Monday 31 August 2020

இப்படியும் கேட்கலாம் தானே!

 பெண்மணி ஒருவர் தனது குழந்தையின் பிறப்புப் பத்திரத்தை நகல் எடுப்பதைப் பார்த்தேன். 

அந்த குழந்தையின் பெயரைப் பார்த்த போது அது தமிழ்ப் பெயராகத் தெரியவில்லை!  நான் வாழும் பகுதியில் மலையாளிகள், தெலுங்கர்கள், ஓடியா இனத்தவர் - இப்படி பல இந்திய இனத்தவர்கள் வாழ்கின்றனர்.  எனக்கு அவர்களின் பெயர்களில் ஓரளவு பரிச்சையும் உண்டு.

ஆனால் இந்தப் பெண் தமிழ்ப்பெண். கணவரும் தமிழர் தான்.  நான் அந்தப் பெண்ணிடம் அவரது குழந்தையின் பெயர் ஏன் இப்படிக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறதே என்று கேட்டேன்.

அதற்கு அவர் "கோயில் பூசாரி இந்த எழுத்தில் தான் ஆரம்பிக்க வேண்டும் என்று சொன்னாருங்க!" என்றார்!

நமக்கு அதில் ஒன்றும் ஆட்சேபனையில்லை.  மனிதர் மேல் நம்பிக்கை வைப்பதை விட கடவுள் மேல் நம்பிக்கை வைப்பது மேலானது.  அதனை நான் ஆதரிக்கிறேன்.

ஆனால் ஒரு தமிழ்ப் பெயர் எப்படி ஆரம்பிக்க வேண்டும் என்கிற அடிப்படை அறிவு இல்லாமல் என்னன்னவோ எழுத்துக்களைக் கொடுத்து      "இப்படித்தான் ஆரம்பிக்க வேண்டும்" என்று சொல்லுகிறார்களே அதுதான் நமக்கு எரிச்சலை ஊட்டுகிறது. பெற்றோர்களால் என்ன செய்ய முடியும்?

நான் கடந்த  நாற்பது  ஆண்டுகளுக்கு மேலாக இப்படி கோயில் பூசாரிகளால் கொடுக்கப்படும் பெயர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

ஆனால் இப்படிப் பெயர்களை மாற்றுவதன் மூலம்  நாம் என்ன பெரிதாகச் சாதித்து விட்டோம்? எனக்கு ஒன்றும் புரியவில்லை!  

பொருளாதாரத் துறையில் வளர்ந்து விட்டோமா? கல்வித் துறையில் வளர்ந்து விட்டோமா?  பெரிய பெரிய பதவிகள்  வகிக்கிறோமா? எதுவும் இல்லை! வழக்கம் போல் ஏமாற்றப்படுகிறோம்! நிறைய குடிகாரர்களை உருவாக்கியிருக்கிறோம்! குண்டர் கும்பல்கள் அதிகரித்து விட்டன!  அடிதடி சண்டை குறையவில்லை! நாளிதழ்களில் நமது இளைஞர்கள் தான் நமது மானத்தை வாங்கிக் கொண்டிருக்கின்றனர்!  சிறைகளை நாம் தான் குத்தகை எடுத்திருக்கிறோம்! 

சாமி பெயர்களை வைத்த காலத்தில் கூட நாம் நன்றாகத்தான் வாழ்ந்திருக்கிறோம். நடிகர்களின் பெயர்களை வைத்த காலத்தில் கூட நாம் நன்றாகத்தான் வளர்ந்திருக்கிறோம். இப்போது? ,,,,........சொல்வதற்கில்லை!  வளர்ச்சி எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறதோ அதே அளவுக்கு வீழ்ச்சியும் வந்திருக்கிறது!

பூசாரிகள் கொடுக்கின்ற எழுத்துக்களை வைத்தே, தக்கவர்களிடம் போனால், நல்ல தமிழ்ப் பெயர்களை வைக்க முடியும்.

எப்பாடுப்பட்டாலும் உங்களுடைய அடையாளத்தை இழந்து விடாதீர்கள்! மற்றவர்கள் அடையாளம் நமக்கு வேண்டாம்

Sunday 30 August 2020

பாஸ் கட்சியினரே 'பாய்' யோடு நில்லுங்கள்!

 

பாஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்,  டத்தோ நிக் முகமட் ஸவாவி சாலே, கிறிஸ்துவ மதத்தைப் பற்றி தான் விமர்சித்ததற்காக  கிறிஸ்துவர்களிடம் தான் மன்னிப்புக் கேட்கப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறார். 

"நான் உண்மையைத் தான் கூறினேன். நான் எதனையும் திரித்துக் கூறவில்லை! நான் படித்தவரை அது சரி தான்! பின் ஏன் அதற்கு  மன்னிப்பு?" என்று  நம் மீதே வினாத் தொடுக்கிறார்!.

டத்தோ நிக் கூறுவது சரியாக இருந்தாலும் ஒரு விஷயத்தை அவர் புரிந்து கொள்ள வேண்டும். 

பிற மதங்களைப் பற்றி நாம் பேசும் போது, அல்லது ஏதோ ஒரு குறிப்பிட்ட  நோக்கத்துக்காக நாம் படிக்கும் போது அல்லது அவர் சொல்லுவது போல மது அருந்துவதை கிறிஸ்துவம் ஏற்றுக் கொள்கிறது என்றே வைத்துக் கொள்வோம் - அவர் தனது புரிதலை வைத்து ஒரு முடிவுக்கு வரக் கூடாது. எந்த மத நூலாக இருந்தாலும் ஏதோ ஒரு புத்தகத்தைப் படிப்பது போல படிப்பது ஆபத்தானது. மத நூல்களை விளங்கிக் கொள்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. 

மத நூல்களைப் புரிந்து கொள்ள அந்தந்த மத அறிஞர்களிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும்.  புனித நூல்கள் என்பது நிக் போன்றவர்களால் எழுதப்பட்டவை அல்ல!  இறைவனின் அருள் இல்லாமல் எந்த புனித நூல்களையும் எழுத முடியாது என்கின்றன வேதங்கள். இஸ்லாமும் அதில் அடங்கும். 

இறை அருளால் எழுதப்பட்ட நூல்கள் எப்படித் தவறான வழியைக் காட்ட முடியும்?  அதைத்தான் நிக் முகமட் புரிந்து கொள்ள வேண்டும். நான் கூட "திருக்குரான்" படித்துவிட்டு உடனே விளக்கம் சொல்ல முடியுமா?  என்னால் படிக்க முடியும் என்பது உண்மை தான்!  ஆனால் என் புரிதல் என்பது முட்டாள்தனமாகத்தான் இருக்கும்!  ஒரே மூச்சில் படித்துவிட்டு அல்லது சில வரிகளைப் படித்துவிட்டு எனக்கு எல்லாம் தெரியும் என்று எப்படிச் சொல்ல முடியும்? புனித நூல்களை அப்படியெல்லாம் நாம் விரும்பியவாறு புரிந்து கொள்ள இயலாது!

நான் எத்தனையோ ஆண்டுகளாக புனித நூலான பைபிளை படித்துக் கொண்டிருக்கிறேன்.  ஆனால் ஒவ்வொரு முறையும் புதிய புதிய அர்த்தத்தை அது கொடுத்துக் கொண்டிருக்கிறது. வயது ஏற ஏற எனது புரிதலும் மாறிக் கொண்டிருக்கிறது! என் அளவு நிக் முகமட் பைபிளை படித்திருப்பார் என நான் நம்பவில்லை! அது அவருக்குத் தேவையும் இல்லை!

ஆனால் ஏதோ ஓரிரு முறை அல்லது ஏதோ ஒரு குறிப்பிட்ட சில பகுதிகளைப் படித்துவிட்டு அல்லது குறிப்பிட்ட சில வரிகளைப் படித்துவிட்டு  "பைபிள் இப்படித்தான் சொல்லுகிறது"  என்று ஒரு முடிவுக்கு வருவது அவர் தகுதிக்கு ஏற்றதல்ல!

அவர் தகுதி என்ன? அவர் ஓர் அரசியல்வாதி. அவ்வளவு தான்! அரசியல்வாதி என்பதாலேயே அவர் ஓரு சமய அறிஞராக மாறி விட முடியாது!  அவர் கிறிஸ்துவ சமய அறிஞர் என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை!

மதங்களை வைத்து மக்களைப் பிரித்து வைப்பது பாஸ் கட்சியினருக்கு வழக்கமாக ஒன்றாகிவிட்டது! அவர்களால் பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாத  போது மதங்களை வைத்து அரசியல் செய்கின்றனர்!

நாம் பாஸ் கட்சியினருக்குச் சொல்ல வருவதெல்லாம் "பா யோடு நில்லுங்கள்!"  என்பது தான்!

கிறிஸ்துவம் அன்பைப் போதிக்கின்ற மதம்! வம்பைப் போதிப்பது அல்ல! 

உலகில் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் எங்கள் நிலையில் மாற்றம் இல்லை.  ஆனால் உங்கள் நிலை? நாட்டுக்குத் தகுந்த மாதிரி மாறும்!

நான் உங்களை மன்னிக்கிறேன்!

இன்னொரு ஹீரோ!

 நம்மிடம் உள்ள ஒரு கெட்டப் பழக்கத்தை இன்னும் நம்மால் கைவிட முடியவில்லை!

அது என்ன?  அடிக்கடி ஒரு சிலரை ஹீரோ ஆக்குவது! இது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இப்போதும் தொடர்கிறது!

இப்போது நமது புதிய ஹீரோ யார். பெர்சாத்து கட்சியின் இளைஞர் பிரிவு தலைவரும், விளையாட்டுத் துறை துணை அமைச்சருமான வான் அமாட் பைஸாவை  நாம்பெரிய ஹீரோவாகக் காட்டிக்கொண்டிருக்கிறோம்! இப்போது அவர் தனது சட்டைக் காலரை தூக்கி விட்டுக் கொண்டு "நானும் ஹீரோ தான்!" என்று  சவால் விட்டுக் கொண்டிருக்கிறார்!

பத்திரிக்கைகளின் நமது எதிர்ப்பைத் தெரிவிப்பதில் தவறில்லை. காரணம் அதைத் தவிர நமக்கு வேறு வழி தெரியவில்லை.

ஆனால் அதைவிட சரியான வழிகள் நமக்குத் தேவை.  அறிக்கைகளினால் எதுவும் ஆகப் போவதில்லை.

நாம் அறிக்கைகள் வெளியிடும் போது அத்துடன் சம்பந்தப்பட்ட அமைச்சுடனும் அவர்களின் கவனத்திற்குச் கொண்டு செல்ல வேண்டும். அது மட்டும் போதாது. சான்றுக்கு மலாக்காவில் கல்வி அமைச்சில் இந்திய அதிகாரி தவிர்க்கப்பட்டிருக்கிறார்.  அறிக்கைகள் விட்டோம். ஏதாவது நகர்ந்திருக்கிறதா? ஒன்றுமில்லை! 

கல்வி அமைச்சின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் போதே  அந்த மாநிலம் பாரிசான் ஆட்சியில் உள்ள மாநிலம்.  நாம் ம.இ.கா.வின் கவனத்திற்கும் கொண்டு சென்றிருக்க வேண்டும். அவர்கள் ஒன்றும் செய்யப் போவதில்லை என்று நமக்குத் தெரியும்! காரணம் அதையெல்லாம் அவர்கள் கேட்டால் வேள்பாரி மேலவையில் செனட்டராகி இருக்க மாட்டார்! ஆனாலும் அவர்களிடன் கொண்டு சென்றிருக்க வேண்டும். கோச டப்பாக்கள் இன்னும் கொஞ்சம் அதிகமாக சத்தம் போடும்! அவ்வளவு தான்!

இப்போது வான் அமாட் பைஸாவை ஏன் பெரிய ஹீரோ ஆக வேண்டும்? பெர்சத்துவும் பல இன கட்சி தான்.  அதில் யார் முக்கியப் புள்ளி , அவரிடம் அந்தப் பிரச்சனையக் கொண்டு செல்ல வேண்டும். முடிந்தால் பிரதமரிமும் பேச்சு வார்த்தை நடத்தலாம். அல்லது அமைச்சரவையில் இருக்கும் டத்தோ ஸ்ரீ சரவணனிடமும்  பிரச்சனையக் கொண்டு செல்ல வேண்டும்.  எல்லாருமே அறிக்கை விட்டுக்கொண்டிருப்பதில் எந்தப் பயனுமில்லை.  மேல் தட்டிலுள்ளவர்களும் அக்கறை கொள்ள வேண்டும். 

பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் பிரச்சனையை அணுக வேண்டும்.  இனி மேல் இவரைப் போன்றவர்கள் வாய் திறக்காமல் இருக்க செய்ய வேண்டும்.

ஒரு பிரச்சனை வரும் போது அறிக்கைகளை விட்டு ஒருவரை ஹீரோ ஆக்குவது இனி மேலும் தொடர வேண்டாம் என்பதே எனது வேண்டுகோள்!

இனி மேல் நமக்கு ஹீரோ வேண்டாம்!

 

Saturday 29 August 2020

துங்கு ரசாலியும் சேர்ந்து கொண்டார்!

 பிரதமர் மோகிதீன் யாசின் மீண்டும் ஓர் இடறலை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது!

ஆமாம்,   இப்போது துங்கு ரசாலியும் அம்னோவை "நடப்பு அமைச்சரைவையிலிருந்து விலகுங்கள்!"  என்று கூற ஆரம்பித்து விட்டார்!

துங்கு ரசாலியின் குரலுக்கு ஒரு மரியாதை உண்டு, மதிப்பும் உண்டு. 

அம்னோவின் உள்ள மற்றவர்களின் குரலுக்கு வேறு மாதிரியான "மரியாதை" உண்டு.   துங்கு ரசாலியை ஓர் ஊழல்வாதி என்று யாரும் கையை நீட்ட முடியாது! அந்த அளவுக்கு நல்ல பெயர் வாங்கியவர்.

துங்கு ரசாலியின் இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்? எல்லாருக்குமே தெரிந்தது தான். பிரதமர் மொகீதீன் தனது பெர்சாத்து கட்சியை  பல்லின கட்சியாக அறிவித்ததின் காரணமாக இப்போது பிரச்சனையில் மாட்டிக் கொண்டிருக்கிறார்!   முதலில் ஓர் இனக் கட்சியாகத் தொடரும் என்று நினைத்தவர்களுக்கு இப்போது பல இனக் கட்சி என்கிற போது அந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது தான் பிரச்சனை! அதுவே துங்கு ரசாலியின் மாற்றத்திற்கும் காரணம். 

பிரதமர் மொகிதீன் சரியான சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார் என்பது நமக்குப் புரிகிறது!

அவருக்குள்ள பிரச்சனை: மலாய் மக்களுக்கான கட்சி என்றாலும் பிரச்சனை உண்டு. பல இன கட்சி என்றாலும் பிரச்சனை உண்டு.  அப்படி ஒரு சிக்கல்.

இரண்டே இரண்டு "பெரும்பான்மையை" வைத்துக் கொண்டு ஆட்சியை நடத்த வேண்டுமென்றால்  துக்ளக் ஆட்சி தான் நடக்கும். அது தான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது!

நம்மவர்களிடம் ஒரு நம்பிக்கை உண்டு. மொகிதீன் நாட்டின் எட்டாவது பிரதமர். எட்டாம் எண் என்பது ஒன்று தூக்கிவிடும்! அல்லது தூக்குத்தூக்கி லிடும்! இப்போது அவரைத் தூக்கித் தூக்கி விட்டுக் கொண்டிருக்கிறது! அதனுடைய ராசி என்பது தூக்கும் அல்லது தாக்கும்! நல்லவர்களுக்கு நல்லது செய்யும் கெட்டவர்களுக்கு அதிகத் தீங்கிழைக்கும்.  அதுதான் இதனது எட்டாவது எண்ணின் ராசி! அவர் நல்லவரா கெட்டவரா என்பதை நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்! துன் சாமிவேலு எட்டாம் எண்ணில் பிறந்தவர். அரசியலில் அவரது உச்சத்தை யாரும் அடைந்ததில்லை ஆனால் இப்போது அவரது உச்சம் என்ன என்பதை அவனது மகனே உலகிற்கு அறிவித்து விட்டார்!

இப்போது துங்கு ரசாலின் இந்த அறிவிப்பு என்ன மாற்றத்தைக் கொண்டு வரப் போகிறது என்பதை இன்னும் கொஞ்சம் நாளில் தெரியவரும்!

வெற்றி யாருக்கு?

 "எந்த நேரத்திலும்!"  என்று எதிர்பார்க்கப்படும் பதினைந்தாவது பொதுத் தேர்தலில் மிகவும் சுவாரஸ்யமான ஒரு தேர்தல் தொகுதி என்று எடுத்துக் கொண்டால் அது எதுவாக இருக்கும்? 

                                        அன்வார் இப்ராகிம் மூத்த மகள் நூருல் இஸாவும் நடப்பு அரசாங்கத்தின் பொருளாதார அமைச்சர் முகமட் அஸ்மின் அலியும் போட்டியிடப் போகின்ற தொகுதி தான் மிக மிக சுவராஸ்யமான தொகுதியாக  இப்போது மக்களால் பேசப்படுகின்ற தொகுதியாக விளங்கிக் கொண்டிருக்கிறது     
                                        

இருவருமே நாடாளுமன்ற உறுப்பினர்கள். வருகின்ற பொதுத் தேர்தலிலும் போட்டியிட இருப்பவர்கள்.

இருவரும் ஒரே தொகுதியில் போட்டியிட்டால் என்ன நடக்கும்? வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு யாருக்குப் பிரகாசமாக இருக்கும்?

பொதுவாக நூருல் இஸாவுக்கு மக்களிடையே ஒரு செல்வாக்குண்டு. ஓர் இளமையான அரசியல்வாதி மட்டும் அல்ல. அவர் எல்லா இனத்தாரிடையேயும் மிகவும் இயல்பாக பழகக் கூடியவர். தந்தையைப் போலவே நியாயம் பேசுபவர்.  அவர் நல்லவர் என்கிற அடையாளம் எப்போதுமே அவருக்கு உண்டு. உண்மையைப் பேசும் அரசியல்வாதி என்று பெயரெடுத்தவர்.  மக்களிடைய ஓர் ஈர்ப்பு அவருக்கு உண்டு.

எந்தத் தொகுதியில் அவர் நின்றாலும் அவரால் வெற்றி பெற முடியும் என்கிற அபிப்பிராயம் பொது மக்களிடமும் உண்டு.

அஸ்மின் அலி - வேறு மாதிரியான குணாதிசயம் கொண்டவர். அவருடைய முந்தைய சரித்திரத்தை நாம் ஆராய வேண்டாம். சமீபத்திய சரித்திரம் அவருக்குப் பாதகமாக இருப்பது ஒன்றே போதும். அவர் மக்களின் வெறுப்புக்கு ஆளாகியிருக்கிறார்!

சுமுகமாக போய்க் கொண்டிருந்த அரசாங்கத்தை கவிழ்த்தவர் என்கிற பெயரோடு இப்போது ஊர்வலம் வந்து கொண்டிருக்கிறார்! இது வரை இப்படி ஒரு நிகழ்வு நாட்டில் நடந்ததில்லை. தான் பிரதமர் ஆக வேண்டும் என்னும் வெறியில் அரசாங்கத்தையே கவிழ்த்த ஒரு மனிதருக்கு மக்களிடையே  என்ன மரியாதை இருக்கும் என்பதை யோசிக்க வேண்டும்!  நாடு பெரிதா தனி மனிதன் பெரிதா!

