Wednesday 30 June 2021

இந்த பாகுபாடுகள் இன்னும் தேவையா?

 இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் பூமிபுத்ராக்களுக்கு அந்த சலுகை வேண்டும்,  இந்த சலுகை வேண்டும் என்று அரசியல்பவாதிகள் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறார்கள்?

அப்படியெல்லாம் சொல்லிச் சொல்லித்  தான் இன்று நாடு இன்றைய சீர்கேடான  நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

நல்லது நடந்தது என்றால் பாராட்டலாம். இன்று நாம் எதிர்நோக்குகின்ற நிலையை வைத்துப் பார்க்கும் போது நல்லது நடக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது.

நம்மால் ஏளனமாக பார்க்கப்பட்ட நாடுகள் எல்லாம் இப்போது நம்மை முந்தி தள்ளிவிட்டுப் போய்க் கொண்டிருக்கின்றன.

ஏன், கொவிட்-19 தொற்றை எடுத்துக் கொள்ளுங்களேன். நமது நிலை என்ன? இறப்பு விகிதத்தைப் பார்க்கும் போது நமது நாடு தாய்லாந்து. வியட்னாம், சிங்கப்பூர் போன்ற நாடுகளை விட அதிகமான அளவில் பதிவு செய்திருக்கிறது.

இதற்குக் காரணம் என்ன, எங்கே நாம் தவறுகள் செய்திருக்கிறோம்  என்பன போன்ற காரணங்களை நாம் ஆராயவில்லை. ஆராய வேண்டும் என்கிற எண்ணமே நமக்கு எழவில்லை! "ஏன் ஆராய வேண்டும்? வந்தால் வரட்டுமே! செத்தால் என்ன கெட்டுப் போய்விட்டது? தொற்று ஏன் கூடிக் கொண்டே போகிறது?" போன்ற பொது மக்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல ஆட்சியில் உள்ளோர் தயாராக இல்லை! ஏதோ ஒரு சில தகவல்களை நகல் எடுத்து வைத்துக் கொண்டு பேசுவதையே  கடமையாகக் கொண்டிருக்கிறார்கள் நமது அமைச்சர்கள்!

பேரரசர் நாடாளுமன்றத்தை விரைவில் கூட்டங்கள் என்று சொன்னால் அதற்குப் பலவாறான வியாக்கியானங்கள்! இப்போது இல்லை! அது அப்புறம் என்று ஒரு பக்கம் விளக்கம்! ஓ! இல்லை! பேரரசருக்கு எந்த அதிகாரமும் இல்லை! பிரதமருக்குத் தான் சகல அதிகாரமும் என்கிற இன்னொரு விளக்கம்!  அதற்கு ஏற்றாற் போல ஒரு சட்டத்துறைத் தலைவர்! ஒரு சபாநாயகர்!  நாமும் "என்னடா! நடக்கிறது இங்கே!" என்கிற ஒரு கேள்வி!

படித்தவர் சொல் சபையேற வேண்டும். ஆனால் இங்கு ஏறவில்லை! அதற்குத்தான் படித்தவர் தேவை என்பதாகக் காலங்காலமாக சொல்லி வருகிறோம்.

இனப் பாகுபாடு தொடர்ந்தால் படித்த ஒரு சமுதாயத்தை நம்மால்  உருவாக்க முடியாது!

Tuesday 29 June 2021

தடுப்பூசி போடுவதில் நாம் பின் தங்கியிருக்கிறோமா?

 கொரோனா தடுப்பூசி போடுவதில் நமது அரசாங்கம் முனைப்புக் காட்டுகிறதா அல்லது சுணக்கம் காட்டுகிறதா?

இப்படி ஒரு கேள்வியை நாம் கேட்டுத்தான் ஆக வேண்டும். காரணம் பொதுவாக நாம் பார்க்கும் போது அரசாங்கத் தரப்பிலிருந்து இன்னும் ஏனோ தானோ போக்கில் தான் இந்தத் திட்டம் போய்க் கொண்டிருக்கிறது என்று சொல்ல வேண்டியிருக்கிறது!

அதாவது அப்படியும் இல்லை இப்படியும் இல்லை என்று தான் நினைக்க வேண்டியுள்ளது. போடு என்றும் சொல்லவில்லை போட வேண்டாம் என்றும் சொல்லவில்லை.  போட்டால் போடு போடாவிட்டால் போ! என்கிற ஒருவித அலட்சியம் தான் நிலவுகிறது!

அதாவது கோவிட்-19 முற்றாக நாட்டிலிருந்து ஒழிக்கப்பட வேண்டும் என்கிற முனைப்பு அரசாங்கத்திடம் இல்லை என்று தான் நாம் கணிக்க வேண்டியிருக்கிறது.

இன்று உலகெங்கிலும் எல்லா நாடுகளும் கோவிட்-19 க்கான தடுப்பூசியைத் தங்கள் நாட்டு மக்கள் போட வேண்டும் என்பதிலே முனைப்புக் காட்டுகின்றன. இது ஒன்றும் அதிசயம் அல்ல.  அது அவர்கள் நாட்டு மக்களின் நலன் சார்ந்தது. போட்டுத்தான் ஆக வேண்டும்.  மக்கள் வியாதியால் முடங்குவதும் நாட்டு மக்கள் மரணிப்பதும் எந்த நாடும் விரும்பவதில்லை.  நமது அரசியல்வாதிகள் விதிவிலக்கோ?

இந்தத் தொற்று பரவினால் பரவாயில்லை, மக்கள் செத்தால் கூட பரவாயில்லை இன்னும் கொஞ்ச நாள் நீடிக்கட்டுமே என்கிற மனப்போக்கு நமது அரசியல்வாதிகளுக்கு உண்டு என்றே தோன்றுகிறது!

தொற்றின் தாக்கம் ஏற்பட்டதிலிருந்து இன்று வரை பார்க்கும் போது பொது மக்கள் பலர் எஸ்.ஒ.பி. யை மீறியிருக்கலாம். அதற்கான தண்டனைகளையும் அவர்களுக்குக் கொடுத்து விட்டார்கள்.  ஆனால் இதில் குறிப்பாக நமது நாட்டின் அமைச்சர்கள் பலர் எஸ்.ஒ.பி. யை மீறியிருக்கிறார்கள்! அமைச்சர்கள் மீறினால் அது தான் செய்தி! மக்கள் என்ன செய்யக் கூடாது என்று சட்டம் போடுபவர்களே அதை மீறினால்  அதற்கான காரணம் என்ன? எஸ்.ஒ.பி. யை அவர்கள் விரும்பவில்லை, தொற்று தொடர வேண்டும் என்பது தானே அதன் பொருள்!

அது தான் இப்போது வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. தடுப்பூசி போட வேண்டும் என்பதிலே ஆர்வமில்லை என்பது தான் அதிகாரத்தில் உள்ளவர்களின் நிலை என்பதாகத் தோன்றுகிறது!

இதில் மக்களின் நிலை என்ன?  நாம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயம். அவர்களுடைய அரசியல் நமக்கு வேண்டாம். நமக்கு வேறு விதமான கருத்துகள் இல்லை. தடுப்பூசி என்பது உலகெங்கும் நடந்து கொண்டிருக்கிறது.  தொற்றை தடுக்க வேண்டும் என்றால் நாம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். நாம் நமது கடமையைத் தவறாமல் செய்வோம். முடிந்தவரை மேலும் தொற்று பரவாமல் பார்த்துக் கொள்வோம்.

தடுப்பூசி போடுவதில் நாம் பின் தங்கியிருக்கிறோமா என்று கேட்டால் "ஆம்!" என்கிற பதில் தான் வருகிறது!

Monday 28 June 2021

பொது முடக்கம் தொடருமா?

 மலேசியர்களுக்கு இன்னொரு பெரிய அடி விழுந்திருக்கிறது!

நாட்டில் பொது முடக்கம் தொடரும் என்கிற செய்தி அப்படி ஒன்றும் நல்ல செய்தி என்று யாருமே இன்றைய நிலையில் எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

ஏற்கனவே பல்வேறு பிரச்சனைகளை மக்கள் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர். 

பொதுவாக மக்கள் வருமானம் இன்றி தவிக்கின்றனர். அதுவே மக்கள் எதிர்நோக்கும் முதலாவது பிரச்சனை. தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள் மட்டு அல்ல தொழில் செய்து கொண்டிருக்கும் சிறு குறு வியாபாரிகளுக்கும் அதே கதி தான். வருமானம் இல்லாமல் கடைகளை இழுத்து மூடிக் கொண்டிருப்பவர்கள் பலர்.

மக்கள் நடமாட்டம் இல்லாமல், வருமானம் இல்லாமல் தவிக்கின்ற இந்தக் காலக் கட்டத்தில் அனைத்துப் பொருட்களின் விலைகளும்  ஏறிவிட்டன. ஏதோ பண்டிகை என்கிற நினைப்போ என்னவோ தெரியவில்லை!

இந்த நேரத்தில் அரசாங்கத்தின் பங்களிப்பு என்னவென்று அவர்களுக்கும் தெரியவில்லை பொது மக்களுக்கும் தெரியவில்லை! மக்கள் வருமானமின்றி தவிக்கும் இந்தக் காலக்கட்டத்தில் பொருட்களின் விலைகளை - குறிப்பாக உணவு சம்பந்தப்பட்ட விலைகளை - ஏறாமல் பார்த்துக் கொள்ளுவது அரசாங்கத்தின் பொறுப்பு. ஆனால் அவர்கள் அதனை செய்யவில்லை. அதனை மட்டும் அல்ல எதனையும் செய்யவில்லை என்பது தான் அவர்கள் மீதான குற்றச்சாட்டு. ஏதோ மரக்கட்டைகளை ஆட்சியில் வைத்திருக்கிறோமோ (நாம் வைக்கவில்லை என்பது வேறு விஷயம்) என்கிற எண்ணம் தான் வலுவாக நம் முன் நிற்கிறது!

ஆட்சியில் உள்ளோர், ஆட்சியாளர்கள் யாருமே இது பற்றி வாயைத் திறக்கவில்லை என்பது தான் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. மக்களால் என்ன செய்ய முடியும்?  சாப்பாடு இருந்தால் ஏதோ 'போனால் போகிறது' என்று விட்டுக் கொடுப்பார்கள். வேலை இல்லை, சாப்பாடு இல்லை. வேறு என்ன தான் இருக்கிறது?  கொரோனா இருக்கிறது! தடுப்பூசி இருக்கிறது!

இதை வைத்துக் கொண்டு மக்கள் என்ன செய்வார்கள்.தடுப்பூசி போட வேண்டுமென்றால் போக்குவரத்து வசதி வேண்டும். தடுப்பூசி போட்டுவிட்டு பட்டினியாக இருக்க முடியாது! அதற்குச் சாப்பாடு  வேண்டும்.  பணம் இல்லாமல் எதுவுமே நடக்காது!

மக்கள் அரசாங்கத்தில் வேலை செய்தால் மாதச் சம்பளம் முழுமையாக கிடைக்கும். ஒவ்வொரு மாதமும் வருமானத்திற்குக் குறை இல்லை என்றால் கொரோனா வைப் பற்றி  யாருக்கு என்ன கவலை! எல்லாப் பேரங்காடிகளையும்  சுற்றிச் சுற்றி வரலாம்! துரித உணவகங்களை வலம் வரலாம்!  அப்படியே ஒரு நாள் செத்துப் போனாலும் மனைவிக்கோ, கணவனுக்கோ தொடர்ந்து வருமானம் வரும்!

