Monday, 29 January 2018

98 வயது பாட்டிக்கு பதமஸ்ரீ விருது!


இந்த 2018 - ம்  ஆண்டு இந்திய குடியரசு தினத்தன்று இந்திய அரசாங்கம் 98 வயது பாட்டிக்கு  பத்மஸ்ரீ விருது  கொடுத்த கௌரவித்திருக்கிறது!

தமிழ் நாட்டின் கோயம்புத்தூரைச் சேர்ந்த பாட்டி ஞானம்மாள் என்பவர் தான் அவர். 
பாட்டியின் சாதனை என்ன?  தனது 8-வது வயதில் தனது தந்தையிடமிருந்து யோகா கலையைக் கற்க ஆரம்பித்தார். பாட்டிக்கு யோகக் கலையில் 90 ஆண்டு கால அனுபவம் உண்டு. இவரிடம் கடந்த 45 ஆண்டுகளாக சுமார் பத்து இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் யோகாசனத்தைக் கற்றிருக்கிறார்கள்! ஆரம்பித்த நாளிலிருந்து இன்றுவரை சுமார் 100 பேர் ஒவ்வொரு நாளும் யோகாவை இவரிடம் கற்றுக் கொண்டு வருகின்றனர்!

பாட்டிக்கு 2 மகன்களும், 3 மகள்களும், 11 பேரன் பேத்திகளும் உள்ளனர்.

இவரிடம் யோகாசனத்தைக் கற்றுக் கொண்டவர்களில் சுமார் 600 பேர் உலக அளவில் யோகாசன ஆசிரியர்களாக உள்ளனர். இவருடைய மாணவர்கள் பலர் உலக அளவில் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப்பதக்கங்களையும்    வென்றிருக்கின்றனர். 

பாட்டி யோகாசனம் செய்கின்ற நாளிலிருந்து இது  வரை  உடல் நலம் இல்லை என்று முடங்கியது கிடையாது! மருத்துவமனையே அவரைக் கண்டு அஞ்சியது  எனலாம்! அந்த அளவுக்கு வலுவான உடலையும்  மனதையும் யோகாவால் பெற்றிருக்கிறார்  பாட்டி!

யோகாசானம்  மூலம்  பல  விருதுகளைப்  பெற்றிருக்கிறார் இந்த  ஞானம்மாள்  பாட்டி!  இதற்கு முன்னர் குடியரசு  தலைவரிடம்  பெண்  சக்தி  விருதையும்   பெற்றிருக்கிறார். இப்போது  பதமஸ்ரீ  விருதையும்  பெற்றிருக்கிறார்  பாட்டி. இன்னும் இதை விட பெரிய விருதைகளையும்  பெற  வேண்டுமென  இறைவனைப்  பிரார்த்திப்போம். 

Sunday, 28 January 2018

ஆசிரியர்களுக்கும் தடை விதிக்க வேண்டும்!


பினாங்கு மாநில இடைநிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியை ஒருவரின் கைப்பேசி காணாமல் போனாதாகக் கூறி ஒரு மாணவியைக் கடுமையாக அச்சுறுத்தப் போக இப்போது அந்த மாணவி மருத்துவமனையில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார். 14 வயது மாணவியான வசந்தபிரியா தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவருக்கு நெருக்கடி கொடுத்தாக அவருடைய ஆசிரியையும், அவருடைய கணவரும் மேலும் மூன்று ஆசிரியர்களும் அவரைக் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக  கூறப்படுகின்றது.வசந்தபிரியா தான் தற்கொலை செய்து கொள்ளும் முன்னரும் அவர் அந்தக் கைப்பேசியை திருடவில்லை எனவும் கடிதம் எழுதி வைத்திருக்கிறார். 

இப்போது நாம் கேட்பதெல்லாம் கைப்பேசி பள்ளி நேரத்தில் அதுவும் வகுப்பறையில் ஆசிரியர்களுக்குத் தேவை தானா?  அதனை வகுப்பறையில் ஏன் வைத்திருக்க வேண்டும்?  அவர்களுடைய விலைமதிப்பற்ற கைப்பேசிகளை ஏன் பள்ளிகளுக்குக் கொண்டு வர வேண்டும்?

இதனைக் கல்வி அமைச்சு கடுமையான பிரச்சனையாகக் கருத வேண்டும். பள்ளி நேரத்தில் மாணவர்களுக்கு எப்படி கைப்பேசி தேவை இல்லையோ அதே போல ஆசிரியர்களுக்கும் கைப்பேசி தேவை இல்லை.  அப்படியே கைப்பேசி தொலைந்து போனாலும்  ஆசிரியர்கள் அந்தப் பழியை மாணவர்கள் மீது திணிக்கக் கூடாது. அவர்களே பொறுப்பு ஏற்க வேண்டும். அவர்களின் பொருள் மீது அவர்கள் தான் பொறுப்பு.

இதுவே ஒரு மலாய் மாணவியாக இருந்தால் இந்த அளவுக்கு அந்த மாணவி மீது இவர்கள் நடவடிக்கை எடுத்திருப்பார்களா - எடுத்திருக்க முடியுமா -  என்பதே நமது கேள்வி. ஓர் இந்திய மாணவி என்றால் எதனையும் செய்யலாம் என்று இந்திய ஆசிரியர்களே நினைக்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்றால் இவர்கள் செய்கின்ற தொழில் மீது  இவர்களுக்கு மதிப்பு, மரியாதை இல்லை என்றே நாம் நினைக்கத் தோன்றுகிறது! 

அந்த மாணவியின் நலனுக்காக நாம் பிரார்த்தனை செய்வோம். சீக்கிரம் குணமடைய அவருடைய பெற்றோருடன் சேர்ந்த நாமும் எல்லா வல்ல இறைவனை வேண்டுவோம்.Saturday, 27 January 2018

மருங்காபுரி மாயக்கொலை!


எனது பள்ளி நாட்களில் நான் படித்து இன்னும் மறக்காத ஒரு துப்பறியும் நாவல் என்றால் அது "மருங்காபுரி மாயக்கொலை" என்பதாகத்தான் இருக்கும்! எத்தனை எத்தனையோ மர்ம நாவல்கள், துப்பறியும் நாவல்கள் இன்னும் கணக்கிலடங்கா நாவல்களைப் படித்திருக்கிறேன். ஏனோ இந்த நாவலை மட்டும் என்னால் மறக்க முடியவில்லை!  எண்ணற்ற மர்ம, துப்பறியும் நாவல்களின் ஆசிரியர்களின் பெயர்கள் இன்னும் அப்படியே மனதில் நிற்கின்றது! 

இப்போது எனது ஞாபகத்தில்  உள்ள ஒரு சில பெயர்கள்: தமிழ்வாணன், மேதாவி, சிரஞ்சீவி, எஸ்.என்.கே.ராஜன், மாயாவி, பி.டி.சாமி - இப்படிச் சில பெயர்கள் இப்போது எனது ஞாபகத்தில் வருகிறது. இதில் அதிகமாக தமிழ்வாணன், சிரஞ்சீவி புத்தகங்களைப் படித்திருப்பேன் என நினைக்கிறேன். நானும் எனது நண்பர்களும் போட்டிப்போட்டுக் கொண்டு இவர்களின் புத்தகங்களைப் படித்திருக்கிறோம்!  சிங்கை, இந்தியன் மூவி நியுஸ் மாத இதழில் தமிழ்வாணன் எழுதிய "மலர்க்கொடி என்னை மறந்துவிடு!" என்னும் தொடர் கதை ஞாபகத்திற்கு வருகிறது. தமிழ் நேசன் நாளிதழில் சிரஞ்சீவி தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார்.  

ஆனால் இந்த  "மருங்காபுரி மாயக்கொலை!" என்னும் மர்ம நாவல் அதை எழுதிய வடூவூர் துரைசாமி ஐயங்கார் ஏனோ எனது மனதை வீட்டு நீங்கவில்லை!  நான் இந்த நாவலைப் படித்த அந்தக் காலக் கட்டத்தில் உண்மையாகவே அந்த நாவலை இரவு நேரத்தில் படிக்க என்னால் முடியவில்லை! நான் பயந்து போனேன் என்று மட்டும் எனக்கு ஞாபகம் இருக்கிறது! இப்போது அந்த நாவல் முழுமையாக எனக்கு ஞாபகம் இல்லை. ஏதோ ஒரு சில காட்சிகள் நினைவில் நிற்கிறது! ஆனால் இந்த நாவலின் பெயரும் அந்த நாவலை எழுதிய வடுவூர் துரைசாமி ஐயங்கார் என்னும் பெயர் மட்டும் அப்படியே நிற்கிறது! இவர் வேறு கதைகள் எழுதியிருக்கிறாரா, தெரியவில்லை. ஆனால் இந்தப் பெயர் எந்த வகையிலும் மர்ம நாவல்கள் எழுதுபவரின் பெயராகத் தெரியவில்லை! மிகவும் வித்தியாசமான பெயர். ஆனால் அந்தத் தலைப்பும் அந்த ஆசிரியரின் பெயரும் அப்படியே மனதில் நிலைத்து விட்டது! அதுவே ஆச்சரியம்!

வடுவுரார் வேறு நாவல்கள் எழுதியிருக்கிறாரா தெரியவில்லை. நான் படிக்க கிடைக்கவில்லை என்பதைத் தவிர அவர் நிறையவே துப்பறியும் நாவல்கள் எழுதியிருக்கிறார் என்பதாக அவரைப் பற்றிய குறிப்புக்கள் கூறுகின்றன.   நடிகர் எம்.என்.நம்பியார் கதாநாயகனாக நடித்த "திகம்பரசாமியார்" இவர் எழுதிய கதை மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 

"மருங்காபுரி மாயக்கொலை" என்னும் அந்தத் தலைப்பும் அதை எழுதிய வடுவூர் துரைசாமி ஐயங்கார் என்னும் வித்தியாசமான பெயரும் அப்படியே மனதில் நிலைத்து விட்டது! 

மீண்டும் அந்த நாவலைப் படிக்க ஆசை உண்டு. ஆனால் அதனைத் தமிழகத்திற்குப் போய்த் தேட வேண்டுமே!

ஆசிரியர்களா? குண்டர் கும்பலா?


