Thursday 30 September 2021

இந்தியர்களுக்கான செயல்திட்டம்!

 இந்தியர்களுக்கான செயல்திட்டம் நிறைவேற்றப்படும் என்பதாக பிரதமர் நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கிறார்.

நல்லது நடந்தால் நமக்கும் மகிழ்ச்சியே! 

2017-ம் ஆண்டு வரையப்பட்ட அந்தத் பெருந்திட்டம் இப்போது மீண்டும் தலைதூக்கியிருக்கிறது. குறைந்தபட்சம் பேச்சு அளவிலாவது இப்போது பேசப்படுகிறது! 

ஏதோ குறைபிரசவத்தில் பிறந்த ஓர் அரசாங்கம் அது பற்றி பேசுகிறதே என்பதைத் தவிர நமக்கு ஒன்றும் பெரிதாக எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லை. என்னவோ பிரதமர் அறிவித்தார். உடனே அதற்கு ஆ! ஓ! போட சில  தலைவர்களின் குரல் கேட்டது! அவ்வளவு தான்! அதற்கு மேல் எந்த மரியாதையும் இல்லை!

இந்த பெருந்திட்டத்திற்கு நம்மால் ஏன் ஆதரவு கொடுக்க முடியவில்லை? காரணம் பிரதமருக்கும் அவரின் பரிவாரங்களுக்கும் இந்தியர்களுடைய தேவை என்ன என்பதே தெரியாத போது என்ன ஆதரவை நாம் கொடுக்க முடியும்?

பூமிபுத்ரா  சொத்துடமை 17.2% விழுக்காடு என்பது பிரதமரின் கண்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் இந்தியரின் சொத்துடமை அவருக்குத் தெரிய நியாயமில்லை! காரணம் அவருக்கு அது தேவையற்றது! கோவிட்-19 தொற்று தாக்கத்தின் பின்னர் மலேசிய இந்தியர்களின் சொத்துடமை என்பது மிகவும் கீழ் நோக்கிப் போய்விட்டது என்பது சந்தேகமில்லை! பல நடுத்தர குடும்பங்கள் இன்று பி.40 நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன.

முன்பு 1.3% விழுக்காடாக இருந்த நமது சொத்துடமை அது கீழ்நோக்கி இன்னும் பரிதாபமாக சரிந்திருக்க வேண்டும். இப்போது அது 0.2 விழுக்காடாகக் கூட இருக்கலாம். அரசாங்கம் தான் அதனை உறுதிப்படுத்த வேண்டும்.

இன்றைய அரசாங்கம் 15வது பொதுத்தேர்தலை மையப்படுத்தி தான் தனது 12-வது ஐந்தாவது மலேசிய திட்டத்தில் இத்திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறது. அது பூமிபுத்ரா சார்பு திட்டங்களாகத்தான் இருக்க முடியும். நாம் பெரிதாக ஒன்றும் எதிர்பார்க்க முடியாது!

அரசாங்கம் அப்படி பெரிய மனதுடன் நமது உரிமைகளைக் கொடுத்தால் நாம் நிச்சயமாக இன்றைய நடப்பு அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்கத்தான் செய்வோம்! அதில் எந்த ஐயமில்லை!

எங்களையும் சோதியுங்கோ!

 

குழந்தைகளைப் பார்த்தாலே போதும்! அவர்களிடம் உள்ள துள்ளல், துடிப்பு நமக்கும் வந்துவிடும்! குழந்தைகளின் உலகம் தனி உலகம்!

சமீபகால திரைப்படம் ஒன்றில் ஒரு வசனம்: குழந்தைகள் கெட்ட வார்த்தைகளைப் பேசுவதில்லை. கேட்ட வார்த்தைகளைத் தான் பேசுவார்கள்!  என்பதாக வரும். மிக மிக உண்மை!

அதே போல குழந்தைகள்  அவர்களைச் சுற்றி பெரியவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை வைத்துத் தான் அவர்களின் குணாதிசயங்கள் அமைகின்றன.

மேலே படத்தில் உள்ள சிறுமி பெரியவர்களைப் பார்த்து, பெற்றோர்களைப் பார்த்து அ வர்கள் செய்த அதே காரியத்தை அவளும் செய்கிறாள்.  கோவிட்-19 காலத்தில் எந்த ஒரு வளாகத்திற்குள்  போனாலும் போகும் முன் நமது உடல் தட்ப வெப்ப நிலையைப் பரிசோதித்துவிட்டுத் தான் போகிறோம்.

அதைத்தான் அந்தக் குழந்தையும் செய்கிறாள்! யாரும் சொல்லவில்லை. யாருடைய பதிலுக்கும் அவள் காத்திருக்கவில்லை! யாரிடமும் அவள் கேட்கவில்லை! நேரே சோதிப்பவரிடம் சென்று அவள் தன்னை சோதித்துக் கொள்கிறாள்!  அது போதாது, தான் கையில் வைத்திருக்கும் பொம்மையையும் சோதித்துக் கொள்கிறாள்! அந்தப் பணியாளரும் பணிந்து, குனிந்து சோதனை செய்கிறார்!

சிறு குழந்தை தான்.  பொறுப்போடு தனது காரியத்தைச் செய்கிறாள். உண்மையில் பெரியவர்களுக்கு அது ஒரு பாடம். நமக்கு எல்லாமே அலட்சியம் தான். சட்டத்தை மீறுவதில் ஒரு சந்தோஷம்.

பெரியவர்களைப் பார்த்து தான் குழந்தைகள் வளர்கிறார்கள். சரியான வளர்ப்பு சரியான குடிமகன்களை உருவாக்குகிறது.

சரிம்மா!  தட்ப வெப்பம் உனக்கும் உன் பொம்மைக்கும் சரியா இருக்கு! உள்ளே  போங்கோ!

Wednesday 29 September 2021

வாழை இலைக்கு இத்தனை மவுசா!


 வாழை இலை பற்றிப் பேசும் போது நமக்கு அது ஒன்றும் பெரிய விஷயமாகவோ பொருளாதார ரீதியில் பணம் சம்பாதிக்கும் ஒரு தொழிலாகவோ நமது கண்ணுக்குத் தெரிந்ததில்லை!

ஒரு நண்பர் சொல்லுவார்: குப்பை என்று எதனையும் தள்ள வேண்டாம்! அத்தனையும் காசு! என்பார். இப்போது நம் கண்முன்னே பார்க்கிறோம்."சுராட் காபார் லாமா!" என்று லோரிகளில் வந்து எல்லாப் பழைய சாமான்களையும் வாங்கிப் போகின்றனர். உரிமையாளன் சீனர் லோரி ஓட்டுபவன் நம்ம ஆள்!

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் நண்பர் ஒருவர் சொன்னார்: வாழை இலை இந்தோனேசியாவிலிருந்து மலேசியாவிற்கு இறக்குமதி ஆகிறது என்று சொன்னார்! 

நான் அதனை நம்பவில்லை. மலேசியாவில் வாழை இலையைப் பயன்படுத்துவதே இந்திய உணவகங்கள் மட்டும் தான். அப்படி ஒன்றும் பெரிய அளவுக்கு நமது நாட்டில் சந்தை இல்லை என்பது தான் எனது கணிப்பு. அதனால் நான் நம்பவில்லை! உண்மை நிலவரம் இன்றும்  தெரியவில்லை.  

 சமீபத்தில் இணையதளத்தில் வலம் வந்த போது மனதைக் கவர்ந்த செய்தி. தமிழ் நாடு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பெண்மணி. பெயர் ராஜேஸ்வரி. சுமார் 10 வருடங்களாக வாழை இலை வியாபாரத்தில் வெற்றிநடை போட்டு வருகின்றார்.

வழக்கம் போல பல இடறல்களிக்கையிடையே எதனையும் காதில் போட்டுக் கொள்ளாமல் தொழிலிலே கவனம் செலுத்தி இன்று இந்த வாழை இலைத் தொழிலில் உயர்ந்து நிற்கிறார். வாழ்த்துகள் அம்மணி!

தொழிலை சிறிய அளவில் தொடங்கினார். ஆரம்பகாலத்தில் விசேஷங்களுக்காக வாழை இலை விற்பனை செய்தார்.  சொந்த போக்குவரத்து இல்லை. பேருந்தில் பயணம் செய்து சேர்க்க வேண்டிய இடத்தில் கொண்டு போய் சேர்ப்பார். சில ஆண்டுகள் இப்படியே தொடர்ந்தது.

பின்னர் தொழிலை விரிவுபடுத்தினார். வெளி மாநிலங்களில், பெரும் நகரங்களில் என்று தொழிலை கொண்டு சென்றார்.  இப்போது அவரிடம் சிறிய லோரி ஒன்று இருக்கிறது. போக்குவரத்துக்குத் தடையில்லை.

இப்போது அவரால் 365 நாளுக்கும் வாழை இலை தயார் செய்து விட முடியும்.  தேவையான இலைகள் எப்போதும் தயார். ஒவ்வொரு நாளும் சுமார் 200 வாழை இலை கட்டுகளை வெளியாக்குகின்றார். ஒவ்வொரு கட்டிலும் 250 வாழை இலைகள் உள்ளன.

இந்திய அளவில் தான் வியாபாரம் என்றாலும் இப்போது அரபு நாடுகளுக்கும் தனது வாழை இலைகளை அனுப்பி வைக்கிறார். இன்னும் பல உலக நாடுகளுக்கும் அவரது தொழில் விரிவடைய வேண்டும் என்பதே நமது விருப்பம்.

வாழை இலை என்றாலே நமக்கு அலட்சியம் உண்டு. ஆனால் அங்கும் பெரும் பணம் சம்பாதிக்க வழியுண்டு என்பதை அம்மையார் நிருபித்திருக்கிறார். 

வாழை இலைக்கு இத்தனை மவுசா என்றால் மனிதன் மனசு வைத்தால் அத்தனைக்கும் ஒரு மவுசை ஏற்படுத்திவிட முடியும்!

Tuesday 28 September 2021

சட்டம் என்பது அனைவருக்கும் தான்!

 

சட்டம் என்பது அனைவருக்கும் ஒன்று தான். ஆனால் ஆளும் கட்சி அரசியல்வாதியாக இருந்தால் சட்டத்தை மீறலாம் என்பதாக ஒரு சிலர் நினைக்கின்றனர்!

அதனால் தான் பல சட்ட மீறல்கள், கோவிட்-19 தொற்றின் போது வெளியே போகக் கூடாது என்று தெரிந்தும், உணவகங்களைத் தவிர்க்க வேண்டும் என்று தெரிந்தும் அதனையெல்லாம் சட்டை செய்யாமல் சட்டத்தை மீறிய சம்பவங்கள் சமீபத்தில் நடந்தேறின! இதில் பெரும்பாலோர் ஆளும் பாஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் தான்!

இப்போது நடந்திருப்பதோ அக்கறையின்மையின் உச்சம் என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை. இதனை அராஜகம் என்று தான் சொல்ல வேண்டும். பொறுப்பற்ற ஒரு செயல். அறிவற்றவன் என்று சொல்லக்கூடிய ஒருவன் கூட இப்படி கார் ஓட்ட மாட்டான் என்று தாராளமாகச் சொல்லலாம். கஞ்சா அடித்துவிட்டு வேண்டுமானால் அப்படி ஓட்டியிருக்கலாம்!

ஆனால் இப்படி சட்டத்தை மீறிப் போகின்ற வாகனம் யாருடையது? சமயத்துறைக்கான துணை அமைச்சர்,  அகமட் மார்ஸுக் ஷாரி அவர்களின் கார் தான் அது!

இது ஒரு வெட்கக்கேடான செயல் என்பது அனைவருக்கும் தெரிகிறது. பாஸ் கட்சியினர் ஷாரியா சட்டம் பற்றி பேசும் போது நாம் ஏன் அதனை எதிர்க்கிறோம்? அவர்கள் சட்டத்தை மீறுவார்கள் ஆனால் தண்டிக்கப்படுவதோ ஏழை மக்கள் தான். அவர்கள் தப்பித்துக் கொள்வார்கள்!

இப்படி அபாயகரமான முறையில் கார் ஓட்டினால் சராசரியான மனிதர்களுக்கு என்ன தண்டனையோ  அந்தத் தண்டனை இவர்களுக்குக் கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சட்டம் என்பது அனைவருக்கும் ஒன்று தான். சட்டம் உடைபடுமா, காக்கப்படுமா? பார்ப்போம்!

குறைந்த விலை வீடுகள்

மலேசிய 12-வது  திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கென வீடுகள் கட்டும் திட்டம் நிச்சயமாக அனைவரின் வரவேற்பைப் பெறும் என நம்பலாம்.

பொதுவாக இன்றைய நிலையில் ஏழ்மையில் உள்ளவர்கள், நடுத்தர குடும்பத்தினர் வீடுகள் வாங்குவது என்பது சாதாரண விஷயம் அல்ல. நடுத்தர  குடும்பத்தினர் என்றால் கணவன் மனவி இருவரும் வேலை செய்ய வேண்டும். அப்போது தான் அவர்களால் சமாளிக்க முடியும். ஒருவர் வேலை இழந்தால் மாதத் தவணை கட்டுவதற்குத் தலை சுற்றும்!

ஆனால் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் சொந்த வீடு என்பதை நினைத்துப் பார்க்கக் கூட முடியாது என்பது தான் இன்றைய சூழல். ஒரு காலக் கட்டத்தில் ஏழைகளுக்கென்றே அரசாங்கம் மலிவு வீடுகளைக்  கட்டிக் கொடுத்தது. பலர் பயன் அடைந்தனர். பிறகு அது போன்ற திட்டங்கள் முழுமையாக கைவிடப்பட்டன. காரணம் தெரியவில்லை. ஒரு வேளை நாட்டில் ஏழைகள் இல்லை என்று ஆளும் வர்க்கம் நினைத்ததோ என்னவோ, யார் கண்டார்?

ஆனால் இப்போது 12-வது மலேசிய திட்டத்தில் கீழ் அந்தத் திட்டத்தை மீண்டும் கொண்டு வந்திருக்கின்றனர்.  பாராட்டலாம்!

குறிப்பாக B40, M40 மக்கள் பயன்பெறும்படியாக  இந்தத் திட்டம் அமையும் என நம்பலாம். பி40 மக்களுக்கு நிச்சயம் இது போன்ற திட்டங்கள் தேவை. ஏழைகள் என்பதற்காக அவர்களை ஒதுக்கி வைக்க முடியாது. வேலை செய்து பிழைப்பவர்களில் அவர்களே நாட்டில் முதன்மையான இடத்தைப் பிடிக்கின்றனர். அவர்கள் எல்லாக் காலங்களிலும்  வாடகை வீடுகளில் குடியிருக்க முடியாது.

எப்படியோ அரசாங்கம் ஏழ்மை நிலையிலுள்ள மக்களுக்காக ஐந்து இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிட்டிருக்கிறது. நடப்பு அரசாங்கம் எத்தனை நாளைக்கு ஆட்சியில் இருக்கும் என்பதை  நம்மால் கணிக்க முடியாது. ஆனாலும் தங்களால் ஆன திட்டங்களைத் தீட்டியிருக்கிறார்கள். இவர்களால் சொன்ன சொல்லை காப்பாற்ற முடியவில்லை என்றாலும் அடுத்து அமையும் அரசாங்கம் இதனை நிறைவேற்றலாம். அது சாத்தியமே.

குறைந்த விலை வீடுகளுக்கு எல்லாக் காலங்களிலும் சந்தையில் மதிப்பு உண்டு. ஆனால் அந்த வீடுகள் பணக்காரர்கள் கையில் போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்!


Monday 27 September 2021

இதுவும் கடந்து போகும்!

 நாட்டிற்குள் கோவிட்-19 என்று காலெடுத்து வைத்ததோ அன்றிலிருந்து நமக்கு ஏற்பட்டது பெரும் சாபக்கேடு!

அந்த நேரத்தில் அரசியல் நெருக்கடிகளும் ஏற்பட்டு அதன்  மூலம் நமக்கு   பெரும் சோதனைகளும் வேதனைகளும் அதிகரித்தது தான் மிச்சம்.

மக்கள் வேலை இல்லாப் பிரச்சனைகளை அப்போது தான் உணர ஆரம்பித்தனர். கணவன் மனைவி வேலை செய்கின்ற குடும்பத்தில் ஒருவர் வேலை செய்தாலே எப்படியோ சமாளிப்பர். ஆனால் இருவருமே வேலை இழந்தால் .....?  இங்கு தான் மக்களால் சுமைகளைத் தாங்க முடியவில்லை.

நாளைய தினத்தை எப்படி கழிக்கப் போகிறோம் என்கிற எண்ணம் வருகின்ற போதே மனம் தளர்ந்து போகின்றனர். தளர்ந்து மட்டும் போகவில்லை;  பயந்தும் போகின்றனர்.

யார் என்ன செய்ய முடியும்? ஒரளவு வசதி உள்ளவர்கள் சமாளித்தார்கள் ஆனால் எல்லாராலும் அப்படி இயலவில்லை. ஏதோ உதவிகளைப் பெற்று சமாளித்து வருகிறார்கள். அவர்கள் மீண்டும் வேலைக்குப் போக வேண்டும். போனால் தான் தங்களது பழைய நிலைக்கு திரும்ப முடியும்.

வேலை இல்லாத சுமார் ஒன்றரை வருட காலக்கட்டத்தில் சுமார்  10,317 பேர் திவால் ஆகியிருப்பதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் கூறியிருக்கிறார்.  ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. எதிர்பார்த்தது தான். இன்னும் கூடும் என்பது தான்  கள நிலவரம்.

அதே காலக்கட்டத்தில் 1,246 தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன. இதில் சிறு, குறு, நடுத்தர, பெரும் நிறுவனங்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றன. அதில் வேலை இழந்தவர்கள் பல்லாயிரக் கணக்கான பேர். 

