Tuesday 31 July 2018

எழுத்தாளர் பீர்முகமதுக்கு நன்றி!

"தமிழ் மலரில்" எழுத்தாளர் சை பீர்முகமது  அவர்கள் "என்ன தவறு செய்தார் ராமசாமி?" என்று வெளியிட்ட அறிக்கையைப் படிக்க நேர்ந்தது.

நான் எல்லாக் காலங்களிலும் பிறரிடம் சொல்லுவதுண்டு. பினாங்கு மாநிலத்தைப் பொறுத்தவரை தமிழர்களுக்கு எதிரிகள் என்றால் அங்குள்ள தமிழறியா தமிழ் முஸ்லிம்கள் தான் என்று.

அவர்கள் தங்களை பூமிபுத்ராக்களாகக் காட்டிக் கொள்ளட்டும். இந்தப் பூர்வீக மண்ணுக்கே சொந்தம் என்று சொந்தம் கொண்டாட்டும்.  அங்குள்ள எல்லா வளங்களையும் கொள்ளையடிக்கட்டும் (அதைத்தான் அவர்கள் பாரிசான் ஆட்சியில் செய்து கொண்டிருந்தார்கள்!) ஆனால் நமக்கு அதைப் பற்றியெல்லாம் கவலையில்லை! 

தமிழர்களைச் சீண்ட வேண்டாம் என்று தான் நாம் சொல்லுகிறோம். நீங்கள் ஏதோ உயர்ந்தவர்கள் போலவும், நாங்கள் எல்லாம்  தாழ்ந்தவர்களைப்  போலவும் காட்டிக் கொள்ளுவதை  நிறுத்துங்கள் என்று தான் சொல்லுகிறோம்.

லிம் குவான் எங் முதலமைச்சராக இருந்த போது எத்தனை எத்தனை ஆர்ப்பாட்டங்கள்! ஒன்றா, இரண்டா! ஆனால் என்ன நடந்தது? உங்களால் அவர்களை அசைக்க முடியவில்லையே!

இப்போது புதிதாக ஓரு பிரச்சனையைக் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஸாகிர் நாயக் இஸ்லாமிய போதகராக இருந்துவிட்டுப் போகட்டும். மற்ற மதங்களின் போதகராக இருக்க வேண்டாம்! அதைத்தான் நாங்கள் சொல்லுகிறோம்.  பேராசிரியர் ராமசாமியும் அதைத்தான் சொல்லுகிறார். அதற்குப் புதிதாய் ஒரு சாயம் பூசுகிறார்கள் அவரைத் தீவிரவாதி என்று!

சை பீர்முகமது சரியாகச் சொன்னார்:  " தேர்தலில் தோல்வியடைந்த அம்னோவில் இருக்கும் தமிழே அறியாத முஸ்லிம்களே மொத்தப் பிரச்சனைக்கும் காரணமாக இருக்கிறார்கள். தொப்புள் கொடி உறவுகள் பற்றி அறியாதவர்கள் அவர்கள். தமிழ் அறிந்த முஸ்லிம்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு நான் அறிந்தவரை ஆதரவாக இல்லை".

ஒரு தமிழர் துணை முதல்வராக இருப்பதை இவர்கள் விரும்பவில்லை. நம்மிடையே காட்டிக் கொடுக்கும் எட்டப்பர்கள் நிறையவே இருக்கிறார்கள்! அதில்  இந்தப் புதிய பூமிபுத்ராக்களும் அடங்குவர். இது ஒரு இரண்டும் கெட்டான் கூட்டம்.  இதுவும் இல்லை, அதுவும் இல்லை! நேரம் வரும். அப்போது இவர்கள் எதை உணர வேண்டுமோ, அதனை உணர்வார்கள்!

சை பீர்முகமதுக்கு நன்றி! நல்லதே நடக்கும் என நம்புவோம்!

Monday 30 July 2018

நூறு நாள்கள் போதுமா...?

தேர்தல் சமயத்தில்  -  பக்காத்தான் கட்சி தேர்தல் பிரசாரத்தின் போது - ஒரு சில காரியங்களை நூறு நாள்களில் நாங்கள் செய்த முடிப்போம் என்று அறிவித்திருந்தனர்.  சிலவற்றைத்  தவிர பெரும்பாலும் செய்த  முடிக்கக் கூடிய காரியங்கள் தான்.

இப்போது பிரச்சனை செய்ய முடியுமா என்பதல்ல. செய்யக் கூடாது என்று சில தரப்பினர் மிகவும் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அதுவும் முன்னாள் பிரதமர் நஜிப்பின் ஆதரவாளர்கள் - நஜிப்பையும் சேர்த்துத் தான் = பலவகையான முட்டுக்கட்டைகளைப் போட்டு அரசாங்கம் இயங்க விடாமல் கோணங்கித்தனங்களையெல்லாம்   பண்ணிக் கொண்டிருக்கின்றனர்! 

எதுவாக இருந்தாலும் அதனை ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொண்டு ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்!. "அது சரியில்லை! இது சரியில்லை!"  என்று ஒவ்வொன்றுக்கும் குற்றம் கண்டுபிடிக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள்! 

எதற்கு எடுத்தாலும் "இஸ்லாம் அவமதிப்பு, மலாய் மொழி அவமதிப்பு, மலாய் ஆட்சியாளர் அவமதிப்பு" என்று தொடர்ந்தாற் போல குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்! 

அம்னோ தரப்பு என்ன சொல்ல வருகிறார்கள்? பக்காத்தான் அரசாங்கத்திற்கு "இஸ்லாம் என்றால் என்னவென்று தெரியவில்லை! மலாய் மொழி என்றால் என்னவென்று தெரியவில்லை! மலாய் ஆட்சியாளர் என்றால் என்னவென்று தெரியவில்லை!" என்று ஒவ்வொரு நாளும்  புலம்பி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள்! அவர்களுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் பள்ளிவாசலில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் செய்வதையே நோக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஏதாவது ஒரு பிரச்சனையைக் கையில் எடுத்துக் கொள்ளுகிறார்கள்! ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்!

ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு பிரச்சனை அவர்களுக்கு அகப்பட்டுக் கொள்கிறது. லிம் கிட் சியாங் இஸ்லாம் பற்றிச் சொன்னார், குலசேகரன் மலாய் குடியேறிகள் என்றார், ராமசாமி தீவிரவாதி - இப்படி ஏதோ ஒன்று அவர்களுக்குக் கிடைத்துவிடுகிறது!

இவர்களின் நோக்கம் என்ன? முன்னாள் பிரதமர் நஜிப்பின் வழக்குகள் நெருங்க நெருங்க,  அவர்கள் அரசாங்கத்திற்கு இன்னும் நெருக்குதல்களை உண்டாக்க வேண்டும் என்பது தான் பிரதானமான நோக்கமாக இருக்க வேண்டும்.  அரசாங்கத்திற்கு அவப்பெயரை உண்டாக்க வேண்டும். நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும். ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கு முக்கியமாக அவர்களுக்குத் தேவைப்படுவது:  "இஸ்லாம், மலாய் மொழி,  மலாய் ஆட்சியாளர்"!

இது போன்ற நெருக்குதல்கள் ஏற்படுத்தி அரசாங்கத்தின் கவனத்தை திசைத்திருப்பி அரசாங்கத்தை இயங்கவிடாமல் தடுப்பது தான் அம்னோவின் நோக்கம்!

எது எப்படி இருந்தாலும் அரசாங்கம் தனது கடமைகளை நிறைவேற்ற உறுதியாக உள்ளது. அவர்கள் செய்ய வேண்டிய வேலைகளைத் தாமதப் படுத்தலாம். ஆனால் தடை செய்ய முடியாது! தடையும் போட முடியாது. தவளைகள் கத்தலாம். எதனையும் கட்டுப்படுத்த முடியாது!

Saturday 28 July 2018

வேலையற்ற வீணர்கள்.....!


பாஸ் கட்சியும் அம்னோவும் சேர்ந்து இப்போது பினாங்கு துணை அமைச்சர் பேராசிரியர் இராமசாமிக்கு நெருக்குதல்களைக் கொடுக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

பேராசிரியர்,  நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முயன்ற இந்திய இஸ்லாமியப் போதகர்  ஸாகிர் நாயக் வெளியேற்றப்பட வேண்டும் என்று சொன்னார். அவர் நாட்டிற்கு அவர் திருப்பி அனுப்பப்பட வேண்டும். காரணம் பண மோசடி மற்றும் அவரின் தீவிரவாதப் போக்கு என்பது தான் இந்திய அரசாங்கத்தின் அவரின் மேல் உள்ள குற்றச்சாட்டு.

அவர் இன்னும் அங்கு அனுப்பப்படவில்லை என்றாலும் இங்கும் அவர் தேவைப்படாதவர் என்பது தான் நம்முடைய குற்றச்சாட்டு. யாருக்கும் மற்றவர்களின் மதங்களைப் பற்றி விமர்சிக்க உரிமையில்லை.

அது ஸாகிர் நாயக்கிற்கும் பொருந்தும். அவர் இஸ்லாமியத் துறையில் பட்டம் பெற்றவராக இருக்கலாம்.  அது எந்த வகையிலும்  மற்ற மதங்களின் மீதான கருத்துக்களைச்  சொல்ல அவருக்கு அதிகாரம் கொடுக்கவில்லை! அவருக்கு அந்த அதிகாரம்  இருந்தால்  மற்ற மதத்தினரும் அதே அதிகாரத்தை கையில் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா!

ஆனால் இதற்குப் பதில் சொல்ல முடியாத அந்த வேலையற்ற  பாஸ், அம்னோ கூட்டம் பேராசிரியர் இராமசாமியின் மீது தாக்குதல்களை மேற் கொண்டிருக்கிறார்கள். அவரைத் தீவிரவாதி என பிரச்சனையைத் திசைத் திருப்புகிறார்கள்!  தமிழீழம் என்பது உலகத் தமிழர் பிரச்சனை. அதற்கான ஆதரவு என்பது ஒவ்வொரு தமிழனிடமும் உண்டு. விடுதலைப் புலிகளுடன் கை கோர்க்கிறோம் என்றால் ஈழத்தில்  சமாதானம், அமைதி நிலவ வேண்டும் என்கின்ற ஒரே காரணம் தான். அதுவும் பேராசிரியர் போன்றவர்கள் சமாதானத் தூதுவராகத் தான் உலக ரீதியில் கூட்டங்களில் கலந்து கொள்ளுகிறாரே தவிர - ஸாகிரைப் போல - தீவிரவாதத்தைத் தூண்டிவிட  அவர் எங்கும் செல்லுவதில்லை!

தமிழ் ஈழம் என்பது ஒரே ஒரு மதத்தினர் சம்பந்தப்பட்டது அல்ல. அது இந்து, கிறிஸ்துவம், முஸ்லிம் சம்பந்தப்பட்டது தான் தமிழ் இனம்.  தமிழர் எந்த மதத்தினராக இருந்தாலும் அவர்கள் புலிகளை ஆதரிக்கத்தான் செய்வார்கள். "நாங்கள் முஸ்லிம்கள் அதனால் பாலஸ்தீனத்தை ஆதரிக்கிறோம்"  என்று நீங்கள் சொல்லலாம் ஆனால் நாங்கள் சொல்ல மாட்டோம். காரணம் மனிதம் என்பது மதம் அல்ல, மனித இனம்!

வேலையற்ற வீணர்களுக்கு இது ஒரு விளையாட்டு!

Friday 27 July 2018

அதிசயம், ஆனால் உண்மை...!

நீங்கள் இதனைப் படிக்கும் போது உங்கள் ஊரிலும் இது போன்று நடந்திருக்கலாம்,  அல்லது நடக்கலாம்! இன்றைய நிலையில் எதுவும் நடக்கலாம்!

இப்போது நான் குடியிருக்கும் இடத்தில் சுமார் இருபத்தாறு ஆண்டுகளாக குடியிருக்கிறேன். பதினான்காவது பொதுத் தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன்பு இங்கு இருந்த ஒரே வங்கியான BSN வங்கியை  மூடிவிட்டார்கள்!  காரணம் வாடகை அதிகரிப்பை வங்கியால் கட்ட முடியவில்லையாம்! அதனால் மக்களுக்குப் பெரிய பாதிப்பு வரும் என்பதைப் பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்பட வில்லை! அங்கு தான் நிற்கிறது நமது முன்னாள் பாரிசான் அரசாங்கம்!