ஆசிரியர்கள்,  குண்டர் கும்பல்கள் போல் நடந்து கொள்ளுவது  என்பது தொடர்ந்து நடந்து கொண்டு தான் வருகிறது! ஆசிரியர்களை மதிக்கும் ஒரு சமுதாயம் நாம். அதனால் தான் "மாதா, பிதா, குரு, தெய்வம்" என்று நமது முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். பெற்றோருக்கு அடுத்து குரு அதற்குப் பின்னர் தான் தெய்வம். குருவுக்கு அடுத்து தான் தெய்வம் என்பது குருவுக்கு அந்த அளவுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை அறியலாம்.

ஆனால் இப்போது ஆசிரியர்கள் இந்தத் தொழிலை ஏதோ பகுதி நேரத் தொழில் போல செய்து கொண்டிருப்பதால் அவர்களுக்கே அவர்களின் தொழிலின் மீது மரியாதை இல்லை. மாணவர்களின் மீது அன்பு இல்லை, அக்கறை இல்லை, அரவணைப்பு இல்லை  ஆனால் அடாவடித்தனம் அதிகம் இருக்கிறது!

ஒரு பதின்மூன்று வயது சிறுமி. பெயர் வசந்தபிரியா,  நிபோங் திபால் மெதடிஸ்ட் இடைநிலைப் பள்ளியில் படிக்கின்ற ஒரு மாணவி. இப்போது மருத்துவமனையில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார். 

என்ன நடந்தது? அவருடைய ஆசிரியையின் கைப்பேசி காணாமல் போய்விட்டது. அதனை இந்த மாணவி தான் திருடினார் என்பதாக சந்தேகம். அதனை விசாரிக்க மூன்று ஆசிரியர்கள் - அனைவரும் இந்தியர்கள் என்று சொல்லப்படுகிறது - அத்தோடு அந்த ஆசிரியையின் கணவர் பக்கத்திலுள்ள வேறொரு பள்ளியில் ஆசிரியர். அவரும் இந்த விசாரணையில் வந்து கலந்து கொண்டார்!  ஆக, ஐந்து பேர். இந்த மாணவி தான் திருடினார் என்று ஒப்புக்கொள்ள வைக்க அந்த மாணவியை படாதபாடு படுத்தினர். எல்லா நெருக்கடிகளையும் கொடுத்தனர். இடைவேளையின் போது அவரைச் சாப்பிட அனுமதிக்கவில்லை.  ஆக அந்தக் குழந்தைக்கு மன உளைச்சளையும். மனத் துன்புறுத்தைலையும் கொடுத்தனர். அந்த மாணவியின் தந்தையும் வரவழைக்கப்பட்டு விசாரித்த போதும் அந்த மாணவி தான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்றே சொல்லியிருக்கிறார். அவரின் தந்தை அந்த ஆசிரியையிடம் தான் வேறொரு புதிய கைப்பேசி வாங்கித் தருவதாகவும் கூறியிருக்கிறார். ஆனால் அந்த மாணவியோ தான் திருடவில்லை என்பதாகவே கூறி வந்திருக்கிறார். தான் திருடினேன் என்று அவர் ஏற்றுக்கொள்ள வில்லை.

அதன் பின்னரே அந்த மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இப்போது மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார் என்பதாகக் கூறப்படுகிறது. கடைசியாக அவர் எழுதிய கடிதத்தில் தான் அந்தக் கைப்பேசிய திருடவில்லை என்பதை மீண்டும் உறுதிப் படுத்தியிருக்கிறார்.

நமது கேள்வி எல்லாம்: ஒரு வகுப்பில் மலாய், சீனர்,இந்தியர் என்று படிக்கின்றனர். ஆனால் ஓர் இந்திய மாணவியை மட்டும் "இவர் திருடினார்"  என்று எப்படி குற்றம் சாட்ட முடிகிறது?  வழக்கம் போல நமக்குப் புரியவில்லை! ஒரு கைப்பேசிக்காக ஓர் உயிரை வாங்கும் அளவுக்கு நமது ஆசிரியர்கள் தங்களது குண்டர் தனத்தைக் காட்டியிருக்கின்றனர்! 

அந்த மாணவியின் நலனுக்காக நாமும் பிரார்த்திக்கிறோம்.

Friday, 26 January 2018

சீனப் பள்ளிகள் கூடுதலாக 34..!


சீனப் பள்ளிகள் நாடு முழுவதிலும்  கூடுதலாக 34 தேவைப் படுவதாக சீனப் பள்ளிகளின் அறவாரியம் டொங் ஜோங் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் நம்மிடையே கோரிக்கை விடுக்க தமிழ் அறவாரியம் ஒன்று இருந்தது. ஆனால் அது கழுத்து நெறிக்கப்பட்டு விட்டதோ என்று தோன்றுகிறது. 

இப்போது நமக்குக் கூடுதலான பள்ளிகள் என்பதை விட இருப்பதைக் காப்பாற்ற வேண்டும் என்னும் போராட்டமே பெரிதாக இருக்கிறது!  சில பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக இருக்கிறது. பிரச்சனை பெற்றோர்களிடம் அல்ல.

நமது பள்ளிக்கூட பிரச்சனைகள் அனைத்துக்கும் காரணம் ம.இ.கா.வும் கல்வி அமைச்சும் தான்!  தொடர்ந்தாற் போல பல பிரச்சனைகளைக் கல்வி அமைச்சு ஏற்படுத்திற் கொண்டே இருக்கிறது. அதனை ம.இ.கா. வால் எதிர் கொள்ள முடியாமல். தட்டிக் கேட்க திராணியில்லாமல் கல்வி அமைச்சு எதனைச் சொன்னாலும் "ஆமாஞ்சாமி" போடுகின்ற நிலையில் தான் ம.இ.கா. இருக்கிறது!

ம.இ.கா.வில் உள்ளவர்கள் படித்தவர்கள், தானே? அப்புறம் ஏன் கல்வி அமைச்சு கொடுக்கும் தொல்லைகளைத் தட்டிக் கேட்க முடிவதில்லை?  படித்தவர்கள் என்பதால் தான் தட்டிக் கேட்க முடியவில்லை! படித்தவனுக்குத் தான் பட்டம் வேண்டும், பதவி வேண்டும், தூதரகப் பதவி வேண்டும் அதுவும் இல்லாவிட்டால் குறைந்தபட்சம் ஒர் அமைச்சருக்கு உதவியாளனாக இருக்க வேண்டும். இப்படித் தான், தான் தனது குடும்பம் என்று அவன் மற்றவரை அண்டிப் பிழைக்க வேண்டிய ஒரு கட்டாயத்தை ஏற்படுத்திக் கொள்ளுகிறான்!  தொண்டு செய்ய வந்தவன் கடைசியில் தொண்டை கிழிய தின்று விட்டு மாண்டு போகிறான்! எதற்கு வந்தானோ அவை நிறைவேறவில்லை!

பெற்றோர்கள் அரசியல்வாதிகளால் பாதிக்கப் படுகின்றனர். அரசியல்வாதிகள் செய்கின்ற தில்லுமுல்லுகளால் பள்ளிக் கூடங்கள் பாதிக்கப்படுகின்றன.  மற்ற மொழிப் பள்ளிகளை விட தமிழ்ப்பள்ளிகளில் தான் கல்வி அமைச்சுக்கு எதிராகப் போராட்டங்கள் நடக்கின்றன. தலைமை ஆசிரியர்களுக்கு எதிராக போராட்டங்கள் என தொடர்ந்து ஏதோ ஒரு பிரச்சனையில் தமிழ்ப்பள்ளிகள் தள்ளப்படுகின்றன.  படிக்கத்தான் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புகிறோம். ஆர்ப்பாட்டம் செய்யவா அனுப்புகிறோம்? ஆனால் அது தான் நடந்து கொண்டிருக்கிறது! அதனாலேயே பெற்றோர்கள் தமிழ்ப்பள்ளிகளைத் தவிர்க்க விரும்புகின்றனர். குற்றம் நம் பெற்றோர்கள் மீது அல்ல!

சீனப் பள்ளிகள் இன்னும் அதிகம் தேவை என்பதை அறிய நமக்கும் மகிழ்ச்சியே. இப்போது சீனப்பள்ளிகளில் மலாய், இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கூடிக்  கொண்டே போகிறது. சீனப்பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்கள் நல்ல சிறப்பான கல்வியைப் பெறுகிறார்கள். கட்டொழுங்கு சீனப் பள்ளிகளில் இருக்கிறது.  

டொங் ஜோங் அறவாரியம் வெற்றி பெற வாழ்த்துவோம்!

Wednesday, 24 January 2018

ஆயுதப்படையில் இந்தியர்கள்..!

முன்னாள் இந்திய முப்படை வீரர்கள் சங்கம் நல்லதொரு நிகழ்ச்சிக்கு முன்னாள் துணையமைச்சர் டத்தோ டி. முருகையா தலைமையில்  இந்திய இளைஞர்களை ஆயுதப்படையில் சேர்க்க முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.

மிகவும் வரவேற்கத் தக்க ஒரு செயல். ஜாலான் ஈப்போ, இப்ராகிம் யாக்கோப் தேசிய இடைநிலைப் பள்ளியின் மண்டபத்தில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் சுமார் 275  பேர் ஆயுதப் படையில் சேர விண்ணப்பித்ததாக "வணக்கம் மலேசியா" செய்தி கூறுகிறது.

ஆயுதப்படையில் அதிகமான இந்திய இளைஞர்கள் சேர வேண்டும் என்னும் முயற்சியில் இந்திய முப்படை வீரர்கள் சங்கம் இறங்கியிருப்பது பாராட்டுதலுக்கு உரியது. சில நேரங்களில் இது போன்ற நல்ல செயல்கள் கூட ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வரும் போது இதுவும் ஒரு கண்துடைப்பா என்று நம்மை நினைக்க வைப்பது இயல்பே! பொதுத் தேர்தலை எதிர்பார்க்கும் இந்நேரத்தில் இந்த நிகழ்வு நம்மையும் ஐயுற வைக்கின்றது என்பது உண்மையே! 

இப்போது முன்னாள் முப்படையினர் செய்ய வேண்டிய வேலை என்ன? இந்த 275 பேரும் படையில் சேர்த்துக் கொள்ளப் பட்டு விட்டனர் என்னும் நல்ல செய்தி வர வேண்டும்.  ஓரிரு மாதங்களில் வந்தால் மட்டுமே இதனை நாம் நம்பலாம். தேர்தலுக்குப் பின்னர் தான் செய்தி வரும் என்றால் ... இதனையும்....குப்பைத் தொட்டியில் போட்டு விடலாம்!  இதுவும் ஒரு கண் துடைப்பு வேலை என்று முடிவுக்கு வரலாம்! ஏன் "275 பேரும்" என்கிறோம்? இராணுவத்தில் பணிபுரியும் ஆர்வத்தில் உள்ளவர்கள் தான் இந்த விண்ணப்பங்களைச் செய்திருக்கின்றனர்.  வேறு யாரும் இந்த விண்ணப்பங்களைச் செய்ய வாய்ப்பில்லை.