அரசாங்கம் தங்களால் முடிந்த அளவு வேலை இழந்த மக்கள் மீண்டும் வேலைக்குப் போக அவர்களால் இயன்றதைச் செய்கின்றனர். ஆனால் நிரந்தரமாக மூடிவிட்டுப் போன நிறுவனங்களை யார் என்ன செய்ய முடியும்? பலர் புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்ள வேண்டும். என்ன வேலை என்று தெரியாது. இப்படி பல பிரச்சனைகளை அனைவருமே எதிர்நோக்கின்றனர்.

ஆனால் இங்கு அதிகம் பாதிக்கப்படுபவர்கள் இந்தியர்கள் தான். இந்த நேரத்தைப் பயன்படுத்தி, நிறுவனங்கள் அவர்களுக்குக் குறைவான சம்பளம் கொடுக்க முயற்சிப்பார்கள். அப்படி ஒரு நிலை வரும்போது மலாய்க்காரர்களுக்காக அம்னோ குரல் கொடுக்கும். சீனர்களுக்கு அப்படி ஒரு நிலை வராது. இந்தியர்கள் கேட்பாரற்றவர்கள். ஏதோ சம்பளம் கிடைத்தால் போதும் என்கிற நிலைமையில்  உள்ளவர்கள். அத்தோடு வெளிநாட்டுத் தொழிலாளர்கள் போட்டிக்கு வருகின்றனர். என்ன செய்ய?

நியாயம் பேச இது நேரம் அல்ல. அவர்கள் வாழ வேண்டும். அது தான் முக்கியம்.

எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு உண்டு. "இதுவும் கடந்து போகும்!" என்று நம்பிக்கையோடு காத்திருப்போம்!

Sunday 26 September 2021

வேலியே பயிரை மேய்கிறது!

 வேலியே பயிரை மேய்கிறது என்பது தான் இந்த அநியாயத்திற்குப் பொருத்தமாக இருக்கும்.

எம்.ஏ.சி.சி. யின் நோக்கம் என்ன? ஊழலை தடுப்பது தான் அவர்களின் வேலை. ஆனால் வருகின்ற செய்திகள் அப்படி ஒன்றும் அவர்களைப் பாராட்டும்படியாக இல்லை. பச்சைத் துரோகிகள் என்றே சொல்ல வேண்டியுள்ளது!


சமீபகாலமாக மூன்று  எம்.ஏ.சி.சி.  அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். ஊழல்வாதிகளிடமிருந்து பறிக்கப்பட்ட  பணம். பறிக்கப்பட்ட பணம் எம்.ஏ.சி.சி. அதிகாரிகளின் கைகளுக்கு மாறி  பின்னர் அவர்களின் பணமாகவே மாறிவிட்டது!

இவர்களில் மூத்த அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்! அவர் மேல் இன்னும் ஒரு சில வழக்குகளும் சேர்ந்து கொண்டன! அதைத்தான் சொல்லுவார்கள்; ஒரு தவறை மறைக்க இன்னொரு தவறு செய்வது! மறைக்க, மறைக்க, மறைக்க, மேலும், மேலும், மேலும் தவறுகள்!

பணம் கையாடல் என்பதே குற்றம்! கையாடிய பணத்திற்குப் பதிலாக கள்ள நோட்டுக்களை வைத்து மறைத்தது இன்னொரு குற்றம்!  செய்த தவற்றை மறக்க  கஞ்சா அடித்தது குற்றம்!  அதனை மறைக்க கையில் துப்பாக்கியும் தோட்டாக்களையும் வைத்திருந்த குற்றம்!

நல்ல வேளை அவர் இன்னும் தற்கொலைக்குத் தயாராகவில்லை! அல்லது வேறு காரணங்களுக்காக துப்பாக்கி வைத்திருந்தாரா என்பதும் தெரியவில்லை!

நமக்கு இவர்கள் மேல் அனுதாபமே ஏற்படுகிறது. அவருடைய பதவி என்பது மிகப்பெரிய பதவி. அதன் பெயரைக் காப்பாற்ற வேண்டும். அவரை அந்தப் பதவியில் நியமித்த அரசாங்கத்திற்கு விசுவாசமான அதிகாரியாக இருக்க வேண்டும். பொது மக்களின் நம்பிக்கைக்கு உரியவராக  இருக்க வேண்டும். 

இது போன்ற பதவிகளுக்கு இவர்கள் வருமுன்னர் இவர்களின் பின்னணி ஆராயப்பட்டு அதன் பின்னர் தான் இவர்கள் பதவிகளில் நியமிக்கப்பாடுகிறார்கள். இது சாதாரண வி‌‌‌‌ஷயம் அல்ல. அரசாங்கம் மிகவும் கவனமாகத் தான் இவர்களைத் தேர்ந்தெடுக்கிறது.

ஆனாலும் அரசாங்கம் இவர்கள்   மேல் உள்ள நம்பிக்கையை இவர்கள் தகர்த்துவிடுகிறார்கள்! துரோகிகளாக மாறி விடுகிறார்கள்! என்ன தான் பெரிய பதவியில் இருந்தாலும் அவர்களின் குடும்பமும் இவர்களின் அவமானங்களை அனுபவிக்க வேண்டியுள்ளது!

என்ன தான் இரும்பு கம்பிகளைக் கொண்டு வேலி அமைத்தாலும் அப்போதும் பயிர்களுக்குப் பாதுகாப்பில்லை!

Saturday 25 September 2021

எங்களால் யாரையும் சமாளிக்க முடியும்!

 பெர்சாத்துவின் கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான முகைதீன் யாசின் மிகவும் நம்பிக்கையோடு அடுத்த போதுத் தேர்தலை எதிர்நோக்கியிருக்கிறார் என்பது  அவர் விடும் செய்திகளின் மூலம் நம்மால் அறிய முடிகிறது!

"யாரையும் தேர்தலில் சந்திக்கத் தயார்!" என்று அவர் மிகவும் தன்னம்பிக்கையோடு பேசி வருகிறார்!

நல்லது! அவரது தன்னம்பிக்கையை நாம் பாராட்டுகிறோம்! அவரும் நாட்டின்  பிரதமராக இருந்தவர். முன்னாள் பிரதமர்களான டாக்டர் மகாதிர், நஜிப் அப்துல் ரசாக் போன்றவர்கள் மிகவும் நம்பிக்கையோடு பேசும் அவர்களை விட நான் எந்த வகையிலும் குறைந்தவன் இல்லை என்று அவர் நினைப்பது பாராட்டுக்குரியது!

ஆனால் தேர்தல் முடிவுகள் என்பது தலைவர்கள் கையிலோ, பிரதமர்களின் கையிலோ இல்லை என்பது அவர்களுக்கும் தெரியும். நமக்கும் தெரியும். மக்களின் குரலே மகேசன் குரல் என்பது தான் இறுதி முடிவு!

முகைதீன் யாசினுக்கு மிகவும் நம்பிக்கைத் தரும் கூட்டணி என்பது பாஸ் கட்சியினர் தான். பாஸ் கட்சியினருக்கும் வேறு வழி இல்லை பெர்சாத்துவைத் தவிர!  பாஸ் கட்சியினரை அம்னோ ஏற்றுக்கொள்ளாது! காரணம் கடந்த காலங்களில் பாஸ் கட்சியினர் அம்னோவின் முதுகில் குத்தியவர்கள்!  அவர்களுக்கு பெர்சாத்துவை முதுகில்  குத்துவதில் எவ்வளவு நேரம் பிடிக்கும்?  அது அவர்களுக்கு இப்போது தெரியாது. பின்னர் அவர்களே தெரிந்து கொள்வார்கள்!

இவ்வளவு துணிவோடு பேசும் முகைதீன் அவர்களைப் பற்றி இந்நாட்டு மக்களின் கருத்து என்னவாக இருக்கும்? மக்கள் என்ன தான் அவரைப் பற்றி நினைக்கிறார்கள்? அவரது ஆட்சி காலத்தில் என்ன நடந்தது என்பதை அவர் சிந்தித்துப் பார்த்திருப்பாரா?

கடந்த காலங்களில் எத்தனையோ பிரதமர்கள் வந்து போயிருக்கிறார்கள்.  அப்போது  இல்லாத பல பிரச்சனைகள் பிரதமர் முகைதீன் காலத்தில் வந்து மக்களைப் பயமுறுத்தியிருக்கிறது! மற்றவர்கள் காலத்தில் அரசாங்கம் முறையாக நடந்தது. தவறுகள் நடந்திருக்கலாம். ஆனாலும் திருத்திக் கொண்டார்கள். ஆனால் முகைதீன் காலத்தில் அவர் பிரச்சனைகளை எதனையும் தீர்த்து வைக்கவில்லை. அவர் செய்த மாபெரும் தவறு கோவிட்-19 தொற்றை அதிகப்படுத்தினார் அல்லது நாடெங்கும் கொண்டு சென்று பரப்பினார் என்கிற குற்றச்சாட்டு அவர் மீது உண்டு! இன்றளவும் அந்தக் குற்றச்சாட்டு அவர் மீது தான் சுமத்தப்படுகின்றது!

அவர் அந்தத் தொற்றை கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வர எந்த முயற்சியும் செய்யவில்லை. அதற்குக் காரணம் அந்தத் தொற்றை வைத்தே அரசியல் ஆட்டம் ஆடினார்! உண்மையில் அவர் பதினேழு மாதங்கள் பிரதமராக இருந்ததற்கு கோவிட்-19 தொற்று தான் காரணம்!  அதனாலேயே அவர் கோவிட்-19 தொற்றை தீர்ப்பதற்கான வழிவகைகளைக் காண முயற்சி எடுக்கவில்லை!

எப்படியோ,  எந்தக் கட்சியையோ அல்லது தலைவர்களையோ அவர் எதிர்க்கத் தயார்!  ஆனால் மக்கள்? அவரை எதிர்க்கத் தயார்!                                                                                                                                                                                                                                              

Friday 24 September 2021

நல்ல செய்தியாக இருந்தாலும்.....!

 அரசாங்கம்  சமீபகாலமாக  கோவிட்-19 மீதான தளர்வுகளை அறிவித்துக் கொண்டு வருகிறது.

நல்ல செய்தி தான். மக்களுக்கு மகிழ்வூட்டும் செய்தி தான்.

என்ன தான் தளர்வுகள் மீதான செய்திகள் தொடர்ந்து வந்தாலும் பொது மக்களின் பொறுப்பு என்ன என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். கொஞ்சம் தளர்வு என்றதுமே நாம்  தலைகால் புரியாமல் ஆடுகிறோம்! ஆனால் அது அப்படி அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.   

கோவிட்-19 தொற்று இன்னும் முற்றாக ஒழிக்கப்படவில்லை என்பதை எப்போதும்  மறந்து விடாதீர்கள். அது இன்னும் ஒரு சில ஆண்டுகள் நம்மோடு தான் இருக்கும் என்பதும் உண்மை!

அரசாங்கம் இப்போது ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.   90 விழுக்காடு மக்கள் தடுப்பூசி போட்டுவிட்டால் இனி மாநிலம் விட்டு மாநிலம் செல்லலாம் என்கிற அறிவிப்பை நல்ல செய்தியாகவே எடுத்துக் கொள்ளலாம்.  இப்போதைக்கு 80.2 விழுக்காடு மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

90 விழுக்காடு போடப்பட்டப் பிறகு தான் இன்னும் அதிகமானப் பயணங்களை மேற்கொள்ளலாம்.   ஆனால் நமக்கும் சிறிது சந்தேகங்கள் உண்டு.  வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அனைவரும் ஊசி போட்டுக் கொண்டு விட்டனரா? என்கிற கேள்வி தான் அது. பலர் போட்டுவிட்டனர். பலர் போடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.   எல்லாம் சரிதான். ஆனால் சட்டத்திற்குப் புறம்பாக நாட்டில் தங்கியிருப்பவர்கள், தங்கி வேலை செய்பவர்கள் - இவர்கள் நிலை என்ன? இவர்களில் எத்தனை விழுக்காடு தடுப்பூசி போட்டிருக்கின்றனர் என்கிற கேள்வியும் எழத்தான் செய்கிறது! முதலில் இவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதையாவது கண்டுபிடிக்க முடிகிறதா என்பதும் புரியாத புதிர்! ஒரு சிலர் வெளியே வந்து உயிருக்குப் பயந்து தடுப்பூசி போட வெளியே வருகிறார்கள். இன்னும் பலர் தங்களுக்குத் தெரிந்த வைத்தியத்தோடு போராடிக் கொண்டிருப்பார்கள்.

சட்டத்திற்குப் புறம்பானவர்கள் இருக்கும் வரை இந்தத் தொற்றை நம் அரசாங்கத்தால் ஒழிக்க முடியாது! அவர்கள் என்றென்றும் நமக்கு, மலேசியர்களுக்கு, ஆபத்தானவர்கள்! அதில் சந்தேகமில்லை.

ஆனால் அனைத்தும் நம் கையில் தான் உள்ளது. அடக்கமாக இருப்போம். அப்படியே வேளியே போக வேண்டிய கட்டாயம் இருந்தாலும் முகக் கவசம் அணிந்து, செய்ய வேண்டியவைகளை செய்து, முறையாக நமது பயணத்தை அமைத்துக் கொள்வோம். 

கிடைத்த  செய்தி நல்ல செய்தி தான்! அதனால் அதனை ஆக்கப்பூர்வமாக  பயன்படுத்திக் கொள்வோம்!                                                                                                                                                                                                                                                                                                                                                         

Thursday 23 September 2021

தடுப்பூசி போடாததன் மர்மம் என்ன?

 பள்ளி ஆசிரியர்கள் சுமார் 2100 பேர் தடுப்பூசி போட இன்னும்  மறுத்து வருகின்றனர் என்பதாக கல்வி அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறார்!

ஆசிரியர்கள் படித்தவர்கள்.மாணவர்களின் வழிகாட்டிகள். எடுத்துக்காட்டாக இருக்க வேண்டியவர்கள். ஓரளவு மக்களிடையே செல்வாக்கும்  பெற்றவர்கள். 

ஆசிரியர்களே இப்படி தவறான வழிகாட்டிகளாக இருப்பது நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இவர்கள் இப்படி வேண்டுமென்றே செய்கிறார்களா அல்லது வேறு காரணங்கள் அல்லது ஏதேனும் உள்நோக்கங்கள் உண்டா என்பது நமக்குப் புரியவில்லை.

உலகில் எந்த ஒரு ஆசிரியர் சமுதாயமும் தடுப்பூசி போடமாட்டோம் என்கிற செய்தி நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் இவர்கள், ஒரு சிறிய கூட்டம்,  தடுப்பூசி வேண்டாம் என்று தொடர்ந்து மறுத்துக் கொண்டு வருவதைப் பார்த்தால்  இவர்கள் படித்தவர்களா என்கிற ஐயம் நமக்கு ஏற்படத்தான் செய்கிறது! 

ஆனால் இவர்கள் இப்படி ஆணவத்துடன் நடந்து கொள்வதற்கு ஒரே ஒரு காரணம் தான். இவர்களுடைய பிரச்சனையைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் பெரிய பெரிய ஆலோசகர்களைத் தேடிக் கொண்டு  போக வேண்டியதில்லை. அவர்களுக்குச் சம்பளமில்லா விடுமுறை கொடுத்து விடுங்கள்! அவர்கள் பள்ளிக்கு வரும்வரை சம்பளம் இல்லை! அவ்வளவு தான்!  

இன்றைய நிலைமை அவர்களுக்குச் சாதகமாக இருக்கின்றது. வேலைக்குப் போகாமல் இருக்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு மாதா மாதம் சம்பளம் கிடைத்து விடுகிறது! அது போதுமே! உழைக்காமல் வருமானம் வந்தால் உலகத்தையே சுற்றி வரலாமே!

எப்படியோ கோவிட்-19 தொற்றுக்கு தடுப்பூசி என்பது முக்கியம். அதுவும் ஆசிரியர்கள் என்றால் இன்னும் அதி முக்கியம்.  இது விளையாட்டல்ல.  மாணவர்களின் எதிர்காலம் அவர்கள் கையில் இருக்கிறது. அவர்களே மாணவர்களுக்கு வழிகாட்டிகள்.  ஆசிரியர்கள் தடுப்பூசி போட மறுத்தால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு அனுப்ப மறுப்பார்கள். அது பெற்றோர்களின் குற்றமல்ல.  எல்லாருக்குமே தங்கள் குழந்தைகளின் மீது பற்றும் பாசமும் உண்டு. பொறுப்பற்ற முறையில் ஆசிரியர்கள் நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது.

குறிப்பிட்ட சில ஆசிரியர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக  தடுப்பூசி போடுவதை மறுக்கிறார்கள். அந்தப் பிரச்சனையை அரசாங்கம் இழுத்துக் கொண்டே போவதை விட அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

தடுப்பூசி போடத்தான் வேண்டும். வேறு வழியில்லை!

Wednesday 22 September 2021

பெண்கள் கல்வி மறுக்கப்படுமா?

 ஆப்கானிஸ்தானின் புதிய தாலிபன் அரசாங்கம் பெண்களின் கல்வியை மறுக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

பெண் கல்வி பற்றி பேசுபவர்கள் 1990 களில் பெண்களுக்குத் தாலிபன்களால் ஏற்பட்ட துயரங்களைச் சுட்டிக் காட்டுகின்றனர். மிகவும் கடுமையான சட்டதிட்டங்களைக் கொண்டு பெண்கள் ஒடுக்கப்பட்டனர்.

ஆனால் அன்றைய நிலைக்கும் இன்றைய நிலைக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளதாகவே நமக்குத் தோன்றுகிறது.

இன்று ஆப்கானிஸ்தானின் ஆட்சி முற்றிலும் தாலிபன்கள் கையில். அவர்கள் பயங்கரவாதிகள் என்பது போய் இன்று நாட்டை ஆளுகின்ற தரப்பினர் என்கிற நிலைக்கு வந்திருக்கின்றனர். நல்லதோ கெட்டதோ அவர்கள் தான் இனி நாட்டை ஆளப்போகின்றவர்கள்.