அவருக்கென்று ஒரு சில இடங்களில் ஆதரவு இருக்கலாம். அவருடைய தொகுதிக்கு அவர் வேண்டப்பட்டவராக இருக்கலாம். எத்தனையோ "லாம்!லாம்"  இருந்தாலும் அவர் செய்த இந்த கவிழ்ப்பு வேலை எந்த காலத்திலும் மன்னிக்க முடியாத செயலாம்!

துரோகத்திற்கு முன்னுதாரணம் அஸ்மின் அலி!   ஏத்தனையோ ஊழல்வாதிகளை நாம் பார்த்திருக்கிறோம்.  அவர்களையெல்லாம் நாம் மன்னித்துவிட்டோம். ஒரு சிலரை நம்மால் மன்னிக்க முடியவில்லை. அதன் பலன் அவர்களை அரசியலிலிருந்து அப்புறப்படுத்தி விட்டோம்! 

ஆனால் அஸ்மின் அலி அப்படியா? அவர் செய்தது மாபெரும் துரோகம் அல்லவா! ஐந்து ஆண்டு காலத்தைக் கடக்க வேண்டிய அரசாங்கத்தை இரண்டு ஆண்டுகளில் மூட்டைக்கட்ட வைத்து விட்டாரே!

இப்போது அடுத்த தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டதே!  அதற்கான செலவுகள் எத்தனை எத்தனை கோடி! நினைத்தாலே வயிறு எரிகிறது அல்லவா!  அது மக்கள் பணம் அல்லவா! மக்களின் நலனுக்குச் செலவு செய்ய வேண்டிய பணம் இப்படி விழலுக்கு இறைத்த நீராக அல்லவா போய்விட்டது!

ஆக வெற்றி யாருக்கு வரும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? 

நானும் அதையே தான் நினைக்கிறேன்!

 

Friday 28 August 2020

புரிந்து கொள்ள முடியாத சில விஷயங்கள்!

 பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தைப் பற்றித் தெரியாதவர் யாரும் இல்லை!

அவர் பல மொழிகளில் பாடியிருந்தாலும் தமிழில் கொஞ்சம் அதிகமாகவே பாடியவர் என்று சொல்லலாம்.  

அவர் கொரோனா தொற்றிலிருந்து நலம் பெற பலரும் அவருக்காக பிரார்த்தனை செய்தார்கள்.  ஒரு பொதுப் பிரார்த்தனையும் அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டது. உலகளவிலும்  அதே நேரத்தில் அவ்ருக்காகப் பிரார்த்தனை செய்யப்பட்டது. அதனை முன்னெடுத்தவர்கள் இளையராஜா, பாரதிராஜா போன்றவர்கள். அனைத்தும் சரி.

நேற்றிரவு  எஸ்.பி.பாலாவின் மகன் எஸ்.பி.பி. சரண் தொலைக்காட்சியில் தோன்றி தனது தந்தை உடல் நிலை தேறி வருவதாகவும் அவரது நலனுக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். எல்லாம் சரி.

ஆனால் ஒரு விஷயத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த அறிவிப்பை அவர் ஏன் ஆங்கிலத்தில் செய்தார் என்பது தான் எனக்குப் புரியாத புதிராக இருக்கிறது.

பாலாவின் நலனுக்காக யார் பிரார்த்தனை செய்தார்கள்? பெரும்பாலோர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள், தமிழர்கள்.  உலகளவில் அவருக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். அவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள்.  இந்தியாவில் ஒரளவு அவரை அறிந்தவர்கள், அவருடைய அபிமானிகள்,   அவருக்காகப் பிரார்த்தனை செய்திருக்கலாம். அதிலே ஆந்திராவும் அடங்கும். ஆந்திராவில் தமிழ் நாட்டைப் போல பெரிய அளவில் செய்யக் கூடிய வாய்ப்பில்லை. கர்நாடக மாநிலத்திலும் வாய்ப்பில்லை. கேரள மாநிலத்திலும் வாய்ப்பில்லை.

ஆக, தமிழ் நாட்டிலும் சரி, உலக அளவிலும் சரி தமிழர்களே பாலாவின் நலனுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். தமிழ் நாட்டில்,  கிராமப்புறங்களில் உள்ள, மூலைமுடுக்குகளில் உள்ள  தமிழர்கள்,  அவருக்காகப் பிரார்த்தனைச் செய்தார்கள்.

பாலா தெலுங்கர் என்றாலும் தமிழர்களே அவரின் நலனுக்காக அதிகமாக பிரார்த்தனைச் செய்தவர்கள்.  அது தமிழர்கள் அவர் மீது வைத்திருக்கும் பாசம், பரிவு, அன்பு என்று சொல்லலாம். தமிழர்கள் அவரைத் தங்களில் ஒருவர் என்று தான் நினைக்கிறார்கள்.

ஆனால் அவரது மகன் எஸ்.பி.பி.சரண்,   அந்த அன்புள்ளம் கொண்ட தமிழர்களை,  எட்டி உதைத்து உதாசீனப் படுத்தி விட்டார் என்று தாராளமாகச் சொல்லலாம்.  சரணுக்குத் தமிழ் தெரியவில்லை என்பதால் அவர் ஆங்கிலத்தில் பேசியிருக்கலாம். ஆனால் கிராமப்புறங்களில், மூலைமுடுக்ககளில் உள்ள பாலாவின் அபிமானிகளுக்கும் அவரது செய்தி போய்ச் சேர்ந்திருக்க வேண்டுமென்றால் அவர் தமிழில் பேசியிருக்க வேண்டும். தமிழ் நாட்டில் ஆங்கிலம் தெரியாதவர்கள் இன்னும் பல கோடி மக்கள் இருக்கிறார்கள் என்பதை அறியாத அளவுக்கு சரண் விவரம் தெரியாதவரா? உலகளவில் வாழும் தமிழர்கள் தமிழ் அறியாதவர்களா? தமிழ் தெரியாதவர்கள் என்றால், தமிழை அறியாதவர்கள் என்றால் எஸ்.பி.பாலாவை அறிந்திருக்க முடியாதே!

எஸ்.பி.பாலா, கொரோனா தொற்றுக்கு முன்னர் கடைசியாக கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒரு தெலுங்கு இசை நிகழ்ச்சி என்று சொல்லப்படுகிறது. அதனை நாம் குறையாகச் சொல்லவில்லை.  ஒரு பாடகருக்குப் பாடுகின்ற வேலை தான். எந்த மொழி என்பது முக்கியம் அல்ல. 

அவர் இப்போது உடல் நலம் தேறி வருவதில் நமக்கு மகிழ்ச்சியே.  மருத்துவமனையிலிருந்து அவர் சீக்கிரம் வீடு திரும்ப வேண்டும் என்று  மீண்டும் பிரார்த்திக்கிறோம்.

மனதிலே ஒரு நெருடல். அதனை இங்கே பகிர்ந்து கொள்ளுகிறேன்.

இன்னும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை தான்!

Thursday 27 August 2020

ம.இ.கா. திருந்தி விட்டதா?

 ம.இ.கா. திருந்திவிட்டதோ என்று நினைக்கும் அளவுக்கு அவர்கள் சிலிம் இடைத் தேர்தலில் பேசுகின்ற பேச்சுக்கள் நமக்குச் சிலிர்ப்பை ஏற்படுத்துகின்றன!

அவர்கள் அப்படியெல்லாம் திருந்தி விட மாட்டார்கள் என்று நிச்சயமாக நாம் நம்பலாம்!

கடந்த கால தவறுகளை மன்னியுங்கள் என்று சொன்னாலும் கடந்து கால தவறுகளையே மன்னிக்க முடியாத போது நிகழ் கால தவறுகளையும் சேர்த்து எப்படி மன்னிப்பது என்பது தான் நமக்குப் புரியவில்லை!

ஏற்கனவே தமிழ்ப்பள்ளிக்குக் கொடுத்த நிலத்தை முழுமையாக பள்ளிக்குக் கொடுக்காமல் அதனில் பாதியை தங்களது பாக்கெட்டில் போட்டுக் கொண்டார்கள்! அதனையே இன்னும் மன்னிக்கவில்லை! அதற்குள் 2000 ஏக்கர் நிலத்தை - தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்காக கொடுக்கப்பட்ட நிலத்தை - அதனையும் அவர்கள் பாக்கெட்டில் போட்டுக் கொண்டார்கள்! கல்விக்காக கொடுக்கப்பட்ட நிலத்தையே கபளீகரம் செய்த இவர்களை எப்படி மன்னிப்பது?  இவர்களே  அரைகுறைகள்! அதற்காக சமுதாயமும் அரைகுறையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களை எப்படி மன்னிப்பது?

இதுவரை ம.இ.கா. மருத்துவக் கல்லூரி அத்தோடு பிற மேற்கல்வி நிலையங்கள்-இவைகள்அனைத்தும் இன்றைய நிலையில் யாருடைய பெயரில் இருக்கிறது என்பது மூடுமந்திரமாகத் தான் இருந்து கொண்டிருக்கிறது. இவர்கள் என்ன சொன்னாலும் நாம் இவர்களை நம்பப் போவதுமில்லை! அவர்களும் நம்மை ஏமாற்றாமல் இருக்கப் போவதுமில்லை! இது தான் நமக்கு அவர்கள் மீது உள்ள உறுதியான நம்பிக்கை!

இப்போது,  இவர்கள் கண் முன்னே,  மலாக்காவில் இவர்களுடைய ஆட்சி தான் நடக்கிறது. தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளராக ஒரு தமிழர் நியமிக்கப்படவில்லை! அதனையும் பிற இனத்தவரிடம் ஒப்படைத்து விட்டார்கள்! அதனைக் கேட்க இவர்களுக்குத் திராணியில்லை! நிசசயமாக பக்காத்தான் ஆட்சியில் இது நடக்காது என்பது நமக்குத் தெரியும். ஆனால் அவர்களை இவர்கள் குறை சொல்லுகிறார்கள்!

ம.இ.கா. திருந்திவிட்டதற்கான அறிகுறி எதுவுமே இல்லை!  திருந்தவும் மாட்டார்கள்!

நல்ல வேளை நாம் முட்டாள்களை உருவாக்கவில்லை!

 பெர்சாத்துவின் இளைஞர் பிரிவுத் தலைவரும், விளையாட்டுத் துறை துணை அமைச்சருமான வான் அமாட் பைஸால் ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார்!

இளைஞர்கள் என்றால் ஒழிக கோஷம் போட வேண்டும்! ஆக்ககரமான கருத்தைச் சொல்லக் கூடாது என்பதை மீண்டும் மெய்ப்பித்திருக்கிறார்!

ஓரு மூத்த அரசியல்வாதியான ஒற்றுமைத்துறை அமைச்சர் ஹலிமா சொன்ன ஒரு கருத்துக்கு அவர் எதிர்கருத்தைச் சொல்லியிருக்கிறார்!

அமைச்சர் தாய் மொழிப்பள்ளிகள் தொடர்ந்து  நிலைத்திருக்கும் என்று கூறியதற்கு தனது  எதிர்ப்பைக் காட்டும் வகையில் இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கிறார்! 

நாட்டின் ஒற்றுமைக்குத் தாய் மொழிப்பள்ளிகள் பங்காற்றவில்லை என்கிற அவரின் குற்றச்சாட்டின் மூலம் என்ன சொல்ல வருகிறார்? இன்றைக்கு மலாய் கட்சிகள் பல, பலப்பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கின்றன. மலாய்க்காரர்களும் பிரிந்து கிடக்கின்றனர். இதற்குத் தாய் மொழிப்பள்ளிகள் தான் காரணம் என்று சொல்ல வருகிறரா!

தாய் மொழிப்பள்ளிகள் தலைசிறந்த குடி மக்களை உருவாக்கவில்லை என்று எதனை அடிப்படையாக வைத்துக் கூறுகிறார்?  இதனைத்தான் சிறுபிள்ளைத் தனம் என்பது!  தனக்கு வயது போதாது என்பதை நிருபித்திருக்கிறார்!

தோட்டப்பாட்டாளிகளின் பிள்ளைகள் அதே தாய் மொழிப்பள்ளிகளில் படித்து, தங்களது ஏழைப் பெற்றோர்களின் பணத்தில் படித்து டாக்டர்களாகவும், வழக்குரைஞர்களாகவும் அந்தக் காலத்திலேயே நாட்டில் பணிபுரிந்திருக்கிறார்கள்  அவர்களுக்கு அரசாங்கம் எந்தப் பண உதவியும் செய்யவில்லை. எல்லாம் சொந்தப் பணம். எந்த சலுகையும் கொடுக்கப்படவில்லை!  அதுவே தாய் மொழிப்பள்ளிகளின் வெற்றி. வேறு என்ன சான்றுகளைக் எதிர்ப்பார்க்கிறீர்கள்!

ஒரு இன அரசியல் கடைப்பிடிக்கப்படும் நாட்டில் திறமையற்றோர் தான் பதவிக்கு வர முடியுமே தவிர திறமையாளர்கள் ஒதுக்கப்படுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை!

ஓர் அமைச்சர் அவருடைய தகுதிக்கு ஏற்ப பேச வேண்டுமே தவிர இப்படி தான்தோன்றித்தனமாக பேசுக்கூடாது! நாட்டின் சரித்திரைத்தைத் தெரிந்து கொண்டு பேச வேண்டும். தெரியாவிட்டால் அது பற்றிப் பேசக்கூடாது!

நல்ல வேளை நமது தாய் மொழிப்பள்ளிகள் முட்டாள்களை உருவாக்கவில்லை என்பதில் நமக்கு மகிழ்ச்சியே

Wednesday 26 August 2020

தூக்குத் தண்டனை பெரும் மலேசியப் பெண்

 

தெரிந்து நடக்கிறதா அல்லது தெரியாமல் நடக்கிறதா என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால் நடக்கிறது! தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது! யாரை நோவுவது?

கஞ்சா கடத்தும் மலேசியப் பெண்கள் அதிலும் குறிப்பாக மலேசிய இந்தியப் பெண்கள் பல நாடுகளில் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கின்றனர் என்கிற செய்தியை முன் ஒரு முறை படித்ததுண்டு.

ஆஃப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் பல பெண்கள்  சிறையில் அடைப்பட்டிருக்கின்றனர். ஒரே காரணம் தான். அனைத்தும் கஞ்சா கடத்தல் வழக்குகள். 

அகப்பட்டால் என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். நாம் வெளிநாடு போக வேண்டிய அவசியமில்லை. நம் நாட்டிலேயே கஞ்சா விற்றால் என்ன தண்டனை என்பது நமக்குத் தெரியும். இங்கு என்ன தண்டனையோ அதே தண்டனை தான் மற்ற நாடுகளிலும். கஞ்சா விற்பனையை யாரும் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.  மிக மிகக் கொடியது. சமரசம் பேச வாய்ப்பில்லை!    

இந்த நிலையில் இந்தப் பெண், கலைவாணி முனியாண்டி, என்பவர் வியட்னாமில் கையும் களவுமாகப் பிடிபட்டிருக்கிறார். கலைவாணி பல நாடுகளுக்குச் சென்று மற்றவர்களின் பொருட்களைக் கொண்டு போவதும், கொண்டு வருவதுமான தொழிலில் ஈடுபட்டிருப்பவர்.

அவர் கடைசியாக மலேசியாவிலிருந்து வியட்னாமுக்குப் பயணம் செய்து  அங்கிருந்து பிரேசில் நாட்டுக்குப் பயணமாகியிருக்கிறார். பின்னர் பிரேசிலிலிருந்து ஓர் ஆப்பரிக்க நபர் ஒருவர் கலைவாணி மூலம் வியட்னாமில் உள்ள ஒர் ஆப்பரிக்க நபருக்குச் சில உணவுப் பொருட்களைக் கொடுத்து அனுப்பியிருக்கிறார். அந்த உணவுப் பெட்டிகளில் போதைப் பொருட்கள் இருந்ததாக வியட்னாம் அதிகாரிகள் அவரை விமான நிலையத்தில் கைது செய்திருக்கின்றனர்.

இப்போது தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் கலைவாணி இனி ஒளியைக் காண முடியாது. 

நாம் சொல்ல வருவதெல்லாம் போதைப் பொருள்களைக் கடத்தும் வேலையில் ஈடுபட வேண்டாம் என்பதே. பிடிப்பட்டால் அதன் முடிவு என்னவென்பது உங்களுக்கே தெரியும்.

இதில் பாவ புண்ணியம் பார்க்கும் நிலையில் யாரும் இல்லை.  மனித உயிர்களின் மேல் பாசம் இல்லதவர்களை யாரும் மன்னிக்க மாட்டார்கள்!

தூக்குத் தண்டனை? வேதனையே!

                

Tuesday 25 August 2020

மேம்பாட்டுத் திட்டங்களில் கை வைக்காதீர்!

 முந்தைய பக்காத்தான் அரசாங்கத்தால் கொண்டு வந்த மேம்பாட்டுத் திட்டங்களில் கை வைக்காதீர் என்று இன்றைய அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்ளுகின்ற நிலைமையில் நாம் தள்ளப்பட்டு இருக்கிறோம்.

இங்கு ஒரு கேள்வி எழத்தான் செய்யும். பாரிசான் அரசாங்கம் கொண்டு வந்த திட்டங்களில் பல வேண்டாமென்று ஒதுக்கப்பட்டிருக்கின்றன அல்லது முற்றிலுமாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. 

ஆனால் பக்காத்தான் அரசாங்கத்தையும் பாரிசான் அரசாங்கத்தையும் எந்த வகையிலும் ஒப்பிட முடியாது.  நஜிப் அரசாங்கம் மக்களின் பணத்தைக் கொள்ளையடிப்பதில் தீவிரம் காட்டியது. பக்கத்தான் அரசாங்கம், டாக்டர் மகாதிர் தலைமையில்,  பல மேம்பாட்டுத் திட்டங்களை உருவாக்கியது. இரண்டு கட்சிகளுமே இரு வேறு துருவங்கள்!  வயதான காலத்தில் டாக்டர் மகாதிர்  நாட்டின் வளத்தைக் கொள்ளையடிப்பதில் ஈடுபடுவார் என்றால் அதனை யாரும் நம்பத் தயாரில்லை. நாட்டின் மேம்பாட்டில் உண்மையான அக்கறைக் கொண்டிருந்தார் என்பதில் எந்த ஐயமுமில்லை.

அக்கறையோடு குறைந்த நிதியைக் கொண்டு உருவாக்கப்பட்ட பல திட்டங்கள் இன்றைய அரசாங்கத்தால் தேவையற்றது என்று போகிற போக்கில் தள்ளுபடி செய்வது அரசாங்கத்திற்கு எந்த நல்ல பேரும் கிடைக்கப் போவதில்லை.

ஓரிரு பெரும்பான்மையை மட்டுமே வைத்துக் கொண்டு 'அதை வெட்டு,  இதை வெட்டு" என்பது மக்களிடையே எந்த நல்ல பெயரையும் கொண்டு வரப் போவதில்லை!

பெரும்பாலான திட்டங்கள் முன்னாள்  நிதியமைச்சர் லிம் குவான் எங் மூலமே வரையப்பட்டன என்றாலும் டாக்டர் மகாதிரின் ஒப்புதல் மூலமே அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தன என்று உறுதியாக நம்பலாம். நிச்சயமாக அந்த திட்டங்களில் எந்த குறைபாடும் இருக்காது என நம்பலாம்.

ஆனால் இன்றைய நிலைமை வேறு. இது அலிபாபா கூட்டம்!  நம்பும்படியாக யாரையும் சுட்டிக்காட்ட முடியாது! ஒன்றை ஒதுக்கிவிட்டு இன்னொன்றை கொண்டு வந்தால் பணம் கொள்ளையடிப்பதற்குத் திட்டம் தீட்டுகிறார்கள் என்பது தான் பொது மக்களின் எண்ணமாக இருக்கும்!