ஆனால் தனியார் துறையில் அந்த நிலை இல்லை. தனியார் துறையில் வேலை செய்யாதவர்களும் நிறையவே இருக்கிறார்கள். அன்றாட காய்ச்சிகள் என்கிற ஒரு பிரிவும் நம்மிடையே இருக்கிறார்கள். இவர்கள் நிலை என்ன? 

ஏதோ அவர்களால் இயன்றதை சம்பாதித்துக்  கொண்டிருந்தார்கள். அவர்களுக்கும் ஆப்பு வைத்தாகி விட்டது. அவர்கள் என்ன செய்வார்கள்?

பொது முடக்கம் நம்மை மிரள வைக்கிறது. அதுவும் ஏழை மக்களை நினைக்கும் போது நம்மால் கண்ணீர் விடத்தான் முடிகிறது.

இந்த மக்களுக்கு அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Friday 25 June 2021

மீண்டும் நாடகம் ஆரம்பம்!

 நம் நாட்டில் மீண்டும் அரசியல் நாடகம் ஆரம்பமாகிவிட்டது!

நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்கின்றனர் ஒரு சாரார்.  "ஆமாம், கூட்டப்பட வேண்டும்.  யாரும்  வேண்டாமென்று சொல்லவில்லையே.  செய்ய வேண்டிய வேலைகளை அப்படியே போட்டுவிட்டு ஓடியார முடியாது என்று தானே சொல்லுகிறோம்! கொஞ்சம் பொறுத்துக் கொள்ள முடியாதா?" என்கின்றனர் ஆளும் தரப்பு!

ஒரு குறிப்பு: "செய்ய வேண்டிய வேலைகள்" என்றால்  கொள்ளையடித்தது இன்னும் போதவில்லை என்பது பொருள்!

கோவிட்-19 இன்னும்...இன்னும்.... நீடித்தால் அவ்வளவும் பணம் என்பது அவர்களது நம்பிக்கை!  அந்த நம்பிக்கையை நாம் ஏன் தகர்க்க வேண்டும்?

நாடளுமன்றத்தை வெகு விரைவில் கூட்ட வேண்டும் என்பதாக மாமன்னர் கூறி இருந்தார். ஒன்றைக் கவனிக்க வேண்டும். "வெகு விரைவில்" என்பதில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன! அதனை ஓரிரு மாதங்கள் எனவும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது ஓரிரு மாமாங்கம் என்றும் எடுத்துக் கொள்ளலாம்!

ஆனால் நடப்பு அரசாங்கத்திற்கு ஓரு மாமாங்கம் தேவை இல்லை. அவர்களின் தேவை எல்லாம் அடுத்த பொதுத் தேர்தல் வரை தான். வேண்டுமானால் கால் மாமாங்கம் என்று வைத்துக் கொள்ளுங்களேன். 

இப்போது நமது அரசியல்வாதிகள் மாமன்னர் சொன்னதை பலவாறாக திரித்துப் பேசுகின்றனர்! இந்த அரசியல் சட்டம் இப்படிச் சொல்லுகிறது, அந்த அரசியல் சட்டம் அப்படிச் சொல்லுகிறது, நாடாளுமன்றத்தைக் கூட்ட மாமன்னருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று பலவாறாக பல்டி அடித்துக் கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் செய்வதை எல்லாம் பார்க்கும் போது:  குரங்கு கையில் பூமாலை! என்பது தான் ஞாபகத்திற்கு வருகிறது!  குரங்குகள் சேட்டைகள் பண்ணலாம்!  அது அவைகளின் இயல்பு. இவர்கள் மனிதர்கள். ஒரு வேளை எங்கள் மூதாதையர்களை எங்களால் விட்டுக் கொடுக்க முடியாது என்கிறார்களோ!

நாடகம் மீண்டும் ஆரம்பமாகி விட்டது. ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்துவார்கள். சவால் விடுவார்கள்! சட்டத்தில் கோளாறு என்பார்கள்.  அந்தக் கட்சி அப்படி, இந்தக் கட்சி இப்படி என்பார்கள்.

கொஞ்சம் நாளைக்குச் சத்தம், கூச்சல், குழப்பம் எல்லாம் கேட்கும்! எல்லாம் நடக்கும் ஆனால் ஒன்று மட்டும் நடக்காது. நாடாளுமன்றம் மட்டும் கூட்டப்படாது.

மீண்டும் எல்லாரும் அமைதியாகி விடுவார்கள். பிறகு மீண்டும்  மாமன்னர், அரசியல் சாசனம், நாடாளுமன்றம் .....என்று விவாதங்கள் தொடரும்!

நமக்கென்ன! நாமும் ரசிப்போம்!

Thursday 24 June 2021

நமக்கும் ரோஷம் உண்டு!

 ஒரு சிலர் பண்ணுகின்ற சேட்டைகளைப் பார்க்கும் போது அடாடா! நமக்கு என்னமாய் ரோஷம் வருகிறது என்று நினைக்கத் தோன்றுகிறது!

தமிழகத்திலிருந்து வந்து இங்கு வேலை செய்கின்றவர்களைப் பற்றி தான் சொல்லுகின்றேன்.

இங்கு வந்து வேலை செய்பவர்கள் உண்மையிலேயே பாவப்பட்ட ஜென்மங்கள்.  மலேசியாவுக்குப் போய் வேலை செய்தால் எப்படியோ குடும்பத்தைக் கரை சேர்க்கலாம் என்று ஓர் உந்துதலில் இங்கு வேலை செய்ய வருகிறார்கள். அவர்களிடம் இருக்கும் சொத்துக்களை விற்று, நகைகளை விற்று, கடன்களை வாங்கி, பாவம்! தங்களது குடும்பம் இனி பிழைத்துக் கொள்ளும் என்கிற எதிர்ப்பார்ப்போடு இங்கு வருகிறார்கள்.

ஆனால் இங்கு வந்து சேர்ந்த அடுத்த நிமிடமே அவர்களது வாழ்க்கை தடம் மாறிப்போகிறது.  கடப்பிதழ்கள் பறிபோகின்றன. எங்கே போகிறோம், என்ன செய்கிறோம் எதுவும் புரியவில்லை. சொல்லப்பட்டதோ ஒரு வேலை. ஆனால் செய்வதோ கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாத ஒரு வேலை. ஏதோ தற்காலிகம் என்று சொல்லப்பட்டாலும் கடைசியில் அதுவே நிரந்தரம் என்கிற ஒரு நிலைமை. எதுவும் கேட்க முடியவில்லை. அதுவும் துணிந்து கேட்டு விட்டால் அடுத்த நிமிடம் அடி, உதை. மாதக் கணக்கில் சம்பளம் கொடுப்பதில்லை. எங்கே புகார் செய்வது,  ஒன்றும் புரியவில்லை.  காவல்துறையை நாட முடியவில்லை.  ஓடி ஒளியத்தான் முடிகிறது. மொழி தெரியாத ஒரு நாட்டில் என்ன செய்வது? விளங்கவில்லை!

இது தான் இங்கு வேலை செய்கின்ற அவர்களின் நிலைமை. பாதிக்கப்பட்ட ஒரு சிலரை நான் நேரடியாகவே பார்த்திருக்கிறேன். ஒரு நண்பர் "போலிஸ்ஸை பார்த்து என்னால் ஒளிய முடியாது! நான் ஊருக்குப் போகிறேன்!" என்று சொல்லி காலில் விழுந்த கதை எனக்குத் தெரியும். ஒரே மாதத்தில்,  தேவையான ஏற்பாடுகளைச் செய்து, கொஞ்சம் துணிமணிகளெல்லாம் கொடுத்து அவரை அனுப்பி வைத்தோம்! பாவம்! மிகவும் பயந்த மனிதர்! எத்தனையோ ஆயிரங்களைச் செலவு செய்து இங்கு வந்தவர். கடைசியில் ஒன்றுமில்லாமல் வெறுங்கையோடு ஊர் திரும்பினார்.

பாவம்! இந்த ஏழை மக்களை ஏமாற்றி இங்கு வரவழைத்து கடைசியில் ஒன்றுமில்லாமல் திரும்பியவர் பலர்.  இப்படி ஏமாற்றி பிழைப்பதையே இங்கு பலர் தொழிலாகக் கொண்டிருக்கின்றனர். அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை.

என்னவோ நாட்டில் சட்டம், ஒழுங்கு என்று ஒன்றுமே இல்லாத நாடு என்று தான் நினைக்க வேண்டி உள்ளது! ஏமாற்றுபவர்கள் எப்படியோ தப்பி விடுகின்றனர். அதனால் தான் இது ஒரு தொடர் கதையாகவே போய்க் கொண்டிருக்கிறது!

Wednesday 23 June 2021

பிரதமர் முகைதீன் சீனாவை மிஞ்சிவிட்டார்!

நமது பிரதமர் முகைதீனை குறை சொல்லுவது என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது!

உண்மையைச் சொன்னால் அவர் இப்போது பதவியில் இருப்பதே கோவிட்-19 புண்ணியம் என்று தான் சொல்ல வேண்டும்!  இந்தத் தொற்று என்று ஒன்று இல்லாவிட்டால் அவர் எப்போதோ மூட்டையைக் கட்டியிருப்பார்! கட்டியிருக்க வைத்திருப்பார்கள்! 

அந்தத் தொற்றை வேண்டுமென்றே நாடு முழுவதும் பரப்பி இப்போது நாட்டு மக்கள் அனைவரையும் சிரமத்திற்கு உள்ளாக்கியிருக்கிறார் என்பது தொடர்ந்து அவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு!

இப்போது கோவிட்-19 எந்த நிலையில் நாட்டில் உள்ளது? இப்போது அது தான் நாட்டில் பேசும் பொருளாக மாறி  இருக்கிறது! ஆமாம் சின்னஞ்சிறிய நாடான நாம் தொற்று நோய் என்று வரும் போது, இறப்பு விகிதத்தில்,  நாம் சீனாவை மிஞ்சி விட்டோம்  என்று செய்திகள்  வருகின்றன.

ஒவ்வொரு நாடும் என்னன்னவோ சாதனைகளை உலக  அளவில் செய்து கொண்டிருக்கின்றன.  இருந்திருந்தும்  கோவிட்-19 தானா நமக்குச்  சாதனையாக  ஆக  வேண்டும்!

அது என்னவோ தெரியவில்லை, நாட்டின் பிரதமராக முகைதீன் பின் கதவு வழியாக வந்த போது, கோவிட்-19 முன் கதவு வழியாக உள்ளே நுழைந்தது!  அது எதேச்சையாக நடந்ததா திட்டமிட்டு நடந்ததா என்றால் அது  அப்படி நடந்ததாகத் தெரியவில்லை!

ஆனால் அதன் பின்னர் நடந்தது எல்லாம் திட்டமிடப்பட்டு நடந்தவை என்பது மக்கள் அறிவர். எல்லா மாநிலங்களிலும் அந்தத் தொற்று  திட்டமிடப்பட்டு பரப்பப்பட்டன!

