமான  பயமுறுத்தலாகவே நமக்குத் தோன்றுகிறது. 

அவருடைய தொகுதியில் அவருக்காக வாக்குச் சேகரிக்கப் போகும் நமது இந்திய சகோதரர்கள் கூடவே சவப்பெட்டியோடு செல்லவும்!

கேள்வி - பதில் (78)


கேள்வி

தமிழக அரசியலில் ரஜினி-கமல் அரசியலுக்கு வருவதால் யாருக்கு என்ன பயன்?

பதில்

இவர்கள் அரசியலுக்கு வருவதால் வேறு வகையான பயன் உண்டு.   எப்படியும் இவர்கள் ஆட்சிக்கு வரப்போவதில்லை. இவர்களுக்கு நடிப்பதற்குப் படங்கள் இருக்கும் வரை இவர்களால் மனம் திறந்து எது பற்றியும் பேச மாட்டார்கள்! பேச முடியாது! இது தான் இவர்களின் இன்றைய நிலை.

இவர்கள் இருவருமே மத்திய அரசாங்கத்தைப் பற்றி வாய்த் திறப்பதில்லை.  மிஞ்சி மிஞ்சிப் போனால் கமல் தமிழக முதலமைச்சரைத் தான் விமர்சனம் செய்ய முடியும்! அந்த எல்லைக்கு மேல் அவர் போக மாட்டார். ரஜினிக்கும் அதே நிலை தான்.  தமிழகத்தை இவர் தாண்டமாட்டார். இவருடைய நடவடிக்கைகள் ஏறக்குறைய பா.ஜ.க. வோடு ஒத்துப்போகும்.

இவர்களால் ஒரு பயன் உண்டு. தேர்தல் காலத்தில் வாக்காளர்களுக்கு இவர்கள் பணம்  கொடுக்க  முன்வர    மாட்டார்கள் என நம்பலாம். பணம் கொடுத்து வாக்குகள் வாங்குவதை இவர்கள் விரும்பமாட்டார்கள். குறைந்தபட்சம் இந்த ஒன்றிலாவது அவர்கள் உறுதியாக இருப்பார்கள் என்று ஏதோ கொஞ்சம் நம்பிக்கையுண்டு! 

இவர்கள் ரசிகர் மன்றங்களை வைத்தே அரசியல் நடத்துவதால் குறைந்தபட்சம் அவர்களின் ரசிகர்களாவது வாக்குகளுக்குப் பணம் வாங்குவதை தவிர்க்கவே நினைப்பார்கள். இப்படி இவர்கள் பணம் வாங்காமலே வாக்குகளைப் போட்டால் அதுவே  தமிழகத்திற்குப் பெரிய வெற்றி! ஐம்பது ஆண்டு காலம் தமிழ் மக்களை "பணம் கொடுத்தால் தான் வாக்கு" என்கிற ஒரு நிலையை  திராவிடக் கட்சிகள் உருவாக்கி விட்டன! அதனை சரி செய்வது அவ்வளவு எளிதல்ல. இந்த 'வாங்கும்' மனப்பான்மையை ஒரளவு இவர்களின் இரு கட்சிகளாலும் செய்ய முடியும் என்பதாகவே நான் நினைக்கிறேன்.

கமலும் ரஜினியும் அரசியலில் என்ன சாதிப்பார்கள் என்று சொல்ல முடியவில்லை. ஆனால் இந்த ஒன்றை அவர்கள் சாதித்தாலே போதுமானது. வாக்குக்குப் பணம் என்கின்ற ஒன்றை ஒழித்தாலே போதும்! தமிழகத்தில் நல்ல ஒரு சூழல் உருவாகும். நல்ல அரசாங்கம் அமையும்.

இவர்களால் இந்த ஒரு பயனே போதும்!

Wednesday, 25 April 2018

குறிக்கோளைக் குறிவைத்து நகர்த்துங்கள்


நம் அனைவருக்குமே குறிகோள்கள் உண்டு. சிறிதோ, பெரிதோ நம்மை அறியாமலேயே ஏதோ ஒரு குறிக்கோளை வைத்துக் கொண்டு தான் நாம் செயல்படுகிறோம். ஆனால் நாம் அறிந்து, தெரிந்து, தெளிந்து ஒரு குறிக்கோளை வைத்துக் கொண்டால் நமது பயணம் சரியாக அமையும்.

விஜய்டிவி புகழ் செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி தம்பதியைப் பாருங்கள். இருவருமே வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழுகின்ற  ஒரு குடும்பம். இருவருக்குமே பாடுகின்ற திறன் இருந்தது. பாடுகின்ற திறன் இருந்ததால் தங்களது வறுமையைப் போக்க பாடுவதையே தங்களது தொழிலாக ஏற்படுத்திக் கொண்டார்கள். வேறு எந்தத் தொழிலையும் தேர்ந்தெடுக்கவில்லை. கிராமப்புறங்களில் நாட்டுப்புற இசை தான் அவர்களுக்குக் கிடைத்த வாய்ப்பு. பாடுவதற்கு நாட்டுப்புற பாடல்கள் தான் அவர்களுக்கு மேடை அமைத்துக் கொடுத்தன.. நாட்டுப்புற பாடல்கள் என்பதால் அவர்கள் அலட்சியமாகப் பாடவில்லை. எப்படி வேண்டுமானாலும் பாடலாம் என்று அலட்சியம் காட்டவில்லை. அதனையும் சிறப்பாக, உணர்ந்து பாடி மக்களின் ஆதரவைப் பெற்றனர். நாட்டுப்புற மேடைகளே அவர்களுக்குப் பாடுவதற்கு தல்லதொரு தலமாக  அமைந்தது.

அவர்களின் பாடல்களுக்கு, கிராம மேடைகளில், நல்ல வரவேற்பு  கிடைத்ததால் நன்றாகப் பாட வேண்டும் என்னும் ஆர்வமும் அதிகரித்தது.  சிறு சிறு கூட்டத்தினரிடையே பாடிக் கொண்டிருக்கிறோமே தொடர்ந்து "நாம் என்ன செய்யப் போகிறோம் அல்லது இப்படியே தானா, பெரிய, பெரிய கூட்டங்களை எப்போது பார்க்கப் போகிறோம்"  என்னும் எண்ணம் துளிர் விட ஆரம்பித்தது. 

அது தான் அவர்களிடம் ஏற்பட்ட முதல் பொறி. அடுத்த கட்ட நகர்வு என்ன எதுவும் தெளிவாக இல்லை. ஆனாலும் பாடுவது தான் நமது தொழில் என்பதில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை. பாடுவதில் இன்னும் மெருகேற்ற வேண்டும் என்பதிலும் எந்தத் தயக்கமும் இல்லை. 

"வெளியே சென்று பாட வேண்டும், பெரிய பெரிய இடங்களில் பாட வேண்டும்" என்னும் ஆசை தொடர்ந்தது, தீவிரம் அடைந்தது. ஆனாலும் எந்த வழியும் தெரியவில்லை. இந்த நேரத்தில் தான் விஜய்டிவி யின் பாடல் போட்டியில் பாடுகின்ற வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தது. அதன் பின்னர் என்ன நடந்தது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

இதில் முக்கியமான ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மனோதத்துவம் என்ன சொல்லுகிறது? நமது குறிக்கோளில் நாம் தீவிரமாக இருந்தால் நம்மைச் சுற்றி இருக்கும் நாலு பேர் அல்லது நாம் நினைத்துப் பார்க்காத இடத்திலிருக்கும் நாலு பேர் நமக்கு உதவி செய்ய வருவார்கள் என்கிறது  மனோதத்துவம்.

பெரிய அளவில் நமது கிராமிய இசையைக் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்த செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி தம்பதி அப்படித்தான் நினைத்தார்கள். அது நடந்தது.

எல்லாத் தீவிரமான ஆசைகளும் நிறைவேறும். அதனால் உங்கள் ஆசையைக் குறிகோளாக மாற்றி அதற்கான உழப்பைப் போட்டீர்களானால் உங்களுக்கான வெற்றி நிச்சயம். 

Tuesday, 24 April 2018

ஆவி வாக்காளர்களா...?


நம் நாட்டிற்குள் வங்களாதேசிகள் என்று காலடி எடுத்து வைத்தார்களோ அன்றே ஆவிகளும் வந்து புகுந்து கொண்டன! ஒவ்வொரு தேர்தலின் போதும் ஆவி வாக்காளர்கள் வந்து ஜன நாயக வழியில் கடமை தவறாமல் வாக்களித்து விட்டுச் செல்கின்றனர்!

சென்ற தேர்தலின் போது 40,000 ஆவி வாக்களர்கள் இருப்பதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டினர்' இம்முறை அவர்கள் எல்லாம் நாட்டின் குடிமக்களாக ஆகியிருப்பார்கள்! அதே சமயத்தில் ஆவி வாக்களர்களும் கூடியிருப்பார்கள்!

இதெல்லாம் நடக்கக்கூடிய சாத்தியமில்லை என்று புறக்கணித்து விட முடியாது. பலவீனப்பட்டுக் கிடக்கும் அரசாங்கம் எதையும் செய்யத் தயாராக இருக்கும்.

ஆமாம்,  பதவியைக் கௌரவமாக விட்டுக் கொடுக்க யாரும் தயராக இல்லை! மக்கள் விரும்புகிறார்களோ, விரும்பவில்லையோ "நான் பதவியில் இருப்பேன்" என்று அடம் பிடிக்கும் தலைவர்களைத்தான் நாம் பார்க்கிறோம்! "நான் நாட்டுக்கும் ஒன்றும் செய்ய மாட்டேன் ஆனால் எனக்குப் பதவி வேண்டும்" என்று சொல்லுகிறவர்கள் தான் அதிகம்!

என்ன செய்வது? இது தான் ஜனநாயகம்!

வெறும் ஆவி வாக்காளர்கள் என்று சொல்லுவதால் மட்டும் பிரச்சனை முடிந்து விடாது! வாக்கு எண்ணுகின்ற இடத்திலும் பல தில்லுமுல்லுகள்! தெனாகா நேஷனலும் அதன் வேலையைக் காட்டும்! தீடீரென்று மின்வெட்டு வயிற்றைக் கலக்கும்! இந்த வேலைகள் எல்லாம் ஆவி வாக்காளர்களோடு கை கோர்த்து வருபவை!  அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரத்திமிரைக் காட்ட எந்த எல்லைக்கும் போவார்கள்!