இருக்கப் போவதோ சில நாள்கள் தான் என்கிற எண்ணம் இருந்தால் இப்போது என்ன செய்கிறீர்களோ அதனையே தொடருங்கள்! இன்னும் சில ஆண்டுகளாவது  அரசாங்கத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்னும் ஆசை இருந்தால் முந்தைய அரசாங்கத்தையே பின் பற்றுங்கள்!

வேறு என்ன சொல்ல!

சின்ன வயது! உயர்ந்த உள்ளம்!

 

 

சின்ன வயது இளைஞன் தான், உள்ளமோ மகா மகா பெரிசு என்று தான் சொல்ல வேண்டும்.

மற்றவர்களுக்கு உதவ கோடிசுவரனாக இருக்க வேண்டும் என்னும் அவசியமில்லை அல்லது இலட்சாதிபதியாக இருக்க வேண்டும் என்னும் அவசியமில்லை! அல்லது ஐந்து இலக்கத்தில் சம்பளம் வாங்க வேண்டும் என்னும் அவசியமில்லை!

நமக்குக் கிடைப்பதில் கொஞ்சம் மற்றவரோடு பகிர்ந்து கொண்டால் அதுவே போதும்.  நமது சமுதாயத்தையே முன்னேற்றி விடலாம்! குடிப்பதில் காட்டும் ஆர்வத்தை வேறெதிலும் நாம் காட்டுவதில்லையே!  பெருத்த சோகம்! என்ன செய்வது?

மேலே படத்தில் காணப்படும் அந்த இளைஞனுக்கு சுமார் 20-25 வயது இருக்கலாம். பெயர் தமிழரசன். மதுரை, அலங்காநல்லூரைச் சேர்ந்தவர்.  பெற்றோர்களை இளம் வயதிலேயே இழந்தவர்.  ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி படித்து பி.எஸ்ஸி வரை கல்வி கற்றவர். வேலை தேடிச் சென்னை வந்தவருக்குப் பசியும் பட்டினியும்  தான் கிடைத்தது. சென்னை அவரை வாழ வைக்கவில்லை, பிச்சை எடுக்கத்தான் வைத்தது. திரும்பவும்  அலங்காநல்லூர் வந்தார்.   தேனீர் வியாபாரத்தில் ஈடுபட்டார். 

இந்த வியாபாரத்தின் மூலம் கிடைக்கின்ற பணத்தில், ஒரு பகுதியை, அவரால் முடிந்த அளவுக்கு ஒரு சில ஏழை மக்களுக்கு உணவு அளித்து வருகிறார்!  அந்த உணவுகளையும் அவரே தயார் செய்கிறார்.அத்தோடு சமீபத்தில் இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு தனி ஆளாக போராடிக் கொண்டிருந்த ஒரு பெண்மணிக்கு ஒரு தையல் மெஷின் வாங்கிக் கொடுத்திருக்கிறார் என்னும் செய்தியும் வேளியாயிருக்கிறது. அந்த தையல் மெஷினின் விலை ருபாய் பதினெட்டாயிரம்!

இதிலிருந்து ஒரு பாடத்தை நாம் கற்றுக் கொள்ளலாம். அதன் மூலம் சிறிதாக இருக்கலாம்.  ஆனால் அதன் வளர்ச்சி அபாரமாக இருக்கும் என்பது இப்போது நமக்குத் தெரிகிறது. இப்போது அந்த இளைஞனுக்கு  நல்ல உள்ள படைத்த பலர் உதவ முன் வந்திருக்கின்றனர். பலர் உதவுவதால் அவரும் தனது உதவிகளைப் பரவலாகச் செய்ய முடிகிறது. இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. காரணம் ஒத்த மனத்தோர் பலர் இருக்கின்றனர். யார் முன் வந்து செய்கிறார்களோ அவர்களோடு அந்த ஒத்த மனத்தோர் சேர்ந்து கொள்கின்றனர். 

அந்த இளைஞரும் தனது வியாபாரத்தை மோட்டார் சைக்கிளில் வைத்து வியாபாரம் செய்ய வேண்டும். அல்லது நல்லபடியாக ஒரு தேனீர் கடையை வைத்து தொழிலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போக வேண்டும். அதன் மூலம் இன்னும் பலர் பயனடைய வேண்டும். அந்த வளர்ச்சி அவருக்கும் இருக்க வேண்டும் அதே போல ஏழை மக்களுக்கும் போய்ச் சேர வேண்டும்.

நல்ல மனத்தோடு எதைச் செய்தாலும் அது நல்லதாகவே நடக்கும். அதுவும் இந்த கொரோனா தொற்று நோயினால் பல குடும்பங்கள் இன்று சின்னாபின்னமாகி விட்டன.

நல்லதைச் செய்வோர் இன்னும் பெருக வேண்டும்!

Sunday 23 August 2020

எவ்வளவு அபராதம் விதிக்கலாம்?

 தோட்டத் தொழில் மூலப்பொருள் அமைச்சர் கைருடீன் விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாக வெடித்துக் கொண்டிருக்கிறது!

ஒரே காரணம் அவர் அமைச்சர் என்பதால் அந்தப் பிரச்சனையை  மூடி மறைக்க நினைத்தது அரசாங்கம்! அது எவ்வளவு பெரிய தவறு என்பதை இப்போதுதான் அரசாங்கத்திற்குப் புரிகிறது.

மக்களுக்கு வெட்ட வெளிச்சமாக தெரிந்த பிரச்சனையை இப்படி மூடி மறைப்பதால் யாருக்கு என்ன இலாபம்?

முதலாவது அமைச்சர் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.  துருக்கி நாட்டுக்குச் சென்று திரும்பியவர் அவர் மட்டும் அல்ல.  அவரது குழுவினரின் நிலை என்ன என்பது தெரியவில்லை. 

இன்று நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் கிளர்ந்து எழுகின்றது என்றால் இவரும் இவரின் குழுவினரும் காரணமாக இருக்கலாம்! இவர் அமைச்சர் என்பதால் கொரோனா தொற்று தொற்றாது என்று யாராலும் உறுதி செய்ய முடியாது!

ஆனால்  உண்மை நிலை என்ன?  இன்றைய அரசாங்கம் நிலைத்து நிற்பதற்கு பாஸ் கட்சியின் ஆதரவு தேவை.  கைருடின் பாஸ் கட்சியைச் சேர்ந்தவர். இன்னொரு பக்கம் அமைச்சர் கைருடினை ஏன்? பாஸ் கட்சியினரை அம்னோ விரும்பவில்லை! அதனால் கைருடின் பதவி விலக வேண்டும் என்று அம்னோ விரும்புகிறது!  அதனால் தான் போலிஸ் புகார்கள் இணையத்தளத்தில் விமர்சனங்கள் என்று இத்தனை ஆர்ப்பாட்டங்கள்!

இதனைக் கூட அரசியலாக்கி விட்டனர்!  இது சரியா, தவறா  என்பது பற்றி யாருக்கும் கவலையில்லை!

அமைச்சருக்கு 1000 வெள்ளி அபராதம் என்றனர்.  "நான் ஐந்து மாத சம்பளத்தைத் தருகிறேன் !" என்கிறார் அவர்!

ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது.  சிவகங்கையிலிருந்து கொரோனா தொற்று நோயை இறக்குமதி செய்த உணவக உரிமையாளருக்கு அந்த மாநில நுகர்வோர் சங்கம்  பதினைந்து இலட்சம் வெள்ளி அபராதம் விதிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது.  அதனையே அளவுகோளாக வைத்து நமது அமைச்சருக்கும் அதனையே அபராதமாக விதிக்க வேண்டும் என்பதே அனது அபிப்பிராயம். அத்துடன் சிறைத் தணடனையையும் அவர் அனுபவிக்க வேண்டும். அரசியல்வாதிகளுக்குச் சிறைத் தண்டனை என்பது ஒரு பொருட்டல்ல! சிறையில் இருக்கும் போதே அவர்கள் வெளி நாடுகளுக்கெல்லாம் உல்லாசப் பயணம் மேற்கொள்வார்கள்!  அது அரசியல்வாதிகளின் அரசியல் உரிமை!

ஆனால் அவர் அமைச்சராயிற்றே!  நாம் சொல்லுவது எதுவும் நடக்காது! அதுவும் எந்த நேரத்திலும் கவிழலாம் என்னும் நிலையில் இருக்கும் அரசாங்கத்தை தூக்கி நிறுத்தும்  தூணாக இருக்கிறார் அமைச்சர்! பொது மக்கள் சொல்லுவது எதுவும் எடுபடாது!

எவ்வளவு அபராதம் விதிக்கலாம்? சும்மா பார்த்து, சிரித்துவிட்டுப் போக வேண்டியது தான்!

Saturday 22 August 2020

தேவையா? தேவையே இல்லை!

பாலர் பள்ளி ஆசிரியை, இந்திரா காந்தி ஆவேசப்படுவதில் அர்த்தமுண்டு!

அவருக்குத் தேவை ,மதம் மாறிய அவரது முன்னாள் கணவர் முகமது ரிட்சுவான் அப்துல்லாவால் கடத்திக் கொண்டு போகப்பட்ட  தனது மகள் பிரசன்னா டிக்சா. அந்த குழந்தை மட்டும் தான் அவர் கேட்பதெல்லாம். 

ஒரு வயதாக இருக்கும் போது கடத்திக் கொண்டு போகப்பட்டவர் இப்போது பதினோரு ஆண்டுகள் ஆகிவிட்டன. குழந்தையின் நிலை தாய்க்குத் தெரியவில்லை. 

பதினோரு ஆண்டுகள் ஆகியும் தனது மகளின் நிலை என்னவென்று அறியாத ஒரு தாயின் நிலை  எப்படி இருக்கும் என்பதை யோசித்திருந்தாலே இந்தப் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்திருக்கும்,.

ஆனால் பலர் இதனை அறிந்திருக்கவில்லை. குறிப்பாக காவல்துறையினர்!  தாய் மகள் பிரச்சனைகளை இவர்கள் அறியாதவர்கள். காக்கி உடைகளுக்குப் பின்னால் கனிவு இருக்க நியாயமிலை!

இப்போது கிடைத்த செய்திகளின் படி இந்திரா காந்தி தனது முன்னாள் கணவருடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன என்பது தெரிகிறது. ஆனால் இந்திரா காந்தி அதனை விரும்பவில்லை,  விரும்பமாட்டார் என்பது நமக்குத் தெரியும். 

மதத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு, ,தனது குழந்தையை கடத்தி வைத்துக் கொண்டு, பதினோரு ஆண்டுகள் அலைக்கழித்த ஒரு நபரை பார்க்க வேண்டும் என்கிற அவசியம் அவருக்கு இல்லை! சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் கூட அவரைப் பார்க்க வாய்ப்பில்லை!  அதனையும் அவர் விரும்ப மாட்டார்! தனது முந்தைய மதத்திற்கே திரும்புகிறேன் என்றால் கூட அவரை வரவேற்க யாருமில்லை!

இது ஒரு சாதாரண விஷயமல்ல.ஒரு"முன்னாள்" இந்த அளவுக்கு விஷத்தைக் கக்குவான் என்று எந்த மனைவியும் எதிர்பார்த்திருக்க மாட்டாள்!. அதற்கான பலனை அவர் அனுபவித்துத் தான் ஆக வேண்டும்!

இங்குத் தேவை பேசுவதற்கான ஏற்பாடுகள் அல்ல! குழந்தை தாயிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அது மட்டுமே! 

பேசுவதற்கான ஏற்பாடுகள் தேவையா?  தேவையே இல்லை!

பொய் சொல்லிக் கோயில்களை உடைக்கலாமா?

 பொய் சொல்லுகின்ற வாய்க்குப் போஜனம் கிடைக்காது என்பது இன்றும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு வழக்குமொழி தான்!

அப்படி போஜனம் கிடைக்காத பொய்யுரைத்தவனை  யாரையும் பார்த்திருக்கிறீர்களா?  இது பெரிய விஷயம் அல்ல.  நம்மைச் சுற்றிப் பார்த்தாலே போதும். பொய் சொல்லி வயிறு வளர்த்த எந்த அரசியல்வாதியாவது நிம்மதியாக சாப்பிடுகிறானா என்று பாருங்கள்! அது போதும்.

 இந்த வழக்குமொழி மூலம் பொய் சொல்லுபவனுக்குக் கிடைக்கும் பெரிய தண்டனையையே சுட்டிக் காட்டியிருக்கிறான் தமிழன்! 

அப்படியென்றால் பொய் சொல்லிக் கோயில்களை உடைத்தால் அவனுக்குக் கிடைக்கும் தண்டனை என்ன? 

பொதுவாக பொய் சொல்லுபவனுக்கு முதலில் நிம்மதி இல்லை. அதுவும் கோயில்கள் அல்லது எந்த வழிபாட்டுத்தளங்களாக இருந்தாலும் அதனை அழிப்பவனுக்கு, அவன், தன்னைத் தானே அழிப்பதற்குச் சமம். அழிப்பவன், தான் சார்ந்த வழிபாட்டுத்தளமாக இருக்கலாம் அல்லது பிற மத வழிபாட்டுத் தளமாக இருக்கலாம்.  ஆனால் அதன் முடிவு என்னவோ ஒன்று தான்!

வழிபாட்டுத்தளங்கள் என்றாலே அங்கே ஒரு சக்தி உண்டு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 

இங்கு நாம் அழிப்பதற்கு அல்லது உடைப்பதற்குக் காரணமானவனைப் பற்றித் தான் பேசுகிறோம். கூலிக்கு மாரடிப்பவனைப் பற்றி அல்ல.

ஒரு முறை கோயில் உள்ள சிலைகளை அகற்றுவதற்காக,  படித்த,  வழக்கரைஞன் ஒருவன் கம்பீரமாக யாரையும் பொருட்படுத்தாமல் வந்து சிலை மீது கை வைத்தான். அதே நிமிடத்தில் அவன் இடுப்பைப் பிடித்துக் கொண்டான்! அதன் பின்னர் பல மாதங்கள் நிமிர்ந்து நிற்க முடியவில்லை! கூட இருந்த,  அவன் கூட வந்த கூட்டம்,  அனைவரும் ஓடிப் போய்விட்டனர்!

அப்படி என்றால் பிற மதத்துவன் ஒருவன் இப்படிச் செய்தால் என்ன ஆகும்? எல்லாமே ஆகும்! அவனுக்கும் தண்டனைகள் உண்டு! அவன் மனநிலை பாதிக்கப்பட்டு சாவான் அல்லது சொல்ல முடியாது பிற நோய்கள் வந்து சாவான்!

அது நமக்குத் தெரிவதில்லை. கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தால் என்ன நடக்கிறது என்பது தெரியும்! வெளியே நமக்குத் தெரியவில்லையே தவிர நடப்பது நடந்து கொண்டு தான் இருக்கிறது! அவனவன் அனுபவிக்க வேண்டியதை அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறான்!

கோயில்கள் மட்டும் அல்ல எந்த வழிபாட்டுத்தளமாக இருந்தாலும்  உடைப்பது என்பது அவனது குடும்பத்தை உடைப்பது  போன்றது. அதனால் பொய் சொல்லி உடைப்பது என்பது மகா பெரிய பாவம்! மகா பெரிய அயோக்கியத்தனம்! உடைப்பதற்கு யார் காரணமோ அவனது மூளை முடங்கிப் போகும்

பயணங்கள் தொடர்கின்றனவா?

 பத்திரிக்கைச செய்திகளை வைத்துப் பார்க்கும் போது வெளி நாட்டுப் பயணங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன  என்று தான் நமக்குத் தோன்றுகிறது!

கொரோனா தொற்று என்பது ஆள் பார்த்து வருகிறதா என்கிற ஐயம் கூட நமக்கு ஏற்படுகிறது!  இந்த தொற்று நோயின் ஆரம்ப காலத்தில்  "இந்த தொற்று  எங்களை ஒன்னும் செய்யாது!" என்று சவால் விட்டவர்கள் தான் நாடு  பூராவும் பரப்பி விட்டனர்! இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் அனுபவபூர்வமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்!

இப்போது அரசாங்கம் எல்லா நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. பள்ளி மாணவர்கள் கூட முகக்கவசம் அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றது.  முகக்கவசம் அணியாதவர்களுக்கு தண்டனைகள் உண்டு.

ஆனாலும் தவறுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஒரு சிலர் செய்கின்ற தவறுகள் தெரிந்தும் அரசாங்கம் கண்களை மூடிக் கொள்கிறது! அதுவும் பதவியில் உள்ளவர்கள் எதற்கும் பயப்படுபவர்களாக இல்லை! தங்களுக்கு எந்த வியாதியும் ஒன்றும் செய்யாது என்று எண்ணுகின்றனர்! இவர்களுக்கும் ஊரடங்கை மீறும், சட்டங்களை மீறும் அகராதி இளைஞர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை! ஒன்று பதவியைக் காட்டி பல் இளிக்கிறது இன்னொன்று  கத்தியைக் காட்டி பல்லைக்காட்டுகின்றது!

கொரோனா தொற்று நோய்க்கு ஜாதி, மதம் வயது வித்தியாசம் என்றெல்லாம் ஒன்றுமில்லை. யாருக்கும் வரலாம். யாரும் சாகலாம், சாகாமலும் போகலாம்!

கேரளா, இந்தியாவில் 103 வயது,  93 வயது, 88 வயது  பெரியவர்கள் குணமடைந்திருக்கிறார்கள்! அது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் குழந்தைகள், இளைஞர்கள் மரணமடைந்து வருகிறார்கள்!  எதையும் சொல்வதற்கில்லை!

நமது நிலை என்ன? அரசாங்கம் சொல்லுகின்ற அனைத்துக் கட்டுப்பாடுகளையும் பின்பற்ற வேண்டும். "என்னை ஒன்னும் செய்யாது!" என்கிற மனப்போக்கு மாற வேண்டும்.

அதிகாரத்தில் உள்ளவர்களை நாம் பின்பற்ற வேண்டாம். அவர்களுக்குச் செத்தாலும் பணம் வரும் சாகாவிட்டாலும் பணம் வரும்! அதிகார துஷ்பிரயோகம் என்பது எல்லாக் காலத்திலும் உண்டு. அது அதிகாரிகளிடம் உண்டு. அரசியல்வாதிகளிடமும் உண்டு. அவர்களைப் போல நாம் செயல்பட முடியாது. அப்படி செயல்படவும் வேண்டாம்.

மிக முக்கியம் அரசாங்க வகுக்கும் கட்டுப்பாடுகளுக்குச் செவி மடுக்க வேண்டும்! அதுவே நமது கடமை!

Friday 21 August 2020

ஒற்றுமை குறைகிறதா?

 நாட்டில் ஏற்படுகின்ற குழப்பங்களுக்கு யார் காரனம்?

அதாவது இனங்களுக்கிடையே ஒற்றுமை குலைவதற்குக் காரணம் தாய் மொழிப் பள்ளிகள் தான் என்பதாக ஒரு சில அரசியல்வாதிகள் தேர்தல் வருகின்ற காலங்களிலெல்லாம் கூறி வருகின்றனர்.

ஆனால் பொது மக்கள் என்ன கூறுகிறார்கள்? தேர்தல் காலங்களில் எந்த விஷயம் முக்கியமாகப் பேசப்படுகிறது என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

தேர்தல் காலங்களில்: அரசியல்வாதிகளுக்கு இவைகள் தான் முக்கிய இலக்கு:  1)  தாய் மொழிப்பள்ளிகள்  2)  சமயம் ஒழிந்துவிடும் 3) தேசிய மொழி தனது முக்கியத்துவத்தை இழந்துவிடும் 4) மலாய் மக்கள் பின் தங்கிவிடுவர் 5) சீனர்கள் பணக்காரர்கள் 6) மலாய் மக்கள் தொழிலில் முன்னேறமுடியாது!