எங்கள் குடியிருப்பில் ஓர் அஞ்சலகமும் நீண்ட நாட்களுக்காகப் பயன்பாட்டில் இருக்கிறது. அதுவும் ஓர் இருபது வருடங்களுக்கு மேலாக. இன்னும் அதன் சேவை தொடர்கிறது. அதுவே எங்களின் பல பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கிறது.

அந்த அஞ்சலகத்தில் - பொதுவாகச் சொல்லப் போனால் - அங்கு வேலை செய்பவர்கள் அந்தக் காலம் தொட்டு இந்தக் காலம் வரை, மலாய்க்காரர்கள் மட்டுமே.  காரணம் அது மலாய்க்காரர்கள் அதிகமாக வசிக்கும் இடம் என்று - நாங்கள் சொல்லவில்லை - அவர்களே சொல்லிக் கொள்ளுகிறார்கள்!  ஏதோ அஞ்சலகத்தையே குத்தகை எடுத்துவிட்டது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி விட்டார்கள்! 

ஆனால் இன்று நான் அஞ்சலகத்திற்கு ஒரு வேலையாகப் போன போது என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை! இது தான் முதன் முறை. ஒரு தமிழ் நண்பர் அங்கு வேலையில் இருந்ததைப் பார்த்ததும் எனக்கு அதிர்ச்சியாகி விட்டது! இப்படியும் நடக்கும் என்று நான் எண்ணிப் பார்த்ததில்லை! 

அதெப்படி? அதெப்படி?  தீடீரென அப்போது தான்  ஞாபகத்திற்கு  வந்தது. ஆமாம்! ஆமாம்! இப்போது தான்  பாரிசான் அரசாங்கம்  இல்லையே!  இப்போது  பக்காத்தான் அரசாங்கம்  அல்லவா! அடாடா! ஓர்  அரசாங்க  மாற்றத்தில்  இப்படியெல்லாம் நடக்குமா! நடந்திருக்கிறதே! இனி  நடக்கும் என்பது  தான்  நமது  எதிர்ப்பார்ப்பு.

இது என்  கண் முன்னே நடந்த  ஒரு  மாற்றம்.  இது  நாடெங்கும் நடைபெறுகிறது - நடைபெற வேண்டும் - என்பதே  நமது கணிப்பு.  ஆட்சி மாற்றம்  மக்களுக்கு நல்லது  கொண்டு வர வேண்டும்.  நல்லது  செய்ய  வேண்டும்.  இனி  எல்லாத்  துறைகளிலும் நமது  பங்கும் இருக்க  வேண்டும். எந்த ஒர் இனமும் எல்லாத்  துறைகளிலும் ஆக்கிரமிப்பு செய்வதை ஏற்றுக்கொள்ள  முடியாது.

பக்காத்தான் ஆட்சியில்  இன்னும் பல அதிசயங்கள் நடைபெறும் என எதிர்ப்பார்க்கிறோம்!

நடக்கட்டும்!  நல்லது நடக்கட்டும்!
 

Thursday 26 July 2018

சட்டம் வருகிறது..ஜாக்கிரதை...!

நாடாளுமன்றத்தில் நல்லதொரு செய்தியைக் கூறியிருக்கிறார், பிரதமர் துறை அமைச்சர் முஜாஹிட் யூசோப் ராவா.

எந்த சமயத்தைப் பற்றியும், எந்த இனத்தைப் பற்றியும் சிறுமைப்படுத்துவதை நிறுத்தப்படும் நோக்கில் வெகு விரைவில் சட்டங்கள் கொண்டு வரப்படும் என்பதாக அமைச்சர் கூறியிருக்கிறார். அதுவும் சமயம் என்று வரும் போது "நீ பெருசு, நான் பெருசு" என்கிற நிலைமை இருக்கக் கூடாது என்பது முக்கியம்.

எல்லா சமயங்களுமே நல்லதைத் தான் பேசுகின்றன. "நீ திருடு" என்று எந்த சமயமும் சொல்லுவதில்லை. அதேபோல "மற்றவரைச் சுரண்டி தான் நீ வாழ வேண்டும்"  என்று எந்த சமயமும் சொல்லவில்லை.  "நான் பெரியவன் நீ சிறியவன், நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன், நான் தலைவன் நீ அடிமை" என்றெல்லாம் சமயங்கள் சொல்லுவதில்லை. அப்படி சொல்லுவது சமயங்களாக இருக்க முடியாது. 

ஆனால் எது எதுவெல்லாம் சமயங்களில் சொல்லப்பட வில்லையோ அவைகள் அனைத்தையும் கடைப்பிடிப்பவன் தான் மனிதன்!  எல்லாத் தவறுகளையும் மனிதன் செய்துவிட்டு, செய்த அத்தனைத் தவறுகளுக்கும்  மற்றவர்கள்  மீதோ அல்லது  மற்ற சமயத்தினர் மீதோ  பழிசுமத்துவது மிக இயல்பாகப் போய்விட்டது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் காலில் அணியும் செருப்புகளில் இந்து சமய கடவுளின் படங்கள் வெளியாயின. அதற்கு இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அது ஒரு முறை தான் நடந்தது என்றால் மன்னித்து விடலாம். ஆனால் அது பல முறை நடந்தது. அரசாங்கம் இந்துக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவில்லை. "இஸ்லாம் மட்டும் தான் எங்கள் வேலை" என்று கழன்று கொண்டது. 

அதே போல சமீபத்திய ஸாகிர் நாயக்கின் சொற்பொழிவுகள் அனைத்தும் மற்ற மதத்தினரை அவமதிக்கப்படுவதாக அமைந்தன.  அதிலும் அரசாங்கம் ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டது.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதற்குத் தான் இது போன்ற சட்டங்கள் வருவதை நாம் வர வேற்கிறோம். ஒவ்வொருவரும் தங்கள் மதத்தை கொண்டாடட்டும், போற்றட்டும், புகழட்டும், புளகாங்கிதம் அடையட்டும்.! பிற மதங்களைப் பற்றி பிதற்ற வேண்டாம், பொல்லாங்கு பேச வேண்டாம்!

வர வேற்கிறோம்!

Tuesday 24 July 2018

பாராட்டலாமே....!


பேரா மாநிலத்தின் தமிழ்ப்பள்ளி மேம்பாட்டு ஒருங்கிணைப்புக் குழுவைப் பாராட்டுகிறேன்.

பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்  அ.சிவநேசன் சொன்னதைச் செய்திருக்கிறார். மாநிலத்தில் 134 தமிழ்ப் பள்ளிகள்  இருக்கின்றன.  அவை பல பிரச்சனைகளை எதிர் நோக்குகின்றன.

நாட்டில் உள்ள  பல தமிழ்ப்பள்ளிகள் போலவே பேரா மாநிலத்தில் உள்ள பள்ளிகளும் நிலப் பிரச்சனை,  கட்டடப் பிரச்சனை,  கற்றல் கற்பித்தல் பிரச்சனைகளைக்கு எந்தப் பஞ்சமும் இல்லை. 

இந்தப் பிரச்சனைகளைக் களைவதற்காக அ.சிவநேசன் அவர்கள் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டு ஒருங்கிணைப்புக் குழுவை அரம்பித்து வைத்திருக்கிறார்.

இந்தக் குழுவில் கல்வி இலாகாவைச் சேர்ந்த அதிகாரிகள், முன்னாள் தமிழ்ப்பள்ளி அமைப்பாளர்கள்,  த்மிழ்ப்பள்ளிகளின் ஆய்வு குழுவினர், நிலவள அதிகாரிகள் ஆகியோர் இந்தக் குழுவில் இடம் பெற்றிருக்கின்றனர்.

நல்ல செய்தி. அது பேரா மநிலத்தில் மட்டும் தான் நமக்குத் தெரிய வந்திருக்கிறது. மற்ற மாநிலங்கள்? 

குறிப்பாக நெகிரி செம்பிலானில் இது நடக்குமா என்பது இன்னும் தெரியவில்லை.  நடப்பதாகவும் தெரியவில்லை! தமிழ்ப்பள்ளிகளின் பிரச்சனைகள் எல்லா மாநிலங்களிலும் ஒன்று தானே! அப்புறம் ஏன் மற்ற மாநிலங்கள் இன்னும் "கப்சிப்" என்று இருக்கின்றன? 

நெகிரி செம்பிலானில் நாங்கள் இன்னும் இரண்டு ஆட்சிக்குழு உறுப்பினர்கள், ஒரு துணை சபாநாயகர் என்னும் அந்த மிதப்பிலேயே இருக்கிறோமோ!  இவர்கள் எதிர்கட்சியாக இருந்த போது  ஏதோ மண்சரிவு ஏற்பட்டால் வருவார்கள், வெள்ளம் ஏறினால் வருவார்கள், நெருப்பு, தீ, என்று வரும் போது இவர்களைப் பார்க்கலாம்! அவ்வளவு தான்! மற்றபடி....தெரியாது!

ஆனால் இப்போது நிலைமை வேறு. எந்தச் சாக்குப் போக்கும் எடுபடாது! இன்னும் இவர்கள் களத்தில் இறங்கவில்லை என்றே தோன்றுகிறது.  நமது பிரச்சனைகள் என்ன ஒன்றா, இரண்டா! தோண்டத் தோண்ட நிறைய கழிவுகள்,  சாக்கடைகள் எல்லாம் வரும்! முந்தைய ஆட்சியில் ம.இ.கா.வினர் அவைகளைச் சேர்த்து வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள்!~ 

அதனால் காலம் கடத்த  வேண்டாம் நண்பர்களே! களத்தில் இறங்குங்கள்!  அடுத்து என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது!

அது வரையில் பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசனைப் பாராட்டுகிறேன்!

Monday 23 July 2018

வாக்களிப்பு வயது குறையலாம்....!

வருங்கால பொதுத் தேர்தல்களில் வாக்களிக்கும் வயது குறையும் என்பதற்கான சாத்தியக்கூறுகள் பிரகாசமாகவே  இருக்கின்றன.

கடந்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் தனது கொள்கை அறிக்கையில் வாக்களிக்கும் வயதை  பதினெட்டாக குறைக்கும் என அறிவித்திருந்தது. இப்போது அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டதாகவே நமக்குத் தோன்றுகிறது.  சட்டத்துறையின் கையில் அது இப்போது, இன்றை நிலையில்.

ஏன் பதினெட்டு வயதினருக்கு மேல்  வாக்களிக்க வேண்டும்? ஒன்று இளைஞர் சக்தி.  எது நல்லது, எது கெட்டது என்பதை இளைஞர்கள் புரிந்து வைத்திருக்கின்றனர்.  வயதானவர்கள் செக்கு மாடுகள் போல!  "அந்தக் காலத்தில் அப்படி, இப்படி!" என்று கடந்த கால பெருமைகளை சொல்லிக் காட்டிக் கொண்டே இருப்பார்கள்!  இப்பொழுது நடக்கும் அநீதிகளைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள்.  அந்த அநீதிகளையும் பெருமையாக நோக்கும் மனப்பக்குவத்தை அவர்கள் கொண்டிருப்பார்கள்!

ஆனால் இளம் வயதினர் பல வகைகளில் வித்தியாசப் படுகின்றனர். அவர்கள் நிகழ் காலத்தை உன்னிப்பவர்கள். தாங்கள் எதிர்நோக்கும் இன்றையப் பிரச்சனைகளில் கவனம் செலுத்துபவர்கள்.  தாங்கள் ஏமாற்றப்படுகின்றோம் என்றால் வீறு கொண்டு எழுபவர்கள்!  அவர்களின் துணிச்சலைக் காட்டுபவர்கள்.  ஊழல்களை எதிர்ப்பவர்கள். இது தான் நமக்குத் தேவை. நாட்டிற்குப் பயன்படாத ஆட்சி நமக்குத் தேவை இல்லை.

அடுத்த பொதுத் தேர்தலிலேயே இந்த வாக்களிப்பு வயது பதினெட்டாகக் குறைக்கைப்படக் கூடிய  வாய்ப்புக்கள் நிறையவே உண்டு. 