அது தான் நம் நாட்டில் இப்போது நம்மை படாதபாடு படுத்திக் கொண்டிருக்கிற  கோவிட்-19 தொற்றின் ஒரு சிறிய சுருக்கம். இப்போது நம்மாலும் பொறுத்துப் போக முடியவில்லை. வீட்டில் அடைந்து கிடப்பது என்பது ஒரு புதிய அனுபவம். அத்தோடு அது முடிந்து விடவில்லை. வேலை இல்லை. வருமானம் இல்லை. "பூவாவுக்கு" என்ன செய்வது? இது தான் மக்கள் நோக்கும் மகத்தானப் பிரச்சனை.

அதுவும் மலேசியர்களில்   அன்றாடக் காய்ச்சிகள் பலர் இருக்கின்றனர். சிறு சிறு வியாபாரங்களில் ஈடுபட்டிருக்கின்றனர். ஏதோ அதை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் இவர்கள். இவர்கள் எல்லாம் தங்களது குடும்பங்களை எப்படிக் காப்பாற்ற முடியும்?

ஊரடங்கு என்றால் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றனர். இது தொடர்ந்தால் சொல்ல வேண்டியதில்லை. அவர்களின் குடும்பங்களை யார் காப்பாற்றுவது? ஊரடங்கு என்றால் அரசாங்கம் தான் அவர்களுடைய குடும்பங்களின் நலனுக்கு முழு உத்திரவாதம் கொடுக்க வேண்டும்.

பதவிக்காக அடித்துக் கொண்டு தொற்று நோயை வளர்த்து விட்டனர். அதை இன்னும் வளர்த்துக் கொண்டிருக்கின்றனர். அது தான் ஆளும் அரசியல்வாதிகளுக்குப் பதவியில் தொடர பாதுகாப்பு!

பிரதமர் முகைதீன், தனது ஆட்சி காலத்தில்,  கோரானா தொற்றை வளர்த்துக் கொண்டே பதவியில் நீடித்தவர் என்கிற பெயரைப் பெறுகின்றார்! அத்தோடு சீனாவையும் மிஞ்சிவிட்டார் என்கிற பெயரையும் பெறுகின்றார்!

Sunday 20 June 2021

இவர்களின் குறைபாடுகள் என்ன?

 சில சமயங்களில் சில விஷயங்களைப் பேசும் போது மனது வலிக்கின்றது.

தமிழ் நாட்டிலிருந்து இங்கு வந்து வேலை செய்யும் தொழிலாளர்களைத் தான் சொல்கிறேன். அவர்கள் மீது நமக்கு வெறுப்பில்லை என்று ஏற்கனவே நான் சொல்லியிருக்கிறேன். வெளி நாடுகளிலிருந்து பலர் இங்கு வந்து  வேலை செய்கின்றார்கள்.

அவர்களையெல்லாம் நாம் வெறுப்பதில் நியாயமில்லை. அவர்களின் வயிற்றுப் பிழைப்புக்காக அவர்கள் வருகிறார்கள். பிழைத்துவிட்டுப் போகட்டுமே! நமக்கு என்ன வந்தது?

ஆனால் தமிழ் நாட்டுத் தொழிலாளர்கள் என்றால் ஒரு சில உணவக உரிமையாளர்களுக்கு அவர்கள் ஏனோ இவர்களுக்குத் "தொக்காகப்"   போய்விடுகிறார்கள்!

உணவக உரிமையாளர்கள் என்று குறிப்பாக ஏன் சொல்லுகிறேன் என்றால் அங்கு தான் அதிகமான பிரச்சனைகளைத் தமிழ் நாட்டவர்கள் எதிர் நோக்குகிறார்கள்! உண்மையைச் சொன்னால் இந்த உணவக உரிமையாளர்கள் எந்த உணவகத் தொழில் பின்னணியும்  இல்லாதவர்கள். பாரம்பரியமாக உணவகத் தொழிலில் உள்ளவர்களால் எந்தப் பிரச்சனையும் எழுவதில்லை. அவர்கள் தொழிலைத் தெரிந்தவர்கள். அவர்களுக்குத் தொழிலாளர்கள் தேவை. அவர்களின் அருமை பெருமையை அறிந்தவர்கள்.

தீடீர் உணவக முதலாளிகள் தான் பிரச்சனைகளை உருவாக்குபவர்கள். அதற்கு ஒரே காரணம் தான் உண்டு.  தமிழ் நாட்டிலிருந்து வருபவர்கள் பலர் நடைமுறை முறைமைகளை அறியாதவர்கள். பலர் தங்களது வாழ்நாள் சேமிப்புக்களை சொத்துக்களை விற்று வேலை செய்ய இங்கு வருகிறார்கள். அவர்கள்  முற்றிலுமாக அங்குள்ள முகவர்களை நம்புகிறார்கள். அவர்களோ இவர்களைச்  சரியான ஆவணங்கள் இன்றி இங்கு அனுப்பி வைக்கிறார்கள்.

அதனைத் தான் இங்குள்ளவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளுகிறார்கள். பயணச்சீட்டு,  பயணிகள் விசா,  ஒரு சில மாதங்களே தங்க முடியும் - போன்ற எதனையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. பெரும் தொகைக் கொடுத்து இங்கு வேலை செய்ய வந்தவர்கள் கடைசியில் சட்டத்திற்குப் புறம்பாக நாட்டில் தங்கியிருப்பவர்கள் என்கிற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

கடைசியில் இந்த தொழிலாளர்கள் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. எங்கு இருக்கிறோம் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. கடவுச்சீட்டு இல்லை. காண்பிப்பதற்கு எந்த ஆவணங்களும் இல்லை.

இப்போது நமக்குத் தெரிய வேண்டியதெல்லாம் இந்த திடீர் உணவக முதலாளிகள் எல்லாம் எப்படி தப்பி விடுகிறார்கள் என்பது தான். காவல்துறை எந்த நடவடிக்கையும்  எடுப்பதில்லை. மனிதவள அமைச்சு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஏதோ நாட்டில் சட்டமே இல்லாதது போல் அனைத்தும் நடந்து கொண்டிருக்கின்றன!

ஆமாம் இந்த முதலாளிகளின்  குறை தான் என்ன?

Friday 18 June 2021

எதுவும் சாத்தியமே!

 நாடாளுமன்றம் எப்போது கூட்டப்பட வேண்டும்?

பேரரசர், சாத்தியமான விரைவில் நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

பிரதமர் துறை அமைச்சர் தக்கியுடின் அதனை உறுதிபடுத்தியிருக்கிறார். ஆமாம் கூடிய விரைவில் சாத்தியமான தேதியில் நாடாளுமன்றம் நடைபெறும் என்பதாக.  

அதனையே பாஸ் கட்சியும் வரவேற்றிருக்கிறது. அரசாங்கம் கூறியதற்கு ஏற்ப பேரரசரின் அறிவிப்பு அமைந்திருப்பதாக அவர்களும் கூறியிருக்கின்றார்கள்.

ஆக, எப்போது நாடாளுமன்றம் கூடும்? விரைவில், சாத்தியமான தேதியில், கூடும் என எதிர்பார்க்கலாம்!

ஆனால் அந்த சாத்தியம் இப்போதைக்கு இல்லை என நிச்சயமாக சொல்லலாம்.   கோவிட்-19 இப்போதைக்குக் குறைவதாக இல்லை. தினசரி அது கூடிக் கொண்டே போகிறதே தவிர குறைவதற்கான அறிகுறி எதுவும் இதுவரை தெரியவில்லை! 4,000 பேருக்குக் குறைவாக இருந்தால் அரசாங்கம் சில தளர்வுகளை ஏற்படுத்தலாம் என்று சொல்லப்படுகிறது.  கூடிக்கொண்டே போகின்ற ஒரு சூழலில் அது குறைவதாகவும் தெரியவில்லை.

கோவிட்-19 குறையவில்லை என்றால், ஊரடங்கு தொடரும் என்றால்,  நாடாளுமன்றம் கூடுவது என்பது அசாத்தியமே! அதனையும் மறுப்பதற்கில்லை.

பொதுவாக மக்கள் ஒன்றைப் புரிந்து கொண்டிருக்கின்றனர். இன்றைய நடப்பு அரசாங்கம் கோவிட்-19  தொற்றை அப்படி ஒன்றும் சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை என்கின்ற புரிந்துணர்வு தான் அது! காரணம் நாடாளுமன்றம் கூடக்கூடாது என்று அரசாங்கம் நினைக்கிறது. அது எப்படியோ போகட்டும். ஆனால் தனது கடமைகளை நிறைவேற்ற முடியாத அரசாங்கம் இருந்தால் என்ன, கெட்டழிந்து போனால் என்ன என்கிற மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள்!

செயல்படாத அரசாங்கம் என்றாலும் அரசை நிர்வகிக்கும் மேல்தட்டு வர்க்கத்தினருக்கு அது, அவர்களுக்காக செயல்படுகின்ற அரசாங்கம்.  அதனால் அவர்கள் அரசாங்கத்தை இறுகப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்!

நாடாளுமன்றம் கூடுவது என்பது விரைவில், சாத்தியமான தேதியில் கூடும் என நம்பலாம். அது எப்போது நடக்கும் என்பதை உங்களுடைய  ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்.

இப்போதே நடக்கலாம்! அடுத்த மாதம் நடக்கலாம்! அடுத்த ஆண்டு நடக்கலாம்! எதுவும் சாத்தியமே!

ஊர்க்காரரா நீங்க!

 தமிழ்நாட்டுக் காரர்களைத் தான் "ஊர்க்காரர்கள்" என்று அழைக்கப்படுவது நமது வழக்கம்.

அது ஒன்றும் தவறான வார்த்தையில்லை. நாம் நல்ல பண்போடும் அன்போடும் தான் தமிழகத்திலிருந்து இங்கு வந்து வேலை செபவர்களை அழைத்து வருகிறோம்.

"நீங்கள் ஊர்காரரா?" என்று கேட்கும் போது அதிலே ஒரு பாசம் உண்டு. பரிவு உண்டு. அதில் சந்தேகமில்லை. அப்படித்தான் அது இருந்தது.

ஆனால் அதே வார்த்தை இப்போது தீண்ட தகாத வார்த்தையாக மாறிவிட்டது. ஒரு சிலர் அப்படி ஒரு நிலைக்கு அந்த வார்த்தையைக் கொண்டு வந்து விட்டனர்.

அப்படிக் கேட்பதே ஏதோ ஏளனமாக அவர்களைப் பார்த்து கேட்பது போல அவர்கள் நினைக்கின்றனர். இவர்களோ  அப்படிச் சொல்லுவதில் ஏதோ ஒரு பெரிய சாதனையைச் செய்து விட்டது போல நினைக்கின்றனர்!  கிறுக்கர்கள் என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்லத் தெரியவில்லை!

ஆனால் கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் தமிழ் நாட்டுத் தமிழர்களை இங்குள்ள தமிழர்கள் அப்படிப் பேசி இழிவுபடுத்த  மாட்டார்கள்  என்று தான் நான் நினைக்கிறேன்.

தமிழ் நாட்டையே மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு தனது சொந்த மண்ணிலேயே "இளிச்சவாயன்" என்று பெயரெடுத்தவர்கள் தமிழர்கள்! அப்படிப்பட்டவர்கள்  இங்கு மட்டும் அப்படி ஒன்றும் இளிச்சவாயத்தனத்திலிருந்து விடுபட்டிருப்பார்கள் என்று நினைக்க இடமில்லை! இங்கும் அதே நிலை தான்!

