Friday 30 June 2023

அரிசி விலை எகிறுமா?

 

விலையேற்றம்  என்பது தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. புதிதாகச் சொல்ல ஒன்றுமில்லை.

ஆனால் அரிசி விலை ஏறும் போது தான் அடிவயிற்றைக் கலக்குகிறது! மலேசியர்களின்  உணவே அரிசி உணவு தானே.

ஒரு விஷயம் மனதுக்கு ஆறுதல். மலேசியாவில் உற்பத்தியாகும்  அரிசி விலையில்  எந்த மாற்றமும் ஏற்படாது.  அரிசியின் உற்பத்தியில்  எந்த மாற்றமும் இல்லை. உற்பத்தி வழக்கம் போல இருக்கிறது.  சந்தையில் தாராளமாகக் கிடைக்கிறது.  அதன் விலை வழக்கம் போல ரி.ம. 2,60 காசுகள்.  அதன் விலையை வியாபாரிகள்  ஏற்றினால் அதனை நீங்கள் புகார் செய்யலாம்.

வெளிநாட்டு அரிசிகளைப் பயன்படுத்தவர்களின் நிலைதான் கொஞ்சம் ஏமாற்றம் அளிப்பதாக இருக்கும் அல்லது இருக்கலாம்.  அதன் உற்பத்தி நிலவரம் நாம் அறியவில்லை.  குறைவான உற்பத்தி என்றால் அதன் விலையை அந்த அந்த நாடுகள் ஏற்றிவிட்டால் நம்மால் ஒன்று செய்ய இயலாது.

இந்தியர்களில் பலர் புழுங்கல் அரிசி உணவைச் சாப்பிடுபவர்களாக இருக்கிறார்கள். அதன் விலையேற்றம் ஒரு வெள்ளியிலிருந்து இரண்டு வெள்ளி வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக எல்லா வெளிநாட்டு உற்பத்திகளும் விலை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. சிக்கனம் என்று நினைத்தால் நமது நாட்டு உற்பத்தியைத்தான்  தேர்ந்தெடுக்க வேண்டும்.`    

ஆனால் வேறு வழியில்லை. அதிக விலை போட்டு விலையுள்ள அரிசிகளை எல்லாராலும் வாங்க இயலாது. விரலுக்கேற்ற வீக்கம் என்பதுபோல நம்மால் எதனைத் தாக்குப்பிடிக்க முடியுமோ அந்த பக்கம் மாற்றிக்கொள்ள வேண்டியதுதான். 

பெரும்பாலும் மலாய்க்காரர்கள் உள்ளூர் அரிசியைத்தான்  பயன்படுத்துகின்றனர்.  அது அவர்களுக்குப் பழகிவிட்டது. நமக்குத் தேவை என்றால் நாமும் பழகிக்கொள்ள வேண்டியது தான்.  எது விலை குறைவோ அந்தப்பக்கம் சாய்ந்து விடுவது தான் நல்லது.  எல்லாமே பழக்க தோஷம் தான். பழகிவிடும்.

 அரிசி விலை ஏற்றம் தவிர்க்க முடியாதது.  இன்னும் ஓரிரு மாதங்களில் அதன் தாக்கம் தெரியும். விலை ஏறக்கூடாது என்பது தான் நமது எதிர்பார்ப்பு. இப்போது எதனையும் நம்மால் கணிக்க முடியவில்லை. எல்லாமே தலைகீழாக மாறிக்கொண்டிருக்கிறது! விலை ஏறலாம் அல்லது ஏறாமலும் போகலாம்! பொறுத்திருப்போம்!

Thursday 29 June 2023

கைவிரித்தனர் முகவர்கள்!

 


யாரைக் குற்றம் சாட்டுவது?  பல இலட்சங்களைச் செலவு செய்து இங்கு வந்த வேலை செய்ய நாட்டிற்குள் வந்துவிட்டனர்.  

வந்த பின்னர் உள்ளே வந்தவர்கள் தேவைக்கு மேல் அதிகமாகிவிட்டனர். இப்போது அவர்களுக்கு வேலை இல்லை என்று முகவர்கள் கைவிரித்துவிட்டனர்!  இப்போது இங்கு வந்த அந்நியநாட்டவர்கள் என்ன செய்வர்?

என்னைக் கேட்டால் இது அரசாங்கத்தின் குற்றம் என்று அடித்துச் சொல்வேன்.  அரசாங்கத்திற்குத் தான் உள்ளூர் நிலவரம் தெரிந்திருக்க வேண்டும். மனிதவளத் தேவை என்பது அரசாங்கத்தின் பொறுப்பு. அதனை முகவர்கள் மேல் பழி  சொல்லி தப்பிக்க முயலக்கூடாது.

அந்த நிறுவனங்கள் கறுப்புப்பட்டியல் இடப்படும் என்பதெல்லாம் ஏமாற்று வேலை.  அதனால் யாருக்கு என்ன இலாபம்? சம்பந்தப்பட்டவர்கள் வேறு ஒரு பெயரில் வேறு ஒரு நிறுவனத்தை தொடங்கிவிடுவார்கள்! அவர்களுக்குத் தெரியாத வழிகளா! இந்த கறுப்புப்பட்டியல் என்கிற பேச்சே வரக்கூடாது. அவர்களுக்குச் சிறை தண்டனை என்பது தான் சரியான வழி. 

ஒன்றை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.  நாம் அந்நியநாட்டவர்கள் என்று சாதாரணமாகச் சொல்லி விடுகிறோம். ஆனால் தங்களது சொத்துகளை விற்று, கடன் வாங்கி பல இலட்சங்களைச் செலவு செய்து அவர்கள் இந்நாட்டுக்கு வருகிறார்கள். வேலை கிடைக்கும் என்கிற உத்தரவாதம் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுத் தான் அவர்கள் வருகிறார்கள். கடைசியில் கைவிரித்தால்?  அந்த முகவர்களையே அவர்கள் இழந்த பொருளாதார இழப்பை ஈடுகட்ட ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ஒன்றுமே இல்லாமல் அவர்களை அனுப்பி வைத்தால்?

எப்படிப் பார்த்தாலும் அரசாங்கம் தான் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.  அல்லது குறைந்தபட்சம் அவர்களை வேறு வேலைகளில் ஈடுபடுத்த வேண்டும்.  இன்று இந்திய உணவகங்கள் 'ஆள்கள் தேவை' என்பதாக மகஜருக்கு மேல் மகஜர்களை  மனிதவள அமைச்சுக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குக் குறிப்பிட்ட காலம் வரை அந்த வாய்ப்பைக் கொடுக்கலாம்.

அந்த அந்நியநாட்டவர்களைத் தற்காலிமாக ஏதோ ஒரு வழியில் காப்பாற்றுலாம். ஏதோ ஏழைபாழைகள்  இந்நாட்டிற்கு வேலை தேடி வருகிறார்கள். அவர்கள் தங்களது தாய்நாட்டிலிருந்து  பலவற்றை இழந்து தான் இங்கு வருகிறார்கள்.  இவர்களைச் சும்மா அனுப்புவது எந்த வகையிலும் நியாயமில்லை.

கடந்த பல வருடங்களாக இவர்களை நாம்,  தேவையோ தேவை இல்லையோ,  இந்நாட்டிற்குள் அனுமதித்து விட்டோம். முகவர்கள் மகிழ்ச்சியடைவதற்காக  எல்லாவற்றையும் செய்தோம்.   இப்போது அந்த அந்நியர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும்  அல்லது முகவர்களை உள்ளே தள்ள வேண்டும்!

கறுப்புப்பட்டியல் என்று சொல்லி மக்களை ஏமாற்ற வேண்டாம்! அந்த கருங்காலிகளுக்குத் தண்டனைக் கொடுத்து நஷ்டஈட்டையும் கொடுக்கும்படி செய்ய வேண்டும்!

Wednesday 28 June 2023

தொழில்நுட்ப பயிற்சிகள்

 


சமீபத்தில் தான் எஸ்.பி.எம். தேர்வுகள் வெளியாயின. வெற்றி தோல்விகள் சகஜம். பலர் மேற்கல்வியைத் தொடர்கின்றனர். இன்னும் பலர் கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றனர். 

இனி கல்வியே வேண்டாம் என்று நினைப்பவர்கள் அவர்களுக்குத் தோதான கைத்திறன் பயிற்சிகள்  மூலம் புதியதொரு  கல்வி முறையைத் தேர்ந்தெடுக்கலாம்.  ஆமாம். நேரடியாகக்  களத்தில் இறங்க வேண்டியது தான்.

அரசாங்கம் பலவிதமான பயிற்சிகளைக்  கொடுக்கின்றனர்.  குறுகியகால பயிற்சிகள் நீண்ட  கால  பயிற்சிகள் - இப்படி பல பயிற்சிகள் உண்டு. பயிற்சி காலத்தில்  படிப்பணமும் அரசாங்கம் கொடுக்கின்றது. கையில் காசும் கொடுத்து, உணவும் கொடுத்து, பயிற்சியும் கொடுத்து, சந்தையில் வேலையும் வாங்கிக் கொடுத்து - வேறு என்ன தான் உங்களுக்கு வேண்டும்?

ஆனால் முக்கியமான ஒரு விஷயத்தைச் சொல்லியே ஆக வேண்டும். இந்த செய்திகள் எந்த அளவுக்கு பொது மக்களுக்குப் போய்ச் சேருகிறது? மாணவர்களுக்கு இந்த செய்திகள் போய்ச் சேர வேண்டும்.  அக்கறையான மாணவர்கள் தேடிப்போய் செய்திகளைச் சேகரித்துக் கொள்கின்றனர். பெற்றோர்களில் பலர்  தங்களது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக  தக்கவர்களிடம் சென்று பயிற்சிகள் பற்றி  அனைத்தையும் அறிந்து கொள்கின்றனர்.

ஒரு சில பெற்றோர்கள் பிள்ளைகள் தங்களைவிட்டு பிரிந்துவிடக் கூடாது என்பதற்காக  வெளியே அனுப்ப மறுக்கின்றனர்.  பெற்றோர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். எப்படித்தான் நாம் பிள்ளைகளைப் பொத்திப் பொத்தி வளர்த்தாலும் நடப்பது நடக்கத்தான் செய்யும். உங்கள் குழந்தைகளை நீங்கள் நம்ப வேண்டும்.  

இன்றைய நிலையில் நமது இளைஞர்கள் ஏதாவது ஒரு துறையில் பயிற்சி பெற்றிருக்கத் தான்  வேண்டும்.  அரசாங்கம் தனது பங்காக அனைத்தையும் செய்கிறது.  நாம் எல்லாகாலங்களிலும்  ஏதோ ஒரு குற்றச்சாட்டை  அரசாங்கத்தின்  மீது வைக்கிறோம்.  அது எந்த அரசாங்கமாக இருந்தாலும் சரி. இளைஞர்களுக்கான  பயிற்சிகள் ஒவ்வொரு ஆண்டும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதில் தமிழ் இளைஞர்களின் பங்கு என்பது பாராட்டும் அளவுக்கு இல்லை.  கட்சிகளும் அவர்களைக் கண்டு கொள்வதில்லை.

ஆக நாம் ஏகப்பட்ட குறைகளை அரசாங்கத்தின் மீது சொல்லிவிட்டோம். அல்லது கட்சிகளின் மீது சொல்லிவிட்டோம்.  நமது குறைகள் மட்டும் நமக்குத் தெரிவதில்லை. அரசாங்கம் கொடுக்கும் இலவச பயிற்சிகளை நீங்கள் புறக்கணித்தால் தனியார் பயிற்சி நிலையங்களில் நீங்கள் பணம் போட்டு தரமற்ற பயிற்சிகளைத்தான் நீங்கள் பெற வேண்டி வரும்! ஏற்கனவே இப்படித்தான் நடந்தது. 

அரசாங்க பயிற்சி நிலையங்களில் சேர்ந்து தரமான பயிற்சிகளை மேற்கொள்ள எனது வாழ்த்துகள்!

Tuesday 27 June 2023

கொஞ்சம் வாயை மூடுங்கள்!

 


 "லோக்மான் சார்! வாயை மூடுறிங்களா?" : ம்.இ.கா: தினாளன் ராஜகோபாலு!

அம்னோ உச்சமன்ற உறுப்பினர் லோக்மான் நூர் அடாம் கொஞ்சம் வாய் பிரபலம்!

அம்னோ  ஆட்சியில் இருந்தால்  வாய்க்கொழுப்பை கொஞ்சம் அதிகமாகவே காட்டலாம். அவரை எதிர்க்க ஆளில்லை. எல்லை மீறீனாலும்  யாரும் பிரச்சனைப் பண்ண போவதில்லை! எல்லாம்  அவர்களின் ஆட்சி! அத்து மீறலாம்!

ஆனால் இன்றைய நிலைமை வேறு.  தேசிய முன்னணியில் உள்ள மூன்று கட்சிகளுமே  அம்னோ, ம.சீ.ச., ம.இ.கா.மக்களின் செல்வாக்கை இழந்த கட்சிகளாக இருக்கின்றன என்பதை லோக்மான் அறியமாட்டாரோ!  ஆனால் அவர் அடிக்கடி அதனை மறந்து விடுகிறார் என்பது தான் அவரது பிரச்சனை. அவரது நிலைமையை மறந்து மற்ற கட்சிகளைப் பாரமாக நினைக்கின்றார்! அம்னோ எப்படி மலாய்க்காரர்களின் அதரவைப் பெறவில்லையோ அதே போல மற்ற இரண்டு கட்சிகளுமே சீனர்களின், இந்தியர்களின் ஆதரவை இழந்துவிட்டன.

நாட்டின் முப்பெரும் இனங்களும் தேசிய முன்னணியைப் புறக்கணித்துவிட்டன.  யார் காரணம்? லோக்மான் அறியமாட்டாரோ? அம்னோ செய்த ஊழல்கள் தான் அனைத்து மலேசியர்களையும்  தேசிய முன்னணியின் மேல் வெறுப்பை ஏற்படுத்திவிட்டன!  முன்னாள் பிரதமர் நஜிப்-ரோஸ்மா கூட்டணி  நாட்டுக்குச் செய்த துரோகம் என்ன சாதாரணமானதா?  அவரே ஆட்சியில் இருந்திருந்தால் அம்னோ நாட்டையே வேறொறு நாட்டிற்கு  எழுதி கொடுத்திருப்பார்!

லோக்மான் ஒன்றை உணர வேண்டும்.  மூன்று  கட்சிகளையும் தராசில் வைத்தால்  மக்களின் செல்வாக்கு  என்பது ஒரே அளவையைத்தான்  காட்டும்!  அம்னோ அப்படி ஒன்றும் பெருமைப்படும் அளவுக்கு ஏதையும் சாதித்துவிடவில்லை!  178 நாடாளுமன்றத்திற்கு  போட்டியிட்டு வெறும் 30 இடங்களில் வெற்றி பெற்றதில் என்ன பெருமை?