முன்பு போல பயங்கரவாதிகள் என்பது போய் அவர்கள் ஆப்கானிஸ்தானை ஆளுகின்றவர்கள் என்கின்ற நிலைமைக்கு வந்திருக்கின்றனர். இத்தனை ஆண்டுகள் அவர்களுக்கென்று எதிரிகள் இருந்தார்கள். அதனால் அவர்களை எதிர்க்க துப்பாக்கி ஏந்த வேண்டிய  நிர்ப்பந்தம் அவர்களுக்கு இருந்தது.இப்போது அந்த நிலை இல்லை. அவர்கள் தான் ஆட்சியாளர்கள். அவர்கள் யாரையும் எதிர்க்க வேண்டிய சூழல் இல்லை.

பல ஆண்டுகளாகவே அவர்கள் ஒரு முரட்டுத்தனமான சூழலில் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள். இப்போது அது தேவை இல்லை என்றாலும் அவர்கள் வாழ்ந்த அந்த சூழலிலிருந்து அவர்களை மாற்றிக்கொள்ள கால அவகாசம் தேவை. அதனால் தான் அவர்கள் பேசுவதில் முன்னும் பின்னும் முரணான போக்கு நிலவுகிறது!

பெண்கள் கல்வி என்று வருகின்ற போது அவர்களது போக்கில் நிச்சயம் மாற்றம் வரும் என நம்பலாம். ஏன் கிறிஸ்துவ பள்ளிகளில் கூட ஆண், பெண் பள்ளிகள் இன்னும் கூட இயங்கத்தானே செய்கின்றன!  தாலிபன்களும் அப்படித்தான்! மாறுவர்!

முதலில் பெண்கள் கல்வி என்பதை அவர்கள் ஏற்றுக் கொண்டாலே காலப் போக்கில் உயர்கல்வியிலும் மாற்றங்கள் வந்து தான் ஆக வேண்டும். பெண்கள் கல்வியைப் புறக்கணித்துவிட முடியாது. மற்ற நாடுகளுடன் தொடர்புகள் வேண்டும், வியாபாரம் செய்ய வேண்டும், போட்டி போட வேண்டும் என்கிற நிலைக்குத் தள்ளப்படும் போது பெண்களுக்கும் அதில் பெரும் பங்கு உண்டு என்பதை அவர்கள் உணர்வார்கள்! பெண்களை ஒதுக்கி விட முடியாது!

இத்தனை ஆண்டுகள் போராட்டம் என்றே வாழ்ந்தவர்கள். பெண்கள் அவர்களுக்குத் தேவைப்படவில்லை. ஆனால் அவர்களே அரசாங்கத்தை இப்போது  நடத்துகின்றனர். அங்குப் பெண்கள் தேவை. கல்வி கற்றவர் தேவை. அரசாங்கத்தை நடத்துவதற்கும் பெண்கள் தேவை.

அதனால் பெண்கள் கல்வி மறுக்கப்படுமா என்று கேட்டால்: இல்லை! மறுக்கப்படாது! என்பது தான் பதில். இப்போதைக்கு அவர்கள் பேச்சில் முன்னுக்குப்பின் முரணாக பேசுவது தவிர்க்க முடியாதது! அனைத்தும் சீக்கிரம் மாறும்! மாற வேண்டும்!

Tuesday 21 September 2021

தேர்தல் 'வேலைகள்' ஆரம்பாகிவிட்டன!

 நம்மிடையே ஒர் பழமொழி உண்டு. "அண்ணன் எப்போது சாவான்! திண்ணை எப்போது காலியாகும்!" நல்லதொரு அனுபவ மொழி!

நம் நாட்டில் சிறு சிறு கட்சிகள் நிறையவே முளைத்துவிட்டன!  இந்த அனைத்து சிறு சிறு கட்சிகளுக்குத் தான் மேலே சொன்ன பழமொழி.

இந்தக் கட்சிகள் எல்லாம் யாருக்காகக் காத்துக் கிடைக்கின்றன? அண்ணன் ம.இ.கா. திண்ணையைக் காலி செய்துவிட்டால் அந்த இடத்தைப் பிடிக்க அவர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்!

ம.இ.கா. அப்படியெல்லாம் கூடாரத்தைக் காலி செய்துவிட்டுப் போய்விடும் என்று சொல்வதற்கில்லை. தேசிய முன்னணியும் அல்லது அம்னோவும் அவ்வளவு சீக்கிரத்தில் ம.இ.கா. வை கைக்கழுவிவிடும் என்றும்   நம்புவதற்கில்லை! அம்னோவும் பலவீனமான நிலையில் உள்ள கட்சி தான். இந்த நிலையில் அவர்கள் ம.இ.கா.வை அவ்வளவு எளிதில் ஒதுக்கிவிட மாட்டார்கள்! தேர்தல் வரும்வரை எதிரும் புதிருமாக இருந்தாலும் கடைசியில் ஒன்று சேர்ந்து கொள்வார்கள் என்பதே எனது கணிப்பு.

ம.இ.கா. பலவீனமான கட்சி என்பது உண்மை தான். இந்தியர்களின் ஆதரவைப் பெறவில்லை என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் ஏதோ இருக்கின்ற கொஞ்ச நஞ்ச இந்தியர்களின் ஆதரவு அவர்களுக்கு உண்டு என்பதையும் மறுக்க முடியாது. இந்திய மக்களின் ஆதரவு அவர்களுக்கு உண்டு என்றாலும்  தலைவர்களின் ஆதரவு தான் இந்திய மக்களுக்கு  இல்லை! 

அம்னோ தலைவர் போதுமான இடங்களை எங்களுக்கு ஒதுக்குவதாக ஆண்டுக் கூட்டத்தில் பேசும் போது குறிப்பிட்டார் என்பதெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள முடியாது என்பது அவர்களுக்கே தெரியும்!  அப்படியே ஒதுக்கினாலும் இவர்களால் வெற்றி பெற முடியாது என்பதும் அவர்களுக்கும் தெரியும்!  ம.இ.கா. வினர் கூட தேசிய முன்னணியில் இருந்தால் தான் ஏதோ ஒன்றாவது கிடைக்கும்! இல்லையேல் அவர்களையும் மக்கள் துடைத்து எறிந்து விடுவார்கள்!

இந்த சிறு கட்சிகளின் நோக்கம் தேர்தலில் வெற்றி பெறுவது என்பது அல்ல. அதன் மூலம் செனட்டர் ஆகலாம்.  அதன் மூலம் துணை அமைச்சராகக் கூட  ஆகலாம்! அல்லது அரசு சார்ந்த தொழிற் துறைகளில் பதவிகள் பெறலாம். இன்னும் டத்தோ, டத்தோஸ்ரீ,  டான்ஸ்ரீ போன்ற பட்டங்கள் பெற்று பிறவிப்பயனை அனுபவிக்கலாம்! எது கிடைத்தாலும் இலாபம் தானே! அதனால் தான் அவர்கள்  'தீவிர"அரசியலில்  கவனம் செலுத்துகிறார்கள்! இவர்களால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை! ஏதோ அவர்கள் குடும்பமாவது பயன் பெற்றுப் போகட்டும்!

இனி இந்த குஞ்சான் கட்சிகள் அடிக்கடி தங்களது தலையைக் காட்டிக் கொண்டிருக்கும்! சலசலப்புகள் வரும்! என்னன்னவோ பேசுவார்கள்! சில சமுதாயத் துரோகிகள் மக்களோடு ஒட்டி உறவாடுவார்கள்!

நமது வேலை இவர்களை இரசிப்பது தான்!

Monday 20 September 2021

மலேசிய தினம் ஏன்?

 நமது சுதந்திர தினம் எப்போது என அனைவரும் தெரிந்து வைத்திருக்கிறோம். 31 ஆகஸ்டு என்றால் அது தான் நமது சுதந்திர தினம். அது உறுதி. எந்த தவறும் ஏற்பட வாய்ப்பில்லை! காரணம் அன்று நமக்கு விடுமுறை மட்டும் அல்ல! அந்தத் தினத்திற்கான முக்கியத்துவம் தொடர்ந்து கொடுக்கப்படுகிறது. சுதந்திர தின ஊர்வலங்கள், பல்வேறு நிகழ்ச்சிகள் என்று தொடர்ந்து முக்கியத்துவம் கொடுப்பதால் சுதந்திரத் தினத்தை மறக்கக் கூடிய வாய்ப்பில்லை!

 மலேசிய தினம் 16 செப்டம்பர்  அன்று கொண்டாடப்படுகிறது. சபா, சரவாக் மாநிலங்கள்  மலேசியாவுடன் இணைந்த தினம் மலேசிய தினம்.     மேற்கு மலேசியாவில் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படாத ஒரு தினம் தான் மலேசிய தினம்!  அதாவது சபா, சரவாக் மாநிலங்களில் கொடுக்கப்படுகின்ற முக்கியத்துவம் இங்குக் கொடுக்கப்படுவதில்லை! இங்கு ஏதோ ஒரு நாளைப் போல அன்று விடுமுறை! அவ்வளவு தான்!

இப்போது ஒரு சிலரிடையே மலேசிய தினத்திற்கு போதுமான முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என்கிற முணுமுணுப்பு கேட்கத் தொடங்கியிருக்கிறது. அதில் உண்மையில்லாமல் இல்லை! போதுமான விழிப்புணர்வு இல்லை என்பது உண்மை தான்!

பொதுவாக சபா, சரவாக் மாநிலங்களில் கொண்டாப்படுகின்ற எந்தவொரு கொண்டாட்டமாக இருந்தாலும் அது ஏதோ வேறு ஒரு நாட்டில் நடைபெறுகின்ற ஒரு கொண்டாட்டமாகவே நமக்குத் தோன்றுகிறது! அது ஏனோ அந்த மாநிலங்களோடு மேற்கு மலேசியாவில் இருக்கும் நம்மால் ஒட்ட முடிவதில்லை! அவைகளை அந்நிய நாடுகளாக பார்க்கின்ற பார்வை தான் இன்னும் நமக்கு இருக்கின்றது!

ஒரு வேளை  தூர இடைவெளிகளைக் கொண்ட மாநிலங்களாக அவைகள்  இருப்பதால் நமக்கு அப்படித் தோன்றலாம். பொது மக்களிடையே குறைவான போக்குவரத்துகள் இருப்பதாலும் அப்படி இருக்கலாம். அரசியல்வாதிகளிடையே உள்ளதைப் போன்ற தொடர்புகள் பொது மக்களிடையே இல்லை!

எல்லாவற்றையும் விட அரசாங்கம், அவைகளும் நமது மாநிலங்கள் தான், என்கிற ஓர் உறவை ஆழமாகப் பதிய வைக்கவில்லை என்று தான் நாம் நினைக்க வேண்டியுள்ளது! அதற்கான முயற்சிகளை அரசாங்கம் எப்போதும் செய்து கொண்டு தான் இருக்கின்றது. இன்னும் செய்து கொண்டு தான் இருக்கும்.

வருங்காலங்களில் மலேசிய தினம் இன்னும் அதிக சிறப்பாக மலேசிய முழுவதிலும் கொண்டாடப்படும் என நம்புவோம்!

Sunday 19 September 2021

சிறை மரணங்கள் குறைவதாக இல்லை!

 சிறை மரணங்களை ஒரு முடிவுக்குக் கொண்டுவர முடியாதோ என்கிற எண்ணம் பொது மக்களுக்கு அதிகரித்துக் கொண்டே போகிறதே தவிர அதனை ஒரு முடிவுக்குக் கொண்டு வரமுடியும் என்றும் தோன்றவில்லை!  இது தான் இன்று நமது நாட்டின் நிலை!

சிறை மரணங்கள் என்றாலே பெரும்பாலும் அது இந்திய இளைஞராகவே இருக்கின்றனர். குடும்பத் தலைவர்கள் என்றாலும் அதுவும் இந்தியர்கள் தான். நமக்கே சலிப்பு ஏற்படுகின்ற அளவுக்கு அது இந்தியர்களின் மரணங்களாகத்தான் இருக்கின்றன.

அவர்களின் மரணங்களைப் பற்றியான செய்திகள் வெளியாகும் போதும் ஒவ்வொரு தரப்பும் ஒவ்வொரு விதமாகக்  கூறுவது நம்மைக் கிறுகிறுக்க வைக்கிறது!  குடும்பத்தினர் அவர்களை எந்த வியாதியும் இல்லாதவர்கள் என்று கூறுகின்றனர். குடும்பத்தினர் பொய் சொல்ல வாய்ப்பில்லை.  காவல்துறையோ ஒவ்வொருமுறையும் ஒரு வியாதியைக் கூறுகின்றனர்! இல்லாத வியாதியையெல்லாம் அவர்கள் கூறுகின்றனர்!

எப்போதாவது ஒரு மரணம் என்றால் நாம் அதனைப் பொருட்படுத்த மாட்டோம். அது பெரும்பாலும் உண்மை மரணமாகவே இருக்கும். 

ஆனால் நடப்பது என்ன? நல்ல முறையில்,  எந்த வியாதியும் இன்றி, கைது செய்யப்பட்ட ஒரு நபர் அடுத்த நாள் மரணமடைந்துவிட்டதாக செய்திகள் வரும்போது நமக்கும் அது திகைப்பாகத்தான் இருக்கிறது! குடும்பத்தினரும் கேள்விகள் எழுப்புகின்றனர். பொது மக்களும் கேள்விகள் எழுப்புகின்றனர். காவல்துறை மௌனம் சாதிக்கிறது! அல்லது ஏதோ மழுப்பலான பதில்கள் வருகின்றன!

வழக்கு, நீதிமன்றம் என்று வரும்போது  குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க பல ஆண்டுகள் ஆகின்றன. தலைவன் இல்லாத குடும்பங்கள் வருமானத்தை இழந்து மிகவும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். பெரும்பாலும் நீதிமன்ற தீர்ப்புகள் வரும் போது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத்தான் சாதகமாக வருகின்றன. அப்படி என்றால் காவல்துறை தான்  குற்றவாளி! என்று பார்க்கப்படுகிறது!

சம்பந்தப்பட்ட குடும்பங்கள், நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும்வரை, பலவகைகளில் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் உதவுவது அரசாங்கத்தின் கடமை. அதுவும் ஏழைக் குடும்பங்களுக்கு உதவிகள் கிடைப்பது முக்கியம்.

சிறை மரணங்கள் குறைய வேண்டும். அதனையே நாம் விரும்புகிறோம்!

Saturday 18 September 2021

இந்திய மாணவர்களுக்கே அதிக பாதிப்பு!

 கல்வி என்று வரும் போது இந்திய மாணவர்களே அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என்கிறது ஓர் ஆய்வு!

ஆய்வு செய்தவர்களுக்கு அது புதிய செய்தியாக இருக்கலாம். ஆனால் இந்திய பெற்றோர்கள் இந்தப் பாகுபாட்டை பல ஆண்டுகளாகவே அறிந்திருக்கின்றனர். இது பற்றி பேசியும் இருக்கின்றனர். சம்பந்தப்பட்டவர்களிடம் இந்தப் பிரச்சனையை கொண்டும் சென்றிருக்கின்றனர். ஆனால் அவர்கள் செவிடராகவே இருப்போம் என்று அடம் பிடிப்பதால் இந்தக் குறைபாடுகளை எடுத்துச் சொன்னாலும் எடுபடவில்லை!

இந்திய மாணவர்களைப் பற்றியான ஓர் அபிப்பிராயம் ஆசிரியர்களிடம் உண்டு. அவர்கள் திறமையான மாணவர்கள். இது ஒன்றே போதும் ஆசிரியர்கள் அவர்களுக்கு எதிராக செயல்படுவதற்கு! காரணங்கள் ஏதுமில்லை! அவர்கள் எப்படித்  திறமையான மாணவர்களாக இருக்கிறார்கள் என்பது ஆசிரியர்களுக்குப் புரியாத புதிர்! ஏழ்மை நிலையில் அவர்கள் இருந்தாலும் திறமை எங்கிருந்தோ அவர்களுக்கு வந்து விடுகிறது! அதனை ஆசிரியர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!

அதனாலேயே இந்திய மாணவர்கள் பலவாறான துன்பத்திற்கும், இடைஞ்சலுக்கும் ஆளாகி வருகிறார்கள்! பள்ளிகளில் ஆசிரியர்களால் அவர்கள் சிறுமைப்படுத்தப்படுகிறார்கள். தாழ்ந்தவர்களாக பார்க்கப்படுகிறார்கள்.  குடிகார இனம், குண்டர் கும்பல் என்று பலவாறாக ஆசிரியர்களால் சித்தரிக்கப்படுகிறார்கள். அதனையே அவர்கள் மலாய் மாணவர்களுக்கும் எடுத்துச் செல்கிறார்கள். ஆக அந்த மாணவர்களும் இந்திய மாணவர்களை இகழ்ந்து பேசவும், இளக்காரமாக பார்ப்பதும் பேசுவதும் வழக்கமான ஒன்றாகி விட்டது. சமயங்களில் அடிதடியிலும் போய் முடிகிறது!

இந்திய மாணவர்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகள் சீன மாணவர்களுக்கு ஏற்படுவதில்லை. ஒரே காரணம் தான். இந்திய மாணவர்களில் பெரும்பாலானோர் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள். அந்த ஒரு காரணமே போதும் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு!

ஆனால் இவைகள் எல்லாமே தற்காலிகம் தான்! நாம் வீழ்ந்து விடுவோம் என்று யாரும் நினைத்தால் அது தான் தவறு! நாம் வீழும் சமுதாயம் அல்ல. எந்த நிலையிலும் வாழ்ந்து காட்டும் சமுதாயம்!

பாதிப்பு என்றாலும் நாம் சாதனை படைக்கும் சமுதாயம்! சாதனை புரிவோம்!

செய்தி புதுசா இருக்கு!