பொதுவாக இந்த "ஊர்க்காரன்!" என்கிற வார்த்தை எங்கு அதிகம் பயன் படுத்தப்படுகிறது? அதைக் கொஞ்சம் ஆராய்ந்து பாருங்கள். எல்லாருடைய குற்றச்சாட்டும் இங்குள்ள உணவகங்களைத்தான் சுட்டுகின்றன.

சரி, இந்த உணவகங்களை நடத்தும் முதலாளிகள் யார்? அதை நாம் கவனித்திருக்கிறோமா? இந்த உணவகங்களைத் தமிழர்களா நடத்துகிறார்கள் என்று ஆராய்ந்து பாருங்கள்.  பெரும்பாலும் தமிழர்களில்லை. ஆனால் தங்களைத் தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்கள் தான் உணவகங்களை நடத்துகிறார்கள்! இவர்களுடைய வெளியே உள்ள விளம்பரப் பலகைகளில் கூட கீழே சிறிய எழுத்துக்களில் தமிழில் போட்டிருப்பார்கள் அல்லது தவிர்த்திருப்பார்கள்! தமிழ் நாட்டிலும் இதே நிலை தான்! இப்போதாவது புரிகிறதா? புரிந்தால் சரி!

தமிழர்களுக்கு எதிராகவே சில சமூகத்தினர் எல்லாக் காலங்களிலும் தமிழர்களை  இழிவு படுத்தவதை ஒரு கடமையாகவே செய்து வருகின்றனர்! யாரோ செய்கிறார்கள் ஆனால் தமிழர்கள் பெயர் தான் அடிபடுகிறது.

ஒன்று மட்டு சொல்லுவேன். தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கு எதிராக இங்குள்ள தமிழர்கள் இல்லை என்பதை மட்டும் சொல்லுவேன். அவர்களை இழிவாகப் பேசுவதை இங்குள்ள தமிழர்கள் விரும்பமாட்டார்கள். இரு பக்கமும் யோக்கியன், அயோக்கியன்  இருக்கத்தான் செய்கிறார்கள்! அது தமிழர்கள் மட்டும் அல்ல, வங்காள தேசம், நேப்பாளம், பாக்கிஸ்தான், வியட்னாம் - இப்படி எல்லா நாட்டு இனத்தவர்களிலும் உண்டு.

அவர்களுக்கு "நீங்க ஊர்க்காரரா?"  என்று கேட்கத்தான் ஆளில்லை!

Wednesday 16 June 2021

வெற்றி மனப்பாங்கு என்பது இது தான்!

 ஒரு மாணவியைப் பற்றியான செய்தியைப்படித்த போது அவர் பாராட்டப்பட வேண்டியவர் என்று தோன்றியது.

பிரவீணா சந்திரன் என்கிற மாணவி எஸ்.பி.எம். தேர்வில் 8A  எடுத்து சாதனைப் புரிந்திருக்கிறார். அவரை விடக்  கூடுதலான புள்ளிகள் எடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இல்லை என்று சொல்லவில்லை. 

ஆனால் அவர்களுக்கும் இந்த மாணவிக்கும் ஒரு சிறிய வித்தியாசம் உண்டு.  இனி கல்வி கற்பது இயங்கலை வழி தான் என்கிற நிலை வந்த போது அவருக்குத் தேவையான மடிக்கணினி கைவசம் இல்லை. அவருடைய சூழ்நிலை  அவரால் கணினி வாங்க இயலவில்லை. 

அந்த நேரத்தில் அவரிடம் இருந்ததெல்லாம் ஒரே ஒரு பழைய கைப்பேசி மட்டுமே.  அந்த கைப்பேசியை வைத்தே  இயங்களையில் அவர் தனது பாடங்களைப் படித்து  எஸ்.பி.எம். தேர்வில் எட்டு ஏக்களை வாங்கி சாதனைப் புரிந்துள்ளார். அவரே நேர் முக வகுப்பில் கலந்து கொண்டிருந்தால் அல்லது மடிக்கணினி வசதியிருந்திருந்தால் அவரும் மற்றவர்களைப் போல பத்து, பதினோரு ஏக்களை வாங்கிக் குவித்திருப்பார்.

நம்மிடையே ஒரு பழமொழி உண்டு. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்று சொல்லுவார்கள்.  அதைத்தான் ஞாபகத்துகிறார் பிரவீணா. எதைப்பற்றியும் கவலைப்படாமல், தனது இயலாமையும் பற்றிக் கவலைப்படாமல் தன்னிடம் இருப்பதைக் கொண்டு சாதனைப் புரிந்திருக்கிறார் இந்த மாணவி. 

இவரை விட இன்னும் மிக மோசமான சூழலில் இருந்த மாணவர்கள் கூட பல இன்னல்கள் இடர்களைத் தாண்டி வெற்றி பெற்ற கதைகள் எல்லாம் நம்மிடம் உண்டு.

நமக்குத் தேவை எல்லாம் வெற்றி பெற வேண்டும் என்கிற ஆர்வம் மட்டும் தான்.  அத்தோடு வெற்றி பெற முடியும் என்கிற மனப்பக்குவம், மனப்பாங்கு என்பது முக்கியம்.  தோல்வியைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் எப்படி வெற்றி பெறுவது என்பது தான் நம் மனதில் நிற்க வேண்டும். வெற்றி பெற நினப்பவர்களுக்கு மாற்றுச் சிந்தனை தேவை இல்லை. காரணம் நமது குறிக்கோள் என்பது வெற்றி மட்டும் தான்.

நாம் இந்த மாணவியை வாழ்த்துகிறோம்.  இவர் எந்தத் துறையில் படிக்க நினைக்கிறாரோ அதுவே அவருக்குக் கிடைக்கவும் நமது வாழ்த்துகள். 

அவர் நிச்சயமாக தான் விரும்புகிற துறையைத் தெர்ந்தெடுத்து அதிலே மாபெரும் வெற்றி பெறுவார் எனவும் நாம் நம்புகிறோம். பல இடர்களைக் கலைந்து எஸ்.பி.எம். தேர்வில் வெற்றி பெற்றவருக்கு வருங்காலங்களில் எந்த ஒரு சோதனையையும் சாதனையாக மாற்றும் இயல்பு அவருக்கு உண்டு என்பதில் ஐயமில்லை.

பிரவீணா தொடர் வெற்றிகளைக் குவிக்க வேண்டும்! வாழ்த்துகள்!

Tuesday 15 June 2021

இதற்கு ஏன் நன்றி, பாராட்டு?

 நமது பெருமைகளை அழிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு ஏன் நன்றியும் பாராட்டும் தெரிவிக்க வேண்டும். இந்த அளவுக்கு நாம் அடிமையாக இருக்க வேண்டுமா?

ஆமாம்! நமக்கும் கோபம் வரும்! வராதா என்ன? கோபம் ஓரே ஒரு இனத்திற்கு மட்டும் குத்தகைக்கு விடப்படவில்லையே!

கிள்ளான் செட்டி பாடாங் பெயர் ஏன் மாற்றப்பட வேண்டும் என்பதில் எந்த முகாந்திரமும் இல்லை. சும்மா ஒரு பெயரை மாற்றி விட முடியாது. அதுவும் ஒரு சரித்திர நிகழ்வு பெற்றதாகக் கூறப்படும் அந்த இடத்தின் பெயரை ஏன் மாற்ற வேண்டும்?  சுமார் நூறு ஆண்டு கால வரலாற்றுப் பின்னணியை கொண்ட அந்த இடைத்தின் பெயரை மாற்ற வேண்டிய காரணம் என்ன? இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவரது மகள் இந்திரா காந்தியும் கால் பதித்த இடம் அந்த செட்டி பாடாங் என்று சொல்லப்படுகிறது.  அது நடந்தது 1949 - ம் ஆண்டு. அதாவது சுமார் 72 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு நிகழ்வு. பழைய நிகழ்வுகளை அப்படியே தூக்கி எறிந்து விட முடியாது. அது சரித்திரம். மீண்டும் அவர்கள் இங்கு வர வாய்ப்பில்லை. 

நமது குழந்தைகள் பள்ளிகளில் கற்கும் சரித்திரமே கொஞ்சமும் சம்பந்தா சம்பந்தம் இல்லாத மலேசிய சரித்திரம் என்று சொல்லி எதை எதையோ கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்! அதே நேரத்தில் உண்மை சரித்திரத்தையும் ஒரு பக்கம் மறைத்துக் கொண்டிருக்கிறோம்!

கிள்ளான் நகராணமைக் கழகம் ஏன் இப்படி ஒரு கலக மனப்பான்மையோடு செயல்படுகிறது என்று நமக்கு கேள்வி எழுத்தான் செய்கிறது. சரித்திரம்  அறியாதவர்கள் பதவியில் இருந்தால் என்னன்ன நடக்கும் என்பதற்கு இதுவே நல்ல உதாரணம்!

 இதிலே, எனக்கு,  ஒரு சில அபிப்பிராய பேதங்கள் உண்டு. பெயரை மாற்றி விட்டார்கள். நமது மக்கள் எதிர்ப்பைக் காட்டினார்கள். அதன் பின்னர் சிலாங்கூர் ஆட்சிக்குழு கூடுகிறது. நமது மாண்புமிகுகளும் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். அந்த ஆட்சிக்குழு கூட்டத்தில் சிலாங்கூர் மந்திரி பெசார் "நாங்கள் எல்லாரும் கூடி அந்த பழைய பெயரையே  தொடர்கிறோம்!" என்று அறிவித்து விட்டார்! 

அது சரி,  நகராண்மைக் கழகத்தில் இருக்கின்ற  நமது இந்திய பிரதிநிதிகள் எங்கே போனார்கள்? ஓடியே போய்விட்டார்களா? இவர்கள் தான் நமது சமுதாயத்தின் இனத் துரோகிகள்.  அந்தக் கால சாமிவேலுவைப் போலவே செயல்படுகின்றனர். ஒன்று நமது உரிமைகளுக்காகப் போராட வேண்டும்.  நமது இனம் சார்ந்த உரிமைகளை விட்டுக் கொடுக்கக் கூடாது என்கிற பாடத்தை அரசியலுக்கு வருவதற்கு முன்னரே  கற்றிருக்க வேண்டும். எதுவும் இல்லாத பஞ்சப்பராரிகள்!

ஆனால் எல்லாவற்றையும் விட மந்திரி பெசாரைப்  பாராட்டுகிறோம்! மகிழ்ச்சியடைகிறோம்!  அடடா!  என்ன பாராட்டு மழைகள்! ஏன்? அந்த புதிய பெயரை மாற்றும் போது மந்திரி பெசாருக்கோ, மாண்புமிகுகளுக்கோ ஒன்றுமே தெரியாமல் நாட்டை விட்டு வெளியே போய் விட்டார்களா?

இங்கு யாருமே பாராட்டுக்குரியவர்கள் அல்ல!  மக்கள் தான், தமிழர்கள் தான், பிரச்சனையைக் கையில் எடுத்த தமிழ் மக்கள்  தான் பாராட்டுக்குரியவர்கள்!

Monday 14 June 2021

மற்ற வழிகளையும் ஆராயுங்கள்!

எஸ்.பி.எம். தோல்வி என்பது அத்தோடு முடிவடைந்து விடுவதில்லை!

கல்வியைத் தொடர்வதற்கு இன்னும் நிறையவே வழிகள் இருக்கின்றன. அரசாங்கம் நிறைய வழிகளைத் திறந்து விட்டிருக்கின்றது. எங்கும் ஓட வேண்டிய அவசியமில்லை! தலையில் கையை வைத்துக் கொண்டு கவலைப்பட வேண்டிய அவசியமில்லை!

