பொதுவாகவே உணவகம் என்றாலே ஆள் பற்றாக்குறை என்பதகத்தான் நமக்குச் செய்திகள் வருகின்றன.
அதே சமயத்தில் புதிய புதிய உணவகங்களும் பல இடங்களில் திறக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. புதிய உணவகங்கள் பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்களை வைத்தே ஆரம்பிக்கின்றனர் என்பது உண்மை தான். அதனால் எந்தவொரு ஆள்பாற்றாக்குறை பிரச்சனைகள் எழுவதில்லை. நாட்டில் பல கிளைகளைக் கொண்ட நிறுவனங்களின் நிலை வேறு. அவைகள் பல நாடுகளில் தங்களது கிளைகளைக் கொண்டிருக்கின்றனர். அதனால் அவர்களுக்குச் சில சலுகைகள் கிடைக்கலாம்.
"வா தமிழா உணவகம்" உண்மையில் ஆரம்பித்திருக்கும் நண்பர் மிகவும் துணிச்சலான ஒரு மனிதர் என்பதில் ஐயமில்லை. இப்போதெல்லாம் தங்களது விளம்பரப் பலகையில் தமிழ் மொழியையே புறக்கணிப்புச் செய்கின்றவர்களே அதிகம். ஆனால் இவர் துணிச்சலாக தனது உணவகத்திற்கே "வா தமிழா" என்று பெயர் வைத்திருக்கிறாரே அதற்காக அவரைப் பாராட்ட வேண்டும்.
இன்று நாட்டில் இயங்கும் பல உணவகங்கள் தமிழர் அல்லாதவர்கள் தான் நடத்துகின்றனர். வெளியே தெரிவதில்லையே தவிர உண்மை அது தான். ஆனால் நாம் அவர்களைக் குறை சொல்ல வரவில்லை. எப்படியிருந்தாலும் அவர்கள் பரிமாறும் உணவுகள் தமிழர் பாரம்பரிய உணவுகள் தானே. அதனால் பாராட்டுவோம்.
இப்போது ஈப்போவில் இயங்கும் வா தமிழா உணவகத்திற்கு நமது தமிழ் மக்களுக்கு நாம் சொல்ல வரும் செய்தி என்ன? அந்தப் பெயருக்காகவே அவர்களுக்கு உங்களின் ஆதரவைத் தாருங்கள் என்பது தான். இப்போது தான் ஆரம்பித்திருக்கின்றனர். அவர்களுக்கு உங்களின் வற்றாத ஆதரவைத் தாருங்கள் என்பது தான் நமது செய்தி. ஆரம்பத்தில் ஒருசில குறைபாடுகள் இருக்கலாம். அதற்காக அவர்களைப் புறக்கணிக்க வேண்டாம். போகப் போக, குறைகள் இருந்தால், அவர்களே அதனைச் சரி செய்து விடுவார்கள்.
எப்படி இருந்தாலும் நமது தமிழ் மக்களின் ஆதரவு அபரிதமாக இருக்க வேண்டும் என்பதே நமது அவா. அவர்களின் முன்னேற்றத்திற்கு நாம் ஆதரவாக இருப்போம். தமிழர்கள் நன்றாக இருந்தால் தான் அவர்களால் தமிழர்களுக்கு நல்லது நடக்கும். வாழ்த்துவோம்!