Tuesday 30 August 2016

பாராட்டுங்கள்! பாராட்டப்படுவீர்கள்!


அனைவரையும் பாராட்டுங்கள்! நீங்களும் பாராட்டப்படுவீர்கள்!

மற்றவர்கள் நல்லதைச் செய்யும் போது  அவர்களைப் பராட்டுங்கள். பாராட்டும் போது மற்றவர்கள் உங்களை நாடி, தேடி வருவார்கள். பாராட்டு என்பது மிகவும் சக்தி வாய்ந்தது!

வீட்டிலே நல்ல உணவு, மனைவியைப் பாராட்டுங்கள். உணவகத்திலே நல்லதொரு தேநீர், பரிமாறுபவரைப் பாராட்டுங்கள். பள்ளியில் மகன் கணக்குப் பாடத்தில் முப்பது மார்க்குகள் தான் வாங்கினானா? அவனையும் பாராட்டுங்கள்.  அந்தப் பாராட்டுதல்களுக்காகவே அடுத்த முறை அறுபது மார்க்குகள் வாங்கி உங்களை மகிழ்ச்சி படுத்துவான்!

இந்த உலகமே பாராட்டுதலுக்காக ஏங்கித் தவிக்கிறது! அடிதடி மூலமோ, ஒருவரை ஏசுவதன் மூலமோ நாம் நினைக்கின்ற வேலைகள் செய்து முடிக்கப்படலாம். ஆனால் அதில் ஒரு நிறைவு இருக்காது. அதிலே ஒரு திருப்தி இருக்காது.

ஒரு வெற்றிகரமான வர்த்தகர். நிறைய வேலையாள்கள் அவருடைய நிறுவனத்தில். பொதுவாக பல நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் வருவதும் போவதுமாக இருப்பார்கள்! ஆனால் அவருடைய நிறுவனத்தில் வருவது மட்டுமே! போவது என்பது ஒய்வு பெறும் போது மட்டுமே! அப்படி என்ன தான் அவர் செய்கிறார்? வேலை ஆட்களைத் தட்டிக் கொடுப்பார். வேலை சரியாக இருந்தால் தாராளமாகப் பாராட்டுவார்! இப்படிப் பாராட்டுவதால் அவருக்கு என்ன இலாபம்?  அந்த வேலையாள் இன்னும் அதிகமாக, இன்னும் சிறப்பாக தனது வேலையைச் செய்வார்! வேலை சிறப்பாக அமையும் போது அந்த வர்த்தகருக்கு விற்பனையும் கூடுகிறது. வேலையாளுக்கு ஊதிய உயர்வும் கிடைக்கிறது.  எல்லாமே ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உடையவைகள் தாம்!

இதனையே அதட்டல், உருட்டல் மூலம் செய்து பாருங்கள். திருப்தியற்ற வேலை; அரைகுறை வேலை!  நேரத்தோடு செய்து முடிக்க முடியாமை! வேலையாள் மாற்றம்! சம்பளக் குறைப்பு! இப்படி தொடர்ந்து கொண்டே இருக்கும்!

பாராட்டுவதற்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை! இலஞ்சம் கொடுக்க வேண்டியதில்லை! ஒரு இன்சொல் போதும்! அனைத்துத் தடைகளையும்
 தகர்த்து எறிந்து விடும்!

பராட்டுவது என்பது எவ்வளவு வலிமையானது என்பதை இந்நேரம் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

மற்றவர்களைப் பாராட்டுங்கள்; பாராட்டுக்கள் உங்களைத் தேடிவரும்!

ஜெகன் ஏன் ஆங்கிலம் பேசுகிறார்?


பொதுவாக வட இந்திய மாநிலங்களிலிருந்து தமிழ்ப்படங்களில் நடிக்க வருபவர்கள் ஆங்கிலத்தில் பேசுவது ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று தான். அவர்களுக்குத் தமிழ் என்பது அந்நிய மொழி. அவ்வளவு தான். தமிழ்ப்படங்களிலிருந்து இந்திப் படங்களுக்கு நடிக்கப் போகிறவர்கள் இந்தி தேசிய மொழியாக இருந்தும் இந்தி,  பள்ளியில் பயிலாதக் காரணத்தால் இவர்களுக்கு இந்தியும் அந்நிய மொழி!

இருந்தாலும்  சினிமா உலகில்  இது  ஒரு  பிரச்சனை  அல்ல! பின்னணிக் குரல் கொடுத்தே எல்லாரையும் தமிழர்களாக்கி விடுவார்கள்!

நகைச்சுவை நடிகர் ஜெகன்,  விஜய் டிவி நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கு பெறுபவர். நிறைய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுகிறார். பல நிகழ்ச்சிகளுக்கு அறிவிப்பாளாராக இருக்கிறார். வளர்ந்து வரும் கலைஞர். வாழட்டும்! வளரட்டும்! நமக்கு மகிழ்ச்சியே!

இவர் பங்கு பெரும் நிகழ்ச்சிகளில் அதிகம் ஆங்கிலத்தைப்  பயன்படுத்துகிறார்.  தமிழ் நிகழ்ச்சிகளில் அதிகம் ஆங்கிலம் பயன்படுத்துபவர் இவராகத்தான் இருக்க வேண்டும். இதில் என்ன குற்றம் கண்டீர்? என உங்களுக்குக் கேட்கத் தோன்றும். காரணம் எல்லா நடிகர்களுமே ஆங்கிலத்தைத் தானே பயன்படுத்துகிறார்கள்?

ஆனால் ஜெகன் ஆங்கிலத்தைப் பயன்படுத்தும் போது ஒரு குறை தெரிகிறது! அவர் பேசுகின்ற தோரணையை வைத்துப் பார்க்கும் போது அவர் ஏதோ ஒரு காரணத்துக்காக ஆங்கிலம் பேசுகிறார்!அது தான் அவரது குறை!

"எனக்கும் ஆங்கிலம் தெரியும்!" என்பதாக நினைத்துக் கொண்டு அவர் பேசுகிறார்!  இருக்கட்டும்!  நீங்கள் நடிகராகியதற்கு ஆங்கிலம் ஒரு காரணம் இல்லையே!

அவர் பேசுகின்ற ஆங்கிலத்தில் ஏதோ ஒரு செயற்கைத்தன்மை  தெரிகிறது! அவருக்கு ஆங்கிலம் இயற்கையாக வரவில்லை! ஏதோ வலிந்து பேசுகிறமாதிரி பேசுகிறார்!  ஏதோ ஒரு கட்டாயத்தின் பேரில் பேசுகிறாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது!

இவருக்கு ஏன் இந்த வீண் வேலை என்று நாம் நினைப்பதில் தவறில்லை. நாம் சொல்ல வருவதெல்லாம் நீங்கள் நீங்களாகவே இருங்கள். உங்களுக்கு எந்த மொழி சரளமாக வருமோ அந்த மொழியிலேயே உரையாடுங்கள். இப்போதைக்கு ஒரு நடிகராக நீங்கள் நிலைப்பதற்குத் தமிழ் தான் உங்களுக்குக் கை கொடுக்கிறது.

சினிமா உலகில் மிகப்பலர் ஆங்கிலம் தெரிந்தவர்களே.  அதில் ஒன்றும் ஐயப்பாடு இல்லை. அந்தக்கால ஜெமினி கணேசன், இந்தக்கால கமல்ஹாசன், ரஜினி, விவேக் போன்றவர்கள் எல்லாம் ஆங்கிலம் தெரிந்தவர்களே. எங்கு ஆங்கிலம் தேவையோ அங்கே அவர்கள் ஆங்கிலத்தைப் பயன் படுத்தினார்கள்; பயன்படுத்துகிறார்கள். அதைக் குற்றம் என்று யாரும் சொல்லவில்லை.

ஆனால் நீங்கள் தேவையற்ற இடங்களில் எல்லாம் ஆங்கிலம் பேசி உங்களுடைய ஆங்கில அறிவை அனைவரும் பார்த்து அதிசயிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அது தான் உங்கள் குறை.

உங்களுக்கு ஆங்கிலம் தெரிவதால் சராசரி ரசிகனுக்கு அதனால் ஆகப்போவது ஒன்றுமில்லை! நீங்கள் படித்த ஆங்கிலம் உங்களுடைய முன்னேற்றத்திற்கு உதவ  வேண்டுமே தவிர வெளி உலகம்  உங்களைப் பெருமைப் படுத்துவதற்காக இருக்கக் கூடாது.

ஆங்கிலம் உலக மொழி. அது தமிழ் சினிமாவின் வழக்கு மொழி அல்ல! ஆங்கிலம் தெரிந்தால் நல்லது. அது மட்டும் அல்ல. மற்ற எந்த மொழிகள் தெரிந்தாலும் அது நமது அறிவை வளர்த்துக் கொள்ள உதவும்.

ஆக,  ஜெகன் அவர்களே! உங்கள் மீது நமக்கு எந்தக் காழ்ப்புணர்ச்சியும் இல்லை!  நீங்கள் வளர வேண்டும். இப்போதைய நிலையில் தமிழ்ச் சினிமா தான் உங்களை வாழ வைக்கிறது. உங்களுடைய ஆங்கில அறிவை வைத்து தமிழ் ரசிகனை ரொம்பவும் சோதிக்காதீர்கள்!  உங்களுக்கு ஆங்கிலம் தெரியும் என்பதை நாங்கள் ஒத்துக் கொள்ளுகிறோம்!

முடிந்தால் தமிழிலேயே பேசுங்கள்! வாழ்த்துகள்!









Saturday 27 August 2016

ரஜினியின் ரகசியம் என்ன?



பொதுவாகவே ரஜினியை அறிந்தவர்கள், தெரிந்தவர்கள்  அனைவரும் அவர் பழகுவதற்கு ஓர் அற்புதமான  மனிதர் என்று சொல்லுகிறார்கள். அவரைப் புகழ்ந்து தள்ளுகிறார்ககள் என்றே சொல்லலாம்!

ஏன்? எதற்காக? இவர்கள் இப்படிப்  பேசுகிறார்கள் என்று பார்க்கும் போது ஒரே ஒரு விஷயம் தான் நமது கவனத்திற்கு வருகிறது.