இந்த வயது குறைப்பை  பிரதமரும் வரவேற்கிறார். இன்னும் பலரும் வர வேற்கின்றனர். குறிப்பாக விளையாட்டுத்துறை அமைச்சர், சைட் சாடிக்   இன்னும் அதிகமாகவே வர வேற்கிறார்!  இந்த நடவடிக்கையின் மூலம்  சுமார் 37 இலட்சம் புதிய வாக்காளர்கள் கிடைப்பார்கள் என நம்பப்படுகிறது. வயதைக் குறைப்பது மட்டும் அல்ல இளைஞர்கள் பதினெட்டு வயது ஆனதும் இயல்பாகவே அவர்கள் தேர்தல் ஆணையத்தினால் வாக்களர்களாகப் பதிவு செய்யப்பட்டு விடுவார்கள். இளைஞர்கள் தேர்தல் தினத்தன்று போய் வாக்களிக்க வேண்டியது தான் அவர்களின் வேலை!

அந்த நல்ல நாளை எதிர்பார்ப்போம்!

Sunday 22 July 2018

ஏன் இந்திய மாணவர்கள் இல்லை...!

மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் தொழிற்துறை பயிற்சி மையங்களில்  இந்திய மாணவர்களின்  எண்ணிக்கை  மன நிறைவு அளிக்கவில்லை என்பதாகக்  கூறியிருந்தார்.

வரவேற்கிறோம்! முன்னைய ஆட்சியில் இதனையெல்லாம் கண்டு கொள்ள ஆளில்லை! அப்போது கொஞ்சம் மன நிறைவு  அளிக்கும் வகையில்  நமது தலைவர்கள்  முயற்சி  எடுத்திருந்தால்  இந்தப் பிரச்சனைக்கு நல்லதொரு முடிவைக் கண்டிருக்கலாம்.  

இப்போது  நமது  அமைச்சர்  ஒருவர்  இது பற்றிப் பேசும் போது நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.  ஆனால் இது முற்றிலும் நமது பெற்றோர்களின் தவறு  அல்ல.

சமீபத்தில் ஒரு பயிற்சி  மையத்தில் நமது  ஆட்சிக்குழு  உறுப்பினர்  ஒருவர்  பேசும் போது  மையத்தில் அறுநூறு  மாணவர்கள் படிக்க வேண்டிய இடத்தில் சுமார் 300க்கு  மேற்பட்ட  மாணவர்களே  படிக்கின்றார்கள்  என்பதாகக்  குறைபட்டுக்  கொண்டார்.

இங்கு ஒன்றை  நாம்  ஞாபகப்படுத்த வேண்டும். பெற்றோர்களுக்கு நமது ஊடகங்களில் கொடுக்கப்படுகின்ற   விளம்பரங்களே அதிகம் போய்  சேருகின்றன. சான்றுக்கு வானொலிகளும், நாளிதழ்களும்.  அனைத்தும் இலவசம்,  இலவசம்  என்பதாகவே  நமது  பெற்றோர்களுக்குச் செய்திகள்  போய்ச் சேர்கின்றன.  கடைசியில் பையன் சொல்லுகின்றானே (அவர்களுக்கு வேறு வாய்ப்புக்கள் இருப்பதும் தெரியவில்லை) என்கிற காரணத்தால் தனியார்  மையங்களில்  தனது  பள்ளிக் கூட்டாளிகளுடன் போய்  அரைகுறை  பயிற்சியைப் பெறுகிறான்!

இன்னொரு கோணத்தில்  பார்த்தால் அரசாங்க மையங்கள் இந்திய  மாணவர்களை  அவ்வளவாக  வரவேற்பதில்லை. அதிலும்  இந்த மையங்களின் தலைமை ஆசிரியர்கள்   மலாய்க்காரர்களாக இருப்பதால் முடிந்தவரை அவர்கள்  இந்திய  மாணவர்களைத் தவிர்க்கவே  விரும்புகின்றனர்.  ஏன்?  இந்திய  மாணவர்கள் தரமற்றக் கல்வியைப் பயிலத்தான் நிறைய தனியார் நிறுவனங்களுக்கு உரிமங்களைக் கொடுத்து அவர்களைக் கட்டாயமாகப் படிக்கின்ற ஒரு சூழலை உருவாக்கியவர்கள் யார்? கல்வி அமைச்சில் உள்ள அதிகாரிகள் தானே! அங்குத்  தடை செய்தால் தான்  இங்கு மாணவர்கள்  கூடுவார்கள், ஆக, அவர்களுக்கும் "கமிஷன்" இவர்களுக்கும் கொள்ளை இலாபம்!

தொழிற்பயிற்சி மையங்களில் இந்திய  மாணவர்கள் அதிகம்  சேர வேண்டும். நமக்கு அதில்  கருத்து வேறுபாடில்லை.ஒவ்வொரு மையத்திலும் பத்து  விழுக்காடு இந்திய  மாணவர்கள் கல்வி  பயில வேண்டும் என்பது  கட்டாயம்  ஆக்கப்பட  வேண்டும். 

மனிதவள அமைச்சர் இனி இதில் கவனம் செலுத்துவார் என்று நம்புவோம். அவருடைய கவனம்  பல திசைகளில் சிதறடிக்கப்படுகின்றது என்பது நமக்குப் புரிகிறது.   ஆனாலும் இதுவும் முக்கியம் என்பதே நமது வேண்டுகோள்!

Saturday 21 July 2018

பேராசிரியர் ராமசாமிக்கு இத்தனை........!

பேராசிரியர் ராமசாமி அப்படி என்ன செய்துவிட்டார்? அவர் மேல் 53 புகார்கள் காவல்துறையில் போடப்பட்டிருக்கிறது என்கிறார் ஐ.ஜி.பி. பூஸி ஹருன்.

இதெல்லாம் சில கும்பல்களுக்கு ஒரு விளையாட்டு மாதிரி!  பேராசிரியர்  சொன்னதெல்லாம் ஜாகிர் நாய்க் என்கிற இஸ்லாமிய போதகர் அவர் நாடான இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்பது தான். அவர் அனுப்பப்பட வேண்டும் என்பதில் ஒரு நியாயம் உண்டு.  இந்தியாவின் குற்றச்சாட்டு என்பது ஜாக்கிர் இஸ்லாமிய தீவிரவாதத்தை வளர்ப்பவர் அத்தோடு பணம் கையாடல் செய்தவர் என்பது தான் அவர் மீது உள்ள குற்றச்சாட்டு. 

மலேசியாவில் ஜாக்கிர் ஓரு நிரந்திர குடியிருப்புவாசி.  அவரின்  சிறப்பு என்பது  இங்குள்ள இஸ்லாமிய - இந்து  சமயத்தினரிடையே  பிரிவினையை ஏற்படுத்துவது! பிரிவினை என்பதை விட இந்து மதத்தைக் கேவலப்படுத்தி  இஸ்லாமியர்களை இந்து மதத்தின் மேல் ஒரு வெறுப்பை  ஏற்படுத்துவது!  இதனை இந்தியாவில் செய்து அவர் செருப்படி வாங்கியவர்! இங்குள்ள இந்துக்கள் அதனைச் செய்ய முடியாது என்பதால்  கொஞ்சம் துணிச்சலாகப் பேச ஆரம்பித்துவிட்டார்!

நிரந்திர குடியிருப்பு  தகுதியைக் கொடுத்த அரசாங்கத்துக்கு அவர் செய்கின்ற கைம்மாறாக இதனை நாம் எடுத்துக் கொள்ளலாம்! 

உண்மையைச் சொன்னால் இந்நாட்டுக்கு அவர் தேவைப்படாதவர்!  ஆனால் இங்குள்ள  இஸ்லாமிய போதகர்கள்  என்று கூறிக் கொள்ளுபவர்கள் ஜாகிரை பெரிய இஸ்லாமிய அறிஞராக நினைப்பது தான் இங்குள்ள பிரச்சனை.

பேராசியர் ராமசாமி அவர்கள் ஜாகிரை அவரது நாட்டுக்கு அனுப்பப்பட வேண்டும் என்று சொன்னதில் எந்தத் தவறும் இல்லை. இந்த நாட்டில்  வாழ்ந்து கொண்டு இங்குள்ள ஒரு சமயத்தினரைக் கேவலப்படுத்துவதை  நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. பேராசிரியர் மட்டும் அல்ல. இங்குள்ள மக்கள் பலர் அவர்களது எதிர்ப்பினைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ஏனோ ஒரு தீவிரவாத கும்பல் பல புகார்களைக் காவல்துறையில் செய்து கொண்டு இதனை ஒரு பிழைப்பாகவே செய்வது நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!

உண்மையை உரத்துக் கூறுவது ஒன்றும் தப்பில்லை! நீதி நிலைக்கும், நம்புவோம்!


Friday 20 July 2018

நாம் அனைவரும் மலேசியரே!

பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தி சொன்னது சரி தான். 

தீபகற்ப மலேசியாவாக இருந்தாலும் சரி,  கிழக்கு  மலேசியாவாக  இருந்தாலும்  சரி நாம்  ஒவ்வொரும் மலேசியரே! அதில் எந்த மாற்றமும் இல்லை. 

 ஆனாலும்  அது  ஏனோ  தீபகற்ப மலேசியாவைச்  சேர்ந்த  நமக்கு "நாம் அனைவரும் மலேசியர்"  என்று  சொல்லும்  போது  தீபகற்ப  மலேசியாவில்  உள்ளவர்களைத் தான் குறிப்பிடுகிறோம்! கிழக்கு மலேசியாவில்  உள்ளவர்களைப்  புறக்கணிக்கின்றோம்! அல்லது  வேறு  மாதிரியாக சொன்னால்  கிழக்கு  மலேசியா  ஒன்று  இருப்பதாகவே  நமது  நினைவிற்கு  வருவதில்லை!

அதில்  ஏதேனும்  அரசியல்  காரணங்கள்  இருக்குமோ?  குறிப்பாக ஒரு சில நமது  எதிர்கட்சி அரசியல்வாதிகள் சபா, சரவாக் மாநிலத்தில்  நுழைய மூடியாத சூழல் பாரிசான் ஆட்சியில் இருந்தது என்பது உண்மை. ஒரு சில  வழக்கறிஞர்கள் கூட  அனுமதிக்கப்படவில்லை.  அனுமதிக்கப்பட முடியாத  வேறு  பிரிவினர்  இருக்கின்றார்களா  என்பது தெரியவில்லை. 

ஒரே நாடு ஆனால் "அவருக்கு அனுமதி இல்லை, இவருக்கு அனுமதி  இல்லை"  என்னும்  பிரச்சனை  எப்படி  வந்தது? ஆனால்  தீபகற்ப  மலேசியாவுக்குள்  அவர்கள் இங்கு  வர  எந்தப்  பிரச்சனையும்  இல்லையே!  அங்கே   போவது  என்றால்  மட்டும்  தானே  பிரச்சனை!

காரணம்  ஒன்றே  ஒன்று  தான்.  இவைகள்  எல்லாம் ஆளும் அரசியல்வாதிகளால்   உருவாக்கப்  படும்  பிரச்சனைகள்!  "நாம்  அனைவரும்  மலேசியர்"  என்று  சொல்லுபவர்களும் அவர்கள்  தான்  சொல்லாதவர்களும்  அவர்கள்  தான்!

இப்போது  பிரதமர் துறை  அமைச்சர் வேதமூர்த்தி சொல்லியிருக்கிறார். சொன்னதோடு  நில்லாமல்  "ஒரே நாடு"  என்கிற  எண்ணத்தை  அவர்  உருவாக்க வேண்டும்.   மாநிலங்களுக்குத்  தனியாக  விடுமுறை என்பதெல்லாம் துடைத்தொழிக்க வேண்டும்.  மலேசியாவெங்கும்  ஒரே  விடுமுறை  தினங்களாக  இருக்க வேண்டும். தேசிய விடுமுறை என்பது  எல்லா மாநிலங்களுக்கும்  ஒன்றாக  இருக்கும் என  நான்  நம்புகிறேன்.  

சபா, சரவாக்  மாநிலங்களில் பல்வேறு  மொழிகள்  பேசுகின்ற  மக்கள் இருக்கின்றார்கள். பல்வேறு  இனங்கள். எல்லாமே  அங்குள்ள  பூர்வீகக்குடி மக்கள். பல்வேறு  சமயங்கள். இன்னும்  சரியானப்  பாதைகள்  இல்லாத பல  கிராமங்கள். பள்ளிக்கூடங்கள்  இல்லாத  கிராமங்கள். மருத்துவ வசதிகள்  இல்லாத  கிராமங்கள். இப்படி  மிகவும்  பின் தங்கிய மாநிலங்கள்  தான்  சபாவும், சரவாக்கும்.