பொதுவாக இப்படித்தான் அரசியல்வாதிகளின் பேச்சுக்கள் இருக்கும்!

தாய் மொழிப்பள்ளிகள் என்பது இந்நாட்டுக்கு ஒன்றும் புதிதல்ல. சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. அப்படியென்றால் இந்த இருநூறு ஆண்டுகளாக ஒற்றுமை இல்லாமல் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? அதாவது அடிதடி சண்டையோடு தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? 

அப்படியெல்லாம் ஒன்றும் தெரியவில்லையே!

தாய் மொழிப்பள்ளிகள் ஒற்றுமையைக் குலைக்கின்றன என்று சொல்லுபவர்கள் எந்தத் தாய்மொழி பள்ளியில் படித்தார்கள்?  

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இன்றைய தேசியப் பள்ளிகள் தான் ஒற்றுமையைக் குலைக்கின்றன என்பது சீன, இந்திய பெற்றோர்களுக்குத் தெரிகிறது. தேசியப் பள்ளிகள் சமயப் பள்ளிகளாக மாறி வருகின்றன என்பது தான் குற்றச்சாட்டு.  இது நாள் வரை அது பற்றி எந்த ஒரு தீர்வும் காணப்படவில்லை! 

தாய் மொழிப்பள்ளிகள் என்பது ஆறு ஆண்டுகள் மட்டும் தான். அதன் பின்னர் மாணவர்கள் பல ஆண்டுகள் தேசிய மொழிப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என்று தொடர்கிறது கல்வி. 

மேற்கல்வி பயிலும் போது மாணவர்களின் ஒற்றுமையைக் குலைப்பவர் யார்? சீன, இந்திய மாணவர்கள் பேச முடியாதவாறு வாயை அடைப்பவர் யார்? முதல் ஆறு ஆண்டுகள் மாணவர்களுக்கு இன வேற்றுமை புகட்டப்படுவதில்லை. அதன் பின்னர் தான் இன வேற்றுமை புகுத்தப்படுகின்றது. 

இந்த நிலையில் தாய் மொழிப்பள்ளிகள் தான் மலேசியர்களிடையே  ஒற்றுமைக் குறைவுக்குக் காரணம் என்றால் எப்படி ஏற்றுக் கொள்ளுவது? ஜாகிர் நாயக், பெர்லிஸ் முப்தி, ஸம்ரி வினோத், முகமது ரிட்சுவான் அப்துல்லா போன்றவர்கள் இன ஒற்றுமையை வளர்ப்பவர்களா?

தாய் மொழிப்பள்ளியில் பயின்றவர்கள் யாரேனும் இன ஒற்றுமையைக் குலைத்தவர்கள் என்று இது நாள் வரை குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றார்களா?

என்னைக் கேட்டால் மலேசியரிடையே ஒற்றுமையில்  குறைகள் இல்லை.  எல்லாம் வழக்கம் போலத்தான் நடந்து கொண்டிருக்கிறது. அரசியல்வாதிகளின் அட்டூழியங்களைத் தவிர வேறு குறைகள் ஏதும் இல்லை என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது/

ஒற்றுமை நம்மிடையே வலிமையாகத்தான் இருக்கிறது!

Thursday 20 August 2020

விலங்கை விட கொடியவர்களா நாம்?

 விலங்குகள்   கொடியவை  என்று நாம் சொல்லுகிறோம்!

அதனை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மனிதன் விலங்குகளை விட கொடியவனாக இருக்கிறான்! 

நமது வீடுகளில் விலங்குகளை என்ன பாடு படுத்துகிறார்கள். அப்படி ஒன்றும் நாம் கொடூரமான மிருகங்களை வீடுகளில் வளர்ப்பதில்லை.

நாம் வளர்ப்பதெல்லாம் நாய், பூனை - இவைகள் தாம்.

இந்த விலங்குகளை எப்படி நாம் நடுத்துகிறோம்! 

சமீபத்திய செய்திகள் நம்மை வருத்தத்திற்கு உள்ளாக்குகின்றன. இரண்டு பூனைகள் துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கின்றன. இன்னொரு செய்தி துணி துவைக்கும் இயந்திரத்தில் வைத்து அரைக்கப்பட்டிருக்கின்றன. நாய்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கின்றன.  நாயொன்று காரில் பின்னால் வைத்து இழுக்கப்பட்டிருக்கின்றது.

இப்படி பல செய்திகள். இந்த செய்திகளைக் கேட்கும் போது மனிதன் இந்த அளவுக்குக் கொடூரமானவனா என்று அதிர்ச்சியைக் கொடுக்கிறது.

நம் வீடுகளில் பூனைகளை வளர்க்கிறோம். குட்டிகள் போடுகின்றன. கடைசியில் பூனைகளையும் குட்டிகளையும் கொண்டு போய் யார் வீட்டிலோ விட்டுவிட்டு ஓடி வந்து விடுகிறோம். இல்லாவிட்டால் குப்பைத் தொட்டியில் போட்டு விடுகிறோம்.

பூனைகளை, நாய்களை - அதிலும் அல்சேஷன் நாய்களை - ஆசை ஆசையாக பணம் போட்டு வாங்கி வளர்க்கிறோம். ஏதோ ஒரு காரணம் அதனை எதிர்பார்த்தபடி வளர்க்க முடியவில்லை. என்ன செய்கிறோம்?  நாய்களை எங்கேயோ - காடுகளாகக் கூட இருக்கலாம் - அங்கே துரத்திவிட்டு வந்து விடுகிறோம்.

வேண்டாத பூனைகள். நாய்கள்- இவைகளுக்கு அடைக்கலம் தரும் விலங்கு நல காப்பகங்கள் இருக்கின்றன.  அங்கே போய் உங்களது வேண்டாத நாய் பூனைகளை விட்டுவிட்டால் அவர்கள் அவைகளைக் கவனித்துக் கொள்வார்கள். 

நாம் எந்த நல்ல செயல்களையும் செய்ய மறுக்கிறோம்.  விலங்குகளுக்குக் கொடூரமான தண்டனைகளைக் கொடுக்க விரும்புகிறோம். நமது மனம் விலங்குகளை விட கொடூர மனம் கொண்டதாக இருக்கிறது.

ஆமாம், அது உண்மை தானே? சமீப காலத்தில் மனிதனின் செயல்கள் மிக மிகக் கொடூரமாக இருக்கின்றன.

ஆம்! விலங்குகளை விட கொடூரமானவர்களாக நாம் மாறிக் கொண்டிருக்கிறோம்!

கொஞ்சம் ஒளி தெரிகிறது!

 தேசிய  காவல் படைத் தலைவர், டான்ஸ்ரீ அப்துல் அமீது பாடோர்  இந்திரா காந்தியின் குடும்பத்திற்கு ஒரு நல்ல செய்தியை வழங்கியிருக்கிறார்!

அது நம்பிக்கை தரும் செய்தி. கொஞ்சம் ஒளி தெரிகிறது.

இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் ரிட்சுவானைக் கண்டுபிடிக்கும் விவகாரத்தில் காவல் படையின் மூத்த அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதாக காவல்துறைத் தலைவர் கூறியிருப்பது கொஞ்சம் நம்பிக்கையைத் தருகிறது.

கடந்த சில வாரங்களாகவே காவல்படைத் தலைவர் இந்த விவகாரத்தில் மூத்த அரசியல்வாதி ஒருவரின்   உதவி நாடப்பட்டிருப்பதாக கூறி வந்திருப்பதை நாம் ஞாபகப்படுத்த விரும்புகிறோம்.

பரவாயில்லை, ஏதோ,   எங்கிருந்தோ இது ஆரம்பிக்கப்பட வேண்டும். இது நாள் வரை எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில் இப்போதாவது  நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்களே அது நமக்குச் சந்தோஷம் தான்.

ஆனால் பல முறை இப்படித்தான் சொல்லுவதும் அப்புறம் இருக்கும் இடம் தெரியவில்லை என்பதும் வழக்கமாக இருந்து வந்திருக்கிறது!

இந்த முறை கொஞ்சம்  வித்தியாசம் தெரிகிறது. காவல்துறைத் தலைவர் மீண்டும் மீண்டும் நம்பிக்கைத் தரும் வார்த்தைகளை உதிர்த்துக் கொண்டு  வந்திருக்கிறார்.  அவர் பேச்சில் உண்மை தெரிகிறது. கொஞ்சம் நியாயம் தெரிகிறது. பெற்ற  குழந்தையைப் பிரிந்து வாழும் ஒரு தாயின் வேதனை அவருக்கும் தெரிகிறது. நாமும் அவரை நம்ப வேண்டும் என்கிற எண்ணம் தோன்றுகிறது.

நல்லதையே நினைப்போம். இம்முறை அரசியல் தலையீடு எதுவும் இருக்காது என்பதை விட மதவாதிகளின் தலையீடு இருக்காது என நம்புவோம்.

ரிட்சுவான் அடிக்கடி இடம் மாறுகிறார் என்பதெல்லாம் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை! என்னமோ காவல்துறை சொல்லுவதை நாம் நம்ப வேண்டியிருக்கிறது. அது தான் இத்தனை ஆண்டுகளாக - சுமார் பதினோரு ஆண்டுகளாக - இந்த இழுத்தடிப்பு நடந்து வந்திருக்கிறது.

நாம் மேலே சுட்டிக்காட்டியது போல காவல்துறைத் தலைவரின் பேச்சில் இப்போது ஒரு சில மாற்றங்கள் தெரிகின்றன.  அதனாலேயே நாம் நம்ப வேண்டிய ஒரு கட்டாயத்தில் இருக்கிறோம்.

இந்த முறை, காவல்துறை,  திடீர் பல்டி அடிக்காது என்று நம்புகிறோம். மீண்டும் மீண்டும் அந்த பழைய பல்லவியையையே பாடாது என நம்புகின்றோம்.

காவல்துறைத் தலைவரை நாம் நம்புகிறோம். அவரது பேச்சில் மாற்றம் தெரிகிறது. கொஞ்சம் நம்பிக்கை தெரிகிறது.

சீக்கிரம் இந்தப் பிரச்சனையில் ஒரு முடிவு தெரியும் என்பதை நாமும் நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்.

ஒரு பெற்ற தாயின் கண்ணீர் விரைவில் துடைக்கப்படும் என நம்புவோம்.

ஒளி ஒளிரட்டும்!

Wednesday 19 August 2020

இதுவும் சரியான பாதை தான்!

 தேசிய முன்னணியைச் சேர்ந்த இந்தியர் சார்ந்த கட்சிகள் தங்களது வாக்காளர்களை அடையாளம் காண வேண்டும் என்று ஐ.பி.எப். கட்சி  அறைகூவல் விடுத்திருப்பது சரியான நோக்கம் தான், தவறு என்று சொல்லிவிட முடியாது!

அதுவும் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்கிற நிலையில் தேர்தலின் மீது அக்கறை காட்டுவது போல இந்திய வாக்காளர்கள் மீதும் அக்கறை காட்ட வேண்டும் என்பது தான் எனது வேண்டுகோள்.

பொதுவாக ஐ.பி.எப். கட்சியின் மீது எனக்கு எந்த மரியாதையும் இல்லை! அவர்களுக்கு ஏதோ ஒரு செனட்டர் பதவி கிடைக்கலாம். கிடைத்துவிட்டுப் போகட்டும். ஏதோ ஒரு தமிழனுக்கு அந்தப் பதவி கிடைத்ததே என்பதோடு சரி. 

மற்றபடி இவர்களால் ஆகப்போவது ஒன்றுமில்லை என்பதும் எனக்குத் தெரியும்! ஆனானப்பட்ட ம.இ.கா. வே மண்ணோடு மண்ணாகிவிட்ட பிறகு இவர்களால் என்ன செய்த விட முடியும்? 

ஆனாலும் இவர்களுக்குச் சொல்ல வேண்டிய சில விஷயங்கள் உண்டு. தேர்தல் காலங்களில் இந்திய வாக்களர்களுக்கு மலிவான அரிசியை வாங்கிக் கொடுக்காதீர்கள்.  மீன் டின்களை வாங்கிக் கொடுக்காதீர்கள்.சாராயத்தை வாங்கிக் கொடுக்காதீர்கள். இன்னும் என்ன என்ன கொடுக்க வேண்டும் என்று நினைக்கீறீர்களோ அவைகளை வாங்கிக் கொடுக்காதீர்கள்.

அப்படியே பற்றும் பாசத்தையும் இந்திய வாக்களர்களுக்குக் காட்ட வேண்டுமானால்  அவர்களுக்கு வீடு வாங்கிக் கொடுங்கள். நிலம் வாங்கிக் கொடுங்கள்.  ஆனால் அவர்கள் பெயரில் வாங்கிக் கொடுங்கள், உங்கள் பெயரில் அல்ல!

ஆனால் இவைகள் அனைத்தும் தேர்தலுக்கு முன்பே கொடுக்கப்பட வேண்டும். அதன் பின்னர் என்றால் மறந்து போய் விடுவீர்கள்! உங்களுக்கு ஞாபகசக்தி கொஞ்சம் குறைவாக இருக்கும்!

இது உங்களுக்கு மட்டும் அல்ல, இந்தியர்களின் தாய் கட்சியான ம.இ.கா.வுக்கும் சேர்த்துத் தான்.  கடந்த அறுபது ஆண்டுகளாக கிழிக்காததை இனி மேலா கிழிக்கப் போகிறார்கள்?

நீங்கள் சரியான வழியைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்.  அதில் தவறில்லை.  ஆனால் சரியான நோக்கத்தோடு செயல்படுங்கள்.  இந்திய வாக்களர்களை ஏமாற்ற வேண்டும் என்கிற நோக்கம் மட்டும் வேண்டாம்!

வெற்றி பெற வாழ்த்துகள்!

களம் இறங்குகின்றனர் கிராமத் தலைவர்கள்!

 இதோ! இப்போது தான் படித்த ஒரு செய்தி மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது!

நாடற்றவர்கள் பிரச்சனை.  அதனைத் தீர்க்க கிராமத் தலைவர்கள் களம் இறங்குகின்றனர்.  இது சிலாங்கூர் மாநிலத்தில்.

இந்த கிராமத் தலைவர்கள் தங்களது முயற்சியில் வெற்றி பெறுகிறார்களா அல்லது வெற்றி பெறவில்லையா என்பதல்ல முக்கியம். அவர்கள் ஒரு முயற்சியைக் கையில் எடுத்திருக்கிறார்கள். அவர்கள் தங்களது முயற்சியைக் கைவிட்டுவிடக் கூடாது என்பது தான் முக்கியம். வெற்றி என்பதே தொடர் முயற்சி தானே! அவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்!

இங்கு நான் பேச வருவது சிலாங்கூரைப் போலவே நெகிரி செம்பிலானும் எதிர்கட்சி ஆட்சியில் இருக்கின்ற ஒரு மாநிலம். இங்கும் நாடற்றவர்கள் நிறையவே இருக்க வேண்டும்.  என்னிடம் அதற்கான புள்ளிவிபரங்கள் இல்லை. ஆனால் கணிசமான அளவு இந்தியர்கள் குடியுரிமை  அற்று இருக்கின்றனர்.

நிச்சயமாக இங்குள்ள கிராமத் தலைவர்கள் அந்த புள்ளிவிபரங்களை வைத்திருப்பர். அப்படி வைத்திருக்கவில்லை என்றால் அவர்கள் கிராமத் தலைவர்கள் இல்லை, கிராமப் பொம்மைகள், அவ்வளவு தான்!

இந்த குடியுரிமைப் பிரச்சனையில் யாரோ நம்மைத் தேடிக்கொண்டு வருவார்கள் என்கிற மனப்போக்கு நமது தலைவர்களுக்கு ஏற்படக் கூடாது! தலைவர்கள் தான் அவர்களைத் தேடிப் போக வேண்டும். தேடிக்கொண்டு வருபவர்கள் ஒரு சிறுபான்மையனர் தான். அவர்களிடம் அந்த முயற்சி என்பது எப்போதும் இருக்கும். ஆனால் பெரும்பான்மையினருக்கு அந்த முயற்சி என்பதே இருப்பதில்லை! அலட்சியம் அதிகம்! அதனால் அவஸ்தையும் அதிகம்!

இங்கு நாம் சொல்ல வருவதெல்லாம் கிராமத் தலைவர்கள் களம் இறங்க வேண்டும்.  ஆம்! சும்மா அரைகுறை மனத்தோடு அல்ல! இதனை ஒரு வேள்வியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். எடுத்த காரியம் வெற்றி பெற வேண்டும். அதிக அக்கறை வேண்டும். அதிக ஈடுபாடு வேண்டும்.

ஒவ்வொரு கிராமத் தலைவரும் தனது கிராமத்தில் உள்ள குடியுரிமை அற்றவர்களின் புள்ளிவிபரங்களை அவசியம் வைத்திருக்க வேண்டும். அவர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும். அந்தப் பிரச்சனைகளைத் தலை போகிற காரியமாக எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும்.

சிலாங்கூர் மாநிலத்தைப் போல அனைத்து மாநிலங்களிலும் கிராமத் தலைவர்கள் இந்த குடியுரிமைப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் முயற்சியில் இறங்க வேண்டும்.

எதிர்கட்சியின் ஆட்சியில் உள்ள குடியுரிமை இல்லாதவர்களைப் பற்றி பேசுவதைப் போல ஆளுங்கட்சியில் உள்ள மாநிலங்களைப் பற்றி பேச நமக்கு உரிமையில்லை. இங்கு ஆளுங்கட்சி என்பது பாரிசான் கட்சியைத்தான் குறிப்பிடுகிறேன். இங்குள்ள கிராமத் தலைவர்கள் எதுவும் செய்யப்போவதில்லை என்பதாக உறுதி மொழி எடுத்திருக்கின்றனர். இது நடந்து அறுபது ஆண்டுகளாகிவிட்டன! அவர்களை நம்புவதால் எந்த ஒரு அணுவும் அசையப்போவதில்லை!

சிலாங்கூர் மாநில கிராமத் தலைவர்களே!   உங்களை நான் வாழ்த்துகிறேன். உங்களுடைய அறிக்கை வெறும் அறிக்கையோடு நின்றுவிடக் கூடாது.  நீங்கள் செய்த சாதனைகள் மக்களால் போற்றப்பட வேண்டும். சாதனைகள் புரிய வேண்டும்.

 கிராமத் தலைவர்களே வாழ்த்துகள்!

Tuesday 18 August 2020

பாக்கிஸ்தானில் தமிழர்களா?

 பாக்கிஸ்தானில் தமிழர்களா! ஆச்சரியக்குறியைப் போட வேண்டுமா அல்லது கேள்விக்குறியைப் போட வேண்டுமா என்பது புரியவில்லை!

பாக்கிஸ்தானில் தமிழர்கள் வசிப்பார்கள்  என்பதை எந்தக் காலத்திலும் நினைத்துப் பார்த்ததில்லை! அப்படி ஒர் எண்ணமே மனதில் ஏற்பட்டதில்லை!

சமீபத்தில்  பி.பி.சி. தமிழ் இணையத்தளத்தில் வந்த செய்தியைப் படித்த போது அது ஒரு அதிர்ச்சி செய்தியாகவே  இருந்தது!

என்ன பாக்கிஸ்தானிலா?  அந்நாட்டைப் பற்றி நாம் அறிந்தது தான். மற்ற இனத்தவரை அவர்கள் வாழவிட்டாலும் மற்ற மதத்தினரை அவர்கள் வாழவிட மாட்டார்களே! என்பது தான் முதல் அதிர்ச்சி!

