Thursday 30 June 2022

இன்று முதல் ஆரம்பம்!

 

இன்று முதல் ஆட்டம் அரம்பம்! அரசாங்கம்  இதுவரை கொடுத்துவந்த உணவு பொருள்களுக்கான மாநியங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன. உண்மை நிலவரம் இன்னும் ஓரிரு நாட்களில் தெரியவரும்!

உணவு பொருள்களின் விலைகள் கிடுகிடு என ஏறக்கூடிய வாய்ப்புக்கள் நிறையவே உள்ளன. கடைக்காரர்கள் பொருள்களைப் பதுக்குகின்ற வேலைகளும் நடந்து கொண்டிருக்கின்றன! அரசாங்கம் இந்த விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற குரலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது!

கோழி தான் மலேசியர்களின் பிரதான உணவு என்பதால்  அதன் விலை ஒரு கிலோ ரி.ம. 9.40 என அறிவிக்கப்பட்டிருக்கிறது. முட்டைகளின் விலை 41 காசுலிருந்து 45 காசுவரை அதன் தரத்திற்கேற்ப உயர்த்தப் பட்டிருக்கிறது.  (ஏற்கனவே இதை விடக் கூடுதலான விலைக்குத்தான் நாங்கள்  வாங்கிக் கொண்டிருக்கிறோம் என்பது வேறு கதை!)  கோழி, முட்டை சார்ந்து தயாரிக்கப்படும் உணவு பொருட்களின் விலைகள் அனைத்தும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  போத்தல்களில் விறபனை செய்யும் சமையல் எண்ணெய் ஏற்றங் காணும். அதற்கான உதவித் தொகையை அரசாங்கம் நிறுத்திக் கொண்டது.  எந்த அளவு உயரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

எது எப்படியோ ஒரு விஷயம் நிச்சயம்.  அரசாங்கத் தலையீடு இல்லையென்றால் விலைகள் விஷம் போல  ஏறிவிடும் என்பது மட்டும் நிச்சயம்.  இது நாள் வரையில் எப்படியோ பெரிய பாதிப்புகள் இல்லாமல் கடந்து வந்துவிட்டோம்.  இந்த முறை ரஷ்யா/உக்ரைன் சண்டையைக் காரணமாக  வைத்து பிரச்சனைகள் முளைத்திருக்கின்றன. 

என்ன என்ன பொருட்கள் இறக்குமதி ஏற்றுமதி  ஆகின்றன என்பதை வியாபாரிகள் சொல்லும் போது தான் நமக்குத் தெரிகிறது. எதை எடுத்தாலும் இறக்குமதி, இறக்குமதி என்கிறோம்! அப்படியென்றால் நாம் என்ன தான் இங்கு தயார் செய்கிறோம் என்பது புரியவில்லை. குறிப்பாக உணவு பொருட்கள் உற்பத்தி என்பது முக்கியம்.

பிரதமரோ இப்போது தான் விவசாயம் செய்ய ஊக்குவிக்கிறோம் என்கிறார்!  இப்போது தான் நிலங்கள் ஒதுக்கப்படுகின்றன. இனிமேல் தான் மற்ற வேலைகள் எல்லாம் ஆரம்பம்.  இனி மேல் தான் பயிர் செய்ய வேண்டும். 

எல்லாமே சரி தான். ஆனால் விலைகள் மட்டும் கட்டுப்பாட்டில்  வைத்திருக்க  வேண்டும் என்பதும் முக்கியம்.

இந்த நிமிடம், இந்த நெருக்கடியான காலகட்டத்தில், எப்படி சமாளிக்கப் போகிறோம் என்பதைப்  பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதுவும் கடந்து போகும் என நம்புவோம்!

Wednesday 29 June 2022

ஏன் தாமதம்?

 

பொதுவாக மக்களின் வரிப்பணம் எப்படியெல்லாம் அரசாங்கத்தால் நாசமாக்கப்படுகிறது என்பதை அறியும் போது  நாட்டின் குடிமகன் என்னும்   முறையில் நமக்குக் கோபம் தான் வருகிறது.

ஆனால் இந்த கோபம் ஆளும் அரசியல்வாதிகளுக்கு ஏன் வருவதில்லை? காய் அடிக்கப்பட்ட இவர்களால் இந்த சமுதாயத்திற்கு என்ன இலாபம் என்று கேள்வி எழுப்புவதில் எந்த தவறுமில்லை.

ஆளுந்தரப்பினரிடையே சவடால் தனம் அதிகம்.   அவர்களுடைய பின்னணியைக் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் 'மக்களுக்காக நாம்' என்கிற எண்ணம் அவர்களுக்கு இருந்ததே இல்லை. முன்னாள் தலைவனிலிருந்து இந்நாள் தலைவன் வரை ஒரே மாதிரியான கொள்கைப்பற்று உள்ளவர்கலாகத்தான் இருக்கிறார்கள்!

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் கட்டப்பட்ட ஐந்து தமிழ்ப்பள்ளிகள் கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளாக இன்னும் திறக்கப்படாமல் யாருக்காகவோ காத்துக் கொண்டிருக்கின்றன! குறிப்பாக ரீஜன்  தமிழ்ப்பள்ளி, சாகா தமிழ்ப்பள்ளி,  நீலாய் டேசா செம்பாகா தமிழ்ப்பள்ளி, ஜெலுபு சிம்பாங் பெர்த்தாம் தமிழ்ப்பள்ளி ஆகிய பள்ளிகள் கட்டப்பட்டு விட்டன. குத்தகையாளர்களை அவர்களே கொண்டுவந்தனர். அதற்கான வாக்கரிசியும் வாங்கிக் கொண்டுவிட்டனர்! ஆனால் பள்ளிகள் மாணவர்கள் பயன்பாட்டுக்கு இன்னும் திறக்கப்படவில்லை! இதற்குக் காரணம் பள்ளிகளைப் பயன்படுத்துவதற்குத் தகுதி சான்றிதழ்கள் இன்னும் பெறப்படவில்லையாம்!

இப்போது நமது கேள்வி எல்லாம் கட்டடங்களில் குளறுபடிகள்  இருந்தால் குத்தகையாளர்களைக் கூப்பிட்டு அதனைச் சரி செய்ய வேண்டும். இது ஒன்றும் பெரிய பிரச்சனை அல்ல. குத்தகையாளர்கள் யாரும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் அல்ல. எல்லாம் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தான். சரிசெய்வதில் அப்படி என்ன பிரச்சனை?

இதனை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு பள்ளிகளைத் திறக்காமல் அப்படியே போட்டு வைத்திருப்பது வடிகட்டின முட்டாள் தனம்! மக்கள் பணம் எப்படியெல்லாம் வீணடிக்கப்படுகிறது! பாரிசான் ஆட்சியில் பணம் எப்படியெல்லாம் பாழடிக்கப்படுகிறது!

நமது பெரிய அண்ணன் ம.இ.கா.வுக்கு இது பற்றி ஒன்றுமே தெரியாதா? இந்த பள்ளிகள்  அமைந்த இடங்களில் ம.இ.கா. கிளைகளே இல்லையோ!  இப்போது மத்தியில் பாரிசான் கட்சி தானே ஆள்கிறது? அமைச்சர்களாக இருக்கிறீர்கள் தானே! செனட்டர்களாக இருக்கிறீர்கள் தானே! மித்ராவை வளைத்துப் போட்டிருக்கிறீர்கள் தானே! எல்லாப் பதவிகளும் வேண்டும். கொள்ளையடிக்க வேண்டும். ஆனால் நாங்கள் எதனையும் செய்யமாட்டோம்! இந்தியர்கள் ஓட்டுப்போட வேண்டும்! இது தானே மக்களுக்கு நீங்கள் சொல்ல வருவது!

அடுத்த  தேர்தல் வருவதற்கு முன்பதாக இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண முடியவில்லை என்றால் ........ அப்புறம் மக்கள் கையில்!

Tuesday 28 June 2022

சம்பளத்தைக் குறையுங்கள்!

                                             சம்பளத்தைக் குறையுங்கள்!

இன்று பொது மக்கள் படுகின்ற சிரமங்களை  அரசியல்வாதிகள் உணரவில்லை என்பது மிக மிகத் தெளிவாகத் தெரிகிறது!

இதற்கு என்ன காரணமாக இருக்கும்?  ஒவ்வொரு மாதமும் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய படியரிசி அவர்களுக்கு  சரியான நேரத்தில்  கிடைத்து விடுகிறது.  மக்களுக்குத்தான் கிடைப்பதில்லை.

சட்டமன்ற/நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள்,  செனட்டர்கள், அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் அரசியல் மாமேதைகள் -  இவர்களுக்கு மாதந்தோறும் எந்த பிரச்சனையும் இல்லாமல் படி அளக்கப்பட்டு விடுகிறது!  புயலோ வெள்ளமோ, மக்கள் பட்டினி கிடந்தாலும் அரசியல்வாதிகள் மட்டும் பட்டினி கிடப்பதில்லை! அவர்கள் வீட்டு பொம்மனாட்டிகள்  வழக்கம் போல பாரிஸ், லண்டன் நகர்களில்  ஷாப்பிங் செய்வதை நிறுத்துவதுமில்லை!

அதனால் இப்போது என்ன சொல்ல வருகிறோம்? அவர்களைப் பட்டினி கிடக்க சொல்லவில்லை. மக்களின் கஷ்டங்களை அவர்கள்  புரிந்து கொள்ளவில்லை. விலைவாசி ஏற்றங்களைத் தெரிந்துகொள்ளவில்லை.

மக்களின் பிரச்சனைகளைப் புரிந்து கொண்டவர்களாக இருந்தால் ஏன் இப்போதே தேர்தல் நடத்துங்கள் என்கிறார்கள்? மக்கள் கஷ்டத்தைப் புரிந்து கொண்டவர்கள் என்றால் ஏன் தேர்தலுக்காக அரசாங்கத்தை நெருக்குகிறார்கள். தேர்தலுக்கான பணம் என்பது கோடிக்கணக்கில் வரும்! அது யார் பணம்? அது மக்கள் பணம் என்பதைப் புரியாதவர்களா இவர்கள்?

மக்களுக்குப் பண பிரச்சனை இருக்கின்றது. அரசாங்கத்திற்குப் பணப் பிரச்சனை இருக்கின்றது. ஆனால் மக்களைப் பிரதிநிதிக்கும் இந்த அரசியல்வாதிகளுக்குப் பணப் பிரச்சனை இல்லை!  அதனால் மக்கள் எப்படி தியாகம் செய்கிறார்களோ அதே போல இவர்களும் தியாகம் செய்ய வேண்டும் என்பது தான் நமது கோரிக்கை.

இவர்களின் சம்பளம் பாதியாக குறைக்கப்பட வேண்டும். மேலும் அவர்களுக்குக் கிடைக்கும் படிக்காசுகள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும். பாதி சம்பளத்தில் அவர்களால் பிழைக்க முடியாதா?  மக்கள் பிழைக்கிறார்களே! அவர்களைவிட குறைவான சம்பாத்தியத்தில் பிழைக்கிறார்களே! மக்களை விட இவர்கள் என்ன உயர்ந்தவர்களா? தொண்டு செய்ய வந்தவனுக்குக் கொண்டை போடுகிற வேலையா நமக்கு!

அரசாங்கம் இது பற்றி யோசிக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட அனைவர்களுடைய சம்பளத்தைக் குறைப்பதின் மூலம் ஒரு சில கோடிகளையாவது மிச்சப்படுத்த முடியும். அந்தப் பணத்தை வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தலாம். இன்று அரசாங்கத்தின் தேவைகள் அதிகம். இவர்களுக்குத் தண்டச் சம்பளம் என்பது தான் பொதுமக்களின் பொதுவான கருத்து.

சம்பளத்தைக் குறையுங்கள் என்பது தான் அரசாங்கத்திற்கு நாம் விடுக்கும் கோரிக்கை!

Monday 27 June 2022

ம.இ.கா. என்ன செய்யலாம்?

 


ம.இ.கா.  இப்போது செயல்பட ஆரம்பித்திருக்கிறது!  ஒரு வேளை தேர்தல் வருவதற்கான அறிகுறியாகக் கூட இருக்கலாம்!

ஆமாம்,  வரப்போகின்ற 15-வது பொதுத் தேர்தல் என்பது ம.இ.கா.வுக்கு வாழ்வா சாவா பிரச்சனை என்பதில்  சந்தேகமில்லை. எப்படியாவது எதனையாவது செய்து வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப்பில் தான் அவர்கள் இருக்கின்றனர்.

நல்லது. அது தான் அரசியல். நான் ஒரு முன்னாள் ம.இ.கா. செயலாளன். அந்த கட்சி மீது இன்னும் இதயத்தின் ஓர் ஓரத்தில் கொஞ்சம் அபிமானம் ஒட்டிக் கொண்டு தான் இருக்கிறது. என்ன செயவது?  நம்பியவர்களை இப்படிச் சாகடித்து  விட்டார்களே  துரோகிகள் என்பதைத் தவிர வேறு ஒன்றும்  செய்ய இயலவில்லை!

ஒன்றை மனதில் வையுங்கள். உங்களின் தேர்தல் பிரச்சாரத்தின் போது "பக்காத்தான்" அரசாங்கம் ஏன் அதனைச் செய்யவில்லை, ஏன் இதனைச் செய்யவில்லை என்று வீராவேசமாக கேள்விகளை எழுப்பி விடாதீர்கள்! அதைக் கேட்பதே முட்டாள்தனம் என்பது உங்களுக்கே தெரியும்!

அத்தோடு இதனையும் நினைவில் வையுங்கள். இந்தியர்கள் உங்களை மன்னித்து விட்டார்கள் என்பதாக மடத்தனமாக நம்பிவிடாதீர்கள்.  அப்படியெல்லாம் நடந்து விடாது! மைக்கா ஹோல்டிங்ஸ் ஆரம்பம். இப்போது மித்ரா! தொடர்ந்து கொண்டு தானே இருக்கிறது! நின்ற பாடில்லையே!  அப்புறம் எங்கே மன்னிப்பு?