மற்றவர்கள் அவரைப்பற்றித் திரும்ப திரும்ப  சொல்லுகின்ற ஒரே விஷயம் ஒன்றே ஒன்று தான். அது தான் "பராட்டு" என்கின்ற ஒரே சொல்.

நல்லதைப் பாராட்டுகின்ற ஒரு தன்மை அவருக்கு உண்டு, மனிதன் எந்த நிமிடத்திலும் மனம் மாறலாம்! அதனால் உடனிருப்பவர்கள் செய்கின்ற நல்ல செயல்களை உடனே பாராட்டுகின்ற நல்ல குணம் அவரிடம் உண்டு!

அவருடன் வேலை செய்கின்ற ஒவ்வொருவரையும் அவர் பாராட்டுகிறார். சிறப்பாக நடிக்கிறார்களா உடனே பாராட்டு! சிறியவர், பெரியவர் என்று பார்ப்பதில்லை! புதியவர் பழையவர் என்று பேதமில்லை! சிறப்பான நடிப்பைக் கொடுத்தால், சிறப்பானப் பாடலைக் கொடுத்தால், சிறப்பான இசையைக் கொடுத்தால் உடனே அவர்களைப் பாராட்டு மழையில்  நினைத்து விடுவார்!

அது தான் ரஜினி!

பாராட்டு என்பது ஒரு பெரிய உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது! அனைவராலும் விரும்பப்படுவது! பாராட்டை விரும்பாதவர் யாருமில்லை. நாம் அனைவருமே மற்றவரின் பாராட்டுதல்களுக்காகக் காத்துக் கிடக்கிறோம்.

நாம் வேலை செய்கின்ற இடத்தில் கிடைக்கின்ற சம்பளத்தில் மட்டும் நாம் திருப்தி அடைந்து விடுவதில்லை. அங்கும் ஒரு பாராட்டுத் தேவைப்படுகிறது. நமது மேலதிகாரியின் பாராட்டுதல் நமக்குத் தேவையாய் இருக்கின்றது! ஒரு சிலரைப் பற்றி நாம் பேசும்போது "தட்டிக்கொடுத்தே வேலை வாங்குவார்" என்கிறோமே! அது என்ன தட்டிக்கொடுத்து? அது தான் அந்தப் பாராட்டுதல்!

பராட்டுதலுகளுக்காக ஒவ்வொவரும் ஏங்குகிறோம்! நமது வீட்டில்,  சுற்றுப்புறத்தில, வேலை  செய்யுமிடத்தில, நண்பர்கள்  வட்டாரத்தில் இப்படி எல்லா  இடங்களிலும் நமக்குப் பாராட்டுதல்கள்  தேவைப்படுகின்றன!

ரஜினி அதனைப் பிரமாதமாக செய்கிறார். அவர் செய்ய வேண்டிய அவசியமே இல்லை! ஆனாலும் செய்கிறார்! அவர் ஒரு சுப்பர் ஸ்டார்! கோடிக்கணக்கில் சம்பாதிப்பவர். அது அவருக்குத் தேவை தானா என்று பலர் நினைக்கலாம். அவர் செய்யத்தான் வேண்டும். மற்றவர்களை மட்டும் அவர் உற்சாகப்படுத்தவில்லை. அப்படிப் பாராட்டுவதன் மூலம் அவரும் உற்சாமடைகிறார்! பணம் மட்டும் உற்சாகத்தைக் கொண்டு வந்து விட முடியாது! சக மனிதனுடான நமது உறவுகளும் உற்சாகத்தைக் கொண்டு வர வேண்டும்.

ரஜினியின் அந்த ரகசியத்தை நாமும் பின்பற்றுவோம்! உங்களுக்கு எனது பாராட்டுக்கள்!

Friday 26 August 2016

நாம் எங்கே போகிறோம்?


காலையில் படித்த செய்தி; கண்கலங்க வைக்கும் செய்தி.

இளம் தாய் தனது ஐந்து குழந்தைகளுடன் ஒரு மாட்டுக்கொட்டகையை விட கேவலமான ஒரு  வீட்டில்  உண்ண உணவின்றி, மின்சாரமின்றி, தண்ணிரின்றி வாழ்ந்து வந்திதிருக்கிகின்றார்.

துர்நாற்றம், கொசுக்கடி இவைகளோடு கையில் ஒரு குழந்தை. குழந்தைக்குக் குடிக்கப் பாலில்லை; புளித்துப்போன பாலையும் குழந்தைக்குக் கொடுத்து வந்திருக்கிறார் அந்தத் தாய். பிள்ளைகளைக் கவனிக்க ஆளில்லாத ஒரு நிலையில் பிள்ளைகளின் உணவுக்காகத் தெருத்தெருவாக அலைந்து இரும்புத் துண்டுகளை  விற்று கிடைத்ததில் பிள்ளைகளின் பசியைப் போக்கியிருக்கிறார். கணவரோ ஒரு போதைப் பித்தர். போதைப்பித்தர் மறுவாழ்வு மையம் அவருக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது

இந்த அவல நிலையில் செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர் டேவிட் மார்ஷல் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டப் பின்னர் உடனடியாகத் தக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  அந்தக் குடும்பம்  ஒரு சில வாரங்கள் பராமரிப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டு அதன் பின்னர் அவர்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு காணப்படுமெனத் தெரிகிறது.

பிள்ளைகளுக்குக் கல்வி கொடுக்கப்பபட வேண்டும். அவர்களுக்கு அடையாள ஆவணங்கள் இல்லை. இவை சீர்செய்யப்பட வேண்டும்.

இப்போது இந்தப் பிரச்சனையை பினாங்கு மாநிலத்தின் இரண்டாவது துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப் பட்டிருப்பதால் பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்னும்  நம்பிக்கை நமக்கு உண்டு.

ஆகக் கடைசியாகக் கிடைத்த தகவலின்படி அந்த இளம் தாயும் ஒரு போதைப் பித்தராம். அவரும் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பப்பபடும் அபாயம் இருப்பதை அறிந்து  அந்தத் தாய் தலைமறையாகி விட்டாராம்! பரவாயில்லை! குழந்தைகளாவது நல்லபடியாக பாதுகாப்பாக வளரட்டும். அதைத்தான் நாம் சொல்ல முடியும்.

நகராண்மைக் கழக உறுப்பினர், டேவிட் மார்ஷலுக்கும்  அவர்தம்  குழுவினருக்கும் நமது நன்றியைப் பதிவு செய்கிறோம்.

எவனோ வாழவதற்கு இந்தத் தமிழினம் பலியாகிறது! கபாலியும் அதைத்தான் சொல்கிறது!

Wednesday 24 August 2016

கல்வியாவது கொடுங்கள்!


கல்வி என்பது எவ்வளவு முக்கியம் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்தக் கல்விக்குக் கூட நாம் கெஞ்சும் நிலையில் உள்ளோம்.

நாம் இங்கு படித்தவர்களைப் பற்றி பேசப்போவதில்லை. அவர்களுக்குக் கல்வி என்பது பற்றி நாம் பாடம் எடுக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் பிள்ளைகளைத் தவறாமல் பள்ளிகளுக்கு அனுப்புவார்கள்.

ஏழைகள் தங்கள் குழைந்தகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களா? பலர் கொடுக்கத்தான் செய்கிறார்கள்.  இல்லை என்று அவர்களை நாம் ஒதுக்கிவிட முடியாது. ஒரு சிலர் வேண்டுமானால்  ஏழ்மையின் காரணமாக தவுறுகள் செய்யலாம்.

ஆனால்  அவர்களை விட இன்னும் கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யார்? முழு நேர குடியும் குடித்தனமுமாக இருக்கும் தமிழ்ப் பெருங்குடி மக்கள் என்னும் அடையாளத்தோடு வலம் வரும் இவர்களைத்தான் நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை! எதற்கும் கவலைப்படாதவர்கள்! நேற்று,  இன்று, நாளை என்று எதற்கும் அசைக்க முடியாதவர்கள்!  முடிந்த காலம், நிகழ்காலம்,  வருங்காலம் பற்றியெல்லாம் அவர்களுக்கு நாம் பாடம் எடுக்க முடியாது!

இவர்கள் தான் இப்படி வீணாகப் போகிறார்களே இவர்கள் பிள்ளைகளாவது நல்லபடியாக வளரட்டும் என்று பார்த்தால் அதற்கும் வழியில்லை. இங்கேயே பிறக்கிறார்கள்; இங்கேயே நாடற்றவராக சாகிறார்கள்! பிறந்த சான்றிதல் இல்லை. அடையாளக்கார்டு இல்லை. பள்ளியில் சேர்க்க முடிவதில்லை. எந்த ஒரு வேலையும் செய்ய முடிவதில்லை. இவர்களுடைய எதிர்காலம் எல்லாம் குண்டர் கும்பல்களில் அடைக்கலம்! வேறு என்ன தான் அவர்கள் செய்வார்கள்?  வாழ வழியில்லை! வழி காட்ட வேண்டியவர்கள் குடித்து கும்மாளம் அடிக்கிறார்கள்!

அரசாங்கம் எந்த வகையிலும் இவர்களுக்குச் சாதகமாக இல்லை. வங்காள தேசத்தவனுக்குக் கொடுக்கும் சலுகை கூட இங்குப் பிறந்த இவர்களின் பிள்ளைகளுக்குப் பள்ளி செல்லக் கூட அனுமதி இல்லை!கேட்க வேண்டியவர்கள் பட்டம், பதவிக்காக அடித்துக் கொண்டிருக்கிறார்கள்!

கல்வியைக் கொடுத்தால் அவன் எப்படியாவது பிழைத்துக் கொள்ளுவான். அரசாங்க அதிகாரிகள் அதற்குத் தடையாக இருக்கிறார்கள்.

ஆனாலும் இவர்களுக்கும் கல்வி கொடுக்க வேண்டும் என்னும் குரல் ஆங்காங்கே ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது. சமுதாய அமைப்புக்கள் குரல் கொடுக்கின்றன.

அரசியவாதிகளைத் தவிர அரசு சாரா அமைப்புக்கள், செல்வாக்குள்ள சில மனிதர்கள் இந்த அடிமட்ட மக்களுக்காகக் குரல் கொடுக்கின்றனர்.