என்ன செய்வது?  தவறான  அரசியல்  தான்  அந்த  நிலைக்குக்  காரணம். அது பாரிசான்  ஆட்சியில்.  இனி  புதிய  அரசங்கம் இவைகளை  எல்லாம்  சரி கட்டும்  என  நம்புவோம்.

நாம் அனைவரும்  மலேசியரே! 

Tuesday 17 July 2018

விவாதம் வேண்டாமே,....!

பினாங்கு துணை முதல்வர் பி.ராமசாமியும்,  இஸ்லாமிய சமயப் போதகர் ஜாகிர் நாய்க்கும் விவாதம் செய்ய வேண்டும் என்கிற பேச்சுக்கே இடமில்லை. அது ஒரு முட்டாள்தனமான அரைகுறைகளின் அரை வேக்காடுகளின் அவசியமற்ற பேச்சு.

ஜாகிர் நாய்க் ஓர் சமயப் போதகர். அவர் இங்கிருப்பதை ராமசாமி மட்டும் தான் எதிர்க்கிறார் ஏன்று சொல்ல முடியாது. இந்த நாட்டிலுள்ள அனைத்து இந்து சகோதரர்களும் எதிர்க்கவே செய்கிறார்கள்.  ஏன்? மற்ற சமயத்தினர் யாரும்  அவரைக் கொஞ்சவில்லை,  இஸ்லாம் மதத்தினரைத் தவிர!

காரணம் அவர் சார்ந்த மதத்தைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் பேசட்டும். ஒவ்வொருவரும் தங்களது மதத்தைப் பற்றி உயர்வாகத் தான் பேசுவார்கள்.  ஜாகிரும் அதற்கு விதி விலக்கல்ல. ஆனால் அவருக்கு மற்ற சமயங்களைப் பற்றி ஒன்றும் தெரியாது என்பதை அவர்  ஒப்புக்கொள்ள வேண்டும். 

சரி நமது விஷயத்துக்கு வருவோம்.  இப்போது ஜாகிர் நாய்க் பிரச்சனை என்பது மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் உள்ள பிரச்சனை. இரு அரசாங்கங்களும்  எப்படி அதனைத் தீர்க்கப் போகின்றன என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நாம் தேவை இல்லாமல் இதனைப் பற்றி விவாதம் செய்ய வேண்டும் என்னும் அவசியமில்லை. ஜாகிர் நாயக் எங்கிருந்தோ வந்த ஒரு மனிதர். அவர் பிறந்த நாடு அவரைத் தேசத் துரோகி என்கிறது. நமது  நாடு அவருக்குக்  குடியுரிமைக் கொடுத்துவிட்டு அவரைத் தேசத் தியாகி என்கிறது! அவ்வளவு தான்!

நம்மைப் பொறுத்தவரை,  ஜாகிர் நாயக் பிரதமர் மகாதீரின்  அறிவுரையைக் கேட்டு நடப்பார் என நம்புவோம்.  பிரதமர் அவருக்கு "ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள்" என்கிற அறிவுரையே அவருக்குப் போதும்  அதனை மீறீனால் அதற்கானப் பலனை அவர் தான் அனுபவிக்க வேண்டும்! ஜாகிருக்கே தெரியும். அவர் இந்தியாவுக்குப் போனால் அவருடைய கதி அதோ கதி என்று அவர் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்! 

அதனால் அவர் எவ்வளவு காலம் இங்கு இருப்பார் என்பது நமக்குத் தெரியாது. இருக்கிற காலத்தில் அவர் இஸ்லாமைப் போதிக்கட்டும். பிற மதங்களில் அவர் தலையிட்டால்  அவரைக் காப்பாற்ற ......யாரும் இருக்க மாட்டார்கள்!

நமது சமுதாயத்தின் மதிப்பு 5% தான்!

நமது இந்திய சமுதாயத்தின் மதிப்பு - ம.இ.கா. வில் உள்ள அரசியல் நிபுணர்கள் நிர்ணயம் செய்த,  நம்முடைய மானம், மரியாதை,  மதிப்பு,  5 விழுக்காடு தான்,   என்பதை அறியும் போது எப்படி இந்த அளவுக்குத் தாராள மனம்  படைத்தவர்களாக நமது தலைவர்கள் இருந்திருக்கிறார்கள் என நினைக்கத் தோன்றுகிறது!

முன்னாள் பிரதமர் துறையில் பணி புரிந்த இரவீந்தரன் தேவகுணம் தான் இப்படி ஒரு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறார்! 

ஆமாம்! இந்தியர்களின் முன்னேற்றத்திற்காக, மேம்பாட்டிற்காக  ஏகப்பட்ட  மானியத்தை வழங்கியும், கோடிக்கணக்கில் பணத்தை ஒதுக்கியும் அந்தக் கோடியிலிருந்து இந்திய சமுதாயத்திற்குப்  போனதோ ஐந்து விழுக்காடு தான் என்கிற உண்மையைப் போட்டு உடைத்திருக்கிறார் தேவகுணம்!

அடாடா!  இந்தியர்களின் தாய்க்கட்சியான  ம.இ.கா. விற்கு இந்தியர்களின் மேல் என்ன பாசம்!  இந்தியர்கள் முன்னேறவே கூடாது என்பதில் என்ன அக்கறை! ஒரு திருடன் ஒன்பது திருடர்களை உருவாக்கினான் என்பதை அறியும் போது ..... ..அவர்களை என்ன சொல்லுவது? இந்த ஒன்பது திருடர்களும் இந்திய சமுதாயத்தையே  கலங்கடித்து விட்டார்களே!

கோடிக்கணக்கான மானியங்கள் எங்கே போனது என்று சமுதாயம் கேட்கும் போது ஒருவனும் வாய் திறக்கவில்லையே! என்ன ரகசியம்! என்ன கட்டுப்பாடு!  கோடிக்கணக்கில் சமுதாயப் பணத்தைப் பங்கு போட்டுக் கொண்டு ஒன்றுமே தெரியாத அப்பாவி போல ஊர்வலம் வருகிறானே!   அடாடா! என்ன நடிப்பு! 

நமக்கு இதைப் பற்றியெல்லாம் அக்கறை இல்லை.  தப்பு செய்தவன் உப்பைத் தின்று தான் ஆக வேண்டும். அவன் தண்டனைப் பெற்றுத் தான் ஆக வேண்டும்.  அவனைப் பார்த்து உலகம் சிரிக்கத் தான்  வேண்டும். மக்கள் காரித்துப்பத் தான்  வேண்டும்.

பார்ப்போம்! எத்தனை பேர் நாட்டைவிட்டு ஓடுகிறார்கள் என்று! பார்ப்போம், எத்தனை பேர் IJN  - ல் படுக்கை  விரிப்பார்கள் என்று!

சமுதாயத்தின் மதிப்பை ஐந்து விழுக்காடாக நிர்ணயித்த இந்த சமுதாயத் துரோகிகள் தொண்ணூற்றூ ஐந்து விழுக்காடு அவமானம் அடைய வேண்டும், என்பதே நமது எதிர்பார்ப்பு!

Monday 16 July 2018

கேள்வி - பதில் (81)

கேள்வி

சேலம் எட்டு வழிச்சாலையை நடிகர் ரஜினிகாந்த் ஆதரிக்கிறாரே!

பதில்

பத்திரிக்கைச் செய்திகள் அப்படித்தான் சொல்லுகின்றன. அவர் சொல்லுவதாக வெளியிடப்படுகின்ற செய்திகள் எதனையும் நம்ப முடிவதில்லை.  காரணம் அடுத்த நாளே நான் அப்படிச் சொல்லவில்லை. எனது செய்தியை ஊடகங்கள் திரித்து வெளியிடுகின்றன  என்பார்!

ஆனால் இந்தச் செய்தியைத் திரித்து எழுவதற்கு ஒன்றுமில்லை. அதனால் அவரின் கருத்து அதுவாக இருக்கலாம். பொதுவாக அவரின் கருத்துக்கள் பா.ஜ.க. வின் கருத்துக்களை ஒட்டியே இருக்கின்றன என்பதும் நமக்குப் புரிகிறது.

அவர் ஏன் பா.ஜ.க. வை ஆதரிக்கிறார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. காரணங்கள் இருக்கலாம். பொதுவாக பா.ஜ.க. இந்துத்துவா கட்சி என்று சொல்லப்படுகிறது. இந்துக்களைத் தவிர்த்து இந்தியாவிற்கு வேறு மதங்கள் தேவை இல்லை என்பது தான் அவர்களின் கொள்கை. அடுத்து பிராமணர்களின் ஆதரவு என்றால் அது பா.ஜ.க. வுக்குத் தான். அதாவது உயர் வர்க்கத்தினரின் கட்சி. ரஜினிகாந்த் தன்னை உயர்ந்த ஜாதிக்காரன் என்று சொல்ல விரும்புகிறாரா? தெரியவில்லை!

ரஜினியை "சுப்பர் ஸ்டார்" என்று எந்த உயர்ந்த ஜாதிக்காரனும் சொல்லுவதில்லை. அவர்கள் என்ன வேலை வெட்டி இல்லாதவர்களா? பெரும்பாலும் சாதாரண , கீழ் நிலையில் உள்ளவன் தான் அவரை கொண்டாடுகிறான்!  பாலாபிஷேகம் செய்கிறான்! 

அவரது இந்த எட்டு வழிச்சாலை ஆதரவு என்பது,  இது சாதாரண மக்களின் பிரச்சனை. விவசாயிகள். இவர்களில் பெரும்பாலும் அவரது ரசிகர்கள். அவர்களின் நிலங்களை அவர்களிடமிருந்து வலுக்கட்டாயமாக  பிடுங்கி எட்டு வழிச்சாலையை அமைப்பது என்பது எந்த வகையிலும் நியாயமாகப் படவில்லை.

இங்கு யாரும் மேம்பாட்டுத் திட்டங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. இருக்கின்ற சாலைகளே போதுமே என்பது தான் மக்கள் கொடுக்கின்ற செய்தி. இந்தச் சாலையைப் பயன் படுத்தப் போகிறவர்கள் மிகச் சிலரே. 

ஆனால் ரஜினிகாந்த் ஆதரிப்பது வேறு ஏதோ உள் நோக்கம் இருப்பதாகவே நமக்குத் தோன்றுகிறது. அவருக்கு பா.ஜ.க.வின் உதவி ஏதோ ஒரு வகையில் தேவைப்படுகிறது. அதாவது அரசாங்க மட்டத்தில். அவர் பிராமணர்களின் குரலாகவே செயல்படுகிறார்!

இருக்கட்டும்! "காலா" பட்ட அடி போதவில்லை என்று தான் தோன்றுகிறது! அடுத்த படம்......?

 

Sunday 15 July 2018

ஒரவஞ்சனை வேண்டாம்...!

நமது புதிய அரசு இந்தியர்களுக்கு மட்டும் ஓரவஞ்சனை செய்யும் காரியத்தில்  ஈடுபட்டிருப்பதாகவே நமக்குத் தோன்றுகிறது.

சீன சமூகத்திற்கு மட்டும் கல்விக்காக ஒரு துணை அமைச்சரைக் கொடுத்துவிட்டு இந்தியர்களை ஓரங்கட்டிருப்பதாகவே நாம் நினைக்கத் தோன்றுகிறது.

ஆமாம், இதோ பாருங்கள்.  சீன கல்விக்குழுக்கள் துணைக் கல்வி அமைச்சரை சந்தித்து சீன உயர்கல்விக்கு என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். நமது நிலை என்ன? நாம் எங்கே ஆரம்பிப்பது? நாம் யாரிடம் நமது பிரச்சனைகளைக் கொண்டு செல்வது?

இனி நாம் மலேசியராக நினைக்க வேண்டும் என்று சொல்லுவது சரி தான்.  அதனால் இந்திய அமைச்சர் தான் நமக்கு வேண்டும் என்று சொல்லுவது சரியில்லை என்பதெல்லாம் கேட்பதற்குக் குளிர்ச்சியாகவே  இருக்கிறது!  அப்படியே அதனை ஏற்றுக் கொண்டாலும்  அப்புறம் ஏன் சீன துணைக்கல்வி அமைச்சர்?  அவர்களுக்கு ஏன் அந்த வாதம் எடுபடவில்லை? 