அதனால் முப்படையினர் செய்த இந்த ஏற்பாட்டை உடனடியாகச் செயல் படுத்த வேண்டும் என்பதே நமது வேண்டு கோள்.  நேரடியாக விண்ணப்பம் செய்கின்ற போது ஏற்றுக்கொள்ளப் படாத விண்ணப்பங்கள் இங்கு ஏற்றுக் கொள்ளப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இருந்தாலும் முன்னாள் முப்படையினரின் முயற்சிகளைப் பாராட்டுகிறோம். அது பயனுடையதாக அமையவும் வேண்டும் எனவும் விரும்புகின்றோம். இங்கு அரசியல் இல்லை எனவும் நம்புகின்றோம். வாழ்த்துகள்!

கேள்வி - பதில் (72)


கேள்வி

தமிழகத் தேர்தலில் ரஜினி, கமல்ஹாசன், விஷால் என்று வரிசைப் பிடிக்க ஆரம்பித்து விட்டார்களே!

பதில்

நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ நடிகர் பிரகாஷ்ராஜ் அதனைத் தான் விரும்புகிறார்! இந்த மூவரும் சேர்ந்து கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

தமிழ் நாட்டு அரசியலைப் பற்றி பிரகாஷ்ராஜ் எவ்வளவு கருத்தாக இருக்கிறார் பாருங்கள். அதாவது தமிழக அரசியலை யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம் விமர்சிக்கலாம் என்னும் நிலையில் தமிழகம் இருக்கிறது.  தமிழ் நாட்டின் முதலமைச்சராக தமிழரைத் தவிர யார் வேண்டுமானாலும் வரலாம் என அண்டை மாநிலத்தவர் விரும்புகின்றனர்.  அதே போல தமிழ் நாட்டில் தமிழர் அல்லாதவரும் அதனையே விரும்புகின்றனர்,

கர்நாடகாவில்,  தமிழ் நாட்டுக்குத் தண்ணீர் தரக் கூடாது என்று சமீபத்தில் கூட கொதித்தெழுந்த வாட்டாள் நாகராஜ் என்பவனைப் பற்றி பிரகாஷ்ராஜ் போன்றவர்கள் வாய்த் திறப்பதில்லை! ஏன், ரஜினி கூட வாய்த் திறப்பதில்லை!  ஆனால் தமிழ் நாட்டில் தமிழன் ஒருவன் ஆட்சிக்கு வருவதை பிரகாஷ்ராஜ் போன்ற கன்னடர்கள் கூட விரும்பவில்லை! தமிழ்ச் சினிமாவில் உள்ளவன் சினிமாவில் உள்ளவனை விரும்பினால் நமக்கு ஆட்சேபனையில்லை. ஆனால் அவன்  தமிழனாக இருக்கக்கூடாது என்பதில் தான் இவ்ர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்! 

பிரகாஷ்ராஜ் ரஜினியின் ஆதரவாளர், அவர் ரஜினியை ஆதரிப்பது கன்னடர் என்பதால் மட்டும் அல்ல தமிழ் நாட்டில் அவர் நல்ல செல்வாக்கு உள்ள நபர் என்பதை அறிந்து தான் ரஜினி பதவிக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார். விஷாலுக்கு அரசியலில் ஆதரவு இல்லை என்பது பிரகாஷ்ராஜுக்குத் தெரியும். அதே போல கமல்ஹாசன் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு ரஜினிக்கு மிரட்டலான நபராக இல்லை. இவற்றையெல்லாம் மனதில்  வைத்துத் தான் பிரகாஷ்ராஜ், ரஜினி பதவிக்கு வர வேண்டும் என்பதற்காக தனது அரசியல் விமர்சனத்தை ஆரம்பித்திருக்கிறார்.

எது எப்படியிருப்பினும் வருகின்ற தேர்தலில் சினிமா நடிகர்கள் தமிழக அரசியலில் பேர் போட முடியாது என்பதே உண்மை. தமிழன் சினிமாவில் தனது தலைவனைத் தேடுகிறான் என்பது ஓரளவு உண்மை தான் என்றாலும் மிச்சம் மீதி இருக்கின்ற மூன்று நான்கு ஆண்டுகளில் இந்தக் கருத்து தவிடுபொடி ஆகிவிடும் என்று நாம் நம்பலாம்!

வாழ்க தமிழினம்!
Sunday, 21 January 2018

பிளவுபடாத ஆதரவு!


சமீபத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் ம.இ.கா. தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் அவர்கள் பேசுகையில் வரப்போகிற பொதுத் தேர்தலில் ம.இ.கா. வேட்பாளர்களுக்கு இந்திய சமூகம் பிளவுபடாத முழுமையான ஆதரவைத் தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.  அப்படி ம.இ.கா. வேட்பாளர்கள்  வெற்றி பெற்றால் தான் அவர்களால் முழுமையான சேவையை இந்திய சமுதாயத்திற்கு வழங்க முடியும் என அவர் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் இத்தனை ஆண்டுகள் பதவியில் இருந்த-இருக்கின்ற  இப்போதைய நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்களின் சேவைக் குறித்து அமைச்சர் திருப்தி அடைகிறாரா என்பது முக்கியமான கேள்வி. இவர்களிடமிருந்து முழுமையான சேவை மக்களைப் போய் அடையவில்லை என்னும் குற்றச்சாட்டு இப்போதும் நிலவுகிறது!

கல்வி,  பொருளாதாரம் என்று வரும் போது ம.இ.கா.வினால் எந்த ஒரு மாற்றத்தையும் இந்தியர்களிடையே  ஏற்படுத்த முடியவில்லை! இந்திய அரசியல்வாதிகளின் முன்னேற்றம் என்பது இந்தியர்களின் முன்னேற்றம் அல்ல.  சிறிய வியாபாரிகள் இன்னும் புறக்கணிக்கப் படுகின்றனர். கல்வியில் தமிழ்க்கல்வியின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இரு மொழிக்கொள்கை என்பது தமிழ் மொழிக்குக் கேடு விளைவிக்கும் என்று பெற்றோர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அறிஞர்கள்  எச்சரிக்கின்றனர்.  ஆனால் ம.இ.கா. வோ, துணைக்கல்வி அமைச்சர் கமலநாதனோ இது வரை வாய்த் திறக்கவில்லை.    தமிழ்க்கல்வி பற்றி அக்கறைப் படுவதாகவும் தெரியவில்லை.   இப்படி மூன்றாவது பெரிய இனத்தின் தாய்க் கட்சியாக விளங்கும் ம.இ.கா. இன்னொரு பெரிய கட்சியான அம்னோவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகத்  நமக்குத் தோன்றுவதில் வியப்பில்லை.  அம்னோ,  தமிழ்க்கல்விக்கு எதிராக உள்ள ஒரு கட்சி. முடிந்தவரை தமிழை அழிக்கும் வேலையில் அம்னோ இறங்கியிருக்கிறது. ஆனால் ம.இ.கா.வினர் தங்களின் பதவியைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக வாயே திறப்பதில்லை என்று சபதம் எடுத்துக் கொண்டு விட்டனர். தமிழுக்கும், தமிழ்ப்பள்ளிகளுக்கும் நடக்கின்ற அநியாயங்கள் ஏன் சீனப்பள்ளிகளுக்கு நடக்கவில்லை? 

இந்த நிலையில் டாக்டர் சுப்பிரமணியம் அவர்கள் இந்தியர்கள் ம.இ.கா.விற்கு பிளவுபடாத ஆதரவு தாருங்கள் என்கிறார்! இப்போது இந்தியர்களை நீங்கள் தான் பிரதிநிதிக்கிறீர்கள். ஆனாலும் எதுவும் உங்களால் செய்ய முடியவில்லை. நீங்கள் இல்லை என்றாலும் அது தான் நடக்கும்!  வேறு என்ன தான் நடந்து விடப் போகிறது?

நாங்கள்  உங்களை ஆதரிப்பதற்கு வலுவான காரணங்கள் இருக்க வேண்டும். நீங்கள் வாழ வேண்டும் என்பதற்காக எங்கள் பிழைப்பில் மண்ணை வாரி இறைக்கிறீர்கள். இறைத்த பிறகும் உங்கள் பிழைப்பு  நன்றாக நடக்க  வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்!     

ஆசை வேண்டும்! பேராசை வேண்டாம்!                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     

Friday, 19 January 2018

ஆங்கிலம் படியுங்கள்!


"ஆங்கிலம் படியுங்கள்!" இது தான் வேலை தேடும் பட்டதாரிகளுக்கு மலேசிய முதாலாளிகளின் கூட்டமைப்பு கொடுக்கும் அறிவுரை.

"உங்களின் தகுதிக்கு ஏற்ற வேலை இருந்தும் உங்களுக்கு அந்த வேலை கொடுக்கப்படவில்லை என்றால் உங்களுக்கு ஆங்கிலத்தில் திறன் போதாது என்று அர்த்தம்!  பல நிறுவனங்களில் வேலை வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் அனைத்தும் பட்டதாரிகள் ஆங்கிலத்தில் பேசும் திறமை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதையே விரும்புகின்றன!  ஆங்கிலம் தெரியவில்லை என்றால் அந்தப் பட்டதாரிகளை அந்நிறுவனங்கள் தவிர்த்து விடுகின்றன!" என்கிறார் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனர் ஷம்சுடின் பார்டன்!

பொதுவாக எல்லா நிறுவனங்களுமே ஆங்கிலத் திறன் கொண்டவர்களையே வேலைக்கு அமர்த்துகின்றன. ஏன், நமது மலாய்க்காரர்களால் நடத்தப்படும் நிறுவனங்கள் கூட ஆங்கிலத்தில் தான் பெரும்பாலும் கடித போக்குவரத்துக்களை வைத்துக் கொள்ளுகின்றன.  பேசுவதில் சரியோ, தவறோ எழுதுவதில் சரியோ, தவறோ புரிந்து கொண்டால் சரி என்னும் மனப்போக்கில் தான் ஆங்கிலம் எழுதப்படுகின்றது அல்லது பேசப்படுகின்றது! அவர்களின் அந்தத் துணிச்சலை நான் பாராட்டுகிறேன். சும்மா 'தெரியவில்லையே' என்று கூனிக்குறுகுவதை விட முடிந்தவரை சமாளிப்போம் என்கிற அந்தத் துணிச்சல் பாராட்டுக்குரியது. ஆனாலும் அந்த இடத்திலேயே நின்று விடாமல் மேலும் தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். அது தான் சிறப்பு.