வழிகள் ஆயிரம் உண்டு. அந்த வழிகளைப் பயன்படுத்திக் கொள்வது தான் புத்திசாலித்தனம்.

ஒரு மலாய் மாணவியை எனக்குத் தெரியும். எஸ்.பி.எம். தேர்வில் குறைவான புள்ளிகளைப் பெற்றவர். அவர் தொடர்ந்து தொழில்கல்வி பயில பதிவு செய்தார்.  அங்கு அவருக்குக் கிடைப்பதெல்லாம் சான்றிதழ் மட்டும்தான். அங்கு  அவர் சிறப்புத் தெர்ச்சி பெற்றார். அதன் பின்னர் அவருக்கு டிப்ளோமா கல்வி பயில மூன்றாண்டு காலம்,   தனது கல்வியைத் தொடர, அவருக்கு வாய்ப்புக் கிடைத்து அந்த மூன்றாண்டுகளையும் முடித்தார். அதன் பின்னர் அவருக்குக் பலகலைக்கழகத்தில் கல்வி பயில வாய்ப்புக் கிடைத்திருப்பதாகச் சொன்னார்.

அது மட்டும் அல்ல. ஒரு தமிழ் மாணவி. சான்றிதழ் முடித்த பின்னர் டிப்ளோமா பயில வாய்ப்புக் கிடைத்தது. அவருக்கும் மேற்படிப்புப் பயில வாய்ப்புக் கிடைத்ததை நான் அறிவேன்.

நான் சொல்ல வருவதெல்லாம் ஓரிடத்தில் தோல்வி என்றாலும் இன்னொரு இடத்தில் உங்களால் உயர முடியும். வெறும் திறன் பயிற்சி மட்டும் போதும் என்று நினைப்பவர்கள் ஓராண்டு கால பயிற்சியை மேற்கொள்ளலாம். அதற்கு மேலும் உயர வேண்டும் என்று நினைப்பவர்கள்  அந்த ஓராண்டு கால சான்றிதழ் படிப்பை சிறப்பாகச் செய்தால் இன்னும் தொடரலாம்.

வாய்ப்புக்கள் கொட்டிக் கிடக்கின்றன. எஸ்.பி.எம். தோல்வி என்பதை ஒரு பக்கம் ஒதுக்கிவிட்டு அடுத்த வாய்ப்பு என்ன என்று தேட வேண்டும். தொழில்திறன் பயில ஏகப்பட்ட தனியார் பள்ளிகள் இயங்குகின்றன. அவை பெரும்பாலும் பணத்தையே குறிக்கோளாக கொண்டவை. அங்கே தரமற்ற கல்வி தான் கிடைக்கும்.  ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்டவர்கள் அவர்கள்!

அரசாங்கம் நிறையவே தொழில் பள்ளிகளைக் கட்டி வைத்திருக்கிறது. நிறையவே கல்வி பயில வாய்ப்புக்களை அள்ளி அள்ளி வழங்குகிறது. இவைகள் எல்லாம் வேண்டாமென்றாலும் கூட பினாங்கு புக்கிட் மெர்டாஜத்தில் ஆறுமுகம் பிள்ளை தொழில் நுட்பக் கல்லூரி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அங்கு இந்திய மாணவர்கள் கணிசமான  அளவு கல்வி பயிலுகின்றனர்.  இந்திய மாணவர்களுடன் தான் படிப்பேன் என்று அடம் பிடிப்பவர்கள் அதனையும் முயற்சி செய்யலாம்.

நாட்டில் கல்வி பயில நிறையவே வாய்ப்புகள் இருக்கின்றன. "நான் எங்கும் என் பிள்ளைகளை அனுப்ப மாட்டேன்! கெட்டுப் போவார்கள்! எனக்குப் பக்கத்தில் தான்  படிக்க இடம் வேணும்!"  என்று சொல்லும் பெற்றோர்களுக்கு ஓர் ஆலோசனை. இன்றைக்குக் கெட்டுப் போகுபவர்கள் எல்லாம் வீட்டில் இருக்கும் போது தான் கெட்டுப் போகிறார்கள்! வீட்டுக்கு வெளியே அல்ல என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்!

கடைசியாக, அப்படியே நீங்கள் எஸ்.பி.எம். தேர்வில் வெற்றி பெறவில்லை என்கிற நிலையில் இருந்தாலும் நம்பிக்கை  இழந்து விடாதீர்கள். இன்னும் நிறையவே வாய்ப்புகள் இருக்கின்றன. இருக்கிற வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்களின் முயற்சி தான் முக்கியம். அவன் உதவுவான், இவன் உதவுவான் என்று பிறர் மீது பழிபோட நினைக்காதீர்கள்! உங்களுக்கு நீங்கள் தான் உதவி.

வெற்றி பெற வாழ்த்துகள்!

Sunday 13 June 2021

உங்களை நம்புங்கள்!

 எஸ்.பி.எம். தேர்வில்  தேர்ச்சி அடையாத  மாணவர்களும் பலர் இருக்கின்றார்கள். 

ஆனால் தோல்வி என்பது நிரந்தரம் அல்ல. மீண்டும் தேர்வை எழுது தேர்ச்சி அடையளாம்.  தேர்ச்சி பெற்றவர்கள் எல்லாம் புத்திசாலிகள்  தேர்ச்சி பெறாதவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்பதாக ஒன்றுமில்லை.

தேர்வில் தோல்வியைத் தழுவியர்கள், ஒரு முறை இரு முறையல்ல, பல முயற்சிகளுக்குப் பின்னர் வெற்றி பெற்றவர்கள் இருக்கிறார்கள். நம்மில் பலர் இருக்கிறார்கள். நம்மைச் சுற்றி பலர் இருக்கிறார்கள். நாட்டில் பலர் இருக்கிறார்கள். உலகில் பலர் இருக்கிறார்கள்.

தேர்வில் தோல்வி என்பது ஒன்றும் புதிதல்ல. அது தொடர்ந்து எல்லாக் காலங்களிலும் தொடர்ந்து கொண்டு வருவது தான்.

அதனால் தான் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளைத் தொடர்ந்தாற்  போல டியூஷன் வகுப்புகளுக்கு தவறாமல்  அனுப்புகிறார்கள்.  அப்படி இருந்தும் கூட தேர்வில் தோல்வி அடைபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்! என்ன செய்ய?

ஆனாலும் அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்பது தான் பெற்றோர்களின் கனவு. அதனால் தான் அவர்களைத் தொடர்ந்து படிக்க  வேண்டும் என்பதாக பெற்றோர்கள் வற்புறுத்துகிறார்கள்.

ஒரு சில குடும்பங்களில் பண வசதி உள்ளவர்களாக இருக்கலாம். அதனால் பெற்றோர்கள் கூட "படித்தால் என்ன! படிக்கவிட்டால் என்ன!" என்கிற எண்ணத்தில் இருப்பவர்கள் கூட இருக்கிறார்கள்!

ஆனால் பெற்றோர்களுக்கு நான் சொல்ல விரும்புவது:  பணம் இருப்பது நல்லது.  வருங்காலங்களில் அந்தப் பணத்தைப் பிள்ளைகளுக்குக் கட்டிக் காக்க தெரிவது அதைவிட நல்லது!

அப்படிக் கட்டிக் காக்கத் தெரியாத பிள்ளைகளினால் இருந்ததையும் இழந்து கடைசியில் நடுத்தெருவுக்கு வரவேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். அல்லது அவர்கள் ஏதோ ஒரு வகையில் ஏமாற்றப்படுவார்கள் என்பதையும் நாம் அறிந்திருக்கிறோம்.

கல்வி இல்லாத பிள்ளைகளுக்கு எதுவும் நடக்கலாம். அதனால் ஓரிருமுறை தேர்வில் தோல்வி அடைந்துவிடுவதால் அப்படி ஒன்றையும் பெரிதாக இழந்துவிடப் போவதில்லை. அவர்கள் தொடர்ந்து படித்து வெற்றி பெற வைப்பது பெற்றோரின் கடமை.

நாம் வாழ்க்கையில் பலவற்றைப் பார்க்கிறோம்.  ஆர்வமில்லாத மருத்துவ படிப்புக்குப் போனவர் பலர் பல்லாண்டுகளை வீணடித்து கடைசியில் ஒன்றுமில்லாமல் திரும்பிவர்களும் உண்டு. அது ஆர்வம் இல்லாமையால் வருகின்ற குறைபாடு.

எஸ்.பி.எம். என்பது அடிப்படைக் கல்வி. அது நிச்சயமாக ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய அடிப்படைக் கல்வி. பிற்காலத்தில் ஏதோ ஒரு வகையில் அந்தக் கல்வி அவர்களுக்கு உதவியாக இருக்கும். முன்னேற்றத்திற்கு ஏணிப்படியாக விளங்கக் கூடியது.

அதனால் எஸ்.பி.எம். என்பது, வெற்றி பெருவது என்பது,  நமது கல்விப் பாதையில்  ஒரு முக்கிய அம்சம். அதனால் அதனை அலட்சியம் செய்ய வேண்டாம். நம்பிக்கையோடு எதிர் கொள்ளுங்கள்.

Saturday 12 June 2021

கல்வியை விட்டு விடாதீர்கள்!

எஸ்.பி.எம். பரிட்சை முடிவுகள் வெளியாகி விட்டன.

வெற்றி பெற்றவர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றனர். மகிழ்ச்சி என்பது உங்களுக்கு மட்டும் அல்ல எங்களுக்கும் தான்.

நீங்கள் வெற்றி பெற வேண்டும். உயர் கல்வி பயில வேண்டும் என்பதையெல்லாம் நாங்களும் விரும்புகிறோம்.  உங்கள் பெற்றோர்களுக்கு என்ன மகிழ்ச்சியோ அதே மகிழ்ச்சியைத்தான் நமது சமுதாயமும் கொண்டாடுகிறது. 

வருங்காலங்களில் நீங்கள் தான் நமது சமுதாயத்தின் மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், கணக்காளர்கள், ஆடிட்டர்கள், கல்லூரி விரிவுரையாளர்கள் -  இப்படி எல்லாமே நீங்கள் தான். நீங்கள் தான் இந்த சமுதாயத்தின் பெருமைகளை மற்றவர்களிடம் கொண்டு சேர்ப்பவர்கள்.

கல்வி என்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்குக் கிடைத்த வாய்ப்பு எல்லாருக்கும் கிடைப்பதில்லை. பல காரணங்கள். அதில் வறுமையையும் ஒரு காரணம் தான்.

அப்பன் குடிகாரனாக இருந்தால் அந்த குடும்பமே பல வழிகளில் அடிபடும். சாப்பாட்டுக்கே வழி இல்லாத குடும்பங்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

ஆனால் எந்த சூழ்நிலையிலும் கல்வியை விட்டுக் கொடுக்காத குடும்பங்கள் பலர் இருக்கின்றனர்.  எப்பாடு பட்டாவது குழந்தைகளின் கல்வியில் சமரசம் செய்து கொள்வதில்லை. காரணம் கல்வி மட்டும் தான் அவர்களை  முன்னேற்றத்துக்குக் கொண்டு செல்லும் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கின்றனர்.

ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.  எஸ்.பி.எம். தேர்வில் வெற்றி என்பது முதல் படி தான்.  இதனை வைத்துக் கொண்டு பெரிதாக எதனையும் சாதித்து விட  முடியாது. அடுத்து கல்லூரி, பல்கலைக்கழகம் என்று தொடர்ந்து படிக்க வேண்டும்.

அப்போது தான் நீங்கள் படித்த படிப்புக்கு மரியாதை. வேலை செய்தே ஆக வேண்டும் என்கிற சூழலில் உள்ளவர்கள்  தொடர்ந்து திறந்த வெளி பல்கலைக்கழகங்களில் தங்களின் கல்வியைத் தொடரலாம்.

வெற்றி பெற்ற அனைவரும் தொடர்ந்து டிப்ளோமா, டிகிரி  என்று தங்களது கல்வியைத் தொடர வேண்டும்.

எக்காரணத்தைக் கொண்டும் உங்கள் கல்வியை விட்டு விடாதீர்கள்!

Thursday 10 June 2021

மீண்டும் முகைதீனா?

 அரசியல் கட்சி தலைவர்கள் மாமன்னரைச் சந்திக்கிறார்கள்.

மாமன்னர் எல்லாக் கட்சித் தலைவர்களையும் ஏறக்குறைய சந்தித்து விட்டார் எனலாம். இப்போது அவர் மாநில சுல்தான்களைச் சந்தித்த பின்னர் அவர் நாட்டின் நலன் கருதி ஒரு நல்ல முடிவுக்கு வருவார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

நல்ல முடிவு என்றால் எப்படி இருக்கும் என்பது நமக்குத் தெரியவில்லை! நம்முடைய எதிர்பார்ப்பு, தலைவர்களின் எதிர்பார்ப்பு, மாமன்னரின் எதிர்பார்ப்பு - இவைகள்  எல்லாம் ஒரே மாதிரி தான் இருக்கும் என்று சொல்வதற்கில்லை.

கட்சித் தலைவர்களின் எதிர்பார்ப்பு என்பது வேறு. அவர்கள் பதவிக்காக போராடும் போராட்டக் குணம் உடையவர்கள்.  மக்களின் நலன் என்பது அவர்களின் சிந்தனைக்கு வருவதில்லை. சுல்தான்கள் மக்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். அவர்களின் ஒருமித்த கருத்துத் தான் மாமன்னரின் கருத்தாக இருக்கும் என்று யூகிக்கலாம். 

கடந்த கால நிகழ்வுகளைப் பார்க்கும் போது  அப்படித்தான் அது நடந்திருக்கிறது. இன்றைய பிரதமர் முகமது யாசின் தொடர்ந்து பிரதமராக இருப்பதற்கு சுல்தான்களும் ஒரு காரணம் எனச் சொல்லலாம்.

ஆனால் இந்த முறை ஏதேனும் மாற்றங்கள் நிகழக்கூடிய சாத்தியங்கள் உண்டா என்று பல்வேறு தரப்பிலிருந்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. காரணம் பிரதமர் முகமது யாசினின் "இயங்காமல் இருப்பதே நமக்கு நல்லது!" என்கிற பாணியில் நாட்டை வழிநடத்துகிறார்!

இப்பொழுது மக்கள் பெரும்பாலும் விரக்தி நிலையில் இருக்கின்றனர். பல பிரச்சனைகளை எதிர் நோக்குகின்றனர். வேலை செய்தால் தான் தங்களது குடும்பத்தைக் காப்பாற்ற முடியும் என்கிற நிலையில் இருக்கும் மக்களிடம் என்னன்னவோ காரணங்கள் சொல்லி இழுத்தடித்துக் கொண்டு போவது இனி மேலும் ஏற்றுக்கொள்ள முடியாது  என்பது தான் மக்களின் நிலை.

பிரதமர்,  தானும் செய்யமாட்டார் மற்றவர்களுக்கும்  வழிவிடமாட்டார் என்பதை இன்னும் எத்தனை காலத்திற்கு மக்கள் பார்த்துக் கொண்டிருக்க முடியும் என்பது தெரியவில்லை! அவர் ஏதேனும் ஒரு முடிவுக்கு வர வேண்டும்.  பதவியில் இருக்கும் வரை எதையாவது செய்து பிரச்சனைகளைக் குறைக்க வேண்டும்.  ஆனால் அவர் அப்படி செய்யவில்லை என்பதைத்தான் மக்கள் குறையாகப் பார்க்கிறார்கள்.

இப்போது, வருகின்ற இடைக் காலத்தில், யார் நாட்டை வழி நடத்தப் போகிறார் என்று மக்களிடையே கேள்வி எழுப்பப்படுகிறது.  மாமன்னரை சந்தித்த பின்னர், இதற்கு முன்னர்  என்ன நடந்திருக்கிறது என்று பார்க்கின்ற போது,  இன்றைய பிரதமர் தனது பதவியைத் தொடர்வதற்கான வாய்ப்புகளே அதிகமாக இருக்கிறது என்பது தான் பளிச்செனத் தெரிகிறது!

வேறு என்ன தான் நடக்கும்?

Tuesday 8 June 2021

துங்கு ரசாலி சரியான மனிதரா?

 இப்போதைய இடைக்கால பிரதமர் முகைதீன் யாசின் எந்த அளவுக்கு மலேசிய மக்களிடையே செல்வாக்குப்  பெற்றிருக்கிறார் என்று காணும் போது நமக்குக் கொஞ்சம் வருத்தம் தான்.

செல்வாக்கு என்பதை விட்டுத் தள்ளுவோம். அவருடைய செயல்பாடு தான் நமக்கு முக்கியம்.

ஆனால் அவர் பூஜ்யம் செல்வாக்குப் பெற்றவராகத்தான் இருக்கிறார். எந்த நிலையிலும் அவர் மலேசிய மக்களுக்குத் தலைமை தாங்க தகுதியற்றவராகத்தான்  தென்படுகிறார்.  

அவர் இந்நாட்டிற்குத் தலைமை தாங்குவது என்பது கோவிட்-19 புண்ணியம் என்று தான் சொல்ல வேண்டும்! அந்தத் தொற்று மட்டும் இல்லையென்றால் அவர் என்றோ ஓரங்கட்டப்பட்டிருப்பார். ஏன்? கோவிட்-19 தொற்றை, தனது சுயநலத்திற்காக,  நாட்டில் இன்னும் அதிகப்படுத்தியவரே அவர் தான். இன்று நாடு இந்த அளவுக்கு சிரமத்திற்குள்ளாக்கப்பட்டிருக்கிறது என்றால் அதற்கு அவர் தான் காரணம்!

இன்றைய சூழலில் நாட்டை வழிநடத்த வேறு யார் பொருத்தமானவராக இருப்பார் என்னும் போது துங்கு ரசாலி ஹம்சா அவர்களின் பெயரை ஒரு சிலர் பரிந்துரைக்கின்றனர்.

துங்கு ரசாலி நீண்ட நாள் நாடாளுமன்ற உறுப்பினர்.  எல்லாப் பிரதமருடனும் பணி புரிந்திருக்கிறார். அவருடைய நேர்மை பற்றியோ நாணயம் பற்றியோ யாரும் கேள்வி எழுப்ப முடியாது. அவர் நாட்டை வழி நடத்த எல்லாத் தகுதியும் உடையவர். அவர் அம்னோ கட்சியைச் சேர்ந்தவர் தான்.  ஆனால்  மற்ற அம்னோ ஊழல் தரப்பினருடன் அவரை ஒப்பிட முடியாது. 

இன்று மலேசியர்கள், உண்மையைச் சொன்னால், ஒரு விரக்தி நிலைக்கு வந்து விட்டனர். வேலை இல்லை. வருமானம் இல்லை. குடும்பத்தைக் காப்பாற்ற முடியவில்லை. ஒரு செயல்பாடற்ற அரசாங்கத்தினால் மக்கள் அவதிப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது என்பது தான் மக்களின் மனநிலை.

வேறு யாரின் பெயரைச் சொன்னாலும் உடனே அங்கே ஒரு அரசியல் வந்துவிடுகிறது! அதனால் பல குளறுபடிகள்!

துங்கு ரசாலி,  பிரதமர் பதவிக்கு நல்லதொரு பரிந்துரை தான்.  அவர் தடுமாற்றம் இல்லாத நல்ல பிரதமராகத் திகழ முடியும் என்பதே நமது முடிவு. இடைக்காலப்  பிரதமராக இருக்கட்டுமே! என்ன கெட்டுப் போய் விட்டது?

துங்கு ரசாலி சரியான மனிதர் தான்! தகுதியான மனிதர் தான்!

Monday 7 June 2021

ஏதோ சரியாயில்லை!

 மலேசிய இந்து சங்கம் செய்தது சரியான  ஒரு நடவடிக்கை இல்லை என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை என்பதை முன் கூட்டியே நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

ம.இ.கா. வைப் போலவே இந்து சங்கமும் ஒரு கபட நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறதோ என்று யோசிக்க வேண்டியுள்ளது.

அரசாங்கம் கோடிக்கணக்கில் கொடுக்கும் மானியத்தை முதலில் வாங்கிக் கொள்வது. கோடிக்கணக்கில் வர்த்தகர்களுக்கு உதவி செய்வது அதன் பின்னர் வாங்க ஆளில்லை என்று சொல்லி திரும்பவம் அந்தப் பணத்தை அரசாங்கத்திடம் ஒப்படைப்பது  என்பது ம.இ.கா. இந்திய சமூகத்திற்குக் கற்றுக் கொடுத்த பாடம்.

இதன் மூலம் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள். முதலில் வாங்குவது போல் வாங்கு. அது இந்தியர்கள் கவனம் பெற. அதன் பின்னர் பெறுநர் யாருமில்லை என்று சொல்லி அந்த மானியத்தை அப்படியே திருப்பிக் கொடுத்து விடு. அப்படிச் செய்தால் உயரிய விருதுகள் கிடைக்கும்.  செனட்டர் பதவி கிடைக்கும். அத்தோடு கமிஷனும் கிடைக்கும்.  எல்லாவற்றையும் விட மேலிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.

இது ம.இ.கா. வின் பிரபலமான ஒரு வழிமுறை இந்தியர்களை ஏமாற்ற! இப்போது இந்து சங்கமும் அதே பாணியைப் பின்பற்றுகிறதோ, பக்தர்களை ஏமாற்ற,  என்று நினைக்க வேண்டியுள்ளது. இருந்தாலும் இது கோயிலுக்கான பணம். கோயிலுக்கான பணம் என்றாலே யோசிக்கத்தான் செய்வார்கள்.  ஏனெனில் கோயில் சொத்து குல நாசம் என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள் பெரியவர்கள்.

இது சரியோ தவறோ தெரியவில்லை. மித்ராவின் பணம் என்பது இந்தியர்களின் வர்த்தக வளர்ச்சிக்காக ஆரம்பிக்கப்பட்டது. இப்போது இது மடை மாற்றப்பட்டு யாருக்கும் உதவாத நிலைக்குத் தள்ளப்படுகிறது என்பது தான் நமது வருத்தம்.

இன்னும் சில ஆண்டுகளில் இந்த மித்ராவின் பணம் தேவை இல்லை என்று ஒரு சாரார் சொல்ல வருவார்கள். காரணம் அந்தப் பணத்தை வாங்க ஆளில்லை என்று இவர்களே அரசாங்கத்திற்குப் பரிந்துரை செய்வார்கள்!

நல்லதொரு தலைமைத்துவம் இல்லையென்றால் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் என்கிற நிலை தான் ஏற்படும்!


