Sunday, 27 April 2025

உத்தாம் சிங் பஸ், கணேசன் பஸ் (30)


 பேரூந்தில் எனது முதல் பயணம் என்றால் அது "உத்தாம் சிங்"  பேரூந்து தான்.  

இந்தப் பேருந்து  மட்டும் தான்  சிரம்பான் - போர்ட்டிகக்சன்  பாதையில் அந்தக் காலத்தில் ஓடிய  ஒரே பேருந்து  நிறுவனம். நான் போர்ட்டிக்சன் ஆங்கிலப்பள்ளியில  படிக்கின்ற போது  நான் முதன் முதலாக ஏறிய பஸ்  இந்த உத்தாம்சிங் பஸ் தான்.
 
இந்த நிறுவனத்தின் அலுவலகம் சிரம்பான் பட்டணத்தில் இருந்தது. ஒவ்வொரு மாதமும் அங்கு போய் தான் அதற்கான பாஸ் எடுக்க வேண்டும். அந்த  நேரத்தில் அவர்களிடம் எத்தனை  பேருந்துகள் இருந்தன என்பது தெரியவில்லை. எனக்குத் தெரிந்தவரையில் ஒரே ஒரு பேருந்தில் தான் நாங்கள் பயணம் செய்வோம். அந்த பஞ்சாபி ஓட்டுநர்  கூடவே வேலை செய்யும்  ஊழியரை "டேய்! நாரதமுனி!" என்று தான் கூப்பிடுவார்! நாரதமுனி என்றால் அப்போது தெரியவில்லை  பிறகு தான் அது நாரதர் என்று புரிந்தது! சரி, நாரதர் தான் எல்லா காலங்களிலும் இருக்கின்றனரே, என்ன செய்ய?

அப்போது இன்னொரு நிறுவனமும் ரந்தாவ்-சிரம்பான் வழியில் ஓடிக் கொண்டிருந்தது. அது "கணேசன்" பேருந்து நிறுவனம். இரண்டு நிறுவனங்களும் ஒரே அலுவலகத்தில் இயங்கிக்கொண்டிருந்தன. இதை நான் ஏன் இங்கே குறிப்பிடுகிறேன் என்றால்  அந்தக் காலத்திலேயே பேருந்து நிறுவனங்களை  நாம்  நடத்தியிருக்கிறோம் என்கிற பெருமை நமக்கு உண்டு.  இப்போதும் இந்த நிறுவனங்கள் நடப்பதாகவே நான் நினைக்கிறேன். அப்படியென்றால் நாடு முழுவதும் நமது நிறுவனங்கள்  இருந்திருக்கத் தானே வேண்டும்?


அறிவோம்:  புதிய முயற்சிகள் எப்போதுமே நம்மிடம் உண்டு. ஆனால் அதனை அடுத்த உயரத்திற்குக் கொண்டுபோகத்தான்  நம்மிடம் சரியான   வாரிசுகளை உருவாக்கவில்லை.  இந்த குறைபாடு இப்போதும் நம்மிடம் உண்டு.  ஒரே காரணம்: நான் பட்ட கஷ்டம் என் பிள்ளைகளுக்கு வேண்டாம்  என்கிற உயரிய நோக்கம் தான் நம்மைப் பின்னுக்குத் தள்ளுகிறது!



Wednesday, 23 April 2025

அடுப்புக்கரி, தேங்காய் எண்ணைய் (29)


தமிழ் நாட்டில் பல துலக்க வேப்பங்குச்சியைப் பயன்படுத்துவார்களாம். இப்போது அல்ல.  அந்தக் காலத்தில். ஒரு வேளை கிராமப்புறங்களில் இப்போதும் இருக்கலாம்.

ஆரம்பகால தோட்டப்பாட்டாளிகளாக  இங்கு வந்த தமிழர்கள்  இந்த அடுப்புக்கரியை பல்துலக்க எங்கிருந்து கற்றுக் கொண்டார்கள்? அதுவும் வெள்ளைக்காரனின் கைவரிசையாக இருக்குமோ? அல்லது அவனும் அடுப்புக்கரியில் தான் பல்துலக்கினானோ?!

எப்படியோ நான் நீண்ட காலம் அடுப்புக்கரியில் தான் பல் துலக்கினேன். அதாவது அடுப்பில் கரி இருக்கும்வரை!  ஒரு வேளை நானே வேலைக்குப் போக ஆரம்பித்தபின்னர் நான் மாற்றிக்கொண்டேன் என நினைக்கிறேன். 

