Tuesday 31 October 2023

நமது பெண்கள் திறமைசாலிகள்!

 

நமது பெண்கள் திறமைசாலிகள் என்பதைச் சமீபகாலமாகப் பார்த்து வருகிறோம்.

தீபாவாளி காலத்தில் நாம் பார்க்கிறோம். ஆன்லைனில்  என்னமாய்  தொழில் செய்கிறார்கள்!  வாழ்த்துகள்!

நான் சொல்ல வருவது 'ஏதோ தீபாவளிக்காக!'  என்று இத்தோடு இந்தத் தொழிலை நிறுத்தி விடாதீர்கள். இதனைத் தொடருங்கள். இப்போதும் நீங்கள் வேலை செய்யும் நிறுவனங்களுக்காக  இதனைப் பலர்  செய்து கொண்டு தான் இருக்கிறீர்கள்.  இல்லை என்று சொல்ல முடியாது. நிறைய நிறுவனங்கள் ஆன்லைனில் தொழில் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

இது ஒரு கட்டாயச் சூழல் தான்.  வாடிக்கையாளர்கள்  கடைகளைத் தேடி போவது குறைந்துவிட்ட நிலையில்  நிறுவனங்கள் இப்போது ஆன்லைனை நாடுகின்றனர். அதுவும் குறிப்பாகப் பெண்கள் சிறப்பாகவே செயல்படுகின்றனர்.   இந்தியப் பெண்களும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை  அவர்கள் வியாபாரம் செய்யும்  முறையைப்  பார்த்தாலே புரியும்.

நமது சமூகத்தைப் பொறுத்தவரைப் பெண்கள் தான் புதுப்புது முயற்சிகளைச் செய்வதற்குத் துணிவுள்ளவர்களாக இருக்கின்றனர்.  கணவர்கள்  பொறுப்பற்றவர்களாக  இருந்தால் பெண்கள் தான் அனைத்துக் குடும்ப சுமையை ஏற்கின்றனர்.  வேலை இல்லையென்றாலும் சிறு சிறு தொழில்களில் ஈடுபட்டு குடும்பத்தை தூக்கி நிறுத்துகின்றனர்.

இன்றையச் சூழலில் சொந்தமாக ஏதாவது சிறு தொழில்களில் ஈடுபட வேண்டும் என்கிற எண்ணம் நமது இளைய தலைமுறையினருக்கு ஏற்பட்டிருக்கிறதே அதுவே  பெரிய வெற்றி தான். நமது இளைஞர்கள்  டுரியான் பழம்  விற்பதை நான் பார்த்ததில்லை.  அதனை ஓர் இளைஞர் செய்வதை  இப்போது நான் பார்க்கிறேன்.

இந்த பெருநாள் காலங்களில்  முறுக்கு வியாபாரம், இனிப்பு வகைகள்  பல பெண்கள் ஈடுபடுவதை நாம் பார்க்கிறோம். இத்தோடு நின்று விடாமல் அதனைத் தொடர்ச்சியாக செய்தால்  அந்த வருமானமும் ஒரு கூடுதல் வருமானமாக இருக்கும்.

இப்போது அனைத்து வியாபாரங்களும் ஆன்லைனில்  செய்யப்படுகின்றன.  வெளியே போய் செய்ய வாய்ப்பு வசதி இல்லாதவர்கள்  பொருட்கள் அனைத்தையும்  ஆன்லைனில்  விற்பனை செய்யலாம். தயக்கம் வேண்டாம். தடுப்பார் யாரும் இல்லை?  பின் என்ன,  விற்பனையில் பின்னி எடுப்போம்!

Monday 30 October 2023

விரைவில் எதிர்பார்க்கலாம்!

 

மனிதவள அமைச்சர்  வி.சிவகுமார் கூறியிருப்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை தான்.

ஆனால் அது நாட்டு நலனுக்காக என்று சொல்லும் போது யார் அதனைத்  தவறு என்று சொல்ல முடியும்?  வெளிநாட்டவர் சுமார் 150,000 பேர் வெகு விரைவில் நாடு வந்தடைவர்  என்பதாக அவர் கூறியிருப்பது  'இன்னுமா?' என்கிற கேள்வி நம்மிடையே எழுவது இயல்பு தான்.

இப்போது நாம் எங்குப் பார்த்தாலும் வெளிநாட்டவர் தான் அதிகம் வாழ்வதாக  நமக்குத் தோன்றுகிறது.   இந்நிலையில் இன்னும் பெரிய அளவில் வெளிநாட்டவரைக் கொண்டு வரும் போது நமக்கு அதிர்ச்சி  ஏற்படத்தான் செய்யும்.

இப்போது பல இடங்களில் நாம் பார்ப்பது என்ன?  சண்டை சச்சரவுகள்  வெளிநாட்டவருக்கும் உள்நாட்டவருக்கும்! இங்கு உள்நாட்டவர்கள் செய்கின்ற தொழில்களை  வெளிநாட்டவர்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றனர். அதனால் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. 

அரசாங்கம் நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக வெளிநாட்டவரின் சேவையை நம்பி இருப்பதில் எந்தத் தவறும் இல்லை. நமக்கும்  அது புரிகிறது.  ஆனால் வருபுவர்கள்  எந்த வேலைகளுக்காக எடுக்கப்படுகிறார்களோ  அந்த வேலைகளைத் தவிர்த்து  அவர்கள் வேறு வேலைகளுக்குப் போகாதபடி  கண்காணிப்பது அரசாங்கத்தின் கடமை. பிரச்சனை என்னவெனில் அது போன்ற ஒரு கண்காணிப்பு  மையத்தை   அரசாங்கம் கொண்டிருக்கவில்லை.  வருகிறவர்களும் நாட்டை நன்கு 'புரிந்து' கொண்ட பின்னர்  தனித்தே செயல்பட ஆரம்பிக்கின்றனர். சொந்தமாகத் தொழில் செய்கின்றனர். 'இது எங்கள் நாடு' என்கிற உணர்வை ஏற்படுத்திக் கொண்டு 'எங்களை யாரும் அசைக்க முடியாது'  என்கிற நிலைக்கு வந்துவிடுகின்றனர்! உண்மையைச் சொன்னால் அரசாங்கத்தால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை!

இந்த நிலையில் இன்னும் புதிய வரவுகள் நின்றபாடில்லை. உள்நாட்டவர்கள் இங்கு வேலை இல்லை என்று சொல்லி வெளிநாடுகளுக்குப் போகின்றனர்.  அண்டை நாடான சின்னஞ்சிறு சிங்கப்பூர் தான் இப்போதைக்கு  மலேசியர்களுக்கு  அடைக்கலம் தரும் நாடு.  இங்கு வேலை இல்லை என்று சொல்லி படித்தவர்கள் பலர் பல நாடுகளுக்கும் படை எடுக்கின்றனர். 

இங்குள்ள தொழில் நிறுவனங்கள்  வேலைக்கு ஆளில்லை என்று சொல்லி  வெளிநாடுகளிலிருந்து  தொழிலாளர்களைக் கொண்டு வருகின்றனர்! எங்கே என்ன நடக்கிறது என்று நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. அரசாங்கத்துக்காவது  புரிகிறதா என்பதும் நமக்கு விளங்கவில்லை.

எந்த நாட்டவர் மீதும் நமக்கு  வெறுப்பில்லை.   மலேசியர்களை மறந்து விடாதீர்கள் என்று தான் நினைவூட்டுகிறோம்!

Sunday 29 October 2023

அதிர்ச்சி தரும் செய்தி தான்!

 

இது அதிர்ச்சி தரும் செய்தி தான்!

கடந்த இருபது ஆண்டுகளில் மலேசியாவில்  மாரடைப்பால் ஏற்பட்ட மரணம்  தான்  அதிகம் என்பதாக புள்ளி விபரத்துறை அதிர வைத்திருக்கிறது. அதிர்ச்சி தான் என்ன செய்வது?

இதற்கு முக்கிய காரணம்  மலேசியர்களின் உணவு முறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றமே. அதாவது ஒழுங்கற்ற உணவு முறை. 

மருத்துவர்கள் அடிக்கடி சொல்லுகின்ற ஓரு காரணம் சிகிரெட் பிடிப்பதை நிறுத்துங்கள் என்பது தான். சொல்லிவிட்டு அவர்களும் சிகிரெட் பிடிப்பதை நிறுத்தவதில்லை!  நோயாளியும் நிறுத்துவதில்லை!  யார் பிடித்தாலும் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க  முடியாது என்பது உண்மை.  

ஆனால் மாரடைப்புக்கு சிகிரெட் மட்டுமே காரணம் என்பதாக நாம் எடுத்துக்கொள்ளக் கூடாது. அதுவும் ஒரு காரணம் அவ்வளவு தான். வேறு வகையான தவறான உணவுகளும் காரணம். முடிந்தவரை மருத்துவர் சொல்லுகின்ற அறிவுரையைக் கேளுங்கள். அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப  சொந்தமாக சிகிச்சைப் பெற வேண்டாம். 

நான் சிகிரெட் பிடிப்பதில்லை. எனக்கும் ஓர் அடி விழுந்தது. மாரடைப்பு ஏற்பட்டு அதற்கான ஆப்ரேஷனும் நடந்தது. ஆனால் ஒரு வருத்தமான செய்தி என்னவென்றால் என்னோடு ஆப்ரேஷனுக்காக காத்திருந்தவர்கள் என்னைவிட அனைவரும்  இளம் வயதினர்!  ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்.   சிகிரெட் பிடிக்காதவர்கள் இன்னொரு பத்து, பதினைந்து ஆண்டுகள் தள்ளிப் போகலாம்!  அது கொஞ்சம் கூடுதல்  ஆதாயம் தானே!

இன்னொரு தகவலையும் புள்ளி விபரத்துறை கூறுகிறது.  மாரடைப்பு,  குறிப்பாக அதிகமாக இந்தியர்களுக்கும், மலாய்க்காரர்களுக்கும்  ஏற்படுவதாகக் கூறுகிறது.  சிகிரெட் மற்றும் உணவு முறைகளும்   நமக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.  சீனர்களோ  அதிகம் புற்று நோயினால்  பாதிக்கப்படுவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. காய்கறிகளில் அதிகம் இரசாயனம் கலப்பதும் காரணமாக இருக்கலாம்.

இதனைப் பேசிக்கொண்டே போனால் அதற்கு முடிவே இல்லை.   நம்மால் என்ன முடியுமோ அதனைச் செய்வோம். மருத்தவர்கள் சொல்லுவதை காது கொடுத்துக் கேட்போம். இப்போதைக்கு மருத்துவர்களை விட்டால் வேறு போக்கிடம் இல்லை! அதற்காகப் பயந்து பயந்து வாழ வேண்டிய அவசியல் இல்லை. மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வோம்.  நமது பணிகளைச் செய்வோம்.

அதற்கு மேல் 'மேலே' உள்ளவன் பார்த்துக்கொள்வான்!

Saturday 28 October 2023

ஆபத்து, அவசரம்? எங்களுக்கு இல்லே!


 நாம் சொன்னால் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்! சொல்ல வேண்டியவர் சொன்னால் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆனாலும் சில கல்லுளி மங்கன்கள் எதையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்க மாட்டார்கள். 

அவர்களை விடுவோம். அவர்கள் யாருக்கும் தேவை இல்லாதவர்கள! நமது  தேசிய  வங்கியின்  தலைவர் அப்துல் ரஷித் கபூர் தான் இத்தகைய  தகவலை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார்.  மலேசியர்களுக்கு நிதி நிர்வாகம் என்பதே தெரியவில்லை என்கிறார் அவர். ஏதோ ஓர் ஆபத்து அவசரத்துக்கு உதவ  ஓர் ஆயிரம் வெள்ளியைக் கூட அவர்கள் சேமிப்பில் வைத்திருப்பதில்லை என்கிறார்.

ஆனால் இப்படி சொன்னதும் 'சீனர்களும் அப்படித்தானோ?' என்று எண்ணத்தில் கொள்ளாதீர்கள்! சேமிப்பு இல்லாமல் அவர்களால் வாழ முடியாது.  இங்கு முக்கியமாக சொல்லப்படுவது இந்தியர்களுக்குத்தான் என்று எடுத்துக் கொள்ளுங்கள். மலாயாக்காரர்கள் கூட ஏதோ ஒரு  நிதி பாதுகாப்பைக் கொண்டிருக்கிறார்கள்.  வேலை இல்லையென்றால்  கிராமத்தில் வீடு இருக்கிறது.  சாப்பிடுவதற்கும் வழி இருக்கிறது. நம்மிடம் மட்டும் தான் எந்த பாதுகாப்பும் இல்லை.  சேமிப்பு இல்லை, காப்புறுதி இல்லை.  வீடு இல்லை.  எதுவும் இல்லை. 

நம்மிடம் உள்ள குறைபாடு என்ன?  வேலை இருக்கிறது. அது போதும். நன்றாகச் சாப்பிடுவோம். ஆட்டம், பாட்டம், கேளிக்கை, கும்மாளம், கூத்து - எல்லாம் வேண்டும்.  வெலை இல்லையென்றால்  நடுவீதிக்கு வருவோம்.  சரி, மரம் வைத்தவன் தண்ணீர்  ஊற்றமாட்டானா  என்று தத்துவம் பேசிக்கொண்டு,   உதவ ஆளில்லை என்றால்,   பத்திரிக்கைகளில் செய்தியைப் போட்டு  பொது மக்களின் உதவியை நாடுவோம். இது தான் நமது நிலை. சீனர்கள் யாரும் இப்படி பொது மக்களின்  உதவியை நாடுவதில்லையே!

ஏன்? நம்மால் கொஞ்சம் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள முடியாதா? கொஞ்சம் சேமித்துத் தான் வைப்போமே.  என்ன கெட்டு விட்டது? கணவன் மனைவி  வேலை செய்தால் மாதம் 100 வெள்ளி சேமிப்பு என்றால் ஓர் ஆண்டு 1200 வெள்ளி. அதையே 10 ஆண்டுகள் என்றால் 12,000 வெள்ளி. சரி, இருபது  ஆண்டுகள் என்றால் 24,000 வெள்ளி.  கிராமப்புறங்களில் ஒரு வீட்டையே வாங்கிவிடலாம்!

ஒவ்வொரு குடும்பத்துக்கும் சேமிப்பு முக்கியம்.  சேமிப்பு நமக்குப் பலத்தைத்தரும்.  கஷ்டத்திலும் நம்மைத் தலைநிமிர வைக்கும். நமது பணம் தான் நமக்கு உதவும். அண்ணன், தம்பி என்றால் கூட பணம் என்றால்  உறவு முறிந்து போகும். பணம் எவ்வளவு வலிமையானது  என்று கையில் பணம் இல்லாத போது தான்  புரியும்.