இவர்களின் வருங்காலம் சிறப்பாக இருக்கும் என நம்புவோம்!

Monday 22 August 2016

கபாலி ஏன் கால் மேல் கால் போட்டு .......?


கபாலி படத்தில் நம் மலேசியத் தமிழர்களுக்குப் புரியாத சில விஷயங்களைப் புகுத்தியிருக்கிறார் இயக்குனர் ரஞ்சித். அது ஒன்றும் நமக்குப் புதிய விஷயங்கள் அல்ல.ஆனால் அது தமிழ் நாட்டில் அதனை ஒரு பிரச்சனையாகக் காண்போரும் உண்டு என்பதை அது பற்றியான விவாதங்கள் நடபெறும் போது தான் நமக்கு அது புரிகிறது!

கபாலி படத்தில் ரஜினி,  கால் மேல் கால் போட்டு உட்காருவதும், கோட் சூட்டோடு அவர் நடமாடுவதும்  ஏதோ  ஒர் அதிசயமாக தமிழ் நாட்டில் பேசப் படுகிறது!  நமது நாட்டைப் பொருத்தவரை இது நமக்குப் புதிது அல்ல. இது ஒரு சாதாரண விஷயமாகத்தான் நாம் பார்க்கிறோம்.  தேவை என்று வரும் போது கோட் சூட் அணிவது நமக்குப் புதிது அல்ல.

கால் மேல் கால் போட்டு உட்காருவதில் அரசியல் உண்டு என்பதை கபாலி படத்தைப் பிறகு தான் நமக்கே புரிகிறது! உடை அணிவதிலும் அரசியல் உண்டு என்பதையும் நமக்கு இப்போது தான் இயக்குனர் வெளிப்படுத்தியிருக்கிறார்!

அடாடா! தமிழக மக்கள்  எதிலெல்லாம் அரசியலை நுழைத்திருக்கிறார்கள்!

இன்னொருவன் சொல்லித்தானா நமது உடைகளை நாம் தேர்வு செய்ய வேண்டும்! கால் மேல் கால் போட்டு உட்காருவது என்பது இயற்கையாக வருவது! அதிலுமா அரசியல்!

ஓர் அதிர்ச்சியான தகவலையும் இந்த நேரத்தில் நமது மலேசிய வாசகர்ளுக்குத் தெரியப்படுத்துவது எனது கடமை என நினைக்கிறேன்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய போராளி ஒருவர் - இம்மானுவேல் சேகர் என்பவர் -  ஒரு கூட்டத்திற்கு அவர் நல்ல உடை அணிந்து வந்தார் என்பதற்காகவும், கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தார் என்பதற்காகவும் அவர் கொலை செய்யப்பபட்டார் என அறியும் போது நம்மால் அதனை ஏற்றுக்கொள்ளத் தான்  முடியவில்லை! என்ன ஒரு காட்டுமிராண்டித்தனம்! மனிதனை மனிதனாக மதிக்கத் தெரியாதவர்கள் இருந்தால் என்ன, செத்தால் என்ன?

உண்மைமைச் சொன்னால் கபாலி மூலம் இன்னும் பல செய்திகள் ஒவ்வொன்றாக நமக்குக்  கிடைக்கும் என நம்பலாம். கிடைக்க வேண்டும். இந்தப் படத்தின் மூலம் பல செய்திகளை வெளிக் கொணர்ந்திருக்கும் இயக்குனர் ரஞ்சித்தை நாம் பாராட்ட வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக கபாலியாக நடித்த ரஜினியை நாம் பராட்டியே ஆக வேண்டும்! வேறு யாரும்  நடிக்கத் துணியாத ஒரு வேடத்தில் அவர் நடித்திருக்கிறார்!

இயக்குனர் ரஞ்சித்துக்கும், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் நமது வாழ்த்துகள்!

Sunday 21 August 2016

காட்டுமிராண்டித்தனமான வழிபாடுகள்!


மலேசிய இந்து சங்கத் தலைவர்,  டத்தோ ஆர்.எஸ்.மோகன் ஷான் கடுமையான ஒர் எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்.

காட்டுமிராண்டித்தனமான தெய்வவழிபாடுகளில்  ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியிருக்கிறார்.

ஆமாம்! இத்தனை ஆண்டுகள் நாம் கேள்விப்படாத ஒன்று இப்போது புதிதாக அரங்கேறிக்  கொண்டிருக்கிறது!

டத்தோ மோகன் ஷான் அவர்கள் கோபப்படும்படியாக அப்படி என்ன நடந்திருக்கிறது?

கிளந்தால் மாநிலத்தில் ஆலயம் ஒன்றில் பன்றிகளை ஈட்டியால் குத்தி பலி கொடுப்பதாக அவர் அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டிருக்கிறார்! உயிரினங்களைப் பலி கொடுப்பதே பாவம். அதிலும் இப்படி ஒரு பலியா? ஈட்டியால் குத்தி பலி கொடுப்பது என்பது சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அது உயிருள்ள ஒரு ஜீவன். என்னதான் பன்றி என்று கேவலப்படுத்தினாலும் ஒரு பிராணியை இப்படியெல்லாம் கொடுமைப் படுத்துவது  மகா பாவம். ஏற்றுக்கொள்ளக் கூடியதே அல்ல!   வாயில்லா ஒரு ஜீவனை இப்படி வதைப்பது மகாக்கொடிய செயல்.

அதே சமயத்தில்  இன்னொரு தகவலையும் டத்தோ மோகன் ஷான் வெளியிட்டிருக்கிறார்.  அந்தத் தகவல்களிலிருந்து   நாம் தெரிந்து கொள்ளுவது ஒன்று தான். அரசாங்கத்தால் உடைக்கப்படுகின்ற கோயில்களில் பெரும்பாலான் கொயில்கள் தனியார் நிலங்களில் உள்ள கோயில்கள் தான். இதில் ஆச்சரியப்படக்கூடிய செய்தி என்னவெனில் இந்தக் கோயில்களை அதன் உரிமையாளர்கள் அதனைப் பொதுச்சொத்தாக மாற்றிக்கொள்ள அனுமதி கொடுப்பதில்லை என்பது தான்!    தனியார் நிலங்களில் வைத்துகொண்டு அதன் மூலம் பணம் சம்பாதிப்பதையே தொழிலாக அந்தக் கோயில்களின் உரிமையாளர்கள் அந்தக் கோயில்களைப் பயன் படுத்துகின்றனர்! ஒரு சில கோயில்கள் விதிவிலக்காக இருக்கலாம்.

நமக்குத் தெரிந்தவரை நகரத்தார் கோயில்கள் பாதிக்கப்படவில்லை. அதேபோல யாழ்ப்பாணத்தமிழர்களின் கோயில்கள் அதிகம் பாதிக்கப்படுவதில்லை. அதே போல தமிழர்கள் பல இடங்களில் பெரிய கோயில்களை அமைத்து வழிபட்டு வருகின்றனர். அவைகளில் ஒரு சில கோயில்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனாலும் பெரிய பாதிப்பில்லை! ஆனால் பெரும்பாலான பாதிப்புகள் சிறிய சிறிய தனியார் நிலங்களில் உள்ள கோயில்கள் தாம்!

இந்து சங்கம் தனியார் நிலங்களில் உள்ள கோயில்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும்.  அவைகளைப் பொது சொத்தாக மாற்ற வேண்டும். எதிர்கால நலனுக்கு இதுவே சிறந்த நடவடிக்கையாக இருக்கும். சிறிய கோயில்கள் பெரிய கோயில்களாக  மாற்றப்பட வேணடும்.

இது போன்ற கோயில்களில் இருந்து தான்  டத்தோ ஷான் குறிப்பிட்ட "காட்டுமிராண்டித்தனமான தெய்வ வழிபாடுகள்" நடபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவைகள் தனியார் நிலங்களில் உள்ள கோயில்கள் என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்பதாக அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இது தொடர அனுமதிக்கப்படுமானால் கஞ்சா அடிப்பவர்கள், குண்டர் கும்பல்களைச் சார்ந்தவர்கள் எல்லாம் புதிது புதிதாக ஏதாவது பலிகளைச் செலுத்த புதிய வழிகளைக் கண்டு பிடித்துக் கொண்டே இருப்பார்கள்!

கடைசியில் தெய்வ வழிபாடு என்பது கேலிக்குரிய ஒன்றாக ஆகிவிடும்! இந்து சங்கம் எப்படி இந்தப் பிரச்சனைகளைச் சமாளிப்பார்கள் என்பது தெரியவில்லை! ஆனாலும் அவர்கள் எதற்கும் தயார் என்பதாகவே நமக்குப் படுகிறது!

வழிபாட்டுத்தலம்  வழிப்பாட்டுத்தலமாகவே இருக்க வேண்டும்! பலி செலுத்தும் பாவத்தலங்களாக மாறக்கூடாது!
                                        

Saturday 20 August 2016

கேள்வி-பதில் (28)


கேள்வி

கபாலி இயக்குனர் ரஞ்சித் ஏதேனும் புதிய படத்தை ஆரம்பித்துவிட்டாரா?


பதில்

இதுவரை எந்த செய்தியும் கிடைக்கவில்லை.

கபாலி பிரச்சனையே இன்னும் அவருக்கு ஒயவில்லை! நேர்மறையாகவும், எதிமறையாகவும் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதுவரை எந்தவொரு தமிழ்ப்படமும் இந்த அளவு விமர்சனங்களுக்கு ஆளாகவில்லை.

கூட்டம் போட்டுப் பேசுகின்ற அளவுக்கு சூடான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன!

கபாலி படத்தை அக்கு வேறாக, ஆணி வேறாக ஒவ்வொரு காட்சியையும் பிரித்து எடுத்து விவாதங்கள் நடைபெறுகின்றன! போகிற போக்கைப் பார்த்தால் முனைவர் பட்டத்துக்காக ஆய்வு கூட செய்வார்கள் என்று கூட தோன்றுகிறது!

என்னைப் பொறுத்தவரை விவாதங்களாக இருந்தாலும் சரி, அது பட்டிமன்றமாக இருந்தாலும் சரி நான் ரஞ்சித்தை ஆதரிக்கிறேன்.