இவைகளெல்லாம் மீறி தான் வெற்றியை நாம் பார்க்க வேண்டும்.  பல இடர்கள்! பல தொல்லைகள்! பல தடங்கல்கள்! அத்தோடு ஆவிகள்!

இம்முறை ஆவி வாக்காளர்கள் தேர்தல் நடைபெறும் எல்லைக்குள் தலை வைத்து படுக்கு மாட்டார்கள் என நம்புவோம்!

Sunday, 22 April 2018

உங்கள் வாக்கு யாருக்கு..?


முதலில் தொலைப்பேசி உரையாடலைக் கேளுங்கள்:

"நான் பி.என். அலுவலகத்தில்  இருந்து பேசுகிறேன்"

"சரி! என்ன செய்தி?"

"உங்கள் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"

"போன தேர்தலப்போ வந்து கைகொடுத்து விட்டுப் போனார்! அதன் பின் அவரைப் பார்க்கல! ஒரு வேளை அம்னோ கூட்டங்களில் அவர் கலந்து கொண்டிருப்பார்!  எனக்குத் தெரியாது!"
"ஆமாம், இந்தத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பீர்கள்?"

"தெரியவில்லை! அது ரகசியமாச்சே!"

"ஆமாம், அது ரகசியம்! சரி! நன்றி!"

இப்போது தான் கடந்து போன ஐந்து வருடங்களைப் பற்றி கொஞ்சம் திரும்பிப் பார்க்க அவர்களுக்கு ஞாபகம் வந்திருக்கிறது. அதுவும் இந்திய வாக்காளர்களாகப் பார்த்து "நீங்கள் யாருக்கு வாக்களிப்பிர்கள்"  என்று கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்!

மலாய் வாக்காளர்களின் வாக்கு எண்ணிக்கை நூறு விழுக்காடு கிடைக்கும் என்னும் நம்பிக்கை குறைந்துவிட்டது. அது பாதி பாதியாகக் கூட  ஆகலாம்! இந்த நேரத்தில் இந்திய வாக்காளர்களின் வாக்குகள் பெரிய அளவில் ஒத்தாசயாய் இரு,க்கும் என்று நம்பப்படுகிறது. அதனால் தான் இந்த வாக்கு வேட்டையை ஆரம்பித்திருக்கிறார்கள்!

யார் யார் இந்தியர்களோ அவர்களைக் கூப்பிட்டு "எங்களுக்கு வாக்குப் போடுங்கள்"  என்னும்  மறைமுக பயமுறுத்தல்களாகக் கூட இருக்கலாம்! அதாவது  "உங்கள் தொலைப்பேசி எண் தெரியும் உங்களைப் பற்றி அனைத்தும் தெரியும், ஜாக்கிரதை!" என்று நமக்கு ஒர் எச்சரிக்கை கொடுக்கலாம்!

எது எப்படி இருப்பினும் இது தேர்தல் காலம். தேவையற்றவர்களிடையே தேவையற்ற பேச்சுக்கள் தவிர்க்கபட வேண்டியவை.  வீண் விவாதங்கள் வேண்டாம். தேர்தல் முடிந்த பிறகு எங்கும் வெளியே போகாதீர்கள் என்பதாக இப்போதே பேச்சுக்கள் வர ஆரம்பித்துவிட்டன! எல்லாம் ஊகங்கள் அடிப்படையில் தான்  நஜிப் மே 9-ல் தேர்தல் வைத்திருக்கிறார்.  மே 9-க்கும் மே 13-க்கும் இடைவெளி அதிகம் இல்லை! அதனால் தான் இது போன்ற ஊகங்கள்!

இருப்பினும் அனைத்தையும் நேர்மறையாகவே பார்ப்போம். நல்லதே நடக்கட்டும். நாட்டுக்கு ந்ல்லது நடக்கட்டும். மக்களுக்கு நல்லது நடக்கட்டும்.

உங்கள் வாக்கு யாருக்கு என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்! வாழ்க மலேசியா!

ஏன் டாக்டர் மகாதிர்...?


ஏன் டாக்டர் மகாதிர்?  இது தான் இப்போதைய ஆயிரம் பொற்காசுகளுக்கான கேள்வி!

அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் பல்வேறு தரப்புக்களிலிருந்து வந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அவரிடம் வாங்கித் தின்றவர்களின் தரப்பிலிருந்து தான் அதிகம் வருகின்றன!

மக்கள் தரப்பிலிருந்து பார்த்தால் அவருக்கு அதிகம் பேர்  ஆதரவு கரம் நீட்டுகிறார்கள்.  ஏன்?   நாட்டிலுள்ள பிரச்சனைகள் தான்.

1) கிடு கிடு விலைவாசிகளின் ஏற்றம்.   விலைவாசிகளின் ஏற்றம் சமாளிக்க முடியாத அளவுக்கு போய்க் கொண்டிருக்கிறது. ஏழை, நடுத்தரக் குடும்பங்கள் தள்ளாடுகின்றன. அத்தியாவசியப் பொருட்கள் கூட வாங்க முடியாத நிலை. "பிரிம்" காசெல்லாம் வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ கிடைக்கலாம். போதாது! மீன்கள் விலையோ சொல்ல முடியாத விலை! பிள்ளைகளின் கல்வி ஏறக்குறைய வணிகமாக மாறிவிட்டது! வேலை செய்பவர்கள் எல்லாம் அரசு ஊழியர்கள் அல்ல என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ளத் தவறிவிட்டது!

2)  வேலையில்லாத் திண்டாட்டம் என்பது மிகப்பெரிய பிரச்சனை.சாதாரண ஊழியர்களிலிருந்து  பெரிய பதவி வகித்தவர்கள் கூட இப்போது வேறு நிறுவனங்களுக்கு வேலைக்கான விண்ணப்பங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள்! பட்டதாரிகள் பலருக்கு வேலை இல்லை. இன்னொரு புறம் வேலையிருந்தால் தகுதி இல்லை! தகுதியற்ற மாணவர்களைக் கல்லுரிகள் மானாவாரியாக வெளியாக்கிக் கொண்டிருக்கின்றன!

3) வெளிநாட்டினர் - சொல்ல முடியாத அளவுக்கு வெளிநாட்டினர் நாட்டுக்குள் நடமாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களெல்லாம் நல்ல நிலையில் இருக்கிறார்கள். நாட்டுக்குள் வியாபாரம் செய்கிறார்கள்; கடை வைத்திருக்கிறார்கள்; பிள்ளைக்குட்டிகளோடு மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். உள்ளூர்காரனுக்கு வியாராம் செய்யவோ, உரிமம் பெறவோ படாதபாடு பாட வேண்டியுள்ளது!  அந்நியரின் ஆதிக்கம். அதிகம். அரசாங்கம் மிகவும் தாராளமாக அவர்களிடம் நடந்து கொள்ளுகிறது. 

இதெல்லாம் ஒரு சில பிரச்சைனைகள் மலேசியர்கள் எதிர்நோக்கும் முக்கியமான பிரச்சனைகள்.

எப்படியோ மனிதன் சாப்பிட வேண்டும். அவனுக்கு வேலை வேண்டும். அவன் பிள்ளைகள் படிக்க வேண்டும். இவைகள் அனைத்தும் மலேசியர்களின் தேவைகள்.

அவைகள்  டாக்டர் மகாதிர் காலத்தில்  கிடைத்தன. சாப்பிட முடிந்தது. வேலை கிடைத்தது. பிள்ளைகள் படிக்க முடிந்தது.

இது தான் ஆயிரம் பொற்காசுகளுக்கான  பதில்!


Friday, 20 April 2018

மைபிபிபி வேளியேறுமா...?


கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியை தனக்குக் கொடுக்காவிட்டால் பாரிசானிலிருந்து  வெளியேறுவோம் என்று மைபிபிபி கட்சியின் தலைவர் கேவியெஸ் அச்சுறுத்துவதாக வெளிவந்த செய்தி எந்த அளவுக்கு உண்மையாக இருக்கும்? 

பொதுவாக கேவியெஸ் பேசுகின்ற பேச்சுக்களை யாரும் சட்டை செய்வதில்லை என்பது பொதுவான அபிப்பிராயம். அவர் மோதுவதெல்லாம் ம.இ.கா. வினரிடம் மட்டுமே! அல்லது ம.சீ.ச, வாக இருக்கலாம். மற்றபடி அம்னோவிடம் மோதுகிற அளவுக்கு அவருக்குத் துணிச்சல் கிடையாது!  

கேமரன் மலையில் கடந்த நான்காண்டுகளாக தான் சேவையாற்றி  வருவதாக அவர் கூறுகிறார். சேவை என்பது மலாய்க்காரர்களுக்கு மட்டும் அல்ல. அனைவருக்கும் அவர் செய்ய வேண்டும். இந்தியர்கள் தாங்கள் பயிர் செய்த காய்கறிகளை விற்பதற்குப் பல தடங்கல்களை எதிர் நோக்கி வருகின்றனர். பல முறை இது பற்றி பத்திரிக்கைகளில் செய்திகள் வந்திருக்கின்றன. ஆனால் அந்தப் பிரச்சனைகளுக்கு இவரால் என்ன செய்ய முடிந்தது? இவரால் ஒன்றும் செய்ய முடியாது! காரணம் அவர்களுடைய பிரச்சனைகளுக்கு இவரால் தீர்வு காண முடியாது. பிரச்சனைகளை உருவாக்குபவர்களே அவருடைய ஆளுங்கட்சியினர்கள் தாம்!

கடந்த நான்கு ஆண்டுகளாக அவர் என்ன செய்தார்? வெளி மாநிலங்களிலிருந்து வாக்காளர்களைக் கொண்டு வந்தார்! சம்பந்தம் இல்லாதவர்களை  எல்லாம் கேமரன் மலை தொகுதியில் வாக்காளர்களாகப் பதிய வைத்தார்! இங்கு மட்டும் அவருக்கு இந்தியர்கள் தேவை.  சேவை என்னும் போது இந்தியர்கள் தேவை இல்லை! இது தான் கேவியெஸ்ஸின் தேர்தல் கொள்கை!

சரி, அவருடைய அச்சுறுத்தல் எங்கு போய் முடியும்?  அவருக்குத் தேவை எல்லாம் ஒரு பதவி. ஒரு முழு அமைச்சராக வேண்டும்.  இது தான் அவருடைய கனவு! அதைத்தான் அச்சுறுத்தல்  மூலம் சாதிக்க விரும்புகிறார். நிச்சயமாக அவர் பாரிசானை விட்டு வெளியேற வாய்ப்பில்லை!