Sunday 6 June 2021

சீனாவின் பயமுறுத்தலா?

 

சீன விமானங்கள் மலேசிய எல்லைக்குள் தனது பயிற்சிகளை மேற்கொள்வது என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது என்பதை அரசாங்கம் தெளிவு படுத்த வேண்டும்.

இது நாள் வரை சீன விமானங்கள் இப்படி ஒரு பயிற்சியை மேற்கொள்ளவில்லை என்பதை நமது அரசாங்கம் உறுதிபடுத்துகிறது. ஆனால் சீனாவோ இது வழக்கமான பயிற்சி தான் என்று மார் தட்டுகிறது.

சீனா என்றாலே நம்பகத்தன்மை  இல்லாத ஒரு நாடு என்று உலகமே அறியும். இப்போது பணத்தைக் கொட்டி பல நாடுகளைக் கபளீகரம் செய்கின்ற ஒரு போக்கைக் கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறது.

ஸ்ரீலங்கா அதற்கு உதாரணம். இந்த நாடு இப்போது சீனாவின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது என்பது நாளுக்கு நாள் செய்திகள் வெளியாகின்றன. ஏன்? அங்கு பயன்பாட்டில் உள்ள தமிழ் மொழியை அழித்துவிட்டு சீன மொழியை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது! சீன மொழிக்கும் ஸ்ரீலங்காவுக்கும் என்ன சம்பந்தம் என்று நாம் கேட்டாலும் அதைக் கேட்க ஸ்ரீலங்காவுக்குத் திராணி இல்லை!

நமது மாண்புமிகு முன்னாள் பிரதமர் நஜிப் தொடர்ந்து பதவியில் இருந்திருந்தால் இந்நேரம் மலேசியாவின் பல பகுதிகள் சீனாவின் கட்டுப்பாட்டில் வந்திருக்கும்! டாக்டர் மகாதிரின் முயற்சியால் அது பாதியில் அறுந்து போனது!

அதற்காக சீன தனது முயற்சியை விட்டுவிடும் என்று நம்புவதற்கில்லை. இப்போது இருக்கின்ற அரசாங்கம் கூட அவர்களுக்குச் சாதகமாகத்தான் நடந்து கொள்ளும் என்று நம்ப இடமிருக்கிறது. குறுகிய காலத்தில் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அமைச்சரவையில் இருக்கிறார்கள். எதுவும் நடக்கலாம்!

சீன விமானங்கள் மலேசிய எல்லைக்குள் அத்து மீறுகிறது என்றால் அதனைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அதனை எங்கு எடுத்துச் செல்ல வேண்டுமோ அங்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

நமது நாடு இந்த அத்து மீறலைக் கண்டிக்கிறதோ இல்லையோ  அமெரிக்கா இதனைக் கண்டித்திருக்கிறது. அப்படியென்றால் நாம் பேசாமடந்தையாக இருந்து விட முடியாது. அல்லது "பார்க்கலாம்!" என்று தள்ளி விட முடியாது.

அடுத்த பொதுத் தேர்தலை தள்ளிப்போட கொரோனாவைப் பயன்படுத்துவது போல இந்த விமான அத்துமீறலைப் பயன்படுத்த கொரோனாவை பயன்படுத்த முடியாது!

எதிர்கட்சியான பக்காத்தா ஹராப்பான் சொல்லுவதைப் போல  இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

Saturday 5 June 2021

டேங்கர் லாரி ஓட்டும் கேரளப் பெண்!

         


ஒரு காலக் கட்டத்தில் பெண்கள் சைக்கிள் ஓட்டுவதைக் கண்டு அதிசயத்திருக்கிறேன். அதன் பின்னர் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதைக் கண்டு அதிசயத்திருக்கிறேன்.  அப்புறம் கார், டெக்சி, பஸ் இப்படி ஓட்டியதையெல்லாம் கண்டாயிற்று. விமானம் ஓட்டும் பெண்களையும் பார்த்தாயிற்று.

இப்போது ஒரு பெண், பெட்ரோல் டேங்கர் லோரி ஓட்டுகிறார் என்பதைக் கேட்டு மலைத்துப் போனேன். 

டேவிஸ் டெலிசியா என்பது அவரது பெயர். கேரளத்துப் பெண். திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர். வயது 22. வணிகத் துறையில் முதுகலை இறுதியாண்டில்  பயின்று வருகிறார்.

என்ன தான் படித்துப் பட்டம் பெற்றாலும் தன்னுடைய ஈர்ப்பு என்பது  டேங்கர் லோரிகள் மீதுதான் என்கிறார் டெலிசியா! 

"அதனால் அந்தத்  துறையிலேயே எனது கவனத்தை செலுத்த விரும்புகிறேன். அரசாங்கத்தில் டேங்கர் ஓட்டும் பணியில்  நான் தொடர்ந்து பணியாற்றுவேன்!"

மூன்று ஆண்டு காலமாக  இந்த பெட்ரோல்  டேங்கர் ஓட்டும் பணியில் அவர் ஈடுபட்டிருக்கிறார். பொதுவாக பெட்ரோல் டேங்கர்களைப் போலிஸார் நிறுத்தி சோதிப்பதில்லை. அதனால் இது நாள் வரை ஒரு பெண்,  டேங்கர் ஓட்டுகிறார் என்று யாரும் கண்டு பிடிக்கவில்லை. அதுவும் ஒரு நாளைக்கு ஏறைக்குறைய, போகவர,   300 கிலோமீட்டர் பயணம் செய்கிறார்.சமீபத்தில் தான் ஒரு பெண் டேங்கர் ஓட்டுவதைப் போலிஸார் கண்டு பிடித்த பின்னர் தான் அவர் வெளிச்சத்திற்கு வந்தார்.  அவரிடம் டேங்கர் ஓட்டுவதற்கான உரிமம் உண்டு மற்றும் தேவையான பத்திரங்களும் பக்காவாக வைத்திருந்தார். எந்த குறையும் இல்லை. கேரளாவிலேயே டேங்கர் ஓட்ட உரிமம் வைத்திருக்கும் ஒரே பெண் இவர் தான் என்று சொல்லப்படுகிறது.

நாம் பெரிய பெரிய படிப்புகளைப் படித்திருக்கலாம். அது நாம் விரும்பும் படிப்பாக இருக்கலாம் விரும்பாத படிப்பாகவும் இருக்கலாம். ஆனால் நாம் எந்த துறையைத் தெர்ந்தெடுக்கிறோமோ அந்தத் துறையில் தான் நம்மால் வாழ்க்கையில் உயர முடியும் என்பதை மறக்க வேண்டாம்.

இப்போது அவர் டேங்கர் லோரி ஓட்டுனர் என்கிற அடையாளத்தைக் கொண்டிருந்தாலும் அந்த துறையிலேயே அவர் உச்சத்தை தொட முடியும். யார் கண்டார்? நாளை அவர் 20 டேங்கர்களுக்குச் சொந்தக்காரர் ஆகலாம். இது நடக்காது என்று சொல்ல முடியுமா? பேருந்துகள் மீது காதல் கொண்ட ஒருவர் இப்போது 50 க்கு மேற்பட்ட பேருந்துகளுக்குச் சொந்தக்காரர்.

நாம் விரும்புவதை செய்யும் போது நம்மால் எளிதாக வாழ்க்கையில் உயர முடியும். விரும்பியதைச் செய்யுங்கள். அதுவே உங்களை உயர்த்தம்!



Friday 4 June 2021

தடுப்புக் காவல் மரணங்கள்!

 நமது நாட்டில் தடுப்புக் காவல் மரணங்கள், அதுவும் குறிப்பாக இந்திய இளைஞர்களின்  மரணங்கள், எந்த கட்டுப்பாடுமின்றி அதிரிகரித்துக் கொண்டே இருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.

விசாரணைக்குப் போகும் இளைஞர்கள் திரும்ப உயிரோடு வருவார்களா என்கிற சந்தேகம் இப்போது மக்களிடையே எழுந்திருக்கிறது. 

எதுவும் உறுதியில்லை. ஓர் உறுதியற்ற அரசாங்கம் பதவியில் இருந்தால் என்ன நடக்கும் என்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். நாட்டில் பொறுப்பில் உள்ளவர் நமது பிரதமர் தான். அவரின் நிலைமை நமக்குப் புரிகிறது.  பேசவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் அப்படி ஒரு நிலை அவருக்கு!  அவரும் "இந்தியர் என்றால் எக்கேடாவது கெட்டுப் போகட்டும் நமக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை! மலாய்க்காரர் ஓட்டு தான் நமது இலக்கு!" என்கிற மனப்பான்மை அவரிடமும் உண்டு.  அவர் என்ன நினைக்கிறாரோ அதையே தான் ம.இ.கா.வும் நினைக்கும்!  வேறு சொந்தமாக எந்த சரக்கும் அவர்களுக்கு இல்லை!

இந்த மரணங்கள் பற்றி காவல் துறையில் எத்தனையோ புகார்கள் கொடுத்தாயிற்று ஆனால் அந்த புகார்கள் எந்தவொரு பயனையும் அளிக்கவில்லை.  தொடர்ந்தாற் போல புகார்கள் கொடுப்பதும் புகார்களை காலில்  போட்டு மிதிபட வைப்பதும் - எந்த ஒரு தீர்வை நோக்கியும் அது போகவில்லை! அதற்காக புகார் அளிக்காமல் இருந்துவிடவும்  முடியாது. அந்த ஒர் உரிமை மட்டும் தான் நமக்கு இருக்கிறது. அதனையும் கைகழுவி விட முடியாது.  ஏதோ இன்று அது வலுவாக இல்லையென்றாலும் நாளை அது வலுவாக இயங்கலாம். நம்பிக்கை தானே வாழ்க்கை.

இதில் பாவப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட குடும்பங்கள் தான்.  தாய்மார்கள், மனவிமார்கள், குழந்தை குட்டிகள் இவர்களுடைய நிகழ்காலம், எதிர்காலம் அனைத்தும் பாழ்,  வேறு என்ன சொல்ல? இருக்கிற கொஞ்ச நஞ்ச பணத்தையும் வழக்குகளுக்காகப் போய்விடும்.

நாட்டில் சட்டங்கள் இருக்கின்றன. அந்த சட்டங்களை யாரும் மதிப்பதில்லை. அதிலும் குறிப்பாக அரசியல்வாதிகள். அவர்கள் செய்யாத குற்றங்களா?  அந்த குற்றங்கள் எதுவும் வெளியே வருவதில்லை!  மிகச் சாமர்த்தியமாக மறைக்கப்படுகின்றன!

அப்பாவிகள் பலர் ஏதோ ஒரு வகையில் காவல்துறையினரிடம் அகப்பட்டுக் கொள்கின்றனர். அதற்காக அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று சட்டங்கள் சொல்லவில்லை. முறையான விசாரணை வேண்டும் என்று தான் கோரிக்கைகள்  வைக்கப்படுகின்றன.

இந்த விசாரணைகளை எதிர்நோக்க முடியாதவர்களால் தான் இது போன்ற மரணங்கள் சம்பவிக்கின்றன.

காத்திருப்போம். நீதி, நியாயம் இல்லாமலா போய்விடும்!

Thursday 3 June 2021

இது போதுமா?