தேசிய வங்கியின் தலைவர் சொன்னால் தான் புரியும் என்று இல்லை.  நாமே அதனை நடைமுறையில் புரிந்து கொள்ளலாம். ஆபத்து, அவசரம்  என்பது அனைவருக்குமே உண்டு. அதிலிருந்து தப்பிக்க ஒரே வழி: சேமிப்பு மட்டுமே!

Friday 27 October 2023

தீபாவளி சந்தை!

 


ஒவ்வொரு தீபாவளி கொண்டாட்டத்தின் போதும் சிறு வியாபாரிகள் தங்களது பொருள்களை விற்பனைச் செய்ய சிறு சிறு கடைகளைத் திறந்து வியாபாரம் செய்ய எல்லா நகரங்களிலும் இந்திய சிறு வணிகர்கள் ஊக்குவிக்கப் படுகின்றனர். 

அது தொடர்ந்து பல ஆண்டகளாக நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது.  சிறு வியாபாரிகளை ஊக்குவித்து அவர்களுக்கு  நல்லதொரு வாய்ப்பையும் வழங்குகிறது அரசாங்கம். இதனால் சிறு வியாபாரிகள் பலர் பயன் அடைகின்றனர்.

ஆனாலும் ஒருசில விஷயங்கள் நம்மைக் குழப்பத்தை  ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு ஆண்டும் சண்டை சச்சரவுகளும் அதிகரித்துக் கொண்டே போகின்றன.  இடங்களை ஒதுக்குவது நகராண்மைக் கழகம். அங்கே உள்ள ஒரு சிலர் ஏதோ கோளாறு செய்கிறார்கள் என்றே தோன்றுகிறது. இவர்கள் தங்களது ஆதிக்கத்தைக் காட்ட விரும்புகின்றனர் என்றே தெரிகிறது. அல்லது இலஞ்சம் வாங்க முயற்சி செய்கிறார்கள் என்றும்  எடுத்துக் கொள்ளலாம்.

ஏதோ ஒரிரு முறை  என்றால் மன்னித்து விடலாம். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் நடைப்பெற்றால்.......? எங்கோ பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது!  எப்போதுமே ஒரு சாரார்  இந்தியர்களுக்குள் அடித்துக் கொள்வதையே விரும்புகிறார்கள்  என்று தான் சொல்ல வேண்டும்.  இல்லாவிட்டால் ஏன் இந்தப் பிரச்சனைத் தொடர்ந்து வர வேண்டும்?

ஒன்று பிரச்சனைக் கொடுக்கும் நாகராண்மைக்கழக அதிகாரிகளை மாற்றுங்கள்.  இவர்கள் வேண்டுமென்றே  வியாபாரிகளிடையே  சச்சரவுகளை ஏற்படுத்துகின்றனர். பாவம்! இந்த சிறு வணிகர்கள். நிம்மதியாகப் பொருள்களை வாங்கி, நிம்மதியாக வியாபாரம் செய்ய முடிவதில்லை. ஒவ்வொரு ஆண்டும் இந்தக்கதை தொடர்கிறது.

சிறு வியாபாரிகளுக்கு ஒரு சிறிய ஆலோசனை.  "நான் சிறு வியாபாரி"  என்று காலங்காலமாக முத்திரைக்குத்திக் கொள்ளாதீர்கள்.  இது தான் காலங்காலமாக  நடந்து கொண்டிருக்கிறது. அப்படியே பெரியவர்கள் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருந்தால்  அதனை ஏதோ பழக்க தோஷம் என்று விட்டுவிடலாம். ஆனால் அவர்கள் பிள்ளைகள் எல்லாம் படித்தவர்கள், கல்விகற்றவர்களாக  இருக்கிறார்கள்.  அதனால் தொழிலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போக தங்களது பொது அறிவைப் பயன்படுத்தி  தொழிலை மேம்படுத்த  முயற்சிகள் செய்ய வேண்டும்.

சிறு வியாபாரிகள் வளர வேண்டும். அடுத்த கட்டத்துக்குப் போக வேண்டும். புதிய வியாபாரிகள் வரவேண்டும். புதியவர்களுக்குப் பழையவர்கள் இடம் கொடுக்க வேண்டும். இந்த சுழற்சி நடந்து கொண்டே தான் இருக்க வேண்டும்.  அப்போது தான்  நமது சமுதாயம் முன்னேறுகிறது  என்று நமக்கும் நம்பிக்கை பிறக்கும்.

கடைசியில் எல்லாமே பொருளாதார முன்னேற்றம் தான்!  அதற்கு இந்த தீபாவளி சந்தையும் ஒரு காரணம் என்பதை மறப்பதற்கில்லை!

Thursday 26 October 2023

நமது பள்ளிகள் வரம்பை மீறுகின்றன!

 

                                        Students, Teachers holding  toy guns.  Malaysia

நமது பள்ளிகள் வரம்பை மீறுகின்றன என்று நான் சொல்லவில்லை நமது பிரதமரே கூறுகின்றார்!

இஸ்ராயேல்-பாலஸ்தீன விவகாரத்தில் நாம் எல்லா காலங்களிலும்  பாலஸ்தீனத்தை தான் நாம் ஆதரித்து வருகிறோம்.

இந்தப் பிரச்சனையை எப்படிக் கையாள்வது என்பதை அரசாங்கத்தின் கைகளில்  விட்டுவிடுங்கள்.  அது தான் சரியான முடிவாக இருக்கும். அரசாங்கம் ஒன்றும் தவறான வழிகளைக் காட்டவில்லை. அவர்கள் பாதை சரியானது என்கிற போது அவர்களை ஆதரிப்பது என்பது நமது கடமை.

அரசாங்கம்  அப்படியே தவறான பாதையைக் காட்டினாலும்  மலேசியர்கள் சரியான பாதையைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். நமக்கும் போதுமான கல்வி அறிவு இருக்கிறது அல்லவா?

இந்தப் பிரச்சனையில் பலர் இந்த சண்டையை மூட்டியவர்கள் பாலஸ்தீனர்கள்  தானே  என்று அவர்கள் மீது பழியைச் சுமத்தினாலும், பாதிக்கப்பட்டவர்கள்  அவ்வளவு சீக்கிரத்தில் செய்த துரோகங்களை மறந்துவிடப் போவதில்லை.

நமது நாட்டைப் பொறுத்தவரை நாம் பாலஸ்தீனர்களை ஆதரிக்கிறோம். அவ்வளவு தான். இப்போது அரசாங்கம் சரியான பாதையில் செல்லுகிறது. பாலஸ்தீனர்களுக்கான உதவிகளைச் செய்து வருகிறது. குறிப்பாக மருத்துவ உதவிகள். இதுவே அவர்களுக்கு முக்கியத் தேவை. எல்லாம் சரியான வழியில் செல்லுகின்றன.

ஆனால் பள்ளிகளில் நடைபெறுகின்ற ஒரு சில விஷயங்கள் நமக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை.  மாணவர்கள் பிரச்சனையைப்  புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது வேறு  ஆனால் அவர்களைப் போருக்குத் தயார் படுத்துவது  போன்ற    வேலைகளில் ஈடுபடுத்துவது என்பது வேறு.  இதில் ஆசிரியர்கள் கூட பங்குப்  பெற்று என்ன தான் சொல்ல வருகிறார்கள்?  

இவர்களால் யாருக்கு என்ன இலாபம்?  இவர்களால் போர் செய்ய முடியாது.  நம்மால் என்ன செய்ய முடியுமோ அதைத்தான்  நாம் செய்ய வேண்டும்.  அவர்களுக்கு என்ன உதவிகள் தேவையோ அதனைச் செய்ய நாம் கடமைப்பற்றிருக்கிறோம்.  பள்ளிப் பிள்ளைகளுக்கு நீதி, நியாயம்  பற்றி போதிக்க வேண்டும். பள்ளிகளில் நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டங்களைப் பார்க்கும் போது ஆசிரியர்களுக்கே இன்னும் தெளிவில்லாமல் இருக்கிறார்கள் என்பது புரிகிறது! 

இன்று நாட்டில் நாம் அருந்துகிற பானங்கள் அனைத்தும் இஸ்ராயேலர்களின்  பங்கு அதிகம். ஆர்ப்பாட்டங்கள் செய்துவிட்டு அவர்களுடைய பானங்களத் தான் குடிக்கப்போகிறோம். குறைந்தபட்சம் அவர்களின் பொருள்களைப் புறக்கணியுங்கள்  என்று இளம் தலைமுறைக்குச் சொல்லிக் கொடுக்கலாம்.

கொஞ்சம் சிந்தியுங்கள். கொஞ்சம் அக்கறை எடுத்து அவர்களின் பொருள்களைப் புறக்கணியுங்கள். அது போதும்!

Wednesday 25 October 2023

குறைகளை எங்கே சுட்டிக்காட்டுவது?

 

                                                              Little India, Seremban.

ஒற்றுமை அரசாங்கத்தில் நமது நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் நிலை என்ன என்பதை நம்மால் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்களை ஏன் விழுந்து விழுந்து தேர்ந்தெடுத்தோம் என்பது நமக்கும் புரியவில்லை, அவர்களுக்கும் புரியவில்லை!

ரொம்ப பெரிய பெரிய விஷயங்களுக்கெல்லாம் போக வேண்டாம்.  சிரம்பானில்  இந்த ஆண்டு தீபாவளி கொண்டாடத்தின் போது வழக்கம் போல சிறு சிறு வியாபாரிகள் தங்களது பொருள்களை விற்பனை செய்ய "லிட்டல் இந்தியா" என்று சொல்லப்படுகின்ற இடத்தில் இடங்கள் ஒதுக்கப்படும். தீபாவாளிக்கு  இரண்டு  வாரங்களுக்கு முன்னர் அவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படும் . இது தான் வழக்கம்.

எனக்குத் தெரிந்து இந்த விற்பனை  எந்த வருடம் ஆரம்பித்ததோ  அப்போதிருந்தே,  அன்று முதல்  இன்றுவரை,   சுமுகமாக நடந்ததாகத் தெரியவில்லை.  ஒவ்வொரு ஆண்டும் இழுபறிகள், ஆவேசமான பேச்சுகள் தொடர்ந்து  கொண்டே   இருக்கின்றன.   ஒவ்வொரு சமயமும் 'இலஞ்சம்! இலஞ்சம்!' என்று தான் சொல்லப்படுகின்றது.

அப்போது ம.இ.கா. இருந்ததால் வசதியாக ம.இ.கா. வினரைக் குறை சொன்னோம்! இப்போதும் ஒற்றுமை அரசாங்கத்தில் ம.இ.கா.வினர் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்போது அந்தப் பொறுப்பு மாறி இருக்க வேண்டும்.  குறிப்பாக அது ஜ.செ.க. தொகுதி என்பதால் அவர்கள் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். அல்லது பி.கே.ஆர். அந்தப் பொறுப்பை ஏற்றிருக்க வேண்டும். ஆனால் இப்போதும் என்ன குற்றச்சாட்டு முன்பு சொல்லப்பட்டதோ அதே குற்றச்சாட்டு தான் இப்போதும் சொல்லப்படுகிறது!

இது போன்ற சிறிய பிரச்சனையையே தீர்க்க முடியாதவர்கள்  இவர்கள் எங்கே பெரிய பிரச்சனைகளைத் தீர்க்கப் போகிறார்கள் என்கிற கேள்வி எழுவது இயல்வு.

உண்மையைச் சொன்னால் ஒற்றுமை அரசாங்கத்தில் ஜ.செ.க., பி.கே.ஆர். கட்சிகளின்  நிலைப்பாடு என்ன என்பதே தெரியவில்லை. முடிந்தவரை எந்த ஒரு பிரச்சனையிலும் தலையிடாமல் மௌன சாமியார்களாகவே இருக்க விரும்புகின்றனர்.  சீனர்களுக்கு எல்லா கட்சிகளுமே அவர்களின் உரிமைக்குக் குரல் கொடுக்கின்றனர்.  ஆனால் இந்தியர்களுக்கு இந்த இரு கட்சிகளுமே குரல் கொடுக்கத் தயாராக இல்லை. இந்தியர் பிரதிநிதிகள்  வாய் திறக்கவே பயப்படுகின்றனர்! அவர்களின் தொகுதிகளிலாவது  அவர்கள் வாய் திறந்து பேசட்டும்!

குறைகள் இருந்தால் அதனை நீக்கப்பாடுபடுங்கள். 'கண்ட' மாதிரி பேசுவது  தவறு தான்.  ஆனால் நீங்களும் கண்ட மாதிரி நடந்து கொண்டால் பேச்சுக்கள்  அளவு மீறுவதைத் தவிர்க்க முடியாது. முன்பு போல்  இப்போதைய நிலைமை இல்லை.  டிக்டாக்கில் எல்லாருமே பேச ஆரம்பித்துவிட்டார்கள்.  அதனால் முடிந்தவரைப் பிரச்சனைகளைத் தீர்க்க முயலுங்கள்.  இல்லாவிட்டால் வாங்கிக்கட்டிக் கொள்ளுங்கள்!

Tuesday 24 October 2023

கார் மரணம் தொடர்கிறது


 சமீப காலமாக கார்களில்  குழந்தைகளை விட்டுச் செல்வதும், மரணங்கள் ஏற்படுவதும்  மிகவும் வருத்தத்திற்குரிய விஷயமாகவே தோன்றுகிறது. எல்லாம் கைக்குழந்தைகள். சில மாதங்களே ஆன குழந்தைகள்.

குழந்தைகளை இப்படி கார்களில் விட்டுச் செல்வதும் அப்புறம் "மறந்து விட்டேன்" என்று சொல்லுவதும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. இதனால் என்ன நடக்கிறது?  குழந்தைகள் கார்களின் உள்ளே இருக்கிற உஷ்ணத்தில் வெந்து போய், மூச்சுத்திணறி மரணமடைகிறார்கள்.

கேட்கவே மனம் கொந்தளிக்கிறது.   என்னன்னவோ சொல்லத் தோன்றுகிறது. என்ன செய்ய?  "பெற்றோர்கள் எப்படி மறக்கிறார்கள்?" என்று கேட்டாலும் இன்னொரு பக்கம் "பிள்ளைகளை எப்படி அப்படியே காரில் விட்டுவிட்டு இவர்கள் ஷாப்பிங் செய்யப்  போகிறார்கள்?" என்றும் கேட்கத் தோன்றுகிறது.  ஏன் அவர்கள் குழந்தைகள் தானே?  கையில் தூக்கிக்கொண்டு போகலாமே என்று கேட்டால் 'இவர்களை வைத்துக்கொண்டு எதையும் வாங்க முடியாது" என்கிற பதில் வருகிறது!