ஆகவே தோல்வி என்பது மூன்று கட்சிகளுக்குமே பெரும் தோல்வி தான். இதில் என்ன  நாட்டாமை உங்களுக்கு?  ம.இ.கா. பெற்ற தோல்விக்கு அம்னோ தான் காரணம்? இப்போது என்னவோ உங்கள் பேச்சு அளவுக்கு மீறுகிறதே? அப்படி என்ன நீங்கள் சாதித்துவிட்டீர்கள் அவர்கள் சாதிக்கவில்லை?

ம.இ.கா.வின் தகவல் பிரிவு தலைவர் தினாளன் ரஜகோபாலு சொன்னது சரிதான்:  "கொஞ்சம் அடக்கி வாசியுங்கள்!"  அது தான் லோக்மானுக்கான சரியான பதிலடி!

Monday 26 June 2023

தேசிய கல்வி மன்றத்தின் உறுப்பினர்!!

 

       நன்றி: வணக்கம் மலேசியா

தேசிய கல்வி மன்றத்தின் உறுப்பினராக சுப்பிரமணியன் கண்ணன்  நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருடைய தகுதிகளைப் பற்றி நாம் பேச நமக்கு எந்த தகுதியும் இல்லை. காலம் தாழ்த்தினாலும் சரியானதொரு  தேர்வையே  கல்வி அமைச்சு செய்திருக்கின்றது.

ஆனால் கல்வி அமைச்சு காலம் தாழ்த்தி இந்த நியமனத்தைக் கொண்டுவந்திருப்பதில் நமக்கு எந்த மகிழ்ச்சியில் இல்லை.  எப்போதோ செய்திருக்க வேண்டும்.  கல்வி அமைச்சில் தகுதியற்றவர்கள்  அதிகமானோர் கூடிக்கொண்டே போகின்றனர் என்றே தோன்றுகிறது! ஒரு நியமனத்திற்கு இத்தனை மாதங்களா?

இன்னொன்றையும் நாம் சொல்லத்தான் வேண்டி உள்ளது. தமிழ்ப்பள்ளிகள் சம்பந்தமாக எதுவாக இருந்தாலும் அதற்கான தீர்வு உடனடியாகக் கிடைப்பதில்லை. நிறைய தடவை காவடிகளுக்கு மேல் காவடிகள் கல்வி அமைச்சுக்கு எடுக்க வேண்டியுள்ளது என்பது எந்த வகையிலும் பாராட்டாக் கூடிய செயல் அல்ல.  

அமைச்சரவையில் பேசுவது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கல்வி அமைச்சரைச் சென்று பார்ப்பது,  மக்கள் ஊடகங்களில் குரல் கொடுப்பது, அதனை அரசியல் ஆக்கி   குழப்புவது - இப்படி என்னன்னவோ  தமிழ்ப்பள்ளிகளுக்காக  இந்நாட்டில் உள்ள நமது மக்கள் போராட வேண்டியுள்ளது!

இதில் என்ன வருத்தம் என்றால்  ஏற்கனவே தேசிய முன்னணி  ஆட்சியில் இதையே தான் நாம் செய்து வந்தோம். அதையே தான் இப்போதும் செய்கிறோம்!  கல்வி அமைச்சில் அதே அதிகாரிகள் தான்  இப்போதும் இருக்கின்றனர். அவர்கள் அப்படியே தான் இருக்கின்றனர். அவர்கள் மாறவில்லை. அதிகாரிகள் தான் நமக்கு முட்டுக்கட்டை.  அது இப்போது தான் உடைபடுகிறது. ஆனால் அது இரும்பு கோட்டை. அவ்வளவு எளிதில் அசைந்து கொடுக்காது.  

தேசிய முன்னணி காலத்தில் இருந்த நடைமுறையை நாம் இனி பின்பற்ற முடியாது. அப்போது ம.இ.கா. செய்த தவறுகள் இப்போதும் நடக்கின்றது என்றால் அதை நாம் நிச்சயமாக எதிர்ப்போம்.  நமது உரிமைகளுக்காக எல்லாகாலங்களிலும் நாம் போராடிக்கொண்டே இருக்க முடியாது.

இப்போது தமிழ்ப்பள்ளிகளுக்கான மன்றத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் திரு.சுப்பிரமணியம் அவர்களை நாம் மனதார வாழ்த்துகிறோம். ஐயா! இந்த சமுதாயம் உங்களிடமிருந்து நிறையவே எதிர்பார்க்கிறது.  குறைகள் நிறைய வரும். எல்லாவற்றையும் கடந்து தான் நல்லதைச் செய்ய முடியும்.  இந்த சமுதாயத்தைப் புரிந்தவர் நீர்.  சொல்ல ஒன்றுமில்லை. 

புரிந்து கொண்டு செயல்பட்டால் போதும்!

Sunday 25 June 2023

நீண்ட நாள் குற்றச்சாட்டு!

 

தமிழ்ப்பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களில் பலர் தங்கள் பிள்ளைகளைத் தமிழ் பள்ளிகளுக்கு அனுப்புவதில்லை  என்கிற குற்றச்சாட்டு ஒரு நீண்ட நாள் குற்றச்சாட்டு. அது பெற்றோர்களின் முடிவு அதனை நாம் மதிக்க வேண்டும்.

அன்று, அந்த காலகட்டத்தில், நான் வேறு விதமாக நினைத்தேன். அன்றைய தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் என்பது, அங்குத் தமிழ் இருக்கிறது என்பதைத் தவிர,  வேறு எந்த அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் பெரும்பாலும் எந்த ஈர்ப்பும் இல்லாமல் இருந்தன.

தரமற்ற கட்டடங்களைக் கொண்ட தமிழ்ப்பள்ளிகளுக்குப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்ப தயங்கத்தான் செய்வார்கள். பெற்றோர்களின் தரம், அவர்களது தொழில் சார்ந்து தாழ்ந்திருந்த போது, கட்டடங்கள் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. ஆனால் அங்கே படித்து வளர்ந்துவிட்ட அடுத்த தலைமுறைக்கு அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவமில்லை.

ஆனாலும் தமிழ்ப்பள்ளிகள் பலவாறு மாற்றம் கண்டுவிட்டன.  கட்டடங்கள் மாறிவிட்டன.  இன்றைய பெற்றோர்கள் கட்டடங்களை வைத்துத்தான்  அனைத்தையும் மதிப்பீடு செய்கின்றனர். கௌரவம் என்று வரும் போது  வேறு வழியில்லை.

இன்று என் பேரன் படிக்கின்ற தமிழ்ப்பள்ளியில் படிக்கின்ற மாணவர்கள்  எல்லாம் வசதியான குடும்பங்களைச் சார்ந்தவர்கள். எல்லாம் மேல்தட்டு பெற்றோர்கள். மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகம்.  பிரமாண்டமான கட்டடம் என்பதால்  அனைவரையும் அது ஈர்க்கிறது.

இன்னும் பழைய நிலையிலேயே இருக்கும் பள்ளிக்கூடங்கள் இப்போதெல்லாம்   பெற்றோர்களை ஈர்ப்பதில்லை. அந்த பெற்றோர்களில்  தமிழ்ப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களும் அடங்குவர். இதிலும் ஒரு வகையினர் இருக்கின்றனர். தமிழ்ப்பள்ளிகளில் பணிபுரியும் இவர்களே இங்கு தரமான கல்வி இருக்காது என்று நினைக்கிறனர்.  இவர்களைப் போலத்தான்  சோம்பறிகள் மற்ற பள்ளிகளிலும் இருப்பார்கள் என்கிற எண்ணம் அவர்களிடம் உண்டு.

எப்படியோ  இந்த குற்றச்சாட்டு என்பது  ஒரு நீண்ட நாளைய குற்றச்சாட்டு. அவர்கள் ஏன் அனுப்புவதில்லை  என்பது அவர்களுக்குத்தான் தெரியும். மொழிப்பற்று, வருங்காலம், பட்டம் பதவி, அதிகாரம் - இவைகளையெல்லாம் வைத்துத் தான் ஒவ்வொருவரும் இயங்குகின்றனர். அவர்களின் கணக்கில் மொழிப்பற்று என்பதெல்லாம் வருவதில்லை.

ஆனாலும் ஒன்றை நாம் மறந்துவிடக் கூடாது. நமது மொழி நதிபோல என்றென்றும் ஓடிக்கொண்டிருக்கும்!

Saturday 24 June 2023

சரியில்ல! மெத்த சரியில்ல!

 

                       அம்பாங் தமிழ்ப் பள்ளியில் சுராவ் (SURAU) கட்ட அனுமதி!

இப்படி ஒரு செய்தியைக் கேட்கும் போது "இப்படியும் நடக்குமா?" என்று நம்மை நாமே பார்த்து கேள்விக் கேட்க  வேண்டியுள்ளது!

பொதுவாகப் பார்க்கும் போது கல்வி அமைச்சு மட்டும் அல்ல ஜாக்கிமும் சேர்ந்தே இப்படி ஒரு முடிவை எடுத்திருக்க வேண்டும்.

சுராவ் கட்டுவதற்கு அனுமதி கொடுத்த தலைமையாசிரியர்  நிச்சயமாக ஒரு தமிழராக இருக்க நியாயமில்லை. தன்னைத் தமிழன் என்று சொல்லிக் கொண்டும், தமிழர்களின் உரிமைகளை அனுபவித்துக் கொண்டும் இருக்கும்  கூட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.  

ஒரு சுராவ் கட்ட வேண்டுமென்றால்  அது தலைமையாசிரியர் "தலையை ஆட்டுவது மட்டும் அல்ல" , பள்ளி வாரியம், பெற்றோர் ஆசிரியர் சங்கம் - இப்படி அனைவரின் ஒப்புதல் தேவை.  

இந்த விஷயத்தில் கல்வி அமைச்சு  எல்லை மீறுகிறது என்று தான் சொல்ல வேண்டும். எத்தனை சீனப்பள்ளிகளில் சுராவ்கள் கட்டப்பட்டிருக்கின்றன?  தமிழ்ப்பள்ளிகளில் படிப்பவர்கள் இந்து மாணவர்களே அதிகம் என்று தெரிந்தும்  ஏன் இந்த குழப்பத்தை கல்வி அமைச்சு ஏற்படுத்துகிறது.   இதற்காக அக்கறை எடுக்கும் நேரத்தில் கல்வியில் அக்கறை செலுத்தினால் அதனால் மாணவர்களுக்கு நல்லது அல்லவா?

சென்ற ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில்  90,000 மாணவர்கள் கணக்கு பாடத்தில்  தோல்வி அடைந்திருக்கின்றனர்.  52,000 மாணவர்கள் ஆங்கில பாடத்தில் தோல்வி அடைந்திருக்கின்றனர். கல்வி அமைச்சு இது போன்ற சுராவ் கட்டுகின்ற வெட்டி வேலையை விட்டுவிட்டு  மாணவர்கள் கணக்கு, ஆங்கிலம் போன்ற பாடங்களில்  வெற்றி பெற வழி வகைகளைச் செய்ய வேண்டும்.

பார்க்கப் போனால் இது ஒன்றும்  கல்வி அமைச்சின் கீழ் வருகின்ற வேலை அல்ல.  அதுவும் குறிப்பாக, சீன, தமிழ்ப்பள்ளிகளில் இது தேவையற்ற வேலை. கல்வி அமைச்சு கல்வி சம்பந்தமான வேலையில் ஈடுபடுவதே நல்லது.

நமது சந்தேகம் எல்லாம் இப்போது ஆட்சியில் இருக்கும் ஒற்றுமை அரசாங்கத்தை இந்தியர்கள் எதிர்க்க வேண்டும் என்று திட்டம் தீட்டி நடைபெறுகின்ற ஒரு சதித்திட்டம் என்றே தோன்றுகிறது. காரணம் இந்தியர்கள் வாக்கு என்று வரும்போது  நிச்சயமாக நடப்பு அரசாங்கத்தை அவர்கள் ஆதரிக்கின்றனர். எண்பது விழுக்காட்டினர் வாக்குகள் நடப்பு அரசாங்கத்திற்கு  வரும் என்று நிச்சயமாக சொல்லலாம்.

நிச்சயமாக இது ஒரு சதித்திட்டம்.  இந்தியர்களின் ஆதரவு ஒற்றுமை அரசாங்கத்திற்குப் போகக் கூடாது  என்று அரசியல் விளையாடுகிறது கல்வி அமைச்சு. இது போன்ற பிற்போக்கான திட்டங்களை எல்லாம் மூட்டை கட்டிவிட்டு கல்வியில் கவனம் செலுத்துவதே  நல்லது என்பதே  நமது ஆலோசனை.

Friday 23 June 2023

சிங்கப்பூர் கொடுத்த தண்டனை!

 


நமது அண்டை நாடான சிங்கப்பூர் பல வழிகளில் உயர்ந்து நிற்கிறது என்றால் அவர்களிடம் ஓர் ஒழுங்கு முறை இருப்பது தான் காரணம்.

நம்மால் அப்படியெல்லாம் இருக்க  முடியாது. நாம் ஒழுங்குமுறைக்கு அப்பாற்பட்டவர்கள்! நாம் மலேசியர்கள் என்பதைவிட  மலாய்க்காரர், சீனர், இந்தியர் - என்று இந்த பாணியிலேயே பார்ப்பது நமது இயல்பாகிவிட்டது.

நமது மலேசியர் ஒருவரின் கார் சிங்கப்பூர் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சொல்லப் போனால் இது ஒரு சாதாரண விஷயம் தான்.  ஆனால் நமக்குத் தான் தலைக்கனம் கொஞ்சம் கூடுதலாயிற்றே! அதனால் இந்த தண்டனை!

காரின் ஓட்டுநர் காத்திருப்பதற்கு நேரமில்லை. வரிசையில் ஏகப்பட்ட கார்கள்.  இவரோ பேருந்துகள், லாரிகள் பயன்படுத்தும் பாதையைப் பயன்படுத்தி சீக்கிரமாகவே போய்ச் சேர்ந்துவிட்டார்., இடையே அவர் காவல்துறையால் தடுத்து நிறுத்தியது போது அவர் அதனைச் சட்டை செய்யவில்லை.

ஆனாலும் அவர் நினைத்தது போல ஒன்றும் நடக்கவில்லை. சிங்கப்பூருக்குள் அவரால் உள்ளே நுழைய முடியவில்லை!  அவசரம் என்றால் எல்லாருக்குமே அவசரம் தான்.  அவருக்கு மட்டும் தானா அவசரம்?