 அமைச்சர்களும், துணை அமைச்சர்களும் மூன்று மாதங்கள் தங்களது சம்பளத்தை எடுக்க மாட்டார்கள்  என்பதாக பிரதமர் அறிவித்திருக்கிறார்.

நல்ல செய்தி தான். மறுப்பதற்கில்லை. மூன்று மாதங்கள் என்பதற்குப் பதிலாக  அவர்கள் பதவியில் இருக்கும் வரை பாதி சம்பளம் அவர்கள் வாங்கலாம்.   ஏன்? சம்பளம் வாங்காமல் கூட அவர்களால் தாக்குப் பிடிக்க முடியும். தொண்டு செய்ய வந்தவர்கள் சம்பளத்தை எதிர்பார்ப்பதில்லை!

அதே போல அரசாங்கத்தில் வேலை செய்வோர் குறைந்தது அடுத்த ஆறு மாதங்களுக்குத் தங்களது சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளலாம். பாதி சம்பளம் போதுமானதே. 

இதெல்லாம் ஒரு தற்காலிக நடவடிக்கை தான். இன்று நாட்டில் கணவன் மனைவி இருவருமே வேலை இல்லாமல் இருக்கும் நிலைமையில் பலர் இருக்கின்றனர். அவர்கள் வேலையை இழந்திருக்கின்றனர். அவர்களுக்குக் குடும்பங்கள் இருக்கின்றன. அவர்களின் குடும்பங்களைக் காப்பாற்ற எண்ணில்லா துன்பங்களை அனுபவிக்கின்றனர்.

ஊரடங்கு காலத்தில் யாராலும் ஒன்றும் செய்ய இயலாது.  வேலை செய்ய அனுமதித்தால் அவர்கள் வேலை செய்ய தயாராக இருக்கிறார்கள். ஊரடங்கினால் வேலை செய்ய இயலாது. வருமானம் என்பது இல்லை. எப்படி பிழைப்பை நடத்துவது?  

எல்லாருமே ஏதோ ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறோம்! எல்லாருக்குமே மாதத் தவணைகள் உண்டு. வீட்டுக் கடன், கார் கடன் என்று இப்படி இழுத்துக் கொண்டு போகும். வீட்டு வாடகைக் கட்டவில்லை என்றால் வீட்டைக்  காலி செய்ய வேண்டி வரும். பல சோதனைகளை மக்கள் எதிர் நோக்குகிறார்கள்.

கோவிட்-19 சமீப காலங்களில் முடியும் என்று தெரியவில்லை. ஒன்று போனால் அடுத்து ஒன்று வருகிறது. 

ஓரு நிரந்தர மற்ற அரசு பதவியில் இருப்பதால் அவர்களால் முழுமையாக இந்த நோயை ஒழிக்க வேண்டும் என்கிற அவசியம், அவசரம் இல்லாமல் இருக்கின்றனர்.  தொற்று நீடித்தால் அவர்கள் தொடர்ந்து பதவியில் இருக்க முடியும் என்று கணக்குப் போடுகின்றனர்!

இந்த நிலையில் மக்கள் தான் அவதிகளை அனுபவிக்கின்றனர். ஒரு நிரந்தர தீர்வைநோக்கி அரசு பயணிக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து கொண்டிருக்கிறது. ஆனால் அந்த குற்றச்சாட்டு சேர வேண்டிய இடத்தில் சேருகிறதா என்கிற ஐயம் நமக்கும் உண்டு!

அதனால் தான் நாம் சொல்ல வருவதெல்லாம் அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் அனைவரும் சம்பளம் வாங்காமல் நாட்டிற்குத் தொண்டு செய்ய வேண்டும் என்று கூறுகிறோம். நாடாளுமன்ற, சட்டமன்ற  உறுப்பினர்கள் சம்பளம் வாங்காமல் நாட்டிற்குத் தொண்டு செய்யுங்கள் என்று நாம் பரிந்துரைக்கிறோம்.

கோவிட்-19 கட்டுப்பாட்டிற்குள் வரும்வரை இவர்கள் சம்பளம் வாங்கக் கூடாது என்பதே ந்மது பரிந்துரை. அதன் மூலம் வேலை இல்லாத பல  குடும்பங்களுக்குக் குறைந்த அளவு உணவுகளையாவது ஆவர்களுக்குக் கொடுத்து அவர்களை வாழ வைக்க முடியும்.

இது போதாது தான்! ஆனால் வேறு வழிகளையும் அரசாங்கம் அலசி ஆராய வேண்டும்!


Wednesday 2 June 2021

ஏன் ஏஜி ஆக முடிவதில்லை?

நமது நாட்டில் சட்டத்துறைத் தலைவராக மலாய்க்காரர் அல்லாதவர் வர இயலாதா என்கிற ஒரு கேள்வி நம்மிடம் எப்போதும் உண்டு.

வர இயலாது என்றால் அதற்கான காரணம் என்னவாக இருக்கும்?  இது போன்ற பெரிய பதவிகளுக்கு மலாய்க்காரர் மட்டுமே வர முடியும் என்பதாக சொல்லுவது எதனால்?

மலாய்க்காரர் அல்லாதவர் வர இயலாது என்று எந்த அரசியல் சட்டமும் கூறவில்லை.  அப்படி கூறுவதாக இருந்தால் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தில் டாமி தாமஸ் சட்டத்துறைத் தலைவராக பிரதமர் டாக்டர் மகாதிர் அவரை நியமித்திருக்க மாட்டார்.

சட்டத்தில் எந்தப் பிரச்சனையும் எழவில்லை. இதனை எதிர்ப்பவர் யார் என்று பார்க்க வேண்டும்.  மலாய் அரசியல்வாதிகள் தான் மலாய்க்காரர் அல்லாதவர் அந்தப் பதவிக்கு வருவதை விரும்புவதில்லை. அதிலும் குறிப்பாக அம்னோ கட்சியைச் சேர்ந்த மலாய் அரசியல்வாதிகள். பக்காத்தான் ஹராப்பான் கட்சியைச் சேர்ந்த மலாய் அரசியல்வாதிகளால் எந்தப் பிரச்சனையும் எழவில்லை. எந்த எதிர்ப்புக் குரலும் கொடுக்கவில்லை. அதனால் தான் அந்த கட்சி ஆட்சியில் இருக்கும் வரை டாமி தாமஸ் ஸால் பதவியில் நீடிக்க முடிந்தது.

கடந்த காலங்களில் அம்னோ அரசியல்வாதிகள் பதவி வகித்த காலங்களைப் பின் நோக்கிப் பார்த்தால் நாட்டிற்கு அவர்களால் ஏற்படுத்தப்பட்ட சேதங்கள் ஏராளம்! ஏராளம்! அனைத்தும் ஊழல்! அனைத்திலும் ஊழல்! ஊழல் இல்லாத அம்னோ அரசியல்வாதிகள் இல்லையென்றே சொல்லலாம்! அந்த அளவுக்கு ஊழலின் ஆதிக்கம் நீக்கமற நிறைந்திருந்தது! இந்த ஊழல் அரசியல்வாதிகளுக்குப் பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் சட்டத்துறைத் தலைவர் மலாய்க்காரராக இருக்க வேண்டும் என்று அலறிக் கொண்டிருப்பவர்கள்! அதனால் தான் அம்னோ அரசியல்வாதிகள் ஊழல் என்று அடிபடும் போதெல்லாம் சட்டத்துறைத் தலைவர்களின் பெயரும் அடிபடுகிறது!

மற்றபடி அரசியல்வாதிகளுக்கு இனப்பற்று, மொழிப்பற்று,சமயப்பற்று என்பதெல்லாம் வெறும் வெளி வேஷம் என்பதை நினைவில் வைத்துக் கொண்டால் போதும்.

வருங்காலங்களில் மீண்டும் டாமி தாமஸ் போன்ற சட்ட அறிஞர்கள் சட்டத்துறைத் தலைவராக வர வாய்ப்பு உண்டா? நிச்சயம் உண்டு. நமபலாம்!

Tuesday 1 June 2021

கவிஞர் வைரமுத்து திரும்ப ஒப்படைத்தார்!

 கேரள மாநிலத்தின்  ஓ என் வி இலக்கிய விருதுக்கு ஓ என் வி  கலாச்சாரக் கழகம் கவிப்பேரரசு வைரமுத்துவைத்  தேர்வு  செய்திருந்திருந்தது.

ஆனால் இந்தத் தேர்வு சரியானதல்ல என்பதாக நடிகை பார்வதி தனது டுவிட்டர் பக்கத்தில் தனது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார். பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவருக்கு இந்த விருதை கொடுப்பது மிக அவமானத்திற்குரியது என்று குறிப்பிட்டிருந்தார்.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் திரைப்பட பாடகி சின்மயி, "மீட்டூ" இயக்கம் தமிழ் நாட்டில் உச்ச கட்டத்தில் இருந்த போது  வைரமுத்துவினால் தான் பாலியில் சீண்டலுக்கு ஆளானதாக குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் வைரமுத்து அந்தக் குற்றச் சாட்டை மறுத்து விட்டார். அதன் பின்னர் அந்தப் பிரச்சனை முடிந்து விட்டதாகவே நினைத்திருந்தோம். காரணம் சின்மயி, வைரமுத்துவின் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதனால்.

இப்போது இலக்கிய விருது கொடுக்கப்படுகின்ற போது மீண்டும் இந்த பிரச்சனை எழுப்பப்பட்டிருக்கிறது. இது சரியா தவறா என்பது பற்றி நாம் கேள்வி எழுப்பப் போவதில்லை. இதில் யார் சொல்லுவது சரி, யார் சொல்லுவது பொய் என்பது அவர்களுக்குத்தான் தெரியும். நமக்குத் தெரிய நியாயமில்லை. நமக்குத் தெரிந்ததெல்லாம் வைரமுத்து நாடு போற்றும் கவிஞர். தமிழர்களால் கொண்டாடப்படும் கவிஞர். இப்படி ஒரு குற்றச்சாட்டு என்னும் போது நமக்குக் கோபம் வரத்தான் செய்யும். ஆனால் உண்மை என்ன, யாருக்குத் தெரியும்?

ஒரு விஷயம் நமக்குப் புரிகிறது. இந்தக் குற்றச்சாட்டு இனி எல்லாக் காலங்களிலும் கவிஞர் வைரமுத்துவின் மீது வைக்கப்படும். தமிழகத்தை தவிர்த்து பிற மாநிலங்களிலிருந்து எந்த ஒரு விருதினையும் அவர் பெற முடியாது. பிராமண சமூகம் வருங்காலங்களில் இந்த குற்றச்சாட்டை  மீண்டும் மீண்டும் கையில் எடுக்கும்! வைரமுத்துவிற்கு எதிராகவே நிற்கும்!

தாய் தமிழகத்தில் மட்டும் தான் அவருக்கு உரிய மரியாதைகள் கிடைக்கும். இங்கும் பா.ஜ.க. ஆதரவு அரசாங்கம் என்றால் அதுவும் கைவிட்டுப் போகும்!

நாடு போற்றும் நல்லவர்களின் பெயரைக் கெடுக்க நாலு பேர் இருந்து கொண்டு தான் இருப்பார்கள்.  அவர்கள் எச்சரிக்கையாகத்தான் இருக்க வேண்டும்.

கவிப்பேரரசு வைரமுத்து தனது வழங்கப்பட்ட விருதினை மீண்டும் ஓ என் வீ  கழகத்திடம் ஒப்படைத்து விட்டதாக கூறப்படுகின்றது.