இன்றைய நிலையில் நாம் வலைத்தளங்களுக்குச் சென்றால் நமக்கு என்ன தேவையோ அவைகள் கிடைக்கும். ஆங்கிலத் திறனை வளர்த்துக் கொள்ள வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன. அதுவும் பட்டதாரிகள் என்றால் மிக எளிதாகவே ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்ளலாம். பட்டம் பெறுகின்ற அளவுக்கு ஒரு மாணவனுக்குத் திறமை இருக்கிறது என்றால் ஆங்கிலம் படிப்பதற்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. ஒரு சில மாதங்களே போதும் கற்றுக்கொள்ளலாம்.  ஆனால் நம்மால் ஆங்கிலம் படிக்க முடியாது என்று  யாரோ நம் மனத்தில் விதைத்த விதை  அப்படியே நம் மனதில் தங்கி நம்மை அடுத்தக் கட்டத்திற்குப் போக முடியாமல் முட்டுக்கட்டையாக்கி விட்டது. எதனையும் ஒரு சில பயிற்சிகளின் மூலம் சரி செய்து விடலாம். செய்து விட முடியும் என்னும் நம்பிக்கை நமக்கு வேண்டும். 

ஆங்கிலம் நமக்கு அந்நிய மொழி அல்ல. இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக நம்மிடையே புழக்கத்தில் உள்ள ஒரு மொழி. அதே போல மலாய், சீனம், தமிழ் - இந்த மொழிகள் எல்லாம்  நமக்குப் பரிட்சையமான மொழிகள் தான். இந்த மொழிகள் எல்லாம் எல்லாக் காலங்களிலும் நம்மைச் சுற்றி ஒலித்துக் கொண்டிருக்கும் மொழிகள்! அதனால் ஏதோ ஒரு வகையில் இந்த மொழிகள் பேசும் போது நமக்கு அந்நியமாகத் தெரிவதில்லை. நமக்கு ஓரளவாவது இந்த மொழிகள் பேசப்படும் போது நமக்குப் புரியத்தான் செய்கின்றன. ஆனால் நமக்கு ஆங்கிலம் புரிந்தால் மட்டும் போதாது. பேசவும், எழுதவும் அதுவும் வர்த்தகத் துறைக்கு மிகவும் முக்கியமான ஒரு மொழி. அதனைக் பேசவும், எழுதவும் கற்றுக் கொள்ளுவது இன்றைய பட்டதாரிகளுக்கு இன்றியமையாதது.

அதனால் ஆங்கில மொழியைக் கற்போம். அந்த மொழியில் பாண்டித்தியம் பெறுவோம்! வெற்றி நமதே!


Thursday, 18 January 2018

இது ஒரு கொலை!


இது ஒரு கொலை.  மிகவும் கொடுரமான ஒரு கொலை. அலட்சியத்தின் காரணமாக நேர்ந்த ஒரு கொலை. 

நாம் எவ்வளவு பொறுப்பற்றவர்களாக அன்றாட வாழ்க்கையில் நடந்து கொள்ளுகிறோம் என்பதற்கு மிகப் பெரிய உதாரணம். மற்றவர்களுக்கு நாம் இடைஞ்சலாக இருக்கக் கூடாது; நம்மால் மற்றவர்களுக்கு எந்த இடையூறும் வரக் கூடாது என்பதை நம் வீட்டிலும் நமக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை. பள்ளியில் சொல்லிக் கொடுத்தாலும் நம் மண்டையில் நாம் ஏற்றிக் கொள்ளுவதுமில்லை.   எல்லாவற்றிலும் ஓர் அலட்சியம்.   

நாம் காட்டுகின்ற அலட்சியம் காரணமாக ஓர் உயிர் அநியாமாகப் பறிக்கப்பட்டு விட்டது.

ஸ்ரீபந்தாய்,  இருபத்தோரு  அடுக்குமாடி குடியிருப்பின் மேல் மாடி ஒன்றிலிருந்து வீசப்பட்ட நாற்காலி ஒன்று ஓரு சிறுவனின் தலை மேல் விழுந்து அந்த இடத்திலேயே அவன் தாயின் கண் முன்னாலேயே  துடிதுடித்து இறந்து போனான். மூன்றாம் பாரம் படிக்கும் 15 வயது மாணவன்,  சதீஸ்வரன் தலையில் ஏற்பட்ட கடுமையான காயங்களினால் சம்பவம் நடந்த இடத்திலேயே மரணமுற்றான்.

இது போன்ற சம்பவங்கள் நடக்கும் போதுதான் அடுக்குமாடி வீடுகளில் வாழ்கின்ற மக்கள் எவ்வளவு பொறுப்பற்ற முறையில் வாழ்கிறார்கள் என்று நமக்குத் தெரிய வருகிறது. இந்தச் சம்பவம் நடைபெறுவது இது தான் முதல் முறை என்று சொல்ல முடியாது. ஏற்கனவே நடந்திருக்கலாம். ஆனால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. அதனால் தப்பித்தோம். அங்கு குடியிருக்கும் மக்களும் அதனை ஒரு பெரிய பிரச்சனையாகக் கருதவில்லை. அடிபடும் போது தான் பிரச்சனை வெளி வருகிறது. முதலில் மேல் மாடிகளில் குப்பைகளை வீசினார்கள். இப்போது நாற்காலிகளும்  குப்பைகளாகி விட்டன. அதனால் வீசி எறிவது சர்வ சாதாரணம் என்றாகி விட்டது. ஆனால் இப்படி ஒருவர் அடிப்பட்டு இறக்கும் போது தான் பிரச்சனை விசுவரூபம் எடுக்கிறது.

ஒன்று மட்டும் உண்மை. மலேசியர்களாகிய நாம் பொறுப்பற்றவர்கள் என்பது இந்த நிகழ்ச்சியின் மூலம் மட்டும் அல்ல; நம்மைச் சுற்றிப் பாருங்கள். நாம் செய்கின்ற ஒவ்வொரு காரியமும் நாம் பொறுப்பற்றவர்கள் என்பதைக் காட்டும். வெயிற் காலங்களில் புகை போட வேண்டாம் என்பார்கள். அப்போது தான் தாரளமாக எல்லாவற்றையும் போட்டு எரித்துக் கொண்டிருப்போம்! டிங்கி காய்ச்சல் அதிகமாகிக் கொண்டே போகிறது என்றால் அரசாங்கம் சொல்லுகின்ற எதனையும் நாம் கேட்பதில்லை. எல்லாவற்றிலும் அலட்சியம்.

நமது அலட்சியத்தினால் ஓர் உயிரை இழந்திருக்கிறோம். வேறு என்ன சொல்ல? மகனை இழந்து வாடும் அந்தக் குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.


Monday, 15 January 2018

தோல்வியில் முடிந்த நட்சத்திரக் கலை விழா!


சமீபத்தில் நடந்த நட்சத்திரக் கலை விழாவைப் பற்றி பல்வேறு கருத்துக்கள்,பல்வேறு சர்ச்சைகள்,பல்வேறு அபிப்பிராயங்கள் - என்று இப்படி இழுத்துக் கொண்டே போகலாம்!

இதில் ஒன்று "மக்கள் ஓசை"  நாளிதழின் கடுமையான விமர்சனம்! அதற்கும் நமக்கு ஒரு பதில் கிடைத்து விட்டது. இந்த நட்சத்திரக் கலை விழா சம்பந்தமான விளம்பரங்கள்  அவர்களுக்குக்  கொடுக்கப் படவில்லையாம்! அவர்களும் சில ஆயிரங்களை இழந்திருக்கலாம்! அதனால் வந்த கோபம்! ஆக, தங்களுக்கு இலாபம் இல்லை என்றால் அவர்களுக்குக் கோபம் வருவது இயற்கை.  ஆனால் அவர்கள் அதனைச் சமுதாயத்தின் மேல் உள்ள அக்கறையாக மாற்றிக்கொண்டார்கள்! அவ்வளவு தான்! தனக்கு இலாபம் இல்லையென்றால் அது சமுதாயப் பற்று! இது தான் தமிழனின் நிலை!

இந்த நிகழ்ச்சி வெற்றி பெறாதது எனக்கு மகிழ்ச்சியே. நமது சமுதாயம் நடிகர்களுக்குப் பால் அபிஷேகம் செய்வது, அவர்களுக்காகத் தற்கொலை செய்வது, தமிழர் சமுதாயத்திற்குத் தலைமை தாங்க சினிமா நடிகர்களைத் தேடுவது - இவைகளெல்லாம் தமிழனைத் தலைகுனிய வைக்கிறது. நம்மைக் கேவலப் படுத்துகிறது. சினிமா நடிகர்களைத் தமிழன்  புறக்கணிக்கின்றான் என்றால் அதனைப் பொன் எழுத்துக்களால் பொறிக்கைப்பட் வேண்டிய விஷயமாக எடுத்துக் கொள்ள வேண்டும்!

மேலும் இன்னோரு ஐயமும் நமக்குண்டு. தமிழ் நாட்டில் தேர்தல் காலத்தில் வாக்குச் சேகரிக்க சினிமா நடிகர்களைப் பயன் படுத்தும் பழக்கும் கட்சிகளுக்கு உண்டு. அதனை இங்கேயும் பரிட்ச்சித்துப்  பார்க்கிறார்களோ என்று ஐயுறுகிறோம்.  விமான நிலையத்தில் ஓர் ஆளுங்கட்சி அரசியல்வாதி போய் நடிகர்களை   வரவேற்க வேண்டிய அவசியம் என்ன? ஓர் சராசரி சினிமா ரசிகன் இப்படிச் செய்வதையே நாம் எதிர்க்கிறோம். ஆனால் பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் இப்படித் தரம் கெட்டுப் போய் அவர்களை வரவேற்பது என்பது இந்தச் சமுதாதயத்திற்கும் தலைகுனிவு தான்! மேலும் ரஜினி  வந்தால்...கமல் வந்தால்... உங்களின் வாக்கு வங்கி  அதிகரித்து விடுமா? 