அவருடைய அட்டைக்கத்தியாக இருந்தாலும் சரி, மெட்ராஸாக இருந்தாலும் சரி  அவர் சொல்ல வந்த செய்திகளை ஒவ்வொரு படத்திலும் சொல்லி வருகிறார்.அதனை நான் பாராட்டுகிறேன். அப்போது வாயை மூடிக்கொண்டு சும்ம இருந்தவர்கள் கபாலி படத்தை பார்த்துவிட்டு எகிறிக் குதிக்கிறார்கள்!

காரணம் நமக்கும் தெரியும். ரஜினியை எப்படி இந்தப்படத்தில் நடிக்க வைக்கலாம் என்பது தான் குற்றச்சாட்டு! ரஜினியை எப்படி ஒரு தாழ்த்தப்பட்டவராக நடிக்க வைக்கலாம் என்பதே அவர்கள் முன் நிற்கும் மிகப்பெபெரிய குற்றச்சாட்டு! அது ஒரு நடிப்பாக இருந்தாலும் கூட அதனைக்கூட அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!

ரஜினியும்,  ரஞ்சித்தும் தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு புதிய பாதையைப் போட்டிருக்கின்றனர்.தேவையான ஒரு பாதை! ஒரு படம் வெற்றி பெற்றால் அதன் பாணியிலேயே தொடர்ந்து படங்கள் வெளியாகும். இந்தப் போக்கு தொடருமா என்று பொருத்திருந்து  பார்க்க வேண்டும். பிரபல கதாநாயகர்கள்  ரஜினியைப் போல நடிக்க முன் வரமாட்டார்கள் என்று தான் தோன்றுகிறது. ஒரு சில நடிகர்கள் "சுப்பர் ஸ்டாரே நடித்து விட்டார், நாம் நடித்தால் என்ன" என்று நினைப்பவர்கள் கூட இருக்கலாம்!

கபாலி ஒரு பொழுது போக்கு சினிமா அல்ல! இது முழுக்க ஒரு அரசியல் படம். பேசுவது அரசியல் என்பது தெரியாமலேயே அரசியல் பேசுகிறது! வருங்கால தமிழக அரசியல் வேறு மாதிரியாக இருக்கும் என நிச்சயம் நம்பலாம்! அரசியல்வாதிகள் மாறவில்லை என்றால் அவர்கள் மாற்றப்படுவார்கள்.

ரஜினி, கபாலி மூலம் அரசியலலில் புகுந்துவிட்டார்! வேறு அரசியல் அவருக்குத் தேவை இல்லை!

Friday 19 August 2016

திருமண விருந்தா? கொஞ்சம் கவனியுங்கள்!


திருமண விருந்துகள், பிறந்த நாள் விழா விருந்துகள், பெருநாட்கால விருந்துகள் இப்படி ஏதாவது ஒரு பெயரைச் சொல்லி விருந்துகள் நம்மிடையே நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

இங்கு நான் விருந்துகளைக் குறைச் சொல்லவில்லை. ஆனால் இந்த விருந்துகளுக்குச் செல்லுகிறோமே நமது பங்கு என்ன என்பது  பற்றித்தான் நாம் குறைச் சொல்ல  வேண்டியுள்ளது.

திருமண விருந்துகளுக்குச் செல்லுபவர்கள் கணவன் மனைவி பிள்ளைகள் என அனைவரும் செல்லுவது என்பது கட்டாயம் என்பது உண்மை.உறவுகள் என்னும் போது வேறு வழியில்லை போய் தான் ஆக வேண்டும்.

ஆனால் இந்தத் தாய்மார்கள் செய்கின்ற அட்டூழியங்கள்  நம்மைக் கண்ணிர் வடிக்க வைக்கின்றன.இன்றைய இளம் தாய்மார்களுக்குத் தங்கள் குழைந்தைகள் எவ்வளவு தான் சாப்பிடுவார்கள் என்னும் அளவு  கூட தெரியாதவர்களாக இருக்கிறார்கள்!

சின்னத்திரை நாடகங்களையெல்லாம் தங்கள் கைக்குள் வைத்திருக்கும் இவர்களுக்குத் தங்கள் பிள்ளைகளைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல்  இருப்பது நமக்கு வேதனையை அளிக்கிறது!

ஒரு மூன்று, நான்கு வயது குழந்தைக்கு ஒரு தாய் எந்த அளவு  சாப்பிடுவாரோ அதே அளவு சாப்பாட்டை அவருடைய குழந்தைக்கும் ஒரு தட்டில் வைத்து கொடுக்கும் கொடுமையை என்னவென்பது? அந்தத் தாய்க்கே தெரியும் அந்தக் குழந்தையால் அந்தச் சாப்பாட்டைச் சாப்பிட முடியாது என்பது.. ஆனாலும் அவர் அப்படித்தான் வைத்துக் கொடுக்கிறார்!  இத்தனைக்கும் அவர் குழந்தையிடம் ஆங்கிலத்தில் தான் பேசுகிறார். அப்படியென்றால் அவர் படித்தவர் தானே! ஆங்கிலத்துக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லையோ?

ஒரு வேளை சாப்பாடு இல்லாமல் சிரமப்படுபவர்கள் நமது நாட்டிலும் இருக்கிறார்கள் என்பதை இவர்கள் மறந்துவிடுகிறார்கள். அது மட்டும் அல்ல. நன்றாக வாழ்ந்த குடும்பங்கள் தீடீரென கணவன் இறந்து போனால் அந்தக் குடும்பங்கள் நடுவீதிக்கு வந்து விடுகிறார்கள் என்பதையும் இவர்கள் மறந்துவிடுகிறார்கள்.

சமீபத்தில் ஒரு குடும்பம் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் வெறும் இன்ஸ்டண்ட் மீ (NOODLES)  சாப்பிட்டு உயிர் வாழ்வதாக செய்திகள் வெளியாயின.

உணவை மதியுங்கள்; மிதியாதீர்கள்.  நாளை மிதிப்படாதீர்கள்!  அது விருந்தாக இருந்தாலும் மருந்து போல பாவியுங்கள்! விருந்து தானே என்று அலட்சியப்படுத்தாதீர்கள். எங்கு சாப்பிட்டாலும் அது உணவு தான்.

Tuesday 16 August 2016

வழி காட்டுங்கள்; வற்புறுத்தாதீர்கள்!


இப்போது நமது குழந்தைகளின் வாழ்க்கை என்பது நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மிகவும் துன்பமான வாழ்க்கை என்று தான் சொல்ல வேண்டும்.

பெற்றோர்கள் இந்தக் குழந்தைகளுக்குக் கொடுக்கின்ற இம்சைகள் சொல்லி மாளாது! குழந்தைகள் தங்களது இயல்பான வாழ்க்கையை அனுபவிக்க முடியவில்லை. அவர்கள் இயல்பான முறையில் வளர முடியவில்லை!

பெற்றோர்கள் குழந்தைகளின்  கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். தவறு என்று யாரும் சொல்ல மாட்டார்கள். ஒரு குழந்தை எல்லா வகையிலும் வளர வேண்டும். வெறும் கல்வி மட்டும் வளர்ச்சியைக் கொண்டு வந்து விடாது!

சமீபத்தில் ஓர் ஆசிரியை தற்கொலைச் செய்து கொள்ள முயற்சி சைய்தார் என்பதாக ஒரு செய்தி. காரணம், அவருடைய தலைமை ஆசிரியை அவருக்குக் கொடுத்த அழுத்தம், மனத்தொல்லைகள், மனக்கஷ்டங்களை  அந்த இளம் அசிரியையால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!

அந்த ஆசிரியையின் பெற்றோர்கள் அவரைப் படி படி என்று படிக்க வைத்தார்கள். நல்லது தான். ஆனால் பிரச்சனைகள் வரும் போது அவைகளை எப்படி எதிர்கொள்வது,  எப்படிக் கையாள்வது என்பதை அவர்கள் சொல்லிக் கொடுக்கவில்லை!

குழந்தைகளுக்கு எல்லா ஆற்றலும் வளர வேண்டும். அவர்கள் விரும்புகின்ற துறையில் அவர்களைப் படிக்க வைக்க வேண்டும். அவர்களுக்கு வழி காட்டலாம். ஆனால் அவர்களை வற்புறுத்தி இதைப்[படி, அதைப்படி என்றெல்லாம் துன்புறுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்.

இப்போது தங்கள் பிள்ளைகள் அனைவருமே பள்ளிப்பாடங்களின் முதலாவதாக வரவேண்டும் என்பது தான் இப்போதைய பெற்றோர்களின் ஆசை. நல்ல ஆசை தான்.  அதற்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். ஆனால் இன்றைய நிலையில் பார்க்கும் போது பிள்ளைகள் உபத்திரவப் படுத்தப்படுகின்றனர். ஒரு பாடத்தில் குறைவானப் புள்ளிகள் எடுத்தால் ஏதோ வானமே இடிந்து விழுந்தது போல பெற்றோர்கள் ஆர்பாட்டப்படுத்துகின்றனர்!

பெரியர்வர்களுக்கு உள்ள இரத்த அழுத்தம், மன அழுத்தம்  மன உளைச்சல் அனைத்தும் இப்போது குழந்தைகளுக்கும் வந்துவிட்டன!   ஓடி விளையாடி பாப்பா என்றெல்லாம் பெற்றோர்கள் இப்போது பாப்பாக்களிடம் சொல்லுவதில்லை! எல்லாவற்றுக்கும் ஒரு நேரமுண்டு: காலை எழுந்தவுடன் படிப்பு, மாலை  முழுதும் விளையாட்டு அதன் பின்னர் இரவும் மீண்டும் படிப்பு என்று ஒரு வழக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும்.

பிள்ளைகளுக்கு வழிகாட்டியாய் இருங்கள். இதைத்தான் படிக்க வேண்டும், இப்படித்தான் நீ வரவேண்டும் என்றெல்லாம் உங்கள் ஆசைகளை அவர்கள் மேல்  திணிக்காதீர்கள்!

பிள்ளைகளுக்கு வழிகாட்டியாய் இருப்பது பெற்றோர்களின் கடமை. வழிகாட்டுதல் வற்புறுத்தலாய் மாறும்போது அது பெற்றொரகளின் மடமை!. .

Friday 12 August 2016

நானாக நானில்லை.....!


