Monday, 21 July 2025

இன்னுமா தூக்கம்?

 தமிழ்ச் சமுதாயத்திடம் நம்மிடம் உள்ள ஒரே கேள்வி:  உங்கள் பிள்ளைகளுக்கு என்று முழுமையான கல்வியைத் தரப் போகிறீர்கள் என்பது தான்.

இன்று 'ஏழை சமுதாயம்' என்று நமக்கு நாமே  நாமகரணம் சூட்டிக் கொண்டாலும் அது உண்மையல்ல. நாட்டில் எல்லா வசதிகளும் உண்டு. ஏழைகள் தங்களது குடும்பத்தை அடுத்த கட்டத்திற்கு  உயர்த்த வேண்டும் என்கிற இலட்சியம் இருந்தாலே போதும். தேவையெல்லாம்  தங்களது பிள்ளைகளுக்குக் கல்வியைக் கொடுத்தால் போதும். 

தோட்டங்களில் அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் நம் இனத்தவர்  ஏறக்குறைய அடிமைகளாகத் தான் இருந்தார்கள். அந்த அடிமை காலத்தில் கூட நமது பிள்ளைகள் படித்து நல்ல பல உத்தியோகங்களுக்குச் சென்றிருக்கிறார்கள். ஆசிரியர்கள், தோட்ட நிர்வாகிகள், கற்றறிருந்த மருத்துவர்கள்,  வழக்கறிஞர்கள், அமைச்சர்கள் - இப்படி பல துறைகளில் தங்களது  முத்திரையப் பதித்திருக்கிறார்கள். அன்று  அடிமை வாழ்க்கை வாழ்ந்த பெற்றோர்களின் விடாமுயற்சிதான் காரணம்.

தோட்டப்புற மாணவர்கள் எதற்கும் இலாயக்கில்லை  என்று யாராலும் குற்றம்   சொல்ல முடியாது. அனைத்தும் பெற்றோர்களின்  கையில் தான். பெற்றோர்கள் கொஞ்சம் தங்கள் பிள்ளைகளின் மீது  அக்கறை காட்டினால் போதும். அந்தக் குடும்பம் அடுத்தக்கட்ட  உயர்வை நோக்கிச்  சென்றுவிடும்.

இன்னும் அந்தப் பழைய பல்லவியையே பாடிக்கொண்டிருக்கக் கூடாது. "படித்து  என்னத்தை கிழிக்கப்போகிறான்" என்று சொல்லி ஒரு சிலர்  நம்மிடம் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி விட்டனர். இதையெல்லாம் மீறி இப்போது வந்துவிட்டோம்.

கல்வி என்பது பிள்ளைகளுக்குக் கட்டாயம் என்பது நம் பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்னும் கல்வியின் அவசியத்தை நமது பெற்றொர்களுக்கு சொல்லிக்கொண்டே இருப்பது நமது அவலம். காலம் அன்று போல் இன்று இல்லை.  நாம் வசிக்கும் இடங்களிலேயே பெரும்பாலான  பள்ளிகள் அமைந்துவிட்டன.  அப்படியே தூரமாக இருந்தாலும்  போக்குவரத்து செலவுகளையும் பல தொண்டூழிய நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டுகின்றன.  அரசாங்கக்  கல்லூரிகளுக்குச் செல்லும்  போது பெரிய அளவில்  செலவுகள் வர வாய்ப்பில்லை.

நீங்கள் குறை சொல்லும்படியாக எதுவும் இல்லை. ஒன்றைப் பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்  நாளை உங்கள் பிள்ளை மருத்துவராக வழக்கறிஞராக.   பொறியியளாலராக, அரசாங்க அதிகாரியாக, போலீஸ் அதிகாரியாக ஆவது  உங்களுக்குப் பெருமை தானே? நமது பிள்ளைகளின் திறமைக்கு ஈடாக யாரை சொல்ல முடியும்? அந்த அளவுக்கு  நாம் அறிவுள்ள சமுதாயம்.

பெற்றோர்களே!  விழித்துக் கொள்ளுங்கள். தூங்கியது போதும். பிள்ளைகளைப் படிக்க வையுங்கள்.  இதற்கு நீங்கள் முதல் போட ஒன்றுமில்லை.  தேவையெல்லாம்  கல்வியின் மீதான உங்கள் ஆர்வத்தைக் காட்டினால் போதும். பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பினால் போதும். உங்கள் பிள்ளைகள் கற்றவர்களோடு சீன, மலாய் பிள்ளைகளோடு சரிசமமாக பார்க்கும் நிலை  ஏற்படும். அது தான் நமக்குப் பெருமை.

No comments:

Post a Comment