இன்றைய  இளம் பெற்றோர்கள் எந்த ஒரு கஷ்டமும் படக்கூடாது  என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். எல்லா கஷ்டங்களையும் போல  இதுவும் ஒரு கஷ்டம் என்று நினைக்கிறார்கள்!  அதாவது பிள்ளைகள் கஷ்டம் அல்ல. அவர்களைப் பாதுகாப்பது, அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவது,  கடமைகளைச் செய்வது - அதனைக் கஷ்டமாக நினைக்கிறார்கள்!   வேலைக்குப் போவது, வருவது எளிது என்கிற கனநிலைக்கு  அனைவரும் வந்துவிட்டார்கள்!

அதனால் தான் இப்போதெல்லாம் ஒரு குழந்தைக்கு மேல் வேண்டாம்  என்கிற நிலைமைக்கு  இன்றைய ஜோடிகள் வந்துவிட்டனர்! அது அவர்களது விருப்பம். ஆனால் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு  கொடுப்பதில் அவர்கள் அலட்சியம் செய்ய முடியாது. அது அவர்களது விருப்பம் அல்ல.  அது கடமை.

அதுவும் பராமரிப்பு மையம் இருந்தும் இப்படியெல்லாம் நடந்தால் என்ன தான் செய்வது?  பராமரிப்பு மையம் இருந்தும் மரணம், இல்லாவிட்டாலும் மரணம், பராமரிப்பு மையத்திலேயே மரணம்,  மழலையர் பள்ளிகளுக்கு அனுப்பினாலும் மரணம் - இப்படி எல்லா இடங்களிலும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லை. அப்படி என்றால் யாரும் தங்களது பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.

இது போன்ற மரணங்களை எப்படி தடுக்கப் போகிறார்கள்  என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Monday 23 October 2023

பிஸா உணவில் காந்தக்கல்!


 எந்த உணவாக இருந்தாலும் வெளியே உணவகங்களிலோ அல்லது துரித உணவகங்களிலோ  சாப்பிடும் உணவுகளில் ஏதேனும்  நாம் சாப்பிடக் கூடாத ஏதாவது கலக்கப்பட்டிருக்கிறதா  என்பதைப் பார்த்துத்தான் சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்!

பலமுறை நாம் இது பற்றி  பேசியிருக்கிறோம்.  யாரை நாம் குற்றம் சொல்லுவது?  பணியாளர்கள் வேண்டுமென்றே செய்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டும் உண்டு. அதாவது அதிருப்தி அடைந்த பணியாளர்கள் இப்படியெல்லாம் செய்யக்கூடும்.  யார் மீதோ உள்ள வன்மத்தை யார் மீதோ காட்டுகிறார்கள்!  ஆனால் பாதிக்கப்படுபவர்கள்  வாடிக்கையாளர்கள் என்பதை மறந்துவிடுகிறார்கள்.

மேலே நாம் பார்ப்பது  துரித உணவகமான பிஸா உணவகத்தில்  வாடிக்கையாளர் ஒருவர் ஆர்டர் செய்து வாங்கியது. அந்த உணவில் ஒரு காந்தக்கல் வருவதற்கான வாய்ப்பே இல்லை. காந்தம் எதுவும் அவர்களுக்குத் தேவைப்படுவதாகத் தெரியவில்லை. அப்படியென்றால் அது வலிந்து உணவில் திணிக்கப்பட்டிருக்கிறது என்று தான் நாம் நினைக்க வேண்டியுள்ளது.

பிஸா தயாரிக்கப்படும் இடத்திற்கு வெளியார் யாரும் போக எந்த நியாயமுமில்லை. தயாரிக்கப்படும் இடத்தில் குறிப்பிட்ட ஒரு சிலர் தான் அதனைக் கையாள்வார்கள். அங்கே உள்ள யாரோ ஒருவர். என்ன செய்வது? பொறாமை காரணமாக இருக்கலாம். யாரையோ பழிவாங்குவது காரணமாக இருக்கலாம். அந்த பிஸா நிறுவனத்திற்குக் கெட்ட பெயரை ஏற்படுத்துவதாக இருக்கலாம். இப்படி பல காரணங்கள்!

பொறாமையால் எந்த நன்மையும் நிகழப்போவதில்லை. பழி வாங்கலாம். அது உங்களுக்கும் நடக்கும். இது இப்படியே நடந்து கொண்டு போனால்  யாருக்கும் எந்த நன்மையும் இல்லை.

உணவகங்களில் பணிபுரிபவர்களுக்கு  அதிருப்திகள் இருந்தால்  அது பேசித்தீர்த்துக் கொள்ளப்பட வேண்டிய விஷயம். தவறான முறைகளைக் கையாளவது சரியாகாது. இன்று நீங்கள் செய்தால் நாளை உங்களுக்கும் நடக்கும். ஏன்? நாளை நீங்களும் உணவகங்களை நடத்தலாம் அல்லவா?

எந்த உணவகங்களாக இருந்தாலும் சரி அல்லது துரித உணவகங்களாக இருந்தாலும் சரி உணவு மனிதர்கள் சாப்பிடுபவை.  உணவுக்கு மரியாதைக் கொடுங்கள் என்பதுதான்  நாம் கொடுக்கும் அறிவுரை. அதனை அசிங்கப்படுத்தாதீர்கள். யாரோ செய்கின்ற தவறுகளுக்காக  வாடிக்கையாளர்களைப் பழிவாங்காதீர்கள்.

பெரியவர்கள் எப்படியோ சமாளித்து விடுகிறார்கள். குழந்தைகள் என்ன செய்வார்கள்? அவர்கள் என்னவோ ஏதோ  என்று சாப்பிடத்தான் செய்வார்கள். அது அவர்கள் உடல் நலனைப் பாதிக்கும். நினைத்துப்பார்க்க முடியவில்லை.

பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள் என்பது தான் எங்களின் செய்தி.

Sunday 22 October 2023

வீட்டின் முன் கார்களை நிறுத்தாதீர்!

 

இது எல்லா தாமான்களிலும் உள்ள பிரச்சனைதான்.

என் வீட்டில் எனது கார் வீட்டின் உள்புறம், கார் நிறுத்துமிடத்தில்,  நிறுத்தப்பட்டிருக்கிறது. யாருக்கும் எந்த இடைஞ்சலுமில்லை. என் வீட்டின் வெளிப்புறம், கார் நிறுத்தக் கூடாத இடத்தில், வரிசையாக கார்கள்  நிறுத்தப்பட்டிருக்கின்றன!யார் வீட்டுக் கார்கள் என்பது கூட தெரியவில்லை!இதனால் என்ன பிரச்சனை? எங்கள் வீட்டுக் காரை 'பார்க்கிங்' செய்வதற்கு  எங்களுக்கு மகா மகா இடைஞ்சல்!  இருந்தாலும் அனைவரும் நல்ல மனிதர்கள் என்பதால்  எந்தப் பிரச்சனையும் எழவில்லை!

என் நண்பர் ஒருவர் மகா திறமைசாலி. அவர் வீட்டு முன் யாரும் கார்களை நிறுத்தக் கூடாது என்பதற்காக அந்த காலியான இடங்களில் நிறைய பூச்செடிகளை  நட்டுவிட்டார்! அந்த இடங்களில் யாரும்  கார்களை நிறுத்த முடியாதுபடி செய்துவிட்டார்! அவர் அங்காளி பங்காளி சண்டைகளைப் பார்த்தவர். பவருக்குத் தெரிந்தது நமக்குத் தெரியவில்லை.

ஒரு சில தாமான்களில் நாம் பார்த்திருக்கிறோம். இரண்டு பக்கமும் கார்கள். நடுவில் கார்களே போகாதபடி செய்திருப்பார்கள்! அந்த அனுபவமும்  நமக்கு உண்டு.  ஒரு வீட்டில் இரண்டு மூன்று கார்கள் இருந்தால்  என்ன தான் செய்வது? 

இப்போது ஒரு நல்ல செய்தி கிடைத்திருக்கிறது. அதன் அமலாக்கத்தில் என்ன பிரச்சனைகள் வரும்  என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஜொகூர், பாசிர் கூடாங் நகராணமைக் கழகம், வீடுகளின் முன்னால் கார்களை நிறுததக் கூடாது என்று தடை விதித்திருக்கிறது.  அது ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வருகிறது. இதனை ஒரு பரிட்சார்த்த முறை என்பதாக எடுத்துக் கொள்ளலாம். இந்த அமலாக்கம் இங்கு வெற்றி பெற்றால் ஒரு வேளை இது  நாடெங்கிலும் அமலுக்கு வரலாம்.

கேட்க நன்றாக இருக்கிறது. இது சாத்தியமா என்கிற குரலும் நமக்குக் கேட்கிறது!  சாத்தியம் இருப்பதாகவும் தெரியவில்லை.   ஆனாலும் அவ்வளவு சீக்கிரத்தில் நாம் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது.  முயற்சி செய்கிறார்கள்.  நல்ல விஷயம் தான்.  

போகப்போக அதிலே கொஞ்சம் மாற்றங்கள் ஏற்படலாம். நூறு விழுக்காடு சரியாக இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. பரவாயில்லை. ஏறக்குறைய  இருந்தாலே போதுமானது. ஆனாலும் அமலாக்கம் செய்யப்படும் வரை நம்மால் எந்த முடிவுக்கு வர முடியாது.

அதுவரை நாமும் அவர்களின் குரலுக்குச் செவி சாய்ப்போம்!

Saturday 21 October 2023

இதைத் தவிருங்கள்!

 

இது பள்ளிப்பிள்ளைகளிடையே நடந்த சம்பவம். ஆனால் ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவம்

குற்றத்தை யார் மீது சுமத்துவது? அவசியமில்லை. இருவருமே சிறுமிகள். ஆனால் மற்ற சிறுமிகளுக்கு இது பாடம்.

நீங்கள் சம்பந்தப்படாத ஒருவரின் புகைப்படத்தை அவர்களின் அனுமதியில்லாமல் வலைதலைங்களில் பதிவேற்றம் செய்வது  மாபெரும் தவறு என்பதை மீண்டும்  நினைவுப்படுத்துகிறோம்.

பள்ளிக் குழந்தைகள் என்பதால் அவர்களால் அதனைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இப்போது அந்த  பிரச்சனையைக்   காவல்துறையினர்  கையில் எடுத்திருக்கின்றனர். 

நடந்தது என்ன? ஒரு மாணவியின் புகைப்படத்தை இன்னொரு மாணவி  டிக்டாக்கில் அந்த மாணவியின் அனுமதியின்றி  பதிவேற்றம் செய்திருக்கிறார். அந்த புகைப்படம் அந்த மாணவிக்கு எங்கிருந்து கிடைத்தது என்று தெரியவில்லை. பாதிக்கப்பட்ட மாணவி அது பற்றி விசாரித்திருக்கிறார். "அந்த புகைப்படம் எப்படி உனக்குக் கிடைத்தது, எங்கிருந்து கிடைத்தது, ஏன் அந்த புகைப்படத்தை பதிவேற்றம் செய்தாய்?" போன்று அந்த மாணவியிடம் கேள்விக்கணைகளைத் தொடுத்திருக்கிறார். அத்தோடு நிற்காமல் ஒவ்வொரு கேள்விக்கும் ஒவ்வொரு அறை அந்த மாணவிக்கு விழுந்திருக்கிறது!

இந்த பிரச்சனை தான் இன்று பூதாகரமாகி  இப்போதுகாவல்துறை கையில் எடுத்திருக்கிறது. இது ஒன்றும் பெரிய பிரச்சனை அல்ல. சின்ன பிரச்சனைதான். இரு சிறுமிகளையும் சமாதானப்படுத்தி விடலாம். அந்த புகைப்படத்தையும் அழித்துவிடலாம்.  ஆனால் புகைப்படத்தைப் பலர் இந்நேரம் பதிவிறக்கம் செய்திருப்பார்கள்! 

டிக்டாக் செய்பவர்கள் இதனைக் கவனிக்க வேண்டும். அவர்கள் குழந்தைகள் அறியாமல் செய்துவிட்டார்கள்.   மன்னித்துவிடலாம்.  ஆனால் நமது இளைஞர்கள்  பலர் இந்த வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.  யாருக்குத் தெரியப் போகிறது என்கிற எண்ணம் அவர்களுக்கு உண்டு. காரணம் எதிர்தரப்பினர் அப்பாவிகளாக இருப்பார்கள். வலைதளங்களைப் பயன்படுத்த  தெரியாதவர்களாக இருப்பார்கள். அவர்களை எப்படியும் பயன்படுத்தலாம் என்கிற நினைப்பு இவர்களுக்கு. ஆனால் நேரம் ஒரே மாதிரியாக இருக்காது. அகப்பட்டால்...?

நாம் சொல்ல வருவதெல்லாம் அவர்கள் பள்ளிப்பிள்ளைகள். அறியாமல் செய்கிறார்கள். ஆனால் வளர்ந்துவிட்டவர்கள் அப்படியெல்லாம் செய்தால் அதற்கான தண்டனைகள் உண்டு.  எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இது மற்றவர்களைக் கேவலப்படுத்தும் விஷயம்.

இது போன்ற விஷயங்களைத்  தவிருங்கள் என்பதைத்  தவிர,  வேறு அறிவுரைகள் இல்லை!

Friday 20 October 2023

கோழி விலை உயர்ந்தது!

 

கோழி விலை உயர்ந்தது!  அரசாங்கம் விலை உயர்த்தப்படும்  என்று  சொன்னதுமே உடனே விலையை ஏற்றிவிட்டனர் வியாபாரிகள்!

விலையேற்றம் என்பது ரி.ம. 1.10 காசுகள்.  முன்பு விற்ற விலை ரி.ம.9.40. விலையேற்றத்திற்குப்  பின்னர் அதன் விலை  ரி.ம.10.50 என்று இன்று உயர்ந்து நிற்கிறது!

அரசாங்கத்தின் விலையேற்றம் இன்னும் உறுதிபடுத்தாத நிலையில்  வியாபாரிகள் விலையை ஏற்றிவிட்டனர்.  யார் அவர்களைக் கேட்க முடியும் என்கிற கேள்வி நமக்கு எழத்தான் செய்கிறது.  ஆனால் அரசாங்கம் எதனையும் கண்டு கொள்ளாத நிலையில்  இப்படித்தான் நடக்கும் என்பது நமக்குப் புரிகிறது.

ஆளுக்கு ஒரு காரணத்தைச் சொல்லுவார்கள்.  அரசாங்கம் நாங்கள் இன்னும் உயர்த்தவில்லை என்பார்கள். வியாபாரிகள்  மொத்த வியாபாரிகளின்  மீது பழிபோடுவார்கள். இது தெரிந்த கதை தான்! பாதிக்கப்படுவது மக்கள் தான்.  யார் கண்டு கொள்வது?

