Saturday, 12 April 2025

என் நண்பன் சந்திரன் (26)



 

நான் செயின்பால் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது  அப்போது பள்ளியில் புதிதாக  வந்து சேர்ந்தான் சந்திரன். அவனைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்றாலும்  அவன் தந்தையார் நாங்கள் வசித்த செண்டாயன் தோட்டத்திற்கு வேலை மாற்றலாகி  மருத்துவ உதவியாளராக வந்திருந்தார். 

ஒரே பள்ளியில் படித்ததால் நாங்கள் இருவரும் ஒன்றாகவே போவோம், ஒன்றாகவே வருவோம். எனக்கு ஆங்கிலம் வராது அதனால் அவன் தமிழில் தான் பேசுவான். அவன் சட்டையில் எப்போதும் பேனா மையின் கறை இருந்து கொண்டே இருக்கும். "டேய் சட்டையில் மசி ஊத்திரிச்சி. அப்பா பார்த்தால் அடிப்பார்"  என்று முணகிக் கொண்டே வருவான்.  மசி என்றால் மை என்றே நினைக்கிறேன்.

அவனது தந்தை M.G.M.  நாயர். உண்மையில்  நல்ல மனிதர். பார்ப்பதற்கு முரட்டுத்தனமாகத் தெரிவார். அவன் வீட்டுக்கு வாடா என்பான்.  கொஞ்சம் பயம் தான். இருந்தாலும் ஒரு நாள் போனேன். அவன் வீட்டில் யாரும் இல்லை. அப்பனும் மகனும் தான். அவனின் அப்பா  என்னைப் பார்த்து "டேய் இந்தா இதைப் படி" என்று பள்ளிப் புத்தகத்தைக் கொடுத்தார். எனக்குத்தான் படிப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லையே! படித்தேன். அவர் மகனுக்கு ரோத்தானில் ஓர் அடி கொடுத்து  "பார்! கூலிக்காரன்ட மகன் எப்படி படிக்கிறான். உன்னால மட்டும் ஏண்டா முடியல?" என்று திட்டினார்.

மகன் கூறிய மசி என்ற வார்த்தையும், அப்பா கூறிய கூலிக்காரன்ட மகன்  என்கிற வார்த்தையும்  என்னால் இன்னும் மறக்க முடியவில்லை! ஒன்றுமட்டும் தெரிகிறது.  மேலிடத்தில் இருந்தவர்கள்  கீழ்மட்டத்தில் உள்ள தொழிலாளர்களைக் கூலிக்காரன் என்று  தான் கூறி வந்திருக்கிறார்கள்.

பிற்காலத்தில் நான் தோட்ட அலுவலகத்தில்  வேலை செய்த போது நாயர் அங்கேயும் மருத்துவ உதவியாளராக வந்திருந்தார்!  நாயர் உண்மையில் நல்ல மனிதர். அநீதி என்றால் தட்டிக்கேட்கும் குணம் உள்ளவர். அதனால் அவர் எங்கேயும் நிரந்தரமாக வேலை செய்ய முடியவில்லை. என்னை எப்போதும்  சுஸா சுஸா (Souza) என்று தான் அழைப்பார்! ஒரு வேளை என்னை அவர் மலையாளி என்று நினைத்திருக்கலாம்!  என் நண்பன் சந்திரன் இராணுவத்தில் சேர்ந்துவிட்டான். அங்கு முகாமில் இருந்தபோது  தவறுதலாகச் சுடப்பட்டு இறந்து போனான். அதன்பின் நாயர் ஊருக்குத்  திரும்பிவிட்டார்.



அறிவோம்:   ஏழைகள்  முன்னேற்றம் அடைய கல்வி மட்டும் தான்  மிக வலிமையான ஆயுதம்.  கல்வி மட்டும் தான் பதவியில் உயர்ந்த மற்ற  அதிகார வர்க்கத்தினரோடு  நம்மைச் சமமாக உட்காராவைக்கும். தோட்டப்புற பின்னணியைக் கொண்ட நமக்கு அடுத்தக்கட்ட நகர்வு கல்வியை நோக்கித்தான் இருக்க வேண்டும்.


No comments:

Post a Comment