 இராணுவப் படையில் சேருவதற்கு இன ரீதியிலான ஒதுக்கீடு எதுவும் இல்லை என்பதாக இராணுவத் தளபதி கூறியிருப்பது நமக்குப் புதிய செய்தியாகவே இருக்கிறது!


இப்படி ஒரு தகவலைக் கொடுத்ததற்காகவே நாம் அவரைப் பாராட்ட வேண்டும்! வாழ்த்துகிறோம்!

எல்லாக் காலத்திலுமே நாம் இராணுவம் என்பது மலாய்க்காரருக்கு மட்டுமே என்பது தான் நமக்குத் தெரிந்தது. ஒரு காலக் கட்டத்தில் ம.இ.க. கூட சம்பந்தப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தைகள் நடத்தி இந்திய இளைஞர்கள் இராணுவத்தில்  சேர வாய்ப்புக் கேட்டதெல்லாம் நமக்குத் தெரிந்தது தான்!

அப்போதுள்ள சட்டமும் இப்போது இராணுவத் தலைவர் சொல்லுகின்ற சட்டமும் எல்லாம் ஒன்று தான்.  எல்லாக் காலத்திலும் ஒரே சட்டம்  தான். எந்த மாற்றமும் இல்லை.   ஆனால் எழுதாத சட்டம் ஒன்று அப்போது கடைப்பிடிக்கப்பட்டது. அது மலாய்க்காரர் மட்டுமே என்கிற சட்டம் தான்! ஏதோ பெயருக்கு மற்ற இனத்தவர்களுக்கு ஒன்று இரண்டு என்று எண்ணி  கொடுக்கப்பட்டது!

ஆக நமக்குத் தெரிய வருவதெல்லாம் சட்டம் ஒன்று தான். ஆனால் இராணுவத் தலைவர் அன்றன்றைய சூழலுக்கு ஏற்ப என்ன சொல்லுகிறாரோ அது தான் நடந்தது! இப்போதும் அது தான் நடக்கிறது!

மற்றபடி நிர்ணயிக்கப்பட்ட  விதிமுறைகள் அடிப்படையில் என்று பார்த்தால் அது மலாய்க்கார இளைஞர்களுக்கு மட்டுமே  சாதகமாக அமைகிறது! மற்ற இன இளைஞர்களுக்கு விதிமுறைகள் சாதகமாக அமையவில்லை!

ஆனாலும் இப்போது இராணுவத்தில் சேருகின்ற மலாய்க்காரர் அல்லாத இளைஞர்களின் விழுக்காடு கூடி வருவதாகவே நாம் நம்புகிறோம். கடந்த 2017 -  2020 வரையிலான தரவுகளின் படி 20 - 25  விழுக்காடு இளைஞர்கள் இராணுவ சேவையில் இணைந்துள்ளதாக நம்பப்படுகிறது.

இன்றைய நிலவரப்படி இராணுவ சேவையில் உள்ள மலாய்க்காரர் அல்லாதவர் எண்ணிக்கை 14.49 விழுக்காடு என்று தரவுகள் அடிப்படையில் இராணுவத் தலைவர் கூறியிருக்கிறார்.

வருங்காலங்களில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என நம்புகிறோம். வாழ்த்துகள்!

Friday 17 September 2021

இதனை நாம் வரவேற்க முடியாது!

 மத்திய அரசாங்கமோ மாநில அரசாங்கமோ யார் செய்தாலும் தவறு தவறு தான்.

மலாக்கா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த தில்லுமுல்லுகளைத் தான் சொல்லுகிறேன். 

இந்து மக்களுக்கு ஈமச்சடங்கு செய்ய இடமில்லை. இது ஒரு 61 ஆண்டு காலப்பிரச்சனை.  இதற்கு முன்னர் இருந்த  பக்காத்தான் அரசாங்கம் ஈமச்சடங்குச் செய்வதற்கான  - அதற்கான இடத்தை - சுமார் `0.74 ஹெக்டர் நிலத்தை - மஸ்ஜித் தானா அருகே ஒதுக்கியிருந்தது. ஒதுக்கப்பட்ட நிலம்  மலாக்கா பட்டணத்திலிருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தூரம்.

ஏற்கனவே அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட நிலத்தை, பின் வாசல் வழியாக வந்த ஓர் அரசாங்கம், இப்படி அலட்சியமாக அதனை ஒதுக்கிவிட முடியாது. முன்னாள் அரசாங்கமும் அலசி ஆராய்ந்து தான் அந்த 0.74 நிலத்தை மலாக்கா இந்து மக்களின் நலனுக்காக ஒதுக்கியிருக்கிறது என்பதை இன்றைய அரசாங்கம் மறந்துவிடக் கூடாது.

ஒரு விஷயம் நமக்குத் தெளிவாகப் புரிகிறது. இன்றைய மாநில அரசாங்கம் இந்தியர்களின் நலனில் கொஞ்சம் கூட அக்கறையற்ற ஓர்  அரசாங்கம் என்பது தெளிவாகிறது.

நம்மைக் கேட்டால் ம.இ.கா.வைத் தான் குறை சொல்லுவோம். ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டதுமே ஈமச்சடங்குளுக்கான வேலைகளை அப்போதே செய்ய ஆரம்பித்திருக்க வேண்டும். என்ன நடந்தது என்று நமக்குத் தெரியவில்லை. ம.இ.கா. செய்ய முடியாததை இவர்கள் செய்வதாவது என்று நினைக்க வாய்ப்புண்டு. "நாம் என்ன ரோஷம் கெட்டவர்களா?" என்று கூட அவர்கள் நினைத்திருக்கலாம். இவர்கள்  ரோஷம் கெட்டவர்கள் என்று எப்போதோ நாம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டோம்! ஆனால் மக்கள் நலனே முக்கியம் என்று அவர்கள் நினைத்திருந்தால் இப்படி ஒரு இனப் புறக்கணிப்பு  ஏற்பட வாய்ப்பில்லை! 

நம்மிடையே ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் பொது நலன் கருதி சில சமயங்களில் சில பிரச்சனைகளுக்கு  நாம் ஒன்றுபட வேண்டும்.  உலகத்தில் உள்ள அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் ம.இ.கா. வினருக்கு மட்டும் தெரியவில்லை என்றால் இந்துக்களை அவர்கள் முட்டாள்கள் என்று நினைக்கிறார்கள் என்று தானே அர்த்தம்?

இருக்கட்டும் எங்கே போகப் போகிறார்கள்? முச்சந்திக்கு வந்து தானே ஆக வேண்டும்!

துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது! பின் வாசலுக்கென்றே பிறந்த இழி பிறவிகள் இவர்கள்!

Thursday 16 September 2021

சீனர்களே அதிகம்!

 நாடாளுமன்றத்தில் பிரதமர் கொடுத்த தகவல்களின்படி 2018-ம்  ஆண்டிலிருந்து சுமார் 2,426 தற்கொலை சம்பவங்கள் நாட்டில் நடந்தேறியிருக்கின்றன என அறிய முடிகிறது.

இதில் ஆண்களே அதிகம். அதில் சீனர்கள் 807, இந்தியர்கள் 462, ம்லாய்க்காரர்கள் 362.

நாம் அதிர்ச்சியான செய்தியாக பார்ப்பது சீனர்களே அதிகம் தற்கொலை செய்து கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பது தான். அப்படி ஒர் எண்ணம் நமக்கு வருவதற்குக் காரணம் சீன சமுதாயம் ஒரு முற்போக்கான சமுதாயம் என்பது தான்.  

நமக்கு அவர்களைப் பற்றி உயர்வான அபிப்பிராயம் உண்டு. படித்த சமுதாயம், ஒற்றுமையான சமுதாயம், பொருளாதாரத்தில் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் சமுதாயம் இப்படித்தான் நாம் அவர்களைப் பார்க்கிறோம்.  ஆனால் அப்படியெல்லாம்  "ஒரு மண்ணுமில்லே!" என்று இந்த செய்தி கூறுகிறது!

 பணம் இருந்தால் ஒரு பிரச்சனையும் இல்லை என்று தான் நாம் நினைக்கிறோம். ஆனால் அது அப்படி அல்ல! பணம் இருப்பவனுக்குத் தான் பிரச்சனைகள் அதிகம்!

பொருளாதாரம் வேண்டும். அதனைப் பெருக்க வேண்டும். அதனைப் பெருக்கிய பின் அது தொடர்ந்த தற்காக்கப்பட வேண்டும்.  பொருளாதார பெருக்கத்திற்குப் பின் அதற்கேற்ற வாழ்க்கை வாழ வேண்டும். பெரிய கார் வேண்டும். பெரிய வீடு வேண்டும். பிள்ளைகளை வெளிநாடுகளில் படிக்கவைக்க வேண்டும்.  இப்படி எல்லாமே ஆடம்பரம் தான். தவறில்லை! வாழ்க்கை அப்படித்தான் அமையும்! கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள் கூட அதைத்தான் செய்கிறான். ஆனால் அரசியல்வாதி எந்தக் காலத்திலும் நிம்மதியோடு இருந்ததில்லை!

சீனர்கள் கையில் பணத்தை  வைத்துக் கொண்டு தங்களை அஞ்சாநெஞ்சர்களாக நடிப்பது அதிகம்! அதுவும் ஏமாந்த தமிழனாக இருந்தால் அவனை முழுவதுமாகவே மொட்டையடிக்கத்  தயங்கமாட்டார்கள்! அப்படி ஒரு கல்மனம் அவர்களுக்கு!  ஏன் தங்கள் இனத்திலேயே அவர்கள் பாவபுண்ணியம் பார்ப்பதில்லை! "தகுதியானவன் தான் பிழைக்க முடியும்" என்பது தான் அவர்களுடைய கொள்கை!

நமகுள்ள ஆச்சர்யம்  எல்லாம் ஒரு பணக்கார சமுதாயம் ஏன் இப்படி தற்கொலையை நாடுகிறது என்பதுதான்!  ஒரே காரணம் தோல்வியை அவர்களால் தங்கிக்கொள்ள முடியவில்லை! எல்லா சமுதாயத்திலும் அது உண்டு. ஆனால் இவர்களால் பொருளாதார தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை!

எப்படிப் பார்த்தாலும் எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை என்பது ஒரு தீர்வல்ல!  எந்த இனமாக இருந்தாலும் அது தான் உண்மை! ஆனாலும் தற்கொலை என்பது ஒரு விநாடியில்  ஏற்படக் கூடியது! அதற்குக் காரண காரியம் தேவை இல்லை!

இதற்கு  தீர்வே இல்லையா? இருந்தால் ஏன் தற்கொலை மரணங்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன!

Wednesday 15 September 2021

வரவேற்புக்குரிய ஒப்பந்தம்!

 மலேசிய அரசியலில் இதுவரை கேள்விப்படாத ஒரு வரலாற்று ஒப்பந்தம்!

அரசியல் கட்சிகள் இப்படியும் செயல்பட முடியும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

வெறுமனே பேசி சண்டை, வம்பு என்று அரசியல் நடத்திக் கொண்டிருப்பதை விட இவர்கள் செய்திருக்கும் இந்த ஒப்பந்தம்  எல்லா வகையிலும் அரசியல் நிலைத்தன்மையை உறுதிபடுத்துகிறது. வாழ்த்துகள்! வரவேற்போம்!

இதற்கு முன்னாள் அமைந்த அரசாங்கத்தை அம்னோ கட்சியினர் புரட்டி எடுத்துவிட்டனர்! அந்த ஒரு பாடமே போதும்! இனி நம் நாட்டிற்கு அது போன்ற சோதனைகள் வேண்டாம்!

இந்த ஒப்பந்தத்தின் மூலம் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஓர் அம்சம் என்றால் பிரதமர் இஸ்மாயில் தொடர்ந்து தனது பணிகளை எந்த இடையூறுமின்றி அரசாங்கத்தை வழி நடத்தலாம்  என்பது தான். ஏதேனும் பிரச்சனைகள் வந்தாலும் கூடிப் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்பதும் முக்கியம். பேசுவதற்கு அவர்களுக்கு ஓர் தளம் உண்டு. அது போதும்!

இதற்கு முன்னர் இந்த நிலை இல்லை. தினசரி ஒரு முகாரி ராகம் கேட்கும்! கொடுக்காவிட்டால், இல்லாவிட்டால், முடியாவிட்டால் என்று தொடர் ஓலங்கள் கேட்டுக்கொண்டே இருக்கும்! இனி அது கேட்காது என நம்பலாம்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இன்னுமொரு அனுகூலம் உண்டு. ஆளுங்கட்சி நினைத்ததெல்லாம் செய்ய முடியாது. அதற்குக் கடிவாளம் போடுவதும் இந்த ஒப்பந்தத்தின் நோக்கம். அதே சமயத்தில் எல்லா பதவிகளுமே எங்களுக்குத்தான்  என்று பேராசைப்படும் தரப்பினருக்கு அடியும் விழும்!

இந்த ஒப்பந்தத்தை முழுமனதுடன் வரவேற்கிறோம். இதன் மூலம் அரசாங்கத்தின் வேலைகள் சுமுகமாக நடைபெறும்.  பதவிகள் இரு தரப்புக்கும் பகிர்ந்தளிக்கப்படும். ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும்  இணைந்து செயல்படும்.  குறைபாடுகளைக் கலைந்து நாட்டு நலனில் கவனம் செலுத்த முடியும். 

இது ஒரு தற்காலிக ஒப்பந்தம் தான். அடுத்த ஆண்டு ஜூலை வரை என்று சொல்லப்படுகிறது. அதுவரை மக்களுக்கு நிம்மதி. ஒரு நிலையான அரசாங்கம் நடந்து கொண்டிருக்கும். இப்போது அவர்கள் கண்முன் இருக்கும் முக்கியத் தடைகளைத் தகர்த்தெறிய வேண்டும்.

எப்படியோ,  இந்த ஒப்பந்தத்தை வரவேற்கிறோம். நாட்டுக்கு நலம் பயக்கும் எதுவாக இருந்தாலும் வரவேற்பது நமது கடமை. அந்தக் கோணத்தில் தான் இதனை நாம் பார்க்கிறோம்.

வரவேற்கிறோம்!

மீண்டும் மீண்டும்...........!

 அறிஞர் அண்ணாவைப் பற்றியான செய்திகள் வரும் போது இன்னும் தமிழன் ஏமாளியாகவே இருக்கிறானே என்கிற எண்ணம் தான் வருகிறது!

அண்ணா முதன் முதலாக நாடாளுமன்றத்தில் பேசும் போது தன்னை "திராவிடன்" என்று தான் அறிமுகப்படுத்திக் கொண்டார்! தமிழ் நாட்டிலிருந்து தமிழகப் பிரதிநிதியாக அங்குப் போன அவர் தன்னைத் தமிழன் என்று சொல்லவில்லை!

இன்று சட்டமன்றத்தில் அதனையே தான் சொன்னார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். தமிழர்கள் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் அவர் தமிழனில்லை! திராவிடன் என்றார்!

தமிழ் அறிஞர்கள் ஒன்று கூடி பேசி "தமிழர் முன்னேற்றக் கழகம்"  என்ற பெயரில் கட்சி ஆரம்பிப்பதாக முடிவெடுத்தனர். ஏகமனதாக அனைவரும், அண்ணா உட்பட,  ஏற்றுக் கொண்டனர். ஆனால் அடுத்த நாள் "திராவிட முன்னேற்றக் கழகம்" என்கிற பெயரில் அண்ணா அதனை மாற்றியமைத்து விட்டார்! அதனால் தமிழறிஞர்கள் பலர் அந்தக் கட்சியிலிருந்து வெளியேறிவிட்டனர். இந்தத் துரோகத்தை செய்தவர் அண்ணா!

அண்ணா தமிழ்ச் சொற்களை வைத்து சித்து விளையாட்டு விளையாடியவர்! அதனை நாம் ரசித்தோம்! அத்தோடு நாம் நிறுத்திக் கொள்ளவில்லை! அவர் தான் அறிஞர் என்று காலில் விழுந்தோம்!

தமிழ் மொழிக்காக பெரும்பாடுபட்டவர் என்பது பொய்.  இன்று  அவர் வழி வந்தவர்கள்  ஆங்கிலத்தை வளர்த்தனர் தமிழை அழித்துவிட்டனர். இன்று தமிழ் நாட்டில் தமிழ் இல்லாமல் ஆங்கில மூலமே கல்வி கற்று அமெரிக்கா போகலாம், ஆப்பிரிக்கா போகலாம்! இந்தியாவிலும் பெரும் பதவிகளிலும் அமரலாம்! மற்ற எந்த மாநிலங்களிலும் இந்த நிலை இல்லை. தாய் மொழி வழியாகத்தான் அனைத்தும் கற்பிக்கப்படுகின்றன! இந்த மொழி மாற்றத்திற்கு மூலம் அண்ணா!

அறிஞர் அண்ணாவோ, கருணாநிதியோ, ஜெயலலிதாவோ  அனைவரும் தமிழுக்குக் கேடு விளைவித்தனர். ஸ்டாலின் தொடருகிறார்.

தமிழுக்குத் தொண்டாற்றியவர்கள் தமிழர்களில் பலர் உள்ளனர். ஆனால் ஏனோ நம் தமிழினம் மீண்டும் மீண்டும் தமிழுக்கு,  தமிழருக்குத் துரோகம் செய்தவர்களையே முன்னிலைப்படுத்துகிறோம்! இன்னும் அந்த மாயையிலிருந்து நாம் மீளவில்லை!

மீண்டும்! மீண்டும்! மீண்டுமா!  இந்த திராவிடத் தலைவர்களைத் தூக்கிப் பிடிக்கும் வேலையை ஏன் நாம் செய்ய வேண்டும்? நாம் தமிழராகவே வாழ்வோம்! 

Tuesday 14 September 2021

அச்சம் தவிர்!

 இன்றைய காலக்கட்டம்  பலருக்கு மிக இக்கட்டான காலக்கட்டம் என்பது நான் சொல்ல வேண்டியதில்லை. பலருக்குப் பல அனுபவங்கள்.