சான்றாக ஒன்றைச் சொல்லலாம்.  இந்திய பஞ்சாபியர்கள் அங்கு இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் சீக்கிய கோயில்களுக்கு அடிக்கடி இடைஞ்சல்கள் ஏற்படுகின்றன! அதே போல அவர்களுக்கும் ஏற்படத்தான் செய்கின்றன.  இன்னொன்று,  அங்கு கிறிஸ்துவ மதத்தினரும் இருக்கின்றனர். கிறிஸ்துவ மதத்தினருக்கும் அவர்களுடைய தேவாலயங்களுக்கும் சேதங்கள் ஏற்படுத்தப்படுகின்றன! ஒரு கிறிஸ்துவ பாக்கிஸ்தானிய அமைச்சர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதெல்லாம் பொதுவாக ஒவ்வொரு நாட்டிலும் சிறுபான்மை சமூகத்தினர் எதிர் நோக்கும் பிரச்சனைகள் தாம் என்பது நமக்கும் தெரியும்.

 தமிழர்களின் நிலைப் பற்றி நமக்கு முழுமையாகத் தெரியவில்லை என்றாலும் இவர்களில் பெரும்பாலும்  பாக்கிஸ்தான் தலைநகரான கராச்சியில் வாழ்வதாகக் கூறப்படுகின்றது. இவர்களில் பெரும்பாலோர் பாக்கிஸ்தான் பிரிவினைக்கு முன்னர் மும்பை மற்ற இந்திய தலை நகரங்களுக்கு வேலை தேடி போனவர்கள் அப்படியே கராச்சி பக்கமும் வேலை தேடிப் போயிருக்கிறார்கள்.  அங்கேயே குடியமர்ந்து விட்டார்கள் என்பது தான் இவர்களின் கதைச் சுருக்க,ம்!

 

இவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள் என்கிற அவர்களின் அடையாளத்தை விடவில்லை!  கராச்சியில் உள்ள மாரியம்மன் கோயில் தான் தமிழர்களை ஒன்று கூடும் இடமாக தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. பொங்கல், ஆடிமாதம், தைப்பூசம் இன்றும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. காவடி எடுத்தல், அலகுக் குத்துதல் அனைத்தும் உண்டு. தமிழர்களின் பாரம்பரியங்கள் தொடர்ந்து கடைப் பிடிக்கப்படுகின்றன. 

ஆனால் தமிழ் மொழி பள்ளிகளில் பாடமாக இல்லை. ஏதோ ஓரளவு தமிழ் அறிந்தவர்களால் மாரியம்மன் கோயிலில் தமிழ் கற்றுக் கொடுக்கப்படுகின்றது.   ஆனால் தமிழ் மொழியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் அவர்களிடையே இருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒரு விஷயம். இப்போது அவர்களிடையே படித்தவர்கள் ஓரளவு இருப்பதனால் மொழி தொடர்ந்து காக்கப்படும் என நம்புவோம்.

இன்றைய தமிழக அரசியல்வாதிகள் மனம் வைத்தால் நல்லது நடக்கும். அல்லது உலகத் தமிழர்கள் மனம் வைத்தால் நல்லது நடக்கலாம். தமிழ் மொழி காக்கப்பட வேண்டும். நமது கலாச்சாரம் காக்கப்பட வேண்டும். 

எல்லாமே நமது கைகளில் தாம். பாக்கிஸ்தானில் வாழும் தமிழர்கள் சிறப்பான வாழ்க்கை வாழ இறைவனைப் பிரார்த்திப்போம்

Sunday 16 August 2020

படு பயங்கரமா?

 கோவிட் - 19 அல்லது கொரோனா = எப்படி சொன்னாலும் அதன் வீரியம் அதிகரித்துக் கொண்டு தான் போகிறது! குறைந்த பாடில்லை!

குறையவும் நாம் வாய்ப்புக் கொடுப்பதில்லை!  சமூக இடைவெளி என்பதை யெல்லாம் காற்றில் பறக்க விட்டுவிட்டு விட்டோம்!

ஆமாம்! இந்த இடைஞ்சலை எத்தனை நாளைக்குத் தான் மடியில் கட்டிக் கொண்டு அழுவது? என்று நினைக்கிறோம்!  நம் எல்லாருக்குமே அந்த நிலை தான், என்ன செய்வது?

ஆனால் இந்தத் தொற்று ஒழிக்கப்படுவது அவசியம்! அவசியம்!  இதனால் நாம் மட்டுமா அவதிப்படுகிறோம்? நமது குழந்தைகள் பள்ளிக்கூடம் போகிறார்களே, அவர்களுக்கும் பிரச்சனை தான்! அது மட்டுமா?  மழலையர் பள்ளிக்குப் போகும் மூன்று, நான்கு வயது குழந்தைகள் கூட முகக்கவசம் அணிகிறார்களே, மனம் வலிக்கிறது. அவர்களால் அதனைத் தொடர்ந்து செயல்படுத்த முடியுமா? என்கிற கேள்வியும் எழுகிறது!

ஆனால் குழந்தைகளைவிட பெரியவர்கள் தான் எதனையும் பொருட்படுத்தாதவர்களாக இருக்கிறார்கள்!  கடைகளுக்குப் போனால் முண்டியடித்துக் கொண்டு பொருள்களை வாங்குகிறார்கள்! இப்போதுள்ள இளசுகள் எல்லாம் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள்!  வயதானவர்களை பொருள்கள் வாங்க அனுப்பிவிடுகிறார்கள்! அது மட்டும் என்ன, ஆபத்து இல்லாமலா போகும்? அவர்கள் மூலமும் தொற்று தொற்றிக் கொள்ளலாம் அல்லவா!

கொரோனா ஆபத்தானது என்று மட்டுமே தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் நாட்பட  நாட்பட கொரோனா வலுவடைந்து,  வீரியமிக்கதாக உலா வருகிறது என்பது தான் சுகாதார அமைச்சு அச்சத்தோடு அறிவித்துக் கொண்டிருக்கிறது!

அதிலும் சிவகங்கை தொற்று இன்னும் ஆபத்தானது, படுபயங்கரமானது என்பதாக அமைச்சு கூறுகிறது!

 நாம் தொடர்ந்து சுகாதாரத்தைப் பேணுவோம். வழக்கம் போல முகக்கவசம் அணிவது,  கைகளைச் சுத்தப்படுத்துவது, கூட்ட நெரிசலைத் தவிர்ப்பது,  சமுக இடைவேளியைக் கடைப்பிடிப்பது - இப்படி அமைச்சு கூறுகின்ற அனைத்தையும் எந்த முணுமுணுப்பும் இல்லாமல் பின்பற்றுவது எல்லாமே நமது பாதுகாப்புக்காக மட்டும்தான்! வேறு எக்காரணத்துக்காகவும் அல்ல என்பதை நாம் முதலில் உணர்வோம்!

இந்த படுபயங்கரத்திலிருந்து விடுபட நாமும் படுபயங்கரமாக அமைச்சோடு கைகோர்க்க வேண்டும்! படுத்து விட்டால் என்ன ஆகும்?

படுத்து விட்டால் ....? நெடுமரம்!  சேர்த்தா விறகுக்குக் கூட ஆகாது!

திடீர் தேர்தலா...?

 தீடீர் தேர்தலா....? நாடு தாங்காது,,,,,,! என்று சொல்லி வருபவர்களில் நானும் ஒருவன்!

என்னைப் பொறுத்தவரை வெற்றி யாருக்கு என்பதில் அக்கறையில்லை.   காரணம் இது வரை நம்மை அலட்சியப்படுத்தியவர்கள் இனி மேலா  லட்சியப்படுத்தப் போகிறார்கள்?  ஒரே ஒரு இலாபம் உண்டு. நமது சமுதாயத்தைச் சேர்ந்த கட்சிகளுக்கு - அதன் தலைவர்கள் - ஓரளவு பணம் சம்பாதித்துக் கொள்ளுவார்கள்! நல்ல நேரம் இருந்தால் அவர்கள் செனட்டர் ஆவார்கள். அவ்வளவு தான்> பரவாயில்லை! பிழைத்துப் போறான் ஒரு தமிழன் என்று நினைத்தாலும் ஆராய்ந்து பார்த்தால் அவன் தமிழனாக இருக்க மாட்டான்!

தீடீர் தேர்தல், அதுவும் கொரொனா கொள்ளை நோய் நம்மைச் சூழ்ந்திருக்கும் இந்த நேரத்தில் அல்லது அதன் பின்னரும் கூட, அடுத்த தேர்தல் வரும் வரை, நாம் பொறுத்துத் தான் ஆக வேண்டும்.

நமக்கொன்றும் அவசரமில்லை! அரசியல்வாதிக்கு அவசரமுண்டு! அது அவனின் தவறு.  மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தான் அதற்கானத் தண்டனையை அவன் அனுபவித்துத் தான் ஆக வேண்டும்!

தீடீர் தேர்தல் வேண்டும் என்பவர்களில் பலர் ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள்! அதற்கு மக்கள் என்ன செய்வார்கள்? அவனது ஊழலை மறைக்க அவனுக்குத் தீடீர் தேர்தல் அவசியம் என்று அவன் நினைக்கிறான்! அவனை ஆதரிப்பவர்களும் உண்டு!  அது தான் நமது மக்களின் பிரச்சனை!

இந்தத் திடீர் தேர்தலில் அவன் ஆட்சி அமைத்தால் எல்லா ஊழல்களும் மறைக்கப்படும். ஆட்சி அமைத்தாலே ஏறக்குறைய புனிதனாகி விட்டான் என்பது பொருள்! அதன் பின்னர் புனித யாத்திரை இன்னும் கொஞ்சம் புனிதனாக்கும்!

எவனோ ஒருவன் பதவிக்காக அடித்துக் கொண்டால் அடித்துக் கொள்ளட்டும்! நமக்கு அதில் பங்கு வேண்டாம்!

தனது கடமைகளைச் சரியாக செய்பவன் எதற்கும் பயப்படுவதில்லை.  ஆனால் அரசியல்வாதிகளை அவ்வளவு சீக்கிரத்தில் எடைப்போட்டு விட முடியாது!  அது ஒரு மானங்கட்ட இனம்!

தீடீர் தேர்தல் நடந்தால் 120 கோடி பணம் சும்மா அப்படியே கால்வாயில் தூக்கி எறியப்பட்ட பணத்திற்குச் சமம்! மக்களுக்கு வேலை இல்லை. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. பிள்ளைகளைப் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்ப முடியவில்லை. பெற்றோர்களே வயிற்றுப்பாட்டிற்குத் தாளம் போடும் போது இதில் என்ன மீண்டும்  தீடீர் தேர்தல்? கார் தவணை, வீட்டுத் தவணை - அரசியல்வாதி அப்பனால்தான் கட்ட முடியும்? மற்ற அப்பன்கள்?

தேர்தல் ஆணையம் 120 கோடி செலவாகும் என்பதாக மதிப்பிடுகிறது.  ஆனால் கூடுதலாகவே செலவாகலாம்! ம்திப்பீடுகள் என்றுமே சரியாக இருந்ததில்லை!

அதனால் தீடீர் தேர்தல் வேண்டாம்! வேண்டாம்! வேண்டாம்! என்பதே நமது வேண்டுகோள்.  இன்றைய அரசாங்கம் முழுமையாக ஐந்து ஆண்டுகளை முடிக்கட்டும்.  நொண்டி அடிக்கட்டும், பரவாயில்லை! குற்றுயிரும் குலையுயிருமாக இருக்கட்டும், பரவாயில்லை!  கொரொனோ அரசாங்கமாக இருக்கட்டும், பரவாயில்லை!

ஆனால் இப்போது தீடீர் தேர்தல் வேண்டாம்!

Friday 14 August 2020

தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம்

 கொரோனா தொற்று நோய் இன்று உலகு எங்கிலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

வேலையில்லாப் பிரச்சனை என்பது தான் முதலில் கண்களுக்குத் தென்படுகிறது.

பலர் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டிருக்கின்றனர், இதில் விமான ஓட்டியான ஓர் இளைஞரும் விதிவிலக்கல்ல. அந்த செய்தியையும் நாம் படித்தோம்.

நம்மில் பலர் செய்கின்ற தவறுகளை கொஞ்சம் எண்ணிப் பார்ப்போம். வேலை ஒன்று கிடைத்ததும் உடனடியாக நாம் செய்கின்ற வேலை என்ன? முதலில் கார் ஒன்று வாங்குவது அதன் பின்னர் வீடு ஒன்று தேவை. அதையும் வாங்குவது.

வீடு என்பது ஒரு சொத்து, உண்மை தான். ஆனால் அதற்கான, முழுமையான கடன் செலுத்திய பிறகு தான், அது நமது சொத்து.  அது வரை அது வங்கியின் சொத்து என்பதை நம்மில் பலர் மறந்து விடுகிறோம்.  கார் என்பது சொத்தே அல்ல! ஒரு இலட்சத்திற்கு வாங்கிய கார் ஒரு வாரம் கழித்து விற்போமானால்  அது பாதி விலைக்குத் தான் போகும்! இது தன் நடைமுறை.

கார் வாங்குவது தேவை கருதி தான். அதனைத் தவிர்க்க முடியாது. ஆனால் அதில் அதிகப் பணம் போடுவதைத் தவிர்க்க வேண்டும். விலை உயர்ந்த கார் தேவையற்றது. குறைவான தவணை, அது தான் முக்கியம். வீடு வாங்குவதை வீட வாடகை வீடே  சிறந்தது.

இங்கு நாம் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டியது நமது சேமிப்பு. ரொக்கப் பணம்.  ரொக்கப்பணம் போல வேறு எதுவும் நமக்கு உதவாது! யார் உதவா விட்டாலும் ஆபத்துக் காலத்தில் ரொக்கப்பணம் நமக்கு உதவும்.

இப்போதெல்லாம் நமது  சம்பளத்தை  மாதத் தவணைகள் கட்டுவதிலேயே செலவழித்து விடுகிறோம்! 

அதற்குத் தான் எவ்வளவு நாம் சேமிக்க வேண்டும் என்பதற்கான வழி காட்டுதல்கள் நிறையவே இருக்கின்றன. நமது மாத வருமானத்தில் 20% விழுக்காடு முதலில் நமது சேமிப்புக்குப் போக வேண்டும். அதன் பின்னர் தான் மற்ற செலவுகள்,  மாதத் தவணைகள் அனைத்தும். என்ன தான் பற்றாக்குறை இருந்தாலும் 20 விழுக்காடு தொடர்ந்து நமது சேமிப்புக்குப் போக வேண்டும்.

அது தான் சுய கட்டுப்பாடு.  என்பது.  சேமிப்பில் பணம் இல்லையென்றால் நாம் பிறரைத் தான் நம்ப வேண்டும்~  ஆனால் நமது பணம் போல் ஆகுமா!

நண்பர்களே! பணம் இல்லையென்பதற்காக தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம். வாழ்க்கை என்பதே போராட்டம் தான். கடைசி வரை போராட வேண்டுமே தவிர நம்பிக்கை இழந்து கைவிட்டுவிடக் கூடாது! நமக்கு வேண்டாதவர்கள் சிரிக்கத்தான் செய்வார்கள்! அவர்களுக்காக நாம் மனம் ஒடிந்து விடக் கூடாது.  நமது பாதையைச் சரி செய்து கொண்டு நமது வழியே போக வேண்டியது தான்! இன்று உங்களைப் பார்த்துச் சிரிப்பவர்கள் நாளை உங்களைப் பார்த்து வாழ்த்துவார்கள்! இது தான் உலகம்!

எந்நேரத்திலும், எந்த நிலையிலும் தவறான முடிவுகளை மட்டும் எடுக்காதீர்கள்!

வாழ்ந்து காட்ட வேண்டும்! பிறருக்கு வழியாக இருக்க வேண்டும்!

வாழ்த்துகள்!

முடியும் ஆனால் முடியாது!

 ஒரு பக்கம் உள்துறை அமைச்சு,  இந்திரா காந்தியின் முன்னாள் கணவர்  முகமது  ரிட்சுவான் அப்துல்லா, ஏதோ ஒரு வெளி நாட்டில் இருக்கலாம் எனச் சந்தேகிக்கின்றனர்! அவர் அடிக்கடி  இடம் மாறிக் கொண்டிருப்பதால் அவரைக் கண்டுப்பிடிப்பதில் சிரமத்தை எதிர்கொள்வதாக அமைச்சு கூறுகிறது!

அது ஒரு பக்கம் இருக்கட்டும். காவல்துறைத் தலைவர் "நாங்கள் ரிட்சுவானோடு தொடர்பில் தான் இருக்கிறோம். அரசியல்வாதி ஒருவரைக் கொண்டு பிரச்சனைக்குத் தீர்வு காண முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்" என்கிற ஆறுதலான செய்தியையும் கூறியிருக்கிறார்.

இப்போது அமைச்சர்கள் சொல்லுவதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. காரணம் அனுபவமிக்க அமைச்சர்கள் இப்போது குறைந்து போய்விட்டனர்! அதனால் காவல்துறைத் தலைவர் சொல்லுவதை ஏற்றுக்கொள்ளலாம்.

ஆக, முகமது ரிட்சுவான் எங்கிருக்கிறார் என்பது காவல்துறைக்குத் தெரியும். இனி அவர் வார்த்தை  மாற மாட்டார் என நம்பலாம்.

இப்போது அவர்களின் தலையாய பிரச்சனை என்ன என்கிற கேள்வி தொக்கி நிற்கிறது!

ரிட்சுவாவைப் பற்றி யாருக்கும் கவலயில்லை. அவர் ஒரு வழியைத் தேடிக் கொண்டார். அது பற்றி யாரும் விமர்சிக்க ஒன்றுமில்லை.

ஆனால் குழந்தை பிரசன்னா டிக்சா?  அவர் பிறந்த ஒரு சில மாதங்களிலேயே மதம் மாற்றப்பட்டு விட்டார்! அது சரியோ தவறோ,  நீதிமன்றம் அதனைத் தவறு என்று தீர்ப்பளித்து விட்டது.

இது ஒரு சிக்கலான பிரச்சனை என்று நாம் நினைத்தாலும் எல்லாவற்றுக்குமே ஒரு தீர்வு உண்டு.  வெளியார்  தலையீடு இல்லாமல் இது பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சனை.

இப்படி வருடக் கணக்கில் இந்தப் பிரச்சனை இழுத்துக்கொண்டு போவதே  ஒரே ஒரு காரணம் தான். அது ஒரு பக்க நியாயத்தையே பேசிக் கொண்ச்டிருக்கிறது!

எல்லாம் நல்லபடியாக முடியும் என நம்புவோம். முடியும்!

Thursday 13 August 2020

வருந்துகிறேன் நண்பரே!

 

 சிவகங்கையிலிருந்து கொரோனாவை இலவசமாக இறக்குமதி செய்த  நாசி கண்டார், உணவக உரிமையாளருக்கு ஐந்து மாத சிறையும், 12,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிய வருத்தம் தான். 

ஆனால் என்ன செய்வது? அவர் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை அவர் அறிந்திருக்கிறாரா?

அறிந்து கொண்டிருக்க வேண்டும்.  அதுவும் குறிப்பாக உணவுத் துறையில் இருப்பவர்கள் அலட்சியமாக இருந்து விட முடியாது. 

தமிழ் நாட்டிலிருந்து இங்கு வரும் போது "எப்படி எப்படியோ" தப்பித்து இங்கு வந்து விடலாம்! ஆனால் நாம் செய்கின்ற தவறு எவ்வளவு பெரிது அதனால் மக்களுக்கு எவ்வளவு பாதிப்பு என்பதை அலட்சியப்படுத்தி விட முடியாது.