இவரைப்  போன்ற அவசரக்குடுக்கைகள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இப்படியே குறுக்கே, நெடுக்கே, இப்படி வெட்டி, அப்படி வெட்டி போவதால் தான்  எல்லாருக்குமே அது இடைஞ்சலாக இருப்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.  இருக்கின்ற நிலைமையைப் புரிந்து கொண்டால், அதன்படி காரை செலுத்தினால் எந்த ஒரு தாமதமும் ஏற்படாது.  போக்குவரத்தும் சுமுகமாக இருக்கும்.

பொதுமக்களுக்குத் தேவை ஒரே சீரான, தரமான ஒரு வாழ்க்கை முறை.  இப்படி குறுக்கும் நெடுக்கும் போய் அந்த வாழ்க்கை முறையை மாற்ற நினைப்பது நல்லதல்ல. நல்லது நடக்க நாம் எதனையும் செய்யலாம். ஆனால் கெடுதல் நடக்க நாம் துணை போக முடியாது. அத்னால் தான் சரியான ஒழுங்குமுறை என்பது தேவைப்படுகிறது. சிங்கப்பூர் நல்லதொரு வாழ்க்கை முறையை நோக்கி நகர்கிறது.

குப்பைகளை யாரும் போடுவதில்லை.  ஆனால் நமது நாட்டில் அது இயல்பாகவே நடக்கிறது. சிங்கப்பூர் அதற்கான தண்டனையைக் கொடுக்கிறது.  நம்மால் கொடுக்க முடியவில்லை.  அதற்கும் ஓர் அரசியல் வந்து விடும். அதனால் பயப்பட வேண்டியுள்ளது

எப்படியோ  சம்பந்தப்பட்ட மலேசியருக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை வரவேற்கக் கூடியதே! ஆனாலும் போதாது!

Thursday 22 June 2023

அதிக வயதான ரப்பர் மரம்!

 

                     நம் நாட்டில் மிகவும் வயதான ரப்பர் மரம்!

மலேசியாவில் முதன் முதலாக நடப்பட்ட ரப்பர் மரம் தான் நீங்கள் மேலே பார்ப்பது. அதன் வயது 140 க்கு மேல் இருக்கும்  என்று  சொல்லப்படுகிறது. அந்த மரத்தின் விலை தற்போது  ரி.ம.200,000 என மதிப்பிடப்படுகிறது.

இப்போது பேராக், கோலகங்சார், நகராண்மை கழக. ஊராட்சி மன்றத்தின் பாதுகாப்பில் இருக்கும் இந்த மரம் பாரம்பரிய மரங்கள் பட்டியலிலும்  சேர்க்கப்பட்டு உள்ளது.

1877 - ம் ஆண்டுகளில் வெள்ளளைக்காரர்களால் சுமார் 22 ரப்பர் கன்றுகள் 
இந்நாட்டிற்குக்குள் கொண்டு வந்த வேளை அதில் ஒன்பது கன்றுகள் கோலகங்சாரில் நடவு செய்யப்பட்டு  இப்போது அதில் ஒன்று  பெரும் மரமாகி  140 ஆண்டுகளைத் தாண்டி நிற்கின்றது!

பெரும்பாலான மலேசிய இந்தியர்கள் ரப்பர் மரங்களோடு தான் வாழந்து,  வளர்ந்தவர்கள்.  அதனால் நாம் ஒன்றும் குறைந்து போய்விடவில்லை. நம்மிடம் சில திறன்கள் இருந்தன  அதனை வெள்ளையன் பயன்படுத்திக் கொண்டான்! அவ்வளவு தான்!

இதைவிட வயதான மரங்கள் எல்லாம் நம் நாட்டிலேயே உள்ளன. ஆனால் ரப்பர் மரம் என்பது நமக்கு மிகவும் விசேஷமானது. ஒரு காலகட்டத்தில் இந்த மண்ணெய் "பொன் விளையும் பூமி" என்றார்கள். அதில் சந்தேகம் இல்லை.  இந்த ரப்பர் மரங்கள் தான் பொன்னை விளைவித்துக் கொண்டிருந்தன.  அந்த விளைச்சல் எப்போது குறைந்து போனதோ அன்றே இந்தியர்கள் வாழ்க்கையும்  கறைந்து போனது. 

மேலே குறிப்பிட்ட இந்த மரம் தனது கடைசி காலத்தை நோக்கித்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அதனைப் பராமரிக்கும் செலவு ரி.ம.5000/ - ஆவதாக சொல்லப்படுகிறது. வயது மூப்பின் காரணமாக  மரம் போதுமான எதிர்ப்புச் சக்தியைக் கொண்டிருக்கவில்லை. அதனால் இப்போது உரம், ரசாயனங்களைப் பயன்படுத்தி தான் அதன் வாழ்க்கை நீட்டிக்கப்படுகின்றது.

எப்படியோ நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி  இன்னும்  பல ஆண்டுகள் இதன் ஆயுளை   நீட்டிக்க  வேண்டும் என்பதே நமது ஆசை. நம்மை, நமது இனத்தை வாழ வைத்த மரம் அல்லவா!

Wednesday 21 June 2023

நெருப்போடு விளையாடாதீர்கள்!

 

மலேசியர்கள் ஒரு சில விஷயங்களை விளையாட்டாக` எடுத்துக் கொள்கின்றனர்.

அதில் ஒன்று தான்  'பொம்பா' எனப்படும் தீயணைப்பு துறை. ஒரு சில தினங்களுக்கு முன்னர் ஒரு சிறிய தீ விபத்து. அதனை அங்குள்ளவர்களே அணைத்து விடலாம். அவ்வளவு சாதாரண விபத்து.  ஆனால் அதற்காக தீயணைப்புப் படையினரையே  அழைத்து 'கசா,முசா' செய்துவிட்டனர்! ஒரு வேளை அவர்கள் செய்ததற்குப் பயம் காரணமாக இருக்கலாம்!

இப்போதோ அதீத வெயிற் காலம். தாங்க முடியாத அளவுக்கு வெக்கை. தீ என்றால் அனைவருக்குமே பயம் ஏற்படுகிறது!  எப்படி தீ ஏற்படுகிறது என்கிற விபரமே இல்லை. எப்படியோ தீ ஏற்பட்டுவிடுகிறது. அது சிறிதா,பெரிதா என்று யோசிக்க நேரமில்லை.  பக்கம் பக்கம் வீடுகள்.  வீடுகள் சேதமடையலாம். அதனால் பொம்பா வை அழைப்பது பாதுகாப்பு என்கிற நிலையில் தான் ஒரு வேளை அங்குள்ள வீட்டார் அழைத்திருக்கலாம்.

நம்முடைய ஆலோசனை எல்லாம் வெயில் காலங்களில் தீ மூட்டாதீர்கள். அப்படி செய்வதென்றால் தணணீரைப் பாதுகாப்புக்காக வைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் மீறினால் தண்ணிரைக் கொண்டு நெருப்பை அணைத்து விடுங்கள்.

ஆனால் இது போன்ற வெயில் காலங்களில் தீ இடுகின்ற பழக்கம் வேண்டாம்.  இது போன்ற நேரத்தில் தான் தீயணைப்புத் துறையினர் இங்கும் அங்கும்  மிகவும்  பரபரப்பாக இருக்கின்ற நேரம். அந்த நேரத்தில் இப்படி தேவையற்ற விஷயங்களில் தீயணைப்பு வீரர்களைத் திசை திருப்புவதை  நாம் தவிர்க்க வேண்டும்.  அப்படி செய்வதால் நமக்குத்தான் ஆபத்து என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் வாழும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம், நாம் தேவையற்ற முறையில் அவர்களைத் திசை திருப்புவதால்,  சில அவசரமாக செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்ல முடியாமல்  அவர்கள் தாமதாக வருவதற்குப் பொது மக்கள் தான் காரணமாக இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏன் நமது குழந்தைகள் கூட பெற்றோருக்குத் தெரியாமல்  சும்மா தமாஷ் பண்ணுவதற்கு தீயணைப்பு நிலையங்களுக்குக் கூப்பிட்டு விளையாடுவதை முன்பெல்லாம் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இப்போது கைப்பேசிகள் வந்துவிட்ட நிலையில்  விளையாட்டுத்தனமான   அவசர அழைப்புகள் வருவது குறைந்திருக்கும் என நம்புகிறோம்.

தீயணைப்பு நிலையங்கள் என்னும் போது,   பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்  அவர்களை தேவையற்று அழைப்பதின் மூலம்  அவர்கள் தங்கள் பணிகளைச் செய்ய விடாமல் தடையாக,  தடைக்கல்லாக இருக்கிறோம்.

தீயணைப்பு என்பது நாட்டின் முக்கியமான ஒரு துறை. அதுவும் இது போன்ற வெயிற் காலங்களில்  அவர்களுடைய சேவை என்பது நாட்டிற்கு முக்கியத் தேவை உண்டு. அவர்களின் நேரத்தை வீணடித்து விடாதீர்கள் என்பது தான் நமது கோரிக்கை.

Tuesday 20 June 2023

2500 இடங்கள் தேவை

 

சமீபத்தில்  ம.இ.கா. தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் கல்வி அமைச்சுக்கும் பிரதமர் அன்வாருக்கும்  அறைகூவல் ஒன்றை விடுத்திருக்கிறார்.

மெட்ரிகுலேஷன் கல்விக்கு இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 2500 ஆக  உயர்த்த  வேண்டும்  என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

பல ஆண்டுகளாக மெட்ரிகுலேஷன் கல்வியில் இந்திய மாணவர்கள் ஏமாற்றப்பட்டு வந்திருக்கின்றனர். அனைத்தும் மா.இ.கா.வினர் கண்முன்னால் நடந்தவை! 'மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல்' ம.இ.கா.வினர் பட்டபாடு  நமக்குத் தெரியும்.  இப்போது அவர்களுக்கும் பேச வாய்ப்புக்குக் கிடைத்திருக்கிறது, பேசுகிறார்கள்.  யாராவது பேசித்தான்  ஆக வேண்டும்.  இப்போது கொஞ்சம் தைரியமாகவே பேசுகிறார்கள், அவ்வளவு தான்!

இப்போது இதனைக் குறையுங்கள் என்று யாரும் சொல்லப் போவதில்லை. 2500 ஆக இருக்கட்டும்.  மெட்ரிகுலேஷன் கல்விக்கு மனு செய்பவர்கள்  பெரும்பாலும் பி 40 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான். அவர்கள் அனைவருக்கும் இடம் கிடைக்க வேண்டும். மேற்கல்வியைத் தொடர அவர்களுக்கு அது ஒன்றே வழி.

மேலும் இட ஒதுக்கீடு என்பது முறையாக இருக்கட்டும். சிறப்பு  தேர்ச்சி பெற்றவர்களுக்கு  முதலிடமும் அதன் பின்   மதிப்பெண்களுக்கு  ஏற்ப அடுத்த அடுத்த இடங்களும் ஒதுக்குவது தான் நியாயமாக இருக்கும்.  அதிக மதிப்பெண் வாங்கியவர்களுக்கு 'இடம் இல்லை' என்பதும் குறைவான மதிப்பெண் வாங்கியவர்களுக்கு  கல்லூரிகளில் இடம் கொடுப்பதும்  மாணவர்/பெற்றோர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும்.  

இந்த ஆண்டு, இந்தியர்களைப் பொறுத்தவரை, மெட்ரிகுலேஷன் கல்வி எதனை நோக்கிப் போகும்  என்பது தெரியவில்லை.  முன்பு போலவே கல்வி அமைச்சின் நோக்கங்கள் இருந்தால்  நமக்கு ஏமாற்றம் தான். நிலைமை மாற வேண்டும் என்பதை  அரசாங்கத்திற்கு இந்தியர்கள் 80 விழுக்காடு ஆதரவு அளித்ததன் மூலம் சொல்லிவிட்டோம். இப்போது பந்து பிரதமர் கையில்.

இப்போது 2500 இடங்கள் என்பதை ம.இ.கா.வினர் கூறியிருக்கலாம். அதுபற்றி நமக்குக் கவலை இல்லை. நமக்குத் தேவை என்பது 2500 தான். ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றிருக்கும் ஜ.செ.க., பி.கே.ஆர். கட்சிகளும்  இது பற்றி வாய்த் திறக்காவிட்டால் பரவாயில்லை. ஆனால் அமைச்சரைவையில்  அழுத்தம் கொடுக்க வேண்டும். அல்லது நாடாளுமன்ற உறுப்பினகள்  அனைவரும் சேர்ந்து இந்தப் பிரச்சனையில் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

ஏதோ ஒன்றூ! ஆனால் பலன் தான் முக்கியம்!

Monday 19 June 2023

மின்சிகிரெட்டுகள் தடையா?

 


புகைபிடிப்பது உடல்நலனுக்குக் கேடு என்று சிறிய எழுத்துக்களில் தமிழ் திரைப்படங்கள் தொடங்குவதற்கு முன்பே போட்டிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.  அதன் பொருள்  "நீ புகைபிடித்து நாசாமாய்ப் போ!" என்பது தான். நீங்கள்  வேறு விதமாய் அர்த்தப்படுத்திக் கொண்டால் அது அவர்களது பிழை அல்ல!   மது  அருந்தினாலும் பொருள் என்னவோ அதுவே தான்!

சிகிரெட் என்றால் உடல்நலனுக்குக் கேடு என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் அதனை நிறுத்த முடியவில்லை. எத்தனையோ ஆண்டுகளாக  சிகிரெட்டின் தீமையைப் பற்றி  சொல்லாதவர்கள், பேசாதவர்கள் யாருமில்லை. அதில் எத்தனையோ டாக்டர்களும் அடங்குவர். டாக்டர்கள் நோயாளிகளிடம் அறிவுரைக் கூறிவிட்டு அடுத்த நிமிடமே புகைக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்! சிகிரெட் பிடிப்பவர்களின் பெரிய பலவீனமே டாக்டர்கள் தான்!  யார் பிடித்தாலும் பலன் என்னவோ ஒன்று தான்.  அதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  டாக்டர்களுகென்று தனிப்பட்ட விதிமுறைகள் எதுவும் கிடையாது. சிகிரெட்டைப் பொறுத்தவரை டாக்டர்களும் நோயாளிகள்  ஒன்று தான்!

ஆனால் இன்றைய நிலையில் மின்சிகிரெட்டுகளின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. மின்சிகிரெட்டுகள் சாதாரண சிகிரெட்டுகளைவிட  மிகவும் அபாயகரமானவை என்பதாகக்  கூறப்படுகிறது.  

ஆனால் ஏனோ தெரியவில்லை. இஸ்லாமிய தேசிய Fatwa மன்றம்  மின்சிகிரெட்டுகளைப் புகைப்பதைத் தடை செய்திருக்கின்றது. அது ஒரு இஸ்லாமிய மன்றம் என்பதால் இஸ்லாமியர்களுக்கு மட்டும் அந்தத் தடை  உத்தரவைப் பிறப்பத்திருக்கின்றது. அதன் பின்னணி என்ன என்பது நமக்குத் தெரியவில்லை. அந்த மின்சிகிரெட்டுகளில் என்ன கலப்படங்கள் செய்யப்படுகின்றன என்பதும் நாம் அறியவில்லை. அல்லது வியாபாரிகளின் நலன் காக்கவா? தெரியவில்லை!