இதுவரையில் நீங்கள் இந்திய சமூகத்திற்கு எதையும் செய்யவில்லை  என்பது உங்களுக்கே தெரியும். இனிமேல் அப்படி என்ன செய்துவிடப் போகிறீர்கள் என்பதும் உங்களுக்கே தெரியும். நீங்கள் எதையும் செய்ய மாட்டீர்கள் என்பது இந்திய சமூகத்திற்குத் தெரியும். 

உங்களுக்குத் தேவையானதெல்லாம் இன்னொரு 'மித்ரா', அவ்வளவு தான்! அது ஒன்றே போதும்! இந்தியர்களைத்  தொழில்துறையில் முன்னேற்றி விடுவீர்கள்!

சமுதாயத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற எண்ணம் உங்களுக்கு எப்போதுமே இருந்ததில்லை! ம.இ.கா. வில் யாரையாவது ஒருவரை 'இவர் நல்லவர்'  என்று அடையாளம் காட்ட முடிகிறதா? முடியவில்லையே!எல்லாருமே பசுத்தோல்  போர்த்திய புலிகளாகத்தான் இருக்கிறீர்கள்!

உங்களுடைய பிரச்சாரத்தை கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள். பணம் கொடுத்து,  பொருட்களைக் கொடுத்து வாக்குகளை வாங்கிவிடலாம் என்று கணக்குப் போடாதீர்கள். மாட்டிக்கொள்வீர்கள்!

என்ன செய்யலாம்! எப்படி செய்யலாம்! என்பதை  நீங்களே யோசியுங்கள்!

Sunday 26 June 2022

காய்கறிகளைப் பயரிடுவோம்!

 

பினாங்கு பயனீட்டாளர் சங்கம். சரியான நேரத்தில்  மக்களுக்குத் தேவையான கருத்துக்களை வெளியிட்டிருக்கிறது

அதன் கல்விப்பிரிவு தலைவர், என்.வி.சுப்பராவ், மக்களுக்கு சில அறிவுரைகளக் கொடுத்திருக்கிறார். காயகறிகளின் விலைகளின் ஏற்றம் கிடுகிடு என உயர்ந்து கொண்டே போகின்றன. விலைகள் குறையும் என்பதற்கான அறிகுறிகளும்  இல்லை. எப்படியும் சீனப் பெருநாள் வரை இந்த நிலை நீடிக்கும் என்கிறார் சுப்பராவ். சீனப் பெருநாள் அடுத்த ஆண்டு 1, பெப்ரவரி  மாதத்தில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை காய்கறிகளின் விலை எந்த அளவுக்கு உயரும் என்று நம்மால் கணிக்க முடியவில்லை.

அதற்கான ஒரு தீர்வைத் தான் பயனீட்டாளர் சங்கம் கூறியிருக்கிறது. விலை ஏறுகிறது என்று சொல்லிக் கொண்டிருப்பதில் பயனில்லை. அந்த விலையேற்றத்தை எப்படி சமாளிக்கலாம் என்பதற்கான சில அலோசனைகளை சங்கம்  வெளியிட்டிருக்கிறது.

உங்களின் வீட்டைச் சுற்றி ஏதாவது ஒரு சிறிய இடமிருந்தாலும் அங்கே காய்கறிகளைப் பயிரிடுங்கள் என்பது தான் அவர்களின் அறிவுரை. அதன் மூலம் உங்களுக்கான தேவைகளை ஓரளவாவது பூர்த்தி செய்து கொள்ளலாம். உடனடியாகப் பலன் தரும் சில கீரைவகைகளை நாமே பயிர் செய்து பயன் பெறலாம்.

பஞ்ச காலத்தில்,  ஒரு முருங்கை மரம் இருந்தால்,  ஓரு குடும்பத்தின் பசியைத் தீர்க்கும்  என்பதாகச் சொல்லப்படுவது உண்டு. நாம் இன்னும் பஞ்சம் என்கிற அளவுக்கு வரவில்லை என்றாலும் வருங்காலங்களில் எதுவும் நடக்கலாம். ஒரு முருங்கை மரத்தின் பயன் என்பது நீண்ட காலத்திற்கு நீடிக்கும்.   கோவிட்-19 காலத்தில் வீட்டை விட்டு வெளியே போக முடியாத சூழலில்  எங்களுக்கு முருங்கை மரம் தான் துணை! 

அவசர காலத்தில் சிறிய பயிர்கள் தான் நமது பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமையும்.  அது உடனடியான பலனைக் கொடுக்கும். அதிகமான இடங்கள் தேவை இல்லை. கொஞ்ச முயற்சிகள் எடுத்தால் என்ன என்ன பயிரிடலாம் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.  விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நாம். விவசாயம் நமக்கு என்ன புதிதா?

உடனடியாகப் பலன் தரும் பயிர்களின் பட்டியலை  பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வெளியிட்டு இருக்கிறது. அதற்கான பயிற்சிகளையும்  அவர்கள் கொடுக்கிறார்கள். குடும்பப் பெண்கள் ஆண்கள்  அக்கறை உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைத் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

அவர்களது அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம் அல்லது நேரடியாக சுப்பராவ் அவர்களை 012-5374899 என்னும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இது ஒரு முன் எச்சரிக்கை. அவ்வளவு தான்!

Saturday 25 June 2022

எது முதன்மையானது? (முன்னேறுவோம்)

 

நமது குடும்பங்களில் எதனை நாம் முன்னிலைப்படுத்துகிறோம்? குடும்பத்தலைவரும், குடும்பத்தலைவியும் எது தங்களுக்கு முக்கியம் என்று கருதுகிறார்களோ அதனை முன்னிலைப்படுத்துவது தான் வழக்கம்.

ஆனாலும் இப்போது நமது குடும்பங்களில் ஒன்றைச் சரியாகவே  புரிந்து கொண்டிருக்கிறார்கள். பிள்ளைகளின் கல்வி தான் நமது பிள்ளைகளின்  எதிர்காலம் என்று புரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால் கல்வியை  முன்னிலைப் படுத்துகிறார்கள் என்பது  நமக்கு மகிழ்ச்சியே!

அதிலும் வருத்தப்பட வேண்டிய விஷயம் எல்லாருக்கும்  கல்வியின் முக்கியத்துவம் புரிவதில்லை.  தொழிற்சாலைகளில் ஏதோ ஓர் ஆயிரம் வெள்ளி சம்பாதிக்க முடியும் என்றால்  அதனைப் பெரிதாக நினைக்கும் பெற்றோர்கள் இந்த காலத்திலும் உண்டு. குறிப்பாக  ஒருசில  தமிழ்ப் பெற்றோர்கள் சம்பாத்தியத்திற்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.  சம்பாதிக்கும் அந்தப் பணத்தை அப்படி என்ன சேர்த்து வைக்கவா போகிறார்கள்? அது எங்குப் போகும் என்பதை நாம் யூகிக்கலாம்!  

 தொழிற்சாலைகள் பல வேலைகளைக்  குத்தகைக்கு விட்டிருப்பார்கள்.  இப்படிக் குத்தகை எடுப்பவர்கள் தான் பல சமயங்களில் கல்வி கற்கும் பிள்ளைகளுக்கு வில்லனாக மாறிவிடுகிறார்கள்! இருந்தாலும் எல்லாம் மாறி வருகின்றன. பெற்றோர்களும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இப்போது நிறையவே நமது பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதில் நமக்கும் மகிழ்ச்சியே!

கல்வி ஏன் முக்கியம்?  பெற்றோர்களுக்குப் பெருமை கிடைக்கும் அல்லது பிள்ளைகளுக்குப் பெருமை கிடைக்கும் எனபதற்காகவா? அல்ல! அல்ல!  வீழ்ந்து கிடக்கும் சமுதாயத்தை நிமிர்ந்து நிற்க வைப்பது தான் கல்வி. காலங்காலமாக அடிமை வாழ்க்கை வாழும் ஒரு சமுதாயத்தை  தூக்கி நிறுத்துவது தான் கல்வி.

"மாபெரும் சபையில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்!" என்பது போல  கல்வி ஒன்றினால் மட்டுமே அது முடியும். கற்றவனுக்குச் செல்கின்ற  இடமெல்லாம் சிறப்பான வரவேற்பு கிடைக்கும் என்கிறார்களே அது தானே உண்மை.

குடும்பத்தை வழி நடத்த, நாட்டையே வழிநடத்த எது தேவை? கல்வி தானே! கல்வி கற்பதில் நாம் இன்னும்  பின் தங்கியவர்களாகத்தான்   இருக்கிறோம். எதிர்பார்த்த அளவு இல்லை.கல்விக்கூடங்களை விட தொழிற்சாலைகள் தான் நமது இளைய தலைமுறையை ஈர்க்கின்றது!

பெற்றோர்கள் தான் பிள்ளைகளின் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும். இளம் பிராயத்திலேயே பிள்ளைகளிடம் "நீ டாக்டராக வேண்டும்! நீ லாயர் ஆக வேண்டும்! நீ என்ஜினியர் ஆக வேண்டும்! நீ தொழிலதிபர் ஆக வேண்டும்!" என்று சொல்லிச்சொல்லி அவர்களை வளர்க்க வேண்டும். அது மனதில் அப்படியே நிற்கும்.

எதிர்மறையான செய்திகள் குழந்தைகளின் பாதையை மாற்றிவிடும்.

நமது சமுதாயத்திற்கு, தமிழர் சமுதாயத்திற்கு கல்வி தான் முதன்மையானது!

Friday 24 June 2022

இதுவும் சாதனை தான்! (முன்னேறுவோம்)

 

சாதனை என்றாலே ஒரு சிலரே நமக்கு ஞாபகத்திற்கு வருகின்றனர்.  அதாவது பெரிய சாதனை புரிந்த தமிழர் என்றால் அது சுந்தர் பிச்சைதான். பிச்சை என்கிற பெயரில் உலக அளவில் பிரமாண்ட  கூகுள் நிறுவனத்தின் தலைமை பீடத்தில் இருப்பவர் இவர் ஒருவர் தான்.

மலேசியாவில் கூட பெரும் சாதனைகள் படைத்த தமிழர்களைச் சமீப காலங்களில் பார்க்கிறோம். பெரும்பாலும் அவர்கள் பெண்களாக இருக்கிறார்கள் என்பதில் நமக்குப்பெருமை தான்.

இந்த சாதனைகளெல்லாம் நமக்குப் பெருமை என்பது உண்மை. ஆனால் அது பற்றி நான் பேசப் போவதில்லை.

மலேசிய நாட்டில் நமது தமிழ் மக்கள் செய்ய வேண்டிய சாதனைகள் உண்டு.  ஒவ்வொரு குடும்பமும் வங்கிக்கடன் இல்லா சொந்த வீட்டை பெற்றிருக்க வேண்டும்.  தேவை என்றால் கடன் இல்லா கார்.  ஒவ்வொரு குடும்பத்திலும் பட்டதாரி பிள்ளைகள்.  கையில் போதுமான கையிருப்பு.  இதனைத்தான் நான் சாதனையாக நினைக்கிறேன்.

இப்போது நமது சாதனைகள் எப்படி இருக்கின்றன?  விளையாட்டுத் துறையில் சாதனைகள் புரிகிறோம்.  மேலே தொடர கையில் பணமில்லை.  இந்தியர் என்றால் அரசாங்கம் கண்டு கொள்வதில்லை. பணம் வசூல் செய்து அவர்களுக்கு உதவுகிறோம். அல்லது ஏதோ ஒரு சீன நன்கொடையாளர் மூலம் பிரச்சனையைத் தீர்த்துக் கொள்கிறோம். பெரும்பாலும் இதுபோன்ற விளையாட்டுத் துறையில் உள்ளவர்களுக்குப் போதுமான வரவேற்பு இல்லை! அதனால் அந்த சாதனைகள் பயனற்றுப் போய் விடுகின்றன!

நாட்டுக்காகப் பெருமை தேடி தருகிறோம் என்றாலும் நமது பணத்தை நம்பித்தான்  நாம் சாதனைகள் புரிய வேண்டிய சூழலில் இருக்கிறோம்! அதற்கும் பணம் தேவை. ஒரு வேளை மற்ற துறைகளில் இது போன்ற பணப்பிரச்சனைகள் எழாது என நம்புகிறோம்.

ஆனால் இது ஒரு சில பேருக்கு எழும் பிரச்சனை. அதனால் அதனைப் பெரிது படுத்த வேண்டிய  அவசியம் இல்லை. நாம் நமது குடும்பத்தைப் பற்றி  மட்டும் சிந்திப்போம். சொந்த வீடு என்பதை அலட்சியப்படுத்த முடியாது. அது நமக்குச் சொந்தமாக இருக்க வேண்டும். பிள்ளைகளின் உயர்கல்வி என்பது கூட கல்வி உபகாரச் சம்பளம், கடனுதவி போன்றவை இப்போது தாராளமாகவே கிடைக்கின்றன.  பட்டதாரியான பின்னர், அவர்கள் வேலை செய்யும் போது, அந்த பணத்தைத் திருப்பிக்கட்டக் கூடிய வசதிகள் இருக்கின்றன. அதனால் அது பற்றிக் கவலைப்பட ஒன்றுமில்லை. நம்மிடம் இருக்கும் சொத்துக்களை விற்று அவர்களைப் படிக்க வைக்க வேண்டும் என்பதெல்லாம் இந்த காலத்துக்கு ஏற்புடையதல்ல. அவர்களிடமே அந்த பொறுப்பை ஒப்படைத்துவிட வேண்டும்.

இன்றைய மலேசிய சூழலில் சாதனை என்றால் சொந்த வீடு,  சொந்த கார்,  கையிருப்பு, பட்டதாரி பிள்ளைகள் - இவைகள் தான் சாதனைகள். இதனை நோக்கித்தான்  நமது பயணம் அமைய வேண்டும்.

இது தான் நமது சாதனை!

Thursday 23 June 2022

இல்லையென புலம்பாதீர்கள்! (முன்னேறுவோம்)`

 

               
நீங்கள் முன்னேற வேண்டும் என்பதற்காக உங்கள் பெற்றோர் உங்களுக்கு ஒன்றுமே சேர்த்து வைத்துவிட்டுப் போகவில்லையா?

எனது நண்பர் ஒருவர் இப்படித்தான்  சொல்லிவிட்டுப் புலம்பினார். நான் அவரிடம்,  'அவர் உங்களுக்கு நல்ல கல்வியைக் கொடுத்திருக்கிறாரே அது போதாதா? என்றேன்.