மக்கள் உங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டுமானால்  அதற்காக உழைக்க வேண்டும். நமது உரிமைகளைக் கேட்டு நமக்கு வாங்கித் தர வேண்டும். நீங்கள் எதுவுமே செய்வதில்லை. எங்களின் தாய் மொழியைக் கூட, உங்களின் பதவி காக்க, தானம் செய்து விட்டீர்கள். நாங்கள் ஏன் உங்களை ஆதரிக்க வேண்டும்? 

உள்ளுர் அரசியல் நிலவரம் தெரியாமல், ம.இ.கா. வுக்கு ஆதரவாக செயல்பட்டதன் விளைவு தான் இந்தக்கலை விழாவின் தோல்வி!

இந்தத் தோல்வியை நான் மனமாற வரவேற்கிறேன். சினிமா மோகம் நமக்கு வேண்டாம். சினிமா நட்சத்திரங்களின் மீதும் மோகம் வேண்டாம்.  இனி சினிமா நட்சத்திரங்கள் இங்கு வந்தால் அடித்துப்பிடித்துக் கொண்டு ஓடாதீர்கள். அவர்கள் வரட்டும், போகட்டும்! நாம் பின்னால் ஓட வேண்டாம்!

Sunday, 14 January 2018

குளிர்! குளிர்! குளிர்!


குளிர்! குளிர்! குளிர்! அடாடா!  என்னமாய் குளிர்கிறது!

இது என்ன புதுமை! எப்போதுமே, எல்லாக் காலங்களிலுமே, மின் விசிரி, குளிரூட்டி என்று பழக்கப்பட்டுப் போன உடம்பு! இப்போது எதனையுமே பயன்படுத்த முடியவில்லை! தொடர்ச்சியான மழை. வேகமாக இல்லையென்றாலும் சிறு சிறு துளியாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. உஷ்ணத்தைப் பார்க்க முடியவில்லை. அனுபவிக்க முடியவில்லை.

இப்படி ஒரு குளிரை தமிழ் நாட்டில் ஊட்டியில் அனுபவத்திருக்கிறேன். நமது நாட்டில் கேமரன் மலையில் அந்த அனுபவம் உண்டு. ஆனால் நான் வசிக்கும் பகுதியில் இப்படி ஒரு குளிரை நான் அனுபவித்ததில்லை. எல்லாக் காலங்களிலும் ஓரு வெப்பமான சூழ்நிலையில் வாழந்தவன். வெப்பத்திற்குத்தான் எமது உடம்பு பழக்கப்பட்டிருக்கிறது! தீடீரென பருவ மாற்றத்தால் இப்படி அதிரடியாக ஓரிரு நாட்களில் அனைத்தும் மாறிவிட்டன! எந்நேரமும் குளிரைத் தாங்க வேண்டிய உடைகளை அணிய வேண்டி வந்துவிட்டது!

நான் பள்ளியில் படித்த காலத்தில் பூகோளத்தில் படித்தது இன்னும் நினவில் உள்ளது. நெகிரி செம்பிலான்,கோலப்பிலா என்னும் ஊர் தான் மிகவும் உஷ்ணத்திற்குப் பேர் போன இடம் என்று.  இப்போது அங்கும் கூட குளிரின் தாக்கம் அதிகமாக இருப்பதாக நண்பர்கள் சொல்லுகின்றனர்! 

ஆக நாம் வாழுகின்ற தீபகற்ப மலேசியாவில் இப்போது குளிர்,குளிர், குளிர் நம்மை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது!  ஆனால் நாம் அதற்குத் தயாராகவில்லை என்பது தான் இப்போது நமக்குப் புரிகிற விஷயம். எப்போதும் இந்தப் பருவ மாற்றம் நிகழ்ந்து கொண்டிருந்தால் நாம் எச்சரிக்கையாய் இருப்போம்.  நாம் இந்த மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை! இன்னும் குளிர் தணிந்தபாடில்லை! தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. குறைந்த பட்சம் இன்னும் ஓரிரு வாரங்களுக்காவது நாம் இந்தக் குளிரோடு தான் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது!

இனி ஒரு நாளைக்கு மூன்று வேளை குளியல், இரண்டு வேளை குளியல் எல்லாம் தேவைப் படாது!  எனக்குத் தேவைப்படவில்லை!

உங்களுக்கு...?


தூவானம் விடவில்லை...!


மழை விட்டும் தூவானம் விடவில்லை! 

ஒவ்வொரும் ஆண்டும் புதிகாகப் பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு நமது கல்வி அமைச்சின் மூலம் பல சோதனைகள், பல  இடர்பாடுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

குழந்தைகள் பள்ளி செல்ல வேண்டும். ஆனால் செல்ல முடியவில்லை. காரணம் அவர்கள் இந்நாட்டுப் பிரஜைகள் அல்ல.  இது தான் காரணம்! உப்புச் சப்பில்லாத ஒரு காரணம்!  இங்குக் குற்றம் பெற்றோர் மேல் இல்லை.  அவர்கள் குடியுரிமைக்கு மனு செய்திருக்கிறார்கள்.  ஆனால் சம்பந்தப்பட்ட அமைச்சில் கணினி பயன்பாட்டில் இல்லை! அதனால் அவர்களால் "ஆம், இல்லை' என்று பதில் சொல்ல பல ஆண்டுகள் ஆகின்றன!

அதற்காகக் குழந்தைகள் ஏன் பழிவாங்கப் பட வேண்டும்? குழந்தைகளுக்குக் கல்வி கொடுப்பது  ஒவ்வொரு நாட்டின் கடமை. அதனை மலேசிய அரசாங்கம் அறிந்திருக்கிறது. 

இங்கும் ஓர் அரசியல் நாடகம் நடந்து கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். துணைப் பிரதமர் நாட்டில் உள்ள அனைத்துக் குழந்தைகளும் பள்ளியில் சேர எந்தப் பிரச்சனைகளும் இல்லை என்கிறார்!  இப்போதுள்ள பிரச்சனை கல்வி அமைச்சு ஒரு பக்கம் முடியம் என்கிறது ஒரு பக்கம் முடியாது என்கிறது! குடிநுழைவுத்துறை ஒரு முறை 'ஆம்' என்கிறது, ஒரு பக்கம் 'இல்லை' என்கிறது! தலமையாசிரியர் 'முடியும்' ஆனால் 'முடியாது' என்கிறார்! இப்படி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் இவர்கள் திட்டமிட்டே இந்தக் குழந்தைகள் அனைவருக்கும்   கல்வி கொடுக்கக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள் என்பது  தெளிவாகிறது

இங்கு நாம் முக்கியமாகக் குற்றம் சாட்டுவது கல்வி அமைச்சை மட்டும் தான்.  கல்வி அமைச்சின் அதிகாரிகள் "நாங்கள் யாருக்கும் கட்டுப்பட்டவர்கள் அல்ல" என்று குட்டி நெப்போலியன்களாகச் செயல்படுகிறார்கள்!  அவர்கள் அப்படிச் செயல்படுவதற்கு காரணம் யார்? யார் அவர்களைத் தூண்டி விடுகிறார்கள்? யார்? அதே துணைப்   பிரதமரின் அலுவலுகமோ என்று நாம் சந்தேகப்படுவதில் எந்தத் தவறும் இல்லை என்பதே நமது கணிப்பு. துணைப் பிரதமரின் அறிவிப்பை அலட்சியம் செய்யும் அளவுக்கு அதிகாரம் படைத்தவர்களா கல்வி அமைச்சின் அதிகாரிகள்? அவர்களின் ஆசி இல்லாமல் இவர்களால் இப்படி அலட்சியம் செய்ய முடியுமா?

ஆக இவர்கள் எல்லாம் சேர்ந்து அரசியல் நாடகம் ஆடி மக்களுக்குத் தொல்லைத் தருகிறார்கள் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும். அதுவும் இந்தியர்களின் பிள்ளைகள் என்றால் எதுவும் செய்யலாம் என்கிற அலட்சியம் இவர்களுக்கு வந்து விட்டது! இதுவே மலாய்க்காரப் பிள்ளைகள் என்றால் இந்நேரம் கைலியைத் தூக்கிக் கொண்டு களத்தில் இறங்கிருப்பார்கள் அம்னோவினர்! ம.இ.கா. காரனுக்கு அடுத்து எந்த நடிகர் பட்டாளத்தை இங்குக் கொண்டு வரலாம் என்பதில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறான்!

இவர்கள் எல்லாம் குழந்தைகள். வருங்காலத் தலைமுறை கல்வி கற்றவர்களாக இருக்க வேண்டும். அதனை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். ஒருவருக்கு ஒருவர் பழி போடுவதை நிறுத்தி ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!


Thursday, 11 January 2018

டுரியான் எடையில் தில்லுமுல்லு!


நாட்டில் எல்லாப் பொருட்களிலும் தில்லுமுல்லுகள்  நிறைந்து விட்டன! போன மாதம் குழைந்தைகள் குடிக்கும் பால் பவுடரில் கலப்படம் என்பதாகச் செய்திகள் வெளி வந்தன! அதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பது தெரியவில்லை. 'இதற்கு நான் பொறுப்பள்ள, அவர்கள் தான் பொறுப்பு' என்பதாக ஒருவரை ஒருவர் சுட்டிக்காட்டி குறைகள் சொல்லிக் கொண்டிருந்தார்கள்!


இதோ  இப்போது டுரியான் விற்பனையில் ஒரு தில்லுமுல்லு நடந்து கொண்டிருக்கிறது! நிறுவை இயந்திரங்களில் எடைகளைக் கூட்டுவதற்காக வியாபாரிகள்  இயந்திரங்களில் சில   குளறுபடிகளை ஏற்படுத்தி எடைகளைக் கூட்டி விடுகின்றனர்! பத்து கிலோ டுரியான் பழம் வாங்கினால் உண்மையில் நாம் ஐந்து கிலோ பழம் தான் வாங்குகிறோம்!  குறைவான விலையில் விற்பது போல ஒரு பாவலா காட்டி எடையைக் குறைத்து விற்பனையைக் கூட்டும் வேலையில் ஈடுபட்டிருக்கின்றனர் இந்த வியாபாரிகள்!

தீடீரென உள்நாட்டு வாணிப அமைச்சு மேற்கொண்ட நடவடிக்கையில் இந்த வியாபாரிகளின் தில்லுமுல்லுகளைக் கண்டுபிடித்தனர், சிரம்பான், மந்தின், ஜலான் பந்தாய்-ஜெலுபு, கோல கிலவாங், செனவாங் ஆகிய பகுதிகளுள்ள சுமார் 46 டுரியான் விற்பகங்களைச் சோதனை செய்ததில் இந்த தில்லுமுல்லுகள் வெளி வந்தன!  பத்தொன்பது விற்பகங்கள் குறைவான எடையுடன் டுரியான்கள் விற்பனை செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிடமிருந்து ரி.ம.5,200.00 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது. எனினும் அவர்களிடமிருந்து பழங்கள் எதனையும் பறிமுதல் செய்யப்படவில்லை!