ஆனால் நமக்கு இது ஒரு மனக்குறை தான். இந்தத் தடை உத்தரவு என்பது மலேசியர்கள் அனைத்தவர்களுக்குமாக இருந்திருக்க வேண்டும். ஏற்கனவே எல்லாரின் கைகளிலும் ஒரு கொள்ளிவாய்ப் பிசாசை வைத்துக்கொண்டு அலைகிறோம்!  அது ஒன்றே போதும் நாட்டின் சுகாதாரத் துறையின் செலவுகளை அதிகரிக்க! இதில் வேறு ஏன் மீன்சிகிரெட்டுகள்?

நமது பரிந்துரை என்னவென்றால் இந்த மின்சிகிரெட்டுகள் முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டும்.  யாருக்கும் வேண்டாம். சாதாரண சிகிரெட்டுகளே போதும்!  புதிது புதிதாக வியாதிகள் வேண்டாம்! ஏற்கனவே நம்மிடம் 'டன்'  கணக்கில்  வியாதிகள் உள்ளன! அதுவே போதும்! ஒரு வியாபாரி  பணம் பண்ண வேண்டும் என்பதற்காக    வியாதிகளை மடியில் போட்டுக்கொண்டு கொஞ்ச முடியாது!

Sunday 18 June 2023

தாதியரின் உடையில் என்ன குறை?

 

மேலே தாதியர்கள் அணிந்திருக்கும் உடைகளைப் பாருங்கள்.  நாம் மருத்துவமனைக்குப் போனால் இவர்கள் இப்படித்தான் உடை உடுத்துவதை நாம் பார்க்கிறோம்.

நாம் குறை சொல்லுகின்ற அளவுக்கு அவர்களின் உடைகள் அப்படி ஒன்றும் அசிங்கமாக இருப்பதாகச் சொல்ல முடியாது. 

ஆனால் பாஸ் கட்சியினருக்கு மட்டும் அவர்களின் பார்வை எப்படி வித்தியாசமாக இருக்கிறது என்பது நமக்குப் புரிவதில்லை.  அதுவும் தேர்தல் காலம் வந்துவிட்டாலே அவர்களின் பார்வை மாற்றம் அடைந்துவிடும்!  தேர்தல் காலங்களில் ஆப்கானிஸ்தானுக்கப் போய் ஒரு சுற்று சுற்றிவிட்டு வருவார்களோ!

நமக்கு ஒரு கேள்வி உண்டு. பாஸ் கட்சியில் உள்ள வீட்டுப் பெண்கள் வேலைக்கே போகாதவர்களோ? அப்படிப் போகுபவர்களாக இருந்தால் அவர்கள் வீட்டுப் பெண்கள் எப்படி உடை அணிவார்கள்?  அவர்களும் அரசாங்க வழிகாட்டுதலில்  தானே உடைகள் அணிய வேண்டும். இத்தனை ஆண்டுகளாக இது பற்றி ஒன்றுமே அறியாதவர்களா இவர்கள்?

தேர்தல் காலங்களில் மட்டும் தான் இவர்களுக்கு ஞானோதயம் பிறக்குமோ! ஆனால் இது போன்ற மலிவு பிரச்சாரங்கள் அவ்வளவாக எடுபடாது  என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் இவர்கள் தேர்தல் காலங்களில் எடுக்கின்ற ஆயுதங்களில் இதுவும் ஒன்று என்றாலும்  அவர்களிடம்  மிகவும் பிரசித்தி பெற்றது என்றால் அது கிறிஸ்துவம்.  தேர்தல் காலங்களில் அவர்கள்  பொதுவாகப் பயன்படுத்துபவை  என்றால்: "நாட்டை கிறிஸ்துவர்கள் தான் ஆளுகின்றார்கள். இஸ்லாமியர்கள் பின்னுக்குத் தள்ளப்படுகிறார்கள். நாட்டின் கலாச்சாரமே கிறிஸ்துவ கலாச்சாரம் தான். பெண்கள் கல்வி என்பதே கிறிஸ்துவ கலாச்சாரம் தான்."  இப்படித்தான்  இவர்களின் தேர்தல் பிரச்சாரமே அமைந்திருக்கும்!

இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடக்க இருக்கின்றது.  அப்பொழுது இவர்களின் பிரச்சாரங்களை இன்னும் தெளிவாகக் கேட்கலாம். பாஸ் கட்சியினர் நாட்டுக்கு என்ன செய்வோம், தாங்கள் ஆளும் மாநிலங்களில் என்ன செய்வோம்  என்று பேசுவது என்பது  அவர்கள் சரித்திரத்திலேயே இல்லை!

என்ன செய்வது?  நாட்டை முன்னேற்றுவது எப்படி என்பதுபற்றியெல்லாம் அவர்களிடன் எந்தத் திட்டமும் இல்லை.  நாட்டில் சரியான திட்டமிடுதல் இல்லாமல் அழிவுகள் ஏற்படும் போது  "அது கடவுளின் செயல்!"  என்று மிக எளிதாக கடவுளின் மீது பழிபோடுவது என்பது அவர்களுக்குக் கைவந்த கலை! இப்படியே தான் அவர்கள் அரசியலை நடத்துகிறார்கள்!

அவர்களின் நிலையான கொள்கை தான் என்ன? பெண்கள் உடுத்தும் உடைகளைக் குறை சொல்லுவது. பெண்களின் கல்வியைக் குறை சொல்லுவது. இவைகள் தான் அவர்களின் வாழ்க்கை முறை! மக்கள் அவர்களை நம்பும்வரை அவர்கள் இதனைக் கைவிடமாட்டார்கள் என்று உறுதியாக நம்பலாம்!

Saturday 17 June 2023

எதிரிகள் ஜாக்கிரதை!

 

ம.இ.கா. வினர் திருந்திவிட்டார்களா என்பது நமக்குத் தெரியாது. அறுபது, எழுபது வருஷத்து பழக்க வழக்கங்களை சும்மா ஆறு  ஏழு மாதத்தில் திருத்திவிட முடியாது! அவர்கள் இன்னும் நமது எச்சரிக்கைக்கு உரியவர்கள் தான்.

ஆனால் அவர்கள் இந்திய சமூகத்திற்கு எதிரிகளாக என்று கேட்டால்  ஒரு பாரம்பரியமான கட்சியை அப்படியெல்லாம் சொல்ல மனம் வரவில்லை.  அதன் தலைவர்களால் அப்படி ஒரு குற்றச்சாட்டை முன் வைப்பதில்  பெரிய குற்றமாகவும் கருத முடியவில்லை.

அவர்கள் மீதான கோபம் அப்படி ஒன்றும் இன்னும் தணிந்து போனதாகவும் இல்லை.  கோபம் அப்படியே தான் இருக்கிறது.  தோட்டப்புறங்களில்  வேலை செய்துவந்த போது கூட இந்தியர்கள் ஓராங் அஸ்லி நிலைமைக்குத் தள்ளப்படவில்லை. இன்று இந்தியர்களை  - ஓராங் அஸ்லி அளவிற்கு   மாற்றிய புண்ணியவான்கள் இவர்கள்.  அவர்களை அவ்வளவு எளிதில் நாம் மறந்துவிட முடியுமா?

சரி அதை விடுவோம். சில பதவிகளிலிருந்து டத்தோ சிவராஜ் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.ஏன் இந்த பதவி நீக்கம் என்பது எனக்குத் தெரியவில்லை என்கிறார் சிவராஜ்..  ம.இ.கா. தலைவருக்கு எல்லா அதிகாரங்களும் உண்டு என்பதால் அவர் யாரையும் பதவி நீக்கம் செய்யலாம்.  மத்திய செயற்குழு என்று ஒன்று அவசியமில்லை தான். ஏதோ பெயருக்கு வைத்திருக்கிறார்கள், அவ்வளவு தான்.

ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது.  சாமிவேலு காலத்தில் இப்படியெல்லாம் நடந்தது  நமக்குத் தெரியும். மத்திய செயற்குழுவுக்கு வேலையே இல்லை. சகல அதிகாரமும் படைத்தவர் அவர். சகலமும் அவரே என்பதால் இந்திய சமூகம்  என்று ஒன்று இருப்பதையே மறந்து போனார். இப்போது, இன்றைய தலைவர் அதனைத் தொடர்கிறார்! ஏனோ தெரியவில்லை படித்தவர்களைக் கண்டாலே  ம.இ.கா. தலைவர்களுக்குப் பிடிப்பதில்லை! இதொரு சாபக்கேடு தான், என்ன செய்வது?

நாம் சொல்ல வருவது அதுவும் அல்ல.  ம.இ.கா.விலிருந்து வேளியேறினாலும் சரி, வெளியேற்றப்பட்டாலும் சரி அவர்களை பி.கே.ஆர். கட்சியில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பது தான் நாம் சொல்ல வருவது. அவர்கள் வருவார்களா, வரமாட்டார்களா என்பது நமக்குத் தெரியாது. ஆனால் கதவு திறந்தால் தான் காட்சி தெரியும்! ஆனால்  எந்த மண்ணும் வேண்டாம்.  அவர்கள் பி.கே.அர். கட்சிக்குள் இணைந்துவிடக் கூடாது என்பது தான் முக்கியம்.

அவர்கள் நமக்கு எதிரிகள் தான் அதில் சந்தேகம் வேண்டாம். ஒரு சமுதாயத்தையே அழித்தவர்கள்  இப்போது தங்களின்  அழிவுக்காகக் காத்திருக்கிறார்கள்! அது நடக்கத்தான் செய்யும்!

Friday 16 June 2023

மலாய் மொழியில் பின்னடைவா?

 

தமிழ்ப்பள்ளிகளின் மலாய் மொழி தேர்ச்சி விகிதம் எதிர்பார்த்தபடி இல்லை என சமீபகாலமாக பேசப்பட்டு வருகிறது.

அது ஏன் என்பது ஆசிரியர்களுக்குத் தெரிந்திருக்க  வாய்ப்புண்டு. மலாய் மொழி ஆசிரியர்களின் குறைபாடு அல்லது ஏதோ எங்கோ சில பல பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

ஒரு காலகட்டத்தில்  பேசப்பட்ட விஷயங்களை ஞாபகப்படுத்துகிறேன். தேசிய பள்ளிகளில் வேண்டாத மலாய் ஆசிரியர்களைத் தமிழ்ப்பள்ளிகளுக்குத் தள்ளி விடுவதாக நான் கேள்விப்பட்டதுண்டு. அதாவது பொறுப்பற்ற, சோம்பேறிகளை  இந்தப்பக்கம் தள்ளிவிடுவதுண்டு!  அவர்கள்  பள்ளிகளுக்கு வருவதும் இல்லை, பாடங்களைப் படித்துக் கொடுப்பதும்  இல்லை, கேள்விகள் கேட்க ஆள்களும் இல்லை! சுதந்திரமான மனிதர்கள்!  ஆனால் காலங்கள் மாறிவிட்டன. இப்போது அந்த நிலைமை இல்லை என்றே நினைக்கிறேன்.

தமிழ்ப்பள்ளிகள் பல சாதனைகள் செய்கின்றன.   அறிவியல் கண்டுபிடிப்புகளுக்காக உலக அளவில் பரிசுகள் பெறுகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் தேசிய மொழி  என்ன அந்த அளவுக்குக் கடினமானதா?

அதுவும் நமது குழந்தைகளுக்கு எந்த மொழியாக இருந்தாலும் பிச்சு உதறுவார்கள்! அது அவர்களது இரத்தத்தில் உள்ள விஷயம். எப்படியிருந்தாலும் கல்வி அமைச்சு சொல்லுவதை நாம் அலட்சியப்படுத்த முடியாது. கொஞ்சம் சிரத்தை எடுத்தால் நமது குழந்தைகள் சாதிப்பார்கள்.  

இந்த விஷயத்தில் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களும் தீவிர முயற்சிகளை எடுக்க வேண்டும்.  பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் இல்லாமல் ஆசிரியர்களாலும் ஒன்றும் செய்ய இயலாது. ஆசிரியர்களுடன் கலந்து பேசி மொழி வளர்ச்சிக்கு எது நல்லதோ  அதனைச் செய்யும்  பொறுப்புகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.  ஒரு வேளை அது நிதி உதவியாகக் கூட இருக்கலாம். எப்படிச்  சுற்றி வந்தாலும் பணம் தான் பேசும். அதற்கு ஆசிரியர்களும் விதிவிலக்கல்ல.

தேசிய மொழியில்  பின்னடைவு என்பது நமது பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட  சவால் என்று தான் சொல்ல வேண்டும். எந்த சவால்களாக இருந்தாலும் அதனை எதிர்கொள்ள நமது ஆசிரியர்கள் தயாராகவே இருப்பார்கள் என நம்பலாம்.  இதற்கு முன்னர் பின்னப்பட்ட அத்தனை சவால்களையும் முறியடித்துத்  தான் இன்றை நிலைக்கு நாம் வந்திருக்கிறோம்.  சவால்கள் ஒன்றும் நமக்குப் புதிதல்ல. மாற்றங்கள் வரும் போது சவால்களும் வரத்தான் செய்யும்.

இந்தப் பின்னடைவையும் நம்மால் வெற்றிகொள்ள முடியும் எனபது உறுதி!

Thursday 15 June 2023

கழிவறையை சுத்தப்படுத்துவதா!

 

சமீபத்தில் பிரதமர் அன்வார் பள்ளி கழிவறைகளைச் சுத்தம் செய்ய மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதில் எந்த தவறும் இல்லை என்பதாகக் கூறியிருக்கிறார்.

இதி எந்த தவறும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.  கழிவறைகளைச் சுத்தம் செய்வது என்பதெல்லாம் ஒரு ஒழுங்குமுறை. 

ஒரு சில பெற்றோர்கள் வீட்டில் குப்பைகளைப் போடாமல் வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பதைச் சொல்லிக் கொடுக்கிறார்கள்,கழிவறை உட்பட. ஆனால் வீட்டுக்கு வெளியேயும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

அதன் விளைவு என்ன? வீட்டுக்கு  வெளியே என்ன நடக்கிறது என்பது பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.   ஆபத்து அவசரத்துக்குப் பொது கழிவறைகளைக் கூட பயன்படுத்த முடிவதில்லை. ஐரோப்பிய நாடுகளில் இப்படி, அந்த நாட்டில் அப்படி, இந்த நாட்டில் இப்படி என்று மற்ற நாடுகளைப் பற்றி பேசுகிறோம். ஏன் நமது நாட்டில் அப்படி செய்ய முடியாதா? சிங்கப்பூரில் குப்பை போட்டால் தண்டனைகள் உண்டு. அதனால் குப்பை பொது வெளிகளில் போடுவது குறைந்து விட்டது. அதுவே இப்போது அவர்களின் கலாச்சாரமாகி விட்டது. அது தான் அவர்களது நோக்கம், தண்டனைப் போட்டு பணம் வசூல் பண்ணுவது அல்ல.