நமக்கென்று ஓர் அடையாளம் உண்டு. நாம் நாமகவே இருக்க விரும்புகிறோம்.

ஆனாலும் நாம் விரும்பியபடி நம்மால் இருக்க  முடியவில்லை. வேலை என்று ஒன்று வந்தவிட்ட பிறகு நம்முடைய சுயத்தன்மையை இழந்து விடுகிறோம்!

நாம் வேலை செய்கின்ற இடத்திற்கு ஏற்ப நம்முடைய உடைகள் அணியப்பட வேண்டும். அது தான் நடமுறை. குறிப்பாக அரசாங்கப் பணியாளர்கள், காவல்துறை,ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் அனைவருக்கும் உடைக் கோட்பாடு உள்ளது. தனியார் நிறுவனங்களில்  கீழ் இருந்து மேல்வரை உள்ள ஊழியர்கள் ஒரே வித சீருடையை அணிகின்றனர்.

எல்லாமே ஒர் ஒழுங்கு, ஓர் கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த அணுகுமுறை.

இல்லாவிட்டால் என்ன நடக்கும்? தோடு, தொங்கட்டான், நீண்ட கூந்தல் என்று அலுவலகங்களே கலகலத்துப் போகும்! ஆணா, பெண்ணா என்று கூட தெரியாமல் போகும்!

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் அரசாங்கத்தில் பணி புரிந்தவர். எப்போதும் டை கட்டி, கம்பீரமான உடை அணிந்து  அலுவலகத்துக்கு வருபவர். அவர் பணி ஒய்வு பெரும் வரை அவர் அப்படித்தான் இருந்தார். அதுவரை எந்த மாற்றமும் இல்லை. பணி ஒய்வு பெற்றார். இப்போது தனது  மகனுடன் சேர்ந்து அவருக்குத் துணையாக மகனின் தொழிலில் உதவியாளராக இருக்கிறார். ஆனால் அவரின் உண்மையான அடையாளம் இப்போது தான் வெளியே வருகிறது!  நீண்ட கூந்தல் - தாராளமாக சடை போடாலாம் - காதுகளில் கடுக்கன், லொட-லொட சிலுவார் -   அடாடா.... ஆளே மாறிப் போனார்! அது தான் அவர்! ஏன் இப்படி மாற்றம் என்று கேட்டால்: நான் நானாக  இருக்கிறேன் என்கிறார்! பாவம்! இத்தனை ஆண்டுகள் அவர் அவராக இல்லை!

சராசரியாக நமது இளைஞர்களைப் பார்க்கும் போது நமக்குக் கோபம் வருகிறது. நீண்ட தலைமுடி, இல்லாவிட்டால் மொட்டை, கடுக்கன். தலையிலேயே "கபாலி" முடிவெட்டு, என்று செய்கின்ற அட்டுழியங்கள் நம்மைக் கோபப்பட வைக்கிறது! ஆனால் உண்மை அதுவா? இல்லை! அது நமது பொறாமையின் வெளிப்பாடு! நம்மால் முடியவில்லையே என்னும் கோபம் நம்மை அப்படிப் பேச வைக்கிறது! நாம்  நாமாக இருக்க முடியவில்லையே என்னும் ஆதங்கம்!  'அவர் என்ன சொல்லுவார்! இவர் என்ன சொல்லுவார்!' என்னும் பயம் நம்மை அடக்கி வைக்கிறது! உண்மையாகச் சொன்னால்: நான் அவனில்லை!

காவல்துறையில் பணிபுரிந்த ஓரு மலாய் நண்பபரைத் தெரியும். எப்போதும் ஒரு கோபப்பார்வை, கம்பீரமான நடை மற்றவர்கள் பயப்படும்பபடியான ஒரு தோற்றம். சில மாதங்களுக்கு முன் ஓய்வுப் பெற்றார். இப்போதோ அனைத்தும் தலைகீழ் மாற்றம்! தலையில் ஒரு தொப்பியைப் போட்டுக்கொண்டு, நீண்ட முடியை வளர்த்துக் கொண்டு, காலில் சிலிப்பரைப் போட்டுக்கொண்டு அஞ்சடிக்காரன் மாதிரி வந்துபோய்க் கொண்டு இருக்கிறார்! 'இது தான் நான்' என்கிறார்!

நாம் அனைவருமே அப்படித்தான்! நாம் நாமாக இருக்க முடியவில்லை! யார் என்ன சொல்லுவார்களோ என்கிற பயம் நம்மைக் கட்டுப்படுத்துகிறது! அல்லது கோபப்பட வைக்கிறது! இளைஞர்கள் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை!

ஒன்று செய்யலாம். வேலையில் இருக்கும் போது: நான் நானாக இல்லை! வேலை முடிந்த பிறகு: நான் அவனில்லை! என்று இரட்டை வேடைத்தில் நடிக்கலாம்! உங்கள் வசதி எப்படி?


Thursday 11 August 2016

ரஞ்சித் மீது ஏன் இந்த 'தலித்' தாக்குதல்?


 சில சமயங்களில் சில பிரச்சனைகளை நம்மால் புரிந்த கொள்ள முடியவில்லை!  அதுவும் தமிழ் நாட்டில், தங்களைப் படித்தவர்கள் என்று சொல்லிக்கொண்டும், ஊடகங்களில் பணிபுரிபவர்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்களும்  தேவை இல்லாதப் பிரச்சனைகளைக் கிளப்பிகொண்டிடிருப்பதும் உண்மையாகவே புரிந்து கொள்ள முடியவில்லை!

முதலில் கபாலி ஒரு தலித் படம் என்று முத்திரைக் குத்தினார்கள்! ரஜினிக்குத் தெரிந்து தான் இந்தப்படத்தை எடுத்தார்களா என்பது ஒரு கேள்வி!  ரஜினியைத் தாக்கிப் பேச முடியாது என்று தெரிந்ததும் அந்தக் கோபத்தை கபாலி இயக்குனர் ரஞ்சித் மேல் கொட்ட ஆரம்பித்துவிட்டனர்!

ஒரு திரைப்படத்தை திரைப்படமாகத்தான் பார்க்க வேண்டும். அதனை விட்டுவிட்டு வேறு எதை எதையோ கொண்டு வந்து திணிக்கின்றனர்!  எத்தனையோ படங்கள் - பிராமாணக் குடும்பங்களைப் பற்றி, கவுண்டர்களைப்பற்றி, தேவர்களைப்பற்றி, உடையார்களைப்பற்றி, இன்னும் ஆழ்ந்து போனால் நிறையவே இருக்கும் -  இந்தப் படங்கள் எல்லாம் திரைப்படம் வெளிவருமுன்னே இந்தச் சாதிப்படம் என்று முத்திரைக்குத்திக் கொண்டு வெளிவரவில்லை! அப்படித்தான் கபாலியும்!  அந்த அவசியம் இல்லை என்று தான் இத்தனை வருடங்களாகத் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறது!

ரஞ்சித் தனது முதல் படமான அட்டக்கத்தி அதன் பின்னர் மெட்ராஸ்  ஆகிய இரண்டு படங்களையுமே தான் வாழுகின்ற வாழ்க்கைப் பின்னணியை வைத்துத்தான்  இயக்கி இருந்தார்.  இப்போது குறை சொல்லுபவர்களுக்கு அப்படி ஒரு வாழ்க்கை இருப்பது கூட தெரியாமல் இருந்தது! அதனை அவர் வெளிக்கொணர்ந்தார். கபாலி திரைப்படம் மலேசிய சூழலில் எடுக்கப்பட்ட ஒரு படம். குண்டர் கும்பல்களைப் பற்றியான ஒரு படம். யாரும் எடுக்கத் துணியாத ஒரு கதையை  ரஜினியை வைத்து அவர் படமாக்கி இருந்தார். அவ்வளவு தான்! இதில் என்ன பிரச்சனை? ரஜினிக்கு முன்னேரே தெரியுமா....என்றால்? என்ன கேள்வி?  அவர் பேசிய வசனங்கள் என்ன என்பது அவருக்குத் தெரியாதா?

கபாலி வெளியான ஒரு சில தினங்களிலேயே ரஞ்சித் மீதான தாக்குதல்களை ஆரம்பித்துவிட்டனர் இந்தச் சாதி வெறியர்கள்! எந்த அளவுக்குத் தாக்குதல்கள் நடத்த முடியுமோ அந்த அளவுக்குத் தாக்குதல்கள் தொடர்கின்றன! நமக்குத் தெரிவதெல்லாம் இது ஒரு பொறாமையின் வெளிப்பாடாகவே தெரிகிறது!  மிக உயர்ந்த நிலையில் இருக்கும் நாம் - நம்மால் முடியாததை - நேற்று வந்த இவன் - தாழ்ந்த நிலையில் இருக்கும் இவன் -  எப்படி ரஜினியை வைத்து இப்படி ஒரு மாபெரும் வெற்றிப் படத்தை கொடுக்க முடியும் என்பதை நினைத்து நினைத்து பொறாமையால் வெந்து சாகின்றனர் இந்தச் சாதி வெறியர்கள்! அதனால் தான் கடந்த சில தினங்களாகவே ரஞ்சித் மீதான தலித் என்று சொல்லித் தாக்குதல்களை ஊடகங்கள் மூலமாக  வெகு வேகமாக பரப்பி வருகின்றனர்!

நாம் அனைவர்களும் தமிழர்கள். உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ நாம் அனைவரும் தமிழர்கள். உள்நாடோ, வெளிநாடோ நாம் அனைவரும் தமிழர்கள். வெளிநாடுகளில் பார்க்கும் போது நாம் தமிழர்கள் என்று தான் அறிமுகப்படுத்திக் கொள்ளுகிறோம். தமிழ் நாட்டுக்கு நாங்கள் வரும் போது நீங்கள் தமிழர்கள் என்று தான் நினைத்துப் பேசுகிறோம். இங்கிலாந்தில் ஒரு தமிழரைப் பார்க்கும் போது "நீங்கள் தமிழரா?" என்று தான் ஆச்சரியப்படுகிறோம். ஏன்? வேறு மாதிரி எதுவும் உண்டா? தமிழனை தமிழனாகத்தானே பார்க்க வேண்டும்? வேறு மாதிரி எப்படிப் பார்ப்பது? கோத்திரம் குலம் எல்லாம் பார்த்துவிட்டுத்தான் பேசுவீர்களா?