இங்கு வந்த பிறகாவது இங்குள்ள நடைமுறைகளை அவர் பின் பற்றிருக்க வேண்டும். அதனையும் அவர் அலட்சியப்படுத்தி இருக்கிறார்! அவர் தன்னை தனிமைப் படுத்தியிருக்க வேண்டும். அதனை அவர் செய்யவில்லை. ஹரிராயா ஹஜி அன்று அவர் கடையைத் திறந்து வைத்திருக்கிறார்! அதன் மூலம் தனது வேலையாள்களுக்கு இலவச இணைப்பாக கொரொனாவை அள்ளிக் கொடுத்திருக்கிறார்! அப்படித்தான் இந்த கொள்ளை நோய் கெடா, பினாங்கு என்று தெறித்துக் கொண்டிருக்கிறது!

இதை நாம் விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடியாது! இதனால் எவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை அறியாதவரா இந்த மனிதர்? 

இப்போது இவரது உணவகம் மூடப்பட்டிருக்கின்றது. வேலையாள்களுக்கும் வேலை இல்லை. இவருக்கும் சிறைத் தண்டனை அத்தோடு அபராதம் வேறு.

இதைத் தான் பேராசை பெரும் நஷ்டம் என்பார்கள். அத்தோடு இவரது உணவகத்தைப் பற்றியே இப்போது சந்தேகக்கண் கொண்டு தான் பார்க்க வேண்டியுள்ளது.  மக்களின் நலனில் அக்கறையற்ற இவர் எவ்வளவு அக்கறையோடு உணவகத்தை நடத்துகிறார்? என்பதையும் யோசிக்க வேண்டியுள்ளது!

வருந்துகிறேன் நண்பரே!  நீங்கள் உணவகத் தொழிலுக்கு இலாயக்கற்றவர் என்பதைத் தான் உங்களின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன! வெளியே வந்ததும் உங்கள் தொழிலை  மாற்றிக் கொள்ளுங்கள்.

இது தான் நமது அறிவுரை!

இருக்கும் இடம் தெரியவில்லை!

 

 "இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே"  என்கிற கவியரசு கண்ணதாசன் பாடல் நினைவுக்கு வருகிறது!

முகமது ரிட்சுவான் அப்துல்லா, இந்திரா காந்தியின் முன்னாள் கணவர்,  இருக்கும் இடம் தெரியவில்லை என்று கைவிரித்து விட்டது உள்துறை அமைச்சு! சுமார் பதினோரு ஆண்டுகளுக்கு முன்னர் இந்திரா காந்தியின் கைக் குழந்தை பிரசன்னாவோடு ஓடிப் போனவர் போனவர் தான்!

அவர் இப்போது நாடு நாடாய், வீடு வீடாய் அலைந்து கொண்டிருப்பதால் அவரைக் கண்டுப் பிடிக்க முடியவில்லையாம்! அதிகாரிகளையே அதிர வைக்கிறாராம்!

கொள்ளைக்கார கோடிசுவரர் ஜோ லோ எங்கோ ஒரு நாட்டில் இருப்பது நமது காவல் துறைக்குத் தெரிகிறது! அவரை எங்கள் நாட்டுக்கு அனுப்பி வையுங்கள் என்று கேட்டுக் கொள்ளத் தெரிகிறது!

ஆனால், காவல் துறையைப் பொறுத்தவரை இந்த ரிட்சுவான், ரஜினி பாணியில் சொல்ல வேண்டுமென்றால், "சும்மா ஜுஜுபி!" என்று சொல்லலாம்!

ஆனாலும் இந்த ஜுஜுபி யைக் கண்டுப் பிடிக்க முடியவில்லை என்கிறது உள்துறை அமைச்சு! எங்கே போய் முட்டிக் கொள்ள?

என்றாலும் அவர்கள் சொல்லுவதை நம்புவோம். நம்பித்தானே ஆக வேண்டும்? இது வரையில் அவர்கள் பொய் என்று எதனையும் சொன்னதில்லையே! 

ஆள் கடத்தல் என்பது நமது நாட்டில் சாதாரண விஷயமாகி விட்டது. இது ஒரு தொடர் கதை என்பதும் நமக்குப் புரிகிறது.

இங்கு நடந்தது என்னவோ குழந்தை கடத்தல். அதுவும் அம்மாவுக்குத் தெரியாமல் அப்பா கடத்திக் கொண்டு போனார்.  அது சரி என்று அவர் நினைத்தால்  அதனைச் சரிகட்ட நீதிமன்றத்தை நாட வேண்டும்.

ஆனால் யார் பின்னாலோ ஒளிந்து கொண்டு நீதிமன்றத்தை அவமானப் படுத்துவது படித்தவர் செய்கின்ற வேலை அல்ல!

பயம் தான் மரணம்! துணிவு தான் வாழ்க்கை! என்கிறார் ஐயா சுகி சிவம். இப்படி பயந்து பயந்து வாழ்வது என்ன வாழ்க்கை? ஆண் பிள்ளை,  ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

உண்மையை எதிர்கொள்ள வேண்டும். பயந்து பயந்து ஓடி ஒளிவதை விட பிரச்சனைக்கு ஒரு முடிவு காண வேண்டும்.

இதைப் போன்ற சப்பைக்கட்டு யெல்லாம் பார்த்தாகி விட்டது. இப்படி நாடு நாடாய் வீடு வீடாய் ஒளிந்து கொண்டு இருந்தால் குழந்தை பிரசன்னாவும் ஒளிந்து ஒளிந்து தான் பள்ளிக்கூடம் பள்ளிக்கூடமாய் போய் கொண்டிருக்கிறாரா?

பாவம்! அப்பனுக்குத் தான் தலைவிதி என்றால் குழந்தைக்கு என்ன தலைவிதி?

இந்தப் பிரச்சனை ஒரு முடிவுக்கு வர வேண்டும். காதிலே பூ சுற்றுகின்ற வேலையை ஒரு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்!

இன்னும் இன்னும் "இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி.....!" போய்க் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்>

Wednesday 12 August 2020

சம்பளத்தை உயர்த்தினால்....?

 இன்று வேலையில்லாமல் பல மலேசியர்கள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். அது உண்மையே!

மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் ஒரு கருத்தைக் கூறியிருக்கின்றது. உள்ளுர்வாசிகளுக்கு அதிக சம்பளம் கொடுத்தால் வேலையில்லாதவர் பலருக்கு வேலை கிடைக்கும். வேலையும் செய்வார்கள்.

அதில் உண்மை இருக்கிறது. சம்பளம் என்பது தான் இங்கு முக்கிய அம்சமாக உள்ளது. 

வெளிநாட்டவர்க்கு இது ஒரு பிரச்சனை அல்ல. அவர்கள் தங்கள் குடும்பத்தோடு இங்குத் தங்கி வாழவில்லை. ஆனால் நமக்கு, மலேசியர்களுக்கு, குடும்பங்கள் இருக்கின்றன. பிள்ளைகள் பள்ளி போகின்றனர் அல்லது மேற்படிப்புப் படிக்கின்றனர். தங்கி வாழ்கின்ற வீட்டுக்கு  வாடகைக் கொடுக்கின்றனர் அல்லது மாதத் தவணை கட்டுகின்றனர். வீட்டில் உள்ளவர்களுக்கு வியாதி என்றால் அதற்குப் பணம் தேவை. தினசரி வாழ்க்கை என்பதே பணத்தைச் சுற்றி சுற்றியே சுழன்றுக் கொண்டிருக்கிறது!

வெளிநாட்டவர்க்குக் குறைவான சம்பளத்தைக் கொடுப்பது போல -  சிலருக்கு அதுவும் கிடைப்பதில்லை!  - இங்குள்ளவர்களுக்கும் அப்படித்தான் செய்வோம் என்றால் ஆள் பற்றாக்குறை இருந்து கொண்டு தான் இருக்கும். அதற்குத் தீர்வு காண முடியாது.

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தான் வேண்டும் என்பவர்கள் பெரும்பாலும் சம்பளத்தை அடிப்படையாக வைத்துத் தான் - அவர்களின் இலாபத்திற்காக - அவர்கள் பேசுகிறார்கள்!

நமது உணவகங்களை எடுத்துக் கொண்டால் வெளி நாட்டவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை ஓரளவு அறிந்தவன் நான்.குறைவான சம்பளத்தைக் கொடுத்துவிட்டு அவர்களை வேலை வாங்குவதில் மிகவும் கெட்டிக்காரர்கள்! 

முடிவெட்டும் தொழிலும் ஓரளவு அப்படித்தான்.இந்த கொரோனா தொற்று நோய் வந்த போது, வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நலனில் இந்த முதலாளிகள் கொஞ்சம் கூட அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை!

இந்த நிலையில் உள்நாட்டுத் தொழிலாளார்களுக்கு இவர்களால் எப்படி வேலை கொடுக்க முடியும் என்கிற கேள்வி எழுகிறது. வேலை கொடுப்பார்கள் ஆனால் சம்பளம் கொடுப்பார்களா?

குறைவான சம்பளமே இவர்களின் இலக்கு! அது தான் இவர்களின் பிரச்சனையும் கூட!  இந்தச் சூழலில் இவர்கள் சம்பளத்தை அதிகம் கொடுத்து இங்குள்ளவர்களுக்கு வேலை கொடுப்பார்கள் என்பதெல்லாம் ஏதோ கற்பனை போன்றே தோன்றுகிறது!

ஆனாலும் இதெல்லாம் சாக்குப்போக்குத் தான்! தொழில் செய்பவர்கள் தங்களது தொழிலை அம்போ என்று சாத்திவிட்டு ஓடிவிட மாட்டார்கள்! தொழில் செய்பவனுக்கு எத்தனையோ வழிகள் உண்டு.  ஒரு வழி போனால் இன்னொரு மாற்று வழியைக் கண்டுப் பிடிப்பவன் தான் உண்மையாகத் தொழில் செய்பவன்.  "மூடி விடுவோம்! ஓடி விடுவோம்!" என்பதும் "திருடுகிறார்கள்! மறுக்கிறார்கள்!" என்பதெல்லாம் நேற்று முளைத்த காளான்கள் என்று தான் சொல்ல வேண்டும்!

சீனர்கள், தொழிலில் கொடி கட்டிப் பறந்த காலத்தில் கூட செட்டியார்கள், தமிழ் முஸ்லிம்கள் தொழில் செய்து கொண்டு தான் இருந்தார்கள்! அவர்களை யாரும் அசைக்க முடியவில்லையே!

அதனால் ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள் மூடி விடுவோம் என்று சொல்லுபவர்களை விட இதனையும் தகர்த்தெறிவோம் என்று சொல்லுபவர்கள் தான் நமக்கு வேண்டும்! அவர்கள் தான் உண்மை வியாபாரப் பரம்பரையினர்!

உள்ளூர் மக்களின் சம்பளத்தை அதிகரியுங்கள்! பிரச்சனைகளைக் களையுங்கள்!

Tuesday 11 August 2020

சிவகங்கை திரள்!

 கொரோனா தொற்று எனது நமது நாட்டைப் பொறுத்தவரை வேகமாகப் பரவும் ஆற்றல் கொஞ்சம் குறைவு தான்.

ஆனால் இப்போது சிவகங்கை திரள் என்கிறார்களே இதன் பரவும் ஆற்றல், வேகம், சக்தி அனைத்தும் கொஞ்சம் அதிகம் என்கிறார்கள். இதன் மூலம் பாக்கிஸ்தான மற்றும் அரபு நாடுகள் என்று ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கிறது.  அரபு நாடுகளுக்குப் பயணம் செய்தோர் மூலம் அல்லது அங்கிருந்து வந்தவர்கள் மூலம் அது பரவியிருக்கலாம்.

சரி அதை விடுவோம். சிவகங்கை என்பது மருது சகோதரர்கள் அரசாண்ட இடம் என்பது, குறைந்தபட்சம்,  கண்ணதாசனின்"சிவகங்கை சீமை" திரைப்படம் பார்த்தவர்களுக்குத் தெரியும். 

அந்த அரசாட்சியின் கடைசி வாரிசான சின்ன மருதுவின் மகன் துரைச்சாமி என்னும் இளம் வயது இளைஞனை,  சுமார் 15-16 வயது, வெள்ளைக்காரர்களால் பினாங்குக்கு நாடு கடத்தியதாக வரலாறு கூறுகின்றது.

அப்படி நாடு கடத்தப்பட்ட துரைச்சாமி என்னும் அந்த இளைஞனின் வரலாறு அத்தோடு முடிவடைகிறது. பினாங்குக்கு நாடுகடத்தப்பட்ட அந்த இளைஞனின் நிலை என்னவாயிற்று என்பது பற்றி நமது மலாக்கா முத்துக்கிருஷ்னன் அவர்களாலும் சொல்ல முடியவில்லை, நாவலாசிரியர் சை பீர்முகமது அவர்களாலும் சொல்ல முடியவில்லை. அவர்களைத் தவிர வேறு யார் நமக்குச் சொல்லப் போகிறார்கள்?

அதன் பிறகு இப்போது தான் சிவகங்கை என்னும் பெயர் அடிபடுகிறது. துரைச்சாமி என்னும் பெயர் அடிபடவில்லை. இனி மேல் அவர் பெயர் அடிபடும்! ஓர் அப்பாவி இளைஞனை, அவன் ஒரு வீர மரபைச் சேர்ந்தவன் என்பதனால்,  வெள்ளைக்காரர்கள் அவனை ஒழித்துக் கட்டி விட்டார்கள்.  

இப்போது தான் துரைச்சாமிக்கு விடிவு காலம் பிறந்திருக்கிறது. அவன் பெயர் அடிபடவில்லை என்றாலும் அவனது ஊர் பெயர் அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கிறது! நல்ல காரணங்களுக்காக அல்ல என்றாலும் அவன் என்ன நிலையில், என்ன மனநிலையில், என்ன மனக் கஷ்டத்தில், என்ன சிரமத்தில் இறந்தானோ - அதே வலியை, அதே கஷ்டத்தை இப்போது நாமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்!

எல்லாரையும் போல நானும் இந்தத் தொற்றுக்கு ஒரு முடிவு வர வேண்டும் என்று தான் நினைக்கிறேன். வெள்ளைக்காரனுக்கு இருந்த அந்தத் திமிர் நமக்கும் இன்னும் குறையவில்லை! அதனால் அரசாங்கம் சொல்வதை "நான் கேட்க மாட்டேன்!" என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தால் அப்புறம் துரைச்சாமி இங்கு சுற்றிக்கொண்டு தான் இருப்பார்! அவருடையை வேதனையை நாம் அனுபவித்துத் தான் ஆக வேண்டும்!

சிவகங்கை சீமை வாழ்க! மருது சகோதரர்கள் வாழ்க! வீரன் துரைச்சாமி வாழ்க!

சிவகங்கை திரள் மறைக!

Monday 10 August 2020

நல்லதொரு ஆட்சியை எதிர்பார்க்கிறோம்!

 இப்போதைய ஆட்சியைப் பற்றி நாம் என்ன சொல்ல நினைக்கிறோம்?

நல்லது சொல்ல வேண்டும் என்று தான் நினைக்கிறோம். ஆனால் சொல்ல முடியவில்லை! பிரதமர் முகைதீன் யாசின் ஓர் இக்கட்டான சூழலில் இருக்கிறார் என்றே சொல்லத் தோன்றுகிறது! 

நம்மைப் பொறுத்தவரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் ஆட்சி தனது ஐந்து ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்ய வேண்டும் என்பது மட்டும் தான்.

அதற்கிடையே நடைபெறுகின்ற பதவிப் போராட்டங்கள், கட்சித் தாவல்கள், ஆட்சிக் கவிழ்ப்புக்கள் இவைகள் எதனையும் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது! அவர்கள் அந்த ஐந்து ஆண்டுகள் நிறைவு செய்ய வேண்டும் என்பதே நமது விருப்பம்.

பக்கத்தான் ஆட்சியில் எதிர்பார்த்தபடி இந்தியர்களுக்கு அவர்கள் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை. ஒரு வேளை அவர்களுக்கு இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கொடுத்திருந்தால் செய்திருக்க வாய்ப்பு இருந்திருக்கலாம்.

ஆனால் பிரிந்து போன ஒரு சில கட்சிகளின் கூட்டணி அப்படி ஒன்றும் பாராட்டும்படியாக இன்றைய நிலையில் இல்லை என்பது தான் நமக்கு வருத்தம்.

இவர்கள் ஆட்சிக்கு வந்ததும் இந்து கோவில்களை உடைத்தார்கள். "உங்கள் மகளை உங்களிடம் ஒப்படைக்கிறேன்" என்று சொன்ன காவல்துறைத் தலைவர் இப்போது இந்திரா காந்தியைப் பார்த்து ஓடி ஒளிகிறார்! முன்னாள் பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் தீடீரென ஊழல் குற்றம் சாட்டப்படுகிறார்! தேவை இல்லாமல் அவரது மனைவியும் குற்றம் சாட்டப்படுகிறார்! நஜிப் - ரோஸ்மா குற்றம் சாட்டப்பட்டால் நாங்களும் அதனையே செய்வோம் என்று அம்னோ இழுக்கும் இழுப்புக்கெல்லாம் பிரதமர் யாசினும் சேர்ந்து ஆட்டம் போட வேண்டியுள்ளது!

யோக்கியனும் அயோக்கியனும் ஒன்றா? ஒன்று தான் என்று இன்றைய ஆட்சி பறைசாட்டுகிறது!

நீதி, நியாயம் பற்றியெல்லாம் பேச எங்களுக்கு நேரமில்லை!  நாங்கள் இல்லாவிட்டால் பெரிகாத்தான் ஆட்சியைத் தொடர முடியாது என்பதால் நாங்கள் சொல்லுவதை பிரதமர் கேட்கத்தான் வேண்டும் என்கிறது அம்னோ!

இறைவா! எங்களுக்கு நல்லதொரு ஆட்சி வேண்டும். குறிப்பாக கடவுள் பயம் உள்ளவர்கள் ஆட்சியில் இருந்தால் தான் இந்த நாடு நல்ல நிலைக்கு வரும். இறைவனை மதிக்காதவர்கள், துதிக்காதவர்கள் உள்ள நாடு ஒன்றும் இல்லாமல் போய்விடும்!

அதனால்,  இறைவனை மதியாதவர்கள் மதிமயங்கிப் போகட்டும்!  செத்தொழியட்டும்! 

நாம் கேட்பதெல்லாம் நல்லவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும். நல்லதொரு ஆட்சி வர வேண்டும். மக்கள் நலத்தோடும் வளத்தோடும் வாழ வேண்டும். மக்களை மதிப்பவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும்.

மீண்டும் தேர்தல் என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. மக்கள் பணத்தில் இப்போது தேர்தல் நடத்துவது ஏற்புடையது அல்ல.

பணம் பற்றாக்குறை உள்ள நேரத்தில் தேர்தல் தேவை இல்லை!

பிரதமர் முகைதீன் யாசின் நால்லவர்களை வைத்து அரசாங்கத்தை வழி நடத்த வேண்டும்.

நல்லதொரு ஆட்சியை எதிர்பார்க்கிறோம்!

Saturday 8 August 2020

ஆட்சி கவிழ்ப்பு தொடர வேண்டுமா?

 இன்று மாநில அள்விலும் சரி தேசிய அளவிலும் சரி ஆட்சி கவிழ்ப்பு என்பது சாதாரண விஷயமாகி விட்டது!