கோழி உணவு என்பது, இன்றைய நிலையில், பணக்கார உணவு என்று சொல்வதற்கில்லை. அனைவராலும், பணக்காரன்-ஏழை  என்கிற பாகுபாடு இல்லாமல்  சாப்பிடப்படும் ஓர் உணவு. அதன் விலையேற்றம் என்பது ஏழை, நடுத்தர மக்களைப் பாதிக்கும். ஒரேடியாக விலை ஏறும் போது அது ஏழை குடும்பங்களைப் பாதிக்கத்தான் செய்யும்.

மற்ற இறைச்சி வகைகளோடு ஒப்பிடும் போது  கோழி விலை தான்  ஓரளவு குறைச்சலான விலையில் விற்கப்படுகிறது. அதனால் தான் கோழிகள் நாட்டில் பரவலாக - மிக எளிதாகக் கிடைக்கும் உணவாக  நாடெங்கிலும் விற்கப்படும்  நிலை ஏற்பட்டுவிட்டது.  எந்த ஒரு மளிகைக்கடைக்குப் போனாலும்  கோழி இறைச்சி மிக எளிதாகக் கிடைக்கும். அந்த அளவுக்கு அருகிலேயே கிடைக்கும் உணவாக  அது மாறிவிட்டது.

அரசாங்கத்திடம் நமது கோரிக்கை எல்லாம் கோழி விலை ரி.ம.10.50 என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத விலை.   விலை அதிகம். நடுத்தர குடும்பங்கள் கூட இதனைச் சமாளிக்க முடியாத நிலையில் தான் இருக்கிறார்கள்.  ஏழைகள் நிலை என்னவாகும்?  அதுவும் குறிப்பாக தீபாவளி போன்ற பெருநாள் காலங்களில் விலையை ஏற்றுவது இன்னும் சிரமத்தைத்தான் ஏற்படுத்தும்.  

பெருநாள் காலங்களில்  விலைகளை ஏற்றுவது தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. அரசாங்கம் உடனடியாக இதில் தலையிட்டு, விலையைக் குறைத்து, சீர் செய்ய வேண்டும் என்பதே நமது கோரிக்கை.

Thursday 19 October 2023

வீடு புதுப்பிக்கீறீர்களா?

 

                                                                  House Renovation

`வீடுகளை வாங்குகிறோம். நல்ல செய்தி. சொந்த வீடு  வாங்குகிறோம் என்பதே நல்ல செய்தி தான்.

ஆனால் சொந்த வீடு என்றால் வாங்கிய கடனை வங்கிக்கு முழுமையாக கட்டியிருக்க வேண்டும். அதன் பின்னர் தான்  நம் வீடு. நம் சொந்த வீடு என்கிற உரிமை அந்த வீட்டின் மேல் நமக்கு உண்டு.

வங்கிக்குக் கடன் கட்டிக்கொண்டிருக்கும் காலத்தில்  சிலர் வீட்டைப் பெரிய அளவில்  மாற்றங்களைச் செய்து கொண்டிருப்பார்கள். அதாவது புதுப்பித்துக் கொண்டிருப்பார்கள். அதற்கும் பெரிய அளவில் பணம் தேவைப்படும்.

நம் வீட்டுக்குச் செலவு செயது மாற்றங்களைக் கொண்டு வருவது பார்ப்பதற்கு அழகாகத்தான் இருக்கும். மற்றவர்களும்  பாராட்டத்தான் செய்வார்கள். பாராட்டப்பட வேண்டும் என்பதற்காக பணத்தைக் கொண்டு போய் கொட்ட முடியாது. காரணம் அது உங்கள் வீடு அல்ல, வங்கி தான் உண்மையான உரிமையாளர். அதற்காக என்ன செய்யலாம். புதிப்பிக்க ஆகும் செலவை நீங்கள் வங்கியின் கடனை அடைக்க முயற்சி செய்யலாம். இப்படி செய்வதன்  மூலம் வங்கியின் கடன் சீக்கிரம் அடைபடும்.  வீடு உங்களுக்குச் சொந்தம் என்றால் அதன் பின்னர் எந்த மாற்றங்கள் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.

ஒரு சிலர் கண்மூடித்தனமாக செலவு செய்கின்றனர். இன்று நாம் சம்பாதிப்பது போல  நாளை முடியுமா என்பதை யாராலும் கணிக்க முடியாது. வியாதியில் வீழலாம். விபத்துகள் ஏற்படலாம்.  அது நிரந்தரமாகக் கூட ஆகிவிடலாம். வருமானம் இல்லாத காலத்தில் வங்கிக்கு நீங்கள் பணம் கட்ட முடியவில்லை என்றால்  வங்கிகள் தயவு தாட்சண்யம்  பார்ப்பதில்லை. உடனே வீட்டை ஏலத்திற்குக் கொண்டு வந்துவிடுவார்கள்.

வங்கிக்கடன்  எவ்வளவு சீக்கிரத்தில்  கட்ட முடியுமோ  அதனைக் கட்டி முடிப்பதுதான்  புத்திசாலித்தனம். தேவையில்லாமல் பத்து ஆண்டுகள், இருபது ஆண்டுகள் என்று காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. கடன் இல்லை என்றால் நீங்கள் சுதந்திரமானவர்.  அது ஒன்றே போதும். நிம்மதி பெருமூச்சு விடலாம்.

வீடு உங்களுடையது என்றால் தாராளமாகச் செலவு செய்யுங்கள். வீடு வங்கியினுடையது  என்றால்  நீங்கள் செய்யப்போகின்ற செலவுகளைக் கொண்டு வங்கியின் கடனை அடைக்க முயலுங்கள். வீடு என்பது நமது எதிர்காலம். நமது குழந்தைகளின் எதிர்காலம்.  நிகழ்காலத்தில் செய்ய வேண்டியவைகளைச் சரியாக செய்துவிட்டால் எதிர்காலம் சரியாக அமையும்.

Wednesday 18 October 2023

சொந்த வீடு அவசியம் தேவை!

 


இன்றைய நிலையில் மலேசியாவில் வீடு வாங்குவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. முதலில் அதனைப் புரிந்து கொள்ளுங்கள்.

ஒரு காலகட்டத்தில்  மக்கள் மீது அக்கறை உள்ள அரசாங்கம் மூன்று விதமான வீடுகளைக் கட்டின. மலிவு வீடுகள், நடுத்தர வீடுகள், வசதி படைத்த பங்களா வீடுகள்.  ஆனால் இப்போது  அது போன்ற வீடுகள் தேவை இல்லையா அல்லது அரசாங்கத்தின் ஆதரவு இல்லையா  என்பதும்  பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

போகிற போக்கை பார்க்கின்ற போது  மலிவு வீடுகளைக் கட்டுவதற்கு வீடுகட்டும் நிறுவனங்கள் விரும்புவதில்லை. அரசியல்வாதிகளின் ஆசி,  அவர்களுக்கு உண்டு. 

எது எப்படியிருந்தாலும் வருங்காலங்களில் B40, நடுத்தர மக்கள்  வீடுகள் வாங்குவது என்பது கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். குடும்பங்களில் கொஞ்சம் சிரத்தை எடுத்து வீடு வேண்டும்  என்று முயற்சி செய்தால் நிச்சயம் சாதிக்க முடியும். எல்லாம் நம் கையில் தான் உள்ளது.

இப்போதும் குடும்பங்கள் அண்ணன் தம்பி, அக்காள் தங்கை என்று ஒன்றாகத்தான் வாழ்கின்றனர். ஒன்றாக வாழும் போதே வீடுகளை வாங்கி விடுங்கள்.  இரண்டு மூன்று பேர் சம்பாத்தியம் இருந்தால் வீடுகள் வாங்கிவிடலாம்.

"தலைக்கு மேல் ஒரு கூரை இருந்தால் நீங்கள் கோடீஸ்வரன்" என்பதாக நண்பர் ஒருவர் கூறியிருந்தார்.  உண்மை தான்.  இப்போதே பலரை நாம் பார்க்கிறோம். நன்றாக இருந்த குடும்பங்கள், வேலை இழந்து, நடுவீதிக்கு வந்துவிட்டன.  என்ன செய்வது? எங்கே போவது?  என்கிற நிலைமையில் பல குடும்பங்கள்  இன்று இருக்கின்றன.  சொந்த வீடு என்று ஒன்று இருந்தால் குடும்பம் அங்கே தங்கிகொண்டு கிடைதத வேலையைச் செய்து கொண்டு  காலத்தைக் கழிக்கலாம். வாடகை வீடு என்றால் கடைசியில் நடுவீதி தான்.

நண்பர்களே! இப்போது நாம் நன்றாக யோசிக்க வேண்டிய தருணம். தனி ஆளாக இருந்தால் எப்படியோ என்று விட்டுவிடலாம். ஆனால் குடும்பம்? குழந்தைகளை நடுவீதியில் கொண்டு போய் நிறுத்துவது எவ்வளவு பெரிய  கேவலமான  நிலை ஒரு அப்பனுக்கும் அம்மாவுக்கும்?  

வீடு வேண்டும். அது கட்டாயம். அதைவிடக் கட்டாயம் அதைக்கட்டி முடிக்க நாம் எடுக்கும் நேரம்.  வாடகை வீட்டில் எப்போதும், சாகும்வரை குடியிருக்க முடியாது.  அவர்கள் விரட்டும்வரை  நாம் அங்கிருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் பார்த்துக்கொள்ள  வேண்டும்.

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு  நாட்டின் நிலைமை மாறிவிட்டது.  மக்களின் பொருளாதாரம் சரிந்துவிட்டது.  அதனைத் தூக்கிப்பிடிக்க நாம் நினைத்தால் நம்மால் மட்டுமே முடியும்!

Tuesday 17 October 2023

வாடகை வீடு கிடைப்பதில்லை!

 


நாம், இந்தியர்கள்,  எதிர்நோக்கும்  பிரச்சனைகளில் இப்போது மட்டும் அல்ல, நீணட நாள்களாகவே வீடு வாடகைக்குக் கிடைப்பதும் ஒன்றாகிவிட்டது.

நமது நிலைமையைப் பார்க்கும் போது ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது  என்று நமக்குள் கேட்டுக் கொள்ளத்தான் முடிகிறதே தவிர வேறு  என்ன தான் சொல்ல?  ஒரு சிலர் செய்கின்ற தவறுக்காக  பார்த்தீர்களா, இந்த சமுதாயமே பாதிக்கப்படுகிறதே அதுபற்றி யோசித்தோமா?

ஒரு எண்ணத்தை நாம் எப்போதும் மனத்தில் இறுத்திக்கொள்ள வேண்டும்.  நாம் தனிப்பட்ட முறையில் செய்கின்ற தவறுகள்  இந்த சமுதாயத்தையே  பாதிக்கும் என்கிற எண்ணம் எப்போதும் இருக்க வேண்டும்.   இந்த சமுதாயத்தைப் பாதிக்கும் என்றால் அது தவிர்க்கப்பட வேண்டும்.

வீட்டை வாடகைக்கு எடுக்கிறோம். வீட்டின் உரிமையாளர் என்ன சொல்கிறாரோ அதை   ஏற்றுக்கொண்டு அதன் படி நடக்க வேண்டும். வீட்டை ஒப்படைக்கும் போது ஒரு சிலர் அதனை  எந்த அளவுக்குச் சேதப்படுத்த முடியுமோ அந்த அளவுக்குச் சேதப் படுத்திவிட்டுத்தான் போவார்கள்.  நோக்கம் என்ன வென்றால்  காலி பண்ணும் போது சும்மா போகக் கூடாது. எந்த அளவுக்கு அந்த உரிமையாளருக்குச் செலவு வைக்க முடியுமோ அந்த அளவுக்குச் செலவு வைக்க வேண்டும்.  அப்படி ஒரு கோபம்!

குடிகாரக் கும்பலாக இருந்தால் பல பிரச்சனைகள். வீடு எப்போதும் அலங்கோலமாய் கிடக்கும். அக்கம் பக்கம் எல்லாம் சண்டை சச்சரவுகள்.  குடித்துவிட்டு சண்டை போடுவதே தொழிலாக இருக்கும்! மற்ற வீட்டாரும் சேர்ந்து "இந்தியர்களுக்கு வீட்டை வாடகைக்குக் கொடுக்காதீர்கள்!" என்கிற கெடுபிடியும் இருக்கும்.

கல்லூரி மாணவர்களையும் இந்தப் பிரச்சனை விட்டுவைக்கவில்லை. ஆமாம், அவர்கள் மட்டும் இளிச்சவாயர்களா என்ன?  அவர்கள் இன்னும் பெரிய குடிகாரர்களாக  இருக்கின்றனர்!  கூச்சல், குழப்பம், அடிதடி எதையுமே அவர்கள் விட்டுவைப்பதில்லை! இவர்களை நம்பிதான் இந்த சமுதாயம் இருக்கிறது. அவர்கள் குடும்பம் இருக்கிறது. ஆனால் அவர்களோ அப்பன் கொடுக்கும் பணத்தில் எல்லா அனாவசிய செலவுகளைச் செய்து சமுதாயத்தின் பெயரைக் கெடுக்கின்றனர்.

நாம் கேட்டுக் கொள்வதெல்லாம்:   நீங்கள் செய்கின்ற தவறுகளால்  இந்த சமுதாயம் பாதிக்கப்படுகின்றது.  அதனை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.  தனிப்பட்ட மனிதனுக்கு வாடகை வீடு கிடைக்கவில்லை என்றால் பரவாயில்லை.  ஒரு குடும்பத்திற்குக் கிடைக்கவில்லை என்றால்  அவர்கள் எங்கே போவார்கள்? எங்கே தங்குவார்கள்?  வேறு ஒரு ஊரில் வேலையின் காரணமாக ஓர் இளைஞன் போகும் போது அங்கே வீடு வாடகைக்குக் கிடைக்காவிட்டால் அந்த இளைஞன் என்ன செய்வான்? சரி அவனே மாணவனாக இருந்தால் அவன்  என்ன செய்வான்?

கொஞ்சம் யோசியுங்கள்.  நம்மால் மற்றவர்களுக்கு எந்த தொந்திரவும் வரக்கூடாது  என்று நீங்கள் நினைத்தால் பொது இடங்களில்  நல்லபடியாக நடந்து கொள்ள வேண்டும். நல்லவர்கள் என்று பெயர் எடுக்க வேண்டும். வீட்டை வாடைகைக்கு எடுத்தாலும் அங்கேயும் நல்லவன் என்று பெயர் எடுக்க வேண்டும்.  இது தான் பொது நீதி!

Monday 16 October 2023

பழைய கதைகள் வேண்டாமே!

 


இளநிலை மாரா கல்லூரிகளிலில் இவ்வாண்டு மாணவர் சேர்க்கையில் தமிழ், சீனப் பள்ளிகளில் பயிலும்  மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என கூறப்படுகின்றது.