இப்படி ஒரு காலக்கட்டத்தை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். மற்றவர்கள் எப்படியோ என் வாழ்க்கையில் நான் அனுபவித்ததில்லை!

ஜப்பான் காலத்தில் பஞ்சம் என்றார்கள்.  அப்போது பொருள்கள் கிடைப்பதில் பஞ்சம்.  அடுத்து என்ன நடக்குமோ என்கிற பயம்.

இப்போது பஞ்சமில்லை. ஆனால் பொருள்களை வாங்க கையில் காசு இல்லை. வேலை இல்லை.சம்பளம் இல்லை. முடியாதவர் பலருக்கு இதுவும் பஞ்சம் தான். கையேந்த தயங்குபவர்களுக்குப் பட்டினி தான்.

ஆனாலும் இப்படி ஒரு நிலையை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். பலருக்கு இது பலவிதங்களில் சரியான படிப்பினை. கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழ்ந்தவர்களுக்கு இப்போது கண்டதும் கொண்டதும் எதுவும் உதவிக்கு வரப்போவதில்லை!

எல்லாமே நம் கையில் தான் உள்ளது. வீழ்வது எல்லாக் காலங்களிலும்  உண்டு. அதில் ஏதும் கேவலமில்லை.  வாழ்க்கையில் வீழ்வதும் எழுவதும் நமது பொறுப்பு!

அச்சம் தவிர் என்று ஏன் சொன்னார்கள்? அச்சம் நம்மை உலுக்கிவிடும். குறுக்கிவிடும். நமது சிந்தனை ஓட்டத்தையே தடை செய்துவிடும். பயத்தை உண்டாக்கும். எப்பேர்பட்ட பலவானையும் பலவீனமாக்கிவிடும்.

எந்த நிலையில் இருந்தாலும் சரி எல்லாம் சரியாகி விடும் என்கிற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர  அச்சம் என்கிற பய எண்ணத்தை வளர்த்துக் கொள்ளக்கூடாது.

இப்போதைய நிலைமை கடினமானது தான். இல்லையென்று சொல்லவில்லை. அதற்காக கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு ஆகாயத்தைப் பார்த்து பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்க முடியுமா? களத்தில் இறங்க வேண்டும். அரசு சாரா இயக்கங்கள் மக்களுக்குப் பல வழிகளில் உதவிகள் செய்கின்றனர். ஆலோசனைகள் கேட்க வேண்டும். வாய்ப்புக்களைத் தேட வேண்டும். நாலு  பேருடன் பழகும் போது சில வழிகள் கிடைக்கும்.

கையாலாகத சிலர் தற்கொலை எண்ணத்தை வளர்த்து கொள்கின்றனர். அதற்குப் பதிலாக "எப்படி சமாளிக்கலாம்" என்கிற எண்ணத்தை வளர்த்துக் கொண்டு களத்தில் இறங்க வேண்டும்.

வேலை இல்லை அதனால் மாதத் தவணைகளைக் கட்ட முடியவில்லை என்கிற வேதனை பலருக்கு உண்டு. தக்கவர்களைக் கண்டு பேச முற்பட வேண்டும்.  பிரச்சனைகள் பேசித் தீர்க்க வேண்டும். மனதில் போட்டு அழுத்திக்கொண்டு அச்சத்தையும் பயத்தையும் வளர்த்துக் கொண்டால் நாளடைவில் மனக்கோளாறு, தற்கொலை என்கிற நிலைக்கு அது இட்டுச் செல்லும்.

எல்லாருமே நல்லது நடக்கும் என்கிற அசட்டு நம்பிக்கையோடு தான் நாள்களை நகர்த்திக் கொண்டிருக்கிறோம். எல்லாமே ஓர் அசட்டு துணிச்சல் தான். என்ன வந்தாலும் ஒரு கை பார்ப்போம் என்று சவாலோடு பிரச்சனைகளை அணுகுவோம்.

அச்சத்தை தவிர்ப்போம்! அமோகமாக வாழ்வோம்!

Monday 13 September 2021

போக்குவரத்துகள் சீரடைகின்றன!

 இன்று பல பிரச்சனைகளுக்கும் பல தடங்கல்களுக்கும்  போக்குவரத்தே மிகப் பெரிய காரணம் என்பதை  நாம் அனைவருமே அறிந்திருக்கிறோம்!

இப்போது நமக்கு நல்ல செய்தி போக்குவரத்து அமைச்சர் மூலம் வந்திருக்கிறது.

ஆமாம் போக்குவரத்துகளுக்கு இனி எந்தத்  தடையும் இல்லை. சுகாதார அமைச்சு கூறியிருக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனைத்து நிர்வாகங்களும் செயல்பட்டால் மீண்டும் நாடு பழைய நிலைக்குத் திரும்பும் என்பதில் ஐயமில்லை.

இப்போது பொருள்கள் கிடைப்பதில் நமக்குத் தடங்கல்கள் உண்டு. அதனால் எல்லாப் பொருள்களும் விலை ஏறிவிட்டன. ஒரு சில பொருள்கள் கிடைப்பதே இல்லை. வெளிநாடுகளிலிருந்தும் பொருள்கள் வருவதில் தடைகள். உள்நாட்டிலிருந்து பொருள்கள் ஏற்றுமதியிலும் தடைகள். போக்குவரத்து பிரச்சனைகளினால் அனைத்தும் நிலைகுத்திவிட்டன.

பாதிப்பு ஒரு சாராருக்கு மட்டும் அல்ல.  அனைவருக்கும் தான். ஆனால் போக்குவரத்தைக் காரணம் காட்டி வியாபாரங்கள் நடைபெறவில்லை என்றால் பொதுமக்களுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும்! அது தான் நடந்து கொண்டிருக்கிறது.  தட்டுப்பாடுகள் என்பது உணவு பொருள்களுக்கு மட்டும் அல்ல மற்ற துறை சார்ந்த பொருள்களுக்கும் நாட்டில் பஞ்சம் தான்! பாதிக்கப்படுவது பெரும் வியாபாரிகள் மட்டும் அல்ல பாதை ஓரங்களில் வியாபாரங்கள் செய்கிறார்களே அவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்!

அதனால் போக்குவரத்து என்பது நாட்டின் முதுகெழும்பு போன்றது. அதனை அலட்சியப் படுத்திவிட முடியாது. அப்படி யாரும் செய்வதுமில்லை. ஆனால் சரியான நேரத்தில் நாம் இந்தப் பெரும் தொற்றினால் அகப்பட்டுக் கொண்ட காரணத்தினால் அனைத்துமே நிலைகுத்திப் போயின!

நாடு இன்னும் கோவிட்-19 தொற்றிலிருந்து விடுபடவில்லை. நாளுக்கு நாள் அதிகரிப்பதைத்தான் பார்க்கிறோம். அதனால் தடுப்பூசி போடுகின்ற வேலையும் விரைவாக நடந்து கொண்டிருக்கிறது. தடுப்பூசியை விரைவு படுத்தினால் தான் போக்குவரத்துத் துறையும் தனது செயல்பாட்டினை  அதிகரிக்க முடியும்.

நாட்டில் தொற்று அதிகரித்தாலும் வேறு வழியில்லாமல் எல்லாத் துறைகளுமே செயல்பட ஆரம்பித்து விட்டன. அதேபோல போக்குவரத்துத் துறையும் தனது பணிகளை ஆரம்பித்து விட்டது.

போக்குவரத்து வந்துவிட்டாலே நாட்டின் நிலை சீரடைந்து வருகிறது என்று ஏற்றுக் கொள்ளலாம்!

இதுவும் சரியான கேள்வி தான்!

 அடுத்த மாதம் 3-ம் தேதிக்குப் பின்னர் கட்டம் கட்டமாகப்  பள்ளிக்கூடங்கள் திறப்பதற்கான ஏற்பாடுகளைக் கல்வி அமைச்சு செய்து வருகிறது.

அதிலே சிக்கல்கள் பல இருந்தாலும் வேறு வழியில்லை என்னும் நிலைக்குக் கல்வி அமைச்சு தள்ளப்பட்டிருக்கிறது என்பது தான் உண்மை.

வேறு என்ன செய்ய? குழந்தைகளை எத்தனை நாள்களுக்குத்தான் வீட்டில் போட்டு அடைத்து வைத்திருக்க முடியும்? அவர்களின் அட்டகாசத்தையும் தாங்க முடியவில்லை. இயங்கலையில் பாடம் நடத்தினாலும் அதுவும் பெரும்பான்மையான மாணவர்களுக்கு வெற்றிகரமாக அமையவில்லை! பெற்றோர்களுக்கும் சிக்கல், ஆசிரியர்களுக்கும் சிக்கல்!

அதனால் தான் சுகாதார அமைச்சும் தனது தடுப்பூசி பணிகளை வேகமாக செய்து வருகிறது. இப்படி பெரும்பான்மையான மக்கள் தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டால் பாதிப்புகள் குறைவாக இருக்கும் என்று சுகாதார அமைச்சு நம்புகிறது.

அதன் பின்னர் தான் பள்ளிகளைத் திறக்கும் வேலைகளைக் கல்வி அமைச்சும் செய்து வருகிறது.  திறப்பதா என்று பெற்றோர்களின் எதிர்ப்புக் குரலும்  ஆங்காங்கே கேட்டு வருகிறது. பெற்றோர்களின்,  தங்கள் பிள்ளைகளின் மீதான கரிசனம், நமக்கும் புரிகிறது.

இப்படியெல்லாம் ஆவேசப்படும் பெற்றோர்கள், அரசாங்கம் கொஞ்சம் தளர்வுகளை ஏற்படுத்தியதும் அவர்கள் செய்கின்ற வேலைகள் நம்மை அதிர வைக்கின்றன!  பேரங்காடிகளுக்குக் குழந்தைகளைத் தயங்காமல் அழைத்துச் செல்கின்றனர். கூட்ட நெருக்கடிதான்! பரவாயில்லை! கடற்கரை, நீர்வீழ்ச்சி, பொழுது போக்கு மையங்கள் என்று எதையும் விட்டு வைப்பதில்லை. எல்லாமே கூட்டம் நிரம்பி வழியும் இடங்கள் தாம்!

 அப்போதெல்லாம் பெற்றோர்களுக்கு எந்த பயமும் வரவில்லை!பள்ளிக்கூடம் போகலாம் என்று அறிவிப்பு வந்ததும் போதும் கோவிட்-19 என்கிற பயம் வந்துவிடுகிறது! பள்ளிக்கூடங்கள் என்ன கோவிட்-19 உற்பத்தியாகும் இடங்களா! நமக்குப் புரியவில்லை! அதைத்தான் பொதுத் தளங்களில் உள்ளவர்களும் கேள்விகள் எழுப்புகிறார்கள்.

கல்வி அமைச்சும், சுகாதார அமைச்சும் முடிந்தவரை, தொற்று வரமாலிருக்க, எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. பிள்ளைகளுக்கு எந்த ஆபத்தும் வராமலிருக்க தங்களால் முடிந்தவரை அனைத்தும் செய்து வருகின்றனர். அவ்வளவு தான் அவர்களால் செய்ய முடியும். அதற்கு மேல் இறைவன் விட்ட வழி!

கோவிட்-19  முற்றிலும் ஒழிக்க முடிந்த வியாதியாகத் தோன்றவில்லை. அது இன்னும் ஒரு சில ஆண்டுகள் தொடரத்தான் செய்யும். அதுவரை எல்லாவற்றையும் அப்படியே மூடி வைத்திருக்க முடியாது. வெளியே வந்து தான் ஆக வேண்டும்.

கல்வித் துறையினரும் சுகாதாரத் துறையினரும்  செய்து வருகின்ற அவர்களது பணிகளை நாம் நம்புவோம். நாமும் நமது சொந்தப் பாதுகாப்பை உறுதி செய்வோம்.

இது நமது அனைவரின் கூட்டு முயற்சி! கூடி வாழ்வோம்! கல்வி பயில்வோம்!

Sunday 12 September 2021

அன்புக்கு பாம்பும் அடிமை!

 

அன்புக்கு உண்டோ அடைக்கும் தாழ்! என்பது திருக்குறள்.

தமிழ் நாடு, கோயம்புத்தூரில்  ஒரு பெண்மணி தனது வீட்டிற்குள் புகுந்த ஒரு நாகப்பாம்பை  அன்பொழுகப்  பேசி அந்தப் பாம்பை வீட்டிலிருந்து வெளியே கொண்டு சென்றிருக்கிறார்!  அதுவும், அந்தப் பாம்பும், அந்தத் தாய் சொன்ன சொல்லைக் கேட்டு  வீட்டிலிருந்து வெளியேறிவிட்டது!

அந்தப் பாம்பை  விரட்டினார்,  அடித்து விரட்டினார், துரத்தி அடித்தார்  என்று சொல்ல நமக்கும் மனம் வரவில்லை! அன்பான வார்த்தைக்குக் கட்டுப்பட்ட அந்தப் பாம்பு எந்தத் தீங்கும் செய்யாமல் தானாகவே வெளியேறிவிட்டது!

"என் சாமி! என் தங்கம்! வெளியே போயிடு ராஜா! உன் கோயிலுக்கு வந்து பால் ஊத்துறேன்....!  என செல்லமாகப் பேசி அந்தப் பாம்பை வெளியே அனுப்புகிறார் அந்தப் பெண்மணி! அந்தப் பாம்பு வெளியேறும் போது சில அறிவுரைகளையும் வழங்குகிறார்!  "யாரு கண்ணுலயும் படக்கூடாது! பத்திரமா இருக்கணும் கண்ணு!" என்கிறார்! 

வழக்கமாக நம்மை நோக்கி படம் எடுத்து வரும் பாம்பு அவருடைய அறிவுரையைக் கேட்டதும் அதுவாகவே பின் நோக்கி நகர்ந்து போகிறது!

இது மாயமோ மந்திரமோ என்று ஒன்றுமில்லை! எல்லாம் அன்பு தான்! அன்பு மட்டும் தான்!

அதைத்தான் "அன்புக்கும்  உண்டோ அடைக்கும் தாழ்", "அன்பு இருந்தால் ஆகாதது  ஏதுமில்லை!" என்கிறார்கள்!

அன்புக்கு அனைத்து ஜீவராசிகளும் அடிமை!

நூறாவது ஆண்டு நினைவு நாள்!

 முதலில் தமிழ் நாடு முதலைமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களைப் பாராட்டுகிறோம்.

பாரதியார் இறந்த நூற்றாண்டு நினவு நாளை (11.9.2021) இனி ஆண்டு தோறும் செப்டம்பர் 11- நினைவு நாளை மகாகவி நாளாகக்  கொண்டாடாப்படும் என அறிவித்திருக்கிறார்.

ஆனால் அது வெறும் மகாகவி நாளாக மட்டும்  அல்லாமல் அந்த நாளில் பள்ளி மாணவர்களுக்குக் கவிதை  போட்டிகளையும் அறிவித்திருப்பது இன்னும் சிறப்பு.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இளம் கவிஞர்களுக்கான கவிதை போட்டி. போட்டியில் பரிசு பெறும் மாணவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பரிசு.

பாரதியாரின் பாடல்கள், கட்டுரைகள் அனைத்தும்  "மனதில் உறுதி வேண்டும்"  என்று புத்தகமாகத் தொகுக்கப்பட்டு   சுமார் 37 இலட்சம்  அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாகக் கொடுப்பது.  இதற்கான செலவு 10 கோடியை அரசு ஏற்கும்.

முதல்வர் அவர்களின் இந்த அறிவிப்புக்கள் நமக்கு மகிழ்ச்சி அளிக்கின்றன.  ஆனால் இவைகள் அனைத்தும் வெறும் அறிவிப்புக்களாக  ஆகிவிடக்கூடாது என்பது தான் நமக்குள்ள எதிர்பார்ப்பு.

காரணம் தி.மு.க. அரசு வெறும் அறிவிப்புக்களை வைத்தே தமிழர்களை ஏமாற்றும் அரசு என்கிற பெயர் உண்டு. அந்த குற்றச்சாட்டு கலைஞர் காலத்திலிருந்தே தொடர்ந்து வருகிறது.

இப்போது அது தொடரக் கூடாது என்பதைத் தான் தமிழர்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். "உடனடியாக அமலுக்கு வருகிறது" என்றால் நமக்குப் பிரச்சனையில்லை. ஆனால் அது அடுத்த ஆண்டு என்னும் போது கொஞ்சம் தயக்கம் இருக்கத்தான் செய்யும். காரணம் தி.மு.க. கொடுத்த முன்னாள் அனுபவம்!

ஆனாலும் இந்நாள் முதலமைச்சர் மீது நமக்கு நல்ல மரியாதை உண்டு. அவர் தமிழர்களை ஏமாற்றுவார் என்று நாம் நினைக்கவில்லை. அப்படி ஒரு நிலையும் வராது என நாம் நம்புவோம்.

பாரதியார் "மகாகவி நாள்" என்பது தமிழர்களின் இனிய நாள். வாழ்த்துகள் முதல்வரே! 

Saturday 11 September 2021

தற்கொலை சம்பவங்கள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன!

நம் நாட்டில்  தற்கொலை சம்பவங்கள் மிகவும் அச்சதை ஏற்படுத்துகின்றன!

கோவிட்-19 தொற்றுக்குப் பின்னர் சொல்ல முடியாத அளவுக்குத் தற்கொலைகள் தொடர்ந்தாற் போல - கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு - தொடர்வதைப் பார்க்கும் போது நிச்சயமாக நமக்கு  அச்சத்தை ஏற்படுத்துகின்றன.

ஒருவரைப் பார்த்து ஒருவர் பின்பற்றுகின்ற நிலை. என்ன செய்ய முடியும்?  உயிர் வாழ மனிதனுக்கு ஏதோ ஒரு வேலை தேவை. அதனை வைத்துத் தான் அவன் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். கணவருக்கு வேலை இல்லை என்றாலும் மனவி குடும்பத்தைக் காப்பாற்றலாம். ஏதோ பாதி வயிறாவது நிறையும். இருவருக்குமே வாழ வழி இல்லையென்றால் யார் அதற்குப் பொறுப்பு? அரசாங்கம் தான் பொறுப்பினை ஏற்க வேண்டும். வேறு வழியில்லை! இந்தியர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்  என்கிற அவச்சொல் அரசாங்கத்திற்கு ஏற்படக் கூடாது.