இந்தச் சோதனைகள் டுரியான் பழ பருவகாலம் வரைத் தொடரும் என வாணிப அமைச்சு அறிவித்துள்ளது.  

எப்பாடுப் பட்டாவது இந்தத் தில்லுமுல்லுகள் துடைத்தொழிக்கப்பட வேண்டும் என்பதே நமது அவா!

வாணிப அமைச்சின் இந்த நடவடிக்கையை வரவேற்போம்!

இனி குடிநுழுவுத்துறையும் பள்ளிகள் நடத்தலாம்!


 நமது நாட்டில்  இனி பள்ளிக்கூடங்கள் யார் வேண்டுமானாலும் நடத்தலாம்! நமக்குத் தெரிந்த வரை ஆளுங்கட்சியான அம்னோ, இஸ்லாமிய இயக்கமான ஜாக்கிம் இவர்களோடு இப்போது குடிநுழுவுத் துறையும் சேர்ந்து கொண்டது!

குழைந்தைகளுக்குக் கல்வி என்பது எவ்வளவு முக்கியம்? "இளமையிற் கல்" என்பது ஒளவையாரின் அமுத வாக்கு. அது மற்றவர்களுக்கும் புரியவேண்டும் என்பது அவசியமல்ல. நிச்சயமாக நமது கல்வி அமைச்சுக்குத் தெரியக் கூடாது. 

ஆனால் இது குழந்தைகளின் உரிமைகளைப் பறிக்கும் செயல் என்பது கல்வி அமைச்சுக்குத் தெரியும். காரணம் முழந்தைகளுக்கானக் கல்வி என்பது அவர்களின் உரிமை. அதனை ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி அவர்களிடமிருந்து பறிக்க முடியாது. அதுவும் குறிப்பாக மலேசியா அதனைச் செய்ய முடியாது. காரணம் சர்வதேச ரீதியில் குழந்தைகளுக்கானக் கல்வி சம்பந்தமான ஒப்பந்தத்தில் மலேசியாவும் கையொப்பமிட்டிருக்கிறது. இப்போது எந்தச் சட்டத்தையும் மீறலாம் என்னும் நிலை இருப்பதால் நமது உரிமைக்காக ஒன்று அம்னோவிடம் போக வேண்டும் அல்லது ஜாக்கிமிடம் போக வேண்டும்!  மேலும் குழந்தைகளின் கல்வி பற்றியான சட்டதிட்டங்கள் எதனையும் கல்வி அமைச்சோ, குடிநுழைவுத் துறையோ, தலைமை ஆசிரியர்களோ அறிந்திருக்கவில்லை என்பது தான் நமக்குள்ள சோகம்.

இவ்வளவுக்கும் காரணம் சிரம்பானைச் சேர்ந்த டர்ஷனா என்னும் குழந்தை. டர்ஷனாவை தத்து எடுத்த பெற்றோர்களான கணேசன் - மல்லிகா முறையாகச் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்து விட்டார்கள். ஆனாலும் அரசாங்கத் தரப்பிலிருந்து இன்னும் முறையான பதிலை அவர்கள் பெறவில்லை. அதனால் அந்தக் குழந்தை பள்ளி போக முடியாத நிலை. அரசாங்க இலாகாக்கள் தங்களது கடமையை இழுத்தடிப்பதால் இது போன்றே பல குழைந்தகள் இன்னும் இருக்கவே செய்வார்கள்.

ஆனாலும் கடைசியாக கிடைத்த செய்தியின் படி அந்தக் குழந்தைக்குப் பள்ளியில் சேர அனுமதி கிடைத்து விட்டதாம்.

 கல்வியில் சிறந்து விளங்க டர்ஷனாவுக்கு நமது வாழ்த்துகள்! 


Tuesday, 9 January 2018

என்ன கேவலமான அரசியல்!


தேர்தல் வரும் போது நமது காலில் வந்து விழுகிறார்கள்! ஐயோ! பாவம்! நமக்காகத் தொண்டு செய்ய எவ்வளவு ஆர்வதோடும், ஆசையோடும் நமது காலில் விழுகிறார்கள்! வெற்றி பெற்றப் பிறகு அவர்கள் காலில் நம்மை விழ வைக்கிறார்கள்! ஐந்து ஆண்டுகள் நமது தொகுதிப் பக்கம் தலை காட்டுவதில்லை! ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். காலில் விழுவது, கெஞ்சுவது, அஞ்சி அஞ்சி சாவது இதனை செய்பவர்கள் சீனர்களோ, மலாய்க்காரர்களோ அல்ல! நாம் மட்டும் தான்! 

ஒரு காலத்தில், ம.இ.கா. சார்பில், நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்ட  ஒரு பஞ்சாபியர் சொன்ன பொன் மொழி இது: "தமிழர்கள் தானே!  அவர்கள் நல்லவர்கள்! கள் வாங்கிக் கொடுத்தாலே போதும், நமக்கு ஓட்டுப் போட்டு விடுவார்கள்!"

நான் சொல்லுவது ஐம்பது வருஷத்துக் கதை! இப்போது ஏதாவது நாம் மாறியிருக்கிறோமா? உண்மையைச் சொன்னால் இல்லை! இப்போதும் அது தான் நடந்து கொண்டிருக்கிறது! கிளைகள் அளவிலோ, மாநில அளவிலோ, தேசிய அளவிலோ பீர், பிராந்தி என்று பணம் தண்ணீராகக் கரைந்து கொண்டிருக்கிறது! பொது மக்கள் என்று வரும் போது அரிசி, ஐஸ்கிரீம், ஆட்டிறைச்சி என்று ஒரு திருவிளையாடல்!

அடாடா! என்னமாய் நமது அரசியல்வாதிகள் நமது மக்களைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்கள்! இவர்களே குடிகாரர்கள் தானே! குடிகாரனுக்குக் குடிகாரப் புத்தி தானே இருக்கும்! அவனும் குடித்து மக்களையும் குடிகாரராக்குகிறான்!

ஐந்து ஆண்டுகள் வீணே காலத்தைக் கழித்து விட்டு தேர்தல் வரும் போது மீண்டும்  எந்த  முகத்தை வைத்துக் கொண்டு மக்களைச் சந்திப்பது? அதனால் கவர்ச்சி அரசியலைப் பயன் படுத்துகிறார்கள்! தமிழ் நாட்டிலிருந்து சினிமா நடிகர்களைக்  கொண்டு வந்து கலை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்!  இப்படிச் செய்வதால்  இவர்களுக்கு ஆதரவு கிடைக்கும் என நம்புகிறார்கள்!  ஏன் இந்த வீண் வேலை என்று தான் நாம் கேட்கத் தோன்றுகிறது! உங்கள் கடமையைச் செய்ய எது தடையாக இருந்தது? சீனர், மலாய்க்காரர்கள், அவர்கள் சமுகத்திற்கு,  செய்யும் போது உங்களால் ஏன், தாழ்ந்த நிலையில் இருக்கும் இந்த இந்திய சமூகத்திற்குச்   செய்ய முடியவில்லை?  உங்களுக்குக் கல்வி அறிவு இல்லையென்றால் நீங்கள் ஏன் அரசியலுக்கு வர வேண்டும்? 

உங்களுடைய நடவடிக்கைகளினால் இந்த சமுதாயம் இழந்தது ஏராளம். கொஞ்ச நஞ்சமல்ல அனைத்தையும் இழந்தோம். இப்போது தமிழ்க்கல்விக் கூட கையை விட்டுப் போகும் நிலையில் இருக்கிறது. தமிழ்க்கல்விக்காக ஒரு அரசியல்வாதியும் பேசத் தயாராக இல்லை. துணிச்சல் இல்லாதவன் அரசியலுக்கு வரக்கூடாது. பொதுத் தொண்டு என்று சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றுவது மகா மகா பாவம்!  அது ஒரு சாபம். ஏழு தலைமுறைக்குத் தொடரும் என்பதை மறந்து விடாதீர்கள்.

நமது அரசியல் - குறிப்பாக ம.இ.கா. அரசியல் - மிகவும் கேவலமாகப் போய்க் கொண்டிருக்கிறது. "நாங்கள் ஒன்றும் செய்ய மாட்டோம் ஆனால் நீங்கள் எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள்" என்று ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

நாங்கள் சொல்ல வருவதெல்லாம் கலை நிகழ்ச்சி என்று சொல்லிப் பணத்தை வீணடிக்காதீர்கள். அந்தப் பணத்தை தமிழின் வளர்ச்சிக்காக பயன்படுத்துங்கள்.

கேவ அரசியல் நமக்கு வேண்டாம்!

Sunday, 7 January 2018

கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு...!


"கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு, காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு!" என்பதாக ஒரு பழைய சினிமாப் பாடல். கவிஞர் மாயவநாதனின் ஒரு தன்முனைப்புப் பாடல் என்று    சொல்லலாம்.  

எல்லாக் காலங்களுக்கும் ஒரு பொருத்தமான பாடல்.  இப்போதும் நமது வாழ்க்கைச் சூழலைப் பார்க்கும் போது அந்தப் பாடல் பொருந்தும்.

கவலை இல்லாத மனிதர் யார்? அப்படி யாரும் இல்லை! இருக்கிறார்கள் என்று நீங்கள் அடம் பிடிப்பவராக இருந்தால்     அவர்களை ஒரே ஒரு இடத்தில் பார்க்க வாய்ப்புண்டு. எல்லா சுடுகாடுகளிலும் அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பார்கள்!  அவர்களிடையேயும் ஆவிகள் சண்டை உண்டா என்று தெரியவில்லை!

கவலைப்படாத மனிதரே இல்லை. கருவறையிலிருந்து கல்லறை வரை அது ஒரு தொடர் கதை. அம்மா கவலைப்பட்டால் குழந்தையும் கருவறையில் கவலைப்படும். அதனால் தான் கர்ப்பிணிப் பெண்கள் எப்போதும் மலர்ந்த முகத்துடன் இருங்கள் என்கிறார்கள் பெரியவர்கள்.