இந்த ஆண்டு தான் இக்கல்லூரி மீண்டும் தமிழ் மாணவர்களுக்குத்  திறக்கப்படுகிறதா  அல்லது இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறதா என்பது எனக்குத் தெரியவில்லை. அதனைத் உறுதிப்படுத்த ஆசிரியர் நண்பர்கள் யாரும் அருகில்  இல்லை.

எனக்குத் தெரிந்து இது நீண்ட நாள்களாக  நடப்பில் உள்ளதை நான் அறிவேன். இந்த மாணவர் சேர்க்கை நீண்டநாள்களாக அதாவது சுமார் நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே நான் இதில் கவனம் செலுத்தியிருக்கிறேன்.  ஆனால் அதன் பின்னர் அதனை முற்றிலுமாக மறந்து போனேன். 

அப்போது என்ன என்ன குறை சொன்னார்களோ அதே குறை, அதே குற்றச்சாட்டு இப்போதும் சொல்லப்படுகிறதே என்கிற ஆதங்கம்  எனக்குள் உண்டு. ஒரு மாணவர் கல்வி கற்க எவ்வளவு தடைக்கற்கள்  யார் இந்த தடைகளை ஏற்படுத்துகிறார்?  பெற்றோர் தரப்பிலிருந்து தான்!

 இன்னொரு பக்கம் கல்லூரிகளும் தமிழ், சீன மாணவர்கள் வர இயலாதவாறு, கண்ணுக்குத் தெரியாதவாறு  சில மறைமுக தடைகளையும் வைத்திருக்கின்றனர். எங்களுக்குத் தான் அந்த உரிமை என்கிற உரிமை கொண்டாடலும் இருப்பதால்  மற்ற இன மாணவர்கள் வரவேற்கப்படுவதில்லை!

நாம் சொல்லுகின்ற குற்றச்சாட்டுகள் என்ன? அந்தப் பள்ளிகளுக்குப் போனால் கட்டாய  மதம் மாற்றி விடுவார்கள்.  அங்கே மாட்டிறைச்சி பயன்படுத்துவார்கள். நமது வழிப்பாட்டு முறைகளைத் தடை செய்வார்கள். இப்படியான குற்றச்சாட்டுகள்.

இவைகள் எல்லாம் தவிர்க்க முடியாதவை அல்ல. குற்றத்தைச் சொல்லிக் கொண்டே இருக்கலாம். அதற்கு முடிவேது?கணிசமான இந்திய, சீன மாணவர்கள் இருக்கும் போது  மதம் மாற்றம் பிரச்சனைகள் எழாது. மேலும் ஆசிரியர்களுக்கு அது வேலையும் அல்ல.  சரி,  வெளியே அது நடக்கவில்லையா?  நாம் சரியாக இருந்தால், நம் பிள்ளைகள் சரியாக வளர்ந்தால் ஒரு பிரச்சனையும் இராது! அது தான் முக்கியம்.

மாட்டிறைச்சி பிரச்சனை அல்ல. பெரும்பாலும் கோழி இறைச்சிக்குத் தான் முதலிடம். பல இன மாணவர்கள் பயில்கின்ற இடத்தில் இது பெரும்பாலும் நடப்பதில்லை. வெள்ளிக்கிழமைகளில் மரக்கறி உணவுகள்.  இது  பேசி தீர்த்துக் கொள்ளக் கூடியது தான். அப்படி இல்லையென்றால் வெறும் குழம்பு மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதெல்லாம் ஒரு பிரச்சனையா? 

நாம் வழிபடுவதில் அப்படி என்ன பிரச்சனை? ஒரு சிறிய சாமிபடத்தை வைத்துக் கொள்வதில் அப்படி எல்லாம் யாரும் சண்டைக்கு வரப்போவதில்லை. மற்றவர்களைச் சீண்டுவது போல் ஏன் நாம் நடந்து கொள்ள வேண்டும்?

எது முக்கியம் என்பதற்குத்தான்  முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தேவையற்ற சில்லறை பிரச்சனைகளுக்கெல்லாம்  தள்ளிவிட்டு கல்வி ஒன்றே தலையாயது என்கிற எண்ணம் வந்தால் அனைத்தும் சாத்தியமே. இனியும் அந்த பழைய கதைகளையே பேசிக்கொண்டு வாய்ப்புகளைத் தவற விடுவது ஏற்றுக்கொள்ள இயலாது!

Sunday 15 October 2023

நஜிப்-அன்வார் ஒன்றா?


மித்ரா,  இந்தியர் உருமாற்றம் அமைப்புக்கு  கொடுக்கப்படும்  நிதி உதவி  இந்த ஆண்டும்  இத்தனை ஆண்டுகளாகக் கொடுக்கப்பட்ட அதே 100 மில்லியன் தானா என்று நம் அனைவராலும் பிரதமரை நோக்கி வீசப்படும் கேள்விக்கு  அவர் பதில் என்னவாக இருக்கும் என நாம் ஒரளவு ஊகிக்கலாம்.

முன்னாள் பிரதமர் நஜிப் என்ன செய்தாரோ அதைத்தானே அன்வார் செய்கின்றார்  என்று நம்மில் பலர் கேட்கின்றனர்.அதாவது அவர் செய்ததைவிட  இவர் என்ன பெரிதாக இந்தியர்களுக்குச் செய்துவிடப் போகிறார்  என்கிற கேளவி சரியாகத்தான் இருக்க வேண்டும். அதை மறுக்கவும் முடியாது.

ஆனால் இருவருக்கிடையே ஒரு சில வித்தியாசங்கள்  இருக்கத்தான் செய்கின்றன. அதையும் மறுப்பதற்கில்லை.  மித்ரா தொடங்கப்பட்ட காலத்தில் அந்த அமைப்பு ம.இ.கா.வினர் கட்டுப்பாட்டில் இருந்தது என்பது பலரும் அறிந்தது தான்.

அந்த காலகட்டத்தில் நூறு மில்லியன் நிதி உதவி, ஓர் ஆண்டில் கூட, முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்பது ஒன்றும் புதிய செய்தி அல்ல. அப்படி பயன்படுத்தப்படாத  அந்த நிதி என்னவாயிற்று?  என்கிற கேள்விக்கு அப்போதே ஊடகங்களில் பெரிய செய்திகளாக  வெளிவந்தன.

மீதப்பணம் எங்கே போயிற்று? அந்தப் பணம்  மீண்டும் அரசாங்க கரூவுலத்திற்கே   திருப்பி அனுப்பப்பட்டதாக அப்போதே செய்திகள் வெளியாயின.  அது ஒரு பக்கம்.  இன்னொரு பக்கம் அந்தப் பணம்  பிரதமர் நஜிப் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாயின.

பிரதமர் நஜிப்பிடம் ஒப்படைக்கப்பட்ட பணம்  அவர் சொந்த செலவுகளுக்காக  என்று அப்போதே செய்திகள் அமர்க்களப்பட்டன! அப்போது ம.இ.கா.வினர் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும், மித்ரா பணத்தை  முழுமையாகப்பயன்படுத்தாமல், பிரதமரின் 'பாக்கெட் மணி'க்காக சில கோடிகளை அவருக்கு ஒதுக்கினர்!  இந்த நிலையில் அவர் தொடர்ந்து பதவியில் இருந்திருந்தால்  இன்னும் அதிகமாகவே மித்ரா அமைப்புக்கு உதவியாக இருந்திருப்பார் என நம்பலாம்!

இந்த நிலையில் இன்றைய பிரதமர் அந்த 'பாக்கெட் மணி'  எதுவும் இல்லாமல் கொடுக்கப்பட்ட நிதியை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்  என்கிற நிலை இருந்ததால் இந்த ஆண்டு அந்த நிதி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டதை நாம் அறிவோம். இது தான் முதல் ஆண்டு. இரண்டாம் ஆண்டு என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளவே அடுத்த ஆண்டும் அதே நூறு மில்லியன் ஒதுக்கப்பட்டதாகவே நான் நினைக்கிறேன்.

வரும் ஆண்டுகளில் கூடுதல் நிதி ஒதுக்கப்படலாம்.  இப்போது உள்ள  நிர்வாகத் திறன் எப்படி உள்ளது என்பதை முதலில் தெரிந்து கொண்டு பின்னர் அது பற்றி, கூடுதல் நிதி பற்றி, யோசிக்கலாம்.

இந்தியர்கள் இப்போது விழிப்புணர்வோடு இருக்கின்றனர். ஆனால் நமது  தலைவர்கள் அதைவிட 'வல்லவர்களாக' இருக்கின்றனர்.  எதையும் யோசித்துத்தான் செய்ய வேண்டி உள்ளது!

Saturday 14 October 2023

செலுவுகளைக் குறையுங்கள்!

 

இப்போதுள்ள நாட்டின் நிலைமையை நாம் அனைவரும் அறிவோம்.  நாட்டின் நிலை சரியில்லை என்றால் வீட்டின் நிலைமையும் தறிகெட்டுப் போகத்தான் செய்யும்.  அது தான் நியதி.

சிக்கனம் என்பது எத்துணை முக்கியம் என்பதை இன்றைய நிலையில்  நாம் உணர முடியும். நாங்கள் வாங்கும் 10 கிலோ  புழுங்கல் அரிசி  முன்பு 36 வெள்ளி இன்றை விலை 50.00 வெள்ளி! இப்போது கோழி முட்டைகளின் விலை 80 காசு அளவுக்குப் போய்விட்டது. முன்பு  30 காசு.

இதிலிருந்தே ஓரளவு நாட்டின் நிலைமையும் மக்களின் நிலைமையும்  நாம் புரிந்து கொள்ளலாம். 

அதனால் நாம் செய்ய வேண்டியது என்ன?  செலவாளிகள் என்றால் நமது நிலைமை மிகவும் மோசம் என்பதை நாம் ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும். கொஞ்சம்  'ஒவர்' ஆகவே நாம் காட்டிக்கொள்கிறோம் என்று தான் சொல்ல வேண்டும்.

ஆடம்பரத்திற்கு நாம் முதலிடம் கொடுப்பது இப்போது மட்டும் அல்ல அப்போதும் தான். கல்யாணம் என்றால் அனாவசிய செலவு  செய்வது  நாம் தான்.  செலவுகளை எப்படிக் குறைப்பது என்பதுபற்றி நாம் யோசிப்பதே இல்லை. சமீபத்தில் நடந்து ஒரு திருமணம். காலை பத்து மணி.  அதுவும் வேலை நாள். அந்த நேரமே பகல் உணவு.  பிரச்சனை முடிந்தது. அதிக செலவு இல்லை. யாரும் குறை சொல்ல ஒன்றுமில்லை!

பிறந்த நாள் விழாக்களைக் கொண்டாடுகிறோம். பெரிய ஆடம்பரம் தேவை இல்லை. வெளி ஆட்கள் கூட தேவை இல்லை.  அது ஒரு குடும்ப விசேஷம். மிக நெருக்கம் உள்ளவர்களே போதும்.  குழந்தைகளுக்கும் மகிழ்ச்சி. பெரியவர்களுக்கும் மகிழ்ச்சி.  வேறு என்ன வேண்டும்?  அது ஒரு குடும்ப நிகழ்ச்சியாக நடத்தினால் அது ஒரு செலவும் இல்லாத நிகழ்வு. 

இப்போது தேவை இல்லாத ஒன்றையும் புதிதாக நமது குடும்ப நிகழ்வாக நடத்திக் கொண்டிருக்கிறோம். அந்தக் காலங்களில் நமது தமிழகக் கிராமங்களில்  குழந்தைகள் பூப்பெய்துவதை  கொண்டாடுவதில் வெவ்வேறு காரணங்கள் உண்டு.  நம் நாட்டில் அது தேவே இல்லாத ஒன்று.  ஆனால் சமீபகாலமாக அதனையும் வலிந்து ஒரு சிலர் கொண்டாடுகின்றனர். தேவை இல்லாத ஒன்று, தேவை இல்லாத ஆடம்பர செலவுகளில்  சேர்ந்து கொண்டது!

இதே போல நமது செலவுகளைக் குறைக்க இன்னும் நமது அன்றாடச் செலவுகளையும் கவனிக்க வேண்டும். விருந்துகளுக்குப் போனால் குழந்தைகளுக்கு ஒரு பெரியவர் சாப்பிடும் சாப்பாட்டை  அப்படியே தட்டில் போட்டு அந்தச் சாப்பாட்டை அப்படியே தூக்கி எறியும் தாய்மார்களைப் பார்த்திருக்கிறோம். குழந்தைகளின் சாப்பாட்டு அளவு இன்றைய தாய்மார்களுக்குத் தெரிவதில்லை! வீட்டில் எப்படி? மூன்று பேர் உள்ள குடும்பத்திற்கு முப்பது பேருக்குச் சமைக்கும் தாய்மார்கள் உண்டு! அளவு தெரியவில்லை! தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வமுமில்லை!

பொதுவாக, நம்மிடையே அனாவசிய செலவுகளைக் குறைக்கலாம். நிறைய வழிகள் உண்டு.,  கொஞ்சம் சிந்தித்தால் போதும். வழிகள் தெரியும்.

Friday 13 October 2023

தெக்கூன் கடனுதவி


 தெக்கூன் கடன் உதவி ஒரு காலத்தில் எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.

அந்த உதவி மலாய்க்கார வர்த்தகர்களுக்கு மட்டுமே எந்று தான் நாம் கணக்குப் போட்டு வைத்திருந்தோம். உண்மையில் அப்போதும் இல்லை. இப்போதும் இல்லை. அந்த நிறுவனத்தில் மலாய்க்கரர் அதிகம் பணிபுரிவதால் நம்மைப் புறக்கணிக்கும் போக்கு அதிக இருந்தது. அவர்களிடம் பற்றும் பாசமும் அதிகம் இருந்ததால் அது மலாய்க்காரருக்கே போய் சேர்ந்தது.  ஆனாலும் அப்போதும் நம் இனத்தவருக்குக் கிடைக்கத்தான் செய்தன.   கறக்கத் தெரிந்தவன் எங்கிருந்தாலும் கறந்து விடுவான்!

ஆனால் இந்த முறை இந்தியர்களுக்கென்றே  தனியாக தெக்கூன் உதவி  3 கோடி ரிங்கிட் ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்பது நல்ல செய்தி. மூன்று கோடி என்பது ஒன்றும் பெரிய  தொகை இல்லை என்று விமர்சனம் செய்யலாம். ஆனால் அதனை எந்த அளவுக்குப் பயன்படுத்தப் போகிறார்கள்  என்பதும் கேள்விக்குறியே!  தெக்கூன் பக்கம் போவதைவிட  மித்ரா பக்கம் போவதைத்தான் நமது வியாபாரிகள் விரும்புவார்கள்!  திட்டுவதற்கு யாராவது வேண்டும் அல்லவா!