இதே கதைதான் தலைக்குத் தேங்காய் எண்ணெய்  வைப்பதும். அதில் ஓர் அசௌகரியம் உண்டு. எண்ணைய் முகத்தில் வழியும்.  அதனால்  நான் இடைநிலைப்பள்ளியில்  படிக்கும் போது  Hair Cream - க்கு மாற்றிக் கொண்டேன். நான் நீண்ட காலம் பயன்படுத்திய ஒரே கிரீம் என்றால் அது Bryl Cream மட்டும் தான். நான் அவ்வளவு எளிதில் எதனையும் மாற்றிக்கொள்ள மாட்டேன்.

அந்த காலகட்டத்தில் எல்லாமே வெள்ளைக்கரர் தேசதிலிருந்து தான்  வெளிநாட்டுப் பொருள்கள் வரும். அதனால்  விற்பனையில் அவர்கள் பொருள்கள் தான் முதன்மையான இடம் பெரும். ஆனால் மக்களுக்கு வாங்கும் சக்தி இருந்ததா என்பது தெரியவில்லை.



அறிவோம்:   பொருளாதாரத்தில்  நாம் பின்னடைந்த சமுதாயம் என்று பெயர் எடுத்துவிட்டோம்.  சீனர்கள் தொழில் செய்ய ஆரம்பிக்கும் முன்னரே நாம்  தான் தொழிலில் முன்னணியில் இருந்தவர்கள். இப்போதும் வாய்ப்புகள் குறைந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. வாய்ப்புகள் பரந்து கிடக்கின்றன. இப்போது தான் வாய்ப்புகளைப் பயன்படுத்துவதில் தீவிரம்  காட்டுகிறோம். வாழ்க! வளர்க!

Saturday, 19 April 2025

"தேம்பா" சிகிரெட் (28)


 இயல்பாகவே நான் சிகிரெட் பிடிக்கும் பழக்கம் இல்லாதவன்.  ஏதோ எப்போதோ ஒன்று இரண்டு இருக்கலாம்/ அதுவும் கூட ஏதாவது விருந்துகளாக  இருக்கும்.

என் தந்தையார் சிகிரெட், பீடி, சுருட்டு  இப்படி ஏதாவது ஒன்று பிடிக்கும் பழக்கம் உள்ளவர்.  ஆனால் பீடி அதிகம்.  என்னைச் சுற்றிப் பார்க்கும் போது  சிகிரெட் தான் அதிகம்.  எனக்குத் தெரிந்து இந்த தேம்பா சிகிரெட் தான் எல்லா இடங்களிலும்  ஒரே சிகிரெட் தான் எங்கும் எதிலும்.

உண்மையில் அந்த சிகிரெட்டின் பெயர் "Rough Rider".  இப்படி எல்லாம் பெயர் வைத்தால் அதை உச்சரிக்கவே  தனி வகுப்பு எடுக்க வேண்டும்!  நம்ம ஆளுங்க பார்த்தாங்க எதையோ துப்பாக்கி வைத்துக் கொண்டு சுடுகிறான் அதனால் Tempak Cigarette"  என்று வைத்துவிட்டார்கள்!  அந்த காலகட்டத்தில் இந்த தேம்பா சிகிரெட் மிகவும் பிரபலம்.  வேறு சிகிரெட் வகைகள் இருந்தனவா என்று தெரியவில்லை. ஆனால் தோட்டப்புறங்களில் இல்லை என்றே நினைக்கிறேன். ஆனால் உயர் மட்டத்தினருக்கு ஏதாவது இல்லாமலா போகும்?   இருந்திருக்க வேண்டும். எனக்குத் தெரியவில்லை. நானும் பார்த்ததில்லை. 

இந்த சிகிரெட்டுக்கு இணையாக ஒன்றைச் சொல்ல வேண்டுமானால்  பீடிகளைத்தான் சொல்ல வேண்டும்.  விலை குறைவானது என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.  அதுவும் இந்தியாவிலிருந்து வந்தவர்களுக்கு பீடி தான் முதாலவது  இடம்!  அவர்களுக்குப் பழக்காமன ஒன்று அல்லவா!




அறிவோம்:   எதை எதையோ நாம் ஒழித்து விடுகிறோம். ஆனால் சிகிரெட்டுகளும் சரி மதுபானங்களும் சரி ஏன் ஒழிக்க முடிவதில்லை?  சிகிரெட் பிடிக்காதே என்று சொல்லுபவன் சிகிரெட் பிடிக்கிறான்! குடிக்காதே என்று சொல்லுபவன்  குடியில் மிதக்கிறான்!  அதற்கு மருத்துவர்களும் விதிவிலக்கல்ல.  மனிதனின் ஆயுட்காலம்வரை இந்தத் தீமை  தொடரத்தான் செய்யும்.