ஆனால் நமது பள்ளிகளில் இன்றைய நிலைமை எனக்குத் தெரியவில்லை.  ஆனால் ஒன்று தெரியும். தேசியப் பள்ளியில் இரண்டாம் வகுப்பில்  படிக்கும் எனது  மலாய்ப்பேத்தி பள்ளியில் காலடி எடுத்து வைக்கும் முன்னே அருகில் உள்ள கடைக்குச் சென்று பாத்ரூமுக்குப் போன  பிறகு தான் வகுப்புக்குச் செல்லுவாள்..  காரணம் அவளது பார்வையில்,  பள்ளியில் உள்ள  கழிவறைகள் சுத்தம் இல்லை என்பது தான்.

ஆனால் வீடுகளைச் சுத்தமாக வைத்துக்  கொள்ள வேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டுகிறோம் வீடுகளுக்கு வெளியேயும்  சுத்தம் சுகம் தேவை என்பது ஏனோ நமக்கு உறைக்கவில்லை.  வீட்டுக்கு வெளியே சுத்தம், இல்லையென்றால், பொதுக் கழிவறைகளில் சுத்தம் இல்லையென்றால்  அதனால் யாருக்குக் கேடு? நமக்குத் தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சுத்தம்,சுகம், என்பது எல்லாருடைய பொறுப்பு. அதன் மூலம் வியாதிகள் பரவத்தான் செய்யும். பள்ளி சிறாரிடையே இந்த சுத்தத்தையும், சுகத்தையும்  சொல்லித்தரப்பட வேண்டிய விஷயமே. இதில் ஏதும் பெருமை, சிறுமை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

வருங்காலங்களில் இந்த நாடு சுத்தம், சுகாதாரமிக்க ஒரு நாடாக விளங்க வேண்டும். இத்தனை ஆணடுகளாக குப்பைக்  கூளங்களோடு வாழப் பழகிவிட்டோம்! அதிலிருந்து விடுபட வேண்டும்.

பிரதமரின் இந்த அறைகூவல் நல்லதொரு பார்வை! நமக்கும் அந்தப் பார்வை வரவேண்டும்!

Wednesday 14 June 2023

இன ரீதியில் இனி இல்லை!

 

இன ரீதியில் இனி எந்த உதவித் திட்டங்களும் அறிவிக்கப்படாது என பிரதமர் அன்வார் கூறியிருக்கிறார்.

இது சரிதானா, முறைதானா என்பது புரிய உடனடியாக எந்தக் கருத்தும் கைவசம் இல்லை!  நாம் எல்லாகாலங்களிலும் இன ரீதியாகத் தான் பேசி கடந்து வந்திருக்கிறோம்.

இன ரீதியில் உதவித் திட்டங்கள் இல்லையென்றால்  உதவிகள் எங்கிருந்தெல்லாம்  வருகிறதோ அனைத்து திட்டங்களிலும் நாம் கவனம் செலுத்தலாம்.  எல்லாத் திட்டங்களும் நம் திட்டங்களாக நினைத்து நாம் செயல்படலாம்! அப்படித்தானே!

அப்படி என்றால் அது நல்லது தானே! ஆமாம் முன்பு எதுவுமே தெரியாத நிலையில் ஏதோ ஒன்றுக்காக, காத்திருந்து அடித்துக் கொண்டோம்!  இந்தியர்களுக்காக ஒரு நிதியை ஏற்படுத்தி அதன் மூலம் இந்தியர்களுக்கு 'அடித்ததடா யோகம்!' என்று  நினைத்துக் காத்துக் கிடந்தோம்! நிதி இருந்தது அது இந்தியர்களுக்குப் பயனளிக்கவில்லை! இப்போது தான் அந்த நிதி மித்ரா என்று காதில் விழுகிறது.  கொஞ்சம் பேச்சு மூச்சு சத்தம் கேட்கிறது!

என்ன தான் அரசாங்கம் பல நிதிகளை ஒதுக்கி பல துறை சார்ந்தவர்களுக்கும் உதவிகள் கிடைக்க செய்கின்றதோ அதில் இந்தியர்களுக்கு எந்த பயனம் இல்லை. இல்லையென்றால் அதுபற்றி நமக்கு எதுவும் தெரியவில்லை.  அது முற்றிலுமாக நூறு விழுக்காடு பூமிபுத்ராகளுக்கே என்கிற நிலையில் நமக்கு ஏதும் உதவிகள் கிடைக்கவில்லை.

இப்போது பிரதமர் அன்வார் அறிவித்திருப்பது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே உள்ளது தான்.  அப்போதும் நமக்குப் பயன் கிடைக்கவில்லை. இப்போதும் அப்படித்தான் இருக்கும் என்றாலும்  குறைந்தபட்சம் ஒரு சில திட்டங்கள் நமக்குத் தெரியவராமல் போகாது.

சரி கடந்துபோன  அனைத்து உரிமைகளும் போனது போனது தான். எதுவும் கிடைக்கப் போவதில்லை. இப்போது நமது கையில் இருக்கின்ற இந்த நிகழ்காலத்தைப் பற்றி மட்டும் பேசுவோம்.  என்ன உரிமைகள் இருக்கிறதோ அதுபற்றி பேசுவோம்.

இப்போது,  இன்றைய நிலையில் சிறு தொழில்கள் செய்யவே நாம் அதிக முனைப்புக் காட்டுகிறோம். அதற்குத்தான் மித்ரா என்கிற அமைப்பை நாம் மிகவும் நம்புகிறோம்.  அந்த அமைப்பினரும் ஏனோ தானோ என்று காலம் கடத்தாமல் பல திட்டங்களைப் போட்டு செயல் படுத்துகின்றனர்.

இன ரீதியில் உதவித்திட்டங்கள் இல்லை என்கிற பிரதமரின் அறிவிப்பு  வரவேற்கக் கூடிய ஒன்றே! அந்த உதவிகள் கிடைக்க நமது சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைகொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

Tuesday 13 June 2023

இனி வர்த்தகம் செய்வோம்!

 

முதலில் சிறு சிறு தொழில்களில்  ஈடுபடுங்கள். பெரும் முதலீடுகள் இல்லாமல் சிறிய முதலீட்டில்  உங்களது வர்த்தகத்தை ஆரம்பியுங்கள்.

முதல் முதலீடு உங்கள் பணமாகத்தான் இருக்க வேண்டும்.கடன் வாங்கித்தான் ஒரு சிறிய தொழிலை ஆரம்பிக்க வேண்டும் என்றால் நீங்கல் அவசரப்பட வேண்டியத் தேவை இல்லை. முதலில் உங்கள் சேமிப்புத்தான் உங்களைக் காப்பாற்றும். முதலில் சேமியுங்கள் அப்புறம் தான் தொழில். காரணம் சேமிப்பு இல்லாதவர்கள்  வெறும் வாய்ப்பேச்சு வீரர்கள். அதில் சந்தேகமில்லை.

சேமிப்புக்கும் தொழில்களுக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. சேமிப்பு ஒரு தடவையோடு முடிந்து போகிற காரியம் இல்லை.அது எப்போதும் தொடர வேண்டும்.  அப்போது தான் தொழிலை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு போவது இயல்பாக வரும்.

எத்தனையோ ஆண்டுகள் "மித்ரா"  அமைப்பைக் கரித்துத் துப்பிக்  கொண்டிருந்தோம். அவர்கள் கடன் கொடுக்கவில்லையே என்று சும்மா தலையில் கையை வைத்துக்கொண்டா இருந்தோம்? நம்மால் என்ன முடியுமோ அந்த முயற்சிகளைக் கைவிட வில்லையே. கடன உடன வாங்கியாவது  வேலைகள் நடந்து கொண்டுதானே இருந்தன.  கையில் என்ன இருந்ததோ அதனை வைத்தே செயல்பட்டுக் கொண்டு தானே இருந்தோம்?

எது நடந்தாலும் சரி "எல்லாம் நனமைக்கே!"  என்று துணிந்து தொழில் செய்ய  இறங்கிவிட  வேண்டும். எல்லாவற்றையும் விட நம்பிக்கையோடு இறங்க வேண்டும்.  என்னால் முடியும் என்பது தான் நம்பிக்கை. அது இல்லாமல் எந்தத் தொழிலும் வெற்றி பெற முடியாது.

ஒரு குடும்பத்தில் ஒருவர் வேலை செய்தாலே போதுமானது. உங்களுடைய உணவு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.  மற்றவர்கள் சேர்ந்து தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்.  ஆரம்ப காலத்தில் ஒரு சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும். அந்த சிக்கல்களைப் பார்த்து யாரும் ஓடிப்போவதில்லை.  துணிந்து நின்று பிரச்சனைகளை எதிர்நோக்கத் தான் வேண்டும். 

தொழில் செய்வதில் பிரச்சனைகள் உண்டு.   இருக்கத்தான் செய்யும்.  பிரச்சனைகள் என்பதை வாய்ப்புகளாகப் பயன்படுத்தி அவைகளைச் சமாளிக்கும் திறனை வளர்த்துக்கொல்ள வேண்டும்.

பிரச்சனைகள் என்பது நமக்குப் புதிதல்ல.  எல்லாகாலத்திலும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பது தான்.  ஒவ்வொரு காலகட்டத்திலும் நாம் அவைகளைத் தீர்க்காமலா விட்டுவிடுகிறோம்? நம்மால் முடிந்ததைச் செய்து பிரச்சனைகளுக்குத் தீர்வைக் கண்டு விடுகிறோம். எல்லாமே அப்படித்தான்.

தொழில் செய்வதில் பிரச்சனைகள் உண்டு. அவைகளைத் தீர்க்கக் கூடிய திறனும் சாமர்த்தியமும் நமக்கு உண்டு.  எல்லாவற்றையும் சமாளித்துத் தான் நாம் முன்னேற வேண்டும்.

இனி வருங்காலங்களில் தொழில் செய்வதில் நாம் கவனம் செலுத்துவோம். நம்மால் முடியும் என்பது நல்ல விஷயம். காலத்தை இனி கடத்த வேண்டாம். 

இனி வர்த்தகம் செய்வோம். வளர்ச்சி அடைவோம்.  வாழ்ந்து காட்டுவோம்.

Monday 12 June 2023

வர்த்தகர்களே பயன் பெறுங்கள்!

 

                    நன்றி: வணக்கம் மலேசியா

சிலாங்கூர் இந்தியர் வர்த்தக சம்மேளனம் சமீபத்தில் சிறு, குறு நடுத்தர  தொழில்களுக்கான ஒரு தேசிய மாநாட்டை நடத்தியது.  இந்த மாநாட்டில்  தொழில் முனைவர் கூட்டுறவு துணையமச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி  தொடக்கி வைத்தார்.  வர்த்தகத் துறையில் ஈடுபட்டுள்ள சுமார் 500 வர்த்தகர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தின் முக்கிய நோக்கம்: வர்த்தகர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் அரசாங்கம் பல கோடிகளை ஒதுக்குகிறது.  அவர்களின் வர்த்தக மேம்பாட்டிற்காக.  ஆனால் இது பற்றியெல்லாம் நமக்கு  எதுவும் தெரிவதில்லை. இது நாள்வரை நமக்குத் தெரிந்திருக்கவில்லை. ஏன் நமது தலைவர்களுக்காகவது தெரிந்திருக்குமா என்பதும் தெரியவில்லை! அதுபற்றி யாரும் வாய் திறக்கவில்லை!  அப்படியென்றால் அவர்களுக்கும் எதுவும் தெரியவில்லை என்பது தானே  பொருள்?

சரி,  போனது பொனது தான்.  அது பற்றி பேசுவதில் பயனில்லை. ஆனாலும் இனி மேல் வர்த்தக சமூகம் வாய்மூடி மௌனியாக இருப்பதில் பயனில்லை.

எப்படியோ நமக்குத் தெரிந்ததெல்லாம் மித்ரா மட்டும் தான்.  பல ஆண்டுகள் மித்ராவையும், செடிக்கையும் திட்டிக் கொண்டு தான் இந்த வர்த்தக சமூகம் பயணம் செய்திருக்கிறது. இன்னும் பல வழிகள் இருக்கின்றன என்பதைக் கூட  நமக்குத் தெரியப்படுத்தவில்லை.

ஆனால் இந்த முறை நிலைமை மாறிவிட்டது.  இப்போது எல்லாருமே பேச ஆரம்பித்துவிட்டார்கள். இந்திய சமூகத்தை தொடர்ந்து ஏமாற்றியவர்கள்  இப்போது ஏமாந்து போய் தெருவுக்கு வந்துவிட்டார்கள்! இனி மேல் இந்த சமூகத்தை ஏமாற்றமுடியாது  என்பதைப் புரிந்து கொண்டார்கள்.

இந்த நாட்டில் உள்ள மற்ற சமூகத்தினரைப் போல இந்தியர்களும் வர்த்தகத்தில் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பதில் எந்தத் தவறும் இல்லை.  நம்மிடையே ஒற்றுமை இல்லை என்பது தவறு.  ஏன் நமது பிரதமர் கூட இந்திய தலைவர்களிடையே ஒற்றுமையைக் கடைப்பிடியுங்கள் என்று அறிவுரைக் கூறியிருக்கிறார். தலைவர்கள் என்றால் ஒற்றுமைப்படுவார்கள். திருடர்களைத் தலைவர்களாகக் கொண்டிருக்கிறோம்! அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள்!

இனி நமது  வர்த்தக சொந்தங்களுக்கு ஒரு சில அறிவுரைகள் உண்டு. உங்களின் தொழில் வளர்ச்சிக்கு எந்தவொரு தயக்கமும் இல்லாமல்  மித்ராவை நாடுங்கள். கடன் கிடைக்கவில்லை என்றால் அதற்கான காரணங்கள் பொது வெளியில் வைக்கப்பட வேண்டும். அது மித்ராவின் கடமை.  வங்கியில் கடன் என்றால் ஏகப்பட்ட நெருக்கடிகளைக் கொடுப்பார்கள். இந்தியர்கள் என்றால் கடன் வாங்குவது அவ்வளவு எளிதல்ல.  மித்ராவும் அதே நடைமுறையைக் கடைப்பிடித்தால்  நாம் எங்கே போவது?

நம்முடைய வேண்டுகோள் எல்லாம் கடன் வாய்ப்புகள் சிறப்பாகவே இருக்கின்றன. அதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நமது கடமை.

வாருங்கள்! வர்த்தகம் நமது வாழ்வியல்! வெற்றி பெறுவது நமது கடமை!