 இந்தப் பிரச்சனையையும் தீர்த்து விட முடியும். சுப்பர் ஸ்டார், ரஜினி வாயைத் திறந்தால் போதும் அவன் அவன் கப்சிப் என்று அடங்கி விடுவான்! அது தான் நடக்கும்! அது வரை "சும்மா! வேலை வெட்டி இல்லாதப் பசங்க!" என்று இந்த வெட்டிகளை எல்லாம் வெட்டிவிட்டு நமது வேலைகளைப் பார்க்க வேண்டியது தான்!

தமிழர்களைத் தமிழர்களாகப் பாருங்ககள். தமிழன் அல்லதவன் தமிழ் நாட்டை ஆளுகின்றான்! அது உங்களுக்கு வெட்கமாக இல்லை! ஆனால் ஒரு தமிழன் வெற்றிகரமாக ஒரு திரைப்படம் எடுத்தால் ஆயிரம் கேள்விக்கணைகள்! தமிழினம் வெற்றி பெறும்!

தமிழன் தலை நிமிர்வான்! வெற்றி பெறுவான்!


Sunday 7 August 2016

நண்டு கதை - பிறந்த கதை!



நாம் அடிக்கடி பயன்படுத்தியும்,  பேசியும் வரும் இந்த  நண்டுக் கதை இப்போது உலகத்தமிழரிடையே  பரவலாகப் பேசப்படுகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை! நமது மலேசிய எல்லைக்குள்ளேயே சுற்றிச்சுற்றி வந்த இந்த நண்டுக் கதை இப்போது கபாலி திரைப்படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமாகிவிட்டது   என்பதும்  உண்மை!

இந்த நண்டுக்ககதையின் பின்னணி என்ன, இதன் தொடக்கம் எங்கிருந்து ஆரம்பமாகிறது என்று கொஞ்சம் அலசலாம். இது நூறு விழுக்காடு சரி என்று நான் சொல்லமாட்டேன். ஆனால் ஒரளவு சரியானது என்பதே எனது ஊகம்!

இதன் பின்னணி ஓர் இருபது-இருபத்தைந்து ஆண்டுகள் பின்னோக்கிப் போக வேண்டும். அப்போது காப்புறுதித் துறையில் மிகவும் பிரபலமாக விளங்கியவர்  போல் நாயுடு (Dr.Paul Naidu) அவர்கள். காப்புறுதித் துறையில் மிகப்பெரிய ஜாம்பவான். பெரும் வெற்றியாளர். அத்துறையின் (NAMLIFA) வின் தலைவராகவும் இருந்திருக்கிறார். இவர் தெலுங்கு சங்கத் தலைவராகவும் பிற்காலத்தில் பதவி வகித்திருக்கிறார்.

காப்புறுதித் துறையில் மிகப்பல இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர். இவர் மூலம் பல இளைஞர்கள்  பொருளாதார வெற்றி அடைந்திருக்கின்றனர். காப்புறுதித்துறையில் மறக்க முடியாத நபர் பால் நாயுடு.

ஓரளவு இந்தத் காப்புறுதித் துறையோடு சம்பந்தப்பட்டவன் நான். அதனால், எனக்குத் தெரிந்தவரை இந்த நண்டுக்கதையை காப்புறுதி கூட்டங்களில் அடிக்கடி சொல்லி வந்தவர் பால் நாயுடு. வேறு யாரும் இந்த நண்டுக்கதையைச் சொல்லி நான் கேட்டதில்லை! அவர் தான் இந்த நண்டுக்கதையின் மூலவர், முதல்வர் என்று சொல்லலாம்! அவரைத் தவிர வேறு யாரும் இந்த நண்டுக்கதையைப் பயன்படுத்தியதில்லை! அவர் மறைந்த பின்னர் தான் மற்றவர்கள் இந்தக் கதையைத் தொடர ஆரம்பித்தனர்!

அவருக்கு எங்கிருந்து இந்த நண்டுக்கதையைத் தேடிக் கண்டுபிடித்தார் அல்லது அவரே இந்தக் கதையை ஜோடித்தரா என்பது புரியாத புதிர்! இரண்டுமே - ஏறுவதும் இறங்குவதும் - தமிழ்  நண்டுகள் என்பதாகத்தான் அவர் அடையாளங் காட்டுகிறார்!

அவர் நோக்கம் நல்ல நோக்கமாகவே இருந்திருக்கக் கூடும். அவரை யாரும் குறை சொன்னது இல்லை. நல்ல மனிதர் என்று பெயர் எடுத்தவர்.  ஆனாலும் இப்போதைய நிலையில் தமிழக,  தெலுங்கு தேசத் தலைவர்களின் தமிழர் எதிர்ப்புப் போக்கைப் பார்க்கின்ற போது நாமும் இவரைச் சந்தேகக் கண் கொண்டு பார்க்க வேண்டியுள்ளது!

இதன் மூலம் தமிழர்களிடையே ஓர் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்துகிறாரா என்னும் எண்ணம்வருவது இயற்கையே! தமிழர்களிடையே ஒற்றுமை இல்லை இல்லை என்று சொல்லியே ஓர் ஒற்றுமை இல்லாத சூழல் உருவாகிவிட்டது! அதே போல இந்த நண்டுக்கதையையும் சொல்லி தமிழர்கள் ஒருவருக்கொருவர்  முன்னேறாதவாறு ஓர் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்களோ என்று ஐயப்பட வேண்டியுள்ளது!

இந்தத் தவறானப் போக்கிலிருந்து நாம் விடுபட வேண்டும். நம்மிடையே ஒற்றுமை உண்டு என்பதை வலியுறுத்த வேண்டும். நண்டுக் கதை நமக்குறியது அல்ல என்பதைத் தெளிவாக்கப்பட வேண்டும்.

நாம்  என்ன செய்யலாம்? தமிழர்கள் ஒற்றுமையானவர்கள் என்பது ஒன்று. மற்றொன்று நண்டுக்கதை தமிழர்களுக்கு உரியது அல்ல என்பது.அது தான் உண்மையும் கூட! இதுபற்றி பேசாமலும், எழுதாலும் இருந்தாலே போதும். தமிழ் நண்டுகள் மேலே ஏறுமே தவிர எந்த நண்டுகளையும் இழுக்காது என்பதை உலகிற்கு நிருபிக்க வேண்டும்! வாழ்க தமிழர்!

Friday 5 August 2016

பூனை குறுக்கே போனால் என்ன?



காலையில் வீட்டை விட்டுக் கிளம்பும் போது பூனை குறுக்கே போனால், சகுனம் சரியில்லை என்று சொல்லுபவர்கள் நம்மிடையே உண்டு! பூனையிலும் கூட கறுப்பு, வெள்ளை என்று வண்ணம் பார்ப்பவர்கள் வேறு!

இதெல்லாம் தமிழ்ச் சினிமா நமக்குக் கற்றுக் கொடுத்த பாடங்கள்!

சீனர்களும்,, இந்தியர்களும் அதிகமாக வசிக்கும் வீடமைப்புப் பகுதிகளில் நாய்களைத்தான் நாம் அதிகம் பார்க்க முடியும். பொதுவாகவே  நாம்,  நாய் விரும்பிகள்! மலாய்க்காரர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பூனைகள் அதிகம் பார்க்கலாம். முஸ்லிம்கள் நாய் வளர்ப்பதை விரும்புவதில்லை!

நாய்கள் குறுக்கே போனால் ஏதேனும் சகுனம் இருக்கிறதா என்பது தெரியவில்லை!  ஆனால் என்னைப் போல மலாய் இனத்தவர் வாழ்கின்ற பகுதிகளில் வசிப்பவர்கள் இந்தப் பூனை பிரச்சனையை எப்படி சமாளிப்பது? எந்த நேரத்திலும் பூனைகள் குறுக்கே மறுக்கே நடந்து கொண்டு தான் இருக்கும்! அவைகளுக்குக் கால நேரம் இல்லை!  எலிகளைக் காவு கொள்ள இரவு நேரம் தான் அவைகளுக்கு நல்ல சகுனம்! பகல் நேரத்தில் தூங்கிக் கொண்டும், கனவு கண்டு கொண்டும் இப்படி அப்படி நடந்து கொண்டும் இருக்கும்!

சரி! நான் ஒரு பழக்கத்தை வைத்திருக்கிறேன். காலையில் காரில் போகும் போது பூனையைக் கண்டால் "ஆகா! இன்று அற்புதமான நாள்! வெற்றி! அனைத்திலும்  வெற்றி!" என்று மகிழ்ச்சியடைவேன்!  வேறு மாதிரி சொல்ல எனக்குப் பழக்கமில்லை!

வெற்றி தான் வாழ்க்கை என்று எந்நேரமும் மனதில் எண்ண ஓட்டம் ஆக்கிரமித்திக் கொண்டிருக்கும் போது நாம் ஏன் எதிர்மறையாக சிந்திக்க வேண்டும்?  நேர்மறையாகவே சிந்திப்போமே!

நம்மிடையே பலவிதமான நம்பிக்கைகளும், சகுனங்களும் வேருன்றிவிட்டன. அது எப்படி, காரணங்கள் என்ன என்பதெல்லாம் நமக்குத் தெரியாது! ஏதோ நமக்குத் தேவைப்பட்ட போது இப்படிச் சில நம்பிக்கைகளை நாம் வளர்த்துக் கொண்டோம்!

