Sunday, 30 April 2017

இந்திய சமுதாய பத்தாண்டு வியூகப் பெருந் திட்டம்!

சென்ற வாரம் இந்திய சமுதாயத்திற்கான பத்தாண்டு வியூகப் பெருந்திட்டத்தை ம.இ.கா.வின் கூட்டமொன்றில் நமது மலேசியப் பிரதமர் "இது வெட்டிப் பேச்சல்ல! இது நிஜம்!" என தமிழில் சொல்லி இந்நாட்டு இந்தியர்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்திருக்கிறார்.

இந்தப் பெருந்திட்டத்தைப் பற்றிப் பல  விமர்சனங்கள் எழுந்தாலும் "இது எதற்கும் உதவாத பெருந்திட்டம்" என்பதாக ஒதுக்கிவிட முடியாது.

நான் எந்த அவநம்பிக்கையையும் விதைக்க விரும்பவில்லை. நம்பிக்கையோடு தான் நாம் இந்தப் பெருந்திட்டத்தை எதிர்கொள்ள வேண்டும். அதுவும் பிரதமரால் ஏற்றுக்கொள்ளப் பட்ட ஒரு திட்டம் என்றால் அது அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட  ஒரு  திட்டம் என்பதாகவே அது பொருள்படும்.

இப்போது நம்மிடையே உள்ள குறைபாடுகள் எல்லாம் இந்த மாபெரும் திட்டத்தை ம.இ.கா. எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது தான்.

இது நாள் வரை ம.இ.கா. கடந்தகாலங்களில் அறிமுகப்படுத்திய  எந்த ஒரு திட்டமும் மக்களைப் போய் சேரவில்லை என்பது தான் அவர்கள் மீது உள்ள குற்றச்சாட்டு. நமக்கு அதிகம் தெரிந்த, நம்மால் அதிகம் பேசப்பட்ட ஒரு விஷயம் என்றால் அது தமிழ்ப்பள்ளிகளின்  சீரமைப்புப் பணிகள்  என்பது தான். அல்லது புதிய கட்டடங்கள்.

கோடிக்கணக்கில் பண உதவி கிடைத்தும் தமிழ்ப் பள்ளிகள் எந்தப் பயனையும் அடையவில்லை! கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை!  ம.இ.கா.வே நமக்கு ஒரு அவநம்பிக்கையை  ஏற்படுத்திவிட்டது!

இன்றைய "மக்கள் ஓசை" ஞாயிறு இதழில் தலைமை ஆசிரியர் எம்.இராஜன் அவர்கள் இந்தப் பெருந்திட்டத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது "யார் கண்டார்கள்...? 10 ஆண்டுகளில் இந்த மறுமலர்ச்சி என்ற ஒரு லட்சியத் தடத்தில் நாம் சாதிப்பது ஒரு பாதியாவது இருக்காதா? ...சில நெல்மணிகளாவது உதிர்க்காமலா போய்விடும்?" என்கிறார்!

அவரின் நம்பிக்கை வார்த்தைகளை நாமும் ஏற்கிறோம். ஆனால் நான் வேறு ஒரு கண்ணோட்டத்தில்  இதனைப் பார்க்கிறேன். இந்தப் பெருந்திட்டத்தின் வளர்ச்சி எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது என்பது மக்களுக்குத் தெரிந்தாக  வேண்டும். ஒவ்வொரு நூறு நாள்களுக்கும், ஒவ்வொரு பத்து மாதத்திற்கும்  எந்த அளவுக்கு திட்டங்கள் நிறைவேற்றப் பட்டிருக்கின்றன என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும். ம.இ.கா. இதனைச் செயல்படுத்த உடனடியாகக் களத்தில் இறங்க வேண்டும்.

தலைவர்கள் சண்டை போடலாம்! தறுதலைகள் எனப் பெயர் எடுக்கலாம்! பைத்தியங்களாகத் திரியலாம்! அது அவர்களது உரிமை!  ஆனால் ம.இ.கா. தலைமையகத்தில் ஒரு குழு அமைத்து இதற்கானத் தொடர் வெலைகள் நடந்தாக வேண்டும். திட்டங்கள் எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்பது கண்காணிக்கப்பட வேண்டும். இது இந்நாட்டு இந்தியர்களின் உரிமை.  இனி மேலும் மூடி மறைக்க இதில் ஒன்றுமில்லை. அரசாங்கம் ஒரு திட்டத்தைக் கொடுத்திருக்கிறது. அது செயல்படுத்தப்பட வேண்டும். அதனை ம.இ.கா. கண்காணிக்க வேண்டும்.

பிரதமர் இவ்வளவு செய்தும் ம.இ.கா. அதனைக் கண்காணிக்கத் தவறினால், இன்னும் ஏனோ தானோ போக்கைக் கடைப் பிடித்தால் - ம.இ.கா. வை மன்னிக்க வாய்ப்பே இல்லை! தலைவர்கள் வரலாம்! போகலாம்! ஆனால் இந்தியர்களுக்கு எனக் கொடுக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட  வேண்டும்! அவைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இனி என்ன செய்யலாம்? அடுத்த நூறு நாள்களில் என்ன முன்னேற்றம்; அடுத்த பத்து  மாதங்களில் என்ன முன்னேற்றம்? அடுத்த தேர்தலுக்கு முன் என்ன முன்னேற்றம்? இவைகள்: எல்லாம் மக்கள் மன்றத்திற்கு வர வேண்டும்.

ஒன்றுமே செய்யாமல் வெறும் வாய்ச்சவடால் பண்ணுவதும், வாயால்  வடைசுடுவதும் போதும் போதும் என்றாகி விட்டது!  இது  ம.இ.கா.விற்கு ஒர் அக்கினிப்பரிட்சை! கடைசி வாய்ப்பு!

என்ன ஆகிறது பார்க்கலாம்!

Saturday, 29 April 2017

சிவ நாடார் உலகின் முதலாவது பணக்காரத் தமிழர்!


உலகத்தில் யார் பெரிய பணக்காரர் என்றால்  அனைவருக்குமே தெரியும், பில் கேட்ஸ் என்று. பல ஆண்டுகளாக அவரை அடிக்க ஆளில்லை! என்ன தான் உலகப் பொருளாதாரத்தில்  வளர்ச்சி, தளர்ச்சி என்றாலும், சரிவு உயர்வு என்றாலும், வீழ்ச்சி மீட்சி என்றாலும் பில் கேட்ஸ் தான் முன்னணியில் நிற்கிறார்! இன்றைய அவரின்  சொத்து மதிப்பு 86 பில்லியன் டாலர். (ஒரு பில்லியன் என்பது 100 கோடி என அறிக)

அது சரி, உலக அளவில் தமிழர் யாரேனும் சொல்லும்படியாக பணக்காரர் வரிசையில் இருக்கிறார்களா? இருக்கிறார்கள். உலக அளவில் முதல் பெரிய கோடான கோடிகளுக்கு அதிபதி  என்றால் அது தமிழ் நாட்டைச் சேர்ந்த சிவ நாடார் தான் அந்தப் பெருமையைப்  பெறுகின்ற முதல் தமிழர்.

சிவ நாடார் அல்லது ஷிவ் நாடார் தமிழ் நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர். தமிழ் வழி கல்வி கற்றவர்.பின்னர் கல்லுரியில் எலக்ட்ரோனிக்ஸ் என்ஜியனியரிங் படித்து அதன் பின்னர் அத்துறையில் டாக்டர்  பட்டமும் பெற்றிருக்கிறார். நல்ல கல்வியாளர்.

சிவ நாடாரின் தந்தை சுப்பிரமணிய நாடார். நீதிபதியாகப் பணியாற்றியவர். தாயார் வாமசுந்தரி தேவி.  வாமசுந்தரி,   நாம் தமிழர் கட்சி நிறுவனரும், தினத்தந்தி நாளிதழின் நிறுவனரும், தமிழர் தந்தை என்று போற்றப்படும் சி.பா. ஆதித்தனார் அவர்களின் சகோதரி.

முதலில் டி.சி.எம். நிறுவனத்தில் சுமார் எட்டு ஆண்டுகள் அவர் பணி புரிந்திருக்கிறார். போதுமான அனுபவங்களைப் பெற்ற பிறகு சொந்தத் தொழில் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் காரணமாக எச்.சி.எல். என்னும் கணினி நிறுவனத்தை நிறுவினார்.  முதலில் எலக்ரோனிக்ஸ் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டார்.வெளி.  நாடுகளிலிருந்து கணினி உதிரி பாகங்கள் இறக்குமதி, சிங்கப்பூரில் கணினி வன்பொருள் விற்பகம். புதிய வடிவமைப்பிலான மடிக்கணினிகள் இப்படி கணினித் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனது. நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், பொருளாதார சீர்திருத்தங்கள் அனைத்தும் கணினித் துறைக்குச் சாதகமாக அமைந்தன! மாற்றங்களை நன்கு பயன்படுத்திக் கொண்டார் சிவ நாடார். சுருக்கமாக கணினி தான் அவரது வெற்றியின் திறவுகோள்!

71 வயதாகும்  சிவ நாடாருக்கு  இன்றைய சொத்து மதிப்பு சுமார் 12.3  பில்லியன் என ஃபோர்ப்ஸ்  பத்திரிக்கை குறிப்பிடுகிறது. அதாவது உலகக் கோடீஸ்வரர்கள் 2043 பேரில் சிவ நாடார் 102 - வது இடத்தில் இருக்கிறார்! உலக அளவில் 102 - வது இடத்தில் இருந்தாலும் உலகக் கோடீஸ்வரத் தமிழர்கள் அளவில் அவரே முதலிடத்தில் இருக்கிறார்.

 மலேசியத் தமிழரான ஆனந்தகிருஷ்ணன் இப்போது வெளியிடப்பட்டிருக்கும் பட்டியலில் 2043 கோடீஸ்வரர்களில் 219-வது இடத்தில் இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் முதல் கோடீஸ்வரத் தமிழர் என்னும் நிலையிலிருந்து தள்ளப்பட்டிருக்கிறார். மலேசியக் கோடீஸ்வரர் பட்டியலிலும் அவர் இரண்டாவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார். இந்தியாவில் அவ்ருடைய நிறுவனத்தின் மீதான வழக்குகளினால் அவருக்கு இந்தப் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது
.

சிவ நாடார் வெளி மாநிலங்களிலோ, வெளி நாடுகளிலோ இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் மறக்காமல் தன் சொந்த ஊரில் நடக்கும் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ளத் தவறுவதில்லை. விடிய விடிய நடக்கும் ஆடல் பாடல்களை ரசித்துப் பார்ப்பதுண்டு  மிக எளிமையான மனிதர் என்று சொல்லப்படுகின்றது.

அவர் இன்னும் பெரிய சாதனைகள் புரிய நாமும் வாழ்த்துவோம்!

Friday, 28 April 2017

கேள்வி - பதில் (44)


கேள்வி

தமிழ் நாட்டில் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ஒரு நிரந்திர ஆட்சி அமையுமா?


பதில்

நிரந்தர ஆட்சி அமைய வாய்ப்பிருந்தாலும் இரு அணிகளுக்குள்ளே இருக்கும் பூசல்களுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை! தீர்வு காணப்பட்டாலும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க விடுமா என்பதும் கேள்விக் குறியே!

முடிந்தவரை அவர்களுக்குள்ளேயே அடித்துக் கொண்டு சாகட்டும்; நாம்  வெளியே இருந்தே வேடிக்கப் பார்ப்போம் என்பது தான் பா.ஜ.கா.வின் நிலை! அவர்களுக்குள் தீர்வு காணாததால் நாங்கள் ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு வந்தோம் என்று தமிழ் நாட்டு மக்களுக்கு பின்னர் அறிக்கை விடுவார்கள்!

இந்த இரு அணிகளுக்குள்ளும் யார் பதவிக்கு வந்தாலும் அதனால் தமிழக மக்களுக்கு என்ன பயன் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். எந்தப் பயனும் இருக்காது என்பதே எனது அபிப்பிராயம்!

பன்னீர்செல்வம்,  தான் அம்மா ஆட்சியைத்தான் கொண்டு வருவேன் என்று பிடிவாதமாக இருக்கிறார்! அம்மா எப்படிப்பட்டவர் என்பதைத் தமிழகம் மட்டும் அல்ல இந்தியாவே அறியும்! அவர் எவ்வளவு பெரிய ஊழல்வாதி என்பதை நாடே அறியும்! கோடி கோடியாக ஊழல் செய்து குற்றவாளி என்று  நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது! இன்று அவர் உயிரோடு இருந்தால் சசிகலாவிற்குப் பதிலாக அவர் இன்று பார்பன அக்ராகர சிறையில் அடைக்கப்பட்டிருப்பார்!