அவருடைய பேச்சுக்களை எல்லாம் நாம் கடுமையாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை! அரசியல்வாதிகளுக்கு இதெல்லாம் ஒரு விளையாட்டு! அவ்வளவு தான்!

வெற்றிகள் எந்த வயதிலும் வரலாம்...! (3)


வெற்றிகள் எந்த வயதிலும் வரலாம். ஒன்று வயதாகிய பின்னர் வரலாம். மிகச் சிறிய வயதில் வரலாம். அதுவும் இல்லை, இதுவும் இல்லை வயதிலும் வரலாம்!

அப்படித்தான் ஒர் இடைப்பட்ட வயதில் - ஒரு முப்பத்தைந்து  வயதுக்குள் இருக்கும்  -  செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி விஜய்டிவி சுப்பர்  சிங்கர் நிகழ்ச்சியில் கிராமியப் பாடல்களைப் பாடி அசத்திக் கொண்டிருக்கிறார்கள்!

ஓரே இரவில் உலகத்தமிழரிடையே புகழ் பெற்றவர்கள் என்றால் இந்த ஜோடியைத் தான் நாம் சொல்ல வேண்டும்! யாரும் எதிர்பாராத  ஒரு நேரத்தில் விஜய்டிவி இந்தக் கிராமிய இசைக் கலைஞர்களை அவர்களின் போட்டியின் மூலம் ஒரு பிரமாண்டமான அறிமுகத்தை  செய்து வைத்திருக்கிறார்கள்!  

கிராமிய இசைக்குப் புத்துயிர் அளிக்கும் நோக்கம் என்பது நல்ல நோக்கமே. அதே சமயத்தில் அவர்கள் தேர்ந்தெடுத்த கலைஞர்கள் மிகவும் திறமைசாலிகள் என்பதையும்  மறுக்க முடியாது. இதன் மூலம் இந்தக் கலைஞர்களுக்கு பேரும், புகழும் அத்தோடு பொருளாதார ரீதியிலும் வெற்றி பெறுவார்கள்  எனவும் நாம்  நம்பலாம்.

கிராமிய இசை என்பது நலிந்து வரும் ஒரு கலையாகவே இது நாள் வரை தொடர்ந்து வந்திருக்கிறது. இனி அதற்கு ஒரு மவுசு ஏற்படும் என நாம் நம்புகிறோம். இந்த கணவன் மனைவி ஜோடியை  சரியான நேரத்தில்  விஜய் டிவி அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.  பாடலா பாடுகிறார்கள். அனைத்தும் கிராமத்து ஏழைகளின் ஏக்கம்,  வாட்டம், வருத்தம் அதே சமயத்தில் காதல், நகைச்சுவை என்று பின்னி எடுக்கிறார்கள்!   அவர்கள் பாடிய அம்மா பாடல்கள், விவசாயம்  கைத்தறி நெசவாளர் பற்றிய   பாடல்கள் மனதை உருக வைக்கும் பாடல்கள். 

இவர்களின் பாடல்களினால் நெசவாளர்களுக்கு ஒரு புதிய உத்வேகம் கிடைத்திருக்கிறது.  அவர்கள் வாழ்க்கையில் வசந்தம் வீசும் என நம்பலாம்.  தமிழர்கள் இப்போது சுதேசி பொருட்களைப் பயன்படுத்துவதால்   தமிழர்களின் பொருளாதாம் உயரும் என்னும் விழிப்பு ஏற்பட்டிருக்கிறது. நாம்  தமிழர்  என்னும்  விழிப்புணர்ச்சி இப்போதாவது ஏற்பட்டிருக்கிறதே  என நாம் பெருமைப்படலாம்.

இந்த தம்பதியினர்  அற்புதமான  குரல் வளத்தைக் கொண்டிருக்கிறார்கள். சங்கீதம் எதுவும் கற்கவில்லை! நாட்டுப்புற கலைஞர்களுக்குக் கத்திப் பாடுவதே சங்கீதமாகிவிட்டது!  உலகலாவிய தமிழர்களின் மனதில் ஒரே இரவில்  இடம் பிடித்த  செந்தில்கணேஷ்-ராஜலட்சுமி தம்பதியினருக்கு நமது வாழ்த்துகள்!  அவர்களது நாட்டுப்புற  இசை உலகமெங்கும் ஒலிக்க மீண்டும் மீண்டும் வாழ்த்துகள்!

வெற்றி என்பது குறிப்பிட்ட  வயதினருக்குத் தான்  என்பதில்லை.  எந்த வயதிலும் வரலாம் என்பதற்கு இவர்கள் ஓர் எடுத்துக் காட்டு!

Tuesday, 17 April 2018

வெற்றிகள் எந்த வயதிலும் வரலாம்...! (2)


வெற்றி என்பது எந்த வயதிலும் வரலாம். விஜய் டிவி சுப்பர் சிங்கர் போட்டியில் முதல் பரிசு பெற்ற பிரித்திகா என்னும் சிறுமியைப் பற்றி சொல்லத்தான் வேண்டும்.

திருவாருர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  தியானபுரம் என்னும்        கிராமத்தில் வாழ்ந்து வருவது அவரது குடும்பம். அப்பா, அம்மா, அண்ணன், பிரித்திகா கடைசிக் குழந்தை. அரசு பள்ளியில் ஒன்பதாம்  வகுப்பு படிக்கும் மாணவி. பிரித்திகா. அப்பா கார்களுக்குப் வர்ணம் பூசும் வேலை.  வருமானம் போதாததால்    வீட்டிலேயே அம்மா தையல் வேலை  பார்க்கிறார்..  வருமானம் போதாதக் குடும்பம்.

பிரித்திகா குடும்பத்தில்  சங்கீதப்  பின்னணி உடையவர்கள் யாரும் இல்லை. அவரது பெற்றோருக்கு அவள் பாடுவாள் என்பது கூட தெரிந்திருக்கவில்லை.. ஆனல் அவர் படிக்கின்ற பள்ளியில் அவருடைய ஆசிரியர்கள் அதனைக் கண்டுப்பிடித்திருக்கிறார்கள்.   பள்ளியின்  தமிழ்த்தாய் வாழ்த்து தான் பிரித்திகாவுக்கு  பிள்ளையார் சுழி போட்ட பாடல்.. அந்தப் பாடல் தான் ஆசிரியர்களை வியப்பில் ஆழ்த்திய பாடல். அதன் பின்னர் பள்ளி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பாடியிருக்கிறார். அவரது ஆசிரியர்கள் அவருக்குச் சங்கீதப் பயிற்சி கொடுத்தால்  இன்னும் சிறப்பாகப் பாடுவார் என்பதாகப் பெற்றோரிடம்  கூறியிருக்கின்றனர்.  அவருக்குச் சங்கீதப் பயிற்சி கொடுக்க அவரது தந்தை அருகிலுள்ள பட்டணத்திற்கு அவரை சைக்கிளில் உட்காரவைத்து கூட்டிகொண்டு போவாராம். மகள் பாடுவதில் உள்ள ஆர்வத்தைக் கண்டு தாயும் தந்தையும் தங்களால் இயன்றதைச் செய்திருக்கிறார்கள்.

விஜயின் சுப்பர் சிங்கர் போட்டியில் கலந்து கொள்வது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே கலந்து கொண்டு அவர் தோல்வி யைத் தழுவியிருக்கிறார்.  ஆனாலும் மனந்ததளரவில்லை. அந்தத் தோல்வியின் மூலம் தனது அனுபவங்களைப் பெருக்கிக் கொண்டார். அந்த அனுபவங்கள் தான் அவருக்கு வெற்றியைக் கொண்டு வந்திருக்கிறது.

அவர் கிராமத்தில் தனது இசைப் பயணத்தை தொடங்கியவர். அந்த கிராமிய மணம் அவர் குரலில் ஒலிக்கத் தவறவில்லை! பட்டணத்தில் உள்ளவர்களுக்கு அவ்வளவு எளிதில் அந்த கிராமியத்தைக் கொண்டு வர முடியாது! அந்தக் கிராமிய மணம் அவருக்குக் கூடுதல் புள்ளிகளையே அள்ளிக் கொடுத்ததாகவே எடுத்துக் கொள்ளலாம்.  அவர் பாடிய ஒவ்வொரு பாடலிலும் அந்தக் கிராமியக் குரல்  வந்து போய்க் கொண்டு தான் இருந்தது!  அதுவே அவருக்கு வெற்றியையும் கொடுத்தது!

பிரித்திகாவின் வெற்றி என்பது இசை மேல் அவருக்குள்ள ஆர்வம் தான். தனது திறமையை வளர்த்துக் கொள்ள  தொடர் பயிற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். விஜய்டிவியின் இசைப் பயிற்சியாளர் வைத்தியநாதனும் அவருக்கு நல்ல வழிகாட்டியாக இருந்திருக்கிறார். அவரது ஊர் மக்கள், பள்ளி ஆசிரியர்கள் இப்படி அனைவரும் ஓரளவு பொருளாதார ரீதியிலும் இன்னும் பல வழிகளில் ஒத்துழைப்பை நல்கியிருக்கிறார்கள்.

இதைத்தான் மனோதத்துவோம் சொல்லுகிறது: உங்களுக்குத் தீராத  ஆர்வம் இருந்தால் உங்கள் ஊரே திரண்டு வந்து உங்கள் லட்சியத்தை அடைய உறுதுணையாக இருக்கும் என்று. எந்த ஏழ்மையும்  உங்களுக்குத்  தடையாக இருக்க முடியாது!

மிகச் சிறிய வயதில் பெரிய சாதனையைப் புரிந்திருப்பவர் பிரித்திகா! இன்னும் பல சாதனைகளைப் புரிய வாழ்த்துகிறோம்!

Monday, 16 April 2018

வெற்றிகள் எந்த வயதிலும் வரலாம்...! (1)


வெற்றிகள் எந்த வயதிலும் வரலாம்! எப்படி வேண்டுமானாலும் வரலாம!. எந்த ரூபத்திலும் வரலாம்! எந்தக் காலக் கட்டத்திலும் வரலாம்! எந்த நிலையிலும் வரலாம்! சிறியவர், பெரியவர் யாருக்கும் வரலாம்!  செல்வந்தர், வறியவர் யாருக்கும் வரலாம்!