 

Wednesday, 16 April 2025

தோட்டம் விட்டு தோட்டம் மாற (27)


 பொதுவாவே தோட்டம்விட்டு இன்னொரு தோட்டம் மாறிப் போவது என்றால்  இப்போது போல வாகன வசதிகள் இல்லாத காலம் அது. அப்படி ஒன்றும்  பெரிய அளவில் சாமான்கள் இருக்கப்போவதில்லை.. என்றாலும்  குறைந்தபட்சம் துணிமணிகள் வைப்பதற்கு  ஒரு பெரிய டிரங்     (Trunk}பெட்டியாவது இருக்கும். பொக்கிஷங்களை வைக்கும் பெட்டி அது தான்!

எங்களுக்கு வேறு வசதிகள் இல்லாத்தால்  ஒரு மாட்டு வண்டியைத் தான் ஏற்பாடு செய்தார் என் தந்தை. அது ஒரு மலாய்க்காரருடைய மாட்டுவண்டி. அந்த வண்டியின் மூலம் தான் எங்களது சட்டிப்பானைகளைத்  தூக்கிக்கொண்டு எங்களையும் அடைத்துக் கொண்டு வேறு தோட்டத்திற்கு மாறிப்போனோம்!

இந்த மாட்டுவண்டிகளைப் பற்றி சொல்லியாக வேண்டும். இந்த மாட்டுவண்டிகள் பெரும்பாலும் மலாய்க்காரர்கள்  தாங்கள் செய்யும் அத்தாப்புக்களை (கூரைகளுக்குப் பயன்படுத்த) விற்பனைக்குச் சிரம்பான் நகருக்குக் கொண்டு செல்வார்கள். இரவும் பகலும் பயணம் செய்வார்கள். ஐந்தாறு வண்டிகளாக ஒன்றுசேர்ந்து பயணம் செய்வார்கள்.  அதன் பின்னர் அவர்கள் கொண்டு செல்லும் அத்தாப்புகளை விற்றுவிட்டு  வீடு திரும்புவார்கள். அத்தாப்புகள் வீட்டுக் கூரைகளுக்குத்தான் என்றாலும்  தோட்டங்களில் மாட்டுக்கொட்டைகளுக்கும் பயன்படுத்தாவர்கள்.

நான் முதலில் பார்த்தவை மலாய்க்காரர்களின்  மாட்டுவண்டிகளைத்தான். பின்னர் றான் பட்டணங்களில்  பஞ்சாபியர் நடத்தும் மாட்டுவண்டிகளைப் பார்த்திருக்கிறேன். பஞ்சாபியரை நினைக்கும் போது  பசு மாடு, மாட்டுவண்டி - அதுவே அவர்களின் முன்னேற்றமாக அமைந்தது.



அறிவோம்:  எதிரிகளாலும் நிராகரிக்க முடியாத தகுதிகளை வளர்த்துக்கொள். அதற்காகவே உன்னைத் தயார்படுத்து.  அதுவே தலைசிறந்த உருவாக்கம்.

ரத்தன் டாட்டா

Saturday, 12 April 2025

என் நண்பன் சந்திரன் (26)



 

நான் செயின்பால் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது  அப்போது பள்ளியில் புதிதாக  வந்து சேர்ந்தான் சந்திரன். அவனைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்றாலும்  அவன் தந்தையார் நாங்கள் வசித்த செண்டாயன் தோட்டத்திற்கு வேலை மாற்றலாகி  மருத்துவ உதவியாளராக வந்திருந்தார். 

ஒரே பள்ளியில் படித்ததால் நாங்கள் இருவரும் ஒன்றாகவே போவோம், ஒன்றாகவே வருவோம். எனக்கு ஆங்கிலம் வராது அதனால் அவன் தமிழில் தான் பேசுவான். அவன் சட்டையில் எப்போதும் பேனா மையின் கறை இருந்து கொண்டே இருக்கும். "டேய் சட்டையில் மசி ஊத்திரிச்சி. அப்பா பார்த்தால் அடிப்பார்"  என்று முணகிக் கொண்டே வருவான்.  மசி என்றால் மை என்றே நினைக்கிறேன்.