இப்படி ஒரு ஊழல்வாதியை முன்னுதாரணமாகக் கொண்டு தான் நான் செயல்படுவேன் என்றால் என்ன அர்த்தம்? அதன்படி அவர் செயல்பட்டுக் கொண்டும் இருக்கிறார். காவேரி நீர் தமிழகத்திற்குக் கிடைக்கவில்லை, கர்னாடக மாநிலம் தண்ணிரைத் தடுப்பதற்காக அணைகள் கட்டிக் கொண்டிருக்கின்றது.. அந்த அணைகள் கட்டுவதற்காக தமிழ் நாட்டில் இருந்து தான் மணல் கொள்ளயடிக்கப் படுகின்றது! அதற்கு இப்போதும் கர்நாடகாவிற்கு மணல் அனுப்பிக் கொண்டிருப்பது அவர் குடும்பமும் ஒன்று!  அம்மா செய்ததையே இவரும் செய்கிறார்! எப்படி காவேரி பிரச்சனைத் தீரும்!

எடப்பாடி பழனிசாமி மன்னார்குடி மாஃபியா குடும்பத்தோடு சம்பந்தப்பட்டவர்! தமிழ் நாட்டையே சுரண்டியவர்கள். தமிழ் நாட்டு மணலை வைத்தே பெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர்கள்! சசிகலாவின் அக்காள் மகனான தினகரனுடன் கைகோர்த்துக் கொண்டிருப்பவர்! இடைத் தேர்தலில் தினகரன் தனது சொத்து மதிப்பு ருபாய் 70,000 இலட்சம் என்று சொன்னவர். ஆனால் இரட்டை இலை சின்னத்திற்காக ருபாய் 50 கோடி இலஞ்சம் கொடுத்தவர்.

இவர்களால் தமிழ் நாட்டுக்கு என்ன நல்லது நடக்கப் போகிறது? இவர்கள் பதவிக்கு வருவதன் மூலம் வருங்காலங்களில் தமிழ் நாட்டு மக்களுக்குக் குடிக்கத் தண்ணீர் கூட கிடைக்காது் இப்போதே இது தெரிய ஆரம்பித்து விட்டது!

ஜனாதிபதி ஆட்சி வருவதன் மூலம் என்ன நடக்கும் என்பதும் புரியவில்லை!  நடுவண் அரசு தமிழகத்திற்கு எதிராகவே தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. விவசாயிகள் பிரச்சனை ஆகட்டும், மீனவர் பிரச்சனை ஆகட்டும், நெடுவாசல் பிரச்சனை ஆகட்டும் - எதுவுமே தமிழகத்தின் நலனுக்குச் சாதகமாக இல்லை.

ஆனாலும் நம்பிக்கையோடு இருப்போம்! நல்லதே நடக்கும் என நம்புவோம்! நல்லாட்சி மலரும் என நம்புவோம்! நான்கு ஆண்டுகள் என்ன நானூறு ஆண்டுகள் ஆனாலும் தமிழன் தலை நிமிர்வான்! தமிழகமும் தலை நிமிரும்!

Thursday, 27 April 2017

"குறை சொல்லாதீர்கள்..!"

 பிரதமர் நஜிப், தமிழில் பேசி, அதிரடியாக அறிவித்த -  இந்தியர்களின் வளர்ச்சிக்காக - ஐம்பது கோடி வெள்ளி பெருந்திட்டம் - இன்று முதல் அமுலுக்கு வந்துவிட்டதாக நாம் நம்பலாம். ம.இ.கா.வினர் நம்பினால் என்ன, நம்பாவிட்டால் என்ன நாம் நம்புவோம்!  ம.இ.கா. தலைவர் தான் இந்தப் பெருந்திட்டம் செயல்படுவதை உறுதிப்படுத்த, செயல்படுத்துவதற்கான தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

இதற்கிடையே ம.இ.கா.வின் இன்னொரு தலைவர் இந்தப் பெருந்திட்டத்தைக் குறை சொல்லுவது நிறுத்துங்கள் என்கிறார்! அவர் சொன்னது தவறு. யாரும் குறை சொல்லவில்லை. இதனை,  ம.இ.கா.வினர் உட்பட, அனைவரும் கேலியாகப் பார்க்கிறர்கள்! அப்படி ஒரு நிலையை ஏற்படுத்தியவர்கள்  ம.இ.கா.வினர் தான்!

ஒரு முறை, இரு முறை அல்ல, பல முறை அதனையே பேசி பேசி, அதனையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தால் மக்கள் என்ன வாழ்த்தவா செய்வார்கள்? சாமிவேலு காலத்திலிருந்து இதனையே தானே சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்?

சரி! அதனை விடுவோம்! இந்த முறை பிரதமர் அறிவித்தது அனைத்தும் நிறைவேறும் என நம்புவோம். அவைகளைப் பெறும் தகுதியும் உங்களுக்கு இருப்பதாகவும் நாம் நம்புவோம்.

இந்தப் பெருந்திட்டம் பத்து ஆண்டு நீண்ட திட்டம். இருந்துவிட்டுப் போகட்டும். இந்தத் திட்டங்கள் எல்லாம் உடனடியாக அமலுக்கு வருவதால் நாமும் உடனடியாகப் பிரச்சனைக்கு வருவோம்.

இன்றைய நிலையில் ஏறக்குறைய 25,000 இந்தியர்கள் நாடற்றவர்களாக இருப்பதாக அறிகிறோம். அதே சமயத்தில் உள்துறை அமைச்சில் சுமார் 3,000 குடியுரிமைக்கான மனுக்கள் உள்துறை அமைச்சரின் ஒப்புதலுக்காகக் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அனைத்தும் சரிபார்க்கபட்டு அவரின் கையொப்பத்திற்காக, கடந்த மூன்று ஆண்டுகளாக. கேட்பாரின்றி அப்படியே போட்டு வைக்கப் பட்டிருக்கின்றன! இவைகள் வெளியாக்கப்பட வேண்டும். ஓர் அமைச்சர் தனது கடைமகளைச் செய்ய விடாமல் எது தடுக்கிறது என்பதையெல்லாம் பற்றி நமக்குக் கவலை இல்லை. நமது உரிமைகள் அங்கே குப்பைகளாகக் கிடக்கின்றன!

இதற்காக நாம் பத்து ஆண்டுகள் காத்துக்கொண்டிருக்க முடியாது. அடுத்த நூறு நாட்களில், மீண்டும் சொல்லுகிறேன் அடுத்து 100 நாட்களில், இந்த 3000 மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு மனுதாரரிடம் போய்ச் சேர வேண்டும். அப்போது தான் உங்களின் பெருந்திட்டம் வேலைச் செய்ய ஆரம்பித்திருக்கிறது என நாங்கள் நம்புவோம்! அதே போல ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 3000 மனுக்கள் சரிபார்த்து உரியவர்களிடம் சேர்ப்பிக்கப்பட வேண்டும். அவர்கள் குடியுரிமைப் பெற்று கௌரவமாக வாழ வேண்டும்; நாடற்றவர்களாக அல்ல!

உயர்க்கல்விக் கூடங்களில் நமது நிலை என்ன?  சாமிவேலு காலத்திலிருந்து இந்நாள் வரை அந்த ஏழு விழுக்காட்டிலேயே தொங்கிக் கொண்டிருக்கிறோம்! இதற்கு நாங்கள் இன்னும் பத்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமா?  இது ஒன்றும் முடியவே முடியாத விஷயம் அல்ல!  இப்போதைய மொத்த இந்திய மாணவர்களின்  விழுக்காடு நான் அறிந்திருக்கவில்லை. ஆனாலும் ஏழு விழுக்காடு என்பது இந்த ஆண்டே முடிக்கக் கூடிய விஷயமே. இன்னும் எட்டு மாதங்கள் இருக்கும் நிலையில் இந்த ஆண்டே இதற்கு ஒரு முடிவு காண முடியும். இனி மேலும் இது ஒரு பிரச்சனையாக ஒவ்வொரு ஆண்டும் பேசப்படுவது கேவலமான ஒரு செயல். நாட்டில் வசிக்கும் மூன்று முப்பெரும் இனங்களில் இந்தியர்கள் மூன்றாவது இடத்தில் இருக்கிறோம். ஆனால் கல்விக்காக தனியார் உயர்கல்விக் கூடங்களில் விகிதாச்சரப்படிப் பார்த்தால் நாம் தான் அதிகமாகச் செலவு செய்கிறோம்! கல்விக்காக இந்தியப் பெற்றோர்கள், மற்ற இனத்தவரை விட,  அதிகமானக் கடன் சுமைகளைச் சுமக்கிறார்கள் என்பது உண்மை. ஏழைகள் என்று அழைக்கப்படும் இந்திய சமுதாயம் தனது சக்தியை விட அதிகமாகவே தங்களது பிள்ளைகளின் கல்விக்காகச்  செலவு செய்கிறார்கள்!

முன்னேறிய ஒரு சமுதாயம் இலவசக் கல்வியைப் பெறுகிறது! பின் தங்கிய ஒரு சமுதாயம் கல்விக்காகப் பெரும் கடனைச் சுமக்கிறது! ம.இ.கா.வினர் இதனை அறியாதவர்களா? ஆனால் அறியவில்லை என்கிறார்கள்! அதனால் தான் இத்தனை ஆண்டுகள் நமது சமுதாயம் செருப்படி  வாங்க்கிக் கொண்டிருக்கிறது!

இன்னும் ஏகப்பட்ட பெருந்திட்டங்கள் உள்ளன.  குறைந்த பட்சம் வருகின்ற நூறு நாட்களில் -  இந்த ஆண்டு முடிவதற்குள் - எத்தனை விழுக்காடு சாதனைப் புரிந்திருக்கிறீர்கள் என்பதை இந்தச் சமுதாயத்திற்குத் தெரியப் படுத்துங்கள்.

இது வெட்டிப் பேச்சல்ல! இது நிஜம்! என்று பிரதமர் அறிவித்துவிட்டார்.

இப்போது பந்து உங்கள் கையில்! இப்போது வெட்டிப் பேச்சு உங்களுடையதா அல்லது இந்த சமுதாயத்தினுடையதா என்பதை நீங்கள் தான் உங்களுடைய  செயலாக்கத்தின் மூலம் இந்த சமுதாயத்திற்கு மெய்ப்பிக்க வேண்டும்..

உங்களால் ஒன்றுமே ஆகவில்லை என்றால் ஒருவரைத்தான் நாங்கள் சுட்டிக் காட்டுவோம். பிரதமர் பேசிய பேச்சு வெறும் வெட்டிப் பேச்சு! அனைத்தும் பொய்! என்பதாகத் தான் நாங்கள் பேச வேண்டி வரும். இந்த நாட்டின் பிரதமர் "இந்திய சமுதாயத்திற்கு நான் செய்வேன்!: என்று சொன்னவைகளை - அதன் பொறுப்பை - உங்களிடம் ஒப்படைத்துவிட்ட பிறகு ஒன்றுமே நடக்கவில்லை என்றால் குற்றவாளி ம.இ.கா. தான்! அதில் சந்தேக்கபடுவதற்கு ஒன்றுமில்லை!

குறை சொல்லாதீர்கள் என்று சொல்லுகிறீர்கள். சரி! ஆனால் இந்தப் பெருந்த்த்திட்டத்தின்  கீழ் ஒன்றும் நகரவில்லை என்றால் யார் வெட்டிப் பேச்சு பேசினார்? பிரதமர் தானே!  உங்களுக்கு அனைத்தும் அள்ளிக் கொடுத்த பிறகு எந்த நடவடிக்கையும் இல்லை என்றால் உங்களை நாங்கள் குறை சொல்ல மாட்டோம். பிரதமரைத் தான் சொல்லுவோம். பிரதமருக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்துவது தான் உங்கள் நோக்கம் என்றால், அதற்கு நாங்கள் என்ன செய்வது?

மீண்டும் சொல்லுகிறோம். வெட்டிப் பேச்சு வேண்டாம்! செயலில் காட்டுங்கள்!

Tuesday, 25 April 2017

"வெட்டிப் பேச்சல்ல..! இது நிஜம்..!" தமிழில் பிரதமர்!


கடந்த காலங்களில் இந்தியர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த, அரசாங்கத் தரப்பிலிருந்து,  எத்தனையோ உறுதிமொழிகள், எத்தனையோ வாக்குறுதிகள் - ஆனால் எதுவும் நடக்கவில்லை! அது சாமிவேலு காலத்திலிருந்து தொடர்கிறது; இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது! நாமும் நம்பிக் கொண்டிருக்கிறோம்; இன்னும் நம்புவோம்! காரணம் அரசாங்கத்தை நம்பியே ஆக வேண்டும் என்னும் ஒரு காட்டாயச் சூழலுக்கு நாம் தள்ளப்பட்டு விட்டோம்!