நம்மைச் சுற்றி எவ்வளவு பிரச்சனைகள். ஒன்றா, இரண்டா? பிரச்சனைகள் வந்து கொண்டு தான் இருக்கும்.  பிரச்சனைகள் இல்லாவிட்டால் வாழ்க்கைக் கசந்து போகும். ஆனால் பிரச்சனைகள் அதிகம் ஆகும் போது மனம் தளர்ந்து போகும் என்பது உண்மையே. 

ஆனால் பிரச்சனைகள் வரும் போது அதனை நாம் எப்படிக்           கையாளுகிறோம் என்பதில் தான் உள்ளது நமது வெற்றியும் தோல்வியும். நல்லதொரு ஆலோசனை உண்டு.  பிரச்சனைகளை பிரச்சனைகளாகப் பார்க்காதீர்கள். ஒரு வாய்ப்பாகப் பாருங்கள். பிரச்சனைகள் நமக்கு நல்லதொரு பாடத்தைக் கற்பிக்கும். பிரச்சனைகள் மூலம் தான் நாம் அனைத்தையும் கற்றுக் கொள்ளுகிறோம். 

நாம் விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி, பிரச்சனைகள் நம்மைத் தேடி வந்து கொண்டு தான் இருக்கும். இல்லாவிட்டால் நம்மை அறியாமலேயே நாம் தேடிப் போய் கொண்டிருப்போம்! அது தான் வாழ்க்கை நமக்குக் கற்பிக்கும் பாடம். பிரச்சனையை அது பிரச்சனையே அல்ல என்கிற ஒரு மனநிலையை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும்! அப்படி ஒரு எண்ணத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

எல்லாமே நமது எண்ணங்கள் தான். கவலையை கவலையாகப் பார்க்காத வரை அது கவலையே அல்ல. இதுவும் கடந்து போகும் என்னும் ஒரு எண்ணத்தை நாம் வளர்த்துக் கொண்டால் கவலை என்று ஒன்று இருக்காது! பிரச்சனை என்று ஒன்றும் இருக்காது!

அது தான் கவிஞர் சொன்னார்: கவலையா? அது கிடக்கட்டும் மறந்துவிடு! அடுத்து என்ன? காரியம் நடக்கட்டும்! துணிந்து விடு!  துணிந்து காரியங்களை பார்க்க ஆரம்பித்து விட்டால் எல்லாக் கவலைகளும் ஓடிவிடும்!

Saturday, 6 January 2018

அத்தான்..! என் அத்தான்...!


அத்தான்!  என்னும் சொல் எப்போது வழக்கத்திற்கு வந்தது? நிச்சயமாக இது சினிமாவில் இருந்து தான் நம்முடைய பேச்சு வழக்கத்திற்கு வந்தது என்பது மட்டும் நமக்குத் தெரியும்.

அத்தான் என்னும் சொல் வருவதற்கு முன் மனைவி, கணவனை எப்படி அழைத்தார்? மாமா! என்பது வழக்கமான சொல். அதனை விடுத்து ஏங்க! ஏங்க! என்பதாக இருக்கலாம்! சினிமாவில் சுவாமி! என்னும் சொல் காதில் விழுந்ததாக நினைவுகள் உண்டு! 

பழைய சினிமாக்கள் பெரும்பாலும் புராணப் படங்களாகவே தயாரிக்கப்பட்டு வெளி வந்ததால் சுவாமி என்னும் சொல் தவிர்க்கபடாததாகவே தொடர்ந்து வந்தன. அத்தோடு மேலும் சில சொற்களும் புராணக் காலத்துச் சொற்கள் தொடர்ந்து பயன்படுத்தப் பட்டன.

சான்றுக்கு: பிராணநாதா, ஸ்வாமி, சஹியே, தவஸ்ரேஸ்டரே என்பது  புராணப் படங்களுக்கு ஏற்ற சொற்களாகவே இருந்தன. ஆனாலும் அந்தக் காலக் கட்டத்திலும் கூட ஒரு புதுமையைப் புகுத்தினார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அவர் கதை வசனம் எழுதிய "ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி" படத்தில் தான் அவர் "அத்தான்" என்னும் சொல்லைப் பயன்படுத்தினார். அதன் பின்னர் அவரே  காதல் காவியம் என்று வர்ணிக்கப்பட்ட     "பொன்முடி" என்னும் படத்திலும் "அத்தான்" என்னும் சொல்லைப் பயன்படுத்தினார். அதன் பின்னர் தான் அத்தான் என்னும் சொல்லை சினிமா உலகினர் பயன் படுத்த ஆரம்பித்தனர். அது இப்போது  பொது மக்கள் பயன்படுத்தும் சொல்லாகவும் ஆகிவிட்டது.

இப்போதெல்லாம் :வாடா! போடா!"  என்னும் சொல்லைப் பெண்கள்  பயன்படுத்துகின்றனர்.  நமக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை! எல்லாம் குறுகிய கால மயக்கம்!  அந்த வார்த்தையை எப்போதும் பயன்படுத்த முடியாது! மயக்கம் தெளிந்த பிறகு சகஜ நிலைக்கு வந்து விடுவார்கள்!

அத்தான்...!  என் அத்தான்...!  இதுவே நமது பண்பாடு!

Friday, 5 January 2018

நல்லவரா? வல்லவரா?


சுப்பர் ஸ்டார் ரஜினி நல்லவரா, வல்லவரா? என்கிற வாதம் இப்போது தமிழகத்தில் எல்லாத் தரப்பிலுமிருந்து விவாதிக்கப் படுகின்றது!

சரி! நமது நாட்டு அரசியல்வாதிகளைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம். 

துன் வீ.தீ.சம்பந்தனைப் பற்றி பேசும்போது பொதுவாக அவர் நல்ல மனிதர் என்று பெயர் எடுத்தவர்.  மிகவும் மென்மையாகப் பிரச்சனைகளை அணுகுபவர். அவர் காலத்தில் அவர் படித்த படிப்பு மிகப் பெரிய படிப்பு. அரசியலில் தனது குடும்பச் சொத்துக்கள் அனைத்தையும் இழந்தவர். இந்தச் சமுதாயத்திற்காக அவர் இழந்தவைகள் அதிகம். ஆனாலும் அவரை இந்தச் சமுதாயம் குறை தான் சொல்லுகிறது. அவர் காலத்திய துன் டான் சியு சின் சீன சமுதாயத்தைப் பொருளாதார ரீதியில் பெரிய அளவில்  உயர்த்தியவர். ஆனால் துன் சம்பந்தன் பொருளாதாரம் என்று வரும் போது இந்திய சமுதாயத்தைக் கை விட்டவர் என்று இன்று வரை சொல்லுகிறோம்!  அப்போதைய பிரதமர் துங்குவோடு மிக நெருக்கமாக இருந்தவர். ஆனாலும் அவரை வைத்து நமது சமுதாயத்தை இவரால் உயர்த்த முடியவில்லை!     நல்ல மனிதர் ஆனால் வல்லவர் என்று அவரால் பெயர் எடுக்க முடியவில்லை!

இப்போது துன் சாமிவேலுவுக்கு வருவோம். வல்லவர் என்று பெயர் எடுத்தவர். ஆனால் நல்லவர் என்று இன்றுவரை அவரால் இந்திய சமுதாயத்தினரிடம் பெயர் எடுக்க முடியவில்லை! அப்போதைய பிரதமர் டாக்டர் மகாதிருடன் மிக மிக நெருக்கமாக இருந்தவர். அவரால் முடியாதது என்று எதுவும் அரசியலில் இருக்கவில்லை! சமுதாயத்திற்குக் கிடைக்க வேண்டிய அனைத்தும் கிடைத்தன. கல்வியா, பொருளாதாரமா அனைத்தும் அவரது கைக்குக் கிடைத்தன.  இந்திய சமுதாயத்தைப் பொருளாதார ரீதியில் உயர்த்தவோ, கல்வியில் உயர்த்தவோ அனைத்தும் அவரிடம் இருந்தன. அவர் வல்லவர் என்பதாலேயே அனைத்தும் அவரால் பெற முடிந்தது. அவரை எதிர்ப்பார் ஆளும் அம்னோ கட்சியில் கூட யாரும் இருக்கவில்லை. ஆனாலும்  அரசாங்கம் மூலம் கிடைத்த எதுவும் சமுதாயத்திற்கு வந்து சேரவில்லை!  அது தான் அவரது பலவீனம்! வல்ல அவர், நல்ல அவராக இருக்கவில்லை!

சரி! நமது இந்திய சமுதாயம் என்ன நிலையில் உள்ளது? நாம் நல்லவராக இருப்பது தான் மற்ற இனத்தவருக்குக் கேலிப் பொருளாக ஆகி விட்டது! நல்லவர் என்று பெயர் எடுப்பது மிகவும் சிரமம். நல்லவர் அத்தோடு வல்லவர் என்றும் பெயர் எடுக்க வேண்டும். சீன சமுதாயம் வல்லவர் என்று பெயர் எடுத்தவர்கள். நமக்கு இரண்டும் வேண்டும். நல்லவர்கள் என்னும் அடையாளத்தை நம்மால் மாற்றிக் கொள்ள முடியாது. ஆனால் வல்லவர்கள் என்பதை நம்மால் உருவாக்கிக் கொள்ள முடியும். 

இனி நாம் நல்லவராகவும் இருப்போம்! வல்லவராகவும் இருப்போம்!

Thursday, 4 January 2018

இது என்ன கலாச்சாரம்?


ஏதோ ஒரு சில சமயங்களில் காலை நேரத்திலேயே நம்மைச் சுற்றி நடக்கும் சில சம்பவங்கள் நம்மைப் பாதிக்கத்தான் செய்கின்றன.

ஆதரவற்ற குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் பல இல்லங்கள் நாட்டில் பல இடங்களில் இருக்கின்றன. அவர்களின் சேவையை நாம் பாராட்டத்தான் வேண்டும். அப்படி ஒன்றும் அது ஓர் எளிதான சேவை அல்ல என்பது அங்குப் போய் வருபவர்களுக்குத் தெரியும்.

அதில் ஒரு சேவை இல்லம் ஆங்காங்கே மரப்பெட்டிகளால் ஆன     சிறு சிறு கூடாரங்களை அமைத்து நம் வீடுகளில் பயன்படுத்தாதப் பொருட்களை அந்தக் கூடாரங்களில் போட்டு வைத்தால் அவர்கள் அதனை மறுபயனீடு செய்ய எடுத்து செல்வார்கள்.  அதில் உள்ள சிரமங்கள் எதுவும் நமக்குத் தெரியாது. இருந்தாலும் தங்களது இல்லங்களின் வளர்ச்சிக்காக அவர்கள் அதனை செய்தே ஆக வேண்டும் என்னும் நிலையில் இருக்கிறார்கள்.