அவனது தந்தை M.G.M.  நாயர். உண்மையில்  நல்ல மனிதர். பார்ப்பதற்கு முரட்டுத்தனமாகத் தெரிவார். அவன் வீட்டுக்கு வாடா என்பான்.  கொஞ்சம் பயம் தான். இருந்தாலும் ஒரு நாள் போனேன். அவன் வீட்டில் யாரும் இல்லை. அப்பனும் மகனும் தான். அவனின் அப்பா  என்னைப் பார்த்து "டேய் இந்தா இதைப் படி" என்று பள்ளிப் புத்தகத்தைக் கொடுத்தார். எனக்குத்தான் படிப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லையே! படித்தேன். அவர் மகனுக்கு ரோத்தானில் ஓர் அடி கொடுத்து  "பார்! கூலிக்காரன்ட மகன் எப்படி படிக்கிறான். உன்னால மட்டும் ஏண்டா முடியல?" என்று திட்டினார்.

மகன் கூறிய மசி என்ற வார்த்தையும், அப்பா கூறிய கூலிக்காரன்ட மகன்  என்கிற வார்த்தையும்  என்னால் இன்னும் மறக்க முடியவில்லை! ஒன்றுமட்டும் தெரிகிறது.  மேலிடத்தில் இருந்தவர்கள்  கீழ்மட்டத்தில் உள்ள தொழிலாளர்களைக் கூலிக்காரன் என்று  தான் கூறி வந்திருக்கிறார்கள்.

பிற்காலத்தில் நான் தோட்ட அலுவலகத்தில்  வேலை செய்த போது நாயர் அங்கேயும் மருத்துவ உதவியாளராக வந்திருந்தார்!  நாயர் உண்மையில் நல்ல மனிதர். அநீதி என்றால் தட்டிக்கேட்கும் குணம் உள்ளவர். அதனால் அவர் எங்கேயும் நிரந்தரமாக வேலை செய்ய முடியவில்லை. என்னை எப்போதும்  சுஸா சுஸா (Souza) என்று தான் அழைப்பார்! ஒரு வேளை என்னை அவர் மலையாளி என்று நினைத்திருக்கலாம்!  என் நண்பன் சந்திரன் இராணுவத்தில் சேர்ந்துவிட்டான். அங்கு முகாமில் இருந்தபோது  தவறுதலாகச் சுடப்பட்டு இறந்து போனான். அதன்பின் நாயர் ஊருக்குத்  திரும்பிவிட்டார்.



அறிவோம்:   ஏழைகள்  முன்னேற்றம் அடைய கல்வி மட்டும் தான்  மிக வலிமையான ஆயுதம்.  கல்வி மட்டும் தான் பதவியில் உயர்ந்த மற்ற  அதிகார வர்க்கத்தினரோடு  நம்மைச் சமமாக உட்காராவைக்கும். தோட்டப்புற பின்னணியைக் கொண்ட நமக்கு அடுத்தக்கட்ட நகர்வு கல்வியை நோக்கித்தான் இருக்க வேண்டும்.


Wednesday, 9 April 2025

என் ஆங்கில ஆசிரியர் (25)

 

எனது பள்ளி நாட்களில் நான் நினைவில் வைத்துக்கொள்வது போல எந்த  ஓர் ஆசிரியரும் அமையவ்வில்லை. அதற்குக் காரணம் வாய்த்த ஆசிரியர்கள் எல்லாம்  பெரும்பாலும் சீனர்கள்  என்பதாகக் கூட இருக்கலாம்.  ஆங்கிலம் பேச முடியவில்லையே  என்கிற காரணமாகவும் நானே ஒதுங்கி இருக்கலாம்.  ஆங்கிலம் எப்படி நம்மை ஒதுக்கி விடுகிறது பார்த்தீர்களா?  

இடைப்பட்ட காலத்தில் அதாவது எனது நான்காம் பாரத்தில் ,அந்த எதிர்பாராத நிகழ்ச்சி நடந்தது.  வந்தார் ஓர் ஆங்கில ஆசிரியர். இளைஞர். ஒரு பஞ்சாபி.   அவர் பேசுகின்ற ஆங்கிலத்தை அத்தனை எளிதில் புரிந்த கொள்ள முடியாது.  கடுமையான (Bombaastic) வார்த்தைகளப் பயன்படுத்துவார்..  ஒவ்வொன்றுக்கும் ஆங்கில ஆக்ஸ்போர்டு அகராதியைப் புரட்ட வேண்டியிருந்தது!