அரசாங்கம் இந்தியர் நலனுக்காக எத்தனையோ கோடிகள், தமிழ்ப்பள்ளிகளுக்காக எத்தனையோ கோடிகள்  - எல்லாம் கொடுக்கப்பட்டன - என்பது உண்மை தான். ஆனால் இந்தப் பணம் எதுவும் இந்தியர் நலனுக்காகவோ, தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்காகவோ பயன்பட வில்லை என்பதே அரசாங்கத்தின் மீது உள்ள குற்றச்சாட்டு! யாரிடம் இந்தப் பணம் கொடுக்கப்பட்டது? இது ஒன்றும் சிதம்பர ரகசியம் அல்ல. ம.இ.கா. வில் உள்ளவர்கள் மட்டும் சம்பந்தப்பட்டிருந்தால் இந்தப் பிரச்சனை இந்நேரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும். ஆனால் அம்னோவும் சம்பந்தப்பட்டிருப்பதால் ஏதோ ஒன்றுமே நடவாதது போல அனைத்தும் அடங்கிப் போய்விட்டது!

அதை விடுவோம்! இப்போது இந்த நிகழ்வுக்கு வருவோம். புத்ரா வாணிப மையத்தில், ம.இ.கா. வினரின் கூட்டமொன்றில், பிரதமர் நஜிப் இந்தியர்களின் வாழ்வாதரத்தை உயர்த்த 50 கோடி வெள்ளி பெருந்திட்டத்தை அறிவித்திருக்கிறார். அதுவும் தமிழில்: இது வெட்டிப் பேச்சல்ல! இது நிஜம்! என்று அழுத்தம் திருத்தமாக அறிவித்திருக்கிறார்!

ம.இ.கா. வினர் கை தட்டி வரவேற்றிருக்கின்றனர்! ஆச்சிரியப்பட ஒன்றுமில்லை! அடுத்த தேர்தலில் யார் யாருக்கு தேர்தலில் நிற்க வாய்ப்பில்லையோ அவர்களுக்கு இந்தப் பணம் ஏதோ ஒரு வகையில் உதவியாக இருக்கலாம்!

இருந்தாலும் நான் அவநம்பிக்கையை விதைக்க விரும்பவில்லை. நாமும் நம்புவோம். பிரதமர் அறிவித்திருக்கிறார். அவரைக் கொஞ்சமாவது நம்புவோம்.

இந்தப் பெருந்திட்டம் எந்த வகையில் இந்தியர்களுக்கு உதவும்? மலேசிய இந்தியர்களைப் பொருளாதார ரீதியில் உயர்த்துவது, உயர்கல்வி பெற உதவி,  தொழில்முனைவர்கள் கடன்பெற ஒரு சுழல் நிதி,  நாட்டில் உள்ள  அனைத்து கல்விக்கழகங்களிலும்  இந்திய மாணவர்களை ஏழு விழுக்காடாக உயர்த்துதல் - இன்னும் பல வழிகளில் இந்தியர்களின் மேம்பாட்டுக்காக இந்த மாபெரும் பெருந்திட்டத்தில் அடங்கியுள்ளது.

வரவேற்கிறோம்! ஏற்கனவே இந்தத் திட்டங்களையெல்லாம் நாம் கேட்டவைகள் தான்! ஆனால் இந்த முறை வேறு கோணத்தில் நாம் பார்ப்போம். இந்த முறை இது வெட்டிப் பேச்சல்ல! நிஜம்! என்பதாகத் தமிழில் சொல்லியிருக்கிறார்! நிச்சயம்  நடக்கும் என எதிர்பார்ப்போம்!

இது தேர்தல் வாக்குறுதி அல்ல என அவரே  சொல்லியிருப்பதையும் கவனித்தில் கொள்ளுவோம்!

ஆனால் கடைசியாக ஒன்று. ம.இ.கா.வினருக்கு ஓர் ஆலோசனை. "அடுத்த ஐந்து ஆண்டுகளில்",  "அடுத்த தேர்தல் வரை", என்பதை மறந்து விடுங்கள்! அடுத்த ஐம்பது நாள்களில், அடுத்த ஐந்து மாதத்தில், மேற் குறிப்பிட்டுள்ள வற்றில் எதனைச் சாதித்துள்ளீர்கள்  என்பதை ஐந்து மாதங்களுக்குப் பின்னர்  நீங்கள் சொல்ல வேண்டும். நூறு விழுக்காடு என்பதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை! குறைந்தபட்சம் பத்து விழுக்காடு...?

பிரதமர் சொன்னவைகள் எந்த அளவுக்கு நடமுறைக்கு வந்திருக்கின்றது என்பது மக்களுக்கும் தெரிய வேண்டும் அல்லவா! அடுத்த ஐந்து மாதங்களில் ஒன்றுமே  ஆகவில்லை என்றால் இந்தப் பெருந்திட்டத்தை நாங்களே குப்பைக் கூடையில் போட்டு விடுவோம்! உங்களுக்கு எந்தக் கஷ்டமும் வேண்டாம்!

பிரதமர் சொன்னது போல நாங்களும் உங்களுக்குச் சொல்லுகிறோம், அதே தமிழில்: இது வெட்டிப் பேச்சல்ல! இது நிஜம்! வருகின்ற தேர்தலில் உங்களுக்குப் பூஜ்யம் என்பதை உறுதிப்படுத்துவோம்!

இந்த வெட்டியான் வேலை எல்லாம் உங்களுக்கு எதற்கு? அரசாங்கம் கொடுக்கும் போது நீங்கள் ஏன் தடையாயிருக்கிறீர்கள்? இந்தியர்களின் முன்னேற்றத்திற்கு ம.இ.கா. தான் தடை என்பதை  அனைவரும் அறிந்திருக்கிறோம்.

நல்லது செய்ய கற்றுக்கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்!


Monday, 24 April 2017

பெர்லிஸ் முப்தி சர்ச்சையில் சிக்கினார்!


ஒரு மதத்தைப் பற்றி இன்னொரு மதத்தைச் சேர்ந்தவர் விமிர்சிப்பது அல்லது கருத்துரைப்பது எவ்வளவு சிக்கலான விஷயம் என்பதை சிலர் புரிந்து கொள்ளுவது இல்லை.

இப்போது நாம் ஏன் இந்தியாவைச் சேர்ந்த,  ஸாகிர் நாயக்கைப் பற்றி ஏன் எழுதுகிறோம், பேசுகிறோம் என்பது குறைந்தபட்சம் ஒரு சிலராவது புரிந்திருக்கும். ஸாகிர் நாயக் பிற இனங்களிடையே, பிற மதித்தினரிடையே ஒற்றுமையைச் சீர்குலைக்கும் ஒரு விஷக்கிருமி என்பது தான் உண்மை.

ஸாகிர் நாயக்கின் வருகைக்கைப் பின்னரே இந்து மதத்தினருக்கும் இஸ்லாமிய மதத்தினருக்கும் பிரிவுகள் அதிகரிக்க ஆர்ம்பித்திருக்கிறது/ மீண்டும் மீண்டும் போலிஸ் புகார்கள்!  எத்தனையோ ஆண்டுகளாகக் கட்டிக் காத்த மத இணக்கம் இப்போது  கேள்விக்குறியாகி விட்டது!

கடைசியாக இப்போது பெர்லிஸ் மாநிலத்தின் முப்தி, டத்தோ முகமது  அஸ்ரியும்  களத்தில் இறங்கியிருக்கிறார்!. பெர்லிஸ் மாநிலத்தின் சமய விவகாரங்களில் மாநில ஆலோசகர். மிகப் பெரிய பதவி. மற்ற மதங்களையும் அவர்களுடைய பழக்க வழக்கங்களையும் கேவலப்படுத்தக் கூடாது என்பதை அறிந்தவர். என்ன செய்வது?  அவருக்கும் இப்படி ஓர் ஆசை! இந்து மதத்தினரைக் கேலி செய்வது, கேவலப்படுத்துவது! அவருக்கு அப்படி என்ன கட்டாயம் என்று நமக்குத் தெரியவில்லை! மற்ற மதத்தை சிறுமைப்படுத்தினால் தான் தனக்குக் கௌரவம் என்று நினைக்கிறாரோ?டத்தோ அஸ்ரி தனது முகநூலில் கவிதை ஒன்றை எழுதி வெளியிட்டிருக்கிறார். இந்து சமயத்தை இழிவுபடுத்தும் வகையில் அந்தக் கவிதை அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.  இதற்கு முன்பும் இந்த சமயத்தை இழிவுபடுத்தி இந்துக்களைப் புண்படுத்தும் எழுத்துக்களையும் எழுதியிருக்கிறார்.

ஒரு மதப் பெரியவர் என்கிற வகையில் அவர் மீது அனைவருக்கும் மதிப்பும் மரியாதையும் உண்டு. அவருக்குக் கிடைக்கும் அந்த மரியாதையே,  தான் எப்படி எழுதினாலும் தன்னை யாரும் ஒன்றும் செய்து விட  முடியாது என்று அவர் நினைக்கிறார்.

அவர் மீது ஏகப்பட்ட புகார்கள் செய்யப்பட்டிருக்கின்றன.இன்னும் தொடர்கின்றன. ஆனால் டத்தோ அஸ்ரிக்கு இதெல்லாம் ஒரு வேடிக்கை விளையாட்டு!

ஒன்றை அவருக்கு நாம் நினைவுறுத்துகிறோம். நாம் ஐம்பது, அறுபது ஆண்டு காலம் மத நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வரும் சமூகம் நாம்.. பிற மதத்தினர் முஸ்லிம்களை வெறுக்கும் வேலைகளில் டத்தோ அவர்கள் ஈடுபடக் கூடாது! எங்கோ இருந்து வந்த ஒரு ஸாகிருக்காக நாம் ஆபத்தான விளயாட்டுக்களில் ஈடுபடக் கூடாது என்பதே நமதுவேண்டுகோள்.

தனது வேடிக்கை விளையாட்டுக்களை முப்தி அவர்கள் நிறுத்துவார் என எதிர்பார்ப்போம்!  நல்லதே நடக்கட்டும்! நாட்டின் நலனே நமக்கு முக்கியம் என வலியுறுத்துவோம்! மலேசியா வாழ்க!

Sunday, 23 April 2017

ஸாகிர் நாயக்கிற்கு நல்லதொரு அறிவுரை!


ஸாகிர் நாயக் இந்த அறிவுரையை ஏற்றுக் கொள்ளுவரா என்று தெரியவில்லையே!

ஆம், ஜொகூர் சுல்தானா ராஜா ஷாரித் சோஃபியா சொன்ன அந்த அறிவுரை ஸாகிர் நாயக் ஏற்றுக்  கொள்ளலாம். அது அவருக்கும் நல்லது. அவர் சார்ந்த நாட்டுக்கும் நல்லது. ஏன்? மலேசியாவுக்கும் நல்லது.

நாம் பொதுவாக சொல்லுவதுண்டு. மரியாதைக் கொடுத்து மரியாதை வாங்க வேண்டும் என்று. அது ஏதோ போகின்ற  போக்கில் சொல்லப்படுகின்ற வார்த்தையாக நாம்  எடுத்துக் கொண்டு விட்டோம்!

சுல்தானா அதைத்தான் சொல்லுகிறார். முஸ்லிம்கள், மற்ற சமயத்தினர்   தங்களுக்குக் கொடுக்கப்படுகின்ற மரியாதையை எப்படி ஏற்றுக் கொள்ளுகிறார்களோ அதே போல முஸ்லிம்களும் மற்ற சமயத்தினருக்கு அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைத் தயங்காமல் கொடுக்க வேண்டுமென்கிறார்.

சுல்தானா அவர்களை நாம் பாராட்டுகிறோம். ஜொகூர் மாநிலத்தின் உயர்ந்த நிலையில் இருக்கின்ற, அரசக் குடும்பத்தை சேர்ந்த,  அவரைப் போன்றவர்கள் தான் இப்படிப் பேச முடியும்.

நாட்டு மக்களை வழி நடத்தும் அரசியல்வாதிகள் இப்படி ஒரு வார்த்தைச் சொல்லவே தயங்குகின்றனர். மற்றவர்களை இகழ்வது, மற்ற மதத்தினரை இகழ்வது என்பதெல்லாம் நமது பண்பாடல்ல! நமது கலாச்சாரத்திற்கு உகந்தது அல்ல! இதனைக் கல்வறிவற்ற கபோதிகள் பேசினால் 'அவன் ஒரு முட்டாள்' என ஒதுக்கி விடலாம்! கல்வியறிவு உள்ளவர்கள் பேசினால் அவர்களை அறிஞர் என்று சொல்லுகின்ற அளவுக்கு நாம் கீழ் நோக்கிப்  போய் விட்டோம்!

எது எப்படி இருப்பினும் சுல்தானா அவர்கள் தேவையான நேரத்தில் தேவை உள்ள நேரத்தில் அவர் இப்படிப் பேசியிருக்கிறார்.