கல்வி என்று வரும் போது அமைச்சர், இரு துணை அமைச்சர்கள் - சீனம், தமிழ் - என்பது தான் சரியான வழியாக இருக்கும். அதில் ஏதும் தப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

 ஒரு துணைக்கல்வி அமைச்சர் சீனராக இருப்பதால் தான் சீனக் கல்விக் குழு தனது வேலைகளை எந்தத் தடையுமின்றி  ஆரம்பிக்க முடிகிறது. ஆனால் இந்திய கல்வி அமைப்புக்கள் இன்னும் எதனையும் செய்ய முடியாத நிலையில் கையைப் பிசைந்து கொண்டிருக்கின்றன. சீனக் கல்விக் குழுவுக்கு தனது இன அமைச்சர் என்பதால் உரிமையோடு உறவாட முடிகிறது.  நம்மால் அப்படி எல்லாம் செய்ய முடியவில்லையே!

கல்விததுறை என்பது ஒரு நாட்டிற்கு மிக முக்கியமானத் துறை. அதனை யாரும் அலட்சியப்படுத்த முடியாது. கல்வித்துறையில் நாம் பல பிரச்சனைகளை எதிர் நோக்குகிறோம்.  பாடங்கள் போதிப்பது மட்டும் அல்ல, கட்டடங்கள், ஆசிரியர் பற்றாக்குறை, தனியார் நிலங்களில் தமிழ்ப்பள்ளிகல்,  போன்ற பல பிரச்சனைகளை நம் கண் முன்னே நிற்கின்றன, இவைகளுக்கெல்லாம் தீர்வு காணப்பட வேண்டும்.

கடைசியாக, ஒன்றே ஒன்று தான். நமது பக்காத்தான் இந்திய அரசியல்வாதிகள், தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைக்  களைய  ஒர்  இந்திய துணைக்கல்வி அமைச்சர் தேவை என்பதை தங்களது மேலிடத்தில் வலியுறுத்த  வேண்டும். 

ஓரு துணைக் கல்வி அமைச்சர் கிடைக்கும் வரை இது பக்காத்தான் அரசாங்கத்தின் ஓரவஞ்சனை என்பதாகவே நாம் எடுத்துக் கொள்ளுவோம்!

Saturday 14 July 2018

ஏன் இந்த அவசரம்...?


அவசர அவசரமாக செய்கின்ற  காரியங்கள் நம்மைச் சிதறித்து விடும். அதனால் நிதானமாக உங்கள் காரியங்களைச் செய்யப் பழகிக் கொள்ளுங்கள்  என்பது தான் மற்றவர்களுக்கு நாம் கொடுக்கும் இலவச ஆலோசனை. ஆனால் எல்லாக் காரியங்களிலும் நாம் அப்படி இருக்க முடியாது

 இதனை நான் சமீபத்தில் தெரிந்து கொண்டேன்.  மிக, மிக அவசரம் என்பதாக ஒன்றும், அவசரம் என்பதாக ஒன்றும், நிதானம் என்பதாக ஒன்றும் நாமே ஒரு திட்டத்தை வகுத்துக் கொள்ளலாம். அதன் படி செயலாற்றலாம்.

பக்காத்தான் அரசாங்கம் அமைந்து இன்னும் மூன்று மாதங்கள் ஆகவில்லை. ஒரு சில விஷயங்களில் சீனர்கள் காட்டுகின்ற தீவிரம் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது! சான்றுக்கு சீன உயர்க்கல்வி பயில யூ.இ.சி. என்னும் நுழைவுத் தேர்வை அரசின் சட்டப்பூர்வமாகக் கொண்டு வர அவர்கள் எவ்வளவு வேகமாகச் செயல்படுகிறார்கள் என்பதை அறியும் போது நாம் ஏன் அப்படிச் செயல்பட முடியவில்லை என நினைக்கத் தோன்றுகிறது! அவர்களுக்கு அது 43 ஆண்டுகள் போராட்டம். அதன் அருமை அவர்களுக்குப் புரிகிறது.  சீனக்கல்விக் குழு "சோங் டோங்"  உடனடியாக சீனத் துணைக் கல்வி அமைச்சரைச் சந்தித்தது.  இந்த ஆண்டுக்குள்  யூ.இ.சி. பிரச்சனையை ஒரு முடிவுக்குக் கொண்டு வருவர் என நம்பலாம். இது மிக மிக அவசரம். நாளை எதுவும் நடக்கலாம்.  எந்த ஆபத்தும் நமக்கு வேண்டாம். இப்போதே அதற்கு ஒரு தீர்வைக் கொண்டு வர வேண்டும் என்கிற மிக மிக அவசரம்  காட்டுவது இயல்பு தானே! இன்னொரு சீனப்பள்ளியையும் கட்டுவதற்கான வேலைகளையும் அவர்கள் ஆரம்பித்து விட்டனர்.

சில ஆண்டுகளுக்கு  முன்னர் பேராக் மாநிலத்தில்1000 ஏக்கர் நிலம் சீன இடைநிலைப் பள்ளிகளின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்டது. சீனப் பள்ளிகள்  உடனடியாக களத்தில் இறங்கின.  காடுகளை அழித்து மரங்களை வெட்டி விற்பனை செய்ததில்  பணம் பார்த்தனர். உடனடியாக செம்பணை  மரங்களை  நட ஆரம்பித்தனர்.   இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அறுவடையையும் செய்ய ஆரம்பித்துவிட்டனர். இப்போது சீன இடைநிலைபள்ளிகளின் பொருளாதார சிக்கல்கள்  ஓரளவு  தீர்ந்து விட்டன.

தமிழ்ப் பள்ளிகளுக்குக்  கொடுத்த  2000 ஏக்கர்  நிலம் "நிலத்தையே காணோம்!"  என்கிற  நிலைமையில்  போய்க் கொண்டே  இருக்கிறது!  யார் பொறுப்பு  என்பதெல்லாம்  இன்னும்  தெரியவில்லை.  இந்நேரம்  சம்பந்தப்பட்ட  திருடர்களை  "உள்ளே"  தள்ளியிருக்க  வேண்டும்.  ஆனால் இன்னும் அது  நடக்கவில்லை!  ஒவ்வொரு  திருடனையும்  சீக்கிரம் நடப்பு  அரசாங்கம் ஏதாவது  செய்தால்  தான்   இருக்கிறவன்  பயப்படுவான்.

அதான் சொன்னேன்.  சீனர்கள்  வாய்ப்புக் கிடைத்ததும் மிக மிக வேகமாக வேலைகளைச்  செய்ய  ஆரம்பித்து விடுகிறார்கள்.  அந்த வேகத்திற்குக்  காரணம்  பின்னால்  எந்த  ஆபத்துக்களும்   வரமாலிருக்க  ஓர்  எச்சரிக்கை  உணர்வு  அவர்களிடம்  இருக்கிறது.  நாமோ எல்லாம் கைவிட்டுப்  போன பிறகு  எல்லாத்  தலைவர்களைப்  பற்றியும்  குறை சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

பக்காத்தான் அரசாங்க  இந்தியத்  தலைவர்களைத்  தான் இந்த சமூகம்  நம்பிக் கொண்டிருக்கிறது. அவர்கள்  கொடுத்த  தேர்தல்  வாக்குறுதிகள்  நிறை வேறும் என எதிர்ப்பார்ப்போம்!

மிக மிக அவசரமானவைகளை, தலைவர்களே, தள்ளிப்போட  வேண்டாம்!

Friday 13 July 2018

Unified Examination Certificate (UEC)


UEC  என்பது என்ன?  சீன உயர்நிலைப் பள்ளிகளில் பயின்று யூ.இ.சி. சான்றிதழ் பெறும் மாணவர்கள் மலேசிய பொதுப் பல்கலைக்கழகங்களில் சேருவதற்குப் போதுமான தகுதிகளைப் பெற்றிருக்கவிில்லை என்பது நமது கல்விக் கொள்கை.  இருந்தாலும்  நாட்டிலுள்ள  தனியார் பல்கலைக்கழகங்கள் இன்னும் வெளி நாடுகளிலுள்ள சீனப் பல்கலைக்கழகங்கள் அனத்தும் இந்தச் சான்றிதழ்களை பல்கலைக்கழகங்களில் மேற்கொண்டு பயில போதுமான தகுதியாக ஏற்றுக் கொள்ளுகின்றன.

இந்தச் சான்றிதழை நமது பல்கலைக்கழகங்கள் போதுமான தகுதியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதாக சீனக் கல்வி அமைப்பான டோங் சோங் (DONG ZONG) நாற்பத்தி மூன்று (43) ஆண்டுகளாக  அரசாங்கத்தோடு போராடிக் கொண்டு வருகின்றது. ஆனாலும் அரசாங்கம் அவர்களுக்குச் செவி சாய்க்கவில்லை. 

ஆனாலும் தேர்தல் செய்கின்ற மாயாஜாலங்கள் எத்தனை எத்தனையோ! பாரிசான் அரசாங்கம், கடந்த 14-வது பொதுத் தேர்தலில் போது தனது கொள்கையை மாற்றிக் கொண்டது. அவர்களின் தேர்தல் வாக்குறுதியாக யூ.இ.சி. யை ஏற்றுக் கொள்ளுகிறோம். ஆனால் SPM தேர்வில்  தேசிய மொழியிலும், சரித்திரப் பாடத்திலும் கிரெடிட் பெற்றிருக்க வேண்டும் என்று தனது தேர்தல் கொள்கை அறிக்கையில்  ஏற்றுக் கொண்டது!

அதே சமயத்தில் எதிர்க்கட்சியாக இருந்த பக்காத்தான் கூட்டணியும் தனது தேர்தல் கொள்கை அறிக்கையில் யூ.இ.சி யை எந்த நிபந்தனையும் இன்றி ஏற்றுக் கொள்வதாக அறிவித்திருந்தது. இவர்களைப் பார்த்த பின்னரே தேசிய முன்னணி தனது கருத்தை மாற்றிக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது பக்காத்தான் கூட்டணி அரசாங்கத்தை அமைத்திருப்பதால் வேலைகள் எல்லாம் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. அவர்களுக்குத் துணைக் கல்வி அமைச்சராக ஒரு சீனப் பெண்மணி பதவியில் இருக்கிறார்.  உடனடியாக, இந்த ஆண்டு கடைசிக்குள், இதனைச் சட்டப்படியாகக் கொண்டு வர அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறார். அந்த வேகம் அவர்களிடம் உண்டு.

நம்மிடம் அந்த வேகம் இருக்கிறதா என்று இன்னும் தெரியவில்லை! இருக்கும் என நம்புவோம்!

Thursday 12 July 2018

எங்கள் மாநிலத்தில் பணம் உண்டு...!

பயப்பட வேண்டாம்! மலேசியாவை நஜிப் கடன்கார நாடாக ஆக்கியிருக்கலாம். ஆனால் எங்கள் நெகிரி செம்பிலான் மாநிலத்துக்கு அவர் என்ன கெடுதல்கள் செய்திருக்கிறார் என்று தெரியவில்லை! எங்கள் மாநிலம் எப்போதும் போல, பாரிசான் ஆட்சியில் எப்படி இருந்ததோ, அதே போல ஏறக்குறைய பாரிசானின் நீட்சியைப் போல இயங்குகிறது என்று தாராளமாகச் சொல்லலாம்!

எதனை வைத்து இதனைச் சொல்லுகிறேன்? ஆமாம், ஹரிராயா பெருநாள் காலத்தில் பாரிசான் ஆட்சியில் என்ன நடந்ததோ,  எந்த வித்தியாசமும் இல்லாமல் அது தொடர்ந்தது, தொடர்கிறது என்று தாராளாமாகச் சொல்லலாம்!

மத்திய அரசாங்கம் சிக்கனத்தைக் கடைப்பிடித்த வேளையில் எங்கள் மாநிலம் வழக்கம் போல மிகவும் தாராளமாக நடந்து கொண்டது எனச் சொல்லலாம். ஆமாம், வீதியெங்கும் நோன்பு நாள் வாழ்த்துப் பதாகைகள், மாநில முதல்வரின் வாழ்த்துகள் என்று ஒரு பக்கம்.