அரசியல்வாதிகளுக்கு இது சாதாரண விஷயம்.  கட்சி விட்டு கட்சி மாறுவது என்பது சாதாரண விஷயமாக இருந்தாலும் இங்கு பல கோடி வெள்ளிகள் கைமாறுகின்றன என்பதை மறந்து விடக்கூடாது. 

இங்குப் பணமே இந்தக் கவிழ்ப்புக்கும், தாவலுக்கும் காரணமாக அமைகிறது! 

தேர்தலில் போட்டியிடும் போது அவர்கள் போட்டியிடும் கட்சியின் கொள்கைகள் என்ன என்று ஒரு அரசியல்வாதிக்கும் தெரிவதில்லை. கொள்கை என்ன என்பது தெரியாததால் நேரம் காலம் வரும் போது அப்படியே தங்களை வேறு கட்சிக்கு மாற்றிக் கொள்கின்றனர்! 

சமீபத்தில் டாக்டர் மகாதிர் ஒரு கருத்தைச் சொன்னார். பதினான்காவது பொதுத் தேர்தலில் ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள், அதனை மறந்து, இப்போது ஊழலோடு சேர்ந்து கொண்டனர் என்றார்!

அது தானே உண்மை! அப்படி ஊழலோடு சேர்ந்து கொண்டதால் தானே இப்போது மக்கள் பல வழிகளிலே துன்பத்தை அனுபவிக்கின்றனர்! 

நிலையான ஓர் அரசாங்கம் இல்லாமல் இப்போது "தடி எடுத்தவனெல்லாம் தண்டல்" என்கிற நிலைமை நாட்டில் உருவாகிவிட்டதே! 

எந்த மாநிலத்தில் ஆட்சியைக் கவிழ்க்கலாம் என்று அல்லும் பகலும் அயராது முயற்சி செய்து கொண்டிருக்கிறார்களே! என்ன சொல்வது?

மக்களிடம் கொள்ளையடித்த பணம் அவர்களிடம் நிறையவே இருக்கிறது. அதனை இப்போது பயன்படுத்துகிறார்கள். இப்போது வாரி இறைத்தால் தான் அடுத்த ஆட்சி அவர்களுடையதாக இருக்கும் போது மீண்டும் மக்களிடமிருந்து கொள்ளையடிக்கலாம்!

திட்டம் போட்டுத் தான் திருடுகிற கூட்டம் திருடிக் கொண்டே இருக்கிறது! ஆட்சி,  பட்டம், பதவி அனைத்தும் மக்களிடமிருந்து தான் திருடுகின்றனர்.

நம்மால் அதனைப் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறு ஒன்று செய்ய முடியவில்லை. நாம் எதைச் சொன்னாலும் உடனே இனம், சமயம் உள்ளே புகுந்து விடுகிறது!

ஆட்சியைப் பிடிக்க சமையத்தைப் பயன்படுத்திகிறவன் சர்வ முட்டாள் என்று தெரிந்து என்ன ஆகப் போகிறது? சமயத்தையும் ஊழலாகப் பயன்படுத்துகிறானே, என்ன செய்ய முடியும்?

மக்கள் திருந்த வேண்டும். அப்போது தான் அரசியல்வாதி திருந்துவான்.இல்லாவிட்டால் ஒரு நிலையில்லாத அரசாங்கத்தைத் தான் நாம் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்!

ஆட்சிக் கவிழ்ப்பு தொடரக் கூடாது என்பது தான் நமது நிலை.ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு கட்சி ஆட்சியாகத் தான் இருக்க வேண்டும். நல்லதோ கெட்டதோ ஒரு நிலையான ஆட்சி நமக்குத் தேவை.

நமக்குத் தான் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் ஆட்சியை மாற்றும் சக்தி இருக்கிறதே!

ஓட்டு இருக்கும் போது ஏன் ஒட்டுப் போட்ட ஆட்சி? 

Friday 7 August 2020

விட்டுக் கொடுத்து வாழ்வோம்!

 நம் மக்கள் செய்கின்ற ஒரு சில விஷயங்கள் நம்மைப் பாதிக்கத்தான் செய்கின்றன.

அறியாமல் செய்கிறார்களா, தெரியாமல் செய்கிறார்களா என்று பார்த்தால் எல்லாம் தெரிகிறது ஆனால் அவனை மன்னிக்கக் கூடாது!  இப்படித்தான் நாம் நினைக்கிறோம்.

பத்திரிக்கையில் படித்த ஒரு செய்தி மனதை வெகுவாகப் பாதிக்கிறது. 

இந்திய உணவகங்கள் இன்று பல பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றன. பாவம்!  வேலையாள்கள் பற்றாக்குறை. அரசாங்கம் அவர்களைச் சட்டை செய்யவில்லை. பல உணவகங்கள் மூடப்படுகின்றன. குடும்பத்தினரால் நடத்தப்படும் உணவகங்கள் ஏதோ ஓடுகின்றன என்று சொல்லலாம்.

இந்த நேரத்தில் ஓர் உணவகத்தைப் பற்றி தவறான தகவல்களை மக்களுக்குப் பரப்பி அந்த உணவகத்துக்கு மக்கள் போகாதபடி செய்வது என்பது யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

அப்படித்தான் நடந்திருக்கிறது, கெடா, சுங்கைப்பட்டாணி  என்னும் நகரில். அந்த உணவகத்தின் உரிமையாளரையோ அல்லது அங்கு வேலை செய்பவர்களையோ நமக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அது முற்றிலும் நமது சொந்தப் பிரச்சனை.

சொந்தப் பிரச்சனையை மற்ற பிரச்சனைகளோடு கலப்பது சரியான அணுகுமுறை அல்ல. அந்த உணவகத்தில் கொரோனா தொற்று இருப்பதாக வெளியே போய் நாலு பேரிடம் சொன்னால் அது அந்த உணவகத்திற்கு அவப்பெயரை உண்டாக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். வாடிக்கையாளர்கள் அந்த உணவகத்திற்குப் போக மாட்டர்கள்! ஏன்? அது நமக்கே தெரியும்! நாமும் போக மாட்டோம்!

இது போன்ற செயல்களில் ஈடுபடுவது உண்மையில்  மிகவும் கேவலமானது.

இந்த கொரோனா தொற்று நோயினால் உலகமே ஸ்தம்பித்துப் போய் கிடக்கிறது. நமது நாட்டிலும் அப்படித்தான்.  பல தொழில்கள், வியாபார நிலையங்கள் அனைத்தும் நொண்டி நடைப் போட்டுக் கொண்டிருக்கின்றன! மக்கள் வேலை இழந்து சிரமத்தை எதிர் நோக்குகின்றனர்.

இந்த நேரத்தில் அவதூறுகளைப் பரப்புவது  ஏற்கத்தக்கது அல்ல. அது ஒருவனின் சோற்றில் மண்ணை வாரி இறைப்பதுற்குச் சமம். 

வேண்டாம்! நமக்குள் பிரிவினைகள் வேண்டாம்! ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வோம்! பகைமையை வளர்க்க வேண்டாம்!

நமது பிழைப்பில் நாம் கவனம் செலுத்துவோம். நமக்கும் நான்கு பேர் உதவி வேண்டும். அந்த நான்கு பேருக்கும் நமது உதவி வேண்டும்.

விட்டுக் கொடுத்து வாழ்வோம்!

புதிய கட்சியைச் தொடங்கினார் மகாதிர்!

 கேட்பதற்குக் கொஞ்சம் அதிசயமாக இருக்கும். ஆனால் அது உண்மை!

டாக்டர் மகாதிர் தனது 95-வது வயதில் புதிய கட்சியைத் தொடங்கியிருக்கிறார்! ஏன் தொடங்கக் கூடாது? அவருக்கு ஆதரவு உண்டு என்று அவர் நினைக்கிறார். வயதைப் பற்றி ஏன் கவலை கொள்ள வேண்டும்?

ஆனால் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக சிந்தித்திருக்கிறார்.

மலேசியர் என்பது போய் மலாய்க்காரர் என்று கொஞ்சம் கீழே இறங்கி வந்திருக்கிறார். இருந்தாலும் பரவாயில்லை.  காரணம் 1969 களிலே இருந்த அந்த வேகம் இப்போது அவருக்கு வந்திருக்கிறது.

 அப்போது மலாய்க்காரர்களின் முன்னேற்றம் என்பது அவரது கொள்கையாக இருந்தது.  மலாய்க்காரர்களின் பொருளாதார முன்னேற்றம், கல்வியில் முன்னேற்றம் இன்னும் அவர்கள் பின் தங்கிய அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் தான் அவரது போராட்டமாக இருந்தது. அதில் அவர் வெற்றியும் கண்டார். 

இப்பொழுதோ கொஞ்சம் தலைகீழ் மாற்றம்! ஐம்பது ஆண்டுகள் கழித்து பொருளாதார முன்னேற்றத்தில் ஊழலும் சேர்ந்து கொண்டது! இப்போது ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே கட்சி ஒன்றை ஆரம்பிக்க வேண்டிய சூழல் உருவாகி விட்டது!

மலாய்க்காரர்களின் நலனுக்காகவே இப்புதிய கட்சி ஆரம்பிக்கப் படுகிறது. கட்சிக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.  கட்சியின் தலைவராக டாக்டர் மகாதிரின் மகன் முக்ரிஸ் மகாதிர் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இப்போதைக்கு அக்கட்சி எந்தக் கட்சியுடனும் கூட்டணி சேராது எனினும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நிலைமை மாறலாம்.

 டாக்டர் மகாதிரின் இந்தப் புதிய கட்சி மலாய்க்காரரிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என நம்புவோம்!

கால மாற்றத்தைக் கண்டீர்களா?  ஒரு காலத்தில் மலாய்க்காரர்கள் முன்னேறவே இல்லை என்கிற ஒரு போராட்டம் அவரால் தொடங்கப்பட்டது.  இப்பொழுதோ முன்னேறி விட்டார்கள் ஆனால் ஊழலிலும் சேர்த்து முன்னேறி விட்டார்கள் என்கிற ஒரு நிலைமை ஏற்பட்டுவிட்டது! இப்போது இதற்காகவும் ஒரு கட்சி தொடங்கி போராட்டம் நடத்த வேண்டியுள்ளது!

மனிதனின் பேராசை எங்கே கொண்டு போய் விடும்? யாரிடமும் பதிலில்லை!

பழிக்குப் பழியா...?

பொதுவாக ஒரு சிலரின் மேல் நாம் தேவைக்கு அதிகமாகவே நம்பிக்கை வைக்கிறோம். அவர்கள் நல்லவர்களாக, கெட்டவர்களா என்பதெல்லாம்  நமக்குத் தெரியாது! எல்லாம் ஒரு நம்பிக்கை தான்!

 லிம் குவான் எங்,  பினாங்கு மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்,  கடலடி சுரங்கப்பாதை திட்டத்தில், இலஞ்சம் கேட்டார் என்னும் குற்றச்சாட்டுக் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

இதைப் படித்ததும் "ஆகா! பழிக்குப் பழியா! எங்க ஆளை மாட்டிவச்சா, உங்க ஆளை மாட்டி வைக்க மாட்டோமா!" என்று தான் முதலில் தோன்றியது!

 அரசியல்வாதிகளுக்கு இப்படியெல்லாம் ஓர் அற்ப ஆசை உண்டு என்பது நமக்குத் தெரியும்!

முடிவு எப்படி இருக்கும் என்பதும் நமக்குத் தெரியும். ஆனால் பிரச்சனை அதுவல்ல! மாட்டிவிடுவது, அப்புறம் ஜாமினில் விடுவிப்பது, பேரைக் கெடுப்பது, நீங்களும் அப்படித்தான் என்று சுட்டிக்காட்டுவது, தேர்தல் நேரத்தில் அதனைப் பயன்படுத்திக்கொள்ளுவது, நாங்க மட்டுமா நீங்களும் தான் என்று பெருமைப் பட்டுக் கொள்ளுவது - இதற்குத்தான் இத்தனை ஆர்ப்பாட்டங்களும்!

அரசியலில் இருப்பவர்களுக்கு, அதுவும் நீண்ட நாள் இருப்பவர்களுக்கு, எப்படி த் திருடுவது என்று சொல்லியாக் கொடுக்க வேண்டும்? அவர்களுக்கு அகப்படாமல் திருடுவதற்கு எத்தனையோ வழிமுறைகள் உண்டு! சமீப காலத்தில் முன்னாள் பிரதமர் நஜிப் மட்டும் தான் மாட்டிக் கொண்டார்.  மற்றவர்கள் எல்லாம் இன்னும் வெளியே தானே இருக்கிறார்கள்!

இதெல்லம் இவர்களுக்கு ஒரு விளையாட்டு! 

தேர்தல் வரும் என்கிற ஆருடம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இப்போ, அப்போ, எப்போ என்று நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்.  வரும் போது ஒரு பக்கம்  நஜிப்பை திருடன் என்பார்கள்! இன்னொரு பக்கம் லிம் குவான் எங்கை திருடன் என்பார்கள்! ஒரு பக்கம் ரோஸ்மாவை திருடி என்பார்கள்! இன்னொரு பக்கம் பெட்டி சியுவை திருடி என்பார்கள்! 

இது ஒரு வகை தேர்தல் ஏற்பாடு என்று தான் தோன்றுகிறது! தேர்தல் சீக்கிரம் வரும் என்று சொல்லத் தோன்றுகிறது! மணியோசை முன்னே வருகிறது!  இனி தேர்தல் வேலைகள் ஆரம்பமாகும் என நம்பலாம்!

ஒன்று மட்டும் சொல்லலாம். லிம் குவான் எங்கையோ அவரது மனைவியைப் பற்றியோ அவ்வளவு சீக்கிரத்தில் மலேசியர்கள் ஒரு முடிவுக்கு வந்து விட மாட்டார்கள்! இது ஒரு தேர்தல் ஏற்பாடு என்று தான் சொல்லுவார்கள்.

ஆனால் ஒன்று. நிச்சயமாக ஊழலுக்கு நாம் ஆதரவு தருவதில்லை. ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதே நமது நிலை. யார் ஊழல் புரிந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இதில் நம்மால் எந்த சமரசத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

அதனால் நீதிமன்றத்தில் குற்றம் நிருபிக்கப்பட வேண்டும். குற்றம் செய்திருந்தால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

இது பழிக்குப் பழியா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

Thursday 6 August 2020

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து.......!

 பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்து......! என்று ஆரம்பிக்கும் கண்ணதாசன் பாடல் ஒன்று உண்டு!

இந்தப் பாடலின் முதல் வரி மட்டும்  சீன நாட்டுக்கோ, சீனர்களுக்கோ மிகவும் பொருந்தும்! அவர்களோடு வாழ்ந்து வரும் நமக்கு அவர்களைப் பற்றி நாம் அறியாததா!

1எம்டிபி ஊழலில் தேடப்படும் ஜோ லோ மற்றும் அவருடைய சகாக்கலும் சீனாவில் தான் இருக்கிறார்கள் என்கிறார் காவல்துறைத் தலைவர்  டான்ஸ்ரீ அப்துல் ஹமீது. அது சரியாகத்தான் இருக்கும் என்று எப்போதோ நாம் அந்த முடிவுக்கு வந்து விட்டோம்! 

ஆனால் சீனா அதனை மறுக்கிறது.  அவர்கள் மறுப்பார்கள் என்பது நமக்கும் தெரியும் நமது அரசாங்கத்திற்கும் தெரியும். 

ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். இந்த மூடுதிரை வாழ்க்கை நடத்தும் கொள்ளையர்களான கோடிசுவரர்களால் சீனா அரசாங்கத்திற்கு இலாபம் உண்டு. அங்கு அவர்கள் பல பெரும் தொழில்களில் முதலீடு செய்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை! அவர்களால் சீனாவுக்கு எந்த இலாபமுமில்லை என்றால் என்றோ அவர்களை அடித்து விரட்டியிருப்பார்கள்!

பணத்தைக் கொண்டு வந்து கொட்டும் இந்தக் கொள்ளையர்களால்  சீன அரசாங்கத்திற்குப் பயன் உண்டு. அதனால் சீன அரசாங்கம் அவர்களைக் காட்டிக் கொடுக்கும் என எதிர்பார்க்க முடியாது!

ஒரு வேளை மலேசிய அரசாங்கம்,  முன்னாள் பிரதமர் நஜிப் செய்தது போல,  அவர்களுக்குப் பெரிய பெரிய திட்டங்களைக் கொடுத்து, அந்தத் திட்டங்களில் உள்ள அனைத்து நிலங்களையும் சீனாவுக்கே சொந்தம் என்று எழுதிக் கொடுத்தால் அவர்கள் ஜோ லோவை காட்டிக் கொடுக்கத் தயாராக  இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை! 

இது நடக்காது என்று சொல்லவும் முடியாது! காரணம் இப்போது நாட்டை ஆள்பவர்கள் நாட்டை விறபதற்குத் தயாராய் உள்ளனர்! அந்த அளவில் அவர்கள் மிக மிக ஒற்றுமையாய் இருக்கிறார்கள்!

ஆக, பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்தவர்கள் உண்மையைப் பேசுவார்கள் என்பதெல்லாம் சுத்த பைத்தியக்காரத் தனம்!

நம்மால் அவர்களை ஒன்று செய்த விட முடியாது என்பதையும் அவர்கள் அறிவார்கள்>

அதனால் அவர்கள் சொல்லுவதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இல்லை என்றால் இல்லைதான்!

பொய்யோ, மெய்யோ  எல்லாமே பிழைப்புக்காகத் தான்

இந்திய (தமிழ்) ஆய்வியல் துறை என்றால் என்ன?

மலாயா பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள இந்திய ஆய்வியல் துறையைப் பற்றி பேச எனக்கு எந்த அருகதையும் இல்லை.

காரணம் அந்தத்  துறையோடு எந்தத் தொடர்பும் இல்லாதவன். அதனால் அதனைப் பற்றி அதிகம் அறியாதவன்.

முன்பு ஒரு சமயத்தில் பத்திரிக்கைகளில் ஒரு செய்தி வீராவேசமாக பகிரப்பட்டது இப்போது எனது ஞாபத்திற்கு வருகிறது.

இந்திய ஆய்வியல் துறை, தமிழ் ஆய்வியல் துறையென பெயர் மாற்றப்பட வேண்டும் என்பதாக பலர் கருத்துத் தெரிவித்திருந்தனர்; எழுதியிருந்தனர். இப்படியும் அப்படியும் எழுதியிருந்தனர்!   அப்புறம் என்ன நடந்தது என்று தெரியவில்லை! அத்தோடு அந்தப் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்தது!

ஆனாலும் இந்தப் பெயரில் ஒரு சிக்கல் இன்னும் உள்ளது என்பது தான் உண்மை.

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி சமஸ்கிருதத்திற்கும் இந்தி மொழிக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர். சமஸ்கிருதம் என்பது இந்தியாவில் சுமார் 45,000 பேர் பேசுகின்ற ஒரு மொழி என்கின்றனர். அந்த 45,000 பேர் பேசுகின்ற ஒரு மொழியை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இந்தியரும் கற்க வேண்டும் என்பதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்து சமஸ்கிருத மொழியைப் பரப்பி வருகிறார்.  வேறு எந்த ஒரு மொழிக்கும்  இந்த அளவுக்குப் பணம் செலவிடப்படவில்லை! யாரும் பேசாத ஒரு மொழிக்காக, எழுத்துருவில் யாரும் அதிகமாகப் பயன்படுத்தாத ஒரு மொழிக்காக பணத்தை தண்ணீராக செலவு செய்து வருகிறார்! அத்தோடு இந்தி மொழி! மற்ற மாநில  மொழிகளைப் பற்றி அவர் கவலைப்படவில்லை!