Sunday 11 June 2023

இருபத்து ஏழாவது முறை!

விடா முயற்சிக்கு நாம் உதாரணமாகக் கொள்வது கஜினி முகமது. அதாவது கஜினி முகமது இந்தியாவின் மீது பதினேழு முறை படை எடுத்ததாகவும் அதில் அவர் தோல்வி அடைந்ததாகவும்  பதினேழாவது  முறையே அவர் வெற்றி பெற்றதாகவும்  சொல்லக் கேட்டிருக்கிறோம். அது எந்த அளவுக்கு உண்மை என்பது இன்னும் தெளிவு இல்லை.

ஆனால் சீனாவில் ஒரு கோடிஸ்வரர் கஜினி முகமதுவையும் மிஞ்சிவிட்டார் என்பது தான் இப்போது நமக்குப் புதிதாக வெளிவந்திருக்கும் செய்தி.

எந்த பின்னணியும் இல்லாமல் சொந்த முயற்சியில் கோடிஸ்வரனாக மாறியிருக்கும்  லியாங் ஷி என்பவர் தான் அவர். ஓர் உண்மையை அவர் இப்போது உணர்ந்திருக்கிறார்.  கோடிஸ்வரனாவது எளிது. ஆனால் ஒரு சிறந்த பல்கலைக்கழகத்தில் சேருவதற்கு அதற்கான நுழைவுத்தாளில் வெற்றி பெறுவது  என்பது எத்துணைக் கடினமானது  என்பதை இப்போது தான் அவருக்குப் புரிந்திருக்கிறது!

லியாங்கிற்கு இப்போது வயது 56. தனது 16-வயதிலிருந்து  தனது கனவான பல்கலைகழகத்தில் சேர இருபத்தாறு முறை தேர்வை எழுதி அவரால் வெற்றிபெற முடியவில்லை. இப்போது அவர் எடுப்பது 27-வது முறை. ஒரு வேளை  அவர் வெற்றி பெறலாம். 

லியாங்கிற்குக் கல்வித் தாகம் எப்போதும் உண்டு. தனது கல்வி முழுமை பெறவில்லையே என்கிற வருத்தம் அவருக்கு உண்டு. ஓர் உயர்தர பல்கலைக்கழகத்தில் தான் பட்டம் பெற வேண்டும் என்கிற தணியாத் தாகம் உண்டு.  அவருடைய மகன் அதே பரிட்சையை எழுதி பல்கலைக்கழகத்திற்குப் போய்விட்டான்!  மகன் கோடிஸ்வரர்  வீட்டுப் பையன்.  அப்பா அப்படியா? தொழிலையும் கவனித்துக் கொண்டு கல்வியில் சாதனையும் செய்ய வேண்டும் என்கிற இலட்சியத்தையும் கொண்டிருக்கிறார்!   வாழத்தப்பட வேண்டியவர்.

நமக்கும் அதில் ஒரு படிப்பினை உண்டு.  நான் பணக்காரன், இலட்சாதிபதி, கோடிஸ்வரன் எல்லாம் சரிதான் தகுதியான கல்வி அறிவைப் பெற்றிருந்தால், பணத்தையும் பெற்றிருந்தால், நாம் தான் தலைவனுக்குள்ள தகுதியைப் பெற்றிருக்கிறோம். நம்மைத் தான் உலகம் தலை நிமிர்ந்து பார்க்கும்.  அரசாங்கம் நம்மைத்தான் ஆலோசனைகளை வழங்க கூப்பிடும்.

கோடிஸ்வரனாவது எவ்வளவு முக்கியமோ அதே போல  தரமான கல்வி அறிவைப் பெற்றிருப்பதும் முக்கியம்.

சீனாவின் கோடிஸ்வரர், லியாங் ஷி  இம்முறை  தேர்வில் வெற்றி பெற நமது பிரார்த்தனைகளையும் இறைவனிடம் சமர்ப்பிப்போம்!
 

Saturday 10 June 2023

கெடா மந்திரி பெசார் ஏன் இப்படி...?

 

        Chief Minister Chow Kon Yeow, Penang.                   Menteri Besar: Sanusi Nor , Kedah

கெடா  மாநில மந்திரி பெசாராக சனுசி நோர் எப்போது பதவியேற்றாரோ அப்போதிலிருந்தே  அண்டை மாநிலங்களுடன் அவரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை!

மந்திரி பெசார்கள் மலாய்க்காரார்களாக இருக்கும்வரை அவர் வாயை மூடிக்கொண்டு இருப்பார். பினாங்கு மாநிலத்திலோ ஒரு சீனர் என்பதால்  அவருடன்  மோதுவதை  ஒரு விளையாட்டாகவே எடுத்துக் கொண்டு பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.

சானுசி நோர் அவருடைய பாஸ் கட்சியினரைப் போலவே  சீனர் இந்தியர் விரோதப் போக்கையே இவரும் கொண்டிருக்கிறார். 

அவர் மாநில மந்திரி பெசாராக பதவியேற்றதும்  முதல் வேலையாக  ஓர் இந்து கோவிலை உடைத்துத் தள்ளினார். அதுவே ஓர் அதிகாரத்திமிர் என்று பேசப்பட்டது. அடுத்து தைப்பூச விடுமுறையை ரத்து செய்தார். ஒன்றைக் கவனிக்க வேண்டும்.  இந்து சமயத்தினரைக் கூப்பிட்டு அவர் அவர்களுடன் பேசவில்லை. ஆலோசனை எதுவும் கேட்கவில்லை. அது தேவை இல்லை என்பது தான் அவரது நிலை. ஏன் அவரது கட்சியின் நிலைப்பாடும் கூட.  இவர்கள் எல்லாம் வட்டமேசையில் உட்கார்ந்து பேசுவார்கள் என்பதையே எதிர்பார்க்க முடியாது!

இந்து, இந்து சமயம் எதுவும் உட்கார்ந்து பேசக்கூடிய அளவுக்கு  ஒரு பெரிய விஷயம் அல்ல என்பது தான் அவரது கொள்கை. ஏன் அவரது கட்சியின் கொள்கையும் கூட. அதில் அவரது அதிகாரத்தைக் காட்டியிருக்கிறார். 

சரி இப்போது பினாங்கு மாநிலத்துடன் பிரச்சனை. முதலில் தண்ணீர் பிரச்சனை. இப்போது பினாங்கு மாநிலம் என்பது கெடா மாநிலத்தின் ஒரு பகுதி என்கிறார்!  என்ன செய்வது? பேசும் அதிகாரம் தனக்கு இருக்கிறது என்பதற்காக கொஞ்ச அதிகமாகவே பேசுகிறார். மக்களுடன் கூட சுமுகமாக பேசும் தன்மை அவரிடம் இல்லை. பெண்களிடம் கேலி பேசுவது, கிண்டல் அடிப்பது,  சீண்டுவது என்பது அவருக்குக் கைவந்த கலை! அவர் எதனைச் செய்தாலும் அவரது கட்சி அவருக்குத் துணை நிற்பது  அவருக்கு கூடுதல் பலம்!

இப்போது பினாங்கு அரசாங்கம் இந்தப் பிரச்சனையை நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறது. அது சரியான வழியாகவே பார்க்கப்படுகிறது. காரணம் ஒரு சில சமயங்களில்  கெடா மந்திரி பெசாரைப் போன்றவர்கள் அரசியலில் இருக்கத்தான் செய்கிறார்கள்! அவர்களைத் திருத்துவதற்கு, நீதிமன்றம் போவதைத் தவிர, வேறு வழியில்லை!

கெடா மாநிலம் ஒரு காலகட்டத்தில் ராஜராஜ சோழன் கட்டுப்பாட்டில் இருந்ததாக  சரித்திரம். நீதிமன்றத்தில் இதுபற்றியெல்லாம் பேசப்படுமா  என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

Friday 9 June 2023

இது எப்படி சரியாகும்?

 

                        UMNO YOUTH CHIEF:  Dr.Muhammed Akmal Saleh

அம்னோ இளைஞர் பிரிவு  அம்னோ ஒரு தூய்மையான கட்சி என்பதை நிருபிக்க  ஜனநாயக செயல் கட்சி, தேர்தலுக்கு முன்பு வசைபாடியதை இப்போது வாபஸ் வாங்க வேண்டும் என்றும் அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும் வலியுறுத்திருக்கிறது!

இது ஒரு ஆச்சரியமான விஷயம் என்பதில் எந்த கருத்து வேறு பாடும் இல்லை. இளைஞர் பிரிவின் தலைவர்  டாக்டர் அக்மால்  இப்படி கூறியிருப்பதைப் பார்த்து நம்மால் நகைக்கத்தான் முடிகிறது! என்ன சொல்ல?

அம்னோ ஒரு தூய்மையான கட்சியா என்பதை இளைஞர் பிரிவு கொஞ்சம் மனதில் கை வைத்துச் சொல்ல  வேண்டும். அவர்களுக்கு மக்களிடையே உள்ள மரியாதை என்ன என்பது அவர்களுக்கே தெரியும். மறைப்பதற்கு ஒன்றுமில்லை.  அரசியலில் அவர்களைப் போல் மக்களின் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள்  இந்நாட்டு சரித்திரத்தில் யாரும் இல்லை.

"கொள்ளையடித்தாலும் மலாய்க்காரர்கள் எங்களைத்தான் ஆதரிப்பார்கள்"  என்கிற தைரியம் அவர்களுக்கு உண்டு.  அல்லது ஆதரிப்பது அவர்களது கடமை என்று அம்னோ நினைக்கிறதா? நமக்குத்தான் தலை சுற்றுகிறது!

சென்ற பொதுத் தேர்தலில் அவர்கள் தோற்றதின் முக்கிய  காரணமே  இலஞ்சம், ஊழல் என்பதால் தான். அதனை மறுப்பதற்கோ அல்லது மறைப்பதற்கோ அவர்களால் இயலாது.

இன்று இலஞ்ச ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர்கள்  பலர் ஒற்றுமை அரசாங்கதில் பதவியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.  ஏன் துணைப்பிரதமர் வரை பதவி வகிக்கிறார்கள்! உண்மை தான். அதற்காக மக்கள் அவர்களின் இலஞ்ச ஊழலை மறந்துவிட்டார்கள் என்பதல்ல. அல்லது ஒற்றுமை அரசாங்கத்தில் அவர்களின் ஊழல்கள் மறைக்கப்பட்டன என்பதல்ல. அவர்கள் இன்னும் ஊழல் கூற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கித்தான் இருக்கிறார்கள்.

இப்படி ஊழலையே தொழிலாகக் கொண்டவர்களை  யாரும் மறக்கவில்லை.  இவர்களையும் ஆட்சியில் இணைத்துக்கொள்ள ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஒரு தேவை ஏற்பட்டது. அதுவும் மாமன்னரின்  சிபாரிசின் பேரில். 

ஆனால் அம்னோ அத்தனையும் மறந்துவிட்டு, இவர்களின் ஊழல்களை மறந்துவிட்டு "நீ மன்னிப்புக் கேள்!' என்று பேச ஆரம்பித்திருப்பது இவர்களின் முட்டாள் தனத்திற்கு எல்லையே இல்லை என்று அனைவரையும்  வியப்படையச் செய்கிறது!

இப்போது அம்னோவை வழிநடத்துபவர்கள்  படித்தவர்கள். முன்பு தொண்டு செய்ய வந்தவர்கள். அவர்களை மறந்துவிட்டார்கள்.  கல்வியால் யாரும் பயன் பெறவில்லை. இலஞ்சம், ஊழல் பெருவதற்குத்தான் பயன் பெறுகிறார்கள்! இவர்கள் திருந்துவதற்கு வழியில்லை என்று தான் தோன்றுகிறது!

Thursday 8 June 2023

கே.கே. நிறுவனத்திற்கு நன்றி!

 

என்ன தான் சொல்லுங்கள். இப்போது வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தான் நாட்டின் ஒவ்வொரு துறையையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றனர். அதனை  நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.

நமது கவலையெல்லாம் உள்நாட்டில் வாழும் நமது இனத்தவர் பற்றி தான். இப்போது நமது தாமான்களில் கொஞ்ச நோட்டம் விட்டால் தெரிந்து கொள்ளலாம்.

தாமான்களில் உள்ள சுப்பர் மார்க்கெட், பேரங்காடி என்று எதனை எடுத்துக் கொண்டாலும் அவர்களும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தான் முன்னுரிமை கொடுக்கின்றனர் என்பது துயரமான செய்தி.` இதற்கு முன்னர் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் விடுமுறை நாள்களில் இந்தப் பேரங்காடிகளில்  ஒரு சில வேலைகளைச் செய்து வருவர். ஏதோ அவர்களால் முடிந்ததைச் சம்பாதித்து கல்லூரி செலவுகளுக்குப் பயன்படுத்திக் கொள்வர்..  வெளியே அவர்கள் போக வேண்டிய அவசியம் இல்லை.  இன்னும் சில பெண்கள்  வீட்டுக்கு அருகிலேயே இந்தப் பேரங்காடிகள் இருப்பதால் அதுவே அவர்களுக்கு வசதியாக இருக்கும்.

இப்படி ஓரளவுக்கு தாமானகளில் உள்ளவர்களுக்கு வேலை கிடைப்பதால் அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு அது உதவியாக இருக்கும். உள்நாட்டுத் தொழிலாளர்களின் நலனைக் கவனிக்காமல் இங்கேயும் வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கொண்டு வருவதால் அந்த மக்கள் எங்குப் போவார்கள் என்பதை மனிதவள அமைச்சு கவனிக்க வேண்டும்.

இந்தத் தவற்றினையெல்லாம் யார் செய்கிறார்கள்? நிச்சயமாக அந்தப்பழி என்பது மனிதவள அமைச்சையே சாரும்.  வெளிநாட்டினர் வேலை செய்கின்ற வாய்ப்பு ஒரு சில துறைகளில் இருப்பது நமக்குத் தெரியும். அதுவும் குறிப்பாக  தோட்டத்துறை, கட்டுமானத்துறை. இத்துறைகளில்  ஆட்பற்றாக்குறை என்பது தெரிந்தது தான். ஆனால் நிலைமை என்ன?  இப்போது எல்லாத் துறைகளிலும் ஆட்பற்றாக்குறை  என்று எல்லா முதலாளிமார்களும் கூற ஆரம்பித்துவிட்டனர்!

முதலாளிமார்கள்  இப்படிக் கூறுவதற்கு அடிப்படைக்காரணம்  வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குக் குறைவான சம்பளம் அல்லது சம்பளமே இல்லை!  அவர்களை இருபத்து நான்கு மணி நேரமும் வேலை வாங்கலாம்!  கேட்க ஆளில்லை என்பது முதலாளிகளுக்குத் தெரியும். இந்தத் தொழிலாளர்கள்  இங்கு வந்த பின்னர் அவர்கள் முற்றிலுமாக முதலாளிகளின் அடிமைகளாக நடத்தப்படுகின்றனர்.