2019-ம் ஆண்டு நமது நாட்டில் 699 தற்கொலைகள் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அதுவே 2020-ல் 631 தற்கொலைகள்.  ஆனால் இந்த ஆண்டு 2021-ல் ஏழு மாதங்களில் சுமார் 638 சம்பவங்கள் பயப்படத்தக்க அளவுக்குப் பதற்றத்தை ஏற்படுத்துகின்றன. அதாவது ஒரு நாளைக்கு மூன்று தற்கொலைகள். இதுவே நமது அச்சத்திற்குக் காரணம்.

இந்த தற்கொலைகளுக்குப் பல காரணங்கள். உடல் நோய், தொழிலில் தோல்வி என்று காரணங்கள் பல சொன்னாலும் மிகப்பெரிய காரணம் என்று சொன்னால் அது கோவிட்-19 தொற்று தான். தொற்றில் இறப்பவர்களை விட தொற்றினால் ஏற்பட்ட வேலையின்மை அதனால் ஏற்படுகின்ற குடும்ப வறுமை - இப்படி எல்லாமே கோவிட்-19 தொடர்புடையது தான்.

இப்படித்  தற்கொலைகள் அதிகரித்துக் கொண்டே போகும் போது அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன, தற்கொலைகளைக் குறைக்க அரசாங்கத்திடம் என்ன திட்டங்கள் உள்ளன - இது போன்ற விஷயங்களுக்குத் தான் அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

ஆனால் நடப்பதோ அரசியல் சண்டைகள் மட்டும் தான் நமக்குத் தெரிகிறது!  ஆனால் புதிதாக வந்திருக்கும் சுகாதார அமைச்சரிடம் ஏதேனும் திட்டங்கள் இருக்கலாம்.

நாம் சொல்ல வருவதெல்லாம் தற்கொலைகள் தடுக்கப்பட வேண்டும்.  எப்பாடுப் பட்டாவது தற்கொலைகள் தவிர்க்கப்பட வேண்டும். அவர்களின் தேவைகள் என்ன என்பதை அறிந்து அவர்கள் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

தற்கொலைச் சம்பவங்கள் இப்படியே அதிகரித்துக் கொண்டே போனால் மலேசியர் அனைவருமே  நோயாளி சமூகமாக மாறிவிடுவர்! இன்றைய நிலையில் அச்சம் தான் மக்கள் மனதில் முதன்மையாக  நிற்கிறது!

Friday 10 September 2021

சீர்திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவையே! ஆனால்............!

 நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஏழு சட்ட சீர்திருத்தங்களைக் கொண்டு வர  பிரதமர் இஸ்மாயில் சாப்ரி தலைமையிலான அரசாங்கம் திட்டமிட்டிருக்கிறது.

குறை சொல்ல ஒன்றுமில்லை. எல்லாமே சரியான முறையில் வரையப்பட்ட  சீர்திருத்தங்கள் தாம். அதில் எந்த சந்தேகமுமில்லை!

இந்த சீர்திருத்தங்களில், என்னைப் பொறுத்தவரை,  நான் மிகவும் விரும்புவது கட்சித் தாவலுக்கான சட்டம். இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் எந்த ஒரு அரசாங்கமாக இருந்தாலும் தங்களது பதவி காலத்தை முழுமையாகச் செயல்படுத்த முடியும்.

நம் நாட்டில், இத்தனை ஆண்டுகளில், எந்த ஓர் அரசாங்கமும் இடைப்பட்ட காலத்தில் கவிழ்க்கப்பட்டதில்லை. நான் PAP காலத்திலிருந்து வாக்களித்து வருபவன். 

சென்ற தேர்தலில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் நமக்குப் புதியதொரு பாடத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. அமையப்போவது அம்னோ அரசாங்கம் இல்லையென்றால் அது கவிழ்க்கப்படுவது கட்டாயம் என்கிற நிலை உருவாக்கப்பட்டது. இருந்தாலும் இவைகள் எல்லாம் தற்காலிகமே!

வருங்காலங்களில் அம்னோ இனி அரசாங்கத்தை அமைப்பது என்பது சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது. அம்னோ அரசியல் என்றால் என்ன என்பதை மக்கள் புரிந்து கொண்டிருக்கின்றனர். இலஞ்சம், ஊழல் என்பது தான் அந்தக் கட்சியின் நிரந்தரக் கொள்கை என்பதை அனைவரும் அறிவர்.  இனி வெறும் மதம், மொழி என்பதெல்லாம் எடுபடாது! அனைத்துக்கும் எல்லா பாதுகாப்பும் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

மதத்தின் பெயரைச்சொல்லி, மொழியின் பெயரைச்சொல்லி "நான் கட்சி மாறுகிறேன்!" என்கிற போக்கு மாற வேண்டும் என்பது தான் நாம் விரும்பும் அரசியல்! ஆனால் அது உண்மையான காரணம் அல்ல. ஒருவன் கட்சி மாறும் போது அங்கு கோடிக்கணக்கில் பணம் கைமாறுகிறது! பணம் அள்ளிக் கொட்டப்படுகிறது.

இந்தப் போக்கு மாற வேண்டும் என்பது தான் நாம் விரும்பும் அரசியல். அதற்குத் தடை போடுகின்ற  கட்சித் தாவல் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்பது நமது தேவை.

ஆனால் மேலே குறிப்பிட்ட அனைத்து சட்டச் சீர்திருத்தங்களும்  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட முடியுமா என்பது கேள்விக்குறியே!

நாடாளுமன்றத்தில் முதலில் தனக்கான ஆதரவை பிரதமர் இஸ்மாயில் பெற முடியுமா என்பதை நிருபிக்க வேண்டும். அவர் முன்னே உள்ள நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை அவரால் வெற்றி கொள்ள  முடியுமா என்பதை அவர் எதிர்கொள்ள வேண்டும்.

சீர்திருத்தங்கள் தேவை தான். அதில் ஒன்றும் மாற்றுக் கருத்து எதுவுமில்லை. ஆனால் பிரதமர் இஸ்மாயில் பிரதமராக நீடிப்பாரா என்பது தான் நமது கேள்வி!

ஏன் இந்த அவசர சட்டம்?

 முஸ்லிம் அல்லாத  சமயங்கள் தொடர்பான ஷாரியா சட்டத் திருத்தம் தேவையா என்னும் கேள்வி எழத்தான் செய்கிறது!

அந்த சட்டத் திருத்தத்தை சபா மாநிலம் நிராகாரித்திருக்கிறது என்பது சரியான முடிவு என்பதே நமது கருத்தும் கூட. இப்படி ஒரு சட்டத் திருத்தத்திற்கு என்ன தேவை வந்தது என்பதை அரசாங்கம் விளக்க வேண்டும்.

சபா மாநில முதல்வர் ஒரு முஸ்லிம். ஏன் அவர்கள் நிராகரிக்கிறார்கள் என்பதற்கு  அவர் விளக்கம் தந்திருக்கிறார்.  மாநிலத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் மத நல்லிக்கணக்கத்தை குலைக்க அவர் விரும்பவில்லை என்பதே அந்த விளக்கத்தின் சாரம்.

சபா மாநிலத்தில் மக்கள் என்ன நிலையில் இருக்கிறார்களோ அதே நிலைதான் மற்ற மாநிலங்களிலும். மத நல்லிணக்கத்தோடு தான் எல்லா மதத்தினரும் ஒற்றுமையாக வாழ்கின்றனர். மத சண்டைகள் என்பதாக நம் நாட்டில் எந்தக் காலத்திலும் வந்ததில்லை. கோவில்கள் உடைப்பு, அதிகாலையில் கோவில்கள் உடைப்பு, எந்த அறிவிப்பும் இல்லாமல் கோவில்களை உடைப்பது, பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே கோவில்களை உடைப்பது இவைகள் எல்லாம் செய்வது அரசாங்கம் மட்டும் தான்! குற்றம் புரிபவர் யார்?

மேலும் இப்போதும் கூட கோவில்கள் எப்படி கட்ட வேண்டும், என்ன அளவில் கட்ட வேண்டும்,  எந்த இடத்தில் கட்ட வேண்டும் என்று ஆயிரெத்தெட்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டுத் தான் அனைத்துக்  கொவில்களும் கட்டப்படுகின்றன! இது போதுமே! புதிதாக இன்னும் என்ன தேவை?

நமக்கு உள்ள சந்தேகம் எல்லாம் இன்றைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பாஸ் கட்சியினர் செய்கின்ற ஏதோ தில்லுமுல்லு வேலைகள் என்று தான் நாம் நினைக்க வேண்டியிருக்கிறது! வருங்காலங்களில் அவர்களுக்கு மத்திய அரசாங்கத்தில் அங்கம் பெறுகின்ற வாய்ப்பில்லை என்பதால், இப்போது அரசாங்கத்தில் பங்குபெற்றிருக்கும் போதே, ஏதாவது சலசலப்பை ஏற்படுத்த வேண்டுமென்று நினைக்கின்றனர்! நிச்சயமாக அது முஸ்லிம் அல்லாதவர்களுக்குப் பாதகமாகத்தான் முடியும் என்று நம்பலாம்!

இந்த நேரத்தில் அவசர சட்டமோ எந்த சட்டமோ தேவையில்லை!

Thursday 9 September 2021

இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்

 கல்வி அமைச்சு சரியான பாதையில் செல்வதாகவே நமக்குத் தோன்றுகிறது.

மீண்டும் பள்ளி திறக்கப்படும் போது பள்ளிக்குச் சம்பந்தப்பட்ட அனைவரும் தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும் என்பது சரியான நடவடிக்கையே.

ஆசிரியர்கள் மட்டும் அல்ல, பள்ளியில் பணிபுரியும் அலுவலகப் பணியாளர்கள், பாதுகாவலர்கள், துப்புரவு பணியாளர்கள்,சிற்றுண்டி நடத்துனர்கள் என்று அனைவருமே தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும் என்னும் கல்வி அமைச்சின் முடிவை வரவேற்கிறோம்.

ஆனாலும் சிறு நெருடல் நமக்கு உண்டு. பள்ளிகள் திறக்கும் முன்பே பணியாளர்கள் அனைவருமே தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும்.  அதனைத்தான் கல்வி அமைச்சு உறுதி செய்ய வேண்டும்.  அவர்கள் இரண்டாம் தடுப்பூசி போட்டு  14 நாள்களுக்குப் பின்னரே அவர்கள் பள்ளி வளாகத்தில் அனுமதிக்கப்படுவர் என்பது கல்வி அமைச்சு தங்களது கொள்கையில் உறுதியாக இல்லை எனத் தெரிகிறது.

பள்ளித் தொடங்குவதற்கு முன்னர் என்று சொன்னால் பள்ளித் தொடங்க இரண்டு நாள்களுக்கு முன்னர் அவர்கள் இரண்டாம் தடுப்பூசியைப் போட்டால் பள்ளிகள் தொடங்கும் போது அவர்கள் பள்ளிகளுக்கு வரவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடும்! இதனைக் கல்வி அமைச்சே கல்விப் பணியாளர்களை ஊக்குவிப்பது போல் ஆகிவிடும்!

கல்வி அமைச்சு தங்களது கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும். பள்ளிகள் திறக்கும் போது, குறிப்பாக பள்ளி ஆசிரியர்கள், அனைவரும் பள்ளிகள் திறக்கப்படும் குறிப்பிட்ட தேதியில் அனவைரும் பள்ளியில் இருக்க வேண்டும் என்கிற கடுமையான போக்கை கடைப்பிடிக்க வேண்டும். அப்போது தான் பள்ளிப் பாடங்கள் சரியான முறையில் மாணவர்களுக்குப்  போதிக்கப்படும். இல்லாவிட்டால் விடுமுறை என்பது சர்வ சாதாரணமாகி விடும். எந்த ஒழுங்கும் இல்லாமல் போய்விடும்.

பள்ளிகள் திறக்கும் போது ஆசிரியர்களின் வருகை என்பது நிச்சயம் உறுதி செய்யப்பட வேண்டும்.

கல்வி அமைச்சு சரியாகச் செயல்படும் என நம்புவோம்!

Wednesday 8 September 2021

எறும்புக்கும் வலிமை உண்டு!

 "எறும்பு ஊர கல்லும் தேயும்" என்பது பழமொழி!

பொதுவாக எறும்பு என்றாலே நாம் அதனை அலட்சியமாகப் பார்ப்பதுண்டு. அது என்னவோ, அதனைப் பார்த்து சீண்டுகிற அளவுக்கு,  சொல்லத்தக்க அளவுக்கு,   ஒன்றுமில்லை என நாம் நம்புகிறோம்!

உண்மை தான்! நம் கண்முன்னே ஒன்று, இரண்டு  எறும்புகளைப்  பார்த்தால் அதனை நமது விரல்களால் நசுக்கிக் கொல்வோம்! பாவம்! அது ஒன்றுமே செய்யவில்லை. நாம் ஏன் அதனைக் கொல்லுகிறோம் என்பது கூட அவைகளுக்குத் தெரிவதில்லை! நமக்கும் தெரியாது!

எல்லாவற்றுக்கும் நேரம் காலம் உண்டு என்பார்கள். ஒரு வேளை நமது நேரம் சரியில்லை என்றால் எங்காவது ஓர் இடத்தில் மயங்கி விழுந்து கிடந்தோமானால் எறும்புக்கு அது நல்ல நேரம்! ஓர் ஆயிரம் எறும்புகள் ஒன்று சேர்ந்தால் நம்மை சப்பி எடுத்துவிடும்! அரித்து எடுத்து விடும்! உயிர் பிழைத்தால் இறைவனுக்கு நன்றி!

ஒரு எரும்பை நாம் கொல்லலாம். ஆயிரம் எறும்புகள் ஒன்று சேர்ந்தால் நம்மை அது கொன்றுவிடும். அது தான் எறும்புகளின் வலிமை.

சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்று நம்மை அதிர வைக்கும்! ஏர் இந்தியா விமானத்தை சுமார் மூன்று மணி நேரம் தாமதிக்க வைத்திருக்கிறது இந்த ஏறும்பு கூட்டம் என்பதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்!

டில்லி - லண்டன் விமானப் பயணம் சுமார் 2.00 மணிக்குப் புறப்பட வேண்டிய அந்தப் பயணம் சுமார் 5.20 க்குத் தான் புறப்பட வேண்டி வந்ததாம்! அதுவும் பூத்தான் நாட்டு இளவரசர் அந்த விமானத்தில் பயணம் செய்திருக்கிறார்! அவர் பயணம் செய்த முதல் வகுப்பில் இந்த எறும்புகளும் இலவசப் பயணம் செய்ய இருந்த நேரத்தில் அதனைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்!

ஆனாலும் ஏர் இந்தியா அந்த விமானத்தை அப்படியே அங்கே போட்டுவிட்டு  வேறு ஒரு ஏர் இந்தியா விமானத்தில் பயணிகளை அனுப்பி வைத்திருக்கிறார்கள். அது லண்டன் போய் சேர்ந்த நேரம் இரவு இந்திய நேரம் 9.43 மணிக்கு. எறும்புகள் தொல்லைகள் இல்லாமல் அந்தப் பயணம் அமைந்ததாக சொல்லப்படுகிறது.

இறைவன் படைப்பில் எதுவுமே வலிமையற்றது என்பது இல்லை. ஒருவனால் முடியவில்லை என்றால் பலர் சேர்ந்து ஒருவனை அடிக்கிறார்களே அதையே தான் இந்த எறும்புகளும் செய்கின்றன!

எறும்புகளுக்கும் வலிமை உண்டு! ஈ, காக்கைகளுக்கும் வலிமையுண்டு!

பெரியாருக்கு சிலை

 தமிழ் நாடு, திருச்சியில் பெரியாருக்குச் சிலை வைக்க தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது.

திராவிடக் கழகத்தினருக்கு அது நல்ல செய்தி தான் என்பதில் ஐயமில்லை.

திருச்சி மாவட்டம்,  மணச்சநல்லூர் வட்டம், சிறுகனூரில் இந்த சிலையை அமைக்க "பெரியார் சுயமரியாதைப் பிரசார அறக்கட்டளை" திட்டமிட்டிருக்கிறது என்பதாக திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி பூங்குன்றன் அறிவித்திருக்கிறார்.    

 தமிழ் நாடு அரசாங்கம் அதற்கான அனுமதி  அளித்திருக்கிறதே தவிர அதற்கான செலவுகளை "பெரியார் சுமரியாதைப் பிரசார அறக்கட்டளை"  ஏற்றுக் கொண்டிருக்கிறது. அதே போல ஒன்றிய அரசும் இந்தத் திட்டத்திற்கான அனுமதியை அளித்திருக்கிறது.

சிறுகனூரில் "பெரியார் உலகம்" என்கிற மிகப்பெரிய வளாகம் ஒன்று 27 ஏக்கர் நிலத்தில் அமையவிருக்கிறது. இந்த வளாகத்தில் தான் பெரியாரின்  95 அடி உயர சிலை கட்டப்படவிருக்கின்றது. அத்தோடு அந்த வளாகத்தில் நூலகம்,  கோளரங்கம், ஒலி-ஒளி காட்சி,  குழந்தைகள் பூங்கா, உணவகம், வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகியவை அமையவிருக்கின்றன. இதன் ஒட்டு மொத்த செலவு 100 கோடி ரூபாய் என்பதாக மதிப்பிடப்படுகிறது.