நான் வேறு ஒரு வீடமைப்புப் பகுதியில் உள்ள ஒரு கூடாரத்தில் எங்கள் வீட்டில் உள்ள - பயன்படுத்துக் கூடிய நல்ல நிலையில் உள்ள - துணிமணிகளை அங்குப் போட்டு வைப்பது வழக்கம்,  சமீபத்தில் நாங்கள் இருக்கும் பகுதியிலேயே அந்த இல்லத்தினர் ஒரு கூடாரத்தை அமைத்திருக்கின்றனர்.   அமைத்து ஓர் ஆறு மாதங்கள் இருக்கும்.      

இன்று காலை அங்கு போன போது ஓர் ஆச்சரியம் காத்துக் கிடந்தது! அந்தக் கூடாரத்தைச் சுற்றிலும் பயன்படுத்தாத உணவு பொருட்கள் கொட்டிக் கிடந்தன. சுருக்கமாக,  எல்லாக் குப்பைகளையும்  அங்குப் போட்டு நிறைத்து விட்டார்கள். அதுவும் அல்லாமல் அந்தக் கூடாரத்தினுள்ளேயும்  குப்பைகளைப் போட்டு  அடைத்து  விட்டார்கள்.   

அறிவில்லாத ஜென்மங்களா, இப்படியா செய்வீர்கள்?  ஓர் ஏழையை நம்மால் காப்பாற்ற முடியாது. அவர்களைக் காப்பாற்றும் இந்த இல்லங்களுக்கு நாம் ஆதரவும்  கொடுப்பதில்லை.  ஏதோ நம்மால் ஆன சின்ன உதவிகளைக் கூடவா செய்யக் கூடாது? அந்த அளவுக்குக் கூடவா நமக்குக்  கல்வி அறிவு இல்லை? அல்லது பொது அறிவு இல்லை? உதவ முடியாவிட்டாலும் பரவாயில்லை ஏன் உபத்திரவு படுத்த வேண்டும்? 

இவர்களை நினைக்கும் போது மனம் நொந்து போகிறது.  முன்பு நான் பயன்படுத்திய அந்தக் கூடாரம் சீனர்கள் வாழுகின்ற ஒரு பகுதி.   இப்போது நான் பயன்படுத்தியது  மலாய்க்காரர், இந்தியர் வாழுகின்ற ஒரு  பகுதி.   சீனர்களிடம் கொஞ்சமாவது அந்தப் பொது நோக்கு உண்டு.  மலாய்க்காரர்- இந்தியர் இடையே ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை! என்று தான் இவர்கள் திருந்துவார்களோ!   

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் என்ன செய்வது?

Wednesday, 3 January 2018

சாகா தோட்டத் தமிழ்ப்பள்ளி..?


 நெகிரி செம்பிலான், சாகா தோட்டத் தமிழ்ப்பள்ளியைப் பற்றி நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் (முதலைமைச்சர்) துணைக்கல்வி அமைச்சர், கமலநாதனிடம் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறார். மந்திரி பெசார் இப்படிக் கேள்விக் கணைகளைத் தொடுப்பதற்குக் காரணம் அது அவரின் ரந்தோ சட்டமன்ற  தொகுதியில் உள்ள  ஒரு  பள்ளி! தேர்தல் காலங்களில் இது போன்ற பிரச்சனைகளில் அக்கறை என்பது தானாகவே வரும்! அது மந்திரி பெசாருக்கும் வந்திருக்கிறது!

ஆனாலும் மந்திரி பெசார் கேட்பது போலவே நாமும் கமலநாதனைப் பார்த்துக் கேட்கிறோம். இந்தத் தாமதத்திற்கான காரணம் என்ன? மந்திரி பெசாரே காரணம் என்ன என்கிறார். காரணங்கள் தெரியவில்லை என்கிறார்! இந்த இணைக்கட்டடப் பிரச்சனையில் ஏதேனும் பிரச்சனைகளை எதிர்நோக்கினால்  'அந்தப் பிரச்சனையை என்னிடம் கொண்டு வாருங்கள், நான் தீர்த்து வைக்கிறேன்' என்கிறார் மந்திரி பெசார். ஆனாலும் கமலநாதன் இது வரை வாய்த் திறக்கவில்லை!  மந்திரி பெசாரிடம் கமலநாதன் எந்தப் பிரச்சனையையும் கொண்டு செல்லவில்லை. அப்படி என்றால் எல்லாமே சரியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது என்பதாகத்தான் நாம் நினைக்க வேண்டியுள்ளது. மந்திரி பெசாரும் அப்படித்தான் நினைத்திருப்பார்.

பொதுவாக இன்றைய நிலையில் தமிழ்ப் பள்ளிகளில் இது போன்ற கட்டடப் பிரச்சனைகள்  - பூர்த்தி ஆகாமல், அரைகுறையாக, இழுத்துப் பறித்துக் கொண்டும் - இருப்பதற்கு அதற்கான முழு பொறுப்பையும் ஏற்க வேண்டியவர் துணைக்கல்வி அமைச்சர் கமலநாதன் தான்!  வேறு யாரும் பொறுப்பல்ல! 

ஒரே காரணம் அவர் தான். அவர் தான் தமிழ்ப் பள்ளிகளைக் காக்க வந்த காவலன்! இவருக்கு முன்னர் இந்தப் பதவியில் யாரும் இருந்ததில்லை.அப்படி  இல்லாத நிலையிலும் தமிழ்ப்பள்ளிகளுக்கு  அதிகமான பாதிப்பில்லை. ஆனால்  என்று துணைக்கல்வி  அமைச்சர் என்று  சொல்லிக்கொண்டு அவர் பதவி ஏற்றாரோ அன்றிலிருந்தே தமிழ்ப்பள்ளிகளுக்குப் பல விதமான ஆபத்துக்கள் வரத் தொடங்கி விட்டன.  தமிழ் ஊடகங்கள், தமிழ் அமைப்புக்கள்  தமிழ் ஆர்வலர்களும் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்பதாக இல்லை!  கோடிக்கணக்கில்  தமிழ்ப்பள்ளிகளுக்குப்  பணம் அரசாங்கம் ஒதுக்கியும் அந்தப் பணம் பள்ளிகளுக்குப் போய் சேரவில்லை. 

அம்னோ என்ன  சொல்லுகிறார்களோ  அதற்கு  மட்டும்  தலை  ஆட்டும் அவர் தமிழ்  சார்ந்த  அமைப்புக்கள்  சொல்லுவதை  அவர்  காது  கொடுத்துக்  கேட்பதில்லை!  பதவி  அவன்  கொடுத்தாலும்  ஓட்டு  போடுகிறவன்  நாம்  தானே!

சாகா  தோட்டத்  தமிழ்ப்பள்ளி  மட்டும்  அல்ல இந்தப் புதிய  ஆண்டில் பல  பள்ளிகள்  பிரச்சனைகள  எதிர்நோக்குகின்றன. பள்ளி  ஆண்டு  தொடங்கும்  போதே  ஆர்ப்பாட்டம், கண்டனம் என்று  பெற்றோர்கள் கல்வி  அமைச்சுக்கு  எதிராக  நடந்து கொண்டிருக்கின்றன!  இவை  அனைத்தும்  கமலநாதனின் கமலபாதத்திற்குஅர்ப்பணம்!


Monday, 1 January 2018

இது தமிழரின் புத்தாண்டு!


இந்தப் புதிய 2018 புத்தாண்டு தமிழரின் மேன்மையைப் புலப்படுத்தும் புத்தாண்டு என்பதில் ஐயமில்லை. இவ்வாண்டு தமிழ் உலகில் எங்கும் வெற்றி! வெற்றி! என்னும் குரல் ஒலிக்கப் போகும்  புத்தாண்டு! தமிழர்கள் விழிப்போடும் செழிப்போடும்  செயல்படும் புத்தாண்டு!

நமது குரல் திக்கெட்டும் ஒலிக்கும்.   நமது புகழ் உலகெங்கும் எத்ரொலிக்கும்.     நமது மொழி இன்னும் அதிகமாகப் பயன்பாட்டுக்கு வரும். தமிழரின் சதனைகள் உலகளவில்  பேசப்படும்.

சிறுபான்மை என்றாலும் சிறுத்தையாகச் செயல்படுவோம்! பெரும்பான்மை என்றாலும் பெருநாகமாக உருவெடுப்போம்!

இது தமிழர் ஆண்டு. வரப்போகும் ஆண்டுகள் அனைத்தும் தமிழர் ஆண்டு. இனி தமிழன் முன்னோக்கித் தான் பயணிப்பான். இனிப் பின் வாங்கப் போவதில்லை. 

பொருளாதாரம் தமிழர் கையில். இனி அதுவே நமது ஆதாரம். இனி நாம் பிச்சை எடுக்கப்போவதில்லை. மற்றவனுக்கு நாம் வேலைக் கொடுப்போம். தொழில்கள் தொடுங்குவோம். உலகெங்கும் தொழில்களைக் கொண்டு செல்லுவோம். இனி தொழிலே நமது மந்திரம்.

வேலை வேலை என்று அலைந்தது போது. இனி அனைத்தும் சொந்த முயற்சி!  இனி தமிழன் என்றால் முயற்சி என்று பொருள். இனி தமிழன் உலகை வெல்வான்! வியாபார உலகை வெல்வான். ஒவ்வொரு தமிழனும் ஒரு யூதனைப் போல! வியாபாராம் வியாபாரம் என்பதே அவன் மூச்சு; அவன் பேச்சு. 

தமிழன் வெற்றி பெறுவான். இனி தோல்வி என்பது இல்லை. மீண்டும் அவனது சரித்திரம் எழும். தரித்திரம் விழும். இனி சரித்திரம் படைப்பான். தரித்திரம் தலை தெறிக்க ஓடும்!

நினவிற் கொள்ளுங்கள். இது தமிழன் சரித்திரம் படைக்கும் ஆண்டு.  இது வழக்கம் போல வந்து போகிற புத்தாண்டு அல்ல! புதிய சரித்திரம் படைக்கும் புத்தாண்டு.

இது தமிழனின் புத்தாண்டு. புத்தம் புதிய புத்தாண்டு. புறப்பட்டு விட்டான்  தமிழன். புதிய உலகம் படைக்க! எழு தமிழா! எழு! சரித்திரம் படைப்போம்! சாதனைப் படைப்போம்! சாகசம் படைப்போம்!

நன்றி! நன்றி! நன்றி!