நாட்டில் இனங்களிடையே, பல சமயத்தினரிடையே பிரிவினகளை ஏற்படுத்தும் யாராக இருந்தாலும் அவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

சமீபகாலங்களில்  நம் நாட்டில் அதிக  அளவில் பேசப்படுகின்ற ஒரு நபர்  என்றால் வெளி நாட்டிலிருந்து இங்கு தஞ்சம் புகுந்திருக்கும் ஸாகிர் நாயக் தான்.இவரின் பின்னணி எதுவும் சரியாக இல்லை! இவர் பெரும்பாலான நாடுகளிலிருந்து ஒதுக்கப்பட்டவர் என்று தாராளமாகச் சொல்லலாம்! ஆனால் மலேசியாவுக்கு இவர் எப்படி நல்லவர் ஆனார் என்பது புரியாத புதிர்! பிற சமயத்தினரைத் தாக்கிப் பேசினால் உடனே மலேசியாவில் நிரந்தரத் தங்குமிடம் கிடைக்கும் என்றால் அதே போலப் பேசுவதற்குப்  பலர் கிளம்பி விடுவர்!

ஜொகூர் சுல்தானா அவர்கள் ஸாகிர் நாயக் போன்றவர்களைப் பார்த்துத் தான் இப்படி ஒரு கருத்தினைக் கூறியிருக்கிறார் என்று தாராளமாகச் சொல்லலாம்! சமீபகாலமாக ஸாகிரின் பேச்சுக்கு நிறைய எதிர்ப்புக்கள் கிளம்பியிருக்கின்றன!  இந்த எதிர்ப்பினை வைத்தே ஸாகிர், இஸ்லாம் தவிர்த்து, மற்ற மதங்களைப் பற்றி அறியாதவர்  என்பதை  இன்னேரம்  அரசாங்கம் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

அரசாங்கம் புரிந்து கொள்ளவில்லை! அதனால் தான் நேரடியாகவே ஜொகூர் சுல்தானா ராஜா ஷாரித் சோஃபியா களத்தில் இறங்கியிருக்கிறார் என நம்பலாம்!


Saturday, 22 April 2017

ஒரு கண் மருத்துவரிடம் ஒரு பத்து நிமிடங்கள்!


அவ்வளவு தான்! ஒரு பத்து நிமிடங்கள் கூட இருக்காது என்று தான் சொல்ல வேண்டும். அவர் என்ன நிற்கக் கூட நேரம் இல்லாதவரா? அப்படி எல்லாம் ஒன்றுமில்லை!  எங்கோ வெளியே போயிருந்தார். அவருக்காக அரை மணி நேரத்திற்கு மேல் நான் காத்திருந்தேன். . அதன் பின்னர் தான் அவர் வந்தார். ஏதோ சுவராஸ்யமே இல்லாதவர் போல காணப்பட்டார்.

என்னை உள்ளே வரச் சொன்னார். போனேன். என்னைப் பற்றிய முழு விபரங்களும் அவரிடம் இருந்தன.ஆனாலும் அவர் எதனையும் படித்ததாக எனக்குத் தோன்றவில்லை. எனது பெயரை மட்டுமே கவனித்தார். 

முதலில் இரு கண்களையும் அவர் முன் இருந்த அந்த பிரம்மாண்ட இயந்திரம் மூலம் படம் எடுத்தார். 

"உங்களுக்கு லேசாக  கண்களில் 'காட்டரேக்' (கண்படலம்) இருப்பதைக்  காட்டுகிறது!" என்றார்!

"சரி!" தலையாட்டினேன்!

மேலும் இயந்திரத்தின் அருகே எனது கண்களைக் கொண்டு சென்று ஒவ்வொரு கண்ணையும் படம் எடுத்தார். மிகவு சக்தி வாய்ந்த ஒளி. இதற்கு முன் இந்த அனுபவம் இல்லை.

உடனடியாக சட்டுபுட்டென்று அனைத்தையும்  அணைத்துவிட்டு:

"சரி! நீங்கள் போகலாம்! எல்லாம் நல்லாயிருக்கு! அவ்வளவு தான்!" என்று சொல்லிவிட்டார்!

"மீண்டும் எப்போது வரலாம்?" இது நான். 

"வர வேண்டாம்! அவசியமில்லை!" 

"மருந்து ஏதேனும் கொடுப்பீர்களா?"

"இல்லை! மருந்து இங்கு இல்லை!"

அவர் என்னைக் கிளப்பிவிடுவதிலேயே இருந்தார்!  ரொம்பவும் அவசரப்பட்டார்!

வேறு வழியில்லை!  நானும் மூட்டையைக் கட்டினேன்!

எல்லாமே ஒரு ஐந்து நிமிடத்தில் முடிந்திருக்கும்! இதற்கு நான் சுமார் இரண்டு மணி நேரம் செலவழித்திருக்கிறேன்! 

எனக்கு ஏற்கனவே இது அரசாங்க மருத்துவமனையில் செய்யப்பட்ட  ஒர் ஏற்பாடு. நீண்ட நாட்கள் நான் எனது கண்களை சரி பார்க்கவில்லை. நான் ஆறு மாதத்திற்கு ஒரு முறை கண்களுக்கான வைத்தியம்  பார்க்க வேண்டும் என்பது அவர்களின் அறிவுரை. அதன்படி தான் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இது போன்ற அரசாங்க கிளினிக்குகள் பல இடங்களில்  சரியாகத்தான் நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்போது ஏனோ அரசாங்கம் தவறான சில முடிவுகளை எடுப்பதாகத் தெரிகிறது. இப்போது நான் மேலே சொன்ன கிளினிக்கில் பல மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. மருத்துவராகப் பணிபுரிபவர்கள் அனைவருமே சிறு வயது பெண் பிள்ளைகளாக இருக்கின்றனர். இவர்கள் அனைவருமே  ஆங்கிலம் அறியாதவர்கள்! அது கூட பரவாயில்லை. அவர்களின் தொழிலில் அவர்களுக்கு ஆர்வம் உள்ளவர்களா என்பதே ஐயத்திற்குரியதாக இருக்கிறது! நோயாளிகளைப் பார்த்தாலே முகம் சுளிக்கிறார்கள்!. அவ்வளவு வேலையாம்!

இந்த மருத்துவர்களைப் பார்க்கின்ற போது நமக்கு ஏற்படுவதெல்லாம் இவர்கள் எப்படி .....மருத்துவர் ....ஆனார்கள் என்னும் எண்ணம் தான்! உண்மையில் இவர்கள் மருத்துவ்ர்களா அல்லது மருத்துவ உதவியாள்ர்களா? ஆனால் இவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்ப்புக்களோ மிகப் பெரிது! இனிப்பு நீர், இருதய நோயாளிகள், கண்கள் - இது போன்ற - அனைத்து நோயாளிகளையும் இவர்கள் பார்க்கின்றனர். ஆனால் அந்தத் தகுதிகள் இவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை! நோயாளிகளைத் தொட்டுப் பார்ப்பதற்குக் கூட தகுதி இல்லாதவர்களாக இவர்கள் இருக்கின்றனர்.

அரசாங்கம் மாரா கல்லூரி மாணவர்களுக்குக் குறுகிய கால மருத்துவப்  பயற்சிகள் கொடுத்து இவர்களை மருத்துவ்ர்களக  அனுப்புகிறதோ என்னும் ஒரு சந்தேகமும் நமக்கு வருகிறது! வெளி நாடுகளில் நிறையவே இந்திய, சீன மாணவர்கள் மருத்துவம் பயின்று வருகின்றனர்.அவர்களுக்குப் போட்டியாக இவர்கள் உருவாக்கப் படுகிறார்களோ என்னும் எண்ணமே நமக்கு ஏற்படுகிறது!

ஒரு கண் மருத்துவரின் நடவடிக்கையால் இப்படியெல்லாம் நம்மை யோசிக்க வைக்கிறது!

சமீபத்தில் நமது பிரதமர் கூட நமது நாட்டில் மருத்துவர்கள் நிறைந்து விட்டதாகக் கூறியிருந்தார். ஒரு வேளை இவர்களை  மனதில் வைத்துத் தான்  அப்படிக் கூறினாரோ!Friday, 21 April 2017

"YOU ARE PERFECTLY ALRIGHT, SIR!"


அந்த இளம் மருத்துவர்,  கடைசியாக அவர் அறையை விட்டு நான் வெளியேறும் போது சொன்ன வார்த்தை:   You are perfectly alright!

அடாடா!  பரவாயில்லையே! இப்படி சில நல்ல வார்த்தைகளை நமது மருத்துவ சமூகம் தெரிந்து வைத்திருக்கிறதே என்று வியந்து போனேன்! அதுவும்இளைய தலைமுறை!

மருந்துகளை விட நம்பிக்கை தரும் வார்த்தைகள்  தான் நோயாளிகளுக்கு மிகவும் தேவை. பெரும்பாலான  நோயாளிகள் கற்பனையான நோய்களுக்கு ஆட்பட்டிருக்கின்றனர் என்பதாகச் சொல்லப்படுகின்றது.அது உண்மையே!

தோட்டப்புறங்களில் நான் பார்த்திருக்கிறேன். மருத்துவ உதவியாளர்களிடம் நோய் என்று வருபவர்கள்  என்ன தான் மருந்து கொடுத்தாலும் அவ்வளவாக திருப்தி அடைவதில்லை. ஊசி போட வேண்டும் என்பதில் தான் குறியாக இருப்பார்கள். அல்லது ஒரு குறிப்பிட்ட ஒரு மாத்திரையைத் தான் கேட்பார்கள். ஒரு ஊசியோ அல்லது அந்த குறிப்பிட்ட மாத்திரையோ கொடுத்து விட்டால் அவர்கள் நோய் தீர்ந்து விடும்!  ஆனாலும் அந்த மருத்துவ உதவியாளர் ஊசி போடுகிறார் என்றால் வெறும் தண்ணீரைத்தான் உடலில் செலுத்துகிறார் என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை!  மருத்துவ உதவியாளர் யாருக்கு மருந்து தேவை, யாருக்கு தண்ணீர் தேவை என்பதை தனது அனுபவத்தில் அறிந்தவர். பிரச்சனைகளைத் தவிர்க்க அவர் ஓர் ஊசியைப்  போட்டு அனுப்பிவிடுவார். ஒர் ஊசியும் ஒரு மாத்திரையும் அவர்களுக்கு மனதில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி விடுகிறது!

ஆனால்  நம்பிக்கை தரும் ஒரு வார்த்தை, நோயாளிகளிடம் அன்பாக நாலு வர்த்தைகள் - இவைகள் இன்னும் வலுவானவை.  நம்மில் பெரும்பாலோருக்குக் கற்பனை நோய்களே அதிகம். அப்படியே நோய் இருப்பது உண்மை என்றாலும் சில நேர்மறை வார்த்தைகளை உச்சரிப்பதன் மூலம் நோயின் தனமையைக் குறைத்துவிட முடியும் அல்லது குணப்படுத்தி விட முடியும். இவைகளெல்லாம் மெய்ப்பிக்கப்பட்ட உண்மைகள்.

நமது கற்பனை நோய்களுக்கு முக்கியமான காரணம் நம்மைச் சுற்றி இருப்பவர்களே! யாருக்கோ ஏதோ ஒரு வியாதி.  அவருக்கு உள்ள ஒரு வியாதியை நம்மிடம் கொண்டு வந்து வலிய திணித்து  விடுவார்கள் ஒரு சிலர்.

உங்களுக்கு ஒரு வியாதியும் இல்லை என்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள். மருத்துவர் ஏதோ ஒரு வியாதியின் பெயரைச் சொல்லுகிறார். அதானால் என்ன?  அவர் சொல்லுவது போல  உணவு முறைகளை மாற்றிக் கொள்ளுங்கள். மற்றபடி வியாதியை மறந்து விட்டு எப்போது போல் மகிழ்ச்சியாய் இருங்கள். நாம் வியாதியைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளுவதாலேயே நமக்கு இன்னும் பிரச்சனை அதிகமாகிறது. இன்னும் சிலர் உங்களுக்கு இந்த வியாதி என்று சொன்னதுமே அவர்களைச் சமாதானப் படுத்துவதே  பெரிய வேலையாகி விடும்! இவர்கள் இப்படிக் கலவரப்படுவதால்  இன்னும் இல்லாத நோய்கள் எல்லாம் வந்துவிட்டதாக இன்னும் அதிகம் கற்பனைச் செய்வார்கள்!  மருத்துவர் தனது கடமையைச் செய்கிறார். அவர் மருத்துவர் தான். கடவுள் அல்ல என்பதையும் நினைவில் வைத்திருங்கள்.

மருத்துவர் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் எப்போதுமே நேர்மறையாகவே உங்கள் எண்ணங்களை வைத்திருங்கள்.  முக்கிக்  கொண்டும் முணகிக் கொண்டும் இருப்பவர்கள் தான்  வகை வகையானக் கற்பனைகளுக்கு உள்ளாகிறர்கள்!  எனக்கு அந்த வியாதி, எனக்கு இந்த வியாதி என்று அதீத கற்பனைகள் செய்கிறார்கள்! அப்படியே இருந்தாலும் நம்மால் என்ன செய்ய முடியும்? தேவையான சிகிச்சைகளைப் பெற்றுக் கொண்டு நமது வேலைகளைக் கவனிக்க வேண்டியது தான்.    