தொலைத் தொடர்புகள் குறைவாக இருந்த காலக்கட்டத்தில் தோட்டப்புறங்களில்  பல சகுனங்கள், பல நம்பிக்கைகள்! அதில் ஒன்று காக்காய் கத்தினால் உடனே "ஊரிலிருந்து தபால் வரும்" என்று நம்பிக்கை! அப்படி வந்தும் இருக்கிறது! இதுக்கும் அதுக்கும் என்னத் தொடர்பு என்று நினைத்துப் பார்த்தால் ஒன்றும் இருக்காது! ஆனால் அது நடந்தது! அந்தக் காலக்  கட்டத்தில் காக்காய்களைத் தோட்டப்புறங்களில் பார்ப்பதும் அரிது! வீட்டிற்குள் பட்டாம்பூச்சி புகுந்துவிட்டால் "இன்று யாரோ, விருந்தாளி வீட்டிற்கு வருகிறார்! என்று சொல்லுவார்கள்! அதுவும் நடந்திருக்கிறது! நாய் இரவு முழுவதும் குரைத்துக் கொண்டே இருந்தால் ஏதோ மரணம் நிகழப்போவது என்று ஊகிக்கலாம்! இவைகள் எல்லாம் அந்தக் காலத்தில் தோட்டுப்புற  சூழக்கு ஏற்ப ஏற்பட்ட சகுனங்கள் அல்லது நம்பிக்கைகள்! நம்மைச் சுற்றி  இருக்கும் உயிரினங்களுக்கும் நமது உள்ளுணவர்களுக்கும்
ஏதோ ஓர் தொடர்பு இருக்கிறது போலும்!

இப்போது இவைகள் எல்லா மறக்கப்பட்டு விட்டன!  காரணம் இப்போது எல்லா வீடுகளிலும் நாய்கள், எல்லா வீடுகளிலும் பூனைகள், காக்காய்கள் தங்க இடம் இல்லாமல் அவைகளும் நம்மைச் சுற்றி வந்துவிட்டன! குரங்குகள் சுற்றிக் கொண்டிருந்த இடங்களை நாம் வளைத்துப் போட்டு விட்டோம்! இப்போது குரங்களும் நம்மைச் சுற்றி ஊர்வலம் வந்து கொண்டிருக்கின்றன!

ஒரு முறை நான் தனி ஆளாகக் காரில் போய்க் கொண்டிருந்த போது ஒரு காக்கை ஒரு பாம்பை அதன் தலையில் கொத்தோ கொத்தென்று கொத்திக் கொண்டே  பாதையில் இழுத்துக்கொண்டிருந்தது. பாம்பின் மேல் உள்ள ரத்தத்தைப் பார்த்து அதிர்ந்து போனேன். மனதில் ஏதோ இனம் புரியாத ஒரு உணர்வு. அன்று என் மனைவி மிகவும் கடுமையாக நோய்வாய்ப்பட்டு  அதிலிருந்து மீள நீண்ட நாள்காளாகின! இதற்கும் அதற்கும் ஏதேனும் சம்பந்தமுண்டா என்பது எனக்குத் தெரியவில்லை! அப்போதெல்லாம் இப்போது போல எதனையும் நேர்மறையாக எண்ணும் பழக்கம் ஏற்படவில்லை!

இது போன்ற நிகழ்வுகள் ஏதோ ஒன்றினைச் சொல்ல வருகின்றனவா  என்னவோ தெரியவில்லை!

ஆனாலும் சகுனங்கள் பெரும்பாலும் மூட நம்பிக்கைகளே! பூனைக்கு ஒரு சகுனம், பல்லிக்கு ஒரு சகுனம், காக்கைக்கு ஒரு சகுனம் - இப்படி சகுனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நமது வாழ்க்கை முறையையே குட்டிச்சுவராக்கிக் கொண்டவர்கள் நாம்!

நாம் பெரும்பாலும் சகுனங்களை நம்புபவர்கள் அல்ல! ஆனால் நமது சினிமாப் படங்கள், சின்னத்திரைகள் ஏதேனும் ஒரு வகையில் நமக்கு இந்தச் சகுனங்களை ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன!

இனி பூனை குறுக்கே போனால் என்ன? போனால் பொன் கிடைக்கும் ஏன்று நினைத்துக் கொள்ளுங்கள்! அப்படி கிடைக்காவிட்டாலும் ஏதாவது நல்லது நடக்கும்!  என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே!





Thursday 4 August 2016

இதோ! இந்த நிமிடம் உண்மையானது!


இதோ! இந்த நிமிடம் தான் உண்மையானது! இதோ இப்போது நாம் பேசுகிறோம்; இப்போது நாம் எழுதுகிறோம்; இப்போது நாம் சிந்திக்கிறோம். இப்போது நாம் வேலை செய்து கொண்டிருக்கிறோம்; .இப்போது நாம் பாடுகிறோம்;  இப்போது நாம் நடிக்கிறோம். இது தான் உண்மை.

பிறகு, அப்புறம், இன்று மாலை, நாளைக் காலை, அடுத்த மாதம்  இவைகளெல்லாம் உண்மையில்லை! நாம் அதுவரை இருந்தால் தான் அது உண்மை!

அதனால் அதனை நாம் ஒதுக்கிவிடுவோம்!  இந்த வினாடி, இப்போது நம் கண்முன்னே என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்வோம். எது முக்கியமோ அதனைச் செய்ய ஆரம்பிப்போம்.

அடுத்த வாரத்திற்கு நாம் செய்ய வேண்டிய வேலைகள் இருந்தால் அதற்கான ஆயத்த வேலைகளைச் செய்ய ஆரம்பிப்போம். அடுத்த ஆண்டு ஏதோ ஒரு புதிய திட்டம் இருக்கிறதா அதற்கானத் தயாரிப்புக்களில் இறங்குவோம். எதையும் நேரம் வரும்வரை காத்திருக்கத் தேவை இல்லை!

இப்போது நமது கைகளில் இருக்கின்ற வேலைகளை முடிப்போம். தள்ளிப்போடும் பழக்கம் தள்ளப்பட வேண்டியது. செய்கின்ற நேரத்தில் செய்யாது அதனைத் தள்ளிபோட்டு அதன் பிறகு அது பற்றி வேதனைப்படுவது என்பது நமது வாடிக்கை!

இன்றே செய்க! அதனை நன்றே செய்க! அந்த நன்றையும் இன்றே செய்க! என்பது தான் முது மொழி.  இங்கு இன்றே எனப்படுவது இந்த நிமிடம், இந்த வினாடி எனக் கொள்க! இன்று இந்த இருபத்து நான்கு மணி நேரம் நம்முடையதா என்பது நமக்குத் தெரியாது! தெரியாத ஒன்றைபற்றிக் கவலைப்படாமல் தெரிந்த, நம் கண்முன்னே இருக்கின்ற இந்த நேரத்தை நமக்கும் பிறருக்கும் பயன் படும்படியாக பயன் படுத்துவோம்!

இதோ! உடனே செயல் படுவோம்!  நாம் வீணாக்குகிற ஒவ்வொரு வினாடியும் மீண்டும் நமக்குக் கிடைக்கப் போவதில்லை என்பதை மனதிலே இருத்திச் செயல்படுவோம்! பணத்தை இழந்தால் மீண்டும் சம்பாதிக்கலாம். ஆனால் நேரத்தை இழந்தால் போனது போனது தான்!

இதோ! இந்த நிமிடத்தைச் சரியாகப் பயன் படுத்துங்கள்! வெற்றி பெறுங்கள்! வாழ்த்துகள்!

Wednesday 3 August 2016

கேள்வி - பதில் (27)


கேள்வி

கபாலி திரைப்படத்திற்குப் பின்னர் தமிழ் திரைப்படவுலகிள் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டா?

பதில்

ஏற்பட வாய்ப்புண்டு என்றே நான் நினைக்கிறேன்.

கபாலி படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ஒரு கூட்டத்தில் பேசும் போது தனது சினிமா வாழ்க்கையில் தனக்குப் பிடித்த இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமனும், பா.ரஞ்சித் இருவரைப் பற்றி குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். இந்த இரு இயக்குனர்களும் தயாரிப்பாளர்களின் செல்லப் பிள்ளைகள் என்று குறிப்பிட்டிருக்கிறார்!

எஸ்.பி.முத்துராமன் ரஜினி வைத்து 25 படங்களை இயக்கி மாபெரும் வெற்றி பெற்றவர். எஸ். தாணுவின் கருத்துப்படி இந்த இரு இயக்குனர்களுமே தயாரிப்பாளர்களின் நலனை முன்னிறுத்துபவர்கள். தயாரிப்பாளர்களுக்கு எந்தவித நட்டத்தையும் ஏற்படுத்தக்கூடாது என்று நினைப்பவர்கள். இவர்கள் இருவருமே தயாரிப்பாளர்கள் கொடுக்கின்ற மதிப்பீட்டுக்குள்ளேயே தங்களது படங்களை முடித்துக் கொடுப்பவர்கள் என்று பெயர் எடுத்தவர்கள்.

இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் இப்போது எந்தப் படங்களையும் இயக்குவதில்லை. அடுத்து நிற்பவர் பா.ரஞ்சித். அவருடைய முன்னைய இரு படங்களும் - அட்டைக்கத்தி, மெட் ராஸ் - இரு படங்களுமே குறைந்த செலவில் நிறைவாக எடுக்கப்பட்டப்  படங்கள். வெற்றிகரமாக ஓடிய படங்கள்! ஏன்? கபாலி ஒரு பெரிய பிரமாண்ட தயாரிப்பாக இருந்தாலும் அவர் கபாலியில் ஏகப்பட்ட சிக்கனத்தைக் கையாண்டவர்! பணத்தை வாரி இறைக்க அவர் சம்மதிக்கவில்லை! அது ஒன்றே போதும் தயாரிப்பாளர்களை மனங்குளிரவைக்க! பணத்தைக் கொட்டிக்கொடுக்க தயாரிப்பாளர் தயராக இருந்தாலும் அவர் அதனை ஏற்கவில்லை! தேவை என்றால் மட்டுமே செலவுகளை ஏற்பவர்! இது தான் எஸ்.பி.முத்துராமனின் அவர்களின் வழியுங்கூட! அதனால் தான் அவர் தயாரிப்பாளர்களின் செல்லப்பிள்ளையாக இருந்திருக்கிறார்! அத்தோடு 75 படங்களையும் இயக்கியிருக்கிறார்!

இந்த முன்மாதிரிகள்  இனி எல்லாத் தயாரிப்பாளர்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமையக் கூடிய சாத்தியம் உண்டு!