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் ஒரு நிறுவனம் - கே.கே.நிறுவனம் - தனது நிறுவனங்களில் உள்நாட்டினருக்கே நாங்கள் வேலை கொடுப்போம் என்று கூறினால் நாம் அவர்களைக் கை எடுத்து கும்பிட வேண்டும். வேறு யாருக்கும் அந்தத் துணிச்சல் வரவில்லையே!

சுமார் 680 கிளைகளைக் கொண்ட இந்த நிறுவனத்தில் எண்பத்தைந்து விழுக்காட்டினர் மலேசியர்கள்.  ஒரு சிறிய கணக்கு.  ஒரு கிளை அளவில் சுமார் ஐந்து பேர் வேலை செய்தால் கூட அந்நிறுவனத்தில் மலேசியர்கள் சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர். மூவாயிரம் குடும்பங்கள் பிழைக்கின்றனர் என்று எடுத்துக் கொள்ளலாம்.

மனிதவள  அமைச்சு  எல்லாத்துறைகளிலும்  இது போன்று வெளிநாட்டவரை வேலைக்கு அமர்த்துவது அது உள்நாட்டவரைப் பாதிக்கும். அதனால் இது போன்ற செயல்களை அமைச்சு கண்காணிக்க வேண்டும்.

மற்ற பேரங்காடிகளும் இவர்களைப் பின்பற்ற வேண்டும்  என்பதே நமது ஆசை!

Wednesday 7 June 2023

என்ன தொழிலைச் செய்யலாம்?

 

புதிதாக என்ன தொழில் செய்யலாம்?

என்னக் கேட்டால் உங்களுக்கு என்ன தொழில் தெரியுமோ அந்தத் தொழிலைச் செய்யுங்கள்  என்று தான் பதில் கூறுவேன். புதிய தொழில் என்றால்?    புதிதாக என்ன தொழிலைக் கற்று வைத்திருக்கிறீர்களோ  அது தான் உங்களுக்குப் புதுத்  தொழில். அதைச் செய்யுங்கள்.

சிறிய பட்ஜெட்..  தொழில் செய்ய வேண்டுமென்கிற பெரும் கனவு. முன்பின் அனுபவம் இல்லை.  அப்போது உங்களது நிலை என்ன? உங்களுக்கு என்ன தொழில் செய்வது சரியாக வருமோ அதனை மட்டும் செய்யுங்கள்.  சிறிய அளவு செய்யுங்கள். கற்றுக் கொள்ளங்கள். கற்றுக் கொண்டே வளருங்கள்.  கற்றுக் கொண்டு வளருவது தான் சிறந்த வழி.  வாய்ப்பு உள்ளவர்கள் அனுபவத்தைத் தேடிய பின்னர் தொழில் செய்ய வாருங்கள். அனுபவம் இல்லாதவர்கள் சிறுக சிறுக தொழில் செய்து கொண்டே வளருங்கள்.  அகலக் கால் வைக்காதீர்கள்.

யாரும் செய்யாத தொழில் என்று எதுவும் இல்லை.  எல்லாத தொழிலுமே யாரோ ஒருவர் ஏற்கனவே செய்துவிட்டுத் தான் போயிருப்பார்.  நீங்கள் புதுமையாக ஏதேனும் செய்ய வேண்டுமென்றால் அதற்கான முதலீடு அதிகமாகவே வரும்.

இங்கு நாம் பேசுவது என்பது காலங்காலமாக  யாரிடமோ வேலை செய்து பிழைப்பவர்களைத்தான்.  அவர்களைத்தான் தொழில் செய்ய முன் வாருங்கள் என்கிறோம்.

நம்மிடம் உள்ள பெரும் பயம் என்றால் தொழிலில் தோல்வி அடைந்து விட்டால் என்ன செய்வது என்கிற பயம் தான். இருக்கத்தான் செய்யும். இருக்கத்தான் வேண்டும்.  குடும்பப் பொறுப்புள்ளவர்கள்  அப்படித்தான் சிந்திப்பார்கள். 

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான குடும்பங்களில் கணவன்-மனைவி  இருவரும் வேலை செய்கின்றனர்.  அதனால் ஒருவர் தொழில் செய்வதில் எந்தவொரு பிரச்சனையும் எழாது. செலவுகளைப் பாதியாக குறைத்துக் கொள்ள வேண்டும். பெரிய அளவில் முதலீடுகளைப் போடாமல் சிறிய அளவிலேயே  தொடங்க வேண்டும்.

புதிதாக என்ன தொழில் செய்யலாம் என்பதைவிட எந்தத் தொழில் செய்தால் நாம் முன்னுக்கு வர முடியும் என்பது தான் முக்கியம்.  விபரம் தெரிந்தவர்களிடம் ஆலோசனைகளைக் கேட்கலாம்.  ஆனால் முடிவு எடுப்பது நீங்களாகத்தான் இருக்க வேண்டும்.  எக்காரணத்தைக் கொண்டும் தோல்வி அடைந்தவர்களிடம்  ஆலோசனைகளைக் கேட்காதீர்கள்.

தொழில் ஒன்று தான் சமுதாயத்தில் உங்களை உயர்த்தும். தொழில் செய்கின்ற சமுதாயம் தான் உயர்ந்து நிற்கும். தொழில் செய்ய கொஞ்சம் துணிச்சல் வேண்டும். 'ரிஸ்க்'  என்கிறார்களே அந்தத் துணிச்சல்.

தொழில் செய்வோம்! உயர்ந்து நிற்போம்!

Tuesday 6 June 2023

அபராதம் கட்டுவீர்!


 வாகனம் நிறுத்துமிடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்துவதா  போடு அபராதம்!

யாருக்கு என்பது தான் முக்கியம்.  காவல்துறையைச் சேர்ந்தவரே அப்படி ஒரு தவற்றினைச் செய்தால்? வேலியே பயிரை மேய்ந்தால் எப்படி?

அதுவோ மாற்றுத்திறனாளிகளுக்கான கார் நிறுத்துமிடம். அந்த இடத்தில்  மோட்டார் சைக்கிளை நிறுத்துவது என்பது தவறு. அதுவும் கார் கதவருகே ஒட்டி நிறுத்துவது இன்னும் தவறு.  அந்த மாற்றுத்திறனாளி அந்தக் காரை  எடுப்பதென்றால் அல்லது நிறுத்துவதென்றால் அவர் என்ன செய்வார்?

அதிகாரத்தில் உள்ளவர்கள் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். அவர் தான் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டுமே தவிர  இது போன்று அசட்டுத்தனமாகவும் பொறுப்பற்றத் தனமாகவும் நடந்து கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாத செயல்.

இன்று நமது அரசாங்க அதிகாரிகள் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கின்றனர். அவர்களே சட்டங்களை மதிப்பதில்லை. பின்னர் யார் மதிப்பார்?   அதிகாரிகளின் கார்கள் சாலைகளின் சமிக்ஞைகளை மதிப்பதில்லை.  ஆனால் சராசரி மனிதர்களுக்குத் தான் அந்த சாலை விதிகள், சமிக்ஞைகள் என்றால் விதிகள் அதன் மதிப்பை இழந்துவிடுகின்றன.

அதிகாரிகள், அமைச்சர்கள், அவர்கள் வீட்டுப்பிள்ளைகள், அவர்கள் மனைவிகள்  -  இவர்கள் தான் பெரும்பாலும் சட்டத்தை மதிக்காதவர்கள். சட்டத்தை அமலாக்க வேண்டியவர்களே  சட்டத்தை அலட்சி8யப் படுத்தினால் சட்டத்தைப் போட்டு மிதித்தால்  அப்புறம் சட்டத்தை மதிப்பவர் யார்?

பொது மக்களுக்கு இது போன்று சட்டத்தை மதிக்காதவர்கள் தான் கண்முன் தெரிகின்றனர். இளைஞர்களோ சொல்ல வேண்டியதே இல்லை. அவர்கள் தவறானவர்களைத்தான் முன்னுதாரணமாகக் கொள்கின்றனர்.

எல்லாவற்றையும்விட அந்த  மோட்டார் சைக்கிளை அங்கிருந்து நகரவிடாமல்  சக்கரத்தில் இறுக்கியைப் போட்டுவிட்டுப் போனாரே  காவலர் அவர் தான் பாராட்டுக்குரியவர்.

சட்டத்தை  மேலிருந்து கீழ்வரை - அதிகாரிகளிலிருந்து அன்னக்காவடி வரை - கடைப்பிடித்தால் நாட்டு நலனுக்கு நல்லது!  எதிர்காலத்திற்கும் நல்லது!  மலேசியாவும் வாழும்!

Monday 5 June 2023

சமயங்கள் விவாதப்பொருள் அல்ல!


சமய விவகாரங்களை அரசியலாக்க வேண்டாம். சர்ச்சைக்குரிய விஷயமாக மாற்ற வேண்டாம்.  விவாதப் பொருளாக பொது வெளியில் பேச வேண்டாம். இது தான் மாட்சிமை தங்கிய மாமன்னரின் பிறந்த நாள் வேண்டுகோளாக மலேசியர்களிடம் வைத்திருக்கிறார்.

பொதுவாக அரசியல்வாதிகள், அதுவும் குறிப்பாக தேர்தல் காலங்களில், சமயங்களைப் பற்றிப் பேசி கைதட்டல்கள் வாங்குவது என்பது எப்போதும் உள்ளதுதான்.

ஆனால் இது தொடர்ந்து நடந்து கொண்டிருப்பது  என்பது ஆரோக்கியமான விஷயமாகக் கருத முடியாது.

அதுவும் அரசியல்வாதிகளுக்கு எப்போது சமயம், மொழி போன்ற விஷயங்களை முன்னெடுக்க வேண்டும் என்பது அத்துப்படி.  மக்களிடமிருந்து  கைதட்டல்கள் வரவேண்டும்,  அது வாக்காக மாற வேண்டும் ஏன்பது தான் அவர்களது நோக்கம்.  இந்த இரண்டு விஷயங்களுமே மிகவும் சக்தி வாய்ந்தவை. உணர்ச்சிகரமான விஷயங்கள்.  விரைவில் மக்களிடம் போய் சேர்ந்துவிடக் கூடியவை.

மக்களுக்கோ அரசியால்வாதிகள் பேசுவதில் உண்மை இல்லை என்று தெரிந்தாலும் எப்போதும் ஒரு சந்தேக மனநிலையிலேயே அவர்கள் இருக்கின்றனர். அப்படி நடந்துவிட்டால்?  இப்படி நடந்துவிட்டால்? மக்களைக் குற்றம் சொல்லுவதில் பயனில்லை.  அவர்களில் பலருக்குக் கள நிலவரம்  தெரிவதில்லை.  நாடு சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆகியும் அவர்களின் சமயத்திற்கோ, மொழிக்கோ ஏதேனும் களங்கள் ஏற்பட்டிருக்கிறதா, பின்னைடைவு ஏற்பட்டிருக்கிறதா என்பதை அவர்கள் யோசித்துப் பார்த்தாலே தெரியும்.  இதுவரை எதுவும் ஆகவில்லை இனிமேலும் எதுவும் ஆகப்போவதில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

சமயம். மொழி என்பது இப்போதும் எப்போதும்  அரசியல்வாதிகளுக்கு மிகவும் கைகொடுக்கும்  ஒரு சொல் என்பதால் அதனை அடிக்கடி ஞாபகப் படுத்திக் கொண்டிருக்கின்றனர். யார் இந்த அரசியல்வாதிகள்? பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தாங்கள் ஏன் அரசியலுக்கு வந்தோம் என்பதை மறந்தவர்கள்!  இலஞ்சம், ஊழல் என்றால் முதல் வரிசையில் நிற்பவர்கள்.  இவர்களைப் போன்றவர்களுக்குத் தான் சமயத்தின் பெருமையும் மொழியின் பெருமையும் அடிக்கடி தேவைப்படுகிறது! இல்லாவிட்டால் அவர்களே மறந்து போய்விடுவர்!

நாம் சொல்ல வருவதெல்லாம் சமயத்தையும் மொழியையும்   கேலி பொருளாக்காதீர்கள் என்பது தான்!

Sunday 4 June 2023

நம் நாட்டவர்க்கே முன்னுரிமை!

 

மனிதவள அமைச்சர் வி.சிவக்குமார் நாம் சொல்லி வருகின்ற கருத்தையே அவரும் சொல்லி இருக்கின்றார்.

முதலில் வேலை வாய்ப்புக்களில் முன்னுரிமை என்பது மலேசியர்களுக்குத் தான் இருக்க வேண்டும்.  ஆனால் நிலைமை அப்படி இல்லை.  ஒவ்வொரு துறையிலும் வெளிநாட்டவரே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றனர். அப்படி என்றால் ஏன் உள் நாட்டினர் புறக்கணிக்கப்படுகின்றனர்?

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இப்போது வேலையில்லாமல் நமது நாட்டில் பலர் தங்கியிருக்கின்றனர். அதுவும் இலட்சக்கணக்கில்! அரசாங்கத்தின் கொள்கை தான் என்ன என்பது நமக்குப் புரியவில்லை. வெளிநாட்டவர்களுக்கு வேலை கொடுத்து உதவுவது என்பது மனிதாபிமானம் தான். இல்லையென்று சொல்லவில்லை. அதற்காக உள்நாட்டில் உள்ளவர்கள் பட்டினியில் வாட வேண்டுமா?

இது அரசாங்கம் செய்கின்ற பெரும் தவறு என்று தான் நமக்குத் தோன்றுகிறது. ஒரு சில வேலைகளை மலேசியர்கள் தவிர்க்கிறார்கள் என்றால் அந்த துறைக்கு மட்டும் தான் வெளிநாட்டினரை வேலைக்கு எடுக்க வேண்டும். எல்லா வேலைகளையும்  மலேசியர்கள் புறக்கணிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அப்படித்தான் மனிதவள அமைச்சு நம்புகிறது!

அப்படியென்றால் என்ன பொருள்? அரசாங்கத்தில் பணிபுரிய வெளிநாட்டினரை எடுக்கலாமே?  அவர்களுக்கும்  கல்வி அறிவு இருக்கின்றது தானே?  காவல்துறைக்கும் அவர்களை  எடுக்கலாமே! சிங்கப்பூரும் பல வேலைகளுக்கு வெளிநாட்டினரை எடுக்கத்தான் செய்கிறார்கள். அங்கு மட்டும் தேவைக்கு அதிகமாக யாரையும் எடுப்பதில்லையே? அங்கும் மட்டும் எப்படி கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்?