இந்தச் சூழலில் நாம் பார்க்கும் போது நமது நாட்டிலும் எதுவும் நடக்கலாம். பிரதமர் மோடி தெய்வீக மொழிக்கும், அவரது தேசிய மொழிக்கும் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யத் தயாராக உள்ளவர். பணத்தை வாரி இறைப்பவர். பணத்தை வைத்துக் காரியங்களைச் சாதிப்பவர்! பணத்துக்கு மயங்காதவர் யார்?

அதனால் இந்திய ஆய்வியல் என்று வரும் போது பிற்காலத்தில் ஏதேனும் திணிப்புக்கள் வருமோ என்று யோசிக்க வேண்டியுள்ளது.

அதனால் அதனை ஏன் "இந்திய (தமிழ்) ஆய்வியல் துறை" என்று மாற்றம் செய்யக் கூடாது? இதில் சிக்கல்கள் உண்டா என்பது எனக்குத் தெரியாது! இதனைப் பல்கலைக்கழக அறிஞர் பெருமக்களிடமே விட்டுவிடுகிறேன். அரசியல்வாதிகளே எல்லா இடங்களிலும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அவர்களிடமும் இதனை விட்டுவிடுகிறேன். அத்தோடு தமிழ் வளர்ச்சிக்காக தே.நில நிதி கூட்டுறவு சஙத் தலைவர் டான்ஸ்ரீ கே.சோமசுந்தரம் அவர்களின் பங்கும் அளப்பரியது. அவர்களிடமும் இதனை விட்டுவிடுகிறேன்.

நல்லது நடந்தால் சரி. இப்போது அசட்டையாக இருந்தால் வருங்காலங்களில் ஏதேனும் நடக்கலாம்.

சிந்தித்துச் செயல்படுவோம்!

Wednesday 5 August 2020

அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்!

கொரோனா தொற்றிலிருந்து நாடு இன்னும் மீளவில்லை!

இப்போது இன்னும் ஒரு குற்றச்சாட்டும் உண்டு.  மலேசியர்கள் "சொன்ன சொல்லைக் கேட்பதில்லை!"  என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.

அது குற்றம் தான். நமக்கே தெரிகிறது! ஆனாலும் பலவித கட்டுப்பாடுகளினால் ஏதோ வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது!

வெளி நாடுகளிலிருந்து வரும் மலேசியர்களின் பிரச்சனையைப் பற்றி அரசாங்கம் கொஞ்சம் தாராளப் போக்கைக் கடைப் பிடிக்கை வேண்டும் என்பது தான் இப்போது நமது கோரிக்கை.

நாம் எப்போதுமே அஜாக்கிரதையாகத் தான் இருந்து வந்திருக்கிறோம். அதனால் தான் சிவகங்கையிலிருந்து மீண்டும் ஒரு பிரச்சனை உருவாகியிருக்கிறது.

வெளி நாடுகளிலிருந்து வரும் மலேசியர்களைத் தனித்து வைக்கப் படுவது தொடர வேண்டும்.  அவரவர் வீடுகளில் அவர்களைத் தங்கவைத்து சிகிச்சைப் பெறுவது என்பது வெற்றி அளிக்கவில்லை என்பதை நாம் தெரிந்து கொண்டோம்.

வெளி நாடுகளிலிருந்து வரும் மலேசியர்கள் தங்குவதற்குப் பல மையங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஆனால் தங்கி சிகிச்சைப் பெறுவதற்கான செலவுகளை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே நமது கோரிக்கை. வெளி நாடுகளிலிருந்து வரும் மலேசியர்கள் பையில் பணத்தோடு வருவார்கள் என்பதை எதிர்பார்க்க முடியாது. கையிலிருந்ததை எல்லாம் முடித்துவிட்டு காலிப்பையோடு தான் நாட்டுக்குள் நுழைவார்கள் என்பது தான் நடைமுறை! அந்த நேரத்தில் பணம் கேட்டு அவர்களை நச்சரிப்பது முறையாகாது.

இந்த நேரத்தில்,  அவர்கள் சிகிச்சைப் பெறும் போது,  எந்த ஒரு சிக்கலிலும் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதே அவர்களுக்குப் பயனைத் தரும். பணம் என்று வரும் போது அத்தோடு கவலையும் சேர்ந்து கொள்ளும். சிகிச்சைப் பயனளிக்காது!

அரசாங்கத்தை நாம் கேட்டுக் கொள்வதெல்லாம்  வெளிநாடுகளிலிருந்து வருபவர்களின் நலன் தலையாயது. பணத்தைக் காரணம் காட்டி அவர்களைப் பிழிந்து எடுக்காதீர்கள்:.பணக்காரர்களுக்குப் பணம் ஒரு பிரச்சனை அல்ல. ஆனால் நடுத்தரக் குடும்பங்களுக்கு அது ஒரு சுமை.

பல குடும்பங்கள் இன்று வேலை இல்லாப் பிரச்சனையை எதிர் நோக்குகின்றன. இந்த நேரத்தில் அரசாங்கமும் சேர்ந்து அவர்களுக்கு நெருக்குதல்களை உருவாக்குவது சரியல்ல என்பதே நமது வேண்டுகோள்.

நாம் கேட்டுக் கொள்வதெல்லாம் அரசாங்கமே இந்த சிகிச்சைக்கான செலவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான்.

பொறுப்பு என்பது அரசாங்கத்திடமே!

Tuesday 4 August 2020

அடுத்த கட்டத்துக்கு தயாராக வேண்டும்!

அம்னோ,,  அடுத்த கட்டத்துக்குத் தயாராக வேண்டும்!

இது தான் கைரி ஜமாலுடின், ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினர்,  அம்னோவினருக்கு விடுத்திருக்கும் செய்தி.

உண்மை தான்.  அவர் விடுத்திருக்கும் செய்தியில் உண்மை உண்டு. அம்னோ நீண்ட பாரம்பரியம் உள்ள கட்சி.  நீண்ட நாள் ஆட்சியில் இருந்த கட்சி.

முன்னாள் தலைவர்களின் ஆட்சியில் சில குறைபாடுகள் இருந்திருக்கலாம். ஆனாலும் மக்களைப் பெரிய அளவில் பாதிக்கின்ற குறைபாடுகள் இருந்ததில்லை.

அளவுக்கு அதிகமான குறைபாடுகள், பெரிய குறைபாடுகள் என்றால் அந்தப் பெருமை நஜிப் ரசாக்கையே சாரும்.! அத்தோடு  அகமது சாகிட் ஹமீத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.  இப்போதைக்கு இந்தத் தலைவர்கள் தான் கண்ணுக்குப் பளிச் என்று தெரிபவர்கள். காரணம் விசாரணை இன்னும் மூடிந்த பாடில்லை!

ஆனால் அத்தோடு முடிந்துவிடவில்ல.  அம்னோ அரசியலில் உள்ளவர்கள் அனைவருக்கும்  பலர் மீது பல வழக்குகள் உண்டு.  அவர்கள் எல்லாம் இப்போது அசைக்க முடியாத தலைவர்களாக இருக்கிறார்கள்.! தொடர்ந்து இருந்தால், அவர்களே மீண்டும் ஆட்சியைப் பிடித்தால், தங்களை யாரும் அசைக்க முடியாது  என்று நம்புகிறார்கள்!

அப்படித்தான் நஜிப் ரசாக் நினைத்தார்.  ஆனால் சில மாதங்களே ஆட்சிக்கு வந்து கவிழ்க்கப்பட்ட பக்காத்தான் அரசாங்கம் அவரைக் குற்றவாளி என்று கூறி அவரைக் கூண்டில் நிறுத்தியது! அவரின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது.  இப்போதைக்கு மாதம் இரு முறை காவல்துறைக்குச் சென்று கையொப்பமிட்டு வருகிறார்!

ஆனால் மக்களின் மனநிலையை யாரும் கணித்துவிட முடியாது.  இப்படித்தான் இருக்கும் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. மக்கள் எல்லாக் காலங்களிலும், கிராமத்து மக்களாக இருந்தாலும் சரி,  என்னவோ இவர்களைத்தான் ஆதரிப்பார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

குறிப்பாக ஊழலில் சம்பந்தப்பட்ட அம்னோ தலவர்கள் நஜிப் ரசாக், அகமது சாகிட்டை ஆதரிப்போம் என்று தொடர்ந்து கூறி வந்தார்களானால் அவர்களுக்கு எதிர்காலம் இல்லை என்று தான் நாம் சொல்ல முடியும்!

அம்னோ, அடுத்த கட்டத்துக்குத் தயாராக வேண்டும் என்பது உண்மை தான். ஏதோ மக்களிடையே நல்ல பெயர் உள்ளவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் தான் இனி கட்சியைத் தொடர்ந்து வழி நடத்த வேண்டும்.

கைரி ஜமாலுதீன்  சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்!

Monday 3 August 2020

ஆகா! என்ன கண்டுப்பிடிப்பு!

பெர்காசா கோமாளிகள் எப்படியெல்லாம் கோமாளித்தனமாகப் பேசுவார்கள் என்பது நமக்குத் தெரியும்!

இப்போது அவர்கள் கோமாளித்தனமாக ஓர் அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

தேர்தல் ஆணையத் தலைவராக  முன்னாள் பெர்சே தலைவர் அம்பிகா சீனிவாசன்  நியமிக்கப்பட்டால் அவர்கள் கடுமையாக எதிர்ப்போம் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்!

ஓர் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் அளவிற்கு அவர்களுக்குத் துணிச்சல் வந்திருக்கிறது! அப்படியென்றால் அரசாங்கத்திற்கு யார் வேண்டுமானாலும் எச்சரிக்கை விடுக்கலாமோ!

இன்னொரு பக்கம் பார்த்தால் முதலில் அம்பிகா இந்த நியமனத்தை ஏற்றுக் கொள்ளுவாரா என்பது தெரியவில்லை! அவர் தனது கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள நினைப்பவர்.   அவரைப் பொறுத்தவரை இது ஒரு கௌரவமற்ற பதவி!  இது போன்ற பதவிகளுக்கு எத்தனையோ பேர் காத்துக் கிடக்கிறார்கள்!  அவர்களில் ஒருவர் "நாங்கள் எச்சரிக்கிறோம்!"   என்று சொல்லுகின்றவராகக் கூட இருக்கலாம்!

பொதுவாக ஓர் இந்தியர் அந்தப் பதவிக்கு வரக் கூடாது என்பது தான் அவர்களது நோக்கம்.  அதை அவர் வெளிப்படையாகச் சொல்லாமல் அம்பிகாவைப் பற்றி  வேறு ஒரு காரணத்தைச் சொல்லுகிறார்.  அவர் ஓரினச்சேர்க்கையை ஆதரிப்பவராம்!  அதனால் இவர்கள் எதிர்ப்பார்களாம்!

அப்படியென்றால் வேறு ஒரு இந்தியரை இவரே சிபாரிசு செய்யலாமே! மிக மிகத் தூயவர்களெல்லாம் பாஸ் கட்சியின் இந்தியர் பிரிவில் இருக்கிறார்களே!  ஒருவர் சமீப காலத்தில் மேல்சபை உறுப்பினர் ஆனாரே!

இது போன்ற பதவிகள் இந்தியர்களுக்குக் கிடைக்காது என்பது எங்களுக்குத் தெரியும். இது ஊரறிந்த ரகசியம்.  ஒரே காரணம் தான். இந்தியர்கள் இது போன்ற பதவிகளுக்குத் தகுதியானவர்கள் அல்ல என்பது பெர்காசாவின் நிலைப்பாடு! ஆமாம், இலஞ்சம் வாங்கத் தெரியாதவனுக்கு ஏன் பதவிகள் கொடுக்க வேண்டும் என்பது தான் இவர்களைப் போன்ற எச்சரிக்கையாளர்கள் நினைக்கிறார்கள்!

எது எப்படியோ நமக்கு ஒன்று தெளிவாகத் தெரியும்.  உயர் பதவிகள் வகிக்க இந்தியர்கள் தகுதியற்றவர்கள்.  யார் இலஞ்சம் வாங்குகிறானோ அவன் தான் எந்தப் பதவிக்கும் தகுதியுள்ளவன்.

இன்றைய உலக மதிப்பீடு அப்படித்தான் போகிறது!

இன்று பல பதவிகள் இந்தியர்களுக்குக் கொடுக்கப்படாதற்குக் காரணமே இலஞ்சம் தான்!

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். நீதி, நியாயம் மட்டுமே நிலைக்கும்!

Saturday 1 August 2020

ஆபத்தை விலைக்கு வாங்காதீர்கள்!

ஆபத்தை விலைக்கு வாங்காதீர்கள் என்று அரசாங்கத்தோடு சேர்ந்து நாமும் எச்சரிக்கை விடுக்க வேண்டியுள்ளது!

கொரோனா தொற்று நோய் கட்டுக்குள் வர வேண்டும்.  முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். நாம் அனைவருமே அதை விரும்புகிறோம்.

ஆனாலும் பொது இடங்களிலும் நாம் பார்க்கும் போது முகக்கவசம் அணியாது சுற்றிக் கொண்டிருக்கிறோம்! சமூக இடைவெளியை யாரும் பின்பற்றுவதில்லை!

நாம் குறைந்தபட்சமாக முகக்கவசம் அணிவதையாவது கடைப்பிடிக்க வேண்டும்  இதிலே படித்தவர் படிக்காதவர் என்கிற வேறுபாடுகள் எல்லாம் ஒன்றுமில்லை. அனைவருமே மந்தைகளைப் போல செயல்படுகிறோம்!

கட்டுப்பாடுகள் என்றால் நமக்குப் பிடிப்பதில்லை.  நமது உயிரைப்பற்றி நமக்குக் கவலையில்லாமல் இருக்கலாம். ஆனால் மற்றவர்களின் உயிர்களைப்பற்றி நாம் கவலைப்படத்தான் வேண்டும். ஒரு வேளை நாம் செத்தால் கவலைப்பட யாருமில்லாமல் இருக்கலாம் அதற்காக  மற்றவர்கள் உயிரை விட வேண்டும் என்கிற அவசியமில்லை. அனைவருக்கும் குடும்பம் உண்டு. குழந்தை குட்டிகள் உண்டு. இவர்களையெல்லாம் விட்டுவிட்டு உயிரை விட முடியாது.

கொரோனாவின்  பாதிப்பைப் பற்றி நாம் சரியாக அறியவில்லை. நம் குடும்பத்தில் அதன் பாதிப்பு ஏற்படாத வரை நம்மால் அதனைப் புரிந்து கொள்ள முடியாது.  அதற்காக பாதிப்பு வர வேண்டும் என்று சொல்ல முடியுமா?  வேண்டாம்! யாருக்கும் எந்த பாதிப்பு வேண்டாம்!

எத்தனை எத்தனை பிள்ளைகள் இன்று அனாதைகளாகி விட்டனர் என்பது தெரியுமா?  நாம் அது பற்றி அக்கறை காட்டுவதில்லை! தெரிந்த கொள்ள முயற்சி செய்வதில்லை!

நண்பர்களே! நீங்கள் பெரிதாக ஒன்றையும் செய்ய வேண்டாம்.  கொஞ்ச கட்டுப்பாடு, அவ்வளவு தான்!

நமது சுகாதாரத் துறை சொல்லுவதைக் கேளுங்கள். இன்றைய நிலையில் அவர்கள் சொல்லுவதெல்லாம் முகக்கவசம் அணியுங்கள் என்பது தான்.   அத்தோடு நாம் செய்ய வேண்டியது சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.  தேவை இல்லாமல் வெளியே சுற்ற வேண்டாம். .  கூட்டமான இடங்களைத் தவிர்த்து விட வேண்டும். இதெல்லாம் சுயக் கட்டுப்பாடு.

கொரோனா 19 பாதிப்பு என்பதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.  நோயைத் கட்டுப்படுத்த முடியாமல் பல நாடுகள் திணறிக் கொண்டிருக்கின்றன.  அதற்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை.

அதனால் நாம் சுகாரத்துறையோடு ஒத்துழைப்போம்.  ஆபத்து என்று தெரிந்தும் அதனைச் சீண்டிப் பார்க்க வேண்டாம்.

ஆபத்தை விலைக்கு வாங்க வேண்டாம்!

அடுத்து எந்த மாநிலம்?

அரசியல் விளையாட்டுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன!

அடுத்த எந்த மாநிலத்திற்கு ஆப்பு என்று இன்னும் தெரிந்தபாடில்லை! சிலாங்கூரா அல்லது நெகிரி செம்பிலனா என்று  எந்த ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை.

சபா மாநிலத்தில் புதிய தேர்தலுக்கு வழி வகுத்துவிட்டார்கள். அது தாம் அம்னோவின் விருப்பமும் கூட. 

இப்போது  அம்னோ தனது கவனத்தை சிலாங்கூரிலும், நெகிரி செம்பிலானிலும் தனது சாக்கடை அரசியலுக்கு காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது!

அம்னோவுக்கு உடனடியாக நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும். அதற்காக அவர்கள் எதனையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். கவிழ்ப்பு வேலை எல்லாம் அவர்களுக்கு அத்துப்படி.

நஜிப் மீதான நீதிமன்ற தீர்ப்பு அவர்கள் எதிர்ப்பார்த்தபடி நடக்கவில்லை.  அதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைய முடியவில்லை! முழு பூசணிக்கையைச் சோற்றில் மறைப்பது என்பது சாத்தியமா?  ஆனால் சாத்தியம் ஆக வேண்டும்  என்பது அம்னோவின் தரப்பு! அம்னோவால் அது சாத்தியம் என்பதை முன்பு அவர்கள் ஆட்சியில் இருக்கும் போது பார்த்திருக்கிறோம்!

இன்னொரு கேள்வியும் நம்மிடையே தொக்கி நிற்கிறது. பி.கே.ஆர். கட்சியினர் அவர்களது கட்சியிலிருந்து விலகிய சட்டமன்ற/நாடாளுமன்ற உறுப்பினர்கள்,   ஒப்பந்தப்படி வெள்ளி ஒரு கோடி கட்சிக்குக் கொடுக்க வேண்டும் என வழக்குப் பதிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாயின. 

இப்படி ஒரு கோடி திருப்பிக் கொடு என்று கேட்பதில் ஏதேனும் பயன்கள் இருக்கின்றனவா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  அவர்கள் அப்படிக் கட்சி மாறினாலும் இவர்கள் போகின்ற கட்சி இந்த சில்லறைகளை வீசி எறிய தயாராகத்தான் இருப்பார்கள்!   ஆட்சியிலிருக்கும் கட்சிகள் எதுவும் வறுமையில் இல்லை! அதனால் அது ஒன்றும் மாறிப் போனவர்களுக்கு ஒரு பிரச்சனையாக இருக்காது.

எப்படியோ இந்தக் கட்சி மாறிகளால் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படலாம். சொல்ல முடியாது. இப்படிக் கட்சி மாறும் போது அவர்களுக்கு ஏகப்பட்ட சில்லறைகள் கிடைக்கின்றன. அதாவது அவர்கள் வாழ்நாளில் சம்பாதிக்க முடியாத அளவுக்கு இந்த ஒரே கட்சி தாவலினால் அவர்கள் சம்பாதித்து விடுகிறார்கள்!

பொதுவாகவே அரசியல்வாதிகளைப் பற்றி நமக்குத் தெரியும். நாலு காசு சம்பாதிக்க முடியாத நாதாறிகள் எல்லாம் அரசியல்வாதிகளாகி விடுகிறார்கள்! அவர்களது நோக்கம் தொண்டு செய்வது அல்ல! பணம் கொள்ளையடிப்பது!

பொறுத்திருந்து பார்ப்போம்!  என்ன தான் நடக்கிறது என்று பார்ப்போம்!

அடுத்து எந்த மாநிலம்?