அப்படித்தான் வந்திருக்கிறது ரமணி அம்மாளுக்கு.

தமிழகத்தின் ZEE TAMIL  தொலைக்காட்சியின் பாடல் போட்டியில் தான் அந்த அதிசயம் நடந்திருக்கிறது.  பாடல் போட்டி என்றாலே இளசுகளின் ஆதிக்கம் அதிகம்.  இளசுகள் பங்கேற்கும் ஒரு நிகழ்ச்சியில் 63 வயது பாட்டியான ரமணி அம்மாள்  இந்தப் போட்டியில் கலந்து கொண்டு இறுதிச் சுற்று வரை வந்து அசத்தியிருக்கிறார்.  வெற்றி பெறா விட்டாலும் இறுதிச் சுற்று வரை வந்திருப்பதே அவருக்கு அது அபாரமான வெற்றி என்று எடுத்துக் கொள்ளலாம்!

ரமணி அம்மாள் ஒரு ஏழை பாட்டி. இப்போதும்  பல வீடுகளில்  பத்துப் பாத்திரங்கள்  தேய்த்துத்தான் தனது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார். அவர் அந்தக் காலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. வரை பள்ளி சென்றிருக்கிறார். ஆங்கிலமும் பேசுவதாகச் சொல்லப்படுகிறது.

பாட்டி பள்ளி காலத்திலிருந்தே பாடி வந்திருக்கிறார். முறையான பயிற்சி ஒன்றும் இல்லை. எல்லாம் கேள்வி ஞானம் தான். பாடுவதில் ஆர்வம் மட்டும் குறையவில்லை. அவர் நன்றாகப் பாடுவார் என்பது பலருக்குத் தெரிந்திருக்கிறது. அதனால் வீட்டு விசேஷங்களில்  யார் கூப்பிட்டாலும்  போய் பாடி வருவது வழக்கம். 

ரமணி  அம்மாளுக்கு  ஒன்பது  குழந்தைகள்.  கணவர்  இறந்து போனார். அதில் ஒரு விசேஷம்.  அவர்  திருமணம் ஆனதும் அவர்  கணவர் முதன் முதலாக அவரைச் சினிமாவுக்குக்  கூட்டிக்கொண்டு போய் காட்டிய முதல் படம் துலாபாரம்!  துலாபாரம்  படம்  பார்த்தவர்களுக்குத்  தெரியும்.  பார்த்தால் பத்து  நாளைக்காவது   தூக்கம்  வராது!  அவ்வளவு  சோக மயம். அவரது  வாழ்க்கை  அதனை  விட  துக்கம்  நிறைந்தது என்கிறார். கணவர் குடிகாரர்  என்பதால்  குடும்பச்  சுமை அவர் மீது  விழுந்தது. இது  நாள்  வரை  அவர்  அதிலிருந்து  இன்னும்  மீள  வில்லை.

இப்போது  தான்  அவர் - இந்தப்  பாடல்  போட்டிக்குப்  பிறகு - அவரது    வாழ்க்கையில்  வசந்தம்  வீசுகிறது.  வீட்டு  நிகழ்ச்சிகளில்  பாடிக் கொண்டிருந்த அவர்  ZEE TAMIL  தொலைக்காட்சி  நிகழ்ச்சியில்  பங்கேற்றார்.  அவர் நிலை அறிந்து  அவருடைய  பொருளாதாரச்  சுமையை  உலகத்  தமிழர்கள்  பலர்  தீர்த்து  வைத்திருக்கின்றனர்.

ரமணி அம்மாளில் வாழ்க்கை  இப்போது  தான்  திசை  திரும்பியிருக்கிறது.  அவருடைய  பாடல்கள்  அனைத்தும் பெரும்பாலும்  கண்ணதாசன்  பாடல்கள். அனைத்தும் தத்துவப் பாடல்கள். அந்தப்  பாடல்கள்  அனைத்தும்  அவருக்கு  ஊக்கத்தைக்  கொடுத்தன. துணிவைக்  கொடுத்தன. தன்னம்பிக்கையைக் கொடுத்தன.  வேறு கசமுசா பாடல்களை  அவர் விரும்புவதில்லை. பணம்  கொடுத்தாலும் பாடுவதில்லை. கண்ணதாசன்  பாடல்களைப்  பாடிப்பாடியே ஊக்கத்தை வளர்த்துக் கொண்டார். அந்த ஊக்கம் தான் அவரை அந்த  மேடைக்கு  அழைத்துச் சென்றது. அந்த  ஊக்கம் தான்  அவரைப் பாட  துணிவைத் தந்தது.

இதிலிருந்து நமக்குப் புரிவது என்ன? நல்ல  பாடல்களைத்  தேர்ந்தெடுத்து நமது  மனதில்  பதிய வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அதுவாக மாற வேண்டும். அதுவே ஒரு நாள் செயலாக வெளிப்படும்.  செயல் பட துணிச்சலைக் கொடுக்கும். ரமணி அம்மாள் 63 வயது பாட்டியாக இருக்கலாம்.  அவரது  பாடல்கள்  இன்னும் பல பாட்டிகளுக்கும் ஊக்கம் கொடுக்கும்! வாழ்க! வளர்க!

Sunday, 15 April 2018

வாக்களிக்க வரவேண்டாம்...!


வருகின்ற 14-வது பொதுத் தேர்தல் மே மாதம் 9-ம் தேதியென தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது அனைவரும் அறிந்ததே.  9-ம் தேதி  என்பது புதன் கிழமை. பொதுவாகத் தேர்தல் ஆணையம் புதன் கிழமைகளில் தேர்தலை வைப்பதில்லை.  இது வரையில் தேர்தல் என்பது சனிக்கிழமைகளில் தான் நடந்திருக்கின்றன. இது தான் காலங்காலமாக நடந்து வருவது.

ஆனால் இம்முறை புதன் கிழமை வருகிறது. இதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும்?  சனிக்கிழமை என்றால் அன்று பள்ளி விடுமுறை. பொதுவாக பொது விடுமுறை தான் வாக்களிக்க் ஏற்ற நாள்.  புதன் கிழமை என்பது வேலை நாள். அரசாங்கம் அன்று விடுமுறை என்று அறிவித்திருக்கிறது. ஒரு நாள் விடுமுறை என்பது அரசாங்க வேலைகள் அனைத்தும் ஒரு நாள் முடக்கும்.  தனியார் நிறுவனங்கள் விடுமுறை  கொடுக்காது.   முடிந்தால் தொழிலாளர்கள் தங்களது ஓய்வு நேரத்தில் போய் வாக்களித்து விட்டு வரலாம்.  அதனை அவர்கள் செய்வார்கள் என நம்பலாம்.

இதில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் சிங்கப்பூரில் வேலை செய்யும் மலேசியர்கள். சிங்கப்பூரில்  சுமார் 5,00,000 (ஐந்து லட்சம்) மலேசிய வாக்காளர்கள் உள்ளதாகச் சொல்லப்படுகின்றது. புதன் கிழமை வேலை தினம் ஆகையால் சிங்கப்பூரிலுள்ள மலேசிய வாக்காளர்கள் வாக்களிக்க வருவது குறையும் என்பது அரசாங்கத்திற்குத் தெரியும்.. இவர்கள் பெரும்பாலும் எதிர்கட்சியினருக்கே வாக்களிப்பார்கள் என்பதும் தெரியும். அதனால் தான் இந்த ஏற்பாடு!

இத்தனை ஆண்டுகள் இல்லாத ஒரு நிலையை இந்தத் தேர்தலில்  நாம் பர்க்கிறோம். துணைப் பிரதமர் ஹமிடி "அர்சாங்கம் நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று சொல்லுவில்லை, வாக்களிக்க வேண்டாம் என்று சொல்லவுமில்லை. அது உங்கள் விருப்பம்.  முதலாளி விடுமுறை கொடுத்தால் வாருங்கள் இல்லாவிட்டால் வர வேண்டாம்!"

சிங்கப்பூரில் உள்ளவர்களுக்கு அது சொல்லப்பட்டாலும் மலேசியர்களுக்கும் அது பொருந்தும். இப்படி ஒரு கருத்து  சொல்லப்படுகிறது என்றால்  நமது அரசாங்கத் தரப்பு மிகவும் ஆட்டங்கண்டிருப்பதாகவே  நமக்குத் தோன்றுகிறது! இதற்காக நாம் வருந்துகிறோம்.

அரசியல்வாதிகள் தங்களது ஆட்சி காலத்தில் கடமைகளைக் கண்டு கொள்ளாமல் இருப்பதும் தேர்தல் காலத்தில் கொஞ்சிக் குலாவுவதும் நமக்கு ஒன்றும் புதிதல்ல!

நாம் ஒவ்வொருவரும் நூறு விழுக்காடு நமது வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

வாக்களிக்கத் தவற வேண்டாம்!

Saturday, 14 April 2018

குழந்தைக்கு பால் ஊட்டிக்கொண்டே தேர்வு எழுதிய தாய்..!


கல்விக்காக எவ்வளவு தியாகங்களைப் பெண்கள் செய்கிறார்கள் என்று நினைக்கும் போது மனம் நெகிழ்ந்து போகிறது. அதிலும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் தீவிரவாத அமைப்புகள் பெண்கள் கல்வி பெறுவதை விரும்புவதில்லை. கல்வி பெறும் பெண்களைச் சுட்டுத் தள்ளுவதிலேயே குறியாய் இருப்பவர்கள்.


            
           

இது போன்ற சூழலில் வெகு தொலைவில் உள்ள ஒரு கிராமத்திலிருந்து, இரண்டு மணி நேரம் காடுமேடுகளில்  நடந்து, பின்னர்  ஒன்பது  மணி நேரம்  பொது போக்குவரத்துகளில் பயணம் செய்து தனது  பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை எழுத தனது இரண்டு மாதக்  கைக் குழைந்தைக்குப்  பாலுட்டிக் கொண்டே   தரையில் உட்கார்ந்து கொண்டு பரிட்சை எழுதுவது என்பது என்ன சாதாரண விஷயமா?  அப்படித்தான் எழுதினார் அந்தப் பெண். அவர் பெயர் ஜாகனாப் அமாடி என்கிற ஒரு விவாசாயப் பெண்.. அவருக்கு இன்னும் இரண்டு குழைந்தைகள் உண்டு. கண்வரோடு வாழ்ந்துவருகிறார்.