தெக்கூன் கடன் உதவி என்பது சிறு வியாபாரிகளுக்கானது. அவர்களுடைய அலுவலங்கள் நாடெங்கும் இருக்கின்றன. ஆனால் அந்த அலுவலகங்களில் இந்தியர்களும் பணிபுரியும் கட்டாயம் இருக்க வேண்டும்.  இல்லாவிட்டால் 'மனு செய்ய ஆளில்லை!'  என்று சொல்லி பணம் அரசாங்கத்திற்கே திருப்பி அனுப்பபபடலாம்.

இப்போது மித்ராவால் சிறு வியாபாரிகளுக்கான கடன் உதவிகளைச் செய்ய முடியவில்லை என்று நமக்குத் தெரிய வருகிறது. கல்வி அமைச்சின் வேலைகளை அவர்களே கையில் எடுத்துக் கொண்டு  செய்து  வருகிறார்கள்!  கொடுத்த மானியத்தை முடித்து வைக்க வேண்டும்  என்கிற கட்டாயத்தில் அவர்கள்  இருக்கிறார்கள்!  சரி, ஏதோ ஒன்றைச்  செய்கிறார்கள்  இதுவும் சமுதாய நலன் தான்.

தொடர்ந்து நாம் குற்றச்சாட்டுக்களையே சுமத்தாமல்  கிடைக்கின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும். இன்னொன்று எங்கே அவர்களின் அலுவலகங்கள்  இருக்கின்றன என்கிற விபரமும் தெரியப்படுத்தப்பட  வேண்டும். முடிந்தவரை இந்தியர் சிறு வியாபாரிகளின் சங்கம்  சிறு வியாபாரிகளுக்கு விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து உதவ வேண்டும்.

நமது வியாபாரிகள் வெற்றி பெற வாழ்த்துகள்!

Thursday 12 October 2023

வேலை! வேலை! வேலை!

 

வேலை! வேலை! வேலை! 

ஆமாம்! வேலை இல்லாமல் வாழ்க்கையை எப்படி ஓட்டுவது? வாடகை வீடு, பிள்ளைகளின் கல்விச் சுமை, உண்ண உணவு - எல்லாவற்றுக்குமே பணம் போட வேண்டும். அதற்கு ஏதாவது ஒரு வேலை வேண்டும்.

இப்போதெல்லாம் எல்லா குடும்பங்களிலும் இருவர் வேலை செய்கின்றனர். கணவன் மனைவி இருவரும் வேலை செய்யாவிட்டால்  குடும்பத்தை நடத்த இயலாது. அது தான் இன்றைய நிலை.

இந்த நேரத்தில் இருவருக்குமே வேலை இல்லை என்றால்....?  என்ன செய்வது? எங்கே போவது?

நமக்குத் தெரிந்ததெல்லாம்  நமக்கு அருகே சிங்கப்பூர் இருக்கிறது. அங்கே போனால் வேலை கிடைக்கும்.  சரி கணவர் மட்டும் போய் ஏதாவது வேலை செய்யலாம்.  பெரும்பாலான குடும்பங்களில் அது தான் நடந்து கொண்டிருக்கிறது. சில குடும்பங்களில் பெண்களும் சிங்கப்பூர் போய் வேலை செய்கின்றனர்.  என்ன செய்வது?  பிழைப்பு நடத்த வேண்டுமே!

ஆனாலும் நிலைமை சீரடைந்து  வருகிறது. கொஞ்சம் முயற்சிகள் தேவை. சமயங்களில்  சம்பளம் எதிர்பார்த்தபடி கிடைப்பதில்லை.  பெரும்பாலான நிறுவனங்கள் அரசாங்கத்தின் குறைந்தபட்ச  ரி.ம. 1500.00 கொடுப்பதாகவே நினைக்கிறேன். மனம் தளர்ந்து விடாதீர்கள்.

நமது பொருளாதாரமும் அந்த அளவுக்குக் கீழ்நோக்கிப் போகவில்லை. நம்பிக்கை தரும் அரசாங்க நடவடிக்கைகளும் மக்களுக்குச் சாதகமாகத்தான்  இருக்கிறது. பொது மக்களுக்கு நமது ஆலோசனை என்னவென்றால் விலை அதிகம் என்றால் அது போன்ற பொருள்களை வாங்குவதைத் தவிருங்கள். தவிர்க்க முடியாத பொருள்கள் என்றால் அளவுகளைக்  குறைத்துக் கொள்ளுங்கள். முன்பெல்லாம் பெரிய பெரிய  மீன்களை வாங்கிச் சாப்பிடுவதற்கான வாய்ப்புகள் இருந்தன. இப்போது அது குறைந்து போயிருக்கலாம். அதனால் பெரிய மீன்களை  குறைந்த அளவில்  ஒரு நேர சாப்பாடாக  வைத்துக் கொள்ளுங்கள்.  எல்லாமே சிக்கனம் தான்.

வேலை இல்லையே என்று புலம்பல் வேண்டாம்.  வேலையே இல்லையென்றால்  வேறு என்ன செய்யலாம் என்று  யோசியுங்கள். வெளிநாடுகளிலிருந்து  இன்னும் ஆட்கள் வேலைக்கு வந்து கொண்டு தான் இருக்கின்றனர். ஒரு சில வேலைகள் நமக்குப் பழக்கமில்லாத வேலையாக இருக்கலாம். பழக்கப்படுத்தி கொள்ளத்தான் வேண்டும். நாம் விரும்பும் வேலை கிடைக்கும்வரை  ஏதோ ஒரு வேலையில் ஒட்டிக்கொள்ளத்தான் வேண்டும்.

நாட்டில் வேலையே இல்லை என்று சொல்லாதீர்கள்.  இருக்கின்ற, கிடைக்கின்ற வேலைகளில் ஈடுபடுங்கள்.   நாட்டுக்கு இப்போது கஷ்ட காலம் தான். அதே போல மலேசியர்களுக்கும் இப்போது கஷ்ட காலம் தான். ஆனால் இவைகள் எல்லாம் முறியடிக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை.

நல்லது நடக்கும் என எதிர்பார்ப்போம்!

Wednesday 11 October 2023

நம்மிடையே கட்டுப்பாடுகள் தேவை!

 

நாம் பண்புள்ள மனிதர்கள். அதாவது தமிழர்கள் பண்புள்ளவர்கள். அதிலே எந்த குறைபாடும் இல்லை.

ஆனால் ஒரு சில விஷயங்கள் நம்மைக் கெட்டவர்களாகவே காட்டுகின்றன. கூட்டமாக செயல்படும் போது, ஒரு சில வேலைகளில், நாம் கெட்டவர்களாக  சித்தரிக்கப்படுகிறோம். நாம் சரியாக இருந்தாலும் நம் பகைவர்கள் நம்மைத் தூண்டிக்கொண்டே இருப்பதால் நம்மால் நல்லவர்களாக  இருக்க முடியவதில்லை.

நம் தமிழ் மக்களுக்கு ஓர் ஆலோசனை. நாம் கெட்டவர்கள் என்று காட்டுவதற்காக ஒரு கூட்டம் எப்போதும் நேரம் காலம்  பார்த்துக் கொண்டிருக்கிறது. பல வழிகளில் நம்மை மற்ற இனத்தவரிடம் தாழ்த்தி பேசிக் கொண்டிருக்கிறது. இந்தியர் யார் எதைச் செய்தாலும்  பழி  என்னவோ தமிழர் மீது தான் சுமத்தப்படுகிறது!

நாம் சொல்ல வருவதெல்லாம் தமிழர்களே! கட்டுப்பாடுகளோடு வளருங்கள்.  கட்டுப்பாடுகள் என்பது நமது நன்மைக்காகத்தான். கட்டுப்பாடுகளோடு வாழும் போது நம்மைச் சுற்றியுள்ள அனைவருக்கும்  அது பயன் தருகிறது.   நாமும் நமது குடும்பமும் சரியாக இருந்தால்  மற்றவர்களின் மரியாதை நமக்குத் தானாகவே வரும்.

மற்றவர்களைப்பற்றி நாம் கவலைப்பட  வேண்டாம்.  நாம் சரியாக இருந்தால் நம்மைச் சுற்றியுள்ள மற்றவர்களும் சரியாகி விடுவார்கள்.

சமீபத்தில் பிரச்சனை ஒன்றில் ஆளாளுக்கு  மைக் பிடித்து பேச ஆரம்பித்துவிட்டார்கள். அதிலும் ஒருவர் வழக்கறிஞர்களை எல்லாம் திட்டோ திட்டு என்று திட்டுகிறார்.தங்க இடம் கொடுத்தால் மடத்தையே பிடுங்கும் கதை இது. உங்களுடைய கோபத்தை நாம்  அறிந்திருக்கிறோம். ஆனால் கட்டுப்பாடு தேவை. இப்படியெல்லா தறிகெட்டுப் பேசும் போது நம்மை 'மபோ' என்று மற்றவர் கேலி செய்கிறார்கள்.

எது உண்மை அல்லது பொய் என்பதெல்லாம் அவ்வளவு எளிதில் நம்மால் தெரிந்து கொள்ள முடிவதில்லை. காரணம்  பொய்யை உண்மை என்று சொல்லுவதற்கு நம்மிடையே ஆயிரம் பேர் இருக்கிறார்கள். அதனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நாம் நல்ல மனிதர்கள் என்பதாக எல்லா காலங்களிலும் நமக்குப் பெயர் உண்டு. முடிந்தவரை மற்ற இனத்தவரிடம் நாம் நல்லவர்களாகவே நடந்து கொள்கிறோம்.  நமக்குள் என்கிறபோது, நம் இனத்தவர் என்கிறபோது  முற்றிலுமாக நமது குணம் மாறிவிடுகிறது! நம்மால் மன்னிக்க முடியவில்லை.

எல்லாவற்றுக்கும் கட்டுப்பாடுகள் உண்டு. சொந்தப் பிள்ளைகளை அடிக்க முடியாது, மனைவியை அடிக்க முடியாது - சட்டத்துக்குப் பதில் சொல்ல வேண்டும். பொது காரியங்களும் அப்படித்தான். வாய்க்கு வந்ததைப் பேச முடியாது. சட்டம் உண்டு. அதை மதிப்பது நமது கடமை.

கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்போம்! கட்டுப்பட்டு  வாழ்வோம்!



Tuesday 10 October 2023

மேல் முறையீடு ஏற்றுக்கொள்ளப்பட்டது!

 

நவீன் கொலை வழக்குப் பற்றி நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். அந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட ஐந்து பேரும் விடுதலை செய்யப்பட்தும்  அதன் பின்னர் நம் சமூகத்தில் ஏற்பட்ட  கொந்தளிப்பும்  நாம் அறிந்தது தான்.

இதில் கொடுமை என்னவெனில் அந்த ஐந்து பேரும் விடுதலை செய்யும்போது நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ' குற்றம்  செய்ததற்கான போதுமான ஆதாரங்கள் இல்லாததால்'   அவர்கள் விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பாதிக்கப்பட்ட நவீன் குடும்பத்தினர் சார்பில்  வாதாடிய அரசு தரப்பு வழக்கறிஞர்கள் போதுமான ஆதாரங்களைக் கொண்டிராததால் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரும் விடுதலை செய்யப்பட்டனர். அதுவும் ஆறு ஆண்டுகள்  எந்த ஒரு சலனமும் இல்லாமல் வழக்கை ஆறப்போட்டு தீடீரென  ஒரு நாள்  ஆதாரம் இல்லை என்று சொல்லி வழக்கை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டார்கள்!

அதுவே ஒரு பெரும் அதிர்ச்சி!  அத்தோடு நீதி அஸ்தமித்துவிட்டதாக  நாம் நினைத்தோம்.   ஆனாலும்  இப்போது  நடந்திருப்பது  நீதியின்  மேல் நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

என்ன தான் குறுக்கு வழிகளில்  வெற்றி பெறலாம் என்று நினைத்தாலும்  நேர்மையான் வழிகள் தான் வெற்றி பெறும்.  அதைத்தான் இந்த மேல் முறையீடு நமக்கு மெய்ப்பிக்கிறது.

ஆனாலும் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டன என்று சொல்லுவதற்கில்லை. இனி மேல் தான் ஆட்டமே ஆரம்பம். இப்போதும் அது ஒரு எளிதான வழியாக இருக்கப் போவதில்லை.    போதுமான ஆதாரங்கள்  இன்றி ஏந்த வழக்கும் நிற்கப்போவதில்லை. சும்மா ஆரவாரமாகவும், கத்திக்கூச்சல் போடுவதாலும்  ஒன்றும் ஆகப்போவதில்லை! நீதிமன்றத்திற்கு ஆதாரம் தேவை.

சமீபமாக நமது இளைஞர்கள் செய்கின்ற அட்டகாசங்களை நம்மால் சகித்துக்கொள்ள முடியவில்லை  என்பது உண்மை தான். நமக்கு அனைத்து மக்களின் ஆதரவு தேவை. இந்த ஒரு விஷயத்திலாவது ஒற்றுமையைக் காட்டுங்கள். ஆனால் ஒற்றுமையைக் காட்டியிருக்கிறார்கள்.  இல்லை என்று சொல்ல முடியாது.

தொடர்ந்து எல்லாம் சுமுகமாக நடைபெற வேண்டும். குற்றவாளிகளுக்குத் தண்டனை என்பது நிச்சயம். அதில் எந்த மாற்றமும் இல்லை.

மேல்முறையீடு தற்காலிக வெற்றி தான்.  அது நிரந்தர வெற்றியாகும் என் நம்புவோம்.
 

Monday 9 October 2023

பொறுப்பு துறப்பா?


பள்ளிகளில் மாணவரிடையே நடைபெறும்  சண்டை சச்சரவுகளுக்கு அந்த பள்ளி நிர்வாகமே பொறுப்பு ஏற்க வேண்டும். அது வன்முறை என்றால்  காவல்துறை  தான் அதற்கான பொறுப்பு. ஆனால் இரு சாராரும் அது பற்றி கவலைப்படாமல் எந்த பொறுப்பையும் ஏற்காவிட்டால்  எங்கே யாரிடம் போவது? இதற்கு வேறு வழிகளும் இருப்பதாகத் தெரியவில்லை. 

பொதுவாக இந்திய மாணவர்கள்   பிரச்சனை என்றாலே  அதனை அலட்சியம் செய்யும் போக்கு எல்லாத் தரப்பினரிடமும் உண்டு.  அதனால் தானோ என்னவோ இந்தியர் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றாலே  அதற்குத் தனி அமைச்சர் வேண்டும் என்கிற கோரிக்கை  இந்தியர் தரப்பிடமிருந்து எழுந்து கொண்டிருக்கிறது!  காவல்துறை, கல்வி அமைச்சு - இவர்களுடைய பொறுப்பு என்ன என்பது நமக்கு நிச்சயமாகத் தெரியவில்லை!