அதனைக் கூட மறந்து விடலாம்.  ஆனால் இவர்கள் நோன்புப் பெருநாள் என்று சொல்லி விருந்துகள் ஏற்பாடுகள் செய்கிறார்களே அது கொஞ்சம் "ஒவர்" என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் நான் இருக்கின்ற தொகுதி என்பது நூறு விழுக்காடு அம்னோவினரின் கையில்! எப்படி? நாடாளுமன்றம், சட்டமன்றம் அனைத்தும் அம்னோவின் கையில்! சரி, போகட்டும்!  விருந்து எப்படி ஏற்பாடு செய்திருந்தனர்?  அம்னோ காலத்தில் எப்படி செய்வார்களோ அதே பாணி, அதே வீணடிப்பு!  அது அம்னோவின் விருந்து உபசரிப்பு  என்று தான் சொல்ல வேண்டுமே தவிர, பக்காத்தான் உபசரிப்பாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை! ஒரு மாற்றமும் இல்லை!  உண்மையைச் சொன்னால் நெகிரி மாநிலம் அம்னோ பாணியைத்தான் கடைப்பிடிக்கும் என்பது தான் நமது கணிப்பு!

சரி, நமது இந்திய பிரதிநிதிகளின் நிலைமை என்ன? பாரிசான் ஆட்சியில் நாம் அவர்களைக் குறை சொல்ல வழியில்லை. காரணம் அவர்களுக்கு எந்த நிதியும் கொடுக்கப்படுவதில்லை. எந்த அதிகாரமும் இல்லை. அதனால் நாமும் வாயை மூடிக் கொண்டு சும்மா இருந்து விட்டோம். இனி மேல் அப்படி இருக்க முடியாது. அதிகாரம் இவர்கள் கையில். இவர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கப் போகிறது என்று ஒவ்வொருவரும் கவனித்துக் கொண்டிருக்கிறோம்.

ஒரு துணை சபாநாயகர், இரண்டு ஆட்சிக்குழு உறுப்பினர் என்பதெல்லாம் நமக்குப் பெருமை அல்ல. இவர்களின் செயல்பாடுகள் என்பது தான் முக்கியம். தனியார் நிலத்தில் இருக்கும் ஒரு கோயில் உடைபடும் போது "ஏன்? உடைப்பதைத் தடுக்கிறீர்கள்?" என்று கேட்டாராம் துணை சபாநாயகர்! அது பத்திரிக்கைச் செய்தி. அதற்கு மாற்று வழி என்ன என்று யோசித்து ஒரு முடிவை எடுக்க வேண்டுமே தவிர உடைப்பதற்கு வழி காட்டக் கூடாது!

எப்படியோ,  நெகிரி மாநிலத்தில் பணத்தட்டுப்பாடு இல்லை என்பதற்காக இந்திய இயக்கங்களுக்குப் பணம் கொடுப்பதை நிறுத்த வேண்டும். அது பாரிசான் காட்டிய வழி! அதனால் மக்களுக்குப் பயன் இல்லை என்பதை ஏற்கனவே தெரிந்து கொண்டோம்! 

தமிழ்ப்பள்ளிகளின் தரத்தை உயர்த்த பணத்தைச் செலவு செய்யுங்கள். தரமான கட்டடங்கள், உபகரணங்கள், மேசை நாற்காலிகள் என்று இன்னும் பல பள்ளிகள் உங்களின் உதவியை எதிர் நோக்கிக் காத்துக் கொண்டிருக்கின்றன. 

நமது மாநிலத்தின் பணம் சரியான இடத்திற்குப் போய்ச் சேர வேண்டும். அதுவே நமது வேண்டுகோள்!

Wednesday 11 July 2018

ஜாகிர் நாயக் ஏன் பயப்படுகிறார்...?


ஜாகிர் நாயக் ஏன் பயப்படுகிறார்? அது தான் நமது கேள்வி. ஒரு தீங்கும் செய்யவில்லை என்று சொல்லும் அவர் ஏன் இந்தியாவுக்குப் போக பயப்படுகிறார். தனது சொந்த நாடு அவரை அழைக்கும் போது அவரால் ஏன் போக முடியவில்லை?  "மடியில் கனம் இருந்தால் மனதில் பயம்" என்பது நாட்டுப் பழமொழி. பயப்படுகிற அளவுக்கு அவர் என்ன தவறு செய்தார்? 

வேறு எந்த நாடும் அடைக்கலம் கொடுக்காத நிலையில் அவர் ஏன் இங்கு வந்து அடைக்கலம் தேடுகிறார்? மற்ற இஸ்லாமிய நாடுகள் எதனும் அவரைக் கண்டு கொள்ளவில்லை. அவரால் தொல்லை என்று மற்ற நாடுகள் நினைக்கின்றன. ஆனால் மலேசிய அவருக்கு அடைக்கலம் கொடுத்து அவருக்கு நிரந்தரமாக தங்கும் தகுதியையும் அவருக்கு வழங்கியிருக்கிறது.

மற்ற இஸ்லாமிய நாடுகளில் நூற்றுக்கணக்கான இந்து கோவில்கள் இல்லை;  நூற்றுக்கணக்கான கிறிஸ்துவ தேவாலயங்கள் இல்லை; நூற்றுக்கணக்கான புத்தக்கோயில்கள் இல்லை; நூற்றுக்கணக்கான சீனக்கோவில்கள் இல்லை. அது தான் ஜாகிர் நாயக்கின் பலம். அவர் எல்லாக் காலங்களிலும் இந்தியாவில் இருக்கும் போதே இந்து மதத்தை தவறாக விமர்சித்து வந்தவர். எல்லாம் தலைமறைவாக! அதே போல கிறிஸ்துவ மதத்தையும் கிண்டலும், கேலியும் செய்தவர். நேரடியாக இதனை அவரால் செய்ய முடியவில்லை. எல்லாம் இருட்டறையில் நடந்தன!

ஆனால் மலேசியா அவருக்கு,  அவரின் கொள்கைக்கு,  ஏற்ற நாடாக விளங்கியது.  இங்கு இந்து கோவில்களை ஆயிரக் கணக்கில் ஆங்காங்கே பார்க்க ஆரம்பித்ததும்,  ஒத்தக்கருத்துடைய அவரை போன்ற ஒரு சிலர் இங்கு இருந்ததால், அவருக்கு மிகவும் வாய்ப்பாகப் போய்விட்டது.  எத்தனை மதங்கள்: இருந்தாலும் இந்து மதத்தை விமர்சிப்பதும், தாக்குவதும் அவருக்கு அலாதியான இன்பம்! ஒரு வேளை அவரின் கடந்த கால கசப்புக்களாக இருக்கலாம். அந்தக் கசப்புக்களுக்குக் காரணமாகவும் அவரே இருந்திருக்கலாம்!

இன்றைய நிலையில் அவர் ஏன் இந்தியா போகப் பயப்படுகிறார்? இப்போது பாருங்கள், அவரைச் சுற்றி நான்கு  மெய்க்காப்பாளர்கள் உடன் வருகிறார்கள்! அவர் எல்லாக் காலங்களிலும் பய உணர்வோடு தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதற்கு அதுவே சான்று! மேலும் தீவிரவாதம் பேசும் அனைவரும் ஏதோ ஒரு வகையில் தங்களைச் சுற்றி யாரையாவது வைத்துக் கொள்ளுகிறார்கள்!

அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்: இந்தியா போனால் என்னை அடித்து, உதைத்து, துவைத்து எடுத்து விடுவார்கள் என்று! ஆக, தவறு செய்தால் என்ன நடக்கும் என்பது அவருக்குத் தெரியும். தவறு செய்தால் மலேசியாவில் தட்டிக் கொடுப்பார்கள் என அவர் தெரிந்து கொண்டார்! அது தான் அவரது பலம்! ஆனால் ஒன்றை அவர் மறந்து விடக்கூடாது. நஜிப் காலம் வேறு, மகாதிர் காலம் வேறு! நஜிப்,  அவரை எதிர்த்தால் மட்டுமே எதிரியை எரிக்கவும் துணிவார்! மகாதிர் நாட்டை விட்டு துரத்தவும் தயார் நிலையில் இருப்பவர்!

அதனால் ஜாகிர் நாயக் மீண்டும் மற்ற மதங்களை விமர்சிக்கத் துணிந்தால் அவர் கழுத்தைப் பிடித்து வெளியேற்றப்படுவார் என்பது அவருக்கே தெரியும்!  அந்தப் பயம் இருந்தாலே போதும்!

Tuesday 10 July 2018

பிறந்த நாள்!...இன்று பிறந்த நாள்!


இன்று (10-7-2018) நமது மலேசியப் பிரதமர், டாக்டர் மகாதீருக்கு பிறந்த நாள்.  93-வது வயதில் அடி எடுத்து வைக்கிறார்.

93 வயது என்றால் யார் தான் நம்புவார்? அவர் செயல்பாடுகள் அப்படி இல்லையே! சரியான நேரத்தில் காலையில் அலுவலகத்தில் இருக்கிறார். அவருடைய வேலையில் கண்ணுங் கருத்துமாக இருக்கிறார். அதிகாரிகளைச் சந்திக்கிறார். அயல் நாட்டவரைச் சந்திக்கிருக்கிறார்.  சில பிரச்சனைகள் குத்துகின்றன! சில பிரச்சனைகள் குதூகளிக்க வைக்கின்றன! எல்லாவற்றுக்கும் சரியான பதில்களைக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால்  ஊடகங்கள் பெரிது படுத்தும்! அல்லது சிறுமை படுத்தும்!

இது தான் அரசியல்! மனிதனை நிம்மதியாக இருக்க விடாது! ஆனால் இந்த தொண்ணூற்று மூன்று வயதில் இதனையெல்லாம் ஏற்றுக்கொள்ளுவது என்பது சாதாரண காரியம் இல்லை. முடங்கிக் கிடக்கும் வயதில் கடலில் மூழ்கி முத்தெடுக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார் டாக்டர் மகாதிர்!

அது எப்படி அவரால் முடிகிறது? ஒரு மனிதன் எந்த வேலையில் அதீத ஈடுபாடு உள்ளவனாக இருக்கிறானோ அவனால் அந்த வேலையை எந்த சோர்வில்லாமலும்  சோர்ந்து போகாமலும் அவனால் செயல் பட முடியும் என்பது மனோதத்துவம்.

டாக்டர் மகாதிர் அரசியலில் அதிக ஈடுபாடு உள்ளவர். அதிலும் மலாய்க்காரர்களின் நலனில் அதிக அக்கறை உள்ளவர். மலாய் இனத்தின் முன்னேற்றமே அவரது இலக்காகக் கொண்டு செயல்பட்டவர்.  அதற்காகவே பல பல திட்டங்களைக் கொண்டு வந்து அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர பாடுபட்டவர். கல்வி, பொருளாதாரம் எல்லாவற்றிலும் உயர வைத்தவர்.

முன்பு பிரதமராக இருந்த போது என்னன்ன திட்டங்கள் கொண்டு வந்தாரோ அதில் பல திட்டங்கள் தோல்வியில் போய் முடிந்தன.  திட்டங்களில் எந்தக் குறைபாடும் இல்லை.  லஞ்சம், ஊழல் அதிகாரத் துஷ்பிரயோகம் என்று அதிகாரத்தில் உள்ளவர்கள் செயல்பட ஆரம்பித்தனர். அதனால் நாடு திவால் ஆகக் கூடிய நிலைமையில் .......

மீண்டும் டாக்டர் மகாதிர் பிரதமரானார்! அதுவும் தான் பிரதமராக இருந்த  ஆளுங்கட்சியை வீழ்த்திவிட்டு எதிர்கட்சியின் மூலம்  மீண்டும் ஆட்சியைப் பிடித்தார்!

ஆது தான் டாக்டர் மகாதிர்!  உலகத்தில் எந்த நாட்டிலும் நடைபெறாத ஓர் அதிசயம் அவர் வாழ்க்கையில் நடந்திருக்கிறது! இந்தப் புதிய அரசியல் பிரவேசம் மூலம் மலேசியாவை புதிய பாதையில் கொண்டு செல்லவிருக்கிறார்.

மீண்டும் மலேசியா வெற்றி பெறும்!  மகாதிர் நீண்ட நாள் வாழ இறைவனைப் பிரார்த்திப்போம்!

Monday 9 July 2018

வேலையில்லா அரசியல்வாதிகள்...!


அரசியல்வாதிகளுக்கு வேலை இல்லை என்றால் என்ன செய்வார்கள்?

இப்போது அம்னோவில் உள்ள சிலர் என்ன செய்கிறார்களோ அதைத்தான் செய்வார்கள்! எல்லாம் முடிந்து விட்டது; நஜிப் பதவியில் இருக்கும் வரை அவரிடம் பொறுக்கித் தின்றார்கள்! இனி மேல் வரவுகள் பாதிக்கப்படும். செய்ய ஒன்றுமில்லை!  இனி ஏதாவது ஒரு ஆர்ப்பாட்டாத்தை முன்னெடுக்க வேண்டும். இனி ஆர்ப்பாட்டம் தான் வரவைக் கொண்டு வரும்! 