தனது  ஒரு கையைத் தொட்டிலாக வைத்து இப்படியும் அப்படியும் ஆட்டிக் கொண்டே  ஒரு கையில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த அந்தக் காட்சியை ஒரு விரிவுரையாளர் படமாகப் பிடித்து  இணையத் தளத்தில் சும்மா தமாஷாகப் போட்டு வைத்தார். ஆனால் அது  வைரலாக மாறி  அந்தப் பெண்ணுக்கு பெரிய பெரிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது!   இளைஞர் அமைப்புக்கள் அவரின் கல்விக்காக தேவையான பணத்தை அள்ளிக் கொடுத்திருக்கின்றன.  சமூக சேவகி ஒருவர் அவரை தலைநகரான காபுல் நகரத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்திருக்கிறார். காபூலில் தரமான பல்கலைக்கழகங்கள் உள்ளன. தரமான கல்வி உண்டு. அவர் தொடர்ந்து  அங்குப் படிக்கலாம். அவருடைய இரண்டு பிள்ளைகளும் கல்வி கற்க ஏற்பாடுகள் செய்கிறார். அவரது கணவருக்கும் வேலை வாங்கித் தருவதாக வாக்களித்திருக்கிறார்.

அந்தத் தாய்க்குக் கல்வி மீது அப்படி என்ன ஆசை? "நான் பின் தங்கி இருக்க விரும்பவில்லை. நான் படிக்க வேண்டும். பட்டம் பெற வேண்டும். டாக்டராகவோ அல்லது ஏதோ ஒரு கல்வி அது என் கிராமத்தில் வாழும் மக்களுக்குப் பயனாக இருக்க வேண்டும். கிராமத்தில் அனைவரும் கல்வி அறிவில்லாதவர்கள். அவர்கள் கல்வி பெற வேண்டும். என் கிராமத்தில் உள்ளவர்களும் விழிப்புணர்ச்சி பெற வேண்டும் என்பதே என் ஆசை" என்கிறார் அமாடி.

இதிலிருந்து நாம் ஒரு பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும். நாம் எப்படிப்பட்ட  நிலையிலும் இருக்கலாம்.  நம்மிடம் பெரிய லட்சியங்கள் இருக்கலாம்.  அந்த லட்சியங்களை நோக்கி  நமது பயணம் அமைய வேண்டும்.  தீவிரப்படுத்த வேண்டும். நமது லட்சியத்தில் தீவிரம் காட்டினால் நமக்கு நாலா  பக்கத்திலிருந்தும் உதவிகள்  தானாக வரும். அது தான்  வாழ்க்கை.  அது தான் நடக்கும். அது தான் இயற்கை. அது தான் கடவுள்.

கல்வி கற்பதில் தீவிரம்  காட்டுங்கள்! உங்கள் இல்ட்சியத்தை அடையுங்கள்! வாழ்த்துகள்!

Friday, 13 April 2018

கேள்வி - பதில் (77)


கேள்வி

 ரஜினி தீடீரென காவலர்கள் மீது கை வைக்கும் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும், தண்டிக்க வேண்டும் என்று பேசுவது சரியான வாதமா?

பதில்

காவலர்கள் மீது தாக்குதல் நடத்துவது என்பது சரியல்ல. அவர் சொல்லுவது சரி தான். 

ஆனாலும் இங்கு அவர் குறிப்பிடுவது ஒரு தவறான உதாரணம். காவலர்கள் தொடர்ந்து வன்முறையைப் பயன்படுத்தி மக்களைத் துன்புறுத்துவது பற்றி அவர் வாய்த்  திறக்கவில்லை. ஒர் பெண்ணைக் கடுமையாகத் தாக்கினார் என்பதற்காகவே காவலர் ஒருவருக்குப் பதவி உயர்வு கொடுத்தது அரசாங்கம்!  இது நியாயம் அல்ல என்பது ரஜினிக்குத் தெரியாதா? மக்களை அடித்தால் அதுவும் பெண்களை அடித்தால்  பதவி உயர்வி கிடைக்கும் என்றால் என்ன அர்த்தம்? ஏன் அவர் அதனைக் கண்டிக்கவில்லை என்பதெல்லாம்  நியாயமான கேள்விகள் தானே?

பெண்கள் வீதிக்கு வந்து எந்தப் பிரச்சனைக்கும் அறப் போராட்டம் கூட நடத்தக் கூடாது என்றால் அவர்கள்  என்ன செய்ய வேண்டும் என்று காவல்துறை தான் சொல்ல வேண்டும். கண்ட இடங்களில்லாம் சாராய விற்பனை.  அதனை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் செய்தால் அதனை ஒடுக்க காவல்துறை தலையீடு. பெண்களை அடிப்பது.

பொதுவாக போராட்டங்கள் எல்லாம் வன்முறை இல்லாமல் தான் நடத்தப்படுகின்றன. ஏதோ ஒருவர் இருவர் உணர்ச்சி வசப்பட்டு அசம்பாவிதங்கள் நேரலாம்.  ஆனால் பெரும்பாலும் அரசியவாதிகளின் தூண்டுதல்களினால் காவல்துறை மக்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.

பலமுறை  மக்கள் மீது  தாக்குதல்கள் நடந்த போதெல்லாம் ரஜினி எந்த ஒரு விமர்சனமும் செய்யவில்லை. ஆனால் தீடீரென ஏன் இந்த கரிசனம்? அவர் செய்வதெல்லாம் அப்பட்டமாகத் தெரிகிறது. அவரைப் பா.ஜ.க. இயக்குகிறது என்று சொல்லலாம். இவர் "ட்வீட்" செய்ததும் உடனே தமிழிசை அதனை  வரவேற்கிறார். தனக்குச் சோறு  போட்ட  தமிழனை எட்டி உதைக்கிறார் என்பது தானே பொருள்? தனது படங்களில் கூட காவல்துறையினரை அடித்துத் துவம்சம் பண்ணுவதாகத்தானே காட்சிகள் வருகின்றன.  அப்படியிருந்தும் கூட தமிழர்கள் வன்முறையைக் கையில் எடுக்கவில்லை!

ரஜினி சொல்லுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. உண்மை தெரிய வேண்டுமானால்  அவர் வீதிக்கு வர வேண்டும். உள்ளே ஒளிந்து கொண்டு கருத்து சொல்லுவதை நிறுத்த வேண்டும்!

Thursday, 12 April 2018

மகாதிர் அப்படி என்னத்தை செய்துவிட்டார்..?


இப்போது மீண்டும் ம.இ,கா. வின் டத்தோ எம்.சரவணன் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார்.  

"அப்படி என்னத்தை இந்திய சமுதாயத்திற்கு  துன் மகாதிர் செய்து விட்டார்" என்று ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார்.

நல்ல கேள்வி. நாம் தான் ம.இ.கா. வினரைப் புரிந்து கொள்ளவில்லை!  "நாங்கள் உங்கள் பிரதிநிதிகள் என்பது உண்மை தான்.  ஆனால் இந்தியர்களின் பிரச்சனைகளைப் பிரதமரிடம் கொண்டு சேர்க்கும்  "ஆபீஸ் பாய்" வேலை என்பது எங்களுடையது அல்ல.  இந்தியர்கள் இந்த நாட்டுக் குடிமக்கள். அவர்களின் பிரச்சனைகளை ஒரு பிரதமரானவர் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ம.இ.கா.  ஒன்றும் செய்யவில்லை என்று எங்கள் மீது பழி போடுவதை நிறுத்த வேண்டும்."

ஏறக்குறைய இந்தத் தொனியில் பேசியிருக்கிறார் டத்தோ சரவணன்! ஒன்று நமக்குப் புரிகிறது. நமக்கு இப்போதும்  அரசாங்கத்தின் மீது   நிறைய குற்றச்சாட்டுக்கள் உள்ளன.  அதற்கு ம.இ.கா. காரணம் அல்ல என்பது இப்போது  தான் விளங்குகிறது.

டாக்டர் மகாதிர் காலத்தில் பள்ளிகளுக்குக் கொடுத்ததை விட இன்றைய பிரதமர் தமிழ்ப்பள்ளீகளுக்கு வாரி இறைத்திருக்கிறார் என்கிறார் சரவணன்.  ஆனால் நாம் கேட்கின்ற கேள்வி அந்தப் பணம் எல்லாம் எங்கே போயின என்று பல ஆண்டுகளாக நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆக, இதற்கும் ம.இ.கா.வுக்கும் சம்பந்தம் இல்லை என்கிறார் சரவணன்.  நாம்  பிரதமரிடம் கேட்க வேண்டிய கேள்வியை ம.இ.கா.விடம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். எங்கே போயின என்பதை பிரதமரிடம் கேளுங்கள் என்கிறார்.

அவர் சொல்ல வருவதெல்லாம் ம.இ.கா.உங்களுக்குத் தேவை இல்லை. இந்தியர்  சம்பந்தப்பட்ட கேள்விகள் அனைத்தும்  பிரதமரிடம்  தான் கேட்க வேண்டும் என்பது தான் அவர் தரப்பு  நியாயம்.

அது தமிழ்ப்பள்ளிகளின்  இரு மொழிக்கொள்கை  ஆகட்டும், "பள்ளியை எங்கே  காணோம்" என்கிற பிரச்சனையாகட்டும், "எப்போது பள்ளியைக்  கட்டப்போகிறீர்கள்"  என்பதாகட்டும் ,  நாடற்றவர்கள்  பிரச்சனை  ஆகட்டும் -  கேள்விகளைப்  பிரதமரிடம் திருப்புங்கள்.  இவ்வளவு  பிரச்சனைகளுக்கும்  காரணமே  பிரதமர்  தான்  என்பது  நமக்குப்  புரிகிறது.

டாக்டர்  மகாதிர்  காலத்தில்  இந்தியர்களின்  பிரச்சனைகளுக்கு  எப்படி துன் சாமிவேலு  பொறுப்பில்லையோ  அதே போல  இப்போதுள்ள அதே  இந்தியர்  பிரச்சனைகளுக்கு சுப்ரா பொறுப்பில்லை என்னும்  வாதத்தை ஏற்றுக்கொள்ளத் தான்  வேண்டும்!

மகாதிர் அப்படி என்ன செய்து விட்டார் என்னும் கேள்வி எழும்போது இப்போது நஜிப்  அப்படி என்ன செய்துவிட்டார் என்னும்  கேள்வி எழுத்தான்  செய்யும்! 