இந்த நேரத்தில் நாம் சொல்ல வருவதெல்லாம் இந்த வளாகத்திற்கு 100 கோடி ரூபாய் செலவு என்று மதிப்பிடுகிறீர்கள். பெரியார் பெண்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்.  அந்த வளாகத்தின் உள்ளே ஒரு கல்லூரி ஒன்றையும் கட்டலாம். பல ஏழை மாணவர்களுக்குக் கல்விக் கண்ணைத் திறக்கலாம். பெரியார் அதில் தான் மகிழ்ச்சி கொள்வார்.

இப்போது நீங்கள் செய்வதெல்லாம் வெறும் தொழிற்கான முதலீடு. மிகப் பெரிய செலவில் தொழிலில் முதலீடு செய்கிறீர்கள். அதே நேரத்தில் கொஞ்சம்  மாணவச் செல்வங்களையும் கவனியுங்களேன் என்பது மட்டும் தான் நாம் சொல்லுகிறோம்.

பெரியார் பெயரில் பெரியதொரு வர்த்தக தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறீர்கள். வாழ்த்துகள்!  இதன் மூலம் வர்த்தகத் துறையில் திராவிடர்களின் ஆதிக்கத்தை இன்னும் அதிகப்படுத்துகிறீர்கள். இதில் தமிழர்களின் பங்கு சுழியம் என நம்ப இடமிருக்கிறது! 

பெரியாருக்குச் சிலை வைப்பதன் மூலம் தமிழர்களுக்கும்  நல்லது நடக்கும் என நம்புவோம்!

Tuesday 7 September 2021

நல்ல செய்தி தான்! ஆனால்..........!

 திரையரங்குகள் திறக்கப்படுகின்றன! இன்னும் ஓரிரு நாட்களில் 50 விழுக்காடு எண்ணிக்கையுடன் திரையரங்குகள் திறக்கப்படவிருக்கின்றன!

திரையரங்குகளில் தான் படம் பார்ப்பேன் என அடம் பிடிப்பவர்களுக்கு இது நல்ல செய்தி என்பதில் ஐயமில்லை. அவர்களைக் கேட்டால்  "அப்படி பார்ப்பதில் தான் நமக்குக் குஷி!" என்பார்கள்.

குறை சொல்ல ஒன்றுமில்லை. நண்பர்களுடன் சேர்ந்து படம் பார்ப்பதில் அனைவருக்கும் சந்தோஷம் தான். அந்த சந்தோஷம் எப்போதும் கிடைப்பதில்லை. இப்படி திரையரங்களுக்குப் போகும் போது தான் கிடைக்கிறது. அதை எப்படி தவறவிட முடியும்?

அதுவும் இந்த கோவிட்-19 காலத்தில் எல்லாவற்றுக்குமே தடை!தடை! தடை!  இப்படி ஒரு வாய்ப்புக் கிடைக்கும் போது அதை பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்க முடியுமா? சான்ஸ்ஸே இல்லை!

ஆனாலும் இந்த நேரத்தில் ஒரு சில வார்த்தைகளைக் கொஞ்சம் காதில் போட்டுக் கொள்ளுங்கள். கோவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொள்வது மிக மிக முக்கியம். அந்த தடுப்பூசி உங்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்கும். அது சரியோ தவறோ, அது சரி என்று தான் உலக சுகாதார நிறுவனமே சொல்லுகிறது. அதுவும் நீங்கள் போகும் திரையரங்குகள் என்பது கூட்டங்கள் கூடுகின்ற இடம்.

தடுப்பூசி போட்டவர்கள் தான் திரையரங்குகளுக்குச் செல்ல வேண்டும் என்பது அரசாங்க விதி. அதைத் திரையரங்குகள் உறுதிப்படுத்திக் கொள்ள  வேண்டும். அதற்கான ஏற்பாடுகளைத் திரையரங்குகள் செய்திருக்கும் என நம்பலாம். அப்படி அவர்கள் தவறினால் அவர்களுக்கும் அதனால் ஆபத்து வரும் என்பது உறுதி! ஆனாலும் சில மாதங்களாக வருமானமின்றி தவிக்கும் அவர்களுக்கு ஏனோ தானோ போக்கு வேண்டாம் என்பதே நமது அறிவுரை.

திரை அரங்குகள் திறப்பது நல்ல செய்தி தான்.  ஆனாலும் பலர் கூட்டம் கூடுகின்ற இடத்தில் ஆபத்தும் வரலாம். நமது உடல் நலத்தை நாம் அலட்சியம் செய்துவிடவும் முடியாது.

அதனால் உங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். பாதுகாப்புக் கொடுங்கள். நீங்கள் நீடுழி வாழ வேண்டும். உங்கள் குடும்பம் உங்களை நம்பி இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள். முடிந்தால் தள்ளிப் போடுங்கள். அதுவே நமது அறிவுரை!

என்ன ஆயிற்று!

 நெகிரி செம்பிலான் மாநிலத்தில் அரசியல் சலசலப்புகள் கேட்க ஆரம்பித்திருக்கின்றன! 

எல்லாமே ஒரு பயம் தான்! இன்னும் மத்தியில் நிலையில்லாத ஓர் அரசாங்கத்தைக் கொண்டிருக்கும் இந்த வேளையில் இன்னொரு பக்கம் ஒரு மாநிலத்தில் அரசியல் சலசலப்புகள் ஏற்பட்டால் தேவை இல்லாத பிரச்சனைகள் எழுமே என்கிற கவலை தான் நமக்கு!

நல்லதோ கெட்டதோ ஓர் நிலையான அரசாங்கம் நமக்குத் தேவை. நல்லதையும் கெட்டதையும் தீர்மானிக்க ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் வருகிறது. அப்போது எந்த அரசாங்கம் நமக்குத் தேவை என்பதை நம்மால் தீர்மானிக்க முடியும்.

ஆனால்  மாநிலத்தில் இப்படி இடையில் பிரச்சனைகள் வந்தால் என்ன செய்ய முடியும்? ஏற்கனவே ஒரு சில மாநிலங்களில் பல குழப்பங்களுக்கிடையே ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டன! கட்சித் தாவல்கள், மாற்றங்கள் என்று குழப்பங்கள் ஏற்பட்டு  கூட்டணி அரசாங்கங்கள்  அமைக்கப்பட்டன!

இது போன்ற செயல்கள் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஏற்படக் கூடாது என்பது தான் நாம் விரும்புவது. அடுத்த பொதுத் தேர்தல் வரை எந்த மாற்றமும் ஏற்படக்கூடாது. அதுவே நமது விருப்பம்.

மாநிலத்தில் உள்ள அரசியல் நிலைமை நமக்குத் தெரியவில்லை. நமக்குத் தெரிந்ததெல்லாம் மாநில மந்திரி பெசார் மீது சில அதிருப்திகள் இருப்பதாக சொல்லப்படுகின்றது. மாநிலத்தில் பி.கே.ஆர். ஆட்சி அமைத்ததிலிருந்தே அவரும் ஏதோ அம்னோ அரசியல்வாதியைப் போலவே செயல்படுகின்றார் என்கிற குற்றச்சாட்டு அவர் மீது உண்டு. பொது மக்கள் பார்வையில் அப்படி ஒரு கண்ணோட்டம் இருப்பது நமக்குத் தெரியும்.

ஆனால் இதனையெல்லாம் தவிர்த்து விட முடியும். காரணம் பி.கே.ஆர் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராகிம் இங்கு இந்த மாநிலத்தில் தான் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். அவரால் சரி செய்து விட முடியும் என நான் நம்புகிறேன்.

இந்த அளவிற்கு அதனைப் பெரிதுபடுத்தி, பிரச்சனைகளை அதிகமாக்கி குழப்பத்தை ஏற்படுத்துவது அது எதிர்கட்சிகளுக்குத் தான் சாதகமாக அமையும். குழப்பத்தை ஏற்படுத்தவே அம்னோ கட்சியினர் என்றென்றும் தயாராக இருக்கின்றனர்!

நல்லது நடக்கும் என எதிர்பார்ப்போம்!

Monday 6 September 2021

தேவையற்ற பதவிகள் எதற்கு?

 நமது அரசியல்வாதிகள் யாரையோ திருப்திப்படுத்த அல்லது அரசாங்கம் தொடர்ந்து செயல்பட, தகுதி இருக்கிறதோ இல்லையோ, ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் ஏதோ ஒரு பதவியைக் கொடுக்க வேண்டும் என்கிற நெருக்கடியில்  முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் எப்படி இருந்தாரோ அதே நிலையில் தான் இப்போதைய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பும் இருக்கிறார் என அறியும் போது "இது என்னடா அயோக்கியத்தனம்!" என்று தலையில் அடித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது!

இப்போது அரசாங்கத்தை அண்டி வாழும் அரசியல்வாதிகள் ஏதோ மாசுமருவற்ற புண்ணிய பூமியிலிருந்த வந்த புண்ணிய ஆத்மாக்கள் என்று மார்தட்டும் இவர்கள், ஒர் அரசாங்கத்தைக் காப்பாற்ற பாவம்! இவர்களுக்குக் கட்டாய பதவிகள் தேவைப்படுகின்றன என நினைக்கும் போது எத்தகைய பதவிப் பேய்கள் இவர்கள் என ஆச்சரியப்பட வேண்டியுள்ளது!

அதைத்தான் "படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில்!" என்று பெரியவர்கள் சொன்னார்கள்! பேசுவது புனிதம் செய்வது பொறுக்கித்தனம்!

வெளிநாடுகளில்,  உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும், மலேசியத் தூதர்கள் பணியாற்றுகின்றனர். அவர்கள் அனைவரும் நமது நாட்டைப் பிரதிநிதிக்கின்றனர். அவர்கள் அனைவரும் தூதரக பணிக்கென பயிற்சி பெற்றவர்கள். அதற்கான தகுதியை அவர்கள் பெற்றிருக்கின்றனர். எந்த நேரத்திலும் அல்லது நெருக்கடியுலும் பிரச்சனைகளைச் சமாளிக்கக் கூடிய ஆற்றல் பெற்றவர்கள். நமது நாட்டில் மட்டும் அல்ல உலகெங்கிலும் இது தான் நடைமுறை.

ஆனால் இப்போது கொஞ்சம் கூட தகுதியற்றவர்களை விசேட தூதர்கள் என்னும் பெயரில் அரசியல்வாதிகளுக்குப்  பதவிகள் கொடுக்கப்படுகின்றன. வெறும் தூதர்கள் மட்டும் அல்ல அவர்களுக்கு அந்தப் பதவிகள் மூலம் அமைச்சர் என்னும் அந்தஸ்தும் கொடுக்கப்படுகின்றது! அதாவது அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதற்கான சம்பளம், அமைச்சர் அந்தஸ்து உள்ள தூதர் பதவிகள்,   அதற்கான அமைச்சருக்குரிய  சம்பளம்! இந்தத் தூதர் பதவிகள் மூலம் அவர்கள் செய்யும் வேலை என்ன? விட்டில் தூங்கிக் கொண்டே அமைச்சருக்குள்ள சம்பளம் வாங்குவது தான்! தூதர்கள் இருக்கும் போது இவர்களுக்கான வேலை தான் என்ன?

இந்த புதிய இஸ்மாயில் சப்ரி அமைச்சரவையில் மூன்று பேர்களுக்கு தூதர்/அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங்! மற்ற இரு தலைவர்களும் இஸ்மாயில் அமைச்சரவையைத் தாங்கிப் பிடிப்பவர்கள்! அவ்வளவு தான்! அப்படியென்றால் இந்தப் பதவிகள் அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை என்றால் அமைச்சரவைக் கவிழும் என்பது உறுதி!  ஆக, பாஸ் தலைவர் ஹாடி அவாங்கும் இஸ்மாயிலைப் பயமுறுத்திக் கொண்டிருக்கிறார் என்பதும் உறுதி! பாஸ் கட்சித் தலைவர் இப்படி பயமுறுத்துல் நாடகம் நடத்துவார் என்பதை நாம் எதிர்பார்க்கவில்லை!

இவர்களுக்கெல்லாம் யார் வீட்டுப் பணம் சம்பளமாகக் கொடுக்கப்படுகின்றது? எல்லாம் மக்களின் வரிப்பணம்! வாரி வாரி வழங்கப்பாடுகின்றது! மக்களோ வேலை இல்லை சம்பளம் இல்லை, உணவு இல்லை! இந்த நிலையில் இவர்களுக்குப் பதவி, இன்னொரு பதவி, அதற்கான சம்பளம்! அடாடா! அரசியல்வாதிகளே! நீங்களும் உங்கள் குடும்பங்களும் வாழ்க! வாழ்க!

Sunday 5 September 2021

தண்டிக்கப்படுவது யார்?

 சமீபத்தில் ஜப்பானில் நடைப்பெற்ற பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் குண்டு எறிதல் போட்டியில் முதல் பரிசான  தங்கத்தை இழந்த மலேசிய வீரர் ஷியாட்  சுல்கிஃபிலி எப்படி அந்த முதல் பரிசை இழந்தார் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்.

ஷியாட் இதற்கு முன் ஒலிம்பிக் போட்டியில் தான்  செய்த உலக  சாதனையை இந்த ஒலிம்பிக்  போட்டியில் முறியடித்திருக்கிறார். அவர்  செய்த சாதனை 17.94 மீட்டர் ஆகும். அதுவே புதிய உலக சாதனை.

ஆனாலும் அவரால் பரிசனைப் பெற முடியவில்லை. காரணம் அவர்  போட்டி  நடைபெறுகின்ற இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்தை விட மூன்று நிமிடங்கள் தாமதாக வந்தார் என்பது தான் அவர் மீதான குற்றச்சாட்டு.

ஒலிம்பிக் போட்டி நடுவர்களை நாம் குறை சொல்ல இயலாது. அவர்கள் ஒலிம்பிக் போட்டியின்  சில சட்டத் திட்டங்களைப் பின்பற்ற வேண்டும். அது அவர்களது கடமை. அவர்கள் கடமையை அவர்கள் செய்கிறார்கள். அதனால் நடுவர்கள் குற்றவாளிகள் அல்ல.

போட்டியாளரான ஷியாட் சுல்கிஃபிலி ஒரு வெற்றியாளர். ஆனாலும் அவரிடம் குறைபாடுகள் உணடு. அவர் கால் ஊனமானவர். இந்தப்  பாரா ஒலிம்பிக்  போட்டி என்பதே மாற்றுத்திறனாளிகளுக்கானப் போட்டி தான். அந்தக் குறைபாடுகளைத் தாண்டி தான் அவர் இந்த  சாதனையைப் புரிந்திருக்கிறார்.  அவர் ஒரு வெற்றியாளரே தவிர அவர் தோல்வியாளர் அல்ல. அதனால் அவரைக் குற்றவாளி என்று சொல்ல நா கூசும்.

ஆனால் மலேசிய ஒலிம்பிக் குழு,  குண்டு எறிதல் போட்டிக்கான  நடுவர் முகமட் பைசல் ஹருண் என்ன சொல்ல வருகிறார்? "அது எனது தவறு தான்!" என்கிறார்! ஆமாம் அது அவரது தவறு தான். போட்டியாளர்கள் மாற்றுத் திறனாளிகள் என்பது அவருக்குத் தெரியும். அவர் தான் அவர்களுக்குத் துணையாக இருக்க வேண்டும். அவர்கள் மொழி புரியாமல் இருக்கலாம். அவர்களுக்குப் பொதுவாக என்ன பேசினாலும் விளங்காதவர்களாகக் கூட இருக்கலாம்.  அதனால் தான் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் என்று சொல்லுகிறோம்.

அப்படி என்றால் அவர்களுக்கு முழு பொறுப்பாளர்கள் மலேசிய அதிகாரிகள் தான்; நடுவர்கள் தான். முதல் பரிசான தங்கத்தை இழப்பது என்பது அவர்களுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு, சாதாரணமான விஷயமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. தங்கம் என்பது அவர்களின் சாதனை. அவர்களின் பெருமை. அதே சமயத்தில் மலேசிய அரசாங்கம் அவர்களுக்குப் பண வெகுமதியும் கொடுக்கின்றனர்.

மாற்றுத்திறானாளிகளுக்கான இந்த ஒலிம்பிக் போட்டியில் தங்க வென்றவர்களுக்கு மலேசிய அரசாங்கம் கொடுக்கும் பண வெகுமதி என்பது பத்து இலட்சம் வெள்ளி. அதே போல இரண்டாம் பரிசு மூன்று இலட்சம் வெள்ளியும் மூன்றாம் பரிசாக ஒரு இலட்சம் வெள்ளியும் கொடுக்கப்படுகின்றது.

எப்படிப் பார்த்தாலும்  பத்து இலட்சம் வெள்ளி என்பது சிறு தொகையா? ஒரு மாற்றுத்திறனாளியை இப்படி சோதிக்கலாமா?

Saturday 4 September 2021

தடுப்பூசி இல்லை? வகுப்பறை இல்லை!

 கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர்  ராட்ஸின் ஜிடின் சரியான நேரத்தில் சரியான அறிவுரையை அல்லது எச்சரிக்கையை ஆசிரியர்களுக்கு விடுத்திருப்பதாகவும்  எடுத்துக் கொள்ளலாம்.

இந்த அறிவுரை கோவிட்-19 தடுப்பூசியைப் புறக்கணிக்கும் ஆசிரியர்களுக்கு மட்டுமே.

நாட்டில் சுமார் 2,500 ஆசிரியர்கள் தடுப்பூசி போடுவதைப் பல்வேறு காரணங்களுக்காக மறுத்திருக்கிறார்கள் என்பதை  அதிர்ச்சி தரும் விஷயமாகவே நாம் பார்க்கிறோம். அதில் தடுப்பூசி மேல் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்கிற காரணமும் ஓன்று!

பெற்றோர்களைப் பொறுத்தவரை தங்கள் பிள்ளைகள் பள்ளிகளுக்குப் போகிறார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பு வேண்டும். அவ்வளவு தான்.  அவர்களின் பாதுகாப்புக்குக் கல்வி அமைச்சே பொறுப்பு.  கல்வி அமைச்சைப் பொறுத்தவரை மாணவர்களின் பாதுகாப்புக்கு ஆசிரியர்கள் தடுப்பூசி போட வேண்டும். இதில் வெவ்வேறு கருத்துகள் இல்லை.