அம்னோவிடம் இன்னும் நிறைய பணம் இருப்பதாகத்தான் இவர்கள் நினைக்கிறார்கள். அதில் எதுவும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.நஜிப்பின் ஆதரவாளர்கள் ஒன்றா, இரண்டா?  ஆதரவாளர்கள் என்றால் "உண்மையான" என்று சொல்ல முடியாது. அவரிடமிருந்து பணம் பெற்றவர்கள் எல்லாம் ஆதரவாளர்கள் தானே! அவர் கொடுத்த பணம் கொஞ்சமா, நஞ்சமா என்ன!  

நஜிப் கொடுத்த பணம். அத்தோடு இன்னும் வரும் பணம். இதனையெல்லாம் கணக்குப் போட்டுத் தான் அவரின் ஆதரவாளர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள்! என்ன தான் அம்னோவின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டாலும் அது அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபி!  இன்னும் எவ்வளவு அங்கிருந்து பிடுங்க முடியுமோ அதனைப் பிடுங்கி அந்தப் பணத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வரும் வரையில் அவர்களின் "நியாயமான" ஆர்ப்பாட்டங்கள் தொடரும்!

சமீபத்தில் கையில் எடுத்திருக்கும் ஆர்ப்பாட்டம்  சட்டத்துறைத் தலைவர், டோமி தோமஸ் அவர்களுக்கு  தேசிய மொழி   தெரியாது என்பது  தான். இது என்ன உலக மகாப் பிரச்சனையா? சாதாரண, சராசரியான மலாய் அவரால் பேச முடியும் என்பதை அவர்களால் ஏன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை? அந்த அளவிற்கு அவர்களுக்கு அறிவு மங்கிப்போய் விட்டதா! அவர் சொல்ல வருவதெல்லாம் அரசியல், சட்டப்பூர்வமான,  முறையான தேசிய மொழியில் பேசுகின்ற மலாய் மொழி ஆற்றல் அவரிடம் இல்லை என்பது தான். 

சரி இனி இந்த வேலை வெட்டி இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? நஜிப் நீதிமன்றத்திற்கு வரும் போதும் போகும் போதும் கூட்டம் கூடி "நஜிப் குற்றமற்றவர், விடுதலை செய்!" என்று கூச்சல் போட்டு காவல்துறையை வம்புக்கு இழுப்பார்கள்! அங்கு தாங்கள் பெரிய "ஹீரோ" வாக காட்டிக் கொள்ளுவார்கள்!  இப்படித்தான் முன்பு ஜமாலுடின் ஆர்பாட்டங்கள் செய்து இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்!

பொதுவாகவே  வேலையில்லாத  அரசியல்வாதிகள்  எந்தக்  காலத்திலும் வேலை செய்யும் எண்ணம் இல்லாதவர்கள்.கொஞ்சம்"பசை" உள்ள அரசியல்வாதிகளிடம் ஒட்டிக் கொண்டு காலத்தைப் போக்கும் தன்மை கொண்டவர்கள். அதனால் இவர்கள் வேலை எல்லாம் அறிக்கை விடுதல் ஆர்ப்பாட்டங்களைத் தூண்டி விடுதல் இது தான் இவர்களின் முக்கிய பணி! பாவம், இப்படியாவது இவர்கள் பிழைத்துப் போகட்டும்! ஆனால் அளவு மீறினால் இருக்கவே இருக்கிறது இரும்புக் கம்பி, கம்பி எண்ணுவதற்கு!

Friday 6 July 2018

வாக்களிக்கும் வயதை குறைக்க...!

 வாக்களிக்கும் வயதை குறைக்க வேண்டுமென அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாடிக். இப்போது நடைமுறையில் இருக்கும் 21 வயதை 18-ஆக குறைக்கும்படி அவர் ஆலோசனைக் கூறியிருக்கிறார்.

ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்தாகவே இதனை நான் கருதுகிறேன். அவர்களுக்குப் போதுமான அரசியல் விழிப்புணர்ச்சி இருக்காது என்கிற கருத்துக்களைப் புறந்தள்ளிவிட்டு அவர்களுக்கு அதற்கான விழிப்புணர்ச்சியை ஏற்படத்தப்பட  வேண்டும் என நான் கருதுகிறேன்.  இப்போதைய இளைஞர்களுக்கு  நல்ல விழிப்புணர்ச்சி உண்டு என்பதில் சந்தேகமில்லை.

18 வயது என்பது நல்ல துடிப்பான வயது. நாம் இத்தனை ஆண்டுகள் ஊழலுக்குப் பெயர் போன அரசாங்கத்தோடு அறுபது ஆண்டுகளை நகர்த்தி வந்திருக்கிறோம். நமது வயது அப்படி!  "பரவாயில்லை! பரவாயில்லை! காலம் வரும், நேரம் வரும்! இன்னோரு வாய்ப்புக் கொடுப்போம்! இவர்கள் திருந்துவார்கள்!"    

 ஆனால் அவர்கள் திருந்தவே இல்லை! அதனால் தான் நீண்ட காலம் பதவியிலிருந்த ஒரு அரசாங்கத்தைத் தூக்கி எறிய வேண்டிய  கட்டாயம் ஏற்பட்டது! அதிலும் இளைஞர் பட்டாளம் தான் மூர்க்கத்தனமாக அரசாங்கத்தை எதிர்த்தவர்கள்!

இதுவே 18 வயது இளசுகளாக இருந்தால் எப்போதோ இந்த அரசாங்கத்தை தூக்கி எறிந்திருப்பார்கள்!  ஆமாம் அவர்கள் தானே அதிகமாகப் பாதிக்கப்படுபவர்கள்? கல்வியாகட்டும், வேலை வாய்ப்புக்களாகட்டும் ஏதோ ஒரு வகையில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் இவர்கள் தான். முக்கியமாக கல்வி என்று வரும் போது அவர்களுக்குப் பலவிதமான பாதிப்புக்கள். கல்லூரிகளில் படிக்கத் தடை,  அவர்கள் விரும்பிய பாடங்களை எடுக்கத் தடை, மருத்துவம் முடியாது, தொழில் நுட்பம் முடியாது, அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் முடியாது.  எல்லாம் தனியார், தனியார் தனியார்! அப்படி என்றால் ...? ஏழை, நடுத்தரக் குடும்பங்கள்? இருப்பதை விற்று பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டிய நிலை. 

இதனையே எடுத்துக் கொண்டால் போதும். வக்களிப்பது 18 வயது என்றால் இப்படி ஒரு இழி நிலை நமக்கு ஏற்பட்டிருக்குமா? அதனால் இந்த 18 வயது என்பதை, அதுவும் நமது விளையாட்டுத்  துறை அமைச்சர் சைட் சாடிக்கின் கருத்தை நாம் ஆதரிப்போம்; வர வேற்போம்!

Thursday 5 July 2018

ஐயா..! மேகத்தைக் காணோம்...!


நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் மிகப் பிரபலமான நகைச்சுவையை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம்.

"ஐயா! என் கெணத்தைக் காணோம்!"

இப்போது இந்த செய்தியைப் படித்த போது அந்தக் கிணறு தான் ஞாபகத்திற்கு வந்தது! இப்படியும் நடக்குமா என்று அதிசயத்துப் போனேன்! ஆனாலும் இப்படியும் நடக்கிறது என்கிறார் ஈரான் நாட்டு இராணுவத் தலைவர்  பிரிகேடியர் ஜெனரல் கோலாம் ரிஸா ஜலாலி ! நம்பவும் முடியவில்லை!. நம்பாமலும் இருக்க முடியவில்லை! நவீன தொழில்நுட்பம் என்பது எதனையும் செய்யும் என்று ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் தான் நாம் இருக்கிறோம்!

அவரின் குற்றச்சாட்டு என்ன? ஈரான் நாட்டில் சமீப காலமாக மழை பெய்வது குறைந்து போனதற்கு இஸ்ரேல்,  ஈரான்  நாட்டை சூழும் மேகக்கூட்டங்களை இஸ்ரேல்  "திருடுவதாக" அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்! அவர் சொல்லுவதற்கு ஆதாரம் தனது பக்கத்து நாட்டில் எல்லாம் மழை பெய்யும் போது ஏன் ஈரான் நாட்டில் மட்டும் மழை பெய்யவில்லை என்பது தான் அவர் கேள்வி.

ஆனாலும் ஈரானின் வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் ஆஹாட் வாசிஃ இந்தக் கூற்றைப் புறந்தள்ளுகிறார்! இப்படியெல்லாம் நடப்பதற்கு வாய்ப்பில்லை என்கிறார் அவர். ஈரான் நாட்டில் நீண்ட நாட்களாகவே மழை இல்லை; வறண்டு கிடக்கிறது. இப்படி மேகத்தைத் திருடுவது, பனியைத் திருடுவது என்று பேசுவது நமது கையாலாகத்தனத்தைக் காட்டுகிறதே தவிர பிரச்சனைக்குத் தீர்வை நோக்கிச் செல்லப் போவதில்லை என்கிறார் வானிலை ஆய்வு மையத்தின் தலைவர்.

ஆமாம்,  ஈரானில் இப்படிப் பேசப்படுவது ஒன்றும் புதிதல்ல! மேகத்தைத் திருடுவது, பனியைத் திருடுவது, மழையைத் திருடுவது  என்பதெல்லாம் இஸ்ரேல் நாட்டைக் குற்றம் சாட்டும் போக்கே தவிர தங்களது நாட்டின் பிரச்சனையைக் களையும் நோக்கமில்லை! அதற்கான முன்னெடுப்பும் இல்லை! 

பிரச்சனையைத் தீர்க்கும் வரை இப்படியே புலம்பிக் கொண்டிருக்க வேண்டியது தான்! கடைசியில்  பாதிக்கப்படுபவர்கள் மக்கள்.   மக்களா? அவர்கள் யார்!

Wednesday 4 July 2018

ஏன் மூன்று அமைச்சர்கள்....?

நாடு சுதந்திரம்  பெற்ற பின்னர் வந்த  அமைச்சரவையில் இரு இந்திய அமைச்சர்கள் இருந்தார்கள். அதன் பின்னர் ஒன்றாக அது குறைந்தது. 

இப்போது பக்காத்தான் அமைச்சரவையில் இந்தியர்களின் அங்கத்துவம்  மூன்றாக அதிகரித்திருக்கிறது. நாடு சுதந்திரம் பெற்ற போது நாம் கேட்காமலேயே  இரண்டு கிடைத்தது. இடையில் கிடைத்த இரண்டையும் வேண்டாமென்று நாமே ஒதுக்கிவிட்டு ஒன்றாக இருப்பதில் மகிழ்ச்சி கொண்டோம்! இப்போது பக்காத்தான் அரசாங்கத்தில் நாம் எதிர்பாராமலேயே மூன்றாக கிடைத்ததும் மீண்டும் மகிழ்ச்சி அடைகிறோம்!

ஏன் நமக்கு இரண்டோ அல்லது மூன்று அமைச்சர்களோ தேவை என்று நாம் யோசித்ததுண்டா? அமைச்சர்கள் என்றால் அவர்கள் அனைத்து மலேசியர்களுக்கும் அமைச்சர்கள் தான்.  அவர்கள் இந்தியர்களுக்கு மட்டும் அல்ல. ஆனால் இரண்டு அமைச்சர்கள் என்னும் போது குறைந்தபட்சம் இரண்டு அமைச்சர்களும் கலந்து ஆலோசித்து இந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக சில நன்மைகளைக் கொண்டு வர முடியும்.  ஒரு மூளையை விட இரண்டு மூளைகள் சேர்ந்தால்  இன்னும் சிறப்பாக இயங்கு முடியும் அல்லவா. அது தான் காரணம்.

ஒரு அமைச்சர் நம்மைப் பிரதிநிதித்த போது அவரால் நம்மைப் பற்றி சிந்திக்க முடியவில்லை.  அவரால் மத்திய அரசாங்கத்தை மட்டும் தான் பிரதிநிதிக்க முடிந்தது. இந்தியர்களைப் பற்றி சிந்திக்க நேரமில்லை. அதன் விளைவுகள் என்ன?  அவர் செய்ய வேண்டிய வேலைகளைக் குண்டர் கும்பல்கள் செய்ய ஆரம்பித்து விட்டன! அப்போது இந்திய சமுதாயத்திற்கு ஏற்பட்ட அந்த அடி இது நாள் வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது!