ஒரு விஷயத்தை  நாம் தெரிந்து  கொண்டோம்.  ம.இ.கா. இருந்தாலும்  இல்லாவிட்டாலும்  பிரதமர்  தான்  இந்தியர்களின்  பிரச்சனைகளைக்  கையாளுகிறார்! ம.இ.கா. அல்ல!

Tuesday, 10 April 2018

நாமும் பஞ்சாபியரைப் பின்பற்றுவோம்!


பஞ்சாபியர்கள் அல்லது சீக்கியர்கள் (நாம் பொதுவாக வட இந்தியர்களை வங்காளிகள் என்போம்!) இவர்கள் இந்தியர்கள் என்று சொல்லப்பட்டாலும் சீக்கியர்கள் என்றே அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.

இந்தியாவில் உள்ள பஞ்சாபியர்களைப் பற்றி முகநூலில் ஒரு செய்தியைக் காண நேர்ந்தது. 

இதோ உங்கள் பார்வைக்கு: 33 விழுக்காடு வரிகட்டுபவர்கள்
                                                              67 விழுக்காடு தர்மம் செய்பவர்கள் 
                                                              45 விழுக்காடு இந்திய ராணுவத்தினர்
                                                              59000 சீக்கிய வழிப்பாட்டுத் தலங்கள்                                                                         மூலம் ஒரு நாளைக்கு 59,00,000    
                                                             ஏழைக்ளுக்கு இலவச உணவு
                                                             இந்தியாவின் மக்கள் தொகையில் 
                                                             இவர்கள்  2.5 விழுக்காடு மட்டுமே!     

இந்தியாவின் ஒரு மாநிலம்  வெறும் 2.5 விழுக்காடு மக்கள் தொகை கொண்டஒரு மாநிலம் மேற்கண்ட  முகநூல்  செய்தியைப் பார்க்கின்ற  போது  அது வெற்றி  பெற்ற  மாநிலம்  என்றே  கருத  வேண்டியுள்ளது. 

பொதுவாக  பஞ்சாப்  மாநிலத்தில்  விவசாயிகள்   தற்கொலை செய்து கொண்டாதாக நாம் கேள்விப்படுவதில்லை. அந்த  மாநிலத்தில்  அரசியல்வாதிகள் மாநிலத்தின்  வளங்களைக்  கொள்ளையடிப்பதாக செய்திகள் இல்லை.

இந்திய  இராணுவத்தில்  பஞ்சாபியரின்  பங்கு  45  விழுக்காடு  என்னும் போது அதனை  நாம் பாதி பேர் பஞ்சாபியர்  என்றே எடுத்துக் கொள்ளலாம். அப்படியென்றால் ஒவ்வொரு  குடும்பத்திலும்  ஒரு பஞ்சாபியர் இராணுவத்தில்  பணி புரிகிறார்.  ஏதோ ஒரு வகையில் அவர்களின் குடும்பங்களில்  வறுமை சூழல் குறைவு. அதனால் தர்ம சிந்தனை அதிகமாகவே அவர்களிடையே உண்டு. ஒரு வேளை இராணுவத்தில் பணி புரிவதாலேயே தர்ம சிந்தனை வருகிறதோ! நல்லது தானே, நடக்கட்டும்.

நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது அவர்களின் வழிப்பாட்டுத் தலங்களில் ஒவ்வொரு நாளும் 59,00,000 ஏழைகளுக்கு  அன்னதானம் செய்கிறார்கள்.  நிச்சயமாக இதனை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. தர்மம் தலை காக்கும் என்பார்கள். அதனால் தான் அந்த மாநிலத்தை தர்மம்  காக்குகிறதோ? 

பஞ்சாபியர்களைப்  பற்றி  வேடிக்கையாகச்  சொல்லப்படுகின்ற ஒரு விஷயம் உண்டு. அவர்கள் மிகவும், மகா மகா  கஞ்சர்கள் என்று சொல்வதுண்டு.  இருந்து விட்டுப் போகட்டும். அது  அவர்கள் பணம். அதனை எப்படிப் பயன்படுத்துவது என்பதை  அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அவர்கள் அப்படி இருப்பதால் தான் இன்று அவர்கள் மிகவும் மேல் நிலையில் இருக்கிறார்கள். நம் நாட்டில் டாக்டர்கள், வழக்கறிஞர்கள், கவால்துறை அதிகாரிகள், தொழிலதிபர்கள், கணக்காளர்கள் -   
இப்படி எல்லாத் துறைகளிலும்   அவர்கள் தான்          முன்னணியில் இருக்கிறார்கள் அவர்களைப் பற்றி நிறைய ஜோக்குகள் இருக்கின்றன. எல்லாம் அவர்களின் கஞ்சத்தனத்தைப் பற்றியது தான்!  

பஞ்சாபியர் ஒருவர் ஒரு கேள்வி கேட்டாராம் ' எங்களைக் கேலி செய்கிறீர்களே, நீங்கள் எந்த பஞ்சாபியராவது  கை நீட்டிப் பிச்சை எடுப்பதைப் பார்த்திருக்கிறீர்களா?" உண்மை தான். இந்தியாவில் இல்லை என்கிறார்கள், நிச்சயமாக மலேசியாவில் இல்லை!

நாம் பின்பற்றுவதற்குரியவர்கள் பஞ்சாபியர்கள். உழைப்பு, உழைப்பு, உழைப்பு.   அது தான்  அவர்களின் முன்னேற்றம்.

Sunday, 8 April 2018

சுப்ரா தப்பிக்க வழி தேடுகிறாரா...?


ம.இ.கா. தலைவர் டத்தோஸ்ரீ சுப்ரமணியம் தப்பிக்க வழி தேடுகிறாரா என்று கேட்கத் தோன்றுகிறது!

இன்று இந்தியர்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கும்  காரணம் டாக்டர் மகாதிர் தான் என்று அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கிறார்! அதற்கு ம.இ.கா. வோ அல்லது சாமிவேலுவோ காரணம் அல்ல என்று நம் அனைவருக்கும் ஞாபகப்படுத்தியிருக்கிறார்

சுப்ரா தப்பிக்க வழி தேடுகிறாரா என்று நினைக்கத் தோன்றுகிறது!  நஜிப் பிரதமரான பின்னர் இந்தியர்கள் ஏன் முன்னேறவில்லை என்று கேள்வி கேட்டால் இதோ  சுப்ரா உடனடி பதிலை வைத்திருக்கிறார்! அதற்கு ம.இ.கா.வோ,  தலைவரோ  காரணமல்ல; பிரதமர் தான் காரணம் என்று சொல்லாமல் சொல்லுகிறார் சுப்ரா!

சாமிவேலு காலத்தில் என்ன குற்றச்சாட்டுக்களை அடுக்கினோமோ அதே குற்றச்சாட்டுக்கள் இப்போதும் இருக்கின்றன, இன்னும் தொடருகின்றன! இதற்கெல்லாம் காரணம் நஜிப் தான்  என்பது   இப்போது நமக்குப் புரிகிறது. இது நமது பதிலல்ல; ம.இ.கா. தலைவரின் பதில்! முன்னாள் பிரதமரை அவர் குற்றஞ்சாட்டுகிறார் என்றால்  அதே குற்றச்சாட்டு இந்நாள் பிரதமரையும் சாரும் என்பதை அவர் மறந்து விட்டார்! 

பிரதமர் தான் - முன்னாளோ இந்நாளோ - இந்தியர்களின் முன்னேற்றத்திற்குத் தடை   என்றால்  ம.இ.கா. வின் நிலை என்ன? ம.இ.கா. வே தேவை இல்லை என்கிறாரா, சுப்ரா!  இந்தியர்களின் பிரச்சனைகளுக்கு முடிவு எடுக்கும் பொறுப்பு பிரதமரிடம் தான் உள்ளது என்றால் இவர்களுடைய  பொறுப்பு என்ன?

அல்லது இந்த 14-வது பொதுத் தேர்தல் முடிவுகள் ம.இ.கா.வுக்கு  இடியாக இருக்கும் என்பதை இப்படிச் சூசகமாக   நமக்குச் சொல்லுகிறாரா, சுப்ரா!  தோற்ற பின் அனைத்துக்கும் காரணம்  "நான் அல்ல, பிரதமர் நஜிப் தான்!" என்று சொல்லப் போகிறாரா?       அதற்கான முதல் கட்ட  வெளிப்பாடாக இதனை  நாம் எடுத்துக் கொள்ளலாமா?

தப்பிக்கப் பார்க்கிறாரா!  சுப்ரா! பதவியில் இருக்கின்ற காலத்தில்  பதவி கொடுத்தவர்களை எட்டி உதைப்பதும்  பதவி போனதும் பிரதமர்களைக் குறை சொல்லுவதும் ம.இ.கா. வினருக்கு ஒன்றும் புதிதல்ல!   

வருகின்ற  தேர்தல் களம் ம.இ.கா.வினருக்கு என்ன கற்பிக்கப் போகிறது என்று  பார்ப்போம்!                                                                                                                 

Saturday, 7 April 2018

'"ராக்கெட்" இல்லாத தேர்தல்...!


பதினான்காவது பொதுத் தேர்தல் வெகு சீக்கிரத்தில் எதிர்பார்க்கலாம். அடுத்த அறுபது நாள்களுக்குள் தேர்தல் நடைபெற வேண்டும். மாநில ச்ட்டமன்றங்களைக்  கலைத்த பின்னர் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்பதாக பிரதமர் அறிவித்திருக்கிறார்.

ஒரு முக்கிய செய்தி.  இந்தத் தேர்தல் ஜனநாயக செயல் கட்சியின் "ராக்கெட்" இல்லாத தேர்தல். ராக்கெட் சின்னம் நமக்குப் பிரபலம். 1969 - ம் ஆண்டிலிருந்து ராக்கெட் சின்னத்தை ஒவ்வொரு தேர்தலிலும் நாம் பார்க்கிறோம்.