நம்மில் பலர் இவரைப் போன்ற நிலையில் தான் இருக்கிறோம். தோட்டப்புறங்களிலே தோட்டப்பாட்டாளிகளாக வாழ்ந்த ஒரு சமுதாயத்திலிருந்து கல்வி கற்று வருவது என்பது சாதாரண விஷயமல்ல. தோட்டப்பாட்டாளிகளின்  பிள்ளைகள் கல்வி கற்பதை தோட்ட நிர்வாகத்தில் உள்ளவர்களே விரும்புவதில்லை.  நான் வளர்ந்த காலகட்டம் அப்படித்தான் இருந்தது.

'வேலைக்குப் போனா அவனும் சம்பாதிப்பான்! உனக்கும் உதவியா இருக்கும்!'  என்று ஐயா சொன்னால் அதனை யாராலும் மறுக்க முடியாது! கங்காணியாரும் 'டேய்! அவன் படிச்சி என்னா கலக்டரா ஆகப்போறான்?  அதான் ஐயா சொல்லிட்டாருல்ல! வேலைக்கு அனுப்புடா!' விவரம் அறியாத அப்பா 'ஐயா,  சரியாத்தான் சொல்லுவாரு!'  என்று அடுத்த நாளே வேலைக்கு அனுப்பிவிடுவார்!  அப்பாவுக்குத் தெரியும், ஐயா வீட்டு மகன் பட்டணம் போய் படிக்கிறான் என்பது ஆனால் நமக்கு அந்த வரம் இல்லை! அதற்கு மேல் அவர் சிந்திப்பதில்லை!

இந்த நிலையில் தான் ஏதோ ஒரு சில பாட்டளிகளின் பிள்ளைகள் படித்து முன்னேற முடிந்தது. அவர்கள் கொடுத்த அந்த கல்வியே பெரும் சொத்து. அப்போது கொடுக்கப்பட்ட அந்த கல்வி பலரை வாழவைத்தது. பள்ளி ஆசிரியர்கள் எல்லாம் அந்த காலகட்டத்தில் தான் நிறைய உருவாகினர். பலர் அரசாங்க வேலைகள், தோட்ட நிர்வாகத்தில், தொழிற்சாலை நிர்வாகங்கள் - இப்படித்தான் முன்னேற்றம் படிப்படியாக அமைந்தது.

இந்த நிலையில் 'எனக்கு ஒன்றுமே இல்லை!' என்று புலம்புவது முட்டாள்தனம் அல்லவா?  ஒன்றுமில்லா ஏழைகளுக்குக் கல்வி தான் மிகப் பலம் வாய்ந்த ஆயுதம். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.  அதனை வைத்துத்தான்  பலரின் முன்னேற்றம் அமைந்திருக்கிறது. பலர் சக்தி வாய்ந்தவர்களாக மிளிர்ந்திருக்கிறார்கள்.

எனது பெற்றோர் எனக்கு ஒன்றுமே கொடுக்கவில்லை என்பதாக புலம்பாதீர்கள். கல்வியே மிகப்பெரிய ஆயுதம். அதனை அவர்கள் கொடுத்திருக்கிறார்கள். அந்த கல்வியை வைத்து உங்களால் முன்னேற முடியவில்லை என்றால் அது பெற்றோர்களின் தவறு அல்ல. நீங்கள் அறிவைப் பயன்படுத்தவில்லை என்பது தான் பொருள்.

இல்லை! இல்லை! என புலம்பாதீர்கள்! கிடைத்ததை வைத்துக் கொண்டு முன்னேறும் வழியைப் பாருங்கள். ஒன்றுமே இல்லாத, வசதிகளே இல்லாத ஒரு காலகட்டத்தில் அன்றைய பெற்றோர்கள் சாதித்ததைக் கூட நம்மால் சாதிக்க முடியவில்லையென்றால் இருந்தும் என்ன பயன்?

புலம்பினால் சாதனைகள் இல்லை! மகிழ்ச்சியோடு  சாதனைகளை உருவாக்குங்கள்!

Wednesday 22 June 2022

செலவுகளைக் குறையுங்கள்!

 

வரப்போகின்ற இன்னும் ஒருசில மாதங்களில் உலகப் பொருளாதாரம் மிகவும் இக்கட்டான ஒரு நிலையை அடையும் என்று  குரல்கள் எழ ஆரம்பித்திருக்கின்றன. நமது நாடும் அதற்கு விதிவிலக்கல்ல.

 இந்த நேரத்தில் நமது தமிழ் மக்கள்  கெட்டிக்காரத்தனமாக, பொறுப்பாக  நடந்து கொள்ள வேண்டும் என்பதே நமது நோக்கம்.

நாம் பல வேளைகளில் மிகவும் அலட்சியம் காட்டுபவர்களாக இருக்கிறோம். அதுவும் பண விஷயத்தில் நாம் அக்கறைக்  காட்டுவதே இல்லை.  பொருட்களை பயன்படுத்துவதிலும் பொறுப்பாக நடந்து கொள்வதில்லை. பணத்தைச் செலவழிப்பதிலும் பொறுப்பில்லாத் தனம் அதிகம்!  வழக்கம் போலவே அக்கறையற்ற ஒரு சூழலில் தான் நமது வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது!

சான்றுக்கு ஒன்றைக் குறிப்பிடலாம். திருமண விருந்துகளுக்குப் போகிறோமே நாம் பொறுப்பாக நடந்து கொள்கிறாமா என்பதை மனதில் கைவைத்துச் சொல்லுங்கள்?   நம்மைப் போல எந்த ஜீவராசிகளும் இப்படி அநாகரிகமாக  நடந்து கொள்வதில்லை. அந்த அளவுக்கு உணவுகளை நாம்  வீணடிக்கிறோம்!  இதனை மற்றவர்கள் சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை. நமக்குத் தேவையான உணவு, நமது குழந்தைகளுக்குத் தேவையான உணவு, அதன் அளவு குழந்தைகளின் அளவு  - இவைகள் எல்லாம் நமக்குத் தெரியாமலில்லை. ஆனாலும்  நமது வன்மத்தை உணவில் காட்டுகிறோம்!

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள். விருந்துகளில் என்ன செய்கிறோமோ அதைத்தான் வீடுகளிலும்  செய்கிறோம். பழக்கங்களை எளிதில் கைவிட்டு விட முடியாது! பெரியவர்கள் காட்டும் பாதையில் தான் குழந்தைகளும் பயணம் செய்வார்கள்!

விருந்து என்பது ஒரு சான்று தான். வீடுகளில் நாம் என்ன என்ன கூத்தடிக்கிறோம், தெரியுமா? சிக்கனம் என்பதே நமக்கு அந்நியமாகப் போய்விட்டது. சிக்கனமாக இருப்பவர்களையும் கஞ்சன் என்று முத்திரைக் குத்துகிறோம். மறந்து விடாதீர்கள். சிக்கனம் தான் உங்களைக் காப்பாற்றும். ஆபத்து அவசர காலங்களில் நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் பணம் தான் உங்களுக்கு உதவும்.  கஷ்ட காலங்களில் மற்றவர்களிடம் போய் நாம் பிச்சை எடுக்க முடியாது. அண்ணன் தம்பிகளுக்கு அவர்களுடைய பிரச்சனைகள். அவர்கள் எங்கே உங்களுக்கு உதவுவது? உதவும் நிலையில் அவர்கள் இருந்தாலும் உதவக் கூடிய வாய்ப்பு குறைவாகத்தான் இருக்கும்.

நிலைமைகளைப் புரிந்து கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு நாம் கஷ்டத்தைக் கொடுக்கக் கூடாது. கஷ்ட காலம் என்பது அனைவருக்கும் தான். உங்களுக்கு மட்டும் அல்ல.

உங்கள் செலவுகளைக் குறையுங்கள். நீங்கள் குடிப்பதைக் குறையுங்கள். சிகரட் பிடிப்பதை நிறுத்துங்கள். வெளியூர் போகும் பயணங்களைக் குறையுங்கள். காரின் பயன்பாட்டைக் குறையுங்கள்.

ஒன்று சொல்வேன். இப்போதே உங்கள் சிக்கனத்தை ஆரம்பித்துவிடுங்கள். உங்கள் குடும்பங்களை நினைத்துப் பாருங்கள். அனைவருக்கும் சாப்பாடு வேண்டும்.  பிள்ளைகள் படிக்க வேண்டும். படிக்காவிட்டாலும் சாப்பாட்டை நிறுத்த முடியாது!

கடைசியாக, செலவுகளைக் குறைத்து சிக்கனமாக வாழக் கற்றுக்கொள்ளுங்கள்! கையேந்துதல் வேண்டாமே!

Tuesday 21 June 2022

விலைகளைக் கட்டுப்படுத்துக!

 

விலைவாசி ஏற்றம் என்பது சாதாரண விஷயமல்ல. ஏழை மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்ற  பிரச்சனை.

 பணம் படைத்தவர்களால் வாங்கக் கூடிய சக்தி  உண்டு என்றாலும் பொருள்களே சந்தையில் இல்லையென்றால் அவர்களும் அதோகதி தான்!

இப்போது அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டியது:  பொருள்களின் விலை நிர்ணயம் செய்வது அடுத்து பொருள்களின் பற்றாக்குறை ஏற்படாமல் கவனம் செலுத்துவது.

முக்கியமான பொருள்களின் விலைகளைக் கட்டுப்படுத்தும் போது மக்களுக்கு அந்த பொருள்களின் விலை ஏற்கத்தக்கது தானா, மக்களுக்கு வாங்கும் சக்திக்கு உட்பட்டதுதானா என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.  விலைகள் முதலாளிகள் சொல்லுவது போல நிர்ணயம் செயல்பட்டால்  அது பயனீட்டாளர்களுக்குப் பாதகமாக அமையும்.

அரசாங்கம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். விலைவாசிகள் ஏற்றம் பெரும் போது  தனியார் நிறுவனங்கள் தங்களது பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு  எதுவும் கொடுப்பதில்லை. அவர்கள் வழக்கமான வழிமுறைகளைத்தான்  கையாள்வார்கள்.  ஆனால் அரசாங்கம் ஏதோ ஒரு வகையில் ஊழியர்களுக்கு ஏதோ ஒரு பெயரில் மாதப் படிப்பணம் கட்டாயமாக  வழங்கும். அதனையும் அரசாங்கம் விலைகள் நிர்ணயம் செய்யும் போது கருத்தில் கொள்ள வேண்டும்.

சில அத்தியாவசிய பொருளகளுக்கு அரசாங்கம் கட்டாயம் விலை  நிர்ணயம் செய்ய வேண்டும்.   குறிப்பாக உணவுப் பொருள்கள் அதிலும் குறிப்பாக குழந்தைகளின் பால்பவுடர்கள்,  சமையல் எண்ணெய், கேஸ் சிலிண்டர்கள் போன்றவை மிக முக்கியமானவை. இவைகள் மக்களின் அன்றாடப் பயன்பாட்டில் உள்ளவை.

ஒரு சில கடைக்காரர்கள் இப்போதே பதுக்கள் நடவடிக்கையில்  ஈடுபட்டிருப்பார்கள்.  அதுவும் குறிப்பாக பால்பவுடர்கள்  முடிந்த அளவு இப்போது வெளிவராமல் பார்த்துக் கொள்வார்கள். இந்த மாதிரியான பதுக்கள் வேலைகள் எப்போதும் உள்ளது தான். ஒன்றும் புதிதல்ல.

ஆனால் அதற்குத் தான் அரசாங்க அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு நிறுவனங்களிலும் புகுந்து பதுக்கள் செய்யும் வேலைகள் நடைபெறுகின்றனவா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.  சென்ற  காலங்களில் இது போன்ற பதுக்கல் வேலைகளில் ஈடுபட்டவர்கள் பலர்  தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். அது தொடர வேண்டும்.  கடைசி நிமிடத்தில் 'ஆள் பற்றாக்குறை'  என்பதாகக் கதை விடக்கூடாது!

எது எப்படியிருப்பினும் அரசாங்கம் விலையேற்றத்தைக் கண்காணிக்க வேண்டும்.  விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

Monday 20 June 2022

இன்றைய நிலையில் எது முக்கியம்?

 

இப்போதே, இந்த நேரத்தில், விலைவாசிகள் நம்மை மூச்சுமூட்ட வைக்கின்றன என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்த நேரத்தில் எது முக்கியம் என்பது தான் கேள்வி. அரசியல் பேசிக் கொண்டு, இப்போது தேர்தல் அப்போது தேர்தல் என்று அரசியல்வாதிகள் அரசியலைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்!

விலைவாசி ஏற்றம் அரசியல்வாதிகளைப் பாதிக்காது!  என்ன பொருள் என்ன விலை விற்றாலும் அவர்கள் வாங்கக் கூடிய சக்தி அவர்களுக்கு உண்டு! அது மட்டும் அல்ல இங்கு, இந்த நாட்டில், பொருட்கள் கிடைக்கவில்லை என்றால்  அவர்களால் வெளிநாடு சென்று பொருட்களை வாங்க முடியும். அரசியல்வாதிகள் பணம் படைத்தவர்கள். நாம் அவர்களுக்கு எல்லா சலுகைகளைக் கொடுத்து உச்சத்தில் வைத்திருக்கிறோம்!

நடப்பது என்ன? அவர்கள் விலைவாசி ஏற்றத்தைப் பற்றி பேசுவதைவிட அடுத்த பொதுத் தேர்தலைப் பற்றி பேசுவதில் ஆர்வமாக இருக்கின்றனர்! துக்காடக்கள் பேசலாம்!  அமைச்சர்கள் பேசலாமோ? அதுவும் நமது பிரதமர் தேர்தல் பற்றி வாய் திறக்காமல்  இருப்பது நல்லது.

இன்றைய நிலையில் மக்களுக்குத் தேர்தல் தேவை இல்லை. இன்னும் ஓராண்டுக்கு மேல் தேர்தல்  வரவிருக்கும் நிலையில் அதுபற்றி இப்போது பேசி நேரத்தை வீணடிப்பதை  நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது!

தேர்தல் இப்போது நமக்குத் தேவை இல்லை.  நேரம் வரும் போது தேர்தலைத் தள்ளிப்போட  வேண்டிய அவசியமுமில்லை. அதனால் தேர்தலைப் பற்றி பேசுவதை எதிர்கட்சியினர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பது தான் எதிர்கட்சிகளுக்கு நமது அறிவுரை.

விலைவாசி ஏற்றத்தினால் மக்கள் கொதித்துப் போய் இருக்கிறார்கள். இப்படிக் கொதித்துப் போய் இருக்கும் மக்களின் மனநிலையைத்தான் அம்னோ கட்சியினர்  அறுவடை செய்ய விரும்புகின்றனர். மக்கள் கொதிக்கும் மனநிலையில் இருந்தால் அவர்கள் வாக்களிக்க விரும்பமாட்டார்கள்.. வாக்குச்சாவடிகளுக்கு வரமாட்டார்கள். அது போதும் அம்னோ வெற்றிபெற! அம்னோ கட்சியினர் தனது வாக்காளர்களை  வாக்களிக்க முழு ஈடுபாட்டோடு களம் இறங்கிவிடுவார்கள். அம்னோ கட்சியினர் அனைவரும் வாக்களிப்பார்கள் மற்ற கட்சியினர்  குறைவான பேர்களே வாக்களிக்கச் செல்வார்கள்! இது அம்னோ வெற்றி பெற அல்லது பாரிசான் வெற்றி பெற வாய்ப்பாக அமையும்.

இவர்கள் வெற்றி பெறுவதோ வெற்றி பெறாததோ நமக்கு அது பற்றி கவலை இல்லை. இப்போது தேர்தலைப் பற்றி சிந்திப்பதைவிட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைப் பற்றி சிந்திப்பது தான் நாட்டிற்கும் நல்லது மக்களுக்கும் நல்லது.

எது தேவை? விலைவாசிகளின் ஏற்றத்தை நிறுத்த வேண்டும். குறிப்பாக உணவு பொருட்களின் விலைகள் குறைய வேண்டும்.  உணவு பொருட்களின் விலைகள் அசுரத்தனமாக ஏறிக் கொண்டிருக்கின்றன!

யார் பொறுப்பு? பிரதமரே பொறுப்பை ஏற்க வேண்டும்!

Sunday 19 June 2022

பட்டதாரிகளை உருவாக்குவோம்!

 


இன்றைய தலைமுறை மாணவர்களுக்கு நிறைய கனவுகள் இருக்கின்றன. அதில் மிக முக்கியமானது,   தான் ஒரு பட்டதாரியாக ஆக வேண்டும் என்கிற கனவு தான்.

பட்டதாரி என்பது நிறைவேற்ற முடிந்த கனவு தான். அப்படி ஒன்றும் நிறைவேற்ற முடியாத கனவு அல்ல.

ஒரு சில பிரச்சனைகளினால் நமது மாணவர்கள்  தளர்ந்து போகிறார்கள். மாணவர்கள் என்ன கல்வியைத் தொடர விரும்புகிறார்களோ அதனைப் படிக்க வாய்ப்புக் கிடைப்பதில்லை.  நாம் எதை விரும்பவில்லையோ அந்த துறையில் கல்வி பயில நம் மாணவர்கள் மீது திணிக்கப்படுகிறது.  ஏழை மாணவர்களுக்கு வேறு வாய்ப்பில்லை என்பதால்  'கிடைத்ததை வரவில் வைப்போம்'  என்று நினைத்து ஏற்றுக் கொள்கிறார்கள்.  அதனைத் தோல்வியாக  நினைக்காமல் அதுவும் வெற்றியைத் தரும் என்பதாக  நினைத்துச் செயல்பட வேண்டும். அதுவே நம் ஆலோசனை.

எந்த ஒரு கல்வியும் வீண்போகாது. படித்த படிப்பு வீணாகாது.  அந்த படிப்பு உங்கள் உயர்வுக்கு நிச்சயம் உதவும் என்று நம்புங்கள்.

எல்லாமே நாட்டுக்குத் தேவையான கல்வி தான் கற்பிக்கப்படுகின்றன. தேவையற்றவை என்பதாக எதுவுமில்லை.  சமீப காலமாக நான் பார்த்தவை: அனைத்து மாணவர்களுக்கும்  Human Resources பற்றியான கல்விக்குத் தான் இடம் ஒதுக்கப்பட்டிருக்கின்றது.  நான் அவர்களிடம் ஏன் இதைத் தேர்ந்தெடுத்தீர்கள் எனக் கேட்ட போது 'நாங்கள் தேர்ந்தெடுக்கவில்லை! அது தான் எங்களைத் தேடி வந்தது!' என்றார்கள்! 

அவர்கள் எல்லாம் திறமையான மாணவர்கள்.  அதனாலென்ன? அதுவும் நாட்டுக்குத் தேவையான கல்வி தான் என்று அவர்களை உற்சாகப் படுத்தினேன்.   இப்போது அவர்கள் பல நிறுவனங்களில் உயர்நிலையில் வேலை வாய்ப்புக்களைப் பெற்றிருக்கின்றனர்.  எதுவாக இருந்தால் என்ன?   எது நிற்கும்?  கடைசியில் உங்கள் திறமை தான் வெற்றி பெறும். திறமைக்குத்தான் என்றும் மதிப்பு.

நமது பெற்றோர்களுக்கு நான் சொல்ல வருவது எல்லாம் உங்களது பிள்ளைகளைப் பட்டதாரி ஆக்க முயற்சி செய்யுங்கள். பணம் உள்ளவர்கள்  பிள்ளைகளுக்கு எந்த கல்வி தேவையோ அந்த கல்வி பயில வெளிநாடுகளுக்கு அனுப்பலாம். அல்லது பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் உள்நாட்டிலேயே செயல்படுகின்றன. அங்கு அவர்கள் கல்வி பயிலலாம்.  வசதி இல்லாதவர்கள் உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில அவர்களை அனுப்பலாம். 

இப்போதெல்லாம் பல நிறுவனங்கள் மேற்கல்வி பயில கடன் உதவிகள் செய்கின்றன. அல்லது உபகாரச் சம்பளங்கள் கொடுக்கின்றன. எல்லா மாநில அரசாங்கங்களும் நிதி உதவிகள் செய்கின்றன. கொஞ்சம் முயற்சி  எடுத்தால் இதுபற்றி நமக்கு நிறைய தகவல்கள்  கிடைக்கும் இப்போது பணம் அவ்வளவு பிரச்சனையாக இல்லை. எல்லா இன மாணவர்களுக்கும்  உதவிகள் கிடைக்கின்றன.

இப்போது படிக்கும் தலைமுறையினர்  பட்டதாரி ஆக வேண்டும் என்று நினைக்கின்றனர். பெற்றோர்கள் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். கல்வியில் சிறந்து விளங்க  இளம் வயதிலேயே உற்சாகப்படுத்த வேண்டும். அவர்களுக்கு என்ன திறமை உள்ளதோ அதனைப் படிக்க ஊக்குவிக்க வேண்டும்.

பெற்றோர்கள் மனம் வைத்தால் பிள்ளைகளைச் சாதிக்க வைக்க முடியும்!


Saturday 18 June 2022

தோல்வியா? அடுத்தது வெற்றி!

 


தோல்வி என்பது  மனதில்  விழுந்த முதல் அடி என்பதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.  அது தான்  வெற்றிக்கான  முதல் படி.

SPM தேர்வில் தோல்வி அடைந்தவர்களின் வலி என்ன என்பது நமக்குப் புரிகிறது. ஆனால் அதுவே முடிந்த முடிவு  அல்ல. இன்னும் வயதிருக்கிறது. இன்னும் எத்தனையோ படிகளைக் கடக்க வேண்டியுள்ளது. அதுக்குள்ளே சோர்வு ஏற்பட்டுவிடக் கூடாது. மாணவர்களுக்கு அது முக்கியம்.

இன்றைய தோல்வி நாளைய வெற்றி என்று எடுத்துக் கொண்டு அடுத்த வேலையைப் பார்க்க வேண்டியது தான். இந்த நேரத்தில் பெற்றோர்களின் அரவணைப்பு என்பது மாணவர்களுக்கு மிக முக்கியம். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது பெற்றோர்களின் வேலை இல்லை.

கல்வியில் ஓர் ஆண்டு பின் தங்கி விட்டால் அது ஒன்றும் தலை போகும் காரியமல்ல. எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின் எவ்வளவோ சாதிக்கலாம். 

இன்று கல்வித்துறையில் வெற்றி பெற்றவர்கள் எல்லாம் தோல்வியே அடையாமல் அந்த இடத்தை அடைந்தவர்கள் என்று சொல்ல முடியாது. ஒரு சில தோல்விக்குப் பின்னர் தான் அவர்கள் கல்வியாளர்கள் என்கிற இடத்தைப் பிடித்திருக்கிறார்கள்.  அதில் வெட்கப்பட ஒன்றுமில்லை.

இன்று வெற்றிகரமான டாக்டர்கள், இன்று வெற்றிகரமான  வழக்கறிஞர்கள், இன்று வெற்றிகரமான பொறியிலாளர்கள் - இப்படி யாரை எடுத்துக் கொண்டாலும்  அன்று ஒரு நாள் தோல்வியைச் சந்தித்தவர்களாகத் தான் இருப்பார்கள்! ஆனால் இன்று அவர்கள் பெற்றிருக்கின்ற வெற்றி அன்று பெற்ற அந்த தோல்வியை யாரும் நினைத்துக் கூட பார்ப்பதில்லை. . எல்லாவற்றையும் போல தோல்வி என்பது வாழ்க்கையின் ஓர் அங்கமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

கல்வியில் தோல்வி அடையாதார் என்பதாக யாருமில்லை.  எப்போதோ எங்கோ சறுக்கியிருப்பார்கள். அவைகளை எல்லாம் கடந்து தான் அடுத்தக் கட்டத்துக்கு நாம் நகர வேண்டும்.

நமது நோக்கம் என்பது பெரிது. கல்வியில் வெற்றி பெற வேண்டும். இந்தக் காலகட்டத்தில்  நம் குடும்பங்களில் பட்டதாரிகளை உருவாக்குவது  நமது கடமை.  குறைந்த கல்வி நம்மை எங்கும் கொண்டு செல்லாது. பின் தங்கியவர்களாகவே நாம் பார்க்கப்படுவோம்.

அதனால் ஒருமுறை தோல்வி என்பது தலைபோகின்ற காரியமல்ல. வெற்றி என்றால் மகிழ்ச்சி. வெற்றி பெறவில்லை என்றாலும் மகிழ்ச்சி தான். காரணம் அத்தோடு அனைத்தும் முடிந்து விடுவதில்லை. இருக்கவே இருக்கிறது அடுத்த முயற்சி. அடுத்த முறை வெற்றி பெற்றால் மகிழலாமே!


Friday 17 June 2022

SPM தமிழ் மொழி

 

இந்த ஆண்டு SPM தமிழ் மொழி பாடத்தில் நமது மாணவர்கள் நல்ல தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என் அறியும் போது நமக்கும் பெருமிதமாக இருக்கிறது! முதலில் இந்த மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்!

இந்த ஆண்டு மிகவும் முக்கியமான விஷயமாக நாம் கருதுவது தமிழ் மொழிப்பாடம் எடுத்த மாணவர்கள் சுமார் பத்தாயிரம். அடுத்த ஆண்டு இந்த எண்ணிக்கைக்  கூடும் என நம்புகிறோம்.

அதே போல தமிழ் மொழி இலக்கியம் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை சுமார் மூவாயிரம் என்பதை   ஏற்றுக்கொள்ள கடினமாகத்தான் இருக்கிறது. ஆனால் எடுத்த மாணவர்களை நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும்.  இந்தப் பாடத்தைக் கஷ்டப்பட்டு ஏன் படிக்க வேண்டும் என்கிற மனநிலையில்  தான் மாணவர்கள் இருக்கிறார்கள். அதனால் பலனில்லையே! அது தான் மாணவர்களின் சோர்வுக்குக் காரணம்.  

எப்படி இருந்தாலும் தமிழ் மொழிப்பாடம் அல்லது தமிழ் இலக்கியம் ஆகிய பாடங்களை SPM  தேர்வில் எடுக்க பெற்றோர்கள் பிள்ளைகளை ஊக்குவிக்க வேண்டும். இன்னும் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் இந்தப் பாடங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தான் பெரும்பாலும் தமிழ் மொழித் தேர்வுகளில் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களே இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்து தமிழ் இலக்கியத்திலும் ஆர்வம் காட்டினால் இன்னும் சிறப்பு.

இந்த நேரத்தில் தமிழ் மொழி கற்றுத்தரும் ஆசிரியர்களைப் பாராட்டியே ஆக வேண்டும். அவர்களின் ஊக்குவிப்பு இல்லையென்றால் நாம் எதிர்பார்க்கின்ற பலன் கிடைக்காது. 

அதே போல நமது நாளிதழ்களும் மாணவர்களுக்கான வழிகாட்டிகளைப் பல வழிகளில் கொண்டு வருகின்றன.  அதே போல வழிகாட்டிப் புத்தகங்களும் வெளியாகின்றன. மாணவர்களுக்கு எந்த அளவு உதவ முடியுமோ அந்த அளவுக்குப் பலர் பல வழிகளில் உதவுகின்றனர். மாணவர்களுக்குக்  கருத்தரங்குகளும் பலவாறாக நட்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

நாம் இங்கு சொல்ல வருவது தமிழ் மொழிப்பாடம் மட்டும் அல்ல, தமிழ் மொழி இலக்கிய மட்டும் அல்ல, மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் முதன்மை நிலையில் தேர்ச்சி பெற வேண்டும். நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்ல தேர்ச்சி பெற்று பேர் பெற்றுத்தர வேண்டும்.

தமிழ் மொழி பாடங்களை எடுத்த அனைத்து மாணவர்களுக்கும் நமது வாழ்த்துகளும் நன்றிகளும்!

Thursday 16 June 2022

மாணவர்களே! நீங்கள் நமது பெருமை!

 


SPM தேர்வில் நமது மாணவர்களின் தேர்ச்சி விகிதம் சிறப்பாக இருப்பதாக  பல்வேறு தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

நல்ல செய்தி தான்.  இந்தியர்களின் எதிர்காலம் என்பது கல்வியில் மீது நாம் காட்டும் ஆர்வத்தில் தான் இருக்கிறது. சந்தேகமில்லை!

இன்று உலக அளவில் நாம் பல சாதனைகளைச் செய்து கொண்டிருக்கிறோம் என்றால் அவை அனைத்தும் கல்வியின் மூலம் பெறப்பட்டவை தான்.  அதே சமயத்தில் நாம் உழைப்புக்குக் கொடுக்கும்  மரியாதையும் அடங்கும்.

SPM என்பது முதல்படி தான். இன்னும் நிறையவே சாதனைகளைச் செய்ய வேண்டி உள்ளது  அடுத்து மெட்ரிகுலேஷன் அல்லது Form VI, கல்லூரி,  பல்கலைக்கழகம் என்று நீண்ட வரிசை காத்துக் கொண்டிருக்கிறது. அதெல்லாம் உங்களுக்குப் பிரச்சனை அல்ல. இடம் கிடைத்தால் சாதனைகள் புரிய நமது மாணவர்கள் என்றென்றும் தயார். வாய்ப்புக் கொடுத்தால் நம்மால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை.

நமது மாணவர்களின்  இளம் வயது கனவு என்பது மருத்துவம் தான். நல்லது.  அதனையும் படிக்க பல வழிகள் உள்ளன. உள்நாட்டில் தகுதி அடிப்படை என்பது கணக்கில் இல்லை. அதனால் உள்நாட்டில் மறுக்கப்பட்டாலும்  வெளிநாடுகளில் படிக்க வாய்ப்புக்கள் நிறையவே உள்ளன. எல்லாம் பணம் தான்!  ஆனாலும் இன்னும் பல வழிகளில் மாநிலங்கள் தோறும் உதவிகள் கிடைக்கின்றனர். கல்வி உதவி அல்லது கல்விக்கடன் உதவி என்று பல நிறுவனங்கள்  கொடுக்கின்றன. இவைகளை எல்லாம்  கடைசி நிமிடத்தில் தேடிக் கொண்டிருப்பதைவிட முன் கூட்டியே தயாராக வைத்திருங்கள். கையில் பணம் இல்லையென்றால்  பல வழிகளைக் கையில் வைத்திருப்பது நல்லது தானே.

ஒரு சிலருக்கு மீண்டும் தேர்வு எழுதி குறைந்துபோன புள்ளிகளை நிறைவு செய்ய வேண்டிய சூழல் இருக்கலாம். தவறில்லை.  தோல்வி என்று ஏற்றுக் கொள்ளாதீர்கள். அதுவே வெற்றியின் அறிகுறி என்பதாக உங்கள் எண்ணத்தை மாற்றி அமத்துக் கொள்ளுங்கள். எதுவும் தோல்வி இல்லை!

இன்னும் பல மாணவர்கள் குறைவான புள்ளிகளே எடுத்திருப்பார்கள். ஏன்? தேர்வு தோல்வியில் முடிந்திருக்கும். பல காரணங்கள். 

ஆனால் அத்தோடு அனைத்தும் அணைந்து விடுவதில்லை.  கொஞ்சம் முயற்சிகள் எடுத்தால் தொழிற்கல்விகள் உண்டு. அங்கும் உயர்கல்விகள் உண்டு. அங்கும் கல்லூரிகள் வரை போகக் கூடிய சாத்தியங்கள் உண்டு. வெறும்  SPM  தேர்வை வைத்துக் கொண்டு அலைவதை விட சான்றிதழ், டிப்ளோமா என்று கையில் வைத்திருப்பது இன்னும் பலம். 

வழிகள் பல உள்ளன.  தகுதிகளை வளர்த்துக் கொள்ள  நிறையவே வாய்ப்புக்கள் உள்ளன. அரசாங்கம் ஒன்றுமே செய்யவில்லை என்று புலம்புவதை விட  இருக்கின்ற அரசாங்கத்தின் வசதி வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்வது தான் புத்திசாலித்தனம். மலாய் இளைஞர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்கிறார்கள். சீன இளைஞர்கள் அதனையே தொழிலாக மாற்றியமைத்துக் கொள்கிறார்கள். நமக்கு மட்டும் என்ன குறை?  தொழிலாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். வேலையாகவும் மாற்றிக் கொள்ளலாம்.

மாணவர்களே! நீங்கள் இந்த சாமுதாயத்தின் பெருமைக்குரியவர்கள். வெற்றி உங்கள் கையில்!

Wednesday 15 June 2022

தற்கொலைகள் அதிகரிக்கின்றன!

 

தற்கொலைகள் கூடாது, வேண்டாம் என்று எப்படித் தான் சொன்னாலும் அது என்னவோ தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

இவர்களுக்கு வழிகாட்ட எத்தனையோ அமைப்புகள் உள்ளன. அது எல்லாருக்கும் பயன் அளிக்கவில்லை. தற்கொலைக்கு யோசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு அது பயன் அளிக்கலாம். ஆனால் ஒரு நிமிடத்தில் முடிவு எடுப்பவர்களுக்கு யாருடைய ஆலோசனையும் எடுபடுவதில்லை!

அதிலும் கடன் பிரச்சனையில் உழல்பவர்களுக்கு யார் என்ன ஆறுதலைச் சொல்லிவிட முடியும்? ஆனாலும் எல்லாவற்றுக்கும் தீர்வு உண்டு என்பது போல கடன் பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். புத்திமதிகளைக் கேட்கும் அளவுக்கு அவர்களுக்கு பொறுமை இருப்பதில்லை.

ஆனாலும் தற்கொலை செய்துகொள்வர்களின் தலையாயப் பிரச்சனை என்பது கடன் தொல்லை தான். பெரியவர்களின் தற்கொலைகள் பெரும்பாலும் கடன் சார்ந்த பிரச்சனைகளாகத்தான் இருக்கும். கந்துவட்டி வாங்குபவர்களிடம் மாட்டிக்கொண்டு அவர்களின் பிடியிலிருந்து விடுபட முடியாமல் உயிரை மாய்த்துக் கொள்பவர்கள் உண்டு.

இளசுகள் வேண்டுமென்றால் காதல் தோல்வி என்று சொல்லிக் கொள்ளலாம்.  அதே போல தீர்க்க முடியாத நோயினால் அவதிப்படுபவர்கள்  'இனி மேல் வாழ வேண்டாம்' என்று முடிவெடுத்து தற்கொலை செய்து கொள்கின்றனர். வேலை இடத் தொல்லைகளினால் பாதிக்கப்பட்டு தற்கொலையை நாடுபவர்களும் உண்டு. பரிட்சையில் தோல்வி,   தகுதி இருந்தும்  மருத்துவ கல்வி பயில இடமில்லை , வியாபாரத்தில் தோல்வி, திருமண வாழ்க்கை நினைத்தது போல் அமையவில்லை -  இது போன்ற காரணங்களால் தங்களது உயிரைப் போக்குபவர்கள் பலர்.

உலக சுகாதார நிறுவனம் கடைசியாக   (2019)  எடுத்த புள்ளிவிபரங்களின் படி உலக அளவில் ஒவ்வொரு நாற்பது வினாடிகளில் ஒரு தற்கொலை நடைபெறுவதாக அறிவித்திருக்கிறது. நமது நாட்டில் அதே 2019 - ம் ஆண்டில் மொத்தம்  609 தற்கொலை சம்பவங்கள்  நிகழ்ந்திருக்கின்றன. இது கோவிட்-19 தொற்றுக்கு முன்பு.  தொற்றுக்குப் பின்னர் இது இன்னும் அதிகரித்திருக்கலாம்.

என்ன தான் சட்டங்கள் கொண்டு வந்தாலும், என்ன தான் புத்திமதிகளைச் சொன்னாலும், என்ன தான் அரசு சார்பற்ற நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டினாலும்  தற்கொலை சம்பவங்கள் குறையும் என்பதற்கான அறிகுறிகள் எதுவும் கண்ணுக்குத் தென்படவில்லை!

Tuesday 14 June 2022

சுல்தான் சொல்லுவது சரியே!


 ஜொகூர் சுல்தான், மத்திய அரசாங்கம் ஜொகூர் மாநிலத்தை மாற்றாந்தாய் போன்று நடத்துவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஜொகூர் சுல்தான் மத்திய அரசாங்கத்தின் மீது இதே போன்ற குற்றச்சாட்டுகளை இதற்கு முன்னரும் வைத்திருக்கிறார் என்பதும் நினைவு கூறத்தக்கது.

அவருடைய குற்றச்சாட்டுகள் தவறு என்று சொல்ல இடமில்லை.  மத்திய அரசாங்கத்தின் தவறான கொள்கைகளினால்  பொதுவாக பல பிரச்சனைகளில் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். இது ஜொகூர் மட்டும் அல்ல மற்ற மாநிலங்களிலும் உள்ள நிலைமை.

ஜொகூர்  சுல்தான் தனது மாநில நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்றாலும் மற்ற மாநிலங்களிலும் இதே நிலைமை தான். மற்ற மாநிலங்கள் வாய் திறக்கவில்லை. அதற்குப் பல காரணங்கள் உண்டு.  ஆனால் ஜொகூர் சுல்தான் அவரால் சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. தனது மாநிலம், தனது குடிமக்கள் என்கிற உரிமையோடு அவர் பேசுகிறார். அதனை நாம் எப்படி தவறு என்று சொல்ல முடியும்!

பொதுவாக சொல்ல வேண்டுமென்றால்  இன்று நம்முடன் பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகள் யாருக்கும் நாட்டுப்பற்று இருப்பதாகத் தெரியவில்ல. அல்லது மொழிப்பற்று, இனப்பற்று - இப்படி எதுவுமே இல்லாத ATM இயந்திரங்களாக மாறிவிட்டனர்! பணம் கிடைத்தால் நாட்டையே விற்றுவிடக் கூடிய அரசியல்வாதிகள் தான் இன்று நமக்குத் தலைமை தாங்குபவர்களாக இருக்கின்றனர்.

அடுத்த மாதம் கோழி விலை ஏறுகிறது, முட்டை விலை ஏறுகிறது, பெட் ரோல் விலை ஏறுகிறது, காய்கறிகள் விலை ஏறுகிறது -இதைச் சொல்லுவதற்குத்தான்  இவர்கள் அமைச்சர்களாக இருக்கிறார்களா? விலைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும், உள்நாட்டு உற்பத்திகளைப் பெருக்க வேண்டும் - மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பது ஆட்சியாளர்களின் கடமை. அரசியலரின்  நோக்கம் மாறிவிட்டது.  வருமும் காப்போம் என்பதைவிட வந்தபின் காப்போம் என்பது  அவர்களுடைய  நோக்கமாக மாறிவிட்டது.

இன்றைய அரசியலர்களைத் தட்டிக்கேட்க ஆளில்லை. ஜொகூர் சுல்தான் அவ்வப்போது அவர்களுக்குப் புத்திமதிகள் கூறிக்கொண்டிருக்கிறார். மற்ற மாநில சுல்தான்களும் பிரச்சனைகளைக் கையில் எடுக்க வேண்டும். அரசியல்வாதிகள் தங்களது கடமைகளைச் செய்யும்படி மாநில ஆட்சியாளர்கள் தூண்டுகோளாக இருக்க வேண்டும்.

அரசியல்வாதிகள் திருந்த வேண்டும்! இல்லாவிட்டால் திருத்தப்பட வேண்டும்!

Monday 13 June 2022

வெற்றி தான் நமது இலக்கு!

 

தோல்வியாளர்கள் என்றுமே வெற்றி பற்றி சிந்திப்பதில்லை!

ஒரே காரணம் தான். அவர்கள் முழுமையாக தோல்விகளைப் பற்றியே பேசிப் பழகிவிட்டனர்! வீட்டிலும் சரி வெளியேயும் சரி அவர்களது பேச்சுக்கள் அனைத்தும் தோல்விகள் பற்றியாதகவே  இருக்கும்.

முடிந்தவரை இவர்கள் தோல்விகளைப் பரப்புபவர்களாகவே இருப்பார்கள். மற்றவர்களையும் தோல்வியாளர்களாகவே பார்ப்பார்கள்.  தங்களைப் போலவே மற்றவர்களும் தோல்வி அடைவது திண்ணம் என்பது தான் அவர்களது எண்ணமாக இருக்கும்.

ஒரு உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  தோல்வி என்பது எப்படி நம் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து விட்டதோ  அதே போல வெற்றி என்பதையும் நம் உள்ளத்தில் ஆழமாகப் பதித்து விட முடியும். அது மிக எளிது.

எப்போது நம் மனதில் தோல்வி எண்ணங்கள் வருகின்றனவோ அப்போது அதனையே வெற்றி எண்ணங்களாக மாற்றி விட வேண்டும். வெற்றி எண்ணங்களை ஒரு பயிற்சியாகவே நாம்  செய்ய பழகிக் கொள்ள வேண்டும்.

ஒரு தோல்வியைச் சந்திக்கும் போது அது தோல்வி என்பதை விட அதில் கிடைத்த வெற்றி என்ன என்பதை ஆராய வேண்டும். தோல்வி என்பதை முற்றாக மறந்து விட்டு அங்குக் கிடைத்த வெற்றியை மட்டும் சிந்திக்க வேண்டும்.

நாம் ஏதோ ஒரு காரியத்தில் தோல்வி அடைந்தால் அதைப் பார்த்து உலகம் சிரிக்கலாம். பலர் சிரிப்பர். ஆனால் நாம் அதனைத்  தோல்வியாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. மனதளவில் நாம்  வெற்றியாளர் என்கிற எண்ணத்தை  உருவாக்கிக் கொள்ள வேண்டும். அந்தத் தோல்வியிலும் ஒரு சில படிப்பினைகளை நாம் கற்றிருப்போம். அது தான் வெற்றி என்பது.

வெற்றி எண்ணங்களே நமக்கு உயர்வைக் கொடுக்கும். தோல்வி எண்ணங்கள் நம்மை எந்தக் காலத்திலும் தலை நிமிராமல் செய்துவிடும். இன்று நம் சமுதாயத்தினரிடையே பெரும் பிரச்சனை என்பது தோல்வி மனப்பான்மை தான். நம் இளைஞர்கள் கூட விதிவிலக்கல்ல.

எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல்  'இது கிடைக்காது! அது கிடைக்காது!' என்று அக்கப்போராக எதையாவது சொல்லி வீழ்ச்சியடைந்து விடுகின்றனர்! முயற்சியே செய்யாமல் ஒரு முடிவுக்கு வந்து விடுகின்றனர்! அத்தோடு தோல்வி மனப்பான்மையையும் சேர்த்துக் கொள்கின்றனர்.

எல்லாக் காலங்களிலும் வாய்ப்புக்கள் கிடைத்துக் கொண்டு தான்  இருக்கின்றன. முற்றிலுமாக நம்மை யாரும் ஒதுக்கிவிடவில்லை.  அது முடியாத காரியம். பிரச்சனை என்னவென்றால் நம்மை நாமே  ஒதுக்கிக் கொள்கிறோம்!

அது என்ன தான் பிரச்சனை என்றாலும் வெற்றி தான் இலக்கு என்று முன் கூட்டியே தீர்மானமாக இருங்கள்.

நமது மலேசிய தமிழ்ப்பெண்கள் பல துறைகளில் இன்று வெற்றியாளர்களாக வலம் வருகிறார்களே அவர்களால் எப்படி முடிந்தது? அவர்களுக்கு வெற்றி மட்டும் தான் இலக்கு. நம்மை யாருடனும் ஒப்பிட வேண்டிய அவசியமில்லை.  நாம் வெற்றி பெற வேண்டும்! அதுவே நமது இலக்கு! அவ்வளவு தான்!

Sunday 12 June 2022

வரும்! ஆனா வராது!

 


பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மரண தண்டனைப் பற்றியான அறிவிப்பைப் படித்த போது, மேலே சொன்னது போல "வரும்! ஆனா வராது!" என்கிற என்னாத்த கண்ணையாவின் பிரபலமான வசனம் நினைவுக்கு வராமல் போகாது!

ஆனாலும் பிரதமர் என்ன சொல்ல வருகிறார் என்றால்  இனி கட்டாய மரண தண்டனை என்பது இல்லை.  ஒரு குறிப்பிட்ட வழக்கில்  மரண தண்டனைத் தேவை என்று நீதிபதிகளுக்குத் தோன்றினால் நீதிபதிகள் அதனைப் பயன்படுத்தலாம். இப்படிச் சொல்லி நம்மைத் தேத்திக் கொள்ளலாம்:  அதாவாது மரண தணடனை இல்லை என்பது 95% விழுக்காடு என்றால் வழக்கின்  தீவிரம் கருதி 5% விழுக்காடு நீதிபதிகள் முடிவுகளை எடுக்கலாம்.  வராது என்பது அதிகம். வரும் என்பது மிகக்குறைவு.

இப்போதும் இதற்கு முன்னரும் என்ன வித்தியாசம்? இதற்கு முன்னர் நீதிபதிகள் ஒரே ஒரு முடிவைத்தான்  எடுக்க முடியும். அது மரண தண்டனை மட்டும் தான்.  இப்போது அது தேவை என்று நீதிபதிகள் ஒரு குறிப்பிட்ட வழக்கில் நினத்தால் மட்டுமே மரண தண்டனை என்கிற முடிவை எடுக்க முடியும். அது வழக்கின் தீவிரத் தன்மையைப் பொறுத்தது.

பொதுவாக இப்போது மரண தண்டனையைப் பெரும்பாலான நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை.  மக்கள் எதிர்க்கிறார்கள் என்பது மட்டும் அல்ல அதனைக் காட்டுமிராண்டித் தனமான தண்டனை என்பதாக உலகம் ஏற்றுக் கொண்டுவிட்டது.

குற்றம் புரியும் ஒருவனுக்கு,  அவனுக்குத் தக்க சிறைத்தண்டனைக் கொடுக்க சட்டத்தில் வழியுண்டு. அதற்காகத்தான் சிறைகளைக் கட்டி வைத்திருக்கிறோம். சிறை எந்த அளவுக்குக் குற்றவாளிகளை மாற்றுகிறது என்றால் அவர்கள் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் இருக்க  அவர்களை அது தடுக்கிறது. அதைத்தான் நாமும் எதிர்பார்க்கிறோம்.

கட்டாய மரண தண்டனை என்பது ஆகக் கடைசியான ஒரு முடிவாக இருக்க வேண்டும்.  "வேறு வழியே இல்லை, இவன் சாவதைத்தவிர! உயிரோடு இருந்தால் மக்களுக்கு மேலும் ஆபத்து!" என்கிற நிலையில் ஒரு குற்றவாளி இருந்தால் நீதிபதி தனது கடசி ஆயுதமாக மரண தண்டனையைப் பயன்படுத்தலாம்.

மரண தண்டனை வராது! அளவு மீறினால் வரும்!

Saturday 11 June 2022

கட்சித்தாவும் தவளைகள்

 

கட்சி தாவும் தவளைகளுக்கு மிக விரவில் ஆப்பு  அடிக்கப்படும் என நம்ப இடமிருக்கிறது!

ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தொடரில் கட்சி தாவல் தடைச்சட்டம் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்கள் இது குறித்து வெகு விரைவில் பிரதமரைச் சந்திப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கமும் எதிர்கட்சிகளும் செய்துகொண்ட புரிந்துணர்வு  ஒப்பந்தத்தில் கட்சித் தாவும் தடைச்சட்டம் முக்கியமானது என்று வர்ணிக்கப்படுகிறது.

உண்மையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தப்படி இந்நேரம் இந்த கட்சி தாவும் தடைச்சட்டம் அமலாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனாலும் இந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் அம்னோ தரப்பினர் என்பது  தெளிவாகத் தெரிகிறது. பிரதமரும் அம்னோவோடு சேர்ந்து கொண்டு கொஞ்சம் இழுபறி வேலையில் இறங்கியிருக்கிறார் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது!

அம்னோ கட்சியினர் ஏன் இந்த தடைச்சட்டத்தை  தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர்?  எல்லாரும் அறிந்தது தான். சென்ற பொதுத் தேர்தலில்  பக்காத்தான்  வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது நாம் அறிந்தது தான். ஆனால் அந்த கட்சி ஆட்சியைத் தொடர விடாமல் தடைக்கல்லாக இருந்தவர்கள் அம்னோவினர்!  ஆளுங்கட்சியில் இருந்தவர்களைப் பண ஆசை காட்டி தங்களது கட்சிக்கு இழுத்தவர்கள் அம்னோ கட்சியினர்! அதனால் என்ன ஆயிற்று?  பக்கத்தான் அரசாங்கம் கவிழ்ந்தது!
 நாடாளுமன்றத்திலும் இது நடந்தது!  சட்டமன்றத்திலும் இது நடந்தது!  கடைசியில் பக்காத்தான் ஆட்சியை இழந்தது! ஒரு சில மாநிலங்களும்  கலைக்கப்பட்டன!  இதன்  பின்னணியிலிருந்து செயல்பட்டவர்கள்  அம்னோ கட்சியினர்!

ஏன்? நாட்டில் கட்சித்தாவல் என்கிற பிரச்சனையை ஆரம்பித்து வைத்தவர்களே அம்னோவினர் தான்! அறுபது ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தவர்கள் என்கிற முறையில் பணம் அவர்களிடம் கொட்டிக் கிடந்தது! அதனால் தங்களது சித்து விளையாட்டைக் காட்டிவிட்டனர்! அதற்கு முன்னர் கட்சித்தாவல் என்கிற கேள்வியே எழவில்லை!

இப்போதும் அம்னோ கட்சியினர் கட்சித்தாவல் பற்றி வாய் திறப்பதில்லை. காரணம் அடுத்த பொதுத் தேர்தல் எப்படி அமையும்  என்று அவர்களால் கணிக்க முடியவில்லை. ஒரு வேளை பிற கட்சியினரைத் தங்கள் பக்கம் இழுக்க வேண்டிய நிலை ஏற்பட்டால்.........? என்று யோசிக்கின்றனர்! அதனால் அவர்கள் வெளிப்படையாக இந்த கட்சித்தாவல் சட்டத்தை ஆதரிக்கவில்லை!

இந்த முறை நாடாளுமன்றத்தில் கட்சித்தாவலைத் தடுக்கும் சட்டம் நிறைவேற்றப்படும் என நம்பப்படுகிறது! நாமும் நம்புவோம்!

Friday 10 June 2022

பயப்படுவது யார்?

  

Who is afraid  of Election?
தேர்தல் என்றாலே யார் பயப்படுபவர்களாக இருக்க முடியும்? அது பெரும்பாலும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களாகத்தான் இருக்க வேண்டும்! எல்லாத்  தேர்தல்களிலும் இது தான் நடக்கும்.

ஆனால் நம் ஊர் தேர்தல் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக  இருக்கிறது. இத்தனை ஆண்டுகள்  அம்னோவினர் ஆட்சியில் இருந்த போது ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் தேர்தல் நடந்து வந்திருக்கிறது.

இந்த ஆண்டு அதே அம்னோ, பொதுத்தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு இருக்கும் போது, ஏனோ இப்போதே,  நான்காவது ஆண்டு நடந்து கொண்டிருக்கும் போதே, தேர்தலை நடத்த வேண்டும் என்று இன்றைய மலேசிய பிரதமர்க்கு நெருக்கடியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது! இன்னும் ஓர் ஆண்டு இருக்கிறதே என்று சொன்னால் "இல்லை! இல்லை! இப்போதே நடத்த வேண்டும்!" என்று  சண்டித்தம் பண்ணிக் கொண்டிருக்கிறனர் அம்னோ தரப்பினர். 

இவர்கள் கேட்கும் போதெல்லாம் பொதுத்தேர்தல் நடத்த வேண்டுமென்றால்  இதில் எந்த நீதியும் நேர்மையும் இருப்பதாகத் தெரியவில்லை.   ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பொதுத்தேர்தல் என்பது தான் எழுதப்பட்ட சட்டம். இந்த நாடு சுதந்திரம் பெற்ற தேதியிலிருந்து இன்றுவரை அந்த சட்டத்தைத் தான் நாம் பின்பற்றுகிறோம்.

அம்னோ  தேவையில்லாத  அரசியல் நெருக்கடியை  நாட்டில் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.  அம்னோ மக்களைப்பற்றி யோசிப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் அரசாங்கத்தைக் கைப்பற்ற வேண்டும். அரசியலில் ஆதிக்கம் செலுத்த வேண்டும். தங்கள் கட்சி சார்ந்த,  நாட்டையே சூரையாடிய கொள்ளையர்களைக் காப்பாற்ற வேண்டும். இது தான் அவர்கள் கொண்டுள்ள உன்னத நோக்கம்!

தேர்தல் முன்கூட்டியே வைப்பதற்கு அம்னோவுக்கு மேற்சொன்னவைகள் காரணமாக இருக்கலாம். ஆனால் மற்ற கட்சிகள் யாரும் தேர்தல் பற்றி  அக்கறைக் காட்டவில்லை. இன்னும் ஓர் ஆண்டு இருக்கும் போது இப்போது தேர்தல் வையுங்கள் என்கிற விவாதம் தேவை இல்லை என்பது தான் அவர்களின் நிலை.

நாட்டில் விலைவாசிகள் தாறுமாறாக ஏறிப்போய் கிடக்கின்ற இந்த காலகட்டத்தில் யாருக்கு வேண்டும் தேர்தல்?  அம்னோவில் உள்ளவர்கள் பணக்காரர்கள். அவர்களுக்கு விலைவாசி பற்றிக் கவலையில்லை. அப்படியே விலையேறினாலும் அம்னோ அவர்களைக் காப்பாற்றிவிடும்! 

நாட்டின் நிலைமையைப் பாருங்கள். ஒரு சராசரி தர்பூசிணி பழம் சுமார் நாற்பது வேள்ளி! ஒரு கிலோ நெத்திலி எண்பது வெள்ளி! இது சும்மா ஒர் எடுத்துக்காட்டு! அவ்வளவுதான்! இன்னும் ஆழமாக உள்ளே போகவில்லை!

இந்த நிலையில் பொதுத்தேர்தல்  தேவையா என்பது தான் பொது மக்களின் கேள்வி.  இப்போது, உடனடி அரசாங்கத்தில் வேலை என்பது விலைவாசிகளைக் குறைப்பது தான். மற்றவை பின்னர்!

அடுத்த ஆண்டு தேர்தல் என்றால் திப்போதே பயப்படுவர்கள்  அம்னோ! அம்னோ! அம்னோ! 

Thursday 9 June 2022

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்!


வாழ்க்கை என்றால் ஆயிரம் மட்டுமா இருக்கும்? இன்னும் ஆயிரம் ஆயிரம் இருக்கும்!

இலாபம் நஷ்டம், இன்பம் துன்பம், வலிகள் வேதனைகள்,  நல்லது கெட்டது என்று அடுக்கிக் கொண்டே போகலாம்! அது போய்க் கொண்டே  இருக்கும்!

ஆனாலும் நாம் நல்லவைகளை மட்டுமே எடுத்துக் கொள்வோம். நல்லவைகள் ஆயிரம் இருக்க ஏன் கெட்டவைகளைப் பற்றிய  ஆராய்ச்சியில் இறங்க வேண்டும்? நாம் நேர்மறையாகவே பேசுவோம் எதிர்மறையான சிந்தனைகளைத்  தவிர்ப்போம். கனிகள் இருக்க காய்களை ஏன் உண்ண வேண்டும்?

வாழ்க்கையில் பிரச்சனைகள் இருக்கும். எல்லாருக்கும் இருக்கும். தெருக்கோடியில் உள்ளவனுக்கும் இருக்கும்.  கோடிகளில் புரள்பவனுக்கும் இருக்கும். அவனவன் பிரச்சனை அவனவனுக்குப் பெரிது. ஒருவனுக்கு நூறு வெள்ளி கடன் பெரிது! ஒருவனுக்கு ஆயிரம் கோடி கடன் பெரிது! பொதுவாக அந்த கடனால்  இருவருமே நிம்மதியாக இல்லை!

ஒன்றை நாம் முக்கியமாக புரிந்து கொள்ள வேண்டும். நிம்மதி என்பது ஒரு மனப்பழக்கம். பிரச்சனையை வெற்றிகரமாக எதிர்நோக்குவது என்பது ஒரு மனப்பழக்கம்.

என்ன தான் தலை போகிற காரியமாக  இருந்தாலும்   'நம்மால் முடியும்' என்கிற மனப்பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.  உட்கார்ந்து பிரச்சனைகளை அலச வேண்டும். அக்கு வேறாக ஆணி வேறாக பிரித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

நெருக்கடிக்களுக்கிடையே மண்டயைப் போட்டு உடைத்துக் கொள்ளக் கூடாது. ஓய்வு எடுத்துக்கொண்டு சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்படியும் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லையா? உங்களிடம் உள்ள ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்துப் படியுங்கள். கதைகளைப் படியுங்கள். 'கதைகளைப் படிக்கிற நிலையிலா நான் இருக்கிறேன்'  என்று சொல்லித் தப்பிக்க வேண்டாம். கதைகள், நாவல்கள் நம்முடைய பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வைக் கொடுக்கின்றன என்பது உண்மை. கதைகள் நம்முடைய வாழ்வியலைத்தான் பிரதிபலிக்கின்றன என்பதை மறக்க வேண்டாம். எழுத்தாளன் ஏதோ வெட்டித்தனமாக எழுதிக் கொண்டிருக்கிறான் என்று நினைக்க வேண்டாம். அவன் எழுதுவது உங்களின் வாழ்க்கையைப் பற்றி, மக்களின் வாழ்க்கையைப்பற்றி.

எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் ஒரு முறை பேட்டி ஒன்றில்  தனது மர்ம நாவல்களைப் படித்து காவல்துறையினர் ஒரு வழக்கில் குற்றவாளியக் கண்டுபிடித்தனர் என்று கூறியிருந்தார். இது ஆச்சரியமாக இருக்கலாம். போலிஸ் மூளை முனைப்பு இல்லாத போது ஒரு எழுத்தாளனின்  மூளையைப் பங்குப் போட்டுக் கொள்கிறது! அவ்வளவு தான்!

நமக்குப் பிரச்சனைகள் ஆயிரம் இருக்கும். அதே சமயத்தில் அதற்கான தீர்வும்  இருக்கும் என்பதை நாம் நம்ப வேண்டும். தீர்க்க முடியாத பிரச்சனை என்பதாக ஒன்றுமில்லை.

வாழ்க்கை என்பதே ஒரு சமாளிப்பு தான்! எதுவானாலும் எளிதாக எடுத்துக் கொள்ளுங்கள்.

Wednesday 8 June 2022

எங்கே தவறு நடக்கிறது?

                              Islamic Affairs Minister  (PM's Department) -  Datuk Idris Ahmad

பிரதமர் துறையின்  இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான அமைச்சர் டத்தோ இட்ரிஸ்  அமாட் சொன்ன கருத்தை நாம் ஏற்றுக்கொள்வதில் தயக்கமேதுமில்லை. அப்படி என்ன சொன்னார்?

"மற்ற சமயத்தினரை அவமதிப்பதையோ, வெறுப்பை விதைப்பதையோ இஸ்லாம் மதத்தின்  போதனைகளும்,  கொள்கைகளும்  தடுக்கின்றன என்பதைப் புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு  முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டும்" என்பது தான் அவரின் செய்தி.

ஆக, இஸ்லாமிய சமய அறிஞர் ஜாகிர் நாயக் அவரின் சீடர் ஸம்ஸூரி வினோத் போன்றவர்கள் பிற மதங்களைத் தாக்குவது,  மக்களிடையே அமைதியின்மையைத் தோற்றுவிப்பது  எந்த விதத்திலும் இஸ்லாமியக் கொள்கைகளைப் பிரதிபலிக்கவில்லை என்பதையே டத்தோ இட்ரிஸ் அவர்கள் சொல்லாமல் சொல்லுகிறார்.

இந்தியாவில் இந்து மதம் பிற மதங்களுக்கு எதிரானதல்ல என்பதாக ஆளும் பாரதிய ஜனதா கட்சி சமீபத்தில் இஸ்லாமிய நாடுகளுக்கு உறுதி அளித்திருக்கிறது. சமீப காலங்களில் இந்தியாவில் முஸ்லிம்கள் பலமுனைகளிலிருந்து தாக்கப்படுகின்றனர்.  பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றன. அரசாங்கம் அதனைத் தனிப்பட்ட மனிதர்களின் தாக்குதல் என்பதாகக் கூறுகிறது. அது இந்து மதத்தின் கோட்பாடுகள் அல்ல என்பது தான் அவர்களது விளக்கம்.

புத்த மதத்தைப் பற்றியும் நாம் அறிந்திருக்கிறோம். மற்றவர்களுக்குத் தீங்கு செய்வதையே அது ஆதரிக்காத மதம்  ஸ்ரீலங்காவின் அதிகாரபூர்வ மதம் புத்தமதம். அந்நாட்டில் ஆட்சியாளர்களுக்குச் சமமானவர்கள்  என்றால் அது புத்த பிக்குகள் தான். ஒன்றரை இலட்சம் தமிழர்களைக் கொன்று குவித்ததற்குக் காரணமானவர்கள்  அந்தப் புத்த பிக்குகள்!

இப்போது ரஷ்ய-உக்ரைன்  சண்டையின் உக்கிரம் இன்னும் தணிந்தபாடில்லை. இரண்டுமே  கிறிஸ்துவ நாடுகள் தான்.   இந்த சண்டையின் மூலம் உக்ரைன் மக்கள் பல நாடுகளுக்கு அகதிகளாகப் போக வேண்டிய நிலைமை. தங்களது சொந்த நாட்டில்  உடைமைகளை இழந்து அந்நிய நாடுகளுக்கு ஆதரவற்ற நிலையில் பிழைத்தால் போதும் என்கிற நிலை.

கிறிஸ்துவம் அன்பைப் போதிக்கும் மதம். ஆனால் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாமல்  அன்பு தடுமாறுகிறது! உலகம் இன்று யாரைக் குற்றம் சொல்லுகிறது? உலகில் நடக்கும் பல பிரச்சனைகளுக்குக் காரணம் கிறிஸ்துவ நாடுகள்  தான் என்கிறது உலகம்!

இதற்கு என்ன தான் முடிவு? ஒவ்வொரு மதமும் நல்லவற்றைத் தான்  போதிக்கின்றன. எங்கே தவறு நடக்கிறது? மதங்களைக் குறை சொல்ல ஒன்றுமில்லை. மதங்களைப் பின்பற்றுவோர் தான் குற்றவாளிகளாக இருக்கின்றனர்.

இவர்களுக்கு நல்ல புத்தியைக் கொடும் கடவுளே என்று தான் நாம் பிரார்த்தனை செய்ய வேண்டியுள்ளது!

Tuesday 7 June 2022

நான் செய்ய நினைத்ததெல்லாம்!

 


"எனக்குப் பிடித்ததை என் இளம் வயதில் செய்ய முடியவில்லை. நான் யார் யாரையோ சந்தோஷப்படுத்த வேண்டிய நிலையில் இருந்ததால் வேண்ட வெறுப்பாகவே நான் விரும்பாத வேலையைச் செய்து வந்தேன்.  இப்போது ஓய்வு பெற்ற நிலையில், பெரிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை என்றாலும், ஏதோ சிறிதாக நான் விரும்பியதைச் செய்கிறேன்."

இப்படி சொல்பவர்கள் பலர் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு சிலர் கடைசி வரை  அவர்கள் விரும்பியதை செய்யாமலேயே போய்ச் சேர்ந்து விட்டார்கள்! பல காரணங்கள். அது தாங்கள் வகித்த பதவிக்கு இழுக்கு என்று நினைப்பவர்கள் உண்டு.

அந்த வகையில் நமது முன்னாள் போலிஸ் படைத்தலைவர்  டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் கொஞ்சம் வித்தியாசப்படுகிறார். ஓராண்டுக்கு முன்னர் தான் அவர் காவல்துறையிலிருந்து ஓய்வு பெற்றார். ஓய்வுபெறும் போது 'நான் விவசாயத்தில் ஈடுபடுவேன்'  என்று ஒரு நேர்காணலின்  போது அவர் கூறியிருந்தார். கிராமப்புறத்திலிருந்து வந்தவர்களுக்கு  விவசாயம் இரத்தத்தில் ஊறிப்போனது.

அவர் சமீபத்தில் பொது சந்தை ஒன்றில்  காய்கறி வியாபாரம் செய்யும் படம் ஒன்று வைரலாகியிருக்கின்றது!  எந்த கூச்சமோ, தயக்கமோ, பதட்டமோ எதுவும் இல்லாமல்  அவர் அந்த படத்தில் காணப்படுகிறார்! அது பொதுவாக அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது!

இப்படி ஒரு குணாதிசயம் கொண்டுள்ள மனிதர்கள் வெகு சிலரையே நாம் பார்க்கின்றோம்.

சில மாதங்களுக்கு முன்னர்  நெதர்லாந்து நாட்டில்  இப்படி ஒரு சம்பவம் நடந்தேறியது. நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்,  தனது வீட்டிலிருந்து சைக்கிள் ஒன்றில்  ஒரு பேரங்காடிக்குக் கையில்   பையோடு பொருள்கள் வாங்கச் செல்கின்றார்! மற்ற சராசரி மனிதர்களோடு அவரும் ஒரு சராசரி மனிதனாகவே நடந்து கொள்கிறார்! இப்படியெல்லாம் ஒரு காட்சியை நாம் எந்தக் காலத்தில்  எங்கு பார்த்திருக்கிறோம்!

இப்படியெல்லாம் உயர்ந்த குணம் உள்ளவர்கள் உலகெங்கிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். நமது நாட்டிலும் பலர் இருக்கத்தான் செய்வர். நம் கண்ணுக்குத்தான் அகப்படுவதில்லை!

இதில் என்ன பாடத்தை நாம் கற்றுக் கொள்கிறோம்?  நாம் விரும்புகின்ற ஒரு காரியத்தை நமது இளமைகாலத்தில் நம்மால் செய்ய முடியவில்லை. அதனாலென்ன?   நாம் ஓய்வு பெறும்போது நம்மால் எந்த அளவுக்கு செய்ய முடியுமோ  அந்த அளவுக்குச் செய்துவிட்டு நாமே திருப்தி அடைந்து கொள்ள வேண்டியது தான்! தேவை எல்லாம் கூச்சத்தை மூட்டைக்கட்டிப் போட்டுவிட வேண்டும்! அவ்வளவு தான்!

Monday 6 June 2022

ஏழை மனதை மாளிகையாக்கி...!

 

கவியரசர் கண்ணதாசன் தான் பாடினார்.  "ஏழை மனதை மாளிகையாக்கி......" அது போதும்!

கவிஞர் பார்க்காத பணமா?  அவர் மலேசியா வந்த போது அவர் சொன்ன ஒரு வார்த்தை இன்னும் எனது ஞாபகத்தில் இருக்கிறது. "இந்தியாவில் எழுதி சம்பாதித்தவர்களில்  பாரத பிரதமர் ஜவஹர்லால் நேருவும்  நானும் தான் முதலிடத்தில் நிற்கிறோம்" என்று அவரால் சொல்ல முடிந்தது என்றால்  அவருடைய வருமானம் எவ்வளவு இருந்திருக்கும் என்பதை நீங்களே கணக்குப் பண்ணிக் கொள்ளுங்கள்.

சமீபத்தில் கவிஞரின் மகன் பேட்டி ஒன்றில் அவரின் தினசரி வருமானம் எட்டாயிரத்திலிருந்து பத்தாயிரம் ரூபாய் வரை இருக்கும் என்பதாகக் கூறியிருந்தார். அவர் வாழ்ந்த காலகட்டத்தில் அப்போதுள்ள அதன்  மதிப்பைப பாருங்கள். இன்றைய நிலையில் ஒப்பிட வேண்டாம்!

இதனை ஏன் நான் சொல்லுகிறேன் என்றால் அவர் மாடமாளிகையில் பிறக்கவில்லை. காரைக்குடி என்றாலே செட்டியார் சமூகம் வாழும் பணக்கார ஊர் என்று தான் தோன்றும். ஆனால் அவரின் நிலை அப்படி இல்லை.  அவரைக் காப்பாற்ற முடியாத ஏழைப் பெற்றோர்கள் அவரை மற்றவர்களுக்குத் தத்துக் கொடுத்துவிட்டனர். அதாவது 'ஏழாயிரம் ரூபாய்க்கு அவரை விற்றுவிட்டனர்' என்கிறார் அவரது மகன்!

கண்ணதாசனின் வாழ்க்கை இப்படித்தான் ஆரம்பம். ஏழ்மை நிலைமையில் இருந்தவர். அவர் தனது எழுத்தின் மீது உள்ள நம்பிக்கையில் எழுத வந்தவர். படிப்போ வெறும் எட்டாம் வகுப்பு வரை. அதற்கு மேல் படிக்க வழியில்லை. பின்னர் திரை உலகில் புகுந்து பல சிரமங்களுக்கிடையே வெற்றிக்கொடி நாட்டியவர்.

அவர் ஏழையாகத்தான் பிறந்தார் என்றாலும் அவர் மனதளவில் தன்னை ஏழையாக நினைக்கவில்லை.  தன் அடிமனதில் அவர் ஏழையாக இருக்கவில்லை.  அவர் மனதை எப்போதும் மாளிகையாகவே வைத்திருந்தார்! அது தான் கவிஞரின் சிறப்பு.

நமது இன்றைய நிலைமை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இருந்து விட்டுப் போகட்டும். ஏழை என்றால் ஏழைதான், வேறு என்ன சொல்ல? ஆனால் ஏழ்மையை நம்மால் மாற்ற முடியும். ஏழ்மை என்று சொல்லி நாம் முற்றிலுமாக ஏழ்மைக்கு  அடிமையாகிவிடக் கூடாது. நம்மில் பலர் இங்கே  தான் தோல்வி அடைந்து விடுகிறோம்.

"இறைவன் விதித்தது! ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்!" என்று எப்போதும் இறைவனைக் குற்றம் சொல்வபவர்கள் பலர் இருக்கின்றனர். அப்படியே சொல்லிச் சொல்லி தங்களது வாழ்க்கையை மாற்றியமைக்க முயற்சி செய்ய மறுப்பவர்கள்.   அதே சமயத்தில் " உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக, மலர்கள் மலர்வது எனக்காக" என்று ஓடி ஆடி இறைவனை வாழ்த்தி தங்களை உயர்த்திக் கொண்டு வாழ்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்!