மருத்துவர் தேவையான சிகிச்சைகளைக் கொடுத்த பிறகு நம்மிடம் என்ன சொல்லுகிறார்? "எல்லாம் சரியாகிவிடும்!" என்று தானே சொல்லுகிறார். அப்புறம் என்ன? எல்லாம் சரியாகிவிடும் என்று நிமிடத்திற்கு நிமிடம் சொல்லிக் கொண்டிருப்போம்! மனதில் ஏற்றிக் கொண்டிருப்போம்!   அதை விட நேர்மறை வார்த்தை என்ன இருக்கிறது?

அனைத்துக்கும் நமது எண்ணங்கள் தான் அடிப்படை. நமது எண்ணங்கள் வலிமையாக இருந்தால் அனைத்திலும் வெற்றியே!

கடைசியாக, மருத்துவர் சொல்லுகிறாரோ, சொல்லவில்லையோ  - அதானாலென்ன, நமக்கு நாமே சொல்லிக் கொள்ளுவோம்:

YOU ARE PERFECTLY ALRIGHT, SIR!                                                                                                                                                                                                                                                                                                    Thursday, 20 April 2017

பணத்தை இறுக்கிப் பிடியுங்கள்!


நடிகர் ரஜினி, கமலைப் பற்றி சமீபத்தில் ஒரு கருத்தைச் சொல்லியிருந்தார். கமலில் அண்ணன் சாருஹாசன் இறந்த பிறகு கமல் எப்படி தனது நிதி நிர்வாகத்தைக் கவனிக்கப் போகிறார் என்பதாக தனது கவலையைத் தெரிவித்திருந்தார். அதாவது சாருஹாசன் தான் அவரது தம்பியின் பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்த்து வைப்பவர்.

உலக நாயகன் கமலின் நடிப்பைப் பற்றி நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. உலக அளவில் பேசுப்படுகின்ற ஒரு நடிகர்.  தமிழ்ச் சினிமாவை உலக அளவில் கொண்டு செல்ல வேண்டுமென்னும் வேட்கை உடையவர். வெவ்வேறு கோணங்களில் படம் எடுத்தவர். பல்வேறு முயற்சிகள். அதில் தோல்விகளும் உண்டு வெற்றிகளும் உண்டு.  கோடிக்கணக்கில் பணம் புரளும் ஒரு தொழிலில் உள்ளவர்.  இன்று வரும் பணம் நாளை போய் விடும்!

ஆனால் சொந்த வாழ்க்கை என்று வரும் போது தனது பொருளாதாரச் சிக்கல்களைச் சமாளிக்க அவருக்கு அவரது அண்ணனின் உதவி தேவையாக இருந்தது.

நம்மில் பெரும்பாலோர் பணச் சிக்கல்கள் வரும் போது பெரிய போராட்டமே நடத்திக் கொண்டு வருகிறோம்.  காரணம் நமக்கு நாமே தான் அண்ணனாகவோ, தம்பியாகவோ இருக்க வேண்டி உள்ளது! வழி காட்டுவார் யாருமில்லை!

நமக்கு அண்ணன் என்றால் அது நமது வங்கிகள் மட்டும் தான். நமக்குப் பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ வங்கிகள் தான் நமக்கு அடைக்கலம்! மனிதர்கள் ஏமற்றலாம்! வங்கிகள் தான் நம்பிக்கையானவை!

வாழ்க்கையில் நமக்கு சறுக்கல்கள் வரலாம்.  ஏராளமாகவே வரும். அதனைச் சமாளிக்க நமக்கு வங்கிகள் தேவை. நமது பணத்தைப் போட்டு வைக்க வங்கிகள் தேவை. நமது சேமிப்புக்களைப் போட்டு வைக்க ஒரு இடம் வேண்டுமென்றால் அது வங்கிகள் மட்டும் தான்.

அதைவிட முக்கியம் நீங்கள் எவ்வளவு சேமிக்கிறீர்கள் என்பது! நம் நாட்டில் ஒவ்வொருவரும் ஏதோ  ஒரு வகையில் வங்கியுடன் தொடர்புடையவர்களாக இருக்கிறோம். கார்களை வாங்கிவிட்டு ஒன்பது ஆண்டுகள் மாதாமாதம் வங்கிகளில் தவணைப் பணத்தைச் செலுத்திக் கொண்டிருக்கிறோம். வீடுகளை வாங்கிவிட்டு முப்பது ஆண்டுகளுக்கு மாதாமாதம் வங்கிகளுக்கு தவணைப்பணம் கட்டுகிறோம். அதனால் வங்கிகள் நமக்குப் புதிதல்ல!

ஆனால் மிகப்பெரிய கேள்வி. உங்கள் சேமிப்பாக மாதாமாதம் வங்கியில் எவ்வளவு கட்டி வருகிறீர்கள்? வங்கிகளில் நீங்கள் மாதாமாதம் கட்டும் கடன்களில் உங்கள் முதல் கடன்  சேமிப்பாக இருக்க வேண்டும். முதலில் சேமிப்பு அதற்குப் பின்னரே வீடு, கார் தவணைகள்.  மற்ற செலவுகள் அனைத்தும் இந்தச் செலவுகளுக்குப் பின்னர் தான்.

பணம் மிக வேகமாக நம்மை விட்டு ஓடக்கூடியது!  கையிலிருந்தால் பணம் வேகமாகச் செலவழிந்து விடும்!  அதனால் தான் நமது முதல் செலவாக நமது சேமிப்பு இருக்க வேண்டும் என்பது. சேமிப்புக்கு முக்கியத்துவம் கொடுங்கள். நேரம் வரும் போது உங்களை உயர்ந்த நிலைக்குக் கொண்டு போவது உங்களின் சேமிப்பு மட்டும் தான்.

அதனால் பணத்தை இறுக்கிப் பிடியுங்கள்! கொஞ்சம் அசந்தால் அது கையை விட்டு நழுவிப் போய்விடும்! நம்மைச் சுற்றி உள்ளவர்களைப் பார்க்கத்தான் செய்கிறோம். பணத்தை வாரி வாரி இறைத்து பிறகு குப்பைத் தொட்டியாய் போனவர்களை!

பணம்! அது நமது பிடியில் இறுக்கமாக இருக்கட்டும்!
Monday, 17 April 2017

வீர விருது பெற்றார் ஜாகிர் நாயக்!


 சர்ச்சைக்குரிய இஸ்லாமிய சமயப் போதகர்,  இந்தியாவின் ஜாகிர் நாயக் இன்று (16.4.2017) நமது மலேசிய நாட்டில்  - அரசாங்கத்தால் கௌரவிக்கப்பட வேண்டிய ஒருவர்  - அதற்குப் பதிலாக வலதுசாரி  இயக்கமான,  பெர்காசா தலவர், இப்ராகிம் அலியின் மூலம்  ஒரு  வீர  விருதினைக் கொடுத்து  கௌரவிக்கப்பட்டார்!

வாழ்த்துகிறோம்!  இதற்கு முன் இதே விருதினை டாக்டர் மகாதிரும் இன்னொருவர் முன்னாள் நிதி அமைச்சர் துன் ஜைனுடினும் கொடுத்து கௌரவிக்கப் பட்டிருக்கின்றனர்.இவர்கள் இருவரும் இந்நாட்டிற்கு செய்த சேவைக்காக, நாட்டின் வளர்ச்சியில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களுக்காக அவர்கள் கௌரவிக்கப் பட்டனர்.

ஒரு வெளிநாட்டவர் என்கிற போது ஜாகிர் நாயக்கே முதல் வெளிநாட்டவர்  இந்த வீர விருதினைப் பெறுகிறவர்.

ஒர் இயக்கம் இது போன்ற விருதுகளை ஒரு நபருக்குக் கொடுக்கிறது என்றால் அதற்குச் சரியான காரணங்கள் இருக்க வேண்டும்.

ஜாகிர் நாயக்கைப் பற்றி பல்வேறு கருத்துக்கள் இருக்கலாம். அவர் ஏற்கனவே பல முறை மலேசியாவுக்கு வருகை தந்திருக்கிறார். அவர் இங்கு வருகை தந்த ஒவ்வொரு முறையும் அவர் பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்களுக்கு ஆளாகியிருக்கிறார்!

அவர் இங்கு வரும் போதெல்லாம் மற்ற மதங்களைத் தாக்குவதே அவருக்கு நோக்கமாக இருந்தது. அதுவும் குறிப்பாக இந்து மதத்தைத் தாக்குவது என்பது அவர் மிகவும் விரும்பி செய்யும்  ஒரு கலையாகவே அதனைச் செய்து கொண்டு வந்தார்! பொதுவாக மலேசியாவில் இஸ்லாம் மதத்தைத் தவிர மற்ற மதங்களை விமிர்சிப்பது, தாக்கிப் பேசுவது ஒரு தவறாக  அரசாங்கம் எடுத்துக் கொள்ளுவதில்லை!  அதனை விரும்பவும் செய்தது! காரணம் உள்ளுரில் உள்ளவர்கள் பேசினால் அது அரசியலாகிவிடும்! அதனால் அது ஒரு ஊக்குவிப்பாகவே ஜாகிருக்கு அமைந்தது! அதுவே அவருக்குக் கூடுதல் பாதுகாப்புக் கொடுத்தது!  தான் பிறந்த ஊரான இந்தியாவில் செய்ய முடியாததை அவர் இங்கு செய்து வந்தார்!

இப்போது இந்திய அரசாங்கம் ஜாகிரை கைது செய்யும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது. இருந்தாலும் அதற்கெல்லாம் அவர் அசறுவார் என்று நினைப்பதற்கில்லை!  தனது நீண்ட நெடிய இஸ்லாமியப் பயணத்தின் போது பல இடையூறுகளைச் சந்தித்தவர்.

இப்போது அவர் இந்தியக் குடிமகனா என்பதே ஐயத்திற்குறியது என்பதையும்  நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்நேரம் அவர் மலேசியக் குடிமகனாகக் கூட ஆகியிருக்கலாம்!  ஒரு மலேசிய குடிமகனாக ஆன பிறகு அவர் மலேசியாவில் எங்கும் இருக்கலாம்! அரசாங்கத்திற்கு அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரிந்திருக்க வேண்டும் என்பதும் அவசியமில்லை!

இந்த வீர விருது என்பது ஜாகிர் இஸ்லாம் மதத்திற்கு ஆற்றிய பங்களிப்புக்காகத் தான் என நாம் நினைப்பதில் பிழையில்லை. அவர் ஓர் இஸ்லாமிய அறிஞர் என்பதில் நமக்கு எந்தவித ஐயமுமில்லை. ஆனால் மற்ற மதங்களை அவர் விமர்சிக்கும்போது அந்த அந்த மதங்களைப் பற்றிய தெளிவை, ஆழ்ந்த அறிவை அவர் பெற்றிருக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம்.

மதங்களிடையே, இனங்களிடையே நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்துவதே அவருடைய தலையாய நோக்கமாக இருக்க வேண்டும். அவர் பெற்ற அந்த வீர விருது உயர்ந்த நோக்கத்திற்காக கொடுக்கப்பட்டிருக்கிறது  என்பதை அறிந்து, புரிந்து அவருடைய வருங்கால சேவை அமைய வேண்டும் என நாம் ஒரு வேண்டுகோளை மிகத் தாழ்மையுடன் விடுக்கிறோம்.

வாழ்த்துகள்!Sunday, 16 April 2017

ஒரு மருத்துவமனை அனுபவம்!


மருத்துவமனைக்கு நான் போவது என்பது கடந்த ஐந்து ஆறு வருடங்களாகத்தான். அதற்கு முன்பு நான் அந்தப் பக்கம் தலைவைத்துக் கூடப் படுத்ததில்லை! அப்படிப் போகும்படியாக பெரிதாக ஒன்றுமில்லை. ஆனால் அப்படிப் போகம்படியாக பெரிதாக ஒன்று வந்து போகும்படியாகி விட்டது!

அதனால் மருத்துவமனைக்குக் கடந்த ஐந்து ஆறு வருடங்களாக இரண்டு முறையாவது போய் வருவது வழக்கமாகி விட்டது. இப்போது மருத்துவமனைகளும் பொருளாதார சிக்கல்களை எதிர் நோக்குவதால் அடிக்கடி மருந்து மாத்திரைகளுக்காக போய் வருகிற நிலைமை.

நான் இதுவரை சந்தித்த மருத்துவர்கள் பலர். இந்தியர், சீனர், மலாய்க்காரர், அரேபியர்; வேறு இனத்தவர் யாரும் இல்லை. இவர்களெல்லாம் நான் வழக்கமாக நான் போகும் மருத்துவமனைகளில் பணியில் இருந்தவர்கள்.