அதுமட்டும் அல்லாமல் மக்களின் பிரச்சனைகளை வெளிக்கொணர வேண்டும் என்னும் ஒரு நினைப்பையும் கபாலி படம் உருவாக்கியிருக்கிறது! பல பிரச்சனைகளை - குறிப்பாக ஏழை பாழைகளின் பிரச்சனைகள் - வெளி வருவதில்லை! அனைத்தும் அடக்கி ஒடுக்கி மறைக்கப்படுகின்றன!  அரசியல்வாதிகள் இப்போது ஒரு புதிய வழியைக் கையாளுகின்றனர்.  எங்கேயாவது ஒரு அநீதி நடந்துவிட்டால் உடனே அந்தக் குடும்பத்தினருக்குக் கொஞ்சம் பணத்தைக் கொடுத்து மறைத்துவிடுகின்றனர்!

இப்போது கபாலி ஒரு புதிய பாதையைக் காண்பித்துக் கொடுத்திருக்கிறது.. புதிய இயக்குனர்களுக்கு ஒர் உத்வேகத்தைக் கொடுத்திருக்கிறது கபாலி. மக்களின் அன்றாடப் பிரச்சனைகளைத் திரை உலகம் கையில் எடுத்திருக்கிறது என்று சொல்லலாம்.

இனி வருங்காலங்களில் மக்களின் பிரச்சனைகளைச் சினிமா உலகம் கையிலெடுத்துப் பயணிக்கும் என்று நம்பலாம்!

கபாலியின் வரவு தமிழ்த் திரை உலகிற்கு ஒரு புதிய வரலாறு படைக்கும்!


Tuesday 2 August 2016

கேள்வி-பதில் (26)


கேள்வி

அண்மையில் வெளியான ரஜினியின் கபாலி ஒரு தலித் படம் என்கிறார்களே! சரியா?

பதில்

தங்கத் தமிழ் நாட்டில் இப்படி எதையாவது சொல்லி புரட்சி செய்வதற்கென்றே  ஒரு கூட்டம் இருக்கின்றது!  நமது மண்ணில் இப்படிப் பேசினால் ஆளையே மூட்டைக்கைட்டி விடுவார்கள்!

ஒரு சில வசனங்களை வைத்து இப்படி தலித் முத்திரைக் குத்துவது ஏற்புடையது அல்ல! இது  போன்ற வசனங்கள் தமிழ்ப்படங்களுக்குப் புதிதும் அல்ல!

சான்றுக்கு, கலஞர் கருணாநிதியின் படங்களில் இது போன்ற வசனங்கள் எல்லாக் காலங்களிலும் உண்டு. அந்த வசனங்களின் மூலம் கலைஞர் தான் பேசப்பட்டாரே தவிர மற்றபடி அந்த வசனங்கள் எந்தத் தாக்கத்தையும் சமுதாயத்திற்குக்  கொண்டு வரவில்லை! பார்த்துவிட்டு, பேசிவிட்டு, ரசித்துவிட்டு போய்விடுவார்கள்! அதனை மறந்தும் விடுவார்கள்!

வேறு ஒரு நடிகர் மூலம் இதே வசனங்களை இயக்குனர் பா.ரஞ்சித் வேறு படங்களில் பேச வைத்தாலும்  கூட இந்தப் படத்தின் மூலம் வந்தத்  தாக்கத்தை அது ஏற்படுத்தாது!

காரணம் அது தான் சுப்பர் ஸ்டார் ரஜினி!  ரஜினி அந்த வசனங்களைப் பேசும் போது அதற்கான கணம் வேறு; அதற்கான பலம் வேறு; அதற்கான வலு வேறு! இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த வசனங்களைப் பேச ரஜினி ஒத்துக்கொண்டாரே அது சாதாரணமான விஷயம் அல்ல! அந்த வசனங்களின் மூலம் வரும் எதிர்ப்புக்களையும் அவர் அறிந்தவர் தான்! இருந்தும் அவர் அந்த வசனங்களைப் பேசினாரே அது தான் ரஜினி! அவருக்கும் சமுதாய நோக்கம் உண்டு என்பதை உணர்ந்து அந்த வசனங்களைப் பேசி இருக்கிறார்!

நாம் இயக்குனர் பா.ரஞ்சித்தையும் பாராட்ட வேண்டும். வேறு எந்த இயக்குனரும் ரஜினியிடம் சொல்லத் தயங்கும் ஒரு விஷயத்தை மிகவும் லாவகமாகப் பிரச்சனையைக் கையாண்டிருக்கிறாரே அவருக்கு நமது வாழ்த்துகள்!

சுப்பர் ஸ்டார் அரசியலுக்கு வருவாரா என்பது நமக்குத் தெரியாது. அவர் பேசிய அந்த வசனங்களே போதும்! அதுவே பெரிய அரசியல்! எத்தனையோ படங்களில் அவர் நடித்திருக்கிறார்.  ஆனால் தனது குணசித்திர நடிப்பையும் வெளிகாட்டி, தனது சமூகக் கடப்பாடுகளையும் கொட்டியிருக்கிறாரே அவருக்கு ஒரு பெரிய மகிழ்ச்சி! மகிழ்ச்சி தலைவரே!

இது தலித் படம் என்று சொன்னால் - மன்னிக்கவும் - நமது மலேசிய மண்ணில் சொன்னால் நிச்சயம் உதை படுவார்கள்! இது ஓர் அற்புதமான தமிழ்ப்படம்! பாராட்டுவோம்! 

Monday 1 August 2016

கபாலி.......மகிழ்ச்சி......டா...!



கபாலி திரைப்படத்தைப் பற்றி  என்ன  சொல்லுவது?

அது வழக்கமான ரஜினி படம் இல்லை!  வழக்கமாக நீங்கள் எதிர்பார்க்கும் சுப்பர் ஸ்டார் படமில்லை! நீங்கள் பட அரங்கத்திற்குள் புகுமுன்னே அந்த எதிர்பார்ப்புக்களை எல்லாம் கழட்டி வைத்துவிட்டுப் போங்கள்!

அது ரஜினியின் வயதுக்கு ஏற்ப எடுக்கப்பட்ட ஒரு படம்.  வயதான கதாபாத்திரம். அசத்தியிருக்கிறார் ரஜினி. தனக்கும் நடிக்க வரும் என்பதை மீண்டும் உறுதிபடுத்தியிருக்கிறார்.

உடல்நிலைக் காரணமாக ஒரு சோர்வு அவரிடம் காணப்படுகிறது. அதனையும் கூட - அது 25 ஆண்டு கால சிறைவாசம், குடும்பத்தினரின் பிரிவு தான் காரணம் - என சாமர்த்தியமாகப் பயன் படுத்தியிருக்கிறார் இயக்குனர்! நடிப்பில் ஓர் அமைதி. நடப்பதில் கூட ஒரு மென்மை. குறைவாகப் பேசுவது. தனது மனைவியையும், மகளையும் நினைத்து அடிக்கடிக்  கண் கலங்குவது. ஆனால் சண்டை என வரும்போது அந்தத் துள்ளல் துள்ளி விளையாடுகிறது! அது தான் ரஜினி!

இந்தத் திரைப்படம் நமது மண்ணின் மைந்தர்களின் கதை. குண்டர் கும்பல்களின் கலாச்சாரம் எந்த அளவுக்கு நமது இளைஞர்களிடம் பின்னிப் பிணைந்திருக்கிறது  என்பதான் கதை.

நாம் அறிந்த கதை தான். ஆனால் அதற்கான தீர்வு தான் என்ன என்பது நம்மிடம் இல்லை!  இந்தக்  குண்டர் கும்பல்களை அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொள்ளுகிறார்கள் தங்களின் வளர்ச்சிக்காக! காவல்துறையினரும் கண்டு கொள்ளுவதில்ல! "உங்களுக்குள்ளேயே அடித்துக்கொண்டு சாகுங்கடா..!" என்று இவர்களும் அவர்களை  ஊக்குவிக்கிறார்கள்!

ஒரு தீர்வும் இல்லாத ஒரு நிலையில் "கபாலி" மூலம் சில செய்திகளைச் சொல்ல வருகிறார் இயக்குனர் பா.ரஞ்சித். அந்தச் செய்தி சேர வேண்டிய இடத்தில் சேர்ந்தால் நமக்கும் மகிழ்ச்சியே! சேரும் எனவும் நம்புவோம்!

கபாலி இயக்குனர்  பா.ரஞ்சித் பல வழிகளில் தாக்கப்படுகிறார்! நான் அவரைத் தற்காக்கிறேன்! ரஜினி கோட் சூட் போடுவது, கால்மேல் கால் போட்டு உட்காருவது என்பது நமக்குள்ள  செய்தி அல்ல! இதனைத் தவறு என்று சொன்னால் சொன்னவன் தான் உதை வாங்க வேண்டும்! அது நமது கலாச்சாரம். உச்சக்கட்ட காட்சிகளில் பேசப்படும் வசனங்கள் நமக்கானதல்ல!  ஆனாலும் இயக்குனரைப் பாராட்டுகிறேன். இதே வசனங்களை வேறு படங்களிலும் பேசலாம். ஆனால் ரஜினி பேசும் போது அதற்கான வலு அதிகம்; பலம் அதிகம்! ரஜினி ஓர் அரசியல்வாதியாய் ஆகியிருந்தால் கூட இப்படிப் பேசியிருக்க முடியாது! வலிந்து ஆனால் ரஜினி அறிந்து அந்த வசனங்களைப் பேச வைத்திருப்பது என்பது ரஜினிக்கும் ஒரு சமூகக் கடமை உண்டு என்பதை அறிந்தும் புரிந்தும் ரஜினி பேசியிருக்கிறார்!  அவருக்கு நமது வாழ்த்துகள்!

படம் ஷங்கர் போன்று பிரமாண்டம் இல்லை என்றாலும்  கேமராமேன் தனது ஒளிப்பதிவின் மூலம் பிரமாண்டமாக காட்சிகளை நம் கண் முன்  கொண்டு வந்திருக்கிறார். படம் முழுவதுமே ஒரு பிரமாண்டம் தெரிகிறது. வாழ்த்துகள் நண்பரே!  இசையமைப்பு மிக அற்புதம்! நெருப்புடா...!  நான் சொல்ல ஒன்றுமில்லை, பின்னணி இசை இனிமையோ இனிமை! மென்மை, பயங்கரம் அனைத்தையும் நன்கு வெளிப்படுத்யிருக்கிறார், சந்தோஷ் நாராயணன்! வாழ்த்துகள்!

கபாலி! மகிழ்ச்சி!......மகிழ்ச்சிடா...!