ராக்கெட் என்றதும் கர்பால் சிங் நினைவுக்கு வருகிறார். தேவன் நாயர், டாக்டர் சென் மான் ஹின், பட்டு, டேவிட் போன்றோர் ஞாபகத்திற்கு வருகிறார்கள்.  ஜ.செ.க. எப்போது ஆரம்பிக்கப்பட்டதோ அன்றிலிருந்தே அதன் வேகம் குறையவில்லை. அதன் வீரியம் குறைந்தபாடில்லை. அதே சமயத்தில் சிங்கப்பூரின் ஆளுங்கட்சியான மக்கள் செயல் கட்சியும் ஞாபத்திற்கு வருகிறது.  சிங்கப்பூரை செதுக்கிய சிற்பியான  லீ குவான் யு வும் ஞாபகத்திற்கு வருகிறார். ராஜரத்தினமும் ஞாபகத்திற்கு  வருகிறார்.  இவர்களெல்லாம் இந்த "ராக்கெட்" டோடு தொடர்புள்ளவர்கள்.

இவ்வளவு சரித்திரப் பின்னணியைக் கொண்ட ஜனநாயக செயல்  கட்சி இந்த முறை ராக்கெட் சின்னம் இல்லாமல் போட்டியிடுகிறது.  ஒரே  காரணம் தான். எதிர்கட்சிகள் அனைத்தும் டாக்டர் மகாதிர் தலைமையில் ஒன்று சேர்ந்து ஆளுங்கட்சியை எதிர்க்கின்றன.

கோட்டையைப் பிடிக்க வேண்டு மென்றால் ஒரு கொடி (சின்னம்) தான் வேண்டும் என்பது எதிர்கட்சிகளின் கணிப்பு. டாக்டர் மகாதிர் தலைமையில் ஒன்று சேர்ந்திருக்கின்றனர். டாக்டர் மகாதிரின் தலைமை என்னும் போது அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. 22 ஆண்டுகள் அரசாங்கதை வழி நடத்தியவர். இப்போது அவர் நடப்பு அரசாங்கத்தின் எதிரியாக விளங்குகிறார்.

எதிர்கட்சிகள் ஒரே சின்னத்தைக்  கொண்டிருந்தால் மட்டுமே ஆளுங்கட்சியை வீழ்த்த முடியும் என்னும் ஒரே கரணத்தால் ராக்கெட் சின்னத்தை இந்தத் தேர்தலில் 'ஓய்வு' எடுக்க வைத்திருக்கிறார்கள்! அது தற்காலிக ஓய்வு தான்!  ராக்கெட்டை நாம் பிரித்தாலும் சீனர்களோடு அது கலந்துவிட்ட ஒன்று! அவ்வளவு எளிதில் அவர்களிடமிருந்து அதனைப் பிரித்து விட முடியாது!

இது ராக்கெட் இல்லாத தேர்தலாக இருக்கலாம். ஆனால் அது காலி பாக்கெட் அல்ல!

ஏன் மெட் ரிகுலேஷன்..?


மெட்ரிகுலேஷன் கல்வி எப்படி வந்தது என்பதன் பின்னணியைக் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும்.  பல்கலைக்கழகம் போகின்ற மாணவர்களில்  பெரும்பாலும் இந்தியர்களும், சீனர்களும் தான் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே வந்தனர். இது மாணவர்களின் தகுதி அடிப்படையில் நிர்ணயக்கப்பட்ட ஒன்று. 

தகுதி அடைப்படையில் மலாய் மாணவர்களின் எண்ணிக்கையை பல்கலைக்கழகங்களில் அதிரிகரிக்க முடியவில்லை. அவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டுத் தான் இந்த மெட்ரிகுலேஷன் கல்விமுறை  கொண்டு வரப்பட்டது. சீன மாணவர்களும், இந்திய மாணவர்களும் இரண்டு ஆண்டுகள்  எஸ்.டி.பி.எம். கல்வியை முடித்த பின்னர் தான் பலகலைக்கழகம் போக முடியும். ஆனால் இந்த மெட் ரிகுலேஷன்  கல்வி முறையில்  ஒரு மலாய் மாணவர் ஓர் ஆண்டு படித்துவிட்டு குறுக்கு வழியில் நேரே பல்கலைக்கழகம் போய்விடலாம்!  இப்படித்தான்  மலாய் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. அது தகுதியின் அடிப்படையில் அல்ல.   அதனால் தான் இந்தக் கல்வி முறை பல ஆண்டுகள் மற்ற இன மாணவர்களுக்கு மறுக்கப்பட்டது! இங்குக் கேட்கப்பட்ட கேள்வி: எங்களுக்கு மட்டும் ஏன் இரண்டு ஆண்டுகள்? கல்வி முறை ஒரே மாதிரியாகத்தானே  இருக்க வேண்டும் என்பது தான்.

அதிலும் இன்னொரு விசேஷம். மெட் ரிகுலேஷன் படிப்பவர்கள் நேரே பல்கலைக்கழகம் போய் விடலாம். ஆனால் இரண்டு ஆண்டுகள் கடினமாக உழைத்துப் படித்து நல்ல முறையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அந்த வாய்ப்பில்லை!  கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம்! அப்படியென்றால் இரண்டு ஆண்டுகள் படித்தும்  அனைத்தும் வீண் என்கிற நிலைமை! அதனால் தான் மெட்ரிகுலேஷன் கல்வி முறை எங்களுக்கும் வேண்டும் என்று மற்ற இன மாணவர்களும் கொடி பிடிக்க ஆரம்பித்தனர்!  அதனால் தான் சிறுக சிறுக மற்ற இன மாணவர்களும்- அரசியல் காரணங்களுக்காக - சேர்க்கப்பட்டனர்.  இங்குக் கேட்கப்படுகின்ற முக்கியக் கேள்வி: ஓர் ஆண்டு படித்துவிட்டு நேரே பல்கலைக்கழகம் செல்லலாம்; இரண்டு ஆண்டுகள் படித்துவிட்டு எங்கே போவது என்று தெரியாமல் ஊர் சுற்றலாம்!

அதனால் தான் இந்த ஓர் ஆண்டு கல்வி முறை அனைத்து இன மாணவர்களும் விரும்பும் முறையாகி விட்டது. ஓர் ஆண்டு படித்தால் பல்கலைக்கழகம் உறுதி.  இரண்டுகள் ஆண்டுகள் படித்தால் மறதி!  ஆனாலும் இந்தக் கல்வி முறை  இந்திய மாணவர்களுக்கு எட்டாக்கனி என்கிற நிலையில் தான் இன்றும் உள்ளது. 

அரசியல்வாதிகள் நிறைய வாக்குறுதிகளைக் கொடுக்கிறார்கள். அதிலும்  தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளை வாரி இறைக்கிறார்கள்! ஆமாம்,  காசா, பணமா? வெற்றுறுதிகள் தானே!  நமது இளந்தலைமுறை பல வழிகளில் அலைக்கழிக்கப்படுகிறார்கள். பல அநீதிகள் இழைக்கப்படுகின்றன. ஆனால் கேட்பார் யாருமில்லை! கேட்க வேண்டியவர்கள் கோட்டையில் குளிர்காய்கிறார்கள்!

நாய், பூனை இறைச்சி விற்பனை..!


கேட்பதற்கு கொஞ்சம் அசௌகரியமாக இருந்தாலும் நாய் இறைச்சி, பூனை  இறைச்சி என்பதெல்லாம்  மலேசியாவில் இப்போது கிடைக்கிறது என்பது மட்டும் உண்மை!

ஒரு முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் நம் நாட்டு சீனர்களிடம் நாய்  இறைச்சி  சாப்பிடுகிற பழக்கம் இருந்ததை  நாம் அறிவோம். இப்போது அந்தத் தலைமுறை எல்லாம் ஏறக்குறைய மறைந்து  போனது.  வயதான சீனப் பெண்மணிகள் சிலர் கையில் நீல நிறக்காப்பு அணிந்திருப்பதைக் காணலாம். இவர்கள் நாய் இறைச்சி சாப்பிடுபவர்கள் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.  அது எந்த அளவுக்கு உண்மை என்பதை நான் அறியவில்லை.

ஆனால் இப்போது இந்தப் புதிய நாய் இறைச்சி, பூனை இறைச்சி  அறிமுகம்  என்பது மலேசியர்களிடமிருந்து அல்ல! வியட்னாமிலிருந்து இங்கு வந்து அந்நிய தொழிலாளர்களாக வேலை செய்யும் வியட்னாமியரிடமிருந்தே  ஆரம்பமாகி இருக்கிறது. இவர்களுடைய  வாடிக்கையாளர்கள் வியட்னாமியர்கள் மட்டும் தானா அல்லது அவர்களோடு சேர்ந்து உள்ளூர் மக்களும்  இருக்கிறார்களா என்பது  தெரியவில்லை.

அதே போல பூனை இறைச்சியும் விற்பனையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதுவும் வியட்னாமியரின் கைவண்ணமே! தீடீரென பூனைகள் அளவுக்கு அதிகமாக தத்தெடுக்கப்படுகிறது என்பது வெளிச்சத்திற்கு வந்ததும்  காரணமும் புரிந்தது!  மருத்துவ காரணங்களுக்காக கறுப்பு நிறப் பூனைகளின் இறைச்சியைச் சாப்பிடும் பழக்கம்  நம்மிடையே இருந்தது. இப்போதும் இருக்கிறதா, தெரியவில்லை.  

நாய் இறைச்சி சாப்பிடுகின்ற கலாச்சாரம் என்பது வியட்னாமியரிடையே  அவர்களது நாட்டில் இப்போதும் உள்ளது. நமது நாட்டில் இல்லை.  நமக்கு மாட்டிறைச்சி சாப்பிடும் பழக்கம் இல்லை. ஆனால் அந்தப் பழக்கம் நம் நாட்டில் உண்டு. பன்றி இறைச்சி சாப்பிடும் பழக்கம் நம் நாட்டில் உண்டு. ஆனால் எல்லாரும் சாப்பிடுவதில்லை. மதம் ஒரு காரணம். பாரம்பரியம் ஒரு காரணம்.

ஆனால் முடிந்தவரை புதிதாக ஒன்றை இறக்குமதி செய்வதை நாம் தவிர்க்க வேண்டும். வியட்னாமிலிருந்து இங்கு வேலை செய்ய வருபவர்கள் நமது நாட்டின் கலாச்சாரத்தை புரிந்து வைத்திருக்க வேண்டும்.  அவர்களுக்கு இங்குள்ள கலாச்சாரம்  தெரிய வாய்ப்பில்லை. 

நாய், பூனை என்பதெல்லாம் நாம் வளர்க்கும் வீட்டுப் பிராணிகள். வெறும் வளர்ப்பு மட்டும் அல்ல அவைகள் நமது செல்லப்பிராணிகள். வியட்னாமியருக்கு அவைகள் இறைச்சி தரும் ஒரு பிராணி.