கல்வி அமைச்சின் கோரிக்கையை ஆசிரியர்கள் புறக்கணித்தால் அதன் பின்விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை ஓரிரு வார்த்தைகளால் சொல்ல வேண்டுமென்றால் "தடுப்பூசி போடலையா? உங்களுக்கு வகுப்பறை இல்லை!" என்பது தான் இப்போதைய செய்தி!

அவர்களுக்கு அப்படியே வேறு வேலை வாய்ப்புக்களை வழங்கினாலும் அங்கும் அவர்களுக்குக் கோவிட்-19 தடுப்பூசி தேவை தானே! தடுப்பூசி போடவில்லையென்றால் அவர்கள் "வீடே கதி" என்கிற நிலை தான் வருமே தவிர வேறு வழியில்லை என்றே நமக்குத் தோன்றுகிறது!

இந்த விஷயத்தில் சிலாங்கூர் சுல்தான் இன்னும் கண்டிப்பாக இருக்கிறார். மாநிலத்தில் உள்ள சமய ஆசிரியர்கள், பள்ளிவாசல்களின் பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட வேண்டும். போடாதவர்கள் தங்களது கடமைகளைச் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்  என்று எச்சரித்திருக்கிறார்!

ஆசிரியர்களே! நீங்கள் சமுதாயத்தில் மக்களின் மரியாதைக்கு உரியவர்களாக இருக்கிறீர்கள். மக்கள் உங்களை உயர்ந்த, மரியாதைக்குரிய நிலையில் வைத்திருக்கிறார்கள். உலகமே கொண்டாடுகின்ற கோவிட்-19 தடுப்பூசியை நீங்கள் மட்டும் இப்படித்  துண்டாடுகிறீர்களே, இது சரியா?

இப்படி நீங்கள் தவிர்ப்பதன் மூலம் மற்றவர்களுக்கு அபாயத்தை ஏற்படுத்துகிறீர்களே! இது ஆசிரியர்களின் வேலை அல்லவே! யோசியுங்கள்!

Friday 3 September 2021

கட்சித் தாவலை தடைசெய்க!

 கட்சித் தாவல் என்பது ஒரு நாட்டைத் பீடித்த பெரும் தொற்று நோய் என்று தான் சொல்ல வேண்டும்!

கட்சிக்கு விசுவாசம், கொள்கைக்கு விசுவாசம், நாட்டுக்கு விசுவாசம்  இனத்துக்கு விசுவாசம், சமயத்திற்கு விசுவாசம் என்று முத்திரைக் குத்தப்பட்டவனெல்லாம்  பணம், பட்டம், பதவி என்றவுடன் அப்படியே அம்மணமாக எதிர் முகாமுக்கு ஓடியதை கடந்து வருடத்திலிருந்து நாம் பார்த்துக்  கொண்டிருக்கிறோம்! அவனுக்குத் தெரிந்ததெல்லாம் பணம் பத்தும் செய்யும் என்பது மட்டும் தான்!

இந்த கட்சித் தாவலினால் என்ன நடந்தது என்று நாம் பார்த்துக் கொண்டும், அனுபவித்துக் கொண்டும் இப்போது இருக்கிறோம்!

இந்த நிலையில் தனி ஆளாக நின்று கொண்டு, கட்சித் தாவலை தடை செய்ய,  முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயகர், அசாலினா ஒத்மான் சைட், இந்தப் பிரச்சனையைக் கையில் எடுத்திருக்கிறார். இதன் தொடர்பில்  வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தனிநபர் மசோதா ஒன்றை சமர்ப்பிக்கவிருக்கிறார்.

அப்படித் தப்பித் தவறி இந்த மசோதா வெற்றி பெற்றால் என்ன ஆகும்? அது அனைத்துக்  கட்சித் தாவலையும் நிறுத்திவிடும்! அத்தணை வலிமை வாய்ந்த சட்டமா அது? ஆமாம்! ஒரு நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினரோ கட்சி தாவினால் அத்தோடு அவர் பதவிகாலம் முடிவுக்கு வந்து  விடும்.  அந்த தொகுதியில் மீண்டும் மறுதேர்தல் நடத்தப்படும்!

ஆகா! இது போதாதா! நமது மாண்புமிகுகளுக்கு!  வயிற்றுப் போக்கு ஆக எத்தனை நிமிடம் பிடிக்கும் என்கிறீர்கள்!

அதனால் தான் இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்று எல்லாத் தரப்பினரும் விரும்புகிறார்கள். நாமும் விரும்புகிறோம். இதனால் என்ன பயன்? ஓரு நிரந்தர அரசாங்கம் அமையும் என்பது போதாதா!

ஆனால் அரசியல்வாதிகள் விரும்ப வழியில்லை! பெரும்பால அரசியல்வாதிகள் விரும்பமாட்டார்கள்! உண்மை, நேர்மையுள்ள அரசியல்வாதிகள் மட்டுமே இது போன்ற சட்டங்கள் தேவை என்று விரும்புவார்கள். அவர்களைத் தேடி எங்கே போவது?

அசாலினா ஓத்மான் சைட் நல்ல பண்புள்ள ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும். அதற்கு நாம் பெங்கெராங்  நாடாளுமன்ற தொகுதி மக்களைத்தான் கேட்க வேண்டும். அவரை நாம் நம்புகிறோம்.

மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அசாலினாவின் இந்த முயற்சிக்கு எந்த அளவுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்? ஒரு வேளை இப்போதுள்ள எதிர்கட்சிகளின் ஆதரவு கிடைக்கலாம். பி.கே.ஆர்., ஜ.செ.க. போன்ற கட்சிகள் ஆதரிக்கலாம்!

பொறுத்திருந்து பார்ப்போம்! கட்சித் தாவலா அல்லது தாவலுக்குத் தடையா!

Thursday 2 September 2021

மூன்று நிமிடம்! தங்கம் பறிபோனது!

                               MOHAMMAD ZIYAD ZOLKEFLI (SHOT-PUT WORLD RECORD)

நேரத்திற்குப் பேர் போனவர்கள் ஐரோப்பியர்கள். ஒரு நிமிடம் தாமதமானாலும் அவர்களுடனான நமது சந்திப்பைத் துண்டித்து விடுவார்கள் என்பது நமக்குத் தெரியும்!

ஐரோப்பா, அமெரிக்கா, ஜெர்மனி போன்ற தொழில் வளர்ச்சி பெற்ற  நாடுகளிலிருந்து அத்தனை பொருள்களையும் நகல் எடுத்து அந்தப் பொருள்களைத் தங்களது நாட்டுக்குக் கொண்டு சென்று  பல சொந்த ஆய்வுகள், ஆராய்ச்சிக்களுக்குப் பின்னர் தங்களது பொருளாக (Made-in-Japan) பொருளாக வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஜப்பானியர்கள் நேரத்தை மட்டும் விட்டு வைப்பார்களா! அதை எப்படி விட்டு வைப்பார்கள்? அவர்களது இரயில் பயணங்கள் எல்லாம் குறிப்பிட்ட நேரம், குறிப்பிட்ட நிமிடம், குறிப்பிட்ட விநாடி - அனைத்தும் கச்சிதமாக குறிப்பிட்ட நேரத்தோடு அந்தப் பயணம் இருக்கும்!

நமக்கெல்லாம் அந்த கொடுப்பனை இல்லை! பொதுவாக ஆசிய நாடுகளில் நேரக் கலாச்சாரம் என்பதெல்லாம் சும்மா வாயளவில் மட்டும் தான்! குறிப்பிட்ட நேரத்தில் துயில் எழுவது, சந்திக்க வேண்டியவர்களை குறிப்பிட்ட நேரத்தில் சந்திப்பது, ஒரு நேர்காணலுக்குப் போவது அனைத்துமே நாம் நேரத்தைக் கடைப்பிடிப்பதில்லை!  நமக்கு நமது வசதிகள்  தான் முக்கியம்!

இப்படி ஒரு சூழலில் வளர்ந்த நமக்கு ஏற்பட்ட அடி தான் ஜப்பானில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் முதல் பரிசான தங்கத்தை இழந்தது. குண்டு எறிதல் போட்டியில் நமது வீரர் ஷியாட் சுல்கிஃபிலி மூன்று நிமிட தாமதத்தினால் தங்கத்தை இழந்தார். குறிப்பிட்ட நேரத்தில் போட்டி நடைபெறுகின்ற இடத்திற்கு வராததால் அவருக்குக் கிடைக்க வேண்டிய தங்கம் அவரிடமிருந்து பறிக்கப்பட்டது. இரண்டு முறை உலக சாதனை ஏற்படுத்தியவர். அதனால் எல்லாம் எந்தப் பயனுமில்லை! நான்கு ஆண்டுகள் கடுமையான பயிற்சி செய்து புதிய சாதனை ஏற்படுத்தியும் யாரும் அதனை பொருட்படுத்தவில்லை! அது தான் நேரத்தின் வலிமை!

நேரம் போனால் போனது தான். உலகில் மிகப்பெரிய பணக்காரர்களால் வாங்க முடியாத ஒன்று என்றால் அது நேரம் தான்! விட்டுவிட்டால் திரும்பப் பெற முடியாதது நேரம்! நேரம் பொன் போன்றது என்பார்கள்! பொன் கிடைக்கும் ஆனால் நேரம் கிடைக்கவே கிடைக்காது!

நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தினால் அது நமக்கு நல்ல நேரம்! அதனை சோம்பலாக்கி சாம்பலாக்கினால் அது நமக்குக் கெட்ட நேரம்!

மூன்று நிமிடத் தாமதம்!  தங்கம் பறிபோனது!

இந்திய சமூகத்திற்கான கோரிக்கைகள்!

 ம.இ.கா.வின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் "வணக்கம் மலேசியா" இணையத்தள நேர்காணலின் போது நல்ல பல கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். வரவேற்கிறோம்.

வருங்காலங்களில் இந்திய சமூகத்திற்கான தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்கிற தேசிய முன்னணியின் உத்தரவாதத்துடன் தான்  15-வது பொதுத் தேர்தலை ம.இ.கா. எதிர்கொள்ளும் என்று அறிவித்திருக்கிறார். நல்ல செய்தி தான் வரவேற்கிறோம்.

ஏற்கனவே செய்யப்பட்ட தவறுகளை மீண்டும் மீண்டும் சொல்லிக்காட்டி அதையே சாக்காக வைத்துக் கொண்டு ம.இ.கா.வை குறை சொல்லுவது சரியான போக்கு அல்ல என்கிறார் அவர்.  புரிகிறது.

நம்மைப் பொறுத்தவரை அதற்குச் சில காரணங்கள் உண்டு. ஏற்கனவே செய்யப்பட்ட தவறுகளின் போது நீங்களும் உடன் இருந்தீர்கள். டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரனும் உடன் இருந்தார். எந்த மாற்றமும் இல்லை. அதனால் தான் இன்னும் அந்தப்  பழைய ம.இ.கா. தான் நினைவுக்கு வருகிறதே தவிர ம.இ.கா.வில் எந்த மாற்றமும் ஏற்பட்டிருப்பதாக  இதுவரை கண்களுக்குத் தெரியவில்லை! அதனால் தான் அந்தக் குறைகளையே சுட்டிக் காட்ட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை நமக்கு இன்னும் தொடர்கிறது!

இன்று ம.இ.கா.வைக் குறை சொல்லுபவர்கள் எல்லாம்  ஒரு காலத்தில் ம.இ.கா.வில் இருந்தவர்கள் தான்,  நான் உட்பட!

பேராக் மாநிலத்தில், தமிழ்ப்பள்ளிகளுக்குக் கொடுக்கப்பட்ட  2000 ஏக்கர் நிலம் என்னவானது என்று கேட்டால் நல்ல, சாமர்த்தியமான பதில் உங்களிடம்  உள்ளது!  நாங்கள் சொல்லுவது எல்லாம் மலாய், சீனப்பள்ளிகள்  நடைமுறையைப் பின்பற்றிருந்தால் இந்நேரம் அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளும் பயன் அடைந்திருக்கும் என்பது தான்.   ம.இ.கா.விற்கு மட்டும் ஏன் வேறு நடைமுறை என்பது தான் எங்கள் கேள்வி.

இது போன்ற இன்னும் பல சம்பவங்கள் உண்டு. அது வேண்டாம்! அதனைக் கிளற, கிளற மனம் கொந்தளிக்கும்.

வருகிற  தேர்தலில் இந்திய சமுதாயத்திற்கான உங்கள் கோரிக்கைகள், தேவைகள் அனைத்தும் நிறைவேற்றுவோம் என்கிற உறுதிமொழியோடு தான் களம் இறங்குவோம் என்கிறீர்கள். அறுபது ஆண்டுகளாக அதே பிரச்சனை, அதே கோரிக்கை, அதே தேவைகள் - புதிதாக என்ன இருக்கப் போகிறது?

வருங்காலங்களில் ம.இ.கா.வின் நிலைப்பாடு எப்படி இருக்கும் எனக் கேட்டால் ஒன்றைச் சொல்லுகிறேன். செல்லியல் இணையத்தளத்தில் தேசிய தினத்தை முன்னிட்டு ம.இ.கா. தலைவர் விடுத்திருக்கும் செய்தியை -அதனையே தேசிய மொழியில் அவரால் கொடுக்க முடியுமா? 

போங்க டத்தோஸ்ரீ! சும்மா தமாஷ் பண்ணாதீங்க!

Wednesday 1 September 2021

இது ஏன் இப்படி!

 கோவிட்-19 தொற்றை ஒழிக்க ஒரே வழி தடுப்பூசி போடுவது தான் என்று உலகம் பூராவும் டாக்டர்களால் வற்புறுத்தப்படுகிறது.

நமது நாட்டிலும் சுகாதார அமைச்சு நேரத்தை வீணடிக்காமல் ஞாயிறு விடுமுறையிலும் கூட தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டிருக்கிறது.

ஆனால் ஒரு சாரார் தடுப்பூசி வேண்டாம் என்கின்றனர்! இதற்கு இவர்கள் சொல்லுகின்ற காரணங்கள் என்ன என்பது இன்னும் நமக்குத் தெரியவில்லை.  அரசாங்கத்தின் மீது வழக்கும் போடுகின்றனர்!

இதைவிட இன்னும் ஒரு படி மேலே போய் அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தனியார் கிளினிக்குகளில் சான்றிதழ்களுக்காக வரிசைகட்டி நிற்கின்றனர்! 

ஆமாம் அவர்கள் சொல்லுவதெல்லாம் "தடுப்பூசி போடுவதற்கான பணம் கொடுக்கிறேன்.  ஆனால் எனக்குத் தடுப்பூசி தேவையில்லை! சான்றிதழ் மட்டுமே தேவை!" என்கின்றனர்!

இதனை நாம் எப்படி எடுத்துக் கொள்வது?  இது மிகவும் ஆபத்தானது என்பதை இவர்கள் ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்? தடுப்பூசி போட வேண்டும் என்று நாம் ஏன் வற்புறுத்துகிறோம்? நம் மூலம் மற்றவர்களுக்கு தொற்று வரக்கூடாது என்பது தான்  முக்கியக் காரணம்.  

"நான் தடுப்பூசி போடமாட்டேன்! நான் செத்தால் நானே தான் பொறுப்பு என்று சத்தியம் செய்கிறேன்!" என்பதாக நாம் சொல்லலாம். அந்த தனிப்பட்ட உங்களது விருப்பத்தை நாம் மதிக்கிறோம்.  அப்படியென்றால் நீங்கள் பொதுவெளியைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் பொதுவெளிக்கு வருவதால் அது மற்றவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தடுப்பூசி வேண்டாம் என்று சொல்லுவதைவிட வேறு எத்தகைய ஊசி உங்களுக்குத் தேவை என்பதை வெளிப்படையாகவே அரசாங்கத்திடம் எடுத்துக் கூறலாம். இன்று வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு வகையான தடுப்பூசிகள் தயார் படுத்தப்படுகின்றன.

இன்று அனைத்துலகிலும்,  எல்லா நாடுகளிலும்,  கோவிட்-19 க்கான தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இந்த மதம், இந்த இனம் என்றெல்லாம் ஒன்றுமில்லை. எல்லா இனத்தாரும், எல்லா மதத்தாரும் தடுப்பூசிகள் போடுகின்றனர்.

நமது நாட்டைப் பொறுத்தவரை ஏன் ஒரு தரப்பினர் தடுப்பூசி வேண்டாம் என்கின்றனர் என்பது நமக்குப் புரியவில்லை. காரணங்கள் இருக்கலாம். ஆனால் நீங்கள் இப்படி மறுப்பதன் மூலம் "தடுப்பூசி போட வேண்டும்" என்று நினைப்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர். உங்கள் மூலம் அவர்களுக்கு ஆபத்துகள் வருகின்றன.

ஆனாலும்,  எது எப்படியோ, அரசாங்கத்திற்கு இவர்களால் பெரிய தலையிடி என்று தான் சொல்ல வேண்டும்,

இவர்களுக்குத் தடுப்பூசி போடாமல் சான்றிதழ் கொடுத்தால் அந்த டாக்டர்களுக்குக் கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும். ஏற்கனவே டாக்டர்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதால் தான் இந்த நாட்டில் வெளி நாட்டவர்களால் பல வியாதிகள் இங்கு  இறக்குமதி செய்யப்பட்டன!

பணம் கொடுத்தால் எதுவும் நடக்கும் என்பது உண்மைதான்! ஆனால் கோவிட்-19 தொற்றில் அது நடக்கக் கூடாது என்பதில் சுகாதார அமைச்சு கடுமையான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இந்தத் தரப்பினர் தடுப்பூசி போடாதவரை நாம் கோவிட்-19  தொற்றை  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியாது என்பது உண்மை!

ஏன், ஏன், ஏன் என்கிற கேள்வி எழாமலில்லை! நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை!