Monday 22 April 2024

2500 இடங்களை ஒதுக்குங்கள்!

 

கோலகுபு பாரு இடைத்தேர்தல் நெருங்குகிறது.   இரண்டு கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்துவிட்டன.

முக்கியமாக  ஒரு செய்தியை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.   வெற்றிபெற  நமது வாக்குகள் முக்கிய பங்குகள் வகிக்கின்றன.  அதனால் தான் புதிதாக  பல தலைவர்கள் தோன்றி  நம்மிடம் கதை அளந்து கொண்டிருக்கின்றனர். நாமும் சிவனே என்று  அவர்கள் சொல்லுகின்றவைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

தேர்தல் என்றாலே ஏகப்பட்ட வாக்குறுதிகளை அள்ளி அள்ளி வீசுகின்றனர்.  சொன்ன சொல்லை எந்த ஒர் அரசியல்வாதியும்  காப்பாற்றுவதில்லை.   அதுவும் இந்தியர்களுக்குக் கொடுக்கப்படும்  வாக்குறுதிகள் அனைத்தும் காற்றிலேயே அடித்துக்கொண்டு போய்விடுகின்றன!

அதனால் நமது மக்களுக்கு ஒரு வேண்டுகோள்:  இனி அடுத்த மாதம், அடுத்த வருடம், அடுத்த ஐந்து ஆண்டுக்குள்,  ஆய்வு செய்வோம்,  ஆய் செய்வோம்   - இப்படியெல்லா அரசியல்வாதிகள்  பேசினால் அவர்களை விரட்டி அடியுங்கள்!  இனி நமக்கு அடுத்த, அடுத்த, அடுத்த, அடுத்த எதுவும் வேண்டாம்.   இப்போது உங்களால் என்ன முடியும்?  அதைச்  சொல்லுங்கள் என்று கேளுங்கள்.

அரசியல்வாதிகள்  பிரமாண்ட  வாழ்க்கை வாழ வேண்டுமானால் வாழட்டும்.  ஆனால் அவர்களின் பிரமாண்டத்துக்காக நாம் உழைக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.  நம்மிடையே  இத்தனை பிரச்சனைகள்.  சரி, இப்போது எந்தப் பிரச்சனையை உங்களால் தீர்க்க முடியும்?   என்று கொக்கி போடுங்கள்.

உணவு பொட்டலங்கள் கொடுத்தால் அதனை அவர்கள் வீட்டுப் பிள்ளைகளுக்குக் கொடுக்கச் சொல்லுங்கள். அதனைக் கொண்டு போய் சீனர்களிடமும், மலாய்க்காரர்களிடம்  கொடுக்கலாமே.  ஏன் நம்மேல் மட்டும் இவ்வளவு அக்கறை?

இப்போது இதோ ஓர் இடைத்தேர்தல்.  இந்த ஆண்டு மெட் ரிகுலேஷன்  கல்வியில் நமது நிலை என்ன?  நமக்கு ஓர் உறுதியான இடஒதுக்கீடு தேவை.  எல்லாகாலங்களிலும் இதற்காக நாம் போராடிக் கொண்டிருக்க முடியாது.  பேச்சு வார்த்தைகள் நடத்திக் கொண்டிருக்க முடியாது. மகஜர் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது. நமது கோரிக்கை 2500 மாணவர்கள். அதற்கான உறுதிமொழி தேவை. அதற்காக இந்த இடைத்தேர்தலை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதுதான் இன்றைய அவசரம்.

சரியான பதில் வரவில்லை என்றால்  யாருக்கு வாக்களிப்பது என்பது  உங்களின் தேர்வு.

Sunday 21 April 2024

இது சரியான முடிவுதானா?

 

"அரசியலில் நிரந்தர எதிரியும் இலலை,  நிரந்தர நண்பனும் இல்லை" என்பார்கள். 

ஆனால் ம.இ.கா. வைப் பற்றி   மக்கள் என்ன நினைக்கிறார்கள்?  நிச்சயமாக நிரந்தர இந்தியர்களின் எதிரியாகத்தான் நினைக்கிறார்கள்.  அந்த எண்ணம் மாற வாய்ப்பிருக்கிறதா?  நிச்சயமாக இப்போது இல்லை!

ஆளுங்கட்சியில் ஓர் அங்கம் என்பதால் ம.இ.கா.வை கோலகுபு பாரு இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு  அழைப்பது  இயல்பு தான்.  ஆனால் ம.இ.கா. பிரச்சாரத்திற்கு வருவதால்  வரவேற்பு எப்படி இருக்கும்?  நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்கப் போவதில்லை!   மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட  ஒரு கட்சி இப்போது 'இந்தியர் நலனுக்காக'  வந்து பிரச்சாரம் செய்தால் அது எடுபடுமா?  ம.இ.கா. வந்தாலே  மக்கள் எட்டிப் போவார்கள் என்பது தான் உண்மை.

பிரதமர் பதவி ஏற்கும் வரை டத்தோஸ்ரீ அன்வார்,  ம.இ.கா.வைப் பற்றிய அவரது நிலைப்பாடு என்ன என்பது  அவருக்கும் தெரியும்; நமக்கும் தெரியும்.   இப்போதும் இந்தியர்களின் நிலைப்பாடு இன்னும் மாறவில்லை.  இந்த நிலையில் இவர்களின் பிரச்சாரத்தை  இந்தியர்கள் எந்த அளவுக்கு வரவேற்பார்கள்?  வரவேற்பு கிடைக்குமா? வெறுப்பேற்பு  கிடைக்குமா?

இவர்கள் பிரச்சாரம் செய்வதால்  அது ம.இ.கா.வுக்கு நல்லதாக இருக்கலாம்.  காரணம் அவர்கள் இந்தியர்களை நெருங்குவதற்கு அது ஒரு காரணமாக அமையும்.  ஆனால் இந்திய மக்களின் மனநிலை என்ன?  அந்த அறுபது ஆண்டு கால அவலத்தை   மீண்டும் நினைத்துப் பார்க்க வேண்டிய சூழல் உருவாகும். அவ்வளவு எளிதில் ம.இ.கா.வின்  கடந்தகாலத்  துரோகங்களை மறந்துவிட முடியுமா?

ம.இ.கா.வைப் பிரச்சாரத்திற்கு அழைப்பது  பி.கே.ஆர். கட்சிக்கு  எப்படிப் பார்த்தாலும் நன்மை பயக்காது.  அது பக்காத்தான் கூட்டணிக்கு  அவப்பெயரைத்தான்  ஏற்படுத்துமே தவிர  நல்லது எதுவும் நடக்கப்போவதில்லை.

பிரதமரின் கூட்டணி இப்போது இந்தியரிடையே  சரியான அடி வாங்கிக் கொண்டிருக்கிறது.  இந்த நேரத்தில் ம.இ.கா. வை அழைப்பது அது இன்னும் அடி வாங்கும்   நிலைக்குத்தான் போகும்!

என்ன செய்வது? இது தான் அரசியல்!  இதனைத் தான் அரசியல் சாணக்கியம் என்கிறார்கள்!  இதற்குச் சாணி அள்ளப்போகலாம்!

Saturday 20 April 2024

இன்னும் பிரச்சனை தீரவில்லை!

நமக்கு இன்னும் பிரச்சனை முடியவில்லை. அப்படித்தான்  நமது செயல்கள் மெய்ப்பிக்கின்றன.

ஏதோ ஒரு பிரச்சனைக்காக கூக்குரலிட  அது பெரிய பிரச்சனையாகி  இன்னும் எரிந்து கொண்டு தான் இருக்கிறது!  எங்கோ அது  புகைந்து கொண்டிருப்பதை நம்மால் காண முடிகிறது!

இந்த எதிர்ப்பைத் தொடர வேண்டாம் என்று  பலர் அறிவுறுத்திவிட்டனர்.  ஆனால் எதுவும் எடுபடவில்லை. நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

எதிர்ப்பாளர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.  அரசாங்கம் சரியான  பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறது.  அவர்கள் இஸ்ரேல் மீதான் எதிர்ப்பைத் தெரிவித்துவிட்டனர்.  அவர்களால் என்ன செய்ய முடியுமோ அதனைச் சரியாகத்தான் செய்கின்றனர்.  அதுவே போதுமானது.  எத்தனையோ  இஸ்லாமிய நாடுகள்  வாய் திறக்கவே பயப்படுகின்ற போது   ஒரு சிறிய நாடான மலேசியா  தனது கருத்துகளை வெளிப்படையாகவே  தெரிவிக்கின்றனர்.  பாலஸ்தீனிய மாணவர்களுக்கும் கூட கல்வி பயில் வாய்ப்பும் அளித்திருக்கின்றனர். அந்நாட்டைச் சேர்ந்த  இளைஞர்கள் கூட  இங்கு வேலையும் செய்கின்றனர்.

மனிதாபிமான அடிப்படையில் மலேசியா, பாலஸ்தீனத்திற்கு  என்ன செய்ய முடியுமோ  அதனைச் செய்து கொண்டு தான் இருக்கின்றது.  ஒரு சிறிய நாடு அதற்குமேல் செய்ய ஒன்றுமில்லை.

இந்த நேரத்தில் இப்படி தேவையற்ற முறையில் அவர்களின் துரித உணவகங்களின் மீது கையெறி குண்டுகளை வீசுவதும், அவர்களின் கட்டடங்களைச் சேதப்படுத்துவதும்   ஏற்புடையதல்ல  என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 

அது தான் கெடா, சுங்கை பட்டாணியில்  சமீபத்தில் நடந்த சம்பவம். துரித உணவகமான மெக்டோனால்  விளம்பரப் பலகை  மீதான தாக்குதல்.  பெரிதாக ஒன்றுமில்லை என்றாலும் வளரவிட முடியாது.  கண்டிப்பது மட்டும் அல்ல தண்டிக்கப்பட வேண்டியதும் கூட.  அது மட்டும் அல்ல. உணவகங்களுக்குப் போகும்  வாடிக்கையாளர்களைப்  பயமுறுத்துவதும் தண்டனைக்கு உட்பட்டது தான்.

நமது காவல்துறை மீது நமக்கு நம்பிக்கையுண்டு. நல்லது நடக்கும் என நம்புவோம்.

Friday 19 April 2024

மனிதாபம் அற்றவரா நாம்?

 

                                             Splashing hot water on a Down Syndrome man
வரவர மனிதாபமற்ற மனிதர்களாக நாம் மாறிவிட்டோமோ? அப்படித்தான் சந்தேகங்களை எழுப்புகிறது மலேசியர்களின் செயல்பாடுகள்.

பூனைகளை அடித்துக் கொல்கிறோம். நாய்களை அடித்துக் கொல்கிறோம். அவைகள் மிருகங்கள் தானே என்கிற அலட்சியம் நமக்கு அதிகமாகிவிட்டது.  ஆனால் அவைகளும் உயிருள்ள பிராணிகள் என்பதை நாம் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.  உயிருள்ள ஜீவன்களைக் கொல்வதை நமது சட்டங்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.

நமக்குப் பிடிக்கவில்லை என்றால் அந்தப் பிராணிகளை வளர்க்க வேண்டாம்.   ஏன்? அவைகளை அப்படியே விட்டுவிடுங்கள். அவைகள் எதையோ தின்று சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும்.  மனிதனால் தான் சந்தோஷமாக  வாழத்தெரியவில்லை. அவைகளையாவது வாழ விடுங்களேன்.

சமீபத்தில்  பினாங்கு மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம்.  அடுக்ககத்தில் உள்ள தனது வீட்டுக்கு  மின்தூக்கியில்  சென்று கொண்டிருந்த ஒரு டவுன் சின்றோம்  நோயாளி மீது சுடுநீரை ஊற்றியிருக்கிறார் ஒரு பெண்மணி.  இது என்ன கொடூரம்?  திருப்பி அடிக்கும் நிலையிலோ, தப்பிக்கும் நிலையிலோ  அந்த மனிதர் இல்லை.  இப்போது அந்த மனிதர் பினாங்கு மருத்துவமனையில்  சிகிச்சைப்  பெற்று வருகிறார்.

ஏன் இப்படி ஒரு கொடூரமான செயலை அந்தப் பெண்  செய்தார் என்று நமக்குப் புரியவில்லை.  எதுவும் செய்ய இயலாத ஒரு மனிதர் மீது ஏன் இந்தக்  கொலை வெறி?  அவருக்குப் பத்து ஆண்டுகள் சிறை என்பது சரியானது தான்.

பூனை  ஒன்றை உயிரோடு எரித்ததாக ஒரு செய்தி.  எப்படி,  இப்படி எல்லாம்  செய்ய இவர்களுக்கு மனம் வந்தது.?

அரக்கக் குணம் உள்ளவர்கள்  தான் இது போன்ற செயல்களில் ஈடுபட முடியும்.  மலேசியர்கள் தங்களது குணங்களை மாற்றி வருகின்றனரோ அல்லது  மாறி வருகின்றனவோ, விளங்கவில்லை.  எல்லாவற்றுக்கும் உணவு தான் முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.  மலேசியர்கள் தவறான உணவுகளை உண்டு சீக்கிரமாக வியாதிகள் வந்து சீக்கிரமாக மண்டையைப் போடுகிறார்கள்! அதில்  இந்த   இரக்கமற்ற குணமும் ஒன்று!

மனிதாபிமானம் மங்கிப் போனதற்கு யார் காரணம்? பெற்றோர்களுக்கே இல்லை அப்புறம் எப்படி பிள்ளைகளுக்கு?

Thursday 18 April 2024

அசிங்கப்படுத்தாதீர்கள்!

 

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு  நமது இந்திய குடும்பங்கள் பல்வேறு  துன்பங்களுக்கு ஆளாகி இருக்கின்றனர்.  சுருக்கமாகச் சொன்னால்:  வேலையில்லா திண்டாட்டம்.

பல பெண்களுக்கு வெளியூர் போய் வேலை செய்ய இயலாத நிலைமை. அதனால் வீட்டு அருகிலேயே  எதையாவது செய்து பிழைக்க வேண்டிய நிலைமையில் உள்ளனர்.  அதன் காரணமாகத்தான்  ஆங்காங்கே சிறு சிறு வியாபாரங்களைச் செய்கின்றனர்.  ஒரு கட்டாயச் சூழல் தான் அவர்களை  இந்த நிலைக்குத் தள்ளியது.  கட்டாயம் என்று சொன்னாலும்  தாங்கள் செய்த வேலையைவிட  இங்கு நிலைமை இன்னும் நன்றாக இருப்பதையும் புரிந்து கொண்டார்கள்.

இந்திய சமூக மகளிர் இது போன்று சிறு சிறு சாலை ஓர வியாபாரங்கள் செய்வதை  நாம் வரவேற்கிறோம்.  சீன இனப் பெண்கள் இது போன்ற வியாபாரங்களைப்   பல ஆண்டுகளாகவே செய்து வருகின்றனர்.  அதனால் தான்  சீனர்களின்  பொருளாதார பலத்தோடு  நம்மால் ஈடு கொடுக்க முடியவில்லை  என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஒரு சில தினங்களுக்கு முன்னர் சகோதரி ஒருவர் ஒரு புகாரை மக்கள் முன்பாகக் கொண்டு வந்திருந்தார். சிலர்  டிக்டாக்கில்  இது போன்ற சிறு வியாபாரங்களைச் செய்யும் சகோதரிகளைப் பேட்டி எடுப்பதும், அவர்களின் உணவுகளைப் பற்றி தரமற்று இருப்பதாக  சொல்லுவதும் = iஇது போன்ற அவதூறு செய்திகளைப்பரப்ப வேண்டாம் என்று அவர் குமுறியிருந்தார்.

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.  உணவுகளை விமர்சனம் செய்ய வேண்டுமென்றால் பெரிய பெரிய உணவகங்களுக்குச் சென்று ஆய்வு செய்யுங்கள்.  பெரிய நிறுவனங்கள் என்றால் பலதரப்பட்ட மக்கள் செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டு.  அந்த விமர்சனங்களைப் பார்த்து அங்கு செல்வோரும் உண்டு.  உண்மையில் சமீபத்தில் நாட்டிற்குள் புதிதாக  நுழைந்த  சில  பன்னாட்டு உணவகங்கள் தரமற்று தான் இருக்கின்றன.  ஏன் விமர்சனம் செய்வதில்லை?

இவைகளையெல்லாம் விட்டுவிட்டு  சிறு வியாபாரங்களில் ஈடுபட்டிருக்கும் நம் இன சகோதரிகளைச் சிறுமைப்படுத்துவது  இரக்கமற்ற செயல்.  யார் கண்டார்? நாளை ஒரு வேளை உங்களுக்கும் இது போன்ற சூழல்கள் வரலாம்.  குடும்பத்தைக் காப்பாற்றவது கட்டாயம் என்கிற நிலை ஏற்படும்போது யாரும் இது போன்ற சிறிய வியாபாரங்களுக்கு வரத்தான் செய்வார்கள்.  அவர்களைக்  கேலி, கிண்டல்கள் செய்து  மனதைப் புண்படுத்துவது  இரக்கமற்றது என்பதைத் தவிர  வேறு என்னவென்பது?

அவர்களைக் கேலி செய்வது நம்மை நாமே அசிங்கப்படுத்துவது தான்!

Wednesday 17 April 2024

தொழிலாளர் பற்றாக்குறை!


 தொழிலாளர் பற்றாக்குறை என்பது இன்று நாட்டில் அடிக்கடி  பேசப்படுகிற  ஒரு விஷயமாக மாறிவிட்டது.  அதே சமயத்தில் உள்ளூர் மக்கள் வேலை இல்லாமல் வெளிநாடுகளுக்குப் போகிற ஒரு கட்டாயமும் ஏற்பட்டிருக்கிறது.

நமது நாட்டில் பேரங்காடிகளில் முழுநேர வேலை, பகுதி நேர வேலை  என்று பலருக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்தன.  இப்போது அவைகளெல்லாம்  உள்ளூர் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டு வெளிநாட்டவர்க்குப் போய்விட்டன.   அதற்குப் பல காரணங்கள் முதலாளிகளால் தொடர்ந்து ண்டுபிடிக்கப்படுகின்றன.

நமது சிகையலங்காரக் கடைகளில் தொடர்ந்தாற் போல ஆள் பற்றாக்குறை  என்பதாகச் சொல்லப்படுகிறது.  பற்றாக்குறை என்று  சொல்லுவது எளிது. ஆனால் அவர்களை வேலைக்கு வைக்கும் போது  அவர்களின் நலனைப்பற்றி  கொஞ்சம் கூட சிந்திப்பதில்லை.  அவர்களுக்கு ஒழுங்கான முறையில் சம்பளம் கொடுப்பதில்லை.  கொஞ்சம்  ஏமாந்தவனாக இருந்தால் அவனை மிரட்டிப் பார்ப்பது - இவைகளை எல்லாம் செய்துவிட்டு  ஆள் பாற்றாக்குறை என்று அரசாங்கத்திடம் மனு கொடுப்பது!

கொரோனா பெருந்தொற்று காலத்தில்  வேலை செய்தார்களே அந்தத் தொழிலாளர்களை அவர்கள் கவனித்தார்களா?   அவர்களில் பெரும்பாலானோர் தமிழகத் தொழிலாளர்கள்.   அவர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியாவிட்டாலும்  சாப்பாடாவது கொடுக்க ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும்.  ஆனால் எதனையும் அவர்கள் செய்யவில்லை. எனக்குத் தெரிந்த ஒரு  நிலையத்தில் இருவருக்கு இந்த நிலை.  சம்பந்தமில்லாதவர்கள் தான் உதவி செய்ய வேண்டி வந்தது!

வேலைக்கு ஆளில்லை என்கிற குறை ஒரு பக்கம்.  இதோ வங்காளதேசிகள் ஆங்காங்கே  முடிவெட்டும் கடைகளை ஆரம்பிக்கின்றனர்.    உங்களுக்கோ ஆளில்லை என்கிற குறை.  அவர்களோ எந்தக் கவலையும் இல்லாமல் தொழிலைச் செய்கின்றனர். எங்கே போய் முட்டிக் கொள்வது என்று தெரியவில்லை!

போகிற போக்கில் ஆள் பற்றாக்குறை  என்று சொல்லி முணகிக் கொண்டே இருக்க வேண்டியது தான்!  வங்காளதேசிகள் இந்தத் தொழிலையும்  தங்களது கட்டுப்பாட்டில்  கொண்டுவந்து விடுவார்கள் என்றே தோன்றுகிறது!

செய்கின்ற தொழிலையாவது காப்பாற்றிக் கொள்ளுங்கள், நண்பர்களே!

Tuesday 16 April 2024

இது தேவை தானா?


 வெகு விரைவில்  நடைபெறவிருக்கும் கோலகுபு பாரு  இடைத் தேர்தலில் ஜ.செ.க.  வேட்பாளர் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியர்களின் வாக்கு எண்ணிக்கை எந்தப்பக்கம்  சாய்கிறதோ  அந்தக் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கணிக்கப்படுகிறது.  அதனால் இந்தியத் தலைவர்களின் குரல் கொஞ்சம் அதிகமாகவே ஒலிக்கிறது!   

ஆனால் அவர்கள் தலைவர்களா  தறுதலைகளா என்றும் ஊகிக்க முடியவில்லை. தலைவர்கள் என்றால் "எங்கள் கட்சிக்கு வாக்களியுங்கள்!" என்பார்கள்.  தறுதலைகள்  தேர்தலை புறக்கணியுங்கள்!!  என்பார்கள்.  ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்.  வாக்களிப்பது நமது ஜனநாயக உரிமை.   புறக்கணியுங்கள் என்று சொல்பவர்கள் துரோகிகள்.

நமது எதிர்ப்பைக் காட்டுவதற்கு வாக்களிப்பதன்  மூலமே காட்டுவதற்கு வழி உண்டு.  அது தான் ஜனநாயகம். புறக்கணியுங்கள் என்று சொல்லுவது கீழறுப்புவாதிகள்.  இனத் துரோகிகள்.  அவர்களின் சுயநலத்திற்காக  எதையும் பேசுவார்கள்.  முதலில் புறக்கணியுங்கள் என்று பேசுபவர்கள் "நாம் படிக்காத சமுதாயம்!"  என்று  மெய்பிக்க நினைப்பவர்கள்.

நடைபெறும் இந்த இடைத் தேர்தல் நாடாளுமன்றத்திற்கானது அல்ல. அது பிரதமர் அன்வாரின் பலத்தைக் கூட்டுவதோ குறைக்கவோ   செய்யாது. அது சட்டமன்றத் தொகுதிக்கான  ஓர் இடைத்தேர்தல்.

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள இந்தியர்கள் இது பற்றி கொஞ்சம் சிரத்தை எடுத்து சிந்திக்க வேண்டும்.  நமக்குத் தெரிந்தவரை - இந்தியர்களைப் பொறுத்தவரை -  நல்ல பல காரியங்களை  சிலாங்கூர் அரசாங்கம்  செய்திருக்கின்றது.   குறிப்பாக கல்வி சம்பந்தமான உதவிகள் நிறையவே கிடைத்திருக்கின்றது.  பள்ளி பேரூந்து கட்டணங்கள்,  உயர்கல்வி நிதி, இறந்தவர்கள் அடக்கம் செய்ய நிதி  - இப்படிப் பல உதவிகள் இந்தியர்களுக்குக் கிடைத்திருக்கின்றது.  அதனை மறுப்பார் இல்லை.  மற்ற மாநிலங்களில் இவைகள் கிடைத்திருக்கின்றனவா என்று யோசித்துப் பாருங்கள்.

இவ்வளவு செய்திருந்தும் அதில் உங்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை என்றால்  யாருக்கு வாக்களிப்பது  என்று  நீங்களே முடிவு எடுக்கலாம்.  அதற்காக புறக்கணிப்பைச் செய்யாதீர்கள்.  இரண்டு கட்சிகள் தான் போட்டியிடுகின்றன.  யாரால் உங்களுக்கு இலாபம் என்று நினைக்கிறீர்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள்.  ஆனால் தேர்தலைப் புறக்கணியாதீர்கள்.

தேர்தலைப் புறக்கணியுங்கள் என்று சொல்லுபவர்களப் புறக்கணியுங்கள்.  புறக்கணிப்பு தேவையற்றது. நமது உரிமையை  விட்டுக்கொடுக்க வேண்டாம்.

Monday 15 April 2024

தேவையற்ற புறக்கணிப்பு!

பாலஸ்தீனிய - இஸ்ராயல் சண்டை பற்றி நாம் அறிவோம். இஸ்ராயேல்  ஒர் நியாயமற்ற  நாடு என்பது பற்றி இரு வேறு  கருத்துகள் இல்லை.  நீதி நியாயம் எல்லாம்  அவர்களிடம் எடுபடாது!  ஈவு இரக்கமற்ற ஓர்  இனம். சுருக்கமாக  அது போதும்.

ஆனால் அவர்களது தொழில் உலக அளவில் பரந்து விரிந்து கிடக்கின்றது.  பெருந்தொழில்களை எடுத்துக் கொண்டாலும் சரி சிறுதொழில்களை எடுத்துக் கொண்டாலும் சரி  அவர்கள் பங்கு இல்லாமல் எதுவும் இல்லை!  ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு பொருளில்  யூதர்களின் பங்கு இருக்கத்தான் செய்யும்.  நமக்கு அடையாளம் தெரியாதே தவிர அவர்களின் அடையாளம்  எங்கோ ஒளிந்து கொண்டு தான் இருக்கும்!

அவர்கள் நாட்டுப் பொருள்களைப் புறக்கணிக்கிறோம் என்று சொல்லி  புறக்கணித்தால் அது  நமக்குத்தான் தீங்காக முடியும்.  மேலும் அவர்கள் நேரடியாக வருவதில்லை. எல்லாமே மறைமுகமாகத்தான் இருக்கும்.

அவர்களின் துரித உணவுகளான  KFC, McDonald போன்ற உணவகங்களில் கை வைத்தால், ஒன்றை மறந்து விடாதீர்கள், அந்த உணவகங்களில் நமது உள்ளூர் நிறுவனங்களும்  பங்கு பெற்றிருக்கும். அந்த உணவகங்களை நடத்துபவர்களே மலேசியர்கள் தான். அதிலும் நமது மலாய் நண்பர்களின் பங்கும் அதிகமாகவே உள்ளன.

'புறக்கணியுங்கள்'  என்று மக்களைத் தூண்டிவிடுவது ஏற்கத்தக்கதல்ல. அதனை அரசியல் இலாபத்திற்காகப் பயன்படுத்துவது முற்றிலும் வெறுக்கத்தக்கது.  இதனை இன்று செய்பவர்கள் நாளை உள்ளூர் நிறுவனத்தையும்  புறக்கணிப்பு செய்யலாம். ஏதோ சீன நிறுவனம் தானே என்று இன்று  சொல்லுபவர்கள்  நாளை மலாய் நிறுவனம்  அல்லது இந்திய நிறுவனம் போன்ற மலேசிய  நிறுவனங்களுக்கும்  இந்த கதி வரலாம். ப்றக்கணிப்பு செய்பவர்களுக்கு ஏதோ ஒரு காரணம் வேண்டும். அவ்வளவு தான். அதனை அரசியாலக்க வேண்டும்.

மக்களைத் தூண்டி விடுவதை விட  நீங்களே முடிவெடுங்கள்.  உங்களுக்கு வேண்டாம் என்றால் நிறுத்திவிடுங்கள்.  புறக்கணித்தால், மற்றவர்களைத் தூண்டினால்,  அந்த தொழிலை நம்பி பலநூறு குடும்பங்கள் வாழ்கின்றன  என்பதை மறந்து விடாதீர்கள். 

புறக்கணிப்பு வேண்டவே வேண்டாம்!

Sunday 14 April 2024

மீண்டும் ஆரம்பம்!

 

மீண்டும் ஆரம்பமாகிவிட்டன  மெட்ரிகுலேஷன்  மீதான விவாதங்கள்! வழக்கம் போல கல்வி அமைச்சு எதனையும்  கண்டு  கொள்ளப்போவதில்லை. 

கல்வி அமைச்சுக்கு என தனி சட்டதிட்டங்கள். அவர்கள் போக்கில் தான் அவர்கள் போவார்கள்.  நம்மை மதிக்க வேண்டும் என்கிற அவசியம் கூட  அவர்களுக்கு இல்லை.

முன்பு தேசிய முன்னணி ஆட்சியில்  1500 இடங்கள் ஒதுக்கப்பட்டன. பின்னர்  அது 2200 இடங்களாக  உயர்த்தப்பட்டன.  இவைகள் எல்லாம் பக்கத்தான் கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு  அனைத்தும்  மறைந்துவிட்டன!  உண்மையைச் சொன்னால் ஆரம்பத்தில்  ஒதுக்கப்பட்ட  1500 இடங்கள் கூட இப்போது  இல்லை என்று சொல்லப்படுகிறது.

அதுவும் குறிப்பாக டாக்டர் மகாதிர், முகைதீன் யாசின்,  இஸ்மாயில் சப்ரி - இவர்கள் இடைக்காலத்தில்  பிரதமராக பதவி வகித்தபோது  1000 இடங்கள் கூட ஒதுக்கப்படவில்லை  என்பதாகக் குற்றச்சாட்டுகள்  உண்டு. அதனைக் கண்காணிக்க ஆளில்லையாம்!   அதனைக் கண்காணிக்கத்  தான்  கங்காணிகள் தேவைப்படுகிறார்கள்! கங்காணிகள் இல்லாமல்  நமது நாட்டில் எதுவும் அசையாது என்பது இப்போது புரியும்!

ஆமாம் இன்றைய நிலைமை என்ன?  அதே நிலைமை தான்.  புதிதாக ஒன்றுமில்லை!

சமீபத்தில் நாம் கேள்விப்பட்டபடி எஸ்.பி.எம். பரிட்சியில் சிறப்பாகத் தேர்ச்சிபெற்ற  200 இந்திய மாணவர்களுக்கு  இடமில்லை என்று கல்வி அமைச்சு கைவிரித்து விட்டதாம்!  ஓர் உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  மெட்ரிகுலேஷன்  கல்வியின் நோக்கம் என்ன?  சீன, இந்திய மாணவர்களுடன் போட்டியிட  இயலாத  மலாய் மாணவர்களுக்காக  ஏற்படுத்தப்பட்டது தான்  மெட்ரிகுலேஷன் கல்வி.  அவர்கள் நோக்கம் சரியாகத்தான் இருக்கிறது.  நாம் தான் தகுதி குறைவான மாணவர்களுடன்  போட்டி இடுகிறோம்.  என்ன செய்ய?  அதிகத் தகுதிகளுடன்  இருப்பது நமது குற்றம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்!

ஒன்றே ஒன்றைப் பிடித்துத் தொங்குவதைவிட  இன்னும் நிறைய வாய்ப்புகள் உள்ளன.  உயர்கல்வியைப்பற்றி இந்திய   கல்வியாளர் பலர்   மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.  அவர்களை நாடுவது தான் சிறந்தது.  நாம் எதனையுமே நாடி, தேடிப் போவதில்லை. நமக்குத் தெரிந்ததெல்லாம்  ஒன்றே ஒன்று மெட்ரிகுலேஷன்  மட்டும் தான்.   ஒன்றை மட்டும் தெரிந்து வைத்துக் கொண்டு புலம்பிக் கொண்டிருக்கிறோம்!  வழிகாட்டுதல் இல்லாத சமுதாயமாக இருக்கிறோம்.  இது கணினி  யுகம்.  தேடுங்கள். உங்களுக்கான ஆயிரம் செய்திகள்  கொட்டிக் கிடக்கின்றன.

சரி இனி  என்ன நடக்கிறது என்று பார்ப்போம்!

Saturday 13 April 2024

நான் ஒன்றுமே செய்யவில்லையா?

                                 நான் ஒன்றுமே செய்யவில்லையா? : பிரதமர்

"இந்திய சமுதாயத்திற்கு  நான் ஒன்றுமே செய்யவில்லையா?" என இந்தியர்களைப் பார்த்துக் கேள்வி எழுப்பியிருக்கிறார்  பிரதமர் அன்வார் இப்ராகிம்.

ஆளுக்கு ஒன்றைச் சொல்வார்கள். அதுவும் அரசியல்வாதிளைப்பற்றி சொல்லவே வேண்டாம். 

நாம் அதை விடுவோம்.  நமக்கு முக்கிய குறைபாடு  ஒன்று உண்டு. கல்வியை எடுத்துக் கொள்வோம்.  முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்  செய்த மகா பெரிய காரியம் என்றால்  அது மெட்ரிகுலேஷன் கல்வி தான்.  அவருடைய காலத்தில் சுமார் 2500  இந்திய மாணவர்களுக்கு  வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.  அதனை ஓர் ஆதாரமாக  வைத்துத்  தான்  இன்று கேள்விகள்  எழுப்பப்படுகின்றன.

சென்ற ஆண்டு என்ன நடந்தது?  சுமார் ஆயிரம் மாணவர்களுக்கு மேல் தான்  மெட் ரிகுலேஷன் கல்வி பெற இந்திய மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.  அது மாபெரும் தோல்வி; இந்திய மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று சொல்லப்படுகிறது.

இதனை வைத்துப் பார்க்கும் போது இந்திய மாணவர்கள் கல்வி கற்பதில் பிரதமருக்கு அக்கறை இல்லையோ என்று தான் நினைக்க வேண்டியுள்ளது.  இந்த அளவுக்குக் குறைவான மாணவர்கள் என்றால் ....? பிரதமர் நிறைய செய்திருக்கிறார் என்று எப்படி  ஏற்றுக்கொள்வது?

இந்திய சமுதாயம் பின் தங்கிய சமுதாயம் என்பது பிரதமருக்குத் தெரியும்.  அவர்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டுமானால் கல்வி ஒன்றே வழி என்பது பிரதமருக்கே தெரியும். ஆனால் அந்தக் கல்வியை மறுப்புதன் மூலம்  இந்திய சமுதாயத்தின் முன்னேற்றம் தடைபடும் என்பதும் பிரதமருக்குத் தெரியும்.  ஆனால் அவர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை  என்பது தான்  குற்றச்சாட்டு.

அவர் வந்த முதல் ஆண்டே ஆயிரம் மாணவர்களுக்கு மேல் தான் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்றால்  அது மேல் நோக்கிப் போகவில்லை. அவரும் அது பற்றி வாய் திறக்கவில்லை! அப்படி என்றால்  அவர் இந்திய சமுதாயத்திற்கு நல்லது செய்வார்  என்கிற நம்பிக்கை இல்லாமற் போய்விட்டது என்பது தான் உண்மை.

மெட் ரிகுலேஷன் கல்வி ஓர் நீண்ட நாள் பிரச்சனை. அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது பிரதமரின் கடமை.  ஆண்டுக்கு இத்தனை பேர் என்று ஒரு வரையறை  வகுத்துவிட்டால்  அதன்பின் யாரும் அது பற்றிப் பேசப்போவதில்லை.  ஆனால் நிலைமை அப்படி இல்லை.அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப  செயல்படுகிறார்கள் என்பது தான் பொதுவான கருத்து.

உங்களின் கணிப்புப்படி நீங்கள் எவ்வளவோ செய்திருக்கலாம். ஆனால் கல்வியில் கை வைக்கிறீர்களே  - அதனால் தான் ஒன்றும் செய்யவில்லை என்று  குற்றச்சாட்டு எழுகிறது! உங்களைப் போலவே எங்களுக்கும்  கல்வி முக்கியம் தான். அதைப் புரிந்து  கொள்ளுங்கள்>

Friday 12 April 2024

வாழ்த்துகள் ரமணன் சார்!

 


அமானா இக்தியார் மலேசியா  என்னும் பெயரை அவ்வப்போது கேள்விப்பட்டிருக்கிறோம்.  ஏதோ மலாய் பெண்களுக்கான ஓர் அமைப்பு.  நிதி உதவி  பெற   அவர்களுக்குப்  பல்வேறு  அரசாங்க அமைப்புகள் இருப்பது போல அதில் இதுவும் ஒன்று என்று தான் தெரியுமே  தவிர இந்த அமைப்பின் மூலம் இந்தியப் பெண்களும் பயன் பெறலாம் என்பது இப்போது தான் டத்தோ ரமணன் மூலம் தெரிய வந்திருக்கிறது. 

ஏற்கனவே நமது மகளிர் பலருக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் இன்று அதனைப் பிரபலப்படுத்தியவர்  டத்தோ ரமணன் அவர்கள் தான். இப்போதைய மகிழ்ச்சியான  செய்தி என்னவென்றால் இந்திய மகளிர் வணிகர்களுக்காக   அமானா இக்தியார்  சுமார்  50 மில்லியன் சிறப்பு நிதி ஒதுக்கியிருப்பதாக அறிவித்திருக்கிறார்.

இந்த நேரத்தில் ஒன்றை நாம் மறந்திவிடக் கூடாது. செய்திகள் வெளியாகிவிட்டன  என்பதற்காக  அனைத்தும்  சுமூகமாக முடிந்துவிட்டன என்று நினைத்துவிடக் கூடாது. யாரும் தங்கத்தட்டில் பரிமாறப் போவதில்லை.   காலை நீட்டி உட்கார்ந்து கொண்டிருந்தால்  எதுவும் நம்மைத் தேடி வராது.  முயற்சிகள் நம்முடையதாக  இருக்க வேண்டும். அதனால் என்ன?  எங்கெங்கோ சுற்றுகிறோம், சுழல்கிறோம்!  இதற்கும் ஒரு முயற்சி எடுத்து 'ஒரு கை பார்த்துவிடுவோமே!' என்கிற சவடால் தனத்தோடு களத்தில் இறங்க வேண்டும்.  பயம், தயக்கம அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு  துணிச்சலோடு  காரியம் சாதிக்க வேண்டும்.

டத்தோ ரமணன் அவர்களிடம்  ஒரு கோரிக்கை வைக்கிறோம்.  இந்த அமைப்புக்கு நாடு முழுவதிலும் அலுவலகங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. மிக முக்கியம் அந்த அலுவலகங்களில்  தமிழ் தெரிந்த ஒருவர்  வேலையில் இருக்க வேண்டும்.  அது தான் நமது பெண்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கும்.  கொஞ்சம் தாராளமாகப் பேசுவார்கள்.  வேண்டிய தகவல்களைத் தெரிந்து கொள்வார்கள்.

சிறு வணிகங்களில் ஈடுபட்டிருக்கும் அல்லது ஈடுபடப்போகும் நமது  பெண்களுக்கு  நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும்  நமது பிரதமருக்கு நன்றி.  எப்போதும் மித்ரா! மித்ரா! என்று கூவிக் கொண்டிருந்த நமக்கு மித்ரா ம்ட்டும் அல்ல இன்னும் ஏகப்பட்ட அமைப்புகள் அரசாங்கத்தில் உண்டு என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் டத்தோ ரமணன்.

வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்  என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல?  வாழ்த்துகள்!

Thursday 11 April 2024

நாமும் குப்பைகள் தான்!

 

மலேசியர்களின் வினோதப் பழக்கங்களில் ஒன்று குப்பைகளோடு வாழ்வது!

ஆம், அப்படித்தான் சொல்ல வேண்டும்.  கண்ட இடங்களில் குப்பைகளைப் போடுபவர்களை என்னவென்று சொல்லுவது? குப்பைகளோடு வாழ விரும்பவர்கள் என்று தான் சொல்ல வேண்டும்!  நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் அது நரகலைத் தேடித்தான்  போகும்! அதன் குணத்தை மாற்ற  இயலாது! அப்படித்தான் நாமும் இருக்கிறோம்!

நம் வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற கடமை உணர்ச்சி பாராட்டுக்குரியது. அதற்காக நமது வீட்டுக் குப்பைகளைப் பக்கத்து வீட்டுக்குத் தள்ளிவிடுவது என்றால் என்ன பொருள்? நாம் குப்பைகளில்  வாழக்கூடாது ஆனால் பக்கத்து வீட்டுக்காரன் குப்பைகளோடு வாழலாம்

வீடாக இருந்தாலும் சரி நாடாக இருந்தாலும் சரி நம் வீட்டைப் போலவே அனைத்தும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தான்  நாட்டின் நலனை விரும்புபவர்கள்.

இன்று சிங்கப்பூரை உலக நாடுகள் புகழ்கின்றன. அது மிக சுத்தமான நாடு என்பதும் முக்கிய காரணம்.  நம்மால் அது முடியாதா?  நம் நாட்டில் எதுவெல்லாம் முடியாதோ  அதனையெல்லாம் செய்து காட்டுகிறது சிங்கப்பூர்!  அரசியல் ரீதியில் இரு நாடுகளும் பிரிந்திருந்தாலும்  பூகோள ரீதியில் இரண்டும் ஒரு நாடு தான்.  அவர்களால் முடியும் என்றால் நம்மாலும் முடியும்.

அப்படி என்ன தான் தடை நம்மிடம்?  அறிவு குறைவு என்று சொல்லலாமா? அதெப்படி?  படித்தவர் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும்  கூடிக்கொண்டே போகிறதே!  படித்தவர்கள் பிள்ளைகளுக்கு எந்த நற்பண்புகளையும் சொல்லிக் கொடுப்பதில்லையோ!

நாடு சுத்தமாக இருக்க வேண்டுமானால் வீடு சுத்தமாக இருக்க வேண்டும். சுற்றுப்புறம் சுத்தமாக இருக்க வேண்டும்.  நாம் தான் அதற்குப் பொறுப்பும் ஏற்க வேண்டும். சுத்தம் சும்மா வந்துவிடாது.

கார்களில் பயணம் செய்யும் போது என்ன என்ன அநியாயங்கள்  நடக்கின்றன.   தின்றுவிட்டு  பைகளை வெளியே தூக்கி எறிகிறார்கள். குடித்துவிட்டு  பிளாஸ்டிக் பைகளை  நடுரோட்டில் வீசுகிறார்கள்.  இது போன்ற பழக்கங்களால் தான் கண்ட  இடங்களில் குப்பைகளைப் போடும் பழக்கம்  ஏற்படுகிறது.

அனைத்தையும் நிறுத்த ஒரே வழி தண்டனை மட்டும் தான்! அதுவரை குப்பைகளோடு தான் வாழ வேண்டும்!

Wednesday 10 April 2024

வாழ்த்துகள்!

 


                                     இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துகள்!


Tuesday 9 April 2024

"சிவா' என்கிற பெயரை வையுங்கள்!

 

சமீப காலத்தில் மிகப் பெரிய அளவில்  மலேசியர்களால் பேசப்படுகின்ற ஒரு கடவுள் என்றால் அது சிவன் என்கிற நாமம் தான்.  அதற்குக் காரணமானவர் ஸம்ரி வினோத் காளிமுத்து!

அவர் கொடுத்த விளம்பரம்  மலேசியரிடையே  சிவா  என்னும் பெயர் பிரபலமடைந்து விட்டது!  அந்த நேரம் பார்த்து சிவா - சங்கரி என்னும் பெயர் கொண்ட  நமது  விளையாட்டு வீரர்  ஸ்குவாஷ் விளையாட்டில் உலகில் முதன்மை விளையாட்டாளராகத் தேறினார்! 

உண்மையைச் சொன்னால் இந்த ஆண்டு சிவபெருமானின் ஆண்டு.  இந்து நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.  இந்த ஆண்டு பிறக்கும் குழந்தைகளுக்கு  முடிந்தவரை  சிவா என்கிற பெயரை வையுங்கள்.  இன்றைய நிலையில் ஆன்மீகத்தலைவர் என்றால் எல்லாரும் அறிந்த சுகி சிவம் அவர்கள் பெயரும் சிவம் என்று தான் வருகிறது.

முடிந்தவரை சிவபெருமானின் பெயரைப் பிரபலப்படுத்துங்கள்.  வலைதளங்களில் கொஞ்சம் முயற்சி செய்தால்  நிறையவே பெயர்கள் உண்டு. ஒர் சில:  சிவக்குமார், சிவநேசன், சிவபாக்கியம், சிவபக்தன்- இப்படி பலபெயர்கள் உண்டு. உங்களுக்கு ஏற்றவாறு  மாற்றிக்கொள்ளுங்கள்.

 மௌனமாகக் காரியங்களைச் செயல்படுத்துங்கள். "நீ எதையோ சொல்!  நாங்கள் செய்வதைச் செய்கிறோம்!"  நமது எதிர்ப்பை அரசாங்கத்திடம் கொண்டு செல்கிறோம். அது தொடரட்டும். அதே சமயத்தில் எங்கள் சிவபெருமானின் பெருமையை நாங்கள் தொடர்ந்து செய்வோம். அதில் பெயர் வைப்பதும் ஒரு பகுதி.

அமைதியாகவே நமது காரியங்களை  நாம்  செய்வோம்.   வெகு விரைவில் இதற்கான ஒரு முற்றுப்புள்ளி வரும்.  காரணம்  மக்களின் ஒற்றுமைக்  குலைவதை  எந்த அரசாங்கமும் விரும்பாது.  ஒரு நாட்டில் பாதிப்பு வருகிறதென்றால்  அனைவருக்கும் தான் அந்த  பாதிப்பு வரும்.

சிவா என்கிற பெயரை வையுங்கள். புரட்சி செய்யுங்கள்.

Monday 8 April 2024

அலட்சியமாக ஓட்ட வேண்டாம்!

 

பெருநாள் நெருங்கிவிட்டது.  பெருநாள் வாழ்த்துகள் கூறும் இந்த நேரத்தில் உங்களுடைய வாகனங்களைப் பார்த்துப் பயன்படுத்தங்கள் என்பது தான் நமது அறிவுரை.

பெருநாள் காலங்களில் பெரும்பாலானோர் தூரத்துப் பயணங்களை  மேற்கொள்கிறீர்கள்.  வீடு போய் பெற்றோர்களைப் பார்க்க வேண்டும், உறவுகளைப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை  அனைவருக்கும் உண்டு. அதில் ஒன்றும் தவறில்லை. வருடத்திற்கு ஒரு முறை தான் பார்க்க இயலும். அதனைத் தவற விடக்கூடாது என்பது தான் நம் அனைவரின் ஆசை.

எது எப்படி இருந்தாலும் கார்களில் பயணிக்கும் போது, நீங்கள் மட்டும் அல்ல,  உங்கள் குடும்ப உறுப்பினர்களும் காரில் பயணிக்கலாம். அனைவரின் பாதுகாப்பும்  முக்கியம்.  மிகவும் எச்சரிக்கை உணர்வோடு தான்  காரைச் செலுத்த வேண்டும்.  நாம் சரியாகப் போனாலும் எதிரே வருபவன்  என்ன நிலையில் இருக்கிறான் என்பது நமக்குத் தெரியாது.  குடிகாரனாக இருக்கலாம், கஞ்சா அடிப்பவனாக இருக்கலாம், கடன்காரனாக இருக்கலாம் - யார் வேண்டுமானாலும் கார் ஓட்டலாம்! அனைத்தையும்  சமாளிக்கக் கூடிய  திறன் நமக்கு இருக்க வேண்டும்.  வேறு வழியில்லை! 

ஊடகச் செய்திகளைப் பார்க்கும் போது  நமக்கே அச்சத்தைக்  கொடுக்கின்றன.   அந்த அளவுக்கு விபத்துகள் நடக்கின்றன.  ஒவ்வொரு விபத்திலும் ஒட்டுநர் மட்டும் அல்ல குழந்தைகள், பெரியவர்கள்  என்று பலர் மரணிக்கின்றனர்.  அதைப் படிக்கும் போது  மனத்தையே கலக்கி விடுகிறது.

யாரைப் பழி சொல்லுவது?  அலட்சியமாக ஓட்டுபவர்கள்  மீது கடுமையானத் தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும்  என்று  மட்டும் தான் நம்மால் சொல்ல முடியும்.  தண்டனைக் கடுமையாக இல்லையென்றால்  விபத்துகளைத் தடுக்க முடியாது.

விபத்துகள் குறைவான நாடு என்றால் அதற்கான காரணம் என்னவாக இருக்க முடியும்?  விபத்து ஏற்படுத்திய ஓட்டுநரின் சொத்துகளையே முடக்கிவிடுவார்களாம்!  அது தான் சரியான தண்டனையாக இருக்க முடியும்!  

நம நாட்டில் பணத்தைக் கொடுத்து காரியங்களைச் சாதிக்க முடியும் என்கிற நிலை இருந்தால்  விபத்துகளை குறைக்க முடியாது என்பது நிச்சயம்!

உங்களின் பயணம் நல்லபடியாக அமையட்டும்!

Sunday 7 April 2024

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?

 


எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் பூனை கண்ணைத் திறந்திருக்கிறது!  இத்தனை  ஆண்டுகள் கண்ணை மூடிக் கொண்டிருந்ததால் நாட்டில் இலஞ்சம், ஊழல் எதுவுமில்லை! ஜாக்கிம் போன்ற அமைப்புகளுக்கு  'கல்வத்' தவிர அப்படி ஒன்றும் தலைபோகும் காரியம் ஒன்றுமில்லை!

ஆனால் இப்போது தான் பூனை கண்ணைத் திறந்திருக்கிறது.  ஐயோ! ஐயோ! என்று அலறுகிறது!  பிரதமர் அன்வாருக்கு நன்றி!

'அந்தப் பெரிய மனுஷன் இலஞ்சம் வாங்கினான்!  இந்தப் பெரிய மனுஷன் இலஞ்சம் வாங்கினான்!'  என்கிற சத்தம் பலமாகக் கேட்கிறது. 'அந்த சாக்ஸில் ஓட்டை!  இந்த சப்பாத்தில ஓட்டை!'   என்கிற சத்தம் இங்கும் பலமாகக் கேட்கிறது.  இனி கடைகளில் விற்பனையாகும் அத்தனைச் சப்பாத்துகளும் துருவி துருவி ஆராயப்படும் என நம்பலாம்!  அதே போல பேரங்காடிகளில்  விற்பனையாகும்   அனைத்துப் பொருள்களும்  நுணுகி நுணுகி  மேயப்படும் எனவும் நம்பலாம்!

புரிந்து கொள்ள முடியாத ஒரு செய்தி: ஏன் இத்தனை ஆண்டுகள்  இவர்கள் கண்டுகொள்ளவில்லை என்பது தான்.  பிரச்சனை என்னவென்றால்  இவர்கள் தான்  அத்தனைக்கும் காரணமாக இருந்தவர்கள்! அதனால் யார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்?  உயர் பதவிகளில் இருந்து கொண்டு  அத்தனை அட்டுழியுங்கள், அக்குறும்புகள் செய்தவர்கள் இவர்கள் தான்!

இப்போது பிரதமர் அன்வாரே இலஞ்ச லாவண்யங்களுக்கு எதிராக இருப்பதால் ஒவ்வொன்றும் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கிறது!  பிரதமர் எதைச் செயதாரோ  இல்லையோ "லஞ்சத்தை ஒழிப்பேன்"  என்று  சொன்னாரே   அது போதும்.  நாடு முன்னேற வேண்டுமானால் இலஞ்சம், ஊழல்,  வேலை தெரியாத அரசாங்க ஊழியர்கள்,  சோம்பித் திரியும் ஊழியர்கள்  இவர்களை ஒழித்துக் கட்ட வேண்டும்!

இலஞ்ச ஊழல் ஆணையம் இத்தனை ஆண்டுகள்  பட்டும் படாமலும் செயல்பட்டுக் கொண்டிருந்தது!  இப்போது தான் அவர்களுக்கும் நேரம் காலம்  கூடிவந்திருக்கிறது.  மற்றவர்கள் குற்றம் சாட்டுவது போல பெரிய மீன்களுக்கும் பெரிய வலைகளைப் போட்டுப் பிடிக்க வேண்டும்!  சிறிய மீன்களால் சராசரி மனிதனுக்குக் கஷ்ட காலம். பெரிய மீன்களால் நாட்டுக்கே கஷ்ட காலம்!

எங்கெங்கோ ஒளிந்து கொண்டிருந்த சுயநலப்பேய்களை ஒவ்வொன்றாக அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கும் இலஞ்ச ஊழல் ஆணையத்திற்கும், பிரதமர் அன்வார் அவர்களுக்கும்  நமது  வாழ்த்துகள்!

Saturday 6 April 2024

எண்ணிக்கை குறைகிறது!

                        Chief Statistician,   Datuk Sri Dr.Mohd Uzir Mahidin
வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைந்திருப்பதாக  புள்ளிவிபரத்துறையின் தலைவர்  கூறியிருக்கிறார்.  வரவேற்பது நமது கடமை.

இன்றை நிலையில் மலேசியர்களில் பலர் சிங்கப்பூரை நோக்கித்தான் படையெடுக்கின்றனர். வேறு வழியில்லை. வயிறு என்று ஒன்று இருக்கிறதே!

நமது குடும்பப்பெண்கள் பெரும்பாலோர் இங்கே தான்  வேலை செய்து தங்களது குடும்பத்தைக்  காப்பாற்ற வேண்டும். அதைத்தான் அவர்கள் விரும்புகின்றனர். பிள்ளைகளின் கல்வி  ஒன்றே போதும். அவர்கள் வேறு எங்கேயும் போக வழியில்லை.

ஆனாலும் சமீபகாலமாக அதுவும் உடைக்கப்பட்டு விட்டதாகவே தோன்றுகிறது. குடும்பம் வாழ வேண்டுமே என்பதற்காக வேறு நாடுகளுக்குப் போய் வேலை செய்ய வேண்டிய சூழல்.  அதனையும் நம்  பெண்கள் செய்கின்றனர்.  வேறு வழியில்லாமல் அதனையும் செய்கின்றனர்.

நம்மிடம் ஒரு கேள்வி உண்டு. அதற்கானப்  பதில் புள்ளியல்  துறையிடம் உண்டு.  இல்லாததை நாம் கேட்கவில்லை.  இருப்பதை நாம் கேட்கிறோம். எத்தனை பேர் வேலை இழந்திருக்கின்றனர்  என்பது புள்ளியல் துறைக்குத் தெரியும்.  அதே சமயத்தில்  அதனை இன ரீதியாக சோல்ல முடியுமா? இன விகிதாச்சாரபடி  மலாயர், சீனர், இந்தியர் - இப்படிப் பிரித்துச் சொன்னால்  அதனை நிவர்த்தி செய்ய  முடியுமா எனப் பார்க்கலாம். எங்களது தலைவர்கள் அதனைச் செய்வார்கள்.   மூவினங்களில் இந்தியர்களே  மூன்றாவது பெரிய இனமாக இருக்கின்றனர்.  ஆனால் வேலை என்று வரும்போது அவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆமாம் அவர்கள் வேலை இல்லாதவர் பட்டியலில்  முதலிடத்தில் இருக்கின்றனர். நடப்பில் அப்படித்தான் தெரிகிறது!  

நம்மைப் பொறுத்தவரை இந்தியர்களுக்குத்தான்  முதலிடம்.  சிறுபான்மையினர் வேலை இல்லாமையில்  முதலிடம் என்றால் எங்கோ சரியாக இல்லை  என்று பொருள்.  அது அரசாங்கத்தின் கையாலாகத்தனம் என்று தான் சொல்ல வேண்டும்.  அல்லது நமது தலைவர்களின் கையாலாகத்தனம். 

வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைகிறது  என்பது நல்ல செய்தி. அதே சமயத்தில்  இந்தியர்களின் வேலை இல்லாதோர் எண்ணிக்கை எவ்வளவு என்று தெரிந்தால் அதுவும் நல்லது.

Friday 5 April 2024

மரவள்ளி மீண்டும் வருமோ?

 

மரவள்ளிக்கிழங்கு என்றாலே இன்றைய தலைமுறையினர் பலருக்கு என்னவென்று கூட தெரியாமல் இருக்கலாம். காரணம் அதனைச் சாப்பிடும் பழக்கம் அற்றுப்போய்விட்டது.

ஆனாலும் பல வகைகளில் அது இன்னும் நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.  குறிப்பாக பலகாரங்களாக  இப்பவும் கிடைக்கத்தான்  செய்கின்றன.

ஜப்பான் காலத்தில் மரவெள்ளி உணவு என்பதெல்லாம் சாதாரணம். அதனை வைத்தே பிழைப்பு நடந்தது.  இப்போதும் விவசாய பூமிகளில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.  நமது நாட்டிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

நம் நாட்டில் அரிசி பற்றாக்குறை என்று அடிக்கடி பேசப்படுகிற  இந்த நேரத்தில் அதற்கு மாற்றாக மரவெள்ளிக்கிழங்கு உற்பத்தியைப் பெருக்க தயாராகுங்கள் என்கிறார் நமது நாடாளுமன்ற சபாநாயகர்.  அவர் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை என்பது உண்மையே. என்றாலும்  அரிசியை விட்டு மரவெள்ளிக்குத் தாவுங்கள் என்பது  சாதாரண விஷயமல்ல.   அந்த மாற்றத்திற்கு மக்கள் தயாராக வேண்டுமே.  அவ்வளவு எளிதில் அந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்!

அதே சமயத்தில்  அரிசி உற்பத்தியைப் பெருக்கமாறு கூறியிருந்தால்  கேட்க இன்னும் நன்றாக இருந்திருக்கும்.  மாற்று வகையிலும் வேறு வகையான உணவுகள் தயார் நிலையில் இருப்பது  நல்லது என்பது உண்மை தான்.

அரிசி உணவுக்கு நாம் அடிமையாகி விட்டோம்.  வேறு வகை உணவுகளுக்கு நாம் தயாராக இல்லை.  ஊறிப்போன ஒரு பழக்கத்தை விடுங்கள் என்று சொன்னால் அது ஒன்றும் எளிதான காரியம் அல்ல. பலவகை உணவு வகைகளைக்  குழந்தைகளுக்குக் கொடுத்து  வளர்க்கும் பழக்கம்  நம்மிடையே இல்லை.  பலவகை இறைச்சி வகைகளைக் கொடுப்பது தான் இன்றைய நாகரிகம்.  இறைச்சி சாப்பிடுபவன் தான் உயர்ந்தவன்  என்கிற ஓர் எண்ணத்தை இன்றைய தலைமுறை நம்புகிறது. என்ன செய்வது?  அதிகம் படித்ததின் பலனை இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்!

மரவெள்ளிக்கிழங்கு ஓர் அற்புதமான உணவு.  ஒரே ஒரு தடை என்னவென்றால்  அரிசியிலிருந்து அதற்கு மாறுங்கள் என்பதைவிட  ஒரு நேரம் மரவெள்ளியைச் சாப்பிட்டுப் பழகுங்கள் என்பது தான் சரி. மரவெள்ளி ஓர் அற்புதமான உணவு என்பதில் சந்தேகமில்லை.  என்னைப் போன்றவர்கள்  அதைச் சாப்பிடத்  தயாராக இருக்கிறோம். இளைய தலைமுறையைச் சாப்பிடத்  தயார பண்ணுவது  தான் சரியாக இருக்கும்.

என்னவோ ஜப்பான் காலத்துக்குக்  கொண்டு போய்விட்டார் சபாநாயகர். இந்த மாற்றம் நடக்கும்   என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை!

Thursday 4 April 2024

மீண்டும் மாற்றம்!

 

இந்தியர் உருமாற்றுப் பிரிவான மித்ரா மீண்டும் பிரதமர் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

அது பிரதமரின் முடிவு என்பதைத்தவிர அது பற்றிப் பேச வேறொன்றுமில்லை.  காரணங்கள் இருக்கலாம். முழுமையான காரணங்கள் பின்னர் வெளியிடப்படும்  என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.  அந்தக் காரணங்களைத் தெரிந்து கொள்வதால் ஆகப்போவது ஒன்றுமில்லை. அது பிரதமரின் முடிவு. அது போதும்.

நம்முடைய எண்ணங்கள் எல்லாம் பின்நோக்கிச் செல்கின்றன.  பிரதமர் துறையில் இருந்த போது தான்  அதிகப் பணம் மித்ராவிலிருந்து களவாடப்பட்டன என்பதாகக் கடந்த கால நடப்புகள்  கூறுகின்றன. மீண்டும் அது நடக்காமல் இருக்க வேண்டும். அதன் தலைவர் பிரபாகரன் அதனைக் கவனத்தில் இறுத்திக் கொண்டால் போதும்.

நம்முடைய நோக்கம் எல்லாம்  மித்ரா எதற்காக  ஆரம்பிக்கப்பட்டதோ அதன் நோக்கங்கள் நிறைவேற வேண்டும்.   ஒன்றுமே ஆகவில்ல என்றும் சொல்லிவிட முடியாது.  பயன்பெற்றவர்கள் ஒருசிலராவது இருக்கலாம். நமக்குத் தெரியவில்லை என்பதற்காக  ஒரேடியாக குற்றம் சுமத்திவிட முடியாது.

இந்த சமயத்தில் ஒன்றை நினைவுகூர்வது  நல்லது.   மித்ரா பிரதமர்  துறைக்கு மாற்றப்பட வேண்டும் என்று  முழக்கமிட்டவர்கள்  நாடாளுமன்ற உறுப்பினர்கள். அனைவரும் ஒன்று சேர்ந்தார்கள்.   ஓரளவு பிரதமரை மடக்கி காரியம் சாதித்தார்கள்.  வரவேற்கிறோம்.   அதே சமயத்தில் ஸம்ரி வினோத் காளிமுத்து இந்து மதத்தை இழிவுபடுத்திப் பேசியபோது இவர்கள்  எல்லாம் எங்கே போயிருந்தார்கள்?  அப்போது அவர்கள் தங்களின் ஒற்றுமையைக் காட்டவில்லையே!   பிரதமரிடம்  அனைவரும் ஒன்று சேர்ந்து  அது பற்றி விவாதித்திருக்கலாம்.  எதுவுமே செய்யவில்லையே!

இதிலிருந்து நாம் படிக்கும் பாடம் என்ன?  மித்ரா என்றால் வரவு உண்டு.  சிவன் என்றால் செலவு, வரவு இல்லை.  இவர்களின் நடவடிக்கை மூலம் இதைத்தான் நாம் புரிந்து கொள்கிறோம்.  இவர்கள் தான் நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள்!  பாவம்!

மற்றபடி இந்த மாற்றம் நல்லபடியாகவே அமையட்டும்.  இவர்களின் செயல்பாடு எப்படி இருக்கும்  என்பது இப்போதைக்கு நமக்குத் தெரியவில்லை.  முன்பு என்ன நடந்தது என்பது தெரியும். இப்போது ...?  ஆனால் இன்று பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன்  மித்ராவில் தலைவராக  நியமிக்கப்பட்டிருக்கிறார்.  கொஞ்சம் நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

நல்லதே நடக்கும் என நம்புவோம்!

Wednesday 3 April 2024

நெரிசலை குறைக்க நடவடிக்கை!

 

சிறைச்சாலகளில்  2030 க்குள் நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதாக சிறைச்சாலைத் தலைமை இயக்குனர்  கூறியிருக்கிறார்.

நமக்கு ஏமாற்றமே.  கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க  நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியிருந்தால்  அது ஆரோக்கியமாக இருந்திருக்கும். தலைமை இயக்குனரின் எதிர்பார்ப்பு என்ன? இன்னும் குற்றங்கள் பெருகும்  அதனால் இன்னும் அதிகமாக சிறைகள் தேவைப்படும். அதற்காக சிறைகள் இன்னும் இன்னும் விரிவாக்கப்பட வேண்டும்!

ஆக,  எண்ணிக்கைக் குறையும் என்பதைவிட குற்றங்கள் பெருகும்  என்று அவர்  நினைக்கிறார்.  நம்மைப் பொறுத்தவரை அதாவது  நாட்டின் சராசரி குடிமகன் என்று பார்க்கும்போது  குற்றஞ்செய்வோரின்  எண்ணிக்கைக் குறைவதே  நாட்டுக்கு நல்லது என நாம் நினைக்கிறோம்.

ஆனால் தலைமை இயக்குனரோ  நேர்மாறாகக் கருத்துரைக்கிறார். குற்றங்கள் பெருகினால் - பெருகிக் கொண்டே போனால் - நாட்டின் வருங்காலத்தைப் பாதிக்கவே செய்யும்.  குற்றச்செயல்கள் குறைந்த  நாடு என்பதுதான் நாட்டிற்குப் பெருமை.  குற்றமே இல்லாத நாடு சாத்தியம் இல்லை. 

இன்றைய நிலையில் காவல்துறை முடிந்த அளவு குற்றங்களைக் குறைப்பதற்குப்  பல்வேறு  நடவடிக்கைகளில் செயல்படுகிறார்கள்.   குற்றங்கள் குறையும் என்கிற நம்பிக்கை நமக்குண்டு.  மலேசிய சமுதாயம் ஒரு குற்றமுள்ள சமுதாயமாகவே  நீடிக்கும் என்று சொல்லுவதற்கு எந்த முகாந்தரமும் இல்லை.

மலேசியர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தாலே  பல பிரச்சனைகள் தீரும்.  வேலை இல்லாத சமுதாயத்தில் குற்றச் செயல்களுக்கு  அதிக வாய்ப்புண்டு.

வருங்காலங்களில்  குற்றங்கள்  கூடும் என்பதைவிட  குற்றங்கள் குறையும் சாத்தியம்  உண்டு என நம்புவோம்.

Tuesday 2 April 2024

தங்க மகள் சிவசங்கரி!

 

கடந்த சில நாட்களாக மலேசியர்களிடையே மிகவும் பேசப்படும் ஒரு நபர் என்றால் அது சிங்கப்பெண் சிவசங்கரி சுப்பிரமணியம்.

என்ன தான் சாதனைகளை நாம் எதிர்பார்த்தாலும்  சாதனைகள் எதுவும் எளிதாக வருவதில்லை. உழைப்பு! உழைப்பு!  உழைப்பு!

ஸ்குவாஷ் விளையாட்டில்  உலக வெற்றியாளர்  என்பதெல்லாம்  மலேசியர்களால் நினைத்துப் பார்க்க முடியாத - எட்டாத தூரத்தில் கனவாகவே இருந்த ஒன்று. அது நிறைவேறியிருக்கிறது.

இந்த நேரத்தில் ஒரு சிறிய இடைச்செருகல்.  சிவா - வைப்பற்றி இழிவாகப் பேசினார் ஒருவர்  இதோ சிவா - சங்கரி  மூலம் "நான் யார்" என்பதைக் காட்டிவிட்டார். 

வாழ்த்துகள் சிவசங்கரி!

Monday 1 April 2024

ஏன் பிரதமர்துறை?

 


'மித்ரா' மீண்டும் பிரதமர் துறைக்கே மாற்ற வேண்டும் என்று சிலர் அடம் பிடிப்பதற்கு  என்ன காரணமாக இருக்கும்?

பொது மக்களுக்கு அது எங்கிருந்தாலும் எந்தக் கவலையுமில்லை.  காரணம் அவர்கள் மித்ரா மூலம் பயன் அடைவதற்கான எந்த வாய்ப்புமில்லை.  அது பற்றி அல்லும் பகலும் கவலைப்படுபவர்களுக்குத்தான்  'பிரதமர் துறையா, ஒற்றுமைத் துறையா'  என்று  வாதிட்டுக் கொண்டிருப்பார்கள்.

மித்ராவின் கடந்த கால வரலாற்றைப் பார்த்தால்  மித்ரா பிரதமர் துறையில் இருந்த போது தான்  பிரபலமான திருட்டுச் சம்பவங்கள் எல்லாம் நடந்தன.  அல்லது அன்றே பேசப்பட்டன.  அப்போது ம.இ.கா.வில் உள்ள பிரபலமானவர்களின் பெயர்களெல்லாம் அடிபட்டன.  ஆனால் அவைகள் எல்லாம்  உண்மையா என்பதற்கு நம்மிடம் ஆதாரம் இல்லை.  பேசப்பட்டது என்னவோ பிரபலமான தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள்  என்பது மட்டும் நமக்குத் தெரியும்.

இப்போது நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட மித்ரா பிரதமர் துறைக்கு மாற்றப்பட  வேண்டும் என்கிற அழுத்தம்  ஏன் கொடுக்கப்பட்டு வருகிறது?  நாமும் சந்தேகக்கண் கொண்டு தான் பார்க்க வேண்டியுள்ளது.  மித்ரா பிரதமர் துறையில் இருந்தால்  'கைவைக்க' வசதியாக இருக்குமோ என்று நமக்கும்  சந்தேகம் எழுகிறது.

ஆமாம் கடந்தகால வரலாறு அதனைத்தான்  சொல்லுகிறது.   ஏன் டத்தோ ரமணன் கூட பிரதர் துறையைத்தான் ஆதரிக்கிறார்.   அவரின் ஓர் ஆண்டுகால  சாதனையில்  சில ஓட்டைகளும் விழுந்ததிற்கு  அந்நிறுவனம் பிரதமர் துறையில் இருந்தது தான் காரணம். அதுவே ஒற்றுமைத் துறையில் இருந்திருந்தால் அவரால் அப்படி செய்திருக்க முடியுமா?  முடியாது என்பது அவருக்கே தெரியும்.

ஒற்றுமைத்துறையில் பணம் வீணாவதைத் தடுக்க முடியும்  என்பதை முந்தைய ஒற்றுமைத்துறை அமைச்சர் காட்டிவிட்டுப் போயிருக்கிறார். இன்றைய அமைச்சர் மட்டும்  சும்மா அள்ளிக் கொடுத்து விடுவாரா?  இங்குச் சரியான வழியில் செயல்படும் என்பது தான்  பிரதமரின் முடிவு.

அதனால் பிரதமர் துறையா என்று கேட்டால் 'இல்லை'  என்று தான் பதில் வரும்.  கொஞ்சம் சுருட்டலாம் என்று நினைப்பவர்களுக்குப் பிரதமர் துறை தான்  சிறந்தது. மக்கள் பயன் பெற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒற்றுமைத்துறை தான் கைகொடுக்கும்.

Sunday 31 March 2024

நமக்கும் பொறுப்பு வேண்டும்!

 

சில இறப்பு வீடுகளில் நம் இளைஞர்கள் செய்யும் வெறித்தனமான செய்கைகள் நம்மைத் தலைகுனிய வைக்கிறது என்பதில் மாற்று கருத்து இல்லை. ஏன் இவர்கள் இப்படி செயல்படுகிறார்கள்  என்று நமக்கும் புரிவதில்லை.

காலம் நேரம் எதுவும் கிடையாது. எந்த நேரம் பார்த்தாலும் குடியும் கும்மாளமும்.  பக்கத்தில் குடியிருப்பவர்களைப் பற்றி  எந்தக் கவலையும் இல்லை.  நான் எதையும் செய்வேன் யார் என்னைக் கேட்பது என்கிற மூர்க்கத்தனம்.

வருங்காலங்களில் இறப்பு வீடுகளுக்குப் போவது கூட குற்றமோ என்கிற நிலைமைக்கு நாம்  தள்ளப்படுகிறோமோ என்று ஐயப்பட வேண்டியுள்ளது. அந்த அளவுக்கு நமது இளைஞர்கள் நடந்து கொள்கின்றனர்.

சாவு வீடு  என்றால் சம்பந்தப்பட்டவர்கள் துக்கத்தோடு இருப்பார்கள்  என்கிற எண்ணமே இருப்பதில்லை.  இறந்தவர் உடலை இடுகாட்டுக்குக் கொண்டு செல்கையில் என்ன ஆர்ப்பாட்டம்.  மோட்டார் சைக்கள் ஊர்வலம், பட்டாஸ் வெடிகளின் வெடிச்சத்தம்  -  சாவு என்கிற துக்கம் போய்  ஏதோ  பிறந்தநாள் கொண்டாட்டம் போல் மாற்றிவிடுகின்றனர்.

கடைசியில் நிலைமை என்னவாகிறது?  காவல்துறை  தலையிட வேண்டியநிலைக்கு ஆளாகிறது.

பொதுவாகவே நமது இளைஞர்கள் நல்லவர்கள். நல்லதைச் செய்வதற்கு எத்தனையோ நல்ல காரியங்கள் உள்ளன.  அவர்களைத் தவறான வழிகளில் கொண்டு செல்லவதற்குத்தான்  வழிகாட்டிகள் உள்ளனர்.  இந்த வழிகாட்டிகள் எல்லாம் பெரிய மனிதர்கள்  போர்வையில் வலம் வருகின்றவர்கள்.  இந்த வழிகாட்டிகள் எது பற்றியும் கவலைப்படாதவர்கள். பணம், பதவி, பட்டம்  இப்படித்தான்  இவர்கள் மூளை  வேலை செய்யும்.

நமது இளைஞர்களுக்கு வேலை இல்லாததும் ஒரு பிரச்சனையே. நமது இளைஞர்களுக்குப் பல தொழிற்திறன் பயிற்சிகள்  அளிக்கப்படுகின்றன. பலர் பயன்பெறத்தான் செய்கின்றனர். பலருக்கு இந்த செய்தியே எட்டுவதில்லை.  காரணம் எஸ்.பி.எம். முடித்த பிறகு என்ன செய்யலாம் என்கிற தேடல் இல்லை.  வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன. இவர்கள் தேடிப் போவதில்லை.  பெற்றோர்களும் தடையாக இருக்கின்றனர்.

நம்முடைய குற்றச்சாட்டெல்லாம் நமது பெற்றோர்களின் மீது தான். அவர்களும் கல்வியைப் பெரிதாகக் கருதுவதில்லை. பிள்ளைகளும் அது பற்றி கவலைப்படுவதில்லை. பொறுப்பு பெற்றோரிடமிருந்து தொடங்க வேண்டும்.  அப்போது தான் அது பிள்ளைகளிடம் போய் சேரும்.

Saturday 30 March 2024

ஏன் கண்டு கொள்ளவில்லை?

 

சமயத்தைப் பற்றி பேசுவதை யாரும் விரும்புவதில்லை.  ஆனால் இந்து சமயத்தைக் கேவலப்படுத்தி  சிலர் பேசுவதை  யாராலும் தடுக்க  முடிவதில்லை.  தடுப்பதற்கு யாருக்கு அதிகாரம் உண்டு  என்றும்  புரியவில்லை.  எல்லாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

தேவையற்ற ஒரு பிரச்சனையை, தேவையில்லாமல் கிளப்பிவிட்டு, அது பற்றி பேசி,  தேவையற்ற  விவாதங்களைக் கிளப்பி  ஒரு சிலர் பேசிக் கொண்டிருப்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  சமயத்தைப் பற்றி பேசி அதனை சர்ச்சையாக்குவதில்  யாருக்கென்ன   இலாபம்?

எந்த ஒரு மதத்துக்காரனும் தன்னுடைய மதம் தாழ்ந்தது என்று எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.  முதலில் அதனைப் புரிந்து கொள்ளுங்கள்.  நீங்கள் கரடியாய்க் கத்துங்கள் அதற்காக உங்கள் மதம் உயர்ந்தது  என்று  எந்த கரடியும் ஒத்துக்கப் போவதில்லை.  ஏன்?  எவரஸ்ட் மலை மீது ஏறி  எகிறி எகிறி குதித்து  தலைகீழாக நின்று கத்துங்கள்  அதற்கெல்லாம் யாரும் மசியப்போவதில்லை.

ஒரே காரணம் தான். அவனவனுக்கு ஒரு மதம் உண்டு. அதைத்தான் அவன் காலங்காலமாக வழிபட்டு வருகிறான். அந்த மதத்தின் மூலம் அவனுக்கு எந்தத் தாழ்வும் வந்ததில்லை.   உலகில் சராசரி மனிதன் வாழும் வாழ்க்கையைத் தான்  அவனும் வாழ்கிறான்.  அதனால் உங்கள் மதமோ எங்கள் மதமோ அவனை உயர்த்தி விடவாப் போகிறது?  மதம் உயர்த்தாது உழைப்புத்தான்  உயர்த்தும்.

மனிதன் சாமி கும்புடுகிறானே  அதுவே பெரிய விஷயம்.  சாமியே வேண்டாம் என்று வெறுப்பவர்களும் இருக்கிறார்கள்.  நாத்திகர்கள் அதைத்தானே  செய்கிறார்கள்?  ஆனால் ஒன்றை யோசித்தது உண்டா?  நாத்திகம் பேசுகிறவனால் எந்த  மதப்பிரச்சனையும் வந்ததில்லை.  மதத்துக்காக அடித்துக் கொள்வதில்லை.  எந்த நாட்டிலாவது  நாத்திகனால் வம்புதும்பு  ஏதேனும் வந்ததுண்டா?  அடிதடி வந்ததுண்டா? 

நாம் சொல்ல வருவதெல்லாம் ஒன்று தான். மதத்தை வைத்துக் கொண்டு அரசியல் நாடகம் ஆடாதீர்கள்.  உங்களுக்கு அதனால் இலாபம் வருகிறது என்றால்  தாராளமாக வரட்டும், கொட்டட்டும்! முடிந்தால் மலேசியாவின் ஒரு  கோடிஸ்வரனாக வர முயலுங்கள். உங்களைப் பாராட்டுகிறோம். யாருக்கும் உங்கள் மீது கோபமில்லை.  ஒரு மதத்தைத் தேர்ந்து எடுப்பது, தொழிலை தேர்ந்தெடுப்பது  உங்கள் உரிமை. ஆனால் பிற மதத்தினரின் நம்பிக்கையைச் சிதைப்பது  உங்களுக்கு உரிமையில்லை.     

பிற மதங்களைப் பற்றி பேச யாரும் உங்களுக்கு அனுமதி வழங்கவில்லை என்பதை மறக்க வேண்டாம்!

Friday 29 March 2024

நல்ல காலம் பொறக்குது!

 

நாட்டின் பொது எதிரி என்றால் ஊழல் என்பது அனைவருக்கும் தெரியும். தெரிந்து என்ன பயன்?  வாயை மூடிக்கொண்டு தான் இருக்க வேண்டும். காரணம் அது அதிகாரம் படைத்தவர்களின் ஆதிக்கத்தில் இருக்கும் போது  அனைவருமே அடங்கிப் போகத்தான் வேண்டியுள்ளது.

பிரதமர் அனவார் பதவிக்கு வந்த பிறகு ஒரு சில மாற்றங்கள் தெரிந்தன. அவரால் என்ன செய்ய முடியுமோ அதனை அவர் செய்து வருகிறார். கொஞ்சம் கொஞ்சமாக, ஒவ்வொன்றாக, ஒரு சில விஷயங்கள் வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்திருக்கின்றன.  ஊழலை அவ்வளவு எளிதில்  வெளிக்கொண்டு வந்துவிட முடியாது. பிரதமர் என்ன தான் முயற்சி செய்தாலும்  அவர் பலரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகத்தான் வேண்டும்.

இந்த நேரத்தில் நல்ல செய்தி ஒன்றும் வெளியாகி இருக்கிறது.  நமது மாமன்னரே களத்தில் இறங்கியிருக்கிறார் என்பது தான் அந்த செய்தி. ஆமாம் அவர் சொந்த மாநிலமே சிங்கப்பூர் அருகில்  இருப்பதால் அங்கு ஊழல்வாதிகளுக்கு என்ன தண்டனை என்பதை அறிந்தவர்.  சிங்கப்பூர் நாடு  ஊழலற்ற நாடு என்பது போல,  அவர் ஆளும் மலேசியா நாடும் ஊழலிருந்து விடுபட வேண்டும் என்று நினைப்பதில்  எந்த குற்றமுமில்லையே!

மாமன்னர் பதவிக்கு வருமுன்னரே பல கருத்துக்களைக் கூறி இருந்தார். அதில் ஊழல், இலஞ்சம்  என்பதில்  அதிகக் கவனம் செலுத்து விரும்புவதாகக் கூறி இருந்தார்.  சொன்னது போலவே  தனது பணியை ஆரம்பித்துவிட்டார்.

நமக்கு அதிலே மகிழ்ச்சி தான்.  பூனைக்கு யார் மணி கட்டுவது என்று பேசிக் கொண்டிருந்த நமக்கு  "இதோ நான் இருக்கிறேன்!"  என்று  முழக்கமிட ஆரம்பித்துவிட்டார் மாமன்னர்!  மணி கட்டுவது என்பதெல்லாம்  அதிகாரத்தில் உள்ளவர்களால்தான் முடியும்.

இதில் இந்தியர்களில் நிலைமை என்னவாக இருக்கும்?  சிடேக், மித்ரா என்று சொல்லி எத்தனையோ அரசியல்வாதிகள் கொள்ளயடித்தார்களே அவர்கள் மட்டும்  தப்பிக்க முடியுமா? அவர்களுக்கும் இருக்கிறது  ஆப்பு என நம்பலாம்.

மித்ரா மட்டும் அல்ல இன்னும் எத்தனையோ கொள்ளைகள் நடந்தன.  யாரால் என்ன செய்ய முடிந்தது?  அதிகாரம் அவர்கள் கையில் இருந்தது.  அதனால் யாராலும் எதனையும் செய்வதற்கில்லை.  இப்போது தான்  கொஞ்சம் வெளிச்சம் தெரிகிறது. பார்ப்போம்!

நல்ல காலம் பொறக்குது!

Thursday 28 March 2024

நெருப்போடு விளையாடாதீர்கள்!


 ஒரு சிலரின் தீவிரவாத பேச்சு கடைசியாக பெட்ரோல் குண்டுகளை   வீசுகிற அளவுக்குப் போய் நிற்கிறது.

அதனால் தான் தீவிரவாத பேச்சுக்கள் வேண்டாம் என்று பலர் சொல்லியும் சில தறுதலைகள்  தங்களை வீராதிவீரன் என்று நினைத்துக் கொண்டு  தொடர்ந்து அந்த கே.கே.மார்ட் மீது  தாக்குதலை மேற்கொண்டனர்.

காவல்துறையினர் சொன்னார்கள்' பேரரசர் பேசினார்; மாநில சுல்தான்கள் சூசகமாக எடுத்துரைத்தார்கள்.  சொன்னது யார் காதிலும் விழவில்லை.  தொடர்ந்து அந்த விற்பனையகத்தின் பொருள்களைப் புறக்கணியுங்கள் என்று  பிரச்சாரம் செய்து வந்தார்கள். 

பெட்ரோல் குண்டுகளோ, நாட்டுக் குண்டுகளோ அல்லது உண்மை குண்டுகளோ எதனையும்  சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.  இன்று பெட்ரோல் குண்டுகள் என்றால் நாளை  இந்த பிரபஞ்சத்தையே அழிக்கும் குண்டுகளாகவும் வரலாம்.  அப்படித்தான் பயங்கரவாத வளர்ச்சி அமையும். 

ஆனால் குண்டுகளைப் போட்டு தங்களது எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என்கின்ற நிலைமை  நாட்டில் இல்லை.  பிரச்சனைகள் வரும் போது  காவல்துறை நடவடிக்கைகளில் இறங்குகிறது. நடவடிக்கை சம்பந்தப்பட்டவர்கள் மீது எடுக்கப்படுகிறது.  இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை.  சட்டதிட்டங்கள் கடுமையாகப் பின்பற்றப்பட்டால்  காவல்துறையின் நடவடிக்கைகளே போதுமானது. காவல்துறை ஆள்பார்த்துச் செயல்படுவதில்லை! பயங்கரவாதம் யாருக்கும் நல்லதில்லை.

பெட்ரோல் குண்டுகள் வீசுவது  என்பது பயங்கரவாதத்தின்  ஆரம்பம். இதை நிச்சயமாக எந்த நாடும்  விரும்பாது.  நமது மலேசியா போன்ற நாடுகள் நிச்சயம் அதனை விரும்ப வாய்ப்பில்லை.  பல்லின மக்கள் வாழ்கின்ற ஒரு நாட்டில்  பயங்கரவாதம் மிக எளிதில் தீ பிடித்துவிடும்.  அதனால் நம் நாட்டைப் பொறுத்தவரை இது முளையிலேயே  கிள்ளியெறியப்பட  வேண்டிய விஷம்.  அதனால் தான் நம் நாட்டில் அமைதி இன்னும் நிலவுகிறது.

குண்டுகளை வீசுவது நெருப்புடன் விளையாடுவது. அதனைப் பரவ விட்டால் நாட்டுக்கே  ஆபத்து.  அரசாங்கம் எந்த அளவுக்குத் தீவிரமாக  செயல்படுகிறது  என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நிச்சயமாக அது வேடிக்கை விளையாட்டு அல்ல.  ஆபத்தான விளையாட்டு.

பார்ப்போம்!


Wednesday 27 March 2024

இனியும் ஆசிரியர் தொழிலா?

 

                                                        Minister of Education: Fadhlina Sidek

பொதுவாக ஆசிரியர் தொழிலில் இருப்பவர்களுக்கு  சுயமரியாதை, கௌரவம்  என்பது முக்கியம்.  ஆசிரியர் ஆணோ பெண்ணோ  இருபாலருக்கும் பொருந்தும். 

சமீபத்தில் பெண் ஆசிரியை ஒருவர்  ஒரு மாணவனுடன்   ஒழுங்கீனமாக  நடந்து கொண்டதாக வெளியான செய்தி இப்போது காவல்துறை,  கல்வி அமைச்சின் விசாரிப்பில் இருக்கின்றது.  அவர் குற்றவாளியா என்பது  விசாரணைக்குப் பின்னரே தெரிய வரும்.  ஒரு வேளை அந்த ஆசிரியை அந்த மாணவனை "நானே திருமணம் செய்து கொள்கிறேன்" என்று சொன்னால்   பிரச்சனையே  திசை மாறிவிடும்!

இங்கு நாம் சொல்ல வருவதெல்லாம் கல்வி அமைச்சு இது போன்ற பிரச்சனைகளில் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்பது தான். பெரும்பாலான பள்ளிகளில் ஆண் மாணவர்களைவிட பெண் மாணவிகளே    அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனை நாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டு தான் வருகிறோம்.

இது போன்ற பிரச்சனைகளில் சிக்கும் ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்றுகிறோம்  என்று கல்வி அமைச்சின் நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.   ஒரே வழி அவர்கள் ஆசிரியர் பணியிலிருந்து  நீக்கப்படுவது தான்.  அவர்கள் தொடர்ந்து ஆசிரியர் பணியில் இருப்பது  எதிர்காலத்தில் மாணவர்களுக்குப் பாதிப்பைத்தான் ஏற்படுத்தும்.

அவர்கள் ஜாலியாக இருப்பதற்கும் கூத்தடிப்பதற்கும்  அரசாங்கத்தில்  வேறு துறைகளா இல்லை? அங்கே அவர்கள் எக்கேடு கெட்டாலும்  யாருக்கும் கவலையில்லை!   ஆனால் கல்வி என்பது வேறு. அது அறிவு சார்ந்தத்  துறை.  நல்ல ஒழுக்கமான மாணவர்களைத் தயார் பண்ணும் துறை. அறிவில் குறைந்தவர்களை வைத்துக் கொண்டு, அடாவடித்தனம் பண்ணுபவர்களை வைத்துக் கொண்டு,  மாணவர்களின் எதிர்காலத்தை வீணடிப்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.  கல்வி அமைச்சு  இதனைக் கொஞ்சம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

இது போன்று  தவறு செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். வேலையிலிருந்து நீக்கப்பட வேண்டும். 'அங்கே மாற்றுகிறோம், இங்கே மாற்றுகிறோம்' என்கிற பேச்சுக்கே இடமில்லை!

Tuesday 26 March 2024

கோடரிக் காம்பு!

 

இந்து மதத்தைப் பற்றி  இஸ்லாமிய மதபோதகர் ஸம்ரி வினோத் தனது விபரீதக்  கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.  அதனால் இந்துக்களின் கோபத்திற்கு அவர் ஆளாகியிருக்கிறார்.  இருக்கும் இடம் வலுவான இடம் என்பதால்  வாய் கொஞ்சம் அகலமாகவே  திறக்கும் என்பதில் ஐயமில்லை!

அவரைப் பற்றி நாம் குறை சொல்லுவதில் பயனில்லை. அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலையை அவர் செய்கிறார்.  அவர் ஆட்டுவிக்கப் படுகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.  இந்துக்களைச் சினமூட்டும் வேலையை மீண்டும் செய்ய ஆரம்பித்திருக்கிறார்.  இருக்கட்டும். அவர் செய்யவில்லை என்றால் அவர் தொழில் பாதிக்கப்படும்.

இவரைப் போன்ற நபர்களின் செயலினால்  நிச்சயமாக அமைதியின்மை ஏற்படத்தான் செய்யும்.  அதனால் தான் நிறைய கண்டனக் குரல்களை நாம் பார்க்கிறோம்.  வேறு வழியில்லை. சமயத்தை இழிவுபடுத்தினால்  அங்குச்  சமாதானம் நிலவ வாய்ப்பில்லை.

இந்து சகோதரர்களுக்கு ஒரு வேண்டுகோளை நான் வைக்கிறேன்.  ஆளுக்கு ஆள் வன்மத்தைக் கையில் எடுப்பதைவிட  இந்து சமயத்தின் சார்பில் ஒரு குழுவாக செயல்படுவது அவசியம்.  இந்து சமயத்தினர் மட்டுமல்ல அனைத்து சர்வ சமயத்தினரும் சேர்ந்து  ஒரு குழுவாகச் செயல்பட்டு சம்பந்தப்பட்ட அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.  இந்துக்களையே ஒருவன் குறிவைக்கிறான் என்றாலும் அதற்கும் சர்வ சமயத்தினரும் கூடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

நிச்சயமாக நீங்கள் அதனைத்தான் செய்வீர்கள் என்பது எனக்குப் புரிகிறது.  இருந்தாலும் தெரிவிப்பது எனது கடமை.  இந்தப் பிரச்சனையில் இளைஞர்கள் கோபப்படுவது இயல்பே.  நம்மைப் பொறுத்தவரை இதனைத் தீர்க்க பேச்சுவார்த்தை ஒன்றே வழி.  நாம் ஒரு பலவீனமான சமுதாயம் என்பது  அவனுக்குப் புரிகிறது.  சீன சமுதாயத்தோடு அவர்கள் மோதுவதில்லை.

அதனால் நமக்குத் தெரிந்ததெல்லாம்  பேச்சுவார்த்தை மட்டும் தான்.  மற்றபடி நியாயங்கள் எல்லாம் எடுபடுவதில்லை.  என்ன செய்வது?  நமக்குத் தகுதி இல்லாதவர்களோடு  உட்கார்ந்து பேசுவதைத் தவிர  வேறு என்ன தான் செய்ய முடியும்?

வருங்காலங்களில்  இது போன்ற பிரச்சனைகள் எழாது என நம்பலாம். படித்த சமுதாயம் புரிந்துணர்வோடு  செயல்படும். அந்நாள் சீக்கிரமே வரும்.  அதுவரை பொறுமை காப்போம்!

Monday 25 March 2024

வாங்கோ! பிரியாணி சாப்பிடலாம்!

நமக்குப் பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ இன்றைய , நிலையில் பிரியாணி கூவி கூவி விறகப்படுகிறது!  மூலை முடுக்குகளில்லாம், முச்சந்திகளில்லாம் விற்கப்படுகின்றது!

அட! அன்று ஒரு மலாய் உணவகத்திற்குப் போனால்  அங்கேயும் பிரியாணி!  ஒன்று மட்டும் நிச்சயம். இப்போது இங்கு விற்கப்படும் பிரியாணிகளைச் சாப்பிட்டால்  அதன்மீது உள்ள  ஆசையே போய்விடும்!

பிரியாணி என்பது ஒரு விசேஷமான  தயாரிப்பு.  யார் வேண்டுமானாலும் அந்த உணவைத் தயாரித்து விடலாம் என்று நினைப்பது பெரிய கற்பனை! அதற்கென்று பல படிநிலைகள் உண்டு.  அதனை வரிசையாகக் கடைப்பிடித்து ஒவ்வொரு படியாகச் செய்யும் போது தான்  அது பிரியாணியாக இருக்கும். 

நினைத்தால் உடனடியாகப் பிரியாணி செய்துவிட முடியும் என்பதெல்லாம் வீண்.  எந்த ராணி  செய்தாலும் அது பிரியாணியாக இருக்காது.  நமது நாட்டைப் பொறுத்தவரை நல்ல பிரியாணிக்கு வாய்ப்பில்லை.  நான் பிரியாணி விரும்பி அல்ல. ஆனால் நான் இது நாள் சாப்பிட்டவரை  எனக்குத் திருப்தி இல்லை.  பெரும்பாலோரைப் பொறுத்தவரை தமிழ் நாட்டுப் பிரியாணிக்கு ஈடில்லை என்பது தான். அதுவும், பிரியாணியைப் பொறுத்தவரை,  இஸ்லாமிய சகோதரர்களுக்குத் தான் முதலிடம்.  முற்றிலுமாக பிரியாணி நூறு விழுக்காடு அவர்களின் தயாரிப்பு தான்.

சமீப காலங்களில் ஏகப்பட்ட தமிழக உணவகங்கள்  இங்கு கிளைகளைத் திறந்து வருகின்றன.  ஆனால் அங்கும் கூட பிரியாணி  தயாரிக்கும் நல்ல  சமையலர் இல்லை  என்பது தான் சோகம்.  அங்குப் போகிறவர் எல்லாம் "நல்லா இல்லே"  என்று தான் சொல்லுகிறார்கள். நல்லா இருக்கு என்று  யாரேனும் சொன்னால்  அந்த உணவகத்தின்  சமையல்காரர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் என்று பொருள்.  அல்லது இன்னொரு குற்றச்சாட்டையும் சொல்லலாம்.  உணவில் சேர்க்க வேண்டிய பொருள்களைக் குறைத்தோ அல்லது தவிர்த்தோ  அவர்கள் சமைக்கலாம்.  எதைக் குறைத்தாலும் கூட்டினாலும் விலையில் எந்த மாற்றமுமில்லை!  விலை குறையும் என்று கனவு காண்பதோடு சரி!

நமக்கு ஒரு வருத்தம் உண்டு. மலேசியாவைப்  பொறுத்தவரை  எல்லா உணவகங்களுமே  பிரியாணி செய்கிறார்கள். பழையவர்களோ, புதியவர்களோ  எல்லா உணவகங்களுமே பிரியாணி உணவைத் தயாரிக்கத்தான் செய்கிறார்கள்.  ஆனால் தரமான பிரியாணிகள் கிடைப்பதில்லை.  கிடைக்க வழியில்லை!  செய்யத் தெரியாதவர்களிடம்  பிரியாணி எப்படி இருக்கும்?

நம்முடைய உணவகங்கள் முறையாகக்  கற்றுக்கொண்டவர்களை  வைத்து  பிரியாணி செய்ய  வேண்டும். இல்லாவிட்டால் இங்கு எந்தக் காலத்திலும்  நல்ல பிரியாணி கிடைக்க வழியில்லை!

Sunday 24 March 2024

ஒற்றுமைத் துறையா? பிரதமர் துறையா?





பொது மக்களிடையே இல்லாத ஒரு குழப்பத்தை  இப்போது நமது இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள்  எதிர்நோக்குகின்றனர்.

மித்ரா அமைப்பை பிரதமர் அன்வார் பிரதமர் துறையிலிருந்து ஒற்றுமைத்துறைக்கு மாற்றினார்.  அவருக்கு அந்த அதிகாரம் இருந்தது அதனால் , என்ன காரணத்தினாலோ,   அதனை அவர் செய்தார்.

இப்போது ஒரு சிலர் சேர்ந்து கொண்டு  'மீண்டும் பிரதமர் துறைக்கே மாற்றுங்கள்' என்று கோஷம் போட்டுக் கொண்டிருக்கின்றனர்!   அப்போதும் அவர் தான் மாற்றினார்  இப்போதும் அவர் தான் மாற்றினார். அது பிரதமரின் உரிமை.  ஏன் மாற்றினார்? ஏதோ  கிசுகிசு  அவருடைய காதுகளுக்கு எட்டியிருக்கலாம்! 

சென்ற ஆண்டு அது முழுமையாக, பிரதமர் துறையில்,  டத்தோ ரமணன்  கீழ் இயங்கியது. அதன் பின்னர் தான்  ஒற்றுமைத்துறை  அமைச்சுக்கு மாற்றப்பட்டது. 

இந்த ஓர் ஆண்டில்  டத்தோ ரமணின் சாதனைகள் என்ன?  மித்ராவுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை  முற்றிலுமாகப் பயன்படுத்தினார். அது அவரின் சாதனை.  ஏற்பட்ட வேதனைகள் என்ன?     தமிழ் பள்ளி மாணவர்களுக்குப்  பயன்படுத்தப்பட்ட கணினிகளைத்  தள்ளிவிட்டார்  என்கிற குற்றச்சாட்டு  இரண்டாவது,  நாடாளுமன்ற உறுப்பினர்களின் கைச்செலவுக்காக  ஒவ்வொருக்கும்  ஐந்து இலட்சம் அள்ளிவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது.

நாம் சொல்ல வருவதெல்லாம்  தமிழ் பள்ளி மாணவர்களின் மீது  உங்களுக்கு  ஏன் அந்த அளவுக்கு வெறுப்பு என்பது மட்டும் தான். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின்  தொகுதி மேம்பாட்டுக்காக  அவர்களுக்கும் பணம் ஒதுக்கப்படுகிறது. மித்ராவுக்கும் அவர்களுக்கும்  என்ன சம்பந்தம்?

மித்ராவின் பணம் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்றால் கல்விக்காக இன்னும் செலவு செய்யலாம்.  நாம் குற்றம் சொல்ல மாட்டோம். ஆனால் பழைய கணினிகள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உதவித் தொகை - இவைகளை எல்லாம் எப்படி ஏற்றுக்கொள்வது?  

இது  ஊழலா என்பது நமக்குத் தெரியாது.  ஆனால் பிரதமர் என்ன நினைத்திருப்பார்?  மித்ரா,  பிரதமர் துறைக்கு மாற்றினால் ஊழல் தான் அதிகம் ஆகும் என்று அவர் நினைத்திருக்கலாம்.  ஏற்கனவே அது தான் நடந்தது. 'செடிக்' கிலிருந்து பார்த்தால் அப்படித்தான் வரலாறு கூறுகிறது!

அதனால் அவர் மீண்டும் ஒற்றுமைத்துறைக்கே  மாற்றி இருக்கலாம்.  மித்ராவுக்காக அவர் நியமித்த முதல் நபரே நம்பிக்கைக்குரியவராக இல்லையே  என்று மனம் நொந்து போயிருக்கலாம்.

இனி மேலும் வாய் சவடால் வேண்டாம்.  இந்த மாற்றத்தினால்  பொது மக்களுக்கு எந்த நட்டமும் இல்லை.  நம்முடைய தேவை எல்லாம் ஒற்றுமைத்துறை ஒட்டுமா என்பது மட்டும் தான்!  இல்லாவிட்டால் அவர்களையும்  ஓட்டத்தயார்!

Saturday 23 March 2024

எதிர்கட்சிக்கு வாய்ப்பு?

 

வருகின்ற இடைத் தேர்தலில் ஒரு சோதனை. அந்த இடைத் தேர்தலில் இந்தியர்கள் தங்களது  ஒற்றுமையைக் காட்டுவார்களா என்று பரிசோதிக்கும் களம்.

இந்தியர்களை எல்லாகாலங்களிலும் ஏமாற்றலாம்  என்று  நினைப்பவர்களுக்கு  ஒரு பாடம் கற்பித்துக் கொடுக்க  வேண்டிய நேரம். அதனை நாம் எப்படிப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறோம். என்பதைப்  பொறுத்துத்தான்  அது எச்சரிக்கை மணியா என்ன  என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

கோலகுபுபாரு, சிலாங்கூர், மாநில சட்டமன்ற தொகுதி காலியானதை ஒட்டி இன்னும் மூன்று மாதங்களுக்குள்  இடைத்தேர்தல் நடத்தப் பெற வேண்டும். அங்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஜ.செ.கட்சியின் திருமதி லீ,   மார்ச்-21-ம் தேதி புற்று நோய் காரணமாக மரணமடைந்தார்.

கோலகுபுபாரு தொகுதியில் மலாய்க்காரரே அதிகமாக இருந்தாலும் சீனர்களும் இந்தியர்களும் சேரும்போது  சிறிய அளவில் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர்.  அதனால் 18 விழுக்காடு உள்ள இந்தியர்களின் வாக்கு  முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இங்கு ஆளுங்கட்சி வெற்றி பெறுகிறதோ அல்லது எதிர்க்கட்சி  வெற்றி பெறுகிறதோ அதனால் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படப்போவதில்லை. ஆனால் நம்மைப் பொறுத்தவரை  இந்தியர்களின் வாக்கு எண்ணிக்கை எந்தப்பக்கம் சாய்கிறது  என்பது  தான் முக்கியம்.

புதிய அரசாங்கம் பதவி ஏற்றதிலிருந்து நமது தரம் கீழ்நோக்கிப் போகின்றதே தவிர எதுவும் மேல் நோக்கிப் போவதாகத் தெரியவில்லை.  கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு - இப்படி எந்த ஒரு பிரச்சனையும் தீர்க்கப்படும் என்கிற உத்தரவாதம் இல்லை. அதுவே பெரிய சிக்கல்.

நமது அதிருப்தியைப் பலவகைகளில் தெரிவித்துக் கொண்டுதான் வருகிறோம். அவைகள் எல்லாம் ஊடகங்களில் எதிரொலிக்கத்தான் செய்கின்றன.  ஆனால் தேர்தலில் எதிரொலிப்பது என்பது வேறு.  அது கொஞ்சம் ஆழமாகவே எதிரொலிக்கும்!  படபட வைக்கும்!

பார்ப்போமே! ஆதரவு  ஒற்றுமை அரசாங்கத்திற்கு  அதிகம் என்றால்  நாம் பிரதமர் அன்வாரின் தலைமைத்துவத்தில் திருப்தி அடைகிறோம் என்பது பொருள். அதுவே எதிரணிக்கு ஆதரவு என்றால் அது ஆளுங்கட்சிக்குப் பயமுறுத்தலாக அமையும் என்று எடுத்துக் கொள்ளலாம்!

முன்பெல்லாம்  அரசாங்கத்தின் மீதான நமது அதிருப்தியைக் காண்பிக்க ஐம்பது அறுபது ஆண்டுகள் பிடித்தன. இனி அப்படியெல்லாம் இருக்க முடியாது.  தருணம் வரும்போது அதனை உடனடியாகக் காட்ட வேண்டும். யாரும் நமக்குக் கை கொடுக்கப்போவதில்லை. 

நமது கையே நமக்கு உதவி!

Friday 22 March 2024

முன்னேற்றத்துக்குத் தடை: இலஞ்சம்!

 

பொதுவாக  பல  நாடுகளின் முன்னேற்றத்திற்குத்   தடையாக இருப்பது இலஞ்சம் தான்!  நமது அருகில் இருக்கும் சிங்கப்பூர் நாட்டை ஒதுக்கிவிடுவோம்.  நம் நாட்டுக்கும் அந்த நாட்டுக்கும் எந்த வகையிலும் ஒத்துப் போக வழியில்லை!  இரு நாடுகளுமே இருவேறு துருவங்கள்!  மாதிரிக்கு ஒன்றைச் சொல்லலாம். ஒரு பிரச்சனை வந்தால் சிங்கப்பூர் அரசாங்கம் அதனை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து  சரி பண்ணுவதில் முனைப்புக் காட்டும்.  இங்குள்ள நிலைமை வேறு.  நிதியைப் பெற்றுக் கொள்ளுவார்கள். பிரச்சனையைப் பேசினால் சாமி கண்ணைக்  குத்தம் என்பார்கள்! ஆக ஒன்றும்  ஆகாது!

ஒரு சில நாடுகளில் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஊழல்.  புதிதாக பாலம் ஒன்றைக் கட்டினார்கள். திறப்புவிழா நடத்தி பாலத்தைக் கோலாகலமாக  திறந்து வைத்தார்கள்.    பாலத்தின் ஆயுசு கம்மி. ஐந்தாறு நாட்களிலேயே பாலம் 'ஐயகோ'  என்று கவிழ்ந்து போனது. 

மழை, வெள்ளம், புயல், காற்று  என்று  வந்துவிட்டால் அதைப்பார்த்து மகிழ்ச்சி அடைபவர்கள் அரசியல்வாதிகள் தான்.  இங்கிருந்து பல கோடிகளைத் தங்களுக்கு ஒதுக்கிவிட்டு  அப்புறம் மிச்சம் மீதி உள்ள பணத்தில்  தான் நிவாரண வேலைகள் நடக்கும்! அரசியல்வாதிகள் விசேஷமான ஜந்துக்கள்!  

முதலில் கையில் இலஞ்சம்  வாங்கிவிட்டு,   அதன் பின்னர் மக்களுக்குத் தொண்டு செய்பவர்கள் தான் அரசியல்வாதிகள்! உலகில் எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும் அவர்களின் அடிப்படைக் கொள்கை என்பது ஒன்று தான்.  'கையில காசு வாயில தோச'  இது தான் அவர்களின் கொள்கை.   தொண்டு என்கிற சொல்லின் பொருளையே மாற்றிவிட்டார்கள்!   

பெரும்பாலான நாடுகளில் உள்ள அரசியல்வாதிகளின் சொத்துக்களைக் கணக்கிலெடுத்தால், அதுவும் அரசியலுக்கு முன் அதற்குப் பின்  - என்று ஒரு கணக்கெடுப்பு நடத்தினால்  முன்: பிச்சைக்காரன், பின்: கோடிஸ்வரன் - என்று தான் புள்ளி விபரங்கள் சொல்லும். ஒரு சில நாடுகளில் இலட்சக்கணக்கிலான  கோடிகள்!  அப்பாடா! எப்படிடா சாத்தியம்? என்று நம்மைக் கேட்க வைக்கும்!    காஞ்ச  மாடு கம்புல பாஞ்ச மாதிரி என்று எடுத்துக் கொள்ள வேண்டியது தான்!

நம் நாட்டில் அரசியலுக்கு வந்தவர்களில் பெரும்பாலானோர் சாதாரணமாகத்தான் வந்தார்கள்.  அவர்கள் போகும் போது  பெரிய செல்வந்தர்களாகப்  போனார்கள்!   நம் ஜாதிக்காரனைப் பணக்காரன் ஆக்குவது நமது கடமை என்று  சில தலைவர்கள் நினைத்தார்கள்.  கடமை சரிதான். ஆனால் கடமை மக்களை ஓட்டாண்டியாக்கிவிட்டது என்பதும் உண்மை!

இலஞ்சம், ஊழலில் சிக்கிய நாடுகளின் வளர்ச்சி நிச்சயமாகத் தடைபடும். நாம் ஏன் முன்னேறவில்ல என்றால் சிங்கப்பூரைத்தான் படிக்க வேண்டும். அதைப்படிக்க அசியல்வாதிக்கு எங்கே நேரம்?

Thursday 21 March 2024

மெட்ரிகுலேஷன் கல்வி!

 

மெட் ரிகுலேஷன் கல்வி என்றாலே ஒவ்வொரு ஆண்டும்  இந்திய மாணவர்களுக்குப்  பிரச்சனைக்குரியதாகவே  தொடர்கிறது.

அதுவும் பிரதமர் அன்வார் வந்த பிறகு பிரச்சனை இன்னும் மோசமடைந்துவிட்டது.  ஒவ்வொரு முறையும் போராட்டம் செய்ய வேண்டிய சூழலே ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

பொதுவாக எல்லாவற்றிலும் பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால் பிரச்சனையாகவே தொடர்வது எந்த வகையிலும் நியாயமில்லை. முற்றுப்புள்ளியே வைக்க முடியாத அளவுக்கு அப்படி எதுவும் இல்லை.

முன்னாள் பிரதமர் நஜிப் அவர்களின் காலத்தில் 2,500 இடங்கள் ஒதுக்கப்பட்டன என்று கூறப்படுகிறது.  சென்ற ஆண்டு அதுவும் பிரதமர் அன்வார் காலத்தில், 1,000 த்திற்கும் மேற்பட்ட இடங்களே ஒதுக்கப்பட்டன.

ஒரு விஷயம் நமக்குப் புரியவில்லை.  கல்வி அமைச்சின் செயல்பாடுகளைப் பார்க்கும் போது ஒவ்வொரு ஆண்டும் இந்திய மாணவர்கள்  மெட்ரிகுலேஷன் கல்விக்காக போராட வேண்டும்  என்கிற சூழலை ஏற்படுத்துகிறதோ  என்று தான் நினைக்க வேண்டியுள்ளது.

நம்மைக் கேட்டால் மிக எளிதாக  இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும்.  ஏற்கனவே முன்னாள் பிரதமர் நஜிப் காட்டிய பாதை. - அதுவே சிறந்தது.  ஒவ்வொரு ஆண்டும் 2,500 இந்திய மாணவர்கள் மெட் ரிகுலேஷன்  கல்விக்காக அனுமதிக்க வேண்டும்.  அப்படி ஒரு எண்ணிக்கையை ஒவ்வொரு ஆண்டும் கொடுத்துவிட்டால்  அதன் பிறகு யாரும் எந்தக் கேள்வியும் கேட்கப்போவதில்லை. 

நமக்குள்ள தலைவலி எல்லாம் எத்தனை ஆண்டுகளாக இந்தப் பிரச்சனைக்காக  நாம் பேச்சுவார்த்தைகள், ஆர்ப்பாட்டங்கள் என்று போய்க்கொண்டே இருப்பது, என்பது தான்.  ஒரு சிறிய பிரச்சனையைக் கூட பிரதமர் அன்வார் அரசாங்கம்  தீர்வு  காண முடியவில்லையே! மெட் ரிகுலேஷன் கல்வியைப் பொறுத்தவரை இந்திய மாணவர்களுக்கு  அது தீராத பிரச்சனை. ஒவ்வொரு ஆண்டும்  'கிடைக்கும் ஆனா கிடைக்காது!' என்கிற பாணியிலேயே  இழுத்துக் கொண்டே போகிறது!

பிரதமர் அன்வார் எந்தவொரு இந்தியர் பிரச்சனையையும் கையாள முடியவில்லை என்பது தான் இந்நாள் வரை  அவர் மீதான குற்றச்சாட்டு. அதை பொய்யென்று சொல்லவும் முடியாது.

பிரதமர் இந்த ஆண்டாவது இந்தப் பிரச்சனையை  ஒரு முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்.  கல்வியில் கூட பாரபட்சம் பார்ப்போம் என்றால்   அப்படிப்பட்ட அராசங்கம் எங்களுக்குத் தேவையா என்று நாங்களும் சிந்திக்க ஆரம்பித்துவிட்டோம்.

கல்வி மிக வலிமையான ஆயுதம். அது எங்களுக்கும் சேர்த்துத் தான்!