முடிந்த வரை தவிர்ப்போம்!

Friday, 6 April 2018

ம.இ.கா.வை ஒழிக்க வேண்டும்!


"ம.இ.கா. ஒழிக்கப்பட வேண்டும்!" 

இதனைச் சொன்னவர் வேறு யாருமில்லை. நாட்டின் தொழிற் வளர்ச்சியின் தந்தை என்று போற்றப்படுபவரும், 22 ஆண்டு காலம் நாட்டை ஆட்சி செய்தவருமான டாக்டர் மகாதிர் சொன்ன வார்த்தைகள்!

மலேசிய இந்தியர் காங்கிரஸ் என்னும் மாபெரும் இயக்கத்தை, பல தியாகிகளால் உருவாக்கப்பட்ட அந்த பேரியக்கத்தை, ஒழிக்கப்பட வேண்டும் என்று சொல்லும் போது மனதுக்கு வேதனை அளிக்கிறது. ஆனால் நாம் என்ன செய்வோம்?  தகாதவர்களிடம் கட்சியை ஒப்படைத்தோம்.  அதனால் இந்த சமுதாயம் அடைந்த பயன் என்ன?  பதவியில் இருந்தவர்கள் மாட மாளிகையில் வாழ்கிறார்கள்.  மாடமாளிகையில் வாழ வேண்டியவனோ மண்டபங்களிலும் இடிந்துபோன இடிபாடுகளிலும் வாழ்கிறான்! இது தான் தகாதவர்களால் ஏற்பட்ட வளர்ச்சி!

சரி, டாக்டர் மகாதிரின்  கால் நூற்றாண்டு ஆட்சி தான் அப்படி என்றால் இன்றைய நிலைமை என்ன? இல்லை! எந்த மாற்றமும் இல்லை! ஆள் மாற்றம் தான் ஏற்பட்டிருக்கிறதே தவிர மற்றபடி அதே பாணி அரசியல். திருட்டுத் தனம், நிதி வளங்களைக் கொள்ளையடிப்பது, புதிய புதிய அறிவிப்புக்களைச் சொல்லியே அரசியல் நடத்துவது - மாற்றங்கள் என்று எதுவும் இல்லை! நாங்கள் யாரும் யோக்கியர்கள் இல்லை என்று சொல்லுகிற அளவுக்கு உள்ளது  தான் இன்றைய அரசியல்.

இந்தியர்களுக்கென்று பிரத்தியேகமாக  மாபெரும் திட்டம் என்று சொன்னார்கள். என்ன ஆயிற்று? இதுவரை எந்தச் சத்தத்தையும் காணோம்! "அடுத்த பத்தாண்டுகளுக்குள்" என்று இப்படியெல்லாம் சொன்னால் யாரும் நம்பத் தயாராக இல்லை! அடுத்த மூன்று மாதங்களுக்குள், அடுத்த ஆறு மாதங்களுக்குள் என்று செய்கின்ற சாதனைகளைக் காட்டினால் ஏதோ கொஞ்சமாவது நம்பலாம். காரணம் "அடுத்த பத்து" என்பதெல்லாம் கேட்டுப் புளித்துப் போய்விட்டது! வருஷமெல்லாம் நமக்கு வேண்டாம். மாதங்கள் தான் நமக்கு வேண்டும்.

சரி, ம.இ.கா. ஒழிக்கப்பட வேண்டும் என்று டாக்டர் மாகாதிர் சொன்னதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?  உங்களைச் சுற்றிப் பாருங்கள். ம.இ.கா.வின் சாதனைகளைப் பாருங்கள். உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறதா அல்லது வேதனை அளிக்கிறதா? அது போதும் நாமே ஒரு முடிவுக்கு வரலாம். என்னைக் கேட்டால் தமிழை அழிக்க இரு மொழித்திட்டத்திற்கு ம.இ.கா. வே கீழறுப்பு வேலை செய்கிறதே அது ஒன்றே போதும் அவர்கள் ஒழிக்கப்பட வேண்டும்!

நமது உரிமைகள் காக்கப்பட வேண்டும்; ஆனால் இவர்களே அதனைக் காற்றில் பறக்க வைக்கிறார்கள்!

Wednesday, 4 April 2018

29 ஆண்டுகளுக்குப் பிறகு.....!29  ஆண்டுகளுக்குப் பிறகு,  தாய் தன் மகனுடன் ஒன்றாகப் பள்ளியில்..

படிக்க வேண்டும் என்னும் பசி வந்து விட்டால் வயதெல்லாம் ஒரு  பொருட்டே  அல்ல!  1989 - ம் ஆண்டு ஒன்பதாம்  வகுப்போடு, ஏழ்மையின் காரணங்களால்,  தனது கல்வியை ரஜினிபாலா முடித்துக் கொண்டார்.        29 ஆண்டுகளுக்கு முன் தொடர முடியாமல் போன அந்தப் பத்தாம் வகுப்பை  இப்போது  தான்  தொடர அவருக்கு நேரம்  காலம் கனிந்து வந்திருக்கிறது.   அவரது  மகனும் பத்தாம் வகுப்பு மாணவராக இருப்பதால் இருவரும் ஒன்றாகவே பள்ளிக்குச் செல்லுகின்றனர்; ஒன்றாகவே படிக்கின்றனர். 

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் 29 ஆண்டுகள் கழித்து இவர் பள்ளிக்குச் செல்கிறார் என்றால்  அவரது  கணவரோ 17 ஆண்டுகள் கழித்து பள்ளிக்கு சென்று தனது கல்வியை முடித்தவர்!

இந்தியா, லுதியானா, பஞ்சாப் மாநிலத்தில் தான்  இந்த  கல்வித்  தாகம்  நிகழ்ந்திருக்கிறது. அந்தத் தாய்க்கு இப்போது வயது 44. அவர் மருத்துவமனை ஒன்றில் ஏவலாளராகப் பணி புரிகிறார். ஒரு மாத கால விடுமுறை எடுத்து பரிட்சையில்  தீவிர  கவனம்  செலுத்தி பரிட்சை எழுதியுள்ளார்.

தான்  ஒரு   பட்டதாரியாக ஆக வேண்டும் என்னும் கனவோடு பள்ளியில் சேர்ந்திருக்கிறார் ரஜினிபாலா.   மீண்டும்  பள்ளி போகும்  திட்டத்திற்கு அவரது கணவர்  தான் தூண்டுகோளாக இருந்ததாகக் கூறுகிறார் ரஜினி. "முதலில் யாராவது தொடங்க வேண்டும். அப்போது  தான் மற்றவர்களும் நம்மைப் பின்பற்றுவார்கள். நீயே ஆரம்பமாக இரு. அரைகுறையாக படித்தவர்களும் பள்ளிக்கூடம் வர ஆரம்பிப்பார்கள்! அதைத்தான் இப்போது நான் செய்கிறேன்." என்கிறார் ரஜினி.

நல்லதொரு ஆரம்பம். கல்வி கற்ற சமுதாயம்  என்பது முக்கியம். வயதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் யாராக இருந்தாலும் வரவேற்போம்! வாழ்த்துவோம்!

இந்தத் தாயையும் வாழ்த்துவோம்!

Sunday, 1 April 2018

கேரளாவில் சாதி பெயர் நீக்க நடவடிக்கை ...!


"மக்கள் மனதில் இருந்து சாதி வெறி ஒழிந்தால் தான் நாடு முன்னேறும். அதனால் விரைவில் கேரள அரசின் விண்ணப்பங்களில் சாதி பெயரை தவிர்ப்பது குறித்து அதிகாரிகளோடு ஆலோசனை செய்யப்படும்" என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

முகநூலில் இன்று காலை படித்த செய்தி. 'ஏப்ரல் ஃபூல்"  செய்தியா என்று தெரியவில்லை! அப்படி இருந்தால் ஏதோ ஒரு  ஜாதி வெறி பிடித்த வெறியன் இந்த ஏப்ரல் 1-ம்  தேதியைப் பயன்படுத்தி மக்களை முட்டாளாக ஆக்கியிருக்கிறான் என்று எடுத்துக்கொள்ள வேண்டியது தான்.

ஆனாலும் இது தேவையான செய்தி என்பதால் இது உண்மையான செய்தியாக இருக்க வேண்டும் என்பதைத்தான் நான் விரும்புகிறேன். 

இதனை எழுதிய நண்பர் கிண்டல் அடிக்கிறார் என்பது புரிகிறது. ஆனால் இது உண்மையாகும் செய்தியாகவே  நான் நினைக்கிறேன். நிச்சயமாக, இந்தியாவில் கேரளாவே அதற்கு முன்னுதாரணமாக இருக்கும் எனவும் நான்  நம்புகிறோம். காரணம் உண்டு. இந்த மாநிலத்தில் படித்தவர்கள் அதிகம்.  95% விழுக்காடு மக்கள் கேரளாவில் படித்தவர்கள். அவர்களின் அரசியலில் சாதியப் பிரச்சனைகள் குறைவு. சாதியை வைத்து வாக்குகளை வாங்க முடியாது.

தமிழகம் போன்ற மாநிலங்களில் சாதியை வைத்துத் தான் அரசியலே நடக்கிறது.  வாக்குகள் எல்லாம் சாதியை வைத்தே பேரங்கள் பேசப்படுகின்றன. அதனையே அரசியல்வாதிகளும்  ஊக்குவிக்கிறார்கள். ஆகவே,  மக்கள் சாதியை வெறுத்தாலும் அரசியல் வாதிகள் சாதியை விடுவதாக இல்லை. தமிழ் நாட்டில் சாதியை ஒழிப்பதற்கு கடுமையான தலைமைத்துவம் வேண்டும். கடந்த ஐம்பது ஆண்டுகளாக சாதியை வளர்த்த கட்சிகளால் சாதியை ஒழிக்க முடியாது.

ஆனால்  கேரளாவில் சாதியை வைத்து அரசியல் நடத்த முடியாது. அதனால் தான் கேரள அரசின் விண்ணப்பங்களில் சாதியப் பெயரைத்  தவிர்க்கக் கூடிய  வாய்ப்புக்கள் நிறையவே உண்டு. சாதியப் பெயரைத் தவிர்க்கும் இந்தியாவில் முதல் மாநிலமாக கேரள   விளங்கும் என நாம் எதிர்பாக்கலாம்.

எப்படியோ, நல்லதையே எதிர்பார்ப்போம்!