இப்போது தான் ஒளி தெரிய ஆரம்பித்திருக்கிறது. பச்சை விளக்கு எரிய ஆரம்பித்திருக்கிறது  மூன்று அமைச்சர்கள்!  குண்டர் கும்பல்கள் ஒளிய ஆரம்பித்திருக்கின்றன எனச் சொல்லலாம். இனி அவர்கள் முற்றிலுமாக  ஒழிக்கப் படுவார்கள் என நம்பலாம். 

இப்போது குண்டர் ஒழிப்பு வேலைகளை அமைச்சர்கள் கையில் எடுத்திருக்கிறார்கள். அவர்களின் தேவைகளை அரசாங்கம் கொடுக்க வேண்டும். வேலை வாய்ப்புக்களை  ஏற்படுத்த வேண்டும். சீர்திருத்தப் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும். போதைப்பித்தர்களுக்கு மறு வாழ்வு அளிக்க வேண்டும்.  இன்னும் காலித்தனம், குண்டர் கும்பல் நடவடிக்கையில் ஈடுபடுவோர் என்று பலர் இருக்கின்றனர்.

இவர்களையெல்லாம் சரியான பாதையில் கொண்டு செல்ல இந்த மூன்று அமைச்சர்களால் முடியும் என நம்பலாம். நமது சமுதாயத்திற்கு அவப்பெயரைக் கொண்டு வரும் இவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலம் அமையும் என நம்புகிறோம்! 

Tuesday 3 July 2018

புதிய அமைச்சரவை சரியா...?


பிரதமர் டாக்டர் மகாதிர் முழுமையான அமைச்சரவையை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார். புதிய அமைச்சர்கள் பதவியேற்றிருக்கின்றனர்.  ஒரு வேளை துணை அமைச்சர்கள் இன்னும் இருக்கலாம். 

இப்போது புதிதாக பதவி ஏற்றிருக்கும் அமைச்சர்களைப் பற்றியும் இன்னும் ஒரு சிலருக்கு பதவி கிடைக்காதது பற்றியும் வெளியே எதிரொலிகள் எப்படி இருக்கின்றன?

குறிப்பாக ஜ.செ.க. வும், பி.கே.ஆரும் தங்களது அதிருப்தியைத்  தெரிவித்திருக்கின்றன.  நாடாளுமன்றத்தில் பி.கே.ஆர். அதிகமானத் தொகுதிகளை வைத்திருக்கும் கட்சி. அதனை அடுத்து ஜ.செ.கட்சி அதிகமான தொகுதிகளைக் கொண்டிருக்கின்றது. ஆனால் இந்த இரு கட்சிகளுமே  அமைச்சரைவையில் தங்களது கட்சிகளுக்குக்  குறைவான இடமே ஒதுக்கப்பட்டிருப்பதாக குறைபட்டுக் கொள்கின்றன! 

ஆனாலும் ஒன்றை நாம் நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும். இது பிரதமர் எடுத்த முடிவு. அதுவும் தீர்க்க ஆராய்ந்த பின்னர் எடுக்கப்பட்ட முடிவு. அதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

வெறும் நிகழ்காலத்துக்கான ஒரு முடிவாக நாம் இதனைக் கருதக் கூடாது. இது ஒரு நீண்ட காலத்துக்கான ஒரு திட்டம். அப்படித்தான் அது இருக்க வேண்டும் என்று பிரதமர் கருதுகிறார். அதில் தவறு இருப்பதாக நினைக்கத் தேவை இல்லை.

ஜனநாயக செயல் கட்சி எப்போதுமே இன அடிப்படையில் சிந்திக்கின்ற ஒரு கட்சி. அது அப்படித்தான் வளர்க்கப்பட்டிருக்கிறது!  அமைச்சரவையில் அதிகமான சீனர்களின் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என அவர்கள் நினைப்பதில் தவறு இல்லை. காரணம் அவர்களின் வாக்கு வங்கி என்பது எப்போதுமே சீனர்களின் பக்கமிருந்து தான் அதிகம்!  அவர்கள் மலேசியர்கள் என்று சொன்னாலும் அது சீனர்களைத்தான் குறிக்கும்!

டாக்டர் மகாதிர் மலாய் பிரதிநிதித்துவம் அதிகம் இருக்க வேண்டும் என நினைப்பவர். அதற்குக் காரணங்கள் உண்டு. வருங்காலங்களில் அம்னோ, பாஸ் கட்சியினரின் குறை கூறல்களைத் தவிர்க்க வேண்டும் அன அவர் நினைக்கலாம். மேலும் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அனைவரும் திறைமையானவர்கள் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

அமைச்சரவை  சிறப்பாகச் செயல்பட வாழ்த்துவோம்!

இரண்டு இலட்சம் பேருக்கு குடியுரிமை...!


மிகவும் நல்லதொரு செய்தியை உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ மொகைதின் யாசின் அறிவித்துள்ளார். நீண்ட நாள் எதிர்பார்க்கப்பட்ட ஒரு செய்தி. பாரிசான் அரசாங்கமும், ம.இ.கா.வும் அக்கறை காட்டவில்லை1 இன்றைய பக்காத்தான் அரசாங்கம் ஏற்கனவே அவர்களது தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி அதனைச் செயல் வடிவில் கொண்டு வந்து விட்டார்கள்.

வரவேற்கிறோம்! இதனை ஒரு சாதாரண செய்தியாக நாம் எடுத்துக்கொள்ள முடியாது. எத்தனை ஆண்டுகள்,  எத்தனை ஆண்டுகள் நம் மக்கள் இதற்காகக் காத்திருந்தனர். ஒன்றா, இரண்டா. .. முப்பது, நாற்பது ஆண்டுகள் இழுக்கடிக்கப்பட்டு ஒரு சிலருக்கு அறுபது  வயதில்,  ஒரு சிலருக்கு எழுபது  வயதில் .....என்ன என்ன கொடுமைகள்..... வேலை கிடைக்காமல்.......குறைவான ஊதியத்தில்..... முதலாளி என்ன சொன்னலும் ஆமாஞ்சாமி போட்டுக்கொண்டு ... சே! என்ன வாழ்க்கை!  ஆனால் இவர்களுடைய ஆத்திரம், கோபம், வேதனை - எதனையுமே ஆட்சியிலிருந்தவர்கள் கண்டு கொள்ளவில்லையே! நம்மைப் பொருத்தவரை நாம் இன்னும் குற்றவாளி ம.இ.கா. தான் என்று அடித்துச் சொல்லுகின்ற நிலைமையில் தான் இருக்கிறோம்! காரணம் பதவியில் இருந்தவன் தனக்குப் பெண்டாட்டிகளையும், பங்களாக்களையும் தான் கூட்டிக் கொண்டு போனானே தவிர களத்தில் இறங்கி வேலை செய்யத் தயாராய் இல்லை!

நிரந்திர அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த சிவப்பு அடையாள அட்டைகள் வைத்திருக்கும் மலேசியர்களுக்கு இப்போது நீல  நிற அடையாள அட்டைகள் கிடைக்கும் என நம்பிக்கையான செய்தி மனதை குளிர வைக்கிறது.

இன்னும் குடியுரிமை கிடைக்காத மலேசியர் பலருக்கு குடியுரிமை கிடைக்கும் என்னும் நம்பிக்கையும் ஏற்பட்டிருக்கிறது. 

நூறு  நாள்களில் இந்தப் பிரச்சனைகளைக் களைவோம் என்னும் தேர்தல் வாக்குறுதி நிச்சயமாக நடக்கும் என நம்புகிறோம். இந்தப் பிரச்சனைக்கு முற்றிலுமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள். உள் நாட்டில் பிறந்தவனை நாடற்றவன் என்று கேலி செய்வதை இனி மேலும் நாம் சகித்துக் கொண்டிருக்க முடியாது.

டான்ஸ்ரீ மொகைதீனின் இந்த அறிவிப்பை மனமார வரவேற்கிறோம்! வாழ்த்துகள்!

Monday 2 July 2018

எங்கே போகிறது அம்னோ...?


நடந்து முடிந்த அம்னோ தேர்தலில் அகமட் ஸாகிட் ஹமிடி தனது இடைக்கால அம்னோ தலைவர் என்கிற நிலையிலிருந்து அம்னோவின் நிரந்திர தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவரது பதவி காலம் அடுத்த அம்னோ தேர்தல் வரை  அதாவது 2021 ஆண்டு தேர்தல் வரை நீடிக்கும்.

ஓர் ஆச்சரியமான உண்மை. அம்னோ பேராளர்கள் ஏன் ஸாகிட்டை தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும்? உண்மையைச் சொன்னால் அவர்களுக்கு எப்படி  ஸாகிட்  மேல் அன்பும்  பாசமும் தீடீரெனத்  தோன்றியது?

தேர்தலில்  போட்டியிட்டவர்களில் கைரியும், துங்கு ரசாலியும்  அடங்குவர். இதில் துங்கு ரசாலி மட்டுமே  எந்த  ஊழலிலும் சம்பந்தப்படாதவர் என்று  தாராளமாகச்  சொல்லலாம். அவர்  மட்டுமே  நேர்மையான மனிதர் என்று பலராலும் பாராட்டப்பட்டவர். அம்னோவை ஓரு நேர்மையானக் கட்சியாக,  ஊழற்றக் கட்சியாக அது மீண்டும் ஆட்சியில்  அமர வேண்டும் என்று  கனவு கண்டவர். உண்மையான அம்னோவின் விசுவாசி. ஆனாலும்  துங்கு ரசாலி அம்னோ பேராளர்களால் புறந்தள்ளப்பட்டார்!

ஒன்றை நாம் புரிந்து கொள்ளலாம். அம்னோவுக்கு மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும்  என்னும் நோக்கம் இருப்பதாகத்  தெரியவில்லை. அம்னோவை பிரதமர் டாக்டர் மகாதிர் எத்தனையோ முறை ஊழலில் ஊறிய கட்சி, மலாய்க்காரர்களை ஏமாற்றும் கட்சி என்று  தொடர்ந்து சாடி வந்திருக்கிறார்.  ஆனால் அம்னோ பேராளர்களுக்கு எதுவுமே உறைக்கவில்லை!

இந்த அம்னோ தேர்தலிலும் ஸாகிட் தனது குரு, நஜிப்பிடமிருந்து கற்றுக் கொண்டதை அப்படியே பயன் படுத்தியிருக்கிறார்! ஆமாம் அது பண அரசியல் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்! ஸாகிட் தனது வெற்றிக்காக பேராளார்களுக்குத்  தண்ணிராக செலவு செய்திருக்கிறார் எனச் சொல்லப்படுகிறது. ஆமாம்,  அரசாங்கத்தை இழந்து ஒரு கட்சிக்காக அவர் ஏன் பணத்தை இழக்க வேண்டும்?

என்ன தான் ஆட்சியை இழந்தாலும் அந்தக் கட்சியில் பணம் இன்னும் வலுவாகவே இருக்கிறது என்பதை பேராளர்கள் புரிந்துவைத்திருக்கிறார்கள். சொத்துக்கள் நிறையவே இருக்கின்றன. பேராளர்கள்  பணத்தின் மீதும் அதன் சொத்துக்கள் மீதம்  கண் வைத்திருக்கிறார்கள் என்பது புரிகிறது! அவைகளை  விட்டுவிட்டு வேறு  எங்கும் அவர்கள் ஓடிப்  போகத்  தயாராக இல்லை!

ஸாகிட்  நேர்மையான மனிதர் இல்லை  என்பது பலருக்குத்  தெரியும். பண அரசியலை அவரால் விட முடியாது.   குறைந்த பட்சம் அம்னோ சொத்துக்கள்  மீது அவரது  ஆதிக்கம் இருக்கும் என நம்பலாம். அவரோடு பங்கு போட இப்போது  பலர் அவருக்குத் துணையாக  இருக்கிறார்கள்! அது அவரது பலம்!

அம்னோவின்  பாதை சரியானதாக  இல்லை! தவறான மனிதர்களால் அது வழி நடத்திச் செல்லப்படுகிறது! ஆட்சியைப் பிடிக்க  வேண்டும்  என்னும்  எதிர்பார்ப்பு  இல்லை!

பொறுத்திருப்போம்! வேறு வழி இல்லை!