நமக்குத் தெரிந்ததெல்லாம் இங்கேயும் இன, மத வேறுபாடுகள் தான் காரணமோ  என்று ஐயுற வேண்டியுள்ளது. இந்திய மாணவர்களிடையே  அடிதடி என்றால் அதன் அணுகுமுறை  வேறு, மலாய் - இந்திய மாணவர் என்றால் அதன் அணுகுமுறை வேறு மாதிரி ,  இந்திய மாணவர்கள் என்றால் அது குண்டர் கும்பல் என்று முத்திரையிடுவது இப்படி எந்த எந்த வகையிலோ பிரச்சனை வேறுபடுகிறது.

இந்த அணுகுமுறை எல்லாம் மாணவர்களுக்கோ எதிர்கால மாணவ சமுதாயத்திற்கோ  எந்த வகையிலும்  நல்லது செய்யப்போவதில்லை.  நாம் வெவ்வேறு உலகத்திலோ, வெவ்வேறு நாட்டிலோ இல்லை. வருங்காலங்களில் இங்கு, இந்த நாட்டில் தான்,  ஒன்று கூடி வாழ வேண்டும்.

இந்த இரண்டு துறைகளுமே - கல்வி அமைச்சு, காவல் துறை -  மலேசிய இளைஞரிடையே  ஒற்றுமையைத் தான் கொண்டு வர வேண்டுமே தவிர வேறுபாடுகளை அல்ல. பள்ளிகள் வேற்றுமையை வளர்க்கும்  இடமல்ல.  ஆனால் அதனைத்தான் இது போன்ற செயல்கள் நமக்குச் சுட்டுகின்றன.

நாம் சொல்ல வருவதெல்லாம் பள்ளிகள் இன்னும் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். 'பள்ளிக்கு வெளியே'  என்றெல்லாம் காரணங்களைக் கண்டுபிடித்துக் கொண்டிருக்கக் கூடாது.  அப்படியே அது 'பள்ளிக்கு வேளியே' என்றால் அதனை காவல்துறையிடம் பிரச்சனையை விட்டுவிட வேண்டும். 

நல்லதொரு அணுகுமுறையை நாமும் எதிர்பார்க்கிறோம்!

Sunday 8 October 2023

அரசியல் கட்சியினால் என்ன இலாபம்?

 

இந்தியர்களுக்குப் புதிய அரசியல் கட்சி ஒன்று தேவை என்பதாக ஒரு சிலர் மிக மிக அவசரம் காட்டுகிறார்கள்!

இவர்கள் இப்படி அவசரப்படுவதை வைத்தே  இவர்கள் ஏதொ தீய நோக்கத்துடன் செயல்படுகிறார்கள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

அதாவது இந்தியர்களைக் குழப்ப வேண்டும்  என்கிற நோக்கம் அவர்களிடம் உண்டு என்பதாகவே நமக்குப்படுகிறது.

இந்தியர்களின் ஏகோபித்த ஆதரவுடன் பிரதமர் அன்வார் இப்ராகிம் கடந்த தெர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். நம்முடைய ஆதரவு கணிசமானது.

இப்போது உள்ள குற்றச்சாட்டெல்லாம்  எதிர்பார்த்தபடி  அவர் தனது கடமையை ஆற்றவில்லை என்கிற குறைபாடு இந்தியர்களுக்கு உண்டு. உண்மை தான். யாரும் மறுக்கவில்லை.  ஆனால் ஓர் ஆண்டுக்குள் அனைத்து மாற்றங்களையும் கொண்டு வந்துவிட வேண்டும் என்பது இயலாத காரியம் என்பது நமக்குத் தெரிந்தது தான். அவர் இந்தியர்களுக்குமட்டும் அல்ல அனைத்து மலேசியர்களுக்கும்  பிரதமர்.

இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கிறன.   இப்போது நாட்டில் பல சிக்கல்கள்.விலைவாசி ஏற்றம் போன்று இன்னும் பல. அனைத்தையும் சரிசெய்ய வேண்டியது அவரது கடமை.

நம்மைப் பொறுத்தவரை  புதிய அரசியல் கட்சி என்பதைவிட  இந்தியர்களின் சார்பில் வலுவான இயக்கம் ஒன்று தேவை. அந்த இயக்கம் அரசியலில் நமக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.  இந்தியர்களின் பிரச்சனைகளை அரசாங்கத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். இப்போது யாரும் இல்லை என்பது தான் மிகப் பெரிய குறைபாடு. 

சீனர்களுக்கு Dong Zong  என்கிற அமைப்பு எப்படி சீன மொழிக்கல்வியில் வழிகாட்டியாக இருக்கிறதோ அதே போன்று நமக்கு ஓர் அமைப்புத் தேவைப்படுகிறது என்பதாகவே நான் நினைக்கிறேன். நல்ல ஆலோசனைக் கூற, அரசியலில் வழிகாட்ட, கல்வி, வேலை வாய்ப்பு - இப்படி பல துறைகளில் வழிகாட்ட  நமக்கு ஓர் அமைப்புத்  தேவை. அதனை அரசாங்கத்திற்குக் கொண்டு செல்வது அவர்களின் கடமை.

65 ஆண்டுகள் ம.இ.கா. வை சகித்துக் கொண்டு வந்தோம். ஐந்து ஆண்டுகள் பி.கே.ஆர். ரை சகித்துக் கொள்ள முடியாதா? அப்படியே புதிய கட்சி ஆரம்பித்தாலும் அதுவும் பி.கே.ஆர். ஆதரவு கட்சியாகத்தான்  இயங்கும்.  எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை.

ஒரு சிலர் தலைவர் ஆக வேண்டும் என்பதற்காகவே நம்மைக் குழப்புகிறார்கள். அதற்குப் பலியாக வேண்டாம் என்பதே நமது வேண்டுகோள்.

Saturday 7 October 2023

அறிவைப் பயன்படுத்துங்கள்!

 

ஒரு பக்கம் உணவகங்களில் வேலை செய்ய ஆளில்லை. அதனால் இந்தியாவிலிருந்து வேலையாட்களைத் தருவிக்க மகஜர் மேல் மகஜர். 

இன்னொரு பக்கம் வேலையாட்கள் சரிவர கவனிக்கப்படுவதில்லை  என்கிற குற்றச்சாட்டு.  அவர்களுக்கு எத்தனை மணி நேர வேலை என்கிற நேரக் கட்டுப்பாடு இல்லை.  இங்கு வரும் போது பேசப்படுவது ஒரு சம்பளம். இங்கு வந்த பிறகு கொடுக்கப்படுவதோ  ஏற்றுக்கொள்ள முடியாத   சம்பளம்

நாடு வந்ததும் அவர்களின் கடப்பிதழ் பறிமுதல். அவர்கள் எங்கு வேலை செய்கிறார்கள்  என்பது அவர்களுக்குத் தெரியாது. ஏதோ பயங்ரவாதிகளுக்கான உணவகம் என்றே தோன்றுகிறது! கைப்பேசிகளையும் முதலாளி வாங்கி வைத்துக் கொள்கிறார். அதனால் வெளி உலகிற்குப் பேச வாய்ப்பில்லை.  பேச வேண்டும் என்று கேட்டால் அவர்களுக்குக் கொலை மிரட்டல். இன்னும் வன்முறை. சம்பளம் கொடுப்பதில்லை.  விடுமுறை என்பதெல்லாம்  நினைத்துப்பார்க்க முடியாத ஒன்று.  ஏதோ ஜப்பான் காலத்தில் ஜப்பானியனின் ஆட்சி போன்ற நிலைமை!

இப்படி ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் உள்ளூர் உணவக முதலாளிகளின்  மீது சுமத்தப்படுகின்றன.

இந்த நிலையில் தான் உணவக முதலாளிகளின் சங்கம்  வேலைக்கு வெளிநாட்டவர் தேவை என்பதாக தொடர்ந்து ஆண்டுக் கணக்கில்  அரசாங்கத்திடம் மகஜரைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது! நமக்கு அது வேடிக்கை தான்!  இருக்கிற வேலையாட்களைக்  கவனிக்க முடியாதவர்கள்  இன்னும் இன்னும் தேவையாம்.  எதற்கு? கொத்தடிமைகளை உருவாக்கவா?

நாம் கேட்பதெல்லாம் உணவக முதலாளிகளின் சங்கம் ஏன் இந்த வன்முறையைக் கையாளும் முதலாளிகளிடம்   ஏன் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பது தான்.  ஒரு  முதலாளியை 'உள்ளே' தள்ளி நொங்கு நொங்கு என்று நொங்கினால்  அடுத்த முறை அவன் ஏன் அந்த தவற்றைச் செய்கிறான்?  நமக்கு வேண்டியதெல்லாம் நல்ல, தரமான உணவகம்.  தனது பணியாளர்களை நன்கு கவனிக்கும் உணவகம். தரமான முதலாளிகளால் நடத்தப்படும் உணவகம். ரௌடிகளால் நடத்தப்படும் உணவகங்கள் எவை என்பது சங்கத்திற்குத் தெரியாமலா இருக்கும்?

எப்படியோ இனி நாம் இது போன்ற சம்பவங்களைப் படிக்க நேர்ந்தால் பொது மக்களே மனிதவள அமைச்சிற்குப் புகார் செய்ய வேண்டிய சூழல் உருவாகும். பிழைக்க வந்தவனைப் பிழிந்து எடுத்துவிட்டு  எதையும் கொடுக்காமல் அவனைத் திருப்பி அனுப்புவதை நம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது!

முதலாளிகளே இனி உங்கள் கையில்!

Friday 6 October 2023

இப்படிப்பட்ட கோபம் தேவையா?

 



பினாங்கு மாநில, தம்பி நவீன்  கொலை வழக்கு எல்லாருக்கும் தெரிந்த ஒன்று தான். அவரின் பெற்றோர்கள் எந்த அளவுக்கு மனபாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்பதை நம்மால் உணரமுடிகிறது.

இப்போது அது பற்றியான வாக்கு வாதங்கள்  அதுவும் குறிப்பாக டிக்டாக் போன்ற ஊடகங்களில் பெரிய அளவில் பேசப்படுகிறதை நாம் பார்க்கிறோம்.

வழக்கு தோல்வி அடைந்தால் அத்தோடு அனைத்தும் முடிந்தது என்று அந்தக் காலத்தில் அப்படி ஒரு நிலை இருந்திருக்கலாம். ஆனால் இன்றைய நிலை அப்படியல்ல.  தோல்வி என்றால் மேல்முறையீடு என்று அடுத்து அடுத்து தொடர்ந்து வழக்கைத் தொடர  வாய்ப்புக்களும், வசதிகளும் உண்டு.

தற்காலிகமாக அது ஒரு தோல்விதான்.   யாரையும் குற்றம் சொல்லுவதில் பயனில்லை. போதுமான ஆதாரம் இல்லையென்றால் நீதிமன்றம் கொடுக்கும் முடிவு தான் தோல்வி. அத்தோடு அது முடியவில்லை. மீண்டும் போய் ஆதாரங்களைக்  கொண்டுவா என்பதாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான்.

தோல்வு ஏற்பட்டுவிட்டதே என்பதற்காக நடுவீதியில் நின்று கொண்டு வழக்கறிஞர்களைத் திட்டுவதும் அவர்களின் குடும்பங்களைப் பற்றி முறைகேடாகப் பேசுவதும் ஏற்புடையது அல்ல.  எங்கோ தவறு நடந்துவிட்டது. அதனைத் திருத்தி மீண்டும் நீதிமன்றத்திற்குப் போவது தான் புத்திசாலித்தனம். இப்படியெல்லாம் பேசி, தரக்குறைவாகப் பேசி கடைசியில் நீங்களே சிறைக்குப் போக வேண்டிய சூழல் ஏற்பட்டால் அப்போதும் உங்களுக்காக ஒரு வழக்கறிஞர்  வந்து வாதாடத்தான் வேண்டும். இது இப்படித்தான் சுற்றிக்கொண்டே இருக்கும்!

இப்படி எடுத்ததெற்கெல்லாம் வீர வசனம் பேசி. நல்லது செய்கிறேன் என்கிற நினைப்பில்,  நவீன் குடும்பத்திற்கு மன உளைச்சலைத்தான்  நீங்கள் ஏற்படுத்துகிறீர்கள்.  அந்தக் குடும்பத்தை இன்னும் வேதனைக்கு உள்ளாக்குகிறீர்கள்.

தமிழர்களுக்குள் அடித்துக்கொள்வதை ஒரு சிலர் கைதட்டி சிரிக்கிறார்கள்.  ஏன், இந்த நடவடிக்கைகள் எல்லாம் அவர்களின் தூண்டுதல்களாகக் கூட இருக்கலாம்.  ஒன்று கேட்கிறேன், நண்பர்களே? குற்றஞ்சாட்டபட்ட அந்த ஐந்து  பேரும்  வேறு இனத்தவராக இருந்தால் நீங்கள் இந்த அளவுக்கு உங்களின் 'நியாயத்தைப்' பேசியிருப்பீர்களா?  அப்போது உங்கள் வீரம் எங்கே போயிருக்கும்? சும்மா வெத்து வேட்டுகளை வைத்துக்கொண்டு இந்த சமூகம்  படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறது!

நிதானத்தைக் கடைப்பிடிப்பது  தான்  ஞானத்திலும் ஞானம்!

Thursday 5 October 2023

அரசியலை வெறுக்காதே!

 

அரசியல்  என்பது பேசக்கூடாத  விஷயமல்ல!

ஆனால் ஓர் எச்சரிக்கை. சீனர்களைப் பார்த்தீர்களா?  அவர்கள்  அதிகம் அரசியல் பேசுவதில்லை.  குறிப்பாக நம்மிடம் பேசுவதில்லை.  ஆனால் அவர்களிடம்  அரசியல் தெளிவு இருக்கும். நாமும் அவர்களின் பாதையைப் பின்பற்றுவது தான் சரி. நம்மிடம் தெளிவு இல்லை. ஆனால் வாய் அதிகம் இருக்கும்!

சீனர்கள் அரசியல் பேசினால் அவர்களுக்கு என்ன இலாபம் என்று பார்ப்பார்கள். அரசியல் என்பது அவர்களுக்கு இலாப-நஷ்ட கணக்கு  பார்ப்பது போல.  

நாம் அரசியல் பேசினால் நமக்கு என்ன தான் வேண்டும் என்று நமக்குத் தெரிவதில்லை.  ஒரு வேளை கள் வாங்கிக் கொடுத்தாலே போதும் நமது அரசியல் மாறிவிடும்!  நான் அதைச் சொல்லவில்லை.  அந்தக் கால நாடாளுமன்ற உறுப்பினர் மகிமா சிங்,  சொன்னது. இதெல்லாம் கடந்த கால கதைகள். இப்போது நாம் அரசியலில் தெளிவு பெற்று வருகிறோம். நாம் தனிப்பட்ட முறையில் சிந்திப்பதைவிட  நமது சமுதாயம் என்கிற ரீதியில் தான் சிந்திக்க வேண்டும்.