சமீபத்தில் இரண்டு முறை வழக்கம் போல நான் மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன்,  மருத்துவமனை என்பதைவிட அரசாங்கம் ஆங்காங்கே கட்டியிருக்கும் கிளினிக்குகள். நல்ல தரமானவைகள் தாம். ஏறக்குறைய ஒரு கால்வாசி மருத்துவமனை என்று சொல்லலாம்.

போன முறை சென்ற போது ஒரு மலாய்ப் பெண் மருத்துவர். மிகவும் இளம் வயது. புதிய வரவாக இருக்கலாம்.  அனுபவக் குறைவு. அதனால் என்ன? நமக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை!  பொதுவாக மலாய்ப் பெண்கள் ஆங்கிலம் பேசுவதில் சிரமப்படுவார்கள் அவர் மலாய் மொழியில் பேசினார்.. என்னனவோ சொன்னார். நான் தலையட்டுவதைவிட பேசப்போவது ஒன்றுமில்லை!

எல்லாம் சரி தான். ஒன்றைக் கவனித்தேன். இதற்கு முன்னர் நான் பார்த்த மருத்துவர்கள் எல்லாம் ஒரு நோயாளியின் திருப்திக்காகவாவது ஸ்டெதஸ்க்கோப்   வைத்து இங்கும் அங்கும் வைத்து 'அது நல்லாயிருக்கு! இது நல்லாயிருக்கு! பரவாயில்லை!" இப்படி எதையாவது சொல்லிவைப்பார்கள்! இவர் அந்த முயற்சியியையும் செய்யவில்லை!  இருந்தாலும் ஒரு மருத்துவருக்கு தெரியாதா தான் என்ன செய்கிறோம் என்று?

நான் போன வாரம்  மருத்துவமனைக்குச் சென்ற போது - இந்த முறை இன்னொரு மலாய் இளம் பெண் அதே புதிய வரவு. ஆனால் இவர் "நம்ம" நிறம்.  ஆங்கிலம் பேசும் திறன்  இருக்கிறது என்றால் தமிழ் முஸ்லிம் பெண் தானே! அதனாலென்ன! மீண்டும் அதே நடைமுறை. நோயாளி மேல் கைதொட்டுப்  பேசுகின்ற பழக்கம் இவருக்கும் இல்லை!

என்னிடம் ஒரு கேள்வி உண்டு. இப்போது புதிதாக வெளியாகும் மருத்துவர்கள் நோயாளிகளைத் தொடக்கூடாது என்பதாக ஏதேனும் போதிக்கப்படுகிறதா? தாதியர்கள் எந்த வேறு பாடுமின்றி நோயாளிகளை தொட்டுத் தானே சிகிச்சைச் செய்கின்றனர்!

 அதென்ன! தாதியர்களுக்கு ஒரு சட்டம் மருத்துவர்களுக்கு ஒரு சட்டம்?  மற்ற மருத்துவர்களுக்கு எந்தத் தொற்றும் ஏற்படாத  போது புதிதாக வரும் இந்த இளம் மருத்துவர்களுக்கும் மட்டும் எப்படி தொற்று நோய்கள் வரும்?  கல்வி முறையில் தான் கோளாறோ! நானறியேன்!

Saturday, 15 April 2017

கையில் பணமில்லையே..!


தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு முதல் தகுதி கையில் பணம் இருக்க வேண்டும்.

வெறும் கையில் முழம் போடுபவர்கள் நம்மிடையே அதிகம். எல்லாத் தகுதிகளும் உண்டு ஆனால் பணம் தான் இல்லை என்று சொல்லுபவர்கள் நம் இனத்தவர்களில்  நிறையவே உண்டு.

இன்று நமக்கு வங்கிகள் கடன் கொடுக்கவில்லை, அரசாங்கத்தில் உள்ள நிறுவனங்கள் கடன் தர மறுக்கின்றன, பெரிய நிறுவனங்களுக்கே கடன் தருகிறார்கள் என்கிற குற்றச்சாட்டுக்கள் எல்லாம் உண்டு.

பெரிய நிறுவனங்களுக்கு,  வெற்றி பெற்ற நிறுவனங்களுக்குக் கடன் கொடுப்பதற்கு  வங்கிகளுக்குப் பயம் இல்லை. அவைகளெல்லாம் தங்களது திறமையை மெய்ப்பித்து விட்டன. அதனால் வங்கிகள் தாராளமாக அள்ளி அள்ளிக் கொடுக்கும்.

ஆனால் வளர்கின்ற நிறுவனங்கள் நிலைமை வேறு. இந்த நிறுவனங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன.   வளர்ந்து கொண்டிருப்பதற்கான ஆதாரங்கள் அவர்களுக்குத் தேவை. நமது நிறுவனம் வளர்கின்றதா  என்பதற்கான ஆதாரம் நமக்கும் தேவை தானே? இல்லாவிட்டால் நாம் வளர்கின்றோமா, தேய்கின்றோமா என்பதை எப்படி நாம் அறிவோம்? நாம் வளரவில்லை என்பதாக நமது ஆதாரங்கள் காட்டினால் - வளராத ஒரு நிறுவனத்திற்கு யார் கடன் கொடுப்பார்?

அதனால் சிறு நிறுவனங்கள் தங்களது தொழிலை படிப்படியாக முன்னேற்றத்தை நோக்கிக் கொண்டு செல்ல வேண்டும். நாம் முன்னேறுகிறோம் என்பதற்கான ஆதாரத்தையும் கொண்டிருக்க வேண்டும். நமது வியாபாரம் சம்பந்தமான ஆவணங்கள், வங்கிக் கணக்குகள் நம்மிடம் இருக்க வேண்டும். குறிப்பாக கணக்கு வழக்குகள் என்பது சிலர் நினைப்பது போல் வீண் விரயம் அல்ல. நமது கணக்கு வழக்குகளைச் சரியானபடி கண்காணிக்க வேண்டும். அதனை எப்படி வைத்திருக்க வேண்டும் என்று நாம் அறிந்திராவிட்டால், தெரிந்தவர்களை  வேலைக்கு வைத்திருக்க வேண்டும்,. சிறு நிறுவனங்களுக்குத் தான் கணக்கு வழக்குகள் மிகவும் தேவை. அது தான் நமது வளர்ச்சியை- தளர்ச்சியைக் காட்டும் கண்ணாடி!. பெரும்பாலான நமது முன்னேற்றம் தடைபடுவது  கணக்குவழக்குகள் சரியாக நாம் வைத்துக் கொள்ளாதது தான்.    

நம்மிடையே இன்னொரு சாரார் உண்டு. அது தான் வெறும் கையில் முழம் போடுபவர்கள். வாய் வீச்சு வீரர்கள்! தொழில் செய்ய வேண்டுமென்று பெரிய போராட்ட வீர்ர்கள் போல் பேசுபவர்கள். வங்கி கடன் கொடுக்கவில்லை என்பார்கள்.அரசாங்கம் கடன் கொடுக்கவில்லை என்பார்கள்! எல்லாரையும் திட்டுவார்கள்! ஆனால் எந்த ஒரு தொழிலும் ஈடுபட்டிருக்க மாட்டார்கள்! அவர்களிடம் பணம் இருந்தாலும் தங்களது பணத்தை வெளியே எடுக்க மாட்டார்கள்! அவர்களுக்கு யாராவது ஓசியில் கொடுக்க வேண்டும். மற்றவர்களின் பணத்தில் தொழில் செய்ய வேண்டுமென்று மனக்கோட்டைக் கட்டுவார்கள்! இவர்களால் எந்தக் காலத்திலும் தொழில் செய்ய முடியாது!  செய்தாலும் வெற்றி பெற முடியாது!

தொழில் செய்ய விரும்புபவர்கள் முதலில் தங்களின் பணத்தைப்  போட்டுத் தான் தொழில் தொடங்க வேண்டும். அதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை. நிறுவனம் வளர்ச்சி பாதையை நோக்கிப் போகும் போது தான் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக வங்கிகளை நாட  வேண்டும்.

அதுவரை நமது பணமே மூலதனம்!
                                                                             

Friday, 14 April 2017

குடியால் சீரழியும் இளைய சமுதாயம்!


நமது இளைஞரிடயே  பெரிய போட்டி எதுவென்றால் யார் அதிகம் குடிக்கிறார்  என்பதாகத்தான் இருக்கும்!

இதற்குத் துணை போவது போல தமிழக சினிமாக்களும் அவைகளுடைய  பங்கைச் சிறப்பாகவே செய்கின்றன!

ஒவ்வொரு தெருக்களிலும், கோவில்கள் அருகே, பள்ளிக்கூடங்கள் அருகே, மக்கள் கூடும்  இடங்களுக்கு அருகே மதுபானக் கடைகளைத் திறந்துவிட்டு - குடிப்பது உடலுக்குக் கேடு விளைவிக்கும் என்று திரைப்படங்களிலும், சின்னத்திரையிலும் விளம்பரப்படுத்துவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் என்பதை  நாம் புரிந்து கொள்ளலாம்!

சாராயக்கடைகளை நடத்துபவன் அரசியல்வாதி. சினிமா, சின்னத்திரை என்று புகுந்து விளையாடுபவன் அரசியல்வாதி. ஊடகங்களிலும் தன்னை இணைத்துக் கொண்டவன் அரசியல்வாதி! ஆக, அவனுடைய ஆதிக்கம் அனைவற்றிலும் இருப்பதால் தமிழன் தனது குடிப்பழக்கத்தில் இருந்து வெளியே வர முடியவில்லை!

நமது நாட்டிலும் நாம் தமிழ் நாட்டைத் தான் முன்னுதாரணமாகக் கொண்டிருக்கிறோம்! அதே தாக்கம் நம்மிடமும் இருக்கிறது!

சமீபத்தில் ஓர் இளைஞன் -  ஒரு தொழில்நுட்பப் பள்ளியில் படிப்பவன் - தனது செய்முறைப் பயிற்சிக்காக வந்திருந்தான்.  வந்த நாள் முதலே அவனது முகத்தில் ஒரு மகிழ்ச்சி இல்லை. முகத்தில் ஒரு பொலிவு இல்லை. எந்நேரமும் எதனையோ இழந்துவிட்டவன் போலவே இருந்தான்!  பயிற்சியில் அக்கறை காட்டவில்லை.  தீடீரென வருவான்; மறைந்து போவான்! பயிற்சியில் எந்த ஈடுபாடும் காட்டவில்லை. கொஞ்சம் நெருங்கிப் பார்த்த போது அவன்  எந்நேரமும் நண்பர்களோடு "தண்ணி" அடிப்பதையே முழு நேர வேலையாகக் கொண்டுவிட்டான்! இந்தச் சமுதாயத்தின் வருங்காலங்கள் எப்படி இருப்பார்கள் என கணிக்க முடிகிறதா? ஒரு மாணவன் இன்னும் தனது கல்வியை முழுமையாக முடிக்கவில்லை - எப்படி தனது வருங்காலத்தை எதிர்நோக்கப் போகிறான்?

ஒரு நடுத்தர இளைஞர் ஒருவரை எனக்குத் தெரியும். குடிகார மன்னன்! லட்சக்கணக்கில் சம்பாதிப்பான்! லட்சக்கணக்கில் அழிப்பான்! குடிப்பது தான் முழு நேர பொழுது போக்கு! ஒரு குடிகாரக்   கும்பலே அவனோடு இருக்கும்! தீடீரென ஒரு நாள் நெஞ்சுவலி. இரத்த அழுத்தம். மிகவும் ஆபத்தான நிலை. உடனடியாக இருதயசிகிச்சை மையத்தில் சேர்த்தார்கள். அடுத்த நாளே பைபாஸ் அறுவை சிகிச்சை. (bypass operation), சிகிச்சை நல்லபடியாக முடிந்தது.  சிகிச்சை நல்லபடியாக முடிந்தது என்பதைக் கொண்டாட அதற்கு அடுத்த நாளே குடித்து மகிழ ஒரு விருந்து! அதில் நமது கதாநாயகன் தான் முக்கிய விருந்தாளி! மீண்டும் மருத்துவமனை. ஒரு வாரத்திற்குப் பின்னர் கதாநாயகன் போய்ச் சேர்ந்தார்! இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது நாளை அவரது பிள்ளைகள் எப்படி வளர்வார்கள்?  வளர்கின்ற பிள்ளைகளுக்கு  அப்பன் தானே முன்னுதாரணம்!

அப்பன் சரியாக இல்லை, பெரியப்பா சித்தப்பா சரியாக் இல்லை, சுற்றுப்புறம் ஒரே குடிகாரக் கூட்டம் - பிள்ளைகள் எப்படி வளர்வார்கள்?  குடிகாரத்தனமாகத் தான் வளர்வார்கள்!

குடித்துக் குடித்தே தனது வாழ்க்கையை வீணடிக்கிறது இளைய சமுதாயம். குடி குடியைக் கெடுக்கும் என்பார்கள். ஆம்,  அது தான் நடந்து கொண்டிருக்கிறது!