அடிக்கடி கட்டுரைகள் எழுத வைப்பார். எனக்கும் ஓர் ஆசை வந்துவிட்டது. அவரைப் போல கடுமையான, எளிதில் புரியாத வார்த்தைகளைப்  பயன்படுத்தும்  பழக்கம் வந்துவிட்டது. அதனை எனது கட்டுரைகளில் காண்பித்தேன். அதற்கென்று புத்தகங்களைத்  தேடினேன். நூலகத்தில்  Wuthering Heights  என்னும் புத்தகம் கைகொடுத்தது.  ஒன்றுமே புரியவில்லை! ஆனாலும் வாசித்து முடித்தேன். எனது கட்டுரைகளில் புதிய புதிய வார்த்தைகளைப் பயன்படுத்தினேன். ஆசிரியருக்கு  என் எழுத்துக்கள்  அவரைக் கவர்ந்துவிட்டன. வகுப்பில் என்னுடைய கட்டுரையை வாசித்துக்காட்டி என்னைப் பெருமைப் படுத்தினார். அப்போதிருந்தே என்னை நானே மாற்றிக் கொண்டேன்.   எனது பள்ளிவாழ்க்கையில் நான் மறக்க முடியாத  ஓர் ஆசிரியர் என்றால்  ரஞ்சிட் சிங்  எனகிற அந்த சீக்கிய ஆசிரியர் தான்.  அதன் பின் என் பாதையே மாறிவிட்டது. பேச்சுப் போட்டியில்  கலந்து கொண்டேன். கொஞ்சம் பயம் தெளிந்தது.




அறிவோம்:    ஆங்கிலம் தெரிந்தால் உலகையே வலம் வரலாம்  என்பது  உண்மை அல்ல. ஆப்பிரிக்க நாடுகளில் பல பிரஞ்சு ஆதிக்கத்தில் இருந்தவை. அங்கெல்லாம் ஆட்சிமொழியாக  பிரஞ்சு மொழி தான்  பயன்பாட்டில் உள்ளது. குறைந்தபட்சம் இந்த இரண்டு மொழிகள் தெரிந்தால்  உலகை வலம்வர பிரச்சனை இருக்காது.


Sunday, 6 April 2025

நான் வாங்கிய முதல் ஆங்கில இதழ் (24)



நான் வாங்கிய முதல் ஆங்கில இதழ் என்று எடுத்துக் கொண்டால் அது  கதோலிக்க திருச்சபயின்  வெளியிடான Malayan Catholic News அல்லது (MCN)  என்று சுருக்கமாகச் சொல்லுவார்கள். அது ஒரு மாத இதழாக வெளிவந்தது. அதன் விலை 15 காசுகள் என நினைக்கிறேன்.ஒவ்வொரு மாதமும் பள்ளியில் கொ9ண்டுவந்து விற்பார்கள்.  இப்போது இந்த இதழ் ஒரு பக்கம் தமிழ், ஒரு பக்கம் சீனம்  தொண்ணூறு விழுக்காடு ஆங்கில இதழாக  Herald என்னும் பெயரில்  வெளிவந்து கொண்டிருக்கிறது.

நான் எத்தனையோ தமிழ் இதழ்கள் படித்தாலும் ஆங்கிலத்தில் எனது ஆரம்பம்  அங்குதான் துவங்கியது.  அது என்னவோ பத்திரிக்கைகள்  மீது எனக்கு ஒர் அதீத  ஈடுபாடு என்றும் உண்டு. நான் இடைநிலைப் பல்ளியில் பயிலும் போது ஏகப்பட்ட பத்திரிக்கைகளை நான் படிப்பதுண்டு.புரிகிறதோ இல்லையோ முதல் பக்கத்திலிருந்து  கடைசிப் பக்கம்வரை படித்து விடுவேன்.

நான் வாசிப்பதில் ஒரு தீவிரவாதி! எதையும் படிப்பேன். எல்லாவற்றையும் படிப்பேன். வாசிப்பதில் எனக்கு வஞ்சனையே இல்லை!  என்னிடம் இருக்கும் புத்தகங்கள் எல்லாம் என் காசில் வாங்கியவை. எல்லாமே அறுபது ஆண்டுகளாக நான் சேகரித்தவை. பல புத்தகங்கள். 



அறிவோம்"    பயஙகரமான போராட்ட  ஆயுதங்கள் எவை என்று  கேட்கப்பட்டபோது  மார்ட்டின் லூதர் கிங்  "புத்தகங்கள் தான்"  என்றாராம்.