ஒன்று மட்டும் நமக்குப் புரிகிறது.  மூளை இல்லாதவர்களெல்லாம் ஆட்சியில் இருந்தால் இப்படித்தான் நடக்கும் என்று சொல்லலாம். உள்நாட்டில் உள்ளவர்களுக்குக் கொடுக்க வேண்டிய வேலைகளையெல்லாம் வெளிநாட்டினருக்குக் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏன் வந்தது?  அவர்கள் சோம்பறிகள் என்றால் ஏன் அப்படி ஒரு நிலைக்கு அவர்கள் ஆளானார்கள்?  ஏன்? சோம்பறிகளைத் திருத்த முடியாதா? நமது நாட்டில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இவர்களை வைத்துத் தானே நடந்து கொண்டிருந்தன. எந்தப் புகாரும் இல்லையே?

ஆக, நாம் எங்கோ தவறு செய்து விட்டோம். சாதாரணத் தவறு இல்லை. பெரிய தவறு. அதனால் தான் இன்று இலட்சக்கணக்கில் வெளிநாட்டவரை இங்குத் தங்க வைத்து சாப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறோம்! உள்நாட்டவர்களுக்கு வேலை இல்லாமல் பட்டினி போட்டுக் கொண்டிருக்கிறோம்!

நம் நாட்டவர்க்கே முன்னுரிமை! அமைச்சரோடு நாமும் வேண்டுகோள் விடுக்கிறோம்!

Saturday 3 June 2023

பெண்களே! துணிவோடு செயல்படுங்கள்!

 

இப்போது உள்ள பெண் பிள்ளைகளுக்கு துணிச்சலைப் பற்றி பாடம் எடுக்க வேண்டிய அவசியமில்லை. 

துணிந்தவனுக்குத் துக்கமில்லை என்பார்கள்.  இப்போது நாட்டில் நிலவும் சூழ்நிலையில் துணிவற்றவனாக இருந்தால் சோத்துக்கே வழியில்லாமல் போய்விடும்.

பணம் உள்ளவன் பிழைத்துக் கொள்கிறான். பணம் இல்லாதவனால் என்ன செய்ய  முடியும்?  

அதற்குத்தான் ஏதாவது தொழிலைக் கற்றுக்கொண்டு  உங்களது திறமையைக் காட்டுங்கள் என்று ஒருசிலராவது கத்திக் கொண்டிருக்கிறோம்.  அந்தக் கூச்சல் இப்போது பலனளித்துக் கொண்டிருக்கிறது  என்று நம்பலாம்.  "ஏன் ஆரம்பிக்க முடியவில்லை?" என்று காரணங்களை அடுக்கிக் கொண்டிருப்பவர்களை அலட்சியப்படுத்துங்கள். அவர்கள் வயிறு நிரம்பி இருப்பதால்  அவர்களுக்கு எதுவும் தேவையில்லை.   தொழில் தொடங்குவது என்பது சும்மா வயிற்றை நிரப்பிக்கொள்வதற்காக அல்ல. தொழில் என்பது காலாகாலமும் அது உங்களது தொழில். உங்களது வாரிசுகளின் தொழில். தொழில் வளரும். முற்றுப்புள்ளி  தேவை இல்லை.  அப்படி யோசியுங்கள்.

இன்று நமது நாட்டை எடுத்துக் கொண்டால் சின்னஞ்சிறு தொழிலிருந்து பெரும் தொழில்வரை சீனர்கள் கையில் தான்  அத்தனை தொழில்களும் உழன்று கொண்டிருக்கின்றன. ஏன் அவர்கள் மட்டும் யாரிடமாவது கைகட்டி வேலை செய்வதில்லை என்று யோசித்தீர்களா?  இன்றும்  நாட்டின் பொருளாதாரம் அவர்களது கையில் தானே!   ஏன்? அவர்களுக்கு வேலை கொடுக்க ஆளில்லையா?

இன்றைய நிலையில் ஆண்களைவிட பெண்கள் தான் துணிச்சல் மிகுந்தவர்களாக இருக்கிறார்கள்.   அது சீன,மலாய், இந்தியர் யாராக இருந்தாலும் சரி தொழில் செய்வதில் பெண்கள் தான் முன்னணியில் நிற்கிறார்கள்.  ஒன்று: தங்களுக்குப் பொருளாதாரத் தடங்கல்கள் இருக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள். பிள்ளைகளின் கல்வி, குடும்பப் பொருளாதாரம் அனைத்துக்கும் தங்களது வருமானம் தேவை என்று நினைக்கிறார்கள்.  கணவரின் வருமானம் என்பது உறுதியற்ற  ஒன்று என்கிற நிலைதான் பெரும்பாலும்.

இன்றைய நிலையில் வீடுகளிலிருந்தே குடும்பப் பெண்கள் செய்யக்கூடிய தொழில்கள் நிறையவே உள்ளன. வீட்டுக்கு அருகிலேயே  தோசை, இட்டிலி,நாசிலெமாக்  ஐஸ் தண்ணி, இப்படி செய்பவர்கள் பலர் இருக்கின்றனர். இன்னும் பலர்  வீட்டிலேயே சமைத்து  உணவு விநியோகம் செய்கின்றனர்.  இப்போது பலர் கேக் செய்யும் கலையைக் கற்றுக் கொண்டு கேக் விற்பனை செய்கின்றனர். எதைச் செய்தாலும் சுவையாக இருந்தால் ஜெயிக்க முடியும்.

இன்றைய நிலையில் வெற்றி என்பது பொருளாதார வெற்றி தான். பணம் பத்தும் செய்யும் என்பார்கள். நமது சமுதாயப் பிரச்சனைகள் எதுவும் தீர்ந்தபாடில்லையே? காரணம் பொருள் இல்லா சமுதாயம் குப்பையியிலே!  அதைத்தான் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்!

தொழில் செய்ய துணிவு வேண்டும். அது நம் பெண்களிடம் நிறையவே உள்ளது!

Friday 2 June 2023

வாழ்த்துகள் அக்கா நாசிலெமாக்!

 

                                                                இப்போது புதிய முகவரி
                                                              முன்பு தெரு ஓரம்

"அக்கா கடை நாசிலெமாக்" என்று அனைத்து மலேசிய மக்களால் அன்பாக அழைக்கப்படும் சங்கீதா அக்காவின் கடை புதிய இடத்திற்கு மாற்றம் கண்டிருக்கிறது.

ஒன்றும் பிரச்சனை இல்லை.  முன்பிருந்த கடையிலிருந்து ஓர் ஐந்து நிமிட நடை தான். உள்ளூர் மக்களுக்கு அத்துப்படியான இடம் என்பதால் அக்காவின் வியாபாரத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை.

இந்த நேரத்தில ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். தொழில் செய்யும் தமிழர்களை எதையாவது சொல்லி அவர்களை மட்டம்தட்டி, மக்குகளாக சித்தரிப்பது ஒரு சிலருக்குக் கைவந்த கலை. நண்டு கதைகளைச் சொல்லி தமிழர்கள் இப்படித்தான் என்று  நட்டுவாக்கிளிகளாக ஒரு சிலர் செயல்பட்டதைப் பார்த்தோம்!

இது போன்ற கதைகள் எல்லாம் எதற்காகச் சொல்லப்படுகிறது என்பதை இப்போது நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். இது தமிழர் மீதான உளவியல்  தாக்குதல் என்பது தான் உண்மை.

நண்டு கதைகளை மறந்துவிட்டு எறும்பு கதைகளைப்பற்றி சிந்திப்போம். இந்த எறும்புகள்  ஒன்றோடு ஒன்றாகச் சேர்ந்து கொண்டு  ஒரே பாதையில் பயணம் செய்து அவைகளது உணவுக்காக  உழைத்து வாழ்வதை நாம் பார்க்கிறோம். எந்தவொரு தடங்களுக்கும் அவை அஞ்சுவதில்லை. ஒரே பாதை! ஒரே பயணம்! ஒரே வெற்றி! அதன்படி நாமும் உழைப்போமே. பாதை ஒன்று! பயணம் ஒன்று! ஒருவரோடு ஒருவர் ஒத்துழைப்பு! வெற்றி நமதே!

இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.  நாம் எதனைச் செய்தாலும் அதைக் குறை சொல்ல நாலு பேர் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டாம்.அவர்களை மனதில் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். யார் நல்லதைச் சொல்லுகிறார்கள், நல்லது பேசுகிறார்கள்  அவர்களை மட்டு அருகில் வைத்துக் கொள்ளுங்கள்.  அட! ஒருவருமே இல்லையா?  "கடவுள் என்னோடு இருக்கிறார்! அவர் வழிகாட்டுவார்!" என்று ஒவ்வொரு நிமிடமும் கடவுளை உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள்! இது தான் எளிமையான வழி. கடவுள் உங்களோடு இருப்பதில் அவருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை!  நீங்கள் நல்லதைச் செய்யும்வரை அவர் உங்களோடு இருப்பதில் அவருக்கு ஆட்சேபணை ஏதும் இருக்கப் போவதில்லை! 

அக்கா சங்கீதா பல ஆண்டுகளாக வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்.  ஆமாம், 13 ஆண்டுகள் என்பது நீண்ட பயணம் தான்.  அவரை இனி முடக்கிப் போடுவது என்பது நடக்கக் கூடிய காரியம் அல்ல. எல்லாப் பிரச்சனைகளையும் பார்த்துவிட்டார். அனுபவித்துவிட்டார்.  இனி என்ன? இந்தக் கழிசடைகளையெல்லாம் தூக்கி எறிய வேண்டும். அவ்வளவு தான்!

எனக்குள்ள ஒரே வருத்தம் என்னவென்றால் நமது பெண்கள் கூட வரிந்து கட்டிக்கொண்டு அவருடன் மல்லுக்கு நின்றதுதான். நமது சமுதாயத்தில் பெண்கள் தான் சிறு தொழில்கள் செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களை இப்படியெல்லாம் செய்து ஒரங்கட்ட பார்ப்பது எப்படியும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல்.  நமது சமுதாயம் பல ஏற்றத்தாழ்வுகளைக் கண்ட சமுதாயம். போட்டி பொறாமைகளைச் சந்தித்த சமுதாயம். இப்போது தான் அவைகளிலிருந்து நாம் விடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.  நல்லதே நடக்கும் என நம்புவோம்!

அக்காவை நாம் வாழ்த்துகிறோம். மீண்டும் பல வெற்றிகளைக் குவிக்க தமிழ் மக்கள் துண நிற்பர்!                                      

Thursday 1 June 2023

தேர்தல் கால சளிகாய்ச்சல்!

 

மாநில சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.  குறிப்பாக ஆறு மாநிலங்கள். கிளந்தான், திரங்காணு, பினாங்கு,  கெடா, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மாநில தேர்தல்கள் நடைபெறும்.

ஆனால் எப்போதுமே ஒன்றை நாம் கவனிக்கிறோம்.   தேர்தல் வருகின்ற காலத்தில் எதிர்தரப்பினர் ஒன்றை மட்டும் உறுதியாக பிடித்துக் கொள்கின்றனர். தேர்தல் காலத்திற்கென்றே வருகின்ற சளிகாய்ச்சல்!  இந்த சளிகாய்ச்சல் வரும் போதெல்லாம் அவர்களுக்கு உதறல் எடுத்துவிடும்.  "இஸ்லாம்! மலாய் மொழி!" இந்த இரண்டும் தான் இவர்களுக்குச் சளிகாய்ச்சலை ஏற்படுத்தும் வியாதியாக மாறிவிடும்.

எனக்குத் தெரிந்துவரை இந்த இரண்டுக்கும் அப்படி என்ன ஆபத்து வந்துவிட்டது?  அவர்கள் சொல்லுகின்ற  ஆபத்து என்பது அபத்தம் என்பது நமக்குத் தெரியும். அவர்கள் பேசுகின்றவை முட்டாள்களுக்குப் போய்ச் சேர்ந்தால் போதும் என்று நினைக்கிறார்கள். அங்கும் அவர்களுக்குப் பிரச்சனைகள் உண்டு. 

நம் நாட்டை பொறுத்தவரை இஸ்லாமிய சமுதாயம் படித்த சமுதாயம் என்பது நமக்குத் தெரியும். படித்தவர்கள் அதிகம் உள்ள சமுதாயம்  என்பதும் உண்மை.  எல்லாத் தேர்தல் காலங்களிலும் "ஐயோ இஸ்லாமுக்கு ஆபத்து!" ஐயோ மலாய் மொழிக்கு ஆபத்து!"  என்று எதிர்தரப்பு  அரசியல்வாதிகள் கூச்சலிடுவது  எதற்கு என்று மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

என்னைப் போன்ற சராசரி மனிதர்கள் கூட இஸ்லாமுக்கோ, மலாய் மொழிக்கோ எந்த ஆபத்தும் இதுவரை வந்ததில்லை என்பதை அறிந்திருக்கிறோம். ஆனால் இவர்களுக்கோ இந்த 'ஐயோ ஆபத்து' எந்த நேரத்திலும் வரலாம்! இவர்களோ ஐயோ ஆபத்து என்று கூக்குரலிடுவார்கள்! ஆர்ப்பாட்டங்களை ஏவி விடுவார்கள்!  கடைசியில் பார்த்தால் எதுவும் நடந்திருக்காது!

இப்படி ஒரு அபத்தத்தை இவர்கள் ஏன் தொடர்ந்து பின்பற்றுகிறார்கள்? நம்மிடம் ஒரு கேள்வி உண்டு.  இஸ்லாமிய மதத்தினர் வேறு மதங்களுக்கு மாறக்கூடிய வாய்ப்பு உண்டா? மற்ற நாடுகளில் உண்டு. நமது நாட்டில் நிச்சயமாக இல்லை.  கதவை இறுக்கமாக மூடி வைத்திருக்கிறார்கள். எந்தப் பக்கம் திரும்பினாலும் எந்த ஓட்டையும் இல்லாமல் தடுக்கப்பட்டிருக்கிறது. ஏன் அது பற்றி பேசினாலே காவல்துறை அடுத்த நாளே வீட்டு வாசலில் நிற்கும்.  இப்படிப்பட்ட ஒரு சூழலில்  எப்படி மதமாற்றம் செய்ய முடியும்?  இதை எதிர்தரப்பு அரசியல்வாதிகள் தெரியாமலா இருக்கிறார்கள்?  எல்லாப் பக்கங்களிலும் இரும்பு கதவுகளைப் போட்டு பூட்டிவிட்டு 'குத்துதே! குடையுதே!' என்றால் யாரை ஏமாற்றும் வேலை?

அரசியல்வாதிகள் தங்களது இலாபத்திற்காக  இது போன்ற பிரச்சனைகளை எழுப்புவதை அரசாங்கம் ஒரு முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!  தேவையான பிரச்சனைகளை எழுப்பாமல் தேவையற்ற பிரச்சனைகளை எழுப்பி  நாட்டில் அமையின்மையை உண்டாக்குபவர்களை அரசாங்கம் தண்டிக்க வேண்டும். வாழ்க மலேசியா!