உடனடியாக நமது கவனத்திற்கு வருவது தமிழ்ச் சினிமா! தமிழ் சின்னத் திரைகள்! மது அருந்துகின்ற காட்சிகளை முற்றிலுமாக அப்புறப்படுத்த வேண்டும். வசனங்களில் கூட சாராயம் இடம் பெறக் கூடாது! தமிழக அரசியல்வாதிகள் வேண்டுமென்றே தமிழ் மக்களுக்குச் செய்கின்ற கேடு விளைவிக்கும் செயல் இது!

மதுவை ஒழிக்க வேண்டும்! அல்லது அரசியல்வாதிகளை ஒழிக்க வேண்டும்!

எப்படிப் பார்த்தாலும்  திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால் ? கொஞ்சம் காலம் பிடிக்கும்! அவன் திருந்தித்தான் ஆக வேண்டும்!


Thursday, 13 April 2017

மத போதகர் என்ன ஆனார்?


கிறிஸ்துவ மத போதகர், ரேமன் கோ என்ன ஆனார்?

இரண்டு மாதங்களுக்கு முன்னர் (13-2-2017)  மக்கள் நடமாட்டம் உள்ள நேரத்தில், கிளானா ஜெயாவில் அவர் கடத்தப்பட்டார். அப்போது அவர் காரில் சென்று கொண்டிருந்தார். அந்த நேரத்தில் தீடீரென அவரைச் சுற்றிக்  கார்களும், மோட்டார் சைக்கள்களும் சூழ்ந்து கொண்டன. காரில் இருந்தபடியே வாகனங்கள், மோட்டார் சைக்கள்கள் புடைசூழ அவர் கடத்தப்பட்டார்!

அப்படித்தான் இணையத்தில வலம் வந்த படக்காட்சிகள் காட்டுகின்றன!   அது ஒரு சாதாரண கடத்தலாக நாம் எடுத்துக் கொள்ள முடியாது. அந்தக் கடத்தல்களுக்கு முன்னதாக அவர் பல நாள்கள் கண்காணிக்கப் பட்டிருக்கின்றார். மிகவும் கைதேர்ந்த, மிகவும் நிபுணுத்துவம் வாய்ந்த ஒரு பயங்கரவாதக் கும்பலின் நடவடிக்கையாகவே அந்தப் படக்காட்சிகள் நமக்கு நினைவூட்டுகின்றன! ஏதோ ஒரு பெரும்புள்ளியை - ஒரு பிரதமரை, ஒரு பெரும் தலைவரை - கடத்துவதற்கு  எப்படி பயங்கரவாதக் கும்பல்கள் திட்டமிட்டுச் செயல்படுகின்றனவோ  அதே முறையை இந்தச் சாதாரண மதபோதகருக்கும் செயல்படுத்தப்பட்டிருப்பது  தான் இதில் வேடிக்கை!

ஆனால் அந்தப் படக்காட்சிகள் எந்த அளவுக்கு உண்மை என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியவில்லை! காவல்துறை எதனையும் இதுவரை உறுதிப்படுத்தவுமில்லை! எல்லாம் "பார்க்கிறோம்" என்னும் தலையசப்பே காவல்துறையின் தற்போதைய நிலைமை!

நமது நாட்டில் இது போன்ற கடத்தல் வேலைகள் பல காலமாகவே நடந்தேறி வருகின்றன. சமீபத்தில் கூட சமூக ஆர்வலர் பீட்டர் சோங் காணாமல் போனார். அவர் என்ன  ஆனார் என்று யாருக்கும் தெரியவில்லை. பேருந்து ஒன்றில் அவர் தாய்லாந்து போனதாக காவல்துறை கூறுகின்றது.  உண்மை இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை!

இன்னொரு கிறிஸ்துவ மத போதக தம்பதியினரான ஜோஷுவாவும் அவரது மனைவியும் கடந்த நவம்பர் மாதம் காணாமல் போனார்கள். கடைசியாக அவர்கள் கோலாலம்பூரில் காணப்பட்டார்கள். அதுவே கடைசி! இன்னும் எந்தத் தகவலும் இல்லை!

இன்னொரு இஸ்லாமிய சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் என்பவரும் கடந்த நவம்பர் மாதம் பெர்லீஸ் மாநிலத்தில் இருந்து காணாமல் போனார். அவர் இஸ்லாமிய  ஷியா பிரிவினை மலேசியாவில் பரப்புவதற்கான வேலைகளைச் செய்வதாக அவர் மேல் உள்ள குற்றச்சாட்டு. ஷியா பிரிவு என்பது அரசாங்கத்தினால் ஏற்கப்படாத ஒன்று!

பெரும்பாலும் சமயம் சம்பந்தமான சர்ச்சகளில் சம்பந்தப்படுவோர் காணாமல் போனால் அவர்களைப் கண்டு பிடிப்பது என்பது காவல்துறையால் இயலாது  என்பதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. அவர்கள் ஒதுக்கப்பட்டு வேறு யாராலோ இயக்கப்படுகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது! ஒரு முன்னாள் இந்துவான பத்மனாதன் என்னும் முகமது  ரிடசுவான் அப்துல்லாவின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க  முடியாமல் காவல்துறை திணறுகிறது என்று சொல்லப்படுவது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை!

எது எப்படி இருப்பினும் கிறிஸ்துவ மதபோதகர்கள் இப்படிக் காணாமல் போவது என்பது நல்லதல்ல. அவர்கள் சட்டத்திற்கு எதிராகச் செயல்படுகிறார்கள்  என்றால் அவர்கள் சட்டத்திற்கு முன் குற்றவாளிகள் என நிருபிக்கப்பட வேண்டும்.

இல்லையேல் எல்லாக் காலத்திலும் அரசாங்கத்தையே மக்கள் குறை கூற வேண்டி வரும்! இதுவும் நல்லதல்ல!கேள்வி-பதில் (43)


கேள்வி

தமிழ் நாட்டில் "புதிய தலைமுறை" தொலைக்காட்சியின்  ஒளிபரப்பு தடைசெய்யப்பட்டு விட்டதாமே!

பதில்

உண்மையே! தமிழிலே ஒரு பழமொழி சொல்லுவார்கள். குரங்கு கையில்; பூமாலைக் கிடைத்தால் என்ன ஆகும்? அந்தக் கதை தான் தமிழ் நாட்டில். தமிழ் நாடு என்னும் பூமாலை குரங்குகளின் கையில் அகப்பட்டுக் கொண்டு படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறது!

இப்போது மட்டும் என்று சொல்லிவிட முடியாது.  கடந்த 50 ஆண்டளவாக தமிழகம் இப்படித்தான் சுரண்டப்பட்டும், சூறையாடப்பட்டும் கடைசியாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு நிலைமையை உருவாக்கிவிட்டவர்கள் அரசியவாதிகள்!

அவர்கள் கை படாத இடமே இல்லை!  அவர்களுக்கு அதரவு இல்லை என்று தெரிந்தால் உடனே களத்தில் இறங்கிவிடுவார்கல்! ரௌடிகள் அவர்களது கையாட்கள்! அத்தோடு காவல்துறையும் அவர்களது பலம்! பொது மக்கள் நிலைமை அவலம்!

இன்றைய ஊடகங்கள் தமிழ் நாட்டின் உண்மை நிலையை வெளியே கொண்டு வருவதில்லை என்னும் குற்றச்சாட்டு சுமத்தப்படுவதுண்டு. ஆனால் உண்மை நிலை என்ன? அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில் தான் அனைத்து ஊடகங்களும் செயல்படுகின்றன! தொலைக்காட்சியாக இருந்தாலும் சரி,  செய்தித்தாள்களாக  இருந்தாலும் சரி அரசியல்வாதிகளுக்கு எதிராக செயல்பட யாருக்கும் துணிவில்லை!  கோடிக்கணக்கில் பணம் போட்டுத் தொடங்கப்பட்ட ஒரு தொலைக்காட்சியை ஒரு நிமிடத்தில் முடக்கிவிடுவான் ஓரு முட்டாள் அரசியல்வாதி!!

அது தான் நடந்தது தமிழ் நாட்டில்!  ஆர்கே நகரில் போட்டியிடும் .பெரும் ஊழல்வாதியான தினகரனைப் பற்றிய செய்திகள் - வெற்றிபெற மாட்டார் என தொடர்ந்து செய்திகள் வெள்யிடப்பட்டதால் அப்படி ஒரு நிலைமை புதிய தலைமுறைக்கு ஏற்பட்டது. அது  எல்லா ஊடகங்களுக்கும் விடுக்கப்பட்ட ஒரு சவால் என்று அனைத்து ஊடகங்களுக்கும் தெரியும்; புரியும்.

இது போன்ற அச்சுறுத்தல்களாலேயே ஊடகங்கள் துணிந்து மக்கள் பிரச்சனைகளை வெளியே கொண்டு வர முடியவில்லை! அப்படித் துணிந்து குரல் கொடுத்தால் குண்டர் கும்பல்களை வைத்து அவர்களுடைய அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்படும்!

இன்றைய நிலையில் தமிழகத்தில் ஏகப்பட்டப் பிரச்சனைகள். ஆனால் ஒன்றுமே நடவாதது போல எல்லாம் வாய்பொத்தி, மௌனியாக செத்த பிணங்கள் போல் நடமாடிக் கொண்டிருக்கின்றனர்!

ஜல்லிக்கட்டு ஒரு முடிவுக்கு வந்தால், நெடுவாசல் இன்னொரு பிரச்சனை. காவேரி நீர் பிரச்சனைக்கு ஒரு முடிவும் இல்லை. கேரளாவோடு முல்லையாறு பிரச்சனையைத் தீர்க்க முடியவில்லை.  மீனவர் பிரச்சனை தமிழ் நாட்டுப் பிரச்சனை! அவன் இந்தியன் அல்ல என்கிற விவாதம் தொடர்கிறது! ஆந்திரவோ ஏழைத் தமிழன் திருட வந்தான் என்று சுட்டுத் தள்ளுகிறது!

ஆனால் பத்திரிக்கைகளோ, தொலைக்காட்சிகளோ இவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை! தமிழகத்தில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்பதாகக் காட்டிக் கொள்ளுகின்றன.இவைகளுக்குப் பதிலாக சினிமா செய்திகளைப் போட்டு தமிழர்களைச் சினிமா பைத்தியங்களாக ஆக்குகின்றன!

புதிய தலைமுறை தொலைக் காட்சிக்கு இது ஒரு பயமுறுத்தல் நாடகம்!  இந்தப் பயமுறுத்தலை அனைத்து ஊடகங்களும் புரிந்து கொள்ள வேண்டுமென்று ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்பு!  அது சரியாகவே நடந்து கொண்டிருக்கிறது. அனைவரும் அடக்கி வாசிக்கிறார்கள்!

இப்போது தமிழகம் தமிழன் என்கிற உணர்வு இல்லாதவர்களிடம் அகப்பட்டுத் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

தமிழனின் சரித்திரம் என்பது ஏதோ தீடீரென நேற்று முளைத்த காளான் அல்ல. எந்த ஓர் அரசியல்வாதியும் தமிழனை அவன் மொழியை அவன் கலாச்சாரத்தை, அவன் வளத்தை அப்படியெல்லாம் அழித்துவிட முடியாது. தமிழன் ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவன்.

இதுவும் கடந்து போகும் என்பது போல இன்றையச் சூழலும் கடந்து போகும்.!

தமிழன் தலை நிமிர்வான்! எந்தத் தங்குத் தடையுமில்லாமல் தமிழன் தனது ஜனநாயக உரிமைகளை நிறைவேற்றுவான் என்பதில் ஐயமில்லை!

புதிய தலைமுறை மீண்டும் தனது மகத்தான பணியை நிறைவேற்றும் என எதிர்பார்ப்போம்!

ஆமாம்! தமிழ் நாட்டைப் பற்றி இவ்வளவு சொல்லிவிட்டோம்! நமது  நாட்டின் நிலைமை என்ன? இங்கும் அதே நிலை தான்! ஐயம் வேண்டாம்!


Saturday, 8 April 2017

கேமரன்மலை யாருக்கு?ஆமாம், கேமரன்மலை யாருக்கு? ஏற்கனவே  அங்கே காடுகளை, மலைகளை அழித்து வங்காள தேசிகள் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதாக ஜனநாயக செயல் கட்சியின் பகாங் மாநில செயலாளர் திரு சிம்மாதிரி  ஒரு முறை எழுதியிருந்ததாக  நினைவு!

இப்போது அவர்கள் நாட்டுக் குடிமக்களாகி வாக்குகள் போடுகிற அளவுக்கு வளர்ந்திருப்பார்கள் என நிச்சயமாக  நாம் நம்பலாம்!. அரசாங்கம் மனது வைத்தால் நடக்க முடியாதது கூட நடக்கும்!

ஆனால் இப்போது விவாதத்திற்கு இலக்காகி இருப்பது கேமரன்மலைத் தொகுதி யாருக்குச் சொந்தம் என்பது தான்.

வருகின்ற பொதுத் தேர்தல் எப்போது என்று தெரியாத நிலையில் இப்போதே கேமரன்மலையில் போட்டியிடப் போகிறவர் யார் என்னும் விவாதம்  களைகட்டத் தொடங்கி விட்டது!.

இப்போது கேமரன்மலை நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் டத்தோஸ்ரீ பழனிவேலு.   ம.இ.கா.வை அவர் பிரதிநிதிக்கிறார்..

ம.இ.கா. வில் ஏற்பட்ட  பங்காளிச் சண்டையால்  பதவியை இழந்தார் பழனிவேலு! அடுத்த தேர்தல் வரை அவர் ம.இ.கா.வின் பிரதிநிதியாகவே இருந்திருக்கலாம். ஆனால் ஏனோ தெரியவில்லை ம.இ.கா. அவரைப் புறக்கணித்து அதனைச் சுயேச்சைத் தொகுதியாக அறிவித்துவிட்டது! தவளையைப் போல  தமிழனும் தனது வாயால் தான்  கெடுவான்!

இந்த நேரத்தில் தான் உள்ளே புகுந்தார் மக்கள் முற்போக்குக் கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ்! மற்ற ம.சீ.ச., அம்னோ கட்சிகளிடம் வம்புக்குப் போவதைவிட ம.இ.க. விடம் வம்புக்குப் போவது ஒரு பிரச்சனையாக இருக்காது என்பது அவரது அனுபவம்!

இரண்டு ஆண்டுகளாக அந்தத் தொகுதியில்,  தான் வேலை செய்து வருவதாக சொல்லுகிறார் கேவியஸ்!  அதனால் தான் அவரைப் பற்றிய செய்திகள் எதுவும் நாம் பார்க்க முடிவதில்லை!  காரணம் இப்போது புரிகிறது! வேலைப்பளு என்பதே சரியாக இருக்கும்!

டான்ஸ்ரீ கேவியஸ் அவர்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுக்கிறோம். உங்கள் தொகுதியிலேயே அமிழ்ந்து விடாதீர்கள். கொஞ்சம் வெளியேயும் பாருங்கள். வெளியே தமிழன் இருக்கிறான். தமிழ் மொழி இருக்கிறது. தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன.. உங்களுடைய பங்களிப்பையும் இந்த சமுதாயத்திற்குத் தாருங்கள். தமிழர்கள் வாக்கு எப்படி உங்களுக்குத் தேவை என்று நினைக்கிறீர்களோ அதே போல தமிழர்களின் தேவைகளையும் கொஞ்சம் கவனியுங்கள்.

ம.இ.கா. விற்கு என்ன சொல்ல முடியும்? ஒரு தொகுதியைச் சுயேட்சை என்று அறிவித்து கைகழுவி விட்டீர்கள்!  இனி சொல்லுவதற்கு என்ன இருக்கிறது? கைகழுவி உங்கள் பிரச்சனையை முடித்துக் கொண்டீர்கள்.  முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும்! ஆகப்போவது ஒன்றுமில்லை!

அப்படி என்றால் கேமரன்மலை யாருக்கு?
Friday, 7 April 2017

கேள்வி-பதில் (42)


கேள்வி

சென்னை, ஆர்கே நகர இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம்?


பதில்

திராவிடக் கட்சிகள் தான் வெற்றி பெறும் என்பதாகக்  கணிப்புகள் கூறுகின்றன. அ.தி.மு.க. வின் பன்னிர்செல்வமோ  அல்லது CAP மாறி "கேப்மாரி" ஐயாவோ  வெற்றி பெறலாம்! அவைகள் வெற்றி வாய்ப்பை இழந்தால் தி.மு.க. தான் வெற்றி பெறும்!

ஆனாலும் பெரும்பாலான கணிப்புகள் தி.மு.க. விற்கே வெற்றி வாய்ப்புகள் இருப்பதாகக் கணிக்கின்றன.

அதனால் தான் எடப்பாடி பணத்தை தண்ணீராகச்   செலவழித்துக் கொண்டிருக்கிறார்! .சிறையில் இருந்தாலும் சின்னம்மாவின் குரல் இன்னும் ஒங்கி ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது! சின்னம்மா சொன்னால் அதனைத் தட்ட முடியாத சூழ்லில் இருக்கிறர் எடப்பாடி. அத்தோடு மட்டும் அல்லாமல் அவரது பதவியையும் அவரால் விட்டுக் கொடுத்து விட முடியாது. அதனையும் அவர் காப்பாற்றியாக வேண்டும். பணமும் செலவாகிக் கொண்டு இருக்கிறது. அதே சமயத்தில் பணம் பட்டுவாடா செய்யும் அவரது ஆள்களும் கைதாகிக் கொண்டு இருக்கிறார்கள்!

ஒரு வேளை தேர்தல் ஆணையம் கடைசி நேரத்தில் இடைத் தேர்தலை ஒத்தி வைக்கும் படியும் ஆகலாம்! அந்த அளவுக்குப் பணம் ஆர்கே நகரில் துள்ளி விளையாடுகிறது!  எதிர்கட்சிகளும் சும்மா இருப்பதாக இல்லை. தேர்தல் ஆணையத்திடம் ஆளுங்கட்சியின் மீது புகார்கள் தொடர்ந்த வண்ணமாக உள்ளன!

ஒரு தரப்பினரையே நாம்  குற்றம் சாட்டினாலும் தி.மு.க.வும், பன்னிர்செல்வமும் அப்படி ஒன்றும் காமராசராக ஆகிவிடவில்லை!அவர்களும் கொடுக்க வேண்டியதை கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறாகள்!  இத்தனை ஆண்டுகள் பணத்தைக் கொடுத்தே வாக்குகளை வாங்கியவர்கள் இப்போது மட்டும் என்ன சும்மா இருக்க முடியுமா? கொடுத்துத் தான் ஆக வேண்டும்! வேறு வழியில்லை!

தி.மு.க. வே வெற்றி பெறும் என்பது பொதுவான கணிப்பு. மற்ற கட்சிகளை எடுத்துக் கொண்டால் அகில இந்திய கட்சியான பா.ஜ.க. வெற்றி வாய்ப்பு மிகக் குறைவு. கங்கை அமரன்  பிரபல இசையமைப்பாளர் என்னும் முறையில் ஒரு சில வாக்குகள் விழலாம்! அதனைப் பெரிது படுத்த ஒன்றுமில்லை! மற்ற கட்சிகளில் - நாம் தமிழர் கட்சி - யைத் தவிர்த்து மற்ற கட்சிகளைப் பற்றி சொல்லுவதற்கு ஒன்றுமில்லை!

நாம் தமிழர் கட்சியின் சீமான் என்ன தான் கத்தோ கத்தென்று கத்தினாலும் இன்றைய நிலையில் அவர் வெற்றி  பெறும் வாய்ப்புக்கள் குறைவு! ஆனாலும் அவரது பிரச்சாரம் வீணாக வழியில்லை!  அவரது பிரச்சாரம் மக்களிடம் போய் சேர வேண்டுமென்று நினைக்கிறார். அது சேருகிறது என்பதே அவருக்கு மகத்தான வெற்றி.

மெரினா கடற்கரையில் சேர்ந்த மாணவர் கூட்டம், மேற்கத்திய குளிர்பானங்கள் புறக்கணிப்பு போன்றவைகள் எல்லாம் சீமானும் அவர் தம்பிகளும் தமிழகமெங்கும் விதைத்த விதைகள்.. அவை பலன் தருகின்றன.

தமிழ் நாட்டுக்கு சரியான ஒரு பாதையைப் போட்டு சரியான ஒரு வழியைக் காட்டிக் கொண்டிருக்கிறார் சீமான்! இப்போதைக்கு அது எடுபடாவிட்டாலும் இளைய தலைமுறையினரிடையே அவருக்கு நல்ல வரவேற்பைக் கொடுத்துக்  கொண்டிருக்கிறது!

ஆர்கே நகரில் யார் வெற்றி பெறுவார் என்றால் தி.மு.க. விற்கே வெற்றி வாய்ப்புக்கள் அதிகம் என்பதாக அரசியல் பார்வையளர்கள் கூறுகின்றனர்.

நான் நாம் தமிழர் கட்சி வெற்றிபெறுவதையே விரும்புகிறேன்!


Thursday, 6 April 2017

நஜிப் உண்மையைச் சொல்லுகிறாரா?


நமது பிரதமர் நஜிப் இந்திய வருகையின் போது மலேசிய இந்தியர்களைப் பற்றி கொஞ்சம் அதிகமாகவே புகழ்ந்து தள்ளியிருக்கிறார்!

இந்த நாட்டின் மேம்பாட்டிற்கு இந்தியர்களின் பங்கு அதிகம் தான். மறுப்பதற்கு ஒன்றுமில்லை.

ஆனால் இந்தப் புகழ்ச்சிகளுக்கெல்லாம் நாம் ஒரேடியாக மகிழப் போவதில்லை. சீன நாட்டிற்குப் போனால் சீனர்களைப் பற்றிப் பெருமையாகப் பேசுவார். இந்தியாவுக்குப் போனால் இந்தியர்களைப் பற்றிப் பெருமையாகப் பேசுவார். இது அரசியல். அரசியல்வாதிகள் அப்படித்தான் பேசுவார்கள்!

பிரதமர் அங்கு தான் இப்படிப் பேசுவாரே தவிர நமது நாட்டில் இப்படிப் பேச அவரால் முடியாது! ஏன்? அம்னோ கூட்டத்தில் அவரால் இப்படி பேச முடியுமா?  மலாய்க்காரர்களுக்கே தெரியும் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு இந்தியர்களின் பங்கு என்ன என்பது. ஆனால் இதனையே அவர் ஒர் அம்னோ கூட்டத்தில் பேசினால் இதுவே ஒரு விதண்டாவாதமாக மாறிவிடும்.

ஒப்புக்கு சப்பாணி என்பார்களே அந்தக் கதை தான்! 

இந்த நாட்டின் வளர்ச்சிக்கு நாம் ஆற்றிய பங்கும் ஆனால் இப்போது நடப்பதற்கும் கொஞ்சம் நினைத்துப் பார்த்தால் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? வயிறு தான் எரியும்! அந்த அளவுக்கு நம் இனத்திற்கு துரோகங்கள் இழைக்கப் படுகின்றன! ஒரு வாங்காளத் தேசிக்கு இந்த நாட்டில் கிடைக்கின்ற வரவேற்பு  இங்குப் பிறந்து வளர்ந்த ஒரு தமிழனுக்குக் கிடைக்கிறதா?  

எந்த அளவுக்கு நமது வளர்ச்சிகள் தடுக்கப் படுகின்றன. நாம் எந்த அளவுக்கு  ஒடுக்கப்படுகின்றோம். எல்லாத் துறைகளிலும் நாம் நசுக்கப் படுகின்றோம். ஒன்றா, இரண்டா எடுத்துச் சொல்ல!

உண்மையைச் சொன்னால் நாம் வேண்டாத விருந்தாளியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! நம்முடைய உழைப்பு, நாம் சிந்திய வேர்வை அனைத்தும் மறக்கப்பட்டு விட்டன! இப்போது நம்முடைய குழந்தைகளுக்குப் பிறப்பு சான்றிதழ் எடுப்பது கூட சாதாரண விஷயமாக இல்லை. சட்டம் அனைவருக்கும் ஒன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் தமிழனின் நிலை வேறு. தோட்டப்புறங்களிலிருந்து போகின்ற தமிழனை ' இன்று வா, நாளை வா' என்று இழுக்கடித்தால் அவன் ஒவ்வொரு நாளும் விடுமுறை எடுத்துக் கொண்டு போக முடியாது. இந்த இழுத்தடிப்பு  செய்கின்ற காரணத்தினாலேயே பலர் பிறப்பு சான்றித்ழ்களை எடுக்க முடியாமல் போகிறது. முறைமைகளை எளிதாக்க வேண்டுமே தவிர போகப் போக இன்னும் கடுமையாக ஆக்குவது இன்னும் கூடுதலான பிரச்சனைகளைத் தான் அது ஏறபடுத்துகிறது.

இந்த நாட்டு இந்தியர்களின் உழைப்பை அரசாங்கம் கருத்தில் கொள்ளவில்லை என்பது தான் உண்மை.  அரசாங்கத்தில் வேலை வாய்ப்புக்கள் இல்லை. கல்விகூடங்களில் வாய்ப்புக்கள் இல்லை. எங்கள் மொழி அழிக்கப்படுகின்றது. எங்களது உரிமைகள் பறிக்கப்படுகின்றன.

ஆனால் இவ்வளவு இக்கட்டுகளிலிருந்தும் தான் தமிழன் தன்னைத்தானே உயர்த்திக் கொள்ளுகிறான்! அவ்வளவு சீக்கிரத்தில் அவனை எடை போட்டுவிட முடியாது! நிச்சய அவன் வெல்லுவான்! வாழ்க தமிழினம்!