நமது சமுதாயம் என்றால் என்ன சொல்ல வருகிறோம்?  சிறிய ஸ்டால்கள் வைத்து வியாபாரம் செய்வதற்கு   நமக்கு அனுமதி கிடைக்கவில்லை. எங்களுக்குக் கிடைக்க வேண்டும். மேற்கல்வி பயில பல கட்டுப்பாடுகள்.  அந்தக் கட்டுப்பாடுகள் களையப்பட வேண்டும். எங்கள் இளைஞர்களுக்குப் போதுமான தொழிற்பயிற்சிகள் கொடுக்க வேண்டும். அரசாங்க வேலைகளில் எங்களுக்கும் போதுமான இடங்கள் ஒதுக்க வேண்டும். தனியார் துறைகளிலும் எங்களுக்கும் போதுமான இட ஒதுக்கீடுகள் தேவை.  இப்போது  தனியார் துறைகளிலும் தமிழர்களுக்குப் போதுமான வேலைகள் கிடைப்பதில்லை.

சமுதாய ரீதியில் பிரச்சனைகளைக் களைந்தாலே  தனியார் பிரச்சனைகளும் களையப்படும்.

இதற்கெல்லாம் நமக்கு வலிமையான அரசியல் தேவை. அதற்கு நாம் ஒரே குரலாய் ஒலிக்க வேண்டும். நாம் பிரிந்து கிடக்கும் வரை  நாம் எதிர்பார்க்கும் எதுவும் கிடைக்கப் போவதில்லை.  நம்மைப் பிரித்து வைக்க பலர் நம்மிடையே உள்ளனர். நாம் ஒன்று சேர்வதை அவர்கள் விரும்புவதில்லை.  அதனால் தான் தமிழர்கள் தங்களுக்கு எது முக்கியம்  என்பதைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.  நமது தேவைக்குத்தான் அதாவது தமிழர்களின் தேவைக்குத்தான் நாம்  பேசுகிறோம். 

நம் சிந்தனைகள் சீனர்களைப் போல இருக்க வேண்டும். நமக்கு என்ன இலாபம், தமிழனுக்கு என்ன இலாபம் என்கிற சிந்தனை உங்களுக்கு இருந்தால்  சீனர்களைப் போலத்தான் சிந்திக்க வேண்டும்.

அதனால் அரசியல் நமக்கு வேண்டும், அரசியல் நாம் பேச வேண்டும்.  சும்மா உளறல் வேண்டாம். அதிகம் பேச வேண்டாம். ஆனால் உள்ளுக்குள் அதிகம் பேசி அரசியலைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம் ஒரே குரலாய் ஒலித்தால் நமது வெற்றி உறுதி!

Wednesday 4 October 2023

அரசியல் வேண்டும்!

 


நாம் விரும்புகிறோமோ இல்லையோ அரசியல் நமக்குத் தேவை. அதிலும் சில கட்டுப்பாடுகள் நமக்கு வேண்டும்.  ஏதோ 'அவிழ்த்துவிட்ட காளை' என்பார்களே  அதெல்லாம் சரிபட்டு வராது. இப்போது நாம் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம்.

நமது இந்தியர்களின் மக்கள் தொகையை எடுத்துக் கொண்டால்  நாட்டின் மக்கள் தொகையில், நாம் மூன்றாவது நிலையில் இருக்கிறோம். நாம் எந்தக் காலத்திலும் தனித்து அரசாங்கத்தை அமைக்க முடியாது. அந்த அளவுக்குக் குறைந்த எண்ணிக்கையில் இருக்கிறோம்.

ஆனால் நாம் புத்திசாலிகளாக இயங்கினால் இருக்கின்ற அரசாங்கத்தை  நம்மால் பலவீனப்படுத்த முடியும்.  நாம் சொல்வதைக் கேட்கும் அரசாங்கத்தை  அமைக்க முடியும்.

யானை தன் பலம் அறியாததினால்  தான் மனிதன் சொல்லுகிறபடியெல்லா கேட்டு ஆட்டம் ஆடுகிறது!  அது போல நமது பலம் நமக்குத் தெரியவில்லை.  எவன் எவனோ நமக்குப் புத்தி சொல்லுகிறான்.  அவன் சொல்லுவது சரிதானென்று நாமும் ஆட்டம் ஆடுகிறோம்!  நமது புத்தியை நாம் எப்போதுமே பாவிப்பதில்லை. பிறர் சொல்லுவதைத் தான் நாம் கேட்கிறோம்,  என்ன செய்ய?

நாம் விரும்புகிறோமோ இல்லையோ  அரசியலை வருங்காலங்களில் இன்னும் ஆழமாக சிந்திக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம். நாம் மாமன் மச்சானுக்காக வாக்களிக்கவில்லை. நமது எதிர்காலத்திற்காக வாக்களிக்கிறோம். அதைக் கொஞ்சம் ஆழமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டிய நிலையில்  நாம் இருக்கிறோம்.

நமது நாடாளுமன்ற தொகுதிகள் 222.    நமது பலம்  என்பது சுமார்  68 தொகுதிகளில் மட்டுமே. அங்கெல்லாம் நமது வாக்குகள் 10, 20, 30 விழுக்காடு உள்ளதாகச் சொல்லப்படுகின்றது.  நம் வாக்கு எங்குப் போகிறதோ அவர்கள் வெற்றி பெற  வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.  68 தொகுதிகள் என்பது சாதாரண  விஷயம் அல்ல.

இங்கு நான் சொல்ல வருவது இது தான். இந்த ஐந்து ஆண்டுகளில் ஆளுங்கட்சி மீது நமக்கு நம்பிக்கை இல்லையென்றால் அடுத்த ஐந்து ஆண்டுகள் நாட்டை ஆள  நாம் எதிர்கட்சிக்கு வாக்களிபோம். முன்பு போல ஐம்பது அறுபது ஆண்டுகள் நாம்  காத்திருக்க வேண்டாம். நம்முடைய பிரச்சனைகள் எதுவும் கவனிக்கப்படவில்லை என்றால் நாம் ஏன் ஆளுங்கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்?

இனி நாம், தமிழர்கள், எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். எப்படிப் பார்த்தாலும்  தமிழர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றோம். அதனால் நமது வலிமையை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். நமது ஒற்றுமையை இன்னும் வலுப்படுத்த வேண்டும். ஒவ்வொரு ஐந்து ஆண்டும் நாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை  தமிழர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

இனி வருங்கால அரசியலில் ஒன்றிணைந்து நாம் செயலாற்ற வேண்டும். நம்மிடம் ஒற்றுமை உண்டு. இன்னும் அதிகம் அதனை வலுப்படுத்துவோம்!

வாழ்க தமிழினம்!

Tuesday 3 October 2023

 

கல்வி கற்காதவர் நிலை என்ன? இன்று இந்நாட்டில் செய்யப்படுகிற அனைத்துக் கீழ்மட்ட வேலைகளையும் நாம் தான் செய்கின்றோம். அப்படி செய்தாலும் கூட அதற்கான சம்பளத்தைக் கூட முழுமையாகப் பெற முடிவதில்லை.

யாரும் செய்யக்கூட துணியாத வேலை அதனை நாம் செய்கிறோம். அதற்கான கூலி என்பது மிக மட்டம். 

அதற்குத்தான் நாம் படித்தவர்களாக இருக்க வேண்டும். எப்போதும் நம்மிடம்  ஒரு சவால் தனம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். யாரும் செய்யத் தயங்கும் சில வேலைகளை நாம் செய்கிறோம். பார்க்கப்போனால் அந்த வேலைகளைச் செய்வதற்கு நமக்கு அதிகம் சம்பளம் தர   வேண்டும். ஆனால் என்ன நடக்கிறது?  நாம் குடிகாரர்கள். எவ்வளவு கொடுத்தாலும் அதனை குடித்துத் தீர்க்கப் போகிறோம்! எவ்வளவு கொடுத்தால் என்ன?

முன்னைய நிலைமையை விட இன்றைய நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது.  காரணம்  இப்போது வேலை கிடைப்பதில் பிரச்சனைகள் எழுகின்றன.  அதனால் எது கிடைத்தாலும் சரி என்கிறை மனப்பானமையை விட்டு ஒழிக்க வேண்டும்.

நாம் கௌரவமிக்க ஓர் இனம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.  நாம் என்ன தான் கீழ்மட்டத்தில் இருந்தாலும் நாம் பிழைப்புக்காக பல வேலைகளைச் செய்கிறோம்.  அதிலும் கண்ணியம் இருக்க வேண்டும்.

எங்கும் போக வேண்டாம். நம்மைச் சுற்றியுள்ள சீனர்களைப் பாருங்கள். சீனப் பெண்மணிகளைப் பாருங்கள்.  அவர்களிலும் ஏழைகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.  அவர்கள் என்ன வேலைகள் செய்கிறார்கள் பாருங்கள். நாமும் அவர்களைப் போன்று ஒரு  தொழிலைத் தேர்ந்தெடுத்து  அதிலே கவனம் செலுத்த வேண்டும். 

சீனர்கள் எதைச் செய்தாலும் குறைவான சம்பளத்தில் வேலை  செய்வதில்லை.  வருமானம் அவர்களுக்கு முக்கியம்.  ஆனால் நமக்கோ எது முக்கியம் என்கிற தெளிவே இல்லை. ஏதோ கிடைத்தால் போதும். தொழிலில் வருமானமும் வேண்டும், கௌரவமும் வேண்டும். நமது பிள்ளைகள் படிக்க வேண்டும். அவர்களுக்கும் கௌரவம் வேண்டும்.

நமக்கு வேலை கிடைக்கவில்லை என்பதைவிட கிடைக்கும் வேலையில்  உண்மையாக உழைக்க வேண்டும். இந்நாட்டில் வேலையே இல்லை என்று சொல்வதைவிட  என்ன வேலையை நாம் தேடுகிறோம் என்பதும் முக்கியம்.

நமது பெண்களுக்கு வேண்டியதெல்லாம் பெரும் பெரும் நிறுவனங்களில் வேலை. இப்படித்தான் மலாய்ப் பெண்களும் இருக்கின்றனர். ஆனால் சீனப் பெண்களைப் பாருங்கள்.  பெரிய நிறுவனங்களைத் தேடிப் போவதில்லை. எல்லாமே சிறிய நிறுவனங்கள்,  கடைகண்ணிகள் அங்குதான் அவர்கள் வேலைகளைத் தேடிப் போகின்றனர். அங்கு தான் கடுமையான கட்டுப்பாடுகள்.   நாமோ கட்டுபாடுகளை விரும்புவதில்லை!  பொழுது போக்குக்காக வேலைக்குப் போகிறோம்!

இது போன்ற கடைகளில் வேலை செய்வதன் மூலம் ஓரளவு அவர்களின் தொழிலையும்  நாம் கற்றுக் கொள்கிறோம். 

பெண்களே!  வேலை தேவை தான்! அதில்  கௌரவமும் வேண்டும்!

Monday 2 October 2023

 
கல்வி  ஒன்றே  நமக்கு  ஆயுதம்.  ஏழ்மையிலிருந்து விடுதலைப் பெற வேண்டுமானால்  கல்வியைத் தவிர  வேறு எளிமையான ஆயுதம்  எதுவும் இல்லை.

நம்மைச் சுற்றிப் பாருங்கள். தோட்டப்புறங்களில் ஏழ்மை நிலையில் வாழ்ந்த எத்தனையோ குடும்பங்களின்   அடுத்த தலைமுறையினர் ஏழ்மை நிலையை மாற்றி படித்தவர் பட்டியலில் வந்து விட்டனர்.

ஆனால் அவர்கள் அனைவரும், அவர்களின் பெற்றோர்களின் அசராத உழைப்பினால் அவர்களின் குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து, தங்களது பிள்ளைகளைச் சான்றோராக வளர்த்து விட்டனர்.

ஆரம்ப காலகட்டத்தில் நிறைய தமிழாசிரியர்கள் உருவானார்கள். ஆமாம் அவர்கள் அனைவரும் தோட்டத் தமிழ்ப்பள்ளிகளில் படித்தவர்கள். அதுவும் பெரும்பாலானோர் மலையாளிகளாகவே இருந்தனர். அதற்குக் காரணம் அவர்கள் இங்கு வருவதற்கு முன்னரே கல்வியைப்பற்றி - அதனால் வரும் முன்னேற்றத்தைப் பற்றி - அறிந்தவர்களாகவே இருந்தனர்.

தமிழர்களில் ஒரு சாராருக்குக் கல்வியின் முக்கியத்துவம் அறியவே இல்லை. அவர்கள் தான்  நல்ல குடிகாரர்களாக  இருந்தனர்.இரண்டு மூன்று தலமுறையினருக்குப் பின்னர் தான் கல்வியை அறிந்தவர்களாக  மாறினார்கள். இப்போது யாரையும் குறை சொல்வதறகில்லை.  அனைவரும் கலவி ஏன் தேவை என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

இப்போது  பிரச்சனை வேறுவித  மாற்றத்திற்கு உள்ளாகிவிட்டது.  அன்று பெற்றோர் கல்வியின் முக்கியத்துவத்தை  புரிந்து கொள்ளவில்லை. இன்றைய பெற்றோர்க்குப்  பொருளாதார பலமில்லை.  ஆனாலும் இயக்கங்கள், அரசாங்கம், தொழிலதிபர்கள் என்று பலவேறு வகைகளில் கல்வி கற்பதற்கான  வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர்.

இன்றைய போட்டி நிறைந்த உலகில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. ஓர் ஏழை கல்வி கற்பதன் மூலம் அவனது குடும்பத்தின்  வாழ்க்கை முறை  முற்றிலுமாக மாற்றியமைக்கப்படுகிறது. ஒரு பணக்காரன் தனது பணத்தைத் தற்காத்துக் கொள்ள கல்வி தேவைப்படுகிறது. அதனால் எப்படிச் சுற்றிப்பார்த்தாலும் கல்வி தேவையே 

அதனால் தான் அவ்வைப்பாட்டி , பிச்சை ஏடுத்தாவது  கல்வியைக் கொடு என்று பெற்றோரைப் பார்த்துச் சொன்னார். நமது ராஜ ராஜ சோழன் தனது காலத்தில் இந்தியா பூராவும்  நிறைய கலவெட்டுகளில்  மக்களின் வாழ்வியலை  தமிழில் எழுதிவிட்டுப் போயிருக்கிறார். இந்தியாவின் சரித்திரத்தை அறிய அவருடைய கல்வெட்டுகளைப் படித்தாலே போதும். அவர் கற்றவர், வல்லவர் என்பதால்தான் அவரது பெயர் இன்னும் நிலைத்து நிற்கிறது.

நாமும் அவரது பரம்பரை தானே! நமக்கு மட்டும் கல்வி ஏறாதா?


                                                                    -  2  -