நீங்கள் ஏழையாகவே  இருக்க வேண்டும் என்பது இறைவன் விதித்தல்ல! அது நீங்கள் விதித்தது, நீங்கள் விதைத்தது. நீங்கள் போட்ட விதை  அது மரமாகி இப்போது உங்களை முன்னேறாதபடி அமுக்கிவிட்டது!

எல்லாவற்றுக்கும் நமது மனமே காரணம். மனம் போல் வாழ்வு என்று தானே சொன்னார்கள்?  நீங்கள் ஏழை என்பதை மனதிலிருந்து அகற்றிவிட்டு 'நான் பணக்காரன்' என்கிற  எண்ணத்தை உள்ளே புகுத்துங்கள். அப்படி ஓர் எண்ணத்தை நீங்கள் வளர்த்துக் கொண்டால் உலகமே உங்களைப் பணக்காரனாக்கி விடும்! அதற்கான வழிகளைக் காட்டும்.

அதைத்தான் கவிஞர் சொன்னார்: ஏழை மனதை மாளிகையாக்கு என்று. அதன் பின்னர் பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் வரும் மாற்றத்தை!

Sunday 5 June 2022

வீடு வாங்குகிறீர்களா?

 


வீடு வாங்குகிறீர்களா? நல்ல விஷயம். நம் சமுதாயத்தினருக்கு மிகவும் தேவையான விஷயம். சொந்த வீடு இல்லாமல் எப்படி காலத்தைக் கழிப்பது? அதனால் 'தலைக்கு மேல் கூரை' என்பதை நம் சமுதாயம்  எப்போதும் வலியுறுத்தி வந்திருக்கிறது.

வீடு வாங்குவதில் இப்போது மிகவும் சிக்கலான காலகட்டம். அந்த காலம் போல மலிவு வீடுகள், நடுத்தர வீடுகள், அதிக விலையுள்ள வீடுகள் என்று மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டு விற்பனையில் இருந்தன. அவை அரசாங்கத்தால் கட்டப்பட்ட வீடுகள்.

இப்போதோ அனைத்தும் தனியார் மயம்.  மலிவு விலை வீடுகளுக்குத் தனியார் நிறுவனங்கள் 'பை! பை!' சொல்லிவிட்டார்கள்!  தனியார் நிறுவனங்கள் இப்போது கட்டும் வீடுகள் அனைத்தும் ஐந்து இலட்சம், ஆறு இலட்சம் என்று விலைகளை நிர்ணயத்திருக்கின்றனர். அதனால் சராசரி குடும்பங்கள் வீடு வாங்குகின்ற சக்தியை இழந்துவிட்டனர். அது மட்டும் அல்ல வீடு வாங்கிய பின்னர் வாங்கியவர்கள் மேலும் ஒரு இலட்சத்திற்கும் மேல் சேலவு செய்ய வேண்டி வரும்! அந்த அளவுக்குத் தரமற்ற வீடுகளைத் தான் இப்போது பார்க்க முடிகிறது! அரசாங்கம் அதனைக் கண்டு கொள்வதில்லை! அது தான் பிரச்சனையே!

இந்த நேரத்தில் ஒரு விஷயத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.  நீங்கள் வங்கியில் கடன் எடுத்துத் தான் ஆக வேண்டும் என்கிற சூழ்நிலை இருந்தால் எத்தனை ஆண்டுகள் நீங்கள் கடன் வாங்கப்போகிறீர்கள் என்பதில் கவனமாய் இருங்கள். முப்பது, முப்பத்தைந்து ஆண்டு கடன் என்றால் நான் அதனை ஆதரிக்கவில்லை. என்னுடைய சிபாரிசு என்றால் பத்து ஆண்டுகள் அல்லது மிஞ்சி மிஞ்சிப் போனால் பதினைந்து  ஆண்டுகள்! அவ்வளவு தான்! அதற்கு மேல் வேண்டாம் என்பது எனது கருத்து.

முப்பது ஆண்டுகள் என்னும் போது நீங்கள் வேலையில் இருப்பீர்களா உங்கள் பிள்ளைகள் தொடர்ந்து மாதத் தவணைகளைக் கட்டுவார்களா அல்லது அவர்கள் என்ன நிலையில் இருப்பார்கள் - இப்படி பலவற்றை யோசிக்க வேண்டியுள்ளது. முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் அது பழைய வீடாகிவிடும்.  அது தேவையில்லை என்கிற நிலைமைக்குப் பிள்ளைகள்  வரலாம். அதனால் தவணையைக் கட்டாமல் தவிர்க்கலாம். அந்த வீடு பழையபடி வங்கிக்கே போக வேண்டிய சூழ்நிலை வரலாம்! பெற்றோர் கஷ்டப்பட்டு உழைத்து சுமார் 25 ஆண்டுகள் தவணைகளைக் கட்டிய பின்னர் அத்தனையும் வீணாகிவிடும்!  "வங்கிக்கே போனால் போகட்டும்!" என்று சொல்லும் மருமகள்களும் இருக்கிறார்கள்! பாதிக்கப்பட்ட  ஒரு வயதானவர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். எதுவும் நடக்கலாம்.

அதனால் உங்கள் காலத்தில் நிம்மதியாக இருக்க வேண்டுமானால் - நீங்கள் வாங்குகிற வீடு உங்களுக்குச் சொந்தமாக இருக்க வேண்டுமானால் - தவணை ஆண்டுகளை முடிந்தவரை குறைத்துக் கொள்ளுங்கள்.

நான் சொல்ல வருவதெல்லாம்  பத்து ஆண்டுகள் அல்லது பதினைந்து ஆண்டுகள் - நீங்கள் நிம்மதியாக உங்கள் கடைசி காலத்தைக் கழிப்பீர்கள்! புலம்ப வேண்டிய சூழல் வராது!

Saturday 4 June 2022

நான் வழிமொழிகிறேன்!

 


பினாங்கு மாநில துணை முதல்வர், பேராசிரியர் டாக்டர் இராமசாமி அவர்கள்  சொன்னதை நான் வழி மொழிகிறேன்! அவர் மட்டும் அல்ல சுகாதார அமைச்சர் கைரி ஜாமாலுடின் அவர்களும் இதே கருத்தைத்தான்  வலியுறுத்தியிருக்கிறார்.

அவர்கள் சொல்ல வருவதெல்லாம் இப்போதைக்கு அடுத்த பொதுத் தேர்தல் தேவை இல்லை என்பது தான்.

ஒரு சிலர்,  அம்னோ தரப்பிலிருந்து,   வேறு விதமாக இதனைக் கயிறு திரிக்கின்றனர்!  'ஏன் தேர்தலைத் தாமதப்படுத்துகிறீர்கள்?' என்று கேளவிகளை எழுப்புகின்றனர். இந்த அறிவிலிகள் ஒன்று அறியாதவர்களா?  தேர்தலை  இங்கு  யாரும் தாமதப்படுத்தவில்லை!  அடுத்தப் பொதுத் தேர்தல் என்பது இன்னும் ஓராண்டுக்குப் பின்னர்  என்பதை இவர்கள் அறிந்தவர்கள் தான்.

தேர்தலை நடத்த வேண்டும் என்று அவசரப்படுத்தும் அவசரக்குடுக்கைகள் யார்?  எல்லாருமே ஏதோ ஒரு வகையில் நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளவர்கள் தான்! இவர்களெல்லாம் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வந்தால் அடுத்த பொதுத்தேர்தல் என்பது அவர்களுக்கு எட்டாக்கனியாகிவிடும் என்பதை முழுமையாக புரிந்து வைத்திருக்கிறார்கள்! 

இவர்களின் சுயநலத்திற்காகவே பொதுத் தேர்தல் நடத்த வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கின்றனர்!

பொது மக்களைப் பொறுத்தவரை தேர்தலை எதிர்கொள்ள யாரும் தயாராக இல்லை. விலைவாசி உயர்வு,  பெட்ரோல் டீசல் விலை உயர்வு, உணவு பொருள்களின் விலை உயர்வு - எல்லாமே உயர்வு உயர்வு என்று மக்கள்  புலம்பிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் தேர்தலை யாரும் விரும்புவதாக இல்லை. 

ஆனால் இந்த சூழலே அம்னோவுக்குச் சாதகமாக இருக்கும் என்று அம்னோ நம்புகிறது. மக்கள் தேர்தலைப் புறக்கணித்தால்  அது அம்னோவுக்கு இலாபம். காரணம் அவர்கள் கட்சியினர் திரண்டு வந்து பாரிசானுக்கு வாக்களிப்பர் என்பது தான் அவர்கள் போடும்  கணக்கு. இது எதிர்கட்சிகளுக்குப் பாதகமாக அமையும்.

அதனால் நியாயப்படி தேர்தல் எப்போது நடக்க வேண்டுமோ அப்போது நடக்கட்டும். மக்கள் யார் பக்கம் இருக்கிறார்களோ அவர்கள் பக்கம் வாக்களிக்கட்டும். அப்போது யாரும் குறை சொல்லப்போவதில்லை! இப்போது தேர்தல் வைப்பது ஒரு தலைசார்பாக அமையலாம்! சாத்தியம் உண்டு.

தேர்தல் இப்போதைக்குத் தேவை இல்லை என்பதே நமது நிலைப்பாடு.  பிரதமர் இஸ்மாயில் சப்ரி அம்னோவின் நெருக்குதல்களுக்கு அசைந்து கொடுக்கக் கூடாது. பிரதமர் இஸ்மாயில் இந்த தவணை மட்டுமே, இன்னும் ஓராண்டு மட்டுமே, பிரதமராக இருக்க முடியும். அதுவும் எதிர்கட்சிகளின் தற்காலிக ஒப்பந்தத்தின் படி அவர் இருக்க முடியும். அதன் பின்னர் அவர் பிரதமர் என்கிற கனவை மறந்துவிட வேண்டியது தான்! இருக்கிற இந்த நல்ல நேரத்தை, பிரதமர் பதவியை,  நல்ல நோக்கத்துக்காக அவர்  பயன்படுத்தட்டும்.

தேர்தல் இப்போதைக்குத் தேவை இல்லை!

Friday 3 June 2022

தயக்கத்தை ஒதுக்கித் தள்ளுங்கள்!

 

தயக்கம், பயம் என்று எப்படிச் சொன்னாலும் அதன் தாக்கம் என்பது எல்லாரிடமும் உண்டு.  பெரும்பாலும் அனைவரிடமும் உண்டு.

நாம் பல காரியங்களைச் செய்ய முடியாததற்குக்  காரணம் தயக்கம் தான்.  தயக்கம் உள்ளவர்கள் அனைவற்றிலும்  பின்தள்ளப்படுகிறார்கள்.  தயக்கத்தினால்  நாம் முன்வராத போது மற்றவர்கள் முன்வந்து எளிதாக  கைப்பற்றிவிடுகிறார்கள்!

நமக்கு ஆங்கிலம்  பேசத் தெரிந்தாலும்  "சரியாகப் பேசுகிறோமா! தவறாகப் பேசுகிறோமா! மற்றவர்கள் சிரிப்பார்களா!"  இப்படி பலவாறாகத் தயங்கித்  தயங்கி கடைசியில் பேச முடியாமலேயே தோல்வியைத் தழுவி விடுகிறோம்!! இன்னொருவன் அரைகுறை ஆங்கிலத்தில் பேசி மற்றவர்களை அசத்தி விடுகிறான்! வெற்றியும் பெற்றுவிடுகிறான்.

தேவையெல்லாம் பேச வேண்டும் அவ்வளவு தான். யார் பேசுகிறானோ அவன் வெற்றி பெறுகிறான். பேசத் தயங்கியவன் தோல்வியோடு போகிறான்!

எல்லாவற்றுக்கும் தேவை ஒரு துணிச்சல் தான். துணிச்சல்  உள்ளவன் சாதித்து விடுகிறான்.

ஒரு சீன இளைஞன் புதிதாக வேலைக்கு வந்திருந்தான். அவன் சீன இடைநிலைப்பள்ளியில் படித்தவன்.  வேலைக்குத் தகுதியானவன் தான்.  நாங்கள் பேசுவது பெரும்பாலும் ஆங்கில மொழியில்.  அந்த இளைஞன் ஆங்கில பேசினால் சிரிக்கும்படியாகத் தான் இருக்கும்! அவன் எது பற்றியும் கவலைப்படவில்லை. அவன் பேசுவது தான் ஆங்கிலம்!  'கேட்டா கேள்! இல்லாவிட்டால் போ!' என்பது போல் பேசுவான்! எப்போதும்  ஆங்கில பத்திரிக்கையைக் கையில்  வைத்திருப்பான். ஒரு சில மாதங்களில் தனது பிழைகளைத் திருத்திக் கொண்டு நன்றாகவே பேச ஆரம்பித்து விட்டான்! இந்த இடத்தில் நமது இளைஞர்களை வைத்து பொருத்திப் பார்த்தால் வருத்தம் தான் வரும்!

எத்தனையோ திறமைசாலிகள், வசதி படைத்தவர்கள் யாராக இருந்தாலும் சரி நாலு பேர் முன்னால் அல்லது ஒரு மேடையில் நின்று பேச எத்தனை பேரால் முடியும்? வேர்த்து விறுவிறுத்துப் போகாதா! உலகிலேயே மிகவும் சிரமத்திற்குரிய காரியம் என்றால் அது மேடையில் பேசுவதுதான்!

நம்முள் இப்படி ஒரு தயக்கம் இருந்தால் ஒன்று செய்யலாம். நாலு பேர் முன்னால் பேசுங்கள். வாய்ப்புக் கிடைத்தால் மேடையில் பேசுங்கள். மேடையில் பேசி பழகிவிட்டால் அதற்குப்பின் எங்கு வேண்டுமானாலும் பேசிவிட முடியும். தயக்கம் போய்விடும்.

தயக்கம் நம்மை எல்லாவற்றிலிருந்தும் தள்ளி வைக்கும்! அதிலிருந்து நாம் விடுபட வேண்டும்!